بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
4:0அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் அறிவுரைப்படியே அனைத்துக் காரியங்களையும் செய்ய நாடுகிறேன். (பார்க்க 6:162)
முன்னுரை - இந்த அத்தியாயம் மதீனாவில் இஸ்லாமிய ஆட்சி அமைப்பை ஆதரிப்பவர்களுக்கும் அதை எதிர்ப்பவர்களுக்கும் இடையே நடந்த பத்ரு களத்திற்குப் பின் இறக்கி அருளப்பட்டது. எனவே இதுதிலுள்ள சட்டங்கள் போர்கால அடிப்படையில் பிறப்பிக்கப் பட்டவையாகும். (Laws proclaimed under Emergency Period)
يَٰٓأَيُّهَا ٱلنَّاسُ ٱتَّقُوا۟ رَبَّكُمُ ٱلَّذِى خَلَقَكُم مِّن نَّفْسٍۢ وَٰحِدَةٍۢ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًۭا كَثِيرًۭا وَنِسَآءًۭ ۚ وَٱتَّقُوا۟ ٱللَّهَ ٱلَّذِى تَسَآءَلُونَ بِهِۦ وَٱلْأَرْحَامَ ۚ إِنَّ ٱللَّهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًۭا.
4:1. மனிதர்களே! உங்கள் அனைவரையும் படைத்து பரிபாலிக்கும் இறைவன் வகுத்துத் தந்துள்ள வழிகாட்டுதல்களை மனதார ஏற்று அதன்படி நடந்து கொள்ளுங்கள். உங்கள் அனைவரின் படைப்பின் ஆரம்பம் உயிர்அணு (life cell) என்ற ஓரே அடிப்படையில்தான் ஏற்பட்டது. (பார்க்க:6:98 &39:6). பின்பு அந்த உயிர் அணுக்களுள் ஆண் பெண் (Spermatazoon & Ovum) என இரண்டாகப் பிரிந்தன. பின்பு ஆண் பெண் சேர்க்கையின் மூலம் உலகம் முழுவதும் மனித இனம் பெருகிவிட்டது.
மனித தேவைகள் அனைத்தும் நிறைவேற அல்லாஹ் செய்துள்ள பரிபாலன ஏற்பாட்டை பாதுகாத்து வாருங்கள். (பார்க்க:14:32-33) உங்களில் ஒவ்வொருவரும் மற்றவர்களைச் சார்ந்தே இருக்கிறீர்கள். ஏக இறைவனாகிய அல்லாஹ் நிர்ணயித்துள்ள வாழ்வாதார பங்கீட்டு முறையின் வழிகாட்டுதலை ஏற்று வாழுங்கள். ஆரம்ப கட்டமாக முதலில் உங்களுள் இருக்கும் இரத்த பந்த உறவினர்களை ஆதரித்து வாருங்கள். பின் அனைத்து தரப்பு மக்களின் பரிபாலனத்திற்கும் ஏற்பாடு செய்யுங்கள். நீங்கள் இவ்வாறு செய்வீர்களானால் அல்லாஹ்வின் நியதிப்படி உங்களுக்கு நிம்மதியான பாதுகாப்பான வாழ்க்கை வசதிகள் கிடைக்கும்.
அதாவது மக்களின் அடிப்படைத் தேவைகளாகிய உணவு, உடை, இருப்பிடம் ஆகியவை கிடைக்க ஏற்பாடுகளை செய்யுங்கள். இறைவனின் படைப்பைப் பற்றி கவனத்தில் கொண்டால், தாம் பெற்ற குழந்தைக்கும் அநாதைகளுக்கும் இடையே ஒரு பேதமும் இருக்க வாய்ப்பில்லை. எனவே நீங்கள் உங்கள் குழந்தைகளை எவ்வாறு பராமரித்து வருகிறீர்களோ, அவ்வாறே அநாதைகளின் உரிமைகளையும் தேவைகளையும் நிறைவேற்ற வேண்டும்.
وَءَاتُوا۟ ٱلْيَتَٰمَىٰٓ أَمْوَٰلَهُمْ ۖ وَلَا تَتَبَدَّلُوا۟ ٱلْخَبِيثَ بِٱلطَّيِّبِ ۖ وَلَا تَأْكُلُوٓا۟ أَمْوَٰلَهُمْ إِلَىٰٓ أَمْوَٰلِكُمْ ۚ إِنَّهُۥ كَانَ حُوبًۭا كَبِيرًۭا.
4:2. அநாதைகளுடைய சொத்துக்களை பாதுகாக்கும் பொறுப்பு வகிப்பவர்கள், மிகவும் நியாயமான முறையில் நடந்து கொள்ள வேண்டும். உங்களுக்கு சொந்தமான உதவாத பொருட்களை அவர்களுடைய பொருட்களோடு சேர்த்து கணக்கிட்டு, தவறான முறையில் அவர்களுடைய செல்வங்களை அபகரிக்கக் கூடாது. எனவே அவர்களுடைய பொருட்களை தனியாக வைத்து அவர்கள் வாலிப வயதை அடையும் வரை (பார்க்க:4:6) பாதுகாத்து வர வேண்டும். அவர்களுடைய பொருட்களை அநியாயமாக விழுங்குவது பெரும் குற்றமாகும். அதாவது இதற்கு மன்னிப்பே கிடையாது.
சமுதாயத்தில் ஆதரவற்ற நிலையில் இருக்கும் அநாதைகளைப் பாதுகாப்பதில் அவர்களுடைய சொத்துக்களை பாதுகாத்தால் மட்டும் பிரச்சினை தீர்ந்து விடாது. அதையும் மீறி சில பிரச்சினைகள் இருக்கும். உதாரணமாக போர், கலவரம் போன்ற இக்கட்டான சூழ்நிலைகளில் நாட்டை துறந்து அகதிகளாக வந்த பெண்கள், (பார்க்க:60:10) கணவனை இழந்த பெண்கள் (பார்க்க:4:127) என சமுதாயத்தில் ஆண்களை விட பெண்கள் அதிக அளவில் இருக்க நேரிடும்.
وَإِنْ خِفْتُمْ أَلَّا تُقْسِطُوا۟ فِى ٱلْيَتَٰمَىٰ فَٱنكِحُوا۟ مَا طَابَ لَكُم مِّنَ ٱلنِّسَآءِ مَثْنَىٰ وَثُلَٰثَ وَرُبَٰعَ ۖ فَإِنْ خِفْتُمْ أَلَّا تَعْدِلُوا۟ فَوَٰحِدَةً أَوْ مَا مَلَكَتْ أَيْمَٰنُكُمْ ۚ ذَٰلِكَ أَدْنَىٰٓ أَلَّا تَعُولُوا۟.
4:3. அப்படிப்பட்ட இக்கட்டான கால கட்டங்களில் ஆதரவற்ற பெண்களின் பாதுகாப்பு விஷயத்தில் மாற்று ஏற்பாடு செய்ய முடியாத சூழ்நிலை இருந்தால், (emergency period) ஒருவனுக்கு ஒருத்தி என்ற திருமணச் சட்டம் தற்காலிகமாக தளர்த்தப்படுகிறது. அதாவது அப்படிப்பட்ட கால கட்டத்தில் இஸ்லாமிய ஆட்சியமைப்பு அபலைப் பெண்களுக்கு வாழ்வளிக்க ஒன்றுக்கு மேல் இரண்டு, மூன்று அல்லது நான்கு பெண்கள் வரை தமக்குப் பிடித்தமானவர்களை மணமுடித்துக் கொள்ள அனுமதி அளிக்கும். அப்படி இல்லாத சூழ்நிலையில் தனிப்பட்ட முறையிலும் அபலைப் பெண்களுக்கு வாழ்வளிக்க இவ்வாறு முடிவெடுக்கலாம்.
இவ்வாறு மணமுடித்துக் கொண்டு அவர்களிடையே சரி சமமான முறையில் நியாயமாக நடந்து கொள்ள முடியாது என்ற பயமுள்ளவர்கள், ஒரு மனைவியே போதும் என்ற நிரந்தர சட்டப்படி இருந்து கொள்ளட்டும். (பார்க்க:4:129) அல்லது ஏற்கனவே அவர்களிடமிருக்கும் பணிவிடைப் பெண்களையே மணமுடித்துக் கொள்ளட்டும். இதுவே சமுதாயத்தில் அநியாயம் நடைபெறாமல் பாதுகாப்பாக வாழ சிறந்த வழிமுறையாகும்.
நினைவில் கொள்ளுங்கள். மனைவியர்களிடையே பொருளாதார ரீதியாக சரிசமமாக நடந்து கொள்ளமுடியுமே அன்றி, உளப்பூர்வமாக நீதமான முறையில் ஒருபோதும் நடக்க முடியாது என்று இறைவனே ஆணித்தரமாக சொல்லிவிட்டான் (பார்க்க:4:129). இருப்பினும் போர், கலவரம் போன்ற காலங்களில் ஆதரவற்றப் பெண்களின் பாதுகாப்பு கருதியே ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களை திருமணம் செய்துகொள்ள இறைச் சட்டத்தில் அனுமதி அளிக்கப்படுகிறது. ஆனால் சுமுகமான சூழ்நிலையில் ஒன்றுக்கு மேல் பெண்களை திருமணம் செய்து கொள்வது முறையாகாது. மேலும் திருக்குர்ஆன் இறக்கி அருளப்படுவதற்கு முன் அரபு நாட்டில் அடிமைப் பெண்களை விலைக்கு வாங்கி பணிவிடைக்காக வைத்துக் கொள்வது பழக்கமாக இருந்து வந்தது. அவர்களை மணமுடித்து மனைவி என்ற அந்தஸ்து அளித்து அடிமைத்தனத்திற்கு திருக்குர்ஆன் முற்றுப்புள்ளி வைத்துவிட்டது.
وَءَاتُوا۟ ٱلنِّسَآءَ صَدُقَٰتِهِنَّ نِحْلَةًۭ ۚ فَإِن طِبْنَ لَكُمْ عَن شَىْءٍۢ مِّنْهُ نَفْسًۭا فَكُلُوهُ هَنِيٓـًۭٔا مَّرِيٓـًۭٔا.
4:4 இவ்வாறு மணந்து கொள்ளும் மனைவிக்கு, ‘மஹர்’ என்ற குடும்ப வாழ்க்கைக்கான வசதிகளை, தன் தகுதிக்கு ஏற்றவாறு ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். இந்த மஹர் என்னும் அன்பளிப்பு பொருட்கள் திரும்பப் பெறும் நோக்கத்துடன் இருக்கக்கூடாது. ஏனெனில் அவை அன்புடன் அளிக்கப்படுவதாகும். அதே சமயத்தில் அவர்களே மனமுவந்து கொடுத்தால், அதை நீங்கள் வாங்கிக் கொள்வதில் எவ்வித தவறும் இல்லை.
நினைவில் கொள்ளுங்கள். சொத்து செல்வங்கள் யாவும் அல்லாஹ் அருளியுள்ள முக்கியமான வாழ்வாதாரங்களாகும். ஒரு சமுதாயம் தன் சொந்தக் காலில் நின்று செயல்பட, இந்த செல்வங்கள் துணை நிற்கின்றன. எனவே அவற்றை தேவைக்கேற்ப பயன்படுத்திக் கொள்ள பாதுகாப்பது மிகவும் அவசியமாகிறது. எனவே
وَلَا تُؤْتُوا۟ ٱلسُّفَهَآءَ أَمْوَٰلَكُمُ ٱلَّتِى جَعَلَ ٱللَّهُ لَكُمْ قِيَٰمًۭا وَٱرْزُقُوهُمْ فِيهَا وَٱكْسُوهُمْ وَقُولُوا۟ لَهُمْ قَوْلًۭا مَّعْرُوفًۭا.
4:5. இந்த சொத்து, செல்வங்களின் முக்கியத்துவத்தைப் பற்றிய ஞானம் இல்லாத சிறுவர்களிடம் (Minors) இருப்பது சரியல்ல. ஆகவே அவற்றை பாதுகாக்கும் பொறுப்பாளர் (Guardian) அவசியமாகிறது. எனினும் அந்த அநாதைகளின் அத்தியாவசியத் தேவைகளாகிய உணவு, உடை, இருப்பிடம் ஆகியவற்றின் ஏற்பாடுகளை செய்துத் தருவது முக்கிய கடமையாகும். அவர்களுடன் அழகிய முறையில் கனிவாகப் பேசி அவர்களுக்கு உலகக் கல்வி மற்றும் ஒழுக்க மாண்புகளைப் பற்றிய கல்வியையும் கற்றுக் கொடுத்து அவர்களை நன்றாக பழக்குங்கள்.
وَٱبْتَلُوا۟ ٱلْيَتَٰمَىٰ حَتَّىٰٓ إِذَا بَلَغُوا۟ ٱلنِّكَاحَ فَإِنْ ءَانَسْتُم مِّنْهُمْ رُشْدًۭا فَٱدْفَعُوٓا۟ إِلَيْهِمْ أَمْوَٰلَهُمْ ۖ وَلَا تَأْكُلُوهَآ إِسْرَافًۭا وَبِدَارًا أَن يَكْبَرُوا۟ ۚ وَمَن كَانَ غَنِيًّۭا فَلْيَسْتَعْفِفْ ۖ وَمَن كَانَ فَقِيرًۭا فَلْيَأْكُلْ بِٱلْمَعْرُوفِ ۚ فَإِذَا دَفَعْتُمْ إِلَيْهِمْ أَمْوَٰلَهُمْ فَأَشْهِدُوا۟ عَلَيْهِمْ ۚ وَكَفَىٰ بِٱللَّهِ حَسِيبًۭا.
4:6. அது மட்டுமின்றி அநாதைகளின் அறிவாற்றலும் செயல்திறனும் எந்த அளவிற்கு வளர்ந்து வருகின்றன என்பதையும் கண்காணியுங்கள். அவர்கள் திருமண வயதை அடையும் வரை அவர்களை வளர்த்து வாருங்கள். (பார்க்க:6:153, 17:34 & 40:67) மேலும் அவர்கள் தங்கள் சொத்துக்களை பராமரிக்கும் அளவிற்கு மனப்பக்குவம் அடைந்துள்ளதாக நீங்கள் கருதினால், அவற்றை அவர்களிடம் ஒப்படைத்து விடுங்கள்.
அவர்கள் வாலிப வயதை (major) அடைந்தபின் அவர்களுடைய சொத்துக்களை திருப்பிக் கொடுத்துவிட வேண்டுமே என்ற எண்ணத்துடன், செலவு செய்ததாக அவசர அவசரமாக பொய்க் கணக்கு காட்டி அதை அபகரிக்க எண்ணாதீர்கள். மேலும் அநாதை சொத்துக்களைப் பாதுகாக்க பொறுப்பேற்றுக் கொண்டவர்கள் செல்வந்தர்களாக இருந்தால், அவற்றின் பராமரிப்புச் செலவுகளை விட்டுக் கொடுக்கட்டும். அவர் வசதியற்றவராக இருந்தால், அவற்றின் பராமரிப்புச் செலவுகளை நியாயமான முறையில் பெற்றுக் கொள்ளட்டும்.
மேலும் அச்சொத்துக்களை அவர்களிடம் ஒப்படைக்கும் போது, சாட்சிகள் இருவரை ஏற்படுத்தி அவர்கள் முன்னிலையில் ஒப்படையுங்கள். ஆக கணக்கெடுப்பதில் சகல வல்லமையுமுடைய அல்லாஹ்வின் முன்னிலையில் ஒப்படைப்பதாக எண்ணி அவற்றை நல்ல முறையில் ஒப்படையுங்கள்.
لِّلرِّجَالِ نَصِيبٌۭ مِّمَّا تَرَكَ ٱلْوَٰلِدَانِ وَٱلْأَقْرَبُونَ وَلِلنِّسَآءِ نَصِيبٌۭ مِّمَّا تَرَكَ ٱلْوَٰلِدَانِ وَٱلْأَقْرَبُونَ مِمَّا قَلَّ مِنْهُ أَوْ كَثُرَ ۚ نَصِيبًۭا مَّفْرُوضًۭا.
4:7. தாய் தந்தையரோ நெருங்கிய உறவினர்களோ, விட்டுச் சென்ற சொத்துக்களில் ஆண்களுக்குப் பங்குண்டு. அவ்வாறே பெண்களுக்கும் பங்குண்டு. விட்டுச்சென்ற சொத்து சிறியதோ பெரியதோ, அவரவர் பங்கை பெறும் உரிமை அவர்களுக்கு உண்டு. பாகப் பிரிவினையில் ஆண்களுக்கு மட்டும்தான் பங்கு என்பதல்ல. பெண்களும் அதற்கு உரிமை பெற்றவர்களே. (பார்க்க:4:32) இது இறைவனால் வரையறுக்கப்பட்ட சட்டமாகும்.
وَإِذَا حَضَرَ ٱلْقِسْمَةَ أُو۟لُوا۟ ٱلْقُرْبَىٰ وَٱلْيَتَٰمَىٰ وَٱلْمَسَٰكِينُ فَٱرْزُقُوهُم مِّنْهُ وَقُولُوا۟ لَهُمْ قَوْلًۭا مَّعْرُوفًۭا.
4:8. பாகப் பிரிவினை செய்யும் போது, சொத்திற்குப் பாத்தியப்படாத உறவினர்களோ அநாதைகளோ இருந்தால், அவர்களையும் கவனத்தில் கொண்டு அச்சொத்திலிருந்து முறைப்படி வழங்குங்கள். இந்த பாகப் பிரிவினை முறைப்படி செய்யப் படுவதால் அவர்களைப் பற்றியும் கவனத்தில் கொண்டுள்ளதாக அவர்களிடம் கனிவான முறையில் எடுத்துரையுங்கள். வாரிசுதாரர்கள் கடின சித்தமுள்ளவர்களாக இருந்தால், சொத்திற்குப் பாத்தியப்படாத தம் ஏழை உறவினர்களுக்கு வஸியத்து செய்து தவருவது அந்த செல்வந்தர் மீதுள்ள கடமையாகும். (பார்க்க:2:180)
وَلْيَخْشَ ٱلَّذِينَ لَوْ تَرَكُوا۟ مِنْ خَلْفِهِمْ ذُرِّيَّةًۭ ضِعَٰفًا خَافُوا۟ عَلَيْهِمْ فَلْيَتَّقُوا۟ ٱللَّهَ وَلْيَقُولُوا۟ قَوْلًۭا سَدِيدًا.
4:9. தம் மரணத்திற்குப் பின் வரும் வாரிசுதாரர்கள் மிகவும் மனோபலம் குன்றிய நிலையில் இருப்பதாக நீங்கள் அஞ்சினால், அவர்களுக்கு ஒருபோதும் அநீதி இழைக்காதவாறு முன்னேற்பாடு செய்யுங்கள். அல்லாஹ்வின் வழிகாட்டுதலைப் பேணி நடந்து கொள்ளுங்கள். இப்படிப்பட்ட வாரிசுதாரர்களின் சொத்துப் பராமரிப்பு விஷயமாக பொறுப்பாளர்களிடம் தெளிவான முறையில் யோசனை கூறவேண்டும்.
إِنَّ ٱلَّذِينَ يَأْكُلُونَ أَمْوَٰلَ ٱلْيَتَٰمَىٰ ظُلْمًا إِنَّمَا يَأْكُلُونَ فِى بُطُونِهِمْ نَارًۭا ۖ وَسَيَصْلَوْنَ سَعِيرًۭا.
4:10. நினைவில் கொள்ளுங்கள். இப்படியாக பொறுப்பேற்றுக் கொண்டவர்களில் யார் அவர்கள் சொத்துக்களை அநியாயமாக அபகரித்துக் கொள்கிறார்களோ, அவர்கள் தம் வயிறுகளில் நெருப்பை அள்ளிக் கொட்டிக் கொள்வதற்குச் சமம் என்பதை தெரிந்து கொள்ளட்டும். சொத்துக் குவிப்பின் பேராசையும் வெறியும் அவர்களுக்கு வேதனையுடன் கூடிய நிம்மதியற்ற வாழ்வைத் தேடித்தரும்.
يُوصِيكُمُ ٱللَّهُ فِىٓ أَوْلَٰدِكُمْ ۖ لِلذَّكَرِ مِثْلُ حَظِّ ٱلْأُنثَيَيْنِ ۚ فَإِن كُنَّ نِسَآءًۭ فَوْقَ ٱثْنَتَيْنِ فَلَهُنَّ ثُلُثَا مَا تَرَكَ ۖ وَإِن كَانَتْ وَٰحِدَةًۭ فَلَهَا ٱلنِّصْفُ ۚ وَلِأَبَوَيْهِ لِكُلِّ وَٰحِدٍۢ مِّنْهُمَا ٱلسُّدُسُ مِمَّا تَرَكَ إِن كَانَ لَهُۥ وَلَدٌۭ ۚ فَإِن لَّمْ يَكُن لَّهُۥ وَلَدٌۭ وَوَرِثَهُۥٓ أَبَوَاهُ فَلِأُمِّهِ ٱلثُّلُثُ ۚ فَإِن كَانَ لَهُۥٓ إِخْوَةٌۭ فَلِأُمِّهِ ٱلسُّدُسُ ۚ مِنۢ بَعْدِ وَصِيَّةٍۢ يُوصِى بِهَآ أَوْ دَيْنٍ ۗ ءَابَآؤُكُمْ وَأَبْنَآؤُكُمْ لَا تَدْرُونَ أَيُّهُمْ أَقْرَبُ لَكُمْ نَفْعًۭا ۚ فَرِيضَةًۭ مِّنَ ٱللَّهِ ۗ إِنَّ ٱللَّهَ كَانَ عَلِيمًا حَكِيمًۭا.
4:11. இதன்பின் பாகப்பிரிவினைச் சட்டம் பின்வருமாறு வருகிறது.
(1) இறந்தவரின் சொத்தில் ஆணுக்கு இரண்டு பங்கு, பெண்ணுக்கு ஒரு பங்கு என்ற விகிதாசாரப்படி பிரிக்கப்படும்.
(2) பெண்கள் மட்டும் இரண்டோ அல்லது அதற்கு மேல் இருந்தால், அவர்களுக்கு மூன்றில் இரண்டு பங்கு கிடைக்கும். ஒரு பெண் மட்டும் இருந்தால் அச்சொத்தில் பாதி பாகம் கிடைக்கும். மீதமுள்ளது நெருங்கிய உறவினர்களுக்குச் சேரும்.
(3) இறந்தவருக்கு பிள்ளைகள் இருந்து தாய் தந்தையர் உயிருடன் இருந்தால், அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஆறில் ஒரு பங்கு கிடைக்கும்.
(4) இறந்தவருக்கு பிள்ளைகள் இல்லாதிருந்தால், தாய் தந்தையர் அச்சொத்திற்கு வாரிசுதாரர்கள் ஆவார்கள். அதில் தாய்க்கு மூன்றில் ஒரு பங்கும் தந்தைக்கு மூன்றில் இரண்டு பங்கும் சேரும்.
(5) இறந்தவருக்கு பிள்ளைகள் இல்லாதிருந்து, சகோதரர்கள் இருந்தால் தாய்க்கு ஆறில் ஒரு பங்கு சேரும். அதாவது சொத்தை ஆறு பங்குகளாகப் பிரித்து ஒரு பங்கு தாய்க்கு போக, மீதமான ஐந்து பங்கில் ஒரு பங்கு சகோதரர்களுக்கும் நான்கு பங்கும் தந்தைக்கும் சேரும்.
நினைவில் கொள்ளுங்கள். இந்த பாகப் பிரிவினை இறந்தவரின் கடன்களை அடைத்த பின்புதான் செய்யப்படும். அவருக்கு கடன் எவ்வளவு இருக்கிறது என்பதைக் கணக்கிட்டு, அந்த சொத்திலிருந்து அதை முதலில் ஒதுக்கவேண்டும். அதன்பின் அவர் மரண சாஸனத்தில் உள்ள சொத்துக்கள் போக, மீதமுள்ள சொத்திலிருந்துதான் பாகப் பிரிவினை செய்ய வேண்டும்.
ஒரு வேளை அவர் உயில் என்ற மரண சாஸனம் எழுதவில்லை என்றால் மேற்சொன்னவாறு முறைப்படி பாகப்பிரிவினை செய்யுங்கள். ஆக உங்கள் பெற்றோர், பிள்ளைகள் ஆகிய இவர்களில் நன்மை செய்வதில் யார் உங்களுக்கு நெருக்கமானவர்கள் என்பதை நீங்கள் அறியமாட்டீர்கள். இதனால்தான் இந்த பாகப்பிரிவினை செய்யும் முறை அல்லாஹ்வின் புறத்திலிருந்து நிர்ணயிக்கப்படுகிறது. ஏனெனில் நிச்சயமாக அல்லாஹ்வின் இந்த சட்ட விதிமுறைகள் கல்வி ஞானத்தின் அடிப்படையில் செய்யப்பட்டவையாகும்.
۞ وَلَكُمْ نِصْفُ مَا تَرَكَ أَزْوَٰجُكُمْ إِن لَّمْ يَكُن لَّهُنَّ وَلَدٌۭ ۚ فَإِن كَانَ لَهُنَّ وَلَدٌۭ فَلَكُمُ ٱلرُّبُعُ مِمَّا تَرَكْنَ ۚ مِنۢ بَعْدِ وَصِيَّةٍۢ يُوصِينَ بِهَآ أَوْ دَيْنٍۢ ۚ وَلَهُنَّ ٱلرُّبُعُ مِمَّا تَرَكْتُمْ إِن لَّمْ يَكُن لَّكُمْ وَلَدٌۭ ۚ فَإِن كَانَ لَكُمْ وَلَدٌۭ فَلَهُنَّ ٱلثُّمُنُ مِمَّا تَرَكْتُم ۚ مِّنۢ بَعْدِ وَصِيَّةٍۢ تُوصُونَ بِهَآ أَوْ دَيْنٍۢ ۗ وَإِن كَانَ رَجُلٌۭ يُورَثُ كَلَٰلَةً أَوِ ٱمْرَأَةٌۭ وَلَهُۥٓ أَخٌ أَوْ أُخْتٌۭ فَلِكُلِّ وَٰحِدٍۢ مِّنْهُمَا ٱلسُّدُسُ ۚ فَإِن كَانُوٓا۟ أَكْثَرَ مِن ذَٰلِكَ فَهُمْ شُرَكَآءُ فِى ٱلثُّلُثِ ۚ مِنۢ بَعْدِ وَصِيَّةٍۢ يُوصَىٰ بِهَآ أَوْ دَيْنٍ غَيْرَ مُضَآرٍّۢ ۚ وَصِيَّةًۭ مِّنَ ٱللَّهِ ۗ وَٱللَّهُ عَلِيمٌ حَلِيمٌۭ.
4:12. இப்போது திருமண பந்தங்களின் மூலமாக கிடைக்கும் சொத்துக்களின் பாகப்பிரிவினை பற்றியது ஆகும்.
(1) உங்கள் மனைவி விட்டுச் சென்ற சொத்துக்களில் பிள்ளைகள் இல்லாத நிலையில் கணவருக்கு சரி பாதி பங்குண்டு. பிள்ளைகள் இருந்தால் அதில் நான்கில் ஒரு பங்கு சேரும்.
அதுவும் அவர் பெயரில் இருக்கும் கடன்கள் மற்றும் மரண சாஸனத்தை பூர்த்தி செய்தபின் மீதமுள்ள சொத்துலிருந்து இந்த பாகப் பரிவினை செய்ய வேண்டும்.
(2) கணவர் விட்டுச் சென்ற சொத்துக்களில் மகப்பேறு இல்லாத நிலையில் மனைவிக்கு நான்கில் ஒரு பங்கு சேரும். பிள்ளைகள் இருந்தால் அதில் எட்டில் ஒரு பங்கு சேரும். இதுவும் அவர் பெயரில் இருக்கும் கடன்கள் மற்றும் தாமே எழுதிய உயில் சொத்துக்கள் போக, மீதமுள்ள சொத்திலிருந்து இந்த பாகப் பிரிவினை செய்யப்படும்.
(3)அதாவது நீங்கள் செய்ய வேண்டிய காரியம் என்னவென்றால் முதலில் இறந்தவர் பேரில் கடன் எவ்வளவு இருக்கிறது என்பதையும் அவர் என்ன உயில் எழுதி வைத்துள்ளார் என்பதையும் கவனிக்க வேண்டும். அது போக மீதமுள்ளதை கணக்கெடுத்து கணவன் மனைவி உறவுமுறையில் பாகப்பிரிவினை கணக்கு எடுக்கவேண்டும் (பார்க்க:4:33). இதை கழித்து மீதமுள்ள சொத்திலிருந்து வாரிசுகளான மகன் மகள் பேரன் பேத்தி அல்லது பெற்றோர்களில் தாய் தந்தை பாட்டனார் ஆகியவர்களுக்குப் பாகப்பிரிவினை செய்யவேண்டும்.
(4) இறந்தவருக்கு பிள்ளைகள் இல்லாதிருந்து, தாய் தந்தையர் உயிருடன் இருந்து, உடன் பிறந்த ஒரு சகோதரன் ஒரு சகோதரி இருந்தால் இவர்கள் இருவருக்கும் தலா ஆறில் ஒரு பங்கு கிடைக்கும். ஒன்றுக்கு மேல் சகோதர சகோதரிகள் இருந்தால் சொத்தில் மூன்றில் ஒரு பங்கு எடுத்து சரிசமமாகப் பிரித்து தரப்படும். இறந்தவருக்குத் தாய் தந்தையர் இல்லை என்றால் 4:176இல் சொன்ன படி பிரித்துத் தரப்படும்.
நினைவில் கொள்ளுங்கள். இந்த பாகப் பிரிவினை எல்லாம் இறந்தவர் பேரில் இருக்கும் கடன்கள் மற்றும் அவர் எழுதிவிட்டுச் சென்ற உயில் சொத்துக்கள் போக மீதமுள்ள சொத்திலிருந்து தான் செய்து தர வேண்டும். ஒருவேளை அவர் எழுதிய மரண சாஸனம் வாரிசுகளுக்கு நஷ்டம் ஏற்படுகிறது என்று இஸ்லாமிய நீதிமன்றம் கருதினால், அதை தீர விசாரித்து சரி செய்யலாம் (பார்க்க:2:182) இதுவே அல்லாஹ்வின் புறத்திலிருந்து நிலைநிறுத்தப்பட்ட சட்ட விதிமுறைகளாகும். அவற்றை யாரும் மீறக்கூடாது. ஏனெனில் இவையாவும் அவசரப்பட்டு செய்யப்பட்ட விதிமுறைகள் அல்ல. எல்லா வல்லமையும் உடைய அல்லாஹ்வின் புறத்திலிருந்து நிலைநிறுத்தப்பட்ட சட்டமாகும்.
تِلْكَ حُدُودُ ٱللَّهِ ۚ وَمَن يُطِعِ ٱللَّهَ وَرَسُولَهُۥ يُدْخِلْهُ جَنَّٰتٍۢ تَجْرِى مِن تَحْتِهَا ٱلْأَنْهَٰرُ خَٰلِدِينَ فِيهَا ۚ وَذَٰلِكَ ٱلْفَوْزُ ٱلْعَظِيمُ.
4:13. இவை யாவும் அல்லாஹ்வின் (Constitution) நிலையான அடிப்படை சட்டங்களாகும். இதை மையமாக வைத்து தான் செயல்முறைச் சட்டங்கள் (By-Laws) ஏற்படுத்தப்படுகின்றன. எந்த சமுதாயம் அல்லாஹ்வின் சட்டத்திற்கும், (Constitution) அதனடிப்படையில் இறைத்தூதர் உருவாக்கும் ஆட்சியமைப்புச் சட்டங்களுக்கும் (By-Laws governing the state) அடிபணிந்து செயல்படுமோ, அது சுவர்க்கத்திற்கு ஒப்பான நாடாக மாறும். அதாவது வற்றாத ஜீவநதி போல் தாராள பொருதார வசதிகளும் பெருகி, நிலையான சந்தோஷங்கள் நிறைந்த சமுதாயமாக விளங்கும். இது மாபெரும் வெற்றியாகும் அல்லவா?
وَمَن يَعْصِ ٱللَّهَ وَرَسُولَهُۥ وَيَتَعَدَّ حُدُودَهُۥ يُدْخِلْهُ نَارًا خَٰلِدًۭا فِيهَا وَلَهُۥ عَذَابٌۭ مُّهِينٌۭ.
4:14. அல்லாஹ்வின் வழிகாட்டுதலையும் அதன் அடிப்படையில் உருவாக்கப்பட்ட ஆட்சிமுறை சட்டங்களுக்கும் மாற்றமாக செயல்படும் சமுதாயம் நரகமாக மாறிவிடும். அதாவது அல்லாஹ்வின் வரையறைகளை மீறி நடக்கும் போது, அந்த சமுதாயத்தினர் தம் மனோ இச்சையின்படி சுயநலத்துடன் தான் செயல்படுவார்கள். அதனால் அங்கு சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு நிம்மதியற்ற நிலை உருவாகும். இதிலிருந்து விடுபட எந்த வழிமுறையும் இருக்காது. இப்படியாக அந்த சமுதாயம் இழிவும் வேதனையும் அனுபவிக்க நேரிடும்.
இதுவரையில் நாட்டு மக்களின் சொத்து செல்வங்களின் பாதுகாப்பு மற்றும் அதன் பாகப் பிரிவினை சம்பந்தப்பட்ட விஷயங்களைப் பார்த்தோம். இனி நாட்டு மக்களின் கலாச்சாரம் மற்றும் ஒழுக்க மாண்புகளைப் பற்றி பார்ப்போம். இதுவும் நாட்டின் வளர்ச்சிக்கும் நல்லிணக்கத்திற்கும் முக்கிய அங்கம் வகிக்கிறது. எனவே இதைப் பேணி நடப்பது மிகவும் முக்கியமாகும். அந்த வகையில் சமுதாயத்தில் ஆண் பெண் உறவுமுறை ஏற்படுவதில் கட்டுப்பாடுகள் இருக்க வேண்டியது அவசியமாகிறது. எனவே இதற்காக அரசு/சமூக அங்கீகாரம் அளிக்கும் பதிவுத் திருமணமுறை ஏற்படுத்தப்படுகிறது. அவ்வாறின்றி அவரவர் விருப்பப்படி அங்கீகாரம் பெறாமலேயே தொடர்பு வைத்துக் கொள்ளலாம் என்றிருந்தால், சமுதாயம் காலப் போக்கில் சீர்கெட்டு போய்விடும்.
وَٱلَّٰتِى يَأْتِينَ ٱلْفَٰحِشَةَ مِن نِّسَآئِكُمْ فَٱسْتَشْهِدُوا۟ عَلَيْهِنَّ أَرْبَعَةًۭ مِّنكُمْ ۖ فَإِن شَهِدُوا۟ فَأَمْسِكُوهُنَّ فِى ٱلْبُيُوتِ حَتَّىٰ يَتَوَفَّىٰهُنَّ ٱلْمَوْتُ أَوْ يَجْعَلَ ٱللَّهُ لَهُنَّ سَبِيلًۭا.
4:15. எனவே பெண்கள் தரப்பிலிருந்து முறையற்ற செயல்கள் நிகழ்வதாக குற்றச்சாட்டுகள் வந்தால், அதை தீர விசாரிக்க வேண்டும். குறைந்தது நான்கு சாட்சிகளையாவது வாத்து விசாரிக்க வேண்டும். விசாரணையில் குற்றம் நிரூபிக்கப்பட்டால், அப்படிப்பட்டவர்ளை ஆயுட்காலம் வரை மகளிர் சீர்திருத்த மையத்தில் அடைத்து வைக்க வேண்டும். அல்லது அவளுக்கு மறுவாழ்வு கிடைக்க ஏற்பாடுகளைச் செய்யலாம். அதாவது திருமணம் ஆகாதவளாக இருந்தால் திருமண ஏற்பாடு செய்து தரலாம். இப்படியாக மாற்று ஏற்பாடுகள் ஏற்படும் வரையில் அவர்களை அடைத்து வைக்க வேண்டும்.
இதனால் மானக்கேடான செயல்கள் சமுதாயத்தில் நடைபெறுவதை தடுத்து விடலாம். அவர்கள் மேல் சுமத்தப்பட்ட குற்றம் நிரூபிக்கப்படவில்லை என்றால், புகார் கொடுத்தவர் மீது அவதூரு வழக்குத் தொடர்ந்து அவருக்கு எண்பது கசையடி அடிக்கப்படும் (பார்க்க:24:4) சாட்சியங்கள் விஷயத்தில் நான்கு சாட்சிகள் என்பது ஆதாரங்கள் (circumstancial evidence) அகும்.
