بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
43:0.அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் அறிவுரைப்படியே அனைத்துக் காரியங்களையும் செய்ய நாடுகிறேன். (பார்க்க 6:162)
حمٓ.
43:1. பாராட்டுக்கும் போற்றுதலுக்கும் உரிய முஹம்மது நபி மூலம் இறக்கியருளப்பட்ட வேதமிது.
وَٱلْكِتَٰبِ ٱلْمُبِينِ.
43:2. விவரமாகத் தொகுக்கப்பட்டுள்ள இவ்வேதம் மிகவும் தெளிவானது என்பதற்கும் இதுவே சான்றாக விளங்குகின்றது.
إِنَّا جَعَلْنَٰهُ قُرْءَٰنًا عَرَبِيًّۭا لَّعَلَّكُمْ تَعْقِلُونَ.
43:3. இதைக் கொண்டு நீங்கள் அனைவரும் மாமேதைகளாக வரவேண்டும் என்பதற்காகவே, நீங்கள் பேசும் மொழியிலேயே தெள்ளத் தெளிவாக தொகுக்கப் பட்டுள்ளது.
وَإِنَّهُۥ فِىٓ أُمِّ ٱلْكِتَٰبِ لَدَيْنَا لَعَلِىٌّ حَكِيمٌ.
43:4. இந்த வேத அறிவுரைகளின் ஊற்றுக் கண், அளவற்ற ஞானமும் எல்லையற்ற வல்லமையுமுடைய இறைவனாகிய அல்லாஹ்வே.
أَفَنَضْرِبُ عَنكُمُ ٱلذِّكْرَ صَفْحًا أَن كُنتُمْ قَوْمًۭا مُّسْرِفِينَ.
43:5. இறைவனின் அறிவுரைகளை ஏற்காமல் வரம்பு மீறின செயல்களில் ஈடுபடுவோரிடம், “நீங்கள் ஏற்றுக் கொள்வதில்லை என்பதற்காக இந்த குர்ஆனின் அறிவுரைகளை மக்களிடம் பரப்பாமல் விட்டுவிட முடியுமா? அல்லது இதில் சொல்லப்பட்டுள்ள பேரழிவுகள் உங்களுக்கு வராமல் போய்விடுமா?” என்று கேளுங்கள்.
وَكَمْ أَرْسَلْنَا مِن نَّبِىٍّۢ فِى ٱلْأَوَّلِينَ.
43:6. இவர்களுக்கு முன் வாழ்ந்த சமூகத்தினரிடமும் இறைவழிகாட்டுதலை எடுத்துரைப்பவர்கள் பலர் வந்தார்கள்.
وَمَا يَأْتِيهِم مِّن نَّبِىٍّ إِلَّا كَانُوا۟ بِهِۦ يَسْتَهْزِءُونَ.
43:7. அவ்வாறு வந்த இறைத்தூதர்களை அக்கால சமூகத்தினரில் சிலர் பரிகாசம் செய்யாமல் இருந்ததில்லை.
فَأَهْلَكْنَآ أَشَدَّ مِنْهُم بَطْشًۭا وَمَضَىٰ مَثَلُ ٱلْأَوَّلِينَ.
43:8. அச்சமுதாயத்தினர் இப்போதுள்ள சமூகத்தினரைவிட பலம் மிக்கவர்களாக இருந்தனர். ஆனால் “மனித செயல்களின் விளைவுகள்” என்ற அல்லாஹ்வின் சட்டம் அவர்களைவிட வலிமை மிக்கதாகும். எனவே அதில் அவர்கள் பலியாகி விட்டார்கள். எனவே அவர்களுக்கு ஏற்பட்ட கதியே இவர்களுக்கும் ஏற்படாமல் போய்விடுமா?
وَلَئِن سَأَلْتَهُم مَّنْ خَلَقَ ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضَ لَيَقُولُنَّ خَلَقَهُنَّ ٱلْعَزِيزُ ٱلْعَلِيمُ.
43:9. அவர்களிடம் அகிலங்களையும் பூமியையும் படைத்தது யார் என்று கேட்டுப்பாருங்கள். அவர்கள் உடனே சகல வல்லமையும் அளவற்ற ஞானமும் உடைய அல்லாஹ் தான் படைத்ததாகக் கூறுவார்கள்.
ஆக அகிலங்களையும் பூமியையும் படைக்கும் பேராற்றல் இறைவனுக்குத் தான் உண்டு என்பதை ஏற்றுக் கொள்ளும் இவர்கள், தம் வாழ்வில் இறைவனின் வழிகாட்டுதல்கள் தலையிடுவதை விரும்புவதில்லை. பிரபஞ்ச படைப்பு வரையில் அவன் சிறப்பாக இருக்கிறான். அவனைப் பாராட்டவும் செய்வோம். ஆனால் நம் விவகாரத்தில் அவனுடைய தலையீடு சரியில்லை என்று நினைக்கிறார்கள். அவர்களிடம்
ٱلَّذِى جَعَلَ لَكُمُ ٱلْأَرْضَ مَهْدًۭا وَجَعَلَ لَكُمْ فِيهَا سُبُلًۭا لَّعَلَّكُمْ تَهْتَدُونَ.
43:10. நீங்கள் இன்புற்று வாழ்வதற்காக, இந்த பூமியை விரிப்பாக ஆக்கி, அதில் நீங்கள் விரும்பும் இடங்களுக்கெல்லாம் பயணம் செய்யும்படியாக பாதைகளை ஏற்படுத்திக் கொடுத்தவனும் இறைவனே என்பதை ஏன் கவனித்துப் பார்ப்பதில்லை.?
وَٱلَّذِى نَزَّلَ مِنَ ٱلسَّمَآءِ مَآءًۢ بِقَدَرٍۢ فَأَنشَرْنَا بِهِۦ بَلْدَةًۭ مَّيْتًۭا ۚ كَذَٰلِكَ تُخْرَجُونَ.
43:11. அதுமட்டுமின்றி வானத்திலிருந்து தேவையான அளவு மழை பொழிய வைப்பதை கவனித்துப் பாருங்கள். அதைக் கொண்டு தானே வரண்டு கிடக்கும் பூமி புத்துயிர் பெற்று பசுமை நிறைந்ததாய் ஆகிறது. அவ்வாறே இறைவனின் வழிகாட்டுதல்களை பின்பற்றுவதன் மூலம் நடைபிணமாக வாழும் நீங்கள், புத்துயிர் பெற்று சிறப்பாக வாழ்வீர்கள் என்பதை ஏன் நினைத்துப் பார்ப்பதில்லை?
وَٱلَّذِى خَلَقَ ٱلْأَزْوَٰجَ كُلَّهَا وَجَعَلَ لَكُم مِّنَ ٱلْفُلْكِ وَٱلْأَنْعَٰمِ مَا تَرْكَبُونَ.
43:12. இறைவனின் செயல்திட்டத்தின்படிதான் எல்லா படைப்புகளும் ஜோடி ஜோடியாகப் படைக்கபட்டுள்ளன. கடலில் போக்குவரத்து சாதனங்களாக இருக்கும் கப்பல்களையும், பூமியில் பயணம் செய்ய குதிரை, ஒட்டகம் போன்ற கால் நடைகளையும் உங்களுக்காகப் படைத்தது அந்த ஏக இறைவன்தானே?
لِتَسْتَوُۥا۟ عَلَىٰ ظُهُورِهِۦ ثُمَّ تَذْكُرُوا۟ نِعْمَةَ رَبِّكُمْ إِذَا ٱسْتَوَيْتُمْ عَلَيْهِ وَتَقُولُوا۟ سُبْحَٰنَ ٱلَّذِى سَخَّرَ لَنَا هَٰذَا وَمَا كُنَّا لَهُۥ مُقْرِنِينَ.
43:13. நீங்கள் பயணிப்பதற்காக அவற்றின் முதுகுகளில் ஏறி அமர்ந்து செல்கிறீர்கள். இறைவனின் இத்தகைய அருளைப் பற்றி சிந்தித்துப் பாருங்கள். அவற்றை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் படைக்காதிருந்தால் உங்களுக்கு எப்படி வசதி வாய்ப்புகள் கிடைத்திருக்கும்? இறைவனின் அருட்கொடைகள் இருப்பதால் தான் உங்களுக்கு இத்தகைய வசதி வாய்ப்புகள் யாவும் கிடைக்கின்றன என்பதை நினைவுகூர்ந்து அவனுடைய வல்லமையைப் போற்றிப் பாராட்டுங்கள். இறைவனின் வல்லமையும், பேராற்றலும் மனித கற்பனைகளுக்கெல்லாம் அப்பாற்பட்டவையாகும் என்பதை நீங்கள் அறிந்துகொள்வீர்கள்.
