بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ

51:0.அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் அறிவுரைப்படியே அனைத்துக் காரியங்களையும் செய்ய நாடுகிறேன். (பார்க்க 6:162)


وَٱلذَّٰرِيَٰتِ ذَرْوًۭا.

51:1. புழுதியைக் கிளப்பும் காற்றை கவனித்துப் பாருங்கள்.


فَٱلْحَٰمِلَٰتِ وِقْرًۭا.

51:2. மழை நீரைச் சுமந்து செல்லும் காற்றை கவனித்துப் பாருங்கள்.


فَٱلْجَٰرِيَٰتِ يُسْرًۭا.

51:3. திசைகள் மாறிமாறி வீசும் கடல் காற்றை கவனித்துப் பாருங்கள்.


فَٱلْمُقَسِّمَٰتِ أَمْرًا.

51:4. உலகம் முழுவதும் பருவக் காலத்திற்கு ஏற்ப மழை நீரை பகிர்ந்து அளிக்கும் காற்றை கவனித்துப் பாருங்கள்.
காற்றின் செயல்பாடுகள் எதற்கு ஒப்பாகின்றன என்று தெரியுமா? இறைச் செய்திகள் அனல் பறக்கும் போது, அந்த செய்திகளை சுமந்து செல்பவர்கள் இங்கும் அங்குமாகப் பறந்து சென்று சமூகத்தாருக்கு தேவையான செய்திகளை பகிர்ந்து அளிப்பதற்கு ஒப்பாகின்றனர். இவை யாவும் இறைவனின் செயல்திட்டங்களே என்ற


إِنَّمَا تُوعَدُونَ لَصَادِقٌۭ.

51:5. உண்மைக்கு சாட்சியாக விளங்குகின்றன. இதுவே அல்லாஹ்வின் வாக்கு ஆகும்.


وَإِنَّ ٱلدِّينَ لَوَٰقِعٌۭ.

51:6. எனவே அல்லாஹ்வின் நியதிப்படி தீயவர்கள் செய்யும் செயல்களுக்கு ஏற்றவகையில், மூஃமின்களின் கரங்களால் தண்டனை கிடைப்பது உறுதி என்பதே அந்த வாக்காகும்.


وَٱلسَّمَآءِ ذَاتِ ٱلْحُبُكِ.

51:7. மேலும் வானத்தை அலங்கரிக்கும் நட்சத்திரங்களைப் பாருங்கள். அவை பல்வேறு கோணங்களில் பிரிந்திருந்தும் வானத்தை எவ்வாறு அலங்கரிக்கின்றன என்பதை கவனித்தீர்களா?
அதே போல் குர்ஆனின் சொல்லும் பல கோணங்களில் இருந்தும் அவற்றின் மையக் கருத்து ஒரே திசையை நோக்கி உள்ளது. அதாவது மனிதனுக்கு அழகான வாழ்வு கிடைக்க வேண்டும் என்பதே அதன் மையக் கருத்தாகும்.


إِنَّكُمْ لَفِى قَوْلٍۢ مُّخْتَلِفٍۢ.

51:8. ஆனால் மனிதனுடைய பேச்சிலோ எண்ணற்ற முரண்பாடுகளும் மாறுபட்ட செயல்களும்தான் உள்ளன.


يُؤْفَكُ عَنْهُ مَنْ أُفِكَ.

51:9. அத்தகைய முரண்பாடுகளிலிருந்து விடுபட்டு நேர்வழியின் பக்கம் செல்ல விரும்புவோர் திருந்தி விடுகிறார்கள்.


قُتِلَ ٱلْخَرَّٰصُونَ.

51:10. இறைவழிகாட்டுதலை பொய்ப்பிப்பவர்கள் அழிந்தே போகிறார்கள்.


ٱلَّذِينَ هُمْ فِى غَمْرَةٍۢ سَاهُونَ.

51:11. அவர்கள் எத்தகையோர் என்றால் மடமையில் அலட்சியமாக இருப்பவர்கள் ஆவர்.


يَسْـَٔلُونَ أَيَّانَ يَوْمُ ٱلدِّينِ.

51:12. மனித செயல்களின் விளைவுகள் தோற்றத்திற்கு வரும் நாள் எப்போது வரும் என்று ஏளனமாக கேட்பவர்கள்.


يَوْمَ هُمْ عَلَى ٱلنَّارِ يُفْتَنُونَ.

