بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ

26:0.அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் அறிவுரைப்படியே அனைத்துக் காரியங்களையும் செய்ய நாடுகிறேன். (பார்க்க 6:162)
இந்த அத்தியாயத்தின் தலைப்பு "கவிஞர்கள்" என்று இருந்தாலும், இதன் இறுதி வாசகங்களில் கவிஞர்களையும் அவர்கள் எழுதும் கற்பனைக் கவிதைகளையும் கடுமையாக சாடுகிறது.


طسٓمٓ.

26:1. அனைத்தையும் கேட்கின்ற வல்லமையும், அறிந்து கொள்ளும் வல்லமையும் உடைய இறைவன் புறத்திலிருந்து இறக்கி அருளப்படுகின்ற தூய்மையான வழிகாட்டுதல் இது.


تِلْكَ ءَايَٰتُ ٱلْكِتَٰبِ ٱلْمُبِينِ.

26:2. தெள்ளத் தெளிவான முறையில் வாழ்க்கை நெறிமுறைகளை உலக மக்களுக்கு விவரமாக எடுத்துரைக்கும் வேதமிது.


لَعَلَّكَ بَٰخِعٌۭ نَّفْسَكَ أَلَّا يَكُونُوا۟ مُؤْمِنِينَ.

26:3. இந்தப் பேருண்மையை ஏற்காத மக்களைப் பற்றி எண்ணி வருத்தப்பட்டு, நீங்கள் உங்களையே மாய்த்துக் கொள்வதாகத் தெரிகிறது. (மேலும் பார்க்க 18:6)
இத்தகைய மனக் கவலை உங்களிடம் இருக்கத் தான் செய்யும். ஆனால் மனிதனைப் பொறுத்த வரையில் இறை வழிகாட்டுதலை ஏற்றுக் கொள்ளும் விஷயத்தில், அவனுடைய விருப்பத்திற்கு விடப்பட்ட ஒன்றாகும் (பார்க்க 18:29) எனவே அவனுக்கு இவற்றை ஏற்றுக்கொண்டு தான் ஆக வேண்டும் என்ற கட்டாயம் இருப்பதில்லை. (10:99) மற்ற ஜீவராசிகளைப் போல் இவனையும் ஒரே திசையில் வாழவைக்கும் இறைவனின் செயல்திட்டம் இருந்திருந்தால், அவ்வாறு செய்திருக்க முடியும். இறைவனுக்கு அது சிரமமான காரியமல்ல. அப்போது


إِن نَّشَأْ نُنَزِّلْ عَلَيْهِم مِّنَ ٱلسَّمَآءِ ءَايَةًۭ فَظَلَّتْ أَعْنَٰقُهُمْ لَهَا خَٰضِعِينَ.

26:4. அவர்களுடைய கழுத்துக்கள் பணிந்து குனிந்து வரும்படி செய்யக் கூடிய அத்தாட்சிகளை வானத்திலிருந்து அவர்கள் மீது இறக்கிக் காட்டியிருக்க முடியும்.
அதே போன்று அவர்களின் விருப்பப்படி அற்புதங்களை நிகழ்த்திக் காட்டி ஈமான் கொள்ள வைப்பது அல்லாஹ்வுக்கு கடினமான காரியமல்லை. ஆனால் அது உண்மையான, நிலையான மார்க்கமாக இருக்காது. எனவே மனிதன் இறை வழிகாட்டுதலை ஆராய்ந்து அறிந்து, சிந்தித்து தம் சுயவிருப்பத்துடன் ஏற்றுக்கொள்வதே ஈமான் கொள்வதற்கு உண்மையான அர்த்தமாகும்.


وَمَا يَأْتِيهِم مِّن ذِكْرٍۢ مِّنَ ٱلرَّحْمَٰنِ مُحْدَثٍ إِلَّا كَانُوا۟ عَنْهُ مُعْرِضِينَ.

26:5. இப்படி இறைவழிகாட்டுதலை ஏற்க மறுப்பது காலம் காலமாக நடந்து வந்த விஷயமே ஆகும். அருட்கொடையாளன் இறைவனிடமிருந்து வழிகாட்டுதல்கள் எடுத்துரைத்த போதெல்லாம் அவற்றை மக்களில் பெரும்பாலோர் புறக்கணிக்காமல் இருந்ததில்லை.


فَقَدْ كَذَّبُوا۟ فَسَيَأْتِيهِمْ أَنۢبَٰٓؤُا۟ مَا كَانُوا۟ بِهِۦ يَسْتَهْزِءُونَ.

26:6. அதே போன்று இன்றைக்கும் இறைவழிகாட்டுதலை எடுத்துரைக்கும் போது, அவற்றை ஏற்க மறுப்பதோடு அவை செயல்படாதவாறு தடுத்தும் வருகின்றனர். மேலும் இவற்றிற்கு எதிராக கேலியும் செய்து வருகிறார்கள். அவர்களுடைய எதிர்ப்பு மற்றும் கேலிப் பேச்சின் விளைவுகள் விரைவில் அவர்கள் முன் வந்துவிடும்.


أَوَلَمْ يَرَوْا۟ إِلَى ٱلْأَرْضِ كَمْ أَنۢبَتْنَا فِيهَا مِن كُلِّ زَوْجٍۢ كَرِيمٍ.

26:7. அவர்கள் பூமியில் விளையும் பலதரப்பட்ட செடிகொடிகளை ஆராய்ச்சி செய்வதில்லையா? ஒவ்வொரு விதையிலிருந்தும் ஒரு வகை செடியும் மரமும் ஜோடி ஜோடியாக உருவாவதைக் கவனிப்பதில்லையா?
அதுபோலத் தான் மனிதனின் ஒவ்வொரு செயலுக்கும் நிர்ணயிக்கப்பட்ட விளைவுகள் நிச்சயமாக ஏற்பட்டே தீரும். அதுவும் நிர்ணயிக்கப்பட்ட கால அளவின்படி தோற்றத்திற்கு வந்தே தீரும். இதை யாரும் தடுக்க முடியாது.


إِنَّ فِى ذَٰلِكَ لَءَايَةًۭ ۖ وَمَا كَانَ أَكْثَرُهُم مُّؤْمِنِينَ.

26:8. சிந்தித்துணரும் மக்களுக்கு இதில் அத்தாட்சிகள் பல இருக்கின்றன. எனினும் மக்களுள் பெரும்பாலோர் இதைப் பற்றி சிந்தித்து ஏற்றுக் கொள்வதில்லை.


وَإِنَّ رَبَّكَ لَهُوَ ٱلْعَزِيزُ ٱلرَّحِيمُ.

26:9. ஆனால் மக்கள் இறை வழிகாட்டுதலை ஏற்று நடந்தாலும் நடக்காவிட்டாலும், அல்லாஹ்வுக்கு ஒரு பாதிப்பும் ஏற்படப் போவதில்லை. அவரவர் செயல்கள் என்னவோ அதன் படியே விளைவுகளை ஏற்படுத்தும் வல்லமை அல்லாஹ்வுக்கு உண்டு. மனிதனுடைய செயல்களுக்கு உடனே தண்டிக்காமல் அவர் திருந்தி வாழ வாய்ப்பு அளித்திருப்பது இறைவனின் அளவற்ற கிருபையை பிரதிப்பலிக்கிறது. (16:61)
இந்த பேருண்மையை அறிந்து கொள்ள வரலாற்று ஆதாரங்களை முன் வைத்தே விளங்கிக் கொள்ளலாம். மூஸா நபியின் சமூகத்தாரும் அந்நாட்டு அரசனாக இருந்த ஃபிர்அவ்னும் தவறான செயல்களில் ஈடுபட்டிருந்தார்கள் என்பதற்காக அவர்களை அல்லாஹ் அழித்து விடவில்லை. மாறாக அவர்களை நல்வழிப்படுத்த மூஸா நபியை அவர்களிடம் அனுப்பி வைத்தான்.


وَإِذْ نَادَىٰ رَبُّكَ مُوسَىٰٓ أَنِ ٱئْتِ ٱلْقَوْمَ ٱلظَّٰلِمِينَ.

26:10. அநியாய அக்கிரம செயல்களில் ஈடுபட்டிருக்கும் தன் சமூகத்தாரிடம் செல்லும்படி இறைவனிடமிருந்து மூஸா நபிக்கு கட்டளை வந்தது.


قَوْمَ فِرْعَوْنَ ۚ أَلَا يَتَّقُونَ.

26:11. ஃபிர்அவ்னின் சமூகத்தாரிடமும் சென்று, அவர்கள் செய்து வரும் தவறான செயல்களின் விளைவாக ஏற்படும் அழிவுகளைப் பற்றி எடுத்துரைத்து, அதிலிருந்து மீண்டுகொள்ள விரும்புகிறீர்களா இல்லையா என்று கேளுங்கள்.


قَالَ رَبِّ إِنِّىٓ أَخَافُ أَن يُكَذِّبُونِ.

26:12. அதற்கு மூஸா நபி, “என் இறைவா! அவர்கள் என் பேச்சைக் கேட்க மாட்டார்கள் என்றே தெரிகிறது. அவர்கள் உன் வழிகாட்டுதலைப் பொய்ப்பிக்கவே முற்படுவார்கள் என்று நான் பயப்படுகிறேன்” என்றார்.


وَيَضِيقُ صَدْرِى وَلَا يَنطَلِقُ لِسَانِى فَأَرْسِلْ إِلَىٰ هَٰرُونَ.

26:13. “எனவே தன்னந் தனியாக நின்று அவர்களிடம் வாதிடும் வல்லமை என்னிடம் இல்லை. எனக்கு அவ்வளவாக சரளமாகப் பேசவும் முடியவில்லை. எனவே எனக்கு என் சகோதரர் ஹாரூனின் துணையும் தேவை” என்றார்.


وَلَهُمْ عَلَىَّ ذَنۢبٌۭ فَأَخَافُ أَن يَقْتُلُونِ.

26:14. “அது மட்டுமின்றி என்மீது கொலைக் குற்றச்சாட்டும் ஒன்று உண்டு. அதை காரணமாகக் காட்டி என்னை அவர்கள் கொன்றுவிடவும் செய்யலாம் என்று நான் பயப்படுகிறேன்” என்றார். (விளக்கத்திற்குப் பார்க்க 28:15-21)


قَالَ كَلَّا ۖ فَٱذْهَبَا بِـَٔايَٰتِنَآ ۖ إِنَّا مَعَكُم مُّسْتَمِعُونَ.

26:15. “அவ்வாறல்ல. நீங்கள் இருவரும் ஆதாரப்பூர்வமான வழிகாட்டுதல்களுடன் சென்று அவற்றை அவர்களுக்கு விளக்குங்கள். நிச்சயமாக நாம் உனக்கு துணை புரிவோம். அனைத்து விஷயங்களையும் நாம் அறிவோம்” என்று இறைவனிடமிருந்து பதில் வந்தது.


فَأْتِيَا فِرْعَوْنَ فَقُولَآ إِنَّا رَسُولُ رَبِّ ٱلْعَٰلَمِينَ.

26:16. ஆகவே நீங்கள் இருவரும் ஃபிர்அவ்னிடம் சென்று, அகிலங்கள் அனைத்தையும் படைத்து பரிபாலிக்கின்ற இறைவனாகிய அல்லாஹ்வின் வழிகாட்டுதலை அவர்களுக்கு எடுத்துரைக்க வந்துள்ளதாக கூறுங்கள்.


أَنْ أَرْسِلْ مَعَنَا بَنِىٓ إِسْرَٰٓءِيلَ.

26:17. பனீஇஸ்ராயீல் சமூகத்தவர்களை விடுதலை செய்து எங்களுடன் அனுப்பி வைக்கும்படி இறைக்கட்டளை சொல்வதாக அவர்களிடம் சொல்லுங்கள்.
அதாவது அனைவரையும் சரிசமமாக வழிநடத்திச் செல்லும் வகையில் அரசு செயல்பட வேண்டும். தற்சமயம் பனீஇஸ்ராயீல் சமூகத்தவர்களை அடிமைப் போல் நடத்துகிறீர்கள். இந்த அணுகுமுறையை விட்டுவிட வேண்டும். இல்லையெனில் அவர்களை விடுதலை செய்து தம்முடன் அனுப்பிவிட வேண்டும் என அரசனிடம் கோரிக்கை வைத்தனர்.


قَالَ أَلَمْ نُرَبِّكَ فِينَا وَلِيدًۭا وَلَبِثْتَ فِينَا مِنْ عُمُرِكَ سِنِينَ.

26:18. அதற்கு ஃபிர்அவ்ன், “உன் குழந்தை பருவத்திலிருந்தே நாங்கள் உன்னை வளர்க்கவில்லையா? நீ பல ஆண்டுகள் வரையில் எங்களோடு தானே வாழ்ந்து வந்தாய்?” என்றான்.


وَفَعَلْتَ فَعْلَتَكَ ٱلَّتِى فَعَلْتَ وَأَنتَ مِنَ ٱلْكَٰفِرِينَ.

26:19.“மேலும் நீ ஒரு கொலையும் செய்து தப்பிவிட்டாய். அதற்கு நீ செய்யும் கைமாறு இதுதானா? எல்லாவற்றையும் மறந்து விட்டாயே!” என்றான்.


قَالَ فَعَلْتُهَآ إِذًۭا وَأَنَا۠ مِنَ ٱلضَّآلِّينَ.

26:20. அதற்கு மூஸா நபி, “அந்த கொலை சம்பவம் எதிர்பாராத விதமாக நடந்த ஒன்றாகும். வேண்டுமென்றே நான் கொலை செய்யவில்லை”


فَفَرَرْتُ مِنكُمْ لَمَّا خِفْتُكُمْ فَوَهَبَ لِى رَبِّى حُكْمًۭا وَجَعَلَنِى مِنَ ٱلْمُرْسَلِينَ.

26:21.“அதை பற்றி உங்களிடம் எடுத்துக் கூறி என் பக்கமுள்ள நியாயத்தை நிரூபிக்க முடியாமல், உங்கள் தண்டனைக்கு பயந்து உங்களைவிட்டு தப்பித்து, மத்யன் நாட்டிற்கு சென்றுவிட்டேன். அதன்பின் அங்கு சில காலம் வாழ்ந்து வந்தேன். (பார்க்க 20:40) அதன்பின் எனக்கு ‘இறைவழிகாட்டுதல்கள்’ என்ற ஞானம் இறைவனிடமிருந்து கிடைத்தது. இப்படியாக நான் இறைத்தூதர்களில் ஒருவனாக தேர்ந்தெடுக்கப்பட்டேன்” என்றார்.


وَتِلْكَ نِعْمَةٌۭ تَمُنُّهَا عَلَىَّ أَنْ عَبَّدتَّ بَنِىٓ إِسْرَٰٓءِيلَ.

26:22.“நீங்கள் எனக்கு செய்த உதவிகளுக்கு நன்றிக் கடனாக பனீஇஸ்ராயீல் சமூகத்தவர்கள் அனைவரையும் உங்களுக்கு அடிமையாக வாழ விட்டுவிட சொல்வது நியாயமாகுமா? அதைப் பற்றிய பேச்சிற்கு இங்கு இடமே இல்லை” என்றார்.


قَالَ فِرْعَوْنُ وَمَا رَبُّ ٱلْعَٰلَمِينَ.

26:23. இதை கேட்ட ஃபிர்அவ்ன், விஷயத்தை திசை திருப்பும் முயற்சியாக, “அகிலங்கள் அனைத்தையும் பரிபாலிக்கும் இறைவன் என்று கூறுகிறாயே! அந்த இறைவன் யார்?” என்று கேட்டான்.(மேலும் பார்க்க 20:49)


قَالَ رَبُّ ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضِ وَمَا بَيْنَهُمَآ ۖ إِن كُنتُم مُّوقِنِينَ.

26:24. அதற்கு மூஸா நபி, “அகிலங்களையும் பூமியையும் இவற்றிற்கு இடையேயும் உள்ள அனைத்தையும் படைத்ததோடு, அவற்றை பரிபக்குவப்படுத்தி சிறப்பாக செயல்படும்படி இயக்குகின்றானே அவன் தான் இறைவன் ஆவான். (மேலும் பார்க்க 20:50). இந்த பேருண்மையை நீங்கள் உறுதிபட ஏற்றுக் கொண்டால், உண்மையை புரிந்து கொள்வதில் எந்தச் சிரமும் இருக்காது” என்று பதிலளித்தார்.


قَالَ لِمَنْ حَوْلَهُۥٓ أَلَا تَسْتَمِعُونَ.

