بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ

41:0.அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் அறிவுரைப்படியே அனைத்துக் காரியங்களையும் செய்ய நாடுகிறேன். (பார்க்க 6:162)


حمٓ.

41:1. பாராட்டுக்கும் போற்றுதலுக்கும் உரிய முஹம்மது நபி மூலம் இறக்கியருளப்பட்ட வேதமிது.


تَنزِيلٌۭ مِّنَ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ.

41:2. எவ்வித பிரதிப்பலனையும் எவரிடமும் எதிர் பார்க்காத அளவற்ற அருளாளனும்,மனிதனுக்கு சிறந்த வழிமுறைகளை எடுத்துரைக்கும் அன்புடையோனுமாகிய இறைவன் புறத்திலிருந்து இவை இறக்கி அருளப்படுகின்றன.


كِتَٰبٌۭ فُصِّلَتْ ءَايَٰتُهُۥ قُرْءَانًا عَرَبِيًّۭا لِّقَوْمٍۢ يَعْلَمُونَ.

41:3. மனித வாழ்க்கைக்குத் தேவையான இறைச் சட்ட திட்டங்கள் அனைத்தைப் பற்றியும் விவரமாக எழுதப்பட்ட வேதமிது. நீங்கள் அனைவரும் அறிவுபெறும் பொருட்டு,திருக்குர்ஆன் எனும் இவ்வவேதம் நீங்கள் பேசும் மொழியிலேயே தெள்ளத் தெளிவாக தொகுக்கப்படுகிறது.


بَشِيرًۭا وَنَذِيرًۭا فَأَعْرَضَ أَكْثَرُهُمْ فَهُمْ لَا يَسْمَعُونَ.

41:4. இறைவழிகாட்டுதலின் படி செயல்படுவோருக்கு கிடைக்கவிருக்கும் நிலையான சந்தோஷங்களும்,பாதுகாப்பான வாழ்வைப் பற்றிய நன்மாராயமும், இதற்கு எதிராக செயல்படுவோருக்கு ஏற்படவிருக்கும் விபரீத விளைவுகளைப் பற்றியும் இவ்வேதத்தில் தெளிவாக்கப்பட்டுள்ளது. இவ்வாறு இருந்தும் பெரும்பாலான மக்கள் இதை ஏற்க மறுக்கின்றனர். இதன் உண்மைகளை எடுத்துரைத்தாலும் அவர்கள் கேட்கத் தயாராக இல்லை.


وَقَالُوا۟ قُلُوبُنَا فِىٓ أَكِنَّةٍۢ مِّمَّا تَدْعُونَآ إِلَيْهِ وَفِىٓ ءَاذَانِنَا وَقْرٌۭ وَمِنۢ بَيْنِنَا وَبَيْنِكَ حِجَابٌۭ فَٱعْمَلْ إِنَّنَا عَٰمِلُونَ.

41:5. இறைவனின் வழிகாட்டுதலை அவர்களிடம் எடுத்துரைக்கும் போது, “நீங்கள் எதன் பக்கம் அழைக்கின்றீர்களோ,அவற்றை எங்கள் உள்ளங்கள் ஏற்றுக் கொள்ளாது. காரணம் அவற்றை கேட்கவே எங்களுக்கு வெறுப்பாக உள்ளது. எனவே உங்களுக்கும் எங்களுக்கும் இடையே உள்ள இந்த திரை விலகாது. எனவே நீங்கள் உங்கள் விருப்பப்படி செயல்படுங்கள். நாங்கள் எங்கள் வழக்கப்படி செயல்படுகிறோம். எங்களை விட்டுவிடுங்கள்” என்கின்றனர்.


قُلْ إِنَّمَآ أَنَا۠ بَشَرٌۭ مِّثْلُكُمْ يُوحَىٰٓ إِلَىَّ أَنَّمَآ إِلَٰهُكُمْ إِلَٰهٌۭ وَٰحِدٌۭ فَٱسْتَقِيمُوٓا۟ إِلَيْهِ وَٱسْتَغْفِرُوهُ ۗ وَوَيْلٌۭ لِّلْمُشْرِكِينَ.

41:6. இறைவழிகாட்டுதலை எடுத்துரைப்பவரே! “நானும் உங்களைப் போன்ற ஒரு சாதாரண மனிதன் தான்” என்று அவர்களிடம் எடுத்துரைப்பபீராக. மேலும், “ஆனால் ஒரு வித்தியாசம். எனக்கு வஹீ எனும் இறைவழிகாட்டுதல்கள் அளிக்கப்படுகின்றன. மற்றபடி என்னுடைய இறைவனும் உங்களுடைய இறைவனும் ஒருவனே ஆவான். எனவே அவன் காட்டும் வழியில் நிலைத்திருந்து செயல்படுங்கள். அதன் மூலம் உங்களுடைய பாதுகாப்பான வாழ்விற்கு வழியை தேடிக் கொள்ளுங்கள். இந்த உண்மைகளை ஏற்காமல் நீங்கள் மனம்போன போக்கில் வாழ்ந்தால் உங்கள் வாழ்க்கைத் தரம் மோசமாகி, துன்பம் துயரங்களை அனுபவிக்க வேண்டிவரும்” என்று அவர்களிடம் எடுத்துரைப்பீராக.


ٱلَّذِينَ لَا يُؤْتُونَ ٱلزَّكَوٰةَ وَهُم بِٱلْءَاخِرَةِ هُمْ كَٰفِرُونَ.

41:7. மேலும் இறைவழிகாட்டுதலை ஏற்றுக் கொண்டு சமூக நலத் திட்டங்களுக்காக நீங்கள் உதவி செய்யவில்லை என்றால்,நீங்களும் இறுதியில் இறை நிராகரிப்பவர்கள் பட்டியலில் தான் இடம்பெறுவீர்கள்.


إِنَّ ٱلَّذِينَ ءَامَنُوا۟ وَعَمِلُوا۟ ٱلصَّٰلِحَٰتِ لَهُمْ أَجْرٌ غَيْرُ مَمْنُونٍۢ.

41:8. இதற்கு மாறாக அல்லாஹ்வின் வழிகாட்டுதலை ஏற்றுக்கொள்வதோடு, ஆக்கப்பூர்வமான சமூக நலத் திட்டங்களுக்காக உழைப்பவர்களுக்கே சிறப்பான வாழ்க்கை வசதிகள் ஏற்பட்டு வரும். அவை ஒருபோதும் குறையாது.


۞ قُلْ أَئِنَّكُمْ لَتَكْفُرُونَ بِٱلَّذِى خَلَقَ ٱلْأَرْضَ فِى يَوْمَيْنِ وَتَجْعَلُونَ لَهُۥٓ أَندَادًۭا ۚ ذَٰلِكَ رَبُّ ٱلْعَٰلَمِينَ.

41:9. பூமியை இரண்டு கால கட்டங்களில் படைத்து உங்களுடைய வாழ்வாதாரங்களைப் பெற வழிசெய்துள்ள இறைவனின் வழிகாட்டுதலையா ஏற்க மறுக்கிறீர்கள்? இப்படியாக அல்லாஹ் அகிலங்கள் அனைத்தையும் படைத்துப் பரிபாலிக்கும் இறைவனாக இருக்கும் போது,பிறரை அவனுக்கு இணை ஆக்குகின்றீர்களா?
பூமி இரண்டு கால கட்டங்களில் படைத்திருப்பதை இரவு பகல் என இரு கால கட்டங்களாக பொருள் கொள்ளலாம். ஆனால் பூமி படைக்கப்பட்ட வரலாறு என்று எடுத்துக் கொண்டால் முதல் கட்டத்தில் இது எரிமலைப் பிழம்பாக இருந்ததும்,அதன் பின் வெப்பம் கொஞ்சம் கொஞ்சமாகக் தணிந்து,தற்போதுள்ள நிலை என்ற இரு கால கட்டங்கள் எனவும் பொருள் கொள்ளலாம். பூமியில் இருந்த வெப்பம் பல படித்தரங்களைக் கடந்து கொஞ்சம் கொஞ்சமாக குறைந்தது. ஒவ்வொரு படித்தரத்தைக் கடப்பதற்கும் எடுத்துக் கொள்ளப்பட்ட கால அளவு ஐம்பது ஐம்பதாயிரம் வருடங்கள் ஆகும் (பார்க்க 70:4) இறைவனின் இத்தகைய நீண்ட கால செயல் திட்டங்களின் அடிப்படையில் தான் பிரபஞ்சமும் இவ்வுலகமும் படைக்கப்பட்டன.


وَجَعَلَ فِيهَا رَوَٰسِىَ مِن فَوْقِهَا وَبَٰرَكَ فِيهَا وَقَدَّرَ فِيهَآ أَقْوَٰتَهَا فِىٓ أَرْبَعَةِ أَيَّامٍۢ سَوَآءًۭ لِّلسَّآئِلِينَ.

