بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ

34:0.அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் அறிவுரைப்படியே அனைத்துக் காரியங்களையும் செய்ய நாடுகிறேன். (பார்க்க 6:162)


ٱلْحَمْدُ لِلَّهِ ٱلَّذِى لَهُۥ مَا فِى ٱلسَّمَٰوَٰتِ وَمَا فِى ٱلْأَرْضِ وَلَهُ ٱلْحَمْدُ فِى ٱلْءَاخِرَةِ ۚ وَهُوَ ٱلْحَكِيمُ ٱلْخَبِيرُ.

34:1. அகிலங்களிலும் பூமியிலும் உள்ள அனைத்து படைப்புகளும், அவற்றின் அழகிய செயல்பாடுகளும் அல்லாஹ்வின் வல்லமையைப் போற்றி பாராட்டுவதாக விளங்குகின்றன. மேலும் அனைத்து படைப்புகளும் இறைவனின் திட்டங்களின் படி தம் இறுதி இலக்கை அடைவதை கவனித்துப் பார்க்கும் போதும், அவை யாவும் பாராட்டுதலுக்கும் போற்றுதலுக்கும் உரியவையாக உள்ளன.
அல்லாஹ்வின் செயல் திட்டங்கள் யாவும் முழு ஞானத்தின் அடிப்படையிலும், இங்கு நடப்பவற்றை நுணுக்கத்துடன் அறிந்து கொள்ளும் வல்லமையுடையதாகவும் உள்ளன என்பதை உறுதிப் படுத்துகின்றன.


يَعْلَمُ مَا يَلِجُ فِى ٱلْأَرْضِ وَمَا يَخْرُجُ مِنْهَا وَمَا يَنزِلُ مِنَ ٱلسَّمَآءِ وَمَا يَعْرُجُ فِيهَا ۚ وَهُوَ ٱلرَّحِيمُ ٱلْغَفُورُ.

34:2. மேலும் பூமிக்குள் நுழைவதும், அதன்பின் அதிலிருந்து தோற்றத்திற்கு வருவதும், வானத்திலிருந்து இறங்குவதும், மேலும் பூமியிலிருந்து வானத்தின் மீது ஏறிச் செல்வதும் அல்லாஹ்வுக்கு நன்கு தெரியும். அவனுடைய செயல்திட்டங்கள் யாவும் கருணையை பிரதிபலிப்பதாகவும் அனைத்தையும் பாதுகாப்பதாகவும் உள்ளன.


وَقَالَ ٱلَّذِينَ كَفَرُوا۟ لَا تَأْتِينَا ٱلسَّاعَةُ ۖ قُلْ بَلَىٰ وَرَبِّى لَتَأْتِيَنَّكُمْ عَٰلِمِ ٱلْغَيْبِ ۖ لَا يَعْزُبُ عَنْهُ مِثْقَالُ ذَرَّةٍۢ فِى ٱلسَّمَٰوَٰتِ وَلَا فِى ٱلْأَرْضِ وَلَآ أَصْغَرُ مِن ذَٰلِكَ وَلَآ أَكْبَرُ إِلَّا فِى كِتَٰبٍۢ مُّبِينٍۢ.

34:3. இதைப் பற்றியெல்லாம் சிந்தித்து பார்க்காமல் இறைவழிகாட்டுதலை ஏற்க மறுப்பவர்கள், “மனித செயல்களுக்கேற்ற இறுதி விளைவுகள்” என்ற சட்ட விதிமுறைகளை நிராகரிக்கிறார்கள். எனவே அத்தகைய விளைவுகளை சந்திக்க நேராது என கூறுகிறார்கள். ஆனால் அவை ஏற்படுவது சர்வ நிச்சயம் என்று அல்லாஹ்வின் நடைமுறை சட்டங்களை ஆதாராமாக வைத்து கூறுவதாக அறிவித்து விடுங்கள். இவ்வாறு நடக்கப் போவது அவர்களுக்கு புலப்படாமல் இருக்கலாம். ஆனால் திரைக்கு மறைவாக இருக்கும் அவ்விஷயங்கள் அல்லாஹ்வுக்கு தெரியும்.
காரணம் பிரபஞ்சம் அனைத்திலும் பூமியிலும் நடக்கின்ற ஒவ்வொரு சின்னசின்ன விஷயங்களையும் அறிந்துகொள்ளும் பேராற்றல் உடையவன் தான் அல்லாஹ். மேலும் அச்செயல்கள் அணுவை விட சிறியதாக அல்லது பெரியதாக இருப்பினும், அல்லாஹ்வின் பதிவேட்டில் பதிவு ஆகாமல் போகாது. இதை அவர்களிடம் எடுத்துரையுங்கள்.


لِّيَجْزِىَ ٱلَّذِينَ ءَامَنُوا۟ وَعَمِلُوا۟ ٱلصَّٰلِحَٰتِ ۚ أُو۟لَٰٓئِكَ لَهُم مَّغْفِرَةٌۭ وَرِزْقٌۭ كَرِيمٌۭ.

34:4. இத்தகைய செயல்திட்டங்கள் எதற்காக என்றால் அல்லாஹ்வின் வழிகாட்டுதலை ஏற்று ஆக்கப்பூர்வமான சமூக நலத் திட்டங்களைத் தீட்டி உழைப்பவர்களுக்கு பாதுகாப்பான நிம்மதியான வாழ்வு கிடைப்பதற்காகவே ஆகும். மேலும் அத்தகைய சமூகத்தாருக்கு கண்ணியமிக்க வாழ்வாதாரங்களையும் கிடைக்கச் செய்வதற்காகவே ஆகும்.
கண்ணியமான வாழ்வாதாரம் என்பதன் பொருள் யாதெனில் முறைப்படி உழைத்து பெற்றுக் கொள்கின்ற வாழ்க்கை வசதிகளாகும். அவ்வாறு இல்லாமல் அநியாய அக்கிரமங்களை செய்து செல்வங்களை ஈட்டிக் கொண்டால் சமுதாய சீர்கேடுகள் ஏற்பட்டு, பல துயரங்களை சந்திக்க நேரிடும். இத்தகைய விளைவுகள் ஏற்படுவதை யாராலும் தடுக்க முடியாது. இதுவே இறைவன் வகுத்துள்ள “மனிதச் செயல்களுக்கேற்ற இறுதி விளைவுகள்” என்ற சட்டமாகும். எனவே


وَٱلَّذِينَ سَعَوْ فِىٓ ءَايَٰتِنَا مُعَٰجِزِينَ أُو۟لَٰٓئِكَ لَهُمْ عَذَابٌۭ مِّن رِّجْزٍ أَلِيمٌۭ.

34:5. இறைவழிகாட்டுதலை ஏற்க மறுத்து தன்னிச்சையாக செயல்பட்டு, அழகிய சமுதாயம் உருவாக வேண்டும் என்று ஆயிரம்தான் முயன்றாலும் அது முடியவே முடியாது. அல்லாஹ் நிர்ணயித்துள்ள விளைவுகள் என்ற சட்டத்தை தம் விருப்பப்படி மாற்றி அமைத்துக் கொள்ள யாராலும் ஒருபோதும் முடியாது. எனவே அத்தகைய சமுதாயங்களுக்கு நோவினை செய்யும் விளைவுகளும் அறுவறுக்கத் தக்க நிலைமைகளும் ஏற்படுவதை தவிர்க்க முடியாமல் போய்விடும்.


وَيَرَى ٱلَّذِينَ أُوتُوا۟ ٱلْعِلْمَ ٱلَّذِىٓ أُنزِلَ إِلَيْكَ مِن رَّبِّكَ هُوَ ٱلْحَقَّ وَيَهْدِىٓ إِلَىٰ صِرَٰطِ ٱلْعَزِيزِ ٱلْحَمِيدِ.

34:6. மாறாக அறிவைப் பயன்படுத்தி சிந்தித்து செயலாற்றுவோர், இறைவன் புறத்திலிருந்து உம்மீது அருளப்படுகின்ற வேத அறிவுரைகள் யாவும் மனிதனின் சிறப்பான வாழ்விற்கு மிகச் சரியான பாதையைக் காட்டுகின்றன என்பதை அறிந்துகி கொளவார்கள். மேலும் அவை வல்லமை மிக்க போற்றுதலுக்குரிய இறைவனிடமிருந்து இறக்கி அருளப்படுகின்றன என்பதையும் அறிந்து கொள்வார்கள்.
அதாவது இறைவனின் அறிவுரைகளைப் படி நடந்தால் நடைபிணமாக வாழும் இச்சமுதாயத்தை சிறந்ததொரு ஜீவனுள்ள சமுதாயமாக உருவாக்கி சிறப்பாக வாழ முடியும் என்பதை அவர்கள் அறிந்து கொள்வார்கள். இப்படியாக இறைவன் காட்டும் வலிமை மிக்க வழிமுறைகள் போற்றுதலுக்கும் பாராட்டிற்கும் உரியவையாக உள்ளன என்பதை அறிந்து கொள்வார்கள். ஆனால்


وَقَالَ ٱلَّذِينَ كَفَرُوا۟ هَلْ نَدُلُّكُمْ عَلَىٰ رَجُلٍۢ يُنَبِّئُكُمْ إِذَا مُزِّقْتُمْ كُلَّ مُمَزَّقٍ إِنَّكُمْ لَفِى خَلْقٍۢ جَدِيدٍ.

