بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
27:0.அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையுயோனுமாகிய அல்லாஹ்வின் வழிகாட்டுதலின்படியே ஒவ்வொரு காரியத்தையும் நிறைவேற்ற நாடுகிறேன். (பார்க்க 6:162)
طسٓ ۚ تِلْكَ ءَايَٰتُ ٱلْقُرْءَانِ وَكِتَابٍۢ مُّبِينٍ.
27:1. உலக மக்கள் அனைவரையும் நேர்வழியின்பால் அழைப்பவரே! உம்மிடம் வந்துள்ள குர்ஆன் வாசகங்கள் யாவும் விளக்கமான வேத விதிமுறைகளே ஆகும்.
هُدًۭى وَبُشْرَىٰ لِلْمُؤْمِنِينَ.
27:2. இந்த விதிமுறைகளை மனதார ஏற்று நடப்பவர்களுக்கு இந்தக் குர்ஆன் நேர்வழி காட்டுவதாகவும், அவர்களுடைய நற்செயல்களின் பலன்கள் நிச்சயமாக கிடைக்கும் என்ற நற்செய்தியை அளிப்பதாகவும் உள்ளன.
ٱلَّذِينَ يُقِيمُونَ ٱلصَّلَوٰةَ وَيُؤْتُونَ ٱلزَّكَوٰةَ وَهُم بِٱلْءَاخِرَةِ هُمْ يُوقِنُونَ.
27:3. இதற்காக அவர்கள் சமுதாய ஒழுக்க மாண்புகளை கட்டிக் காப்பதற்காக, இறைக்கொள்கை கோட்பாடுகளைக் கற்றுத் தரும் ஸலாத்தை முறையோடு நிலைநிறுத்தி, (பார்க்க 29:45) சமுதாய மேம்பாட்டிற்காக தம்மாலான உதவியும் செய்து வருவார்கள். (பார்க்க 2:219) மேலும் அவர்கள் இறைவன் நிர்ணயித்துள்ள “மனித செயல்களுக்கேற்ற இறுதி விளைவுகள்” என்ற ஆஃகிரத்தையும் உறுதியோடு ஏற்று அதன்படி ஆக்கப்பூர்வமாக செயல்படுவார்கள்.
إِنَّ ٱلَّذِينَ لَا يُؤْمِنُونَ بِٱلْءَاخِرَةِ زَيَّنَّا لَهُمْ أَعْمَٰلَهُمْ فَهُمْ يَعْمَهُونَ.
27:4. இறைவன் நிர்ணயித்துள்ள “மனித செயல்களுக்கேற்ற இறுதி விளைவுகள்” என்ற விதிமுறைகளை ஏற்காதவர்களுக்கு, தாம் செய்து வரும் தவறான செயல்கள் யாவும் மிக அழகாகவே தோன்றும். எனவே இறைவனின் நியதிப்படி அத்தகையவர்கள் இறுதியில் தட்டழிந்து திரியவேண்டி வரும்.
أُو۟لَٰٓئِكَ ٱلَّذِينَ لَهُمْ سُوٓءُ ٱلْعَذَابِ وَهُمْ فِى ٱلْءَاخِرَةِ هُمُ ٱلْأَخْسَرُونَ.
27:5. அவர்கள் செய்து வரும் தீய செயல்களின் விளைவுகள் யாவும் வேதனை அளிக்கக் கூடியதாக இருக்கும். மேலும் எதிர்கால வாழ்விலும் அவர்கள் பெரும் நஷ்டத்திலேயே இருப்பார்கள்.
وَإِنَّكَ لَتُلَقَّى ٱلْقُرْءَانَ مِن لَّدُنْ حَكِيمٍ عَلِيمٍ.
27:6. எனவே மனித செயல்களின் இறுதி விளைவுகளைப் பற்றி தெளிவான ஞானமுடைய இறைவனிடமிருந்து இந்த குர்ஆன் உனக்கு இறக்கி அருளப்படுகிறது. மனிதனை வேதனைகளிலிருந்து காப்பாற்றவே இந்த வேத அறிவுரைகள் அளிக்கப்படுகின்றன.
இத்தகைய இறை வழிகாட்டுதல்கள் காலம் காலமாக நபிமார்கள் மூலம் இறக்கி அருளப்பட்டன. அவற்றை ஏற்காத சமுதாயங்கள் அழிவையே சந்தித்துள்ளன. அந்த வரிசையில் மூஸா நபிக்கும் இறைவழிகாட்டுதல்கள் அளிக்கப்பட்டன. அவரும் தம் சமுதாய மக்களையும், எதேச்சதிகார ஆட்சி செய்து வந்த ஃபிர்அவ்னையும் நேர்வழிப்படுத்த பலவாறாக முயற்சிகளை மேற்கொண்டார். அவர் இறைவழிகாட்டுதலைப் பெற்ற சம்பவத்தை தொடர்ந்து அவருடைய வரலாற்று உண்மைகள் எடுத்துரைக்கப்படுகிறது.
إِذْ قَالَ مُوسَىٰ لِأَهْلِهِۦٓ إِنِّىٓ ءَانَسْتُ نَارًۭا سَـَٔاتِيكُم مِّنْهَا بِخَبَرٍ أَوْ ءَاتِيكُم بِشِهَابٍۢ قَبَسٍۢ لَّعَلَّكُمْ تَصْطَلُونَ.
27:7. மூஸா நபி தம் குடும்பத்தாருடன் பயணித்த போது, வழியில் இருள் சூழ்ந்து கொள்கிறது. எனவே வழியை அறிந்து கொள்வதற்காக தூரத்தில் இருந்த மலை அடிவாரத்தில் தென்பட்ட நெருப்பு ஜுவாலையை எடுத்து வருவதாகவும், அதன் துணையைக் கொண்டு மேற்கொண்டு செல்ல வழியை தெரிந்து கொள்ளலாம் அல்லது குளிர்காய்த்து இரவை சுகமாக கழித்துக் கொள்ளலாம் என்றும் கூறி, அவர் அந்த இடத்திற்கு வந்தார். (இதற்கு முன் நடந்த சம்பவத்தைப் பற்றி பார்க்க 20:37-40)
فَلَمَّا جَآءَهَا نُودِىَ أَنۢ بُورِكَ مَن فِى ٱلنَّارِ وَمَنْ حَوْلَهَا وَسُبْحَٰنَ ٱللَّهِ رَبِّ ٱلْعَٰلَمِينَ.
27:8. மூஸா நபி அங்கு வந்த போது, “அந்த நெருப்பு இருக்கும் இடமாகிய ‘தூர்’ மலை அடிவாரமும் (பார்க்க 7:137) அதன் சுற்றுபுறத்தில் உள்ள இடமும் (பாலஸ்தீனமும்) மிகவும் வளம் மிக்க பிரதேசமாகும். இந்த இடம் மட்டுமின்றி உலகிலுள்ள மற்ற எல்லா பிரதேசங்களும் சிறப்பாக பரிபாலித்து பாதுகாத்து வரும் ஏக இறைவனாகிய அல்லாஹ் மனித கற்பனைக்கெல்லாம் அப்பாற்பட்டவன் ஆவான்” என்ற ஓசை வந்தது.
மூஸா நபி அந்த ஓசை எங்கிருந்து வருகிறது என்ற சிந்தனையில் ஆழ்ந்திருந்தார்.
يَٰمُوسَىٰٓ إِنَّهُۥٓ أَنَا ٱللَّهُ ٱلْعَزِيزُ ٱلْحَكِيمُ.
27:9. அகிலங்கள் அனைத்தையும் ஆட்சி செய்யும் அளவற்ற வல்லமையுடைய அல்லாஹ்விடமிருந்து அந்த ஓசை வருவதாக சொல்லப்பட்டது.
அதைத் தொடர்ந்து மூஸா நபிக்கு இறைவழிகாட்டுதல்கள் அளிக்கப்பட்டு வந்தன. அவற்றை நன்றாக புரிந்துக் கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டார். அவர் அதைப் பற்றி சரியாக புரிந்து இருக்கிறாரா என்பதை அறிந்து கொள்ள, அவர் கையில் ஊன்றுகோலாக இருந்த இறைவழிகாட்டுதலைப் பற்றி விசாரிக்கப்பட்டது (பார்க்க 20:17) அதற்கு அவர் அதைக் கொண்டு சமுதாய மக்களை வழிநடத்தி செல்லப் போவதாகவும் மற்ற எல்லா பிரச்னைகளுக்கும் தீர்வுகாண அவை துணை நிற்கும் எனவும் பதில் அளிக்கிறார். (பார்க்க 20:18)
وَأَلْقِ عَصَاكَ ۚ فَلَمَّا رَءَاهَا تَهْتَزُّ كَأَنَّهَا جَآنٌّۭ وَلَّىٰ مُدْبِرًۭا وَلَمْ يُعَقِّبْ ۚ يَٰمُوسَىٰ لَا تَخَفْ إِنِّى لَا يَخَافُ لَدَىَّ ٱلْمُرْسَلُونَ.
27:10. அவருக்கு ஊன்றுகோலாக இருந்த இறைவழிகாட்டுதலை மக்களிடம் சமர்ப்பிக்கும்படி இறைவனிடமிருந்து கட்டளை வந்தது. (பார்க்க 26:10) அவ்வாறே அவர் மக்களிடம் சமர்ப்பித்த போது, எல்லா புறத்திலிருந்தும் எதிர்ப்புகள் வலுத்தன. எனவே மூஸா நபியும், மலைப் பாம்பை கண்டு ஒருவர் எவ்வாறு பயப்படுவாரோ அவ்வாறே மிரண்டு போனார். எனவே அந்த பணியை விட்டு பின்வாங்கி விடலாமா என எண்ணத்தில் இருந்தார். அப்போது அவ்வாறு பயப்பட வேண்டிய அவசியமில்லை எனவும், இறைத் தூதர்கள் யாரும் அவ்வாறு பயந்து ஓடமாட்டார்கள் எனவும் இறைவனிடமிருந்து தைரியமளிக்கும் செய்தி வந்தது.
إِلَّا مَن ظَلَمَ ثُمَّ بَدَّلَ حُسْنًۢا بَعْدَ سُوٓءٍۢ فَإِنِّى غَفُورٌۭ رَّحِيمٌۭ.
27:11. “அநியாய அக்கிரம செயல்களில் ஈடுபடுபவர்கள் தாம் அவ்வாறு பயந்து ஓடுவார்கள். ஆனால் தீய செயல்களை விட்டுவிட்டு அழகிய நற்செயல்களை செய்து வந்தால், நிச்சயமாக அவர்களுக்கும் பாதுகாப்பான வாழ்வு கிடைக்க வழிகள் பிறக்கும். ஏனெனில் மக்கள் செய்யும் தீய செயல்களுக்கு உடனே தண்டிக்காமல் (பார்க்க 16:61) அவர்கள் திருந்தி வாழ கால அவகாசம் அளித்துள்ள இறைவன் மாபெரும் கருணையாளனே” என அச்செய்தி கூறிற்று.
وَأَدْخِلْ يَدَكَ فِى جَيْبِكَ تَخْرُجْ بَيْضَآءَ مِنْ غَيْرِ سُوٓءٍۢ ۖ فِى تِسْعِ ءَايَٰتٍ إِلَىٰ فِرْعَوْنَ وَقَوْمِهِۦٓ ۚ إِنَّهُمْ كَانُوا۟ قَوْمًۭا فَٰسِقِينَ.
27:12. எனவே உன் கைவசம் இருக்கும் இறைவழிகாட்டுதலை மக்களிடம் தக்க ஆதாரங்களுடனும், பணிவோடும் எளிய முறையில் எடுத்துரை. அவை மக்களின் ஒளிமயமான வாழ்விற்கு மாசற்ற வழிகாட்டுதலாக உள்ளன என்பதை அவர்களில் உள்ள அறிவாளிகள் புரிந்து கொள்ளவார்கள். (மேலும் பார்க்க 20:22, 28:32) அவருக்கு அளிக்கப்பட்ட இறைக் கட்டளைகள் ஒன்பது பிரிவுகளாகப் பிரித்து வடிவமைக்கப்பட்டு உள்ளன. அவற்றை ஃபிர்அவுனிடமும் அவருடைய சமூகத்தவரிடமும் எடுத்துரை. காரணம் அச்சமுதாயத்தினர் தவறான வழியில் செல்லும் பாவிகளாகவே இருக்கிறார்கள்.
فَلَمَّا جَآءَتْهُمْ ءَايَٰتُنَا مُبْصِرَةًۭ قَالُوا۟ هَٰذَا سِحْرٌۭ مُّبِينٌۭ.
27:13. அவ்வாறே மனிதனின் ஒளிமயமான வாழ்விற்கு வேண்டிய ஆதராப்பூர்வமான இறைவழிகாட்டுதல்கள் வந்த போது, அவற்றை ஏற்று நடப்பதற்குப் பதிலாக அவை யாவும் மக்களை ஏமாற்றும் வித்தைகளே என கூறினார்கள்.
அதாவது இறைவழிகாட்டுதலை ஏற்று நடக்கா விட்டால், அவர்கள் அனைவரும் அழிந்து போவார்கள் என்ற மூஸா நபியின் முன்னெச்சரிக்கையை அவர்கள் பொய்யென கூறிவிட்டார்கள்.
وَجَحَدُوا۟ بِهَا وَٱسْتَيْقَنَتْهَآ أَنفُسُهُمْ ظُلْمًۭا وَعُلُوًّۭا ۚ فَٱنظُرْ كَيْفَ كَانَ عَٰقِبَةُ ٱلْمُفْسِدِينَ.
