بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ

36:0.அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் அறிவுரைப்படியே அனைத்துக் காரியங்களையும் செய்ய நாடுகிறேன். (பார்க்க 6:162)


يسٓ.

36:1. ஓ! மனிதரில் மாணிக்கமே!


وَٱلْقُرْءَانِ ٱلْحَكِيمِ.

36:2. ஞானம் மிக்க இந்த குர்ஆன் கீழ்கண்ட விஷயங்களுக்கு சாட்சி பகர்கிறது என்பதை அறிந்துகொள்.


إِنَّكَ لَمِنَ ٱلْمُرْسَلِينَ.

36:3. நிச்சயமாக நீர் இறைத்தூதர்களில் ஒருவராக இருக்கின்றீர் என்பதற்கும் இது சாட்சியாகும்.


عَلَىٰ صِرَٰطٍۢ مُّسْتَقِيمٍۢ.

36:4. மேலும் நீர் மனித வாழ்வின் உயர் இலட்சியத்தை அடையச் செய்யும் சரியான பாதையில் இருக்கின்றீர் என்பதற்கும் இந்த குர்ஆன் சாட்சி பகர்கிறது.


تَنزِيلَ ٱلْعَزِيزِ ٱلرَّحِيمِ.

36:5. மேலும் அனைத்தையும் மிகைத்தோனும் கிருபையுடையோனும் ஆகிய இறைவனிடமிருந்து இந்தக் குர்ஆன் இறக்கி அருளப்படுகிறது என்பதற்கும் சாட்சி ஆகும்.


لِتُنذِرَ قَوْمًۭا مَّآ أُنذِرَ ءَابَآؤُهُمْ فَهُمْ غَٰفِلُونَ.

36:6. இந்தக் குர்ஆன் இறக்கி அருளப்படுவதன் நோக்கமே இதற்கு முன்னர் எச்சரிக்கை செய்பவர் யாரும் வராத சமூகத்தார்க்கு முன்னெச்சரிக்கை செய்வதற்காகவே ஆகும். (பார்க்க 28:46, 32:3) அவர்களுடைய முன்னோர்களுக்கும் எச்சரிக்கை செய்பவர் யாரும் வராததால் அவர்கள் செயல்படுவது சரியா அல்லது தவறா என்பதையும் அறியாமல் அவர்கள் அலட்சியமாக செயல்பட்டு வருகிறார்கள்.
முதலில் இவர்களுக்கு எடுத்துரைத்த பின் உம்முடைய போதனைகளை விரிவாக்கம் செய்து, உலக மக்கள் அனைவருக்கும் இவற்றின் உண்மை நிலையை எடுத்துரையுங்கள். (பார்க்க7:158)


لَقَدْ حَقَّ ٱلْقَوْلُ عَلَىٰٓ أَكْثَرِهِمْ فَهُمْ لَا يُؤْمِنُونَ.

36:7. நீர் அவர்களுக்கு செய்து வரும் முன்னெச்சரிக்கைகள் யாவும் ஆக்கப்பூர்வமான நோக்கங்களுக்காகவே ஆகும். ஆனால் அவர்களில் பலர் முன்னோர்களின் வழிபாட்டில் இருப்பதால் இவற்றின் உண்மை நிலையை ஏற்க மறுக்கின்றனர்.


إِنَّا جَعَلْنَا فِىٓ أَعْنَٰقِهِمْ أَغْلَٰلًۭا فَهِىَ إِلَى ٱلْأَذْقَانِ فَهُم مُّقْمَحُونَ.

36:8. இப்படியாக குதிரைக்கு கடிவாளம் கட்டிவிட்டது போல், அவர்களுடைய கழுத்துகளின் தாடைவரையில் சடங்கு சம்பிரதாயங்களின் சங்கிலிகள் பொருத்தப்பட்டுள்ளன. எனவே அவர்களால் முன்னோர்களின் வழிபாட்டைத் தவிர வேறு எதையும் சிந்திக்க முடியாத நிலையில் இருக்கிறார்கள்.


وَجَعَلْنَا مِنۢ بَيْنِ أَيْدِيهِمْ سَدًّۭا وَمِنْ خَلْفِهِمْ سَدًّۭا فَأَغْشَيْنَٰهُمْ فَهُمْ لَا يُبْصِرُونَ.

36:9. இறைவனின் நியதிப்படி அவர்களுக்கு முன்பாகவும் பின்னாடியும் தடுப்புகள் உள்ளன. அவர்களால் வேறு எதைப் பற்றியும் சுயமாக சிந்தித்துப் செயலாற்றவே முடியாது.


وَسَوَآءٌ عَلَيْهِمْ ءَأَنذَرْتَهُمْ أَمْ لَمْ تُنذِرْهُمْ لَا يُؤْمِنُونَ.

36:10. இத்தகையவர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதும் செய்யாமலிருப்பதும் ஒன்றே என்ற நிலை ஏற்பட்டுவிடுகிறது. அத்தகையவர்கள் நேர்வழி பெறுவது எங்ஙனம்?
அதாவது தற்கொலை செய்ய முடிவு செய்தவனுக்கு சைனைடு உட்கொண்டால் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று ஆயிரம் முறை சொன்னாலும் அவன் கவலைப்பட மாட்டான். அது போலத் தான் அவர்களின் தவறான செயல்களால் ஏற்படவிருக்கும் விபரீத விளைவுகளைப் பற்றி எத்தனை முறை சொன்னாலும் அவர்களுடைய சிந்தனைக்கு எட்டாது.


إِنَّمَا تُنذِرُ مَنِ ٱتَّبَعَ ٱلذِّكْرَ وَخَشِىَ ٱلرَّحْمَٰنَ بِٱلْغَيْبِ ۖ فَبَشِّرْهُ بِمَغْفِرَةٍۢ وَأَجْرٍۢ كَرِيمٍ.

36:11. எனவே யார் உள்ளச்சப்பாடுடன் அருட்கொடையாளன் இறைவனுக்கு அஞ்சி நடக்க முற்படுகிறார்களோ, அவர்களுக்கு மட்டும்தான் உம்முடைய முன்னெச்சரிக்கைகள் பலனளிக்கும். எனவே அத்தகையவர்களுக்கு பாதுகாப்பான நிம்மதியான வாழ்வும், கண்ணியம் மிக்க வாழ்வாதாரங்களும் கிடைக்கும் என்ற நற்செய்தியை கொடுப்பீராக.


إِنَّا نَحْنُ نُحْىِ ٱلْمَوْتَىٰ وَنَكْتُبُ مَا قَدَّمُوا۟ وَءَاثَٰرَهُمْ ۚ وَكُلَّ شَىْءٍ أَحْصَيْنَٰهُ فِىٓ إِمَامٍۢ مُّبِينٍۢ.

36:12. நம் செயல்திட்டப்படி இறந்து மடிந்து போன சமுதாயங்கள் இவ்வழிகாட்டுதலைக் கொண்டு உயிர்பெற்று விடும். அவர்கள் தம் வருங்கால வாழ்விற்காக செய்யும் செயல்களையும், “மனித செயல்களின் பலன்கள்” என்ற ஏட்டில் பதிவு செய்து வருகிறோம். அவர்கள் தம் வருங்கால சந்ததியினருக்காக விட்டுச் செல்லும் செயல்களையும் பதிவேட்டில் பத்திரமாக பாதுகாக்கிறோம். இப்படியாக அவர்கள் அனைவரும் செய்து வரும் நற்செயல்கள் மற்றும் தீயசெயல்கள் விரிவாக பதிவாகிக் கொண்டே செல்கின்றன.
அவர்களுடைய செயல்ளின் பலன்களும் விளைவுகளும், எவை சரியானவை எவை தவறானவை என்பதை கணிக்கும் உரைகல்லாக இருக்கும். மேலும் நாம் உருவாக்கிச் செல்லும் சமூக அமைப்பையே பிற்காலத்தில் வருகின்ற சந்ததிகள் பின்பற்றும்.


