بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
50:0.அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் அறிவுரைப்படியே அனைத்துக் காரியங்களையும் செய்ய நாடுகிறேன். (பார்க்க 6:162)
قٓ ۚ وَٱلْقُرْءَانِ ٱلْمَجِيدِ.
50:1."ஃகோஃப்" என்ற தலைப்பில் இந்த குர்ஆன் மூலம் அறிவிக்கப்படும் விஷயங்களை சற்று கவனமாகப் படித்துப் பாருங்கள். அதிலிருந்து பல உண்மைகள் விளங்கும்.
بَلْ عَجِبُوٓا۟ أَن جَآءَهُم مُّنذِرٌۭ مِّنْهُمْ فَقَالَ ٱلْكَٰفِرُونَ هَٰذَا شَىْءٌ عَجِيبٌ.
50:2. நீங்கள் பேசும் மொழியிலேயே தெளிவாக எடுத்துரைக்கும் இறைவழிகாட்டுதல் வந்துள்ளதை படித்து, உங்களுக்கு வியப்பாக இருக்கிறதா? அல்லது அவற்றை எடுத்துரைப்பவரும் தம்மைப் போன்ற ஒரு சாதாரண மனிதராகவே இருக்கிறாரே என்றும் ஆச்சரியப்படுகிறீர்களா? அவ்வாறு வியப்படைவதற்கு ஒன்றுமில்லை. ஆனால் இதை ஏற்க மறுப்பவர்களுக்குத் தான் ஆச்சரியமான விஷயமாகத் தோன்றும்.
أَءِذَا مِتْنَا وَكُنَّا تُرَابًۭا ۖ ذَٰلِكَ رَجْعٌۢ بَعِيدٌۭ.
50:3. செத்து மடிந்து கிடக்கும் இந்த சமுதாயம் மீண்டும் உயிர்பெற்று எழும் என்பதை கேள்விபடும் போது, அது அவர்களுக்கு வியப்பாக இருக்கிறதா அல்லது மனிதன் இறந்து மண்ணோடு மண்ணாகிப் போன பின் மீண்டும் எழுப்பப்படுவது பற்றி கேள்வி பட்டு வியப்படைகிறார்களா? அது எவ்வாறு சாத்தியமாகும் என எண்ணுகிறார்களா? மனித அறிவுக்குப் புலப்படாத ஒன்றாக இருக்கின்றதே என்று வியப்படைகிறார்களா?
قَدْ عَلِمْنَا مَا تَنقُصُ ٱلْأَرْضُ مِنْهُمْ ۖ وَعِندَنَا كِتَٰبٌ حَفِيظٌۢ.
50:4. மனிதன் மரணித்த பின் பூமியில் ஏற்படும் எடைக்குறைவுப் பற்றிய உண்மை அல்லாஹ்வுக்கு தெரியும். அவன் செய்யும் ஒவ்வொரு செயலும் பாதுகாப்பாக பதிவாக்கப்படுகிறது.
அதவாது மனித உடல் மண்ணோடு மாண்ணாகி விடுகிறது. ஆனால் அவனது “நஃப்ஸ்” (அ) “ரூஹ்” எனும் “ஆத்மா” அத்துடன் அழிவதில்லை. அது அடுத்தக் கட்ட வாழ்க்கைக்கு முன்னேறிச் செல்ல வேண்டியுள்ளது.
بَلْ كَذَّبُوا۟ بِٱلْحَقِّ لَمَّا جَآءَهُمْ فَهُمْ فِىٓ أَمْرٍۢ مَّرِيجٍ.
50:5. இதுதான் மனித வாழ்வைப் பற்றி இறைவனின் செயல்திட்டமாகும். ஆனால் இதைப் பற்றி எடுத்துரைக்கும் போது, அவை யாவும் பொய்யென கூறி விடுகிறார்கள். அவர்களுக்கு இதைப் பற்றிய தெளிவு கிடைக்காமல் குழப்பத்திலேயே இருக்கிறார்கள் என்பது தான் உண்மை.
