بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ

47:0.அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் அறிவுரைப்படியே அனைத்துக் காரியங்களையும் செய்ய நாடுகிறேன். (பார்க்க 6:162)


ٱلَّذِينَ كَفَرُوا۟ وَصَدُّوا۟ عَن سَبِيلِ ٱللَّهِ أَضَلَّ أَعْمَٰلَهُمْ.

47:1. எவர்கள் அல்லாஹ்வின் ஆட்சியமைப்பு சட்டங்களுக்கு எதிராக செயல்பட்டு, அதன் செயல்திட்டங்கள் நிறைவேறாதவாறு தடைகளை ஏற்படுத்தி வருகிறார்களோ, அவர்களுடைய முயற்சிகள் யாவும் வீணாகிப் போகும். அவர்கள் தம் திட்டத்தில் வெற்றி பெறவே முடியாது என்பதை அறிந்து கொள்ளட்டும்.
அதாவது அனைத்து தரப்பு மக்களின் நலனை பேணிக் காக்கும் ஆட்சியமைப்பு ஏற்படுவது உறுதியாகும். அதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது. (பார்க்க 46:32)


وَٱلَّذِينَ ءَامَنُوا۟ وَعَمِلُوا۟ ٱلصَّٰلِحَٰتِ وَءَامَنُوا۟ بِمَا نُزِّلَ عَلَىٰ مُحَمَّدٍۢ وَهُوَ ٱلْحَقُّ مِن رَّبِّهِمْ ۙ كَفَّرَ عَنْهُمْ سَيِّـَٔاتِهِمْ وَأَصْلَحَ بَالَهُمْ.

47:2. இதற்கு மாறாக முஹம்மது நபி மீது இறக்கி அருளப்படுகின்ற வழிகாட்டுதலை ஏற்று ஆக்கப்பூர்வமான நற்செயல்களை செய்பவர்கள்தாம் இறைவனின் உண்மையான நேர்வழியில் இருப்பதாக கருதப்படுவார்கள். அத்தகையவர்களிடம் உள்ள தீய எண்ணங்களும் பழக்க வழக்கங்களும் அறவே நீங்கி, அவர்களுடைய ஆற்றல்கள் வேகமாக வளர்ந்து உயர்நிலைக்கு வருவார்கள்.


ذَٰلِكَ بِأَنَّ ٱلَّذِينَ كَفَرُوا۟ ٱتَّبَعُوا۟ ٱلْبَٰطِلَ وَأَنَّ ٱلَّذِينَ ءَامَنُوا۟ ٱتَّبَعُوا۟ ٱلْحَقَّ مِن رَّبِّهِمْ ۚ كَذَٰلِكَ يَضْرِبُ ٱللَّهُ لِلنَّاسِ أَمْثَٰلَهُمْ.

47:3. இவை தான் இறை நிராகரிப்பவர்களும், மூஃமின்களுக்கும் உள்ள வேற்றுமைகளாகும். காரணம் இறை நிராகரிப்பவர்கள் போலியான வழிமுறைகளை கடைப்பிடித்து கற்பனையோடு வாழ்கின்றனர். ஆனால் மூஃமின்கள் தம் இறைவனிடமிருந்து இறக்கியருளப்பட்ட வழிகாட்டுதலின்படி சமுதாய வளர்ச்சிக்காக நன்மைப் பயக்கும் வழிமுறைகளை பின்பற்றுகின்றனர். இந்த பேருண்மையை உலக மக்கள் அனைவரும் புரிந்து கொள்ளவேண்டும் என்பதற்காக இத்தகைய உதாரணங்களை அல்லாஹ் எடுத்துரைக்கிறான்.


فَإِذَا لَقِيتُمُ ٱلَّذِينَ كَفَرُوا۟ فَضَرْبَ ٱلرِّقَابِ حَتَّىٰٓ إِذَآ أَثْخَنتُمُوهُمْ فَشُدُّوا۟ ٱلْوَثَاقَ فَإِمَّا مَنًّۢا بَعْدُ وَإِمَّا فِدَآءً حَتَّىٰ تَضَعَ ٱلْحَرْبُ أَوْزَارَهَا ۚ ذَٰلِكَ وَلَوْ يَشَآءُ ٱللَّهُ لَٱنتَصَرَ مِنْهُمْ وَلَٰكِن لِّيَبْلُوَا۟ بَعْضَكُم بِبَعْضٍۢ ۗ وَٱلَّذِينَ قُتِلُوا۟ فِى سَبِيلِ ٱللَّهِ فَلَن يُضِلَّ أَعْمَٰلَهُمْ.

