بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
48:0.அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் அறிவுரைப்படியே அனைத்துக் காரியங்களையும் செய்ய நாடுகிறேன். (பார்க்க 6:162)
إِنَّا فَتَحْنَا لَكَ فَتْحًۭا مُّبِينًۭا.
48:1. இறைவழிகாட்டுதலின் படி சமுதாயத்ததை வழிநடத்திச் செல்பவரே! தர்மத்திற்கும் அதர்மத்திற்குமிடையே நடந்த போரில் இறைவனின் நியதிப்படி உமக்கு தீர்க்கமான வெற்றி கிடைத்தது.
இறை நிராகரிப்பவர்கள் உமக்கு எதிராக பல அவதூறுகளையும் இடையூறுகளையும் செய்து வந்தார்கள். இதனால் இறைவனின் ஆட்சியமைப்பு செயல்திட்டங்களை நிறைவேற்றுவதில் சிரமங்கள் ஏற்பட்டு வந்தன. அவர்களை அப்படியே விட்டுவிட்டால் இனியும் அவ்வாறே செய்து வருவார்கள். எனவே இந்த வெற்றியின் மூலம் அவர்களுடைய அக்கிரமங்களை ஒடுக்கி வைத்து
لِّيَغْفِرَ لَكَ ٱللَّهُ مَا تَقَدَّمَ مِن ذَنۢبِكَ وَمَا تَأَخَّرَ وَيُتِمَّ نِعْمَتَهُۥ عَلَيْكَ وَيَهْدِيَكَ صِرَٰطًۭا مُّسْتَقِيمًۭا.
48:2. உம்முடைய செயல்திட்டங்களை பாதுகாப்பாக நிறைவேற்றி வர வழிகள் பிறக்கும். இனியும் உமக்கு எதிராக அவர்களுடைய தொல்லைகள் எதுவும் இராது. இப்படியாக உமக்கு இறைவனின் நியதிப்படி அருட்கொடைகள் கிடைத்து வரும். மேலும் இறைச் செயல் திட்டங்களை நிறைவேற்ற உமக்கு நிலையான பாதையும் கிடைத்து விடும். (மேலும் பார்க்க 40:55, 47:19)
وَيَنصُرَكَ ٱللَّهُ نَصْرًا عَزِيزًا.
48:3. இதை தொடர்ந்து அல்லாஹ்வின் நியதிப்படி நாட்டில் உமக்கு முழு அதிகாரப் பலமும் கிடைத்துவிடும். மேலும் வாய்மையே வெல்லும் என்பதற்கு நீரே உலகார்க்கு எடுத்துக்காட்டாக விளங்குவீர்.
هُوَ ٱلَّذِىٓ أَنزَلَ ٱلسَّكِينَةَ فِى قُلُوبِ ٱلْمُؤْمِنِينَ لِيَزْدَادُوٓا۟ إِيمَٰنًۭا مَّعَ إِيمَٰنِهِمْ ۗ وَلِلَّهِ جُنُودُ ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضِ ۚ وَكَانَ ٱللَّهُ عَلِيمًا حَكِيمًۭا.
48:4. இந்த வெற்றியின் மூலம் இறைவனின் செயல்வீரர்களாகிய மூஃமின்களின் உள்ளங்களிலும் மனநிறைவும் அமைதியும் ஏற்படும். இறைவனின் ஆட்சியமைப்பு திட்டங்களை நிறைவேற்றுவதில் அவர்களுக்கு மென்மேலும் ஆர்வமும் உற்சாகமும் கூடிவரும். வானங்களிலும் பூமியிலும் செயல்பட்டு வரும் இயற்கை சக்திகள் தாம் மனிதனின் ஒவ்வொரு செயலுக்கும் சரியான பலன்களை ஏற்படுத்தி வருகின்றன. அவற்றின் துணையைக் கொண்டு தான் இந்த வெற்றியும் கிடைத்தது. (பார்க்க 9:36) (பார்க்க 45:22, 53:31) இவை யாவும் அல்லாஹ்வின் தெளிவான ஞானத்தின் அடிப்படையில் ஏற்படுவதாகும்.
لِّيُدْخِلَ ٱلْمُؤْمِنِينَ وَٱلْمُؤْمِنَٰتِ جَنَّٰتٍۢ تَجْرِى مِن تَحْتِهَا ٱلْأَنْهَٰرُ خَٰلِدِينَ فِيهَا وَيُكَفِّرَ عَنْهُمْ سَيِّـَٔاتِهِمْ ۚ وَكَانَ ذَٰلِكَ عِندَ ٱللَّهِ فَوْزًا عَظِيمًۭا.
48:5. இப்படியாக போரில் கிடைக்கும் வெற்றிக்குப் பிறகு, இறைவனின் வழிகாட்டுதலின்படி செயலாற்றும் ஆண்களும் பெண்களும் கூடிய சமுதாயம், சுவனத்திற்கு ஒப்பானதாக மாறிவரும். அவர்களுக்கு தாராளமாக பொருளாதார வசதிகளும் குன்றாது கிடைத்து வரும். மேலும் அவர்கள் நாட்டை சீர்கெடுக்கும் பாவச் செயல்களிலிருந்து விலகி இருப்பார்கள். இவை யாவும் அல்லாஹ்வின் வழிகாட்டுதலின்படி செயல்படுவதால் கிடைக்கின்ற மாபெரும் வெற்றியாகும்.
மேலும் நியாயமான ஆட்சிக்கு கிடைக்கும் வெற்றியின் பலனாக, அநியாய அக்கிரமங்கள் ஓய்ந்துவிடும். (பார்க்க 17:81) அதைத் தொடர்ந்து அராஜக ஆட்சியும் ஒழியும். எனவே
وَيُعَذِّبَ ٱلْمُنَٰفِقِينَ وَٱلْمُنَٰفِقَٰتِ وَٱلْمُشْرِكِينَ وَٱلْمُشْرِكَٰتِ ٱلظَّآنِّينَ بِٱللَّهِ ظَنَّ ٱلسَّوْءِ ۚ عَلَيْهِمْ دَآئِرَةُ ٱلسَّوْءِ ۖ وَغَضِبَ ٱللَّهُ عَلَيْهِمْ وَلَعَنَهُمْ وَأَعَدَّ لَهُمْ جَهَنَّمَ ۖ وَسَآءَتْ مَصِيرًۭا.
