بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ

29:0.அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் அறிவுரைப்படியே அனைத்துக் காரியங்களையும் செய்ய நாடுகிறேன். (பார்க்க 6:162)


الٓمٓ.

29:1. அளவற்ற அருளாளனாகிய அல்லாஹ்வின் புறத்திலிருந்து முஹம்மது நபிமூலமாக இறக்கி அருளப்பட்ட வேதமிது.


أَحَسِبَ ٱلنَّاسُ أَن يُتْرَكُوٓا۟ أَن يَقُولُوٓا۟ ءَامَنَّا وَهُمْ لَا يُفْتَنُونَ.

29:2. ஓ மனித இனமே! “நாங்கள் அல்லாஹ்வை ஏற்றுக்கொண்டோம் என்று உதட்டளவில் கூறிவிட்டு தம் மனம்போன போக்கில் வாழ்ந்து கொண்டிருந்தால், எந்த பிரச்சனைக்கும் ஆளாக மாட்டோம்” என்று எண்ணிக் கொண்டீர்களா?
அவ்வாறு இல்லை. அல்லாஹ்வை ஏற்றுக் கொள்வதோடு விஷயம் முடிவதில்லை. அவனுடைய வழிகாட்டுதலையும் ஏற்று அதன்படி செயல்பட்டால் தான் ஒவ்வொருவரின் வாழ்வும் சிறப்பாக இருக்கும். (பார்க்க 4:136) மேலும் அந்த சமுதாயமும் பிரச்சனைகளுக்கு உட்படாமல் இருக்கும்.


وَلَقَدْ فَتَنَّا ٱلَّذِينَ مِن قَبْلِهِمْ ۖ فَلَيَعْلَمَنَّ ٱللَّهُ ٱلَّذِينَ صَدَقُوا۟ وَلَيَعْلَمَنَّ ٱلْكَٰذِبِينَ.

29:3. இதற்கு முன் வாழ்ந்த எத்தனையோ சமுதாயத்தினர் இவ்வாறு உதட்டளவில் அல்லாஹ்வை ஏற்றுக் கொண்டு, அதற்கு மாற்றமாக செயல்பட்டதால் அல்லாஹ் நிர்ணயித்துள்ள “மனித செயல்களுக்கு ஏற்ற பின் விளைவுகளை” சந்தித்து அழிந்து விட்டனர். இப்போதுள்ள மக்களுக்கும் இதே நிலைதான் ஏற்படும். அதாவது அல்லாஹ்வின் வழிகாட்டுதலை உண்மைப்படுத்துவோர் யார் என்பதும் பொய்யாக்குபவர்கள் யார் என்ற உண்மையும் வெட்டவெளிச்சமாகி விடும்.
இதுவே அல்லாஹ்வை உதட்டளவில் ஏற்றுக்கொண்டு அவனுடைய வழிகாட்டுதலுக்கு எதிராக செயல்படுவோரின் நிலைமையாகும். இப்போது இறைவழிகாட்டுதலை முழுக்க முழுக்க நிராகரிப்பவர்களின் நிலைமை என்னவென்பதையும் கவனியுங்கள்.


أَمْ حَسِبَ ٱلَّذِينَ يَعْمَلُونَ ٱلسَّيِّـَٔاتِ أَن يَسْبِقُونَا ۚ سَآءَ مَا يَحْكُمُونَ.

29:4. அல்லாஹ்வின் வழிகாட்டுதலை வெளிப்படையாக ஏற்க மறுத்து தீய செயல்களில் ஈடுபட்டு, நாட்டை சீரழித்துக் கொண்டிருக்கிறார்களே அவர்களும், தமக்கு எவ்வித தீங்கும் ஏற்படாது என்று எண்ணத்தோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார்களா? அல்லாஹ் நிர்ணயித்துள்ள “மனித செயல்களுக்கேற்ற விளைவுகள்” என்ற பிடியிலிருந்து அவர்களால் தப்பித்துக்கொள்ள முடியுமா? ஒருபோதும் இல்லை. அவர்களின் முடிவும் மிகக் கெட்டதாகவே இருக்கும்.


مَن كَانَ يَرْجُوا۟ لِقَآءَ ٱللَّهِ فَإِنَّ أَجَلَ ٱللَّهِ لَءَاتٍۢ ۚ وَهُوَ ٱلسَّمِيعُ ٱلْعَلِيمُ.

29:5. அல்லாஹ் நிர்ணியித்துள்ள “மனித செயல்களுக்கு ஏற்ற விளைவுகளை” சந்தித்தே ஆக வேண்டும் என்பதை ஏற்றுக் கொள்பவர்கள், நாட்டு மக்களின் நிகழ்கால மற்றும் வருங்கால நலனில் அக்கறைக் கொண்டு ஆக்கப்பூர்வமான நற்காரியங்களை செய்து கொள்ளட்டும். ஏனெனில் அல்லாஹ் நிர்ணயித்த அதன் பலன்கள் தக்க தருணத்தில் நிச்சயமாக கிடைக்கும் என்பதை அவர்கள் நன்கு அறிவார்கள். நிச்சயமாக அல்லாஹ்வின் செவியேற்கும் வல்லமை, அனைத்தையும் அறிந்துகொள்ளும் வல்லமை அளவற்றவையாகும். எனவே மனிதன் சொல்வதும் செயல்படுவதும் அல்லாஹ்வை விட்டு மறையாது.


وَمَن جَٰهَدَ فَإِنَّمَا يُجَٰهِدُ لِنَفْسِهِۦٓ ۚ إِنَّ ٱللَّهَ لَغَنِىٌّ عَنِ ٱلْعَٰلَمِينَ.

29:6. மேலும் அல்லாஹ் காட்டிய வழியில் சிறப்பாக தொடர்ந்து உழைத்து வரும் சமுதாயம், தன்னுடைய நன்மைக்காகவே உழைக்கிறது என்பதையும், அவ்வாறு உழைக்காதவர்களுக்கு அதன் பின்விளைவுகள் அதற்கே உரித்தாகும் என்பதையும் அறிந்து செயல்படட்டும். மற்றபடி அல்லாஹ்வுக்கு எந்த உயர்வோ தாழ்வோ ஏற்படப் போவதில்லை. காரணம் அவன் தன்னிறைவு பெற்றவனாக இருக்கின்றான்.


وَٱلَّذِينَ ءَامَنُوا۟ وَعَمِلُوا۟ ٱلصَّٰلِحَٰتِ لَنُكَفِّرَنَّ عَنْهُمْ سَيِّـَٔاتِهِمْ وَلَنَجْزِيَنَّهُمْ أَحْسَنَ ٱلَّذِى كَانُوا۟ يَعْمَلُونَ.

29:7. எனவே அல்லாஹ்வின் வழிகாட்டுதலை ஏற்று அதன்படி ஆக்கப்பூர்வமான நலத் திட்டங்களைத் தீட்டி உழைத்து வந்தால் அவர்களிடமிருந்த தீய பழக்க வழக்கங்கள் அவர்களை விட்டு நீங்கிவரும். அத்துடன் அவர்கள் செய்துவரும் நற்செயல்களின் பலனாக அவர்களுக்கு பன்மடங்கு அழகான நன்மைகள் வந்தடையும். இதில் யாருக்கும் எவ்வித சந்தேகமும் வேண்டாம்.
மேலும் நன்மையான செயல்கள் எவை? எவ்வாறு அவற்றைப் பின்பற்ற வேண்டும் என்பதையும் நன்றாக அறிந்து கொள்ளுங்கள். உதாரணத்திற்கு உங்கள் குடும்பங்கள் சீரடைந்தால் தான் சமுதாயமும் சிறக்கும். எனவே


وَوَصَّيْنَا ٱلْإِنسَٰنَ بِوَٰلِدَيْهِ حُسْنًۭا ۖ وَإِن جَٰهَدَاكَ لِتُشْرِكَ بِى مَا لَيْسَ لَكَ بِهِۦ عِلْمٌۭ فَلَا تُطِعْهُمَآ ۚ إِلَىَّ مَرْجِعُكُمْ فَأُنَبِّئُكُم بِمَا كُنتُمْ تَعْمَلُونَ.

29:8. உங்கள் தாய் தந்தையரின் தேவைகளை அழகிய முறையில் நிறைவேற்றி வரும்படி நாம் உங்களுக்கு அறிவுறுத்தி இருக்கிறோம். எனவே இவை உங்கள் மீதுள்ள கடமையாகும். (பார்க்க 4:36, 31:14-15) ஆனால் அவர்கள் மார்க்க விஷயத்தில் தெளிவான ஞானம் இல்லாமல் அல்லாஹ்வுக்கு இணையாக வேறு வழிமுறைகளைப் பின்பற்ற சொன்னால், அவ்விருவருக்கும் அவ்விஷயத்தில் நீங்கள் அடிப்பணியத் தேவையில்லை. ஏனெனில் நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலும் அல்லாஹ் நிர்ணயித்த இலக்கை நோக்கியே செல்கின்றன. எனவே நீங்கள் செய்து கொண்டிருப்பவற்றைப் பற்றிய கேள்விக் கணக்கு நிச்சயம் உண்டு.
அதாவது தாய் தந்தையர் சொல்கிறார்கள் என்பதற்காக நீங்கள் அதன்படி செயல்பட்டு ,அது அல்லாஹ்வின் வழிகாட்டுதலுக்கு மாற்றமாக இருந்தால் அல்லாஹ் நிர்ணயித்துள்ள பின்விளைவுகள் என்ற சட்டம் மாறிப் போகாது. உதாரணத்திற்கு மருமகள் மீதுள்ள கடுப்பில் அவளை விவாகரத்து செய்ய சொன்னால், அதை நீங்கள் அடிப்பணியத் தேவையில்லை. நீங்கள் அல்லாஹ்வின் அறிவுரைப்படி, நடந்த விவகாரம் என்னவென்பதை நன்கறிந்து அதன்படியே செயல்பட வேண்டும். (பார்க்க 4:35) எனவே தாய் தந்தையருக்கு சேவை செய்வதற்கும் அடிபணிவதற்கும் உள்ள வித்தியாசத்தை நன்கு அறிந்து கொள்ளுங்கள்.
அதுபோல எல்லா விஷயத்திலும் அல்லாஹ்வின் கட்டளைகளுக்கு மட்டும் அடிபணிந்து செயல்பட வேண்டும். இதில் தாய் தந்தையரோ அல்லது அதிகாரிகளாயினும் சரியே. தனி நபர் வழிபாட்டிற்கு இஸ்லாமிய மார்க்கத்தில் இடமிருப்பதில்லை (பார்க்க 3:79).


وَٱلَّذِينَ ءَامَنُوا۟ وَعَمِلُوا۟ ٱلصَّٰلِحَٰتِ لَنُدْخِلَنَّهُمْ فِى ٱلصَّٰلِحِينَ.

29:9. இப்படியாக ஒவ்வொரு விஷயத்திலும் அல்லாஹ்வின் வழிகாட்டுதல் என்னவென்பதை நன்கறிந்து அதன்படி ஆக்கப்பூர்வமான நற்செயல்களை செய்பவர்கள் தாம் ஆற்றல்மிக்க சான்றோர்களின் பட்டியலில் இடம் பெறுவர்.