وَٱلَّذَانِ يَأْتِيَٰنِهَا مِنكُمْ فَـَٔاذُوهُمَا ۖ فَإِن تَابَا وَأَصْلَحَا فَأَعْرِضُوا۟ عَنْهُمَآ ۗ إِنَّ ٱللَّهَ كَانَ تَوَّابًۭا رَّحِيمًا.
4:16. எனவே தண்டனை விஷயத்தில் ஆண் பெண் ஆகிய இருவரும் சமமானவர்களே. ஆனால் அறியாமையில் தவறு செய்துவிட்டதாக உணர்ந்து, மன்னிப்புக் கோரினால், அவர்களை எச்சரித்து மன்னிப்பு அளிக்க அல்லாஹ்வின் சட்டத்தில் இடமுண்டு. இது அல்லாஹ்வின் கிருபையாகும்.
அதாவது அடைத்து வைக்கப்பட்டுள்ள இத்தகைய குற்றவாளிகள் திருந்தியுள்ளனர் என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அரசுக்குப் பரிந்துரை செய்தால், அவர்களை தீர விசாரித்து சரிபார்த்து விடுதலை செய்து ஒழுக்கத்துடன் வாழ மீணடும் ஒரு அவகாசம் அளிக்கலாம்.
إِنَّمَا ٱلتَّوْبَةُ عَلَى ٱللَّهِ لِلَّذِينَ يَعْمَلُونَ ٱلسُّوٓءَ بِجَهَٰلَةٍۢ ثُمَّ يَتُوبُونَ مِن قَرِيبٍۢ فَأُو۟لَٰٓئِكَ يَتُوبُ ٱللَّهُ عَلَيْهِمْ ۗ وَكَانَ ٱللَّهُ عَلِيمًا حَكِيمًۭا.
4:17. ஆக தீய செயல்கள் எதுவாக இருந்தாலும், அறியாமையில் செய்திருந்தால், அதனை உடனே விட்டுவிட்டு திருந்திகொள்ள வேண்டும். அப்படி மன்னிப்பு கோரி திருந்தி வாழ்பவர்களுக்கே அல்லாஹ்வின் சட்டத்தில் மன்னிப்பு உண்டு. ஏனெனில் இந்த சட்ட திட்டங்கள் யாவும் அல்லாஹ் தன் கல்வி ஞானத்தின் அடிப்படையில் ஏற்படுத்தியவை ஆகும்.
وَلَيْسَتِ ٱلتَّوْبَةُ لِلَّذِينَ يَعْمَلُونَ ٱلسَّيِّـَٔاتِ حَتَّىٰٓ إِذَا حَضَرَ أَحَدَهُمُ ٱلْمَوْتُ قَالَ إِنِّى تُبْتُ ٱلْـَٰٔنَ وَلَا ٱلَّذِينَ يَمُوتُونَ وَهُمْ كُفَّارٌ ۚ أُو۟لَٰٓئِكَ أَعْتَدْنَا لَهُمْ عَذَابًا أَلِيمًۭا.
4:18. இதற்கு மாறாக ஒருவர் காலமெல்லாம் தீய செயல்களில் ஈடுபட்டுவிட்டு, தனக்கு மரணம் நெருங்கும் தருவாயில், பாவமன்னிப்பு கோரினால் அப்படிப்பட்டவர்க்கு மன்னிப்பு அளிக்கப்பட மாட்டாது. மேலும் யார் அல்லாஹ்வின் சட்ட திட்டங்களுக்கு மாற்றமாக தொடர்ந்து செயல்பட்டு மரிக்கிறார்களோ, அவர்களுக்கும் பாவமன்னிப்பு கிடையாது. அத்தகையோருக்கு துயரமிக்க வேதனைகள் சித்தப்படுத்தப்பட்டுள்ளன.
இதுவரை சொத்து செல்வங்களின் பாதுகாப்பு மற்றும் ஒழுக்க மாண்புகளின் விதிமுறைகளைப் பார்த்தோம். இதற்கு அடுத்தப்படியாக குடும்ப வாழ்வியல் விதிமுறைகளைப் பார்ப்போம். இது சம்பந்தமாக ஓர் அடிப்படை விஷயத்தை மனதில் பதிய வைத்துக் கொள்ள வேண்டும். அதாவது திருமண விஷயத்தில் தமக்குப் பிடித்தமான பெண்களை மணமுடித்துக் கொள்ள அனுமதி உண்டு (பார்க்க:4:3). அதேபோல் மணமுடித்துக் கொள்ள பெண்களின் ஒப்புதலும் அவசியமாகிறது.
يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟ لَا يَحِلُّ لَكُمْ أَن تَرِثُوا۟ ٱلنِّسَآءَ كَرْهًۭا ۖ وَلَا تَعْضُلُوهُنَّ لِتَذْهَبُوا۟ بِبَعْضِ مَآ ءَاتَيْتُمُوهُنَّ إِلَّآ أَن يَأْتِينَ بِفَٰحِشَةٍۢ مُّبَيِّنَةٍۢ ۚ وَعَاشِرُوهُنَّ بِٱلْمَعْرُوفِ ۚ فَإِن كَرِهْتُمُوهُنَّ فَعَسَىٰٓ أَن تَكْرَهُوا۟ شَيْـًۭٔا وَيَجْعَلَ ٱللَّهُ فِيهِ خَيْرًۭا كَثِيرًۭا.
4:19. எனவே உங்களை விரும்பாத பெண்களை பலவந்தமாக திருமணம் செய்துகொள்ளக் கூடாது. நீங்கள் மணமுடித்த பெண்களுக்கு அளித்துள்ள பொருட்களை திரும்பப் பெறும் பொருட்டு, அவர்களை துன்புறுத்தக் கூடாது. அவர்களுடைய விருப்பத்திற்கு மாறாக அவர்களை உங்களிடமே நிறுத்தி வைத்துக் கொள்ளக் கூடாது.
அவர்கள் மானக்கேடான செயல்களைச் செய்வதாக உங்களுக்குத் தெளிவானால், இஸ்லாமிய நீதிமன்றத்தின் மூலமாக, அப்பொருட்களிலிருந்து சிலவற்றை திரும்பப் பெற்றுக் கொள்ள உரிமை உண்டு. நீங்கள் உங்கள் மனைவியிடம் கனிவான முறையில் நடந்து கொள்ளுங்கள். அவளுடைய செயல்களில் ஏதாகிலும் உங்களுக்குப் பிடிக்காதிருந்தால், அவளை வெறுத்து ஒதுக்கிடாமல் சீர்செய்ய முயற்சி செய்யுங்கள். எதையும் பொறுமையுடன் கையாளுங்கள்.
இந்த விதிமுறை உங்களுக்கு வெறுக்கத்தக்கதாய் தோன்றலாம். அல்லாஹ்வின் இந்த அறிவுரைகளைக் கொண்டு உங்களுக்கு சிறந்த சந்தோஷமான வாழ்க்கை கிடைக்க வழிகள் பிறக்கும்.
وَإِنْ أَرَدتُّمُ ٱسْتِبْدَالَ زَوْجٍۢ مَّكَانَ زَوْجٍۢ وَءَاتَيْتُمْ إِحْدَىٰهُنَّ قِنطَارًۭا فَلَا تَأْخُذُوا۟ مِنْهُ شَيْـًٔا ۚ أَتَأْخُذُونَهُۥ بُهْتَٰنًۭا وَإِثْمًۭا مُّبِينًۭا.
4:20. நீங்கள் வேறு பெண்ணை மணந்து கொள்ளும் நோக்கத்துடன், தன் மனைவியை விவாகரத்து செய்ய நாடினால் அவளுக்கு நீங்கள் கொடுத்துள்ள பொருட்களிலிருந்து திரும்பப் பெறுவது முறையாகாது. நீங்கள் அவளுக்குப் பொற் குயவியலையே கொடுத்திருந்தாலும் சரியே, அவற்றை திரும்பப் பெறக் கூடாது. அவளிடமிருந்து சொத்துக்களை திரும்பப் பெறும் பொருட்டு, அவள் மீது அபாண்டமாகப் பழி சுமத்துவதோ துன்புறுத்துவதோ கூடாது. இது மிகப் பெரிய பாவகரச் செயலாகும்.
وَكَيْفَ تَأْخُذُونَهُۥ وَقَدْ أَفْضَىٰ بَعْضُكُمْ إِلَىٰ بَعْضٍۢ وَأَخَذْنَ مِنكُم مِّيثَٰقًا غَلِيظًۭا.
4:21. கணவன் மனைவி உறவுமுறை என்பது நகமும் சதையும் போன்றதாகும். ஒருவர் மற்றவரின் நலனை வாழ்நாள் முழுவதும் பேணிக்காப்பதாக வாக்குறுதி அளித்து, திருமண ஒப்பந்தம் செய்து கொண்டு, மிகவும் அன்யோனியமாக வாழ்ந்த பின்னர், அவளை விட்டுப் பிரியும் நிலை ஏற்பட்டால், அவளிடமிருந்து பொருட்களை திரும்பப் பெற நினைப்பது எப்படி நியாயமாகும்?
وَلَا تَنكِحُوا۟ مَا نَكَحَ ءَابَآؤُكُم مِّنَ ٱلنِّسَآءِ إِلَّا مَا قَدْ سَلَفَ ۚ إِنَّهُۥ كَانَ فَٰحِشَةًۭ وَمَقْتًۭا وَسَآءَ سَبِيلًا.
4:22. மேலும் எந்தெந்த பெண்ணோடு மணமுடித்துக் கொள்ள தடை உள்ளது என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள். அந்தப் பட்டியலில் முதலில் வருவது உங்கள் தந்தை மணமுடித்த பெண். அவர் உங்கள் தாய்க்குச் சமமானவர். எனவே அவருடன் திருமணம் செய்யக் கூடாது. ஏனெனில் இது மானக்கேடானதும், வெறுக்கத தக்கதும், தீமையான செயலும் ஆகும். ஆனால் அறியாமைக் கால கட்டத்தில் ஏற்கனவே அவ்வாறு மணமுடித்து இருந்தால், அதை அப்படியே தக்கவைத்துக் கொள்வதில் ஆட்சேபனை இல்லை. இனி இவ்வாறு நடக்கக் கூடாது.
حُرِّمَتْ عَلَيْكُمْ أُمَّهَٰتُكُمْ وَبَنَاتُكُمْ وَأَخَوَٰتُكُمْ وَعَمَّٰتُكُمْ وَخَٰلَٰتُكُمْ وَبَنَاتُ ٱلْأَخِ وَبَنَاتُ ٱلْأُخْتِ وَأُمَّهَٰتُكُمُ ٱلَّٰتِىٓ أَرْضَعْنَكُمْ وَأَخَوَٰتُكُم مِّنَ ٱلرَّضَٰعَةِ وَأُمَّهَٰتُ نِسَآئِكُمْ وَرَبَٰٓئِبُكُمُ ٱلَّٰتِى فِى حُجُورِكُم مِّن نِّسَآئِكُمُ ٱلَّٰتِى دَخَلْتُم بِهِنَّ فَإِن لَّمْ تَكُونُوا۟ دَخَلْتُم بِهِنَّ فَلَا جُنَاحَ عَلَيْكُمْ وَحَلَٰٓئِلُ أَبْنَآئِكُمُ ٱلَّذِينَ مِنْ أَصْلَٰبِكُمْ وَأَن تَجْمَعُوا۟ بَيْنَ ٱلْأُخْتَيْنِ إِلَّا مَا قَدْ سَلَفَ ۗ إِنَّ ٱللَّهَ كَانَ غَفُورًۭا رَّحِيمًۭا.
4:23. இது தவிர வேறு எந்தெந்த பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள தடை உள்ளது என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள்.
உங்களைப் பெற்றெடுத்த தாய், உங்கள் மகள்கள், உங்கள் சகோதரிகள், உங்கள் தந்தையின் சகோதரிகள் (அத்தை), உங்கள் தாயின் சகோதரிகள், உங்கள் சகோதரனின் மகள்கள், உங்கள் சகோதரியின் மகள்கள், உங்களுக்கு பாலூட்டிய செவிலித் தாய், பால்குடி சகோதரிகள், உங்கள் மனைவியின் தாய் ஆகியவர்களுடன் மணமுடிக்கத் தடை செய்யப்பட்டுள்ளது.
அதே போல் நீங்கள் ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு, அவளுடன் உறவு கொண்டபின் அவளுடைய முந்தைய கணவருக்குப் பிறந்து உங்கள் கண்காணிப்பில் இருக்கும் மகளை நீங்கள் திருமணம் செய்துக் கொள்ளக்கூடாது. ஆனால் நீங்கள் மணமுடித்துக் கொண்ட பெண்ணிடம் வீடு கூடாமல் இருந்தால், அவளை விவாகரத்து செய்து, அவளுடைய முந்தைய கணவனுக்குப் பிறந்த பெண்ணை திருமணம் செய்து கொள்வதில் குற்றமில்லை.
உங்களுக்குப் பிறந்த மகன்களின் மனைவியையும் (மருமகள்) மணந்து கொள்ளக் கூடாது. மேலும் இரு சகோதரிகளை ஒரே சமயத்தில் மனைவிகளாக ஆக்கிக்கொள்வது தடை செய்யப்படுகிறது.
இருந்தும் அறியாமைக் காலத்தில் ஏற்கனவே இதற்கு மாற்றமாகத் திருமணங்கள் நடந்திருந்தால் அதை அப்படியே விட்டுவிடுங்கள். அதாவது இந்த சட்டம் பிறப்பிக்கப்பட்டதும் விவாகரத்து செய்துவிட எண்ணாதீர்கள். அல்லாஹ்வின் ஏற்பாடு பாதுகாப்பும் கருணையும் மிக்கதாய் இருக்கின்றது.
۞ وَٱلْمُحْصَنَٰتُ مِنَ ٱلنِّسَآءِ إِلَّا مَا مَلَكَتْ أَيْمَٰنُكُمْ ۖ كِتَٰبَ ٱللَّهِ عَلَيْكُمْ ۚ وَأُحِلَّ لَكُم مَّا وَرَآءَ ذَٰلِكُمْ أَن تَبْتَغُوا۟ بِأَمْوَٰلِكُم مُّحْصِنِينَ غَيْرَ مُسَٰفِحِينَ ۚ فَمَا ٱسْتَمْتَعْتُم بِهِۦ مِنْهُنَّ فَـَٔاتُوهُنَّ أُجُورَهُنَّ فَرِيضَةًۭ ۚ وَلَا جُنَاحَ عَلَيْكُمْ فِيمَا تَرَٰضَيْتُم بِهِۦ مِنۢ بَعْدِ ٱلْفَرِيضَةِ ۚ إِنَّ ٱللَّهَ كَانَ عَلِيمًا حَكِيمًۭا.
4:24. மேலும் திருமண உறவில் இருக்கும் கணவனுள்ள பெண்களை நீங்கள் மணமுடிக்கக் கூடாது. இஸ்லாமிய மார்க்கத்தைத் தழுவிய பெண்கள், பாதுகாப்பு கருதி அகதிகளாக உங்களிடம் வந்து தங்கியிருந்து அவர்களும் விரும்பினால், அவர்களை மணமுடித்துக் கொள்ளலாம். இவை யாவும் அல்லாஹ் உங்களுக்கு நிர்ணயித்துத் தந்துள்ள வரையறைகளாகும்.
மேலே தடை செய்யப்பட்டுள்ள பெண்களைத் தவிர, வேறு எந்த பெண்ணுடனும் திருமணம் செய்துக் கொள்ளலாம். ஆனால் அவர் திருமணச் சட்ட விதிமுறைகளின்படி பதிவுத் திருமணம் (நிக்காஹ்) செய்துகொள்ள வேண்டும். இப்படியாக ஒருவர் மற்றவரின் நலனைப் பேணிக் காக்கும் வாழ்நாள் காலத்து தம்பதிகளாக ஆகிவிடவேண்டும்.
இதை விட்டுவிட்டு வெறும் சிற்றின்பத்தை மட்டும் அனுபவிக்கும் எண்ணத்துடன் திருமண உறவுகளை ஏற்படுத்திக் கொள்வது முறையல்ல. கணவன் மனைவி என்ற உறவுமுறையின் அடிப்படையில் இருக்கவேண்டும்.
நிர்ணயிக்கப்பட்ட ‘மஹர்’ என்னும் வாழ்க்கை நடத்த வசதிகளை நன்கொடையாக அளித்திடல் வேண்டும். இதில் இருவரின் சம்மதத்துடன் அதிகரித்துக் கொள்ளவோ அல்லது குறைத்துக் கொள்ளவோ செய்யலாம். அதில் குற்றம் ஏதுமில்லை.
அல்லாஹ்வின் சட்டதிட்டங்கள் யாவும் ஞானத்தின் அடிப்படையிலானவை ஆகும் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
وَمَن لَّمْ يَسْتَطِعْ مِنكُمْ طَوْلًا أَن يَنكِحَ ٱلْمُحْصَنَٰتِ ٱلْمُؤْمِنَٰتِ فَمِن مَّا مَلَكَتْ أَيْمَٰنُكُم مِّن فَتَيَٰتِكُمُ ٱلْمُؤْمِنَٰتِ ۚ وَٱللَّهُ أَعْلَمُ بِإِيمَٰنِكُم ۚ بَعْضُكُم مِّنۢ بَعْضٍۢ ۚ فَٱنكِحُوهُنَّ بِإِذْنِ أَهْلِهِنَّ وَءَاتُوهُنَّ أُجُورَهُنَّ بِٱلْمَعْرُوفِ مُحْصَنَٰتٍ غَيْرَ مُسَٰفِحَٰتٍۢ وَلَا مُتَّخِذَٰتِ أَخْدَانٍۢ ۚ فَإِذَآ أُحْصِنَّ فَإِنْ أَتَيْنَ بِفَٰحِشَةٍۢ فَعَلَيْهِنَّ نِصْفُ مَا عَلَى ٱلْمُحْصَنَٰتِ مِنَ ٱلْعَذَابِ ۚ ذَٰلِكَ لِمَنْ خَشِىَ ٱلْعَنَتَ مِنكُمْ ۚ وَأَن تَصْبِرُوا۟ خَيْرٌۭ لَّكُمْ ۗ وَٱللَّهُ غَفُورٌۭ رَّحِيمٌۭ.
4:25. சுதந்திரமுள்ள மூஃமினான பெண்ணை திருமணம் செய்துகொள்ள வசதி இல்லாதோர், இஸ்லாம் மார்க்கத்தைத் தழுவிய மற்றவர் பாதுகாப்பில் இருக்கும் பணிவிடைப் பெண்களை மணமுடித்துக் கொள்ளலாம்.
இப்படியாக பெண்கள் அடிமைத்தனம் கொஞ்சம் கொஞ்சமாக நீங்கி சமுதாயத்தில் சீர்நிலை ஏற்படும். ஆக நீங்கள் செயல்பட்டு வருவதும், உங்களில் எந்த அளவிற்கு மார்க்க ஈடுபாடு ஏற்பட்டுள்ளது என்பதும் அல்லாஹ்வுக்கு நன்கு தெரியும். எனவே பணிவிடைப் பெண்களை மணமுடித்துக் கொள்வது இழிவான செயல் என்று எண்ணாதீர்கள். எப்போது அவள் இஸ்லாம் மார்க்கத்தைத் தழுவி உங்களுடன் நிக்காஹ் செய்து திருமண உறவுக்குள் வந்து விடுகிறாளோ, அப்போதிலிருந்தே அவள் மற்ற மூஃமினான பெண்களுக்குச் சமமானவளாக ஆகிவிடுகிறாள்.
ஆனால் பணிவிடைப் பெண்ணை மணமுடிக்க அவளுடைய எஜமானிடமிருந்து அனுமதி பெற்றுக்கொள்வது முக்கியமான ஒன்றாகும். அதன்பின் அவளுக்கு ‘மஹர்’ என்னும் நன்கொடையை அளித்து முறைப்படி திருமணம் செய்துகொள்ள வேண்டும். ஆக கணவன் மனைவி ஆகிய இருவரும் கற்புடன் தூய்மையமான வாழ்க்கை வாழ்வதற்காகவே நிக்காஹ் என்ற ஒப்பந்தம் செய்யப்படுகிறது. (பார்க்க– 5:5)
இவ்வாறாக பணிவிடைப் பெண்ணை திருமணம் செய்துகொண்ட பின் ஒருவேளை அவள் மானக்கேடான செயலில் ஈடுபடுவதாகத் தெரிய வந்தால், மற்ற சுதந்திரமான பெண்களுக்கு கிடைக்கக் கூடிய கசையடி தண்டனையில் சரிபாதி விதிக்கப்படும்.* அவ்வாறு பணிவிடைப் பெண்களை மணந்துகொண்டு இறைவழிகாட்டுதலைப் பேணி நடக்க இயலாது என்று அஞ்சினால், நீங்கள் மணக்காதீர்கள். எனினும் யார் அல்லாஹ்வின் வழிகாட்டுதலின்படி உறுதிப்படுடன் நிலைத்திருந்து செயல்படுகிறார்களோ, அவர்களுக்கு அல்லாஹ்வின் உதவியும் பாதுகாப்பும் கிடைக்கும்.
கசையடி சரி பாதி ஆக்கியதன் காரணம் அவர்கள் வளர்ந்து வந்த சூழ்நிலை சந்தர்ப்பத்தால், தகாத செயல்களுக்குப் பழக்கமாகி இருப்பார்கள். அப்படிப்பட்ட செயல்கள் செய்வதில் தவறு ஒன்றும் இல்லை என்ற எண்ணத்தில் இருப்பார்கள். இப்படிப்பட்டவர்கள் திருந்துவதற்கு சில காலம் ஆகும். எனவேதான் அவர்களுக்குத் தரப்படும் தண்டனை பாதியாகக் குறைக்கப்படுகிறது. நீங்கள் நிதானத்தோடு பக்குவமாக எடுத்துச் சொல்லி, அவளை திருத்தவேண்டும். ஏனெனில் இவர்களிடமுள்ள தீய பழக்கங்களை நீக்கி, சிறந்த முஸ்லிம் பெண்மணியாக உருவாக்குவதே உங்களுடைய நோக்கமாகும்.
يُرِيدُ ٱللَّهُ لِيُبَيِّنَ لَكُمْ وَيَهْدِيَكُمْ سُنَنَ ٱلَّذِينَ مِن قَبْلِكُمْ وَيَتُوبَ عَلَيْكُمْ ۗ وَٱللَّهُ عَلِيمٌ حَكِيمٌۭ.
4:26. இப்படியாக இல்லற வாழ்வியல் தொடர்பாக விரிவான சட்ட திட்டங்கள் அல்லாஹ்வின் புறத்திலிருந்து தெளிவாக்கப்படுகின்றன. முன்சென்ற சமுதாயங்கள் இவற்றை முறைப்படி பேணி நடந்து எந்த அளவிற்கு மகிழ்ச்சியாகவும் வளமாகவும் வாழ்ந்தார்கள் என்பதை உங்களுக்கு தெளிவாக்கிடத்தான் இவை உங்களுக்கு அளிக்கப்படுகின்றன. அவ்வாறே உங்களையும் சிறப்பாக வாழ வைக்கவேண்டும் என்பதே அல்லாஹ்வின் நாட்டமாகும். ஆக அல்லாஹ்வின் வழிகாட்டுதல்கள் யாவும் தெளிவான கல்வி ஞானத்தின் அடிப்படையைக் கொண்டவையே ஆகும்.
وَٱللَّهُ يُرِيدُ أَن يَتُوبَ عَلَيْكُمْ وَيُرِيدُ ٱلَّذِينَ يَتَّبِعُونَ ٱلشَّهَوَٰتِ أَن تَمِيلُوا۟ مَيْلًا عَظِيمًۭا.
4:27. உங்களை தீய செயல்களிலிருந்து விலக்கி சிறப்பாக வாழ வழிசெய்ய வேண்டும் என்பதே அல்லாஹ்வின் நாட்டமாகும். ஆனால் மனம் போன போக்கில் வாழ்பவர்களோ, நீங்களும் பாவகர செயல்களில் ஈடுபட்டு அதிலேயே மூழ்கி, அவர்களோடு அழிந்துவிட வேண்டும் என்று விரும்புகிறார்கள்.
يُرِيدُ ٱللَّهُ أَن يُخَفِّفَ عَنكُمْ ۚ وَخُلِقَ ٱلْإِنسَٰنُ ضَعِيفًۭا.
4:28. உங்களுடைய துயரங்களை நீக்கி உங்கள் வாழ்க்கையை இலேசாக்கிடவே அல்லாஹ்வின் வழிகாட்டுதல்கள் நாடுகின்றன. ஆனால் மனித படைப்பில் எந்த தீய பழக்கங்களுக்கும் எளிதில் அடிமையாகும் பலவீனம் உள்ளது.
இறைவழிகாட்டுதல்கள் இன்றி தன் மனம் போன போக்கில் மனிதன் வாழ நினைத்தால், அவன் எளிதில் தன் மனோ இச்சைக்கு அடிமையாகி விடுவான். இதனால் அவனது வாழ்வில் சிக்கல்கள் பல ஏற்பட்டு அவன் துயரத்திற்கு ஆளாகிவிடுவான். இது அல்லாஹ்வுக்கு நன்கு தெரியும். எனவே பாவச் செயலில் ஈடுபட்டு துன்பங்களுக்கு ஆளாகாமல் சுகமான வாழ்க்கை பெறவே இறைவழிகாட்டுதல்கள் அளிக்கப்படுகின்றன. மனிதன் தன் மனோ இச்சைக்கு அடிமை ஆகிவிட்டால், பிறருடைய பொருட்கள் எல்லாம் தன்னிடம் வந்துவிட வேண்டும் என்ற பேராசையும் அவனுக்குள் வளர ஆரம்பிக்கும். அவனுடைய இந்த பேராசையை நிறைவேற்றிக் கொள்ள எந்த வழிமுறையையும் கையாள பின்வாங்க மாட்டான். இப்படியாக தவாறான வழியில் ஈடுபட்டால் சமுதாயத்தில் தீய விளைவுகள்தான் ஏற்படும்.
يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟ لَا تَأْكُلُوٓا۟ أَمْوَٰلَكُم بَيْنَكُم بِٱلْبَٰطِلِ إِلَّآ أَن تَكُونَ تِجَٰرَةً عَن تَرَاضٍۢ مِّنكُمْ ۚ وَلَا تَقْتُلُوٓا۟ أَنفُسَكُمْ ۚ إِنَّ ٱللَّهَ كَانَ بِكُمْ رَحِيمًۭا.
4:29. இறைவழிகாட்டுதலை மனதார ஏற்றுக்கொண்டவர்களே! உங்கள் வாழ்க்கைக்குத் தேவையான பொருட்களை ஒருவரையொருவர் பரிமாறிக் கொள்கிறீர்கள். இது வியாபாரமாகும். இதில் தவறு ஒன்றுமில்லை. ஆனால் ஒருவர் மற்றவரின் பொருட்களை அநியாயமாக அபகரித்துக் கொள்வது முறையாகாது. ஏனெனில் அதனால் சண்டைச் சச்சரவு, கொலை என அசம்பாவிதங்கள் தான் ஏற்படும். இப்படி ஒரு நிலையை ஏற்படுத்தாதீர்கள். நிச்சயமாக அல்லாஹ்வின் வழிகாட்டுதல்கள் அனைத்து தரப்பு மக்களின் நலனை முன்வைத்தே தரப்படுகின்றன. இதுவே அல்லாஹ்வின் மிகப்பெரிய கருணையாகும்.
وَمَن يَفْعَلْ ذَٰلِكَ عُدْوَٰنًۭا وَظُلْمًۭا فَسَوْفَ نُصْلِيهِ نَارًۭا ۚ وَكَانَ ذَٰلِكَ عَلَى ٱللَّهِ يَسِيرًا.
4:30. இவ்வாறாக தெளிவான எச்சரிக்கைகள் வந்த பின்பும், ஒருவர் மற்றவரின் பொருட்களை அநியாயமாக அபகரித்து, வரம்பு மீறின செயலில் ஈடுபடும் சமுதாயமாக உருவானால், விரையில் அது நரக வேதனைகளில் சிக்கிக்கொள்ளும். ஏனெனில் பொது நலனில் அக்கறை காட்டாத சுயநலவாதிகள் வாழும் சமுதாயத்தில் ஏற்றத்தாழ்வுகள் ஏற்பட்டு குழப்பங்கள் உண்டாகி அழிந்து போவது இயல்புதானே.
إِن تَجْتَنِبُوا۟ كَبَآئِرَ مَا تُنْهَوْنَ عَنْهُ نُكَفِّرْ عَنكُمْ سَيِّـَٔاتِكُمْ وَنُدْخِلْكُم مُّدْخَلًۭا كَرِيمًۭا.
4:31. எனவே தடை செய்யப்பட்ட இந்த விஷயங்கள் சாதாரணமானவை அல்ல. ஏனெனில் இவை மனித நேயத்தை சீரழிக்கும் செயல்களாகும். இதை நீங்கள் தவிர்த்துக் கொண்டால் உங்களிடையே உள்ள தீமைகள் நீங்கி சுமுகமான சூழ்நிலை உருவாகி, மதிப்பும் மரியாதையும் கூடிவரும்.
மேலும் சொத்துரிமை விஷயத்தில் ஆண்களுக்கு மட்டுமே சொந்தம், பெண்களுக்கு உரிமை இல்லை என்பதல்ல. அவர்களுக்கும் பங்குண்டு என்பதை ஏற்கனவே 4:7இல் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதே போல் சமுதாயத்தில் சம்பாத்தியம் என்பது ஆண்களுக்கு மட்டுமே உள்ள உரிமை, பெண்களுக்கு உரிமை இல்லை என்றோ அவர்கள் தகுதியற்றவர்கள் என்றோ தவறாக எண்ணிக் கொள்ளாதீர்கள். ஏனெனில் சமூகப் பணிகளில் ஆண்கள் செய்யக்கூடிய எல்லா பணிகளையும் பெண்களாலும் செய்ய முடியும் (பார்க்க:33:35).
وَلَا تَتَمَنَّوْا۟ مَا فَضَّلَ ٱللَّهُ بِهِۦ بَعْضَكُمْ عَلَىٰ بَعْضٍۢ ۚ لِّلرِّجَالِ نَصِيبٌۭ مِّمَّا ٱكْتَسَبُوا۟ ۖ وَلِلنِّسَآءِ نَصِيبٌۭ مِّمَّا ٱكْتَسَبْنَ ۚ وَسْـَٔلُوا۟ ٱللَّهَ مِن فَضْلِهِۦٓ ۗ إِنَّ ٱللَّهَ كَانَ بِكُلِّ شَىْءٍ عَلِيمًۭا.
4:32. ஆக ஆண் பெண் என்று உடலமைப்பு ரீதியாகப் பார்க்கும் போது, அல்லாஹ்வின் நியதிப்படி சில வேற்றுமைகளும், தனிச் சிறப்புகளும் இருக்கும். இதை வைத்து யாரும் மற்றவர் மீது பெருமை கொள்ளத் தேவையில்லை. வாழ்வாதாரத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள பெண்களும் அல்லாஹ்வின் அருளைத் தேடிக் கொள்ளலாம். ஆக பெண்கள் தம் பங்கிற்கும், ஆண்கள் தம் பங்கிற்கும் சம்பாதித்துக் கொள்ளலாம். யார் எப்படிப்பட்ட செயல்களைச் செய்ய முடியும் என்ற முழு ஞானமும் உள்ள அல்லாஹ்விடமிருந்து வரும் வழிகாட்டுதல் இது.
وَلِكُلٍّۢ جَعَلْنَا مَوَٰلِىَ مِمَّا تَرَكَ ٱلْوَٰلِدَانِ وَٱلْأَقْرَبُونَ ۚ وَٱلَّذِينَ عَقَدَتْ أَيْمَٰنُكُمْ فَـَٔاتُوهُمْ نَصِيبَهُمْ ۚ إِنَّ ٱللَّهَ كَانَ عَلَىٰ كُلِّ شَىْءٍۢ شَهِيدًا.
4:33. ஆண்கள் மற்றும் பெண்கள் விட்டுச் சென்ற சொத்திலிருந்து பாகப் பிரிவினை செய்யும் விகிதத்தை 4:11இல் குறிப்பிட்டுள்ளோம். தாய் தந்தையர் மற்றும் நெருங்கிய உறவினர் பெயரில் இருக்கும் சொத்துக்களை முறைப்படி பாகப்பிரிவினை செய்யவேண்டும். ஆனால் வாரிசுதாரர்களுக்கு பாகப்பிரிவினை செய்வதற்கு முன் திருமண பந்தத்தில் உள்ளவர்களுக்கு முதலில் பங்கு கொடுத்து விட்டு, மீதமுள்ளவற்றில் மற்ற வாரிசுகளுக்கு பங்கு பிரிக்கவேண்டும். அதாவது கணவன் பெயரில் உள்ள சொத்திலிருந்து முதலில் மனைவிக்கும் அல்லது மனைவி பெயரில் உள்ள சொத்திலிருந்து கணவனுக்கும் பிரித்துக் கொடுக்க வேண்டும். ஆக உங்களுடைய அனைத்து செயல்களுக்கும் அல்லாஹ் சாட்சியாக இருப்பதை மறவாதீர்.
ஆண் பெண் ஆகிய இரு பாலரில் உடல் ரீதியான தனித் தன்மைகளைப் பற்றி 4:31இல் குறிப்பிட்டுள்ளோம். அதாவது மகப்பேறு மற்றும் பாலூட்டி வளர்த்தல் போன்ற காரியங்களை பெண்களால் மட்டுமே செய்ய முடியும். இதனால் சம்பாதிக்கும் வாய்ப்பு அவர்களுக்கு குறைவாக இருக்கும். இந்தக் குறையை ஆண்கள் நிவர்த்தி செய்கிறார்கள்.
ٱلرِّجَالُ قَوَّٰمُونَ عَلَى ٱلنِّسَآءِ بِمَا فَضَّلَ ٱللَّهُ بَعْضَهُمْ عَلَىٰ بَعْضٍۢ وَبِمَآ أَنفَقُوا۟ مِنْ أَمْوَٰلِهِمْ ۚ فَٱلصَّٰلِحَٰتُ قَٰنِتَٰتٌ حَٰفِظَٰتٌۭ لِّلْغَيْبِ بِمَا حَفِظَ ٱللَّهُ ۚ وَٱلَّٰتِى تَخَافُونَ نُشُوزَهُنَّ فَعِظُوهُنَّ وَٱهْجُرُوهُنَّ فِى ٱلْمَضَاجِعِ وَٱضْرِبُوهُنَّ ۖ فَإِنْ أَطَعْنَكُمْ فَلَا تَبْغُوا۟ عَلَيْهِنَّ سَبِيلًا ۗ إِنَّ ٱللَّهَ كَانَ عَلِيًّۭا كَبِيرًۭا.
4:34. இப்படியாக அல்லாஹ்வின் நியதிப்படி சில விஷயங்களில் ஆணுக்கும், சிலவற்றில் பெண்ணுக்கும் தனிச் சிறப்புகள் இருக்கும். இதனால் குடும்ப நிர்வாகப் பொறுப்பை ஆண்கள் எடுத்துக் கொள்கிறார்கள். ஆண்களின் வருவாயிலிருந்து பெண்கள் குடும்ப செலவுகளை கவனித்துக் கொள்கிறார்கள். இந்த குடும்பப் பெண்கள், அல்லாஹ் நிர்ணயித்துள்ளபடி நல்லொழுக்கத்தையும் சட்ட விதிமுறைகளையும் பேணி நடந்து கொள்கிறார்கள். இவர்கள் தம் கற்பை பாதுகாத்துக் கொள்வார்கள்.
இப்போது, சமூக நல்லொழுக்கம் சீரழியும் செயல்களில் ஈடுபடும் பெண்களைப் பற்றியது. அவர்களைத் திருத்த தக்க நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்.
(1) சமுதாயத் தலைவர்கள் அப்படிப்பட்ட பெண்களை அழைத்து நல்லுபதேசம் செய்ய வேண்டும். அதாவது அவர்களுடைய முறையற்ற செயல்களால் ஏற்படும் விபரீத விளைவுகளைப் பற்றி எடுத்துரைத்து எச்சரிக்கை செய்ய வேண்டும்.
(2) அதையும் மீறி அவர்களுடைய முறையற்ற செயல்கள் தொடர்வதாக தெரிந்தால், அவர்களை வீட்டில் தனிமைப்படுத்தி சமுதாயத்தை விட்டு ஒதுக்கி வையுங்கள்.
(3)அப்படியும் அவர்கள் திருந்தாவிடில் அல்லாஹ்வின் சட்டப்படி நீதிமன்றம் மூலமாக அவர்களுக்கு தண்டனை வழங்குங்கள்.