34:7. இந்த உண்மைகளை ஏற்காதவர்கள், “சீரழிந்த சமூகத்தினரை புதுப் பொலிவுடன் விளங்கும் சமுதாயமாக உருவாக்கப் போவதாக சொல்லும் ஒரு நபரை உங்களுக்கு காண்பிக்கட்டுமா?” என்று ஏளனமாக அவர்களுள் பேசிக் கொள்கிறார்கள்.


أَفْتَرَىٰ عَلَى ٱللَّهِ كَذِبًا أَم بِهِۦ جِنَّةٌۢ ۗ بَلِ ٱلَّذِينَ لَا يُؤْمِنُونَ بِٱلْءَاخِرَةِ فِى ٱلْعَذَابِ وَٱلضَّلَٰلِ ٱلْبَعِيدِ.

34:8. மேலும் அவர்கள், “தாமே சுய கற்பனையுடன் இவ்வாறு சொல்லிக் கொண்டு, அல்லாஹ் சொல்வதாக சொல்லிக் கொண்டிருக்கிறார் என்றே நாம் நினைக்கிறோம்” என்கிறார்கள். ஆனால் உண்மை அதுவன்று. யார் “மனித செயல்களுக்கேற்ற இறுதி விளைவுகள்” என்ற விதிமுறைகளை ஏற்க மறுக்கிறார்களோ, அவர்கள் தாம் நேரான பாதையை விட்டு வெகு தூரம் சென்று விட்டவர்கள். இதனால் அவர்களுக்கு ஏற்படும் வேதனைகளைத் தவிர்க்க முடியாததாகி விடும்.


أَفَلَمْ يَرَوْا۟ إِلَىٰ مَا بَيْنَ أَيْدِيهِمْ وَمَا خَلْفَهُم مِّنَ ٱلسَّمَآءِ وَٱلْأَرْضِ ۚ إِن نَّشَأْ نَخْسِفْ بِهِمُ ٱلْأَرْضَ أَوْ نُسْقِطْ عَلَيْهِمْ كِسَفًۭا مِّنَ ٱلسَّمَآءِ ۚ إِنَّ فِى ذَٰلِكَ لَءَايَةًۭ لِّكُلِّ عَبْدٍۢ مُّنِيبٍۢ.

34:9. வானத்திலிருந்து பூமி வரையில் நடக்கின்ற நிகழ்வுகளை அவர்கள் கவனித்து பார்ப்பதில்லையா? அவர்கள் கண்ணெதிரே உள்ளவற்றையும், அவற்றிலுள்ள மறைவான செயல்திறன்களைப் பற்றியும் கவனித்து பார்ப்பதில்லையா? அல்லாஹ் அழிக்க நாடியிருந்தால் அவர்களை பூமியில் புதைத்துவிட முடியும். அல்லது வானிலிருந்து எரிகற்களின் துண்டுகளை விழச் செய்தாலே போதும். ஆனால் அல்லாஹ் அவ்வாறு அழிக்க நாடுவதில்லை. சிந்தித்துணரும் மக்களுக்கு இதில் அத்தாட்சிகள் பல இருக்கின்றன.
அதாவது உலக வரலாற்றை ஆராய்ந்தால் சமுதாயத்தின் அழிவுகள் எவ்வாறு ஏற்பட்டன என்ற உண்மைகள் விளங்கும். பூமியில் மரம் செடி போன்றவற்றில் மலிவாகக் கிடைக்கும் உணவு வகைகளையும், பூமியில் மறைந்திருக்கும் வாழ்வாதாரங்களையும், விவசாயம் செய்து உழைத்துப் பெற்று அனைவரும் சிறப்பாக வாழும்படி சொல்வதே இறைவனின் வழிகாட்டுதலாகும். அதை ஏற்காமல் வாழ்ந்தால் சமுதாய மக்கள் தவறான வழியில் சென்று அழிவை சந்தித்துக் கொள்வார்கள். இதைப் பற்றி எடுத்து சொன்னால் அதை ஏளனமாக பேசுகிறார்கள். அவர்கள் அவ்வாறு பேசுகிறார்கள் என்பதால் அவர்களை அழிக்க அல்லாஹ்வுக்கு ஒரு நொடிப் பொழுதே போதும். ஆனால் அல்லாஹ்வின் செயல் திட்டமோ அவர்கள் திருந்துவதற்கு தக்க அவகாசம் அளிக்கிறது. (பார்க்க 16:61) உலக வரலாறே இதற்கு ஆதாராமாக இருக்கிறது. எடுத்துக்காட்டாக


۞ وَلَقَدْ ءَاتَيْنَا دَاوُۥدَ مِنَّا فَضْلًۭا ۖ يَٰجِبَالُ أَوِّبِى مَعَهُۥ وَٱلطَّيْرَ ۖ وَأَلَنَّا لَهُ ٱلْحَدِيدَ.

34:10. தாவூது நபி ஆட்சி காலத்தில் வாழ்ந்த மக்கள் எல்லா வகையான வாழ்வாதாரங்களையும் தேவைக்கு அதிகமாகவே பெற்றிருந்தார்கள். மலைகளைப் போல் செல்வங்களை குவித்து வைத்திருக்கும் பணக்கார முதலைகளும் இவருடைய ஆட்சியின் கீழ் இருந்தார்கள். (பார்க்க 21:79) மேலும் குதிரைப் படைகளையும், காலாட் படைகளையும், பழங்குடியினரை சேர்ந்த அசுரர் படைகளையும் தயாரித்து வைத்திருந்தார். (பார்க்க 27:15-16) அதுமட்டுமின்றி இரும்பு ஆலைகளும் இருந்தன


أَنِ ٱعْمَلْ سَٰبِغَٰتٍۢ وَقَدِّرْ فِى ٱلسَّرْدِ ۖ وَٱعْمَلُوا۟ صَٰلِحًا ۖ إِنِّى بِمَا تَعْمَلُونَ بَصِيرٌۭ.

34:11. அவற்றைக் கொண்டு போர்க் கவசங்களையும் ஆயுதங்களையும் தயாரிக்க சொன்னோம். அவற்றை தக்க வகையில் பயன்படுத்தி, ஒழுங்குபடுத்திக் கொள்ள சொன்னோம். இவற்றை எல்லாம் வைத்துக் கொண்டு, ஆற்றல் மிக்க நற்செயல்களை செய்ய கட்டளை பிறப்பித்தோம். அவற்றை அழிவுக்காக ஒருபோதும் பயன்படுத்தக் கூடாது என்றும் நீங்கள் செய்வதனைத்தையும் நாம் கண்காணித்துக் கொண்டே வருகிறோம் என்பதை நினைவில் வைத்துக்கொண்டு செயல்படுங்கள் எனவும் அறிவுறுத்தினோம்.


وَلِسُلَيْمَٰنَ ٱلرِّيحَ غُدُوُّهَا شَهْرٌۭ وَرَوَاحُهَا شَهْرٌۭ ۖ وَأَسَلْنَا لَهُۥ عَيْنَ ٱلْقِطْرِ ۖ وَمِنَ ٱلْجِنِّ مَن يَعْمَلُ بَيْنَ يَدَيْهِ بِإِذْنِ رَبِّهِۦ ۖ وَمَن يَزِغْ مِنْهُمْ عَنْ أَمْرِنَا نُذِقْهُ مِنْ عَذَابِ ٱلسَّعِيرِ.

