بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
31:0.அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் அறிவுரைப்படியே அனைத்துக் காரியங்களையும் செய்ய நாடுகிறேன். (பார்க்க 6:162)
الٓمٓ.
31:1. அளவற்ற அருளாளன் அல்லாஹ்வின் புறத்திலிருந்து முஹம்மது நபி மூலமாக இறக்கி அருளப்பட்ட வேதமிது.
تِلْكَ ءَايَٰتُ ٱلْكِتَٰبِ ٱلْحَكِيمِ.
31:2. தெளிவான ஞானத்தின் அடிப்படையில் நிலையான வாழ்க்கை நெறிமுறைகள் அடங்கிய வேதம் இது.
هُدًۭى وَرَحْمَةًۭ لِّلْمُحْسِنِينَ.
31:3. அழகிய முறையில் சிறப்பாக வாழ நாடுவோருக்கு இவ்வேதம் நேர்வழி காட்டக் கூடியதாகவும் அருட்கொடையாகவும் இருக்கிறது.
ٱلَّذِينَ يُقِيمُونَ ٱلصَّلَوٰةَ وَيُؤْتُونَ ٱلزَّكَوٰةَ وَهُم بِٱلْءَاخِرَةِ هُمْ يُوقِنُونَ.
31:4. இவ்வாறு சிறப்பாக வாழ நாடுவோர், சமுதாய மக்கள் அனைவரும் நேர்வழி பெற்று, ஒழுக்க மாண்புகளுடன் வாழ்வதற்காக் கற்றுத் தரும் ஸலாத் முறையை நிலைநிறுத்துவார்கள். மேலும் சமுதாய மேம்பாட்டிற்காக உதவியும் செய்து வருவார்கள். மேலும் மனிதனின் ஒவ்வொரு செயலும் அதன்தன் இறுதி விளைவுகளை ஏற்படுத்தியே தீரும் என்பதை திடமாக நம்புவார்கள். (மேலும் பார்க்க 2:2-4)
أُو۟لَٰٓئِكَ عَلَىٰ هُدًۭى مِّن رَّبِّهِمْ ۖ وَأُو۟لَٰٓئِكَ هُمُ ٱلْمُفْلِحُونَ.
31:5. இத்தகையவர்களே தங்கள் இறைவனிடமிருந்து நேர்வழி பெற்றவர்கள் ஆவார்கள். மேலும் இவர்களே தம் வாழ்வின் இலட்சியத்தில் வெற்றி இலக்கை அடைபவர்கள். (பார்க்க 2:5)
ஆனால் மக்களில் சிலர் இருக்கிறார்கள். அவர்களிடம் எந்த இலட்சியமும் இருப்பதில்லை. ஏதோ கிடைப்பதை வைத்து சொகுசாக வாழ்வதையே நோக்கமாகக் கொள்வார்கள். இதனால் அவர்கள்
وَمِنَ ٱلنَّاسِ مَن يَشْتَرِى لَهْوَ ٱلْحَدِيثِ لِيُضِلَّ عَن سَبِيلِ ٱللَّهِ بِغَيْرِ عِلْمٍۢ وَيَتَّخِذَهَا هُزُوًا ۚ أُو۟لَٰٓئِكَ لَهُمْ عَذَابٌۭ مُّهِينٌۭ.
31:6. மனித வாழ்க்கைக்கு எந்த பலனும் அளிக்காத வீணான விஷயங்களை எல்லாம் தாமே உருவாக்கி வைத்துக் கொண்டு, அவற்றையே மக்களிடம் பரப்பி வருவார்கள். இப்படியாக அறிவில்லாமல் தாமும் கெட்டு, மக்களையும் அல்லாஹ்வின் பாதையை விட்டு தடுத்து வருவார்கள். மேலும் இறைவழிகாட்டுதலை கேலிக்குரியதாக ஆக்கி விடுகிறார்கள். இத்தகையவர்கள் போய் சேரும் இடம் நரகமாகத்தான் இருக்கும். காரணம்.
وَإِذَا تُتْلَىٰ عَلَيْهِ ءَايَٰتُنَا وَلَّىٰ مُسْتَكْبِرًۭا كَأَن لَّمْ يَسْمَعْهَا كَأَنَّ فِىٓ أُذُنَيْهِ وَقْرًۭا ۖ فَبَشِّرْهُ بِعَذَابٍ أَلِيمٍ.
31:7. இத்தகையவர்களிடம் இறைவழிகாட்டுதலை எடுத்துரைத்தால், ஏதும் கேட்காதவன் போல் சென்று விடுவார்கள். அவர்களை நீங்கள் பார்த்தால் செவிட்டுத்தனம் இருப்பது போல் தோன்றும். அந்த அளவுக்கு பெருமை கொண்டவர்களாக முகத்தை திருப்பிக் கொண்டு சென்றுவிடுவார்கள். எனவே தான் இத்தகையவர்கள் செய்யும் தவறான செயல்களின் விளைவாக நோவினை தரும் வேதனைகள் வந்தடையும் என்பதை விளக்கிவிடுங்கள்.
إِنَّ ٱلَّذِينَ ءَامَنُوا۟ وَعَمِلُوا۟ ٱلصَّٰلِحَٰتِ لَهُمْ جَنَّٰتُ ٱلنَّعِيمِ.
31:8. இதற்கு மாறாக இறைவழிகாட்டுதலை ஏற்று, சமுதாய நலத் திட்டங்களைத் தீட்டி, ஆற்றல் மிக்க நற்செயல்களில் ஈடுபடும் சமுதாயம், சுவனத்திற்கு ஒப்பான பாக்கியம் மிக்கதாகத் திகழும்.
خَٰلِدِينَ فِيهَا ۖ وَعْدَ ٱللَّهِ حَقًّۭا ۚ وَهُوَ ٱلْعَزِيزُ ٱلْحَكِيمُ.
31:9. எதுவரையில் இவ்வாறு அவர்கள் செயல்பட்டு வருகிறார்களோ, அது வரையில் அவர்களுக்கு இச்சுவன வாழ்வு கிடைத்து வரும். (பார்க்க 8:53) இது அல்லாஹ்வின் வாக்குறுதியாகும். இதில் எவ்வித மாறுதலையும் எக்காலத்திலும் காணமாட்டீர்கள். ஏனெனில் எல்லா ஞானங்களையும் கொண்ட அனைத்து வல்லமையும் உடைய இறைவனின் வாக்காகும்.