இன்றைய நவீன காலத்திலும் போக்கு வரத்து சாதனங்களை எல்லாம் இறைவனின் அருட்கொடைகளாக இருக்கும் இயற்கை வளங்களைக் கொண்டு தான் தயாரிக்கிறோம். இத்தகைய எண்ணற்ற அருட்கொடைகள் இறைவனிடமிருந்து கிடைப்பதால் தான் மனிதனால் சிறப்பாக உயிர்வாழ முடிகிறது. ஆனால் அவனுடைய சந்தோஷங்கள் நிலைத்திருக்க வேண்டும் என்றால் அவன் காட்டிய வழியில் மனிதன் செயல்பட வேண்டும். ஏனெனில்
وَإِنَّآ إِلَىٰ رَبِّنَا لَمُنقَلِبُونَ.
43:14. மனிதன், தான் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் இறைவன் நிர்ணயித்த விதிமுறைப்படி விளைவுகளை சந்தித்தே ஆகவேண்டும் என்பதை அறிந்துகொள்ள வேண்டும்.
وَجَعَلُوا۟ لَهُۥ مِنْ عِبَادِهِۦ جُزْءًا ۚ إِنَّ ٱلْإِنسَٰنَ لَكَفُورٌۭ مُّبِينٌ.
43:15. ஆனால் மனிதனின் அறிவிலித்தனத்தைப் பாருங்கள். ஒருபுறம் இறைவனின் படைப்பு விஷயத்தை ஏற்றுக் கொள்ளும் இவன், மறுபுறம் இறைவனுக்குப் மகப்பேறுகளும் உண்டு என்று கூறி அவற்றை பூஜித்தும் வருவான். இப்படியாக மனிதன் தன் உயர் இலட்சியத்தை மறந்தவனாக, வெளிப்படையான வழிகேட்டில் சென்று விடுகிறான்.
أَمِ ٱتَّخَذَ مِمَّا يَخْلُقُ بَنَاتٍۢ وَأَصْفَىٰكُم بِٱلْبَنِينَ.
43:16. அதுமட்டுமின்றி இறைவனுக்கு புதல்வியர்களும் உண்டு என்று கூறும் இவன், தனக்கு மட்டும் ஆண் குழந்தை வேண்டும் என்று இறைவனிடம் வேண்டிக் கொள்கின்றான். (பார்க்க 16:57) அதாவது தேவதைகள் யாவரும் இறைவனின் புதல்வியர்கள் எனக் சொல்லி அவற்றை வழிபட்டு வருகிறான்.
وَإِذَا بُشِّرَ أَحَدُهُم بِمَا ضَرَبَ لِلرَّحْمَٰنِ مَثَلًۭا ظَلَّ وَجْهُهُۥ مُسْوَدًّۭا وَهُوَ كَظِيمٌ.
43:17. அருட்கொடையாளன் இறைவனிடம் வேண்டிக் கொண்டபடி ஆண் குழந்தைக்குப் பதிலாக பெண் குழந்தைப் பிறந்ததை அவன் அறிந்தால் அவனுடைய முகம் கவலையால் வாடிப்போய் விடுகிறது. மேலும் அவன் தனக்குப் பீடை பிடித்து விட்டதாகக் கருதி கோபம் அடைகின்றான். (மேலும் பார்க்க 16:57-59)
أَوَمَن يُنَشَّؤُا۟ فِى ٱلْحِلْيَةِ وَهُوَ فِى ٱلْخِصَامِ غَيْرُ مُبِينٍۢ.
43:18. ஆனால் அவன் வழிபடும் கற்பனை பெண் தெய்வங்களை, ஆடை அலங்காரங்களுடன் பல்லக்கில் வலம் வரச் செய்கிறான். ஆனால் மனித விவகாரங்களைப் பற்றி அறிந்து கொள்ளும் சக்தி அவற்றில் எதற்கும் இல்லை. இருந்தும் அவற்றை அவன் வழிபடுகிறான்.
وَجَعَلُوا۟ ٱلْمَلَٰٓئِكَةَ ٱلَّذِينَ هُمْ عِبَٰدُ ٱلرَّحْمَٰنِ إِنَٰثًا ۚ أَشَهِدُوا۟ خَلْقَهُمْ ۚ سَتُكْتَبُ شَهَٰدَتُهُمْ وَيُسْـَٔلُونَ.
43:19. மேலும் அருட்கொடையாளன் இறைவன், தன் செயல்திட்டங்களை நிறைவேற்ற உருவாக்கிய இயற்கை சக்திகளை, அவர்கள் பெண் தெய்வங்களாக கருதுகின்றனர். ஏதோ, அவை படைக்கப்பட்ட போது இவர்கள் எல்லாம் பார்த்துக் கொண்டிருந்தது போலவே பேசுவார்கள். இவர்கள் பேசி வருவதும் செயல்பட்டு வருவதும் பதிவு செய்யப்படாமல் விடப்படுமா? இல்லை. அவர்கள் பேசி வரும் ஒவ்வொரு சொல்லுக்கும் பதில் சொல்லியே ஆக வேண்டும்.
وَقَالُوا۟ لَوْ شَآءَ ٱلرَّحْمَٰنُ مَا عَبَدْنَٰهُم ۗ مَّا لَهُم بِذَٰلِكَ مِنْ عِلْمٍ ۖ إِنْ هُمْ إِلَّا يَخْرُصُونَ.
43:20. அதுமட்டுமின்றி அவர்களிடம் இவற்றின் உண்மை நிலையைப் பற்றி தீர விசாரித்தால், அருட்கொடையாளன் இறைவனின் விருப்பத்திற்கு ஏற்பத் தான் இவ்வாறு வழிபட்டு வருவதாக கூறுகிறார்கள். இறைவன் நாடியிருந்தால் நாங்கள் அவற்றை வணங்கி இருக்க மாட்டோம் என்கின்றனர். (பார்க்க 6:148) ஆனால் அவர்கள் உண்மையை விளங்கியிருந்தால் இப்படிப்பட்ட பேச்சை பேசியிருக்க மாட்டார்கள். அவர்களே கற்பனை செய்து கொண்டு தெளிவான ஆதாரம் எதுவுமின்றி இவ்வாறு பேசி வருகிறார்கள்.
أَمْ ءَاتَيْنَٰهُمْ كِتَٰبًۭا مِّن قَبْلِهِۦ فَهُم بِهِۦ مُسْتَمْسِكُونَ.
43:21. இவர்களின் கூற்றிற்கு ஆதாராமாக, இறைவன் புறத்திலிருந்து இதற்கு முன் எப்போதாவது வேதம் இறக்கி அருளப்பட்டுள்ளதா என்று கேளுங்கள்.
بَلْ قَالُوٓا۟ إِنَّا وَجَدْنَآ ءَابَآءَنَا عَلَىٰٓ أُمَّةٍۢ وَإِنَّا عَلَىٰٓ ءَاثَٰرِهِم مُّهْتَدُونَ.
43:22. இந்த கேள்விக்கு அவர்கள், தம் முன்னோர்கள் எதை வணங்கக் கண்டார்களோ, அவற்றையே தாங்களும் வணங்குவதாகக் கூறுவார்கள். அதாவது அவர்கள் பின்பற்றி வந்த வழிமுறைகளையே இவர்களும் பின்பற்றி வருவதாக கூறுவார்கள். மற்றபடி எந்த ஆதாரமும் கிடையாது.
وَكَذَٰلِكَ مَآ أَرْسَلْنَا مِن قَبْلِكَ فِى قَرْيَةٍۢ مِّن نَّذِيرٍ إِلَّا قَالَ مُتْرَفُوهَآ إِنَّا وَجَدْنَآ ءَابَآءَنَا عَلَىٰٓ أُمَّةٍۢ وَإِنَّا عَلَىٰٓ ءَاثَٰرِهِم مُّقْتَدُونَ.
43:23. இறைவழிகாட்டுதலை எடுத்துரைப்பவரே! இவர்களின் இந்த கூற்று புதிதான ஒன்றல்ல. உமக்கு முன்பும் இறைத்தூதர்கள் மார்க்க உண்மைகளை எடுத்துரைத்த போதெல்லாம் அச்சமுதாயத்தில் வாழ்ந்த செல்வந்தர்கள், “எங்கள் மூதாதையர்கள் கடைப்பிடித்த வழிமுறையையே நாங்களும் கடைப்பிடிக்கிறோம்” என்று கூறாமல் இருந்ததில்லை.
இன்றைக்கும் இந்த மார்க்க உண்மைகளை மக்களிடம் எடுத்துரைக்கும் போது, இதைத் தான் கூறி இறைவழிகாட்டுதலை ஏற்க மறுப்பார்கள்.
۞ قَٰلَ أَوَلَوْ جِئْتُكُم بِأَهْدَىٰ مِمَّا وَجَدتُّمْ عَلَيْهِ ءَابَآءَكُمْ ۖ قَالُوٓا۟ إِنَّا بِمَآ أُرْسِلْتُم بِهِۦ كَٰفِرُونَ.
