بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ

32:0.அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் அறிவுரைப்படியே அனைத்துக் காரியங்களையும் செய்ய நாடுகிறேன். (பார்க்க 6:162)


الٓمٓ.

32:1. அளவற்ற அருளாளன் அல்லாஹ்வின் புறத்திலிருந்து முஹம்மது நபி மூலமாக இறக்கி அருளப்பட்ட வேதமிது.


تَنزِيلُ ٱلْكِتَٰبِ لَا رَيْبَ فِيهِ مِن رَّبِّ ٱلْعَٰلَمِينَ.

32:2. இவ்வேதம் அகிலங்கள் அனைத்தையும் படைத்து பரிபாலிக்கும் ஏக இறைவனாகிய அல்லாஹ்வின் புறத்திலிருந்து இறக்கி அருளப்படுகிறது என்பதில் யாருக்கும் எவ்வித சந்தேகமும் இருக்க வேண்டாம். மேலும் இதை பின்பற்றுவதால் வாழ்வின் உயர் இலட்சியத்தை அடைய முடியுமா முடியாதா என்ற மனச் சஞ்சலமும் இருக்கத் தேவையில்லை.


أَمْ يَقُولُونَ ٱفْتَرَىٰهُ ۚ بَلْ هُوَ ٱلْحَقُّ مِن رَّبِّكَ لِتُنذِرَ قَوْمًۭا مَّآ أَتَىٰهُم مِّن نَّذِيرٍۢ مِّن قَبْلِكَ لَعَلَّهُمْ يَهْتَدُونَ.

32:3. உண்மை இவ்வாறிருக்க மக்களுடைய பேச்சு வேறு விதமாக உள்ளது. இறைத்தூதர், தானே கற்பனை செய்து இவ்வேதத்தை எழுதிக் கொள்வதாக பேசி வருகின்றனர். மற்றவர்களும் அதற்கு துணை புரிவதாகவும் கூறுகிறார்கள் (பார்க்க 32:4) ஆனால் உண்மை அதுவல்ல. அகிலங்கள் அனைத்தையும் படைத்து பரிபாலிக்கின்ற ஏக இறைவனிடமிருந்து இது இறக்கியருளப்படுகிறது என்பது தான் உண்மை. உமக்கு முன்னர் தவறான செயல்களின் தீய விளைவுகளைப் பற்றி முன்னெச்சரிக்கை செய்யும் இறைத்தூதர் எவரும் வராத சமூகத்தவர்க்கும் இந்த அறிவுரைகள் இறக்கியருளப்படுகின்றன. (பார்க்க 36:6) இவற்றைக் கொண்டு, அவர்கள் நேர்வழி பெற்றுக் கொள்ளட்டும்.


ٱللَّهُ ٱلَّذِى خَلَقَ ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضَ وَمَا بَيْنَهُمَا فِى سِتَّةِ أَيَّامٍۢ ثُمَّ ٱسْتَوَىٰ عَلَى ٱلْعَرْشِ ۖ مَا لَكُم مِّن دُونِهِۦ مِن وَلِىٍّۢ وَلَا شَفِيعٍ ۚ أَفَلَا تَتَذَكَّرُونَ.

32:4. அகிலங்களையும் பூமியையும், இவ்விரண்டிற்கும் இடையே உள்ள அனைத்தையும் ஆறு கால கட்டங்களில் படைத்து (விளக்கத்திற்குப் பார்க்க 7:54) அவை அனைத்தையும் கட்டுக் கோப்பாக செயல்படுத்தி வரும் ஏக இறைவனாகிய அல்லாஹ்விடமிருந்து வரும் சொல்லாகும். (மேலும் பார்க்க 10:3) அவன் காட்டிய வழிமுறைகளைத் தவிர உங்களின் சிறப்பான வாழ்விற்கு வேறு எந்த வழிமுறையும் துணை நிற்காது. மேலும் மனிதனிடையே உள்ள பிரச்னைகளுக்கு இதைத் தவிர வேறு எதுவும் நிவாரணம் அளிக்க இயலாது. (பார்க்க 17:82) இந்தப் பேருண்மையைப் பற்றி சிந்திக்க மாட்டீர்களா?


يُدَبِّرُ ٱلْأَمْرَ مِنَ ٱلسَّمَآءِ إِلَى ٱلْأَرْضِ ثُمَّ يَعْرُجُ إِلَيْهِ فِى يَوْمٍۢ كَانَ مِقْدَارُهُۥٓ أَلْفَ سَنَةٍۢ مِّمَّا تَعُدُّونَ.

