بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ

46:0.அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் அறிவுரைப்படியே அனைத்துக் காரியங்களையும் செய்ய நாடுகிறேன். (பார்க்க 6:162)


حمٓ.

46:1. பாராட்டுக்கும் போற்றுதலுக்கும் உரிய முஹம்மது நபி மூலம் இறக்கியருளப்பட்ட வேதமிது.


تَنزِيلُ ٱلْكِتَٰبِ مِنَ ٱللَّهِ ٱلْعَزِيزِ ٱلْحَكِيمِ.

46:2. அகிலங்களிலும் பூமியிலும் உள்ள அனைத்தையும் கட்டுப்படுத்தும் சகல வல்லமையும், ஞானமும் மிக்க அல்லாஹ்விடமிருந்து இறக்கியருளப்படும் வேதமிது.


مَا خَلَقْنَا ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضَ وَمَا بَيْنَهُمَآ إِلَّا بِٱلْحَقِّ وَأَجَلٍۢ مُّسَمًّۭى ۚ وَٱلَّذِينَ كَفَرُوا۟ عَمَّآ أُنذِرُوا۟ مُعْرِضُونَ.

46:3. இவ்வேதம் இறக்கி அருளப்படுவதன் நோக்கம் என்னவென்றால் அகிலங்களையும், பூமியையும், இவற்றிற்கிடையே உள்ளவை அனைத்தையும் ஆக்கபூர்வமான செயல் திட்டங்களுக்காகவே படைக்கப்பட்டன என்பதை எடுத்துரைப்பதே ஆகும். அவற்றை வீண் விளையாட்டிற்காகப் படைக்கவில்லை. (பார்க்க 44:38) அவற்றிலுள்ள ஒவ்வொறு படைப்பும் நிர்ணயிக்கப்பட்ட கால அளவுகோலின் படியே விளைவுகளை ஏற்படுத்தி வருகின்றன. இதற்கு மாறாக இவற்றை அழிவுக்காக பயன்படுத்தினால், அதனால் ஏற்படும் விளைவுகளைப் பற்றி முன்னெச்சரிக்கை செய்வதே இவ்வேதம் இறக்கி அருளப்படுவதன் முக்கிய நோக்கமாகும். (3:189 & 190)


قُلْ أَرَءَيْتُم مَّا تَدْعُونَ مِن دُونِ ٱللَّهِ أَرُونِى مَاذَا خَلَقُوا۟ مِنَ ٱلْأَرْضِ أَمْ لَهُمْ شِرْكٌۭ فِى ٱلسَّمَٰوَٰتِ ۖ ٱئْتُونِى بِكِتَٰبٍۢ مِّن قَبْلِ هَٰذَآ أَوْ أَثَٰرَةٍۢ مِّنْ عِلْمٍ إِن كُنتُمْ صَٰدِقِينَ.

46:4. இத்தகைய பேருண்மைகளைப் பற்றி சிந்திக்காமல் அல்லாஹ்வின் அறிவுரைகளை விட்டுவிட்டு, மக்கள் வணங்கி வரும் கற்பனை தெய்வங்களைப் பற்றி கவனித்தீர்களா? உலகிலுள்ளவற்றில் எதையாவது அவை படைத்தனவா? அல்லது அகிலங்களின் படைப்பில் தான் அவற்றிற்கு பங்கு ஏதேனும் உண்டா? இதைப் பற்றி யாராவது பதில் தர முடியுமா என்று அவர்களிடம் கேளுங்கள். “உங்கள் கூற்றில் உண்மையாளர்களாக இருந்தால், இதற்கு முன் வந்த வேதங்களில் உலக படைப்புகளில் அவற்றிற்கும் பங்குண்டு என்ற குறிப்புகள் உள்ளனவா? அத்தகைய சான்றுகள் இருந்தால் அவற்றை எங்களிடம் கொண்டு வாருங்கள். அல்லது உங்களுடைய கூற்றுக்கு அறிவுப்பூர்வமான பதில் ஏதேனும் இருந்தாலும் எங்களிடம் கொண்டுவாருங்கள்” என்று அறைகூவல் விடுங்கள்.


وَمَنْ أَضَلُّ مِمَّن يَدْعُوا۟ مِن دُونِ ٱللَّهِ مَن لَّا يَسْتَجِيبُ لَهُۥٓ إِلَىٰ يَوْمِ ٱلْقِيَٰمَةِ وَهُمْ عَن دُعَآئِهِمْ غَٰفِلُونَ.

46:5. அல்லாஹ்வின் வழிகாட்டுதலை விட்டுவிட்டு, அவர்கள் வழிபட்டு வரும் கற்பனை தெய்வங்களை கியாம நாள் வரையில் அழைத்துக் கொண்டிருந்தாலும் அவற்றிலிருந்து பதில் எதுவும் வராது. இதைப் பற்றி சிந்திக்காதவர்களை விட வழிகெட்டவர்கள் வேறு யார் இருக்க முடியும்? காரணம் அவர்களுடைய எந்த வேண்டுகோளையும் அவற்றால் கேட்கவே முடியாதே!


وَإِذَا حُشِرَ ٱلنَّاسُ كَانُوا۟ لَهُمْ أَعْدَآءًۭ وَكَانُوا۟ بِعِبَادَتِهِمْ كَٰفِرِينَ.

46:6. எனவே மனித செயல்களின் விளைவுகளை சந்திக்கும் கால கட்டத்தில் அவையே உங்களுக்கு பகையாக வந்து நிற்கும். காரணம் உங்களுடைய இந்த நிலைமைக்கு அந்த வழிபாடுகளே வினையாக வந்து நிற்குமே! அப்போது அவற்றை அவர்கள் வெறுக்க நேரிடும்.
அத்தகைய கால கட்டத்தில் அவற்றை ஆயிரம் வெறுத்து என்ன பயன்? ஆகப்போவது ஒன்றுமில்லை. காரணம்


وَإِذَا تُتْلَىٰ عَلَيْهِمْ ءَايَٰتُنَا بَيِّنَٰتٍۢ قَالَ ٱلَّذِينَ كَفَرُوا۟ لِلْحَقِّ لَمَّا جَآءَهُمْ هَٰذَا سِحْرٌۭ مُّبِينٌ.

46:7. அல்லாஹ்வின் வழிகாட்டுதலை தெளிவான முறையில் அறிவுப்பூர்வமாக எடுத்துரைத்த போது, அவற்றை ஏற்க விருப்பமில்லாமல் நிராகரித்து விட்டார்கள். அவையாவும் மக்களை வசியப்படுத்தி ஏமாற்றும் கலையே என்று கூறி வந்தார்கள்.


