بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
37:0.அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் அறிவுரைப்படியே அனைத்துக் காரியங்களையும் செய்ய நாடுகிறேன். (பார்க்க 6:162)
وَٱلصَّٰٓفَّٰتِ صَفًّۭا.
37:1. இறைவனின் ஆட்சியமைப்பை கட்டிக்காத்து, அணிவகுத்து நிற்கும் செயல்வீரர்கள்;
فَٱلزَّٰجِرَٰتِ زَجْرًۭا.
37:2. அவர்களைக் கட்டுப்படுத்தும் பலம் வாய்ந்த தலைவர்கள்;
فَٱلتَّٰلِيَٰتِ ذِكْرًا.
37:3. இறைவழிகாட்டுதலை ஏற்றுக்கொண்ட பொது மக்கள்;
إِنَّ إِلَٰهَكُمْ لَوَٰحِدٌۭ.
37:4. ஆகிய இவர்கள் அனைவரும் ஒரே இலட்சியத்துடன் செயல்பட்டு, ஆட்சி அதிகாரம் அனைத்தும் ஏக இறைவனாகிய அல்லாஹ்வுக்கே என்பதற்கு சாட்சியாக இருக்கிறார்கள்.
رَّبُّ ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضِ وَمَا بَيْنَهُمَا وَرَبُّ ٱلْمَشَٰرِقِ.
37:5. அகிலங்கள் அனைத்திலும், பூமியிலும் உள்ளவையும், இவற்றிற்கிடையே உள்ள அனைத்தையும் படைத்து பரிபாலிக்கின்ற ஏக இறைவனின் அதிகாரத்திற்கு உட்பட்டே அவர்கள் செயல்படுகிறார்கள். அவற்றை பரிபாலிப்பதோடு மட்டுமின்றி மனிதனின் ஒளிமயமான வாழ்விற்காக வழிகாட்டுதலை காட்டியிருப்பதும் அந்த ஏக இறைவனே என்பதற்கு அவர்கள் சாட்சியாக இருக்கிறார்கள். (பார்க்க 70:40)
إِنَّا زَيَّنَّا ٱلسَّمَآءَ ٱلدُّنْيَا بِزِينَةٍ ٱلْكَوَاكِبِ.
37:6. ஓ மனிதனே! இரவில் வானத்தை ஜொலிக்க வைத்து, அழகுபடுத்தும் நட்சத்திரங்களை கவனித்தாயா? அவை யாவும் உனக்கு அருகாமையில் இருக்கும் வானத்தில் மின்னுபவை ஆகும்.
இப்படி வானங்களைக் கடந்து சென்றால் எத்தனையோ கோடான கோடி நட்சத்திரங்கள் இருக்கும் என்பதையும், அவற்றை படைப்பவனின் வல்லமை எந்த அளவிற்கு எல்லையற்றதாக இருக்கும் என்பதையும் சிந்தித்துப் பார்.
وَحِفْظًۭا مِّن كُلِّ شَيْطَٰنٍۢ مَّارِدٍۢ.
37:7. இத்தகைய வல்லமையுடைய இறைவனின் வழிகாட்டுதலின்படி இவ்வுலகில் ஆட்சி நடைபெறும் போது, சமுதாயத்தை வழிகெடுக்கும் விஷமிகளுக்கு இடமேது? அந்த ஆட்சியில் அத்தயைவர்களுக்கு அறவே இடமிருக்காது. (மேலும் பார்க்க 15:42)
உண்மை இவ்வாறிருக்கும் போது, மனித வாழ்வை அந்த நட்சத்திரங்கள் தாம் நிர்ணயிக்கின்றன என்று ஜோதிடர்கள் மக்களிடம் கூறி அவர்களை ஏமாற்றி பிழைக்கின்றனர். அந்த ஜோசியத்தை வான சாஸ்திரம் என்றும் சொல்லிக் கொள்கிறார்கள்.
لَّا يَسَّمَّعُونَ إِلَى ٱلْمَلَإِ ٱلْأَعْلَىٰ وَيُقْذَفُونَ مِن كُلِّ جَانِبٍۢ.
37:8. ஆனால் அவர்களால் அப்படி எதுவுமே வானுலக விஷயங்களை ஒருபோதும் கேட்டு தெரிந்துகொள்ள முடியாது. மாறாக அவர்கள் மக்களிடம் அவ்வாறு கூறி, அவர்களை திசை திருப்பவே செய்கிறார்கள். காரணம் வானுலக செயல்திட்டங்களைப் பற்றி தாமே அறிந்து கொள்ளும் வல்லமை அவர்களுக்கு ஒருபோதும் இருந்ததில்லை. அங்கு செல்வதற்கான வழிகளும் அவர்களிடம் இருந்ததிலை. (மேலும் பார்க்க 15:18, 26:212, 67:5, 72:8-9)
دُحُورًۭا ۖ وَلَهُمْ عَذَابٌۭ وَاصِبٌ.
37:9. இத்தகைய சமூக விஷமிகள் இஸ்லாமிய ஆட்சியமைப்பில் துரத்தப்படுவார்கள். மேலும் அவர்களுக்கு தாளா வேதனைகள் தாம் கிடைக்கும்.
إِلَّا مَنْ خَطِفَ ٱلْخَطْفَةَ فَأَتْبَعَهُۥ شِهَابٌۭ ثَاقِبٌۭ.
37:10. ஆனால் மனோ இச்சை எனும் ஷைத்தானை பின்பற்றுபவர்களின் வாழ்வில் நிகழும் சில விஷயங்களில் ஜோதிடர்களின் கணிப்புகள் சரியாக இருக்கலாம். அதில் மூடநம்பிக்கை வைப்பவர்கள் அவற்றை பின்பற்றுவார்கள். ஆனால் இத்தகையவர்களின் வாழ்வில் வேதனைகள் என்ற தீப்பந்தங்கள் தாம் பின்தொடரும்.
فَٱسْتَفْتِهِمْ أَهُمْ أَشَدُّ خَلْقًا أَم مَّنْ خَلَقْنَآ ۚ إِنَّا خَلَقْنَٰهُم مِّن طِينٍۢ لَّازِبٍۭ.
37:11. ஜோதிடர்களின் கணிப்புப் படி உள்ள நட்சத்திரங்கள் வலிமை மிக்கதா அல்லது அந்த நட்சத்திரங்களை படைத்த இறைவன் வலிமை மிக்கவனா? மனிதனை பிசுபிசுப்பான களிமண்ணால் படைத்ததே அந்த ஏக இறைவன் தானே? மனிதனை அந்த நட்சத்திரங்களா படைத்தன?
بَلْ عَجِبْتَ وَيَسْخَرُونَ.
37:12. நபியே! இறைவனின் படைப்புகளைப் பற்றி எண்ணி நீர் ஆச்சரியத்தில் மூழ்கிவிடுகிறீர். ஆனால் அந்த ஜோதிடர்களுக்கோ அவை விளையாட்டாகப் போயிற்று.
எனவே மனிதனின் எதிர் காலத்தை நிர்ணியிக்கும் நம் வழிகாட்டுதல்கள் வலிமை மிக்கதா அல்லது ஜோதிடர்களின் கணிப்புகளா?
وَإِذَا ذُكِّرُوا۟ لَا يَذْكُرُونَ.
37:13. மனிதனுக்கு இது விஷயமாக பலமுறை அறிவுரைகளை செய்து வந்த போதும், அவன் அவற்றை நினைவில் கொண்டு செயலாற்றுவதில்லை.
وَإِذَا رَأَوْا۟ ءَايَةًۭ يَسْتَسْخِرُونَ.
37:14. இப்போதும் இந்த குர்ஆனின் அறிவிப்பை அவர்களிடம் எடுத்துக் கூறினால், அதை பரிகசிக்கவே அவர்கள் ஒன்று கூடிவிடுகிறார்கள்.
وَقَالُوٓا۟ إِنْ هَٰذَآ إِلَّا سِحْرٌۭ مُّبِينٌ.
37:15. இது மக்களை வசியப்படுத்தும் ஏமாற்று வித்தைகளே என்று தங்களுக்குள் பேசிக் கொள்கின்றனர்.
மரணத்திற்குப் பின்பும் மனித வாழ்க்கை தொடர்கிறது என்று அவர்களிடம் சொன்னால் அவற்றை அவர்கள் நம்பத் தயாராக இல்லை. எனவே
أَءِذَا مِتْنَا وَكُنَّا تُرَابًۭا وَعِظَٰمًا أَءِنَّا لَمَبْعُوثُونَ.
37:16.“நாங்கள் இறந்த பின் மண்ணோடு மண்ணாகி மக்கிப்போன எலும்புகூடுகளாக ஆகிவிடுகிறோம். உண்மை இவ்வாறிருக்கும் போது, நாங்கள் எப்படி மீண்டும் உயிர் பெற்று எழுப்பப்படுவோம்?” என்று கேட்கிறார்கள்.
أَوَءَابَآؤُنَا ٱلْأَوَّلُونَ.
37:17.“அதுபோன்றே எங்களுடைய முன்னோர்களும் எழுப்பப்படுவார்களா?” என்றும் கேலியாகக் கேட்கிறார்கள்.
قُلْ نَعَمْ وَأَنتُمْ دَٰخِرُونَ.
37:18.“அவ்வாறே நடக்கும்” என்று அவர்களிடம் சொல்லி விடுங்கள். “உங்களுடைய தீய செயல்களின் விளைவாக அங்கு சிறுமை அடைந்தவர்களாக எழுப்பப்படுவீர்கள்” என்பதையும் அறிவித்து விடுங்கள்.
ஆனால் மனித செயல்களின் விளைவுகளை அறிந்து கொள்ள, மரணம் ஏற்படும் வரையில் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. அவர்களுடைய வாழ்விலேயே சிலவற்றை கண்டு கொள்வார்கள். இங்கு ஏற்படவிருக்கும் நல்லாட்சிக்கு எதிராக செயல்படுகிறீர்களே!
