بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ

35:0.அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் அறிவுரைப்படியே அனைத்துக் காரியங்களையும் செய்ய நாடுகிறேன். (பார்க்க 6:162)


ٱلْحَمْدُ لِلَّهِ فَاطِرِ ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضِ جَاعِلِ ٱلْمَلَٰٓئِكَةِ رُسُلًا أُو۟لِىٓ أَجْنِحَةٍۢ مَّثْنَىٰ وَثُلَٰثَ وَرُبَٰعَ ۚ يَزِيدُ فِى ٱلْخَلْقِ مَا يَشَآءُ ۚ إِنَّ ٱللَّهَ عَلَىٰ كُلِّ شَىْءٍۢ قَدِيرٌۭ.

35:1. வானங்களையும் பூமியையும் யாதொரு பொருளின் துணையுமின்றி உருவாக்கிய ஏக இறைவனாகிய அல்லாஹ்வின் செயல் திட்டங்கள் யாவும், போற்றுதலுக்கும் பாராட்டுக்கும் உரியவையே. மேலும் அவற்றை செயல்பட வைக்க, பிரபஞ்ச இயற்கை சக்திகளை படைத்ததும் அவனே. அந்த சக்திகள் ஒன்றுக்கு மேல் இரண்டிரண்டு, மும்மூன்று, நான்குநான்கு என பல்வேறு செயல்திறன்களைக் கொண்டவையாகவும் உள்ளன. அவற்றையெல்லாம் பாதுகாப்பதோடு மட்டுமின்றி, தன் படைப்புகளின் தொடர்ச்சியாக மென்மேலும் புதிய புதிய படைப்புகளை படைத்துக்கொண்டே செல்வதும் அவனது எல்லை இல்லா வல்லமையை பறைசாற்றுகின்றன. இப்படியாக அவனுடைய ஒவ்வொரு படைப்பிலும் தன்னுடைய ஆதிக்கமே செயல்பட்டு வருவதற்கும் அவை ஆதாரமாக விளங்குகின்றன (மேலும் பார்க்க 6:101)


مَّا يَفْتَحِ ٱللَّهُ لِلنَّاسِ مِن رَّحْمَةٍۢ فَلَا مُمْسِكَ لَهَا ۖ وَمَا يُمْسِكْ فَلَا مُرْسِلَ لَهُۥ مِنۢ بَعْدِهِۦ ۚ وَهُوَ ٱلْعَزِيزُ ٱلْحَكِيمُ.

35:2. அல்லாஹ்வின் படைப்பு செயல் திட்டங்களின் படியே மனிதனுக்கு வேண்டிய வாழ்க்கை வசதிகள் அனைத்திற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மனிதனுக்கு வேண்டிய வாழ்வாதார திறவுகோலை திறந்துவிட்டால் அவற்றை தடுப்பவர்கள் யாருமில்லை. அதே போல் அவற்றை அவன் தடுத்துக் கொண்டால் அதன்பின் அதனை ஏற்படுத்தக் கூடிய வல்லமை வேறு யாருக்கும் இல்லை. இப்படியாக அல்லாஹ்வின் செயல் திட்டங்களே அனைத்தையும் மிகைத்து நிற்பதாக உள்ளன.
அதாவது மனிதனுக்கு கிடைக்கக் கூடிய வாழ்வாதாரங்களின் ஏற்பாடுகளை செய்து கொடுத்தது அல்லாஹ் தான். அவற்றில் செயல்படும் சட்ட விதிமுறைகளை மனிதன் அறிந்து அதற்கேற்றவாறு உழைத்து பெற்றுக்கொள்ள வேண்டும். உதாரணத்திற்கு நெல் பயிரிடவேண்டும் என்றால் அதற்கு வேண்டிய மண்ணின் தன்மை, தட்பவெப்ப நிலை மற்றும் தண்ணீரின் அளவு மிகமிக முக்கியம். இவற்றை அறிந்து பயிரிட்டால் தான் நல்ல மகசூலை பெற முடியும். அவ்வாறு கிடைப்பதை யாரும் தடுக்க முடியாது. அதே போல் மனிதன் உழைக்காமல் இருந்து விட்டால் அவனுக்கு வேண்டிய வாழ்வாதாரங்கள் தடைப்பட்டுப் போகும். அதன்பின் வேறு எந்த வழிமுறையைக் கொண்டும் அவனால் சிறப்பாக வாழவே முடியாது. எனவே மனிதனின் உழைப்பிற்கு ஏற்ற பலன்களே அவனுக்குக் கிடைக்கும். (பார்க்க 53:39)
அதே போல் உழைத்து பெற்றுக் கொண்ட வாழ்வாதாரங்களை சமுதாய மக்களின் மேம்பாட்டிற்காகப் பயன்படுத்த வேண்டும் என்பது இறைவனின் அறிவுரையாகும். காரணம் நீங்கள் பெற்றுக் கொள்ளும் வாழ்க்கை வசதிகள் யாவும் இறைவன் செய்துள்ள ஏற்பாடுகளின் மூலம்தான். (பார்க்க 56:63-73) எனவே


يَٰٓأَيُّهَا ٱلنَّاسُ ٱذْكُرُوا۟ نِعْمَتَ ٱللَّهِ عَلَيْكُمْ ۚ هَلْ مِنْ خَٰلِقٍ غَيْرُ ٱللَّهِ يَرْزُقُكُم مِّنَ ٱلسَّمَآءِ وَٱلْأَرْضِ ۚ لَآ إِلَٰهَ إِلَّا هُوَ ۖ فَأَنَّىٰ تُؤْفَكُونَ.

35:3. உலக மக்களே! உங்களுக்கு அல்லாஹ்வின் புறத்திலிருந்து கிடைத்துள்ள பாக்கியங்களைப் பற்றி எண்ணிப் பாருங்கள். வானத்திலிருந்து மழை நீரை பொழிய வைத்து, (பார்க்க 2:22) உணவு வகைகள் விளையும் வகையில் பூமியை படைத்து, உங்களுக்கு வாழ்வாதாரங்கள் கிடைக்கும்படி செய்தது அல்லாஹ் தானே. அவனையன்றி வேறு படைப்பாளி யாராவது இருக்கிறார்களா? எனவே அவன் காட்டிய வழியினை விட்டுவிட்டு, நீங்கள் வேறு வழிமுறைகளை பின்பற்றி ஏன் திசை மாறிச் செல்கிறீர்கள்?


وَإِن يُكَذِّبُوكَ فَقَدْ كُذِّبَتْ رُسُلٌۭ مِّن قَبْلِكَ ۚ وَإِلَى ٱللَّهِ تُرْجَعُ ٱلْأُمُورُ.

35:4. இறைவழிகாட்டுதலை எடுத்துரைப்பவரே! மக்கள் உம்முடைய அறிவுரைகளை ஏற்கவில்லை என்றால் அதற்காக நீங்கள் வருந்தாதீர்கள். ஏனெனில் இதற்குமுன் வாழ்ந்த சமூகத்தவர்களும் இவ்வாறே இறைவனின் அறிவுரைகளை புறக்கணித்தார்கள். ஆனால் அவர்களுடைய செயல்களின் விளைவுகள் யாவும் அல்லாஹ் நிர்ணயித்த விதிமுறைகளின் படியே ஏற்பட்டன. எனவே தீய செயல்களில் ஈடுபட்டவர்கள் அழிவைச் சந்தித்துக் கொண்டனர்.


يَٰٓأَيُّهَا ٱلنَّاسُ إِنَّ وَعْدَ ٱللَّهِ حَقٌّۭ ۖ فَلَا تَغُرَّنَّكُمُ ٱلْحَيَوٰةُ ٱلدُّنْيَا ۖ وَلَا يَغُرَّنَّكُم بِٱللَّهِ ٱلْغَرُورُ.