48:6. உதட்டளவில் ஈமான் கொள்வதாக கூறிக்கொண்டு அரசுக்கு எதிராக நயவஞ்சகமாக செயல்பட்டு வரும் ஆண்களையும் பெண்களையும், நாட்டின் வளர்ச்சிக்கு தடையாக இருக்கும் முஷ்ரிக்கான ஆண்களையும் பெண்களையும் வேதனை தரும் கேடுகள் சூழ்ந்து கொண்டே செல்லும். காரணம், அவர்கள் செய்து வந்த சட்ட விரோத செயல்களுக்கு அளவே இல்லாமல் இருந்தது. மேலும் அவர்கள் அல்லாஹ்வின் ஆட்சியாளர்களின் கோபத்திற்கு ஆளானார்கள். இத்தகையவர்களுக்கு அரசின் ஆதரவும் அரவணைப்பும் ஒருபோதும் கிடைக்காது. இப்படியாக அவர்களுடைய வாழ்வு வேதனை மிக்கதாக மாறிவரும். அப்படிப்பட்ட கேடுகெட்ட நிலை ஏற்படுவது மிகவும் கெட்டதாகும் அல்லவா?
وَلِلَّهِ جُنُودُ ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضِ ۚ وَكَانَ ٱللَّهُ عَزِيزًا حَكِيمًا.
48:7. மேலும் வானங்களிலும் பூமியிலும் உள்ள பல்வேறு சக்திகள் அல்லாஹ்வின் செயல் திட்டங்களின்படி செயல்பட்டு வருகின்றன. எனவே அவன் நிர்ணயித்த மனித செயல்களுக்கு ஏற்ற விளைவுகள் என்ற சட்டப்படி சந்தோஷங்களும் வேதனைகளும் ஏற்படும் (பார்க்க 45:22) நிச்சயமாக அல்லாஹ்வின் செயல் திட்டங்கள் யாவும் மாபெரும் ஞானத்தின் அடிப்படையில் உள்ளவையாகும்.
அகிலங்களும் பூமியும் எவ்வாறு அல்லாஹ்வின் செயல்திட்டங்களின் படி செயல்பட்டு வருகின்றனவோ, அவ்வாறே மனிதனும் அல்லாஹ்வின் செயல் திட்டங்களுக்கு உட்பட்டு செயல்பட வெண்டும். அப்போது தான் மனிதனின் வாழ்வு சிறப்பாக இருக்க முடியும். அந்த செயல் திட்டங்கள் என்னவென்பதை இந்த குர்ஆன் மூலம் தெளிவாக்கப்பட்டு விட்டது.
لِّتُؤْمِنُوا۟ بِٱللَّهِ وَرَسُولِهِۦ وَتُعَزِّرُوهُ وَتُوَقِّرُوهُ وَتُسَبِّحُوهُ بُكْرَةًۭ وَأَصِيلًا.
48:9. இதனால் அவர்கள் இறைவழிகாட்டுதலை மனதார ஏற்று, இறைத்தூதர் ஏற்படுத்தியுள்ள ஆட்சியமைப்பு திட்டங்களை மதித்து, அந்த ஆட்சியை கண்ணியப்படுத்த தம்மாலான உதவிகளை செய்து, இறை ஆட்சியின் புகழை மேலோங்க செய்வார்கள் (பார்க்க 7:157) இதற்காக அவர்கள் அல்லும் பகலும் அயராது பாடுபடுவார்கள். (பார்க்க 33:41-42)
இத்தகைய உயர் நோக்கங்களுடன் கொண்ட ஆட்சியமைப்பை இறைத்தூதர் தாமே உருவாக்குகின்ற ஒன்றல்ல. அவர் முழுக்க முழுக்க அல்லாஹ்வின் வழிகாட்டுதலின் அடிப்படையில் உருவாக்குகின்றார். எனவே அவர் ஏற்படுத்தும் ஆட்சியமைப்பு சட்டங்களைப் பின்பற்றுவதும் அல்லாஹ்வைப் பின்பற்றுவதும் ஒன்றே ஆகும்.(பார்க்க 3:31-32)
إِنَّ ٱلَّذِينَ يُبَايِعُونَكَ إِنَّمَا يُبَايِعُونَ ٱللَّهَ يَدُ ٱللَّهِ فَوْقَ أَيْدِيهِمْ ۚ فَمَن نَّكَثَ فَإِنَّمَا يَنكُثُ عَلَىٰ نَفْسِهِۦ ۖ وَمَنْ أَوْفَىٰ بِمَا عَٰهَدَ عَلَيْهُ ٱللَّهَ فَسَيُؤْتِيهِ أَجْرًا عَظِيمًۭا.