41:10. பூமியின் மேற்பரப்பில் இருந்த நீர் வடிந்து (பார்க்க 79:31) அதன் மேட்டுப் பகுதி மலைகளாகவும் தாழ்வானப் பகுதி கடலாகவும் உருவாயின. மேலும் இறைவன் மலைகள் மூலமாக பல்வேறு அருட்கொடைகளை கிடைக்கச் செய்தான். மேலும் பூமியில் நான்கு பருவக் காலங்களை சீராக அமைத்து அவற்றைக் கொண்டு எல்லா வகையான உணவு வகைகள் கிடைக்கும்படி ஏற்பாடு செய்துள்ளான். அனைத்து தரப்பு மக்களின் தேவைகளை நிறைவேற்றத் தான் இவையாவும் அளிக்கப்பட்டன. (பார்க்க 56:63-73)
உலகின் பல்வேறு பகுதிகளில் மழை பொழிவதற்கும்,மழைநீரைத் தேக்க வைப்பதற்கும் மலைகள் உதவி புரிகின்றன. அதுமட்டுமின்றி விலை மதிப்பற்ற உயிர் காக்கும் மூலிகைகளும்,வாழ்வாதாரப் பொருட்களும் மலைகளில் கிடைத்து வருவதை யாரும் மறுக்க முடியாது. இவை யாவும் இறைவன் அருட்கொடைகளாகும். மேலும் இவ்வாசகத்தில் நான்கு நாட்களில் உணவு வகைகளை சீராக்கி வைத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. உலகில் விளையும் எல்லா உணவு வகைகளும் பருவக் கால மாற்றங்களின் அடிப்படையில்தான் உற்பத்தியாகின்றன. எனவே நான்கு நாட்கள் என்பது கோடை, இலையுதிர், வசந்தம், குளிர் என நான்கு பருவக் காலங்கள் என பொருள்படும்.


ثُمَّ ٱسْتَوَىٰٓ إِلَى ٱلسَّمَآءِ وَهِىَ دُخَانٌۭ فَقَالَ لَهَا وَلِلْأَرْضِ ٱئْتِيَا طَوْعًا أَوْ كَرْهًۭا قَالَتَآ أَتَيْنَا طَآئِعِينَ.

41:11. இதற்கு முன் புகை மண்டலமாக இருந்த வானத்தையும்,எரிமலைப் பிழம்புகளுடன் சகதியாக இருந்த பூமியையும் சீராக்கும் செயல் திட்டம் இறைவனிடம் இருந்து வந்தது. அவற்றிலுள்ள படைப்புகள் யாவும் விரும்பத்தக்க விளைவுகளையும் விரும்பத்தகாத விளைவுகளையும் ஏற்படுத்துபவையாக உள்ளன. இருப்பினும் அவை அனைத்தும் இறைக் கட்டளைக்கு சிரம்பணிந்து ஆக்கப்பூர்வமாக செயல்படவே முன்வந்தன.(13:15)
அதாவது பிரபஞ்ச படைப்புகளில் எதுவும் தாமாக நன்மை பயப்பதாகவோ அல்லது தீமை விளைவிக்கக் கூடியதாகவோ இருப்பதில்லை. ஆனால் மனிதன் அவற்றை ஆக்கப்பூர்வமான நன்மைக்காகப் பயன்படுத்தினால்,அவை நன்மைகளைத் தரும். தவறாகப் பயன்படுத்தினால் விரும்பத் தகாத விளைவுகளை ஏற்படுத்தும். அவற்றில் இவ்விரு தன்மைகளும் உள்ளன. எடுத்துக்காட்டாக அணு சக்தி என்று ஆதி முதலே இருந்து வந்த சக்தியாகும். அவற்றை மனிதன் கண்டுபிடித்து மின் உற்பத்தி போன்ற ஆக்கப்பூர்வமாகவும் பயன்படுத்தலாம் அணு ஆயதங்களைத் தயாரித்து அழிவுக்காகவும் பயன்படுத்தலாம்.


فَقَضَىٰهُنَّ سَبْعَ سَمَٰوَاتٍۢ فِى يَوْمَيْنِ وَأَوْحَىٰ فِى كُلِّ سَمَآءٍ أَمْرَهَا ۚ وَزَيَّنَّا ٱلسَّمَآءَ ٱلدُّنْيَا بِمَصَٰبِيحَ وَحِفْظًۭا ۚ ذَٰلِكَ تَقْدِيرُ ٱلْعَزِيزِ ٱلْعَلِيمِ.

41:12. இப்படியாக அல்லாஹ்வின் மாபெரும் செயல்திட்டத்தின் படி ஏழேழு வானங்களையும் படைத்து,அவற்றின் நடுவே பூமியையும் படைத்து,அதில் இரவு பகல் என இரண்டு கால கட்டங்களில் செயல்படும் படி ஏற்பாடு ஆனது. மேலும் வானத்திலுள்ள ஒவ்வொறு படைப்பும் இறைவனின் செயல் திட்டத்தின் படியே செயல்பட்டு வருகிறது. இப்படியாக பூமியின் அருகாமையில் இருக்கும் வானத்தை அலங்கரிக்கும் வகையில் நட்சத்திரங்களை படைத்துள்ளான். மேலும் பூமி பாதுகாப்பாக இருக்க மற்ற கோள்களின் புவி ஈர்ப்பில் பாதுகாப்பாக செயல்படும் படி ஏற்படுத்தியுள்ளான். (பார்க்க 21:32, 36:38-40) இவையாவும் நிர்ணயிக்கபட்ட விதிமுறைகளின் படி செயல்படுகின்றன. அவற்றில் எதுவும் இறைக் கட்டளைக்கு மாறு செய்யும் சக்தி அறவே கிடையாது (பார்க்க 16:49-50)
அதாவது ஏழு வானங்கள் என்பது பூமியைச் சுற்றியுள்ள ஏழு வான் மண்டலங்கள் (Zones) எனப் புலனாகிறது. சூரியனின் ஒளிக்கதிர் அவற்றின் வழியாக பாயும் போது,பூமியின் ஒரு பகுதிக்கு சூரிய ஒளியும் வெப்பமும் கிடைக்கிறது. பூமியின் மறு பாதியில் இருள் சூழ்ந்து கொள்கிறது. மேலும் பூமி தன்னைத் தானே சுற்றிக் கொள்வதால், இரவும் பகலும் மாறிமாறி வருகின்றன. இந்த வான் மண்டலங்களின் ஏற்பாடுகள் மூலமாகத் தான் பூமிக்கு சீரான புவிஈர்ப்பு கிடைத்து,உயிரினங்கள் வாழ முடிகிறது. பூமியின் புவிஈர்ப்புக்கு வெளியே வான் மண்டலத்தைக் கடந்து சென்று விட்டால் எல்லாமே இருட்டாக இருக்கும்.
மேலும் பூமியின் அருகாமையில் உள்ள வானத்தை அலங்கரித்துள்ளதாக சொல்லப்படுகிறது. அதாவது இரவில் மின்னும் நட்சத்திரங்கள் தாம் வானத்தை அலங்கரிக்கின்றன. பிரபஞ்சம் என்று எடுத்துக் கொண்டால் இத்தகைய எண்ணற்ற சூரிய குடும்பங்களும் நட்சத்திரங்களும் இருக்கின்றன என்ற உண்மை நமக்குத் தெரிகிறது. இந்த படைப்புகளை எல்லாம் கவனித்துப் பார்க்கும் போது,அவற்றை படைத்தவனின் எல்லையற்ற வல்லமையைப் பிரதிபலிக்கின்றன. ஆனால் இவ்வுலகில் மனித படைப்பின் நிலை மட்டும் மாறுபட்டதாக உள்ளது. அவன் மற்ற படைப்புகளைப் போல் ஒரு குறிப்பிட்ட திசையில் தான் வாழவேண்டும் என்ற கட்டாயத்தில் இல்லை. (விளக்கத்திற்குப் பார்க்க 18:29)


فَإِنْ أَعْرَضُوا۟ فَقُلْ أَنذَرْتُكُمْ صَٰعِقَةًۭ مِّثْلَ صَٰعِقَةِ عَادٍۢ وَثَمُودَ.

