بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ

28:0.அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் அறிவுரைப்படியே அனைத்துக் காரியங்களையும் செய்ய நாடுகிறேன். (பார்க்க 6:162)


طسٓمٓ.

28:1. அனைத்தையும் கேட்கின்ற வல்லமையும், அறிந்துகொள்ளும் வல்லமையும் உடைய இறைவனின் தூய்மையான வழிகாட்டுதல் இது.


تِلْكَ ءَايَٰتُ ٱلْكِتَٰبِ ٱلْمُبِينِ.

28:2. தெளிவான முறையில் விவரமான வாழ்க்கை நெறிமுறைகளை உலக மக்களுக்கு எடுத்துரைக்கும் வேதமிது.


نَتْلُوا۟ عَلَيْكَ مِن نَّبَإِ مُوسَىٰ وَفِرْعَوْنَ بِٱلْحَقِّ لِقَوْمٍۢ يُؤْمِنُونَ.

28:3. மூஸா நபி மற்றும் கொடுங்கோல் அரசனாக இருந்த ஃபிர்அவ்னின் வரலாற்று உண்மைகளை உங்களுக்கு எடுத்துரைக்கின்றோம். இறைவழிகாட்டுதலை மனதார ஏற்றுக்கொண்ட சமூகத்தவர்கள் படிப்பினைகளை பெற்று சிறப்பாக வாழவேண்டும் என்பதற்காக இவற்றை எடுத்துரைக்கிறோம்.


إِنَّ فِرْعَوْنَ عَلَا فِى ٱلْأَرْضِ وَجَعَلَ أَهْلَهَا شِيَعًۭا يَسْتَضْعِفُ طَآئِفَةًۭ مِّنْهُمْ يُذَبِّحُ أَبْنَآءَهُمْ وَيَسْتَحْىِۦ نِسَآءَهُمْ ۚ إِنَّهُۥ كَانَ مِنَ ٱلْمُفْسِدِينَ.

28:4. நடந்த உண்மை என்னவென்றால் எதேச்சதிகார ஆட்சிமுறை செய்து வந்த ஃபிர்அவ்னிய மன்னன், நாட்டில் பல குழப்பங்களை ஏற்படுத்திக் கொண்டிருந்தான். அவன் தன் ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள, நாட்டு மக்களை பல பிரிவுகளாகப் பிரித்து, அவற்றில் இஸ்ரவேலர்களை பலவீனப்படுத்தி வந்தான். இதற்காக அவர்களில் வீரம் மிக்க ஆண்களைக் கொன்றுவிடுவதும் வீரமற்ற கோழைகளைப் பிழைக்க விடுவதும் அவன் கடைப்பிடித்து வந்த வழிமுறையாக இருந்து வந்தது. (மேலும் பார்க்க 2:49, 7:141, 40:25)
அதாவது அனைத்து தரப்பு மக்களையும் சரிசமமாக நடத்துவதை விட்டுவிட்டு, தன் இனத்தை சேர்ந்தவர்களை மட்டும் நல்ல சலுகைகளை அளிப்பதும், மற்றவர்களை மாற்றாந் தாய் நோக்கோடு செயல்படுவதுமாக இருந்து வந்தான். இப்படி செயல்படுவது தவறானது என்று அவர்களுக்கு ஒருபோதும் தோன்றவே இல்லை. (பார்க்க 27:34)


وَنُرِيدُ أَن نَّمُنَّ عَلَى ٱلَّذِينَ ٱسْتُضْعِفُوا۟ فِى ٱلْأَرْضِ وَنَجْعَلَهُمْ أَئِمَّةًۭ وَنَجْعَلَهُمُ ٱلْوَٰرِثِينَ.

28:5. இவ்வாறு ஒடுக்கப்பட்டு பலவீனமடைந்த மக்களுக்கு உதவி செய்வதே இறைவனின் செயல்திட்டமாக இருந்து வருகிறது. அதன்படி அவர்களுக்கு உதவி புரிந்து அவர்களிடம் ஆட்சி அதிகாரத்தை ஒப்படைத்து அவர்களை ஆட்சியாளர்களாக ஆக்கிவிடவே இறைவனின் நடைமுறைச் சட்டம் நாடுகிறது.


وَنُمَكِّنَ لَهُمْ فِى ٱلْأَرْضِ وَنُرِىَ فِرْعَوْنَ وَهَٰمَٰنَ وَجُنُودَهُمَا مِنْهُم مَّا كَانُوا۟ يَحْذَرُونَ.

28:6. இப்படியாக இறைவனின் நியதிப்படி, ஃபிர்அவ்னையும் அவனுடன் ராஜகுருவாக இருந்த ஹாமானின் படைகளையும் வீழ்த்தி, தவறான ஆட்சிமுறையால் ஏற்படுகின்ற பின்விளைவுகள் என்னவென்பதை எடுத்துக் காட்டவே இஸ்ரவேலர்களை உறுதி மிக்கவர்களாக ஆக்க திட்டமிடப்பட்டது. மேலும் ஃபிர்அவ்னும் ஹாமானும் பாசத்துடன் கட்டிக் காத்து வந்த ஆட்சி, அவர்களை விட்டு பறிபோனது.
கவனித்தீர்களா? உலகில் நடக்கின்ற அநியாயம் அட்டூழியங்களை ஒடுக்க அந்நாட்டிலுள்ள பலவீனர்களை பலம் பொருந்தியவர்களாக ஆக்கப்படுகிறதே அன்றி இறைவனே நேரடியாக தலையிட்டு அநியாயத்தை ஒருபோதும் அழிப்பதில்லை என்பது இதிலிருந்து புலனாகிறது. (பார்க்க 2:210)


وَأَوْحَيْنَآ إِلَىٰٓ أُمِّ مُوسَىٰٓ أَنْ أَرْضِعِيهِ ۖ فَإِذَا خِفْتِ عَلَيْهِ فَأَلْقِيهِ فِى ٱلْيَمِّ وَلَا تَخَافِى وَلَا تَحْزَنِىٓ ۖ إِنَّا رَآدُّوهُ إِلَيْكِ وَجَاعِلُوهُ مِنَ ٱلْمُرْسَلِينَ.

28:7. இறைவனின் செயல்திட்டப்படி அந்நாட்டில் பிறந்த மூஸாவை சிறந்த முறையில் வளர்க்க திட்டங்கள் தீட்டப்பட்டன. அதன்படி மூஸாவின் தாயாரிடம்,“அக்குழந்தையைப் பாலூட்டி முறைப்படி வளர்த்து வா. அக்குழந்தையை வளர்ப்பதில் சிக்கல் உள்ளதாக அஞ்சினால், அதை ஒரு பேழையில் வைத்து ஆற்றில் விட்டுவிடு. அப்படி செய்வதால் அக்குழந்தையை பிரிந்து வாழ நேரிடுமே என்று பயப்படவோ துக்கப்படவோ வேண்டாம். அக்குழந்தையை மீண்டும் உன்னிடமே சேர்த்து வைக்க ஏற்பாடு செய்து தரப்படும். மேலும் உனக்குப் பிறந்துள்ள குழந்தை எதிர் காலத்தில் இறைத் தூதர்களில் ஒருவனாக வருவான்” என்று இறைச் செய்தி அனுப்பப்பட்டது.


فَٱلْتَقَطَهُۥٓ ءَالُ فِرْعَوْنَ لِيَكُونَ لَهُمْ عَدُوًّۭا وَحَزَنًا ۗ إِنَّ فِرْعَوْنَ وَهَٰمَٰنَ وَجُنُودَهُمَا كَانُوا۟ خَٰطِـِٔينَ.

28:8. “மேலும் அக்குழந்தை ஃபிர்அவ்னுடைய குடும்பத்தினரிடம் சென்றடையும். அங்கு நன்றாக வளர்ந்து பெரியவனானதும் ஃபிர்அவ்னுக்கும் ஹாமானுக்கும் பகைவனாக வருவான். காரணம் அவர்களும் அவர்களுடைய படையினரும் அக்கிரம செயல்களில் ஈடுபட்டுள்ளனர். இதை உன் மகன் தட்டிக் கேட்பான்”


وَقَالَتِ ٱمْرَأَتُ فِرْعَوْنَ قُرَّتُ عَيْنٍۢ لِّى وَلَكَ ۖ لَا تَقْتُلُوهُ عَسَىٰٓ أَن يَنفَعَنَآ أَوْ نَتَّخِذَهُۥ وَلَدًۭا وَهُمْ لَا يَشْعُرُونَ.

28:9. “மேலும் உன் குழந்தையை அவர்கள் கொன்று விடுவார்கள் என்று பயப்பட வேண்டியதில்லை. ஃபிர்அவ்னுக்கு புத்திரப் பாக்கியம் இல்லாததால், அழகான உன் குழந்தையை அவனுடைய மனைவி வளர்த்துக் கொள்வாள். அக்குழந்தையை கொன்றுவிடக் கூடாது என்று அவள் உறுதியாக இருப்பாள். அக்குழந்தை தமக்கு நன்மையைக் கொண்டு வரலாம் எனபதற்காக அவனை தத்தெடுத்துக் கொள்வதாக கூறுவாள். இறைவனின் செயல்திட்டம் எல்லாம் என்னவென்பது அவர்களுக்குத் தெரியாது” என்று அச்செய்திக் குறிப்பு கூறிற்று.
எனவே அக்குழந்தையை பேழையில் வைத்து ஆற்றில் விட்டுவிடு என்று இறைச்செய்தி கூறிற்று. அந்த காலத்தில் ஷுஅய்ப் நபி இருந்ததாகத் வரலாறு கூறுகிறது. எனவே இந்த செய்தி அவர் மூலமாக மூஸா நபியின் தாயாருக்கு அனுப்பப்பட்டதாக தெரிகிறது. ஆயிரம் தான் அச்செய்தி இறைவனிடம் வந்துள்ளதாக கூறினாலும், அப்படி தன் குழந்தையை ஒரு பேழையில் வைத்து ஆற்றில் விட்டுவிட எந்த ஒரு தாயின் மனமாவது ஒப்புமா? அந்த குழந்தை ஆற்றில் அடித்துச் சென்று விட்டால் என்ன செய்வது என்ற பல்வேறு கவலையும் துக்கமும் அவரை வாட்டி எடுத்தது.


وَأَصْبَحَ فُؤَادُ أُمِّ مُوسَىٰ فَٰرِغًا ۖ إِن كَادَتْ لَتُبْدِى بِهِۦ لَوْلَآ أَن رَّبَطْنَا عَلَىٰ قَلْبِهَا لِتَكُونَ مِنَ ٱلْمُؤْمِنِينَ.

28:10. இப்படியாக மூஸாவுடைய தாயின் மனம் கவலையால் துக்கப்பட்டது. எனினும் அவள் இறைவனின் செயல்திட்டத்தை மனதார ஏற்றுக் கொண்டதால், இதைப் பற்றி யாரிடமும் வெளிப்படுத்த வில்லை. ஒருவேளை அவளுடைய மனம் உறுதி அடையாமல் இருந்திருந்தால், அவள் இறைவனின் செயல் திட்டத்தைப் பற்றி மற்றவர்களிடம் வெளிப்படுத்தி இருப்பாள்.
எனவே இறைக் கட்டளைப்படி அக்குழந்தையை பேழையில் வைத்து ஆற்றில் விட்டுவிட்டார். தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும் என்பது போல அக்குழந்தையின் நிலை என்னவாகிறது என்பதைக் கண்டறிய அவர் தன் மூத்த மகளை அழைத்து, அந்த ஆற்றின் வழியாக சென்று பார்த்து வர அனுப்பி வைத்தார்.


وَقَالَتْ لِأُخْتِهِۦ قُصِّيهِ ۖ فَبَصُرَتْ بِهِۦ عَن جُنُبٍۢ وَهُمْ لَا يَشْعُرُونَ.

28:11. மூஸாவின் சகோதரியிடம், “நீ அப்பேழையைப் பின்தொடர்ந்து செல்” என்று கூறி அனுப்பி வைத்தார். அவ்வாறே அவளும் யாரும் கண்டுக் கொள்ளாதவாறு அது எங்கு செல்கிறது என்று தூரத்திலிருந்து கவனித்து வந்தாள்.
ஃபிர்அவ்னின் ஆட்கள் அக்குழந்தையை எடுத்துச் செல்வதைப் பார்த்தாள்.


۞ وَحَرَّمْنَا عَلَيْهِ ٱلْمَرَاضِعَ مِن قَبْلُ فَقَالَتْ هَلْ أَدُلُّكُمْ عَلَىٰٓ أَهْلِ بَيْتٍۢ يَكْفُلُونَهُۥ لَكُمْ وَهُمْ لَهُۥ نَٰصِحُونَ.

28:12. மேலும் அக்குழந்தை பால் அருந்தாமல் கஷ்டப்படுவதாக கேள்வியுற்றாள். எனவே அவள் அரண்மனைக்குள் சென்று அரசியிடம், “அக்குழந்தையைப் பாலூட்டி சிறப்பாக வளர்க்க பொறுப்பேற்கும் ஒரு தாயை நான் அனுப்பி வைக்கட்டுமா? அந்த தாய் நல்ல குடும்பத்தை சேர்ந்தவர். எனவே அக்குழந்தைக்கு எந்த தீங்கும் ஏற்படாது” என்று கூறினாள்.
அவ்வாறே அவர்களிடம் முன்அனுமதிப் பெற்று, மூஸாவை வளர்த்து வர அவரது தாயார் நியமிக்கப்பட்டார்.


فَرَدَدْنَٰهُ إِلَىٰٓ أُمِّهِۦ كَىْ تَقَرَّ عَيْنُهَا وَلَا تَحْزَنَ وَلِتَعْلَمَ أَنَّ وَعْدَ ٱللَّهِ حَقٌّۭ وَلَٰكِنَّ أَكْثَرَهُمْ لَا يَعْلَمُونَ.

