بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
42:0.அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் அறிவுரைப்படியே அனைத்துக் காரியங்களையும் செய்ய நாடுகிறேன். (பார்க்க 6:162)
حمٓ.
42:1. பாராட்டுக்கும் போற்றுதலுக்கும் உரிய முஹம்மது நபி மூலம் இறக்கியருளப்பட்ட வேதமிது.
عٓسٓقٓ.
42:2. அடிபணிதல் - மனிதன் - குர்ஆனுக்கு மட்டுமே என்பது இதன் அடிப்படை கோட்பாடாகும்.
كَذَٰلِكَ يُوحِىٓ إِلَيْكَ وَإِلَى ٱلَّذِينَ مِن قَبْلِكَ ٱللَّهُ ٱلْعَزِيزُ ٱلْحَكِيمُ.
42:3. இறைவழிகாட்டுதலை எடுத்துரைப்பவரே! இதே அடிப்படையில் இவ்வேதம் இறக்கியருளப்படுகிறது. உமக்கு முன் வந்த இறைத் தூதர்களுக்கும் இதே போன்ற கட்டளைகள் இறக்கியருளப்பட்டன. அகிலங்களிலும் பூமியிலும உள்ள அனைத்தையும் கட்டுப்படுத்தும் சகல வல்லமையும் ஞானமும் மிக்க அல்லாஹ்விடமிருந்து இறக்கியருளப்படும் வேதமிது.
لَهُۥ مَا فِى ٱلسَّمَٰوَٰتِ وَمَا فِى ٱلْأَرْضِ ۖ وَهُوَ ٱلْعَلِىُّ ٱلْعَظِيمُ.
42:4. காரணம் அகிலங்களிலும் பூமியிலும் உள்ளவை அனைத்தும் அல்லாஹ்வின் செயல்திட்டங்களை நிறைவேற்றவே செயல்பட்டு வருகின்றன. அல்லாஹ்வின் செயல்திட்டங்களே மகத்தானவையாகவும், மனிதனை உயர் நிலைக்கு கொண்டு செல்பவையாகவும் உள்ளன.
تَكَادُ ٱلسَّمَٰوَٰتُ يَتَفَطَّرْنَ مِن فَوْقِهِنَّ ۚ وَٱلْمَلَٰٓئِكَةُ يُسَبِّحُونَ بِحَمْدِ رَبِّهِمْ وَيَسْتَغْفِرُونَ لِمَن فِى ٱلْأَرْضِ ۗ أَلَآ إِنَّ ٱللَّهَ هُوَ ٱلْغَفُورُ ٱلرَّحِيمُ.
42:5. அத்தகைய வல்லமையின் கட்டுப்பாடுகள் இல்லாதிருந்தால் வானமே பிளந்து அவன் மேல் விழுந்திருக்கும். ஆனால் பிரபஞ்ச இயற்கை சக்திகள் யாவும் அல்லாஹ்வின் நேரடி கட்டுப்பாட்டில் செயல்படுவதால், தமக்கு வகுக்கப்பட்டுள்ள கடமைகளை அவை அனைத்தும் செவ்வன நிறைவேற்றி, இறைச் செயல் திட்டங்களை பாராட்டுக்கு உரியவையாக ஆக்குகின்றன. அதனால் தான் பூமியில் வாழும் அனைத்து ஜீவனங்களுக்கும் பாதுகாப்பு கிடைக்கின்றன. அல்லாஹ்வின் செயல்திட்டங்கள் யாவும் அனைவருக்கும் பாதுகாப்பு அளிப்பவையாகவும் கிருபை மிக்கதாகவும் உள்ளன என்பதற்கு அவை சாட்சி பகர்கின்றன.
وَٱلَّذِينَ ٱتَّخَذُوا۟ مِن دُونِهِۦٓ أَوْلِيَآءَ ٱللَّهُ حَفِيظٌ عَلَيْهِمْ وَمَآ أَنتَ عَلَيْهِم بِوَكِيلٍۢ.
42:6. ஆனால் மனிதனோ, அல்லாஹ்வுக்கு இணையாக வேறு கற்பனை தெய்வங்களை உருவாக்கிக் கொண்டு, அவையே அவர்களை பாதுகாத்து வருவதாக எண்ணிக் கொள்கின்றான். எனவே இத்தகையவர்களைப் பற்றி கவலை கொள்வதில் எந்த பயனும் இல்லை. இறைவழிகாட்டுதலை எடுத்துரைப்பவரே! நீங்கள் அவர்களைக் கண்காணிக்கும் அதிகாரி அல்லர். இறைவழிகாட்டுதலை எடுத்துரைப்பதே உமது பணியாகும். (பார்க்க 5:67)
وَكَذَٰلِكَ أَوْحَيْنَآ إِلَيْكَ قُرْءَانًا عَرَبِيًّۭا لِّتُنذِرَ أُمَّ ٱلْقُرَىٰ وَمَنْ حَوْلَهَا وَتُنذِرَ يَوْمَ ٱلْجَمْعِ لَا رَيْبَ فِيهِ ۚ فَرِيقٌۭ فِى ٱلْجَنَّةِ وَفَرِيقٌۭ فِى ٱلسَّعِيرِ.
42:7. இறைவழிகாட்டுதலை எடுத்துரைப்பவரே! இதே அடிப்படை நோக்கங்களைக் கொண்டு, உம்மீது நீர் பேசும் தெள்ளத் தெளிவான மொழியிலேயே இவ்வேதத்தை இறக்கியருளுகிறோம். இதைக் கொண்டு நீர் உம் ஊரிலுள்ள மக்களுக்கும், அதைச் சுற்றியுள்ளவர்களுக்கும், அவர்கள் செய்து வரும் தவறான செயல்களைப் பற்றி எடுத்துரைத்து, அவற்றால் ஏற்படக் கூடிய விபரீத விளைவுகளைப் பற்றி முன்னெச்சரிக்கை செய்யுங்கள். இதை ஏற்காவிடில் நீங்கள் களத்தை சந்திக்க வேண்டிய காலம் வந்தே தீரும் என்றும் அதில் யாருக்கும் எவ்வித சந்தேகமும் வேண்டாம் என்றும் கூறிவிடுங்கள். மேலும் அவ்வழிகாட்டுதலை ஏற்று நடப்பவர்களுக்கு சுவனத்திற்கு ஒப்பான வாழ்வு கிடைக்கும் என்றும், அவற்றை எதிர்ப்பவர்களின் வாழ்வு வேதனை மிக்கதாய் ஆகிவிடும் என்பதையும் எடுத்துரையுங்கள்.
இறைவழிகாட்டுதலை நபிமார்கள் மூலம் எடுத்துரைப்பதற்குக் காரணம் என்னவென்றால் மனிதனுக்கு இவ்வுலகில் முழு சுதந்திரம் அளிக்கப்ட்டுள்ளது. எனவே அவனுடைய சுதந்திரத்தில் அல்லாஹ் தலையிடுவதில்லை. இறைவழிகாட்டுதலை ஏற்றுக் கொள்ளும் விஷயத்திலும் எவ்வித நிர்ப்பந்தமும் இருப்பதில்லை. (பார்க்க 2:256) ஆனால் பூமியில் உள்ள மற்ற எல்லா ஜீவராசிகளுக்கும் தம் இயல்பின் அடிப்படையில் வாழும் நிர்ப்பந்தம் இருக்கிறது. எனவே
وَلَوْ شَآءَ ٱللَّهُ لَجَعَلَهُمْ أُمَّةًۭ وَٰحِدَةًۭ وَلَٰكِن يُدْخِلُ مَن يَشَآءُ فِى رَحْمَتِهِۦ ۚ وَٱلظَّٰلِمُونَ مَا لَهُم مِّن وَلِىٍّۢ وَلَا نَصِيرٍ.
42:8. உலகிலுள்ள மற்ற ஜீவராசிகளைப் போல், மனிதனையும் தம் இயல்பின் அடிப்படையில் வாழவைக்கும் திட்டம் இருந்திருந்தால், அல்லாஹ் அவ்வாறே மனிதனையும் படைத்திருப்பான். மனிதனும் ஒரே இனத்தவானக வாழ்ந்திருப்பான். ஆனால் அவனுக்கு முழு சுதந்திரத்தை அளித்துவிட்டதால், நேர்வழியைப் பெற ஆர்வமுள்ளவர்களுக்கு மட்டும் அல்லாஹ்வின் இந்த வழிகாட்டுதல் புரிகிறது. இதை ஏற்காமல் அநியாய அக்கிரம செயல்களை செய்வோர்க்கு, பாதுகாப்பான வாழ்வு கிடைப்பதில்லை. மேலும் அவர்களுக்கு வேதனைகள் வந்தால் அவற்றிலிருந்து காப்பாற்ற உதவி புரிபவர்கள் யாரும் இருப்பதில்லை.
أَمِ ٱتَّخَذُوا۟ مِن دُونِهِۦٓ أَوْلِيَآءَ ۖ فَٱللَّهُ هُوَ ٱلْوَلِىُّ وَهُوَ يُحْىِ ٱلْمَوْتَىٰ وَهُوَ عَلَىٰ كُلِّ شَىْءٍۢ قَدِيرٌۭ.