இப்படிப்பட்ட நடவடிக்கையால் சமுதாயத்தில் சட்டம் ஒழுங்கு சீர்படும். சமூக நல்லிணக்கமும் ஏற்படும். ஆக அவர்கள் உங்களுடைய அறிவுரைகளை ஏற்று திருந்தி கொண்டால், அவர்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையையும் எடுக்காதீர்கள். இதே சட்டம் ஆண்களுக்கும் பொருந்தும் (பார்க்க:4:128).
وَإِنْ خِفْتُمْ شِقَاقَ بَيْنِهِمَا فَٱبْعَثُوا۟ حَكَمًۭا مِّنْ أَهْلِهِۦ وَحَكَمًۭا مِّنْ أَهْلِهَآ إِن يُرِيدَآ إِصْلَٰحًۭا يُوَفِّقِ ٱللَّهُ بَيْنَهُمَآ ۗ إِنَّ ٱللَّهَ كَانَ عَلِيمًا خَبِيرًۭا.
4:35. இதுவே ஆண் பெண் ஆகிய இருபாலருக்கும் அல்லாஹ்வின் புறத்திலிருந்து நிர்ணயிக்கப்பட்ட ஒழுங்குமுறை சட்ட நடவடிக்கையாகும்.
இதைத் தவிர தனிப்பட்ட முறையில் கணவன் மனைவி இடையே விரிசல் இருப்பதாக புகார் வந்தால் - அந்தப் விரிசல் திருமண ஒப்பந்தத்தில் முறிவு ஏற்படும் அளவிற்குச் சென்றுவிடும் என்று பயந்தால், அதன் பிரச்னையை தீர்த்து வைக்க கணவனின் உறவினர்களிலிருந்து ஒருவரையும் மனைவியின் உறவினர்களிலிருந்து ஒருவரையும் நடுவர்களாக நியமித்து, சமாதானமாக வாழ வைக்க முயலுங்கள்.
அப்படி அவர்கள் இருவரும் சமாதானமாகிவிட விரும்பினால், அவர்கள் இருவரும் பழையபடி சேர்ந்து வாழ அல்லாஹ்வின் சட்டத்தில் இடமுண்டு.
எனவே அந்த நடுவர்கள் கணவன் மனைவி இடையே ஏற்பட்டுள்ள பிணக்கை நீக்கும் நல்லெண்ணத்துடன் அணுகவேண்டும். ஏனெனில் அல்லாஹ்வின் சட்டதிட்டங்கள் யாவும் கல்வி ஞானத்தின் அடிப்படையைக் கொண்டவை ஆகும்.
அதையும் மீறி கணவன் மனைவி பிரிந்து வாழவே முடிவெடுத்தால், 2:228 - 232 மற்றும் 65:1 - 7 ஆகிய விதிமுறைகளின் படி நீதி மன்றம் அல்லது ஜமாஅத் அவர்களுக்கு விவாகரத்து அளிக்கலாம்.
۞ وَٱعْبُدُوا۟ ٱللَّهَ وَلَا تُشْرِكُوا۟ بِهِۦ شَيْـًۭٔا ۖ وَبِٱلْوَٰلِدَيْنِ إِحْسَٰنًۭا وَبِذِى ٱلْقُرْبَىٰ وَٱلْيَتَٰمَىٰ وَٱلْمَسَٰكِينِ وَٱلْجَارِ ذِى ٱلْقُرْبَىٰ وَٱلْجَارِ ٱلْجُنُبِ وَٱلصَّاحِبِ بِٱلْجَنۢبِ وَٱبْنِ ٱلسَّبِيلِ وَمَا مَلَكَتْ أَيْمَٰنُكُمْ ۗ إِنَّ ٱللَّهَ لَا يُحِبُّ مَن كَانَ مُخْتَالًۭا فَخُورًا.
4:36. கணவன் மனைவி குடும்ப பிரச்னைக்குப் பின் உறவினர்கள் விஷயம் எழுகிறது. கணவன் மனைவி விஷயமோ அல்லது உறவினர்கள் விஷயமோ எதுவாக இருந்தாலும், அல்லாஹ்வின் வழிகாட்டுதலுக்கு இணையாக வேறு எந்த வழிமுறையையும் கடைப்பிடிக்காதீர்கள்.
சமுதாய சீர்திருத்தம் ஏற்பட வேண்டும் என்று நீங்கள் விரும்பினால், அதை உங்கள் தாய் தந்தையரிடமிருந்து ஆரம்பிக்க வேண்டும். அவ்விருவரிடமும் அன்போடும் பரிவோடும் நடந்து கொள்ள வேண்டும் (பார்க்க:17:23-24 & 31:14). அவர்களுடைய தேவைகளை அழகிய முறையில் நிறைவேற்ற வேண்டும்.
அதே போல் நெருங்கிய உறவினர்கள், சமுதாயத்தில் ஆதரவற்ற நிலையில் இருப்பவர்கள், சம்பாதிக்க இயலாத உடல் ஊனமுற்றோர்கள், அண்டை வீட்டார்களில் வசதியற்ற நிலையில் இருப்பவர்கள், அல்லாஹ்வின் பாதையில் பணியாற்றும் தோழர்கள், அதற்காக பயணத்தை மேற்கொள்பவர்கள், உங்களிடம் இருக்கும் பணியாட்கள் ஆகிய அனைவருக்கும் உங்கள் வசதி வாய்ப்பிற்கு ஏற்றவாறு அவர்களுடைய துயரங்கள் நீங்க உதவி செய்யுங்கள்.
ஆக சமுதாய நலனில் அக்கறையுள்ள அன்புள்ளம் கொண்டவர்கள் மட்டுமே இப்படிப்பட்ட நற்காரியங்களில் ஈடுபட்டு, தம் வாழ்வில் பேரானந்தம் அடைவார்கள். மாறாக வெறும் வார்த்தை ஜாலங்களால் தற்பெருமை அடித்துக் கொண்டு சுயநலத்தில் அக்கறை கொண்டுள்ளவர்கள், இதைப் பற்றி எண்ணிப் பார்க்கவும் மாட்டார்கள். அவர்களிடம் எடுத்துரைத்தாலும் அதை பின்பற்றவும் மாட்டார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு அல்லாஹ்வின் நேசம் கிடைக்காது.
ٱلَّذِينَ يَبْخَلُونَ وَيَأْمُرُونَ ٱلنَّاسَ بِٱلْبُخْلِ وَيَكْتُمُونَ مَآ ءَاتَىٰهُمُ ٱللَّهُ مِن فَضْلِهِۦ ۗ وَأَعْتَدْنَا لِلْكَٰفِرِينَ عَذَابًۭا مُّهِينًۭا.
4:37. இத்தகையோர், தாம் சம்பாதிக்கும் சொத்து செல்வங்கள் அனைத்தும் தமக்காகத் தான் என்று நினைத்துக் கொள்வார்கள். அது மட்டுமின்றி இதில் தவறு ஒன்றும் இல்லை என்று பிறருக்கும் போதிப்பார்கள். எனவே அவை யாவும் தமக்கு மட்டுமே சொந்தமானவை என்று எண்ணி, அவற்றை மறைத்து வைத்துக் கொள்கின்றனர்.
நினைவில் கொள்ளுங்கள்! அல்லாஹ்வின் அருட்கொடைகளகிய வாழ்வாதாரங்களை தம் தேவைக்கு அதிகமாகவே குவித்துக் கொள்வது – அதாவது சமுதாய வளர்ச்சிக்காக பயன்படுத்தாமல் அவை எல்லாம் தமக்ககாகத் தான் என்று தேக்கி வைத்துக் கொள்வது, அல்லாஹ்வுக்கு நன்றி மறந்த செயல்களாவும், இப்படிப்பட்டவர்களுக்கு இழிவு தரும் வேதனைகள் சித்தப்படுத்தப்பட்டுள்ளன.
وَٱلَّذِينَ يُنفِقُونَ أَمْوَٰلَهُمْ رِئَآءَ ٱلنَّاسِ وَلَا يُؤْمِنُونَ بِٱللَّهِ وَلَا بِٱلْيَوْمِ ٱلْءَاخِرِ ۗ وَمَن يَكُنِ ٱلشَّيْطَٰنُ لَهُۥ قَرِينًۭا فَسَآءَ قَرِينًۭا.
4:38. இத்தகையோர்களில் சிலர் புகழ்வேண்டி மக்களுக்கு காட்டிக் கொள்வதற்காகவே தம் செல்வங்களை செலவழிப்பார்கள். மேலும் இவர்கள் தாம் அல்லாஹ்வின் வழிகாட்டுதலையும் “மனித செயலுக்கேற்ற இறுதி விளைவுகள்” என்ற ஆகிரத்தையும் ஏற்றுக் கொள்ளாதவர்கள். இவர்களே தம் மனோ இச்சையை கூட்டாளிகளாக்கிக் கொண்டவர்கள். அவர்களை அது தீமையின் பக்கமே இழுத்துச் செல்லும்.
அதாவது தான் ஒரு "தர்மகர்த்தா" என்று பெயரும் புகழும் கிடைக்க வேண்டும் என்று ஏழை எளிய மக்களுக்கு தருமம் செய்து வருவார்கள். இது மிகவும் அழகான செயல் என்ற நினைப்பு ஏற்படும். ஆனால் மக்களிடம் கையேந்தும் பழக்கம் அதிகமாகி, சமுதாயம் முன்னேறுவதற்குப் பதிலாக பின்னடைவு ஏற்படுவதைப் பற்றி சிந்திக்க மாட்டார்கள்.
وَمَاذَا عَلَيْهِمْ لَوْ ءَامَنُوا۟ بِٱللَّهِ وَٱلْيَوْمِ ٱلْءَاخِرِ وَأَنفَقُوا۟ مِمَّا رَزَقَهُمُ ٱللَّهُ ۚ وَكَانَ ٱللَّهُ بِهِمْ عَلِيمًا.
4:39. மாறாக அல்லாஹ்வின் வழிகாட்டுதலையும் "மனித செயலுக்கு ஏற்ற விளைவுகள்" என்ற சட்டத்தையும் ஏற்று, அல்லாஹ்வின் அறிவுரைகளின்படி ஆக்கப்பூர்வமாக நலத்திட்டங்களுக்காக செயல்படும் ஆட்சி/சமூக அமைப்புக்கு வழங்குவதால், அவர்களுக்கு என்ன குறை வந்துவிடப் போகிறது? அந்த அமைப்பு அனைவரின் மேம்பாட்டையும் கவனித்தில் கொள்ளுமே. மேலும் மனிதனின் அனைத்து செயல்களைப் பற்றியும் அல்லாஹ்வுக்கு தெரியாமல் போவதில்லையே!
ஆட்சியமைப்பு இல்லாத பட்சத்தில், சமூக நல தொண்டு நிருவனத்தை ஏற்படுத்தி இத்தகைய பணியை செய்யலாம். ஒவ்வொருவருடைய செயலின் பின்ணனியிலும் அவர்களின் எண்ணங்களும் நோக்கங்களும் இருக்கும். ஆக யார் எப்படிப்பட்ட செயல்களை செய்கிறார்களோ அதன்படியே பலன்களும் விளைவுகளும் ஏற்படும்.
إِنَّ ٱللَّهَ لَا يَظْلِمُ مِثْقَالَ ذَرَّةٍۢ ۖ وَإِن تَكُ حَسَنَةًۭ يُضَٰعِفْهَا وَيُؤْتِ مِن لَّدُنْهُ أَجْرًا عَظِيمًۭا.
4:40. எனவே அல்லாஹ்வின் புறத்திலிருந்து யாருக்கும் ஒருபோதும் ஓர் அணு அளவு கூட அநியாயாம் ஏற்படாது. மாறாக எந்த ஒரு நன்மையான செயலாக இருந்தாலும் அதற்கேற்ப பலன்கள் பன்மடங்காகி மகத்தான நற்கூலியாக அல்லாஹ்விடமிருந்து கிடைக்கும்.
فَكَيْفَ إِذَا جِئْنَا مِن كُلِّ أُمَّةٍۭ بِشَهِيدٍۢ وَجِئْنَا بِكَ عَلَىٰ هَٰٓؤُلَآءِ شَهِيدًۭا.
4:41. எனவே ஒரு சமுதாயம் சிறப்பாக உருவாக ஒவ்வொரு ஊரிலிருந்தும் நேர்மைக்கு சாட்சி பகரும் தகுதியுள்ள பொறுப்பாளர்களைத் தேர்ந்தெடுத்து, அத்தகைய பொறுப்பாளர்களின் தலைவராக சமுதாயத்தை வழிநடத்திச் செல்லும் உமக்கு துணை நின்று, அனைவரும் செயல்பட்டிருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்? (பார்க்க:2-143)
يَوْمَئِذٍۢ يَوَدُّ ٱلَّذِينَ كَفَرُوا۟ وَعَصَوُا۟ ٱلرَّسُولَ لَوْ تُسَوَّىٰ بِهِمُ ٱلْأَرْضُ وَلَا يَكْتُمُونَ ٱللَّهَ حَدِيثًۭا.
4:42. அப்படி ஓர் ஆட்சியமைப்பு உருவாகும் கால கட்டத்தில், அல்லாஹ்வின் வழிகாட்டுதலை நிராகரித்து இறை ஆட்சி அமைப்புக்கு எதிராக செயல்படுபவர்கள் கடுமையான தண்டனைக்கு ஆளாவார்கள். அதன் வேதனையை தாங்கமுடியாமல் இப்படி ஓர் இழிநிலை ஏற்படுவதற்கு முன்னமே, தங்களை இந்த பூமி விழுங்கிக் கொள்ளக்கூடாதா என்று ஏங்குவார்கள். அதாவது தாம் செத்து மடிந்து விடலாமே என்று எண்ணுவார்கள். இப்படி ஒரு நிலைமை இந்த உலகில் ஏற்படவில்லை என்றாலும், மரணத்திற்குப் பின் இவர்களுக்கு நிச்சயமாக இந்த வேதனை ஏற்படும். ஏனெனில் அகிலங்கள் அனைத்திலும் ஏக இறைவனாகிய அல்லாஹ்வின் சட்டமே செயல்பட்டு வருகின்றது. எந்த செயலும் அல்லாஹ்வின் கண்காணிப்பிலிருந்து தப்பிக்க வாய்ப்பே இல்லை.
இந்த உலகில் அல்லாஹ்வின் ஆட்சியமைப்பு உருவாக அவனுடைய கொள்கைக் கோட்பாடுகளை மக்களுக்கு எடுத்துரைப்பது அவசியமாகிறது. இந்த பணி கூட்டுத் தொழுகை (ஸலாத்) மூலம், இறைக் கொள்கைகளை அனைவருக்கும் விளக்கி, சிந்தித்து செயல்படும் வகையில் கற்றுத் தரலாம். அப்படி இந்த ஸலாத்திற்கு வருபவர்கள் அங்கு கூறப்படும் விஷயங்களைப் புரிந்து கொள்ளும் தகுதியை ஏற்படுத்திக் கொள்வது அவசியம்.
يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟ لَا تَقْرَبُوا۟ ٱلصَّلَوٰةَ وَأَنتُمْ سُكَٰرَىٰ حَتَّىٰ تَعْلَمُوا۟ مَا تَقُولُونَ وَلَا جُنُبًا إِلَّا عَابِرِى سَبِيلٍ حَتَّىٰ تَغْتَسِلُوا۟ ۚ وَإِن كُنتُم مَّرْضَىٰٓ أَوْ عَلَىٰ سَفَرٍ أَوْ جَآءَ أَحَدٌۭ مِّنكُم مِّنَ ٱلْغَآئِطِ أَوْ لَٰمَسْتُمُ ٱلنِّسَآءَ فَلَمْ تَجِدُوا۟ مَآءًۭ فَتَيَمَّمُوا۟ صَعِيدًۭا طَيِّبًۭا فَٱمْسَحُوا۟ بِوُجُوهِكُمْ وَأَيْدِيكُمْ ۗ إِنَّ ٱللَّهَ كَانَ عَفُوًّا غَفُورًا.
4:43. இறைவழிகாட்டுதலை மனதார ஏற்றுக்கொண்டவர்களே! மதி மயங்கிய நிலையில் "ஸலாத்"தின் பக்கம் நெருங்காதீர்கள். ஏனெனில் அங்கு பேசப்படும் விஷயத்தைப் பற்றிய ஞானம் பெற முடியாமல் போய் விடும். அங்கு சொல்லப்படுவதை சிந்தித்துணரும் நிலையில் தான் கலந்து கொள்ள வேண்டும்.
"ஸலாத்"தில் கலந்து கொள்பவர்கள் உடல் சுத்தத்தையும் பேணிக்கொள்வது அவசியம். கணவன் மனைவி தாம்பத்ய உறவில் ஈடுபட்டிருந்தால், அவர்கள் இருவரும் குளித்து சுத்தமாகிய பின்னரே கூட்டு ஸலாத்துக்கு வரவேண்டும். மற்றவர்கள் கை கால்களை கழுவி தலையை வாரி சரி செய்து கொண்டு வரவேண்டும். (பார்க்க-5:6)
உடல் நலம் குன்றியவர்கள், வழிப் போக்கர்கள் மலஜலம் கழித்து தண்ணீர் கிடைக்காத பட்சத்தில், கூட்டு ஸலாத்தில் கலந்து கொள்ள வருபவர்கள், சுத்தமான பொருளைக் கொண்டு சுத்தம் செய்து கொள்ளட்டும். மேலும் தம் கைகளை சுத்தமான மண்ணில் பதித்து முகம், மற்றும் கைகளைத் தடவி சுத்தம் செய்து கொண்டு ஸலாத்தில் கலந்து கொள்ளலாம். இதையே தயம்மம் முறை என்பார்கள். அதேபோன்று கணவன் மனைவி கூடலில் ஈடுபட்டிருந்து தண்ணீர் கிடைக்காத பட்சத்திலும் தயம்மம் செய்து கொண்டு கூட்டு ஸலாத்தில் கலந்து கொள்ளலாம். அதாவது நீங்கள் சுத்தமாக இருக்கப் பழகிக் கொள்ளவே இவை உதவிகரமாக நிற்கும். அதே சமயம் "ஸலாத்"தில் ல்லாஹ்வின் முக்கியமான ஞான விஷயங்கள் ஓதிக் காட்டி அறிவுருத்தப்படுவதால், அதில் கலந்து கொள்வது மிகமிக அவசியம். "ஸலாத்"தில் கலந்து கொள்ளாமல் இருப்பதால் ஏற்படும் இழப்பிலிருந்து உங்களை பாதுகாதுக் கொள்ளவே இந்த சலுகைகள் அளிக்கப்படுகின்றன.
أَلَمْ تَرَ إِلَى ٱلَّذِينَ أُوتُوا۟ نَصِيبًۭا مِّنَ ٱلْكِتَٰبِ يَشْتَرُونَ ٱلضَّلَٰلَةَ وَيُرِيدُونَ أَن تَضِلُّوا۟ ٱلسَّبِيلَ.
4:44. இதை அடுத்து, சமய நூல்கள் அளிக்கப் பெற்றவர்களின் பேச்சும் செயலும் எவ்வாறு முரண்படுகின்றன என்பதை கவனியுங்கள். அவர்களுடைய செயல்கள் வழிகேட்டையே விலைக்கு வாங்கிக் கொள்வதாக உள்ளன. அது மட்டுமின்றி நீங்களும் வழிகெட்டுப் போய் விடவேண்டும் என்றும் அவர்கள் விரும்புகிறார்கள்.
وَٱللَّهُ أَعْلَمُ بِأَعْدَآئِكُمْ ۚ وَكَفَىٰ بِٱللَّهِ وَلِيًّۭا وَكَفَىٰ بِٱللَّهِ نَصِيرًۭا.
4:45. அல்லாஹ்வின் செயல் திட்டங்களை நிறைவேற்றி வரும் உங்களுக்கு எதிராகச் செயல்படுபவர்கள் யார் என்று அலலாஹ்வுக்கு நன்கு தெரியும். எனவே நீங்கள் அச்சமின்றி உங்கள் செயல் திட்டத்தில் முன்னேறிச் செல்லுங்கள். அல்லாஹ்வின் நியதிப்படி போதுமான பாதுகாப்பும் உதவியும் உங்களுக்குக் கிடைக்கும்.
مِّنَ ٱلَّذِينَ هَادُوا۟ يُحَرِّفُونَ ٱلْكَلِمَ عَن مَّوَاضِعِهِۦ وَيَقُولُونَ سَمِعْنَا وَعَصَيْنَا وَٱسْمَعْ غَيْرَ مُسْمَعٍۢ وَرَٰعِنَا لَيًّۢا بِأَلْسِنَتِهِمْ وَطَعْنًۭا فِى ٱلدِّينِ ۚ وَلَوْ أَنَّهُمْ قَالُوا۟ سَمِعْنَا وَأَطَعْنَا وَٱسْمَعْ وَٱنظُرْنَا لَكَانَ خَيْرًۭا لَّهُمْ وَأَقْوَمَ وَلَٰكِن لَّعَنَهُمُ ٱللَّهُ بِكُفْرِهِمْ فَلَا يُؤْمِنُونَ إِلَّا قَلِيلًۭا.
4:46. இத்தகையவர்களில் யூதர்கள் மிகவும் மோசமாக செயல்பட்டு வருகின்றனர். அவர்கள் வேத சொற்களையே உருமாற்றி விடுகின்றனர். அவர்களுடைய பேச்சுகளும் இரு அர்த்தம் தரக்கூடிய வகையில் உள்ளன.
உதாரணத்திற்கு “இறைச் சொல்லை நாம் கேட்டோம். நிச்சயமாக அதன்படி செயல்படுவோம் என்று சொல்வதற்குப் பதிலாக “கேட்டோம் அதற்கு மாறு செய்வோம்” என்று பொருள் தரும் வகையில், தங்களின் நாவைக் கோணி கேலி செய்து, அவற்றை மறுப்பது போல் பேசி வருகிறார்கள்.
மேலும், “நீங்கள் எங்கள் பேச்சை முதலில் கேளுங்கள் அப்புறம் நாங்கள் உங்கள் பேச்சைக் கேட்கிறோம்” என்று நிபந்தனையிட்டுப் பேசுகின்றனர். மாறாக, “நாம் இறைச் சொல்லை செவி மடுத்தோம் இன்னும் அதன்படி செயல்படுவோம். இருப்பினும் நம் பேச்சையும் உங்கள் கவனத்திற்குக் கொண்டுவர நாடுகிறோம். நம்மையும் நீங்கள் கனிவோடு கவனியுங்கள்” (பார்க்க – 2:104) என்று பெருந் தன்மையோடு பேசி இருந்தால், எவ்வளவு நன்றாக இருந்திருக்கும். மேலும் அது அவர்களுக்கு நன்மை அளிப்பதாகவும் இருந்திருக்குமே.
ஆனால் அவர்களின் பேச்சுத் தரமும் கெட்டுப் போய் இருக்கிறது. அதனால் சமுதாயத்தில் கிடைக்க வேண்டிய மதிப்பும் மரியாதையை இழந்து இழிவிற்கு ஆளாகி விடுகிறார்கள். இந்த உண்மையை அவர்களுள் சிலரைத் தவிர பெரும்பாலோர் ஏற்றுக்கொள்வதாக இல்லை.
يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ أُوتُوا۟ ٱلْكِتَٰبَ ءَامِنُوا۟ بِمَا نَزَّلْنَا مُصَدِّقًۭا لِّمَا مَعَكُم مِّن قَبْلِ أَن نَّطْمِسَ وُجُوهًۭا فَنَرُدَّهَا عَلَىٰٓ أَدْبَارِهَآ أَوْ نَلْعَنَهُمْ كَمَا لَعَنَّآ أَصْحَٰبَ ٱلسَّبْتِ ۚ وَكَانَ أَمْرُ ٱللَّهِ مَفْعُولًا.
4:47. சமய நூல்கள் வழங்கப்பட்டவர்களே! உங்களிடமுள்ள வேதத்தில் சொல்லப்பட்ட படி நடைமுறைப்படுத்தி உண்மைப் படுத்திக் காட்டவே இந்த வேதம் அளிக்கப்படுகிறது. இதை முழு மனதோடு ஏற்றுச் செயல்பட முன்வாருங்கள். இல்லை என்றால் அதன் விளைவுகளைச் சந்தித்தே ஆகவேண்டும்.
அதாவது சத்தியம் நிலைக்கும், அதர்மம் அழியும், இந்த உலகில் அல்லாஹ்வின் செயல் திட்டப்படியே எல்லாம் செயல்படும். இது போன்ற விஷயங்கள் உங்கள் வேதங்களிலும் உள்ளன. இதை உண்மைப் படுத்தவே இந்த வேதம் அருளப்படுகிறது.
உங்களுடைய நிலைமை மோசமடைவதற்கு முன், இதை சிந்தித்து ஏற்றுக் கொள்ளுங்கள். இல்லாவிட்டால் இறுதியில், ‘அஸ்ஹாபுஸ் ஸப்த்’ போன்ற உங்கள் முன்னோர்களுக்கு ஏற்பட்ட கதியே உங்களுக்கும் ஏற்பட்டுவிடும். அவர்கள் அல்லாஹ்வின் அருட்கொடைகள் அனைத்தையும் இழந்து வானரங்கள் மற்றும் பன்றிகள் போன்ற இழிநிலைக்குத் தள்ளப்பட்டு, கொத்தடிமையாகவே வாழ நேர்ந்தது என்பது வரலாறாகும். (பார்க்க–7:166 & 167) இது வெறும் அச்சுறுத்தல் அல்ல. அல்லாஹ்விடமிருந்து வரும் அறிவிப்புகளாகும். இவ்வாறு நடந்தே தீரும்.
إِنَّ ٱللَّهَ لَا يَغْفِرُ أَن يُشْرَكَ بِهِۦ وَيَغْفِرُ مَا دُونَ ذَٰلِكَ لِمَن يَشَآءُ ۚ وَمَن يُشْرِكْ بِٱللَّهِ فَقَدِ ٱفْتَرَىٰٓ إِثْمًا عَظِيمًا.
4:48. நினைவில் கொள்ளுங்கள்! சிறு சிறு தவறுகள் செய்வதால் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து உங்களால் மீளமுடியும். ஆனால் அல்லாஹ்வின் வழிகாட்டுதலுக்கு இணையாக வேறு வழிமுறைகளைப் பின்பற்றினால், அது இணை வைத்தலே ஆகும். இப்படிப்பட்டவர்களுக்கு உலகில் பாதுகாப்பான வாழ்க்கை ஒருபோதும் கிடைக்காது. சிறு சிறு பிழைகளால் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து நிவாரணம் கிடைக்கலாமே அன்றி, அல்லாஹ்வின் வழிகாட்டுதலுக்கு இணையாக வேறு வழிமுறைகளை ஏற்றுக்கொண்டு செயல்படும் சமுதாயங்கள் பலமிழந்து அழிவைத் தான் சந்திக்க நேரிடும்.
أَلَمْ تَرَ إِلَى ٱلَّذِينَ يُزَكُّونَ أَنفُسَهُم ۚ بَلِ ٱللَّهُ يُزَكِّى مَن يَشَآءُ وَلَا يُظْلَمُونَ فَتِيلًا.
4:49. ஆக கற்பனையின் அடிப்படையில் உருவாகிய வழிமுறைகளைப் பின்பற்றுபவர்களின் மனோ நிலையைக் கவனித்தீர்களா? அவர்கள் கடைப்பிடித்து வரும் ஆன்மிக வழிமுறைகளைக் கொண்டே மனித நேயம் வளர்ந்து வருவதாக சொல்லிக் கொள்கிறார்கள். ஆனால் மனித மாண்புகளின் வளர்ச்சிக்குத் தேவையான கொள்கை கோட்பாடுகள் இந்த வேதத்தில் இறக்கி அருளப்பட்டுள்ளன. இவற்றை பின்பற்றுவதைக் கொண்டே மனித ஒழுக்கத்தையும் மாண்புகளையும் வளர்க்க முடியும். மனித நேயம் வளர முயல்பவர்களுக்கே அதன் பலன்கள் கிடைக்கும். இதில் சிறிதளவும் குறை வைக்கப்பட மாட்டாது.
ٱنظُرْ كَيْفَ يَفْتَرُونَ عَلَى ٱللَّهِ ٱلْكَذِبَ ۖ وَكَفَىٰ بِهِۦٓ إِثْمًۭا مُّبِينًا.
4:50. ஆனால் ‘இறைவழிபாடு’ என்ற பெயரில் இவர்களே சில வழிமுறைகளை உருவாக்கி வைத்துக்கொண்டு இதை அல்லாஹ் ஏற்படுத்தித் தந்துள்ளதாக இட்டுக்கட்டிக் கூறி வருவதையும் கவனியுங்கள். இது எவ்வளவு பெரிய அபாண்டமான பொய்யாகும். இதனால் அல்லாஹ்வுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. ஆனால் இதுவே அவர்களுடைய அழிவிற்குக் காரணிகளாக அமைந்துவிடும்.
أَلَمْ تَرَ إِلَى ٱلَّذِينَ أُوتُوا۟ نَصِيبًۭا مِّنَ ٱلْكِتَٰبِ يُؤْمِنُونَ بِٱلْجِبْتِ وَٱلطَّٰغُوتِ وَيَقُولُونَ لِلَّذِينَ كَفَرُوا۟ هَٰٓؤُلَآءِ أَهْدَىٰ مِنَ ٱلَّذِينَ ءَامَنُوا۟ سَبِيلًا.
4:51. சமய நூல் பெற்றவர்களின் செயல்பாடுகளைக் கவனியுங்கள். யாதொரு பலனையும் அளிக்காத சடங்கு சம்பிரதாயங்களில் ஈடுபட்டுள்ளார்கள். அல்லாஹ் அல்லாத பிறரை தெய்வங்களாகவும், மத குருமார்கள் மற்றும் தன்னிச்சையாக செயல்படும் தலைவர்கள் ஏற்படுத்தியுள்ள ஷரீஅத் சட்டங்களையும் ஏற்று நடக்கிறார்கள். வேடிக்கை என்னவென்றால் இந்தக் குர்ஆனை ஏற்று செயல்படும் உங்களைவிட அவர்களே மேல் என்றும், அவர்களே நேரான பாதையில் இருப்பதாகவும் சொல்லிக் கொள்கிறார்கள்.
أُو۟لَٰٓئِكَ ٱلَّذِينَ لَعَنَهُمُ ٱللَّهُ ۖ وَمَن يَلْعَنِ ٱللَّهُ فَلَن تَجِدَ لَهُۥ نَصِيرًا.
4:52. இவர்கள்தாம் அல்லாஹ்வின் அருட்கொடைகளை இழந்து நிற்பவர்கள். அல்லாஹ்வின் வழிகாட்டுதலைப் புறக்கணித்து விட்டு, அவனது அருட்கொடைகளை இழந்து நிற்கும் சமூகத்தவர்களுக்கு உதவி செய்வோர் வேறு யார் இருக்க முடியும்?
أَمْ لَهُمْ نَصِيبٌۭ مِّنَ ٱلْمُلْكِ فَإِذًۭا لَّا يُؤْتُونَ ٱلنَّاسَ نَقِيرًا.
4:53. நல்லவேளை இப்படிப்பட்டவர்களிடம் ஆட்சி அதிகாரம் எதுவுமில்லை. அவ்வாறு இருந்திருந்தால் அதன் மூலம் செல்வங்களைக் குவித்து வைத்துகொண்டு அதிலிருந்து சல்லிக் காசும் யாருக்கும் கொடுத்து உதவி இருக்க மாட்டார்கள்.
أَمْ يَحْسُدُونَ ٱلنَّاسَ عَلَىٰ مَآ ءَاتَىٰهُمُ ٱللَّهُ مِن فَضْلِهِۦ ۖ فَقَدْ ءَاتَيْنَآ ءَالَ إِبْرَٰهِيمَ ٱلْكِتَٰبَ وَٱلْحِكْمَةَ وَءَاتَيْنَٰهُم مُّلْكًا عَظِيمًۭا.
4:54. உண்மை நிலவரம் என்னவென்றால் அல்லாஹ்வின் நியதிப்படி “இறைவழி காட்டுதல்கள்” என்ற அருட்கொடைகளைப் பெற்றிருக்கும் உங்களைப் பார்த்து, அவர்கள் பொறாமைப் படுகிறார்கள். இந்த அருட்கொடைகள் ஏதோ ஒரு குறிப்பிட்ட சமுதாயத்திற்குத் தான் கிடைக்கும் என்று நினைக்கிறார்களா? அல்லாஹ்வின் வழிகாட்டுதலை ஏற்று, அதைப் பின்பற்றி நடந்த இப்ராஹீம் மற்றும் அவருடைய சந்ததியர்களுக்கும் கிடைத்தன. அதுமட்டுமின்றி அவர்களுக்கு வேத உபதேசங்களும் அவற்றின் ஞானமும் அளிக்கபட்டன. கூடவே மாபெரும் ஆட்சி அதிகாரமும் கிடைத்தன.
فَمِنْهُم مَّنْ ءَامَنَ بِهِۦ وَمِنْهُم مَّن صَدَّ عَنْهُ ۚ وَكَفَىٰ بِجَهَنَّمَ سَعِيرًا.
4:55. அவருக்குப் பின் வந்த சந்ததியர்களில் சிலர் இறைவழிகாட்டுதலின் படியே செயல்பட்டு சிறப்பாக வாழ்ந்தவர்களும் உண்டு. காலப் போக்கில் அவற்றைப் புறக்கணித்து அழிவை தேடிக்கொண்டவர்களும் உண்டு. அவர்களுக்கு ஏற்பட்ட இழிநிலையும் வேதனைகளுமே அதற்குப் போதுமான சான்றுகளாகும்.
إِنَّ ٱلَّذِينَ كَفَرُوا۟ بِـَٔايَٰتِنَا سَوْفَ نُصْلِيهِمْ نَارًۭا كُلَّمَا نَضِجَتْ جُلُودُهُم بَدَّلْنَٰهُمْ جُلُودًا غَيْرَهَا لِيَذُوقُوا۟ ٱلْعَذَابَ ۗ إِنَّ ٱللَّهَ كَانَ عَزِيزًا حَكِيمًۭا.
4:56. நிச்சயமாக இறைவழிகாட்டுதலுக்கு மாற்றமாகச் செயல்படுபவர்கள் தோல்வியையும் நரக வேதனைகளை சந்திக்க நேரிடும். அப்போது அவர்கள் தம் எல்லா பலத்தையும் இழந்து விடுவார்கள். மீண்டும் அவர்கள் தங்களை தயார் படுத்திக் கொண்டும், நீதமான அரசமைப்புடன் மோதும்போது மீண்டும் தோல்வியுற்று, பலமிழந்து உருக்குலைந்து போவார்கள். இவ்வாறாக அவர்கள் திரும்ப திரும்ப மோதும்போது தோல்விகளையும் வேதனைகளையுமே அனுபவிக்க நேரிடும். ஏனெனில் அல்லாஹ் நிர்ணயித்துள்ள “மனித செயலுக்கு ஏற்ற விளைவுகள்” என்ற சட்டம் எக்காலத்திலும்,உலகில் எல்லா பகுதி மக்களுக்கும் பொருந்தக் கூடியதும் நிலைமாறாததும் ஆகும்.
وَٱلَّذِينَ ءَامَنُوا۟ وَعَمِلُوا۟ ٱلصَّٰلِحَٰتِ سَنُدْخِلُهُمْ جَنَّٰتٍۢ تَجْرِى مِن تَحْتِهَا ٱلْأَنْهَٰرُ خَٰلِدِينَ فِيهَآ أَبَدًۭا ۖ لَّهُمْ فِيهَآ أَزْوَٰجٌۭ مُّطَهَّرَةٌۭ ۖ وَنُدْخِلُهُمْ ظِلًّۭا ظَلِيلًا.
4:57. இதற்கு மாறாக அல்லாஹ்வின் வழிகாட்டுதலை ஏற்று அதன்படி தலைசிறந்த சமுதாயம் உருவாக செயல் திட்டங்களைத் தீட்டி, ஆற்றல் மிக்க செயல்களைச் செய்வோரின் சமுதாயம் சுவனத்திற்கு ஒப்பானதாக மாறிவரும். அவர்கள் வாழும் நாட்டில் பொருளாதாரம் என்றும் வற்றாத ஜீவநதியாக பெருகி வரும். அது மட்டுமின்றி அந்த சுவனத்தில் தூய உள்ளம் படைத்த சக தோழர்களும் வந்து இணைவார்கள். (பார்க்க 110:1-2) அவர்களுக்கு இறைவனின் அருளும் மனக் குளிர்ச்சியும் கூடிய வளமான வாழ்வும் கிடைக்கும்.