28:13. இப்படியாக மூஸாவின் தாயாரின் கண் குளிர்ச்சி அடையவும், அவள் துக்கப்படாமல் இருக்கவும் இந்த ஏற்பாடுகள் ஆயின. நிச்சயமாக அல்லாஹ்வின் வாக்குறுதிகள் உண்மையானவையே என்பதை அவள் அறிந்து கொண்டாள். மேலும் தன் குழந்தை தன்னிடமே வந்தடைந்தது. ஆனால் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு இறைவனின் செயல்திட்டம் என்னவென்பது தெரியாமலே இருந்தது.
இப்படியாக மூஸா, அரண்மனையில் சிறப்பாக வளர்ந்து வந்தார். அங்கு அவருக்குச் சிறந்த கல்வி, சண்டைப் பயிற்சி, ராஜ தந்திரங்கள் என எல்லாவற்றையும் நன்றாகப் பயின்று வளர்ந்து வந்தார்.


وَلَمَّا بَلَغَ أَشُدَّهُۥ وَٱسْتَوَىٰٓ ءَاتَيْنَٰهُ حُكْمًۭا وَعِلْمًۭا ۚ وَكَذَٰلِكَ نَجْزِى ٱلْمُحْسِنِينَ.

28:14. மேலும் அவர் வாலிப வயதை அடைந்த போது, அவர் கல்வி ஞானம் முழு அளவில் பெற்று சிறந்த செயல்வீரராக விளங்கினார். இவ்வாறே நல்லோருக்கு இறைவன் புறத்திலிருந்து நற்கூலி வழங்கப்படுகிறது.
கவனித்தீர்களா? இந்த உயர்வும் கண்ணியமான வாழ்வும், வெறும் நபிமார்களுக்கு மட்டும்தான் என்பதல்ல. யாரெல்லாம் இறைவழிகாட்டுதல்படி சிறப்பாக செயல்படுகிறார்களோ, அவர்களுக்கெல்லாம் இத்தகைய உயர்வும் கண்ணியமும் கிடைக்கும் என இறைவன் வாக்களித்து இருப்பதை கவனியுங்கள். இறைவனின் வாக்கு ஒருபோதும் தவறாது.
இறைவனின் செயல் திட்டப்படி மூஸா நபி சிறப்பாக வளர்ந்து வந்ததோடு, சிறந்த கல்வியும் ஞானத்தையும் பெற்றிருந்தார். அக்கால வழக்கப்படி நாட்டு நடப்பு எவ்வாறு உள்ளது என்பதை கண்டறிய அரசனோ அவனுடைய மந்திரியோ மாறு வேடத்தில் ஊருக்குள் சென்று உளவு பார்ப்பார்கள். அவ்வாறே வலம் வருவது மூஸாவுக்கும் பழக்கமாக இருந்து வந்தது.


وَدَخَلَ ٱلْمَدِينَةَ عَلَىٰ حِينِ غَفْلَةٍۢ مِّنْ أَهْلِهَا فَوَجَدَ فِيهَا رَجُلَيْنِ يَقْتَتِلَانِ هَٰذَا مِن شِيعَتِهِۦ وَهَٰذَا مِنْ عَدُوِّهِۦ ۖ فَٱسْتَغَٰثَهُ ٱلَّذِى مِن شِيعَتِهِۦ عَلَى ٱلَّذِى مِنْ عَدُوِّهِۦ فَوَكَزَهُۥ مُوسَىٰ فَقَضَىٰ عَلَيْهِ ۖ قَالَ هَٰذَا مِنْ عَمَلِ ٱلشَّيْطَٰنِ ۖ إِنَّهُۥ عَدُوٌّۭ مُّضِلٌّۭ مُّبِينٌۭ.

28:15. ஒரு நாள் மக்கள் அனைவரும் அயர்ந்து தூங்கும் போது, நள்ளிரவில் மூஸா ஒரு நகரத்திற்குள் சென்றார். அங்கு இருவர் சண்டையிட்டுக் கொண்டிருந்ததைக் கண்டார். அதில் ஒருவன் தன் இனத்தைச் சேர்ந்தவனாகவும் மற்றொருவன் பகை இனத்தை சேர்ந்தவனாகவும் இருந்தான். பகை இனத்தை சேர்ந்தவனுக்கு எதிராக உதவி செய்யும்படி தன் இனத்தைச் சேர்ந்தவன் வேண்டினான். எனவே அவனை ஆதரித்து பகைவனுக்கு ஒரு குத்து குத்தினார். அதனால் படாத இடத்தில் பட்டு அவன் அந்த இடத்திலேயே இறந்து விட்டான். இதைக் கண்ட மூஸா நபி மனம் வருந்தினார். தான் எதைப் பற்றியும் சிந்திக்காமல் அவசரப்பட்டு உணர்ச்சி வேகத்தில் செயல்பட்டு விட்டோமே என எண்ணி மனம் வெதும்பினார். இவ்வாறு செயல்படுவதால் மனிதன் வழிகெட்டு போய் விடுகின்றானே. இது மனிதனுக்கும் மனித நேயத்திற்கு பகையான செயல் ஆயிற்றே என எண்ணி வருத்தப்பட்டார்.


قَالَ رَبِّ إِنِّى ظَلَمْتُ نَفْسِى فَٱغْفِرْ لِى فَغَفَرَ لَهُۥٓ ۚ إِنَّهُۥ هُوَ ٱلْغَفُورُ ٱلرَّحِيمُ.

28:16. தம் தவறை உணர்ந்த மூஸா,“என் இறைவா! நிச்சயமாக எனக்கு நானே தீங்கிழைத்துக் கொண்டேன். ஆகவே இதன் பாதிப்புகளிலிருந்து என்னை காத்தருள்வாயாக!” என்று பிரார்த்தித்தார். அவ்வாறே அவருடைய பாதுகாப்பிற்கான வழிமுறைகள் கிடைத்தன. நிச்சயமாக எதிர் பாராத விதமாக அறியாமையில் நடக்கும் தவறுகளுக்கு இறைவனின் பாதுகாப்பும் அரவணைப்பும் கிடைக்கும்.


قَالَ رَبِّ بِمَآ أَنْعَمْتَ عَلَىَّ فَلَنْ أَكُونَ ظَهِيرًۭا لِّلْمُجْرِمِينَ.

28:17. அவர்,“என் இறைவா! நீ எனக்குத் தந்துள்ள வசதி வாய்ப்புக்கு இனி நன்றி செலுத்துபவனாக இருப்பேன். எனவே குற்றவாளிகளுக்கு ஆதரவாக நான் ஒருபோதும் செயல்படமாட்டேன்” என்று இறைவனிடம் பிரார்த்தித்தார்.
சிந்தனையாளர்களே! இச்சம்பவங்கள் யாவும் மூஸாவுக்கு நபித்துவம் கிடைப்பதற்கு முன் நடந்தவை என்பதை நினைவில் கொள்ளுங்கள். அவர் ஃபிர்அவ்னின் அரண்மனையில் சகல வசதிகளுடன் வாழ்ந்து வந்த போதும், அவரது தாயார் அவருக்கு இறைவனின் அறிவுரைகளை சொல்லிக் கொடுத்ததாகத் தெரிகிறது. மேலும் அரண்மனையில் வாழ்ந்ததன் காரணமாக அவரிடம் அவசரப்புத்தி இருந்ததாகக் காணப்படுகிறது. அதே சமயம் இறைவனின் அறிவுரைகளைப் பெற்றதன் காரணமாக தம் தவறை உணர்ந்து இறைவனிடம் பிரார்த்தனை செய்வதை கவனியுங்கள்.


فَأَصْبَحَ فِى ٱلْمَدِينَةِ خَآئِفًۭا يَتَرَقَّبُ فَإِذَا ٱلَّذِى ٱسْتَنصَرَهُۥ بِٱلْأَمْسِ يَسْتَصْرِخُهُۥ ۚ قَالَ لَهُۥ مُوسَىٰٓ إِنَّكَ لَغَوِىٌّۭ مُّبِينٌۭ.

28:18. இப்படியாக பொழுது விடிந்ததும், இக்கொலை சம்பவத்தைப் பற்றி அறிய மீண்டும் அந்த நகரத்திற்குத் திரும்பி வந்தார். தன்னை யாராவது அடையாளம் கண்டுக் கொள்வார்களோ என்ற பயத்திலும் இருந்தார். அப்போது அன்றிரவு உதவிக்காக அழைத்த அதே நபர் இன்னொருவருடன் சண்டையிட்டுக் கொண்டு, மூஸாவை மீண்டும் உதவிக்காக அழைத்தான். இதைக் கண்ட மூஸா, “நீ பகிரங்கமான கலகக்காரனாக இருக்கின்றாயே! உனக்கு எப்படி உதவி செய்வது?” என்று அவனை அதட்டினார்.
இன்றைய தினமும் ஃபிர்அவ்னிய கூட்டத்தை சேர்ந்தவனுக்கும் இஸ்ரவேலர் கூட்டத்தை சேர்ந்தவனுக்கும் இடையே மோதல் இருந்தது. இதை பார்த்த மூஸா, தன் இனத்தை சேர்ந்தவனிடம் நேற்றிரவு நடந்த சம்பவத்தைப் பற்றியும் கூறி அவரை அதட்டி அவ்விருவரையும் அகற்றிவிட முயன்றார். இதனால் அக்கொலை யார் செய்தது என்ற உண்மை ஃபிர்அவ்னிய கூட்டத்தை சேர்ந்தவனுக்குத் தெரிந்து விட்டது.


فَلَمَّآ أَنْ أَرَادَ أَن يَبْطِشَ بِٱلَّذِى هُوَ عَدُوٌّۭ لَّهُمَا قَالَ يَٰمُوسَىٰٓ أَتُرِيدُ أَن تَقْتُلَنِى كَمَا قَتَلْتَ نَفْسًۢا بِٱلْأَمْسِ ۖ إِن تُرِيدُ إِلَّآ أَن تَكُونَ جَبَّارًۭا فِى ٱلْأَرْضِ وَمَا تُرِيدُ أَن تَكُونَ مِنَ ٱلْمُصْلِحِينَ.

28:19. மூஸா அவ்விருவரில் பகை இனத்தை சேர்ந்தவரைப் பிடித்து அகற்ற முன்வந்த போது, அவன் தன்னைத் தாக்க வருவதாக எண்ணி, கூச்சலிட ஆரம்பித்து விட்டான். “மூஸாவே! நேற்று நீ ஒரு மனிதனை கொன்றது போல் இன்றைக்கும் என்னையும் கொல்ல நாடுகிறீரா? நாட்டில் குழப்பம் செய்யவே நாடுகிறீரே! மக்களிடையே சமாதானத்தை ஏற்படுத்த நீர் நாடவில்லையே!” என்று உரக்கக் கத்தினான்.
கவனித்தீர்களா? ஆட்சி செய்யும் கூட்டத்தை சேர்ந்தவர்கள் என்ன தான் அநியாயம் செய்தாலும் எப்போதும் தமக்கு ஆதரவாகவே அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று விரும்புவார்கள். அநியாயத்திற்கு எதிராக நடவடிக்கை எடுத்தால், அது மிகப் பெரிய குற்றமாக கருதுவார்கள். இது தான் இவ்வுலகில் இன்றைக்கும் நடக்கின்ற உண்மையாகும். மூஸாவுக்கும் இந்த உண்மை புரிந்தது. மேலும் முந்தைய தினம் கொலை செய்ததும் மூஸாதான் என்ற செய்தியும் மக்களிடையே வேகமாக பரவியது. கொலையுண்டவன் ஆட்சி செய்யும் கூட்டத்தை சேர்ந்தவன் என்பதால் அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க அவர்கள் முடிவெடுத்தனர்.


وَجَآءَ رَجُلٌۭ مِّنْ أَقْصَا ٱلْمَدِينَةِ يَسْعَىٰ قَالَ يَٰمُوسَىٰٓ إِنَّ ٱلْمَلَأَ يَأْتَمِرُونَ بِكَ لِيَقْتُلُوكَ فَٱخْرُجْ إِنِّى لَكَ مِنَ ٱلنَّٰصِحِينَ.

28:20. எனவே மூஸா அந்த ஊரைவிட்டு சற்று தொலைவான இடத்திற்குச் சென்று விட்டார். அங்கு ஒருவன் அவரிடம் ஓடி வந்து,“மூஸாவே! இந்த ஊரிலுள்ள தலைவர்கள் எல்லாம் ஒன்றுகூடி உம்மை கொன்றுவிட வேண்டும் என்று ஆலோசனை செய்து கொண்டிருக்கிறார்கள். ஆகவே நீர் இவ்வூரை விட்டு வெளியேறி விடு. உம்முடைய நன்மைக்காகத் தான் இதை நான் கூறுகிறேன்” என்றான்.


فَخَرَجَ مِنْهَا خَآئِفًۭا يَتَرَقَّبُ ۖ قَالَ رَبِّ نَجِّنِى مِنَ ٱلْقَوْمِ ٱلظَّٰلِمِينَ.

28:21. ஆகவே இதை கேட்ட அவர் நடுங்கிப் போனார். அவர் யாருக்கும் தெரியாமல் அவ்வூரை விட்டு தப்பித்துச் சென்றார். “என் இறைவா! இந்த அக்கிரமக்கார சமூகத்தாரை விட்டு நீ என்னை காத்தருள்வாயாக!” என்று பிரார்த்தித்தார்.


وَلَمَّا تَوَجَّهَ تِلْقَآءَ مَدْيَنَ قَالَ عَسَىٰ رَبِّىٓ أَن يَهْدِيَنِى سَوَآءَ ٱلسَّبِيلِ.

28:22. இப்படியாக அவர் மத்யன் நாட்டின் பக்கம் செல்லலானார். தன் இறைவனிடமிருந்து தனக்கு நேர்வழி கிடைக்கும் என்ற முழு நம்பிக்கையுடன் அவர் அங்கு சென்றார்.


وَلَمَّا وَرَدَ مَآءَ مَدْيَنَ وَجَدَ عَلَيْهِ أُمَّةًۭ مِّنَ ٱلنَّاسِ يَسْقُونَ وَوَجَدَ مِن دُونِهِمُ ٱمْرَأَتَيْنِ تَذُودَانِ ۖ قَالَ مَا خَطْبُكُمَا ۖ قَالَتَا لَا نَسْقِى حَتَّىٰ يُصْدِرَ ٱلرِّعَآءُ ۖ وَأَبُونَا شَيْخٌۭ كَبِيرٌۭ.