أَمْ يَقُولُونَ ٱفْتَرَىٰهُ ۖ قُلْ إِنِ ٱفْتَرَيْتُهُۥ فَلَا تَمْلِكُونَ لِى مِنَ ٱللَّهِ شَيْـًٔا ۖ هُوَ أَعْلَمُ بِمَا تُفِيضُونَ فِيهِ ۖ كَفَىٰ بِهِۦ شَهِيدًۢا بَيْنِى وَبَيْنَكُمْ ۖ وَهُوَ ٱلْغَفُورُ ٱلرَّحِيمُ.

46:8. உங்களில் சிலர், இவரே இவற்றை கற்பனை செய்து எழுதிக் கொண்டு அல்லாஹ்விடமிருந்து வருவதாக சொல்கிறார் என்றும் கூறுகிறார்கள். அவர்களிடம், “அல்லாஹ்வின் மீது இட்டுக் கட்டி கூறினால், அவன் நிர்ணயித்துள்ள கடுமையான வேதனையிலிருந்து என்னை யாராலும் காப்பாற்றவே முடியாது. நீங்கள் உங்களுடைய சுய நலத்தின் காரணமாக இத்தகைய பேச்சை பேசி வருகிறீர்கள். நீங்கள் சொல்லி வருவதையும் அவற்றின் நோக்கங்களைப் பற்றியும் அல்லாஹ்வுக்கு தெரியாமல் இல்லை. அவனுடைய வழிகாட்டுதலே எனக்கு போதுமானதாக உள்ளது. அதைக் கொண்டே என்னுடைய பாதுகாப்பான வாழ்க்கைக்குரிய வழியை தேடிக்கொள்கிறேன். அவனே மிகவும் கிருபை மிக்கவனாக இருக்கிறான்” என்று எடுத்துரையுங்கள்.


قُلْ مَا كُنتُ بِدْعًۭا مِّنَ ٱلرُّسُلِ وَمَآ أَدْرِى مَا يُفْعَلُ بِى وَلَا بِكُمْ ۖ إِنْ أَتَّبِعُ إِلَّا مَا يُوحَىٰٓ إِلَىَّ وَمَآ أَنَا۠ إِلَّا نَذِيرٌۭ مُّبِينٌۭ.

46:9. மேலும் அவர்களிடம், “உலகிற்கு வருகை தந்த பல இறைத்தூதர்களில் நானும் ஒருவன் ஆவேன். (பார்க்க 36:3) நான் எதுவும் தனிச் சிறப்பு பெற்ற இறைத்தூதன் அல்லன். நாளைய தினம் எனக்கு என்ன நேரும் என்றோ அல்லது உங்களுடைய நிலைமை என்னவாகும் என்றோ என்னால் கூற இயலாது. காரணம் அந்த ஞானம் அல்லாஹ்விடமே உள்ளது. ஆனால் எனக்கு அல்லாஹ்வின் புறத்திலிருந்து வஹீ மூலம் என்ன இறக்கி அருளப்படுகின்றனவோ அவற்றை மட்டுமே கடைப்பிடிப்பவனாக இருக்கின்றேன். மேலும் அந்த வழிகாட்டுதல்கள் எவற்றை தீய செயல்கள் என கோடிட்டு காட்டுகிறதோ அவற்றை உங்களுக்கு எடுத்துரைத்து, அவற்றால் ஏற்படும் தீய விளைவுகளைப் பற்றி முன்னெச்சரிக்கை செய்வதே என் பணியாகும்;” என்று கூறிவிடுங்கள்.


قُلْ أَرَءَيْتُمْ إِن كَانَ مِنْ عِندِ ٱللَّهِ وَكَفَرْتُم بِهِۦ وَشَهِدَ شَاهِدٌۭ مِّنۢ بَنِىٓ إِسْرَٰٓءِيلَ عَلَىٰ مِثْلِهِۦ فَـَٔامَنَ وَٱسْتَكْبَرْتُمْ ۖ إِنَّ ٱللَّهَ لَا يَهْدِى ٱلْقَوْمَ ٱلظَّٰلِمِينَ.

46:10. “இஸ்ரவேலர்களே! நீங்கள் ஒரு விஷயத்தை கவனித்துப் பார்த்தீர்களா? உங்களிடையே இறைவழிகாட்டுதலை தெளிவாக எடுத்துரைத்த பல நபிமார்கள் வந்தார்கள். அவர்கள் எடுத்துரைத்த விஷயங்களையே நானும் உங்களுக்கு எடுத்துரைக்கின்றேன். என்னுடைய வருகையைப் பற்றிய குறிப்புகள் உங்கள் வேதமான தவ்ராத்திலும் உள்ளது.* (பார்க்க 7:157) அதைப் பற்றி மூஸா நபியே சாட்சி கூறியிருக்கிறார். (பார்க்க 73:15) அவரைவிட நீங்கள் மிஞ்சி விட்டீர்களா? நான் எடுத்துரைக்கும் அறிவுரைகளை ஏற்றுக் கொள்ளாமல் உங்கள் விருப்பப்படி நடந்துகொண்டால், உங்களுடைய நிலைமை என்னவாகும் என்பதைப் பற்றி எண்ணிப் பார்த்ததுண்டா? இப்படி எதையுமே சிந்திக்காமல் கண்மூடித்தனமாக வாழ்பவர்களுக்கு நேர்வழி எப்படி கிடைக்கும்?” என்று அவர்களிடம் கேளுங்கள்.
முஹம்மது நபியின் வருகையைப் பற்றிய குறிப்புகள் இன்றைக்கும் இஸ்திஸ்னா என்ற தவ்ராத்தில் இருக்கிறது. இவ்வாசகம் இஸ்ரவேலர்களுக்கு குறிப்பிட்டுச் சொன்னாலும் அவை இக்காலத்து மக்களுக்கும் பொருந்தும். காரணம் நபித்துவத் தொடர் முற்றுபெற்று விட்டது. எனவே இறை வேதமான குர்ஆன் நம்மிடம் உள்ளது. அவற்றின் உண்மைகளை மக்களுக்கு எடுத்துரைப்பது மிகமிக அவசியம்.


وَقَالَ ٱلَّذِينَ كَفَرُوا۟ لِلَّذِينَ ءَامَنُوا۟ لَوْ كَانَ خَيْرًۭا مَّا سَبَقُونَآ إِلَيْهِ ۚ وَإِذْ لَمْ يَهْتَدُوا۟ بِهِۦ فَسَيَقُولُونَ هَٰذَآ إِفْكٌۭ قَدِيمٌۭ.