وَٱضْرِبْ لَهُم مَّثَلًا أَصْحَٰبَ ٱلْقَرْيَةِ إِذْ جَآءَهَا ٱلْمُرْسَلُونَ.

36:13. இந்த பேருண்மையை ஒர் ஊராரின் உதாரணத்தைக் கொண்டு விளங்கிக் கொள்ளலாம். தவறான செயல்களின் விளைவுகளைப் பற்றி முன் எச்சரிக்கை செய்யும் இறைத்தூதர் ஒருவர் அவர்களிடம் வந்தார்.


إِذْ أَرْسَلْنَآ إِلَيْهِمُ ٱثْنَيْنِ فَكَذَّبُوهُمَا فَعَزَّزْنَا بِثَالِثٍۢ فَقَالُوٓا۟ إِنَّآ إِلَيْكُم مُّرْسَلُونَ.

36:14. அதன்பின் அவர்களிடம் ஒன்றுக்கு இரண்டு இறைத் தூதர்கள் வந்தார்கள். ஆனால் அவர்களை அவ்வூரார் பொய்ப்பித்து விட்டார்கள். அதன் பின் அவர்களிடம் மூன்றாவது இறைத்தூதரும் வந்தார். அவர்கள் அவ்வூராரிடம், “நாம் உங்களிடம் அனுப்பி வைக்கப்பட்ட இறைத்தூதர்கள் தாம்” என்று அறிவித்தனர்.


قَالُوا۟ مَآ أَنتُمْ إِلَّا بَشَرٌۭ مِّثْلُنَا وَمَآ أَنزَلَ ٱلرَّحْمَٰنُ مِن شَىْءٍ إِنْ أَنتُمْ إِلَّا تَكْذِبُونَ.

36:15. ஆனால் அவ்வூரார் இறைத்தூதர்களின் பேச்சை ஏற்றுக் கொள்ளாததற்கு சொன்ன காரணம் என்ன என்று தெரியுமா? , அவர்கள் அனைவரும் தம்மைப் போன்ற சாதாரண மனிதர்களாகவே இருக்கிறார்களே என்பதுதான். அதாவது அவர்களிடம் எந்த தனிச் சிறப்பும் இல்லையே. எனவே அத்தூதர்கள் சொல்வதெல்லாம் பொய் என்றார்கள்.


قَالُوا۟ رَبُّنَا يَعْلَمُ إِنَّآ إِلَيْكُمْ لَمُرْسَلُونَ.

36:16. அதற்கு அத்தூதர்கள், “நாங்கள் அனைவரும் உங்களிடம் அனுப்பப்பட்ட இறைத்தூதர்கள் என்பதை இறைவன் நன்கு அறிவான்” என்றார்கள்.


وَمَا عَلَيْنَآ إِلَّا ٱلْبَلَٰغُ ٱلْمُبِينُ.

36:17. “எனவே இறைவனின் வழிகாட்டுதலை தெளிவாக எடுத்துரைப்பதே எங்கள் மீதுள்ள கடமை என்றார்கள். அவற்றைக் கடைப்பிடிப்பதும் மறுப்பதும் உங்கள் விருப்பம்” என்றனர். (பார்க்க 18:29)


قَالُوٓا۟ إِنَّا تَطَيَّرْنَا بِكُمْ ۖ لَئِن لَّمْ تَنتَهُوا۟ لَنَرْجُمَنَّكُمْ وَلَيَمَسَّنَّكُم مِّنَّا عَذَابٌ أَلِيمٌۭ.

36:18. அதற்கு அவ்வூர் மக்கள், “உங்களை எப்போது பார்த்தாலும் வரவிருக்கும் அழிவைப் பற்றியும் துயரங்களைப் பற்றியுமே பேசி வருகிறீர்கள். எனவே உங்களை அபசகுணமாகவே கருதுகிறோம். நீங்கள் இத்தகைய பேச்சுகளிலிருந்து விலகிக் கொள்ளாவிட்டால், உங்களை திட்டமாகக் கல்லால் அடித்து கொன்றுவிடுவோம். அல்லது எங்களிடமிருந்து உங்களுக்கு நோவினை செய்யும் வேதனைகள் கிடைக்கச் செய்வோம்” என்று எச்சரித்தனர்.


قَالُوا۟ طَٰٓئِرُكُم مَّعَكُمْ ۚ أَئِن ذُكِّرْتُم ۚ بَلْ أَنتُمْ قَوْمٌۭ مُّسْرِفُونَ.

36:19. அதற்கு அத்தூதர்கள், “ துர்ச்சகுணம் என்பதெல்லாம் உங்களுடைய செயல்களால் தான் ஏற்படுபவை ஆகும். உங்களுக்கு அறிவுரை செய்வதையா அபசகுணம் என்கிறீர்கள்? உண்மை அதுவன்று. நீங்கள் வரம்பு மீறிய சமூகத்தாராகவே இருக்கிறீர்கள். எனவே தான் இப்படிப்பட்ட பேச்சுகளை பேசி வருகிறீர்கள்” என்று வருத்தத்துடன் கூறினார்கள்.


وَجَآءَ مِنْ أَقْصَا ٱلْمَدِينَةِ رَجُلٌۭ يَسْعَىٰ قَالَ يَٰقَوْمِ ٱتَّبِعُوا۟ ٱلْمُرْسَلِينَ.

36:20. இதற்கிடையில் வெளியூரில் மிகத் தொலைவில் வாழ்ந்த ஒருவர், இதை கேள்வியுற்று விரைந்தோடி வந்தார். அம்மக்கள் அத்தூதர்களை கொன்று விடுவார்களோ என்ற பயத்தில் இருந்தார். எனவே அவர் இறைத்தூதர்கள் காட்டும் வழியில் செயல்படுமாறு தம் சமூகத்தாருக்கு அறிவுறுத்தினார்.


ٱتَّبِعُوا۟ مَن لَّا يَسْـَٔلُكُمْ أَجْرًۭا وَهُم مُّهْتَدُونَ.

36:21. மேலும் எந்த பிரதிப்பலனையும் எதிர்பார்க்காத இத்தூதர்களை பின்பற்றும்படியும், அவர்கள் நேர்வழியில் இருப்பதாகவும் தம் சமூகத்தாரிடம் அவர் கூறினார்.


وَمَا لِىَ لَآ أَعْبُدُ ٱلَّذِى فَطَرَنِى وَإِلَيْهِ تُرْجَعُونَ.

36:22. மேலும் அவர் தம் சமூகத்தாரிடம், “என்னை படைத்த இறைவனின் கட்டளைகளை ஏற்று நடக்காமல் இருக்க எனக்கு என்ன வந்தது? என்னுடைய ஒவ்வொரு செயலும் இறைவன் நிர்ணயித்த விதிமுறைகளின் படியே விளைவுகளை ஏற்படுத்தும் போது, நான் எப்படி அவனுடைய கட்டளைக்கு மாறு செய்ய முடியும்?” என்று தன் நிலையை எடுத்துரைத்தார்.


ءَأَتَّخِذُ مِن دُونِهِۦٓ ءَالِهَةً إِن يُرِدْنِ ٱلرَّحْمَٰنُ بِضُرٍّۢ لَّا تُغْنِ عَنِّى شَفَٰعَتُهُمْ شَيْـًۭٔا وَلَا يُنقِذُونِ.