42:9. இந்த அளவிற்கு பேருண்மைகளை அவர்களுக்கு எடுத்துரைத்த பின்பும், அவர்கள் அல்லாஹ்வின் வழிகாட்டுதலை விட்டுவிட்டு, மற்ற வழிமுறைகளால் அவர்களுக்குப் பாதுகாப்பான வாழ்வு கிடைக்கும் என்று எண்ணுகிறார்களா? நடைபிணமாக வாழும் இச்சமுதாயம், இறைவழிகாட்டுதலை பின்பற்றுவதைக் கொண்டே புத்துயிர் பெற்று சிறந்த சமுதாயமாக உருவாக முடியும். காரணம் ஒவ்வொரு படைப்பும் எவ்வாறு செயல்பட வேண்டும் என்ற அளவுகோலை நிர்ணயித்ததே அல்லாஹ் தான்.
وَمَا ٱخْتَلَفْتُمْ فِيهِ مِن شَىْءٍۢ فَحُكْمُهُۥٓ إِلَى ٱللَّهِ ۚ ذَٰلِكُمُ ٱللَّهُ رَبِّى عَلَيْهِ تَوَكَّلْتُ وَإِلَيْهِ أُنِيبُ.
42:10. அல்லாஹ்வின் வழிகாட்டுதலை பின்பற்றுவதன் மூலம் சமூக சீர்த்திருத்தங்கள் ஏற்படுமா என்ற சந்தேகம் அவர்களுக்கு உண்டு. எனவே அல்லாஹ்வின் கட்டளைகளை அவர்களுக்கு தொடர்ந்து எடுத்துரையுங்கள். அவற்றில் தனக்கு முழு நம்பிக்கை இருப்பதாகவும், அவற்றின் பக்கமே என் முழு கவனத்தையும் செலுத்துவதாகவும் அவர்களிடம் சொல்லிவிடுங்கள்.
فَاطِرُ ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضِ ۚ جَعَلَ لَكُم مِّنْ أَنفُسِكُمْ أَزْوَٰجًۭا وَمِنَ ٱلْأَنْعَٰمِ أَزْوَٰجًۭا ۖ يَذْرَؤُكُمْ فِيهِ ۚ لَيْسَ كَمِثْلِهِۦ شَىْءٌۭ ۖ وَهُوَ ٱلسَّمِيعُ ٱلْبَصِيرُ.
42:11. காரணம் பிரபஞ்சங்களையும் பூமியையும் எந்த ஒரு பொருளின் துணையுமின்றி படைக்கும் பேராற்றல் உடையவன் தான் அல்லாஹ். (பார்க்க- 6:101) அத்தகைய வல்லமையுடைய இறைவனிடமிருந்து இவ்வழிகாட்டுதல்கள் இறக்கி அருளப்படுகின்றன. இறைவனின் செயல்திட்டங்களின் அடிப்படையில் தான் நீங்கள் ஜோடி ஜோடியாகப் படைக்கப்பட்டுள்ளீர்கள். அதே போன்று மற்ற கால் நடைகளும் ஜோடி ஜோடியாய் படைக்கப்பட்டுள்ளன. அந்த ஜோடியைக் கொண்டு தான் இனப்பெருக்கம் ஏற்பட்டு வருகின்றது. இப்படிப்பட்ட ஏற்பாடுகளை செய்யும் வல்லமை அகிலத்தில் வெறு யாருக்காவது உண்டா? இல்லை. இவற்றையெல்லாம் படைத்த இறைவன் உங்களை கட்டுப்பாடின்றி விட்டுவிட்டதாக எண்ணுகிறீர்களாய. அனைத்தையும் கேட்கும் பேராற்றலும் பார்க்கும் பேராற்றலும் அல்லாஹ்வுக்கு உண்டு. எனவே அவரவர் செய்யும் செயல்களுக்கேற்ற வகையில் தான் பலன்களும் விளைவுகளும் ஏற்பட்டே தீரும்.
لَهُۥ مَقَالِيدُ ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضِ ۖ يَبْسُطُ ٱلرِّزْقَ لِمَن يَشَآءُ وَيَقْدِرُ ۚ إِنَّهُۥ بِكُلِّ شَىْءٍ عَلِيمٌۭ.
42:12. எனவே வானங்கள் மற்றும் பூமியில் உள்ள எல்லா படைப்புகளும், அவற்றிற்கு நிர்ணயிக்கப்பட்ட சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டே செயல்படுகின்றன. அனைத்து படைப்புகளின் “சாவிகள்” இறைவனால் உருவாக்கப்பட்டவையே ஆகும். அவற்றை ஆய்வு செய்து உழைக்கும் நாடுகள் அளவின்றி வாழ்வாதாரங்களைப் பெற்று வளத்துடன் வாழ்கின்றன. (பார்க்க 3:190-191) ஆய்வுகளை மேற்கொள்ளாமல் மூட நம்பிக்கையில் வாழும் நாடுகளில் வாழ்வாதார வசதிகள் குன்றிவிடுகின்றன. உலகில் யார் எப்படி வாழ்கிறார்கள் என்ற நிலைமை அல்லாஹ்வுக்கு நன்கு தெரியும்.
۞ شَرَعَ لَكُم مِّنَ ٱلدِّينِ مَا وَصَّىٰ بِهِۦ نُوحًۭا وَٱلَّذِىٓ أَوْحَيْنَآ إِلَيْكَ وَمَا وَصَّيْنَا بِهِۦٓ إِبْرَٰهِيمَ وَمُوسَىٰ وَعِيسَىٰٓ ۖ أَنْ أَقِيمُوا۟ ٱلدِّينَ وَلَا تَتَفَرَّقُوا۟ فِيهِ ۚ كَبُرَ عَلَى ٱلْمُشْرِكِينَ مَا تَدْعُوهُمْ إِلَيْهِ ۚ ٱللَّهُ يَجْتَبِىٓ إِلَيْهِ مَن يَشَآءُ وَيَهْدِىٓ إِلَيْهِ مَن يُنِيبُ.
42:13. இந்த பேருண்மைகளை எடுத்துரைத்து மக்களிடையே மார்க்க அறிவுரைகளை பரப்பி, சிறந்ததொரு ஆட்சியை ஏற்படுத்தும்படி ஆதி முதல் எல்லா நபிமார்களுக்கும் கட்டளையிடப்பட்டது. நபிமார்கள் பட்டியலில் முதலில் இடம் பெறுபவர் நூஹ் நபியாவார். அவருக்கும் இதேபோன்ற கட்டளைகள் தான் பிறப்பிக்கப்பட்டன. அதே போன்று இப்றாஹீம் நபி, மூஸா நபி, ஈஸா நபி ஆகியோருக்கும் கட்டளைகள் பிறப்பிக்கப்பட்டன. அல்லாஹ்வின் புறத்திலிருந்து முன்மொழியப்பட்ட மார்க்க கட்டளைகளை சமுதாயத்தில் நிலைநிறுத்தி அவற்றின்படி சமுதாய ஒற்றுமையைக் கட்டிக் காத்து சிறப்பாக செயல்பட வைப்பதே அந்த நபிமார்களின் இலட்சியங்காளக இருந்தன. மார்க்க விஷயத்திலும் ஆட்சியமைப்பு விஷயத்திலும் கருத்து வேறுபாடுகள் கூடாது என்றே அவர்களும் தத்தம் சமூகத்தவர்களுக்கு எடுத்துக் கூறினார்கள். ஆனால் சில சுயநலக்காரர்களுக்கு அவர்கள் விடுத்த அழைப்பு வெறுப்பாகவே இருந்தன. இப்படியாக மார்க்க அறிவுரைகளைப் பெற ஆர்வமுள்ளவர்கள் அல்லாஹ்வின் தேர்வில் வந்துவிடுகிறார்கள். அத்தகையவர்களுக்கே நேர்வழியும் கிடைக்கின்றன. இவற்றை ஏற்க விரும்பாதவர்களுக்கு நேர்வழி ஒருபோதும் கிடைப்பதில்லை.
وَمَا تَفَرَّقُوٓا۟ إِلَّا مِنۢ بَعْدِ مَا جَآءَهُمُ ٱلْعِلْمُ بَغْيًۢا بَيْنَهُمْ ۚ وَلَوْلَا كَلِمَةٌۭ سَبَقَتْ مِن رَّبِّكَ إِلَىٰٓ أَجَلٍۢ مُّسَمًّۭى لَّقُضِىَ بَيْنَهُمْ ۚ وَإِنَّ ٱلَّذِينَ أُورِثُوا۟ ٱلْكِتَٰبَ مِنۢ بَعْدِهِمْ لَفِى شَكٍّۢ مِّنْهُ مُرِيبٍۢ.
42:14. இப்படியாக எல்லா நபிமார்களும் கட்டுக்கோப்பான சமுதாயத்தை ஏற்படுத்தி சிறப்பாக வாழ வழிவகுத்தார்கள். அதனடிப்படையில் ஆட்சியமைப்பையும் ஏற்படுத்தினார்கள். ஆனால் அவர்களுடைய மறைவுக்குப் பின் காலப்போக்கில் அவர்களிடையே சுயநலம் மேலோங்கிடவே, போட்டியும் பொறாமையும் ஏற்பட்டு மார்க்கத்தில் பிளவை ஏற்படுத்திக் கொண்டனர். ஒரே சீரான மார்க்க கட்டளைகள் இருந்தும், பல தரப்பட்ட சமுதாயங்களாகப் பிரிந்தன. ஆனால் அவர்கள் செய்யும் தவறுகளுக்கு உடனே தண்டிப்பது என்பது அல்லாஹ்வின் செயல்திட்டத்தில் இல்லை. (பார்க்க 16:61) திருந்தி வாழ அவர்களுக்கு வாய்ப்புகளை அளிக்க வேண்டும் என்பதே அல்லாஹ்வின் செயல்திட்டமாகும். இப்படியொரு திட்டம் இல்லாதிருந்தால் அவர்களுக்கு எப்போதோ ஒரு முடிவு ஏற்பட்டிருக்கும். அவ்வாறில்லாமல் வேற்றுமை பகைகளை நீக்கவே இந்த வேதமான குர்ஆனும் இறக்கி அருளப்படுகிறது. ஆனால் வேதக்காரர்களுக்கு இந்த உண்மை புரியவில்லை. அவர்கள் இன்னமும் சந்தேகத்திலேயே இருக்கின்றனர்.