32:5. வானத்திலிருந்து பூமிவரையில் உள்ள ஏக இறைவனின் செயல் திட்டங்களைப் பற்றி ஆராய்ந்து பாருங்கள். அவற்றிலுள்ள படைப்புகள் யாவும் பல படித்தரங்களைக் கடந்து, அவன் நிர்ணயித்த விதிமுறைகளின் படியே வளர்ந்து, இறுதி இலக்கை சென்றடைகின்றன. அவ்வாறு ஒவ்வொரு படித்தரத்தையும் கடப்பதற்கு எடுத்துக் கொள்ளப்படும் கால அளவு உங்கள் கணக்கு படி ஆயிரமாயிரம் வருடங்களாகும்.
இப்படியாக இறைவனின் செயல்திட்டங்கள் யாவும் யுகங்கள் என்ற அடிப்படையில் நீண்ட கால செயல் திட்டங்களாக உள்ளன. மேலும் பிரபஞ்ச படைப்புகளில் பரிணாம வளர்ச்சியின் படித்தரங்களை கடக்க எடுத்துக் கொள்ளப்படும் கால அளவு ஐம்பது ஐம்பதாயிரம் வருடங்களாகும். (பார்க்க 70:4) இவையாவும் மனித அறிவுக்குப் புலப்படாத விஷயங்களாகும். இவற்றைப் பற்றி தனி ஒரு நபர் எவ்வாறு சுயமாக கணித்து எழுத முடியும். இவற்றை படைத்த இறைவனால் மட்டுமே சாத்தியமாகும். எனவே இவ்வேதம் இறைவனிடமிருந்து இறக்கியருளப்படுகிறது என்பதற்கு இதுவும் ஒரு சான்றாகும்.


ذَٰلِكَ عَٰلِمُ ٱلْغَيْبِ وَٱلشَّهَٰدَةِ ٱلْعَزِيزُ ٱلرَّحِيمُ.

32:6. பிரபஞ்ச படைப்புகளில் மறைந்து கிடக்கும் உண்மைகளையும், வெளிப்படையானவற்றையும் நன்கு அறிபவன் தான் அல்லாஹ். இவை யாவும் அவனுடைய வல்லமையையும் இரக்க குண நலங்களையும் பிரதிபலிக்கின்றன.


ٱلَّذِىٓ أَحْسَنَ كُلَّ شَىْءٍ خَلَقَهُۥ ۖ وَبَدَأَ خَلْقَ ٱلْإِنسَٰنِ مِن طِينٍۢ.

32:7. அல்லாஹ்வின் அதே நீண்ட கால செயல் திட்டத்தின்படியே ஒவ்வொரு பொருளும் அழகிய முறையில் படைக்கப்பட்டன. அத்தகைய அழகிய படைப்புகளில் மனித படைப்பும் ஒன்றாகும். மனித படைப்பின் துவக்கமும் மண்ணில் உள்ள (Inorganic Matter) சத்துகளிலிருந்து பல படித்தர யுகங்களை கடந்து உருவானது.


ثُمَّ جَعَلَ نَسْلَهُۥ مِن سُلَٰلَةٍۢ مِّن مَّآءٍۢ مَّهِينٍۢ.

32:8. உயிரற்று கிடந்த மண்ணின் சத்துகளில் தண்ணீர் கலந்ததும் அதில் உயிரணுக்கள் (Life Cell) உருவாயின. (மேலும் பார்க்க 37:11) அந்த உயிரணுக்கள் ஆண் பெண் என இரண்டாகப் பிரிந்தன. இவ்வாறு மனித படைப்பு உருவாகி யுகங்கள் பல கடந்தபின், ஆண் பெண் சேர்க்கையின் (Procreation) மூலம் இந்திரிய துளியிலிருந்து உருவாக ஆரம்பித்தது. இப்படியாக மனித இனம் உலகம் முழுவதும் பல்கி பெருகியது (பார்க்க 4:1)
மனிதன் இந்த நிலையில் மற்ற உயிரினங்களுக்கு ஒப்பானவனாக இருந்தான். அவனிடம் எந்த தனிச் சிறப்பும் இருந்ததில்லை (பார்க்க 76:1) ஆக மண்ணின் சத்தைக் கொண்டு உருவானது (Evolution) முதல் கட்டம். அதன்பின் ஆண்பெண் சேர்க்கையின் மூலம் உருவானது (Emergent Evolution மூலம்) இரண்டாவது கட்டம். மனிதன் மட்டுமின்றி எல்லா உயிரினங்களும் இவ்வாறே உருவாயின (பார்க்க 6:38). அதன்பின் மூன்றாவது கட்டமாக


ثُمَّ سَوَّىٰهُ وَنَفَخَ فِيهِ مِن رُّوحِهِۦ ۖ وَجَعَلَ لَكُمُ ٱلسَّمْعَ وَٱلْأَبْصَٰرَ وَٱلْأَفْـِٔدَةَ ۚ قَلِيلًۭا مَّا تَشْكُرُونَ.

