بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
30:0.அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் அறிவுரைப்படியே அனைத்துக் காரியங்களையும் செய்ய நாடுகிறேன். (பார்க்க 6:162)
الٓمٓ.
30:1. அளவற்ற அருளாளன் அல்லாஹ்வின் புறத்திலிருந்து முஹம்மது நபி மூலமாக இறக்கி அருளப்பட்ட வேதமிது.
غُلِبَتِ ٱلرُّومُ.
30:2. ரோமானியர்கள் ஈரானியர்களால் தோற்கடிக்கப்பட்டனர்.
ரோமானியர்களின் இந்த தோல்வி, அரபு நாட்டில் வாழ்ந்த முஷ்ரிக்குகளுக்கு மிகவும் சந்தோஷமான செய்தியாக இருந்தது. அக்காலத்தில் சிரியா, பாலஸ்தீனம், எகிப்து ஆகியவை இணைந்து ரோமாபுரி (Byzantine) வல்லரசு நாடாக விளங்கியது. இந்த நாட்டின் மீது மற்றொரு வல்லரசான ஈரான் (Persian Empire) படையெடுத்தது. இந்தப் போர் கி.பி. 603 முதல் 624 வரையில் ஏறத்தாழ 21 ஆண்டுகள் நீடித்தது. துவக்க காலத்தில் ரோமாபுரி அரசு தோற்றுப் போய்விட்டது.
இதற்கிடையில் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கி.பி. 610இல் நபித்துவம் பெற்றார். அவர் ஏறத்தாழ 13 ஆண்டுகள் வரையில் மக்காவில் போதித்து வந்தார். இறைவழிகாட்டுதலை ஏற்றுக் கொண்டவர்களை, முஷ்ரிக்குகள் பல வகையில் துன்புறுத்தி வந்தனர். (பார்க்க 4:75) எனவே முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கி.பி. 623இல் ஹிஜ்ரத் செய்து மதினாவிற்கு சென்று விட்டார். அவருடன் சிலரும் மதினாவிற்கு சென்றுவிட்டனர். மதினாவிற்கு சென்ற முஹம்மது நபி (ஸல்) அவர்கள், அங்கு ஃகிலாபத் என்ற மக்களாட்சியை நிருவினார். இதை பொறுக்காத மக்காவாசிகள் கி.பி 624இல் ஆயிரம் பேரைக் கொண்ட படையைத் தயாரித்து மதினாவிற்கு அனுப்பி வைத்தனர். இது பத்ருப் போர் எனப்படும். இதில் மக்கா படையினர் தோற்றுப் போனார்கள். அதே வருடத்தில் ரோமியர்களின் படையும் ஈரானியர்களை வெற்றி கொண்டது. இந்த செய்தியும் முஃமின்களுக்கு இரட்டிப்பான மகிழ்ச்சியான செய்தியாக இருந்தது.
فِىٓ أَدْنَى ٱلْأَرْضِ وَهُم مِّنۢ بَعْدِ غَلَبِهِمْ سَيَغْلِبُونَ.
30:3. அரபு நாட்டிற்கு மிக அருகாமையில் இருக்கும் ரோமாபுரி அரசு விரைவிலேயே ஈரானியர்களைத் தோற்கடித்து அவர்கள் மீது வெற்றி கொள்ளும்.
فِى بِضْعِ سِنِينَ ۗ لِلَّهِ ٱلْأَمْرُ مِن قَبْلُ وَمِنۢ بَعْدُ ۚ وَيَوْمَئِذٍۢ يَفْرَحُ ٱلْمُؤْمِنُونَ.
30:4. சில ஆண்டுகளிலேயே அவர்களுக்கு வெற்றி கிடைத்து விடும். ஆனால் இதற்கு முன்பும் சரி, இனி வரும் காலங்களிலும் சரி, இறைவனின் செயல்திட்டப்படி தான் வெற்றி தோல்வி ஏற்படும். எனவே இறைவனின் நியதிப்படி ஏற்படும் ரோமானியர்களின் வெற்றி மற்றும் பத்ரு போரில் மூஃமின்களுக்குக் கிடைக்கும் வெற்றி யாவும் மகிழ்ச்சியான செய்தியாக இருக்கும்.
بِنَصْرِ ٱللَّهِ ۚ يَنصُرُ مَن يَشَآءُ ۖ وَهُوَ ٱلْعَزِيزُ ٱلرَّحِيمُ.
30:5. நினைவில் கொள்ளுங்கள். போரில் கிடைக்கும் அல்லாஹ்வின் உதவி என்பது வரையறுக்கப்பட்ட விதிமுறையாகும். யார் அல்லாஹ்வின் அருட்கொடைகளின் படி போர் ஏற்பாடுகளை செய்கிறார்களோ, அவர்களுக்குத்தான் அந்த உதவிகள் கிடைக்கும். (பார்க்க 8:60) அல்லாஹ்வின் இந்த வரையறைகளை யாராலும் மிகைக்கவே முடியாது. மேலும் உலகில் நடக்கும் அக்கிரமங்களை கட்டுப்படுத்த போரின் ஏற்பாடுகளை செய்த இறைவன் கருணையாளனே ஆவான். (பார்க்க 2:251)
அதாவது இவர் ஜெயிக்க வேண்டும் அல்லது அவர் தோற்க வேண்டும் என்று வெறும் ஆசைகளை வளர்த்துக் கொள்வதால், ஒரு பலனும் ஏற்படாது. அதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். (பார்க்க 8:60) யாரிடம் போருக்கான யுக்திகளும், போர் தடவாளங்களும் மிகைத்துள்ளனவோ அவர்களுக்கே வெற்றி கிடைக்கும். இதில் முஸ்லிம்கள் முஸ்லிம் அல்லாதவர்கள் என்ற பாகுபாடு இருப்பதில்லை.
وَعْدَ ٱللَّهِ ۖ لَا يُخْلِفُ ٱللَّهُ وَعْدَهُۥ وَلَٰكِنَّ أَكْثَرَ ٱلنَّاسِ لَا يَعْلَمُونَ.
30:6. இவையே அல்லாஹ்வின் நிலையான சட்ட வரையறைகளாகும். இதில் எந்த மாற்றமும் வராது. ஏனெனில் அல்லாஹ்வின் வாக்குறுதியில் ஒருபோதும் தவறு ஏற்படாது. ஆனால் பெரும்பாலான மக்கள் இதை அறிவதில்லை.
ஆனால் போரில் ஈடுபடும் நாடுகளில் எந்த உயர் இலட்சியமும் இருப்பதில்லை. ஒருவர் மீது மற்றவர் ஆதிக்கம் கொள்ளவேண்டும் என்பதற்காகவே போரிடுவார்கள். காரணம்
يَعْلَمُونَ ظَٰهِرًۭا مِّنَ ٱلْحَيَوٰةِ ٱلدُّنْيَا وَهُمْ عَنِ ٱلْءَاخِرَةِ هُمْ غَٰفِلُونَ.
30:7. அவர்கள் கண்ணெதிரே இருப்பது தற்காலிக சொகுசு வாழ்வைப் பற்றிய கவலையே. அது தான் அவர்களுக்குத் தெரியும். மனித நேயத்துடன் கூடிய சிறப்பான வாழ்வைப் பற்றியோ, வருங்கால நிலையான வாழ்வைப் பற்றியோ அல்லது மரணத்திற்குப் பின் தொடர்கின்ற வாழ்வைப் பற்றியோ, அவர்கள் அறியமாட்டார்கள். அவற்றைப் பற்றி அவர்களுக்கு எடுத்து சொன்னாலும் அதில் அக்கறை காட்டுவதாகவும் இல்லை.
ஆனால் இறைவழிகாட்டுதலை ஏற்றுக் கொண்ட மூஃமின்கள் இவ்வாறு செயல்பட மாட்டார்கள். உலகில் நடக்கும் அநியாய அக்கிரமத்தை ஒடுக்கத் தான் போரிடுவார்களே அன்றி நாட்டை பிடிக்கவோ அல்லது ஆதிக்கம் செலுத்தவோ ஒருபோதும் இல்லை. (பார்க்க 22:39) மேலும் ஒட்டு மொத்த மனித இனத்தையும் இன்புற்று நிம்மதியாக வாழ வழிசெய்ய வேண்டும் என்பதே இவர்களுடைய இலட்சியமாக இருக்கும். இப்போது நீங்களே சற்று சிந்தித்து பாருங்கள். இத்தகைய உயர் இலட்சியங்களுடன் வாழும் நாடு வெற்றி பெற வேண்டுமா அல்லது ஆதிக்க வெறியர்கள் வெற்றி பெறவேண்டுமா?
أَوَلَمْ يَتَفَكَّرُوا۟ فِىٓ أَنفُسِهِم ۗ مَّا خَلَقَ ٱللَّهُ ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضَ وَمَا بَيْنَهُمَآ إِلَّا بِٱلْحَقِّ وَأَجَلٍۢ مُّسَمًّۭى ۗ وَإِنَّ كَثِيرًۭا مِّنَ ٱلنَّاسِ بِلِقَآئِ رَبِّهِمْ لَكَٰفِرُونَ.
30:8. இப்படி எதுவுமே சிந்திக்காமல் இவர்கள் வெற்றிபெற வேண்டும் அல்லது அவர்கள் வெற்றி பெற வேண்டும் என்று பேசுவது நியாயமா? அகிலங்களையும் பூமியையும் இவற்றிற்கு இடையே உள்ள அனைத்தையும் அல்லாஹ் ஆக்கப்பூர்வமான நோக்கங்களுடன் அனைவருக்கும் பலனளிக்கக் கூடிய வகையிலேயே படைத்திருப்பதை அவர்கள் கவனிக்க வேண்டாமா? மேலும் அவை அனைத்தும் நிர்ணயிக்கப்பட்ட கால அளவுபடி சிறப்பாகச் செயல்படுவதையும் கவனிக்க மாட்டார்களா? மக்களுள் பெரும்பாலோர் இதைப் பற்றி எல்லாம் சிந்திக்காததால் அவர்கள் செய்துவரும் தவறான செயல்களின் விளைவுகளை எதிர்கொள்ளவேண்டி வரும் என்பதை அறிவதில்லை.