43:24. அதற்கு அந்த இறைத்தூதர்கள், “உங்கள் முன்னோர்கள் எந்த வழிமுறைகளைப் பின்பற்றினார்களோ, அவற்றைவிட சிறப்பான வழிமுறைகளை நான் உங்களுக்கு கொண்டு வந்தாலும் அவற்றை ஏற்க மாட்டீர்களா?” என்று கேட்டனர். ஆனால் அவர்களோ அவர் எடுத்துரைத்த அறிவுரைகளை ஏற்றுக் கொள்வதில்லை என்று சொல்லி விட்டனர்.
இறைவழிகாட்டுதலின் சிறப்புகளை அவர்களிடம் எடுத்துரைத்து அவர்களுடைய தவறான போக்குகளினால் ஏற்படுகின்ற விளைவுகளைப் பற்றி எச்சரிக்கை செய்தும், அவர்கள் தம் தீய செயல்களில் நிலைத்துவிட்டார்கள். எனவே
فَٱنتَقَمْنَا مِنْهُمْ ۖ فَٱنظُرْ كَيْفَ كَانَ عَٰقِبَةُ ٱلْمُكَذِّبِينَ.
43:25. அருட்கொடையாளன் இறைவன் நிர்ணயித்துள்ள “மனித செயல்களுக்கேற்ற இறுதி விளைவுகள்” என்ற விதிமுறைகளின்படி அவர்களுடைய தீய செயல்களுக்கு தக்க பதிலடி கிடைத்து விட்டது. இறைவழிகாட்டுதலை ஏற்க மறுத்து தீய செயல்களில் ஈடுபட்டவர்களின் முடிவு எந்த அளவுக்கு பயங்கரமாக இருந்தது என்பதை வரலாற்று ஏட்டுகளை புரட்டிப் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
وَإِذْ قَالَ إِبْرَٰهِيمُ لِأَبِيهِ وَقَوْمِهِۦٓ إِنَّنِى بَرَآءٌۭ مِّمَّا تَعْبُدُونَ.
43:26. இதே போல் இப்றாஹீம் நபி தம் தந்தையிடமும், தம் சமூகத்தாரிடமும் மார்க்க உண்மைகளை எடுத்துரைத்து வந்தார். அவர்கள் கடைப்பிடித்து வந்த தெய்வ வழிபாட்டை விட்டு விலகி இருப்பதாக அவர் கூறி வந்தார்.
إِلَّا ٱلَّذِى فَطَرَنِى فَإِنَّهُۥ سَيَهْدِينِ.
43:27. மேலும் அவர் தன்னைப் படைத்த ஏக இறைவனின் வழிகாட்டுதலை பின்பற்றுவதாகவும் கூறி வந்தார். அவனே எனக்கு நேர்வழியைக் காட்டுகிறான் என்றும் கூறினார்.
وَجَعَلَهَا كَلِمَةًۢ بَاقِيَةًۭ فِى عَقِبِهِۦ لَعَلَّهُمْ يَرْجِعُونَ.
43:28. மேலும் அவர், தான் மட்டும் இறைவழிகாட்டுதலைப் பின்பற்றாமல் தன்னைப் பின்பற்றி வரும் சந்ததியினருக்கும், தவறான மூடநம்பிக்கைகளை விட்டுவிட்டு நேர்வழியைப் பின்பற்றி நடக்கும்படி அறிவுறுத்தி வந்தார்.
بَلْ مَتَّعْتُ هَٰٓؤُلَآءِ وَءَابَآءَهُمْ حَتَّىٰ جَآءَهُمُ ٱلْحَقُّ وَرَسُولٌۭ مُّبِينٌۭ.
43:29. ஆனால் அவர்களுடைய மூதாதையர்களைப் பொறுத்த வரையில், இறைத்தூதர் அறிவித்த தீய விளைவுகள் தெளிவாகும் வரையில் அவர்களுடைய ஆரவாரங்கள் மேலோங்கியே இருந்தன.
அவர்கள் தம் மனோ இச்சையைப் பின்பற்றி வந்ததால் இறைவழிகாட்டுதலை ஏற்கவில்லை. எனவே அவர்களுடைய வாழ்வில் சரிவு ஏற்பட்டு விட்டது.
وَلَمَّا جَآءَهُمُ ٱلْحَقُّ قَالُوا۟ هَٰذَا سِحْرٌۭ وَإِنَّا بِهِۦ كَٰفِرُونَ.
43:30. அவர்களிடம் தெளிவான வேத உண்மைகள் வந்தபோதும், அவை மக்களை வசியப்படுத்தும் ஏமாற்றுப் பேச்சுகளே எனக் கூறி அவற்றை அவர்கள் நிராகரிப்பதாக கூறிவிட்டனர்.
இப்போதுள்ள மக்களின் பேச்சையும் கவனித்துப் பாருங்கள். அவர்கள் இறைவழிகாட்டுதலை ஏற்க மறுப்பதற்கு கூறும் காரணம் என்னவென்பதைக் கவனியுங்கள்.
وَقَالُوا۟ لَوْلَا نُزِّلَ هَٰذَا ٱلْقُرْءَانُ عَلَىٰ رَجُلٍۢ مِّنَ ٱلْقَرْيَتَيْنِ عَظِيمٍ.
43:31. “இந்த குர்ஆன் மக்கா, மதினா ஆகிய இவ்விரு ஊர்களிலுள்ள பெரியார்கள் மீது இறக்கி அருளப்பட்டிருக்கக் கூடாதா?” என்று கேட்கிறார்கள்.
“அதாவது முந்தைய காலத்தில் தாவூது நபி, சுலைமான் நபி போன்றோருக்குத் தான் இறைவழிகாட்டுதல்கள் இறக்கி அருளப்பட்டன. இப்போதும் இவ்விரு பட்டணத்தில் பெரிய மனிதர்கள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். அவர்களை எல்லாம் விட்டுவிட்டு, சாதாரண மனிதருக்கா இந்த வழிகாட்டுதலை அளிக்க வேண்டும்?” என்கிறார்கள். (பார்க்க 23:33-34) ஆக நபித்துவம் போன்ற விஷயத்திலும் அவர்கள் என்ன விரும்புகிறார்களோ, அதன்படி தான் நடக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். சரி. நபித்து விஷயத்தை விடுங்கள் அவர்களுடைய வாழ்வாதார பங்கீட்டு முறையை சற்று கவனித்துப் பாருங்கள்.
أَهُمْ يَقْسِمُونَ رَحْمَتَ رَبِّكَ ۚ نَحْنُ قَسَمْنَا بَيْنَهُم مَّعِيشَتَهُمْ فِى ٱلْحَيَوٰةِ ٱلدُّنْيَا ۚ وَرَفَعْنَا بَعْضَهُمْ فَوْقَ بَعْضٍۢ دَرَجَٰتٍۢ لِّيَتَّخِذَ بَعْضُهُم بَعْضًۭا سُخْرِيًّۭا ۗ وَرَحْمَتُ رَبِّكَ خَيْرٌۭ مِّمَّا يَجْمَعُونَ.
43:32. இறைவனின் அருட்கொடையான வாழ்வாதாரங்கள் விஷயத்தில் இவர்களா பங்கிட்டுத் தருகிறார்கள். சமுதாயத்தில பல்வேறு தேவைகள் நிறைவேற பல தரப்பட்ட மனித ஆற்றல்கள் அவசியமாகின்றன. எனவே பல்வேறு தொழில்கள் உருவாகின்றன. இதனால் சிலருடைய சம்பாத்தியம் மற்றவர்களை விட அதிகமாகி விடுகிறது. சிலர், சிலரை ஊழியத்திற்கு வைத்துக்கொள்ளும் வாய்ப்பும் ஏற்படுகிறது. ஆக எல்லோருடைய உழைப்பும் ஒருங்கிணைந்தால் தான் ‘சமுதாயம்’ என்று உருவாகி, அது செழிப்பாகத் திகழும். எனவே அவர்களுடைய வாழ்வாதாரங்களை சரிசமமாக பங்கிட்டு, அனைவரும் இன்புற்று வாழ வழிசெய்ய வேண்டும் என்பதே இறைவனின் அறிவுரையாகும். அவ்வாறு அவர்கள் செயல்பட்டால் அவர்கள் சேகரித்து வைத்துள்ள சொத்து செல்வங்களின் மூலம் கிடைக்கின்ற சந்தோஷங்களை விட பன்மடங்கு அதிகமான சந்தோஷங்கள் கிடைக்கும். (பார்க்க 16:71)
அதாவது தனிநபர் எவரும் சமுதாயமாக ஆகிவிட முடியாது. அனைவரும் கூடி வாழும்போது தான் சமுதாயம் என உருவாகிறது. அதுபோல தனி நபர் ஒருவரின் அனுபவங்கள் உலக பொது நெறி முறையாக ஆகிவிட முடியாது. எனவே உலக பொது மறையான குர்ஆனை தனி நபர் விருப்பப்படி எழுத முடியாது. உலக மக்கள் அனைவருக்கும் பொதுவாக இருக்கும் ஏக இறைவனால் மட்டுமே உலக மக்களின் பொதுப் பிரச்னைகளுக்கு சரியான தீர்வு சொல்ல முடியும். மேலும் யார் தகுதியானவரோ அவர் மூலமாகத் தான் வழிகாட்டுதல்களை அறிவிக்க முடியும்.
