بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
39:0.அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் அறிவுரைப்படியே அனைத்துக் காரியங்களையும் செய்ய நாடுகிறேன். (பார்க்க 6:162)
تَنزِيلُ ٱلْكِتَٰبِ مِنَ ٱللَّهِ ٱلْعَزِيزِ ٱلْحَكِيمِ.
39:1. அகிலங்கள் அனைத்தையும் தன் கட்டுப்பாட்டில் வைத்து செயல்பட வைக்கும் வல்லமையும், ஞானமும் மிக்க அல்லாஹ்வின் புறத்திலிருந்து இறக்கியருளப்படுகின்ற நிலைமாறா சட்டங்களைக் கொண்ட வேதமிது.
إِنَّآ أَنزَلْنَآ إِلَيْكَ ٱلْكِتَٰبَ بِٱلْحَقِّ فَٱعْبُدِ ٱللَّهَ مُخْلِصًۭا لَّهُ ٱلدِّينَ.
39:2. நாம் இறக்கி அருளியுள்ள இவ்வேதம் மனிதனின் சிறப்பான வாழ்விற்கு மிகச் சரியான பாதையை காட்டக் கூடியதாகவே உள்ளது. எனவே முழுக்க முழுக்க இவ்வேத அறிவுரைகளுக்கு மட்டும் அடிபணிந்து செயலாற்றுங்கள். அல்லாஹ்வை ஏற்றுக் கொள்பவர்கள், இதிலுள்ள மார்க்க அறிவுரைகளுக்கு மாற்றமாக ஒரு போதும் செயல்பட மாட்டார்கள்.
أَلَا لِلَّهِ ٱلدِّينُ ٱلْخَالِصُ ۚ وَٱلَّذِينَ ٱتَّخَذُوا۟ مِن دُونِهِۦٓ أَوْلِيَآءَ مَا نَعْبُدُهُمْ إِلَّا لِيُقَرِّبُونَآ إِلَى ٱللَّهِ زُلْفَىٰٓ إِنَّ ٱللَّهَ يَحْكُمُ بَيْنَهُمْ فِى مَا هُمْ فِيهِ يَخْتَلِفُونَ ۗ إِنَّ ٱللَّهَ لَا يَهْدِى مَنْ هُوَ كَٰذِبٌۭ كَفَّارٌۭ.
39:3. அறிந்து கொள்ளுங்கள். மீண்டும் அறிவிக்கிறோம். மார்க்கம் என்பது அல்லாஹ்வின் புறத்திலிருந்து அருளப்பட்ட வழிகாட்டுதலுக்கு உட்பட்டே நடைமுறைப்படுத்த வேண்டிய விஷயமாகும். அல்லாஹ்வை விட்டுவிட்டு மகான்களையும், கற்பனை தெய்வங்களையும் தம் வாழ்வின் பாதுகாவலர்களாக சிலர் எடுத்துக் கொள்கிறார்கள். தம் வேண்டுதல்களை அல்லாஹ்விடம் கொண்டு செல்வதற்காகவே அவர்களை வணங்கி வருவதாக கூறுகின்றனர். அல்லாஹ்வைக் குறித்து அவர்கள் கொண்டுள்ள கருத்து வேற்றுமைகளை இவ்வேதம் நீக்கிவிட்டது. எனவே இனி அல்லாஹ்வைப் பற்றி பொய்யான தகவல்களை கொடுத்து இறை வழிகாட்டுதலுக்குப் புறம்பான வழிமுறைகளை ஏற்படுத்திக் கொள்பவர்கள் நேர்வழியில் இருக்கவே முடியாது. இதுதான் உண்மை.
அவ்லியாக்கள் உயிருடன் இருப்பதாக மூட நம்பிக்கையில் மூழ்க வைத்து, மக்களை எதற்கும் தகுதி இல்லாதவர்களாக ஆக்கி விடுகிறார்கள். இதற்கு குர்ஆனின் 2:154 போன்ற வாசகங்களை மேற்கோள்காட்டி அல்லாஹ்வே அவ்லியாக்களுக்கு சாகாவரம் கொடுத்துள்ளான் என சொல்லி, அவர்களை வணங்க வேண்டும் என்கின்றனர். ஆனால் அல்லாஹ்வின் பாதையில் தம் உயிரை நீத்த தியாகிகளைப் பற்றி தான் அந்த வாசகம் பேசுகிறது. மேலும் இறந்து போனவர்களை நீங்கள் கேட்க வைக்க முடியாது என்று பலமுறை குர்ஆனில் சொல்லப்பட்டுள்ளது. (பார்க்க 7:189-190, 16:20-21) எனவே அவ்லியாக்களை வணங்குவது அல்லாஹ்வுக்கு இணையாக்குவதற்கு சமம் ஆகும். இது மன்னிக்க முடியாத குற்றமாகும். அத்தகையவர்கள் ஒருபோதும் நேர்வழிப் பெற மாட்டார்கள்.
உலக அமைப்பில் நீதிபதியிடம் தம் விஷயத்தை முன்வைக்க வழக்கறிஞர்கள் அவசியமாவது போல் ,அல்லாஹ்விடம் தம் கோரிக்கைகளை சமர்ப்பிக்க, அவ்லியாக்கள் தேவைப்படுவதாக சிலர் சொல்கிறார்கள். மனதில் ஊடுருவிச் செல்லும் எண்ணங்களையே அறிந்துகொள்ளும் பேராற்றலுடைய அல்லாஹ்வுக்கு இத்தகைய துணைகள் தேவையா?
لَّوْ أَرَادَ ٱللَّهُ أَن يَتَّخِذَ وَلَدًۭا لَّٱصْطَفَىٰ مِمَّا يَخْلُقُ مَا يَشَآءُ ۚ سُبْحَٰنَهُۥ ۖ هُوَ ٱللَّهُ ٱلْوَٰحِدُ ٱلْقَهَّارُ.
39:4. இன்னும் சிலர் அல்லாஹ்வுக்கு ஒரு புதல்வரும் உண்டு என்கிறார்கள். (பார்க்க 18:5) இவ்வாறு சொல்லி, அல்லாஹ்வை மனித அளவிற்கு கொண்டுவந்து விட்டார்கள். அப்படியும் அல்லாஹ் ஒரு மகனை எடுத்துக் கொள்வதாக இருந்திருந்தால், அப்படியே படைத்திருக்க முடியுமே! அல்லாஹ்வின் வல்லமைகளோ அவர்களுடைய கற்பனைகளுக்கெல்லாம் அப்பாற்பட்டவையாகும். அல்லாஹ்வுக்கு நிகரான மேலாண்மை அகிலத்தில் வேறு யாருக்கும் இல்லை. அவனுடைய வல்லமைக்கு நிகர் அவனே.
அதாவது ஈஸாவை நேரடியாகப் படைப்பதற்குப் பதிலாக, ஏன் அவன் ஒரு பெண்ணை தேர்ந்தெடுத்து கருத்தரிக்கச் செய்து பிறக்க வைக்க வேண்டும்? (பார்க்க 19:22) எனவே ஈஸா நபி அல்லாஹ்வின் புதல்வர் என்பதெல்லாம் கிறிஸ்தவர்களின் கற்பனை கதைகளே ஆகும். அல்லது அவர் தந்தையின்றி பிறந்தார் என்பதும் தவறான தகவலாகும் (விளக்கத்திற்குப் பார்க்க அத்தியாயம் 3:35-51)
خَلَقَ ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضَ بِٱلْحَقِّ ۖ يُكَوِّرُ ٱلَّيْلَ عَلَى ٱلنَّهَارِ وَيُكَوِّرُ ٱلنَّهَارَ عَلَى ٱلَّيْلِ ۖ وَسَخَّرَ ٱلشَّمْسَ وَٱلْقَمَرَ ۖ كُلٌّۭ يَجْرِى لِأَجَلٍۢ مُّسَمًّى ۗ أَلَا هُوَ ٱلْعَزِيزُ ٱلْغَفَّٰرُ.
39:5. அல்லாஹ் எத்தகைய வல்லமைப் பெற்றவன் என்றால், அகிலங்களையும் பூமியையும் ஆக்கப்பூர்வமான நோக்கங்களுக்காகவே எப்பொருளின் துணையுமின்றி படைத்துள்ளான். (பார்க்க 6:101) அவனே இரவையும் பகலையும் மாறி மாறி வரச் செய்துள்ளான். மேலும் சூரியனையும் சந்திரனையும் குறிப்பிட்ட வட்டரையில் சுற்ற வைத்து உங்களுக்குப் பலன் அளிக்கும் வகையில் படைத்துள்ளான். அகிலங்களில் உள்ள ஒவ்வொன்றும் அதற்கே நிர்ணயிக்கப்பட்ட பாதையில் தத்தம் கால அளவுபடி சுற்றி வருகின்றன. அறிந்துகொள்ளுங்கள். அல்லாஹ் அனைத்தையும் படைப்பதோடு அவற்றை பாதுகாத்து கட்டுக் கோப்பாக வழி நடத்திச் செல்லும் பேராற்றல் உடையவனும் ஆவான்.
இத்தகைய பேராற்றலுடைய அல்லாஹ்வுக்கு உதவி செய்ய ஒரு புதல்வன் தேவையா? மனித உள்ளத்தில் ஊடுருவிச் செல்லும் எண்ணங்களையும் அறிந்துகொள்ளும் பேராற்றல் உடையவனாக அல்லாஹ் இருக்கும் போது, தம் வேண்டுதல்களை அவன் வரையில் கொண்டு செல்ல ஒரு நபர் அவசியமா? இத்தகைய மூட நம்பிக்கைகளை மக்களிடத்தில் வளரச் செய்வதால் அந்த சமுதாயமே எந்த முன்னேற்றத்தையும் அடையாமல் பின்தங்கி விடுகிறது.
خَلَقَكُم مِّن نَّفْسٍۢ وَٰحِدَةٍۢ ثُمَّ جَعَلَ مِنْهَا زَوْجَهَا وَأَنزَلَ لَكُم مِّنَ ٱلْأَنْعَٰمِ ثَمَٰنِيَةَ أَزْوَٰجٍۢ ۚ يَخْلُقُكُمْ فِى بُطُونِ أُمَّهَٰتِكُمْ خَلْقًۭا مِّنۢ بَعْدِ خَلْقٍۢ فِى ظُلُمَٰتٍۢ ثَلَٰثٍۢ ۚ ذَٰلِكُمُ ٱللَّهُ رَبُّكُمْ لَهُ ٱلْمُلْكُ ۖ لَآ إِلَٰهَ إِلَّا هُوَ ۖ فَأَنَّىٰ تُصْرَفُونَ.
39:6. மனித படைப்பைப் பற்றியே சற்று சிந்தித்துப் பாருங்கள். உங்கள் அனைவரையும் ஓர் உயிரணுவிலிருந்தே படைக்கின்றான். அந்த உயிரணுவை ஆண் பெண் என இரண்டாகப் பிரித்து உங்களில் ஜோடியை உருவாக்குகின்றான். உங்களுக்காக எட்டு வகையான கால்நடைகளையும் படைத்துள்ளான். (பார்க்க 6:144-146) நீங்கள் தாய் வயிற்றில் கருவாக இருக்கும்போது, உங்களை மூன்று படித்தரங்களைக் கடக்கச் செய்து படைக்கின்றான். அதுமட்டுமின்றி உங்களை மூன்று வகையான ஜவ்வுப் போன்ற அறைக்குள்* (membrane) பாதுகாப்பாக வைத்து வளரச் செய்கிறான். இப்படி உங்களைப் படைக்கும் பேராற்றலுடைய இறைவன் தான் அல்லாஹ். அவனைத் தவிர வேறு யாராலும் இப்படி ஒருபோதும் படைக்கவே முடியாது. காரணம் அகிலங்கள் அனைத்தும் அவனுடைய அதிகாரத்திற்கு உட்பட்டே செயல்பட்டு வருகின்றன.
ஆனால் நீங்களோ இதைப் பற்றி எல்லாம் சிந்தித்துப் பார்க்காமல் இறந்து போன மகான்களை பின்பற்றிச் செல்லவே விரும்புகிறீர்கள்.
தாயின் கர்ப்பப் பை, குழந்தைக்கு ஆகாரம் கிடைக்கச் செய்யும் மணிக்கொடி என்ற பை, குழந்தையைச் சுற்றி ஜவ் போன்ற பனிக்குடம் என்கிற பை ஆகிய மூன்று அறைகள் உள்ளன.