وَمِنَ ٱلنَّاسِ مَن يَقُولُ ءَامَنَّا بِٱللَّهِ فَإِذَآ أُوذِىَ فِى ٱللَّهِ جَعَلَ فِتْنَةَ ٱلنَّاسِ كَعَذَابِ ٱللَّهِ وَلَئِن جَآءَ نَصْرٌۭ مِّن رَّبِّكَ لَيَقُولُنَّ إِنَّا كُنَّا مَعَكُمْ ۚ أَوَلَيْسَ ٱللَّهُ بِأَعْلَمَ بِمَا فِى صُدُورِ ٱلْعَٰلَمِينَ.

29:10. மக்களில் சிலர், அல்லாஹ்வின் வழிகாட்டுதலை ஏற்றுக் கொள்வதாக உதட்டளவில் சொல்லி வருவார்கள். ஆனால் இவர்கள் அல்லாஹ்வின் ஆட்சியமைப்பு நலத் திட்டங்களுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் செயல்படுவார்கள். அதனால் பிரச்னைகள் ஏற்படும்போது, இவையெல்லாம் அல்லாஹ்வின் புறத்திலிருந்து ஏற்பட்ட துயரங்களைப் போன்று கருதுவார்கள். தேவையில்லாமல் நாம் சிக்கலில் மாட்டிக் கொண்டோமே என்று புலம்பிக் கொண்டு இருப்பார்கள். அதே சமயம் இவர்களுக்கு அனுகூலங்கள் ஏற்பட்டால்,“நாங்கள் உங்களுடன்தான் இருக்கிறோம்” என சொல்லிக்கொண்டு விரைந்தோடி வருவார்கள். ஆனால் அல்லாஹ்வோ அகிலத்தார் அனைவரின் மனதில் உள்ள எல்லா எண்ணங்களையும் அறிந்து கொள்ளும் வல்லமைப் பெற்றவனாக இல்லையா?


وَلَيَعْلَمَنَّ ٱللَّهُ ٱلَّذِينَ ءَامَنُوا۟ وَلَيَعْلَمَنَّ ٱلْمُنَٰفِقِينَ.

29:11. எனவே அல்லாஹ்வின் வழிகாட்டுதலை மனதார ஏற்று அதன்படி செயல்பட முன்வருபவர்கள் யார் என்பதும், வெளித் தோற்றத்தில் ஒன்று உள்ளத்தில் வேறு என்று செயல்படும் முனாஃபிக்குகள் யார் என்பதும் அல்லாஹ்வுக்குத் தெரியாமல் இல்லை.


وَقَالَ ٱلَّذِينَ كَفَرُوا۟ لِلَّذِينَ ءَامَنُوا۟ ٱتَّبِعُوا۟ سَبِيلَنَا وَلْنَحْمِلْ خَطَٰيَٰكُمْ وَمَا هُم بِحَٰمِلِينَ مِنْ خَطَٰيَٰهُم مِّن شَىْءٍ ۖ إِنَّهُمْ لَكَٰذِبُونَ.

29:12. மறுபுறம் இறைவழிகாட்டுதலை ஏற்க மறுப்பவர்களின் கூற்று என்னவென்பதையும் கவனியுங்கள். அவர்கள் அல்லாஹ்வை ஏற்று செயல்படும் மூஃமின்களிடம், “நீங்கள் எங்கள் வழக்கப்படி வாழ்ந்து கொள்ளுங்கள். பிரச்னை ஏதாவது ஏற்பட்டால் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். உங்களுடைய தீய செயல்களுக்கு நாங்கள் பொறுப்பேற்றுக் கொள்கிறோம்” என்று கூறுகிறார்கள். அவர்கள் செய்த பாவச் செயல்களின் சுமையே அவர்களால் சுமக்க முடியாதே. அப்படி இருக்க அவர்கள் எப்படி மற்றவர்களின் பாவச் சுமைகளைச் சுமக்க முடியும்? எனவே அவர்கள் யாவரும் பொய்யர்களே ஆவர். அவர்களை நீங்கள் பின்பற்றாதீர்கள்.


وَلَيَحْمِلُنَّ أَثْقَالَهُمْ وَأَثْقَالًۭا مَّعَ أَثْقَالِهِمْ ۖ وَلَيُسْـَٔلُنَّ يَوْمَ ٱلْقِيَٰمَةِ عَمَّا كَانُوا۟ يَفْتَرُونَ.

29:13. அப்படியும் அவர்கள் சிலரை வழிகெடுத்தால், தம் பாவச் சுமைகளை சுமப்பதோடு தங்களால் வழிகெட்டவர்களின் பாவச் சுமைகளையும் சுமக்க நேரிடும். தீய செயல்களின் விளைவுகள் தோற்றத்திற்கு வரும் கால கட்டத்தில், இவ்வாறு அவர்கள் இட்டுக்கட்டி கூறிவந்த விஷயங்கள் யாவும் தெளிவாகிவிடும்.
இவ்வாறு அவர்கள் பேசுவது புதிதான ஒன்றல்ல. காலம் காலமாக இறைவழிகாட்டுதலை நபிமார்கள் மக்களுக்கு எடுத்துரைத்த போதெல்லாம், இவ்வாறே சமூக விஷமிகள் நடந்து வந்துள்ளார்கள். வரலாற்று ஆதாரங்களும் இதையே பறைசாற்றுகின்றன.


وَلَقَدْ أَرْسَلْنَا نُوحًا إِلَىٰ قَوْمِهِۦ فَلَبِثَ فِيهِمْ أَلْفَ سَنَةٍ إِلَّا خَمْسِينَ عَامًۭا فَأَخَذَهُمُ ٱلطُّوفَانُ وَهُمْ ظَٰلِمُونَ.

29:14. இவ்வாறே நூஹ் நபி காலத்திலும் நடந்து வந்தது. அவரைப் பின்பற்றி வந்த சமுதாயத்தினர், அங்கு ஏற்பட்ட ஆபத்திலிருந்து மீண்டு கொண்டனர். அதைத் தொடர்ந்து அந்நாட்டு மக்களிடையே நூஹ் நபியுடைய போதனைகள் தொள்ளாயிறத்து ஐம்பது ஆண்டுகள் வரையில் ஜீவித்து இருந்தது.(i.e. Noha's Era was 950 years) அவரை ஏற்காத அநியாக்காரர்கள், புயல் காற்றில் சிக்கி அழிவை சந்தித்துக் கொண்டனர்.


فَأَنجَيْنَٰهُ وَأَصْحَٰبَ ٱلسَّفِينَةِ وَجَعَلْنَٰهَآ ءَايَةًۭ لِّلْعَٰلَمِينَ.

29:15. நூஹ் நபியின் அறிவுரைகளை எதிர்த்து வந்தவர்கள் அங்கு ஏற்பட்ட பிரளயத்தில் மாண்டு போனார்கள். அவரைப் பின்பற்றி வந்தவர்கள் அவர் தயாரித்த கப்பலில் ஏறி தப்பித்துக் கொண்டனர். (பார்க்க 11:37) இந்த வரலாற்றுச் சம்பவம் வருங்காலத்தில் வரும் உலக மக்கள் அனைவருக்கும் படிப்பினையாக உள்ளது.
வரம்பு மீறின செயல்களில் ஈடுபடுபவர்கள் எந்த அறிவுரையையும் ஏற்று நடக்கும் மனப் பக்குவத்தை இழந்து விடுகின்றனர். எனவே இயற்கை சீற்றங்களைப் பற்றிய முன்னெச்சரிக்கையை நூஹ் நபி செய்தும், அவர்கள் அதை பொருட்படுத்தவில்லை. இதனால் அவர்கள் அழிந்து போனார்கள். நூஹ் நபி காலத்திற்குப் பின் இப்றாஹீம் நபியின் (Abraham’s era) காலம் துவங்குகிறது .


وَإِبْرَٰهِيمَ إِذْ قَالَ لِقَوْمِهِ ٱعْبُدُوا۟ ٱللَّهَ وَٱتَّقُوهُ ۖ ذَٰلِكُمْ خَيْرٌۭ لَّكُمْ إِن كُنتُمْ تَعْلَمُونَ.

29:16. நூஹ் நபியைத் தொடர்ந்து இப்றாஹீம் நபியும் தம் நாட்டு மக்களிடம், “அல்லாஹ்வின் வழிகாட்டுதலுக்கு மட்டும் அடிபணிந்து செயலாற்றுங்கள். அவற்றிற்கு மாற்றமாக செயல்படுவதால் ஏற்படும் விபரீத விளைவுகளுக்கு அஞ்சி வாழுங்கள். இப்படி வாழ்வதால் மட்டுமே உங்களுக்கு சிறப்பான வாழ்வு கிடைக்கும். இதை அறிவுப்பூர்வமாகச் சிந்தித்துப் பார்த்தால் உங்களுக்கே உண்மை விஷயங்கள் புரிந்துவிடும்” என்று போதித்து வந்தார்.


إِنَّمَا تَعْبُدُونَ مِن دُونِ ٱللَّهِ أَوْثَٰنًۭا وَتَخْلُقُونَ إِفْكًا ۚ إِنَّ ٱلَّذِينَ تَعْبُدُونَ مِن دُونِ ٱللَّهِ لَا يَمْلِكُونَ لَكُمْ رِزْقًۭا فَٱبْتَغُوا۟ عِندَ ٱللَّهِ ٱلرِّزْقَ وَٱعْبُدُوهُ وَٱشْكُرُوا۟ لَهُۥٓ ۖ إِلَيْهِ تُرْجَعُونَ.

29:17. அதுமட்டுமின்றி மக்களிடையே நடந்து வந்த சிலை வணக்க வழிபாடுகளுக்கும் அவர் எதிர்ப்பு தெரிவித்து வந்தார். அவர் தன் மக்களிடம், “அல்லாஹ்வின் வழிகாட்டுதலை விட்டுவிட்டு உங்களுடைய தேவைகள் நிறைவேற நீங்களே செய்து வைத்துள்ள சிலைகள் முன் மண்டியிட்டு நிற்கிறீர்களே! இவ்வுலகப் படைப்புகளில் தலைச்சிறந்த படைப்பாகிய மனிதனின் நிலை (பார்க்க 17:70) இந்த அளவிற்கு மோசமாக உள்ளதே. மேலும் ஒவ்வொரு சிலைக்கும் பின்னணியில் கற்பனை கதைகளைச் சொல்லி மக்களை ஏமாற்றி வருகிறீர்களே! அவை என்ன உங்களுக்குத் தேவையான வாழ்வாதாரங்களை அளிக்கக்கூடிய சக்திப் பெற்றவையா? இவற்றை எல்லாம் விட்டுவிட்டு அல்லாஹ் படைத்துள்ள இயற்கை பரிபாலன அமைப்பின் மூலமே உங்கள் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள உழையுங்கள். (பார்க்க 53:39) அவ்வாறு கிடைத்த வாழ்வாதாரங்களை மக்கள் அனைவருக்கும் சரிசமமாகப் பங்கிட்டு, அல்லாஹ்வுக்கு நன்றி விசுவாசத்துடன் நடந்து கொள்ளுங்கள். நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலும் அல்லாஹ் நிர்ணயித்த இலக்கை நோக்கியே செல்கிறது. எனவே இதற்கு மாற்றமாக செயல்பட்டால் அதன் விளைவுகளை நிச்சயமாக சந்தித்துக் கொள்வீர்கள்” என்று போதித்து வந்தார்.