35:5. உலக மக்களே! தீய வழியில் செல்பவர்கள் படிப்படியாக அழிவை சந்திப்பது நிச்சயம் என்ற அல்லாஹ்வின் வாக்கு உண்மையானதே ஆகும். அதில் எந்த மாற்றமும் வராது. எனவே உங்களுடைய தற்காலிக சொகுசு வாழ்வின் மமதை, உங்களை ஏமாற்றிவிட வேண்டாம். அல்லாஹ்வின் அறிவுரைகள் எதுவும் தேவையில்லை என்ற மிதப்பில் இருக்காதீர்கள். எனவே


إِنَّ ٱلشَّيْطَٰنَ لَكُمْ عَدُوٌّۭ فَٱتَّخِذُوهُ عَدُوًّا ۚ إِنَّمَا يَدْعُوا۟ حِزْبَهُۥ لِيَكُونُوا۟ مِنْ أَصْحَٰبِ ٱلسَّعِيرِ.

35:6. தன் மனோ இச்சையை அடிப்படையாகக் கொண்டு வாழ்பவர்களின் பேச்சை கேட்டு செயல்படாதீர்கள். அவர்கள் உங்களுடைய பகைவர்களாக இருக்கின்றனர். நீங்கள் அவர்களை உற்ற நண்பர்களாக எடுத்துக் கொள்ளாதீர்கள். அவர்கள் விடும் அழைப்புகள் யாவும் வேதனை அளிக்கும் நரகத்தின் பக்கம்தான் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.


ٱلَّذِينَ كَفَرُوا۟ لَهُمْ عَذَابٌۭ شَدِيدٌۭ ۖ وَٱلَّذِينَ ءَامَنُوا۟ وَعَمِلُوا۟ ٱلصَّٰلِحَٰتِ لَهُم مَّغْفِرَةٌۭ وَأَجْرٌۭ كَبِيرٌ.

35:7. இதையும் மீறி இறைவழிகாட்டுதலுக்கு எதிராக செயல்படுபவர்கள், கடுமையான வேதனைகளுக்கு காத்திருக்க வேண்டியதுதான். மாறாக இறைவழிகாட்டுதலை ஏற்று அதன்படி ஆக்கப்பூர்வமான சமூக நலத் திட்டங்களைத் தீட்டி உழைத்து வருபவர்களுக்கு மகத்தான வளம் மிக்க எதிர்காலம் உண்டு. இதை அனைவரும் மனதில் பதிய வைத்துக் கொள்ளுங்கள்.


أَفَمَن زُيِّنَ لَهُۥ سُوٓءُ عَمَلِهِۦ فَرَءَاهُ حَسَنًۭا ۖ فَإِنَّ ٱللَّهَ يُضِلُّ مَن يَشَآءُ وَيَهْدِى مَن يَشَآءُ ۖ فَلَا تَذْهَبْ نَفْسُكَ عَلَيْهِمْ حَسَرَٰتٍ ۚ إِنَّ ٱللَّهَ عَلِيمٌۢ بِمَا يَصْنَعُونَ.

35:8. ஏனெனில் சமுதாயத்தை கெடுத்து வரும் தீய செயல்கள் யாவும் அவர்களுக்கு அழகாகத் தோன்றுவதால், அவற்றை அழகிய செயல்கள் என கருத முடியுமா? அல்லாஹ்வின் நிலைமாறா சட்டம் என்னவென்றால், யார் தவறான வழியில் செல்ல நாடுகிறானோ அவனை வழிகேட்டில் விட்டுவிடுவதும், யார் நேர்வழியில் செல்ல நாடி அதற்காக முயல்கிறானோ அவனை நேர்வழியில் செலுத்துவதும் ஆகும். (பார்க்க 18:29) இறைவழிகாட்டுதலை எடுத்துரைப்பவரே! தவறான வழியில் செல்பவர்களைப் பற்றி விசனப்பட்டு நீர் ஏன் உன் உயிருக்கு ஆபத்தை விளைவித்துக் கொள்கின்றீர்? நிச்சயமாக உலகில் உள்ள அனைத்து தரப்பு மக்களும் எவ்வாறு செயல்பட்டு வருகிறார்கள் என்ற உண்மை நிலவரம் அல்லாஹ்வுக்கு நன்கு தெரியும். எனவே அவரவர் செயல்களுக்கு ஏற்றவாறு பலன்களும் விளைவுகளும் கிடைத்து வருவது உறுதி.
மனித விஷயத்தில் நடைபெற்று வரும் இதே சட்டம் தான் அகிலங்கள் அனைத்திலும் இறைவனின் செயல்திட்டப்படி நடைபெற்று வருகின்றன. எடுத்துக்காட்டாக


وَٱللَّهُ ٱلَّذِىٓ أَرْسَلَ ٱلرِّيَٰحَ فَتُثِيرُ سَحَابًۭا فَسُقْنَٰهُ إِلَىٰ بَلَدٍۢ مَّيِّتٍۢ فَأَحْيَيْنَا بِهِ ٱلْأَرْضَ بَعْدَ مَوْتِهَا ۚ كَذَٰلِكَ ٱلنُّشُورُ.

35:9. அல்லாஹ் நிர்ணயித்த விதிமுறைகளின் படியே காற்றின் சுழலால் மேகங்கள் உருவாகின்றன. பின்னர் அம்மேகங்களின் மூலமாக மழை பொழிகிறது. வரண்டு உயிரற்ற நிலையில் இருக்கும் பூமியின் மேல் பொழிந்து, அந்நிலம் செழிப்பாகி புத்துயிர் பெற்றுவிடுகிறது. இவ்வாறே இறைவழிகாட்டுதல்கள் மூலம் செத்து மடிந்து கிடக்கும் சமுதாயங்களை புத்துயிர் பெறச் செய்து சிறப்பாக வாழ வழி வகுக்கின்றன.


مَن كَانَ يُرِيدُ ٱلْعِزَّةَ فَلِلَّهِ ٱلْعِزَّةُ جَمِيعًا ۚ إِلَيْهِ يَصْعَدُ ٱلْكَلِمُ ٱلطَّيِّبُ وَٱلْعَمَلُ ٱلصَّٰلِحُ يَرْفَعُهُۥ ۚ وَٱلَّذِينَ يَمْكُرُونَ ٱلسَّيِّـَٔاتِ لَهُمْ عَذَابٌۭ شَدِيدٌۭ ۖ وَمَكْرُ أُو۟لَٰٓئِكَ هُوَ يَبُورُ.

35:10. எனவே மதிப்பு மரியாதையுடன் கூடிய சிறப்பான வாழ்க்கையைப் பெற விரும்பும் சமுதாயங்கள், அல்லாஹ் நிர்ணயித்த வாழ்க்கை நெறிமுறைகளை அனைவரும் ஒருங்கிணைந்து கடைப்பிடிக்க வேண்டும். இதை அவர்கள் அறிந்து கொள்ளட்டும். ஏனெனில் மனிதனுடைய வாழ்க்கைத் தரம் உயர வேண்டும் என்றால் அவனிடம் முன்னேற்றத்திற்கான செயல்திட்டங்கள் இருக்க வேண்டும். கூடவே உயர்ந்த இலட்சியங்களும் கொள்கைக் கோட்பாடுகளும் இருக்கவேண்டும். இவை அனைத்தும் இறைவழிகாட்டுதலில் உள்ளன. எனவே எந்தச் சமுதாயம் அவற்றை முன்வைத்து சிறந்த செயல்களை செய்து வருகிறதோ, உலக அரங்கில் அவர்களுடைய கண்ணியமும் உயர்வும் கூடிவரும். அன்றியும் எவர்கள் இவற்றை நிராகரித்து தீய வழியில் செல்ல சதி செய்கிறார்களோ, அவர்களுடைய எதிர்காலம் பிரச்னைகள் மிகுந்தவையாக மாறிவிடும். அவையே அவர்களுக்கு வேதனைகளை அளிக்க போதுமானதாகும்.
உலகம் முழுவதும் அல்லாஹ் படைத்துள்ள இயற்கைப் படைப்புகள் யாவும் தமக்கே உரிய வேகத்தில் செயல்பட்டு வருகின்றன. அல்லாஹ்வின் செயல்திட்டங்கள் ஆக்கப்பூர்வமாக உள்ளன என்பதற்கு உங்களுடைய படைப்பின் ஆரம்பமும் அதன் படித்தர முன்னேற்றங்களையும் வைத்து சிந்தித்துப் பாருங்கள். உண்மை உங்களுக்கே புரியும்.


