بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ

25:0.அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் அறிவுரைப்படியே அனைத்துக் காரியங்களையும் செய்ய நாடுகிறேன். (பார்க்க 6:162)


تَبَارَكَ ٱلَّذِى نَزَّلَ ٱلْفُرْقَانَ عَلَىٰ عَبْدِهِۦ لِيَكُونَ لِلْعَٰلَمِينَ نَذِيرًا.

25:1. நன்மை தீமை ஆகியவற்றை தெள்ளத் தெளிவாக பிரித்து அறிவிக்கக் கூடிய இவ்வேதத்தை, தன் அடியார் மீது இறக்கியருளிய இறைவன் அளவற்ற பாக்கியங்கள் உடையவனே! இந்த வேதத்தைக் கொண்டு உலக மக்கள் அனைவருக்கும் தம் வாழ்க்கைப் பயணத்தில் எந்தெந்த செயல்களால் என்ன தீய விளைவுகள் ஏற்படும் என்பதையும், அதிலிருந்து பாதுகாப்பாக இருக்க என்ன வழிகள் என்பதையும் தெளிவாக எடுத்துரைக்கத் தான் இவை இறக்கி அருளப்படுகின்றன.
எனவே எல்லா வல்லமைகளையும் பாக்கியங்களையும் உடைய அல்லாஹ்வின் வழிகாட்டுதலைப் பின்பற்றும் சமுதாயங்கள், எல்லா வளங்களையும் பாக்கியங்களையும் பெற்று சிறப்பாக விளங்கும் என்பதில் என்ன சந்தேகம் இருக்கப் போகிறது? மேலும் இவ்வேத உபதேசங்களை முஹம்மது நபி (ஸல்) அவர்கள் தன் சுய சிந்தனையின் அடிப்படையில் கொடுக்கின்ற ஒன்றல்ல. மாறாக


ٱلَّذِى لَهُۥ مُلْكُ ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضِ وَلَمْ يَتَّخِذْ وَلَدًۭا وَلَمْ يَكُن لَّهُۥ شَرِيكٌۭ فِى ٱلْمُلْكِ وَخَلَقَ كُلَّ شَىْءٍۢ فَقَدَّرَهُۥ تَقْدِيرًۭا.

25:2. அகிலங்கள் மற்றும் பூமி ஆகிய அனைத்திலும் ஆட்சி புரியும் வல்லமையுடைய இறைவனிடமிருந்து இறக்கி அருளப்பட்ட வேதமாகும். அதாவது அனைத்து படைப்புகளும் யாருடைய கட்டுப்பாட்டிற்குள் செயல்பட்டு வருகின்றனவோ, அப்பேற்பட்ட வல்லமையுடைய அல்லாஹ்விடமிருந்து வரும் வழிகாட்டுதல்களாகும். உண்மை இவ்வாறிருக்கும் போது, தனக்கு துணைப் புரிய ஒரு மகன் அவசியமா? அகிலங்களிலும் பூமியிலும் உள்ள அனைத்தையும் படைத்து அவற்றில் ஒவ்வொன்றும் எவ்வாறு செயல்பட வேண்டும் என்று நிர்ணயித்தது அல்லாஹ் தான். அவனுடைய செயல்திட்டத்தை நிறைவேற்ற எவரையும் கூட்டாக்கிக் கொள்வதில்லை. அதற்கு அவசியமும் இல்லை (பார்க்க 18:26).


وَٱتَّخَذُوا۟ مِن دُونِهِۦٓ ءَالِهَةًۭ لَّا يَخْلُقُونَ شَيْـًۭٔا وَهُمْ يُخْلَقُونَ وَلَا يَمْلِكُونَ لِأَنفُسِهِمْ ضَرًّۭا وَلَا نَفْعًۭا وَلَا يَمْلِكُونَ مَوْتًۭا وَلَا حَيَوٰةًۭ وَلَا نُشُورًۭا.

25:3. அல்லாஹ்வின் வல்லமையும் பேராற்றலும் இவ்வாறிருக்க, மக்களில் பெரும்பாலோர் அல்லாஹ்வை விட்டுவிட்டு பிறரை தெய்வங்களாக கற்பனை செய்து கொள்கின்றனர். அந்த கற்பனை தெய்வங்களோ, எந்த பொருளையும் படைக்கும் ஆற்றல் பெறாதவையே. அவையே படைக்கப்பட்டவையாக இருக்கும் நிலையில், அவை மற்றதை எப்படி படைக்க முடியும்? அவை தமக்கே நன்மை செய்துக் கொள்ளவோ, தீமையை தடுத்துக் கொள்ளவோ சக்தி பெறாதவையாக இருக்கின்றதே! உண்மை இவ்வாறிருக்கும் போது, அவை யாரையும் உயிர்ப்பிக்கச் செய்யவோ, மரிக்க செய்யவோ அல்லது மீண்டும் உயிர் கொடுத்து எழுப்பவோ சக்தி உடையதாக கருத முடியுமா?


وَقَالَ ٱلَّذِينَ كَفَرُوٓا۟ إِنْ هَٰذَآ إِلَّآ إِفْكٌ ٱفْتَرَىٰهُ وَأَعَانَهُۥ عَلَيْهِ قَوْمٌ ءَاخَرُونَ ۖ فَقَدْ جَآءُو ظُلْمًۭا وَزُورًۭا.

25:4. ஆனால் இறைவழிகாட்டுதலை ஏற்க மறுப்போர், இந்த குர்ஆன் இறைவன் புறத்திலிருந்து இறக்கியருளப்படுகிறது என்ற பேச்செல்லாம் வெற்றுப் பேச்சே என்று கூறுகிறார்கள். எல்லாவற்றையும் நபியே சுயமாக இட்டுக்கட்டி கூறுகிறார். இன்னும் இதற்கு அவரை சார்ந்தவர்களும் உதவி புரிந்து வருகிறார்கள் எனவும் கூறுகிறார்கள். அவர்களுடைய பேச்சு எந்த அளவுக்கு உண்மைக்குப் புறம்பாகவும் அநியாயமாகவும் உள்ளது என்பதை நீங்களே சற்று சிந்தித்துப் பாருங்கள்.


وَقَالُوٓا۟ أَسَٰطِيرُ ٱلْأَوَّلِينَ ٱكْتَتَبَهَا فَهِىَ تُمْلَىٰ عَلَيْهِ بُكْرَةًۭ وَأَصِيلًۭا.

25:5. அதுமட்டுமின்றி இதிலுள்ள வரலாற்று சம்பவங்களைக் கேட்டு, அவை யாவும் முன்னோர்களின் கட்டுக் கதைகளே என்கிறார்கள். அவற்றை இவரே எழுதி வைத்துக் கொண்டு தினந்தோறும் காலையிலும் மாலையிலும் ஓதிக்கொண்டு வருவதாகவும் ஏளனமாக பேசி வருகின்றனர்.


قُلْ أَنزَلَهُ ٱلَّذِى يَعْلَمُ ٱلسِّرَّ فِى ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضِ ۚ إِنَّهُۥ كَانَ غَفُورًۭا رَّحِيمًۭا.

25:6. அகிலங்களிலும் பூமியிலும் உள்ள இரகசியங்கள் அனைத்தையும் அறியக்கூடிய வல்லமையுடைய ஏக இறைவனாகிய அல்லாஹ்விடமிருந்து வரும் வேதமிது என்பதை அவர்களுக்கு எடுத்துரையுங்கள். அவற்றை படைத்ததோடு அவை அனைத்தும் பாதுக்காப்பாக செயல்படும்படியும் செய்துள்ளானே! இது அல்லாஹ்வின் மாபெரும் கிருபையாகும் அல்லவா?
அதாவது அகிலங்கள் மற்றும் பூமியில் உள்ள அனைத்து விஷயங்களை பற்றியும் இவ்வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன. அவற்றில் உங்களுக்கு தெரியாத இரகசியங்களையும், இவ்வுலகில் நடந்த வலராற்று உண்மைகளையும் அறிபவன்தானே சரியாக எடுத்துரைக்க முடியும்? தனி நபர் ஒருவரால் இப்படி எல்லா விஷயங்களையும் எடுத்துரைக்க முடியுமா? இதைப் பற்றி அவர்களிடம் எடுத்துரைத்தால், அதற்குப் பதிலளிக்க அவர்களால் முடிவதில்லை. மாறாக அவர்கள் இறைத் தூதரின் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி விமர்சிக்க ஆரம்பித்து விடுகின்றனர்.


وَقَالُوا۟ مَالِ هَٰذَا ٱلرَّسُولِ يَأْكُلُ ٱلطَّعَامَ وَيَمْشِى فِى ٱلْأَسْوَاقِ ۙ لَوْلَآ أُنزِلَ إِلَيْهِ مَلَكٌۭ فَيَكُونَ مَعَهُۥ نَذِيرًا.

25:7. அவர்கள், “இந்த ரசூல் என்ன? உணவு உண்கிறார். கடை வீதிக்குச் செல்கிறார். இப்படி சாதாரண மனிதராக இருக்கும் இவருடைய பேச்சை எப்படிக் கேட்பது? இவருடைய பேச்சில் உண்மை இருந்தால்,இவருடன் அச்சமூட்டி எச்சரிப்பதற்காக ஒரு மலக்கை அல்லவா அனுப்பி இருக்கவேண்டும்?” என்கிறார்கள்.