26:25. இதை கேட்ட ஃபிர்அவ்ன் தன்னுடைய அரசவையில் உள்ளவர்களை நோக்கி, “நீங்கள் அனைவரும் இவர் சொன்ன விஷயத்தைக் கேட்டீர்களா?” என்று கிண்டலாக கேட்டான்.


قَالَ رَبُّكُمْ وَرَبُّ ءَابَآئِكُمُ ٱلْأَوَّلِينَ.

26:26. அதற்கு மூஸா நபி, “அகிலங்களை படைத்து பராமரிப்பதோடு, உங்கள் அனைவரையும் படைத்து பரிபாலிப்பவனும் அந்த ஏக இறைவனே. உங்களுடைய முன்னோர்களுடைய இறைவனும் அவனே ஆவான்” என்றார்.


قَالَ إِنَّ رَسُولَكُمُ ٱلَّذِىٓ أُرْسِلَ إِلَيْكُمْ لَمَجْنُونٌۭ.

26:27. அதற்கு ஃபிர்அவ்ன் தன் அரசவையில் உள்ளவர்களை நோக்கி, “தன்னை இறைத்தூதர் என்று சொல்லிக் கொண்டு உங்களிடம் வந்திருக்கிறாரே, அவர் ஒரு பைத்தியக்காரர் தான்” என்றான்.


قَالَ رَبُّ ٱلْمَشْرِقِ وَٱلْمَغْرِبِ وَمَا بَيْنَهُمَآ ۖ إِن كُنتُمْ تَعْقِلُونَ.

26:28. ஃபிர்அவ்னின் பேச்சை பொருட்படுத்தாத மூஸா நபி, “நான் உங்களிடம் எடுத்துரைக்கும் இறைவன், கிழக்கிலிருந்து மேற்கு வரையில் உள்ள எல்லாவற்றையும் படைத்து பரிபாலித்து வருபவனைப் பற்றியது. நீங்கள் சற்றே சிந்தித்துப் பார்த்தால் உண்மை உங்களுக்கும் விளங்கிவிடும்” என்று விளக்கமளித்தார்.
அதாவது அனைத்தையும் படைத்த இறைவனே மனிதனையும் படைத்து பரிபாலிப்பவன் ஆவான். எனவே மற்ற படைப்புகள் இறைவனின் கட்டளைப் படி முறையோடு செயல்படும் போது, மனிதனும் இறைக்கட்டளைப்படி செயல்பட வேண்டும். அப்போது தான் அவனுடைய வாழ்வும் சிறப்பாக இருக்கும். இதை அவர்களுக்கு விளக்கினார். இதைக் கேட்ட ஃபிர்அவ்னால் ஜீரணிக்க முடியவில்லை. எனவே மூஸாவிடம் கோபத்துடன் இந்நாட்டில் என்னுடைய அதிகாரம் தான் செல்லும். இதை விட்டுவிட்டு


قَالَ لَئِنِ ٱتَّخَذْتَ إِلَٰهًا غَيْرِى لَأَجْعَلَنَّكَ مِنَ ٱلْمَسْجُونِينَ.

26:29.“நீர் என்னையன்றி வேறு ஒருவரின் கட்டளையை ஏற்று நடக்க சொல்கிறீரா? அது உன் இறைவனே இருந்தாலும் சரியே. அவனுடைய கட்டளைகள் இங்கு செல்லாது. இல்லையென்றால் உன்னை சிறையில் அடைத்து விடுவேன்” என்று அரசபையில் கர்ஜித்தான்.


قَالَ أَوَلَوْ جِئْتُكَ بِشَىْءٍۢ مُّبِينٍۢ.

26:30. அதற்கு மூஸா நபி, “நான் உங்கள் முன் தெளிவான ஆதாரப்பூர்வமான இறை வழிகாட்டுதலை கொண்டு வந்தாலுமா நீங்கள் என்னை சிறையில் அடைத்து விடுவீர்கள்? அரசனின் சொல் தான் இந்நாட்டின் சட்டமா?” என்று கேட்டார்.


قَالَ فَأْتِ بِهِۦٓ إِن كُنتَ مِنَ ٱلصَّٰدِقِينَ.

26:31. இதை கேட்ட ஃபிர்அவ்ன் வேறு வழியின்றி, “நீ உண்மையாளராக இருந்தால் அந்த ஆதாரங்களை எங்கள் முன் சமர்ப்பியும்” என்றான்.


فَأَلْقَىٰ عَصَاهُ فَإِذَا هِىَ ثُعْبَانٌۭ مُّبِينٌۭ.

26:32. ஆகவே மூஸா நபி தம்மிடமிருந்த இறைவழிகாட்டுதலை அந்த சபையோர்களிடம் எடுத்துரைத்தார். அது ஃபிர்அவ்னின் எதேச்சாதிகார ஆட்சியை விழுங்கும் மலைப் பாம்பாக இருந்தது. (மேலும் பார்க்க 7:107-108, 20:17-25, 28:31-32)


وَنَزَعَ يَدَهُۥ فَإِذَا هِىَ بَيْضَآءُ لِلنَّٰظِرِينَ.

26:33. மேலும் இறை வழிகாட்டுதலை பின்பற்றுவதால் அரசுக்கும், நாட்டு மக்களுக்கும் கிடைக்கவிருக்கும் பலன்களை எடுத்துரைத்தார். கேட்பவர்களுக்குப் அவை பரவசமூட்டுவதாகவும் பளிச்சிடும் வெள்ளை அறிக்கையாகவும் (Crystal Clear) இருந்தன.
அதாவது இறைவன் காட்டிய வழியில் ஆட்சியை நடத்தினால் சமுதாய சமச்சீர்நிலை ஏற்படும். அரசன் ஆண்டி என்ற வேற்றுமை இருக்காது. அனைவருக்கும் அடிப்படை தேவைகளான உணவு, உடை, உறைவிடம் கிடைக்கும். அந்த சபையில் உள்ளவர்களுக்கு இந்த உண்மை புரிந்தது. அதனால் அவர்கள் மூஸா நபிக்கு ஆதரவாக மாறிவிடுவார்களோ என ஃபிர்அவ்ன் பயந்தான். எனவே


قَالَ لِلْمَلَإِ حَوْلَهُۥٓ إِنَّ هَٰذَا لَسَٰحِرٌ عَلِيمٌۭ.

26:34. ஃபிர்அவ்ன் தன் சபையில் உள்ளவர்களை நோக்கி, “இந்த பேச்சுகள் எல்லாம் மக்களை ஏமாற்றி வசியப்படுத்தக் கூடியவையாக உள்ளன. நடக்காத ஒன்றை உண்மையாக்கிக் காட்டும் சூனியமான பேச்சே இவை” என்று ஆவேசமாகப் பேசினான்.


يُرِيدُ أَن يُخْرِجَكُم مِّنْ أَرْضِكُم بِسِحْرِهِۦ فَمَاذَا تَأْمُرُونَ.

26:35. “இப்படிப்பட்ட வசீகர பேச்சுகளைப் பேசி, உங்களை உங்கள் நாட்டை விட்டு வெளியேற்ற விரும்புகிறார். எனவே இதைப் பற்றி நீங்கள் கூறும் யோசனை என்ன?” என்று கேட்டான்.


قَالُوٓا۟ أَرْجِهْ وَأَخَاهُ وَٱبْعَثْ فِى ٱلْمَدَآئِنِ حَٰشِرِينَ.

26:36. அதற்கு அவர்கள், “அவருக்கும் அவருடைய சகோதரருக்கும் சிறிது கால அவகாசம் கொடுத்து விடுங்கள். பட்டணங்களில் உள்ள வாதத் திறமை மிக்க மதகுருமார்களை அழையுங்கள். இதற்காக கட்டளை பிறப்பியுங்கள்” என்று யோசனை கூறினார்கள்.
அதாவது சபையில் இருந்தவர்களில் சிலருக்கு உண்மைப் புரிந்திருந்தது. ஆனால் அதை ஃபிர்அவ்ன் ஏற்றுக் கொள்வதாக இல்லை. எனவே மூஸா நபியின் வாதங்களை முறியடிக்க ஃபிர்அவ்னின் ஆட்சியை ஆதரிக்கும் மதகுருமார்களை வைத்து பேசிக் கொள்ளலாம் என்பதே அவர்கள் கூறிய யோசனை ஆகும்.


يَأْتُوكَ بِكُلِّ سَحَّارٍ عَلِيمٍۢ.

26:37. “அந்த கட்டளையின் படி நாட்டிலுள்ள பேச்சுத் திறமை மிக்க மதகுருமார்களை எல்லாம் உம்மிடம் அழைத்து வரட்டும்” என்றனர்.


فَجُمِعَ ٱلسَّحَرَةُ لِمِيقَٰتِ يَوْمٍۢ مَّعْلُومٍۢ.

26:38. அவ்வாறே அந்த குருமார்கள் அனைவரும் ஒரு குறிப்பிட்ட நாளில் ஒன்று கூடினார்கள். (20:59)


وَقِيلَ لِلنَّاسِ هَلْ أَنتُم مُّجْتَمِعُونَ.

26:39. மேலும் பொது மக்களிடமும் இதைப் பற்றிய அறிவிப்பும் செய்யப்பட்டது. அவர்களுக்கும் அழைப்பு விடப்பட்டது.


لَعَلَّنَا نَتَّبِعُ ٱلسَّحَرَةَ إِن كَانُوا۟ هُمُ ٱلْغَٰلِبِينَ.

26:40. ஏனென்றால் அந்த குருமார்கள் வாதத்தில் வெற்றிப் பெற்றுவிட்டால் மக்கள் அனைவரும் அவர்களையே பின்பற்றக் கூடும்.


فَلَمَّا جَآءَ ٱلسَّحَرَةُ قَالُوا۟ لِفِرْعَوْنَ أَئِنَّ لَنَا لَأَجْرًا إِن كُنَّا نَحْنُ ٱلْغَٰلِبِينَ.

26:41. அத்திட்டத்தின் படி மதகுருமார்கள் ஃபிர்அவ்னிடம் வந்து சேர்ந்தார்கள். அவர்கள் ஃபிர்அவ்னிடம், "நாங்கள் இந்த வாதத்தில் வெற்றிப் பெற்றால், நிச்சயமாக அதற்குரிய வெகுமதி எங்களுக்குக் கிடைக்கும் அல்லவா?” என்று கேட்டனர்.


قَالَ نَعَمْ وَإِنَّكُمْ إِذًۭا لَّمِنَ ٱلْمُقَرَّبِينَ

26:42.“ஆம். நிச்சயம் கிடைக்கும். உங்களுக்கு உயர் பதவியை அளித்து நெருக்கமானவர்களாக ஆக்கிக் கொள்வேன்” என்றான். (பார்க்க 20:61-62)


قَالَ لَهُم مُّوسَىٰٓ أَلْقُوا۟ مَآ أَنتُم مُّلْقُونَ.

26:43. அதன்படி போட்டி நாளன்று அனைவரும் ஒன்று கூடிவிட்டனர். மூஸா நபி அவர்களை நோக்கி, “நீங்கள் முதலில் உங்கள் கருத்துக்களை எடுத்துரையுங்கள்” என்றார்.


فَأَلْقَوْا۟ حِبَالَهُمْ وَعِصِيَّهُمْ وَقَالُوا۟ بِعِزَّةِ فِرْعَوْنَ إِنَّا لَنَحْنُ ٱلْغَٰلِبُونَ.

26:44. ஆகவே அவர்கள் தங்களிடம் இருந்த மதச் சித்தாந்தங்களையும் கற்பனைக் கதைகளையும் எடுத்துரைத்தனர். “ஃபிர்அவ்னுடைய கண்ணியத்தின் மீது ஆணையாக இன்றைய தினம் நாமே வெற்றியடைவோம்” என்று கூறினார்கள்.


فَأَلْقَىٰ مُوسَىٰ عَصَاهُ فَإِذَا هِىَ تَلْقَفُ مَا يَأْفِكُونَ.

26:45. அதன்பின் மூஸா நபி இறைவழிகாட்டுதலின் உண்மைகளையும், அவற்றின் நோக்கங்களையும் தெளிவாக எடுத்துரைத்தார். அது அவர்களுடைய பொய்யான கற்பனைக் கதைகளை விழுங்கிவிட்டது. (பார்க்க 7:117, 20:69)


فَأُلْقِىَ ٱلسَّحَرَةُ سَٰجِدِينَ.

26:46. மூஸா நபியின் அறிவுரைகளை கேட்ட மதகுருமார்கள் அனைவரும் சரணடைந்து விட்டனர்.


قَالُوٓا۟ ءَامَنَّا بِرَبِّ ٱلْعَٰلَمِينَ.

26:47. அகிலங்கள் அனைத்தையும் படைத்து பரிபாலிக்கின்ற இறைவனின் வழிகாட்டுதலை தாங்களும் ஏற்றுக் கொள்வதாக அறிவித்து விட்டனர்.


رَبِّ مُوسَىٰ وَهَٰرُونَ.

26:48. “அந்த ஏக இறைவனே மூஸாவுக்கும் ஹாரூனுக்கும் இறைவன் ஆவான்” என்றனர்.


قَالَ ءَامَنتُمْ لَهُۥ قَبْلَ أَنْ ءَاذَنَ لَكُمْ ۖ إِنَّهُۥ لَكَبِيرُكُمُ ٱلَّذِى عَلَّمَكُمُ ٱلسِّحْرَ فَلَسَوْفَ تَعْلَمُونَ ۚ لَأُقَطِّعَنَّ أَيْدِيَكُمْ وَأَرْجُلَكُم مِّنْ خِلَٰفٍۢ وَلَأُصَلِّبَنَّكُمْ أَجْمَعِينَ.

26:49. இதை சற்றும் எதிர் பாராத ஃபிர்அவ்னுக்கு கோபம் தலைக்கு மேல் ஏறிவிட்டது. அவன் அவர்களை நோக்கி, “என்னிடம் எதுவும் கேட்காமலேயே நீங்களாகவே மூஸாவின் பேச்சைக் கேட்டு அவர் பக்கம் சாய்ந்து விட்டீர்களா? நிச்சயமாக அவர் உங்கள் அனைவரையும் விட மகா சூனியக்காரராக இருக்கிறார். (பார்க்க – 7:123) ஆகவே நீங்கள் வெகு விரைவில் இதன் விளைவுகளை சந்தித்துக் கொள்வீர்கள். உங்களுடைய மாறுகை மாறுகால் துண்டித்து அனைவரையும் சிலுவையில் அறைந்து கொன்றுவிடுவேன்” என்று கர்ஜித்தான்.


قَالُوا۟ لَا ضَيْرَ ۖ إِنَّآ إِلَىٰ رَبِّنَا مُنقَلِبُونَ.

26:50. இந்த கர்ஜனைகளையும் ஆவேசப் பேச்சையும் கேட்ட மதகுருமார்கள், “நீர் என்ன தண்டனை கொடுக்க விரும்புகிறாயோ அவ்வாறே செய்துகொள். இதனால் எங்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படப் போவதில்லை. இப்போது எங்களை படைத்தவனைப் பற்றி நாங்கள் நன்கு அறிந்துகொண்டோம். (மேலும் பார்க்க - 20:72) எனவே நாம் செய்யும் ஒவ்வொரு செயலும் இறைவன் நிர்ணயித்த இலக்கை நோக்கியே செல்கின்றன. அதன் விளைவுகளை நாம் சந்தித்தே ஆக வேண்டும் என்பதை மூஸா நபியின் மூலம் தெரிந்து கொண்டோம்” என்று அடக்கமாக பதில் கூறி விட்டனர்.


إِنَّا نَطْمَعُ أَن يَغْفِرَ لَنَا رَبُّنَا خَطَٰيَٰنَآ أَن كُنَّآ أَوَّلَ ٱلْمُؤْمِنِينَ.

