بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ

45:0.அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் அறிவுரைப்படியே அனைத்துக் காரியங்களையும் செய்ய நாடுகிறேன். (பார்க்க 6:162)


حمٓ.

45:1. பாராட்டுக்கும் போற்றுதலுக்கும் உரிய முஹம்மது நபி மூலம் இறக்கியருளப்பட்ட வேதமிது.


تَنزِيلُ ٱلْكِتَٰبِ مِنَ ٱللَّهِ ٱلْعَزِيزِ ٱلْحَكِيمِ.

45:2. அகிலங்களிலும் பூமியிலும் உள்ள அனைத்தையும் கட்டுப்படுத்தும் சகல வல்லமையும், ஞானமும் மிக்க அல்லாஹ்விடமிருந்து இறக்கியருளப்படும் வேதமிது.


إِنَّ فِى ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضِ لَءَايَٰتٍۢ لِّلْمُؤْمِنِينَ.

45:3. இவற்றைப் பற்றி சிந்தித்து செயலாற்றும் மூஃமின்களுக்கு, அகிலங்கள் மற்றும் பூமியின் படைப்புகளில் அல்லாஹ்வின் சர்வ வல்லமையின் அத்தாட்சிகள் பல கிடைக்கும். அவற்றை ஆய்வு செய்து மனித வள மேம்பாட்டிற்காக பயன்படுத்துவார்கள். (பார்கக் 3:190-191)


وَفِى خَلْقِكُمْ وَمَا يَبُثُّ مِن دَآبَّةٍ ءَايَٰتٌۭ لِّقَوْمٍۢ يُوقِنُونَ.

45:4. அதுமட்டுமின்றி உங்களை படைத்திருப்பதிலும், எண்ணற்ற ஜீவராசிகளை உலகம் முழுவதிலும் பரவலாகப் படைத்திருப்பதிலும் அல்லாஹ்வின் வல்லமையின் அத்தாட்சிகள் பல கிடைக்கும். அவையாவும் மனிதனின் சிறப்பான வாழ்விற்காகவே படைக்கப்பட்டுள்ளன என்பதை அறிந்து கொள்வீர்கள். (பார்க்க 2:29)


وَٱخْتِلَٰفِ ٱلَّيْلِ وَٱلنَّهَارِ وَمَآ أَنزَلَ ٱللَّهُ مِنَ ٱلسَّمَآءِ مِن رِّزْقٍۢ فَأَحْيَا بِهِ ٱلْأَرْضَ بَعْدَ مَوْتِهَا وَتَصْرِيفِ ٱلرِّيَٰحِ ءَايَٰتٌۭ لِّقَوْمٍۢ يَعْقِلُونَ.

45:5. மேலும் மாறிமாறி வரும் இரவு பகலைப் பற்றி சிந்தித்துப் பாருங்கள். வானத்திலிருந்து மழை பொழிய வைத்து, அதைக் கொண்டு வறண்டு கிடக்கும் பூமியை செழிப்பாக்கி, அதிலிருந்து பல்வேறு உணவு வகைகள் கிடைத்து வருவதைப் பற்றியும் சிந்தித்துப் பாருங்கள். இதற்காக உலகம் முழுவதிலும் காற்றை மாறி மாறி வீசச் செய்வதையும் சிந்தித்துப் பாருங்கள். இவற்றைப் பற்றி சிந்தித்துணரும் மக்களுக்கு அல்லாஹ்வின் சர்வ வல்லமையின் அத்தாட்சிகள் பல கிடைக்கும்.


تِلْكَ ءَايَٰتُ ٱللَّهِ نَتْلُوهَا عَلَيْكَ بِٱلْحَقِّ ۖ فَبِأَىِّ حَدِيثٍۭ بَعْدَ ٱللَّهِ وَءَايَٰتِهِۦ يُؤْمِنُونَ.

45:6. மனிதவள மேம்பாட்டிற்காக அல்லாஹ்வின் படைப்புகள் உறுதுணையாக இருப்பது போல, மனித சமுதாயங்களும் ஒழுக்க மாண்புகளுடன் சிறப்பாக செயல்பட வேண்டும் என்பதற்காகவே இறைவழிகாட்டுதல் அடங்கிய இவ்வேதம் அளிக்கப்படுகிறது. இந்த அளவுக்கு தெளிவாக எடுத்துரைத்த போதும், அவர்கள் இவற்றை விட்டுவிட்டு வேறு எந்த பேச்சைக் கேட்டு ஈமான் கொள்ளப் போகிறார்கள்?
ஆக உலகப் படைப்புகளின் ஆய்வுகளை மேற்கொண்டும் இறைவழிகாட்டுதலை பின்பற்றிக் கொண்டும் சிறப்பாக வாழ்வதற்குப் பதிலாக (பார்க்க 39:67) வெறும் கற்பனை உலகைப் பற்றிய பேசி மதிமயங்கிக் கிடக்க விரும்புகிறீர்களா?


