بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ

49:0.அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் அறிவுரைப்படியே அனைத்துக் காரியங்களையும் செய்ய நாடுகிறேன். (பார்க்க 6:162)
இறைழிகாட்டுதலை ஏற்று நடப்பவர்கள் யாவரும் உலக மக்களை நேர்வழியில் கொண்டுசெல்வதற்காக தோற்றுவிக்கப் பட்டவர்கள் ஆவார்கள். (பார்க்க 3:110) எனவே உங்களுடைய சொல்லிலும் செயலிலும் ஒருங்கிணைப்பும் வரையறையும் இருந்தல் மிகமிக அவசியம்.


يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟ لَا تُقَدِّمُوا۟ بَيْنَ يَدَىِ ٱللَّهِ وَرَسُولِهِۦ ۖ وَٱتَّقُوا۟ ٱللَّهَ ۚ إِنَّ ٱللَّهَ سَمِيعٌ عَلِيمٌۭ.

49:1. இறைவழிகாட்டுதலை ஏற்று நடக்கும் செயல்வீரர்களே! மக்களவையில் அல்லாஹ்வின் ஆட்சியமைப்பு சம்பந்தமாக தலைமைப் பொறுப்பை ஏற்றிருப்பவர் கொண்டுவரும் தீர்மானங்களுக்கு முன்னதாகவே, நீங்களே சுயமாக முடிவெடுத்து செயல்படாதீர்கள். இது அவையின் உரிமை மீரல் ஆகும். எனவே அல்லாஹ்வின் அறிவுரைகளைப் பேணி நடந்து கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ்வின் ஆட்சியமைப்பு அனைத்தையும் உன்னிப்பாக கவனித்து வரும் என்பதை மறவாதீர்கள்.


يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟ لَا تَرْفَعُوٓا۟ أَصْوَٰتَكُمْ فَوْقَ صَوْتِ ٱلنَّبِىِّ وَلَا تَجْهَرُوا۟ لَهُۥ بِٱلْقَوْلِ كَجَهْرِ بَعْضِكُمْ لِبَعْضٍ أَن تَحْبَطَ أَعْمَٰلُكُمْ وَأَنتُمْ لَا تَشْعُرُونَ.

49:2. இறைவழிகாட்டுதலை ஏற்று நடக்கும் செயல்வீரர்களே! மேலும் அவையில் உங்கள் குரல்களை உயர்த்தி பேசுவது முறையாகாது. இது தலைமைப் பொறுப்பை ஏற்றிருப்பவரை அவமதிப்பதாக பொருள்படும். பொதுவாக நீங்கள் மற்றவர்களிடம் தம் பேச்சை மிகைக்க செய்யவேண்டும் என்பதற்காக கூச்சலிட்டுப் பேசுவீர்கள். அதுபோன்று இந்த சபையில் நீங்கள் பேசாதீர்கள். இதனால் உங்களிடையே உள்ள நற்பண்புகள் யாவும் உங்களை விட்டு கொஞ்சம் கொஞ்சமாக அறியாவண்ணம் மறைந்து விடும்.


إِنَّ ٱلَّذِينَ يَغُضُّونَ أَصْوَٰتَهُمْ عِندَ رَسُولِ ٱللَّهِ أُو۟لَٰٓئِكَ ٱلَّذِينَ ٱمْتَحَنَ ٱللَّهُ قُلُوبَهُمْ لِلتَّقْوَىٰ ۚ لَهُم مَّغْفِرَةٌۭ وَأَجْرٌ عَظِيمٌ.

49:3. எவர் ஒருவர் தம் கருத்துக்களை அவையில் எடுத்துரைத்தாலும், அவையில் கூட்டாக எடுக்கும் தலைவரின் தீர்மானங்களின் முன் தலைவணங்கி ஏற்றுக்கொள்ள வேண்டும். அல்லாஹ்வின் ஆட்சியமைப்பு இத்தகையவர்களையே தேர்ந்தெடுத்து, அவர்கள் மூலமாக தம் செயல்திட்டங்களை நிறைவேற்றிக் கொள்ளும். அத்தகையவர்களுக்குத் தான் பாதுகாப்பான வாழ்வும், மகத்தான உயர் பதவியும் கிடைக்கும்.