34:12. தாவூத் நபிக்குப் பின் அவருடைய புதல்வர் சுலைமான் நபியும், தனது ஆட்சி காலத்தில் காற்றின் வேகம் மற்றும் அதன் திசையைப் பற்றி நன்கு அறிந்து இருந்தார் (30:46) . மேலும் அவற்றை பயன்படுத்தும் வகையில் பாய்மரக் கப்பல்களைத் தயாரிக்க வழிசெய்தார். அது காற்றின் திசையை நோக்கி வேகமாக சென்று, (மேலும் பார்க்க 38:36) ஒரு மாத கால பயணத் தூரத்தை சில மணி நேரத்திலேயே கடக்க முடிந்தது. இந்த கப்பல்களை தயாரிப்பதற்காக அவசியமாகும் செம்பு போன்ற உலோகப் பொருட்கள், பூமியிலிருந்து தாராளமாக கிடைக்கச் செய்தோம்.
மேலும் பலம் பொருந்திய ஆதிவாசிகளை இவருடைய கட்டளைக்கு அடிபணியச் செய்தோம். இவை யாவும் நம் செயல் திட்டங்களின் படி செய்யப்படும் ஏற்பாடுகளாகும். எனவே யார் நம் கட்டளைக்கு எதிராக செயல்படுகிறார்களோ, அவர்கள் கடுமையான தண்டனைக்கு ஆளாவார்கள் என்ற சட்டம் அவரது ஆட்சி காலத்திலும் பிறப்பிக்கப்பட்டு இருந்தது.
அதாவது கப்பல் தயாரிப்பதற்காக கடின உழைப்பும் அவற்றின் முழு ஞானமும் அவசியமாகின்றன. இதற்காக சுலைமான் நபி, இறைவனின் அறிவுரைப் படி பலம் பொருந்திய மலைவாழ் மக்களுக்குப் பயிற்சி அளித்து, இத்தகைய பணியில் ஈடுபடுத்திக் கொண்டார். மேலும் அவர்கள் தவறு இழைக்காதவாறும் பார்த்துக் கொண்டார். இல்லையென்றால் அவர்கள் மிகப் பெரிய ஆபத்துகளை விளைவித்து விடுவார்கள். எனவே தவறு செய்பவர்களுக்கு கடுமையான தண்டனை அளித்து வந்தார். இப்படி அவர்களுக்கு கட்டுக் கோப்பாக பயிற்சி அளித்து வந்தார்.


يَعْمَلُونَ لَهُۥ مَا يَشَآءُ مِن مَّحَٰرِيبَ وَتَمَٰثِيلَ وَجِفَانٍۢ كَٱلْجَوَابِ وَقُدُورٍۢ رَّاسِيَٰتٍ ۚ ٱعْمَلُوٓا۟ ءَالَ دَاوُۥدَ شُكْرًۭا ۚ وَقَلِيلٌۭ مِّنْ عِبَادِىَ ٱلشَّكُورُ.

34:13. தான் விரும்பியபடி பெரிய பெரிய ஹைக்கல் எனும் பள்ளிவாசல்களை கட்டினார். மேலும் அவற்றில் அழகான ஓவியங்களையும் சிற்பங்களையும் செய்தார். உணவு தயாரிக்கப் பயன்படுத்தும் பெரிய பெரிய கொப்பரைகளையும் தயாரித்து வந்தார். அது மட்டுமின்றி நகர்த்த முடியாத வலுவான பாத்திரங்களையும் தயாரித்து வந்தார். இவற்றை பயன்படுத்தி அனைத்து தரப்பு மக்களுக்கும் வாழ்வாதார வசதிகளை செய்து கொடுத்து இறைவனுக்கு நன்றி விசுவாசத்துடன் நடந்துகொண்டார். ஆனால் தாவூது நபியின் சந்ததியர்களில் ஒரு சிலரைத் தவிர பெரும்பாலோர் இறைவனின் அறிவுரைப்படி நடந்துகொள்ளவில்லை.
சுலைமான் நபிக்குப் பின் ஆட்சி பொறுப்பு அவருடைய மகனுக்குக் கிடைத்தது. ஆனால் அவனோ தன் தந்தை மற்றும் பாட்டனாரைப் போல் இல்லாமல் எதற்கும் பயன்படாத உதவாக்கரையாக இருந்தான். (பார்க்க 38:34) எனவே சுலைமான் நபியின் (Solomen the Great) பொற்கால சாம்ராஜ்ஜியம் அஸ்தமிக்க ஆரம்பித்தது.


فَلَمَّا قَضَيْنَا عَلَيْهِ ٱلْمَوْتَ مَا دَلَّهُمْ عَلَىٰ مَوْتِهِۦٓ إِلَّا دَآبَّةُ ٱلْأَرْضِ تَأْكُلُ مِنسَأَتَهُۥ ۖ فَلَمَّا خَرَّ تَبَيَّنَتِ ٱلْجِنُّ أَن لَّوْ كَانُوا۟ يَعْلَمُونَ ٱلْغَيْبَ مَا لَبِثُوا۟ فِى ٱلْعَذَابِ ٱلْمُهِينِ.

34:14. இப்படியாக சுலைமான் நபியின் மறைவுக்குப் பின், ஆட்சி பொறுப்பை ஏற்றுக்கொண்டவர்கள் தலைசிறந்த அந்த பேரரசின் புகழை தக்கவைத்துக் கொள்ளவில்லை. இதனால் அவருடைய ஆட்சியின் அஸ்திவாரம் செல்லறிக்க ஆரம்பித்தது.
கோட்டைக்குள் நடக்கின்ற அநியாய அக்கிரம செயல்களைப் பற்றி, அதை பாதுகாத்து வந்த ஆதிவாசிகளைச் சேர்ந்த காவலாளிகளுக்கு நீண்ட காலம் வரையில் தெரியாமலே இருந்தது. அந்த ஆட்சியாளர்கள் செய்த அக்கிரமங்களினால் நாட்டில் பாதிப்புகள் ஏற்பட ஆரம்பித்தன. இப்படியாக சுலைமான் நபியின் வான்புகழ் சாம்ராஜ்யம் முற்றிலுமாக சாய்ந்து விட்டது.
அப்போது தான் கோட்டைக்குள் நடக்கின்ற விஷயங்கள் அந்த காவலாளிகளுக்கு தெரிய வந்தது. எனவே அவர்கள் மிகவும் வருத்தத்துடன், “நாங்கள் கோட்டைக்குள் நடக்கின்ற விஷயங்களை இதற்கு முன்பே அறிந்திருந்தால், இந்த அளவுக்கு நம்முடைய கடின உழைப்புகள் யாவும் வீணாகி இருக்காதே. நாம் இழிவுக்கும் வேதனைக்கும் ஆளாகியிருக்க மாட்டோமே” என்று புலம்பலானார்கள்.
இதுதான் பேரரசர் சுலைமான் நபியின் ஆட்சியின் புகழும் அதன் வீழ்ச்சியின் காரணங்களும் ஆகும். அதே போல் ஸபா நாட்டில் நடந்த உண்மை வரலாற்றைப் பற்றியும் தெரிந்து கொள்ளுங்கள்.


لَقَدْ كَانَ لِسَبَإٍۢ فِى مَسْكَنِهِمْ ءَايَةٌۭ ۖ جَنَّتَانِ عَن يَمِينٍۢ وَشِمَالٍۢ ۖ كُلُوا۟ مِن رِّزْقِ رَبِّكُمْ وَٱشْكُرُوا۟ لَهُۥ ۚ بَلْدَةٌۭ طَيِّبَةٌۭ وَرَبٌّ غَفُورٌۭ.

34:15. ஸபா நாட்டின் இருபுறங்களிலும் சோலைகள் நிறைந்த செழிப்பான நிலங்கள் இருந்தன. அவை நாட்டின் இடப்புறத்திலும் வலப்புறத்திலும் ஒரே சீராகப் பரவி அந்நாட்டின் வளத்தை வலுவூட்டின. இறைவனின் நியதிப்படி கிடைக்கின்ற இத்தகைய வாழ்வாதாரங்களை அனைத்து தரப்பு மக்களுக்கும் கிடைக்க செய்து இறைவனுக்கு நன்றி விசுவாசத்துடன் நடந்துகொள்ள அந்நாட்டு அரசுக்கு இறைக் கட்டளை இருந்து வந்தது. அப்போதுதான் அது மென்மேலும் சிறப்பாக முன்னேறி பாதுகாப்பான நிம்மதியான நாடாகத் திகழும் என்றும் இறை கட்டளையில் குறிப்பிடப்பட்டிருந்தது.


فَأَعْرَضُوا۟ فَأَرْسَلْنَا عَلَيْهِمْ سَيْلَ ٱلْعَرِمِ وَبَدَّلْنَٰهُم بِجَنَّتَيْهِمْ جَنَّتَيْنِ ذَوَاتَىْ أُكُلٍ خَمْطٍۢ وَأَثْلٍۢ وَشَىْءٍۢ مِّن سِدْرٍۢ قَلِيلٍۢ.

