بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
40:0.அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் அறிவுரைப்படியே அனைத்துக் காரியங்களையும் செய்ய நாடுகிறேன். (பார்க்க 6:162)
حمٓ.
40:1. போற்றுதலுக்குரிய முஹம்மது நபி மூலம் இறக்கியருளப்பட்ட வேதமிது.
تَنزِيلُ ٱلْكِتَٰبِ مِنَ ٱللَّهِ ٱلْعَزِيزِ ٱلْعَلِيمِ.
40:2. அகிலங்களிலும் பூமியிலும் உள்ள அனைத்தையும் படைத்து கட்டுக்கோப்பாக வழிநடத்திச் செல்லும் சகல வல்லமையும் ஞானமும் உடைய அல்லாஹ்விடமிருந்து இறக்கியருளப்படும் வேதமிது.
غَافِرِ ٱلذَّنۢبِ وَقَابِلِ ٱلتَّوْبِ شَدِيدِ ٱلْعِقَابِ ذِى ٱلطَّوْلِ ۖ لَآ إِلَٰهَ إِلَّا هُوَ ۖ إِلَيْهِ ٱلْمَصِيرُ.
40:3. மனிதனின் கவனக் குறைவால் ஏற்படும் பிழைகளின் பாதிப்புகளிலிருந்து பாதுகாத்துக் கொள்ள வழிமுறைகளும் இவ்வேதத்தில் உள்ளன. பாவச் செயல்களால் ஏற்படும் கடுமையான விளைவுகளிலிருந்து மீள்வதற்குரிய வழிமுறைகளும் இதில் அறிவிக்கப்பட்டுள்ளன. (11:114, 25:70-77) இவ்வாறு திருந்துவதற்கு தக்க வாய்ப்பு அளித்திருப்பது இறைவனின் கருணையையே பிரதிபலிக்கிறது. அவனைத் தவிர வேறு யாருடைய அதிகாரமும் பிரபஞ்சத்தில் எங்கும் நடைபெறுவதில்லை. எனவே அவனுடைய வழிகாட்டுதலுக்கு எதிராக செயல்பட்டால் கடுமையான தண்டனையிலிருந்து மீளவே முடியாது. காரணம் நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலும் அவன் நிர்ணயித்த இலக்கை நோக்கியே செல்கிறது என்பதை அறிந்து செயல்படுங்கள். அதாவது அதன்படியே விளைவுகள் ஏற்பட்டே தீரும்.
இதை மையமாக வைத்து பேசும் வேதமிது. ஆனால்
مَا يُجَٰدِلُ فِىٓ ءَايَٰتِ ٱللَّهِ إِلَّا ٱلَّذِينَ كَفَرُوا۟ فَلَا يَغْرُرْكَ تَقَلُّبُهُمْ فِى ٱلْبِلَٰدِ.
40:4. இவற்றையெல்லாம் முற்றிலுமாக நிராகரிக்க வேண்டும் என்று ஏற்கனவே தீர்மானித்தவர்கள் தாம் அல்லாஹ்வின் இந்த சட்ட விதிமுறைகளைக் குறித்து தர்க்கம் செய்வார்கள். ஊரார் மத்தியில் அவர்களுக்கு கிடைத்துள்ள சுகபோக வாழ்வும் அந்தஸ்தும், அவர்களை இந்த முடிவுக்கு வரச் செய்கிறது. அவர்களுடைய போக்கைக் கண்டு நீங்கள் ஏமாற வேண்டாம்.
அவர்கள் செய்து வரும் தீய செயல்களே அவர்களுடைய அழிவிற்கு காரணிகளாக அமைந்துவிடும். இவ்வாறு அல்லாஹ்வின் வழிகாட்டுதலை ஏற்க மறுப்பது புதிதான ஒன்றல்ல. காலம் காலமாக இப்படித் தான் நடந்து வந்துள்ளது. உதாரணத்திற்கு
كَذَّبَتْ قَبْلَهُمْ قَوْمُ نُوحٍۢ وَٱلْأَحْزَابُ مِنۢ بَعْدِهِمْ ۖ وَهَمَّتْ كُلُّ أُمَّةٍۭ بِرَسُولِهِمْ لِيَأْخُذُوهُ ۖ وَجَٰدَلُوا۟ بِٱلْبَٰطِلِ لِيُدْحِضُوا۟ بِهِ ٱلْحَقَّ فَأَخَذْتُهُمْ ۖ فَكَيْفَ كَانَ عِقَابِ.
40:5. நூஹ் நபியின் சமுதாயமும், பிற்காலத்தில் வந்த பல சமுதாயத்தினரும் இறைவழிகாட்டுதல் என்பதெல்லாம் சரியில்லை என்று சொல்லி வந்தார்கள். இருப்பினும் அவர்களை திருத்தி நேர்வழியில் கொண்டுவர ஒவ்வொரு சமூகத்தவரிடமும் இறைவனின் நியதிப்படி இறைத் தூதர்கள் வந்தார்கள். ஆனால் அவர்கள் தம்மிடம் வந்த இறைத் தூதரிடம் போலியான சடங்கு சம்பிரதாயங்களை ஆதரித்து, தர்க்கங்களைச் செய்து அவர் மீது குற்றம் சுமத்தனர். இவ்வாறு அவர்கள் நடந்து கொண்டதால் அவர்கள் வெற்றி கண்டார்களா? இல்லை. இறுதியில் அல்லாஹ்வின் நியதிப்படி அவர்கள் எல்லாம் கடுமையான அழிவிற்கே ஆளானார்கள்.
وَكَذَٰلِكَ حَقَّتْ كَلِمَتُ رَبِّكَ عَلَى ٱلَّذِينَ كَفَرُوٓا۟ أَنَّهُمْ أَصْحَٰبُ ٱلنَّارِ.
40:6. இவ்வாறு இறைவழிகாட்டுதலை நிராகரித்து தவறான வழியில் செல்வோர் அழிவை சந்திப்பது சர்வ நிச்சயம் என்ற அல்லாஹ்வின் வாக்கு உண்மையே என்று நிரூபணமாகி வந்துள்ளது.
ٱلَّذِينَ يَحْمِلُونَ ٱلْعَرْشَ وَمَنْ حَوْلَهُۥ يُسَبِّحُونَ بِحَمْدِ رَبِّهِمْ وَيُؤْمِنُونَ بِهِۦ وَيَسْتَغْفِرُونَ لِلَّذِينَ ءَامَنُوا۟ رَبَّنَا وَسِعْتَ كُلَّ شَىْءٍۢ رَّحْمَةًۭ وَعِلْمًۭا فَٱغْفِرْ لِلَّذِينَ تَابُوا۟ وَٱتَّبَعُوا۟ سَبِيلَكَ وَقِهِمْ عَذَابَ ٱلْجَحِيمِ.
40:7. ஆனால் அல்லாஹ்வின் வழிகாட்டுதலின்படி உருவாக்கப்பட்டுள்ள ஆட்சியமைப்பை கட்டிக் காப்பாற்றுபவர்கள், இத்தகைய வீணான தர்க்கங்களையும், முறையற்ற செயல்களையும் செய்ய மாட்டார்கள். ஆட்சி பொறுப்பில் இருப்பவர்களும், அதன் கீழ் பணிபுரிபவர்களும் தமது இறைவனின் செயல்திட்டங்களை பாராட்டுக்கும் போற்றுதலுக்கும் உரியவையாக ஆக்கிட, தமக்கு ஒதுக்கப்பட்ட கடமைகளை சிறப்பாக நிறைவேற்றி வருவார்கள். இறைவனின் செயல்திட்டங்களில் முழுமையான நம்பிக்கை கொண்டு செயலாற்றுவார்கள். நாட்டில் அசம்பாவிதங்கள் நிகழாதவாறு பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுப்பார்கள். மேலும் அந்த செயல் வீரர்கள், “எங்கள் இறைவனே! இந்த அகிலத்தில் உன் அருட்கொடைகள் இல்லாத இடமே இல்லை. இவ்வுலகில் நடக்கும் எந்த விஷயமும் உனக்குத் தெரியாமல் போகவே முடியாது. எனவே தவறான வழிமுறைகளை விட்டுவிட்டு, நீ காட்டும் நேரான வழியை கடைப்பிடிக்கவே நாடுகிறோம். (பார்க்க 1:5) எனவே அறியாமையில் செய்த தவறான செயல்களின் தாக்கங்களிலிருந்து எங்களுக்கு பாதுகாப்பு அளிப்பாயாக. எங்களை நரக வேதனைகளிலிருந்து காத்தருள்வாயாக” என்பதாக தம் எண்ணங்களும் செயல்பாடுகளும் இருக்கும்.
رَبَّنَا وَأَدْخِلْهُمْ جَنَّٰتِ عَدْنٍ ٱلَّتِى وَعَدتَّهُمْ وَمَن صَلَحَ مِنْ ءَابَآئِهِمْ وَأَزْوَٰجِهِمْ وَذُرِّيَّٰتِهِمْ ۚ إِنَّكَ أَنتَ ٱلْعَزِيزُ ٱلْحَكِيمُ.
40:8. மேலும் அவர்கள், “எங்கள் இறைவனே! நீ அளித்த வாக்குறுதிப்படி, வாழ்வின் எல்லா வளங்களையும் சந்தோஷங்களையும் கொண்ட சுவனத்திற்கு ஒப்பான சமுதாயமாக ஆக்கிட வழிவகுப்பாயாக. இச்சுவனத்திற்கு ஒப்பான சமுதாயத்தில், முஃமின்களையும் அவர்களுக்குத் துணை நின்ற குடும்பத்தாரையும், சக தோழர்களையும் சந்ததியர்களையும் இடமளிப்பாயாக. நிச்சயமாக உன் செயல்திட்டங்கள் யாவும் அனைத்தையும் கட்டுக்கோப்பாகச் செயல்படக் கூடியவையாகவும் ஞானம் மிக்கவையாகவும் உள்ளன என்பதை நாம் அறிவோம்” என்று தம் எண்ணங்களை இறைவனிடம் சமர்ப்பிப்பார்கள்.
وَقِهِمُ ٱلسَّيِّـَٔاتِ ۚ وَمَن تَقِ ٱلسَّيِّـَٔاتِ يَوْمَئِذٍۢ فَقَدْ رَحِمْتَهُۥ ۚ وَذَٰلِكَ هُوَ ٱلْفَوْزُ ٱلْعَظِيمُ.
40:9. மேலும் தீய செயல்கள் நிகழாதவாறு இச்சமுதாயத்தை காத்தருள்வாயாக. காரணம் தீய செயல்களிலிருந்து விலகியிருக்கும் சமுதாயங்களே உன் நிரந்தர அருட்கொடைகளுக்கு உரியவர்கள் ஆவர். இத்தகைய சமுதாயம் உருவாவது மிகப் பெரிய வெற்றியாகும் என்பதை உணர்ந்து செயலாற்றுவார்கள்.
إِنَّ ٱلَّذِينَ كَفَرُوا۟ يُنَادَوْنَ لَمَقْتُ ٱللَّهِ أَكْبَرُ مِن مَّقْتِكُمْ أَنفُسَكُمْ إِذْ تُدْعَوْنَ إِلَى ٱلْإِيمَٰنِ فَتَكْفُرُونَ.
40:10. ஆனால் இறைவழிகாட்டுதலை ஏற்க மறுத்து வாழ்பவர்களிடம், அவர்களுடைய செயல்களின் விளைவுகள் தோற்றத்திற்கு வரும் கால கட்டத்தில், “இன்றைய தினம் உங்களை நீங்களே பழித்துக் கொள்ள வேண்டியது தான்” என்று கூறப்படும். “காரணம் உங்களை நேர்வழியின் பக்கம் அழைத்தபோது, நீங்கள் அதை வெறுத்து நிராகரித்து விட்டீர்கள். எனவே அல்லாஹ்வின் நியதிப்படி இந்த வெறுப்பு உங்களை தாளா வேதனைகளில் ஆழ்த்தி விட்டது” என்று கூறப்படும்.