خَلَقَ ٱلسَّمَٰوَٰتِ بِغَيْرِ عَمَدٍۢ تَرَوْنَهَا ۖ وَأَلْقَىٰ فِى ٱلْأَرْضِ رَوَٰسِىَ أَن تَمِيدَ بِكُمْ وَبَثَّ فِيهَا مِن كُلِّ دَآبَّةٍۢ ۚ وَأَنزَلْنَا مِنَ ٱلسَّمَآءِ مَآءًۭ فَأَنۢبَتْنَا فِيهَا مِن كُلِّ زَوْجٍۢ كَرِيمٍ.
31:10. அல்லாஹ்வின் மாபெரும் வல்லமையை அறிந்துகொள்ள வேண்டும் என்றால், பரந்து விரிந்து இருக்கும் வானத்தை அண்ணாந்து பார்க்கட்டும். அது எவ்வித தூண்களும் இன்றி நிலைப் பெற்றிருக்கிறதே . (மேலும் பார்க்க 13:2) அதன்பின் நீங்கள் வாழும் பூமியின் படைப்பை பற்றி கவனித்துப் பாருங்கள். இந்தப் பூமி ஆடாது அசையாதிருக்க பெரிய பெரிய உறுதிமிக்க மலைகளைப் படைத்திருப்பதை கவனித்துப் பாருங்கள். மேலும் இந்தப் பூமியில் எண்ணற்ற உயிரினங்கள் படைக்கப்பட்டு இருப்பதை கவனித்துப் பாருங்கள். மேலும் வானிலிருந்து மழையை பொழிய வைத்து அதன் மூலம் விதவிதமான செடிகொடிகள், மரங்கள் யாவும் செழிப்பாக வளரச் செய்திருப்பதை கவனித்துப் பாருங்கள். அந்த செடிகொடிகளிலும் மரங்களிலும் ஜோடி ஜோடியாகப் படைக்கப்பட்டு இருப்பதையும் கவனித்துப் பாருங்கள். (2:264)
هَٰذَا خَلْقُ ٱللَّهِ فَأَرُونِى مَاذَا خَلَقَ ٱلَّذِينَ مِن دُونِهِۦ ۚ بَلِ ٱلظَّٰلِمُونَ فِى ضَلَٰلٍۢ مُّبِينٍۢ.
31:11. பிரமாண்டமான எண்ணற்ற படைப்புகளைப் பற்றி அவர்கள் சிந்தித்துப் பார்க்கட்டும். அவற்றை அல்லாஹ்வைத் தவிர வேறு யார் படைத்ததாக அவர்கள் எண்ணுகிறார்கள்? அவர்களே உருவாக்கியுள்ள கற்பனை தெய்வங்கள் அவற்றை படைத்தன என்று சொல்கிறார்களா? அவர்களிடம் அதற்கு ஆதாரம் ஏதாவது உண்டா என்று கேளுங்கள். இப்படி கற்பனை தெய்வங்களை உருவாக்கி வைத்துக் கொண்டு அநியாய அக்கிரம செயல்களை செய்வோர்தாம், வழிகேட்டில் இருப்பவர்கள் ஆவர். இதுதான் உண்மை.
அதாவது படைப்பாளி மற்றும் படைப்புகள் ஆகிய இரண்டிற்கும் உள்ள வித்தியாசத்தை தெரிந்து கொள்ளவேண்டும். படைப்புகளில் உள்ள சக்திகளையே படைப்பாளி என கருதுவது சரியாகுமா? படைப்புகளில் உள்ள சக்திகளை படைத்தவன் தானே அல்லாஹ். அது மட்டுமின்றி அனைத்தையும் படைத்ததோடு அவை எவ்வாறு செயல்பட வேண்டும் என்ற சட்ட விதிமுறைகளை நிர்ணயித்ததும் ஏக இறைவனாகிய அல்லாஹ் தான். மேலும்
மனிதனுக்கு முழு சுதந்திரத்தை அளித்துவிட்டு அவனுக்கு வழிகாட்டுதல்களை நபிமார்கள் மூலம் அறிவித்து அவற்றின்படி வாழ வழி வகுத்துத் தந்ததும் அல்லாஹ் தான். இத்தகைய வழிகாட்டுதல்களை அவர்கள் வழிபட்டு வரும் கற்பனை தெய்வங்கள் அளிக்கின்றதா? (பார்க்க 10:35) அந்த இறை வழிகாட்டுதல்கள் என்னவென்பதை லுஃக்மான் ஹகீம் என்பவரின் வார்த்தைகளாக இங்கு விவரிக்கப்படுகின்றன.
وَلَقَدْ ءَاتَيْنَا لُقْمَٰنَ ٱلْحِكْمَةَ أَنِ ٱشْكُرْ لِلَّهِ ۚ وَمَن يَشْكُرْ فَإِنَّمَا يَشْكُرُ لِنَفْسِهِۦ ۖ وَمَن كَفَرَ فَإِنَّ ٱللَّهَ غَنِىٌّ حَمِيدٌۭ.
31:12. நடந்த உண்மை என்னவென்றால் லுஃக்மான் என்பவர் அல்லாஹ்வின் புறத்திலிருந்து வழிகாட்டுதலின் முழு ஞானத்தையும் பெற்றிருந்தார். அல்வழிகாட்டுதலின் படி செயல்பட்டு எவ்வாறு அல்லாஹ்வுக்கு நன்றி விசுவாசத்துடன் நடந்து கொள்ளவேண்டும் என்பதை அவர் நன்கு அறிந்திருந்தார். ஏனெனில் அவற்றின்படி செயல்படுபவருக்கே அதன் நன்மைகள் கிடைக்கும் என்பதும், அதற்கு எதிராக செயல்படுவதால் அதன் தீய விளைவுகள் அவனையே வந்தடையுமே அன்றி அல்லாஹ்வுக்கு ஒரு பாதிப்பும் ஏற்படாது என்பதையும் அவர் நன்கு அறிந்திருந்தார்.
அவர், தான் மட்டும் அவற்றை கடைப்பிடிக்காமல் தம் மகனுக்கும் இறைவழிகாட்டுதலின் முக்கியத்துவத்தை அடிக்கடி எடுத்துரைத்து அவனையும் நேர்வழியில் கொண்டு வந்தார். அவர் தம் மகனுக்கு கற்றுத் தந்த இறைவழிகாட்டுதல்களில் சிலவற்றை நாம் கவனிப்போம்.