أَفَلَمْ يَنظُرُوٓا۟ إِلَى ٱلسَّمَآءِ فَوْقَهُمْ كَيْفَ بَنَيْنَٰهَا وَزَيَّنَّٰهَا وَمَا لَهَا مِن فُرُوجٍۢ.
50:6. இறைவனின் இந்த கூற்று உண்மையென நம்பவேண்டும் என்றால், அவர்கள் உலக படைப்புகளைப் பற்றி ஆராய்ந்து பார்க்கட்டும். அவர்கள் மேல் இருக்கும் வானத்தைப் அண்ணார்ந்துப் பார்க்கட்டும். அது எவ்வாறு கட்டுக் கோப்பாக அமைக்கப்பட்டு, அதில் எவ்வித வெடிப்பும் இல்லாமல் அழகாக படைக்கப்பட்டுள்ளன என்பதை கவனித்துப் பார்க்கட்டும்.
இது உண்மையென்றால் இறைவன் மனிதனின் அடுத்தக் கட்ட வாழ்வைப் பற்றி கூறுவதும் உண்மையே.
وَٱلْأَرْضَ مَدَدْنَٰهَا وَأَلْقَيْنَا فِيهَا رَوَٰسِىَ وَأَنۢبَتْنَا فِيهَا مِن كُلِّ زَوْجٍۭ بَهِيجٍۢ.
50:7. மேலும் பூமியை விரிவாக்கி அதில் உறுதி வாய்ந்த மலைகளை அமைத்துள்ளதையும், பலதரப்பட்ட புற்பூண்டுகள் விளைவதையும் கவனித்துப் பார்க்கட்டும். அவற்றில் ஒவ்வொன்றிலும் ஜோடி ஜோடியாகப் படைத்துள்ளதையும் கவனித்துப் பார்க்கட்டும்.
இது உண்மையென்றால் இறைவன் மனிதனின் அடுத்தக் கட்ட வாழ்வைப் பற்றி கூறுவதும் உண்மையே.
تَبْصِرَةًۭ وَذِكْرَىٰ لِكُلِّ عَبْدٍۢ مُّنِيبٍۢ.
50:8. இந்த உண்மைகளை எடுத்துரைப்பதன் நோக்கமே மனிதனில் உள்ள அறியாமை என்கிற திரையை விலக்கி, அவனது அகப் பார்வையை திறக்க வேண்டும் என்பதற்காகவே ஆகும். ஒவ்வொருவரும் இறைவழிகாட்டுதலின்படி சிந்தித்து செயலாற்ற வேண்டும் என்பதற்காகவே ஆகும்.
وَنَزَّلْنَا مِنَ ٱلسَّمَآءِ مَآءًۭ مُّبَٰرَكًۭا فَأَنۢبَتْنَا بِهِۦ جَنَّٰتٍۢ وَحَبَّ ٱلْحَصِيدِ.
50:9. மேலும் இறைவனின் செயல்திட்டப்படி வானத்திலிருந்து மழை பொழிந்து பூமி பாக்கியம் மிக்கதாக ஆகிவிடுகிறது. அதைக் கொண்டு பூமியில் விதவிதமான தோட்டங்கள் உருவாகின்றன. மேலும் பல்வேறு தானிய வகைகளும் விளைகின்றன. அவற்றை அறுவடை செய்து பயன் பெறுகிறீர்கள்.
وَٱلنَّخْلَ بَاسِقَٰتٍۢ لَّهَا طَلْعٌۭ نَّضِيدٌۭ.
50:10. பூமியில் விளையும் மரங்களில் அடுக்கடுக்கான பாளைகளைக் கொண்ட நெடிய பேரீச்ச மரங்களும் அடங்கும்.