إِنَّ ٱلَّذِينَ يُنَادُونَكَ مِن وَرَآءِ ٱلْحُجُرَٰتِ أَكْثَرُهُمْ لَا يَعْقِلُونَ.

49:4. சிலருக்கு எப்படி மதிப்பு மரியாதையுடன் நடந்து கொள்வது என்ற வரையறையும் தெரியாமல் இருக்கும். எந்த முன்னறிவிப்பும் செய்யாமல் அவர்கள் வெளியில் நின்றபடியே தம் தலைவரை கூச்சலிட்டு அழைத்துக் கொண்டிருப்பார்கள். இவையாவும் அவர்களுடைய அறிவிலித்தனத்தையே காட்டுகின்றன.


وَلَوْ أَنَّهُمْ صَبَرُوا۟ حَتَّىٰ تَخْرُجَ إِلَيْهِمْ لَكَانَ خَيْرًۭا لَّهُمْ ۚ وَٱللَّهُ غَفُورٌۭ رَّحِيمٌۭ.

49:5. சமுதாயத்தை வழிநடத்திச் செல்பவரே! நீர் மக்கள் நலத் திட்டங்களைப் பற்றி கலந்தாலோசிக்கும் சபையை விட்டு வெளியே வரும் வரையில் அவர்கள் காத்திருந்தால், அது எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்! இவையாவும் அவர்களுடைய பாதுகாப்பான வாழ்விற்கும், அன்போடு பழகுவதற்கும் ஏதுவானதாக இருக்கும் அல்லவா?


يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوٓا۟ إِن جَآءَكُمْ فَاسِقٌۢ بِنَبَإٍۢ فَتَبَيَّنُوٓا۟ أَن تُصِيبُوا۟ قَوْمًۢا بِجَهَٰلَةٍۢ فَتُصْبِحُوا۟ عَلَىٰ مَا فَعَلْتُمْ نَٰدِمِينَ.

49:6. இறைவழிகாட்டுதலை ஏற்று நடக்கும் செயல்வீரர்களே! நீங்கள் எந்த ஒரு செய்தியைக் கேட்டாலும், உடனே செயலில் இறங்கி விடாதீர்கள். அந்த செய்திகள் கலவரம் செய்பவர்களிடமிருந்தும் வந்திருக்கலாம். எனவே அதை பற்றி தீர விசாரித்த பின்னரே அதற்கேற்றவாறு செயல்படுங்கள். (25:73) இல்லையேல் நீங்கள் அறியாமையில் பிறருக்கு தீங்கும் செய்து விடுவீர்கள். அதன்பின் உண்மை அறிந்து நீங்கள் செய்தமைக்கு வருத்தப்பட்டுக் கொண்டிருப்பீர்கள்.
இறைவழிகாட்டுதலை ஏற்று நடக்கும் செயல்வீரர்களே! இதற்கு முன் வாழ்ந்தது போல இப்போதும் நீங்கள் மனம் போன போக்கில் வாழலாம் என்று எண்ணாதீர்கள். இப்போது எதை செய்வதாக இருந்தாலும் முறையோடு அமைப்பு ரீதியாக கூட்டாக முடிவெடுத்து தான் செயல்பட வேண்டும்.


وَٱعْلَمُوٓا۟ أَنَّ فِيكُمْ رَسُولَ ٱللَّهِ ۚ لَوْ يُطِيعُكُمْ فِى كَثِيرٍۢ مِّنَ ٱلْأَمْرِ لَعَنِتُّمْ وَلَٰكِنَّ ٱللَّهَ حَبَّبَ إِلَيْكُمُ ٱلْإِيمَٰنَ وَزَيَّنَهُۥ فِى قُلُوبِكُمْ وَكَرَّهَ إِلَيْكُمُ ٱلْكُفْرَ وَٱلْفُسُوقَ وَٱلْعِصْيَانَ ۚ أُو۟لَٰٓئِكَ هُمُ ٱلرَّٰشِدُونَ.