32:9. இறைவனின் செயல்திட்டப்படி மனிதனில் இருந்த குறைகளை நீக்கி, அவனுள் “ரூஹ்” எனும் தனிச்சிறப்பு மிக்க ஆற்றல்கள் (Devine Energy) படிப்படியாக அளிக்கப்பட்டது. அதன் துணையைக் கொண்டு மனிதனுக்கு கேட்கும் சக்தியும், பார்க்கும் சக்தியும், எதையும் சிந்தித்து செயலாற்றும் பகுத்தறிவும் கிடைத்தன. இவ்வாறிருந்தும் மனிதன் நன்றி மறப்பவானகவே இருக்கிறான்.
செவிப்புலன், பார்வைப்புலன், பகுத்தறியும் புலன் ஆகியவை மற்ற உயிரினங்களுக்கும் உள்ளன. ஆனால் அவையாவும் ஒரு குறிப்பிட்ட எல்லைக்கு உட்பட்டவையாக இருக்கின்றன. (பார்க்க 24:41) மனிதனுக்கு கிடைத்துள்ள முழு சுதந்திரத்தைப் போன்று அவற்றிற்கு அளிக்கப்படவில்லை. மேலும் இவ்வுலகை வழிநடத்திச் செல்லும் தகுதியும் பொறுப்பும் மனிதனுக்கு மட்டுமே அளிக்கப்பட்டன. (பார்க்க 2:30)
எனவே அவனுடைய ஒவ்வொரு செயலும் பிரபஞ்ச இயற்கை சட்டத்தின்படி விளைவுகளை ஏற்படுத்திக் கொண்டே செல்கின்றன. அவன் செய்து வரும் நற்செயல்களின் பலன்களையோ அல்லது தீய செயல்களின் விளைவுகளையோ அவன் அடைந்தே தீர வேண்டும். அந்த பலன்களையும் விளைவுகளையும் இவ்வுலகில் பெறவில்லை என்றாலும் மரணத்திற்குப் பின் தொடர்கின்ற வாழ்வில் அவன் அனுபவித்தே ஆக வேண்டும். இது அல்லாஹ்வின் செயல்திட்டங்களுக்கு உட்பட்ட விஷயங்களாகும். இதைப் பற்றி மக்களிடம் எடுத்துக் கூறினால்


وَقَالُوٓا۟ أَءِذَا ضَلَلْنَا فِى ٱلْأَرْضِ أَءِنَّا لَفِى خَلْقٍۢ جَدِيدٍۭ ۚ بَلْ هُم بِلِقَآءِ رَبِّهِمْ كَٰفِرُونَ.

32:10. உயிரற்ற மண்ணின் சத்திலிருந்து படைக்கப்பட்ட விஷயம் எவ்வாறு அவனுக்கு புரியவில்லையோ, அவ்வாறே மரணத்திற்குப் பின் மீண்டும் படைக்கப்படுகின்ற விஷயமும் அவனுக்கு புரியவில்லை. அவன் செய்யும் செயல்களின் விளைவுகளை இறைவனின் நியதிப்படி சந்தித்தே ஆகவேண்டும் என்று எடுத்துச் சொன்னாலும் அதையும் ஏற்றுக் கொள்வதில்லை.
அப்படியும் மனிதனுக்கு இவ்வுலகில் நிரந்தர வாழ்வு கிடைக்கப் போவதும் இல்லை. அவனுள் செயல்பட்டு வரும் சக்திகள் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து, ஒரு கட்டத்தில் இவ்வுலகில் வாழ முடியாமல் இறந்து விடுகிறான். இதைத் திருக்குர் ஆன் மொழியில்:


۞ قُلْ يَتَوَفَّىٰكُم مَّلَكُ ٱلْمَوْتِ ٱلَّذِى وُكِّلَ بِكُمْ ثُمَّ إِلَىٰ رَبِّكُمْ تُرْجَعُونَ.