أَوَلَمْ يَسِيرُوا۟ فِى ٱلْأَرْضِ فَيَنظُرُوا۟ كَيْفَ كَانَ عَٰقِبَةُ ٱلَّذِينَ مِن قَبْلِهِمْ ۚ كَانُوٓا۟ أَشَدَّ مِنْهُمْ قُوَّةًۭ وَأَثَارُوا۟ ٱلْأَرْضَ وَعَمَرُوهَآ أَكْثَرَ مِمَّا عَمَرُوهَا وَجَآءَتْهُمْ رُسُلُهُم بِٱلْبَيِّنَٰتِ ۖ فَمَا كَانَ ٱللَّهُ لِيَظْلِمَهُمْ وَلَٰكِن كَانُوٓا۟ أَنفُسَهُمْ يَظْلِمُونَ.
30:9. இந்த பேருண்மையை அறிந்துகொள்ள விரும்பினால், அவர்கள் உலகைச் சுற்றி பயணம் செய்து பார்த்துக் கொள்ளட்டும். இதற்கு முன்னிருந்த எத்தனையோ சமுதாயங்கள் எதையும் சிந்திக்காமல் மூட நம்பிக்கையில் வாழ்ந்து வந்ததன் விளைவாக எத்தகைய அழிவை சந்தித்தன என்பதை நேரடியாக பார்த்து தெரிந்து கொள்ளட்டும். அச்சமுதாயத்தினர் இவர்களைவிட வலிமை மிக்கவர்களாக இருந்தார்கள். இவர்களுக்கு கிடைத்துள்ள வாழ்வாதார வசதிகளைவிட அவர்களுக்கு பன்மடங்கு அதிகமாகவே கிடைத்திருந்தன.
அவர்களிடம் வந்த இறைத் தூதர்கள் மூட நம்பிக்கையில் வாழ்வதை விட்டுவிட்டு அறிவுப்பூர்வமாக சிந்தித்து செயலாற்றும் படி தக்க ஆதாரங்களுடன் எடுத்துரைத்தனர். ஆனால் அவர்கள் கண்மூடித்தனமாக அநியாய அக்கிரம செயல்களை செய்து வந்ததால், அவர்கள் அல்லாஹ்வின் நியதிப்படி அழிவை சந்தித்துக் கொண்டார்கள். ஆக அல்லாஹ் அவர்களை ஒருபோதும் அநியாயம் செய்ததில்லை. அவர்கள் தமக்குத்தாமே அநியாயம் செய்து கொண்டார்கள்.
ثُمَّ كَانَ عَٰقِبَةَ ٱلَّذِينَ أَسَٰٓـُٔوا۟ ٱلسُّوٓأَىٰٓ أَن كَذَّبُوا۟ بِـَٔايَٰتِ ٱللَّهِ وَكَانُوا۟ بِهَا يَسْتَهْزِءُونَ.
30:10. அதுமட்டுமின்றி அவர்கள் அல்லாஹ்வின் அறிவுரைகள் எல்லாம் தேவையற்றவை என்று கூறி அவற்றை பொய்ப்பிக்கவே முற்பட்டார்கள். அது முடியாமல் போகவே அவற்றை பரிகசித்துக் கொண்டு இருந்தார்கள். எனவே அவர்களின் தீய செயல்களின் விளைவாக சமுதாய சீர்கேடுகள் ஏற்பட்டு அவர்களுக்கு அழிவு ஏற்பட்டது. இப்படியாக தீமை செய்தவர்களுக்கு தீய முடிவே ஏற்பட்டது.
ٱللَّهُ يَبْدَؤُا۟ ٱلْخَلْقَ ثُمَّ يُعِيدُهُۥ ثُمَّ إِلَيْهِ تُرْجَعُونَ.
30:11. அவர்கள் அல்லாஹ்வின் படைப்பு சட்டத்தைப் பற்றியே கவனித்துப் பார்க்கட்டும். எல்லா படைப்புகளும் அவன் இயற்றிய சட்டங்களின் படியே உருவாகின்றன. அவை அனைத்தும் அவற்றின்படியே படிப்படியாக அறியா வண்ணம் வளர்ந்து முழுமையான வளர்ச்சி பெறுகின்றன. இப்படியாக ஒவ்வொன்றும் அல்லாஹ் நிர்ணயித்த இலக்கை நோக்கியே செல்கின்றன.
இதே போல் சமுதாயத்தில் நிகழ்ந்து வரும் தீய செயல்களின் விளைவுகளும் படிப்படியாக உருவாகி, ஒரு கட்டத்தில் அவர்கள் முன் தோற்றத்திற்கு வந்து விடுகின்றன.
وَيَوْمَ تَقُومُ ٱلسَّاعَةُ يُبْلِسُ ٱلْمُجْرِمُونَ.
30:12. உலக படைப்புகளில் ஒவ்வொன்றும் வளர்ந்து இறுதி வளர்ச்சி பெற கால அளவுகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. அவற்றின்படியே அவை வளர்கின்றன. அதுபோல மனித செயல்களின் விளைவுகளும் ஏற்பட கால அளவுகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. அவற்றின்படி அவை வளர்ந்து தோற்றத்திற்கு வந்தே தீரும். அப்போது தீய செயல்களை செய்தோர் நிராசையின் பிடியில் சிக்கிக்கொள்வர்.
அதாவது முன்சென்ற சமுதாயங்கள் எவ்வாறு அழிந்தனவோ அவ்வாறே இவர்களும் அழிந்து போவது உறுதி.
وَلَمْ يَكُن لَّهُم مِّن شُرَكَآئِهِمْ شُفَعَٰٓؤُا۟ وَكَانُوا۟ بِشُرَكَآئِهِمْ كَٰفِرِينَ.
30:13. அப்படியொரு கால கட்டத்தில் சமுதாயத்தை கெடுத்து வந்த இணை வைப்பாளர்கள் எவரும் வழிகெட்டவர்களின் துயரங்களிலிருந்து காப்பாற்ற இயலாது. வழிகெடுத்தவர்களிடம் அவர்களால் உதவி கேட்கவும் முடியாமல் போய்விடும்.
وَيَوْمَ تَقُومُ ٱلسَّاعَةُ يَوْمَئِذٍۢ يَتَفَرَّقُونَ.
30:14. இப்படியாக வழிகெட்டவர்களும் வழிகெடுத்தவர்களும் தத்தம் நிலையை காப்பாற்றிக் கொள்வதிலேயே குறியாய் இருப்பார்கள். அவர்கள் எப்படி மற்றவர்களின் விமோசனத்தைப் பற்றி கவலைப்படுவது? இப்படியாக அவர்களிடையே பிரிவு ஏற்பட்டுவிடும்.
فَأَمَّا ٱلَّذِينَ ءَامَنُوا۟ وَعَمِلُوا۟ ٱلصَّٰلِحَٰتِ فَهُمْ فِى رَوْضَةٍۢ يُحْبَرُونَ.
30:15. மாறாக அல்லாஹ்வின் வழிகாட்டுதலை ஏற்று அதன்படி ஆக்கப்பூர்வமான சமூக நலத் திட்டங்களை தீட்டி, உழைத்து வருகின்ற சமுதாயங்களுக்கு, இத்தகைய இழிநிலை ஏற்படாது. அவர்கள் அனைவரும் கண்ணியத்துடன் சந்தோஷமாக வாழ்வார்கள்.
وَأَمَّا ٱلَّذِينَ كَفَرُوا۟ وَكَذَّبُوا۟ بِـَٔايَٰتِنَا وَلِقَآئِ ٱلْءَاخِرَةِ فَأُو۟لَٰٓئِكَ فِى ٱلْعَذَابِ مُحْضَرُونَ.
30:16. எனவே அல்லாஹ்வின் வழிகாட்டுதலையும் மனித செயல்களின் இறுதி விளைவுகள் என்கின்ற ஆகிரத்தை சந்திக்க வேண்டிவரும் என்பதையும், மறுத்து, தம் மனம் போன போக்கில் வாழ்ந்து, இறை மார்க்கத்தை பொய்ப்பிக்கும் சமுதாயம் துயரங்களை அனுபவிக்க வேண்டிவரும்.
فَسُبْحَٰنَ ٱللَّهِ حِينَ تُمْسُونَ وَحِينَ تُصْبِحُونَ.
30:17. ஆக எந்த ஒரு சமுதாயமானலும் சரியே! அது வளர்ச்சியின் துவக்க நிலையில் இருந்தாலும் அல்லது அதன் வளர்ச்சி அஸ்தமித்து வீழ்ச்சியின் தருவாயில் இருந்தாலும் இறைவழிகாட்டுதலின்படி செயல்பட முன்வர வேண்டும்.
அவ்வாறு அது செயல்படும் போது மனித பிரச்னைகளுக்கெல்லாம் தீர்வு கிடைத்து
وَلَهُ ٱلْحَمْدُ فِى ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضِ وَعَشِيًّۭا وَحِينَ تُظْهِرُونَ.
30:18. அல்லாஹ்வின் செயல்திட்டங்கள் யாவும் ஆயிரமாயிரம் போற்றுதலுக்கு உரியவையாக ஆகிவிடும். எவ்வாறு வானுலகிலும் பூமியில் உள்ள மற்ற படைப்புகள் சிறப்பாகச் செயல்பட்டு மிக அழகாக இருக்கின்றனவோ, அவ்வாறே மனித சமுதயாமும் மிக அழகிய முறையில் செயல்பட்டு வரும்போது, அவர்களிடம் இருந்த இருள் சூழ்ந்த நிலை நீங்கி, ஒவ்வொரு பிரச்னைக்கும் தெளிவான தீர்வு கிடைத்து எல்லாமே வெட்டவெளிச்சமாகி வரும்.
يُخْرِجُ ٱلْحَىَّ مِنَ ٱلْمَيِّتِ وَيُخْرِجُ ٱلْمَيِّتَ مِنَ ٱلْحَىِّ وَيُحْىِ ٱلْأَرْضَ بَعْدَ مَوْتِهَا ۚ وَكَذَٰلِكَ تُخْرَجُونَ.