وَٱللَّهُ خَلَقَكُم مِّن تُرَابٍۢ ثُمَّ مِن نُّطْفَةٍۢ ثُمَّ جَعَلَكُمْ أَزْوَٰجًۭا ۚ وَمَا تَحْمِلُ مِنْ أُنثَىٰ وَلَا تَضَعُ إِلَّا بِعِلْمِهِۦ ۚ وَمَا يُعَمَّرُ مِن مُّعَمَّرٍۢ وَلَا يُنقَصُ مِنْ عُمُرِهِۦٓ إِلَّا فِى كِتَٰبٍ ۚ إِنَّ ذَٰلِكَ عَلَى ٱللَّهِ يَسِيرٌۭ.

35:11. அன்றியும் அல்லாஹ்வின் செயல்திட்டப் படியே மனித படைப்பு மண்ணின் சத்திலிருந்து உருவானது. (பார்க்க 71:17) அதன்பின் யுகங்கள் பல கடந்து ஆண் பெண் சேர்க்கையின் மூலம் இந்திரீயத் துளியிலிருந்து உருவாக்கும் ஏற்பாடுகள் ஆயின. (விளக்கத்திற்குப் பார்க்க 32:7-10) எனவே எந்தப் பெண்ணும் கருத்தரிப்பதோ அல்லது பிரசவிப்பதோ அல்லாஹ்வுக்குத் தெரியாமல் போகாது. இவ்வாறே ஒருவருடைய வயது அதிகமாவதோ அல்லது குறைவதோ அல்லாஹ் நிர்ணயித்த விதிமுறைகளின் படியே ஏற்பட்டு வரும். இவற்றை யாராலும் மாற்றி அமைக்க முடியாது. மேலும் இவ்வாறு விதிமுறைகளை உருவாக்குவது அல்லாஹ்வுக்கு எளிதான விஷயமே ஆகும்
உதாரணத்திற்கு ஒருவர் புகையிலையை பயன் படுத்துவது, புகைபிடித்தல், போதைப் பொருட்கள் போன்ற பழக்கத்திற்கு ஆளானால், அவருடைய ஆயுட் காலம் குறைந்து விடும். உடல் நலத்திற்கு உகந்த சத்துள்ள உணவு வகைகளை உட்கொண்டு தாம்பத்திய உறவு முறைகளில் கட்டுப்பாடோடு வாழ்ந்தால் அவருடைய ஆயுட்காலம் கூடி வரும். இதுதான் நிலைநிறுத்தப்பட்ட சட்டமாகும். இதை யாராவது மாற்ற முடியுமா? இப்படிப்பட்ட நிலைமாறா சட்டங்களைத் தான் லூஹுல் மஹ்பூஃஜ்- இல் உள்ள சட்டங்கள் என சொல்லப்படுகிறது.


وَمَا يَسْتَوِى ٱلْبَحْرَانِ هَٰذَا عَذْبٌۭ فُرَاتٌۭ سَآئِغٌۭ شَرَابُهُۥ وَهَٰذَا مِلْحٌ أُجَاجٌۭ ۖ وَمِن كُلٍّۢ تَأْكُلُونَ لَحْمًۭا طَرِيًّۭا وَتَسْتَخْرِجُونَ حِلْيَةًۭ تَلْبَسُونَهَا ۖ وَتَرَى ٱلْفُلْكَ فِيهِ مَوَاخِرَ لِتَبْتَغُوا۟ مِن فَضْلِهِۦ وَلَعَلَّكُمْ تَشْكُرُونَ.

35:12. அதுபோல பூமியில் ஓடும் நீரூற்றுகளைப் பற்றி கவனித்துப் பாருங்கள். சில இடங்களில் தண்ணீர் மிகவும் இனிமையாகவும், குடிப்பதற்கு சுவையாகவும் இருக்கிறது. சில இடங்களில் அதுவே உவர்ப்பாகவும் கசப்பாகவும் இருக்கிறது. இவை இரண்டும் சமமானவையே என நீங்கள் எண்ணுவீர்களா? இருந்தும் இனிமையும் கசப்பும் உள்ள கடல்கள் ஒன்றோடு ஒன்றாக இணைந்திருக்கும் போதும், அவற்றிற்கிடையே தடுப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது (பார்க்க 25:53) ஆனால் கடல்களிலிருந்து உண்பதற்கு சுவையான மீன்களையும், அணிந்து கொள்வதற்குச் சிறப்பான முத்து, பவளம் போன்ற ஆபரணங்களையும் எடுத்துக் கொள்கிறீர்கள். (பார்க்க 16:14) மேலும் உலகின் ஒரு பகுதியிலிருந்து மற்ற பகுதிக்கு எடுத்து செல்லும் மலைகளைப் போன்ற கப்பல்கள், கடலில் நீரை பிளந்து செல்வதையும் காண்கிறீர்கள். இவற்றை எல்லாம் ஏற்பாடு செய்த இறைவனின் அறிவுரைப்படி நடந்துகொள்ள மாட்டீர்களா?
நற்செயல்களைச் செய்து சிறப்பாக வாழும் சமுதாயம், தீய செயல்களைச் செய்து சீரழியும் சமுதாயத்திற்கு சமம் என்று கருதுவீர்களா?


يُولِجُ ٱلَّيْلَ فِى ٱلنَّهَارِ وَيُولِجُ ٱلنَّهَارَ فِى ٱلَّيْلِ وَسَخَّرَ ٱلشَّمْسَ وَٱلْقَمَرَ كُلٌّۭ يَجْرِى لِأَجَلٍۢ مُّسَمًّۭى ۚ ذَٰلِكُمُ ٱللَّهُ رَبُّكُمْ لَهُ ٱلْمُلْكُ ۚ وَٱلَّذِينَ تَدْعُونَ مِن دُونِهِۦ مَا يَمْلِكُونَ مِن قِطْمِيرٍ.

35:13. மேலும் உலகில் நிகழ்ந்து வரும் இரவு பகலைப் பற்றி சிந்தித்ததுண்டா? தினந்தோறும் எவ்வாறு இரவின் திரையை பகலின் வெளிச்சம் அகற்றிவிடுகிறது என்பதையும், பகலில் உள்ள வெளிச்சத்தை இரவு எவ்வாறு போர்த்திக் கொள்கிறது என்பதையும் கவனித்துப் பார்த்ததுண்டா? அது மட்டுமின்றி சூரியனையும் சந்திரனையும் நீங்கள் பயன்படுத்திக் கொள்ளும்படியாக படைத்திருப்பதை கவனித்தீர்களா? அவை எல்லாம் மிகத் துல்லியமாக இறைக் கட்டளைப்படி செயல்பட்டு வருவதால் தான், நாட் கணக்கையும், மாதங்கள், வருடங்கள் என்ற கணக்குகளையும் உங்களால் சரியாக கணிக்க முடிகிறது. ஆக அகிலங்கள் அனைத்திலும், உங்கள் இறைவனாகிய அல்லாஹ்வின் அதிகாரமே செயல்பட்டு வரும்போது, மனிதனும் அவனுடைய வழிகாட்டுதல்களுக்கு உட்பட்டே செயல்பட்டிருக்க வேண்டும். ஆனால் மனிதனோ அவன் காட்டிய வழிமுறைகளை விட்டுவிட்டு வேறு வழிமுறைகளை கடைப்பிடிக்கின்றான்.


إِن تَدْعُوهُمْ لَا يَسْمَعُوا۟ دُعَآءَكُمْ وَلَوْ سَمِعُوا۟ مَا ٱسْتَجَابُوا۟ لَكُمْ ۖ وَيَوْمَ ٱلْقِيَٰمَةِ يَكْفُرُونَ بِشِرْكِكُمْ ۚ وَلَا يُنَبِّئُكَ مِثْلُ خَبِيرٍۢ.

