بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
38:0.அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் அறிவுரைப்படியே அனைத்துக் காரியங்களையும் செய்ய நாடுகிறேன். (பார்க்க 6:162)
صٓ ۚ وَٱلْقُرْءَانِ ذِى ٱلذِّكْرِ.
38:1. உழைப்பே உயர்வுக்கு வழி - வாய்மையே வெல்லும் - இவற்றில் ஒன்றை விட்டாலும் அழிவு நிச்சயம்!!! என்பதை மையமாகக் கொண்டு பேசும் இந்த குர்ஆன் நல்லறிவுரைகளுக்கு இலக்கணமாகத் திகழ்கிறது.
(1) "ஸ்வாத்" என்ற எழுத்தின் வடிவம் உழைப்பின் சின்னமாக உள்ளது.
(2) " ஸ்வாத்" என்ற எழுத்து ஸாதிக் என்று வாய்மையைக் குறிக்கும் சுருக்கெழுத்தாக உள்ளது.
(3) "ஸ்வாத்" என்ற எழுத்தின் வடிவம் எச்சரிக்கை செய்யும் அறிவாளைப் போலவும் உள்ளது.
எனவே நாம் இந்த மூன்று அர்த்தங்களையும் தந்துள்ளோம். விளக்கம் இந்த அத்தியாயத்தின் இறுதியில் வருகிறது.
بَلِ ٱلَّذِينَ كَفَرُوا۟ فِى عِزَّةٍۢ وَشِقَاقٍۢ.
38:2. ஆனால் இந்த பேருண்மைகளை ஏற்க மறுப்பவர்களோ, போலியான கௌரவத்திற்காக நேர்மையையும் நாணயத்தையும் விட்டு வெகுதூரம் சென்று விடுகின்றனர்.
அவர்கள் சற்றே இந்த குர்ஆனின் அறிவுரைகளை சிந்தித்துப் பார்த்திருந்தால், அவர்களுடைய உயர்வுக்கும் கண்ணியத்திற்கும் எந்த அளவுக்கு சிறப்பான அறிவுரைகளை தருகின்றது என்பதை விளங்கிக் கொண்டிருப்பார்கள். ஆனால் அவர்களோ கண்மூடித்தனமாக முன்னோர்களின் வழிபாட்டில் மூழ்கியிருப்பதால், அவர்களுக்கு ஏற்படவிருக்கும் அழிவு தவிர்க்க முடியாமல் போய்விடுகிறது.
كَمْ أَهْلَكْنَا مِن قَبْلِهِم مِّن قَرْنٍۢ فَنَادَوا۟ وَّلَاتَ حِينَ مَنَاصٍۢ.
38:3. இப்படியாக இதற்கு முன் வாழ்ந்த எத்தனையோ சமுதாயங்கள் இறைவனின் நியதிப் படி அழிந்துள்ளன. அவர்களுக்கு அழிவு ஏற்பட்டபோது, வெறும் கூக்குரல்களும், அழுகை புலம்பல்களும் தான் மிஞ்சி நின்றன. அவை அவர்களைக் காப்பாற்றவே இல்லை.
وَعَجِبُوٓا۟ أَن جَآءَهُم مُّنذِرٌۭ مِّنْهُمْ ۖ وَقَالَ ٱلْكَٰفِرُونَ هَٰذَا سَٰحِرٌۭ كَذَّابٌ.
38:4. அவர்கள் வீண் பெருமைக்காக வாழ்ந்து வருவதால், அவர்களோடு வாழும் ஒருவர் இத்தகைய எச்சரிக்கை செய்திகளை அளிப்பது அவர்களுக்கு ஆச்சரியத்தை தந்தது. எனவே இவை மக்களை வசியப்படுத்தும் ஏமாற்று பேச்சுகளே என்று கூறி, அந்த எச்சரிக்கையை அவர்கள் உதாசீனப்படுத்தி விட்டார்கள்.
أَجَعَلَ ٱلْءَالِهَةَ إِلَٰهًۭا وَٰحِدًا ۖ إِنَّ هَٰذَا لَشَىْءٌ عُجَابٌۭ.
38:5. மேலும் அவர்கள், “இவருடைய பேச்சை கேளுங்கள். நாங்கள் காலம் காலமாக வழிபட்டு வரும் தெய்வங்கள் எல்லாம் பொய்யானவை என்று கூறி, அவற்றை நம்மிடமிருந்து பிரிக்கப் பார்க்கிறார். இவர் சொல்லும் தெய்வம் மட்டும் உண்மையான தெய்வமாம். அதை மட்டும் வழிபட வேண்டுமாம். இவர் சொல்வது ஆச்சரியமாக உள்ளதே?” என்று தங்களுக்குள் பேசிக் கொண்டார்கள்.
وَٱنطَلَقَ ٱلْمَلَأُ مِنْهُمْ أَنِ ٱمْشُوا۟ وَٱصْبِرُوا۟ عَلَىٰٓ ءَالِهَتِكُمْ ۖ إِنَّ هَٰذَا لَشَىْءٌۭ يُرَادُ.
38:6. “எனவே இவரை விட்டு விலகிக் கொள்ளுங்கள். நாங்கள் கடைப்பிடித்து வரும் தெய்வ வழிபாட்டில் உறுதியோடு இருங்கள். ஏனெனில் இவருடைய பேச்சில் ஏதோ உள்நோக்கம் இருப்பதாக தெரிகிறது. அதனால் அவர் தம் பேச்சை எப்படியாவது மக்களிடத்தில் சேர்க்க வேண்டும் என்று விரும்புகிறார்” என்று அங்கிருந்த மதத் தலைவர்கள் கூறி வந்தனர்.
مَا سَمِعْنَا بِهَٰذَا فِى ٱلْمِلَّةِ ٱلْءَاخِرَةِ إِنْ هَٰذَآ إِلَّا ٱخْتِلَٰقٌ.
38:7. இன்னும் சிலர், “நாம் இதற்குமுன் எந்த சமுதாயத்திலும் இப்படிப்பட்ட விசித்திரமான பேச்சை கேள்வியுற்றதே இல்லை. எனவே இவர் கூறுவது யாவும் கற்பனையான விஷயங்களே ஆகும்” என்றும் கூறி வந்தனர். (மேலும் பார்க்க 26:137)
أَءُنزِلَ عَلَيْهِ ٱلذِّكْرُ مِنۢ بَيْنِنَا ۚ بَلْ هُمْ فِى شَكٍّۢ مِّن ذِكْرِى ۖ بَل لَّمَّا يَذُوقُوا۟ عَذَابِ.
38:8. மேலும் அவர்கள், “இத்தனை காலமாக அவர் எங்களோடு தான் வாழ்ந்து வந்தார். அவருக்கு மட்டும் எப்படி திடீரென்று ஞானோதயம் கிடைத்து விட்டது?” என்றும் பேசிக் கொள்கிறார்கள். உண்மை அதுவல்ல. இவர் செய்யும் முன் எச்சரிக்கையை அவர்கள் விளங்கிக் கொள்ளவே இல்லை. மனித செயல்களின் விளைவுகள் என்ற சட்டப்படி ஏற்படவிருக்கும் வேதனைகளைப் பற்றி அவர்களால் கணிக்க முடியவில்லை. இதுதான் உண்மை.
أَمْ عِندَهُمْ خَزَآئِنُ رَحْمَةِ رَبِّكَ ٱلْعَزِيزِ ٱلْوَهَّابِ.
38:9. அவர்கள் எதை வைத்து இப்படிப்பட்ட பேச்சுகளைப் பேசி வருகிறார்கள்? அவர்களிடம் அருட்கொடையாளன் இறைவன் புறத்திலிருந்து கிடைத்துள்ள செல்வங்களை வைத்து இப்படி பேசுகிறார்களா? அந்த செல்வங்களின் கருவூலங்கள் யாவும் அவர்களுக்கு மட்டும் சொந்தமா? இதை அவர்களிடம் கேளுங்கள்.
أَمْ لَهُم مُّلْكُ ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضِ وَمَا بَيْنَهُمَا ۖ فَلْيَرْتَقُوا۟ فِى ٱلْأَسْبَٰبِ.
38:10. அகிலங்கள் அனைத்திலும், பூமியிலும், இவ்விரண்டிற்கும் இடையே உள்ளவற்றிலும் அவர்களுடைய ஆட்சி தான் நடைபெற்று வருகின்றதா? அப்படி நடைபெறுகிறது என்றால், ஏணி வைத்து மேலே சென்று அங்கும் தன் அதிகாரத்தை நிலைநிறுத்திக் கொள்ளட்டும். இறை நிராகரிப்பவர்களிடம் இதை எடுத்துரையுங்கள்.
جُندٌۭ مَّا هُنَالِكَ مَهْزُومٌۭ مِّنَ ٱلْأَحْزَابِ.