30:19. எவ்வாறு உயிரற்ற நிலையில் வரண்டு போய் இருக்கும் பூமியை மழை நீரைக் கொண்டு அல்லாஹ் செழிப்பாக ஆக்குகின்றானோ அவ்வாறே இறைவழிகாட்டுதலைக் கொண்டு சமுதாயத்தை ஜீவனுள்ள சமுதாயமாக மாற்றி விடுகிறான். (பார்க்க 16:64-65) அதே சமயத்தில் ஒரு சமுதாயம் இறைவழிகாட்டுதலை விட்டுவிட்டால் காலப்போக்கில் எல்லா ஆற்றல்களையும் இழந்து நடைபிணங்களாக வாழும். இதுவே அல்லாஹ்வின் நிலையான சட்டமாகும்.
இவையாவும் திடீர் திருப்பங்கள் அல்லது அற்புதங்கள் என்ற அடிப்படையில் ஏற்படுபவை அல்ல. அகிலங்களிலும் உலகிலும் அல்லாஹ்வின் படைப்புகளின் செயல்பாடுகளைப் பற்றி ஆராய்ந்து பாருங்கள். அவை எல்லாமே முறைப்படி சிறப்பாக செயல்பட்டு வருவதை நீங்கள் அறிந்து கொள்வீர்கள். அது போலத் தான் சமுதாயங்களின் வளர்ச்சியும் வீழ்ச்சியும் ஏற்பட்டு வரும். உதாரணமாக
وَمِنْ ءَايَٰتِهِۦٓ أَنْ خَلَقَكُم مِّن تُرَابٍۢ ثُمَّ إِذَآ أَنتُم بَشَرٌۭ تَنتَشِرُونَ.
30:20. மனித படைப்பையே எடுத்துக் கொள்ளுங்கள். அது துவக்க காலத்தில் மண்ணின் சத்திலிருந்து உருவானது. அது உயிரணு என்ற நிலையிலிருந்து, பல படித்தரங்களை கடந்து மனித உருவில் வந்தடைந்தது. (பார்க்க 32:7-9) (23:13-14) அந்த உயிரணுக்கள் ஆண்பெண் என இரண்டாக பிரிக்கப்பட்டன (பார்க்க 4:1). அதன்பின் ஆண் பெண் சேர்க்கையின் மூலம் மனித இனம் உலகம் முழுவதும் பரவிவியது. (பார்க்க 4:1) இவையாவும் அல்லாஹ்வின் படைப்புத் திட்டத்தின் கீழ் உருவானவை ஆகும். சிந்தித்துணரும் மக்களுக்கு இவை இறைவனின் அத்தாட்சிகளாக விளங்கும்.
இன்றைக்கும் மண்ணில் கிடைக்கும் சத்திலிருந்து தான் ஆணின் விந்தும், பெண்ணின் கருப்பையில் குழந்தை வளர்வதற்கான எல்லா சத்துகளும் கிடைக்கின்றன. எனவே மனிதன் மண்ணிலிருந்து தான் இன்றைக்கும் படைக்கப்படுகிறான்.
وَمِنْ ءَايَٰتِهِۦٓ أَنْ خَلَقَ لَكُم مِّنْ أَنفُسِكُمْ أَزْوَٰجًۭا لِّتَسْكُنُوٓا۟ إِلَيْهَا وَجَعَلَ بَيْنَكُم مَّوَدَّةًۭ وَرَحْمَةً ۚ إِنَّ فِى ذَٰلِكَ لَءَايَٰتٍۢ لِّقَوْمٍۢ يَتَفَكَّرُونَ.
30:21. அல்லாஹ்வின் படைப்பு சட்டத்தின் கீழ் உருவான ஆண் பெண் ஆகிய இரு பாலரும், ஒருவர் மற்றவர்க்கு ஜோடியாக இருக்கின்றனர். இதனால் பரஸ்பர இணக்கம் கொண்டு ஒருவர் மற்றவரின் குறைகளை நிறைவு செய்பவராக விளங்குகின்றனர். இதனால் அவர்களுடைய வாழ்வில் மன நிறைவும் நிம்மதியும் கிடைக்கின்றன. சிந்தித்துணரும் மக்களுக்கே இறைவனின் வல்லமையின் சான்றுகளைப் பற்றி அறிந்துகொள்ள முடியும்.
மனித வாழ்க்கை என்று எடுத்துக்கொண்டால், ஆணோ பெண்ணோ தனித்து வாழ்ந்திட முடியாது. ஆண்களில் இருக்கின்ற குறைகளை பெண்கள் நிறைவு செய்பவர்களாகவும், பெண்களில் இருக்கின்ற குறைகளை ஆண்கள் நிறைவு செய்பவர்களாகவும் இருக்கின்றனர். இதனால்தான் குடும்பம் என்ற வாழ்க்கைப் படகு சுமுகமாக செல்ல முடிகிறது. சமுதாயமும் சீராக திகழ்கிறது. அவ்வாறு இல்லாது போனால் சமூக அஸ்திவாரமே ஆட்டம் கண்டுவிடும்.
وَمِنْ ءَايَٰتِهِۦ خَلْقُ ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضِ وَٱخْتِلَٰفُ أَلْسِنَتِكُمْ وَأَلْوَٰنِكُمْ ۚ إِنَّ فِى ذَٰلِكَ لَءَايَٰتٍۢ لِّلْعَٰلِمِينَ.
30:22. அதன்பின் பிரமாண்டமான அகிலங்கள் மற்றும் பூமியின் படைப்பை பற்றி ஆராய்ந்து பாருங்கள். இவ்வுலகில் எத்தனையோ மொழிகள் உள்ளன என்பதையும் கவனித்துப் பாருங்கள். மனித படைப்பிலேயே எத்தனை வகையான நிறங்களும் உருவ வேற்றுமைகளும் உள்ளன என்பதையும் கவனித்துப் பாருங்கள். இந்த நிறங்கள், மொழிகள் மற்றும் உருவ வேற்றுமைகள் இருந்தும் மனித இனம் ஒன்றே என்ற நிலை உருவாகியுள்ளதே (பார்க்க 2:213) இது அல்லாஹ்வின் பேராற்றரல்களை பறைசாற்றுகின்றன அல்லவா?
وَمِنْ ءَايَٰتِهِۦ مَنَامُكُم بِٱلَّيْلِ وَٱلنَّهَارِ وَٱبْتِغَآؤُكُم مِّن فَضْلِهِۦٓ ۚ إِنَّ فِى ذَٰلِكَ لَءَايَٰتٍۢ لِّقَوْمٍۢ يَسْمَعُونَ.
30:23. அது மட்டுமா? இரவில் இளைப்பாற உறக்கமும், பகலில் உழைத்து இறை அருட்கொடைகளை தேடிக்கொள்ளவும் ஏற்பாடுகளை செய்தது அல்லாஹ் தானே. இந்த உண்மைகளை எல்லாம் மக்களுக்கு எடுத்துரைத்தால் அவற்றை கேட்க முன்வரவேண்டுமே! அவற்றைப் பற்றி கேட்க முன்வராதவர்கள், இறைவனின் அருட்கொடைகளைப் பற்றி அறிந்துகொள்வது எப்படி?
وَمِنْ ءَايَٰتِهِۦ يُرِيكُمُ ٱلْبَرْقَ خَوْفًۭا وَطَمَعًۭا وَيُنَزِّلُ مِنَ ٱلسَّمَآءِ مَآءًۭ فَيُحْىِۦ بِهِ ٱلْأَرْضَ بَعْدَ مَوْتِهَآ ۚ إِنَّ فِى ذَٰلِكَ لَءَايَٰتٍۢ لِّقَوْمٍۢ يَعْقِلُونَ.
30:24. மேலும் உலகம் முழுவதும் அல்லாஹ் ஏற்பாடு செய்துள்ள மழையைப் பற்றியும், மின்னல்களைப் பற்றியும் ஆராய்ந்து பாருங்கள். வானத்திலிருந்து பொழியும் அந்த மழைநீரைக் கொண்டே வரண்டு கிடக்கும் பூமி செழிப்பாகிறது. மின்னல்களின் ஒளியைக் கொண்டே பூமிக்கு இரசாயண சக்தி கிடைத்து அது பசுமையாவதற்கு துணை நிற்கின்றன. (மேலும் பார்க்க 13:12-13) இந்த ஏற்பாடுகள் எல்லாம் இல்லாதிருந்தால் மனிதனுக்கு ஏது வாழ்வு? அறிவைப் பயன்படுத்தும் மக்களுக்கே இந்த உண்மைகள் எல்லாம் விளங்கும். ஆனால் உங்களுக்கோ மழை நீர் மீது ஆசையும், இடி மின்னல்கள் மூலம் அச்சமும் ஏற்படுத்துகிறது.
وَمِنْ ءَايَٰتِهِۦٓ أَن تَقُومَ ٱلسَّمَآءُ وَٱلْأَرْضُ بِأَمْرِهِۦ ۚ ثُمَّ إِذَا دَعَاكُمْ دَعْوَةًۭ مِّنَ ٱلْأَرْضِ إِذَآ أَنتُمْ تَخْرُجُونَ.
30:25. மேலும் அல்லாஹ்வின் வானுலக செயல் திட்டங்களின்படி இந்தப் பூமியை புவி ஈர்ப்பில் நிலை பெற்று வான் மண்டலத்தில் வேகமாக சுற்றி வரும்படி செய்திருப்பதைப் பற்றி ஆராய்ந்து பாருங்கள். (பார்க்க 36:38-40) அல்லாஹ்வின் அழைப்பை ஏற்று ஒருநாள் இல்லை ஒருநாள் இந்த பூமியைவிட்டு புறப்பட்டுச் சென்றே ஆகவேண்டும் என்பதை கவனித்தீர்களா?
இந்த வாசகத்தை இரு வகையில் பொருள் கொள்ளலாம். முதலாவதாக மனிதனுக்கு மரணம் ஏற்பட்ட உடன் அவனுடைய வாழ்க்கைப் பயணம் இவ்வுலகை விட்டு வேறு கோளிலோ அல்லது வானிலோ தொடரும். இது “ஆலமெ பர்ஜஃக்” (பார்க்க 23:100) என்பதாகும்.