وَإِذْ قَالَ لُقْمَٰنُ لِٱبْنِهِۦ وَهُوَ يَعِظُهُۥ يَٰبُنَىَّ لَا تُشْرِكْ بِٱللَّهِ ۖ إِنَّ ٱلشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌۭ.
31:13. லுஃக்மான் தன் மகனை நோக்கி, “என் அருமை மகனே! நீ அல்லாஹ்வின் மகத்துவத்திற்கு இணையாக வேறு தெய்வங்களையோ அல்லது அவனுடைய வழிகாட்டுலுக்கு இணையாக வேறு வழிமுறைகளையோ ஒருபோதும் ஏற்படுத்திக் கொள்ளாதே. இவ்வாறு அல்லாஹ்வுக்கு இணையாக்குவது மிகப்பெரிய அநியாய செயலாகும்” என்று அறிவுருத்தி வந்தார்.
சிந்தனையாளர்களே! இது வெறும் கதை அல்ல. அவர் கடைப்பிடித்த வழிமுறையையே நீங்களும் கடைப்பிடிக்க வேண்டும். எவ்வாறு நபிமார்கள் தம் பிள்ளைகளுக்கு அறிவுரை செய்து வந்தார்களோ (பார்க்க 2:132-133) அவ்வாறே நீங்களும் உங்கள் பிள்ளைகளுக்கு அறிவுரைகளை தொடர்ந்து செய்து வர வேண்டும். இதற்காகத் தான் இந்த குர்ஆனை நீங்கள் பேசும் மொழியிலேயே தருகிறோம். அதை நன்றாகப் புரிந்து கொண்டு தம் பிள்ளைகளுக்கும் மற்ற உறவினர்களுக்கும் இறைவனின் அறிவுரைகளை எடுத்துரைக்க வெண்டும்.
இதே போன்று அவர் தன் மகனிடம் இறைவனின் அறிவுரைகளை எடுத்துரைத்தார். அவற்றை முதன் முதலில் தான் வாழும் வீட்டிலிருந்தே ஆரம்பிக்க வேண்டும் என்பதற்காக, தாய் தந்தையரின் விஷயத்தில் எவ்வாறு நடந்து கொள்ளவேண்டும் என்பதை எடுத்துரைத்தார்.
وَوَصَّيْنَا ٱلْإِنسَٰنَ بِوَٰلِدَيْهِ حَمَلَتْهُ أُمُّهُۥ وَهْنًا عَلَىٰ وَهْنٍۢ وَفِصَٰلُهُۥ فِى عَامَيْنِ أَنِ ٱشْكُرْ لِى وَلِوَٰلِدَيْكَ إِلَىَّ ٱلْمَصِيرُ.
31:14. “மனிதன் தன் பெற்றோருக்குச் செய்ய வேண்டிய பணிவிடைப் பற்றி அறிவுறுத்தினார். ஏனெனில் அவன் தாய் வயிற்றில் மிகவும் பலவீனமாக இருந்து, அவளுக்கும் பலவீனம் ஏற்பட்டு அவனை சுமந்து பெற்றெடுக்கிறாள். மேலும் குழந்தைக்கு இரண்டு வருடங்கள் வரையில் பாலுட்டி வளர்க்கிறாள். இந்த ஏற்பாட்டினை செய்த அல்லாஹ்வுக்கும் உன்னை பெற்று வளர்த்தத் தாய் தந்தையருக்கும் நன்றி விசுவாசத்துடன் நடந்து கொள்ளவேண்டும். நீ செய்யும் ஒவ்வொரு செயலும் அல்லாஹ் நிர்ணயித்த இலக்கை நோக்கியே செல்கிறது என்பதை மறந்து விடாதே” என்று மகனுக்கு அவர் அறிவுருத்தி வந்தார். (மேலும் பார்க்க 46:15)
சிந்தனையாளர்களே! நன்றி செலுத்து என்றால் நன்றி, நன்றி, நன்றி என்று வார்த்தைகளை உச்சரித்துக் கொண்டிருப்பதற்கு சொல்வதில்லை. அல்லாஹ்வின் அறிவுரையின்படி செயல்படுவதே அவனுக்கு நீங்கள் செலுத்தும் நன்றியாகும். தாய் தந்தையர் தேவைகளை நிறைவேற்றுவதே நீங்கள் அவர்களுக்கு செலுத்தும் நன்றியாகும்.
காரணம் நீங்கள் வளர்ந்து வாலிப வயதை அடையும்போது, தாய் தந்தையர் முதுமை அடைந்து பலவீனமாக ஆவிடுவார்கள். (பார்க்க 17:23) எனவே நீங்கள் சிறு பிள்ளையாக இருந்த போது, அவர்கள் உங்களை எவ்வாறு வளர்த்து வந்தார்களோ, அவ்வாறே நீங்கள் அவர்களுடைய வயதான காலத்தில் அவர்களை நன்றாக கவனித்து வரவேண்டும் (பார்க்க 17:24-25)
وَإِن جَٰهَدَاكَ عَلَىٰٓ أَن تُشْرِكَ بِى مَا لَيْسَ لَكَ بِهِۦ عِلْمٌۭ فَلَا تُطِعْهُمَا ۖ وَصَاحِبْهُمَا فِى ٱلدُّنْيَا مَعْرُوفًۭا ۖ وَٱتَّبِعْ سَبِيلَ مَنْ أَنَابَ إِلَىَّ ۚ ثُمَّ إِلَىَّ مَرْجِعُكُمْ فَأُنَبِّئُكُم بِمَا كُنتُمْ تَعْمَلُونَ.
31:15. தாய் தந்தையருக்கு பணிவிடை செய்ய வேண்டும் என்றால் அவர்களுடைய ஒவ்வொரு கட்டளைக்கும் அடிபணிந்து செயல்பட வேண்டும் என்பதல்ல. நீங்கள் அவர்களிடம் பேசும் போது, நளினமாகப் பேசுங்கள். (பார்க்க 17:23) ஆனால் அவர்கள் இடும் கட்டளைகள் அல்லாஹ்வின் வழிகாட்டுதலுக்கு உட்பட்டு இருந்தால் மட்டுமே நீங்கள் அதன்படி செயல்பட வேண்டும். (மேலும் பார்க்க 29:8) அதற்கு எதிராக இருந்தால், அதை நீங்கள் ஏற்று நடக்க வேண்டிய அவசியமில்லை. இருந்தும் அவர்களுக்கு வேண்டிய வாழ்க்கை வசதிகளை நீங்கள் செய்து தருவது உங்கள் மீதுள்ள கடமையாகும்.