فَلِذَٰلِكَ فَٱدْعُ ۖ وَٱسْتَقِمْ كَمَآ أُمِرْتَ ۖ وَلَا تَتَّبِعْ أَهْوَآءَهُمْ ۖ وَقُلْ ءَامَنتُ بِمَآ أَنزَلَ ٱللَّهُ مِن كِتَٰبٍۢ ۖ وَأُمِرْتُ لِأَعْدِلَ بَيْنَكُمُ ۖ ٱللَّهُ رَبُّنَا وَرَبُّكُمْ ۖ لَنَآ أَعْمَٰلُنَا وَلَكُمْ أَعْمَٰلُكُمْ ۖ لَا حُجَّةَ بَيْنَنَا وَبَيْنَكُمُ ۖ ٱللَّهُ يَجْمَعُ بَيْنَنَا ۖ وَإِلَيْهِ ٱلْمَصِيرُ.
42:15. இறைவழிகாட்டுதலை எடுத்துரைப்பவரே! மக்கள் இந்த மார்க்க உண்மைகளை ஏற்க மறுக்கிறார்கள் என்பதற்காக வருத்தப்பட வேண்டாம். நீங்கள் இறைவழிகாட்டுதலின் பக்கம் அழைத்த வண்ணம் இருங்கள். உங்களுக்கு இடப்பட்ட கட்டளைப்படி நிலைகுலையாமல் உறுதியோடு செயல்பட்டு வாருங்கள். அவர்களுடைய வழிமுறைகளைப் பின்பற்றாதீர்கள். காரணம் அவர்கள் யாவரும் தம் மனோ இச்சையின் படியே செயல்படுபவர்கள். அல்லாஹ்வின் புறத்திலிருந்து இவ்வேதத்தில் இறக்கி அருளப்பட்ட அறிவுரைப் படியே செயல்படுவதாக அவர்களிடம் கூறிவிடுங்கள். அந்த அறிவுரைப்படி நீதமான முறையில் சம தர்ம சமுதாயத்தை உருவாக்குவதே தன் இலட்சியமாகும் என்பதையும் அவர்களுக்கு எடுத்துரையுங்கள். உங்களையும் எங்களையும் படைத்துப் பரிபாலிப்பவனையே அல்லாஹ் என்கிறோம் என்றும் அவர்களிடம் சொல்லுங்கள். எனவே எங்களுடைய செயல்களின் பலன்கள் எங்களுக்குக் கிடைக்கும். உங்களுடைய செயல்களுக்கேற்ற வகையில் பலன்கள் உங்களுக்குக் கிடைக்கும். எனவே இனியும் இது குறித்து எங்களுக்கும் உங்களுக்கும் இடையே தர்க்கமோ மோதலோ வேண்டாம். அதையும் மீறி களத்தில் சந்திக்க நீங்கள் நாடினால் அதற்கு நாங்களும் தயார். காரணம் நாம் செய்யும் ஒவ்வொரு செயலும் அல்லாஹ் நிர்ணயித்த இலக்கின்படியே விளைவுகளை ஏற்படுத்துகின்றன.
وَٱلَّذِينَ يُحَآجُّونَ فِى ٱللَّهِ مِنۢ بَعْدِ مَا ٱسْتُجِيبَ لَهُۥ حُجَّتُهُمْ دَاحِضَةٌ عِندَ رَبِّهِمْ وَعَلَيْهِمْ غَضَبٌۭ وَلَهُمْ عَذَابٌۭ شَدِيدٌ.
42:16. இந்த அளவுக்கு தெளிவுபடுத்திய பின்பும் யார் அல்லாஹ்வின் வழிகாட்டுதலின்படி ஏற்படும் ஆட்சியமைப்புக்கு எதிராக செயல்படுகிறார்களோ, அது அவர்களுக்கு எந்த வகையிலும் பலனளிக்காது. இறைவழிகாட்டுதலுக்கும் அதன் ஆட்சியமைப்பு சட்டங்களுக்கும் எதிராக செயல்படுபவர்கள் வேதனைகளுக்கு ஆளாக நேரிடும்.
ٱللَّهُ ٱلَّذِىٓ أَنزَلَ ٱلْكِتَٰبَ بِٱلْحَقِّ وَٱلْمِيزَانَ ۗ وَمَا يُدْرِيكَ لَعَلَّ ٱلسَّاعَةَ قَرِيبٌۭ.
42:17. காரணம் அல்லாஹ்வின் புறத்திலிருந்து இறக்கி அருளப்படுகின்ற வழிகாட்டுதல்கள் யாவும் மனிதனின் சிறப்பான வாழ்விற்கு ஆக்கப்பூர்வமான நலத் திட்டங்களைக் கொண்டவையாகும். இப்படியாக நாட்டில் எவ்வித குழப்பமும் அநீதியும் ஏற்படாமல் சமச்சீர்நிலைக் கொண்ட நாடாக உருவாக்குவதே இறையாட்சியின் நோக்கமாகும். அத்தகைய மறுமலர்ச்சி விரைவிலும் ஏற்படலாம். அந்த உண்மை உங்களுக்குத் தெரியாது.
يَسْتَعْجِلُ بِهَا ٱلَّذِينَ لَا يُؤْمِنُونَ بِهَا ۖ وَٱلَّذِينَ ءَامَنُوا۟ مُشْفِقُونَ مِنْهَا وَيَعْلَمُونَ أَنَّهَا ٱلْحَقُّ ۗ أَلَآ إِنَّ ٱلَّذِينَ يُمَارُونَ فِى ٱلسَّاعَةِ لَفِى ضَلَٰلٍۭ بَعِيدٍ.
42:18. ஆனால் இறைவழிகாட்டுதலை ஏற்காதவர்கள், அப்படியொரு கால கட்டம் உடனே ஏற்படுத்திக் காட்டுமாறு அவசரப்படுகிறார்கள். ஆனால் அதற்குரிய கால கட்டத்தில் தான் அது ஏற்பட்டு வரும். மாறாக இறை வழிகாட்டுதலை ஏற்று நடப்பவர்கள், அதற்காக தாம் செய்ய வேண்டிய கடமைகளின் சுமைகளை எண்ணி கவலைப் படுகிறார்கள். இவையே இரு வெவ்வேறு மனப்பான்மை கொண்டவர்களுக்கும் இடையே உள்ள வேறுபாடுகளாகும். எனவே யார் தேவையற்ற தர்க்கங்களை செய்துகொண்டு தம் நேரத்தை வீணடிக்கிறார்களோ, அவர்கள் வழிகேட்டில் வெகுதூரம் சென்றுவிடுவார்கள்.
இறைவழிகாட்டுதலை நிராகரிப்பவர்களுக்கும் வாழ்வாதாரங்கள் தங்குதடையின்றி கிடைத்து வருகின்றதே என்று சிலருக்குத் தோன்றலாம்.
ٱللَّهُ لَطِيفٌۢ بِعِبَادِهِۦ يَرْزُقُ مَن يَشَآءُ ۖ وَهُوَ ٱلْقَوِىُّ ٱلْعَزِيزُ.
42:19. ஆளால் அல்லாஹ்வின் செயல்திட்டத்தின் படி அனைவருக்கும் அவரவர் உழைப்புக்கு ஏற்றவகையில் வாழ்வாதாரங்கள் கிடைத்து விடுகின்றன. அதில் யாருக்கும் எந்த பாகுபாடும் இருப்பதில்லை. (பார்க்க 17:19-20) காரணம் அல்லாஹ் அன்பு மிக்கவனாக இருக்கின்றான். மேலும் அவனுடைய செயல்திட்டங்கள் யாவும் வலிமை மிக்கவையாகவும், யாவற்றையும் விட மிகைப்பவையாகவும் உள்ளன.
எனவே வாழ்வாதாரங்களைப் பொறுத்தவரையில் யாரெல்லாம் அதற்காக உழைக்கிறார்களோ, அவர்களுக்கெல்லாம் தங்குதிடையின்றி கிடைத்து வரும். ஆனால் இறைவழிகாட்டுதலை ஏற்றுக் கொள்பவர்கள் மனித மாண்புகளையும் கட்டிக் காப்பாற்றுவதால் அவர்களுக்குத் நிகழ்கால சந்தோஷங்களும் வருங்கால நிலையான சந்தோஷங்களும் கிடைக்கின்றன. எனவே
مَن كَانَ يُرِيدُ حَرْثَ ٱلْءَاخِرَةِ نَزِدْ لَهُۥ فِى حَرْثِهِۦ ۖ وَمَن كَانَ يُرِيدُ حَرْثَ ٱلدُّنْيَا نُؤْتِهِۦ مِنْهَا وَمَا لَهُۥ فِى ٱلْءَاخِرَةِ مِن نَّصِيبٍ.
