بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
44:0.அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் அறிவுரைப்படியே அனைத்துக் காரியங்களையும் செய்ய நாடுகிறேன். (பார்க்க 6:162)
حمٓ.
44:1. பாராட்டுக்கும் போற்றுதலுக்கும் உரிய முஹம்மது நபி மூலம் இறக்கியருளப்பட்ட வேதமிது.
وَٱلْكِتَٰبِ ٱلْمُبِينِ.
44:2. விவரமாக தொகுக்கப்பட்டுள்ள இவ்வேதம் மிகவும் தெளிவானது என்பதற்கும் இதுவே சான்றாக விளங்குகின்றது.
إِنَّآ أَنزَلْنَٰهُ فِى لَيْلَةٍۢ مُّبَٰرَكَةٍ ۚ إِنَّا كُنَّا مُنذِرِينَ.
44:3. உலகமே இருள் சூழ்ந்த நிலையில் தவித்திருக்கும் போது, பெரும் பாக்கியங்களுடன் ரமஜான் மாதத்தில் இந்த குர்ஆன் இறக்கி அருளப்பட ஆரம்பமானது. (பார்க்க 2:185) மனிதனின் தவறான செயல்களின் விளைவுகளைப் பற்றி எடுத்துரைத்து எச்சரிக்கை செய்வது இறைவனின் நடைமுறைச் சட்டமாகும். அது போலவே இவ்வேதமும் முன்னெச்சரிக்கை செய்கிறது.
فِيهَا يُفْرَقُ كُلُّ أَمْرٍ حَكِيمٍ.
44:4. இவ்வேதத்தில் இறைவனின் ஒவ்வொரு செயல்திட்டத்தைப் பற்றியும், அதன் நோக்கங்களைப் பற்றியும் தனித்தனியே பிரித்து அறிவிக்கப்பட்டுள்ளது. (97:4)
أَمْرًۭا مِّنْ عِندِنَآ ۚ إِنَّا كُنَّا مُرْسِلِينَ.
44:5. இவ்வேதம் இறைவன் புறத்திலிருந்து, “வஹீ ” என்கின்ற இறைவழிகாட்டுதல் செயல் திட்டத்தின் படி இறக்கி அருளப்படுகிறது. ஆரம்பம் முதலே இறைத் தூதர்களை அனுப்பி இத்தகைய வழிகாட்டுதலை இறக்கி அருளப்பட்டு வந்துள்ளது.
رَحْمَةًۭ مِّن رَّبِّكَ ۚ إِنَّهُۥ هُوَ ٱلسَّمِيعُ ٱلْعَلِيمُ.
44:6. இவை யாவும் இறைவனின் அருட்கொடைகளாகும். அனைத்தையும் கேட்கும் வல்லமையும் அறிந்து கொள்ளும் பேராற்றலும் இறைவனுக்கு உண்டு. எனவே ஒவ்வொரு மனித செயலின் விளைவுகளும் அவன் நிர்ணயித்த விதிமுறைகளின் படியே ஏற்பட்டு வரும்.
رَبِّ ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضِ وَمَا بَيْنَهُمَآ ۖ إِن كُنتُم مُّوقِنِينَ.
44:7. அகிலங்களையும் பூமியையும் இவற்றிற்கு இடையே உள்ளவற்றையும் படைத்ததோடு, அவற்றின் ஒவ்வொன்றும் தம் இறுதி இலக்கை சென்றடையும் வரை தேவையான அனைத்து பரிபாலன ஏற்பாடுகளையும் செய்தவன் ஏக இறைவனே. அதன்படி மனிதனின் உடல் வளர்ச்சி மட்டுமின்றி மனித ஆற்றல்களாகிய ‘ரூஹ்’வின் வளர்ச்சிக்கும் இறைவழிகாட்டுதல் அவசியமாகிறது. இதைப் பற்றி மனிதன் சிந்தித்து பார்த்தால் அவனுக்கு உண்மை விளங்கி விடும்.
لَآ إِلَٰهَ إِلَّا هُوَ يُحْىِۦ وَيُمِيتُ ۖ رَبُّكُمْ وَرَبُّ ءَابَآئِكُمُ ٱلْأَوَّلِينَ.