34:16. ஆனால் அந்நாட்டை சேர்ந்த ஆட்சியாளர்களோ, காலப் போக்கில் இறைவனின் அறிவுரைகளை பொருட்படுத்தாமல் நாட்டில் ஏற்றத் தாழ்வுகளை விளைவித்து வந்தனர். இதனால் அவர்களுடைய நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. சோலைகளுக்கு தண்ணீர் கிடைப்பதற்காக கட்டியிருந்த அணைக்கட்டு பெரும் வெள்ளத்தால் உடைப்பு ஏற்பட்டு, இருபுறத்தில் இருந்த சோலைகளை நாசமாக்கி விட்டன. இதனால் சுவை மிக்க உணவு வகைகள் கிடைக்கின்ற இடமாக இருந்த சோலைகள், பாழ் நிலங்களாக மாறி அழுக ஆரம்பித்தன. இதனால் அங்கிருந்த பழங்களும் தானியங்களும் அழுகி, கசப்பும் புளிப்பும் நிறைந்த கள்ளிக் காடாக மாறிவிட்டன. அங்கிருந்த இலந்தை மரங்கள் மட்டும் மிஞ்சின.
அதாவது அனைத்து தரப்பு மக்களையும் ஒரே சீராகப் பராமரித்து தக்க பயிற்சிகளை அளித்து பாதுகாப்பு படைகளை தயாரித்து வைத்திருந்தால், இயற்கை சீற்றங்களால் ஏற்படும் இத்தகைய விளைவுகளை சீர்செய்யும் பக்குவமும் ஆட்பலமும் அவர்களிடம் இருந்திருக்கும். உடனே அவர்களை அனுப்பி அந்த சோலைகளில் ஏற்பட்ட நாசங்களை சரிசெய்து அவற்றை உயிர்ப்பித்து இருக்க முடியும். ஆனால் அவர்களோ நாட்டு மக்களின் நலனில் அக்கறை காட்டாததால், பொது மக்களும் அவற்றை அதை சரி செய்ய முடியாமல் அப்படியே விட்டுவிட்டனர். எனவே அவை நாளடைவில் அழிந்து போயின.


ذَٰلِكَ جَزَيْنَٰهُم بِمَا كَفَرُوا۟ ۖ وَهَلْ نُجَٰزِىٓ إِلَّا ٱلْكَفُورَ.

34:17. இறைவனின் அறிவுரைகளை ஏற்க மறுத்து தம் விருப்பம் போல செயல்பட்டு வந்ததன் விளைவாக கிடைக்கின்ற கூலி இது போன்றதே ஆகும். அவர்கள் இறைவனின் அறிவுரைப்படி நடந்திருந்தால் இந்த அழிவுகள் ஏற்பட்டிருக்குமா?
இவையாவும் அவர்களுக்கு மட்டும் கிடைக்கின்ற அழிவுகள் அல்ல. யாரெல்லாம் இறைவனின் அறிவுரைகளை ஏற்க மறுத்து தம் மனம் போன போக்கில் வாழ்கிறார்களோ, அவர்களுக்கெல்லாம் இதே போன்று கதிதான் ஏற்படும்.


وَجَعَلْنَا بَيْنَهُمْ وَبَيْنَ ٱلْقُرَى ٱلَّتِى بَٰرَكْنَا فِيهَا قُرًۭى ظَٰهِرَةًۭ وَقَدَّرْنَا فِيهَا ٱلسَّيْرَ ۖ سِيرُوا۟ فِيهَا لَيَالِىَ وَأَيَّامًا ءَامِنِينَ.

34:18. இந்த அழிவு ஏற்படுவதற்கு முன், ‘இமன்’ (Yemen) எனும் அந்த நாடு எந்த அளவுக்கு சிறப்பாக இருந்தது என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள். அந்நாட்டில் பல்வேறு நகரங்களுக்கிடையே போக்கு வரத்து வசதிகள் நிறைந்திருந்தன. இதற்காக அகலமான சாலைகளையும் ஏற்படுத்தி இருந்தார்கள். மேலும் அவற்றில் இரவு பகலாக பயமேதுமின்றி அவர்களால் பிரயாணம் செய்ய முடிந்தது.


فَقَالُوا۟ رَبَّنَا بَٰعِدْ بَيْنَ أَسْفَارِنَا وَظَلَمُوٓا۟ أَنفُسَهُمْ فَجَعَلْنَٰهُمْ أَحَادِيثَ وَمَزَّقْنَٰهُمْ كُلَّ مُمَزَّقٍ ۚ إِنَّ فِى ذَٰلِكَ لَءَايَٰتٍۢ لِّكُلِّ صَبَّارٍۢ شَكُورٍۢ.

34:19. ஆனால் அவர்களுடைய அநியாய அக்கிரம செயல்களால் நாளடைவில் நாட்டில் குழப்பங்களும் கலவரங்களும் உருவாயின. இதனால் எளிதாக அச்சமின்றி செய்து வந்த பயணங்கள் யாவும் சிரமத்திற்குள்ளாயின. போக்குவரத்து பல சமயங்களில் தடைப்பட்டு சுற்றுவழிப் பாதையில் செல்ல வேண்டியதாயிற்று. இதனால் பயணத் தூரம் நீண்டு விட்டது. உணவு வகைகளை எடுத்துச் செல்ல முடியாமல் அவர்கள் சிதறிப் போனார்கள். இதுவே அவர்கள் செய்து வந்த அநியாய செயல்களுக்கு இறைவனிடமிருந்து வேண்டிக் கொண்ட அழிவுகளாகும். அந்நாட்டில் ஏற்பட்ட அழிவு, உறுதிப்பாடோடு சிந்தித்து இறைவனுக்கு நன்றி விசுவாசத்துடன் நடக்க விரும்புவோருக்கு கிடைக்கின்ற படிப்பினைகளாகும்.


وَلَقَدْ صَدَّقَ عَلَيْهِمْ إِبْلِيسُ ظَنَّهُۥ فَٱتَّبَعُوهُ إِلَّا فَرِيقًۭا مِّنَ ٱلْمُؤْمِنِينَ.

34:20. மேலும் அந்நாட்டில் ஏற்பட்ட அழிவுகள், இப்லீஸ் இறைவனிடம் விட்ட அறைகூவலுக்கு ஒப்பானதாக இருந்தது. (பார்க்க 15:38-41) அதாவது மக்களுடைய தவறான செயல்களை அழகாகக் காட்டி அவர்களை அழிவுக்குள் ஆக்குவேன் என்ற சவாலில் இப்லீஸ்க்கு வெற்றி கிடைத்தது. ஆனால் அங்கிருந்த மூஃமின்கள் அந்த அழிவில் சிக்கவில்லை. அவர்கள் தப்பித்துக் கொண்டனர்.


وَمَا كَانَ لَهُۥ عَلَيْهِم مِّن سُلْطَٰنٍ إِلَّا لِنَعْلَمَ مَن يُؤْمِنُ بِٱلْءَاخِرَةِ مِمَّنْ هُوَ مِنْهَا فِى شَكٍّۢ ۗ وَرَبُّكَ عَلَىٰ كُلِّ شَىْءٍ حَفِيظٌۭ.

34:21. இத்தனைக்கும் அவர்கள் மீது இப்லீஸுக்கு எந்த அதிகாரமும் இருந்ததில்லை. அவர்களாகவே மனோ இச்சை எனும் இப்லீஸுக்கு அடிபணிந்து வாழ ஆரம்பித்ததால், அதன் வலையில் சிக்கிக் கொண்டனர். இறைவன் நிர்ணயித்துள்ள “மனித செயல்களுக்கேற்ற இறுதி விளைவுகள்” என்ற சட்டத்தைப் பற்றிய சந்தேகத்தில் உள்ளவர்களுக்கு விளக்குவதற்காகவே இந்த சம்பவ நிகழ்ச்சியைப் பற்றி எடுத்துரைக்கிறோம். நிச்சயமாக உலக நிகழ்வுகள் அனைத்திலும் உமது இறைவனின் வல்லமை பிரதிபலிப்பதாக உள்ளன. இதை இப்போதாவது ஏற்றுக் கொள்வீர்களா?


قُلِ ٱدْعُوا۟ ٱلَّذِينَ زَعَمْتُم مِّن دُونِ ٱللَّهِ ۖ لَا يَمْلِكُونَ مِثْقَالَ ذَرَّةٍۢ فِى ٱلسَّمَٰوَٰتِ وَلَا فِى ٱلْأَرْضِ وَمَا لَهُمْ فِيهِمَا مِن شِرْكٍۢ وَمَا لَهُۥ مِنْهُم مِّن ظَهِيرٍۢ.

34:22. ஆனால் மக்களோ அல்லாஹ்வைத் தவிர வேறு சக்திகளும் இவ்வுலகை கட்டிக் காப்பதாக எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அந்த சக்திகளை அழைத்துப் பாருங்கள். எந்த பதிலும் அவற்றிடமிருந்து வரவே வராது. எனவே அல்லாஹ்வைத் தவிர வேறு யாருக்கும் அகிலங்களிலும் பூமியிலும் எந்த அதிகாரமும் ஒருபோதும் கிடையாது. உங்கள் வாழ்வில் ஏற்படுகின்ற நல்லது கெட்டது ஆகியவற்றில், அவற்றிற்கு எந்த பங்கும் கிடையாது. அல்லாஹ்வுக்கு யாருடைய உதவியும் ஒருபோதும் தேவைப்பட்டதில்லை. இனி தேவைப்படப் போவதுமில்லை. இதை மக்களிடம் எடுத்துரையுங்கள்.


