بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ

52:0.அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் அறிவுரைப்படியே அனைத்துக் காரியங்களையும் செய்ய நாடுகிறேன். (பார்க்க 6:162)


وَٱلطُّورِ.

52:1. தூர் எனும் மலைப் பிரதேசத்தில் மூஸா நபி காலத்தில் நடந்த நிகழ்வுகளை கவனித்துப் பாருங்கள்.


وَكِتَٰبٍۢ مَّسْطُورٍۢ.

52:2. வெள்ளை காகிதத்தில் தொகுத்து எழுதப்பட்ட இவ்வேதத்தையும் ஆராய்ந்து பாருங்கள்.


فِى رَقٍّۢ مَّنشُورٍۢ.

52:3. அதன் வழிகாட்டுதல்கள் வெகுதூரம் வரையில் பரவி வருவதையும் கவனியுங்கள்.


وَٱلْبَيْتِ ٱلْمَعْمُورِ.

52:4. இறை இல்லமாக கருதப்படும் கஅபா எனும் தலைமை செயலகத்தையும், அதன் ஆணிவேராக இருக்கும் இறைவன் அறிவித்துள்ள வாழ்க்கை நெறிமுறைப் பற்றியும் ஆராய்ந்து பாருங்கள்.


وَٱلسَّقْفِ ٱلْمَرْفُوعِ.

52:5. சிந்தித்து செயலாற்றுபவர்களை உயர்நிலைக்குக் கொண்டு செல்லும் வானளாவிய கருத்துக்களையும் ஆராய்ந்து பாருங்கள்.


وَٱلْبَحْرِ ٱلْمَسْجُورِ.

52:6. அல்லது ஒன்றோடு ஒன்று இணைந்தாற் போல் பொங்கி வரும் கடலை ஆராய்ந்து பாருங்கள். அல்லது கடலோரப் பகுதியில் வாழ்ந்த மீனவ இனத்திற்கு எற்பட்ட துர்பாக்கிய நிலையை ஆராய்ந்து பாருங்கள். (பார்க்க 7:163-168)
ஆகிய இவை அனைத்தும் ஒரே விஷயத்தை திரும்ப திரும்ப வலியுறுத்திக் கூறுகின்றன. அதாவது மனித செயல்களின் விளைவுகள் என்பது எக்காலத்திலும், உலகின் எல்லா பகுதி மக்களுக்கும் நிலைநிறத்தப்பட்ட சட்டமே ஆகும். இறைவழிகாட்டுதலை நிராகரிக்கும்


إِنَّ عَذَابَ رَبِّكَ لَوَٰقِعٌۭ.

52:7. சமுதாயங்கள் இறைவனின் நியதிப்படி வேதனைகளை அனுபவித்தே தீரும்.


مَّا لَهُۥ مِن دَافِعٍۢ.

52:8. அத்தகைய வேதனைகள் வருவதை யாராலும் தடுக்கவும் முடியாது.


يَوْمَ تَمُورُ ٱلسَّمَآءُ مَوْرًۭا.

52:9. அந்த வேதனைக் காலம் நெருங்கும் போது, வானத்தை போன்று ஆட்சி அதிகாரத்தின் உயர் பதவியில் இருந்த அதிகார வர்க்கத்தினர் மிதிப்பட்டு குமுறிக் கொண்டிருப்பர்.


وَتَسِيرُ ٱلْجِبَالُ سَيْرًۭا.

52:10. மலைகளைப் போல் செல்வங்களை குவித்து வைப்போரின் நிலை சின்னா பின்னமாகி விடும். (பார்க்க 20:105-107)


فَوَيْلٌۭ يَوْمَئِذٍۢ لِّلْمُكَذِّبِينَ.

52:11. காரணம் அவர்கள் மார்க்க கட்டளைப்படி சமுதாய சமச் சீர்நிலையை பாதுகாப்பதில்லை. இதனால் அவர்களுக்கு கேடு காலம் சூழ்ந்து கொள்கிறது.


ٱلَّذِينَ هُمْ فِى خَوْضٍۢ يَلْعَبُونَ.