உங்களுடைய பெற்றோர் இறைவனின் வழிகாட்டுதலுக்கு உட்பட்டு நடந்தால் அவற்றிற்கு நீங்கள் அடிபணிந்து செயல்படுங்கள். ஏனெனில் நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலும் அல்லாஹ் நிர்ணயித்த இலக்கை நோக்கியே செல்லும். அதாவது அவன் நிர்ணயித்த விளைவுகளையே ஏற்படுத்தும். அந்த விளைவுகள் ஏற்படும்போது, நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள் என்று உங்களுக்கே வெட்டவெளிச்சமாகி விடும்.
இவையாவும் உங்கள் வீட்டிற்குள் நடப்பவை ஆகும். எனவே நாம் செய்வது பிறருக்குத் தெரிய வாய்ப்பில்லை என நீங்கள் நினைத்துக் கொள்ளலாம். தாய் தந்தையரோ தம் வயதான காலத்தில் யாருக்கும் தெரியப்படுத்தவும் மாட்டார்கள் எனவும் நினைக்கலாம். ஆனால் உண்மை அதுவல்ல.
يَٰبُنَىَّ إِنَّهَآ إِن تَكُ مِثْقَالَ حَبَّةٍۢ مِّنْ خَرْدَلٍۢ فَتَكُن فِى صَخْرَةٍ أَوْ فِى ٱلسَّمَٰوَٰتِ أَوْ فِى ٱلْأَرْضِ يَأْتِ بِهَا ٱللَّهُ ۚ إِنَّ ٱللَّهَ لَطِيفٌ خَبِيرٌۭ.
31:16. “நீ செய்யும் ஒவ்வொரு செயலும் அல்லாஹ்வுக்கு தெரியாமல் போகாது. அந்த செயல் கடுகின் வித்து அளவே இருந்தாலும் சரியே. அந்த செயல் கற்பாறைக்குள் நடந்திருந்தாலும், அல்லது வானங்களில் நடந்திருந்தாலும், பூமிக்குள்ளே நடந்திருந்தாலும் அல்லாஹ்வின் நியதிப்படி அதன் விளைவுகள் நிச்சயமாக ஏற்பட்டே தீரும். அல்லாஹ்வின் வல்லமை ஒவ்வொரு செயலின் நுணுக்கத்தையும் அறிந்துகொள்ளும் பேராற்றல் உடையதாகும்” என்று தன் மகனுக்கு எடுத்துரைத்தார்.
يَٰبُنَىَّ أَقِمِ ٱلصَّلَوٰةَ وَأْمُرْ بِٱلْمَعْرُوفِ وَٱنْهَ عَنِ ٱلْمُنكَرِ وَٱصْبِرْ عَلَىٰ مَآ أَصَابَكَ ۖ إِنَّ ذَٰلِكَ مِنْ عَزْمِ ٱلْأُمُورِ.
31:17. எனவே, “என் அருமை மகனே! நீ இறைவழிகாட்டுதலை மக்களுக்குக் கற்றுத்தரும் ஸலாத் முறையை நிலைநிறுத்து. அதன் மூலமாக மக்களுக்கு இறைவன் காட்டும் நன்மையான செயல்கள் எவை என்பதை எடுத்துரைத்து அவற்றின் பக்கம் அழைப்பு விடு. மேலும் தீய செயல்கள் என எவற்றை அல்லாஹ் கோடிட்டுக் காட்டுகின்றானோ, அவற்றை தடுத்துக் கொள்ளுமாறு மக்களுக்கு அறிவுருத்தி வா. இவ்வாறு சமூக சீர்த்திருத்த பணிகளில் ஈடுபடும் போது, சில சமயங்களில் உனக்கு தொல்லைகள் ஏற்படலாம். (பார்க்க 2:155-156) அவற்றைக் கண்டு மனந்தளராமல், உன் செயல்திட்டத்தில் நிலைத்திருந்து தொடர்ந்து செயல்படு. இவை யாவும் வீரனுக்கே உள்ள அழகிய பண்புகளாகும்.
وَلَا تُصَعِّرْ خَدَّكَ لِلنَّاسِ وَلَا تَمْشِ فِى ٱلْأَرْضِ مَرَحًا ۖ إِنَّ ٱللَّهَ لَا يُحِبُّ كُلَّ مُخْتَالٍۢ فَخُورٍۢ.
31:18. இறை அறிவுரைகளை மக்களுக்கு எடுத்துரைக்கும் போது, அவர்களில் சிலர் முகத்தை திருப்பிக் கொள்வார்கள். கேலியும் செய்வார்கள். இருந்தாலும் நீ அவர்களை விட்டு உன் முகத்தை சுளிக்காதே. நீ ஒருபோதும் கர்வத்துடன் நடந்து கொள்ளாதே. இவ்வாறு ஆணவங் கொண்டு செயல்படுவோரை அல்லாஹ் ஒருபோதும் நேசிப்பதில்லை. (மேலும் பார்க்க 16:125)
وَٱقْصِدْ فِى مَشْيِكَ وَٱغْضُضْ مِن صَوْتِكَ ۚ إِنَّ أَنكَرَ ٱلْأَصْوَٰتِ لَصَوْتُ ٱلْحَمِيرِ.
31:19. இப்படியாக நீ எந்த செயலை செய்வதாக இருந்தாலும் அதில் நிதானமும் முன்யோசனையும் இருப்பது மிக மிக அவசியம். எனவே உன் செயல்பாடுகளில் பதற்றமோ அல்லது மிகமிக சோர்வுடனோ இருக்கக் கூடாது. நீ எப்போதும் நடுத்தரமான வழிமுறையையே கடைப்பிடித்து வா. மேலும் நீ பேசும் போதும், உன் குரலையும் தாழ்த்திக் கொள். குரல்களிலேயே வெறுக்கத்தக்கது கழுதையின் குரலேயாகும்.