38:11. சிந்தனையாளர்களே! இறைவழிகாட்டுதல்களை மக்கள்முன் வைத்த போதெல்லாம் இத்தகைய ஆட்சேபனைகளும், கேலிப் பேச்சும், மிரட்டல்களும் இல்லாமல் இருந்ததில்லை. இப்போதும் இந்த குர்ஆனின் அறிவுரைகளை எடுத்துரைத்தால் இதே போன்று எதிர்ப்புகள் எழும்.
كَذَّبَتْ قَبْلَهُمْ قَوْمُ نُوحٍۢ وَعَادٌۭ وَفِرْعَوْنُ ذُو ٱلْأَوْتَادِ.
38:12. இதற்கு முன் ‘நூஹ் நபி’யின் சமுதாயம், ‘ஆது’ என்கிற சமுதாயம், தலைமுறை தலைமுறையாக ஆட்சி செய்து வந்த ஃபிர்அவ்னிய சமுதாயமும் இப்படித் தான் இறைவனின் அறிவுரைகளை ஏற்க மறுத்து அழிந்து போனார்கள்.
وَثَمُودُ وَقَوْمُ لُوطٍۢ وَأَصْحَٰبُ لْـَٔيْكَةِ ۚ أُو۟لَٰٓئِكَ ٱلْأَحْزَابُ.
38:13. அதுமட்டுமின்றி ‘சமூது’ என்கிற சமுதாயமும், லூத் நபி சமுதாயமும், அஸ்ஹாபுல் ஐக்கதா என்கிற மத்யன் நாட்டவர்களும் இவ்வாறே அழிந்து போனவர்களின் பட்டியலில் இடம்பெறுகின்றனர்.
إِن كُلٌّ إِلَّا كَذَّبَ ٱلرُّسُلَ فَحَقَّ عِقَابِ.
38:14. இவர்களுடைய அழிவுக்கு காரணம் இறைவழிகாட்டுதலை அவர்களிடம் எடுத்துரைத்த போது, அவற்றைப் பொய்ப்பித்து தீய செயல்களில் நிலைத்து விட்டதே ஆகும். அவர்களுடைய தீய செயல்களின் விளைவாக அவர்கள் இறைவனின் தண்டனைக்கு ஆளானார்கள்.
وَمَا يَنظُرُ هَٰٓؤُلَآءِ إِلَّا صَيْحَةًۭ وَٰحِدَةًۭ مَّا لَهَا مِن فَوَاقٍۢ.
38:15. இப்போதுள்ள மக்களும் இதே போன்று இறைவழிகாட்டுதலை ஏற்க மறுத்து அந்த அழிவை எதிர்பார்த்து இருக்கிறார்கள். அவர்கள் எதிர் பார்க்கும் கலவரம் வெடிக்கும் போது, எல்லாமே முடிந்து விடும். அவ்வாறு ஏற்படுவதை அவர்களால் தடுத்து நிறுத்தவும் முடியாது.
وَقَالُوا۟ رَبَّنَا عَجِّل لَّنَا قِطَّنَا قَبْلَ يَوْمِ ٱلْحِسَابِ.
38:16. அவர்கள் செயல்பட்டு வருவதை பார்க்கும் போது, அந்த வேதனைகளை துரிதப்படுத்தும் படி இறைவனிடம் வேண்டிக் கொண்டிருப்பது போல் உள்ளது. இறைவன் விதித்துள்ள “மனித செயல்களின் விளைவுகள்” என்ற கணக்கு வழக்குகளை துரிதப்படுத்தும்படி கூறுவதாக உள்ளது.
ٱصْبِرْ عَلَىٰ مَا يَقُولُونَ وَٱذْكُرْ عَبْدَنَا دَاوُۥدَ ذَا ٱلْأَيْدِ ۖ إِنَّهُۥٓ أَوَّابٌ.
38:17. இறைவழிகாட்டுதலை எடுத்துரைப்பவரே! அவர்களுடைய இத்தகைய கேலிப் பேச்சுகளைப் பற்றி எண்ணி நீங்கள் விசாரப்படாதீர்கள். நீங்கள் உங்கள் செயல் திட்டத்தில் நிலைத்திருந்து செயல்படுங்கள். இவ்வாறே ஆட்சி செய்து வந்த தாவூத் நபியும் இறைவனின் வழிகாட்டுதலை முன்வைத்தே செயல்பட்டு வந்தார்.
إِنَّا سَخَّرْنَا ٱلْجِبَالَ مَعَهُۥ يُسَبِّحْنَ بِٱلْعَشِىِّ وَٱلْإِشْرَاقِ.
38:18. மலைகளைப் போல் செல்வங்களை குவித்து வைத்திருந்தவர்களும் அவரது ஆட்சி அதிகாரத்தின் கீழ் இருந்தார்கள். அவர்கள் அனைவரும் தாவூத் நபியுடன் இறைக்கட்டளைப்படி அயராது அல்லும் பகலும் செயல்பட்டு வந்தார்கள்.
وَٱلطَّيْرَ مَحْشُورَةًۭ ۖ كُلٌّۭ لَّهُۥٓ أَوَّابٌۭ.
38:19. அதுமட்டுமின்றி அவரது ஆட்சி காலத்தில் வேகமாகப் பறந்து செல்லும் குதிரைப் படைகளையும் ஒன்று திரட்டி நன்றாக பயிற்சியளித்து வைத்திருந்தார். அவை அனைத்தும் அவருக்குக் கட்டுப்பட்டு நடந்தன. (மேலும் பார்க்க:21:79, 27:16, 34:10)
وَشَدَدْنَا مُلْكَهُۥ وَءَاتَيْنَٰهُ ٱلْحِكْمَةَ وَفَصْلَ ٱلْخِطَابِ.
38:20. இப்படியாக அவருக்கு பலம் வாய்ந்த அரசாட்சியும், அதை சிறப்பாக நடத்திச் செல்ல ஞான உபதேசங்களும், அவற்றின் அடிப்படையில் சிறப்பான தீர்ப்புகளை அளிக்கக் கூடிய சொல்லாற்றலும் இறைவனின் நியதிப்படி கிடைத்திருந்தன.
ஆனால் சமுதாய மக்களிடையே ஒழுக்க மாண்புகள் மிகவும் சீர்கெட்டுப் போய் இருந்தது. அவர்கள் மிகவும் மோசமானவர்களாக இருந்தனர். அரசவை கூடும் நேரம் காலம், அதை அணுகவேண்டிய முறை என்பதெல்லாம் அவர்களுக்குத் தெரியாது. அதுபோலத்தான் ஒரு நாள்
۞ وَهَلْ أَتَىٰكَ نَبَؤُا۟ ٱلْخَصْمِ إِذْ تَسَوَّرُوا۟ ٱلْمِحْرَابَ.
38:21. எந்த முன்னறிவிப்பும் செய்யாமல், இருவர் திடீரென்று தாவூதுடைய இருப்பிடத்திற்குள் சுவர் ஏறி குதித்து உள்ளே நுழைந்தனரே! அங்கு நடந்த விவகாரம் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா?
إِذْ دَخَلُوا۟ عَلَىٰ دَاوُۥدَ فَفَزِعَ مِنْهُمْ ۖ قَالُوا۟ لَا تَخَفْ ۖ خَصْمَانِ بَغَىٰ بَعْضُنَا عَلَىٰ بَعْضٍۢ فَٱحْكُم بَيْنَنَا بِٱلْحَقِّ وَلَا تُشْطِطْ وَٱهْدِنَآ إِلَىٰ سَوَآءِ ٱلصِّرَٰطِ.
38:22. அவர்களைக் கண்ட தாவூத் நபிக்கு மனச் சஞ்சலம் ஏற்பட்டது. அப்போது அவர்கள், “நீங்கள் பயப்படாதீர்கள். எங்களுக்குள் அநீதி இழைக்கப்பட்டுள்ளது. தாங்களிடம் தான் எங்களுக்கு சரியான நீதி கிடைக்கும். எனவே தாங்கள் தீர்ப்பு வழங்குவதில் தவறிழைக்க மாட்டீர்கள் என நம்புகிறோம். நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதையும் தாங்கள் தான் சொல்ல வேண்டும்” என்றனர்.
إِنَّ هَٰذَآ أَخِى لَهُۥ تِسْعٌۭ وَتِسْعُونَ نَعْجَةًۭ وَلِىَ نَعْجَةٌۭ وَٰحِدَةٌۭ فَقَالَ أَكْفِلْنِيهَا وَعَزَّنِى فِى ٱلْخِطَابِ.