32:11. “மலக்குல் மவ்த்” என்று சொல்கிறது. இது ஒவ்வொரு மனிதருக்கும் நிர்ணயிக்கப்பட்ட விதியாகும். வாழ்வின் இறுதிக் கட்டத்தில் அந்த "மலக்குல் மவ்த்'' உங்கள் உயிர்களை கைப்பற்றிக் கொள்ளும். அதன்பின் நீங்கள் இவ்வுலகில் செய்து வந்த செயல்களுக்கு ஏற்ப பலன்களையோ அல்லது தீய விளைவுகளையோ இறைவனின் நியதிப்படி நிச்சயமாக அடைவீர்கள். இதை யாராலும் தவிர்க்க முடியாது.


وَلَوْ تَرَىٰٓ إِذِ ٱلْمُجْرِمُونَ نَاكِسُوا۟ رُءُوسِهِمْ عِندَ رَبِّهِمْ رَبَّنَآ أَبْصَرْنَا وَسَمِعْنَا فَٱرْجِعْنَا نَعْمَلْ صَٰلِحًا إِنَّا مُوقِنُونَ.

32:12. மரணத்திற்குப் பின் நிகழ்வதை நீர் பார்க்க நேர்ந்தால், தீய செயல்களில் ஈடுபட்டிருந்த பாவிகள் தங்கள் இறைவன் முன் தலை குனிந்தவர்களாய், “எங்கள் இறைவா! இப்போது நாங்கள் அனைத்தையும் கண்கூடாக பார்த்துக் கொண்டோம். அனைத்தையும் கேட்டு புரிந்துக் கொண்டோம். ஆகவே நீ எங்களை மீண்டும் ஒருமுறை உலகிற்கு அனுப்பி வை. உன் கட்டளைப்படி நற்கருமங்களையே செய்வோம். நிச்சயமாக நாங்கள் அனைத்தையும் உறுதியுடன் அறிந்து கொண்டோம்” என்று மன்றாடிக் கொண்டிருப்பதை காண்பீர். (மேலும் பார்க்க 23:99-100)
சிந்தனையாளர்களே! இத்தகைய பரிதாபகர நிலைக்கு தள்ளப்படுவதை நீங்கள் விரும்புகிறீர்களா? இப்படி ஏற்படாமல் இருக்க வேண்டும் என்றால் இறைவனின் அறிவுரைப் படி இப்போது கிடைத்துள்ள அரிய சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு நற்செயல்களை செய்து வாருங்கள். ஏனெனில் மீண்டும் உங்களை உலகிற்கு திருப்பி அனுப்புவது என்பது இறைவனின் செயல் திட்டத்தில் இல்லாத ஒன்றாகும். (6:27-28 7:53)


وَلَوْ شِئْنَا لَءَاتَيْنَا كُلَّ نَفْسٍ هُدَىٰهَا وَلَٰكِنْ حَقَّ ٱلْقَوْلُ مِنِّى لَأَمْلَأَنَّ جَهَنَّمَ مِنَ ٱلْجِنَّةِ وَٱلنَّاسِ أَجْمَعِينَ.

32:13. மேலும் மற்ற உயிரினங்களை தம் இயல்பின் அடிப்படையில் வாழ வைத்திருப்பது போல, இறைவன் மனிதனையும் வாழ வைத்திருந்தால், ஒவ்வொருவரும் நேர்வழியிலேயே செயல்பட்டு இருப்பான். ஆனால் இறைவனின் செயல்திட்டம் அவ்வாறல்ல. மனிதனுக்கு முழு சுதந்திரத்தை அளித்துவிட்டு, அவன் வழிகாட்டுதலை உளமாற விரும்பி ஏற்று செயல்பட முன்வர வேண்டும். இதுவே இறைவனின் செயல்திட்டமாகும். எனவேதான் இறைவழிகாட்டுதலை ஏற்க மறுத்து தவறான வழியில் செல்பவர்களில் பழங்குடியினரோ அல்லது நகர்புறவாசிகளோ, யாராக இருந்தாலும் நரகத்தில் தள்ளப்படுவார்கள். இதுதான் இறைவன் ஏற்கனவே நிர்ணயித்த செயல் திட்டமாகும்.


فَذُوقُوا۟ بِمَا نَسِيتُمْ لِقَآءَ يَوْمِكُمْ هَٰذَآ إِنَّا نَسِينَٰكُمْ ۖ وَذُوقُوا۟ عَذَابَ ٱلْخُلْدِ بِمَا كُنتُمْ تَعْمَلُونَ.