رِّزْقًۭا لِّلْعِبَادِ ۖ وَأَحْيَيْنَا بِهِۦ بَلْدَةًۭ مَّيْتًۭا ۚ كَذَٰلِكَ ٱلْخُرُوجُ.
50:11. அந்த விளைச்சல்கள் யாவும் மக்களுக்கு உணவாக பயன்படுகின்றன. ஆக இறைவன் எவ்வாறு மழை நீரைக் கொண்டு பூமியை உயிர்ப்பிக்கின்றானோ, அதே போல் இறைவழிகாட்டுதலைக் கொண்டு இறந்து கிடக்கும் மனித சமுதாயத்தை உயிர்ப்பிக்கிறான். மேலும் மனிதன் இறந்த பின்பும் உயிர்ப்பிக்கப்படுவான். இதில் இறைவனுக்கு என்ன சிரமம் இருக்கப் போகிறது?
كَذَّبَتْ قَبْلَهُمْ قَوْمُ نُوحٍۢ وَأَصْحَٰبُ ٱلرَّسِّ وَثَمُودُ.
50:12 இறைவனின் இச்செயல் திட்டத்தை மக்கள் பொய்ப்பிப்பது புதிதான ஒன்றல்ல. இதற்கு முன் வாழ்ந்த நூஹ்வுடைய சமுதாயம் மற்றும் ‘ராஸ்’ (பார்க்க 25:38) மற்றும் ‘சமூது’ போன்ற சமூகத்தாரும் பொய்ப்பித்தே இருக்கிறார்கள்.
وَعَادٌۭ وَفِرْعَوْنُ وَإِخْوَٰنُ لُوطٍۢ.
50:13. மேலும் அதே போன்று, ‘ஆது’, ‘ஃபிர்அவுன்’ மற்றும் ‘லூத்’ நபி காலத்தில் வாழ்ந்த சமுதாயத்தவர்களும் பொய்ப்பித்தே இருக்கிறார்கள்.
وَأَصْحَٰبُ ٱلْأَيْكَةِ وَقَوْمُ تُبَّعٍۢ ۚ كُلٌّۭ كَذَّبَ ٱلرُّسُلَ فَحَقَّ وَعِيدِ.
50:14. மேலும் ‘அஸ்ஹாபுல் ஐக்கதா’ மற்றும் அதைத் தொடர்ந்து வந்த சமூகத்தவர்களும் இவ்வாறே பொய்ப்பித்தார்கள். அவர்கள் அனைவரிடத்திலும் இறைவழிகாட்டுதலை எடுத்துரைக்கும் தூதர்கள் வந்தார்கள். அவர்கள் மூலம் இறைவன் செய்த முன்னெச்சரிக்கைகள் யாவும் உண்மையே என நிரூபணமாயிற்று.
أَفَعَيِينَا بِٱلْخَلْقِ ٱلْأَوَّلِ ۚ بَلْ هُمْ فِى لَبْسٍۢ مِّنْ خَلْقٍۢ جَدِيدٍۢ.
50:15. இறந்த பின் மீண்டும் எழுப்பப்படுவது பற்றி சந்தேகங் கொள்பவர்களிடம், “ஆதிமுதல் மனிதனை படைக்கும் விஷயத்தில் எப்போதாவது இறைவனுக்கு சோர்வு ஏற்பட்டதுண்டா?” என்று கேளுங்கள். அவ்வாறு ஒருபோதும் சோர்வு ஏற்பட்டதில்லை எனும்போது, மனிதனை மீண்டும் படைப்பதில் அவனுக்கு என்ன சிரமம் இருக்கப் போகிறது?
وَلَقَدْ خَلَقْنَا ٱلْإِنسَٰنَ وَنَعْلَمُ مَا تُوَسْوِسُ بِهِۦ نَفْسُهُۥ ۖ وَنَحْنُ أَقْرَبُ إِلَيْهِ مِنْ حَبْلِ ٱلْوَرِيدِ.