46:11. இந்த குர்ஆன் நன்மையின் பக்கம் அழைப்பதாக இருந்தாலும், ஈமான் கொண்டவர்களைக் குறித்து இறைவழிகாட்டுதலை ஏற்காதவர்கள், “இதைக் கொண்டு எங்களை விட அவர்கள் கல்வி ஞானத்தில் மிஞ்சிவிட முடியாது. மேலும் ஈமான் கொண்டவர்கள் பாமரர்களாகவே இருக்கிறார்களே” என்று கூறுகிறார்கள். எனவே அவர்களுக்கு இந்த குர்ஆனின் அறிவுரைகளை எடுத்துரைத்தால், இவை யாவும் பழங்காலத்து கட்டுக் கதைகளே என்கின்றனர். இது தான் அவர்களுடைய கல்வி ஞானம்!!


وَمِن قَبْلِهِۦ كِتَٰبُ مُوسَىٰٓ إِمَامًۭا وَرَحْمَةًۭ ۚ وَهَٰذَا كِتَٰبٌۭ مُّصَدِّقٌۭ لِّسَانًا عَرَبِيًّۭا لِّيُنذِرَ ٱلَّذِينَ ظَلَمُوا۟ وَبُشْرَىٰ لِلْمُحْسِنِينَ.

46:12. இதற்கு முன் மூஸா நபிக்கு அளிக்கப்பட்ட வேதம், அக்காலத்து மக்களுக்கு நேர்வழி காட்டியாகவும் இறைவனின் அருட்கொடையாகவும் இருந்தது. இப்போது அதே அடிப்படையில் உங்கள் மொழியிலேயே இறக்கி அருளப்படும் இந்த குர்ஆனும், அதில் இருந்த உண்மை விஷயங்களை எடுத்துரைக்கிறது. அநியாய அக்கிரம செயலில் ஈடுபடுவோருக்கு எச்சரிக்கை செய்கிறது. மேலும் சமுதாய சமச் சீர்நிலை ஏற்பட பாடுபடுபவர்களுக்கு சிறந்ததொரு எதிர்காலம் உண்டு என்ற நன்மாராயமும் கூறுகிறது.


إِنَّ ٱلَّذِينَ قَالُوا۟ رَبُّنَا ٱللَّهُ ثُمَّ ٱسْتَقَٰمُوا۟ فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ.

46:13. எனவே எந்த சமுதாயம் தங்களை படைத்து பரிபாலிக்கும் இறைவன் அல்லாஹ் தான் என்பதை ஏற்று, அவன் காட்டிய வழியில் நிலைத்திருந்து அயறாது செயல்படுகிறதோ, அவர்களுடைய வாழ்வில் எவ்வித அச்சமோ துயரமோ நெருங்காது.


أُو۟لَٰٓئِكَ أَصْحَٰبُ ٱلْجَنَّةِ خَٰلِدِينَ فِيهَا جَزَآءًۢ بِمَا كَانُوا۟ يَعْمَلُونَ.

46:14. இத்தகையவர்களே சுவனத்திற்கு ஒப்பான சிறந்த சமுதாயத்தில் நீண்ட காலம் வரையில் இருப்பார்கள். இவை யாவும் அவர்கள் செய்து வரும் ஆற்றல் மிக்க செயல்களுக்குக் கிடைக்கும் சன்மானங்களாகும்.


وَوَصَّيْنَا ٱلْإِنسَٰنَ بِوَٰلِدَيْهِ إِحْسَٰنًا ۖ حَمَلَتْهُ أُمُّهُۥ كُرْهًۭا وَوَضَعَتْهُ كُرْهًۭا ۖ وَحَمْلُهُۥ وَفِصَٰلُهُۥ ثَلَٰثُونَ شَهْرًا ۚ حَتَّىٰٓ إِذَا بَلَغَ أَشُدَّهُۥ وَبَلَغَ أَرْبَعِينَ سَنَةًۭ قَالَ رَبِّ أَوْزِعْنِىٓ أَنْ أَشْكُرَ نِعْمَتَكَ ٱلَّتِىٓ أَنْعَمْتَ عَلَىَّ وَعَلَىٰ وَٰلِدَىَّ وَأَنْ أَعْمَلَ صَٰلِحًۭا تَرْضَىٰهُ وَأَصْلِحْ لِى فِى ذُرِّيَّتِىٓ ۖ إِنِّى تُبْتُ إِلَيْكَ وَإِنِّى مِنَ ٱلْمُسْلِمِينَ.

46:15. அந்த இறைவழிகாட்டுதல், தம் பெற்றோர்களின் தேவைகளை அழகிய முறையில் நிறைவேற்றி வரும்படி மனிதனுக்கு அறிவுறுத்துகிறது. காரணம் அவனுடைய தாய் வெகு சிரமத்துடனே அவனை சுமந்து பெற்றெடுக்கிறாள். கர்ப்பத்தில் அவனை சுமப்பதும் அவனுக்கு பாலூட்டுவதும் மொத்தம் முப்பது மாதங்கள் ஆகின்றன. இப்படியாக அவன் வளர்ந்து முழு அளவில் மனப் பக்குவத்துடன் கூடிய வயதை அடைய நாற்பது ஆண்டுகள்* ஆகின்றன. அப்போது அவனுக்கும், தன் பெற்றோருக்கும் இறைவன் புறத்திலிருந்து கிடைத்துள்ள அருட்கொடைகளை எண்ணி, நன்றி விசுவாசத்துடன் நன்மையான செயல்களை செய்யும் அரிய வாய்ப்பினை அளிக்கும்படி இறைவனிடம பிரார்த்திக்கின்றான். இவ்வாறே தம் பிள்ளைகளும் ஆற்றல்மிக்க நன்மையான செயல்களை செய்யும் தகுதி உடையவர்களாக ஆக்க இறைவனிடம் பிரார்த்திக்கின்றான். இப்படியாக அவனது வாழ்வின் ஒவ்வொரு விஷயத்திலும் இறைவனின் அறிவுரைகள் என்னவோ அதன் பக்கமே அவனுடைய கவனம் எல்லாம் இருக்கும். மேலும் அவன் அனைத்து தரப்பு மக்களின் நலனைப் பேணிக்காக்கும் முஸ்லிமாகவும் இருப்பான். இவை தான் சுவனத்து மக்களிடம் இருக்கும் சிறப்பான எண்ணங்களும் செயல்பாடுகளும் ஆகும்.
நாற்பது ஆண்டுகள் என்பது மனிதனின் நடுத்தர வயதாகும். இந்த வயதில், தன்னை வளர்த்து வந்த தாய் தந்தையர் ஒரு பக்கம்; தான் வளர்த்து வரும் பிள்ளைகள் மறு பக்கம் என இருப்பார்கள். இவன் எவ்வாறு தம் பிள்ளைகளை கஷ்டப்பட்டு வளர்த்து வருகிறானோ, அவ்வாறே அவனது பெற்றோர்களும் தன்னை வளர்த்து இருப்பார்கள் என்பதை அனுபவ ரீதியாக அறிந்து கொள்ளும் மனப்பக்குவம் அடையும் வயது. எனவே தான் தாய் தந்தையருடைய தேவைகளை அழகிய முறையில் நிறைவேற்றி வரும்படி இறைவழிகாட்டுதல் வலியுறுத்தி சொல்கிறது. (17:23-25, 31:14)
மேலும் மனித வாழ்வு என்பது கூட்டு வாழ்க்கையின் சங்கிலித் தொடர் போன்றதாகும். அதன் மூலம் தான் இவனால் சிறப்பாக வாழ முடியும். இவனால் தனித்து உயிர் வாழ முடியாது. எனவே தான் பெற்றோர்கள் விஷயத்திலும் உறவினர்கள் விஷயத்திலும் அழகிய முறையில் நடந்து கொள்ள வலியுறுத்துகிறது (பார்க்க 4:36). அதே போன்று பொது மக்களின் நலனையும் பேணிக்காக்க அறிவுறுத்துகிறது.