27:14. மூஸா நபி எடுத்துரைத்த ஆதாரங்கள் யாவும் உண்மையே என அவர்கள் அறிந்திருந்தார்கள். ஆனால் அவர்களிடமிருந்த ஆணவமும் பெருமையும் அவற்றை ஏற்று அதன்படி நடக்க அவர்களை தடுத்து விட்டன. அதைத் தொடர்ந்து அந்த விஷமிகளுக்கு ஏற்பட்ட கதி என்னவென்பதை கவனித்துப் பாருங்கள். (7:136-137)
وَلَقَدْ ءَاتَيْنَا دَاوُۥدَ وَسُلَيْمَٰنَ عِلْمًۭا ۖ وَقَالَا ٱلْحَمْدُ لِلَّهِ ٱلَّذِى فَضَّلَنَا عَلَىٰ كَثِيرٍۢ مِّنْ عِبَادِهِ ٱلْمُؤْمِنِينَ.
27:15. தாவூது நபிக்கும் அவருடைய புதல்வர் ஸுலைமான் நபிக்கும் இறைவழிகாட்டுதலின் முழு ஞானத்தையும் அளித்திருந்தோம். அவர்கள் ஆட்சி செய்த நாட்டில் இறைவழிகாட்டுதலை ஏற்று நடக்கும் மூஃமின்கள் பலர் இருந்தார்கள். அவர்கள் அனைவரும் இறைவனின் அருட்கொடைகளைப் பெற்று சீரும் சிறப்புமாக வாழ்ந்து வந்தார்கள். அவ்விருவரும் இவற்றை எண்ணி இறைவனைப் போற்றிப் பாராட்டி அவனுடைய புகழை மேலோங்க செய்த வண்ணம் இருந்தார்கள். (மேலும் பார்க்க 28:31)
وَوَرِثَ سُلَيْمَٰنُ دَاوُۥدَ ۖ وَقَالَ يَٰٓأَيُّهَا ٱلنَّاسُ عُلِّمْنَا مَنطِقَ ٱلطَّيْرِ وَأُوتِينَا مِن كُلِّ شَىْءٍ ۖ إِنَّ هَٰذَا لَهُوَ ٱلْفَضْلُ ٱلْمُبِينُ.
27:16. தாவூது நபியின் மறைவுக்குப் பின் அவருடைய புதல்வர் ஸுலைமான் நபி ஆட்சி பொறுப்பை எடுத்துக் கொண்டார். அவரது ஆட்சி காலத்தில் குதிரைகளை நன்றாக பழக்கி அவற்றை சரியாக பயன்படுத்தும் வகையில் படைகளைத் தயாரித்து வைத்திருந்தார். அது மட்டுமின்றி அந்நாட்டில் அவருக்கு எல்லா வகையான வசதி வாய்ப்புகளும் தாராளாமாக கிடைத்திருந்தன. இவற்றை எல்லாம் கண்ட ஸுலைமான் நபி, இந்த வசதி வாய்ப்புகள் யாவும் இறைவனின் அருட்கொடைகளாகும் என்று மக்களிடம் பெருமிதத்தோடு எடுத்துரைத்து வந்தார்.
இவ்வாசகத்தில் தைரன் என்ற வார்த்தை வருகிறது. பொதுவாக இதற்கு அர்த்தம் பறவை என்பதாகும். ஆனால் குதிரைகளும் வேகமாகச் செல்வதால் அரபு நாட்டவர்கள் குதிரைக்கும் தைரன் என்பார்கள். நாமும் குதிரை ஓட்டத்தை “பறந்து செல்லும் குதிரை” என்கிறோம். எனவேதான் நாம் “தைரன்” என்ற வார்த்தைக்கு குதிரைப்படை என்று பொருள் தந்துள்ளோம்.
وَحُشِرَ لِسُلَيْمَٰنَ جُنُودُهُۥ مِنَ ٱلْجِنِّ وَٱلْإِنسِ وَٱلطَّيْرِ فَهُمْ يُوزَعُونَ.
27:17. இப்படியாக ஸுலைமான் நபி பழங்குடியினரைச் சேர்ந்த இராணுவப் படையினர், நகர்புற மக்களின் காவலாளிப் படையினர் மற்றும் குதிரைப் படைகள் என தனித்தனியே தயாரித்து வைத்திருந்தார்.
இந்த படை வீரர்களைக் கொண்டு தன் நாட்டிலும், அண்டை நாட்டிலும் உள்ள மக்கள் பாதுகாப்பாக வாழ வழிசெய்து வந்தார். எங்கும் அநியாயம் அக்கிரமம் நடக்காதவாறு பார்த்துக் கொண்டார். இதற்காக அண்டை நாடுகளுக்கும் சேனைகளுடன் சென்று அங்குள்ள நிலவரங்களைக் கண்டறிய செல்வது அவருடைய பழக்கமாக இருந்து வந்தது. அவ்வாறு செல்லும் போது ஒரு முறை
حَتَّىٰٓ إِذَآ أَتَوْا۟ عَلَىٰ وَادِ ٱلنَّمْلِ قَالَتْ نَمْلَةٌۭ يَٰٓأَيُّهَا ٱلنَّمْلُ ٱدْخُلُوا۟ مَسَٰكِنَكُمْ لَا يَحْطِمَنَّكُمْ سُلَيْمَٰنُ وَجُنُودُهُۥ وَهُمْ لَا يَشْعُرُونَ.
27:18. “நம்ல்” என்கிற பள்ளத்தாக்கு வழியாக சென்றார். ஸுலைமான் நபியின் வருகையைப் பற்றி கேள்யுற்ற அந்நாட்டின் அரசி, “நம்ல்வாசிகளே! நீங்கள் அனைவரும் உங்கள் இல்லங்களிலேயே தங்கிக் கொள்ளுங்கள். ஸுலைமானும் அவருடைய சேனைகளும் எதற்காக வருகிறார்கள் என்று தெரியவில்லை. நம்மை எதிர்த்துப் போரிட வருகிறார்களா அல்லது வேறு நாட்டை தாக்குவதற்கு செல்கிறார்களா என்பது தெரியவில்லை. இந்த உண்மையை அறியாத நிலையில் நீங்கள் அவர்களை தாக்கப் போய், அவர்களும் உங்களைத் தாக்கி நசுக்கிவிடலாம்” என்று அந்நாட்டு அரசி மக்களுக்கு செய்தியை அனுப்பி வைத்தாள்.
பொதுவாக அரசர்கள் படையெடுக்கும் போது, வழியில் வருகின்ற கிராமங்களையும் ஊர்களையும் நாசம் செய்துவிட்டுச் செல்வது இயல்பான ஒன்றாக இருந்தது. இன்றைக்கும் அதே போன்று தான் போரின் சமயம் பல நேரங்களில் அப்பாவி மக்கள் பலியாகி விடுகிறார்கள். எனவே இப்பகுதி மக்கள் பயப்படுவதில் அர்த்தம் இருக்கத் தான் செய்தது. ஆனால் அல்லாஹ்வின் ஆட்சியாளர்கள் படையெடுப்பது, நசுக்கப்பட்டவர்களை காப்பாற்றத்தானே அன்றி, அப்பாவி மக்களைக் கொன்று குவிப்பதற்காக அல்ல. எனவே ஸுலைமான் நபி மற்றும் அவருடைய சேனையைப் பற்றி அந்நாட்டு அரசிக்குத் தெரியவில்லை.
فَتَبَسَّمَ ضَاحِكًۭا مِّن قَوْلِهَا وَقَالَ رَبِّ أَوْزِعْنِىٓ أَنْ أَشْكُرَ نِعْمَتَكَ ٱلَّتِىٓ أَنْعَمْتَ عَلَىَّ وَعَلَىٰ وَٰلِدَىَّ وَأَنْ أَعْمَلَ صَٰلِحًۭا تَرْضَىٰهُ وَأَدْخِلْنِى بِرَحْمَتِكَ فِى عِبَادِكَ ٱلصَّٰلِحِينَ.
27:19. இந்த அறிக்கையை செவியுற்ற ஸுலைமான் நபி புன்னகை செய்தார். அவர், “இறைவா! நீ எனக்கும் என் பெற்றோருக்கும் இந்த அளவுக்கு விசாலமான அருட்கொடைகளையும் ஆட்சி அதிகாரத்தையும் அளித்துள்ளாய். இவற்றை நான் உன் வழிகாட்டுதலின்படி உலக மக்களின் நலனுக்காகப் பயன்படுத்தி உனக்கு நன்றி விசுவாசத்துடன் நடக்க எனக்கு அருள்புரிவாயாக! மேலும் நான் உன் வழிகாட்டுதலைப் பின்பற்றி உலக வரலாற்றில் “சான்றோர்கள்” என முத்திரை பதித்துச் சென்றவர்கள் பட்டியலில் என்னையும் இணைத்துக் கொள்வாயாக!” என்று பிரார்த்தித்தார்.
சிந்தனையாளர்களே! கவனித்தீர்களா? ஸுலைமான் நபி ஒரு பேரரசராக இருந்த போதும், அவர் தன் சுய விருப்பப்படி ஆட்சி செய்ய இறைவனிடம் பிரார்த்திக்க வில்லை. உலக மக்களின் நன்மைக்காக பாடுபடவே தன் ஆட்சி அதிகாரத்தையும், அவருக்குக் கிடைத்த அருட்கொடைகளையும் பயன்படுத்த எண்ணம் கொண்டிருந்தார். இறைவனின் வழிகாட்டுதலை பெற்ற ஒருவர் ஆட்சி பீடத்தில் இருந்தாலும் இப்படிப்பட்ட உயர் இலட்சியங்களுடன் வாழ்ந்தார்கள் என்பதற்கு இவை தான் சான்றுகளாகும். எனவே தம் இலட்சிய பயணத்தைப் பற்றி ‘நம்ல்’ நாட்டு அரசியிடம் தெரிவித்து, அவ்வாறே அந்நாட்டு அரசியிடமும் இறைவழிகாட்டுதலின்படி ஆட்சி செய்து வர அறிவுறுத்தி விட்டு சென்றார்.
இப்படியாக சிறந்த முறையில் ஆட்சி செய்து வந்த ஸுலைமான் நபி தம் வசமிருந்த குதிரைப் படைகளையும் வீரர்களையும் சிறப்பாக பராமரித்து வந்தார். ஏனெனில் பாதுகாப்பான அரசாட்சிக்கு அவை முக்கியமானவையாகும். மேலும் ஒவ்வொரு சேனைப் பிரிவுக்கும் பெயரை சூட்டி இருந்தார். இன்றைய உலகிலும் இவ்வாறு சேனைகளுக்குப் பெயர் சூட்டுவது பழக்கமாக இருந்து வருகிறது.
وَتَفَقَّدَ ٱلطَّيْرَ فَقَالَ مَا لِىَ لَآ أَرَى ٱلْهُدْهُدَ أَمْ كَانَ مِنَ ٱلْغَآئِبِينَ.
27:20. ஒருமுறை அவர் குதிரைப் படைகளையும் சேனைகளையும் மேற்பார்வையிட்டு வந்தார். அதில் உளவுப் படையைச் சேர்ந்த, “ஹுத் ஹுதூ” என்ற படைத் தலைவரை காணமால் போகவே, அவரைப் பற்றி விசாரித்து வந்தார். நெடு நாட்களாகியும் அவரைப் பணியில் இல்லாமல் போனது அவருக்கு கோபத்தை ஏற்படுத்தியது.
لَأُعَذِّبَنَّهُۥ عَذَابًۭا شَدِيدًا أَوْ لَأَا۟ذْبَحَنَّهُۥٓ أَوْ لَيَأْتِيَنِّى بِسُلْطَٰنٍۢ مُّبِينٍۢ.
27:21. மேலும் ஸுலைமான் நபி, “சட்ட விரோதமாக அரசுக்கு தகவல் எதுவும் அனுப்பாமல் மாயமாய் மறைந்திருக்கும் அவருக்கு ராணுவ சட்டப்படி கடுமையானத் தண்டனைக் கிடைக்கும். தான் பணியில் இல்லாதமைக்கு தக்க ஆதாரத்தை கொண்டு வரவில்லை என்றால் அவருக்கு மரண தண்டனையும் கிடைக்கலாம்” என்றார்.
فَمَكَثَ غَيْرَ بَعِيدٍۢ فَقَالَ أَحَطتُ بِمَا لَمْ تُحِطْ بِهِۦ وَجِئْتُكَ مِن سَبَإٍۭ بِنَبَإٍۢ يَقِينٍ.
27:22. இதைக் கேள்வியுற்ற “ஹுத் ஹுதூ” என்ற படைத் தலைவர், சில நாட்களிலேயே அரசரிடம் வந்தடைந்தார். அவர் அரசரிடம், “தாங்கள் அறியாத சில விஷயங்களை நான் அறிந்து, தகவல் கொண்டு வந்துள்ளேன். அது ஸபா நாட்டைப் பற்றியதாகும். நான் சமர்ப்பிக்கும் தகவல்கள் யாவும் உண்மையானதே ஆகும்” என்று தான் நெடுநாட்களாக இல்லாததற்கு விளக்கம் அளித்தார்.
إِنِّى وَجَدتُّ ٱمْرَأَةًۭ تَمْلِكُهُمْ وَأُوتِيَتْ مِن كُلِّ شَىْءٍۢ وَلَهَا عَرْشٌ عَظِيمٌۭ.
27:23. “அந்நாட்டை ஒரு பெண்மணி ஆட்சி செய்து வருகிறார். அந்நாட்டு அரசி எல்லா வகையான வளங்களையும், வசதி வாய்ப்புகளையும் கொண்டு தன்னிறைவு பெற்று ஆட்சி செய்து வருகிறார். அதனால் அவர்கள் தன் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள பிற நாட்டவரிடம் கையேந்துவதில்லை. அப்படிப்பட்ட மகத்தான பலம்வாய்ந்த ஆட்சியாக இருக்கிறது” என்று ஹ{த் ஹ{தூ தகவல் அளித்தார்.