قَالُوا۟ رَبَّنَآ أَمَتَّنَا ٱثْنَتَيْنِ وَأَحْيَيْتَنَا ٱثْنَتَيْنِ فَٱعْتَرَفْنَا بِذُنُوبِنَا فَهَلْ إِلَىٰ خُرُوجٍۢ مِّن سَبِيلٍۢ.
40:11. அப்போது அவர்கள், “எங்கள் இறைவனே நாங்கள் உயிரற்ற நிலையில் இருந்த போது, எங்களுக்கு உயிர் கொடுத்து உலகில் வாழ வழி செய்தாய். நாங்கள் மரணித்த பின் மீண்டும் இரண்டாம் முறையாக உயிர் கொடுத்து எழுப்பியுள்ளாய். இப்படியாக எங்களுக்கு இருமுறை மரணமும் இருமுறை வாழ்வும் கிடைத்தன. இப்போது நாங்கள் எங்கள் பாவங்களை ஒப்புக் கொள்கிறோம். எனவே இவ்வேதனையிலிருந்து வெளியேற வழி ஏதேனும் உண்டா?” என்று கேட்பார்கள். (மேலும் பார்க்க 2:28, 37:58, 44:56)
ذَٰلِكُم بِأَنَّهُۥٓ إِذَا دُعِىَ ٱللَّهُ وَحْدَهُۥ كَفَرْتُمْ ۖ وَإِن يُشْرَكْ بِهِۦ تُؤْمِنُوا۟ ۚ فَٱلْحُكْمُ لِلَّهِ ٱلْعَلِىِّ ٱلْكَبِيرِ.
40:12. அதற்கு, “அல்லாஹ்வின் வழிகாட்டுதலுக்கு மட்டும் அடிபணிந்து செயல்பட முன்வாருங்கள்” என்று உங்களிடம் வந்த அழைப்பை ஏற்க மறுத்து விட்டீர்கள். அல்லாஹ்வின் வழிகாட்டுதலை விட்டுவிட்டு அதற்கு இணையான வேறு வழிமுறைகளின் மீதே உங்களுக்கு முழு நம்பிக்கை இருந்து வந்தது. (பார்க்க 39:45) ஆனால் இன்றைய தினம் அல்லாஹ்வின் கட்டளைகளே யாவற்றையும் மிகைத்து நிற்கின்றன என்பதை நீங்களே அறிந்துகொண்டீர்கள். எனவே இனி உங்கள் ஆசைகள் ஒருபோதும் நிறைவேறாது” என்றே பதில் அளிக்கப்படும்.
هُوَ ٱلَّذِى يُرِيكُمْ ءَايَٰتِهِۦ وَيُنَزِّلُ لَكُم مِّنَ ٱلسَّمَآءِ رِزْقًۭا ۚ وَمَا يَتَذَكَّرُ إِلَّا مَن يُنِيبُ.
40:13. இறைவழிகாட்டுதலை எடுத்துரைத்தவர் உங்களுக்கு புதிய விஷயங்களை ஒன்றும் எடுத்துரைக்கவில்லை. அல்லாஹ்வின் படைப்புகளைப் பற்றியும் அவனுடைய சகல வல்லமைகளைப் பற்றியுமே அவர் எடுத்துரைத்தார். வானத்திலிருந்து இறக்கியருளப்படும் மழை நீரைக் கொண்டே உங்களுக்கு வாழ்வாதாரங்கள் கிடைக்கின்றன என்ற உண்மையைத் தானே அவர் உங்களுக்கு எடுத்துரைத்தார்? எனவே இந்த பேருண்மைகளை சிந்தித்து ஏற்றுக் கொள்பவர்களைத் தவிர வேறு யாரும் அல்லாஹ்வின் கட்டளைக்கு உட்பட்டு நடக்க மாட்டார்கள் என்று தானே அவர் கூறினார்.
فَٱدْعُوا۟ ٱللَّهَ مُخْلِصِينَ لَهُ ٱلدِّينَ وَلَوْ كَرِهَ ٱلْكَٰفِرُونَ.
40:14. இதைப் பற்றி சிந்தித்து முற்றிலுமாக ஏற்றுக்கொள்ள முன்வராதவர்களுக்கு அவருடைய அழைப்பு மிகவும் வெறுப்பையே தந்தது. இருப்பினும் அவர் அல்லாஹ்வின் வழிமுறைகளுக்கு மட்டும் அடிபணிந்து வாழும்படி உங்களுக்கு தொடர்ந்து எடுத்துரைத்து வந்தார்.
رَفِيعُ ٱلدَّرَجَٰتِ ذُو ٱلْعَرْشِ يُلْقِى ٱلرُّوحَ مِنْ أَمْرِهِۦ عَلَىٰ مَن يَشَآءُ مِنْ عِبَادِهِۦ لِيُنذِرَ يَوْمَ ٱلتَّلَاقِ.
40:15. மேலும் அவர், அல்லாஹ் காட்டும் வழிமுறைகளை பின்பற்றுவதைக் கொண்டே உங்களுக்கு உயர்வும், அந்தஸ்தும், அரசாளும் தகுதியும் படிப்படியாக கிடைக்கும் என்று சொல்லி வந்தார். இவையாவும் இறைவனால் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட செயல்திட்டங்களாகும். இந்த உண்மைகளை எடுத்துரைக்க யார் தகுதியுடையவராக இருக்கிறாரோ அவர் மூலம் தான் இறைவழிகாட்டுதலை இறக்கி அருள வேண்டும் என்பதும் அவனுடைய செயல்திட்டமாகும். இதை அடிப்படையாக வைத்து நீங்கள் செய்துவரும் செயல்கள் சரியா அல்லது தவறா என்பதை அறிவித்து, தவறான செயல்களால் ஏற்படும் விபரீத விளைவுகளைப் பற்றி எடுத்துரைக்கவே தான் வந்துள்ளதாக அவர் உங்களிடம் கூறினார்.
ஆனால் நீங்களோ இறைவழிகாட்டுதலை எடுத்துரைத்த தூதர் ஒரு சாதாரண மனிதராகவே இருக்கிறாரே என்று கூறி அவருடைய அறிவுரைகளை மதிக்கவில்லை. எனவே
يَوْمَ هُم بَٰرِزُونَ ۖ لَا يَخْفَىٰ عَلَى ٱللَّهِ مِنْهُمْ شَىْءٌۭ ۚ لِّمَنِ ٱلْمُلْكُ ٱلْيَوْمَ ۖ لِلَّهِ ٱلْوَٰحِدِ ٱلْقَهَّارِ.
40:16. நீங்கள் செய்து வந்த செயல்களின் விளைவுகள் தோற்றத்திற்கு வரும் காலக் கட்டம் வந்துவிட்டது. இன்றைய கால கட்டத்தில் நீங்கள் செய்த எந்த விஷயமும் மறைக்கலாகாது. எல்லாமே அல்லாஹ்வின் அதிகாரத்திற்கு உட்பட்டே தீர்மானிக்கப்படும். அவனைத் தவிர வேறு யாருடைய அதிகாரமும் செல்லாது.
எனவே நீங்கள் விரும்புவது போல மீண்டும் உலகிற்கு திரும்பி செல்லவே முடியாது. காலத்தின் சுழல் முன்நோக்கி செல்லுமே அன்றி பின்னுக்குத் தள்ளப்பட மாட்டாது. மக்களே! மரணத்திற்குப் பின் நடப்பவையே இவ்வுலகிலும் சமுதாயங்களிடையே நடந்து வரும் என்பதை நாம் மீண்டும் வலியுறுத்தி சொல்கிறோம். அதாவது இவ்வுலகில் அல்லாஹ் காட்டிய வழியில் ஆட்சி நடைபெறும் போதும், இத்தகைய வேதனைகள் அநியாயக்காரர்களுக்குக் கிடைக்கும். மூஃமின்களுக்கு உயர்வும் அந்தஸ்தும் கிடைக்கும் என்பதே இந்த குர்ஆனின் நிலைப்பாடாகும். எனவே குர்ஆனின் வாசகங்களை இவ்விரு விஷயங்களையும் வைத்து சிந்தித்துப் பார்க்க வேண்டும். அதாவது அனைத்து அதிகாரங்களுக்கும் உரிய அல்லாஹ்வின் ஆட்சி இவ்வுலகில் நடைபெறும் கால கட்டத்திலும், மரணத்திற்குப் பின் தொடர்கின்ற கால கட்டங்களிலும் இதே சட்டம் பொருந்தும்.
ٱلْيَوْمَ تُجْزَىٰ كُلُّ نَفْسٍۭ بِمَا كَسَبَتْ ۚ لَا ظُلْمَ ٱلْيَوْمَ ۚ إِنَّ ٱللَّهَ سَرِيعُ ٱلْحِسَابِ.
40:17. அப்படியொரு கால கட்டத்தில் ஒவ்வொருவரும் செய்து வரும் செயல்களுக்குரிய பலன்களை பெற்றுக்கொள்வர். நிச்சயமாக யாருக்கும் எவ்வித அநீதியும் இழைக்கப்பட மாட்டாது. அல்லாஹ்வின் ஆட்சியமைப்பு கணக்கெடுப்பதில் மிகத் துல்லியமாகச் செயல்படும்.
وَأَنذِرْهُمْ يَوْمَ ٱلْءَازِفَةِ إِذِ ٱلْقُلُوبُ لَدَى ٱلْحَنَاجِرِ كَٰظِمِينَ ۚ مَا لِلظَّٰلِمِينَ مِنْ حَمِيمٍۢ وَلَا شَفِيعٍۢ يُطَاعُ.
40:18. இறைவழிகாட்டுதலை எடுத்துரைப்பவரே! இறைக் கட்டளைக்கு மாறு செய்வதால் ஏற்படும் அதிபயங்கர விளைவுகளைப் பற்றி எடுத்துரைத்து முன்னெச்சரிக்கை செய்வீராக. அவ்வேதனைகள் ஏற்படும் போது, அவர்களுடைய உள்ளங்கள் பயத்தால் தொண்டையை அடைத்துக் கொள்ளும். அந்த தருணத்தில் அநியாயக்காரர்களுக்கு உதவிட யாரும் முன்வர மாட்டார்கள். அல்லது யாருடைய பரிந்துரையும் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.
ஆனால் இப்போதோ அநியாயக்காரர்கள் இவ்வுலக வாழ்வில் தப்பித்துக் கொள்கிறார்கள். கண்கள் செய்யும் மோசங்களையும் உள்ளங்களில் மறைத்து வைப்பதையும் யாராலும் கண்டுபிடிக்க முடிவதில்லை. ஆனால் இறைவனின் ஆட்சியமைப்பு நடைபெறும் கால கட்டத்தில்,
يَعْلَمُ خَآئِنَةَ ٱلْأَعْيُنِ وَمَا تُخْفِى ٱلصُّدُورُ.
40:19. கண்கள் செய்யும் மோசத்தையும் அவர்கள் உள்ளங்களில் மறைத்து வைப்பதையும் அல்லாஹ்வின் நியதிப்படி வெட்ட வெளிச்சமாகிவிடும். யாரும் எவ்வித தண்டனையிலிருந்தும் தப்பிக்க முடியாது.
وَٱللَّهُ يَقْضِى بِٱلْحَقِّ ۖ وَٱلَّذِينَ يَدْعُونَ مِن دُونِهِۦ لَا يَقْضُونَ بِشَىْءٍ ۗ إِنَّ ٱللَّهَ هُوَ ٱلسَّمِيعُ ٱلْبَصِيرُ.
40:20. இதை வெறும் அச்சுறுத்தல் என்று எடுத்துக் கொள்ளாதீர்கள். இதுவே நடந்து வந்த, நடக்கின்ற, இனி நடக்கவிருக்கின்ற உண்மைகளாகும். இதை யாராலும் மாற்ற முடியாது. அல்லாஹ்வை விட்டுவிட்டு கற்பனை தெய்வங்களை ஏற்படுத்திக் கொண்டு வேறு வழிமுறைகளைக் கடைப்பிடிப்பதால் நிரந்தரப் பலன்களைப் பெறவே முடியாது. நிச்சயமாக அனைத்தையும் பார்த்து அறிந்துகொள்ளும் அளவிலா வல்லமை அல்லாஹ்வுக்கு உண்டு என்பதை அவர்கள் அறிந்து கொள்ளட்டும். அதாவது அவரவர் செய்யும் செயல்களுக்கேற்ப பலன்களையும் விளைவுகளையும் நிச்சயமாகப் பெற்றுக் கொள்வார்கள்.