41:13. ஆகவே இறைவழிகாட்டுதலை அவர்கள் ஏற்று நடக்க முன்வரவில்லை என்றால் ‘ஆது’ மற்றும் ‘சமூது’ சமூகத்தவர்களுக்கு ஏற்பட்ட அழிவுகளைப் போலவே இவர்களும் சந்திக்க வேண்டி வரும் என்பதை எச்சரிக்கை செய்வீராக.
அதாவது இறைவழிகாட்டுதலை ஏற்று நடக்கும் சமுதாயங்கள் பிரபஞ்ச ஆய்வுகளை மேற்கொண்டு சிறப்பாக வாழ்வதோடு,ஒழுக்க மாண்புகளையும் கட்டிக் காப்பாற்றுவார்கள். இதனால் இயற்கை சீற்றங்களால் ஏற்படும் ஆபத்துகளிலிருந்து பாதுகாத்துக் கொள்ளும் திறமையும் பக்குவமும் கிடைக்கும். இல்லையென்றால், மூட நம்பிக்கையில் மூழ்கி அழிந்து போவார்கள். பிரபஞ்ச படைப்புகளை ஆய்வு செய்யாமல் வாழ்ந்து வந்தால் காலப் போக்கில் சமுதாயத்தில் மூடநம்பிக்கைகள் வளர்ந்து,பொருளாதார பின்னடைவு ஏற்பட்டு,இறுதியில் அழிவைச் சந்திக்கும்.


إِذْ جَآءَتْهُمُ ٱلرُّسُلُ مِنۢ بَيْنِ أَيْدِيهِمْ وَمِنْ خَلْفِهِمْ أَلَّا تَعْبُدُوٓا۟ إِلَّا ٱللَّهَ ۖ قَالُوا۟ لَوْ شَآءَ رَبُّنَا لَأَنزَلَ مَلَٰٓئِكَةًۭ فَإِنَّا بِمَآ أُرْسِلْتُم بِهِۦ كَٰفِرُونَ.

41:14. அவர்களிடம் வந்த இறைத்தூதர்கள்,அல்லாஹ்வின் இத்தகைய வழிகாட்டுதலுக்கு மட்டும் அடிபணிந்து வாழுங்கள் என்று தான் அறிவுறுத்தினார்கள். அவர்களுக்கு முன் வாழ்ந்த சமூகத்தவர்களுக்கும்,அவர்களுக்குப் பின் வாழ்ந்தவர்களுக்கும் இதை தான் சொன்னார்கள். ஆனால் அவர்களோ எங்கள் இறைவன் எங்களை நேர்வழிப்படுத்த வேண்டும் என்று நாடியிருந்தால் மலக்குகளை அல்லவா அனுப்பியிருப்பான்? ஆனால் நீரோ எங்களைப் போன்ற சாதராண மனிதராக இருக்கின்றீரே! எனவே நாங்கள் உம் பேச்சை ஏற்க மாட்டோம்” என்று கூறி நிராகரித்து விட்டார்கள்.


فَأَمَّا عَادٌۭ فَٱسْتَكْبَرُوا۟ فِى ٱلْأَرْضِ بِغَيْرِ ٱلْحَقِّ وَقَالُوا۟ مَنْ أَشَدُّ مِنَّا قُوَّةً ۖ أَوَلَمْ يَرَوْا۟ أَنَّ ٱللَّهَ ٱلَّذِى خَلَقَهُمْ هُوَ أَشَدُّ مِنْهُمْ قُوَّةًۭ ۖ وَكَانُوا۟ بِـَٔايَٰتِنَا يَجْحَدُونَ.

41:15. இவ்வாறே ‘ஆது’ கூட்டத்தார் அநியாய அக்கிரம செயல்களைச் செய்துகொண்டு நாட்டில் குழப்பங்களை ஏற்படுத்தி வந்தார்கள். அவற்றை நிறுத்திக் கொள்ள அவர்களை அறிவுறுத்திய போது,மிகவும் ஆணவத்துடன் புறக்கணித்து விட்டார்கள். தம்மை விட வலிமை மிக்கவர்கள் யாருமில்லை என்ற மிதப்பில் இருந்தார்கள். ஆனால் அல்லாஹ்வின் வலிமையோ, இவர்களை விட பன்மடங்கு பெரியது என்பதை அவர்கள் எண்ணிப் பார்க்கவில்லை. அதைப் பற்றி ஆதாரப்பூர்வமாக எடுத்துரைத்தும் அவர்கள் மறுப்பவர்களாகவே இருந்தார்கள்.


فَأَرْسَلْنَا عَلَيْهِمْ رِيحًۭا صَرْصَرًۭا فِىٓ أَيَّامٍۢ نَّحِسَاتٍۢ لِّنُذِيقَهُمْ عَذَابَ ٱلْخِزْىِ فِى ٱلْحَيَوٰةِ ٱلدُّنْيَا ۖ وَلَعَذَابُ ٱلْءَاخِرَةِ أَخْزَىٰ ۖ وَهُمْ لَا يُنصَرُونَ.

41:16. எனவே உலக பேரழிவுகளிலேயே மிக மோசமான புயல் காற்று அங்கு தொடர்ந்து ஏழு நாட்கள் வீசியது (பார்க்க 69:7). அது அவர்களுடைய துர்பாக்கியமான நாட்களாக இருந்தன. அதன் விளைவாக அவர்கள் அனைவரும் பேரீத்த மரங்கள் வேரோடு பிடுங்கப்பட்டது போல் தலைக் குப்புரமாக விழுந்து கிடந்தனர் (பார்க்க 54:19) இது அவர்களுக்கு இவ்வுலகில் கிடைத்த இழிவான அழிவாகும். ஆனால் மறுமையில் கிடைக்கின்ற வேதனைகளோ இதைவிட பன்மடங்கு அதிகமாக இருக்கும். அவர்களை யாராலும் உதவி செய்ய முடியவில்லை.


وَأَمَّا ثَمُودُ فَهَدَيْنَٰهُمْ فَٱسْتَحَبُّوا۟ ٱلْعَمَىٰ عَلَى ٱلْهُدَىٰ فَأَخَذَتْهُمْ صَٰعِقَةُ ٱلْعَذَابِ ٱلْهُونِ بِمَا كَانُوا۟ يَكْسِبُونَ.

41:17. அதே போல் சமூது கூட்டத்தாருக்கும் சாலிஹ் நபி மூலம் நேர்வழியை எடுத்துரைத்தோம். (பார்க்க 7:73) ஆனால் அவர்கள் அந்த வழிகாட்டுதலை ஏற்றுக் கொள்ள விரும்பவில்லை. குருட்டுத்தனமாகவே வாழ விரும்பினர். எனவே தாம் செய்து வருவது நன்மையான செயல்களா தீய செயல்களா என்று கூட அவர்களால் அறிந்துகொள்ள முடியவில்லை. எனவே அவர்களுடைய தவறான செயல்களின் விளைவாக,இறைத்தூதர் செய்த முன்னெச்சரிக்கையையும் பொருட்படுத்தாமல் அங்கு ஏற்பட்ட பேரிடி பூகம்பத்தில் சிக்கி மடிந்து போயினர். (பார்க்க 11:65)


وَنَجَّيْنَا ٱلَّذِينَ ءَامَنُوا۟ وَكَانُوا۟ يَتَّقُونَ.

41:18. இறைத் தூதரை பின்பற்றியவர்கள்,அவருடைய அறிவுரையை ஏற்று அங்கிருந்து தப்பித்துக் கொண்டனர். அவர்கள் இறைவழிகாட்டுதலைப் பேணி நடப்பவர்களாக இருந்தனர்.


وَيَوْمَ يُحْشَرُ أَعْدَآءُ ٱللَّهِ إِلَى ٱلنَّارِ فَهُمْ يُوزَعُونَ.

41:19. அதே போன்று இன்றைய கால கட்டத்திலும் அல்லாஹ்வின் வழிகாட்டுதலுக்கு எதிராக செயல்படுபவர்கள் வேதனைகளுக்கு ஆளாவார்கள். அத்தகைய பகைவர்களை அடையாளங் கொள்வதில் சிரமம் எதுவும் இருக்காது.


حَتَّىٰٓ إِذَا مَا جَآءُوهَا شَهِدَ عَلَيْهِمْ سَمْعُهُمْ وَأَبْصَٰرُهُمْ وَجُلُودُهُم بِمَا كَانُوا۟ يَعْمَلُونَ.

41:20. அவர்களுடைய குற்றங்களை நிரூபிக்க வெளியிலிருந்து சாட்சிகளை கொண்டுவர வேண்டியிருக்காது. அவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள கேட்கும் புலன்களும்,பார்வைப் புலன்களும்,அங்க அடையாளங்களும் அவர்களை காட்டிக் கொடுத்துவிடும். அதாவது ஒவ்வொருடைய செயல்பாடுகளின் ஏடு அவர்கள் கழுத்தில் மாட்டப்பட்டு இருக்கும். (பார்க்க 17:13)
அதாவது தீவிர விசாரணைகளின் மூலம் குற்றங்களை எளிதில் நிரூபிக்க முடியும். இதை யாராலும் மறுக்க முடியாது. அல்லது நாட்டில் நிலவி வரும் சீர்கேடுகளே அவர்களுடைய தீய செயல்களை பறை சாற்றும்.