26:51. “மூஸா நபி மற்றும் ஹாரூன் நபியின் அழைப்பை ஏற்று அல்லாஹ்வின் வழிகாட்டுதலை ஏற்றுக் கொண்டோரில் முதன்மை வகிப்பவர்களாக இருப்பதினால், அறியாமையில் செய்த தவறான போதனைகளின் தீய விளைவுகளிலிருந்து எங்களை இறைவன் காத்தருள்வான் என்பதை திடனாக நம்புகிறோம்” என்று கூறினார்கள். (மேலும் பார்க்க 7:126)
அதைத் தொடர்ந்து இஸ்ரவேலர்களை ஃபிர்அவ்ன் கூட்டத்தார் பலவகையில் துன்புறுத்தினர். அதனால் ஃபிர்அவ்னியர்களுக்கு கஷ்டம் ஏற்படும் போதெல்லாம் உதவி செய்யும்படி மூஸா நபியிடம் மன்றாடினார்கள். அவ்வாறு உதவி செய்தால் இஸ்ரவேலர்களை விடுதலை செய்து விடுவதாக ஃபிர்அவ்ன் வாக்குறுதியும் அளித்து வந்தான். ஆனால் அவன் தன் வாக்கில் நிலைத்து இருக்கவில்லை. எனவே இறைவனின் அறிவுரைப்படி தம் சமூகத்தைச் சேர்ந்த வீரர்களை அழைத்துக் கொண்டு இரகசியமாக நாட்டை விட்டு ஹிஜ்ரத் செய்து வெளியேறி விடுவது என்று திட்டம் தீட்டப்பட்டது. (விளக்கத்திற்குப் பார்க்க 7:127-136)


۞ وَأَوْحَيْنَآ إِلَىٰ مُوسَىٰٓ أَنْ أَسْرِ بِعِبَادِىٓ إِنَّكُم مُّتَّبَعُونَ.

26:52. அவ்வாறே தன் தோழர்களுடன் இரகசியமாக அந்நாட்டை விட்டு வெளியேறி, ஹிஜ்ரத் செய்துவிட இறைவனிடமிருந்து மூஸா நபிக்கு வஹீச் செய்தி வந்தது. மேலும் ஃபிர்அவ்னின் படையினர் அவர்களைப் பின் தொடர்வார்கள் என்பதையும் முன்கூட்டியே அறிவிக்கப்பட்டது.
அதாவது மூஸா நபியின் போதனைகள் இஸ்ரவேலர்களிடையே வெகுவாக பரவி வந்தன. அவருடைய அறிவுரையின் படி நடக்க ஏராளமானோர் இருந்தார்கள் என்பது இதிலிருந்து தெரிகிறது.


فَأَرْسَلَ فِرْعَوْنُ فِى ٱلْمَدَآئِنِ حَٰشِرِينَ.

26:53. இவற்றை முறியடிப்பதற்காகவும், பட்டணத்தில் நடக்கும் விஷயங்களை அறிந்து கொள்வதற்காகவும், ஃபிர்அவ்னும் தன் பங்கிற்கு உளவாளிகளை அமர்த்தி இருந்தான்.


إِنَّ هَٰٓؤُلَآءِ لَشِرْذِمَةٌۭ قَلِيلُونَ.

26:54. நிச்சயமாக இஸ்ரவேலர்களில் சிலர் தான் செயல்வீரர்களாக இருக்கின்றனர் என்பதை அவர்கள் ஃபிர்அவ்னுக்கு தகவல் அனுப்பினர்.


وَإِنَّهُمْ لَنَا لَغَآئِظُونَ.

26:55. மேலும் அவர்கள், தங்களுக்கு எதிராக செயல்பட்டு வருவதாகவும் அதனால் அவர்கள் தம்முடைய கோபத்திற்கு ஆளாகி உள்ளதாகவும் ஃபிர்அவ்னிடம் தெரிவித்து வந்தனர்.


وَإِنَّا لَجَمِيعٌ حَٰذِرُونَ.

26:56. அவர்களுடைய ஒவ்வொரு நடவடிக்கையையும் உன்னிப்பாக கவனித்து வருவதாகவும், அவர்கள் அனைவரும் எச்சரிக்கையுடனே இருப்பதாகவும் தகவல் அனுப்பினர்.
இப்படியாக அவர்கள் இஸ்ரவேலர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து வந்தனர். மறுபுறம் இறைவன் வகுத்துள்ள “மனித செயல்களுக்கேற்ற விளைவுகள்” என்ற நியதிப்படி ஃபிர்அவ்ன் கூட்டத்தாரின் நிலைமை மோசமாகிக் கொண்டே சென்றது.


فَأَخْرَجْنَٰهُم مِّن جَنَّٰتٍۢ وَعُيُونٍۢ.

26:57. இறைவனின் நியதிப்படி ஃபிர்அவ்ன் கூட்டத்தாரின் சுகமான வாழ்வும் பொருளாதாரமும் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வந்தன.


وَكُنُوزٍۢ وَمَقَامٍۢ كَرِيمٍۢ.

26:58. அவர்களிடமிருந்த சொத்து செல்வங்களும் படிப்படியாக குறைந்து, அவர்களுடைய கண்ணியமான வாழ்வும் பறிபோயின.


كَذَٰلِكَ وَأَوْرَثْنَٰهَا بَنِىٓ إِسْرَٰٓءِيلَ.

26:59. இறைவழிகாட்டுதலின்படி இஸ்ரவேலர்கள் அயராது உழைத்து வந்ததால் சொத்து செல்வங்கள் இவர்கள் கைவசம் வந்து கொண்டிருந்தன.
இருப்பினும் ஆட்சி அதிகாரம் ஃபிர்அவ்னியர்களிடம் இருந்ததால், அடிமையாக வாழ்ந்த இஸ்ரவேலர்களின் வளர்ச்சிக்கு தடையாக இருந்தார்கள். எனவே ஏற்கனவே தீட்டியிருந்த திட்டப்படி, அவர்களுக்கு முழுஅளவில பயிற்சி அளித்து சிறந்த செயல்வீரர்களாக உருவாக்குவதற்காக, அவர்களை அழைத்துக் கொண்டு அங்கிருந்து ஹிஜ்ரத் செய்துவிடுவது என்று மூஸா நபி தீர்மானித்தார். அதன்படி இரவோடு இரவாக யாருக்கும் தெரியாமல் அவர் தன் தோழர்களுடன் புறப்பட்டுச் சென்றுவிட்டார். அவர்கள் செல்லும் வழியில் குறுக்கே ஆறு ஒன்று இருந்தது. இஸ்ரவேலர்கள் உருவாக்கியிருந்த உலர்ந்த பாதை – பாலம் வழியாக அவர்கள் கடந்து சென்று விட்டானர். (20:77)


فَأَتْبَعُوهُم مُّشْرِقِينَ.

26:60. இதைப் பற்றி தகவல் அறிந்த ஃபிர்அவ்னும் தன் படைகளுடன் அவர்களை தேடி பின்தொடர்ந்து வந்தான். அவன் மறுநாள் காலையில் அந்த நதிக்கரையை வந்தடைந்தான்.


فَلَمَّا تَرَٰٓءَا ٱلْجَمْعَانِ قَالَ أَصْحَٰبُ مُوسَىٰٓ إِنَّا لَمُدْرَكُونَ.

26:61. இஸ்ரவேலர்கள் நதியின் அக்கரையிலும், ஃபிர்அவ்னின் படையினர் இக்கரையிலும் இருந்தனர். அவ்விரு கூட்டத்தாரும் ஒருவரையொருவர் கண்டபோது, “இப்போது நாம் பிடிபடுவது உறுதி என்றே தெரிகிறது” என்று இஸ்ரவேலர்கள் பயந்தனர்.


قَالَ كَلَّآ ۖ إِنَّ مَعِىَ رَبِّى سَيَهْدِينِ.

26:62. அதற்கு மூஸா நபி, “ஒருபோதும் இல்லை. நிச்சயமாக என் இறைவனின் வழிகாட்டுதல் என்னுடன் இருக்கிறது. அதன்படி எனக்கு விரைவிலேயே இதற்கு தீர்வு கிடைக்கும்” என்று தன் தோழர்களுக்கு ஆறுதல் அளித்தார்.


فَأَوْحَيْنَآ إِلَىٰ مُوسَىٰٓ أَنِ ٱضْرِب بِّعَصَاكَ ٱلْبَحْرَ ۖ فَٱنفَلَقَ فَكَانَ كُلُّ فِرْقٍۢ كَٱلطَّوْدِ ٱلْعَظِيمِ.

26:63. ஏற்கனவே மூஸா நபிக்கு இறைவன் அறிவித்தபடி, அவர் தன் தோழர்களுடன் பாலத்தின் வழியாக (பார்க்க 20:77) அந்த நதியை கடந்து சென்றுவிட்டார். அந்த நதி மிகவும் ஆழமாகவும் அதன் இருகரைகளும் மலைகளைப் போன்றும் காணப்பட்டன.


وَأَزْلَفْنَا ثَمَّ ٱلْءَاخَرِينَ.

26:64. அதை தொடர்ந்து ஃபிர்அவ்னும் அவனுடைய படையினரும் அந்த நதியை நெருங்கி வந்தனர்.


وَأَنجَيْنَا مُوسَىٰ وَمَن مَّعَهُۥٓ أَجْمَعِينَ.

26:65. மூஸா நபியும் அவருடைய தோழர்களும் அந்த நதியை கடந்து பாதுகாப்பாக சென்று விட்டிருந்தனர்.


ثُمَّ أَغْرَقْنَا ٱلْءَاخَرِينَ.

26:66. அதன்பின் வந்த ஃபிர்அவ்னும் அவனது படையினரும் அந்த ஆழமான நதியில் விழுந்து மூழ்கிவிட்டனர்.


إِنَّ فِى ذَٰلِكَ لَءَايَةًۭ ۖ وَمَا كَانَ أَكْثَرُهُم مُّؤْمِنِينَ.

26:67. நிச்சயமாக சிந்தித்து உணர்பவர்களுக்கு இதில் அத்தாட்சிகள் பல உண்டு. ஆனால் மக்களில் பெரும்பாலோர் இதைப் பற்றி சிந்தித்து ஏற்றுக் கொள்வதில்லை.
அதாவது நபிமார்கள் காலத்திலும் சரி இன்றைய நவீன காலத்திலும் சரி. எந்த ஒரு செயலையும் திட்டமிட்டு செய்தால், அதில் நிச்சயமாக வெற்றி கிடைக்கும். அவற்றை விட்டுவிட்டு வெறும் உணர்ச்சி வேகத்தில் செயல் பட்டால் பலன் ஏற்படுவதற்குப் பதிலாக அழிவுகள் தான் ஏற்படும். மூஸா நபி உயர் இலட்சியத்திற்காக தன் தோழர்களுடன் பயணத்தை மேற்கொண்டார். அதுவும் திட்டமிட்டு அதன்படியே செயல்பட்டார். ஆனால் ஃபிர்அவ்னிடம் இருந்ததோ வெறும் ஆவேசமும் காழ்புணர்ச்சியும் தான். ஆக தர்மத்திற்கும் அதர்மத்திற்கும் இடையே நடக்கும் மோதலில் இறுதியாக தர்மமே வெற்றிபெறும் என்பதை இந்த நிகழ்வு எடுத்துக் காட்டுகிறது.
நைல் நதியைக் கடந்து சென்ற சம்பவத்தைப் பற்றி விளக்கமாக 7:136 வாசகத்தில் இடம் பெற்றுள்ளது.


وَإِنَّ رَبَّكَ لَهُوَ ٱلْعَزِيزُ ٱلرَّحِيمُ.

26:68. நிச்சயமாக உன் இறைவனின் செயல்திட்டங்கள் யாவற்றையும் விட மிகைத்தவையாகவும், அனைவரையும் பாதுகாப்பு அளிக்கும் கருணை மிக்கதாகவும் உள்ளன என்பதை நினைவில் கொள்ளுங்கள்.


وَٱتْلُ عَلَيْهِمْ نَبَأَ إِبْرَٰهِيمَ.

26:69. அதே போன்று இப்ராஹீம் நபியின் வாழ்க்கை வரலாற்றைப் பற்றியும் எடுத்துரையுங்கள்.


إِذْ قَالَ لِأَبِيهِ وَقَوْمِهِۦ مَا تَعْبُدُونَ.

26:70. அவர் தன் தந்தையும் சமூகத்தாரும் வழிபட்டு வந்த தெய்வ வழிபாட்டின் உண்மை நிலையைப் பற்றிப் பலவாராக கேள்வி எழுப்பி வந்தார்.


قَالُوا۟ نَعْبُدُ أَصْنَامًۭا فَنَظَلُّ لَهَا عَٰكِفِينَ.

26:71. அதற்கு அவர்கள், “நாங்கள் ஆராதிக்கின்ற சிலைகள் இவையே. அவற்றைத் தான் நாங்கள் வணங்கி வருகிறோம்” என்று பதிலளித்து வந்தார்கள்.


قَالَ هَلْ يَسْمَعُونَكُمْ إِذْ تَدْعُونَ.

26:72. அதற்கு இப்ராஹீம் நபி, “நீங்கள் வணங்கி வருகின்ற இந்த தெய்வங்கள், உங்களுடைய வேண்டுதல்களை காதுகொடுத்து கேட்கும் ஆற்றலுடையதா?” என்று கேட்டார்.


أَوْ يَنفَعُونَكُمْ أَوْ يَضُرُّونَ.

26:73. “அல்லது அவை உங்களுக்கு நன்மையோ தீமையோ செய்யக் கூடியதாக இருக்கின்றனவா?” என்று கேட்டார்.


قَالُوا۟ بَلْ وَجَدْنَآ ءَابَآءَنَا كَذَٰلِكَ يَفْعَلُونَ.

26:74. தெய்வ வழிபாட்டின் உண்மை நிலையை அறியாத அம்மக்கள், “அதைப் பற்றி எல்லாம் எங்களுக்குத் தெரியாது. எங்கள் முன்னோர்கள் எவற்றை வழிபட்டு வந்தார்களோ, அதையே நாங்களும் வணங்குகிறோம்” என்று பதிலளித்தார்கள்.


قَالَ أَفَرَءَيْتُم مَّا كُنتُمْ تَعْبُدُونَ.

26:75. “அப்படியாயின் நீங்கள் எதை வணங்கிக் கொண்டிருக்கிறீர்கள் என்பதை ஒருபோதும் கவனித்து பார்க்கவில்லையா?” என்று கேட்டார்.


أَنتُمْ وَءَابَآؤُكُمُ ٱلْأَقْدَمُونَ.

26:76. “நீங்களும் உங்களுடைய முன்னோர்களும் வணங்கி வந்த தெய்வங்களின் உண்மை நிலை என்னவென்பதை எப்போதாவது கவனித்து பார்த்ததுண்டா?” என்று கேட்டார்.


فَإِنَّهُمْ عَدُوٌّۭ لِّىٓ إِلَّا رَبَّ ٱلْعَٰلَمِينَ.

26:77. “நிச்சயமாக நீங்கள் வழிபட்டு வரும் வணக்க வழிபாடுகள் எனக்கும், அகிலங்களை படைத்து பரிபாலிக்கின்ற இறைவனின் செய்திட்டத்திற்கும் நேர் எதிராக உள்ளன. எனவே இவற்றை நான் ஒருபோதும் ஏற்கவில்லை” என்றார்.


ٱلَّذِى خَلَقَنِى فَهُوَ يَهْدِينِ.

26:78. “அகிலங்களை படைத்ததோடு மட்டுமின்றி, நான் எப்படி வாழவேண்டும் என்ற வழிகாட்டுதலையும் அளித்தது அந்த ஏக இறைவனே.
நீங்கள் வணங்கி வரும் தெய்வங்கள் உங்களுக்கு நேர்வழியை காட்டுகிறதா? (10:35)


وَٱلَّذِى هُوَ يُطْعِمُنِى وَيَسْقِينِ.

26:79. “நான் உயிர் வாழத் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து கொடுப்பவனும் அந்த ஏக இறைவனே”


وَإِذَا مَرِضْتُ فَهُوَ يَشْفِينِ.

26:80. “மேலும் எனக்கு நோய் ஏற்படும்போது, அந்த நோயை குணப்படுத்த மருத்துவ ஏற்பாடுகளை செய்து கொடுப்பவனும் அந்த ஏக இறைவனே”
அதாவது உலக மக்கள் அனைவருக்கும் ஏற்படுகின்ற எல்லா நோய்களுக்கும் நிவாரணம் கிடைப்பது, பூமியில் கிடைக்கும் மூலிகை மற்றும் தாதுப் பொருட்களைக் கொண்டுதான். அந்த ஏற்பாடுகளை செய்ததும் ஏக இறைவனே. இப்படி அனைத்து ஏற்பாடுகளையும் செய்த இறைவனை விட்டுவிட்டு, யாதொரு நன்மையோ தீமையோ செய்ய இயலாத சிலைகளின் முன் தன் தேவைகளை நிறைவேற்ற மன்றாடிக் கொண்டிருப்பதில் என்ன அர்த்தம் இருக்கிறது? எனவே அவர் தம் தந்தை மற்றும் சமுதாய மக்களுக்கு பின்வருமாறு போதித்து வந்தார்.