28:23. அவர் மத்யன் நாட்டிற்கு சென்றபோது, அங்கேயும் கண்டதோ அநியாய செயல்களே. அங்கு ஒரு கூட்டத்தினர் தம் கால்நடைகளுக்குத் தண்ணீர் புகட்டிக் கொண்டிருந்தார்கள். அதனருகில் பெண்கள் இருவர் தம் ஆடுகளுக்கு தண்ணீர் புகட்ட முடியாமல் ஒதுங்கி நின்றதை கண்டார். அவர்கள் அருகில் சென்று, அங்கு என்ன நடக்கிறது என்பதை விசாரித்தார். அதற்கு அவ்விரு பெண்கள், "இந்த மேய்ப்பாளர்கள் தம் கால்நடைகளுக்குத் தண்ணீர் புகட்டிவிட்டுப் போகும் வரையில் நாங்கள் எங்கள் ஆடுகளுக்கு தண்ணீர் புகட்ட முடியாது. இதை தட்டிக் கேட்க யாரும் இல்லை. எங்கள் தந்தையோ மிகவும் வயதானவராக இருக்கின்றார்” என்றனர்.
இதை கண்ட மூஸா மிகவும் வருத்தப்பட்டார். எகிப்து நாட்டிலோ இஸ்ரவலர்கள் படும் வேதனைகளைப் பார்த்து சகிக்க முடியாமல் இங்கு ஓடி வந்தேன். ஆனால் இங்கு நடப்பதோ அதைவிட கொடுமையாக இருக்கிறதே. பலம் வாய்ந்தவர்கள் ஏழை எளியோர்களை ஏன் இவ்வாறு நசுக்குகிறார்கள்? ஏன் எந்த நாட்டிலும் நியாயம் நிலைக்கவில்லை? மூஸாவால் இதை பொறுத்துக் கொள்ள முடியவில்லை. எனவே அந்த மேய்ப்பாளர்களை விரட்டி விட்டு


فَسَقَىٰ لَهُمَا ثُمَّ تَوَلَّىٰٓ إِلَى ٱلظِّلِّ فَقَالَ رَبِّ إِنِّى لِمَآ أَنزَلْتَ إِلَىَّ مِنْ خَيْرٍۢ فَقِيرٌۭ.

28:24. அவர் அவ்விருவரின் ஆடுகளுக்குத் தண்ணீர் புகட்ட ஏற்பாடு செய்தார். அதன்பின் ஒரு மரத்தடியின் நிழலில் ஒதுங்கி நின்றார். “என் இறைவா! நான் இங்கும் தவறிழைக்காதவாறு என்னை பாதுகாத்துக் கொள்வாயாக! இதற்காக நீ எனக்கு நல்ல வழிமுறைகளை அறிவித்து தருவாயாக! உன் வழிகாட்டுதல்கள் எனக்கு மிகவும் அவசியமானவையாக இருக்கின்றன” என்று தன் எண்ணங்களை இறைவனிடம் சமர்ப்பித்தார்.
சிந்தனையாளர்களே! நபித்துவம் கிடைப்பதற்கு முன்பும் ஒரு நபியின் உள்ளத்தில் எப்போதும் தனக்கு நேர்வழி கிடைக்கவேண்டும் என்ற அளவுகடந்த ஆவல் இருப்பதை கவனித்தீர்களா? இதனால் தான் அத்தகையவர்கள் நபித்துவத்தின் தேர்வுக்கு தகுதி பெறுகிறார்கள். நாமும் நேர்வழி கிடைக்க இறைவனிடம் பிரார்த்திப்பதோடு அதற்காக முயற்சியும் மேற்கொண்டால் தான் நமக்கும் நேர்வழி கிடைக்கும். ஏனெனில் அந்த நேர்வழி இவ்வேதமான குர்ஆனிலேயே உள்ளது.


فَجَآءَتْهُ إِحْدَىٰهُمَا تَمْشِى عَلَى ٱسْتِحْيَآءٍۢ قَالَتْ إِنَّ أَبِى يَدْعُوكَ لِيَجْزِيَكَ أَجْرَ مَا سَقَيْتَ لَنَا ۚ فَلَمَّا جَآءَهُۥ وَقَصَّ عَلَيْهِ ٱلْقَصَصَ قَالَ لَا تَخَفْ ۖ نَجَوْتَ مِنَ ٱلْقَوْمِ ٱلظَّٰلِمِينَ.

28:25. அதன் பின்னர் அவ்விரு பெண்களில் ஒருவர் மூஸாவிடம் நாணத்துடன் வந்து, அவர்களுடைய தந்தை அழைத்து வரச் சொல்வதாக சொன்னாள். அவர் செய்த உதவிக்காக தக்க கூலி கொடுப்பதற்காக அழைப்பதாக சொன்னாள். அவ்வாறே அவரும் அவளுடன் சென்று தன்னைப் பற்றிய உண்மைகளை எடுத்துரைத்தார். அவற்றை கேட்ட அந்த பெரியவர் மூஸாவுக்கு தைரியமூட்டினார். அக்கிரமக்கார சமூகத்தாரிடமிருந்து பாதுகாப்பாக இங்கு இருக்கலாம் என்றும் ஆறுதலளித்தார்.


قَالَتْ إِحْدَىٰهُمَا يَٰٓأَبَتِ ٱسْتَـْٔجِرْهُ ۖ إِنَّ خَيْرَ مَنِ ٱسْتَـْٔجَرْتَ ٱلْقَوِىُّ ٱلْأَمِينُ.

28:26. அவ்விரு பெண்களில் ஒருத்தி தன் தந்தையிடம் அவரை பணியில் அமர்த்திக் கொள்ளுமாறு வேண்டினாள். காரணம் அவர் ஆடுகளுக்கு தண்ணீர் புகட்டிய விஷயத்தை கவனித்துப் பார்க்கும் போது, அவருடைய வீரத்தையும் விவேகத்தையும் பிரதிபலிக்கின்றன. தங்களுடன் நடந்து கொள்வதை வைத்துப் பார்க்கும் போது, அவர் நல்ல பண்புள்ளவராகவும் தெரிவதாக சொன்னாள்.


قَالَ إِنِّىٓ أُرِيدُ أَنْ أُنكِحَكَ إِحْدَى ٱبْنَتَىَّ هَٰتَيْنِ عَلَىٰٓ أَن تَأْجُرَنِى ثَمَٰنِىَ حِجَجٍۢ ۖ فَإِنْ أَتْمَمْتَ عَشْرًۭا فَمِنْ عِندِكَ ۖ وَمَآ أُرِيدُ أَنْ أَشُقَّ عَلَيْكَ ۚ سَتَجِدُنِىٓ إِن شَآءَ ٱللَّهُ مِنَ ٱلصَّٰلِحِينَ.

28:27. இதைப் பற்றி கவனித்து பார்த்த அந்தப் பெரியவர், அவரைத் தம்மிடம் பணியில் அமர்த்திக் கொள்ள ஒப்புக்கொண்டார். ஆனால் அதற்கு சில நிபந்தனைகளை விதித்தார். அதாவது அங்கு எட்டு ஆண்டுகள் வரையில் தங்கி இருந்து பணிபுரிய வேண்டும் அவ்விரு பெண்களில் ஒருத்தியை மணந்து கொள்ள வேண்டும். மேல்கொண்டு விரும்பினால் அவர் பத்து ஆண்டுகள் வரையில் இருந்தாலும் அவருக்கு ஆட்சேபனை இல்லை என்று கூறினார். அவருக்கு வேண்டிய வசதிகளை செய்து தருவதாகவும், அல்லாஹ்வின் நாட்டப்படியே தான் செயல்பட்டு வருவதால், நல்லவர்களில் ஒருவராகவே இருப்பதாகவும் அந்தப் பெரியவர் கூறினார்.


قَالَ ذَٰلِكَ بَيْنِى وَبَيْنَكَ ۖ أَيَّمَا ٱلْأَجَلَيْنِ قَضَيْتُ فَلَا عُدْوَٰنَ عَلَىَّ ۖ وَٱللَّهُ عَلَىٰ مَا نَقُولُ وَكِيلٌۭ.

28:28. அவ்வாறே மூஸாவும் தங்களுக்கிடையே செய்துகொண்ட ஒப்பந்தத்தை சம்மதிப்பதாகக் கூறினார். அந்த ஒப்பந்தத்தில் உள்ளபடி பத்து ஆண்டுகள் வரை இருந்து பணிபுரிவதாக உறுதியளித்தார். ஆனால் எட்டு ஆண்டுகளுக்கு மேல் அங்கு தங்கி இருப்பது தன் விருப்பம் என கூறினார். இந்த ஒப்பந்தத்திற்கு அல்லாஹ்வே சாட்சியாக இருப்பதாகவும் கூறினார்.
அந்த பெரியவர் ஷுஐப் நபி என்று வரலாற்று குறிப்புகள் கூறுகின்றன. மூஸாவுக்கு நபித்துவத்தை பெறும் அறிகுறிகள் இருப்பதை அவர் கண்டதால், அவரை நன்றாகப் பழக்கி நபித்துவத்திற்கு முழு அளவில் தகுதியுள்ளவராக ஆக்கவேண்டும் என்பதற்காக அவரை எட்டு முதல் பத்து ஆண்டுகள் வரையில் தங்கியிருக்க வழி செய்ததாகத் தெரிகிறது. மேலும் அவருடன் இருந்த அவசரப் புத்தியை சரிசெய்து நன்றாக பழக்க ஃகிஜர் நபியிடம் அனுப்பி வைத்த சம்பவமும் முக்கியமான ஒன்றாகும். (பார்க்க 18:60-70)


۞ فَلَمَّا قَضَىٰ مُوسَى ٱلْأَجَلَ وَسَارَ بِأَهْلِهِۦٓ ءَانَسَ مِن جَانِبِ ٱلطُّورِ نَارًۭا قَالَ لِأَهْلِهِ ٱمْكُثُوٓا۟ إِنِّىٓ ءَانَسْتُ نَارًۭا لَّعَلِّىٓ ءَاتِيكُم مِّنْهَا بِخَبَرٍ أَوْ جَذْوَةٍۢ مِّنَ ٱلنَّارِ لَعَلَّكُمْ تَصْطَلُونَ.

28:29. அவர்கள் செய்து கொண்ட ஒப்பந்தப்படி மூஸா அங்கு தங்கியிருந்து அவ்விரு பெண்களில் ஒருத்தியை மணந்து கொண்டார். அவர் தன் தோழர்களுடன் பயணித்த போது, “தூர்” என்னும் மலை அடிவாரத்திற்கு வந்தடைந்தனர். அதற்குள் இருட்டாகி விட்டதால் அங்கிருந்து தொலைவில் நெருப்பின் ஜுவாலையைக் கண்ட அவர், தன்னுடன் வந்தவர்களை அங்கேயே தங்கி இருக்கும்படி சொன்னார். தான் நெருப்பின் ஜுவாலையை காண்பதாகவும் அந்த நெருப்பின் கங்கை எடுத்து வருவதாகவும் கூறினார். அந்த நெருப்பின் வெளிச்சத்தைக் கொண்டு அனைவரும் குளிர் காய்த்து இரவை கழித்துக் கொள்ளலாம்.(பார்க்க 27:7) அல்லது அங்கிருந்து செல்ல வழியைத் தேடிக் கொள்ளலாம் என கூறி அவர் புறப்பட்டுச் சென்றார்.


فَلَمَّآ أَتَىٰهَا نُودِىَ مِن شَٰطِئِ ٱلْوَادِ ٱلْأَيْمَنِ فِى ٱلْبُقْعَةِ ٱلْمُبَٰرَكَةِ مِنَ ٱلشَّجَرَةِ أَن يَٰمُوسَىٰٓ إِنِّىٓ أَنَا ٱللَّهُ رَبُّ ٱلْعَٰلَمِينَ.

28:30. அவர் அந்த நெருப்பின் வெளிச்சத்தின் அருகில் வந்த போது, அந்த இடம் எல்லா வளங்களையும் பெற்ற இயற்கை எழில் மிக்க இடமாக இருப்பதை கண்டார். அவற்றிற்கிடையே நீரருவியும் இருப்பதை கண்டார். அங்குள்ள மரங்களின் அருகிலிருந்து, “மூஸாவே! நானே அகிலங்கள் அனைத்தையும் பரிபாலிக்கும் இறைவனாகிய அல்லாஹ்” என்ற ஓசை வந்தது.
இவ்வாறாக அவர் இறைவனின் வழிகாட்டுதலை நேரடியாகப் பெறும் பாக்கியம் கிடைத்தது. இனி அவர் இறைவழிகாட்டுதலைத் தேடி அலைய வேண்டியதில்லை அந்த வழிகாட்டுதல் அவரிடமே வந்தடையும் என்றும் கூறப்பட்டது. (பார்க்க 20:12) அதைத் தொடர்ந்து அவருக்கு இறைக் கட்டளைகள் அடங்கிய வேதம் சிறுக சிறுக அளிக்கப்பட்டது. (பார்க்க 20:14-16)


وَأَنْ أَلْقِ عَصَاكَ ۖ فَلَمَّا رَءَاهَا تَهْتَزُّ كَأَنَّهَا جَآنٌّۭ وَلَّىٰ مُدْبِرًۭا وَلَمْ يُعَقِّبْ ۚ يَٰمُوسَىٰٓ أَقْبِلْ وَلَا تَخَفْ ۖ إِنَّكَ مِنَ ٱلْءَامِنِينَ.

28:31. அதைத் தொடர்ந்து, அவர் கைவசமிருந்த வேத அறிவுரைகளை மக்களிடம் சமர்ப்பிக்குமாறு இறைவனிடமிருந்து கட்டளை வந்தது. (பார்க்க 26:10) அவ்வாறே அவர் அதை மக்களிடம் எடுத்துரைத்த போது, மக்களிடமிருந்து எதிர்ப்புகள் வலுத்தன. எனவே பாம்பை கண்டு எவ்வாறு ஒருவர் மிரண்டு ஓடுவாரோ அவ்வாறே அவரும் பயந்து பின்வாங்கினார். அதற்கு, “எதிர்ப்பைக் கண்டு முன்வைத்த காலை பின்வைக்காதே. உன் தாவாப் பணியை தொடர்ந்து செய். மக்களின் எதிர்ப்பிலிருந்து உனக்கு எல்லா வகையான பாதுகாப்பும் கிடைக்கும்” என்று இறைச் செய்தி வந்தது. இறைச் செய்திகளை மக்கள் முன் வைப்பவர்கள் தம் உயிரை துச்சமாக கருதுவர் (பார்க்க 27:10).