42:20. யார் நிகழ்கால சந்தோஷங்களுடன் வருங்கால நிலையான சந்தோஷங்களுக்காகவும் உழைக்கிறார்களோ, அவர்களுடைய உழைப்பிற்கு ஏற்ப பலன்கள் பன்மடங்காகப் பெருகிப் பல்கி வரும் (மேலும் பார்க்க 2:201-202). யார் நிகழ்கால சந்தோஷங்களை மட்டும் நோக்கமாகக் கொண்டு உழைக்கின்றார்களோ, அவர்களுடைய விருப்பங்களுக்கு ஏற்ப பலன்கள் கிடைத்து விடும். ஆனால் அவர்களுடைய வருங்கால வாழ்வில் அந்த சந்தோஷங்கள் ஒருபோதும் நீடிக்காது. அச்சமுதாயத்தில் பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டு அவர்களுடைய வாழ்வே கேள்விக்குறியாக ஆகிவிடும்.
உதாரணத்திற்கு போதைப் பொருட்கள், விபச்சாரம், சூதாட்டம் போன்றவை தற்காலிக சந்தோஷங்களைத் தரக் கூடியவையாக உள்ளன. ஆனால் அவை வருங்கால வாழ்வில் பெரும் பிரச்னைகளை ஏற்படுத்திவிடும். இத்தகைய செயல்களை தவிர்த்துக் கொள்ளச் சொல்வதே வேதம் செய்யும் முன்னெச்சரிக்கை ஆகும்.
أَمْ لَهُمْ شُرَكَٰٓؤُا۟ شَرَعُوا۟ لَهُم مِّنَ ٱلدِّينِ مَا لَمْ يَأْذَنۢ بِهِ ٱللَّهُ ۚ وَلَوْلَا كَلِمَةُ ٱلْفَصْلِ لَقُضِىَ بَيْنَهُمْ ۗ وَإِنَّ ٱلظَّٰلِمِينَ لَهُمْ عَذَابٌ أَلِيمٌۭ.
42:21. அவர்கள் இறைவழிகாட்டுதலை ஏற்காததற்குக் காரணம், தாமே சில வழிமுறைகளை ஏற்படுத்திக் கொண்டு அல்லாஹ் அறிவித்ததாக சொல்லி, அவற்றிற்கு இணையாக அவர்கள் கடைப்பிடித்து வருவதேயாகும். அல்லாஹ் ஒருபோதும் அப்படிப்பட்ட வழிமுறைகளை அறிவிக்கவில்லை. அவர்கள் செய்யும் இத்தகைய தவறுகளுக்கு அல்லாஹ் உடனே தண்டிப்பதில்லை. (பார்க்க 16:61) திருந்தி வாழ அவர்களுக்கு வாய்ப்புகளை அளிக்க வேண்டும் என்று ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டது. அப்படியொரு திட்டம் இல்லாதிருந்தால் அவர்கள் எப்போதோ அழிந்து போயிருப்பார்கள். அல்லாஹ்வின் இந்த திட்டத்தின்படி மனித செயல்களின் விளைவுகள் தோற்றத்திற்கு வரும் கால கட்டம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அந்த கால கட்டத்திற்குப் பின் அவர்கள் செய்த அநியாய செயல்களுக்கு நோவினை செய்யும் வேதனைகள் வந்தடையும்.
تَرَى ٱلظَّٰلِمِينَ مُشْفِقِينَ مِمَّا كَسَبُوا۟ وَهُوَ وَاقِعٌۢ بِهِمْ ۗ وَٱلَّذِينَ ءَامَنُوا۟ وَعَمِلُوا۟ ٱلصَّٰلِحَٰتِ فِى رَوْضَاتِ ٱلْجَنَّاتِ ۖ لَهُم مَّا يَشَآءُونَ عِندَ رَبِّهِمْ ۚ ذَٰلِكَ هُوَ ٱلْفَضْلُ ٱلْكَبِيرُ.
42:22. அப்படியொரு கால கட்டத்தில் தாம் செய்து வந்த தீய செயல்களின் விளைவுகளை சந்திக்கவிருப்பதை எண்ணி, அவர்கள் பயந்து நடுங்குவதை நீர் பார்ப்பீர். ஆனால் அவர்கள் பயப்படுவதால் ஆகப்போவது ஒன்றும் கிடையாது. அவர்கள் அந்த வேதனைகளை அனுபவித்தே ஆகவேண்டும். மாறாக எந்த சமுதாயம் இறைவழிகாட்டுதலை ஏற்று சிறப்பான ஆற்றல் மிக்க செயல்கைள செய்கிறதோ, அது சுவனத்திற்கு ஒப்பான சமுதாயமாக உருவெடுக்கும். அங்கு அவர்கள் மகிழ்ச்சியுடன் வாழ்வார்கள். அவர்கள் விரும்புவதெல்லாம் அவர்களுக்குக் கிடைத்து வரும். இப்படியொரு சமுதாயம் உருவாவது பெரும் பாக்கியமாகும் அல்லவா? இதே நிலை அவர்களுடைய மரணத்திற்குப் பின்பும் தொடரும். (16:30)
ذَٰلِكَ ٱلَّذِى يُبَشِّرُ ٱللَّهُ عِبَادَهُ ٱلَّذِينَ ءَامَنُوا۟ وَعَمِلُوا۟ ٱلصَّٰلِحَٰتِ ۗ قُل لَّآ أَسْـَٔلُكُمْ عَلَيْهِ أَجْرًا إِلَّا ٱلْمَوَدَّةَ فِى ٱلْقُرْبَىٰ ۗ وَمَن يَقْتَرِفْ حَسَنَةًۭ نَّزِدْ لَهُۥ فِيهَا حُسْنًا ۚ إِنَّ ٱللَّهَ غَفُورٌۭ شَكُورٌ.
42:23. இதுவே இறைவழிகாட்டுதலை ஏற்று சமுதாய நலத்திட்டங்களை தீட்டி செயல்படும் மூஃமின்களுக்கு அல்லாஹ்வின் புறத்திலிருந்து அறிவிக்கப்படும் நற்செய்திகளாகும். நபியே! நீர் அவர்களிடம், “என் சுய லாபத்திற்காக இவற்றை எல்லாம் எடுத்துரைக்கவில்லை. என் உற்றார் உறவினர்கள் அனைவரும் சந்தோஷமாக வாழவேண்டும் என்ற நோக்கத்தோடு தான் நான் இவற்றை எடுத்துரைக்கிறேன்” என்று அவர்களுக்கு எடுத்துரையுங்கள். (பார்க்க 25:57, 34:47)
أَمْ يَقُولُونَ ٱفْتَرَىٰ عَلَى ٱللَّهِ كَذِبًۭا ۖ فَإِن يَشَإِ ٱللَّهُ يَخْتِمْ عَلَىٰ قَلْبِكَ ۗ وَيَمْحُ ٱللَّهُ ٱلْبَٰطِلَ وَيُحِقُّ ٱلْحَقَّ بِكَلِمَٰتِهِۦٓ ۚ إِنَّهُۥ عَلِيمٌۢ بِذَاتِ ٱلصُّدُورِ.
42:24. நபியே! இந்த வழிகாட்டுதல்களை நீரே உமது சுய சிந்தனைக் கொண்டு சொல்லிவிட்டு அல்லாஹ் சொல்வதாகப் பொய்யுரைக்கிறீர் என்று அவர்கள் கூறுகிறார்களா? அல்லாஹ்வின் செயல்திட்டப்படி தான் நீர் அவற்றை எடுத்துரைக்கின்றீர். வஹீ உமக்கு அருளப்படாதிருந்தால் நீர் அவற்றை ஒருபோதும் எடுத்துரைத்திருக்க முடியாது. போலியான வழிமுறைகளின் அடிப்படையில் உருவான சமூக அமைப்பை வேரறுத்து, ஆக்கப்பூர்வமான நலத்திட்டங்களுடன் கூடிய ஆட்சியமைப்பை ஏற்படுத்திடவே இந்த மார்க்க கட்டளைகள் உன் மூலமாக அறிவிக்கப்படுகின்றன. நிச்சயமாக உள்ளத்தில் ஊடுருவிச் செல்லும் எண்ணங்களையும் அறிந்துகொள்ளும் பேராற்றல் உடையவன் தான் அல்லாஹ் என்பதை அவர்களுக்கு எடுத்துரையுங்கள்.
وَهُوَ ٱلَّذِى يَقْبَلُ ٱلتَّوْبَةَ عَنْ عِبَادِهِۦ وَيَعْفُوا۟ عَنِ ٱلسَّيِّـَٔاتِ وَيَعْلَمُ مَا تَفْعَلُونَ.
42:25. இந்த உண்மைகளை அறிந்து கொண்டபின் யார் தம் தவறான போக்குகளை விட்டுவிட்டு, இறைவன் காட்டிய வழியில் செல்ல நாடுகிறார்களோ, அவர்களுக்கு பாவ மன்னிப்பு உண்டு (பார்க்க 4:17) அவர்கள் அறியாமையில் செய்த பாவச் செயல்களின் தாக்கங்களிலிருந்து விடுபட வழிகள் பிறக்கும். ஏனெனில் நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலைப் பற்றியும் அல்லாஹ்வுக்குத் தெரியாமல் போவதில்லை. அதனதன் விளைவுகள் ஏற்பட்டே தீரும்.