மக்களிடம் மார்க்க உண்மைகளை எடுத்துரைத்தாலும், பொது வாழ்வு சம்பந்தமாக சபையில் பேசினாலும் எந்த விஷயத்தைப் பற்றியும் அழகிய முறையில் பேச வேண்டும். அப்போது தான் உன் பேச்சைக் கேட்க பிறருக்கு ஆர்வம் ஏற்படும்.
இவை யாவும் ஒவ்வொரு மனிதரும் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகளாகும். இவற்றை தாமும் கடைப்பிடித்து தம் பிள்ளைகளுக்கும் உற்றார் உறவினர்களுக்கும் தொடர்ந்து எடுத்துரைக்க வேண்டும். இந்த அறிவுரைகளை மட்டும் மக்களுக்கு எடுத்துரைத்தால் போதுமா? மனித வாழ்வின் இன்னொரு பகுதியும் உண்டு. அதுவே மனிதனுக்கு வேண்டிய வாழ்வாதார விஷயங்களாகும். இதைப் பற்றியும் இறைவனின் வழிகாட்டுதல் என்னவென்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
أَلَمْ تَرَوْا۟ أَنَّ ٱللَّهَ سَخَّرَ لَكُم مَّا فِى ٱلسَّمَٰوَٰتِ وَمَا فِى ٱلْأَرْضِ وَأَسْبَغَ عَلَيْكُمْ نِعَمَهُۥ ظَٰهِرَةًۭ وَبَاطِنَةًۭ ۗ وَمِنَ ٱلنَّاسِ مَن يُجَٰدِلُ فِى ٱللَّهِ بِغَيْرِ عِلْمٍۢ وَلَا هُدًۭى وَلَا كِتَٰبٍۢ مُّنِيرٍۢ.
31:20. வானங்களிலும் பூமியிலும் உள்ள அனைத்தையும் நீங்கள் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் தான் அல்லாஹ் படைத்துள்ளான்.இதை நீங்கள் கவனித்துப் பார்ப்பதில்லையா? (மேலும் பார்க்க 2:29). அவற்றைக் கொண்டு உங்கள் வாழ்க்கைக்குத் தேவையான அனைத்தையும் ஏற்படுத்தி கொடுத்துள்ளான். எனவே நீங்கள் அவற்றை தாராளமாகப் பயன்படுத்தி அவற்றிலிருந்து இறைவனின் அருட்கொடைகளை தேடிக் கொள்ளுங்கள். இந்த வாழ்வாதாரங்கள் வெளிப்படையாகவும் மறைவாகவும் உள்ளன. இதை நீங்கள் அறியவில்லையா? ஆயினும் மக்களில் சிலர் இருக்கிறார்கள். அவர்களிடம் போதிய அளவு கல்வியறிவு இருப்பதில்லை. நேர்வழியினைப் போதிக்கும் வேத அறிவுரைகளும் இருப்பதில்லை. இப்படி எதுவுமே இல்லாமல் அல்லாஹ்வின் செயல்திட்டங்களைப் பற்றி தர்க்கம் செய்கின்றனர்.
அல்லாஹ்வின் படைப்புகளைப் பயன்படுத்தி போதிய வாழ்வாதாரங்களைத் தேடிக் கொள்வது மனிதன் மீதுள்ள கடமையாகும். அந்த வாழ்வாதாரங்கள் தானியங்களாகவும் பழங்களாகவும் வெளிப்படையாக உள்ளன. அவற்றில சில, பூமியில் மறைந்து கிடக்கின்றன. விவசாயம் செய்து அவற்றைப் பெற்றுக் கொள்ளலாம். உலோகங்கள் மற்றும் எண்ணற்ற அமிலங்களும் தாதுப் பொருட்களும் பூமியில் புதைந்து கிடக்கின்றன. உழைக்காமல் எல்லாமே தாமாகவே நம்மிடம் வந்தடைய வேண்டும் என்றால், அது ஒருபோதும் சாத்தியமில்லை. (பார்க்க 13:14, 53:39) இந்த உண்மைகளை எல்லாம் சரிவர தெரிந்து கொள்ளாமல் அல்லாஹ்வை குறித்து தர்க்கம் செய்பவர்களும் இருக்கிறார்கள்.
இரண்டாவதாக அல்லாஹ்வின் அருட்கொடைகளைப் பெற்று சொகுசாக வாழும் சிலரும் இருக்கிறார்கள். இறைவழிகாட்டுதலின் படி அந்த வாழ்வாதாரங்களை சரி சமமாக பங்கிட்டு, சமுதாய சீர்நிலையை கொண்டுவர வேண்டும் என்று சொன்னால் அதைப் பற்றியும் தர்க்கம் செய்கின்றனர்.
وَإِذَا قِيلَ لَهُمُ ٱتَّبِعُوا۟ مَآ أَنزَلَ ٱللَّهُ قَالُوا۟ بَلْ نَتَّبِعُ مَا وَجَدْنَا عَلَيْهِ ءَابَآءَنَآ ۚ أَوَلَوْ كَانَ ٱلشَّيْطَٰنُ يَدْعُوهُمْ إِلَىٰ عَذَابِ ٱلسَّعِيرِ.
31:21. எனவே அவர்களிடம், அல்லாஹ்வின் புறத்திலிருந்து இறக்கியருளப்பட்ட வாழ்க்கை நெறிமுறைகளை பின்பற்றுங்கள் என்று சொன்னால், எங்கள் முன்னோர்கள் எந்த வழிமுறைகளை பின்பற்றி நடந்தார்களோ, அவற்றையே நாங்களும் பின்பற்றுவோம் என்கிறார்கள். அவர்களுடைய முன்னோர்கள் மனோ இச்சை எனும் ஷைத்தானை பின்பற்றி அழிவை தேடிக் கொண்டார்கள். இப்போதும் சுயநலம் கொண்ட ஷைத்தானிய பண்புகள் உங்களை கடுமையான வேதனைகளின் பக்கம் அழைத்து செல்கின்றன. அப்போதும் நீங்கள் கண்மூடித்தனமாகத் தான் வாழ்வீர்களா? (மேலும் பார்க்க 2:170)
۞ وَمَن يُسْلِمْ وَجْهَهُۥٓ إِلَى ٱللَّهِ وَهُوَ مُحْسِنٌۭ فَقَدِ ٱسْتَمْسَكَ بِٱلْعُرْوَةِ ٱلْوُثْقَىٰ ۗ وَإِلَى ٱللَّهِ عَٰقِبَةُ ٱلْأُمُورِ.