ٱسْلُكْ يَدَكَ فِى جَيْبِكَ تَخْرُجْ بَيْضَآءَ مِنْ غَيْرِ سُوٓءٍۢ وَٱضْمُمْ إِلَيْكَ جَنَاحَكَ مِنَ ٱلرَّهْبِ ۖ فَذَٰنِكَ بُرْهَٰنَانِ مِن رَّبِّكَ إِلَىٰ فِرْعَوْنَ وَمَلَإِي۟هِۦٓ ۚ إِنَّهُمْ كَانُوا۟ قَوْمًۭا فَٰسِقِينَ.

28:32. மேலும் இறைவழிகாட்டுதல் ஒவ்வொன்றையும் உள்ளத்தில் பதிய வைத்துக் கொண்டு மக்களிடம் தக்க ஆதாரங்களுடன் எடுத்துரைத்து வா. நாளடைவில் அவை மனிதனின் ஒளிமயமான வாழ்விற்கு சரியான வழிகாட்டுவது உண்மையே என்று மக்களுக்கு தெளிவாகி வரும். (பார்க்க 27:12) மேலும் ஆபத்து ஏதாகிலும் வருவதாக தெரிந்தால், நீ தைரியத்தை இழந்து நடுங்கக் கூடாது. உன்னை ஏற்றுக் கொண்டவர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து முழு வேகத்துடன் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வா. இவ்வாறு செயல்பட்டு வந்தால் ஃபிர்அவ்னையும் அவனுடைய ஆதரவாளர்களையும் எதிர்த்து நிற்கும் வலிமை கிடைத்து விடும். அப்போது தான் அவனுக்கும் அவனுடைய சகாக்களுக்கும் உண்மை புரியும். காரணம் அவர்கள் அனைவரும் பாவச் செயல்களில் ஈடுபடும் சமூகத்தாராகவே இருக்கிறார்கள்.
இப்படியாக மூஸா நபிக்கு வழிகாட்டுதல்கள் கிடைத்து வந்தன. மக்கள் ஆதரவைத் திரட்டிய பின் இறைவழிகாட்டுதலின்படி ஃபிர்அவ்னிடம் எடுத்துரைக்க இறைக் கட்டளை வந்தது. (பார்க்க 79:17). ஆனால் அந்த பணியும் மிகப்பெரிய ஆபத்து விளைவிக்கும் என அவருக்கு தோன்றியது. காரணம் அவர் ஏற்கனவே ஒரு கொலையை செய்து விட்டு மறைமுகமாக வாழ்ந்து வருபவராக இருந்தார். எனவே அவர் இறைவனிடம்:


قَالَ رَبِّ إِنِّى قَتَلْتُ مِنْهُمْ نَفْسًۭا فَأَخَافُ أَن يَقْتُلُونِ.

28:33. “என் இறைவா! நான் ஃபிர்அவ்ன் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை கொன்று விட்டேன். எனவே நான் செய்த கொலைக் குற்றத்திற்கு என்னை தூக்கிலிட்டு கொன்று விடுவார்கள் என்று பயப்படுகிறேன்” என்றார்.


وَأَخِى هَٰرُونُ هُوَ أَفْصَحُ مِنِّى لِسَانًۭا فَأَرْسِلْهُ مَعِىَ رِدْءًۭا يُصَدِّقُنِىٓ ۖ إِنِّىٓ أَخَافُ أَن يُكَذِّبُونِ.

28:34. மேலும் எனக்கு பேச்சுத் திறமை குறைவாக இருப்பதால், எனக்கு ஆதரவாக என்னுடைய சகோதரர் ஹாரூனையும் அழைத்துச் செல்ல அனுமதி வேண்டும். ஏனெனில் அவர் என்னைவிட பேச்சில் மிகத் தெளிவானவராக இருக்கிறார். உன் வழிகாட்டுதலை எடுத்துரைப்பதில் அவர் எனக்கு அவ்வப்போது துணைப் புரிவார். மேலும் அவர்களுக்கு தெளிவாக எடுத்துரைக்க என்னால் முடியாவிட்டால், அவர்கள் அவற்றை பொய்யென கூறி விடுவார்கள” என்றார். (பார்க்க 20:25-35)


قَالَ سَنَشُدُّ عَضُدَكَ بِأَخِيكَ وَنَجْعَلُ لَكُمَا سُلْطَٰنًۭا فَلَا يَصِلُونَ إِلَيْكُمَا ۚ بِـَٔايَٰتِنَآ أَنتُمَا وَمَنِ ٱتَّبَعَكُمَا ٱلْغَٰلِبُونَ.

28:35. அதற்கு, “நீ கேட்டுக்கொண்டதற்கு இணங்க, உன்னுடைய இந்த இலட்சியப் பயணத்தில் உன் சகோதரனையும் உன்னுடன் அழைத்துச் செல். அவர் உனக்கு பக்கபலமாக இருந்து உன் கரத்தை வலுப்படுத்துவார். நம் நியதிப்படி உங்கள் இருவருக்கும் வெற்றி கிடைப்பது உறுதி. நாம் உங்களுக்கு அளித்துள்ள ஆதாரப்பூர்வமான வழிகாட்டுதலைக் கொண்டு நீங்கள் இருவரும் உங்களை பின்பற்றிவருவோரும், ஃபிர்அவுனியர்களை அடக்கி ஆளும் சூழ்நிலை உருவாகும்” என்று இறைச்செய்தி வந்தது.


فَلَمَّا جَآءَهُم مُّوسَىٰ بِـَٔايَٰتِنَا بَيِّنَٰتٍۢ قَالُوا۟ مَا هَٰذَآ إِلَّا سِحْرٌۭ مُّفْتَرًۭى وَمَا سَمِعْنَا بِهَٰذَا فِىٓ ءَابَآئِنَا ٱلْأَوَّلِينَ.

28:36. ஆனால் மூஸா நபி, அவர்களிடம் இறைவனின் வழிகாட்டுதலை ஆதாரப்பூர்வமாக எடுத்துரைத்த போது, அவர்கள், “இவை யாவும் கற்பனை வளத்தில் பொய்யாக ஏற்படுத்திக் கொண்ட ஏமாற்று வேலையே” என்று கூறலானார்கள். மேலும் தங்கள் முன்னோர்களிடமிருந்து இத்தகைய விஷயங்களை கேள்விப்பட்டதே இல்லை எனவும் கூறினார்கள்.
சிந்தனையாளர்களே! தாம் பின்பற்றி வரும் வழிமுறைக்கு ஆதரவாக முன்னோர்களின் வழிமுறையையே ஆதாரமாக முன்வைக்கிறார்கள். அறிவுப்பூர்வமாக வாதிட அவர்களிடம் எவ்வித ஆதாரமும் இருப்பதில்லை. மேலும் நபிமார்கள் கொண்டுவரும் வழிமுறைகள் புதிதாகத் தோன்றுவதால், மக்களால் அவற்றை புரிந்து கொள்ள முடிவதில்லை. எனவே அவை ஏமாற்று வேலை என்று சொல்லி அவற்றை முறியடிக்கவே முனைகிறார்கள். இது இன்றைக்கும் நடக்கின்ற உண்மையாகும்.


وَقَالَ مُوسَىٰ رَبِّىٓ أَعْلَمُ بِمَن جَآءَ بِٱلْهُدَىٰ مِنْ عِندِهِۦ وَمَن تَكُونُ لَهُۥ عَٰقِبَةُ ٱلدَّارِ ۖ إِنَّهُۥ لَا يُفْلِحُ ٱلظَّٰلِمُونَ.

28:37. அதற்கு மூஸா நபி, “நான் உங்கள்முன் வைக்கும் வழிகாட்டுதல்கள் யாவும் மனித செயல்களின் ஒவ்வொன்றையும் அறிந்து கொள்ளும் பேராற்றலுடைய இறைவன் புறத்திலிருந்து வந்தவையாகும். எனவே யார் நேர்வழியில் இருக்கிறார்கள்? யார் தவறான வழியில் இருக்கிறார்கள் என்பதும் இறைவனுக்குத் தெரியும். யாருடைய வழிமுறைகள் மனிதனை சுவனத்திற்கு அழைத்துச் செல்லும் என்பதும் அவனுக்கு தெரியும். எனவே இறைவன் நிர்ணயித்துள்ள “மனித செயலுக்கேற்ற விளைவுகள்” என்ற சட்ட விதிமுறைகளின் படி அக்கிரம செயல்களில் ஈடுபடுவோர் ஒருபோதும் தன் இலட்சியத்தில் வெற்றிபெற மாட்டார்கள்” என்று தீர்க்கமாக எடுத்துரைத்தார்.
மூஸா நபியின் பேச்சு மத சம்பந்தப்பட்ட விஷயம் மட்டுமன்றி அரசியல் விஷயத்திலும் தலையிடுவதாக இருந்தது. இதைக் கேட்ட ஃபிர்அவ்ன் கோபமடைந்தான். எனவே


وَقَالَ فِرْعَوْنُ يَٰٓأَيُّهَا ٱلْمَلَأُ مَا عَلِمْتُ لَكُم مِّنْ إِلَٰهٍ غَيْرِى فَأَوْقِدْ لِى يَٰهَٰمَٰنُ عَلَى ٱلطِّينِ فَٱجْعَل لِّى صَرْحًۭا لَّعَلِّىٓ أَطَّلِعُ إِلَىٰٓ إِلَٰهِ مُوسَىٰ وَإِنِّى لَأَظُنُّهُۥ مِنَ ٱلْكَٰذِبِينَ.

28:38. ஃபிர்அவ்ன், “இந்நாட்டில் என்னைத் தவிர அதிகாரம் செலுத்தக் கூடியவர் வேறு யாரும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. ஆதலின் ஹாமானே! நீ செங்கல் சூளை ஒன்றை தயாரித்து செங்கற்களால் உயரமான கோபுரம் ஒன்றை எழுப்பு. நான் அதன் மேலே ஏறிச் சென்று மூஸாவின் இறைவனை காணவேண்டும். மேலும் இவர் கூறுவது அனைத்தும் பொய்யே என்பதில் எனக்கு எவ்வித சந்தேகமும் இல்லை” என்று மிகவும் ஏளனமாக பேசினான்.


وَٱسْتَكْبَرَ هُوَ وَجُنُودُهُۥ فِى ٱلْأَرْضِ بِغَيْرِ ٱلْحَقِّ وَظَنُّوٓا۟ أَنَّهُمْ إِلَيْنَا لَا يُرْجَعُونَ.

28:39. இப்படியாக ஃபிர்அவ்னும் அவனுடைய ஆட்சியாளர்களும் மூஸா நபியின் அறிவுரைகளை பொருட்படுத்தாமல், அநியாய அக்கிரம செயல்களிலேயே நிலைத்துவிட்டனர். அவர்களுடைய தீய செயல்கள், இறைவனின் நியதிப்படி விளைவுகளை ஏற்படுத்தி வருகின்றன என்பதைப் பற்றி அவர்கள் கவலைப்படவே இல்லை. எனவே மூஸா நபி கூறுவது போல் தங்களுக்கு எவ்வித ஆபத்தும் வராது என்றே எண்ணிக் கொண்டனர்.


فَأَخَذْنَٰهُ وَجُنُودَهُۥ فَنَبَذْنَٰهُمْ فِى ٱلْيَمِّ ۖ فَٱنظُرْ كَيْفَ كَانَ عَٰقِبَةُ ٱلظَّٰلِمِينَ.

28:40. ஆகவே அவனும் அவனுடைய சேனைகளும் இறைவன் விதித்துத்துள்ள “மனித செயல்ளுக்கேற்ற இறுதி விளைவுகள்” என்ற சட்டத்தின் பிடியில் சிக்கி ஆழமான நதியில் விழுந்து மடிந்து போயினர். (பார்க்க 7:136) கண்மூடித்தனமாக அக்கிரம செயல்களில் ஈடுபடுபவர்களின் நிலைமை என்னவாயிற்று என்பதை நீங்களே எண்ணிப் பாருங்கள்.


وَجَعَلْنَٰهُمْ أَئِمَّةًۭ يَدْعُونَ إِلَى ٱلنَّارِ ۖ وَيَوْمَ ٱلْقِيَٰمَةِ لَا يُنصَرُونَ.

28:41. மேலும் அநியாய அக்கிரம செயல்களால் மக்களை பல வேதனைக்கு ஆளாக்கினர். அவர்கள் அனைவரையும் நரக வேதனைகளின் பக்கம் அழைத்துச் செல்லும் தலைவர்களாகவே இருந்தனர். எனவே அவர்களுடைய செயல்களின் விளைவுகள் தோற்றத்திற்கு வந்த கால கட்டத்தில் அவர்களுக்கு யாரும் உதவவில்லை.


وَأَتْبَعْنَٰهُمْ فِى هَٰذِهِ ٱلدُّنْيَا لَعْنَةًۭ ۖ وَيَوْمَ ٱلْقِيَٰمَةِ هُم مِّنَ ٱلْمَقْبُوحِينَ.

28:42. அது மட்டுமின்றி அவனுடைய சமூகத்தார் அனைவரும் இறைவனின் அருட்கொடைகளைக் கொஞ்சம் கொஞ்சமாக இழந்து பல வேதனைகளுக்கு ஆளானார்கள். இறுதியாக அவர்கள் அனைவரும் இழிவாகி விட்டார்கள். மேலும் மரணத்திற்குப் பின் தொடர்கின்ற கியாம நாளிலும் இகழப்பட்டவர்களாகவே இருப்பார்கள்.
மனித வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால் இவ்வாறு அழிந்து போன சமுதாயங்கள் ஏராளம் என்பதை அறிந்து கொள்வீர்கள். இவ்வாறு மனித இனம் அழிந்து விடக் கூடாது என்பதற்காகவே இறை வழிகாட்டுதல்கள் அளிக்கப்பட்டு வந்தன. அந்த வரிசையில் மூஸா நபியும் வருகிறார்.