38:23. நடந்த உண்மையை விசாரிக்கையில் அவ்விருவரில் ஒருவர், “இவர் என்னுடன் பிறந்த சகோதரர் ஆவார். இவரிடம் 99 ஆடுகள் இருக்கின்றன. ஆனால் என்னிடம் ஒரே ஒரு ஆடுதான் இருக்கிறது. இவர் அதனையும் தனக்கு கொடுத்துவிட வேண்டும் என்று சொல்லி வந்தார். மக்களிடம் இதற்கு தீர்ப்பு கேட்கும் போது, அவர்களும் இவரையே ஆதரித்து பேசுகின்றனர். இவ்வாறு அவர் வாதத்தில் என்னை மிகைத்து நிற்கிறார்” என்று வழக்கின் உண்மை நிலையை எடுத்துரைத்தார்.
قَالَ لَقَدْ ظَلَمَكَ بِسُؤَالِ نَعْجَتِكَ إِلَىٰ نِعَاجِهِۦ ۖ وَإِنَّ كَثِيرًۭا مِّنَ ٱلْخُلَطَآءِ لَيَبْغِى بَعْضُهُمْ عَلَىٰ بَعْضٍ إِلَّا ٱلَّذِينَ ءَامَنُوا۟ وَعَمِلُوا۟ ٱلصَّٰلِحَٰتِ وَقَلِيلٌۭ مَّا هُمْ ۗ وَظَنَّ دَاوُۥدُ أَنَّمَا فَتَنَّٰهُ فَٱسْتَغْفَرَ رَبَّهُۥ وَخَرَّ رَاكِعًۭا وَأَنَابَ ۩.
38:24. இதைக் கேட்ட தாவூத் நபி, “உம்முடைய ஆட்டை அவர் தம்முடைய ஆடுகளுடன் சேர்த்து விடும்படி கேட்பது அநியாய செயலாகும். அவர் உம்மீது அநியாயம் செய்கிறார். பங்காளிகளில் பெரும்பாலோர் இப்படித் தான் மோசம் செய்கிறார்கள். அல்லாஹ்வின் வழிகாட்டுதலை ஏற்று நடப்பவர்கள் இப்படி செய்ய மாட்டார்கள். இப்படி செயல்படுபவர்கள் மிகச் சிலரே இருக்கிறார்கள்” என்று கூறி சரியான தீர்ப்பு அளித்தார். ஆனால் அவர் இந்த வழக்கில் ஓர் உண்மை மறைந்திருப்பதை கவனித்தார். இறைவனிடமிருந்து தனக்கு கிடைத்த அறிவிப்பு என எண்ணி, நாட்டில் அதற்கான சீரமைப்பு நடவடிக்கைகளை எடுத்து வந்தார். இப்படியாக அவர் அரசராக இருந்த போதும் இறைவனின் வழிகாட்டுதல் என்னவென்பதை கவனத்தில் கொண்டு அதற்கேற்றவாறே செயல்பட்டு வந்தார்.
அதாவது தாவூது நபி அந்த வழக்கைப் பற்றி ஆழ்ந்து சிந்தித்துப் பார்த்தார். விவகாரம் ஆடுகள் விஷயமாக வந்த வழக்காளிகளுக்கு மட்டும் அல்ல என்பதை உணர்ந்தார். நாட்டில் எங்கும் மோசடி நடந்து வருவதையும் மக்கள் செல்வந்தர்களுக்கு ஆதரவாகவும், ஏழை எளிய மக்களுக்கு எதிராகவும் செயல்படுவதை அறிந்து கொண்டார். அவர் அரசராக இருந்தும் இதைக் கவனத்தில் கொள்ளாதது அவருடைய தவறாகும். ஆட்டின் வழக்கு இதை அவருக்கு உணர்த்துவதாக இருந்தது.
அயல் நாட்டவரிடமிருந்து பாதுகாத்துக் கொள்ள படைகளைத் தயாரித்த தாவூது நபி, உள்நாட்டில் நடமாடிக் கொண்டிருக்கும் விஷமிகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்காதது அவருடைய ஆட்சியில் இருந்த குறைப்பாடாகும். எனவே பொது மக்களின் நலனைப் பேணிக் காக்க தக்க நடவடிக்கைகளை எடுத்து வந்தார்.
فَغَفَرْنَا لَهُۥ ذَٰلِكَ ۖ وَإِنَّ لَهُۥ عِندَنَا لَزُلْفَىٰ وَحُسْنَ مَـَٔابٍۢ.
38:25. அவ்வாறே அவர் எடுத்து வந்த பாதுகாப்பு மற்றும் சீரமைப்பு நடவடிக்கைகளுக்கு இறைவனின் துணையும் இருந்து வந்தது. இப்படியாக அவர் ஆற்றிய சிறந்த பணிக்காக அவருக்கு உயர் அந்தஸ்தும், அழகிய அரண்மனை வாசமும் நம் நியதிப்படி கிடைத்தது.
يَٰدَاوُۥدُ إِنَّا جَعَلْنَٰكَ خَلِيفَةًۭ فِى ٱلْأَرْضِ فَٱحْكُم بَيْنَ ٱلنَّاسِ بِٱلْحَقِّ وَلَا تَتَّبِعِ ٱلْهَوَىٰ فَيُضِلَّكَ عَن سَبِيلِ ٱللَّهِ ۚ إِنَّ ٱلَّذِينَ يَضِلُّونَ عَن سَبِيلِ ٱللَّهِ لَهُمْ عَذَابٌۭ شَدِيدٌۢ بِمَا نَسُوا۟ يَوْمَ ٱلْحِسَابِ.
38:26. இறைவனிடமிருந்து, “தாவூதே! நிச்சயமாக நாம் உமக்கு நாட்டை ஆளும் வாய்ப்பினை வழங்கியுள்ளோம். எனவே மக்களிடையே நியாயமான தீர்ப்புகள் கிடைக்கும்படி வழி செய்வீராக. மேலும் நியாயமான முறையில் ஆட்சி செய்து வருவீராக. அன்றியும் மக்களின் விருப்பங்களுக்கு ஒருபோதும் இணங்கி செயல்படாதீர். ஏனெனில் அவர்கள் தம் மனோ இச்சைக்கு அடிபணிந்து செயல்படுகிறார்கள். எனவே அவை அல்லாஹ்வின் பாதையை விட்டு உம்மை திசைத் திருப்பிவிடும். யார் அல்லாஹ்வின் இந்த ஆட்சிக்கு எதிராக செயல்படுகிறார்களோ, அவர்களுக்கு கடுமையான தண்டனை அளிக்கப்படும் என்று மக்களுக்கு எச்சரிப்பீராக. இதையும் மீறி அநியாய செயல்களில் ஈடுபடுவோர் மிகக் கொடிய வேதனையுண்டு என்பதை அவர்கள் நினைவில் கொள்ளட்டும்” என்று இதுபோன்ற கட்டளைகள் அடங்கிய ஜபூர் எனும் வேதம் அவருக்கு அளிக்கப்பட்டது.(பார்க்க 17:55)
وَمَا خَلَقْنَا ٱلسَّمَآءَ وَٱلْأَرْضَ وَمَا بَيْنَهُمَا بَٰطِلًۭا ۚ ذَٰلِكَ ظَنُّ ٱلَّذِينَ كَفَرُوا۟ ۚ فَوَيْلٌۭ لِّلَّذِينَ كَفَرُوا۟ مِنَ ٱلنَّارِ.
38:27. அதுமட்டுமின்றி அந்த வேதத்தில், “அகிலங்களையும் பூமியையும் அல்லாஹ் விளையாட்டுக்காக படைத்துள்ளதாக மக்கள் எண்ணிக் கொண்டுள்ளனர். இது இறை நிராகரிப்பவர்களின் தவறான எண்ணங்களாகும். அவற்றை இறைவன் உயர்ந்த நோக்கங்களுக்காகவே படைத்துள்ளான். இதுவே உண்மையாகும். எனவே யார் தம் வாழ்க்கையை விளையாட்டாக எடுத்துக் கொள்கிறார்களோ, அவர்கள் கேடுகளை விளைவிக்கும் வேதனைகளின் பக்கம் விரைவார்கள்” என்றும் குறிப்பிடப்பட்டு இருந்தது.
أَمْ نَجْعَلُ ٱلَّذِينَ ءَامَنُوا۟ وَعَمِلُوا۟ ٱلصَّٰلِحَٰتِ كَٱلْمُفْسِدِينَ فِى ٱلْأَرْضِ أَمْ نَجْعَلُ ٱلْمُتَّقِينَ كَٱلْفُجَّارِ.