47:4. இப்படியாக இறைவழிகாட்டுதலை எடுத்துரைக்கும் போது, சமுதாயத்தில் இருவகையினராகப் பிரிந்து, ஒருவர் மற்றவரின் பகைவர்களாக ஆகிவிடுகின்றனர். இறை ஆட்சியமைப்பை கட்டிக் காக்கும் வீரர்களே! சமூக விரோதிகளை களத்தில் சந்திக்க நேர்ந்தால், அவர்களை உயிருடன் விட்டுவிடாதீர்கள். இப்படியாக முழூ பலத்துடன் அவர்களை கட்டுப்படுத்தி விடுங்கள். அவர்கள் சரணடைந்து விட்டால் அவர்களை பிடித்து சிறையில் அடைத்து வையுங்கள். (விளக்கத்திற்கு பார்க்க 8:67) ஒருவேளை அவர்கள் தம் ஆயுதங்களை ஆட்சியிடம் சமர்ப்பித்து சரணடைவதாகச் சொன்னால், அவர்களுக்கு பொது மன்னிப்பு அளித்து அவர்களிடம் குறிப்பிட்ட தொகையை நஷ்ட ஈடாக வசூலித்து அவர்களை விட்டுவிடுங்கள். அவர்களில் சிலர் உண்மை அறியாது சண்டையில் கலந்து கொண்டு இருக்கலாம். அவர்களைப் பற்றியும் தீர விசாரித்து நஷ்டயீடு எதுவுமின்றி விட்டுவிடவும் செய்யலாம். தீயவர்களுக்கு எதிராக இறைவனின் ஆட்சியமைப்பு அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அல்லாஹ்வின் திட்டமாகும். இப்படி நடக்கும் மோதலில் அல்லாஹ்வின் ஆட்சியமைப்புக்கு ஆதரவாக பங்கெடுத்தவர்களில் கொல்லப்பட்டால், அவர்களுடைய வீரச் செயல்கள் அல்லாஹ்வின் சட்டப்படி ஒருபோதும் வீண் போகாது. (பார்க்க 2:154)
அதாவது இறைவனின் செயல்திட்டப் படி மனிதனுக்கு ஏற்படும் மரணம் என்பது அவனது அடுத்த கட்ட வாழ்வின் நுழைவாயில் ஆகும். அவன் உயர் இலட்சியங்களுக்காக உயிரிழக்க நேர்ந்தால் அது ஒருபோதும் வீண் போகாது என்பதே இவ்வாசகத்தில் சொல்லப்படுகிறது. ஷுஅதாக்கள்-தியாகிகள் என்ற உயர் அந்தஸ்து பெறுவார்கள்.


سَيَهْدِيهِمْ وَيُصْلِحُ بَالَهُمْ.

47:5. இப்படியாக தீயவர்களை ஒடுக்கி, முன்னேறுவதற்கான வழிகள் அவர்களுக்கு கிடைத்துவிடுகின்றன.


وَيُدْخِلُهُمُ ٱلْجَنَّةَ عَرَّفَهَا لَهُمْ.

47:6. மேலும் சிறந்த முறையில் ஆட்சி நடைபெற்று வந்தால், சுவனத்திற்கு ஒப்பான நாடாக மாறிவரும். இதைப் பற்றி இந்த குர்ஆனில் பல முறை எடுத்துரைக்கப்பட்டுள்ளது.


يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوٓا۟ إِن تَنصُرُوا۟ ٱللَّهَ يَنصُرْكُمْ وَيُثَبِّتْ أَقْدَامَكُمْ.

47:7. இறைவழிகாட்டுதலை ஏற்றுக் கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வின் ஆட்சியமைப்பு நலத் திட்டங்களை ஆதரித்து உதவி புரிந்தால், அல்லாஹ்வின் உதவியும் கிடைத்து வரும். அதாவது அந்த அரசு உங்களுடைய நலனைப் பேணிக் காக்கும். மேலும் உங்களுக்குள் உறுதிப்பாடும் செயல் திறனும் வளர்ந்து வரும்.


وَٱلَّذِينَ كَفَرُوا۟ فَتَعْسًۭا لَّهُمْ وَأَضَلَّ أَعْمَٰلَهُمْ.

47:8. மாறாக இறைவழிகாட்டுதலின் படி நடைபெறும் கால கட்டத்தில் அதற்கு எதிராக செயல்படுபவர்கள், தோல்வியை தழுவார்கள். மேலும் அவர்களை கேடுகள் தாம் சூழ்ந்து கொள்ளும்.


ذَٰلِكَ بِأَنَّهُمْ كَرِهُوا۟ مَآ أَنزَلَ ٱللَّهُ فَأَحْبَطَ أَعْمَٰلَهُمْ.

47:9. காரணம் அல்லாஹ்வின் ஆட்சியமைப்பு அறிவித்துள்ள நலத்திட்டங்கள் யாவும் அனைத்து தரப்பு மக்களின் நலனுக்காகவே ஆகும். ஆனால் இவை நிராகரிப்பவர்களுடைய சொகுசு வாழ்விற்கு எதிராக செல்கின்றன. எனவே அவர்கள் வெறுத்து அவற்றை முறியடிக்கவே முயல்வார்கள். ஆனால் அவர்களுடைய முயற்சிகள் யாவும் பயனற்றுப் போகும்.


۞ أَفَلَمْ يَسِيرُوا۟ فِى ٱلْأَرْضِ فَيَنظُرُوا۟ كَيْفَ كَانَ عَٰقِبَةُ ٱلَّذِينَ مِن قَبْلِهِمْ ۚ دَمَّرَ ٱللَّهُ عَلَيْهِمْ ۖ وَلِلْكَٰفِرِينَ أَمْثَٰلُهَا.

47:10. இந்த பேருண்மையை அறிந்துகொள்ள விரும்புவோர், உலகத்தை சுற்றி பார்த்துக் கொள்ளட்டும். அவர்களுக்கு முன் வாழ்ந்த எத்தனையோ சமுதாயத்தினர், தம் தவறான செயல்களால் அழிந்துதான் போனார்கள். அல்லாஹ்வின் நியதிப்படி அவர்கள் யாவரும் அடியோடு அழிந்து போனதை அவர்கள் கவனித்துப் பார்க்கட்டும். இறைவழிகாட்டுதலை ஏற்க மறுக்கும் சமூக விரோதிகளின் கதி இப்படியாகத்தான் முடியும். காரணம் இதுவே இறைவன் ஏற்படுத்தியுள்ள பொது மறையாகும்.