وَلَوْلَآ أَن يَكُونَ ٱلنَّاسُ أُمَّةًۭ وَٰحِدَةًۭ لَّجَعَلْنَا لِمَن يَكْفُرُ بِٱلرَّحْمَٰنِ لِبُيُوتِهِمْ سُقُفًۭا مِّن فِضَّةٍۢ وَمَعَارِجَ عَلَيْهَا يَظْهَرُونَ.
43:33. இப்படியாக இறைவனின் நியதிப்படி ஒருவர் மற்றவரின் தேவைகளை நிறைவேற்றிக் கொண்டு, மனிதன் கூட்டாகத் தான் வாழ முடியும். அனைத்து தரப்பு மக்களும் ஒரினத்தவன் என்ற அடிப்படையில் தான் வாழ்ந்தாக வேண்டும். (பார்க்க 10:19) இதுவே இறைவனின் நாட்டமாகும். இத்தகைய வாழ்க்கை முறையை இறைவன் ஏற்படுத்தாமல் இருந்தால், சமூக அமைப்பின் ஏற்பாட்டிற்கு எதிராக மனிதனுக்கு செல்வங்களைக் குவிக்கும் பேராசையே மிகைத்திருக்கும். மனிதன் தன் வீட்டின் கூரைகளும் படிகட்டுகளும் வெள்ளியினால் ஆனவையாக இருக்கவேண்டும் என்றே விரும்பி இருப்பான்.
وَلِبُيُوتِهِمْ أَبْوَٰبًۭا وَسُرُرًا عَلَيْهَا يَتَّكِـُٔونَ.
43:34. அத்தகையவர்கள் தம் வீட்டு கதவுகளும், படுத்து உறங்கும் கட்டில்களும் தங்கத்தால் ஆனதாக இருக்க வேண்டும் என்றும் விரும்புவார்கள். இப்படியாக அவர்களுடைய ஆசைகளுக்கு எல்லையே இருக்காது.
அவ்வாறு அவை தங்கத்தாலும் வெள்ளியினாலும் அலங்கரிக்கப்பட்டு இருந்தாலும், அவை மனித நேயத்தையும் உயர் பண்புகளையும் உயர்த்துமா? இறைவழிகாட்டுதலின்றி வாழும் சமுதாயங்களில் இத்தகைய வாழ்க்கையே சிறப்பு என்ற கண்ணோட்டங்கள் இருக்கும். ஆனால் அவை மனித பிரச்னைகளுக்கு ஒருபோதும் தீர்வு ஆக முடியாது. எனவே சமுதாயத்தில் தொழில் ரீதியான வேற்றுமைகள் இருந்தாலும் அவன் ஒற்றுமையோடு ஒன்றுபட்டு வாழவே இறைவழிகாட்டுதல் வலியுறுத்துகிறது.
وَزُخْرُفًۭا ۚ وَإِن كُلُّ ذَٰلِكَ لَمَّا مَتَٰعُ ٱلْحَيَوٰةِ ٱلدُّنْيَا ۚ وَٱلْءَاخِرَةُ عِندَ رَبِّكَ لِلْمُتَّقِينَ.
43:35. எனவே இந்த அலங்காரங்கள் மீதுள்ள ஈர்ப்பு தற்காலிக சுகங்களை மட்டும் தரக் கூடியவையாக உள்ளன. ஆனால் அவை வருங்கால நிலையான வாழ்விற்கு ஒருபோதும் துணை நிற்காது. அவை சமுதாயங்களை அழிவின் பக்கமே அழைத்துச் செல்லும். எனவே வருங்கால நிலையான சுகங்களும் வேண்டும் என்றால் இறைவழிகாட்டுதலைப் பேணி நடந்து சமூக சமச்சீர்நிலையைக் கட்டிக் காப்பாற்ற வேண்டும். அப்போது தான் நிகழ்கால வாழ்வும் வருங்கால நிலையான வாழ்வும் சிறக்கும்.
وَمَن يَعْشُ عَن ذِكْرِ ٱلرَّحْمَٰنِ نُقَيِّضْ لَهُۥ شَيْطَٰنًۭا فَهُوَ لَهُۥ قَرِينٌۭ.
43:36. ஆக அருட்கொடையாளன் இறைவனின் அறிவுரைகளைப் புறக்கணித்து விட்டால், மிஞ்சி நிற்பதோ ஷைத்தான் எனும் மனோ இச்சையே. அதுவே அவர்களுக்கு உற்ற நண்பனாக இருக்க முடியும். இப்படியாக அவர்கள் சுய நலக்காரர்களாக மாறிவிடுவார்கள்.
وَإِنَّهُمْ لَيَصُدُّونَهُمْ عَنِ ٱلسَّبِيلِ وَيَحْسَبُونَ أَنَّهُم مُّهْتَدُونَ.
43:37. இத்தகைய சுய நலக்கார தலைவர்கள், மக்களை நேரான பாதையை விட்டு தடுத்து, வழிகெடுத்து வருவார்கள். ஆனால் அவர்கள் செய்யும் செயல்கள் யாவும் அழகானவையே என்று எண்ணிக் கொள்வார்கள். அந்த செயல்களின் தாக்கங்களைப் பற்றிய ஞானமே அவர்களுக்கு ஒருபோதும் இராது.
حَتَّىٰٓ إِذَا جَآءَنَا قَالَ يَٰلَيْتَ بَيْنِى وَبَيْنَكَ بُعْدَ ٱلْمَشْرِقَيْنِ فَبِئْسَ ٱلْقَرِينُ.
43:38. அவர்கள் செய்து வந்த செயல்களின் விளைவுகள் தோற்றத்திற்கு வரும்போது தான், அவர்களுடைய அறிவுக்கண் திறக்கும். அப்போது, “எங்களுக்கும் வழிகெடுத்த உங்களுக்கும் இடையே கிழக்கிற்கும் மேற்கிற்கும் உள்ள இடைவெளி இருந்திருக்க வேண்டுமே! எங்களை இந்த அளவுக்கு அவர்கள் வழிகெடுத்து விட்டார்களே!” என்று புலம்புவார்கள்.
وَلَن يَنفَعَكُمُ ٱلْيَوْمَ إِذ ظَّلَمْتُمْ أَنَّكُمْ فِى ٱلْعَذَابِ مُشْتَرِكُونَ.
43:39. நீங்கள் செய்து வந்த அநியாய அக்கிரம செயல்களின் விளைவாக ஏற்படும் வேதனைகளைத் தாங்க முடியாமல் இத்தகைய ஏக்கங்கள் ஏற்படும். உங்களுடைய ஏக்கம் எதுவும் எந்த பலனையும் தராது. நீங்கள் அனுபவிக்க வேண்டிய வேதனைகளை யாராலும் தடுக்கவும் முடியாது. இதுவே அவர்களுடைய நிலைமையாக இருக்கும்.
أَفَأَنتَ تُسْمِعُ ٱلصُّمَّ أَوْ تَهْدِى ٱلْعُمْىَ وَمَن كَانَ فِى ضَلَٰلٍۢ مُّبِينٍۢ.
43:40. இதுதான் அவர்களுக்கு நேரவிருக்கும் வேதனைகளைப் பற்றிய உண்மைகளாகும். அதைப் பற்றி எடுத்துரைத்தால் கண்மூடித்தனமாக அவற்றை ஏற்க மறுக்கிறார்கள். எனவே இறைவழிகாட்டுதலை எடுத்துரைப்பவரே! இப்படி செவிடர்களாகவும் குருட்டுத்தனமாகவும் வாழும் இவர்கள் வெளிப்படையான வழிகேட்டில் இருக்கிறார்களே! அத்தகையவர்களை எப்படி நேர்வழிக்கு கொண்டுவர முடியும்?
فَإِمَّا نَذْهَبَنَّ بِكَ فَإِنَّا مِنْهُم مُّنتَقِمُونَ.
43:41.அவர்களுக்கு நேரவிருக்கும் அழிவினை நீர் உன் வாழ்நாளில் பார்க்க முடியவில்லை என்றாலும் அவர்களுடைய தீய செயல்களின் விளைவுகளை சந்திப்பது உறுதி.
அதாவது நீர் விடும் எச்சரிக்கைகள் யாவும் அவர்களுக்கு மிகவும் வருத்தத்தைத் தருகின்றன. எனவே நீர் விரைவில் இவ்வுலகை விட்டு போய்விட வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள். ஆனால் உம்மடைய மரணம் அவர்களுடைய வேதனைகளைத் தடுக்குமா?
أَوْ نُرِيَنَّكَ ٱلَّذِى وَعَدْنَٰهُمْ فَإِنَّا عَلَيْهِم مُّقْتَدِرُونَ.