38:28. ஆக அல்லாஹ்வின் வழிகாட்டுதலை ஏற்று சமுதாய மேம்பாட்டிற்காக ஆக்கப்பூர்வமான நலத் திட்டங்களைத் தீட்டி அவற்றிற்காக உழைப்பவர்கள் ஒரு பக்கம். சமுதாயத்தையும் சமுதாய மக்களையும் வழிகெடுத்து குழப்பங்களையும் கலவரங்களையும் தூண்டுவோர் மறு பக்கம். ஆக இவ்விரு பிரிவினரும் சமமாவார்களா? இறைவனின் நியதிப்படி மனித செயல்களுக்கேற்ற விளைவுகள் என்ற சட்டத்திற்கு பயந்து நடப்பவர்களும் மனம் போன போக்கில் நடந்து பாவச் செயல்களைச் செய்வோரும் சமமாவார்களா?
كِتَٰبٌ أَنزَلْنَٰهُ إِلَيْكَ مُبَٰرَكٌۭ لِّيَدَّبَّرُوٓا۟ ءَايَٰتِهِۦ وَلِيَتَذَكَّرَ أُو۟لُوا۟ ٱلْأَلْبَٰبِ.
38:29. இத்தகைய அறிவுரைகளும் முன் எச்சரிக்கைகளும் அடங்கிய வேதத்தை தாவூது நபிக்கு வழங்கினோம். அவர்கள் அனைவரும் அந்த அறிவுரைகளை சீரிய முறையில் ஆராய்ந்து செயலாற்றுவதற்காகவே அவ்வேதத்தை அவர்களுக்கு நாம் அளித்தோம்.
وَوَهَبْنَا لِدَاوُۥدَ سُلَيْمَٰنَ ۚ نِعْمَ ٱلْعَبْدُ ۖ إِنَّهُۥٓ أَوَّابٌ.
38:30. அது மட்டுமின்றி தாவூது நபிக்குப் பின், அவரது மகன் சுலைமான் நபி வாரிசாக வந்தார். அவரும் அரசராக இருந்த போது, இறைவழிகாட்டுதல்கள் என்னவென்பதை முன்வைத்தே நாட்டை ஆட்சி செய்து வந்தார்.
إِذْ عُرِضَ عَلَيْهِ بِٱلْعَشِىِّ ٱلصَّٰفِنَٰتُ ٱلْجِيَادُ.
38:31. மேலும் சுலைமான் நபியும் தன் ஆட்சி காலத்தில், நன்றாக பயிற்சி அளிக்கப்பட்ட குதிரைப் படைகளை தயாரித்து வைத்திருந்தார். அந்த குதிரைகளை அவரிடம் கொண்டுவரச் சொல்லி
فَقَالَ إِنِّىٓ أَحْبَبْتُ حُبَّ ٱلْخَيْرِ عَن ذِكْرِ رَبِّى حَتَّىٰ تَوَارَتْ بِٱلْحِجَابِ.
38:32. காலை முதல் இரவு வரையில் அந்த குதிரைகளை ஒவ்வொன்றாக தாமே ஆய்வு செய்து வந்தார். இது விஷயமாக அவர் தன் நண்பரிடம், அந்த குதிரைகளின் மேல் அளவு கடந்த பாசம் இருப்பதற்கு காரணம் என்னவென்பதை எடுத்துரைத்தார். “அந்த குதிரைகள் தாம் இறைவனின் கட்டளைப்படி ஆட்சியமைப்பை பாதுகாக்க உறுதுணையாக இருக்கின்றன. அந்த அளவிற்கு அவை முக்கியமானவை ஆகும்” என்றார்.
رُدُّوهَا عَلَىَّ ۖ فَطَفِقَ مَسْحًۢا بِٱلسُّوقِ وَٱلْأَعْنَاقِ.
38:33. அவற்றை மீண்டும் வரவழைத்து ஒவ்வொன்றாக பின்னங்கால் பகுதியிலும், கழுத்துப் பகுதிகளிலும் தடவிக் கொடுத்தார். அந்த அளவுக்கு அவருக்கு அவற்றின் மீது பாசம் இருந்தது.
وَلَقَدْ فَتَنَّا سُلَيْمَٰنَ وَأَلْقَيْنَا عَلَىٰ كُرْسِيِّهِۦ جَسَدًۭا ثُمَّ أَنَابَ.
38:34. இப்படியாக சுலைமான் நபி தன் ஆட்சி சம்பந்தப்பட்ட ஒவ்வொரு விஷயத்திலும் இறைக்கட்டளை என்னவோ அதன்படியே செயல்பட்டு வந்தார். ஆனால் அவருக்குப் பின் ஆட்சி பொறுப்பை எடுத்துக் கொண்ட அவருடைய மகனோ எதற்கும் தகுதியில்லாத முண்டமாக இருந்தான். அவனை திருத்த முடியாமல் போகவே அவனைப் பற்றி கவலைப் படுவதை விட்டுவிட்டு, நம் கட்டளைப்படியே செயல்பட்டு வந்தார்.
قَالَ رَبِّ ٱغْفِرْ لِى وَهَبْ لِى مُلْكًۭا لَّا يَنۢبَغِى لِأَحَدٍۢ مِّنۢ بَعْدِىٓ ۖ إِنَّكَ أَنتَ ٱلْوَهَّابُ.
38:35. அவர், “என் இறைவா! என் ஆட்சியமைப்புத் திட்டங்களை பாதுகாப்பாக நிறைவேற்ற எனக்கு வழி வகுப்பாயாக. மேலும் உலகிலேயே தலைசிறந்த ஆட்சி என்று வருங்கால மக்களுக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் வகையில் எனக்கு உதவி செய்வாயாக! நிச்சயமாக உன் அறிவுரைகளின் படி செயல்படுவதைக் கொண்டே இத்தகைய ஆட்சியை ஏற்படுத்து முடியும் என்பதை நான் அறிவேன்” என்று தன் உயர்ந்த எண்ணங்களை இறைவன் முன் சமர்ப்பித்தார்.
فَسَخَّرْنَا لَهُ ٱلرِّيحَ تَجْرِى بِأَمْرِهِۦ رُخَآءً حَيْثُ أَصَابَ.
38:36. இப்படியாக இறைச் செயல்திட்டத்தின் படி செயல்படும் கடல் காற்றின் வேகத்தையும், திசைகளையும் ஆய்வு செய்து அவற்றை பயன்படுத்திக் கொள்ளும் வகையில் பாய்மரக் கப்பல்களை தயாரிக்க வழிசெய்தார். இதனால் மாதக் கணக்கில் ஆகும் பயணத் தூரத்தை சில மணி நேரத்திலேயே இலகுவாகக் கடக்க முடிந்தது (மேலும் பார்க்க 34:12)
وَٱلشَّيَٰطِينَ كُلَّ بَنَّآءٍۢ وَغَوَّاصٍۢ.
38:37. அது மட்டுமின்றி ஆழ்கடல் ஆராய்ச்சி செய்யும் வகையில், கடலில் மூழ்கி முத்துக்களையும் பவளங்களையும் எடுக்கும் பலம் மிக்கவர்களை தயாரித்து வைத்திருந்தார். (பார்க்க 21:82, 34:13)
وَءَاخَرِينَ مُقَرَّنِينَ فِى ٱلْأَصْفَادِ.
38:38. அதுமட்டுமின்றி பலம்பொருந்திய மலைவாழ் மக்களும் இவருடைய கட்டளைக்கு அடிபணிந்து நடக்கும்படி கட்டுப்படுத்தி வைத்திருந்தார்.
هَٰذَا عَطَآؤُنَا فَٱمْنُنْ أَوْ أَمْسِكْ بِغَيْرِ حِسَابٍۢ.
38:39. இவையாவும் அவருக்கு இறைவன் புறத்திலிருந்து கிடைத்திருந்த அருட்கொடைகளாகும். அவர் விரும்பினால் அந்த மலைவாழ் மக்களை சிறை பிடித்து அடிமையாக்கி வைத்திருக்கலாம்; அல்லது அவர்களை நகர்புற மக்களைப் போல் பயிற்சியளித்து சிறப்பாக வாழ வழி செய்தும் தரலாம் என்ற நிலையில் அவர் இருந்தார். அவரை யாரும் தட்டிக் கேட்க முடியாது என்ற நிலை இருந்தது.
وَإِنَّ لَهُۥ عِندَنَا لَزُلْفَىٰ وَحُسْنَ مَـَٔابٍۢ.
38:40. ஆனால் அவர் அவர்களை நன்றாகப் பயிற்சி அளித்து சிறந்த முறையில் வாழ வழிசெய்தார். இப்படியாக அவர் ஒவ்வொரு விஷயத்திலும் இறைவழிகாட்டுதலோடு நெருக்கமான தொடர்பு வைத்திருந்தார். எனவே அவருக்கு உயர் அந்தஸ்தும் அழகிய அரண்மனை வாசமும் கிடைத்தன. மறுமை நாளிலும் அவருக்கு இதே சிறப்புகள் கிடைக்கும்.
وَٱذْكُرْ عَبْدَنَآ أَيُّوبَ إِذْ نَادَىٰ رَبَّهُۥٓ أَنِّى مَسَّنِىَ ٱلشَّيْطَٰنُ بِنُصْبٍۢ وَعَذَابٍ.