ذَٰلِكَ بِأَنَّ ٱللَّهَ مَوْلَى ٱلَّذِينَ ءَامَنُوا۟ وَأَنَّ ٱلْكَٰفِرِينَ لَا مَوْلَىٰ لَهُمْ.

47:11. இவ்வாறே இறைவழிகாட்டுதலை ஏற்று செயல்படுபவர்களுக்கு அல்லாஹ்வின் ஆட்சியமைப்பு துணை நிற்கும். இறை ஆட்சி அமைப்புக்கு எதிராக செயல்படுபவர்களை இந்த அரசு ஒருபோதும் ஆதரிக்காது.


إِنَّ ٱللَّهَ يُدْخِلُ ٱلَّذِينَ ءَامَنُوا۟ وَعَمِلُوا۟ ٱلصَّٰلِحَٰتِ جَنَّٰتٍۢ تَجْرِى مِن تَحْتِهَا ٱلْأَنْهَٰرُ ۖ وَٱلَّذِينَ كَفَرُوا۟ يَتَمَتَّعُونَ وَيَأْكُلُونَ كَمَا تَأْكُلُ ٱلْأَنْعَٰمُ وَٱلنَّارُ مَثْوًۭى لَّهُمْ.

47:12. எனவே எந்த சமுதாயம் இறைவழிகாட்டுதலை ஏற்று ஆக்கப்பூர்வமான நலத் திட்டங்களைத் தீட்டி அதற்காக உழைக்குமோ, அவர்களுடைய நாட்டில் பொருளாதார வசதிகள் பெருகி வரும். அத்தகைய சமுதாயத்தில் மூஃமின்கள் இடம்பெறுவார்கள். இதற்கு மாறாக இறைவழிகாட்டுதலை நிராகரிப்பவர்கள் யாவரும் தற்காலிக சந்தோஷங்களையே நோக்கமாகக் கொண்டு செயல்படுவார்கள். எனவே அவர்களுடைய வாழ்க்கை விலங்கின அளவில் தான் இருக்கும். அதாவது உண்டு மகிழ்ந்து சந்தோஷமாக இருப்பதே சிறந்த வாழ்க்கை என கருதுவார்கள். அவர்களிடம் வருங்கால நலத் திட்டங்கள் எதுவும் இருக்காது. எனவே அத்தகைய சமுதாயங்களின் பிரச்னைகள் அதிகமாகி வேதனை மிக்கதாய் மாறிவரும்.


وَكَأَيِّن مِّن قَرْيَةٍ هِىَ أَشَدُّ قُوَّةًۭ مِّن قَرْيَتِكَ ٱلَّتِىٓ أَخْرَجَتْكَ أَهْلَكْنَٰهُمْ فَلَا نَاصِرَ لَهُمْ.

47:13. நபியே! உம்மை ஊரைவிட்டு வெறியேற்றுவதிலேயே மக்காவாசிகள் கண்ணும் கருத்துமாய் இருந்தார்கள் (பார்க்க 8:30) இவர்களை விட அதிக செல்வ செழிப்புடன் வாழ்ந்த எத்தனையோ சமூகத்தினர், இறைவனின் நியதிப்படி அழிந்தே இருக்கிறார்கள். அவர்கள் செய்து வந்த பாவச் செயல்களின் காரணமாக அவர்கள் அழிவை சந்தித்துக் கொண்டார்கள். அந்த அழிவு ஏற்பட்ட போது அவர்களை யாராலும் காப்பாற்ற முடியவில்லை.


أَفَمَن كَانَ عَلَىٰ بَيِّنَةٍۢ مِّن رَّبِّهِۦ كَمَن زُيِّنَ لَهُۥ سُوٓءُ عَمَلِهِۦ وَٱتَّبَعُوٓا۟ أَهْوَآءَهُم.

47:14. எனவே இறைவனின் தெளிவான வழிகாட்டுதலைப் பின்பற்றி சரியான பாதையில் இருப்பவர்கள் ஒரு பக்கம். தம் மனோ இச்சையைப் பின்பற்றி, தாம் செய்வது அனைத்தும் அழகானதே என்று எண்ணிக்கொண்டு, தகாத செயல்களை எல்லாம் செய்துகொண்டு இருப்பவர்கள் மறு பக்கம். ஆக இவ்விருவரும் சமமாகி விடுவார்களா?(பார்க்க 45:21)


مَّثَلُ ٱلْجَنَّةِ ٱلَّتِى وُعِدَ ٱلْمُتَّقُونَ ۖ فِيهَآ أَنْهَٰرٌۭ مِّن مَّآءٍ غَيْرِ ءَاسِنٍۢ وَأَنْهَٰرٌۭ مِّن لَّبَنٍۢ لَّمْ يَتَغَيَّرْ طَعْمُهُۥ وَأَنْهَٰرٌۭ مِّنْ خَمْرٍۢ لَّذَّةٍۢ لِّلشَّٰرِبِينَ وَأَنْهَٰرٌۭ مِّنْ عَسَلٍۢ مُّصَفًّۭى ۖ وَلَهُمْ فِيهَا مِن كُلِّ ٱلثَّمَرَٰتِ وَمَغْفِرَةٌۭ مِّن رَّبِّهِمْ ۖ كَمَنْ هُوَ خَٰلِدٌۭ فِى ٱلنَّارِ وَسُقُوا۟ مَآءً حَمِيمًۭا فَقَطَّعَ أَمْعَآءَهُمْ.