وَيْلٌۭ لِّكُلِّ أَفَّاكٍ أَثِيمٍۢ.

45:7. மனித வளத்தை குன்றச் செய்யும் வீணான பேச்சை கேட்டு காலத்தை வீணடித்தால், அவர்கள் அழிவு எனும் பாதாளத்திற்குள் செல்ல ஆயத்தமாகிக் கொள்ளட்டும்.


يَسْمَعُ ءَايَٰتِ ٱللَّهِ تُتْلَىٰ عَلَيْهِ ثُمَّ يُصِرُّ مُسْتَكْبِرًۭا كَأَن لَّمْ يَسْمَعْهَا ۖ فَبَشِّرْهُ بِعَذَابٍ أَلِيمٍۢ.

45:8. இத்தகையவர்களிடம் இறைவனின் வழிகாட்டுதலை எடுத்துரைத்தால், அவற்றை கேட்காதது போல் ஆணவத்தோடு சென்றுவிடுவார்கள். இத்தகையவர்களுக்கு பேரழிவு காத்துக் கிடக்கிறது என்று அறிவித்து விடுங்கள்.


وَإِذَا عَلِمَ مِنْ ءَايَٰتِنَا شَيْـًٔا ٱتَّخَذَهَا هُزُوًا ۚ أُو۟لَٰٓئِكَ لَهُمْ عَذَابٌۭ مُّهِينٌۭ.

45:9. அப்படியும் இறைவழிகாட்டுதலில் சிலவற்றை அவர்கள் அறிந்து கொண்டாலும், அவற்றை வைத்துக் கொண்டு பரிகசித்துக் கொண்டிருப்பார்கள். அத்தகையோர் இழிவு தரும் வேதனையில் சிக்கிக் கொள்வார்கள். அதிலிருந்து வெளிவரும் எந்த வழியும் இருக்காது.


مِّن وَرَآئِهِمْ جَهَنَّمُ ۖ وَلَا يُغْنِى عَنْهُم مَّا كَسَبُوا۟ شَيْـًۭٔا وَلَا مَا ٱتَّخَذُوا۟ مِن دُونِ ٱللَّهِ أَوْلِيَآءَ ۖ وَلَهُمْ عَذَابٌ عَظِيمٌ.

45:10. உலகில் பலதரப்பட்ட மக்கள் துயரங்களால் அவதிப்பட்டு வருவதை காண்கிறார்கள். அவர்களுடைய வாழ்வு நரகமாக மாறியுள்ளதையும் பார்க்கிறார்கள். ஆனால் அவர்கள் அதன் காரணத்தை அறிந்து அதற்கேற்ற சீரமைப்பு நடவடிக்கை எடுக்காமல், உலகிற்கு எந்தப் பலனும் அளிக்காத செயல்களை செய்து வருகிறார்கள். (பார்க்க 18:103-106) அல்லாஹ்வை விட்டுவிட்டு கற்பனை தெய்வங்களை ஏற்படுத்திக் கொண்டு, வழிபட்டு வருபவர்களின் நிலைமையும் அதுவே ஆகும். இத்தகையவர்களுக்கு வேதனை மிக்க நரகம் காத்திருக்கிறது.


هَٰذَا هُدًۭى ۖ وَٱلَّذِينَ كَفَرُوا۟ بِـَٔايَٰتِ رَبِّهِمْ لَهُمْ عَذَابٌۭ مِّن رِّجْزٍ أَلِيمٌ.

45:11. ஆனால் இந்த குர்ஆன் மனிதனின் சிறப்பான வாழ்விற்கு வழிகாட்டியாக இருக்கிறது. எனவே இதன் வழிகாட்டுதலை ஏற்காமல் தவறான வழியில் செல்பவர்கள் நோவினை தரும் நரக வேதனைகளை அனுபவிக்கப் போவது தவிர்க்க முடியாததாக ஆவிடுகிறது
இத்தகைய நரக வேதனைகளிலிருந்து மீள வழிமுறைகள் உள்ளன. அவையே உலக படைப்புகளின் ஆய்வுகளை செய்வதோடு இறைவழிகாட்டுதலின்படி மனிதவள மேம்பாட்டிற்காக அவற்றைப் பயன்படுத்த முன்வரவேண்டும். இதற்காக


۞ ٱللَّهُ ٱلَّذِى سَخَّرَ لَكُمُ ٱلْبَحْرَ لِتَجْرِىَ ٱلْفُلْكُ فِيهِ بِأَمْرِهِۦ وَلِتَبْتَغُوا۟ مِن فَضْلِهِۦ وَلَعَلَّكُمْ تَشْكُرُونَ.