49:7. இப்போது அதற்கு வசதியாக அல்லாஹ்வின் ஆட்சியமைப்பு உங்களிடையே உள்ளது. அதை வழி நடத்திச் செல்லும் தலைவராக இறைத்தூதரும் இருக்கிறார். அவர், உங்களுடைய தனிப்பட்ட விருப்பங்களுக்கு ஏற்ப செயல்பட முடியாது. அவ்வாறு செயல்பட்டால் உங்களுக்குத் தான் பெருத்த நஷ்டம் ஏற்படும். எனவே நாட்டு நலனை கருத்தில் கொண்டு சபையில் கொண்டு வரப்படும் தீர்மானங்களுக்கு உட்பட்டு தான் செயல்பட வேண்டும். நீங்கள் அனைவரும் இறைவழிகாட்டுதலில் ஒருங்கிணைந்து செயல்படுங்கள். அப்போது தான் அவற்றின் பலன்கள் கிடைத்து வரும். அதன்பின் அவையே உங்களுக்கு அழகாகத் தோன்றும். இதை தவிர்த்து வேறு எந்த வழிமுறையையும் கடைப்பிடிப்பதை வெறுப்பீர்கள். இத்தகையவர்கள் தாம் நேர்வழியில் நடப்பவர்கள் ஆவர்.


فَضْلًۭا مِّنَ ٱللَّهِ وَنِعْمَةًۭ ۚ وَٱللَّهُ عَلِيمٌ حَكِيمٌۭ.

49:8. இவ்வாறு வழிகள் பிறப்பதும், சந்தோஷங்கள் கிடைப்பதும் அல்லாஹ்வின் அளவிலா அருட்கொடைகளாகும். அப்போது தான் அல்லாஹ்வின் நியதிப்படி சிறந்த அறிவாற்றலுடன் ஞானமிக்கவர்களாக ஆக முடியும்.


وَإِن طَآئِفَتَانِ مِنَ ٱلْمُؤْمِنِينَ ٱقْتَتَلُوا۟ فَأَصْلِحُوا۟ بَيْنَهُمَا ۖ فَإِنۢ بَغَتْ إِحْدَىٰهُمَا عَلَى ٱلْأُخْرَىٰ فَقَٰتِلُوا۟ ٱلَّتِى تَبْغِى حَتَّىٰ تَفِىٓءَ إِلَىٰٓ أَمْرِ ٱللَّهِ ۚ فَإِن فَآءَتْ فَأَصْلِحُوا۟ بَيْنَهُمَا بِٱلْعَدْلِ وَأَقْسِطُوٓا۟ ۖ إِنَّ ٱللَّهَ يُحِبُّ ٱلْمُقْسِطِينَ.

49:9. இருப்பினும் சில சமயங்களில் மூஃமின்களிடையே கருத்து வேறுபாடுகளும் மோதல்களும் ஏற்படலாம். அவற்றை உடனுக்குடன் தீர்த்து வைத்து, சீர் செய்துவிட வேண்டும். இதன்பின்பும் அவ்விருவரில் யாராவது அத்துமீறி நடந்து கொண்டால், அவர் அல்லாஹ்வின் சட்டத்திற்கு கட்டுப்பட்டு வரும்வரையில் நீங்கள் அனைவரும் ஒன்றிணைந்து அவருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுங்கள். அவ்வாறு அவர் அல்லாஹ்வின் வழிகாட்டுதலின் படி நடப்பதாக ஒப்புக்கொண்டால், அவர்களுக்கிடையே சமாதானம் செய்து வையுங்கள். இவ்வாறு தீர்த்து வைப்பதில் நீதியுடன் நடந்து கொள்ளுங்கள். நினைவில் கொள்ளுங்கள். நீதியுடன் நடப்பவர்களுக்குத் தான் அல்லாஹ்வின் நேசமும் அரவணைப்பும் கிடைக்கும்.
இவை யாவும் இஸ்லாமிய ஆட்சியமைப்பு ஏற்படும் ஆரம்ப கால கட்டத்தில் ஏற்படுகின்ற கருத்து வேறுபாடுகளும் மோதல்களுமாகும். இந்த ஆட்சி சிறப்பாக நடைபெறும் போது, இத்தகைய சண்டை சச்சரவுக்கு இடமிருக்காது. அங்கு அனைவரும் பாசப் பிணைப்புடன் நடந்து கொள்வார்கள். (பார்க்க 8:63) எனவே இத்தகைய மோதல்கள் எதிர்பாராத விதமாக ஏற்படும்போது, பகைவர்களிடம் நீங்கள் கண்டிப்புடன் நடப்பது போல மூஃமின்களிடையே நடக்கக் கூடாது. காரணம்


إِنَّمَا ٱلْمُؤْمِنُونَ إِخْوَةٌۭ فَأَصْلِحُوا۟ بَيْنَ أَخَوَيْكُمْ ۚ وَٱتَّقُوا۟ ٱللَّهَ لَعَلَّكُمْ تُرْحَمُونَ.