31:22. ஆக அல்லாஹ்வின் வழிகாட்டுதலுக்கு முற்றிலும் அடிபணிந்து சமுதாய சமச் சீர்நிலை ஏற்பட சிறப்பான அழகிய திட்டங்களை தீட்டி உழைப்போர், உறுதிமிக்க சரியான பாதையை பற்றிப் பிடித்துக் கொண்டதாக பொருள்படும். (மேலும் பார்க்க 2:256) மேலும் அத்தகையோரின் ஒவ்வொரு செயல்திட்டமும் அல்லாஹ்வின் நியதிப்படி நல்ல பலன்களையே ஏற்படுத்தி வரும்.
وَمَن كَفَرَ فَلَا يَحْزُنكَ كُفْرُهُۥٓ ۚ إِلَيْنَا مَرْجِعُهُمْ فَنُنَبِّئُهُم بِمَا عَمِلُوٓا۟ ۚ إِنَّ ٱللَّهَ عَلِيمٌۢ بِذَاتِ ٱلصُّدُورِ.
31:23. இதற்கு மாறாக இறைவழிகாட்டுதலை ஏற்க மறுப்பவர்களைப் பற்றி நீ கவலைப்படாதே. அவர்கள் செய்து வரும் ஒவ்வொரு தீய செயலும் இறைவனின் நியதிப்படி தீய விளைவுகளையே ஏற்படுத்தும். அவர்கள் செய்து வருபவற்றையும், அவர்கள் உள்ளங்களில் ஊடுருவிச் செல்லும் எண்ணங்களையும் அறிந்து கொள்ளும் வல்லமை அல்லாஹ்வுக்கு நிச்சயம் உண்டு.
نُمَتِّعُهُمْ قَلِيلًۭا ثُمَّ نَضْطَرُّهُمْ إِلَىٰ عَذَابٍ غَلِيظٍۢ.
31:24. அவர்களுக்குக் கிடைக்கும் சுகங்கள் யாவும் அற்ப காலத்திற்கே . அதன் பின் அவர்கள் செய்து வரும் தீய செயல்களால் ஏற்படும் விளைவுகளின் பிடியில் சிக்கிக் கொள்வார்கள்.
وَلَئِن سَأَلْتَهُم مَّنْ خَلَقَ ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضَ لَيَقُولُنَّ ٱللَّهُ ۚ قُلِ ٱلْحَمْدُ لِلَّهِ ۚ بَلْ أَكْثَرُهُمْ لَا يَعْلَمُونَ.
31:25. இறை நிராகரிப்பவர்களிடம், “அகிலங்களையும் பூமியையும் படைத்தது யார்?” என்று கேட்டுப் பாருங்கள். அவர்கள் அல்லாஹ் தான் படைத்ததாக பதில் கூறுவார்கள். அகிலங்களும் உலகிலுள்ள படைப்புகள் யாவும் அல்லாஹ்வின் கட்டளைக்கு உட்பட்டு நடப்பதால், அவை யாவும் போற்றுதலுக்கு உரியவையாக உள்ளனவே, அதுபோல அல்லாஹ்வின் படைப்பாகிய மனிதனும் அவனுக்கு கட்டுப்பட்டு வாழ்ந்தால் எவ்வளவு சிறப்பாக இருக்கும்? ஆனால் இந்த உண்மைகள் எல்லாம் பெரும்பாலான மக்களுக்கு தெரியாது.
لِلَّهِ مَا فِى ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضِ ۚ إِنَّ ٱللَّهَ هُوَ ٱلْغَنِىُّ ٱلْحَمِيدُ.
31:26. ஆக அகிலங்களிலும் பூமியிலும் உள்ளவை அனைத்தும் அல்லாஹ் வகுத்துள்ள செயல்திட்டங்களை நிறைவேற்றவே செயல்பட்டு வருகின்றன. எனவே மனிதன் இறைவழிகாட்டுதலுக்கு இணங்கி வாழ்ந்தாலும், வாழாவிட்டாலும் அல்லாஹ்வுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படப் போவதில்லை. அவன் தேவையற்றவனாகவும் போற்றுதலுக்கு உரியவனாகவும் இருக்கிறான்.
وَلَوْ أَنَّمَا فِى ٱلْأَرْضِ مِن شَجَرَةٍ أَقْلَٰمٌۭ وَٱلْبَحْرُ يَمُدُّهُۥ مِنۢ بَعْدِهِۦ سَبْعَةُ أَبْحُرٍۢ مَّا نَفِدَتْ كَلِمَٰتُ ٱللَّهِ ۗ إِنَّ ٱللَّهَ عَزِيزٌ حَكِيمٌۭ.
31:27. அவனை பாராட்டி இந்த பூமியிலுள்ள மரம் செடிகளை எல்லாம் எழுதுகோல்களாக மாற்றி, கடல் நீரை மையாக பயன்படுத்தி எழுதினாலும் அவனுடைய பாராட்டுகள் மாளாது. இம்மாதிரியான ஏழு கடல்களை மையாக பயன்படுத்தினாலும் அவனுடைய புகழ் வார்த்தைகள் முடிவுறாது. அந்த அளவிற்கு அல்லாஹ்வின் வல்லமை யாவற்றையும் மிகைத்தவையாகவும் ஞானம் மிக்கவையாகவும் உள்ளது.
எனவே அல்லாஹ்வை வார்த்தை ஜாலங்களால் புகழ்ந்துக் கொண்டிருப்பதை விட்டுவிட்டு, அவன் காட்டிய வழியில் செயல்படுங்கள்.
مَّا خَلْقُكُمْ وَلَا بَعْثُكُمْ إِلَّا كَنَفْسٍۢ وَٰحِدَةٍ ۗ إِنَّ ٱللَّهَ سَمِيعٌۢ بَصِيرٌ.
31:28. இறைவனின் வல்லமையைப் பற்றி கூறவேண்டும் என்றால் மனித இனம் முழுவதையும் ஆரம்பத்திலிருந்து இன்று வரையில் படைத்திருப்பது, அவனை பொருத்த வரையில் ஒரு மனிதனை படைத்ததற்கு சமம். அவ்வளவு தான். விசாலமான அவனுடைய வல்லமை அனைத்தையும் கேட்கக் கூடியதாகவும் ஒவ்வொருவருடைய செயலையும் நுணுக்கத்துடன் கண்காணிக்கக் கூடியதாகவும் உள்ளது.