இவையாவும் இவ்வேதத்தில் எழுதப்பட்டுள்ள கதைகளே என்று அவர்கள் எண்ணுகிறார்களா? அப்படியென்றால்
۞ أَوَلَمْ يَسِيرُوا۟ فِى ٱلْأَرْضِ فَيَنظُرُوا۟ كَيْفَ كَانَ عَٰقِبَةُ ٱلَّذِينَ كَانُوا۟ مِن قَبْلِهِمْ ۚ كَانُوا۟ هُمْ أَشَدَّ مِنْهُمْ قُوَّةًۭ وَءَاثَارًۭا فِى ٱلْأَرْضِ فَأَخَذَهُمُ ٱللَّهُ بِذُنُوبِهِمْ وَمَا كَانَ لَهُم مِّنَ ٱللَّهِ مِن وَاقٍۢ.
40:21. அவர்கள் உலகைச் சுற்றிப் பார்த்துக் கொள்ளட்டும். இதற்கு முன் வாழ்ந்த சமுதாயங்கள் ஏன் அழிந்தன என்ற உண்மை அவர்களுக்குப் புரியும். அப்போதாவது அவர்களுக்கு உண்மை புரியும். அந்தச் சமுதாயத்தார் இவர்களை விட பன்மடங்கு பலம் வாய்ந்தவர்களாகவும், வசதி வாய்ப்புப் பெற்றவர்களாகவும் இருந்தனர். ஆனால் அவர்கள் இறைவழிகாட்டுதலை ஏற்காமல் தீய செயல்களில் ஈடுபட்டு வந்தார்கள். எனவே மனித செயல்களின் விளைவுகள் என்ற அல்லாஹ்வின் சட்டம் அவர்களை பிடித்துக் கொண்டது. இன்னும் அவர்களால் அந்த பிடியிலிருந்து தப்பிக்கவே முடியவில்லை.
ذَٰلِكَ بِأَنَّهُمْ كَانَت تَّأْتِيهِمْ رُسُلُهُم بِٱلْبَيِّنَٰتِ فَكَفَرُوا۟ فَأَخَذَهُمُ ٱللَّهُ ۚ إِنَّهُۥ قَوِىٌّۭ شَدِيدُ ٱلْعِقَابِ.
40:22. அந்த அழிவுகள் அவர்களுக்கு முன்னெச்சரிக்கை செய்யாமல் ஏற்படவில்லை. மாறாக அவர்களிடம் இறைத்தூதர்கள் வந்தார்கள். அவர்கள் ஒவ்வொரு விஷயத்தைப் பற்றியும் ஆதாரப்பூர்வமாக தெளிவாக எடுத்துரைத்தனர். ஆனால் அவர்களோ அந்த முன்னெச்சரிக்கைகளை பொருட்படுத்தவே இல்லை. எனவே அல்லாஹ்வின் நியதிப்படி ஏற்படவேண்டிய அழிவின் பிடியில் அவர்கள் சிக்கிக் கொண்டனர். அந்த அழிவின் விளைவுகள் எந்த அளவுக்கு கடுமையாக இருந்தன என்பதை அப்போது அறிந்துகொண்டனர்.
وَلَقَدْ أَرْسَلْنَا مُوسَىٰ بِـَٔايَٰتِنَا وَسُلْطَٰنٍۢ مُّبِينٍ.
40:23. இதே போன்று மூஸா நபிக்கும் ஆதாரப்பூர்மான வழிகாட்டுதல்களும் தெளிவான சான்றுகளும் இறைவன் புறத்திலிருந்து இறக்கி அருளப்பட்டன.
إِلَىٰ فِرْعَوْنَ وَهَٰمَٰنَ وَقَٰرُونَ فَقَالُوا۟ سَٰحِرٌۭ كَذَّابٌۭ.
40:24. ஆனால் ஏகாதிபத்திய ஆட்சிமுறையை நடத்தி வந்த ஃபிர்அவ்னும், அரசவையில் ராஜகுருவாக இருந்த ஹாமானும், செல்வ சீமானாக இருந்த ஃகாரூனும், மூஸா நபியின் அறிவுரைகளை ஏற்றுக் கொள்ளவில்லை. அவர்களிடம் இறைவழிகாட்டுதலின் உண்மைகளை எடுத்துரைத்த போது, அவை மக்களை வசீயப்படுத்தும் ஏமாற்று வித்தைகளே என்று கூறிவிட்டனர்.
فَلَمَّا جَآءَهُم بِٱلْحَقِّ مِنْ عِندِنَا قَالُوا۟ ٱقْتُلُوٓا۟ أَبْنَآءَ ٱلَّذِينَ ءَامَنُوا۟ مَعَهُۥ وَٱسْتَحْيُوا۟ نِسَآءَهُمْ ۚ وَمَا كَيْدُ ٱلْكَٰفِرِينَ إِلَّا فِى ضَلَٰلٍۢ.
40:25. மூஸா நபி இந்த உண்மைகளை தம் மக்களிடம் எடுத்துரைத்து வந்தார். இந்த அறிவுரைகள் மக்களிடையே பரவிய போது, தம் ஆட்சிக்கு ஆபத்து வரும் என்று இம்மூவரும் பயந்தனர். எனவே மூஸா நபியை ஏற்றுக் கொண்டவர்களுள் வீரம் மிக்க ஆண்களைப் பிடித்து கொன்றுவிடும்படியும், வீரமில்லா கோழைகளை அப்படியே வாழவிட்டு விட வேண்டும் என்றும் முடிவெடுத்தனர். இவ்வாறு அந்த சதிகாரர்கள் எடுத்த முடிவு, எந்த அளவுக்கு மோசமானது என்பதை எண்ணிப் பாருங்கள்.
وَقَالَ فِرْعَوْنُ ذَرُونِىٓ أَقْتُلْ مُوسَىٰ وَلْيَدْعُ رَبَّهُۥٓ ۖ إِنِّىٓ أَخَافُ أَن يُبَدِّلَ دِينَكُمْ أَوْ أَن يُظْهِرَ فِى ٱلْأَرْضِ ٱلْفَسَادَ.
40:26. அப்போது ஃபிர்அவ்ன் தன் சபையோர்களை நோக்கி, “மூஸாவைத் தீர்த்துக் கட்ட என் பொறுப்பில் விட்டுவிடுங்கள். நான் அவருடைய கதையை முடித்து விடுகிறேன். அப்போது தான் பலம் மிக்கவன் நானா அல்லது அவருடைய இறைவனா என்பதை அவர் தெரிந்து கொள்வார். அவரை உயிரோடு விட்டுவிட்டால் நாட்டிலுள்ள மக்களை உங்கள் மார்க்கத்தை விட்டு மாற்றி விடுவார். இதனால் நாட்டில் குழப்பங்கள் ஏற்பட்டுவிடும் என நான் அஞ்சுகிறேன்” என்றான்.
وَقَالَ مُوسَىٰٓ إِنِّى عُذْتُ بِرَبِّى وَرَبِّكُم مِّن كُلِّ مُتَكَبِّرٍۢ لَّا يُؤْمِنُ بِيَوْمِ ٱلْحِسَابِ.
40:27. அதற்கு மூஸா நபி, “மனித செயல்களின் விளைவுகள்” என்ற இறைவனின் சட்டத்தை ஏற்காமல் ஆணவத்தோடு நடக்கும் உங்களை விட்டு, இறைவன் காட்டும் வழியில் செயல்பட நான் தீர்மானித்துள்ளேன். அதாவது யார் உங்களுக்கும் எனக்கும் இறைவனாக இருக்கின்றானோ அவன் காட்டும் வழியில் செயல்பட்டு, அவனிடமே நான் பாதுகாப்பு தேடுகிறேன்” என்று சபையோர்களை நோக்கி கூறினார்.
وَقَالَ رَجُلٌۭ مُّؤْمِنٌۭ مِّنْ ءَالِ فِرْعَوْنَ يَكْتُمُ إِيمَٰنَهُۥٓ أَتَقْتُلُونَ رَجُلًا أَن يَقُولَ رَبِّىَ ٱللَّهُ وَقَدْ جَآءَكُم بِٱلْبَيِّنَٰتِ مِن رَّبِّكُمْ ۖ وَإِن يَكُ كَٰذِبًۭا فَعَلَيْهِ كَذِبُهُۥ ۖ وَإِن يَكُ صَادِقًۭا يُصِبْكُم بَعْضُ ٱلَّذِى يَعِدُكُمْ ۖ إِنَّ ٱللَّهَ لَا يَهْدِى مَنْ هُوَ مُسْرِفٌۭ كَذَّابٌۭ.
40:28. அப்போது மூஸா நபியின் அறிவுரைகளை இரகசியமாக ஏற்றுக்கொண்ட ஃபிர்அவுனுடைய சபையில் இருந்த ஒருவர் சபையோரிடம், “என்னை படைத்து பரிபாலிக்கும் இறைவன் அல்லாஹ்வே என்று ஒருவர் கூறியதற்காக அவரை கொன்று விடுவீர்களா? அவர் எடுத்துரைக்கும் விஷயங்கள் யாவும் ஆதாரப்பூர்வமாகவே உள்ளன. எனவே அவர் கூறுவது பொய்யாக இருந்தால் அதன் கேடுகள் அவருக்கே வந்தடையும். ஆனால் அவர் உண்மையாளராக இருந்தால் அவர் சொன்ன வாக்கு பலித்துவிடும். எனவே அந்த அழிவுகள் நமக்கு வந்தடையுமே! காரணம் வரம்பு மீறி நடப்பவர்களுக்கு ஒருபோதும் அல்லாஹ்வின் நேர்வழி கிடைக்காதே” என்று வெளிப்படையாக அறிவித்தார்.
يَٰقَوْمِ لَكُمُ ٱلْمُلْكُ ٱلْيَوْمَ ظَٰهِرِينَ فِى ٱلْأَرْضِ فَمَن يَنصُرُنَا مِنۢ بَأْسِ ٱللَّهِ إِن جَآءَنَا ۚ قَالَ فِرْعَوْنُ مَآ أُرِيكُمْ إِلَّا مَآ أَرَىٰ وَمَآ أَهْدِيكُمْ إِلَّا سَبِيلَ ٱلرَّشَادِ.
40:29. மேலும் அவர், “என்னுடைய சமூகத்தார்களே! இன்று ஆட்சி அதிகாரம் உங்களிடம் தான் இருக்கிறது. இந்நாட்டில் உங்களுடைய ஆதிக்கமே நடந்து வருகிறது. ஆயினும் அல்லாஹ்வின் தண்டனை நமக்கு வந்துவிட்டால் அதிலிருந்து மீள எந்த வழிமுறையும் இருக்காதே! இதைப் பற்றி நீங்கள் சிந்தித்துப் பாருங்கள்” என்றார். இதைக் கேட்ட ஃபிர்அவ்ன் அவரைக் குறுக்கிட்டு, “என் மனதிற்கு எது சரியென்று படுகிறதோ அதையே நான் உங்களுக்கு எடுத்துரைக்கிறேன். நான் சொல்வது தான் சரியான வழிமுறை. அதாவது மூஸாவை கொன்று விடுவதே சரியான வழி என நான் நினைக்கிறேன்” என்றான்.
وَقَالَ ٱلَّذِىٓ ءَامَنَ يَٰقَوْمِ إِنِّىٓ أَخَافُ عَلَيْكُم مِّثْلَ يَوْمِ ٱلْأَحْزَابِ.
40:30. இதைப் பொருட்படுத்தாத அந்த மூஃமின், தன் வாதத்தை தொடர்ந்தார். அவர், “என சமூகத்தாரே! இதற்குமுன் அழிவை சந்தித்துக் கொண்ட சமூகத்தாரைப் போன்றே உங்களுக்கும் அழிவு ஏற்பட்டு விடுமோ என நான் அஞ்சுகிறேன்” என்றார்.