وَٱلَّذِى يُمِيتُنِى ثُمَّ يُحْيِينِ.

26:81. “இறைவனின் அதே சட்ட விதிமுறைகளின்படி எனக்கு மரணமும் ஏற்படும். அதன்பின் நான் இவ்வுலகில் செய்து வந்த செயல்களைப் பற்றிய கேள்விக்கணக்கு உண்டு. அதற்காக என்னை அவன் மீண்டும் உயிர்கொடுத்து எழுப்புவான்”


وَٱلَّذِىٓ أَطْمَعُ أَن يَغْفِرَ لِى خَطِيٓـَٔتِى يَوْمَ ٱلدِّينِ.

26:82. “ஆக நான் செய்துவரும் நற்செயல்களின் பலன்களையோ தீய செயல்களின் விளைவுகளையோ பெற்றுக் கொள்ளும் கால கட்டம் நிச்சயம் உண்டு என்பதை நான் அறிவேன். அறியாமையில் செய்த சிறு தவறுகளினால் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து பாதுகாப்பாக இருக்க இறைவனின் உதவியை நாடுகிறேன்”


رَبِّ هَبْ لِى حُكْمًۭا وَأَلْحِقْنِى بِٱلصَّٰلِحِينَ.

26:83.“இதற்கான வழிகாட்டுதலை அளிக்கும்படி இறைவனிடமே பிரார்த்திக்கின்றேன். மக்களிடையே உள்ள தீய பழக்க வழக்கங்களை நீக்கி சிறந்ததொரு சமூதாயத்தை உருவாக்க எனக்கு ஞானத்தை அளிக்கும்படி இறைவனிடம் பிரார்த்திக்கின்றேன். மேலும் சிறப்பாக வாழ்ந்து உலக வரலாற்றில் சான்றோர்கள் என முத்திரை பதித்துவிட்டுச் சென்றவர்களில் நானும் ஒருவனாக இருக்கவே விரும்புகிறேன்”


وَٱجْعَل لِّى لِسَانَ صِدْقٍۢ فِى ٱلْءَاخِرِينَ.

26:84. “மேலும் வருங்கால சந்ததியர்களுக்கு நான் ஒரு முன்மாதிரியாக விளங்க எனக்கு நற்பெயரை ஏற்படுத்தும்படி இறைவனிடம் பிரார்த்திக்கின்றேன்”


وَٱجْعَلْنِى مِن وَرَثَةِ جَنَّةِ ٱلنَّعِيمِ.

26:85. “இன்னும் பாக்கியமிக்க சுவனபதியில் உரிமை மிக்க வாரிசுதாரர்களில் ஒருவனாக என்னையும் ஆக்கிவைக்க இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்”


وَٱغْفِرْ لِأَبِىٓ إِنَّهُۥ كَانَ مِنَ ٱلضَّآلِّينَ.

26:86. “அதே போன்று என் தந்தைக்கும் பாதுகாப்பான வாழ்வு கிடைக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். ஆனால் அவரோ வழிக்கேடர்களில் ஒருவராக இருக்கின்றாரே!”


وَلَا تُخْزِنِى يَوْمَ يُبْعَثُونَ.

26:87. “இறைவா! மனித செயல்களின் விளைவுகள் தோற்றத்திற்கு வரும் கால கட்டங்களில் என்னை இழிவுக்குள்ளாக்கிக் கொள்ள நான் விரும்பவில்லை. அதற்கான வழிகாட்டுதலை அளிக்க உன்னிடம் பிரார்த்திக்கின்றேன்”


يَوْمَ لَا يَنفَعُ مَالٌۭ وَلَا بَنُونَ.

26:88. “அப்படிப்பட்ட கால கட்டங்களில் என்னுடைய நற்செயல்களே எனக்கு சாதகமாக பேசும். என்னுடைய செல்வங்களோ, பிள்ளைகளோ எந்த பலனையும் அளிக்காது.”


إِلَّا مَنْ أَتَى ٱللَّهَ بِقَلْبٍۢ سَلِيمٍۢ.

26:89. “எவர் இறைவனின் அறிவுரைகளை உளப்பூர்வமாக ஏற்று செயல்பட்டார்களோ, அவர்களே அல்லாஹ்விடத்தில் கண்ணியத்திற்கு உரியவர் ஆவார்கள்” (மேலும் பார்க்க 37:84)


وَأُزْلِفَتِ ٱلْجَنَّةُ لِلْمُتَّقِينَ.

26:90. “அத்தகையோர் அல்லாஹ்வின் வழிகாட்டுதல்கள் என்னவோ அவற்றையே நோக்கமாகக் கொண்டு இறையச்சத்துடன் செயல்படுபவர்கள் ஆவர். அவர்கள் பக்கமே அந்த சுவனம் நெருங்கி வரும்”


وَبُرِّزَتِ ٱلْجَحِيمُ لِلْغَاوِينَ.

26:91. “மாறாக அல்லாஹ்வின் அறிவுரைகளை ஏற்காமல் வழிதவறி செல்பவர்களின் வாழ்வில் நரகமே நெருங்கி வரும்”


وَقِيلَ لَهُمْ أَيْنَ مَا كُنتُمْ تَعْبُدُونَ.

26:92. அப்போது அவர்களிடம், “நீஙகள் வணங்கி வந்த கற்பனை தெய்வங்கள் எங்கே?” என்று கேட்கப்படும்.


مِن دُونِ ٱللَّهِ هَلْ يَنصُرُونَكُمْ أَوْ يَنتَصِرُونَ.

26:93. “அல்லாஹ்வின் வழிகாட்டுதலை விட்டுவிட்டு, மற்றவற்றை வணங்கி வந்தீர்களே அவை உங்களுக்கு உதவி செய்கின்றதா? அல்லது தமக்குத் தாமே உதவி செய்து கொள்ளும் தகுதியாவது அவற்றிற்கு உண்டா?” என்றும் கேட்கப்படும்.


فَكُبْكِبُوا۟ فِيهَا هُمْ وَٱلْغَاوُۥنَ.

26:94. “பின்னர் வழிதவறி சென்றவர்களும் அவர்களை வழிகெடுத்து வந்த மதகுருமார்களும் முகங்குப்புறமாக அந்த நரகத்தில் தள்ளப்படுவார்கள்”


وَجُنُودُ إِبْلِيسَ أَجْمَعُونَ.

26:95. “அதாவது வழிகெடுத்து வந்த இப்லீஸியக் கூட்டத்தார் அனைவரும் அந்த நரகத்தில் தள்ளப்படுவார்கள்”


قَالُوا۟ وَهُمْ فِيهَا يَخْتَصِمُونَ.

26:96. “அங்கே வழிகெட்டவர்களும் வழிகெடுத்தவர்களும் தங்களுக்குள் தர்க்கித்துக் கொள்வார்கள்”


تَٱللَّهِ إِن كُنَّا لَفِى ضَلَٰلٍۢ مُّبِينٍ.

26:97. வழிதவறி போனவர்கள் மதகுருமார்களிடம், “அல்லாஹ்வின் மீது ஆணையாக நாங்கள் உங்களைப் பின்பற்றி வந்தது மிகப் பெரிய வழிக்கேடான செயல் என்பது வெட்டவெளிச்சம் ஆகிவிட்டது” என்று கூறுவார்கள்.


إِذْ نُسَوِّيكُم بِرَبِّ ٱلْعَٰلَمِينَ.

26:98. “நாம் உங்களையே வழிகாட்டியாகவும் அனைவரையும் பாதுகாப்பவர்களாகவும் எண்ணிக் கொண்டது எங்களுடைய வழிக்கேடான செயலாகும்.


وَمَآ أَضَلَّنَآ إِلَّا ٱلْمُجْرِمُونَ.

26:99. “நாங்கள் உங்களை நல்லவர்கள் என நினைத்தோமே. ஆனால் நீங்களே குற்றவாளிகளாக இருக்கிறீர்களே”


فَمَا لَنَا مِن شَٰفِعِينَ.

26:100. “எங்களுக்காக பரிந்து பேசுவீர்கள் என நினைத்துக் கொண்டதும் தப்பாகிவிட்டதே”


وَلَا صَدِيقٍ حَمِيمٍۢ.

26:101. “உங்களை இரக்கமுள்ள நண்பர்களாக எண்ணிக் கொண்டதும் சரியில்லை என்றாகிவிட்டதே”


فَلَوْ أَنَّ لَنَا كَرَّةًۭ فَنَكُونَ مِنَ ٱلْمُؤْمِنِينَ.

26:102. “நாங்கள் மீண்டும் உலகத்திற்கு செல்ல வழி கிடைக்குமாயின், நிச்சயமாக நாங்கள் இறைவழிகாட்டுதலை ஏற்று செயல்படுவோம்”
இப்ராஹீம் நபி, இறைவழிகாட்டுதலை நிராகரிப்பவர்களுக்கு ஏற்படும் நிலையைப் பற்றி மக்களுக்கு முன்எச்சரிக்கை செய்து போதித்து வந்த உண்மை விஷயங்களாகும். இறைவழிகாட்டுதலை பின்பற்றி நடப்பதால் கிடைக்கும் சுவன வாழ்வைப் பற்றியும், அதற்கு மாற்றமாக செயல்படுவதால் ஏற்படும் நரக வேதனைகளைப் பற்றியும் எடுத்துரைத்து, மக்களை நல்வழிபடுத்த அவர் பல வகையில் முயற்சிகளை மேற்கொண்டார்.


إِنَّ فِى ذَٰلِكَ لَءَايَةًۭ ۖ وَمَا كَانَ أَكْثَرُهُم مُّؤْمِنِينَ.

26:103. இந்த அறிவுரைகளைப் பற்றி சிந்தித்துணரும் மக்களுக்குப் பல படிப்பினைகள் உண்டு. எனினும் பெரும்பாலோர் இதைப் பற்றி சிந்தித்து அதன்படி செயல்படுவதில்லை.
அதாவது “மனித செயலுக்கேற்ற விளைவுகள்” ஏற்படுவது நிச்சயமே. அதன்படி நற்செயல்களுக்கு நற்பலன்களும், தீய செயல்களுக்கு விபரீத விளைகளும் ஏற்படுவது உறுதி. மேலும் தனி நபரோ அல்லது ஒரு சமுதாயமோ, தவறான வழிமுறைகளை பின்பற்றி அதன் விளைவுகளாக நரக வேதனைகள் ஏற்படும்போது, தம் செயல்களை எண்ணி வருத்தப்பட்டுக் கொண்டு இருப்பதில் பலன் எதுவும் இருக்காது. அந்த நரக வேதனைகளை அனுபவித்து தான் அகவேண்டும். எனவே இதை மனதில் பதிய வைத்துக் கொண்டு இறைவழிகாட்டுதலின் படி செயல்பட வேண்டும். மேலும் புணர் ஜன்மம் அல்லது மறுபிறவி உண்டு என்று சிலர் நம்புகிறார்கள். அது முற்றிலும் தவறான கருத்தாகும். காலத்தின் சுழல் முன்நோக்கி செல்லுமே அன்றி அது பின்னுக்கு ஒருபோதும் செல்லாது என்பதே உண்மை. எனவே மறுபிறவி என்ற பேச்சுக்கே இடமில்லை என்பதும் மேற்சொன்ன வாசகங்களிலிருந்து தெளிவாகிறது.


وَإِنَّ رَبَّكَ لَهُوَ ٱلْعَزِيزُ ٱلرَّحِيمُ.

26:104. ஆக மனிதன் எவ்வாறு செயல்படுகின்றானோ அதற்கேற்றவாறு விளைவுகளை ஏற்படுத்தும் பேராற்றல் உடையவனே உமது இறைவன். அதே சமயத்தில் அனைவரும் பாதுகாப்பாக வாழ வைக்க ஏற்பாடு செய்திருப்பது இறைவனின் அளவற்ற இரக்க குணநலத்தை பிரதிபலிக்கிறது.


كَذَّبَتْ قَوْمُ نُوحٍ ٱلْمُرْسَلِينَ.

26:105. அதே போன்று நூஹ்வுடைய சமுகத்தாரும் இறைவழிகாட்டுதலை ஏற்க மறுத்து அவற்றை பொய்யென கூறி வந்தார்கள்.


إِذْ قَالَ لَهُمْ أَخُوهُمْ نُوحٌ أَلَا تَتَّقُونَ.

26:106. அதே சமுதாயத்தில் பிறந்து வளர்ந்த நூஹ் நபி, “இறைவனின் அறிவுரைகளுக்கு எதிராக செயல்படுகிறீர்களே! உங்களுடைய தீய செயல்களால் ஏற்படும் விபரீத விளைவுகளை எண்ணி அதற்கு அஞ்ச மாட்டீர்களா?” என்று தம் சமூகத்தாரிடம் கேட்டு வந்தார்.


إِنِّى لَكُمْ رَسُولٌ أَمِينٌۭ.

26:107. “நிச்சயமாக நான் கூறும் அறிவுரைகள் யாவும் இறைவன் புறத்திலிருந்து கிடைக்கப் பெற்றவை ஆகும். அந்த வழிகாட்டுதல்கள் உங்களை அமைதியான வாழ்வின் பக்கம் அழைத்துச் செல்கின்றன” என்று மக்களிடம் கூறி வந்தார்.


فَٱتَّقُوا۟ ٱللَّهَ وَأَطِيعُونِ.

26:108. எனவே அல்லாஹ்வுக்கு அஞ்சி, எனக்கு வஹீ மூலம் கிடைத்துள்ள அறிவுரைகளை ஏற்று அதன்படி வாழுங்கள்.


وَمَآ أَسْـَٔلُكُمْ عَلَيْهِ مِنْ أَجْرٍ ۖ إِنْ أَجْرِىَ إِلَّا عَلَىٰ رَبِّ ٱلْعَٰلَمِينَ.

26:109. இவையாவும் நான் என் சுய இலாபத்திற்காக எடுத்துக் கூறவில்லை. உங்களுடைய நலனுக்காகத் தான் கூறுகிறேன். எனக்குரிய வாழ்வாதாரங்கள் என் இறைவன் புறத்திலிருந்து எனக்கு கிடைத்து வருகின்றன.


فَٱتَّقُوا۟ ٱللَّهَ وَأَطِيعُونِ.

26:110. ஆகவே அல்லாஹ் நிர்ணயித்துள்ள மனித செயலுக்கேற்ற விளைவுகள் என்ற சட்ட விதிமுறைகளுக்கு அஞ்சுங்கள். எனக்கு கிடைத்துள்ள இறைவனின் அறிவுரையின்படி செயல்படுங்கள்.
ஆனால் அவர்களோ அவருடைய அறிவுரையை ஏற்று நடப்பதற்குப் பதிலாக அவருடைய அறிவுரையை கேட்டு நடப்பவர்களின் வாழ்க்கைத் தரத்தைப் பற்றி விமர்சித்து வந்தார்கள்.


۞ قَالُوٓا۟ أَنُؤْمِنُ لَكَ وَٱتَّبَعَكَ ٱلْأَرْذَلُونَ.

26:111. “பின்தங்கிய நிலையில் உள்ளவர்கள் மட்டும் உம்மை பின்பற்றும் போது, நாங்கள் உம் பேச்சை எப்படி நம்பி ஏற்றுக் கொள்வது?” என்று கேட்கலானார்கள்.


قَالَ وَمَا عِلْمِى بِمَا كَانُوا۟ يَعْمَلُونَ.

26:112. அதற்கு அவர், “என்னிடம் வருபவர்கள் என்ன தொழிலில் ஈடுபட்டுள்ளார்கள் என்பதைப் பற்றி நான் கேட்டுக் கொண்டிருப்பதில்லை. அது எனக்கு அவசியமும் இல்லை” என்று பதில் கூறினார்.
இங்கு வருபவர்கள் எந்த அளவுக்கு மார்க்க விஷயத்தில் கவனம் செலுத்துகிறார்கள் என்பதும் எந்த அளவுக்கு அவற்றை பேணி நடக்கிறார்கள் என்பதுமே எனக்கு முக்கியமானவை. ஏனெனில்


إِنْ حِسَابُهُمْ إِلَّا عَلَىٰ رَبِّى ۖ لَوْ تَشْعُرُونَ.