وَلَا تَنفَعُ ٱلشَّفَٰعَةُ عِندَهُۥٓ إِلَّا لِمَنْ أَذِنَ لَهُۥ ۚ حَتَّىٰٓ إِذَا فُزِّعَ عَن قُلُوبِهِمْ قَالُوا۟ مَاذَا قَالَ رَبُّكُمْ ۖ قَالُوا۟ ٱلْحَقَّ ۖ وَهُوَ ٱلْعَلِىُّ ٱلْكَبِيرُ.

34:23. எனவே மனித வாழ்வில் ஏற்படுகின்ற பிரச்சனைகளுக்கு நிலையான தீர்வுகள் கிடைப்பதற்காகவே இறைவன் புறத்திலிருந்து வழிகாட்டுதல்கள் அருளப்படுகின்றன. அவையே அவன் வாழ்வில் என்றென்றைக்கும் துணை நிற்கும். இதைத் தவிர வேறு எந்த வழிமுறையும் அவனுக்கு பரிந்துறை செய்யாது. (பார்க்க 10:3) அவனுக்கு எந்தப் பலனையும் அளிக்காது. எனவே இறைவழிகாட்டுதலின் அடிப்படையில் சமூக அமைப்பு உருவாகும் போது, அங்கு அச்சம் தீர்ந்த நிலை ஏற்படும். அம்மக்களிடையே இறைவனின் ஒவ்வொரு சொல்லும் தெளிவாகிவிடும்.
அதாவது இறைவனின் வழிகாட்டுதல்கள் மக்களின் நன்மைக்கே என்பதையும், மனிதனின் சிறப்பான வாழ்விற்கு அவை சரியான பாதையைத் தான் காட்டுகின்றன என்பதையும் உணர்ந்து கொள்வார்கள். இப்படியாக இறைவனின் செயல்திட்டங்கள் யாவும், அனைத்தையும் மிகைக்கக் கூடியவையாக உள்ளன என்பதையும் அறிந்து கொள்வார்கள்.


۞ قُلْ مَن يَرْزُقُكُم مِّنَ ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضِ ۖ قُلِ ٱللَّهُ ۖ وَإِنَّآ أَوْ إِيَّاكُمْ لَعَلَىٰ هُدًى أَوْ فِى ضَلَٰلٍۢ مُّبِينٍۢ.

34:24. அப்படியும் அவர்கள் இறைவனின் செயல்திட்டங்களை அறிந்து கொள்ளவில்லை என்றால், அவர்களிடம் வானங்களிலிருந்தும் பூமியிலிருந்தும் உங்களுக்கு உணவளிப்பவன் யார் என்று கேளுங்கள். அல்லாஹ் தான் அனைவருக்கும் உணவளிப்பவன் என்று (56:63-73இல் உள்ளபடி) அவர்களுக்குத் தெளிவாக்கி விடுங்கள். எனவே அல்லாஹ் காட்டிய வழியில் இருக்கும் நாங்கள் நேர்வழியில் இருக்கிறோமா? அல்லது நீங்கள் நேர்வழியில் இருக்கிறீர்களா? என்று கேளுங்கள்.
அதாவது இறைவன் புறத்திலிருந்து கிடைக்கின்ற வாழ்வாதாரங்கள், அனைத்து தரப்பு மக்களுக்கும் போய் சேரும்படி ஏற்பாடு செய்ய சொல்வதே இறைவனின் வழிகாட்டுதலாகும். இந்தப் பொறுப்பை அரசு எடுத்துக் கொள்ள வேண்டும். மேலும் ஒழுக்க மாண்புகளைப் பற்றிய கல்வி அறிவை மக்களுக்கு தவறாமல் போதிக்க வேண்டும். அப்போது தான் மக்களும் தம் பொறுப்பை உணர்ந்து சிறந்த முறையில் நாட்டை பாதுகாத்து வருவார்கள். இவ்விரு விஷயங்களில் எதை விட்டுவிட்டாலும் அந்த நாடு அழிவை நோக்கித் தான் செல்லும். ஸபா நாட்டிற்கு ஏற்பட்ட அழிவிற்கும் இதுதான் காரணமாகும். எனவே அவர்களிடம்


قُل لَّا تُسْـَٔلُونَ عَمَّآ أَجْرَمْنَا وَلَا نُسْـَٔلُ عَمَّا تَعْمَلُونَ.

34:25. நாங்கள் செய்து வரும் செயல்கள் யாவும் தீயவை என்று நீங்கள் கருதினால் அதைப்பற்றி உங்களிடம் கேட்கப்பட மாட்டாது. அதே போன்று நீங்கள் செய்து வரும் செயல்களைப் பற்றி எங்களிடம் கேட்கப்பட மாட்டாது. அதாவது அவரவர் செய்து வரும் செயல்களுக்கு எற்ப பலன்களும் விளைவுகளும் தான் வந்தடையும். (2:134)


قُلْ يَجْمَعُ بَيْنَنَا رَبُّنَا ثُمَّ يَفْتَحُ بَيْنَنَا بِٱلْحَقِّ وَهُوَ ٱلْفَتَّاحُ ٱلْعَلِيمُ.

34:26. இதன்பின்பும் நீங்கள் திருந்தவில்லை என்றால், “எங்களிடம் நீங்கள் களத்தில்தான் சந்திக்க நேரிடும். அப்போது யார் நேர்மைக்காக பாடுபடுகிறார்களோ, அவர்களுக்கு வெற்றி கிடைப்பது நிச்சயம். அப்போது எந்த நேர்மைக்காக நாம் அழைப்பு விடுகிறோமோ, அதன் உண்மை நிலை வெளிப்பட்டு விடும். நினைவில் கொள்ளுங்கள். இறைவனின் தீர்ப்புகள் யாவும் ஞானத்தின் அடிப்படையைக் கொண்டவையாகும்” என்று அறிவித்து விடுங்கள்.


قُلْ أَرُونِىَ ٱلَّذِينَ أَلْحَقْتُم بِهِۦ شُرَكَآءَ ۖ كَلَّا ۚ بَلْ هُوَ ٱللَّهُ ٱلْعَزِيزُ ٱلْحَكِيمُ.

34:27. மேலும் அவர்களிடம், “யாரை நீங்கள் அல்லாஹ்வின் வல்லமைக்கு இணையானவர்கள் என்று சொல்லி வருகிறீர்களோ, அவர்களின் வல்லமையை சற்று காட்டுங்கள்” என்று கேட்டுப் பாருங்கள். அவர்களால் எந்த ஆதாரத்தையும் கொண்டு வரவே முடியாது. ஆனால் உலக படைப்புகள் யாவும், அல்லாஹ்வின் வல்லமையைக் கொண்டு தான் உருவாயின என்பதை விளக்கிவிடுங்கள். (பார்க்க 2:164) அல்லாஹ்வின் செயல்திட்டங்கள் யாவும் ஞானத்தின் அடிப்படையில் உருவானவை என்பதையும், அவை அனைத்தையும் கட்டுப்படுத்தும் வல்லமை உடையவை என்பதையும் அவர்களுக்கு எடுத்துரையுங்கள்.
எனவே அகிலங்கள் அனைத்தும் அல்லாஹ் ஒருவனின் வல்லமையின் கீழ் செயல்படும் போது, அவனுடைய படைப்புகளில் ஒன்றாகிய மனித படைப்பும் அவனுடைய வழிகாட்டுதலின் கீழ்தான் செயல்பட வேண்டும். எனவே


وَمَآ أَرْسَلْنَٰكَ إِلَّا كَآفَّةًۭ لِّلنَّاسِ بَشِيرًۭا وَنَذِيرًۭا وَلَٰكِنَّ أَكْثَرَ ٱلنَّاسِ لَا يَعْلَمُونَ.

34:28. ஒட்டுமொத்த மனித இனமும் ஓரிறைவனின் வழிகாட்டுதலை மட்டும் பின்பற்ற வேண்டும். அதை பின்பற்றுவதால் கிடைக்கும் நன்மைகளைப் பற்றியும், இதற்கு எதிராக செயல்படுவதால் ஏற்படும் விபரீத பின்விளைவுகளைப் பற்றியும் எடுத்துரைப்பதற்காகவே உம்மை நாம் அனுப்பி இருக்கிறோம். ஆனால் பெரும்பாலான மக்கள் இவற்றின் உண்மை நிலையை சிந்தித்து ஏற்றுக் கொள்வதில்லை. (மேலும் பார்க்க 7:158)


وَيَقُولُونَ مَتَىٰ هَٰذَا ٱلْوَعْدُ إِن كُنتُمْ صَٰدِقِينَ.

34:29. மாறாக, “நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால், அடிக்கடி அச்சுறுத்தி வரும் பேரழிவுகள் (34:26) எப்போது வரும்?” என்று கேட்கிறார்கள்.


قُل لَّكُم مِّيعَادُ يَوْمٍۢ لَّا تَسْتَـْٔخِرُونَ عَنْهُ سَاعَةًۭ وَلَا تَسْتَقْدِمُونَ.