52:12. மேலும் அவர்களுக்கு மார்க்க உண்மைகளை எடுத்துரைத்தால், அவற்றைப் பற்றி சிந்திக்காமல் விளையாட்டாக எடுத்துக் கொள்கிறார்கள். அந்த அளவுக்கு தற்காலிக சுகபோகங்களை அனுபவிப்பதிலேயே கண்ணும் கருத்துமாக இருக்கிறார்கள்.


يَوْمَ يُدَعُّونَ إِلَىٰ نَارِ جَهَنَّمَ دَعًّا.

52:13. இதனால் இத்தகையவர்களின் நிலை படுமோசமானதாக ஆகிவிடும். நெருப்பில் விழுந்தவன் எவ்வாறு தவிப்பானோ அது போன்று இவனுடைய நிலைமை தாளா வேதனைக்கு உரியதாக ஆகிவிடும்.


هَٰذِهِ ٱلنَّارُ ٱلَّتِى كُنتُم بِهَا تُكَذِّبُونَ.

52:14. அப்படியொரு கட்டத்தில் நீங்கள் பொய்யென கூறி வந்த நரக வேதனைகள் இவைதான் என்று அவர்களிடம் கூறுவதாக இருக்கும்.


أَفَسِحْرٌ هَٰذَآ أَمْ أَنتُمْ لَا تُبْصِرُونَ.

52:15. அப்போது அவர்களிடம், “இவையெல்லாம் மக்களை வசீயப்படுத்தி ஏமாற்றும் கலையே என்றீர்களே, அது உண்மை புரிந்து விட்டதா?” என்று கேட்கப்படும். நீங்கள் எதையும் சிந்தித்துணரும் தகுதியில்லாத குருடர்களைப் போல் அல்லவா இருந்தீர்கள்?


ٱصْلَوْهَا فَٱصْبِرُوٓا۟ أَوْ لَا تَصْبِرُوا۟ سَوَآءٌ عَلَيْكُمْ ۖ إِنَّمَا تُجْزَوْنَ مَا كُنتُمْ تَعْمَلُونَ.

52:16. எனவே அந்த வேதனை மிக்க வாழ்வில் நுழையுங்கள். அங்கு நீங்கள் வேதனைகளை சகித்துக் கொண்டாலும் சகித்துக்கொள்ள முடியாவிட்டாலும் சமமே. இவையாவும் நீங்கள் செய்து வந்த தீய செயல்களின் விளைவாக கிடைக்கின்ற தண்டனை இப்படித்தான் இருக்கும்.


إِنَّ ٱلْمُتَّقِينَ فِى جَنَّٰتٍۢ وَنَعِيمٍۢ.

52:17. மாறாக இறைவழிகாட்டுதலைப் பேணி நடப்பவர்களின் வாழ்வு சுவர்க்க சோலைகளில் இன்புற்று இருப்பதற்கு ஒப்பானதாக இருக்கும்.


فَٰكِهِينَ بِمَآ ءَاتَىٰهُمْ رَبُّهُمْ وَوَقَىٰهُمْ رَبُّهُمْ عَذَابَ ٱلْجَحِيمِ.

52:18. அவர்கள் தம் இறைவன் புறத்திலிருந்து கிடைத்து வருபவற்றைக் கொண்டு மகிழ்வுடன் இருப்பார்கள். அவர்கள் இறைவழிகாட்டுதலைப் பேணி நடந்து கொண்டதால், அவர்கள் நரக வேதனைகளிலிருந்து மீண்டு கொள்வார்கள்.


كُلُوا۟ وَٱشْرَبُوا۟ هَنِيٓـًٔۢا بِمَا كُنتُمْ تَعْمَلُونَ.

52:19. நீங்கள் இறைவழிகாட்டுதலை ஏற்று நன்மையான செயல்களை செய்து வந்ததன் பலனாக, உங்களுக்கு தாராளமாக உண்ண உணவும், பருக அருசுவை நீரும் கிடைக்கும்.


مُتَّكِـِٔينَ عَلَىٰ سُرُرٍۢ مَّصْفُوفَةٍۢ ۖ وَزَوَّجْنَٰهُم بِحُورٍ عِينٍۢ.

