بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
33:0.அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் அறிவுரைப்படியே அனைத்துக் காரியங்களையும் செய்ய நாடுகிறேன். (பார்க்க 6:162)
يَٰٓأَيُّهَا ٱلنَّبِىُّ ٱتَّقِ ٱللَّهَ وَلَا تُطِعِ ٱلْكَٰفِرِينَ وَٱلْمُنَٰفِقِينَ ۗ إِنَّ ٱللَّهَ كَانَ عَلِيمًا حَكِيمًۭا.
33:1. இறைவழிகாட்டுதலை எடுத்துரைப்பவரே! அல்லாஹ்வின் அறிவுரைகளுக்கு எதிராக செயல்படுவதால் ஏற்படும் தீய விளைவுகளைப் பற்றி எண்ணி அஞ்சுங்கள். இறைவழிகாட்டுதலை முற்றிலுமாக நிராகரித்து சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்களையும், உள்ளத்தில் ஒன்று செயல் வேறு என்றிருக்கும் நயவஞ்சகர்களையும் (பார்க்க 2:27) ஒருபோதும் பின்பற்றாதீர்கள். நீங்கள் செயல்படுவது எதுவும் அல்லாஹ்வுக்குத் தெரியாமல் போகாது. அவற்றின் விளைவுகளை ஏற்படுத்தும் பேராற்றல் உடையவன் தான் அல்லாஹ்.
وَٱتَّبِعْ مَا يُوحَىٰٓ إِلَيْكَ مِن رَّبِّكَ ۚ إِنَّ ٱللَّهَ كَانَ بِمَا تَعْمَلُونَ خَبِيرًۭا.
33:2. எனவே உம்முடைய இறைவனிடமிருந்து இறக்கி அருளப்படும் வஹீ எனும் வழிகாட்டுதலை - இந்த குர்ஆனை மட்டும் (பார்க்க 6:19) பின்பற்றுங்கள். நிச்சயமாக உங்கள் செயல்கள் அனைத்தும் அல்லாஹ்வுக்கு நன்கு தெரியும்.
وَتَوَكَّلْ عَلَى ٱللَّهِ ۚ وَكَفَىٰ بِٱللَّهِ وَكِيلًۭا.
3. அவன் இறக்கி அருளியுள்ள வழிகாட்டுதலில் முழுமையாக நம்பிக்கைக் கொண்டு அவற்றின்படியே செயல்படுங்கள். உங்கள் வாழ்வின் இலட்சியங்கள் ஈடேற அல்லாஹ்வின் வழிகாட்டுதலே போதுமானவை.
எனவே இறை வழிகாட்டுதலை நிராகரித்து சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவோரும் நயவஞ்சகர்களும் விதவிதமான புரளிகளை பரப்பி, நாட்டில் குழப்பங்களை ஏற்படுத்தி வருகின்றனர். தேவையற்ற பேச்சுகளை மக்களிடம் பேசி, மார்க்கத்தில் இணையாதவாறு செய்து வருகின்றனர். (பார்க்க 31:6) உதாரணமாக மனைவியை தாய்க்கு ஒப்பிட்டுப் பேசி விட்டால், அவள் தாயாகிவிடுவதாக கூறுகிறார்கள். இவை எல்லாம் வீணான சர்ச்சைகளே ஆகும். காரணம்
مَّا جَعَلَ ٱللَّهُ لِرَجُلٍۢ مِّن قَلْبَيْنِ فِى جَوْفِهِۦ ۚ وَمَا جَعَلَ أَزْوَٰجَكُمُ ٱلَّٰٓـِٔى تُظَٰهِرُونَ مِنْهُنَّ أُمَّهَٰتِكُمْ ۚ وَمَا جَعَلَ أَدْعِيَآءَكُمْ أَبْنَآءَكُمْ ۚ ذَٰلِكُمْ قَوْلُكُم بِأَفْوَٰهِكُمْ ۖ وَٱللَّهُ يَقُولُ ٱلْحَقَّ وَهُوَ يَهْدِى ٱلسَّبِيلَ.
33:4. எந்த மனிதனிடத்திலும் இரண்டு இருதயங்கள் இருப்பதில்லை. ஏதோ கோபத்திலோ அல்லது விளையாட்டாகவோ உங்கள் மனைவியைப் பார்த்து தன் தாயைப் போன்று இருக்கிறாள் என்று சொன்னதற்காக, அவள் தாயாகிவிட மாட்டாள். அதே போல சிறுபிள்ளைகளைப் பார்த்து மகனே அல்லது மகளே என்று சொல்லி விடுவதால், சொந்த மகனாகவோ அல்லது மகளாகவோ ஆகிவிட மாட்டாள். இவையாவும் நீங்கள் செல்லமாக அழைக்கும் வாய்ச் சொற்களேயாகும். அல்லாஹ்வின் வழிகாட்டுதல்கள் யாவும் உங்களுடைய சிறப்பான வாழ்விற்கு எவை பொருந்துமோ அவற்றை மட்டுமே எடுத்துரைக்கின்றன. மேலும் அவை உங்களை நேரான பாதையிலேயே அழைத்து செல்கின்றன.
ஆக எதையும் விளையாட்டுக்காக சொல்வது பெரிய குற்றமில்லை. ஆனால் அதையே உளப்பூர்வமாக நன்றாக அறிந்தே முறைதவறிப் பேசுவது என்பது வேறு விஷயமாகும். (விளக்கத்திற்குப் பார்க்க 2:226, 58:2-3). இவை தண்டனைக்குரிய குற்றங்களாகும். ஆக ஒரு பிள்ளையை பிரியத்துடன் தன் பிள்ளை என்று கூறினால் அது பெரிய குற்றமாகாது. ஆனால் சட்டப்படி சொல்ல வேண்டுமென்றால்
ٱدْعُوهُمْ لِءَابَآئِهِمْ هُوَ أَقْسَطُ عِندَ ٱللَّهِ ۚ فَإِن لَّمْ تَعْلَمُوٓا۟ ءَابَآءَهُمْ فَإِخْوَٰنُكُمْ فِى ٱلدِّينِ وَمَوَٰلِيكُمْ ۚ وَلَيْسَ عَلَيْكُمْ جُنَاحٌۭ فِيمَآ أَخْطَأْتُم بِهِۦ وَلَٰكِن مَّا تَعَمَّدَتْ قُلُوبُكُمْ ۚ وَكَانَ ٱللَّهُ غَفُورًۭا رَّحِيمًا.
33:5. அவர்களைப் பெற்று வளர்த்த தாய்* அல்லது தந்தையின் பெயரை பயன்படுத்தியோ, இன்னாரின் மகன் அல்லது மகள் என்றே பதிவு செய்யுங்கள். இதுவே அல்லாஹ்வின் சட்டப்படி மிகவும் சிறப்பானதாகும். ஆனால் தாய் தந்தையரின் பெயரை அறியாத அநாதைகளாக இருந்தால் அவர்களை உங்கள் மார்க்க சகோதர சகோதரிகளாக கருதுங்கள். அவர்களை உங்களுடைய நண்பர்களாக்கிக் கொள்ளுங்கள். இதற்குமுன் தவறுகள் நேர்ந்திருந்தால் அவற்றை நீங்கள் பெரிது படுத்தாதீர்கள். இனி அவ்வாறு நடக்காதவாறு பார்த்துக் கொள்ளுங்கள். எனவே நீங்கள் வேண்டுமென்றே உளப்பூர்வமாக அறிந்தே கூறினால் அது குற்றமாகும். இப்படியாக உங்கள் அனைவரின் பாதுகாப்பான வாழ்விற்காவே தலைசிறந்த வழிகாட்டுதல்கள் வகுக்கப்படுகின்றன. இதுவே அல்லாஹ்வின் இரக்க குணநலங்களின் பிரதிபலிப்பாகும்.
உதாரணத்திற்கு ஈஸா நபி, தாயின் பெயரைக் கொண்டே அழைக்கப்படுகிறார். அவரது தந்தையின் பெயரைக் குறிப்பிட்டு சொல்லப்படுவதில்லை. எனவே தாயின் பெயரைப் பயன்படுத்தியும் அரசாங்க பதிவேட்டில் பதிவு செய்யலாம். மேலும் மார்க்க சகோதரத்துவம் என்பது இணைபிரியாத பாசப்பிணைப்புடன் ஏற்படும் உறவுமுறையாகும். (பார்க்க 8:63) அதே போல்
ٱلنَّبِىُّ أَوْلَىٰ بِٱلْمُؤْمِنِينَ مِنْ أَنفُسِهِمْ ۖ وَأَزْوَٰجُهُۥٓ أُمَّهَٰتُهُمْ ۗ وَأُو۟لُوا۟ ٱلْأَرْحَامِ بَعْضُهُمْ أَوْلَىٰ بِبَعْضٍۢ فِى كِتَٰبِ ٱللَّهِ مِنَ ٱلْمُؤْمِنِينَ وَٱلْمُهَٰجِرِينَ إِلَّآ أَن تَفْعَلُوٓا۟ إِلَىٰٓ أَوْلِيَآئِكُم مَّعْرُوفًۭا ۚ كَانَ ذَٰلِكَ فِى ٱلْكِتَٰبِ مَسْطُورًۭا.
33:6. இறைவழிகாட்டுதலை எடுத்துரைக்கும் நபி, மூஃமின்களுக்கு தம் உயிரைவிட மேலானவராக கருதப்படுகிறார். நபியும் மூஃமின்களின் மீது அளவுகடந்த பாசத்துடன் இருக்கிறார். (பார்க்க 9:128) ஏனெனில் அவர்கள் அல்லாஹ்வின் பாதையில் தம் உயிர்களை தியாகம் செய்வதாக உறுதிமொழி அளித்தவர்கள். (பார்க்க 9:111, 48:10) மேலும் நபியின் மனைவிமார்கள் மூஃமின்களுக்கு தாயைப் போன்றவர்கள் ஆவர். (பார்க்க 33:53) மூஃமின்களிடையே உள்ள இரத்தபந்த உறவுமுறை என்பது வேறு. மார்க்க அடிப்படையில் ஏற்படும் உறவுமுறை என்று வரும்போது, இரத்தபந்த உறவுமுறையைவிட இதில் நெருக்கம் அதிகமாக இருக்கும். இரத்தபந்த உறவுமுறையில் சொத்துரிமை விதியாக்கியது போல் அல்லாஹ்வின் பாதையில் தம் வீட்டையும் ஊரையும் துறந்து வந்த மூஹாஜிர்கள், மூஃமின்களைவிட அதிக உரிமைப் பெற்றவர்களாக ஆகிறார்கள். இருப்பினும் நட்புறவின் அடிப்படையில் உதவி செய்வதில் யாதொரு குற்றமும் இல்லை. இவையாவும் நிலைநிறுத்தப்பட்ட சட்டங்களாகும்.
وَإِذْ أَخَذْنَا مِنَ ٱلنَّبِيِّۦنَ مِيثَٰقَهُمْ وَمِنكَ وَمِن نُّوحٍۢ وَإِبْرَٰهِيمَ وَمُوسَىٰ وَعِيسَى ٱبْنِ مَرْيَمَ ۖ وَأَخَذْنَا مِنْهُم مِّيثَٰقًا غَلِيظًۭا.
33:7. இப்படியாக மூஃமின்கள் மற்றும் நபிமார்கள் ஆகியோரிடையே உறுதிப்பாடு இருப்பதும், வாக்குறுதிகளை வாங்கிக் கொள்வதும் புதிதான ஒன்றல்ல. காலம் காலமாக எல்லா நபிமார்களும் அவரவர் காலத்தில் வாழ்ந்த மூஃமின்களிடம் இத்தகைய இணைபிரியா உறுதிமொழிகளை வாங்கி இருக்கிறார்கள். குறிப்பாக நூஹ் நபி, இப்ராஹீம் நபி, மூஸா நபி மற்றும் மர்யமின் குமாரர் ஈஸா நபியிடமும் இத்தகைய வாக்குறுதிகள் வாங்கப்பட்டன. அதே அடிப்படையில் தான் இப்போதும் நபியே உம்மிடத்திலும் உறுதிமொழிகள் எடுத்துக் கொள்ளப்படுகின்றன. இறைவனின் நியதிப்படி ஏற்படும் இத்தகைய உறுதிமொழி யாவும் உறுதி மிக்கதாகும். (மேலும் பார்க்க 3:81)
இவ்வாறு அவர்கள் செய்துகொள்ளும் ஒப்பந்தங்களின் விவரம் மிகவும் விசாலமானவையாகும். ஆனால் அவற்றின் கருவூலம் யாதெனில்
لِّيَسْـَٔلَ ٱلصَّٰدِقِينَ عَن صِدْقِهِمْ ۚ وَأَعَدَّ لِلْكَٰفِرِينَ عَذَابًا أَلِيمًۭا.
33:8. நீதி நெறிமுறையைக் கட்டிக் காப்பதாக நபியிடம் செய்துகொள்ளும் வாக்குறுதிப்படி அவர்கள் நடந்துகொள்ள வேண்டும். அவர்கள் செய்துகொண்ட வாக்குறுதிக்கு எதிராக செயல்படுபவர்கள் அல்லாஹ்வுக்குப் பதில் சொல்லியே ஆகவேண்டும். அத்தகையவர்களுக்கு நோவினைத் தரும் வேதனைகள் நிச்சயமாக வந்தடையும். இதுவே அவர்களிடையே செய்துகொள்ளும் வாக்குறுதியின் கருவூலமாகும்.
يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟ ٱذْكُرُوا۟ نِعْمَةَ ٱللَّهِ عَلَيْكُمْ إِذْ جَآءَتْكُمْ جُنُودٌۭ فَأَرْسَلْنَا عَلَيْهِمْ رِيحًۭا وَجُنُودًۭا لَّمْ تَرَوْهَا ۚ وَكَانَ ٱللَّهُ بِمَا تَعْمَلُونَ بَصِيرًا.