34:30. இறைவனின் நியதிப்படி ஏற்படும் அந்த அழிவுகள் குறித்த நேரத்தில் கண்டிப்பாக வரும். அதில் காலத் தாமதமோ குறித்த நேரத்திற்கு முன்பாகவோ ஏற்படாது என்பதை அவர்களுக்கு எடுத்துரையுங்கள்.


وَقَالَ ٱلَّذِينَ كَفَرُوا۟ لَن نُّؤْمِنَ بِهَٰذَا ٱلْقُرْءَانِ وَلَا بِٱلَّذِى بَيْنَ يَدَيْهِ ۗ وَلَوْ تَرَىٰٓ إِذِ ٱلظَّٰلِمُونَ مَوْقُوفُونَ عِندَ رَبِّهِمْ يَرْجِعُ بَعْضُهُمْ إِلَىٰ بَعْضٍ ٱلْقَوْلَ يَقُولُ ٱلَّذِينَ ٱسْتُضْعِفُوا۟ لِلَّذِينَ ٱسْتَكْبَرُوا۟ لَوْلَآ أَنتُمْ لَكُنَّا مُؤْمِنِينَ.

34:31. ஆனால் இந்த உண்மைகளை ஏற்க மறுப்பவர்கள், இந்த குர்ஆனில் உள்ள அறிவுரைகளையோ, இதற்கு முன் இறைவனிடமிருந்து வந்ததாக கூறப்படும் வழிகாட்டுதலையோ நாங்கள் ஒருபோதும் ஏற்கமாட்டோம் என்று கர்வத்துடன் கூறி வருகிறார்கள். ஆனால் குறித்த நேரப்படி அவர்களுடைய கேள்விக் கணக்குக் கேட்கப்படும் நாளில், அவர்களை நீர் பார்ப்பீராயின், தலை குனிந்தவர்களாக அவர்களில் சிலர் சிலருக்கு எதிராக குறைகூறிக் கொண்டிருப்பார்கள். பலவீனர்கள் தம் தலைவர்களை நோக்கி, “நீங்கள் எங்களை வழிகெடுக்காதிருப்பின் நிச்சயமாக நாங்கள் மூஃமின்களாகி இருப்போம்” என்று கூறுவார்கள்.


قَالَ ٱلَّذِينَ ٱسْتَكْبَرُوا۟ لِلَّذِينَ ٱسْتُضْعِفُوٓا۟ أَنَحْنُ صَدَدْنَٰكُمْ عَنِ ٱلْهُدَىٰ بَعْدَ إِذْ جَآءَكُم ۖ بَلْ كُنتُم مُّجْرِمِينَ.

34:32. ஆனால் தலைக்கணம் பிடித்த அந்த தலைவர்கள் பலவீனமானவர்களை நோக்கி, “உங்களிடம் நேர்வழி வந்தபின் அதைவிட்டு உங்களை நாங்களா தடுத்தோம்? அப்படியல்ல. நீங்கள்தாம் நேர்வழியினை ஏற்க மனம் ஒவ்வாது குற்றவாளிகளாக இருந்தீர்கள்” என்று பதிலளித்து விடுவார்கள்.


وَقَالَ ٱلَّذِينَ ٱسْتُضْعِفُوا۟ لِلَّذِينَ ٱسْتَكْبَرُوا۟ بَلْ مَكْرُ ٱلَّيْلِ وَٱلنَّهَارِ إِذْ تَأْمُرُونَنَآ أَن نَّكْفُرَ بِٱللَّهِ وَنَجْعَلَ لَهُۥٓ أَندَادًۭا ۚ وَأَسَرُّوا۟ ٱلنَّدَامَةَ لَمَّا رَأَوُا۟ ٱلْعَذَابَ وَجَعَلْنَا ٱلْأَغْلَٰلَ فِىٓ أَعْنَاقِ ٱلَّذِينَ كَفَرُوا۟ ۚ هَلْ يُجْزَوْنَ إِلَّا مَا كَانُوا۟ يَعْمَلُونَ.

34:33. அதற்கு பலவீனமானவர்கள், பெருமையை தேடிக் கொண்ட தலைவர்களிடம், “அப்படியல்ல. நீங்கள் தாம் இராப் பகலாக பல சூழ்ச்சிகளை செய்து, எங்களை அல்லாஹ்வின் வழிகாட்டுதலை விட்டு அதற்கு இணையான மற்ற வழிமுறைகளைப் பின்பற்ற வைத்தீர்கள்” என்று குற்றம் சுமத்துவார்கள். (பார்க்க 33:66-68) அந்த தலைவர்கள் தங்கள் முன் இருக்கும் வேதனைகளை பார்ப்பார்கள். மறுபுறம் அவர்களுக்கு எதிராக குற்றச்சாட்டுகளின் வேதனைகளிலிருந்தும் தப்பிக்க முயலுவார்கள். ஆனால் அவர்கள் இப்படி அப்படி அசையாதவாறு அவர்கள் கழுத்துகளில் அறிகண்டம் மாட்டப்பட்டு இருக்கும். எனவே அவர்கள் செய்து வந்த தீய செயல்களுக்காகவே அத்தகைய தண்டனைகள் அளிக்கப்படும்.


وَمَآ أَرْسَلْنَا فِى قَرْيَةٍۢ مِّن نَّذِيرٍ إِلَّا قَالَ مُتْرَفُوهَآ إِنَّا بِمَآ أُرْسِلْتُم بِهِۦ كَٰفِرُونَ.

34:34. மேலும் இறைத்தூதர்கள் இறைவழிகாட்டுதலை மக்களிடம் எடுத்துரைத்த போதெல்லாம் அங்கிருந்த தலைக்கணம் பிடித்த தலைவர்களும், செல்வத்தில் கொழுத்தவர்களும் இவற்றை எதிர்க்காமல் இருந்ததில்லை. காலம் காலமாக இப்படித்தான் எல்லா இடங்களிலும் நடந்து வந்துள்ளது.


وَقَالُوا۟ نَحْنُ أَكْثَرُ أَمْوَٰلًۭا وَأَوْلَٰدًۭا وَمَا نَحْنُ بِمُعَذَّبِينَ.

34:35. மேலும் அவர்கள், “எங்களிடம் செல்வ பலமும் ஆட்பலமும் அளவுக்கு அதிகமாகவே இருக்கின்றன. எனவே எங்களை யாரும் வேதனைப் படுத்த முடியாது” என்று கூறாமல் இருந்ததில்லை.


قُلْ إِنَّ رَبِّى يَبْسُطُ ٱلرِّزْقَ لِمَن يَشَآءُ وَيَقْدِرُ وَلَٰكِنَّ أَكْثَرَ ٱلنَّاسِ لَا يَعْلَمُونَ.

34:36. சமுதாய சீர்திருத்தவாதியே! அவர்களிடம், இந்த வாழ்வாதார வசதிகள் யாவும் இறைவனின் மஷீயத் எனும் செயல்திட்டப்படி கிடைப்பவை ஆகும். யார் அதற்காக திறமையுடன் உழைக்கிறார்களோ, அவர்களுக்கு அதிக அளவிலும், திறமையின்றி உழைப்பவர்களுக்கு மிகக் குறைவாகவும் கிடைக்கின்றன. (பார்க்க 13:26, 17:30) ஆனால் பெரும்பாலான பாமர மக்களுக்கோ இந்த உண்மையெல்லாம் தெரியாது. இதை அவர்களிடம் எடுத்துரையுங்கள்.


وَمَآ أَمْوَٰلُكُمْ وَلَآ أَوْلَٰدُكُم بِٱلَّتِى تُقَرِّبُكُمْ عِندَنَا زُلْفَىٰٓ إِلَّا مَنْ ءَامَنَ وَعَمِلَ صَٰلِحًۭا فَأُو۟لَٰٓئِكَ لَهُمْ جَزَآءُ ٱلضِّعْفِ بِمَا عَمِلُوا۟ وَهُمْ فِى ٱلْغُرُفَٰتِ ءَامِنُونَ.

34:37. மேலும் உங்களுடைய செல்வங்களோ அல்லது ஆட்பலமோ எங்களிடம் எந்த பெருமையும் சேர்க்காது. ஆனால் இறைவழிகாட்டுதலை ஏற்று ஆக்கப்பூர்வமான சமூக நலத் திட்டங்களைத் தீட்டி உழைத்து வருபவர்கள் தாம் பெருமைக்கும் பாராட்டுக்கும் உரியவர்கள். அவர்கள் செய்து வரும் நற்செயல்களுக்குரிய நற்பலன்கள் இரட்டிப்பாக கிடைக்கும். அதாவது அவர்களுக்கு கண்ணியமான வாழ்வாதாரங்களும், அனைத்து வசதிகளும் கொண்ட மாளிகைகளும், நிம்மதியான வாழ்வும் கிடைக்கும். இதையும் அவர்களிடம் எடுத்துரையுங்கள்.


وَٱلَّذِينَ يَسْعَوْنَ فِىٓ ءَايَٰتِنَا مُعَٰجِزِينَ أُو۟لَٰٓئِكَ فِى ٱلْعَذَابِ مُحْضَرُونَ.