أُو۟لَٰٓئِكَ ٱلَّذِينَ نَتَقَبَّلُ عَنْهُمْ أَحْسَنَ مَا عَمِلُوا۟ وَنَتَجَاوَزُ عَن سَيِّـَٔاتِهِمْ فِىٓ أَصْحَٰبِ ٱلْجَنَّةِ ۖ وَعْدَ ٱلصِّدْقِ ٱلَّذِى كَانُوا۟ يُوعَدُونَ.

46:16. இப்படிப்பட்ட ஆக்கப்பூர்வமான நற்செயல்களைத் தான் இறைவன் ஏற்றுக் கொள்கின்றான். மேலும் அவர்களுடைய வாழ்வில் தீமைகள் நெருங்காதவாறு பார்த்துக் கொள்கிறான். இத்தகையவர்களே சுவனவாசிகள் என்ற அந்தஸ்தைப் பெறுகிறார்கள். இது தான் இறைவன் புறத்திலிருந்து மனிதனுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதியாகும். இதில் ஒருபோதும் மாற்றம் ஏற்படாது.


وَٱلَّذِى قَالَ لِوَٰلِدَيْهِ أُفٍّۢ لَّكُمَآ أَتَعِدَانِنِىٓ أَنْ أُخْرَجَ وَقَدْ خَلَتِ ٱلْقُرُونُ مِن قَبْلِى وَهُمَا يَسْتَغِيثَانِ ٱللَّهَ وَيْلَكَ ءَامِنْ إِنَّ وَعْدَ ٱللَّهِ حَقٌّۭ فَيَقُولُ مَا هَٰذَآ إِلَّآ أَسَٰطِيرُ ٱلْأَوَّلِينَ.

46:17. இதற்கு மாறாக பெற்றோர்களின் அறிவுரைகளை மதிக்காத பிள்ளைகளும் இருக்கின்றனர். அத்தயைவர்கள் தம் பெற்றோரிடம், “சீச்சி! உங்களுக்கு என்ன நேர்ந்தது! நான் மரணித்த பின் மீண்டும் எழுப்பப்படுவேன் என்று என்னை பயமுறுத்துகிறீர்களா? எனக்கு முன்னர் எத்தனையோ தலைமுறையினர் சென்று விட்டனரே! அவர்கள் எல்லாம் மீண்டும் எழுப்பப்படுவதை நான் காணவில்லையே!” என்று வாதிடுகின்றனர். இத்தகைய பிள்ளைகளைப் பாதுகாக்குமாறு பெற்றோர்கள் அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்கின்றனர். இருந்தும் அவர்கள் தம் பிள்ளைகளுக்கு இறைவனின் செயல் திட்டங்களைப் பற்றி அடிக்கடி எடுத்துரைத்து நேர்வழிக்கு கொண்டுவர முயல்கின்றனர். அவர்கள் தம் பிள்ளைகளிடம், “மனிதன் மரணித்த பின் மீண்டும் எழுப்புவது என்பது இறைவனின் செயல் திட்டமாகும். அதை யாரால் மாற்ற முடியும்? இவை யாவும் உன்னுடைய நன்மைக்காகத் தான் எடுத்துரைக்கிறோம்” என்று அறிவுறுத்தி வருகின்றனர். அவற்றை ஏற்று நடக்கும் பிள்ளைகளும் இருக்கின்றனர். இவையாவும் முன்னோர்களின் கட்டுக்கதையே எனக் கூறி நிராகரிப்பவர்களும் உள்ளனர்.


أُو۟لَٰٓئِكَ ٱلَّذِينَ حَقَّ عَلَيْهِمُ ٱلْقَوْلُ فِىٓ أُمَمٍۢ قَدْ خَلَتْ مِن قَبْلِهِم مِّنَ ٱلْجِنِّ وَٱلْإِنسِ ۖ إِنَّهُمْ كَانُوا۟ خَٰسِرِينَ.

46:18. ஆக பெற்றோர்கள் தம் பிள்ளைகளுக்கு எடுத்துரைத்த அறிவுரைகள் யாவும் உண்மையானதே ஆகும். இது போன்றே முன்சென்ற மக்களுள் நகர் புறவாசிகளும் மலைவாழ் இனத்தவரும் தம் பிள்ளைகளுக்கு அறிவுறுத்தி வந்தனர். அந்த அறிவுரைகளை ஏற்காத பிள்ளைகள் பிற்காலத்தில் பெருத்த நஷ்டவாளிகளாகி விட்டனர்.
மேற்சொன்ன மூன்று வாசகங்களிலிருந்து நமக்கு தெரிய வருவது என்னவென்றால் நமக்கு மட்டும் சிறப்பான வாழ்வு கிடைத்தால் போதாது. நம் பிள்ளைகளுக்கும் சுவனத்திற்கு ஒப்பான வாழ்வு இவ்வுலகில் நீடித்து நிலைக்க, இறைவனின் செயல் திட்டங்களைப் பற்றியும் அவனுடைய அறிவுரைகளையும் எடுத்துரைக்க வேண்டும். இதே போன்று நபிமார்களும் தம் பிள்ளைகளுக்கு அறிவுறுத்தி வந்தனர். (பார்க்க 2:132-133) அவ்வாறு நாம் செய்யவில்லை என்றால் பிள்ளைகளுக்குத் தம் வாழ்வின் நோக்கங்களைப் பற்றி தெரியாமல் போய்விடும். அவர்கள் காலப்போக்கில் வழிதவறி சென்றுவிடுவார்கள்.


وَلِكُلٍّۢ دَرَجَٰتٌۭ مِّمَّا عَمِلُوا۟ ۖ وَلِيُوَفِّيَهُمْ أَعْمَٰلَهُمْ وَهُمْ لَا يُظْلَمُونَ.