50:16. மனித படைப்பு இறைவனின் செயல் திட்டப்படியே உருவான ஒன்றாகும். எனவே அவன் மனதில் ஊடுருவிச் செல்லும் எண்ணங்களையும் அறிந்து கொள்ளும் பேராற்றல் உடையவன் தான் அல்லாஹ். ஏனெனில் அவன் மனிதனின் பிடரி நரம்பைவிட மிக அருகாமையில் இருப்பவன்.
إِذْ يَتَلَقَّى ٱلْمُتَلَقِّيَانِ عَنِ ٱلْيَمِينِ وَعَنِ ٱلشِّمَالِ قَعِيدٌۭ.
50:17. அதுமட்டுமின்றி அவன் அன்றாடம் செய்து வரும் செயல்களில் நன்மையோ தீமையோ அவற்றை பதிவு செய்பவர்கள் இருவர் வலப்புறத்திலும் இடப்புறத்திலும் உள்ளனர்.
அதாவது நீங்கள் செய்யும் செயல்களின் விளைவுகளிலிருந்து ஒருபோதும் தப்ப முடியாது.
مَّا يَلْفِظُ مِن قَوْلٍ إِلَّا لَدَيْهِ رَقِيبٌ عَتِيدٌۭ.
50:18. அவன் உச்சரிக்கும் ஒவ்வொரு சொல்லையும் பதிவாளர்கள் பதிவு செய்யாமல் விட்டுவிடுவதில்லை.
وَجَآءَتْ سَكْرَةُ ٱلْمَوْتِ بِٱلْحَقِّ ۖ ذَٰلِكَ مَا كُنتَ مِنْهُ تَحِيدُ.
50:19. இவ்வாறே அவனுடைய வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து, மரணத் தருவாயில் இறைவனின் கூற்று எல்லாமே உண்மையே என அவனுக்கு தெரிந்துவிடுகிறது. “நீ எதைப் பற்றி பயந்து கொண்டு இருந்தாயோ அதுதான் இது” என்று அவனிடம் அப்போது கூறுவதாக இருக்கும்.
மரணத் தருவாயில் நடக்கும் விஷயத்தை மற்றவர் யாரும் உணர முடியாது. இதை அல்லாஹ் வஹீ எனும் வழிகாட்டுதல் மூலம் மனிதனுக்கு தெரியப்படுத்தி விடுகிறான். இதனால்தான் மனிதனுக்கு முழு சுதந்திரம் கிடைத்திருந்தும் அவன் தன் வாழ்வில் எதையும் அனுசரித்தே செயல்படவேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கின்றான்.
وَنُفِخَ فِى ٱلصُّورِ ۚ ذَٰلِكَ يَوْمُ ٱلْوَعِيدِ.
50:20. அவனது அடுத்த கட்ட வாழ்வை தொடர்வதற்காக மீண்டும் உயிர்பெற வைக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. “இதுதான் உனக்கு வாக்களிக்கப்பட்ட நாள்” என்று அவனிடம் அப்போதும் கூறப்படும்;.
وَجَآءَتْ كُلُّ نَفْسٍۢ مَّعَهَا سَآئِقٌۭ وَشَهِيدٌۭ.
50:21. அதைத் தொடர்ந்து மறுமையின் வாழ்வு தொடங்குகிறது. இதையே உங்களிடம் ஒவ்வொரு இறைத் தூதரும் எடுத்துச் சொன்னார்கள். அவர்களை நாம் சாட்சியாளர்களாக கொண்டுவருவோம்.
لَّقَدْ كُنتَ فِى غَفْلَةٍۢ مِّنْ هَٰذَا فَكَشَفْنَا عَنكَ غِطَآءَكَ فَبَصَرُكَ ٱلْيَوْمَ حَدِيدٌۭ.