அல்லாஹ்வின் எல்லையில்லா வல்லமையினால் தான் இவ்வுலகில் இரவும் பகலும் மாறி மாறி வருகின்றன. உலக படைப்புகள் அனைத்தையும் ஒட்டு மொத்தமாக உங்களால் எவ்வாறு பார்க்க முடியாதோ, அதுபோல அல்லாஹ்வின் வல்லமைகளையும் ஒட்டு மொத்தமாக கணித்து ஒரு வார்த்தையில் கூற இயலாது. உதராணமாக இரவு பகலையே எடுத்துக் கொள்ளுங்கள். அவ்விரண்டில் ஒன்றைத் தான் உங்களால் காண முடியும். அது போல
أَلَمْ تَرَ أَنَّ ٱللَّهَ يُولِجُ ٱلَّيْلَ فِى ٱلنَّهَارِ وَيُولِجُ ٱلنَّهَارَ فِى ٱلَّيْلِ وَسَخَّرَ ٱلشَّمْسَ وَٱلْقَمَرَ كُلٌّۭ يَجْرِىٓ إِلَىٰٓ أَجَلٍۢ مُّسَمًّۭى وَأَنَّ ٱللَّهَ بِمَا تَعْمَلُونَ خَبِيرٌۭ.
31:29. இரவை பகலில் புகுத்துவதையும் பகலை இரவில் புகுத்துவதையும் நீங்கள் பார்ப்பதில்லையா? உங்கள் பார்வைக்கு இவை இரண்டும் நேர் எதிரானதாக தோன்றலாம். ஆனால் உண்மையில் இரவில் ஏற்படும் குறைகளை பகல் நீக்கிவிடுவதாகவும், பகலில் ஏற்படுகின்றன குறைகளை இரவு சரிசெய்வதாகவும் உள்ளது. இப்படியாக இவை இரண்டும் ஒன்றில் மற்றொன்று ஐக்கியமாகி விடுகிறது. இதனால் தான் உங்களால் சிறப்பாக உயிர் வாழ முடிகிறது. அது போல சூரியனையும் சந்திரனையும் நீங்கள் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் படைத்துள்ளான். அவற்றின் உதவியைக் கொண்டு உங்கள் வாழ்வை சிறப்பாக்கிக் கொள்ளலாம். அல்லாஹ்வின் இத்தகைய படைப்புகள் யாவும் நிர்ணயிக்கப்பட்ட கால அளவுபடி செயல்பட்டு வருகின்றன. அதே போல் நீங்கள் செய்து வரும் ஒவ்வொரு செயலும் அல்லாஹ்வுக்கு நன்கு தெரியும். எனவே அவற்றின் விளைவுகள் அதற்குரிய கால அளவுபடி ஏற்பட்டே தீரும்.
ذَٰلِكَ بِأَنَّ ٱللَّهَ هُوَ ٱلْحَقُّ وَأَنَّ مَا يَدْعُونَ مِن دُونِهِ ٱلْبَٰطِلُ وَأَنَّ ٱللَّهَ هُوَ ٱلْعَلِىُّ ٱلْكَبِيرُ.
31:30. இதுதான் அல்லாஹ்வின் மாபெரும் செயல்திட்டமாகும். அவையாவும் ஆக்கப்பூர்வமான நோக்கங்களுக்காக உருவாக்கப்பட்டுள்ளன. இறைவனின் வழிகாட்டுதலை விட்டுவிட்டு வேறு தெய்வங்களை கற்னை செய்து அவற்றிடம் பிரார்த்திக்துக் கொண்டிருப்பது உண்மைக்குப் புறம்பானதாகும். எனவே அல்லாஹ்வின் நடைமுறை சட்டமோ மனிதனின் செயல்களுக்கு ஏற்ற வகையில் விளைவுகளை ஏற்படுத்தும் வல்லமை உடையதாகும்.
أَلَمْ تَرَ أَنَّ ٱلْفُلْكَ تَجْرِى فِى ٱلْبَحْرِ بِنِعْمَتِ ٱللَّهِ لِيُرِيَكُم مِّنْ ءَايَٰتِهِۦٓ ۚ إِنَّ فِى ذَٰلِكَ لَءَايَٰتٍۢ لِّكُلِّ صَبَّارٍۢ شَكُورٍۢ.
31:31. அல்லாஹ்வின் செயல் திட்டங்கள் ஆக்கப்பூர்வமாக உள்ளன என்பதற்கு கடலில் வேகமாகப் பாய்ந்து செல்லும் கப்பலைப் பற்றியே கவனித்துப் பாருங்கள். அவை அல்லாஹ்வின் அருட்கொடைகளை சுமந்துகொண்டு செல்கின்றன. இதனால் உலக மக்கள் அனைவரும் பயனடைகிறார்கள். நிச்சயமாக அல்லாஹ்வின் வழிகாட்டுதலை ஏற்று நன்றி விசுவாசத்துடன் நடப்பவர்களுக்கு இதில் அத்தாட்சிகள் பல கிடைக்கும்.
அதாவது அல்லாஹ்வின் ஏற்பாடுகளை மனிதனும் ஆக்கப்பூர்வமான நலத் திட்டங்களுக்காக பயன்படுத்த வேண்டும். இவற்றை அவன் அழிவிற்காக பயன்படுத்தினால் அதனால் ஏற்படும் பாதிப்புகள் அல்லாஹ்வுக்கு அல்ல. மனிதனுக்குத் தான். (பார்க்க 31:12) உதாரணத்திற்கு இதே கப்பல் பயணத்தை எடுத்துக் கொள்ளுங்கள்.
وَإِذَا غَشِيَهُم مَّوْجٌۭ كَٱلظُّلَلِ دَعَوُا۟ ٱللَّهَ مُخْلِصِينَ لَهُ ٱلدِّينَ فَلَمَّا نَجَّىٰهُمْ إِلَى ٱلْبَرِّ فَمِنْهُم مُّقْتَصِدٌۭ ۚ وَمَا يَجْحَدُ بِـَٔايَٰتِنَآ إِلَّا كُلُّ خَتَّارٍۢ كَفُورٍۢ.