43:42. அல்லது நீர் உயிருடன் இருந்தால் மட்டும் அவர்களுக்கு நேரவிருக்கும் வேதனைகளைத் தடுக்கத் தான் முடியுமா? மனிதன் செய்யும் செயல்களுக்கு ஏற்ற விளைவுகளை ஏற்படுத்தும் பேராற்றலுடையவன் தான் அல்லாஹ். (பார்க்க 10:46, 40:77)
فَٱسْتَمْسِكْ بِٱلَّذِىٓ أُوحِىَ إِلَيْكَ ۖ إِنَّكَ عَلَىٰ صِرَٰطٍۢ مُّسْتَقِيمٍۢ.
43:43. எனவே அவர்கள் பேசி வருவதைப் பற்றி நீர் கவலைப்பட தேவையில்லை. உமக்கு வஹீ மூலம் அறிவிக்கப்பட்டபடி உம் செயல்திட்டத்தில் நிலைத்திருந்து உறுதியோடு செயல்படு. நீர் நேரான பாதையில்தான் இருக்கின்றீர் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. எனவே நீர் உன் இலட்சியத்தில் வெற்றி பெறுவது உறுதி.
وَإِنَّهُۥ لَذِكْرٌۭ لَّكَ وَلِقَوْمِكَ ۖ وَسَوْفَ تُسْـَٔلُونَ.
43:44. எனவே குர்ஆன் எனும் இவ்வேத அறிவுரைகளின்படி நடக்கும் நீரும், உம்மைப் பின்பற்றி வருபவர்களும் மனித மாண்புகளின் உயர்ந்த நிலையை அடைவார்கள். அவர்களுடைய உழைப்பிற்கு ஏற்ற பலன்களை அவர்கள் விரைவில் காண்பார்கள். இந்த நற்செய்தியை அவர்களுக்கு அளிப்பீராக.
وَسْـَٔلْ مَنْ أَرْسَلْنَا مِن قَبْلِكَ مِن رُّسُلِنَآ أَجَعَلْنَا مِن دُونِ ٱلرَّحْمَٰنِ ءَالِهَةًۭ يُعْبَدُونَ.
43:45. ஆனால் இறைவழிகாட்டுதலை ஏற்க மறுப்பவர்களோ, அல்லாஹ்வுக்கு இணையாக வேறு கற்பனை தெய்வங்களை உருவாக்கிக் கொண்டு அவற்றை வழிபட்டு வருகிறார்கள். எனவே அவர்களிடம், “எனக்கு முன் வந்த இறைத்தூதர்கள் அல்லாஹ்வை விட்டுவிட்டு இத்தகைய தெய்வ வழிபாட்டை கடைப்பிடிக்கச் சொன்னார்களா?” என்று கேளுங்கள்.
ஆக எந்த இறைத்தூதரும் அல்லாஹ்வை விட்டு வேறு வழிமுறைகளை கடைப்பிடிக்க ஒருபோதும் மக்களுக்கு சொல்லவே இல்லை. (3:79) அவர்களுடைய மறைவுக்குப் பின் காலப்போக்கில் அவர்களே கற்பனை செய்துக்கொண்டு இத்தகைய வழிமுறைகளை ஏற்படுத்திக் கொண்டனர்.
وَلَقَدْ أَرْسَلْنَا مُوسَىٰ بِـَٔايَٰتِنَآ إِلَىٰ فِرْعَوْنَ وَمَلَإِي۟هِۦ فَقَالَ إِنِّى رَسُولُ رَبِّ ٱلْعَٰلَمِينَ.
43:46. இதே போன்று நம் வழிகாட்டுதல்களை தக்க ஆதாரங்களுடன் ஃபிர்அவ்ன் மன்னனிடமும் அவனுடைய அரசவை தலைவர்களிடமும் எடுத்துரைக்க மூஸா நபியை அனுப்பி வைத்தோம். அவரும் அவர்களிடம், அகிலங்கள் அனைத்தையும் படைத்துப் பரிபாலிக்கும் ஏக இறைவனாகிய அல்லாஹ்வின் புறத்திலிருந்து அனுப்பப்பட்ட தூதனாக வந்துள்ளதாகக் கூறினார்.
فَلَمَّا جَآءَهُم بِـَٔايَٰتِنَآ إِذَا هُم مِّنْهَا يَضْحَكُونَ.
43:47. ஆனால் அவர் எடுத்துரைத்த ஆதாரப்பூர்வமான வழிகாட்டுதல்களைக் கேட்டு அவர்கள் பரிகாசமாக சிறிக்கவே செய்தார்கள். (பார்க்க 20:52-59)
وَمَا نُرِيهِم مِّنْ ءَايَةٍ إِلَّا هِىَ أَكْبَرُ مِنْ أُخْتِهَا ۖ وَأَخَذْنَٰهُم بِٱلْعَذَابِ لَعَلَّهُمْ يَرْجِعُونَ.
43:48. அவர் செய்த முன்னெச்சரிக்கைப் படி எகிப்து நாட்டில் பல துயர நிகழ்வுகள் ஒன்றன் பின் ஒன்றாக ஏற்பட்டு வந்தன. அதன் கடுமை அதிகமாகிக் கொண்டே சென்றது. (பார்க்க 7:133) அப்போதாவது அவர்கள் திருந்தி நேர்வழியின் பக்கம் வருகிறார்களா என்று நாம் பார்த்தோம்.
وَقَالُوا۟ يَٰٓأَيُّهَ ٱلسَّاحِرُ ٱدْعُ لَنَا رَبَّكَ بِمَا عَهِدَ عِندَكَ إِنَّنَا لَمُهْتَدُونَ.
43:49. அவர்களுக்கு துயரங்கள் ஏற்படும்போதெல்லாம் மூஸாவிடம், “நாங்கள் உம்மை குருவாக ஏற்றுக் கொள்ள தயார். நாங்கள் நேரானப் பாதையை கடைப்பிடித்தால் எங்களுக்குப் பிடித்துள்ள வேதனைகள் நீங்கும் என்று உம்முடைய இறைவன் வாக்களித்துள்ளானே. அதன்படியே நாம் நேர்வழிக்கு வந்துவிடுகிறோம். எனவே நீர் இந்த வேதனைகளை நீக்க ஏற்பாடு செய்வீராக” என்று மன்றாடுவார்கள்.
فَلَمَّا كَشَفْنَا عَنْهُمُ ٱلْعَذَابَ إِذَا هُمْ يَنكُثُونَ.
43:50. அவ்வாறே அவனுடைய வேதனைகள் நீங்கியதும், அவர்கள் தங்கள் வாக்குறுதிகளை முறித்துக் கொண்டார்கள். இஸ்ரவேலர்களுக்கு விடுதலை அளிப்பதாக ஃபிர்அவ்ன் அளித்த வாக்குறுதியையும் மீறிவிட்டான். (பார்க்க 7:135)
وَنَادَىٰ فِرْعَوْنُ فِى قَوْمِهِۦ قَالَ يَٰقَوْمِ أَلَيْسَ لِى مُلْكُ مِصْرَ وَهَٰذِهِ ٱلْأَنْهَٰرُ تَجْرِى مِن تَحْتِىٓ ۖ أَفَلَا تُبْصِرُونَ.
43:51. இருந்தாலும் நாட்டில் அரசுக்கு எதிராக எதிர்ப்புகள் வளர்ந்தன. இதைக் கண்டு ஃபிர்அவுவ்னுக்குப் பயம் ஏற்பட்டது. எனவே அவன் தன் அதிகாரப் பலத்தை தக்க வைத்துக்கொள்ள பல அறிக்கைகளை வெளியிட்டான். அதில், “என் நாட்டு மக்களே! இந்த மிஸ்று எனும் எகிப்து நாட்டின் அரசன் நானல்லவா? என் நாட்டில் ஓடும் நதிகளும் என் ஆட்சிக்கு உட்பட்டதல்லவா? இந்த உண்மைகள் எல்லாம் உங்களுக்குத் தெரியும் அல்லவா?”
أَمْ أَنَا۠ خَيْرٌۭ مِّنْ هَٰذَا ٱلَّذِى هُوَ مَهِينٌۭ وَلَا يَكَادُ يُبِينُ.
43:52. “அல்லது மிகவும் பின்தங்கிய நிலையில் இருக்கும் மூஸாவை என்னை விட மேலானவராக எண்ணுகிறீர்களா? அவரால் தெளிவாக பேசவும் முடியாதே. அவரை உங்களுடைய தலைவனாக ஏற்கிறீர்களா?”
فَلَوْلَآ أُلْقِىَ عَلَيْهِ أَسْوِرَةٌۭ مِّن ذَهَبٍ أَوْ جَآءَ مَعَهُ ٱلْمَلَٰٓئِكَةُ مُقْتَرِنِينَ.
43:53. “அவர் இறைவன் புறத்திலிருந்து வந்த மாமேதை என்றால், அதற்கு அடையாளமாக அவரிடம் பொன்னாலான கங்கணங்கள் இருக்க வேண்டாமா? அல்லது அவருடன் மலக்குகள் கூட்டமாக வந்திருக்க வேண்டாமா?”
فَٱسْتَخَفَّ قَوْمَهُۥ فَأَطَاعُوهُ ۚ إِنَّهُمْ كَانُوا۟ قَوْمًۭا فَٰسِقِينَ.