47:15. இறைவழிகாட்டுதலைப் பேணி நடப்பவர்கள் சுவனத்திற்கு ஒப்பான சமுதாயத்தில் இருப்பார்கள் என வாக்களிக்கப்படுகிறது. அந்த சுவனம் எவ்வாறு இருக்கும் என்றால் மாறுபடாத தெளிந்த நீரைக் கொண்ட ஆறுகளும், சுவை மாறாத பாலாறுகளும், அருந்துவோருக்கு இன்பமளிக்கும் மதுரச ஆறுகளும், தெளிவான தேனாறுகளும் கொண்ட நாடாக இருந்தால் எவ்வளவு சந்தோஷமாக இருக்கும்? அது போலத் தான் அவர்களுக்கு தலைசிறந்த வாழ்வு கிடைக்கும். அவர்களுக்கு குன்றாத வாழ்வதாரங்களும், பாதுகாப்பான வாழ்வும் இறைவன் புறத்திலிருந்து கிடைத்து வரும். இத்தகைய சிறப்பான வாழ்வு பெறுவதை விட்டுவிட்டு குடலைப் புண்ணாக்கும் கொதிநீரும், வேதனை அளிக்கும் வாழ்வையும் நோக்கி பயணம் செய்வது சிறப்பா? இவர்கள் அச்சுவனவாசிகளுக்கு ஒப்பாவார்களா?


وَمِنْهُم مَّن يَسْتَمِعُ إِلَيْكَ حَتَّىٰٓ إِذَا خَرَجُوا۟ مِنْ عِندِكَ قَالُوا۟ لِلَّذِينَ أُوتُوا۟ ٱلْعِلْمَ مَاذَا قَالَ ءَانِفًا ۚ أُو۟لَٰٓئِكَ ٱلَّذِينَ طَبَعَ ٱللَّهُ عَلَىٰ قُلُوبِهِمْ وَٱتَّبَعُوٓا۟ أَهْوَآءَهُمْ.

47:16. மேலும் உம்மிடம் வருபவர்களில் சிலர் உம் அறிவுரைகளை கேட்டுவிட்டு வெளியே சென்றதும் தம் மார்க்க அறிஞர்களை சந்தித்து, “அவர் என்னவோ கூறினார். அவை சற்றும் எங்களுக்கு விளங்கவில்லை” என்று கூறி பரிகாசம் செய்பவர்களும் இருக்கிறார்கள். இத்தகையவர்கள் தாம் நேர்வழி பெறும் வாய்ப்பை இழப்பவர்கள். காரணம் அவர்கள் தம் மனோ இச்சையையே பின்பற்றி வருவதால் அவர்களுடைய உள்ளங்களில் விளங்கிக்கொள்ள முடியாதபடி திரை ஏற்பட்டு விடுகிறது. (பார்க்க 2:7, 6:46, 16:108, 17:46)


وَٱلَّذِينَ ٱهْتَدَوْا۟ زَادَهُمْ هُدًۭى وَءَاتَىٰهُمْ تَقْوَىٰهُمْ.

47:17. ஆனால் உம்முடைய அறிவுரைகளைக் கேட்டு நேர்வழிப் பெற ஆர்வமுள்ளவர்களும் இருக்கிறார்கள். அவர்களுத்தான் நேர்வழி மென்மேலும் கிடைத்து இறைவழிகாட்டுதலை பேணி நடப்பவர்களாக ஆகிறார்கள்.


فَهَلْ يَنظُرُونَ إِلَّا ٱلسَّاعَةَ أَن تَأْتِيَهُم بَغْتَةًۭ ۖ فَقَدْ جَآءَ أَشْرَاطُهَا ۚ فَأَنَّىٰ لَهُمْ إِذَا جَآءَتْهُمْ ذِكْرَىٰهُمْ.

47:18. தீய செயல்களின் விளைவுகள் எதிர் பாராதவிதமாக தோற்றத்திற்கு வந்தடையுமே, அந்த தருணத்தை அவர்கள் எதிர் பார்க்கின்றனரா? அந்த தீய விளைவுகள் கொஞ்சம் கொஞ்சமாக ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றதே, அவற்றின் அறிகுறிகள் அவர்களுக்கு தெரியவில்லையா? எனவே அந்த விளைவுகள் முழு அளவில் ஏற்படும் போது, அவர்களால் அவற்றை எதிர்கொள்ள முடியுமா? அப்போது இந்த அறிவுரைகள் பலனளிக்குமா?. இதைப் பற்றி அவர்கள் சிந்திக்க வேண்டாமா?


فَٱعْلَمْ أَنَّهُۥ لَآ إِلَٰهَ إِلَّا ٱللَّهُ وَٱسْتَغْفِرْ لِذَنۢبِكَ وَلِلْمُؤْمِنِينَ وَٱلْمُؤْمِنَٰتِ ۗ وَٱللَّهُ يَعْلَمُ مُتَقَلَّبَكُمْ وَمَثْوَىٰكُمْ.

47:19. நீங்கள் ஒரு விஷயத்தை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள். அல்லாஹ் நிர்ணயித்துள்ள சட்ட விதிமுறைகளே அகிலங்கள் அனைத்திலும் செயல்பட்டு வருகின்றன. எனவே நீங்கள் செய்யும் தீய செயல்களின் விளைவுகளிருந்து ஒருபோதும் தப்பிக்கவே முடியாது. எனவே நபியே! சமூக விரோதிகள் உமக்கும் இறைவழிகாட்டுதலை எற்று நடப்பவர்களுக்கும் எதிராக செயல்படுகின்றனர். அதனால் பாதிப்புக்குள்ளான ஆண்களுக்கும் பெண்களுக்கும் பாதுகாப்பு அளியுங்கள். அதற்கான நிவாரணப் பணியையும் பாதுகாப்பு நடவடிக்கைகளையும் எடுத்து வாருங்கள். (பார்க்க 40:55) உங்களில் விரைந்து செயல்படுபவர்கள் யார் என்பதும், வீட்டில் தங்கி உறங்கிக் கொண்டிருப்பவர்கள் யார் என்பதும் அல்லாஹ்வுக்கு நன்கு தெரியும்.