وَلَقَدْ ءَاتَيْنَا مُوسَى ٱلْكِتَٰبَ مِنۢ بَعْدِ مَآ أَهْلَكْنَا ٱلْقُرُونَ ٱلْأُولَىٰ بَصَآئِرَ لِلنَّاسِ وَهُدًۭى وَرَحْمَةًۭ لَّعَلَّهُمْ يَتَذَكَّرُونَ.

28:43. மூஸா நபிக்கும் இறைவழிகாட்டுதல்கள் அளிக்கப்பட்டன. அவருக்கு முன்வந்த பல தலைமுறையினரும் அழிவை சந்தித்துள்ளனர். மக்களில் யாரும் அழிந்து போகாமல் சிறப்பாக வாழ்ந்து வர, அந்த வழிகாட்டுதல்கள் ஞானம் மிக்க அறிவுரைகளாகவும், நேர்வழியைக் காட்டுவதாகவும், பாதுகாப்பாக வாழ்வதற்கான வழிமுறையாகவும் இருந்தன.


وَمَا كُنتَ بِجَانِبِ ٱلْغَرْبِىِّ إِذْ قَضَيْنَآ إِلَىٰ مُوسَى ٱلْأَمْرَ وَمَا كُنتَ مِنَ ٱلشَّٰهِدِينَ.

28:44. இறைவழிகாட்டுதலை எடுத்துரைப்பவரே! இந்த உண்மைகள் எல்லாம் வஹீ மூலம் உமக்கு அறிவிக்கப்படுகின்றன. ஏனெனில் மூஸாவுக்கு இறைக் கட்டளை அறிவிக்கும் சமயம் மேற்குத் திசையில் உள்ள தூர் மலையின் பக்கம் நீ இருந்ததுமில்லை. அந்நிகழ்ச்சியை நீ கண்டதும் இல்லை.


وَلَٰكِنَّآ أَنشَأْنَا قُرُونًۭا فَتَطَاوَلَ عَلَيْهِمُ ٱلْعُمُرُ ۚ وَمَا كُنتَ ثَاوِيًۭا فِىٓ أَهْلِ مَدْيَنَ تَتْلُوا۟ عَلَيْهِمْ ءَايَٰتِنَا وَلَٰكِنَّا كُنَّا مُرْسِلِينَ.

28:45. மேலும் மூஸா நபிக்குப் பின் அநேக தலைமுறையினர் வந்தனர். இப்படியாக யுகங்கள் பல கடந்து விட்டன. அதுமட்டுமின்றி மத்யன்வாசிகளிடையே நீ வசிக்கவுமில்லை. அவர்களுக்கு நீ இறைவழிகாட்டுதலை எடுத்துரைக்கவுமில்லை. இறைச் செய்திகள் எனும் “வஹீ” மூலமே இவை உமக்கு அறிவிக்கப்படுகின்றன.


وَمَا كُنتَ بِجَانِبِ ٱلطُّورِ إِذْ نَادَيْنَا وَلَٰكِن رَّحْمَةًۭ مِّن رَّبِّكَ لِتُنذِرَ قَوْمًۭا مَّآ أَتَىٰهُم مِّن نَّذِيرٍۢ مِّن قَبْلِكَ لَعَلَّهُمْ يَتَذَكَّرُونَ.

28:46. அதுமட்டுமின்றி தூர் மலையின் பக்கம் மூஸாவை அழைத்து இறைவன் பேசியபோதும் நீ அங்கு இருந்ததில்லை. உனக்கு இறைவனின் அருட்கொடையாக இந்த வழிகாட்டுதல்கள் கிடைத்துள்ளன. இதைக் கொண்டு இது வரையில் இறைவழிகாட்டுதல்கள் எதுவும் கிடைக்காத சமூகத்தவர்களுக்கு எடுத்துரைப்பதற்காக உமக்கு இறக்கி அருளப்படுகிறது. (மேலும் பார்க்க 32:3, 36:6) அவர்களுடைய தவறான செயல்களால் ஏற்படும் விபரீத விளைவுகளைப் பற்றி எடுத்துரைத்து முன்னெச்சரிக்கை செய்வதற்காக இறக்கி அருளப்படுகிறது. இதன் மூலம் நல்லறிவுரைகளைப் பெற்று சிறப்பாக வாழமுடியும். இது உன் இறைவனின் மாபெரும் அருட்கொடையாகும் அல்லவா?


وَلَوْلَآ أَن تُصِيبَهُم مُّصِيبَةٌۢ بِمَا قَدَّمَتْ أَيْدِيهِمْ فَيَقُولُوا۟ رَبَّنَا لَوْلَآ أَرْسَلْتَ إِلَيْنَا رَسُولًۭا فَنَتَّبِعَ ءَايَٰتِكَ وَنَكُونَ مِنَ ٱلْمُؤْمِنِينَ.

28:47. அவர்களுடைய தீய செயல்களால் துயர விளைவுகள் ஏற்படும் சமயம், “எங்கள் இறைவா! நீ எங்களுக்கு இறைச் செய்திகளை எடுத்துரைப்பவர் யாரையாவது அனுப்பி இருக்கக் கூடாதா? அவ்வாறு அனுப்பி இருந்தால் அவர் காட்டும் வழியில் செயல்பட்டிருப்போமே! நாமும் உன் வழிகாட்டுதலை ஏற்று நடப்பவர்களாக ஆகியிருப்போமே. இந்த துயரங்களை எல்லாம் சந்திக்க நேர்ந்திருக்காதே!” என்று கூறி இருப்பார்கள். அப்படி ஒரு நிலைமை ஏற்படாதிருக்கவே இந்த இறைவழிகாட்டுதல்கள் அளிக்கப்படுகின்றன. (மேலும் பார்க்க 6:156-157)


فَلَمَّا جَآءَهُمُ ٱلْحَقُّ مِنْ عِندِنَا قَالُوا۟ لَوْلَآ أُوتِىَ مِثْلَ مَآ أُوتِىَ مُوسَىٰٓ ۚ أَوَلَمْ يَكْفُرُوا۟ بِمَآ أُوتِىَ مُوسَىٰ مِن قَبْلُ ۖ قَالُوا۟ سِحْرَانِ تَظَٰهَرَا وَقَالُوٓا۟ إِنَّا بِكُلٍّۢ كَٰفِرُونَ.

28:48. நபியே! இதையே நோக்கமாகக் கொண்டு இறைவழிகாட்டுதல்கள் உனக்கு அளிக்கப்படுகின்றன. இவை மனிதனின் சிறப்பான வாழ்விற்கு மிகச் சரியான வழியை காட்டுவதாக உள்ளன. இவ்வழிகாட்டுதலை ஆராய்ந்து மனதார ஏற்றுக்கொள்வதற்குப் பதிலாக, “மூஸா நபியின் வழிகாட்டுதலை ஏற்காமல் போனதற்கு ஃபிர்அவ்னுக்கு ஏற்பட்ட அழிவைப் போன்றே, குர்ஆனை ஏற்காத நமக்கும் ஏன் அழிவு ஏற்படவில்லை?” என்று கேட்கிறார்கள். “அவர்கள் அழிந்த பின்பும் எஞ்சியிருந்தவர்கள் மூஸா நபி கொண்டுவந்த வழிகாட்டுதலை புறக்கணிக்க வில்லையா? மூஸாவும் ஹாரூனும் ஒருவருக்கொருவர் துணை புரியும் ஏமாற்றுக்காரர்கள் என்று அவர்கள் சொல்ல வில்லையா? இவ்வாறாக அவர்கள் இறைவழிகாட்டுதலை முழுவதுமாக ஏற்க மறுத்து விட்டவர்கள் தானே!


قُلْ فَأْتُوا۟ بِكِتَٰبٍۢ مِّنْ عِندِ ٱللَّهِ هُوَ أَهْدَىٰ مِنْهُمَآ أَتَّبِعْهُ إِن كُنتُمْ صَٰدِقِينَ.

28:49. “எனவே மூஸா நபிக்கு அளிக்கப்பட்ட தவ்ராத்தை விடவும் (பார்க்க 6:154) இந்த குர்ஆனைவிடவும் (பார்க்க 6:155) சிறந்த நேர்வழி காட்டக் கூடிய வேதம் உங்களிடம் இருந்தால் அதை கொண்டு வாருங்கள். நானும் அதையே பின்பற்றுகிறேன்” என்று அவர்களிடம் கூறுங்கள்.


فَإِن لَّمْ يَسْتَجِيبُوا۟ لَكَ فَٱعْلَمْ أَنَّمَا يَتَّبِعُونَ أَهْوَآءَهُمْ ۚ وَمَنْ أَضَلُّ مِمَّنِ ٱتَّبَعَ هَوَىٰهُ بِغَيْرِ هُدًۭى مِّنَ ٱللَّهِ ۚ إِنَّ ٱللَّهَ لَا يَهْدِى ٱلْقَوْمَ ٱلظَّٰلِمِينَ.

28:50. அவர்களிடமிருந்து இதற்கு பதில் எதுவும் வரவில்லையெனில் அவர்கள் தம் மனோ இச்சையையே பின்பற்ற விரும்புகிறார்கள் என்பதை அறிந்து கொள்ளுங்கள். அவர்களால் அப்படி ஒரு சிறந்த வழிகாட்டுதலைக் கொண்டு வரவே முடியாது. (பார்க்க 2:23 &24) எனவே இறைவழிகாட்டுதலை விட்டுவிட்டு தம் மனோ இச்சையை பின்பற்றுபவனை விட வழிகெட்டவன் வேறு யார் இருக்க முடியும்? இப்படி தம் மனோ இச்சையைப் பின்பற்றுபவர்கள் இறைவழிகாட்டுதலுக்கு அளிக்கவேண்டிய முக்கியத்துவத்தை அளிக்க மாட்டார்கள். எனவே இத்தகையவர்கள் ஒருபோதும் நேர்வழி பெறும் வாய்ப்பே பெற மாட்டார்கள்.


۞ وَلَقَدْ وَصَّلْنَا لَهُمُ ٱلْقَوْلَ لَعَلَّهُمْ يَتَذَكَّرُونَ.

28:51. இப்படியாக காலம் காலமாக அவர்களுக்கு இறைவழிகாட்டுதலை நபிமார்கள் மூலம் அளித்துக் கொண்டே இருந்தோம். அதைக்கொண்டு அவர்கள் வேத அறிவுரைகளை பெற்று சிறப்பாக செயலாற்ற இவ்வாறு நம் புறத்திலிருந்து ஏற்பாடு செய்யப்பட்டது.


ٱلَّذِينَ ءَاتَيْنَٰهُمُ ٱلْكِتَٰبَ مِن قَبْلِهِۦ هُم بِهِۦ يُؤْمِنُونَ.

28:52. அதே அடிப்படையில் இந்த குர்ஆனையும் நாம் இறக்கி அருளுகிறோம். இது முந்தைய வேதங்களின் உண்மையான அறிவுரைகளையே எடுத்துரைக்கிறது. இவற்றைப் பற்றி சிந்திப்பவர்கள் தாம் இதை ஏற்றுக் கொள்கிறார்கள்.


وَإِذَا يُتْلَىٰ عَلَيْهِمْ قَالُوٓا۟ ءَامَنَّا بِهِۦٓ إِنَّهُ ٱلْحَقُّ مِن رَّبِّنَآ إِنَّا كُنَّا مِن قَبْلِهِۦ مُسْلِمِينَ.

28:53. மேலும் திருக்குர்ஆனின் வாசகங்களை அவர்களிடம் ஓதிக் காண்பித்தால் அவர்கள், “நாங்கள் இவற்றை ஏற்றுக் கொள்கிறோம். இவை எங்கள் இறைவனிடமிருந்து வந்த வேத உண்மைகளே என்பதை எவ்வித சந்தேகமின்றி ஏற்றுக் கொள்கிறோம். இதற்கு முன்பிருந்தே இந்த இறைவழிகாட்டுதலுக்கு முற்றிலும் அடிபணிபவர்களாக இருக்கிறோம்” என்று கூறுகின்றனர்.


أُو۟لَٰٓئِكَ يُؤْتَوْنَ أَجْرَهُم مَّرَّتَيْنِ بِمَا صَبَرُوا۟ وَيَدْرَءُونَ بِٱلْحَسَنَةِ ٱلسَّيِّئَةَ وَمِمَّا رَزَقْنَٰهُمْ يُنفِقُونَ.

28:54. இப்படியாக அவர்கள் இறைக் கொள்கை கோட்பாட்டில் நிலைத்திருந்து செயல்படுவதால் அவர்களுக்கு இரட்டிப்பு பலன்கள் கிடைக்கின்றன. மேலும் அவர்கள் நன்மையான செயல்களைக் கொண்டு தீமைகள் ஏற்படாதவாறு தடுக்கிறார்கள். மேலும் அவர்களிடம் இருக்கும் உபரிச் செல்வங்களை சமுதாய மேம்பாட்டிற்காக செலவும் செய்கிறார்கள்.


وَإِذَا سَمِعُوا۟ ٱللَّغْوَ أَعْرَضُوا۟ عَنْهُ وَقَالُوا۟ لَنَآ أَعْمَٰلُنَا وَلَكُمْ أَعْمَٰلُكُمْ سَلَٰمٌ عَلَيْكُمْ لَا نَبْتَغِى ٱلْجَٰهِلِينَ.

28:55. மேலும் அவர்கள் வீணான பேச்சுகள் நிகழ்வதைக் கண்டால் அவர்கள் அவற்றைவிட்டு ஒதுங்கிச் சென்று விடுகிறார்கள். அப்படியும் அங்கிருக்க நேர்ந்தால் எங்களுடைய செயல்களுக்கு ஏற்ற பலன்களை நாங்கள் பெற்றுக் கொள்வோம். உங்களுடைய செயலுக்கேற்ற பலன்களை நீங்கள் பெற்றுக் கொள்வீர்கள். நாங்கள் உங்கள் நலனில் அக்கரை கொள்பவர்களாக இருக்கிறோம். நீங்கள் உண்மை தெரியாமல் இப்படிப்பட்ட தகாத செயல்களில் ஈடுபடுகிறீர்கள். இவற்றை விட்டு நாங்கள் விலகிக் கொள்கிறோம்” என்று நளினமாக சொல்லி அவர்களை திருத்த முயற்சி செய்கிறார்கள்.
ஆனால் அந்த வேதமுடையவர்களில் உள்ள பெரும்பாலோரின் செயல்களை பார்த்தால் இப்படிப்பட்ட நற்செயல்கள் இருப்பதாக தெரியவில்லை (பார்க்க-2:41). அவர்கள் தவறான செயல்களில் மூழ்கி இருக்கிறார்கள் என்றே தெரிகிறது. எனவேதான் இந்த குர்ஆன் கூறும் அறிவுரைகளின்படி வாழ முன்வருவதில்லை. இத்தகையவர்களை எவ்வாறு நேர்வழிக்கு கொண்டுவர முடியும்?