۞ إِنَّ ٱللَّهَ يَأْمُرُكُمْ أَن تُؤَدُّوا۟ ٱلْأَمَٰنَٰتِ إِلَىٰٓ أَهْلِهَا وَإِذَا حَكَمْتُم بَيْنَ ٱلنَّاسِ أَن تَحْكُمُوا۟ بِٱلْعَدْلِ ۚ إِنَّ ٱللَّهَ نِعِمَّا يَعِظُكُم بِهِۦٓ ۗ إِنَّ ٱللَّهَ كَانَ سَمِيعًۢا بَصِيرًۭا.
4:58. இவ்வாறாக அவர்கள் வாழும் இடம் சுவர்க்க பூமியாக உருவாகி வரும். அதன் நிர்வாகப் பொறுப்பு, அதை வழிநடத்திச் செல்லும் தகுதி உடையவர்களிடமே ஒப்படைக்கப்பட வேண்டும். இது அல்லாஹ்வின் கட்டளையாகும். இரண்டாவதாக மக்களிடையே ஏற்படும் பிரச்னைகளுக்குத் தீர்ப்பு வழங்கும்போது, அல்லாஹ் அறிவித்துள்ள சட்டங்களின்படியே நியாயமான தீர்ப்பே வழங்க வேண்டும். அதுவும் அந்த தீர்ப்பு, தீவிர விசாரணைக்குப்பின் மக்களுக்கு துரிதமாக கிடைக்க வேண்டும். இவை யாவும் அல்லாஹ்வின் நல்லுபதேசங்களாகும். இவற்றை எப்போதும் பேணி நடந்துகொள்ள வேண்டும். உங்களுடைய ஒவ்வொரு செயலும் அல்லாஹ்வின் கண்காணிப்பிலிருந்து தப்பிக்கவே முடியாது என்பதை மட்டும் மறவாதீர்.
يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوٓا۟ أَطِيعُوا۟ ٱللَّهَ وَأَطِيعُوا۟ ٱلرَّسُولَ وَأُو۟لِى ٱلْأَمْرِ مِنكُمْ ۖ فَإِن تَنَٰزَعْتُمْ فِى شَىْءٍۢ فَرُدُّوهُ إِلَى ٱللَّهِ وَٱلرَّسُولِ إِن كُنتُمْ تُؤْمِنُونَ بِٱللَّهِ وَٱلْيَوْمِ ٱلْءَاخِرِ ۚ ذَٰلِكَ خَيْرٌۭ وَأَحْسَنُ تَأْوِيلًا.
4:59. எனவே அல்லாஹ்வின் வழிகாட்டுதலை மனதார ஏற்றுக்கொண்ட நீங்கள் அல்லாஹ்வின் வழிகாட்டுதலுக்கு மட்டுமே அடிபணிந்து செயல்பட வேண்டும். மேலும் அதன் அடிப்படையில் இறைத்தூதர் உருவாக்கும் ஆட்சியமைப்பு சட்டங்களுக்கும் அடிபணிந்து செயல்படுவதும் மிகவும் அவசியமாகும். அது மட்டுமின்றி இந்த ஆட்சி அமைப்பின் கீழ் செயல்படும் அதிகாரிகளுக்கும் நீங்கள் ஒத்துழைப்புத் தாருங்கள். ஒருவேளை அதிகாரிகள் எடுத்த முடிவில் உங்களுக்கு உடன்பாடு இல்லாது போனால், ஆட்சியமைப்பின் உயர் அதிகாரிகளிடம் மேல்முறையிடுங்கள். அங்கு அல்லாஹ்வின் சட்டங்களின்படி சரியான தீர்வு கிடைத்து விடும் (பார்க்க -42:10). இதுவே தலைசிறந்த சமுதாயம் உருவாவதற்குத் துணை நிற்கும். மேலும் அல்லாஹ்வையும் “மனித செயலுக்கு ஏற்ற இறுதி விளைவுகள்” என்ற ஆஃகிரத்தையும் ஏற்றுக்கொண்டதற்கு இதுவே உண்மையான அர்த்தமுமாகும்.
மேலும் உயர்மட்ட குழு எடுக்கும் தீர்ப்பே இறுதியானது. இதற்கு எதிராக மேல்முறையீடு செய்யலாகாது. அதன் தீர்ப்பே இறுதியானது. ஏனெனில் அவர்கள் செய்யும் தீர்ப்பு அல்லாஹ்வின் சட்டத்திற்கு உட்பட்டே இருக்கும். (விளக்கம் 3:32)எனவே அல்லஹ்வின் வழிகாட்டுதலை ஏற்றுக்கொண்ட நீங்கள் இந்த தீர்ப்பிற்கு எதிராக விமர்சிக்காதீர்கள். (பார்க்க:4:65 & 33:36)
أَلَمْ تَرَ إِلَى ٱلَّذِينَ يَزْعُمُونَ أَنَّهُمْ ءَامَنُوا۟ بِمَآ أُنزِلَ إِلَيْكَ وَمَآ أُنزِلَ مِن قَبْلِكَ يُرِيدُونَ أَن يَتَحَاكَمُوٓا۟ إِلَى ٱلطَّٰغُوتِ وَقَدْ أُمِرُوٓا۟ أَن يَكْفُرُوا۟ بِهِۦ وَيُرِيدُ ٱلشَّيْطَٰنُ أَن يُضِلَّهُمْ ضَلَٰلًۢا بَعِيدًۭا.
4:60. இவைதான் மூஃமின்களின் நன்நடத்தையாகும். இதற்கு மாறாக இந்த குர்ஆனையும் இதற்கு முன்வந்த வேதத்தையும் உதட்டளவில் ஏற்றுக்கொள்வதாக வாதிடுபவர்களின் செயல்பாடுகளை கவனித்துப் பாருங்கள். தமக்கு சாதகமாக, தாமே உருவாக்கி வைத்துள்ள ஷரீஅத் சட்டங்களுக்கு ஏற்ப தீர்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என்று விரும்புகிறார்கள். உண்மை விஷயம் என்னவென்றால், இறைச் சட்டங்களுங்கு மாற்றமான தீர்ப்புகள் வழங்கக் கூடாது என்று அவர்களுக்கு கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்கள் இறைக் கட்டளைக்குப் பதிலாக தம் மனோ இச்சையின்படி வாழவே விரும்புகிறார்கள். இப்படி செயல்படுவதால் அவர்கள் அனைவரும் வழிகேட்டில் வெகுதூரம் சென்று விடுகிறார்களே! இதைப் பற்றி அவர்கள் சிந்தித்துணர மாட்டார்களா?
وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا۟ إِلَىٰ مَآ أَنزَلَ ٱللَّهُ وَإِلَى ٱلرَّسُولِ رَأَيْتَ ٱلْمُنَٰفِقِينَ يَصُدُّونَ عَنكَ صُدُودًۭا.
4:61. அவர்களிடம் அல்லாஹ்வின் கொள்கை கோட்பாடுகளையும் அவற்றை நடைமுறைப்படுத்த இறைத்தூதர் ஏற்படுத்தும் ஆட்சியமைப்பு சட்டங்களையும் ஏற்று அதன்படி செயல்படுங்கள் என்று கூறினால், அவர்களோ இவற்றை விட்டு விலகி இருக்கவே நாடுகிறார்கள். இறைத்தூதரே! நீரும் இதைப் பார்க்கின்றீர். அவர்கள் தம் பிரச்னைகளுக்குத் தீர்வு காண உம்மிடம் வருவதை விரும்பாமல் தடைகளை ஏற்படுத்துகிறார்கள். இது நயவஞ்சகத்தனம் அல்லவா?
فَكَيْفَ إِذَآ أَصَٰبَتْهُم مُّصِيبَةٌۢ بِمَا قَدَّمَتْ أَيْدِيهِمْ ثُمَّ جَآءُوكَ يَحْلِفُونَ بِٱللَّهِ إِنْ أَرَدْنَآ إِلَّآ إِحْسَٰنًۭا وَتَوْفِيقًا.
4:62. இப்படியாக இவர்கள் செய்து வரும் செயல்களால் துன்பம் ஏற்படும் போது, இவர்கள் உம்மிடம் வந்து, “அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நாங்கள் சமூக நல்லிணக்கத்தையும் நன்மையையும் தவிர வேறு எதையும் நாடவில்லை” என்று கூறுவார்கள்.
أُو۟لَٰٓئِكَ ٱلَّذِينَ يَعْلَمُ ٱللَّهُ مَا فِى قُلُوبِهِمْ فَأَعْرِضْ عَنْهُمْ وَعِظْهُمْ وَقُل لَّهُمْ فِىٓ أَنفُسِهِمْ قَوْلًۢا بَلِيغًۭا.
4:63. ஆனால் அவர்கள் உள்ளங்களில் இருப்பதும், உதடுகளில் வெளிவருவதும் என்ன என்ற விஷயமெல்லாம் அல்லாஹ்வுக்கு நன்கு தெரியும். (பார்க்க – 63:1) எனவே இப்படிப்பட்ட நயவஞ்சகர்களை விட்டு விலகி இருப்பதே நல்லது. இருப்பினும் அல்லாஹ்வின் வழிகாட்டுதலின் சிறப்புகளையும் அவற்றைப் பின்பற்றுவதால் ஏற்படும் நன்மைகளைப் பற்றியும் தொடர்ந்து எடுத்துரைப்பீராக. எதுவரை மனமாற்றம் ஏற்படுவதில்லையோ அதுவரை சீர்திருத்தங்களை கொண்டு வர முடியாது. (13:11) எனவே இறைவழிகாட்டுதலை மனதில் பதியும்படி தெளிவாக எடுத்துரையுங்கள்.
وَمَآ أَرْسَلْنَا مِن رَّسُولٍ إِلَّا لِيُطَاعَ بِإِذْنِ ٱللَّهِ ۚ وَلَوْ أَنَّهُمْ إِذ ظَّلَمُوٓا۟ أَنفُسَهُمْ جَآءُوكَ فَٱسْتَغْفَرُوا۟ ٱللَّهَ وَٱسْتَغْفَرَ لَهُمُ ٱلرَّسُولُ لَوَجَدُوا۟ ٱللَّهَ تَوَّابًۭا رَّحِيمًۭا.
4:64. இதற்கு முன் வந்த ஒவ்வொரு இறைத்தூதரும் அல்லாஹ்வின் கட்டளைக்கு மட்டுமே இணங்கி மக்களை வழிநடத்திச் சென்ற சீர்திருத்தவாதிகளாகவே இருந்தார்கள். எனவே இறைத்தூதரைப் பின்பற்றுவது இறைவனைப் பின்பற்றுவதற்கு ஒப்பானதாகும். எனவே ஒருவர் தமக்குத் தாமே தீங்கிழைத்து இருந்தால் அதற்குப் பரிகாரமாக என்ன செய்ய வேண்டும் என்று உம்மிடம் வந்து கேட்டிருந்தால், நீரும் அல்லாஹ்வின் வழிகாட்டுதலின்படி அதன் விளைவுகளிலிருந்து நிவாரணம் பெற என்ன வழிமுறை கையாளவேண்டும் என்பதை கூறியிருப்பாய். காரணம் பிரச்னைக்குத் தீர்வு பெற விரைந்து, அதற்கேற்ப செயல்பட அல்லாஹ்வின் வழிகாட்டுதலில் வழிமுறைகள் உள்ளன. இது அல்லாஹ்வின் மாபெரும் கிருபையாகும் அல்லவா?
ஒருவர் தம் மனம்போன போக்கில் வாழ்ந்து பாவச் செயல்களில் ஈடுபட்டால், அதன் பாதிப்புகள் ஏற்படாமல் போகாது. இப்படியாக அவர் தம்மை தாமே அநீதி இழைத்துக் கொள்கிறார். அவர் வீட்டில் ஒரு மூலையில் அமர்ந்தபடியே, பாவமன்னிப்புக் கோரி சில வார்த்தைகளை ஜபித்துக் கொண்டிருப்பார். அதனால் அவர் செய்த பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்படும் என்ற எண்ணத்தில் இருப்பார். ஆனால் அவர் தம் வாழ்வில் செய்த பாவச் செயல்களால் ஏற்பட்ட பாதிப்புகளை அது ஒருபோதும் நீக்காது. எனவே அவர் அதற்குப் பரிகாரமாக என்ன செய்ய வேண்டும்? அல்லாஹ்வின் சட்டப்படி அதற்குப் பரிகாரங்கள் என்ன என்பதை அறிந்து பாதிக்கப்பட்டவர்களின் நலனில் அக்கரைக் கொண்டு அதற்கேற்ப ஆக்கப்பூர்வமான நன்மையான செயல்களைச் செய்தால், நன்மையின் எடைத்தட்டை மிகைக்கச் செய்து, அவரிடமுள்ள பாவச் சுமைகள் குறைந்து பாதுகாப்பான வாழ்க்கைக்கு வழி பிறக்கும். (பார்க்க – 25:70)
فَلَا وَرَبِّكَ لَا يُؤْمِنُونَ حَتَّىٰ يُحَكِّمُوكَ فِيمَا شَجَرَ بَيْنَهُمْ ثُمَّ لَا يَجِدُوا۟ فِىٓ أَنفُسِهِمْ حَرَجًۭا مِّمَّا قَضَيْتَ وَيُسَلِّمُوا۟ تَسْلِيمًۭا.
4:65. ஆக மக்களிடையே ஏற்படும் பிரச்னைகளுக்குத் தீர்வு காண சமுதாயத்தை வழிநடத்திச் செல்பவராகிய உம்மை நீதிபதியாவும் தலைவராகவும் மக்கள் ஏற்றுக்கொள்ள அல்லாஹ்வின் புறத்திலிருந்தே அங்கீகாரம் அளிக்கப்படுகிறது. அதுமட்டுமின்றி அல்லாஹ்வின் சட்டப்படி அவர் தீர்ப்பு அளிப்பதால், அந்த தீர்ப்பைப் பற்றி யாரும் அதிருப்தி அடையக் கூடாது. அந்த தீர்ப்புகளை நீங்கள் உளப்பூர்வமாக ஏற்றுக்கொள்ள வேண்டும். (பார்க்க – 33:36 & 24:63) இப்படி ஒரு வரையறைக்குள் செயல்படாத வரையில் நீங்கள் உண்மையான மூஃமின்கள் ஆக முடியாது.
وَلَوْ أَنَّا كَتَبْنَا عَلَيْهِمْ أَنِ ٱقْتُلُوٓا۟ أَنفُسَكُمْ أَوِ ٱخْرُجُوا۟ مِن دِيَٰرِكُم مَّا فَعَلُوهُ إِلَّا قَلِيلٌۭ مِّنْهُمْ ۖ وَلَوْ أَنَّهُمْ فَعَلُوا۟ مَا يُوعَظُونَ بِهِۦ لَكَانَ خَيْرًۭا لَّهُمْ وَأَشَدَّ تَثْبِيتًۭا.
4:66. மேலும் மனிதகுல மேம்பாட்டிற்காக அத்தகைய சமூக அமைப்பு உருவாக தம் பேராசைகளை புறந்தள்ளிவிட்டு, அல்லாஹ்வின் பாதையில் தம்மை அர்ப்பணித்துக் கொண்டு, தம் வீட்டை விட்டு வெளியேறி, பொது வாழ்வில் ஈடுபட கட்டளை இடப்பட்டால், சிலரைத் தவிர பெரும்பாலோர் அவ்வாறு செய்யவில்லை. அதாவது மிகச் சிலரே அல்லாஹ்வின் கட்டளைக்கு முழுஅளவில் அடிபணிந்து செயல்படுகிறார்கள். அல்லாஹ்வின் அறிவுரையின்படி செயல்பட்டால் அவர்களுக்கு நன்மைகள் பல கிடைக்கும். ஆக சமுதாய நலனில் பங்கெடுத்துக் கொள்ள மனஉறுதியும் செயல் வேகமும் மிகவும் அவசியமானவை ஆகும்.
وَإِذًۭا لَّءَاتَيْنَٰهُم مِّن لَّدُنَّآ أَجْرًا عَظِيمًۭا.
4:67. அவர்கள் அல்லாஹ்வின் வழிகாட்டுதலின்படி பொதுப் பணியில் ஈடுபட்டு இருந்தால், “மனித செயல்களுக்கேற்ற பலன்கள்” என்ற விதிமுறைகளின்படி நன்மைகள் பல கிடைத்துக் கொண்டே இருந்திருக்கும்.
وَلَهَدَيْنَٰهُمْ صِرَٰطًۭا مُّسْتَقِيمًۭا.
4:68. அதுமட்டுமின்றி அவர்கள் வாழ்வின் சரியான இலக்கு என்ன என்பதும் வெட்ட வெளிச்சமாகி இருக்கும். அதை அடைய சரியான பாதை என்ன என்பதும் அனுபவ ரீதியாகத் தெரிந்திருக்கும்.
وَمَن يُطِعِ ٱللَّهَ وَٱلرَّسُولَ فَأُو۟لَٰٓئِكَ مَعَ ٱلَّذِينَ أَنْعَمَ ٱللَّهُ عَلَيْهِم مِّنَ ٱلنَّبِيِّۦنَ وَٱلصِّدِّيقِينَ وَٱلشُّهَدَآءِ وَٱلصَّٰلِحِينَ ۚ وَحَسُنَ أُو۟لَٰٓئِكَ رَفِيقًۭا.
4:69. இத்தகையவர்களே அல்லாஹ்வின் அருட்கொடைகளைப் பெறும் பாக்கியமுடையவர்கள் ஆவார்கள்.
(1) அதாவது அல்லாஹ்வின் வழிகாட்டுதலை நேரடியாகப் பெற்று செயல்பட்ட நபிமார்கள்,
(2) அவற்றை உண்மைபடுத்திக் காட்டிய சித்தீஃகீன்கள்,
(3)அதன் அடிப்படையில் உருவாக்கப்படும் ஆட்சி அமைப்பு சிறப்பாகச் செயல்பட தம் வாழ்வை அர்ப்பணித்த ஷுஹதாக்கள், மற்றும்
(4) சமுதாய மக்களின் மேம்பாட்டுத் திட்டங்களில் அல்லும் பகலும் பாடுபட்ட ஸாலிஹீன்கள்
(5) ஆகியவர்களே அல்லாஹ்வின் அருட்கொடைகளைப் பெற்று சிறப்பாக வாழ்ந்து, உலக வரலாற்றில் முத்திரை பதித்துச் சென்றவர்கள் ஆவார்கள்.
(6) ஆக யார் அல்லாஹ்வின் வழிகாட்டுதலையும் அதன் அடிப்படையில் உருவாக்கப்படும் ஆட்சியமைப்பு சட்டங்களையும் பின்பற்றி அதற்கு துணைபுரிந்து செயல்படுகிறார்களோ, அவர்கள் அனைவரும் மேற்சொன்ன அல்லாஹ்வின் அருட்கொடைகளைப் பெற்ற சான்றோர்களின் பட்டியலில் இடம் பெறுவர். யாருக்கு இந்த பாக்கியம் கிடைக்கிறதோ, அவருக்கு இதைவிட சிறப்பான சந்தோஷம் வேறு என்னவாக இருக்க முடியும்?
ذَٰلِكَ ٱلْفَضْلُ مِنَ ٱللَّهِ ۚ وَكَفَىٰ بِٱللَّهِ عَلِيمًۭا.
4:70. அல்லாஹ்வின் இந்த நற்பேறுகளையும், அருட்கொடைகளையும் நாடி யார் உழைக்கிறார்களோ, அவர்கள் அனைவரும் இதற்கு தகுதியானவர்கள். இது வெறும் வாய்ச் சொற்கள் அல்ல. அனைத்து ஞானங்களையும் உடைய அல்லாஹ்வின் உறுதிமொழியாகும். இதுவே போதுமானதாகும்.
يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟ خُذُوا۟ حِذْرَكُمْ فَٱنفِرُوا۟ ثُبَاتٍ أَوِ ٱنفِرُوا۟ جَمِيعًۭا.
4:71. அல்லாஹ்வின் இந்த ஆட்சியமைப்பை கட்டிக்காப்பதற்காக முன்னெச்சரிக்கையும் முன்னேற்பாடுகளும் அவசியமான ஒன்றாகும். இதற்காக நீங்கள் அனைத்து உபாயங்களையும் பயிற்சிகளையும் முறைப்படுத்தி வைத்துக்கொள்ள வேண்டும். தேவை ஏற்படின் தற்காப்புக்காக களத்தில் இறங்கவும் தயாராக இருக்கவேண்டும். அதுசமயம் தேவைக்கு ஏற்ப பிரிவுகளாகவோ (Battalions) அனைவரும் ஒன்று சேர்ந்தோ சூழ்நிலைக்கு ஏற்ப களத்தில் இறங்கலாம்.
وَإِنَّ مِنكُمْ لَمَن لَّيُبَطِّئَنَّ فَإِنْ أَصَٰبَتْكُم مُّصِيبَةٌۭ قَالَ قَدْ أَنْعَمَ ٱللَّهُ عَلَىَّ إِذْ لَمْ أَكُن مَّعَهُمْ شَهِيدًۭا.
4:72. இதற்கு காரணம் என்னவென்றால், உங்களில் சிலர் களத்தில் இறங்க தயக்கம் காட்டலாம். ஏதாவது காரணம் காட்டி பின்தங்கியும் விடலாம். இதனால் மற்றவர்களை அது பாதிக்கும். மேலும் போரில் ஏதாவது துயரச் சம்பவம் நிகழ்ந்தால் பின்தங்கியவர்களில் சிலர், “நாம் அவர்களோடு போரில் கலந்து கொள்ளாதது அல்லாஹ் நமக்கு அளித்த அருளாகும்” என்று பேசிக் கொள்வார்கள்.
وَلَئِنْ أَصَٰبَكُمْ فَضْلٌۭ مِّنَ ٱللَّهِ لَيَقُولَنَّ كَأَن لَّمْ تَكُنۢ بَيْنَكُمْ وَبَيْنَهُۥ مَوَدَّةٌۭ يَٰلَيْتَنِى كُنتُ مَعَهُمْ فَأَفُوزَ فَوْزًا عَظِيمًۭا.
4:73. அவ்வாறே அல்லாஹ்வின் அருளைக் கொண்டு வெற்றி கிடைத்துவிட்டால், “நாமும் அதில் கலந்து கொண்டிருந்தால் நன்றாக இருந்திருக்குமே. அந்த வெற்றியில் நமக்கும் பெரும் பாக்கியம் கிடைத்திருக்குமே” என்று ஏங்குவார்கள். உங்களுக்கும் அவர்களுக்கும் இடையே எந்த ஒட்டும் உறவும் இல்லாதது போலவே இப்படிப்பட்ட பேச்சுகளைப் பேசுவார்கள்.
۞ فَلْيُقَٰتِلْ فِى سَبِيلِ ٱللَّهِ ٱلَّذِينَ يَشْرُونَ ٱلْحَيَوٰةَ ٱلدُّنْيَا بِٱلْءَاخِرَةِ ۚ وَمَن يُقَٰتِلْ فِى سَبِيلِ ٱللَّهِ فَيُقْتَلْ أَوْ يَغْلِبْ فَسَوْفَ نُؤْتِيهِ أَجْرًا عَظِيمًۭا.
4:74. உண்மை என்னவென்றால் இவர்கள் நிலையான சந்தோஷங்கள் நிறைந்த வாழ்க்கைக்குப் பதிலாக, தற்காலிக சுக வாழ்விற்கே முக்கியத்துவம் அளிப்பவர்கள். ஆனால் மூஃமின்கள், தம் வாழ்வை அர்ப்பணித்து அல்லாஹ்வின் பாதையில் போரிடுவார்கள். இதில் இரு வகையான பலன்கள் உண்டு. போரில் வெற்றி பெற்றால் மிகச் சிறப்பான வாழ்க்கையை இவ்வுலகில் அனுபவிப்பார்கள். ஒருவேளை அதில் மாண்டு போனாலும் அல்லாஹ்விடத்தில் தக்க சன்மானம் கிடைப்பது உறுதி.
وَمَا لَكُمْ لَا تُقَٰتِلُونَ فِى سَبِيلِ ٱللَّهِ وَٱلْمُسْتَضْعَفِينَ مِنَ ٱلرِّجَالِ وَٱلنِّسَآءِ وَٱلْوِلْدَٰنِ ٱلَّذِينَ يَقُولُونَ رَبَّنَآ أَخْرِجْنَا مِنْ هَٰذِهِ ٱلْقَرْيَةِ ٱلظَّالِمِ أَهْلُهَا وَٱجْعَل لَّنَا مِن لَّدُنكَ وَلِيًّۭا وَٱجْعَل لَّنَا مِن لَّدُنكَ نَصِيرًا.
4:75. அல்லாஹ்வின் வழிகாட்டுதலை மனதார ஏற்றுக்கொண்ட மக்கமா நகர மக்களின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. ஊரைவிட்டு வெளியே வர இயலாத முதியவர்களும், சிறு பிள்ளைகளும் அக்கிரமக்காரர்களால் மிகவும் துன்புறுத்தப் படுகிறார்கள். இதனால் அவர்கள் தங்களை காப்பாற்றும்படி இறைவனிடம் மன்றாடிப் பிரார்த்தித்துக் கொண்டு இருக்கின்றனர். “எங்களை பரிபாலிப்பவனே! அக்கிரமக்காரரர்கள் இருக்கும் இந்த ஊரை விட்டு வெளியேற எங்களுக்கு உதவி செய்வாயாக. எங்களுக்காக உன்னிடமிருந்து ஒரு பாதுகாவலனை அளித்தருள்வாயாக. இன்னும் உன்னிடமிருந்து உதவியாளனையும் அனுப்பி வைப்பாயாக” என்று அவர்கள் பிரார்த்தனை செய்கிறார்கள்.
அவர்களுடைய கூக்குரல் இவ்வாறு இருக்க, அல்லாஹ்வின் பாதையில் அக்கிரமக்காரர்களுக்கு எதிராகப் போரிட புறப்படாமல் இருக்க இந்த மூஃமின்களுக்கு என்ன வந்தது? உலகில் நிகழும் அநியாயத்தையும் அக்கிரமத்தையும் அழிக்கத்தானே போர் எனும் உபாயம் உள்ளது (பார்க்க – 22:39)
பொதுவாக போரை யாரும் விரும்ப மாட்டார்கள். காரணம் அதில் உயிர்ச்சேதமும் பொருட் சேதங்களும் ஏற்படுகின்றன. ஆனால் யார் யாருக்கு எதிராக எதற்காகப் போரிடுகிறார்கள் என்பதே கவனிக்க வேண்டிய விஷயமாகும். உலகில் துயரத்தில் இருப்பவர்களைக் காப்பாற்ற மனிதன் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். இறைவனுடைய உதவி நேரடியாக இல்லாமல், தான் நிலைநிறுத்திய சட்டத்தின்படி உதவியாளர்கள் மூலமாகத்தான் வரும் என்று இவ்வாசகத்திலிருந்து நமக்குத் தெளிவாகப் புலனாகிறது. (மேலும் பார்க்க 2:251
ٱلَّذِينَ ءَامَنُوا۟ يُقَٰتِلُونَ فِى سَبِيلِ ٱللَّهِ ۖ وَٱلَّذِينَ كَفَرُوا۟ يُقَٰتِلُونَ فِى سَبِيلِ ٱلطَّٰغُوتِ فَقَٰتِلُوٓا۟ أَوْلِيَآءَ ٱلشَّيْطَٰنِ ۖ إِنَّ كَيْدَ ٱلشَّيْطَٰنِ كَانَ ضَعِيفًا.
4:76. ஆக ஒரு பிரிவினர் உலகில் நிகழும் அநியாயத்தையும் அட்டூழியத்தையும் ஒழித்துக் கட்ட போரிடுகிறார்கள். இது அல்லாஹ்வின் பாதையில் போரிடுவது என்பதாகும். மற்றொரு பிரிவினர் எத்தேச்சதிகார ஆட்சிமுறை மற்றும் அங்கு நடைபெற்று வரும் அடக்குமுறை ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள போரிடுபவார்கள். இது தாஃகூத்திய ஆட்சியாளரின் படை எனப்படும். ஆக மூஃமின்களே! நீங்கள் எப்போதும் அல்லாஹ்வின் பாதையில் போரிடுங்கள். போருக்கான எல்லா உபாயங்களையும் பயிற்சிகளையும் அளித்து உங்களை ஆயத்தப்படுத்திக் கொள்ளுங்கள். உங்கள் பகைவர்களிடம் பல்வேறு பலவீனங்கள் இருக்கும். இதனால் அவர்கள் உங்களை வெற்றிகொள்வது சாத்தியமல்ல.
أَلَمْ تَرَ إِلَى ٱلَّذِينَ قِيلَ لَهُمْ كُفُّوٓا۟ أَيْدِيَكُمْ وَأَقِيمُوا۟ ٱلصَّلَوٰةَ وَءَاتُوا۟ ٱلزَّكَوٰةَ فَلَمَّا كُتِبَ عَلَيْهِمُ ٱلْقِتَالُ إِذَا فَرِيقٌۭ مِّنْهُمْ يَخْشَوْنَ ٱلنَّاسَ كَخَشْيَةِ ٱللَّهِ أَوْ أَشَدَّ خَشْيَةًۭ ۚ وَقَالُوا۟ رَبَّنَا لِمَ كَتَبْتَ عَلَيْنَا ٱلْقِتَالَ لَوْلَآ أَخَّرْتَنَآ إِلَىٰٓ أَجَلٍۢ قَرِيبٍۢ ۗ قُلْ مَتَٰعُ ٱلدُّنْيَا قَلِيلٌۭ وَٱلْءَاخِرَةُ خَيْرٌۭ لِّمَنِ ٱتَّقَىٰ وَلَا تُظْلَمُونَ فَتِيلًا.
4:77. அல்லாஹ்வின் வழிகாட்டுதலின் அடிப்படையில் முதலில் சமுதாயத்தை உருவாக்கி வளர்ச்சிப் பணித் திட்டங்களுக்காக செலவு செய்ய சொல்லப்பட்டது. அப்போது போரிடும் நிலை ஏற்படவில்லை. ஆனால் இப்போது போரிடும் கட்டாயம் ஏற்பட்டதும் போருக்காக அழைப்பு விடுத்த போது, அவர்களுடைய நிலையை நீர் கவனித்தீரா? அவர்களில் ஒரு பிரிவினர் அல்லாஹ்வுக்குப் பயப்படுவது போல் அதைவிட அதிகமாகவே மக்களுக்கு பயப்பட்டு, “எங்கள் இறைவனே! எங்கள் மீது நீ போரை ஏன் விதியாக்கினாய்? இன்னும் சிறிது காலம் எங்களுக்காக பிற்படுத்தியிருக்கக் கூடாதா?” என்று கூறுகிறார்கள். நீர் அவர்களிடம், “வருங்காலத்தில் கிடைக்கவிருக்கும் நிலையான பலன்களுக்காக, அல்லாஹ்வின் கட்டளையை ஏற்று, தற்காலிக உலக சுகத்தை தியாகம் செய்வது அவர்களுடைய நன்மைக்கே என்றும் அவர்கள் எள்ளளவும் அநியாயம் செய்யப்பட மாட்டார்கள் என்றும்” கூறுவீராக.
أَيْنَمَا تَكُونُوا۟ يُدْرِككُّمُ ٱلْمَوْتُ وَلَوْ كُنتُمْ فِى بُرُوجٍۢ مُّشَيَّدَةٍۢ ۗ وَإِن تُصِبْهُمْ حَسَنَةٌۭ يَقُولُوا۟ هَٰذِهِۦ مِنْ عِندِ ٱللَّهِ ۖ وَإِن تُصِبْهُمْ سَيِّئَةٌۭ يَقُولُوا۟ هَٰذِهِۦ مِنْ عِندِكَ ۚ قُلْ كُلٌّۭ مِّنْ عِندِ ٱللَّهِ ۖ فَمَالِ هَٰٓؤُلَآءِ ٱلْقَوْمِ لَا يَكَادُونَ يَفْقَهُونَ حَدِيثًۭا.
4:78. இப்போது மிஞ்சி நிற்பது போர்க் களத்தில் ஏற்படும் மரண பயம் பற்றியதாகும். மரணம் யாரை விட்டு வைக்கப் போகிறது? ஒரு நாள் இல்லை ஒரு நாள் மரணம் சம்பவித்தே தீரும். யார் எங்கு இருந்த போதிலும் சரியே. உறுதியாகக் கட்டப்பட்ட கோட்டையில் இருந்தாலும் சரியே. மரணம் உங்களை அடைந்தே தீரும். உண்மை இவ்வாறிருக்க, கோழைகளாய் நூறாண்டுகள் வாழ்வதை விட சிறந்த செயல் வீரனாய் ஒரே ஒரு நாள் வாழ்வதே மேல் அல்லவா? உயர் இலட்சியத்திற்காகத் தன் வாழ்வை அர்ப்பணிப்பதைக் கொண்டே மனிதனுக்கு நிலையான வாழ்க்கை கிடைக்கிறது என்பதுதான் உண்மை.
இப்போது இவர்களுடைய போக்கு எவ்வாறு இருக்கின்றது தெரியுமா? இவர்களுக்கு சாதகமான சூழ்நிலை உருவாகும்போது, இதில் இந்த இறைத்தூதரின் பங்கு என்ன இருக்கின்றது? எல்லாமே இறைவன் புறத்திலிருந்து கிடைப்பவை என்கிறார்கள். இவர்களுக்கு ஏதாவது துன்பம் நேர்ந்தால், உடனே இவை இறைத்தூதரின் தவறான வழிகாட்டுதலால் தான் என்று அவர் மீது பழி சுமத்துகிறார்கள்.
உண்மை அதுவல்ல. மனிதச் செயல்களுக்கு ஏற்பத்தான் விளைவுகள் ஏற்படும். நற்செயல்களுக்கு நற்பலன்கள் கிடைக்கும். தவறான செயல்களுக்கு தீய விளைவுகள். ஆக இவை இரண்டுமே அல்லாஹ்வின் புறத்திலிருந்து நிலை நிறுத்தப்பட்ட சட்டமாகும். (كُلٌّۭ مِّنْ عِندِ ٱللَّهِ ۖ) இந்த மக்களுக்கு என்ன நேர்ந்து விட்டது. இதைக் கூட அவர்களால் விளங்கிக் கொள்ள முடியவில்லையே.
مَّآ أَصَابَكَ مِنْ حَسَنَةٍۢ فَمِنَ ٱللَّهِ ۖ وَمَآ أَصَابَكَ مِن سَيِّئَةٍۢ فَمِن نَّفْسِكَ ۚ وَأَرْسَلْنَٰكَ لِلنَّاسِ رَسُولًۭا ۚ وَكَفَىٰ بِٱللَّهِ شَهِيدًۭا.
4:79. எந்த ஒரு செயலையும் அல்லாஹ்வின் வழிகாட்டுதலின்படி செய்தால் அவை நற்பலன்களையே தரும். யார் இதற்கு மாற்றமாக தம் விருப்பப்படி செயல்படுகிறார்களோ, அதற்கு ஏற்ற பின்விளைவுகள் தான் ஏற்படும். எனவே உங்களுக்கு வந்தடையும் துயரங்கள் யாவும் நீங்கள் உங்கள் கைகளால் சம்பாதித்தவையே ஆகும். (பார்க்க – 42:30) அல்லாஹ்வின் புறத்திலிருந்து அணு அளவும் அநியாயம் நிகழ்வதில்லை. (பார்க்க – 4:40). “மனித செயல்களுக்கு ஏற்ப விளைவுகள்” என்ற சட்டத்தை அல்லாஹ் நிர்ணயித்துள்ளதை, இதற்குமுன் வந்த நபிமார்களும் அவரவர் சமூகத்தார்க்கு எடுத்துரைத்து வந்தனர் (பார்க்க 7:131) இந்த உண்மையை எடுத்துக் கூறி செயல்படவே இந்த இறைத் தூதரும் வந்துள்ளார். இவரும் அல்லாஹ்வின் வழிகாட்டுதலின்படியே செயல்படுகிறார். (பார்க்க 6:106) எனவே அவர் புறத்திலிருந்து தவறு ஏற்பட வாய்ப்பில்லை என்பதற்கு அல்லாஹ்வின் நடைமுறைச் சட்டமே சாட்சியாக இருக்கிறது.
مَّن يُطِعِ ٱلرَّسُولَ فَقَدْ أَطَاعَ ٱللَّهَ ۖ وَمَن تَوَلَّىٰ فَمَآ أَرْسَلْنَٰكَ عَلَيْهِمْ حَفِيظًۭا.