وَيَقُولُ ٱلَّذِينَ ءَامَنُوا۟ لَوْلَا نُزِّلَتْ سُورَةٌۭ ۖ فَإِذَآ أُنزِلَتْ سُورَةٌۭ مُّحْكَمَةٌۭ وَذُكِرَ فِيهَا ٱلْقِتَالُ ۙ رَأَيْتَ ٱلَّذِينَ فِى قُلُوبِهِم مَّرَضٌۭ يَنظُرُونَ إِلَيْكَ نَظَرَ ٱلْمَغْشِىِّ عَلَيْهِ مِنَ ٱلْمَوْتِ ۖ فَأَوْلَىٰ لَهُمْ.

47:20. இதுவரையில் இறைவழிகாட்டுதலை ஏற்று நடக்கும் செயல் வீரர்கள், சமூக விரோதிகளை கட்டுப்படுத்த அல்லாஹ்வின் புறத்திலிருந்து அனுமதி கிடைக்கவில்லையே என்று கேட்டு வந்தார்கள். அதன்படி போருக்கான அனுமதி அளித்தபின் மூஃமின்கள் உற்சாகத்துடன் ஆயத்த பணிகளை மேற்கொள்கின்றனர். ஆனால் அவர்களின் உள்ள நயவஞ்சகர்கள் மரண பயத்தால் மயங்கி விழுபவன்போல் பதறிப் போவதை நீங்கள் காண்பீர்கள். அதனால் போரில் கலந்துகொள்ளாததற்கு ஆயிரம் காரணங்களை சொல்வார்கள். (பார்க்க 9:41, 9:45) இத்தகையவர்களுக்கு கேடுகள்தான் வந்தடையும்.


طَاعَةٌۭ وَقَوْلٌۭ مَّعْرُوفٌۭ ۚ فَإِذَا عَزَمَ ٱلْأَمْرُ فَلَوْ صَدَقُوا۟ ٱللَّهَ لَكَانَ خَيْرًۭا لَّهُمْ.

47:21. போருக்கான கட்டளை வந்ததும், அவர்கள் அதற்கு தயாராக இருப்பதாகவும் இறைக் கட்டளையின்படி நடப்பதாகவும் அவர்கள் சொல்லியிருக்க வேண்டும். போரிட முடிவான பின், அல்லாஹ்வின் கட்டளைப் படி அதில் பங்கெடுத்து, இறைவனுக்கு விசுவாசமாக நடப்பதாக நிரூபித்து காட்டியிருக்க வேண்டும். அப்போது தான் பகைவர்களை கட்டுப்படுத்தி அவர்களால் சிறப்பாகச் செயலாற்ற முடியும். (பார்க்க 48:2)
போர் அறிவிப்பு வந்ததும் பயந்து நடுங்கிக் கொண்டிருந்தால், இறைவனின் செயல்திட்டங்களை எப்படி நிறைவேற்றுவது?


فَهَلْ عَسَيْتُمْ إِن تَوَلَّيْتُمْ أَن تُفْسِدُوا۟ فِى ٱلْأَرْضِ وَتُقَطِّعُوٓا۟ أَرْحَامَكُمْ.

47:22. போரில் கலந்துகொள்ளாமல் நீங்கள் பின்வாங்குவீர்களாயின், அநியாய அக்கிரம செயல்களைச் செய்யும் சமூக விரோதிகளுக்கு ஆதரவாக செயல்படுவதாக பொருள்படும். இறைவழிகாட்டுதலை ஏற்று நடக்கும் செயல்வீரர்களை விட்டு உங்கள் உறவை துண்டிக்க வேண்டி வரும்.


أُو۟لَٰٓئِكَ ٱلَّذِينَ لَعَنَهُمُ ٱللَّهُ فَأَصَمَّهُمْ وَأَعْمَىٰٓ أَبْصَٰرَهُمْ.

47:23. அது மட்டுமின்றி அல்லாஹ்வின் பாதையில் இலட்சிய வாழ்வை வாழ்வதற்குப் பதிலாக குருட்டுத்தனமாக செவிடர்களைப் போல வாழ்வதையே விரும்புவதாக பொருள்படும். அத்தகைய இழிவான வாழ்வுதான் இறைவனின் நியதிப்படி கிடைக்கும்.
இத்தகையவர்களுக்கு இழிவான வாழ்வு தான் கிடைத்தது என்பதை பல முறை இந்த குர்ஆனில் எடுத்துரைக்கப்பட்டுள்ளது.


أَفَلَا يَتَدَبَّرُونَ ٱلْقُرْءَانَ أَمْ عَلَىٰ قُلُوبٍ أَقْفَالُهَآ.

47:24. அவர்கள் இந்த குர்ஆனில் சொல்லப்பட்ட விஷயங்களை ஆராய்ந்து பார்த்திருக்க வேண்டாமா? (பார்க்க 4:82) அவர்கள் உள்ளங்களில் பூட்டா போடப்பட்டு உள்ளது?