فَإِنَّمَا هِىَ زَجْرَةٌۭ وَٰحِدَةٌۭ فَإِذَا هُمْ يَنظُرُونَ.
37:19. உங்களுக்கு எதிராக ஒரே ஒரு அபாய சங்கொலியே போதுமே! நீங்கள் அனைவரும் திடுக்கிட்டுப் போய்விடுவீர்களே!
وَقَالُوا۟ يَٰوَيْلَنَا هَٰذَا يَوْمُ ٱلدِّينِ.
37:20. அவ்வேளையில் நீங்கள், “அடப்பாவமே! எங்களுடைய நிலைமை இந்த அளவிற்கு மோசமாகி விட்டதே” என்று தான் புலம்பிக் கொண்டிருப்பீர்கள்.
هَٰذَا يَوْمُ ٱلْفَصْلِ ٱلَّذِى كُنتُم بِهِۦ تُكَذِّبُونَ.
37:21. “நீங்கள் எது நடக்காது என்று சொல்லிக் கொண்டிருந்தீர்களோ, உங்களுடைய செயல்களின் விளைவுகளை அறுவடை செய்யும் கால கட்டம் இது தான்” என்று அவர்களின் நிலைமை அறிவிக்கும்.
۞ ٱحْشُرُوا۟ ٱلَّذِينَ ظَلَمُوا۟ وَأَزْوَٰجَهُمْ وَمَا كَانُوا۟ يَعْبُدُونَ.
37:22. அப்போது அநியாய செயல்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்தோரும், அவர்களுக்கு துணை நின்ற தலைவர்களும் ஒன்று திரள்வார்கள்.
مِن دُونِ ٱللَّهِ فَٱهْدُوهُمْ إِلَىٰ صِرَٰطِ ٱلْجَحِيمِ.
37:23. அல்லாஹ்வின் வழிகாட்டுதலை விட்டுவிட்டு தவறான வழியில் சென்றவர்கள், நரகத்தின் பக்கம் கொண்டு செல்லப்படுவார்கள்.
وَقِفُوهُمْ ۖ إِنَّهُم مَّسْـُٔولُونَ.
37:24. “அதற்குமுன் அவர்களை சற்று நிறுத்தி வையுங்கள். அவர்களிடம் சில கேள்விகளைக் கேட்க வேண்டியுள்ளது” என்று கூறப்படும்.
مَا لَكُمْ لَا تَنَاصَرُونَ.
37:25. “இப்போது உங்களுக்கு என்ன நேர்ந்து விட்டது? நீங்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொண்டிருந்தீர்களே! இப்போது மட்டும் உங்களால் ஏன் அப்படி உதவி செய்துக் கொள்ள முடியவில்லை?” என்று கேட்கப்படும்.
بَلْ هُمُ ٱلْيَوْمَ مُسْتَسْلِمُونَ.
37:26. இந்த கேள்விக்கு அவர்களால் பதிலேதும் சொல்ல இயலாமல் தலைகுனிந்து நிற்பார்கள்.
وَأَقْبَلَ بَعْضُهُمْ عَلَىٰ بَعْضٍۢ يَتَسَآءَلُونَ.
37:27. வழிகெட்டவர்களுக்கும் வழிகெடுத்தவர்களுக்கும் இடையே காரசாரமான கேள்விகளும் தர்க்கங்களும் நடைபெறும்.
قَالُوٓا۟ إِنَّكُمْ كُنتُمْ تَأْتُونَنَا عَنِ ٱلْيَمِينِ.
37:28. வழிகெட்டவர்கள் தம் தலைவர்களை நோக்கி, “நீங்கள் தாம் உங்களிடமிருந்த பலத்தைப் பயன்படுத்தி எங்களை நேர்வழி பெறாதவாறு தடுத்து வந்தீர்கள்” என்று குற்றம் சுமத்துவார்கள்.
قَالُوا۟ بَل لَّمْ تَكُونُوا۟ مُؤْمِنِينَ.
37:29. இதைக் கேட்கும் அவர்கள், “அப்படியல்ல. நீங்கள் தாம் இறைவழிகாட்டுதலை ஏற்க முன்வரவில்லை. எனவே நாங்கள் உங்களுக்கு உதவி செய்தோம். அவ்வளவு தான்” என்று பதில் அளித்து விடுவார்கள். (மேலும் பார்க்க 14:22)
وَمَا كَانَ لَنَا عَلَيْكُم مِّن سُلْطَٰنٍۭ ۖ بَلْ كُنتُمْ قَوْمًۭا طَٰغِينَ.
37:30. “உங்கள் மீது எங்களுக்கு எந்த அதிகாரமும் இருந்ததில்லை. நீங்கள்தாம் வரம்பு மீறின பாவச் செயல்களை செய்யும் கூட்டத்தாராக இருந்தீர்கள்” என்றும் அவர்களிடம் சொல்லி விடுவார்கள்.
فَحَقَّ عَلَيْنَا قَوْلُ رَبِّنَآ ۖ إِنَّا لَذَآئِقُونَ.
37:31. “எனவே பாவச் செயல்களை செய்வோருக்கு தண்டனை நிச்சயம் உண்டு என்ற எங்கள் இறைவனுடைய வாக்கு எங்கள் மீது உண்மையாகி விட்டதே!”
فَأَغْوَيْنَٰكُمْ إِنَّا كُنَّا غَٰوِينَ.
37:32. “நாங்கள் உங்களை வழிகெடுத்ததோடு நாங்களும் வழிகெட்டுத் தான் இருந்தோமே!”
فَإِنَّهُمْ يَوْمَئِذٍۢ فِى ٱلْعَذَابِ مُشْتَرِكُونَ.
37:33. ஆகவே இந்நாளில் வேதனைகளை அனுபவிப்பதில் கூட்டாளிகளாக இருக்க வேண்டியுள்ளதே என்றும் கதறும் காலக் கட்டமாக இருக்கும்.
إِنَّا كَذَٰلِكَ نَفْعَلُ بِٱلْمُجْرِمِينَ.
37:34. சிந்தனையாளர்களே! பாவச் செயலை செய்ய தூண்டுவோருக்கு இறைவன் புறத்திலிருந்து கிடைக்கும் தண்டனைகளும், பாவிகளின் நிலைமையும் இப்படியாகத்தான் இருக்கும் என்பதை அறிந்துகொள்ளுங்கள்.
إِنَّهُمْ كَانُوٓا۟ إِذَا قِيلَ لَهُمْ لَآ إِلَٰهَ إِلَّا ٱللَّهُ يَسْتَكْبِرُونَ.
37:35. கராணம் அவர்களுக்கு அல்லாஹ்வின் வழிகாட்டுதலுக்கு மட்டும் அடிபணிந்து செயல்படும்படி அறிவுறுத்திய போது, ஆணவத்தோடு அவற்றை நிராகரித்து விட்டார்கள்.
وَيَقُولُونَ أَئِنَّا لَتَارِكُوٓا۟ ءَالِهَتِنَا لِشَاعِرٍۢ مَّجْنُونٍۭ.
37:36. இவ்வாறு அறிவுறுத்தி வந்தவரைப் பற்றி அவர்கள், “திரும்ப திரும்ப ஒரே விஷயத்தைப் பற்றியே உளறிக் கொண்டிருப்பவரின் பேச்சை கேட்டு, காலம் காலமாக வழிபட்டு வரும் தெய்வங்களை விட்டுவிட முடியுமா?” என்று கேட்டு வந்தார்கள்.
அப்படி அந்த இறைத்தூதர் சொன்ன விஷயம்தான் என்ன?
بَلْ جَآءَ بِٱلْحَقِّ وَصَدَّقَ ٱلْمُرْسَلِينَ.
37:37. இதுவரையில் நடந்துவந்த மற்றும் இனி நடக்கிவிருக்கின்ற உண்மை விஷயங்களை மட்டுமே, தான் எடுத்துரைப்பதாக அவர்களிடம் கூறி வந்தார்.
إِنَّكُمْ لَذَآئِقُوا۟ ٱلْعَذَابِ ٱلْأَلِيمِ.
37:38. அதன்படி உங்களுடைய தவறான செயல்களால் ஏற்படவிருக்கும் நோவினைத் தரும் வேதனைகளை அனுபவிக்க வேண்டி வரும் என்று தான் அவர் முன்னெச்சரிக்கை செய்து வந்தார்.
وَمَا تُجْزَوْنَ إِلَّا مَا كُنتُمْ تَعْمَلُونَ.
37:39. ஏனெனில் நீங்கள் செய்து வரும் நற்செயல்களுக்கு ஏற்ப நற்பலன்களும் தீய செயல்களுக்கு ஏற்ப தீய விளைவுகளும் தான் ஏற்படும் என்பதை அவர் விளக்கி வந்தார்.
இதை அவர்கள் உளறல்கள் என்பார்களா? மேலும் நடக்கவிருக்கும் உண்மை என்னவென்பதையும் அறிந்து கொள்ளுங்கள்.
إِلَّا عِبَادَ ٱللَّهِ ٱلْمُخْلَصِينَ.
37:40. அல்லாஹ்வின் அறிவுரைகளுக்கு முற்றிலும் அடிபணிந்து செயல்படுபவர்களுக்கு நற்செய்தி உண்டு.
أُو۟لَٰٓئِكَ لَهُمْ رِزْقٌۭ مَّعْلُومٌۭ.
37:41. அவர்களுக்காக சிறப்பான வாழ்க்கை வசதிகள் நிச்சயமாக கிடைக்கும். உண்ண உணவும், உடுத்த உடையும், வசிக்க அழகிய இல்லங்களும் கிடைக்கும். இது அவர்களுக்கும் தெரியும்.
فَوَٰكِهُ ۖ وَهُم مُّكْرَمُونَ.
37:42. அதுமட்டுமின்றி தாராள பொருளாதார வசதிகளை குறிக்கும் வகையில் அவர்களுக்கு கனி வகைகளும் கண்ணியம் மிக்க வாழ்வும் கிடைக்கும்.