33:9. இறைவழிகாட்டுதலை மனதார ஏற்றுக்கொண்டவர்களே! பகைவர்கள் உங்களுக்கு எதிராக படையெடுத்த போது, அந்த இக்கட்டான சூழ்நிலையில் அல்லாஹ்வின் உதவி எவ்வாறு வந்தது என்பதை எண்ணிப் பாருங்கள். அப்போது நீங்கள் பார்க்க முடியாத பிரபஞ்ச இயற்கை சக்திகளில் ஒன்றாகிய புயல்காற்றை வீசச் செய்து பகைவர்களை பலவீனப்படுத்தி உங்களுக்கு புத்துயிர் கிடைக்கச் செய்யவில்லையா? (பார்க்க 8:11-12) மேலும் நீங்கள் செய்தவை அனைத்தையும் அல்லாஹ் உன்னிப்புடன் கவனிப்பவனாகவே இருக்கிறான். எனவே இப்போதும் அல்லாஹ்வின் உதவி உங்களுக்கு நிச்சயம் கிடைக்கும்.
إِذْ جَآءُوكُم مِّن فَوْقِكُمْ وَمِنْ أَسْفَلَ مِنكُمْ وَإِذْ زَاغَتِ ٱلْأَبْصَٰرُ وَبَلَغَتِ ٱلْقُلُوبُ ٱلْحَنَاجِرَ وَتَظُنُّونَ بِٱللَّهِ ٱلظُّنُونَا۠.
33:10. அது எத்தகைய இக்கட்டான சூழ்நிலை என்றால் பகைவர்கள் நாலாபுறமும் உங்களை சூழ்ந்து கொண்டிருந்தனர். பயத்தால் உங்கள் கண்கள் இருண்டுவிட்டன. நடுக்கத்தால் உங்களுடைய இதயத் துடிப்பு உங்கள் தொண்டையை அடைத்துக்கொண்டது. அல்லாஹ் கொடுத்த வாக்குறுதியைப் பற்றி உங்களுக்குப் பல்வேறு சந்தேகங்களும் அவநம்பிக்கையும் ஏற்பட்டு விட்டன. அப்படிப்பட்ட இக்கட்டான சூழ்நிலையில் உங்களுக்கு அல்லாஹ்வின் உதவி வந்ததை நினைவு கூறுங்கள். (மேலும் பார்க்க 2:214 ,3:142, 9:16, 29:2)
هُنَالِكَ ٱبْتُلِىَ ٱلْمُؤْمِنُونَ وَزُلْزِلُوا۟ زِلْزَالًۭا شَدِيدًۭا.
33:11. அப்போது அல்லாஹ்வின் படைவீரர்களாகிய மூஃமின்கள் பல அதிர்ச்சிகளுக்கும் திகில்களுக்கும் ஆளானார்கள். அத்தகைய சமயத்தில் அல்லாஹ்வின் உதவி அவர்களுக்கு வரவில்லையா?
وَإِذْ يَقُولُ ٱلْمُنَٰفِقُونَ وَٱلَّذِينَ فِى قُلُوبِهِم مَّرَضٌۭ مَّا وَعَدَنَا ٱللَّهُ وَرَسُولُهُۥٓ إِلَّا غُرُورًۭا.
33:12. அப்படிப்பட்ட இக்கட்டான சூழ்நிலையில், “அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் ஏமாற்றத்தைத் தவிர வேறெதுவும் ஒருபோதும் தரமாட்டார்கள்” என்று நயவஞ்சகர்களும் தீய மனப்பான்மை கொண்டவர்களும் வதந்திகளைப் பரப்பி, மூஃமின்கள் மனதில் தொய்வு ஏற்படுத்தியதையும் எண்ணிப் பாருங்கள்.
وَإِذْ قَالَت طَّآئِفَةٌۭ مِّنْهُمْ يَٰٓأَهْلَ يَثْرِبَ لَا مُقَامَ لَكُمْ فَٱرْجِعُوا۟ ۚ وَيَسْتَـْٔذِنُ فَرِيقٌۭ مِّنْهُمُ ٱلنَّبِىَّ يَقُولُونَ إِنَّ بُيُوتَنَا عَوْرَةٌۭ وَمَا هِىَ بِعَوْرَةٍ ۖ إِن يُرِيدُونَ إِلَّا فِرَارًۭا.
33:13. அவர்கள் மதீனாவாசிகளை நோக்கி, “எதிரிகளின் படைப் பலத்தை எதிர்த்து உங்களால் போரிடவே முடியாது. எனவே நீங்கள் இங்கிருந்து ஓடிவிடுங்கள்” என்று கூறி வந்தார்கள். இந்த அச்சுறுத்தலைக் கேட்ட சிலர், நபியிடம் வந்து தங்களுடைய வீடுகள் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதாகக் காரணம் காட்டி களத்தை விட்டு திரும்பிச் செல்ல அனுமதி கோறினார்கள். உண்மை அதுவல்ல. அவை யாவும் தப்பி ஓடுவதற்காக சொன்ன சாக்கு போக்குகளே ஆகும்.
وَلَوْ دُخِلَتْ عَلَيْهِم مِّنْ أَقْطَارِهَا ثُمَّ سُئِلُوا۟ ٱلْفِتْنَةَ لَءَاتَوْهَا وَمَا تَلَبَّثُوا۟ بِهَآ إِلَّا يَسِيرًۭا.
33:14. ஒருவேளை பகைவர்களின் படைகள் நாலாபுறமும் சூழ்ந்து ஊருக்குள் நுழைந்து மூஃமின்களுக்கு எதிராக போரிட நயவஞ்சகர்களிடம் சொல்லி இருந்தால், அப்போது தங்கள் வீடுகள் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதைப் பற்றியெல்லாம் கவலைப்பட்டிருக்க மாட்டார்கள். உடனே களத்தில் இறங்கி மூஃமின்களை முறியடிக்க வீட்டைவிட்டு புறப்பட்டு இருப்பார்கள்.
وَلَقَدْ كَانُوا۟ عَٰهَدُوا۟ ٱللَّهَ مِن قَبْلُ لَا يُوَلُّونَ ٱلْأَدْبَٰرَ ۚ وَكَانَ عَهْدُ ٱللَّهِ مَسْـُٔولًۭا.
33:15. ஆக போர் ஏற்படுவதற்கு முன் அவர்கள் போரிலிருந்து புறங்காட்டி ஓடுவதில்லை என்று நபி மூலம் அல்லாஹ்வுக்கு வாக்குறுதி அளித்திருந்தார்கள். எனவே அவர்கள் அளித்த வாக்குறுதியின்படி நடந்து கொள்வது அவர்களுடைய பொறுப்பாகும் அல்லவா? அதை மீறி நடந்தால் அல்லாஹ் அதைப் பற்றி கேட்கமாட்டானா?
قُل لَّن يَنفَعَكُمُ ٱلْفِرَارُ إِن فَرَرْتُم مِّنَ ٱلْمَوْتِ أَوِ ٱلْقَتْلِ وَإِذًۭا لَّا تُمَتَّعُونَ إِلَّا قَلِيلًۭا.
33:16. எனவே போரின் சமயம் யாரும் புறமுதுகு காட்டி ஓடக் கூடாது என்று நபி மூலம் அறிவுறுத்தினோம். மரணித்து விடுவோம் என்றோ கொல்லப்படுவோம் என்றோ பயந்து களத்தைவிட்டு ஓடுவது அவர்களுக்கு யாதொரு பலனையும் அளிக்காது என்றும், அப்படியும் ஓடி வாழ்ந்தாலும் சொற்ப காலத்திற்கே அன்றி நீண்ட காலத்திற்கு சுகமாக வாழமுடியாது என்றும் அவர்களுக்கு அறிவித்து விடுங்கள்.
قُلْ مَن ذَا ٱلَّذِى يَعْصِمُكُم مِّنَ ٱللَّهِ إِنْ أَرَادَ بِكُمْ سُوٓءًا أَوْ أَرَادَ بِكُمْ رَحْمَةًۭ ۚ وَلَا يَجِدُونَ لَهُم مِّن دُونِ ٱللَّهِ وَلِيًّۭا وَلَا نَصِيرًۭا.
33:17. மேலும் அல்லாஹ்வின் ஆட்சியமைப்புக்கு தீங்கிழைத்தால், அதற்குரிய தண்டனையிலிருந்து உங்களை பாதுகாப்பது யார்? மாறாக அல்லாஹ்வின் ஆட்சியமைப்பை ஆதரித்து செயல்பட்டால், அரசு உங்களுக்கு பல நன்மைகளை செய்து தரும். அத்தகைய நன்மைகளை அரசு செய்து கொடுப்பதை யாரால் தடுக்க முடியும்? இந்த அரசாட்சியின் ஆதரவை இழந்து விட்டால் உங்களுக்கு உதவி செய்வோர் வேறு யாரும் இருக்க மாட்டார்கள். இதையும் அவர்களிடம் தெளிவாக எடுத்துரையுங்கள்.
۞ قَدْ يَعْلَمُ ٱللَّهُ ٱلْمُعَوِّقِينَ مِنكُمْ وَٱلْقَآئِلِينَ لِإِخْوَٰنِهِمْ هَلُمَّ إِلَيْنَا ۖ وَلَا يَأْتُونَ ٱلْبَأْسَ إِلَّا قَلِيلًا.
33:18. மேலும் போரில் பங்கெடுக்க முடிவெடுத்திருக்கும் மார்க்க சகோதரர்களை நோக்கி, போரில் கலந்து கொள்ளாமல் தங்களிடமே திரும்பி வந்துவிடும்படி சிலர் சொல்கிறார்கள். அவர்களைப் பற்றியும் அல்லாஹ்வின் ஆட்சியமைப்பு அறிந்தே இருக்கிறது என்பதை அவர்களிடம் அறிவித்து விடுங்கள். எனவே அவர்களில் சிலரே போரில் பங்கெடுக்க முன்வருவார்கள் என்பதும் இந்த அரசுக்குத் தெரியும்.
أَشِحَّةً عَلَيْكُمْ ۖ فَإِذَا جَآءَ ٱلْخَوْفُ رَأَيْتَهُمْ يَنظُرُونَ إِلَيْكَ تَدُورُ أَعْيُنُهُمْ كَٱلَّذِى يُغْشَىٰ عَلَيْهِ مِنَ ٱلْمَوْتِ ۖ فَإِذَا ذَهَبَ ٱلْخَوْفُ سَلَقُوكُم بِأَلْسِنَةٍ حِدَادٍ أَشِحَّةً عَلَى ٱلْخَيْرِ ۚ أُو۟لَٰٓئِكَ لَمْ يُؤْمِنُوا۟ فَأَحْبَطَ ٱللَّهُ أَعْمَٰلَهُمْ ۚ وَكَانَ ذَٰلِكَ عَلَى ٱللَّهِ يَسِيرًۭا.
33:19. அவர்களுடைய சுயநலப் போக்கும் கருமித்தனமும் எவ்வாறு உள்ளன என்பதையும் அறிந்து கொள்ளுங்கள். ஒருவேளை அவர்கள் உங்களோடு போருக்குப் புறப்பட்டே இருந்தாலும், மரணத் தருவாயில் மயங்கிக் கிடப்பவனின் கண்கள் எவ்வாறு சுழன்று சுழன்று வருமோ, அவ்வாறே அவர்கள் மரண பயத்தில் மிரள்வதை கண்டிருப்பீர்கள். அப்படியும் போர் முடிவுற்று அச்சம் தீர்ந்த நிலை ஏற்பட்டாலும், போரில் கிடைத்த பொருட்களின் மீது பேராசை கொண்டவர்களாக நாக்கை தொங்கவிட்டு அலைவதை பார்த்திருப்பீர்கள். அவற்றை பெற முடியாமல் போனால் உங்களை சாடியும் இருப்பார்கள். இதற்குக் காரணம் என்னவென்றால், அவர்கள் உண்மையிலேயே அல்லாஹ்வின் மீது ஈமான் கொள்ளவில்லை. வெறும் ஒப்புக்காகத் தான் ஈமான் கொண்டதாக சொல்லி வந்தார்கள். எனவே இதுவரையில் அவர்கள் செய்து வந்த நற்காரியங்கள் யாவும் வீணாகி, பலனற்றுப் போய்விடும். அவ்வாறு அவற்றை வீணாக்குவது அல்லாஹ்வுக்கு சிரமமான காரியம் அல்ல. இதை அவர்களிடம் எடுத்துரையுங்கள்.
يَحْسَبُونَ ٱلْأَحْزَابَ لَمْ يَذْهَبُوا۟ ۖ وَإِن يَأْتِ ٱلْأَحْزَابُ يَوَدُّوا۟ لَوْ أَنَّهُم بَادُونَ فِى ٱلْأَعْرَابِ يَسْـَٔلُونَ عَنْ أَنۢبَآئِكُمْ ۖ وَلَوْ كَانُوا۟ فِيكُم مَّا قَٰتَلُوٓا۟ إِلَّا قَلِيلًۭا.
33:20. அவர்களுடைய மரண பயம் எந்த அளவிற்கு வேரூன்றி இருக்கிறது என்றால், பகைவர்கள் தோற்றுப் போன பின்பும், பகைவர்கள் இன்னமும் களத்தில் இருப்பதாக எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். மறுபடியும் அவர்கள் தம்மைத் தாக்க வந்தால், நாம் கிராமப் புறங்களுக்குச் சென்று மறைந்து கொள்ளலாம் என்று திட்டமிடுகிறார்கள். அங்கே இருந்து கொண்டு போர் நிலவரத்தைப் பற்றி விசாரித்துக் கொள்ளலாம் எனவும் எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். எனவே இத்தகையவர்கள் உங்களோடு இணைந்து போரிட்டிருந்தாலும் அது உங்களுக்கு எந்தப் பலனும் கிடைத்திருக்காது. அதிலும் அவர்களில் மிகச் சிலரே போரில் கலந்து கொண்டிருப்பார்கள்.
இவை தான் போர் காலங்களில் இருந்து வந்த இக்கட்டான சூழ்நிலைகளாகும். இஸ்லாமிய ஆட்சி உருவாவதை எதிர்த்து படையெடுத்த பகைவர்கள் ஒருபுறம். உள் நாட்டிலேயே அரசுக்கு எதிராக சதி வேலைகளில் தீவிரமாக செயல்பட்ட நயவஞ்சகர்கள் மறுபுறம். இவர்களுக்கு இடையே எல்லாவற்றையும் எதிர்கொண்டு, எந்த பதட்டமும் இல்லாமல் நிதானத்துடன் அல்லாஹ்வின் மீது அசைக்க முடியாத நம்பிக்கையுடன் செயல்பட்ட படைத் தளபதி இறைத்தூதர். இத்தனைக்கும் அவர் புயல் வேகத்தில் செயல்பட்டு எவ்வாறு மூஃமின்களுக்கு கலங்கரை விளக்காக ஜொலித்தார் என்பதை நீங்கள் கவனித்தீர்களா? இதனால்தான் உங்களுக்கு ஆயிரமாயிரம் மனநிறைவு அளிப்பதாக இருந்தது.