45:12. அல்லாஹ் கடல்களை, மனிதன் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் தான் படைத்துள்ளான். அவற்றில் நிர்ணயிக்கப்பட்ட விதிமுறைகளின் படி கப்பல்களை தயாரித்து பயன்படுத்திக் கொள்கிறீர்கள். இவற்றைக் கொண்டு கடல் ஆராய்ச்சி செய்து அல்லாஹ்வின் அளவற்ற அருட்கொடைகளை தேடிக் கொள்ளவும் செய்கிறீர்கள். இவற்றையெல்லாம் அல்லாஹ் காட்டிய வழியில் உலக நன்மைக்காகப் பயன்படுத்தி அவனுக்கு நன்றியுள்ளவர்களாக இருக்க வேண்டும்.


وَسَخَّرَ لَكُم مَّا فِى ٱلسَّمَٰوَٰتِ وَمَا فِى ٱلْأَرْضِ جَمِيعًۭا مِّنْهُ ۚ إِنَّ فِى ذَٰلِكَ لَءَايَٰتٍۢ لِّقَوْمٍۢ يَتَفَكَّرُونَ.

45:13. இப்படியாக அல்லாஹ்வின் செயல்திட்டத்தின் படி வானங்களிலும் பூமியிலும் உள்ள அனைத்தும் நீங்கள் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் படைக்கப்பட்டுள்ளன. ஆனால் சிந்தித்து செயலாற்றும் மக்களுக்குத் தான் இவற்றின் அருமை தெரியும்.
வெறும் மூடநம்பிக்கையுடன் கற்பனை உலகில் வாழ்பவர்களுக்கு உலக படைப்புகளின் அருமை தெரிய வாய்ப்பில்லை. இவர்களைப் பொறுத்த வரையில் அல்லாஹ்வும் மலக்குகளும் பல்லக்கில் வந்து அவர்களுடைய எல்லா காரியங்களையும் முடித்து தருவார்கள் என்ற எதிர்பார்ப்பில் தான் இருப்பார்கள். (பார்க்க 2:210, 6:116)


قُل لِّلَّذِينَ ءَامَنُوا۟ يَغْفِرُوا۟ لِلَّذِينَ لَا يَرْجُونَ أَيَّامَ ٱللَّهِ لِيَجْزِىَ قَوْمًۢا بِمَا كَانُوا۟ يَكْسِبُونَ.

45:14. இறைவழிகாட்டுதலை மனதார ஏற்று நடப்பவர்களிடம், “அல்லாஹ் நிர்ணயித்த மனித செயல்களுக்கேற்ற விளைவுகள் ஏற்படும் காலம் வரும் என்பதை ஏற்காதவர்களுக்கு பாதுகாப்பான வாழ்வு கிடைப்பது எப்படி? எனவே நீங்கள் இறைச் செயல்திட்டங்களின் படி செயல்பட்டு வாருங்கள். ஒவ்வொரு சமுதாயத்தவருக்கும் அவரவர் செய்யும் செயலுக்கேற்ற பலன்களே அல்லாஹ்வின் நியதிப்படி கிடைக்கும்” என்று அறிவுறுத்துங்கள்.


مَنْ عَمِلَ صَٰلِحًۭا فَلِنَفْسِهِۦ ۖ وَمَنْ أَسَآءَ فَعَلَيْهَا ۖ ثُمَّ إِلَىٰ رَبِّكُمْ تُرْجَعُونَ.

45:15. தனிநபரோ அல்லது சமுதாயமோ, ஆக்கப்பூர்வமான நன்மையான செயல்களை செய்து வந்தால் அவற்றின் பலன்கள் அவர்களுக்கே கிடைக்கும். மாறாக எந்த சமுதாயம் தவறான வழியில் செல்லுமோ அவற்றின் பாதிப்புகள் அவர்களையே வந்தடையும். ஆக உலகில் மனிதன் செய்யும் ஒவ்வொரு செயலும் அல்லாஹ் நிர்ணயித்த இலக்கை நோக்கியே செல்லும். எனவே நிர்ணயித்த விதிமுறைகளின்படியே நற்பலன்களும் தீயவிளைவுகளும் ஏற்பட்டு வரும்.


وَلَقَدْ ءَاتَيْنَا بَنِىٓ إِسْرَٰٓءِيلَ ٱلْكِتَٰبَ وَٱلْحُكْمَ وَٱلنُّبُوَّةَ وَرَزَقْنَٰهُم مِّنَ ٱلطَّيِّبَٰتِ وَفَضَّلْنَٰهُمْ عَلَى ٱلْعَٰلَمِينَ.