4:80. எனவே யார் இறைத்தூதரைப் பின்பற்றுகிறாரோ அவர் அல்லாஹ்வைப் பின்பற்றுவதற்குச் சம்மாகும். யார் இதற்கு மாற்றமாக செயல்படுகிறாரோ அதன் பின்விளைவுகளுக்கு அவரே பொறுப்பாளி ஆவார். நபியே! நாம் உம்மை அவர்களின் பொறுப்பாளராக அனுப்பவில்லை.
وَيَقُولُونَ طَاعَةٌۭ فَإِذَا بَرَزُوا۟ مِنْ عِندِكَ بَيَّتَ طَآئِفَةٌۭ مِّنْهُمْ غَيْرَ ٱلَّذِى تَقُولُ ۖ وَٱللَّهُ يَكْتُبُ مَا يُبَيِّتُونَ ۖ فَأَعْرِضْ عَنْهُمْ وَتَوَكَّلْ عَلَى ٱللَّهِ ۚ وَكَفَىٰ بِٱللَّهِ وَكِيلًا.
4:81. சமுதாயத்தை வழிநடத்திச் செல்பவரே! உம்மைப் பின்பற்றுவதாகச் சொல்லிக் கொள்பவர்களில் சிலர், உம்மை விட்டு விலகிச் சென்றதும் உமக்கு எதிராக சதி திட்டங்களைத் தீட்டுகின்றனர்.அதிலேயே தம் இரவுப் பொழுதையும் கழிக்கின்றனர். அவர்கள் செய்யும் செயல்கள் எல்லாம் பதிவாகி வருகின்றன. அவர்களுடைய சதி திட்டங்களை நீர் பொருட்படுத்தாதீர். அல்லாஹ்வின் செயல் திட்டங்களில் முழு கவனத்தை செலுத்தி வாரீர். அதன்படி செய்யப்படும் பாதுகாப்பு ஏற்பாடுகளே அவர்கள் தீட்டும் சதி திட்டங்களை முறியடிக்க போதுமானது.
இப்படியாக இவர்களின் செயல்களை சற்று ஆராய்ந்து பாருங்கள். நிமிடத்திற்கு ஒரு பேச்சும், நேரத்திற்கு தகுந்தாற் போல் செயலும், நிலையற்ற தன்மைகளும் காணப்படும். இப்படித்தான் இவர்களுடைய உள்ளமும் செயல்பட்டுக் கொண்டிருக்கும். சமுதாயத்தில் எத்தனையோ முரண்பட்ட கருத்துகளும் செயல்பாடுகளும் நிலவிவரும். அவற்றிற்கு தீர்வுகள் எதுவும் அவர்களிடம் இருக்காது.
أَفَلَا يَتَدَبَّرُونَ ٱلْقُرْءَانَ ۚ وَلَوْ كَانَ مِنْ عِندِ غَيْرِ ٱللَّهِ لَوَجَدُوا۟ فِيهِ ٱخْتِلَٰفًۭا كَثِيرًۭا.
4:82. ஆனால் குர்ஆனின் நிலை அவ்வாறில்லை. இதை நீங்கள் ஆழ்ந்து சிந்தித்துப் பார்த்தால் எங்கும் முரண்பட்ட கருத்துகள் இருப்பதாக காணமாட்டீர்கள். ஆரம்பத்திலிருந்து கடைசி வரை உள்ள கொள்கை கோட்பாடுகள் ஒரே அடிப்படையில்தான் இருக்கும். ஆனால் அது பல கோணங்களில் விவரிக்கப்பட்டுள்ளது. இந்த வழிகாட்டுதல்கள் அல்லாஹ்விடமிருந்து வந்துள்ளன என்பதற்கு இதுவே ஆதாரமாகும். அல்லாஹ் அல்லாத பிறரிடமிருந்து வந்திருந்தால் இதில் ஏராளமான முரண்பாடுகள் இருந்திருக்கும்.
குர்ஆனின் மூலமொழியான அரபி மொழியில் சொல்லப்பட்ட விஷயங்களில் எங்கும் முரண்பாடுகள் இல்லை என்பது இதிலிருந்து புலனாகிறது.
وَإِذَا جَآءَهُمْ أَمْرٌۭ مِّنَ ٱلْأَمْنِ أَوِ ٱلْخَوْفِ أَذَاعُوا۟ بِهِۦ ۖ وَلَوْ رَدُّوهُ إِلَى ٱلرَّسُولِ وَإِلَىٰٓ أُو۟لِى ٱلْأَمْرِ مِنْهُمْ لَعَلِمَهُ ٱلَّذِينَ يَسْتَنۢبِطُونَهُۥ مِنْهُمْ ۗ وَلَوْلَا فَضْلُ ٱللَّهِ عَلَيْكُمْ وَرَحْمَتُهُۥ لَٱتَّبَعْتُمُ ٱلشَّيْطَٰنَ إِلَّا قَلِيلًۭا.
4:83. மேலும் நயவஞ்சகர்கள், அமைதியை காக்கும் நற்செய்தியோ அல்லது ஆபத்திலிருந்து பாதுகாக்கும் எச்சரிக்கைகளோ வந்தால், உடனே அவர்கள் மக்களிடம் பரப்பி குழப்பம் ஏற்படுத்தி விடுகின்றனர். இதனால் தக்க நடவடிக்கை எடுப்பதில் சிக்கல்கள் ஏற்படுகின்றன. எனவே இப்படிப்பட்ட செய்திகளை முறையாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மூலமாக அறிவிக்கப்பட்டால் இத்தகைய குழப்பங்கள் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள முடியும். அவர்களுக்கு அந்த ஆற்றல் உண்டு. ஆக “அல்லாஹ்வின் வழிகாட்டுதல்” என்ற அருள் இல்லாதிருந்தால் இப்படிப்பட்ட புரளிகளை கிளப்பும் ஷைத்தான்களை நம்பி உங்களில் பலர் உடனே செயலில் இறங்கி இருப்பீர்கள். பிரச்னைகள் தீர்வதற்குப் பதிலாக அது மேலும் சிக்கலாகி இருக்கும்.
எந்த பிரச்னையை எவ்வாறு அணுகுவது என்று பொது மக்களுக்கு தெரியாது. அதனால் சட்ட ஒழுங்கு சீர்கெடும். இப்படி உணர்ச்சி வேகத்தில் செயல்படுபவர்களுக்கே எதிர் பாராத பாதிப்புகள் ஏற்படுகின்றன. இதற்காக மக்கள் புரளிகளை நம்பாமல், தீர விசாரித்து உண்மைகளை கண்டறிந்த பின்பே செயல்பட வேண்டும். (பார்க்க 25:73)
فَقَٰتِلْ فِى سَبِيلِ ٱللَّهِ لَا تُكَلَّفُ إِلَّا نَفْسَكَ ۚ وَحَرِّضِ ٱلْمُؤْمِنِينَ ۖ عَسَى ٱللَّهُ أَن يَكُفَّ بَأْسَ ٱلَّذِينَ كَفَرُوا۟ ۚ وَٱللَّهُ أَشَدُّ بَأْسًۭا وَأَشَدُّ تَنكِيلًۭا.
4:84. சமுதாயத்தில் சீர்திருத்தம் கொண்டு வருவதில் அக்கரையுள்ளவரே! பொதுமக்களின் நலனைக் கருதி ஏற்படுத்தப்பட்ட இந்த அரசமைப்பை வலுப் படுத்துவதிலும், அதை நடத்திச் செல்ல பாதுகாப்பு படைகளைத் தயாரிப்பதிலும் கவனம் செலுத்துவீராக. இது விஷயமாக உம்மைத் தவிர்த்து மற்றவர்களைக் கட்டாயப்படுத்த முடியாது. எனினும் உன்னுடைய சக தோழர்களாகிய மூஃமின்களுக்கு தக்க ஆயுத பயிற்சிகளையும் போர் தந்திரங்களையும் கற்றுக் கொடுத்து, அவர்களிடமுள்ள குறைகளை நீக்கி முறையாக ஊக்கமளித்து அவர்களுடைய ஆற்றல்களை வளர்த்து வருவீராக. இவையாவும் பகைவர்களின் பலத்தை ஒடுக்கி வைக்க உதவிபுரியும். இவ்வாறாக அல்லாஹ்வின் செயல்திட்டம் மிகவும் வலிமை மிக்கதாகவும் குற்றம் புரிபவர்களுக்குத் தண்டனை அளிப்பதில் கடுமையானதாகவும் இருக்கின்றது.
مَّن يَشْفَعْ شَفَٰعَةً حَسَنَةًۭ يَكُن لَّهُۥ نَصِيبٌۭ مِّنْهَا ۖ وَمَن يَشْفَعْ شَفَٰعَةًۭ سَيِّئَةًۭ يَكُن لَّهُۥ كِفْلٌۭ مِّنْهَا ۗ وَكَانَ ٱللَّهُ عَلَىٰ كُلِّ شَىْءٍۢ مُّقِيتًۭا.
4:85. இப்படியாக நீரும் உம்மை சார்ந்த மூஃமின்களும் இணைந்து செயல்படுங்கள். எவரேனும் ஆக்கப்பூர்வமான நற்செயல்களுக்காக உதவி செய்தால் அதன் நன்மைகளில் அவருக்கும் பங்குண்டு. அவ்வாறே தீய காரியங்களின் பக்கம் அழைத்தால், அதில் அவருக்கும் பங்குண்டு. எல்லா விஷயங்களைப் பற்றியும் அறிந்து கொள்ளும் பேராற்றலும் கண்காணிக்கும் வல்லமையும் அல்லாஹ்வுக்கு உண்டு.
அதாவது நன்மையான செயல்களைச் செய்ய அறிவுரை செய்பவர்களுக்கு அரசின் சார்பாக உதவியும் பாராட்டும் கிடைக்கும். தீய காரியங்களைச் செய்ய தூண்டுபவர்களுக்கும் தக்க தண்டனை கிடைக்கும். எனவே தீய காரியங்களைச் செய்பவர்களின் பின்னணியில் இருக்கும் தீயவர்களை கண்டறிந்து அவர்களையும் வேரறுக்க வேண்டும். அது மட்டுமின்றி அல்லாஹ்வின் புறத்தலிருந்தும் அவரவர் செயலுக்கு ஏற்ப சன்மானங்களும் தண்டனைகளும் மரணத்திற்குப் பின்பும் கிடைக்கும்.
وَإِذَا حُيِّيتُم بِتَحِيَّةٍۢ فَحَيُّوا۟ بِأَحْسَنَ مِنْهَآ أَوْ رُدُّوهَآ ۗ إِنَّ ٱللَّهَ كَانَ عَلَىٰ كُلِّ شَىْءٍ حَسِيبًا.
4:86. இப்படியாக அவர்கள் உம்முடன் ஒருங்கிணைந்து, இந்த அரசமைப்பின் நலனையும் பாதுகாப்பையும் கருதி செயல்பட்டால், அதற்குப் பிரதி உபகாரமாக அவர்களுக்கு உரிய வாழ்க்கை வசதிகளை சிறந்த முறையில் செய்து தாருங்கள். அதற்கு வாய்ப்பில்லாத நிலையில் குறைந்தபட்ச வசதிகளையாவது செய்து தாருங்கள். அல்லாஹ்வின் இந்த ஆட்சியமைப்பு எல்லா விஷயத்திலும் அளவோடு அணுகும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
ٱللَّهُ لَآ إِلَٰهَ إِلَّا هُوَ ۚ لَيَجْمَعَنَّكُمْ إِلَىٰ يَوْمِ ٱلْقِيَٰمَةِ لَا رَيْبَ فِيهِ ۗ وَمَنْ أَصْدَقُ مِنَ ٱللَّهِ حَدِيثًۭا.
4:87. ஆக பொதுமக்கள் உங்களுடைய செயல்திட்டத்தில் பங்கெடுத்தாலும் புறக்கணித்தாலும் சரியே. நீர் அல்லாஹ்வின் வல்லமையைப் பற்றியும், அகிலங்கள் அனைத்திலும் அவனுடைய மேளாண்மையே செயல்படுகின்றன என்பதையும், அவனைத் தவிர வேறு யாருடைய அதிகாரமும் செயல்பாட்டில் இல்லை என்பதையும் மக்களிடம் எடுத்துச் சொல்லுங்கள். அது போல மனிதனும் அவனுடைய கட்டளைகளுக்கு மட்டுமே கீழ்ப்படிந்து நேர்வழியில் செயல்பட வேண்டும் என்பதையும் விளக்கி வாருங்கள். மேலும் மக்கள் அனைவரும் "ஒன்றிணைந்து வாழும் நாள்" விரைவில் வரும் என்பதையும், அதில் எவ்வித சந்தேகமும் இல்லை என்றும் எடுத்துரையுங்கள். அல்லாஹ்வின் இச்சொல்லை (ஹதீஸை) விட வேறு யார் உண்மைப்படுத்திக் காட்ட முடியும்?
۞ فَمَا لَكُمْ فِى ٱلْمُنَٰفِقِينَ فِئَتَيْنِ وَٱللَّهُ أَرْكَسَهُم بِمَا كَسَبُوٓا۟ ۚ أَتُرِيدُونَ أَن تَهْدُوا۟ مَنْ أَضَلَّ ٱللَّهُ ۖ وَمَن يُضْلِلِ ٱللَّهُ فَلَن تَجِدَ لَهُۥ سَبِيلًۭا.
4:88. உங்களிடையே சிலர், உள்ளத்தில் ஒன்று புறத்தில் ஒன்றாக செயல்பட்டு வரும் சந்தர்ப்பவாதிகள் உள்ளனர். உங்களில் சிலர் இவர்களைப் பற்றி உண்மை தெரியாமல் நல்ல அபிப்ராயம் கொண்டுள்ளார்கள். அல்லாஹ்வின் வழிகாட்டுதலை ஏற்றுக் கொண்டதாக சொல்லி, அதற்கு எதிராகச் செயல்படுபவர்களை நேர்வழியில் செலுத்த நீங்கள் விரும்புகிறீர்களா? இப்படி நீங்கள் விரும்புவதால் மட்டுமே அவர்களுக்கு நேர்வழி கிடைத்து விடாது. நேர்வழியைப் பெற நாடி அதற்காக முயல்பவர்களுக்கே நேர்வழி கிடைக்கும். (பார்க்க- 18:29) இது அல்லாஹ்வின் நியதி. எனவே அல்லாஹ்வின் வழிகாட்டுதலை அவர்களாகவே முன்வந்து ஏற்றுச் செயல்பட்டால் அன்றி, வழிகேட்டில் செல்பவர்களை அதிலிருந்து நீங்கள் மீளவைக்க முடியாது.
وَدُّوا۟ لَوْ تَكْفُرُونَ كَمَا كَفَرُوا۟ فَتَكُونُونَ سَوَآءًۭ ۖ فَلَا تَتَّخِذُوا۟ مِنْهُمْ أَوْلِيَآءَ حَتَّىٰ يُهَاجِرُوا۟ فِى سَبِيلِ ٱللَّهِ ۚ فَإِن تَوَلَّوْا۟ فَخُذُوهُمْ وَٱقْتُلُوهُمْ حَيْثُ وَجَدتُّمُوهُمْ ۖ وَلَا تَتَّخِذُوا۟ مِنْهُمْ وَلِيًّۭا وَلَا نَصِيرًا.
4:89. அந்த நயவஞ்சகர்கள் நேர்வழி பெற்று உங்களுடன் வந்து இணைந்துகொள்ள வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள். ஆனால் அவர்களோ நீங்கள் அனைவரும் நேர்வழியை விட்டுவிட்டு அவர்களுடன் சேர்ந்து கொள்ள வேண்டும் என்று விரும்புகிறார்கள்.
அவர்கள் அல்லாஹ்வின் பாதையில் செயல்படுவதாகத் தெளிவாகும் வரையில், அவர்களை உற்ற நண்பர்களாக எடுத்துக் கொள்ளாதீர்கள். அவர்களும் உங்களைப் போன்று அல்லாஹ்வின் பாதையில் சீரமைப்புப் பணியில் பங்கெடுத்து பொது வாழ்வில் ஈடுபட தயாராகிவிட வேண்டும்.
அதற்கு முன்வராமல் அவர்கள் சமூக விரோத செயல்களில் ஈடுபட்டால், இறை ஆட்சியமைப்பு அவர்களைப் பிடித்து சிறையில் அடைத்து நடவடிக்கை எடுக்கும். ஏனெனில் அன்னியர்களை விட உள்நாட்டில் கலவரத்தை ஏற்படுத்துபவர்களே அதிபயங்கரவாதிகள் ஆவர். (பார்க்க – 2:191)
எனவே இத்தகைய சமூக விரோதிகள் உங்களுக்கு எதிராகப் படை எடுத்தால் அவர்களை உயிருடன் விட்டு வைக்காதீர்கள். அவர்கள் தப்பி ஓட முயன்றால் கண்ட இடத்திலேயே கொன்று விடுங்கள். இது விஷயமாய் நீங்கள் யாரையும் பாரபட்சம் காட்டாதீர்கள்.
ஆனால் இவையாவும் ஆட்சி அதிகார சட்டத்திற்கு உட்பட்டவையாகும். தனிப்பட்ட முறையில் இப்படிப்பட்ட நடவடிக்கை எடுப்பதற்கு இறைச் சட்டத்தில் இடமில்லை.
إِلَّا ٱلَّذِينَ يَصِلُونَ إِلَىٰ قَوْمٍۭ بَيْنَكُمْ وَبَيْنَهُم مِّيثَٰقٌ أَوْ جَآءُوكُمْ حَصِرَتْ صُدُورُهُمْ أَن يُقَٰتِلُوكُمْ أَوْ يُقَٰتِلُوا۟ قَوْمَهُمْ ۚ وَلَوْ شَآءَ ٱللَّهُ لَسَلَّطَهُمْ عَلَيْكُمْ فَلَقَٰتَلُوكُمْ ۚ فَإِنِ ٱعْتَزَلُوكُمْ فَلَمْ يُقَٰتِلُوكُمْ وَأَلْقَوْا۟ إِلَيْكُمُ ٱلسَّلَمَ فَمَا جَعَلَ ٱللَّهُ لَكُمْ عَلَيْهِمْ سَبِيلًۭا.
4:90. ஆனால் யாருடன் நீங்கள் போர் நிறுத்த உடன்படிக்கை செய்து கொண்டு இருக்கிறீர்களோ, அவர்களுடன் பகைவர்கள் தஞ்சம் அடைந்து கொண்டால் அப்போது, அங்கு சென்று இவர்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்காதீர்கள். மேலும் போரிட மனம் ஒப்பாது உங்களுடன் வந்து சரண் அடைபவர்ளையும் நீங்கள் கொன்று விடாதீர்கள். உயிர்களை பறிப்பதே போரின் நோக்கமாக இருந்திருந்தால், அவர்களும் வேறு வழியின்றி உங்களிடம் போரிடவே முனைந்து இருப்பார்கள். வெவ்வேறு இரு கொள்கைகளுக்கும் இடையே நடக்கின்ற மோதல் என்பதால், அவர்கள் உங்களுடன் சமாதானம் பேச முன்வந்தால், சமாதானம் செய்து கொள்ளுங்கள். எனவே அப்படி சமாதானம் பேச முன்வருபவர்களுக்கு எதிராக போர் புரிவது முறையாகாது. அப்படிப்பட்ட வழிகாட்டுதலை அல்லாஹ் உங்களுக்கு அளிக்கவில்லை.
سَتَجِدُونَ ءَاخَرِينَ يُرِيدُونَ أَن يَأْمَنُوكُمْ وَيَأْمَنُوا۟ قَوْمَهُمْ كُلَّ مَا رُدُّوٓا۟ إِلَى ٱلْفِتْنَةِ أُرْكِسُوا۟ فِيهَا ۚ فَإِن لَّمْ يَعْتَزِلُوكُمْ وَيُلْقُوٓا۟ إِلَيْكُمُ ٱلسَّلَمَ وَيَكُفُّوٓا۟ أَيْدِيَهُمْ فَخُذُوهُمْ وَٱقْتُلُوهُمْ حَيْثُ ثَقِفْتُمُوهُمْ ۚ وَأُو۟لَٰٓئِكُمْ جَعَلْنَا لَكُمْ عَلَيْهِمْ سُلْطَٰنًۭا مُّبِينًۭا.
4:91. அதே சமயம் உங்களிடம் சரண் அடைந்தவர்களையும் தொடர்ந்து கண்காணியுங்கள். ஏனெனில் தம் சமூகத்தவர்களை ஆதரிப்பதற்காகவும் உங்களிடம் சரணடைவது போல் நடித்துக் கொண்டும் இருக்கலாம். அதன்பின் தருணம் பார்த்து குழப்பவாதிகளிடம் கைகோர்த்துக் கொண்டு, கண்மூடித்தனமாக விஷமம் செய்ய ஆரம்பித்து விடுவார்கள். அதாவது இத்தகையவர்கள் உங்களோடு கூட இருந்து கொண்டே உங்களுக்கு எதிராக குழி தோண்ட எண்ணுவார்கள். உங்கள் கொள்கைகளை ஏற்று உங்களுடன் சமாதானமாக வாழ விரும்பாதவர்கள். இப்படிப் பட்டவர்களை சமுதாயத்தில் விட்டு வைத்தால் மக்களை நிம்மதியாக வாழ விடமாட்டார்கள். அது மட்டுமன்றி மக்கள் நலத் திட்டங்களையும் உங்களால் சரிவர நிறைவேற்ற முடியாது. எனவே இவர்களைக் கண்ட உடன் பிடித்து சிறையில் அடையுங்கள். தப்பி ஓட முயன்றால் கொன்று விடுங்கள். உங்களிடம் போரிட்டால் நீங்களும் அதற்குத் தக்க பதிலடி கொடுங்கள். ஆக யாரைக் கொல்ல வேண்டும் யாரை விட்டுவிட வேண்டும் என்று அல்லாஹ்விடமிருந்து அளிக்கப்படுகின்ற தெளிவான விளக்கங்கள் இவையே.
وَمَا كَانَ لِمُؤْمِنٍ أَن يَقْتُلَ مُؤْمِنًا إِلَّا خَطَـًۭٔا ۚ وَمَن قَتَلَ مُؤْمِنًا خَطَـًۭٔا فَتَحْرِيرُ رَقَبَةٍۢ مُّؤْمِنَةٍۢ وَدِيَةٌۭ مُّسَلَّمَةٌ إِلَىٰٓ أَهْلِهِۦٓ إِلَّآ أَن يَصَّدَّقُوا۟ ۚ فَإِن كَانَ مِن قَوْمٍ عَدُوٍّۢ لَّكُمْ وَهُوَ مُؤْمِنٌۭ فَتَحْرِيرُ رَقَبَةٍۢ مُّؤْمِنَةٍۢ ۖ وَإِن كَانَ مِن قَوْمٍۭ بَيْنَكُمْ وَبَيْنَهُم مِّيثَٰقٌۭ فَدِيَةٌۭ مُّسَلَّمَةٌ إِلَىٰٓ أَهْلِهِۦ وَتَحْرِيرُ رَقَبَةٍۢ مُّؤْمِنَةٍۢ ۖ فَمَن لَّمْ يَجِدْ فَصِيَامُ شَهْرَيْنِ مُتَتَابِعَيْنِ تَوْبَةًۭ مِّنَ ٱللَّهِ ۗ وَكَانَ ٱللَّهُ عَلِيمًا حَكِيمًۭا.
4:92. அதே சமயம் சமுதாயத்தில் வாழும் மக்களிடையே கொலைச் சம்பவம் நடைபெறாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். அதற்கேற்ப சட்டங்களைக் கொண்டு வரவேண்டும். ஆனால் எதிர்பாராத விதமாக கொலை நடந்துவிட்டால், அதற்குப் பரிகாரமாக இவ்வாறு செய்து கொள்ள சட்டத்தில் அனுமதி உண்டு. அதாவது அவர் மூஃமினான ஓர் அடிமையை விடுதலை செய்யவேண்டும். கொலையுண்டவனின் குடும்பத்திற்கு நஷ்டஈடு கொடுக்க வேண்டும். (பார்க்க – 2:178) கொலைச் சம்பவத்தின் சூழ்நிலையை அறிந்து அந்த குடும்பத்தார் விட்டுக் கொடுத்தால் நஷ்டஈடு அளிக்க வேண்டியதில்லை.
கொலை செய்யப்பட்டவன் பகை இனத்தவனில் இருந்து, அவர் மூஃமினானவர் என்று தெரிந்தால் அதற்கு ஈடாக ஒரு முஃமின் அடிமையை விடுதலை செய்தால் போதும். ஆனால் போர் நிறுத்த ஒப்பந்தம் செய்த வகுப்பினரைச் சேர்ந்த மூஃமின் கொல்லப்பட்டதாக நிரூபிக்கப்பட்டால், அதற்குப் நஷ்ட ஈடாக அவர் குடும்பத்தைச் சோந்த வாரிசுதாரர்களுக்கு நஷ்டஈடு கொடுப்பதுடன் ஒரு மூஃமின் அடிமையை விடுதலை செய்யவும் வேண்டும். இவ்வாறு நஷ்டஈடு தர சக்தி இல்லாதவனாக இருந்தால் அவன் திருந்தி வாழ தொடர்ந்து 60 நாட்களுக்கு நோன்பு இருக்க வேண்டும். எல்லாவற்றையும் நன்கறியும் வல்லமையும் ஞானமும் உடைய அல்லாஹ்விடமிருந்து வரும் சொல்லாகும்.
அக்காலத்தில் உலகின் பல பகுதிகளில் மனிதனை விலைக்கு வாங்கி அடிமைகளாக வைத்துக் கொள்வது செல்வந்தர்களின் பழக்கமாக இருந்தது. இந்தியாவிலும் சுதந்திரம் பெறுவதற்கு முன் ஜமீன்தார்களிடம் இந்த பழக்கம் இருந்து வந்தது. ஆக அடிமையை விடுவிப்பது என்ற கட்டளை அவர்களுக்குப் பெருத்த நஷ்டத்தைத் தரும் தண்டனையாக இருந்தது. ஆனால் அடிமைப் பழக்கத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக அழிக்கவே இப்படிப்பட்ட கட்டளைகள் இறைவனால் பிறப்பிக்கப்பட்டதாகத் தெரிகிறது.
மேலும் நஷ்டயீட்டை அளிக்க இயலாத குற்றவாளியை சிறையில் அடைத்து தொடர்ந்து 60 நாட்களுக்கு நோன்பு கடைப்பிடிக்க அரசு ஆவன செய்யும்
وَمَن يَقْتُلْ مُؤْمِنًۭا مُّتَعَمِّدًۭا فَجَزَآؤُهُۥ جَهَنَّمُ خَٰلِدًۭا فِيهَا وَغَضِبَ ٱللَّهُ عَلَيْهِ وَلَعَنَهُۥ وَأَعَدَّ لَهُۥ عَذَابًا عَظِيمًۭا.
4:93. சமூக நலனை நோக்கமாகக் கொண்டு வாழும் ஓர் அரசு அதிகாரியை யாராவது வேண்டுமென்றே கொன்றுவிட்டால், அவருக்கு மரண தண்டனை அளிக்கப்படும். (பார்க்க- 5:32). மரணத்திற்குப் பின் தொடர்கின்ற வாழ்விலும் அவன் நரக வேதனையை அனுபவிக்க வேண்டி வரும். ஏனெனில் அல்லாஹ்வின் சட்டத்தின் பார்வையில் அவன் மிகப்பெரிய குற்றவாளியாவான். எனவே அவனுக்கு எந்த சலுகையும் அளிக்கப்பட மாட்டாது. அவன் கடுமையான வேதனைக்கு ஆளாவான். எனவே வேண்டுமென்றே திட்டமிட்டு செய்யும் கொலைக்கு நஷ்டஈடு என்ற பேச்சிற்கே இடமில்லை.
உலக அமைதிக்காகப் பாடுபடும் மூஃமின்களே! நீங்கள் எந்த செயலைச் செய்தாலும் முன்யோசனையுடன் சரியான செயல் திட்டத்துடன் செயல்பட வேண்டும். முக்கியமாக போர் போன்ற உலக விவகாரங்களைத் தீர்மானிக்கும் விஷயத்தில் கண்மூடித்தனமாகச் செயல்படக் கூடாது.
يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوٓا۟ إِذَا ضَرَبْتُمْ فِى سَبِيلِ ٱللَّهِ فَتَبَيَّنُوا۟ وَلَا تَقُولُوا۟ لِمَنْ أَلْقَىٰٓ إِلَيْكُمُ ٱلسَّلَٰمَ لَسْتَ مُؤْمِنًۭا تَبْتَغُونَ عَرَضَ ٱلْحَيَوٰةِ ٱلدُّنْيَا فَعِندَ ٱللَّهِ مَغَانِمُ كَثِيرَةٌۭ ۚ كَذَٰلِكَ كُنتُم مِّن قَبْلُ فَمَنَّ ٱللَّهُ عَلَيْكُمْ فَتَبَيَّنُوٓا۟ ۚ إِنَّ ٱللَّهَ كَانَ بِمَا تَعْمَلُونَ خَبِيرًۭا.
4:94. ஆக உங்களை எதிர்த்துப் போரிடுவோர் யார்? மற்றும் அவர்களின் பலம் என்ன என்பதை நன்கறிந்த பின்னரே அவர்களை எதிர்க்க முழு ஆயத்தங்களுடன் போருக்கு புறப்பட்டுச் செல்ல வேண்டும். எதிர் தரப்பினரிடமிருந்து சமாதானச் செய்தி வந்தால்,“நீங்கள் மூஃமின்கள் அல்ல” எனக் கூறி அவர்களுடன் போரிடுவது சரியல்ல. இறைவழிகாட்டுதல் வருவதற்கு முன் நீங்கள் போரில் கிடைக்கும் வெற்றிப் பொருட்கள் போன்ற அற்ப ஆதாயங்களுக்காகப் போரிட்டு வந்தீர்கள். ஆனால் இப்போதோ உங்களுக்கு அல்லாஹ்வின் வழிகாட்டுதல்கள் கிடைத்துள்ளன. மேலும் இதைவிடப் பன்மடங்கு வாழ்வாதாரங்கள் அல்லாஹ்விடமிருந்து கிடைக்கும். எனவே உண்மையிலேயே மக்கள் விரோதச் செயல்களில் ஈடுபடும் கூட்டம் எது என்பதைக் கண்டறிந்து, அதை முறியடிக்கவே நடவடிக்கை எடுங்கள். (பார்க்க 8:42) ஆக நீங்கள் செய்வது யாவும் அல்லாஹ்வுக்கு நன்கு தெரியும் என்பதை மறவாதீர்.
لَّا يَسْتَوِى ٱلْقَٰعِدُونَ مِنَ ٱلْمُؤْمِنِينَ غَيْرُ أُو۟لِى ٱلضَّرَرِ وَٱلْمُجَٰهِدُونَ فِى سَبِيلِ ٱللَّهِ بِأَمْوَٰلِهِمْ وَأَنفُسِهِمْ ۚ فَضَّلَ ٱللَّهُ ٱلْمُجَٰهِدِينَ بِأَمْوَٰلِهِمْ وَأَنفُسِهِمْ عَلَى ٱلْقَٰعِدِينَ دَرَجَةًۭ ۚ وَكُلًّۭا وَعَدَ ٱللَّهُ ٱلْحُسْنَىٰ ۚ وَفَضَّلَ ٱللَّهُ ٱلْمُجَٰهِدِينَ عَلَى ٱلْقَٰعِدِينَ أَجْرًا عَظِيمًۭا.
4:95. மேலும் மூஃமின்களில் இருபிரிவினர் இருக்கிறார்கள். ஒரு பிரிவினர் அல்லாஹ்வின் பாதையில் சமூக நலப்பணிகளில் அல்லும் பகலும் அயராது உழைப்பவர்கள், அதற்காகத் திட்டங்களைத் தீட்டி தம் செல்வத்தையும் உயிரையும் பணயம் வைத்து செயல்படும் செயல்வீரர்கள் - இவர்கள் ஒரு பக்கம்.
இவ்வாறில்லாமல் தத்தம் தொழிலில் நிலைத்திருப்பவர்கள் மறுபக்கம். இவர்கள் இருவரும் சமமாக மாட்டார்கள். இவ்வாறு அல்லாஹ்வின் பாதையில் அயராது பாடுபடுபவர்களுக்கு உயர் பதவியும் அந்தஸ்தும் மரியாதையும் கிடைக்கும். ஆயினும் மற்ற மூஃமின்களின் பங்கிற்கு எதுவும் கிடைக்காது என்பதல்ல. இந்த செயல்திட்டங்கள் நிறைவேற அவர்களுடைய ஒத்துழைப்பும் பொருளாதார உதவியும் அவசியமாகிறது. அவர்களுக்கும் அரசமைப்பின் ஆதரவும் அரவணைப்பும் கிடைக்கும். ஆனால் பதவி அந்தஸ்து என்னும் போது இவர்களுக்கு கிடைப்பதைவிட அந்த செயல்வீரர்களுக்கு சிறப்பாக இருக்கும்.
دَرَجَٰتٍۢ مِّنْهُ وَمَغْفِرَةًۭ وَرَحْمَةًۭ ۚ وَكَانَ ٱللَّهُ غَفُورًۭا رَّحِيمًا.
4:96. ஆக இதுவே உயர்பதவியும் அந்தஸ்தும் கிடைக்க அல்லாஹ் நிர்ணயித்துள்ள சட்ட வரையறைகளாகும். (பார்க்க- 84:19) மேலும் இவ்வாறு இறை ஆட்சியமைப்பின் செயல் திட்டங்களை நிறைவேற்றி வருபவர்களால் ஏற்படும் சிறு தவறுகள், பெரிய அளவில் பாதிப்புகளை ஏற்படுத்துவதில்லை. மேலும் அல்லாஹ்வின் நியதிப்படி அவர்களுடைய ஆற்றல்களும் செயல்திறனும் வளர்கின்றன. இப்படியாக அல்லாஹ்வின் சட்ட விதிமுறைகளில் பாதுகாப்பும் வளர்ச்சிக்கான அனைத்து வழிமுறைகளும் நிர்ணயமாகி உள்ளன.
இதுவே அல்லாஹ்வின் பாதையில் செயலாற்றுபவர்கள் மற்றும் அதற்கு துணை நிற்பவர்களைப் பற்றிய சட்ட விதிமுறைகளாகும். இப்போது இருப்பது அல்லாஹ்வின் செயல் திட்டங்கள் நிறைவேற எந்த முயற்சியும் மேற்கொள்ளாமல் வாழ்பவர்களைப் பற்றியது.
إِنَّ ٱلَّذِينَ تَوَفَّىٰهُمُ ٱلْمَلَٰٓئِكَةُ ظَالِمِىٓ أَنفُسِهِمْ قَالُوا۟ فِيمَ كُنتُمْ ۖ قَالُوا۟ كُنَّا مُسْتَضْعَفِينَ فِى ٱلْأَرْضِ ۚ قَالُوٓا۟ أَلَمْ تَكُنْ أَرْضُ ٱللَّهِ وَٰسِعَةًۭ فَتُهَاجِرُوا۟ فِيهَا ۚ فَأُو۟لَٰٓئِكَ مَأْوَىٰهُمْ جَهَنَّمُ ۖ وَسَآءَتْ مَصِيرًا.
4:97. தம் வாழ்நாள் முழுவதும் தமக்காகவே வாழ்ந்து தமக்குத் தாமே அநியாய செயலில் ஈடுபட்டவர்களுக்கு மரணம் நெருங்கும் போது, அவர்களிடம், “உங்கள் நிலை என்ன?” என்று கேட்டால் அவர்கள், “உலகில் அநியாயங்கள் நடப்பதை தட்டிக்கேட்க எங்களிடம் எந்தப் பலமும் இருந்ததில்லை. நாங்கள் மிகவும் பலவீனர்களாக இருந்தோம்” என்று கூறுவார்கள். அதற்கு, “அல்லாஹ்வின் பூமி விசாலமானதாக இருந்ததில்லையா? ( பார்க்க 29:56) இறைவன் கூறும் நலத்திட்டங்களை நிறைவேற்ற உங்களுக்கு சாதகமான இடங்களுக்கு ஹிஜ்ரத் செய்து சென்றிருக்கலாமே. இவ்வாறு ஏன் செய்யவில்லை?” என்று கேட்பார்கள். எனவே அல்லாஹ்வின் நலத்திட்டங்களை நிறைவேற்றாமல் சொகுசு வாழ்வு வாழ்பவர்கள் செல்லும் இடம் நரகமாகத்தான் இருக்கும். இப்படி ஒரு நிலைக்கு தள்ளப்படுவது நல்லதா?
إِلَّا ٱلْمُسْتَضْعَفِينَ مِنَ ٱلرِّجَالِ وَٱلنِّسَآءِ وَٱلْوِلْدَٰنِ لَا يَسْتَطِيعُونَ حِيلَةًۭ وَلَا يَهْتَدُونَ سَبِيلًۭا.