52:20. அணி அணியாக போடப்பட்ட மஞ்சங்களின் மீது சாய்ந்தவர்களாக தம் பணிகளை மேற்கொள்வீர்கள். உங்களுடன் கண் குளிரச் செய்யும் பரிசுத்தமான சக தோழர்களும் பணி புரிவார்கள்.


وَٱلَّذِينَ ءَامَنُوا۟ وَٱتَّبَعَتْهُمْ ذُرِّيَّتُهُم بِإِيمَٰنٍ أَلْحَقْنَا بِهِمْ ذُرِّيَّتَهُمْ وَمَآ أَلَتْنَٰهُم مِّنْ عَمَلِهِم مِّن شَىْءٍۢ ۚ كُلُّ ٱمْرِئٍۭ بِمَا كَسَبَ رَهِينٌۭ.

52:21. எவர்கள் இறைவழிகாட்டுதலை ஏற்று நடக்கிறார்களோ, அவர்களுக்கு மட்டும்தான் இந்த சுவன வாழ்வு என்பதல்ல. அவர்களுடைய சந்ததியினரும் அதே போல் ஏற்று நடந்தால் அவர்களுக்கும் அத்தகைய சுவனத்திற்கு ஒப்பான வாழ்வு கிடைக்கும். அவர்களுக்கு எவ்விதத்திலும் குறை வைக்கப்பட மாட்டாது. அவர்கள் எவ்வாறு செயல்படுகிறார்களோ அவ்வாறே அவர்களுக்கும் பலன்கள் கிடைக்கும். ஒவ்வொரு மனிதனும் தன் செயலுக்கும் உரிய பலன்களை பெற்றுக் கொள்பவனாகவே இருக்கின்றான்.


وَأَمْدَدْنَٰهُم بِفَٰكِهَةٍۢ وَلَحْمٍۢ مِّمَّا يَشْتَهُونَ.

52:22. அவர்களுக்காக கனி வகைகளும் சுத்தமான மாமிச இறைச்சியும் சுவைமிக்க உணவும் தொடர்ந்து கிடைத்து வரும்.


يَتَنَٰزَعُونَ فِيهَا كَأْسًۭا لَّا لَغْوٌۭ فِيهَا وَلَا تَأْثِيمٌۭ.

52:23. அமுதம் நிறைந்த கோப்பையை ஒருவர் மற்றவர்க்கு பரிமாறிக் கொண்டிருப்பர். அங்கு வீணாண பேச்சிற்கோ குற்றம் புரியும் எண்ணங்களுக்கோ ஒருபோதும் இடமிருக்காது.


۞ وَيَطُوفُ عَلَيْهِمْ غِلْمَانٌۭ لَّهُمْ كَأَنَّهُمْ لُؤْلُؤٌۭ مَّكْنُونٌۭ.

52:24. அவர்களுடைய பிள்ளைகள் அவர்களை சுற்றி விளையாடிய வண்ணம் இருப்பார்கள். முத்துக்கள் பதித்த ஆடைகள் அணிந்து, பார்ப்பவர் கண்களுக்கு பரவசமடையச் செய்வார்கள். (பார்க்க:13:23, 52:21, 59:17)


وَأَقْبَلَ بَعْضُهُمْ عَلَىٰ بَعْضٍۢ يَتَسَآءَلُونَ.

52:25. அவர்களில் ஒருவரையொருவர் புன்சிரிப்புடன் நலம் விசாரித்துக் கொள்வார்கள்.


قَالُوٓا۟ إِنَّا كُنَّا قَبْلُ فِىٓ أَهْلِنَا مُشْفِقِينَ.

52:26.“இதற்கு முன் நாம் நம் குடும்பத்தாருடன் பயந்த நிலையில் வாழ வேண்டியிருந்தது”


فَمَنَّ ٱللَّهُ عَلَيْنَا وَوَقَىٰنَا عَذَابَ ٱلسَّمُومِ.

52:27. “ஆனால் இப்போது அந்த பயம் நீங்கி அமைதியோடு வாழக்கூடிய பாக்கியத்தை அல்லாஹ் நமக்கு ஏற்படுத்திக் கொடுத்தான்” என்று கூறுவார்கள்.