51:13. அப்படி வருவது அவர்களுக்கு நல்லதொரு காட்சியா? பார்த்து ரசிப்பதற்கு? இல்லையே! தாளா வேதனைகளை அனுபவிக்க வேண்டிய காலம் ஆயிற்றே! இதை அவர்களிடம் எடுத்துரையுங்கள்.


ذُوقُوا۟ فِتْنَتَكُمْ هَٰذَا ٱلَّذِى كُنتُم بِهِۦ تَسْتَعْجِلُونَ.

51:14. அப்படியொரு கால கட்டத்தில், “நீங்கள் எதிர்பார்த்த வேதனைகளை அனுபவியுங்கள். இதைத் தானே நீங்கள் அவசரப்படுத்திக் கொண்டு இருந்தீர்கள்?” என்று கூறுவதாகத்தான் நிலைமை இருக்கும்.


إِنَّ ٱلْمُتَّقِينَ فِى جَنَّٰتٍۢ وَعُيُونٍ.

51:15. மாறாக இறைவழிகாட்டுதலை பேணி நடந்து கொண்டவர்கள், சுவனத்து சோலைகளிலும் நீரூற்றுகளிலும் மகிழ்வுடன் இருப்பார்கள்.


ءَاخِذِينَ مَآ ءَاتَىٰهُمْ رَبُّهُمْ ۚ إِنَّهُمْ كَانُوا۟ قَبْلَ ذَٰلِكَ مُحْسِنِينَ.

51:16. இறைவனின் பரிபாலன அமைப்பிலிருந்து கிடைக்கின்ற அனைத்து வாழ்வாதாரங்களையும் பெற்று மகிழ்வுடன் இருப்பார்கள். இதற்கு காரணம் அவர்கள் இறைவழிகாட்டுதலின் படி நன்மையான செயல்களையே செய்து வந்தார்கள்.


كَانُوا۟ قَلِيلًۭا مِّنَ ٱلَّيْلِ مَا يَهْجَعُونَ.

51:17. அவர்கள் இரவிலும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட கடமைகளை நிறைவேற்றி வந்தார்கள். எனவே அவர்களால் இரவில் சொற்ப நேரமே தூங்க முடிந்தது.


وَبِٱلْأَسْحَارِ هُمْ يَسْتَغْفِرُونَ.

51:18. அவர்கள் பொழுது விடிவதற்கு முன்பே கண் விழித்து சமுதாய பாதுகாப்பு நடவடிக்கை பற்றியும், மக்களின் துயர் துடைப்பு பணிகளைப் பற்றியும் திட்டங்களைத் தீட்டி வந்தனர்.


وَفِىٓ أَمْوَٰلِهِمْ حَقٌّۭ لِّلسَّآئِلِ وَٱلْمَحْرُومِ.

51:19. அவர்கள் உழைத்து பெற்ற செல்வங்களை, வசதியற்ற ஏழை எளியோர் மற்றும் சம்பாதிக்க இயலாதோரின் வாழ்க்கை தரம் உயர கொடுத்து உதவுவது தம் கடமை என்பதை அறிந்து அவற்றை தக்க முறையில் பயன்படுத்தினார்கள்.


وَفِى ٱلْأَرْضِ ءَايَٰتٌۭ لِّلْمُوقِنِينَ.

51:20. இப்படியாக இறைவழிகாட்டுதலில் முழுமையான நம்பிக்கை வைத்து செயல்படுபவர்களுக்கு, பல்வேறு அனுபவ சான்றுகள் கிடைக்கும். இதற்காக பூமியை சுற்றி செயல்படும் காற்றின் செயல்பாடுகளை ஆதாரமாக எடுத்து சொன்னோம்.


وَفِىٓ أَنفُسِكُمْ ۚ أَفَلَا تُبْصِرُونَ.