46:19. மேலும் இத்தகைய சுவனத்திற்கு ஒப்பான சமுதாயங்களில் அவரவர் செய்து வரும் நற்செயல்களுக்கும், தகுதிக்கும் ஏற்ற வகையில்தான் பதவியும், அந்தஸ்தும் கிடைக்கும். அத்தகைய சமுதாயங்களில் யாரும் யாருக்கும் எதிராக அநியாயம் செய்ய மாட்டார்கள். மரணத்திற்குப் பின் தொடர்கின்ற சுவர்க்கத்திலும் இதே போன்ற வாழ்வு கிடைக்கும்.


وَيَوْمَ يُعْرَضُ ٱلَّذِينَ كَفَرُوا۟ عَلَى ٱلنَّارِ أَذْهَبْتُمْ طَيِّبَٰتِكُمْ فِى حَيَاتِكُمُ ٱلدُّنْيَا وَٱسْتَمْتَعْتُم بِهَا فَٱلْيَوْمَ تُجْزَوْنَ عَذَابَ ٱلْهُونِ بِمَا كُنتُمْ تَسْتَكْبِرُونَ فِى ٱلْأَرْضِ بِغَيْرِ ٱلْحَقِّ وَبِمَا كُنتُمْ تَفْسُقُونَ.

46:20. இதற்கு மாறாக இறைவழிகாட்டுதலைப் புறக்கணித்து வாழும் சமுதாயங்களின் நிலை நாளுக்கு நாள் மோசமாகி, வேதனை அளிக்கும் சம்பவங்கள் மிகைத்து வரும். மேலும் அவர்களிடம், “உங்களுக்கு கிடைத்திருந்த வாழ்வாதரங்களை இறைவழிகாட்டுதலின் படி அனைவருக்கும் சரி சமமாகப் பங்கிட்டு சிறப்பாக வாழ்வதற்குப் பதிலாக வீணான செலவுகளைச் செய்து, உங்கள் வரையில் சுகத்தை தேடிக் கொண்டீர்களே. நீங்கள் ஆணவத்துடன் அநியாய அக்கிரம செயல்களை செய்யவே முற்பட்டீர்கள். இதனால் உங்களுடைய சமுதாயம் இழிவு தரும் வேதனை அளிக்கும் படியாக மாறிவிட்டது. இது தான் நீங்கள் செயல்பட்டு வந்தமைக்கு கிடைக்கும் கூலியாகும்” என்று கூறும் வகையில் நிலைமை ஏற்படும். இதே போன்ற நிலை மரணத்திற்குப் பின்பும் தொடரும்.


۞ وَٱذْكُرْ أَخَا عَادٍ إِذْ أَنذَرَ قَوْمَهُۥ بِٱلْأَحْقَافِ وَقَدْ خَلَتِ ٱلنُّذُرُ مِنۢ بَيْنِ يَدَيْهِ وَمِنْ خَلْفِهِۦٓ أَلَّا تَعْبُدُوٓا۟ إِلَّا ٱللَّهَ إِنِّىٓ أَخَافُ عَلَيْكُمْ عَذَابَ يَوْمٍ عَظِيمٍۢ.

46:21. இவற்றின் உண்மை நிலை அறிந்துகொள்ள விருப்பமிருந்தால், பாலைவன மணல் மேடுகள் நிறைந்த ஆஃகாஃப் என்ற பிரதேசத்தில் “ஆது” என்ற சாம்ராஜ்ஜியம் பரந்து விரிந்து கிடந்ததும், அதன் அழிவுக்கான காரணங்களையும் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். அந்நாட்டை சேர்ந்த ஹுது நபி போன்றோர் அவர்களுடைய தீய செயல்களின் விளைவுகளைப் பற்றி எச்சரிக்கை செய்து வந்தார்கள். அவருக்கு முன் வந்த இறைத் தூதர்களும் அல்லாஹ்வின் வழிகாட்டுதலைத் தவிர வேறு எதற்கும் அடிபணிந்து செயல்படாதீர்கள் என்று அறிவுறுத்தி வந்தார்கள். மேலும் இறைக் கட்டளைக்கு மாறு செய்வதால் ஏற்படும் பேரழிவுகளுக்கு பலியாக நேரிடும் என தாம் அஞ்சுவதாகவும் கூறினார்கள்.


قَالُوٓا۟ أَجِئْتَنَا لِتَأْفِكَنَا عَنْ ءَالِهَتِنَا فَأْتِنَا بِمَا تَعِدُنَآ إِن كُنتَ مِنَ ٱلصَّٰدِقِينَ.

46:22. ஆனால் அந்நாட்டை சேர்ந்தவர்கள் அவர்களுடைய அறிவுரைகளை ஏற்றுக் கொள்ளவே இல்லை. மாறாக “நாங்கள் காலம் காலமாக வழிபட்டு வரும் தெய்வங்களை விட்டுவிடும் படி சொல்லவே நீர் எங்களிடம் வந்தீரா? நீர் உண்மையாளராக இருந்தால் அடிக்கடி எங்களைப் பயமுறுத்தி வரும் அந்த வேதனைகளை எங்கள் முன் கொண்டு வாரும் என்றும் அதில் கால தாமதம் எதற்கு?” என்று அறிவில்லாமல் கேட்டு வந்தார்கள்.


قَالَ إِنَّمَا ٱلْعِلْمُ عِندَ ٱللَّهِ وَأُبَلِّغُكُم مَّآ أُرْسِلْتُ بِهِۦ وَلَٰكِنِّىٓ أَرَىٰكُمْ قَوْمًۭا تَجْهَلُونَ.

46:23. அதற்கு இறைத்தூதர், அந்த வேதனைகள் எப்போது வரும் என்ற ஞானம் எனக்கில்லை. அது அல்லாஹ்வுக்கு மட்டுமே தெரியும். ஆனால் நீங்கள் செயல்படுவதை வைத்துப் பார்க்கும் போது, உங்களுக்கு அழிவு ஏற்படுவது நிச்சயம் என்றே தோன்றுகிறது. எனவே எனக்கு வஹீ மூலம் என்ன அறிவிக்கப்படுகின்றதோ, அவற்றையே உங்களுக்கு நான் எடுத்துரைக்கின்றேன். ஆனால் நீங்கள் எதைப் பற்றியும் சிந்திக்காத சமூகத்தாராக இருக்கிறீர்களே” என்று கூறி வந்தார்.


فَلَمَّا رَأَوْهُ عَارِضًۭا مُّسْتَقْبِلَ أَوْدِيَتِهِمْ قَالُوا۟ هَٰذَا عَارِضٌۭ مُّمْطِرُنَا ۚ بَلْ هُوَ مَا ٱسْتَعْجَلْتُم بِهِۦ ۖ رِيحٌۭ فِيهَا عَذَابٌ أَلِيمٌۭ.