إِن تَكْفُرُوا۟ فَإِنَّ ٱللَّهَ غَنِىٌّ عَنكُمْ ۖ وَلَا يَرْضَىٰ لِعِبَادِهِ ٱلْكُفْرَ ۖ وَإِن تَشْكُرُوا۟ يَرْضَهُ لَكُمْ ۗ وَلَا تَزِرُ وَازِرَةٌۭ وِزْرَ أُخْرَىٰ ۗ ثُمَّ إِلَىٰ رَبِّكُم مَّرْجِعُكُمْ فَيُنَبِّئُكُم بِمَا كُنتُمْ تَعْمَلُونَ ۚ إِنَّهُۥ عَلِيمٌۢ بِذَاتِ ٱلصُّدُورِ.
39:7. படைப்புகளின் இந்த உண்மைகளை எல்லாம் எடுத்துரைத்த பின்பும், யாராவது இறைவழிகாட்டுதலுக்கு எதிராகச் செயல்பட விரும்பினால், அதனால் ஏற்படும் பாதிப்புகள் அவனுக்கே அன்றி, அல்லாஹ்வுக்கு ஒருபோதும் அல்ல என்பதை அறிந்து கொள்ளட்டும். அப்படியும் அவன் இறைவழிகாட்டுதலுக்கு எதிராக செயல்பட்டு தன் வாழ்வில் நிலையான சுகத்தை ஒருபோதும் காண முடியாது. நீங்கள் நிலையான சந்தோஷங்களுடன் வாழவேண்டும் என்பதே அல்லாஹ்வின் விருப்பமாகும். ஒருவர் உழைத்து சிறப்பாக வாழ்ந்தால் அதன் பலன்கள் அவருக்கே கிடைக்கின்றன. மனம்போன போக்கில் வாழ்ந்து தவறான செயல்களைச் செய்து வந்தால், அவற்றின் விளைவுகள் அவனையே வந்தடைகின்றன. ஒருவனுடைய பாவச் சுமைகளை பிரிதொருவன் சுமக்க முடியாது. இப்படியாகத் தான் அல்லாஹ் சட்டங்களை நிலைநிறுத்தியுள்ளான். நீங்கள் செய்யும் நற்செயல்களோ அல்லது தீய செயல்களோ அவற்றின் பலன்களும் விளைவுகளும் முறைப்படி அல்லாஹ் நிர்ணயித்த விதிமுறைகளின் படியே ஏற்பட்டு வரும். இதை அறிவிக்கத் தான் இறைவழிகாட்டுதல் என்கின்றன இவ்வேதம் அளிக்கப்படுகிறது. உங்களுடைய தவறான செயல்கள் எவை என்பதையும் இவ்வேதம் தெளிவாக்குகிறது. மேலும் நீங்கள் செய்யும் செயல்கள் எதுவும் அல்லாஹ்வுக்கு தெரியாமல் போவதில்லை. உங்கள் மனதில் எழும் எண்ணங்களையும் அறிந்துகொள்ளும் பேராற்றலுடையவன் தான் அல்லாஹ் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
۞ وَإِذَا مَسَّ ٱلْإِنسَٰنَ ضُرٌّۭ دَعَا رَبَّهُۥ مُنِيبًا إِلَيْهِ ثُمَّ إِذَا خَوَّلَهُۥ نِعْمَةًۭ مِّنْهُ نَسِىَ مَا كَانَ يَدْعُوٓا۟ إِلَيْهِ مِن قَبْلُ وَجَعَلَ لِلَّهِ أَندَادًۭا لِّيُضِلَّ عَن سَبِيلِهِۦ ۚ قُلْ تَمَتَّعْ بِكُفْرِكَ قَلِيلًا ۖ إِنَّكَ مِنْ أَصْحَٰبِ ٱلنَّارِ.
39:8. ஆனால் மனிதனின் நிலை எவ்வாறு உள்ளது என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள். அவனுக்கு ஏதேனும் துன்பம் ஏற்பட்டால் உடனே அவன் உள்ளச்சத்துடன் இறைவனைப் பிரார்த்திக்கிறான். அதன்பின் இறைவனின் நியதிப்படி அத்துன்பத்திலிருந்து விடுபட்டு, அவனுக்கு அருட்கொடைகள் கிடைக்க ஆரம்பித்தால், அவன் பட்ட கஷ்ட நஷ்டங்களையும் அவற்றிலிருந்து விடுபட அவன் எடுத்துக் கொண்ட முயற்சிகளையும் மறந்து விடுகிறான். (பார்க்க 6:40-41) அதன்பின் அவன் பழையபடி மகான்களையும் கற்பனைத் தெய்வங்களையும் அல்லாஹ்வுக்கு இணையாகப் பாவித்து, அவற்றை வணங்கி வருகிறான். அதாவது அவன் மனம் போன போக்கில் வாழவே ஆசைப்படுகிறான். இத்தகையவர்கள் சிறிது காலத்திற்குத் தான் சுகமாக வாழ முடியும். இறுதியில் அவர்களுடைய தவறான செயல்களின் விளைவாக நரக வேதனைகளை அனுபவிக்க வேண்டி வரும்.
أَمَّنْ هُوَ قَٰنِتٌ ءَانَآءَ ٱلَّيْلِ سَاجِدًۭا وَقَآئِمًۭا يَحْذَرُ ٱلْءَاخِرَةَ وَيَرْجُوا۟ رَحْمَةَ رَبِّهِۦ ۗ قُلْ هَلْ يَسْتَوِى ٱلَّذِينَ يَعْلَمُونَ وَٱلَّذِينَ لَا يَعْلَمُونَ ۗ إِنَّمَا يَتَذَكَّرُ أُو۟لُوا۟ ٱلْأَلْبَٰبِ.
39:9. இறைவன் நிர்ணயித்துள்ள “மனித செயல்களுக்கு ஏற்ற இறுதி விளைவுகள்” என்கின்ற ஆஃகிரத்தை ஏற்று, தவறான செயல்களை தவிர்த்து, இறைச் சட்டங்களுக்கு முற்றிலும் அடிபணிந்து, இரவு பகலாக உழைத்து, இறை அருட்கொடைகளை பெறுபவர்கள் ஒருபுறம். அல்லாஹ்வுக்கு இணையாக கற்பனை தெய்வங்களையும் மகான்களையும் வணங்கி வருபவர்கள் மறுபக்கம். இவ்வாறு அறிவுள்ளவர்களும், அறியாதவர்களும் சமமானவர்கள் என நீங்கள் கூறுவீர்களா? எனவே அறிவைப் பயன்படுத்தும் சிந்தனையாளர்கள் தாம் இறைவனின் அறிவுரைகளை ஏற்று அவற்றின்படி செயல்படுவார்கள்.
قُلْ يَٰعِبَادِ ٱلَّذِينَ ءَامَنُوا۟ ٱتَّقُوا۟ رَبَّكُمْ ۚ لِلَّذِينَ أَحْسَنُوا۟ فِى هَٰذِهِ ٱلدُّنْيَا حَسَنَةٌۭ ۗ وَأَرْضُ ٱللَّهِ وَٰسِعَةٌ ۗ إِنَّمَا يُوَفَّى ٱلصَّٰبِرُونَ أَجْرَهُم بِغَيْرِ حِسَابٍۢ.
39:10. நபியே! மேற்சொன்ன பேருண்மைகளை ஏற்றுக் கொண்டவர்களிடம், அல்லாஹ்வின் வழிகாட்டுதலைப் பேணி நடந்து கொள்ளும்படி அறிவுறுத்துங்கள். சமுதாய மேம்பாட்டிற்காக நீங்கள் செய்யும் எல்லா அழகிய செயல்களும் நன்மையே விளைவிக்கும். அல்லாஹ் படைத்துள்ள இந்த பூமி மிகவும் விசாலமானது. மனித வாழ்க்கைக்குத் தேவையான அனைத்தையும் இப்பூமியில் படைக்கப்பட்டுள்ளன. (பார்க்க 2:29) அவற்றின் செயல்பாடுகளை அல்லும் பகலும் ஆராய்ந்து, தொடர்ந்து உழைப்பவர்களுக்கு இறைவன் புறத்திலிருந்து கணக்கில்லா நற்பலன்கள் கிடைத்து வருகின்றன. (பார்க்க 3:190-191) இதை அவர்களிடம் தெளிவாக விளக்கிவிடுங்கள்.
قُلْ إِنِّىٓ أُمِرْتُ أَنْ أَعْبُدَ ٱللَّهَ مُخْلِصًۭا لَّهُ ٱلدِّينَ.
39:11. அவர்களிடம், “நானும் இறைக் கட்டளைக்கு மட்டுமே அடிபணிந்து செயல்பட வேண்டும் என்பது இறைவனின் கட்டளையாகும். எனவே இறைவன் வகுத்து தந்துள்ள மார்க்கத்தை உண்மைப்படுத்திக் காட்டவே நானும் செயல்படுகிறேன்” என்று நபியே! நீர் தெளிவுபடுத்தி விடுவீராக. (பார்க்க 9:33)
وَأُمِرْتُ لِأَنْ أَكُونَ أَوَّلَ ٱلْمُسْلِمِينَ.
39:12. மேலும் இறைக் கட்டளையின்படி ஒட்டுமொத்த மக்களின் நலனை பேணிக் காக்கும் முஸ்லிம்களில் நான் முதன்மையானவனாக இருப்பதாகவும் அவர்களிடம் எடுத்துரைப்பீராக
قُلْ إِنِّىٓ أَخَافُ إِنْ عَصَيْتُ رَبِّى عَذَابَ يَوْمٍ عَظِيمٍۢ.
39:13. எனவே நான் இறைக் கட்டளைக்கு எதிராக செயல்பட்டால் மிகப் பெரிய வேதனைக்கு ஆளாவேன் என்றும் அல்லாஹ்விடமிருந்து எச்சரிக்கை வந்துள்ளதாக அவர்களிடம் கூறிவிடுங்கள்.
قُلِ ٱللَّهَ أَعْبُدُ مُخْلِصًۭا لَّهُۥ دِينِى.
39:14. ஆகவே அல்லாஹ் அறிவித்து தந்துள்ள மார்க்க கட்டளைக்கு மட்டுமே அடிபணிந்து செயல்படுகிறேன். இதுவே நான் அறிவிக்கும் மார்க்கமாகும்.
فَٱعْبُدُوا۟ مَا شِئْتُم مِّن دُونِهِۦ ۗ قُلْ إِنَّ ٱلْخَٰسِرِينَ ٱلَّذِينَ خَسِرُوٓا۟ أَنفُسَهُمْ وَأَهْلِيهِمْ يَوْمَ ٱلْقِيَٰمَةِ ۗ أَلَا ذَٰلِكَ هُوَ ٱلْخُسْرَانُ ٱلْمُبِينُ.
39:15. நீங்கள் இந்த மார்க்க கட்டளையை விட்டுவிட்டு வேறு வழிமுறைகளை கடைப்பிடிக்க நாடினால், அது உங்கள் விருப்பம். ஆனால் ஒரு விஷயத்தை மட்டும் கவனத்தில் வைத்துக் கொள்ளுங்கள். நீங்களும் உங்களை சார்ந்தவர்களும் மனித செயல்களின் விளைவுகள் தோற்றத்திற்கு வரும் கால கட்டங்களில் பெரு நஷ்டவாளிகளாகத் தான் நிற்பீர்கள். நீங்கள் செய்து வரும் தவறான செயல்களின் விளைவுகளாக அவை உங்கள் முன் வந்து நிற்கும்.
لَهُم مِّن فَوْقِهِمْ ظُلَلٌۭ مِّنَ ٱلنَّارِ وَمِن تَحْتِهِمْ ظُلَلٌۭ ۚ ذَٰلِكَ يُخَوِّفُ ٱللَّهُ بِهِۦ عِبَادَهُۥ ۚ يَٰعِبَادِ فَٱتَّقُونِ.
39:16. இத்தகைய சமுதாயங்களில் சில சமயம் மேல்மட்ட வர்க்கத்திலிருந்து பிரச்னைகள் உருவாகிவரும். சில சமயங்களில் அடிமட்ட வர்க்கத்திலிருந்து பிரச்னைகள் ஏற்பட்டு வரும். இதன் தாக்கம் நடுத்தர வர்கத்திற்கும் ஏற்படும். இப்படியாக மேல் மட்டத்திலிருந்தும் கீழிலிருந்தும் பிரச்னைகள் உருவாகி கேடுகள் ஏறபட்டுக் கொண்டே இருக்கும். இத்தகைய முன்னெச்சரிக்கைகள் எல்லாம் அல்லாஹ்வின் புறத்திலிருந்து உங்களுக்கு அறிவிக்கப்படுகின்றன. அத்தகைய ஆபத்திலிருந்து காப்பாற்றிக் கொள்ள விரும்பினால் அல்லாஹ்வின் வழிகாட்டுதலைப் பேணி நடந்து கொள்ளட்டும்.