45:16. இதே அடிப்படையில் தான் இஸ்ரவேலர்களுக்கும் வேத ஞானங்கள் அளிக்கப்பட்டன. அவற்றை கடைப்பிடித்ததால் இறைவனின் நியதிப்படி அவர்களுக்கு ஆட்சி அதிகாரங்கள் கிடைத்தன. மேலும் அவர்களிடம் பல நபிமார்கள் வந்தார்கள். அவர்களுக்கு பரிசுத்தமான உணவு வகைகளும் கிடைத்து வந்தன. இப்படியாக அவர்கள் அக்காலத்தில் வாழ்ந்த மற்ற சமுதாயத்தவர்களை விட மேன்மைப் பெற்றவர்களாக இருந்தார்கள்.


وَءَاتَيْنَٰهُم بَيِّنَٰتٍۢ مِّنَ ٱلْأَمْرِ ۖ فَمَا ٱخْتَلَفُوٓا۟ إِلَّا مِنۢ بَعْدِ مَا جَآءَهُمُ ٱلْعِلْمُ بَغْيًۢا بَيْنَهُمْ ۚ إِنَّ رَبَّكَ يَقْضِى بَيْنَهُمْ يَوْمَ ٱلْقِيَٰمَةِ فِيمَا كَانُوا۟ فِيهِ يَخْتَلِفُونَ.

45:17. அவர்களுக்கு அளிக்கப்பட்ட வேதத்தில் இறைவனின் செயல்திட்டங்களைப் பற்றிய குறிப்புகள் தெளிவாக தொகுக்கப்பட்டு இருந்தன. அந்த அளவுக்கு தெளிவான ஞானங்கள் வந்த பின்பும், அவர்கள் காலப் போக்கில் போட்டி பொறாமையின் காரணமாக மார்க்கத்தில் பிளவை ஏற்படுத்திக் கொண்டனர். திருக்குர்ஆனின் அடிப்படையில் ஆட்சியமைப்பு நிலை நிறுத்தப்படும் கால கட்டத்தில் இந்த வேற்றுமை பகைகளுக்கு சரியான தீர்ப்பு கிடைத்துவிடும். அல்லது கியாம நாளில் தீர்ப்பு அளிக்கப்படும்.


ثُمَّ جَعَلْنَٰكَ عَلَىٰ شَرِيعَةٍۢ مِّنَ ٱلْأَمْرِ فَٱتَّبِعْهَا وَلَا تَتَّبِعْ أَهْوَآءَ ٱلَّذِينَ لَا يَعْلَمُونَ.

45:18. இறைவழிகாட்டுதலை எடுத்துரைப்பவரே! நீங்கள் கடைப்பிடிக்க வேண்டிய நேரான வழியை வஹீ மூலம் காட்டியுள்ளோம். (பார்க்க 42:13) எனவே நீங்கள் அதை பின்பற்றுங்கள். இறைவழிகாட்டுதலின் உண்மை நிலையை அறியாத மக்களின் விருப்பங்களுக்கு இணங்கி செயல்படாதீர்கள். (மேலும் பார்க்க 6:106)


إِنَّهُمْ لَن يُغْنُوا۟ عَنكَ مِنَ ٱللَّهِ شَيْـًۭٔا ۚ وَإِنَّ ٱلظَّٰلِمِينَ بَعْضُهُمْ أَوْلِيَآءُ بَعْضٍۢ ۖ وَٱللَّهُ وَلِىُّ ٱلْمُتَّقِينَ.

45:19. அல்லாஹ்வின் செயல்திட்டங்களுக்கு எதிராக அவர்களால் எதுவும் தீங்கிழைக்க முடியாது. (பார்க்க 3:111) இப்போது ஒருவரையொருவர் உமக்கு எதிராக கை கோர்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இறைவழிகாட்டுதலைப் பேணி நடப்பவர்களுக்கு ஆதரவாக அல்லாஹ்வின் துணை எப்போதும் இருக்கும்.


هَٰذَا بَصَٰٓئِرُ لِلنَّاسِ وَهُدًۭى وَرَحْمَةٌۭ لِّقَوْمٍۢ يُوقِنُونَ.

45:20. காரணம் அல்லாஹ்வின் வழிகாட்டுதல்கள் யாவும் உலக மக்களின் அறிவுக் கண்ணை திறக்கக் கூடியதாக இருக்கின்றன. மேலும் இவற்றை முழு மனதுடன் ஏற்று நடப்பவர்களுக்கு தலைசிறந்த வாழ்க்கைக்கு வேண்டிய மிகச் சரியான வழிகாட்டியாகவும் இறைவனின் அருட்கொடையாகவும் இருக்கின்றன.