44:8. அவனையன்றி அகிலத்தில் வேறு யாருடைய அதிகாரமும் எங்கும் செயல்படுவதில்லை. எனவே அவனுடைய செயல்திட்டங்களே நிலையாக ஜீவித்து செயல்படக் கூடியவை. அவன் உங்களை படைத்து பரிபாலித்து வருவது போல, உங்களுடைய மூதாதையர்களையும் படைத்து பரிபாலித்த இறைவனும் அவனே.
بَلْ هُمْ فِى شَكٍّۢ يَلْعَبُونَ.
44:9. இவையாவும் உயர் இலட்சியங்களுடன் கூடிய செயல்திட்டங்களைப் பற்றியதாகும். ஆனால் உலக மக்களுக்கு இன்னமும் இவற்றில் சந்தேகம் தான் உள்ளது. எனவே அவற்றை அவர்கள் விளையாட்டாகவே எடுத்துக் கொள்கிறார்கள்.
இந்த அளவிற்கு தெளிவான ஆதாரங்களுடன் அவர்களுக்கு உண்மைகளை எடுத்துரைத்த போதும், அவர்கள் இதைப் பற்றி சிந்திக்காமல் இறைவழிகாட்டுதலின் பக்கம் விடப்படும் அழைப்பை எதிர்ப்பதில் முன்னொடியாக இருக்கிறார்கள். எனவே அவர்களுக்கு நேரவிருக்கும் பேராபத்தை அவர்கள் எதிர் பார்த்து இருக்கட்டும்.
فَٱرْتَقِبْ يَوْمَ تَأْتِى ٱلسَّمَآءُ بِدُخَانٍۢ مُّبِينٍۢ.
44:10. அப்படியொரு கலவரம் வெடிக்கும் கால கட்டத்தில் எங்கு நோக்கினும் புழுதிகள் பறந்து கொண்டிருக்கும். வானமே புகை மண்டலமாகத் தோன்றும். அந்த பேரழிவுகளின் பயத்தால் அவர்களுடைய கண்களே இருண்டு விடும்.
يَغْشَى ٱلنَّاسَ ۖ هَٰذَا عَذَابٌ أَلِيمٌۭ.
44:11. வேதனை மிக்க அந்த புழுதிகள் அவர்களை நாலாப் புறமும் சூழ்ந்து கொள்ளும். அவை யாவும் அவர்களுக்கு நோவினைத் தரும் வேதனைகளாக இருக்கும்.
رَّبَّنَا ٱكْشِفْ عَنَّا ٱلْعَذَابَ إِنَّا مُؤْمِنُونَ.
44:12. அப்போது அவர்கள், “எங்கள் இறைவனே! நீ எங்களை விட்டு இந்த வேதனைகளை நீக்குவாயாக. நிச்சயமாக நாங்கள் உன் வழிகாட்டுதலை ஏற்று நடக்கும் மூஃமின்களாக ஆகிவிடுவோம்” என்று மன்றாடுவார்கள்.
أَنَّىٰ لَهُمُ ٱلذِّكْرَىٰ وَقَدْ جَآءَهُمْ رَسُولٌۭ مُّبِينٌۭ.
44:13. இத்தகைய வேதனைகள் அவர்களை சூழ்ந்து கொள்ளும் என்று ஆதாரப்பூர்வமாக எடுத்துரைத்த இறைத்தூதர் அவர்களிடம் வரவில்லையா? அவரை ஏற்காமல் வேதனை ஏற்படும்போது திருந்துவதாக சொல்வதில் என்ன பயன்? (பார்க்க 17:15)
ثُمَّ تَوَلَّوْا۟ عَنْهُ وَقَالُوا۟ مُعَلَّمٌۭ مَّجْنُونٌ.
44:14. அவர்கள் அவருடைய அறிவுரைகளை பொருட்படுத்தவே இல்லை. யாரோ தன்னை பேரறிஞன் என்று சொல்லிக் கொண்டு ஏதோ உளறிக் கொண்டிருக்கிறார் என்றல்லவா அவர்கள் கூறினார்கள்?
إِنَّا كَاشِفُوا۟ ٱلْعَذَابِ قَلِيلًا ۚ إِنَّكُمْ عَآئِدُونَ.