مِثْلَ دَأْبِ قَوْمِ نُوحٍۢ وَعَادٍۢ وَثَمُودَ وَٱلَّذِينَ مِنۢ بَعْدِهِمْ ۚ وَمَا ٱللَّهُ يُرِيدُ ظُلْمًۭا لِّلْعِبَادِ.
40:31. மேலும் அவர், “நூஹ்வுடைய சமூகத்தாருக்கும், “ஆது” மற்றும் “சமூது” சமூகத்தாருக்கும், அவர்களுக்குப் பின் வந்த சமூகத்தாருக்கும் ஏற்பட்ட இழிநிலைப் போன்றே உங்களுக்கும் ஏற்பட்டு விடுமோ என நான் அஞ்சுகிறேன். அந்த அழிவுகள் எல்லாம் அவர்கள் செய்து வந்த தீய செயல்களின் விளைவாகத் தானே அன்றி அல்லாஹ்வின் புறத்திலிருந்து எந்த அநியாயமும் நிகழவில்லை” என்றார்.
وَيَٰقَوْمِ إِنِّىٓ أَخَافُ عَلَيْكُمْ يَوْمَ ٱلتَّنَادِ.
40:32. மேலும் அவர், “என் சமூகத்தாரே! அந்த அழிவுகள் ஏற்படும் கால கட்டம் உங்களை நெருங்கிவிடுமோ என நான் அஞ்சுகின்றேன். அப்படியொரு நிலையில் யாரும் யாருக்கும் உதவி செய்ய முடியாதே அப்படிப்பட்ட நெருக்கடியான நிலை ஏற்பட்டு விடுமோ என நான் அஞ்சுகிறேன்” என்றார்.
يَوْمَ تُوَلُّونَ مُدْبِرِينَ مَا لَكُم مِّنَ ٱللَّهِ مِنْ عَاصِمٍۢ ۗ وَمَن يُضْلِلِ ٱللَّهُ فَمَا لَهُۥ مِنْ هَادٍۢ.
40:33. மேலும் அவர், “அல்லாஹ்வின் நியதிப்படி ஏற்படும் அந்த அழிவிற்குப் பயந்து நீங்கள் ஓடுவீர்கள். அப்படி ஓடுவதால் உங்களை எவரும் காப்பாற்ற முடியாதே! அப்படியொரு திக்கற்ற நிலைக்கு தள்ளப்படுவீர்களே! யார் அல்லாஹ்வின் நேர்வழியை ஏற்றுக் கொள்வதில்லையோ, அவருக்கு வேறு யாரும் நேர்வழியில் கொண்டு செல்ல முடியாதே!” என்றார்.
وَلَقَدْ جَآءَكُمْ يُوسُفُ مِن قَبْلُ بِٱلْبَيِّنَٰتِ فَمَا زِلْتُمْ فِى شَكٍّۢ مِّمَّا جَآءَكُم بِهِۦ ۖ حَتَّىٰٓ إِذَا هَلَكَ قُلْتُمْ لَن يَبْعَثَ ٱللَّهُ مِنۢ بَعْدِهِۦ رَسُولًۭا ۚ كَذَٰلِكَ يُضِلُّ ٱللَّهُ مَنْ هُوَ مُسْرِفٌۭ مُّرْتَابٌ.
40:34. மேலும் அவர், “முந்தைய காலத்தில் யூஸுஃப் நபி இறைவழிகாட்டுதலை தெளிவான முறையில் ஆதாரங்களுடன் அக்கால சமுதாயத்தினரிடம் எடுத்துரைத்தார். அந்த வழிகாட்டுதலை அவர் தன் ஆயுட் காலம் முழுவதும் எடுத்துரைத்து வந்தார். எனினும் அவர் காட்டிய இறைவழிகாட்டுதலில் உங்களிடம் இருந்த சந்தேகங்கள் தீரவே இல்லை. அவருடைய மறைவுக்குப் பின் எந்த தூதரையும் அல்லாஹ் அனுப்பவே மாட்டான் என்றும் கூறினீர்கள். இவ்வாறே எந்தச் சமுதாயத்தவர்கள் எதிர் மறையாக சிந்தித்து, தெளிவு பெறாமல் வரம்பு மீறி செயல்படுகிறார்களோ அவர்கள் அல்லாஹ்வின் நியதிப்படி வழிகேட்டில் சென்று விடுவார்கள்” என்றார்.
ٱلَّذِينَ يُجَٰدِلُونَ فِىٓ ءَايَٰتِ ٱللَّهِ بِغَيْرِ سُلْطَٰنٍ أَتَىٰهُمْ ۖ كَبُرَ مَقْتًا عِندَ ٱللَّهِ وَعِندَ ٱلَّذِينَ ءَامَنُوا۟ ۚ كَذَٰلِكَ يَطْبَعُ ٱللَّهُ عَلَىٰ كُلِّ قَلْبِ مُتَكَبِّرٍۢ جَبَّارٍۢ.
40:35. மேலும் அவர், “எனவே தாங்களிடம் எவ்வித ஆதாரமும் இல்லாமல் அல்லாஹ்வின் வழிகாட்டுதலுக்கு எதிராக கண்மூடித்தனமாக தர்க்கம் செய்வது அல்லாஹ்விடத்திலும், ஈமான் கொண்டவர்களிடத்திலும் மிகவும் வெறுக்கப்பட்டதாகும். இவ்வாறே ஆணவத்துடன் நடந்துகொள்ளும் ஒவ்வொருவரின் உள்ளங்களிலும் அல்லாஹ்வின் நியதிப்படி திரை ஏற்பட்டுவிடுகிறது. அதனால் அவர்களால் உண்மையை ஒருபோதும் விளங்கிக் கொள்ளவே முடிவதில்லை” என்றார்.
இவற்றையெல்லாம் கேட்ட ஃபிர்அவ்னுக்கு எந்த விஷயமும் புரியவில்லை. காரணம் அவனிடம் ஆணவமே மிகைத்திருந்தது. எனவே அவன்
وَقَالَ فِرْعَوْنُ يَٰهَٰمَٰنُ ٱبْنِ لِى صَرْحًۭا لَّعَلِّىٓ أَبْلُغُ ٱلْأَسْبَٰبَ.
40:36. “ஹாமானே! நீ எனக்காக ஓர் உயரமான கோபுரத்தை கட்டுவாயாக. அப்போதுதான் என்னால் மேலே ஏறிச் செல்ல முடியும்” என்றான்.
أَسْبَٰبَ ٱلسَّمَٰوَٰتِ فَأَطَّلِعَ إِلَىٰٓ إِلَٰهِ مُوسَىٰ وَإِنِّى لَأَظُنُّهُۥ كَٰذِبًۭا ۚ وَكَذَٰلِكَ زُيِّنَ لِفِرْعَوْنَ سُوٓءُ عَمَلِهِۦ وَصُدَّ عَنِ ٱلسَّبِيلِ ۚ وَمَا كَيْدُ فِرْعَوْنَ إِلَّا فِى تَبَابٍۢ.
40:37. மேலும் அவன், “வானங்களைக் கடந்து நான் மூஸாவின் அல்லாஹ்வைக் காண வேண்டும். இது முடியாது என்பதால் மூஸா பொய்ச் சொல்கிறார் என்றே நான் எண்ணுகிறேன்” என்று கூறினான். இதற்குக் காரணம் என்னவென்றால் அவன் செய்து வந்த தீய செயல்கள் எல்லாம் அவனுக்கு அழகாகத் தோன்றின. எனவே நேர்வழி பெற அவனது மனம் ஒப்பவில்லை. எனவே அவன் மூஸா நபிக்கு எதிராக பல சதிதிட்டங்களைத் தீட்டினான். ஆனால் அவன் செய்த சதிகள் எல்லாம் அவனுக்கே அழிவைத் தேடித் தந்துவிட்டன.
وَقَالَ ٱلَّذِىٓ ءَامَنَ يَٰقَوْمِ ٱتَّبِعُونِ أَهْدِكُمْ سَبِيلَ ٱلرَّشَادِ.
40:38. இதைக் கேட்ட அம்மனிதர், “என்னுடைய சமூகத்தாரே! நான் சொல்வதைக் கேளுங்கள். நான் உங்களுக்கு நேரான பாதையைக் காண்பிக்கின்றேன்” என்றார்.
يَٰقَوْمِ إِنَّمَا هَٰذِهِ ٱلْحَيَوٰةُ ٱلدُّنْيَا مَتَٰعٌۭ وَإِنَّ ٱلْءَاخِرَةَ هِىَ دَارُ ٱلْقَرَارِ.
40:39. மேலும் அவர், “என் சமூகத்தாரே! இறைவழிகாட்டுதலைப் பின்பற்றுவதால் வருங்காலத்தில் கிடைக்கவிருக்கும் நிலையான சந்தோஷங்களை வைத்துப் பார்க்கும் போது, தற்சமயம் உங்களுக்கு கிடைத்துள்ளவை எல்லாம் அற்பமானதே என்பதை அறிந்து கொள்ளுங்கள்” என்றார்.
எனவே இறைவனின் வழிகாட்டுதலின்படி செயல்பட முன்வாருங்கள். என் அறிவுரையை விட்டுவிட்டு
مَنْ عَمِلَ سَيِّئَةًۭ فَلَا يُجْزَىٰٓ إِلَّا مِثْلَهَا ۖ وَمَنْ عَمِلَ صَٰلِحًۭا مِّن ذَكَرٍ أَوْ أُنثَىٰ وَهُوَ مُؤْمِنٌۭ فَأُو۟لَٰٓئِكَ يَدْخُلُونَ ٱلْجَنَّةَ يُرْزَقُونَ فِيهَا بِغَيْرِ حِسَابٍۢ.
40:40. “எவர் தீய வழியில் செல்கின்றாரோ அதன் விளைவுகளே அவருடைய பங்கிற்கு வந்தடையும். எவர் ஒருவர் ஆணோ பெண்ணோ அல்லாஹ்வின் வழிகாட்டுதலை ஏற்று, சமூக நலப்பணிக்காக ஆக்கப்பூர்வமாகச் செயல்படுகிறாரோ அவரே சிறந்த மூஃமின் எனப்படுவார். அவர்களுடைய சமூக அமைப்பு சுவனத்திற்கு ஒப்பானதாக அமையும். மேலும் அவர்களுடைய உழைப்பிற்கேற்ப அளவிலா வாழ்வாதாரங்கள் கிடைத்து வரும்” என்றார்.
۞ وَيَٰقَوْمِ مَا لِىٓ أَدْعُوكُمْ إِلَى ٱلنَّجَوٰةِ وَتَدْعُونَنِىٓ إِلَى ٱلنَّارِ.
40:41. மேலும் அவர், “என் சமூகத்தாரே! நான் உங்களுக்கு நேரவிருக்கும் அழிவிலிருந்து காப்பாற்றவே இந்த அறிவுரைகளை செய்கின்றேன். ஆனால் நீங்களோ இந்த அறிவுரைகளை ஏற்காமல் என்னையும் நரக வேதனைகளை அளிக்கும் வழிமுறையின் பக்கம் அழைக்கின்றீர்களே!” என்றார்.
تَدْعُونَنِى لِأَكْفُرَ بِٱللَّهِ وَأُشْرِكَ بِهِۦ مَا لَيْسَ لِى بِهِۦ عِلْمٌۭ وَأَنَا۠ أَدْعُوكُمْ إِلَى ٱلْعَزِيزِ ٱلْغَفَّٰرِ.
40:42. “அதாவது நானும் அல்லாஹ்வின் வழிகாட்டுதலுக்கு இணையான வேறு வழிமுறைகளை கடைப்பிடித்து அவனுக்கு எதிராக செயல்பட வேண்டும் என்று நீங்கள் என்னை அழைக்கின்றீர்கள். ஆனால் இப்படி என்னால் செயல்பட முடியாது. ஏனெனில் நான் உங்களுக்கு விடும் அழைப்பு, யாவற்றையும் படைத்து, அனைத்தையும் கட்டுப்படுத்தும் வல்லமையுடையவன் அறிவித்த மார்க்கத்தின் பக்கமாகும். யார் அவன் காட்டிய வழியில் செயல்படுகிறார்களோ, அவர்கள் வாழ்வின் எல்லா ஆபத்துகளிலிருந்தும் பாதுகாப்பாக இருப்பார்கள்” என்று கூறினார்.