35:14. அதாவது மனிதன் இறந்து போன மகான்களையும், கற்பனை தெய்வங்களையும் இறைவனாக கருதுகிறான். இத்தனைக்கும் அவற்றில் எதுவும் இவனுடைய அழைப்புகளை கேட்கவோ அல்லது கேட்டாலும் பதிலளிக்கவோ அவற்றால் ஒருபோதும் முடியாது. எனவே மனித செயல்களின் விளைவுகள் தோற்றத்திற்கு வரும் கால கட்டத்திலும், அவை இவனை நிற்கதியாய் விட்டுவிடும். காரணம் அவற்றால் இவனுக்கு எந்த வகையிலும் உதவி செய்யவே முடியாது. மேலும் இந்த உண்மைகள் எல்லாம் இறைவழிகாட்டுதல்கள் மூலம்தான் உங்களுக்கு கிடைக்கும். இதைத் தவிர வேறு யாராலும் எந்த உண்மையையும் அறிவிக்க முடியாது
இத்தனைக்கும் மனித வாழ்வு என்று எடுத்துக்கொண்டால் அவனுடைய சுவாசமே அல்லாஹ்வின் ஏற்பாடுகளைக் கொண்டே இருக்கிறது. அவன் உயிர் வாழ்வதற்குத் தேவையான பிராணவாயு, தண்ணீர் மற்றும் உணவு வகைகள் யாவும் அல்லாஹ்வின் ஏற்பாட்டைக் கொண்டு தான் கிடைக்கின்றன.


۞ يَٰٓأَيُّهَا ٱلنَّاسُ أَنتُمُ ٱلْفُقَرَآءُ إِلَى ٱللَّهِ ۖ وَٱللَّهُ هُوَ ٱلْغَنِىُّ ٱلْحَمِيدُ.

35:15. ஓ மனித இனமே! வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் அல்லாஹ்வின் உதவியை நாடி இருக்கும் நீ, எந்த தேவையும் இல்லாத, எல்லா போற்றுதலுக்கும் உரிய அல்லாஹ்வின் வழிகாட்டுதலுக்கு இணங்கி செயல்பட மாட்டாயா? அல்லாஹ்வோ எந்த தேவையுமற்றவனாக இருக்கின்றானே! அவனுடைய செயல்திட்டங்கள் யாவும போற்றுதலுக்கு உரியவையாக இருக்கின்றதே!


إِن يَشَأْ يُذْهِبْكُمْ وَيَأْتِ بِخَلْقٍۢ جَدِيدٍۢ.

35:16. உங்களை போக்கி விட்டு வேறொரு புதிய படைப்பை கொண்டுவர அல்லாஹ்வின் செயல்திட்டம் இருந்தால், அதை அவனால் எளிதாக செய்ய முடியுமே! அத்தகைய வல்லமை உடையவன் தானே அல்லாஹ்? இதை அறிந்து கொள்ள வேண்டாமா?


وَمَا ذَٰلِكَ عَلَى ٱللَّهِ بِعَزِيزٍۢ.

35:17. இவ்வாறு மாற்று படைப்புகளை கொண்டுவருவது அல்லாஹ்வுக்கு கஷ்டமான காரியமே அல்ல என்பதை நீங்கள் அறியவேண்டாமா?
எனவே நீங்கள் எப்போதும் இறைவன் நிர்ணயித்த “மனித செயல்களுக்கேற்ற இறுதி விளைவுகள்” என்ற விதிமுறையை மனதில் கொண்டு செயலாற்றுங்கள். இதை விட்டுவிட்டு நம் பாவங்களை இன்னார் சுமப்பார் என்றோ அல்லது இன்னார் நமக்கு பரிந்துரை செய்வார் என்ற தைரியத்திலோ தம் மன இச்சைப்படி செயல்படாதீர்கள். ஏனெனில்


وَلَا تَزِرُ وَازِرَةٌۭ وِزْرَ أُخْرَىٰ ۚ وَإِن تَدْعُ مُثْقَلَةٌ إِلَىٰ حِمْلِهَا لَا يُحْمَلْ مِنْهُ شَىْءٌۭ وَلَوْ كَانَ ذَا قُرْبَىٰٓ ۗ إِنَّمَا تُنذِرُ ٱلَّذِينَ يَخْشَوْنَ رَبَّهُم بِٱلْغَيْبِ وَأَقَامُوا۟ ٱلصَّلَوٰةَ ۚ وَمَن تَزَكَّىٰ فَإِنَّمَا يَتَزَكَّىٰ لِنَفْسِهِۦ ۚ وَإِلَى ٱللَّهِ ٱلْمَصِيرُ.

35:18. ஒருவர் செய்யும் செயல்களின் விளைவுகளை பிரிதொருவர் சுமக்க முடியாது. யாராவது பாவச் சுமைகளின் கீழ் சிக்கிக்கொண்டால் அவர் மற்றவரை அழைத்து தன் சுமையின் ஒரு பகுதியையாவது சுமக்க அழைத்தாலும், அப்படி பாவச் சுமைகளில் சிறிதளவு கூட வேறு யாராலும் பங்கு போட்டுக் கொள்ள முடியாது. இறைவனின் இந்த சட்டத்திற்கு அஞ்சி இறைக் கொள்கை கோட்பாடுகளில் நிலைத்திருந்து செயல்படுபவர்களுக்கு மட்டும்தான் உங்களுடைய முன்னெச்சரிக்கை பலனளிக்கும். மேலும் எவர் தீய பழக்க வழக்கங்களிலிருந்து விடுபட்டு நேரானப் பாதையின் பக்கம் வருகிறாரோ, அவர்களுக்கே அதன் பலன்கள் கிடைக்கும். ஏனெனில் அவரவர் செய்து வரும் செயல்களின் விளைவுகள் யாவும் அல்லாஹ் நிர்ணயித்த இலக்கை நோக்கியே செல்கின்றன.


وَمَا يَسْتَوِى ٱلْأَعْمَىٰ وَٱلْبَصِيرُ.

35:19. எனவே மூட நம்பிக்கையில் குருட்டுத்தனமாக வாழ்பவர்கள் ஒரு பக்கம். இறை வழிகாட்டுதலை முன்வைத்து சிந்தித்து செயலாற்றுபவர்கள் மறுபக்கம். இவ்விருவரும் சமமாவார்களா?


وَلَا ٱلظُّلُمَٰتُ وَلَا ٱلنُّورُ.

35:20. அதே போல் முன்னோர்களின் வழிப்பாடு என்ற இருளில் வாழ்பவர்கள் ஒரு புறம். இறைவழிகாட்டுதலின் ஒளியில் வாழ்பவர்கள் மறு பக்கம். இவ்விருவரும் சமமாவார்களா?.


وَلَا ٱلظِّلُّ وَلَا ٱلْحَرُورُ.

35:21. அதே போல் மூட நம்பிக்கையில் சிக்கி வெயிலில் வாடுபவனும், இறைவழிகாட்டுதல் என்ற நிழலின் கீழ் சுகமாக வாழ்பவனும் சமமாவார்களா?


وَمَا يَسْتَوِى ٱلْأَحْيَآءُ وَلَا ٱلْأَمْوَٰتُ ۚ إِنَّ ٱللَّهَ يُسْمِعُ مَن يَشَآءُ ۖ وَمَآ أَنتَ بِمُسْمِعٍۢ مَّن فِى ٱلْقُبُورِ.

35:22. மேலும் சிறந்த முறையில் செயலாற்றும் ஜீவனுள்ள வாழ்க்கையை வாழ்பவர்களும், எதையும் சிந்திக்காமல் நடைபிணமாக வாழ்பவர்களும் சமமாவார்களா? இப்படியாக இறைவன், இறைவழிகாட்டுதலைப் பெற நாடி வருபவர்களைத்தான் செவியேற்க செய்கிறான். எனவே நடைபிணமாக வாழ நாடுபவர்களை நீர் கேட்கச் செய்ய முடியாது.
அதாவது சிந்தித்து செயலாற்றும் பகுத்தறிவு உடையவர்களுக்கே இறைவன் செவியுறச் செய்கிறான். இதுவே இறைவனின் நாட்டமாகும்.


إِنْ أَنتَ إِلَّا نَذِيرٌ.

35:23. இறைவழிகாட்டுதலை எடுத்துரைப்பவரே! தவறான செயல்களால் ஏற்படும் விபரீத விளைவுகளைப் பற்றி எடுத்துரைத்து முன்னெச்சரிக்கை செய்வதே உம் பணியாகும்.
அவற்றை ஏற்று நடப்பதும நடக்காததும் அவரவர் விருப்பமாகும் (பார்க்க 18:29)


إِنَّآ أَرْسَلْنَٰكَ بِٱلْحَقِّ بَشِيرًۭا وَنَذِيرًۭا ۚ وَإِن مِّنْ أُمَّةٍ إِلَّا خَلَا فِيهَا نَذِيرٌۭ.