44:15. இப்போது அவர்களுடைய வேதனைகளை எப்படி குறைக்க முடியும்? அப்படியே சிறிது காலத்திற்காக அவ்வேதனைகளை குறைத்தாலும் அவர்கள் திருந்துவதாக இல்லை.
يَوْمَ نَبْطِشُ ٱلْبَطْشَةَ ٱلْكُبْرَىٰٓ إِنَّا مُنتَقِمُونَ.
44:16. எனவே மனித செயல்களின் விளைவுகள் என்ற பிடி மிகவும் கடுமையானது என்றும் அதன்படி நீங்கள் செய்து வரும் தீய செயல்களுக்கு ஏற்ற தண்டனை கிடைப்பது உறுதி என்றும் அவர்களுக்கு அறிவிக்கவில்லையா?
இந்த உண்மைகளை வரலாற்று ஆதாரங்களுடனும் பலமுறை எடுத்துரைத்துள்ளோம். அவற்றை மீண்டும் உங்கள் கவனத்திற்குக் கொண்டு வருகிறோம்.
۞ وَلَقَدْ فَتَنَّا قَبْلَهُمْ قَوْمَ فِرْعَوْنَ وَجَآءَهُمْ رَسُولٌۭ كَرِيمٌ.
44:17. நடந்த உண்மை என்னவென்றால் இவர்களுக்கு முன் ஃபிர்அவ்னுடைய சமூகத்தாரும் தீய வழியில் செயல் பட்டதால் அவர்களுக்கு சிறு சிறு வேதனைகள் வந்து கொண்டிருந்தன. அவற்றை சரிசெய்ய கண்ணியான முறையில் இறைத்தூதர் ஒப்புக் கொண்டார் (பார்க்க 7:130-133, 43:48-49)
أَنْ أَدُّوٓا۟ إِلَىَّ عِبَادَ ٱللَّهِ ۖ إِنِّى لَكُمْ رَسُولٌ أَمِينٌۭ.
44:18. அவர், ஃபிர்அவ்னிடம் அல்லாஹ்வின் அடியார்களாக இருந்த இஸ்ரவேலர்களை விடுதலை அளித்து தன்னோடு அனுப்பிவைக்கும்படி கேட்டுக் கொண்டார். (பார்க்க 20:47) மேலும் அவர், “இதனால் நாம் அனைவருக்கும் நன்மையே ஏற்படும். என்னை நம்புங்கள். நான் இறைவனின் சார்பாக உங்களிடம் வந்துள்ளேன்” என்று கேட்டுக் கொண்டார்.
وَأَن لَّا تَعْلُوا۟ عَلَى ٱللَّهِ ۖ إِنِّىٓ ءَاتِيكُم بِسُلْطَٰنٍۢ مُّبِينٍۢ.
44:19. மேலும் அவர், “நான் உங்களுக்கு அல்லாஹ்வின் புறத்திலிருந்து கிடைத்த தெளிவான சான்றுகளை எடுத்துரைத்துள்ளேன். அவற்றை புறந்தள்ளி விடாதீர்கள்” என்றும் கேட்டுக் கொண்டார்.
وَإِنِّى عُذْتُ بِرَبِّى وَرَبِّكُمْ أَن تَرْجُمُونِ.
44:20. “இதற்காக நீங்கள் என்னை கல்லால் அடித்து கொல்லப் போவதாக பயமுறுத்துகிறீர்கள். ஆனால் நான் என்னுடைய இறைவனும் உங்களுடைய இறைவனும் ஆகிய அல்லாஹ்விடமே பாதுகாப்பு தேடிக்கொள்கிறேன் என்று கூறினார்.
وَإِن لَّمْ تُؤْمِنُوا۟ لِى فَٱعْتَزِلُونِ.
44:21. மேலும் அவர், “என்னுடைய அறிவுரைகளை நீங்கள் கேட்க முன்வரவில்லை என்றால், என்னை விட்டு நீங்கள் விலகிக் கொள்ளுங்கள். அதை விட்டுவிட்டு என்னை கொல்லப் போவதாகக் கூறுவது சரியா?” என்று கேட்டார்.
فَدَعَا رَبَّهُۥٓ أَنَّ هَٰٓؤُلَآءِ قَوْمٌۭ مُّجْرِمُونَ.