50:22. “ஆனால் இறைத் தூதர் சொன்ன விஷயத்தில் நீ அலட்சியமாக இருந்துவிட்டாய். இப்போது உனக்குள் இருந்த “சந்தேகம்” என்ற திரை நீங்கிவிட்டது. இப்போது நடக்கப் போவதைத் தான் நீ பார்க்கப் போகிறாய்” என்று கூறப்படும்.
وَقَالَ قَرِينُهُۥ هَٰذَا مَا لَدَىَّ عَتِيدٌ.
50:23. அப்போது, “ஒவ்வொருவருடைய செயல்பாடுகளின் பதிவேடும் என்னிடம் பத்திரமாக இருக்கிறது” என்று பதிவாளர் கூறுவார்.
أَلْقِيَا فِى جَهَنَّمَ كُلَّ كَفَّارٍ عَنِيدٍۢ.
50:24. அப்போது அந்த பதிவேட்டின்படி இறைவழிகாட்டுதலை நிராகரித்து அநியாய அக்கிரம செயல்களைச் செய்து வந்த அனைவரையும் நரகத்திற்கு இழுத்துச் செல்லும்படி உத்தரவிடப்படும்.
مَّنَّاعٍۢ لِّلْخَيْرِ مُعْتَدٍۢ مُّرِيبٍ.
50:25. காரணம் அவர்கள் நன்மையான செயல்களை செய்வதை தடுத்து வந்ததோடு, மறுமையின் வாழ்வைப் பற்றி அலட்சியம் செய்து, வரம்பு மீறன செயல்களையே செய்து வந்தார்கள்.
ٱلَّذِى جَعَلَ مَعَ ٱللَّهِ إِلَٰهًا ءَاخَرَ فَأَلْقِيَاهُ فِى ٱلْعَذَابِ ٱلشَّدِيدِ.
50:26. “இறைவழிகாட்டுதலை ஏற்காததற்கு காரணம், அவர்கள் அல்லாஹ்வை விட்டுவிட்டு, வேறு கற்பனை தெய்வங்களை உருவாக்கி வைத்துக் கொண்டிருந்தது தான் ஆகும். எனவே இவர்களை கடுமையான வேதனையில் தள்ளிவிடுங்கள்” என்று கூறப்படும்.
அப்போது அவர்களை வழிகெடுத்த தம் தலைவனை காரணம் காட்டுவார்கள். அவர்களை அழைத்துக் கேட்கும்படி சொல்வார்கள்.
۞ قَالَ قَرِينُهُۥ رَبَّنَا مَآ أَطْغَيْتُهُۥ وَلَٰكِن كَانَ فِى ضَلَٰلٍۭ بَعِيدٍۢ.
50:27. அப்போது அவர்களுடைய தலைவன், “எங்கள் இறைவா! நான் இவர்களை வழி கெடுக்கவில்லை ஆனால் அவர்களே வழி கேட்டில் வெகுதூரம் சென்று விட்டார்கள்” என்று கூறிவிடுவான்.
قَالَ لَا تَخْتَصِمُوا۟ لَدَىَّ وَقَدْ قَدَّمْتُ إِلَيْكُم بِٱلْوَعِيدِ.
50:28. அப்போது என்னிடத்தில் இத்தகைய வாக்கு வாதத்திற்கு இடமே இல்லை. இதைப் பற்றிய முன்னெச்சரிக்கை இதற்கு முன்னரே செய்துள்ளேன்” என்று அல்லாஹ்வின் சட்டம் கூறும்.
مَا يُبَدَّلُ ٱلْقَوْلُ لَدَىَّ وَمَآ أَنَا۠ بِظَلَّٰمٍۢ لِّلْعَبِيدِ.
50:29. எனவே இறைவனுடைய செயல்திட்டத்தில் எவ்வித மாற்றமும் ஏற்பட வாய்ப்பில்லை. அதன்படி எவருக்கும் அநியாயம் செய்வதற்கில்லை என்றும் அறிவிக்கப்படும்..