وَجَدتُّهَا وَقَوْمَهَا يَسْجُدُونَ لِلشَّمْسِ مِن دُونِ ٱللَّهِ وَزَيَّنَ لَهُمُ ٱلشَّيْطَٰنُ أَعْمَٰلَهُمْ فَصَدَّهُمْ عَنِ ٱلسَّبِيلِ فَهُمْ لَا يَهْتَدُونَ.
27:24. “ஆனால் அந்த அரசியும் நாட்டு மக்களும் அல்லாஹ்வின் வழிகாட்டுதலை விட்டுவிட்டு சூரியனைத் தெய்வமாக எடுத்துக் கொண்டு அதை வணங்கி வருகின்றனர். மேலும் அவர்கள் செய்து வரும் தவறான செயல்கள் யாவும் அவர்களுக்கு அழகாகத் தோன்றுகின்றன. எனவே அவர்களுடைய மனோ இச்சை அவர்களை நேர்வழியை விட்டு விலக்கி வருகின்றது. அதனால் அவர்கள் நேர்வழியில் இல்லை”
அதாவது அந்நாட்டு அரசும் மக்களும் இறைவழிகாட்டுதலை பின்பற்றாததால் அவர்கள் அனைவரும் தன்னிச்சையாக செயல்படுகிறார்கள். அதனால் அவர்களுடைய சமுதாயத்தில் ஏற்றத்தாழ்வு ஏற்பட்டு வருகிறது. மேலும் அவர்களுடைய ஒழுக்க மாண்புகள் சீரழிந்து வருகின்றன. எனவே அந்நாடு அழிவை நோக்கிச் செல்கிறது. அந்த சீரழிவிலிருந்து அவர்களை காப்பாற்ற வேண்டும். இல்லையெனில் அவர்கள் முற்றிலுமாக அழிந்து போவார்கள்.
أَلَّا يَسْجُدُوا۟ لِلَّهِ ٱلَّذِى يُخْرِجُ ٱلْخَبْءَ فِى ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضِ وَيَعْلَمُ مَا تُخْفُونَ وَمَا تُعْلِنُونَ.
27:25. “வானங்களையும் பூமியையும் படைத்து அவற்றிலுள்ள மறைவான வற்றிலிருந்து தேவைக்கு ஏற்ப வெளிப்படுத்துபவனும் ஆகிய ஏக இறைவன் அல்லாஹ்வின் வழிகாட்டுதலுக்கு இணங்கி அவர்கள் செயல்பட்டிருக்க வேண்டாமா? அது மட்டுமின்றி நீங்கள் செய்யும் மறைவான செயல்களும் வெளிப்படையான செயல்களும் அல்லாஹ்வுக்கு மறைவானவை அல்ல என்பதை அவர்களிடம் எடுத்துக் கூறியும் அவர்கள் அதை ஏற்றுக் கொள்வதாக இல்லை”
ٱللَّهُ لَآ إِلَٰهَ إِلَّا هُوَ رَبُّ ٱلْعَرْشِ ٱلْعَظِيمِ ۩.
27:26. “அகிலங்களை எல்லாம் படைத்து அவற்றை சரியான முறையில் பரிபாலித்து தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கும் அல்லாஹ்வைத் தவிர, வேறு யாருடைய ஆட்சி அதிகாரமும் எங்கும் நடைபெறுவதில்லை. உண்மை இவ்வாறிருக்க அவர்கள் இறைவனின் படைப்பாகிய சூரியனை கடவுளாக கருதி அதை வணங்கி வருவது சரியாகுமா?”
இப்படியாக உளவுப்படைத் தலைவரான “ஹுத் ஹுதூ” அந்நாட்டைப் பற்றிய எல்லா விஷயங்களையும் அறிந்து, ஸுலைமான் நபியிடம் அறிக்கையை சமர்ப்பித்தார்.
۞ قَالَ سَنَنظُرُ أَصَدَقْتَ أَمْ كُنتَ مِنَ ٱلْكَٰذِبِينَ.
27:27. இந்த செய்தியை கேள்வியுற்ற ஸுலைமான் நபி, “உன்னுடைய இந்த அறிக்கையில் பொய் ஏதாவது கலந்துள்ளதா? அவ்வாறு பொய் கலந்திருந்தால் உண்மை விரைவில் வெளிப்பட்டு விடும்” என்று ஹுத் ஹுதூவிடம் கூறினார்.
பொதுவாக “ஹுத் ஹுதூ” என்பது ஒரு பறவை என்றும், அது மேற்சொன்ன தகவல்களை ஸுலைமான் நபியிடம் அளித்தது என்றும் சொல்வார்கள். இது சாத்தியமாகுமா என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
ஒரு நாடும், அங்கு நடைபெறும் ஆட்சிமுறையும் தொடர்ந்து சிறப்பாக திகழ வேண்டும் என்றால் அங்கு கடைப்பிடிக்க வேண்டிய சட்டதிட்டங்கள் எவ்வாறு இருக்கவேண்டும் என்பதை விளக்கும் வகையில் குறிப்புகள் அடங்கிய ஜபூர் என்னும் வேத்ததை ஸுலைமான் நபி அந்நாட்டு அரசியிடம் அனுப்பி வைத்தார்.
ٱذْهَب بِّكِتَٰبِى هَٰذَا فَأَلْقِهْ إِلَيْهِمْ ثُمَّ تَوَلَّ عَنْهُمْ فَٱنظُرْ مَاذَا يَرْجِعُونَ.
27:28. அவர், “என்னுடைய இந்தக் குறிப்பேடுகளை எடுத்துச் செல். சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளிடம் இதை சமர்ப்பித்து விடு. அதன்பின் சில நாட்கள் வரையில் அங்கு தனித்திருந்து என்ன நடக்கிறது என்பதைக் கவனித்து வா” என்று ஹுத் ஹுதூவிடம் கூறினார்.
அவ்வாறே அந்த உளவுபடைத் தலைவரான “ஹுத் ஹுதூ”, “ஜபூர்” எனும் வேத அறிவுரைகள் அடங்கிய குறிப்பேடுகளை எடுத்துச் சென்று அந்நாட்டு அரசிடம் சமர்ப்பித்து விட்டார். அந்த குறிப்பேடுகள் அரசியிடம் சென்றடைந்தன. ஸுலைமான் நபியிடமிருந்து வந்த குறிப்பேடுகளைப் படித்துவிட்டு உடனே அவள் சபையைக் கூட்டினாள்.
قَالَتْ يَٰٓأَيُّهَا ٱلْمَلَؤُا۟ إِنِّىٓ أُلْقِىَ إِلَىَّ كِتَٰبٌۭ كَرِيمٌ.
27:29. அவள், “மந்திரிகளே! கண்ணியமான முறையில் எழுதப்பட்ட வேத குறிப்பேடுகள் என்னிடம் வந்துள்ளன” என்றாள்.
إِنَّهُۥ مِن سُلَيْمَٰنَ وَإِنَّهُۥ بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ.
27:30. “அவை சுலைமானிடமிருந்து வந்துள்ளன. மேலும் அதில் அல்லாஹ்வின் விசாலனமான தயாள குணநலன்களைப் பற்றியும் அவனுடைய செயலாக்க முறைப் பற்றியும் எழுதப்பட்டுள்ளன” என்றும்
أَلَّا تَعْلُوا۟ عَلَىَّ وَأْتُونِى مُسْلِمِينَ.
27:31. “இந்த குறிப்பேடுகளிலுள்ள விஷயத்தை மறுக்காமல், ஏக இறைவனாகிய அல்லாஹ்வின் கட்டளைக்கு முற்றிலும் கட்டுப்பட்டவர்களாக ஆகிவிடுங்கள் என்றும் அதில் எழுதப்பட்டுள்ளது” என்றும் சபை உறுப்பினர்களின் கவனத்திற்கு கொண்டுவந்தாள்.
قَالَتْ يَٰٓأَيُّهَا ٱلْمَلَؤُا۟ أَفْتُونِى فِىٓ أَمْرِى مَا كُنتُ قَاطِعَةً أَمْرًا حَتَّىٰ تَشْهَدُونِ.
27:32. “எனவே சபை உறுப்பினர்களே! இது விஷயமாக என்ன செய்யவேண்டும் என்று ஆலோசனை கூறுவீர்களாக! நீங்கள் என்னிடம் மனப்பூர்வமான ஆலோசனை தெரிவிக்காத வரையில் நான் எந்தக் காரியத்திலும் முடிவு எடுப்பதில்லை என்பது உங்களுக்குத் தெரியும்” என்றாள்.
قَالُوا۟ نَحْنُ أُو۟لُوا۟ قُوَّةٍۢ وَأُو۟لُوا۟ بَأْسٍۢ شَدِيدٍۢ وَٱلْأَمْرُ إِلَيْكِ فَٱنظُرِى مَاذَا تَأْمُرِينَ.
27:33. இதைக் கேட்ட மந்திரிகள், “நாங்கள் பலசாலிகளாகவும் கடினமாகப் போர் செய்யக் கூடியவர்களாகவும் இருப்பது என்னவோ உண்மைதான். இருந்தாலும் இதைப் பற்றித் நீங்கள் எடுக்கும் முடிவுதான் இறுதியானது. எனவே நீங்களே சிந்தித்து ஒரு நல்ல முடிவை சொல்லுங்கள்” என்று அந்தப் பொறுப்பை அரசியிடமே ஒப்படைத்து விட்டார்கள்.
அதாவது ஸுலைமான் நபியின் பேச்சை கேட்காவிட்டால் அவர் நமக்கு எதிராக போர் தொடுப்பார். அதற்கு பதிலடி கொடுக்க நாங்கள் என்னவோ தயார். ஆனால் கடிதத்தில் உள்ள விஷயமோ வேறுவிதமாக உள்ளது. அதாவது இறைவனுக்குக் கட்டுப்படும் விஷயமாக இருக்கிறது. எனவே இதைப் பற்றி முடிவெடுக்க வேண்டியது அரசியே என எண்ணி அந்தப் பொறுப்பபை அவளிடமே ஒப்படைத்து விட்டார்கள்.
قَالَتْ إِنَّ ٱلْمُلُوكَ إِذَا دَخَلُوا۟ قَرْيَةً أَفْسَدُوهَا وَجَعَلُوٓا۟ أَعِزَّةَ أَهْلِهَآ أَذِلَّةًۭ ۖ وَكَذَٰلِكَ يَفْعَلُونَ.
27:34. இதைப் பற்றி யோசித்த அந்த அரசி, “அரசர்கள் ஒரு நாட்டிற்கு எதிராக எப்போது படையெடுத்தாலும் அங்குள்ள அனைத்தையும் நாசமாக்கி சின்னாபின்னமாக்கி விடுவார்கள். அந்நாட்டிலுள்ள கண்ணியமிக்கவர்களை எல்லாம் சிறுமைப்படுத்தி உருகுலைத்து விடுவார்கள். எனவே இப்போது போர் மூண்டாலும் இதே போன்ற நிலைதான் ஏற்படும்” என்று சபையோரிடம் கூறினாள்.
وَإِنِّى مُرْسِلَةٌ إِلَيْهِم بِهَدِيَّةٍۢ فَنَاظِرَةٌۢ بِمَ يَرْجِعُ ٱلْمُرْسَلُونَ.
27:35. மேலும் அவள், “ஆகவே நான் அவர்களுக்கு சில அன்பளிப்புப் பொருட்களைக் கொடுத்தனுப்ப எண்ணி இருக்கிறேன். அதன்பின் என்ன செய்தி வருகிறது என்பதை நான் கவனிக்கப் போகிறேன்” என்றாள்.
فَلَمَّا جَآءَ سُلَيْمَٰنَ قَالَ أَتُمِدُّونَنِ بِمَالٍۢ فَمَآ ءَاتَىٰنِۦَ ٱللَّهُ خَيْرٌۭ مِّمَّآ ءَاتَىٰكُم بَلْ أَنتُم بِهَدِيَّتِكُمْ تَفْرَحُونَ.
27:36. அவ்வாறே அந்த அன்பளிப்பு பொருட்களை அரசுத் தூதர்கள் ஸுலைமான் நபியிடம் கொண்டு வந்தபோது, “நீங்கள் எனக்கு அன்பளிப்புப் பொருட்களைக் கொடுத்து உதவி செய்ய நினைக்கிறீர்களா? உங்களிடமிருக்கும் சொத்து செல்வங்களைவிட அதிகமான செல்வங்கள் அல்லாஹ்வின் புறத்திலிருந்து எங்களுக்கு கிடைத்துள்ளன. இத்தகைய அன்பளிப்பு பொருட்களைக் கொண்டு நீங்கள் தான் மகிழ்சி அடைவீர்கள். எங்களுக்கு இவை எல்லாம் தேவையில்லை” என்றார்.
ٱرْجِعْ إِلَيْهِمْ فَلَنَأْتِيَنَّهُم بِجُنُودٍۢ لَّا قِبَلَ لَهُم بِهَا وَلَنُخْرِجَنَّهُم مِّنْهَآ أَذِلَّةًۭ وَهُمْ صَٰغِرُونَ.
27:37. “ஆகவே இவற்றை எல்லாம் நீங்கள் திருப்பி எடுத்துச் செல்லுங்கள். என்னுடைய அறிவுரைகளை அவர்கள் ஏற்காததால், அவர்களுக்கு எதிராக படையெடுப்பதைத் தவிர வேறு எந்த வழிமுறையும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. எங்களிடமிருக்கும் பலம் வாய்ந்த படையிடம் அவர்கள் தோற்றுப் போவார்கள். அதன்பின் அவர்களை ஆட்சியை விட்டு வெளியேற்றி, சிறுமை அடைந்தவர்களாக இழிவுக்குள்ளாகி விடுவார்கள். இந்த செய்தியை நீங்கள் உங்கள் நாட்டு அரசியிடம் அறிவித்து விடுங்கள்” என்றார்.