51:21. அதுபோல உங்களுக்குள்ளேயும் பல அத்தாட்சிகள் இருக்கின்றன. அதை பற்றி எப்போதாவது சிந்தித்ததுண்டா?
எவ்வாறு காற்று மண்டலம் பூமியை சுற்றி எல்லா பகுதி மக்களுக்கும் மழை பொழிய வைக்கிறதோ, அது போல மனிதனும் கூட்டாகத் தான் வாழ முடியும். எனவே சமுதாயம் என்பது ஒரு மனிதனின் உடலைப் போன்றது. உடலுருப்புகள் அனைத்தும் ஒருங்கிணைந்து செயல்பட்டால் தான் மனிதனால் நிம்மதியாக வாழ முடியும். அதில் ஏதாவது ஓர் உருப்பு பாதித்தால், அதனால் நிம்மதி இழக்க நேரிடும். அதுபோல அனைத்து தரப்பு மக்களும் ஒருங்கிணைந்து செயல்பட்டால் தான் ,சமுதாயம் சிறப்பாக விளங்கும். அதில் ஏதவாது ஒரு பகுதி மக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால், அதை உடனே சரிசெய்ய வேண்டும். அவ்வாறு செய்யவில்லை என்றால் மற்ற பகுதிக்கும் பரவி பாதிப்புகள் பெரியதாகி நிலைமையை கட்டுப்படுத்த முடியாமல் போய்விடும். இதை மனதில் பதிய வைத்துக் கொண்டு செயலாற்றுங்கள்.


51:22. உங்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குப்படி வானத்திலிருந்தும் வாழ்வாதாரங்களைப் பெற்று வருகிறீர்கள்.


فَوَرَبِّ ٱلسَّمَآءِ وَٱلْأَرْضِ إِنَّهُۥ لَحَقٌّۭ مِّثْلَ مَآ أَنَّكُمْ تَنطِقُونَ.

51:23. இப்படியாக வானத்திலும் பூமியிலும் செய்யப்பட்டுள்ள வாழ்வாதார ஏற்பாடுகளைப் பற்றி எடுத்துரைத்த பின்பும் அவர்களுக்குப் புரியவில்லை என்றால் அவர்களிடையே பேசப்பட்டு வருவது போல வரலாற்று ஆதாரங்களை எடுத்துரைத்து உண்மையை விளக்குங்கள்.


هَلْ أَتَىٰكَ حَدِيثُ ضَيْفِ إِبْرَٰهِيمَ ٱلْمُكْرَمِينَ.

51:24. அந்த வரிசையில் கண்ணியமிக்க இப்றாஹீம் நபியின் வரலாற்று உண்மைகள் உம்மிடம் வந்துள்ளதா?


إِذْ دَخَلُوا۟ عَلَيْهِ فَقَالُوا۟ سَلَٰمًۭا ۖ قَالَ سَلَٰمٌۭ قَوْمٌۭ مُّنكَرُونَ.

51:25. ஒரு நாள், முன்பின் தெரியாத சிலர் அவரிடம் வந்து, சாந்தியும் மனஅமைதியும் உண்டாவதாக என்றனர். பதிலுக்கு இவரும் வந்தவர்களின் நலனை விரும்புவதாகக் கூறி அவர்களை உபசரித்தார். எனினும் தனக்கு அறிமுகம் இல்லாத அன்னியர்களாக இருக்கிறார்களே என வியந்தார்.


فَرَاغَ إِلَىٰٓ أَهْلِهِۦ فَجَآءَ بِعِجْلٍۢ سَمِينٍۢ.

51:26. வந்தவர்களுக்கு விருந்தளிக்க தன் வீட்டிலுள்ளவர்களிடம் சொல்லி காளைக் கன்றின் மாமிசத்தை பொறித்து கொண்டுவந்தார்.


فَقَرَّبَهُۥٓ إِلَيْهِمْ قَالَ أَلَا تَأْكُلُونَ.

51:27. அவர்கள் முன் கொண்டு வந்து, அதைப் புசிக்கும்படி அவர் கேட்டுக்கொண்டார்.


فَأَوْجَسَ مِنْهُمْ خِيفَةًۭ ۖ قَالُوا۟ لَا تَخَفْ ۖ وَبَشَّرُوهُ بِغُلَٰمٍ عَلِيمٍۢ.

51:28. அவர்கள் அதை உண்ணாதிருப்பதைக் கண்டு அவருக்கு கவலை ஏற்பட்டது. காரணம் பொதுவாக கெட்ட செய்தியை கொண்டுவருபவர்கள் உண்ண மாட்டார்கள். இதனை கவனித்த அவர்கள், அவரை ஆறுதல் அளிக்கும் வகையில் அவருக்கு அறிவுமிக்க ஒரு மகன் பிறப்பான் என்ற இறைவனின் செய்தியை அறிவித்தனர்.


فَأَقْبَلَتِ ٱمْرَأَتُهُۥ فِى صَرَّةٍۢ فَصَكَّتْ وَجْهَهَا وَقَالَتْ عَجُوزٌ عَقِيمٌۭ.