26:113. “ஏழை பணக்காரன் என்ற ஒவ்வொருவருடைய நிலையும் அல்லாஹ் நிர்ணயித்துள்ள விதிமுறைகளின் படி அவரவர் உழைப்பிற்கு ஏற்ற வகையில் இருக்கும். அதன் கணக்கு வழக்கு அவனிடமே உள்ளது. அதைப் பற்றிய விசாரணை அவர்களிடமே நடைபெறும். இதை நீங்கள் அறியமாட்டீர்களா?” என்றார்.


وَمَآ أَنَا۠ بِطَارِدِ ٱلْمُؤْمِنِينَ.

26:114. “எனவே இறைவழிகாட்டுதலை ஏற்று அதன்படி நடப்பவர்களை என்னால் விரட்ட முடியாது” என்றார்.


إِنْ أَنَا۠ إِلَّا نَذِيرٌۭ مُّبِينٌۭ.

26:115. “இறைவன் வகுத்துள்ள “மனித செயலுக்கேற்ற இறுதி விளைவுகள்” என்ற சட்டத்தின்படி தவறான செயல்களால் ஏற்படும் விபரீத விளைவுகளைப் பற்றி எடுத்துரைத்து, முன்னெச்சரிக்கை செய்வதே என் பணியாகும். அவற்றை ஏற்றுக் கொள்வதும் ஏற்காததும் அவரவர் விருப்பமாகும்” என்றார்.


قَالُوا۟ لَئِن لَّمْ تَنتَهِ يَٰنُوحُ لَتَكُونَنَّ مِنَ ٱلْمَرْجُومِينَ.

26:116. இதற்குப் பதில் அளிக்க முடியாமல் போகவே, அவர்கள் அவரை மிரட்ட ஆரம்பித்து விட்டனர். அவர்கள், “நூஹே! நீ உன் மார்க்க பிரச்சாரத்தை இத்தோடு நிறுத்திக்கொள். அவ்வாறு நீ விலகிக் கொள்ளவில்லை என்றால், நாங்கள் உன்னை கல்லால் அடித்தே கொன்று விடுவோம்” என்று மிரட்டினார்கள்.


قَالَ رَبِّ إِنَّ قَوْمِى كَذَّبُونِ.

26:117. அதற்கு அவர், “என் இறைவனே! என்னுடைய சமூகத்தவர்கள் உன் அறிவுரைகளை பொய்யாக்கி விட்டார்கள்”


فَٱفْتَحْ بَيْنِى وَبَيْنَهُمْ فَتْحًۭا وَنَجِّنِى وَمَن مَّعِىَ مِنَ ٱلْمُؤْمِنِينَ.

26:118. “ஆகவே எனக்கும் அவர்களுக்கும் இடையே ஒரு தீர்க்கமான முடிவை ஏற்படுத்துவாயாக. எனக்கும் உன் வழிகாட்டுதல்களை ஏற்று நடப்பவர்களுக்கும் எதிராக அவர்கள் செய்யும் சூழ்ச்சிகளிலிருந்து காப்பாற்றுவாயாக” என்று பிரார்த்தித்தார்.


فَأَنجَيْنَٰهُ وَمَن مَّعَهُۥ فِى ٱلْفُلْكِ ٱلْمَشْحُونِ.

26:119. ஆகவே கப்பல் ஒன்றை தயாரிக்கச் செய்து (பார்க்க 11:36) அவரையும் அவருடைய தோழர்களையும் அதில் ஏற்றி காப்பாற்றினோம்.


ثُمَّ أَغْرَقْنَا بَعْدُ ٱلْبَاقِينَ.

26:120. அதன்பின் அங்கு ஏற்பட்ட பிரளயத்தில் மற்றவர்கள் மூழ்கிப் போனார்கள்.


إِنَّ فِى ذَٰلِكَ لَءَايَةًۭ ۖ وَمَا كَانَ أَكْثَرُهُم مُّؤْمِنِينَ.

26:121. நிச்சயமாக இந்த வரலாற்று நிகழ்வில் படிப்பினைகள் உள்ளன. ஆனால் பெரும்பாலோர் அதைப் பற்றி சிந்தித்து ஏற்றுக் கொள்வதில்லை.
அனைவரையும் சீறும் சிறப்புமாக வாழ வைப்பதே இறைவனின் செயல்திட்டமாகும். இதற்காக இறைவன், நபியின் மூலம் வழிகாட்டுதலை எடுத்துரைக்கின்றான். ஆனால் மனிதன் அவற்றின் உண்மை நிலையை ஆய்ந்தறிந்து அதன்படி வாழ முன்வருவதில்லை. முன்னோர்களின் வழிமுறை என கண்மூடித்தனமாக வாழ்வதால் ஆபத்துக்களை எதிர்கொள்ளும் சக்தியை இழக்க நேரிடுகிறது. நூஹ் நபியின் அறிவுரைகளை ஏற்று நடந்திருந்தால் அவர்களும் பாதுகாப்பாக மீண்டு இருப்பார்கள். இன்றைய நவீன காலத்திலும் இதே சட்டம் பொருந்தும். பூகம்பம் சுனாமி போன்ற இயற்கை ஆபத்துகள் ஏற்பட்டால் அவற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை செய்து கொள்ள வேண்டும். (விளக்கத்திற்குப் பார்க்க 7:79)


وَإِنَّ رَبَّكَ لَهُوَ ٱلْعَزِيزُ ٱلرَّحِيمُ.

26:122.ஆக மனிதன் எப்படி செயல்படுகின்றானோ அதற்கேற்றவாறு விளைவுகளை ஏற்படுத்தும் பேராற்றலுடையவனே உமது இறைவன். அதே சமயத்தில் அனைவரும் பாதுகாப்பாக வாழ வைக்க ஏற்பாடு செய்திருப்பது இறைவனின் அளவற்ற இரக்க குணநலத்தையே பிரதிபலிக்கிறது.


كَذَّبَتْ عَادٌ ٱلْمُرْسَلِينَ.

26:123. அதே போன்று வரலாற்று நிகழ்வுகளில் ‘ஆது’ கூட்டத்தாரின் வரலாறும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். அவர்களும் இறைவழிகாட்டுதலை எடுத்துரைத்த தூதரை பொய்ப்பித்தார்கள்.


إِذْ قَالَ لَهُمْ أَخُوهُمْ هُودٌ أَلَا تَتَّقُونَ.

26:124. அந்த சமுதாயத்திற்கு இறைவழிகாட்டுதலை எடுத்துரைக்க வந்தவரே ஹூது என்பவர் ஆவார். அவரும் அதே சமுதாயத்தில் பிறந்து வளர்ந்தவர். அவர் தம் சமூகத்தாரிடம் இறைச் சட்டங்களுக்கு மாற்றமாக செயல்படுவதால் ஏற்படும் தீய விளைவுகளுக்கு அஞ்சி, தவறான செயல்களை விட்டு விலகி வாழும்படி அறிவுறுத்தினார்.


إِنِّى لَكُمْ رَسُولٌ أَمِينٌۭ.

26:125. அந்த வழிகாட்டுதல்களை இறைவனின் சார்பாக, தான் எடுத்துரைப்பதாக அவர் கூறினார். அமைதியான வாழ்விற்கான வழிகாட்டுதலே அவை என்றும் கூறினார்.


فَٱتَّقُوا۟ ٱللَّهَ وَأَطِيعُونِ.

26:126. “ஆகவே அல்லாஹ்வின் வழிகாட்டுதலுக்கு எதிராக செயல்படுவதால் ஏற்படும் தீய விளைவுகளுக்கு அஞ்சுங்கள். இறைவழிகாட்டுதலை எடுத்துரைக்கும் என்னை பின்பற்றுங்கள்” என்று தம் சமுதாய மக்களிடம் எடுத்துரைத்து வந்தார்.


وَمَآ أَسْـَٔلُكُمْ عَلَيْهِ مِنْ أَجْرٍ ۖ إِنْ أَجْرِىَ إِلَّا عَلَىٰ رَبِّ ٱلْعَٰلَمِينَ.

26:127. “இந்த அறிவுரைகளை நான் என் சுய இலாபத்திற்காக எடுத்துரைக்கவில்லை. உங்களுடைய நன்மையைக் கருதியே எடுத்துரைக்கின்றேன். எனக்குத் தேவையான வாழ்வாதாரங்கள் இறைவன் புறத்திலிருந்து கிடைத்து வருகின்றன.


أَتَبْنُونَ بِكُلِّ رِيعٍ ءَايَةًۭ تَعْبَثُونَ.

26:128. நீங்கள் வீண் பெருமைக்காக ஒவ்வொரு உயரமான மலைக் குன்றுகளிலும் தேவையற்ற நினைவு ஆலயங்களை கட்டி வருகிறீர்களே! இதற்கு பதிலாக மக்களுக்கு பயன்படும் வகையில் வீடுகளை கட்டித் தரலாம் அல்லவா?”


وَتَتَّخِذُونَ مَصَانِعَ لَعَلَّكُمْ تَخْلُدُونَ.

26:129. “இவ்வாறே மாளிகைகளை கட்டிக் கொண்டு நிரந்தரமாக வாழ்ந்திடலாம் என நினைத்துக் கொண்டீர்களா?”
அதாவது பொது மக்களின் நலனில் அக்கறை காட்டாமல் தனி நபர் சுக வாழ்வில் கவனம் செலுத்தி வந்தால். சமுதாயத்தில் ஏற்றத்தாழ்வு ஏற்பட்டு சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு போய் விடும்.


وَإِذَا بَطَشْتُم بَطَشْتُمْ جَبَّارِينَ.

26:130. “இப்படிப்பட்ட ஏற்றத்தாழ்வின் காரணமாக உருவாகும் பலவீனர்களை, குற்றவாளிகளைப் போல் பிடித்து கொடூரமான முறையில் தண்டிக்கிறீர்களே!


فَٱتَّقُوا۟ ٱللَّهَ وَأَطِيعُونِ.

26:131. “ஆகவே அல்லாஹ்வின் வழிகாட்டுதலுக்கு எதிராக செயல்படுவதால் ஏற்படும் தீய விளைவுகளுக்கு அஞ்சுங்கள். இறைவழிகாட்டுதலை எடுத்துரைக்கும் என்னைப் பின்பற்றுங்கள்” என்று தம் சமுதாய மக்களிடம் எடுத்துரைத்து வந்தார்.


وَٱتَّقُوا۟ ٱلَّذِىٓ أَمَدَّكُم بِمَا تَعْلَمُونَ.

26:132. அல்லாஹ்வின் ஏற்பாடுகளைக் கொண்டே உங்களுக்கு பல்வேறு வாழ்வாதாரங்கள் கிடைக்கின்றன. இந்த விஷயம் உங்களுக்குத் தெரியும். எனவே அந்த ஏக இறைவனான அல்லாஹ்வின் வழிகாட்டுதலைப் பேணி நடந்து கொள்ளுங்கள்.


أَمَدَّكُم بِأَنْعَٰمٍۢ وَبَنِينَ.

26:133. உங்களிடமுள்ள கால்நடைகள், பிள்ளைகள் யாவும் அல்லாஹ்வின் புறத்திலிருந்து செய்யபட்ட ஏற்பாடுகளைக் கொண்டுதான் கிடைத்துள்ளன என்பதும் உங்களுக்கு தெரியும்.


وَجَنَّٰتٍۢ وَعُيُونٍ.

26:134. அதுமட்டுமின்றி நீங்கள் இன்புற்று வாழ தோட்டங்களும் நீர் வீழ்ச்சிகளும் உள்ளன.
இவற்றைக் கொண்டு நிலையான சந்தோஷங்களுடன் வாழ விரும்பினால், சமுதாய சமச்சீர்நிலையை தவற விடாதீர்கள். இது அல்லாஹ்வின் கட்டளையாகும். அவ்வாறு செய்யவில்லை என்றால்


إِنِّىٓ أَخَافُ عَلَيْكُمْ عَذَابَ يَوْمٍ عَظِيمٍۢ.

26:135. “இறைவனின் நியதிப்படி ஏற்படும் மனித செயல்களின் இறுதி விளைவுகள் தோற்றத்திற்கு வரும் கால கட்டத்தில் நீங்கள் பல வேதனைகளுக்கு ஆளாகிவிடுவீர்கள். இதை எண்ணி நான் அஞ்சுகிறேன்” என்றார்.
இவ்வாறாக ஹூது நபி தம் சமூகத்தாரிடம் அறிவுரைகளை எடுத்துரைத்து முன்னெச்சரிக்கை செய்து வந்தார். ஆனால் அவர்களில் பெரும்பாலோர் அவருடைய அறிவுரைகளுக்கு செவி சாய்க்கவில்லை.


قَالُوا۟ سَوَآءٌ عَلَيْنَآ أَوَعَظْتَ أَمْ لَمْ تَكُن مِّنَ ٱلْوَٰعِظِينَ.

26:136. அதற்கு அவர்கள், “நீர் எங்களுக்கு அறிவுரை செய்வதும் செய்யாதிருப்பதும் ஒன்றே ஆகும். நாங்கள் உம் பேச்சை ஒருபோதும் கேட்டு நடப்பதாக இல்லை” என்று கூறினர். ஏனெனில்


إِنْ هَٰذَآ إِلَّا خُلُقُ ٱلْأَوَّلِينَ.

26:137. “நீர் வேதனைகளைப் பற்றி கூறி அடிக்கடி எங்களை மிரட்டி வருகின்றீர். இது முன்னோர்களின் வழக்கமான வழிமுறையே ஆகும்” என்றனர்.


وَمَا نَحْنُ بِمُعَذَّبِينَ.

26:138. “நீர் சொல்வது போல எங்களுக்கு அப்படிப்பட்ட வேதனைகள் எதுவும் ஏற்படாது. எனவே நீர் சொல்வதெல்லாம் வெறும் மிரட்டல்தான்” என்றனர்.


فَكَذَّبُوهُ فَأَهْلَكْنَٰهُمْ ۗ إِنَّ فِى ذَٰلِكَ لَءَايَةًۭ ۖ وَمَا كَانَ أَكْثَرُهُم مُّؤْمِنِينَ.

26:139. இவ்வாறே ஹூது நபி எடுத்துரைத்த அறிவுரைகளைப் பொய்ப்பித்து தம் தவறான செயல்களில் நிலைத்துவிட்டனர். எனவே இறைவனின் நியதிப்படி ஏற்பட்ட அழிவில் அவர்கள் சிக்கிக்கொண்டனர். நிச்சயமாக இதில் படிப்பினைகள் பல உள்ளன. ஆனால் பெரும்பாலோர் இதைப் பற்றி சிந்தித்து செயல்படுவதில்லை.
இறைவழிகாட்டுதலின் நோக்கமே, வரும் முன் காப்போம் என்பதே ஆகும். அதாவது அழிவுகள் ஏற்படுவதற்கு முன்னமே தீய வழியில் செயல்படுவதை விட்டுவிடவேண்டும். அவ்வாறு அவர்கள் முன்னெச்சரிக்கையுடன் இறைவழிகாட்டுதலின்படி செயல்பட்டிருந்தால், அங்கு ஏற்பட்ட இயற்கை அழிவிலிருந்து அவர்கள் மீண்டு இருப்பார்கள். (பார்க்க 11:57) மேலும் சமூக நலப் பணிகளில் அக்கறை காட்டாமல் நினைவு சின்னங்களையும் ஆலயங்களையும் கட்டிக் கொண்டதில் அவர்களுக்கு பெருமை சேர்க்கவில்லை. மாறாக அவை அழிவிற்கு வழிவகுத்து விட்டன.


وَإِنَّ رَبَّكَ لَهُوَ ٱلْعَزِيزُ ٱلرَّحِيمُ.

26:140. மனிதன் எப்படி செயல்படுகின்றானோ அதற்கேற்றவாறு விளைவுகளை ஏற்படுத்தும் பேராற்றலுடையவனே உமது இறைவன். அதே சமயத்தில் அனைவரும் பாதுகாப்பாக வாழ வைக்க ஏற்பாடு செய்திருப்பதும் அளவற்ற இரக்க குணநலத்தையே பிரதிப்பலிக்கிறது.


كَذَّبَتْ ثَمُودُ ٱلْمُرْسَلِينَ.


26:141. அதே போன்று ‘சமூது’ சமுதாயத்தவர்களும் அல்லாஹ்வின் அறிவுரைகளை எடுத்துரைத்த நபியை பொய்ப்பித்தார்கள்.


إِذْ قَالَ لَهُمْ أَخُوهُمْ صَٰلِحٌ أَلَا تَتَّقُونَ.