34:38. மாறாக எவர் இறைவழிகாட்டுதலின் அடிப்படையில் சமூக அமைப்பு உருவாவதை தோல்வியுற செயல்படுகிறார்களோ, அவர்களுக்கு கடுமையான தண்டனை கிடைக்கும். இதையும் அவர்களிடம் எடுத்துரையுங்கள்.


قُلْ إِنَّ رَبِّى يَبْسُطُ ٱلرِّزْقَ لِمَن يَشَآءُ مِنْ عِبَادِهِۦ وَيَقْدِرُ لَهُۥ ۚ وَمَآ أَنفَقْتُم مِّن شَىْءٍۢ فَهُوَ يُخْلِفُهُۥ ۖ وَهُوَ خَيْرُ ٱلرَّٰزِقِينَ.

34:39. இறைவழிகாட்டுதலை எடுத்துரைப்பவரே! மீண்டும் அவர்களிடம், “வாழ்வாதார வசதிகள் யாவும் இறைவனின் மஷீயத் எனும் செயல்திட்டப்படி கிடைப்பவை ஆகும். யார் அதற்காக திறமையுடன் உழைக்கிறார்களோ அவர்களுக்கு அதிக அளவிலும், திறமையின்றி உழைப்பவர்களுக்கு மிகக் குறைவாகவும் கிடைக்கின்றன” என்பதை வலியுறுத்தி சொல்லிவிடுங்கள். எனவே யார் இறைவனின் செயல் திட்டங்களை நிறைவேற்ற பொருளுதவி செய்து வருகிறார்களோ, அவர்களுக்கு பன்மடங்கு பிரதிபலன்கள் கிடைக்கும். அல்லாஹ்வின் செயல்திட்டங்களின்படி செயல்படுவோருக்குத் தான் மேலான நற்பலன்கள் கிடைத்து வரும்.


وَيَوْمَ يَحْشُرُهُمْ جَمِيعًۭا ثُمَّ يَقُولُ لِلْمَلَٰٓئِكَةِ أَهَٰٓؤُلَآءِ إِيَّاكُمْ كَانُوا۟ يَعْبُدُونَ.

34:40. எனவே தீய செயல்களின் விளைவுகள் ஒட்டு மொத்தமாக அனைவரையும் சூழ்ந்துக் கொள்ளும் கால கட்டத்தில், (பார்க்க 6.:22) இயற்கை சக்திகளாகிய மலக்குகளை நோக்கி, “உங்களை வணங்கி வந்தவர்கள் இவர்கள்தானா?” என்று கேட்கப்படும்.


قَالُوا۟ سُبْحَٰنَكَ أَنتَ وَلِيُّنَا مِن دُونِهِم ۖ بَلْ كَانُوا۟ يَعْبُدُونَ ٱلْجِنَّ ۖ أَكْثَرُهُم بِهِم مُّؤْمِنُونَ.

34:41. அதற்கு அந்த மலக்குகள், “எங்களைப் பரிபாலிப்பவனே! நீயே எங்கள் பாதுகாவலன். எங்களை வணங்கி வர நாம் அவர்களிடம் எப்படி கூற முடியும்? உண்மையில் அவர்கள் யாவரும் கண்ணுக்கு புலப்படாத சக்திகளை தெய்வங்களாக பாவித்து வணங்கி வந்தனர். அவையே தமக்கு பாதுகாப்பு அளிப்பதாகவும் அவர்கள் நம்பி இருந்தனர்” என்று கூறிவிடும்.


فَٱلْيَوْمَ لَا يَمْلِكُ بَعْضُكُمْ لِبَعْضٍۢ نَّفْعًۭا وَلَا ضَرًّۭا وَنَقُولُ لِلَّذِينَ ظَلَمُوا۟ ذُوقُوا۟ عَذَابَ ٱلنَّارِ ٱلَّتِى كُنتُم بِهَا تُكَذِّبُونَ.

34:42. “இன்றைய தினம் உங்களில் யாரும் யாருக்கும் உதவி செய்யவோ தீமை செய்யவோ முடியாது. தீய செயல்களை செய்து இருந்தால், நோவினை தரும் வேதனைகளை அனுபவிக்க வேண்டி வரும் என்று நாம் உங்களுக்கு எடுத்துரைத்த போது, அதை நீங்கள் பொருட்படுத்தவில்லை. அவை யாவும் பொயே என்று சொல்லி வந்தீர்கள். நீங்கள் பொய்யென கூறிவந்த வேதனைகளை அனுபவியுங்கள்” என்று அவர்களிடம் அப்போது கூறப்படும்.


وَإِذَا تُتْلَىٰ عَلَيْهِمْ ءَايَٰتُنَا بَيِّنَٰتٍۢ قَالُوا۟ مَا هَٰذَآ إِلَّا رَجُلٌۭ يُرِيدُ أَن يَصُدَّكُمْ عَمَّا كَانَ يَعْبُدُ ءَابَآؤُكُمْ وَقَالُوا۟ مَا هَٰذَآ إِلَّآ إِفْكٌۭ مُّفْتَرًۭى ۚ وَقَالَ ٱلَّذِينَ كَفَرُوا۟ لِلْحَقِّ لَمَّا جَآءَهُمْ إِنْ هَٰذَآ إِلَّا سِحْرٌۭ مُّبِينٌۭ.

34:43. இறைத்தூதர்கள் அவர்களிடம் இறைவழிகாட்டுதலை தெளிவான முறையில் ஆதாரப்பூர்வமாக எடுத்துரைத்த போது, அவற்றை அவர்கள் ஏற்காததற்கு சொன்ன காரணம் என்னவென்று தெரியுமா? இறைத்தூதர் ஒரு சாதாரண மனிதராக இருக்கிறாரே என்பது தான். மேலும் தாங்கள் வாழையடி வாழையாக வணங்கி வந்த தெய்வ வழிபாட்டை விட்டுவிட அவர் சொல்வது அவர்களுக்குப் பிடிக்கவில்லை. எனவே அவர்கள் இறைவழிகாட்டுதலை ஏற்று நடக்க முன்வரவில்லை. ஆனால் இதை வெளிப்படையாக சொல்லாமல், இறைத்தூதர் கூறும் அறிவுரைகளுக்கு எவ்வித ஆதாராமும் இல்லை என்றும் அவரே இட்டுக்கட்டி கூறிவருகிறார் என்றும் கூறிவிடுகின்றனர். மேலும் மனிதனின் சிறப்பான வாழ்விற்கு சிறந்த வழிமுறைகளை அவர்களுக்கு எடுத்துரைத்த போது, அவர்கள் இவையாவும் மக்களை வசீயப்படுத்தும் ஏமாற்று பேச்சே என்று கூறி அவற்றை தட்டிக் கழித்தனர்.


وَمَآ ءَاتَيْنَٰهُم مِّن كُتُبٍۢ يَدْرُسُونَهَا ۖ وَمَآ أَرْسَلْنَآ إِلَيْهِمْ قَبْلَكَ مِن نَّذِيرٍۢ.

34:44. இவர்களின் கூற்றுக்கு எவ்வித ஆதாரமும் கிடையாது. ஏனெனில் இதற்கு முன் இவர்களிடம் வேத அறிவுரைகள் எதுவும் வந்ததில்லை. நபியே! உமக்கு முன்னர் தவறான செயல்களால் ஏற்படும் விபரீத விளைவுகளைப் பற்றி எடுத்துக் கூறுபவர் யாரும் வந்ததில்லை. (பார்க்க 36:6)
இத்தகைய வேதங்கள் அவர்களிடம் வந்திருந்தாலாவது இறைத்தூதர் கூறும் விஷயங்கள் உண்மையானதா அல்லது இட்டுக்கட்டப்பட்ட பேச்சுகளா என்பதை அறிந்திருப்பார்கள். அவர்களின் கூற்றிற்கு அர்த்தமும் இருந்திருக்கும். அப்படி அவர்களிடம் எந்த ஆதாரமும் இல்லையே!


وَكَذَّبَ ٱلَّذِينَ مِن قَبْلِهِمْ وَمَا بَلَغُوا۟ مِعْشَارَ مَآ ءَاتَيْنَٰهُمْ فَكَذَّبُوا۟ رُسُلِى ۖ فَكَيْفَ كَانَ نَكِيرِ.