أَوْ يُلْقَىٰٓ إِلَيْهِ كَنزٌ أَوْ تَكُونُ لَهُۥ جَنَّةٌۭ يَأْكُلُ مِنْهَا ۚ وَقَالَ ٱلظَّٰلِمُونَ إِن تَتَّبِعُونَ إِلَّا رَجُلًۭا مَّسْحُورًا.

25:8. “அல்லது இவரிடம் செல்வக் குவியலாவது இருந்திருக்க வேண்டும். அல்லது குறைந்தது அவரிடம் பழரச தோட்டங்களாவது இருந்திருக்க வேண்டும். அதில் அவர் பழங்களை உண்டு மகிழவேண்டும்” என்கின்றனர். “இப்படி எதுவுமே இல்லாத ஒருவரின் வசீகர பேச்சில் மதி மயங்கி ஏன் பின்பற்றி நடக்கிறீர்கள்?” என்று கூறி இறைவழிகாட்டுதலை ஏற்று நடப்பவர்களையும் வழி கெடுத்து வருகின்றனர்.
இவ்வாசகத்தில் நபியைப் பார்த்து சூனியம் செய்யப்பட்டவர் “மஸ்ஹுரா” என்று அநியாயக்காரர்கள் கூறுவதாக சொல்லப்படுகிறது. அவ்வாறு அவரை யாராலும் சூனியம் செய்ய முடியாது என்று இதிலிருந்து புலனாகிறது. பேச்சில் திறமை மிக்கவரை சாஹிர் என்று சொல்வார்கள். எனவே நாம் இந்த பொருளை தந்துள்ளோம்.


ٱنظُرْ كَيْفَ ضَرَبُوا۟ لَكَ ٱلْأَمْثَٰلَ فَضَلُّوا۟ فَلَا يَسْتَطِيعُونَ سَبِيلًۭا.

25:9. இறைவழிகாட்டுதலை எடுத்துரைப்பவரே! உன்னைப் பற்றி இவர்கள் எப்படியெல்லாம் விமர்சித்து வருகிறார்கள் என்பதை கவனித்தாயா? அதனால் உமக்கு என்ன பாதிப்பு எற்படப் போகிறது? இப்படி பேசி வருபவர்களே வழிகெட்டு போவார்கள். இத்தயைவர்கள் நேரான பாதையை அடைவது எப்படி?


تَبَارَكَ ٱلَّذِىٓ إِن شَآءَ جَعَلَ لَكَ خَيْرًۭا مِّن ذَٰلِكَ جَنَّٰتٍۢ تَجْرِى مِن تَحْتِهَا ٱلْأَنْهَٰرُ وَيَجْعَل لَّكَ قُصُورًۢا.

25:10. ஆனால் எல்லா பாக்கியங்களையும் வல்லமையும் உடைய அல்லாஹ் காட்டிய வழியில் சமூக அமைப்பை உருவாக்கி அதன் வளர்ச்சிக்காக உழைத்து வந்தால், இவர்கள் எதிர் பார்க்கும் தோட்டங்களை விட, பன் மடங்கு சிறந்த சமுதாயமும் அதில் வாழ்வாதார வசதிகளும் ஜீவநதியாய் பெருகிவரும் என்பதையும் இவர்களுக்கு யார் புரிய வைப்பது? அவர்களுக்கு ஒரு தோட்டம் என்ன? பசுமை நிறைந்த பல தோட்டங்கள் அவர்களுக்கு கிடைக்குமே! சுகமாக வாழ மாளிகைகளும் கிடைக்குமே!


بَلْ كَذَّبُوا۟ بِٱلسَّاعَةِ ۖ وَأَعْتَدْنَا لِمَن كَذَّبَ بِٱلسَّاعَةِ سَعِيرًا.

25:11. ஆனால் இறைவழிகாட்டுதலை மனதார ஏற்று அதன்படி நடப்பதால், இத்தகைய மறுமலர்ச்சி காலம் ஒருபோதும் உருவாகாது என்கிறார்கள். இவை எல்லாம் வெற்றுப் பேச்சு என்கிறார்கள். எனவே அப்படிப்பட்ட எழுச்சி மிகு பொற் காலத்தைப் பொய் என்பவர்களுக்கு வேதனைகள் தான் மிஞ்சும்.
ஏனெனில் அவர்களிடம் முயற்சியும் உழைப்பும் இருக்காது. ஏதோ இருப்பதை வைத்து வாழ்ந்து விட்டு போகலாம் என்ற நினைப்பில் இருந்து விடுவார்கள். வசதியுள்ளவர்கள் மென்மேலும் செல்வத்தை குவிப்பதிலேயே கண்ணும் கருத்துமாய் இருப்பார்கள். எனவே காலப் போக்கில் சமுதாயத்தில் மந்தமான நிலையும் ஏற்றத் தாழ்வும் ஏற்பட்டு பல வேதனைகளுக்கு ஆளாவார்கள்.


إِذَا رَأَتْهُم مِّن مَّكَانٍۭ بَعِيدٍۢ سَمِعُوا۟ لَهَا تَغَيُّظًۭا وَزَفِيرًۭا.

25:12. அவர்களுடைய வாழ்வில் ஏற்படவிருக்கும் வேதனைகளின் அறிகுறிகளை காணும் போதே, அதற்கே உரித்தான கொந்தளிப்பும் பேரிரைச்சலும் கேட்கும்.


وَإِذَآ أُلْقُوا۟ مِنْهَا مَكَانًۭا ضَيِّقًۭا مُّقَرَّنِينَ دَعَوْا۟ هُنَالِكَ ثُبُورًۭا.

25:13. மேலும் அந்த வேதனைகள் அவர்களை நெருங்கும் போது, அதிலிருந்து மீள முடியாமல் தத்தளிப்பார்கள். இத்தகைய இழிநிலையை விட சாவதே மேல் என அவர்கள் கதறுவார்கள்.


لَّا تَدْعُوا۟ ٱلْيَوْمَ ثُبُورًۭا وَٰحِدًۭا وَٱدْعُوا۟ ثُبُورًۭا كَثِيرًۭا.

25:14. “இத்தகைய இழிவான வேதனைமிக்க காலம் ஏற்படுவதைத் தானே நீங்கள் அழைத்துக் கொண்டு இருந்தீர்கள். மேலும் பல வேதனைமிக்க அழிவுகளை அனுபவிக்க வேண்டி நாடுங்கள்” என்பதாக மோசமான நிலைமை இருக்கும்.


قُلْ أَذَٰلِكَ خَيْرٌ أَمْ جَنَّةُ ٱلْخُلْدِ ٱلَّتِى وُعِدَ ٱلْمُتَّقُونَ ۚ كَانَتْ لَهُمْ جَزَآءًۭ وَمَصِيرًۭا.

25:15. உலக மக்களே! அத்தகைய வேதனைமிக்க கால கட்டத்தை எதிர் பார்கின்றீர்களா? அல்லது இறைவழிகாட்டுதலின்படி வாழ்ந்து சிறப்பான சுவனத்திற்கு ஒப்பான வாழ்வைப் பெற விரும்புகிறீர்களா? நீங்களே முடிவெடுத்துக் கொள்ளுங்கள். உங்கள் விருப்பம் என்னவோ அதன்படியே செயலாற்றுங்கள். சுவன வாழ்வை பெற நாடினால், இறைவழிகாட்டுதலுக்கு கட்டுபட்டு வாழ்வதைத் தவிர வேறு எந்த வழிமுறையாலும் இயலாது.


لَّهُمْ فِيهَا مَا يَشَآءُونَ خَٰلِدِينَ ۚ كَانَ عَلَىٰ رَبِّكَ وَعْدًۭا مَّسْـُٔولًۭا.

25:16. நீங்கள் விரும்பியவாறு தான் உங்களுக்கு சுவர்க்க வாழ்வும் நரக வாழ்வும் நிலைத்து விடும். முடிவு உங்கள் கையில். உங்களுடைய செயலுக்குரிய விளைவுகளை அல்லது பலன்களை அளிப்பதே அல்லாஹ்வின் வாக்குறுதியாகும். இதில் ஒருபோதும் எந்த மாறுதலும் ஏற்படாது.
எனவே இவ்வுலகில் உங்களுக்கு கிடைத்துள்ள அரிய சந்தர்ப்பத்தை நன்றாகப் பயன்படுத்தி, சுவன வாழ்வைப் பெற உழையுங்கள். அவ்வாறு நீங்கள் செயல்படவில்லை என்றால் உங்கள் செயல்கள் எதுவோ அவற்றின் விளைவுகள் தோற்றத்திற்கு வருவது சர்வ நிச்சயம். அவற்றை அனுபவியுங்கள்.


وَيَوْمَ يَحْشُرُهُمْ وَمَا يَعْبُدُونَ مِن دُونِ ٱللَّهِ فَيَقُولُ ءَأَنتُمْ أَضْلَلْتُمْ عِبَادِى هَٰٓؤُلَآءِ أَمْ هُمْ ضَلُّوا۟ ٱلسَّبِيلَ.