إِنَّ ٱلَّذِينَ ٱرْتَدُّوا۟ عَلَىٰٓ أَدْبَٰرِهِم مِّنۢ بَعْدِ مَا تَبَيَّنَ لَهُمُ ٱلْهُدَى ۙ ٱلشَّيْطَٰنُ سَوَّلَ لَهُمْ وَأَمْلَىٰ لَهُمْ.

47:25. நேர்வழி இன்னதென்று தெளிவான பின், அவற்றை விட்டு பின்வாங்கினால், அவர்கள் யாவரும் தம் மனோ இச்சையை பின்பற்றவே விரும்புவதாக பொருள்படும் அல்லவா? மேலும் அவர்கள் செய்யும் செயல்கள் எல்லாம் அவர்களுக்கு அழகாகவே தோன்றலாம். ஆனால் அவர்களிடையே சுயநலப் போக்கும் தவறான செயல்களும் அதிகமாகிக் கொண்டே செல்வது அவர்களுக்கு தெரியாமலே போய்விடுகிறதே!.


ذَٰلِكَ بِأَنَّهُمْ قَالُوا۟ لِلَّذِينَ كَرِهُوا۟ مَا نَزَّلَ ٱللَّهُ سَنُطِيعُكُمْ فِى بَعْضِ ٱلْأَمْرِ ۖ وَٱللَّهُ يَعْلَمُ إِسْرَارَهُمْ.

47:26. இப்படியாக அல்லாஹ்வின் புறத்திலிருந்து இறக்கியருளப்பட்ட வேத அறிவுரைகளை வெறுப்பவர்களோடு இவர்களும் இரகசிய உறவை வைத்துக் கொள்கிறார்கள். அதன்பின் அவர்கள் அல்லாஹ்வின் சில அறிவுரைகளை மட்டும் பின்பற்றுவோம் என்பார்கள். ஆனால் அவர்களுடைய இரகசியங்கள் எல்லாம் அல்லாஹ்வுக்கு மறைவானதாக இருக்காது என்பது அவர்களுக்குத் தெரியாது.


فَكَيْفَ إِذَا تَوَفَّتْهُمُ ٱلْمَلَٰٓئِكَةُ يَضْرِبُونَ وُجُوهَهُمْ وَأَدْبَٰرَهُمْ.

47:27. அவர்கள் செய்து வரும் செயல்கள் எல்லாம் அழகானவையே என எண்ணி சந்தோஷப்படுகிறார்கள். ஆனால் அதுவே நாலாப் புறத்திலிருந்து வேதனைகளைத் தரும் வினையாக வந்து நிற்கும் போது, தம் நிலைமை என்னவாகும் என்பதை அவர்கள் நினைத்துப் பார்க்கிறார்களா? துயரம் தரும் சக்திகள் அவர்களை வாட்டி வதைக்குமே!


ذَٰلِكَ بِأَنَّهُمُ ٱتَّبَعُوا۟ مَآ أَسْخَطَ ٱللَّهَ وَكَرِهُوا۟ رِضْوَٰنَهُۥ فَأَحْبَطَ أَعْمَٰلَهُمْ.

47:28. இதற்கு காரணம் அவர்கள் அல்லாஹ்வின் அறிவுரைகளுக்கு நேர் மாற்றமாக செயல்பட்டு வருவதேயாகும். அல்லாஹ்வின் அறிவுரைகள் என்னவோ அதன்படி நடப்பதை வெறுக்கவே செய்கிறார்கள். எனவே அவர்களுடைய உழைப்புகள் எல்லாம் வீணாகிவிடுகின்றன.


أَمْ حَسِبَ ٱلَّذِينَ فِى قُلُوبِهِم مَّرَضٌ أَن لَّن يُخْرِجَ ٱللَّهُ أَضْغَٰنَهُمْ.

47:29. ஆனால் அவர்கள் வெளித் தோற்றத்தில் பெரிய மகான்களைப் போன்று காணப்படுவார்கள். அவர்களுடைய உள்ளங்களில் மறைந்திருக்கும் “தீய எண்ணங்கள்” என்ற நோய் மற்ற எவருக்கும் தெரிய வாய்ப்பில்லை என்று எண்ணிக் கொள்கிறார்கள். ஆனால் அவர்கள் நடத்தி வரும் கபட நாடகங்கள் யாவும் அல்லாஹ்வின் நியதிப்படி வெளிச்சத்திற்கு வராமல் போயிவிடுமா?


وَلَوْ نَشَآءُ لَأَرَيْنَٰكَهُمْ فَلَعَرَفْتَهُم بِسِيمَٰهُمْ ۚ وَلَتَعْرِفَنَّهُمْ فِى لَحْنِ ٱلْقَوْلِ ۚ وَٱللَّهُ يَعْلَمُ أَعْمَٰلَكُمْ.