இரண்டாவதாக மனித வாழ்வின் தேற்றங்களை வைத்து பார்க்கும் போது, அவன் வானுலக ஆராய்ச்சிகளை மேற்கொண்டு, மற்ற கோள்களும் உலகங்களும் எவ்வாறு செயல்படுகின்றன என்ற உண்மைகளை அறிந்து கொள்ள இவ்வுலகை விட்டு செல்லும் கட்டாயத்தில் தான் இருக்கிறான் என்றும் பொருள் கொள்ளலாம். ஆக எது எப்படியாக இருப்பினும் அல்லாஹ்வின் அளவிலா பேராற்றலை யாரால் மறுக்க முடியும்? காரணம்
وَلَهُۥ مَن فِى ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضِ ۖ كُلٌّۭ لَّهُۥ قَٰنِتُونَ.
30:26. அகிலங்களிலும் பூமியிலும் உள்ள அனைத்து படைப்புகளும் அல்லாஹ்வின் செயல் திட்டங்களை நிறைவேற்றவே செயல்பட்டு வருகின்றன. அவற்றில் ஒவ்வொன்றும் அல்லாஹ் விதித்த சட்ட விதிமுறைகளின் படியே செயல்பட்டு வருகின்றன. (பார்க்க 16:49-50)
மற்ற படைப்புகளை நாம் இயற்கைப் படைப்புகள் என்கிறோம். அவற்றின் செயல்பாடுகளில் எந்த மாற்றத்தையும் நாம் காண்பதில்லை. எனவே அவை அழகாக இருக்கின்றன. மனிதனும் அல்லாஹ்வின் படைப்புகளில் ஒறுவனாக இருக்கிறான். எனவே அவனும் அல்லாஹ்வின் சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு வாழ்ந்தால் அவனுடைய வாழ்வும் சிறப்பாக இருக்கும். ஏனெனில்
وَهُوَ ٱلَّذِى يَبْدَؤُا۟ ٱلْخَلْقَ ثُمَّ يُعِيدُهُۥ وَهُوَ أَهْوَنُ عَلَيْهِ ۚ وَلَهُ ٱلْمَثَلُ ٱلْأَعْلَىٰ فِى ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضِ ۚ وَهُوَ ٱلْعَزِيزُ ٱلْحَكِيمُ.
30:27. அல்லாஹ்வின் படைப்பு சட்டத்தின் படியே ஆரம்பம் முதல் இறுதிவரையில் எல்லாமே நிகழ்ந்து வருகின்றன. அந்த படைப்புகள் யாவும் முழு அளவில் வளர்ந்து வருகின்றன. இவ்வாறு படைப்பதற்கும் முழுஅளவில் வளரச் செய்வதற்கும் அல்லாஹ்வுக்கு ஒரு சிரமும் இருப்பதில்லை. அதுமட்டுமின்றி வானங்களையும் பூமியையும் படைத்திருப்பதில் உயர்ந்த நோக்கங்கள் உள்ளன. மேலும் அவனுடைய பேராற்றல்கள் எல்லாவற்றையும் விட மிகைத்தவையாகவும், ஒவ்வொன்றும் தெளிவான ஞானத்தின் அடிப்படையிலும் உள்ளன.
இப்படி இருந்தும் மனிதனின் நிலை வேறு விதமாக உள்ளது. அவன் அல்லாஹ்வின் பிரமாண்டமான படைப்புகளை ஆராயாமல் ஏதோ கற்பனை உலகில் வாழ்ந்து வருகிறான். இதனால் அவனுடைய வாழ்வில் பிரச்னைகள் பல உருவாகின்றன. மேலே 19 முதல் 27வரையிலுள்ள வாசகங்களில் விவரித்து கூறப்பட்ட படைப்புகள் யாவும் அல்லாஹ்வின் படைப்புகளின் அத்தாட்சிகள் (ஆயத்துகள்) ஆகும். அவை யாவும் அல்லாஹ்வின் கட்டளைக்குக்கு உட்பட்டு செயல்படுபவையாகும். ஆனால் மக்கள் அல்லாஹ்வின் படைப்புகளை அல்லாஹ்வுக்கு இணையாகக் கருதி அவற்றிற்கு பயப்படுகிறார்களே! இது சரியா? இதனால் உங்களின் தினசரி வாழ்வில் அவர்கள் கடைப்பிடிக்கும் வழிமுறை வேறு விதமாக உள்ளது. அதாவது
ضَرَبَ لَكُم مَّثَلًۭا مِّنْ أَنفُسِكُمْ ۖ هَل لَّكُم مِّن مَّا مَلَكَتْ أَيْمَٰنُكُم مِّن شُرَكَآءَ فِى مَا رَزَقْنَٰكُمْ فَأَنتُمْ فِيهِ سَوَآءٌۭ تَخَافُونَهُمْ كَخِيفَتِكُمْ أَنفُسَكُمْ ۚ كَذَٰلِكَ نُفَصِّلُ ٱلْءَايَٰتِ لِقَوْمٍۢ يَعْقِلُونَ.
30:28. உங்களுக்குக் கீழ் பணியாற்றுபவர்களை உங்களுக்கு சரி சமமானவர்களாக நீங்கள் கருதுவீர்களா? அல்லது உங்களிடம் ஊதியம் பெற்று வாழ்பவர்களை பங்காளிகள் என நீங்கள் எடுத்துக் கொள்வீர்களா? இல்லையே! உங்களுக்கு சமமாக இருப்பவர்களுக்கு மதிப்பு கொடுப்பது போல் இவர்களை நீங்கள் பொருட்படுத்துவீர்களா?. நீங்கள் அறிவு பெறும் பொருட்டு உங்களிலிருந்தே உதாரணமாக மேற்கோள்காட்டி விளக்குகிறோம்.
அதாவது மேலதிகாரிகளுக்கு மதிப்புக் கொடுத்து செயல்படுவது போல், சகல வல்லமையும் படைத்த அல்லாஹ்வுக்கு ஏன் பயந்து நடப்பதில்லை? மேலும் உங்களைவிட தாழ்ந்த நிலையில் இருப்பவர்களை சம அந்தஸ்தை அளிக்காத நீங்கள், அல்லாஹ்வுக்கு கீழ் பணிபுரியும் இயற்கை சக்திகளை எல்லாம் ஏன் அல்லாஹ்வுக்கு இணையாக கருதி, அவற்றிற்கு பயந்து வணங்கி வருகிறீர்கள்?
உங்களுக்கு கீழ் பணிபுரிபவர்களை நீங்கள் சமஉரிமை அளித்து அவர்களுடைய வாழ்வு சிறக்க வழி செய்திருக்க வேண்டும். ஆனால் நீங்கள் ஒருபோதும் அவ்வாறு செய்வதில்லை. மாறாக மேல்மட்ட அளவில் உள்ளவர்களுக்கு பயந்து அவர்களிடம் பரஸ்பர உணர்வுடன் செயல்படுகிறீர்கள். அல்லாஹ்வின் விஷயத்தில் மட்டும் அவன் படைத்த இயற்கை சக்திகளை இணை தெய்வங்களாக கற்பனை செய்துகொண்டு அவற்றிற்கு பயப்படுகிறீர்கள். மேலும் அடிமட்ட நிலையில் உள்ள மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த முயற்சிகளை மேற்கொள்ளாவிட்டால் அதுவே உங்களுடைய அழிவுக்குக் காரணமாகிவிடும். இதற்கு பயந்து நீங்கள் செயல்பட்டிருக்க வேண்டும். முதளாளித்துவ சமூக அமைப்புகளில் இப்படிப்பட்ட கண்ணோட்டம் நிலவிவரும். இவற்றை சரிசெய்ய வேண்டும்.
بَلِ ٱتَّبَعَ ٱلَّذِينَ ظَلَمُوٓا۟ أَهْوَآءَهُم بِغَيْرِ عِلْمٍۢ ۖ فَمَن يَهْدِى مَنْ أَضَلَّ ٱللَّهُ ۖ وَمَا لَهُم مِّن نَّٰصِرِينَ.
30:29. இப்படியாக எந்த கல்வி ஞானமும் இல்லாமல், சமுதாயத்தின் எதிர்காலத்தைப் பற்றி எல்லாம் கவலைக் கொள்ளாமல், அநியாய அக்கிரம செயல்களை செய்துகொண்டு, தம் மனஇச்சைப் படி செயல்படுகிறார்கள். இத்தகைய வழிக்கேடர்களுக்கு அல்லாஹ்வின் வழிகாட்டுதல் கிடைப்பது எப்படி? அல்லாஹ்வின் அறிவுரைகளை பொருட்படுத்தாமல் செயல்படுவர்களுக்கு வேறு யார் தான் உதவி செய்வார்கள்?
فَأَقِمْ وَجْهَكَ لِلدِّينِ حَنِيفًۭا ۚ فِطْرَتَ ٱللَّهِ ٱلَّتِى فَطَرَ ٱلنَّاسَ عَلَيْهَا ۚ لَا تَبْدِيلَ لِخَلْقِ ٱللَّهِ ۚ ذَٰلِكَ ٱلدِّينُ ٱلْقَيِّمُ وَلَٰكِنَّ أَكْثَرَ ٱلنَّاسِ لَا يَعْلَمُونَ.