لَّقَدْ كَانَ لَكُمْ فِى رَسُولِ ٱللَّهِ أُسْوَةٌ حَسَنَةٌۭ لِّمَن كَانَ يَرْجُوا۟ ٱللَّهَ وَٱلْيَوْمَ ٱلْءَاخِرَ وَذَكَرَ ٱللَّهَ كَثِيرًۭا.
33:21. இப்படியாக அல்லாஹ்வின் வழிகாட்டுதலில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டு சமுதாய சீர்த்திருத்தங்களை அழகிய முறையில் செய்து வரும் இறைத் தூதர், உங்களுக்கு முன்மாதிரியாக விளங்குகிறார். அல்லாஹ் நிர்ணயித்துள்ள மனித நற்செயல்களின் நற்பலன்கள் என்ற சட்டங்களின் மீது அவருக்கு அசைக்க முடியாத நம்பிக்கை இருந்ததால், இப்படி சிறப்பாக செயல்பட்டு அவரால் வெற்றி பெற முடிந்தது. இறைவனின் அறிவுரைகளே மிகவும் சிறந்தவை என்பதை உலகார்க்கு அவரால் நிரூபித்துக் காட்ட முடிந்தது.
وَلَمَّا رَءَا ٱلْمُؤْمِنُونَ ٱلْأَحْزَابَ قَالُوا۟ هَٰذَا مَا وَعَدَنَا ٱللَّهُ وَرَسُولُهُۥ وَصَدَقَ ٱللَّهُ وَرَسُولُهُۥ ۚ وَمَا زَادَهُمْ إِلَّآ إِيمَٰنًۭا وَتَسْلِيمًۭا.
33:22. எனவே மூஃமின்கள் பகைவர்களின் கூட்டுப் படைகளைக் கண்டு பயப்படவில்லை. மாறாக அவர்கள், “அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் (ஆட்சியமைப்பும்) நமக்கு அளித்த வாக்கு நிறைவேறும் தருணம் வந்துவிட்டது. இப்போது ஒவ்வொருவருடைய செயல்களின் பலன்களையும் அடைந்து கொள்ளும் காலக் கட்டம் வந்து விட்டது” என்று முழக்கமிட்டார்கள். அதாவது மரண பயத்தால் நடுங்கிய முனாஃபிக்குகளுக்கு நடைபிணமான வாழ்வும், மூஃமின்களுக்கு இறைவன் மீதுள்ள நம்பிக்கை கூடி வருவது நிச்சயம் என்றும் நிரூபணம் ஆகிவிட்டது.
مِّنَ ٱلْمُؤْمِنِينَ رِجَالٌۭ صَدَقُوا۟ مَا عَٰهَدُوا۟ ٱللَّهَ عَلَيْهِ ۖ فَمِنْهُم مَّن قَضَىٰ نَحْبَهُۥ وَمِنْهُم مَّن يَنتَظِرُ ۖ وَمَا بَدَّلُوا۟ تَبْدِيلًۭا.
33:23. காரணம் மூஃமின்களின் படையை சேர்ந்த வீரர்கள் அளித்த வாக்குறுதிப்படி நடந்து, தாம் உண்மையாளர்கள் என்பதை நிரூபித்துக் காட்டினார்கள். (பார்க்க 9:111) அவர்களில் சிலர் உயிர் தியாகமும் செய்து, தாம் இலட்சியவாதிகள் எனவும் நிரூபித்துக் காட்டினர். மேலும் சிலர் மீண்டும் போருக்கான கட்டளை எப்போது வரும் என்று எதிர் பார்த்து, தாமும் இலட்சியவாதிகளே என்ற பெயரை எடுக்க வேண்டும் என்ற ஆர்வத்துடன் இருக்கிறார்கள். இப்படியாக அவர்கள் எந்த நிலையிலும் தாம் அல்லாஹ்வுக்கு அளித்த வாக்குறுதிகளில் நிலைத்திருந்து செயல்பட்டார்கள். அதிலிருந்து சிறிதளவும் பிசகவில்லை.
لِّيَجْزِىَ ٱللَّهُ ٱلصَّٰدِقِينَ بِصِدْقِهِمْ وَيُعَذِّبَ ٱلْمُنَٰفِقِينَ إِن شَآءَ أَوْ يَتُوبَ عَلَيْهِمْ ۚ إِنَّ ٱللَّهَ كَانَ غَفُورًۭا رَّحِيمًۭا.
33:24. இப்படியாக தம் வாக்குறுதிகளில் நிலைத்திருந்து உண்மைப்படுத்தி காட்டுபவர்களுக்கு இறைவனின் நியதிப்படி தக்க சன்மானம் கிடைக்கும். அதே போல நயவஞ்சகர்களுக்கு வேதனை மிக்க தண்டனை கிடைக்கும். ஒருவேனை அவர்கள் திருந்தி வந்தால், அவர்களுக்கு பொது மன்னிப்பு அளிக்கப்படும். அல்லாஹ்வின் வழிகாட்டுதல்கள் யாவும் அனைத்துத் தரப்பு மக்களின் நலனைப் பேணிக் காப்பதாகவே உள்ளன. இது அல்லாஹ்வின் மாபெரும் கருணையாகும்.
وَرَدَّ ٱللَّهُ ٱلَّذِينَ كَفَرُوا۟ بِغَيْظِهِمْ لَمْ يَنَالُوا۟ خَيْرًۭا ۚ وَكَفَى ٱللَّهُ ٱلْمُؤْمِنِينَ ٱلْقِتَالَ ۚ وَكَانَ ٱللَّهُ قَوِيًّا عَزِيزًۭا.
33:25. இறைவனின் ஆட்சியமைப்புக்கு எதிராக போரிட்டவர்கள், தோல்வியுற்று பல வகையில் கோபத்திற்கும் வெறுப்புக்கும் ஆளானார்கள். மேலும் அவர்களுக்கு எந்த நன்மையும கிடைக்கவில்லை. இப்படியாக அல்லாஹ்வின் வழிகாட்டுதல்கள் மூஃமின்களை வெற்றிபெறச் செய்ய போதுமானதாக இருந்தன. மேலும் அல்லாஹ்வின் செயல் திட்டங்கள் அனைத்தையும் மிகைக்கும் வகையில் பேராற்றல் உடையதாக உள்ளன.
وَأَنزَلَ ٱلَّذِينَ ظَٰهَرُوهُم مِّنْ أَهْلِ ٱلْكِتَٰبِ مِن صَيَاصِيهِمْ وَقَذَفَ فِى قُلُوبِهِمُ ٱلرُّعْبَ فَرِيقًۭا تَقْتُلُونَ وَتَأْسِرُونَ فَرِيقًۭا.
33:26. மேலும் பகைவர்களின் படைகளுக்கு உதவிப் புரிந்த வேதக்காரர்களை, அவர்களுடைய கோட்டையிலிருந்து வெளியேறச் செய்து அவர்களுடைய மனதில் திகிலை ஏற்படுத்தினீர்கள். மேலும் அவர்களில் சிலர், களத்தில் மாண்டு போனார்கள். மற்றவர்களை நீங்கள் சிறைப் பிடித்தீர்கள்.
وَأَوْرَثَكُمْ أَرْضَهُمْ وَدِيَٰرَهُمْ وَأَمْوَٰلَهُمْ وَأَرْضًۭا لَّمْ تَطَـُٔوهَا ۚ وَكَانَ ٱللَّهُ عَلَىٰ كُلِّ شَىْءٍۢ قَدِيرًۭا.
33:27. இப்படியாக அவர்களுடைய நிலங்கள், வீடுகள் மற்றும் செல்வங்கள் யாவும் உங்களுடைய கட்டுப்பாட்டிற்குள் வந்துவிட்டன. இது வரையில் உங்களுடைய காலடி கூட படியாத நிலங்களுக்கு நீங்கள் வாரிசுதாரர்களாகி விட்டீர்கள். அல்லாஹ்வின் வழிகாட்டுதலின் வலிமை, அனைத்தையும் கட்டுப்படுத்தக் கூடிய வகையில் உள்ளது என்பதற்கு இதுவே ஒரு சான்றாகும்.
அதாவது எல்லா நிகழ்வுகளும் அல்லாஹ்வின் நியதிப்படி முறையாகவே நடந்து வருகின்றன. அவை யாருக்கும் எதிராகவோ அல்லது சாதகமாகவோ செயல் படுவதில்லை. அவரவர் செய்துவரும் செயலுக்கு ஏற்றவாறே பலன்களும் வேதனைகளும் வந்தடைகின்றன. இப்படியாகத் தான் மூஃமின்களுக்கு ஆட்சி அதிகாரங்களுடன் சிறப்பான வாழ்வு கிடைக்கும் என்ற அல்லாஹ்வின் வாக்குறுதி (பார்க்க 24:55) நிறைவேறுகிறது.
இந்தப் போர் நடவடிக்கைகள் யாவும் பகைவர்களின் பலத்தை குன்றச் செய்து, இறைவனின் ஆட்சியமைப்பு திட்டங்களை சிறப்பாக நிறைவேற்ற வேண்டும் என்பதற்காகத் தான். (பார்க்க 48:1-3). அந்த திட்டங்களில் முக்கிய அம்சம் யாதெனில் நாட்டு மக்களுக்கு சீரான கல்வி போதனைகளை அளித்து, அவர்களை சீரும் சிறப்புமாக வாழவைப்பதே ஆகும். அப்போது தான் நாட்டில் உள்ள குழப்பங்கள் நீங்கி, நியாயமான ஆட்சி நடைபெற்று வரும். நாட்டை சீராக்கும் விஷயத்தில் ஆண்கள் மட்டும் உழைத்தால் போதாது. பெண்களும் ஆண்களுக்கு இணையாக பணியாற்ற வேண்டும். எனவே முதன்முதலில் இறை அறிவுரைகளை உங்கள் வீட்டிலிருக்கும் பெண்களுக்கும் அளிக்கவேண்டும்
يَٰٓأَيُّهَا ٱلنَّبِىُّ قُل لِّأَزْوَٰجِكَ إِن كُنتُنَّ تُرِدْنَ ٱلْحَيَوٰةَ ٱلدُّنْيَا وَزِينَتَهَا فَتَعَالَيْنَ أُمَتِّعْكُنَّ وَأُسَرِّحْكُنَّ سَرَاحًۭا جَمِيلًۭا.
33:28. இறைவழிகாட்டுதலை எடுத்துரைப்பவரே! உங்கள் வீட்டில் உள்ள துணைவியர்களுக்கு மேற்சொன்ன உண்மைகளை எடுத்துரையுங்கள். அவர்கள் உம்மோடு இணைந்து வாழ விரும்பினால், உம்முடைய இலட்சியங்களை நிறைவேற்றவே அவர்கள் துணை புரிய முன் வரவேண்டும். வெறும் உடல் சுகத்திலும், தற்காலிக இன்ப வாழ்வின் ஈர்ப்புகளிலும் அவர்களுடைய கவனங்கள் இருந்தால், அத்தகையவர்கள் உம்மோடு இணைந்து வாழும் வாய்ப்பு பெற மாட்டார்கள். எனவே அவர்களுக்கு வேண்டிய வாழ்க்கை வசதிகளை செய்துகொடுத்து, அவர்களை விடுவித்துவிட தயாராக இருப்பதாக அவர்களிடம் கூறிவிடுங்கள்.
وَإِن كُنتُنَّ تُرِدْنَ ٱللَّهَ وَرَسُولَهُۥ وَٱلدَّارَ ٱلْءَاخِرَةَ فَإِنَّ ٱللَّهَ أَعَدَّ لِلْمُحْسِنَٰتِ مِنكُنَّ أَجْرًا عَظِيمًۭا.
33:29. மேலும் அவர்கள் அல்லாஹ்வின் வழிகாட்டுதலையும், அவனுடைய ஆட்சியமைப்பு சட்டங்களையும் ஏற்று சிறப்பான எதிர் காலத்தை உருவாக்க விரும்பினால், அழகிய முறையில் சமூக நலப் பணிகளை தொடர்ந்து செய்து வரட்டும். அப்போது அவர்களுக்கு இந்த ஆட்சியமைப்பு சிறந்த வெகுமதியை அளிக்கும் என்பதையும் எடுத்துரையுங்கள். வருங்கால வாழ்வு என்பது மரணத்திற்குப் பின்பும் தொடர்வதால், அங்கும் அவர்களுக்கு மகத்தான வாழ்வு கிடைக்கும்படி ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாக அறிவித்து விடுங்கள். (பார்க்க 33:33)
يَٰنِسَآءَ ٱلنَّبِىِّ مَن يَأْتِ مِنكُنَّ بِفَٰحِشَةٍۢ مُّبَيِّنَةٍۢ يُضَٰعَفْ لَهَا ٱلْعَذَابُ ضِعْفَيْنِ ۚ وَكَانَ ذَٰلِكَ عَلَى ٱللَّهِ يَسِيرًۭا.
33:30. இறைத்தூதர் இல்லத்தில் தங்கி, சீர்திருத்தப் பணியில் ஈடுபடும் பெண்கள், மற்றவர்களுக்கு முன்மாதிரியாக விளங்கவேண்டும். எனவே அவர்கள் எவ்வித முறையற்ற செயலையும் செய்யாமல் தம்மை பாதுகாத்துக் கொள்ள வேண்டும். அதையும் மீறி அவர்களில் யாராவது சட்ட விரோதமாக நடந்து கொண்டால், அவர்களுக்கு இரு மடங்கு தண்டனை கிடைக்கும். இவ்வாறு தண்டனை அளிப்பதற்கு அல்லாஹ்வின் ஆட்சியமைப்புக்கு எவ்வித தடையும் இல்லை.