51:29. இந்தச் செய்தியை கேட்ட அவரது மனைவி வியப்பில் ஆழ்ந்து, தன் விரல்களால் வாயை மூடியவாறு ஓடி வந்தார். குழந்தை பெறும் வயதை கடந்தும், வயதான காலத்தில் தனக்குக் குழந்தை பிறக்குமா என அவர்களிடம் வியந்து கேட்டார்.


قَالُوا۟ كَذَٰلِكِ قَالَ رَبُّكِ ۖ إِنَّهُۥ هُوَ ٱلْحَكِيمُ ٱلْعَلِيمُ.

51:30. “இதில் என்ன வியப்பு இருக்கப் போகிறது? உமக்கு குழந்தை இந்த வயதான காலத்திலேயும் பிறக்கும். இது இறைவனின் செய்தியாகும். நிச்சயமாக அவன் நடக்காத ஒன்றை ஒருபோதும் சொல்ல மாட்டான். ஏனெனில் உமக்கு குழந்தை இல்லாததும் இனி பிறக்கப்போவதும் அவனுக்குத் தெரியும்” என்றனர்.


۞ قَالَ فَمَا خَطْبُكُمْ أَيُّهَا ٱلْمُرْسَلُونَ.

51:31. அதன்பின் அந்த செய்தியாளர்களிடம் மேற்கொண்டு பயணத்திட்டம் என்னவென்று இப்றாஹீம் நபி வினவினார்.


قَالُوٓا۟ إِنَّآ أُرْسِلْنَآ إِلَىٰ قَوْمٍۢ مُّجْرِمِينَ.

51:32. அதற்கு அவர்கள், தீய செயல்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் சமூகத்தினரை நோக்கி செல்லவிருப்பதாக சொன்னார்கள்.


لِنُرْسِلَ عَلَيْهِمْ حِجَارَةًۭ مِّن طِينٍۢ.

51:33. அச்சமூகத்தார் மீது அக்கினிப் பிழம்பு எறியப்படும் செய்தியைக் கொண்டு வந்துள்ளதாக சொன்னார்கள்.


مُّسَوَّمَةً عِندَ رَبِّكَ لِلْمُسْرِفِينَ.

51:34. இது வரம்பு மீறி நடப்பவர்களுக்கு உங்கள் இறைவனிடமிருந்து கிடைக்கின்ற தண்டனையின் அடையாளமாகும் என்றனர்.


فَأَخْرَجْنَا مَن كَانَ فِيهَا مِنَ ٱلْمُؤْمِنِينَ.

51:35. ஆகவே அவ்வூரில் இருக்கும் முஃமின்களை நாம் வெளியேறிவிட சொல்வோம்.


فَمَا وَجَدْنَا فِيهَا غَيْرَ بَيْتٍۢ مِّنَ ٱلْمُسْلِمِينَ.

51:36. அவ்வாறே அவர்கள் அங்கு சென்று, தாம் கொண்டு வந்துள்ள செய்தியை லூது நபியிடம் அறிவித்தார்கள். அங்கு லூது நபியை சேர்ந்த சிலரைத் தவிர, மற்றவர்கள் யாரும் இறைவனுக்கு அடிபணிந்து செயல்படுபவர்களாக தெரியவே இல்லை. அவ்வாறு அழிந்து போனவர்களில் அவரது மனைவியும் இடம் பெற்றாள் (பார்க்க 11:81)


وَتَرَكْنَا فِيهَآ ءَايَةًۭ لِّلَّذِينَ يَخَافُونَ ٱلْعَذَابَ ٱلْأَلِيمَ.

51:37. எனவே தீயவர்களுக்கு தண்டனை எந்த அளவுக்கு கடுமையானதாக இருந்தது என்பதை வரவிருக்கும் சந்ததியர்களுக்கு எடுத்துக்காட்டாக விளங்கச் செய்தோம்.


وَفِى مُوسَىٰٓ إِذْ أَرْسَلْنَٰهُ إِلَىٰ فِرْعَوْنَ بِسُلْطَٰنٍۢ مُّبِينٍۢ.

51:38. அதே போன்று மூஸா நபியின் வரலாற்றிலும் பல படிப்பினைகள் உள்ளன. இறைவன் தெளிவான ஆதாரங்களுடன் ஃபிர்அவ்ன் மன்னனிடம் அவரை அனுப்பி வைத்த போது,


فَتَوَلَّىٰ بِرُكْنِهِۦ وَقَالَ سَٰحِرٌ أَوْ مَجْنُونٌۭ.