44:22. ஆனால் அவர்கள் வரம்பு மீறிய சமூகத்தாராகவே இருந்தார்கள். எனவே அவர், “இறைவா! உன் அறிவுரைகளை மதிக்காமல் அவர்கள் அக்கிரமங்களை செய்து வருகிறார்களே!” என்று பிரார்த்தித்தார்.
فَأَسْرِ بِعِبَادِى لَيْلًا إِنَّكُم مُّتَّبَعُونَ.
44:23. எனவே இறை வழிகாட்டுதலை ஏற்று நடக்கும் செயல் வீரர்களை இரவோடு இரவாக அழைத்துச் செல்லும்படி இறைச் செய்தி வந்தது. இதைப் பற்றி கேள்விப்பட்டு உங்களை ஃபிர்அவ்னியர்கள் பின்தொடர்வார்கள்.
وَٱتْرُكِ ٱلْبَحْرَ رَهْوًا ۖ إِنَّهُمْ جُندٌۭ مُّغْرَقُونَ.
44:24. மேலும் நீங்கள் செல்லும் வழியில் குறுக்கே நைல் நதி வரும். அதன் குறுக்கே ஒரு பாலத்தை கட்டுங்கள். (பார்க்க 20:77) அதன் வழியாக கடந்து சென்று விடுங்கள். உங்களைப் பின்தொடரும் பகைவர்கள் அந்த நதியில் விழுந்து மூழ்கிவிடுவார்கள். (விளக்கத்திற்குப் பார்க்க 7:136)
كَمْ تَرَكُوا۟ مِن جَنَّٰتٍۢ وَعُيُونٍۢ.
44:25. ஃபிர்அவ்ன் மன்னனிடமும் அவர்களுடைய சமூகத்தாரிடமும் எத்தனையோ தோட்டங்களும் நீர் ஊற்றுகளும் இருந்தன. அவற்றை எல்லாம் அவர்கள் இழக்க நேர்ந்தது.
وَزُرُوعٍۢ وَمَقَامٍۢ كَرِيمٍۢ.
44:26. அது மட்டுமின்றி அவர்களிடம் விளை நிலங்களும் உயரமான மாளிகைகளும் இருந்தன. அவையும் அவர்களிடமிருந்து பறிபோயின.
وَنَعْمَةٍۢ كَانُوا۟ فِيهَا فَٰكِهِينَ.
44:27. கூடவே அவர்களுடைய சுகமான வாழ்வும் சந்தோஷங்களும் கொஞ்சம் கொஞ்சமாக பறிபோயிற்று.
كَذَٰلِكَ ۖ وَأَوْرَثْنَٰهَا قَوْمًا ءَاخَرِينَ.
44:28. அவர்களுடைய அழிவுக்குப் பின் அந்த சொத்து செல்வங்கள் யாவற்றிற்கும் வேறு சமுதாயத்தவர்கள் வாரிசுதாரர்களாக ஆகிவிட்டனர்.
فَمَا بَكَتْ عَلَيْهِمُ ٱلسَّمَآءُ وَٱلْأَرْضُ وَمَا كَانُوا۟ مُنظَرِينَ.
44:29. ஆகவே அவர்களுக்காக வானமோ பூமியோ அழவும் இல்லை. அவர்களால் அந்த அழிவிலிருந்து தப்பிக்கவும் முடியவில்லை.
وَلَقَدْ نَجَّيْنَا بَنِىٓ إِسْرَٰٓءِيلَ مِنَ ٱلْعَذَابِ ٱلْمُهِينِ.
44:30. ஆனால் இழிவு தரும் பேரழிவிலிருந்து இஸ்ரவேலர்கள் தப்பித்துக் கொண்டனர். அவர்கள் இறைவழிகாட்டுதலின் படி நாட்டை விட்டு வெளியேறியதால் அவர்களுக்குப் பாதுகாப்பு கிடைத்தது.
مِن فِرْعَوْنَ ۚ إِنَّهُۥ كَانَ عَالِيًۭا مِّنَ ٱلْمُسْرِفِينَ.
44:31. அதுமட்டுமின்றி கொடுங்கோலன் ஃபிர்அவ்னிடமிருந்தும் விடுதலை கிடைத்தது. அவன் மிகவும் ஆணவத்துடன் அநியாய அக்கிரமமான முறையில் தான் அட்சி செய்து வந்தான்.