30:30. இறைவழிகாட்டுதலை ஏற்றுக்கொண்டவர்களே! நீங்கள் இப்படிப்பட்ட போக்கை விட்டுவிட்டு, அனைத்து தரப்பு மக்களின் நலனை பேணிக் காக்கும் இஸ்லாம் மார்க்கத்தின் பக்கமே உங்கள் முழு கவனத்தையும் செலுத்தி வாருங்கள். அல்லாஹ்வின் நிலையான படைப்பு சட்டத்தின்படி உங்கள் அனைவரையும் எவ்வாறு படைத்துள்ளானோ (பார்க்க 23:12-14, 32:8) அவ்வாறே நீங்கள் கடைப்பிடிக்க வேண்டிய நிலையான சட்ட திட்டங்களையும் அவன் நிர்ணயித்துள்ளான். அல்லாஹ்வின் படைப்பு சட்டத்தில் நீங்கள் எவ்வித மாறுதலையும் காணமாட்டீர்கள். அதுபோல அல்லாஹ்வின் மார்க்கத்திலும் எவ்வித மாறுதலையும் காணமாட்டீர்கள். இதுவே அல்லாஹ்வின் நிலைமாறா நிலையான மார்க்கமாகும். ஆனால் பெரும்பாலான மக்கள் இந்த உண்மைகளை அறிவதில்லை.
۞ مُنِيبِينَ إِلَيْهِ وَٱتَّقُوهُ وَأَقِيمُوا۟ ٱلصَّلَوٰةَ وَلَا تَكُونُوا۟ مِنَ ٱلْمُشْرِكِينَ.
30:31. எனவே நீங்கள் அல்லாஹ்வின் நிலையான மார்க்கத்தின் பக்கமே முழு கவனத்தையும் செலுத்தி வாருங்கள். அல்லாஹ்வின் அறிவுரைகளுக்கு எதிராக செயல்படுவதால் ஏற்படும் விபரீத விளைவுகளுக்கு அஞ்சி நடந்து கொள்ளுங்கள். சமுதாய ஒழுக்க மாண்புகளை போதிக்கும் ஸலாத் முறையை நிலைநிறுத்துங்கள். அப்போது தான் அனைத்து தரப்பு மக்களும் ஒன்றிணைந்து ஒருமித்த சமுதாயமாகத் திகழும். (பார்க்க 2:213) இணை வைப்பாளர்கள் மக்களை தம் மனஇச்சைப்படி செயல்படும்படி விட்டுவிடுவதைப் போல் நீங்களும் அவர்களை விட்டுவிடாதீர்கள்.
مِنَ ٱلَّذِينَ فَرَّقُوا۟ دِينَهُمْ وَكَانُوا۟ شِيَعًۭا ۖ كُلُّ حِزْبٍۭ بِمَا لَدَيْهِمْ فَرِحُونَ.
30:32. அவ்வாறு ஒழுக்க மாண்புகளை போதிக்கும் ஸலாத் முறையை விட்டுவிட்டால், சமுதாயத்தில் பல பிரிவுகள் ஏற்பட்டுவிடும். அவற்றில் ஒவ்வொரு பிரிவும் சுயமாக வழிமுறைகளை உருவாக்கி வைத்துக்கொண்டு அவற்றையே கடைப்பிடித்து வரும். மேலும் காலப் போக்கில் அவர்கள் கடைப்பிடித்து வரும் வழிமுறையே மிகச் சரியானவை என்ற நினைப்பில் வாழ்வார்கள். நினைவில் கொள்ளுங்கள். மார்க்கத்தில் பிளவை ஏற்படுத்துவது மிகப்பெரிய பாவச் செயலாகும். (பார்க்க 3:104, 6:160, 23:53, 42:13)
وَإِذَا مَسَّ ٱلنَّاسَ ضُرٌّۭ دَعَوْا۟ رَبَّهُم مُّنِيبِينَ إِلَيْهِ ثُمَّ إِذَآ أَذَاقَهُم مِّنْهُ رَحْمَةً إِذَا فَرِيقٌۭ مِّنْهُم بِرَبِّهِمْ يُشْرِكُونَ.
30:33. இப்படிப்பட்ட பிரிவுகளால் பிரச்சனைகள் உருவாகும் போதுதான், அவர்கள் அல்லாஹ்வின் பக்கம் கவனம் செலுத்துவார்கள். அவன் நிர்ணயித்த வழிமுறைக் கொண்டே தீர்வு காண முயற்சிகளை மேற்கொண்டிருப்பார்கள். அவன் காட்டிய வழியில் செயல்பட்டு அவர்களுடைய பிரச்னைகள் தீர்ந்து சுகமான வாழ்க்கை கிடைத்தால், அவர்களில் பலர் பழையபடி இறைவனுக்கு இணையாக வேறு வழிமுறைகளைப் பின்பற்றி வருவார்கள்.
لِيَكْفُرُوا۟ بِمَآ ءَاتَيْنَٰهُمْ ۚ فَتَمَتَّعُوا۟ فَسَوْفَ تَعْلَمُونَ.
30:34. இதனால் இறைவனின் அருட்கொடைகளைக் கொண்டு அவர்களால் சில காலம் தான் சுகங்களை அனுபவிக்க முடிகிறது. அதன்பின் அவர்களுக்கு பழையபடி மீண்டும் பிரச்னைகள் பல உருவாகி விடும். அப்போது தான் அவர்களுக்கு உண்மை என்னவென்று விளங்குகின்றது.
أَمْ أَنزَلْنَا عَلَيْهِمْ سُلْطَٰنًۭا فَهُوَ يَتَكَلَّمُ بِمَا كَانُوا۟ بِهِۦ يُشْرِكُونَ.
30:35. இதையும் அறிந்து கொள்ளுங்கள். அல்லாஹ்வுக்கு இணையாக அவர்கள் உருவாக்கிய இணைத் தெய்வங்கள் யாவும் அவர்களே தம் சுய சிந்தனையின் அடிப்படையில் உருவாக்கியவையாகும். அவற்றிற்கு அல்லாஹ்வின் புறத்திலிருந்து எந்த ஆதாரமும் இறக்கி வைக்கப்படவில்லை.
وَإِذَآ أَذَقْنَا ٱلنَّاسَ رَحْمَةًۭ فَرِحُوا۟ بِهَا ۖ وَإِن تُصِبْهُمْ سَيِّئَةٌۢ بِمَا قَدَّمَتْ أَيْدِيهِمْ إِذَا هُمْ يَقْنَطُونَ.
30:36. இப்படியாக அவர்கள் வாழ்வில் இன்பமும் துன்பமும் கலந்தாற் போல் ஏற்பட்டு வருகின்றன. அல்லாஹ்வின் அருட்கொடைகள் கிடைத்து வந்தால் அவர்களுக்கு மகிழ்ச்சி ஏற்படுகிறது. ஆனால் அவர்கள் தாமாகவே செய்து வரும் தீய செயல்களால் துன்பம் ஏற்பட்டால், நிராசையாகி நிம்மதி இழந்து தவிக்கிறார்கள். இது தான் காலம் காலமாக நடந்து வருபவையாகும்.
أَوَلَمْ يَرَوْا۟ أَنَّ ٱللَّهَ يَبْسُطُ ٱلرِّزْقَ لِمَن يَشَآءُ وَيَقْدِرُ ۚ إِنَّ فِى ذَٰلِكَ لَءَايَٰتٍۢ لِّقَوْمٍۢ يُؤْمِنُونَ.
30:37. மேலும் ஒரு விஷயத்தை மனதில் பதிய வைத்துக் கொள்ளுங்கள். வாழ்க்கை வசதிகள் விஷயத்தில் அல்லாஹ்வின் புரத்திலிருந்து யாருக்கும் எவ்வித பாரபட்சமும் இருப்பதில்லை (பார்க்க 17:20) ஆனால் திறமையுடன் உழைப்பவர்களுக்கு வாழ்வாதார வசதிகள் பெருகி வருகின்றன. திறமையின்றி உழைப்பவர்களுக்கு அவை மிகக் குறைவாகவே கிடைக்கின்றன. (பார்கக் 53:39) இறைவழிகாட்டுதலை ஏற்றுக் கொண்டவர்களுக்கு இதில் பல அத்தாட்சிகள் கிடைக்கும்.
அதாவது ஒரு சமுதாயம் என்று எடுத்துக் கொண்டால் அங்குள்ளவர்கள் விவசாயம், நெசவு, வாணிபம், கல்வி, சுகாதாரம் என பல்வேறு துறைகள் இருக்கும். (பார்க்க 92:1-4) அவை அனைத்தும் ஒருங்கிணைந்தால் தான் சமுதாயம் என உருவாகும். இவற்றிலிருந்து ஈட்டிக் கொள்ளும் வாழ்வாதாரங்களில் ஏற்றத் தாழ்வு இருக்கலாம். இறைவழிகாட்டுதலை ஏற்று நடக்கும் சமுதாயம் இந்த வேற்றுமைகளை நீக்கி எல்லோருக்கும் எல்லாமே என்ற அடிப்படையில் சரிசமமாக பங்கிட்டு ஒற்றுமையுடன் வாழ வழி செய்யும்.
فَـَٔاتِ ذَا ٱلْقُرْبَىٰ حَقَّهُۥ وَٱلْمِسْكِينَ وَٱبْنَ ٱلسَّبِيلِ ۚ ذَٰلِكَ خَيْرٌۭ لِّلَّذِينَ يُرِيدُونَ وَجْهَ ٱللَّهِ ۖ وَأُو۟لَٰٓئِكَ هُمُ ٱلْمُفْلِحُونَ.
30:38. இப்படியாக அவர்கள் தம் உறவினர்களுக்கு சேர வேண்டிய உரிமையில் எந்த குறைவும் வைக்க மாட்டார்கள். மேலும் சம்பாதிக்க இயலாத ஊனமுற்றோர் மற்றும் அக்கம் பக்கத்தில் வாழும் வசதியற்றோர் (4:36) ஆகியோரின் குறைகளை நீக்க முயல்வார்கள். மேலும் அனைத்து தரப்பு மக்களையும் பாதுகாக்கும் இறைவனின் ஆட்சியமைப்பிற்கும் தம்மால் இயன்ற வரையில் கொடுத்து உதவுவார்கள். (பார்க்க 2:219) இவ்வாறு செய்து வருவது அவர்களுடைய நன்மைக்கே ஆகும். இப்படி உதவி செய்வதில் விளம்பரம் இருக்கக் கூடாது. அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடியே கொடுக்கவேண்டும். இத்தகையவர்களே தம் வாழ்வின் இலட்சியத்தில் வெற்றி பெறுபவர்கள் ஆவார்கள்.