4:98. இருப்பினும் உங்களுள் இருக்கும் சிறுவர் சிறுமியர்கள் மற்றும் பலவீனமான ஆண் பெண்கள் விஷயம் வேறு. இத்தகையவர்களால் எவ்வித கடினமான செயல்களிலும் ஈடுபட முடியாது. அவ்வாறு பொதுப் பணிக்காக வெளியில் செல்லும் வழிமுறைகளும் தெரியாது. அப்படியே சென்றாலும் எந்தப் பலனும் கிடைக்காது.
فَأُو۟لَٰٓئِكَ عَسَى ٱللَّهُ أَن يَعْفُوَ عَنْهُمْ ۚ وَكَانَ ٱللَّهُ عَفُوًّا غَفُورًۭا.
4:99. அத்தகையோருக்கு ஹிஜ்ரத் செய்யும் விஷயத்தில் விடுவிப்பு உண்டு. ஏனெனில் அவர்கள் செல்வதும் செல்லாமல் இருப்பதும் எவ்வித மாற்றத்தையும் கொண்டு வராது. எனவேதான் இப்படிப்பட்டவர்களுக்கு அல்லாஹ்வின் சட்டத்தில் விதிவிலக்கும் பாதுகாப்பும் அளிக்கப்படுகிறது.
நாம் பிறந்த மண், ஊர், தாய் மொழி ஆகிய உணர்வுகள் ஒவ்வொருவருக்கும் இருப்பது இயல்பானதே. இருப்பினும் ஒரு லட்சியம், கொள்கை என்று வரும்போது எது நமக்கு நிலையான பலன்களைத் தரும் என்பதை ஒவ்வொருவரும் சிந்தித்து செயலாற்ற வேண்டும். முக்கியத்துவம் அளிக்கவேண்டியது பாசத்திற்கா அல்லது லட்சியத்திற்கா?
۞ وَمَن يُهَاجِرْ فِى سَبِيلِ ٱللَّهِ يَجِدْ فِى ٱلْأَرْضِ مُرَٰغَمًۭا كَثِيرًۭا وَسَعَةًۭ ۚ وَمَن يَخْرُجْ مِنۢ بَيْتِهِۦ مُهَاجِرًا إِلَى ٱللَّهِ وَرَسُولِهِۦ ثُمَّ يُدْرِكْهُ ٱلْمَوْتُ فَقَدْ وَقَعَ أَجْرُهُۥ عَلَى ٱللَّهِ ۗ وَكَانَ ٱللَّهُ غَفُورًۭا رَّحِيمًۭا.
4:100. இறைவழிகாட்டுதலின்படி உயர் லட்சியங்கள் நிறைவேற அல்லாஹ்வின் பாதையில் யார் தம் வீட்டையும் நாட்டையும் விட்டு வெளியேறி பொதுவாழ்வில் ஈடுபடுகிறார்களோ, அவர்களுக்கு இவ்வுலகில் ஏராளமான நன்மைகளும் விசாலமான இருப்பிடங்களும் கிடைக்க வழிகள் பிறக்கும். இப்படியாக யார் அல்லாஹ்வுக்கும் சமுதாயத்தை வழிநடத்திச் செல்லும் தூதரின் சொல்லுக்கும் கட்டுப்பட்டு தம் வீட்டை விட்டு வெளியேற முற்படுகிறார்களோ, அவர் தம் இலக்கை அடைவதற்கு முன்பே அவருக்கு மரணம் ஏற்பட்டு விட்டாலும் அல்லாஹ்வின் புறத்திலிருந்து அவருக்கு தக்க சன்மானம் கிடைப்பது நிச்சயம். அல்லாஹ்வின் இந்த வழிகாட்டுதல்கள் பாதுகாப்பு அளிப்பதாகவும் கிருபை மிக்கதாகவும் உள்ளது.
நினைவில் கொள்ளுங்கள். ஹிஜ்ரத் என்பது வீட்டை விட்டுவிட்டு துறவறத்தை மேற்கொள்ள காட்டிற்குச் சென்றுவிடுவதற்கு சொல்லப்படுவதல்ல. ஓர் உயர் இலட்சியத்துடன் அல்லாஹ்வின் பாதையில் செயல்படுவதற்காக மக்கள் ஆதரவோடு சிறந்த செயல்திட்டங்களுடன் சாதகமான இடங்களுக்கு செல்வதே ஹிஜ்ரத் என்பதாகும்.
وَإِذَا ضَرَبْتُمْ فِى ٱلْأَرْضِ فَلَيْسَ عَلَيْكُمْ جُنَاحٌ أَن تَقْصُرُوا۟ مِنَ ٱلصَّلَوٰةِ إِنْ خِفْتُمْ أَن يَفْتِنَكُمُ ٱلَّذِينَ كَفَرُوٓا۟ ۚ إِنَّ ٱلْكَٰفِرِينَ كَانُوا۟ لَكُمْ عَدُوًّۭا مُّبِينًۭا.
4:101. இப்படியாக நீங்கள் ஹிஜ்ரத் செய்ய பயணம் மேற்கொள்ளும் போது, இறைவழிகாட்டுதலைக் கற்றுத் தரும் "ஸலாத்" முறையில் சுருக்கிக் கொள்ளலாம். உங்களை எதிரிகள் விஷமம் செய்வார்கள் என்ற அச்சம் இருந்தாலும் இந்த "ஸலாத்"தை குறைத்துக் கொள்வதும் ஆகுமானதே. நிச்சயமாக இந்த விஷமிகள் வெளிப்படையான பகைவர்களாகவே இருக்கிறார்கள்.
எல்லா சூழ்நிலைகளிலும் இறைவழிகாட்டுதல் ஒவ்வொருவருக்கும் இன்றியமையாத ஒன்றாக இருக்கிறது. அவற்றை எப்போதும் நினைவில் கொள்ளவேண்டும். அதற்கு வேண்டிய ஏற்பாடுகளையும் செய்யவேண்டும். இதற்காகத் தான் குறித்த நேரங்களில் கூட்டு "ஸலாத்" கடைப்பிடிக்கப்படுகிறது.
وَإِذَا كُنتَ فِيهِمْ فَأَقَمْتَ لَهُمُ ٱلصَّلَوٰةَ فَلْتَقُمْ طَآئِفَةٌۭ مِّنْهُم مَّعَكَ وَلْيَأْخُذُوٓا۟ أَسْلِحَتَهُمْ فَإِذَا سَجَدُوا۟ فَلْيَكُونُوا۟ مِن وَرَآئِكُمْ وَلْتَأْتِ طَآئِفَةٌ أُخْرَىٰ لَمْ يُصَلُّوا۟ فَلْيُصَلُّوا۟ مَعَكَ وَلْيَأْخُذُوا۟ حِذْرَهُمْ وَأَسْلِحَتَهُمْ ۗ وَدَّ ٱلَّذِينَ كَفَرُوا۟ لَوْ تَغْفُلُونَ عَنْ أَسْلِحَتِكُمْ وَأَمْتِعَتِكُمْ فَيَمِيلُونَ عَلَيْكُم مَّيْلَةًۭ وَٰحِدَةًۭ ۚ وَلَا جُنَاحَ عَلَيْكُمْ إِن كَانَ بِكُمْ أَذًۭى مِّن مَّطَرٍ أَوْ كُنتُم مَّرْضَىٰٓ أَن تَضَعُوٓا۟ أَسْلِحَتَكُمْ ۖ وَخُذُوا۟ حِذْرَكُمْ ۗ إِنَّ ٱللَّهَ أَعَدَّ لِلْكَٰفِرِينَ عَذَابًۭا مُّهِينًۭا.
4:102. போர் முனையில் இருந்தாலும் கூட, நீங்கள் உங்கள் உயர் லட்சியத்தை மறந்துவிடக் கூடாது. எனவே கூட்டு "ஸலாத்"தில் நீர் நின்றால், எல்லோரையும் ஒரே அணியாக ஸலாத்தில் நிற்கச் செய்யாதீர்கள். ஏனெனில் அந்த தருணம் பார்த்து ஒரே அடியாக உங்களை தாக்கி சாய்த்து விட எதிர்தரப்பினர் சதி செய்யலாம். எனவே ராணுவ வீரர்களை இரண்டாகப் பிரித்து முதலில் ஒரு பகுதியினர் ஸலாத்தை நிறைவேற்றிக் கொள்ளட்டும். அது வரையில் மற்றப் பிரிவினர் இவர்களைப் பாதுகாக்க ஆயுதங்களை ஏந்தி நிற்கட்டும். அவர்களுடைய ஸலாத் முடிந்தபின் மற்றொரு பிரிவினர் தம் ஸலாத்தை நிறைவேற்றிக் கொள்ளட்டும்.
அதாவது நீங்கள் எப்போதும் விழிப்போடு இருக்க வேண்டும் என்பதற்காகவும், அத்துடன் இறைவழிகாட்டுதலை எக்காரணத்தைக் கொண்டும் மறந்து விடக்கூடாது என்பதற்காகவும் இவ்வாறு அறிவுறுத்தப்படுகிறது. இவ்விரண்டில் எதில் கவனக் குறைவாக நடந்து கொண்டாலும், அது உங்களை ஆபத்தில் தள்ளிவிடும். எனவேதான் உங்கள் ஆயுதங்களைப் பற்றியும் மற்ற வாழ்வாதார பொருட்களையும் பாதுகாக்க வலியுறுத்தப்படுகிறது.
இருப்பினும் மழை போன்ற திடீர் தட்பவெப்ப மாறுதல்களால் உங்கள் உடல் நிலையில் பாதிப்புகள் ஏற்படலாம். அதனால் உங்களில் சிலருக்கு பலவீனம் ஏற்பட்டு அவர்களால் ஆயுதங்களை கையேந்தி நிற்க சக்தி பெறாமல் போகலாம். இப்படிப்பட்டவர்கள் ஆயுதங்களை கீழே வைத்து விடலாம். எனினும் நீங்கள் எச்சரிக்கையாகவே இருந்து கொள்ளுங்கள். நிச்சயமாக எதிர் தரப்பினருக்கு இழிவு தரும் வேதனை காத்து நிற்கிறது.
சிந்தனையாளர்களே! இங்கு ஒரு விஷயத்தை கவனித்துப் பாருங்கள். பாதுகாப்பு முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் யாவும் மூஃமின்களின் பொறுப்பில்தான் விடப்படுகிறது. அல்லாஹ்வின் நேரடித் தலையீடு இருப்பதில்லை. ஏனெனில் அல்லாஹ்வின் சட்டங்கள் ஒருதலைபட்சமாக செயல்படாது. அவை அனைவருக்கும் பொதுவானவை. இயற்கை மாற்றங்கள் விஷயத்தையும் கவனித்துப் பாருங்கள். மழை போன்ற காரணங்களால் நோயாளிகளாக ஆகிவிடலாம் என்று சொல்லப்படுகிறது. அதாவது மூஃமின்கள் என்பதால் இயற்கைச் சட்டத்திலும் எவ்வித பாரபட்சமும் இருப்பதில்லை. எனவே மழைநீரின் தாக்கம் மூஃமின்களுக்கும் சரிசமமாகப் பொருந்தும்.
இப்படியாக கூட்டு "ஸலாத்" முடிந்ததும், இறைவனுக்கு ஆற்றவேண்டிய பணிகள் யாவும் முடிந்துவிட்டன என்று நினைத்துக் கொள்ளாதீர்கள். ஸலாத்தில் கிடைத்த இறைச்செய்தி மற்றும் அவற்றை ஏற்றுக் கொள்வதாகக் காட்டிய சைகைகள் யாவும் ஒவ்வொருவரும் தம் வாழ்நாள் முழுவதும் கடைப்பிடிக்க வேண்டிய விஷயங்களாகும்.
فَإِذَا قَضَيْتُمُ ٱلصَّلَوٰةَ فَٱذْكُرُوا۟ ٱللَّهَ قِيَٰمًۭا وَقُعُودًۭا وَعَلَىٰ جُنُوبِكُمْ ۚ فَإِذَا ٱطْمَأْنَنتُمْ فَأَقِيمُوا۟ ٱلصَّلَوٰةَ ۚ إِنَّ ٱلصَّلَوٰةَ كَانَتْ عَلَى ٱلْمُؤْمِنِينَ كِتَٰبًۭا مَّوْقُوتًۭا.
4:103. நினைவில் கொள்ளுங்கள். இந்த "கூட்டு ஸலாத்"முறை என்பது இறைவழிகாட்டுதலை மக்கள் அனைவருக்கும் எடுத்துரைக்க செய்யப்பட்ட ஏற்பாடுகளே ஆகும். எனவே இதற்காக நேரம் காலம் குறிப்பிட்டு அந்தந்த வேளையில் நடத்தப்படுகிறது. அப்போதுதான் அனைவரும் கலந்துகொள்ளும் வாய்ப்புகள் ஏற்படும். எனவே ஸவாத்தில் கற்றுக் கொண்ட விஷயங்களை எல்லா நேரங்களிலும் கவனத்தில் கொண்டு, அதன்படி செயலாற்ற வேண்டும். நின்ற நிலையில் இருந்தாலும் சரி, அமர்ந்த நிலையிலும் படுத்திருந்த நிலையிலும். ஆக எப்போதும் அவற்றை சிந்தித்து கவனத்தில் கொள்ளவேண்டும். (மேலும் பார்க்க 3:190,191). மேலும் போர், கலவரங்கள் தீர்ந்து அமைதி திரும்பியதும், தொழுகை ஸலாத்தை முறைப்படி கடைப்பிடித்து வாருங்கள்.
وَلَا تَهِنُوا۟ فِى ٱبْتِغَآءِ ٱلْقَوْمِ ۖ إِن تَكُونُوا۟ تَأْلَمُونَ فَإِنَّهُمْ يَأْلَمُونَ كَمَا تَأْلَمُونَ ۖ وَتَرْجُونَ مِنَ ٱللَّهِ مَا لَا يَرْجُونَ ۗ وَكَانَ ٱللَّهُ عَلِيمًا حَكِيمًا.
4:104. நினைவில் கொள்ளுங்கள். போர்க் களத்தில் பகைவர்களை விரட்டி அடிப்பதில் பின்வாங்காதீர்கள். போரில் நீங்கள் பல சிரமங்களை சந்திக்க வேண்டியுள்ளது என்றால், பகைவர்களுக்கும் அதே போன்றுதான் சிரமங்கள் ஏற்படும். அதாவது கஷ்ட நஷ்ட விஷயத்தில் இரு தரப்பினரும் சமமானவர்களே ஆவர். ஆனால் அல்லாஹ்வின் ஆட்சியமைப்பு மூலமாக நீங்கள் எதிர் பார்க்கும் பலாபலன்கள் உங்களுக்குக் கிடைக்கும். ஆனால் அந்த அனுகூலங்கள் பகைவர்களுக்கு கிடைக்காது. ஆக அல்லாஹ்வின் வழிகாட்டுதல்கள் யாவும் கல்வி ஞானத்தின் அடிப்படையைக் கொண்டதாகும் என்பதை மறவாதீர்.
இவையே போர்க் கால சமயங்களில் நீங்கள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகளாகும். இனி நீங்கள் சமுதாயப் பணிகள் தொடர்பாக வந்த கட்டளைகள் எனன் என்பதைக் கவனியும்.
إِنَّآ أَنزَلْنَآ إِلَيْكَ ٱلْكِتَٰبَ بِٱلْحَقِّ لِتَحْكُمَ بَيْنَ ٱلنَّاسِ بِمَآ أَرَىٰكَ ٱللَّهُ ۚ وَلَا تَكُن لِّلْخَآئِنِينَ خَصِيمًۭا.
4:105. மக்கள் பிரச்னைகளைத் தீர்த்து வைப்பதில் எப்போதும் இறைவழிகாட்டுதலை முன்வைத்தே தீர்ப்பளியுங்கள். ஏனெனில் மனித வாழ்வின் சரியான பாதையைக் காட்டும் வழிமுறைகள் இதில் அளிக்கப்படுகின்றன. இதை விட்டுவிட்டு அநியாயக்காரர்களுக்கும் மோசக்காரர்களுக்கும் சாதகமாக தீர்ப்பு வழங்காதீர்கள். அவர்களை எவ்விதத்திலும் ஆதரித்து வாதாடாதீர்.
وَٱسْتَغْفِرِ ٱللَّهَ ۖ إِنَّ ٱللَّهَ كَانَ غَفُورًۭا رَّحِيمًۭا.
4:106. எப்போதும் அல்லாஹ்வின் வழிகாட்டுதலின் பாதுகாப்பு வளையத்தில் இருந்து கொண்டு செயல்படுங்கள். அப்போதுதான் சிறு பிழைகளால் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து மீள முடியும். அல்லாஹ்வின் சட்டத்தில் இதற்கு வழி வகுக்கப்பட்டுள்ளது.
وَلَا تُجَٰدِلْ عَنِ ٱلَّذِينَ يَخْتَانُونَ أَنفُسَهُمْ ۚ إِنَّ ٱللَّهَ لَا يُحِبُّ مَن كَانَ خَوَّانًا أَثِيمًۭا.
4:107. மீண்டும் வலியுறுத்திச் சொல்லிவிடுகிறோம். இதை நினைவில் கொள்ளுங்கள். பிறருக்குத் தீமை செய்வதால் சமுதாயத்திற்கு பாதிப்புகளை ஏற்படுத்தி வரும். அதன் தீய விளைவுகள் அவனையே வந்தடையும். இப்படியாக அவன் தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொள்கிறான். அத்தகையவனுக்கு ஆதரவாக நீர் ஒருபோதும் வாதிடவேண்டாம். இவ்வாறு கொடிய செயல்களைச் செய்பவனை அல்லாஹ்வின் சட்டம் ஒருபோதும் நேசிக்காது.
يَسْتَخْفُونَ مِنَ ٱلنَّاسِ وَلَا يَسْتَخْفُونَ مِنَ ٱللَّهِ وَهُوَ مَعَهُمْ إِذْ يُبَيِّتُونَ مَا لَا يَرْضَىٰ مِنَ ٱلْقَوْلِ ۚ وَكَانَ ٱللَّهُ بِمَا يَعْمَلُونَ مُحِيطًا.
4:108. இப்படிப்பட்டவர்கள், தாம் செய்து வரும் சதி திட்டங்கள் யாவும் மக்களுக்குத் தெரியாமல் போய்விடும் என்று நினைக்கிறார்கள். ஆனால் அல்லாஹ்விடமிருந்து அவற்றை மறைக்க முடியுமா? அவர்கள் இரவு நேரங்களில் இரகசியமாகத் திட்டங்களைத் தீட்டும் போதும், அல்லாஹ் அவர்கள் மத்தியில் இருக்கத்தான் செய்கின்றானே. ஆக எந்த ஒரு செயலையும் “மனித செயலுக்கேற்ற இறுதி விளைவுகள்” என்ற அல்லாஹ்வின் சட்டம் எப்போதும் கண்காணித்துக் கொண்டே இருக்கும். (மேலும் பார்க்க - 40:19)
هَٰٓأَنتُمْ هَٰٓؤُلَآءِ جَٰدَلْتُمْ عَنْهُمْ فِى ٱلْحَيَوٰةِ ٱلدُّنْيَا فَمَن يُجَٰدِلُ ٱللَّهَ عَنْهُمْ يَوْمَ ٱلْقِيَٰمَةِ أَم مَّن يَكُونُ عَلَيْهِمْ وَكِيلًۭا.
4:109. நினைவில் கொள்ளுங்கள். “மனித செயலுக்கேற்ற இறுதி விளைவுகள்” என்ற இறைவனின் சட்டம், இவ்வுலக வாழ்வோடு முடிந்து விடுவதில்லை. அது அவனுடைய மரணத்திற்குப் பின்பும் தொடரும். எனவே இப்படிப்பட்ட தீயவர்களுக்குச் சாதகமாக நீதிமன்றத்தில் வாதாடி இவ்வுலக தண்டனையிலிருந்து தப்பித்து விடலாம். ஆனால் “மனித செயல்களின் விளைவுகள்” தோற்றத்திற்கு வரும் கால கட்டத்தில் அவர்களை யாரால் காப்பாற்ற முடியும்?
காரணம் அவன் செய்து வந்த செயல்களின் விளைவுகள் அவனோடு ஐக்கியமாகி இருக்குமே. அவன் செய்த செயல்களுக்கு கணக்கெடுப்பு ஆகுமே. (பார்க்க – 17:13&14). எனவே இப்படிப்பட்ட தீயவர்களுக்கு வக்காலத்து வாங்கி வாதிடுவதில் நிலையானப் பலன்கள் கிடைக்க வாய்ப்பில்லை. இது நிலைமாறா நிரந்தர சட்டமாகும். இதை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள். எந்த தீய செயல்களானாலும் சரி அவை தனக்கோ பிறருக்கோ பாதிப்புகளை ஏற்படுத்தியே தீரும். இந்த உலக நடைமுறைச் சட்டத்திலிருந்து வேண்டுமானால் நீங்கள் தற்காலிக தண்டனையிலிருந்து தப்பித்து விடலாம். ஆனால் அல்லாஹ்வின் நிலையான சட்டத்திலிருந்து ஒருபோதும் தப்ப முடியாது. அவ்வாறு தப்ப வேண்டும் என்று நீங்கள் விரும்பினால் அதற்கு ஒரே ஒரு வழிதான் இருக்கிறது.
وَمَن يَعْمَلْ سُوٓءًا أَوْ يَظْلِمْ نَفْسَهُۥ ثُمَّ يَسْتَغْفِرِ ٱللَّهَ يَجِدِ ٱللَّهَ غَفُورًۭا رَّحِيمًۭا.
4:110. நீங்கள் செய்த தீய செயல்களுக்கு மனம் வருந்தி அவற்றை உடனே விட்டுவிட்டு (பார்க்க 4:17) அதற்கு பரிகாரமாக ஆக்கப்பூர்வமான பன்மடங்கு நற்செயல்களைச் செய்ய வேண்டும். அப்போதுதான் தீமைகள் குறைந்து நன்மைகள் மிகைக்கும் (25:70). அவ்வாறு செய்வதால் நீங்கள் செய்த தீய செயல்களின் பாதிப்பிலிருந்து நிவாரணமும் பாதுகாப்பும் கிடைக்கும். இப்படியாக ஒருவன் செய்யும் தீய செயல்களுக்கு உடனே தண்டிக்காமல் அவனுடைய பாதுகாப்பு கருதி அவன் திருந்தி வாழ தக்க வாய்ப்பு அளித்திருப்பது (பார்க்க 16:61) அல்லாஹ்வின் மிகப் பெரிய கருணையாகும்.
وَمَن يَكْسِبْ إِثْمًۭا فَإِنَّمَا يَكْسِبُهُۥ عَلَىٰ نَفْسِهِۦ ۚ وَكَانَ ٱللَّهُ عَلِيمًا حَكِيمًۭا.
4:111. இந்த உண்மையை அறிந்த பின்பும் ஒருவர் தீய செயல்களில் ஈடுபடுகிறார் என்றால், அதன் கேடுகள் அவரையே வந்தடையும் என்பதை தெரிந்து கொள்ளட்டும். அவற்றின் விளைவுகள் அவரையும் மனித மாண்புகளையும் சீரழிக்கும். அல்லாஹ்வின் சட்டமும் வழிகாட்டுதலும் கல்விஞானத்தின் அடிப்படையில் அமைந்துள்ளதாகும்.
وَمَن يَكْسِبْ خَطِيٓـَٔةً أَوْ إِثْمًۭا ثُمَّ يَرْمِ بِهِۦ بَرِيٓـًۭٔا فَقَدِ ٱحْتَمَلَ بُهْتَٰنًۭا وَإِثْمًۭا مُّبِينًۭا.
4:112. ஒருவன் தவறான செயலையோ அல்லது பாவச் செயலையோ செய்துவிட்டு, அதை ஒரு பாவமும் அறியாத அப்பாவி மீது பழிசுமத்தி விடுவது எவ்வளவு பெரிய அநியாயச் செயலாகும். இது ஒரு வெளிப்படையான பாவச்செயல் அல்லவா? இப்படியாக அவன் இருமடங்கு பாவத்தை சுமந்து கொண்டதாகப் பொருள்படும்.
وَلَوْلَا فَضْلُ ٱللَّهِ عَلَيْكَ وَرَحْمَتُهُۥ لَهَمَّت طَّآئِفَةٌۭ مِّنْهُمْ أَن يُضِلُّوكَ وَمَا يُضِلُّونَ إِلَّآ أَنفُسَهُمْ ۖ وَمَا يَضُرُّونَكَ مِن شَىْءٍۢ ۚ وَأَنزَلَ ٱللَّهُ عَلَيْكَ ٱلْكِتَٰبَ وَٱلْحِكْمَةَ وَعَلَّمَكَ مَا لَمْ تَكُن تَعْلَمُ ۚ وَكَانَ فَضْلُ ٱللَّهِ عَلَيْكَ عَظِيمًۭا.
4:113. ஆக “இறைவழிகாட்டுதல்” என்ற அல்லாஹ்வின் அருட்கொடைகள் இல்லாதிருந்தால் சமுதாயத்திலுள்ள சில மதகுருமார்கள் உம்மை வழிகெடுத்து இருப்பார்கள். இவ்வாறாக அவர்கள் உம்மை வழிகெடுக்க முயன்று, அவர்கள் தமக்குத்தாமே தீங்கிழைத்துக் கொள்வார்கள். இதுவே உண்மையாகும். மேலும் அவர்களால் உமக்கு எவ்வித தீங்கும் செய்ய முடியாது. மேலும் அல்லாஹ் உங்களுக்கு அளித்துள்ள வேத ஞானத்தைக் கொண்டு, நீங்கள் அறியாதவற்றை எல்லாம் கற்று நேர்வழியைப் பெறலாம். இப்படியாக அல்லாஹ்வின் “வழிகாட்டுதல்” என்ற அருட்கொடை மகத்தானதாகவே இருக்கின்றது.
۞ لَّا خَيْرَ فِى كَثِيرٍۢ مِّن نَّجْوَىٰهُمْ إِلَّا مَنْ أَمَرَ بِصَدَقَةٍ أَوْ مَعْرُوفٍ أَوْ إِصْلَٰحٍۭ بَيْنَ ٱلنَّاسِ ۚ وَمَن يَفْعَلْ ذَٰلِكَ ٱبْتِغَآءَ مَرْضَاتِ ٱللَّهِ فَسَوْفَ نُؤْتِيهِ أَجْرًا عَظِيمًۭا.
4:114. நயவஞ்சகர்களின் பேச்சை கவனித்துப் பாருங்கள். மக்கள் நலத்திட்டங்களில் பங்கெடுத்துக் கொள்வதைப் பற்றியோ, நன்மையான செயல்களைச் செய்வதைப் பற்றியோ, மக்களின் பிரச்னை தீர்த்து வைப்பது பற்றியோ அவர்களுடைய இரகசிய பேச்சில் எதுவும் இருக்காது. மாறாக தேவையற்ற விஷயங்களைப் பற்றியே ஆலோசித்துக் கொண்டு இருப்பார்கள். யார் அல்லாஹ்வின் செயல் திட்டங்களுக்கு இணங்கி, அவனுடைய திருப்பொருத்தத்தை நாடி செயல்படுகிறார்களோ, அவர்களுக்குத் தான் மகத்தான சன்மானம் நிச்சயமாகக் கிடைக்கும் என்பதை அவர்களுக்கு எடுத்துரையுங்கள்.
وَمَن يُشَاقِقِ ٱلرَّسُولَ مِنۢ بَعْدِ مَا تَبَيَّنَ لَهُ ٱلْهُدَىٰ وَيَتَّبِعْ غَيْرَ سَبِيلِ ٱلْمُؤْمِنِينَ نُوَلِّهِۦ مَا تَوَلَّىٰ وَنُصْلِهِۦ جَهَنَّمَ ۖ وَسَآءَتْ مَصِيرًا.
4:115. இந்த பேருண்மை தெளிவான பின்னரும், யார் அல்லாஹ்வின் வழிகாட்டுதலையும் அதன்படி இறைத்தூதர் உருவாக்கும் ஆட்சியமைப்பு சட்டங்களையும் புறக்கணித்து, மூஃமின்களை விட்டும் பிரிந்து செல்கின்றாரோ, அவர் நிராகரிப்பவர்களின் பட்டியலில் இணைந்து விட்டதாக பொருள்படும். இவ்வாறு செயல்படுபவர் கடுமையான வேதனைக்கு ஆளாவார். மேலும் அவர் சென்றடையும் இடம் மிகவும் வேதனை மிக்க நரகமாக இருக்கும்.
إِنَّ ٱللَّهَ لَا يَغْفِرُ أَن يُشْرَكَ بِهِۦ وَيَغْفِرُ مَا دُونَ ذَٰلِكَ لِمَن يَشَآءُ ۚ وَمَن يُشْرِكْ بِٱللَّهِ فَقَدْ ضَلَّ ضَلَٰلًۢا بَعِيدًا.
4:116. இதற்கு காரணம் அல்லாஹ்வை விட்டு கற்பனைத் தெய்வ வழிபாட்டில் ஈடுபட்டு, அல்லாஹ்வின் வழிகாட்டுதலுக்கு இணையாக வேறு வழிமுறைகளை கடைப்பிடிப்பதே ஆகும். அதனால் அவர்களுக்கு பாதுகாப்பான நிம்மதியான வாழ்வு கிடைப்பதில்லை. இதைத் தவிர்த்து சிறு சிறு தவறுகள் என்பது வேறு விஷயம். ஏனெனில் அவற்றின் பாதிப்புகளிலிருந்து நிவாரணம் பெற அல்லாஹ்வின் ஏற்பாட்டில் வாய்ப்பு உள்ளது. ஆனால் அல்லாஹ்வின் வழிகாட்டுதலுக்கு இணையாக வேறு வழிமுறைகளை கடைப்பிடிப்போர் நேர்வழியை விட்டு வழிகேட்டில் வெகு தூரம் சென்றுவிடுவர். (பார்க்க 4:48)
إِن يَدْعُونَ مِن دُونِهِۦٓ إِلَّآ إِنَٰثًۭا وَإِن يَدْعُونَ إِلَّا شَيْطَٰنًۭا مَّرِيدًۭا.
4:117. இப்படியாக அல்லாஹ்வை தவிர்த்து, அவர்கள் வழிபடும் கற்பனை தெய்வங்கள் யாவும் எவ்வித சக்தியும் பெறாத பலவீனமானதாகும். மேலும் அவர்கள் தம் மனோ இச்சையையே தெய்வமாக்கிக் கொண்டுள்ளனர். இத்தகையவர்கள் நேர்வழியின் பக்கம் வருவது இயலாத ஒன்றே. (பார்க்க:45-23)
لَّعَنَهُ ٱللَّهُ ۘ وَقَالَ لَأَتَّخِذَنَّ مِنْ عِبَادِكَ نَصِيبًۭا مَّفْرُوضًۭا.
4:118. இத்தகையவர்கள் அல்லாஹ்வின் அருட்கொடைகளை இழந்து திக்கற்ற நிலையில் தான் வாழ நேரிடும். மேலும் அவர்களை வழிநடத்திச் செல்லும் மதகுருமார்களும் அவர்களுடைய சம்பாத்தியத்திலிருந்து ஒரு பங்கை தமக்காக பிடுங்கிக் கொள்வார்கள்.
وَلَأُضِلَّنَّهُمْ وَلَأُمَنِّيَنَّهُمْ وَلَءَامُرَنَّهُمْ فَلَيُبَتِّكُنَّ ءَاذَانَ ٱلْأَنْعَٰمِ وَلَءَامُرَنَّهُمْ فَلَيُغَيِّرُنَّ خَلْقَ ٱللَّهِ ۚ وَمَن يَتَّخِذِ ٱلشَّيْطَٰنَ وَلِيًّۭا مِّن دُونِ ٱللَّهِ فَقَدْ خَسِرَ خُسْرَانًۭا مُّبِينًۭا.
4:119. மேலும் இத்தகைய குருமார்களின் அறைகூவலைக் கவனித்தால், “நிச்சயமாக நான் மக்களை வழி கெடுப்பேன். மக்களுடைய குறைகள் அனைத்தையும் இந்த கற்பனை தெய்வங்கள் தீர்த்து வைக்கும் என்ற மூட நம்பிக்கைகளையும், அவர்களின் மனதில் வளர்ப்பேன். இதற்காக கால்நடைகளின் காதுகள் போன்ற அங்கங்களை அறுத்து பலியிடக் கட்டளையிடுவேன். இப்படியாக அல்லாஹ்வின் அழகான படைப்புகளை உருமாற்றம் செய்வேன்” என்பது போல் உள்ளது. ஆக அல்லாஹ்வின் வழிகாட்டுதலைப் புறக்கணித்து இப்படிப்பட்ட மூடநம்பிக்கையுடன் வாழும் சமுதாயம் பெரும் நஷ்டத்திற்குள்ளாகும் என்பதே உண்மை.
يَعِدُهُمْ وَيُمَنِّيهِمْ ۖ وَمَا يَعِدُهُمُ ٱلشَّيْطَٰنُ إِلَّا غُرُورًا.
4:120. தன் மனோ இச்சையை தெய்வமாக்கிக் கொண்ட மதகுருமார்கள், சுவர்க்கத்தில் மக்களை அழைத்துச் செல்வதாக வாக்குறுதியும் அளிப்பார்கள். அந்த சுவன வாழ்வைப் பற்றி கற்பனைக் கதைகளை சொல்லிக் கொண்டிருப்பார்கள். இவர்களுடைய வாக்குறுதிகள் யாவும் இறுதியில் ஏமாற்றத்தையே தரும்.
أُو۟لَٰٓئِكَ مَأْوَىٰهُمْ جَهَنَّمُ وَلَا يَجِدُونَ عَنْهَا مَحِيصًۭا.
4:121. இத்தகையவர்களைப் பின்பற்றி வாழும் சமுதாயத்தவர்கள், வேதனைகளைத் தான் அனுபவிப்பார்கள். அதிலிருந்து மீண்டு வர ஒரு வழியையும் அவர்களால் காண இயலாது.
وَٱلَّذِينَ ءَامَنُوا۟ وَعَمِلُوا۟ ٱلصَّٰلِحَٰتِ سَنُدْخِلُهُمْ جَنَّٰتٍۢ تَجْرِى مِن تَحْتِهَا ٱلْأَنْهَٰرُ خَٰلِدِينَ فِيهَآ أَبَدًۭا ۖ وَعْدَ ٱللَّهِ حَقًّۭا ۚ وَمَنْ أَصْدَقُ مِنَ ٱللَّهِ قِيلًۭا.
4:122. மாறாக அல்லாஹ்வின் வழிகாட்டுதலை மனதார ஏற்று அதன்படி ஆக்கப்பூர்வமான நற்செயல்களைச் செய்து வரும் சமுதாயத்தவர்கள், சுவனத்திற்கு ஒப்பான வாழ்வை இம்மையிலும் மறுமையிலும் ஈட்டிக் கொள்வார்கள். அதாவது அவர்களின் உழைப்பிற்கு ஏற்ப தாராள பொருளாதார வசதிகள் ஜீவநதி போல் செழித்து வரும். மேலும் அல்லாஹ்வின் வழிகாட்டுதலின்படி நடக்கும் வரை சுவனத்திற்கு ஒப்பான வாழ்வு தொடர்ந்து நீடிக்கும். (8:53) இதுதான் அல்லாஹ்வின் வாக்காகும். அவனுடைய வாக்குறுதியைவிட வேறு யாருடைய வாக்குறுதி உண்மையானதாக இருக்க முடியும்?
لَّيْسَ بِأَمَانِيِّكُمْ وَلَآ أَمَانِىِّ أَهْلِ ٱلْكِتَٰبِ ۗ مَن يَعْمَلْ سُوٓءًۭا يُجْزَ بِهِۦ وَلَا يَجِدْ لَهُۥ مِن دُونِ ٱللَّهِ وَلِيًّۭا وَلَا نَصِيرًۭا.
4:123. நினைவில் கொள்ளுங்கள். அல்லாஹ்வின் வழிமுறையை நிராகரித்து உங்களுடைய விருப்பப்படியோ அல்லது வேதமுடையவர்கள் விரும்பியபடியோ செயல்பட்டு, இந்த சுவன வாழ்வை ஒருபோதும் ஈட்டிக் கொள்ளவே முடியாது. இதில் மனிதனின் தனிப்பட்ட விருப்பங்களுக்கு இடமிருப்பதில்லை. யார் தீமை செய்கின்றானோ அவனுக்கு அதற்குரிய தண்டனை கிடைத்தே தீரும். ஆயிரம்தான் அவன் விரும்பினாலும் தண்டனையிலிருந்து காப்பாற்ற யாராலும் முடியாது. அதற்கு ஒரேவழி அல்லாஹ்வின் வழிகாட்டுதலைப் பேணி நடப்பதே ஆகும்.