لَا جَرَمَ أَنَّمَا تَدْعُونَنِىٓ إِلَيْهِ لَيْسَ لَهُۥ دَعْوَةٌۭ فِى ٱلدُّنْيَا وَلَا فِى ٱلْءَاخِرَةِ وَأَنَّ مَرَدَّنَآ إِلَى ٱللَّهِ وَأَنَّ ٱلْمُسْرِفِينَ هُمْ أَصْحَٰبُ ٱلنَّارِ.
40:43. மேலும் அவர், “என்னை நீங்கள் எந்த வழிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்று அழைக்கிறீர்களோ, அவை சிறப்பான வாழ்விற்கு எந்த வகையிலும் பலன் அளிக்கக் கூடியதாக இல்லை. அவை தற்காலிக உலக வாழ்விலோ அல்லது வருங்கால நிலையான வாழ்விலோ எவ்வித பலனையும் அளிக்கக் கூடியதாக இல்லை. ஏனெனில் நாம் செய்யும் ஒவ்வொரு செயலும் அல்லாஹ் நிர்ணயித்துள்ள இலக்கை நோக்கியே சென்று, அதனதன் விளைவுகளையே ஏற்படுத்தும். எனவே நாம் வரம்பு மீறின செயல்களில் ஈடுபட்டால் நம் வாழ்வு வேதனைகள் மிக்க நரகமாக மாறிவிடும்” என்றார்.
فَسَتَذْكُرُونَ مَآ أَقُولُ لَكُمْ ۚ وَأُفَوِّضُ أَمْرِىٓ إِلَى ٱللَّهِ ۚ إِنَّ ٱللَّهَ بَصِيرٌۢ بِٱلْعِبَادِ.
40:44. “நான் சொல்வதை நீங்கள் சிந்தித்து பார்த்தால், அந்த நரக வேதனைகள் ஏற்பட்டு வருவதை உணர்ந்து கொள்வீர்கள். அல்லது இனி வரும் காலங்களில் உங்களுக்கே உண்மை புரிந்துவிடும். எனவே என் அனைத்து காரியங்களையும் அல்லாஹ்வின் வழிகாட்டுதலின்படியே நிறைவேற்ற முடிவெடுத்துள்ளேன். ஏனெனில் நான் செய்யும் ஒவ்வொரு செயலையும் அல்லாஹ் கண்காணிப்பவனாகவே இருக்கிறான் என்பதை நான் அறிந்து கொண்டேன்” என்று சபையோர் முன்னிலையில் அவர் எடுத்துரைத்தார்.
இவைதான் மூஸா நபி தம் சமூகத்தாருக்கு எடுத்துரைத்த மார்க்க உண்மைகளாகும். பனி இஸ்ராயீல் சமூகத்தவர்கள் மட்டுமின்றி ஃபிர்அவ்னிய சமூகத்தாரிலும் சிலர் மார்க்க உண்மைகளை ஏற்றுக் கொண்டதாக தெரிகிறது. எனவே தான் அவர் தைரியமாக இவற்றை சபையோர் முன்னிலையில் எடுத்துரைத்தார்.
فَوَقَىٰهُ ٱللَّهُ سَيِّـَٔاتِ مَا مَكَرُوا۟ ۖ وَحَاقَ بِـَٔالِ فِرْعَوْنَ سُوٓءُ ٱلْعَذَابِ.
40:45. இவ்வாறாக தீர்த்துக் கட்ட ஃபிர்அவ்னிய சமூகத்தார் செய்த சதி திட்டங்களிலிருந்து, மூஸா நபி தம்மை பாதுகாத்துக் கொண்டார். எனவே அல்லாஹ்வின் நியதிப்படி நரக வேதனைகளிலிருந்து அவர் மீண்டு கொண்டார். ஆனால் காலம் செல்ல செல்ல அவர் அறிவித்தபடி வேதனைகள் மிக்க கேடுகள் ஃபிர்அவ்னிய சமூகத்தாரையே சூழ்ந்துகொண்டன.
ٱلنَّارُ يُعْرَضُونَ عَلَيْهَا غُدُوًّۭا وَعَشِيًّۭا ۖ وَيَوْمَ تَقُومُ ٱلسَّاعَةُ أَدْخِلُوٓا۟ ءَالَ فِرْعَوْنَ أَشَدَّ ٱلْعَذَابِ.
40:46. அந்த வேதனைகள் அவர்களை அல்லும் பகலும் தொடர்ந்து வரக் கூடியவையாக இருந்தன. அது மட்டுமின்றி ஃகியாம நாளிலும் ஃபிர்அவுனிய கூட்டத்தாருக்கு நரக வேதனைகள் தொடர உத்தரவிடப்படும். அந்த வேதனைகள் இதைவிட மிகவும் கடுமையானதாக இருக்கும். (பார்க்க 7:133, 28:42)
وَإِذْ يَتَحَآجُّونَ فِى ٱلنَّارِ فَيَقُولُ ٱلضُّعَفَٰٓؤُا۟ لِلَّذِينَ ٱسْتَكْبَرُوٓا۟ إِنَّا كُنَّا لَكُمْ تَبَعًۭا فَهَلْ أَنتُم مُّغْنُونَ عَنَّا نَصِيبًۭا مِّنَ ٱلنَّارِ.
40:47. அந்த நரக வேதனைகளை அனுபவிப்பவர்களை நீங்கள் பார்க்க நேர்ந்தால், அவர்கள் வேதனைகளை தாங்கிக் கொள்ள முடியாமல் புலம்பிக் கொண்டிருப்பதை காண்பீர்கள். (பார்க்க 14:21, 33:67, 34:32, 37:27-29, 38:60) அப்போது மக்களை வழிகெடுத்து வந்த மதகுருமார்களையும் சமுதாயத் தலைவர்களையும் நோக்கி, “எங்களை விட்டு இவ்வேதனைகளின் ஒரு பகுதியையாவது விலக்கி வைப்பீர்களா?” என்று கேட்பார்கள். இப்படியொரு நிலை ஏற்படுவதை சற்று கவனித்துப் பாருங்கள்.
قَالَ ٱلَّذِينَ ٱسْتَكْبَرُوٓا۟ إِنَّا كُلٌّۭ فِيهَآ إِنَّ ٱللَّهَ قَدْ حَكَمَ بَيْنَ ٱلْعِبَادِ.
40:48. அப்போது தலைக்கணம் பிடித்த அந்த தலைவர்கள், “நாம் அனைவருமே இவ்வேதனைகளில் சிக்கி இருக்கிறோம். அல்லாஹ் நமக்கிடையே சரியான தீர்ப்பையே அளித்து விட்டான்” என்று கூறுவார்கள்.
وَقَالَ ٱلَّذِينَ فِى ٱلنَّارِ لِخَزَنَةِ جَهَنَّمَ ٱدْعُوا۟ رَبَّكُمْ يُخَفِّفْ عَنَّا يَوْمًۭا مِّنَ ٱلْعَذَابِ.
40:49. மேலும் நரக வேதனைகளை அனுபவிப்பவர்கள், “இவ்வேதனைகளை ஒரு நாளைக்கு மட்டும் எங்களுக்காக இலேசாக்கும்படி உங்கள் இறைவனிடத்தில் கேட்டுப் பாருங்கள்” என்று நரக காவலாளிகளிடம் மன்றாடுவார்கள்.
قَالُوٓا۟ أَوَلَمْ تَكُ تَأْتِيكُمْ رُسُلُكُم بِٱلْبَيِّنَٰتِ ۖ قَالُوا۟ بَلَىٰ ۚ قَالُوا۟ فَٱدْعُوا۟ ۗ وَمَا دُعَٰٓؤُا۟ ٱلْكَٰفِرِينَ إِلَّا فِى ضَلَٰلٍ.
40:50. அதற்கு நரக காவலாளிகள், “தெளிவான ஆதாரங்களுடன் இறைவழிகாட்டுதலை உங்களுக்கு எடுத்துரைக்க இறைத்தூதர்கள் வரவில்லையா?” என்று கேட்பார்கள். அதற்கு நரகவாசிகள், “ஆம். வந்தனர்” என்று பதில் கூறுவார்கள். அத்தூதர்களின் அறிவுரைகளை ஏற்க மறுத்து அல்லாஹ்வுக்கு எதிராக செயல்பட்டு நரகத்தில் நீங்கள் தள்ளப்பட்டுள்ளீர்கள். அப்படியிருக்கும் போது, அவ்வேதனைகளை குறைக்க அல்லாஹ்விடம் நாங்கள் எப்படி பிரார்த்திக்க முடியும்? எனவே நீங்களே அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்” என்று கூறிவிடுவார்கள். ஆக இறைவழிகாட்டுதலுக்கு எதிராக செயல்படுபவர்களின் பிராத்தனைகள் எவ்வாறு பலனளிக்க முடியும்?
إِنَّا لَنَنصُرُ رُسُلَنَا وَٱلَّذِينَ ءَامَنُوا۟ فِى ٱلْحَيَوٰةِ ٱلدُّنْيَا وَيَوْمَ يَقُومُ ٱلْأَشْهَٰدُ.
40:51. உண்மை என்னவென்றால் இறைவழிகாட்டுதலை எடுத்துரைக்கும் இறைத் தூதர்களுக்கும், அந்த வழிகாட்டுதலை மனதார ஏற்று நடப்பவர்களுக்கும் அல்லாஹ்வின் உதவி கிடைப்பது உறுதி. அந்த உதவிகள் இவ்வுலக வாழ்விலும் கிடைக்கும். மனித செயல்களின் விளைவுகள் தோற்றத்திற்கு வரும் கால கட்டத்திலும் கிடைக்கும். அதாவது அவர்களுக்கு சந்தோஷமான வாழ்வு கிடைக்கும்.
يَوْمَ لَا يَنفَعُ ٱلظَّٰلِمِينَ مَعْذِرَتُهُمْ ۖ وَلَهُمُ ٱللَّعْنَةُ وَلَهُمْ سُوٓءُ ٱلدَّارِ.
40:52. அத்தகைய கால கட்டங்களில் அநியாய அக்கிரம செயல்களைச் செய்து வந்தவர்களுடைய சொல்லுக்கு எவ்வித மதிப்பும் இராது. அவர்களுடைய கோரிக்கைகள் எதுவும் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டது. அல்லாஹ்வின் புறத்திலிருந்து கிடைக்கின்ற அருட்கொடைகள் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக தடைபட்டுப் போகும். இப்படியாக அவர்களுடைய நிலைமை மிகவும் மோசமானதாக மாறிவிடும்.
وَلَقَدْ ءَاتَيْنَا مُوسَى ٱلْهُدَىٰ وَأَوْرَثْنَا بَنِىٓ إِسْرَٰٓءِيلَ ٱلْكِتَٰبَ.
40:53. இதுபோன்ற உண்மைகள் அடங்கிய வேதத்தையே மூஸா நபிக்கும் அளித்தோம். அது இஸ்ராயீல் சந்ததியினருக்கு நேர்வழிகாட்டியாக இருந்தது. அவர்கள் அதை ஏற்றுக்கொண்டதால் அவர்கள் அவ்வேதத்திற்கு வாரிசுதாரர்களாக ஆனார்கள்.
هُدًۭى وَذِكْرَىٰ لِأُو۟لِى ٱلْأَلْبَٰبِ.
40:54. மேலும் அவ்வேதம் அவர்களின் சிறப்பான வாழ்விற்கு சிறந்த வழிகாட்டியாக இருந்தது. அதை சிந்தித்து செயலாற்றும் அறியுடையோருக்கு நல்ல அறிவுரைகள் அடங்கிய வேதமாக இருந்தது.
மூஸா நபி எவ்வாறு மனஉறுதியோடு நிலைத்திருந்து இஸ்ரவேலர்களைத் திருத்தி நேர்வழிக்குக் கொண்டு வந்தாரோ, அவ்வாறே
فَٱصْبِرْ إِنَّ وَعْدَ ٱللَّهِ حَقٌّۭ وَٱسْتَغْفِرْ لِذَنۢبِكَ وَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ بِٱلْعَشِىِّ وَٱلْإِبْكَٰرِ.