وَلَقَدِ ٱخْتَرْنَٰهُمْ عَلَىٰ عِلْمٍ عَلَى ٱلْعَٰلَمِينَ.
44:32. மேலும் அவர்கள் அல்லாஹ்வின் வழிகாட்டுதலைப் பேணி நடந்து வந்ததால் அக்காலத்தில் உலகில் வாழ்ந்த மற்ற சமூகத்தவர்களைவிட சிறந்த மாமேதைகளாக விளங்கினார்கள்.
وَءَاتَيْنَٰهُم مِّنَ ٱلْءَايَٰتِ مَا فِيهِ بَلَٰٓؤٌۭا۟ مُّبِينٌ.
44:33. அதாவது அவர்களுக்கு இறைவன் புறத்திலிருந்து கிடைத்த தெளிவான வழிகாட்டுதல்கள் அவர்களை உயர்நிலைக்குக் கொண்டு சென்றன.
إِنَّ هَٰٓؤُلَآءِ لَيَقُولُونَ.
44:34. ஆனால் இப்போது மக்காவாசிகளாகிய இவர்கள், அவை எல்லாம் உண்மை இல்லை என்கிறார்கள்.
إِنْ هِىَ إِلَّا مَوْتَتُنَا ٱلْأُولَىٰ وَمَا نَحْنُ بِمُنشَرِينَ.
44:35. மேலும் அவர்கள், “மனித வாழ்க்கை என்பது இவ்வுலக வாழ்வோடு முடிந்து விடுகிறது. அதன் பிறகு மறுவாழ்வு என்பது கிடையாது. எனவே நாங்கள் மீண்டும் எழுப்பப்பட மாட்டோம்” என்கிறார்கள்.
فَأْتُوا۟ بِـَٔابَآئِنَآ إِن كُنتُمْ صَٰدِقِينَ.
44:36. அது மட்டுமின்றி மீண்டும் எழுப்பப்டுவது உண்மை என்றால் முந்தைய காலத்தில் இறந்து போன எங்கள் மூதாதையர்களைத் மீண்டும் எழுப்பிக் காட்டுங்கள் என்கிறார்கள்.
أَهُمْ خَيْرٌ أَمْ قَوْمُ تُبَّعٍۢ وَٱلَّذِينَ مِن قَبْلِهِمْ ۚ أَهْلَكْنَٰهُمْ ۖ إِنَّهُمْ كَانُوا۟ مُجْرِمِينَ.
44:37. இத்தகைய விதண்டா வாதம் செய்கின்ற நீங்கள் செல்வத்திலும் ஆட்பலத்திலும் பலசாலிகளா அல்லது உங்களுக்கு முன் அழிந்து போயினரே அந்த முன்னோர்கள் பலசாலிகளா என்பதை சற்று சிந்தித்துப் பாருங்கள். உங்களைவிட பன்மடங்கு பலசாலிகளாக இருந்த ‘ஆது’, ‘சமூது’ போன்ற சமூகத்தவர்களே இறைவன் விதித்த “மனித செயல்களின் விளைவுகள்” என்ற சட்டத்தின் பிடியில் சிக்கி மடிந்து போனார்கள். நீங்கள் எம்மாத்திரம்?
وَمَا خَلَقْنَا ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضَ وَمَا بَيْنَهُمَا لَٰعِبِينَ.
44:38. அகிலங்களையும் பூமியையும் இவற்றிற்கு இடையே உள்ளவற்றையும் வீண் விளையாட்டிற்காக படைத்திருப்பதாக அவர்கள் எண்ணிக் கொண்டு இருக்கிறார்களா? ஒருபோதும் அதற்காக படைக்கவில்லை. சீரிய செயல்திட்டத்தின் அடிப்படையில் தான் அவை படைக்கப்பட்டன.
مَا خَلَقْنَٰهُمَآ إِلَّا بِٱلْحَقِّ وَلَٰكِنَّ أَكْثَرَهُمْ لَا يَعْلَمُونَ.