25:17. அப்படியொரு கால கட்டத்தில் அல்லாஹ்வையன்றி அவர்கள் வணங்கி வந்த கற்பனை தெய்வங்களைப் பற்றி விசாரிக்கப்படும். அவ்வாறு வணங்கி வந்தவர்களையும் அத்தகைய தெய்வங்களை பற்றி கற்பனை கதைகளை உருவாக்கியவர்களையும் அழைத்து, “மக்களை நீங்கள் வழிகெடுத்தீர்களா அல்லது அவர்கள் தாமாகவே வழிகெட்டு போனார்களா?” என்று கேட்கப்படும்.


قَالُوا۟ سُبْحَٰنَكَ مَا كَانَ يَنۢبَغِى لَنَآ أَن نَّتَّخِذَ مِن دُونِكَ مِنْ أَوْلِيَآءَ وَلَٰكِن مَّتَّعْتَهُمْ وَءَابَآءَهُمْ حَتَّىٰ نَسُوا۟ ٱلذِّكْرَ وَكَانُوا۟ قَوْمًۢا بُورًۭا.

25:18. அப்போது அவை, “எங்கள் இறைவா! அவர்கள் உருவாக்கிய கற்பனை கதைகளுக்கெல்லாம் நீ அப்பாற்பட்டவன். உன்னையன்றி மற்றவர்களைத் தம் வாழ்வின் துணையாக எடுத்துக்கொள்ள, நாங்கள் அவர்களிடம் எப்படி கூற முடியும்? அவர்களுடைய முன்னோர்களுக்கு உன் புறத்திலிருந்து கிடைத்திருந்த செல்வங்களின் மமதையில், அவர்களே அத்தகைய கற்பனை கதைகளை ஏற்படுத்திக் கொண்டனர். எனவே உன் வழிகாட்டுதலை விட்டு அவர்கள் நழுவி விட்டனர். (பார்க்க 7:175) இதனால் அவர்கள் அழிந்து போகும் கூட்டத்தாராக ஆகிவிட்டனர்” என்று பதிலளிக்கும். (பார்க்க 7:176)


فَقَدْ كَذَّبُوكُم بِمَا تَقُولُونَ فَمَا تَسْتَطِيعُونَ صَرْفًۭا وَلَا نَصْرًۭا ۚ وَمَن يَظْلِم مِّنكُمْ نُذِقْهُ عَذَابًۭا كَبِيرًۭا.

25:19. அப்போது, “நீங்கள் உருவாக்கி வைத்திருந்த கற்பனை கதைகள் யாவும் பொய்யென நிரூபணம் ஆகிவிட்டன. ஆகவே நீங்கள் செய்து வந்த தவறான செயல்களின் விளைவாக வேதனைகளை அனுபவியுங்கள். அவற்றை நீங்கள் தடுக்கவும் முடியாது அவ்வேதனைகளிலிருந்து உங்களை யாரும் காப்பாற்றவும் முடியாது. மேலும் உங்களில் எவர் அநியாய செயலில் ஈடுபட்டிருந்தார்களோ, அவர்கள் கடுமையான வேதனைகளை அனுபவிக்க வேண்டியது தான்” என்ற நிலையில்தான் இருப்பார்கள்.
அதாவது இறைவனைப் பற்றிய தவறான விஷயங்களை மக்களுக்கு சொல்லும் போது, அவர்களும் தவறான வழியில் சென்று விடுவார்கள். உதாரணத்திற்கு இறைவன் இரக்கமுள்ளவன். அவன் உங்கள் பாவங்கள் அனைத்தையும் மன்னித்து விடுவான் என்று சொல்லிவிட்டால் போதும் பாவ செயல்களில் ஈடுபட அவர்களுக்கு தைரியம் வந்துவிடும். காலப் போக்கில் அதுவே அவர்களுக்கு பழக்கமாகி விடும். இவை யாவும் தவறானவை என்று யாராவது எடுத்துச் சொன்னால், அது அவர்களுக்கு கசப்பாகத் தெரியும். எனவே எடுத்துரைப்பவரின் தனிப்பட்ட வாழ்க்கைப் பற்றி விமர்சித்து அவருடைய அறிவுரையை கேட்காதவாறு மக்களை கெடுத்து வருவார்கள். உண்மை என்னவென்றால்


وَمَآ أَرْسَلْنَا قَبْلَكَ مِنَ ٱلْمُرْسَلِينَ إِلَّآ إِنَّهُمْ لَيَأْكُلُونَ ٱلطَّعَامَ وَيَمْشُونَ فِى ٱلْأَسْوَاقِ ۗ وَجَعَلْنَا بَعْضَكُمْ لِبَعْضٍۢ فِتْنَةً أَتَصْبِرُونَ ۗ وَكَانَ رَبُّكَ بَصِيرًۭا.

25:20. இதற்குமுன் வந்த எல்லா இறைத்தூதர்களும் உணவு அருந்துபவர்களாகவும் கடைவீதிக்கு செல்பவராகவுமே இருந்தார்கள். அதுமட்டுமின்றி இப்படி இறைத்தூதரைப் பற்றி விமர்சித்து அவர்களில் சிலர் சிலருக்கு குழப்பங்களை ஏற்படுத்துபவர்களாவே இருந்தார்கள். எனவே இறைத்தூதரே! நீர் அவர்களுடைய விமர்சனங்களை பொருட்படுத்தாதே. நீங்கள் இறைச் செயல் திட்டத்தில் நிலைத்திருந்து செயல்பட்டு வாருங்கள். அவர்கள் செய்து வருபவை அல்லாஹ்வுக்கு தெரியாமல் இல்லை. அதன் விளைவுகளை அவர்கள் நிச்சயம் சந்தித்துக் கொள்வார்கள்.
அதாவது இறைச் செய்திகளை எடுத்துரைப்பவர் தனி சிறப்புப் பெற்ற மாமனிதராகவோ அல்லது ஒரு மலக்காகவோ இருப்பது அவசியம் என்று எதிர் பார்க்கிறார்கள். ஆனால் மனிதனுக்கு முழு சுதந்திரமும் அறிவாற்றலும் அளிக்கப்பட்டிருப்பதால், இறை வழிகாட்டுதலை தன் சுய விருப்பத்தடன் சிந்தித்து ஏற்க முன்வரவேண்டும் என்பதே இறைவனின் செயல்திட்டமாகும். எனவே ஒரு மலக்கை அனுப்பி இறைவழிகாட்டுதலை ஏற்க கட்டாயப் படுத்துவதாக இருந்தால் மனிதனுக்கு அளிக்கப்பட்டுள்ள சுதந்திரத்திற்கு அர்த்தமில்லாமல் போய்விடும். அப்போது அவனும் மற்ற உயிரினங்களைப் போல தன் இயல்பின் அடிப்படையில் வாழ்ந்திருப்பான். அவனால் இவ்வுலகில் எந்த சிறப்பையும் கொண்டுவர முடியாமல் போயிருக்கும்.
எனவே மனிதன் இறைவழிகாட்டுதலை ஏற்காமல் வாழ்வதால் தன் மனோ இச்சையின்படி வாழ்கிறான். அதனால் அவன் தவறான செயல்களில் ஈடுபடுகிறான். இதன் விளைவுகள் மிகவும் மோசமாக இருக்கும் என்று சொன்னால் அதை ஏற்றுக் கொள்வதில்லை.


۞ وَقَالَ ٱلَّذِينَ لَا يَرْجُونَ لِقَآءَنَا لَوْلَآ أُنزِلَ عَلَيْنَا ٱلْمَلَٰٓئِكَةُ أَوْ نَرَىٰ رَبَّنَا ۗ لَقَدِ ٱسْتَكْبَرُوا۟ فِىٓ أَنفُسِهِمْ وَعَتَوْ عُتُوًّۭا كَبِيرًۭا.

25:21. இறைவனின் நியதிப்படி உங்கள் செயல்களின் விளைவுகளை இறுதியில் சந்தித்தே ஆகவேண்டும் என்று சொன்னால், அதை ஏற்காதவர்கள், “எங்களிடம் இறைவன் ஏன் மலக்குகளை அனுப்பவில்லை? அல்லது இறைவனே நம் கண்முன் ஏன் தோன்றுவதில்லை?” என்று கேட்கிறார்கள். இவை யாவும் அவர்களிடமிருக்கும் கர்வத்தினால் பேசுகின்ற பேச்சாகும். மேலும் அவர்கள் தீய வழியில் அளவுகடந்து சென்று விட்டார்கள்.


يَوْمَ يَرَوْنَ ٱلْمَلَٰٓئِكَةَ لَا بُشْرَىٰ يَوْمَئِذٍۢ لِّلْمُجْرِمِينَ وَيَقُولُونَ حِجْرًۭا مَّحْجُورًۭا.

25:22.அவர்கள் எதிர் பார்கின்ற மலக்குகளை அவர்கள் காண்பதாக இருந்தால், அந்நாளில் அக்குற்றவாளிகளுக்கு அது நற்செய்தியாக இராது. அவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள சுதந்திரம் போன்ற நற்பாக்கியங்கள் யாவும் தடைபட்டுப் போய்விடும். அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் அதை தடுத்து நிறுத்த யாராவது இருக்கிறார்களா என்று தான் புலம்பிக் கொண்டிருப்பார்கள்.