إِنَّا كُنَّا مِن قَبْلُ نَدْعُوهُ ۖ إِنَّهُۥ هُوَ ٱلْبَرُّ ٱلرَّحِيمُ.

52:28. நிச்சயமாக நாம் இதற்கு முன் எல்லா உதவிகளையும் அல்லாஹ்விடமே நாடினோம். அவனே நமக்கு சிறந்த வாழ்க்கை கிடைக்க சரியான பாதையை காட்டினான். அவன் காட்டிய பாதையில் செயல்பட்டதால் நாமும் அல்லாஹ்வின் கிருபைக்கு உரியவர்களாக ஆகிவிட்டோம்.


فَذَكِّرْ فَمَآ أَنتَ بِنِعْمَتِ رَبِّكَ بِكَاهِنٍۢ وَلَا مَجْنُونٍ.

52:29. எனவே இறைவழிகாட்டுதலை எடுத்துரைப்பவரே! நீர் மக்களுக்கு தொடர்ந்து நல்லறிவுரைகளை செய்து வருவீராக. உம்முடைய இறைவனின் வழிகாட்டுதலைப் பின்பற்றுவதால் கிடைக்கின்ற நற்பலன்களைப் பற்றி எடுத்துரைப்பீராக. அவர்கள் சொல்வது போல நீர் ஒருபோதும் ஜோசியக்காரரோ அல்லது பைத்தியக்காரரோ அல்லர்.


أَمْ يَقُولُونَ شَاعِرٌۭ نَّتَرَبَّصُ بِهِۦ رَيْبَ ٱلْمَنُونِ.

52:30. இன்னும் சிலர் உம்மை புலவர் என்றும் கூறுகிறார்கள். காலம் செல்ல செல்ல இத்தூதருக்கு துன்பம் சூழ்ந்து கொள்ளும். அதுவரையில் நாம் காத்திருப்போம் என்று கூறுவோரும் இருக்கிறார்கள்.


قُلْ تَرَبَّصُوا۟ فَإِنِّى مَعَكُم مِّنَ ٱلْمُتَرَبِّصِينَ.

52:31. இறைவழிகாட்டுதலை எடுத்துரைப்பவரே! அவர்கள் எதிர்பார்த்து காத்து கிடக்கட்டும். நிச்சயமாக நானும் உங்களுடன் எதிர்பார்க்கிறேன் என்று அவர்களிடம் கூறிவிடுங்கள்.


أَمْ تَأْمُرُهُمْ أَحْلَٰمُهُم بِهَٰذَآ ۚ أَمْ هُمْ قَوْمٌۭ طَاغُونَ.

52:32. அவர்கள் இப்படியெல்லாம் அறிவில்லாமல் பேசுவதாக நினைக்கிறீர்களா? இல்லை. அவர்களுடைய சுயநலப் போக்குதான் அவர்களை இவ்வாறு பேச வைக்கிறது, இதனால் அவர்கள் வரம்பு மீறின செயல்களில் ஈடுபட்டுள்ளனர்.


أَمْ يَقُولُونَ تَقَوَّلَهُۥ ۚ بَل لَّا يُؤْمِنُونَ.

52:33. அவர்கள் இறைவழிகாட்டுதலை ஏற்றுக் கொள்ளாததற்கு இன்னொரு காரணமும் சொல்வார்கள். இந்த குர்ஆனை இவரே இட்டுக்கட்டி எழுதிக் கொள்கிறார் என்பதே அவர்களின் கூற்று. இதுவும் அவர்கள் குர்ஆனை ஏற்காததற்கு கூறும் சாக்கு போக்காகும்.


أَمْ خُلِقُوا۟ مِنْ غَيْرِ شَىْءٍ أَمْ هُمُ ٱلْخَٰلِقُونَ.

52:35. அவர்களிடம், “அல்லாஹ்வின் வழிகாட்டுதலை ஏற்க மறுக்கிறீர்களே, நீங்களே உங்களை படைத்துக் கொண்டீர்களா? நீங்களே உங்களுடைய படைப்பாளிகளா?” என்று கேளுங்கள்.


أَمْ خَلَقُوا۟ ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضَ ۚ بَل لَّا يُوقِنُونَ.