46:24. இப்படியாக அவர்கள் தர்க்கித்து வந்தார்கள். ஹுது நபியின் அறிவுரைகளுக்கு செவி சாய்க்கவில்லை. ஒரு நாள் அவர்கள் வாழ்ந்த பள்ளத்தாக்குகளை நோக்கி கருமேகங்கள் வருவதைக் கண்டு மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்கள். காரணம் அவர்கள் மழையின்றி அவதிப்பட்டு வந்ததால் அவர்களுக்கு இருந்த கஷ்டம் தீர்ந்து விடும் என எண்ணினார்கள். ஆனால் அவர்களை நோக்கி வந்ததோ புழுதிப் புயலாகும். அவர்கள் அவசரப்பட்டுக் கொண்டிருந்த பெரு வேதனைகள் அவர்களை நொக்கி வந்தடைந்தன.


تُدَمِّرُ كُلَّ شَىْءٍۭ بِأَمْرِ رَبِّهَا فَأَصْبَحُوا۟ لَا يُرَىٰٓ إِلَّا مَسَٰكِنُهُمْ ۚ كَذَٰلِكَ نَجْزِى ٱلْقَوْمَ ٱلْمُجْرِمِينَ.

46:25. இறைவனின் நியதிப்படி இயற்கை சீற்றத்தின் அடிப்படையில் ஏற்பட்ட அந்த புழுதிப் புயல் அவர்களுடைய எல்லா வாழ்வதாரப் பொருட்களையும் வேறோடு அழித்து விட்டது. மறுநாள் காலையில் இடிந்து போன வீடுகள் மட்டும்தான் மிஞ்சின. மற்றவை எதுவும் காணவில்லை. இறைவன் புறத்திலிருந்து கிடைக்கின்ற முன்னெச்சரிக்கைகளை மதிக்காமல் அலட்சியமாக வாழ்பவர்களுக்கு கிடைக்கின்ற பேரழிவுகள் இப்படியாகத் தான் இருக்கும்.


وَلَقَدْ مَكَّنَّٰهُمْ فِيمَآ إِن مَّكَّنَّٰكُمْ فِيهِ وَجَعَلْنَا لَهُمْ سَمْعًۭا وَأَبْصَٰرًۭا وَأَفْـِٔدَةًۭ فَمَآ أَغْنَىٰ عَنْهُمْ سَمْعُهُمْ وَلَآ أَبْصَٰرُهُمْ وَلَآ أَفْـِٔدَتُهُم مِّن شَىْءٍ إِذْ كَانُوا۟ يَجْحَدُونَ بِـَٔايَٰتِ ٱللَّهِ وَحَاقَ بِهِم مَّا كَانُوا۟ بِهِۦ يَسْتَهْزِءُونَ.

46:26. அவர்கள் வாழ்ந்த நாட்டில் வசதி வாய்ப்பிற்கு எந்தக் குறைவும் இருந்ததில்லை. உங்களுக்கும் கிடைக்காத அளவுக்கு வசதி வாய்ப்புகளைப் பெற்று சீரும் சிறப்புமாக வாழ்ந்து வந்தார்கள். எல்லா துறைகளிலும் ஞானமும் ஆற்றல்களும், தொழில் நுட்பங்களும் அவர்களிடம் இருந்தது என்னவோ உண்மை தான். புரிந்துகொள்ளும் ஆற்றல், பார்வைப் புலன்கள், மற்றும் சிந்திக்கும் புலன்கள் யாவும் சிறப்பாகத் தான் இருந்தன. ஆனால் அவர்களுக்கு அல்லாஹ்வின் அறிவுரைகளை எடுத்துரைத்த போது, அவற்றைக் கேட்டு, சிந்தித்துப் பார்க்கும் திறன்கள் இல்லாமல் போயிற்று. காரணம் அவர்களுடைய சுயநலப் போக்கும், தீய செயல்களும், கற்பனை தெய்வ வழிபாடுகளும் அவர்களை மயக்கிவிட்டன. அதனால் அவர்கள் இறைவனின் அறிவுரைகளை பரிகசிக்கவே செய்தார்கள். இறுதியில் அவர்களுடைய பரிகாசமே அவர்களுடைய அழிவுக்குக் காரணியாக அமைந்து விட்டது.
குறிப்பு:"ஆது" சாம்ராஜ்ஜியம் கி.மு. 2500 வரையில் நடைபெற்று வந்ததாக வரலாற்றுக் குறிப்புகள் தெரிவிக்கின்றன. இது இக்காலத்தில் இருக்கும் ஏமன் நாடு முதல் ஈராக் வரையிலும், அரபுநாடுகளும், தெற்கே எகிப்து முதல் வடக்கே சிரியா நாடு வரையில் பரவி இருந்தது. அதில் பெரும்பாலான இடங்கள் மணல் மேடுகள் நிறைந்த பாலைவனமாக இருந்தன. அப்படி இருந்தும் அவர்கள் தொழில் ரீதியாக சிறப்பாகத்தான் வாழ்ந்து வந்தார்கள். ஆனால் அவர்கள் ஒழுக்கங் கெட்ட செயல்களைச் செய்து வந்ததால் அவர்களுடைய அழிவு தவிர்க்க முடியாததாகி விட்டது.


وَلَقَدْ أَهْلَكْنَا مَا حَوْلَكُم مِّنَ ٱلْقُرَىٰ وَصَرَّفْنَا ٱلْءَايَٰتِ لَعَلَّهُمْ يَرْجِعُونَ.

46:27. இப்படியாக “ஆது” சமுதாயத்தின் சாம்ராஜ்ஜியம் அழிவை சந்தித்தது. அது மட்டுமின்றி அதை சுற்றியுள்ள நாடுகளும் இறைவனின் நியதிப்படி பேரழிவை சந்தித்துக் கொண்டன. அவர்கள் அந்த அழிவிலிருந்து மீள்வதற்காக நாம் இறைத் தூதர்களை தொடர்ந்து அனுப்பி வைத்தோம். ஆனால் அவர்கள் அவற்றைக் கேட்காததால் அழிந்து போனார்கள்.
அவர்கள் இறைவழிகாட்டுதலை ஏற்காததற்கு காரணம் என்ன? அவர்கள் உருவாக்கி வைத்திருந்த கற்பனை தெய்வங்களும், அவற்றின் வழிபாடுகளும், சுயநலப்போக்கும், தீய செயல்களின் இன்பங்களும், ஆடம்பரமான வாழ்க்கையும் அவர்களை இதன் பக்கம் வர தடையாக இருந்தன.


فَلَوْلَا نَصَرَهُمُ ٱلَّذِينَ ٱتَّخَذُوا۟ مِن دُونِ ٱللَّهِ قُرْبَانًا ءَالِهَةًۢ ۖ بَلْ ضَلُّوا۟ عَنْهُمْ ۚ وَذَٰلِكَ إِفْكُهُمْ وَمَا كَانُوا۟ يَفْتَرُونَ.