وَيَسْتَجِيبُ ٱلَّذِينَ ءَامَنُوا۟ وَعَمِلُوا۟ ٱلصَّٰلِحَٰتِ وَيَزِيدُهُم مِّن فَضْلِهِۦ ۚ وَٱلْكَٰفِرُونَ لَهُمْ عَذَابٌۭ شَدِيدٌۭ.
42:26. ஆகவே இறைவழிகாட்டுதலுக்கு செவி சாய்த்து, சமூக நலத் திட்டங்களைத் தீட்டி ஆக்கப்பூர்வமாக செயல்பட்டு வந்தால் அவை ஒருபோதும் வீண் போகாது. அவர்களுடைய உழைப்பிற்கு ஏற்ற நற்பலன்கள் கூடிக்கொண்டே செல்லும். மாறாக இறைவழிகாட்டுதலை ஏற்க மறுத்து சமூக விரோத செயல்களைச் செய்தால், வாழ்வாதார வசதிகள் இருந்தும், அந்த சமுதாயம் அழிவை நோக்கிச் சென்றுவிடும்.
இத்தனைக்கும் வாழ்வாதார விஷயத்தில் அல்லாஹ்வின் செயல்திட்டம் அனைத்து தரப்பு மக்களுக்கும் பொதுவானதாக உள்ளது. நல்ல ஆற்றல்களோடு கடினமாக உழைப்பவர்களுக்கு அந்த வசதி வாய்ப்புகள் பெருகி வருகின்றன. தற்சமயம் உள்ள நடைமுறை உலகமே இதற்குச் சாட்சியாக உள்ளது. இருந்தும் உணவு வகைகளில் மனிதனுக்கு தேவைப்படும் அளவுக்குத் தான் கிடைக்கும்படி இறைவன் ஏற்பாடு செய்துள்ளான்.
۞ وَلَوْ بَسَطَ ٱللَّهُ ٱلرِّزْقَ لِعِبَادِهِۦ لَبَغَوْا۟ فِى ٱلْأَرْضِ وَلَٰكِن يُنَزِّلُ بِقَدَرٍۢ مَّا يَشَآءُ ۚ إِنَّهُۥ بِعِبَادِهِۦ خَبِيرٌۢ بَصِيرٌۭ.
42:27. ஒருவேளை அல்லாஹவின் நியதிப்படி மனிதனுக்கு வாழ்வாதார வசதிகள் அளவின்றி கிடைக்கச் செய்திருந்தால், அவன் தவறான வழியில் சென்று நாட்டில் அட்டூழியங்களே மிகைத்திருக்கும். அவனுக்கு வாழ்வாதாரங்கள் அளவோடு கிடைக்கச் செய்திருப்பதால், இந்த நிலை ஏற்படுவதில்லை. ஒவ்வொருவரும் செய்து வரும் செயல்களைப் பற்றிய உண்மை நிலவரங்களும் ஞானமும் அல்லாஹ்வுக்கு உண்டு என்பதே உண்மை.
وَهُوَ ٱلَّذِى يُنَزِّلُ ٱلْغَيْثَ مِنۢ بَعْدِ مَا قَنَطُوا۟ وَيَنشُرُ رَحْمَتَهُۥ ۚ وَهُوَ ٱلْوَلِىُّ ٱلْحَمِيدُ.
42:28. எனவே தான் மழை பொழியாமல் வறட்சி ஏற்பட்டால், அவர்கள் நிராசையாகி விடுகிறார்கள். அதன்பின் அங்கு இறைவனின் நியதிப்படி மழை பொழிந்து செழிப்பான பூமியாக மாறிவிடுகிறது. இப்படியாக மனிதன் உயிர்வாழ இறைவனின் துணை அவசியமாகிறது என்பதை அந்த மழை அவர்களுக்கு உணர்த்துகிறது. கால சூழ்நிலைக்கு ஏற்றவாறு அல்லாஹ் மனிதனுக்கு உதவி புரிவது போற்றுதலுக்குரிய விஷயமே ஆகும்.
وَمِنْ ءَايَٰتِهِۦ خَلْقُ ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضِ وَمَا بَثَّ فِيهِمَا مِن دَآبَّةٍۢ ۚ وَهُوَ عَلَىٰ جَمْعِهِمْ إِذَا يَشَآءُ قَدِيرٌۭ.
42:29. அதுமட்டுமின்றி மனிதன் சிறப்பாக வாழ வேண்டும் என்பதற்காகவே வானங்களையும் பூமியையும் அல்லாஹ் படைத்துள்ளான். மேலும் பூமியிலும் மற்ற பிரபஞ்ச படைப்புகளிலும் ஜீவராசிகள் வசிக்கின்றன. இவையெல்லாம் இப்போது தனித்தனியே வசிக்கின்றன. ஆனால் ஒரு கட்டத்தில் அல்லாஹ்வின் நியதிப்படி அவையாவும் ஒன்றிணையும். இவை யாவும் அல்லாஹ்வின் நிகரற்ற வல்லமையின் சான்றுகளாகும்.
அகிலங்களில் பூமி மட்டுமின்றி மற்ற உலகங்களிலும் ஜீவனங்கள் இருப்பதை இவ்வாசகம் பறை சாற்றுகிறது. மேலும் ஒரு கட்டத்தில் இவர்கள் ஒன்று சேருவார்கள் என்றும் சொல்லப்படுகிறது.
وَمَآ أَصَٰبَكُم مِّن مُّصِيبَةٍۢ فَبِمَا كَسَبَتْ أَيْدِيكُمْ وَيَعْفُوا۟ عَن كَثِيرٍۢ.
42:30. இப்படியாக அல்லாஹ்வின் செயல்திட்டங்கள் யாவும் ஆக்கப்பூர்வமான நன்மைக்காகவே உள்ளன. ஆனால் மனிதனோ தீய வழியில் செயல்பட்டு, தீராப் பிரச்னைகளை வரவழைத்துக் கொள்கின்றான் (பார்க்க 4:79). இருந்தும் மனிதன் செய்யும் சிறிய சிறிய தவறுகளை சரிசெய்து கொள்ளும் வாய்ப்புகள் உள்ளன. பெரிய அளவில் தீவினை செய்து வந்தால் அவனுடைய வாழ்வில் சிக்கல்கள் ஏற்பட்டு வருகின்றன.
உதாரணத்திற்கு ஒருவர் குடி பழக்கத்திற்கு ஆளானால், ஆரம்ப நிலையில் அவரை சரிசெய்து விடலாம். ஆனால் அவர் அந்த பழக்கத்திற்கு அடிமையாகி விட்டால் அவரைத் திருத்துவது மிகவும் கடினமாகி விடும். அது மட்டுமின்றி மது அருந்துவதில் பாவமில்லை என்ற மனப்பான்மை நாட்டில் உருவானால் அதன் விளைவு என்னவாகும் என்பதையும் கவனித்துப் பாருங்கள். அச்சமுதாயம் அழிந்து போவதைத் தவிர வேறு வழியில்லை. இப்படிப்பட்ட சட்டங்களைத் தான் அல்லாஹ் ஏற்படுத்தியுள்ளான். அதாவது சிறிய தவறுகளை சரி செய்து கொள்ளலாம். பெரிய அளவில் நடந்து வரும் பாவச் செயல்களை திருத்துவது கடினம்.
وَمَآ أَنتُم بِمُعْجِزِينَ فِى ٱلْأَرْضِ ۖ وَمَا لَكُم مِّن دُونِ ٱللَّهِ مِن وَلِىٍّۢ وَلَا نَصِيرٍۢ.
42:31. எனவே ஒரு சமுதாயம் தவறான வழியில் நடந்துகொண்டு, அது பிரச்னையின்றி சிறப்பாக விளங்வேண்டும் என்று ஆயிரம் தான் விரும்பினாலும் அது ஒருகாலும் முடியவே முடியாது. அல்லாஹ் நிலைநிறுத்தியுள்ள சட்டங்களை யாராலும் மாற்றியமைக்கவே முடியாது. எனவே உங்களுடைய சிறப்பான வாழ்விற்கு அல்லாஹ்வின் வழிகாட்டுதலை விட்டால் வேறு எந்த வழிமுறையும் துணை நிற்காது. (பார்க்க 7:40)
وَمِنْ ءَايَٰتِهِ ٱلْجَوَارِ فِى ٱلْبَحْرِ كَٱلْأَعْلَٰمِ.
42:32. இன்னும் அல்லாஹ்வின் வல்லமைப் பற்றி அறிந்துகொள்ள வேண்டும் என்றால் மலைகளைப் போல் உள்ள பாய்மரக் கப்பல்கள் காற்றின் வேகத்தைக் கொண்டு கடலில் நீந்திச் செல்வதைப் பாருங்கள்.
சிறிய ஊசி கூட தண்ணீரில் மிதங்காது எனும்போது, இவ்வளவு பெரிய கப்பல் மிதந்து செல்வதை கவனித்துப் பாருங்கள். அதன் வடிவமைப்பைக் கொண்டு தான் இவ்வாறு மிதக்க முடிகிறது. தண்ணீருக்கும் அந்த வடிவமைப்புக்கும் நெருக்கமான தொடர்பு உள்ளது. இந்த ஏற்பாடுகள் இல்லாதிருந்தால், உலகில் மனிதன் எவ்வாறு தன் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள முடியும்?
إِن يَشَأْ يُسْكِنِ ٱلرِّيحَ فَيَظْلَلْنَ رَوَاكِدَ عَلَىٰ ظَهْرِهِۦٓ ۚ إِنَّ فِى ذَٰلِكَ لَءَايَٰتٍۢ لِّكُلِّ صَبَّارٍۢ شَكُورٍ.