وَإِن تُكَذِّبُوا۟ فَقَدْ كَذَّبَ أُمَمٌۭ مِّن قَبْلِكُمْ ۖ وَمَا عَلَى ٱلرَّسُولِ إِلَّا ٱلْبَلَٰغُ ٱلْمُبِينُ.

29:18. மேலும் அவர், “நான் எடுத்துரைக்கும் அறிவுரைகளை ஏற்காமல் அவற்றிற்கு மாறாக செயல்பட்டால், நான் மனம் தளர்ந்து போகமாட்டேன். ஏனெனில் உங்களுக்கு முன் வாழ்ந்த பல சமூகத்தவர்கள் இவ்வாறே இறைவழிகாட்டுதலைப் பொய்ப்பித்து வந்துள்ளனர். எனவே எனக்குக் கிடைத்துள்ள இறைவழிகாட்டுதலை மக்களிடம் தெள்ளத் தெளிவாக எடுத்துரைப்பதே என் மீதுள்ள கடமையாகும்” என்று மக்களிடம் எடுத்துரைத்து வந்தார்.


أَوَلَمْ يَرَوْا۟ كَيْفَ يُبْدِئُ ٱللَّهُ ٱلْخَلْقَ ثُمَّ يُعِيدُهُۥٓ ۚ إِنَّ ذَٰلِكَ عَلَى ٱللَّهِ يَسِيرٌۭ.

29:19. மேலும் அவர், “மூடநம்பிக்கையில் வாழ்வதை விட்டுவிட்டு உலகப் படைப்புகளின் செயல்பாடுகளைப் பற்றி ஆராய்ந்து பாருங்கள். அவற்றின் ஒவ்வொன்றும் தொடக்க நிலையிலிருந்து படிப்படியாக முன்னேறி அதற்கே உரிய இறுதி இலக்கை எவ்வாறு சென்று அடைகிறது என்பதை நீங்கள் கவனித்துப் பாருங்கள். இறைவனின் செயல்திட்டப்படி இவையாவும் எந்த சிரமுமின்றி படிப்படியாக வளர்ந்து இறுதி இலக்கை சென்றடைகின்றன அல்லவா?


قُلْ سِيرُوا۟ فِى ٱلْأَرْضِ فَٱنظُرُوا۟ كَيْفَ بَدَأَ ٱلْخَلْقَ ۚ ثُمَّ ٱللَّهُ يُنشِئُ ٱلنَّشْأَةَ ٱلْءَاخِرَةَ ۚ إِنَّ ٱللَّهَ عَلَىٰ كُلِّ شَىْءٍۢ قَدِيرٌۭ.

29:20. மேலும் என் அறிவுரைகளை நீங்கள் கண்மூடித்தனமாக ஏற்றுக்கொள்ள வேண்டிய அவசியமுமில்லை. நீங்களே உலகை சுற்றிப் பாருங்கள். உலக படைப்புகள் எவ்வாறு தோன்றின? அவை எவ்வாறு பல படித்தரங்களைக் கடந்து முழுமை அடைந்தன? அவற்றின் ஒவ்வொன்றும் புதிய படைப்பு உருவாவதற்கு எவ்வாறு துணை நிற்கின்றன? இது போன்ற விஷயங்களை நன்கறிந்து அதன் பின்னரே அல்லாஹ்வின் பக்கம் நான் விடும் அழைப்பை ஏற்றுக் கொள்ளுங்கள். உலகப் படைப்புகளை படைத்ததோடு அவை ஒவ்வொன்றும் செயல்படும் முறையையும் நிர்ணயித்த அல்லாஹ், மாபெரும் வல்லமைப் பெற்றவன்தான் என்பதை உணர்வீர்கள். இந்த பேருண்மைகளை மக்களிடம் எடுத்துரையுங்கள்.


يُعَذِّبُ مَن يَشَآءُ وَيَرْحَمُ مَن يَشَآءُ ۖ وَإِلَيْهِ تُقْلَبُونَ.

29:21. இறைவனின் அந்த சட்ட விதிமுறைகளின் படி தீய செயல்களில் ஈடுபடுவோர், வேதனைகளுக்கு ஆளாகிறார்கள். ஆக்கப்பூர்வமான நற்செயல்களை செய்வோருக்கு அருட்கொடைகள் பல கிடைத்து வருகின்றன. இறைவனின் இந்த சட்ட விதிமுறைகளை விட்டு மனிதனால் எங்கும் தப்பித்து செல்லவே முடியாது. (பார்க்க 11:56)


وَمَآ أَنتُم بِمُعْجِزِينَ فِى ٱلْأَرْضِ وَلَا فِى ٱلسَّمَآءِ ۖ وَمَا لَكُم مِّن دُونِ ٱللَّهِ مِن وَلِىٍّۢ وَلَا نَصِيرٍۢ.

29:22. அல்லாஹ் நிர்ணயித்துள்ள இந்த விதிமுறைகளை யாராலும் மாற்றவும் முடியாது. எனவே உங்களுடைய சிறப்பான வாழ்விற்கு அல்லாஹ்வின் வழிகாட்டுதலை விட்டால் வேறு எந்த வழிமுறையும் கிடைக்காது. உங்கள் துயரங்களை நீக்க வேறு யாரும் துணை நிற்கவும் மாட்டார்கள்.


وَٱلَّذِينَ كَفَرُوا۟ بِـَٔايَٰتِ ٱللَّهِ وَلِقَآئِهِۦٓ أُو۟لَٰٓئِكَ يَئِسُوا۟ مِن رَّحْمَتِى وَأُو۟لَٰٓئِكَ لَهُمْ عَذَابٌ أَلِيمٌۭ.

29:23. மேலும் அவர்,“அல்லாஹ்வின் வழிகாட்டுதலையும், தம் செயல்களுக்கு அவன் நிர்ணயித்துள்ள விளைவுகளை சந்திக்க நேரிடும் என்பதையும் ஏற்றுக் கொள்ளாத சமுதாயம், அல்லாஹ்வின் அருட்கொடைகளை இழந்து நிராசையாய் நிற்கும். அதுமட்டுமின்றி அவர்கள் பல வேதனைகளுக்கு ஆளாவார்கள்” என்றும் மக்களிடம் எடுத்துரைத்து வந்தார்.
இவ்வாறு இப்றாஹீம் நபி மக்களுக்கு பலமுறை போதித்து வந்தார். (பார்க்க 6:76-80) மக்களில் சிலரைத் தவிர மற்றவர்கள் அவருடைய அறிவுரைகளுக்கு செவி சாய்க்கவில்லை. எனவே அவர் சிலைவணக்க வழிபாடுகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க தீர்மானித்து சிலைகளை உடைத்து விட்டார். சிலைகள் உடைக்கப்பட்டு இருப்பதை கண்ட மக்கள் கொதித்துப் போனார்கள். அவருக்கு எதிராக ஆவேசமாக பேச ஆரம்பித்தனர். (பார்க்க 21:57-68, 37:86-98)


فَمَا كَانَ جَوَابَ قَوْمِهِۦٓ إِلَّآ أَن قَالُوا۟ ٱقْتُلُوهُ أَوْ حَرِّقُوهُ فَأَنجَىٰهُ ٱللَّهُ مِنَ ٱلنَّارِ ۚ إِنَّ فِى ذَٰلِكَ لَءَايَٰتٍۢ لِّقَوْمٍۢ يُؤْمِنُونَ.

29:24. இதனால் அந்த சமுதாயத்தினர் அவரைக் கொன்று விடுங்கள் அல்லது நெருப்புக் குண்டத்தில் போட்டு பொசுக்கி விடுங்கள் என ஆவேசமாக பேசினார்கள். அவர்களால் இதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும்? ஆனால் இப்றாஹீம் நபி இறைவனின் அறிவுரைப்படி ஹிஜ்ரத் செய்து விட்டதால் (பார்க்க 29:26,37:98-99) மக்களின் கொந்தளிப்புத் "தீ" நாளடைவில் தணிந்து விட்டது. இப்படியாக அல்லாஹ் அவர்களுடைய சதி திட்டத்திலிருந்து அவரை காப்பாற்றினான். ஆக இந்தச் சம்பவ நிகழ்ச்சியில் ஈமான் கொண்ட மக்களுக்குப் பல படிப்பினைகள் உள்ளன.
அதாவது சிலை வணக்க வழிபாடுகளை விட்டு மக்களை திருத்த வேண்டும் என்றால் மக்களுடைய துயர் துடைப்புப் பணியைத் தொடர்ந்து செய்து வரவேண்டும். அதனால் மக்களின் ஆதரவும் அபிமானமும் பெற்று சிறந்ததொரு சமுதாயத்தை உருவாக்க முடியும். அல்லாஹ்வின் வழிகாட்டுதலைப் பின்பற்றி வாழ்வதால் ஏற்படுகின்ற சிறப்புகளை எடுத்துரைத்து மக்களை திருத்த முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். அப்போது தான் காலப் போக்கில் சிலைகளின் மீதுள்ள அளவுகடந்த பாசம் குறைந்து அவை எல்லாம் மனித வாழ்க்கைக்கு தேவையற்றவை என்பதை உணர்வார்கள். எனவே தான் இப்றாஹீம் நபியும் அங்கிருந்து புறப்பட்டு வெளியூருக்குச் சென்றுவிட்டார். மேலும் அவர் இறுதியாக மக்களுக்கு விடுத்த செய்தியில் இவ்வாறு கூறினார்.


وَقَالَ إِنَّمَا ٱتَّخَذْتُم مِّن دُونِ ٱللَّهِ أَوْثَٰنًۭا مَّوَدَّةَ بَيْنِكُمْ فِى ٱلْحَيَوٰةِ ٱلدُّنْيَا ۖ ثُمَّ يَوْمَ ٱلْقِيَٰمَةِ يَكْفُرُ بَعْضُكُم بِبَعْضٍۢ وَيَلْعَنُ بَعْضُكُم بَعْضًۭا وَمَأْوَىٰكُمُ ٱلنَّارُ وَمَا لَكُم مِّن نَّٰصِرِينَ.

29:25. “உலக வாழ்க்கைக்கு துணை நிற்கின்ற அல்லாஹ்வின் வழிகாட்டுதலை விட்டு, நீங்கள் வணங்கி வருபவை யாவும் அவற்றின் மீது உங்களிடையே உள்ள பாசத்தின் காரணமாகத் தான். இதைத் தவிர அவற்றில் வேறு எந்த சிறப்பும் இல்லை. அவை உங்களுக்கு எந்த வழிகாட்டுதலும் அளிப்பதில்லை. (பார்க்க 10:18) இதனால் நீங்கள் செய்து வரும் தவறான செயல்கள் யாவும் உங்களுக்கு அழகாகத் தோன்றுகின்றன. (பார்க்க 29:38) எனவே உங்கள் செயல்களின் விளைவுகள் தோற்றத்திற்கு வரும் கால கட்டத்தில் ஒருவருக்கொருவர் சாடிக் கொண்டும் சபித்துக் கொண்டும் இருப்பீர்கள். இருந்தும் உங்கள் துயரங்களிலிருந்து உங்களை காப்பாற்ற யாரும் வர மாட்டார்கள். இப்படியாக நீங்கள் செல்லும் இடம் நரகமாகத்தான் இருக்கும்” என்று அறிக்கை வெளியிட்டார்.
இவ்வாறு அறிக்கை வெளியிட்டும் யாரும் அவருடைய அறிவுரைகளை செவிசாய்த்து வரவில்லை. மிகச் சிலரே அவருடைய பேச்சில் உண்மை இருப்பதாக ஒப்புக் கொண்டாலும், (பார்க்க 21:65) அவரை யாரும் முழு அளவில் ஏற்றுக் கொள்ளவில்லை.