فِى جَنَّٰتِ ٱلنَّعِيمِ.
37:43. இப்படியாக அவர்கள் வாழும் சமுதாயம் சுவனத்திற்கு ஒப்பானதாக மாறிவரும். அவர்கள் அங்கு மன நிறைவோடு சந்தோஷமாகவும் பாதுகாப்பாகவும் இருப்பார்கள்.
عَلَىٰ سُرُرٍۢ مُّتَقَٰبِلِينَ.
37:44. அவர்களுக்கு உயர் அந்தஸ்தும் கிடைக்கும். அதை குறிக்கும் வகையில் அவர்கள் சாய்வு நாற்காலிகளில் அமர்ந்த வண்ணம் பணியாற்றி வருவார்கள்.
يُطَافُ عَلَيْهِم بِكَأْسٍۢ مِّن مَّعِينٍۭ.
37:45. அவர்கள் எவ்வித சிரமும் இன்றி இன்புற்று வாழ குளிர் பானங்கள் கைக்கு எட்டிய தூரத்தில் இருக்கும்.
بَيْضَآءَ لَذَّةٍۢ لِّلشَّٰرِبِينَ.
37:46. அந்த குளிர் பானங்கள் மாசற்ற தன்மையுடையதாய் (Hygenicகாக) இருக்கும். மேலும் அவை குடிப்பதற்கு மிகவும் சுவை மிக்கதாகவும் இருக்கும்.
لَا فِيهَا غَوْلٌۭ وَلَا هُمْ عَنْهَا يُنزَفُونَ.
37:47. அது புத்தியை தடுமாற வைக்கும் மதுவாகவோ உடல் நலத்தை கெடுக்கும் பானமாகவோ ஒருபோதும் இராது.
وَعِندَهُمْ قَٰصِرَٰتُ ٱلطَّرْفِ عِينٌۭ.
37:48. மேலும் மிகவும் அடக்கத்துடனும் இனிய பார்வைகளுடனும் பேசும் பெண்களும் அவர்களோடு பணியாற்றி வருவார்கள்.
كَأَنَّهُنَّ بَيْضٌۭ مَّكْنُونٌۭ.
37:49. சிற்பிக்குள் முத்துக்கள் எவ்வாறு தூய்மையாக இருக்கின்றனவோ அவ்வாறே அப்பெண்களும் பரிசுத்தமானவர்களாக இருப்பார்கள்.
فَأَقْبَلَ بَعْضُهُمْ عَلَىٰ بَعْضٍۢ يَتَسَآءَلُونَ.
37:50. சுவன வாசிகள் பேசிக்கொள்ளும் விஷயங்கள் எவ்வாறு இருக்கும் என்பதையும் தெரிந்துகொள்ளுங்கள்.
قَالَ قَآئِلٌۭ مِّنْهُمْ إِنِّى كَانَ لِى قَرِينٌۭ.
37:51. என் வாழ்வில் உற்ற நண்பன் ஒருவர் இருந்தார் என்று ஒருவர் கூற,
يَقُولُ أَءِنَّكَ لَمِنَ ٱلْمُصَدِّقِينَ.
37:52. இதைக் கேட்கும் மற்றவர் அவரை நோக்கி, “செத்து மடிந்து கிடக்கும் எங்களுக்கு மறுவாழ்வு கிடைப்பது உறுதி என இறைத்தூதர் சொன்ன பேச்சைக் கேட்டு செயல்பட்டவர்களில் நீரும் ஒருவரா?” என்று கேட்பார்.
இவைதான் சுவர்க்கத்தில் இருப்பவர்களின் சந்தோஷங்களும் வாழ்க்கைத் தரமும் ஆகும். மாறாக இறைவழிகாட்டுதலை ஏற்க மனம் ஒவ்வாதவர்களின் நிலை என்னவென்பதையும் தெரிந்துகொள்ளும்.
أَءِذَا مِتْنَا وَكُنَّا تُرَابًۭا وَعِظَٰمًا أَءِنَّا لَمَدِينُونَ.
37:53. அதாவது செத்து மடிந்து, மண்ணோடு மண்ணாகி, வெறும் எலும்புகூடுகளாக ஆகிவிட்டபின், நாங்கள் மீண்டும் எழுப்பப்பட்டு எங்கள் செயல்களுக்கு தக்க கூலி கொடுக்கப்படுமா என்று ஏளனமாக கேட்டவனின் நிலை என்னவென்பதையும் தெரிந்து கொள்ளுங்கள்.
قَالَ هَلْ أَنتُم مُّطَّلِعُونَ.
37:54. “அத்தகையவர்களை நீங்கள் பார்க்க விரும்புகிறீர்களா?” என்று சுவனவாசிகளிடம் கேட்கப்படும்.
فَٱطَّلَعَ فَرَءَاهُ فِى سَوَآءِ ٱلْجَحِيمِ.
37:55. அப்படியென்றால் அவர்களை நரகத்தின் நடுவேதான் பார்க்க முடியும்.
قَالَ تَٱللَّهِ إِن كِدتَّ لَتُرْدِينِ.
37:56. நரக வேதனைகளை அனுபவிப்பவனைப் பார்த்து, “நீ என்னையும் வழிகெடுத்து அழித்துவிட முற்பட்டாயே! இதற்கு அல்லாஹ்வே சாட்சியாவான்” என்பார்.
وَلَوْلَا نِعْمَةُ رَبِّى لَكُنتُ مِنَ ٱلْمُحْضَرِينَ.
37:57. “அல்லாஹ்வின் வழிகாட்டுதல் என்ற அருட்கொடைகளை பின்பற்றாமல் இருந்திருந்தால் நானும் உன்னைப் போன்று நரகத்தில் தான் சிக்கியிருப்பேன்” என்பார்.
أَفَمَا نَحْنُ بِمَيِّتِينَ.
37:58. சுவனவாசிகள் மற்றும் நரகவாசிகளின் மனதில் மீண்டும் நாம் இறந்து விடுவோமா என்ற கேள்வி எழும்.
إِلَّا مَوْتَتَنَا ٱلْأُولَىٰ وَمَا نَحْنُ بِمُعَذَّبِينَ.
37:59. இதற்குமுன் ஏற்பட்ட மரணத்தைத் தவிர மற்றொருமுறையும் மரணம் ஏற்படாது என்று அவர்களுக்கு பதிலளிக்கப்படும். எனவே அந்த சுவனவாசிகள் வேதனைகளுக்கு அஞ்ச வேண்டி இருக்காது.
إِنَّ هَٰذَا لَهُوَ ٱلْفَوْزُ ٱلْعَظِيمُ.
37:60. இது அவர்களுக்கு கிடைக்கும் மகத்தான வெற்றியாகும் அல்லவா?
لِمِثْلِ هَٰذَا فَلْيَعْمَلِ ٱلْعَٰمِلُونَ.
37:61. எனவே உழைப்பவர்கள் இத்தகைய சிறந்த சமூக அமைப்பை உருவாக்குவதற்காகவே உழைக்கட்டும்.
أَذَٰلِكَ خَيْرٌۭ نُّزُلًا أَمْ شَجَرَةُ ٱلزَّقُّومِ.
37:62. இத்தகைய சந்தோஷமான வாழ்வை பெறுவது சிறப்பா? அல்லது ஜக்கூம் எனும் கள்ளி மரத்தின் கனியை சுவைப்பது போன்ற துயரம் மிக்க வாழ்வை பெறுவது சிறப்பா என்பதை சிந்தித்துப் பார்க்கட்டும்.
إِنَّا جَعَلْنَٰهَا فِتْنَةًۭ لِّلظَّٰلِمِينَ.
37:63. கசப்பையும் வெறுப்பையும் அளிக்கும் ஜக்கூம் என்னும் கள்ளி மரங்கள் அநியாயக்கார சமூகத்தாருக்காகவே சித்தப் படுத்தப்பட்டுள்ளது. அத்தகைய வாழ்வு அவர்களுக்கு பெரும் சோதனையாகவே இருக்கும்.
அதாவது அனைத்து தரப்பு மக்களையும் சிறப்பாக வாழ வைத்து, தாமும் சிறப்பாக கண்ணியத்துடன் வாழ்வது சிறப்பா அல்லது ஊராரின் பணத்தைக் கையாடல் செய்து அனைவரின் சாபத்திற்கும் கோபத்திற்கும் ஆளாகி கேவலமான வாழ்வை வாழ்வது சிறப்பா என்பதைப் பற்றி யோசித்து அதன்படி செயல்படட்டும்.
إِنَّهَا شَجَرَةٌۭ تَخْرُجُ فِىٓ أَصْلِ ٱلْجَحِيمِ.
37:64. மெய்யாகவே அந்த கள்ளி மரங்கள் அடித்தளத்தில் வளரக் கூடிய மரமாகும். அதாவது நரக வேதனைகளை அனுபவிக்க உருவாக்கப்பட்ட மரங்களாகும்.
طَلْعُهَا كَأَنَّهُۥ رُءُوسُ ٱلشَّيَٰطِينِ.
37:65. அவற்றின் தாளைகள் பாம்பு தலை விரித்தாடுவது போன்று இருக்கும்.
فَإِنَّهُمْ لَءَاكِلُونَ مِنْهَا فَمَالِـُٔونَ مِنْهَا ٱلْبُطُونَ.
37:66. நரகவாசிகள் அதைக் கொண்டே புசித்து தம் வயிறுகளை நிரப்பிக் கொள்ள நேரிடும்.
ثُمَّ إِنَّ لَهُمْ عَلَيْهَا لَشَوْبًۭا مِّنْ حَمِيمٍۢ.
37:67. மேலும் அவர்களுக்கு குடிக்க கொதிக்கும் நீர் தான் கிடைக்கும்.
ثُمَّ إِنَّ مَرْجِعَهُمْ لَإِلَى ٱلْجَحِيمِ.
37:68. இப்படியாக அவர்கள் தங்குமிடம் நரகமாகத் தான் இருக்கும். காரணம்
إِنَّهُمْ أَلْفَوْا۟ ءَابَآءَهُمْ ضَآلِّينَ.