42:33. ஆனால் இறைவனின் நியதிப்படி காற்று வீசுவது நின்று விட்டால், அந்த கப்பல்கள் நகராமல் அசைவற்று நின்றுவிடும். ஒவ்வொரு இலட்சியத்திலும் உறுதிப்பாடுடன் நிலைத்திருந்து செயல்படுபவர்களுக்கும் நன்றி விசுவாசத்துடன் நடப்பவர்களக்கும் இதில் பல படிப்பினைகள் கிடைக்கும்.
அதாவது மனிதன் தனக்கு அளிக்கப்பட்ட அறிவைக் கொண்டு காற்றின் வேகத்தில் செல்லும் கப்பல்களை, இயந்திர சக்தியின் உதவியைக் கொண்டு செல்ல வழிமுறைகளை தேடிக்கொள்ளலாம். மேலும் அல்லாஹ்வின் படைப்புகள் யாவும் மனிதனுக்கு பயனுள்ளதாகவே உள்ளன என்று சொல்லப்படுகிறது. அதாவது அவற்றை மனிதன் ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தினால் அவனுக்குத் தொடர்ந்து பலன்கள் கிடைத்து வரும். மாறாக அவன் தன் சுய நலத்துடன் தவறாகப் பயன்படுத்தினால் அவை அவனுக்கு அழிவைத் தேடி தந்துவிடும். உதாரணத்திற்கு ஆயுத கப்பல்களை தயாரித்து அட்டூழியங்களை செய்தால் என்னவாகும்?
أَوْ يُوبِقْهُنَّ بِمَا كَسَبُوا۟ وَيَعْفُ عَن كَثِيرٍۢ.
42:34. எனவே அவர்கள் செய்து வரும் தீய செயல்களுக்காக அவர்களை உடனே துயரங்களில் மூழ்கடிக்க முடியும். ஆனால் பெரும்பாலான சிறிய தவறுகளின் தாக்கங்களிலிருந்து தப்பித்துக்கொள்ள வழிகளை அல்லாஹ் ஏற்படுத்தியுள்ளான்.
وَيَعْلَمَ ٱلَّذِينَ يُجَٰدِلُونَ فِىٓ ءَايَٰتِنَا مَا لَهُم مِّن مَّحِيصٍۢ.
42:35. ஆக பிரபஞ்ச படைப்புகளைப் படைக்கும் வல்லமை அல்லாஹ்வுக்கு மட்டும் உண்டு என்ற உண்மையை ஏற்காதவர்கள், அதை குறித்து தர்க்கம் செய்கிறார்கள். அதனால் அவர்கள் இறைவழிகாட்டுதலை ஏற்காமல் தீய வழியில் சென்று விடுகிறார்கள். இறுதியாக அவர்களுடைய செயல்களின் விளைவுகள் ஏற்படும்போது, அவர்கள் செய்து வந்தவைப் பற்றி அறிந்து கொள்வார்கள். ஆனால் அவர்களால் அவற்றிலிருந்து தப்பித்துச் செல்ல வழி எதுவும் கிடைக்காது.
فَمَآ أُوتِيتُم مِّن شَىْءٍۢ فَمَتَٰعُ ٱلْحَيَوٰةِ ٱلدُّنْيَا ۖ وَمَا عِندَ ٱللَّهِ خَيْرٌۭ وَأَبْقَىٰ لِلَّذِينَ ءَامَنُوا۟ وَعَلَىٰ رَبِّهِمْ يَتَوَكَّلُونَ.
42:36. அவர்கள் செய்து வந்த தீய செயல்கள் யாவை? இறைவன் புறத்திலிருந்து தமக்கு கிடைத்த வாழ்வாதார வசதிகளைக் கொண்டு, நிகழ்கால சுகங்களை மட்டும் அனுபவித்து வந்தார்கள். இதனால் அவர்கள் வருங்கால நலன்களைப் பற்றி கவலைக் கொள்ளவில்லை. ஆனால் இறைவனின் வழிகாட்டுதல்கள் யாவும் நிகழ்கால சந்தோஷங்களோடு வருங்கால நலன்களையும் கருத்தில் கொண்டு செயல்பட அறிவுறுத்துகின்றன. அவற்றைக் கடைப்பிடித்தால் தற்போதுள்ள சுக வாழ்வை விட பன் மடங்கு சிறப்பான நிலையான வாழ்வு கிடைக்கும்.
உடல் வளர்ச்சிக்கு உணவு உட்கொள்வது எவ்வாறு முக்கியமானதோ, அவ்வாறே மனித மாண்புகள் வளர சமுதாய நலனுக்காக கொடுத்து உதவுவது முக்கியமானதாகும். அப்போதுதான் இவ்வுலகிலும் சிறப்பான சமுதாயத்தில் வாழும் வாய்ப்புகள் கிடைக்கும். மேலும் அவனுடைய “ரூஹ்” எனும் ஆன்மா வளர்ச்சிப் பெற்று அடுத்தக் கட்ட வாழ்க்கைக்கு முழு அளவில் ஆயத்தமாகி விடும். அப்போது அவனுடைய மறுமை வாழ்விலும் சிறப்பான சந்தோஷங்கள் கிடைக்கும். இதுவே அல்லாஹ்வின் செயல்திட்டமாகும்.
وَٱلَّذِينَ يَجْتَنِبُونَ كَبَٰٓئِرَ ٱلْإِثْمِ وَٱلْفَوَٰحِشَ وَإِذَا مَا غَضِبُوا۟ هُمْ يَغْفِرُونَ.
42:37. மேலும் இவர்கள் சமுதாய வளர்ச்சியை குன்றச் செய்யும் செயல்கள் எதுவும் நடைபெறாதவாறு பார்த்துக் கொள்வார்கள். சிறிய தவறுகள் ஏற்படுவது என்பது சகஜம் தான். அவற்றின் தாக்கங்களிலிருந்து மீள முடியும். ஆனால் பெரிய அளவில் நாட்டின் வளர்ச்சியை பாதிக்கக் கூடிய செயல்கள் நிகழ்ந்தால் அவற்றை சரிசெய்வது கஷ்டமாகிவிடும். குறிப்பாக பெரிய பாவச் செயல்களாக இருக்கும் மானக் கேடானவை இவற்றில் அடங்கும். அவற்றிற்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்போது, எதிர்ப்புகள் வலுத்து மக்களின் கோபத்திற்கு ஆளானால் தக்க பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள்.
உதாரணமாக போதைப் பொருட்கள், நடனம், நாட்டியம், அறைகுறை ஆடை அணிந்து திரிதல், திருமணமின்றி உடலுறவு கொள்ளுதல், ஓரினச் சேர்க்கை, பாலியல் பலாத்காரம், விபச்சாரம் சூதாட்டம் போன்றவை நாட்டின் வளர்ச்சியை பெருமளவில் பாதிக்கும் மானக்கேடான செயல்களாகும். மேலை நாடுகளில் இவையெல்லாம் நடைபெற்று வந்த போதிலும், அவர்கள் முன்னேறிக் கொண்டுதான் இருக்கிறார்களே என்ற கேள்வி எழலாம். இவை எல்லாம் தற்காலிமான வளர்ச்சியே ஆகும். இவற்றின் தாக்கங்கள் அறியாவண்ணம் ஏற்பட்டு அவை ஒரு கட்டத்தில் பூதாகரமாக தோற்றத்திற்கு வந்து நிற்கும். அப்போது அவர்களுக்கு அழிவைத் தவிர வேறு எதுவும் ஏற்படாது. அவ்வாறு ஏற்படுவதற்கு முன் அவற்றை தவிர்த்துக் கொண்டால் தான் அவர்களுக்குச் சிறப்பு.
وَٱلَّذِينَ ٱسْتَجَابُوا۟ لِرَبِّهِمْ وَأَقَامُوا۟ ٱلصَّلَوٰةَ وَأَمْرُهُمْ شُورَىٰ بَيْنَهُمْ وَمِمَّا رَزَقْنَٰهُمْ يُنفِقُونَ.
42:38. இப்படியாக இறைவன் காட்டிய வழியில் சமூக நலத் திட்டங்களை செயல்படுத்த தக்க ஞானமும் அவசியமான ஒன்றாக இருக்கிறது. இதை கூட்டு ஸலாத் மூலம் அறிந்து கொள்ளலாம். இத்தகைய பயிற்சி அளிக்கும் ஸலாத்திற்காக அழைக்கப்பட்டால், இவர்கள் உடனே விரைவார்கள். (பார்க்க 62:9) மேலும் சமூக சீர்கேடுகளை சரி செய்வதைப் பற்றி தங்களுக்குள் கலந்தாலோசித்து ஆக்கப்பூர்வமாக முடிவெடுப்பார்கள். மேலும் இந்தப் பணிகளை மேற்கொள்ள தம்மாலான பொருளுதவிகளையும் செய்து வருவார்கள்.
இப்படியாக இவர்கள் எல்லா சமூகப் பிரச்னைகளுக்கும் நாட்டின் வளர்ச்சித் திட்டங்களுக்காகவும் ஒன்று கூடி (Assemblyயில்)கலந்தாலோசித்து நல்ல முடிவுகளை எடுப்பார்கள்.
وَٱلَّذِينَ إِذَآ أَصَابَهُمُ ٱلْبَغْىُ هُمْ يَنتَصِرُونَ.