இப்படியாக ஸபா நாட்டிற்கு எதிராக படையெடுக்கவே ஸுலைமான் நபி முடிவெடுத்தார். காரணம் தவறான ஆட்சி முறையால் அங்குள்ள நலிந்த மக்களுக்கு பல இன்னல்களும் துயரங்களும் ஏற்பட்டு வருகின்றன. இறை வழிகாட்டுதலின் படி ஆட்சி நடைப் பெற்றால் அனைவரும் சந்தோஷமாக வாழ வழிகள் பிறக்கும். இதை அந்நாட்டு அரசி ஏற்கத் தயாராக இல்லை. இருப்பினும் பெரிய அளவில் தாக்குவதற்குப் பதிலாக அவர்களுடைய கோட்டையை மட்டும் தாக்கி அரசியைப் பணிய வைக்க முடியுமா என்ற யோசனையில் இருந்தார். காரணம் இதனால் பொது மக்களுக்கும் உயிர் சேதமும் பொருட்சேதமும் பெருமளவில் ஏற்படாது.
قَالَ يَٰٓأَيُّهَا ٱلْمَلَؤُا۟ أَيُّكُمْ يَأْتِينِى بِعَرْشِهَا قَبْلَ أَن يَأْتُونِى مُسْلِمِينَ.
27:38. எனவே அவர் படைத் தலைவர்களை அழைத்து, “அவர்கள் படையெடுத்து புறப்படுவதற்கு முன், அவர்களுடைய கோட்டையைத் தாக்கி, அந்த அரசியின் ஆட்சியைக் கைப்பற்ற முடியுமா?” என்று யோசனைக் கேட்டார்.
قَالَ عِفْرِيتٌۭ مِّنَ ٱلْجِنِّ أَنَا۠ ءَاتِيكَ بِهِۦ قَبْلَ أَن تَقُومَ مِن مَّقَامِكَ ۖ وَإِنِّى عَلَيْهِ لَقَوِىٌّ أَمِينٌۭ.
27:39. மலைவாழ் மக்களைச் சேர்ந்த பலம் வாய்ந்த படைத் தளபதி, “இஃப்ரீத்” என்பவர், இந்த பணியை சிறப்பாக செய்து முடிப்பதாக உறுதியளித்தார். அவர் ஸுலைமான் நபியிடம், “நீங்கள் போருக்கு ஆயத்தமாகி புறப்படுவதற்கு முன்பே நான் அவளுடைய ஆட்சியமைப்பை உருகுலைய செய்து அவளை உங்கள் காலடியில் விழச் செய்வேன். இந்த பணியை நிறைவேற்ற எனக்கு எல்லா வகையான படைப் பலமும், முழு நம்பிக்கையும் உள்ளது” என்று சூளுரைத்தார்.
قَالَ ٱلَّذِى عِندَهُۥ عِلْمٌۭ مِّنَ ٱلْكِتَٰبِ أَنَا۠ ءَاتِيكَ بِهِۦ قَبْلَ أَن يَرْتَدَّ إِلَيْكَ طَرْفُكَ ۚ فَلَمَّا رَءَاهُ مُسْتَقِرًّا عِندَهُۥ قَالَ هَٰذَا مِن فَضْلِ رَبِّى لِيَبْلُوَنِىٓ ءَأَشْكُرُ أَمْ أَكْفُرُ ۖ وَمَن شَكَرَ فَإِنَّمَا يَشْكُرُ لِنَفْسِهِۦ ۖ وَمَن كَفَرَ فَإِنَّ رَبِّى غَنِىٌّۭ كَرِيمٌۭ.
27:40. போர் யுக்திகளில் ஞானமும் தேர்ச்சியும் பெற்ற திறமை மிக்க ஒரு படைத்தலைவர், “இது ஒன்றும் சிரமமான காரியம் அல்ல. அதை நான் கண் இமைக்கும் நேரத்தில் செய்து முடிப்பேன். எனவே அதன் பொறுப்பை என்னிடம் ஒப்படையுங்கள்” என்றார். தம்மிடம் இருந்த தேற்சிப் பெற்ற படைப் பலத்தையும் வசதி வாய்ப்புகளையும் கண்ட ஸுலைமான் நபி, தன் சேனைகளிடம், “இவை யாவும் இறைவனின் அருட் கொடைகளாகும். இவற்றை வைத்து இறைவனின் கட்டளைக்குக் கட்டுப்பட்டு நன்றி விசவாசத்துடன் செயல்படுகிறேனா அல்லது இறைவனுக்கு மாறு செய்து, சுய நலமாக செயல்படுகின்றேனா என்பது தான் என் முன் உள்ள கேள்வியாகும். யார் இறைவனுக்குக் கட்டுப்பட்டு நன்றி விசுவாசத்துடன் செயல்படுகிறானோ, அதன் பலன்கள் அவனுக்கே கிடைக்கும். யார் இறைவனின் கட்டளைக்கு மாறு செய்கிறானோ, அதன் தீய விளைவுகள் அவனுக்கே சேரும். என் இறைவன் தேவையற்றவனாகவும், வள்ளல் தன்மை உடையவனாகவுமே இருக்கிறான். இவற்றை மனதில் பதிய வைத்துக் கொண்டு போருக்குப் புறப்படுங்கள்” என்று அறிவுறுத்தினார்.
அதாவது போரின் நோக்கமே ஆட்சியாளரையும் மக்களையும் நேர்வழிப்படுத்தவே ஆகுமே அன்றி, அவர்களுடைய நாட்டை கைப்பற்றுவதற்கு அல்ல என்பதை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள். இது தான் இறைவழிகாட்டுதலின் அடிப்படையில் செயல்படும் ஆட்சியாளர்களின் உயர் பண்புகளாகும்.
قَالَ نَكِّرُوا۟ لَهَا عَرْشَهَا نَنظُرْ أَتَهْتَدِىٓ أَمْ تَكُونُ مِنَ ٱلَّذِينَ لَا يَهْتَدُونَ.
27:41. “எனவே அவளுடைய ஆட்சி அதிகாரத்தை தோற்கடிப்பதிலேயே நோக்கமாகக் கொண்டு செயல்படுங்கள். அவளுடைய கோட்டையைத் தாக்கி, அரண்மனைக் காவலாளிகளைக் கைது செய்து, ஆட்சி பீடத்தை உருகுலைய செய்துவிடுங்கள். அப்போதாவது அவள் தன் நிலையை அறிந்து, தன்னை மாற்றிக் கொள்கிறாளா அல்லது அறிந்து கொள்ள முடியாத நிலையிலேயே இருக்கிறாளா என்பதைக் கவனிப்போம்” என்று தம் சேனைகளுக்கு போரின் நோக்கமும் அங்கு கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகளைக் கொண்ட வரைப் படத்தையும் தயாரித்துக் கொடுத்தார்.
அவ்வாறே அவர்களுடைய திட்டப்படி, அவளுடைய கோட்டைக்குள் சென்று, அவளுடைய ஆட்சி பீடத்தைக் கைப்பற்றி அவளை கைது செய்தனர். அதன்பின் ஸுலைமான் நபியும் ஸபா நாட்டிற்குச் சென்று அவளை சந்தித்தார்.
فَلَمَّا جَآءَتْ قِيلَ أَهَٰكَذَا عَرْشُكِ ۖ قَالَتْ كَأَنَّهُۥ هُوَ ۚ وَأُوتِينَا ٱلْعِلْمَ مِن قَبْلِهَا وَكُنَّا مُسْلِمِينَ.
27:42. கைது செய்யப்பட்ட அரசி அவர் முன் வந்தபோது அவளிடம், “உன்னுடைய ஆட்சி அதிகாரம் என்பதெல்லாம் இவ்வளவு தானா? இவற்றை நம்பித் தான் நாட்டை ஆட்சி செய்தாயா? உன்னுடைய நாடே சீரழிந்து கொண்டிருக்கிறதே?” என்றார். அதற்கு அவள், “ஆட்சி அதிகாரம் என்பதெல்லாம் இது போன்றதே என்ற எண்ணத்தில் தான் இதுவரையில் இருந்து விட்டேன். இப்படிப்பட்ட இழிநிலை ஏற்படும் என்ற ஞானம் எனக்கு முன்பே இருந்தது. எனவே இனி உங்களுக்குக் கட்டுப்பட்டு நடப்பேன்” என்று தம் தவறை உணர்ந்து கூறினாள்.
وَصَدَّهَا مَا كَانَت تَّعْبُدُ مِن دُونِ ٱللَّهِ ۖ إِنَّهَا كَانَتْ مِن قَوْمٍۢ كَٰفِرِينَ.
27:43. அல்லாஹ்வின் வழிகாட்டுதலை ஏற்கச் சொன்னபோது, அவள் வணங்கி வந்த சூரியன் அவளை தடுத்துக் கொண்டிருந்தது. இதனால் அவள் இறைவனின் அறிவுரைகளை ஏற்க மறுப்பவளாக இருந்தாள்.
அதன்பின் அந்நாட்டின் அரசாட்சியை அவளிடமே ஒப்படைத்து, இறைவழிகாட்டுதலின் படி ஆட்சி செய்ய அறிவுறுத்திவிட்டு தன் நாட்டிற்குத் திரும்பிச் சென்றார். தன் நாட்டிலுள்ள மக்களும் அரசாட்சியும் எவ்வளவு சிறப்பாக செயல்படுகிறது என்பதை புரிய வைப்பதற்காக அவளை தன் நாட்டிற்கு வருகைத் தரும்படி ஸுலைமான் நபி அழைப்பு விடுத்தார். அவளும் வருவதாக ஒப்புக்கொண்டாள். அவள் வருகையை ஒட்டி பல அலங்கார ஏற்பாடுகளை செய்தார்.
قِيلَ لَهَا ٱدْخُلِى ٱلصَّرْحَ ۖ فَلَمَّا رَأَتْهُ حَسِبَتْهُ لُجَّةًۭ وَكَشَفَتْ عَن سَاقَيْهَا ۚ قَالَ إِنَّهُۥ صَرْحٌۭ مُّمَرَّدٌۭ مِّن قَوَارِيرَ ۗ قَالَتْ رَبِّ إِنِّى ظَلَمْتُ نَفْسِى وَأَسْلَمْتُ مَعَ سُلَيْمَٰنَ لِلَّهِ رَبِّ ٱلْعَٰلَمِينَ.
27:44. அவளுடைய வரவேற்பு கண்ணாடி மாளிகையில் கோலாகலமாக நடைபெற்றது. அந்த மாளிகையின் நுழைவாயிலில் தண்ணீர் தடாகம் போன்று தளத்தை ஏற்படுத்தியிருந்தார். அதை தண்ணீரென நினைத்து கலக்கம் அடைந்த அவள், தன் ஆடையை கெண்டைக் கால்களுக்கு மேல் உயர்த்தினாள். இதைக் கண்ட ஸுலைமான் நபி, “இது வழுவழுப்பான கண்ணாடிகளால் தளம் போடப்பட்ட மாளிகையாகும்” என்றார். இதைப் பார்த்துப் பிரமித்துப் போன அரசி, “என் இறைவா! நிச்சயமாக எனக்கு நானே தீங்கிழைத்துக் கொண்டேன். அகிலங்களுக்கெல்லாம் இறைவனாகிய அல்லாஹ்வுக்கும் ஸுலைமான் நபிக்கும் கட்டுப்பட்டு நடப்பேன்” என்றாள்.
அதாவது கண்ணாடியைக் கொண்டு தயாரிக்கப்பட்ட தளத்தைத் தண்ணீர் தடாகம் என எவ்வாறு தவறாக எண்ணிக் கொண்டிருந்தாளோ, அவ்வாறே இறைவனின் படைப்பான சூரியனையே இறைவன் என எண்ணிக் கொண்டிருந்தது தவறு என்பதை புரிய வைத்தார். ஓர் அரசன் மற்ற நாட்டு அரசனுக்கு இத்தகைய உவமானப் பொருட்களைக் கொண்டு உண்மையை விளக்குவது மரபாக இருந்து வந்தது.
மேலும் ஏறத்தாழ 3500 ஆண்டுகளுக்கு முன்பே விஞ்ஞான வளர்ச்சி எந்த அளவுக்கு வளர்ந்து இருந்தது என்பதையும் இவ்வாசகம் நமக்கு எடுத்துக் காட்டுகிறது. ஸபா நாட்டில் இத்தகைய பளிங்கு மாளிகை எல்லாம் அக்காலத்தில் இல்லை. எனவே அந்த பளிங்கு மாளிகையைக் கண்டு ஆச்சரியப்பட்டுப் போனாள். விஞ்ஞான வளர்ச்சியைக் கொண்டு இந்த அளவுக்கு வளர்ச்சிப் பெற்று சிறப்பாக வாழ முடியும் என்பதை அவள் தெரிந்து கொண்டாள். எனவே இறைவனின் பிரமாண்டமான பரிபாலன ஏற்பாட்டினை ஏற்றுக் கொள்வதாக அவள் அறிவித்தாள். காரணம் விஞ்ஞான வளர்ச்சி மட்டுமின்றி சமுதாய ஒழுக்க மாண்புகளைப் பேணிக்காக்க இறைவழிகாட்டுதல்கள் அவசியமாகின்றன என்பதையும் அவள் புரிந்து கொண்டாள்.
இதுவே ஸுலைமான்நபி (Solamon the Great) மற்றும் ஸபா நாட்டு அரசியான பல்ஃகீஸ் (The Queen of Sheeba)என்பவரின் வரலாற்று உண்மைகளாகும். அந்த அரசி தன் தவறை உணர்ந்து இறைவழிகாட்டுதலின்படி ஆட்சி செய்தார். எனவே அந்நாட்டிற்கு ஏற்படவிருந்த பேரழிவுகளிலிருந்து அந்நாட்டு மக்களும் மீண்டு கொண்டனர். இதற்கு மாறாக ஆது, சமூது போன்ற சமுதாயங்கள் இறைவழிகாட்டுதலை ஏற்க மறுத்து அழிவை சந்தித்துக் கொண்டன.