۞ فَـَٔامَنَ لَهُۥ لُوطٌۭ ۘ وَقَالَ إِنِّى مُهَاجِرٌ إِلَىٰ رَبِّىٓ ۖ إِنَّهُۥ هُوَ ٱلْعَزِيزُ ٱلْحَكِيمُ.

29:26. ஆக இப்றாஹீம் நபியின் அறிவுரைகளை முழு அளவில் ஏற்றுக்கொண்டவர் அவருடைய ஒன்றுவிட்ட சகோதரர் லூத் நபி மட்டும் ஆவார். அவரிடம், “நிச்சயமாக நான் என் இறைவனின் வழிகாட்டுதலை பெற இவ்வூரை விட்டு ஹிஜ்ரத் செய்கிறேன். இறைவனின் செயல் திட்டங்கள் யாவும் அனைத்தையும் மிகைத்தவையாகவும், முழுக்க முழுக்க ஞானத்தின் அடிப்படையைக் கொண்டவையும் ஆகும்” என்றார்.
அதாவது இறைவனின் செயல் திட்டங்கள் இந்த அளவிற்கு சிறப்பாகவும் ஞானம் மிக்கதாகவும் இருந்தும், அவற்றை அவ்வூர் மக்கள் ஏற்றுக் கொள்ளாததால் அவர் அங்கிருந்து வெளியேறி, இறைச் செயல் திட்டங்களை நிறைவேற்ற சாதகமான இடத்திற்கு சென்றுவிட்டார். இதையே ஹிஜ்ரத் என்று சொல்லப்படும். அவ்வாறே அவர் வளம் மிக்க நாடாக இருந்த பாலஸ்தீன நாட்டிற்குச் சென்று அங்கு மில்லத் என்ற சமுதாயத் தொண்டு நிறுவனத்தை நிறுவி சிறப்பாக செயல்பட்டார். அது காலப் போக்கில் மில்லதெ இப்றாஹீம் எனும் அரசு அமைப்பாக உருவெடுத்தது. அந்த மில்லத்தின் முக்கிய நோக்கம் தன் நாட்டிலும், அதன் சுற்று வட்டாரத்திலும் நிகழ்ந்து வரும் அநியாய அக்கிரமங்களை ஒழித்துக் கட்டி, சாந்தமான, அமைதியான, பாதுகாப்பான சமுதாயத்தை உருவாக்குவதே ஆகும்.
இப்படியாக அவர் சிறப்பாக நாட்டு மக்களின் அமைதிக்காக பாடுபட்டு வந்தார். அவருக்கு நீண்ட காலம் வரையில் புத்திர பாக்கியம் இல்லாமல் இருந்தது. அதன் பின் அவருடைய வயதான காலத்தில் இஸ்மாயில் எனும் மகன் பிறந்தார். அதன்பின் இஸ்ஹாக் பிறந்தார். (பார்க்க 14:39)


وَوَهَبْنَا لَهُۥٓ إِسْحَٰقَ وَيَعْقُوبَ وَجَعَلْنَا فِى ذُرِّيَّتِهِ ٱلنُّبُوَّةَ وَٱلْكِتَٰبَ وَءَاتَيْنَٰهُ أَجْرَهُۥ فِى ٱلدُّنْيَا ۖ وَإِنَّهُۥ فِى ٱلْءَاخِرَةِ لَمِنَ ٱلصَّٰلِحِينَ.

29:27. இப்படியாக இப்றாஹீம் நபிக்கு இஸ்ஹாக் எனும் மகனும் அதன்பின் யாஃகூப் எனும் பேரனும் பிறந்தனர். அது மட்டுமின்றி அவர்களுடைய சந்ததிகளில் நபித்துவமும், இறைவேத அறிவுரைகளும் கிடைத்து வந்தன. அவர்களுடைய நன்நடத்தையின் பலனாக அவர்கள் அனைவரும் உலகில் சிறப்பாக வாழ்ந்து ஆட்சியும் செய்து வந்தனர். (பார்க்க 4:54) அது மட்டுமின்றி அவர்கள் அனைவரும் மறுமை நாளிலும் சிறந்த ஆற்றல் மிக்கவர்களாக இருப்பார்கள்.


وَلُوطًا إِذْ قَالَ لِقَوْمِهِۦٓ إِنَّكُمْ لَتَأْتُونَ ٱلْفَٰحِشَةَ مَا سَبَقَكُم بِهَا مِنْ أَحَدٍۢ مِّنَ ٱلْعَٰلَمِينَ.

29:28. அதே போல் லூத் நபியும் அவருடைய சமூகத்தாரிடம் அனுப்பி வைக்கப்பட்டார். அவருடைய சமூகத்தாரின் தகாத செயல்களைப் பார்த்து மனம் வெதும்பினார். அவர், தன் சமூகத்தார் உலகில் இதுவரை யாருமே செய்யாத மானக்கேடான வெறுக்கத்தக்க செயலை செய்து வருவதை மிகவும் கடிந்து வந்தார்.


أَئِنَّكُمْ لَتَأْتُونَ ٱلرِّجَالَ وَتَقْطَعُونَ ٱلسَّبِيلَ وَتَأْتُونَ فِى نَادِيكُمُ ٱلْمُنكَرَ ۖ فَمَا كَانَ جَوَابَ قَوْمِهِۦٓ إِلَّآ أَن قَالُوا۟ ٱئْتِنَا بِعَذَابِ ٱللَّهِ إِن كُنتَ مِنَ ٱلصَّٰدِقِينَ.

29:29.“நீங்கள் உங்கள் காம இச்சைகளை தணித்துக் கொள்ள ஆண்களைத் தேடிச் செல்கிறீர்களே. இது சரியா? அது மட்டுமின்றி வழிப்பறிக் கொள்ளைகளிலும் ஈடுபட்டு வருகிறீர்கள். உங்களுடைய அரசவையிலும் வெறுக்கத் தக்க செயல்களை செய்து வருகிறீர்கள். இதனால் ஏற்படும் விளைவுகளைப் பற்றி எண்ணிப் பார்த்தீர்களா?” என்று அவர்களிடம் பலமுறை கேட்டு வந்தார். ஆனால் அவர்களோ அவருடைய அறிவுரைகளுக்கு செவி சாய்க்கவில்லை. மாறாக அவர்கள்,“மனித செயல்களுக்கேற்ற விளைவுகள்” என்ற சட்டத்தின்படி ஆபத்துகள் ஏற்படும் என்று அடிக்கடி மிரட்டி வருகிறீரே! அது உண்மை என்றால் அல்லாஹ்வின் அந்த வேதனையை கொண்டு வாரும்” என்று அவர்கள் ஏளனமாக பேசி வந்தார்கள். இதைத் தவிர அவர்களுடைய செயலில் எந்த மாற்றமும் ஏற்படுவதாக இல்லை.


قَالَ رَبِّ ٱنصُرْنِى عَلَى ٱلْقَوْمِ ٱلْمُفْسِدِينَ.

29:30. இதனால் அவர் மன வருத்தத்துடன், “இறைவா! இப்படிப்பட்ட கேடுகெட்ட சமுதாயத்தினரிடமிருந்து பாதுகாத்துக் கொள்ள எனக்கு உதவி புரிவாயாக!” என்று பிரார்த்தித்தார்.
இப்படியாக அந்த சமுதாயத்தினர் திருந்துவதற்கான எல்லா வாய்ப்புகளையும் இழந்து விட்டார்கள். எனவே அவர்கள் அழிந்து போவதைத் தவிர வேறு எந்த வழியும் இல்லை. இந்த செய்தி இப்ராஹீம் நபியிடம் வருகிறது.


وَلَمَّا جَآءَتْ رُسُلُنَآ إِبْرَٰهِيمَ بِٱلْبُشْرَىٰ قَالُوٓا۟ إِنَّا مُهْلِكُوٓا۟ أَهْلِ هَٰذِهِ ٱلْقَرْيَةِ ۖ إِنَّ أَهْلَهَا كَانُوا۟ ظَٰلِمِينَ.

29:31. இறைச் செய்தியை எடுத்துக்கொண்டு சிலர் இப்ராஹீம் நபியிடம் வந்தனர். அல்லாஹ்விடமிருந்து வந்த அந்த செய்தியாளர்கள், “நிச்சயமாக அந்த ஊரார் அநியாய அக்கிரம செயலில் எல்லையை கடந்து விட்டதால், இறைவனின் நியதியின்படி அழிவை சந்திக்கப் போகிறார்கள்” என்று கூறினர்.


قَالَ إِنَّ فِيهَا لُوطًۭا ۚ قَالُوا۟ نَحْنُ أَعْلَمُ بِمَن فِيهَا ۖ لَنُنَجِّيَنَّهُۥ وَأَهْلَهُۥٓ إِلَّا ٱمْرَأَتَهُۥ كَانَتْ مِنَ ٱلْغَٰبِرِينَ.

29:32. இதைக் கேட்ட இப்றாஹீம் நபி திடுக்கிட்டுப் போனார். அவர், “அவ்வூரில் லூத்தும் இருக்கிறாரே” என்றார். அதற்கு அவர்கள், எங்களுக்கும் அந்த விஷயம் தெரியும் என்றனர். “எனவே இச்செய்தியை லூத்திடம் எடுத்துரைத்து, தன்னை காப்பாற்றிக் கொள்ள அறிவுருத்துவோம். ஆனால் அவருடைய மனைவி அந்த முன்னெச்சரிக்கையைப் பொருட்படுத்த மாட்டாள். எனவே அவள் அழிந்து போவோரில் ஒருத்தியாக இருப்பாள். மற்றபடி லூத் நபியை சார்ந்தவர்களும் அந்த அழிவிலிருந்து மீண்டு கொள்வார்கள்” என்றனர்.


وَلَمَّآ أَن جَآءَتْ رُسُلُنَا لُوطًۭا سِىٓءَ بِهِمْ وَضَاقَ بِهِمْ ذَرْعًۭا وَقَالُوا۟ لَا تَخَفْ وَلَا تَحْزَنْ ۖ إِنَّا مُنَجُّوكَ وَأَهْلَكَ إِلَّا ٱمْرَأَتَكَ كَانَتْ مِنَ ٱلْغَٰبِرِينَ.

29:33. அதே போல் இறைச் செய்தியாளர்கள் லூத் நபியிடம் அச்செய்தியை எடுத்துரைத்த போது, அவ்வூர் மக்களைப் பற்றி எண்ணி அவர் மிகவும் விசனப்பட்டார். அவர்களுக்கு நேரவிருக்கும் அழிவை எண்ணி சங்கடப்பட்டார். இதைக் கண்ட அவர்கள், “நீ அவ்வூராரை குறித்து பயப்பட்டோ, வருத்தப்பட்டோ ஆகப் போவது ஒன்றுமில்லை. உன் மனைவியும் அந்த அழிவிலிருந்து மீளமாட்டாள். மற்றபடி நீங்களும் உங்களை சார்ந்தவர்களும் இங்கிருந்து புறப்பட்டுச் சென்று விடுங்கள். (பார்க்க 11:81) அந்த அழிவிலிருந்து நீங்கள் மீண்டு கொள்வீர்கள்” என்று கூறினர்.