31:32. கடல் பயணத்தில் மலைகளைப் போன்ற பேரலைகள் அவர்களை சூழ்ந்து கொள்ளுமானால் அவற்றிலிருந்து மீண்டுகொள்ள அல்லாஹ்வின் உதவியையே நாடுகிறீர்கள். அப்போது மட்டும் உண்மையிலேயே அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு வாழ்பவர்களைப் போல் உளமார அவனைப் பிரார்த்தித்துக் கொண்டிருப்பீர்கள். (மேலும் பார்க்க 10:22-23) அதன்பின் அத்துயரத்திலிருந்து மீண்டு கரைக்கு வந்தடைந்தால், அவர்களில் சிலர் தான் நடுநிலையுடன் சிந்தித்து செயலாற்றுகிறார்கள். அவர்களில் பெரும்பாலோர் பழையபடி தம் போக்கிலேயே செயல்படுகிறார்கள். இவ்வாறு நன்றி மறந்து செயல்படும் பாதகர்கள் நேர்வழி பெறுவது எப்படி? இவர்களைத் தவிர சிந்தித்து செயலாற்றுபவர்கள், இறைவழிகாட்டுதலில் எந்தக் குறையையும் காணமாட்டார்கள்.
يَٰٓأَيُّهَا ٱلنَّاسُ ٱتَّقُوا۟ رَبَّكُمْ وَٱخْشَوْا۟ يَوْمًۭا لَّا يَجْزِى وَالِدٌ عَن وَلَدِهِۦ وَلَا مَوْلُودٌ هُوَ جَازٍ عَن وَالِدِهِۦ شَيْـًٔا ۚ إِنَّ وَعْدَ ٱللَّهِ حَقٌّۭ ۖ فَلَا تَغُرَّنَّكُمُ ٱلْحَيَوٰةُ ٱلدُّنْيَا وَلَا يَغُرَّنَّكُم بِٱللَّهِ ٱلْغَرُورُ.
32:33. உலக மக்களே! நீங்கள் அத்தகைய சந்தர்ப்பவாதிகளைப் போல் செயல்படாதீர்கள். ஏனெனில் மனித செயல்களின் விளைவுகள் என்பது மறுக்க முடியாத உண்மையாகும். அதைப் பற்றி எண்ணி அஞ்சி நடந்து கொள்ளுங்கள். அந்த விளைவுகள் ஏற்படும் கால கட்டத்தில், தந்தை தன் மகனுக்கோ அல்லது பிள்ளை தன் தந்தைக்கோ எவ்வகையிலும் உதவி செய்ய முடியாது. இப்படி நடக்கப் போவது உண்மையே ஆகும். இது அல்லாஹ்வின் நடைமுறை சட்டமாகும். இதில் எந்த மாற்றமும் ஏற்படாது. எனவே தற்காலிக சொகுசு வாழ்க்கையின் மோகத்தில் ஏமாறாதீர்கள். மனோ இச்சை எனும் ஷைத்தானின் மோக வலையில் சிக்காமல் எச்சரிக்கையாக இருங்கள்.
إِنَّ ٱللَّهَ عِندَهُۥ عِلْمُ ٱلسَّاعَةِ وَيُنَزِّلُ ٱلْغَيْثَ وَيَعْلَمُ مَا فِى ٱلْأَرْحَامِ ۖ وَمَا تَدْرِى نَفْسٌۭ مَّاذَا تَكْسِبُ غَدًۭا ۖ وَمَا تَدْرِى نَفْسٌۢ بِأَىِّ أَرْضٍۢ تَمُوتُ ۚ إِنَّ ٱللَّهَ عَلِيمٌ خَبِيرٌۢ.
31:34. இப்போது அடிக்கடி கேட்கப்படுகின்ற கேள்வி அந்த விளைவுகள் எப்போது தோற்றத்திற்கு வரும் என்பதைப் பற்றியதாகும். அதைப் பற்றி கணித்து யாரும் கூற இயலாது. அதன் முழு ஞானம் அல்லாஹ்விடமே உள்ளது. அது மட்டுமின்றி அவனே மழையையும் பொழிய வைக்கிறான். மேலும் கர்ப்பத்தில் இருக்கும் குழந்தைப் பற்றியும் அவனுக்குத் தெரியும். அல்லாஹ்விடம் இருக்கும் இந்த ஞானம், கல்வி ஞானத்தில் தேர்ச்சிப் பெற்றவர்களுக்கு ஓரளவிற்குத் தெரியும். (பார்க்க 3:7) ஆனால் நாளைய தினம் நீங்கள் செய்வது என்ன என்பதை எவரும் அறிவதில்லை. மேலும் உலகின் எந்த பகுதியில் உயிர் போகும் என்பதும் யாருக்கும் தெரியாது. இதைப் பற்றி அல்லாஹ்வுக்கு மட்டுமே தெரியும். அந்த அளவிற்கு அவன் நுட்பமானவன்.
வானத்தில் காற்றழுத்தம் ஏற்பட்ட பின்புதான் மழை பொழிய வாய்ப்புள்ளதாக உங்களால் கணிக்க முடிகிறது. மேலும் ஒரு பெண் கருத்தரித்த பின்பு தான் குழந்தை எப்போது பிறக்கும் என்பதை கணிக்க முடிகிறது. அது போல் மனித செயல்களின் தீய விளைவுகள் ஏற்படும் போது தான், அதைப் பற்றிய உண்மைகள் தெரிய வரும். ஆனால் இறைவழிகாட்டுதல் தீய செய்லகளின் விளைவுகளைப் பற்றி முன்னறிவிப்பு செய்து விடுகிறது.
எனவே மனித செயல்களின் விளைவுகள் எப்போது தோற்றத்திற்கு வரும் என்பது அல்லாஹ்வுக்கு மட்டுமே தெரியும். மனிதனுக்கு தெரிய வாய்ப்பில்லை. அல்லாஹ்வின் இந்த முன்னெச்சரிக்கையை மனிதன் ஏற்று விழிப்புடன் செயல்பட வேண்டும். மக்களின் தீய செயல்களைப் பார்த்து நம்மில் பலர், இவர்களுக்கு அழிவு ஏற்படுவது நிச்சயம் என்று சொல்லி வருவார்கள். ஆனால் அது எப்போது வரும் என்று நேரம், காலம், தேதி எதையும் யாரும் கணித்துக் கூற இயலாது.
இப்படியாக லுஃக்மான் ஹகீம் தன் மகனுக்கு அறிவுருத்தினார்.