38:41. அதே போன்று இறைத்தூதர்கள் வரிசையில் அய்யூப் நபியும் இடம் பெறுகிறார். அவரை ஒரு நாள் ஒரு கொடிய விஷப் பாம்பு கடித்து விட்டது. அந்த வேதனையை தாங்கிக்கொள்ள முடியாமல் அதிலிருந்து விடுபட இறைவனிடம் பிரார்த்தித்தார்.
ٱرْكُضْ بِرِجْلِكَ ۖ هَٰذَا مُغْتَسَلٌۢ بَارِدٌۭ وَشَرَابٌۭ.
38:42. அதற்கு,“எப்படியாவது தவழ்ந்து சென்று பக்கத்திலுள்ள குகையினுள் செல்வீராக. அதனுள் நீரூற்றுகள் இருக்கின்றன. அந்த நீரில் உன் கால்களை விட்டு ஆட்டுவாயாக. அது குளிர்ச்சியான இடமாகவும் இருக்கும். குடிப்பதற்கு சுவையான நீரும் கிடைத்து விடும்” என்று இறைவனிடமிருந்து பதில் வந்தது.
இந்த சம்பவத்திலிருந்து சில உண்மைகள் தெரிய வருகின்றன. அதாவது அவர் தனிமையில் மாட்டிக் கொண்டதாகத் தெரிகிறது. மேலும் பாம்புக் கடியின் வலியால் துடித்துக் கொண்டும் இருந்தார். வெயிலின் கடுமையும் அதிகமாகவே இருந்தது. மேலும் அவருக்கு அதிக தாகமும் இருந்ததாகத் தெரிகிறது.
وَوَهَبْنَا لَهُۥٓ أَهْلَهُۥ وَمِثْلَهُم مَّعَهُمْ رَحْمَةًۭ مِّنَّا وَذِكْرَىٰ لِأُو۟لِى ٱلْأَلْبَٰبِ.
38:43. மேலும் அதே தண்ணீரைத் தேடி அவருடைய குடும்பத்தாரும், சமூகத்தாரும் அங்கு வந்தனர். அது மட்டுமின்றி வேறு சிலரும் அவர்களுடன் வந்தடைந்தனர். இப்படியாக அவருக்கு இறைவன் புறத்திலிருந்து உதவிகள் கிடைத்தன. சிந்தித்துணரும் மக்களுக்கு இதில் படிப்பினைகள் உள்ளன. (பார்க்க 38:49)
وَخُذْ بِيَدِكَ ضِغْثًۭا فَٱضْرِب بِّهِۦ وَلَا تَحْنَثْ ۗ إِنَّا وَجَدْنَٰهُ صَابِرًۭا ۚ نِّعْمَ ٱلْعَبْدُ ۖ إِنَّهُۥٓ أَوَّابٌۭ.
38:44. அதன்பின் பாம்பு கடியின் வலியிலிருந்து விடுபட மந்திரக் குச்சிகளைப் பயன்படுத்திக் கொள்ள அவர்கள் யோசனை கூறினார்கள். அதில் எந்த பாவமும் இல்லை என்றனர். ஆனால் அந்த வழிமுறைகளால் மூட நம்பிக்கைக்கு வழி வகுக்கும் என்பதால் அதை அவர் ஏற்றுக் கொள்ளவில்லை. அவர் பொறுமையுடன் இருந்து மூலிகை போன்றவற்றிலிருந்தே சிகிச்சை பெற்றார். இப்படியாக அவர் தம் வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் இறைவனின் வழிகாட்டுதல் என்னவென்பதை முன்வைத்தே செயல்பட்டார்.
وَٱذْكُرْ عِبَٰدَنَآ إِبْرَٰهِيمَ وَإِسْحَٰقَ وَيَعْقُوبَ أُو۟لِى ٱلْأَيْدِى وَٱلْأَبْصَٰرِ.
38:45. இப்படியாக சிறந்த முறையில் சிந்தித்து செயலாற்றிய இறைத்தூதர்கள் வரிசையில் இப்றாஹீம் நபி, இஸ்ஹாக் நபி, யாகூப் நபி ஆகியோரின் வரலாற்றையும் எடுத்துரையுங்கள்.
إِنَّآ أَخْلَصْنَٰهُم بِخَالِصَةٍۢ ذِكْرَى ٱلدَّارِ.
38:46. அவர்கள் அனைவரும் நம் கட்டளைப் படியே செயல்பட்டு வந்த இலட்சியவான்கள் ஆவர்.
وَإِنَّهُمْ عِندَنَا لَمِنَ ٱلْمُصْطَفَيْنَ ٱلْأَخْيَارِ.
38:47. நிச்சயமாக அவர்கள் அனைவரும் வருங்கால சமூக நலத் திட்டங்களைத் தீட்டியே அழகிய முறையில் செயலாற்றியவர்கள் ஆவர். அவர்கள் ஒருபோதும் இறைக்கட்டளைக்கு மாற்றமாக செயல்பட்டதே இல்லை.
وَٱذْكُرْ إِسْمَٰعِيلَ وَٱلْيَسَعَ وَذَا ٱلْكِفْلِ ۖ وَكُلٌّۭ مِّنَ ٱلْأَخْيَارِ.
38:48. அதே போன்று இஸ்மாயில் நபி, அல்யஸ்அ, மற்றும் ஜல் கிஃப்லு போன்றவர்களும் சிறப்பாக செயல்பட்டு உலக வரலாற்றில் சிறந்த இடத்தைப் பிடித்தவர்கள் ஆவர். அவர்களும் ஒருபோதும் இறைக்கட்டளைக்கு மாற்றமாக செயல்பட்டதில்லை. அவர்களுடைய வாழ்க்கை வரலாற்றைப் பற்றியும் எடுத்துரையுங்கள்.
هَٰذَا ذِكْرٌۭ ۚ وَإِنَّ لِلْمُتَّقِينَ لَحُسْنَ مَـَٔابٍۢ.
38:49. இப்படியாக வரலாற்றின் உண்மைகளை ஆராயும்போது, காலஞ்சென்ற நபிமார்களுக்கு பல இன்னல்களும் துயரங்களும் ஏற்பட்ட போதும், தம் இலட்சியத்தில் நிலைத்திருந்து அயராது பாடுபட்டார்கள். இறுதியில் நிச்சயமாக அவர்களுக்கு வெற்றி கிடைத்தது.
அதே போன்று இறைவழிகாட்டுதலை ஏற்று அதன்படி செயலாற்ற விரும்புவோர் கடந்த கால நபிமார்களின் வாழ்க்கை வரலாற்றை கவனத்தில் கொண்டு, எப்படிப்பட்ட கஷ்ட நஷ்டங்கள் வந்தாலும் இறைக் கொள்கைக் கோட்பாட்டில் நிலைத்திருந்து தொடர்ந்து பாடுபட வேண்டும். இவை தான் சிந்தித்துணரும் மக்களுக்கு கிடைக்கும் படிப்பினைகளாகும்.
جَنَّٰتِ عَدْنٍۢ مُّفَتَّحَةًۭ لَّهُمُ ٱلْأَبْوَٰبُ.
38:50. இப்படி அயராது உழைப்பவர்களுக்கு இவ்வுலக வாழ்வு சுவனத்திற்கு ஒப்பானதாகவும், மரணத்திற்குப் பின் தொடர்கின்ற வாழ்விலும் சுவன வாழ்வு கிடைக்கும். மேலும் அத்தகைய சமுதாயங்களில் அனைத்து வசதிகளும் தாராளமாகக் கிடைத்து வரும்.
مُتَّكِـِٔينَ فِيهَا يَدْعُونَ فِيهَا بِفَٰكِهَةٍۢ كَثِيرَةٍۢ وَشَرَابٍۢ.
38:51. அத்தகைய சிறப்பான சமுதாயத்தில் சாய்வு நாற்காலிகளில் அமர்ந்த வண்ணம் தம் பணிகளைத் தொடர்ந்து செய்து வருவார்கள். உண்ண ருசிமிக்க உணவும், குடிக்க குளிர் பானங்களும் அவர்களுக்கு தாராளமாக கிடைக்கும்.
۞ وَعِندَهُمْ قَٰصِرَٰتُ ٱلطَّرْفِ أَتْرَابٌ.
38:52. இத்தகைய சுகமான வாழ்வு ஆண்களுக்கு மட்டும் கிடைக்கும் என்பதல்ல. அவர்களுக்கு இணையாக தூய உள்ளம் படைத்த பெண்களும் அவர்களுடன் பணியாற்றுவார்கள். அந்த பெண்கள் அன்னிய ஆடவர் எவரிடத்திலும் கெட்ட எண்ணத்தோடு ஒருபோதும் பழகவே மாட்டார்கள். அந்த அளவுக்கு அவர்கள் பரிசுத்தமானவர்களாக இருப்பார்கள்.