وَلَقَدْ أَرْسَلْنَآ إِلَىٰ ثَمُودَ أَخَاهُمْ صَٰلِحًا أَنِ ٱعْبُدُوا۟ ٱللَّهَ فَإِذَا هُمْ فَرِيقَانِ يَخْتَصِمُونَ.
27:45.“சமூது” சமூகத்தாரிடமும் சாலிஹ் நபி இறைவழிகாட்டுதலை எடுத்துரைத்து வந்தார். அவரும் அச்சமூகத்தைச் சேர்ந்தவர் தான். அவர் தம் சமூகத்தாரிடம் அல்லாஹ்வின் வழிகாட்டுதலை ஏற்று வாழும்படி அறிவுறுத்தி வந்தார். இதனால் அச்சமுதாயம் இரண்டு பிரிவாக பிரிந்து விட்டது. ஒன்று சாலிஹ் நபியை ஏற்றுக் கொண்டவர்கள் மற்றொன்று அவரை எதிர்த்தவர்கள்.
தவறான செயல்களால் ஏற்படவிருக்கும் அழிவைப் பற்றி அவர்களிடம் எடுத்துரைத்து வந்தார். ஆனால் அவர்கள் அதை வெறும் மிரட்டல் என்றே நினைத்துக் கொண்டனர். எனவே அந்த அழிவை உடனே ஏன் கொண்டுவந்து காட்டுவதில்லை என்று அவர்கள் வாதிட்டு வந்தனர்.
قَالَ يَٰقَوْمِ لِمَ تَسْتَعْجِلُونَ بِٱلسَّيِّئَةِ قَبْلَ ٱلْحَسَنَةِ ۖ لَوْلَا تَسْتَغْفِرُونَ ٱللَّهَ لَعَلَّكُمْ تُرْحَمُونَ.
27:46. அதற்கு சாலிஹ் நபி, “என் சமூகத்தாரே! நீங்கள் இந்த அளவுக்கு சிந்தனையற்று செயல்படுகிறீர்களே! யாராவது நன்மைகள் கிடைப்பதை விட்டுவிட்டு தீமைகள் ஏற்பட விரும்புவார்களா? நீங்கள் சொல்வதையும் செய்வதையும் பார்த்தால் தீமையை விரும்புவதாகவே தெரிகிறது. நீங்கள் அல்லாஹ்வின் வழிகாட்டுதலின்படி செயல்பட்டு, தீய விளைவுகளிலிருந்து பாதுகாப்பாக இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்! உங்களுக்கு அல்லாஹ்வின் கருணையும் கிடைக்கும் அல்லவா?” என்று அவர்களிடம் அடக்கமாக அறிவுரை செய்து வந்தார்.
قَالُوا۟ ٱطَّيَّرْنَا بِكَ وَبِمَن مَّعَكَ ۚ قَالَ طَٰٓئِرُكُمْ عِندَ ٱللَّهِ ۖ بَلْ أَنتُمْ قَوْمٌۭ تُفْتَنُونَ.
27:47. ஆனால் அவர்கள் இந்த அறிவுரைகளுக்கு செவி சாய்க்கவில்லை. மாறாக அவர்கள் சாலிஹ் நபியிடம், “எப்போது பார்த்தாலும் அழிவைப் பற்றியும் நாசத்தைப் பற்றியுமே பேசி வருகின்றீர். எனவே உம்மையும் உம்முடன் இருப்பவர்களையும் பார்த்தால் கெட்ட சகுணம் படைத்தவர்கள் என்றே தெரிகிறது” என்று அவரை சாடி வந்தார்கள். அதற்கு சாலிஹ் நபி, “கெட்ட சகுணம், அழிவு போன்றவற்றிற்கு நாங்கள் காரணம் அல்ல. அல்லாஹ் நிர்ணயித்துள்ள “மனித செயல்களுக்கு ஏற்ற இறுதி விளைவுகள்” என்ற விதிமுறைகளின்படி, உங்களுடைய தவறான செயல்களின் விளைவாக ஏற்படுவதாகும். அந்த அழிவுகள் வந்தடையும் வரையில் நீங்கள் திருந்துபவர்களாகத் தெரியவில்லை” என்று விளக்கமளித்து வந்தார்.
وَكَانَ فِى ٱلْمَدِينَةِ تِسْعَةُ رَهْطٍۢ يُفْسِدُونَ فِى ٱلْأَرْضِ وَلَا يُصْلِحُونَ.
27:48. மேலும் அந்த சமுதாயத்தில் அதிகாரம் படைத்த பெரும் செல்வந்தர்கள் ஒன்பது பேர் இருந்தனர். அவர்கள்தாம் எல்லா குழப்பங்களுக்கும் காரணமாக இருந்தார்கள். அவர்கள் ஒருபோதும் சமுதாய நன்மைக்காக செயல்பட்டதே இல்லை.
சாலிஹ் நபியின் அழைப்போ நீதி, நேர்மை, சமுதாய ஒருமைப்பாடு ஆகியவற்றை மையமாகக் கொண்டிருந்தன. இந்த அழைப்பு அதிகார வர்க்கத்திற்கு எதிராக இருந்ததால் சாலிஹ் நபியைச் ஆதரிப்பவர்களுக்கும் எதிர்ப்பவர்களுக்கும் இடையே மோதல்கள் ஏற்பட்டன.
قَالُوا۟ تَقَاسَمُوا۟ بِٱللَّهِ لَنُبَيِّتَنَّهُۥ وَأَهْلَهُۥ ثُمَّ لَنَقُولَنَّ لِوَلِيِّهِۦ مَا شَهِدْنَا مَهْلِكَ أَهْلِهِۦ وَإِنَّا لَصَٰدِقُونَ.
27:49. இறுதியில் அவர்கள் அனைவரும் ஒன்று கூடி சதி திட்டம் தீட்டினார்கள். அவர்கள், “அல்லாஹ்வின் மீது ஆணையாக! நாம் அவரையும் அவரை சார்ந்தவர்களையும் யாருக்கும் தெரியாமல் ஒழித்து விடுலாம். அதன்பின் அவர்களைப் பற்றி அவர்களுடைய குடும்பத்தினர் விசாரித்தால், அதைப் பற்றி எங்களுக்கு எதுவும் தெரியாது என்றும், நாம் சொல்வதெல்லாம் உண்மையே என்றும் சத்தியம் செய்து சொல்லி விடலாம்” என்று முடிவெடுத்தனர்.
சாலிஹ் நபியின் சமூகத்தவர்கள் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொண்டு தான் இருந்தார்கள் என்பது இதிலிருந்து தெரிகிறது. ஆனால் அவர்கள் அல்லாஹ்வின் அறிவுரைகளுக்கு மாற்றமாக செயல்பட்டு, பெயரளவில் முஸ்லிம்களாக இருந்தார்கள். எனவே அவர்களைத் திருத்த சாலிஹ் நபி முயற்சி மேற்கொண்டார்.
وَمَكَرُوا۟ مَكْرًۭا وَمَكَرْنَا مَكْرًۭا وَهُمْ لَا يَشْعُرُونَ.
27:50. இப்படியாக அவர்கள் இரகசியமாக திட்டங்களைத் தீட்டி வந்தனர். ஆனால் “மனித செயல்களுக்கேற்ற விளைவுகள்” என்ற இறைவனின் சட்டம் அவர்களுக்கு எதிராக செயல்பட்டது. இந்த உண்மை அவர்களுக்குத் தெரியாயமல் போயிற்று.
فَٱنظُرْ كَيْفَ كَانَ عَٰقِبَةُ مَكْرِهِمْ أَنَّا دَمَّرْنَٰهُمْ وَقَوْمَهُمْ أَجْمَعِينَ.
27:51. ஆகவே அவர்களுடைய சூழ்ச்சிகளின் முடிவு என்னவாயிற்று என்பதை கவனியுங்கள். இறைவனின் அறிவரைப்படி சாலிஹ் நபியும் அவரை சார்ந்தவர்களும் தப்பித்துக் கொண்டார்கள். அவரை எதிர்த்தவர்கள் அனைவரும் அழிந்து போனார்கள்.
فَتِلْكَ بُيُوتُهُمْ خَاوِيَةًۢ بِمَا ظَلَمُوٓا۟ ۗ إِنَّ فِى ذَٰلِكَ لَءَايَةًۭ لِّقَوْمٍۢ يَعْلَمُونَ.
27:52. இதுவே உலகில் அநியாயம் அட்டூழியம் செய்வோருக்கு ஏற்படும் அழிவுகளாகும். இது வெறும் கதையல்ல. பாழடைந்துப் போன அந்த ஊரும், வீடுகளும் உங்கள் கண்ணெதிரே இருக்கின்றனவே! அவற்றைப் பார்த்து நடந்த உண்மை என்னவென்பதை விசாரித்து தெரிந்து கொள்ளுங்கள். ஆக சிந்தித்துணரும் மக்களுக்கு இதில் பல படிப்பினைகள் உள்ளன. (பார்க்க 26:158)
وَأَنجَيْنَا ٱلَّذِينَ ءَامَنُوا۟ وَكَانُوا۟ يَتَّقُونَ.
27:53. மேலும் அல்லாஹ்வின் வழிகாட்டுதலை ஏற்று, அதற்கு எதிராக செயல்படுவதால் ஏற்படும் விபரீத விளைவுகளுக்கு அஞ்சி வாழ்ந்தவர்கள், அந்த அழிவில் சிக்கவில்லை. அவர்கள் காப்பாற்றப்பட்டனர்.
وَلُوطًا إِذْ قَالَ لِقَوْمِهِۦٓ أَتَأْتُونَ ٱلْفَٰحِشَةَ وَأَنتُمْ تُبْصِرُونَ.
27:54. அதே போன்று அழிந்து போன சமூகத்தவர்களில் லூத் நபியின் சமுதாயமும் ஒன்று. அவருடைய சமுதாயத்தினர் மானக் கேடான செயல்களில் ஈடுபட்டிருந்தனர். அதன் விளைவுகள் என்னவாகும் என்பதை அறிந்தே, அவர்கள் செய்து வந்தனர். எனவே அவர்களை அவர் வன்மையாக கண்டித்து வந்தார்.
أَئِنَّكُمْ لَتَأْتُونَ ٱلرِّجَالَ شَهْوَةًۭ مِّن دُونِ ٱلنِّسَآءِ ۚ بَلْ أَنتُمْ قَوْمٌۭ تَجْهَلُونَ.
27:55. அது மட்டுமின்றி அச்சமுதாயத்தினர் அநேக அக்கிரம செயல்களில் ஈடுபட்டு வந்தனர். (பார்க்க 29:29) அது மட்டுமின்றி அவர்கள் தம் காம இச்சையை தணித்துக் கொள்ள, தம் மனைவிகளை விட்டுவிட்டு ஓரின சேர்க்கை முறையை கடைப்பிடித்து வந்தனர். இவை முற்றிலும் அறிவில்லாத மானக்கேடான செயலாகும். எனவே லூத் நபி அவர்களை கடுமையாக கண்டித்து வந்தார்.
۞ فَمَا كَانَ جَوَابَ قَوْمِهِۦٓ إِلَّآ أَن قَالُوٓا۟ أَخْرِجُوٓا۟ ءَالَ لُوطٍۢ مِّن قَرْيَتِكُمْ ۖ إِنَّهُمْ أُنَاسٌۭ يَتَطَهَّرُونَ.
27:56. ஆனால் லூத் நபியின் சமூகத்தவரோ அவருடைய அறிவுரையைக் கேட்கவே இல்லை. மாறாக அவரையும் அவரை சார்ந்தவர்களையும் ஊரைவிட்டு விரட்டுவதிலேயே கண்ணும் கருத்துமாக இருந்தார்கள். அவர் மிகவும் பரிசுத்தமானவராக இருக்கிறார் போலும் என அவரைக் கேலியாகப் பேசி வந்தனர். அதைத் தவிர அவர்களிடம் வேறு எந்தப் பேச்சும் இருந்ததில்லை.
فَأَنجَيْنَٰهُ وَأَهْلَهُۥٓ إِلَّا ٱمْرَأَتَهُۥ قَدَّرْنَٰهَا مِنَ ٱلْغَٰبِرِينَ.
27:57. எனவே அங்கு ஏற்படவிருக்கும் அழிவைப் பற்றி முன்அறிவிப்பு வந்தது. (பார்க்க 11:81). அதன்படி அவர்கள் அவ்வூரை விட்டு வெளியேறி தப்பித்துக் கொண்டார்கள். ஆனால் அவருடைய மனைவியும் அந்த முன் எச்சரிக்கையைப் பொருட்படுத்த வில்லை. அவள் அங்கேயே தங்கி விட்டதால் அங்கு ஏற்பட்ட பேரழிவில் அவளும் சிக்கிவிட்டாள்.
وَأَمْطَرْنَا عَلَيْهِم مَّطَرًۭا ۖ فَسَآءَ مَطَرُ ٱلْمُنذَرِينَ.
27:58. அதாவது இறைவனின் நியதிப்படி அங்கு எரிமலைப் பிழம்பும் கல்மாரியும் பொழிந்தன. அதில் அனைவரும் எரிந்து சாம்பலாகி புதைந்து விட்டனர். எனவே முன்னெச்சரிக்கை செய்த பின் அவர்கள் மீது பெய்த அம்மழை மிகவும் மோசமாக இருந்தது.
இந்த வரலாற்று நிகழ்வுகளிலிருந்து தெரிய வருவது என்னவென்றால் அநியாயம் அக்கிரம் செய்பவர்கள் இறுதியில் அழிவைத் தான் சந்திக்கின்றனர். இறை வழிகாட்டுதலை ஏற்று நடப்பவர்கள் பாதுகாப்பாக வாழ்கின்றனர். இப்படியொரு ஏற்பாட்டை அல்லாஹ் செய்திருக்காவிட்டால் உலகில் எங்கும் அநியாயம் அட்டூழியம் தொடர்ந்து நடந்து கொண்டே இருந்திருக்கும். இப்படி நடக்காதவாறு (Check Point) தடை செய்வது அல்லாஹ்வின் மாபெரும் கருணையாகும் அல்லவா? (பார்க்க 2:251). எனவேதான்
قُلِ ٱلْحَمْدُ لِلَّهِ وَسَلَٰمٌ عَلَىٰ عِبَادِهِ ٱلَّذِينَ ٱصْطَفَىٰٓ ۗ ءَآللَّهُ خَيْرٌ أَمَّا يُشْرِكُونَ.