وَٱلَّذِينَ ٱجْتَنَبُوا۟ ٱلطَّٰغُوتَ أَن يَعْبُدُوهَا وَأَنَابُوٓا۟ إِلَى ٱللَّهِ لَهُمُ ٱلْبُشْرَىٰ ۚ فَبَشِّرْ عِبَادِ.
39:17. ஆக மனோ இச்சைகளை அடிப்படையாகக் கொண்டு செயல்படுபவர்களை பின்பற்றுவதை விட்டுவிட்டு, அல்லாஹ்வின் வழிகாட்டுதலின் பக்கம் திரும்பி வருவோருக்குத் தான் சிறந்ததொரு எதிர்காலம் இருக்கும் என்ற நற்செய்தி உண்டு. இந்த நற்செய்தியை இறைக் கட்டளைப் படி செயல்படுபவர்களுக்கு மட்டும் பொருந்தும் என்று அறிவித்துவிடுவீராக.
ٱلَّذِينَ يَسْتَمِعُونَ ٱلْقَوْلَ فَيَتَّبِعُونَ أَحْسَنَهُۥٓ ۚ أُو۟لَٰٓئِكَ ٱلَّذِينَ هَدَىٰهُمُ ٱللَّهُ ۖ وَأُو۟لَٰٓئِكَ هُمْ أُو۟لُوا۟ ٱلْأَلْبَٰبِ.
39:18. அவர்கள் அல்லாஹ்வின் புறத்திலிருந்து அளிக்கப்பட்டுள்ள இந்த குர்ஆனை செவியுற்று, அவற்றின் அறிவுரைகளை தெரிந்து கொள்ளட்டும். தங்களுக்குள் உள்ள விவகாரங்களை தீர்த்து வைக்க, இந்த அறிவுரைகளை முன்வைத்து சிறந்த முறையில் செயலாற்றட்டும். இத்தகையவர்கள் தான் நேர்வழியில் செல்ல வாய்ப்பினை பெறுபவர்கள். (மேலும் பார்க்க 7:145&39:55) இவர்கள் தாம் சான்றோர்கள் பட்டியலில் இடம்பெறுவர்.
أَفَمَنْ حَقَّ عَلَيْهِ كَلِمَةُ ٱلْعَذَابِ أَفَأَنتَ تُنقِذُ مَن فِى ٱلنَّارِ.
39:19. எனவே எவர் இந்த வழிகாட்டுதலுக்கு எதிராக செயல்படுகிறாரோ, அவருக்கு அழிவு நிச்சயமாகி விடுகிறது. அதன்பின் அவரை அந்த அழிவிலிருந்து யாரால் காப்பாற்ற முடியும்?
لَٰكِنِ ٱلَّذِينَ ٱتَّقَوْا۟ رَبَّهُمْ لَهُمْ غُرَفٌۭ مِّن فَوْقِهَا غُرَفٌۭ مَّبْنِيَّةٌۭ تَجْرِى مِن تَحْتِهَا ٱلْأَنْهَٰرُ ۖ وَعْدَ ٱللَّهِ ۖ لَا يُخْلِفُ ٱللَّهُ ٱلْمِيعَادَ.
39:20. ஆனால் எவர் இறைவழிகாட்டுதலைப் பேணி நடந்து கொள்கிறார்களோ அவர்களுக்கு மென்மேலும் உயர்வும் கண்ணியமும் கூடிக் கொண்டே செல்லும். மேலும் அவர்களுக்கு வாழ்க்கை வசதிகளும் பெருகி வரும். அவை வற்றாத ஜீவநதி போல் தொடர்ந்து கிடைத்து வரும். இது அல்லாஹ்வின் வாக்குறுதியாகும். அல்லாஹ்வின் இந்த வாக்குறுதியில் எந்த மாற்றத்தையும் ஒருபோதும் காணமாட்டீர்கள்.
أَلَمْ تَرَ أَنَّ ٱللَّهَ أَنزَلَ مِنَ ٱلسَّمَآءِ مَآءًۭ فَسَلَكَهُۥ يَنَٰبِيعَ فِى ٱلْأَرْضِ ثُمَّ يُخْرِجُ بِهِۦ زَرْعًۭا مُّخْتَلِفًا أَلْوَٰنُهُۥ ثُمَّ يَهِيجُ فَتَرَىٰهُ مُصْفَرًّۭا ثُمَّ يَجْعَلُهُۥ حُطَٰمًا ۚ إِنَّ فِى ذَٰلِكَ لَذِكْرَىٰ لِأُو۟لِى ٱلْأَلْبَٰبِ.
39:21. அல்லாஹ்வின் நிலைமாற சட்டத்தைப் பற்றிய ஆதாரம் வேண்டுமென்றால், இவ்வுலகம் சிறப்பாக செயல்பட அவன் ஏற்படுத்தியுள்ள நடைமுறை சட்டங்களைப் பற்றி கவனித்துப் பாருங்கள். வானத்திலிருந்து பொழியும் மழை நீர், பூமியில் ஓடைகளாகவும் நதிகளாகவும் ஒடுகின்றன. அவை பூமிக்குள் சென்று நீரூற்றாகவும் ஒடுகின்றன. அதைக் கொண்டு பல நிறங்களைக் கொண்ட தானியங்களும் விளைகின்றன. அதே தானியங்கள் உலர்ந்து கூளமாகவும் மாறிவிடுகின்றன. அறிவுடையோருக்கு இதில் படிப்பினைகள் பல உள்ளன.
மழை நீரைப் பயன்படுத்தி உழைத்து விவசாயம் செய்து வந்தால், அந்நிலத்திலிருந்து மக்களுக்கு பல நன்மைகள் கிடைக்கின்றன. அந்நிலத்தை சரிவர பராமரிக்காமல் விட்டு விட்டால், நாளடைவில் பொத்தல் காடாக மாறிவிடுகிறது. அதுபோல இறைவழிகாட்டுதல் மூலம் சமுதாயத்தைக் கட்டிக் காத்து வந்தால்,செல்வ செழிப்புடன் சிறப்பாக விளங்கும். அதை சரிவர கவனிக்காமல் விட்டுவிட்டால் நாளடைவில் சீர்கெட்டு எதற்கும் பயன்படதாக சமுதாயமாக ஆகிவிடும்.
أَفَمَن شَرَحَ ٱللَّهُ صَدْرَهُۥ لِلْإِسْلَٰمِ فَهُوَ عَلَىٰ نُورٍۢ مِّن رَّبِّهِۦ ۚ فَوَيْلٌۭ لِّلْقَٰسِيَةِ قُلُوبُهُم مِّن ذِكْرِ ٱللَّهِ ۚ أُو۟لَٰٓئِكَ فِى ضَلَٰلٍۢ مُّبِينٍ.
39:22. எனவே எந்த சமுதாயம் இறைவழிகாட்டுதலின்படி அனைத்து தரப்பு மக்களின் நலனை பேணிக் காக்கும் இஸ்லாமிய கொள்கைக் கோட்பாடுகளை ஏற்று அவற்றின்படி செயல்படுமோ, அவர்களுடைய உள்ளங்கள் இறைவனின் நியதிப்படி விசாலமாகிக் கொண்டே செல்லும். மாறாக எந்த சமுதாயத்தவர்கள் இறைவனின் அறிவுரைகளைப் புறக்கணித்து வாழ்கிறார்களோ, அவர்களுடைய உள்ளங்கள் கற்பாறைகள் போல் கடினமாகிவிடும். (பார்க்க 2:74) அத்தகையவர்கள் வழிகேட்டில் வெகுதூரம் சென்று விடுகிறார்கள்.
ٱللَّهُ نَزَّلَ أَحْسَنَ ٱلْحَدِيثِ كِتَٰبًۭا مُّتَشَٰبِهًۭا مَّثَانِىَ تَقْشَعِرُّ مِنْهُ جُلُودُ ٱلَّذِينَ يَخْشَوْنَ رَبَّهُمْ ثُمَّ تَلِينُ جُلُودُهُمْ وَقُلُوبُهُمْ إِلَىٰ ذِكْرِ ٱللَّهِ ۚ ذَٰلِكَ هُدَى ٱللَّهِ يَهْدِى بِهِۦ مَن يَشَآءُ ۚ وَمَن يُضْلِلِ ٱللَّهُ فَمَا لَهُۥ مِنْ هَادٍ.
39:23. இப்படியாக அல்லாஹ், மார்க்க உண்மைகளை மிக அழகிய முறையில் வரலாற்று நிகழ்வுகளை ஆதாரமாகக் கொண்டு இறக்கி அருளியுள்ளான். அவற்றிற்கு ஒப்பான நிகழ்வுகளே இவ்வுலகில் மீண்டும் மீண்டும் நிகழ்ந்து வரும் என்பதை அறிந்து கொள்ளுங்கள். இந்த வரலாற்று உண்மைகளை இன்றைய நவீன காலத்தோடு ஒப்பிடுகையில், இன்றைக்கும் அவ்வாறே நிகழ்ந்து வருவதை அறிந்து கொள்வீர்கள். இந்த உண்மைகள் உங்களை மெய்ச்சிலிர்க்க வைத்துவிடும். மேலும் அல்லாஹ்வுக்கு எதிராக செயல்படுவதால் ஏற்படும் விபரீத விளைவுகளை எண்ணி அவர்கள் உள்ளச்சத்துடன் செயல்படுவார்கள். இதுதான் அல்லாஹ்வின் வழிமுறையாகும். ஆக அல்லாஹ் காட்டும் வழியில் செல்ல யாருக்கு ஆர்வம் இருக்கின்றதோ, அவர்கள் நேர்வழி பெறுகிறார்கள். யார் அல்லாஹ்வின் நேர்வழியினை விட்டு விலகி விடுகிறார்களோ, அவர்களுக்கு நேர்வழி காட்டுவோர் வேறு எவரும் இருப்பதில்லை.
வரலாற்று உண்மைகளைக் கவனித்துப் பார்க்கும் போது, ஓரே மாதிரியான நிகழ்வுகள் தான் திரும்ப திரும்ப நிகழ்ந்துள்ளன என்பதை அறிந்து கொள்வீர்கள். அதாவது இறைவழிகாட்டுதல் இல்லாமல் வாழும் மக்கள் தவறான வழியில் செல்வதும், அவர்களை திருத்தி நேர்வழிப்படுத்த இறைத்தூதர்கள் முயல்வதும், அவரை ஏற்று நடப்பவர்களுக்கு அழகிய வாழ்க்கை வசதிகள் கிடைப்பதும், அவரை எதிர்த்து தம் மனம் போன போக்கில் வாழ்பவர்கள் அழிவை சந்தித்துக் கொண்டதும் - என ஒரே மாதிரியான நிகழ்வுகளே நடந்துள்ளன.
அதே போல இறைவழிகாட்டுதலை எடுத்துரைத்த போது எதிர்ப்புகளும் எழுந்தன. எடுத்துக்காட்டாக மூஸா நபிக்கு எதிராக அவர் காலத்தில் வாழ்ந்த ஃபிர்அவ்னிய மன்னனும், செல்வங்களைக் குவித்து வைத்திருந்த ஃகாரூனும், மதத்தலைவனாக ஹாமானும் இருந்தார்கள். (பார்க்க 28:6) முஹம்மது நபி காலத்திலும் இத்தகைய எதிர்ப்புகள் வலுத்தன. (பார்க்க 95:1-3) அது போல இன்றைக்கும் இறைவழிகாட்டுதலை எடுத்துரைத்தால் இந்த மூன்று சக்திகளும் எதிர்த்து நிற்கும். இதை கவனத்தில் கொள்ள வேண்டும். ஏழை எளிய பாமர மக்களின் ஆதரவு தான் முதன் முதலில் கிடைக்கும். (பார்க்க 26:111) கேடுகெட்ட சமுதாயமாக இருந்த அரபு நாட்டு மக்களை முஹம்மது நபி (ஸல்) அவர்கள் நல்வழிப்படுத்த முயன்றது போல, நாமும் இப்போதுள்ள மக்களை நல்வழிப்படுத்த முயல வேண்டுமே அன்றி, ‘மஹ்தி’ என்பவர் வருவார் என்றோ, ஈஸா நபி மீண்டும் வருவார் என்றோ சொல்லிக் கொண்டு பொறுப்பை தட்டிக் கழிக்கக் கூடாது.
أَفَمَن يَتَّقِى بِوَجْهِهِۦ سُوٓءَ ٱلْعَذَابِ يَوْمَ ٱلْقِيَٰمَةِ ۚ وَقِيلَ لِلظَّٰلِمِينَ ذُوقُوا۟ مَا كُنتُمْ تَكْسِبُونَ.