42:39. இத்தகைய பணிகளை மேற்கொள்ளும் போது, சில சமயம் ஆபத்துகளில் மாட்டிக் கொள்ள நேரிடும். அப்போது அனைவரும் தோளோடு தோள் நின்று ஆபத்தில் சிக்கியவரை காப்பாற்றுவார்கள். (பார்க்க 2:177) மேலும் அநியாயக்காரர்களுக்குத் தக்க பதிலடி கொடுப்பார்கள்.
وَجَزَٰٓؤُا۟ سَيِّئَةٍۢ سَيِّئَةٌۭ مِّثْلُهَا ۖ فَمَنْ عَفَا وَأَصْلَحَ فَأَجْرُهُۥ عَلَى ٱللَّهِ ۚ إِنَّهُۥ لَا يُحِبُّ ٱلظَّٰلِمِينَ.
42:40. ஆனால் பதில் நடவடிக்கை எடுப்பதில் அளவு கடந்து செல்லக் கூடாது. எந்த அளவுக்கு அவர்கள் தீங்கை விளைவித்தார்களோ அதே அளவு நீங்களும் தண்டிக்கலாம். (பார்க்க 2:178) மேலும் தீங்கிழைத்தவர் மன்னிப்புக் கோரி சமாதானம் செய்துகொள்ள முற்பட்டால் அவரை மன்னித்து விடவும் செய்யலாம். அவர்களை மன்னித்து விட்டுவிடுவதும், தண்டிப்பதும் அல்லாஹ்வின் ஆட்சியமைப்பின் கீழ் செயல்படும் நீதிமன்ற விவகாரங்களாகும். அநியாய அக்கிரம செயல்களைச் செய்வோரை அந்த நீதிமன்றம் ஒருபோதும் ஆதரிக்காது.
وَلَمَنِ ٱنتَصَرَ بَعْدَ ظُلْمِهِۦ فَأُو۟لَٰٓئِكَ مَا عَلَيْهِم مِّن سَبِيلٍ.
42:41. ஆக நீதிமன்றம் பாதிக்கப்பட்டவர்களை ஆதரித்து குற்றவாளிகளுக்கு தண்டனை அளிப்பது அல்லாஹ்வின் சட்டத்தின்படி குற்றமாகாது. இதனால் நாட்டில் குற்றங்கள் குறையும்.
إِنَّمَا ٱلسَّبِيلُ عَلَى ٱلَّذِينَ يَظْلِمُونَ ٱلنَّاسَ وَيَبْغُونَ فِى ٱلْأَرْضِ بِغَيْرِ ٱلْحَقِّ ۚ أُو۟لَٰٓئِكَ لَهُمْ عَذَابٌ أَلِيمٌۭ.
42:42. ஆனால் அல்லாஹ்வின் சட்டத்தின் பார்வையில் குற்றவாளிகள் யார் என்றால், ஒருவர் பிறரை அநியாயமாக தீங்கிழைப்பவர்களும், நாட்டில் அட்டூழியங்களை செய்வோருமே ஆவர். இப்படி செயல்படுபவர்கள் கடுமையான தண்டனைக்கு ஆளாவார்கள்.
وَلَمَن صَبَرَ وَغَفَرَ إِنَّ ذَٰلِكَ لَمِنْ عَزْمِ ٱلْأُمُورِ.
42:43. இப்படியாக நியாயத்திற்காகவும், சமூக மேம்பாட்டிற்காகவும் பாடுபடுபவர்கள், சில சமயம் தம் மீது அநீதி இழைக்கப்பட்டாலும், தம் கொள்கையில் நிலைத்திருந்து தம்மை பாதுகாத்துக் கொள்வோர் தாம் தலைசிறந்த செயல்வீரர்கள் ஆவர்.
وَمَن يُضْلِلِ ٱللَّهُ فَمَا لَهُۥ مِن وَلِىٍّۢ مِّنۢ بَعْدِهِۦ ۗ وَتَرَى ٱلظَّٰلِمِينَ لَمَّا رَأَوُا۟ ٱلْعَذَابَ يَقُولُونَ هَلْ إِلَىٰ مَرَدٍّۢ مِّن سَبِيلٍۢ.
42:44. மாறாக யார் அல்லாஹ்வின் ஆட்சியமைப்பு சட்டங்களை மீறி, தவறான வழியில் செயல்படுகிறாரோ, அத்தகையவர்களுக்கு உதவி புரிய யாரும் முன் வரமாட்டார்கள். அநியாயம் செய்தவர்கள் பிடிபட்டு தண்டிக்கப்படும் போது, அவ்வேதனையிலிருந்து தப்பிக்க வழி ஏதேனும் உண்டா என்று மன்றாடுவதைத் தான் நீங்கள் பார்ப்பீர்கள். இப்படியொரு நிலை ஏற்படுவது நல்லதா?
وَتَرَىٰهُمْ يُعْرَضُونَ عَلَيْهَا خَٰشِعِينَ مِنَ ٱلذُّلِّ يَنظُرُونَ مِن طَرْفٍ خَفِىٍّۢ ۗ وَقَالَ ٱلَّذِينَ ءَامَنُوٓا۟ إِنَّ ٱلْخَٰسِرِينَ ٱلَّذِينَ خَسِرُوٓا۟ أَنفُسَهُمْ وَأَهْلِيهِمْ يَوْمَ ٱلْقِيَٰمَةِ ۗ أَلَآ إِنَّ ٱلظَّٰلِمِينَ فِى عَذَابٍۢ مُّقِيمٍۢ.
42:45. அப்படியொரு நிலை ஏற்படும்போது, அவர்களுடைய ஆணவப் போக்கும் தலைக் கணமும் முற்றிலும் நீங்கி, தலை குனிந்தவர்களாக சிறுமைப்பட்டு நிற்பார்கள். அவர்களுக்கு ஆதரவாக யாராவது உதவி செய்வார்களா என்று ஏக்கத்தோடு பார்ப்பார்கள். அப்போது இறை ஆட்சியமைப்பு அதிகாரிகள், “தங்களுக்கும் தம்மை சார்ந்தவர்களுக்கும் தீங்கை விளைவிப்பவர்கள், இறுதியில் பெரு நஷ்டத்தில் இருப்பார்கள் என்று உங்களுக்கு அறிவிக்கப்பட வில்லையா?” என்று கேட்பார்கள். எனவே அத்தகையோர் ஆயுட் காலத்திற்கு தண்டனையை அனுபவிக்க வேண்டி வரும்.
وَمَا كَانَ لَهُم مِّنْ أَوْلِيَآءَ يَنصُرُونَهُم مِّن دُونِ ٱللَّهِ ۗ وَمَن يُضْلِلِ ٱللَّهُ فَمَا لَهُۥ مِن سَبِيلٍ.
42:46. அத்தகையவர்களை யாராவது காப்பாற்றுவதாக இருந்தால், அல்லாஹ்வின் சட்ட விதிமுறைகளின் படியே காப்பாற்ற முடியும். ஆனால் அக்குற்றவாளிகளோ அல்லாஹ்வின் ஆட்சியமைப்பு சட்டங்களுக்கு எதிராக அல்லவா செயல்பட்டிருக்கிறார்கள்? அதனால் அவர்களை வேறு யார் தான் காப்பாற்ற முடியும்? இப்படி வழிதவறிச் செல்ல நாடுவோருக்கு நேர்வழியில் செல்லும் வாய்ப்பே இல்லாமல் போய்விடுகிறது.
ٱسْتَجِيبُوا۟ لِرَبِّكُم مِّن قَبْلِ أَن يَأْتِىَ يَوْمٌۭ لَّا مَرَدَّ لَهُۥ مِنَ ٱللَّهِ ۚ مَا لَكُم مِّن مَّلْجَإٍۢ يَوْمَئِذٍۢ وَمَا لَكُم مِّن نَّكِيرٍۢ.
42:47. இப்படிப்பட்ட இழிநிலை ஏற்படுவதிலிருந்து தம்மை காப்பாற்றிக் கொள்ள ஒரே ஒரு வழிமுறை தான் உள்ளது. அதாவது அவர்கள் அல்லாஹ்வின் வழிகாட்டுதலின் பக்கம் விடப்படுகின்ற அழைப்பை ஏற்று அதன்படி செயல்பட முன்வரவேண்டும். அவ்வாறு செயல்பட முன்வரவில்லை என்றால் அல்லாஹ்வின் சட்டத்தின் பிடியிலிருந்து ஒருபோதும் தப்பித்துச் செல்ல முடியாது. அப்படியும் அவர்கள் தப்பித்துச் செல்லும் இடம் தான் எங்கிருக்கும்? நீங்கள் செய்த குற்றங்களை மறுக்கவும் முடியாது.
فَإِنْ أَعْرَضُوا۟ فَمَآ أَرْسَلْنَٰكَ عَلَيْهِمْ حَفِيظًا ۖ إِنْ عَلَيْكَ إِلَّا ٱلْبَلَٰغُ ۗ وَإِنَّآ إِذَآ أَذَقْنَا ٱلْإِنسَٰنَ مِنَّا رَحْمَةًۭ فَرِحَ بِهَا ۖ وَإِن تُصِبْهُمْ سَيِّئَةٌۢ بِمَا قَدَّمَتْ أَيْدِيهِمْ فَإِنَّ ٱلْإِنسَٰنَ كَفُورٌۭ.