37:69. தங்கள் மூதாதையர்கள் வழிகேட்டில் இருந்தார்கள் என்பதை அறிந்தும், அவர்கள்
فَهُمْ عَلَىٰٓ ءَاثَٰرِهِمْ يُهْرَعُونَ.
37:70. பழக்கத் தோஷத்தால் அவர்களையே கண் மூடித்தனமாக பின்பற்றி வந்தார்கள்.
وَلَقَدْ ضَلَّ قَبْلَهُمْ أَكْثَرُ ٱلْأَوَّلِينَ.
37:71. அதுமட்டுமின்றி பண்டைய காலத்தில் வாழ்ந்த பெரும்பாலான வழிகேடர்களையும் அவர்கள் பின்பற்றி வந்தார்கள்.
وَلَقَدْ أَرْسَلْنَا فِيهِم مُّنذِرِينَ.
37:72. இதைப் பற்றி எடுத்துரைத்து முன்னெச்சரிக்கை செய்யக் கூடிய இறைத் தூதர்கள் இறைவன் புறத்திலிருந்து வந்தே இருக்கிறார்கள்.
فَٱنظُرْ كَيْفَ كَانَ عَٰقِبَةُ ٱلْمُنذَرِينَ.
37:73. மனித வரலாற்றின் ஏட்டை புரட்டிப் பாருங்கள். முன் எச்சரிக்கைகளை நிராகரித்தவர்களின் முடிவு என்னவாயிற்று என்பதை எண்ணிப் பார்க்க சொல்லுங்கள்.
إِلَّا عِبَادَ ٱللَّهِ ٱلْمُخْلَصِينَ.
37:74. ஆனால் சமுதாய மக்களுள் இறைவழிகாட்டுதலை ஏற்று, சிறப்பாக பணியாற்றியவர்கள் அத்தகைய நரக வேதனைகளிலிருந்து தப்பித்தும் இருக்கிறார்கள்.
وَلَقَدْ نَادَىٰنَا نُوحٌۭ فَلَنِعْمَ ٱلْمُجِيبُونَ.
37:75. வரலாற்றின் தொடரில் நூஹ் நபியின் சமுதாயத்தைப் பற்றி கூறாமல் இருக்க முடியாது. அவருடைய சமூகத்தவர்கள் அவரை பல வகையில் துன்புறுத்தி வந்தனர். அவர்களிலிருந்து காப்பாற்ற இறைவனிடம் பிராத்தித்தார். அவருடைய பிரார்த்தனைக்கு இறைவன் அழகிய முறையில் பதிலளித்தான். (பார்க்க 11:36-37)
وَنَجَّيْنَٰهُ وَأَهْلَهُۥ مِنَ ٱلْكَرْبِ ٱلْعَظِيمِ.
37:76. அவரையும் அவரைப் பின்பற்றி வந்தவர்களையும் அவர்களிடமிருந்து இறைவன் காப்பாற்றினான்.
وَجَعَلْنَا ذُرِّيَّتَهُۥ هُمُ ٱلْبَاقِينَ.
37:77. மேலும் அவர்களுடைய சந்ததியரை பாதுகாப்பான இடத்தில் குடியமர வழி செய்தான்.
وَتَرَكْنَا عَلَيْهِ فِى ٱلْءَاخِرِينَ.
37:78. மேலும் அவரை நிராகரித்து பிரளயத்தில் மூழ்கி அழிந்து போன வரலாறு பிற்காலத்தில் வரக்கூடிய மக்களுக்கு படிப்பினையாக ஆக்கி வைத்தான். (பார்க்க 29:14)
سَلَٰمٌ عَلَىٰ نُوحٍۢ فِى ٱلْعَٰلَمِينَ.
37:79. ஆக அவரைப் பின்பற்றி வந்த மக்களுக்கும் எல்லா பாக்கியங்களும் பெற்று சாந்தியுடனும் சந்தோஷங்களுடனும் வாழந்து வந்தார்கள்.
إِنَّا كَذَٰلِكَ نَجْزِى ٱلْمُحْسِنِينَ.
37:80. இப்படிப்பட்ட நல்வாழ்வு நூஹ்வுக்கும் அவருடைய சமுதாயத்திற்கு மட்டும் கிடைத்ததாக எண்ணிக் கொள்ளாதீர்கள். யாரெல்லாம் இறைவழிகாட்டுதலை ஏற்று சிறப்பாக உழைக்கிறார்களோ, அவர்கள் அனைவருக்கும் இத்தகைய சிறப்பான வாழ்வு கிடைக்கும்.
إِنَّهُۥ مِنْ عِبَادِنَا ٱلْمُؤْمِنِينَ.
37:81. நிச்சயமாக நூஹ்வும் அவரைப் பின்பற்றி வந்தவர்களும் அல்லாஹ்வின் வழிகாட்டுதலுக்கு முற்றிலும் அடிபணிந்து வாழ்ந்த செயல்வீரர்களாக இருந்தார்கள்.
ثُمَّ أَغْرَقْنَا ٱلْءَاخَرِينَ.
37:82. இவர்களைத் தவிர்த்து மற்றவர்கள் அங்கு ஏற்பட்ட பிரளயத்தில் மூழ்கிப் போனார்கள்.
۞ وَإِنَّ مِن شِيعَتِهِۦ لَإِبْرَٰهِيمَ.
37:83. அதே போன்று இப்ராஹீம் நபியின் வாழ்க்கை வரலாறும் முக்கியம் வாய்ந்ததாகும். அவரும் நூஹ் நபியைப் போல் இறைக்கட்டளைக்கு முற்றிலும் அடிபணிந்து வாழ்பவராக இருந்தார்.
إِذْ جَآءَ رَبَّهُۥ بِقَلْبٍۢ سَلِيمٍ.
37:84. அவர் பரிசுத்த உள்ளத்துடன் இறைவழிகாட்டுதலைப் பின்பற்ற முன்வந்தார்.
إِذْ قَالَ لِأَبِيهِ وَقَوْمِهِۦ مَاذَا تَعْبُدُونَ.
37:85. எனவே அவர் தம் தந்தையிடமும் அவருடைய சமூகத்தாரிடமும், அவர்கள் வணங்கி வரும் தெய்வ வழிபாட்டின் உண்மை நிலையைப் பற்றி விசாரித்து வந்தார்.
أَئِفْكًا ءَالِهَةًۭ دُونَ ٱللَّهِ تُرِيدُونَ.
37:86. அவர்களுடைய பதிலில் உண்மை எதுவும் இருப்பதாக அவருக்கு புலப்படவில்லை. எனவே அவர்,“அல்லாஹ்வின் வழிகாட்டுதலை விட்டுவிட்டு கற்பனை தெய்வங்களை ஏற்படுத்திக் கொண்டு அவற்றை வழிபட விரும்புகிறீர்களே. அது மட்டுமின்றி இறைவனின் படைப்புகளையும் இறைவனாக பாவித்து அவற்றை வணங்கி வருகிறீர்களே. இது சரியா?” என்று தர்க்கித்து வந்தார்.(பார்க்க 6:76-80)
فَمَا ظَنُّكُم بِرَبِّ ٱلْعَٰلَمِينَ.
37:87. “நீங்கள் வழிபடுவது உண்மை என்றால் அகிலங்கள் அனைத்தையும் படைத்து பரிபாலிக்கும் உங்கள் இறைவனைப் பற்றி உங்களுடைய எண்ணம் தான் என்ன?” என்று வினவினார்.
فَنَظَرَ نَظْرَةًۭ فِى ٱلنُّجُومِ.
37:88. மேலும் அவர்கள் வழிபட்டு வரும் நட்சத்திரங்களைப் பற்றி ஆய்வு செய்து, அவை ஒருபோதும் இறைவனாக இருக்கவே முடியாது என்றார். (பார்க்க6:76)
فَقَالَ إِنِّى سَقِيمٌۭ.
37:89. அந்த நட்சத்திரங்களுக்கும் மனித வாழ்க்கைக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லாததை கண்ட அவர், அவற்றை வணங்கி வருவது பற்றி மிகவும் வெறுப்பு அடைந்துள்ளதாக கூறினார். (பார்க்க 60:4)
فَتَوَلَّوْا۟ عَنْهُ مُدْبِرِينَ.
37:90. இதை கேட்ட அச்சமூகத்தினரால் எந்த பதிலையும் அளிக்க முடியவில்லை. எனவே அவர்கள் அவரை விட்டு விலகிக் கொண்டனர்.
فَرَاغَ إِلَىٰٓ ءَالِهَتِهِمْ فَقَالَ أَلَا تَأْكُلُونَ.
37:91. அதன்பின் அவர்கள் வழிபட்டு வரும் சிலைகள் இருக்கும் கோயிலுக்கு சென்றார். அங்கு சிலைகளுக்கு முன் உணவு பலகாரங்களை வைத்திருந்தனர். அவற்றை உண்ண மாட்டீர்களா என்று சிலைகளிடம் வினவினார்.
مَا لَكُمْ لَا تَنطِقُونَ.
37:92. மேலும் சிலைகளை நோக்கி, “நீங்கள் உதவி செய்வீர்கள் என்று மக்கள் திடமாக நம்பி இருக்கிறார்கள். ஆனால் உங்களுக்கு என்ன நேர்ந்து விட்டது. நீங்கள் ஏன் பேசுவது கிடையாது?” என்று வினவினார்.
فَرَاغَ عَلَيْهِمْ ضَرْبًۢا بِٱلْيَمِينِ.
37:93. அதன் பின் ஒரு நாள் அவர் அங்கு சென்று அங்கிருந்த சிலைகளை உடைத்தெறிந்தார்.
فَأَقْبَلُوٓا۟ إِلَيْهِ يَزِفُّونَ.
37:94. இதைப் பற்றி அறிந்த அம்மக்கள் அவரிடம் விரைந்தோடி வந்தனர்.
قَالَ أَتَعْبُدُونَ مَا تَنْحِتُونَ.