وَقَالُوا۟ لِجُلُودِهِمْ لِمَ شَهِدتُّمْ عَلَيْنَا ۖ قَالُوٓا۟ أَنطَقَنَا ٱللَّهُ ٱلَّذِىٓ أَنطَقَ كُلَّ شَىْءٍۢ وَهُوَ خَلَقَكُمْ أَوَّلَ مَرَّةٍۢ وَإِلَيْهِ تُرْجَعُونَ.

41:21. அவர்களுடைய அங்க அடையாளங்களே தம்மைக் காட்டிக் கொடுத்து விட்டனவே என்று வருத்தப்பட்டு நிற்கும்போது,அவற்றின் ஒவ்வொன்றையும் படைத்த அல்லாஹ் இதற்கேற்ற வகையில் தான் படைத்துள்ளான் என்று அவர்களுக்குப் பதிலளிக்கப்படும். இவ்வாறு தான் படைக்க வேண்டும் என்பது ஆதி முதலே இருந்து வந்த அல்லாஹ்வின் செயல் திட்டமாகும். எனவே அல்லாஹ் நிர்ணயித்த விதிமுறைகளின் படியே அவை செயல்பட்டாக வேண்டும்.


وَمَا كُنتُمْ تَسْتَتِرُونَ أَن يَشْهَدَ عَلَيْكُمْ سَمْعُكُمْ وَلَآ أَبْصَٰرُكُمْ وَلَا جُلُودُكُمْ وَلَٰكِن ظَنَنتُمْ أَنَّ ٱللَّهَ لَا يَعْلَمُ كَثِيرًۭا مِّمَّا تَعْمَلُونَ.

41:22. உங்களுடைய காதுகளும்,கண்களும்,அங்கங்களும் உங்களுக்கு எதிராக சாட்சி சொல்லக் கூடாது என்று விரும்பி இருந்தால், அதற்கேற்ற வகையில் பாவச் செயல்களை தவிர்த்து நேர்மையான முறையில் செயல்பட்டிருக்க வேண்டும். ஆனால் நீங்களோ அவ்வாறு செயல்படவில்லையே. நீங்கள் செய்பவை எதுவும் அல்லாஹ்வுக்குத் தெரிய வாய்ப்பில்லை என்றுதானே தவறாக எண்ணிக் கொண்டிருந்தீர்கள்?


وَذَٰلِكُمْ ظَنُّكُمُ ٱلَّذِى ظَنَنتُم بِرَبِّكُمْ أَرْدَىٰكُمْ فَأَصْبَحْتُم مِّنَ ٱلْخَٰسِرِينَ.

41:23. எனவே உங்களுடைய இறைவனைப் பற்றிய தவறான எண்ணங்களே, பாவச் செயல்களை செய்ய உங்களை தைரியமூட்டின. அதன் விளைவு இப்போது உங்களுக்கு ஏற்பட்டுள்ள துயரங்களும் அழிவுகளும். ஆகவே இன்றைய தினம் நீங்கள்தாம் நஷ்டவாளிகளாக நிற்கிறீர்கள்.


فَإِن يَصْبِرُوا۟ فَٱلنَّارُ مَثْوًۭى لَّهُمْ ۖ وَإِن يَسْتَعْتِبُوا۟ فَمَا هُم مِّنَ ٱلْمُعْتَبِينَ.

41:24. நீங்கள் அந்த வேதனைகளையும் துயரங்களையும் சகித்துக் கொள்ளலாம் என்று எண்ணினால் அது உங்களால் முடியவே முடியாது. அவற்றிலிருந்து மீள கூக்குரலிட்டு மன்னிப்பு கோரினாலும் யாரும் செவியேற்று மன்னிப்பு அளிப்பதாகவும் இல்லை. நெருப்பில் விழுந்து தவிப்பவனைப் போல் அந்த வேதனைகள் அவனை துயரத்தில் ஆழ்த்தும்.
சிந்தனையாளர்களே! 20-24 வாசகங்களில் சொல்லப்பட்ட விஷயங்கள் யாவும் இவ்வுலகில் இறைவனின் ஆட்சியமைப்பு நடைபெறும் கால கட்டத்திலும் நிகழும். அல்லது மரணத்திற்குப் பின் தொடர்கின்ற கால கட்டத்திலும் நிகழும். சிலருக்கு இவ்வுலகத்திலேயே அவர்கள் செய்த பாவச் செயல்களுக்கு ஏற்ற தண்டனைகள் கிடைக்கும். ஆக “மனித செயல்களுக்கேற்ற இறுதி விளைவுகள்” என்ற அல்லாஹ்வின் சட்டம் பிரபஞ்சத்தில் எல்லா இடங்களிலும் செல்லும் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
இத்தகைய வேதனைமிக்க இழி நிலைக்கு காரணம் என்னவென்றால் இறைவழிகாட்டுதல்களை ஏற்க மறுத்து வாழ்பவர்களுக்கு,தாம் செய்யும் செயல்கள் எல்லாமே அழகானவையே என எண்ணத் தோன்றுவதே ஆகும். எனவே இனம் இனத்தோடு சேரும் என்பது போல


۞ وَقَيَّضْنَا لَهُمْ قُرَنَآءَ فَزَيَّنُوا۟ لَهُم مَّا بَيْنَ أَيْدِيهِمْ وَمَا خَلْفَهُمْ وَحَقَّ عَلَيْهِمُ ٱلْقَوْلُ فِىٓ أُمَمٍۢ قَدْ خَلَتْ مِن قَبْلِهِم مِّنَ ٱلْجِنِّ وَٱلْإِنسِ ۖ إِنَّهُمْ كَانُوا۟ خَٰسِرِينَ.

41:25. தீயவர்கள் தீயவர்களோடு கூட்டு வைத்துக் கொண்டார்கள். எனவே முன் பின் என்ன நடக்க போகிறது என்பதைக் கூட கவனிக்காமல் கண்மூடித்தனமாக செயல்பட்டார்கள். தாம் செய்யும் செயல்கள் யாவும் அழகானவையே என்றும் எண்ணிக் கொண்டார்கள். (பார்க்க 43:36) ஆனால் நகர்புற மக்களானாலும் நாட்டுப்புற மக்களானாலும்,அல்லாஹ் ஏற்கனவே நிர்ணயித்த விதிமுறைகளின்படி வழிதவறிச் செல்பவர்களுக்கு வேதனைகள் வந்தடைவது தவிர்க்க முடியாததாகி விடுகிறது. அத்தகையவர்கள் பெரும் நஷ்டவாளிகளாகத் தான் இருப்பார்கள்.


وَقَالَ ٱلَّذِينَ كَفَرُوا۟ لَا تَسْمَعُوا۟ لِهَٰذَا ٱلْقُرْءَانِ وَٱلْغَوْا۟ فِيهِ لَعَلَّكُمْ تَغْلِبُونَ.

41:26. தற்சமயமுள்ள மக்களின் நிலைமை என்னவென்று தெரியுமா? அவர்களிடம் திருக்குர்ஆனில் உள்ள அறிவுரைகளை மக்களுக்கு எடுத்துரைத்தால் அவற்றை கேட்கவிடாமல் தடுத்து விடுகிறார்கள். அதையும் மீறி யாராவது எடுத்துரைத்தால் பெரிய கலவரமே மூண்டது போல கூச்சலிட்டு அதைத் தடுத்துவிட முற்படுகிறார்கள். இப்படி செய்து குர்ஆனிய செய்திகள் மக்களிடம் சென்றடையாதவாறு கட்டுப்படுத்திட முயலுகிறார்கள்.


فَلَنُذِيقَنَّ ٱلَّذِينَ كَفَرُوا۟ عَذَابًۭا شَدِيدًۭا وَلَنَجْزِيَنَّهُمْ أَسْوَأَ ٱلَّذِى كَانُوا۟ يَعْمَلُونَ.

41:27. இத்தகைய சமூக விரோதிகளுக்கு இறைவனின் நியதிப்படி கடுமையான தண்டனை காத்து நிற்கிறது. அவர்கள் செய்து வரும் தீய செயல்களுக்கு ஏற்ப துயரங்கள் மிக்க வேதனைகளையே அவர்கள் சுவைக்க நேரிடும்.


ذَٰلِكَ جَزَآءُ أَعْدَآءِ ٱللَّهِ ٱلنَّارُ ۖ لَهُمْ فِيهَا دَارُ ٱلْخُلْدِ ۖ جَزَآءًۢ بِمَا كَانُوا۟ بِـَٔايَٰتِنَا يَجْحَدُونَ.