51:39. அவன் தம்மிடமிருந்த ஆட்சி அதிகாரம், செல்வங்கள் மற்றும் படைப் பலம் ஆகியவற்றின் மமதையில் அவருடைய அறிவுரைகளை ஏற்க மறுத்து விட்டான். மேலும் அந்த அறிவுரைகள் யாவும் மக்களை ஏமாற்றி வசீயப்படுத்தும் ஏமாற்று கலைகளே என்றும், சொன்னதையே திரும்ப திரும்பக் கூறும் பைத்தியக்காரர் என்றும் கூறினான்.


فَأَخَذْنَٰهُ وَجُنُودَهُۥ فَنَبَذْنَٰهُمْ فِى ٱلْيَمِّ وَهُوَ مُلِيمٌۭ.

51:40. எனவே அவனும் அவனது படைவீரர்களும் நதியை கடக்கும் போது, அதில் வீசி எரியப்பட்டு மடிந்து விட்டனர். எதைப் பற்றியும் சிந்திக்காமல் செயல்பட்டதால் அவன் பல நிந்தனைகளுக்கு ஆளாகிவிட்டான். (விளக்கத்திற்குப் பார்க்க 7:136)


وَفِى عَادٍ إِذْ أَرْسَلْنَا عَلَيْهِمُ ٱلرِّيحَ ٱلْعَقِيمَ.

51:41. அதே போன்று ‘ஆது’ சமூகத்தாருக்கு ஏற்பட்ட வீழ்ச்சியிலும் பல படிப்பினைகள் கிடைக்கும். அந்நாட்டில் வீசிய பூதக் காற்றில் அவர்கள் சிக்கி அழிந்து போனார்கள்.


مَا تَذَرُ مِن شَىْءٍ أَتَتْ عَلَيْهِ إِلَّا جَعَلَتْهُ كَٱلرَّمِيمِ.

51:42. அந்த காற்று எதிரில் பட்டதை எல்லாம் தூள் தூளாக்கி விட்டது. அந்த அளவுக்கு அது வேகமான சுழல் காற்றாக இருந்தது.


وَفِى ثَمُودَ إِذْ قِيلَ لَهُمْ تَمَتَّعُوا۟ حَتَّىٰ حِينٍۢ.

51:43. மேலும் ‘சமூது’ சமூகத்தாரின் வீழ்ச்சியிலும் படிப்பினைக் கிடைக்கும். அவர்களிடம் வந்த இறைத் தூதர்கள் நிலையான சந்தோஷமான வாழ்விற்காக அழைப்பு விடுத்தனர். ஆனால் அவர்களோ தற்காலிக சிக போகங்களின் பக்கமே விரைந்தோடினர். எனவே சில காலம் மட்டுமே அவர்களால் சுகம் அனுபவிக்க முடிந்தது.


فَعَتَوْا۟ عَنْ أَمْرِ رَبِّهِمْ فَأَخَذَتْهُمُ ٱلصَّٰعِقَةُ وَهُمْ يَنظُرُونَ.

51:44. அவர்கள் அனைவரும் இறைவனின் கட்டளையை மீறி கண்மூடித்தனமாக நடந்து கொண்டார்கள். அவர்களுக்கு விடப்பட்ட முன்னெச்சரிக்கையைப் பொருட்படுத்தவே இல்லை. எனவே அங்கு ஏற்பட்ட பூகம்பத்தில் அவர்கள் சிக்கி அழிந்து போனார்கள்.


فَمَا ٱسْتَطَٰعُوا۟ مِن قِيَامٍۢ وَمَا كَانُوا۟ مُنتَصِرِينَ.

51:45. அங்கு ஏற்பட்ட பூகம்பத்தின் கடுமையை அவர்களால் தாக்குபிடிக்க முடியாமல் போயிற்று. அவர்களுக்கு யாராலும் உதவியும் செய்ய முடியாமல் போயிற்று. அதனால் அவர்கள் அழிந்து போனார்கள்.


وَقَوْمَ نُوحٍۢ مِّن قَبْلُ ۖ إِنَّهُمْ كَانُوا۟ قَوْمًۭا فَٰسِقِينَ.