37:95.“நீங்களே செதுக்கி வைத்துள்ள இவற்றையா நீங்கள் வணங்குகிறீர்கள்?” என்று அம்மக்களைப் பார்த்து கேட்டார்.
وَٱللَّهُ خَلَقَكُمْ وَمَا تَعْمَلُونَ.
37:96.“உங்களையும், நீங்கள் செய்து வைத்துள்ள சிலைகளின் மூலப் பொருட்களையும் படைத்தது அல்லாஹ் தான். எனவே அவன் காட்டும் வழியில் வாழுங்கள்” என்றார்.
قَالُوا۟ ٱبْنُوا۟ لَهُۥ بُنْيَٰنًۭا فَأَلْقُوهُ فِى ٱلْجَحِيمِ.
37:97. இதை கேட்ட அம்மக்கள் கோபமடைந்தார்கள். எனவே, “பெரியதொரு நெருப்புக் குண்டத்தை ஏற்படுத்தி அதில் அவரை எறிந்து விடுங்கள்” என்று ஆவேசமாகப் பேசினர்.
فَأَرَادُوا۟ بِهِۦ كَيْدًۭا فَجَعَلْنَٰهُمُ ٱلْأَسْفَلِينَ.
37:98. இப்படியாக அவர்கள் அவரை கொன்றுவிட இரகசிய திட்டம் தீட்டினர். ஆனால் இறைவன் அவர்களுடைய சதி திட்டத்தைப் பற்றி அவருக்கு அறிவித்து, அத்திட்டத்தில் அவர்கள் வெற்றி பெறாதவாறு செய்துவிட்டான்.
وَقَالَ إِنِّى ذَاهِبٌ إِلَىٰ رَبِّى سَيَهْدِينِ.
37:99. எனவே அவர், “என் இறைவனின் அறிவுரைப்படி நான் இவ்வூரை விட்டு சென்று விடுகிறேன். இறைவன் இதை விட சிறந்த வழியை எனக்கு காட்டுவான்” என்று கூறி அங்கிருந்து ஹிஜ்ரத் செய்து சென்று விட்டார். (மேலும் பார்க்க 29:26)
இப்ராஹீம் நபி அவ்வாறே பாலஸ்தீன நாட்டிற்குச் சென்று அங்கு மில்லதெ இப்ராஹீம் என்று சொல்லப்படுகின்ற மக்கள் தொண்டு நிருவனத்தை ஏற்படுத்தி சிறப்பாக செயல்பட்டு வந்தார். அவருக்கு நீண்ட காலத்திற்கு புத்திர பாக்கியம் இல்லாதிருந்தது. இது அவருக்கு மிகவும் கவலை அளித்து வந்தது. எனவே அவர்
رَبِّ هَبْ لِى مِنَ ٱلصَّٰلِحِينَ.
37:100.“என் இறைவா! எனக்கு ஆற்றல் மிக்க ஒரு மகனைத் தந்தருள்வாயாக” என்று பிரார்த்தித்து வந்தார்.
فَبَشَّرْنَٰهُ بِغُلَٰمٍ حَلِيمٍۢ.
37:101. அவ்வாறே திறமை மிக்க ஒரு மகன் அவருக்கு பிறப்பான் என்ற நற்செய்தியும் கிடைத்தது. அவரது பெயர் இஸ்மாயில் என்பதாகும்.
فَلَمَّا بَلَغَ مَعَهُ ٱلسَّعْىَ قَالَ يَٰبُنَىَّ إِنِّىٓ أَرَىٰ فِى ٱلْمَنَامِ أَنِّىٓ أَذْبَحُكَ فَٱنظُرْ مَاذَا تَرَىٰ ۚ قَالَ يَٰٓأَبَتِ ٱفْعَلْ مَا تُؤْمَرُ ۖ سَتَجِدُنِىٓ إِن شَآءَ ٱللَّهُ مِنَ ٱلصَّٰبِرِينَ.
37:102. அவ்வாறே அக்குழந்தை பிறந்து வளர்ந்து பெரியவன் ஆனான். தன் தந்தையுடன் பணியாற்றும் வாலிப வயதை அடைந்தார். ஒரு நாள் இப்ராஹீம், தன் மகனை அறுத்து பலியிடுவது போல் கனவு கண்டதாக மகனிடம் கூறினார். அதைப்பற்றி அவர் என்ன அபிப்ராயம் கொள்கிறார் என்பதையும் கேட்டார். அதற்கு மகன், “என் அருமை தந்தையே! நீங்கள் கண்ட கனவு இறைவனின் கட்டளை என்று நினைத்தால் அதை நிறைவேற்றுவதில் கால தாமதம் செய்யாதீர்கள். அதுவே இறைவனின் நாட்டமாக இருந்தால், நான் அதற்கு முற்றிலும் அடிபணிவதில் நிலைத்திருப்பேன்” என்றார்.
அதாவது இப்றாஹீம் நபி கண்டது ஒரு கனவுதான். அதுவும் அவருடைய வயதான காலத்தில் பிறந்த மகனை பலியிடுவது போல் கனவு காண்கிறார். அது இறைவனுடைய கட்டளையாக இருக்குமோ என்று சந்தேகத்தில் அதைப் பற்றி தன் மகனிடம் கேட்கிறார். அந்த அளவுக்கு அவர் இறைக்கட்டளை எதுவாக இருந்தாலும், அதை நிறைவேற்ற தயாராக இருந்தார். இது அவருடைய தியாக மனப்பான்மையை பிரதிபலிக்கிறது.
மேலும் அவருடைய மகன் அதை உடனே நிறைவேற்றும் படியும் அதற்கு முற்றிலும் ஒத்துழைப்பதாகவும் கூறுகிறார். இது அவருடைய தியாக மனப்பான்மையைக் காட்டுகிறது. இப்படி நாமும் அல்லாஹ்வுக்காகத் தம் வாழ்க்கையை அர்ப்பணிக்க முன் வரவேண்டும். இதுவே இந்த சம்பவ நிகழ்ச்சியிலிருந்து நமக்கு கிடைக்கின்ற படிப்பினையாகும்.
فَلَمَّآ أَسْلَمَا وَتَلَّهُۥ لِلْجَبِينِ.
37:103. அதைத் தொடர்ந்து அவ்விருவரும் தாம் கண்ட கனவை நிறைவேற்ற முற்பட்ட போது,
وَنَٰدَيْنَٰهُ أَن يَٰٓإِبْرَٰهِيمُ.
37:104. “இப்ராஹீமே!” என்று மறுபுறத்தில் இறைவனிடமிருந்து ஒரு அதட்டல் சத்தம் ஒலித்தது.
قَدْ صَدَّقْتَ ٱلرُّءْيَآ ۚ إِنَّا كَذَٰلِكَ نَجْزِى ٱلْمُحْسِنِينَ.
37:105. “நீர் கண்டது ஒரு கனவு தான். அதை உண்மை என நினைத்து நிறைவேற்ற முற்படுகிறீரே! இப்படிப்பட்ட பலியை நாம் ஏற்றுக் கொள்வதில்லை. (பார்க்க 6:137 6:140) மாறாக அழகிய நன்மையான செயல்களை செய்வதையே நாம் ஏற்றுக் கொள்கிறோம். அத்தகைய செயல்களுக்கு தான் நாம் நற்கூலி கொடுப்போம்” என்று இறைவனிடமிருந்து வந்த செய்தி ஒலித்தது.
إِنَّ هَٰذَا لَهُوَ ٱلْبَلَٰٓؤُا۟ ٱلْمُبِينُ.
37:106. இருப்பினும் இப்ராஹீம் நபிக்கு இது ஒரு பெரும் சோதனையாகவே இருந்தது. அதை இறைவன் தெளிவுபடுத்தி விட்டான்.
وَفَدَيْنَٰهُ بِذِبْحٍ عَظِيمٍۢ.
37:107. இப்படியாக ஒரு மாபெரும் இலட்சியத்திற்காக தன் மகனை அவர் அறுத்து பலியிடுவதை இறைவன் தடுத்து நிறுத்தி விட்டான்.
அதாவது பாலஸ்தீன நாட்டின் அரசாட்சியை விட்டுவிட்டு, பொத்தல் காடாக இருக்கும் கஅபா எனும் இடத்தில் அவரை குடியமர்த்தி, அங்கு இஸ்லாமிய கொள்கைக் கோட்பாடுகளை நிலைநிறுத்தி, கஅபாவை உலக அமைதிக்கான தலைமைச் செயலகமாக உருவாக்க, தன் மகனை அர்ப்பணிக்க வந்த கட்டளையே ஆகும். (பார்க்க 14:37, 2:125-128)
وَتَرَكْنَا عَلَيْهِ فِى ٱلْءَاخِرِينَ.
37:108. இப்படியாக அவர் செய்த தியாகங்கள் வருங்கால மக்களுக்கு நினைவுச் சின்னமாக ஆக்கினோம்.
سَلَٰمٌ عَلَىٰٓ إِبْرَٰهِيمَ.
37:109. இத்தகைய நற்செயல்களை செய்த இப்றாஹீம் நபிக்கு அமைதியான அழகிய வாழ்வு கிடைக்க செய்தோம்.
كَذَٰلِكَ نَجْزِى ٱلْمُحْسِنِينَ.
37:110. இப்படியாக இப்றாஹீமுக்கும் அவருடைய சமுதாயத்திற்கு மட்டும் அழகிய வாழ்வு கிடைத்ததாக எண்ணிக் கொள்ளாதீர்கள். யாரெல்லாம் இறை வழிகாட்டுதலை ஏற்று சிறப்பாக உழைக்கிறார்களோ, அவர்கள் அனைவருக்கும் இத்தகைய சிறப்பான வாழ்வு கிடைக்கும்.
إِنَّهُۥ مِنْ عِبَادِنَا ٱلْمُؤْمِنِينَ.
37:111. இப்றாஹீம் நபி இறைக்கட்டளைகளை நிறைவேற்றும் சிறந்த செயல் வீரராகவே இருந்தார்.