39:24. தவறான வழியில் செல்வதால் ஏற்படும் விளைவுகள் கொடிய வேதனைகளாக தோற்றத்திற்கு வரும் கால கட்டத்தில், அவற்றை யாராவது தடுத்து நிறுத்த முடியுமா? நீங்கள் இதுநாள் வரையில் செய்து வந்த தீய செயல்களினால் ஏற்பட்ட தீய விளைவுகளை அனுபவியுங்கள் என்று சொல்வதாகத் தான் அந்த வேதனைகள் இருக்கும். எனவே வரும்முன் காப்போம் என்பதே வரலாற்று ஆதாரங்களை எடுத்துரைப்பதன் நோக்கமாகும். மனித வாழ்க்கை மரணத்திற்குப் பின்பும் தொடர்வதால் இதே போன்ற வேதனைகள் பன்மடங்கு மறுமையில் அதிகமாகவே இருக்கும்.
كَذَّبَ ٱلَّذِينَ مِن قَبْلِهِمْ فَأَتَىٰهُمُ ٱلْعَذَابُ مِنْ حَيْثُ لَا يَشْعُرُونَ.
39:25. இதற்குமுன் கடந்த கால சமூகத்தவர்களும் இதே போன்று வரலாற்று முன்எச்சரிக்கைகளை பொருட்படுத்தாமல் வாழ்ந்து வந்ததால், அவர்களுடைய தீய செயல்களின் விளைவுகள் அவர்களை அறியா வண்ணம் கொஞ்சம் கொஞ்சமாக சூழ்ந்து கொண்டன.
فَأَذَاقَهُمُ ٱللَّهُ ٱلْخِزْىَ فِى ٱلْحَيَوٰةِ ٱلدُّنْيَا ۖ وَلَعَذَابُ ٱلْءَاخِرَةِ أَكْبَرُ ۚ لَوْ كَانُوا۟ يَعْلَمُونَ.
39:26. இறுதியில் அல்லாஹ்வின் நியதிப்படி அந்த விளைவுகள் பயங்கர வேதனைகளாக விஸ்வரூபம் எடுத்துக் கொண்டன. இப்படியாக அவர்களுக்கு வேதனைகள் அதிகரித்துக் கொண்டே சென்றன. மரணத்திற்குப் பின்பும் அந்த வேதனைகள் பன்மடங்காக இருக்கும். இந்த உண்மைகளை அவர்கள் அறிந்திருந்தால் நன்றாக இருந்திருக்குமே!
وَلَقَدْ ضَرَبْنَا لِلنَّاسِ فِى هَٰذَا ٱلْقُرْءَانِ مِن كُلِّ مَثَلٍۢ لَّعَلَّهُمْ يَتَذَكَّرُونَ.
39:27. ஆக உலக மக்கள் அனைவரும் இறைவனின் அறிவுரைகளை மிகச் சரியாகப் புரிந்து கொண்டு சிறப்பாக வாழவேண்டும் என்பதற்காகவே எல்லா விதமான உதாரணங்களும் ஆதாரங்களும் இந்த குர்ஆனில் எடுத்துரைக்கப்படுகின்றன.
قُرْءَانًا عَرَبِيًّا غَيْرَ ذِى عِوَجٍۢ لَّعَلَّهُمْ يَتَّقُونَ.
39:28. இவற்றைக் கொண்டு மக்கள் இறைவழிகாட்டுதலை பேணி சிறப்பாக நடக்கவேண்டும் என்பதற்காகவே அவர்கள் பேசும் தெள்ளத்தெளிவான மொழியிலேயே இந்த குர்ஆன் அளிக்கப்படுகிறது. இதில் எவ்வித முரண்பட்ட கருத்துகளோ அல்லது கோணலோ எங்கும் காணக் கிடைக்காது. (பார்க்க 4:82, 18:1)
இத்தகயை உதாரணங்களில் இதுவும் ஒன்று. அதை கவனித்துப் பாருங்கள்.
ضَرَبَ ٱللَّهُ مَثَلًۭا رَّجُلًۭا فِيهِ شُرَكَآءُ مُتَشَٰكِسُونَ وَرَجُلًۭا سَلَمًۭا لِّرَجُلٍ هَلْ يَسْتَوِيَانِ مَثَلًا ۚ ٱلْحَمْدُ لِلَّهِ ۚ بَلْ أَكْثَرُهُمْ لَا يَعْلَمُونَ.
39:29. ஒருவர் பல்வேறு கொள்கை கோட்பாடுகளைக் கொண்ட பல எஜமானர்களிடம் பணி புரிகிறார். இன்னொருவர் ஒரே கொள்கையுடைய ஓர் எஜமானனிடம் பணிபுரிகிறார். இவ்விருவரும் சமமாவார்களா? மனிதனின் சிறப்பான வாழ்க்கைக்கு சரியான பாதையைக் காட்டிய அல்லாஹ் போற்றுதலுக்குரியவனே ஆவான். ஆனால் இந்த உண்மை பெரும்பாலான மக்களுக்குத் தெரியாது.
அதே போல ஒரு சமுதாயம் பல தெய்வ வழிபாட்டில் மூழ்கி அவர்களிடையே கருத்து வேற்றுமைகளும் மோதல்களும் இருந்தால் அது சிறப்பான சமுதாயமாகத் திகழுமா? ஓர் இறைவன், சமுதாயத்தை வழிநடத்திச் செல்லும் ஒரு தலைவர், ஓரிறைக் கொள்கையுடைய வேதம் என்று அனைவரும் இணைந்து ஒருமித்த கொள்கையுடன், “அனைத்து சந்தோஷங்களும் அனைவருக்கும்” என்ற அடிப்படையில் ஒரு சமுதாயம் உருவெடுக்குமானால் அது எவ்வளவு சிறப்பான சமுதாயமாக இருக்கும்? அப்படிப்பட்ட சமுதாயத்தில் தான் அல்லாஹ்வின் பாராட்டுகளும் போற்றுதல்களும் ஒலித்துக்கொண்டே இருக்கும்.
إِنَّكَ مَيِّتٌۭ وَإِنَّهُم مَّيِّتُونَ.
39:30. எனவே எந்த ஒரு தனி நபருக்கும் இவ்வுலகில் நிரந்தர வாழ்வு கிடைக்கப் போவதில்லை. நீர் மரிக்க நேர்ந்தால் அவர்கள் என்ன நிரந்தரமாக உயிர் வாழப் போகிறார்களா? அவர்களும் மரிக்கத் தான் போகிறார்கள்.
ثُمَّ إِنَّكُمْ يَوْمَ ٱلْقِيَٰمَةِ عِندَ رَبِّكُمْ تَخْتَصِمُونَ.
39:31. அதன் பின் நீங்கள் செய்து வந்த செயல்களுக்கு ஏற்ற பலன்களைப் பெறும் கால கட்டம் துவங்கி விடுகிறது. இதை யாராவது தடுத்து நிறுத்த முடியுமா? எனவே ஓரிறைக் கொள்கையை ஏற்க முன் வரவில்லை என்றால் அவர்களை அவர்கள் போக்கில் விட்டுவிடுங்கள்.
۞ فَمَنْ أَظْلَمُ مِمَّن كَذَبَ عَلَى ٱللَّهِ وَكَذَّبَ بِٱلصِّدْقِ إِذْ جَآءَهُۥٓ ۚ أَلَيْسَ فِى جَهَنَّمَ مَثْوًۭى لِّلْكَٰفِرِينَ.
39:32. இதுவே அல்லாஹ்விடமிருந்து வந்துள்ள உண்மை விஷயங்களாகும். இதன் பின்பும் யாராவது அல்லாஹ் சொல்லாததை சொன்னதாகவோ (பார்க்க 7:33) அல்லது அல்லாஹ் சொன்ன உண்மைகளை மறைப்பதோ கூடாது (பார்க்க 2:164) இவ்வாறு பொய்யுரைத்து மார்க்கதை பொய்ப்பிப்பவனை விட பெரும் அநியாயக்காரன் யாராக இருக்க முடியும்? இத்தகையவர்களை பின்பற்றி நடக்கும் சமுதாய மக்கள் போய் சேருமிடம் நரகமாகத் தான் என்பதை தெரிந்து கொள்ளட்டும்.
وَٱلَّذِى جَآءَ بِٱلصِّدْقِ وَصَدَّقَ بِهِۦٓ ۙ أُو۟لَٰٓئِكَ هُمُ ٱلْمُتَّقُونَ.
39:33. இதற்கு மாறாக யார் அல்லாஹ் அறிவித்துள்ள மார்க்க உண்மைகளை மக்களுக்கு எடுத்துரைத்து அவற்றை நடைமுறைப்படுத்தி அவற்றை உறுதியாக்குவாரோ, அத்தகையவர்களே இறைவழிகாட்டுதலைப் பேணி நடப்பவர்கள் ஆவர்.
لَهُم مَّا يَشَآءُونَ عِندَ رَبِّهِمْ ۚ ذَٰلِكَ جَزَآءُ ٱلْمُحْسِنِينَ.
39:34. இப்படியாக இறைவனின் நாட்டம் என்னவோ அதன்படியே அவர்கள் செயல்படுவார்கள். எனவே அவர்களுக்கு வேண்டியவற்றை இறைவனின் நியதிப்படி உழைத்து பெற்றுக் கொள்வார்கள். இவையே அழகிய சமுதாயத்தை உருக்க சிறந்த செயல்களை செய்வோருக்குக் கிடைக்கும் சன்மானங்களாகும்.
لِيُكَفِّرَ ٱللَّهُ عَنْهُمْ أَسْوَأَ ٱلَّذِى عَمِلُوا۟ وَيَجْزِيَهُمْ أَجْرَهُم بِأَحْسَنِ ٱلَّذِى كَانُوا۟ يَعْمَلُونَ.
39:35. இவ்வாறு செயல்பட முன்வருபவர்களுக்கு, இது நாள் வரையில் செய்து வந்த தீய செயல்களை போக்கி, அவர்களுடைய ஆற்றல்களை நற்காரியங்களுக்காகப் பயன்படுத்த இறைவன் வழி செய்கிறான். தீய செயல்களை செய்து கொண்டிருந்த போது கிடைத்து வந்ததை விட, பன்மடங்கு அழகானவற்றை அவர்களுக்கு நற்கூலியாகக் கிடைக்க வழி செய்கிறான்.
أَلَيْسَ ٱللَّهُ بِكَافٍ عَبْدَهُۥ ۖ وَيُخَوِّفُونَكَ بِٱلَّذِينَ مِن دُونِهِۦ ۚ وَمَن يُضْلِلِ ٱللَّهُ فَمَا لَهُۥ مِنْ هَادٍۢ.
39:36. இறைவழிகாட்டுதலை எடுத்துரைப்பவரே! அல்லாஹ்வின் வழிகாட்டுதலே தன் அடியாருக்கு போதுமானதாக இல்லையா? ஆனால் உன்னை எதிர்ப்பவர்கள், அவர்கள் வழிபட்டு வரும் தெய்வங்களின் சாபத்திற்கு நீர் ஆளாகிவிடுவீர் என்று பயமுறுத்துகின்றனர். இத்தகைய மூடநம்பிக்கையில் வாழ்பவர்களுக்கு நேர்வழி கிடைப்பது எப்படி? ஆக யார் வழிதவறி நடக்க விரும்புகிறார்களோ, அவர்கள் அல்லாஹ்வின் நியதிப்படி வழிகேட்டில் சென்றுவிடுகிறார்கள். அதன்பின் அத்தகையவர்களுக்கு வேறு யாரும் நேர்வழி காட்டவே முடியாது.
وَمَن يَهْدِ ٱللَّهُ فَمَا لَهُۥ مِن مُّضِلٍّ ۗ أَلَيْسَ ٱللَّهُ بِعَزِيزٍۢ ذِى ٱنتِقَامٍۢ.
39:37. இத்தகைய மூட நம்பிக்கைகளை விட்டுவிட்டு, அல்லாஹ் காட்டியுள்ள நேரான வழியில் சிந்தித்து செயலாற்ற விரும்புவோரை யாராலும் வழிகெடுக்க முடியாது. இவை தான் அல்லாஹ்வின் வழிகாட்டுதலின் வலிமையும், ஸ்திரத்தன்மையும் ஆகும். இதற்கு மாற்றமாக செயல்படுபவர்கள், தம் தீய செயல்களின் வலையில் சிக்கி மடிந்து போவார்கள். இதை அவர்களால் தடுத்து நிறுத்த முடியாது.