يَوْمَ نَقُولُ لِجَهَنَّمَ هَلِ ٱمْتَلَأْتِ وَتَقُولُ هَلْ مِن مَّزِيدٍۢ.
50:30. இப்படியாக அநியாய அக்கிரம செயல்களைச் செய்து வந்த அனைவரும் நரகத்தில் தள்ளப்படுவார்கள். நரகத்திற்கு என்ன குறை இருக்கப்போகிறது. அதனிடம் இன்னமும் இடம் இருக்கின்றதா என்று கேட்கப்படும். அதற்கு தன்னிடம் விசாலமான இடமிருப்பதாகவே கூறும். இந்நிலையைப் பற்றி சிந்தித்து அதற்கு பயந்து நடந்து கொள்ளுங்கள். இப்படிப்பட்ட விஷயங்களை இந்த குர்ஆன் எடுத்துரைத்து முன்னெச்சரிக்கை செய்கிறது.
وَأُزْلِفَتِ ٱلْجَنَّةُ لِلْمُتَّقِينَ غَيْرَ بَعِيدٍ.
50:31. ஆனால் இறைவழிகாட்டுதலை ஏற்று அதைப் பேணி நடந்தவர்களுக்கு இத்தகைய வேதனைகள் ஒருபோதும் நெருங்காது. மாறாக அவர்களுக்கு மன நிறைவான சுவர்க்கம் விரைந்து வரும்.
هَٰذَا مَا تُوعَدُونَ لِكُلِّ أَوَّابٍ حَفِيظٍۢ.
50:32. அப்போது அவர்களிடம், “இதுதான் உங்களுக்கு வாக்களிக்கப்ட்ட சுவன வாழ்வாகும்” என்று கூறப்படும். காரணம் நீங்கள் எப்போதும் இறைவனின் வழிகாட்டுதலை முன்வைத்தே செயல்பட்டு வந்தீர்கள். பாவச் செயல்களிலிருந்து தம்மை காத்துக் கொண்டீர்கள். எனவே நீங்கள் தான் சுவனத்திற்கு உரியவர்கள் என்று கூறப்படும்.
مَّنْ خَشِىَ ٱلرَّحْمَٰنَ بِٱلْغَيْبِ وَجَآءَ بِقَلْبٍۢ مُّنِيبٍ.
50:33. எனவே அருட்கொடையாளன் அர்ரஹ்மானுக்கு எதிராக நடப்பதால் ஏற்படும் விபரீத விளைவுகளுக்கு அஞ்சி நடப்பவர்களுக்கும், முழுமையாக அவனுடைய வழிகாட்டுதலுக்கு அடிபணிந்து செயல்படுபவர்களுக்கும் சுவன வாழ்வு கிடைக்கும்.
ٱدْخُلُوهَا بِسَلَٰمٍۢ ۖ ذَٰلِكَ يَوْمُ ٱلْخُلُودِ.
50:34. அத்தகைய சுவனத்தில் மன நிறைவுடன் மிக அமைதியாக நுழையும்படி கூறப்படும். இனி வரும் காலத்தில் இங்குதான் நீங்கள் நீடித்து வாழ்வீர்கள் எனப்படும்.
لَهُم مَّا يَشَآءُونَ فِيهَا وَلَدَيْنَا مَزِيدٌۭ.
50:35. அவர்கள் விரும்புவதெல்லாம் அங்கு அவர்களுக்குக் கிடைக்கும். இன்னமும் அதிகமான இன்பங்கள் அவர்களுக்கு கிடைக்கும்.
இவையே மரணித்த பின் மனிதனுக்குக் கிடைக்கின்ற நரகம் மற்றும் சுவர்க்கத்தை பற்றிய உண்மை விஷயங்களாகும். அல்லாஹ்வின் அதே சட்டவிதிமுறைகளின் படி இவ்வுலகில் சமுதாயங்களின் அழிவும் வாழ்வும் நடைபெற்று வருகிறது. அதை சமுதாயங்களின் வாழ்வும் மரணமும் என்று சொல்கிறது.