அதனால் அவருக்கு உயர்வும் கண்ணியமும் சிறந்த வாழ்வும் கிடைத்தது. நீங்களும் அவ்வாறே செயல்பட்டு வாருங்கள். உங்களுக்கும் உயர்வும் கண்ணியமும் கிடைக்கும்.
وَبَشَّرْنَٰهُ بِإِسْحَٰقَ نَبِيًّۭا مِّنَ ٱلصَّٰلِحِينَ.
37:112. அதற்குப் பின் அவருக்கு இஸ்ஹாக் எனும் மகன் பிறப்பான் என்ற நற்செய்தியை அளித்தோம். அவரும் பிற்காலத்தில் ஒரு இறைத்தூதராகவும் அழகிய நற்செயல்களை செய்யும் திறமை மிக்கவராகவும் அவர் விளங்குவார் என்றும் அறிவித்தோம்.
وَبَٰرَكْنَا عَلَيْهِ وَعَلَىٰٓ إِسْحَٰقَ ۚ وَمِن ذُرِّيَّتِهِمَا مُحْسِنٌۭ وَظَالِمٌۭ لِّنَفْسِهِۦ مُبِينٌۭ.
37:113. இப்படியாக அவர் மீதும் அவருடைய மகன் இஸ்ஹாக் மீதும் நம் பாக்கியங்களை பொழிந்தோம். அவ்விருவருடைய சந்ததியர்களில் பிறந்தவர்கள் ஆக்கப்பூர்வமான நற்செயல்களைச் செய்து சிறப்புப் பெற்றவர்களும் இருந்தார்கள். அவர்களில் சிலர் வெளிப்படையான அநியாய அக்கிரமச் செயல்களைச் செய்து அழிந்தும் போனார்கள்.
அதாவது இப்ராஹீம் நபியின் வம்சத்தவர்கள் என்பதால் அவர்களுக்கு எந்த தனிச் சிறப்பும் கிடைத்ததில்லை. அவர்கள் செய்து வந்த நற்செயல்களின் அடிப்படையில் தான் உயர் பதவியும் நற்பேரும் கிடைத்தன. இது இறைவனால் நிலைநிறுத்தப்பட்ட சட்டமாகும். (பார்க்க 2:124)
அது போலவே இன்றைய கால கட்டத்திலும் நம்மை முஹம்மது நபியின் உம்மத்துகள் என்று சொல்லிக் கொள்வதால் மட்டும் எந்த பெருமையும் சேராது. அவர் காட்டிய வழியில் சிறப்பாக செயல்பட்டு வந்தால் தான் மதிப்பும் மரியாதையும் கிடைக்கும்.(பார்க்க 3:144, 33:38)
وَلَقَدْ مَنَنَّا عَلَىٰ مُوسَىٰ وَهَٰرُونَ.
37:114. ஆக நபித்துவ தொடரில் பனீஇஸ்ராயீல் சமூகத்தவர்களுள் மூஸா நபி மற்றும் ஹாரூன் நபியும் வருகிறார்கள். அவர்கள் ஆற்றிய சிறந்த பணிக்காக அவர்களுக்கும் நாம் பாக்கியங்களை அளித்தோம்.
وَنَجَّيْنَٰهُمَا وَقَوْمَهُمَا مِنَ ٱلْكَرْبِ ٱلْعَظِيمِ.
37:115. அவ்விருவரையும், அவ்விருவருடைய சமூகத்தாரையும் ஃபிர்அவ்னியர்களின் மிகப்பெரிய துன்பத்திலிருந்து காப்பாற்றினோம்.
وَنَصَرْنَٰهُمْ فَكَانُوا۟ هُمُ ٱلْغَٰلِبِينَ.
37:116. அது மட்டுமின்றி அவர்கள் ஃபிர்அவ்னியர்களின் மீது வெற்றி கொள்ளவும் அவர்களுக்கு உதவி செய்தோம்.
وَءَاتَيْنَٰهُمَا ٱلْكِتَٰبَ ٱلْمُسْتَبِينَ.
37:117. மேலும் அவர்களுக்கு விரிவான வேத அறிவுரைகளையும் அளித்தோம்.
وَهَدَيْنَٰهُمَا ٱلصِّرَٰطَ ٱلْمُسْتَقِيمَ.
37:118. மேலும் அவ்வேதத்தைக் கொண்டு அவ்விருவருக்கும் நேர்வழியை காட்டினோம்.
وَتَرَكْنَا عَلَيْهِمَا فِى ٱلْءَاخِرِينَ.
37:119. இப்படியாக அவ்விருவரும் செய்த வரலாற்று சிறப்பு மிக்க செயல்களுக்காக பிற்காலத்தில் வருபவர்களுக்கு எடுத்துக் காட்டாக விளங்கச் செய்தோம்.
سَلَٰمٌ عَلَىٰ مُوسَىٰ وَهَٰرُونَ.
37:120. இப்படிப்பட்ட நற்செயல்களை செய்து வந்த மூஸா நபிக்கும் ஹாரூன் நபிக்கும் அமைதியான அழகிய வாழ்வு கிடைக்கச் செய்தோம்.
إِنَّا كَذَٰلِكَ نَجْزِى ٱلْمُحْسِنِينَ.
37:121. இத்தகைய நல்வாழ்வு நபிமார்களுக்கு மட்டும்தான் கிடைக்கும் என்பதல்ல. யாரெல்லாம் இப்படிப்பட்ட நற்செயல்களை செய்கிறார்களோ அவர்களுக்கெல்லாம் இப்படிப்பட்ட சுகமான வாழ்வு கிடைக்கும்.
إِنَّهُمَا مِنْ عِبَادِنَا ٱلْمُؤْمِنِينَ.
37:122. அவர்கள் இருவரும் இறைச் செயல்திட்டங்களின் படியே செயல்பட்டு, அவற்றை நிறைவேற்ற தம்மை அர்ப்பணித்துக் கொண்ட செயல் வீரர்களாக இருந்தனர்.
وَإِنَّ إِلْيَاسَ لَمِنَ ٱلْمُرْسَلِينَ.
37:123. அதே போல் இல்யாஸ் நபியும் உலக அமைதிக்காக பாடுபட்ட இறைத்தூதர்கள் வரிசையில் வருகிறார்.
إِذْ قَالَ لِقَوْمِهِۦٓ أَلَا تَتَّقُونَ.
37:124. அவரும் தம் சமூகத்தாரிடம் இருந்த சீர்கேடுகளை நீக்க அரும்பாடுபட்டார். அவர் தம் சமூகத்தாரை நோக்கி, “இறைவனின் வழிகாட்டுதலுக்கு எதிராக செயல்படுவதால் ஏற்படும் விபரீத விளைவுக்கு அஞ்ச மாட்டீர்களா?” என்று கேட்டு வந்தார்.
أَتَدْعُونَ بَعْلًۭا وَتَذَرُونَ أَحْسَنَ ٱلْخَٰلِقِينَ.
37:125. “எல்லாவற்றையும் சிறந்த முறையில் படைக்க கூடிய வல்லமையுடைய இறைவனின் வழிகாட்டுதலை விட்டுவிட்டு, இந்த கற்சிலைகளை வணங்கி வருகிறீர்களா? "என்று அவர்களிடம் வருத்தத்துடன் எடுத்துரைத்து வந்தார்.
ٱللَّهَ رَبَّكُمْ وَرَبَّ ءَابَآئِكُمُ ٱلْأَوَّلِينَ.
37:126. “உங்களையும் உங்கள் முன்னோர்களையும் படைத்து பரிபாலிப்பவன் அல்லாஹ் தான்” என்பதை அவர்களுக்கு பலமுறை எடுத்துரைத்து வந்தார்.
فَكَذَّبُوهُ فَإِنَّهُمْ لَمُحْضَرُونَ.
37:127. ஆனால் அச்சமூகத்தாரோ அவருடைய அறிவுரையை ஏற்றுக் கொள்ளவில்லை. இதனால் இறைவனின் நியதிப்படி அவர்கள் செய்து வந்த தீய செயல்களின் விபரீத விளைவுகளை சந்தித்துக் கொண்டனர்.
إِلَّا عِبَادَ ٱللَّهِ ٱلْمُخْلَصِينَ.
37:128. எனினும் அவர்களுள் இறைவழிகாட்டுதலை ஏற்று சிறப்பாக பணியாற்றிய செயல்வீரர்கள் இருந்தார்கள். அவர்கள் அந்த அழிவுகளிலிருந்து மீண்டுகொண்டனர்.
وَتَرَكْنَا عَلَيْهِ فِى ٱلْءَاخِرِينَ.
37:129. இப்படியாக அவர் ஆற்றிய வரலாற்று சிறப்பு மிக்க தொண்டுக்காக அவரையும் பிற்காலத்தில் வருபவர்களுக்கு முன்னுதாரணமாக விளங்கச் செய்தோம்.
سَلَٰمٌ عَلَىٰٓ إِلْ يَاسِينَ.
37:130. இத்தகைய நற்செயல்களை செய்த இல்யாஸ் நபிக்கு அமைதியான அழகிய வாழ்வு கிடைக்கச் செய்தோம்.
إِنَّا كَذَٰلِكَ نَجْزِى ٱلْمُحْسِنِينَ.
37:131. இத்தகைய நல்வாழ்வு நபிமார்களுக்கு மட்டும்தான் கிடைக்கும் என்பதல்ல. யாரெல்லாம் இப்படிப்பட்ட நற்செயல்களை செய்கிறார்களோ, அவர்களுக்கெல்லாம் இப்படிப்பட்ட சுகமான வாழ்வு கிடைக்கும்.
إِنَّهُۥ مِنْ عِبَادِنَا ٱلْمُؤْمِنِينَ.
37:132. நிச்சயமாக அவர் இறைச் செயல் திட்டங்களின்படி செயல்பட்டு, அவற்றை நிறைவேற்றுவதற்காக தம்மை அர்ப்பணித்துக் கொண்ட செயல்வீரர்களுள் ஒருவராக இருந்தார்.