إِنَّكَ لَا تَهْدِى مَنْ أَحْبَبْتَ وَلَٰكِنَّ ٱللَّهَ يَهْدِى مَن يَشَآءُ ۚ وَهُوَ أَعْلَمُ بِٱلْمُهْتَدِينَ.

28:56. இறைவழிகாட்டுதலை எடுத்துரைப்பவரே! நேர்வழியினை எடுத்துரைப்பதே உன் பணியாகும். நீர் விரும்பியவர்களை எல்லாம் நேர்வழியில் கொண்டுவர முடியாது. நீர் அவர்களை கட்டாயப்படுத்தவும் முடியாது (பார்க்க 10:99) நேர்வழிப் பெற நாடி வருபவர்களுக்குத் தான் நேர்வழி கிடைக்கும் என்பது அல்லாஹ்வின் நாட்டமாகும். (பார்க்க 10:108, 18:29) நேர்வழியில் நிலைத்திருந்து செயல்படுவர்கள் யார் என்பதும் அல்லாஹ்வுக்கு நன்கு தெரியும்.
முஹம்மது நபி (ஸல்) காலத்தில் வாழ்ந்த குரைஷியர்களும் இறைவழிகாட்டுதலை ஏற்க மறுக்கின்றனர். அவர்களுடைய மறுப்புக்கு கூறும் காரணம் என்னவென்பதையும் கவனியுங்கள்.


وَقَالُوٓا۟ إِن نَّتَّبِعِ ٱلْهُدَىٰ مَعَكَ نُتَخَطَّفْ مِنْ أَرْضِنَآ ۚ أَوَلَمْ نُمَكِّن لَّهُمْ حَرَمًا ءَامِنًۭا يُجْبَىٰٓ إِلَيْهِ ثَمَرَٰتُ كُلِّ شَىْءٍۢ رِّزْقًۭا مِّن لَّدُنَّا وَلَٰكِنَّ أَكْثَرَهُمْ لَا يَعْلَمُونَ.

28:57. அவர்கள், “நாங்கள் உம்முடன் இணைந்து இந்த குர்ஆன் காட்டும் வழியை பின்பற்றினால், இவ்வூராரின் ஆதரவை இழந்து விடுவோம். மேலும் அவர்கள் எங்களை நாட்டைவிட்டு விரட்டி விடுவார்கள்” என்று கூறுகிறார்கள். எனவே நீ அவர்களிடம்,"உங்களை சங்கை மிக்க இடமாகிய கஅபாவில் பாதுகாப்பாக வாழ இறைவன் ஏற்பாடு செய்து வரவில்லையா? நீங்கள் வசிக்கும் இடத்தில் எல்லா வகையான கனிவர்க்கங்களும் உணவு வகைகளும் உங்களுக்கு கிடைக்க ஏற்பாடு செய்யவில்லையா? இவ்வளவு செய்யக் கூடிய அல்லாஹ்வால் நீங்கள் இறைவழிகாட்டுதலின் படி நடந்தால் உங்களுடைய பாதுகாப்பான வாழ்விற்கு ஏற்பாடு செய்ய மாட்டானா? இந்த உண்மையை பெரும்பாலோர் அறிவதில்லை.


وَكَمْ أَهْلَكْنَا مِن قَرْيَةٍۭ بَطِرَتْ مَعِيشَتَهَا ۖ فَتِلْكَ مَسَٰكِنُهُمْ لَمْ تُسْكَن مِّنۢ بَعْدِهِمْ إِلَّا قَلِيلًۭا ۖ وَكُنَّا نَحْنُ ٱلْوَٰرِثِينَ.

28:58. அதுமட்டுமின்றி இதற்கு முன் செல்வ செழிப்புடன் வாழ்ந்த எத்தனையோ சமுதாயத்தினர் அவர்களுடைய தவறான செயல்களால் இறைவனின் நியதிப்படி அழிந்து போயினர். அவர்கள் வாழ்ந்த இடங்களுக்குச் சென்று பாருங்கள். அவர்களில் சிலரைத் தவிர பெரும்பாலோர் அங்கு வாழ்வதில்லை. அவர்களுடைய அழிவுக்குப் பின் அந்த இடங்களை எந்த மனிதனும் பயன்படுத்தியதும் இல்லை. எனவே அந்த இடங்கள் அல்லாஹ்வுக்குச் சொந்தமாகி விட்டன.


وَمَا كَانَ رَبُّكَ مُهْلِكَ ٱلْقُرَىٰ حَتَّىٰ يَبْعَثَ فِىٓ أُمِّهَا رَسُولًۭا يَتْلُوا۟ عَلَيْهِمْ ءَايَٰتِنَا ۚ وَمَا كُنَّا مُهْلِكِى ٱلْقُرَىٰٓ إِلَّا وَأَهْلُهَا ظَٰلِمُونَ.

28:59. இன்னொரு விஷயத்தையும் தெரிந்து கொள்ளுங்கள். அதாவது எக்காரணமும் இன்றி இறைவன் யாரையும் கண்மூடித்தனமாக அழிப்பதில்லை. இறைவழிகாட்டுதலை எடுத்துரைக்கும் இறைத்தூதர்களை அனுப்பி அவர்கள் திருந்துவதற்கு தக்க வாய்ப்பை அளிக்கின்றான். அவற்றை புறக்கணித்து அநியாய அக்கிரம செயல்களைச் செய்யும் சமுதாயங்களே “மனித செயல்களின் விளைவுகள்” என்ற இறைவனின் நியதிப்படி அழிந்து போகின்றன. (பார்க்க 6:131)
சிந்தனையாளர்களே! நபித்துவத் தொடர் முற்றுப் பெற்றுவிட்டது. இனி இறைத்தூதர்கள் வர மாட்டார்கள். எனவே அல்லாஹ் நம்மைத் தண்டிக்க மாட்டான் என்று எண்ணி விடாதீர்கள். திருக்குர்ஆன் இறக்கி அருளப்பட்டு உலகம் முழுவதும் சமர்ப்பித்தாகி விட்டது. அதை படித்து ஆய்வு செய்து மக்களுக்கு எடுத்துரைத்து நேர்வழி காட்டுவது மார்க்க அறிஞர்களின் முக்கிய கடமையாகும் (பார்க்க 3:104, 3:110) அவற்றை அறிந்து பின்பற்றுவது ஒவ்வொரு மனிதனின் கடமையாகும். நினைவில் கொள்ளுங்கள்! அறியாமை தண்டனையிலிருந்து தப்பிக்கும் வழி அல்ல. Ignorance of Law is no excuse. (6:156-157)


وَمَآ أُوتِيتُم مِّن شَىْءٍۢ فَمَتَٰعُ ٱلْحَيَوٰةِ ٱلدُّنْيَا وَزِينَتُهَا ۚ وَمَا عِندَ ٱللَّهِ خَيْرٌۭ وَأَبْقَىٰٓ ۚ أَفَلَا تَعْقِلُونَ.

28:60. மேலும் உங்களுக்கு கிடைத்துள்ள வாழ்வாதரங்கள் யாவும் தற்காலிக வாழ்வின் சுகங்களும் அவற்றை அலங்கரிக்கும் பொருட்களும் தான் ஆகும். ஆனால் இறைவழிகாட்டுதலைப் பின்பற்றி நடக்கும் போது, இதை விட பன்மடங்கு சிறப்பான வாழ்க்கை வசதிகள் கிடைக்கும். மேலும் மனித வாழ்வு மரணத்தோடு முடிந்து விடுவதில்லை. அதன் பின்பும் தொடர்கிறது. இறைவழிகாட்டுதல் அவனுடைய தற்காலிக உலக வாழ்வோடு மரணத்திற்குப் பின் தொடர்கின்ற நிலையான சந்தோஷமான வாழ்விற்காகவும் வழி வகுக்கிறது. இதைப் பற்றி சிந்தித்து அறிந்தால், உண்மையை விளங்கிக் கொள்வதில் சிரமம் எதுவும் இருக்காது.


أَفَمَن وَعَدْنَٰهُ وَعْدًا حَسَنًۭا فَهُوَ لَٰقِيهِ كَمَن مَّتَّعْنَٰهُ مَتَٰعَ ٱلْحَيَوٰةِ ٱلدُّنْيَا ثُمَّ هُوَ يَوْمَ ٱلْقِيَٰمَةِ مِنَ ٱلْمُحْضَرِينَ.

28:61. இப்போது உண்மை தெளிவாகிவிட்டது. ஒரு சமுதாயம் இறைவழிகாட்டுதலின்படி நடந்து வாக்களிக்கபட்ட நிகழ்கால சந்தோஷங்களையும் வருங்கால நிலையான சந்தோஷங்களையும் பெற்றுக் கொள்கிறது. இன்னொரு சமுதாயம் நிகழ்கால சந்தோஷங்களை மட்டும் பெற்றுக் கொள்கிறது. வருங்கால வாழ்வில் தண்டனை பெறுவதற்காக இறைவன் முன் கொண்டு வரப்படுகிறது. இவ்விரு சமுதாயங்களும் சமமாகிவிடுமா?


وَيَوْمَ يُنَادِيهِمْ فَيَقُولُ أَيْنَ شُرَكَآءِىَ ٱلَّذِينَ كُنتُمْ تَزْعُمُونَ.

28:62. அப்போது உங்களை வழிகெடுத்து வந்த மதகுருமார்கள் எங்கே? அல்லாஹ்வுக்கு இணையாக உருவாக்கி வைத்திருந்த கற்பனை தெய்வங்கள் எங்கே? என்று அங்கு குற்றவாளிகளாக வந்து நிற்பவர்களிடம் கேட்கப்படும்.


قَالَ ٱلَّذِينَ حَقَّ عَلَيْهِمُ ٱلْقَوْلُ رَبَّنَا هَٰٓؤُلَآءِ ٱلَّذِينَ أَغْوَيْنَآ أَغْوَيْنَٰهُمْ كَمَا غَوَيْنَا ۖ تَبَرَّأْنَآ إِلَيْكَ ۖ مَا كَانُوٓا۟ إِيَّانَا يَعْبُدُونَ.

28:63. அல்லாஹ்வின் தண்டனைக்குரிய மதகுருமார்கள், “எங்கள் இறைவா! எங்களால் வழிகெட்டுப் போனவர்கள் இவர்கள் தாம். இதற்கு காரணம் நாங்களே வழிகெட்டுப் போனவர்களாக இருந்தோம். அவர்களாகவே முழு விருப்பத்துடன் எங்களிடம் வந்து கற்பனை தெய்வங்களை வணங்கினார்கள். எங்களை அவர்கள் வணங்கவில்லை. எனவே இந்த வழிகேட்டிற்கு நாங்கள் பொறுப்பாளி அல்ல” என்று மன்றாடுவார்கள்.


وَقِيلَ ٱدْعُوا۟ شُرَكَآءَكُمْ فَدَعَوْهُمْ فَلَمْ يَسْتَجِيبُوا۟ لَهُمْ وَرَأَوُا۟ ٱلْعَذَابَ ۚ لَوْ أَنَّهُمْ كَانُوا۟ يَهْتَدُونَ.

28:64. அப்போது வழிகெட்டுப் போனவர்களை அழைத்து, “உங்களை வழிகெடுத்து வந்த தலைவர்களையும் மத குருமார்களையும் அழையுங்கள்” என்று சொல்லப்படும். அப்போது அவர்களை அழைப்பார்கள். ஆனால் அவர்களால் இவர்களுக்கு பதில் எதுவும் கூற இயலாது. காரணம் அவர்களே நரக வேதனைக்கு உரியவர்களாக இருப்பார்கள். ஆக இறை வழிகாட்டுதலின் படி நடந்திருந்தால் அவர்களுக்கு இந்த இழி நிலை ஏற்பட்டிருக்குமா?


وَيَوْمَ يُنَادِيهِمْ فَيَقُولُ مَاذَآ أَجَبْتُمُ ٱلْمُرْسَلِينَ.

28:65. மேலும் அவர்களிடம்,“இறைத்தூதர்கள் உங்களை நேர்வழியின் பக்கம் அழைப்பு விடுத்தபோது, நீங்கள் என்ன பதில் அளித்தீர்கள்” என்று கேட்கப்படும்.


فَعَمِيَتْ عَلَيْهِمُ ٱلْأَنۢبَآءُ يَوْمَئِذٍۢ فَهُمْ لَا يَتَسَآءَلُونَ.

28:66. அவர்கள் செய்து வந்த தீய செயல்களின் விளைவுகளை சந்திக்கும் கால கட்டத்தில் அவர்களுக்கு எல்லாமே வெட்ட வெளிச்சமாகி விடும். இந்நிலை ஒருவருக்கு மட்டும் ஏற்படுகின்ற ஒன்றல்ல. அவர்கள் அனைவருடைய நிலைமையும் பரிதாபத்திற்குரியதாகவே இருக்கும். எனவே யாராலும் எதுவும் பேசவே முடியாது.


فَأَمَّا مَن تَابَ وَءَامَنَ وَعَمِلَ صَٰلِحًۭا فَعَسَىٰٓ أَن يَكُونَ مِنَ ٱلْمُفْلِحِينَ.