وَقَدِمْنَآ إِلَىٰ مَا عَمِلُوا۟ مِنْ عَمَلٍۢ فَجَعَلْنَٰهُ هَبَآءًۭ مَّنثُورًا.

25:23. ஆனால் அவர்கள் செய்து வந்த செயல்கள் தான் இறைவனிடம் பேசும். எனவே அவர்களுடைய பலனற்ற செயல்கள் யாவும் பரத்தப்பட்ட புழுதிப்போல் பறந்தோடிவிடும். அவர்களுக்கு எந்த பலனையும் அளிக்காது.


أَصْحَٰبُ ٱلْجَنَّةِ يَوْمَئِذٍ خَيْرٌۭ مُّسْتَقَرًّۭا وَأَحْسَنُ مَقِيلًۭا.

25:24. இதற்கு மாறாக சுவனவாசிகளின் நிலைமை வேறுவிதமாய் இருக்கும். அங்குள்ளவர்கள் யாவரும் சிறந்த செயல்களை செய்யும் சான்றோர்களாய் விளங்குவர். அவர்கள் ஓய்வெடுத்துக் கொள்ளும் இடமும் மிக சிறப்புடையதாக இருக்கும்.


وَيَوْمَ تَشَقَّقُ ٱلسَّمَآءُ بِٱلْغَمَٰمِ وَنُزِّلَ ٱلْمَلَٰٓئِكَةُ تَنزِيلًا.

25:25. அப்படியொரு கால கட்டத்தில் ஆய்வுகளின் மூலம் வானுலகில் அடங்கியுள்ள இரகசியங்கள் யாவும் வெட்ட வெளிச்சமாகி வரும். அவற்றிலுள்ள பிரபஞ்ச இயற்கை சக்திகளின் உதவிகளும் தொடர்ந்து இறங்கிய வண்ணமிருக்கும்.


ٱلْمُلْكُ يَوْمَئِذٍ ٱلْحَقُّ لِلرَّحْمَٰنِ ۚ وَكَانَ يَوْمًا عَلَى ٱلْكَٰفِرِينَ عَسِيرًۭا.

25:26. மேலும் அந்த காலக் கட்டத்தில், அருட்கொடையாளன் அல்லாஹ் காட்டிய வழியில் ஆக்கப்பூர்வமான ஆட்சி நடைபெறும். மேலும் சட்ட விரோத செயல்களைச் செய்வோருக்கு, அது கடுமையான காலக் கட்டமாக இருக்கும்.
ஏனெனில் அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டு பல நரக வேதனைகளுக்கு ஆளாவார்கள்.


وَيَوْمَ يَعَضُّ ٱلظَّالِمُ عَلَىٰ يَدَيْهِ يَقُولُ يَٰلَيْتَنِى ٱتَّخَذْتُ مَعَ ٱلرَّسُولِ سَبِيلًۭا.

25:27. அப்போது அநியாயக்காரர்கள் வேதனைகளை தாங்கிக்கொள்ள முடியாமல், தம் இரு கைகளையும் பிசைத்துக் கொண்டு, “நானும் இறைச் சட்டங்களின்படி நடந்து, நேரான வழியில் வாழ்ந்திருக்க வேண்டாமா?” என்று புலம்பிக் கொண்டு இருப்பார்கள்.


يَٰوَيْلَتَىٰ لَيْتَنِى لَمْ أَتَّخِذْ فُلَانًا خَلِيلًۭا.

25:28.“அடப்பாவமே! என்னை வழிகெடுப்பவனையா நான் நண்பனாக ஆக்கிக் கொண்டேன்? அத்தகையவர்களை விட்டு நான் ஒதுங்கி இருக்கலாமே!”


لَّقَدْ أَضَلَّنِى عَنِ ٱلذِّكْرِ بَعْدَ إِذْ جَآءَنِى ۗ وَكَانَ ٱلشَّيْطَٰنُ لِلْإِنسَٰنِ خَذُولًۭا.

25:29.“என்னிடம் என்னவோ நேர்வழிகள் வந்தனவே! அவற்றையெல்லாம் விட்டுவிட்டு என்னை வழிகெடுக்கும் சுயநலக்காரா கும்பலின் சதியில் நானும் சிக்கிக் கொண்டேனே!” என்று குமுறிக் கொண்டு இருப்பான்.


وَقَالَ ٱلرَّسُولُ يَٰرَبِّ إِنَّ قَوْمِى ٱتَّخَذُوا۟ هَٰذَا ٱلْقُرْءَانَ مَهْجُورًۭا.

25:30. அப்போது இறைத்தூதர், “என் இறைவா! என்னுடைய சமுதாயத்தவர்கள் இறை வேதமான குர்ஆனை, சடங்கு சம்பிரதாயங்களின் பிடியில் சிக்கவைத்து விட்டனர். இதனால் இதன் உண்மைகள் மக்களிடம் சென்றடையாமல் போயிற்று” என்று குற்றம் சுமத்துவார்.
அதாவது இந்தக் குர்ஆன் காட்டும் வழியில் செயல்படுவதை விட்டுவிட்டு, தாம் கடைப்பிடித்து வரும் சடங்கு சம்பிரதாயங்களின் படி அவற்றின் அர்த்தங்களை எழுதிக் கொண்டு அவற்றை பின்பற்றினர். இதனால் இந்த குர்ஆனின் உண்மையான நோக்கங்கள் உலக மக்களிடம் சென்று அடையவில்லை.
இந்த வாசகத்தில் “மஹ்ஜுரா” என்ற வார்த்தை வருகிறது. அதற்கு குர்ஆனை விட்டுவிட்டதாக நபி (ஸல்) அவர்கள் குறை கூறுவார் என்று பொருள் தந்துள்ளார்கள். ஆனால் மஹ்ஜுரா என்ற வார்த்தை அல்ஹிஜாரு என்ற வார்த்தையின் வினையெச்சமாகும். அல்ஹிஜாரு என்ற வார்த்தைக்கு மூக்கணாங் கயிறு என்று பொருளாகும். எனவே தான் நாம் இந்தக் குர்ஆனை சடங்கு சம்பிரதாயங்களின் பிடியில் சிக்கவைத்து விட்டதாக அர்த்தம் எழுதியுள்ளோம்.


وَكَذَٰلِكَ جَعَلْنَا لِكُلِّ نَبِىٍّ عَدُوًّۭا مِّنَ ٱلْمُجْرِمِينَ ۗ وَكَفَىٰ بِرَبِّكَ هَادِيًۭا وَنَصِيرًۭا.

25:31. இவ்வாறே இறைவனின் நியதிப்படி இறைவழிகாட்டுதலை விட்டுவிட்டு தீய விழியில் சென்றவர்கள் தண்டனைக்கு ஆளானார்கள். ஆனால் உன்னுடைய இறைவனின் செயல்திட்டமோ, அனைவருக்கும் நேர்வழி காட்டுவதாகவும் அனைத்து தரப்பு மக்களையும் பாதுகாப்பதாகவும் உள்ளது.


وَقَالَ ٱلَّذِينَ كَفَرُوا۟ لَوْلَا نُزِّلَ عَلَيْهِ ٱلْقُرْءَانُ جُمْلَةًۭ وَٰحِدَةًۭ ۚ كَذَٰلِكَ لِنُثَبِّتَ بِهِۦ فُؤَادَكَ ۖ وَرَتَّلْنَٰهُ تَرْتِيلًۭا.

25:32.“இந்தக் குர்ஆனை ஒரே அடியாக மொத்தமாக ஏன் இறக்கி அருளவில்லை? ஏன் பகுதி பகுதியாக இறக்கி அருளப்படுகிறது? (பார்க்க 17:106)” என்றும் இறை வழிகாட்டுதலை ஏற்க மறுப்பவர்கள் ஆட்சேபிக்கிறார்கள். இந்தக் குர்ஆனை படிப்படியாக இறக்கியருளுவதன் நோக்கமே, அதன்படி நீங்கள் செயல்பட்டு அதன் பலன்களை உடனுக்குடன் பார்த்து அறிந்து கொள்ளவேண்டும் என்பதற்காகவே ஆகும். (மேலும் பார்க்க 73:4)
இதில் அடங்கியுள்ள எல்லா அறிவுரைகளும் ஒன்றுக்கொன்று தொடர்பு உடையதாகவே உள்ளன. எனவே சமுதாயத்தை சீரமைக்கும் பணியையும் முறையோடு செய்ய வேண்டும். முன்னுக்கு பின் முரணாக செயல்பட்டால் பலன்கள் கிடைப்பதற்குப் பதிலாக பாதிப்புகளை தான் ஏற்படுத்தும். உதாரணத்திற்கு ஒருவர் சமூக சீரமைப்பு செய்ய எண்ணி, ஆட்சியைக் கைப்பற்றி இறைச் சட்டங்களை திணித்தால் அது சர்வாதிகர ஆட்சியாக கருதப்படும். மாறாக அவர் இறைவழிகாட்டுதலை மக்களுக்கு எடுத்துரைத்து, மக்களின் ஆதரவைப் பெற்று அதன்பின் ஆட்சியமைக்க எண்ணினால் அது சிறந்த பலன்களைத் தரும். இதற்காக அவர் மக்கள் நலனை பாதிக்கும் தீய செயல் எவை என்பதையும், அவற்றை நீக்கி இறைவன் காட்டிய வழியில் செயல்படுவதால் ஏற்படும் நன்மைகளைப் பற்றியும் முதலில் எடுத்துரைக்க வேண்டும்.