۞ وَمَن يَقْنُتْ مِنكُنَّ لِلَّهِ وَرَسُولِهِۦ وَتَعْمَلْ صَٰلِحًۭا نُّؤْتِهَآ أَجْرَهَا مَرَّتَيْنِ وَأَعْتَدْنَا لَهَا رِزْقًۭا كَرِيمًۭا.
33:31. அதுபோலவே அவர்களில் யார் அல்லாஹ்வின் வழிகாட்டுதலுக்கும், ஆட்சியமைப்பு சட்டங்களுக்கும் அடிபணிந்து ஆக்கப்பூர்வமான நற்செயல்களை செய்கிறார்களோ, அவர்களுக்கு இருமடங்கு நற்கூலி கிடைக்கும். அதாவது அவர்களுக்கு கண்ணியமான வாழ்வும், சிறப்பான வாழ்வாதாரங்களும் கிடைக்க அரசின் சார்பாக ஏற்பாடுகள் செய்து தரப்படும்.
இறைத்தூதர் இல்லங்களில் இருக்கும் பெண்களுக்கு இரு மடங்கு வேதனையும், இரு மடங்கு வெகுமதியும் எதற்கு என்ற கேள்வி எழுகிறது. உலக மக்களை சீர்திருத்தும் பணியில் ஈடுபட்டிருக்கும் நபியின் வீட்டில் சீர்கேடுகள் இருந்தால், நாட்டை வெகுவாக பாதித்து விடும். அரசன் எவ்வழியோ அவ்வழியே குடிமகன் என்பதற்கு ஒப்ப நாட்டிலும் சீர்கேடுகள் மலிந்துவிடும். எனவே நபியின் இல்லத்தில் இருப்பவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகளில் சிலவற்றை இங்கு பார்ப்போம்.
يَٰنِسَآءَ ٱلنَّبِىِّ لَسْتُنَّ كَأَحَدٍۢ مِّنَ ٱلنِّسَآءِ ۚ إِنِ ٱتَّقَيْتُنَّ فَلَا تَخْضَعْنَ بِٱلْقَوْلِ فَيَطْمَعَ ٱلَّذِى فِى قَلْبِهِۦ مَرَضٌۭ وَقُلْنَ قَوْلًۭا مَّعْرُوفًۭا.
33:32. இறைத்தூதரின் துணைவியர்களே! நீங்கள் மற்ற பெண்களைப் போன்றவர்கள் அல்ல. நீங்கள் இறைச் சட்டங்களுக்குப் பயந்து நடப்பவர்களாக இருந்தால், அன்னிய ஆடவருடன் பேசும்போது, குழைந்து பேசுதல் கூடாது. ஏனென்றால் உங்களுடன் பேச வருபவர்களின் எண்ணங்கள் எவ்வாறு இருக்கும் என்பதை அறியும் வாய்ப்பு உங்களுக்கு இருக்காது. அவர்களில் சபலம் உள்ளவர்களும் இருக்கலாம். அத்தகையவர்களுக்கு உங்கள் மீது ஆசையும் ஏற்படும் வாய்ப்பு ஏற்பட்டு விடும். எனவே அன்னிய ஆடவர்களிடம் நீங்கள் பேசும்போது நல்ல முறையில் சர்வ சாதாரணமாகவே பேசுங்கள்.
சிந்தனையாளர்களே! நபியின் துணைவியர்களுக்கு இடப்பட்ட கட்டளை மற்ற எல்லா பெண்களுக்கும் எல்லா கால கட்டத்திலும் பொருந்தும். மேலும் அன்னிய ஆடவருடன் பேசக் கூடாது என்று சொல்லப் படவில்லை. அவர்களிடம் எப்படி பேச வேண்டும் என்று தான் கற்றுத் தரப்படுகிறது.
وَقَرْنَ فِى بُيُوتِكُنَّ وَلَا تَبَرَّجْنَ تَبَرُّجَ ٱلْجَٰهِلِيَّةِ ٱلْأُولَىٰ ۖ وَأَقِمْنَ ٱلصَّلَوٰةَ وَءَاتِينَ ٱلزَّكَوٰةَ وَأَطِعْنَ ٱللَّهَ وَرَسُولَهُۥٓ ۚ إِنَّمَا يُرِيدُ ٱللَّهُ لِيُذْهِبَ عَنكُمُ ٱلرِّجْسَ أَهْلَ ٱلْبَيْتِ وَيُطَهِّرَكُمْ تَطْهِيرًۭا.
33:33. இறைத்தூதரின் துணைவியர்களே! நீங்கள் இதற்குமுன் எப்படி நடந்து கொண்டீர்கள் என்பது முக்கியமல்ல. இப்போது நீங்கள் எவ்வாறு நடந்து கொள்கிறீர்கள் என்பதுதான் முக்கியமாகும். எனவே உங்கள் இல்லங்களில் அல்லது அரசு அலுவலகங்களில் இருந்தபடியே நற்பணியைத் தொடருங்கள். அஞ்ஞான காலத்தில் பொறுப்பில்லாமல் சுற்றித் திரிந்து கொண்டிருந்ததைப் போல் இப்போதும் திரியாதீர்கள். (மேலும் பார்க்க 24:31, 24:60) இறைச் சட்டங்களை போதிக்கும் ஸலாத் முறையை நிலைநிறுத்தி, சமுதாய நலத் திட்டங்களில் பங்கெடுத்துக் கொள்ளுங்கள். அதற்காக உங்களிடம் இருக்கும் உபரியான செல்வங்களைக் கொடுத்து உதவுங்கள். மேலும் இறைவனின் ஆட்சியமைப்பு சட்டங்களுக்கு அடிபணிந்து செயல்படுங்கள். இறைத்தூதரின் துணைவியர்களே! உங்களிடம் இருந்து வந்த தீய பழக்க வழக்கங்களை நீக்கி உங்களை சிறந்த பெண்மணிகளாக உருவாக்கவே இறைவழிகாட்டுதல் நாடுகிறது.
சிந்தனையாளர்களே! கவனித்தீர்களா? மார்க்க பணிக்காக நபிக்கு துணை நின்ற பெணிகளிடம், தேவைக்கு அதிகமாகவே பணம் இருந்ததாக சொல்லப்படுகிறது. நபியும் சஹாபாக்களும் பணக் கஷ்டத்தால் வாடவேண்டிய அவசியம் ஏற்பட்டதில்லை என்பது இதிலிருந்து புலனாகிறது. மேலும் உலக அலங்காரங்களை விரும்பினால் … என்று 33:28 வாசகம் கூறுகிறது. இது வெறும் துணிமணி, நகைநட்டு என்பது பொருளல்ல. தாம்பத்திய உறவும் இவற்றில் அடங்கும். இதற்கு நபியிடம் எந்த வாய்ப்பும் இருந்ததில்லை. காரணம் மதினாவில் இருந்த பத்து வருட காலத்தில் பல போர்களை சந்திக்க நேர்ந்தது. சமூக பிரச்சனைகளை தீர்த்து வைப்பதற்கே அவருக்கு நேரம் போதவில்லை (73:1-7)
وَٱذْكُرْنَ مَا يُتْلَىٰ فِى بُيُوتِكُنَّ مِنْ ءَايَٰتِ ٱللَّهِ وَٱلْحِكْمَةِ ۚ إِنَّ ٱللَّهَ كَانَ لَطِيفًا خَبِيرًا.
33:34. உங்கள் இல்லங்களில் இருந்தபடியே அல்லாஹ்வின் வழிகாட்டுதலாகத் திகழும் ஞான உபதேசங்களை மக்களுக்கு எடுத்துரையுங்கள். நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலும் மிக மிக நுணுக்கத்துடன் அறிந்து கொள்ளும் வல்லமை அல்லாஹ்வுக்கு உண்டு என்பதையும் அவர்களுக்கு எடுத்துரையுங்கள்.
சிந்தனையாளர்களே! இங்கு ஞான உபதேசங்களைக் குறிக்க ‘அல்ஹிக்மா’ என்ற வார்த்தை பயன்படுத்தப் பட்டுள்ளது. அதை மக்களிடம் ஓதிக் காட்டும் படியும் சொல்லப்படுகிறது. திருக்குர்ஆனை விளக்குவதாக சொல்லி இறைத்தூதரின் கூற்று தான் ஹிக்மா என்று சிலர் கூறுகிறார்கள். இந்த வாசகம் இதை மறுக்கிறது. ஏனெனில் திருக்குர்ஆனையும் ‘குர்ஆனில் ஹகீம்’ என்று தான் சொல்லப்படுகிறது. (பார்க்க 36:2) ஞானம் மிக்க குர்ஆன் என்பது அதன் பொருளாகும். அதாவது இறைவனின் அறிவுரைகளும் அவற்றை கடைப்பிடிப்பதால் ஏற்படும் நன்மைகள் என்னவென்பதையும் அதற்கு மாற்றமாக செயல்படுவதால் ஏற்படும் விபரீத விளைவுகள் என்னவென்பதையும் தெளிவுபடுத்துவதே அவற்றின் ஹிக்மா என்பதாகும். இதை ஆங்கிலத்தில் Logic and wisdom என்பார்கள்.
மேலும் இறைத்தூதரைச் சுற்றி இருப்பவர்களுக்கு இத்தகைய அறிவுரைகள் தரப்படுவதன் நோக்கமே நாட்டிலுள்ள மற்றவர்களும் அவர்களை முன்மாதிரியாக வைத்து செயல்படுத்த வேண்டும் என்பதற்காகத் தான். இந்த அறிவுரைகள் ஆண் பெண் ஆகிய இருவருக்குமே பொருந்தும். இவ்விருவரிடத்தில் உடல் ரீதியான வேற்றுமைகள் இருந்தாலும் செயலாற்றல் அறிவாற்றல் ஒழுக்க மாண்புகள் ஆகியவை ஒரே சீராக இருத்தல் அவசியம். அப்போது தான் சீர்பட்ட நாட்டை உருவாக்க முடியும். எனவே இஸ்லாமிய சமுதாயத்தில் ஆண் பெண் ஆகிய இருவரிடத்திலும் இருக்கவேண்டிய பண்புகள் என்னவென்பதையும் கவனியுங்கள்.
إِنَّ ٱلْمُسْلِمِينَ وَٱلْمُسْلِمَٰتِ وَٱلْمُؤْمِنِينَ وَٱلْمُؤْمِنَٰتِ وَٱلْقَٰنِتِينَ وَٱلْقَٰنِتَٰتِ وَٱلصَّٰدِقِينَ وَٱلصَّٰدِقَٰتِ وَٱلصَّٰبِرِينَ وَٱلصَّٰبِرَٰتِ وَٱلْخَٰشِعِينَ وَٱلْخَٰشِعَٰتِ وَٱلْمُتَصَدِّقِينَ وَٱلْمُتَصَدِّقَٰتِ وَٱلصَّٰٓئِمِينَ وَٱلصَّٰٓئِمَٰتِ وَٱلْحَٰفِظِينَ فُرُوجَهُمْ وَٱلْحَٰفِظَٰتِ وَٱلذَّٰكِرِينَ ٱللَّهَ كَثِيرًۭا وَٱلذَّٰكِرَٰتِ أَعَدَّ ٱللَّهُ لَهُم مَّغْفِرَةًۭ وَأَجْرًا عَظِيمًۭا.
33:35. (1.) இறைவழிகாட்டுதல்களை உளமாற ஏற்றுக்கொள்ளும் ஆண்களும் பெண்களும் -
(2.) இவற்றை உதட்டளவில் ஏற்றுக் கொள்வது என்றில்லாமல், ஆழ்ந்து சிந்தித்து பயனளிக்கும் வகையில் செயலளவில் இருக்கும் ஆண்களும் பெண்களும் -
(3.) இறைவன் வகுத்துத் தந்துள்ள சட்ட திட்டங்களின் நுணுக்கங்களை அறிந்து அதன்படி செயலாற்றி வரும் ஆண்களும் பெண்களும் - (Lawyers and judges) ,
(4.) இறைவனிடம் அளித்த வாக்குறுதிபடி (பார்க்க 9:111) செயலாற்றி உண்மைக்கு பாத்திரமாக விளங்கும் ஆண்களும் பெண்களும் -
(5.) நாட்டில் எதிர்ப்பாராத துயர சம்பவம் ஏற்பட்டால், மன வலிமையுடன் நிலைகுலையாமல் ஒருவருக்கொருவர் ஆதரவாக இருக்கும் ஆண்களும் பெண்களும் -
(6.) சமுதாய மேம்பாட்டிற்காக தம்மாலான உதவிகளை செய்ய முன்வரும் ஆண்களும் பெண்களும்
(7.) இறைச் செயல்திட்டங்களை உண்மைப்படுத்திக் காட்ட தம்மை அர்ப்பணித்துக் கொள்ளும் ஆண்களும் பெண்களும் -
(8.) இறைக் கட்டளைப்படி செயல்படுவதும், தடை செய்தவற்றை தடுத்துக் கொள்ளும் ஆண்களும் பெண்களும் -
(9.) தங்களுடைய கற்பை பாதுகாத்துக் கொள்ளும் ஆண்களும் பெண்களும்-
(10.) சுருங்கச் சொன்னால் ஆண் பெண் ஆகிய இருபாலரும் வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் இறைவழிகாட்டுதலை ஒட்டு மொத்தமாக முன்வைத்து செயல்படுதல் வேண்டும்.
இத்தகைய சமூகத்தவர்கள் தாம் மனித செயல்களின் தீய விளைவுகளிலிருந்து பாதுகாப்பாக இருக்க முடியும். இது அல்லாஹ்வின் வாக்குறுதியாகும். இவற்றை கவனத்தில் கொண்டு செயல்படுபவர்களுக்கு சிறந்ததொரு எதிர்காலம் உண்டு என்பதை அறிந்து கொள்ளட்டும். இவற்றில் ஆண்பெண் என்ற பேதம் இருக்க வாய்ப்பில்லை. (பார்க்க 3:195, 4:124)
وَمَا كَانَ لِمُؤْمِنٍۢ وَلَا مُؤْمِنَةٍ إِذَا قَضَى ٱللَّهُ وَرَسُولُهُۥٓ أَمْرًا أَن يَكُونَ لَهُمُ ٱلْخِيَرَةُ مِنْ أَمْرِهِمْ ۗ وَمَن يَعْصِ ٱللَّهَ وَرَسُولَهُۥ فَقَدْ ضَلَّ ضَلَٰلًۭا مُّبِينًۭا.