36:23. “இத்தகைய மாபெரும் வல்லமையுடைய அருட்கொடையாளனின் வழிகாட்டுதலை விட்டுவிட்டு, வேறு வழிமுறைகளையும் கற்பனை தெய்வங்களையும் பின்பற்றுவேனா? இறைவழிகாட்டுதலை விட்டுவிட்டு தவறான வழியில் சென்று, அதன் விளைவாக எனக்கு கெடுதல்கள் ஏற்பட்டால், அவற்றிலிருந்து காப்பாற்ற இந்த கற்பனை தெய்வங்களால் முடியுமா என்ன?” எனக் கேட்டார்.


إِنِّىٓ إِذًۭا لَّفِى ضَلَٰلٍۢ مُّبِينٍ.

36:24. எனவே ஏக இறைவனின் வழிகாட்டுதலை பின்பற்றி நடக்காவிட்டால், நான் வெளிப்படையான வழிகேட்டில் இருப்பதாகத் தான் பொருளாகும்.


إِنِّىٓ ءَامَنتُ بِرَبِّكُمْ فَٱسْمَعُونِ.

36:25. “எனவே என்னை படைத்து பரிபாலிக்கும் ஏக இறைவன் மீது நான் முழு நம்பிக்கை வைக்கிறேன். என் சமூகத்தாரே! என் அழைப்புக்கு நீங்களும் செவி சாயுங்கள்” என்றார்.
இப்படியாக அவர் தம் சமூகத்தாருக்கு அறிவுரை செய்து வந்தார். ஆனால் அவ்வூராரோ அவரை ஏற்க மறுத்து விட்டனர். அவர் மிகவும் வருத்தத்துடன்


قِيلَ ٱدْخُلِ ٱلْجَنَّةَ ۖ قَالَ يَٰلَيْتَ قَوْمِى يَعْلَمُونَ.

36:26. சுவர்க்கத்திற்கு செல்லும் வழியைத் தானே அவர்களுக்கு எடுத்துரைக்கிறோம். இதன் உண்மை நிலையை அவர்கள் அறிந்திருக்க வேண்டாமா? ஆனால் அவர்கள் இந்த உண்மையை ஏற்க மறுக்கிறார்களே! தம் சமூகத்தாரின் பரிதாப நிலையைப் பற்றி எண்ணி வருத்தமடைந்தார்.


بِمَا غَفَرَ لِى رَبِّى وَجَعَلَنِى مِنَ ٱلْمُكْرَمِينَ.

36:27. என்னுடைய இறைவன் எனக்கு பாதுகாப்பான நிம்மதியான வாழ்வளித்து, எனக்கு கண்ணியமானவர்களில் சேர்த்துள்ளானே! இதையாவது அவர்கள் கவனித்திருக்க வேண்டுமே!


۞ وَمَآ أَنزَلْنَا عَلَىٰ قَوْمِهِۦ مِنۢ بَعْدِهِۦ مِن جُندٍۢ مِّنَ ٱلسَّمَآءِ وَمَا كُنَّا مُنزِلِينَ.

36:28. அதன்பின் அவ்வூராரை அழிப்பதற்காக வானத்திலிருந்து எந்த மலக்குகளையும் இறைவன் அனுப்பவில்லை. அதற்கு அவசியமும் ஏற்பட்டதில்லை. காரணம் அவர்களுடைய தீய செயல்களே அவர்களை அழிவின் பக்கம் அழைத்து செல்ல போதுமானதாக இருந்தன.


إِن كَانَتْ إِلَّا صَيْحَةًۭ وَٰحِدَةًۭ فَإِذَا هُمْ خَٰمِدُونَ.

36:29. இறுதியில் ஒரு கலவரம் தான் வெடித்தது. அவர்களுடைய அழிவுக்கு அது போதுமானதாக இருந்தது. அதன் விளைவாக அனைவரும் செத்து மடிந்து போனார்கள். அவர்களுடைய உழைப்புகள் எல்லாம் வீணாகி எரிந்து சாம்பலாயின.


يَٰحَسْرَةً عَلَى ٱلْعِبَادِ ۚ مَا يَأْتِيهِم مِّن رَّسُولٍ إِلَّا كَانُوا۟ بِهِۦ يَسْتَهْزِءُونَ.

36:30. இப்படியாக அந்த சமுதாயத்திற்கு ஏற்பட்ட அழிவு அந்தோ பரிதாபம்! அவர்களிடம் வந்த இறைத்தூதர்களை எல்லாம் அவர்கள் பரிகசித்து வந்தார்களே! இறுதியில் அவர்களே பரிகாசத்திற்கு ஆளாகி விட்டார்களே!
சிந்தனையாளர்களே! வரலாற்றின் இந்த சான்றுகளை உங்களுக்கு எடுத்துரைப்பதன் நோக்கமே இறைவழிகாட்டுதலை எடுத்துரைப்பவருக்கு கிடைக்கும் சுவன வாழ்வைப் பற்றியும், அவற்றைப் பொய்ப்பித்து வந்த சமூகத்தாருக்கு ஏற்படும் அழிவைப் பற்றியும் அறிவிப்பதற்காகத் தான். எனவே நாமும் சமுதாயத்தை நல்வழிப்படுத்த முயல வேண்டும்.


أَلَمْ يَرَوْا۟ كَمْ أَهْلَكْنَا قَبْلَهُم مِّنَ ٱلْقُرُونِ أَنَّهُمْ إِلَيْهِمْ لَا يَرْجِعُونَ.

36:31. இப்படியாக இதற்கு முன்னர் எத்தனையோ சமுதாயத்தினர் இறைவனின் நியதிப்படி அழிந்து போனார்கள். காரணம் அவர்கள் இறைத் தூதர்கள் செய்த அறிவுரைகளின் பக்கம் கவனம் செலுத்தாமல் அவர்களை பரிகசித்து வந்தனர்.
சிந்தனையாளர்களே! இவை யாவும் வீணான கதைகள் என எண்ணிக் கொண்டீர்களா? எங்களுக்கு இத்தகைய அழிவுகள் எதுவும் வராது என்ற நினைப்பில் இருக்கிறீர்களா? இல்லை.


وَإِن كُلٌّۭ لَّمَّا جَمِيعٌۭ لَّدَيْنَا مُحْضَرُونَ.

36:32. உங்களுடைய தவறான செயல்களின் விளைவுகளை இறைவன் நிர்ணயித்த விதிமுறைகளின் படி சந்திக்கும் நாள் வெகு தூரத்தில் இல்லை என்பதை அறிந்து கொள்ளுங்கள். நீங்கள் அனைவரும் இறைவனின் நியதிப்படி ஒன்று திரண்டு வரவேண்டி இருக்கும்.


وَءَايَةٌۭ لَّهُمُ ٱلْأَرْضُ ٱلْمَيْتَةُ أَحْيَيْنَٰهَا وَأَخْرَجْنَا مِنْهَا حَبًّۭا فَمِنْهُ يَأْكُلُونَ.

36:33. மேலும் மனிதனுக்குக் கிடைக்கும் வாழ்வாதாரங்கள் யாவும் பூமியிலிருந்து தான் கிடைக்கின்றன. வரண்டு கிடக்கும் பூமி, மழை நீரைக் கொண்டு புத்துயிர் பெறுகிறது. இறைவனின் செயல்திட்டப்படி செயல்படும் இவற்றிலிருந்து தான் உணவு தானியங்கள் வெளியாகி, அவை மனிதனுக்கு உணவாகக் கிடைக்கின்றன.


وَجَعَلْنَا فِيهَا جَنَّٰتٍۢ مِّن نَّخِيلٍۢ وَأَعْنَٰبٍۢ وَفَجَّرْنَا فِيهَا مِنَ ٱلْعُيُونِ.