أَمْ حَسِبَ ٱلَّذِينَ ٱجْتَرَحُوا۟ ٱلسَّيِّـَٔاتِ أَن نَّجْعَلَهُمْ كَٱلَّذِينَ ءَامَنُوا۟ وَعَمِلُوا۟ ٱلصَّٰلِحَٰتِ سَوَآءًۭ مَّحْيَاهُمْ وَمَمَاتُهُمْ ۚ سَآءَ مَا يَحْكُمُونَ.

45:21. ஏனெனில் சமுதாயத்தை கெடுக்கும் வகையில் செயல்படுபவர்கள், அல்லாஹ்வின் வழிகாட்டுதலை ஏற்று சமுதாய வளர்ச்சிக்காக பாடுபவர்களுக்கு சமமானவர்கள் என எண்ணிக் கொள்கிறார்களா? எவ்வாறு உயிருடன் இருப்பவர்களும் மரணமடைந்தவர்களும் சமமாக மாட்டார்களோ, அவ்வாறே இவ்விரு பிரிவினரும் சமமாக மாட்டார்கள். இவ்விரு பிரிவினரும் சமம் என எண்ணிக் கொண்டது மிகவும் கெட்டதாகும்.


وَخَلَقَ ٱللَّهُ ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضَ بِٱلْحَقِّ وَلِتُجْزَىٰ كُلُّ نَفْسٍۭ بِمَا كَسَبَتْ وَهُمْ لَا يُظْلَمُونَ.

45:22. அகிலங்களையும் பூமியில் உள்ளவற்றையும் ஆக்கப்பூவர்மான நலத்திட்டங்களுக்காகவே அல்லாஹ் படைத்துள்ளான் என்ற உண்மை அவர்களுக்கு தெரியாது. அல்லாஹ்வின் அத்திட்டத்தின்படி மனிதர்கள் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் சரியான விளைவுகளை ஏற்படுத்தும் வகையில் தான் இவை படைக்கப்பட்டுள்ளன. எனவே அவரவர் செயல்களுக்கு அவர்களே பொறுப்பாளியாக ஆகிறார்கள். அல்லாஹ்வின் புறத்திலிருந்து எந்த அநியாயமும் ஏற்படுவதில்லை.
சிந்தித்து செயலாற்றுவதற்காக, மனிதனுக்கு அறிவு அளிக்கப்பட்டிருக்கும் போது, இறைவழிகாட்டுதலுக்கு என்ன அவசியம் இருக்கிறது என்று கேட்கிறார்கள். ஆனால் இறைவழிகாட்டுதல் இன்றி வாழும் மக்களிடம் ஆசைகளும் மனோ இச்சைகளும் மிகைத்து நிற்கிறதே! அறிவு, மனோ இச்சைக்கு அடிமையாகி இருக்கிறதே! இந்த உண்மை அவர்களுக்குப் புரியவில்லையே!


أَفَرَءَيْتَ مَنِ ٱتَّخَذَ إِلَٰهَهُۥ هَوَىٰهُ وَأَضَلَّهُ ٱللَّهُ عَلَىٰ عِلْمٍۢ وَخَتَمَ عَلَىٰ سَمْعِهِۦ وَقَلْبِهِۦ وَجَعَلَ عَلَىٰ بَصَرِهِۦ غِشَٰوَةًۭ فَمَن يَهْدِيهِ مِنۢ بَعْدِ ٱللَّهِ ۚ أَفَلَا تَذَكَّرُونَ.

45:23. தன்னுடைய மனோ இச்சைக்கு அடிபணிந்து செயல்படுபவர்களை நீங்கள் பார்த்தீர்களா? தம் மனதில் எழும் ஆசைகளின்படி தான் அவர்கள் செயல்படுவார்கள். அவற்றின் பாதிப்புகளைப் பற்றி சிந்திக்க மாட்டார்கள். அந்த பாதிப்புகள் வரும்போது பார்த்துக் கொள்ளலாம் என்பார்கள். அவர்களுக்கு அறிவு இருந்தும் அவர்களுடைய நிலைமை என்னவாக ஆகிவிடுகிறது என்பதை கவனித்தீர்களா? அவர்களுக்கு ஆசைகள் மிகைக்கும் போது, அவர்களுடைய உள்ளங்களும், காதுகளும், பார்வைப் புலன்களும் செயலிழந்து விடுகின்றன. எனவே எந்த அறிவுரைப் பற்றியும் சிந்தித்து பார்க்கும் தகுதியே அவர்களிடம் இல்லாமல் போயிவிடுகிறது. அவர்கள் இவற்றை கேட்கவும் மாட்டார்கள். இத்தகையவர்களுக்கு வேறு யாரால் நேர்வழி காட்ட முடியும்? இதைப் பற்றி சிந்தித்துப் பார்க்கும் படி அவர்களிடம் சொல்லுங்கள்.
மேலும் இத்தகைய சமுதாயங்களில் வாழும் மக்கள் தற்காலிக சுகங்களை மட்டுமே நோக்கமாகக் கொண்டு வாழ்வார்கள். வருங்கால நலன்களுக்காகவோ, மரணத்திற்குப் பின் உள்ள வாழ்க்கைக்காவோ எந்த முன்னேற்பாடுகளையும் செய்ய மாட்டார்கள். அவர்களிடம் இதைப் பற்றிக் கேட்டால்