34:45. மேலும் இவர்களுக்கு முன்னிருந்த ஏனைய சமூகத்தவர்களுக்கும் இறைவழிகாட்டுதலை எடுத்துரைத்த போது, அவற்றை பொய்ப்பிக்கவே செய்தனர். மேலும் அவர்களுக்கு கிடைத்திருந்த வாழ்வாதார வசதிகளில் பத்தில் ஒரு பங்கு கூட இவர்களிடம் இல்லை. அந்த அளவிற்கு செல்வ சிறப்புடன் அவர்கள் வாழ்ந்து வந்தார்கள். இருந்தும் அவர்கள் இறைவனின் அறிவுரைகளை ஏற்று நடக்க மறுத்து விட்டனர். அதனால் அங்கு ஏற்பட்டு வந்த சமூக சீர்கேடுகள் அவர்களை நரகம் எனும் பாழ்குழியில் கொண்டுபோய் சேர்த்து விட்டன. எனவே இறைவழிகாட்டுதலை ஏற்க மறுத்து வாழ்ந்தவர்களின் கதி என்னவாயிற்று என்பதை கவனித்துப் பார்க்கும் படி இவர்களிடம் சொல்லுங்கள்.


۞ قُلْ إِنَّمَآ أَعِظُكُم بِوَٰحِدَةٍ ۖ أَن تَقُومُوا۟ لِلَّهِ مَثْنَىٰ وَفُرَٰدَىٰ ثُمَّ تَتَفَكَّرُوا۟ ۚ مَا بِصَاحِبِكُم مِّن جِنَّةٍ ۚ إِنْ هُوَ إِلَّا نَذِيرٌۭ لَّكُم بَيْنَ يَدَىْ عَذَابٍۢ شَدِيدٍۢ.

34:46. இறைவழிகாட்டுதலை எடுத்துரைப்பவரே! “நான் உங்களிடம் அதிகமாக விவாதிக்க விரும்பவில்லை. நான் உங்களுக்கு அறிவுறுத்துவது ஒரே ஒரு விஷயத்தைப் பற்றி மட்டும்தான். நீங்கள் ஒவ்வொருவராகவோ, இரண்டு இரண்டு பேராகவோ அல்லாஹ்வுக்காக சற்று நிதானத்துடன் சிந்தித்துப் பாருங்கள். உங்களுடைய நலனில் அக்கறை கொண்டுள்ள எனக்கு பைத்தியம் பிடித்துள்ளதா? உங்களுடைய தீய செயல்களால் ஏற்படும் விளைவுகளைப் பற்றி முன்னெச்சரிக்கை தானே செய்து வருகிறேன்? நீங்கள் அழிவில் சிக்கிக்கொள்ளக் கூடாது என்பதற்காகத் தானே நான் உங்களுக்கு அறிவுரை செய்கிறேன். இதைத் தவிர நான் வேறு என்ன சொல்லிக் கொண்டு இருக்கிறேன்? என்று இவர்களிடம் கேளுங்கள்.


قُلْ مَا سَأَلْتُكُم مِّنْ أَجْرٍۢ فَهُوَ لَكُمْ ۖ إِنْ أَجْرِىَ إِلَّا عَلَى ٱللَّهِ ۖ وَهُوَ عَلَىٰ كُلِّ شَىْءٍۢ شَهِيدٌۭ.

34:47. “இவ்வாறு உங்களுக்கு அறிவுரைகளை செய்வதற்காக உங்களிடமிருந்து பிரதிப்பலன் எதையாவது எதிர் பார்க்கின்றேனா? அதன் பலன்கள் உங்களுக்கே கிடைக்கட்டும். எனக்கு வேண்டிய வாழ்வதார வசதிகள் என் இறைவனிடமிருந்து கிடைக்கின்றன. இங்கு நடக்கும் ஒவ்வொரு விஷயத்திற்கும் அல்லாஹ்வே சாட்சி ஆயிற்றே!” என்று அவர்களிடம் கூறிவிடுங்கள்.


قُلْ إِنَّ رَبِّى يَقْذِفُ بِٱلْحَقِّ عَلَّٰمُ ٱلْغُيُوبِ.

34:48. “நிச்சயமாக என்னுடைய இறைவனின் செயல்திட்டங்கள் யாவும் நன்மை அளிப்பதாகவே உள்ளன. எனவே அவை அழிவை விளைவுக்கும் தீய சக்திகளை முறியடித்தே தீரும். (மேலும் பார்க்க 21:18) இந்த உண்மைகள் மனித அறிவுக்கு புலப்படுவதில்லை. இத்தகைய மறைவான விஷயங்களை எல்லாம் அறிபவன்தான் என் இறைவன்” என்று அவர்களிடம் கூறிவிடுங்கள்.


قُلْ جَآءَ ٱلْحَقُّ وَمَا يُبْدِئُ ٱلْبَٰطِلُ وَمَا يُعِيدُ.

34:49. “இவ்வாறே ஆக்கப்பூர்வமான நலத் திட்டங்களைக் கொண்ட வழிகாட்டுதல்கள் வந்து விட்டன. எனவே போலியான அராஜக ஆட்சிமுறை முடிவுக்கு வந்தே தீரும். இவையே காலம் காலமாக நடந்து வந்தவை ஆகும். புதிதாக எதுவும் நடக்கப் போவதும் இல்லை. (பார்க்க 17:81)


قُلْ إِن ضَلَلْتُ فَإِنَّمَآ أَضِلُّ عَلَىٰ نَفْسِى ۖ وَإِنِ ٱهْتَدَيْتُ فَبِمَا يُوحِىٓ إِلَىَّ رَبِّىٓ ۚ إِنَّهُۥ سَمِيعٌۭ قَرِيبٌۭ.

34:50. “ஆக தர்மத்திற்கும் அதர்மத்திற்கும் இடையே நடக்கின்ற இந்த போராட்டத்தில் தவறு ஏதாவது ஏற்பட்டால், அது என் புறத்திலிருந்து ஏற்படுபவை ஆகும். இதற்கு என் இறைவன் பொறுப்பல்ல. நான் என் இலட்சியத்தில் வெற்றி பெற்றால், அது என் இறைவன் காட்டிய நேர்வழியில் செயல்பட்டதன் மூலம் கிடைப்பதாகும். என் இறைவன் அனைத்தையும் கேட்கும் வல்லமை பெற்றவன் ஆவான். எனவே அவனுக்குத் தெரியாமல் எதுவும் நடைபெற வாய்ப்பில்லை” என்று அவர்களுக்கு அறிவித்துவிடுங்கள்.


وَلَوْ تَرَىٰٓ إِذْ فَزِعُوا۟ فَلَا فَوْتَ وَأُخِذُوا۟ مِن مَّكَانٍۢ قَرِيبٍۢ.

34:51. மேலும் இந்த போராட்டத்தில் சமூக விரோதிகளை காணும் சந்தர்ப்பம் கிடைத்தால், அவர்கள் பயத்தால் நடுங்குவதை பார்ப்பீர்கள். அவர்கள் தப்பி ஓட முயல்வார்கள். ஆனால் அவர்களால் முடியாது. அவர்களை பிடிப்பதற்கு எந்த சிரமும் இராது.


وَقَالُوٓا۟ ءَامَنَّا بِهِۦ وَأَنَّىٰ لَهُمُ ٱلتَّنَاوُشُ مِن مَّكَانٍۭ بَعِيدٍۢ.

34:52. அப்படியொரு நிலை ஏற்படும் கால கட்டத்தில் தான், அவர்கள் இறைவழிகாட்டுதலை ஏற்றுக் கொள்வதாக கூறுவார்கள். ஆனால் வழிகேட்டில் வெகு தூரம் சென்றபின் ஈமான் கொள்வதாக சொல்லும் அவர்களுடைய பேச்சு எப்படி உண்மையாக இருக்க முடியும்?


وَقَدْ كَفَرُوا۟ بِهِۦ مِن قَبْلُ ۖ وَيَقْذِفُونَ بِٱلْغَيْبِ مِن مَّكَانٍۭ بَعِيدٍۢ.

34:53. காரணம் இதற்கு முன்னர் இவர்கள் நேர்வழியினை ஏற்க மறுத்ததோடு, இதற்கு எதிராக பல சதிகளையும் செய்து வந்தனர். இருட்டில் அம்பை எய்து பார்த்தார்கள். அது பலிக்காமல் போய்விடவே இப்போது ஈமான் கொள்வதாக சொல்கிறார்கள்.


وَحِيلَ بَيْنَهُمْ وَبَيْنَ مَا يَشْتَهُونَ كَمَا فُعِلَ بِأَشْيَاعِهِم مِّن قَبْلُ ۚ إِنَّهُمْ كَانُوا۟ فِى شَكٍّۢ مُّرِيبٍۭ.

34:54. முன்சென்ற சமூகத்தவர்களுக்கு ஏற்பட்ட கதியே இவர்களுக்கும் ஏற்படும். அதாவது அவர்கள் தம் நோக்கத்தில் ஒருபோதும் வெற்றி பெற்றதில்லை. இவர்களுக்கும் இதே கதிதான் ஏற்படும். இதுதான் அவர்களுக்கு நேரவிருக்கும் நிலைமையாகும். இதைப் பற்றி அவர்களிடம் எடுத்துரைத்தால், இப்படி எதுவும் நடக்க வாய்ப்பில்லை என்ற சந்தேகத்திலேயே இருக்கிறார்கள்.