48:10. எனவே இறைவனின் ஆட்சியமைப்பு சட்டங்களுக்கு அடிபணிந்து செயல்படுவதாக இறைத்தூதரிடம் அவர்கள் அளிக்கும் வாக்குறுதி* உண்மையிலேயே அல்லாஹ்விடம் அளிக்கும் வாக்குறுதிக்கு சமமானதாகும். அவர்கள் வாக்குறுதி அளிக்கும்போது, அல்லாஹ்வின் உதவி அவர்களுக்கு பக்கபலமாக இருக்கிறது என்பதை அவர்கள் அறிந்து கொள்ளட்டும். எனவே இறைத் தூதரின் கட்டளைக்கு அவர்கள் முற்றிலும் அடிபணிந்து செயல்படட்டும். இவ்வாறு வாக்குறுதி அளித்த பின், யார் அதற்கு மாற்றமாக செயல்படுகிறாரோ, அதன் கேடுகள் அவரையே வந்தடையும். எவர் அல்லாஹ்வின் ஆட்சியமைப்பு சட்டங்களுக்கு ஆதரவாக செயல்படுகிறாரோ, அவருக்கு மகத்தான நற்பலன்கள் கிடைப்பது நிச்சயம். (பார்க்க 9:111)
மூஃமின்கள் ரசூலிடம் இவ்வாறு வாக்குறுதி அளிப்பதற்கு பைஅத் என்ற வார்த்தை பயன்படுத்துகிறது. ஆனால் இன்றைய கால கட்டத்தில் ஷேக்குமார்கள் பைஅத் செய்து கொண்டு, தம்மால் தான் சுவர்க்கத்திற்கு அழைத்துச் செல்ல முடியும் என்று கூறி, பாமர முஸ்லிம்களை ஏமாற்றிக் கொண்டு வருகிறார்கள். இது வண்மையாக கண்டிக்கத் தக்கதாகும்.
سَيَقُولُ لَكَ ٱلْمُخَلَّفُونَ مِنَ ٱلْأَعْرَابِ شَغَلَتْنَآ أَمْوَٰلُنَا وَأَهْلُونَا فَٱسْتَغْفِرْ لَنَا ۚ يَقُولُونَ بِأَلْسِنَتِهِم مَّا لَيْسَ فِى قُلُوبِهِمْ ۚ قُلْ فَمَن يَمْلِكُ لَكُم مِّنَ ٱللَّهِ شَيْـًٔا إِنْ أَرَادَ بِكُمْ ضَرًّا أَوْ أَرَادَ بِكُمْ نَفْعًۢا ۚ بَلْ كَانَ ٱللَّهُ بِمَا تَعْمَلُونَ خَبِيرًۢا.
48:11. இவ்வாறு வாக்குறுதி அளித்த பின்பும், சிலர் ஆட்சியமைப்பு கட்டளைக்கு அடிபணிந்து வர இயலாமைக்கு ஆயிரம் காரணங்களைக் கூறுவார்கள். குறிப்பாக இராணுவ பயிற்சிக்காகவோ போரில் கலந்துகொள்ளவோ ஆயத்தமாகிவிட கட்டளை பிறப்பிக்கும்போது, நாட்டுபுறத்து மக்களில் சிலரும் அதில் கலந்துகொள்ள இயலாமைக்கு காரணங்களை சொல்கிறார்கள். தமக்கு அன்றாட அலுவல்கள் இருப்பதாலும், குடும்பத்தை கவனிக்க வெண்டி இருப்பதாலும், தமக்கு விடுவிப்பு அளிக்குமாறு வேண்டி கொள்கிறார்கள். ஆனால் அது உண்மையல்ல. அவர்களுடைய உள்ளங்களில் இல்லாததை அவர்கள் பேசி வருகிறார்கள். அல்லாஹ்வின் நியதிப்படி அவர்களுக்கு பலன்களோ நஷ்டங்களோ ஏற்படுமானால் அவற்றை யாரால் தடுக்கமுடியும் என்று அவர்களிடம் கேளுங்கள்.* நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலும் அல்லாஹ்வின் கண்காணிப்பில் தான் உள்ளது என்பதை அவர்களுக்கு மீண்டும் தெரியப்படுத்துங்கள்.
அதாவது பகைவர்கள் உங்களைத் திடீரென்று தாக்கினால் அதிலிருந்து தம்மை பாதுகாத்துக் கொள்ள பயிற்சி எடுத்துக் கொள்வது மிகமிக முக்கியம். அப்படி பயிற்சி எடுத்துக் கொள்ளாவிடில் அவர்களுடைய தாக்குதலுக்கு பலியாகிவிடுவீர்கள். அதிலிருந்து உங்களை யார் காப்பாற்றுவது?
بَلْ ظَنَنتُمْ أَن لَّن يَنقَلِبَ ٱلرَّسُولُ وَٱلْمُؤْمِنُونَ إِلَىٰٓ أَهْلِيهِمْ أَبَدًۭا وَزُيِّنَ ذَٰلِكَ فِى قُلُوبِكُمْ وَظَنَنتُمْ ظَنَّ ٱلسَّوْءِ وَكُنتُمْ قَوْمًۢا بُورًۭا.
48:12. எனவே அவர்களுடைய உள்ளங்களில் ஊடுருவிச் சென்ற பயம் யாதெனில், போரில் கலந்து கொண்டால் இறைத்தூதர் மற்றும் மூஃமின்களுடனும் சேர்ந்து தாமும் மடிந்துவிடுவோம். தம்மால் வீடு திரும்பவே முடியாது. எனவே நம் குடும்பங்களை சுத்தமாக மறந்துவிட வேண்டியது தான். இது போன்ற எண்ணங்கள் தாம் உங்களிடம் இருந்தன. இத்தகைய எண்ணங்களே உங்களை அழிவின் பக்கம் அழைத்துச் செல்ல ஏதுவாக இருந்தன. (மேலும் பாhக்க 49:14-15)
அதாவது சிறந்த செயல் வீரர்களாக வாழ்வதற்கு பதிலாக கோழைகளைப் போல் எந்த ஆற்றலுமின்றி வாழ்வதால் என்ன பயன் ஏற்படப் போகிறது? எத்தனை ஆண்டுகளானாலும் மரணித்து தான் ஆக வேண்டும். அந்த உயிர் உயர் இலட்சியத்திற்காகப் பயன்படட்டுமே!
وَمَن لَّمْ يُؤْمِنۢ بِٱللَّهِ وَرَسُولِهِۦ فَإِنَّآ أَعْتَدْنَا لِلْكَٰفِرِينَ سَعِيرًۭا.