32:14. ஆகவே அத்தகைய வேதனைகள் மிக்க கால கட்டத்தை சந்திக்க நேரிடும் என்பதை பொருட்படுத்தாதவர்கள் தற்காலிக சுகங்களை மட்டும் அனுபவித்துக் கொள்ளட்டும். அந்த வேதனை மிக்க கால கட்டங்களில் நாமும் உங்களை பொருட்படுத்த மாட்டோம். மேலும் நீங்கள் செய்து வந்த தீய செயல்களின் விளைவாக நரக வேதனைகளை நிரந்தரமாக அனுபவிக்க வேண்டிவரும். இறைவனின் இச்செயல்திட்டத்தைப் பற்றி அவர்களுக்கு அறிவித்துவிடுங்கள்.


إِنَّمَا يُؤْمِنُ بِـَٔايَٰتِنَا ٱلَّذِينَ إِذَا ذُكِّرُوا۟ بِهَا خَرُّوا۟ سُجَّدًۭا وَسَبَّحُوا۟ بِحَمْدِ رَبِّهِمْ وَهُمْ لَا يَسْتَكْبِرُونَ ۩.

32:15. மாறாக இறைவழிகாட்டுதலை ஏற்று நடப்பவர்களின் நிலை எவ்வாறு இருக்கும் என்றால், இறைவனின் அறிவுரைகளை எடுத்துரைத்தால், அவற்றின் நுணுக்கத்தை அறிந்து (பார்க்க 25:73) அவற்றிற்கு முற்றிலும் அடிபணிந்து செயல்படுவார்கள். அந்த அறிவுரைகளின்படி நடப்பதால் ஏற்படும் நன்மைகளை பார்த்து, இறைவனை பாராட்டி புகழாரம் செய்த வண்ணமிருப்பார்கள். அவர்கள் ஒருபோதும் பெருமை அடித்து கர்வத்துடன் நடந்துகொள்ளவே மாட்டார்கள்.


تَتَجَافَىٰ جُنُوبُهُمْ عَنِ ٱلْمَضَاجِعِ يَدْعُونَ رَبَّهُمْ خَوْفًۭا وَطَمَعًۭا وَمِمَّا رَزَقْنَٰهُمْ يُنفِقُونَ.

32:16. அவர்கள் தம் படுக்கையில் தூங்கிக் கொண்டிருக்கும் போதும், தங்கள் இறைவனின் செயல் திட்டங்களைப் பற்றியும், அவற்றை நிறைவேற்றுவதில் தவறிழைத்தால் அதனால் ஏற்படும் பாதிப்புகளைப் பற்றியும் எண்ணி அஞ்சுபவர்களாக இருப்பார்கள். இப்படி ஏற்படாமலிருக்க தம்மை காப்பாற்றும்படி இறைவனிடம் பிரார்த்தித்த வண்ணமிருப்பார்கள். மேலும் சமுதாய நலத் திட்டங்களுக்காக தம்மாலான உதவிகளையும் செய்து வருவார்கள்.


فَلَا تَعْلَمُ نَفْسٌۭ مَّآ أُخْفِىَ لَهُم مِّن قُرَّةِ أَعْيُنٍۢ جَزَآءًۢ بِمَا كَانُوا۟ يَعْمَلُونَ.

32:17. இவ்வாறு அவர்கள் செய்துவரும் ஆக்கப்பூர்வமான நற்செயல்களின் பலனாக, அவர்களுக்கு கண் குளிர்ச்சியளிக்கும் அழகான சமூக அமைப்பும், சிறப்பான வாழ்வும் கிடைப்பது நிச்சயம். ஆனால் தற்சமயம் உள்ள அறிவைக் கொண்டு அந்த உண்மைகளை மக்களால் புரிந்துகொள்ள முடிவதில்லை.


أَفَمَن كَانَ مُؤْمِنًۭا كَمَن كَانَ فَاسِقًۭا ۚ لَّا يَسْتَوُۥنَ.

32:18. நீங்களே சிந்தித்து பாருங்கள். அழகான சமூக அமைப்பும், தலைசிறந்த நாடும் உருவாக பாடுபடும் மூஃமின்களும், சமூக நல்லிணக்கத்தை சீரழிக்கும் பாவிகளும் (2:27) சமமாகி விடுவார்களா? இவ்விருவரும் ஒருபோதும் சமமாக மாட்டார்கள்.