49:10. மூஃமின்கள் அனைவரும் சகோதர மனப்பான்மையுடன் நடப்பவர்களே ஆவர். எனவே இரு சகோதாரர்களுக்கு இடையே சமாதானம் உண்டாக்குகிறோம் என்ற எண்ணத்துடன் தான் சமாதானம் செய்ய வேண்டும். இப்படியாக ஒவ்வொரு விஷயத்திலும் அல்லாஹ்வின் வழிகாட்டுதலைப் பேணி நடந்து கொள்ளுங்கள். இதனால் உங்களிடையே பாசப் பிணைப்பும் இரக்க குணநலன்களும் வளரும்.


يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟ لَا يَسْخَرْ قَوْمٌۭ مِّن قَوْمٍ عَسَىٰٓ أَن يَكُونُوا۟ خَيْرًۭا مِّنْهُمْ وَلَا نِسَآءٌۭ مِّن نِّسَآءٍ عَسَىٰٓ أَن يَكُنَّ خَيْرًۭا مِّنْهُنَّ ۖ وَلَا تَلْمِزُوٓا۟ أَنفُسَكُمْ وَلَا تَنَابَزُوا۟ بِٱلْأَلْقَٰبِ ۖ بِئْسَ ٱلِٱسْمُ ٱلْفُسُوقُ بَعْدَ ٱلْإِيمَٰنِ ۚ وَمَن لَّمْ يَتُبْ فَأُو۟لَٰٓئِكَ هُمُ ٱلظَّٰلِمُونَ.

49:11. இறைவழிகாட்டுதலை ஏற்று நடக்கும் செயல் வீரர்களே! இஸ்லாத்தை ஏற்காத பிற சமூகத்தவர்களை பரிகாசம் செய்ய வேண்டாம். காரணம் அவர்கள் பல வகையில் உங்களை விட சிறந்த ஆற்றல் மிக்கவர்களாக இருக்கலாம். அவர்களிடமுள்ள பரஸ்பர உறவு சீர்கெடும். அதே போன்று பெண்களும் மற்ற எந்த பெண்ணையும் பரிகசிப்பது கூடாது. ஏனெனில் அவர்களிடத்திலும் பல சிறப்பு குணங்கள் இருக்கலாம். இவை யாவும் தேவையற்ற பகைமைக்கு வழி வகுக்கும். எனவே இவற்றை கண்டிப்பாக தவிர்த்துக் கொள்ளுங்கள்.
அதே போல உங்களில் ஒருவரையொருவர் தரக்குறைவான வார்த்தைகளை பயன்படுத்திப் பழித்துப் பேசிக் கொள்ளாதீர்கள். மேலும் நீங்கள் ஒருவரையொருவர் தரக்குறைவான பட்டப் பெயர்களைச் சூட்டி அழைக்காதீர்கள். அல்லாஹ்வின் வழிகாட்டுதலை ஏற்றுக் கொண்ட பின் இப்படிப்பட்ட பெயர்களைச் சூட்டுவது மிகவும் கெட்டதாகும். எவர் இவ்வாறு செய்வதிலிருந்து மீளவில்லையோ அவர்கள் அநியாயக்காரர்களின் பட்டியலில் இடம்பெறுவர்.


يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟ ٱجْتَنِبُوا۟ كَثِيرًۭا مِّنَ ٱلظَّنِّ إِنَّ بَعْضَ ٱلظَّنِّ إِثْمٌۭ ۖ وَلَا تَجَسَّسُوا۟ وَلَا يَغْتَب بَّعْضُكُم بَعْضًا ۚ أَيُحِبُّ أَحَدُكُمْ أَن يَأْكُلَ لَحْمَ أَخِيهِ مَيْتًۭا فَكَرِهْتُمُوهُ ۚ وَٱتَّقُوا۟ ٱللَّهَ ۚ إِنَّ ٱللَّهَ تَوَّابٌۭ رَّحِيمٌۭ.