وَمَآ ءَاتَيْتُم مِّن رِّبًۭا لِّيَرْبُوَا۟ فِىٓ أَمْوَٰلِ ٱلنَّاسِ فَلَا يَرْبُوا۟ عِندَ ٱللَّهِ ۖ وَمَآ ءَاتَيْتُم مِّن زَكَوٰةٍۢ تُرِيدُونَ وَجْهَ ٱللَّهِ فَأُو۟لَٰٓئِكَ هُمُ ٱلْمُضْعِفُونَ.
30:39. இவ்வாறு சமுதாய சமச்சீர்நிலை ஏற்படுவதை விட்டுவிட்டு, நலிந்த மக்களிடமிருந்து பிடுங்கும் எண்ணங்கள் இருந்தால் அங்கு சந்தோஷமான சூழ்நிலையை எவ்வாறு தக்க வைத்துக்கொள்ள முடியும்? நலிந்த மக்களுக்கு கடனுதவி அளிக்கும்போது, அவர்களிடமிருந்து வட்டியை வசூலித்தால் நாட்டின் பொருளாதார வளர்ச்சி தடைப்பட்டுப் போகும். தனிப்பட்ட முறையில் பண முதலீடு செய்பவர்களுக்கு சில ஆதாயங்கள் கிடைத்திடலாம். ஓட்டு மொத்த சமுதாயத்தை வைத்து பார்க்கும் போது, ஏற்றத் தாழ்வு தான் ஏற்படும். எனவே யாதொரு பிரதிப்பலனையும் எதிர் பார்க்காமல் அல்லாஹ்வின் திருப் பொருத்தத்தை நாடியே சமுதாய வளர்ச்சிக்காக உதவி செய்து வந்தால் தான் அந்த சமுதாயம் இரட்டிப்பு வேகத்தில் வளர்ந்து வரும். (மேலும் பார்க்க 2:275-281)
ஜகாத் என்பது நாட்டு மக்களின் பாதுகாப்புக்காகவும், நலிந்த மக்களின் முன்னேற்றத்திற்காகவும் வசூலிக்கப்படுகின்ற நிதி (Tax System) ஆகும். இந்த நிதி இருப்போரிடமிருந்து வசூலிக்கப்படுவதாகும். ஆனால் வட்டித் தொழில் என்பது இதற்கு நேர் எதிரானதாகும். ஏனெனில் இங்கு இருப்போர், இல்லாதோரிடமிருந்து வசூலிப்பதாகும். இதனால் இருப்போர் இல்லாதோர் என்ற வேற்றுமை விரிவடைந்து நாட்டில் வழிப்பறி, கொள்ளை,கொலை என்ற நிலை தான் ஏற்படும். இதனால் பாதுகாப்பற்ற நிலை ஏற்பட்டு செல்வங்கள் அனைத்தும் சீரழியும் நிலை ஏற்படும். இதற்கு மாறாக அல்லாஹ்வின் அறிவுரையின்படி ஜகாத் கொடுத்து வந்தால் உங்களுக்கு பாதுகாப்பு இரட்டிப்பாகும். மேலும் வட்டி வசூலிப்பது போட்டி அரசாங்கம் நடத்துவதற்கு ஒப்பான செயலாகும்.
ٱللَّهُ ٱلَّذِى خَلَقَكُمْ ثُمَّ رَزَقَكُمْ ثُمَّ يُمِيتُكُمْ ثُمَّ يُحْيِيكُمْ ۖ هَلْ مِن شُرَكَآئِكُم مَّن يَفْعَلُ مِن ذَٰلِكُم مِّن شَىْءٍۢ ۚ سُبْحَٰنَهُۥ وَتَعَٰلَىٰ عَمَّا يُشْرِكُونَ.
30:40 இதையும் கவனித்துப் பாருங்கள். உங்கள் அனைவரையும் படைத்தது அல்லாஹ் தான். அவன் செய்துள்ள ஏற்பாட்டைக் கொண்டு தான் உங்களுக்கு வாழ்வாதாரங்கள் கிடைக்கின்றன. அதுமட்டுமின்றி உங்களுக்கு இவ்வுலகில் நிரந்தரமான வாழ்வு கிடைக்கப் போவதும் இல்லை. நீங்கள் மரணத்தை சந்தித்துதான் ஆகவேண்டும். அதன் பின் நீங்கள் செயல்பட்டு வந்தமைக்கு அல்லாஹ்வுக்கு பதில் சொல்லியே ஆகவேண்டும். இதுவே அவனுடைய செயல் திட்டமாகும். உண்மை இவ்வாறிருக்க உங்களுடைய கற்பனை தெய்வங்கள் இதிலிருந்து மீட்டுத் தருமா? அல்லாஹ்வின் அளவிலா வல்லமை உங்களுடைய கற்பனைக்கு அப்பாற்பட்டவை ஆகும்.
எனவே அனைத்து தரப்பு மக்களின் பாதுகாப்பையும் முன்னேற்றத்தையும் நோக்கமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இறைவனின் ஆட்சியமைப்புக்கு உதவி செய்து, உங்கள் வாழ்வை அர்த்தமுள்ளதாக ஆக்கிக் கொள்ளுங்கள். அப்போது தான் இவ்வுலக வாழ்விலும் மரணத்திற்குப் பின் தொடர்கின்ற வாழ்விலும் பாதுகாப்பான வாழ்வு கிடைக்கும். இதுவே இரட்டிப்பு சந்தோஷமாகும்.
எனவே சமுதாய மக்களுக்கு இறைவனின் அறிவுரைகளை எடுத்துரைத்து அவர்களை நல்வழிபடுத்தவில்லை என்றால் மக்கள் அனைவரும் தத்தம் விருப்பம் போல் வாழ்ந்து வருவார்கள். காலப்போக்கில்
ظَهَرَ ٱلْفَسَادُ فِى ٱلْبَرِّ وَٱلْبَحْرِ بِمَا كَسَبَتْ أَيْدِى ٱلنَّاسِ لِيُذِيقَهُم بَعْضَ ٱلَّذِى عَمِلُوا۟ لَعَلَّهُمْ يَرْجِعُونَ.
30:41. எங்கு நோக்கினும் குழப்பங்களும் கலவரங்களும் தான் எற்பட்டு வரும். அவர்கள் செய்து வரும் தீய செயல்களின் விளைவாக அவர்களுக்கு பல வேதனைகள் உருவாகி வரும். அப்போதாவது அவர்கள் மனந்திருந்தி, அல்லாஹ்வின் அறிவுரைகளை ஏற்று, அவற்றின் படி செயல்பட முன் வருகிறார்களா என்பதை பார்க்கத் தான் இந்த ஏற்பாடு.
முழுவதுமாக அழிவு ஏற்படுவதற்கு முன் அவர்களுடைய தீய செயல்களின் விளைவுகள் பிரச்னைகளாக உருவெடுக்கும். அவற்றை கவனித்து அப்போதாவது இறைவனின் அறிவுரைப்படி செயல்பட முன்வரவேண்டும். நடப்பது நடக்கட்டும். வரும்போது பார்த்துக் கொள்ளலாம் என்று அலட்சியமாக இருந்துவிட்டால், ஒரு கட்டத்திற்குப் பின் அந்த விளைவுகள் திடீரென்று பூதாகரமாக வந்து நிற்கும். அப்போது அவர்களால் எதுவும் செய்ய இயலாது. இப்படி அலட்சியமாக வாழ்ந்த
قُلْ سِيرُوا۟ فِى ٱلْأَرْضِ فَٱنظُرُوا۟ كَيْفَ كَانَ عَٰقِبَةُ ٱلَّذِينَ مِن قَبْلُ ۚ كَانَ أَكْثَرُهُم مُّشْرِكِينَ.
30:42. எத்தனையோ தலைமுறையினரின் கதி என்னவாயிற்று என்பதை உலகை சுற்றி பார்த்துக் கொள்ளும்படி சொல்லுங்கள். அப்போதாவது நம் கூற்றில் எந்த அளவிற்கு உண்மை இருக்கிறது என்பதை அவர்களால் புரிந்துகொள்ள முடியும். ஆனால் மக்களில் பெரும்பாலோர் மனஇச்சைப்படி வாழும் முஷ்ரிக்குகளாகவே இருப்பதால், இதைப் பற்றி எல்லாம் சிந்திக்கத் தயாராக இல்லை.
இறைவழிகாட்டுதலை ஏற்றுக்கொண்டவர்களே! நீங்கள் அவ்வாறு செயல்படாதீர்கள். மார்க்க உண்மைகளை தெளிவாக ஆராய்ந்து அறிந்த பின்னரே ஏற்றுக் கொள்ளுங்கள். (பார்க்க 25:73) அவ்வாறு தெளிவான பின்
فَأَقِمْ وَجْهَكَ لِلدِّينِ ٱلْقَيِّمِ مِن قَبْلِ أَن يَأْتِىَ يَوْمٌۭ لَّا مَرَدَّ لَهُۥ مِنَ ٱللَّهِ ۖ يَوْمَئِذٍۢ يَصَّدَّعُونَ.
30:43. எக்காலத்திற்கும் பொருந்தக் கூடிய நிலையான இந்த மார்க்க அறிவுரைகளின் படியே செயல்படுங்கள். அவற்றின் அடிப்படையில் ஆட்சியமைப்புத் திட்டங்களை உருவாக்குவதில் உங்கள் முழு கவனத்தையும் செலுத்தி வாருங்கள். (பார்க்க 30:30) அவ்வாறு செய்யா விட்டால் உங்களுக்கும் அந்த வேதனைகள் ஏற்படுவது நிச்சயம். அந்த தருணத்தில் இந்த வாய்ப்பு கிடைக்காது. காரணம் இருப்போர் இல்லாதோர் என்ற வேற்றுமை ஏற்பட்டு அதுவே சமுதாய அழிவுக்கு காரணியாக அமைந்துவிடும்.
مَن كَفَرَ فَعَلَيْهِ كُفْرُهُۥ ۖ وَمَنْ عَمِلَ صَٰلِحًۭا فَلِأَنفُسِهِمْ يَمْهَدُونَ.