26:142. இறைத் தூதர் சாலிஹ் நபி அதே சமுதாயத்தைச் சேர்ந்தவர் ஆவார். அவர் தம் சமூகத்தாரிடம் இறைச் சட்டங்களுக்கு மாற்றமாக செயல்படுவதால் ஏற்படும் தீய விளைவுகளை எண்ணி, அதற்கு அஞ்சி வாழும்படி அறிவுறுத்தினார்.


إِنِّى لَكُمْ رَسُولٌ أَمِينٌۭ.

26:143. அந்த வழிகாட்டுதல்கள் இறைவனின் சார்பாக எடுத்துரைப்பதாகவும், அமைதியான வாழ்விற்கான வழிகாட்டுதலே அவை என்றும் அவர் கூறி வந்தார்.


فَٱتَّقُوا۟ ٱللَّهَ وَأَطِيعُونِ.

26:144. “ஆகவே அல்லாஹ்வின் வழிகாட்டுதலுக்கு எதிராக செயல்படுவதால் ஏற்படும் தீய விளைவுகளுக்கு அஞ்சுங்கள். இறைவழிகாட்டுதலை எடுத்துரைக்கும் என்னை பின்பற்றுங்கள்” என்று அச்சமுதாய மக்களிடம் எடுத்துரைத்து வந்தார்.


وَمَآ أَسْـَٔلُكُمْ عَلَيْهِ مِنْ أَجْرٍ ۖ إِنْ أَجْرِىَ إِلَّا عَلَىٰ رَبِّ ٱلْعَٰلَمِينَ.

26:145. “இந்த அறிவுரைகளை நான் என் சுய இலாபத்திற்காக எடுத்துரைக்கவில்லை. உங்களுடைய நன்மையைக் கருதியே எடுத்துரைக்கின்றேன். எனக்குத் தேவையான வாழ்வாதாரங்கள் இறைவன் புறத்திலிருந்து கிடைத்து வருகின்றன” என்றார்.


أَتُتْرَكُونَ فِى مَا هَٰهُنَآ ءَامِنِينَ.

26:146. “சமுதாய சமச்சீர்நிலையை சீர்குலைக்கும் வகையில் செயல்பட்டுக் கொண்டு நிரந்தரமாக சுகபோகங்களுடன் வாழ்ந்திடலாம் என்று எண்ணிக் கொண்டீர்களா? உங்களுடைய தவறான செயல்களைப் பற்றி கேள்விக் கணக்கு இல்லை என எண்ணிக் கொண்டீர்களா?”


فِى جَنَّٰتٍۢ وَعُيُونٍۢ.

26:147. “நீங்கள் இன்புற்று வாழ தோட்டங்களும் நீரூற்றுகளும் உள்ளன”


وَزُرُوعٍۢ وَنَخْلٍۢ طَلْعُهَا هَضِيمٌۭ.

26:148. “உங்கள் வேளாண்மையும் தானிய வகைகளும் கொத்துக் கொத்தாக விளையும் மிருதுவான பேரீச்ச மரங்களும் உள்ளன”


وَتَنْحِتُونَ مِنَ ٱلْجِبَالِ بُيُوتًۭا فَٰرِهِينَ.

26:149. “ஆடம்பரமாக வாழ மலைகளை குடைந்து மாளிகைகளை அமைத்துக் கொள்ளவும் செய்கிறீர்கள்”
இவை எல்லாம் மனித வாழ்விற்கு முக்கியமானவை தான். ஆனால் இச்செல்வங்களை தனி நபர் சுகபோகங்களுக்காக மட்டும் பயன்படுத்திக் கொண்டால், சமுதாய சீரழிவுகள் ஏற்பட்டு வருகின்றன. இந்த செல்வங்கள் எல்லாம் காலப் போக்கில் உங்களை விட்டு பறிபோய் விடும். அதாவது இவை உங்களிடம் நிரந்தரமாக இருக்காது.


فَٱتَّقُوا۟ ٱللَّهَ وَأَطِيعُونِ.

26:150. “ஆகவே அல்லாஹ்வின் வழிகாட்டுதலுக்கு எதிராக செயல்படுவதால் ஏற்படும் விளைவுகளுக்கு அஞ்சுங்கள். இறைவழிகாட்டுதலை எடுத்துரைக்கும் என்னை பின்பற்றுங்கள்” என்று அச்சமுதாய மக்களிடம் எடுத்துரைத்து வந்தார்.


وَلَا تُطِيعُوٓا۟ أَمْرَ ٱلْمُسْرِفِينَ.

26:151. “இன்னும் ஆடம்பரமாக செலவழித்துக் கொண்டு வரம்பு மீறின செயலில் ஈடுபட்டுள்ளோரை பின்பற்றாதீர்கள்”


ٱلَّذِينَ يُفْسِدُونَ فِى ٱلْأَرْضِ وَلَا يُصْلِحُونَ.

26:152. “ஏனெனில் அவர்கள் சமுதாய நல்லிணக்கத்தைப் பற்றி அக்கறை காட்டாமல் ஏற்றத் தாழ்வுகளை ஏற்படுத்தி நாட்டில் குழப்பத்தை உண்டாக்கவே விரும்புகிறார்கள்”
இவ்வாறாக சாலிஹ் நபி தம் சமூகத்தவர்களுக்கு போதித்து வந்தார். ஆனால் அவர்களில் பெரும்பாலோர் அவருடைய அறிவுரைகளுக்கு செவி சாய்க்கவில்லை.


قَالُوٓا۟ إِنَّمَآ أَنتَ مِنَ ٱلْمُسَحَّرِينَ.

26:153. அச்சமுதாய மக்கள், “உண்மையிலேயே உன் பேச்சுகள் யாவும் மக்களை மயக்கி ஏமாற்றும் வகையில் உள்ளன” என்றனர்.


مَآ أَنتَ إِلَّا بَشَرٌۭ مِّثْلُنَا فَأْتِ بِـَٔايَةٍ إِن كُنتَ مِنَ ٱلصَّٰدِقِينَ.

26:154. “உம்மைப் பார்த்தால், எங்களைப் போன்ற ஒரு சாதாரண மனிதராகவே இருக்கின்றீர். ஆனால் எங்களுக்கு அழிவு ஏற்பட்டு விடும் என்று அடிக்கடி மிரட்டி வருகின்றீர். அது உண்மை என்றால் நீர் ஓர் அத்தாட்சியைக் கொண்டு வந்து அதை நிரூபித்துக் காட்டும்” என்றனர்.
“தற்சமயம் சமுதாயத்தில் இருப்போர் இல்லாதோர் என்ற வேற்றுமை அதிகரித்து இருப்பதோடு, நலிந்தோர் நசுக்கப்பட்டும் வருகிறார்கள். இது நீடித்தால் நிலைமை மோசமாகி அழிவை சந்தித்துக் கொள்வீர்கள். எனவே சமுதாய ஒற்றுமையைக் கட்டிக் காத்து சமச் சீர்நிலையை கொண்டுவர நான் ஒரு யோசனை கூறுகின்றேன்” என்றார்.


قَالَ هَٰذِهِۦ نَاقَةٌۭ لَّهَا شِرْبٌۭ وَلَكُمْ شِرْبُ يَوْمٍۢ مَّعْلُومٍۢ.

26:155. “அதன் அடையாளமாக இந்த பெண் ஒட்டகத்தை உங்கள் முன் கொண்டு வந்திருக்கிறேன். ஓவ்வொரு பிரிவினருக்கும் தண்ணீர் கிடைக்க அவரவருக்கு ஒரு சுற்று வரும். அதன்படி ஒவ்வொரு பிரிவினரும் முறைப்படி தண்ணீரைப் பயன்படுத்திக் கொள்ளட்டும். நான் அறிமுகப்படுத்திய ஒட்டகமும் அதன் சுற்றுப்படி தண்ணீர் பருகட்டும். எதுவரையில் இந்த ஒட்டகம் பாதுகாப்போடு இருக்கிறதோ, அதுவரையில் உங்களிடையே சமூகக் கட்டுப்பாடு நிலைத்திருப்பதாக பொருள்படும்” என்றார் (பார்க்க 11:64)


وَلَا تَمَسُّوهَا بِسُوٓءٍۢ فَيَأْخُذَكُمْ عَذَابُ يَوْمٍ عَظِيمٍۢ.

26:156. “எனவே அந்த ஒட்டகத்தை நீங்கள் யாதொரு தீங்கும் செய்யாதீர்கள். அவ்வாறு நீங்கள் தீங்கிழைத்தால் சமுதாயக் கட்டுப்பாடு சீர்குலைந்து அழிவை சந்திப்பீர்கள். அதன் வேதனைகளில் சிக்கிக்கொள்வீர்கள்” என்றார்.


فَعَقَرُوهَا فَأَصْبَحُوا۟ نَٰدِمِينَ.

26:157. ஆனால் அவர்களோ அந்த ஒட்டக ஏற்பாட்டினை கட்டிக் காக்கவில்லை. சிறிது காலத்திலேயே அதை செயலிழக்க செய்து விட்டார்கள். இப்படியாக அவர்கள் தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொண்டார்கள்.


فَأَخَذَهُمُ ٱلْعَذَابُ ۗ إِنَّ فِى ذَٰلِكَ لَءَايَةًۭ ۖ وَمَا كَانَ أَكْثَرُهُم مُّؤْمِنِينَ.

26:158. எனவே அல்லாஹ் நிர்ணயித்த “மனித செயல்களுக்கேற்ற விளைவுகள்” என்ற சட்டப்படி அவர்களை வேதனைகள் பீடித்துக் கொண்டன. நிச்சயமாக இதில் உலக மக்களுக்கு படிப்பினைகள் உள்ளன. எனினும் பெரும்பாலோர் இதைப் பற்றி சிந்தித்து அதன்படி செயல்படுவதில்லை.
இன்றைய நவீன காலத்திலும் தண்ணீர் பற்றாக்குறை என்பது உலகளாவிய பிரச்னையாகும். இது நாடுகளுக்கிடையே நிலவுகின்ற மோதலுக்குக் காரணியாக இருக்கின்றது. நம் நாட்டிலும் காவேரி ஆற்றுப் பிரச்னையும் இன்று வரையில் தீர்க்கப்படாத பிரச்னையாக இருக்கிறது. சாலிஹ் நபி அம்மக்களுக்கு செய்த அறிவுரைப்படி தண்ணீரின் பங்கீட்டு முறையை கடைப்பிடித்து இருந்தால், அந்த பிரச்னை தீர்ந்து இருக்கும். காரணம் தண்ணீர் இறைவனின் அருட்கொடை என்பதை மக்கள் எண்ணிப் பார்ப்பதில்லை.
மேலும் நாட்டில் பிறப்பிக்கப்படுகின்ற சட்டம் சிறியதோ பெரியதோ அதை அனைவரும் பேணி நடந்து கொள்ள வேண்டும். இதில் ஏழை பணக்காரன் என்ற பேதங்கள் இருக்கக் கூடாது. இந்த சட்டங்களை மீறும் போது, சமுதாயத்தில் மோதல்கள் வலுக்க வழிகள் உண்டாகி விடுகின்றன. இதனால் சமுதாயக் கட்டுப்பாடு சீர்குலைந்து விடுகிறது. “அஸ்ஹாபுஸ் சப்து” என்று சொல்லப்படுகின்ற மீனவ குப்பத்தை சேர்ந்தவாக்ளுக்கும் அதே கதிதான் ஏற்பட்டது. (பார்க்க 2:65).


وَإِنَّ رَبَّكَ لَهُوَ ٱلْعَزِيزُ ٱلرَّحِيمُ.

26:159. ஆக மனிதன் எப்படி செயல்படுகின்றானோ, அதற்கேற்றவாறு நிலைமைகளை ஏற்படுத்தும் பேராற்றலுடையவனே உமது இறைவன். அதே சமயத்தில் அனைவரும் பாதுகாப்பாக வாழ வைக்க ஏற்பாடு செய்திருப்பதும் இறைவனின் அளவற்ற இரக்க குணநலத்தையே பிரதிப்பலிக்கிறது.


كَذَّبَتْ قَوْمُ لُوطٍ ٱلْمُرْسَلِينَ.

26:160. அதே போன்று இறைத் தூதர்களை பொய்ப்பித்தவர்கள் பட்டியலில் லூத் நபியின் சமூகத்தவர்களும் இடம் பெறுகின்றனர்.


إِذْ قَالَ لَهُمْ أَخُوهُمْ لُوطٌ أَلَا تَتَّقُونَ.

26:161. இறைத் தூதர் லூத் நபி தம் சமூகத்தாரிடம், இறைச் சட்டங்களுக்கு மாற்றமாக செயல்படுவதால் ஏற்படும் தீய விளைவுகளைப் பற்றி நினைத்து அதற்கு அஞ்சி வாழும்படி அறிவுறுத்தினார்.


إِنِّى لَكُمْ رَسُولٌ أَمِينٌۭ.

26:162. தான் அந்த வழிகாட்டுதல்களை இறைவனின் சார்பாக எடுத்துரைப்பதாகவும், அமைதியான வாழ்விற்கான வழிகாட்டுதலே அவை என்றும் அவர் கூறி வந்தார்.


فَٱتَّقُوا۟ ٱللَّهَ وَأَطِيعُونِ.

26:163. “ஆகவே அல்லாஹ்வின் வழிகாட்டுதலுக்கு எதிராக செயல்படுவதால் ஏற்படும் விளைவுகளுக்கு அஞ்சுங்கள். இறைவழிகாட்டுதலை எடுத்துரைக்கும் என்னை பின்பற்றுங்கள்” என்று அச்சமுதாய மக்களுக்கு எடுத்துரைத்து வந்தார்.


وَمَآ أَسْـَٔلُكُمْ عَلَيْهِ مِنْ أَجْرٍ ۖ إِنْ أَجْرِىَ إِلَّا عَلَىٰ رَبِّ ٱلْعَٰلَمِينَ.

26:164. “இந்த அறிவுரைகளை நான் என் சுய இலாபத்திற்காக எடுத்துரைக்க வில்லை. உங்களுடைய நன்மையைக் கருதியே எடுத்துரைக்கின்றேன். எனக்குத் தேவையான வாழ்வாதாரங்கள் இறைவன் புறத்திலிருந்து கிடைத்து வருகின்றன” என்றார்.


أَتَأْتُونَ ٱلذُّكْرَانَ مِنَ ٱلْعَٰلَمِينَ.

26:165. “உலகத்தாரில் இதற்கு முன் எவருமே செய்திராத மானக்கேடான செயலை செய்து வருகிறீர்ளே! (பார்க்க 29:28) நீங்கள் ஓரின சேர்க்கையில் ஈடுபடுகிறீர்களே!” என்று தம் சமூகத்தாரிடம் கடிந்து கூறி வந்தார்.


وَتَذَرُونَ مَا خَلَقَ لَكُمْ رَبُّكُم مِّنْ أَزْوَٰجِكُم ۚ بَلْ أَنتُمْ قَوْمٌ عَادُونَ.

26:166. “இன்னும் இறைவன் உங்களுக்காக படைத்துள்ள மனைவிமார்களை விட்டு விடுகிறீர்கள். இது மாபெரும் குற்றமல்லவா? உண்மையிலேயே நீங்கள் வரம்பு மீறின சமூகத்தாராகவே இருக்கிறீர்கள்” என்று குற்றம் சுமத்தினார்.


قَالُوا۟ لَئِن لَّمْ تَنتَهِ يَٰلُوطُ لَتَكُونَنَّ مِنَ ٱلْمُخْرَجِينَ.

26:167. “அதற்கு அவர்கள், “லூத்தே! நீ எங்களுடைய விஷயத்தில் தலையிடுவதை விட்டுவிடவில்லை என்றால் நிச்சயமாக நாங்கள் உம்மை ஊரைவிட்டு வெளியேற்றி விடுவோம்” என்று மிரட்டினார்கள்.


قَالَ إِنِّى لِعَمَلِكُم مِّنَ ٱلْقَالِينَ.

26:168. இதைக் கேட்ட லூத் நபி, “நீங்கள் செய்து வரும் செயல்கள் மிகவும் வெறுக்கத் தக்கவையே ஆகும். எனவே நான் அதை கடுமையாக எதிர்க்கிறேன்” என்றார்.


رَبِّ نَجِّنِى وَأَهْلِى مِمَّا يَعْمَلُونَ.

26:169. “என் இறைவனே! என்னையும் என்னை சார்ந்தவர்களையும் இத்தகைய தீயவர்களிலிருந்து காப்பாற்றுவாயாக” என்று தம் எண்ணங்களை இறைவனிடம் சமர்ப்பித்தார்.


فَنَجَّيْنَٰهُ وَأَهْلَهُۥٓ أَجْمَعِينَ.