46:28. அழிந்து போன அந்த சமுதாயத்தவர்கள் அல்லாஹ் அல்லாத பிற கற்பனை தெய்வங்களை உருவாக்கி அவற்றை வழிபட்டு வந்தார்கள். தங்களை அல்லாஹ்விடம் நெருங்க வைக்கும் என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள். அவர்களுடைய கண்ணோட்டம் உண்மையாக இருந்திருந்தால் முன்சென்ற சமுதாயங்களுக்கு அழிவு ஏற்பட்ட போது, அவர்களை காப்பாற்றி இருக்க வேண்டுமே. ஆனால் அவற்றில் எதுவும் ஏன் உதவி புரியவில்லை? எனவே அவையாவும் அவர்களே பொய்யாக கற்பனை செய்து உருவாக்கி வைத்திருந்த சித்தாந்தங்களாகும் என்பதற்கு இதுவே சான்றாகும். அது மட்டுமின்றி அந்த வழிபாடுகளே அவர்களை வழிகெடுக்கச் செய்தன.
இறைவழிகாட்டுதலை எடுத்துரைப்பவரே! நகர்புற மக்கள் இறை வழிகாட்டுதலை ஏற்க மறுக்கிறார்கள் என்பதை எண்ணி வருத்தப்பட வேண்டாம். இவர்கள் கேட்க முன்வரவில்லை என்றால்


وَإِذْ صَرَفْنَآ إِلَيْكَ نَفَرًۭا مِّنَ ٱلْجِنِّ يَسْتَمِعُونَ ٱلْقُرْءَانَ فَلَمَّا حَضَرُوهُ قَالُوٓا۟ أَنصِتُوا۟ ۖ فَلَمَّا قُضِىَ وَلَّوْا۟ إِلَىٰ قَوْمِهِم مُّنذِرِينَ.

46:29. குர்ஆனுடைய போதனைகள் நடைபெறுவதாக கேள்வியுற்ற நாட்டுப்புற மக்களுள் சிலர் அங்கு வந்து கவனமாகக் கேட்கிறார்கள். நபியே! அவர்கள் மறைந்திருந்து குர்ஆனின் அறிவுரைகளைக் கேட்டு வருவதாக நாம் உமக்கு வஹீ மூலம் அறிவித்தும் இருக்கிறோம். (பார்க்க 72:1) அவர்கள் குர்ஆனின் விஷயத்தை கேட்க மிகவும் ஆர்வத்துடன் இருக்கிறார்கள். எனவே அவர்கள் மற்றவர்களை நோக்கி மௌனமாக கேளுங்கள் என்று கண்டித்தும் இருக்கிறார்கள். இவ்வாறு கவனமாகக் கேட்டவற்றை தம் சமூகத்தாரிடம் சென்று, அவர்களுடைய தவறான செயல்களால் ஏற்படும் பாதிப்புகளைப் பற்றி எடுத்துரைத்து எச்சரிக்கை செய்தும் வருகின்றனர்.


قَالُوا۟ يَٰقَوْمَنَآ إِنَّا سَمِعْنَا كِتَٰبًا أُنزِلَ مِنۢ بَعْدِ مُوسَىٰ مُصَدِّقًۭا لِّمَا بَيْنَ يَدَيْهِ يَهْدِىٓ إِلَى ٱلْحَقِّ وَإِلَىٰ طَرِيقٍۢ مُّسْتَقِيمٍۢ.

46:30. அவர்கள் தம் இருப்பிடத்திற்கு சென்று, “எங்களுடைய சமூகத்தவர்களே! நிச்சயமாக நாங்கள் ஒரு வேதத்தை செவிமடுத்தோம். அது மூஸாவுக்குப் பின்னர் இறக்கி அருளப்பட்டுள்ளதாக உள்ளது. அது தனக்கு முன் வந்த வேதங்களின் உண்மையான நோக்கங்களையும் அவற்றில் இருந்த நேர்வழியையும் எடுத்துரைக்கிறது. அது மனிதனின் சிறப்பான வாழ்விற்கு மிகச் சரியான பாதையை காட்டுவதாக இருக்கிறது. அவற்றை கடைப்பிடிப்பவர்களுக்கு நேர்வழி கிடைப்பது உறுதி என்றே தெரிகிறது” என்று அறிவுறுத்தி வருகிறார்கள்.


يَٰقَوْمَنَآ أَجِيبُوا۟ دَاعِىَ ٱللَّهِ وَءَامِنُوا۟ بِهِۦ يَغْفِرْ لَكُم مِّن ذُنُوبِكُمْ وَيُجِرْكُم مِّنْ عَذَابٍ أَلِيمٍۢ.

46:31. மேலும் அவர்கள், “எங்கள் சமூகத்தவர்களே! அல்லாஹ்வின் வழிகாட்டுதலின் பக்கம் அழைப்பவரின் அழைப்பை ஏற்று நீங்கள் அவருக்கு ஆதரவு அளியுங்கள். அவர் கூறி வரும் உண்மை விஷயங்களை ஏற்றுக் கொள்ளுங்கள். இது வரையில் அறியாமையில் செய்த பாவச் செயல்களின் தாக்கங்களிலிருந்து பாதுகாத்து கொள்ள நேர்வழிகள் கிடைத்துவிடும். இப்படியாக உங்களுக்கு நேரவிருக்கும் பேரழிவிலிருந்து மீள முடியும்” என்று அறிவுறுத்தி வருகிறார்கள்.


وَمَن لَّا يُجِبْ دَاعِىَ ٱللَّهِ فَلَيْسَ بِمُعْجِزٍۢ فِى ٱلْأَرْضِ وَلَيْسَ لَهُۥ مِن دُونِهِۦٓ أَوْلِيَآءُ ۚ أُو۟لَٰٓئِكَ فِى ضَلَٰلٍۢ مُّبِينٍ.