وَمَن يَعْمَلْ مِنَ ٱلصَّٰلِحَٰتِ مِن ذَكَرٍ أَوْ أُنثَىٰ وَهُوَ مُؤْمِنٌۭ فَأُو۟لَٰٓئِكَ يَدْخُلُونَ ٱلْجَنَّةَ وَلَا يُظْلَمُونَ نَقِيرًۭا.
4:124. சுவனத்திற்கு ஒப்பான வாழ்வு பெறும் விஷயத்தில், ஆண் பெண் என்ற பேதம் இருப்பதில்லை. ஆணோ பெண்ணோ யாரெல்லாம் அல்லாஹ்வின் வழிகாட்டுதலை ஏற்று ஆக்கப்பூர்வமான நற்செயல்களை செய்கின்றார்களோ, அவர்கள் யாவரும் இச்சுவனத்திற்கு உரியவர்கள் ஆவார்கள். இதில் யாருக்கும் இம்மியளவும் அநியாயம் செய்யப்பட மாட்டாது.
وَمَنْ أَحْسَنُ دِينًۭا مِّمَّنْ أَسْلَمَ وَجْهَهُۥ لِلَّهِ وَهُوَ مُحْسِنٌۭ وَٱتَّبَعَ مِلَّةَ إِبْرَٰهِيمَ حَنِيفًۭا ۗ وَٱتَّخَذَ ٱللَّهُ إِبْرَٰهِيمَ خَلِيلًۭا.
4:125. இந்த விளக்கங்களுக்குப் பின் இதைவிட சிறந்த மார்க்கம் வேறு எதுவாக இருக்க முடியும் என்று அவர்களிடம் கேளுங்கள். அவர்களுடைய மூதாதையராகிய இப்ராஹீம் நபியும் அல்லாஹ்வுக்கு முற்றிலும் அடிபணிந்து அழகிய சமுதாயத்தை உருவாக்கிக் காட்டினார். அவர் ஒவ்வொரு விஷயத்திலும் அல்லாஹ்வின் நாட்டம் என்னவோ அதை முன்வைத்தே செயல்பட்டார். அவரை பின்பற்றுவதாகக் கூறிக்கொள்ளும் நீங்களும் இப்படித்தானே செயல்பட்டிருக்க வேண்டும்?
وَلِلَّهِ مَا فِى ٱلسَّمَٰوَٰتِ وَمَا فِى ٱلْأَرْضِ ۚ وَكَانَ ٱللَّهُ بِكُلِّ شَىْءٍۢ مُّحِيطًۭا.
4:126. இவ்வாறு செயல்படவில்லை என்றால், அதனால் ஏற்படும் தாக்கங்கள் உங்களுக்குத் தானே அன்றி அல்லாஹ்வுக்கு அல்ல. காரணம் வானங்களிலும் பூமியிலும் உள்ள மற்ற எல்லாப் படைப்புகளும் அல்லாஹ்வின் கட்டளைக்கு இணங்கியே செயல்பட்டு வருகின்றன. நிச்சயமாக அல்லாஹ் ஒவ்வொரு படைப்புக்கும் அதற்குரிய சட்ட விதிமுறைகளை உருவாக்கியுள்ளான். மனினுக்கு மட்டும் வஹீ மூலம் அந்த சட்டதிட்டங்களை அறிவுறுத்தியுள்ளான்.
எனவே அல்லாஹ்வின் வழிகாட்டுதலுக்கு மாற்றமாக செயல்பட்டால் அதன் விளைவுகளை மனிதன் சந்தித்தே ஆகவேண்டும்.
وَيَسْتَفْتُونَكَ فِى ٱلنِّسَآءِ ۖ قُلِ ٱللَّهُ يُفْتِيكُمْ فِيهِنَّ وَمَا يُتْلَىٰ عَلَيْكُمْ فِى ٱلْكِتَٰبِ فِى يَتَٰمَى ٱلنِّسَآءِ ٱلَّٰتِى لَا تُؤْتُونَهُنَّ مَا كُتِبَ لَهُنَّ وَتَرْغَبُونَ أَن تَنكِحُوهُنَّ وَٱلْمُسْتَضْعَفِينَ مِنَ ٱلْوِلْدَٰنِ وَأَن تَقُومُوا۟ لِلْيَتَٰمَىٰ بِٱلْقِسْطِ ۚ وَمَا تَفْعَلُوا۟ مِنْ خَيْرٍۢ فَإِنَّ ٱللَّهَ كَانَ بِهِۦ عَلِيمًۭا.
4:127. சமுதாயத்தை வழிநடத்திச் செல்பவரே! பெண்களைப் பற்றிய மேலும் மார்க்கக் கட்டளைகள் என்னவென்று உம்மிடம் கேட்கிறார்கள். அதற்கு அல்லாஹ் இவ்வாறு பதிலளிப்பதாக கூறுங்கள்.
ஏற்கனவே இவ்வேதத்தில் ஆதரவற்ற பெண்களைப் பற்றி கடைப்பிடிக்க வேண்டிய சட்ட விதிமுறைகளை அறிவித்துள்ளோம். (4:3) அதன்படி நீங்கள் அவர்களை மணப்பதாக இருந்தால் நிர்ணயித்த மஹர் என்னும் அன்பளிப்பை அவர்களுக்கு அளித்து மணமுடித்துக் கொள்ளுங்கள்.
அவ்வாறு அன்பளிப்பு எதுவும் கொடுக்காமல் மணந்துகொள்ள விரும்புவது தவறான செயலாகும். மேலும் ஆதரவற்ற நிலையில் இருக்கும் பிள்ளைகளுக்கும் நலிந்த மக்களுக்கும் அவர்களுக்குரிய உதவித் தொகையை அளியுங்கள். அவர்களிடம் மிகவும் நீதமாக நடந்து கொள்ளுங்கள்.
ஆக நன்மையான செயல்கள் எதைச் செய்தாலும் அதற்குரிய பலன்கள் அல்லாஹ்விடமிருந்து நிச்சயமாகக் கிடைக்கும். நீங்கள் செய்வதனைத்தும் அல்லாஹ்விற்கு நன்கு தெரியும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
وَإِنِ ٱمْرَأَةٌ خَافَتْ مِنۢ بَعْلِهَا نُشُوزًا أَوْ إِعْرَاضًۭا فَلَا جُنَاحَ عَلَيْهِمَآ أَن يُصْلِحَا بَيْنَهُمَا صُلْحًۭا ۚ وَٱلصُّلْحُ خَيْرٌۭ ۗ وَأُحْضِرَتِ ٱلْأَنفُسُ ٱلشُّحَّ ۚ وَإِن تُحْسِنُوا۟ وَتَتَّقُوا۟ فَإِنَّ ٱللَّهَ كَانَ بِمَا تَعْمَلُونَ خَبِيرًۭا.
4:128. மேலும் ஒரு பெண், தன் கணவன் கொடுமை செய்வதாகவோ, அதனால் அவனை விட்டு ஒதுங்கி வாழ நேரும் என்று பயப்படுவதாகவோ புகார் கொடுத்தால், அவ்விருவரும் இணைந்து வாழ சுமுகமான முறையில் தீர்வு காணுங்கள். இதற்கு அல்லாஹ்வின் சட்டத்தில் இடமுண்டு. ஏனெனில் பிரிவை விட அத்தகைய சமாதானமே மேலானது. பொருளாதாரம் காரணமாக பிரச்னை உருவாகுமானால் அதை அழகிய முறையில் தீர்த்து வைப்பது நல்லது. இருவரும் பரஸ்பர உறவு நாடி அல்லாஹ்வுக்குப் பயந்து நடந்து கொள்வீர்களானால், அது அவ்விருவருக்கும் நல்லதாகும். நிச்சயமாக நீங்கள் செய்வதனைத்தையும் அல்லாஹவுக்கு நன்கு தெரியும் என்பதை மறவாதீர்கள்.
وَلَن تَسْتَطِيعُوٓا۟ أَن تَعْدِلُوا۟ بَيْنَ ٱلنِّسَآءِ وَلَوْ حَرَصْتُمْ ۖ فَلَا تَمِيلُوا۟ كُلَّ ٱلْمَيْلِ فَتَذَرُوهَا كَٱلْمُعَلَّقَةِ ۚ وَإِن تُصْلِحُوا۟ وَتَتَّقُوا۟ فَإِنَّ ٱللَّهَ كَانَ غَفُورًۭا رَّحِيمًۭا.
4:129. இறை வழிகாட்டுதலை மனதார ஏற்றுக் கொண்டவர்களே! நீங்கள் எவ்வளவு தான் முயன்றாலும் மனைவிகளிடையே உளப்பூர்வமாக நீதமாக நடக்க ஒருபோதும் சாத்தியமில்லை. ஆனால் குறைந்த பட்சம் பொருளாதார ரீதியாக நியாயமாக நடந்து கொள்ளுங்கள். எனவே ஒரு மனைவியிடம் முற்றிலும் சாய்ந்து மற்றவளை கஷ்டத்திற்குள் ஆக்காதீர்கள். அல்லாஹ்வுக்குப் பயந்து நீதமாக நடந்து கொள்ளுங்கள். அவ்வாறு நீங்கள் நடந்து கொண்டால் உங்களுக்கு பாதுகாப்பான வாழ்க்கை கிடைக்கும். இது அல்லாஹ்வின் கிருபையாகும்.
aq_விளக்கம் அதாவது 4:3 வாசகத்தில் குறிப்பிடப்பட்டது போல அபலைப் பெண்களுக்கு வாழ்வளிப்பதற்காக ஒன்றுக்கு மேல் மணந்திருந்தாலோ அல்லது இந்த குர்ஆன் இறக்கி அருளப்படுவதற்கு முன்பிருந்தே பல மனைவிகள் இருந்தாலோ மேற்சொன்ன அறிவுரையின்படி மனைவிகளிடையே குறைந்த பட்சம் பொருளாதார ரீதியாக நீதமான முறையில் நடந்துகொள்ள வேண்டும்.
وَإِن يَتَفَرَّقَا يُغْنِ ٱللَّهُ كُلًّۭا مِّن سَعَتِهِۦ ۚ وَكَانَ ٱللَّهُ وَٰسِعًا حَكِيمًۭا.
4:130. அவ்வாறு இணைந்து வாழ வேறு எந்த வாய்ப்பும் இல்லாது போனால், அவர்கள் பிரிந்து வாழ முற்படலாம். இப்படி பிரிந்து வாழும் பெண்களுக்கு ஏற்படும் பொருளாதார சிக்கல்களை தீர்த்து வைக்கும் பொறுப்பை அல்லாஹ்வின் ஆட்சியமைப்புக்கு உட்பட்டதாகும். நிச்சயமாக அல்லாஹ்வின் செயல்திட்டங்கள் யாவும் விசாலமான ஞானத்தின் அடிப்படையில் உள்ளவை ஆகும்.
aq_விளக்கம் அப்படிப்பட்ட ஆட்சியமைப்பு இல்லாத கால கட்டத்தில் இந்த பொறுப்பை ஜமாஅத்தார் அல்லது உறவினர்கள் கலந்தாலோசித்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
وَلِلَّهِ مَا فِى ٱلسَّمَٰوَٰتِ وَمَا فِى ٱلْأَرْضِ ۗ وَلَقَدْ وَصَّيْنَا ٱلَّذِينَ أُوتُوا۟ ٱلْكِتَٰبَ مِن قَبْلِكُمْ وَإِيَّاكُمْ أَنِ ٱتَّقُوا۟ ٱللَّهَ ۚ وَإِن تَكْفُرُوا۟ فَإِنَّ لِلَّهِ مَا فِى ٱلسَّمَٰوَٰتِ وَمَا فِى ٱلْأَرْضِ ۚ وَكَانَ ٱللَّهُ غَنِيًّا حَمِيدًۭا.
4:131. அகிலங்களிலும் பூமியிலும் உள்ள அனைத்தும் அல்லாஹ்வின் செயல் திட்டங்களை நிறைவேற்றிய வண்ணம் சிறப்பாக செயல்படுகின்றன. எனவே அங்கு எந்தப் பிரச்னையும் இருப்பதில்லை. அவ்வாறே உங்கள் வாழ்வும் சிறப்பாக திகழ உங்களுக்கும் அறிவுரைகள் அளிக்கப்படுகின்றன.
இதற்குமுன் வேதம் அளிக்கப்பட்டோருக்கும் அல்லாஹ்வின் புறத்திலிருந்து இத்தகைய அறிவுரைகள் வந்தே இருக்கின்றன. அவற்றிற்கு முற்றிலும் அடிபணிந்து செயல்பட கட்டளையும் வந்தது. நீங்கள் இறைக் கட்டளைகளுக்கு மாறுசெய்தால் அதனால் ஏற்படும் பாதிப்புகள் உங்களுக்குத் தானே அன்றி அல்லாஹ்வுக்கு அல்ல.
ஏனெனில் அகிலங்களிலும் பூமியிலும் உள்ளவை அனைத்தும் அல்லாஹ்வுக்கு இணங்கியே செயல்படுகின்றன. எனவே அவன் உங்களை சார்ந்து இருப்பதில்லை. அதற்கு அவசியமும் இல்லை. அவனுடைய செயல்திட்டங்கள் யாவும் போற்றி பாராட்டுதலுக்கு உரியதே ஆகும்.
وَلِلَّهِ مَا فِى ٱلسَّمَٰوَٰتِ وَمَا فِى ٱلْأَرْضِ ۚ وَكَفَىٰ بِٱللَّهِ وَكِيلًا.
4:132. ஆக அகிலங்களிலும் பூமியிலும் உள்ள படைப்புகள் யாவும் அல்லாஹ்வின் செயல்திட்டங்களை நிறைவேற்றவே துல்லியமாகவும் துரிதமாகவும் செயல்படுகின்றன என்பதற்கு அவற்றின் செயல்பாடுகளே இதற்கு சாட்சி பகர்கின்றன.
மற்ற படைப்புகளுக்கும் மனிதனுக்கும் ஒரு வித்தியாசம் உள்ளது. மற்ற படைப்புகள் பொறுத்த வரை அவை அல்லாஹ்வின் கட்டளைக்கு மாற்றமாகச் செயல்படவே முடியாது. ஆனால் மனிதனின் நிலை அவ்வாறில்லை. அவனும் தான் நாடியதை செய்யக் கூடிய சுதந்திரத்தையும் ஆற்றலையும் பெற்றவனாக இருக்கின்றான். இது அல்லாஹ்வின் செயல் திட்டப்படி மனிதனுக்கு அளிக்கப்பட்ட சுதந்திரமும் சோதனையும் ஆகும்.
إِن يَشَأْ يُذْهِبْكُمْ أَيُّهَا ٱلنَّاسُ وَيَأْتِ بِـَٔاخَرِينَ ۚ وَكَانَ ٱللَّهُ عَلَىٰ ذَٰلِكَ قَدِيرًۭا.
4:133. இவ்வாறில்லாமல் மனித இனத்தைப் போக்கி விட்டு அதற்குப் பதிலாக வேறு படைப்பை கொண்டு வரும் அல்லாஹ்வின் செயல்திட்டம் இருந்திருந்தால், அவ்வாறு செய்வதில் அவனுக்கு எவ்வித சிரமும் இருந்திருக்காது. அல்லாஹ் அனைத்து விஷயங்களிலும் பேராற்றல் உடையவனே என்பதை தெரிந்து கொள்ளுங்கள். (மேலும் பார்க்க 14- 9 & 10)
مَّن كَانَ يُرِيدُ ثَوَابَ ٱلدُّنْيَا فَعِندَ ٱللَّهِ ثَوَابُ ٱلدُّنْيَا وَٱلْءَاخِرَةِ ۚ وَكَانَ ٱللَّهُ سَمِيعًۢا بَصِيرًۭا.
4:134. எனவே எந்த ஒரு சமுதாயமோ அல்லது தனிநபரோ தற்காலிக சுக வாழ்வை மட்டும் நோக்கமாகக் கொண்டு வாழ்ந்தால், அவர்களின் உழைப்பிற்கு ஏற்ப தற்காலிக பலன்கள் கிடைத்து விடும். ஆனால் அல்லாஹ்வின் வழிகாட்டுதலின் படி நடந்தால் தற்காலிகப் பலன்களுடன், வருங்கால நிலையான பலன்களும் கிடைத்து வரும். (பார்க்க:2- 201 & 202) நிச்சயமாக அல்லாஹ்வின் செயல்திட்டம் அனைத்து விஷயங்களையும் கவனத்தில் கொள்வதாக உள்ளது.
۞ يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟ كُونُوا۟ قَوَّٰمِينَ بِٱلْقِسْطِ شُهَدَآءَ لِلَّهِ وَلَوْ عَلَىٰٓ أَنفُسِكُمْ أَوِ ٱلْوَٰلِدَيْنِ وَٱلْأَقْرَبِينَ ۚ إِن يَكُنْ غَنِيًّا أَوْ فَقِيرًۭا فَٱللَّهُ أَوْلَىٰ بِهِمَا ۖ فَلَا تَتَّبِعُوا۟ ٱلْهَوَىٰٓ أَن تَعْدِلُوا۟ ۚ وَإِن تَلْوُۥٓا۟ أَوْ تُعْرِضُوا۟ فَإِنَّ ٱللَّهَ كَانَ بِمَا تَعْمَلُونَ خَبِيرًۭا.
4:135. இறை வழிகாட்டுதலை மனதார ஏற்றுக் கொண்டவர்களே! நீங்கள் எப்போதும் நடுநிலை வகிக்கும் சமூகத்தவராகவே திகழவேண்டும். ஒருபோதும் நியாயத்தை கைவிடக் கூடாது. (பார்க்க - 5:8) எனவே மக்களுக்கு நியாயமான தீர்ப்பு கிடைக்க, நேர்மையான சாட்சியங்கள் இருப்பது அவசியாமாகின்றன.
எனவே நீங்கள் சாட்சி கூறுவதாக இருந்தால், அது உங்களுக்கோ உங்கள் பெற்றோர்களுக்கோ அல்லது உறவினர்களுக்கோ எதிராக இருப்பினும் சரியே, அல்லாஹ்வின் கட்டளைப்படி உண்மைக்கு சாட்சியாக நில்லுங்கள்.
இவ்வாறு சாட்சி சொல்வதில் செல்வந்தர்கள் ஏழைகள் என்ற பாகுபாடும் இருக்கக் கூடாது. இவ்விரு விஷயத்தைப் பாதுகாப்பதில் அல்லாஹ்வே போதுமானவன். ஆக நீங்கள் நீதி அளிக்கும் விஷயத்தில் அல்லாஹ்வின் கட்டளையை விட்டுவிட்டு தம் மனோ இச்சைக்கு இடமளிக்காதீர்கள். சாட்சி கூறுவதில் உண்மைக்குப் புறம்பாகவோ அல்லது உண்மை தெரிந்தும் சாட்சி கூறாமலிருப்பதோ கூடாது.
ஆக நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலும் அல்லாஹ்வுக்கு நன்கு தெரியும் என்பதை நினைவில் கொண்டு செயலாற்றுங்கள்.
சாட்சி சொல்வதில் தான் ஒரு சமுதாயத்தில் நீதியை கட்டிக் காப்பாற்ற முடியும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இறைவழிகாட்டுதலை மனதார ஏற்றுக் கொண்டவர்களே! ஒரு விஷயத்தை நன்றாக தெரிந்து கொள்ளுங்கள். ஒருவன் முஸ்லிம் வீட்டில் பிறந்து வளர்ந்து வருவதால் அவனை உண்மையான மூஃமின் என்று கருத முடியாது. அவன் கடைப்பிடிக்கின்ற கொள்கை கோட்பாடுகளை வைத்தே ஒருவனின் உண்மையான நிலையைக் கணிக்க முடியும். எனவே இறைவழிகாட்டுதலை முழுமையாக ஏற்று அதன்படி செயல்படுவதைக் கொண்டுதான் உண்மையான மூஃமினாக முடியும்.
َٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوٓا۟ ءَامِنُوا۟ بِٱللَّهِ وَرَسُولِهِۦ وَٱلْكِتَٰبِ ٱلَّذِى نَزَّلَ عَلَىٰ رَسُولِهِۦ وَٱلْكِتَٰبِ ٱلَّذِىٓ أَنزَلَ مِن قَبْلُ ۚ وَمَن يَكْفُرْ بِٱللَّهِ وَمَلَٰٓئِكَتِهِۦ وَكُتُبِهِۦ وَرُسُلِهِۦ وَٱلْيَوْمِ ٱلْءَاخِرِ فَقَدْ ضَلَّ ضَلَٰلًۢا بَعِيدًا.
4:136. ஈமான் கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வின் வழிகாட்டுதலின் உண்மை நிலையை அறிந்து, அதை மனதார ஏற்று அதன்படி செயலாற்றுங்கள். சமுதாய சீரமைப்பு பணிக்காக இறைத்தூதர் பிறப்பிக்கும் நடைமுறை சட்டங்களையும், வேத அறிவுரைகளையும் ஏற்று அதன்படி செயலாற்றுங்கள். இதற்கு முன் வந்த வேதங்களும் இதே அடிப்படையைக் கொண்டவை என்பதையும் ஏற்றுக்கொள்ள வேண்டும். எவர் அல்லாஹ்வின் வழிகாட்டுதலையும், அவனுடைய செயல்திட்டங்களை நிறைவேற்ற உருவாக்கப்பட்ட பிரபஞ்ச இயற்கை சக்திகளையும், இறைவனின் ஆட்சியமைப்பு உருவாக்கும் நடைமுறை சட்டங்களையும், “மனித செயலுக்கேற்ற இறுதி விளைவுகள்” என்ற ஆஃகிரத்தையும் ஏற்க மறுக்கின்றானோ, அவன் வழிகேட்டில் வெகு தூரம் சென்று விடுகின்றான். இதுதான் உண்மை.
إِنَّ ٱلَّذِينَ ءَامَنُوا۟ ثُمَّ كَفَرُوا۟ ثُمَّ ءَامَنُوا۟ ثُمَّ كَفَرُوا۟ ثُمَّ ٱزْدَادُوا۟ كُفْرًۭا لَّمْ يَكُنِ ٱللَّهُ لِيَغْفِرَ لَهُمْ وَلَا لِيَهْدِيَهُمْ سَبِيلًۢا.
4:137. ஈமான் கொள்ளுதல் என்பதன் பொருள் இறைவழிகாட்டுதலை சிந்தித்து அறிந்து மனதார ஏற்றுக் கொண்டு அதன்படி நடப்பதே ஆகும். (பார்க்க 2:208) சில விஷயத்தை ஏற்றுக் கொள்வது சில விஷயத்தை ஏற்க மறுப்பது. மேலும் ஏற்க மறுப்பதிலேயே முனைப்பாக இருப்பது என்றிருந்தால் அவன் நேர்வழி பெறும் வாய்ப்பை இழந்து விடுகின்றான். இதனால் அவனுக்கு பாதுகாப்பான வாழ்வும் கிடைக்காது.
بَشِّرِ ٱلْمُنَٰفِقِينَ بِأَنَّ لَهُمْ عَذَابًا أَلِيمًا.
4:138. மாறாக சொல் ஒன்று செயல் வேறு என்று இரட்டை வேடமிடுபவர்கள் நயவஞ்சகர்கள். அத்தகையவர்களுக்கு நோவினை தரும் வேதனைகள் நிச்சயமாக காத்திருக்கின்றன என்பதை அறிவித்துவிடுங்கள்.
ٱلَّذِينَ يَتَّخِذُونَ ٱلْكَٰفِرِينَ أَوْلِيَآءَ مِن دُونِ ٱلْمُؤْمِنِينَ ۚ أَيَبْتَغُونَ عِندَهُمُ ٱلْعِزَّةَ فَإِنَّ ٱلْعِزَّةَ لِلَّهِ جَمِيعًۭا.
4:139. இத்தகைய நயவஞ்சகர்கள் மூஃமின்களையும், இறைவழிகாட்டுதலையும் புறக்கணித்து விட்டு, சமூக விரோத செயல்களில் ஈடுபடுபவர்களை உற்ற நண்பர்களாக எடுத்துக் கொள்கின்றனர். இப்படி செயல்படுவதால் அவர்களுக்கு உயர்வும் கண்ணியமும் கிடைத்து விடும் என்று எண்ணுகிறார்களா? நிச்சயமாக இந்த உயர்வும் கண்ணியமும் அல்லாஹ்வின் வழிகாட்டுதலை முழுவதுமாக ஏற்று அதன்படி நடப்பதைக் கொண்டே கிடைக்கும்.
وَقَدْ نَزَّلَ عَلَيْكُمْ فِى ٱلْكِتَٰبِ أَنْ إِذَا سَمِعْتُمْ ءَايَٰتِ ٱللَّهِ يُكْفَرُ بِهَا وَيُسْتَهْزَأُ بِهَا فَلَا تَقْعُدُوا۟ مَعَهُمْ حَتَّىٰ يَخُوضُوا۟ فِى حَدِيثٍ غَيْرِهِۦٓ ۚ إِنَّكُمْ إِذًۭا مِّثْلُهُمْ ۗ إِنَّ ٱللَّهَ جَامِعُ ٱلْمُنَٰفِقِينَ وَٱلْكَٰفِرِينَ فِى جَهَنَّمَ جَمِيعًا.
4:140. மேலும் அல்லாஹ்வின் வழிகாட்டுதலை ஏற்க மறுப்பதும், அதை பரிகசிப்பதுமாக இருக்கும் கூட்டத்தில் நீங்கள் தொடர்ந்து அமர்ந்திருக்க வேண்டாம். அவர்கள் இதைவிட்டு வேறு விஷயத்தில் ஈடுபடும் வரையில் அவர்களை விட்டு விலகியே இருங்கள். இவ்வேதத்தின் மூலம் உங்களுக்கு இடப்பட்ட அல்லாஹ்வின் கட்டளையாகும். அத்தகையவர்களோடு நீங்கள் தொடர்பு வைத்துக் கொண்டால் நீங்களும் அவர்களைப் போன்றே ஆகிவிடுவீர்கள். இப்படிப்பட்ட நயவஞ்சகர்கள் மற்றும் இறைவழிகாட்டுதலை ஏற்க மறுப்பவர்கள் யாவரும் இறுதியாக சேரும் இடம் நரகம்தான் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
ٱلَّذِينَ يَتَرَبَّصُونَ بِكُمْ فَإِن كَانَ لَكُمْ فَتْحٌۭ مِّنَ ٱللَّهِ قَالُوٓا۟ أَلَمْ نَكُن مَّعَكُمْ وَإِن كَانَ لِلْكَٰفِرِينَ نَصِيبٌۭ قَالُوٓا۟ أَلَمْ نَسْتَحْوِذْ عَلَيْكُمْ وَنَمْنَعْكُم مِّنَ ٱلْمُؤْمِنِينَ ۚ فَٱللَّهُ يَحْكُمُ بَيْنَكُمْ يَوْمَ ٱلْقِيَٰمَةِ ۗ وَلَن يَجْعَلَ ٱللَّهُ لِلْكَٰفِرِينَ عَلَى ٱلْمُؤْمِنِينَ سَبِيلًا.
4:141. இந்த நயவஞ்சகர்கள் எப்போதும் உங்களை கவனித்த வண்ணம் இருக்கிறார்கள். அல்லாஹ்வின் அருளைக் கொண்டு உங்களுக்கு வெற்றி கிடைத்தால் தாமும் உங்களுடன் இருந்ததாகக் கூறுகின்றனர். மாறாக எதிரணியினருக்கு வெற்றி கிடைத்தால் அவர்களிடம் சென்று, அவர்களோடு இருந்து கொண்டு மூஃமின்களிடமிருந்து அவர்களை காப்பாற்ற துணை புரிந்ததாக கூறுகின்றனர். இவை யாவும் இப்போது பேசிக் கொள்ளலாம். இறைவனின் ஆட்சியமைப்பு நிலை நிறுத்தப்படும் கால கட்டத்தில் எல்லாமே வெளிச்சத்திற்கு வந்து விடும். மூஃமின்கள் மீது சமூக விரோதிகள் வெற்றி கொள்ள அல்லாஹ்வின் புறத்திலிருந்து வழி எதுவும் கிடைக்காது.
إِنَّ ٱلْمُنَٰفِقِينَ يُخَٰدِعُونَ ٱللَّهَ وَهُوَ خَٰدِعُهُمْ وَإِذَا قَامُوٓا۟ إِلَى ٱلصَّلَوٰةِ قَامُوا۟ كُسَالَىٰ يُرَآءُونَ ٱلنَّاسَ وَلَا يَذْكُرُونَ ٱللَّهَ إِلَّا قَلِيلًۭا.
4:142. ஆக இந்நயவஞ்சகர்கள் அல்லாஹ்வின் ஆட்சியமைப்பு செயல்படாமல் தடுக்க நினைக்கிறார்கள் என்பதே உண்மையாகும். ஆனால் அல்லாஹ்வின் நியதிப்படி அவர்களுடைய நயவஞ்சக செயல்களே அவர்களை சூழந்து அடையாளம் காட்டிவிடும். (பார்க்க 2:9) மேலும் அவர்கள் கூட்டுத் "ஸவாத்"திலும் வேண்டா வெறுப்பாகவே கலந்து கொள்கிறார்கள். அதுவும் பிறருக்கு காட்டிக் கொள்வதற்காகவே. அவர்கள் மிகச் சொற்பமான அளவே அன்றி அல்லாஹ்வின் அறிவுரைகளைப் பெறுவதில்லை.
مُّذَبْذَبِينَ بَيْنَ ذَٰلِكَ لَآ إِلَىٰ هَٰٓؤُلَآءِ وَلَآ إِلَىٰ هَٰٓؤُلَآءِ ۚ وَمَن يُضْلِلِ ٱللَّهُ فَلَن تَجِدَ لَهُۥ سَبِيلًۭا.
4:143. இத்தகைய நயவஞ்சகர்கள் மூஃமின்கள் பக்கமும் இருப்பதில்லை இறை நிராகரிப்பவர்களுடனும் இல்லை. சந்தர்ப்பத்திற்கு ஏற்ப இவர்களுக்கிடையே தத்தளித்துக் கொண்டு இருக்கின்றனர். இப்படியாக இறைவழிகாட்டுதலை புறக்கணித்து விட்டு வழிதவறிச் செல்பவர்கள், அல்லாஹ்வின் நியதிப்படி வழிகேட்டிலேயே மூழ்கிவிடுவர். அவர்களை திருத்த வேறு எந்த வழியும் இருக்காது.
يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟ لَا تَتَّخِذُوا۟ ٱلْكَٰفِرِينَ أَوْلِيَآءَ مِن دُونِ ٱلْمُؤْمِنِينَ ۚ أَتُرِيدُونَ أَن تَجْعَلُوا۟ لِلَّهِ عَلَيْكُمْ سُلْطَٰنًۭا مُّبِينًا.
4:144. இறைவழிகாட்டுதலை மனதார ஏற்றுக் கொண்டவர்களே! இப்படிப்பட்ட சமூக விரோதிகளை அடையாளம் கண்டு, அவர்களுடன் தொடர்பு வைத்துக் கொள்ளாதீர்கள். இல்லாவிடில் நீங்களும் அல்லாஹ்வின் சட்டப்படி தண்டனைக்கு ஆளாவீர்கள். அவர்களோடு வைத்துக்கொள்ளும் நட்புறவே உங்களுக்கு எதிரான சாட்சியாக மாறும்.
إِنَّ ٱلْمُنَٰفِقِينَ فِى ٱلدَّرْكِ ٱلْأَسْفَلِ مِنَ ٱلنَّارِ وَلَن تَجِدَ لَهُمْ نَصِيرًا.
4:145. நிச்சயமாக இந்த நயவஞ்சகர்கள் நரக வேதனைகளில் சிக்கி படுமோசமான நிலைக்கு தள்ளப்படுவார்கள். அவர்களுக்கு உதவ யாரும் முன் வரமாட்டார்கள். அதாவது இவ்வுலகிலும் அவர்களுக்கு கடுங்காவல் தண்டனை கிடைக்கும். எனவே நீங்கள் அவர்களுடன் தொடர்பு வைத்துக் கொள்ளாதீர்கள்.
ِلَّا ٱلَّذِينَ تَابُوا۟ وَأَصْلَحُوا۟ وَٱعْتَصَمُوا۟ بِٱللَّهِ وَأَخْلَصُوا۟ دِينَهُمْ لِلَّهِ فَأُو۟لَٰٓئِكَ مَعَ ٱلْمُؤْمِنِينَ ۖ وَسَوْفَ يُؤْتِ ٱللَّهُ ٱلْمُؤْمِنِينَ أَجْرًا عَظِيمًۭا.
4:146. மாறாக இத்தகைய தவறான செயல்கள் செய்வதை விட்டுவிட்டு மனம் திருந்தி, அல்லாஹ்வின் வழிகாட்டுதலின்படி ஆக்கப்பூர்வமான நற்காரியங்களைச் செய்வதில் உறுதியாக இருந்து, மார்க்கத்தில் முழுவதுமாக தம்மை ஈடுபடுத்திக் கொண்டு, தம்மை தூய்மையாக்கிக் கொள்பவர்கள், மூஃமின்களின் பட்டியலில் இடம் பெறுவர். மேலும் இத்தகைய மூஃமின்களுக்கு அல்லாஹ்வின் நியதிப்படி தொடர்ந்து நற்பலன்கள் கிடைத்து வரும்.
مَّا يَفْعَلُ ٱللَّهُ بِعَذَابِكُمْ إِن شَكَرْتُمْ وَءَامَنتُمْ ۚ وَكَانَ ٱللَّهُ شَاكِرًا عَلِيمًۭا.
4:147. இப்படியாக நீங்கள் அல்லாஹ்வுக்கு நன்றி விசுவாசத்துடன் நடந்து கொண்டு இறைவழிகாட்டுதலின்படி வாழ்ந்தால், உங்களை வேதனை செய்வதில் அல்லாஹ்வுக்கு என்ன இலாபம் கிடைக்கப் போகிறது? ஆக யார் நன்றி விசுவாசத்துடன் நடந்து கொள்கிறார்கள் என்ற உண்மை அல்லாஹ்வுக்கு நன்கு தெரியும்.
۞ لَّا يُحِبُّ ٱللَّهُ ٱلْجَهْرَ بِٱلسُّوٓءِ مِنَ ٱلْقَوْلِ إِلَّا مَن ظُلِمَ ۚ وَكَانَ ٱللَّهُ سَمِيعًا عَلِيمًا.
4:148. இப்படி திருந்தி வந்தவர்களை இதற்கு முன் செய்த செயல்களை நினைவில் கொண்டு பரிகாசம் செய்யாதீர்கள். இது அல்லாஹ்வுக்கு பிடிக்காத ஒன்றாகும். பாதிக்கப்பட்டவர்கள் தம் மனக் குமுறல்களை வெளிப்படுத்துவது என்பது வேறு விஷயமாகும். அல்லாஹ் கேட்பவனாகவும் அறிபவனாகவும் இருக்கிறான் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
إِن تُبْدُوا۟ خَيْرًا أَوْ تُخْفُوهُ أَوْ تَعْفُوا۟ عَن سُوٓءٍۢ فَإِنَّ ٱللَّهَ كَانَ عَفُوًّۭا قَدِيرًا.
4:149. ஆக நீங்கள் நன்மையான காரியங்களை வெளிப்படையாகச் செய்தாலும் மறைமுகமாகச் செய்தாலும் அது அல்லாஹ்வுக்கு தெரியும். அதே போல ஒருவர் செய்யும் தீமையை பெரிதுபடுத்தாமல் அவனை திருத்த முயல்வதும் நல்ல விஷயமே ஆகும். உங்களால் ஏற்படும் சிறு பிழைகளுக்கு பெரிய அளவில் தாக்கங்கள் ஏற்படுவதில்லை. இது அல்லாஹ்வின் நடைமுறைச் சட்டமாகும்.
إِنَّ ٱلَّذِينَ يَكْفُرُونَ بِٱللَّهِ وَرُسُلِهِۦ وَيُرِيدُونَ أَن يُفَرِّقُوا۟ بَيْنَ ٱللَّهِ وَرُسُلِهِۦ وَيَقُولُونَ نُؤْمِنُ بِبَعْضٍۢ وَنَكْفُرُ بِبَعْضٍۢ وَيُرِيدُونَ أَن يَتَّخِذُوا۟ بَيْنَ ذَٰلِكَ سَبِيلًا.