وَلَا يَأْتُونَكَ بِمَثَلٍ إِلَّا جِئْنَٰكَ بِٱلْحَقِّ وَأَحْسَنَ تَفْسِيرًا.

25:33. எனவே அவர்கள் எத்தகைய ஆட்சேபனை செய்தாலும், அதற்குரிய சிறந்த அழகான பதில்களும் விளக்கங்களும் இந்த வேதத்தில் தரப்பட்டுள்ளன. அதில் சிறிதளவும் குறை வைக்கவில்லை.


ٱلَّذِينَ يُحْشَرُونَ عَلَىٰ وُجُوهِهِمْ إِلَىٰ جَهَنَّمَ أُو۟لَٰٓئِكَ شَرٌّۭ مَّكَانًۭا وَأَضَلُّ سَبِيلًۭا.

25:34. ஆனால் அவர்கள் செய்து வரும் செயல்களை கவனித்துப் பாருங்கள். அவற்றின் விளைவுகள் அவர்களை நரகத்தில் குப்புற இழுத்துச் செல்பவையாக உள்ளன அல்லவா? எனவே அவர்கள் செல்லும் இடமும் மிகக் கெட்டதாகவே இருக்கும். அவர்கள் கடைப்பிடித்து வருவதும் மோசமான வழிமுறையே ஆகும்.
இப்படி சமுதாயங்கள் தம் தவறான செயல்களால் அழிந்து போவது புதிதான ஒன்றல்ல. காலம் காலமாய் இப்படித்தான் நடந்து வந்துள்ளது. வரலாற்று ஏடுகளைப் புரட்டிப் பாருங்கள். இந்த உண்மையையே அவை பறைசாற்றும். எடுத்துக்காட்டாக


وَلَقَدْ ءَاتَيْنَا مُوسَى ٱلْكِتَٰبَ وَجَعَلْنَا مَعَهُۥٓ أَخَاهُ هَٰرُونَ وَزِيرًۭا.

25:35. மூஸா நபிக்கும் தவ்ராத் எனும் வேதம் அளிக்கப்பட்டது. மேலும் இறைக் கட்டளைப்படி அவருடைய சகோதரர் ஹாரூனும் அவருக்கு பக்க பலமாக இருந்து செயல்பட்டார்.


فَقُلْنَا ٱذْهَبَآ إِلَى ٱلْقَوْمِ ٱلَّذِينَ كَذَّبُوا۟ بِـَٔايَٰتِنَا فَدَمَّرْنَٰهُمْ تَدْمِيرًۭا.

25:36. இறைவழிகாட்டுதலுக்கு எதிராக செயல்படும் தம் சமூகத்தவரிடம் செல்லும்படி அவ்விருவருக்கும் இறைக்கட்டளை வந்தது. அவர்கள் எடுத்துரைத்த அறிவுரைகளை அச்சமூகத்தவர்கள் ஏற்க மறுத்து, அவற்றிற்கு எதிராக செயல்பட்டதால் அவர்கள் இறைவனின் நியதிப்படி அழிவை சந்தித்துக் கொண்டனர்.


وَقَوْمَ نُوحٍۢ لَّمَّا كَذَّبُوا۟ ٱلرُّسُلَ أَغْرَقْنَٰهُمْ وَجَعَلْنَٰهُمْ لِلنَّاسِ ءَايَةًۭ ۖ وَأَعْتَدْنَا لِلظَّٰلِمِينَ عَذَابًا أَلِيمًۭا.

25:37. அதே போன்று நூஹ்வின் சமூகத்தாரும் இறைவழிகாட்டுதலை புறக்கணித்து, அவற்றை பொய்யாக்கியதன் விளைவாக அவர்களும் பிரளயத்தில் மூழ்கி போனார்கள். அந்த சம்பவம் பிற்காலத்தில் வரக்கூடிய மக்களுக்கு ஒரு பாடமாக விளங்கியது. அதாவது அநியாய செயலில் ஈடுபடுவோருக்கு ஏற்படும் வேதனைகள் அவ்வாறு தான் இருக்கும் என்பதை உலகார்க்கு ஓர் எடுத்துக்காட்டாக இருக்கிறது.


وَعَادًۭا وَثَمُودَا۟ وَأَصْحَٰبَ ٱلرَّسِّ وَقُرُونًۢا بَيْنَ ذَٰلِكَ كَثِيرًۭا.

25:38. அதுமட்டுமின்றி, ‘ஆது’ மற்றும் ‘சமூது’ சமுகத்தாரும் ‘ராஸ்’ போன்ற சமூகத்தாரும், மேலும் அநேக தலைமுறையினர்களும் அவ்வாறே இறைவழிகாட்டுதலைப் புறக்கணித்து, தவறான செயல்களில் ஈடுபட்டு அழிந்து போனார்கள்.


وَكُلًّۭا ضَرَبْنَا لَهُ ٱلْأَمْثَٰلَ ۖ وَكُلًّۭا تَبَّرْنَا تَتْبِيرًۭا.

25:39. உண்மை என்னவென்றால் ஒவ்வொரு சமூகத்தவர்க்கும் தெளிவான ஆதாரப்பூர்வமான வழிகாட்டுதல்கள் இறைவன் புறத்திலிருந்து அளிக்கப்பட்டன. அவற்றை நிராகரித்து தவறான செயல்களை தொடர்ந்து செய்து வந்ததால், அவர்கள் முழுவதுமாக அழிந்து போயினர்.
இவையாவும் அரபு நாட்டிற்குத் தொலைவில் நடந்த நிகழ்வுகளாகும்.


وَلَقَدْ أَتَوْا۟ عَلَى ٱلْقَرْيَةِ ٱلَّتِىٓ أُمْطِرَتْ مَطَرَ ٱلسَّوْءِ ۚ أَفَلَمْ يَكُونُوا۟ يَرَوْنَهَا ۚ بَلْ كَانُوا۟ لَا يَرْجُونَ نُشُورًۭا.

25:40. ஆனால் அவர்கள் தினந்தோறும் நடந்து செல்லும் வழியில் அழிந்து போன சமுதாயம் உள்ளதே அதன் நிலை என்னவென்பதை இவர்கள் எப்போதாவது கவனித்துப் பார்த்ததுண்டா? லூத் நபியின் சமூகத்தவர் மீது கல்மாறி மழை பொழிந்து அனைவருமே மண்ணோடு மண்ணாகப் புதைந்து விட்டார்களே, அதற்கு காரணம் என்னவென்பதை இவர்கள் கவனித்து இருக்கிறார்களா? அவர்களில் எஞ்சி இருந்த சிலரைக் கொண்டு மீண்டும் ஒரு எழுச்சி மிகு சமுதாயமாக உருவானதை அவர்கள் கவனிக்கவில்லையா?
அவர்கள் அதைப் பற்றியெல்லாம் சிந்திக்க மாட்டார்கள். காரணம் அவர்கள் தம் வாழ்வை ஆட்டம், பாட்டம் என கேலிக் கூத்தாக ஆக்கிக் கொண்டுள்ளார்கள். எனவே அவர்கள்


وَإِذَا رَأَوْكَ إِن يَتَّخِذُونَكَ إِلَّا هُزُوًا أَهَٰذَا ٱلَّذِى بَعَثَ ٱللَّهُ رَسُولًا.

25:41. இறைத் தூதரைப் பார்க்கும் போதும், “இவரையா அல்லாஹ் தன் தூதராக அனுப்பி இருக்கிறான்?” எனக் கேலியாகப் பேசி வருகிறார்கள். இப்படியாக உன்னையும் கேலிக்குரியவராக ஆக்கிக் கொண்டுள்ளனர்.


إِن كَادَ لَيُضِلُّنَا عَنْ ءَالِهَتِنَا لَوْلَآ أَن صَبَرْنَا عَلَيْهَا ۚ وَسَوْفَ يَعْلَمُونَ حِينَ يَرَوْنَ ٱلْعَذَابَ مَنْ أَضَلُّ سَبِيلًا.

25:42. மேலும் அவர்கள், “நாமும் நம் தெய்வ வழிப்பாடுகளில் உறுதியாக இல்லாதிருந்தால், எங்களையும் எங்கள் தெய்வங்களைவிட்டு திசை மாற்றி இருப்பார். நாம் நம் கொள்கையில் உறுதியாக இருப்பதால் தான் வழிகெடாமல் இருக்கிறோம்” என்கின்றனர். ஆனால் அவர்களுடைய செயல்களின் விளைவுகள் தோற்றத்திற்கு வரும்போது, யார் வழிதவறிச் சென்றவர்கள் என்ற உண்மை புரிந்துவிடும்.


أَرَءَيْتَ مَنِ ٱتَّخَذَ إِلَٰهَهُۥ هَوَىٰهُ أَفَأَنتَ تَكُونُ عَلَيْهِ وَكِيلًا.