44:39. இறைவனின் அந்த திட்டத்தின்படி மனிதன் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் சரியான விளைவுகளை ஏற்படுத்தும். இந்த உண்மைகளை அறியாமல் அவர்கள் தம் மனம் போன போக்கில் எதிர் மறையாக செயல்பட்டு வருகிறார்கள்.
إِنَّ يَوْمَ ٱلْفَصْلِ مِيقَٰتُهُمْ أَجْمَعِينَ.
44:40. எனவே அவர்கள் சேய்து வரும் தீய சேயல்களின் விளைவுகளை அறுவடை செய்யும் காலக்கட்டம் வந்தே தீரும். அதுவும் நிர்ணயிக்கப்பட்ட காலத் தவணைக்குப் பின் ஒட்டு மொத்தமாக வந்து நிற்கும்.
يَوْمَ لَا يُغْنِى مَوْلًى عَن مَّوْلًۭى شَيْـًۭٔا وَلَا هُمْ يُنصَرُونَ.
44:41. அப்படியொரு கால கட்டத்தில் யாரும் யாருக்கும் எவ்வித உதவியும் செய்ய இயலாது. ஒவ்வொருவருக்கும் தம் பாவச் சுமைகளின் வேதனையிலிருந்து தப்பிப்பது எப்படி என்ற கவலையே மிகைத்திருக்கும். (பார்க்க 22:2)
إِلَّا مَن رَّحِمَ ٱللَّهُ ۚ إِنَّهُۥ هُوَ ٱلْعَزِيزُ ٱلرَّحِيمُ.
44:42. ஆனால் அல்லாஹ்வின் வழிகாட்டுதலின்படி செயல்பட்டோரின் நிலை இவ்வாறு இருக்காது. அல்லாஹ்வின் செயல்திட்டமே அனைத்தையும் மிகைப்பதாகவும் கருணைமிக்கதாகவும் உள்ளது. (பார்க்க 21:102, 27:89)
إِنَّ شَجَرَتَ ٱلزَّقُّومِ.
44:43. எனவே இறைவழிகாட்டுதலுக்கு எதிராக செயல்பட்டவர்களின் நிலைமை கள்ளி மரத்தின் கனியை மென்று தின்பவனின் நிலைப் போன்று அருவெறுப்பாக இருக்கும். (மேலும் பார்க்க 17:60 , 37:62-65)
طَعَامُ ٱلْأَثِيمِ.
44:44. இதுவே பாவச் செயல்களில் ஈடுபடுவோருக்கு கிடைக்கும் விருந்தாகும்.
كَٱلْمُهْلِ يَغْلِى فِى ٱلْبُطُونِ.
44:45. அவர்களுடைய வயிறுகள் உருக்கப்பட்ட செம்பு போல் எரிய ஆரம்பிக்கும்.
كَغَلْىِ ٱلْحَمِيمِ.
44:46. வெந்நீர் கொதிப்பதைப் போல் அவர்களுக்கு வயிற்றெரிச்சல் இருக்கும்.
خُذُوهُ فَٱعْتِلُوهُ إِلَىٰ سَوَآءِ ٱلْجَحِيمِ.
44:47. அவர்களை இழுத்து வேதனைத் தரும் பாதாளத்தில் தள்ளிவிடுவார்கள்.
ثُمَّ صُبُّوا۟ فَوْقَ رَأْسِهِۦ مِنْ عَذَابِ ٱلْحَمِيمِ.
44:48. “அவர்களுடைய தலைக்கு மேல் கொதி நீரை ஊற்றுங்கள். தலைக்கணம் பிடித்து ஆடிய ஆட்டங்கள் யாவும் தணிந்துவிடும்” என்று கூறப்படும்.
ذُقْ إِنَّكَ أَنتَ ٱلْعَزِيزُ ٱلْكَرِيمُ.
44:49. “இப்போது நீ சுவைக்கும் வேதனைகள் எவ்வாறு உள்ளன? உன்னுடைய வல்லமையும் உயர் அந்தஸ்தும் எங்கு போயின?” என்று அவர்களிடம் கேட்கப்படும்.
إِنَّ هَٰذَا مَا كُنتُم بِهِۦ تَمْتَرُونَ.
44:50. “இத்தகைய வேதனைகளை சுவைக்க வேண்டி வராது என்ற மிதப்பில் இருந்தீர்களே அந்த வேதனைகள் இவை தான்” என்று அவர்களிடம் கூறப்படும்.