وَقَالُوا۟ مَا هِىَ إِلَّا حَيَاتُنَا ٱلدُّنْيَا نَمُوتُ وَنَحْيَا وَمَا يُهْلِكُنَآ إِلَّا ٱلدَّهْرُ ۚ وَمَا لَهُم بِذَٰلِكَ مِنْ عِلْمٍ ۖ إِنْ هُمْ إِلَّا يَظُنُّونَ.

45:24. “மனித வாழ்க்கை என்பது இவ்வுலகில் வாழ்வதோடு சரி. இந்த உலக வாழ்க்கையைத் தவிர வேறு வாழ்க்கை எதுவும் கிடையாது. ஏதோ குறிப்பிட்ட காலம் வரையில் வாழ்கிறோம்; அதன்பின் மரணம் அடைந்து விடுகிறோம். நமக்கு அழிவு காலம் வந்தால் அழிந்து போய்விடுவோம், அவ்வளவுதான்” என்பார்கள். இவையாவும் தெளிவான ஞானம் இல்லாமல் பேசுகின்ற பேச்சாகும். அவர்கள் பேசுவது வெறும் யூகத்தின் அடிப்படையில் தான்.


وَإِذَا تُتْلَىٰ عَلَيْهِمْ ءَايَٰتُنَا بَيِّنَٰتٍۢ مَّا كَانَ حُجَّتَهُمْ إِلَّآ أَن قَالُوا۟ ٱئْتُوا۟ بِـَٔابَآئِنَآ إِن كُنتُمْ صَٰدِقِينَ.

45:25. மனித வாழ்க்கை என்பது மரணத்திற்குப் பின்பும் தொடர்கின்ற ஒன்று என்று அவர்களிடம் தெளிவாக எடுத்துரைத்தால், இதை ஏற்காமல் வீணாக தர்க்கம் செய்கிறார்கள். “உங்களுடைய கூற்று உண்மையென்றால், இறந்து போன எங்கள் மூதாதையர்களை மீண்டும் எழுப்பி, எங்கள் கண் முன் கொண்டுவந்து காட்டுங்கள்” என்கிறார்கள்.


قُلِ ٱللَّهُ يُحْيِيكُمْ ثُمَّ يُمِيتُكُمْ ثُمَّ يَجْمَعُكُمْ إِلَىٰ يَوْمِ ٱلْقِيَٰمَةِ لَا رَيْبَ فِيهِ وَلَٰكِنَّ أَكْثَرَ ٱلنَّاسِ لَا يَعْلَمُونَ.

45:26. அவர்களிடம், “மனித வாழ்வும் மரணமும் அல்லாஹ்வின் செயல்திட்டத்தின் படி உருவானவையாகும். அதன்படி நீங்கள் வாழ்கிறீர்கள். அதன் பின் நீங்கள் மரணம் அடைகிறீர்கள். ஆனால் உங்கள் வாழ்வு அத்துடன் முடிந்து விடுவதில்லை. மரணத்திற்குப் பின் நீங்கள் அனைவரும் ஒன்று திரளும் நாள் வரும். நீங்கள் செய்து வந்தமைக்கு கேள்வி கேட்கப்படுவீர்கள். இதில் யாருக்கும் எவ்வித சந்தேகமும் வேண்டாம். ஆனால் பெரும்பாலான மக்களுக்கு இந்த உண்மை தெரியாது” என்று அறிவித்து விடுங்கள். (விளக்கத்திற்குப் பார்க்க 6:22-23)


وَلِلَّهِ مُلْكُ ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضِ ۚ وَيَوْمَ تَقُومُ ٱلسَّاعَةُ يَوْمَئِذٍۢ يَخْسَرُ ٱلْمُبْطِلُونَ.