27:59. அல்லாஹ்வின் செயல்திட்டங்கள் யாவும் போற்றுதலுக்கும் பாராட்டுக்கும் உரியவையாக உள்ளன என்பதை உலக மக்களுக்கு எடுத்துரையுங்கள். மேலும் அல்லாஹ்வின் வழிகாட்டுதலுக்கு கட்டுப்பட்டு கண்ணியத்துடன் வாழ்பவர்கள் உலகில் பாதுகாப்பாக இருப்பார்கள் என்றும், அவனுடைய வழிகாட்டுதலுக்கு எதிராக செயல்படுபவர்கள் அழிந்து போவார்கள் என்பதையும் அறிவித்து விடுங்கள். எனவே அல்லாஹ்வின் அறிவுரைப்படி வாழ்வது சிறப்பானதா? அல்லது அவனுக்கு இணையாக வேறு வழிமுறைகளை பின்பற்றுவது சிறப்பானதா? என்பதை சிந்தித்து முடிவெடுக்கச் சொல்லுங்கள்.
أَمَّنْ خَلَقَ ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضَ وَأَنزَلَ لَكُم مِّنَ ٱلسَّمَآءِ مَآءًۭ فَأَنۢبَتْنَا بِهِۦ حَدَآئِقَ ذَاتَ بَهْجَةٍۢ مَّا كَانَ لَكُمْ أَن تُنۢبِتُوا۟ شَجَرَهَآ ۗ أَءِلَٰهٌۭ مَّعَ ٱللَّهِ ۚ بَلْ هُمْ قَوْمٌۭ يَعْدِلُونَ.
27:60. “மேலும் அகிலங்களிலும் பூமியிலும் உள்ளவை அனைத்தையும் படைத்து, அனைத்து உயிரினங்களும் உயிர்வாழ, வானத்திலிருந்து மழையை பொழிய வைப்பது யார்? அந்த மழை நீரைக் கொண்டு தான் எழில்மிக்க செழிப்பான சோலைகளும் தோட்டங்களும் உருவாகின்றனவே, அவற்றிலுள்ள மரங்களையும் செடி கொடிகளையும் படைப்பது யார்? இந்த பிரமாண்டமான ஏற்பாட்டை செய்தது அல்லாஹ்வா அல்லது நீங்களா? நீங்கள் உண்மை அறிந்திருந்தும் அல்லாஹ்வின் வழிகாட்டுதலை விட்டுவிட்டு, உங்கள் மனோ இச்சையைப் பின்பற்றி வருகிறீர்களே! இது சரியா?” என்று கேளுங்கள்.
أَمَّن جَعَلَ ٱلْأَرْضَ قَرَارًۭا وَجَعَلَ خِلَٰلَهَآ أَنْهَٰرًۭا وَجَعَلَ لَهَا رَوَٰسِىَ وَجَعَلَ بَيْنَ ٱلْبَحْرَيْنِ حَاجِزًا ۗ أَءِلَٰهٌۭ مَّعَ ٱللَّهِ ۚ بَلْ أَكْثَرُهُمْ لَا يَعْلَمُونَ.
27:61. “மேலும் இந்தப் பூமியை நீங்கள் வசிப்பதற்கு ஏற்ற வகையில் படைத்தது யார்? அதனிடையே ஆறுகளையும் படைத்து, இந்த பூமி ஆடாது அசையாதிருக்க (Cosmic Balance) மலைகளையும் ஊன்றி, மேலும் கடல்களுக்கு இடையே தடுப்புகளை ஏற்படுத்தியது யார்? (மேலும் பார்க்க 25:53). அல்லாஹ்வை தவிர்த்து வேறு யாரால் இவற்றை படைக்க முடியும் என்று நினைக்கிறீர்கள்? நீங்கள் சிந்திக்கத் தவறிய மக்களாக இருக்கிறீர்களே!” என்று கூறுங்கள்.
أَمَّن يُجِيبُ ٱلْمُضْطَرَّ إِذَا دَعَاهُ وَيَكْشِفُ ٱلسُّوٓءَ وَيَجْعَلُكُمْ خُلَفَآءَ ٱلْأَرْضِ ۗ أَءِلَٰهٌۭ مَّعَ ٱللَّهِ ۚ قَلِيلًۭا مَّا تَذَكَّرُونَ.
27:62. “மேலும் துன்பத்திலும் கஷ்டத்திலும் இருப்பவர்களின் உதவிக்காக அழைக்கும் போது, அவர்களுக்கு பதில் அளித்து நிவாரணம் அளிப்பது யார்? துயரத்தில் சிக்கிக் கொண்டவர்களுக்கு நிவாரணம் அளிக்க ஆட்சி பொறுப்பில் அமர்த்துவதும் யார்? இப்படிப்பட்ட ஏற்பாடுகளை செய்தது அல்லாஹ்வா அல்லது உங்கள் கற்பனையில் உருவான தெய்வங்களா?” என்று அவர்களிடம் கேளுங்கள். ஆக அல்லாஹ்வின் அறிவுரைகளை பெறுபவர்கள் மிகச் சிலரே ஆவர்.
அதாவது உலக மக்கள் அனைவரின் பிரச்னைகளுக்கும் இந்த குர்ஆன் மூலமாக தீர்வு அளிக்கப்பட்டு விட்டது. (பார்க்க 17:82) இப்படியாகத் தான் மக்களின் அழைப்பிற்கு இந்த குர்ஆன் மூலம் அல்லாஹ் பதிலளிக்கிறான்.
மேலும் மனிதனுக்கு ஏற்படும் நோய் நொடிகளிலிருந்து நிவாரணம் பெற, பூமியில் மருத்துவ மூலிகைகளின் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அவற்றைக் கொண்டு தான் மனிதனின் உடல் ரீதியான நோய்கள் நீங்குகின்றன.
மேலும் கொடுங்கோல் ஆட்சியில் சிக்கித் தவிப்பவர்களுக்கு நிவாரணம் கிடைக்க வழிமுறைகள் இந்த குர்ஆனில் சொல்லப்பட்டுள்ளன. அனைவருடைய ஆற்றல்களும் வளர இந்த குர்ஆன் மூலம் வழிகாட்டுதல்கள் அளிக்கப்பட்டுள்ளன. அவற்றை ஒரு சமுதாயம் பின்பற்றும்போது, அவர்களுள் சிறப்பான ஆற்றல்கள் வளர்ந்து, அவர்களுடைய துயரங்கள் நீங்கும். மேலும் அவர்களுக்கு ஆட்சி அதிகாரமும் கிடைத்து எல்லா பிரச்னைகளுக்கும் தீர்வு கிடைத்து விடும். (பார்க்க 24:55). இத்தகைய எல்லா ஏற்பாடுகளையும் செய்த அல்லாஹ்வை விட்டுவிட்டு அவனுக்கு இணையாக வேறு வழிமுறைகளை பின்பற்றி வருவது சரியாகுமா?
أَمَّن يَهْدِيكُمْ فِى ظُلُمَٰتِ ٱلْبَرِّ وَٱلْبَحْرِ وَمَن يُرْسِلُ ٱلرِّيَٰحَ بُشْرًۢا بَيْنَ يَدَىْ رَحْمَتِهِۦٓ ۗ أَءِلَٰهٌۭ مَّعَ ٱللَّهِ ۚ تَعَٰلَى ٱللَّهُ عَمَّا يُشْرِكُونَ.
27:63. “மேலும் இரவு நேரங்களில் நிலப்பகுதியிலும் கடலிலும் பிரயாணம் செய்யும் போது, நட்சத்திரங்கள் மற்றும் சந்திரனின் ஒளியைக் கொண்டு உங்களுக்கு வழிகாட்டுவது யார்? (பார்க்க 16:16) உலகிலுள்ள எல்லா ஜீவராசிகளுக்கும் உயிர் நாடியாக இருக்கும் தண்ணீரின் ஏற்பாடு செய்தது யார்? அந்த தண்ணீர் மழைத் துளிகளாகப் பொழிகின்றன. அந்த மழை பொழிவதற்கு முன் காற்றில் அழுத்தம் ஏற்படுகிறது. இந்த ஏற்பாடுகளை எல்லாம் செய்தது யார்? இது அல்லாஹ்வின் மாபெரும் கருணையாகும் அல்லவா? இருந்தும் நீங்கள் அல்லாஹ்வுக்கு இணையாக வேறு வழிமுறைகளை பின்பற்றுகிறீர்களே! நீங்கள் அவனுக்கு இணையாக வணங்கி வரும் கற்பனை தெய்வங்களுக்கெல்லாம் அப்பாற்பட்டவன் தான் அல்லாஹ்!” என்று அவர்களிடம் எடுத்துரையுங்கள்.
أَمَّن يَبْدَؤُا۟ ٱلْخَلْقَ ثُمَّ يُعِيدُهُۥ وَمَن يَرْزُقُكُم مِّنَ ٱلسَّمَآءِ وَٱلْأَرْضِ ۗ أَءِلَٰهٌۭ مَّعَ ٱللَّهِ ۚ قُلْ هَاتُوا۟ بُرْهَٰنَكُمْ إِن كُنتُمْ صَٰدِقِينَ.
27:64. “மேலும் உலகிலுள்ள படைப்புகளை தோற்றுவித்தது யார்? அவற்றைப் படைத்ததோடு அவை அனைத்தையும் படிப்படியாக வளரச்செய்து, இறுதி இலக்கு வரை சென்றடையச் செய்வது யார்? இதற்காக உங்களுக்கு எல்லா வகையான வாழ்வாதாரங்களையும் வானத்திலிருந்தும் பூமியிலிருந்தும் ஏற்பாடுகளை செய்தது யார்? இந்த உண்மையை அறிந்தும் அல்லாஹ்வுக்கு இணையாக பெரியார்களையும் மகான்களையும் வணங்கி வருகிறீர்களே! அவர்கள் தாம் இந்த ஏற்பாடுகளை செய்ததாக நீங்கள் கூறினால், அதற்கு தகுந்த ஆதாரத்தைக் கொண்டு வாருங்கள்” என்று அவர்களிடம் கூறுங்கள்.
قُل لَّا يَعْلَمُ مَن فِى ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضِ ٱلْغَيْبَ إِلَّا ٱللَّهُ ۚ وَمَا يَشْعُرُونَ أَيَّانَ يُبْعَثُونَ.
27:65. மேலும் அகிலங்களிலும் பூமியிலும் உள்ளவற்றில் மனித அறிவுக்கு எட்டாத விஷயங்களை எல்லாம் அறிபவன் தான் அல்லாஹ். அவனைத் தவிர வேறு யாருக்கும் அவற்றில் மறைந்திருக்கும் உண்மைகள் தெரியாது. நீங்கள் உதவிக்கு அழைக்கின்ற மறைந்து போன மகான்களுக்கும் தெரியாது. அத்தனை ஏன்? அவர்கள் எப்போது எழுப்பப்படுவார்கள் என்ற விஷயமே அவர்களுக்கு தெரியாது. அத்தகையவர்களைத் தான் நீங்கள் உதவிக்கு அழைத்துக் கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் சிந்திக்கவே மாட்டீர்களா?
بَلِ ٱدَّٰرَكَ عِلْمُهُمْ فِى ٱلْءَاخِرَةِ ۚ بَلْ هُمْ فِى شَكٍّۢ مِّنْهَا ۖ بَلْ هُم مِّنْهَا عَمُونَ.
27:66. மேலும் மரணத்திற்குப் பின் தொடர்கின்ற வாழ்க்கையைப் பற்றி, மனிதனால் கணித்துக் கூறமுடியாது. எனவே அதைப் பற்றி இறைவழிகாட்டுதல்கள் மூலமாக அறிவிக்கப்படுகிறது. இருந்தும் அவர்கள் அதில் சந்தேகத்திலேயே இருக்கின்றனர். இன்னும் சொல்லப் போனால் அவர்கள் கண்மூடித்தனமாக தம் விருப்பம் போல் செயல்படுகிறார்கள் என்றே சொல்ல முடியும்.
وَقَالَ ٱلَّذِينَ كَفَرُوٓا۟ أَءِذَا كُنَّا تُرَٰبًۭا وَءَابَآؤُنَآ أَئِنَّا لَمُخْرَجُونَ.
27:67. எனவே அவர்கள், “நாங்களும் எங்கள் மூதாதையர்களும் மரித்து மண்ணாகிப் போன பின்னரும் மீண்டும் எழுப்பப்படுவோமா?” என்று கேட்கின்றனர்.
لَقَدْ وُعِدْنَا هَٰذَا نَحْنُ وَءَابَآؤُنَا مِن قَبْلُ إِنْ هَٰذَآ إِلَّآ أَسَٰطِيرُ ٱلْأَوَّلِينَ.
27:68. “இதற்கு முன்பும் எங்களுக்கும் எங்களுடைய மூதாதையர்களுக்கும் இப்படிப்பட்ட அச்சுறுத்தல்கள் செய்யபட்டே இருக்கின்றன. இவை யாவும் முன்னோர்களின் கட்டுக் கதைகளே அன்றி வேறில்லை” என்று அவர்கள் கூறுகின்றனர்.
قُلْ سِيرُوا۟ فِى ٱلْأَرْضِ فَٱنظُرُوا۟ كَيْفَ كَانَ عَٰقِبَةُ ٱلْمُجْرِمِينَ.