وَكَمْ أَهْلَكْنَا قَبْلَهُم مِّن قَرْنٍ هُمْ أَشَدُّ مِنْهُم بَطْشًۭا فَنَقَّبُوا۟ فِى ٱلْبِلَٰدِ هَلْ مِن مَّحِيصٍ.
50:36. உலகில் எத்தனையோ சமுதாயங்கள் நல்ல வாழ்வாதார வசதிகளோடு வளத்துடன் வாழ்ந்து வந்தன. ஆனால் அவர்களிடையே இருந்துவந்த தீய செயல்களின் விளைவாக அழிவை சந்தித்துக் கொண்டன. அந்த அழிவுகள் ஏற்படும்போது, அவற்றிலிருந்து தப்பிக்க பல ஊர்களையும் அகதிகளாக அலைந்தனர். ஆனால் அவர்களால் எங்கும் தப்பித்து செல்ல இடம் கிடைக்கவில்லை. இறுதியில் அழிந்தே போனார்கள்.
ஆக உலக வரலாற்றைப் புரட்டிப் பாருங்கள். அழிந்து போன நாடுகளில் நடந்த அட்டூழியங்களின் கதைகளே எடுத்துக் கூறும். இவை உண்மையென்றால் மரணத்திற்குப் பின் கிடைக்கின்ற நரகமும் சுவர்க்கமும் உண்மையே என்பதை சிந்தித்துப் பார்த்து ஏற்றுக் கொள்ளுங்கள்.
إِنَّ فِى ذَٰلِكَ لَذِكْرَىٰ لِمَن كَانَ لَهُۥ قَلْبٌ أَوْ أَلْقَى ٱلسَّمْعَ وَهُوَ شَهِيدٌۭ.
50:37. எனவே கடந்த கால சமுதாயங்களுக்கு ஏற்பட்ட அழிவுகள், இப்போது வாழும் மக்களுக்கு நினைவூட்டும் படிப்பினைகளாக இருக்கும். எனவே சிந்தித்துணரும் மனப்பக்குவமும், செவி தாழ்த்தி கேட்டும் ஆற்றல்களும் உடைய சமூகத்தவர்களுக்கு இந்த படிப்பினைகள் பலனளிக்கும்.
இதையும் தவிர்த்து உங்களுக்கு ஆதாரங்கள் வேண்டும் என்றால் அகிலங்களின் படைப்பை பற்றியே சிந்தித்துப் பாருங்கள். அதைப் பற்றி உண்மைகளையும் இங்கு தருகிறோம்.
وَلَقَدْ خَلَقْنَا ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضَ وَمَا بَيْنَهُمَا فِى سِتَّةِ أَيَّامٍۢ وَمَا مَسَّنَا مِن لُّغُوبٍۢ.
50:38. அகிலங்களையும் பூமியையும் இவற்றிற்கிடையே உள்ளவற்றையும் அல்லாஹ்வின் செயல்திட்டத்தின் படி ஆறு கால கட்டங்களில் படைக்கப்பட்டுள்ளன. (விளக்கத்திற்குப் பார்க்க 7:54) அவ்வாறு படைப்பதில் அல்லாஹ்வுக்கு எந்த களைப்பும் ஏற்பட்டதில்லை.
எனவே மனிதனை மீண்டும் உயிர்பெற செய்வதில் அல்லாஹ்வுக்கு என்ன சிரமம் இருக்கப்போகிறது?
فَٱصْبِرْ عَلَىٰ مَا يَقُولُونَ وَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ قَبْلَ طُلُوعِ ٱلشَّمْسِ وَقَبْلَ ٱلْغُرُوبِ.