49:12. இறைவழிகாட்டுதலை ஏற்று நடக்கும் செயல் வீரர்களே! நீங்கள் எந்த விஷயத்தையும் சந்தேகக் கண்ணோட்டத்தோடு அணுகாதீர்கள். காரணம் இது பல சமயங்களில் தீய விளைவுகளை ஏற்படுத்தி விடும். மேலும் உங்களிடையே பகைமை உண்டாக்க உங்களுக்கு எதிராக புரளிகளைப் பரப்புவதற்கென்றே சிலர் சுற்றிக்கொண்டு இருப்பார்கள். நீங்கள் மிகவும் கவனத்துடன் நடந்து கொள்ள வேண்டும். எனவே அவற்றைப் பற்றி துருவித் துருவிக் கேட்டு கொண்டிருக்க வேண்டியதில்லை. மேலும் உங்களிடையே புறம் பேசுவது கூடாது. எதுவாக இருந்தாலும் நேரடியாகப் பேசி பிரச்னைகளை தீர்த்துக் கொள்ளவேண்டும். புறம் பேசுவதால் சமுதாயத்தில் பகைமையும், கெட்ட அபிப்ராயங்களும் தான் வளரும். எனவே ஒருவர் தம் சகோதாதரனின் பிணத்தை சாப்பிட எவ்வாறு வெறுப்பாரோ, அந்த அளவுக்கு புறம் பேசுவதை வெறுக்க வேண்டும். இப்படியாக அல்லாஹ்வின் வழிகாட்டுதலுக்கு எதிராக செயல்படுவதால், ஏற்படுகின்ற தீய விளைவுக்கு அஞ்சி அவற்றைப் பேணி நடந்து கொள்ளுங்கள். இதுவே தவறான வழியிலிருந்து மீள்வதற்கும், உங்களிடையே பரஸ்பர நல்லுறவும் அன்பும் ஏற்படுவதற்கும் சிறந்த வழியாகும்.
இஸ்லாமிய ஆட்சியின் ஆரம்ப கட்டத்தில் சில விஷமிகள் வதந்திகளைப் பரப்பி ஆட்சியாளர்களிடையே பகைமை ஏற்படுத்தி குழப்பங்களை ஏற்படுத்துவதில் கண்ணும் கருத்துமாக இருப்பார்கள். இதற்குக் காரணம் நாம்தான் சிறந்த சமுதாயத்தை சேர்ந்தவர்கள். நேற்று வரையில் அடிமைப் பேதைகளாய் ஊரைச் சுற்றி திரிந்து கொண்டிருந்தவர்களுக்கு இந்த அளவுக்கு உயர்வும் கண்ணியமும் கிடைப்பதா என்ற காழ்புணர்ச்சியே ஆகும். எனவே இத்தகைய தவறான எண்ணங்களை அவர்களை விட்டு நீக்க வேண்டும்.


يَٰٓأَيُّهَا ٱلنَّاسُ إِنَّا خَلَقْنَٰكُم مِّن ذَكَرٍۢ وَأُنثَىٰ وَجَعَلْنَٰكُمْ شُعُوبًۭا وَقَبَآئِلَ لِتَعَارَفُوٓا۟ ۚ إِنَّ أَكْرَمَكُمْ عِندَ ٱللَّهِ أَتْقَىٰكُمْ ۚ إِنَّ ٱللَّهَ عَلِيمٌ خَبِيرٌۭ.