48:13. எனவே அல்லாஹ்வின் மீதும் இறைத்தூதரின் மீதும் உறுதியான நம்பிக்கை கொள்ளாதவர்கள், இந்த ஆட்சியமைப்புக்கு எப்படி துணை நிற்க முடியும்? எனவே அவர்கள் இறை நிராகரிப்பவர்கள் பட்டியலில் இடம்பெற்று, இறுதியாக வேதனை மிக்க வாழ்வையே வாழ நேரிடும்.
காரணம் அல்லாஹ்வின் இத்தகைய செயல்திட்டம் இப்பூமியில் மட்டும் உள்ளது என்று எண்ணிக் கொள்ளாதீர்கள். அகிலங்கள் அனைத்திலும் இத்தகைய சட்டங்களே நடைபெற்று வருகின்றன. எனவே அந்த சட்ட விதிமுறைகளின் படி ஆபத்துகள் இன்றி பாதுகாப்பாக யாரால் வாழ முடியும் என்பதையும், யார் வேதனைமிக்க வாழ்வை வாழ நேரிடும் என்பதையும் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டு விட்டது.
وَلِلَّهِ مُلْكُ ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضِ ۚ يَغْفِرُ لِمَن يَشَآءُ وَيُعَذِّبُ مَن يَشَآءُ ۚ وَكَانَ ٱللَّهُ غَفُورًۭا رَّحِيمًۭا.
48:14. எனவே அகிலங்களும் பூமியும் அல்லாஹ்வின் அதிகாரத்திற்கு உட்பட்டே செயல்படுகின்றன என்பதை அறிந்து, அல்லாஹ்வின் வழிகாட்டுதலை பின்பற்றி பாதுகாப்பாக வாழ்வதா அல்லது அதற்கு மாற்றமாக செயல்பட்டு வேதனைகளுடன் வாழ்வதா என்பதை அவர்களே தீர்மானித்துக் கொள்ளட்டும். நிச்சயமாக அல்லாஹ்வின் செயல்திட்டங்கள் யாவும் அனைத்து தரப்பு மக்களின் பாதுகாப்பு கருதியே உருவாக்கப்பட்டுள்ளன.
سَيَقُولُ ٱلْمُخَلَّفُونَ إِذَا ٱنطَلَقْتُمْ إِلَىٰ مَغَانِمَ لِتَأْخُذُوهَا ذَرُونَا نَتَّبِعْكُمْ ۖ يُرِيدُونَ أَن يُبَدِّلُوا۟ كَلَٰمَ ٱللَّهِ ۚ قُل لَّن تَتَّبِعُونَا كَذَٰلِكُمْ قَالَ ٱللَّهُ مِن قَبْلُ ۖ فَسَيَقُولُونَ بَلْ تَحْسُدُونَنَا ۚ بَلْ كَانُوا۟ لَا يَفْقَهُونَ إِلَّا قَلِيلًۭا.
48:15. மேலும் நாட்டுப்புற மக்களுக்கு, போரில் கிடைக்கின்ற உபரி செல்வங்களை எடுத்துக் கொள்ள அனுமதி அளித்திருந்தால், போரில் கலந்து கொள்ள ஆர்வம் காட்டியிருப்பார்கள். அப்போது உங்களுடன் போரில் கலந்து கொள்ள அனுமதி அளிக்கும் படியும் கேட்டிருப்பார்கள். ஆனால் போரில் வெற்றி பெற்று அதனால் கிடைக்கவிருக்கின்ற சந்தோஷமான வாழ்வைப் பற்றி அல்லாஹ் அறிவித்துள்ளான். அவர்கள் அந்த நோக்கத்தை மாற்றி விட எண்ணுகிறார்கள். எனவே நீங்கள் எங்களை பின்பற்றி வரவேண்டிய அவசியமில்லை என்று கூறிவிடுங்கள். அதற்கு அவர்கள் தம் மீது பொறாமைப்பட்டு இவ்வாறு கூறுவதாக சொல்வார்கள். அப்படியல்ல! அவர்களுக்கு போரின் உயர் நோக்கங்களைப் பற்றிய ஞானம் இல்லாமல் இப்படிப்பட்ட பேச்சை பேசுகிறார்கள் என்பதே உண்மையாகும்.
قُل لِّلْمُخَلَّفِينَ مِنَ ٱلْأَعْرَابِ سَتُدْعَوْنَ إِلَىٰ قَوْمٍ أُو۟لِى بَأْسٍۢ شَدِيدٍۢ تُقَٰتِلُونَهُمْ أَوْ يُسْلِمُونَ ۖ فَإِن تُطِيعُوا۟ يُؤْتِكُمُ ٱللَّهُ أَجْرًا حَسَنًۭا ۖ وَإِن تَتَوَلَّوْا۟ كَمَا تَوَلَّيْتُم مِّن قَبْلُ يُعَذِّبْكُمْ عَذَابًا أَلِيمًۭا.
48:16. போரில் கலந்துகொள்ளாத நாட்டுப்புற மக்களிடம், “விரைவில் பலம் மிக்க ஒரு படையினரை எதிர்த்து போரிட வேண்டி வரும். அதுவும் அந்த படையினர் தம் ஆயுதங்களுடன் சரணடையும் வரையில் அவர்களிடம் போரிட நேரிடும். அவ்வாறு நீங்கள் போரிட்டு வெற்றிப் பெற்றால், நீங்கள் அல்லாஹ்வின் மீது உண்மையான ஈமான் கொண்டதாக பொருள்படும். அல்லாஹ்வின் வாக்குப்படி உங்களுக்கு எல்லா விதமான வசதி வாய்ப்புகளும் கிடைத்து வரும். நீங்கள் அந்த போரில் பின் வாங்கி விட்டால், உங்களுக்கு இழிவும் வேதனைகளும் சூழ்ந்து கொள்ளும்” என்று அறிவித்து விடுங்கள்.