50:39. இதையும் மீறி அவர்கள் இறைவனின் செயல்திட்டத்தை ஏற்க முன்வரவில்லை என்றால் அவர்களை அவர்கள் போக்கில் விட்டுவிடுங்கள். நீங்கள் அனைவரும் ஒருங்கிணைந்து உங்கள் இறைவனின் செயல்திட்டங்களின் புகழை மேலோங்கச் செய்யுங்கள். இதற்காக காலை முதல் மாலை வரையில் அயராது உழைத்து வாருங்கள்.
وَمِنَ ٱلَّيْلِ فَسَبِّحْهُ وَأَدْبَٰرَ ٱلسُّجُودِ.
50:40. தம் கடமைகளை முடித்தபின், தேவை ஏற்படின் இரவிலும் இறைவனின் செயல்திட்டங்களை நிறைவேற்றுவதைப் பற்றி ஆய்வு செய்யுங்கள்.
وَٱسْتَمِعْ يَوْمَ يُنَادِ ٱلْمُنَادِ مِن مَّكَانٍۢ قَرِيبٍۢ.
50:41. வெகு விரைவில் பகைவர்களிடம் மோதும் காலம் வந்துவிடும். அப்போது அனைவரும் திறண்டு வருவதற்காக அழைப்பவரின் அழைப்பைக் கேட்க வேண்டி வரும்.
يَوْمَ يَسْمَعُونَ ٱلصَّيْحَةَ بِٱلْحَقِّ ۚ ذَٰلِكَ يَوْمُ ٱلْخُرُوجِ.
50:42. அப்போது நியாயமான ஆட்சியை ஏற்படுத்துவதற்காக களத்தில் சந்திக்க, அபாய சங்கொலியை அவர்கள் கேட்பார்கள். அதை கேட்டவுடன் அவர்கள் தம் இல்லத்தை விட்டு களத்திற்கு விரைவார்கள்.
إِنَّا نَحْنُ نُحْىِۦ وَنُمِيتُ وَإِلَيْنَا ٱلْمَصِيرُ.
50:43. மேலும் களத்தில் வாழ்வும் மரணமும் இறைவனின் சட்ட விதிமுறைகளின்படி ஏற்படும். அதாவது எந்த பிரிவினர் தகுதியானவர்களாக இருக்கிறார்களோ, அவர்களுக்கு வாழ்வு கிடைக்கும். தகுதியற்றவர்கள் செத்து மடிவார்கள். இப்படியாக ஒவ்வொருவரும் அல்லாஹ் நிர்ணயித்த விதிமுறைகளின் பக்கமே செல்ல வேண்டி இருக்கும்.
يَوْمَ تَشَقَّقُ ٱلْأَرْضُ عَنْهُمْ سِرَاعًۭا ۚ ذَٰلِكَ حَشْرٌ عَلَيْنَا يَسِيرٌۭ.
50:44. அப்போது பகைவர்களுக்கு பூமி பிளந்து விடுவது போல் தோன்றும். அவர்கள் வேகமாக நடந்தும் அவர்களால் களத்தில் முன்னேற முடியாது. இவ்வாறு அவர்களை களத்தில் வரவழைப்பது நமக்கு சிரமமான காரியம் அல்ல.
نَّحْنُ أَعْلَمُ بِمَا يَقُولُونَ ۖ وَمَآ أَنتَ عَلَيْهِم بِجَبَّارٍۢ ۖ فَذَكِّرْ بِٱلْقُرْءَانِ مَن يَخَافُ وَعِيدِ.
50:45. மேலும் இறை நிராகரிப்பவர்கள் பேசி வருவது அல்லாஹ்வுக்கு நன்கு தெரியும். எனவே மார்க்கத்தை ஏற்றுக் கொள்வதும் ஏற்றுக் கொள்ளாததும் அவரவர் விருப்பம். எனவே நீர் அவர்களை கட்டாயப்படுத்த முடியாது. யாருக்கு இறையச்சம் இருக்கின்றதோ, அவர்களுக்கு இந்தக் குர்ஆனில் உள்ள நல்லுபதேசங்களை எடுத்துரையுங்கள்.