30:44. எந்தச் சமுதாயம் இறை வழிகாட்டுதலுக்கு எதிராக செயல்படுமோ, அதன் பின்விளைவுகள் அதற்கே ஏற்படும். இதற்கு மாறாக, எந்தச் சமுதாயம் இறை வழிகாட்டுதலை ஏற்று அதன்படி சமூக நலத் திட்டங்களைத் தீட்டி உழைக்குமோ, அவற்றின் பலன்கள் அதற்கே கிடைக்கும். இத்தகைய சட்டங்களே நாம் ஏற்படுத்தியுள்ளோம்.
لِيَجْزِىَ ٱلَّذِينَ ءَامَنُوا۟ وَعَمِلُوا۟ ٱلصَّٰلِحَٰتِ مِن فَضْلِهِۦٓ ۚ إِنَّهُۥ لَا يُحِبُّ ٱلْكَٰفِرِينَ.
30:45. அல்லாஹ்வின் வழிகாட்டுதலின் படி யார் ஆக்கப்பூர்வமான சமூக நலத் திட்டங்களைத் தீட்டி அதற்காக உழைக்குமோ, அவர்களுக்கே சிறந்த பலன்கள் கிடைக்கும். வெறும் ஈமான் கொள்வதாலோ இறைவழிகாட்டுதலுக்கு எதிராக செயல்படுபவதாலோ, அல்லாஹ்வின் நேசம் ஒருபோதும் கிடைக்காது. அவர்களுக்கு இத்தகைய நற்பலன்கள் ஒருபோதும் கிடைக்காது.
அல்லாஹ்விடமிருந்து கிடைக்கின்ற இந்த நன்மைகள் ஏதோ நூதனமான முறையில் கிடைத்துவிடும் என்ற எதிர்ப்பார்ப்பில் இருக்காதீர்கள். அவன் ஏற்கனவே ஏற்படுத்தியுள்ள சட்ட விதிமுறைகளின் படியே கிடைக்கும். எடுத்துக்காட்டாக
وَمِنْ ءَايَٰتِهِۦٓ أَن يُرْسِلَ ٱلرِّيَاحَ مُبَشِّرَٰتٍۢ وَلِيُذِيقَكُم مِّن رَّحْمَتِهِۦ وَلِتَجْرِىَ ٱلْفُلْكُ بِأَمْرِهِۦ وَلِتَبْتَغُوا۟ مِن فَضْلِهِۦ وَلَعَلَّكُمْ تَشْكُرُونَ.
30:46. அல்லாஹ் உருவாக்கியுள்ள காற்று மண்டலத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அது உங்களுக்கு மழை நீரை கொண்டுவந்து உங்களை மகிழ்விக்கிறது. அந்த மழை நீர் வாழ்வாதார வசதிகள் அனைத்தையும் உங்களுக்கு கிடைக்க வழிசெய்கிறது. அதே காற்று பாய்மரக் கப்பல்களை ஓரிடத்திலிருந்து மற்ற இடங்களுக்குச் செல்ல உதவுகிறது. அந்த கப்பல்களில் இறைவனின் அருட்கொடைகளான உணவு மற்றும் இதர பொருட்களை எடுத்து செல்கிறீர்கள். இறைவனின் அறிவுரைப்படி செயல்பட்டு சிறப்பாக வாழ்வதற்கு இவை உங்களுக்கு சாதகமாக இருக்கின்றன.
அதாவது அல்லாஹ் படைத்துள்ள காற்று எவ்வாறு உங்களுக்கு பலவகையில் பலனுள்ளதாக உள்ளதோ அவ்வாறே இறைவழிகாட்டுதலை பின்பற்றுவதால் உங்களுக்குப் பல நன்மைகள் கிடைத்து வரும். அந்த நன்மைகள் பலவேறு புதிய நன்மையான நலத் திட்டங்களை உருவாக்க ஏதுவாக இருக்கும். இதுவே அல்லாஹ்வின் புறத்திலிருந்து கிடைக்கின்ற நன்மைகளாக இருக்கின்றன.
وَلَقَدْ أَرْسَلْنَا مِن قَبْلِكَ رُسُلًا إِلَىٰ قَوْمِهِمْ فَجَآءُوهُم بِٱلْبَيِّنَٰتِ فَٱنتَقَمْنَا مِنَ ٱلَّذِينَ أَجْرَمُوا۟ ۖ وَكَانَ حَقًّا عَلَيْنَا نَصْرُ ٱلْمُؤْمِنِينَ.
30:47. இத்தகைய நற்செய்திகளைத் தான் இதற்கு முன் வந்த நபிமார்களும் அவரவர் சமுதாய மக்களுக்கு எடுத்துரைத்து நேர்வழிப்படுத்த முயன்றனர். அவர்களும் ஒவ்வொரு விஷயத்தைப் பற்றியும் தெளிவான முறையில் தக்க ஆதாரங்களுடன் விளக்கி வந்தனர். அந்த அறிவுரைகளுக்கு எதிராக, சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டோர் கடுமையான தண்டனைக்கு ஆளானார்கள். இறைவழிகாட்டுதலை ஏற்று நன்மையான செயல்களை செய்தோர் அல்லாஹ்வின் உதவி பெற்று சிறப்பாக வாழ்ந்தார்கள்.
ٱللَّهُ ٱلَّذِى يُرْسِلُ ٱلرِّيَٰحَ فَتُثِيرُ سَحَابًۭا فَيَبْسُطُهُۥ فِى ٱلسَّمَآءِ كَيْفَ يَشَآءُ وَيَجْعَلُهُۥ كِسَفًۭا فَتَرَى ٱلْوَدْقَ يَخْرُجُ مِنْ خِلَٰلِهِۦ ۖ فَإِذَآ أَصَابَ بِهِۦ مَن يَشَآءُ مِنْ عِبَادِهِۦٓ إِذَا هُمْ يَسْتَبْشِرُونَ.
30:48. அல்லாஹ் படைத்துள்ள காற்றின் உதாரணத்தை மீண்டும் உங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறோம். அல்லாஹவின் கட்டளைப் படி காற்று கடலிலுள்ள ஈரப் பதத்தை மேலுக்கு இழுத்துச் சென்று மேகங்களை உருவாக்குகிறது. மேலும் இறைவனின் நியதிப்படி அந்த காற்று அடர்த்தியாகி மேகங்களை பல பிரிவுகளாக பிரித்து பல இடங்களில் மழை நீராகப் பொழிய வைக்கிறது. இப்படியாக பொழியும் மழை உங்கள் அனைவரையும் மகிழ்விக்கிறது.
وَإِن كَانُوا۟ مِن قَبْلِ أَن يُنَزَّلَ عَلَيْهِم مِّن قَبْلِهِۦ لَمُبْلِسِينَ.
30:49. மழை பொழிவதற்கு முன்பு அவர்கள் மிகவும் நிராசையாய் இருந்தார்கள்.
فَٱنظُرْ إِلَىٰٓ ءَاثَٰرِ رَحْمَتِ ٱللَّهِ كَيْفَ يُحْىِ ٱلْأَرْضَ بَعْدَ مَوْتِهَآ ۚ إِنَّ ذَٰلِكَ لَمُحْىِ ٱلْمَوْتَىٰ ۖ وَهُوَ عَلَىٰ كُلِّ شَىْءٍۢ قَدِيرٌۭ.
30:50. அல்லாஹ்வின் இந்த மாபெரும் ஏற்பாட்டைப் பற்றி நீங்களே சற்று சிந்தித்துப் பாருங்கள். உயிரற்ற நிலையில் இருக்கின்ற பூமி, மழை நீரைக் கொண்டு எவ்வாறு செழிப்பாகிறது என்பதையும் கவனியுங்கள். இவ்வாறே அல்லாஹ் இறந்தவர்களை உயிர்ப்பிக்கிறான். நிச்சயமாக ஒவ்வொரு விஷயத்திலும் அல்லாஹ்வின் அளவற்ற ஆற்றல்கள் மறைந்து இருப்பதைக் கவனியுங்கள்.
அதாவது காற்றை உருவாக்கி அதிலிருந்து மழையை பொழிய வைப்பது தான் அல்லாஹ்வின் நடைமுறைச் சட்டம். மழைநீரை பயன்படுத்தி அதிலிருந்து வாழ்வாதாரங்களை தேடிக் கொள்வது மனிதனின் கடமையாகும். அதை பயன்படுத்திக் கொள்ளா விட்டால் அதனால் ஏற்படும் நஷ்டம் மனிதனுக்குத் தானே அன்றி மழையைப் பொழியவைத்த அல்லாஹ்வுக்கு அல்ல.
அது போல இறைவழிகாட்டுதலை நபிமார்கள் மூலம் அனுப்புவதுதான் அல்லாஹ்வின் புறத்திலிருந்து செய்யப்பட்ட ஏற்பாடாகும். அவற்றை ஏற்று நடப்பதும் நடக்காததும் மனித விருப்பத்திற்கு விடப்பட்ட விஷயமாகும். (பார்க்க 18:29) அதை ஏற்று நடந்தால் நடை பிணமாக வாழும் சமுதாயம் புத்துயிர் பெற்று சிறப்பாக வாழ வழிகள் பிறக்கும். ஆக நீங்கள் எவ்வாறு செயல்படுகிறீர்களோ அவ்வாறே பலன்களும் விளைவுகளும் ஏற்படும். இது அல்லாஹ்வின் பேராற்றலாகும்.
وَلَئِنْ أَرْسَلْنَا رِيحًۭا فَرَأَوْهُ مُصْفَرًّۭا لَّظَلُّوا۟ مِنۢ بَعْدِهِۦ يَكْفُرُونَ.