49:13. உலக மக்களே! நீங்கள் அனைவரும் ஓர் ஆண் ஒரு பெண்ணின் சேர்க்கையின் மூலமே பிறந்து வந்தவர்கள்தாம். எனவே உங்களுடைய பிறப்பை பொறுத்தவரை எந்த வேற்றுமையும் இல்லை. உண்மை இவ்வாறு இருக்கும்போது, உங்களுக்குள் உயர்வு தாழ்வு எப்படி இருக்க முடியும்? மேலும் உலகத்தில் தோன்றியுள்ள குலம் கோத்திரம் என்பதெல்லாம் நீங்கள் ஒருவரையொருவர் எளிதில் அறிந்து கொள்வதற்காகத் தானே அன்றி, இதனால் உயர்வும் கண்ணியமும் கிடைப்பதில்லை. உண்மையில் கண்ணியமும் உயர்வும் அல்லாஹ்வின் வழிகாட்டுதலைப் பேணி நடப்பதைப் பொருத்துத் தான் அமையும் அப்போது தான் அல்லாஹ்வின் நியதிப்படி அனைத்து விஷயங்களையும் அறிந்துகொள்ளும் பேராற்றல்கள் உங்களுக்கு கிடைக்கும்.
இந்த வாசகத்தில் குலம் கோத்திரம் என்று உலகில் பிரிக்கப்பட்டு இருப்பதாகச்சொல்லப்படுகிறது. இவை யாவும் நிர்வாக வசதிக்காக செய்யப்பட்ட ஏற்பாடுகள் ஆகும். உதாரணத்திற்கு பூகம்பம் ஏற்பட்டுள்ளது என்ற செய்தி படித்தவுடன், அது எங்கு? எப்போது? எந்த இடம் என்று குறிப்பிட்டு சொல்ல வேண்டியுள்ளது. அப்போது தான் நிவாரணப் பணிகளைத் துரிதமாக மேற்கொள்ள முடியும். இதை விட்டு விட்டு நாம் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தை சேர்ந்தவர்கள் என்பதால் யாருக்கும் எந்தப் பெருமையும் கிடைப்பதில்லை. (பார்க்க 5:18) அதே போல நாம் அல்லாஹ்வை ஏற்றுக் கொள்வதால் மட்டும் எந்தச் சிறப்பும் கிடைக்காது. எனவே


۞ قَالَتِ ٱلْأَعْرَابُ ءَامَنَّا ۖ قُل لَّمْ تُؤْمِنُوا۟ وَلَٰكِن قُولُوٓا۟ أَسْلَمْنَا وَلَمَّا يَدْخُلِ ٱلْإِيمَٰنُ فِى قُلُوبِكُمْ ۖ وَإِن تُطِيعُوا۟ ٱللَّهَ وَرَسُولَهُۥ لَا يَلِتْكُم مِّنْ أَعْمَٰلِكُمْ شَيْـًٔا ۚ إِنَّ ٱللَّهَ غَفُورٌۭ رَّحِيمٌ.

49:14. நாட்டுப்புறத்து அரபு மக்கள் தாமும் அல்லாஹ்வின் மீது ஈமான் கொண்டுள்ளதாகக் சொல்லிக் கொள்கிறார்கள். வெறும் உதட்டளவில் அல்லாஹ்வையும் ரசூலையும் ஏற்றுக் கொள்வதாக சொல்வதால் மட்டும் ஈமான் கொண்டதாகப் பொருளாகாது என்று அவர்களிடம் எடுத்துரையும். அவர்கள் வெறும் இஸ்லாமிய ஆட்சியமைப்பு சட்டங்களை ஏற்றுக் கொண்டிருப்பதால், அவர்கள் முஸ்லிம்களாக இருக்கிறார்கள். மற்றபடி ஈமான் அவர்களுடைய உள்ளங்களில் வேரூன்றி செல்லவில்லை. எனவே அல்லாஹ்வின் வழிகாட்டுதலுக்கும் அதனடிப்படையில் நடைபெறும் ஆட்சியமைப்பு சட்டங்களின் படியும் நடந்து வந்தால் அவர்களுடைய நற்செயல்களுக்குரிய பலன்கள் அல்லாஹ்வின் நியதிப்படி கிடைத்து வரும். நிச்சயமாக அல்லாஹ்வின் வழிகாட்டுதல்கள் உங்களுடைய பாதுகாப்பான வாழ்விற்கு வழி வகுக்கின்றன. இதனால் உங்களிடையே இரக்க மனப்பான்மையும் ஏற்பட்டு வரும்.


إِنَّمَا ٱلْمُؤْمِنُونَ ٱلَّذِينَ ءَامَنُوا۟ بِٱللَّهِ وَرَسُولِهِۦ ثُمَّ لَمْ يَرْتَابُوا۟ وَجَٰهَدُوا۟ بِأَمْوَٰلِهِمْ وَأَنفُسِهِمْ فِى سَبِيلِ ٱللَّهِ ۚ أُو۟لَٰٓئِكَ هُمُ ٱلصَّٰدِقُونَ.