إِنَّا مُنزِلُونَ عَلَىٰٓ أَهْلِ هَٰذِهِ ٱلْقَرْيَةِ رِجْزًۭا مِّنَ ٱلسَّمَآءِ بِمَا كَانُوا۟ يَفْسُقُونَ.

29:34. இப்படியாக பாவச் செயல்களில் மூழ்கி இருக்கும் சமுதாயத்தவர்கள் இறைவனின் நியதியின்படி அழிந்து போவது இயல்புதானே! காரணம் இறைத்தூதரின் எல்லா அறிவுரைகளையும் நிராகரிக்கும் அச்சமுதாயம், அவருடைய முன் எச்சரிக்கையையும் பொருட்படுத்த வில்லை. (பார்க்க 26:173) எனவே அங்கு ஏற்பட்ட எரிமலைப் பிழம்பில் அவர்கள் சிக்கி மாண்டுவிட்டனர். (பார்க்க 11:82)


وَلَقَد تَّرَكْنَا مِنْهَآ ءَايَةًۢ بَيِّنَةًۭ لِّقَوْمٍۢ يَعْقِلُونَ.

29:35. இப்படித் தான் அந்த சமுதாயத்தினர் அழிந்து போனார்கள். சிந்தித்து செயலாற்றும் மக்களுக்கு இதிலிருந்து தெளிவான படிப்பினைகள் உள்ளன. (விளக்கத்திற்குப் பார்க்க 26:174)


وَإِلَىٰ مَدْيَنَ أَخَاهُمْ شُعَيْبًۭا فَقَالَ يَٰقَوْمِ ٱعْبُدُوا۟ ٱللَّهَ وَٱرْجُوا۟ ٱلْيَوْمَ ٱلْءَاخِرَ وَلَا تَعْثَوْا۟ فِى ٱلْأَرْضِ مُفْسِدِينَ.

29:36. அதே போல மத்யன் நாட்டை சேர்ந்த ஷுஅய்ப் நபியும் தம் சமூகத்தாரிடம், “அல்லாஹ்வின் வழிகாட்டுதலுக்கு மட்டும் அடிபணிந்து வாழுங்கள். அதற்கு மாற்றமாக செயல்படுவதால் ஏற்படும் விபரீத விளைவுகளை எதிர்கொள்ள வேண்டிவரும் என்பதைப் பற்றி எண்ணிப் பாருங்கள். நீங்களோ சொத்து செல்வங்களை குவிப்பதையே நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு, சமுதாயத்தில் இருப்போர் இல்லாதோர் என்ற ஏற்றத் தாழ்வை ஏற்படுத்தி வருகிறீர்கள்” என்று எச்சரித்து வந்தார்.


فَكَذَّبُوهُ فَأَخَذَتْهُمُ ٱلرَّجْفَةُ فَأَصْبَحُوا۟ فِى دَارِهِمْ جَٰثِمِينَ.

29:37. ஆனால் அந்நாட்டு மக்கள் அவருடைய எந்த அறிவுரையையும் ஏற்கவில்லை. அதைத் தொடர்ந்து அங்கு ஏற்படவிருக்கும் பூகம்பம் பற்றிய முன் எச்சரிக்கையையும் அவர்கள் பொருட்படுத்தவில்லை. (பார்க்க 26:174) எனவே அவர்களை பூகம்பம் பீடித்துக் கொண்டது. இதனால் அவர்கள் விடியவிடிய தம் இல்லங்களில் தலைக் குப்புறமாக புதைந்து விட்டனர்.
ஷுஅய்ப் நபியும் அவரை சார்ந்தவர்களும், அல்லாஹ்வின் அறிவுரைப்படி அவ்வூரைவிட்டு வெளியேறி பூகம்பத்திலிருந்து மீண்டுவிட்டனர் (பார்க்க 11:94)


وَعَادًۭا وَثَمُودَا۟ وَقَد تَّبَيَّنَ لَكُم مِّن مَّسَٰكِنِهِمْ ۖ وَزَيَّنَ لَهُمُ ٱلشَّيْطَٰنُ أَعْمَٰلَهُمْ فَصَدَّهُمْ عَنِ ٱلسَّبِيلِ وَكَانُوا۟ مُسْتَبْصِرِينَ.

29:38. இவ்வாறே ‘ஆது’ மற்றும் ‘சமூது’ சமுதாயத்தவர்களும் அல்லாஹ்வின் நியதிப்படி அழிவை சந்தித்துக் கொண்டனர். அவர்கள் வாழ்ந்த இடங்களில் இன்னமும் சில அடையாளங்கள் உள்ளன. உண்மையை அறிந்து கொள்ள வேண்டுமென்றால், நீங்கள் அந்த இடங்களை ஆராய்ந்து பாருங்கள். அவர்களுடைய மனோ இச்சையானது அவர்களுடைய தீய செயல்களை அழகான செயல்களாக தோன்றும்படி காட்டி வந்தது. அதனால் அவர்களிடம் சிந்தித்து செயலாற்றும் அறிவுத்திறன் இருந்தும், அவர்கள் தம் தீய செயல்களை விட்டு நேர்வழியில் வரமுடியாமல் போயிற்று. அதனால் அவர்கள் அழிவிலிருந்து மீள முடியவில்லை.


وَقَٰرُونَ وَفِرْعَوْنَ وَهَٰمَٰنَ ۖ وَلَقَدْ جَآءَهُم مُّوسَىٰ بِٱلْبَيِّنَٰتِ فَٱسْتَكْبَرُوا۟ فِى ٱلْأَرْضِ وَمَا كَانُوا۟ سَٰبِقِينَ.

29:39. அதே போன்று செல்வ மிதப்பில் வாழ்ந்த ஃகாரூனும், கொடுங்கோல் அரசனாக விளங்கிய ஃபிர்அவ்னும், மக்களை வழிகெடுத்து வந்த மதகுரு ஹாமானும் இறுதியில் அழிந்தே போயினர். அவர்களிடமும் மூஸா நபி தெளிவான ஆதாரங்களை எடுத்துரைத்தார். ஆனால் அவர்களோ ஆணவம் கொண்டு நாட்டிலுள்ள ஏழை எளிய மக்களையும் நசுக்கி கொடுமைப் படுத்தி வந்தார்கள். ஆனால் அவர்களுக்கு ஏற்பட்ட அழிவிலிருந்து அவர்களால் தப்பிக்க முடிந்ததா?


فَكُلًّا أَخَذْنَا بِذَنۢبِهِۦ ۖ فَمِنْهُم مَّنْ أَرْسَلْنَا عَلَيْهِ حَاصِبًۭا وَمِنْهُم مَّنْ أَخَذَتْهُ ٱلصَّيْحَةُ وَمِنْهُم مَّنْ خَسَفْنَا بِهِ ٱلْأَرْضَ وَمِنْهُم مَّنْ أَغْرَقْنَا ۚ وَمَا كَانَ ٱللَّهُ لِيَظْلِمَهُمْ وَلَٰكِن كَانُوٓا۟ أَنفُسَهُمْ يَظْلِمُونَ.

29:40. இவ்வாறே நாம் ஒவ்வொரு சமுதாயத்தினரும் அவர்கள் செய்து வந்த பாவச் செயல்களின் விளைவாக நம் நியதியின்படி ஏற்படும் அழிவுகளின் பிடியில் சிக்கிக் கொண்டனர். அந்த பேரழிவுகள் கடும் புயல்கள் வடிவிலும், பேரிடி முழக்கம் மற்றும் பூகம்பம் வடிவிலும் ஏற்பட்டன. சில சமுதாயத்தவர்கள் பிரளயத்தில் மூழ்கி போனார்கள். சிலர் பூமியில் புதைந்து போனார்கள். ஆனால் ஒரு விஷயம் மட்டும் தெளிவான ஒன்றாகும். அல்லாஹ் அவர்களை அழிக்க ஒருபோதும் நாடவில்லை. அல்லாஹ்வின் புறத்திலிருந்து அநியாயம் எப்போதும் எங்கும் நடப்பதில்லை. அவர்களை நேர்வழியில் செலுத்த இறைத் தூதர்களை அனுப்பி வந்தான். ஆனால் அவர்களோ இறைவனின் அறிவுரைகளையும், முன் எச்சரிக்கைகளையும் பொருட்படுத்தாமல் தமக்குத்தாமே தீங்கிழைத்துக் கொண்டார்கள்.


مَثَلُ ٱلَّذِينَ ٱتَّخَذُوا۟ مِن دُونِ ٱللَّهِ أَوْلِيَآءَ كَمَثَلِ ٱلْعَنكَبُوتِ ٱتَّخَذَتْ بَيْتًۭا ۖ وَإِنَّ أَوْهَنَ ٱلْبُيُوتِ لَبَيْتُ ٱلْعَنكَبُوتِ ۖ لَوْ كَانُوا۟ يَعْلَمُونَ.

29:41. அல்லாஹ் அல்லாதவற்றை தங்களுடைய பாதுகாவலராக எடுத்துக் கொள்பவருக்கு உதாரணம் சிலந்திப் பூச்சி கட்டும் வீட்டைப் போன்றதாகும். தனக்காக கட்டிக் கொள்ளும் வீடு மிகவும் பலவீனமானதாக இருக்கும். இதை அவர்கள் அறிந்து கொள்வாராயின் அவர்கள் இணையாக எடுத்துக் கொண்டது மிகவும் பலவீனமானது என்பதை அறிவார்கள்.
அதாவது அனைத்து தரப்பு மக்களின் பாதுகாப்பைக் கருதி தலைசிறந்த, வலுவான நாட்டை உருவாக்கவே அல்லாஹ்வின் வழிகாட்டுதல் நாடுகிறது. இதை புரிந்து கொள்ளாமல் அவர்கள் வேறு வழிமுறைகளைக் கடைப்பிடிக்கிறார்கள். இதனால் அவர்கள் பலவீனமுள்ளவர்களை நசுக்கி, தன் ஆட்சி அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்வதே சிறப்பு என நினைக்கிறார்கள்.
சிலந்திப்பூச்சி எவ்வாறு வலையைக் கட்டி தன்னைவிட பலவீனமுள்ள பூச்சிகளை அதில் சிக்கவைத்து, தன் உணவாகப் பயன்படுத்திக் கொள்கிறதோ, அதுபோலத் தான் இவர்களும். ஆனால் தன்னை விட பலம் வாய்ந்த பிராணி அதை தாக்கினால், அதை எதிர்க்கும் சக்தியில்லாமல் அது ஓடிவிடும். அது கட்டிய வீடும் பலனளிக்காது.
அது போல் ஏழை எளிய மக்களை பலவீனமாக்கி அரசு தன் அதிகாரத்தை தக்க வைத்துக் கொண்டால், அதைவிட பலம் வாய்ந்த நாடு தாக்கும் போது, அதை எதிர்கொள்ள முடியாமல் வீழ்ச்சி அடைந்து விடும். அல்லாஹ்வின் வழிகாட்டுதலை புறக்கணித்து விட்டு சுயமாக சட்டங்களை உருவாக்கி நடத்தும் ஆட்சிமுறை யாவும் சிலந்திப் பூச்சியின் வலைக்கு ஒப்பான பலம் இல்லாத ஆட்சியே ஆகும்.