وَإِنَّ لُوطًۭا لَّمِنَ ٱلْمُرْسَلِينَ.
37:133. அது போலவே லூத்து நபியும் இறைத் தூதர்களில் ஒருவராவார்.
إِذْ نَجَّيْنَٰهُ وَأَهْلَهُۥٓ أَجْمَعِينَ.
37:134. அவரையும் அவரை சார்ந்தவர்களையும் அந்நாட்டில் ஏற்பட்ட ஆபத்திலிருந்து முன்னறிவிப்பு செய்து காப்பாற்றினோம். (பார்க்க 11:81)
إِلَّا عَجُوزًۭا فِى ٱلْغَٰبِرِينَ.
37:135. அந்த ஆபத்திலிருந்து தப்பியவர்களில் அவருடைய மனைவி இடம்பெறவில்லை. காரணம் அவள் அந்த ஆபத்தைப் பற்றிய முன்னறிவிப்பை உதாசீனப்படுத்தி அங்கேயே தங்கிவிட்டாள்.
ثُمَّ دَمَّرْنَا ٱلْءَاخَرِينَ.
37:136. இப்படியாக அங்கேயே தங்கிவிட்ட அனைவரும் அழிந்து போனார்கள்.
وَإِنَّكُمْ لَتَمُرُّونَ عَلَيْهِم مُّصْبِحِينَ.
37:137. தினந்தோரும் பொழுது விடிந்ததும் நீங்கள் அழிந்து போன அவ்வூரின் வழியாகத் தான் போய் வருகிறீர்கள்.
وَبِٱلَّيْلِ ۗ أَفَلَا تَعْقِلُونَ.
37:138. இரவிலும் அதன் வழியாகத் தான் செல்கிறீர்கள். இருப்பினும் அல்லாஹ்வின் அறிவுரைகளுக்கு எதிராக செயல்பட்டவர்களுக்கு ஏற்பட்ட அழிவைப் பற்றி அறிந்து கொள்ள மாட்டீர்களா?
وَإِنَّ يُونُسَ لَمِنَ ٱلْمُرْسَلِينَ.
37:139. அதே போல யூனுஸ் நபியும் இறைத் தூதர்களில் ஒருவராக இருந்தார்.
எனினும் அவர் தம் சமூகத்தாரின் எதிர்ப்பை எதிர்கொள்ள முடியாமல் அங்கிருந்து தப்பித்து செல்ல தானே முடிவெடுத்துக் கொண்டார். (பார்க்க 21:87)
إِذْ أَبَقَ إِلَى ٱلْفُلْكِ ٱلْمَشْحُونِ.
37:140. அவர் ஒரு கப்பலில் ஏறி தப்பித்துச் செல்ல முற்பட்டார். அந்த படகில் ஏற்கனவே பயணிகள் நிரம்பி இருந்தனர்.
فَسَاهَمَ فَكَانَ مِنَ ٱلْمُدْحَضِينَ.
37:141. ஆகவே பயணத்திற்கான அனுமதி பெறாதவராக இருந்ததால் அவர் பிடிபட்டார்.
فَٱلْتَقَمَهُ ٱلْحُوتُ وَهُوَ مُلِيمٌۭ.
37:142. எனவே அக்கால வழக்கப்படி அவரை கப்பலை விட்டு தள்ளிவிட வேண்டியதாயிற்று. அதை தொடர்ந்து மீன் ஒன்று அவரை கவ்விக் கொண்டது.
فَلَوْلَآ أَنَّهُۥ كَانَ مِنَ ٱلْمُسَبِّحِينَ.
37:143. ஆனால் அவர் அந்த மீனிலிருந்து விடுபட்டு வேகமாக நீந்தி கரைக்கு வந்தடைந்தார். அவ்வாறு செய்யாதிருந்தால்,
لَلَبِثَ فِى بَطْنِهِۦٓ إِلَىٰ يَوْمِ يُبْعَثُونَ.
37:144. அவர் மீனுக்கு இறையாகி மடிந்து இருப்பார். அதன்பின் அவரை நிலையான சட்டப்படி தான் எழுப்ப வேண்டியிருக்கும். (பார்க்க 68:49)
۞ فَنَبَذْنَٰهُ بِٱلْعَرَآءِ وَهُوَ سَقِيمٌۭ.
37:145. ஆக அவர் வேகமாக நீந்தி வந்ததால், மிகவும் களைத்துப் போய் இருந்தார். எப்படியோ அவர் கஷ்டப்பட்டு கரைக்கு வந்து சேர்ந்தார்.
وَأَنۢبَتْنَا عَلَيْهِ شَجَرَةًۭ مِّن يَقْطِينٍۢ.
37:146. எனவே அங்கு முளைத்திருந்த சுரைக்காய் வேலிக்குள் சென்று சில நாட்களுக்கு ஓய்வு எடுத்துக் கொண்டார்.
وَأَرْسَلْنَٰهُ إِلَىٰ مِا۟ئَةِ أَلْفٍ أَوْ يَزِيدُونَ.
37:147. அதன் பின் அவர் தம் ஊருக்குத் திரும்பியதும் அங்கு ஆயிரக் கணக்கில் மக்கள் கூடியிருந்து அவரை வரவேற்றனர். அதாவது
فَـَٔامَنُوا۟ فَمَتَّعْنَٰهُمْ إِلَىٰ حِينٍۢ.
37:148. யூனுஸ் நபியின் அறிவுரைப்படி செயல்படுவதாக அவர்கள் அனைவரும் ஒப்புக் கொண்டனர். அதைத் தொடர்ந்து அச்சமுதாயத்தில் சீர்திருத்தங்களை ஏற்படுத்தி அவர்கள் சிறப்பாகவும் சந்தோஷமாகவும் வாழ்ந்தார்கள்.
இவைதான் இறைத்தூதர்கள் வருகையின் நோக்கங்களும் அவர்களுடைய அறிவுரைகளை பின்பற்றுவதால் ஏற்படுகின்ற நன்மைகளும் ஆகும். இவ்வுலகில் சிறப்பாகவும் சந்தோஷமாகவும் வாழ இதுவே சிறந்த வழிமுறையாகும். இதை எல்லாம் விட்டுவிட்டு இறைவனைப் பற்றி பல கற்பனைகளை செய்துகொண்டு அவனை சந்தோஷப்படுத்த வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருப்பதில் என்ன பலன் ஏற்படுகிறது? மனிதன் சந்தோஷமாக இருக்கவேண்டும் என்பதே இறைவனின் நோக்கமாகும். ஆனால் மனிதன் இறைவனை சந்தோஷப் படுத்துவதாக எண்ணி கற்பனை வளத்தில் வழிமுறைகளை ஏற்படுத்திக் கொள்கிறான். எடுத்துக்காட்டாக
فَٱسْتَفْتِهِمْ أَلِرَبِّكَ ٱلْبَنَاتُ وَلَهُمُ ٱلْبَنُونَ.
37:149. இறைவனுக்கு மகன்களும் மகள்களும் இருப்பதாக கற்பனை செய்து சொல்லி வருகிறார்களே, இது உண்மையா என்று அவர்களிடம் கேளுங்கள்.
أَمْ خَلَقْنَا ٱلْمَلَٰٓئِكَةَ إِنَٰثًۭا وَهُمْ شَٰهِدُونَ.
37:150. அல்லது பிரபஞ்ச இயற்கை சக்திகளாக இருக்கும் மலக்குகள் பெண்களாக இருக்கின்றார்களா? அதற்கு அவர்களிடம் ஆதாரம் ஏதாவது இருக்கின்றதா? இதையும் அவர்களிடம் கேளுங்கள்.
أَلَآ إِنَّهُم مِّنْ إِفْكِهِمْ لَيَقُولُونَ.
37:151. உண்மை அதுவன்று. இவர்கள் தாங்களே கற்பனை செய்து கொண்டு இவ்வாறு பேசி வருகிறார்கள்.
وَلَدَ ٱللَّهُ وَإِنَّهُمْ لَكَٰذِبُونَ.
37:152. அல்லாஹ் ஒரு பிள்ளையை பெற்றெடுத்துக் கொண்டான் என்ற பேச்சும் முற்றிலும் பொய்யானதே ஆகும்.
أَصْطَفَى ٱلْبَنَاتِ عَلَى ٱلْبَنِينَ.
37:153. அது மட்டுமின்றி சிலர் அல்லாஹ்வுக்கு மகள்களும் இருப்பதாக கூறுகின்றனர். அல்லாஹ் ஆண் குழந்தையை விட்டுவிட்டு தனக்காக பெண் குழந்தைகளை தேர்ந்தெடுத்துக் கொண்டானா?
مَا لَكُمْ كَيْفَ تَحْكُمُونَ.
37:154. உங்களுக்கு என்ன நேர்ந்து விட்டது? தெளிவான ஆதாரம் ஏதுமின்றி நீங்கள் எவ்வாறு இப்படிப்பட்ட தகவல்களை மக்கள் மத்தியில் பரப்பலாம்?
أَفَلَا تَذَكَّرُونَ.
37:155. நீங்கள் என்ன சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள் என்பதை சிந்தித்து தான் பேசி வருகிறீர்களா?
أَمْ لَكُمْ سُلْطَٰنٌۭ مُّبِينٌۭ.
37:156. இதற்காக உங்களிடம் தெளிவான ஆதாரங்கள் ஏதாவது இருக்கின்றதா?
فَأْتُوا۟ بِكِتَٰبِكُمْ إِن كُنتُمْ صَٰدِقِينَ.
37:157. அப்படி வேத ஆதாரங்கள் ஏதாவது உங்களிடம் இருந்தால் அவற்றை எங்களிடம் கொண்டு வாருங்கள்.
وَجَعَلُوا۟ بَيْنَهُۥ وَبَيْنَ ٱلْجِنَّةِ نَسَبًۭا ۚ وَلَقَدْ عَلِمَتِ ٱلْجِنَّةُ إِنَّهُمْ لَمُحْضَرُونَ.