41:28. இவையே அல்லாஹ்வின் வழிகாட்டுதலுக்கு எதிராகச் செயல்படுபவர்களுக்கு அளிக்கப்படும் கடுமையான தண்டனையாகும். தாளா வேதனைகளை அளிக்கும் அந்த நரகத்தில் அவர்கள் நிரந்தரமாக இருக்க நேரிடும். இவை யாவும் அவர்கள் மேலுள்ள வெறுப்பின் காரணமாக அல்ல. மாறாக அவர்கள் செய்து வந்த தீயச் செயல்களின் விளைவாகத் தரப்படும் தண்டனைகளே ஆகும்.


وَقَالَ ٱلَّذِينَ كَفَرُوا۟ رَبَّنَآ أَرِنَا ٱلَّذَيْنِ أَضَلَّانَا مِنَ ٱلْجِنِّ وَٱلْإِنسِ نَجْعَلْهُمَا تَحْتَ أَقْدَامِنَا لِيَكُونَا مِنَ ٱلْأَسْفَلِينَ.

41:29. அந்த வேதனைகள் தோற்றத்திற்கு வரும் கால கட்டத்தில் அவர்கள்,“எங்கள் இறைவா! எங்களை இந்த நிலைமைக்கு ஆளாக்கிய நாட்டுப்புற மற்றும் நகர்புறத்து விஷமிகள் எங்கே?” என்று கேட்பார்கள். (மேலும் பார்க்க 6:112) அவர்களை எங்களிடம் அனுப்பி வைப்பாயாக. அவர்களை நாம் கால்களால் மிதித்து நசுக்கிவிடுகிறோம்” என்று கூறுவார்கள்.


إِنَّ ٱلَّذِينَ قَالُوا۟ رَبُّنَا ٱللَّهُ ثُمَّ ٱسْتَقَٰمُوا۟ تَتَنَزَّلُ عَلَيْهِمُ ٱلْمَلَٰٓئِكَةُ أَلَّا تَخَافُوا۟ وَلَا تَحْزَنُوا۟ وَأَبْشِرُوا۟ بِٱلْجَنَّةِ ٱلَّتِى كُنتُمْ تُوعَدُونَ.

41:30. ஆனால் இறைவழிகாட்டுதலை ஏற்றுக் கொண்டவர்களின் நிலைமை இதற்கு நேர் மாற்றமாக இருக்கும். காரணம் அவர்கள் தங்களை படைத்து பரிபாலிப்பவனாகிய அல்லாஹ்வின் வழிகாட்டுதலில் நிலைத்திருந்து செயல்படுபவர்களாக இருக்கிறார்கள். அத்தகையவர்களுக்கு பிரபஞ்ச இயற்கைச் சக்திகளின் ஆதரவும் துணையும் நிச்சயமாகக் கிடைக்கின்றன. எனவே அங்கு எவ்வித பயமோ துயரமோ நிகழாத சமுதாயமாக உருவெடுக்கும். இவ்வாறாக சுவனத்திற்கு ஒப்பான சமுதாயமாக மாறிவரும். இதுவே அல்லாஹ்வின் வாக்குறுதியாகும். அதன்படி அவர்களுக்கு இவ்வுலகிலும் மறுமையிலும் கிடைக்கும்.


نَحْنُ أَوْلِيَآؤُكُمْ فِى ٱلْحَيَوٰةِ ٱلدُّنْيَا وَفِى ٱلْءَاخِرَةِ ۖ وَلَكُمْ فِيهَا مَا تَشْتَهِىٓ أَنفُسُكُمْ وَلَكُمْ فِيهَا مَا تَدَّعُونَ.

41:31. இப்படியாக இவர்களுக்கு இவ்வுலக வாழ்விலும் மறுமை வாழ்விலும் இறைவனின் உதவியும் ஆதரவும் கிடைத்து வரும். அத்தகைய சுவனத்திற்கு ஒப்பான சமுதாயத்தில் நீங்கள் விரும்பும் அனைத்தும் கிடைக்கும். நீங்கள் கேட்பதெல்லாம் கிடைக்கும். ஆனால் நீங்கள் அல்லாஹ்வின் நாட்டம் எதுவோ அதன்படியே செயல்படுவீர்கள். (76:30-31)


نُزُلًۭا مِّنْ غَفُورٍۢ رَّحِيمٍۢ.

41:32. அப்போது தான் அந்த சமுதாயம் முழு அளவில் பாதுகாப்பாகவும் இறைவனின் அருட்கொடைகளைப் பெற்றுக் கொண்டும் இருக்கும். எதுவரையில் இவ்வாறு செயல்படுகிறார்களோ,அதுவரையில் இச்சுவன வாழ்வு தொடர்ந்து கிடைத்து வரும் (பார்க்க 8:53)


وَمَنْ أَحْسَنُ قَوْلًۭا مِّمَّن دَعَآ إِلَى ٱللَّهِ وَعَمِلَ صَٰلِحًۭا وَقَالَ إِنَّنِى مِنَ ٱلْمُسْلِمِينَ.

41:33. இத்தகைய எழுச்சி மிகு சமுதாயத்தை உருவாக்க அல்லாஹ்வின் அழகிய செயல்திட்டங்களின் பக்கம் அழைப்பவரை விட சிறந்த மாமனிதர் வேறு யார் இருக்க முடியும்? மேலும் ஆற்றல் மிக்க அழகிய செயல்களைச் செய்து கொண்டு அல்லாஹ்வின் வழிகாட்டுதலுக்கு முற்றிலும் அடிபணிபவர்களுள் முதன்மையானவனாக இருப்பதாக கூறுகிறாரே! அவரை விட சிறந்த செயல்வீரர் வேறு யார் இருக்க முடியும்?


وَلَا تَسْتَوِى ٱلْحَسَنَةُ وَلَا ٱلسَّيِّئَةُ ۚ ٱدْفَعْ بِٱلَّتِى هِىَ أَحْسَنُ فَإِذَا ٱلَّذِى بَيْنَكَ وَبَيْنَهُۥ عَدَٰوَةٌۭ كَأَنَّهُۥ وَلِىٌّ حَمِيمٌۭ.

41:34. ஆக சமுதாய சமச்சீர் நிலையைக் கொண்டுவர சிறப்பாக செயல்படுபவரும்,சமுதாயத்தை கெடுக்கும் தீயவர்களும் சமமாக மாட்டார். எனவே சமுதாய நலத் திட்டங்களுக்காக பாடுபட்டு வந்தால் தான் சமூக சீர்கேடுகள் கொஞ்சம் கொஞ்சமாக நீங்கி வரும். அப்போது யாரெல்லாம் உங்களை எதிர்த்து நின்றார்களோ,அவர்கள் எல்லாம் உற்ற நண்பர்களாக மாறிவிடுவார்கள்.


وَمَا يُلَقَّىٰهَآ إِلَّا ٱلَّذِينَ صَبَرُوا۟ وَمَا يُلَقَّىٰهَآ إِلَّا ذُو حَظٍّ عَظِيمٍۢ.

41:35. இப்படியொரு நிலையை உருவாக்குவது சாதாரண காரியமல்ல. அல்லாஹ்வின் செயல்திட்டங்களில் நிலைத்திருந்து தொடர்ந்து உழைப்பவர்களுக்குத் தான் இத்தகைய நற்பாக்கியங்கள் கிடைக்கும். எனவே மனஉறுதியும் தைரியமும் செயல்திறனும் இருப்பது மிகமிக அவசியம்.
இறைவழிகாட்டுதலைப் பின்பற்றுவதைக் கொண்டு இத்தகைய சிறப்புகள் வளர்ந்து வரும். இது அல்லாஹ்வின் வாக்குறுதியாகும்.


وَإِمَّا يَنزَغَنَّكَ مِنَ ٱلشَّيْطَٰنِ نَزْغٌۭ فَٱسْتَعِذْ بِٱللَّهِ ۖ إِنَّهُۥ هُوَ ٱلسَّمِيعُ ٱلْعَلِيمُ.

41:36. எனவே இந்த செயல்திட்டங்களை நடைமுறைப்படுத்தும் போது, சமூக விரோத சக்திகள், இத்திட்டம் நிறைவேறாதவாறு சதிகளை செய்யும். அவற்றை கட்டுப்படுத்த இறைவனின் அறிவுரைப்படி தீவரமாக செயல்பட்டு பாதுகாப்பு நடவடிக்கையும் எடுத்து வாருங்கள். அல்லாஹ் கேட்பவனாகவும் அனைத்தையும் அறிபவனாகவும் இருக்கின்றான். எனவே உங்கள் முயற்சி ஒருபோதும் வீண் போகாது.
இத்தகைய சாதனைகளை உடனடியாக படைக்க வேண்டும் என்று நீங்கள் விரும்பினால் அது நடக்காது. இதற்காக அல்லும் பகலும் அயராது தொடர்ந்து உழைக்க வேண்டும். எனவே தான் இதை அல்லாஹ்வின் படைப்புகளை ஒப்பிட்டு உங்களுக்கு விளக்கம் அளிக்கப்படுகிறது.