25:43. இறைவழிகாட்டுதலை எடுத்துரைப்பவரே! தம் மனஇச்சைக்கு அடிமைப்பட்டு வாழ்பவர்களின் நிலையைக் கவனித்தீரா? அத்தகையவர்களை நீர் எவ்வாறு நரக வேதனையிலிருந்து காப்பாற்ற இயலும்?


أَمْ تَحْسَبُ أَنَّ أَكْثَرَهُمْ يَسْمَعُونَ أَوْ يَعْقِلُونَ ۚ إِنْ هُمْ إِلَّا كَٱلْأَنْعَٰمِ ۖ بَلْ هُمْ أَضَلُّ سَبِيلًا.

25:44. இறைவழிகாட்டுதலை எடுத்துரைப்பவரே! இத்தகையவர்களில் பெரும்பாலோர் உன்னுடைய அறிவுரைகளைக் கேட்டு அதன்படி அறிவுப் பூர்வமாக செயல்படுவார்கள் என்ற நினைப்பில் இருக்கிறீரா? இல்லை. மனோ இச்சைக்கு அடிபணிந்து வாழ்பவர்கள், அறிவை பயன்படுத்தவே மாட்டார்கள். எனவே அவர்கள் மனித தன்மையிலிருந்து கீழிறங்கி மிருக அளவிற்கு சென்றுவிடுகின்றனர். அந்த அளவிற்கு தரங்கெட்டுப் போய்விடுகின்றனர்.
அந்த மிருகங்களாவது தம் இயல்பின் அடிப்படையில் வாழ்ந்து வருகின்றன. ஆனால் மனிதனின் நிலை அதைவிட மோசம் (மேலும் பார்க்க 7:179) மேலும் உலகின் மற்ற படைப்புகளும் இறைவன் விதித்த விதிமுறைகளின்படியே செயல்படுகின்றன. எடுத்துக்காட்டாக


أَلَمْ تَرَ إِلَىٰ رَبِّكَ كَيْفَ مَدَّ ٱلظِّلَّ وَلَوْ شَآءَ لَجَعَلَهُۥ سَاكِنًۭا ثُمَّ جَعَلْنَا ٱلشَّمْسَ عَلَيْهِ دَلِيلًۭا.

25:45. நிழலை எடுத்துக் கொள்ளுங்கள். இறைவனின் நியதிப்படி அவை எவ்வாறு நீண்டுக்கொண்டே செல்கின்றன என்பதைக் கவனித்தீர்களா? அந்த நிழல் அசைவற்று நிலையாக இருக்கும்படி செய்ய இறைவனின் நாட்டம் இருந்திருந்தால் அதை அவ்வாறு செய்திருக்க முடியும். ஆனால் இறைவனின் செயல்திட்டப்படி பூமி சூரியனை சுற்றி வருவதால், சூரிய ஒளி நிழலுக்கு ஆதாராமாக விளங்குகிறது.


ثُمَّ قَبَضْنَٰهُ إِلَيْنَا قَبْضًۭا يَسِيرًۭا.

25:46. இப்படியாக அந்த நிழல் இறைவனின் நியதிப்படி கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து முழுவதுமாக மறைந்து விடுகிறது.


وَهُوَ ٱلَّذِى جَعَلَ لَكُمُ ٱلَّيْلَ لِبَاسًۭا وَٱلنَّوْمَ سُبَاتًۭا وَجَعَلَ ٱلنَّهَارَ نُشُورًۭا.

25:47. அதை தொடாந்து பூமியில் இருள் சூழ்ந்து, இரவாக மாறிவிடுகிறது. இப்படியாக உங்களுக்கு தூக்கத்தைக் கொடுத்து ஒய்வெடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனால்தான் உங்களால் பகலில் சுறுசுறுப்பாக உழைக்க முடிகிறது.


وَهُوَ ٱلَّذِىٓ أَرْسَلَ ٱلرِّيَٰحَ بُشْرًۢا بَيْنَ يَدَىْ رَحْمَتِهِۦ ۚ وَأَنزَلْنَا مِنَ ٱلسَّمَآءِ مَآءًۭ طَهُورًۭا.

25:48. அல்லாஹ்வின் அதே சட்டத்தின் கீழ் பூமியில் விளைச்சல்களும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அந்த திட்டத்தின் படியே மழை பொழிவதற்கு முன்பாக காற்றில் சுழல் ஏற்பட்டு அதன்பின் தூய்மையான மழைநீர் பொழிகிறது. இவை யாவும் அல்லாஹ்வின் மாபெரும் கிருபை ஆகும் அல்லவா?


لِّنُحْۦِىَ بِهِۦ بَلْدَةًۭ مَّيْتًۭا وَنُسْقِيَهُۥ مِمَّا خَلَقْنَآ أَنْعَٰمًۭا وَأَنَاسِىَّ كَثِيرًۭا.

25:49. அந்த மழை நீரைக் கொண்டே இறந்து போன பூமிக்கு உயிர் கிடைத்து பசுமையாகி, கால் நடைகளுக்கும் மனிதர்களுக்கும் பல்வேறு உணவு வகைகள் கிடைப்பதோடு, அனைவரின் தாகமும் தணிகிறது.


وَلَقَدْ صَرَّفْنَٰهُ بَيْنَهُمْ لِيَذَّكَّرُوا۟ فَأَبَىٰٓ أَكْثَرُ ٱلنَّاسِ إِلَّا كُفُورًۭا.

25:50. இதுவே இறைவனின் செயல் திட்டப்படி இவ்வுலகில் நடைபெற்று வரும் இயற்கை சட்டங்களாகும். அவற்றை நீங்கள் நன்றாக அறிந்து சிறப்பாக செயல்பட வேண்டும் என்பதற்காகவே அவற்றை பலக் கோணங்களில் திரும்ப திரும்ப எடுத்துரைக்கிறோம். ஆனால் மனிதனோ இதைப் பற்றி சிந்தித்து செயலாற்றுவதற்குப் பதிலாக ஆணவத்துடன் அவற்றை நிராகரித்து விடுகிறான்.
இதனால் மக்கள் பல வகையில் எதிர்ப்புகளை தெரிவிக்கிறார்கள். இறைவன் ஏன் ஒருவரை மட்டும் தன் தூதராகத் தேர்ந்தெடுத்து வழிகாட்டுதலை அளிக்கவேண்டும்? ஊருக்கு ஒரு தூதரை அனுப்பி இருக்கலாமே என்கிறார்கள். அவர்களிடம் இது விஷயமாக தெளிவாக்கிவிடுங்கள்.


وَلَوْ شِئْنَا لَبَعَثْنَا فِى كُلِّ قَرْيَةٍۢ نَّذِيرًۭا.

25:51. ஒவ்வொரு ஊரிலும் ஒரு தூதரை அனுப்பும் செயல்திட்டம் இருந்திருந்தால் இறைவன் அவ்வாறே அனுப்பி ஒவ்வொரு ஊர் மக்களுக்கும் எச்சரித்து இருப்பான்.
ஆனால் இறைவனின் செயல்திட்டம் அவ்வாறில்லை. உலகில் மனிதன் ஒரே குடும்பமாக இணைந்து வாழும் கால கட்டத்திற்கு வந்து விட்டான். எனவே இறைவனின் செயல்திட்டப் படி உலக மக்கள் அனைவருக்காகவும் ஒரு தூதரை தேர்ந்தெடுத்து எல்லா சட்ட திட்டங்களும் வரையறைகளும் அவர் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. (பார்க்க 7:158) எனவே


فَلَا تُطِعِ ٱلْكَٰفِرِينَ وَجَٰهِدْهُم بِهِۦ جِهَادًۭا كَبِيرًۭا.

25:52. நிராகரிப்பவர்களின் பேச்சுக்கு நீங்கள் செவி சாய்க்காதீர்கள். அவர்களுடைய எதிர்ப்புகளை முறியடிக்க எல்லா வகையிலும் கடுமையான நடவடிக்கை எடுங்கள்.
மேலும் மக்கள் அனைவரும் ஏன் இறைவழிகாட்டுதலை ஏற்க மறுக்கிறார்கள் என்று கவலைப்பட்டுக் கொண்டிராதீர்கள். உண்மை என்னவென்றால் நேர்வழியில் இருப்பவர்களும் அவற்றை நிராகரிப்பவர்களும் இணைந்தே வாழ்கிறார்கள். உதாரணத்திற்கு கடல் நீரை எடுத்துக் கொள்ளுங்கள்.


۞ وَهُوَ ٱلَّذِى مَرَجَ ٱلْبَحْرَيْنِ هَٰذَا عَذْبٌۭ فُرَاتٌۭ وَهَٰذَا مِلْحٌ أُجَاجٌۭ وَجَعَلَ بَيْنَهُمَا بَرْزَخًۭا وَحِجْرًۭا مَّحْجُورًۭا.