47:30. இப்படி கபட உள்ளம் கொண்டவர்களில் ஒவ்வொருவரையும் நாம் உன் கண்முன் கொண்டு நிறுத்தி இருக்க முடியும். ஆனால் அவ்வாறு செய்வது நம் செயல்திட்டத்தில் இல்லை. காரணம் மனிதன் எடுக்கும் தனிப்பட்ட முடிவுகளில் அல்லாஹ்வின் தலையீடு ஒருபோதும் இருப்பதில்லை. ஆனால் நீர் அவர்களுடைய முக பாவனைகளைக் கொண்டு அவர்களை அடையாளங் கொள்ளலாம். அதுமட்டுமின்றி அவர்களுடைய சூழ்ச்சிகர பேச்சைக் கொண்டும் அவர்களைப் பற்றி அறிந்துகொள்ள முடியும். நீங்கள் செய்து வருபவை எல்லாம் அல்லாஹ்வுக்கு நன்கு தெரியும் என்பதை அவர்களிடம் எடுத்துரையுங்கள். அதாவது அவர்களுடைய செயல்களின் விளைவுகள் ஏற்பட்டே தீரும்.
நயவஞ்சகர்கள் யார் என்ற உண்மையை அல்லாஹ் தெரியப்படுத்தி விட்டால் அது ஒரு குறிப்பிட்ட காலத்திற்கான மார்கமாக மாறிவிடும். பிற்காலத்தில் வருபவர்களுக்கு இவர்களைப் பற்றி அல்லாஹ் தெரியப்படுத்த முடியாது. காரணம் அல்லாஹ் யாரிடமும் நேரடியாகப் பேசுவதில்லை. எனவேதான்


وَلَنَبْلُوَنَّكُمْ حَتَّىٰ نَعْلَمَ ٱلْمُجَٰهِدِينَ مِنكُمْ وَٱلصَّٰبِرِينَ وَنَبْلُوَا۟ أَخْبَارَكُمْ.

47:31. அல்லாஹ்வின் பாதையில் உருவான ஆட்சியமைப்பை கட்டிக்காக்க தம் வாழ்வை அர்ப்பணிக்க முன் வருபவர்கள் யார் என்பதையும், தம் இறைக் கொள்கையில் நிலைத்திருந்து செயல்படுபவர்கள் யார் என்பதையும் அவர்களுடைய செயல்களையும் ஆர்வங்களையும் வைத்தே கண்டுபிடித்துக் கொள்ள முடியும். இப்படியாக அவர்களுடைய தியாகங்கள் மற்றும் ஆற்றல்மிக்க செயல்களின் பலன்களாக ஏற்பட்டு வரும் மறுமலர்ச்சியை இந்த உலகமே பார்த்துக் கொள்கிறது.


إِنَّ ٱلَّذِينَ كَفَرُوا۟ وَصَدُّوا۟ عَن سَبِيلِ ٱللَّهِ وَشَآقُّوا۟ ٱلرَّسُولَ مِنۢ بَعْدِ مَا تَبَيَّنَ لَهُمُ ٱلْهُدَىٰ لَن يَضُرُّوا۟ ٱللَّهَ شَيْـًۭٔا وَسَيُحْبِطُ أَعْمَٰلَهُمْ.

47:32. அதே போல அல்லாஹ்வின் வழிகாட்டுதல் மற்றும் ஆட்சியமைப்பு நலத் திட்டங்களைப் பற்றி தெளிவான பின்பும், அவை நிறைவேறாதவாறு தடைகளை ஏற்படுத்தி வருபவர்களையும் உங்களால் அடையாளங்கொள்ள முடியும். மேலும் அவர்கள் இறைத்தூதரை எதிர்த்தும் நிற்கிறார்கள். இத்தகைய செயல்களால் அல்லாஹ்வுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்திட முடியாது என்பதையும் அதன் பாதிப்புகள் அவர்களுக்கே வந்தடையும் என்றும் அவர்களிடம் தெரியப்படுத்தி விடுங்கள். அவர்களுடைய முயற்சிகள் யாவும் வீணாகிவிடும் என்பதையும் தெரியப்படுத்துங்கள்.


۞ يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوٓا۟ أَطِيعُوا۟ ٱللَّهَ وَأَطِيعُوا۟ ٱلرَّسُولَ وَلَا تُبْطِلُوٓا۟ أَعْمَٰلَكُمْ.

47:33. இறைவழிகாட்டுதலை மனதார ஏற்றுக்கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வின் வழிகாட்டுதலையும் அதன் அடிப்படையில் ஏற்படுத்தப்பட்டுள்ள ஆட்சியமைப்புச் சட்டங்களுக்கும் அடிபணிந்து செயல்படுங்கள். இவற்றிற்கு மாற்றமாகச் செயல்பட்டு உங்களுடைய உழைப்புகளை வீணாக்காதீர்கள்.


إِنَّ ٱلَّذِينَ كَفَرُوا۟ وَصَدُّوا۟ عَن سَبِيلِ ٱللَّهِ ثُمَّ مَاتُوا۟ وَهُمْ كُفَّارٌۭ فَلَن يَغْفِرَ ٱللَّهُ لَهُمْ.

47:34. அல்லாஹ்வின் வழிகாட்டுதலை ஏற்க மறுத்து அதன் பாதையில் உருவான ஆட்சியமைப்பு நலத்திட்டங்கள் நிறைவேறாதவாறு தடைகளை செய்பவர்கள், தம் போக்கை மாற்றிக் கொள்ளட்டும். அவர்கள் இதே நிலையில் நீடித்து மரித்து விட்டால் அவர்கள் “காஃபிர்கள்” என்ற பட்டியலில் இடம்பெறுவர். அத்தகைவர்களுக்கு அல்லாஹ்வின் புறத்திலிருந்து ஒருபோதும் பாதுகாப்பு கிடைக்காது.


فَلَا تَهِنُوا۟ وَتَدْعُوٓا۟ إِلَى ٱلسَّلْمِ وَأَنتُمُ ٱلْأَعْلَوْنَ وَٱللَّهُ مَعَكُمْ وَلَن يَتِرَكُمْ أَعْمَٰلَكُمْ.