45:27. இந்த செயல்திட்டங்கள் யாவும் அகிலங்களையும் பூமியையும் படைத்து, அனைத்து அதிகாரங்களையும் தன்னகத்தே கொண்டுள்ள ஏக இறைவனாகிய அல்லாஹ்வின் புறத்திலிருந்து ஏற்படுத்தப்பட்டவை ஆகும். எனவே மக்கள் செய்து வரும் நற்செயல்களின் நற்பலன்கள் மற்றும் தீய செயல்களின் தீய விளைவுகள் தோற்றத்திற்கு வரும் கால கட்டம் நிர்ணயிக்கப்பட்டது உறுதியே. அப்போது கற்பனை உலகில் வாழ்ந்து வந்தவர்களின் நிலை பரிதாபத்திற்குரியதே (பார்க்க 7:8-9)


وَتَرَىٰ كُلَّ أُمَّةٍۢ جَاثِيَةًۭ ۚ كُلُّ أُمَّةٍۢ تُدْعَىٰٓ إِلَىٰ كِتَٰبِهَا ٱلْيَوْمَ تُجْزَوْنَ مَا كُنتُمْ تَعْمَلُونَ.

45:28. எனவே இறைவனின் இந்த திட்டத்தின்படி தான் உலகிலுள்ள நாடுகளின் நிலைமையும் உருவாகி வரும். கற்பனை உலகில் வாழும் நாடுகள் யாவும் தம் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள, முன்னேறிய நாடுகளிடம் மண்டியிட்டு மன்றாடிக் கொண்டிருக்க நேரிடும். ஓவ்வொரு நாட்டினரின் செயல்பாடுகளின் பதிவேடுகளே பேசும். இப்படியாக அவர்களுடைய செயல்கள் என்னவோ அதன்படியே பலன்களும், தீய விளைவுகளும் ஏற்பட்டு வரும்.


هَٰذَا كِتَٰبُنَا يَنطِقُ عَلَيْكُم بِٱلْحَقِّ ۚ إِنَّا كُنَّا نَسْتَنسِخُ مَا كُنتُمْ تَعْمَلُونَ.

45:29. இதுவே அல்லாஹ்வின் புறத்திலிருந்து நிலைநிறுத்தப்பட்ட நியதியாகும். எனவே நீங்கள் எவ்வாறு செயல்படுகிறீர்களோ அவ்வாறே பலன்களும் விளைவுகளும் ஏற்படும். இதில் எந்த மாற்றமும் ஏற்படாது. இப்படியாக உங்களுடைய ஒவ்வொரு செயலும் பதிவாகி வருகிறது. அவை ஒருபோதும் அழியாது.


فَأَمَّا ٱلَّذِينَ ءَامَنُوا۟ وَعَمِلُوا۟ ٱلصَّٰلِحَٰتِ فَيُدْخِلُهُمْ رَبُّهُمْ فِى رَحْمَتِهِۦ ۚ ذَٰلِكَ هُوَ ٱلْفَوْزُ ٱلْمُبِينُ.

45:30. எனவே இறைவழிகாட்டுதலை ஏற்று ஆக்கப்பூர்மான நன்மையான செயல்களை செய்துவரும் சமுதாயங்களுக்கு இறைவன் தன் அருட்கொடைகளை அளவின்றி கொடுக்கிறான். இத்தகைய வளமான வாழ்க்கை பெறுவது பெரும் பாக்கியமாகும் அல்லவா?


وَأَمَّا ٱلَّذِينَ كَفَرُوٓا۟ أَفَلَمْ تَكُنْ ءَايَٰتِى تُتْلَىٰ عَلَيْكُمْ فَٱسْتَكْبَرْتُمْ وَكُنتُمْ قَوْمًۭا مُّجْرِمِينَ.

45:31. இதற்கு மாறாக இறைவழிகாட்டுதலை ஏற்க மறுக்கும் சமுதாயங்களின் நிலை மிகவும் பரிதாபத்திற்குரியதாக இருக்கும். அவர்களுடைய இழி நிலைக்கு அவர்களே காரணம் ஆவார்கள். ஏனெனில் அவர்களிடம் அல்லாஹ்வின் வழிகாட்டுதலை எடுத்துரைத்த போது, அவர்கள் ஆணவத்துடன் அவற்றை புறக்கணித்து வந்ததோடு தீய செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகளாகவே இருந்தார்கள்.


وَإِذَا قِيلَ إِنَّ وَعْدَ ٱللَّهِ حَقٌّۭ وَٱلسَّاعَةُ لَا رَيْبَ فِيهَا قُلْتُم مَّا نَدْرِى مَا ٱلسَّاعَةُ إِن نَّظُنُّ إِلَّا ظَنًّۭا وَمَا نَحْنُ بِمُسْتَيْقِنِينَ.