لَّيْسَ عَلَى ٱلْأَعْمَىٰ حَرَجٌۭ وَلَا عَلَى ٱلْأَعْرَجِ حَرَجٌۭ وَلَا عَلَى ٱلْمَرِيضِ حَرَجٌۭ ۗ وَمَن يُطِعِ ٱللَّهَ وَرَسُولَهُۥ يُدْخِلْهُ جَنَّٰتٍۢ تَجْرِى مِن تَحْتِهَا ٱلْأَنْهَٰرُ ۖ وَمَن يَتَوَلَّ يُعَذِّبْهُ عَذَابًا أَلِيمًۭا.
48:17. ஆனால் கண் பார்வையை இழந்தவர்கள், உடல் ஊனமுற்றோர், வயோதிகர்கள், நோயாளிகள் என சிலர் இருக்கலாம். அவர்களால் போரில் கலந்து கொள்ள முடியாது. அத்தகையவர்கள் போரில் கலந்து கொள்ளாமல் இருப்பது குற்றமாகாது. (பார்க்க 9:91) அவர்கள் அல்லாஹ்வின் வழிகாட்டுதலையும் ஆட்சியமைப்பு சட்டங்களையும் பின்பற்றி வாழ வேண்டும். அப்படி வாழ்பவர்களுக்கும் வாழ்வாதார வசதிகள் கிடைத்து வரும். எவர் இதற்கு மாற்றமாக செயல்படுகிறார்களோ, அத்தகையவர்களுக்கு வேதனை மிக்க வாழ்வே கிடைக்கும்.
۞ لَّقَدْ رَضِىَ ٱللَّهُ عَنِ ٱلْمُؤْمِنِينَ إِذْ يُبَايِعُونَكَ تَحْتَ ٱلشَّجَرَةِ فَعَلِمَ مَا فِى قُلُوبِهِمْ فَأَنزَلَ ٱلسَّكِينَةَ عَلَيْهِمْ وَأَثَٰبَهُمْ فَتْحًۭا قَرِيبًۭا.
48:18. மேற்சொன்ன இதே கொள்கை கோட்பாட்டின் அடிப்படையில் தான் இறைவழிகாட்டுதலை ஏற்று நடக்கும் ஏராளமான செயல்வீரர்கள் உம்மிடம் மரத்தடியில் பிரமாணங்களை எடுத்துக் கொண்டனர். (பார்க்க 48:10) அவர்கள் அளித்த உறுதி மொழி அல்லாஹ்வின் நாட்டப்படியே உளப்பூர்வமாக இருந்தது. அதைப் பற்றிய உண்மை அல்லாஹ்வுக்கு தெரியும். எனவே அவர்கள் போரில் எதிர்கொள்ளவிருக்கும் சிரமங்கள் ஆயிரம் ஆயிரம் இருந்தும், அவர்களுடைய உள்ளங்களில் பொலிவும் புத்துணர்வும் மிகைத்திருந்தன. எனவே போரில் வெற்றி பெறுவது உறுதி என்று அசைக்க முடியாத நம்பிக்கையில் இருந்தார்கள்.
وَمَغَانِمَ كَثِيرَةًۭ يَأْخُذُونَهَا ۗ وَكَانَ ٱللَّهُ عَزِيزًا حَكِيمًۭا.
48:19. இதனால் போரில் வெற்றிக்குப் பின், அவர்களுக்கு போர் தடவாளங்கள் அதிகமான அளவில் கிடைத்தன. இப்படியாக அல்லாஹ்வின் செயல் திட்டங்கள் யாவற்றையும் மிகைப்பவையாகவும், ஞானத்தின் அடிப்படையில் உள்ளவை என்பதற்கும் சான்றாக விளங்கின.
وَعَدَكُمُ ٱللَّهُ مَغَانِمَ كَثِيرَةًۭ تَأْخُذُونَهَا فَعَجَّلَ لَكُمْ هَٰذِهِۦ وَكَفَّ أَيْدِىَ ٱلنَّاسِ عَنكُمْ وَلِتَكُونَ ءَايَةًۭ لِّلْمُؤْمِنِينَ وَيَهْدِيَكُمْ صِرَٰطًۭا مُّسْتَقِيمًۭا.
48:20. இத்தகைய வெற்றிப் பொருட்கள் உங்களுக்கு கிடைக்கும் என்ற அல்லாஹ்வின் வாக்கு இருந்தது என்னவோ உண்மை தான். ஆனால் போரின் நோக்கம் அதுவல்ல. அநியாய அக்கிரமங்களை ஆதரித்து போரிடுபவர்களின் பலத்தை குன்றச் செய்வதே இதன் நோக்கமாகும். எனவே வெற்றிப் பொருட்களின் மீது மூஃமின்களுக்கு ஈர்ப்பு ஏற்படாமல் அல்லாஹ்வின் அறிவுரைகள் தடுத்துக் கொண்டன. (8:1) அதாவது இந்த வெற்றியின் மூலம் நல்லாட்சியும் சமுதாய முன்னேற்றத்திற்கான சரியான பாதையும் அவர்களுக்கு கிடைத்து விட்டன.
وَأُخْرَىٰ لَمْ تَقْدِرُوا۟ عَلَيْهَا قَدْ أَحَاطَ ٱللَّهُ بِهَا ۚ وَكَانَ ٱللَّهُ عَلَىٰ كُلِّ شَىْءٍۢ قَدِيرًۭا.
48:21. இதைத் தவிர அவர்களுக்கு பல வெற்றிகளும் கிடைத்து வரும். அவற்றைப் பற்றிய ஞானம் உங்களுக்கு இருக்க வாய்ப்பில்லை. ஆனால் அல்லாஹ்வுக்கு நன்கு தெரியும். நிச்சயமாக அல்லாஹ்வின் செயல்திட்டங்கள் ஒவ்வொரு விஷயத்திலும் பேராற்றல் உடையவையாக உள்ளன. அவ்வாறே எல்லா நிகழ்வுகளும் ஏற்பட்டுவரும்.
وَلَوْ قَٰتَلَكُمُ ٱلَّذِينَ كَفَرُوا۟ لَوَلَّوُا۟ ٱلْأَدْبَٰرَ ثُمَّ لَا يَجِدُونَ وَلِيًّۭا وَلَا نَصِيرًۭا.