إِنَّ ٱللَّهَ يَعْلَمُ مَا يَدْعُونَ مِن دُونِهِۦ مِن شَىْءٍۢ ۚ وَهُوَ ٱلْعَزِيزُ ٱلْحَكِيمُ.

29:42. எந்தச் சமுதாயம் அல்லாஹ்வின் வழிகாட்டுதலை விட்டுவிட்டு வேறு வழிமுறைகளைப் பின்பற்றி ஆட்சி நடத்துகிறதோ, அதன் உண்மை நிலை என்னவென்பது அல்லாஹ்வுக்குத் தெரியும். ஆனால் அல்லாஹ்வின் வழிகாட்டுதலின் அடிப்படையில் உருவாகும் ஆட்சிமுறை தான் எல்லாவற்றையும் விட தலைசிறந்த ஆட்சியாகவும் ஞானத்தின் அடிப்படையிலும் இருக்கும். (பார்க்க 9:33)


وَتِلْكَ ٱلْأَمْثَٰلُ نَضْرِبُهَا لِلنَّاسِ ۖ وَمَا يَعْقِلُهَآ إِلَّا ٱلْعَٰلِمُونَ.

29:43. உலக மக்கள் உண்மைகளைப் புரிந்து கொள்வதற்காக நாம் இத்தகைய உதாரணங்களை தருகிறோம். ஆனால் சிந்திக்தாத மக்களுக்கு எந்த உதாரணங்களும் பலனளிக்காது.


خَلَقَ ٱللَّهُ ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضَ بِٱلْحَقِّ ۚ إِنَّ فِى ذَٰلِكَ لَءَايَةًۭ لِّلْمُؤْمِنِينَ.

29:44. அகிலங்களையும் பூமியையும் படைத்துப் பரிபாலிக்கின்ற ஏக இறைவனின் செயல்திட்டங்கள் யாவும் ஆக்கப்பூர்வமான உயர் நோக்கங்களுக்காகவே படைக்கப்பட்டன. ஏதோ வீண் விளையாட்டிற்காக என்று எண்ணிக் கொள்ளாதீர்கள். இதை ஏற்றுக்கொண்டு மிகவும் கவனத்துடன் செயலாற்றும் மூஃமின்களுக்கு தம் வாழ்வின் நோக்கங்களைப் பற்றிய உண்மையும் புரிந்து விடும்.
அதாவது இவ்வுலக வாழ்க்கை என்பது தம் வாழ்க்கைப் பயணத்தின் முதல் கட்டம் என்பதை அறிந்து, அதற்கு ஏற்றவாறு செயலாற்றுவார்கள். இதில் கவனக் குறைவு இருந்தால் அடுத்த கட்ட மறுமை வாழ்வில் தோல்வியையே சந்திக்க நேரிடும் என்பதை அறிவார்கள். மேலும் அவர்கள் உருவாக்கிச் செல்லும் சமுதாயமும் பிரச்னைகளுக்கு ஆளாகும் என்பதையும் உணர்ந்து சிறப்பாக செயலாற்றுவார்கள்.
இப்படியாக அகிலங்கள் அனைத்திலும் செயல்படும் அல்லாஹ்வின் இயற்கைச் சட்டங்கள் தாம் மனித வாழ்விலும் செயல்படுகின்றன. எனவே


ٱتْلُ مَآ أُوحِىَ إِلَيْكَ مِنَ ٱلْكِتَٰبِ وَأَقِمِ ٱلصَّلَوٰةَ ۖ إِنَّ ٱلصَّلَوٰةَ تَنْهَىٰ عَنِ ٱلْفَحْشَآءِ وَٱلْمُنكَرِ ۗ وَلَذِكْرُ ٱللَّهِ أَكْبَرُ ۗ وَٱللَّهُ يَعْلَمُ مَا تَصْنَعُونَ.

29:45. இறைவழிகாட்டுதலை எடுத்துரைப்பவரே! நீர் அல்லாஹ்விடமிருந்து இறக்கி அருளப்பட்ட வேதத்திலிருந்து மக்களுக்கு எடுத்துரைத்து அதிலுள்ளபடி அறிவுறுத்தி வாருங்கள். இப்படியாக சமுதாயத்தை நேர்வழிப்படுத்தும் ஸலாத் முறையை நிலை நிறுத்துங்கள். அப்போது தான் சமுதாயத்தில் உள்ள மானக்கேடான செயல்களும் தீய செயல்களும் விலகிவிடும். அல்லாஹ்வின் அறிவுரைகளே உலகில் தலைசிறந்தவை என்பதை நிரூபித்துக் காட்டுங்கள். நீங்கள் செய்து வருபவை அனைத்தும் அல்லாஹ்வுக்கு நன்கு தெரியும் என்பதை நினைவில் கொண்டு செயலாற்றுங்கள்.
சமுதாயத்தை அல்லாஹ்வின் அறிவுரை எதுவுமின்றி அப்படியே விட்டுவிட்டால் அங்குள்ள மக்கள் சுய நலக்காரர்களாக மாறிவிடுவார்கள். ஒவ்வொருவரும் தம்மால் இயன்றவரை சுருட்டுவதிலேயே கண்ணும் கருத்துமாக இருந்து விடுவார்கள். இதனால் இருப்போர் இல்லாதோர் என்ற வேற்றுமை விரிவடைந்து, இல்லாதோர் கஷ்டப்பட நேரிடும். மேலும் சமுதாயத்தில் மானக்கேடான செயல்களும், கொலை, கொள்ளை போன்ற தீய செயல்களும் நடைபெற்று வரும். இவற்றை தடுத்து நிறுத்த இறைவழிகாட்டுதலின் படி சமுதாயத்தை உருவாக்கி அனைத்து தரப்பு மக்களும் சிறப்பாக வாழ வழிசெய்யும் ஆட்சி முறையை ஏற்படுத்த வேண்டும். இதற்காக மக்களின் ஆதரவு பெறுவது முக்கியமான ஒன்றாகும். எனவே தான் இறைவழிகாட்டுதலை எடுத்துரைக்கும் ஸலாத் முறையை நிலைநிறுத்த வலியுறுத்தப்படுகிறது.
இந்த புதிய அணுகு முறைக்கு அங்குள்ள வேதக்காரர்கள் எதிர்ப்பு தெரிவிப்பார்கள். தம்மிடம் வேதமிருக்கும் போது, புதிய வேதத்திற்கு அவசியம் என்னவென்று கேட்பார்கள். ஆனால் அவர்களிடமுள்ள வேதங்களில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. (பார்க்க 2:59) எனவே


۞ وَلَا تُجَٰدِلُوٓا۟ أَهْلَ ٱلْكِتَٰبِ إِلَّا بِٱلَّتِى هِىَ أَحْسَنُ إِلَّا ٱلَّذِينَ ظَلَمُوا۟ مِنْهُمْ ۖ وَقُولُوٓا۟ ءَامَنَّا بِٱلَّذِىٓ أُنزِلَ إِلَيْنَا وَأُنزِلَ إِلَيْكُمْ وَإِلَٰهُنَا وَإِلَٰهُكُمْ وَٰحِدٌۭ وَنَحْنُ لَهُۥ مُسْلِمُونَ.

29:46. அவர்களிடம், அழகிய முறையில் உண்மை விஷயங்களை எடுத்துரைத்து அவர்களை நல்வழிப்படுத்த முயலுங்கள். அவர்கள் வெளிப்படையான அக்கிரம செயல்களில் இறங்கினால், அதற்கு வேறு வழிமுறையைக் கொண்டு சரி செய்யலாம். மற்றபடி மார்க்க விஷயங்களில் அவர்களிடமுள்ள வேத உண்மைகளை ஏற்றுக் கொள்வதாகவும், நம் அனைவரின் இறைவனும் ஒருவனே என்பதையும் எடுத்துரையுங்கள். நாங்கள் அனைவரும் அல்லாஹ்வின் கட்டளைக்கே உட்பட்டு செயல்படுகிறோம் என்பதையும் அவர்களிடம் எடுத்துரையுங்கள்.


وَكَذَٰلِكَ أَنزَلْنَآ إِلَيْكَ ٱلْكِتَٰبَ ۚ فَٱلَّذِينَ ءَاتَيْنَٰهُمُ ٱلْكِتَٰبَ يُؤْمِنُونَ بِهِۦ ۖ وَمِنْ هَٰٓؤُلَآءِ مَن يُؤْمِنُ بِهِۦ ۚ وَمَا يَجْحَدُ بِـَٔايَٰتِنَآ إِلَّا ٱلْكَٰفِرُونَ.

29:47. நபியே! இதே அடிப்படையில்தான் உம் மீதும் இவ்வேதம் இறக்கி அருளப்படுகிறது. ஆகவே இதற்கு முன் வேதம் அளிக்கப்பட்டோரும் இதிலுள்ள வேத அறிவுரைகளை ஏற்றுக்கொள்வார்கள். இந்த வேதமான திருக்குர்ஆனை முழுக்க முழுக்க உளமாற ஏற்று நடப்பவர்களும் இருக்கிறார்கள். இந்த வேத உண்மைகளை நிராகரிக்க முன் கூட்டியே முடிவு எடுத்தவர்கள் தாம் இவற்றை ஏற்க மாட்டார்கள். மற்றவர்கள் இவற்றை ஏற்றுக் கொள்வார்கள்.
இவ்வேதத்தை ஏற்காதவர்கள் இந்த இறைத் தூதர் முந்தைய வேதங்களை படித்து காப்பி அடித்து கூறுகிறார் என்ற பரிகாசமாக மக்களிடையே பேசி வருகிறார்கள். (6:105)


وَمَا كُنتَ تَتْلُوا۟ مِن قَبْلِهِۦ مِن كِتَٰبٍۢ وَلَا تَخُطُّهُۥ بِيَمِينِكَ ۖ إِذًۭا لَّٱرْتَابَ ٱلْمُبْطِلُونَ.

29:48. ஆனால் வேதம் இறக்கியருளப்படுதற்கு முன் நீர் எந்தப் புத்தகத்தையும் படிக்கத் தெரிந்தவராக இருந்ததில்லை. உம் கரங்களால் எழுதவும் முடியாது. இந்த உண்மை அவர்களுக்கும் தெரியுமே. அவ்வாறு எழுத படிக்கத் தெரிந்தவராக இருந்திருந்தால் இறை நிராகரிப்பவர்கள் சந்தேகப்படுவதில் அர்த்தம் இருக்கும்.
வேதம் இறக்கி அருளப்பட்ட பின் நபிகளார் அவர்கள் எழுத படிக்க கற்றுக் கொண்டார் என்பது நமக்கு இவ்வாசகத்திலிருந்து புலனாகிறது. அப்போது தான் அவர் இவ்வுலகில் விட்டுச் செல்லும் இறுதி வேதமான திருக்குர்ஆன் சரியாக தொகுத்து எழுதப்பட்டுள்ளதா என்பதை அவரால் உறுதிப்படுத்த முடியும். (75:17-19)


بَلْ هُوَ ءَايَٰتٌۢ بَيِّنَٰتٌۭ فِى صُدُورِ ٱلَّذِينَ أُوتُوا۟ ٱلْعِلْمَ ۚ وَمَا يَجْحَدُ بِـَٔايَٰتِنَآ إِلَّا ٱلظَّٰلِمُونَ.