27:69. “இவை யாவும் வெறும் அச்சுறுத்தல்கள் அல்ல. தவறான வழியில் செயல்பட்ட முன்சென்ற சமுதாயங்களின் கதி என்னவாயிற்று என்பதை அறிந்துகொள்ள நீங்களே உலகைச் சுற்றி பயணம் செய்துப் பாருங்கள். உண்மை விளங்கி விடும்” என்று அவர்களிடம் கூறுவீராக.
அதாவது இறைவன் நிர்ணயித்துள்ள “மனித செயல்களுக்கேற்ற இறுதி விளைவுகள்” என்ற விதிமுறைகளின் படி எத்தனையோ சமுதாயங்கள் இவ்வுலகில் அழிந்து போயின. அவர்கள் அழிந்து போனதன் அடையாளங்கள் இன்னமும் பூமியில் புதைந்து கிடக்கின்றன. அவற்றைப் பார்த்து இப்படி அழிவுகள் ஏற்பட்டது உண்மை தான் என்று நீங்கள் ஒப்புக் கொண்டால், உங்கள் மரணத்திற்குப் பின்பும் தம் தவறான செயல்களின் விளைவுகளாக வேதனைகளை சந்திப்பது நிச்சயம் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்.
وَلَا تَحْزَنْ عَلَيْهِمْ وَلَا تَكُن فِى ضَيْقٍۢ مِّمَّا يَمْكُرُونَ.
27:70. இறைவழிகாட்டுதலை எடுத்துரைப்பவரே! உமக்கு எதிராக பேசி வருவோரைப் பற்றி கவலைப்படாதீர். மேலும் அவர்கள் செய்து வரும் சூழ்ச்சிகளைப் பற்றியும் எண்ணி சங்கடப்பட வேண்டாம்.
وَيَقُولُونَ مَتَىٰ هَٰذَا ٱلْوَعْدُ إِن كُنتُمْ صَٰدِقِينَ.
27:71. அவர்களுக்கு நேரவிருக்கும் அழிவைப் பற்றி அடிக்கடி எடுத்துக் கூறி அவர்களை எச்சரித்து வருகின்றாய். அந்த அழிவு எப்போது வரும் என்று அவர்கள் உம்மிடம் கேட்கிறார்கள்.
قُلْ عَسَىٰٓ أَن يَكُونَ رَدِفَ لَكُم بَعْضُ ٱلَّذِى تَسْتَعْجِلُونَ.
27:72. “நீங்கள் ஆவலோடு எதிர்ப் பார்க்கின்ற அந்த அழிவுகளில் சில, இப்போதிலிருந்தே கொஞ்சம் கொஞ்சமாக உங்களை நெருங்கி வரக் கூடும்” என்று அவர்களிடம் கூறிவிடுங்கள்.
மனித செயல்களின் விளைவுகள் உணரா வண்ணம் ஏற்பட்டுக்கொண்டே வரும். அவை உணரும் வகையில் தோற்றத்திற்கு வருவதற்கு காலஅளவு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்படி அவை வெளிவரும். மனிதன் செய்யும் தீய செயல்களுக்கு உடனே தண்டிப்பதாக இருந்தால், இப்பூமியில் யாரும் உயிர் வாழ முடியாது. (பார்க்க 16:61) எனவே அவன் திருந்துவதற்கு தக்க வாய்ப்பு அளிக்கப்படுகிறது.
وَإِنَّ رَبَّكَ لَذُو فَضْلٍ عَلَى ٱلنَّاسِ وَلَٰكِنَّ أَكْثَرَهُمْ لَا يَشْكُرُونَ.
27:73. எனவே இந்த விஷயத்தில் இறைவன் மிகவும் கருணை மிக்கவனாக இருக்கிறான். ஆனால் உண்மை அறியாத மக்கள் இந்த இடைவெளி காலத்தை தவறாக பயன்படுத்திக் கொள்கிறார்கள். இப்படியாக அவர்கள் அல்லாஹ்வின் இச்சலுகையை சரியாகப் பயன்படுத்திக் கொள்வதில்லை.
وَإِنَّ رَبَّكَ لَيَعْلَمُ مَا تُكِنُّ صُدُورُهُمْ وَمَا يُعْلِنُونَ.
27:74. அவர்களுடைய உள்ளங்களில் ஊடுருவிச் செல்லும் விஷயங்களும், வெளிப்படையாக செயல்படுவதும் அல்லாஹ்வுக்குத் தெரியாமல் போவதில்லை. எனவே தீய செயல்களின் விளைவுகள் ஏற்படாமல் போகாது.
وَمَا مِنْ غَآئِبَةٍۢ فِى ٱلسَّمَآءِ وَٱلْأَرْضِ إِلَّا فِى كِتَٰبٍۢ مُّبِينٍ.
27:75. காரணம் வானத்திலும் பூமியிலும் நடக்கின்ற ஒவ்வொரு நிகழ்வுகளும் அல்லாஹ்வை விட்டு மறைந்திருக்காது. எந்த செயலுக்கு என்ன என்ன விளைவுகள் என்ற நிலை மாறா நிரந்தர சட்டங்களை உருவாக்கியது அவன்தான். அவற்றை யாராலும் ஒருபோதும் மாற்றி அமைக்கவே முடியாது.
إِنَّ هَٰذَا ٱلْقُرْءَانَ يَقُصُّ عَلَىٰ بَنِىٓ إِسْرَٰٓءِيلَ أَكْثَرَ ٱلَّذِى هُمْ فِيهِ يَخْتَلِفُونَ.
27:76. இதே அடிப்படையில் தான் இந்த குர்ஆனும் உண்மைகளை எடுத்துரைக்கிறது. ஆனால் இஸ்ரவேலர்கள் இது விஷயமாக கருத்து வேறுபாடு கொண்டுள்ளனர். இந்தக் குர்ஆன் அவர்களின் கருத்து வேறுபாடுகளை நீக்குவதற்காகவே வந்துள்ளது.
وَإِنَّهُۥ لَهُدًۭى وَرَحْمَةٌۭ لِّلْمُؤْمِنِينَ.
27:77. மேலும் இறைவழிகாட்டுதலை மனதார ஏற்று அதன்படி செயல்படும் மூஃமின்களுக்கு, இந்த குர்ஆன் நேர்வழியாகவும், அவர்களுடைய வாழ்வு சிறக்க எல்லா வழிமுறைகளை எடுத்துரைப்பதாகவும் உள்ளது.
إِنَّ رَبَّكَ يَقْضِى بَيْنَهُم بِحُكْمِهِۦ ۚ وَهُوَ ٱلْعَزِيزُ ٱلْعَلِيمُ.
27:78. ஆனால் இறைவழிகாட்டுதலை ஏற்க மறுப்பவர்களோ தம் விருப்பம் போல சுயநலத்துடன் செயல்படவே விரும்புகிறார்கள். எனவே அவர்களின் செயல்களுக்கு ஏற்றவாறு தான் பின்விளைவுகள் ஏற்படும். இவையாவும் அல்லாஹ் நிலை நிறுத்தியுள்ள தெளிவான ஞானத்தின் அடிப்படையில் ஏற்படுபவை ஆகும். இப்படியாக அல்லாஹ்வின் செயல்திட்டமே என்றென்றைக்கும் மிகைத்து நிற்கக் கூடியதாக உள்ளது.
فَتَوَكَّلْ عَلَى ٱللَّهِ ۖ إِنَّكَ عَلَى ٱلْحَقِّ ٱلْمُبِينِ.
27:79. எனவே நீங்கள், என்றென்றைக்கும் நிலைத்து நிற்கக்கூடிய அல்லாஹ்வின் வழிகாட்டுதலின் மீதே முழுமையான நம்பிக்கை கொண்டு செயல்படுங்கள். அதனடிப்படையில் செயல்படுவதால் மட்டுமே தம் இலட்சியத்தில் வெற்றி பெற முடியும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
إِنَّكَ لَا تُسْمِعُ ٱلْمَوْتَىٰ وَلَا تُسْمِعُ ٱلصُّمَّ ٱلدُّعَآءَ إِذَا وَلَّوْا۟ مُدْبِرِينَ.
27:80. எந்த ஆற்றலும் இல்லாமல் நடைபிணமாக வாழ்பவர்களை, இறை வழிகாட்டுதலை ஒருபோதும் செவியேற்குமாறு செய்ய முடியாது. காரணம் காதிருந்தும் செவிடர்கள் போல் உள்ளவர்கள் புறங்காட்டி ஓடிவிடுவார்கள். உன் அறிவுரைகள் இத்தகையவர்களின் மனதில் பதியாது.
அதே போன்று இறந்து போனவர்களையும் யாரும் செவியேற்க வைக்க முடியாது. எனவே அவர்களுடைய கல்லறைகளுக்குச் சென்று தம் குறைகளைச் சொல்லிக் கொண்டிருப்பதும் வீண்.
وَمَآ أَنتَ بِهَٰدِى ٱلْعُمْىِ عَن ضَلَٰلَتِهِمْ ۖ إِن تُسْمِعُ إِلَّا مَن يُؤْمِنُ بِـَٔايَٰتِنَا فَهُم مُّسْلِمُونَ.
27:81. அதே போன்று எதைப் பற்றியும் சிந்திக்காமல் குருட்டுத்தனமாக வாழும் வழிக்கேடர்களையும் நேர்வழியில் கொண்டுவர முடியாது. எவர்கள் அல்லாஹ்வின் வழிகாட்டுதலை நம்பி மனதார ஏற்றுக் கொள்கிறார்களோ, அவர்களை மட்டும் தான் நீ செவியேற்குமாறு செய்ய முடியும். இத்தகையவர்களே அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு நடக்கும் முஸ்லிம்கள் ஆவர்.
ஆக தவறான வழியில் செல்லும் சமுதாயங்களில் துன்பம் துயரங்கள் என பல கோணங்களில் ஏற்பட்டு வரும். சில சமயங்களில் சமுதாயத்தில் உள்ள உயர்மட்ட மக்களுள் சீர்கேடுகள் ஏற்பட்டு அழிவு ஏற்படும். ஒரு சில சமுதாயத்தின் அடிமட்ட மக்களில் பிரச்னைகள் ஏற்பட்டு சட்ட ஓழுங்கு சீர்கெடும். சில சமயங்களில் இதுவே பிரிவினை உண்டாவதற்குக் காரணிகளாக அமைந்து விடும். இதனால் சமுதாயம் பல பிரிவுகளாகப் பிரிந்து கலகம், கலவரம், மோதல்கள் என்று பல கொடுமைகள் நிகழ்ந்து வரும். (பார்க்க 6:65)
۞ وَإِذَا وَقَعَ ٱلْقَوْلُ عَلَيْهِمْ أَخْرَجْنَا لَهُمْ دَآبَّةًۭ مِّنَ ٱلْأَرْضِ تُكَلِّمُهُمْ أَنَّ ٱلنَّاسَ كَانُوا۟ بِـَٔايَٰتِنَا لَا يُوقِنُونَ.
27:82. அவ்வாறு அநியாய அக்கிரமங்கள் தலை விரித்தாடும் போது, அவற்றை முறியடிக்க ஒரு வீரனோ அல்லது ஒரு ஜமாஅத் கூட்டமைப்போ உருவெடுக்கும். அது பாதிக்கப்பட்டவர்களை ஆதரித்து அந்நாட்டு கொடுங்கோல் ஆட்சிக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும். இறைவனின் வழிகாட்டுதலுக்கு எதிராக செயல்படுவதால் ஏற்பட்டுள்ள மோசமான நிலைமையைப் பற்றி மக்களிடம் அந்த ஜமாஅத் எடுத்துரைக்கும்.
இந்த வாசகத்தில் தாப்பதன் என்ற வார்த்தை வருகிறது. அதற்கு அர்த்தம் உயிர் பிராணி என்பதாகும். உயிர் பிராணிகளில் மனிதனும் அடங்குவான். (பார்க்க 6:38, 11:56, 22:18) எங்கேயாவது அநியாயம் நடந்தால் “உங்களைத் தட்டிக் கேட்க ஒரு உசிரு வராமல் போகுமா?” என்று நாமும் பேச்சு வாக்கில் கூறுகிறோம். எனவே தான் இந்த வாசகத்தில் வரும் தாப்பதன் என்ற வார்த்தைக்கு மாவீரன் அல்லது ஜமாஅத் அமைப்பு என்று பொருள் தந்துள்ளோம்.
மேலும் சில நேரங்களில் அத்தகைய பலவீனமான நாடுகள் அன்னியர்களின் தாக்குதலுக்கும் ஆளாகும். அதை எதிர்க்கொள்ளும் வலிமையை இழந்து, அந்நாடு தோல்வியை சந்திக்கும். அதைத் தொடர்ந்து அச்சமுதாயம் அடிமைப்பட்டு வாழ நேரிடும். இதுதான் காலம் காலமாக நடைபெற்று வந்த உண்மையாகும்.
وَيَوْمَ نَحْشُرُ مِن كُلِّ أُمَّةٍۢ فَوْجًۭا مِّمَّن يُكَذِّبُ بِـَٔايَٰتِنَا فَهُمْ يُوزَعُونَ.
27:83. இறைவனின் நிலைமாறா இதே சட்டத்தின்படியே இறைவழிகாட்டுதலை பொய்ப்பிக்கும் ஒவ்வொரு சமூதாயத்தையும் சீர்த்திருத்த, பாதுகாப்புப் படைகள் உருவெடுத்து வரும். சில சமயங்களில் இதுவே பந்நாட்டுப் படையாக உருவெடுத்து, உலக யுத்தங்கள் என்ற ரூபத்திலும் உருவெடுக்கும். ஒரு பிரிவு மற்ற பிரிவின் அநியாயத்தை ஒடுக்க போராடும்.
حَتَّىٰٓ إِذَا جَآءُو قَالَ أَكَذَّبْتُم بِـَٔايَٰتِى وَلَمْ تُحِيطُوا۟ بِهَا عِلْمًا أَمَّاذَا كُنتُمْ تَعْمَلُونَ.