49:15. எனவே உண்மையான முஃமின்கள் யாரென்றால், அல்லாஹ்வின் வழிகாட்டுதலையும் அதனடிப்படையில் உருவான ஆட்சியமைப்பு சட்டங்களையும் ஏற்றுக் கொள்வதோடு, தம் வாழ்வையும் செல்வங்களையும் இதற்காகவே அர்ப்பணித்து செயல்படுபவர்கள் தாம். இறைவழிகாட்டுதலை அறிந்த பின், அதற்கு மாற்றமாக ஒருபோதும் நடந்துகொள்ளவே மாட்டார்கள். இவர்கள் இறைவனின் ஆட்சியமைப்பு சட்டங்களின் மகத்துவத்தை உண்மைப்படுத்திக் காட்ட, தேவை ஏற்பட்டால், தம் உயிரையும் துறக்க தயங்க மாட்டார்கள். (பார்க்க 9:111) இவர்களே உண்மையில் மூஃமின்கள் எனப்படுவர்.
ஆனால் அறியா மக்களோ, மார்க்கம் எப்படி இருக்க வெண்டும் என்று தமக்குத் தாமே பேசிக் கொள்கிறார்கள். மார்க்க உண்மைகள் என்னவென்று இறை வேதத்தை படித்துப் பார்க்க மாட்டார்கள். விட்டால் இவர்கள் அல்லாஹ்வுக்கே மார்க்கத்தை கற்றுத் தருவார்கள் போலும். எனவே


قُلْ أَتُعَلِّمُونَ ٱللَّهَ بِدِينِكُمْ وَٱللَّهُ يَعْلَمُ مَا فِى ٱلسَّمَٰوَٰتِ وَمَا فِى ٱلْأَرْضِ ۚ وَٱللَّهُ بِكُلِّ شَىْءٍ عَلِيمٌۭ.

49:16. அவர்களிடம், “மார்க்கம் எவ்வாறிருக்க வேண்டுமென்று அல்லாஹ்வுக்கு நீங்கள் கற்றுத் தருகிறீர்களா?” என்று கேளுங்கள். அகிலங்களும் பூமியில் உள்ளவையும் எவ்வாறு செயல்படுகின்றன என்ற உண்மை அல்லாஹ்வுக்கு தெரியும். எல்லா படைப்புகளையும் தம் சட்டங்களின் வட்டறையில் கட்டிக் காக்கும் மாபெரும் வல்லமை அல்லாஹ்வுக்கு இருக்கும் போது, மனிதன் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் எப்படி இருக்க வேண்டும் என்று அவனுக்கு தெரியாமல் போய்விடுமா? இதை அவர்களுக்கு தெரியப்படுத்துங்கள்.


يَمُنُّونَ عَلَيْكَ أَنْ أَسْلَمُوا۟ ۖ قُل لَّا تَمُنُّوا۟ عَلَىَّ إِسْلَٰمَكُم ۖ بَلِ ٱللَّهُ يَمُنُّ عَلَيْكُمْ أَنْ هَدَىٰكُمْ لِلْإِيمَٰنِ إِن كُنتُمْ صَٰدِقِينَ.

49:17. சிலர் இஸ்லாம் மார்க்கத்தை தழுவியதால், மிகப்பெரிய உபகாரம் செய்து விட்டதாக எண்ணுகின்றனர். இப்படி கூறுவது முறையாகாது என்று அவர்களிடம் எடுத்துரையுங்கள். மாறாக இஸ்லாம் மார்க்கத்தில் அவர்கள் இணைந்து விட்டதால், வாழ்வின் நேர்வழி என்னவென்று அறிந்துகொள்ளும் வாய்ப்பு அவர்களுக்குத் தான் கிடைத்தது. அதைத் தொடர்ந்து அல்லாஹ்வின் பேராதரவும் உபகாரமும் கிடைக்கின்றன என்பது தான் உண்மை. இதை அவர்களிடம் கூறி விடுங்கள்.


إِنَّ ٱللَّهَ يَعْلَمُ غَيْبَ ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضِ ۚ وَٱللَّهُ بَصِيرٌۢ بِمَا تَعْمَلُونَ.

49:18. வானங்களிலும் பூமியிலும் உள்ள அனைத்து மறைவான விஷங்களையும் அறிந்து கொள்ளும் பேராற்றல் அல்லாஹ்வுக்கு இருக்கும் போது, உங்களுடைய செயல்கள் என்னவென்பதை அவனால் அறிந்து கொள்ள முடியாதா?