42:48. இறைவழிகாட்டுதலை எடுத்துரைப்பவரே! இந்த அளவுக்கு தெளிவாக எடுத்துரைத்த பின்பும், அவர்கள் இந்த முன்னெச்சரிக்கைகளை ஏற்காமல் புறக்கணித்தால், அவர்களைக் குறித்து நீர் கவலைக் கொள்ள வேண்டிய அவசியமில்லை. நாம் உம்மை அவர்களைக் கண்காணிக்கும் அதிகாரியாக அனுப்பவில்லை. மார்க்க உண்மைகளை எடுத்துரைப்பதே உம் பணியாகும். மனிதனின் நிலை எவ்வாறு உள்ளது என்பதையும் அறிந்து கொள்ளுங்கள். அவனுக்கு இறைவனின் அருட்கொடைகள் கிடைத்தால் அவற்றைக் கொண்டு சுகம் அனுபவிப்பதையே நோக்கமாகக் கொண்டு வாழ்கிறான். இதுதான் அவர்களின் தற்காலிக நிலையாகும். இதனால் அவன் செய்வது நல்லதா கெட்டதா என்பதையும் கவனிப்பதில்லை. எனவே தீய செயலில் ஈடுபடும்போது, அவற்றின் விளைவாக தீங்கு நேரிட்டால் அதற்கு அல்லாஹ்வின் மீது பழிசுமத்தி நன்றி கெட்டவனாக மாறிவிடுகின்றான்.
لِّلَّهِ مُلْكُ ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضِ ۚ يَخْلُقُ مَا يَشَآءُ ۚ يَهَبُ لِمَن يَشَآءُ إِنَٰثًۭا وَيَهَبُ لِمَن يَشَآءُ ٱلذُّكُورَ.
42:49. இப்படி செயல்படுவதால் அல்லாஹ்வுக்கு எந்த பாதிப்பும் ஏற்படப் போவதில்லை. ஏனெனில் பிரபஞ்ச படைப்புகளும் பூமியில் உள்ளவையும் அல்லாஹ்வின் செயல்திட்டங்களை நிறைவேற்றவே செயல்பட்டு வருகின்றன. அவனுடைய அதே படைப்பு சட்டத்தின் கீழ் எல்லாவற்றையும் படைக்கின்றான். அந்த சட்டத்தின் படியே ஆண் குழந்தையும் பெண் குழந்தையும் பிறக்கின்றன.
أَوْ يُزَوِّجُهُمْ ذُكْرَانًۭا وَإِنَٰثًۭا ۖ وَيَجْعَلُ مَن يَشَآءُ عَقِيمًا ۚ إِنَّهُۥ عَلِيمٌۭ قَدِيرٌۭ.
42:50. அல்லாஹ்வின் சட்டத்தின் படியே சிலருக்கு ஆண் குழந்தையும் பெண் குழந்தையும் பிறக்கின்றன. சிலருக்கு குழந்தைப் பாக்கியம் பெறாத வகையில் மலட்டுத்தனமும் ஏற்பட்டு விடுகிறது. அனைத்தையும் அறிந்து கொள்ளும் அல்லாஹ்வின் வல்லமை அளவற்றது என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
இவையாவும் அல்லாஹ் நிர்ணயித்த உடலியல் சம்பந்தப்பட்ட(Biological System) சட்டங்களாகும். இவை மற்ற உயிரினங்களுக்கு இருப்பது போலவே எல்லோருக்கும் பொதுவானவை ஆகும். ஆனால் மனித வாழ்வின் இன்னொரு பகுதியும் உள்ளது. அதுதான் மனிதனின் ஒழுக்க மாண்புகள் மற்றும் மனித நேயம் சம்பந்தப்பட்ட சட்டங்களாகும். இவை மனித சரீரத்தில் ஐக்கியமாகி இருப்பதில்லை. இவற்றை மனிதனுக்கு வஹீ என்னும் இறைவழிகாட்டுதல் மூலமாக அறிவிக்கப்படுகிறது. இவற்றை மனிதனுக்கு நேரடியாகக் கொடுக்காமல் இறைத் தூதர்களைத் தேர்ந்தெடுத்து அவர்கள் மூலமாக அறிவிக்கின்றான். காரணம்
۞ وَمَا كَانَ لِبَشَرٍ أَن يُكَلِّمَهُ ٱللَّهُ إِلَّا وَحْيًا أَوْ مِن وَرَآئِ حِجَابٍ أَوْ يُرْسِلَ رَسُولًۭا فَيُوحِىَ بِإِذْنِهِۦ مَا يَشَآءُ ۚ إِنَّهُۥ عَلِىٌّ حَكِيمٌۭ.
42:51. எந்த மனிதனிடத்திலும் நேரடியாக பேசுவது என்ற செயல்திட்டம் அல்லாஹ்விடம் இல்லை. அவன் மனிதனுக்கு அறிவிக்க வேண்டியவற்றை வஹீ எனும் இறைவழிகாட்டுதல்கள் மூலமாக அறிவிக்கின்றான். சில விஷயங்களை திரைக்கு அப்பால் இருந்தபடி அறிவிக்கிறான். அல்லது தன் செயல்திட்டத்தின்படி ஒரு தூதரைத் தேர்ந்தெடுத்து அவர் மூலமாக அறிவித்துவிடுகிறான். எனவே எந்த செயல்திட்டத்தை எவ்வாறு நிறைவேற்ற வேண்டும் என்ற முழு ஞானமும் அல்லாஹ்வுக்கு உண்டு என்பதே உண்மை நிலை.
அதாவது வஹீ மூலமாக அருளப்படுபவற்றை வேதங்கள் என்கிறோம். அவை இப்போது தன் அசல் வடிவில் திருக்குர்ஆனில் உள்ளன. திரைக்கு அப்பால் இருந்து பேசுவதாகக் கூறுவது அவன் படைத்த இயற்கை படைப்புகளில் உள்ள சட்டங்கள் மூலமாக மனதனுக்குக் கிடைக்கின்ற ஞானங்களாகும். இவற்றை மனித ஆய்வுகளை மேற்கொண்டு ஒவ்வொரு படைப்பிலும் அல்லாஹ்வின் சட்டங்கள் எவ்வாறு செயல்படுகின்றன என்ற உண்மையை அறிந்து கொள்ளலாம். (பார்க்க 3:190-191) ஆனால் மனித ஒழுக்க மாண்புகள் சம்பந்தப்பட்ட விஷயங்களை இந்த குர்ஆன் மூலம்தான் அறிந்து கொள்ள முடியும். அத்தனை ஏன்? இந்த வழிகாட்டுதல்கள் என்னவென்பதை முஹம்மது நபிக்கே வஹீ இறக்கி அருளப்படுவதற்கு முன் தெரியாமல் இருந்தது.
وَكَذَٰلِكَ أَوْحَيْنَآ إِلَيْكَ رُوحًۭا مِّنْ أَمْرِنَا ۚ مَا كُنتَ تَدْرِى مَا ٱلْكِتَٰبُ وَلَا ٱلْإِيمَٰنُ وَلَٰكِن جَعَلْنَٰهُ نُورًۭا نَّهْدِى بِهِۦ مَن نَّشَآءُ مِنْ عِبَادِنَا ۚ وَإِنَّكَ لَتَهْدِىٓ إِلَىٰ صِرَٰطٍۢ مُّسْتَقِيمٍۢ.
42:52. இறைவழிகாட்டுதலை எடுத்துரைப்பவரே! இவ்வாறே மனித வாழ்விற்கு உயிர் நாடியாக இருக்கும் நம்முடைய செயல்திட்டங்கள் அடங்கிய இந்த குர்ஆனை உன் உள்ளத்தில் இறக்கி அருளுகிறோம். (பார்க்க 2:97) இதற்கு முன்னர் இறைவனின் நிலைமாறா சட்டம் என்றால் என்னவென்றோ, அவற்றை ஏற்று நடப்பதன் பலன்கள் என்னவென்பதோ உமக்குத் தெரியாமல் இருந்தது. வெள்ளை காகிதமாக இருந்த உமது உள்ளத்தில் அவற்றை பதித்து, மனிதனின் ஒளிமயமான வாழ்விற்கு சிறந்த வழி காட்டியாகவும் ஒளிவிளக்காகவும் ஆக்கினோம். (பார்க்க 24:35) எனவே எவர் இந்த வழிகாட்டுதலைப் பெற நாடி முயல்கிறார்களோ, அவர்களை எல்லாம் இது நேர் வழியின் பக்கம் அழைத்துச் செல்லும். (பார்க்க 2:256-257)
صِرَٰطِ ٱللَّهِ ٱلَّذِى لَهُۥ مَا فِى ٱلسَّمَٰوَٰتِ وَمَا فِى ٱلْأَرْضِ ۗ أَلَآ إِلَى ٱللَّهِ تَصِيرُ ٱلْأُمُورُ.
42:53. இந்த வழிகாட்டுதல்கள் அகிலங்களும், பூமியில் உள்ளவையும் யாருடைய செயல்திட்டங்களை நிறைவேற்ற செயல்படுகின்றனவோ, அந்த ஏக இறைவனாகிய அல்லாஹ்விடமிருந்து இறக்கி அருளப்படுபவை ஆகும். எனவே மனிதர்களாகிய நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலும் அவன் நிர்ணயித்த விதிமுறைகளின் படியே விளைவுகளை ஏற்படுத்திச் செல்கின்றன. அதாவது அதனதன் நிர்ணயிக்கப்பட்ட விளைவுகளையே ஏற்படுத்தும் என்பதை அறிந்து செயல்படுங்கள்.