48:22. அதுமட்டுமின்றி பகைவர்கள் உங்களை எதிர்த்து முழு பலத்துடன் போர் செய்திருந்தாலும், அவர்கள் புறங்காட்டிப் பின் வாங்கியிருப்பார்கள். அதன்பின் அவர்களை ஆதரித்து உதவி புரிபவர்கள் வேறு யாரும் இருக்க மாட்டார்கள்.
அதாவது ஆட்சியமைப்பும் அவர்களை கண்காணிக்காமல் விட்டுவிடும். பொது மக்களின் ஆதரவும் கிடைக்காது.
سُنَّةَ ٱللَّهِ ٱلَّتِى قَدْ خَلَتْ مِن قَبْلُ ۖ وَلَن تَجِدَ لِسُنَّةِ ٱللَّهِ تَبْدِيلًۭا.
48:23. இவ்வாறு நடப்பது புதிதான ஒன்றல்ல. காலம் காலமாக இப்படித் தான் நடந்து வந்துள்ளது. இனியும் அப்படித் தான் நடந்து வரும். காரணம் அல்லாஹ் ஏற்படுத்தியுள்ள நடைமுறை சட்டங்களில் எவ்வித மாறுதலையும் ஒருபோதும் காண மாட்டீர்கள்.
وَهُوَ ٱلَّذِى كَفَّ أَيْدِيَهُمْ عَنكُمْ وَأَيْدِيَكُمْ عَنْهُم بِبَطْنِ مَكَّةَ مِنۢ بَعْدِ أَنْ أَظْفَرَكُمْ عَلَيْهِمْ ۚ وَكَانَ ٱللَّهُ بِمَا تَعْمَلُونَ بَصِيرًا.
48:24. அல்லாஹ்வின் அதே சட்ட விதிமுறைகளின் படியே மக்காவில் இருந்த பகைவர்களுக்கு எதிராக போரிட தடை செய்யப்பட்டதும், உங்களுக்கு எதிராக அவர்களாலும் போரிட முடியாமல் போனதும் ஆகும். ஆக நீங்கள் செய்பவற்றை எல்லாம் அல்லாஹ்வின் சட்டம் கண்காணித்துக் கொண்டே வருகின்றன.
அதாவது இரத்தம் ஏதும் சிந்தாமல் மக்கா நகரை வெற்றி கொள்ள முடிந்தது. வரலாற்று தொகுப்புகளின்படி மக்கா நரைச் சுற்றியுள்ள மலைகளில் இறைத்தூதரின் அறிவுரைப்படி மூஃமின்கள் தீ மூட்டி தம் பலத்தை வெளிப்படுத்தினார்கள். (பாhக்க:59:5) அவர்கள் எண்ணிக்கையில் ஆயிரம் பேர் தான் இருந்தார்கள். மக்கா நகரத்தில் பகைவர்களின் படை வீரர்கள் ஏறத்தாழ பத்தாயிரம் பேர் இருந்தார்கள். இருந்தும் அவர்கள் மூட்டிய தீயைப் பார்த்து பயந்து சமாதானத்திற்காக தயாராக இருப்பதாக அறிவித்து விட்டனர். இதை தொடர்ந்து மூஃமின்களின் படைவீரர்கள் மக்கா நகரை சுற்றி வளைத்து பிடித்துக் கொண்டனர். இருப்பினும் அங்கிருந்த காஃபிர்களை இஸ்லாமிய படையினர் கொன்று குவிக்கவில்லை என்று வரலாற்று சான்றுகள் கூறுகின்றன. அவர்களுக்கு நான்கு மாதங்கள் கால அவகாசம் அளித்து தாம் எங்கு எப்படி வாழவேண்டும் என்பதை முடிவெடுத்துக் கொள்ளும் படி அறிவிப்பு செய்யப்பட்டது. (பார்க்க 9:1-5)
هُمُ ٱلَّذِينَ كَفَرُوا۟ وَصَدُّوكُمْ عَنِ ٱلْمَسْجِدِ ٱلْحَرَامِ وَٱلْهَدْىَ مَعْكُوفًا أَن يَبْلُغَ مَحِلَّهُۥ ۚ وَلَوْلَا رِجَالٌۭ مُّؤْمِنُونَ وَنِسَآءٌۭ مُّؤْمِنَٰتٌۭ لَّمْ تَعْلَمُوهُمْ أَن تَطَـُٔوهُمْ فَتُصِيبَكُم مِّنْهُم مَّعَرَّةٌۢ بِغَيْرِ عِلْمٍۢ ۖ لِّيُدْخِلَ ٱللَّهُ فِى رَحْمَتِهِۦ مَن يَشَآءُ ۚ لَوْ تَزَيَّلُوا۟ لَعَذَّبْنَا ٱلَّذِينَ كَفَرُوا۟ مِنْهُمْ عَذَابًا أَلِيمًا.
48:25. மக்கமா நகரில் இருந்த தீயவர்கள் மஸ்ஜிதுல் ஹராமிற்கு மூஃமின்கள் வருவதை தடுத்து வந்தார்கள். இந்த உண்மை அல்லாஹ்வுக்குத் தெரியும். மேலும் அங்கு ஹஜ் சமயம் அனுப்பப்படுகின்ற அன்பளிப்பு பொருட்கள் அங்கு போய் சேராதவாறு தடைகளை செய்து வந்தவர்கள். இருப்பினும் நீங்கள் ஊருக்குள் புகுந்து போரிட்டு இருந்தால் அங்கு அல்லாஹ்வை ஏற்றுக் கொண்டவர்கள், ஏற்றுக் கொள்ளாதவர்கள் என்ற பாகுபாடின்றி மிதித்து கொன்று இருப்பீர்கள். அவர்களைப் பற்றிய உண்மை அறியாத நிலையில் போரிட்டிருந்தால், உங்களுக்கும் நஷ்டம் ஏற்பட்டிருக்கும். எனவே போர் செய்யாமலேயே மக்கா நகரின் மீது வெற்றி கொள்ள முடிந்தது. மேலும் அங்கிருப்பவர்களில் விரும்புவோர் இஸ்லாமிய ஆட்சியமைப்பு சட்டங்களை ஏற்று அங்கேயே தங்கிக்கொள்ள அனுமதியும் அளிக்கப்பட்டது. அங்கு மூஃமின்கள் யாரும் இல்லாமல் பகைவர்கள் மட்டும் இருந்திருந்தால் அவர்களை வேதனை செய்ய வாய்ப்புகள் கிடைத்திருக்கும்.