إِنَّ ٱلْمُتَّقِينَ فِى مَقَامٍ أَمِينٍۢ.
44:51. ஆனால் இறைவழிகாட்டுதலைப் பேணி நடந்தவர்களுக்கு இதற்கு நேர் மாற்றமாக அச்சமற்று இருப்பார்கள்.
فِى جَنَّٰتٍۢ وَعُيُونٍۢ.
44:52. அவர்கள் வாழும் இடம் சுவனத்து சோலைகளும், நீரூற்றுகளும் நிறைந்தவையாக இருக்கும்.
يَلْبَسُونَ مِن سُندُسٍۢ وَإِسْتَبْرَقٍۢ مُّتَقَٰبِلِينَ.
44:53. மேலும் அவர்களுக்கு உலகளாவிய ஆடை ஆபரணங்கள் கிடைத்து வரும். அவர்கள் சந்தோஷத்தில் ஒருவரையொருவர் பார்த்து பூரித்துப் போவார்கள்.
كَذَٰلِكَ وَزَوَّجْنَٰهُم بِحُورٍ عِينٍۢ.
44:54. இப்படியாக அவர்கள் வாழும் இடங்களுக்கு கண்களைக் குளிர வைக்கும் உற்ற தோழர்களும் வந்து இணைவார்கள்.
يَدْعُونَ فِيهَا بِكُلِّ فَٰكِهَةٍ ءَامِنِينَ.
44:55. இப்படியாக அவர்கள் அச்சமற்று வாழ்வார்கள். அங்கு அவர்கள் கேட்கும் எல்லா விதமான கனி வகைகளும் பழரசங்களும் கிடைக்கும்.
لَا يَذُوقُونَ فِيهَا ٱلْمَوْتَ إِلَّا ٱلْمَوْتَةَ ٱلْأُولَىٰ ۖ وَوَقَىٰهُمْ عَذَابَ ٱلْجَحِيمِ.
44:56. மேலும் அவர்களுக்கு நித்திய வாழ்வு கிடைத்து வரும். இதற்கு முன் உலக வாழ்வில் அவர்களுக்கு ஏற்பட்ட மரணத்தைப் போன்று இனியும் மரணம் ஏற்படாது. இப்படியாக அவர்கள் நரக வேதனைகளிலிருந்து மீண்டு கொள்வார்கள்.
فَضْلًۭا مِّن رَّبِّكَ ۚ ذَٰلِكَ هُوَ ٱلْفَوْزُ ٱلْعَظِيمُ.
44:57. இவையாவும் உமது இறைவனின் அருட்கொடைகளாகும். இப்படியொரு வாழ்வு கிடைப்பது மிகப் பெரிய வெற்றியாகும் அல்லவா?
فَإِنَّمَا يَسَّرْنَٰهُ بِلِسَانِكَ لَعَلَّهُمْ يَتَذَكَّرُونَ.
44:58. நீங்கள் நல்லறிவுரைகளை பெறுவதற்காகவே நீங்கள் பேசும் மொழியிலேயே எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் இவற்றை தொகுத்து தந்துள்ளோம்.
فَٱرْتَقِبْ إِنَّهُم مُّرْتَقِبُونَ.
44:59. ஆகவே நீங்கள் இறைவனின் வழிகாட்டுதலின்படி செயல்பட்டு நற்பலன்களை எதிர்பாருங்கள். அவர்களும் தம் வழக்கப்படி செயல்பட்டு அவற்றின் விளைவுகளை எதிர் பார்க்கட்டும்.
சிந்தனையாளர்களே! மேற்சொன்ன நரக வாழ்க்கை மற்றும் சுவர்க்க வாழ்க்கை இவ்வுலகில் இறைவழிகாட்டுதலின் படி ஆட்சி நடைபெறும் போதும் அவரவர் செயலுக்கேற்ப கிடைத்து வரும். மரணத்திற்குப் பின்பும் இதே நிலை நீடிக்கும். இவ்வுலகில் அத்தகைய ஆட்சி இல்லை என்றால் மரணத்திற்குப் பின் தொடர்கின்ற வாழ்வில் கிடைப்பது சர்வ நிச்சயம்.