37:158. அது மட்டுமின்றி அவர்களுடைய கண்களுக்குப் புலப்படாத சக்திகளை (ஜின்களை) அல்லாஹ்வோடு தொடர்ப்பு படுத்தி பேசிவருகிறார்கள். (பார்க்க 34:41) இவையெல்லாம் அவர்களுடைய கற்பனை கதைகளே ஆகும். பிரபஞ்ச சக்திகள் யாவும் அல்லாஹ்வின் கட்டளைக்கு கட்டுப்பட்டு செயல்படுபவையே ஆகும். எனவே அவற்றை அல்லாஹ்வுக்கு இணையாக கருதுவது முறையாகாது.
سُبْحَٰنَ ٱللَّهِ عَمَّا يَصِفُونَ.
37:159. எனவே அவர்கள் இவ்வாறு வர்ணிப்பதை விட்டும் அல்லாஹ் மிகமிக மேலானவன் ஆவான். அதாவது அல்லாஹ்வின் வல்லமைகள் மனித கற்பனைக்கு அப்பாற்பட்டவை ஆகும்.
إِلَّا عِبَادَ ٱللَّهِ ٱلْمُخْلَصِينَ.
37:160. ஆனால் அல்லாஹ்வின் அறிவுரைகளை ஏற்று அவற்றின்படி செயல்படுபவர்கள் இப்படிப்பட்ட கதைகளை ஒருபோதும் மக்களிடம் சொல்ல மாட்டார்கள். அவர்களிடம் இப்படிப்பட்ட பேச்சுக்கு இடமிருக்காது.
فَإِنَّكُمْ وَمَا تَعْبُدُونَ.
37:161. இறைவழிகாட்டுதலை ஏற்க மறுப்பவர்களே! ஒரு விஷயத்தை நினைவில் கொள்ளுங்கள். நீங்களும் நீங்கள் கற்பனை செய்து வணங்கி வருகின்ற தெய்வங்களும்
مَآ أَنتُمْ عَلَيْهِ بِفَٰتِنِينَ.
37:162. அல்லாஹ்வின் வழிகாட்டுதலை ஏற்றுக்கொண்டவர்களை ஒருபோதும் வழிகெடுத்துவிட முடியாது.
إِلَّا مَنْ هُوَ صَالِ ٱلْجَحِيمِ.
37:163. ஆனால் நரக வேதனைகளை அனுபவிக்க முடிவெடுத்தவர்கள் தாம் உங்களுடைய பேச்சில் உண்மை இருப்பதாக எண்ணுவார்கள்.
وَمَا مِنَّآ إِلَّا لَهُۥ مَقَامٌۭ مَّعْلُومٌۭ.
37:164. இறைவழிகாட்டுதலை மனதார ஏற்றுக்கொண்டவர்கள், அல்லாஹ் இல்லாத இடம் எதுவுமில்லை என்பதை உணர்வார்கள். அவர்கள் எங்கிருப்பினும், எந்த செயலைச் செய்தாலும் அதற்கேற்ற பலன்களை பெற்றுக் கொள்வது உறுதி என நம்புவார்கள்.
وَإِنَّا لَنَحْنُ ٱلصَّآفُّونَ.
37:165. எனவே அவர்கள், “நாங்கள் அல்லாஹ்வின் கட்டளையை எதிர்பார்த்து அணிவகுத்து நிற்பவர்களே ஆவோம்” என்று கூறுபவர்களாகவே இருப்பார்கள்.
وَإِنَّا لَنَحْنُ ٱلْمُسَبِّحُونَ.
37:166. “அவ்வாறு இறைக் கட்டளைகள் வந்தால், அவற்றை உடனே நிறைவேற்ற இரவு பகல் என்று பாராமல் அயராது உழைப்பவர்கள் நாங்கள்” என்பார்கள்.
وَإِن كَانُوا۟ لَيَقُولُونَ.
37:167. இதற்குமுன் இவ்வூரிலுள்ள மக்கள் என்ன கூறிக் கொண்டிருந்தார்கள் என்று தெரியுமா?
لَوْ أَنَّ عِندَنَا ذِكْرًۭا مِّنَ ٱلْأَوَّلِينَ.
37:168. “எங்களுக்கும் எங்கள் முன்னோர்களிடமிருந்து இறைவனின் அறிவுரைகள் வந்திருந்தால்”
لَكُنَّا عِبَادَ ٱللَّهِ ٱلْمُخْلَصِينَ.
37:169. “நாங்களும் அல்லாஹ்வின் கட்டளைக்கு முற்றிலும் அடிபணிந்து செயல்படும் செயல்வீரர்களாக ஆகியிருப்போம்” என்று இந்த வேதம் இறக்கியருளப்படுவதற்கு முன் அவர்கள் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.
فَكَفَرُوا۟ بِهِۦ ۖ فَسَوْفَ يَعْلَمُونَ.
37:170. ஆனால் அவர்கள் எதிர் பார்த்தபடி இறைவனிடமிருந்து அறிவுரைகள் வந்துள்ள போது, அவற்றை ஏற்று அதன்படி நடக்க மறுக்கிறார்கள். அவர்கள் செய்து வரும் தீய செயல்களின் விளைவுகளை விரைவில் அறிந்து கொள்வார்கள்.
وَلَقَدْ سَبَقَتْ كَلِمَتُنَا لِعِبَادِنَا ٱلْمُرْسَلِينَ.
37:171. மேலும் இறைத்தூதர்களிடம் இறைச் செயல் திட்டங்களைப் பற்றிய உண்மைகளை ஏற்கனவே சமர்ப்பித்தாகி விட்டது.
إِنَّهُمْ لَهُمُ ٱلْمَنصُورُونَ.
37:172. அத்திட்டங்களின் படி இறை நிராகரிப்பவர்கள் சதி திட்டங்கள் தீட்டினால், இறைவன் புறத்திலிருந்து நிச்சயமாக மூஃமின்களுக்கு உதவி கிடைக்கும்.
وَإِنَّ جُندَنَا لَهُمُ ٱلْغَٰلِبُونَ.
37:173. இறைவனின் திட்டங்களின்படி இறை ஆட்சியமைப்பை ஆதரிக்கும் போர் வீரர்களே வெற்றி பெறுவது உறுதி.
فَتَوَلَّ عَنْهُمْ حَتَّىٰ حِينٍۢ.
37:174. எனவே இப்போதைக்கு அவர்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்காதீர்கள். அவர்களை அவர்கள் போக்கில் விட்டுவிடுங்கள்.
وَأَبْصِرْهُمْ فَسَوْفَ يُبْصِرُونَ.
37:175. இனி வரும் காலங்களில் அவர்களுடைய நிலைமை என்னவாகிறது என்பதை நீங்களே பார்த்துக் கொள்வீர்கள். அவர்களும் அறிந்து கொள்வார்கள்.
أَفَبِعَذَابِنَا يَسْتَعْجِلُونَ.
37:176. அவ்வாறு ஏற்படவிருக்கும் வேதனைகளுக்காகவா அவர்கள் காத்து கிடக்கிறார்கள்?
فَإِذَا نَزَلَ بِسَاحَتِهِمْ فَسَآءَ صَبَاحُ ٱلْمُنذَرِينَ.
37:177. அவர்கள் அழியும் தருவாயில் இருக்கிறார்கள். அவர்களை அழிவிலிருந்து காப்பாற்றவே நீர் எச்சரிக்கை செய்து வருகின்றீர். ஆனால் அவர்களோ எப்போது பொழுது விடியும்? எப்போது அந்த அழிவு வரும் என்று காத்து நிற்கிறார்கள் போலும்.
وَتَوَلَّ عَنْهُمْ حَتَّىٰ حِينٍۢ.
37:178. எனவே அத்தகையவர்களை விட்டு நீங்கள் தற்சமயம் விலகியே இருந்துகொள்ளுங்கள்.
وَأَبْصِرْ فَسَوْفَ يُبْصِرُونَ.
37:179. இனி வரும் காலங்களில் அவர்களுடைய நிலைமை என்னவாகிறது என்பதை நீங்களே பார்த்துக் கொள்வீர்கள். அவர்களும் அறிந்து கொள்வார்கள்.
سُبْحَٰنَ رَبِّكَ رَبِّ ٱلْعِزَّةِ عَمَّا يَصِفُونَ.
37:180. மேலும் அவர்கள் அல்லாஹ்வைப் பற்றி வர்ணிப்பதை விட மிகமிக தூயவன் என்பதையும் அவனுடைய வல்லமை மனித அறிவுக்கு அப்பாற்பட்டவை என்பதையும் எடுத்துரையுங்கள.
وَسَلَٰمٌ عَلَى ٱلْمُرْسَلِينَ.
37:181. இப்போது இருக்கின்ற கேள்வி இறைவழிகாட்டுதலை எடுத்துரைப்பவர்களுக்கு ஏற்படவிருக்கும் ஆபத்தைப் பற்றியது. அவர்கள் அதைப் பற்றி கவலைப்பட தேவையில்லை. எல்லா விதமான பாதுகாப்பும் அவர்களுக்கு இறைவன் புறத்திலிருந்து கிடைக்கும்.
وَٱلْحَمْدُ لِلَّهِ رَبِّ ٱلْعَٰلَمِينَ.
37:182. அகிலங்களை எல்லாம் படைத்துப் பரிபாலிப்பவனாகிய அல்லாஹ் அனைத்தையும் பாதுகாப்பாக செயல்படும்படியாக ஏற்பாடுகளை செய்துள்ளான். இவற்றின் செயல்பாடுகளை கவனிக்கும் ஒவ்வொருவரும் அவனுடைய செயல்திட்டத்தை பாராட்டாமல் இருக்க முடியாது.
உண்மை இவ்வாறிருக்கும் போது, அல்லாஹ்வின் செயல்திட்டங்களை நிறைவேற்ற முயலும் இறைத்தூதர்களுக்கும் செயல்வீரர்களுக்கும் பாதுகாப்பு கிடைக்காதா?