27:84. அந்தச் சீர்த்திருத்தப் பாதுகாப்புப் படையினர் இவ்வாறு கூறுவதாக இருக்கும். “இறைவழிகாட்டுதலின் உண்மை நிலையை முழுவதுமாக அறிந்து கொள்ளாது, அவற்றைக் கண்மூடித்தனமாகப் பொய்ப்பித்து வந்தீர்களே! அதன் விளைவு என்னவாயிற்று என்பதை இப்போதாவது அறிந்து கொண்டீர்களா? நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என்பதாவது உங்களுக்கு இப்போது விளங்கியதா?”
இன்றைக்கும் நாம் திருக்குர்ஆனின் ஒரே ஒரு வாசகத்தை எடுத்துக் கொண்டு சுயமாக முடிவுக்கு வந்துவிடுகிறோம். இது தவறாகும். ஒவ்வொரு விஷயத்தைப் பற்றியும் திருக்குர்ஆனின் நிலைப்பாடு என்னவென்பதை அதிலுள்ள எல்லா வாசகங்களையும் முன்வைத்து முடிவுக்கு வரவேண்டும். எடுத்துக்காட்டாக தலாஃக் விஷயத்தையே எடுத்துக் கொள்வோம். இது சம்பந்தமான அனைத்து வாசகங்களையும் கவனிக்காமல், தமக்கு சாதமான சில வாசகங்களை மட்டும் வைத்துக் கொண்டு நடைமுறையில் உள்ளதைப் பின்பற்றுகிறோம். இவ்வாறு செய்வது அல்லாஹ்வுக்கும் அவனது வேதமான திருக்குர்ஆனுக்கும் முரணானதாகும். எனவே ஒவ்வொரு விஷயத்தைப் பற்றியும் அது சம்பந்தப்பட்ட ஒட்டுமொத்த வாசகங்களையும் முழுமையாக ஆராய்ந்து அதன் பின்னரே செயல்படுத்த வேண்டும்.
وَوَقَعَ ٱلْقَوْلُ عَلَيْهِم بِمَا ظَلَمُوا۟ فَهُمْ لَا يَنطِقُونَ.
27:85. அப்படி இழிவு ஏற்படும் கால கட்டங்களில் இத்தகைய கேள்விகளுக்கு, அவர்களால் பதில் எதுவும் பேச முடியாது. காரணம் அவர்கள் செய்து வந்த அநியாய அக்கிரமங்களின் விளைவுகளாக வேதனைகள் அவர்கள் முன் தோற்றத்திற்கு வந்தவையாகும். இதுவே இறைவனின் நிலைமாறாச் சட்டமாகும்.
இறைவன் படைத்துள்ள உலகப் படைப்புகள் யாவும் அவர்கள் கண்ணெதிரே இருந்தும், அவர்கள் அவற்றை ஆராய்ந்து பார்ப்பதே இல்லை. எல்லாமே முறைப்படி நிர்ணயிக்கப்பட்ட கால அளவுபடி நடைப்பெற்று வருவதை அவர்கள் கவனிப்பதே இல்லை!
أَلَمْ يَرَوْا۟ أَنَّا جَعَلْنَا ٱلَّيْلَ لِيَسْكُنُوا۟ فِيهِ وَٱلنَّهَارَ مُبْصِرًا ۚ إِنَّ فِى ذَٰلِكَ لَءَايَٰتٍۢ لِّقَوْمٍۢ يُؤْمِنُونَ.
27:86. அதே போல இரவு பகல் என மாறிமாறி வருதையும் அவர்கள் கவனித்துப் பார்ப்பதே இல்லை. ஒய்வு பெறுவதற்காக இரவையும், உழைத்து வாழ்வாதாரங்களைத் தேடிக் கொள்வதற்காக பகலையும் படைத்துள்ளோம். (பார்க்க 78:10-11) நம் வழிகாட்டுதலை ஏற்று நடப்பவர்களுக்கு இதில் நிச்சயமயாக அத்ததாட்சிகள் உள்ளன.
அதவாது உழைத்து வாழும் சமுதாயங்களின் வாழ்க்கைத் தரம் மிகவும் பிரகாசமாகவும், உழைக்காமல் வாழும் சமுதயாங்களின் வாழ்வில் இருள் சூழ்ந்த நிலையும் ஏற்பட்டு வரும். இவை யாவும் திடீர் திருப்பங்கள் என்ற அடிப்படையில் ஏற்படுகின்ற ஒன்றல்ல. அதுவும் நிர்ணயிக்கப்பட்ட கால அளவுபடி ஏற்பட்டு வரும். அந்த கால அளவு ஐம்பது முதல் நூறு வருடங்கள் வரையும் ஆகலாம். எனவே உழைக்காத சமுதாயங்கள் சில காலம்தான் இன்புற்று வாழ முடியும். ஆனால் இறுதியில் அதற்கு இருள் சூழ்ந்த நிலைதான் ஏற்படும். இதையே ஜீவனுள்ள ஹயாத்தான சமுதாயம் என்றும் மரணமடைந்த மவுத்தான சமுதாயம் என்றும் சொல்லப்படும். இப்படியாக உழைக்காமல் பிறர் உழைப்பில் சொகுசாக வாழ்பவர்களுக்கு எதிராகத் தான் கலகம் கலவரம் மோதல் என்று இவ்வுலகில் ஏற்பட்டு வரும்.
وَيَوْمَ يُنفَخُ فِى ٱلصُّورِ فَفَزِعَ مَن فِى ٱلسَّمَٰوَٰتِ وَمَن فِى ٱلْأَرْضِ إِلَّا مَن شَآءَ ٱللَّهُ ۚ وَكُلٌّ أَتَوْهُ دَٰخِرِينَ.وَيَوْمَ يُنفَخُ فِى ٱلصُّورِ فَفَزِعَ مَن فِى ٱلسَّمَٰوَٰتِ وَمَن فِى ٱلْأَرْضِ إِلَّا مَن شَآءَ ٱللَّهُ ۚ وَكُلٌّ أَتَوْهُ دَٰخِرِينَ.
27:87. இறைவன் நிர்ணயித்த அதே சட்டங்களின்படி போரின் சங்கொலி எழுப்பப்படும் போது, உயர்மட்ட நிலையில் வாழ்பவர்களுக்கும் அடிமட்ட நிலையில் வாழ்பவர்களுக்கும் திகில் ஏற்பட்டு விடும். ஆனால் இறைவனின் அறிவுரைகளின் படி வாழ்பவர்களுக்கு எவ்வித பயமும் ஏற்படாது. காரணம் இது போன்ற நிலைமையை சமாளிக்கும் திறன் கொண்டவர்களாக இருப்பார்கள். இப்படியாக சமுதாய மக்கள் அனைவரும் அல்லாஹ் நிர்ணயித்த வழிமுறைகளுக்கே வந்தடைவார்கள். (பார்க்க 6:74, 18:99, 20:10, 39:68)
அதாவது பிறர் உழைப்பில் சுகம் காணுவதை விட்டுவிட்டு, அனைத்து தரப்பு மக்களும் உழைத்து அனைவருக்கும் சரிசமமாக கிடைக்கச் செய்யும் இறைவனின் ஆட்சியமைப்பை ஆதரிப்பார்கள். அத்தகைய இறைஆட்சி ஏற்படும் கால கட்டத்தில்
وَتَرَى ٱلْجِبَالَ تَحْسَبُهَا جَامِدَةًۭ وَهِىَ تَمُرُّ مَرَّ ٱلسَّحَابِ ۚ صُنْعَ ٱللَّهِ ٱلَّذِىٓ أَتْقَنَ كُلَّ شَىْءٍ ۚ إِنَّهُۥ خَبِيرٌۢ بِمَا تَفْعَلُونَ.
27:88. மலைகளைப் போல் செல்வங்களையும், அதிகாரங்களையும் குவித்து வைத்திருப்பவர்களைப் பார்த்து, அனைவரும் மிகவும் பலம் வாய்ந்தவர்கள், எனவே அவர்களை ஒருபோதும் அசைக்க முடியாது என்று எண்ணுகின்றீர். ஆனால் வெளித் தோற்றத்தில் தான் அவர்கள் அவ்வாறு காணப்படுகிறார்கள். மேகங்கள் பறந்தோடுவது போல் அவர்கள் காணாமல் போய் விடுவார்கள். இது வெறும் வாய்ச் சொல் அல்ல. ஒவ்வொரு பொருளையும் படைத்து அதற்குரிய செயல் திறன்களை நிர்ணயித்த அல்லாஹ்வின் சொல்லாகும். அதே போன்று நீங்கள் செய்து வரும் ஒவ்வொரு செயலும் அல்லாஹ்வுக்கு தெரியாமல் போகாது. அதன் விளைவுகள் நிச்சயமாக ஏற்பட்டே தீரும்.
مَن جَآءَ بِٱلْحَسَنَةِ فَلَهُۥ خَيْرٌۭ مِّنْهَا وَهُم مِّن فَزَعٍۢ يَوْمَئِذٍ ءَامِنُونَ.
27:89. ஏனெனில் அல்லாஹ் நிர்ணயித்த நிலைமாறா நிரந்தர சட்டம் எல்லோருக்கும் சமமானதே. அழகிய நற்செயல்களை செய்து சமுதாய சமச் சீர்நிலை நிலைக்க பாடுபடுவோர் அதன் பலன்களை அனுபவிப்பார்கள். மேலும் அத்தகைய சமுதாயங்களில் இப்படிப்பட்ட திகில் தரக்கூடிய நிகழ்வுகள் ஒருபோதும் ஏற்படாது. (பார்க்க 21:103, 27:87)
وَمَن جَآءَ بِٱلسَّيِّئَةِ فَكُبَّتْ وُجُوهُهُمْ فِى ٱلنَّارِ هَلْ تُجْزَوْنَ إِلَّا مَا كُنتُمْ تَعْمَلُونَ.
27:90. இதற்கு மாறாக சமூக சமன்பாட்டை சீர்குலைக்கும் வகையில் செயல்படும் சமுதாயத்தோர் அதன் விளைவுகளை சந்தித்தே ஆகவேண்டும். அத்தகைய சமுதாயம் தலைக் குப்புறமாக வேதனைகளில் சிக்கிக்கொள்ளும். அப்போது நீங்கள் செய்து வந்த செயல்களுக்கு ஏற்ப கூலிக் கிடைத்து விட்டதா என்ற கேள்வி தான் மிஞ்சும்.
إِنَّمَآ أُمِرْتُ أَنْ أَعْبُدَ رَبَّ هَٰذِهِ ٱلْبَلْدَةِ ٱلَّذِى حَرَّمَهَا وَلَهُۥ كُلُّ شَىْءٍۢ ۖ وَأُمِرْتُ أَنْ أَكُونَ مِنَ ٱلْمُسْلِمِينَ.
27:91. "இந்த மாநகரமும் அதன் சுற்றுப் புறமும் உலக மக்களின் நலனை பேணிக் காக்க கண்ணியப் படுத்தப்பட்டுள்ளது. மேலும் ஏக இறைவனான அல்லாஹ்வின் கட்டளைக்கு மட்டும் அடிபணிந்து செயல்படும்படி நான் ஏவப்பட்டுள்ளேன். ஏனெனில் இந்த இடம் உலக் மக்களின் அமைதியை கட்டிக் காக்க ஏற்படுத்தப்பட்ட சங்கை மிக்க இடமாகும். (பார்க்க 5:95) உண்மை என்னவென்றால் உலக படைப்புகள் யாவும் அல்லாஹ்வின் செயல்திட்டங்களை நிறைவேற்றவே படைக்கப்பட்டுள்ளன. எனவே நானும் இறைக்கட்டளைக்கு முற்றிலும் கட்டுப்பட்டு செயல்படும்படி கட்டளை இடப்பட்டுள்ளேன்".
وَأَنْ أَتْلُوَا۟ ٱلْقُرْءَانَ ۖ فَمَنِ ٱهْتَدَىٰ فَإِنَّمَا يَهْتَدِى لِنَفْسِهِۦ ۖ وَمَن ضَلَّ فَقُلْ إِنَّمَآ أَنَا۠ مِنَ ٱلْمُنذِرِينَ.
27:92. அதாவது இந்த குர்ஆனில் உள்ள அறிவுரைகளை மக்களிடம் எடுத்துரைக்கவே நான் வந்துள்ளேன். ஆகவே எவர் அதன் அறிவுரைகளை ஏற்று நேர்வழியை அடைகிறாரோ, அது அவருக்கே நன்மையாகும். அன்றியும் எவர் வழிதவறி செல்கிறாரோ, அதன் கேடுகள் அவருக்கே ஆகும். எந்தெந்த தீய செயலுக்கு என்ன பின்விளைவுகள் ஏற்படும் என்பதை உங்களுக்கு எடுத்துரைத்து முன்னெச்சரிக்கை செய்வதே என் பணியாகும்.
وَقُلِ ٱلْحَمْدُ لِلَّهِ سَيُرِيكُمْ ءَايَٰتِهِۦ فَتَعْرِفُونَهَا ۚ وَمَا رَبُّكَ بِغَٰفِلٍ عَمَّا تَعْمَلُونَ.
27:93. நீங்கள் இதை எதிர்த்தாலும் சரியே, இறைவழிகாட்டுதலின்படி இறை ஆட்சியமைப்பு ஏற்படுவது உறுதியே. அந்த இறை ஆட்சியின் செயல்திட்டங்கள் யாவும் போற்றுதலுக்கு உரியவையே என்பது விரைவில் நிரூபணம் ஆகியே தீரும். அப்போது உண்மை உங்களுக்கே விளங்கும். மேலும் நீங்கள் செய்வதனைத்தும் அல்லாஹ்வுக்குத் தெரியாமல் இல்லை என்பதை அறிந்து கொள்ளுங்கள்.