46:32. மேலும் அவர்கள், “யார் இறைவழிகாட்டுதலின் பக்கம் விடப்படும் அழைப்பை ஏற்க மறுக்கிறார்களோ, அதன் பாதிப்புகள் அவர்களுக்கே ஏற்படும். இதனால் அல்லாஹ்வின் செயல் திட்டத்தில் எந்த பாதிப்பும் ஏற்படாது. இறைவழிகாட்டுதலின் படி உருவாகவிருக்கும் நேர்மையான ஆட்சியமைப்பை யாராலும் தடுக்க முடியாது. அதன்பின் இத்ததைய ஆட்சிக்கு எதிராக செயல்படுபவர்களுக்கு உதவி செய்வோர் வேறு எவரும் இருக்க மாட்டார்கள். மேலும் அவர்கள் வெளிப்படையான வழிகேட்டில் இருப்பதாகவே கருதப்படுவார்கள்” என்று தம் சமூகத்தாருக்கு எச்சரிக்கை செய்து வருகின்றனர்.
ஆக மலைவாழ் மக்களுக்கும் நாட்டுப்புற மக்களுக்கும் உண்மை விஷயங்கள் என்னவென்று புரிந்து விட்டன. அவர்களுடைய ஆதரவு இறைத் தூதருக்கு கிடைப்பது உறுதியாகி விட்டது. ஆனால் நகர்புற மக்களுக்கு இன்னமும் விளங்கவில்லை. எனவே


أَوَلَمْ يَرَوْا۟ أَنَّ ٱللَّهَ ٱلَّذِى خَلَقَ ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضَ وَلَمْ يَعْىَ بِخَلْقِهِنَّ بِقَٰدِرٍ عَلَىٰٓ أَن يُحْۦِىَ ٱلْمَوْتَىٰ ۚ بَلَىٰٓ إِنَّهُۥ عَلَىٰ كُلِّ شَىْءٍۢ قَدِيرٌۭ.

46:33. அவர்கள், அகிலங்களும் பூமியும் படைக்கப்பட்டு அழகிய முறையில் செயல்படுத்தி வரும் அல்லாஹ்வின் மாபெரும் வல்லமையைப் பற்றி கவனித்துப் பார்ப்பதில்லையா? அவற்றை தொடர்ந்து படைத்து வருவதையும், அதில் ஒருபோதும் சற்றும் சோர்வு அடைவதில்லை என்பதையும் கவனித்துப் பார்ப்பதில்லையா? இந்த அளவுக்கு பேராற்றலுடைய அல்லாஹ்வுக்கு இறந்தவர்களை மீண்டும் உயிர் கொடுக்கும் ஆற்றல் இல்லை என்று எண்ணிக் கொண்டார்களா? அவ்வாறில்லை. அவன் படைத்த ஒவ்வொரு படைப்பிற்கும் அதனதன் எல்லைக் கோடுகளையும், செயல் திறன்களையும் நிர்ணயித்துள்ளான். அதன்படி நடைபிணமாக இருக்கும் உங்களையும் இவ்வழிகாட்டுதல் மூலம் புத்துயிர் பெறச் செய்து, புதுப் பொலிவுடன் வாழவைக்க முடியும். இந்த உண்மைகளை அவர்களுக்கு எடுத்துரையுங்கள்.
அவர்கள் இறைவழிகாட்டுதலை ஏற்காமல் தீய செயல்களை தடுத்துக் கொள்ளாவிட்டால் அவர்களுக்கு நேரவிருக்கும் பேரழிவுகளை தடுத்து நிறுத்த முடியாது. அவ்வாறு பேரழிவுகள் ஏற்பட்டதும், ஏற்படப் போவதும் நிச்சயம் என்று அவர்கள் கவனித்துப் பார்க்கக் கூடாதா?


وَيَوْمَ يُعْرَضُ ٱلَّذِينَ كَفَرُوا۟ عَلَى ٱلنَّارِ أَلَيْسَ هَٰذَا بِٱلْحَقِّ ۖ قَالُوا۟ بَلَىٰ وَرَبِّنَا ۚ قَالَ فَذُوقُوا۟ ٱلْعَذَابَ بِمَا كُنتُمْ تَكْفُرُونَ.

46:34. அந்த தீய விளைவுகள் தோற்றத்திற்கு வரும் கால கட்டத்தில், அவர்கள் அந்த வேதனைகளை தம் கண்களால் பார்த்து தான் புரிந்து கொள்வார்கள். அப்போது அவர்களிடம், “நாம் செய்த முன்னெச்சரிக்கை யாவும் உண்மையே என ஆகிவிட்டதா?” என்று கேட்கப்படும். அதற்கு அவர்கள்,“அல்லாஹ்வின் மீது ஆணையாக அது உண்மைதான்” என்று பதில் கூறுவார்கள். “நீங்கள் இறை வழிகாட்டுதலை ஏற்காமல் தீய வழியில் சென்றமைக்கு இவ்வேதனைகளை தொடர்ந்து அனுபவியுங்கள்” என்று கூறப்படும்.
சிந்தனையாளர்களே! திருக்குர்ஆனின் விளக்க உரையில் சுவன வாழ்வைப் பற்றியும் நரக வேதனைகளைப் பற்றியும் இவ்வுலகிலும் மரணத்திற்குப் பின் தொடர்கின்ற வாழ்விலும் கிடைக்கும் என்ற அடிப்படையில் தந்துள்ளோம். காரணம் அல்லாஹ்வின் செயல் திட்டங்கள் அகிலங்கள் அனைத்திலும் ஒரே சீராக நடைபெறுபவை ஆகும். (பார்க்க 5:120)


فَٱصْبِرْ كَمَا صَبَرَ أُو۟لُوا۟ ٱلْعَزْمِ مِنَ ٱلرُّسُلِ وَلَا تَسْتَعْجِل لَّهُمْ ۚ كَأَنَّهُمْ يَوْمَ يَرَوْنَ مَا يُوعَدُونَ لَمْ يَلْبَثُوٓا۟ إِلَّا سَاعَةًۭ مِّن نَّهَارٍۭ ۚ بَلَٰغٌۭ ۚ فَهَلْ يُهْلَكُ إِلَّا ٱلْقَوْمُ ٱلْفَٰسِقُونَ.

46:35. சமூக சீர்த்திருத்தவாதியே! நீங்கள் அவர்களுடைய ஏளன பேச்சைப் பற்றி எண்ணி வருத்தப்படாதீர்கள். நீங்கள் உங்கள் செயல்திட்டத்தில் நிலைத்திருந்து செயல்பட்டு வாருங்கள். இப்படி செயல்படுவது சாதாரண விஷயமல்ல. உங்களுக்கு முன் வந்த சீர்த்திருத்தவாதிகள் எவ்வாறு பொறுமையுடன் தம் இலட்சியத்தில் நிலைத்திருந்து செயல்பட்டு வந்தார்களோ, அவ்வாறே நீங்களும் மனஉறுதியுடன் செயல்பட்டு வாருங்கள். தீயவர்களுக்கு ஏற்படவிருக்கும் அழிவுகள் வெகு தூரத்தில் இல்லை. அதன் வேதனைகளைப் பார்த்து அவர்கள் புரிந்து கொள்வார்கள். அப்போது, தாம் திருந்துவதற்கு அளிக்கப்பட்ட கால அவகாசம் மிகவும் சொற்பமானதே என்று எண்ணும் அளவுக்கு அந்த வேதனைகள் கடுமையானதாக இருக்கும். இதைப் பற்றிய உண்மைகளை எடுத்துரைப்பதே உங்கள் பணியாகும். காரணம் அவர்கள் வரம்பு மீறிய சமூகத்தாராகவே இருக்கிறார்கள்.