وَلَئِن سَأَلْتَهُم مَّنْ خَلَقَ ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضَ لَيَقُولُنَّ ٱللَّهُ ۚ قُلْ أَفَرَءَيْتُم مَّا تَدْعُونَ مِن دُونِ ٱللَّهِ إِنْ أَرَادَنِىَ ٱللَّهُ بِضُرٍّ هَلْ هُنَّ كَٰشِفَٰتُ ضُرِّهِۦٓ أَوْ أَرَادَنِى بِرَحْمَةٍ هَلْ هُنَّ مُمْسِكَٰتُ رَحْمَتِهِۦ ۚ قُلْ حَسْبِىَ ٱللَّهُ ۖ عَلَيْهِ يَتَوَكَّلُ ٱلْمُتَوَكِّلُونَ.
39:38. அல்லாஹ்வின் செயல்திட்டங்களின் நிலையானத் தன்மைகளையும், மேலாண்மையின் வலிமையையும் அறிந்துகொள்ள வேண்டுமென்றால், அவன் படைத்து வழிநடத்திச் செல்லும் அகிலங்களையும், பூமியின் செயல்பாடுகளைப் பற்றியும் அராய்ந்து பார்க்கட்டும். அவற்றைப் படைத்தது யார் என்று அவர்களிடம் கேட்டால், அல்லாஹ் தான் என்று பதிலளித்து விடுவார்கள். அவர்களிடம், “அல்லாஹ்வின் நியதிப்படி எனக்கு ஏதேனும் கெடுதி ஏற்பட்டுவிட்டால் அதை உங்களுடைய கற்பனைத் தெய்வங்களால் சரிசெய்ய முடியுமா? அல்லது எனக்கு அல்லாஹ்வின் அருட்கொடைகள் கிடைத்து வந்தால் அவற்றை உங்கள் தெய்வங்களால் தடுக்கத் தான் முடியுமா? இதைப் பற்றி நீங்கள் எப்போதாவது கவனித்துப் பார்த்ததுண்டா? அல்லாஹ்வே எனக்குப் போதுமானவன். அவனுடைய வழிகாட்டுதல்களின் மீதே முழுமையான நம்பிக்கை வைத்து செயல்படுகிறேன். இப்படிச் செயல்பட முன்வருபவர்கள் எல்லாம் அவனுடைய வழிகாட்டுதலின் மீதே முழு நம்பிக்கைக் கொண்டு செயல்படுங்கள்” என்று அவர்களிடம் கூறிவிடுவீராக.
இந்த கொள்கையின் அடிப்படையில் செயல்பட்டால், உங்களுக்கு சிறப்புக் கிடைக்கும். இல்லையெனில் நீங்கள் வேதனைகளை அனுபவிக்க வேண்டி வரும். எனவே இதை ஏற்க மறுக்கும் சமூகத்தவர்களிடம்:
قُلْ يَٰقَوْمِ ٱعْمَلُوا۟ عَلَىٰ مَكَانَتِكُمْ إِنِّى عَٰمِلٌۭ ۖ فَسَوْفَ تَعْلَمُونَ.
39:39. “என் சமூகத்தவர்களே! நீங்கள் உங்கள் வழக்கப்படி செயல்பட்டு வாருங்கள். நானும் இறைவழிகாட்டுதலின்படி செயல்பட்டு வருகின்றேன். யாருடைய நிலைமை என்னவாக ஆகப்போகிறது என்பதை விரைவில் அறிந்து கொள்வீர்கள்” என்று அவர்களிடம் அறிவித்துவிடுங்கள்.
مَن يَأْتِيهِ عَذَابٌۭ يُخْزِيهِ وَيَحِلُّ عَلَيْهِ عَذَابٌۭ مُّقِيمٌ.
39:40. “அதாவது இழிவுபடுத்தும் வேதனைகள் யாருக்கு கிடைக்கின்றன? யார் தீராத் துயரங்களில் சிக்கிக் கொள்கிறார்கள் என்பதை பார்த்துக் கொள்ளலாம். (மேலும் பார்க்க 6:136, 11:93, 20:135)
إِنَّآ أَنزَلْنَا عَلَيْكَ ٱلْكِتَٰبَ لِلنَّاسِ بِٱلْحَقِّ ۖ فَمَنِ ٱهْتَدَىٰ فَلِنَفْسِهِۦ ۖ وَمَن ضَلَّ فَإِنَّمَا يَضِلُّ عَلَيْهَا ۖ وَمَآ أَنتَ عَلَيْهِم بِوَكِيلٍ.
39:41. இவை தான் காலம் காலமாக நடந்து வந்த, தற்போதும் நடக்கின்ற, இனியும் நடக்கவிருக்கின்ற உண்மைகளாகும். இதில் ஒருபோதும் எந்த மாற்றமும் ஏற்படாது. உலக மக்களுக்கு நிலைமாறா நிரந்தர சட்டங்களைப் பற்றி எடுத்துரைப்பதே வேதம் என்பதாகும். எனவே எந்த ஒரு சமுதாயமோ அல்லது தனி நபரோ, யார் இறைவன் காட்டும் நேர்வழியில் செயல்படுகின்றானோ அவன் தன்னுடைய நன்மைக்காகவே செயல்படுகிறான். யார் இந்த அறிவுரைகளை விட்டுவிட்டு தவறான வழியில் செல்கின்றானோ, அவற்றின் பாதிப்புகள் அவனையே வந்தடையும். இதை யாராலும் ஒருபோதும் மாற்ற முடியாது. எனவே நபியே! இந்த உண்மைகளை எடுத்துரைப்பதே உம் பணியாகும். நீர் அவர்களைக் கண்காணிக்கும் பொறு ப்பாளி அல்ல.
ٱللَّهُ يَتَوَفَّى ٱلْأَنفُسَ حِينَ مَوْتِهَا وَٱلَّتِى لَمْ تَمُتْ فِى مَنَامِهَا ۖ فَيُمْسِكُ ٱلَّتِى قَضَىٰ عَلَيْهَا ٱلْمَوْتَ وَيُرْسِلُ ٱلْأُخْرَىٰٓ إِلَىٰٓ أَجَلٍۢ مُّسَمًّى ۚ إِنَّ فِى ذَٰلِكَ لَءَايَٰتٍۢ لِّقَوْمٍۢ يَتَفَكَّرُونَ.
39:42. மனித வாழ்வின் நிலையை கவனித்துப் பாருங்கள். அல்லாஹ்வின் நியதிப்படி அவனுக்கு மரணம் வரத்தான் செய்கிறது. அவன் மரணித்த பின் இவ்வுலகில் வாழும் தகுதியை இழக்கத் தான் செய்கிறான். ஆனால் தினந்தோறும் அவனுக்கு தூக்கமும் ஏற்பட்டு வருகின்றது. அதுவும் தற்காலிக மரணத்தைப் போன்றதே ஆகும். (பார்க்க 6:60) ஆனால் அவனால் தூக்கத்திலிருந்து விழித்துக் கொள்ள முடிகிறது. இப்படியாக அவன் குறிப்பிட்ட காலம் வரையில் இவ்வுலகில் உயிர் வாழ்கிறான். சிந்தித்து பார்க்கும் மக்களுக்கு இதில் அத்தாட்சிகள் பல இருக்கும்.
அதாவது மூடநம்பிக்கையில் மூழ்கி வெறும் நடைபிணமாக வாழ்பவர்களுக்கு இந்த குர்ஆனின் உண்மைகளை புரியவைக்க முடியாது. ஏனெனில் அவன் உயிர் வாழ்வதில் எந்த அர்த்தமும் இருப்பதில்லை. இரண்டாவதாக தூங்குபவனை தட்டி எழுப்பிவிடலாம். ஆனால் தூங்குவதைப் போல் பாசாங்கு செய்பவனை எழுப்பவே முடியாது. அவனை அடித்து தான் எழப்பவேண்டும். அது போல இறைவழிகாட்டுதல் பெறாமல் அலட்சியமாக தூங்கிக் கொண்டிருப்பவனை புரிய வைத்துவிடலாம். ஆனால் ஒன்றுமே அறியாமல் எல்லாமே அறிந்தவனைப் போல் நடித்துக் கொண்டிருப்பவனை நேர்வழியில் கொண்டுவரவே முடியாது. மேலும் உண்மை தெரிந்தும் ஏதும் அறியாதவனைப் போல் நடித்துக் கொண்டிருப்பவனுக்கும் நேர்வழி காட்ட முடியாது. அவனுக்கு தண்டனை அளித்து தான் திருத்த வேண்டும்.
أَمِ ٱتَّخَذُوا۟ مِن دُونِ ٱللَّهِ شُفَعَآءَ ۚ قُلْ أَوَلَوْ كَانُوا۟ لَا يَمْلِكُونَ شَيْـًۭٔا وَلَا يَعْقِلُونَ.
39:43. எனவே அல்லாஹ் அல்லாத பிற கற்பனை தெயவங்கள், அவர்களுடைய வாழ்வில் உள்ள பிரச்னைகளைத் தீர்த்து வைக்கும் என்று அவர்கள் அறியாமையில் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அவற்றிற்கு அத்தகைய எந்த சக்தியோ அவற்றை தீர்த்து வைக்கும் ஞானமோ இல்லை என்பதை அவர்களுக்கு எடுத்துரையுங்கள்.
قُل لِّلَّهِ ٱلشَّفَٰعَةُ جَمِيعًۭا ۖ لَّهُۥ مُلْكُ ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضِ ۖ ثُمَّ إِلَيْهِ تُرْجَعُونَ.
39:44. அல்லாஹ்வின் அறிவுரைகளின்படி நடப்பதைக் கொண்டே அவர்களுடைய வாழ்வில் ஏற்பட்டுள்ள எல்லா பிரச்னைகளுக்கும் தீர்வு கிடைக்கும். இதைவிட்டால் அவர்களுக்கு வேறு எந்த வழிமுறையும் கிடைக்காது. காரணம் அகிலங்களிலும் பூமியிலும் உள்ளவை அனைத்தும் அல்லாஹ்வின் அதிகாரத்திற்கு உட்பட்டே செயல்படுகின்றன. நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலும் அவன் நிர்ணயித்த இலக்கின்படியே விளைவுகளை ஏற்படுத்தி வருகின்றன. (பார்க்க 6:40-41)
وَإِذَا ذُكِرَ ٱللَّهُ وَحْدَهُ ٱشْمَأَزَّتْ قُلُوبُ ٱلَّذِينَ لَا يُؤْمِنُونَ بِٱلْءَاخِرَةِ ۖ وَإِذَا ذُكِرَ ٱلَّذِينَ مِن دُونِهِۦٓ إِذَا هُمْ يَسْتَبْشِرُونَ.
39:45. அல்லாஹ் அறிவித்துள்ளபடி இந்த குர்ஆனிலுள்ள விஷயங்களை மட்டும் எடுத்துரைக்கும் போது, அவர்களுக்கு வெறுப்பும் சலிப்பும் ஏற்படுகின்றன. இந்த குர்ஆனிய விஷயங்களுடன் மற்ற பெரியார்களின் கதைகளையும் இணைத்து சொன்னால் அவர்களுக்கு பெரு மகிழ்ச்சி ஏற்படுகிறது. மனித செயல்களின் இறுதி விளைவுகள் என்ற ஆஃகிரத்து மீது நம்பிக்கை இல்லாதது தான் இதற்குக் காரணம் ஆகும். (மேலும் பார்க்க 17:46, 18:57, 40:12).
قُلِ ٱللَّهُمَّ فَاطِرَ ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضِ عَٰلِمَ ٱلْغَيْبِ وَٱلشَّهَٰدَةِ أَنتَ تَحْكُمُ بَيْنَ عِبَادِكَ فِى مَا كَانُوا۟ فِيهِ يَخْتَلِفُونَ.
39:46. அல்லாஹ் யார் என்ற கேள்வி அவர்கள் மனதில் எழலாம். அகிலங்களையும் பூமியையும் எப்பொருளின் துணையுமின்றி படைத்து பரிபாலிக்கும் வல்லமை உடையவனைத் தான் அல்லாஹ் என்கிறோம் என்று அவர்களிடம் எடுத்துரையுங்கள். (பார்க்க 6:101) இவ்வுலகில் நடக்கும் மறைவான விஷயங்களும் வெளிப்படையானவையும் அவனுக்கு தெரியாமல் இருப்பதில்லை. எனவே மக்களிடையே இருந்து வரும் கருத்து வேற்றுமைகளை தீர்த்து வைக்கும் வல்லமை அல்லாஹ்வின் வழிகாட்டுதலுக்கு மட்டுமே உள்ளது என்பதை அவர்களுக்கு புரிய வையுங்கள். ஆக மனித பிரச்னைகளும் அவன் காட்டும் வழிமுறைகளைக் கொண்டு தான் தீரும்.