28:67. ஆனால் மனந்திருந்தி அல்லாஹ்வின் வழிகாட்டுதலை மனதார ஏற்று, தம் தவறான செயல்களை விட்டுவிட்டு, ஆக்கப்பூர்வமான நற்செயல்களை செய்வோருக்கு இந்நிலை ஏற்படாது. அவர்களுக்கு மகத்தானதொரு வெற்றி கிடைத்துவிடும்.
சிந்தனையாளர்களே! இன்னமும் காலம் கடந்து விடவில்லை. உங்கள் வாழ்வில் கிடைத்துள்ள அரிய வாய்ப்பை நழுவ விடாதீர்கள். தவறான செயல்களை விட்டுவிட்டு இறைவனின் நேர்வழியின் பக்கம் வந்து விடுங்கள். உங்களுக்கு மகத்தானதொரு வெற்றி கிடைப்பது உறுதி.


وَرَبُّكَ يَخْلُقُ مَا يَشَآءُ وَيَخْتَارُ ۗ مَا كَانَ لَهُمُ ٱلْخِيَرَةُ ۚ سُبْحَٰنَ ٱللَّهِ وَتَعَٰلَىٰ عَمَّا يُشْرِكُونَ.

28:68. ஏனெனில் இவையாவும் இறைவன் வகுத்துள்ள செயல்திட்டங்கள் சம்பந்தப்பட்ட விஷயங்களாகும். அந்த செயல் திட்டங்களின் படியே அனைத்தும் படைக்கப்பட்டுள்ளன. வளர்ச்சி படித்தரங்களைக் கடந்து வெற்றி இலக்கை அடைவதற்கும் சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன. அவை இந்த குர்ஆன் மூலம் அறிவிக்கப்படுகின்றன. இவற்றை பின்பற்றுவதன் மூலமே அந்த வெற்றி இலக்கை அடைய முடியுமே தவிர, மனிதன் சுயமாக உருவாக்கி வைத்துள்ள வழிமுறைகளை கொண்டு அல்ல. இறைவனின் செயல்திட்டங்கள் யாவும் மனித கற்பனைகளுக்கெல்லாம் அப்பாற்பட்டவை ஆகும்.


وَرَبُّكَ يَعْلَمُ مَا تُكِنُّ صُدُورُهُمْ وَمَا يُعْلِنُونَ.

28:69. அல்லாஹ்வை பொறுத்த வரையில் எதுவும் மூடி மறைக்க முடியாது. உங்கள் மனதில் எழும் எண்ணங்களானாலும் சரி உங்களுடைய வெளிப்படையான செயல்களானாலும் சரி. அல்லாஹ்வுக்கு எல்லாமே சமமானதே.


وَهُوَ ٱللَّهُ لَآ إِلَٰهَ إِلَّا هُوَ ۖ لَهُ ٱلْحَمْدُ فِى ٱلْأُولَىٰ وَٱلْءَاخِرَةِ ۖ وَلَهُ ٱلْحُكْمُ وَإِلَيْهِ تُرْجَعُونَ.

28:70. அப்பேற்பட்ட பேராற்றல் உடையவன் தான் அல்லாஹ். அகிலங்கள் அனைத்திலும் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருடைய அதிகாரமும் செயல்படுவதில்லை. ஆரம்பம் முதல் இறுதி வரையில் உள்ள அவனுடைய எல்லா செயல்திட்டங்களும் பாராட்டுக்கும் போற்றுதலுக்கும் உரியவையே. எனவே அவனுடைய செயல் திட்டங்களின் படியே இவ்வுலகிலும் ஆட்சி நடைபெற வேண்டும். உலக மக்களின் பாதுகாப்பான சந்தோஷமான வாழ்விற்கு அவனுடைய இந்த செயல் திட்டங்களின் படியே நீங்கள் அனைவரும் வந்தே ஆகவேண்டும். இதை விட்டால் மனிதனுக்கு வேறு எந்த வழிமுறையும் இல்லை.
அல்லாஹ்வின் பேராற்றல்களுக்கு இன்றைய நடைமுறை உலகமே சாட்சி பகர்கின்றது. அதை செயல்பட வைக்கும் வல்லமை வேறு யாருக்காவது உள்ளதா என்பதை கவனித்துப் பார்த்தீர்களா? உதாரணத்திற்கு இவ்வுலகில் மாறிமாறி வரும் இரவு பகலையே எடுத்துக் கொள்ளுங்கள்.


قُلْ أَرَءَيْتُمْ إِن جَعَلَ ٱللَّهُ عَلَيْكُمُ ٱلَّيْلَ سَرْمَدًا إِلَىٰ يَوْمِ ٱلْقِيَٰمَةِ مَنْ إِلَٰهٌ غَيْرُ ٱللَّهِ يَأْتِيكُم بِضِيَآءٍ ۖ أَفَلَا تَسْمَعُونَ.

28:71. ஒருவேளை இரவை இரவாகவே நிலைத்திருக்க செய்துவிட்டால் உங்களுடைய நிலைமை என்னவாகும் என்பதை கவனித்துப் பார்த்தீர்களா? அவ்வாறு செய்துவிட்டால் பகலின் வெளிச்சத்தை அல்லாஹ்வைத் தவிர வேறு யாரால் கொண்டு வரமுடியும்? நாம் என்ன சொல்கிறோம் என்பதை கவனமாகக் கேட்கிறீர்களா? இதை மக்களிடம் தெளிவுபடுத்தி விடுங்கள்.


قُلْ أَرَءَيْتُمْ إِن جَعَلَ ٱللَّهُ عَلَيْكُمُ ٱلنَّهَارَ سَرْمَدًا إِلَىٰ يَوْمِ ٱلْقِيَٰمَةِ مَنْ إِلَٰهٌ غَيْرُ ٱللَّهِ يَأْتِيكُم بِلَيْلٍۢ تَسْكُنُونَ فِيهِ ۖ أَفَلَا تُبْصِرُونَ.

28:72. இதற்கு மாறாக ஒருவேளை பகலை பகலாகவே நிலைத்திருக்க செய்துவிட்டால் உங்களால் நிம்மதியாக வாழ முடியுமா? தினந்தோறும் இரவில் ஓய்வு எடுத்துக் கொள்கிறீர்களே, அந்த இரவை அல்லாஹ்வைத் தவிர வேறு யாரால் கொண்டுவர முடியும். இதைப் பற்றி நீங்கள் யோசித்துப் பார்த்ததுண்டா?
ஆக இரவு இரவாகவே இருந்து விட்டாலும் பகல் பகலாகவே இருந்து விட்டாலும் உலகில் எந்த உயிரினமும் உயிர்வாழ முடியாது. பகலில் ஏற்படும் வெப்பத்தை தணிக்கும் வகையில் இரவையும், இரவில் ஏற்படும் ஈரப்பதத்தை குறைக்கும் வகையில் வெயிலின் வெப்பத்தையும் படைத்திருப்பது அல்லாஹ்வே. அது மட்மின்றி உலகில் விளையும் அனைத்து உணவு வகைகளுக்கும் சூரிய வெப்பமும் இரவு நேர ஈரப்பதமும் அவசியமாகின்றன. இத்தகைய ஏற்பாடுகளை அல்லாஹ் செய்யாதிருந்தால் இங்குள்ள மற்ற உயிரினங்களுக்கும் மனிதனுக்கும் உணவு கிடைப்பது எப்படி?


وَمِن رَّحْمَتِهِۦ جَعَلَ لَكُمُ ٱلَّيْلَ وَٱلنَّهَارَ لِتَسْكُنُوا۟ فِيهِ وَلِتَبْتَغُوا۟ مِن فَضْلِهِۦ وَلَعَلَّكُمْ تَشْكُرُونَ.

28:73. ஆக இவ்வுலகில் மாறிமாறி வரும் இரவு பகல் அல்லாஹ்வின் மிகப் பெரிய அருட்கொடையாகும். இதைக் கொண்டுதான் இரவில் மனிதன் நிம்மதியாக ஓய்வெடுத்துக் கொண்டு மறுநாள் பகலில் புத்துயிர் பெற்று சிறப்பாக உழைத்து அல்லாஹ்வின் அருளை தேடிக்கொள்கிறான். மனிதன் அல்லாஹ்வின் வழிகாட்டுதலுக்கு அடிபணிந்து நன்றி விசுவாசத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே இந்த ஏற்பாடுகளை எல்லாம் ஏற்படுத்தப்பட்டன.
அதாவது மனிதனுக்கு கிடைக்கும் வாழ்வாதாரங்களை அல்லாஹ் காட்டிய வழியில் சரிசமமாக பங்கிட்டு அனைத்து தரப்பு மக்களும் சிறப்பாக வாழ வழி செய்யவேண்டும். ஆனால் மனிதனோ இதை எல்லாம் விட்டுவிட்டு அல்லாஹ்வுக்கு இணையாக கற்பனை தெய்வங்களை உருவாக்கிக் கொண்டு தன் மனஇச்சைப் படி வாழ்கிறான். அதனால் அவன் செய்து வரும் தவறான செயல்களின் விளைவுகளை சந்திக்கும் கால கட்டத்தில் அவனிடம்,


وَيَوْمَ يُنَادِيهِمْ فَيَقُولُ أَيْنَ شُرَكَآءِىَ ٱلَّذِينَ كُنتُمْ تَزْعُمُونَ.

28:74. “அல்லாஹ்வுக்கு இணையாக வணங்கி வந்த தெய்வங்கள் எங்கே என்று கேட்கப்படும். அவை உங்களுக்கு உதவ வரவில்லையா?” என்று கேட்கப்படும்.


وَنَزَعْنَا مِن كُلِّ أُمَّةٍۢ شَهِيدًۭا فَقُلْنَا هَاتُوا۟ بُرْهَٰنَكُمْ فَعَلِمُوٓا۟ أَنَّ ٱلْحَقَّ لِلَّهِ وَضَلَّ عَنْهُم مَّا كَانُوا۟ يَفْتَرُونَ.

28:75. இப்படியாக தலைகனத்துடன் நடந்து கொண்ட ஒவ்வொரு சமுதாய தலைவர்களையும் நாம் அழைத்து அவர்களுடைய கூற்றுக்கு தக்க ஆதாரங்களை கொண்டுவரச் சொல்வோம். ஆனால் அவர்களால் எதுவுமே கொண்டுவர முடியாது. அப்போது அவர்களுக்கு உண்மை என்னவென்று தெரிந்துவிடும். அல்லாஹ்வின் கூற்றே உண்மையானது என்பதையும், இதுவரையில் அவர்கள் இட்டுக்கட்டிச் சொல்லி வந்தவை எல்லாம் வீணானவை என்பதையும் உணர்ந்து கொள்வார்கள்.
இப்படியாக மனம்போன போக்கில் சுயநலத்துடன் செல்வக் குவிப்பை மட்டும் நோக்கமாகக் கொண்டு வாழ்ந்தவர்களின் நிலை என்னவென்பதையும் தெரிந்து கொள்ளுங்கள். மூஸா நபி காலத்தில் வாழ்ந்த ஃகாரூனின் வாழ்க்கை வரலாறு எடுத்துக்காட்டாக கூறப்படுகிறது.


۞ إِنَّ قَٰرُونَ كَانَ مِن قَوْمِ مُوسَىٰ فَبَغَىٰ عَلَيْهِمْ ۖ وَءَاتَيْنَٰهُ مِنَ ٱلْكُنُوزِ مَآ إِنَّ مَفَاتِحَهُۥ لَتَنُوٓأُ بِٱلْعُصْبَةِ أُو۟لِى ٱلْقُوَّةِ إِذْ قَالَ لَهُۥ قَوْمُهُۥ لَا تَفْرَحْ ۖ إِنَّ ٱللَّهَ لَا يُحِبُّ ٱلْفَرِحِينَ.

28:76. உண்மை என்னவென்றால் ஃகாரூன் என்பவன் மூஸா நபியின் சமுதாயத்தை சேர்ந்தவனாக இருந்தான். அவனிடம் கணக்கில்லா செல்வங்கள் குவிந்திருந்தன. மேலும் அவன் தன் செல்வங்களைக் கொண்டு சமுதாய மக்களை கஷ்டப்படுத்தி வந்தான். அவனுடைய கஜானாவை பலம் வாய்ந்த காவலாளிகளை வைத்து பாதுகாத்து வந்தான். அவனுடைய அக்கிரமங்களை தாளாத மக்கள் அவனிடம், “இவ்வாறு தன் செல்வங்களின் மீது கர்வங்கொண்டு செயல்படாதே” என்று அறிவுறுத்தி வந்தனர். மேலும் அவர்கள் ஆணவத்தோடு நடப்பவர்களை அல்லாஹ் ஒருபோதும் நேசிப்பதில்லை என்பதையும் எடுத்துரைத்து வந்தனர்.


وَٱبْتَغِ فِيمَآ ءَاتَىٰكَ ٱللَّهُ ٱلدَّارَ ٱلْءَاخِرَةَ ۖ وَلَا تَنسَ نَصِيبَكَ مِنَ ٱلدُّنْيَا ۖ وَأَحْسِن كَمَآ أَحْسَنَ ٱللَّهُ إِلَيْكَ ۖ وَلَا تَبْغِ ٱلْفَسَادَ فِى ٱلْأَرْضِ ۖ إِنَّ ٱللَّهَ لَا يُحِبُّ ٱلْمُفْسِدِينَ.

28:77. அவ்வூரில் இருந்த மார்க்க அறிஞர்கள், “சொத்து செல்வங்களை ஈட்டி கொள்வது தவறான செயல் அல்ல. ஆனால் அதுவே வாழ்வின் குறிக்கோளாக இருக்கக் கூடாது. ஏனெனில் மனிதனின் வாழ்வு இவ்வுலக வாழ்வோடு முடிந்து விடுவதில்லை. அது மரணத்திற்குப் பின்பும் தொடர்கிறது. எனவே வருங்கால வாழ்வை கருத்தில் கொண்டு உனக்கு அல்லாஹ் எவ்வாறு குறைவில்லா அழகிய வாழ்வை அளித்துள்ளானோ, அதே போல் ஏழை எளிய மக்களின் குறைகளையும் நீக்கி, அவர்களுடைய வாழ்வையும் சிறப்பிக்கச் செய். ஏனெனில் உனக்குக் கிடைத்துள்ள செல்வங்கள் யாவும் நீயே உருவாக்கிக் கொண்டவை அல்ல. இறைவனின் வாழ்வாதார ஏற்பாடுகள் இல்லாமல் உனக்கு இந்த பாக்கியங்கள் கிடைத்திருக்க வாய்ப்பில்லை என்பதை மறந்துவிடாதே. அளவிலா செல்வங்களை குவித்துக் கொண்டு சமுதாயத்தில் ஏற்றத்தாழ்வு ஏற்படுத்துவோரை அல்லாஹ் ஒருபோதும் நேசிப்பதில்லை” என்று ஃகாரூனுக்கு அறிவுரை செய்து வந்தனர்.