33:36. எனவே அல்லாஹ்வின் வழிகாட்டுதல்கள் மீதும், அதனடிப்படையில் செயல்படும் ஆட்சியமைப்பு கொண்டு வரும் தீர்மானங்கள் மீதும் மூஃமினான ஆண்களோ பெண்களோ மாற்று அபிப்ராயம் கொள்வதற்கு உரிமையில்லை. எனவே அல்லாஹ்வின் வழிகாட்டுதலுக்கும் அதனடிப்படையில் உருவான ஆட்சியமைப்பு சட்டங்களுக்கும் எதிராக செயல்பட்டால் அது அவர்களை பகிரங்கமான வழிகேட்டில் விட்டுவிடும். அத்தகையவர்கள் கடும் வேதனைகளுக்கு ஆளாக நேரிடும்.
எனவே அனைவரும் இறைவனின் ஆட்சியமைப்பு கொண்டுவரும் தீர்மானங்களுக்கு உட்பட்டு நடந்து கொள்ளுங்கள். இந்த தீர்மானங்களை இறைத்தூதர் தாமே உருவாக்குவதில்லை. இறைவழிகாட்டுதலின் படி கலந்தாலோசித்து உருவாக்குபவையாகும். (பார்க்க 42:38) எனவே அவற்றிற்கு அடிபணிவது மூஃமின்களின் கடமையாகும். (4:65) ஆனால் இறைத்தூதரின் தனிப்பட்ட கருத்துகளை பின்பற்றவேண்டிய கட்டாயம் இல்லை. இதற்கு எடுத்துக்காட்டாக இறைத்தூதரின் வளர்ப்பு மகன் ஜைது உடைய விஷயம் உங்கள் கவனத்திற்கு கொண்டு வரப்படுகிறது.
وَإِذْ تَقُولُ لِلَّذِىٓ أَنْعَمَ ٱللَّهُ عَلَيْهِ وَأَنْعَمْتَ عَلَيْهِ أَمْسِكْ عَلَيْكَ زَوْجَكَ وَٱتَّقِ ٱللَّهَ وَتُخْفِى فِى نَفْسِكَ مَا ٱللَّهُ مُبْدِيهِ وَتَخْشَى ٱلنَّاسَ وَٱللَّهُ أَحَقُّ أَن تَخْشَىٰهُ ۖ فَلَمَّا قَضَىٰ زَيْدٌۭ مِّنْهَا وَطَرًۭا زَوَّجْنَٰكَهَا لِكَىْ لَا يَكُونَ عَلَى ٱلْمُؤْمِنِينَ حَرَجٌۭ فِىٓ أَزْوَٰجِ أَدْعِيَآئِهِمْ إِذَا قَضَوْا۟ مِنْهُنَّ وَطَرًۭا ۚ وَكَانَ أَمْرُ ٱللَّهِ مَفْعُولًۭا.
33:37. (நபியின் வளர்ப்பு மகன்) ஜைதுவுக்கு அல்லாஹ்வின் பேராதரவு கிடைத்திருந்தது. மேலும் இறைத்தூதர் சார்பாகவும் அவர் அதிக வசதி வாய்ப்புகளை பெற்றிருந்தார். அவர் தன் மனைவியை விவாகரத்து செய்ய முற்பட்டபோது, அவரிடம், “அல்லாஹ்வின் சட்டப்படி செய்துக்கொண்ட திருமண உறவை பேணி நடந்துகொள். நீ உன் மனதில் மறைத்து வைத்திருப்பதை என்னிடம் எடுத்துரை. மக்களைப் பற்றி எண்ணி கவலைப்படாதே. அதாவது விவாகரத்து செய்தால் மக்கள் அனைவருக்கும் தெரிந்துவிடுமே என்ற கவலை வேண்டாம். நீ பயப்படுவதாக இருந்தால் அல்லாஹ்வுக்கு மட்டுமே பயப்பட வேண்டும்” என்று அறிவுறுத்தி வந்தீர்.
அதைத் தொடர்ந்து ஜைது தன் மனைவியை விவாகரத்து செய்து விட்டார். அதன்பின் அவளை நீ மணந்து கொள்ள ஏற்பாடு செய்தோம். ஏனென்றால் வளர்ப்பு மகன் சொந்த மகன் ஆகமாட்டான். சொந்த மகனின் மனைவியை (மருமகளை) மணக்க தடை உண்டு (பார்க்க 4:23) மேலும் இந்த சட்டம் மூஃமின்களுக்கும் பொருந்தும். அதாவது வளர்ப்பு மகன், தன் மனைவியை விவாகரத்து செய்துவிட்டால் அவளை மணமுடித்து கொள்வதில் தவறு ஒன்றுமில்லை. இது அல்லாஹ்வின் புறத்திலிருந்து தீர்மானிக்கப்பட்ட சட்ட வரையறைகளாகும்.
مَّا كَانَ عَلَى ٱلنَّبِىِّ مِنْ حَرَجٍۢ فِيمَا فَرَضَ ٱللَّهُ لَهُۥ ۖ سُنَّةَ ٱللَّهِ فِى ٱلَّذِينَ خَلَوْا۟ مِن قَبْلُ ۚ وَكَانَ أَمْرُ ٱللَّهِ قَدَرًۭا مَّقْدُورًا.
33:38. எனவே அல்லாஹ்வின் புறத்திலிருந்து கொண்டுவரப்பட்ட தீர்மானங்களின் படி இறைத்தூதர் செயல்படுவதில் தவறு ஒன்றுமில்லை. இவை இந்த இறைத்தூதருக்கு மட்டும் அளித்த வரையறைகள் என்று எண்ணிக் கொள்ளாதீர்கள். காலம் காலமாக எல்லா இறைத் தூதர்கள் விஷயத்திலும் அல்லாஹ்வின் இதே சட்டங்கள் ஏற்படுத்தப்பட்டன. இதுவே வரையறுக்கபட்ட சட்ட விதிமுறைகளாகும்.
ٱلَّذِينَ يُبَلِّغُونَ رِسَٰلَٰتِ ٱللَّهِ وَيَخْشَوْنَهُۥ وَلَا يَخْشَوْنَ أَحَدًا إِلَّا ٱللَّهَ ۗ وَكَفَىٰ بِٱللَّهِ حَسِيبًۭا.
33:39. இதற்குமுன் வந்த இறைத் தூதர்களிடமும் இத்தகைய வழிகாட்டுதல்களையே இறக்கியருளினோம். அவர்களும் அவற்றையே மக்களிடம் எடுத்துக் கூறினார்கள். மேலும் அல்லாஹ்வின் அறிவுரைகளுக்கு எதிராகச் செயல்படுவதால் ஏற்படும் விபரீத விளைவுகளுக்கு அஞ்சி செயல்பட்டார்கள். காரணம் மனிதனின் ஒவ்வொரு செயலைப் பற்றியும் கேள்விக் கணக்கு கேட்பதற்கு அல்லாஹ்வின் வல்லமையே போதுமானதாக உள்ளது என்பதை அவர்கள் அறிந்திருந்தார்கள்.
மேலும் ஒரு விஷயத்தை தெரிந்து கொள்ளுங்கள். நாமும் நபிமார்கள் செயல்பட்டது போலவே மக்களுக்கு இறைவன் புறத்திலிருந்து இறக்கியருளப்பட்ட வேத உண்மைகளையே எடுத்துரைக்க வேண்டும். மேலும் ஜைது தன் மனைவியை விவாகரத்து செய்த பின் அவளை நபி மணமுடித்துக் கொண்டார். ஏனெனில்
مَّا كَانَ مُحَمَّدٌ أَبَآ أَحَدٍۢ مِّن رِّجَالِكُمْ وَلَٰكِن رَّسُولَ ٱللَّهِ وَخَاتَمَ ٱلنَّبِيِّۦنَ ۗ وَكَانَ ٱللَّهُ بِكُلِّ شَىْءٍ عَلِيمًۭا.
33:40. முஹம்மது நபி பெற்றெடுத்த பிள்ளைகளில் ஆண்பிள்ளை யாரும் இல்லை என்பது உங்களுக்கே தெரியும். மேலும் அவர் இறைத்தூதர்களில் இறுதி தூதராக இருக்கிறார். மேலும் உலக நிகழ்வுகள் அனைத்தையும் அறிந்துகொள்ளும் வல்லமை அல்லாஹ்வுக்கு உண்டு என்பதை அறிந்து கொள்ளுங்கள். (பார்க்க 5:3)
எனவே ஆதி முதல் முஹம்மது நபி (ஸல்) காலம் வரையில் பல படித்தரங்களை கடந்து, மனிதன் விஞ்ஞான காலத்தில் அடியெடுத்து வைத்தபோது இறைவன் புறத்திலிருந்து வழிகாட்டுதல் இறக்கி அருளும் செயல் திட்டம் முடிவுக்கு வந்துவிட்டது. எனவே இனி வரும் காலங்களில் இந்த வழிகாட்டுதலை (குர்ஆனை) அடிப்படையாகக் கொண்டு மனிதன் தம் வாழ்வை சிறப்பாக்கிக் கொள்ள முடியும். (விளக்கத்திற்குப் பார்க்க 5:3) எனவே
يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟ ٱذْكُرُوا۟ ٱللَّهَ ذِكْرًۭا كَثِيرًۭا.
33:41. இறைவழிகாட்டுதலை ஏற்றுக் கொண்டவர்களே! இனி யாருக்கும் நேரடி வழிகாட்டுதல் வரும் என்ற எதிர்பார்ப்பில் இருக்காதீர்கள். இந்தக் குர்ஆனில் உள்ள அறிவுரைகளை மக்களிடம் விரிவாக எடுத்துரையுங்கள். அதற்காகவே நியமிக்கப்பட்டவர்கள் தாம் நீங்கள். (பார்க்க 3:110, 35:32)
وَسَبِّحُوهُ بُكْرَةًۭ وَأَصِيلًا.
33:42. இதற்காக காலையிலும் மாலையிலும் நேரத்தை நிர்ணயித்து (4:103) இறைவனின் அறிவுரைகளை மக்களுக்கு எடுத்துரைத்து இறைவழிகாட்டுதலுக்கு உட்பட்டு வாழ அறிவுறுத்தி வாருங்கள். (பார்க்க 48:9)
هُوَ ٱلَّذِى يُصَلِّى عَلَيْكُمْ وَمَلَٰٓئِكَتُهُۥ لِيُخْرِجَكُم مِّنَ ٱلظُّلُمَٰتِ إِلَى ٱلنُّورِ ۚ وَكَانَ بِٱلْمُؤْمِنِينَ رَحِيمًۭا.
33:43. நீங்கள் யாருடைய உதவியும் இல்லாமல் தனியாக இருப்பதாக எண்ணி விடாதீர்கள். அல்லாஹ்வும் அவன் படைத்த பிரபஞ்ச இயற்கை சக்திகளின் துணையும் உங்களுக்கு என்றென்றைக்கும் இருக்கும். (பார்க்க 33:56) நீங்கள் இறைவழிகாட்டுதலின்படி செயல்பட்டு வந்தால் உங்களிடையே உள்ள இருள் சூழ்ந்த நிலை நீங்கி, வெளிச்சத்திற்கு வந்து விடுவீர்கள். (மேலும் பார்க்க 14:1-5) மேலும் இறைவனின் நியதிப்படி உங்களுடைய பேராற்றல்கள் வேகமாக வளர்ந்து வரும். (பார்க்க 2:155-157)
தற்சமயம் நீங்கள் சில இன்னல்களையும் துயரங்களையும் சந்திக்க நேரிடுகிறது. ஆனால்
تَحِيَّتُهُمْ يَوْمَ يَلْقَوْنَهُۥ سَلَٰمٌۭ ۚ وَأَعَدَّ لَهُمْ أَجْرًۭا كَرِيمًۭا.
33:44. நீங்கள் செய்துவரும் நற்செயல்களின் பலன்களை பெறும் கால கட்டங்களில், பாதுகாப்பான அமைதியான சந்தோஷமான சூழ்நிலையே உருவாகும். மேலும் உங்களுக்கு வாக்களிக்கப்பட்ட கண்ணியமான வாழ்வாதார வசதி வாய்ப்புகளும் பெருகி வரும்.
يَٰٓأَيُّهَا ٱلنَّبِىُّ إِنَّآ أَرْسَلْنَٰكَ شَٰهِدًۭا وَمُبَشِّرًۭا وَنَذِيرًۭا.
33:45. இறைவழிகாட்டுதலை எடுத்துரைப்பவரே! உம்மை மக்களிடம் அனுப்பி வைத்ததன் நோக்கமே இறைவழிகாட்டுதலின் படி சிறப்பான சமூக அமைப்பை ஏற்படுத்தி, அதிலிருந்து நல்லோர்களை தேர்ந்தெடுத்து, அவர்களிடம் ஆட்சி பொறுப்பை ஒப்படைத்து, சிறந்ததோர் உலகைப் படைத்து உலகார்க்கு எடுத்துக் காட்டத் தான் ஆகும். இறைவழிகாட்டுதலுக்கு மாற்றமாக செயல்படுவதால் ஏற்படும் விபரீத விளைவுகளைப் பற்றி எடுத்துரைத்து முன்னெச்சரிக்கை செய்வதும் உன் முக்கிய பணியாகும்.
وَدَاعِيًا إِلَى ٱللَّهِ بِإِذْنِهِۦ وَسِرَاجًۭا مُّنِيرًۭا.
33:46. இதற்காக அவர் மேற்கொள்ளும் முதல் பணி யாதெனில் இறைவழிகாட்டுதலின் படி அறிவுரைகளை மக்களிடம் எடுத்துரைத்து அவர்களை அல்லாஹ்வின் பக்கம் அழைப்பு விடுவதேயாகும். அந்த வழிகாட்டுதலின்படி செயல்படும் நீர், இருளில் தவிக்கும் மக்களுக்கு பிரகாசமான கலங்கரை விளக்காக இருக்கின்றீர்.