40:55. நீங்களும் நிதானத்துடன் நிலை குலையாமல் மக்களை அறிவுறுத்தி வாருங்கள். இவ்வாறு செயல்படுபவர்களுக்கு உதவி கிடைக்கும் என்ற அல்லாஹ்வின் வாக்கு ஒருபோதும் தவறாது. எனவே மக்களின் துயர் துடைப்புப் பணியில் உங்கள் முழு கவனத்தையும் செலுத்துங்கள். அல்லாஹ்வின் செயல்திட்டங்கள் யாவும் போற்றுதலுக்கு உரியவையாக ஆக்கிட அல்லும் பகலும் அயராது உழைத்து வாருங்கள். (பார்க்க 47:19, 48:2) உங்கள் இலட்சியம் ஈடேறப் போவது நிச்சயம்.
<إِنَّ ٱلَّذِينَ يُجَٰدِلُونَ فِىٓ ءَايَٰتِ ٱللَّهِ بِغَيْرِ سُلْطَٰنٍ أَتَىٰهُمْ ۙ إِن فِى صُدُورِهِمْ إِلَّا كِبْرٌۭ مَّا هُم بِبَٰلِغِيهِ ۚ فَٱسْتَعِذْ بِٱللَّهِ ۖ إِنَّهُۥ هُوَ ٱلسَّمِيعُ ٱلْبَصِيرُ./p>
40:56. இப்படியாக உங்களுக்கு ஆதாரப்பூர்மான நல்லறிவுரைகள் அல்லாஹ்வின் புறத்திலிருந்து இறக்கி அருளப்பட்டுள்ளன. இவற்றை சிந்தித்து ஏற்று நடப்பதற்குப் பதிலாக, அல்லாஹ்வின் வழிகாட்டுதலை குறித்து எவ்வித ஆதாரமுமின்றி தர்க்கம் செய்கிறார்கள். இதற்குக் காரணம் அவர்களிடையே உள்ள ஆணவப் போக்குதான் ஆகும். ஆனால் அதில் அவர்கள் ஒருபோதும் வெற்றி கொள்ளவே இயலாது. இவர்களுடைய விதண்டா வாதங்களைப் பற்றி கவலைக் கொள்ளாமல், நீங்கள் அல்லாஹ்வின் வழிகாட்டுதலின்படி பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வாருங்கள். உலகில் நடக்கின்ற எல்லா நிகழ்வுகளையும் கேட்டு அறிந்து கொள்ளும் அளவற்ற வல்லமையுடையவனே அல்லாஹ் என்பதை மறவாதீர்கள்.
அதாவது ஒவ்வொருவரும் செய்து வரும் செயல்கள் கண்காணிக்கப்படுகின்றன. அவற்றின் விளைவுகள் நிர்ணயித்த படி ஏற்பட்டே தீரும். மேலும் இறை நிராகரிப்பவர்கள் இம்மார்க்கத்திற்கு எதிராக தர்க்கம் செய்வதோடு நிறுத்திக் கொள்வதில்லை. இதை முறியடிக்க சில நடவடிக்கைகளையும் எடுப்பார்கள். அந்த சமயத்தில் தற்காப்பு நடவடிக்கைகளை நீங்களும் எடுத்தாக வேண்டும். இறைவனின் நியதிப்படி அதையும் செய்துகொள்ள வேண்டும். (பார்க்க 8:60). மேலும் அவர்கள் அல்லாஹ்வின் வல்லமையைக் குறித்து தர்க்கம் செய்வார்கள். அவர்களிடம்,
لَخَلْقُ ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضِ أَكْبَرُ مِنْ خَلْقِ ٱلنَّاسِ وَلَٰكِنَّ أَكْثَرَ ٱلنَّاسِ لَا يَعْلَمُونَ.
40:57. அகிலங்களையும் பூமியையும் படைப்பது கடினமானதா அல்லது இந்த பூமியில் வாழும் மனிதனை படைப்பது கடினமானதா என்று அவர்களிடம் கேளுங்கள். (பார்க்க 79:27) அல்லாஹ்வின் அளவிலா வல்லமைகளைப் பற்றி பெரும்பாலான மக்களுக்கு எதுவும் தெரியாது.
எனவே அல்லாஹ்வை குறித்து அவர்களே கற்பனை செய்துகொண்டு, அவனுக்கு உருவமும் கொடுத்து, அவனுக்கு மனைவி, பிள்ளைக்குட்டி உண்டு என்று கதைகளை சொல்லி வருகிறார்கள். இதற்கெல்லாம் அப்பாற்பட்டவன் தான் அல்லாஹ். எனவே
وَمَا يَسْتَوِى ٱلْأَعْمَىٰ وَٱلْبَصِيرُ وَٱلَّذِينَ ءَامَنُوا۟ وَعَمِلُوا۟ ٱلصَّٰلِحَٰتِ وَلَا ٱلْمُسِىٓءُ ۚ قَلِيلًۭا مَّا تَتَذَكَّرُونَ.
40:58. மூடநம்பிக்கையில் குருட்டுத்தனமாக வாழ்பவர்களும், எதையும் சிந்தித்து செயலாற்றுபவர்களும் சமமாகி விடுவார்களா? அவ்வாறே அல்லாஹ்வின் வழிகாட்டுதலை ஏற்று ஆக்கப்பூர்வமான சமூக நலத் திட்டங்களைத் தீட்டி ஆற்றல்மிக்க செயல்களை செய்வோரும், சமுதாயத்தை கெடுக்கும் தீயவர்களும் சமமாகி விடுவார்களா? இருந்தும் உங்களில் மிகச் சிலரே இதைப் பற்றி சிந்தித்து நல்லறிவுரைகளைப் பெறுகிறீர்கள்.
إِنَّ ٱلسَّاعَةَ لَءَاتِيَةٌۭ لَّا رَيْبَ فِيهَا وَلَٰكِنَّ أَكْثَرَ ٱلنَّاسِ لَا يُؤْمِنُونَ.
40:59. அதாவது உலகிலுள்ள தனி நபரோ அல்லது சமுதாயமோ ஒவ்வொருவரும் செய்யும் செயல்களுக்குரிய விளைவுகளை சந்திக்கக் கூடிய கால கட்டம் வந்தே தீரும். இதை யாராலும் தட்டிக் கழிக்க முடியாது. இறைவனின் இந்த சட்டத்தின் பிரகாரம் நற்செயல்களுக்கு நற்பலன்கள் என்றும், தீய செயல்களுக்கு தீய விளைவுகள் என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த பேருண்மையை பெருபாலான மக்கள் ஏற்றுக் கொள்வதில்லை.
وَقَالَ رَبُّكُمُ ٱدْعُونِىٓ أَسْتَجِبْ لَكُمْ ۚ إِنَّ ٱلَّذِينَ يَسْتَكْبِرُونَ عَنْ عِبَادَتِى سَيَدْخُلُونَ جَهَنَّمَ دَاخِرِينَ.
40:60. உங்களுடைய இறைவன் உங்களுக்கு கடினமான விதிமுறைகளையா விதித்துள்ளான்? உங்கள் மனதில் எழும் சந்தேகங்களை இறைவனிடமே கேளுங்கள். அவற்றிற்கு இந்த குர்ஆன் மூலமே பதிலளிக்கின்றான். அவ்வாறே உங்களிடையே உள்ள பிரச்சனைகள் தீர அவனிடமே கேளுங்கள். (பார்க்க 2:186) அதற்கும் இந்த குர்ஆன் மூலம் பதிலளிக்கின்றான். (பார்க்க 42:51) உங்களுக்குத் தேவையான அனைத்து வாழ்வாதாரங்களையும் அவன் உருவாக்கியுள்ள பரிபாலன அமைப்பின் மூலமே உழைத்து பெற்றுக் கொள்ளுங்கள். (பார்க்க 53:39-40) இவ்வாறாக அவனுக்கு மட்டும் அடிபணிவதை விட்டுவிட்டு மனம்போன போக்கில் ஆணவத்தோடு நடந்துகொள்பவர்கள், சிறுமையடைந்தவர்களாக துயரமிக்க வாழ்வையே வாழ நேரிடும்.
காரணம் நீங்கள் சிறப்பாக வாழ அனைத்து ஏற்பாடுகளையும் செய்து கொடுத்தவன்தான் அல்லாஹ். (பார்க்க 2:29) அவற்றைக் கொண்டு சிறப்பாக வாழ சொல்வதே இறைவழிகாட்டுதலின் நோக்கமாகும். உதாரணமாக
ٱللَّهُ ٱلَّذِى جَعَلَ لَكُمُ ٱلَّيْلَ لِتَسْكُنُوا۟ فِيهِ وَٱلنَّهَارَ مُبْصِرًا ۚ إِنَّ ٱللَّهَ لَذُو فَضْلٍ عَلَى ٱلنَّاسِ وَلَٰكِنَّ أَكْثَرَ ٱلنَّاسِ لَا يَشْكُرُونَ.
40:61. நீங்கள் இளைப்பாறுவதற்காக இருள்சூழ்ந்த இரவையும், நீங்கள் வாழ்வாதாரங்களைப் பெறுவதற்காக பளிச்சிடும் பகலையும் உருவாக்கியவன் அல்லாஹ்வே ஆவான். இந்த ஏற்பாடுகள் யாவும் அல்லாஹ்வின் அளவிலா அருட்கொடைகள் என்பதில் சந்தேகமில்லை. எனினும் பெரும்பாலான மக்கள் அல்லாஹ்வின் அறிவுரைகளை ஏற்று நன்றி விசுவாசத்துடன் நடந்து கொள்வதில்லை.
அதாவது இரவு இரவாகவே இருந்து விட்டாலோ, பகல் பகலாகவே இருந்தாலோ இந்த பூமியில் யாரும் உயிர்வாழ முடியாது. இரவு பகல் என மாறிமாறி வரும் ஏற்பாட்டைக் கொண்டே உலக மக்களுக்கும், மற்ற ஜீவராசிகளுக்கும் வாழ்வாதாரங்கள் கிடைக்கின்றன. இவை யாவும் மனிதனின் ஏற்பாடுகள் அல்ல. எனவே அந்த வாழ்வாதாரங்களை சீரான முறையில் பங்கிட்டு அனைத்து தரப்பு மக்களும் ஒற்றுமையுடன் சிறப்பாக வாழவேண்டும் என்பதே இறைவனின் கட்டளையாகும். அப்படி வாழ்வதே இறைவனுக்கு மனிதன் செய்யும் நன்றிக் கடனாகும்.
ذَٰلِكُمُ ٱللَّهُ رَبُّكُمْ خَٰلِقُ كُلِّ شَىْءٍۢ لَّآ إِلَٰهَ إِلَّا هُوَ ۖ فَأَنَّىٰ تُؤْفَكُونَ.
40:62. இத்தகைய மாபெரும் இயற்கை ஏற்பாடுகளை செய்து கொடுத்த உங்களுடைய இறைவன்தான் அல்லாஹ். அந்த ஏற்பாட்டின் மூலம்தான் உங்கள் வாழ்க்கைக்குத் தேவையான அனைத்து பொருட்களும் உங்களுக்கு கிடைக்கின்றன. இந்த ஏற்பாட்டினை அல்லாஹ்வைத் தவிர வேறு யாராலும் ஒருபோதும் செய்து தர முடியாது. உண்மை இவ்வாறிருக்கு அவனுடைய அறிவுரைகளின்படி நடப்பதற்குப் பதிலாக, வேறு எங்கு திசைமாறி செல்கிறீர்கள். (மேலும் பார்க்க 29:61)
كَذَٰلِكَ يُؤْفَكُ ٱلَّذِينَ كَانُوا۟ بِـَٔايَٰتِ ٱللَّهِ يَجْحَدُونَ.
40:63. இவ்வாறே இதற்கு முன் வாழ்ந்த சமூகத்தவர்களும் அல்லாஹ்வின் வழிகாட்டுதலைப் பற்றி தேவையற்ற சர்ச்சையை எழுப்பி, அவற்றை நிராகரித்து நேர்வழியிலிருந்து திசைமாறிச் சென்று விட்டார்கள்.