இதிலிருந்து நமக்குத் தெரிய வருவது என்னவென்றால் போர் செய்வதற்கும் வரைறைகள் வேண்டும். யார் வேண்டுமானாலும் ஊருக்குள் நுழைந்து அனைவரையும் தாக்குவது முறையாகாது. மனிதர்களை கொன்று குவிப்பது போரின் நோக்கமல்ல. இரு வெவ்வேறு கொள்கைகளுக்கிடையே நடப்பது தான் போராகும். இதில் யாரும் அநியாயமாக உயிர் துறக்கக் கூடாது.
إِذْ جَعَلَ ٱلَّذِينَ كَفَرُوا۟ فِى قُلُوبِهِمُ ٱلْحَمِيَّةَ حَمِيَّةَ ٱلْجَٰهِلِيَّةِ فَأَنزَلَ ٱللَّهُ سَكِينَتَهُۥ عَلَىٰ رَسُولِهِۦ وَعَلَى ٱلْمُؤْمِنِينَ وَأَلْزَمَهُمْ كَلِمَةَ ٱلتَّقْوَىٰ وَكَانُوٓا۟ أَحَقَّ بِهَا وَأَهْلَهَا ۚ وَكَانَ ٱللَّهُ بِكُلِّ شَىْءٍ عَلِيمًۭا.
48:26. மேலும் அங்கிருந்த மக்களிடம் இறைத் தூதருக்கும் மூஃமின்களுக்கும் எதிராக பகைவர்கள் விதவிதமான புரளிகளைப் பரப்பி, மக்களிடையே தேவையில்லாமல் வெறுப்பையும் பகைமையும் வளர்த்து வைத்திருந்தனர். நீங்களும் அங்கிருந்தால் அந்த புரளிகள் எல்லாம் உண்மையே என எண்ணி மூஃமின்களை தாக்க வந்திருப்பீர்கள். ஆனால் அல்லாஹ்வின் வழிகாட்டுதலை கொண்டு இறைத் தூதர் மனதிலும் இஸ்லாமிய படைவீரர்களாகிய மூஃமின்கள் உள்ளத்திலும் அமைதியை ஏற்படுத்தி, மன உறுதிப்பாடும் நிதானத்தோடு முடிவெடுக்கின்ற திறமையும் கிடைத்தன. அந்த அளவுக்கு மனப் பக்குவம் வளர்ந்து இருந்தது. அல்லாஹ்வின் செயல் திட்டங்கள் யாவும் தெளிவான ஞானத்தின் அடிப்படையில் செயல்படுபவையாகும் என்பதற்கு இவை யாவும் சான்றுகளாகும்.
لَّقَدْ صَدَقَ ٱللَّهُ رَسُولَهُ ٱلرُّءْيَا بِٱلْحَقِّ ۖ لَتَدْخُلُنَّ ٱلْمَسْجِدَ ٱلْحَرَامَ إِن شَآءَ ٱللَّهُ ءَامِنِينَ مُحَلِّقِينَ رُءُوسَكُمْ وَمُقَصِّرِينَ لَا تَخَافُونَ ۖ فَعَلِمَ مَا لَمْ تَعْلَمُوا۟ فَجَعَلَ مِن دُونِ ذَٰلِكَ فَتْحًۭا قَرِيبًا.
48:27. இப்படியாக சங்கை மிக்க கஅபா, இஸ்லாத்தின் தலைமைச் செயலகமாக நிலைநிறுத்த வேண்டும் என்ற இறைத்தூதரின் இலட்சியக் கனவு (பார்க்க 2:144) அல்லாஹ்வின் நியதிப்படி நிறைவேறி விட்டது. இதன் பின் நீங்கள் அனைவரும் பயமின்றி கஅபாவிற்குச் செல்வீர்கள். அங்கு நடைபெறும் தலைமுடிகளைக் களைதல் அல்லது தலைமுடியை சீர்செய்தல் போன்ற சம்பிரதாய வழக்கப்படி செய்து வருவீர்கள். இனி உங்களுக்கு எந்த பயமும் இருக்காது. இந்த உண்மைகள் எல்லாம் உங்களுக்கு முன்பு தெரியாமல் இருந்தது. ஆனால் அல்லாஹ்வுக்கு தெரியும். அதுமட்டுமின்றி உங்களுக்கு மேலும் ஒரு வெற்றி கிடைக்கப் போகிறது.
هُوَ ٱلَّذِىٓ أَرْسَلَ رَسُولَهُۥ بِٱلْهُدَىٰ وَدِينِ ٱلْحَقِّ لِيُظْهِرَهُۥ عَلَى ٱلدِّينِ كُلِّهِۦ ۚ وَكَفَىٰ بِٱللَّهِ شَهِيدًۭا.
48:28. அது என்னவென்றால், இறைத்தூதரை அனுப்பி வைத்ததன் நோக்கம் என்னவென்று உலக மக்களுக்கு தெளிவாகிவிடும். உலக மக்கள் தாமாக கடைப்பிடித்து வரும் எல்லா வழிமுறைகளைவிடவும் இஸ்லாமிய மார்க்கமே சாலச் சிறந்தது என்பது அவர்களுக்கு தெளிவாகிவிடும். இதை உலக மக்களுக்கு நிரூபித்துக் காட்டுவதற்கு மூஃமின்களுக்கு தக்க பலமும் செயல் திறனும் அவசியமாகின்றன. இதற்காக அல்லாஹ்வின் ஆட்சியமைப்பு போதுமான சான்றாக இருக்கின்றது.