43:54. மக்களிடம் இத்தகைய பிரசாரங்களை செய்து வந்தான். இதனால் நாட்டு மக்கள் எதைப் பற்றியும் சிந்திக்காமல் இவனுடைய ஆட்சியை ஆதரித்து வரக்கூடும் என அவன் எண்ணினான். ஆனால் உண்மை விஷயம் என்னவென்றால் அந்நாட்டு மக்களே நேரான வழியில் செல்ல விரும்பவில்லை. எனவே ஃபிர்அவ்னின் பிரச்சாரங்கள் அவர்களில் பலருக்கு வலுவூட்டின.
فَلَمَّآ ءَاسَفُونَا ٱنتَقَمْنَا مِنْهُمْ فَأَغْرَقْنَٰهُمْ أَجْمَعِينَ.
43:55. இப்படியாக அவர்களுடைய தீய செயல்கள் மிகைத்திடவே, அவர்களுடைய அழிவு காலம் ஆரம்பமாகிவிட்டது. அவர்கள் யாவரும் இறைவனின் நியதிப்படி அந்த அழிவில் மடிந்து போனார்கள்.
فَجَعَلْنَٰهُمْ سَلَفًۭا وَمَثَلًۭا لِّلْءَاخِرِينَ.
43:56. இப்படியாக அந்த சமுதாயத்தவர்கள், “தலைசிறந்தவர்கள்” என்பதற்குப் பதிலாக,“அழிந்து போன சமுதாயத்தவர்கள்” என்று வரலாற்று ஏட்டில் பதிவாகிவிட்டனர். இந்த பேரழிவுகளைப் பற்றி பின்வரும் சமுதாயங்களுக்கு எடுத்துக்காட்டாக கூறப்படுகிறது.
۞ وَلَمَّا ضُرِبَ ٱبْنُ مَرْيَمَ مَثَلًا إِذَا قَوْمُكَ مِنْهُ يَصِدُّونَ.
43:57. இதுவரையில் மூஸா நபியின் சமூகத்தாரைப் பற்றி எடுத்துரைத்தீர்கள். அதே போன்று மர்யமின் குமாரர் ஈஸா நபியின் வரலாற்றுச் சிறப்புகளை எடுத்துரைக்கும் போதும், உமது சமூகத்தார் கடுப்பாகி விடுகிறார்கள்.
وَقَالُوٓا۟ ءَأَٰلِهَتُنَا خَيْرٌ أَمْ هُوَ ۚ مَا ضَرَبُوهُ لَكَ إِلَّا جَدَلًۢا ۚ بَلْ هُمْ قَوْمٌ خَصِمُونَ.
43:58. அவர்கள் ஆவேசத்துடன், “நாங்கள் வழிபட்டுவரும் தெய்வத்தைவிட இவர் சிறந்தவராகி விடுகிறாரா?” என்று கேட்கிறார்கள். அதாவது அவர் ஓரிறைக் கொள்கையின் பிரச்சாரம் செய்கிறார் என்பதற்காக எங்களுடைய தெய்வங்களை எதிர்ப்பதா என்று கிறிஸ்தவர்கள் கேட்கிறார்கள். உம்மிடம் அவர்கள் தர்க்கம் செய்வதற்காகவே இப்படி பேசி வருகிறார்கள்.
إِنْ هُوَ إِلَّا عَبْدٌ أَنْعَمْنَا عَلَيْهِ وَجَعَلْنَٰهُ مَثَلًۭا لِّبَنِىٓ إِسْرَٰٓءِيلَ.
43:59. எனவே நீர் அவரைப் பற்றிய உண்மைகளை தெளிவாக்கி விடுவீராக. அவர் இறைவனின் கட்டளைக்கு அடிபணிந்து செயல்பட்ட ஒரு மாவீரர் ஆவார். அவருக்கும் இறைவழிகாட்டுதல் என்ற அருட்கொடைகள் அளிக்கப்பட்டது. அவை இஸ்ரவேலர்களின் சிறப்பான வாழ்விற்கு அழகான வழிகாட்டுதல்களாக இருந்தன. அவர் நடைமுறைப் படுத்திக் காட்டியவை யாவும் அவர்களுக்கு முன்மாதிரியாக இருந்தன.
ஆனால் அவர்கள் ஈஸா நபியைக் குறித்து அவருடைய மறைவுக்குப் பின் விதவிதமான கற்பனை கதைகளை சொல்லி வருகிறார்கள். அதில் ஒன்று அவர் ஏதும் அறியாத மலக்கு போன்றவராவார் என்கின்றனர். மனிதன் செய்யும் பாவங்களுக்கு அவர் இரட்சகர் ஆவார் என்றும் இதற்காகவே அவர் தம் இரத்தத்தை சிந்தினார் என்றும் இதுபோன்ற பல வதந்திகளை அவர்கள் பரப்பி வருகின்றனர். ஆனால் உண்மை அதுவன்று. அவர் மற்ற மனிதர்களைப் போன்றவரே ஆவார். ஒருவேளை பூமியில்
وَلَوْ نَشَآءُ لَجَعَلْنَا مِنكُم مَّلَٰٓئِكَةًۭ فِى ٱلْأَرْضِ يَخْلُفُونَ.
43:60. மலக்குகள் வசித்திருந்தால் மலக்குகளையே இறைவன் தோற்றுவித்து இருப்பான். அவர்களையே இந்த பூமியை ஆளும் தகுதியை அளித்திருப்பான். (மேலும் பார்க்க 17:95)
ஆக ஈஸா நபி உலகிற்கு வருகைத் தந்து இஸ்ரவேலர்கள் மத்தியில் மாபெரும் எழுச்சியை ஏற்படுத்திக் காட்டினார். அவர் இஸ்ஹாக் நபியின் சந்ததியில் இஸ்ரவேலர்களுக்கு இறுதி தூதராக இருந்தார். அவருக்குப் பின் இறைவழிகாட்டுதல் இஸ்மாயில் நபியின் சந்ததியில் இறுதி நபியாக முஹம்மது நபி வருவார் என்ற உண்மை அவருக்குத் தெரியும் (பார்க்க 61:6, 7:157) இதை அவர் அறிவித்தும் இருந்தார். எனவே இறைவனின் செயல்திட்டத்தின் படி
وَإِنَّهُۥ لَعِلْمٌۭ لِّلسَّاعَةِ فَلَا تَمْتَرُنَّ بِهَا وَٱتَّبِعُونِ ۚ هَٰذَا صِرَٰطٌۭ مُّسْتَقِيمٌۭ.
43:61. இத்தகைய எழுச்சி மிகு காலம் மீண்டும் வரும் என்ற ஞானம் அவருக்கு இருந்தது. நபியே! நீர் மக்களிடம், “அவர் முன்னறிவிப்பு செய்தபடி நான் இறுதி தூதராக உங்களிடம் வந்துள்ளேன். (பார்க்க 33:40) இதில் யாருக்கும் எவ்வித சந்தேகமும் வேண்டாம். எனவே நான் காட்டும் வழியிலேயே செயல்படுங்கள். அதுவே உங்களுடைய சிறப்பான வாழ்விற்கு நேரான பாதையை காட்டும்” என்று அறிவித்துவிடுங்கள்.
وَلَا يَصُدَّنَّكُمُ ٱلشَّيْطَٰنُ ۖ إِنَّهُۥ لَكُمْ عَدُوٌّۭ مُّبِينٌۭ.
43:62. கவனமாக இருங்கள். சுயநலக்காரக் கூட்டம் உங்களை வழி கெடுக்க முயற்சி செய்யக் கூடும். அத்தகையவர்களின் பேச்சில் மயங்கி விடாதீர்கள். அவர்கள் உங்களுடைய பகைவர்களாக இருக்கிறார்கள்.
وَلَمَّا جَآءَ عِيسَىٰ بِٱلْبَيِّنَٰتِ قَالَ قَدْ جِئْتُكُم بِٱلْحِكْمَةِ وَلِأُبَيِّنَ لَكُم بَعْضَ ٱلَّذِى تَخْتَلِفُونَ فِيهِ ۖ فَٱتَّقُوا۟ ٱللَّهَ وَأَطِيعُونِ.
43:63. இதே போன்று ஈஸா நபியும் தெளிவான ஆதாரங்களுடன் தம் சமூகத்தாருக்கு வழிகாட்டுதலை எடுத்துரைத்தார். அவர், “நான் தெளிவான ஞான அறிவுரைகளை கொண்டு வந்துள்ளேன். உங்களிடையே உள்ள கருத்து வேறுபாடுகளை களைவேன். இதற்காக நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றே ஆகும். நீங்கள் அல்லாஹ்வின் வழிகாட்டுதலைப் பேணி நடந்து கொள்ளுங்கள். மேலும் என்னைப் பின்பற்றி நடந்து கொள்ளுங்கள்” என்றார்.
إِنَّ ٱللَّهَ هُوَ رَبِّى وَرَبُّكُمْ فَٱعْبُدُوهُ ۚ هَٰذَا صِرَٰطٌۭ مُّسْتَقِيمٌۭ.