ٱللَّهُ ٱلَّذِى جَعَلَ لَكُمُ ٱلْأَرْضَ قَرَارًۭا وَٱلسَّمَآءَ بِنَآءًۭ وَصَوَّرَكُمْ فَأَحْسَنَ صُوَرَكُمْ وَرَزَقَكُم مِّنَ ٱلطَّيِّبَٰتِ ۚ ذَٰلِكُمُ ٱللَّهُ رَبُّكُمْ ۖ فَتَبَارَكَ ٱللَّهُ رَبُّ ٱلْعَٰلَمِينَ.
40:64. மேலும் எப்படிப்பட்ட அளவிலா வல்லமையுடைய அல்லாஹ் என்றால், ஒரு கட்டத்தில் எரிமலைப் பிழம்புடன் சகதியாக இருந்த இந்த பூமியின் (பார்க்க 41:11) வெப்பத்தை கொஞ்சம் கொஞ்சமாகக் குறைத்து, நீங்கள் தங்குவதற்கு ஏற்ற வகையில் ஆக்கி வைத்தான். இந்த பூமியைப் பாதுகாக்கும் வகையில் விதானமான வானத்தில் மற்ற கோள்களின் புவி ஈர்ப்பில் நிலைத்திருக்கும் படி படைத்ததும் அவனே. (பார்க்க 21:32) உங்களை அழகிய முறையில் படைத்து, உங்களுக்காக பரிசுத்தமான ஆரோக்கியமான உணவு வகைகளை கிடைக்கச் செய்தவனும் அவனே. இப்படியாக உங்களுக்குத் தேவையான எல்லா இயற்கை படைப்புகளையும் படைத்தவன் தான் அல்லாஹ். அகிலங்கள் அனைத்தையும் படைத்து பரிபாலிக்கின்ற அல்லாஹ்வின் வல்லமை விசாலமானதே என்பதில் மாற்றுக் கருத்து உள்ளதா?
هُوَ ٱلْحَىُّ لَآ إِلَٰهَ إِلَّا هُوَ فَٱدْعُوهُ مُخْلِصِينَ لَهُ ٱلدِّينَ ۗ ٱلْحَمْدُ لِلَّهِ رَبِّ ٱلْعَٰلَمِينَ.
40:65. அந்த ஏக இறைவனின் செயல்திட்டங்கள் யாவும் என்றென்றைக்கும் நிலைத்து நிற்பவையாகும். அவனையன்றி வேறு யாருடைய மேலாண்மையும், அகிலத்தில் எங்கும் நடைபெறுவதில்லை. எனவே இத்தகைய வல்லமையுடைய அல்லாஹ் காட்டும் நிலையான மார்க்க கட்டளைகளுக்கு மட்டும் அடிபணிந்து செயல்படுங்கள். இதன் பலனாக உங்களுடைய சமுதாயம் சிறப்பாக உருவாகும். அதைக் காணும் ஒவ்வொருவரும் அகிலத்தாரை படைத்து பரிபாலிக்கும் இறைவனாகிய அல்லாஹ்வின் செயல் திட்டங்களே தலைசிறந்தவை என போற்றிப் பாராட்டுவார்கள்.
۞ قُلْ إِنِّى نُهِيتُ أَنْ أَعْبُدَ ٱلَّذِينَ تَدْعُونَ مِن دُونِ ٱللَّهِ لَمَّا جَآءَنِىَ ٱلْبَيِّنَٰتُ مِن رَّبِّى وَأُمِرْتُ أَنْ أُسْلِمَ لِرَبِّ ٱلْعَٰلَمِينَ.
40:66. இறைவழிகாட்டுதலை எடுத்துரைப்பவரே! “அத்தகைய எல்லையற்ற வல்லமையுடைய இறைவனின் கட்டளைக்கு மட்டும் அடிபணிந்து வாழும்படி எனக்கும் கட்டளை வந்துள்ளது. எனவே அல்லாஹ்வின் தெளிவான வழிகாட்டுதல்கள் வந்த பின்பும் அவற்றை விட்டுவிட்டு வேறு வழிமுறைகளையா நான் பின்பற்றுவேன்? (பார்க்க 6:114) அகிலங்கள் அனைத்தையும் படைத்து பரிபாலிக்கின்ற ஏக இறைவனின் அறிவுரைகளுக்குத் தலைவணங்கி செயல்படும்படியே நான் கட்டளை இடப்பட்டுள்ளேன்” என்று மக்களிடம் அறிவித்துவிடுவீராக.
هُوَ ٱلَّذِى خَلَقَكُم مِّن تُرَابٍۢ ثُمَّ مِن نُّطْفَةٍۢ ثُمَّ مِنْ عَلَقَةٍۢ ثُمَّ يُخْرِجُكُمْ طِفْلًۭا ثُمَّ لِتَبْلُغُوٓا۟ أَشُدَّكُمْ ثُمَّ لِتَكُونُوا۟ شُيُوخًۭا ۚ وَمِنكُم مَّن يُتَوَفَّىٰ مِن قَبْلُ ۖ وَلِتَبْلُغُوٓا۟ أَجَلًۭا مُّسَمًّۭى وَلَعَلَّكُمْ تَعْقِلُونَ.
40:67. ஏக இறைவனாகிய அல்லாஹ்வின் வல்லமைகளைப் பற்றி மேல்கொண்டு சான்றுகள் வேண்டும் என்றால் உங்களுடைய படைப்பைப் பற்றியே சற்று சிந்தித்துப் பாருங்கள். உங்களுடைய படைப்பின் துவக்கம் உயிரற்ற மண்ணின் சத்திலிருந்து உருவானது. அதன்பின் அது பல படித்தரங்களைக் கடந்து, மனித படைப்பு இந்திரியத் துளியிலிருந்து உருவாக ஆரம்பித்தது. (பார்க்க 32:7-8) அந்த இந்திரியத் துளி தாயின் கருப்பைக்குள் சென்று அலக் என்னும் தசைக் கட்டியாக மாறுகிறது. இப்படியாகப் பல படித்தரங்களைக் கடந்து குழந்தை பிறக்கிறது. (பார்க்க 22:5, 23:13-14) அதன்பின் நீங்கள் படிப்படியாக வளர்ந்து வாலிப வயதை அடைகிறீர்கள். பின்னர் முதியோராக ஆகிவிடுறீர்கள். சிலர் இதற்கு இடைப்பட்ட காலத்தில் மரணித்தும் விடுகிறார்கள். இப்படியாக நீங்கள் குறிப்பிட்ட காலம் வரை வளர்ந்து சிந்தித்துச் செயலாற்றும் தகுதியைப் பெறுகிறீர்கள்.
هُوَ ٱلَّذِى يُحْىِۦ وَيُمِيتُ ۖ فَإِذَا قَضَىٰٓ أَمْرًۭا فَإِنَّمَا يَقُولُ لَهُۥ كُن فَيَكُونُ.
40:68. இறைவனின் செய்திட்டத்தின் படி இவ்வுலகில் மனிதனுக்கு வாழ்வும், மரணமும் தொடர்கின்றன. ஆக இறைவனின் அளவற்ற வல்லமை எவ்வாறு உள்ளது என்றால் எந்த செயல்திட்டத்தையும் உருவாக்க நாடினால் அவை முறைப்படி உருவாகி அவற்றின் இறுதி இலக்கு வரையில் சென்றடைகின்றன. (பார்க்க 32:5) அதில் எந்த இடையூறும் இருப்பதில்லை.
அதாவது தனி நபர் விஷயத்தில் வாழ்வு மரணம் என்று நிர்ணயித்தது போல, சமுதாயங்களின் வாழ்வும் மரணத்திற்காகவும் சட்டங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. இறை வழிகாட்டுதலின் படி செயல்படும் நாடுகள் எல்லா வளத்துடன் சீரும் சிறப்புமாக ஹயாத்தான சமுதாயமாகத் திகழும். ஆனால் இறைவழிகாட்டுதலின்றி மனிதன் சுயமாக உருவாக்கி வைத்துள்ள வாழ்க்கை வழிமுறைகளைப் பற்றி கவனித்துப் பாருங்கள். அங்கு பொருளாதார முன்னேற்றம் இருந்தும் கூட, அதில் எத்தனையோ சிக்கல்களும், மோதல்களும், பல பிரச்னைகளும் ஏற்பட்டு வருகின்றன. நாட்டிலுள்ள வேற்றுமை பகைகளை நீக்கி சுமுகமான நற்பண்புள்ள சமுதாயத்தை உருவாக்கவே இறைவழிகாட்டுதல்கள் நாடுகின்றன. (பார்க்க 2:213) ஆனால்
أَلَمْ تَرَ إِلَى ٱلَّذِينَ يُجَٰدِلُونَ فِىٓ ءَايَٰتِ ٱللَّهِ أَنَّىٰ يُصْرَفُونَ.
40:69. அவர்களோ அல்லாஹ்வின் வழிகாட்டுதலை குறித்து, எவ்வித ஞானமும் இல்லாமல் தர்க்கம் செய்கிறார்கள். இவர்களைப் பற்றி என்னவென்று சொல்வது? அவர்கள் நேரான வழியைவிட்டு எங்கு திசைமாறிச் செல்ல விரும்புகிறார்கள்?
ٱلَّذِينَ كَذَّبُوا۟ بِٱلْكِتَٰبِ وَبِمَآ أَرْسَلْنَا بِهِۦ رُسُلَنَا ۖ فَسَوْفَ يَعْلَمُونَ.
40:70. இறைத் தூதர் மூலமாக இறக்கி அருளப்பட்ட இவ்வேத அறிவுரைகள் சரியில்லை எனக் கூறி அவற்றைப் புறக்கணிப்பவர்கள் அதன் விளைவுகளை விரைவிலேயே சந்தித்துக் கொள்வார்கள்.
காரணம், அவற்றைப் புறக்கணிப்பதன் நோக்கமே தம் மனோ இச்சைப்படி நடக்கவே அவர்கள் விரும்புவதாகும்.
إِذِ ٱلْأَغْلَٰلُ فِىٓ أَعْنَٰقِهِمْ وَٱلسَّلَٰسِلُ يُسْحَبُونَ.
40:71. இப்படியாக அவர்கள் தீய பழக்க வழக்கங்களின் வலையில் சிக்கி, அவையே அவர்களை நரக வேதனைகளின் பக்கம் இழுத்துச் செல்லும் அரிகண்டங்களாக மாறிவிடும்.
فِى ٱلْحَمِيمِ ثُمَّ فِى ٱلنَّارِ يُسْجَرُونَ.
40:72. மேலும் அந்த வேதனைகளின் நிலை எவ்வாறு இருக்கும் என்றால் ஒருவர் கொதி நீரில் விழுந்து விட்டால் எவ்வாறு துடிப்பாரோ அது போல் ஆகிவிடும். இப்படியாக அவர்களின் முகங்கள் கருத்துவிடும்.
ثُمَّ قِيلَ لَهُمْ أَيْنَ مَا كُنتُمْ تُشْرِكُونَ.
40:73. அப்போது தம்மை காப்பாற்றுவதாக எண்ணிக் கொண்டிருந்த கற்பனை தெய்வங்களுக்கு என்னவாயிற்று என்று அவர்களிடம் கேட்கப்படும்.
مِن دُونِ ٱللَّهِ ۖ قَالُوا۟ ضَلُّوا۟ عَنَّا بَل لَّمْ نَكُن نَّدْعُوا۟ مِن قَبْلُ شَيْـًۭٔا ۚ كَذَٰلِكَ يُضِلُّ ٱللَّهُ ٱلْكَٰفِرِينَ.
40:74. அல்லாஹ்வின் வழிகாட்டுதலை விட்டுவிட்டு, வழிகெடுத்து வந்த தலைவர்கள் எங்கே என்று கேட்கப்படும். அப்போது அவர்கள் எல்லாம் தம்மைவிட்டு மறைந்து போயிவிட்டதாக கூறுவார்கள். மேலும் அவர்கள் அல்லாஹ்வை விட்டுவிட்டு வேறெதையும் நாங்கள் வணங்கவில்லையே என்றும் வாதிடுவார்கள். இவையே இறைவழிகாட்டுதலை நிராகரித்ததன் கேடுகள் ஆகும்.