35:24. இறைவழிகாட்டுதலை எடுத்துரைப்பவரே! மனிதனின் சிறப்பான வாழ்விற்கு சரியான வழியை உலக மக்களுக்கு எடுத்துக் கூறுவதற்காகவே உம்மை நாம் அனுப்பி இருக்கிறோம். அவற்றை ஏற்று நடப்பவர்களுக்கு கிடைக்கவிருக்கும் சிறப்பான வாழ்க்கைப் பற்றிய நற்செய்தியை எடுத்துக் கூறுவதற்காகவும், அவற்றிற்கு எதிராக செயல்படுபவர்களுக்கு ஏற்படவிருக்கும் தீய விளைவுகளைப் பற்றி முன்னெச்சரிக்கை செய்வதும் உம் பணியாகும். இவ்வாறு இறைத் தூதர்களை அனுப்புவது புதிதான ஒன்றல்ல. உலகிலுள்ள எல்லா பகுதி மக்களுக்கும் இத்தகைய எச்சரிக்கை செய்திகள் இறைவன் புறத்திலிருந்து வந்தே இருக்கின்றன. (மேலும் பார்க்க 14:4)


وَإِن يُكَذِّبُوكَ فَقَدْ كَذَّبَ ٱلَّذِينَ مِن قَبْلِهِمْ جَآءَتْهُمْ رُسُلُهُم بِٱلْبَيِّنَٰتِ وَبِٱلزُّبُرِ وَبِٱلْكِتَٰبِ ٱلْمُنِيرِ.

35:25. மேலும் உம்முடைய அறிவுரைகளை அவர்கள் புறக்கணித்தால், அதைப் பற்றி விசனப்படாதீர். ஏனெனில் இப்படி அவர்கள் பொய்ப்பிப்பது புதிதான ஒன்றல்ல. உமக்கு முன் வந்த இறைத்தூதர்களும் தத்தம் சமூகத்தவர்களிடம் தெளிவான ஆதாரப்பூர்வமான வழிகாட்டுதல்களையே எடுத்துரைத்தனர். அவை யாவும் அவர்களுடைய ஒளிமயமான வாழ்விற்கு சிறந்த வழிமுறையாகத் தான் இருந்தன. இருப்பினும் அவற்றை அவர்கள் புறக்கணித்தனர்.


ثُمَّ أَخَذْتُ ٱلَّذِينَ كَفَرُوا۟ ۖ فَكَيْفَ كَانَ نَكِيرِ.

35:26. அதன்பின் அவர்கள் நம் அறிவுரைகளை நிராகரித்து, தவறான செயல்களை தொடர்ந்து செய்து வந்ததால் நாம் நிர்ணயித்த “மனித செயல்களுக்கேற்ற இறுதி விளைவுகள்” என்ற பிடியில் சிக்கிக் கொண்டனர். அந்த வேதனைகள் எவ்வாறு இருந்தது என்பதை உலகமே பார்த்துக் கொண்டது.
இவையாவும் திடீர் திருப்பங்கள் என்ற அடிப்படையில் உருவாவதில்லை. மனித செயல்களுக்கும் அவற்றின் விளைவுகள் தோற்றத்திற்கு வருவதற்கும் இடைவெளி காலம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே அந்த விளைவுகள் அவர்கள் அறியா வண்ணம் ஏற்பட்டுக் கொண்டிருக்கும். இதைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டும் என்றால்


أَلَمْ تَرَ أَنَّ ٱللَّهَ أَنزَلَ مِنَ ٱلسَّمَآءِ مَآءًۭ فَأَخْرَجْنَا بِهِۦ ثَمَرَٰتٍۢ مُّخْتَلِفًا أَلْوَٰنُهَا ۚ وَمِنَ ٱلْجِبَالِ جُدَدٌۢ بِيضٌۭ وَحُمْرٌۭ مُّخْتَلِفٌ أَلْوَٰنُهَا وَغَرَابِيبُ سُودٌۭ.

35:27. அல்லாஹ்வின் செயல்திட்டப்படி வானத்திலிருந்து பொழியும் மழைநீர் ஒரே தன்மையை கொண்டதாக உள்ளது. ஆனால் அதைக் கொண்டு உருவாகும் கனிகள் பல்வேறு நிறங்களைக் கொண்டவையாக உள்ளன. அதே போல் பூமி உருவானதும் ஒரே மாதிரியான மூலப் பொருளிலிருந்துதான். ஆனால் அவற்றில் உருவாகியுள்ள மலைகள் பல்வேறு நிறங்கள் உடையவையாக உள்ளன. அவற்றில் சில வெள்ளை நிறம், சிவப்பு நிறம், சுத்தக் கரிய நிறம் என பல்வேறு நிறங்களைக் கொண்ட மலைகள் இவ்வுலகில் இருப்பதையும், அவற்றில் பல்வேறு பாதைகள் உருவாகி இருப்பதையும் கவனித்துப் பார்க்கட்டும்.


وَمِنَ ٱلنَّاسِ وَٱلدَّوَآبِّ وَٱلْأَنْعَٰمِ مُخْتَلِفٌ أَلْوَٰنُهُۥ كَذَٰلِكَ ۗ إِنَّمَا يَخْشَى ٱللَّهَ مِنْ عِبَادِهِ ٱلْعُلَمَٰٓؤُا۟ ۗ إِنَّ ٱللَّهَ عَزِيزٌ غَفُورٌ.

35:28. அதே போல மனித படைப்பிலும், ஊர்வனவற்றிலும், கால் நடைகளிலும் பல நிறங்களை உடையவையாக உள்ளன. பூமியிலுள்ள அனைத்து படைப்புகளையும் ஆராய்ந்து அவற்றின் பின்னணியில் செயல்படும் அல்லாஹ்வின் வல்லமையை அறிந்து, அவன் நிர்ணயித்த சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு நடப்பவர்கள் தாம் "உலமா" எனும் விஞ்ஞானிகள் ஆவர். ஏனெனில் சிந்தித்து செயலாற்றுபவர்கள் தாம் அல்லாஹ்வின் வல்லமையைப் பற்றியும், அவை அனைத்தும் எந்த அளவுக்கு பாதுகாப்பு அளிப்பதாக உள்ளன என்பதையும் அறிவார்கள். (மேலும் பார்க்க 3:190-191)
ஆக உலக படைப்புகளில் உள்ள நிறங்கள் மற்றும் தன்மைகளின் வேற்றுமைகள், தானே உருவானவை அல்ல. மாறாக இறைவனின் செயல்திட்டப்படி உருவானவை. எனினும் அவை அனைத்தும் இறைவனுக்கு கட்டுப்பட்டு நடப்பதால் அவை மிக அழகாக தோன்றுகின்றன. மேலும் அவை அனைத்தும் ஒருங்கிணைந்து செயல்படுவதால் தான் மனித வாழ்க்கையை அலங்கரிக்கின்றன. அதே போல மனிதனிடத்தில் உள்ள ஆற்றல்களும் பலப் பிரிவுகளாக இருக்கும். உதாரணத்திற்கு விவசாம், நெசவு, கல்வி முதலியன. ஆனால் அவை அனைத்தும் ஒன்றிணைந்தால் தான் சமுதாயம் என உருவாகும். எனவே இதில் உயர்வு தாழ்வு இருப்பது முறையாகாது.


إِنَّ ٱلَّذِينَ يَتْلُونَ كِتَٰبَ ٱللَّهِ وَأَقَامُوا۟ ٱلصَّلَوٰةَ وَأَنفَقُوا۟ مِمَّا رَزَقْنَٰهُمْ سِرًّۭا وَعَلَانِيَةًۭ يَرْجُونَ تِجَٰرَةًۭ لَّن تَبُورَ.