أَمَّا ٱلَّذِينَ ءَامَنُوا۟ وَعَمِلُوا۟ ٱلصَّٰلِحَٰتِ فَلَهُمْ جَنَّٰتُ ٱلْمَأْوَىٰ نُزُلًۢا بِمَا كَانُوا۟ يَعْمَلُونَ.

32:19. எனவே எந்தச் சமுதாயம் அல்லாஹ்வின் வழிகாட்டுதலை ஏற்று அதன்படி சமூக நல திட்டங்களைத் தீட்டி உழைத்து வருமோ, அது சுவனத்திற்கு ஒப்பான சமுதாயமாக மாறிவரும். அங்கு வாழ்பவர்கள் அனைவரும் தத்தம் செயல்களுக்கு ஏற்ப பலன்களை தொடர்ந்து பெற்று வருவார்கள்.


وَأَمَّا ٱلَّذِينَ فَسَقُوا۟ فَمَأْوَىٰهُمُ ٱلنَّارُ ۖ كُلَّمَآ أَرَادُوٓا۟ أَن يَخْرُجُوا۟ مِنْهَآ أُعِيدُوا۟ فِيهَا وَقِيلَ لَهُمْ ذُوقُوا۟ عَذَابَ ٱلنَّارِ ٱلَّذِى كُنتُم بِهِۦ تُكَذِّبُونَ.

32:20. இதற்கு மாறாக, இறைவழிகாட்டுதலில் குறைகள் இருப்பதாக கூறி, அவற்றிற்கு மாற்றமாக செயல்படும் சமுதாயம், பிரச்னைகள் நிறைந்த நரகமாக மாறிவரும். அந்த வேதனைகளிலிருந்து வெளிவர எவ்வளவு தான் முயன்றாலும், ஒருபோதும் முடியாது. அந்த பிரச்னைகளின் தீர்வுகளில் பல புதுப் பிரச்னைகள் உருவெடுக்கும். (பார்க்க 24:40) இத்தகைய வேதனைகளைப் பற்றி இவ்வேதம் முன்னெச்சரிக்கை செய்கிறது. ஆனால் அவர்களோ அப்படி எதுவும் நடக்காது என்று அலட்சியமாய் இருந்து விடுகிறார்கள். “இதோ! அந்த வேதனைகள் வந்துவிட்டன. அவற்றை அனுபவியுங்கள்” என்று கூறுவதாக சூழ்நிலைகள் உருவாகி வருகின்றன.


وَلَنُذِيقَنَّهُم مِّنَ ٱلْعَذَابِ ٱلْأَدْنَىٰ دُونَ ٱلْعَذَابِ ٱلْأَكْبَرِ لَعَلَّهُمْ يَرْجِعُونَ.

32:21. இப்படிப்பட்ட தாளா வேதனைகள் ஏற்படுவதற்கு முன், சிறிய சிறிய பிரச்னைகளாக சமுதாயத்தில் உருவெடுக்கும். அதன் பின் அவையே பெரிய பிரச்னைகளாக உருவாகி, கடும் வேதனை அளிக்கக் கூடியதாக மாறிவிடும். சிறிய அளவில் பிரச்னைகள் ஏற்படும்போதாவது அவர்கள் இறைவழிகாட்டுதலின் பக்கம் கவனம் செலுத்தட்டும் என்பதற்காக இந்த சந்தர்ப்பம் அளிக்கப்படுகிறது.
சிறிய அளவில் பிரச்னைகள் உருவாகும்போதே அவற்றின் மூலக் காரணங்களைக் கண்டறிந்து அவற்றை நிவர்த்தி செய்யவேண்டும். அவற்றின் காரண காரணிகளை அறிந்து கொள்ளும் அறிவுத் திறன் மனிதனிடம் பொதுவாக இருப்பதில்லை. அவற்றைப் பற்றிய உண்மைகளை இவ்வேதம் எடுத்துரைக்கிறது.


وَمَنْ أَظْلَمُ مِمَّن ذُكِّرَ بِـَٔايَٰتِ رَبِّهِۦ ثُمَّ أَعْرَضَ عَنْهَآ ۚ إِنَّا مِنَ ٱلْمُجْرِمِينَ مُنتَقِمُونَ.