وَمِنْ ءَايَٰتِهِ ٱلَّيْلُ وَٱلنَّهَارُ وَٱلشَّمْسُ وَٱلْقَمَرُ ۚ لَا تَسْجُدُوا۟ لِلشَّمْسِ وَلَا لِلْقَمَرِ وَٱسْجُدُوا۟ لِلَّهِ ٱلَّذِى خَلَقَهُنَّ إِن كُنتُمْ إِيَّاهُ تَعْبُدُونَ.

41:37. மாறி மாறி வரும் இரவுப் பகலைப் பற்றி கவனித்துப் பாருங்கள். அவை முறைப்படி செயல்பட்டு வருகின்றன. மேலும் சூரியனையும் சந்திரனின் செயல்பாடுகளையும் கவனித்துப் பாருங்கள். அவை அனைத்தும் அல்லாஹ்வின் வல்லமையின் சான்றுகளாக உள்ளன. அவை எவ்வாறு நிர்ணயிக்கப்பட்ட விதிமுறைகளின்படி செயல்படுகின்றதோ, நீங்களும் இறைவழிகாட்டுதலுக்கு மட்டும் அடிபணிந்து தொடர்ந்து செயல்பட்டு வந்தால் படிப்படியாக முன்னேறுவீர்கள். மாறாக சூரியனையும் சந்திரனையும் வணங்குவதால் உங்களுடைய முன்னேற்றம் துரிதமாகிவிடாது. அதனால் எந்த பலனும் ஏற்படாது. மனித வாழ்க்கைக்கு அவை துணைபுரியும் என எண்ணி அவற்றை வணங்குவது மூடநம்பிக்கையே.


فَإِنِ ٱسْتَكْبَرُوا۟ فَٱلَّذِينَ عِندَ رَبِّكَ يُسَبِّحُونَ لَهُۥ بِٱلَّيْلِ وَٱلنَّهَارِ وَهُمْ لَا يَسْـَٔمُونَ ۩.

41:38. இதை அறிவித்த பின்பும்,அவர்கள் அல்லாஹ்வின் வழிகாட்டுதலுக்கு அடிபணியாமல்,ஆணவத்தோடு நடந்து கொண்டால், அல்லாஹ்வின் பிரபஞ்ச படைப்பின் செயல்பாடுகளில் எந்த பாதிப்பும் ஏற்படப் போவதில்லை. அந்த படைப்புகள் யாவும் தமக்கு விதிக்கப்பட்டபடி தம் கடமைகளை அயராமல் அல்லும் பகலும் நிறைவேற்றி வருகின்றன. அதில் அவற்றிற்கு ஒருபோதும் சோர்வு ஏற்படுவதில்லை. அதனால் ஏற்படும் பாதிப்புகள் யாவும் உங்களுக்குத் தான்.


وَمِنْ ءَايَٰتِهِۦٓ أَنَّكَ تَرَى ٱلْأَرْضَ خَٰشِعَةًۭ فَإِذَآ أَنزَلْنَا عَلَيْهَا ٱلْمَآءَ ٱهْتَزَّتْ وَرَبَتْ ۚ إِنَّ ٱلَّذِىٓ أَحْيَاهَا لَمُحْىِ ٱلْمَوْتَىٰٓ ۚ إِنَّهُۥ عَلَىٰ كُلِّ شَىْءٍۢ قَدِيرٌ.

41:39. அல்லாஹ்வின் வல்லமைப் பற்றி மேற்கொண்டு ஆதாரங்கள் வேண்டும் என்றால்,அவர்கள் பூமியில் நடப்பவற்றைப் பற்றி கவனித்துப் பார்க்கட்டும். காய்ந்து வரண்டு கிடக்கும் பூமிக்கு மழை நீர் கிடைத்ததும் அது புத்துயிர் பெற்று பசுமையாகி விடுகிறது. அதாவது அல்லாஹ்வின் ஏற்பாடுகளைக் கொண்டே உயிரற்ற நிலையில் இருக்கும் பூமிக்கு உயிர் கிடைக்கிறது. அது போலவே எந்த ஆற்றலுமின்றி நடைபிணமாக வாழும் சமுதாயம் இறைவழிகாட்டுதல் மூலம் புத்துயிர் பெற்று சிறப்பாக வாழ வழி பிறக்கிறது. இப்படியாக அல்லாஹ்வின் புறத்திலிருந்து ஒவ்வொரு படைப்புக்கும் உரிய அளவுகோல்கள் நிலைநிறுத்தப்பட்டுள்ளன. அதன்படியே எல்லாமே நடைபெற்று வரும்.


إِنَّ ٱلَّذِينَ يُلْحِدُونَ فِىٓ ءَايَٰتِنَا لَا يَخْفَوْنَ عَلَيْنَآ ۗ أَفَمَن يُلْقَىٰ فِى ٱلنَّارِ خَيْرٌ أَم مَّن يَأْتِىٓ ءَامِنًۭا يَوْمَ ٱلْقِيَٰمَةِ ۚ ٱعْمَلُوا۟ مَا شِئْتُمْ ۖ إِنَّهُۥ بِمَا تَعْمَلُونَ بَصِيرٌ.

41:40. அதாவது இறைவனின் வழிகாட்டுதல்கள் சரியில்லை என்று கூறி குறை சொல்லிக் கொண்டு இருப்பவர்களுடைய செயல்கள் கண்காணிக்கப்படாமல் போகாது. எனவே அவர்கள் தம் மூடநம்பிக்கையில் நிலைத்து விட்டால்,அவர்கள் எவ்வித ஆற்றலுமின்றி வேதனைகள் மிக்க வாழ்வையே வாழ நேரிடும். இவ்வாறு நரகத்தில் எறியப்படுபவன் சிறந்தவனா? அல்லது மனித செயல்களின் விளைவுகள் தோற்றத்திற்கு வரும் கால கட்டத்தில் அச்சமின்றி சுகமாக வாழ்பவன் சிறந்தவனா? இதையும் மீறி அவர்கள் இறைவழிகாட்டுதலை ஏற்கவில்லை என்றால் அவர்களிடம்,“நீங்கள் விரும்பியதை செய்து கொண்டிருங்கள். நிச்சயமாக அல்லாஹ்வின் விதிமுறைகளின் படி உங்களுடைய ஒவ்வொரு செயலுக்கும் உரிய விளைவுகள் ஏற்பட்டுக் கொண்டே செல்லும்” என்று அறிவித்து விடுங்கள்.


إِنَّ ٱلَّذِينَ كَفَرُوا۟ بِٱلذِّكْرِ لَمَّا جَآءَهُمْ ۖ وَإِنَّهُۥ لَكِتَٰبٌ عَزِيزٌۭ.

41:41. எனவே எந்த சமுதாயத்தினர் அல்லாஹ்வின் அறிவுரைகளை ஏற்க மறுத்து வாழ்கிறார்களோ,அதன் விளைவுகளை அவர்கள் விரைவில் அனுபவித்துக் கொள்வார்கள். அல்லாஹ்வின் புறத்திலிருந்து நிலைநிறுத்தப்பட்ட இந்தச் சட்டமே என்றென்றும் மிகைத்து நிற்கும்.


لَّا يَأْتِيهِ ٱلْبَٰطِلُ مِنۢ بَيْنِ يَدَيْهِ وَلَا مِنْ خَلْفِهِۦ ۖ تَنزِيلٌۭ مِّنْ حَكِيمٍ حَمِيدٍۢ.

41:42. எனவே மூட நம்பிக்கையில் செயல்படும் சமூக அமைப்புகள் இதற்கு எதிராக நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ சதிகளை செய்யும். ஆனால் இறைச் சட்டங்களுக்கு அவை எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்த முடியாது. ஏனெனில் இந்த சட்ட திட்டங்கள் யாவும் அனைத்தையும் அறிந்துகொள்ளும் பேறாற்றலுடைய இறைவனிடமிருந்து இறக்கி அருளப்படுபவை ஆகும். அவனுடைய செயல் திட்டங்களே போற்றுதலுக்கு உரியவையாக இருக்க முடியும்.


مَّا يُقَالُ لَكَ إِلَّا مَا قَدْ قِيلَ لِلرُّسُلِ مِن قَبْلِكَ ۚ إِنَّ رَبَّكَ لَذُو مَغْفِرَةٍۢ وَذُو عِقَابٍ أَلِيمٍۢ.