25:53. கடலில் இனிமையும் சுவையும் கலந்த நீரும், உப்பும் கசப்பும் கலந்த நீரும் ஒன்றாக இருந்தும், அவ்விரண்டும் ஒன்றோடு ஒன்று கலக்காதவாறு தடுப்புகள் உள்ளன. இதனால் அவை இரண்டும் கலப்பதில்லை.
அதாவது கடல் நீர் ஒன்றாக இருந்தும், அவை ஒன்றோடு ஒன்று கலப்பதில்லை. அது போலவே வெவ்வேறு கலாச்சார வழிமுறைகளை பின்பற்றும் மக்கள் ஒன்றாகவே வாழ்ந்தும், அவரவர் தம் கொள்கையில் நிலைத்து விடுகிறார்கள். அவர்கள் ஒரு போதும் மற்ற கலாச்சார விஷயங்களில் கலந்து கொள்வதில்லை. எனவே தான் இறைவழிகாட்டுதலுக்கு இந்த அளவுக்கு எதிர்ப்பு வலுக்கிறது. (மேலும் பார்க்க 35:12)
இரண்டாவதாக கடல் ஆராய்ச்சியாளர்கள் கடலில் உள்ள பிளவுப் பற்றிய உண்மையை அண்மையில் தான் கண்டுபிடித்தார்கள். முஹம்மது நபி (ஸல்) அவர்கள் ஒருபோதும் கடல் ஆராய்ச்சி செய்ததுமில்லை. கடல் பயணம் மேற்கொண்டதும் இல்லை. இருந்தும் இந்த உண்மையை உலக மக்களுக்கு அவர் எடுத்துரைக்கிறார் என்றால், இந்த விஷயத்தை உலகைப் படைத்த இறைவனின் கூற்றே என்பதற்கும், வஹீ மூலமே இவை அறிவிக்கப்பட்டன என்பதற்கும் இவ்வாசகம் சாட்சி பகர்கிறது.


وَهُوَ ٱلَّذِى خَلَقَ مِنَ ٱلْمَآءِ بَشَرًۭا فَجَعَلَهُۥ نَسَبًۭا وَصِهْرًۭا ۗ وَكَانَ رَبُّكَ قَدِيرًۭا.

25:54. ஆக மனிதன் இறைவனின் படைப்பு சட்டத்தின் படி நீரிலிருந்து உருவானவன் தான். ஆனால் இனப் பெருக்கத்தின் காரணமாக இறைவனின் நியதிப்படி அவனுள் பரம்பரை வம்சங்களும், உறவுமுறை சம்பந்தங்களும் உருவாயின. உங்கள் இறைவனின் செயல்திட்டங்கள் பேராற்றலுடையவை என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
பிறப்பின் அடிப்படையில் மக்கள் அனைவரும் ஓரினத்தவனே என்றிருக்கும் போது, அவனுள் பிரிவினை இருப்பது நியாயமில்லை. (பார்க்க 4:1) இருப்பினும் குலம், கோத்திரம், வம்சம், சமுதாயம், நாடு என்று இருப்பதெல்லாம் எளிதாக அடையாளம் கண்டு நிர்வாக வசதிக்காகத் தானே அன்றி, இதனால் யாருக்கும் எவ்வித சிறப்பும் கிடைப்பதில்லை. இறை வழிகாட்டுதலை எந்த அளவுக்குப் பேணி நடக்கிறார்களோ, அந்த அளவுக்குத் தான் உயர்வும் கண்ணியமும் கிடைக்கும் என்பதே உண்மை. (பார்க்க 49:13) எனவே வம்ச உறவுமுறைகள் என்பது முக்கியமல்ல. இந்த உண்மைகளை எல்லாம் அறியாத மக்கள் அல்லாஹ்வின் வழிகாட்டுதலை விட்டுவிட்டு மற்ற வழிமுறையை கடைப்பிடித்து வருகிறார்கள்.


وَيَعْبُدُونَ مِن دُونِ ٱللَّهِ مَا لَا يَنفَعُهُمْ وَلَا يَضُرُّهُمْ ۗ وَكَانَ ٱلْكَافِرُ عَلَىٰ رَبِّهِۦ ظَهِيرًۭا.

25:55. அவர்கள் வணங்கி வரும் கற்பனை தெய்வங்கள், அவர்களுக்கு யாதொரு நன்மை செய்யவோ அல்லது தீமையை நீக்கவோ இயலாதவை ஆகும். அவர்கள் பல்வேறு வம்சத்தை சேர்ந்தவராக இருந்தாலும், இறைக் கொள்கை என்று வரும்போது, அதை எதிர்ப்பதில் அனைவரும் ஒருங்கிணைந்து விடுகிறார்கள்.


وَمَآ أَرْسَلْنَٰكَ إِلَّا مُبَشِّرًۭا وَنَذِيرًۭا.

25:56. இப்படி அவர்கள் எதிர்ப்பதால் அல்லாஹ்வுக்கோ உமக்கோ எந்த பாதிப்பும் ஏற்படப் போவதில்லை. ஏனெனில் நற்செயல்கள் எவை? அவற்றின் பலன்கள் என்ன? தீய செயல்கள் எவை? அவற்றின் பாதிப்புகள் என்ன? இது போன்ற விஷயங்களை தெளிவாக எடுத்துரைப்பதே உம் மீதுள்ள கடமையாகும்.


قُلْ مَآ أَسْـَٔلُكُمْ عَلَيْهِ مِنْ أَجْرٍ إِلَّا مَن شَآءَ أَن يَتَّخِذَ إِلَىٰ رَبِّهِۦ سَبِيلًۭا.

25:57. அதுமட்டுமின்றி நீர் உம் சுய லாபத்திற்காக அவர்களிடம் இந்த உண்மைகளை எடுத்துரைப்பதில்லை. மாறாக விருப்பமுள்ளவர்கள் இறைவனின் நேர்வழியை பெற்று, சந்தோஷமான வாழ்வை பெற்றுக் கொள்ளட்டும். இதுதானே உங்கள் நோக்கம்! இதை அவர்களிடம் தெளிவாக விளக்கிவிடுங்கள்.


وَتَوَكَّلْ عَلَى ٱلْحَىِّ ٱلَّذِى لَا يَمُوتُ وَسَبِّحْ بِحَمْدِهِۦ ۚ وَكَفَىٰ بِهِۦ بِذُنُوبِ عِبَادِهِۦ خَبِيرًا.

25:58. மேலும் என்றென்றும் நித்திய ஜீவித்திருக்கும், ஒருபோதும் மரிக்காத இறைவனின் வழிகாட்டுதலின் மீது முழுமையான நம்பிக்கைக் கொண்டு செயல்படுங்கள். அந்த இறை செயல் திட்டங்களின் படியே ஏற்படுத்தப்பட்டுள்ள சமூக அமைப்பின் புகழ் மேலோங்க அயராது உழைத்து வாருங்கள். இறை ஆட்சியமைப்பிற்கு எதிராக செயல்படுவோரின் நிலை என்னவென்று அல்லாஹ்வுக்கு நன்கு தெரியும்.
அவர்கள் செய்து வரும் சூழ்ச்சிகள் யாவும் இறைவனின் நியதிப்படி பலனற்றுப் போகும். எனவே உங்கள் செயல் திட்டங்களில் அயராது உழைத்து வாருங்கள். பாதுகாப்பு விஷயங்களில் கவனம் செலுத்தி வாருங்கள். ஏனெனில்


ٱلَّذِى خَلَقَ ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضَ وَمَا بَيْنَهُمَا فِى سِتَّةِ أَيَّامٍۢ ثُمَّ ٱسْتَوَىٰ عَلَى ٱلْعَرْشِ ۚ ٱلرَّحْمَٰنُ فَسْـَٔلْ بِهِۦ خَبِيرًۭا.

25:59. இந்த வழிகாட்டுதல்கள் அகிலங்களையும் பூமியையும் படைத்து பரிபாலிக்கின்ற ஏக இறைவனாகிய அல்லாஹ்விடமிருந்து அருளப்படுகின்ற செயல் திட்டங்களாகும். ஏக இறைவனாகிய அல்லாஹ் இவற்றையும் இவற்றிற்கிடையே உள்ள அனைத்தையும் ஆறு கால கட்டங்களில் படைத்து (விளக்கத்திற்குப் பார்க்க 7:54) அவற்றை கட்டுக்கோப்பாக வைத்து முறையோடு செயல்படும்படி ஏற்பாட்டினை செய்துள்ளான். (பார்க்க 3:190, 41:9-10) பிரபஞ்ச செயல்பாடுகளைப் பற்றி அறிந்துகொள்ள விரும்பினால், அவற்றின் ஆய்வுகளை மேற்கொள்ளும் விஞ்ஞானிகளிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். (மேலும் பார்க்க 35:27-28)
இத்தகைய ஏற்பாட்டின் மூலம் தான் இவ்வுலகில் எல்லா உயிரினங்களும் உயிர் வாழ முடிகிறது. மனிதனுக்கும் எல்லா வாழ்வாதரங்களும் கிடைக்கின்றன. இவை யாவும் மனிதன் இறைவனிடம் மன்றாடி கேட்டு அளிக்கப்பட்டவை அல்ல. இறைவனின் செயல்திட்டப்படி உருவானவையாகும். எனவே அவை யாவும் இறைவனின் அருட்கொடைகளாகும்.


وَإِذَا قِيلَ لَهُمُ ٱسْجُدُوا۟ لِلرَّحْمَٰنِ قَالُوا۟ وَمَا ٱلرَّحْمَٰنُ أَنَسْجُدُ لِمَا تَأْمُرُنَا وَزَادَهُمْ نُفُورًۭا ۩.