وَلَوْ أَنَّ لِلَّذِينَ ظَلَمُوا۟ مَا فِى ٱلْأَرْضِ جَمِيعًۭا وَمِثْلَهُۥ مَعَهُۥ لَٱفْتَدَوْا۟ بِهِۦ مِن سُوٓءِ ٱلْعَذَابِ يَوْمَ ٱلْقِيَٰمَةِ ۚ وَبَدَا لَهُم مِّنَ ٱللَّهِ مَا لَمْ يَكُونُوا۟ يَحْتَسِبُونَ.
39:47. அவர்கள் அநியாய அக்கிரமச் செயல்களை நிறுத்திக் கொள்ளட்டும் என்பதே அல்லாஹ்வின் அறிவுரையாகும். அப்படி அவர்கள் நிறுத்திக் கொள்ளவில்லை என்றால், அவற்றின் விளைவுகள் அதிபயங்கர வேதனைகளாக அவர்கள்முன் வந்து நிற்கும். அப்போது அவற்றை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது. உலகிலுள்ள அத்தனைச் செல்வங்களையும் இன்னும் அதிகமாகவும் அப்போது செலவழித்தாலும் அந்த விளைவுகளை அவர்களால் தடுத்து நிறுத்த முடியாது. அப்படிப்பட்ட வேதனைகள் வரும் என்று அவர்கள் ஒருபோதும் எண்ணிப் பார்த்திருக்கவே மாட்டார்கள். மரணத்திற்குப் பின் தொடர்கின்ற வாழ்விலும் இதே நிலைதான் தொடரும். (மேலும் பார்க்க 3:91)
وَبَدَا لَهُمْ سَيِّـَٔاتُ مَا كَسَبُوا۟ وَحَاقَ بِهِم مَّا كَانُوا۟ بِهِۦ يَسْتَهْزِءُونَ.
39:48. இப்படியாக அவர்கள் செய்து வரும் தீய செயல்களே அவர்களுக்கு வினையாக வந்து நிற்கும். இதைப் பற்றி அவர்களுக்கு எடுத்துரைத்தால் அவர்கள் பரிகசிக்கவே செய்கிறார்கள். எனவே எதை அவர்கள் பரிகாசித்தார்களோ அதுவே அவர்களுடைய வேதனைகளுக்கு காரணிகளாக அமைந்துவிடும்.
فَإِذَا مَسَّ ٱلْإِنسَٰنَ ضُرٌّۭ دَعَانَا ثُمَّ إِذَا خَوَّلْنَٰهُ نِعْمَةًۭ مِّنَّا قَالَ إِنَّمَآ أُوتِيتُهُۥ عَلَىٰ عِلْمٍۭ ۚ بَلْ هِىَ فِتْنَةٌۭ وَلَٰكِنَّ أَكْثَرَهُمْ لَا يَعْلَمُونَ.
39:49. அப்படி அவர்களுக்கு இவ்வுலக வாழ்வில் துயரங்கள் ஏற்பட்டால் அவற்றிலிருந்து மீள, அல்லாஹ் படைத்துள்ள இயற்கை படைப்புகளின் மூலமே நிவாரணப் பணியை மேற்கொள்கிறார்கள். (பார்க்க 6:40-41) அதன்பின் அல்லாஹ்வின் அருட்கொடைகள் மூலம் அத்துயரங்களிலிருந்து நிவாரணம் பெற்றுவிட்டால், அவையாவும் தன் சுய அறிவை கொண்டுதான் கிடைத்தன என்று நினைத்துக் கொள்கிறார்கள். உண்மை அதுவல்ல. இது அவர்களில் உள்ள குழப்பமே ஆகும். பெரும்பாலான மக்களுக்கும் உண்மை என்னவென்று தெரிவதில்லை.
அதாவது இறைவன் படைத்த இயற்கை படைப்புகளின் துணையைக் கொண்டு தான் அவனுக்கு வேண்டிய வாழ்வாதாரங்களை அவனால் பெற முடிகிறது. ஆக மூலப் பொருட்கள் அல்லாஹ்வின் புறத்திலிருந்தும், உழைப்பு மனிதன் புறத்திலிருந்தும் என்று உள்ளன. எனவே அவனுடைய உழைப்புக்குரிய பங்கு மட்டும் அவனுக்கு சேரும். மற்றவை அல்லாஹ்வுக்கு உரியதாகும். அதாவது அல்லாஹ்வின் கட்டளைப்படி அவற்றை அனைத்து தரப்பு மக்களுக்கும் கிடைக்க வழிசெய்ய வேண்டும். இதுவே அல்லாஹ்வின் ஆட்சியின் சிறப்பு அம்சமாகும். இந்த உண்மையை அவர்களுக்கு எடுத்துரைத்தால் மனக் குழப்பங்களே ஏற்படுகின்றன. தம் சொந்த விஷயத்தில் அல்லாஹ்வின் தலையீடு இருப்பது சரியல்ல என்று நினைக்கிறார்கள். இவ்வாறு இவர்களிடையே குழப்பங்கள் இருப்பது புதிதான ஒன்றல்ல.
قَدْ قَالَهَا ٱلَّذِينَ مِن قَبْلِهِمْ فَمَآ أَغْنَىٰ عَنْهُم مَّا كَانُوا۟ يَكْسِبُونَ.
39:50. இவர்களுக்கு முன்னிருந்தவர்களும் இவ்வாறு தான் குழப்பத்தில் இருந்தார்கள். இதைப் பற்றி நாம் இந்த குர்ஆனில் பலமுறை கூறியிருக்கிறோம். முதலாளித்துவ சமுதாயங்களில் இத்தகைய மனப்பான்மை தான் வளர்கின்றன. (பார்க்க 28:78) இத்தகைய தவறான சமூக அமைப்புகளில் ஏற்றத்தாழ்வு விரிவடைந்து, அந்த செல்வங்களே அவர்களை அழிவை தேடித் தந்து விடுகின்றன. அவ்வாறு அழிவு ஏற்படும் காலங்களில் அந்த செல்வங்கள் அவர்களுக்கு பலனளிப்பதே இல்லை.
فَأَصَابَهُمْ سَيِّـَٔاتُ مَا كَسَبُوا۟ ۚ وَٱلَّذِينَ ظَلَمُوا۟ مِنْ هَٰٓؤُلَآءِ سَيُصِيبُهُمْ سَيِّـَٔاتُ مَا كَسَبُوا۟ وَمَا هُم بِمُعْجِزِينَ.
39:51. எனவே அவர்களுடைய தவறான போக்குகளின் விளைவுகளை அவர்கள் சந்தித்துக் கொண்டனர். இதுவே காலம் காலமாக நடந்து வந்தவையாகும். இனியும் இத்தகைய தவறான கண்ணோட்டத்துடன் வாழும் சமுதாயங்களில் அநியாய அக்கிரம செயல்களே மிகைத்து விடும். இறுதியில் அவை அவர்களுக்கு அழிவை தேடித் தந்துவிடும். இதுவே அல்லாஹ் நிலைநிறுத்தியுள்ள நிலைமாறா சட்டமாகும். அல்லாஹ் நிர்ணயித்துள்ள இந்த விதிமுறையை யாராலும் வெல்லமுடியாது.
இந்த அழிவுகளிலிருந்து மீள வேண்டும் என்றால் அல்லாஹ்வின் அறிவுரைப் படி சமுதாய சமச் சீர்நிலையைக் கொண்டுவர வேண்டும். அதில் எப்போதும் குறை ஏற்படாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
أَوَلَمْ يَعْلَمُوٓا۟ أَنَّ ٱللَّهَ يَبْسُطُ ٱلرِّزْقَ لِمَن يَشَآءُ وَيَقْدِرُ ۚ إِنَّ فِى ذَٰلِكَ لَءَايَٰتٍۢ لِّقَوْمٍۢ يُؤْمِنُونَ.
39:52. காரணம் வாழ்வாதாரங்களின் விசாலத்தன்மையும் நெருக்கடியும் அல்லாஹ் நிர்ணயித்துள்ள விதிமுறைகளின் படியே ஏற்பட்டு வருகின்றன. எனவே யார் இறைவனின் இயற்கை படைப்புகளை ஆய்ந்தறிந்து அதன்படி உழைக்கிறார்களோ, அவர்களுடைய வாழ்வாதாரங்கள் விசாலமாகின்றன. யார் அறிவை பயன்படுத்தாமல் உழைப்பின்றி வாழ நினைக்கிறார்களோ, அவர்களுடைய வாழ்வாதாரங்கள் சுருங்கிவிடுகின்றன. (பார்க்க 53:39) இவற்றைப் பற்றி அவர்கள் சிந்தித்துப் பார்ப்பதில்லையா? எனவே இறைவழிகாட்டுதலை மனதார ஏற்று நடப்பவர்கள் இதைப் பற்றி நன்கறிந்து அதற்கேற்றவாறு செயல்படுவார்கள்.
۞ قُلْ يَٰعِبَادِىَ ٱلَّذِينَ أَسْرَفُوا۟ عَلَىٰٓ أَنفُسِهِمْ لَا تَقْنَطُوا۟ مِن رَّحْمَةِ ٱللَّهِ ۚ إِنَّ ٱللَّهَ يَغْفِرُ ٱلذُّنُوبَ جَمِيعًا ۚ إِنَّهُۥ هُوَ ٱلْغَفُورُ ٱلرَّحِيمُ.
39:53. இறைவழிகாட்டுதலை எடுத்துரைப்பவர்களே! நீர் நம் வழிகாட்டுதலின்படி வாழ்பவர்களிடம், “இது நாள் வரையில் நீங்கள் அறியாமையில் தவறான கண்ணோட்டத்துடன் செயல்பட்டு, தமக்குத்தாமே தீங்கிழைத்திருந்தால் அதைப் பற்றியே கவலைப்பட்டுக் கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை. அல்லாஹ்வின் வழிகாட்டுதலில் அவநம்பிக்கை கொள்ளவும் தேவையில்லை. இனி நீங்கள் ஆக்கப்பூர்வமாக செயல்பட்டு வந்தால், உங்களிடையே இருந்து வந்த தீய பழக்க வழக்கங்கள் நீங்கி, உங்களுக்குப் பாதுகாப்பான வாழ்க்கைக் கிடைத்து விடும். இவ்வாறு திருந்தி வாழ விரும்புவோருக்கு பாதுகாப்பிற்கான வழிமுறையை இயற்றிருப்பது அல்லாஹ்வின் கருணையைப் பிரதிபலிக்கிறது” என்று அறிவித்துவிடுவீராக.
وَأَنِيبُوٓا۟ إِلَىٰ رَبِّكُمْ وَأَسْلِمُوا۟ لَهُۥ مِن قَبْلِ أَن يَأْتِيَكُمُ ٱلْعَذَابُ ثُمَّ لَا تُنصَرُونَ.
39:54. ஆகவே உலக மக்களே! வரும் முன் காப்போம் என்பதே இறைவழிகாட்டுதலின் கருவூலமாகும். உங்களுக்கு பேராபத்துகள் வருவதற்கு முன்பே இறைவன் காட்டிய வழியின் பக்கம் திரும்பி, அவற்றிற்கு முற்றிலும் அடிபணிந்து செயல்படுங்கள். அவ்வாறு நீங்கள் செயல்படவில்லை என்றால் நிர்ணயிக்கப்பட்ட ஆபத்துகள் நேர்ந்துவிடும். அப்போது உங்களை காப்பாற்றுவோர் யாரும் இருக்க மாட்டார்கள்.
وَٱتَّبِعُوٓا۟ أَحْسَنَ مَآ أُنزِلَ إِلَيْكُم مِّن رَّبِّكُم مِّن قَبْلِ أَن يَأْتِيَكُمُ ٱلْعَذَابُ بَغْتَةًۭ وَأَنتُمْ لَا تَشْعُرُونَ.
39:55. எனவே அல்லாஹ் இறக்கியுள்ள இந்த அறிவுரைப்படி அழகிய முறையில் ஆக்கப்பூர்வமாக செயல்பட்டு வாருங்கள். இல்லையென்றால் உங்களுடைய தவறான செயல்களின் விளைவுகள் அறியா வண்ணம் ஏற்பட்டு வரும். ஒரு கட்டத்தில் அவை திடீரென்று வேதனைகளாக உங்கள் முன் தோற்றத்திற்கு வந்து நிற்கும்.
أَن تَقُولَ نَفْسٌۭ يَٰحَسْرَتَىٰ عَلَىٰ مَا فَرَّطتُ فِى جَنۢبِ ٱللَّهِ وَإِن كُنتُ لَمِنَ ٱلسَّٰخِرِينَ.