29:49. ஆனால் கல்வி ஞானத்தில் தேர்ச்சிப் பெற்றவர்கள், இந்த இறைவேத அறிவுரைகளை ஆழ்ந்து சிந்தித்துப் பார்ப்பார்கள். இவை உண்மையிலேயே தெளிவான வழிகாட்டுதலாக உள்ளன என்பதை அவர்களுடைய உள்ளங்கள் பறைசாற்றும். ஆனால் இவ்வாறு சிந்திக்காமல் கண்மூடித்தனமாக எதிர்க்கும் அநியாயக்காரர்களுக்கு இவை விளங்காது. எனவே அவர்கள் தர்க்கம் தான் செய்வார்கள்.


وَقَالُوا۟ لَوْلَآ أُنزِلَ عَلَيْهِ ءَايَٰتٌۭ مِّن رَّبِّهِۦ ۖ قُلْ إِنَّمَا ٱلْءَايَٰتُ عِندَ ٱللَّهِ وَإِنَّمَآ أَنَا۠ نَذِيرٌۭ مُّبِينٌ.

29:50. எனவே அத்தகையவர்கள், தம் இறைவனிடமிருந்து இறைத்தூதர் மீது ஏன் அற்புதங்கள் எதுவும் இறக்கப்படவில்லை என்ற கேள்விகளையே கேட்டுக் கொண்டிருப்பார்கள். அல்லாஹ் நம்மிடம் ஏன் நேரடியாக வந்து பேசுவதில்லை என்றும் கேட்பார்கள். (பார்க்க 2:118) அல்லாஹ்வின் எண்ணற்ற படைப்புகளின் அற்புதங்கள் அவர்களின் கண்ணெதிரே இருக்கும் போது, அவற்றை அவர்கள் கவனிப்பதில்லை. எனவே அவர்கள் எதிர்பார்க்கும் கண்கட்டி மாய வித்தைகளை செய்து காட்டுவது என் பணி அல்ல. மாறாக தவறான செயல்களால் ஏற்படும் விபரீத விளைவுகளைப் பற்றி எடுத்துரைத்து எச்சரிக்கை செய்யவே வந்துள்ளதாக அவர்களிடம் கூறிவிடுங்கள்.


أَوَلَمْ يَكْفِهِمْ أَنَّآ أَنزَلْنَا عَلَيْكَ ٱلْكِتَٰبَ يُتْلَىٰ عَلَيْهِمْ ۚ إِنَّ فِى ذَٰلِكَ لَرَحْمَةًۭ وَذِكْرَىٰ لِقَوْمٍۢ يُؤْمِنُونَ.

29:51. அவர்களிடம், “உங்களுடைய சிறப்பான வாழ்விற்கு வழிகாட்டியாக விளங்கும் இந்த குர்ஆன் என்மீது இறக்கி அருளப்படுகின்றதே அது உங்களுக்கு போதாதா? இதன் அறிவுரைகளை ஏற்று நடந்தால் உங்களுடைய அனைத்து பிரச்னைகளுக்கும் விடிவுகாலம் கிடைத்துவிடுமே அது உங்களுக்கு போதாதா? கண்கட்டி மாய மந்திர வித்தைகளுக்கு இங்கு என்ன வேலை?” என்று கேளுங்கள்.


قُلْ كَفَىٰ بِٱللَّهِ بَيْنِى وَبَيْنَكُمْ شَهِيدًۭا ۖ يَعْلَمُ مَا فِى ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضِ ۗ وَٱلَّذِينَ ءَامَنُوا۟ بِٱلْبَٰطِلِ وَكَفَرُوا۟ بِٱللَّهِ أُو۟لَٰٓئِكَ هُمُ ٱلْخَٰسِرُونَ.

29:52. அல்லாஹ்வின் சட்ட விதிமுறைகளின் படி அவரவர் செய்து வரும் செயல்களுக்கு ஏற்ப விளைவுகள் ஏற்பட்டு வருகின்றன. இவையே நம் கூற்றிற்கு சாட்சி பகர்கின்றன. (பார்க்க 6:135) இதைவிட சிறந்த சாட்சி வேறு என்னவாக இருக்க முடியும்? அகிலங்களிலும் பூமியிலும் உள்ள அனைத்து விஷயங்களையும் அறிபவன் தான் அல்லாஹ். உண்மை இவ்வாறிருக்க எவர் அல்லாஹ்வின் வழிகாட்டுதலை ஏற்க மறுத்து, மூட நம்பிக்கையில் வாழ்கிறார்களோ, அவர்களுடைய நிலைமை படுமோசமாகி விடும். அப்போது தான் அவர்களுக்கு உண்மை என்னவென்று புரியும்.


وَيَسْتَعْجِلُونَكَ بِٱلْعَذَابِ ۚ وَلَوْلَآ أَجَلٌۭ مُّسَمًّۭى لَّجَآءَهُمُ ٱلْعَذَابُ وَلَيَأْتِيَنَّهُم بَغْتَةًۭ وَهُمْ لَا يَشْعُرُونَ.

29:53. இதை அவர்களுக்கு எடுத்துச் சொன்னால், அந்த வேதனைகள் எப்போது வரும்? அவற்றை கொண்டுவந்து காட்டு என்று அவசரப்பட்டு உம்மிடம் கேட்கிறார்கள். ஒவ்வொரு செயலுக்கும் உரிய விளைவுகள் ஏற்பட காலத் தவணை ஏற்படுத்தப்பட்டுள்ளது. (பார்க்க 16:61) அவ்வாறு ஏற்படுத்தாதிருப்பின், அவ்வேதனை அவர்களுக்கு உடனே வந்திருக்கும். எனினும் அவர்கள் செய்து வரும் தவறான செயல்களின் விளைவுகள் அவர்கள் உணரா வண்ணம் கொஞ்சம் கொஞ்சமாக ஏற்பட்டுக் கொண்டே வருகின்றன. அவை அவர்கள் முன் திடீரென்று தோற்றத்திற்கு வரும். இந்த உண்மையை அவர்களுக்குப் புரிய வையுங்கள்.


يَسْتَعْجِلُونَكَ بِٱلْعَذَابِ وَإِنَّ جَهَنَّمَ لَمُحِيطَةٌۢ بِٱلْكَٰفِرِينَ.

29:54. இதற்கு அவர்கள் அவ்வேதனைகளை துரிதமாக்குமாறு உங்களிடம் கேட்கிறார்கள். அவர்கள் ஆவலோடு எதிர்பார்ப்பதற்கு அவை என்ன சுவாரசியமாக ரசிக்கக் கூடிய விஷயமா? (பார்க்க 16:1) அந்த நரக வேதனைகள் அவர்களை சூழ்ந்துகொண்டு வருகின்றன என்பதே உண்மையாகும்.


يَوْمَ يَغْشَىٰهُمُ ٱلْعَذَابُ مِن فَوْقِهِمْ وَمِن تَحْتِ أَرْجُلِهِمْ وَيَقُولُ ذُوقُوا۟ مَا كُنتُمْ تَعْمَلُونَ.

29:55. அப்படியொரு கால கட்டத்தில் அவர்களுக்கு வேதனைகள் நாலா புறங்களிலிருந்தும் அவர்களை சூழ்ந்து கொள்ளும். நீங்கள் செய்து கொண்டிருந்த தீய செயல்களின் பலன்களை சுவைத்துக் கொண்டிருங்கள் என்பதாக அவர்களுடைய நிலைமை இருக்கும். (விளக்கத்திற்கு பார்க்க 6:65)


يَٰعِبَادِىَ ٱلَّذِينَ ءَامَنُوٓا۟ إِنَّ أَرْضِى وَٰسِعَةٌۭ فَإِيَّٰىَ فَٱعْبُدُونِ.

29:56. எனவே அல்லாஹ்வின் வழிகாட்டுதலுக்குக் கட்டுப்பட்டு வாழ நினைக்கும் செயல்வீரர்களே! இறை நிராகரிப்பவர்களை அவர்கள் போக்கில் விட்டுவிடுங்கள். இறைவனின் இந்த பூமி மிகவும் விசாலமாக இருக்கிறது. எனவே உங்களுக்கு சாதகமாக இருக்கும் இடத்திற்கு சென்று இந்த இறைத்திட்டங்களை செயலளவில் கொண்டுவர முயற்சி செய்யுங்கள். (பார்க்க 4:97) ஒட்டு மொத்த மக்களின் ஆதரவைக் கொண்டு இந்த செயல திட்டங்களை நிறைவேற்றினால் தான் அவற்றிற்குரிய பலன்கள் உங்களுக்கு நிச்சயமாகக் கிடைக்கும்.


كُلُّ نَفْسٍۢ ذَآئِقَةُ ٱلْمَوْتِ ۖ ثُمَّ إِلَيْنَا تُرْجَعُونَ.

29:57. இப்படியொரு முயற்சியில் அதிக பட்சமாக என்ன நேரும்? உங்களுடைய உயிர் தான் பறிபோகும். அப்படியும் இந்த பூமியில் யார்தான் நிரந்தரமாக உயிர் வாழப் போகிறார்கள்? எல்லோருக்கும் மரணம் சம்பவித்துதான் தீரும். நீங்கள் எப்படி வாழ்ந்தாலும் மரணத்தை தவிர்க்க முடியாது. (பார்க்க 2:243, 4:78)


وَٱلَّذِينَ ءَامَنُوا۟ وَعَمِلُوا۟ ٱلصَّٰلِحَٰتِ لَنُبَوِّئَنَّهُم مِّنَ ٱلْجَنَّةِ غُرَفًۭا تَجْرِى مِن تَحْتِهَا ٱلْأَنْهَٰرُ خَٰلِدِينَ فِيهَا ۚ نِعْمَ أَجْرُ ٱلْعَٰمِلِينَ.

29:58. எனவே அல்லாஹ்வின் வழிகாட்டுதலை ஏற்றுக்கொண்ட மூஃமின்களில், யார் ஆக்கப்பூவர்மான சமூக நலத்திட்டங்களைத் தீட்டி உழைக்கிறார்களோ, அவர்களுக்கு தாராள பொருளாதரா வசதிகள் கொண்ட நித்திய வாழ்வு ஜீவநதி போல் கிடைக்கும் என்பதும், உயர் பதவிகளை வகிப்பார்கள் என்பதும் அல்லாஹ்வின் வாக்காகும். இப்படியொரு வாழ்வை பெறுவது எவ்வளவு பெரிய பாக்கியமாகும்!
எனவே இவ்வுலகில் உயிர் வாழ்ந்தாலும் உயிர் நீத்தாலும் அல்லாஹ்வின் வாக்கு நிச்சயம் நிறைவேறும். எனவே துணிவே துணை என்று சமூக சீர்திருத்தப் பணிகளில் இறங்குங்கள்.


ٱلَّذِينَ صَبَرُوا۟ وَعَلَىٰ رَبِّهِمْ يَتَوَكَّلُونَ.

29:59. இத்தகைய மூஃமின்கள் தங்களுடைய செயல்திட்டங்களில் உறுதிப்பாடுடன் நிலைத்திருந்து விடாமுயற்சியுடன் செயல்படுவார்கள். இறைவழிகாட்டுதலில் பரிபூரண நம்பிக்கையுடன் செயல்படுவார்கள்.