51:46. மேலும் இவர்களுக்கெல்லாம் முன்பாக நூஹ்வுடைய சமூகத்தாரும் அழிவை சந்தித்தார்கள். அவர்களும் அல்லாஹ்வின் அறிவுரைகளை மதிக்காமல் வாழ்ந்ததால் அங்கு ஏற்பட்ட பிரளயத்தில் அழிந்து போயினர்.
மேலும் இந்த வரலாறு மற்றும் பிரபஞ்ச படைப்புகளின் ஆதாரங்களையும் எடுத்துரைத்த பின்பும் இறைவழிகாட்டுதலின் படி வாழ முன்வரவில்லை என்றால் அவர்களிடம் மேற்கொண்டு சில உண்மைகளை எடுத்துரையுங்கள்.


وَٱلسَّمَآءَ بَنَيْنَٰهَا بِأَيْي۟دٍۢ وَإِنَّا لَمُوسِعُونَ.

51:47. அகிலத்தின் படைப்புகள் யாவும் அல்லாஹ்வின் அளவிலா வல்லமையைக் கொண்டு தான் உருவாயின. அதுமட்டுமின்றி அவற்றின் விரிவாக்கம் தொடர்ந்த வண்ணம் உள்ளது என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்.


وَٱلْأَرْضَ فَرَشْنَٰهَا فَنِعْمَ ٱلْمَٰهِدُونَ.

51:48. இன்னும் பூமி உருண்டை வடிவில் இருந்தும் அதில் நீங்கள் செங்குத்தாக நின்று செயல்படும் வகையில் விரிப்பாக ஆக்கியதும் ஏக இறைவனே. இப்படி உருவாக்கிய இறைவனின் அளவற்ற வல்லமையை இது சான்று பகர்கின்றது.


وَمِن كُلِّ شَىْءٍ خَلَقْنَا زَوْجَيْنِ لَعَلَّكُمْ تَذَكَّرُونَ.

51:49. அதுமட்டுமின்றி பூமியில் உள்ள படைப்புகள் அனைத்திலும் ஜோடி ஜோடியாக படைத்திருப்பதும் இறைவனின் வல்லமைக்கு சான்றாக இல்லையா?


فَفِرُّوٓا۟ إِلَى ٱللَّهِ ۖ إِنِّى لَكُم مِّنْهُ نَذِيرٌۭ مُّبِينٌۭ.

51:50. ஆகவே நீங்கள் அனைவரும் அல்லாஹ்வின் வழிகாட்டுதலின் பக்கம் விரைந்து வாருங்கள். உங்களுடைய தவறான செயல்கள் எவை என்பதையும், அவற்றால் ஏற்படும் விபரீத விளைவுகள் என்னவாக இருக்கும் என்பதையும் நான் உங்களுக்கு எடுத்துரைத்து முன்னெச்சரிக்கை செய்கின்றேன்.


وَلَا تَجْعَلُوا۟ مَعَ ٱللَّهِ إِلَٰهًا ءَاخَرَ ۖ إِنِّى لَكُم مِّنْهُ نَذِيرٌۭ مُّبِينٌۭ.

51:51. மேலும் அல்லாஹ்வின் வழிகாட்டுதலுக்கு இணையாக வேறு வழிமுறைகளைப் பின்பற்றாதீர்கள். உங்களுடைய தவறான செயல்கள் எவை என்பதையும், அவற்றால் ஏற்படும் விபரீத விளைவுகள் என்னவாக இருக்கும் என்பதையும் நான் உங்களுக்கு எடுத்துரைத்து முன்னெச்சரிக்கை செய்கின்றேன்.
ஆனால் இவர்களோ உன் அறிவுரையை கேட்பதாக இல்லை. மாறாக உம்மை அவர்கள் விதவிதமாக விமர்சிக்கிறார்கள். இது ஒன்றும் புதிதான ஒன்றல்ல.


كَذَٰلِكَ مَآ أَتَى ٱلَّذِينَ مِن قَبْلِهِم مِّن رَّسُولٍ إِلَّا قَالُوا۟ سَاحِرٌ أَوْ مَجْنُونٌ.

51:52. இவ்வாறே இவர்களுக்கு முன் வாழ்ந்த சமூகத்தவர்களும் இறைத் தூதர்கள் வரும் போதெல்லாம் அவர்களை பார்த்து, “பேச்சில் மயக்கும் வல்லவர் அல்லது பைத்தியக்காரர்” என்றே கூறி இருக்கிறார்கள்.