36:34. அதுமட்டுமின்றி பூமியில் பேரீத்த மரங்களும் திராட்சைக் கொடிகளும் கூடிய தோட்டங்களும் உருவாகின்றன. அவற்றின் குறுக்கே நீரூற்றுகளும் பீறிட்டு ஓடுகின்றன.


لِيَأْكُلُوا۟ مِن ثَمَرِهِۦ وَمَا عَمِلَتْهُ أَيْدِيهِمْ ۖ أَفَلَا يَشْكُرُونَ.

36:35. இறைவனின் இத்தகைய ஏற்பாடுகளின் மூலம் தான் உண்பதற்கு பழவகைகள் கிடைக்கின்றன. இவற்றை எல்லாம் அவர்களே உருவாக்குகிறார்களா? இதைப் பற்றி சிந்தித்து, இறைக்கட்டளையின் படி செயல்பட்டு நன்றி விசுவாசத்துடன் வாழவேண்டாமா?


سُبْحَٰنَ ٱلَّذِى خَلَقَ ٱلْأَزْوَٰجَ كُلَّهَا مِمَّا تُنۢبِتُ ٱلْأَرْضُ وَمِنْ أَنفُسِهِمْ وَمِمَّا لَا يَعْلَمُونَ.

36:36. இறைவனின் செயல்திட்டப்படி பூமியில் உருவாகின்ற அத்தனை புற்பூண்டுகளிலும், இவர்கள் அறியாத பல படைப்புகளிலும், மனித படைப்பிலும் ஜோடி ஜோடியாக படைத்திருப்பது அல்லாஹ்வின் தனித் தன்மையையும், எல்லையில்லா வல்லமையையும் பிரதிபலிக்கின்றன. இவை மனித கற்பனைக் கெல்லாம் அப்பாற்பட்டவையாக உள்ளன.


وَءَايَةٌۭ لَّهُمُ ٱلَّيْلُ نَسْلَخُ مِنْهُ ٱلنَّهَارَ فَإِذَا هُم مُّظْلِمُونَ.

36:37. அதுமட்டுமின்றி அல்லாஹ்வின் வல்லமையை அறிந்துகொள்ள வேண்டுமென்றால் இரவு பகலை செயல்பட வைத்திருக்கும் அழகிய முறையை கவனித்துப் பார்க்கட்டும். அதில் மாறி மாறி வரும் இரவு பகலை கவனித்துப் பார்க்கட்டும். இரவு பகலைவிட்டு நீங்கி வருவதும் பகலின் வெளிச்சதைப் போக்கி காரிருளாக மாறிவிடுவதும் நடைபெற்று வருவதை கவனித்துப் பார்க்கட்டும்.


وَٱلشَّمْسُ تَجْرِى لِمُسْتَقَرٍّۢ لَّهَا ۚ ذَٰلِكَ تَقْدِيرُ ٱلْعَزِيزِ ٱلْعَلِيمِ.

36:38. மேலும் பிரம்மாண்டமான சூரியன் செயல்படும் விதத்தை ஆராய்ந்து பார்க்கட்டும். அது தன்னை சுற்றியுள்ள நவக்கிரகங்களையும் அழைத்துக் கொண்டு எவ்வாறு தனக்கே உரிய இலக்கை நோக்கி சென்றுக் கொண்டிருக்கின்றது என்பதை அறிந்து கொள்வார்கள். இவை யாவும் சகல வல்லமையும் மிகைத்தோனுமாகிய இறைவன் நிர்ணயித்த விதிமுறைகளாகும்.


وَٱلْقَمَرَ قَدَّرْنَٰهُ مَنَازِلَ حَتَّىٰ عَادَ كَٱلْعُرْجُونِ ٱلْقَدِيمِ.

36:39. மேலும் சந்திரனின் செயல்பாடுகளை ஆராய்ந்து பார்க்கட்டும். அது கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து வருவதும், அதன்பின் கொஞ்சம் கொஞ்சமாக தேய்ந்து ஊசிமுனை அளவிற்கு ஆகிவருவதுமாக இருக்கிறது. இவை யாவும் அதன் படித்தரங்களாகும்.


لَا ٱلشَّمْسُ يَنۢبَغِى لَهَآ أَن تُدْرِكَ ٱلْقَمَرَ وَلَا ٱلَّيْلُ سَابِقُ ٱلنَّهَارِ ۚ وَكُلٌّۭ فِى فَلَكٍۢ يَسْبَحُونَ.

36:40. ஆக சூரியன் சந்திரனை நெருங்கி வருதற்கோ, அல்லது நிர்ணயிக்கப்பட்ட இரவு நேரம் முந்திக்கொண்டு பகலாவதற்கோ ஒருபோதும் முடியாது. காரணம் அவை ஒவ்வொன்றும் வான்மண்டலத்தில் தனக்கே உரிய வட்டரையில் (In the given orbit) சுற்றி வருகின்றன. (மேலும் பார்க்க 19:33)


وَءَايَةٌۭ لَّهُمْ أَنَّا حَمَلْنَا ذُرِّيَّتَهُمْ فِى ٱلْفُلْكِ ٱلْمَشْحُونِ.

36:41. வான் மண்டலத்திலிருந்து கீழிறங்கி அவர்கள் வாழும் பூமியில் நடப்பதை ஆராய்ந்து பார்த்து, அல்லாஹ்வின் அளவிலா வல்லமையை அறிந்து கொள்ளட்டும். உதாரணத்திற்கு அவர்களுடைய சந்ததிகளை ஏற்றிக் கொண்டு தண்ணீரைப் பிளந்து செல்லும் கப்பல்களைப் பார்க்கட்டும்.
ஓர் ஊசி எடையுள்ள பொருளும் தண்ணீரில் மூழ்கிவிடும் போது, பல டன் எடையுள்ள கப்பல்கள் தண்ணீரில் மூழ்காமல் மிதந்து, நீரை பிளந்து செல்வது ஆச்சரியமே அல்லவா?


وَخَلَقْنَا لَهُم مِّن مِّثْلِهِۦ مَا يَرْكَبُونَ.

36:42. இப்படி அல்லாஹ்வின் புறத்திலிருந்து செய்யப்பட்ட ஏற்பாடுகளை எல்லாம் நீங்கள் எண்ணிக் கொண்டே சென்றாலும் அவை எண்ணி முடியாது. (பார்க்க 2:164)


وَإِن نَّشَأْ نُغْرِقْهُمْ فَلَا صَرِيخَ لَهُمْ وَلَا هُمْ يُنقَذُونَ.

36:43. அவை தண்ணீரில் மிதந்து செல்லாமல் அதற்குள் மூழ்கும் விதத்தில் சட்டங்களை அல்லாஹ் ஏற்படுத்தவில்லை. அவ்வாறு ஏற்படுத்தி இருந்தால்,அதற்கு எதிராக யாரும் எதுவும் செய்திருக்க முடியாது.


إِلَّا رَحْمَةًۭ مِّنَّا وَمَتَٰعًا إِلَىٰ حِينٍۢ.

36:44. காரணம் உலகிலுள்ள அனைத்து தரப்பு மக்களும் சிறப்பாக வாழவேண்டும் என்பதே அல்லாஹ்வின் செயல் திட்டமாகும். அவனது கிருபையை இது பிரதிப்பலிப்பதாகவே உள்ளது. அதனால் தான் கப்பல்கள் கடலில் மிதந்து செல்ல முடிகிறது. அதைக் கொண்டு தான் உங்களால் சில காலத்திற்கு பலன்களைப் பெற முடிகிறது.
உங்கள் வாழ்வில் நிலையான பலன்கள் கிடைக்க வேண்டுமெனறால் இறைவழிகாட்டுதலின்படி, சமூக அமைப்பை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். அந்த சமூக அமைப்பின் பிரதான நோக்கம் யாதெனில்


وَإِذَا قِيلَ لَهُمُ ٱتَّقُوا۟ مَا بَيْنَ أَيْدِيكُمْ وَمَا خَلْفَكُمْ لَعَلَّكُمْ تُرْحَمُونَ.