مُّحَمَّدٌۭ رَّسُولُ ٱللَّهِ ۚ وَٱلَّذِينَ مَعَهُۥٓ أَشِدَّآءُ عَلَى ٱلْكُفَّارِ رُحَمَآءُ بَيْنَهُمْ ۖ تَرَىٰهُمْ رُكَّعًۭا سُجَّدًۭا يَبْتَغُونَ فَضْلًۭا مِّنَ ٱللَّهِ وَرِضْوَٰنًۭا ۖ سِيمَاهُمْ فِى وُجُوهِهِم مِّنْ أَثَرِ ٱلسُّجُودِ ۚ ذَٰلِكَ مَثَلُهُمْ فِى ٱلتَّوْرَىٰةِ ۚ وَمَثَلُهُمْ فِى ٱلْإِنجِيلِ كَزَرْعٍ أَخْرَجَ شَطْـَٔهُۥ فَـَٔازَرَهُۥ فَٱسْتَغْلَظَ فَٱسْتَوَىٰ عَلَىٰ سُوقِهِۦ يُعْجِبُ ٱلزُّرَّاعَ لِيَغِيظَ بِهِمُ ٱلْكُفَّارَ ۗ وَعَدَ ٱللَّهُ ٱلَّذِينَ ءَامَنُوا۟ وَعَمِلُوا۟ ٱلصَّٰلِحَٰتِ مِنْهُم مَّغْفِرَةًۭ وَأَجْرًا عَظِيمًۢا.
48:29. இவை தாம் முஹம்மது நபி அவர்களும், அவரைப் பின்பற்றி வரும் செயல்வீரர்களும் படைத்த சாதனைகளாகும். இவர்களுடைய அணுகுமுறை எவ்வாறு இருக்கும் என்றால் , சமூக விரோத செயலில் ஈடுடுபவர்களிடம் மிகவும் கண்டிப்புடன் நடந்து கொள்வார்கள். ஆனால் தங்களுக்கிடையே பணிவோடும் இரக்க மனப்பான்மையுடனும் நடந்து கொள்வார்கள். (பார்க்க 5:54) இவர்களில் ஒவ்வொருவரும் ஆட்சி பொறுப்பை முழு மனதுடன் தலை சாய்த்து ஏற்றுக்கொண்டு அவற்றை நிறைவேற்றுவதில் முழு வேகத்துடன் செயல்படுவார்கள். மேலும் இவர்கள் இறைவனின் சட்ட விதிமுறைகளின் படி தமக்கு தேவையான வாழ்வாதாரங்களை தேடிக்கொள்வர். அத்துடன் அவர்களுடைய ஒவ்வொரு செயலும் அல்லாஹ்வின் திருப் பொருத்தத்தை நாடியே இருக்கும். இதனால் அவர்களுக்கு ஏற்படும் முக மலர்ச்சியும் புன்முறுவலும், அவர்கள் அடிபணிந்து செயல்படுவதற்கு சான்று பகர்வதாக இருக்கும். இப்படியாக செயல்பட்ட முந்தைய வீரர்களைப் பற்றியும் தவ்ராத்திலும் பைபிளிலும் காணக்கிடைக்கும். அவர்கள் ஏற்படுத்துகின்ற ஆட்சியமைப்பை ஒரு மரத்திற்கு ஒப்பிடலாம். ஒரு பழுத்த விதை பூமியில் விதைத்து, அது பூமியைப் பிளந்து, மிருதுவான செடியாகி, பெரிய மரமாக வளர்ந்து, அது தன்னைத் தானே காத்துக் கொள்ளும் வகையில் வலுவான வேர்களும், தண்டுகளும் கொண்டு வலிமையைப் பெற்று, சதா கனிகளை ஈட்டிக்கொண்டே இருக்கின்றதே, அத்தகைய மரத்திற்கு ஒப்பிடலாம். (பார்க்க 14:24-25) இப்படியாக அந்த ஆட்சி அனைவருக்கும் பலனளிக்கக் கூடிய வகையில் செயல்படும். ஆனால் இந்த முன்னேற்றம் இறை நிராகரிப்பவர்களுக்கு வெறுப்பையே உண்டாக்கும். ஆக யார் அல்லாஹ்வின் வழிகாட்டுதலை மனதார ஏற்று அதன்படி ஆக்கப்பூர்வமாகச் செயல்படுகிறார்களோ, அவர்களுக்கெல்லாம் இத்தகைய நற்பலன்கள் அளிக்கும் நல்லாட்சி கிடைக்கும் என்பதே அல்லாஹ்வின் வாக்காகும். (பார்க்க 24:55) மேலும் இத்தகையவர்களுக்கு பாதுகாப்பான வாழ்வும் கிடைத்து வரும்.
சிந்தனையாளர்களே! கவனித்தீர்களா? முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கும் சஹாபா பெருமக்களுக்கும் கிடைத்த வெற்றி போன்றே இறைவழிகாட்டுதலை ஏற்று செயல்படும் அனைவருக்கும் கிடைக்கும் என்று வாக்களிக்கப்படுகிறது. ஆனால் எவ்வாறு விவசாயி மரத்தை வளர்ப்பதற்கு அல்லும் பகலும் அயராது உழைக்கின்றானோ, அவ்வாறே நாமும் மார்க்கத்தை நிலை நாட்டுவதற்காக அயராது உழைக்கவேண்டும். இதற்காக செயல்திறனும், விவேகமும், மனஉறுதிப்பாடும் அவசியமாகின்றன. வெறும் வார்த்தை ஜாலங்களால் அல்லாஹ்வை புகழ் பாடிக் கொண்டிருப்பதால் கிடைக்கின்ற ஒன்றா?