47:35. இறைவழிகாட்டுதலை மனதார ஏற்றுக் கொண்டவர்களே! நீங்கள் மக்கள் நலப் பணியில் தொடர்ந்து செயலாற்றி வாருங்கள். அதில் சற்றும் சோர்வடையாதீர்கள். பகைவர்களின் மிரட்டலுக்குப் பயந்து தைரியத்தை இழந்து அவர்களிடம் சமாதானம் செய்து கொள்ளாதீர்கள். இவ்வாறு எதிர்ப்பவர்களை சமாளித்துக் கொண்டு சிறப்பாக செயலாற்றி வந்தால், நீங்கள் தாம் மேலோங்கி வருவீர்கள். அல்லாஹ்வின் துணை உங்களுக்கு எப்போதும் இருக்கும். இவ்வாறு நற்செயல்களை செய்வோருக்கு அல்லாஹ் ஒருபோதும் குறை வைக்க மாட்டான்.


إِنَّمَا ٱلْحَيَوٰةُ ٱلدُّنْيَا لَعِبٌۭ وَلَهْوٌۭ ۚ وَإِن تُؤْمِنُوا۟ وَتَتَّقُوا۟ يُؤْتِكُمْ أُجُورَكُمْ وَلَا يَسْـَٔلْكُمْ أَمْوَٰلَكُمْ.

47:36. இறை நிராகரிப்பவர்களுக்கு இந்த உலக வாழ்க்கை வீண் விளையாட்டாக இருக்கலாம். (பாhக்க 6:70, 43:83) ஆனால் இறைவழிகாட்டுதலை ஏற்று நடக்கும் உங்களுக்கு அவ்வாறு இருக்க முடியாது. உலக நன்மைக்காக பாடுபடுவதெல்லாம் இறைவனின் திருப் பொருத்தத்தை நாடித் தான் என்பதை நினைவில் கொள்ளுங்கள். (பார்க்க 2:265) எனவே நீங்கள் இறைவழிகாட்டுதலைப் பேணி நடந்தால் அதற்குரிய பலன்கள் உங்களுக்கு வந்தடையுமே அன்றி அல்லாஹ் உங்களிடமிருந்து வேறெதையும் எதிர் பார்க்கவில்லை.


إِن يَسْـَٔلْكُمُوهَا فَيُحْفِكُمْ تَبْخَلُوا۟ وَيُخْرِجْ أَضْغَٰنَكُمْ.

47:37. எனவே இறை ஆட்சியமைப்பின் நலத்திட்டங்கள் நிறைவேற உங்களாலான உதவிகளை செய்து வாருங்கள். அவை உங்களுடைய நன்மைக்காகவே ஆகும். (பார்க்க 2:261) அதை உங்களிடம் வற்புறுத்தி கேட்க முடியாது. காரணம் உங்களிடையே உள்ள கஞ்சத்தனத்தால் பொருளுதவி செய்ய மறுத்து அதன்பின் இந்


هَٰٓأَنتُمْ هَٰٓؤُلَآءِ تُدْعَوْنَ لِتُنفِقُوا۟ فِى سَبِيلِ ٱللَّهِ فَمِنكُم مَّن يَبْخَلُ ۖ وَمَن يَبْخَلْ فَإِنَّمَا يَبْخَلُ عَن نَّفْسِهِۦ ۚ وَٱللَّهُ ٱلْغَنِىُّ وَأَنتُمُ ٱلْفُقَرَآءُ ۚ وَإِن تَتَوَلَّوْا۟ يَسْتَبْدِلْ قَوْمًا غَيْرَكُمْ ثُمَّ لَا يَكُونُوٓا۟ أَمْثَٰلَكُم.

47:38. ஒரு விஷயத்தை மனதில் பதிய வைத்துக் கொள்ளுங்கள். அல்லாஹ்வின் ஆட்சியமைப்பு நலத் திட்டங்களை நிறைவேற்றவே நீங்கள் செல்வந்தர்களுக்கு அழைப்பு விடுகிறீர்கள். ஆனால் அவர்களில் சிலர் கஞ்சத்தனத்தால் உதவி செய்ய மறுக்கிறார்கள். எனவே அவர்களிடம், “எவர் கஞ்சத்தனம் செய்கிறார்களோ அதன் பாதிப்புகள் அவர்களையே வந்தடையும். அதன் பாதிப்புகள் அல்லாஹ்வுக்கு அல்ல. எனவே அல்லாஹ்வோ அதன் ஆட்சியமைப்போ உங்கள் உதவிகளை நாடி நிற்கவில்லை. நீங்கள் இதற்காக உதவி செய்ய முன்வரவில்லை என்றால் நீங்கள் அல்லாத மற்ற சமூகத்தவர்கள் இந்த ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொள்வார்கள். அவர்களுடைய கலாச்சாரம் வேறு விதமாய் இருக்கும்” என்பதை அவர்களுக்கு தெளிவுபடுத்தி விடுங்கள்.
நீங்கள் விரும்புவது போன்று அந்த ஆட்சியாளர்கள் நடந்துகொள்ள மாட்டார்கள். அப்போது நீங்கள் சம்பாதித்து வைத்திருக்கும் செல்வங்களை எல்லாம் பறிகொடுக்க நேரிடும். உங்களால் எதுவும் செய்ய இயலாது. இப்படியாக சமுதாயத்தின் மரணமும் வாழ்வும் மக்கள் நடந்துகொள்ளும் முறையில்தான் அடங்கியுள்ளது என்பதே உண்மையாகும். (பார்க்க 5:54, 6:89, 6:133, 9:39, 11:57, 14:19, 35:15-19).