36:45. இறைவன் புறத்திலிருந்து கிடைத்துள்ள அறிவுரைகளுக்கு உட்பட்டு அனைவரும் நடந்துகொள்ள வேண்டும். அவற்றிற்கு எதிராக செயல்படுவதால் ஏற்பட்ட அல்லது ஏற்படவிருக்கும் தீய விளைவுகளுக்கு அஞ்சி நடக்க வேண்டும். அப்போது தான் மென்மேலும் உயர்ந்து சிறப்பான வாழ்வு உங்களுக்குக் கிடைக்க வழிகள் பிறக்கும்.
இங்கு முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம் யாதெனில் உலகிலுள்ள மற்ற படைப்புகள் யாவும் இறைவனின் நேரடி கட்டுப்பாட்டில் செயல்படுகினறன. (பார்க்க 16:49-50) அவற்றால் இறைக்கட்டளைக்கு மாற்றமாக செயல்படவே முடியாது. அவற்றின் செயல்பாடுகளில் எந்த மாற்றமும் வருவதில்லை. எனவே தான் இறைவனின் கட்டுப்பாட்டில் செயல்படும் அகிலங்கள் மிக மிக சிறப்பாகவும் அழகாகவும் உள்ளன.
ஆனால் இவ்வுலகில் மனிதனின் நிலை அவ்வாறு இல்லை. அவனுக்கு மட்டும் முழு சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளதால், அவன் எப்படி வேண்டுமானாலும் வாழ்ந்து கொள்ளலாம் என்ற நிலை உருவாகிறது. (பார்க்க 76:3) ஆனால் அவன் செய்து வரும் செயல்களுக்கு ஏற்ப விளைவுகள் ஏற்பட்டு வரும். அந்த விளைவுகளை அவனால் ஒருபோதும் மாற்ற முடியாது. எனவே தான் அவன் செய்ய வேண்டிய மற்றும் செய்யக் கூடாத விஷயங்களைப் பற்றி இறைத் தூதர்கள் மூலம் அல்லாஹ் அறிவிக்கின்றான். எனவே


وَمَا تَأْتِيهِم مِّنْ ءَايَةٍۢ مِّنْ ءَايَٰتِ رَبِّهِمْ إِلَّا كَانُوا۟ عَنْهَا مُعْرِضِينَ.

36:46. இறைவன் புறத்திலிருந்து வந்துள்ள வழிகாட்டுதல்களை ஏற்று நடக்க முன்வர வேண்டும். அப்போது தான் அவர்களுடைய சமுதாயமும் நிலையான செல்வ செழிப்புடன் அழகாகவும் சிறப்பாகவும் இருக்கும். ஆனால் இதைப்பற்றி மக்களிடம் எடுத்துரைத்தால் அவற்றை அவர்கள் புறக்கணிக்காமல் இருப்பதில்லை. எடுத்துக் காட்டாக


وَإِذَا قِيلَ لَهُمْ أَنفِقُوا۟ مِمَّا رَزَقَكُمُ ٱللَّهُ قَالَ ٱلَّذِينَ كَفَرُوا۟ لِلَّذِينَ ءَامَنُوٓا۟ أَنُطْعِمُ مَن لَّوْ يَشَآءُ ٱللَّهُ أَطْعَمَهُۥٓ إِنْ أَنتُمْ إِلَّا فِى ضَلَٰلٍۢ مُّبِينٍۢ.

36:47. அவர்களுக்கு கிடைத்துள்ள வாழ்வாதாரங்களை சமுதாய மேம்பாட்டிற்காக கொடுத்து உதவ சொன்னால், அவர்களுக்கு கசப்பாக இருக்கிறது. இந்த வழிமுறையை (Concept) ஏற்க மறுப்பவர்கள், “அல்லாஹ் நாடியிருந்தால் அவர்களை கஷ்டத்தில் வாட வைத்திருப்பானா? அவர்கள் கஷ்டப்பட வேண்டும் என்பதே அவர்களுடைய விதி. (மேலும் பார்க்க 6:149, 16:35, 43:20) இதை புரியாமல் அவர்களின் முன்னேற்றத்திற்காக எங்களை செலவு செய்யச் சொல்வது அறிவிலித்தனம் அல்லவா?” என்கிறார்கள்.
கவனித்தீர்களா? அவர்கள் அறிவிலிகளாக இருந்துகொண்டு, சமுதாய மக்களின் துயர் துடைக்க உதவி செய்யச் சொல்வதை அறிவிலித்தனம் என்கிறார்கள். எனவே செல்வ குவிப்பை நோக்கமாகக் கொண்டு வாழும் சமுதாயம் அழிவை சந்திக்கும் என்பது நிலைநிறுத்தப்பட்ட சட்டமாகும். இதை அவர்களிடம் எடுத்துக் கூறினால்


وَيَقُولُونَ مَتَىٰ هَٰذَا ٱلْوَعْدُ إِن كُنتُمْ صَٰدِقِينَ.

36:48. வாக்களிக்கப்பட்ட அந்த அழிவு எப்போது வரும் என்று கேட்கிறார்கள். மேலும், “நீங்கள் உங்கள் கூற்றில் உண்மையாளர்களாக இருந்தால் அதை எங்கள் முன் கொண்டுவந்து காட்டுங்கள்” என்கின்றனர்.


مَا يَنظُرُونَ إِلَّا صَيْحَةًۭ وَٰحِدَةًۭ تَأْخُذُهُمْ وَهُمْ يَخِصِّمُونَ.

36:49. அந்த அழிவுகளை அவர்கள் பார்த்து சந்தோஷப்படுகின்ற விஷயமா? அதற்கு திடுக்கிடும் ஒரு கலவரம் வெடித்தாலே போதுமே! அதற்காகத் தான் இவர்கள் காத்திருக்கிறார்கள் போலும். அவர்கள் இப்படி தர்க்கித்துக் கொண்டிருக்கும் நிலையிலேயே அவர்களை நம்மால் அழிக்க முடியாதா என்ன?


فَلَا يَسْتَطِيعُونَ تَوْصِيَةًۭ وَلَآ إِلَىٰٓ أَهْلِهِمْ يَرْجِعُونَ.

36:50. அதி பயங்கரமான அந்த நிலையில், யாரும் யாருக்கும் எந்த அறிவுரையும் செய்ய இயலாது. அத்தனை ஏன்? தம் குடும்பத்தாரையும் கவனிக்க இயலாது. அப்படிப்பட்ட நிலைக்காகவே அவர்கள் காத்திருக்கிறார்கள் போலும்.


وَنُفِخَ فِى ٱلصُّورِ فَإِذَا هُم مِّنَ ٱلْأَجْدَاثِ إِلَىٰ رَبِّهِمْ يَنسِلُونَ.

36:51. இத்தகைய நிலை மரணத்திற்குப் பின்பும் தொடரும். எனவே அவர்கள் செய்த செயல்களுக்குரிய பலன்களைப் பெறும் காலம் வரும்போது, அதற்குரிய அபாய ஒலி எழுப்பப்படும். அவர்கள் அனைவரும் தம் சமாதிகளிலிருந்து வெளியே வந்து இறைவனின் நீதிமன்றத்தின் பக்கம் விரைய வேணடி இருக்கும்.


قَالُوا۟ يَٰوَيْلَنَا مَنۢ بَعَثَنَا مِن مَّرْقَدِنَا ۜ ۗ هَٰذَا مَا وَعَدَ ٱلرَّحْمَٰنُ وَصَدَقَ ٱلْمُرْسَلُونَ.