4:150. ஆனால் அல்லாஹ் நிர்ணயித்த நிலையான சட்டங்களையும், அதன் அடிப்படையில் இறைத்தூதர் ஏற்படுத்தும் ஆட்சியமைப்பு வழிமுறைகளையும் புறக்கணித்து, அவ்விரண்டிற்கும் இடையே பிரிவு உண்ணடாக்க முயல்கிறார்கள். மேலும் சிலவற்றை ஏற்றுக் கொண்டு மற்றதை மறுத்து, தமக்கென ஒரு புது வழியை தாமே ஏற்படுத்திக் கொள்ள எண்ணுகிறார்கள். இது மிகப் பெரிய பாவச் செயலாகும்.
أُو۟لَٰٓئِكَ هُمُ ٱلْكَٰفِرُونَ حَقًّۭا ۚ وَأَعْتَدْنَا لِلْكَٰفِرِينَ عَذَابًۭا مُّهِينًۭا.
4:151. இத்தகையவர்கள் தாம் இறைவழிகாட்டுதலை நிராகரிக்கும் சமூக விரோதிகள் ஆவர். இப்படிப் பட்டவர்கள் கடுமையான வேதனைக்கு ஆளாவார்கள்.
وَٱلَّذِينَ ءَامَنُوا۟ بِٱللَّهِ وَرُسُلِهِۦ وَلَمْ يُفَرِّقُوا۟ بَيْنَ أَحَدٍۢ مِّنْهُمْ أُو۟لَٰٓئِكَ سَوْفَ يُؤْتِيهِمْ أُجُورَهُمْ ۗ وَكَانَ ٱللَّهُ غَفُورًۭا رَّحِيمًۭا.
4:152. மாறாக யார் இறைவழிகாட்டுதலை ஏற்று, அதன் அடிப்படையில் இறைத்தூதர் ஏற்படுத்தும் ஆட்சியமைப்பு சட்டங்களையும் ஏற்று, அதன்படி நடந்து, இதற்கு முன் வந்த இறைத்தூதர்கள் விஷயத்திலும், தூதுச் செய்திகள் விஷயத்திலும் வேற்றுமை பாராட்டாது செயல்படுகிறார்களோ, அவர்களுக்கு அல்லாஹ்வின் நியதிப்படி நற்பலன்கள் கிடைத்து வரும். அல்லாஹ்வின் வழிகாட்டுதல்கள் அனைத்து தரப்பு மக்களின் பாதுகாப்புக் கருதியே வடிவமைக்கப் பட்டுள்ளன. இது அல்லாஹ்வின் மிகப்பெரிய கிருபையாகும்.
يَسْـَٔلُكَ أَهْلُ ٱلْكِتَٰبِ أَن تُنَزِّلَ عَلَيْهِمْ كِتَٰبًۭا مِّنَ ٱلسَّمَآءِ ۚ فَقَدْ سَأَلُوا۟ مُوسَىٰٓ أَكْبَرَ مِن ذَٰلِكَ فَقَالُوٓا۟ أَرِنَا ٱللَّهَ جَهْرَةًۭ فَأَخَذَتْهُمُ ٱلصَّٰعِقَةُ بِظُلْمِهِمْ ۚ ثُمَّ ٱتَّخَذُوا۟ ٱلْعِجْلَ مِنۢ بَعْدِ مَا جَآءَتْهُمُ ٱلْبَيِّنَٰتُ فَعَفَوْنَا عَن ذَٰلِكَ ۚ وَءَاتَيْنَا مُوسَىٰ سُلْطَٰنًۭا مُّبِينًۭا.
4:153. வேதமுடையவர்களின் பேச்சை சற்று கவனியுங்கள். வானத்திலிருந்து ஒரு வேத நூலை நேரடியாக இறக்கிக் காட்டும்படி கூறுகிறார்கள். இது ஒன்றும் புதிதல்ல. இறைவழிகாட்டுதலை ஏற்காகததற்கு அவர்கள் கூறும் சாக்குப் போக்குகளே ஆகும். அவர்கள் தங்களிடம் வந்த மூஸா நபியிடமும் இப்படித்தான் பேசி வந்தார்கள். அல்லாஹ்வைக் கண்கூடாகப் பார்க்காத வரை, அவரை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று கூறினார்கள். அவர்களுடைய அக்கிரம செயல்களுக்காக அவர்களை இடி முழக்கம் தாக்கியது. (பார்க்க 7:155)
அதுமட்டுமின்றி அவர்களுக்கு மூஸா நபி மூலம் தெளிவான அறிவுரைகள் வந்த பின்பும் அவர்கள் ஒரு கட்டத்தில் காளைக் கன்றை தெய்வ வழிபாட்டிற்காக எடுத்துக் கொண்டனர். அதையும் பெரிது படுத்தாமல் அவர்களுக்கு வாய்ப்பளித்து அவர்கள் நேர்வழி பெற, மூஸா நபி மூலமாக தெளிவான வழிகாட்டுதல்கள் இறைவனிடமிருந்து அருளப்பட்டன. (2:56)
இப்போதும் அதே போல் தேவையற்ற தர்க்கங்கள் செய்கின்றனர். இறைவழிகாட்டுதலை ஏற்றுக் கொண்டவர்களே! நீங்கள் அவர்களைப் போன்று ஆகிவிடாதீர்கள்.
وَرَفَعْنَا فَوْقَهُمُ ٱلطُّورَ بِمِيثَٰقِهِمْ وَقُلْنَا لَهُمُ ٱدْخُلُوا۟ ٱلْبَابَ سُجَّدًۭا وَقُلْنَا لَهُمْ لَا تَعْدُوا۟ فِى ٱلسَّبْتِ وَأَخَذْنَا مِنْهُم مِّيثَٰقًا غَلِيظًۭا.
4:154. மேலும் உயரமான ‘தூர்’ என்னும் மலை அடிவாரத்தில் வாழ்ந்து வந்த போது, அவர்களிடம் உறுதிமொழி வாங்கிக் கொண்டோம். அதன்படி வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் இறை கட்டளைக்கு மட்டுமே தலை வணங்கி செயல்படும்படி அறிவுருத்தினோம். மேலும் வரம்பு மீறி அழிந்து போன மீனவ கூட்டத்தைச் சேர்ந்தவர்களைப் போல் ஆகிவிடாதீர்கள் என்று உபதேசித்தோம். இப்படியாக அவர்களிடம் உறுதிமொழி வாங்கிக் கொண்டோம்.
فَبِمَا نَقْضِهِم مِّيثَٰقَهُمْ وَكُفْرِهِم بِـَٔايَٰتِ ٱللَّهِ وَقَتْلِهِمُ ٱلْأَنۢبِيَآءَ بِغَيْرِ حَقٍّۢ وَقَوْلِهِمْ قُلُوبُنَا غُلْفٌۢ ۚ بَلْ طَبَعَ ٱللَّهُ عَلَيْهَا بِكُفْرِهِمْ فَلَا يُؤْمِنُونَ إِلَّا قَلِيلًۭا.
4:155. ஆனால் அவர்கள் காலப்போக்கில் அல்லாஹ்விடம் செய்து கொண்ட ஒப்பந்தத்தை மீறி, இறைவழிகாட்டுதலை நிராகரிப்பவர்களாக ஆகிவிட்டார்கள். இறைக் கட்டளைக்கு இணங்கி நடக்க அவ்வப்போது வந்த இறைத் தூதர்களையும் கொலை செய்யவே முனைந்தார்கள்.
எங்கள் இதயங்களில் திரை ஏற்பட்டுள்ளது எனவே உங்களுடைய எந்த உபதேசமும் நம்மிடம் செல்லாது என்றே கூறி வந்தனர். இதனால் அவர்கள் அல்லாஹ்வின் அனைத்து அருட்கொடைகளையும் இழந்து நிற்கும் நிலை ஏற்பட்டுவிட்டது.
அல்லாஹ்வின் நியதிப்படி இத்தகையவர்களின் இதயங்களில் திரை ஏற்பட்டு விடுகிறது. எனவே அவர்களில் மிகச் சிலரே இறைவழிகாட்டுதலை ஏற்றுக் கொள்வார்கள். இப்போதும் மனிதனின் நிலை இப்படியாகவே உள்ளது.
وَبِكُفْرِهِمْ وَقَوْلِهِمْ عَلَىٰ مَرْيَمَ بُهْتَٰنًا عَظِيمًۭا.
4:156. இப்படியாக அல்லாஹ்வின் வழிகாட்டுதலை ஏற்க மறுப்பதோடு, ஈஸா நபியின் தாயார் மர்யமைப் பற்றியும் பல அவதூறுகளை சொல்லி அவருடைய கண்ணியத்திற்கு பங்கம் விளைவிக்கின்றனர். இப்படி செய்வதால், அவர்களுக்கு நேர்வழி கிடைக்குமா?
وَقَوْلِهِمْ إِنَّا قَتَلْنَا ٱلْمَسِيحَ عِيسَى ٱبْنَ مَرْيَمَ رَسُولَ ٱللَّهِ وَمَا قَتَلُوهُ وَمَا صَلَبُوهُ وَلَٰكِن شُبِّهَ لَهُمْ ۚ وَإِنَّ ٱلَّذِينَ ٱخْتَلَفُوا۟ فِيهِ لَفِى شَكٍّۢ مِّنْهُ ۚ مَا لَهُم بِهِۦ مِنْ عِلْمٍ إِلَّا ٱتِّبَاعَ ٱلظَّنِّ ۚ وَمَا قَتَلُوهُ يَقِينًۢا.
4:157. மேலும் அவர்கள் சொல்லி வரும் கட்டுக் கதைகளில், மர்யமின் குமாரரும் இறைத் தூதருமான ஈஸாவை கொன்று விட்டதாக சொல்வதும் ஒன்றாகும். ஆனால் உண்மை என்னவென்றால் அவர்கள் அவரை கொல்லவும் இல்லை அவர்கள் சொல்லி வருவது போல் அவரை சிலுவையில் அறையவும் இல்லை. இவை யாவும் அவர்களுடைய யூகங்களே. அதில் பலர் மாறுபட்ட கருத்துக்களை கொண்டு இன்னமும் சந்தேகத்திலேயே இருக்கின்றனர். இது பற்றி அவர்களிடம் தெளிவான ஞானம் எதுவும் இல்லை. வெறும் யூகங்களை வைத்தே பேசி வருகின்றனர். ஆக அவர் கொல்லப்படவே இல்லை என்பதுதான் உண்மையாகும்.
بَل رَّفَعَهُ ٱللَّهُ إِلَيْهِ ۚ وَكَانَ ٱللَّهُ عَزِيزًا حَكِيمًۭا.
4:158. அவர்கள் கூறி வருவது போல் சிலுவையில் அறையப்பட்டு, அவர் இழிவான மரணத்திற்கு ஆளாகவில்லை. மாறாக அல்லாஹ்வின் நியதிப்படி அவருக்கு கண்ணியமும் உயர்வும் கிடைத்தன. நிச்சயமாக அல்லாஹ்வின் செயல் திட்டங்கள் யாவும் மாபெரும் ஞானத்தின் அடிப்படையில் செயல்படக் கூடியவையே ஆகும்.
وَإِن مِّنْ أَهْلِ ٱلْكِتَٰبِ إِلَّا لَيُؤْمِنَنَّ بِهِۦ قَبْلَ مَوْتِهِۦ ۖ وَيَوْمَ ٱلْقِيَٰمَةِ يَكُونُ عَلَيْهِمْ شَهِيدًۭا.
4:159. இப்போதோ அந்த வேதமுடையவர்களை கவனியுங்கள். மனிதனின் பாவங்களை போக்கி, அவர்களை பரிசுத்தமாக்கவே ஈஸா நபி சிலுவையில் ஏறி இரத்தம் சிந்தியதாக திடமாக நம்புகின்றனர். குறைந்தது மரணம் சம்பவிக்கும் முன்பாவது இதை ஒவ்வொரு கிறிஸ்தவரும் மனதார ஏற்றுக்கொள்ள வேண்டும் என்கின்றனர். ஆனால் மறுமைநாளில் இவர்களின் இக்கூற்றிற்கு எதிராக ஈஸா நபியே சாட்சி சொல்வார். (பார்க்க:5-116&117)
فَبِظُلْمٍۢ مِّنَ ٱلَّذِينَ هَادُوا۟ حَرَّمْنَا عَلَيْهِمْ طَيِّبَٰتٍ أُحِلَّتْ لَهُمْ وَبِصَدِّهِمْ عَن سَبِيلِ ٱللَّهِ كَثِيرًۭا.
4:160. யூதர்களோ வேத நூலை நேரடியாக இறக்கிக் காட்ட சொல்கின்றனர். (4:153) இப்படிப்பட்ட விதண்டா வாதங்களும், முறையற்ற செயல்களையும் செய்து வந்த காரணத்தினால், அவர்களுக்கு பல விஷயங்களில் கட்டுப்பாடுகளும் தடை உத்தரவும் விதிக்கப்பட்டு இருந்தன. மேலும் அல்லாஹ் காட்டிய வழியில் தம் செல்வங்களை செலவழிக்காமல் வீண் விரயம் செய்து வந்தார்கள். அவர்கள் திருந்தி வாழ்வதற்காக இத்தகைய தடை உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு இருந்தன.
وَأَخْذِهِمُ ٱلرِّبَوٰا۟ وَقَدْ نُهُوا۟ عَنْهُ وَأَكْلِهِمْ أَمْوَٰلَ ٱلنَّاسِ بِٱلْبَٰطِلِ ۚ وَأَعْتَدْنَا لِلْكَٰفِرِينَ مِنْهُمْ عَذَابًا أَلِيمًۭا.
4:161. உதாரணத்திற்கு வட்டி வாங்குவதற்குத் தடை உத்தரவு இருந்தது. ஆனால் அவர்கள் அதை புறக்கணித்து, வட்டி வாங்கி ஏழை எளிய மக்களின் உழைப்பில் சுகம் காணும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டார்கள். அநியாயமாக ஏழை எளியோரின் சொத்துக்களை அபகரித்து வந்தார்கள். இவர்கள் செய்து வந்த செயல்களின் விளைவுகள் அல்லாஹ்வின் நியதிப்படி தோற்றத்திற்கு வந்த கால கட்டத்தில் கடுமையான தண்டனைக்கு ஆளானார்கள். இறைவழிகாட்டுதலை நிராகரித்து அதற்கு எதிராக செயல்படுபவர்களுக்கு இப்படிப்பட்ட கடுமையான வேதனைகள் சித்தப்படுத்தப்பட்டுள்ளன என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
لَّٰكِنِ ٱلرَّٰسِخُونَ فِى ٱلْعِلْمِ مِنْهُمْ وَٱلْمُؤْمِنُونَ يُؤْمِنُونَ بِمَآ أُنزِلَ إِلَيْكَ وَمَآ أُنزِلَ مِن قَبْلِكَ ۚ وَٱلْمُقِيمِينَ ٱلصَّلَوٰةَ ۚ وَٱلْمُؤْتُونَ ٱلزَّكَوٰةَ وَٱلْمُؤْمِنُونَ بِٱللَّهِ وَٱلْيَوْمِ ٱلْءَاخِرِ أُو۟لَٰٓئِكَ سَنُؤْتِيهِمْ أَجْرًا عَظِيمًا.
4:162. ஆனால் அவர்களுள் வேத ஞானங்களில் தேர்ச்சி பெற்றவர்களும் இருக்கிறார்கள். உமக்கும் உமக்கு முன்னால் வந்த வேத உபதேசங்களையும் ஏற்று, முறைப்படி இறை நெறிமுறைகளைக் கடைப்பிடித்து சமுதாய மேம்பாட்டிற்காக உதவி செய்பவர்களும் இருக்கிறார்கள். அவர்கள் அல்லாஹ்வின் வழிகாட்டுதலையும், “மனித செயலுக்கு ஏற்ற இறுதி விளைவுகள்” என்ற ஆஃகிரத்தையும் ஏற்று நடக்கிறார்கள். அவர்களுக்கும் அல்லாஹ்விடமிருந்து மகத்தான சன்மானம் கிடைக்கும்.
۞ إِنَّآ أَوْحَيْنَآ إِلَيْكَ كَمَآ أَوْحَيْنَآ إِلَىٰ نُوحٍۢ وَٱلنَّبِيِّۦنَ مِنۢ بَعْدِهِۦ ۚ وَأَوْحَيْنَآ إِلَىٰٓ إِبْرَٰهِيمَ وَإِسْمَٰعِيلَ وَإِسْحَٰقَ وَيَعْقُوبَ وَٱلْأَسْبَاطِ وَعِيسَىٰ وَأَيُّوبَ وَيُونُسَ وَهَٰرُونَ وَسُلَيْمَٰنَ ۚ وَءَاتَيْنَا دَاوُۥدَ زَبُورًۭا.
4:163. உமக்கு முன்னால் வந்த உபதேசங்கள் என்றதும், அவை வேறு, இந்த வேதமான குர்ஆன் வேறு என்று எண்ணிவிடாதீர்கள். ஆதி முதல் நூஹ் நபி மற்றும் அவரைத் தொடர்ந்து வந்த ஏனைய நபிமார்கள், குறிப்பாக இப்றாஹீம் நபி, இஸ்மாயீல் நபி, இஸ்ஹாக் நபி, யாஃகூப் நபி, மற்றும் அவருடைய சந்ததியர்களில் வந்தவர்களுக்கும் மேலும் ஈஸா நபி, அய்யூப் நபி, யூனுஸ் நபி, ஹாரூன் நபி, சுலைமான் நபிக்கும், தாவூத் நபிக்கு அளிக்கப்பட்ட ‘ஜபூர்’ என்னும் வேதமும் ஒரே அடிப்படையைக் கொண்டதாகும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
وَرُسُلًۭا قَدْ قَصَصْنَٰهُمْ عَلَيْكَ مِن قَبْلُ وَرُسُلًۭا لَّمْ نَقْصُصْهُمْ عَلَيْكَ ۚ وَكَلَّمَ ٱللَّهُ مُوسَىٰ تَكْلِيمًۭا.
4:164. இப்படியாக வந்த பல நபிமார்களில் சிலருடைய வரலாற்று நிகழ்வுகளை நாம் உமக்கு விளக்கியுள்ளோம். உமக்கு முன்னால் வந்த பல நபிமார்களைப் பற்றி நாம் கூறவில்லை. மேலும் மூஸா நபியிடம் நாம் பேசவும் செய்தோம். (பார்க்க 27:8-9) வராலற்று சம்பவங்களும் வழிகாட்டுதல் அளிக்கும் விதங்களும் வெவ்வேறாக இருக்கலாம். ஆனால் ஒவ்வொரு இறைத்தூதருக்கும் அளிக்கப்பட்ட இறைச்செய்தி ஒரே அடிப்படையைக் கொண்டதாகும்.
رُّسُلًۭا مُّبَشِّرِينَ وَمُنذِرِينَ لِئَلَّا يَكُونَ لِلنَّاسِ عَلَى ٱللَّهِ حُجَّةٌۢ بَعْدَ ٱلرُّسُلِ ۚ وَكَانَ ٱللَّهُ عَزِيزًا حَكِيمًۭا.
4:165. ஆக எல்லா நபிமார்களின் வருகையின் நோக்கமும் ஒரே அடிப்டையைக் கொண்டதாக இருந்தது. அதவாவது ஆக்கப்பூர்வமான நற்காரியங்களை செய்வோருக்கு நல்ல வாழ்வு கிடைக்கும் என்ற நற்செய்தி கூறுவதும், தீய செயல்களால் ஏற்படும் விபரீத விளைவுகளைப் பற்றி எடுத்துரைத்து முன்னெச்சரிக்கை செய்வதும் அவர்களுடைய பணியாக இருந்தது. ஏனெனில் வருங்காலத்தில் மக்கள் அவதிப்படும் போது, எங்களுக்கு நேர்வழி காட்ட யாரையும் அல்லாஹ் அனுப்பவில்லையே என்று சொல்லக் கூடாது என்பதற்காகவே இந்த ஏற்பாடு ஆகும். ஆக அல்லாஹ்வின் செயல் திட்டம் எல்லாவற்றையும் விட ஞானத்தில் மிகைத்ததாகவும் பேராற்றல் மிக்கதாகவும் உள்ளது
لَّٰكِنِ ٱللَّهُ يَشْهَدُ بِمَآ أَنزَلَ إِلَيْكَ ۖ أَنزَلَهُۥ بِعِلْمِهِۦ ۖ وَٱلْمَلَٰٓئِكَةُ يَشْهَدُونَ ۚ وَكَفَىٰ بِٱللَّهِ شَهِيدًا.
4:166. அல்லாஹ் இறக்கி அருளியுள்ள அறிவுப்பூர்வமான வழிகாட்டுதல்கள் யாவும் தெளிவான ஞானத்தின் அடிப்படையிலானவை என்பதற்கு அழகான முறையில் இயங்கி வரும் இவ்வுலகமே சாட்சியாகத் திகழ்கிறது. அல்லாஹ் உருவாக்கிய பிரபஞ்ச இயற்கை சக்திகளின் செயல்பாடுகளும் இதற்கு சாட்சி பகர்கின்றன. இதை விட சிறந்த ஆதாரங்களும் சாட்சிகளும் வேறு எதுவாக இருக்க முடியும்?
إِنَّ ٱلَّذِينَ كَفَرُوا۟ وَصَدُّوا۟ عَن سَبِيلِ ٱللَّهِ قَدْ ضَلُّوا۟ ضَلَٰلًۢا بَعِيدًا.
4:167. எனவே இறைவழிகாட்டுதலுக்கு எதிராக செயல்பட்டு அல்லாஹ்வின் செயல் திட்டங்கள் நிறைவேறாதபடி தடைகளை ஏற்படுத்த எண்ணுவோர் வழிகேட்டில் வெகு தூரம் சென்றுவிடுவார்கள் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
إِنَّ ٱلَّذِينَ كَفَرُوا۟ وَظَلَمُوا۟ لَمْ يَكُنِ ٱللَّهُ لِيَغْفِرَ لَهُمْ وَلَا لِيَهْدِيَهُمْ طَرِيقًا.
4:168. இப்படியாக இறைவழிகாட்டுதலை நிராகரித்து அநியாயம் செய்து வருவோருக்கு, அல்லாஹ்வின் புறத்திலிருந்து ஒருபோதும் நிலையான பாதுகாப்பான வாழ்க்கை கிடைக்காது. அவர்கள் திருந்தி வாழ வாய்ப்பும் பெற மாட்டாhகள்.
إِلَّا طَرِيقَ جَهَنَّمَ خَٰلِدِينَ فِيهَآ أَبَدًۭا ۚ وَكَانَ ذَٰلِكَ عَلَى ٱللَّهِ يَسِيرًۭا.
4:169. இத்தகையவர்களுக்கு நிரந்தர நரக வேதனைகள் தான் கிடைக்கும். அதிலிருந்து மீள எந்த வழியும் இருக்காது. இவ்வாறு அவர்களை தண்டிப்பதில் அல்லாஹ்விற்கு எவ்வித சிரமும் இல்லை.
يَٰٓأَيُّهَا ٱلنَّاسُ قَدْ جَآءَكُمُ ٱلرَّسُولُ بِٱلْحَقِّ مِن رَّبِّكُمْ فَـَٔامِنُوا۟ خَيْرًۭا لَّكُمْ ۚ وَإِن تَكْفُرُوا۟ فَإِنَّ لِلَّهِ مَا فِى ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضِ ۚ وَكَانَ ٱللَّهُ عَلِيمًا حَكِيمًۭا.
4:170. எனவே உலக மக்களே! உங்களை படைத்த இறைவனிடமிருந்து உங்கள் வாழ்வின் சரியான பாதையைக் காட்டும் நேர்வழி வந்து விட்டது. அதை ஏற்று அதன்படி நடந்தால், உங்களுக்கு நலமே உண்டாகும். அதை நிராகரித்து மாறு செய்தால் அதன் பாதிப்புகள் உங்களுக்கே. ஏனென்றால் வானங்களில் உள்ளவையும் பூமியில் உள்ளவை யாவும் அல்லாஹ்வின் கட்டளைப்படியே செயல்படுகின்றன. நீங்கள் இந்த இறைச் சட்டங்களுக்கு எதிராக செயல்பட்டால், உங்கள் செயல்களின் விளைவுகளை சந்தித்தே ஆகவேண்டும். அல்லாஹ் நீங்கள் செய்வது அனைத்தையும் நன்கறிபவனாகவும் ஞானமிக்கவனாகவும் இருக்கின்றான்.
يَٰٓأَهْلَ ٱلْكِتَٰبِ لَا تَغْلُوا۟ فِى دِينِكُمْ وَلَا تَقُولُوا۟ عَلَى ٱللَّهِ إِلَّا ٱلْحَقَّ ۚ إِنَّمَا ٱلْمَسِيحُ عِيسَى ٱبْنُ مَرْيَمَ رَسُولُ ٱللَّهِ وَكَلِمَتُهُۥٓ أَلْقَىٰهَآ إِلَىٰ مَرْيَمَ وَرُوحٌۭ مِّنْهُ ۖ فَـَٔامِنُوا۟ بِٱللَّهِ وَرُسُلِهِۦ ۖ وَلَا تَقُولُوا۟ ثَلَٰثَةٌ ۚ ٱنتَهُوا۟ خَيْرًۭا لَّكُمْ ۚ إِنَّمَا ٱللَّهُ إِلَٰهٌۭ وَٰحِدٌۭ ۖ سُبْحَٰنَهُۥٓ أَن يَكُونَ لَهُۥ وَلَدٌۭ ۘ لَّهُۥ مَا فِى ٱلسَّمَٰوَٰتِ وَمَا فِى ٱلْأَرْضِ ۗ وَكَفَىٰ بِٱللَّهِ وَكِيلًۭا.
4:171. வேதமுடையவர்களே! நீங்கள் மார்க்க விஷயங்களில் வரையறுக்கப்பட்ட எல்லையை மீறாதீர்கள். அல்லாஹ்வைப் பற்றி உண்மையைத் தவிர வேறெதையும் கூறாதீர்கள். நிச்சயமாக மர்யமின் குமாரர் ஈஸா மஸீஹ் ஓர் இறைத்தூதரே ஆவார். மேலும் அவர் இறைக் கொள்கைக்குச் சான்றாக விளங்கியவர் ஆவார். இது விஷயமாக மர்யமிற்கு முன் கூட்டியே செய்தியும் அனுப்பப்பட்டது. இறைவனின் வழிகாட்டுதலை ஏற்று அதன்படி மக்களை வழி நடத்துவதே அவருடைய போதனைகளின் கருவூலமாக இருந்தது. அதை மூன்று சித்தாந்தங்களாகப் பிரித்து பேசாதீர்கள். இப்படி பேசி வருவதை தவிர்த்துக் கொண்டால் அது உங்களுக்கே நலம். நிச்சயமாக ஏக இறைவனாகிய அல்லாஹ் ஒருவன் மட்டுமே. அவனுக்கு ஒரு மகன் என்ற பேச்சிற்கே இடமில்லை. இப்படிப்பட்ட கற்பனைக்கெல்லாம் அப்பாற்பட்டவன் அவன். வானங்களிலும் பூமியிலும் இருப்பவை யாவும் அவனுக்கே உரியவை ஆகும். அவன் யாரையும் சார்ந்து இல்லை. அகிலங்கள் அனைத்தும் செயல்பட அவனை சார்ந்தே இருக்கின்றன.
لَّن يَسْتَنكِفَ ٱلْمَسِيحُ أَن يَكُونَ عَبْدًۭا لِّلَّهِ وَلَا ٱلْمَلَٰٓئِكَةُ ٱلْمُقَرَّبُونَ ۚ وَمَن يَسْتَنكِفْ عَنْ عِبَادَتِهِۦ وَيَسْتَكْبِرْ فَسَيَحْشُرُهُمْ إِلَيْهِ جَمِيعًۭا.
4:172. கிறிஸ்தவர்களைப் பொருத்த வரையில் ஈஸா மஸீஹ்வும் மலக்குகளும் அல்லாஹ்வுக்கு அடிபணிந்து செயல்படுவதாகச் சொல்வது கௌரவக் குறைவு எனக் கருதுகிறார்கள். ஆனால் அவரும் மலக்குகளும் அவ்வாறு கருதவில்லை. யார் அல்லாஹ்வின் கட்டளைக்கு அடிபணிந்து செயல்படுவதைக் கௌரவ குறைவாக எண்ணி ஆணவத்துடன் நடந்து கொள்கிறார்களோ, “மனித செயலுக்கேற்ற இறுதி விளைவுகள்” என்ற சட்டத்தின் பிடியில் சிக்கிவிடுவர். அவர்கள் அனைவரையும் ஒன்றுதிரட்டி அவர்கள் செய்த செயல்களுக்கு பதில் சொல்லியே ஆக வேண்டும் என்பதை அவர்கள் தெரிந்து கொள்ளட்டும்.
فَأَمَّا ٱلَّذِينَ ءَامَنُوا۟ وَعَمِلُوا۟ ٱلصَّٰلِحَٰتِ فَيُوَفِّيهِمْ أُجُورَهُمْ وَيَزِيدُهُم مِّن فَضْلِهِۦ ۖ وَأَمَّا ٱلَّذِينَ ٱسْتَنكَفُوا۟ وَٱسْتَكْبَرُوا۟ فَيُعَذِّبُهُمْ عَذَابًا أَلِيمًۭا وَلَا يَجِدُونَ لَهُم مِّن دُونِ ٱللَّهِ وَلِيًّۭا وَلَا نَصِيرًۭا.
4:173. ஆக எந்த சமுதாயம் அல்லாஹ்வின் வழிகாட்டுதலை ஏற்று அதன்படி ஆக்கப்பூர்வமான நற்செயல்களைச் செய்கின்றதோ, அந்த சமுதாயத்திற்கு நிச்சயமாக நற்பலன்கள் கிடைக்கும். அவர்கள் எதிர்பார்த்ததை விட அதிகமாகவே நன்மைகள் கிடைக்கும். மாறாக எந்த சமுதாயம் அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு வாழ்வதை கௌரவக் குறைவு என்று எண்ணி ஆணவத்துடன் நடந்து கொள்கிறதோ, அது துயர்மிக்க வேதனைகளில் சிக்கிக் கொள்ளும். அந்த வேதனைகளிலிருந்து வெளிவர யாரும் துணை நின்று உதவி புரிய மாட்டார்கள். அதற்கு ஒரே வழி அல்லாஹ்வின் வழிகாட்டுதலை ஏற்று அதன்படி செயல்படுவதே ஆகும். மேலும் மரணத்திற்குப் பின்பு இந்த வாய்ப்பும் கைவிட்டு நழுவி விடும்.
يَٰٓأَيُّهَا ٱلنَّاسُ قَدْ جَآءَكُم بُرْهَٰنٌۭ مِّن رَّبِّكُمْ وَأَنزَلْنَآ إِلَيْكُمْ نُورًۭا مُّبِينًۭا.
4:174. உலக மக்களே! இவையே உங்களை படைத்த இறைவனிடமிருந்து வந்துள்ள ஆதாரப்பூர்வமான நிலைமாறாத தெளிவான சட்ட விதிமுறைகளாகும். இவை உங்களுடைய ஒளிமயமான வாழ்விற்கு விரிவான வழிகாட்டுதலை அளிக்கும் ஒளிவிளக்காகத் திகழ்கிறது.
فَأَمَّا ٱلَّذِينَ ءَامَنُوا۟ بِٱللَّهِ وَٱعْتَصَمُوا۟ بِهِۦ فَسَيُدْخِلُهُمْ فِى رَحْمَةٍۢ مِّنْهُ وَفَضْلٍۢ وَيَهْدِيهِمْ إِلَيْهِ صِرَٰطًۭا مُّسْتَقِيمًۭا.
4:175. ஆக எந்த சமுதாயம் இவற்றை தன் வாழ்வின் இலட்சியமாகக் கருதி, அனைவரும் ஒருங்கிணைந்து உறுதிப்பட செயல்பதடுமோ அது அல்லாஹ்வின் அருட்கொடைகளை ஈட்டிக்கொள்ளும் ஆற்றலைப் பெற்றுவிடும். மேலும் மனித வாழ்க்கையின் சரியான இலக்கை அடையும் பாதையும் விரிவடைந்து வரும்.
அந்த இலக்கு என்ன என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள்:
(1) உலக மக்கள் அனைவரும் ஒரே இனத்தவர். அவர்களுள் சகோதரத்துவமும் பாசமும் வளர வேண்டும். (பார்க்க:2:213)
(2) எவ்வித பயமோ கவலையோ இல்லாத பாதுகாப்பான வாழ்வு அனைத்து தரப்பு மக்களுக்கும் கிடைக்கச் செய்ய வேண்டும். (பார்க்க 2:38)
(3) தாராளப் பொருளாதார வசதிகள் கொண்ட சமுதாயமாக விளங்க வேண்டும் (பார்க்க 2:118,119)
(4) நீதியும் சமத்துவமும் கொண்டு விளங்கும் இவ்வுலகம், இறைவழிகாட்டுதல் என்ற ஒளியைக் கொண்டு பிரகாசிக்க வேண்டும். (பார்க்க 39:69)
(5) அனைத்து தரப்பு மக்களின் ஆற்றல்களையும் வேகமாய் வளரச் செய்து, வாழ்வின் முன்னேற்றப் படித்தரங்களைக் கடக்கும் தகுதி உடைவர்களாய் உருவாக்க வேண்டும் (பார்க்க 84:19)
(6) மனிதப் பிரச்சினைகள் அனைத்தும் இறைவழிகாட்டுதலின் படியே தீர்வு காணப்பட வேண்டும் (பார்க்க- 5:44) இவை அனைத்தும் அல்லாஹ் நிர்ணயித்த மனித வாழ்வின் இலக்கின் பால் அழைத்துச் செல்கின்ற நேரானப் பாதையாகும்.
يَسْتَفْتُونَكَ قُلِ ٱللَّهُ يُفْتِيكُمْ فِى ٱلْكَلَٰلَةِ ۚ إِنِ ٱمْرُؤٌا۟ هَلَكَ لَيْسَ لَهُۥ وَلَدٌۭ وَلَهُۥٓ أُخْتٌۭ فَلَهَا نِصْفُ مَا تَرَكَ ۚ وَهُوَ يَرِثُهَآ إِن لَّمْ يَكُن لَّهَا وَلَدٌۭ ۚ فَإِن كَانَتَا ٱثْنَتَيْنِ فَلَهُمَا ٱلثُّلُثَانِ مِمَّا تَرَكَ ۚ وَإِن كَانُوٓا۟ إِخْوَةًۭ رِّجَالًۭا وَنِسَآءًۭ فَلِلذَّكَرِ مِثْلُ حَظِّ ٱلْأُنثَيَيْنِ ۗ يُبَيِّنُ ٱللَّهُ لَكُمْ أَن تَضِلُّوا۟ ۗ وَٱللَّهُ بِكُلِّ شَىْءٍ عَلِيمٌۢ.
4:176. இப்போது பாகப்பிரிவினை சம்பந்தமாக மேற்கொண்டு சில விளக்கங்கள் கேட்கப்படுகின்றன. அதற்கு அல்லாஹ்விடமிருந்து இவ்வாறு பதில் வருகிறது.தாய் தந்தை, பாட்டனார், பிள்ளை என்று எதுவுமே வாரிசுதாரர்கள் இல்லாத சொத்துக்கள் யாருக்குப் போய் சேரும் என்பதே அவர்களின் கேள்வியாகும். அவ்வாறு வாரிசு இல்லாத செல்வந்தர் இறந்துவிட்டால், அவருக்கு பிள்ளைகள் இல்லாதிருந்து ஒரு சகோதரி மட்டும் இருந்தால் அச்சொத்திலிருந்து அவளுக்கு சரிபாதி கிடைக்கும். இறந்து போனவர் பெண்ணாக இருந்தால் அவளுக்குப் பிள்ளைகள் இல்லாதிருந்தால் அவளின் சகோதரன் அவளுடைய சொத்திற்கு முழு வாரிசு ஆவான். சகோதரிகள் ஒன்றுக்கு மேல் இருந்தால் அச்சொத்தில் மூன்றில் இரு பகுதிகளை எடுத்துச் சமமாகப் பிரித்து தரப்படும். சகோதரர்கள் சகோதரிகள் இருந்தால் ஏற்கனவே சொன்ன 2:1 என்ற விகிதாச்சாரப்படி பிரித்து தரப்படும். இதுவே அல்லாஹ்வின் கட்டளையாகும். நீங்கள் வழிதவறிச் செல்லாமல் இருக்க உங்களுக்கு இந்த விளக்கங்கள் தரப்படுகின்றன. நிச்சயமாக அல்லாஹ் யாவற்றையும் அறிபவனாகவே இருக்கின்றான்.