52:36.“அல்லது அகிலங்களையும் பூமியையும் நீங்களே படைத்தீர்களா?” என்று கேளுங்கள். அவர்களால் தீர்க்கமாக பதில் எதுவும் தர இயலாது.


أَمْ عِندَهُمْ خَزَآئِنُ رَبِّكَ أَمْ هُمُ ٱلْمُصَۣيْطِرُونَ.

52:37. இறைவனிடம் பொக்கிஷங்கள் இருப்பது போல் இவர்களிடமும் உள்ளனவா? அந்த பொக்கிஷங்களை பயன்படுத்திக் கொள்ள நீங்கள் தான் உரிமைப் பெற்றவர்களா? உங்களை கேட்பாரே இல்லை என்று எண்ணிக் கொண்டீர்களா?” என்று அவர்களிடம் கேளுங்கள்.


أَمْ لَهُمْ سُلَّمٌۭ يَسْتَمِعُونَ فِيهِ ۖ فَلْيَأْتِ مُسْتَمِعُهُم بِسُلْطَٰنٍۢ مُّبِينٍ.

52:38. வானுலக இரகசியங்கள் எங்களுக்கும் தெரியும் என்கிறீர்களே, வானத்தில் ஏறிச் சென்று, அவற்றை கேட்டு வருவதற்கு உங்களிடம் ஏணி ஏதாவது இருக்கிறதா என்று கேளுங்கள். அவ்வாறாயின் அவர்களில் கேட்டு வந்தவர் செவியேற்றதை தெளிவான ஆதாரத்துடன் கொண்டு வரச் சொல்லுங்கள்.
வஹீச் செய்திகள் என்பது மனிதன் தன் திறமையைக் கொண்டு அறிந்து கொள்கின்ற விஷயங்கள் அல்ல. இவை முழுக்க முழுக்க இறைவனின் செயல்திட்டப் படி யார் அதற்கு தகுதியானவரோ அவருக்கு அளிக்கப்படுவதாகும். (2:105)


أَمْ لَهُ ٱلْبَنَٰتُ وَلَكُمُ ٱلْبَنُونَ.

52:39. அல்லது அல்லாஹ்வுக்கு பெண் பிள்ளைகள் இருப்பதாக கூறுகிறீர்கள். ஆனால் உங்களுக்கு மட்டும் ஆண் பிள்ளைகள் வேண்டும். இது என்ன நியாயம் என்று கேளுங்கள்.


أَمْ تَسْـَٔلُهُمْ أَجْرًۭا فَهُم مِّن مَّغْرَمٍۢ مُّثْقَلُونَ.

52:40. நபியே! நீர் எப்போதாவது உன் பேச்சைக் கேட்க அவர்களிடமிருந்து உதவித் தொகை ஏதாவது கேட்டீரா? அதனால் தான் உனக்கு பயந்து அவர்கள் இதிலிருந்து ஒதுங்கிக் கொள்கிறார்களா?


أَمْ عِندَهُمُ ٱلْغَيْبُ فَهُمْ يَكْتُبُونَ.

52:41. அல்லது அவர்களிடம் மறைவான செய்திகள் இருப்பதாக கூறுகிறார்களே அவற்றை அவர்கள் எழுதி வைத்திருக்கிறார்களா?


أَمْ يُرِيدُونَ كَيْدًۭا ۖ فَٱلَّذِينَ كَفَرُوا۟ هُمُ ٱلْمَكِيدُونَ.

52:42. அல்லது அவர்கள் உமக்கெதிராக சதி செய்ய நாடுகிறார்களா? அது உண்மையென்றால் அந்த சதியின் வலையில் அவர்களே சிக்கிக் கொள்வார்களே!


أَمْ لَهُمْ إِلَٰهٌ غَيْرُ ٱللَّهِ ۚ سُبْحَٰنَ ٱللَّهِ عَمَّا يُشْرِكُونَ.