43:64. மேலும் அவர், “உங்களையும் என்னையும் படைத்துப் பரிபாலிக்கின்ற இறைவன் அல்லாஹ்வே ஆவான். அவனுடைய கட்டளைக்கு மட்டும் அடிபணிந்து செயல்படுங்கள். அதுவே உங்களுடைய சிறப்பான வாழ்விற்கு சிறந்த வழிகாட்டியாக உள்ளது” என்றார்.
فَٱخْتَلَفَ ٱلْأَحْزَابُ مِنۢ بَيْنِهِمْ ۖ فَوَيْلٌۭ لِّلَّذِينَ ظَلَمُوا۟ مِنْ عَذَابِ يَوْمٍ أَلِيمٍ.
43:65. இப்படியாக ஈஸா நபி தம் சமூகத்தாருக்கு ஓரிறைக் கொள்கையை எடுத்துரைத்து சீர்த்திருத்தங்களை செய்தார். ஆனால் அவருடைய மறைவுக்குப் பின் காலப் போக்கில் அவரைப் பின்பற்றியவர்களிடையே கருத்து வேறுபாடுகள் வலுத்து, அநியாய அக்கிரம செயல்களை செய்ய ஆரம்பித்தனர். அதன் விளைவாக அவர்கள் வேதனை மிக்க கேடுகளில் சிக்கி மடிந்தனர்.
هَلْ يَنظُرُونَ إِلَّا ٱلسَّاعَةَ أَن تَأْتِيَهُم بَغْتَةًۭ وَهُمْ لَا يَشْعُرُونَ.
43:66. அவர்களுடைய தவறான செயல்களின் விளைவுகள் அவர்கள் அறியா வண்ணம் கொஞ்சம் கொஞ்சமாக ஏற்பட்டு அவற்றின் கேடுகள் தோற்றத்திற்கு வந்தன. இப்போது இவர்களும் அதே போன்று கேடுகள் ஏற்படவேண்டும் என்றுதான் எதிர் பார்க்கின்றார்களா?
ٱلْأَخِلَّآءُ يَوْمَئِذٍۭ بَعْضُهُمْ لِبَعْضٍ عَدُوٌّ إِلَّا ٱلْمُتَّقِينَ.
43:67. அத்தகைய விளைவுகள் தோற்றத்திற்கு வரும் கால கட்டத்தில் இறைவழிகாட்டுதலைப் பேணி நடப்பவர்கள் அந்த கேடுகளிலிருந்து தப்பித்துக் கொள்வார்கள். மற்றவர்கள் தங்களுக்கிடையே பகைமை வளர்ந்து அழிந்து போவார்கள்.
يَٰعِبَادِ لَا خَوْفٌ عَلَيْكُمُ ٱلْيَوْمَ وَلَآ أَنتُمْ تَحْزَنُونَ.
43:68. இறைக் கட்டளைக்கு அடிபணிந்து நடப்பவர்களே! உங்களுடைய வாழ்வில் எவ்வித அச்சமோ துக்கமோ நெருங்காது. உங்களுக்கு எப்போதும் அல்லாஹ்வின் அரவணைப்பும் ஆதரவும் கிடைத்துக் கொண்டே இருக்கும் என்று அறிவிக்கப்படுகிறது.
ٱلَّذِينَ ءَامَنُوا۟ بِـَٔايَٰتِنَا وَكَانُوا۟ مُسْلِمِينَ.
43:69. காரணம் அவர்கள் அல்லாஹ்வின் வழிகாட்டுதல்கள் என்னவோ அவற்றின்படியே செயல்பட்டு வருகிறார்கள். அதாவது சமுதாய மக்களின் நலனைக் காக்கவே அவர்கள் அனைவரும் செயல்பட்டு வருகிறார்கள்.
ٱدْخُلُوا۟ ٱلْجَنَّةَ أَنتُمْ وَأَزْوَٰجُكُمْ تُحْبَرُونَ.
43:70. இப்படியாக நீங்களும் உங்களை சார்ந்தவர்களும் ஆக்கப்பூர்வமான நன்மையான செயல்களை செய்து வருவதால், நீங்கள் வாழும் சமுதாயம் சுவனத்திற்கு ஒப்பானதாக மாறிவிடும். அதில் உங்கள் மனைவி மக்களுடன் இன்புற்று வாழ அழைக்கப்படுவீர்கள்.
يُطَافُ عَلَيْهِم بِصِحَافٍۢ مِّن ذَهَبٍۢ وَأَكْوَابٍۢ ۖ وَفِيهَا مَا تَشْتَهِيهِ ٱلْأَنفُسُ وَتَلَذُّ ٱلْأَعْيُنُ ۖ وَأَنتُمْ فِيهَا خَٰلِدُونَ.
43:71. இத்தகையவர்கள் வாழும் சமுதாயத்தில் பொருளாதார வளர்ச்சியைக் குறிக்கும் வகையில் பொன்னாலான தட்டுகளும் கிண்ணங்களும் தாராளமாகக் கிடைக்கும். இத்தகைய வளர்ச்சியும் வசதி வாய்ப்புகளும் அவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். மேலும் “அச்சுவனத்தில் நிரந்தரமாக தங்கி இருங்கள்” என்று கூறப்படும்.
وَتِلْكَ ٱلْجَنَّةُ ٱلَّتِىٓ أُورِثْتُمُوهَا بِمَا كُنتُمْ تَعْمَلُونَ.
43:72. ஆனால் இவையாவும் அவர்களுக்குத் தானமாக கிடைப்பவை அல்ல. அவர்கள் செய்து வரும் ஆக்கப்பூர்வமான நற்செயல்களின் பலனாக அவர்கள் சுவனத்திற்கு உரிமைப் பெற்றவர்களாக இருக்கிறார்கள்.
لَكُمْ فِيهَا فَٰكِهَةٌۭ كَثِيرَةٌۭ مِّنْهَا تَأْكُلُونَ.
43:73. மேலும் அச்சுவனத்தில் தாராளமான கனி வகைகளும் கிடைத்து வரும். அவற்றை நீங்கள் மனநிறைவோடு உண்பீர்கள்.
إِنَّ ٱلْمُجْرِمِينَ فِى عَذَابِ جَهَنَّمَ خَٰلِدُونَ.
43:74. மாறாக இறைவழிகாட்டுதலுக்கு எதிராக செயல்படும் குற்றவாளிகளின் நிலை இவற்றிற்கு நேர் மாற்றமாக இருக்கும். அவர்களுடைய வாழ்வு வேதனைகள் மிக்கதாய் இருக்கும்.
لَا يُفَتَّرُ عَنْهُمْ وَهُمْ فِيهِ مُبْلِسُونَ.
43:75. அந்த வேதனைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்லும். அவற்றை தவிர்க்க அவர்கள் எடுக்கும் முயற்சிகள் யாவும் வீணாகி அவர்களுக்கு அவநம்பிக்கையே ஏற்பட்டு வரும்.
وَمَا ظَلَمْنَٰهُمْ وَلَٰكِن كَانُوا۟ هُمُ ٱلظَّٰلِمِينَ.
43:76. இவை எல்லாம் அவர்கள் மேலுள்ள வெறுப்பின் காரணமாக அல்ல. அவர்கள் செய்து வந்த தீய செயல்களின் விளைவாக கிடைக்கும் வேதனைகளாகும். ஏனெனில் அல்லாஹ்வின் புறத்திலிருந்து யாருக்கும் எவ்வித அநீதியும் ஒருபோதும் இழைக்கப்படுவதில்லை. (பார்க்க 4:40)
وَنَادَوْا۟ يَٰمَٰلِكُ لِيَقْضِ عَلَيْنَا رَبُّكَ ۖ قَالَ إِنَّكُم مَّٰكِثُونَ.
43:77. அவர்கள் வேதனைகளைத் தாங்கிக் கொள்ள முடியாமல் அதிகாரிகளிடம், “உமது ஆட்சியாளரிடம் சொல்லி எங்களை ஒரே அடியாக சாகடித்து விடுங்களேன்” என்று குரல் தெரிக்கக் கத்துவார்கள். அதற்கு அவர்கள், “நீங்கள் இத்தகைய வேதனைகளில் நிலைத்து இருக்க வேண்டியவர்களே” என்று பதிலளித்து விடுவார்கள்.
لَقَدْ جِئْنَٰكُم بِٱلْحَقِّ وَلَٰكِنَّ أَكْثَرَكُمْ لِلْحَقِّ كَٰرِهُونَ.
43:78. காரணம் இத்தகைய வேதனைகள் வரும் என்று இறைவன் புறத்திலிருந்து ஏற்கனவே முன்னெச்சரிக்கைகள் வந்தன. அவற்றைப் பற்றி சிந்தித்து, தவறுகளை திருத்திக் கொண்டிருந்தால் இந்நிலை ஒருபோதும் ஏற்பட்டிருக்காது. ஆனால் நீங்களோ அவற்றை வெறுத்து விட்டீர்கள். இப்போது புலம்பி என்ன பயன்?