وَبَشِّرِ ٱلْمُؤْمِنِينَ بِأَنَّ لَهُم مِّنَ ٱللَّهِ فَضْلًۭا كَبِيرًۭا.
33:47. எனவே உம்மைப் பின்பற்றி நடக்கும் மூஃமின்களுக்கு இறையருட்கள் மிகுந்த பிரகாசமான எதிர்காலம் நிச்சயம் உண்டு என்ற நன்மாராயம் கூறுவீராக!
وَلَا تُطِعِ ٱلْكَٰفِرِينَ وَٱلْمُنَٰفِقِينَ وَدَعْ أَذَىٰهُمْ وَتَوَكَّلْ عَلَى ٱللَّهِ ۚ وَكَفَىٰ بِٱللَّهِ وَكِيلًۭا.
33:48. எனவே இறைவழிகாட்டுதலின் நோக்கங்களைப் பற்றி மக்களிடம் தொடர்ந்து எடுத்துரைத்து வாருங்கள். இறைவழிகாட்டுதலை ஏற்க மறுப்பவர்கள் மற்றும் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்களை புறக்கணித்து விடுங்கள். அப்படியும் அவர்கள் உங்களுக்கு தீங்கிழைத்தால் அதைப் பற்றி தற்சமயம் பொருட்படுத்தாதீர்கள். அல்லாஹ்வின் வழிகாட்டுதலில் முழுமையான நம்பிக்கை கொள்ளுங்கள். உங்கள் இலட்சியங்கள் நிறைவேற இறை வழிகாட்டுதலே போதுமானதாக இருக்கின்றன.
சமூக நற்பணிகளில் ஆண் பெண் ஆகிய இருவருமே பங்கெடுத்துக் கொள்ளவேண்டும் என்று நாம் 33:35இல் ஏற்கனவே கூறினோம். எனவே குடும்பவியல் சம்பந்தப்பட்ட சட்டங்களைப் பற்றியும் நன்றாக தெரிந்து கொள்ள வேண்டும். இதைப் பற்றிய விவரங்கள் ஏற்கனவே 2:228-241இல் கூறியிருக்கிறோம். அதைப் பற்றிய விஷயத்தை நாம் மேல்கொண்டு தெளிவாக்குகிறோம்.
يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوٓا۟ إِذَا نَكَحْتُمُ ٱلْمُؤْمِنَٰتِ ثُمَّ طَلَّقْتُمُوهُنَّ مِن قَبْلِ أَن تَمَسُّوهُنَّ فَمَا لَكُمْ عَلَيْهِنَّ مِنْ عِدَّةٍۢ تَعْتَدُّونَهَا ۖ فَمَتِّعُوهُنَّ وَسَرِّحُوهُنَّ سَرَاحًۭا جَمِيلًۭا.
33:49. இறைவழிகாட்டுதலை மனதார ஏற்றுக் கொண்டவர்களே! நீங்கள் பெண்களின் பாதுகாப்பு கருதி 60:10இல் உள்ள அறிவுரைப்படி மணமுடித்துக் கொண்டவர்களை, தீண்டுவதற்கு முன்பே விவாகரத்து அளிக்க நேர்ந்தால், அப்பெண்கள் கடைப்பிடிக்க வேண்டிய மூன்று மாத கால இத்தா தவணை என்ற சட்டம் பொருந்தாது. நீங்கள் வசதி படைத்தவர்களாக இருந்தால், அவர்களுக்கு வேண்டிய வாழ்க்கை வசதிகளை செய்து தாருங்கள். இன்னும் அவர்களை அழகிய முறையில் திருமண பந்தத்திலிருந்து விடுவித்து விடுங்கள்.
يَٰٓأَيُّهَا ٱلنَّبِىُّ إِنَّآ أَحْلَلْنَا لَكَ أَزْوَٰجَكَ ٱلَّٰتِىٓ ءَاتَيْتَ أُجُورَهُنَّ وَمَا مَلَكَتْ يَمِينُكَ مِمَّآ أَفَآءَ ٱللَّهُ عَلَيْكَ وَبَنَاتِ عَمِّكَ وَبَنَاتِ عَمَّٰتِكَ وَبَنَاتِ خَالِكَ وَبَنَاتِ خَٰلَٰتِكَ ٱلَّٰتِى هَاجَرْنَ مَعَكَ وَٱمْرَأَةًۭ مُّؤْمِنَةً إِن وَهَبَتْ نَفْسَهَا لِلنَّبِىِّ إِنْ أَرَادَ ٱلنَّبِىُّ أَن يَسْتَنكِحَهَا خَالِصَةًۭ لَّكَ مِن دُونِ ٱلْمُؤْمِنِينَ ۗ قَدْ عَلِمْنَا مَا فَرَضْنَا عَلَيْهِمْ فِىٓ أَزْوَٰجِهِمْ وَمَا مَلَكَتْ أَيْمَٰنُهُمْ لِكَيْلَا يَكُونَ عَلَيْكَ حَرَجٌۭ ۗ وَكَانَ ٱللَّهُ غَفُورًۭا رَّحِيمًۭا.
33:50. நபியே! நீர் மஹர் எனும் நன்கொடை அளித்து பெண்களை இணைத்துக் கொள்ள உமக்கு அனுமதி உண்டு. அதுமட்டுமின்றி காஃபிர்களிடமிருந்து விடுதலைப் பெற்ற பெண்கள், (பார்க்க 60:10) , மற்றும் உம்முடன் ஹிஜ்ரத் செய்து வந்த சித்தப்பா பெரியப்பா மகள், அத்தை மகள், தாய் மாமன் மகள், தாயின் சகோதரியின் மகள் ஆகியோரில் உம்முடன் இணைந்து வாழ விரும்புவோரை நீரும் விரும்பினால் நன்கொடை எனும் மஹர் இன்றி இணைத்துக் கொள்வதில் தவறு ஒன்றுமில்லை.
மேலும் மூஃமினான பெண் நபி வழியில் வாழ தம்மை அர்ப்பணித்து, அவரை இணைத்துக் கொள்ள விரும்பினால் அப்படிப்பட்ட பெண்களையும் அன்பளிப்பு அளிக்காமல் இணைத்துக் கொள்வது உமக்கு மட்டும் அளிக்கப்படுகின்ற விதிவிலக்காகும். ஆனால் மற்ற மூஃமின்களைப் பொறுத்தவரையில் அவர்களுடைய மனைவிமார்கள் மற்றும் பணிவிடைப் பெண்கள் விஷயத்தில் நாம் ஏற்கனவே அறிவித்து இருக்கிறோம் (பார்க்க 4:23-25&5:5) மேலும் பல இடங்களில் குறிப்புகள் வந்தள்ளன.)
இத்தகைய விதிவிலக்கு அளித்ததன் நோக்கமே இந்த விஷயத்தில் உமக்கு சிக்கல்கள் ஏற்படுவதிலிருந்து தவிர்க்கத் தான். நிச்சயமாக அல்லாஹ்வின் செயல்திட்டங்கள் யாவும் அனைத்துத் தரப்பு மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டவை. இது அல்லாஹ்வின் மாபெரும் கருணையாகும்.
ஏற்கனவே சொன்னது போல, போர்க்கால நிவாரணப் பணிகளில் பெண்களின் பாதுகாப்பு விஷயமும் முக்கியமான ஒன்றாகும். (விளக்கத்திற்குப் பார்க்க 4:3) அதன் பின் சுமுகமான சூழ்நிலை உருவாகி மற்ற இளைஞர்கள் இஸ்லாத்தில் வந்து இணையும் போது, முஃமின்களின் திருமண பந்தத்தில் இருக்கும் பெண்களை விடுவித்து இஸ்லாத்தில் இணைந்த இளைஞர்கனை மணக்க அனுமதி அளிக்கலாம். அந்தப் பெண்களும் அவ்வாறு மணந்து கொள்ள விரும்பினால், அவர்களை நல்லமுறையில் விடுவித்து வசதி வாய்ப்புக்கு ஏற்ற வகையில் வாழ்க்கைக்கான பொருட்களை அளித்தும் அனுப்பி வைக்கலாம். (பார்க்க 2:236) அதுபோல
۞ تُرْجِى مَن تَشَآءُ مِنْهُنَّ وَتُـْٔوِىٓ إِلَيْكَ مَن تَشَآءُ ۖ وَمَنِ ٱبْتَغَيْتَ مِمَّنْ عَزَلْتَ فَلَا جُنَاحَ عَلَيْكَ ۚ ذَٰلِكَ أَدْنَىٰٓ أَن تَقَرَّ أَعْيُنُهُنَّ وَلَا يَحْزَنَّ وَيَرْضَيْنَ بِمَآ ءَاتَيْتَهُنَّ كُلُّهُنَّ ۚ وَٱللَّهُ يَعْلَمُ مَا فِى قُلُوبِكُمْ ۚ وَكَانَ ٱللَّهُ عَلِيمًا حَلِيمًۭا.
33:51. நபியே! உம்முடைய பந்தத்தில் இருப்பவர்களில் நீ விரும்பியவரை விலக்கியும் வைக்கலாம். நீர் விரும்பியவரை உம்முடன் தங்கவைத்தும் கொள்ளலாம். உம்முடன் வாழ தகுதியற்றவர்கள் என ஒதுக்கப்பட்டவர்கள் தம் தவறை உணர்ந்து திருந்தி உம்முடனே இணைய நாடினால், நீர் அவர்களை சேர்த்துக் கொள்ளலாம். இதில் உம்மீது யாதொரு குற்றமும் இல்லை. மேலும் இது அவர்களை கண் குளிரச் செய்யும். ஆனால் சில நிபந்தனைகள் உள்ளன. இனிமேல் அவர்கள் உமக்கு எந்த வகையிலும் மாறு செய்யக் கூடாது. மேலும் அவர்களுக்கு உன் புறத்திலிருந்து கிடைக்கின்ற உதவிகளைக் கொண்டு திருப்தி அடையவேண்டும். அப்போது தான் அவர்கள் அனைவரும் உம்முடன் சுமுகமான முறையில் வாழ்ந்து பணியாற்ற முடியும். அவர்கள் உள்ளங்களில் இருப்பவற்றை அல்லாஹ் நன்கு அறிகிறான் என்ற விஷயத்தையும் மனதில் பதிய வைத்துக்கொள்ள வேண்டும். ஏனெனில் அல்லாஹ்வின் செயல்திட்டங்கள் யாவும் ஞானத்தின் அடிப்படையிலும் அறிவுப்பூர்வமாகவும் உள்ளன.
எனவே போர்க்கால நேரங்களில் நபியிடம் வந்து புகலிடமடைந்த பெண்கள் மற்றும் பணிவிடைப் பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க, அவர்களை இணைத்துக் கொள்ள நேர்ந்தது. இனி வரும் காலங்களில் சமுகமான சூழ்நிலை உருவாகும். ஆகவே
لَّا يَحِلُّ لَكَ ٱلنِّسَآءُ مِنۢ بَعْدُ وَلَآ أَن تَبَدَّلَ بِهِنَّ مِنْ أَزْوَٰجٍۢ وَلَوْ أَعْجَبَكَ حُسْنُهُنَّ إِلَّا مَا مَلَكَتْ يَمِينُكَ ۗ وَكَانَ ٱللَّهُ عَلَىٰ كُلِّ شَىْءٍۢ رَّقِيبًۭا.
33:52. நபியே! நீர் இணைத்துக் கொண்ட பெண்களைத் தவிர, வேறு யாரையும் இனி இணைத்துக் கொள்ளக் கூடாது. வேறு பெண்ணை இணைத்துக் கொள்ள, தற்சமயம் உம்மிடம் இருப்பவர்களை விலக்கு அளிப்பதும் தடை செய்யப்படுகிறது. அவர்களுடைய செயல்கள் எவ்வளவு தான் ஆற்றல் மிக்கதாகவும் அழகாக இருப்பினும் சரியே! உம்மிடம் பந்தத்தில் இருப்பவர்களைத் தவிர வேறு எந்த பெண்ணையும் இணைத்து கொள்ளாதீர். நிச்சயமாக அல்லாஹ்வின் பிரபஞ்ச அமைப்பு ஒவ்வொரு நிகழ்வையும் கண்காணித்துக் கொண்டே இருக்கின்றன என்பதை மறவாதீர்.
காரணம், நபி அவர்கள் ஏராளமான பெண்களை தம்முடன் இணைத்துக் கொள்கிறார் என்ற எண்ணம் மக்களிடையே பரவி வரும். இதனால் ஏராளமானவர்கள் இவருடன் இணைந்து கொள்ள விரும்பலாம். இதற்கு இடமில்லை என்பதே இதிலிருந்து புலனாகிறது. மேலும் இந்த கட்டளைகள் நபிக்கு மட்டுமே அளிக்கப்படுகின்ற தனிப்பட்ட கட்டளைகளாகும். இது மற்ற மூஃமின்களுக்கு பொருந்தாது. மற்ற மூஃமின்கள் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுங்குமுறை சட்டங்களைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟ لَا تَدْخُلُوا۟ بُيُوتَ ٱلنَّبِىِّ إِلَّآ أَن يُؤْذَنَ لَكُمْ إِلَىٰ طَعَامٍ غَيْرَ نَٰظِرِينَ إِنَىٰهُ وَلَٰكِنْ إِذَا دُعِيتُمْ فَٱدْخُلُوا۟ فَإِذَا طَعِمْتُمْ فَٱنتَشِرُوا۟ وَلَا مُسْتَـْٔنِسِينَ لِحَدِيثٍ ۚ إِنَّ ذَٰلِكُمْ كَانَ يُؤْذِى ٱلنَّبِىَّ فَيَسْتَحْىِۦ مِنكُمْ ۖ وَٱللَّهُ لَا يَسْتَحْىِۦ مِنَ ٱلْحَقِّ ۚ وَإِذَا سَأَلْتُمُوهُنَّ مَتَٰعًۭا فَسْـَٔلُوهُنَّ مِن وَرَآءِ حِجَابٍۢ ۚ ذَٰلِكُمْ أَطْهَرُ لِقُلُوبِكُمْ وَقُلُوبِهِنَّ ۚ وَمَا كَانَ لَكُمْ أَن تُؤْذُوا۟ رَسُولَ ٱللَّهِ وَلَآ أَن تَنكِحُوٓا۟ أَزْوَٰجَهُۥ مِنۢ بَعْدِهِۦٓ أَبَدًا ۚ إِنَّ ذَٰلِكُمْ كَانَ عِندَ ٱللَّهِ عَظِيمًا.