35:29. எந்தச் சமுதாயம் இறைவனின் வேத அறிவுரைகளை படிக்க வேண்டிய முறையில் படித்து, (2:121) அவற்றை மக்கள் அனைவரும் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை போதிக்கும் ஸலாத் முறையை நிலைநிறுத்தி (29:45), சமுதாய மேம்பாட்டிற்காகத் தம்மாலான உதவிகளை மறைமுகமாகவோ வெளிப்படையாகவோ செய்து வருமோ, அது தன் இறைவனிடம் செய்துகொண்ட வியாபாரத்தில் பேராதரவைப் பெற்றுக்கொள்ளும். (மேலும் பார்க்க 9:111, 61:10-11, 62:10-11)


لِيُوَفِّيَهُمْ أُجُورَهُمْ وَيَزِيدَهُم مِّن فَضْلِهِۦٓ ۚ إِنَّهُۥ غَفُورٌۭ شَكُورٌۭ.

35:30. இறைவனிடம் செய்துகொண்ட இந்த வியாபார ஒப்பந்தப்படி, இத்தகையவர்களுக்கு நற்பலன்கள் பன்மடங்காகப் பெருகி வரும். இறைவனிடமிருந்து கிடைக்கும் அருட்கொடைகள் கூடிக் கொண்டே செல்லுமே ஒழிய, ஒருபோதும் எந்தக் குறைவும் ஏற்படாது. காரணம் அல்லாஹ்வின் செயல்திட்டங்கள் யாவும் அனைத்து தரப்பு மக்களுக்கும் பாதுகாப்பு அளிப்பதாகவும் அவற்றின் படி செயல்படுவோருக்கு நன்மை அளிப்பதாகவும் உள்ளன.


وَٱلَّذِىٓ أَوْحَيْنَآ إِلَيْكَ مِنَ ٱلْكِتَٰبِ هُوَ ٱلْحَقُّ مُصَدِّقًۭا لِّمَا بَيْنَ يَدَيْهِ ۗ إِنَّ ٱللَّهَ بِعِبَادِهِۦ لَخَبِيرٌۢ بَصِيرٌۭ.

35:31. இதற்குமுன் வாழ்ந்த மக்களுக்கும் இறைவன் புறத்திலிருந்து இதே போன்ற வாக்குறுதிகள் அளிக்கப்பட்டன. (பார்க்க 2:83, 9:111) அதே அடிப்படையில் நபியே உமக்கும் வேத அறிவுரைகள் அளிக்கப்படுகின்றன. இதிலுள்ள படி நற்செயல்களை செய்பவர்களுக்கு நன்மைகள் பல கிடைப்பது சர்வ நிச்சயம். மேலும் திருக்குர்ஆன் எனும் இவ்வேதம் அவர்களிடம் உள்ள வேத உண்மைகளையே எடுத்துரைக்கிறது. ஆக அல்லாஹ்வின் அறிவுரைகளுக்கு கட்டுப்பட்டு நடப்பவர்கள் யார் என்பது மிகத் துல்லியமாக அறிந்துகொள்ளும் வல்லமைப் உடையவன் தான் அல்லாஹ்.இதை நினைவில் கொள்ளுங்கள்.
இப்படியாக அல்லாஹ்வின் புறத்திலிருந்து இறக்கி அருளப்படுகின்ற வேத அறிவுரைகள் முழுமையாக்கப்பட்டு (5:3) பத்திரமாகப் பாதுகாக்கப்பட்டு உள்ளது (15:9)


ثُمَّ أَوْرَثْنَا ٱلْكِتَٰبَ ٱلَّذِينَ ٱصْطَفَيْنَا مِنْ عِبَادِنَا ۖ فَمِنْهُمْ ظَالِمٌۭ لِّنَفْسِهِۦ وَمِنْهُم مُّقْتَصِدٌۭ وَمِنْهُمْ سَابِقٌۢ بِٱلْخَيْرَٰتِ بِإِذْنِ ٱللَّهِ ۚ ذَٰلِكَ هُوَ ٱلْفَضْلُ ٱلْكَبِيرُ.

35:32. இவ்வாறு வேத அறிவுரைகளுக்குக் கட்டுப்பட்டு வாழ்பவர்களையே இவ்வேதத்தை கட்டிக்காக்கும் வாரிசுதாரர்களாக ஆக்கினோம். ஆனால் அவர்களில் சிலர் இவற்றை ஏற்காமல் தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொள்பவர்களும் இருக்கிறார்கள். சிலர் வேத அறிவுரைகளின்படி நடுநிலைமை வகித்து செயல்படுபவர்களும் இருக்கிறார்கள். மற்றும் சிலர் அல்லாஹ்வின் கட்டளைக்கு இணங்கி ஆக்கப்பூர்வமான நற்செயல்களை செய்வதில் முன்னிலை வகிப்பவர்களும் இருக்கிறார்கள். இவர்களுக்கே மகத்தான வெற்றி கிடைக்கும். (பார்க்க 2:143)


جَنَّٰتُ عَدْنٍۢ يَدْخُلُونَهَا يُحَلَّوْنَ فِيهَا مِنْ أَسَاوِرَ مِن ذَهَبٍۢ وَلُؤْلُؤًۭا ۖ وَلِبَاسُهُمْ فِيهَا حَرِيرٌۭ.

35:33. இத்தகையவர்கள் செய்து வரும் நற்செயல்களின் பலனாக அவர்களுடைய நாடு மிகவும் செழிப்பானதாக மாறிவரும். எதுவரையில் இவ்வாறு செயல்பட்டு வருவார்களோ அதுவரையில் இச்சுவன வாழ்வு நீடிக்கும். (பார்க்க 8:53) மேலும் அவர்கள் ஆற்றிய நற்செயல்களின் அடையாளமாக பொன்னாடைகளும், முத்துக்கள் பதிக்கப்பட்ட மகுடங்களும் சூட்டப்படும்.


وَقَالُوا۟ ٱلْحَمْدُ لِلَّهِ ٱلَّذِىٓ أَذْهَبَ عَنَّا ٱلْحَزَنَ ۖ إِنَّ رَبَّنَا لَغَفُورٌۭ شَكُورٌ.

35:34. மேலும் அங்கு வாழும் மக்கள் அனைவரும், இறைவழிகாட்டுதலின் படி நடப்பதால் தங்களுக்குக் கிடைக்கின்ற பலன்களை கண்கூடாகப் பார்த்துக் கொள்வார்கள். “இதுநாள் வரையில் வாட்டி எடுத்த கவலைகளிலிருந்தும் விடுபடச் செய்த அல்லாஹ்வுக்கே பாராட்டும் போற்றுதல்களும்” என்று எங்கு நோக்கினும் ஒலித்துக் கொண்டே இருக்கும். காரணம் அல்லாஹ்வின் வழிகாட்டுதலை பின்பற்றுவதால் எல்லா வகையான ஆபத்துகளிலிருந்தும் பாதுகாப்பு கிடைத்துவிடுகிறது.


ٱلَّذِىٓ أَحَلَّنَا دَارَ ٱلْمُقَامَةِ مِن فَضْلِهِۦ لَا يَمَسُّنَا فِيهَا نَصَبٌۭ وَلَا يَمَسُّنَا فِيهَا لُغُوبٌۭ.

35:35. அதுமட்டுமின்றி இறைவனின் ஆட்சி நடைபெறும் நாட்டில் பிறக்க வாய்ப்பு கிடைத்ததற்காகவும், தம் வாழ்வாதார பிரச்னைகள் எதுவுமின்றி சிறந்த முறையில் நிலையான வாழ்வை பெற்றதற்காகவும் இந்த புகழாரம் ஒலிக்கும். (பார்க்க 20:124) இதே போன்று மனநிறைவான வாழ்வு மரணத்திற்குப் பின்பும் தொடரும்.


وَٱلَّذِينَ كَفَرُوا۟ لَهُمْ نَارُ جَهَنَّمَ لَا يُقْضَىٰ عَلَيْهِمْ فَيَمُوتُوا۟ وَلَا يُخَفَّفُ عَنْهُم مِّنْ عَذَابِهَا ۚ كَذَٰلِكَ نَجْزِى كُلَّ كَفُورٍۢ.