هَٰذَا مَا تُوعَدُونَ لِيَوْمِ ٱلْحِسَابِ.
38:53. இவை தான் இறைவழிகாட்டுதலை ஏற்று ஆக்கப்பூர்வமாக செயல்படுபவர்களுக்கு கிடைக்கும் பலன்களாகும். மேலும் அக்கால கட்டத்தில் உருவாகும் சமுதாய அமைப்பின் வரை படங்களாகும்.
إِنَّ هَٰذَا لَرِزْقُنَا مَا لَهُۥ مِن نَّفَادٍ.
38:54. இவை யாவும் அவர்களுக்கு இறைவன் புறத்திலிருந்து கிடைக்கின்ற அருட்கொடைகளாகும். இதில் சிறிதளவும் எந்த குறைவும் இருக்காது.
هَٰذَا ۚ وَإِنَّ لِلطَّٰغِينَ لَشَرَّ مَـَٔابٍۢ.
38:55. இவை யாவும் நல்லோர்களுக்குக் கிடைக்கின்ற நற்பலன்களாகும். மறுபுறம் தீயவர்களின் நிலை இதற்கு நேர் மாற்றமாக இருக்கும். அவர்களுடைய தங்குமிடம் மிகவும் மோசமானதாக இருக்கும்.
جَهَنَّمَ يَصْلَوْنَهَا فَبِئْسَ ٱلْمِهَادُ.
38:56. அவர்களுடைய சமுதாயம் பல பிரச்னைகளுக்குரியதாக அமையும். இதையே நாம் நரகம் என்கிறோம். அது வசிப்பதற்கு மிகவும் மோசமான இடமாக இருக்கும்.
هَٰذَا فَلْيَذُوقُوهُ حَمِيمٌۭ وَغَسَّاقٌۭ.
38:57. இவையாவும் தீய செயல்களில் ஈடுபடும் சமுதாயத்தில் ஏற்படுகின்ற தீய விளைவுகளாகும். அவர்கள் அதை அனுபவித்துப் பார்க்கட்டும். அவர்களுக்கு கிடைப்பதோ கொதி நீரும் அழுகிய ஆகாரங்களுமே ஆகும்.
وَءَاخَرُ مِن شَكْلِهِۦٓ أَزْوَٰجٌ.
38:58. இவை மட்டுமின்றி அவர்களுக்கு இதுபோன்ற பல்வேறு வேதனைகளும் ஏற்பட்டு வரும்.
هَٰذَا فَوْجٌۭ مُّقْتَحِمٌۭ مَّعَكُمْ ۖ لَا مَرْحَبًۢا بِهِمْ ۚ إِنَّهُمْ صَالُوا۟ ٱلنَّارِ.
38:59. சமுதாயத்தை கெடுத்து வந்த தலைவர்களிடம், “இவர்கள் தாம் உங்களுடைய நெருங்கிய சேனைகளாகும். உங்களோடு அவர்களும் நரகத்திற்குள் புகுவார்கள். அங்கு இவர்களுக்கு எந்த மதிப்பும் மரியாதையும் இருக்காது. வெறும் துயரமும் வேதனைகளும் தான் மிஞ்சும்” என்று சொல்லப்படும்.
قَالُوا۟ بَلْ أَنتُمْ لَا مَرْحَبًۢا بِكُمْ ۖ أَنتُمْ قَدَّمْتُمُوهُ لَنَا ۖ فَبِئْسَ ٱلْقَرَارُ.
38:60. அத்தலைவர்களைப் பின்பற்றி வந்தவர்கள், “அப்படியல்ல. நீங்களும் எங்களோடு நரகத்தில் இருக்க வேண்டியவர்களே. உங்களுக்கும் எந்த மதிப்பும் மரியாதையும் கிடைக்காது. காரணம். நீங்கள் தாம் எங்களை முன்நின்று வழிகெடுத்து வந்தீர்கள். எனவே நம் இரு கூட்டத்தாரும் தங்குமிடம் மிகவும் கெட்டதாகும்” என்று சொல்வார்கள்.
قَالُوا۟ رَبَّنَا مَن قَدَّمَ لَنَا هَٰذَا فَزِدْهُ عَذَابًۭا ضِعْفًۭا فِى ٱلنَّارِ.
38:61. மேலும் அவர்கள், “எங்கள் இறைவா! எவர்கள் எங்களை முன்நின்று வழிகெடுத்து வந்தார்களோ, அவர்களுக்கு நரக வேதனையை இரு மடங்காக அதிகப்படுத்துவாயாக!” இறைவனிடம் வேண்டிக் கொள்வார்கள்.
وَقَالُوا۟ مَا لَنَا لَا نَرَىٰ رِجَالًۭا كُنَّا نَعُدُّهُم مِّنَ ٱلْأَشْرَارِ.
38:62. இன்னும் அந்த நரகவாசிகள்,“நமக்கு என்ன நேர்ந்தது? எவர்களை நாம் கெட்ட மனிதர்கள் என்று எண்ணிக் கொண்டிருந்தோமோ, அந்த இறை நேசர்களை நாங்கள் இங்கு நரகத்தில் காண முடியவில்லையே!” என்று ஏக்கம் அடைவார்கள்.
أَتَّخَذْنَٰهُمْ سِخْرِيًّا أَمْ زَاغَتْ عَنْهُمُ ٱلْأَبْصَٰرُ.
38:63. மேலும் அவர்கள், “எவர்களை நாம் பரிகாசம் செய்து கொண்டிருந்தோமோ, அவர்களை இங்கு காண முடியவில்லையே! அவர்கள் உண்மையிலேயே எங்கு இருக்கிறார்கள். எங்கள் பார்வைகள் அந்த அளவுக்கு சுருங்கிவிட்டனவா?” என்று கேட்டுக் கொண்டிருப்பார்கள்.
إِنَّ ذَٰلِكَ لَحَقٌّۭ تَخَاصُمُ أَهْلِ ٱلنَّارِ.
38:64. இது வெறும் அச்சுறுத்தல் என்று எண்ணிக் கொள்ளாதீர்கள். இவை நடக்கப்போகும் உண்மையே ஆகும். இப்படித்தான் அந்த நரகவாசிகள் தங்களுக்கிடையே தர்க்கித்துக் கொண்டிருப்பார்கள்.
قُلْ إِنَّمَآ أَنَا۠ مُنذِرٌۭ ۖ وَمَا مِنْ إِلَٰهٍ إِلَّا ٱللَّهُ ٱلْوَٰحِدُ ٱلْقَهَّارُ.
38:65. இறைவழிகாட்டுதலை எடுத்துரைப்பவரே! “நான் உங்களுடைய தவறான செயல்களால் ஏற்படும் தீய விளைவுகளைப் பற்றி எடுத்துரைத்து முன்னெச்சரிக்கை செய்பவனே ஆவேன். அகிலங்கள் அனைத்தையும் படைத்து, அவற்றை அடக்கி ஆளுகின்ற ஏக இறைவனாகிய அல்லாஹ்வின் கட்டளைக்கு மட்டுமே அடிபணிந்து செயல்படவேண்டும் என்பதை மக்களுக்கு எடுத்துரைப்பதே என் பணியாகும்” என்று கூறிவிடுங்கள்.
رَبُّ ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضِ وَمَا بَيْنَهُمَا ٱلْعَزِيزُ ٱلْغَفَّٰرُ.
38:66. “இந்த முன்னெச்சரிக்கை செய்திகள் யாவும் அகிலங்களையும், பூமியையும், இவற்றிற்கு இடையே உள்ளவற்றையும் படைத்து பரிபாலிக்கின்ற ஏக இறைவனிடமிருந்து வருபவையாகும். அவனுடைய வழிகாட்டுதல்களே அனைத்தையும் மிகைக்கக் கூடியதாகவும், அனைத்து தரப்பு மக்களையும் பாதுகாப்பு அளிப்பவையாகவும் உள்ளன என்பதை அறிந்து கொள்ளுங்கள்”.
قُلْ هُوَ نَبَؤٌا۟ عَظِيمٌ.
38:67. மேலும் அவர்களிடம், “நான் எடுத்துரைக்கும் இந்த எச்சரிக்கை செய்திகள் யாவும் உங்கள் வாழ்க்கைக்கு மிகவும் நன்மை பயப்பதாகவே இருக்கும்”
أَنتُمْ عَنْهُ مُعْرِضُونَ.
38:68. “இந்த அளவிற்கு தெளிவான முறையில் ஆதாரப்பூர்வமான உண்மை விஷயங்களை எடுத்துரைத்தும், அவற்றை நீங்கள் சிந்தித்து ஏற்றுக் கொள்வதற்குப் பதிலாக வெறும் கண்மூடித்தனமாகப் புறக்கணிக்கிறீர்களே!”