52:43. அல்லது அல்லாஹ் அல்லாத பிற தெய்வங்களும் இருப்பதாக கூறுகிறார்களா? அவ்வாறாயின் அத்தகைய எண்ணங்களுக்கெல்லாம் அப்பாற்பட்டவன் தான் அல்லாஹ் என்பதை அறிவித்துவிடுங்கள்.
மேலே கேட்கப்பட்ட எந்த கேள்விக்கும் அவர்களிடம் அறிவுப்பூர்வமான பதில் எதுவும் கிடைக்காது. வெறும் உணர்ச்சி பூர்வமான பதில்களே அவர்கள் தருவார்கள். இவையாவும் வெறும் மூட நம்பிக்கையின் அடிப்படையில் தான் இருக்கும். அவர்களிடம் இருக்கும் மூட நம்பிக்கைதான்


وَإِن يَرَوْا۟ كِسْفًۭا مِّنَ ٱلسَّمَآءِ سَاقِطًۭا يَقُولُوا۟ سَحَابٌۭ مَّرْكُومٌۭ.

52:44. அவர்களை சுற்றி பேராபத்துகள் விரைந்து வருகின்றன. ஆனால் அவர்களால் அவற்றை அறிந்து கொள்ள முடிவதில்லை. அப்படியும் ஆபத்துகள் வந்தால் அவர்களுடைய கற்பனை தெய்வங்கள் கண்டிப்பாக காப்பாற்றும் என்ற அசட்டு தைரியத்தில் இருக்கிறார்கள். எனவே தான் அவர்கள் வானத்திலிருந்து ஆபத்து ஏதேனும் வந்தாலும் அது மேகக் கூட்டம் தான் என்பார்கள்.


فَذَرْهُمْ حَتَّىٰ يُلَٰقُوا۟ يَوْمَهُمُ ٱلَّذِى فِيهِ يُصْعَقُونَ.

52:45. எனவே இத்தகையவர்களை நீங்கள் அவர்கள் போக்கில் விட்டுவிடுங்கள். அவர்களை மூர்ச்சையாக்கும் பேராபத்துகள் வந்தால் தான் அவர்கள் நம்புவார்கள் போலும்.


يَوْمَ لَا يُغْنِى عَنْهُمْ كَيْدُهُمْ شَيْـًۭٔا وَلَا هُمْ يُنصَرُونَ.

52:46.அத்தகைய கால கட்டத்தில் அவர்களுடைய சதி திட்டங்கள் எதுவும் ஈடேறாது. அதனால் அவர்களுக்கு எந்தப் பலனும் கிடைக்காது. அவர்களுக்கு யாரும் உதவி செய்யவும் முடியாது.


وَإِنَّ لِلَّذِينَ ظَلَمُوا۟ عَذَابًۭا دُونَ ذَٰلِكَ وَلَٰكِنَّ أَكْثَرَهُمْ لَا يَعْلَمُونَ.

52:47. எனவே அநியாய அக்கிரம செயல்களை செய்தோருக்கு இவ்வுலகிலும் வேதனைகள் கிடைக்கும். மரணத்திற்குப் பின்பும் அவ்வேதனைகள் தொடரும். இந்த உண்மையை அவர்களில் பெரும்பாலோர் அறிய மாட்டார்கள்.


وَٱصْبِرْ لِحُكْمِ رَبِّكَ فَإِنَّكَ بِأَعْيُنِنَا ۖ وَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ حِينَ تَقُومُ.

52:48. எனவே அவர்களுடைய வீண் பேச்சை கேட்டு விசாரப்படாதீர்கள். நீங்கள் இறைவனின் ஆட்சியமைப்பு திட்டங்கள் நிறைவேற நிலைத்திருந்து செயல்படுங்கள். இறைவனின் பரிபாலன திட்டத்தை சிறப்பாக நடத்தி, போற்றுதலுக்குரியதாக ஆக்கிட காலை முதல் மாலை வரையில் அயராது உழைத்து வாருங்கள்.


وَمِنَ ٱلَّيْلِ فَسَبِّحْهُ وَإِدْبَٰرَ ٱلنُّجُومِ.

52:49. அவசியம் ஏற்படின் இரவின் சிறு பகுதியிலும், விடிவதற்கு முன் சில நேரத்தையும் இதற்காக ஒதுக்கி இறைவனின் செயல் திட்டங்களைப் பற்றி தீவரமாக ஆலோசித்து செயல்பட்டு வாருங்கள்.