وَكَأَيِّن مِّن دَآبَّةٍۢ لَّا تَحْمِلُ رِزْقَهَا ٱللَّهُ يَرْزُقُهَا وَإِيَّاكُمْ ۚ وَهُوَ ٱلسَّمِيعُ ٱلْعَلِيمُ.

29:60. இவ்வாறு செயல்பட ஆரம்பித்தால், நம் வருங்காலம் என்னவாகும் என்று நினைத்துக் கொண்டிருப்பீர்கள். உலகில் உள்ள எண்ணற்ற ஜீவராசிகளைப் பாருங்கள். அவை தமக்கு வேண்டிய உணவு வகைகளை சுமந்துக் கொண்டா திரிகின்றன? அவற்றிற்கு வேண்டிய உணவை அல்லாஹ்வின் நியதிப்படி அவ்வப்போது தேடிக் கொள்கின்றன. (பார்க்க 11:6) நீங்களும் இறைவனின் செயல் திட்டங்களை நிறைவேற்ற இடம் பெயர்ந்து சென்றால் அங்கு உங்களுக்கு வேண்டிய வாழ்க்கை வசதிகள் கிடைக்காதா?உங்கள் உள்ளங்களில் ஊடுருவிச் செல்லும் எண்ணங்களையும் அறிபவன்தானே அல்லாஹ்?


وَلَئِن سَأَلْتَهُم مَّنْ خَلَقَ ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضَ وَسَخَّرَ ٱلشَّمْسَ وَٱلْقَمَرَ لَيَقُولُنَّ ٱللَّهُ ۖ فَأَنَّىٰ يُؤْفَكُونَ.

29:61. இறைவழிகாட்டுதலை எடுத்துரைப்பவரே! அவர்களிடம் அகிலங்களையும் பூமியையும் படைத்து அவற்றில் சூரியனையும் சந்திரனையும் உங்களுக்கு வசப்படுத்திக் கொடுத்தவன் யார் என்று கேளுங்கள். அவர்கள் உடனே அல்லாஹ் தான் என்று பதிலளித்து விடுவார்கள். வெளிஉலகை செயல்பட வைப்பது அல்லாஹ் தான் என்பதை ஏற்றுக் கொள்ளும் இவர்கள், தம் வாழ்வில் அல்லாஹ்வின் தலையீடு இருக்க வேண்டியதில்லை என நினைக்கிறார்களே! இது சரியா? இதனால் அவர்கள் வாழ்வின் சரியான இலக்கை விட்டு திசை மாறிச் சென்று விடுகிறார்களே!


ٱللَّهُ يَبْسُطُ ٱلرِّزْقَ لِمَن يَشَآءُ مِنْ عِبَادِهِۦ وَيَقْدِرُ لَهُۥٓ ۚ إِنَّ ٱللَّهَ بِكُلِّ شَىْءٍ عَلِيمٌۭ.

29:62. வாழ்வாதார விஷயங்களையே எடுத்துக் கொள்ளுங்கள். அதில் அல்லாஹ்வின் செயல்திட்டம் என்ன? யார் திறமையுடன் உழைக்கிறார்களோ, அவர்களுக்கு விசாலமான வாழ்வாதாரங்கள் கிடைத்து வருகின்றன. திறமையின்றி உழைப்பவர்களுக்கு வாழ்வாதாரங்கள் சுருங்கி விடுகின்றன. இவையாவும் மனிதனின் உழைப்பும் அதன் சூழ்நிலையைப் பொருத்தே அமையும். அல்லாஹ்வின் வல்லமையோ அனைத்து விஷயங்களையும் கட்டுப்படுத்தும் விதமாக உள்ளன என்பதை அறிந்து கொள்ளுங்கள்.


وَلَئِن سَأَلْتَهُم مَّن نَّزَّلَ مِنَ ٱلسَّمَآءِ مَآءًۭ فَأَحْيَا بِهِ ٱلْأَرْضَ مِنۢ بَعْدِ مَوْتِهَا لَيَقُولُنَّ ٱللَّهُ ۚ قُلِ ٱلْحَمْدُ لِلَّهِ ۚ بَلْ أَكْثَرُهُمْ لَا يَعْقِلُونَ.

29:63. மேலும் வானத்திலிருந்து மழை பொழிய வைத்து, உயிரற்ற நிலையில் இருக்கும் பூமியை உயிர் பெறச் செய்பவன் யார் என்று அவர்களிடம் கேளுங்கள். அதற்கும் பதிலளிக்கையில் அல்லாஹ் தான் என்று சொல்லி விடுவார்கள். இப்படி அல்லாஹ்வின் எல்லா செயல் திட்டங்களும் புகழுக்குரியவையாக விளங்கும் போது, இறைவழிகாட்டுதலின்படி மனிதனும் தம் சமூக அமைப்பை ஏற்படுத்திக் கொண்டால் எவ்வளவு சிறப்பாக இருக்கும். இத்தகைய சமுதாயமும் போற்றுதலுக்கு உரியதாக விளங்கும் அல்லவா? இவ்வாறிருந்தும் மக்களில் பெரும்பாலோர் அல்லாஹ்வின் வழிகாட்டுதலை ஏற்று நடக்க முன்வருவதில்லை.


وَمَا هَٰذِهِ ٱلْحَيَوٰةُ ٱلدُّنْيَآ إِلَّا لَهْوٌۭ وَلَعِبٌۭ ۚ وَإِنَّ ٱلدَّارَ ٱلْءَاخِرَةَ لَهِىَ ٱلْحَيَوَانُ ۚ لَوْ كَانُوا۟ يَعْلَمُونَ.

29:64. மேலும் இத்தகையவர்கள் இவ்வுலக வாழ்வை வெறும் விளையாட்டாகவே எடுத்துக் கொள்கின்றனர். எதையும் சீரிய சிந்தனையுடன் எதிர் காலத்தைப் பற்றி சிந்தித்து செயலாற்றாமல், தற்காலிக சொகுசு வாழ்வையே நோக்கமாகக் கொண்டு வாழ்கிறார்கள். தற்காலி சந்தோஷமான வாழ்வுடன் வருங்கால நிலையான வாழ்வையும் முன்வைத்து அதற்கு ஏற்றாற்போல் செயல்பட்டால் எவ்வளவு சிறப்பாக இருக்கும்?
மனித வாழ்வை வெறும் உடல் தேற்றங்களை நிறைவேற்றும் சாதனமாக ஆக்கிக் கொண்டால், அவன் முன் எந்த உயர் இலட்சியமும் இருக்காது. இத்தகையவர்களால் எந்த ஆபத்தையும் எதிர்கொள்ள முடியாமல் போய்விடுகிறது. உதாரணமாக


فَإِذَا رَكِبُوا۟ فِى ٱلْفُلْكِ دَعَوُا۟ ٱللَّهَ مُخْلِصِينَ لَهُ ٱلدِّينَ فَلَمَّا نَجَّىٰهُمْ إِلَى ٱلْبَرِّ إِذَا هُمْ يُشْرِكُونَ.

29:65. மரக்கலத்தில் ஏறும் போது, பயபக்தியும் அல்லாஹ்வை நினைவு கூர்ந்து பிரார்த்திப்பதைப் போல் அல்லாஹ்விடம் இரைஞ்சுவார்கள். கரைக்கு போய் சேர்ந்த உடன் அவர்கள் எல்லாவற்றையும் மறந்து பழையபடி அல்லாஹ்வை விட்டுவிட்டு, அதற்கு இணையாக சுயநலத்துடன் நடந்து கொள்கின்றனர்.


لِيَكْفُرُوا۟ بِمَآ ءَاتَيْنَٰهُمْ وَلِيَتَمَتَّعُوا۟ ۖ فَسَوْفَ يَعْلَمُونَ.

29:66. இப்படியாக அல்லாஹ் அவர்களுக்கு அளித்த சொத்து செல்வங்களை தம் விருப்பப்படி சுயநடத்துடன் செலவழித்து தற்காலிக சுகங்களை அனுபவிப்பதிலேயே கண்ணும் கருத்துமாய் இருப்பார்கள். அவ்வாறே அவர்கள் சுகங்களை அனுபவித்துக் கொண்டு இருக்கட்டும். விரைவில் அவற்றின் விளைவுகளை அவர்கள் அறிந்து கொள்வது நிச்சயமே!
மேலும் மக்கமா நகரத்தைப் பற்றியும் அதன் சுற்று வட்டாரத்தில் உள்ள நிலையைப் பற்றி அவர்கள் சிந்தித்துப் பார்த்திருந்தால் உண்மை விளங்கி இருக்கும்.


أَوَلَمْ يَرَوْا۟ أَنَّا جَعَلْنَا حَرَمًا ءَامِنًۭا وَيُتَخَطَّفُ ٱلنَّاسُ مِنْ حَوْلِهِمْ ۚ أَفَبِٱلْبَٰطِلِ يُؤْمِنُونَ وَبِنِعْمَةِ ٱللَّهِ يَكْفُرُونَ.

29:67. மக்காவை சுற்றியுள்ள ஊர்களில் அல்லாஹ்வின் வழிகாட்டுதலை ஏற்காததால் அங்குள்ளவர்களுக்கு ஆபத்துகள் சூழ்ந்து, நிம்மதியில்லாமல் இருக்கிறார்கள். ஆனால் சங்கை மிக்க இந்த கஅபாவில் இறைவழிகாட்டுதலைப் பின்பற்றுவதால் அமைதி நிலவுகிறது. இதை அறிந்தும் அவர்கள் பொய்யான வழிமுறைகளைப் பின்பற்றி அல்லாஹ்வின் வழிகாட்டுதல் என்ற அருட்கொடைகளை நிராகரிக்கிறார்களா?


وَمَنْ أَظْلَمُ مِمَّنِ ٱفْتَرَىٰ عَلَى ٱللَّهِ كَذِبًا أَوْ كَذَّبَ بِٱلْحَقِّ لَمَّا جَآءَهُۥٓ ۚ أَلَيْسَ فِى جَهَنَّمَ مَثْوًۭى لِّلْكَٰفِرِينَ.

29:68. இப்படியாக அல்லாஹ்வின் வழிகாட்டுதல்களையும் அவற்றின் சிறப்புகளையும் எடுத்துரைத்தபின், அல்லாஹ்வின் மீது பொய்யான விஷயங்களை இட்டுக்கட்டி புனைந்து கூறுபவனைவிட, அல்லது தம்மிடம் மனிதனின் சிறப்பான வாழ்விற்கு சரியான வழிகாட்டுதல் வந்தபின்பும் அதை பொய்யாக்குபவனை விட அநியாயம் செய்பவன் வேறு யார் இருக்க முடியும்? இத்தகைய இறை நிராகரிப்பவர்கள் போய் சேரும் இடம் நரகமாகத்தான் இருக்க முடியும்.


وَٱلَّذِينَ جَٰهَدُوا۟ فِينَا لَنَهْدِيَنَّهُمْ سُبُلَنَا ۚ وَإِنَّ ٱللَّهَ لَمَعَ ٱلْمُحْسِنِينَ.

29:69. இதற்கு மாறாக எவர்கள் இறைவன் காட்டிய வழியில் சமூக நல்லிணக்கத்திற்காக அயராது உழைக்கிறார்களோ, அவர்களை நிச்சயமாக நேரான வழியில் செலுத்துவான். நிச்சயமாக அல்லாஹ் நன்மை செய்வோரிடமே இருக்கிறான் என்பதை மனதில் பதிய வைத்து செயலாற்றுங்கள்.