أَتَوَاصَوْا۟ بِهِۦ ۚ بَلْ هُمْ قَوْمٌۭ طَاغُونَ.

51:53. இவர்களுடைய கேலிப் பேச்சை கேட்கும்போது, ஒவ்வொரு சமூகத்தவரும், தம் கடைசி காலத்தில் வருங்கால சமூகத்தவர்களிடம் இவ்வாறு தான் இறைத்தூதர்களை பரிகசிக்க வேண்டும் என்று அறிவுறுத்தி சென்றார்கள் போலும். எல்லோருமே வழி தவறிய சமூகத்தாராகவே இருக்கிறார்களே!


فَتَوَلَّ عَنْهُمْ فَمَآ أَنتَ بِمَلُومٍۢ.

51:54. எனவே அவர்களைப் பற்றி நீங்கள் கவலைப் படாதீர்கள். அவர்களை அவர்கள் போக்கில் விட்டுவிடுங்கள். அப்படி அவர்களைவிட்டு நீங்கள் விலகிவிட்டால் அது உங்கள் மீது குற்றமாகாது.


وَذَكِّرْ فَإِنَّ ٱلذِّكْرَىٰ تَنفَعُ ٱلْمُؤْمِنِينَ.

51:55. ஆனால் இறைவழிகாட்டுதலை ஏற்க விரும்பும் மூஃமின்களுக்கு நல்லறிவுரைகளை தொடர்ந்து செய்து வாருங்கள். இது நற்பலன்களை அளிக்கக் கூடிய செயலாகும்.


وَمَا خَلَقْتُ ٱلْجِنَّ وَٱلْإِنسَ إِلَّا لِيَعْبُدُونِ.

51:56. ஆக நகர்புற மக்களானாலும் மலைவாழ் மக்களானாலும் சரி, அவர்கள் அனைவரும் அல்லாஹ்வின் வழிகாட்டுதலுக்கு மட்டும் கட்டுப்பட்டு வாழ்வதற்காகவே படைக்கப்பட்டு இருக்கிறார்கள்.


مَآ أُرِيدُ مِنْهُم مِّن رِّزْقٍۢ وَمَآ أُرِيدُ أَن يُطْعِمُونِ.

51:57. அல்லாஹ்வின் வழிகாட்டுதலின்படி உருவாகும் ஆட்சியமைப்பு உங்களிடமிருந்து எதையும் எதிர்பார்க்கவில்லை. நீங்கள் அனைவரும் வசதி வாய்ப்புகளுடன் சீரும் சிறப்புமாக வாழவேண்டும் என்றே விரும்புகிறது.


إِنَّ ٱللَّهَ هُوَ ٱلرَّزَّاقُ ذُو ٱلْقُوَّةِ ٱلْمَتِينُ.

51:58. உங்களுக்கு கிடைக்கின்ற வாழ்வாதாரங்கள் யாவும் அல்லாஹ்வின் வல்லமையைக் கொண்டு உருவான நீர், காற்று, சூரிய வெப்பம், பூமியில் உள்ள சக்திகள் மற்றும் பூமியை சுற்றியுள்ள வானம் போன்ற உறுதி மிக்க ஏற்பாடுகளின் மூலம்தான் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.


فَإِنَّ لِلَّذِينَ ظَلَمُوا۟ ذَنُوبًۭا مِّثْلَ ذَنُوبِ أَصْحَٰبِهِمْ فَلَا يَسْتَعْجِلُونِ.

51:59. எனவே இவர்களுக்கு முன் வாழ்ந்தவர்கள் தமக்கு கிடைத்த வாழ்வாதாரங்களை தவறாகப் பயன்படுத்தி தம் பங்கிற்கு வேதனைகளை அனுபவித்தது போல் இவர்களும் எதிர் பார்க்கின்றனரா? ஆகவே அவர்கள் நம்மை அவசரப்படுத்த வேண்டாம். வேதனைகள் வரவேண்டிய நேரத்தில் கண்டிப்பாக வரும். அப்போது


فَوَيْلٌۭ لِّلَّذِينَ كَفَرُوا۟ مِن يَوْمِهِمُ ٱلَّذِى يُوعَدُونَ.

51:60. இறைவனின் வழிகாட்டுதலை நிராகரித்து தவறான செயல்களைச் செய்வோருக்கு வாக்களிக்கட்ட கேடுகள் சூழ்ந்து கொள்வது சர்வ நிச்சயம்.