45:32. அப்போது இத்தகைய எழுச்சி மிகு காலம் வருவது உறுதி என்றும், அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மையானதே என்றும் கூறவில்லையா? இதில் யாரும் சந்தேகம் கொள்ள வேண்டாம் என்று உங்களிடம் சொன்னோமே. ஆனால் நீங்கள் அதைப் பற்றி எங்களுக்கு எதுவும் தெரியாது என்கிறீர்கள். எங்களுடைய கூற்றை வெறும் கற்பனையே என்று சொல்லி, அவற்றை ஏற்றுக் கொள்வதற்கு இல்லை என்று கூறினீர்களே.


وَبَدَا لَهُمْ سَيِّـَٔاتُ مَا عَمِلُوا۟ وَحَاقَ بِهِم مَّا كَانُوا۟ بِهِۦ يَسْتَهْزِءُونَ.

45:33. எனவே நீங்கள் செய்து வந்த தீய செயல்களின் விளைவுகள் தோற்றத்திற்கு வரும் காலம் வந்து விட்டது. எதை நீங்கள் பரிகாசம் செய்து வந்தீர்களோ, அதுவே உங்களை சூழ்ந்து கொண்டது.


وَقِيلَ ٱلْيَوْمَ نَنسَىٰكُمْ كَمَا نَسِيتُمْ لِقَآءَ يَوْمِكُمْ هَٰذَا وَمَأْوَىٰكُمُ ٱلنَّارُ وَمَا لَكُم مِّن نَّٰصِرِينَ.

45:34. இத்தகைய விளைவுகளை சந்திக்கும் கால கட்டத்தைப் பற்றி நீங்கள் அலட்சியமாக இருந்து விட்டது போலவே இன்றைய கட்டத்தில் உங்களுக்கு ஏற்பட்டுள்ள நிலையைப் பற்றி நாம் அலட்சியப் படுத்துவோம். எனவே இனி நீங்கள் தங்கப் போகும் இடம் வேதனை அளிக்கக் கூடிய இடமாகத் தான் இருக்கும். அதிலிருந்து உங்களை காப்பாற்றுவோர் வேறு யாரும் இருக்க மாட்டார்கள்.


ذَٰلِكُم بِأَنَّكُمُ ٱتَّخَذْتُمْ ءَايَٰتِ ٱللَّهِ هُزُوًۭا وَغَرَّتْكُمُ ٱلْحَيَوٰةُ ٱلدُّنْيَا ۚ فَٱلْيَوْمَ لَا يُخْرَجُونَ مِنْهَا وَلَا هُمْ يُسْتَعْتَبُونَ.

45:35. இதுவே அல்லாஹ்வின் முன்னெச்சரிக்கை அறிவுரைகளை ஏளனமாக எடுத்துக் கொண்டு உலக வாழ்க்கையின் தற்காலி சுக போகத்தில் மயங்கிக் கிடந்தவர்களுக்கு ஏற்படும் மோசமான நிலைமையாகும். இத்தகைய நிலையிலிருந்து அவர்களால் ஒருபோதும் தப்பிக்கவே முடியாது. அவர்களுக்குப் பாவ மன்னிப்பும் கிடைக்காது.


فَلِلَّهِ ٱلْحَمْدُ رَبِّ ٱلسَّمَٰوَٰتِ وَرَبِّ ٱلْأَرْضِ رَبِّ ٱلْعَٰلَمِينَ.

45:36. இத்தகைய எழுச்சி மிகு கால கட்டங்களில் அல்லாஹ்வின் மாபெரும் வளர்ச்சித் திட்டங்களே செயல்பட்டு வரும். அவற்றை ஒட்டு மொத்த சமுதாய மக்களின் நலனை பேணிக் காக்கவே பயன்படுத்தப்படும். இப்படியாக இறைவனின் செயல்திட்டங்கள் யாவும் ஆயிரமாயிரம் போற்றுதலுக்கு உரியவையாகத் திகழும்.


وَلَهُ ٱلْكِبْرِيَآءُ فِى ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضِ ۖ وَهُوَ ٱلْعَزِيزُ ٱلْحَكِيمُ.

45:37. அப்படியொரு கால கட்டத்தில் அகிலங்கள் அனைத்திலும் அல்லாஹ்வின் செயல் திட்டங்களே செயல்பட்டு வருகின்றன என்பதையும், ஒவ்வொரு படைப்பும் அல்லாஹ்வின் வல்லமையையே பறைசாற்றுகிறது என்பதையும் அனைவரும் ஏற்றுக் கொள்வார்கள். மேலும் அல்லாஹ்வின் செயல் திட்டங்கள் யாவும் தெளிவான ஞானத்தின் அடிப்படையிலானவை என்பதையும் ஏற்றுக் கொள்வார்கள்.