36:52. அப்போது அவர்கள், “அடப் பாவமே! எங்களுடைய நித்திரையிலிருந்தும் சமாதிகளிலிருந்தும் எங்களை எழுப்பியது யார்?” என்று கேட்பார்கள். அதற்கு, “அருட்கொடையாளனின் வாக்குறுதியைப் பற்றி இறைத்தூதர்கள் உங்களுக்கு முன்பே எடுத்துரைத்தனரே, அந்த வாக்கு நிறைவேறும் காலம் வந்துவிட்டது” என்று அவர்களுக்கு பதிலளிக்கப்படும்.


إِن كَانَتْ إِلَّا صَيْحَةًۭ وَٰحِدَةًۭ فَإِذَا هُمْ جَمِيعٌۭ لَّدَيْنَا مُحْضَرُونَ.

36:53. இதற்காக அவர்களுக்கு ஒரே ஒரு அபாய ஒலியை எழுப்பினாலே போதும். அவர்கள் அனைவரும் இறைவனின் நீதிமன்றத்தில் ஆஜராகி விடுவார்கள்.


فَٱلْيَوْمَ لَا تُظْلَمُ نَفْسٌۭ شَيْـًۭٔا وَلَا تُجْزَوْنَ إِلَّا مَا كُنتُمْ تَعْمَلُونَ.

36:54. அன்றியும் அக்கால கட்டத்தில் யாருக்கும் எவ்வித அநீதியும் இழைக்கப்பட மாட்டாது. நீங்கள் எவ்வாறு செயல்பட்டு வந்தீர்களோ, அதற்கேற்றவாறே பலன்கள் கிடைக்கும். அதாவது நன்மையான செயல்கள் மிகைத்திருந்தால் சுவர்க்கம் (பார்க்க 6:8) தீமையான செயல்கள் மிகைத்திருந்தால் நரகமே. (பார்க்க 6:9)


إِنَّ أَصْحَٰبَ ٱلْجَنَّةِ ٱلْيَوْمَ فِى شُغُلٍۢ فَٰكِهُونَ.

36:55. அதன் படியே நன்மையான செயல்களை செய்தோருக்கு சுவனம் கிடைத்துவிடும். அவர்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் தம் அலுவல்களை கவனித்து வருவார்கள்.


هُمْ وَأَزْوَٰجُهُمْ فِى ظِلَٰلٍ عَلَى ٱلْأَرَآئِكِ مُتَّكِـُٔونَ.

36:56. அவர்களுடன் அவர்களுடைய சக தோழர்களும் இருப்பார்கள். அவர்கள் அனைவரும் குளிர்ந்த காற்றில் சாய்வு நாற்காலிகளில் அமர்ந்த வண்ணம் தம் பணிகளைத் தொடர்வார்கள்.


لَهُمْ فِيهَا فَٰكِهَةٌۭ وَلَهُم مَّا يَدَّعُونَ.

36:57. மேலும் அவர்களுக்குப் பல வகையான அருசுவை கனிவகைகளும் கிடைக்கும். மேலும் அவர்கள் வேண்டிய அனைத்தும் கைக்கு எட்டும் தூரத்தில் இருக்கும்.


سَلَٰمٌۭ قَوْلًۭا مِّن رَّبٍّۢ رَّحِيمٍۢ.

36:58. இப்படியாக எங்கு நோக்கினும் சாந்தியும் சமாதானமும் என்ற ஒலிதான் ஒலித்துக் கொண்டிருக்கும். இவையாவும் அவர்கள் இறைவனின் சொல்லைப் பின்பற்றி நடந்ததன் பயனாகக் கிடைக்கும் பலன்களாகும்.


وَٱمْتَٰزُوا۟ ٱلْيَوْمَ أَيُّهَا ٱلْمُجْرِمُونَ.

36:59. ஆனால் இறைவழிகாட்டுதலுக்கு எதிராக செயல்பட்ட குற்றவாளிகளின் நிலைமையோ, அந்தோ பரிதாபம்! “இன்றைய தினம் நீங்கள் நல்லோர்களின் பட்டியலில் இடம் பெற மாட்டீர்கள். எனவே அவர்களை விட்டு விலகி விடுங்கள்” என்று கூறப்படும்.


۞ أَلَمْ أَعْهَدْ إِلَيْكُمْ يَٰبَنِىٓ ءَادَمَ أَن لَّا تَعْبُدُوا۟ ٱلشَّيْطَٰنَ ۖ إِنَّهُۥ لَكُمْ عَدُوٌّۭ مُّبِينٌۭ.

36:60. ஓ மனித இனமே! மனோ இச்சையின்படி செயல்படும் சமூக விரோதிகளைப் பின்பற்றாதீர்கள் என்று நாம் உங்களுக்கு ஏற்கனவே தூதர்கள் மூலம் அறிவிக்கவில்லையா? அவர்கள் உங்களின் ஜன்ம பகைவர்கள் என்பதை நாம் தெரியப்படுத்தவில்லையா?


وَأَنِ ٱعْبُدُونِى ۚ هَٰذَا صِرَٰطٌۭ مُّسْتَقِيمٌۭ.

36:61. “அவர்களை விட்டுவிட்டு நம் கட்டளைகளுக்கு மட்டும் அடிபணிந்து செயல்பட சொன்னோமே! அவை உங்களுக்கு நேரான பாதையை காட்டுவதாக இருந்தனவே!” என்று அவர்களிடம் கூறப்படும்.


وَلَقَدْ أَضَلَّ مِنكُمْ جِبِلًّۭا كَثِيرًا ۖ أَفَلَمْ تَكُونُوا۟ تَعْقِلُونَ.

36:62. உண்மையை விளக்கிய பின்பும் அந்த சமூக விரோதிகள், உங்களில் பெரும்பாலானவர்களை வழி கெடுத்து வந்தனரே! இதனை நீங்கள் சிந்தித்து பார்த்திருக்க வேண்டாமா?


هَٰذِهِۦ جَهَنَّمُ ٱلَّتِى كُنتُمْ تُوعَدُونَ.

36:63. எனவே உங்களுடைய தவறான செயல்களின் விளைவாக உங்களுக்கு வாக்களிக்கப்பட்ட நரகம் இதுதான். அதைத் தவிர வேறு எதுவும் அங்கு கிடைக்காது.


ٱصْلَوْهَا ٱلْيَوْمَ بِمَا كُنتُمْ تَكْفُرُونَ.

36:64. நம் கட்டளைகளுக்கு எதிராக செயல்பட்டதால் நரகத்தினுள் நுழையுங்கள்.


ٱلْيَوْمَ نَخْتِمُ عَلَىٰٓ أَفْوَٰهِهِمْ وَتُكَلِّمُنَآ أَيْدِيهِمْ وَتَشْهَدُ أَرْجُلُهُم بِمَا كَانُوا۟ يَكْسِبُونَ.

36:65. அப்படியொரு கால கட்டத்தில் அவர்களால் எதுவும் பேசவே முடியாது. அவர்கள் செய்து வந்த செயல்களே அவர்களை காட்டிக் கொடுத்துவிடும். இப்படியாக அவர்களுடைய கைகள் மற்றும் கால்களே அவர்களுக்கு எதிராகச் சாட்சி சொல்லும். (மேலும் பார்க்க 17:13-14, 75:13-15)
ஆக மனிதனுக்கு முழு சுதந்திரத்தை அளித்துவிட்டு, வழிகாட்டுதலை இறைத் தூதர்கள் மூலம் அருளிவிட்டு, அவற்றை ஏற்று நடந்தால் சுவர்க்கம் என்றும் அதற்கு மாற்றமாக நடந்தால் நரகம் என்றும் நிர்ணயிக்கப்பட்ட இறைவனின் செயல் திட்டமாகும். ஆனால் மனிதன் அறியாமையில் தவறான வழியில் சென்றாலும் அவன் திருந்துவதற்கு தக்க வாய்ப்பு அளிக்கப்படுகிறது. அது போலவே ஒரு சமுதாயம் திருந்துவதற்கும் தக்க வாய்ப்பு அளிக்கப்படுகிறது. அங்கு நடக்கும் தவறான செயல்களுக்காக அவர்களை உடனே அழித்து விடுவதில்லை.