30:51. மேலும் அல்லாஹ் ஏற்படுத்தியுள்ள அதே காற்று பயிர்களை பழுக்க வைத்து பொன் நிறமாக மாற்றிவிடுகிறது. அப்போது நீங்கள் அதை அறுவடை செய்து எடுத்துச் சென்றுவிடுகிறீர்கள். அதன்பின் அந்த மகசூல் யாவும் தனக்கு மட்டுமே சொந்தம் என நினைத்து அல்லாஹ்வின் அறிவுரைக்கு எதிராகச் செயல்படுகிறீர்கள்
அல்லாஹ்வின் ஏற்பாடுகள் எல்லாம் இல்லாதிருந்தால் உங்களால் விவசாயம் செய்து உணவு தானியங்களைப் பெற்றிருக்க முடியுமா? (பார்க்க 56:63-73) எனவே அல்லாஹ்வின் அறிவுரைப் படி சமுதாய மக்கள் அனைவருக்கும் அந்த விளைச்சல்கள் போய் சேரும்படி வழி செய்ய வேண்டும். இதுவே அல்லாஹ்வுக்கு நீங்கள் செலுத்தும் நன்றிக் கடனாகும்.
فَإِنَّكَ لَا تُسْمِعُ ٱلْمَوْتَىٰ وَلَا تُسْمِعُ ٱلصُّمَّ ٱلدُّعَآءَ إِذَا وَلَّوْا۟ مُدْبِرِينَ.
30:52. இந்த அறிவுரைகளை எல்லாம் சிந்தித்து ஏற்காதவர்கள் தாம் நடைபிணமாக வாழ்பவர்கள் ஆவர். இத்தகைய ஜடங்களுக்கு நீங்கள் மார்க்க உண்மைகளை கேட்கும்படி செய்ய முடியாது. நன்மையின் பக்கம் நீங்கள் விடும் அழைப்பைக் கேட்காத செவிடர்கள் இவர்கள். இத்தகையவர்களை நீங்கள் கேட்கச் செய்ய முடியாது.
அதே போல் இறந்து போன மகான்களிடமும் உங்களுடைய வேண்டுதல்களை கேட்கவைக்க முடியாது.
وَمَآ أَنتَ بِهَٰدِ ٱلْعُمْىِ عَن ضَلَٰلَتِهِمْ ۖ إِن تُسْمِعُ إِلَّا مَن يُؤْمِنُ بِـَٔايَٰتِنَا فَهُم مُّسْلِمُونَ.
30:53. இதே போல் குருட்டுத்தனமாக மூடநம்பிக்கையில் வாழ்பவர்களையும், வழிகேட்டிலிருந்து நேர்வழியில் கொண்டுவர முடியாது. யார் இறைவழிகாட்டுதலை உளமாற ஏற்க முன்வருகிறார்களோ அவர்களைத் தான் நீங்கள் நேர்வழிபடுத்த முடியும்.
۞ ٱللَّهُ ٱلَّذِى خَلَقَكُم مِّن ضَعْفٍۢ ثُمَّ جَعَلَ مِنۢ بَعْدِ ضَعْفٍۢ قُوَّةًۭ ثُمَّ جَعَلَ مِنۢ بَعْدِ قُوَّةٍۢ ضَعْفًۭا وَشَيْبَةًۭ ۚ يَخْلُقُ مَا يَشَآءُ ۖ وَهُوَ ٱلْعَلِيمُ ٱلْقَدِيرُ.
30:54. மேலும் அல்லாஹ்வின் படைப்புச் சட்டத்தையே கவனித்துப் பாருங்கள். மனிதன் பிறக்கும் போது மிகவும் பலவீனமாகப் பிறக்கின்றான். அதன்பின் அவனுக்கு கொஞ்சம் கொஞ்சமாக பலம் கூடுகிறது. அதன்பின் முதிய பருவத்தில் அவனுக்கு மீணடும் பலவீனமும், முடி நரையும் ஏற்படுகிறது. (பார்க்க 16:70) இப்படியாக அனைத்தும் அல்லாஹ்வின் செயல் திட்டப்படியே நடைபெறுகின்றன. இப்படியாக உலகில் உருவாவதும், பலம் பெறுவதும், பலவீனம் ஆவதும் அல்லாஹ்வுக்கு நன்கு தெரியும். இத்தகைய பேராற்றாலுடையவனே அல்லாஹ்.
அதவாது தனி நபர் விஷயத்தில் உடல் ரீதியாக செயல்படும் சட்டமே சமுதாயத்திலும் செயல்படுகின்றன. பலமின்றி இருக்கும் சமுதாயம் இறைவனின் வழிகாட்டுதலைப் பின்பற்றினால் பலம் பொருந்திய சமுதாயமாக உருவெடுக்கும். இறைவழிகாட்டுதலை விட்டுவிட்டால் மீண்டும் அது காலப் போக்கில் பலமற்றுப் போய்விடும். மனிதனுடைய வாழ்வு இவ்வுலக வாழ்வோடு முடிந்து விடுவதில்லை. அவனுடைய வாழ்வு மரணத்திற்குப் பின்பும் தொடர்கிறது. அது போலவே அவன் தன் வாழ்நாளில் செய்து வந்த நற்செயல்களும் தீய செயல்களும் இவ்வுலகை விட்டு நீங்குவதில்லை. எனவே
وَيَوْمَ تَقُومُ ٱلسَّاعَةُ يُقْسِمُ ٱلْمُجْرِمُونَ مَا لَبِثُوا۟ غَيْرَ سَاعَةٍۢ ۚ كَذَٰلِكَ كَانُوا۟ يُؤْفَكُونَ.
30:55. அவன் செய்து வந்த செயல்களின் விளைவுகளை எதிர்கொள்ளும் நாழிகை கண்டிப்பாக வந்தே தீரும். அத்தகைய கால கட்டத்தில் அவனுக்கு கொடுக்கப்பட்ட கால அவகாசம் மிகக் குறைவானதே என்றும், இன்னும் அதிகமாக அவகாசம் கொடுத்தால் நான் திருந்தி வாழ்ந்திருப்பேன் என்றும் புலம்பிக் கொண்டு இருப்பான். இது தான் அவர்களுடைய பரிதாபகர நிலையாகும். இதை அவர்களால் தவிர்க்க முடியாது.
وَقَالَ ٱلَّذِينَ أُوتُوا۟ ٱلْعِلْمَ وَٱلْإِيمَٰنَ لَقَدْ لَبِثْتُمْ فِى كِتَٰبِ ٱللَّهِ إِلَىٰ يَوْمِ ٱلْبَعْثِ ۖ فَهَٰذَا يَوْمُ ٱلْبَعْثِ وَلَٰكِنَّكُمْ كُنتُمْ لَا تَعْلَمُونَ.
30:56. ஆனால் அல்லாஹ்வின் வழிகாட்டுதலை ஏற்று, கல்வி ஞானத்துடன் செயல்படுபவர்கள் இவ்வாறு துக்கப்பட மாட்டார்கள். அவர்களுக்கு அல்லாஹ்வின் சட்ட திட்டங்கள் என்னவென்று தெளிவாகத் தெரியும். அவர்கள் இறை நிராகரித்தவர்களை நோக்கி, “மனித செயல்களுக்கேற்ற இறுதி விளைவுகள் தோற்றத்திற்கு வரும் வரையில் உங்களுக்கு கால அவகாசம் அளிக்கப்பட்டது. இதோ! அந்த கால அவகாசம் முடிவுபெற்று விளைவுகளை சந்திக்கும் நாள் வந்து விட்டது. இந்த உண்மைகளை எல்லாம் எடுத்துக் கூறியும் நீங்கள் விளங்கிக் கொள்ளாமல் இருந்தீர்களே!” என்று கூறுவார்கள்.
فَيَوْمَئِذٍۢ لَّا يَنفَعُ ٱلَّذِينَ ظَلَمُوا۟ مَعْذِرَتُهُمْ وَلَا هُمْ يُسْتَعْتَبُونَ.
30:57. அப்படியொரு கால கட்டத்தில் அநியாயமாக செயல்பட்டவர்கள் கூறும் சாக்குப் போக்குகள் ஒருபோதும் பலனளிக்காது. மேலும் அல்லாஹ்விடம் அவை எதுவும் எடுபடாது.
وَلَقَدْ ضَرَبْنَا لِلنَّاسِ فِى هَٰذَا ٱلْقُرْءَانِ مِن كُلِّ مَثَلٍۢ ۚ وَلَئِن جِئْتَهُم بِـَٔايَةٍۢ لَّيَقُولَنَّ ٱلَّذِينَ كَفَرُوٓا۟ إِنْ أَنتُمْ إِلَّا مُبْطِلُونَ.
30:58. சிந்தனையாளர்களே! உலக மக்கள் அனைவரும் நன்றாகப் புரிந்து செயல்படவேண்டும் என்பதற்காக மறைந்து கிடக்கும் உண்மைகளை இந்த குர்ஆனில் உதாரணங்கள் மூலமாக எடுத்துரைக்கிறோம். இத்தகைய அறிவுப்பூர்வமான ஆதாரங்களை அவர்களுக்கு எடுத்துரைத்த போதிலும், இவையாவும் மக்களை ஏமாற்றும் வித்தைகளே என்று தான் இறைவழிகாட்டுதலை ஏற்க மறுப்பவர்கள் கூறுவார்கள்.
كَذَٰلِكَ يَطْبَعُ ٱللَّهُ عَلَىٰ قُلُوبِ ٱلَّذِينَ لَا يَعْلَمُونَ.
30:59. இவ்வாறே அல்லாஹ்வின் நியதிப்படி அறிவைப் பயன்படுத்தாதவர்களின் உள்ளங்களில் திரை ஏற்பட்டு விடுகிறது.
فَٱصْبِرْ إِنَّ وَعْدَ ٱللَّهِ حَقٌّۭ ۖ وَلَا يَسْتَخِفَّنَّكَ ٱلَّذِينَ لَا يُوقِنُونَ.
30:60. இறைவழிகாட்டுதலை எடுத்துரைப்பவரே! இத்தகையவர்களைப் பற்றி கவலைப்படுவதை விட்டுவிட்டு,இறைச் செயல்திட்டங்களை நடைமுறைப் படுத்துவதில் தொடர்ந்து முயலுங்கள். அல்லாஹ்வின் வாக்கு ஒருபோதும் தவறாது. எனவே உமக்கு எதிராக செயல்படுபவர்கள், உன் இலட்சியத்தில் நீ பின்வாங்கிக் கொண்டதாக எண்ணவேண்டாம்.