26:170. அவ்வாறே இறைவன், தன் ஏற்பாட்டின்படி அவருக்கும் அவரை சார்ந்தவர்களுக்கும் முன்அறிவிப்பு செய்தியை அனுப்பி, அவர்களை காப்பாற்றினான். அங்கு ஏற்பட்ட எரிமலை பிழம்பில் அவர்கள் அனைவரும் புதைந்து விட்டனர்.


إِلَّا عَجُوزًۭا فِى ٱلْغَٰبِرِينَ.

26:171. இவ்வாறு தப்பித்தவர்களில் அவருடைய வயதான மனைவி இடம்பெறவில்லை (பார்க்க 7:83) ஏனெனில் அவருடைய மனைவி அந்த இடத்தைவிட்டு வெளியேற மறுத்துவிட்டாள்.


ثُمَّ دَمَّرْنَا ٱلْءَاخَرِينَ.

26:172. பின்னர் அவளும் மற்றவர்கள் அனைவரும் அழிந்து போனார்கள்.


وَأَمْطَرْنَا عَلَيْهِم مَّطَرًۭا ۖ فَسَآءَ مَطَرُ ٱلْمُنذَرِينَ.

26:173. இன்னும் இறைவனின் நியதிப்படி ஏற்பட்ட எறிமலை பிழம்பில் ‘சதூம்’ என்ற அந்த ஊர் அழிந்து போனது. அச்சமூட்டி எச்சரிக்கப்பட்டவர்கள் மீது பொழிந்த அந்த கல்மாரி மழை மிகவும் கொடூரமாக இருந்தது.


إِنَّ فِى ذَٰلِكَ لَءَايَةًۭ ۖ وَمَا كَانَ أَكْثَرُهُم مُّؤْمِنِينَ.

26:174. நிச்சயமாக இதில் படிப்பினைகள் உள்ளன. எனினும் பெரும்பாலோர் இதைப்பற்றி சிந்தித்து செயல்படுவதில்லை.
அதாவது ஓரினச் சேர்க்கை என்பது இயற்கை சட்டத்திற்கு புறம்பானது மட்டும் அல்ல. மனிதனை மனித நேயத்தை விட்டு மிருகத்தை விட மோசமான நிலைக்கு தள்ளி விடும். இந்த அளவுக்கு கீழ்தரமாக நடப்பவர்கள் நாட்டில் வேறு என்ன அநியாயத்தைத் தான் செய்யாமல் இருப்பார்கள். எல்லா வகையான தகாத செயல்களையும் செய்து வந்தார்கள். (பார்க்க 29:29) எனவே அவர்கள் எல்லா வகையிலும் எல்லையை மீறி சென்று விட்டனர். இருப்பினும் அம்மக்களுக்கு அங்கு நேரவிருக்கும் பேரழிவைப் பற்றி லூத் நபி மூலம் முன்எச்சரிக்கை செய்யப்பட்டது. நபியின் எல்லா அறிவுரைகளையும் அலட்சியப் படுத்தியதைப் போல், இந்த எச்சரிக்கையையும் அவர்கள் அலட்சியப்படுத்தி அழிவில் சிக்கிக் கொண்டனர்.
மேலும் மனிதன் தீய பழக்கத்திற்கு ஆளானால், அதிலிருந்து விடுபட மிகவும் கடினமாகி விடும். எனவேதான் இறைவனின் வழிகாட்டுதல்கள் மனிதனை தீய செயல்களிலிருந்து விலகியிருக்க அறிவுறுத்துகிறது. (பார்க்க 5:90)


وَإِنَّ رَبَّكَ لَهُوَ ٱلْعَزِيزُ ٱلرَّحِيمُ.

26:175. ஆக மனிதன் எப்படி செயல்படுகின்றானோ, அதற்கேற்றவாறு விளைவுகளை ஏற்படுத்தும் பேராற்றலுடையவனே உமது இறைவன். அதே சமயத்தில் அனைவரும் பாதுகாப்பாக வாழ வைக்க ஏற்பாடு செய்திருப்பதும் இறைவனின் அளவற்ற இரக்க குணநலத்தை பிரதிப்பலிக்கிறது.


كَذَّبَ أَصْحَٰبُ لْـَٔيْكَةِ ٱلْمُرْسَلِينَ.

26:176. அதே போன்று, “அஸ்ஹாபுல் ஐக்கது” என்கிற மத்யன்வாசிகளும் இறைத் தூதர்களை பொய்ப்பித்து வந்தனர். (11:84)


إِذْ قَالَ لَهُمْ شُعَيْبٌ أَلَا تَتَّقُونَ.

26:177. அவர்களிடம் ஷுஐப் நபி, இறைச் சட்டங்களுக்கு மாற்றமாக செயல்படுவதால் ஏற்படும் தீய விளைவுகளைப் பற்றி எடுத்துரைத்து அவற்றிற்கு அஞ்சி வாழும்படி அறிவுறுத்தி வந்தார்.


إِنِّى لَكُمْ رَسُولٌ أَمِينٌۭ.

26:178. தான், அந்த வழிகாட்டுதல்கள் இறைவனின் சார்பாக எடுத்துரைப்பதாகவும், அமைதியான வாழ்விற்கான வழிகாட்டுதலே அவை என்றும் அவர் கூறி வந்தார்.


فَٱتَّقُوا۟ ٱللَّهَ وَأَطِيعُونِ.

26:179. “ஆகவே அல்லாஹ்வின் வழிகாட்டுதலுக்கு எதிராக செயல்படுவதால் ஏற்படும் விளைவுகளுக்கு அஞ்சுங்கள். இறைவழிகாட்டுதலை எடுத்துரைக்கும் என்னைப் பின்பற்றுங்கள்” என்று அச்சமுதாய மக்களுக்கு எடுத்துரைத்து வந்தார்.


وَمَآ أَسْـَٔلُكُمْ عَلَيْهِ مِنْ أَجْرٍ ۖ إِنْ أَجْرِىَ إِلَّا عَلَىٰ رَبِّ ٱلْعَٰلَمِينَ.

26:180. “இந்த அறிவுரைகளை நான் என் சுய இலாபத்திற்காக எடுத்துரைக்க வில்லை. உங்களுடைய நன்மையைக் கருதியே எடுத்துரைக்கின்றேன். எனக்குத் தேவையான வாழ்வாதாரங்கள் இறைவன் புறத்திலிருந்து கிடைத்து வருகின்றன” என்றார்.


۞ أَوْفُوا۟ ٱلْكَيْلَ وَلَا تَكُونُوا۟ مِنَ ٱلْمُخْسِرِينَ.

26:181. “உங்களுடைய தவறான செயல்களை விட்டுவிடுங்கள். கொடுக்கல் வாங்கல் விஷயத்திலும் அளவு எடையிலும் எந்த குறையும் வைக்காதீர்கள். சரியான அளவை கடைப்பிடித்து வாருங்கள்.”


وَزِنُوا۟ بِٱلْقِسْطَاسِ ٱلْمُسْتَقِيمِ.

26:182. “நாட்டில் பொருளாதரம் மற்றும் சமூக சமச்சர்நிலை நிலைக்க வேண்டும் என்றால் மக்களின் அத்தியாவசியத் தேவைகளில் எந்த குறைப்பாடும் இருக்கக் கூடாது. நீதித் துறையும் மிகவும் நியாயமான முறையில் செயல்பட வேண்டும்”


وَلَا تَبْخَسُوا۟ ٱلنَّاسَ أَشْيَآءَهُمْ وَلَا تَعْثَوْا۟ فِى ٱلْأَرْضِ مُفْسِدِينَ.

26:183. “எனவே அளவு நிலுவை விஷயத்தில் கவனக் குறைவாக இருந்து, ஏழை எளிய மக்களுக்கு அநீதி இழைத்து விடாதீர்கள். அவர்களுக்கு கொடுக்க வேண்டிய பொருட்களை நீங்கள் குறைத்து விடாதீர்கள். இல்லாவிடில் நாட்டில் ஏற்றத்தாழ்வு ஏற்பட்டு குழப்பங்கள் தான் அதிகரிக்கும். இப்படி ஒரு நிலையை ஏற்படுத்தி விடாதீர்கள். (பார்க்க 11:85)
அதாவது தற்சமயம் நடைபெற்று வரும் ஆட்சியமைப்பில் இந்த குறைகள் உள்ளன. அவற்றை சரிசெய்து தக்க சட்டங்களை இயற்றி ,சமுதாய சமச் சீர்நிலையை ஏற்படுத்துங்கள் என்றார்.


وَٱتَّقُوا۟ ٱلَّذِى خَلَقَكُمْ وَٱلْجِبِلَّةَ ٱلْأَوَّلِينَ.

26:184. “அன்றியும் உங்களையும் உங்களுடைய முன்னோர்களையும் படைத்த இறைவனின் வழிகாட்டுதலைப் பேணி நடந்து கொள்ளுங்கள். அதற்கு மாற்றமாக செயல்படுவதால் ஏற்படும் விபரீத விளைவுகளுக்கு அஞ்சி செயல்படுங்கள்.”
இவ்வாறாக ஷுஐப் நபி தம் சமூகத்தவர்க்கு பலமுறை அறிவுருத்தி வந்தார். ஆனால் அவருடைய சமூகத்தவரோ அவருடைய அறிவுரைகளை ஏற்றுக் கொள்ளவில்லை.


قَالُوٓا۟ إِنَّمَآ أَنتَ مِنَ ٱلْمُسَحَّرِينَ.

26:185. அவர்கள், “உண்மையிலேயே உன் பேச்சுகள் யாவும் மக்களை மயக்கி ஏமாற்றும் வகையில் உள்ளன”


وَمَآ أَنتَ إِلَّا بَشَرٌۭ مِّثْلُنَا وَإِن نَّظُنُّكَ لَمِنَ ٱلْكَٰذِبِينَ.

26:186. “உம்மை பார்த்தால் எங்களைப் போன்ற ஒரு சாதாரண மனிதராகவே இருக்கின்றீர். எனவே உம் பேச்சில் உண்மை எதுவும் இருப்பதாக நாங்கள் கருதவில்லை” என்று கூறினார்கள்.


فَأَسْقِطْ عَلَيْنَا كِسَفًۭا مِّنَ ٱلسَّمَآءِ إِن كُنتَ مِنَ ٱلصَّٰدِقِينَ.

26:187. “நீ பேசுவதை பார்த்தால், ஏதோ வானுலக தொடர்பு உமக்கு உள்ளதாக கூறுகின்றீர். மேலும் எங்களுக்கு அழிவு ஏற்பட்டுவிடும் என்று அடிக்கடி மிரட்டி வருகிறீர். இது உண்மை என்றால் அந்த வேதனையின் சிறு பகுதியை எங்கள் மேல் விழச் செய்து காட்டு” என்றனர்.


قَالَ رَبِّىٓ أَعْلَمُ بِمَا تَعْمَلُونَ.

26:188. அதற்கு ஷுஐப் நபி, “நான் எப்படி வானத்திலிருந்து வேதனையை கொண்டு வர முடியும்? நீங்கள் செய்து கொண்டிருப்பது இறைவனுக்குத் தெரியாமல் இல்லை. அதன் விளைவுகள் அதற்குரிய நேரத்தில் நிச்சயமாக ஏற்படும்” என்று பதிலளித்தார்.


فَكَذَّبُوهُ فَأَخَذَهُمْ عَذَابُ يَوْمِ ٱلظُّلَّةِ ۚ إِنَّهُۥ كَانَ عَذَابَ يَوْمٍ عَظِيمٍ.

26:189. அவ்வாறே அவர்கள் ஷுஐப் நபியின் அறிவுரைகளை பொய்ப்பித்து, தம் தவறான செயல்களில் நிலைத்திருந்தனர். எனவே அவர்களுடைய தீய செயல்களின் விளைவாக அவர்களை வேதனைகள் நாலாப்புறமும் சூழ்ந்து கொண்டன. மேலும் அங்கு ஏற்பட்ட பூகம்பத்தில் அவர்கள் அனைவரும் புதைந்து விட்டனர் (பார்க்க 11:94-95)


إِنَّ فِى ذَٰلِكَ لَءَايَةًۭ ۖ وَمَا كَانَ أَكْثَرُهُم مُّؤْمِنِينَ.

26:190. நிச்சயமாக சிந்தித்து செயலாற்றுபவர்களுக்கு இதில் பல படிப்பினைகள் உள்ளன. எனினும் பெரும்பாலோர் இதை ஏற்றுக் கொள்வதில்லை.
அதாவது நாட்டில் சமுதாய ஒழுக்க மாண்புகளும், மனித நேயமும் காக்கப்பட வேண்டும் என்றால் பொருளாதார சமச் சீர்நிலையையும் நீதித் துறையையும் கட்டிக் காக்க வேண்டும். இறைவழிகாட்டுதல் இவை இரண்டையும் கவனத்தில் கொண்டு செயல்பட அறிவுருத்துகிறது. எனவே மக்கள் சுயநலத்துடன் செயல்படுவதை விட்டுவிட்டு இறை வழிகாட்டுதலின் படி பொது நலத்தையும் கவனத்தில் கொண்டு செயல்பட முன்வரவேண்டும். அவ்வாறு செயல்படவில்லை என்றால், நாட்டில் இருப்போர் இல்லாதோர் என்ற வேற்றுமை விரிவடைந்து பல பிரச்னைகள் உருவாகி நிம்மதியாக வாழ முடியாமல் போய்விடும். இறுதியில் அத்தகைய நாடு அழிவை சந்திக்கும். இதுவே இறைவன் நிலை நிறுத்தியுள்ள நிரந்தர சட்டமாகும்.


وَإِنَّ رَبَّكَ لَهُوَ ٱلْعَزِيزُ ٱلرَّحِيمُ.

26:191. ஆக மனிதன் எப்படி செயல்படுகின்றானோ, அதற்கேற்றவாறு விளைவுகளை ஏற்படுத்தும் பேராற்றல் உடையவனே உமது இறைவன். அதே சமயத்தில் அனைவரும் பாதுகாப்பாக வாழ வைக்க ஏற்பாடு செய்திருப்பதும் இறைவனின் அளவற்ற இரக்க குணநலத்தை பிரதிப்பலிக்கிறது


وَإِنَّهُۥ لَتَنزِيلُ رَبِّ ٱلْعَٰلَمِينَ.

26:192. முன்சென்ற இறைத்தூதர்களுக்கு இறைவழிகாட்டுதல் அளிக்கப்பட்டது போல, இந்த வேதமான குர்ஆனும் இறைவன் புறத்திலிருந்து இறக்கி அருளப்படுகிறது.


نَزَلَ بِهِ ٱلرُّوحُ ٱلْأَمِينُ.

26:193. ‘ரூஹுல் அமீன்’ எனப்படும் இறைச் செய்தியில் எவ்வித மாற்றத்தையும் செய்யாமல், உள்ளது உள்ளபடியே எடுத்து சொல்லும் சக்தியாக இருக்கும் ஜிப்ரயீல் மூலமாக இந்த குர்ஆன் இறக்கி அருளப்படுகிறது.


عَلَىٰ قَلْبِكَ لِتَكُونَ مِنَ ٱلْمُنذِرِينَ.

26:194. இறைவழிகாட்டுதலை எடுத்துரைப்பவரே! இந்த குர்ஆன் உமது உள்ளத்தில் இறக்கி அருளப்படுகின்றன. (பார்க்க 2:97) இதன் நோக்கமே இதைக் கொண்டு தவறான செயல்கள் எவை என்பதையும், அதனால் ஏற்படும் பாதிப்புகளைப் பற்றியும் உலக மக்களுக்கு எடுத்துரைத்து முன்னெச்சரிக்கை செய்வதே ஆகும்.


بِلِسَانٍ عَرَبِىٍّۢ مُّبِينٍۢ.

26:195. எனவே தான் இந்தக் குர்ஆன் நீங்கள் பேசும் மொழியிலேயே தெளிவாக இறக்கி அருளப்படுகிறது.


وَإِنَّهُۥ لَفِى زُبُرِ ٱلْأَوَّلِينَ.

26:196. இதிலுள்ள அறிவுரைகள் யாவும் இதற்கு முன்வந்த வேதங்களிலும் வந்தவையே ஆகும்.


أَوَلَمْ يَكُن لَّهُمْ ءَايَةً أَن يَعْلَمَهُۥ عُلَمَٰٓؤُا۟ بَنِىٓ إِسْرَٰٓءِيلَ.