39:56. அப்போது அந்த வேதனைகளை தாங்கிக்கொள்ள முடியாமல், “அடப்பாவமே! அல்லாஹ் அறிவுறுத்திய படி நான் செய்ய வேண்டிய கடமைகளை நிறைவேற்ற தவறி விட்டேனே! அவற்றை எடுத்துரைத்த போது, பரிகாசம் செய்பவர்களில் நானும் ஒருவனாக இருந்து விட்டேனே! அதன் விளைவாக இந்த வேதனைகளை அனுபவிக்க வேண்டியுள்ளதே!” என்று புலம்பிக் கொண்டிருப்பீர்கள். அப்படியொரு நிலை உங்களுக்கு ஏற்படக் கூடாது என்பதற்காகவே இந்த அறிவுரைகள் தரப்படுகின்றன.
أَوْ تَقُولَ لَوْ أَنَّ ٱللَّهَ هَدَىٰنِى لَكُنتُ مِنَ ٱلْمُتَّقِينَ.
39:57. அல்லது அப்போது நீங்கள், “அல்லாஹ் எனக்கு நேர் வழியை அறிவித்திருந்தால் நானும் அவற்றைப் பேணி நடந்திருப்பேனே! இத்தகைய விபரீத விளைவுகளிலிருந்து பாதுகாத்துக் கொண்டவர்களுள் நானும் ஒருவனாக இருந்திருப்பேனே!” என்று ஏங்கி தவித்துக் கொண்டிருப்பீர்கள். அப்படியொரு நிலைக்கு நீங்கள் ஆளாகக் கூடாது என்பதற்காகவே இந்த வழிகாட்டுதல்கள் அளிக்கப்படுகின்றன.
أَوْ تَقُولَ حِينَ تَرَى ٱلْعَذَابَ لَوْ أَنَّ لِى كَرَّةًۭ فَأَكُونَ مِنَ ٱلْمُحْسِنِينَ.
39:58. அல்லது அந்த வேதனைகளை தாங்கிக்கொள்ள முடியாமல், “எனக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு அளிக்கப்பட்டால் இங்கிருந்து மீண்டு சென்று அழகிய நன்மையான செயல்களையே செய்வோரில் நானும் ஒருவனாக ஆகிவிடுவேனே” என்று வீணாக ஆசைப்படுவீர்கள். அதற்கு வாய்ப்பே இராது. இப்படிப்பட்ட பரிதாபகர நிலை ஏற்படக் கூடாது என்பதற்காகவே இந்த முன்னறிவிப்புகள் அளிக்கப்படுகின்றன.
بَلَىٰ قَدْ جَآءَتْكَ ءَايَٰتِى فَكَذَّبْتَ بِهَا وَٱسْتَكْبَرْتَ وَكُنتَ مِنَ ٱلْكَٰفِرِينَ.
39:59. அப்போது அவர்களுக்கு, “என்னுடைய வழிகாட்டுதல்கள் உங்களிடம் வந்தன. ஆனால் நீங்கள் அவற்றை உதாசீனப்படுத்தி புறக்கணிக்கவே முயன்றீர்கள். காரணம் உங்களிடம் இருந்த ஆணவப் போக்குதான் இவ்வாறு அவற்றை மறுக்க செய்து விட்டது” என்ற பதில் தான் இறைவனிடமிருந்து கிடைக்கும்.
وَيَوْمَ ٱلْقِيَٰمَةِ تَرَى ٱلَّذِينَ كَذَبُوا۟ عَلَى ٱللَّهِ وُجُوهُهُم مُّسْوَدَّةٌ ۚ أَلَيْسَ فِى جَهَنَّمَ مَثْوًۭى لِّلْمُتَكَبِّرِينَ.
39:60. அதுமட்டுமின்றி மனித செயல்களின் விளைவுகள் தோற்றத்திற்கு வரும் கால கட்டத்தில், அல்லாஹ் சொல்லாததை எல்லாம் அல்லாஹ் சொன்னதாக பொய்யுரைத்து வந்தார்களே, அவர்களை நீங்கள் பார்க்க நேர்ந்தால் அவர்களுடைய முகங்கள் பயத்தில் கறுத்துப் போய் இருக்கும். காரணம் அவர்கள் சேரும் இடம் நரகம் அல்லவா?
وَيُنَجِّى ٱللَّهُ ٱلَّذِينَ ٱتَّقَوْا۟ بِمَفَازَتِهِمْ لَا يَمَسُّهُمُ ٱلسُّوٓءُ وَلَا هُمْ يَحْزَنُونَ.
39:61. அல்லாஹ்வின் வழிகாட்டுதலுக்கு எதிராக செயல்படுவதால் ஏற்படும் விபரீத விளைவுகளுக்கு அஞ்சி செயல்படுபவர்களுக்கு அல்லாஹ்வின் உதவி கிடைத்து அவர்கள் தம் இலட்சியத்தில் வெற்றி பெறுவது உறுதி. அத்தகையவர்களுக்கு எவ்வித தீங்கும் நெருங்காது. அவர்களுடைய வாழ்வில் எவ்வித துக்கமும் இராது.
ٱللَّهُ خَٰلِقُ كُلِّ شَىْءٍۢ ۖ وَهُوَ عَلَىٰ كُلِّ شَىْءٍۢ وَكِيلٌۭ.
39:62. ஏனெனில் இவ்வுலகில் உள்ள அனைத்தையும் படைத்ததோடு மட்டுமின்றி அவற்றில் ஒவ்வொன்றும் எவ்வாறு செயல்பட வேண்டும் என்ற வரையறைகளை நிர்ணயித்து, அவற்றின் செயல்பாடுகளை கண்காணித்து வருபவனும் அல்லாஹ் தான்.
لَّهُۥ مَقَالِيدُ ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضِ ۗ وَٱلَّذِينَ كَفَرُوا۟ بِـَٔايَٰتِ ٱللَّهِ أُو۟لَٰٓئِكَ هُمُ ٱلْخَٰسِرُونَ.
39:63. மேலும் பிரபஞ்ச படைப்புகள் அனைத்தும் எவ்வாறு செயல்பட வேண்டும் என்ற விதிமுறைகளை நிர்ணயித்ததும் அல்லாஹ் தான். அதாவது அவற்றின் கட்டுப்பாடு அல்லாஹ்விடமே உள்ளது. ஆகவே எந்த சமூகத்தவர்கள் அல்லாஹ்வின் வழிகாட்டுதலின்படி செயல்படு வதில்லையோ அவர்கள் தாம் நஷ்டவாளிகள் ஆவர்.
பிரபஞ்ச படைப்புகளின் சாவிகள் அல்லாஹ்விடம் இருப்பதாக இவ்வாசகத்தில் வருகிறது. அதாவது எந்தப் படைப்பு எந்த விதிமுறைகளின் படி செயல்படவேண்டும் என்பதை நிர்ணயித்தது அல்லாஹ் தான். அந்த விதிமுறைகளை மனிதன் ஆய்வு செய்து அவற்றின் சாவிகளை பெற்றுக் கொண்டால், அவற்றை தன் தேவைக்கு ஏற்ப பயன்படுத்திக் கொள்ளமுடியும். அதுபோல சமூக அமைப்பு எந்த கொள்கையின் அடிப்படையில் செயல்பட வேண்டும் என்ற விதிமுறைகளையும் அல்லாஹ் நிர்ணயித்துள்ளான். அதன் படி சமூக அமைப்பு ஏற்படுமானால், அந்த சமுதாயமும் எந்தக் குறைவும் இல்லாத சந்தோஷமான சமுதாயமாக மாறிவரும்.
قُلْ أَفَغَيْرَ ٱللَّهِ تَأْمُرُوٓنِّىٓ أَعْبُدُ أَيُّهَا ٱلْجَٰهِلُونَ.
39:64. இத்தகைய வல்லமையுடைய அல்லாஹ்வின் வழிகாட்டுதலை விட்டுவிட்டு வேறு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று யாராவது விரும்பினால் அவனை அறிவுடையவன் என்று கருத முடியுமா?
وَلَقَدْ أُوحِىَ إِلَيْكَ وَإِلَى ٱلَّذِينَ مِن قَبْلِكَ لَئِنْ أَشْرَكْتَ لَيَحْبَطَنَّ عَمَلُكَ وَلَتَكُونَنَّ مِنَ ٱلْخَٰسِرِينَ.
39:65. அன்றியும் உமக்கும் உமக்கு முன் வாழ்ந்த சமூகத்தவர்களுக்கும் இறைவழிகாட்டுதல் எனும் வஹீ மூலம் அறிவித்தது என்னவென்றால் அல்லாஹ்வின் அறிவுரைகளின் படியே செயல்பட வேண்டும் என்றும், அவற்றிற்கு இணையாக வேறு வழிமுறைகளை ஏற்படுத்திக் கொள்பவர்களுக்கு அழிவினை தவிர்க்க முடியாது என்பதுமே ஆகும். மேலும் உங்கள் நற்செயல்கள் யாவும் வீணாகிவிடும்.
بَلِ ٱللَّهَ فَٱعْبُدْ وَكُن مِّنَ ٱلشَّٰكِرِينَ.
39:66. ஆகவே நீங்கள் அல்லாஹ்வின் வழிகாட்டுதலுக்கு மட்டும் இணங்கி செயல்படுங்கள். இப்படியாக அவன் காட்டிய வழியில் வாழ்ந்து அவனுக்கு நன்றி செலுத்துபவர்களாக இருங்கள்.
وَمَا قَدَرُوا۟ ٱللَّهَ حَقَّ قَدْرِهِۦ وَٱلْأَرْضُ جَمِيعًۭا قَبْضَتُهُۥ يَوْمَ ٱلْقِيَٰمَةِ وَٱلسَّمَٰوَٰتُ مَطْوِيَّٰتٌۢ بِيَمِينِهِۦ ۚ سُبْحَٰنَهُۥ وَتَعَٰلَىٰ عَمَّا يُشْرِكُونَ.
39:67. உண்மை என்னவென்றால் மக்கள் அல்லாஹ்வை மதிக்க வேண்டிய முறையில் மதிப்பதில்லை. மேலும் அவனுடைய வழிகாட்டுதலுக்கு அளிக்கவேண்டிய முக்கியத்துவத்தை அளிப்பதில்லை. (பார்க்க 6:91, 22:75) அதன் முக்கியத்துவத்தை அறிந்து செயல்பட்டால், நாட்டிலுள்ள அனைவரும் அவனுடைய ஆட்சியின் பிடியில் வந்து விடுவார்கள். இப்படியாக ஒரு பக்கம் இறைவழிகாட்டுதலின் பிடியில் மக்களும், மறு பக்கம் வானளாவிய வளங்களும் அந்த ஆட்சியின் கீழ் செயல்பட்டு வரும். இந்த உண்மைகளை எல்லாம் அறியாத மக்கள் அல்லாஹ்வை கற்பனை செய்து பல வகையில் இணை வைக்கிறார்கள். ஆனால் அவனுடைய செயல் திட்டங்களோ, இவர்களுடைய கற்பனைகளுக்கெல்லாம் அப்பாற்பட்டவையாகும்.
இந்த வாசகத்தில் கியாம நாளில் பூமியும் வானங்களும் அல்லாஹ்வுடைய பிடியில் வந்து விடும் என்று சொல்லப்பட்டுள்ளது. இதை நேரடி பொருள் கொண்டால் இவ்வுலகம் அழிந்து, மனித செயல்களை பற்றிய கணக்கு வழக்குக் கேட்கப்படும் கால கட்டம் என்று நமக்கு புலனாகிறது. ஆனால் இறைவழிகாட்டுதலுக்கு அளிக்கவேண்டிய முக்கியத்துவத்தை மனிதன் அளித்து வந்தால் இவ்வுலகில் ஏற்படும் ஆட்சியமைப்பின் கீழ் மக்களும், வானளாவிய பொக்கிஷங்களும் செயல்பட்டு வரும் என்று தெரிகிறது. எனவே நாம் இந்த வாசகத்திற்கும் இனி வரும் வாசகத்திற்கும் “கியாம நாள்” என்பதை இவ்வுலகில் இஸ்லாமிய ஆட்சியமைப்பு ஏற்படும் கால கட்டத்தை அடிப்படியாக வைத்து பொருள் தந்துள்ளளோம். இதை நேரடி பொருள் கொண்டால் கியாம நாளில் நடக்கும் சம்பவங்களாகப் பொருள்படும்.
எனவே இறைவழிகாட்டுதலின்படி நியாயமான மக்களாட்சி உருவாகும் கால கட்டங்களில் நல்லோர்களுக்கும் தீயவர்களுக்கும் இடையே மோதல் வலுக்கும். அவ்விரு கூட்டத்தாரும் களத்தில் சந்திக்கவேண்டிய நிலை ஏற்படும்.