33:53. இறைவழிகாட்டுதலை மனதார ஏற்றுக்கொண்டவர்களே! நீங்கள் அழைப்பு ஏதுமின்றி இறைத்தூதரின் இருப்பிடத்திற்கு செல்வது முறையல்ல. எனவே அவரை சந்திக்க முன்அனுமதி பெறவேண்டும். காரணம் அவருக்கு மற்ற அலுவல்கள் இருக்கும். எனவே உங்களுடைய விஜயம் அவற்றை பாதித்துவிடும். அதே போல் உங்களை விருந்துக்கு அழைத்தாலும், அது தயாராவதற்கு முன்பே அங்கு சென்று உணவிற்காக காத்திருக்காதீர்கள். குறித்த நேரத்தில் உங்களை அழைத்தால் மட்டுமே நீங்கள் அங்கு செல்லுங்கள். மேலும் நீங்கள் உணவருந்திய பின் அங்கேயே அமர்ந்து விடாதீர்கள். இதனால் நபிக்கு மற்ற அலுவல்களை கவனிக்க முடியாமல் பாதிப்புகளை ஏற்படுத்தி விடும். இதனை அவர் உங்களிடம் எடுத்துக்கூற சங்கோசப்படலாம்.
மேலும் இறைத்தூதரின் துணைவியர்களிடம் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள். அவரிடம் ஏதாவது ஒரு விஷயத்தைப் பற்றி கேட்க நாடினால், கூக்குரலிட்டு அவரை அழைத்து கேட்காதீர்கள். திரைக்கு மறைவாக நின்று மரியாதை அடக்கத்துடன் கேளுங்கள். இத்தகைய அணுகு முறைகளால் உங்களுடைய உள்ளங்களும் அவர்களுடைய உள்ளங்களும் பரிசுத்தமாகி வரும். மேலும் முறை தவறி நடந்து அல்லாஹ்வின் தூதருக்கு மனவேதனை அளிப்பது மூஃமின்களாகிய உங்களுக்கு சிறந்தது அல்ல. மேலும் அவரது துணைவியர்கள் உங்கள் தாய்க்கு ஒப்பானவர்கள் ஆவர். எனவே இறைத்தூதரின் மறைவுக்குப் பின் அவருடைய துணைவியர்களை மணப்பதும் மூஃமின்களுக்குத் தடை செய்யப்படுகிறது. அவருடைய மனைவியை மணந்து கொள்வது அல்லாஹ்வின் சட்டப்படி மிகப் பெரிய குற்றமாகும்.
இத்தகைய நற்பண்புகளால் மூஃமின்களிடையே பரஸ்பர உறவு சிறப்பாக இருக்கும். நபியின் வீட்டில் நடந்துகொள்வது போலவே மற்றவர்கள் இல்லங்களிலும் நடந்துகொள்ளும் பழக்கம் ஏற்படும். (பார்க்க 24:27-29)
إِن تُبْدُوا۟ شَيْـًٔا أَوْ تُخْفُوهُ فَإِنَّ ٱللَّهَ كَانَ بِكُلِّ شَىْءٍ عَلِيمًۭا.
33:54. மேலும் ஒரு விஷயத்தை நன்றாக மனதில் பதிய வைத்துக் கொள்ளுங்கள். நாம் மறைமுகமாக செயல்பட்டால் அல்லாஹ்வுக்கு தெரியாமல் போய்விடும் என்று நினைப்பீர்கள். ஆனால் உண்மை அதுவன்று. நீங்கள் வெளிப்படையாக செயல்பட்டாலும் மறைமுகமாக செயல்பட்டாலும் அனைத்தையும் அறிந்துகொள்ளும் வல்லமை அல்லாஹ்வுக்கு நிச்சயம் உண்டு என்பதை அறிந்துகொள்ளுங்கள். மனதில் ஊடுருவி செல்லும் விஷயங்களையும் அறிந்துகொள்ளும் பேராற்றல் உடையவன்தான் அல்லாஹ்.
لَّا جُنَاحَ عَلَيْهِنَّ فِىٓ ءَابَآئِهِنَّ وَلَآ أَبْنَآئِهِنَّ وَلَآ إِخْوَٰنِهِنَّ وَلَآ أَبْنَآءِ إِخْوَٰنِهِنَّ وَلَآ أَبْنَآءِ أَخَوَٰتِهِنَّ وَلَا نِسَآئِهِنَّ وَلَا مَا مَلَكَتْ أَيْمَٰنُهُنَّ ۗ وَٱتَّقِينَ ٱللَّهَ ۚ إِنَّ ٱللَّهَ كَانَ عَلَىٰ كُلِّ شَىْءٍۢ شَهِيدًا.
33:55. மறுபுறத்தில் நபியின் துணைவியர்கள் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பதையும் தெரிந்து கொள்ளட்டும். அவர்கள் தங்கள் தந்தையர்கள், சகோதரர்கள், சகோதரர்களின் மகன்கள், சகோதரிகளின் மகன்கள், பணிவிடை ஆட்கள் ஆகியோர் முன்பு நிற்பதில் தவறு ஒன்றுமில்லை.
பிற ஆடவர்களிடம் அவர்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதை ஏற்கனவே 33:32இல் சொல்லப்பட்டது. எனவே அவர்களும் அல்லாஹ்வுக்கு பயந்து அவன் நிர்ணயித்த வரையறைகளுக்கு உட்பட்டு நடந்து கொள்ளட்டும். உங்களுடைய ஒவ்வொரு செயலும் அல்லாஹ்வின் நியதிப்படி தக்க சாட்சிகளுடன் நிரூபணமாகியே தீரும் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
மூஃமின்களே! இறைத்தூதர் அனைத்து தரப்பு மக்களின் நலனைக் கருதி மாபெரும் செயல்திட்டங்களை தீட்டிவருகிறார். அவற்றை நடைமுறைப் படுத்தி சிறந்ததொரு நவீன உலகைப் படைக்க அயராது உழைத்து வருகிறார். (பார்க்க 14:47-48, 39:69) இத்திட்டம் நிறைவேற அவர் தன்னந்தனியாக இருக்கிறார் என்று எண்ணிக் கொள்ளாதீர்கள். அவருடைய மாபெரும் செயல்திட்டங்கள் நிறைவேற
إِنَّ ٱللَّهَ وَمَلَٰٓئِكَتَهُۥ يُصَلُّونَ عَلَى ٱلنَّبِىِّ ۚ يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟ صَلُّوا۟ عَلَيْهِ وَسَلِّمُوا۟ تَسْلِيمًا.
33:56. அல்லாஹ்வின் துணையும் பேராதரவும், அவனது பிரபஞ்ச இயற்கை சக்திகளின் துணையும் நபிக்கு பக்கபலமாக இருக்கின்றன. எனவே மூஃமின்களே! இறைத்தூதரின் செயல்திட்டங்கள் நிறைவேற நீங்களும் அவருக்கு துணை நின்று, அவருடைய கட்டளைகளை உளமாற ஏற்று அவற்றின்படி முழூ வேகத்துடன் செயலாற்றுங்கள்.
إِنَّ ٱلَّذِينَ يُؤْذُونَ ٱللَّهَ وَرَسُولَهُۥ لَعَنَهُمُ ٱللَّهُ فِى ٱلدُّنْيَا وَٱلْءَاخِرَةِ وَأَعَدَّ لَهُمْ عَذَابًۭا مُّهِينًۭا.
33:57. எனவே அல்லாஹ்வின் செயல் திட்டங்களுக்கும் அவனுடைய ஆட்சியமைப்பிற்கும் பங்கம் ஏற்படும் வகையில் செயல்படாதீர்கள். யார் இவ்வாறு முறை தவறி நடக்கிறார்களோ, அவர்களுக்கு இவ்வுலக வாழ்விலும், மரணத்திற்குப் பின் தொடர்கின்ற வாழ்விலும் நோவினை தரும் வேதனைகள் காத்து நிற்கின்றன. மேலும் அத்தகையவர்களுக்கு இறை ஆட்சியமைப்பு அளிக்கும் சலுகைகள் தடை செய்யப்படுவதோடு, அவர்கள் பல இழிவுகளுக்கும் வேதனைகளுக்கும் ஆளாக நேரிடும் என்பதை அறிந்து கொள்ளட்டும்.
وَٱلَّذِينَ يُؤْذُونَ ٱلْمُؤْمِنِينَ وَٱلْمُؤْمِنَٰتِ بِغَيْرِ مَا ٱكْتَسَبُوا۟ فَقَدِ ٱحْتَمَلُوا۟ بُهْتَٰنًۭا وَإِثْمًۭا مُّبِينًۭا.
33:58. அதே போன்று இறை அட்சியமைப்பில் பணிபுரியும் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு எதிராக அவதூறு கூறி அவர்களுடைய பணியில் குறுக்கிடுபவர்களும் கடுமையான தண்டனைக்கு ஆளாவார்கள். அவர்களுக்கு எதிராக அவதூறு கூறினாலும், வெளிப்படையான தடைகளை ஏற்படுத்தி வந்தாலும், அவர்கள் தண்டனையை அடைய நேரிடும். இதை வெளிப்படையாக அறிவித்து விடுங்கள்.
சிந்தனையாளர்களே! இவை யாவும் நபிகளார் உயிருடன் இருந்த காலத்தில் அவருக்கும் அவருடைய சகாக்களாகிய சஹாபா பெருமக்களுக்கும் இடப்பட்ட கட்டளைகளாகும் என்றோ, இதற்கும் தற்சமயம் வாழும் நமக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்றோ எண்ணி விடாதீர்கள். இறைத் தூதரின் மறைவுக்குப் பின் இந்த பொறுப்பு முஃமின்களிடம் ஒப்படைக்கப்படுகிறது. (பார்க்க 3:81, 3:102, 3:144). எனவே இறைவழிகாட்டுதலை ஏற்றுக் கொண்ட நாமும் இத்தகைய சமூக சீர்திருத்தப் பணியில் ஈடுபட்டால், நபிக்கு கிடைத்த அல்லாஹ்வின் பேராதரவும் ஆசியும், பிரபஞ்ச இயற்கை சக்திகளின் துணையும் நமக்கும் கிடைக்கும். (பார்க்க 33:43, 2:157) இதற்காக மூஃமினான ஆண்களும் பெண்களும் நடை உடை பாவனை ஆகியவற்றில் சில வரையறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும். அப்போது தான் சிறப்பாக செயலாற்ற முடியும். எனவே
يَٰٓأَيُّهَا ٱلنَّبِىُّ قُل لِّأَزْوَٰجِكَ وَبَنَاتِكَ وَنِسَآءِ ٱلْمُؤْمِنِينَ يُدْنِينَ عَلَيْهِنَّ مِن جَلَٰبِيبِهِنَّ ۚ ذَٰلِكَ أَدْنَىٰٓ أَن يُعْرَفْنَ فَلَا يُؤْذَيْنَ ۗ وَكَانَ ٱللَّهُ غَفُورًۭا رَّحِيمًۭا.
33:59. இறைவழிகாட்டுதலை எடுத்துரைப்பவரே! நீர் உம்முடைய செயல்திட்டத்தில் பங்கெடுக்க துணை நிற்கும் துணைவியர்களுக்கும் மற்ற அரசு பணிகளில் ஈடுபட்டிருக்கும் பெண்களுக்கும் மேலாடைகளை சரியாக போர்த்திக் கொண்டு (Unifrom Dress Code) பணி புரிய அறிவுறுத்துங்கள். இதனால் இவர்கள் அரசு பணியாளர்கள் என்பதை உணர்ந்து துஷ்டர்கள் முறைதவறி நடக்காமல் இருக்கலாம். இவ்வாறு தீயவர்களிடமிருந்து தப்பிக்க சுலபமான வழிமுறையாகும். இப்படியாக அல்லாஹ்வின் அறிவுரைகள் யாவும் அனைத்துத் தரப்பு மக்களின் பாதுகாப்பை முன்வைத்தே அளிக்கப்படுகின்றன. இது அல்லாஹ்வின் மாபெரும் கருணையின் பிரதிபலிப்பாகும்.
காவல்துறை, மருத்துவ மனை போன்ற அரசுப் பணியாட்களுக்கு கொடுக்கப்படும் சீருடை UNIFORM DRESS CODE மூலமே நாம் அவர்களை அடையளம் கண்டு, அவர்களிடம் மதிப்பு மரியாதையுடன் நடந்து கொள்கிறோம். அதே போல மற்ற எல்லாப் பெண்களும் அழகிய முறையில் உடையை உடுத்தவேண்டும். ஏனெனில் அவர்கள் அறைகுறை ஆடைகளை அணிந்து வெளியே வந்தால், சபல புத்தியுள்ள ஆண்கள் அவர்களை வலைவீச முற்படுவார்கள். இதானல் பெண்களுடைய எதிர்காலம் பாதிப்பிற்குள் ஆகிவிடும். மேலும் இப்படிப்பட்ட அரைகுறை ஆடைகளால் இளைஞர்களின் மனதிலும் சபலத்தை ஏற்படுத்தி விடும். அவர்களும் காலப் போக்கில் காம இச்சையின் தூண்டுதலுக்கு இரையாகி விடுவார்கள். ஆக உடலழகை வெளியில் காட்டாமல் நல்ல அழகிய ஆடைகளை அணிந்து வெளியே வருவதைக் கொண்டே நாட்டை சீராக்கி சிறப்பாக ஆக்க முடியும்.
۞ لَّئِن لَّمْ يَنتَهِ ٱلْمُنَٰفِقُونَ وَٱلَّذِينَ فِى قُلُوبِهِم مَّرَضٌۭ وَٱلْمُرْجِفُونَ فِى ٱلْمَدِينَةِ لَنُغْرِيَنَّكَ بِهِمْ ثُمَّ لَا يُجَاوِرُونَكَ فِيهَآ إِلَّا قَلِيلًۭا.