قَالَ إِنَّمَآ أُوتِيتُهُۥ عَلَىٰ عِلْمٍ عِندِىٓ ۚ أَوَلَمْ يَعْلَمْ أَنَّ ٱللَّهَ قَدْ أَهْلَكَ مِن قَبْلِهِۦ مِنَ ٱلْقُرُونِ مَنْ هُوَ أَشَدُّ مِنْهُ قُوَّةًۭ وَأَكْثَرُ جَمْعًۭا ۚ وَلَا يُسْـَٔلُ عَن ذُنُوبِهِمُ ٱلْمُجْرِمُونَ.

28:78. ஆனால் அவனோ அந்த செல்வங்கள் எல்லாம் தன் சுய அறிவைக் கொண்டும், திறமையைக் கொண்டும் சம்பாதித்தவை ஆகும் என்று கூறி வந்தான். எனவே ஏழை எளிய மக்களுக்கு உதவ முன்வரவல்லை. இவனுக்கு முன் இவனைவிட செல்வ சிறப்புடன் வாழ்ந்த எத்தனையோ தலைமுறையினர் அநியாயமாக செயல்பட்டு, சமுதாய நல்லிணக்கத்தை சீரழித்ததன் காரணமாக, அல்லாஹ்வின் நியதிப்படி அழிந்து போனார்கள் என்பதை அவன் கவனித்துப் பார்க்க தவறிவிட்டான். இத்தகைய குற்றம் புரிபவர்கள் செய்து வரும் பாவச் செயல்களைப் பற்றி இறைவன் கண்டுக் கொள்வதில்லை என மக்கள் எண்ணிக் கொள்கின்றனர். ஆனால் அவர்கள் செய்யும் பாவச் செயல்களே அவர்களை அழிவின் பக்கம் அழைத்துச் சென்றுவிடுவது அவர்களுக்கு தெரியாது.


فَخَرَجَ عَلَىٰ قَوْمِهِۦ فِى زِينَتِهِۦ ۖ قَالَ ٱلَّذِينَ يُرِيدُونَ ٱلْحَيَوٰةَ ٱلدُّنْيَا يَٰلَيْتَ لَنَا مِثْلَ مَآ أُوتِىَ قَٰرُونُ إِنَّهُۥ لَذُو حَظٍّ عَظِيمٍۢ.

28:79. இப்படியாக ஃகாரூனுக்கு அறிவுரை செய்தவர்களும் இருந்தார்கள். ஆனால் அவனோ செல்வங்களின் மிதப்பில் பெருமையுடன் ஆடம்பரமாக வாழ்ந்து வந்தான். அங்குள்ளவர்களில் சொகுசு வாழ்வை விரும்புவோர், ஃகாரூனின் செல்வங்களின் மீது பெருமிதப்பட்டுக் கொண்டனர். ஃகாரூனுக்கு கிடைத்துள்ள செல்வங்களைப் போன்று தங்களுக்கும் கிடைத்திருக்கக் கூடாதா என்று ஏக்கத்துடனும் இருந்தனர். நிச்சயமாக ஃகாரூன் மிகவும் பாக்கியசாலி என்றும் கூறி சிலர் அவனைப் பாராட்டியும் வந்தார்கள்.


وَقَالَ ٱلَّذِينَ أُوتُوا۟ ٱلْعِلْمَ وَيْلَكُمْ ثَوَابُ ٱللَّهِ خَيْرٌۭ لِّمَنْ ءَامَنَ وَعَمِلَ صَٰلِحًۭا وَلَا يُلَقَّىٰهَآ إِلَّا ٱلصَّٰبِرُونَ.

28:80. ஆனால் மார்க்கக் கல்வியில் ஞானம் பெற்றவர்கள், ஃகாரூனின் செயல்களைக் கண்டு எச்சரித்து வந்தனர். இவ்வாறு பெருமிதத்தோடு சொகுசாக வாழ்பவர்களுக்கு கேடுதான் ஏற்படும் என்றனர். அவர்கள், "அல்லாஹ்வின் அறிவுரைகளை ஏற்று ஆக்கப்பூர்வமான நலத் திட்டங்களுக்காக செலவு செய்பவர்களின் வருங்கால வாழ்வு, இதைவிட பன்மடங்கு சிறப்பாக இருக்கும். இருப்பினும் யார் இறைவன் காட்டிய வழியில் நிலைத்திருந்து அயராது உழைக்கிறார்களோ, அவர்களுக்குத் தான் வருங்கால வாழ்வு சிறப்பாக இருக்கும்” என்றார்கள்.


فَخَسَفْنَا بِهِۦ وَبِدَارِهِ ٱلْأَرْضَ فَمَا كَانَ لَهُۥ مِن فِئَةٍۢ يَنصُرُونَهُۥ مِن دُونِ ٱللَّهِ وَمَا كَانَ مِنَ ٱلْمُنتَصِرِينَ.

28:81. இறுதியில் ஃகாரூன் செய்து வந்த தவறான செயல்களின் விளைவுகள் தோற்றத்திற்கு வந்த கால கட்டத்தில் அவனும் அவனுடைய செல்வங்களும் அழிந்து மண்ணோடு மண்ணகாப் புதைந்து விட்டன. அல்லாஹ்வின் நியதிப்படி ஏற்பட்ட அந்த அழிவிலிருந்து அவனைக் காப்பாற்ற யாராலும் முடியவில்லை. அது மட்டுமின்றி அவனாலும் அந்த அழிவிலிருந்து காப்பாற்றிக் கொள்ள முடியவில்லை.
சிந்தனையாளர்களே! இந்த வாசகத்தில் அவனையும் அவனுடைய செல்வங்களையும் அல்லாஹ் பூமியில் புதைத்து விட்டதாக கூறப்படுகிறது. இன்றைக்கும் நம் நாட்டில் செல்வ சிறப்புடன் வாழ்ந்த எத்ததனையோ மன்னர்களின் மாட மாளிகைகள் புதைந்து நாசமாகி இருப்பதை காண்கிறோம். இவை யாவும் நொடிப் பொழுதில் ஏற்படுகின்ற ஒன்றல்ல. முதலாளித்துவ சமுதாயத்தில் ஏழை எளிய மக்கள் பெருமளவில் பாதிக்கப்படுவார்கள். ஒரு கட்டத்தில் அந்த முதலாளிக்கு ஆபத்து ஏற்படும் போது, அந்த மக்களால் அவனை காப்பாற்ற முன் வருவதில்லை. அழிந்து போகட்டும் என்று இருந்து விடுவார்கள். இப்படித்தான் அவனுடைய மாளிகைகள் அழிந்து பூமியில் தரைமட்டமாகி இருக்கும் என நமக்குப் புலனாகிறது. அந்த அழிவிலிருந்து காப்பாற்றிக் கொள்ள அவனுடைய திறமையும் பயன்படவில்லை.


وَأَصْبَحَ ٱلَّذِينَ تَمَنَّوْا۟ مَكَانَهُۥ بِٱلْأَمْسِ يَقُولُونَ وَيْكَأَنَّ ٱللَّهَ يَبْسُطُ ٱلرِّزْقَ لِمَن يَشَآءُ مِنْ عِبَادِهِۦ وَيَقْدِرُ ۖ لَوْلَآ أَن مَّنَّ ٱللَّهُ عَلَيْنَا لَخَسَفَ بِنَا ۖ وَيْكَأَنَّهُۥ لَا يُفْلِحُ ٱلْكَٰفِرُونَ.

28:82. நேற்று வரையில் ஃகாரூனின் செல்வ சிறப்புகளைப் பற்றி பெருமிதத்தோடு பேசி வந்தவர்கள், அவனுக்கு ஏற்பட்ட பேரழிவைப் பார்த்து ஆச்சரியத்தில் மூழ்கி போனார்கள். தாம் அவனை ஆதரித்து பேசியது எந்த அளவுக்கு தவறானது என்பதை உணர்ந்து கொண்டார்கள். காரணம் ஒவ்வொருவருக்கும் கிடைக்கின்ற வாழ்வாதாரங்களும் பொருட் செல்வமும் இறைவனின் சட்ட விதிமுறைகளின்படி அவரவர் உழைப்பிற்கும் திறமைக்கும் ஏற்பத்தான். அதன் படியே வாழ்க்கை வசதிகள் பெருகியும் வருகின்றன் சுருங்கியும் போகின்றன. எனவே யார் எப்படி உழைக்கிறார்களோ, அதன் படியே இந்த வசதிகள் கிடைத்து வரும். அல்லாஹ்வின் மாபெரும் ஏற்பாடுகள் இல்லை என்றால் நமக்கும் எதுவுமே கிடைத்திருக்காது. எனவே அல்லாஹ் காட்டிய வழியில் அச்செல்வங்களை பயன்படுத்தவில்லை என்றால் ஃகாரூனுக்கு ஏற்பட்ட கதியே நமக்கும் ஏற்பட்டிருக்கும். அல்லாஹ்வின் வழிகாட்டுதலை ஏற்றுக் கொள்ளாதோர், ஒருபோதும் தம் இலட்சியத்தில் வெற்றிபெறவே மாட்டார்கள் என்று மக்கள் பேசிக் கொண்டார்கள்.


تِلْكَ ٱلدَّارُ ٱلْءَاخِرَةُ نَجْعَلُهَا لِلَّذِينَ لَا يُرِيدُونَ عُلُوًّۭا فِى ٱلْأَرْضِ وَلَا فَسَادًۭا ۚ وَٱلْعَٰقِبَةُ لِلْمُتَّقِينَ.

28:83. ஆக நிகழ்கால வாழ்விலும் வருங்கால நிலையான வாழ்விலும் சிறப்பான வாழ்வு கிடைக்க வேண்டும் என்றால், தமக்கு கிடைத்துள்ள செல்வங்களைக் கொண்டு பெருமையுடன் சொகுசாக வாழ்ந்து நாட்டில் ஏற்றத்தாழ்வை ஏற்படுத்த விரும்பக் கூடாது. அவ்வாறு விரும்பினால் சமுதாயத்தின் எதிர்காலம் பிரச்னைக்குரியதாக ஆகிவிடும். இதை மனதில் பதிய வைத்துக் கொண்டு உள்ளச்சப்பாடுடன் வாழ்பவர்களே சிறப்பாக வாழமுடியும்.


مَن جَآءَ بِٱلْحَسَنَةِ فَلَهُۥ خَيْرٌۭ مِّنْهَا ۖ وَمَن جَآءَ بِٱلسَّيِّئَةِ فَلَا يُجْزَى ٱلَّذِينَ عَمِلُوا۟ ٱلسَّيِّـَٔاتِ إِلَّا مَا كَانُوا۟ يَعْمَلُونَ.

28:84. எனவே எந்தச் சமுதாயம் ஆக்கப்பூர்வமான நன்மையான செயல்களைக் கொண்டு அழகிய சமூக அமைப்பு உருவாக்குகிறதோ, அதன் பலன்கள் பன்மடங்காகப் பெருகி வரும். இதற்கு மாறாக எந்தச் சமுதாயம் தீய செயல்களின் ஈடுபட்டு ஏற்றத்தாழ்வை ஏற்படுத்துகிறதோ, அவையே அவர்களை அழிவின் பக்கம் இழுத்துச் சென்று விடும்.
இந்த சட்டவிதிமுறைகள் இன்றைக்கு ஏற்படுத்தியவை அல்ல. காலம் காலமாக நடந்து வருபவையே ஆகும். அந்த நிலையான சட்டவிதிமுறைகளை இந்த குர்ஆனில் இறக்கி அருளி அவற்றைக் கடைப்பிடிக்க வலியுறுத்துகிறது.


إِنَّ ٱلَّذِى فَرَضَ عَلَيْكَ ٱلْقُرْءَانَ لَرَآدُّكَ إِلَىٰ مَعَادٍۢ ۚ قُل رَّبِّىٓ أَعْلَمُ مَن جَآءَ بِٱلْهُدَىٰ وَمَنْ هُوَ فِى ضَلَٰلٍۢ مُّبِينٍۢ.

28:85. இறைவழிகாட்டுதலை எடுத்துரைப்பவரே! இந்த குர்ஆனில் உள்ள கடமைகளை விதியாக்கிய இறைவனின் நியதிப்படியே, உன்னுடைய இலட்சியங்களும் நிச்சயமாக நிறைவேறி வரும். அதாவது நீ எதிர் பார்த்தபடி மக்கமா நகரை வெற்றி கொண்டு அதை அராஜகர்களின் பிடியிலிருந்து விடுவிப்பாய். அப்போது யார் நேர்வழியில் இருக்கிறார்கள்? யார் தவறான வழியில் இருக்கிறார்கள் என்ற உண்மை தெளிவாகிவிடும்.
அதாவது மூஸா நபி காலத்தில் வாழ்ந்த கொடுங்கோல் அரசனான ஃபிர்அவ்னும், அவனுடைய மதகுருமார் ஹாமானும், செல்வங்களை குவித்து வைத்திருந்த ஃகாரூன் போன்றோரும், இஸ்ரவேலர்களை துன்புறுத்தி வந்தார்கள். அதனால் அவர்கள் அந்நாட்டை விட்டு வெளியேறி விட்டார்கள். அதே போல் முஹம்மது நபி (ஸல்) காலத்திலும் குரைஷியர்களிடையே வாழ்ந்த ஃபிர்அவ்ன் போன்ற அராஜகர்களும் அபூலஹப் போன்ற செல்வந்தர்களும் நபியை மக்கமா நகரை விட்டு வெளியேறும்படி செய்து விட்டனர்.(பார்க்க 8:30) அவர்களை அகற்றிவிட்டு இறைவனின் ஆட்சி மலரச் செய்வதே நபி (ஸல்) அவர்களுடைய இலட்சியமாக இருந்து வந்தது. அந்த இலட்சியம் நிச்சயமாக நிறைவேறும் என்றே இந்த வாசகத்தில் சொல்லப்படுகிறது.