35:36. ஆனால் இறைவழிகாட்டுதலை ஏற்க மறுத்து வாழ்பவர்களின் நிலை அந்தோ பரிதாபம்! அவர்களுடைய தவறான செயல்களால் அவர்களை துயரங்கள் மிக்க வேதனைகள் நெருங்குகின்றன. இந்த வேதனைகள் அவர்களுடைய மரணத்தோடு முடிந்து விடுகின்றதா என்றால் அதுவுமில்லை. அங்கு அவர்களுக்கு வேதனைகள் மென்மேலும கடுமையானதாக இருக்கும். இவையாவும் அவர்களுடைய தவறான செயல்களுக்கு கிடைக்கின்ற தண்டனைகளாகும்.


وَهُمْ يَصْطَرِخُونَ فِيهَا رَبَّنَآ أَخْرِجْنَا نَعْمَلْ صَٰلِحًا غَيْرَ ٱلَّذِى كُنَّا نَعْمَلُ ۚ أَوَلَمْ نُعَمِّرْكُم مَّا يَتَذَكَّرُ فِيهِ مَن تَذَكَّرَ وَجَآءَكُمُ ٱلنَّذِيرُ ۖ فَذُوقُوا۟ فَمَا لِلظَّٰلِمِينَ مِن نَّصِيرٍ.

35:37. மேலும் அந்த நரக வேதனைகளை தாங்க முடியாமல் தம்மை அதிலிருந்து வெளியேற்றிவிட இறைவனிடம் இரைஞ்சிக் கொண்டிருப்பார்கள். தமக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு அளித்தால், அவர்கள் வழக்கமாக செய்து வந்த தீய செயல்களை விட்டுவிடுவதாகவும், இறைவனின் அறிவுரைப்படி நற்செயல்களை செய்வதாகவும் வேண்டிக் கொண்டிருப்பார்கள். ஆனால் முன்நோக்கி செல்லும் காலத்தின் சுழல் பின்னுக்கு தள்ளப்படுமா? ஒருபோதும் முடியாது. எனவே உங்களுக்கு கிடைத்த நீண்ட ஆயுளின் வாய்ப்பினை நீங்கள் நழுவ விட்டீர்கள். உங்களிடம் முன்னெச்சரிக்கை செய்யும் தூதர்களும் வந்தார்கள். ஆனால் நீங்களோ அவர்களுடைய அறிவுரைகளை மதிக்கவில்லை. எனவே உங்களுக்குரிய வேதனைகளை சுவையுங்கள். மேலும் அநியாய அக்கிரமங்களை செய்தவர்களுக்கு யாருடைய உதவியும் கிடைக்க வாய்ப்பில்லை. இதுவே இறைவனின் பதிலாக இருக்கும்.
உலக மக்களே! நாம் யாருக்கும் தெரியாதவாறு தீய செயல்களை செய்தால் அவை அல்லாஹ்வுக்கு தெரியமல் போய்விடும் என்று எண்ணிக் கொண்டிருக்கிறீர்களா? உண்மை அதுவன்று.


إِنَّ ٱللَّهَ عَٰلِمُ غَيْبِ ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضِ ۚ إِنَّهُۥ عَلِيمٌۢ بِذَاتِ ٱلصُّدُورِ.

35:38. அகிலங்களிலும் பூமியிலும் மறைந்து கிடக்கும் அத்தனை உண்மைகளையும் அறிந்து கொள்ளும் பேராற்றல் உடையவன் தான் அல்லாஹ். நிலைமை இவ்வாறிருக்க மனிதனின் உள்ளங்களில் ஊடுருவிச் செல்லும் எண்ணங்களும் அல்லாஹ்வுக்கு தெரியாமல் போவதில்லை.


هُوَ ٱلَّذِى جَعَلَكُمْ خَلَٰٓئِفَ فِى ٱلْأَرْضِ ۚ فَمَن كَفَرَ فَعَلَيْهِ كُفْرُهُۥ ۖ وَلَا يَزِيدُ ٱلْكَٰفِرِينَ كُفْرُهُمْ عِندَ رَبِّهِمْ إِلَّا مَقْتًۭا ۖ وَلَا يَزِيدُ ٱلْكَٰفِرِينَ كُفْرُهُمْ إِلَّا خَسَارًۭا.

35:39. மேலும் ஒரு விஷயத்தை அறிந்துக் கொள்ளுங்கள். இறைவனின் செயல்திட்டப்படியே மனிதனுக்கு எல்லா ஆற்றல்களையும் அளித்து (பார்க்க 32:9) இவ்வுலகை வழிநடத்திச் செல்லும் பொறுப்பை (Governance) வழங்கினான். மேலும் நேர்வழி பெறுவதற்கு குர்ஆனையும் அருளினான். எனவே எந்தச் சமுதாயம் அந்த பொறுப்புகளை தட்டிக் கழிக்குமோ, அவற்றின் விளைவுகள் அவர்களுக்கே வந்தடையும். எனவே அவர்களுடைய பொறுப்பில்லா போக்கு, அவர்களை தீய செயல்களையே அதிகரிக்கச் செய்யும். மேலும் இறைவனின் நியதிப்படி அவர்கள் பொது மக்களின் வெறுப்புக்கும் ஆளாவார்கள். இதனால் அவர்களுக்குத் தான் பெருத்த நஷ்டங்கள் ஏற்படும்.


قُلْ أَرَءَيْتُمْ شُرَكَآءَكُمُ ٱلَّذِينَ تَدْعُونَ مِن دُونِ ٱللَّهِ أَرُونِى مَاذَا خَلَقُوا۟ مِنَ ٱلْأَرْضِ أَمْ لَهُمْ شِرْكٌۭ فِى ٱلسَّمَٰوَٰتِ أَمْ ءَاتَيْنَٰهُمْ كِتَٰبًۭا فَهُمْ عَلَىٰ بَيِّنَتٍۢ مِّنْهُ ۚ بَلْ إِن يَعِدُ ٱلظَّٰلِمُونَ بَعْضُهُم بَعْضًا إِلَّا غُرُورًا.

35:40. இறைவழிகாட்டுதலை எடுத்துரைப்பவரே! அல்லாஹ்வை விட்டுவிட்டு, அவனுக்கு இணையாக நீங்கள் உருவாக்கி வைத்துள்ள கற்பனை தெய்வங்களின் நிலை என்னவென்பதை எப்போதாவது சிந்தித்துப் பார்த்ததுண்டா? அவை பூமியில் உள்ள படைப்புகளை படைக்கும் திறன் கொண்டவையா? அல்லது அகிலங்களிலுள்ள படைப்புகளில் அவற்றிற்கு பங்கு ஏதேனும் உண்டா?” என்று அவர்களிடம் கேளுங்கள். அவற்றை வணங்கி வரச் சொல்லி இறைவனிடமிருந்து கட்டளை ஏதாவது வந்துள்ளதா என்றும் கேளுங்கள். அப்படி எதுவுமே இல்லையே. வெறும் யூகங்களின் அடிப்படையில் தன்னிச்சையாக செயல்படுவதால் அவர்கள் அநியாயமாக செயல்படுபவர்களாகவே ஆகிவிடுகிறார்கள். அவர்களில் சிலர் சிலரை ஏமாற்றியும் வருகிறார்கள். இறுதியில் அவர்களுக்குக் கிடைப்பதெல்லாம் வெறும் ஏமாற்றமே அன்றி வேறு எதுவும் இருக்காது.


۞ إِنَّ ٱللَّهَ يُمْسِكُ ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضَ أَن تَزُولَا ۚ وَلَئِن زَالَتَآ إِنْ أَمْسَكَهُمَا مِنْ أَحَدٍۢ مِّنۢ بَعْدِهِۦٓ ۚ إِنَّهُۥ كَانَ حَلِيمًا غَفُورًۭا.

35:41. அகிலங்களின் படைப்புகளை அவர்கள் கவனித்து பார்த்திருந்தால் அவர்களுக்கு உண்மை விளங்கி இருக்கும். வானங்களுக்கும் பூமிக்கும் இடையே உள்ள இடைவெளி சற்றும் மாறுபடாதவாறு தடுத்துவருவது அல்லாஹ்வே ஆவான். அவர்களுடைய கற்பனை தெய்வங்கள் அல்ல. வானங்களும் பூமியும் விலகிவிட்டால் அவற்றை தடுத்து நிறுத்தும் சக்தி வேறு யாருக்கும் இல்லை. அல்லாஹ்வின் கட்டுக் கோப்பான செயல்திட்டங்கள் யாவும் மிகவும் நிதானத்துடனும், அனைவருக்கும் பாதுகாப்பு அளிக்கும் வகையிலும் செயல்பட்டு வருகின்றன.
இதானல் தான் மனிதனால் இங்கு உயிர் வாழ முடிகிறது. உண்மை இவ்வாறு இருந்தும் மனிதனுக்கு பிரச்னைகள் ஏற்பட்டால் ஒரு விதமாகவும், அவை தீர்ந்துவிட்டால் வேறு விதமாகவும் செயல்படுகிறான்.