இவ்வாறு அவர்களுக்கு பதிலளிக்கப்படும். இவற்றை எடுத்துரைப்பதன் நோக்கமே உங்களுக்கும் இத்தகைய நிலை ஏற்படக் கூடாது என்பதற்காகவே. இதை மக்கமா நகர மக்களுக்கும் இறைத்தூதர் தெளிவாக எடுத்துரைக்கிறார். ஆனால் அவர்களோ இதைப் பற்றி எல்லாம் கவலைக் கொள்வதாக இல்லை. அவர்கள் இறைவனின் ஆட்சி ஏற்படாதிருக்கவே இரகசிய திட்டங்களைத் தீட்டி வருகிறார்கள். அவர்களிடம்,
أَمْ أَبْرَمُوٓا۟ أَمْرًۭا فَإِنَّا مُبْرِمُونَ.
43:79. இறைவனின் ஆட்சியமைப்பை எதிர்த்து போரிட அவர்கள் அனைவரும் ஆயத்தமாகி விட்டர்கள் போலும். நாமும் அவர்களுடைய திட்டங்களை முறியடிக்க ஆயத்தமாகி விட்டதாக சொல்லிவிடுங்கள்.
أَمْ يَحْسَبُونَ أَنَّا لَا نَسْمَعُ سِرَّهُمْ وَنَجْوَىٰهُم ۚ بَلَىٰ وَرُسُلُنَا لَدَيْهِمْ يَكْتُبُونَ.
43:80. அல்லது அவர்கள் அனைவரும் இரகசியமாகக் கூடி தங்களுக்குள் ஆலோசித்துக் கொண்டிருப்பவை யாவும் இந்த ஆட்சிக்கு தெரியாமல் போய்விடுமா? அவர்கள் தீட்டி வரும் திட்டங்களே அவர்களை காட்டி கொடுத்து விடுமே!
அவர்கள் இதை எதிர்த்து போரிடக் காரணம் என்ன? ஈஸாவை அல்லாஹ்வின் புதல்வன் என்ற அவர்களுடைய கூற்றை ஏற்காதது தான் அவர்கள் எதிர்ப்பதற்குக் காரணமா?
قُلْ إِن كَانَ لِلرَّحْمَٰنِ وَلَدٌۭ فَأَنَا۠ أَوَّلُ ٱلْعَٰبِدِينَ.
43:81. அப்படியென்றால் அவர்களிடம்,“அருட்கொடையாளன் அர்ரஹ்மானுக்கு ஒரு புதல்வன் இருந்திருக்குமானால் அவரை வணங்குவதில் நானே முதன்மையானவனாக இருந்திருப்பேனே!” என்று கூறிவிடுங்கள்.
سُبْحَٰنَ رَبِّ ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضِ رَبِّ ٱلْعَرْشِ عَمَّا يَصِفُونَ.
43:82. “ஆனால் நான் அடிபணிந்து வரும் இறைவன் எத்தகையவன் என்றால் அவனே அகிலங்களையும் பூமியிலுள்ளவற்றையும் படைத்து தன் கட்டுபாட்டிற்குள் வைத்து செயலாற்றுபவன். அத்தகைய எல்லையற்ற வல்லவனை, தந்தை மகன் என்று பேசி மனித அளவிற்குத் தாழ்த்தி விடுகிறீர்களே. இத்தகைய தேவையற்ற வர்ணனைகளைவிட மிகமிக உயர்ந்தவன் தான் அல்லாஹ்” என்பதை அவர்களுக்கு எடுத்துரையுங்கள்.
فَذَرْهُمْ يَخُوضُوا۟ وَيَلْعَبُوا۟ حَتَّىٰ يُلَٰقُوا۟ يَوْمَهُمُ ٱلَّذِى يُوعَدُونَ.
43:83. இதையும் மீறி அவர்கள் தம் போக்கை மாற்றிக் கொள்ளவில்லை என்றால், நீர் அவர்களை அவர்களுடைய போக்கில் விட்டுவிடுங்கள். வாக்களிக்கப்பட்ட வேதனைகள் அவர்களுக்கு வந்தடையும் வரையில் அவர்கள் இவ்வாறே நடந்து கொள்வார்கள் போலும்.
وَهُوَ ٱلَّذِى فِى ٱلسَّمَآءِ إِلَٰهٌۭ وَفِى ٱلْأَرْضِ إِلَٰهٌۭ ۚ وَهُوَ ٱلْحَكِيمُ ٱلْعَلِيمُ.
43:84. இறைவழிகாட்டுதல்கள் யாவும் அல்லாஹ்விடமிருந்தே இறக்கி அருளப்படுகின்றன. அவன் வானங்களுக்கு மட்டும் இறைவன் என்பதல்ல. பூமியில் உள்ளவற்றுக்கும் இறைவன் அவனே. அவனுடைய வழிகாட்டுதல்கள் யாவும் ஞானமிக்கவையாகவும், அறிவுப்பூர்வமாகவும் உள்ளன. எனவே நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலும் அவனுக்கு தெரியாமல் போகாது.
وَتَبَارَكَ ٱلَّذِى لَهُۥ مُلْكُ ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضِ وَمَا بَيْنَهُمَا وَعِندَهُۥ عِلْمُ ٱلسَّاعَةِ وَإِلَيْهِ تُرْجَعُونَ.
43:85. அவனுடைய அருட்கொடைகள் யாவும் மிகவும் விசாலமானவையாகும். அகிலங்கள் மற்றும் பூமியில் உள்ளவை அனைத்தும் அவன் இயற்றிய சட்டதிட்டங்களின் படியே செயல்பட்டு வருகின்றன. எனவே இங்கு ஏற்படவிருக்கும் மாபெரும் மறுமலர்ச்சி நிர்ணயிக்கப்பட்ட கால அளவுபடி ஏற்பட்டே தீரும். ஏனெனில் ஒவ்வொரு செயலும் இறைவன் நிர்ணயித்த இலக்கை நோக்கியே செல்கிறது.
وَلَا يَمْلِكُ ٱلَّذِينَ يَدْعُونَ مِن دُونِهِ ٱلشَّفَٰعَةَ إِلَّا مَن شَهِدَ بِٱلْحَقِّ وَهُمْ يَعْلَمُونَ.
43:86. எனவே அல்லாஹ்வை விட்டு விட்டு அவர்கள் வழிபட்டு வரும் கற்பனை தெய்வங்களை இத்தகைய எழுச்சி மிகு சமுதாயத்தை உருவாக்க உதவிக்கு அழைக்கிறார்கள். ஆனால் அவை ஒருபோதும் அவர்களுக்கு உதவி செய்யவே முடியாது. ஆனால் அல்லாஹ் அறிவித்துள்ள வழிகாட்டுதல்களே அவர்களுடைய பிரச்னைகளைத் தீர்க்கும் ஆதாரங்களாக விளங்கும்.
وَلَئِن سَأَلْتَهُم مَّنْ خَلَقَهُمْ لَيَقُولُنَّ ٱللَّهُ ۖ فَأَنَّىٰ يُؤْفَكُونَ.
43:87. அவர்களிடம் உங்களை படைத்த இறைவன் யார் என்று கேட்டுப் பாருங்கள். அவர்கள் உடனே அல்லாஹ் தான் என்பார்கள். ஆனால் அல்லாஹ்வின் வழிகாட்டுதலை விட்டுவிட்டு வேறு எங்கு திசை மாறிச் செல்கிறீர்கள் என்று அவர்களிடம் கேளுங்கள்.
وَقِيلِهِۦ يَٰرَبِّ إِنَّ هَٰٓؤُلَآءِ قَوْمٌۭ لَّا يُؤْمِنُونَ.
43:88. இப்படியாக அவர்களுக்கு எல்லா வகையிலும் விளக்கமளித்த பின்பும் அவர்கள் அல்லாஹ்வின் வழிகாட்டுதலை ஏற்று நடந்து அந்த அழிவிலிருந்து மீள்வதாகத் தெரியவில்லையே என்று இறைத்தூதர் விசனப்படுகிறார். இந்த உண்மை அல்லாஹ்வுக்குத் தெரியும்.
فَٱصْفَحْ عَنْهُمْ وَقُلْ سَلَٰمٌۭ ۚ فَسَوْفَ يَعْلَمُونَ.
43:89. தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்தவனுக்கு மரணத்தைப் பற்றி அச்சுறுத்தி என்ன பயன்? இருந்தும் இறைவழிகாட்டுதலை எடுத்துரைப்பவரே! அவர்களிடம், “நான் எடுத்துரைக்கும் வழிகாட்டுதல்களின் நோக்கமே உங்களுக்கு சாந்தமான, சந்தோஷமான வாழக்கை கிடைத்திட வேண்டும் என்பதற்காகவே ஆகும். இந்த உண்மைகளை நீங்கள் விரைவில் அறிந்து கொள்வீர்கள்” என்று சொல்லிவிடுங்கள்.