காரணம் அல்லாஹ்வை வணங்குவதோடு பொறுப்பு முடிந்துவிட்டது என்று அவர்கள் நினைத்து கொண்டதுதான். (பார்க்க அத்தியாம் 107) ஆனால் அவனுடைய அறிவுரைகளை மதிக்காமல் ஆணவத்தோடு நடந்து கொண்டது நியாயமா?
ذَٰلِكُم بِمَا كُنتُمْ تَفْرَحُونَ فِى ٱلْأَرْضِ بِغَيْرِ ٱلْحَقِّ وَبِمَا كُنتُمْ تَمْرَحُونَ.
40:75. உங்களுக்கு ஏற்பட்டுள்ள இந்த இழிநிலைக்கு இதுவே காரணமாகும். நாட்டில் அநியாய அக்கிரம செயல்களைச் செய்துகொண்டு, அதிகாரப் பலத்தால் ஆனந்த வெள்ளத்தில் மூழ்கி இருந்தீர்களே அதற்கான தண்டனைதான் இது.
ٱدْخُلُوٓا۟ أَبْوَٰبَ جَهَنَّمَ خَٰلِدِينَ فِيهَا ۖ فَبِئْسَ مَثْوَى ٱلْمُتَكَبِّرِينَ.
40:76. எனவே இனி நரக வேதனைகளின் வாயில்கள் ஒவ்வொன்றாக திறக்கப்படும். அவற்றிலிருந்து வெளிவரும் வாய்ப்பே இராது. பெருமையடித்து ஆணவத்துடன் நடப்பவர்களின் தங்குமிடம் மிகவும் மோசமானதாக இருக்கும்.
فَٱصْبِرْ إِنَّ وَعْدَ ٱللَّهِ حَقٌّۭ ۚ فَإِمَّا نُرِيَنَّكَ بَعْضَ ٱلَّذِى نَعِدُهُمْ أَوْ نَتَوَفَّيَنَّكَ فَإِلَيْنَا يُرْجَعُونَ.
40:77. அல்லாஹ்வின் இந்த வாக்கு நிச்சயம் நிறைவேறும். நபியே! நீங்கள் உங்கள் செயல்திட்டங்களில் நிலைத்திருந்து செயல்பட்டு வாருங்கள். வாக்களித்த படி அவர்களுக்கு ஏற்படும் வேதனைகளில் சிலவற்றை நீர் உம் வாழ்நாளிலேயே காண்பீர். அந்த வேதனைகள் முழுஅளவில் அவர்களுக்கு ஏற்படுவதற்கு முன்பே உமக்கு மரணம் நேர்ந்தாலும் அல்லாஹ் நிர்ணயித்த “மனித செயல்களின் விளைவுகள்” என்ற வேதனைகளிலிருந்து அவர்கள் ஒருபோதும் தப்பவே முடியாது. (மேலும் பார்க்க 13:40)
وَلَقَدْ أَرْسَلْنَا رُسُلًۭا مِّن قَبْلِكَ مِنْهُم مَّن قَصَصْنَا عَلَيْكَ وَمِنْهُم مَّن لَّمْ نَقْصُصْ عَلَيْكَ ۗ وَمَا كَانَ لِرَسُولٍ أَن يَأْتِىَ بِـَٔايَةٍ إِلَّا بِإِذْنِ ٱللَّهِ ۚ فَإِذَا جَآءَ أَمْرُ ٱللَّهِ قُضِىَ بِٱلْحَقِّ وَخَسِرَ هُنَالِكَ ٱلْمُبْطِلُونَ.
40:78. இப்படி ஒரு நிலை ஏற்படுவது புதிதான ஒன்றல்ல. உமக்கு முன்னர் பல நபிமார்கள் வந்தார்கள். அவர்களில் சிலருடைய வரலாற்று உண்மைகளை உமக்கு அறிவித்து இருக்கிறோம். இன்னும் பலருடைய வரலாற்றை நாம் கூறவில்லை. காரணம் எல்லா தூதர்கள் விஷயத்திலும் அல்லாஹ்வின் அதே வரையறைகளின் படியே நடந்தன. அல்லாஹ்வின் கட்டளைகள் என்னவோ அவற்றைத் தான் அவர்கள் மக்களுக்கு எடுத்துரைத்தார்கள். எனவே அல்லாஹ் நிர்ணயித்துள்ள படி, “மனித செயல்களுக்கேற்ற விளைவுகள்” தோற்றத்திற்கு வந்த கால கட்டத்தில், ஒவ்வொருவரும் செய்து வந்த செயல்களுக்கு ஏற்ற வகையிலேயே நியாயமான பலன்களையும் விளைவுகளையும் பெற்றுக் கொண்டார்கள். அதன் அடிப்படையில் மார்க்கத்தை பொய்ப்பித்தவர்கள் தாம் பெரு நஷ்டத்தில் இருந்தார்கள்.
ٱللَّهُ ٱلَّذِى جَعَلَ لَكُمُ ٱلْأَنْعَٰمَ لِتَرْكَبُوا۟ مِنْهَا وَمِنْهَا تَأْكُلُونَ.
40:79. அல்லாஹ்வின் செயல்திட்டங்கள் யாவும் ஆக்கப்பூர்வமான நோக்கங்களுக்காகவே உள்ளன. எடுத்துக்காட்டாக கால் நடைகளை பற்றியே கவனித்துப் பாருங்கள். அவையாவும் உங்களுக்கு உதவிடவே படைக்கப்பட்டுள்ளன. அவற்றின் சிலவற்றைப் போக்குவரத்து சாதனமாகப் பயன்படுத்திக் கொள்கிறீர்கள். சிலவற்றை உணவாகப் பயன்படுத்திக் கொள்கிறீர்கள்.
وَلَكُمْ فِيهَا مَنَٰفِعُ وَلِتَبْلُغُوا۟ عَلَيْهَا حَاجَةًۭ فِى صُدُورِكُمْ وَعَلَيْهَا وَعَلَى ٱلْفُلْكِ تُحْمَلُونَ.
40:80. மேலும் அவற்றில் உங்களுக்கு பல்வேறு பலன்களும் உள்ளன. இந்த கால்நடைகளைத் தவிர மற்றும் சில போக்கு வரத்து சாதனங்களும் உள்ளன. நீங்கள் விரும்பியவாறு பயணம் செய்ய உங்களை சுமந்து செல்லும் கப்பல்களும் அவற்றில் அடங்கும்.
وَيُرِيكُمْ ءَايَٰتِهِۦ فَأَىَّ ءَايَٰتِ ٱللَّهِ تُنكِرُونَ.
40:81. இவையாவும் அல்லாஹ்வின் வல்லமையின் அத்தாட்சிகளாகும். இதைப் பற்றி சிந்தித்து அவன் காட்டிய வழியில் நடக்க முன்வரவேண்டும். அல்லாஹ்வின் அத்தாட்சிகளில் எதை உங்களால் மறுக்க முடியும்? எனவே அவன் காட்டும் வழியை நீங்கள் ஏன் ஏற்க மறுக்கிறீர்கள்?
أَفَلَمْ يَسِيرُوا۟ فِى ٱلْأَرْضِ فَيَنظُرُوا۟ كَيْفَ كَانَ عَٰقِبَةُ ٱلَّذِينَ مِن قَبْلِهِمْ ۚ كَانُوٓا۟ أَكْثَرَ مِنْهُمْ وَأَشَدَّ قُوَّةًۭ وَءَاثَارًۭا فِى ٱلْأَرْضِ فَمَآ أَغْنَىٰ عَنْهُم مَّا كَانُوا۟ يَكْسِبُونَ.
40:82. மேலும் உங்களுக்கு அல்லாஹ்வின் அத்தாட்சிகள் தேவை என்றால் நீங்கள் உலகைச் சுற்றிப் பாருங்கள். உங்களுக்கு முன் தீய செயல்களில் ஈடுபட்டு வந்த எத்தனையோ சமுதாயங்கள் எந்த அளவுக்கு பயங்கர விளைவுகளை சந்தித்துக் கொண்டன என்பதை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். (பார்க்க 6:10-11) அவர்கள் இவர்களை விட எண்ணிக்கையில் அதிகமாகவும் செல்வ பலத்திலும் மிகைத்து இருந்தார்கள். அவர்களின் தொழில் நுட்பங்கள் எந்த அளவுக்கு வளர்ந்து இருந்தன என்றால் அவற்றைக் கொண்டு பல்வேறு நினைவு சின்னங்களையும் ஏற்படுத்தி இருந்தனர். இவ்வளவு பலம் இருந்தும் அவர்களுடைய தீய செயல்களின் விளைவாக ஏற்பட்ட அழிவுகளை அவர்களால் தடுக்கவே முடியவில்லை. எனவே அவர்கள் பெற்ற வந்த வளர்ச்சிகள் யாவும் வீணாகிவிட்டன.
فَلَمَّا جَآءَتْهُمْ رُسُلُهُم بِٱلْبَيِّنَٰتِ فَرِحُوا۟ بِمَا عِندَهُم مِّنَ ٱلْعِلْمِ وَحَاقَ بِهِم مَّا كَانُوا۟ بِهِۦ يَسْتَهْزِءُونَ.
40:83. காரணம் அவர்களிடம் வந்த இறைத்தூதர்கள் தெளிவான ஆதாரங்களுடன் இறைவழிகாட்டுதலை எடுத்துரைத்தும், அவர்கள் தம்மிடம் இருந்த தொழில் நுட்பக் கலையின் மமதையில் அவற்றை ஏற்க மறுத்துவிட்டனர். எனவே இறைவழிகாட்டுதலை பரிகாசம் செய்து வந்தனர். அந்தப் பரிகாசங்களே கேடுகளாக அவர்களை சூழ்ந்துகொண்டன.
فَلَمَّا رَأَوْا۟ بَأْسَنَا قَالُوٓا۟ ءَامَنَّا بِٱللَّهِ وَحْدَهُۥ وَكَفَرْنَا بِمَا كُنَّا بِهِۦ مُشْرِكِينَ.
40:84. எனவே அல்லாஹ் நிர்ணயித்த “மனித செயல்களின் விளைவுகள்” என்ற சட்டத்தின் படி வேதனைகள் நெருங்கிய சமயத்தில், அவர்கள் அல்லாஹ்வின் வழிகாட்டுதலை ஏற்றுக் கொள்வதாக கூறினர். இணைத் தெய்வங்களை கற்பித்த மதகுருமார்களை ஒதுக்கி விடுவதாகக் கூறினர். ஆனால் இறைச்சட்டம் இதற்கு அவகாசம் அளிக்கவில்லை. (பார்க்க 4:18)
فَلَمْ يَكُ يَنفَعُهُمْ إِيمَٰنُهُمْ لَمَّا رَأَوْا۟ بَأْسَنَا ۖ سُنَّتَ ٱللَّهِ ٱلَّتِى قَدْ خَلَتْ فِى عِبَادِهِۦ ۖ وَخَسِرَ هُنَالِكَ ٱلْكَٰفِرُونَ.
40:85. எனவே அல்லாஹ்வின் நியதிப்படி அவர்களுக்கு வேதனைகள் நெருங்கியபோது, அவர்கள் கொண்ட நம்பிக்கை பலனளிக்கவில்லை. இதுவே அல்லாஹ்வின் வழியாகும். இதற்கு முன் வாழ்ந்த சமூகத்தவர்களுக்கும் இவ்வாறே நடந்துள்ளது. எனவே அழியும் தருவாயில் ஈமான் கொள்வதாகக் கூறும் காஃபிர்களுக்கு ஒரு பலனும் கிடைக்காது.
அதாவது செல்வ பலமும் தொழில் நுட்பக் கலையும் இருந்தால் மட்டும் போதாது. சமுதாய மக்களுள் ஒழுக்க மாண்புகளும், தொலை நோக்கு பார்வையும், பரந்த மனப்பான்மையும் இருக்க வேண்டும். அப்போது தான் சீர்பட்ட சமுதாயமாக உருவாகி நிலையான சந்தோஷங்கள் கிடைக்கும். இல்லாவிடில் அவை அழிவை தேடித் தந்துவிடும். இதுவே திருக்குர்ஆனின் அறிவுரையாகும்.