32:22. ஆக இறைவனின் அறிவுரைகள் தெளிவான பின்பும் அவற்றை புறக்கணிப்பவனை விட அநியாயக்காரன் வேறு யார் இருக்க முடியும்? இறைவனின் அறிவுரைகளை ஏற்க மறுத்து அநியாய அக்கிரம செயல்களில் ஈடுபடுவோர் தண்டனையிலிருந்து எப்படி தப்பிக்க முடியும்?
வரலாற்று நிகழ்வுகளும் இதையே உண்மைப் படுத்துவதாக உள்ளன என்பதை அவர்கள் கவனித்துப் பார்க்கட்டும். எனவே மூஸா நபி காலத்தில் நடந்த நிகழ்வுகளை உங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறோம்.


وَلَقَدْ ءَاتَيْنَا مُوسَى ٱلْكِتَٰبَ فَلَا تَكُن فِى مِرْيَةٍۢ مِّن لِّقَآئِهِۦ ۖ وَجَعَلْنَٰهُ هُدًۭى لِّبَنِىٓ إِسْرَٰٓءِيلَ.

32:23. நடந்த உண்மை என்னவென்றால் மூஸா நபிக்கு இறைவழிகாட்டுதல் அடங்கிய வேதம் அளிக்கப்பட்டது. அது பனீஇஸ்ராயீல் சமூகத்தவர்க்கு நேர்வழி காட்டக் கூடியதாக இருந்தது. அந்த வழிகாட்டுதலுக்கு எதிராக செயல்பட்டால், எதிர் விளைவுகளை சந்திக்க வேண்டிவரும் என்றும் அதில் யாருக்கும் எவ்வித சந்தேகமும் இருக்க வேண்டியதில்லை என்றும் சொல்லப்பட்டிருந்தது.


وَجَعَلْنَا مِنْهُمْ أَئِمَّةًۭ يَهْدُونَ بِأَمْرِنَا لَمَّا صَبَرُوا۟ ۖ وَكَانُوا۟ بِـَٔايَٰتِنَا يُوقِنُونَ.

32:24. மேலும் இறைவழிகாட்டுதலில் உறுதிப்பட நிலைத்திருந்து செயல்பட்டு வந்த காலம் வரையில் அவர்கள் நாட்டை வழிநடத்தி செல்லக் கூடிய தலைவர்களாக - இமாம்களாக இறைவனின் நியதிப்படி இருந்து வந்தார்கள். அவர்கள் யாவரும் இறைவனின் வழிகாட்டுதல்களைப் பேணி நடந்தார்கள்.
அவ்வழிகாட்டுதலை அவர்கள் காலப் போக்கில் விட்டுவிட்டதால் அவர்களிடையே மார்க்க விஷயத்தில் அபிப்பிராய பேதங்கள் ஏற்பட்டு, தடுமாற்றம் ஏற்பட்டு விட்டது. எனவே அவர்களிடையே இருந்த தலைமைப் பதவிகளும் பறி போய்விட்டன. மேலும் நிர்ணயிக்கப்பட்ட வேதனைகள் அவர்களை சூழ்ந்து கொண்டன. அவ்வாறு அழிந்து போனவர்கள் இப்போது இவ்வுலகில் இல்லை. எனவே


إِنَّ رَبَّكَ هُوَ يَفْصِلُ بَيْنَهُمْ يَوْمَ ٱلْقِيَٰمَةِ فِيمَا كَانُوا۟ فِيهِ يَخْتَلِفُونَ.

32:25. அவர்களுடைய அபிப்பிராய பேதங்கள் குறித்து மறுமை நாளில் நிச்சயமாக தீர்ப்பு வழங்கப்படும். எனினும் மாறுபட்ட மார்க்கத்தை பின்பற்றி நடப்பவர்கள் இன்றைக்கும் இருக்கிறார்கள். இறை வழிகாட்டுதலின் படி ஆட்சியமைப்பு ஏற்படும் போது, இவர்களுடைய வேற்றுமை பகைகள் குறித்து தீர்ப்பு கிடைத்துவிடும்.


أَوَلَمْ يَهْدِ لَهُمْ كَمْ أَهْلَكْنَا مِن قَبْلِهِم مِّنَ ٱلْقُرُونِ يَمْشُونَ فِى مَسَٰكِنِهِمْ ۚ إِنَّ فِى ذَٰلِكَ لَءَايَٰتٍ ۖ أَفَلَا يَسْمَعُونَ.