33:60. சமுதாய நல்லிணக்கத்தை கெடுப்பவர்களும், சபல புத்தியுள்ளவர்களும், நகரத்தில் பொய்ப் பிரச்சாரம் செய்து திரிபவர்களும் தங்கள் போக்கை மாற்றிக் கொள்ளவேண்டும். இனி அவர்கள் கற்புள்ள பெண்கள் மீது அவதூறு கூறுவதோ அல்லது அவர்களை சீண்டுவதோ (Eve teasing) கூடாது. இனியும் அவர்கள் இத்தகைய தீய செயலிலிருந்து விலகவில்லை என்றால், அவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அதன்பின் அவர்கள் விரைவில் ஊரைவிட்டு வெளியேறிவிட நேரிடும்.
مَّلْعُونِينَ ۖ أَيْنَمَا ثُقِفُوٓا۟ أُخِذُوا۟ وَقُتِّلُوا۟ تَقْتِيلًۭا.
33:61. மேலும் அத்தகையவர்களுக்கு அரசு தரப்பிலிருந்து கிடைக்கும் சலுகைகள் யாவும் தடுக்கப்பட்டு விடும். அதையும் மீறி அவர்கள் தம் போக்கை மாற்றிக் கொள்ளவில்லை என்றால் அவர்கள் சிறையில் அடைக்கப்படுவார்கள். தப்பிக்க முயன்றால் உடனே பிடித்து கொன்று விட உத்தரவு பிறப்பிக்கப்படும். இதுவே அவர்களுக்கு கிடைக்கும் கடும் தண்டனையாகும்.
سُنَّةَ ٱللَّهِ فِى ٱلَّذِينَ خَلَوْا۟ مِن قَبْلُ ۖ وَلَن تَجِدَ لِسُنَّةِ ٱللَّهِ تَبْدِيلًۭا.
33:62. அல்லாஹ் ஏற்படுத்திய இந்தச் சட்டம் புதிதான ஒன்றல்ல. காலம் காலமாக அவன் புறத்திலிருந்து இதே சட்டம் தான் நடைமுறையில் இருந்து வந்துள்ளது. எனவே அல்லாஹ்வின் நடைமுறைச் சட்டங்களில் எப்போதும் மாறுதல் இருந்ததில்லை. இனியும் மாறுதல் இருக்காது.
يَسْـَٔلُكَ ٱلنَّاسُ عَنِ ٱلسَّاعَةِ ۖ قُلْ إِنَّمَا عِلْمُهَا عِندَ ٱللَّهِ ۚ وَمَا يُدْرِيكَ لَعَلَّ ٱلسَّاعَةَ تَكُونُ قَرِيبًا.
33:63. இத்தகைய கட்டுக் கோப்பான சமூக அமைப்பைக் கொண்ட காலம் எப்போது வரும் என்று மக்கள் உம்மிடம் கேட்கிறார்கள். எனவே அவர்களிடம், “அத்தகைய சமூக அமைப்பு ஏற்படும் காலத்தை நான் எப்படி குறித்துக் கூற முடியும்? அது எப்போது ஏற்படும் என்ற ஞானம் அல்லாஹ்விடமே உள்ளது” என்று பதில் அளித்துவிடுங்கள். அத்தகைய மறுமலர்ச்சி காலம் விரைவிலும் வந்திடலாம்.
அதாவது சமுதாயத்தில் ஏற்படும் அழிவுகளோ மறுமலர்ச்சியோ அவரவருடைய உழைப்பைப் பொருத்தே அமையும். எந்த அளவிற்கு தீய செயல்களை செய்கிறார்களோ, அந்த அளவிற்கு அந்த அழிவுகள் விரைந்து வரும். அதே போல எந்த அளவிற்கு நற்செயல்களை செய்கிறார்களோ, அந்த அளவிற்கு அவற்றின் பலன்கள் விரைவில் தோற்றத்திற்கு வரும். அதைப் பற்றி யாரும் நாள், மாதம், வருடம் என்று கணித்து கூற இயலாது. ஆனால் ஒரு விஷயம் மட்டும் நிச்சயமாக நடக்கும். அதாவது
إِنَّ ٱللَّهَ لَعَنَ ٱلْكَٰفِرِينَ وَأَعَدَّ لَهُمْ سَعِيرًا.
33:64. இறைவழிகாட்டுதலுக்கு மாற்றமாக செயல்படுவோர் அல்லாஹ்வின் அருட்கொடைகளை இழக்க நேரிடும். மேலும் அவர்கள் தாளா வேதனைகள் கொண்ட நரகத்தில் தள்ளப்படுவார்கள். இத்தகைய தீயவர்களுக்காகவே அவை சித்தப் படுத்தப்பட்டுள்ளன.
خَٰلِدِينَ فِيهَآ أَبَدًۭا ۖ لَّا يَجِدُونَ وَلِيًّۭا وَلَا نَصِيرًۭا.
33:65. அதில் அவர்கள் நீண்ட காலம் தங்கி வேதனைகளை அனுபவிக்க நேரிடும். மேலும் இத்தகையவர்களை ஆதரிப்பவர்களோ அல்லது உதவி செய்பவர்களோ யாரும் இருக்க மாட்டார்கள்.
يَوْمَ تُقَلَّبُ وُجُوهُهُمْ فِى ٱلنَّارِ يَقُولُونَ يَٰلَيْتَنَآ أَطَعْنَا ٱللَّهَ وَأَطَعْنَا ٱلرَّسُولَا۠.
33:66. அந்த நரக வேதனைகளை அனுபவிக்கும் அந்த கால கட்டங்களில் அவர்கள், “அடப்பாவமே! அல்லாஹ்வின் அறிவுரைகளின்படி நாம் நடந்திருக்க வேண்டுமே! இறைத்தூதர் காட்டிய வழியில் செயல்பட்டிருக்க வேண்டுமே!” என்று புலம்பிக் கொண்டு தான் இருப்பார்கள்.
وَقَالُوا۟ رَبَّنَآ إِنَّآ أَطَعْنَا سَادَتَنَا وَكُبَرَآءَنَا فَأَضَلُّونَا ٱلسَّبِيلَا۠.
33:67. மேலும் அவர்கள், “எங்கள் இறைவா! நாங்கள் எங்கள் தலைவர்களுக்கும் பெரியார்களுக்கும் வழிப்பட்டோமே! ஆனால் அவர்களோ எங்களை வழிகெடுத்து விட்டார்களே!” என்று அவர்கள் கதறிக் கொண்டிருப்பார்கள்.
رَبَّنَآ ءَاتِهِمْ ضِعْفَيْنِ مِنَ ٱلْعَذَابِ وَٱلْعَنْهُمْ لَعْنًۭا كَبِيرًۭا.
33:68. மேலும் அவர்கள்,“எங்கள் இறைவா! எங்களை வழிகெடுத்த எங்கள் தலைவர்களுக்கு இருமடங்கு வேதனை அளிப்பாயாக. அவர்களை நரகத்திலேயே மிக மோசமான பாழ்குழியில் தள்ளி வேதனை அளிப்பாயாக” என்று இறைவனிடம் வேண்டிக் கொள்வார்கள்.
ஆக இப்படிப்பட்ட கேவலமான நிலை ஏற்படாமல் இருக்க வேண்டும் என்றால் இறைத்தூதர் கொண்டு வரும் செயல் திட்டங்களை நிறைவேற்ற முழு மூச்சுடன் செயல்பட வேண்டும். மேலும் எந்த வகையிலும் அவருக்கு பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடாது (பார்க்க 33:57) இதற்கு முன் மூஸா நபியிடம் அவரைப் பின்பற்றியவர்கள் விதவிதமான நெருக்கடியை ஏற்படுத்தி வந்தார்கள். இதனால் அவர் கொண்டு வந்த சமூக நலத் திட்டங்கள் பல சமயங்களில் தடைபட்டு விட்டன. எனவே
يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟ لَا تَكُونُوا۟ كَٱلَّذِينَ ءَاذَوْا۟ مُوسَىٰ فَبَرَّأَهُ ٱللَّهُ مِمَّا قَالُوا۟ ۚ وَكَانَ عِندَ ٱللَّهِ وَجِيهًۭا.
33:69. இறைவழிகாட்டுதலை மனதார ஏற்றுக்கொண்டவர்களே! இதற்குமுன் மூஸா நபியிடம் அவருடைய சமூகத்தார் செய்த நோவினைப் போன்று நீங்களும் செய்யாதீர்கள்.* அப்படி அவர்கள் நடந்து கொண்டதால் மூஸா நபிக்கு எந்த பாதிப்பும் ஏற்பட்டதில்லை. மாறாக அவர் அல்லாஹ்விடத்தில் மிகவும் கண்ணிய மிக்கவராகவே இருந்தார்.
விளக்கம் 2:55, 7:155 மற்றும் 5:101-103இல் வந்துள்ளது.
يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟ ٱتَّقُوا۟ ٱللَّهَ وَقُولُوا۟ قَوْلًۭا سَدِيدًۭا.
33:70. இறைவழிகாட்டுதலை மனதார ஏற்றுக் கொண்டவர்களே! அல்லாஹ்வின் அறிவுரைகளுக்கு மாற்றமாக செயல்படுவதால் ஏற்படும் தீய விளைவுகளுக்கு அஞ்சி நடந்து கொள்ளுங்கள். எனவே எப்போதும் உள்ளது உள்ளபடியே ஒளிவு மறைவு இல்லாமல் நேர்மையாகவே பேசுங்கள்.
يُصْلِحْ لَكُمْ أَعْمَٰلَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ ۗ وَمَن يُطِعِ ٱللَّهَ وَرَسُولَهُۥ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا.
33:71. இப்படி பேசுவதைக் கொண்டு இறைவனின் நியதிப்படி உங்களுடைய நடத்தை சீராகி வரும். மேலும் தவறான செயல்களால் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து பாதுகாப்பு கிடைக்கும். சுருங்கச் சொன்னால் அல்லாஹ்வின் வழிகாட்டுதலுக்கும், அதனடிப்படையில் உருவான ஆட்சியமைப்பு சட்டங்களுக்கும் அடிபணிந்து செயல்படுங்கள். இதனால் உங்கள் வாழ்வில் மகத்தான மறுமலர்ச்சி ஏற்படும். இவ்வாறு ஏற்படுவது மாபெரும் வெற்றியாகும் அல்லவா?
إِنَّا عَرَضْنَا ٱلْأَمَانَةَ عَلَى ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضِ وَٱلْجِبَالِ فَأَبَيْنَ أَن يَحْمِلْنَهَا وَأَشْفَقْنَ مِنْهَا وَحَمَلَهَا ٱلْإِنسَٰنُ ۖ إِنَّهُۥ كَانَ ظَلُومًۭا جَهُولًۭا.
33:72. அல்லாஹ்வின் செயல்திட்டங்களை நிறைவேற்ற வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும், அவற்றில் பெரிய பெரிய மலைகளே ஆயினும் சரியே எல்லாமே அல்லாஹ்வின் கட்டளைக்கு சிரம்பணிய முன்வந்தன. (பார்க்க 41:11, 16:49-50) அவற்றுள் எதுவுமே அல்லாஹ்வின் கட்டளைக்கு மாறு செய்வதில்லை. அவ்வாறு மாறு செய்வதால் ஏற்படும் விளைவுகளுக்கு அஞ்சி சிரம்பணிந்து நடக்கின்றன. ஆனால் மனிதனின் நிலைமையோ வேறுவிதமாக உள்ளது. அவனுக்கு அளிக்கப்பட்ட கடமையிலிருந்து அவன் நழுவிவிடுகிறான். இதனால் ஏற்படும் பாதிப்புகளை அவனே சுமக்கவேண்டி வரும் என்பதை அறியாமலே இருக்கிறான். எனவே தான் மனிதன் அநியாயக்காரனாகவும் அறிவிலியாகவும் இருக்கும் நிலை ஏற்படுகிறது.
இப்போது இருக்கின்ற கேள்வி மனிதனுக்கு மட்டும் ஏன் இந்த அழிவுகளும் வேதனைகளும் ஏற்படுகின்றன என்பதேயாகும். காரணம் மனிதன் மட்டும் மற்ற படைப்புகளைப் போன்று தம் இயல்பின் அடிப்படையில் வாழும் கட்டாயத்தில் இருப்பதில்லை. எனவே இவன் செய்யும் நற்செயல்களுக்கும் தீய செயல்களுக்கும் இவனே பொறுப்பாளி ஆகிவிடுகிறான். எனவேதான்
لِّيُعَذِّبَ ٱللَّهُ ٱلْمُنَٰفِقِينَ وَٱلْمُنَٰفِقَٰتِ وَٱلْمُشْرِكِينَ وَٱلْمُشْرِكَٰتِ وَيَتُوبَ ٱللَّهُ عَلَى ٱلْمُؤْمِنِينَ وَٱلْمُؤْمِنَٰتِ ۗ وَكَانَ ٱللَّهُ غَفُورًۭا رَّحِيمًۢا.
33:73. அல்லாஹ் நிர்ணயித்த சட்ட விதிமுறைகளின்படி சமுதாய நல்லிணக்கத்தை கெடுக்கும் ஆண்களாயினும் பெண்களாயினும் சரியே, தங்கள் மன இச்சைக்கு அடிபணிந்து வாழும் முஷ்ரிக்குகளாயினும் சரியே, அவர்கள் அனைவரும் வேதனைகளை அனுபவிப்பது தவிர்க்க முடியாததாகும். மாறாக இறைவழிகாட்டுதலை மனதார ஏற்று நடக்கும் மூஃமினான ஆண்களுக்கும் பெண்களுக்கும், தவறான பாதையிலிருந்து விலகி நேரான பாதையில் செல்ல அல்லாஹ்வின் ஏற்பாடு (System) வழிவகுக்கிறது.. இதனால் அவர்களுடைய நிகழ்கால வாழ்வும் வருங்கால நிலையான வாழ்வும் சிறப்பாக இருக்கும். அல்லாஹ்வின் செயல்திட்டங்கள் அனைத்து தரப்பு மக்களின் நலனையும் காப்பதாகவே உள்ளன என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. இது அல்லாஹ்வின் மாபெரும் கருணை குணநலத்தின் பிரதிபலிப்பாகும்.
விரும்பினால் அவனுடைய வழிகாட்டுதலை ஏற்று அதன்படி நடக்க அலைவரும் முன்வர வேண்டும்.