مَا كَانَ لِىَ مِنْ عِلْمٍۭ بِٱلْمَلَإِ ٱلْأَعْلَىٰٓ إِذْ يَخْتَصِمُونَ.
38:69. “ காலஞ்சென்ற நபிமார்களிடம் சமுதாயத் தலைவர்கள் தர்க்கித்த விஷயங்கள் எதுவும் இதற்கு முன் எனக்குத் தெரியவே தெரியாது. அவை எனக்கு வஹீ எனும் இறைவழிகாட்டுதல்கள் மூலமாகத் தான் கிடைத்தன. எனவே நானே அவற்றை எவ்வாறு சுயமாக இட்டுக்கட்டிக் கூற முடியும்?” என்று அவர்களிடம் கேளுங்கள்.
إِن يُوحَىٰٓ إِلَىَّ إِلَّآ أَنَّمَآ أَنَا۠ نَذِيرٌۭ مُّبِينٌ.
38:70. அந்த வரலாற்று உண்மைகளை எடுத்துக் கூறுவதன் நோக்கமே, முன்சென்ற சமுதாயங்களுக்கு ஏற்பட்ட அழிவுகளே உங்களுக்கும் ஏற்படும் என்பதை வெளிப்படையாக முன்னெச்சரிக்கை செய்வதே ஆகும். எனவே வரலாற்று நிகழ்வுகள் எனக்கு வஹீ எனும் இறைவழிகாட்டுதல்கள் மூலமாக அறிவிக்கப்பட்டதே அன்றி நானே சுயமாக இட்டுக்கட்டிக் கூறவில்லை.
ஆக உலக படைப்புகளில் மனிதன் மட்டும் ஏன் இறைவனின் அறிவுரைகளுக்கு கட்டுப்பட மறுக்கிறான்? இந்த பிரபஞ்சத்தில் மனிதனின் நிலை என்ன? மனிதனை குறித்து இறைவனின் செயல்திட்டம் என்ன? இது போன்ற கேள்விகளுக்கு “ஆதம்” என்ற தலைப்பில் ஏற்கனவே 2:30-39, 7:11-25, 15:28-44, 20:115-124 ஆகிய வாசகங்களில் விளக்கியாகி விட்டது. இதையே மீண்டும் இங்கு விளக்கப்படுகிறது.
அதாவது “ஆதம்” எனும் மனித இனம் ஒரு புறம் -
இறைச் செயல்திட்டத்தின்படி மனிதனுடைய கட்டளைக்கு கட்டுப்பட்டு செயல்படும் பிரபஞ்ச இயற்கை சக்திகள் ஒருபுறம் -
மனிதனை ஆட்டிப்படைக்கும் மனிதனுள் செயல்பட்டு வரும் ஷைத்தானிய குணங்கள் மறுபுறம் -
இவற்றிற்கு இடையில் இறைவனின் வழிகாட்டுதல்கள். இவற்றை நீங்கள் சரியாகப் புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக அவற்றை உரையாடல் வடிவில் தரப்படுகிறனவே அன்றி, இந்த சம்பவம் எங்கோ எப்போதோ நடந்ததாக எடுத்துக் கொள்ளக் கூடாது. (விளக்கத்திற்குப் பார்க்க 15:31)
إِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَٰٓئِكَةِ إِنِّى خَٰلِقٌۢ بَشَرًۭا مِّن طِينٍۢ.
38:71. ஓசைத்தரும் கருப்பான களிமண்ணைக் கொண்டு மனிதனை படைத்து (பார்க்க 15:26) அவனுக்கு இந்த பூமியை வழிநடத்திச் செல்லும் தகுதியுடையவனாக ஆக்குவது என்பது இறைவனின் செயல்திட்டமாகும். இதைப் பற்றி அறிந்த பிரபஞ்ச இயற்கை சக்திகளாகிய மலக்குகளுக்கு ஆச்சரியமாக இருந்தது (பார்க்க 2:30)
فَإِذَا سَوَّيْتُهُۥ وَنَفَخْتُ فِيهِ مِن رُّوحِى فَقَعُوا۟ لَهُۥ سَٰجِدِينَ.
38:72. அதன்படியே அல்லாஹ் (பார்க்க 32:5) மனிதனை படைத்து அவனை செவ்வைப்படுத்தி தன்னிடமிருந்து அவனுக்கு ‘ரூஹ்’ எனும் தனிச்சிறப்பு மிக்க ஆற்றலை அளித்தான். (பார்க்க 32:9) மனிதனுள் இந்த தனிச் சிறப்புடன் கூடிய ஆற்றல்கள் வளர ஆரம்பிக்கும் போது, பிரபஞ்ச இயற்கை சக்திகள் மனித கட்டளைக்குக் கட்டுப்பட வேண்டும் என்பது இறைவனின் செயல் திட்டமாகும்.
فَسَجَدَ ٱلْمَلَٰٓئِكَةُ كُلُّهُمْ أَجْمَعُونَ.
38:73. அதன்படியே பிரபஞ்ச இயற்கை சக்திகள் அனைத்தும் மனிதனுக்கு கட்டுப்பட்டு வருகின்றன.
إِلَّآ إِبْلِيسَ ٱسْتَكْبَرَ وَكَانَ مِنَ ٱلْكَٰفِرِينَ.
38:74. ஆனால் மனிதனுள் செயல்பட்டு வரும் இப்லீஸிய குணம் மனித கட்டளைக்கு அடிபணியவில்லை. அதுதான் அவனுள் இருக்கும் தற்பெருமை, ஆணவம் மற்றும் சுயநலம் எனும் இப்லீஸிய குணங்களாகும். எனவேதான் மனிதன் இறை நிராகரிப்பவனாக மாறி விடுகின்றான்.
அந்த தற்பெருமை எப்படி இருக்கும் என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள்.
قَالَ يَٰٓإِبْلِيسُ مَا مَنَعَكَ أَن تَسْجُدَ لِمَا خَلَقْتُ بِيَدَىَّ ۖ أَسْتَكْبَرْتَ أَمْ كُنتَ مِنَ ٱلْعَالِينَ.
38:75. “இப்லீஸே! நானே படைத்த மனிதனுக்கு கட்டுபட்டு நடக்க என் கட்டளை வந்தபோது, உன்னை தடுத்தது எது? நீ பெருமையடிக்கிறாயா? நீ அவனைவிட உயர்ந்தவனாக ஆகிவிட நினைக்கிறாயா?” என்று இறைவன் கேட்டான்.
அதாவது மனிதன் தற்பெருமை கொண்டவனாக இருக்கும் நிலையில், இறைவனின் கட்டளையையே ஏற்க மறுக்கிறான். அவன் அந்த அளவிற்கு தன்னை உயர்ந்தவனாக எண்ணிக் கொள்கிறான். ஆக அந்த இப்லீஸ் இறைவனுக்கு அளித்த பதிலையும் கவனியுங்கள்.
قَالَ أَنَا۠ خَيْرٌۭ مِّنْهُ ۖ خَلَقْتَنِى مِن نَّارٍۢ وَخَلَقْتَهُۥ مِن طِينٍۢ.
38:76. “நானே அவரைவிட மேலானவன். நீ என்னை நெருப்பிலிருந்து படைத்தாய். ஆனால் அவரையோ நீ களிமண்ணிலிருந்து படைத்தாய்” என்று இப்லீஸ் கூறினான்.
கவனித்தீர்களா? நான் உயர்ந்தவன் மற்றவன் தாழ்ந்தவன் என்ற ஆணவப்போக்கு மனிதனிடத்தில் இன்றைக்கும் காணப்படுகிறது. அதனால் தான் சமுதாயத்தில் எல்லா பிரச்சனைகளும் உருவாகின்றன. (பார்க்க 15:33) இறைவழிகாட்டுதலை எடுத்துரைக்கும் நபியையும் அத்தகையவர்கள் பொருட்படுத்துவதில்லை.
قَالَ فَٱخْرُجْ مِنْهَا فَإِنَّكَ رَجِيمٌۭ.
38:77. “அவ்வாறாயின் நீ இங்கிருந்து வெளியேறிவிடு. நிச்சயமாக நீ நம் அருட்கொடைகளை எல்லாம் இழந்து ஒதுக்கப்பட்டவனாக ஆகிவிட்டாய்”
وَإِنَّ عَلَيْكَ لَعْنَتِىٓ إِلَىٰ يَوْمِ ٱلدِّينِ.