وَأَقْسَمُوا۟ بِٱللَّهِ جَهْدَ أَيْمَٰنِهِمْ لَئِن جَآءَهُمْ نَذِيرٌۭ لَّيَكُونُنَّ أَهْدَىٰ مِنْ إِحْدَى ٱلْأُمَمِ ۖ فَلَمَّا جَآءَهُمْ نَذِيرٌۭ مَّا زَادَهُمْ إِلَّا نُفُورًا.

35:42. அவர்கள் இதற்கு முன், “முன்னெச்சரிக்கை செய்பவர் வந்தால் மற்ற சமூகத்தவர்களைப் போன்று நடக்கமாட்டோம். நாங்கள் அவருடைய அறிவுரைகளை ஏற்று நிச்சயமாக பின்பற்றுவோம் என்று அல்லாஹ்வின் மீது ஆணையிட்டு கூறி வந்தார்கள். ஆனால் அத்தகைய முன்னெச்சரிக்கை செய்பவர் வந்த போது, அவர்களுக்கு வெறுப்பைத் தவிர வேறெதையும் அதிகமாக்கவில்லை.


ٱسْتِكْبَارًۭا فِى ٱلْأَرْضِ وَمَكْرَ ٱلسَّيِّئِ ۚ وَلَا يَحِيقُ ٱلْمَكْرُ ٱلسَّيِّئُ إِلَّا بِأَهْلِهِۦ ۚ فَهَلْ يَنظُرُونَ إِلَّا سُنَّتَ ٱلْأَوَّلِينَ ۚ فَلَن تَجِدَ لِسُنَّتِ ٱللَّهِ تَبْدِيلًۭا ۖ وَلَن تَجِدَ لِسُنَّتِ ٱللَّهِ تَحْوِيلًا.

35:43. அதுமட்டுமின்றி அவர்கள் பெருமை அடித்துக்கொண்டு நாட்டில் தீய செயல்களை செய்து வந்தனர். இறைத்தூதர் கொண்டு வரும் செயல் திட்டங்களை முறியடிக்க பல்வேறு சூழ்ச்சிகளையே செய்து வந்தார்கள். அவ்வாறு அவர்கள் செய்து வரும் சூழ்ச்சிகளே அவர்களை சூழ்ந்து கொள்ளும் என்று அவர்களுக்கு தெரியாமல் போயிற்று. இத்தகையவர்களின் முன்னோர்களுக்கு ஏற்பட்ட அழிவுகளையே இவர்களும் எதிர் பார்க்கின்றனரா? அவ்வாறு அவர்கள் எதிர் பார்த்தால் அவர்களுக்கும் அழிவு ஏற்படுவது சர்வ நிச்சயம் என்பதை அறிவித்துவிடுங்கள். ஏனெனில் அல்லாஹ்வின் சட்ட விதிமுறைகளில் ஒருபோதும் மாற்றம் ஏற்படாது. எனவே அவர்கள் நேர்வழி பெறுவது என்பதும் நடக்காது.


أَوَلَمْ يَسِيرُوا۟ فِى ٱلْأَرْضِ فَيَنظُرُوا۟ كَيْفَ كَانَ عَٰقِبَةُ ٱلَّذِينَ مِن قَبْلِهِمْ وَكَانُوٓا۟ أَشَدَّ مِنْهُمْ قُوَّةًۭ ۚ وَمَا كَانَ ٱللَّهُ لِيُعْجِزَهُۥ مِن شَىْءٍۢ فِى ٱلسَّمَٰوَٰتِ وَلَا فِى ٱلْأَرْضِ ۚ إِنَّهُۥ كَانَ عَلِيمًۭا قَدِيرًۭا.

35:44. இவர்களுக்கு முன்னிருந்தோர்களுக்கு ஏற்பட்ட கதி என்னவென்பதை அறிந்துகொள்ள இவர்கள் உலகில் பல்வேறு இடங்களுக்கு சென்று பார்ப்பதில்லையா? அவ்வாறு அழிந்து போனவர்கள் இவர்களைவிட பன் மடங்கு பொருளாதார ரீதியாகவும், தொழில் ரீதியாகவும் பலம் பொருந்தியவர்களாக இருந்தனர். அவர்களும் அல்லாஹ்வின் அறிவுரைகளுக்கு மாற்றமாக செயல்பட்டதால் அழிந்து போனார்கள். ஆக அப்போதும் சரி இப்போதும் சரி; அல்லாஹ்வின் நடைமுறை சட்டத்தை யாராலும் மாற்றி அமைக்க முடியாது. எனவே நிர்ணயித்த விதிமுறைகளின்படி அழிவுகள் ஏற்படுவது நிச்சயம். ஆக அனைத்தையும் அறிந்து கொள்ளும் பேராற்றலும் வல்லமையும் அல்லாஹ்வுக்கு உண்டு என்பதை அவர்கள் கவனத்தில் கொள்ளட்டும்.
அல்லாஹ்வின் அறிவுரை என்னவென்றால் நாட்டில் கிடைக்கும் வாழ்வாதார வசதிகளை அனைத்து தரப்பு மக்களுக்கும் போய் சேர வழி செய்ய வேண்டும். கூடவே மக்கள் அனைவரும் ஒழுக்க மாண்புகளுடன் சிறப்பாக வாழ்வதற்காக, இறை வழிகாட்டுதல்களை கற்றுத் தரவேண்டும். அப்போது தான் ஒவ்வொரு குடிமகனும் தான் செய்ய வேண்டிய கடமை என்ன? செய்யக் கூடாதவை எவை என்பதை அறிந்து நாட்டின் வளர்ச்சிக்காக பாடுபடுவான். இவை இரண்டில் எதை விட்டுவிட்டாலும் நாடு அழிவை நோக்கியே சென்றுவிடும்.


وَلَوْ يُؤَاخِذُ ٱللَّهُ ٱلنَّاسَ بِمَا كَسَبُوا۟ مَا تَرَكَ عَلَىٰ ظَهْرِهَا مِن دَآبَّةٍۢ وَلَٰكِن يُؤَخِّرُهُمْ إِلَىٰٓ أَجَلٍۢ مُّسَمًّۭى ۖ فَإِذَا جَآءَ أَجَلُهُمْ فَإِنَّ ٱللَّهَ كَانَ بِعِبَادِهِۦ بَصِيرًۢا.

35:45. இந்த அழிவு உடனுக்குடன் ஏற்படுவதில்லை. இதற்காக கால அவகாசம் நிலை நிறுத்தப்பட்டுள்ளது. காரணம் மனிதர்கள் செய்யும் தீய செயல்களுக்கு உடனுக்குடன் தண்டனை அளிப்பதாக இருந்தால் பூமியில் யாரும் உயிர் வாழ முடியாது. எனவே தவறுகளிலிருந்து விடுபட்டு திருந்துவதற்கு தக்க வாய்ப்பு அளிக்கப்படுகிறது. அவர்களுக்கு அளித்த வாய்ப்பு முடிந்த உடன் அல்லாஹ்வின் நியதிப்படி அவர்களுக்கு அழிவு ஏற்படுவது நிச்சயம். (மேலும் பார்க்க 16:61)
அதாவது ஒரு சமுதாயமும் தவறான செயல்களை செய்து வரும்போது, காலப்போக்கில் சீரழிந்து அழிவை சந்திக்கும். அதே போல ஆக்கப்பூர்வமான நற்செயல்களை செய்யும் போது, அவற்றின் பலன்கள் நிர்ணயித்த கால அளவின்படியே கிடைத்து வரும். எதுவுமே திடீர் திருப்பங்கள் என்ற அடிப்படையில் நடைபெறாது. இதுவே அல்லாஹ்வின் நடைமுறை சட்டங்களாகும்.