وَلَوْ نَشَآءُ لَطَمَسْنَا عَلَىٰٓ أَعْيُنِهِمْ فَٱسْتَبَقُوا۟ ٱلصِّرَٰطَ فَأَنَّىٰ يُبْصِرُونَ.

36:66. நபியே! உம்மை அவர்கள் எதிர்க்கிறார்கள் என்பதற்காக அவர்களுடைய சிந்தனைப் புலன்களையும் பார்வைப் புலன்களையும் உடனே போக்கிவிடுவது என்பது நம் செயல்திட்டத்தில் இல்லை. அவ்வாறு உடனே அவற்றை போக்கிவிட்டால் தப்பிக்க வழிதேடி அவர்கள் இங்கும் அங்குமாக அலைந்து கொண்டிருப்பார்கள்.


وَلَوْ نَشَآءُ لَمَسَخْنَٰهُمْ عَلَىٰ مَكَانَتِهِمْ فَمَا ٱسْتَطَٰعُوا۟ مُضِيًّۭا وَلَا يَرْجِعُونَ.

36:67. மேலும் அவர்கள் வாழும் இடத்திலேயே முன்னுக்கும் பின்னுக்கும் அசையாதவாறு அவர்களை உருமாற்றம் செய்திருக்க முடியும். அப்போதும் அவர்களால் ஒன்றும் செய்திருக்கவே முடியாது. அதிலிருந்து அவர்களால் தப்பிக்கவும் முடியாது.
ஆனால் இறைவனுடைய செயல்திட்டம் இவ்வாறு செயல்படுவதில்லை. அவரவர் செய்து வரும் செயல்களுக்கு ஏற்ற வகையில் அவர்களுடைய வாழ்க்கைத் தரம் மாறி வர வேண்டும் என்பதே இறைவனின் திட்டமாகும். எனவே தவறான செயல்களின் விளைவுகள் படிப்படியாக ஏற்பட்டு வரும். உதாரணத்திற்கு


وَمَن نُّعَمِّرْهُ نُنَكِّسْهُ فِى ٱلْخَلْقِ ۖ أَفَلَا يَعْقِلُونَ.

36:68. மனித படைப்பையே எடுத்துக் கொள்ளுங்கள். அவன் பிறந்து வளர்ந்து பெரியவனாகி அதன் பின் வயோதிகனாக ஆகின்றான். அவன் பிறந்த உடன் வயோதிகனாக ஆகிவிடுவதில்லை. இதை அவர்கள் சிந்தித்துப் பார்த்திருக்க வேண்டாமா?
அது போலத்தான் ஒரு சமுதாயம் தவறான வழியில் சென்றால், அதன் விளைவுகள் படிப்படியாக வளர்ந்து அது தோற்றத்திற்கு வரும். மேலும் எந்த குழந்தையும் குழந்தையாகவே இவ்வுலகில் இருக்க முடியாது. அவன் வாழ்ந்து வந்தால் ஒரு கட்டத்தில் அவன் வயோதிகனாக ஆகியே தீர வேண்டும். இதை யாராலும் மாற்ற முடியாது. அதுபோலத் தான் தவறான செயல்களின் விளைவுகளை சந்தித்து தான் ஆகவேண்டும். இதை அவனால் தவிர்க்க முடியாது. இவற்றைப் பற்றி எல்லாம் உங்களுக்கு எடுத்துரைக்கும் போது, ஏதோ கற்பனை வளத்தோடு பேசுவதாக எண்ணுகிறீர்களா? இல்லை.


وَمَا عَلَّمْنَٰهُ ٱلشِّعْرَ وَمَا يَنۢبَغِى لَهُۥٓ ۚ إِنْ هُوَ إِلَّا ذِكْرٌۭ وَقُرْءَانٌۭ مُّبِينٌۭ.

36:69. இறைத் தூதர் கற்பனை வளத்தோடு கவிதை வடிவில் வார்த்தைகளை ஜோடித்து கூறுபவர் அல்லர். அதற்கு அவசியமும் இல்லை. மாறாக உலக மக்களை நேர்வழிப்படுத்தி ஒன்றிணைப்பதற்கான அறிவுரைகளையே அவர் அறிவிக்கும் இந்த குர்ஆனில் காணக் கிடைக்கும்.
எனவே உலகப் படைப்புகளைப் பற்றிய அறிவியல் விஷயங்களானாலும், வரலாற்று உண்மைகளாக இருந்தாலும், அவற்றிலிருந்து கிடைக்கின்ற அறிவுரைகள் மற்றும் படிப்பினைகள் என்னவென்பதை அறிவிப்பதே இந்த குர்ஆனின் நோக்கமாகும். ஏனெனில் அறிவியல் ஆய்வுகளின் மூலம் உலகப் படைப்புகளைப் பற்றிய உண்மைகளை மனிதனால் தனிப்பட்ட முறையில் அறிந்துகொள்ள முடியும் (பார்க்க 2:31) அவற்றைக் கொண்டு பொருளாதார முன்னேற்றத்தை அடைய முடியும். ஆனால் தவறான செயல்கள் எவை நற்செயல்கள் எவை என்பதை அறிந்துகொள்ளும் அறிவுத்திறன் மனிதனிடத்தில் இருப்பதில்லை. அப்படியே சில விஷயங்களை அறிந்திருந்தாலும் அவனால் அந்த தீய செயல்களிலிருந்து விலகி இருக்க முடிவதில்லை. எனவே


لِّيُنذِرَ مَن كَانَ حَيًّۭا وَيَحِقَّ ٱلْقَوْلُ عَلَى ٱلْكَٰفِرِينَ.

36:70. சிந்தித்து செயலாற்றும் உயிரோட்டமுள்ள சமுதயாத்திற்கு அவர்களுடைய தவறான செயல்களால் ஏற்படும் விளைவுகளைப் பற்றி எடுத்துரைத்து முன்னெச்சரிக்கை செய்வதே இவ்வேதத்தின் நோக்கமாகும். மேலும் இதை பொருட்படுத்தாமல் மூடநம்பிக்கையில் வாழ்பவர்களுக்குக் கிடைக்கும் அழிவைப் பற்றியும் உறுதிப்பட எடுத்துரைக்கிறது.


أَوَلَمْ يَرَوْا۟ أَنَّا خَلَقْنَا لَهُم مِّمَّا عَمِلَتْ أَيْدِينَآ أَنْعَٰمًۭا فَهُمْ لَهَا مَٰلِكُونَ.

36:71. அவர்களிடமுள்ள கால் நடைகள் யாவும் இறைவனின் செயல்திட்டப்படி உருவான படைப்புகள் என்பதை அவர்கள் கவனித்துப் பார்க்க மாட்டார்களா? அவற்றை அவர்களா படைத்தார்கள்? உண்மை அவ்வாறு இருக்கும் போது, அவற்றை அவர்கள் பயன்படுத்திக் கொள்ளத் தான் அனுமதி உள்ளதே அன்றி, அவற்றின் மீது அவர்கள் எப்படி உரிமை கொண்டாட முடியும்?


وَذَلَّلْنَٰهَا لَهُمْ فَمِنْهَا رَكُوبُهُمْ وَمِنْهَا يَأْكُلُونَ.