26:197. பனீ இஸ்ராயீல் சமூகத்திலுள்ள மார்க்க அறிஞர்களுக்கு இந்த உண்மை நன்றாகவே தெரியும். இதுவும் நம் கூற்றிற்கு அத்தாட்சி ஆகும் அல்லவா?
இந்த வேத அறிவுரைகள் மனித சிந்தனையால் உருவானவை அல்ல என்பதும் அவர்களுக்குத் தெரியும். தெரிந்திருந்தும் என்ன பயன்? இந்த இறைத் தூதர் நம் இனத்தை சேர்ந்வராக இல்லையே என்ற பொறாமை தான் அவர்களுக்கு (பார்க்க 2:98-99). எனவே


وَلَوْ نَزَّلْنَٰهُ عَلَىٰ بَعْضِ ٱلْأَعْجَمِينَ.

26:198. இந்த வேதத்தை அன்னிய மொழியில் இறக்கி அருளியிருந்தாலும்


فَقَرَأَهُۥ عَلَيْهِم مَّا كَانُوا۟ بِهِۦ مُؤْمِنِينَ.

26:199. அதனை இறைத்தூதர் ஓதிக் காட்டி இருந்தாலும், அந்த அறிவுரைகளை அவர்கள் ஏற்றுக் கொள்வதாக இல்லை.
அதாவது அவர்கள் இறைவழிகாட்டுதலை ஏற்காததற்கு ஏதாவது ஒரு சாக்கு போக்கு சொல்வதே பழக்கமாக இருந்து வந்துள்ளது. அன்னிய மொழியில் இறக்கி அருளினால் ஏன் நம் தாய் மொழியில் இறக்கி அருளவில்லை என்பார்கள். தம் தாய் மொழியில் இறக்கி அருளினால் ஏன் அன்னிய மொழியில் இறக்கி அருளவில்லை என்பார்கள்.


كَذَٰلِكَ سَلَكْنَٰهُ فِى قُلُوبِ ٱلْمُجْرِمِينَ.

26:200. குற்றமுள்ள நெஞ்சங்களில் இத்தகைய மனப்பான்மை தான் இருக்கும்.


لَا يُؤْمِنُونَ بِهِۦ حَتَّىٰ يَرَوُا۟ ٱلْعَذَابَ ٱلْأَلِيمَ.

26:201. ஆக இந்தக் குர்ஆன் மூலம் செய்யப்படும் எச்சரிக்கையை அவர்கள் செவி சாய்ப்பதாக இல்லை. எனவே நோவினை செய்யும் வேதனைகளை அவர்கள் காணும் வரையில் இதைப் பற்றி சிந்திக்க மாட்டார்கள் போலும்.


فَيَأْتِيَهُم بَغْتَةًۭ وَهُمْ لَا يَشْعُرُونَ.

26:202. அவர்கள் செய்து வரும் தவறான செயல்களின் விளைவுகள், அறியாவண்ணம் ஏற்பட்டு வருகின்றன. அந்த விளைவுகள் அவர்கள் முன் தீடீரென தோற்றத்திற்கு வந்து நிற்கும்.


فَيَقُولُوا۟ هَلْ نَحْنُ مُنظَرُونَ.

26:203. அந்த கால கட்டத்தில் திருந்தி வாழ தமக்கு சிறிது கால அவகாசம் கொடுக்கப்படுமா என ஏங்குவார்கள்.


أَفَبِعَذَابِنَا يَسْتَعْجِلُونَ.

26:204. இதுதான் நடக்கப் போகும் உண்மையாகும். இதை அறிந்த பின்பும் இத்தகைய வேதனைகளுக்கா அவர்கள் அவசரப்படுகிறார்கள்?
அதாவது அதற்காகவா தவறான செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டிருக்கிறார்கள்?


أَفَرَءَيْتَ إِن مَّتَّعْنَٰهُمْ سِنِينَ.

26:205. அவர்களுடைய நிலைமையைக் கவனித்தீரா? அவர்களுக்கு மேலும் பல ஆண்டுகள் வரையில் சுகம் அனுபவிக்கச் செய்தாலும், அவர்கள் தம் போக்கை மாற்றிக் கொள்ளவே மாட்டார்கள்.


ثُمَّ جَآءَهُم مَّا كَانُوا۟ يُوعَدُونَ.

26:206. அதன்பின் அவர்களுடைய தவறான செயல்களின் விளைவாக வேதனைகள் வந்தடையும் போது,


مَآ أَغْنَىٰ عَنْهُم مَّا كَانُوا۟ يُمَتَّعُونَ.

26:207. அவர்கள் சேகரித்து வைத்த செல்வங்கள் யாவும் ஒரு பலனையும் தராது. அவர்கள் அந்த வேதனைகளை அனுபவித்துத் தான் ஆக வேண்டும்.


وَمَآ أَهْلَكْنَا مِن قَرْيَةٍ إِلَّا لَهَا مُنذِرُونَ.

26:208. இப்படியாக காலம் காலமாக உலகிலுள்ள ஒவ்வொரு சமூகத்தவர்க்கும் முன்னெச்சரிக்கை செய்யும் தூதர், இறைவன் புறத்திலிருநது வந்தே இருக்கிறார்கள். (பார்க்க 14:4, 17:15) அந்த அறிவுரைகளை ஏற்காதவர்கள் அழிவை சந்தித்தே இருக்கிறார்கள்.


ذِكْرَىٰ وَمَا كُنَّا ظَٰلِمِينَ.

26:209. அவ்வாறு முன்னெச்சரிக்கை செய்யாமல் எந்த ஊரையும் அழித்து விடுவது சிறந்த செயல் அல்ல. எனவே அவர்களுக்கு அறிவுரைகள் செய்து திருந்தி வாழ தக்க கால அவகாசம் அளிக்கப்பட்டது. ஆக இறைவன் புறத்திலிருந்து எவ்வித அநியாயமும் நடக்கவில்லை.
இப்போது இருப்பது இந்த குர்ஆனை ரூஹுல் அமீன் மூலம் இறக்கி அருளப்பட்டது என்பதைப் பற்றியது. இவை எல்லாம் பொய் என்கிறார்கள்.


وَمَا تَنَزَّلَتْ بِهِ ٱلشَّيَٰطِينُ.

26:210. இந்த குர்ஆன் மனித சிந்தனையில் உருவானது என அவர்கள் நினைக்கிறார்களா? அல்லது இதை ஒருவர் தன் விருப்பத்திற்கு ஏற்ப எழுதிக் கொண்டார் என நினைக்கிறார்களா?


وَمَا يَنۢبَغِى لَهُمْ وَمَا يَسْتَطِيعُونَ.

26:211. அப்படிப்பட்ட ஆற்றல் எந்த தனி மனிதருக்கும் தரப்படவில்லை. எனவே இதை யாரும் தன் சுய சிந்தனையுடன் கற்பனையாக எழுதிட முடியாது.
அதாவது கஷ்ஃப், இல்ஹாம் போன்றவற்றைக் கொண்டு மனிதன் இத்தகைய வழிகாட்டுதலை பெற்றுக் கொள்ள முடியும் என்று சிலர் கருதுகிறார்கள். கஷ்ஃப் அல்லது இல்ஹாம் என்றால் சில சொற்களை தினந்தோறும் உச்சரித்து வந்தால், ஒருவகை சக்தி கிடைத்து, கனவு மூலமாக இறைவனிடம் பேச முடியும், அதே சமயம் அத்தகையவர்கள் மனித தன்மையை விட்டு, உயர் நிலைக்கு சென்று இறை நேசர்களாக ஆக முடியும் என்கிறார்கள். இவை யாவும் தவறான கருத்துகளாகும். அத்தகையவர்களால் நாட்டு மக்களின் வளர்ச்சிக்குத் தேவையான எந்த வழிமுறையையும் காட்ட இயலாது.


إِنَّهُمْ عَنِ ٱلسَّمْعِ لَمَعْزُولُونَ.

26:212. எனவே தான் மனோ இச்சையின்படி சுயநலத்துடன் செயல்படுபவர்கள் இந்தக் குர்ஆனின் அறிவுரைகளைக் கேட்டதும் விரைந்தோடி விடுகிறார்கள்.


فَلَا تَدْعُ مَعَ ٱللَّهِ إِلَٰهًا ءَاخَرَ فَتَكُونَ مِنَ ٱلْمُعَذَّبِينَ.

26:213. ஆகவே நீங்கள் அல்லாஹ்வுக்கு இணையாக வேறு எந்த வழிமுறையையும் கடைப்பிடிக்காதீர்கள். அவ்வாறு செய்வீர்களாயின் நீங்களும் காலப் போக்கில் பல வேதனைகளுக்கு ஆளாக நேரிடும்.


وَأَنذِرْ عَشِيرَتَكَ ٱلْأَقْرَبِينَ.

26:214. மேலும் இந்த வேத அறிவுரைகளை முதன் முதலில் உங்களுடைய நெருங்கிய உறவினர்களுக்கு எடுத்துக் கூறி, தவறான செயல்களால் ஏற்படும் விளைவுகளைப் பற்றி எடுத்துராத்து எச்சரிக்கை செய்யுங்கள்.


وَٱخْفِضْ جَنَاحَكَ لِمَنِ ٱتَّبَعَكَ مِنَ ٱلْمُؤْمِنِينَ.

26:215. இறை வழிகாட்டுதலை ஏற்று உங்களை பின்பற்றி வருபவர்களிடம் கனிவுடன் நடந்து கொள்ளுங்கள். அவர்களுடைய தேவைகள் நிறைவேற ஆவன செய்யுங்கள்.


فَإِنْ عَصَوْكَ فَقُلْ إِنِّى بَرِىٓءٌۭ مِّمَّا تَعْمَلُونَ.

26:216. ஆனால் அவர்கள் மாறு செய்வதாக தெரிந்தால், அவர்களை விட்டு விலகிக் கொள்வதாக அறிவித்து விடுங்கள்.


وَتَوَكَّلْ عَلَى ٱلْعَزِيزِ ٱلرَّحِيمِ.

26:217. மேலும் யாவற்றையும் மிகைக்கக் கூடிய இறைவழிகாட்டுதலின் மீது முழு நம்பிக்கை வைத்து செயல்படுங்கள். உங்களுடைய இறைவன் மிகவும் கருணை மிக்கவன் ஆவான்.


ٱلَّذِى يَرَىٰكَ حِينَ تَقُومُ.

26:218. ஏக இறைவனாகிய அல்லாஹ் உங்களுடைய ஒவ்வொரு செயலையும் கவனிக்காமல் இல்லை.


وَتَقَلُّبَكَ فِى ٱلسَّٰجِدِينَ.

26:219. மேலும் இறை வழிகாட்டுதலுக்கு முழுஅளவில் இணங்கி செயல்படுபவர்களுடன் நீங்கள் இணைந்து செயல்படுவதும் செயல்படாததும் இறைவனுக்கு நன்கு தெரியும்.


إِنَّهُۥ هُوَ ٱلسَّمِيعُ ٱلْعَلِيمُ.

26:220. நிச்சயமாக உலக நிகழ்வுகள் அனைத்தையும் அறிந்து கொள்ளும் பேராற்றல் உடையவனே அல்லாஹ்.


هَلْ أُنَبِّئُكُمْ عَلَىٰ مَن تَنَزَّلُ ٱلشَّيَٰطِينُ.

26:221. “மனோ இச்சை என்னும் ஷைத்தானுக்கு இணங்கி செயல்படுபவன் யார் என்பதை நான் உமக்கு அறிவிக்கட்டுமா?”என்று அவர்களிடம் கேளுங்கள்.


تَنَزَّلُ عَلَىٰ كُلِّ أَفَّاكٍ أَثِيمٍۢ.

26:222. “பொய், பித்தலாட்டமும் பாவச் செயல்களில் ஈடுபடுபவனும் தான், மனோ இச்சை எனும் ஷைத்தானின் வலையில் சிக்குவான்.


يُلْقُونَ ٱلسَّمْعَ وَأَكْثَرُهُمْ كَٰذِبُونَ.

26:223. அத்தகையவர்கள் இங்கும் அங்குமாக கேட்கும் செய்திகளில் பொய்களையும் சேர்த்து வதந்திகளை பரப்புவார்கள். அதில் பெரும்பாலான செய்திகள் பொய்யானதாகவே இருக்கும்.


وَٱلشُّعَرَآءُ يَتَّبِعُهُمُ ٱلْغَاوُۥنَ.

26:224. அதே போன்று கவிஞர்களும் தம் கவிதைகளில் பொய்களை உண்மைப் போல் சித்தரிப்பார்கள். அவர்களை ஷைத்தானியர்கள் தான் சுவாரசியமாக பின்பற்றுவார்கள்.
அதாவது கவிஞர்கள் தம் உள்ளத்தில் தோன்றும் கருத்துக்களை கவிதை நடையில் சொல்வார்கள். அவற்றில் உயர் நோக்கமோ குறிக்கோளோ எதுவும் இருக்காது. அவை கற்பனை வளத்தில் கூறப்படுகின்ற விஷயங்களாகவே இருக்கும். அதனால் மக்களுக்கு எந்தப் பலனும் ஏற்படுவதில்லை. ஆனால் அல்லாஹ்வின் வழிகாட்டுதிலை ஏற்று செயல்படும் மூஃமின்கள், மக்களின் நல்வாழ்விற்காக பல்வேறு திட்டங்களைத் தீட்டி, அதற்காக அவர்கள் அயராது செயல்படுவார்கள்.


أَلَمْ تَرَ أَنَّهُمْ فِى كُلِّ وَادٍۢ يَهِيمُونَ.

26:225. இந்த கவிஞர்களை பார்த்தீர்களானால், அவர்கள் இயற்கை வர்ணனைகளை, கற்பனை வளத்துடன் கவிதை நடையில் கூறி வருவார்கள். மக்களிடம் பெயரும் புகழும் பெறவேண்டும் என்பதற்காக காட்டிலும் மேட்டிலும் அலைந்து திரிந்து கொண்டிருப்பார்கள். அவர்கள் கூறுவதற்கும் உலக நடப்புக்கும் ஒரு சம்பந்தமும் இராது. அவர்கள் கூறுவது அனைத்துமே கற்பனைகளே.


وَأَنَّهُمْ يَقُولُونَ مَا لَا يَفْعَلُونَ.

26:226. மேலும் அவர்களால் செய்ய முடியாத விஷயங்களையே சொல்லிக்கொண்டு இருப்பார்கள்.


إِلَّا ٱلَّذِينَ ءَامَنُوا۟ وَعَمِلُوا۟ ٱلصَّٰلِحَٰتِ وَذَكَرُوا۟ ٱللَّهَ كَثِيرًۭا وَٱنتَصَرُوا۟ مِنۢ بَعْدِ مَا ظُلِمُوا۟ ۗ وَسَيَعْلَمُ ٱلَّذِينَ ظَلَمُوٓا۟ أَىَّ مُنقَلَبٍۢ يَنقَلِبُونَ.

26:227. ஆனால் அல்லாஹ்வின் வழிகாட்டுதலை மனதார ஏற்று, செயல்படுபவர்களின் நிலை ஒருபோதும் அவ்வாறு இருக்காது. அவர்கள் சமுதாய வளர்ச்சிக்காக ஆக்கப்பூர்வமான நலத் திட்டங்களை தீட்டி உழைத்து வருவார்கள். அவர்கள் ஒவ்வொரு விஷயத்திலும் அல்லாஹ்வின் அறிவுரைகள் என்னவென்பதையே நினைவில் கொண்டு செயல்படுவார்கள். எங்கேயாவது அநியாயம் அக்கிரமம் நடந்தால் அதற்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுப்பார்கள். அவ்வாறு நடவடிக்கை எடுக்காமல் அநியாயக்காரர்களை விட்டுவைத்தால் அதனால் என்ன விளைவுகள் ஏற்படும் என்பதை அவர்கள் அறிந்து, அதை கட்டுப்படுத்த எல்லா வகையிலும் ஆவன செய்வார்கள்.
ஆனால் கவிஞர்களிடம் இத்தகைய எந்த நலத் திட்டமும் இருக்காது. வெறும் வார்த்தை ஜாலங்கள் தான் அவர்களிடம் மிஞ்சும். எங்கேயாவது அநியாயம் அக்கிரமம் நடந்தால் அதற்கு ஏற்றவாறு கவிதைகளைப் பாடி மக்களை தூங்க வைத்து விடுவார்கள். எனவே இறைவழிகாட்டுதலை பின்பற்றும் சமுதயாத்தில் கவிதைகளுக்கு இடமேது? (பார்க்க 36:69)