41:43. ஆக இறைவழிகாட்டுதலுக்கு எதிரான இவர்களுடைய பேச்சும் நடவடிக்கைகளும் புதிதான ஒன்றல்ல. நபியே! உமக்கு முன்னர் வந்த இறைத்தூதர்களுக்கு எதிராகவும் இவ்வாறே செய்து வந்தனர். ஆனால் இத்தகைய எதிர்ப்புகளிலிருந்து உமக்கு இறைவன் புறத்திலிருந்து பாதுகாப்பு கிடைப்பது உறுதி. அதுபோலவே அவர்களுடைய தீய செயல்களின் விளைவாக கடுமையான வேதனைகள் அவர்களுக்குக் கிடைப்பதும் உறுதி.
இறைவழிகாட்டுதலை எதிர்ப்பதற்கு அவர்கள் கூறும் சாக்குப் போக்குகளுக்கு அளவே இருக்காது. இந்த வழிகாட்டுதல்கள் அவர்கள் பேசும் மொழியில் இருந்தால்,“இவ்வேதம் மாற்று மொழியில் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்குமே! அவற்றை மந்திரங்களைப் போல் சதா உச்சரித்துக் கொண்டே இருக்க முடியுமே” என்பார்கள்.


وَلَوْ جَعَلْنَٰهُ قُرْءَانًا أَعْجَمِيًّۭا لَّقَالُوا۟ لَوْلَا فُصِّلَتْ ءَايَٰتُهُۥٓ ۖ ءَا۬عْجَمِىٌّۭ وَعَرَبِىٌّۭ ۗ قُلْ هُوَ لِلَّذِينَ ءَامَنُوا۟ هُدًۭى وَشِفَآءٌۭ ۖ وَٱلَّذِينَ لَا يُؤْمِنُونَ فِىٓ ءَاذَانِهِمْ وَقْرٌۭ وَهُوَ عَلَيْهِمْ عَمًى ۚ أُو۟لَٰٓئِكَ يُنَادَوْنَ مِن مَّكَانٍۭ بَعِيدٍۢ.

41:44. இவ்வேதத்தை மாற்று மொழியில் இறக்கி அருளியிருந்தால்,“அதை நாம் பேசும் மொழியிலேயே தெளிவாக விளக்கமளித்து இருக்கக் கூடாதா?” என்பார்கள். அதாவது அரபு நாட்டவர்களுக்கு அரபி மொழியில் இவ்வேதம் இருப்பது கசப்பாக இருக்கிறது. அரபி மொழி பேசாதவர்களுக்கு இது புரியாத புதிராக இருக்கிறது. இவையாவும் அவர்கள் இவ்வேதத்தை ஏற்க விருப்பமில்லாமல் சொல்லும் சாக்கு போக்குகளே ஆகும். ஆனால் இறைவழிகாட்டுதலை ஏற்று நடப்பவர்களுக்கு இவ்வேதம் மனித வாழ்வின் எல்லா பிரச்னைகளுக்கும் அருமையான வழிமுறைகளை காட்டக் கூடியதாக உள்ளது. (பார்க்க 17:82) இதை ஏற்க விரும்பாதவர்கள், தம் காதுகளில் செவிட்டுத்தனம் இருப்பதுபோல் நடிப்பார்கள். இப்படியாகத் தான் அவர்கள் குருட்டுத்தனமான மூட நம்பிக்கையில் வாழ்வதையே விரும்புவார்கள். எனவே இந்த அறிவுரைகள் யாவும் அவர்களுக்கு மிகத் தொலைவிருந்து ஏதோ ஓசை எழுப்பப்படுவது போல் தோன்றுகிறது.


وَلَقَدْ ءَاتَيْنَا مُوسَى ٱلْكِتَٰبَ فَٱخْتُلِفَ فِيهِ ۗ وَلَوْلَا كَلِمَةٌۭ سَبَقَتْ مِن رَّبِّكَ لَقُضِىَ بَيْنَهُمْ ۚ وَإِنَّهُمْ لَفِى شَكٍّۢ مِّنْهُ مُرِيبٍۢ.

41:45. இதே போன்று மூஸா நபிக்கும் தெளிவான வேதத்தை நாம் அளித்தோம். அதுவும் அவர்கள் பேசும் மொழியிலேயே இருந்தது. அவற்றை கடைப்பிடித்து சிறப்பாகவும் வாழ்ந்தனர். (பார்க்க 2:47) அவருடைய மறைவுக்குப் பின் காலப் போக்கில் அவருடைய சமூகத்தினரிடையே வளர்ந்த போட்டி பொறாமையின் காரணமாக மார்க்கத்தில் பிளவை ஏற்படுத்திக் கொண்டனர். ஆனால் மனிதன் செய்யும் தவறான செயல்களுக்கு உடனடியாக தண்டிக்கக் கூடாது என்ற சட்டத்தை நாம் ஏற்கனவே நிர்ணயித்து விட்டதால் (பார்க்க 16:61) அவர்களை உடனுக்குடன் தண்டிக்கவில்லை. இல்லையென்றால் அப்போதே அவர்களுக்கு ஒரு முடிவு ஏற்பட்டிருக்கும். அதனால் அவர்கள் நம் தண்டனையைக் குறித்து ஆழ்ந்த சந்தேகத்திலேயே இருக்கின்றனர். எனவே அவர்கள் தம் தவறுகளை திருத்திக் கொள்ள விரும்புவதில்லை.
மேலும் மனிதனுக்கு முழு சுதந்திரம் அளிக்கப்பட்டு இருப்பதால்,அவன் எடுக்கும் தீர்மானத்தில் இறைவன் தலையிடுவதில்லை. ஆனால் அவன் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் ஏற்ற விளைவுகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. அந்த விளைவுகள் ஏற்படுவதில் மனிதன் தலையிட முடியாது. எனவே


مَّنْ عَمِلَ صَٰلِحًۭا فَلِنَفْسِهِۦ ۖ وَمَنْ أَسَآءَ فَعَلَيْهَا ۗ وَمَا رَبُّكَ بِظَلَّٰمٍۢ لِّلْعَبِيدِ.

41:46. எந்தச் சமுதாயம் ஆற்றல் மிக்க நற்செயல்களைச் செய்கின்றதோ, அவற்றின் பலன்கள் அதற்கே கிடைக்கும். மேலும் எந்தச் சமுதாயம் தவறான வழியில் செல்கின்றதோ,அவற்றின் கேடுகள் அதற்கே வந்தடையும். எனவே எத்தகைய சமுதாயம் தமக்கு வேண்டும் என்பதை மனிதன் தீர்மானித்து அதற்கேற்ற வகையில் செயல்பட வேண்டும். தீய விளைவுகள் வந்தடைந்த பிறகு இறைவனை குறை சொல்லிக் கொண்டிருப்பதில் எந்தப் பலனும் கிடைக்காது. ஏனெனில் இறைவன் புறத்திலிருந்து யாருக்கும் எவ்வித அநீதியும் இழைக்கப்படுவதில்லை. (பார்க்க 4:40)


۞ إِلَيْهِ يُرَدُّ عِلْمُ ٱلسَّاعَةِ ۚ وَمَا تَخْرُجُ مِن ثَمَرَٰتٍۢ مِّنْ أَكْمَامِهَا وَمَا تَحْمِلُ مِنْ أُنثَىٰ وَلَا تَضَعُ إِلَّا بِعِلْمِهِۦ ۚ وَيَوْمَ يُنَادِيهِمْ أَيْنَ شُرَكَآءِى قَالُوٓا۟ ءَاذَنَّٰكَ مَا مِنَّا مِن شَهِيدٍۢ.

41:47. மனித செயல்களின் விளைவுகள் தோற்றத்திற்கு வரும் கால கட்டத்தை நிர்ணயித்தது அல்லாஹ்தான்.எவ்வாறு ஒரு விதை செடியாகி,மரமாகி கனிகளை ஈட்ட கால அளவு நிர்ணயிக்கப்பட்டுள்ளதோ அல்லது எவ்வாறு ஒரு பெண் கருத்தரித்து பிரசவிப்பதற்கு கால அளவு நிர்ணயிக்கப்பட்டுள்ளதோ, அவ்வாறே மனிதனின் தீய செயல்களின் விளைவுகள் தோற்றத்திற்கு வரும் கால அளவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அந்த விளைவுகள் வேதனைகளாக வந்தடையும் கால கட்டத்தில் அல்லாஹ்வுக்கு இணையாகக் கருதப்பட்டவை எங்கே என்ற கேள்வி எழும். தங்களுக்கு ஆதரவாக சாட்சி சொல்லக் கூடிய எவரும் இல்லையே என்ற உண்மையும் அப்போது விளங்கும்.


وَضَلَّ عَنْهُم مَّا كَانُوا۟ يَدْعُونَ مِن قَبْلُ ۖ وَظَنُّوا۟ مَا لَهُم مِّن مَّحِيصٍۢ.

41:48. மேலும் இது வரையில் அவர்களை தவறான வழிமுறைகளின் பக்கம் அழைத்துக் கொண்டிருந்த மத குருமார்களும்,அவர்களை விட்டு மறைந்து விடுவார்கள். அவ்வேதனைகளிலிருந்து காப்பாற்ற அவர்களும் வரமாட்டார்கள். இதற்குக் காரணம் என்ன?