36:72. மேலும் அவை அவர்களுக்குக் கீழ்ப்படிந்து நடக்கும் வகையில் படைக்கப்பட்டுள்ளன. அவற்றில் சிலவற்றின் மீது ஏறிச் சவாரி செய்கிறார்கள். மேலும் அவற்றில் சிலற்றின் மாமிசத்தை புசிக்கவும் செய்கிறார்கள்.


وَلَهُمْ فِيهَا مَنَٰفِعُ وَمَشَارِبُ ۖ أَفَلَا يَشْكُرُونَ.

36:73. மேலும் அவற்றிலிருந்து அவர்களுக்குப் பல நன்மைகளும், பானங்களும் கிடைக்கின்றன. இத்தகைய அருட்கொடைகளை அளித்த இறைவனின் வழிகாட்டுதலுக்கு அடிபணிந்து அவனுக்கு நன்றி விசுவாசத்துடன் நடந்துகொள்ள மாட்டார்களா?


وَٱتَّخَذُوا۟ مِن دُونِ ٱللَّهِ ءَالِهَةًۭ لَّعَلَّهُمْ يُنصَرُونَ.

36:74. ஆனால் அவர்களைப் பாருங்கள். அல்லாஹ்வின் வழிகாட்டுதலை விட்டுவிட்டு அவர்களுக்கு உதவி செய்வதாக எண்ணி கற்பனை தெய்வங்களை உருவாக்கி இருக்கிறார்கள்.


لَا يَسْتَطِيعُونَ نَصْرَهُمْ وَهُمْ لَهُمْ جُندٌۭ مُّحْضَرُونَ.

36:75. அவற்றால் அவர்களுக்கு எந்த வகையிலும் உதவி புரிய முடியாது. ஒரு கட்டத்தில் அவையே இவர்களுக்கு எதிர் வினையாக வந்து நிற்கும்.


فَلَا يَحْزُنكَ قَوْلُهُمْ ۘ إِنَّا نَعْلَمُ مَا يُسِرُّونَ وَمَا يُعْلِنُونَ.

36:76. நபியே! உமக்கெதிரான அவர்களுடைய பேச்சைப் பற்றி எண்ணி கவலைப்படாதீர்கள். அவர்கள் உள்ளங்களில் மறைத்து வைத்திருப்பதும் வெளிப்படையாக செயல்படுவதும் நமக்குத் தெரியாமல் இல்லை.


أَوَلَمْ يَرَ ٱلْإِنسَٰنُ أَنَّا خَلَقْنَٰهُ مِن نُّطْفَةٍۢ فَإِذَا هُوَ خَصِيمٌۭ مُّبِينٌۭ.

36:77. இறைவனால் எப்படி அறிந்துகொள்ள முடியும் என்ற கேள்வி அவர்கள் மனதில் தோன்றலாம். மனிதனின் படைப்பைப் பற்றியே அவர்கள் சிந்தித்து பார்க்க்கட்டும். கண்ணுக்குப் புலப்படாத இந்திரீயத்தின் அணுவிலிருந்து மனிதனைப் படைத்தான். அணு அளவில் இருந்த அவனை இவ்வளவு பெரிய மனிதனாக ஆக்க வல்லமைப் பெற்ற இறைவனுக்கு, மனித உள்ளத்தில் ஊடுருவிச் செல்லும் எண்ணங்களை அறிந்துகொள்ளும் வல்லமை இருக்காதா?


وَضَرَبَ لَنَا مَثَلًۭا وَنَسِىَ خَلْقَهُۥ ۖ قَالَ مَن يُحْىِ ٱلْعِظَٰمَ وَهِىَ رَمِيمٌۭ.

36:78. தாம் எவ்வாறு படைக்கப்பட்டோம் என்பதை எண்ணிப் பார்க்கத் தவறிய மனிதன், இறைவனுக்கு பல உதாரணங்களை கூறிவருகிறான். தாம் செத்து மடிந்து எலும்புக் கூடுகளாக மக்கிப்போன பின் அவற்றை உயிர்ப்பிப்பது யார் என்றும் கேட்கின்றான்.


قُلْ يُحْيِيهَا ٱلَّذِىٓ أَنشَأَهَآ أَوَّلَ مَرَّةٍۢ ۖ وَهُوَ بِكُلِّ خَلْقٍ عَلِيمٌ.

36:79. யார் உங்களை முதன் முதலில் படைத்தானோ, அவனே உங்களை மீண்டும் உயிர்ப்பிப்பான் என்று அவர்களிடம் கூறிவிடுங்கள். அது மட்டுமின்றி எல்லா படைப்புகளின் நிலைமைப் பற்றியும் நன்கு அறிந்தவன் தான் அல்லாஹ் என்பதையும் அவர்களுக்கு எடுத்துரையுங்கள்.


ٱلَّذِى جَعَلَ لَكُم مِّنَ ٱلشَّجَرِ ٱلْأَخْضَرِ نَارًۭا فَإِذَآ أَنتُم مِّنْهُ تُوقِدُونَ.

36:80. ஏக இறைவனாகிய அல்லாஹ்வின் சட்ட விதிமுறைகளின் படியே பசுமையான மரங்களும் காய்ந்து எரிபொருளாக மாறுகின்றன. அவற்றிலிருந்து தான் உங்களுக்கு நெருப்பு கிடைக்கிறது என்பதையும் கவனித்துப் பார்க்க சொல்லுங்கள்.


أَوَلَيْسَ ٱلَّذِى خَلَقَ ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضَ بِقَٰدِرٍ عَلَىٰٓ أَن يَخْلُقَ مِثْلَهُم ۚ بَلَىٰ وَهُوَ ٱلْخَلَّٰقُ ٱلْعَلِيمُ.

36:81. பிரம்மாண்டமான வானங்களையும் பூமியையும் படைக்கும் ஆற்றலுடைய ஏக இறைவனுக்கு மனிதனை மீண்டும் படைக்கும் சக்தி பெறாதவன் என எண்ணுகிறார்களா? உண்மை அதுவன்று. அவன் எல்லாவற்றையும் படைக்கும் பேராற்றல் உடையவனே என்பதை அறிந்து கொள்ளட்டும்.


إِنَّمَآ أَمْرُهُۥٓ إِذَآ أَرَادَ شَيْـًٔا أَن يَقُولَ لَهُۥ كُن فَيَكُونُ.

36:82. அவனுடைய வல்லமை எவ்வாறு உள்ளது என்றால் அவன் எதையாவது படைக்கவேண்டும் என்று விரும்பினால், அது முறைப்படி உருவாகி படிப்படியாகப் பல படித்தரங்களைக் கடந்து முழுமை அடைந்து விடுகிறது. ( 32:5)


فَسُبْحَٰنَ ٱلَّذِى بِيَدِهِۦ مَلَكُوتُ كُلِّ شَىْءٍۢ وَإِلَيْهِ تُرْجَعُونَ.

36:83. மேலும் அவற்றை படைத்ததோடு சரி என்று விட்டுவிடுவதில்லை. மாறாக எல்லா படைப்புகளையும் கட்டுக்கோப்பாக வைத்து செயல்படுத்தியும் வருகிறான். இப்படியாக இறைவனின் செயல்திட்டங்கள் யாவும் அனைத்தையும் மிகைப்பவையாகவும், அவற்றின் ஒவ்வொன்றும் அவன் நிர்ணயித்த இலக்கின்படியே விளைவுகளை ஏற்படுத்துவதாகவும் உள்ளன என்பதையும் அறிந்துகொள்ளுங்கள். இவையாவும் மனித கற்பனைக்கு அப்பாற்பட்ட விஷயங்களாகும்,