38:78. “மேலும் நம் வழிகாட்டுதலின் அடிப்படையில் ஆட்சியமைப்பு ஏற்படும் வரையில், மனிதனிடத்தில் உன் ஆதிக்கம் செல்லும். அதன் பின் உனக்குக் கேடுதான்”
மனிதனிடத்தில் இருக்கும் இந்த ஆணவப் போக்கே, இறைவழிகாட்டுதலை ஏற்க தடுக்கிறது. இதனால் அவன் பிரபஞ்ச ஆய்வுகளை மேற்கொள்ளும் திறன்களை இழந்து எல்லாமே அல்லாஹ்வும் மலக்குகள் செய்து தருவார்கள் என்ற மூடநம்பிக்கையில் முழ்கி, (பார்க்க 2:210) எல்லா ஆற்றல்களையும் இழந்து நடை பிணமாக வாழ்வான். இதனால் மனிதனுக்கு கிடைத்திருந்த சுவனத்திற்கு ஒப்பான வாழ்வு பறிபோய் விடுகிறது.
قَالَ رَبِّ فَأَنظِرْنِىٓ إِلَىٰ يَوْمِ يُبْعَثُونَ.
38:79. “என் இறைவனே! இவ்வாறு நடை பிணங்களாக வாழும் இவர்களை, உன் வழிகாட்டுதல்களைப் பெற்று விழிப்புணர்ச்சி ஏற்படும் காலம் வரையில் என் ஆதிக்கம் செல்லுமாறு அவகாசம் தருவாயாக” என இப்லீஸ் கேட்டுக் கொண்டான்.
قَالَ فَإِنَّكَ مِنَ ٱلْمُنظَرِينَ.
38:80. “நிச்சயமாக நாம் உனக்கு அந்த வாய்ப்பை அளிக்கிறோம்.”
إِلَىٰ يَوْمِ ٱلْوَقْتِ ٱلْمَعْلُومِ.
38:81. “மக்களில் விழிப்புணர்வு ஏற்படும் காலம் வரையில், உன் ஆதிக்கம் நடைபெற்று வரும்.
இறைவழிகாட்டுதலின் மூலம் மனிதனுக்கு விழிப்புணர்ச்சி ஏற்படும்போது, ஷைத்தானிய குணங்கள் அவனைவிட்டு விலகிக்கொள்ளும்.
قَالَ فَبِعِزَّتِكَ لَأُغْوِيَنَّهُمْ أَجْمَعِينَ.
38:82. அதற்கு இப்லீஸ், “என் இறைவனே! என்னை நீ வழிகேட்டில் விட்டுவிட்டதால், நான் இவ்வுலகின் எல்லா வழிக்கேடான செயல்களையும் அவர்களுக்கு அழகாக தோன்றும்படி செய்து (பார்க்க 6:43), அவர்கள் அனைவரையும் வழிகெடுத்து வருவேன்” என்றான்.
கவனித்தீர்களா? மனிதனுள் செயல்பட்டு வரும் இந்த இப்லீஸயத் தன்மைதான், தாம் செய்யும் ஒவ்வொரு தவறான செயலும் அழகாகவும், மிகவும் சிறப்பாகவும் இருப்பதாக எண்ண வைக்கிறது. இறைவழிகாட்டுதலின் ஒளி இல்லாததால் அவனுக்கு இந்த நிலைமை ஏற்படுகிறது. இன்றைய உலகில் நிகழ்ந்து வரும் எல்லா கேடுகெட்ட செயல்களும் அழகாகத் தோன்றும்படி, அலங்காரங்களுடன் வலம் வந்து கொண்டிருக்கின்றன. தாம் செய்வது சரியா தவறா என்று அறிந்து கொள்வதற்கு மனிதன்முன் உள்ள ஒரே உரைகல் திருக்குர்ஆன் மட்டுமே.
إِلَّا عِبَادَكَ مِنْهُمُ ٱلْمُخْلَصِينَ.
38:83. மேலும் அந்த இப்லீஸ், “மனிதர்களில் உன் வழிகாட்டுதலைப் பின்பற்றி வரும் நல்லடியார்களைத் தவிர, மற்ற எல்லோரிடத்திலும் என் ஆதிக்கம் செல்லும் என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன்” என்றான்.
قَالَ فَٱلْحَقُّ وَٱلْحَقَّ أَقُولُ.
38:84. இதுதான் மனிதனைப் பற்றிய இறைவனின் செயல் திட்டமாகும். எனவே இதன் அடிப்படையில் தான் மனிதன் இன்றைக்கும் தம் மனம்போன போக்கில் வாழ்ந்து அழிவை சந்தித்துக் கொள்கின்றான். எனவேதான்
ஏற்கனவே 2:30-39இல் விளக்கமளித்தது போல இங்கும் ஒருமுறை விளக்கமளிக்கிறோம். அதாவது பிரபஞ்ச இயற்கை சத்திகளை ஆய்வு செய்யாத நாடுகளுக்கு எவ்வித முன்னேற்றமும் கிடைக்காது. அதுமட்டுமின்றி அந்நாட்டு மக்கள் எவ்வித உழைப்புமின்றி மூடநம்பிக்கையில் நடைபிணமாகத் தான் வாழ நேரிடும். எனவே தான் இந்த இறை வேதமான திருக்குர்ஆனில் அடிக்கடி பிரபஞ்ச படைப்புகளைப் பற்றி எடுத்துரைத்து மனித சிந்தனையைத் தூண்டுகிறது. எனவே மனிதன் இயற்கை சக்திகளை பயன்படுத்தி தனக்கு தேவையான அனைத்துப் பொருட்களையும் படைத்துக் கொள்ள வேண்டும் என்பது இறைவனின் அறிவுரையாகும்.
அதே சமயத்தில் அவற்றை ஆக்கப்பூர்வமான நோக்கத்திற்காக பயன்படுத்த வேண்டும் என்பதும் இறைவனின் கட்டளையாகும். மனிதன் இறைவனின் அறிவுரைப்படி நடக்காமல், தன் மனோ இச்சைப்படி செயல்பட்டால், இதே படைப்புகள் அவனுடைய அழிவிற்கு காரணிகளாக அமைந்து விம். எடுத்துக்காட்டாக அணுசக்தி ஆராய்ச்சியையே கூறலாம். அதை மனிதவள மேம்பாட்டிற்காகவும் பயன்படுத்தலாம். நாசகர விளைவுகளை ஏற்படுத்தும் அணு ஆயுதங்களை தயாரிக்கவும் பயன்படுத்தலாம். இதுவே இந்த அத்தியாயம் ஸ்வாத் என்ற எழுத்திற்கு நாம் கொடுத்துள்ள விளக்கமாகும்.
لَأَمْلَأَنَّ جَهَنَّمَ مِنكَ وَمِمَّن تَبِعَكَ مِنْهُمْ أَجْمَعِينَ.
38:85. இறைவனின் இத்திட்டத்தின்படி, மனோ இச்சையின்படி தவறான வழியில் செல்பவர்கள் அனைவரும் நரகம் எனும் பாழ்குழியில் விழுந்து அழிந்து போகிறார்கள். இதிலிருந்து அவர்களால் தப்பிக்கவே முடிவதில்லை.
قُلْ مَآ أَسْـَٔلُكُمْ عَلَيْهِ مِنْ أَجْرٍۢ وَمَآ أَنَا۠ مِنَ ٱلْمُتَكَلِّفِينَ.
38:86. ஆதமின் இந்த எடுத்துக்காட்டைக் கொண்டு உலகில் நடக்கின்ற பேருண்மையை விளக்கிடத் தான் நபிமார்கள் இறைவழிகாட்டுதலை எடுத்துரைத்தார்கள். அவ்வாறு அவர் எடுத்துரைப்பது மக்களின் நன்மைக்காத் தானே அன்றி தன் சுயலாபத்திற்காக அல்ல. மக்களை அழிவதிலிருந்து காப்பாற்றதான். மற்றபடி அவருக்கு எந்தக் கஷ்டமும் ஏற்படப் போவதில்லை.
إِنْ هُوَ إِلَّا ذِكْرٌۭ لِّلْعَٰلَمِينَ.
38:87. எனவேதான் இந்த குர்ஆனில் சொல்லப்பட்ட விஷயங்கள் யாவும் உலக மக்கள் அனைவருக்கும் நல்லுபதேசங்களாகவே உள்ளன. வீணான எந்த பேச்சிற்கும் இதில் இடமில்லை.
وَلَتَعْلَمُنَّ نَبَأَهُۥ بَعْدَ حِينٍۭ.
38:88. இந்த குர்ஆனின் அறிவுரைகளை ஏற்று நடந்தால் அதன் பலன்களை சிறிது காலத்திற்குப் பின் அறிந்து கொள்வீர்கள். அவற்றை ஏற்க மறுத்து வாழ்ந்தால் அதன் விளைவுகளை சிறிது காலத்திற்குப் பின் அறிந்து கொள்வீர்கள்.
இதுதான் நடந்த மற்றும் நடக்கவிருக்கின்றன உண்மைகளாகும்.