32:26. மேலும் இவர்களுக்கு முன் வாழ்ந்த எத்தனையோ சமுதாயங்கள், தம் தீய செயல்களின் விளைவாக இறைவனின் நியதிப்படி அழிந்து விட்டன என்பதை அவர்கள் கவனித்து பார்க்க மாட்டார்களா? அவ்வாறு அழிந்து, சமாதியான சமுதாயங்கள் இவர்கள் வாழும் இடங்களுக்கு அருகாமையில் தான் உள்ளன. அவற்றின் வழியாகத் தான் அவர்கள் நடந்து செல்கிறார்கள். இருந்தும் என்ன பயன்? இறைவனின் அழைப்புக்கு அவர்கள் செவி சாய்த்தால் தானே?


أَوَلَمْ يَرَوْا۟ أَنَّا نَسُوقُ ٱلْمَآءَ إِلَى ٱلْأَرْضِ ٱلْجُرُزِ فَنُخْرِجُ بِهِۦ زَرْعًۭا تَأْكُلُ مِنْهُ أَنْعَٰمُهُمْ وَأَنفُسُهُمْ ۖ أَفَلَا يُبْصِرُونَ.

32:27. மேலும் யாருடைய செயல்திட்டத்தின் கீழ் வரண்ட பூமி செழிப்பாகிறது என்பதை அவர்கள் கவனித்து பார்க்க மாட்டார்களா? இறைவனின் செயல் திட்டத்தின் படியே வரண்ட பூமியின் மீது மழை பொழிந்து அதன் மூலம் அவர்களுக்கும், அவர்களுடைய கால்நடைகளுக்கும் உண்ண உணவு வகைகள் கிடைக்கின்றன.
இத்தகைய ஏற்பாட்டினை செய்த இறைவன், மனிதனுக்கு சிறப்பான வாழ்க்கை கிடைக்க வேண்டும் என்பதற்காகத் தான் இந்த வேத அறிவுரைகளை அளிக்கின்றான். அவற்றிற்கு எதிராக செயல்பட்டால், முன்சென்ற சமுதாயங்கள் அழிந்தது போலவே நீங்களும் அழிந்து விடுவீர்கள் என்று இவ்வேதம் எச்சரிக்கிறது. இதை அவர்களிடம் எடுத்துச் சொன்னால்


وَيَقُولُونَ مَتَىٰ هَٰذَا ٱلْفَتْحُ إِن كُنتُمْ صَٰدِقِينَ.

32:28. நீங்கள் உங்கள் கூற்றில் உண்மையாளர்களாக இருந்தால், அந்த அழிவுகள் எப்போது வரும் என்று கேட்கிறார்கள். இறைவனின் அந்த எண்ணம் எப்போது ஈடேறும் என்று ஏளனமாகக் கேட்கிறார்கள்.
அவர்களுக்கு ஏற்படும் அந்த அழிவுகள் நற்செய்தியாக இருக்குமா என்ன! இல்லையே! அவர்கள் அவற்றைப் பார்த்து சந்தோஷப் படக்கூடிய விஷயமா? இல்லையே. அத்தகைய அழிவு ஏற்பட்ட பின் இவர்கள் நேர்வழியின் பக்கம் வந்து என்ன பயன்? (பார்க்க 10:50-51)


قُلْ يَوْمَ ٱلْفَتْحِ لَا يَنفَعُ ٱلَّذِينَ كَفَرُوٓا۟ إِيمَٰنُهُمْ وَلَا هُمْ يُنظَرُونَ.

32:29. அவர்கள் எதிர் பார்க்கின்ற "ஈடேறும் நாள்" வருவது சர்வ நிச்சயம். இவ்வாறு அழிவுகள் வந்தபின் அதை கண்கூடாக பார்த்து, இறைவழிகாட்டுதலை ஏற்றுக்கொள்வதில் என்ன பயன் இருக்கப் போகிறது? அவர்கள் திருந்தி வாழ்வதற்கு மீண்டும் எந்த வாய்ப்பும் கிடைக்காதே!


فَأَعْرِضْ عَنْهُمْ وَٱنتَظِرْ إِنَّهُم مُّنتَظِرُونَ.

32:30. எனவே அவர்களுடைய வீணான பேச்சுகளைப் பெரிதுபடுத்தாமல் அவர்களை அவர்கள் போக்கில் விட்டுவிடுங்கள். அவர்கள் தங்கள் அழிவை எதிர் பார்த்து காத்து நிற்கட்டும். நீங்கள் இறைவழிகாட்டுதலின்படி செயல்பட்டு நல்ல பலன்களை எதிர் பார்த்திருங்கள்.