وَنُفِخَ فِى ٱلصُّورِ فَصَعِقَ مَن فِى ٱلسَّمَٰوَٰتِ وَمَن فِى ٱلْأَرْضِ إِلَّا مَن شَآءَ ٱللَّهُ ۖ ثُمَّ نُفِخَ فِيهِ أُخْرَىٰ فَإِذَا هُمْ قِيَامٌۭ يَنظُرُونَ.
39:68. அதற்கான எச்சரிக்கை சங்கு ஊதப்படும் போது, மக்களில் மேல் மட்டத்தில் உள்ளவர்களும் அடிமட்டத்தில் இருப்பவர்களும் தோல்வி பயத்தில் நடுநடுங்கிப் போவார்கள். ஆனால் அல்லாஹ்வின் நாட்டப் படி கல்வி பயின்றவர்களுக்கு இத்தகைய நடுக்கமோ பதட்டமோ இருக்காது. போர்களத்தில் சந்திக்க சங்கொலி எழுப்பப்பட்ட உடன் இவர்கள் அனைவரும் களத்தை நோக்கிச் சென்று விடுவார்கள்.
இப்படியாக அநியாக்காரர்களும் சமூக விரோத செயலில் ஈடுபட்டு வந்தவர்களும் அழிந்து போவார்கள். நியாயமான தர்மமான ஆட்சியமைப்பு ஏற்படும். அந்த ஆட்சியமைப்பு இறை வழிகாட்டுதலின்படி சிறப்பாக செயல்பட்டு வரும்போது மக்களின் அனைத்துப் பிரச்னைகளும் தீர்க்கப்பட்டு
وَأَشْرَقَتِ ٱلْأَرْضُ بِنُورِ رَبِّهَا وَوُضِعَ ٱلْكِتَٰبُ وَجِا۟ىٓءَ بِٱلنَّبِيِّۦنَ وَٱلشُّهَدَآءِ وَقُضِىَ بَيْنَهُم بِٱلْحَقِّ وَهُمْ لَا يُظْلَمُونَ.
39:69. அந்த நாடே இறைவனின் பேரொளியைக் கொண்டு பிரகாசிக்கும். அந்த கால கட்டத்தில் ஒவ்வொருவரும் தன் செயல்களுக்குரிய பலன்களையே பெற்றுக் கொள்வார்கள். அதாவது அவர்களுக்கு நியாயமான முறையில் தீர்ப்புகள் கிடைத்து வரும். யாரும் ஒருபோதும் அங்கு அநீதி இழைக்கப்பட மாட்டார்கள். இப்படியாக நபிமார்களும் சான்றோர்களும் எடுத்துரைத்து வந்த சுவனத்திற்கு ஒப்பான வாழ்வின் செயல்திட்டங்கள் உண்மையாகி வரும்.
தற்சமயம் உள்ள சமூக அமைப்பில் உழைப்பவர் ஒருவர், சுகம் அனுபவிப்பது மற்றவர் என்ற நிலை உள்ளது. உழைப்பிற்கு ஏற்ற பலன்கள் கிடைப்பதில்லை ஆனால் குர்ஆனிய சமூக அமைப்பில் (பார்க்க 2:48)
وَوُفِّيَتْ كُلُّ نَفْسٍۢ مَّا عَمِلَتْ وَهُوَ أَعْلَمُ بِمَا يَفْعَلُونَ.
39:70 ஒவ்வொருவருக்கும் தன் உழைப்பிற்குரிய பலன்கள் முழுமையாக கிடைத்து வரும். இப்படியாக ஒவ்வொருவருடைய சாதனைகளின் குறிப்பேடுகளையும் (Service Records) அந்த ஆட்சியமைப்பு பாதுகாத்து வரும்.
இறைவழிகாட்டுதலை ஏற்க மறுத்து சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு இந்த ஆட்சியமைப்பில் எந்த சலுகையும் கிடைக்காது. மாறாக
وَسِيقَ ٱلَّذِينَ كَفَرُوٓا۟ إِلَىٰ جَهَنَّمَ زُمَرًا ۖ حَتَّىٰٓ إِذَا جَآءُوهَا فُتِحَتْ أَبْوَٰبُهَا وَقَالَ لَهُمْ خَزَنَتُهَآ أَلَمْ يَأْتِكُمْ رُسُلٌۭ مِّنكُمْ يَتْلُونَ عَلَيْكُمْ ءَايَٰتِ رَبِّكُمْ وَيُنذِرُونَكُمْ لِقَآءَ يَوْمِكُمْ هَٰذَا ۚ قَالُوا۟ بَلَىٰ وَلَٰكِنْ حَقَّتْ كَلِمَةُ ٱلْعَذَابِ عَلَى ٱلْكَٰفِرِينَ.
39:71. அந்த தீயவர்கள் கூட்டம் கூட்டமாக நரகவேதனை அளிக்கும் சிறைச் சாலைகளுக்கு இழுத்து செல்லப்படுவர்கள். அவர்கள் அங்கு வந்தவுடன் சிறைகளின் வாயில்கள் திறக்கப்படும். அங்கிருக்கும் காவலாளிகள் அவர்களிடம், “உங்களிலிருந்து வந்த இறைத்தூதர், இறைவனின் வழிகாட்டுதல்களை எடுத்துரைக்க வில்லையா? நீங்கள் அவர்களை நிராகரித்து சட்ட விரோதமாக செயல்பட்டால் இத்தகைய கேடுகெட்ட நிலையை சந்திக்க வேண்டி வரும் என்று அவர்கள் உங்களுக்கு முன்னெச்சரிக்கை செய்யவில்லையா?” என்று கேட்பார்கள். அதற்கு அவர்கள், “ஆம். வந்தார்கள்” என்று பதில் கூறுவார்கள். அப்போது அவர்கள் தம் தவறை உணர்ந்து என்ன பயன்? அவர்களுக்கு நிச்சயிக்கப்பட்ட வேதனைகளை அவர்கள் அனுபவித்தே ஆகவேண்டும்.
قِيلَ ٱدْخُلُوٓا۟ أَبْوَٰبَ جَهَنَّمَ خَٰلِدِينَ فِيهَا ۖ فَبِئْسَ مَثْوَى ٱلْمُتَكَبِّرِينَ.
39:72. எனவே அவர்களை நோக்கி, “நீங்கள் அனைவரும் நரக வேதனை அளிக்கும் சிறைகளுக்குள் நுழைந்து விடுங்கள். அதில் நீங்கள் உங்கள் ஆயுட்காலத்தை கழிக்க வேண்டியதுதான்” என்று கூறப்படும். இறைவழிகாட்டுதலை மதிக்காமல் ஆணவத்துடன் நடப்பவர்கள் இறுதியில் தங்குமிடம் மிகவும் கெட்டதாகும் என்பதே உறுதி. (மேலும் பார்க்க 6:131)
சிந்தனையாளர்களே! அகிலங்களும் பூமியும் அல்லாஹ்வின் அதிகாரத்திற்கு உட்பட்டே செயல்படுகின்றன என்று பல முறை இந்த குர்ஆனில் சொல்லப்பட்டுள்ளது. இந்த பூமியில் இறைவனுடைய வழிகாட்டுதலின்படி நடக்கின்ற ஆட்சியமைப்பு சட்டதிட்டங்களே மற்ற உலகங்களிலும் நடைபெற்று வருகிறது என்பதை மறவாதீர்கள். எனவே இங்கு இத்தகைய ஆட்சியமைப்பு ஏற்படவில்லை என்றால் மரணத்திற்குப் பின்பு தொடர்கின்ற வாழ்வில் இதே போன்று உங்களுடைய செயல்களுக்கு ஏற்ற வகையில் சுவன வாழ்வோ நரக வேதனைகளோ கிடைக்கும். இதை யாராலும் தடுக்க முடியாது.
وَسِيقَ ٱلَّذِينَ ٱتَّقَوْا۟ رَبَّهُمْ إِلَى ٱلْجَنَّةِ زُمَرًا ۖ حَتَّىٰٓ إِذَا جَآءُوهَا وَفُتِحَتْ أَبْوَٰبُهَا وَقَالَ لَهُمْ خَزَنَتُهَا سَلَٰمٌ عَلَيْكُمْ طِبْتُمْ فَٱدْخُلُوهَا خَٰلِدِينَ.
39:73. எனவே அல்லாஹ்வின் அறிவுரைகளுக்கு எதிராகச் செயல்படுவதால் ஏற்படுகின்றன விபரீத விளைவுகளுக்கு அஞ்சி செயல்படும் சமுதாயம் சுவனத்தை நோக்கி செல்லும். அதாவது அவர்களுக்காக சுவனத்து வாயில்கள் திறக்கும். பிரபஞ்ச இயற்கை சக்திகள் அவர்களுடைய அமைதியான வாழ்விற்காக அழைப்பு விடுத்த வண்ணமிருக்கும். காரணம் இவர்களே பரிசுத்தவான்களாக செயல்படுபவர்கள். எனவே இத்தகையவர்களே சுவனத்திற்கு உரியவர்கள் என்ற சூழ்நிலை உருவாகும். (23:1-11)
وَقَالُوا۟ ٱلْحَمْدُ لِلَّهِ ٱلَّذِى صَدَقَنَا وَعْدَهُۥ وَأَوْرَثَنَا ٱلْأَرْضَ نَتَبَوَّأُ مِنَ ٱلْجَنَّةِ حَيْثُ نَشَآءُ ۖ فَنِعْمَ أَجْرُ ٱلْعَٰمِلِينَ.
39:74. அத்தகைய சுவனத்திற்கு ஒப்பான சமுதாயம் உருவாவதைக் காணும் மூஃமின்கள், “எல்லா பாராட்டுகளும் நமக்கு வழிகாட்டிய அல்லாஹ்வுக்கே” என்று புகழாரம் செய்த வண்ணமிருப்பார்கள். அவன் காட்டிய வழியில் செயல்பட்டால் இத்தகைய சுவன வாழ்வு கிடைப்பது உறுதி என்று வாக்களிக்கப்பட்டது உண்மையே என்பதை அவர்கள் அறிந்து கொள்வார்கள். நாம் விரும்பும் இடங்களுக்கெல்லாம் சென்று சுகமாக வாழ எங்களை இப்பூமிக்கு உரியவர்களாக ஆக்கிய அல்லாஹ்வுக்கே பாராட்டுகள் அனைத்தும் என்பார்கள். எனவே அல்லாஹ் நிர்ணயித்த விதிமுறைகளின்படி நன்மை செய்வோருக்கே நன்மைகள் வந்தடையும்.
وَتَرَى ٱلْمَلَٰٓئِكَةَ حَآفِّينَ مِنْ حَوْلِ ٱلْعَرْشِ يُسَبِّحُونَ بِحَمْدِ رَبِّهِمْ ۖ وَقُضِىَ بَيْنَهُم بِٱلْحَقِّ وَقِيلَ ٱلْحَمْدُ لِلَّهِ رَبِّ ٱلْعَٰلَمِينَ.
39:75. இவ்வாறாக மூஃமின்கள் உருவாக்கும் இறைவனின் ஆட்சியமைப்புக்கு, பிரபஞ்ச இயற்கைச் சக்திகளும் உறுதுணையாக செயல்பட்ட வண்ணம் இருப்பதையும், அதை பாதுகாப்பதில் அவை பக்கபலமாக செயல்பட்டு வருவதையும், இறைச் செயல்திட்டங்களைப் பாராட்டுக்குரியவையாக ஆகிவருவதையும் நீங்கள் கண்கூடாகப் பார்த்துக் கொள்வீர்கள். அப்படியொரு கால கட்டத்தில் அங்குள்ள மக்கள் பயன்பெறும் வகையில் நியாயமான ஆக்கப்பூர்வமான நலத்திட்டங்களைத் தீட்டி அவற்றின்படியே அந்த ஆட்சியமைப்பு செயல்பட்டு வரும். இப்படியாக அகிலங்களுக்கெல்லாம் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே பாராட்டுகள் அனைத்தும் என்பதாக அந்த சமுதாயம் திகழும்.
அதாவது பிரபஞ்ச இயற்கைச் சக்திகளின் ஆராய்ச்சிகளின் மூலம் பாதுகாப்புக்கான அனைத்து உபாயங்களையும் அந்த அரசு கவனித்துக் கொள்ளும். அவற்றை மக்களின் நலனுக்காகவே பயன்படுத்தப்படுமே அன்றி மனித இனத்திற்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் ஒருபோதும் பயன்படுத்தப்பட மாட்டாது.