لَّا يَسْـَٔمُ ٱلْإِنسَٰنُ مِن دُعَآءِ ٱلْخَيْرِ وَإِن مَّسَّهُ ٱلشَّرُّ فَيَـُٔوسٌۭ قَنُوطٌۭ.

41:49. மனிதன் சொத்து செல்வங்களைக் குவிப்பதில் ஒருபோதும் சோர்வடைவதில்லை. (பார்க்க 100:8,102:1-2) ஆனால் அவனுக்குக் கெடுதி ஏற்பட்டுவிட்டால் நிராசையாகி விடுகிறான்.


وَلَئِنْ أَذَقْنَٰهُ رَحْمَةًۭ مِّنَّا مِنۢ بَعْدِ ضَرَّآءَ مَسَّتْهُ لَيَقُولَنَّ هَٰذَا لِى وَمَآ أَظُنُّ ٱلسَّاعَةَ قَآئِمَةًۭ وَلَئِن رُّجِعْتُ إِلَىٰ رَبِّىٓ إِنَّ لِى عِندَهُۥ لَلْحُسْنَىٰ ۚ فَلَنُنَبِّئَنَّ ٱلَّذِينَ كَفَرُوا۟ بِمَا عَمِلُوا۟ وَلَنُذِيقَنَّهُم مِّنْ عَذَابٍ غَلِيظٍۢ.

41:50. அதன்பின் அவன் பட்ட கஷ்டங்கள் எல்லாம் தீர்ந்து,அவனுக்கு வசதி வாய்ப்புகள் கிடைத்து வந்தால் அவையாவும் தனக்கே உரியவை என்று எண்ணிக் கொள்கிறான். மற்றவர்களுக்கு இதில் உரிமையில்லை என நினைத்துக் கொள்கிறான். அதனால் ஏற்படும் பாதிப்புகளைப் பற்றி எண்ணிப் பார்ப்பதில்லை. அப்படியும் தான் இறைவனிடம் செல்ல நேர்ந்தால் இதைவிட சிறப்பான நன்மையே கிடைக்கும் என்றும் எண்ணுகிறான். (பார்க்க 18:36) இவையாவும் அவனுடைய தவறான எண்ணங்களே என்பதை தெரியப்படுத்தி விடுங்கள். மனித செயல்களின் விளைவுகள் என்ற சட்ட விதிமுறைகளின்படி அவர்களுக்கு வேதனைகள் வந்தடைவதை யாராலும் தடுக்க முடியாது.


وَإِذَآ أَنْعَمْنَا عَلَى ٱلْإِنسَٰنِ أَعْرَضَ وَنَـَٔا بِجَانِبِهِۦ وَإِذَا مَسَّهُ ٱلشَّرُّ فَذُو دُعَآءٍ عَرِيضٍۢ.

41:51. ஏனெனில் மனிதனுக்கு வசதி வாய்ப்புகள் பெருக பெருக,இறைவனின் அறிவுரைகளை புறக்கணிக்கும் மனப்பான்மையும் கூடவே வளர்ந்து விடுகிறது. ஆனால் அவனுக்கு கெடுதி ஏற்படும் போதுதான் அதிலிருந்து மீள்வதற்கு இறைவனிடம் பிரார்த்தனை செய்வான்.
அதாவது தம்மிடமுள்ள உபரி செல்வங்களை மக்கள் நலத் திட்டங்களுக்காகப் பயன்படுத்த வேண்டும் என்பது இறைவனின் அறிவுரையாகும். இதை மக்கள் ஏற்று செயல்படவேண்டும். ஆனால் இதைப் புறக்கணித்து வாழ்ந்தால் அவனுள் கஞ்சத்தனம் வளர்ந்துவிடுகிறது. அதைத் தொடர்ந்து சமுதாயத்தில் ஏற்றத் தாழ்வு ஏற்பட்டு கலகம்,கலவரம் என துயரச் சம்பவங்கள் ஏற்படுகின்றன. அப்போது அதிலிருந்து காப்பாற்ற இறைவனிடம் பிரார்த்தித்துக் கொண்டிருக்கிறான்.


قُلْ أَرَءَيْتُمْ إِن كَانَ مِنْ عِندِ ٱللَّهِ ثُمَّ كَفَرْتُم بِهِۦ مَنْ أَضَلُّ مِمَّنْ هُوَ فِى شِقَاقٍۭ بَعِيدٍۢ.

41:52. இந்த அளவுக்கு இறைவழிகாட்டுதல்களை தெளிவாக்கிய பின்பும் அவற்றை ஏற்க மறுத்து வழிகேட்டில் செல்பவனை என்னவென்று சொல்வது? அத்தகைய வழிகேடர்கள் தவறான பாதையில் வெகுதூரம் சென்றுவிடுவதை நீங்கள் பார்ப்பதில்லையா? இதைப் பற்றி அவர்களிடம் எடுத்துரையுங்கள்.


سَنُرِيهِمْ ءَايَٰتِنَا فِى ٱلْءَافَاقِ وَفِىٓ أَنفُسِهِمْ حَتَّىٰ يَتَبَيَّنَ لَهُمْ أَنَّهُ ٱلْحَقُّ ۗ أَوَلَمْ يَكْفِ بِرَبِّكَ أَنَّهُۥ عَلَىٰ كُلِّ شَىْءٍۢ شَهِيدٌ.

41:53. இந்த குர்ஆனின் அறிவுரைகளை எவ்வளவு தான் புறக்கணித்து வாழ்ந்தாலும், இதில் சொல்லப்பட்ட வானுலக விஷயங்களும், சமுதாயத்தில் நிகழும் விஷயங்கள் ஆகிய அனைத்தும் மிகச் சரியானவையே என்பதை மனிதன் ஆய்வுகளின் மூலமும்,அனுபவங்களின் மூலமும் அறிந்து கொள்வான். மேலும் மனித சமுதாயத்தில் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகளையும் இந்த குர்ஆனில் சொல்லப்பட்டுள்ளன. அவற்றைப் பின்பற்றி வந்தால் அதன்படி நற்பலன்கள் கிடைப்பதும் உறுதியாகிக் கொண்டே செல்லும். இப்படியாக உமது இறைவனின் ஒவ்வொரு சொல்லும் உண்மையானதே என்பதற்கு இந்த குர்ஆன் சாட்சியாக நிற்கும்.
சிந்தனையாளர்களே! இந்த வாசகத்தில் அல்லாஹ்வின் ஆயத்துகள் வானுலகத்திலும் உங்களுக்குள்ளும் இருப்பதாக சொல்லப்பட்டுள்ளது. எனவே வானுலக படைப்புகள் மற்றும் மனித படைப்பு என்று அர்த்தம் கொள்கிறோம். காரணம் வானுலக படைப்பைப் பற்றி ஏறத்தாழ 850 வாசகங்கள் உள்ளன. அவற்றைப் பற்றி சொல்லப்பட்ட விஷயங்கள் யாவும் உண்மையானதே என்பதை மனிதன் ஆய்வுகளின் மூலம் அறிந்து கொள்வான். (பார்க்க 3:190-191) அதே போல் மனிதன் கடைப்பிடிக்க வேண்டிய வாழ்க்கை நெறிமுறைகளைப் பற்றியும் இந்தக் குர்ஆனில் சொல்லப்பட்டுள்ளன. அவையும் அல்லாஹ்வின் ஆயத்துகளாகும். அவற்றை அவன் ஏற்றுக் கொள்ளவில்லை என்றால் ஒவ்வொன்றாக அனுபவப்பட்டு இறுதியில் இறைவழிகாட்டுதலே உண்மையானது என்பதை அறிந்து கொள்வான்.


أَلَآ إِنَّهُمْ فِى مِرْيَةٍۢ مِّن لِّقَآءِ رَبِّهِمْ ۗ أَلَآ إِنَّهُۥ بِكُلِّ شَىْءٍۢ مُّحِيطٌۢ.

41:54. ஒரு விஷயத்தை மட்டும் நினைவில் கொள்ளுங்கள். மனித செயல்களின் விளைவுகள் என்ற இறைவனின் சட்டம் உண்மையானதே ஆகும். நற்செயல்களைச் செய்தால் நற்பலன்களையும், தீய செயல்களைச் செய்தால் தீய விளைவுகளையும் சந்தித்தே ஆகவேண்டும். ஆனால் அவர்கள் இன்னும் சந்தேகத்தில் தான் இருக்கிறார்கள். மனிதன் செய்யும் ஒவ்வொரு செயலும் அல்லாஹ்வின் கண்காணிப்பில் உள்ளது என்பதை அவர்களுக்கு எடுத்துரையுங்கள். எனவே இறைவனின் இந்தச் சட்டத்திலிருந்து யாரும் தப்பமுடியாது.