25:60. இத்தகைய மாபெரும் அருட்கொடையாளனின் வழிகாட்டுதலுக்கு அடிபணிந்து செயல்படும்படி அவர்களிடம் கூறினால்,“அருட்கொடையாளனா? அது என்ன?” என்று எதுவுமே அறியாதவர்கள் போல கேட்கிறார்கள். மேலும் அவர்கள், “நீர் சொல்கிறீர் என்பதால் நாங்கள் அடிபணிந்து விட முடியுமா?” என்கிறார்கள். இப்படித் தான் நிராகரிப்பவர்களுக்கு வெறுப்பையே அதிகமாக்குகிறது.
ஸஜ்தா என்ற வார்த்தைக்கு விளக்கம் பெற 16:49-50 வாசகங்களைப் படியுங்கள். அம்மக்கள் கேட்ட கேள்விக்குப் பதில் இதோ:


تَبَارَكَ ٱلَّذِى جَعَلَ فِى ٱلسَّمَآءِ بُرُوجًۭا وَجَعَلَ فِيهَا سِرَٰجًۭا وَقَمَرًۭا مُّنِيرًۭا.

25:61. வானத்தில் இரவில் மின்னும் இலட்சோப இலட்ச நட்சத்திரங்களையும், இவற்றிற்கு இடையே பளிச்சிடும் சந்திரனையும் கவனித்து பார்க்கச் சொல்லுங்கள். அது மட்டுமின்றி பகலில் சுடர்விட்டு ஒளி வீசும் சூரியனைப் பற்றியும் கவனித்து பார்க்கும் படி சொல்லுங்கள். அவற்றைப் படைத்து ஒவ்வொன்றையும் குறிப்பிட்ட கோளில் நீந்தி செல்லும் படி செய்துள்ள வல்லமைமிக்க ஏக இறைவனைப் பற்றி வேறு என்ன சொல்லி விளக்குவது? (மேலும் பார்க்க 36:38-40)
இறைவனின் வழிகாட்டுதலுக்கு கட்டுப்பட்டு வாழ சொல்வது மக்களின் நன்மைக்காவே அன்றி வேறு எதுவுமில்லை. இதனால் அவர்கள் வாழ்வில் இருக்கும் இருள் சூழ்ந்த நிலை மாறி ஒளிமயமான வாழ்விற்கு வழி பிறக்கும். எனவே


وَهُوَ ٱلَّذِى جَعَلَ ٱلَّيْلَ وَٱلنَّهَارَ خِلْفَةًۭ لِّمَنْ أَرَادَ أَن يَذَّكَّرَ أَوْ أَرَادَ شُكُورًۭا.

25:62. இறைவனின் செயல்திட்டப்படி இரவுக்குப் பின் பகல் என எவ்வாறு மாறிமாறி வருகிறதோ, அவ்வாறே இறைவழிகாட்டுதலைக் கொண்டு சமுதாயங்களில் நிலவி வரும் இருள் சூழ்ந்த நிலை மாறி வெளிச்சத்திற்கு வந்து விடும். ஆனால் அறிவைப் பயன்படுத்தும் மக்களுக்கே இந்த உண்மைகளும் அறிவுரைகளும் பலன் தரும். அப்போது தான் அவர்கள் மனிதனாகப் பிரவி எடுத்தன் நோக்கமும் நிறைவேறும். அத்தகையவர்களே இறைவனிடம் நன்றி விசுவாசத்துடன் நடந்து கொள்பவர் ஆவர்.
மேலும் அருட்கொடையாளனின் அறிவுரைகளுக்கு அடிபணிந்து செயல்படும் செயல்வீரர்கள் எத்தகைய பண்புடையவர்களாக இருப்பார்கள் என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள்.


وَعِبَادُ ٱلرَّحْمَٰنِ ٱلَّذِينَ يَمْشُونَ عَلَى ٱلْأَرْضِ هَوْنًۭا وَإِذَا خَاطَبَهُمُ ٱلْجَٰهِلُونَ قَالُوا۟ سَلَٰمًۭا.

25:63. அருட்கொடையாளனின் ஆட்சியின்கீழ் பணியாற்றும் செயல்வீரர்கள், பொதுமக்களுடன் எப்போதும் பணிவோடும் அடக்கத்துடனும் நடந்துகொள்வார்கள். அதையும் மீறி மக்களில் சிலர் ஆவேசமாக நடந்து கொண்டாலும், இறைவனின் ஆட்சியமைப்பு சட்டங்கள் யாவும் மக்கள் அனைவரின் நலனைக் கருதியே ஏற்படுத்தப்பட்டுள்ளன என்பதை தெளிவாகவும் பணிவோடும் எடுத்துச் சொல்வார்கள்.
இறைவன் காட்டிய சட்டப்படி செயல்படும்போது, சில சமயங்களில் சிலருக்கு பாதிப்புகள் ஏற்படும். உதாரணத்திற்கு வட்டித் தொழிலையே எடுத்துக் கொள்ளுங்கள். அதற்குத் தடை விதிக்கும் போது, வட்டித் தொழில் செய்வோருக்கு பாதிப்புக்களை ஏற்படுத்தும். இதனால் அவர்கள் ஆவேசப்படுவார்கள். ஆனால் ஒட்டுமொத்த சமுதாய நலனை வைத்துப் பார்க்கும் போது, அந்த தடை உத்தரவு பலனுள்ளதாக இருக்கும். இதை அவர்களுக்கு நளினமாக எடுத்துக் கூற வேண்டும். இது போன்ற தனி நபரைப் பாதிக்கும் பல விஷயங்களைப் பற்றி எடுத்துக் கூறவேண்டும்.


وَٱلَّذِينَ يَبِيتُونَ لِرَبِّهِمْ سُجَّدًۭا وَقِيَٰمًۭا.

25:64. இப்படி சிறப்பாகத் தம் கடமைகளை ஆற்றிவரும் செயல்வீரர்கள், இரவு நேரங்களிலும் ஒட்டுமொத்த மக்களின் நலனைப் பேணிக் காக்கும் இறை ஆட்சியமைப்பு செயல் திட்டங்களை மேலோங்கச் செய்ய எந்த விஷயங்களில் அடிபணிந்து செயல்பட வேண்டும்? எங்கு உறுதியோடு நின்று செயல்பட வேண்டும் என்பதைப் பற்றிய சிந்தனையில் ஆழ்ந்து இருப்பார்கள். இப்படியாக அவர்கள் இரவுப் பகலாக அயராது உழைப்பார்கள்.
சுயநலக்காரர்களிடம் இந்த ஆட்சியமைப்பு சிக்கினால் சமூக ஒருமைப்பாட்டை சீர்குலைத்து ஏற்றத் தாழ்வை ஏற்படுத்தி சமுதாயத்தை சீரழித்து விடுவார்கள். அந்த சமுதாயம் நரகமாக மாறிவிடும். எனவே


وَٱلَّذِينَ يَقُولُونَ رَبَّنَا ٱصْرِفْ عَنَّا عَذَابَ جَهَنَّمَ ۖ إِنَّ عَذَابَهَا كَانَ غَرَامًا.

25:65. இவர்களுடைய எண்ணங்களும் செயல் திட்டங்களும் இத்தகைய நரக வேதனையிலிருந்து மக்களை பாதுகாக்கவே இருக்கும். ஏனெனில் அப்படிப்பட்ட வேதனைகளிலிருந்து மீள்வது மிகவும் கடினமானவை என்பதை அவர்கள் அறிந்தே முன்னெச்சரிக்கையோடு செயல்படுவார்கள்.


إِنَّهَا سَآءَتْ مُسْتَقَرًّۭا وَمُقَامًۭا.

25:66. மேலும் அப்படிப்பட்ட சூழ்நிலையில் மக்கள் வாழ்வதும் வசிப்பதும் மிக மிக கெட்ட இடமாகவே இருக்கும் என்பதை அறிந்தே அதை தவிர்த்துக் கொள்ளும் வகையில் அந்த செயல்வீரர்கள் செயல்படுவார்கள்.


وَٱلَّذِينَ إِذَآ أَنفَقُوا۟ لَمْ يُسْرِفُوا۟ وَلَمْ يَقْتُرُوا۟ وَكَانَ بَيْنَ ذَٰلِكَ قَوَامًۭا.

25:67. மேலும் அருட்கொடையாளனின் செயல்வீரர்கள், எப்போதும் மக்கள் நலனுக்காக தீட்டப்பட்ட செயல் திட்டங்களுக்காகவே செலவிடுவார்கள். அவசியமில்லாத செலவுகளை தவிர்த்துக் கொள்வார்கள். தேவை எனும்போது, செலவு செய்யாமலும் இருக்க மாட்டார்கள். இப்படியாக அவர்கள் ஒவ்வொரு விஷயத்திலும் அனுசரித்து நடுநிலையோடு செயல்படுவார்கள்.


وَٱلَّذِينَ لَا يَدْعُونَ مَعَ ٱللَّهِ إِلَٰهًا ءَاخَرَ وَلَا يَقْتُلُونَ ٱلنَّفْسَ ٱلَّتِى حَرَّمَ ٱللَّهُ إِلَّا بِٱلْحَقِّ وَلَا يَزْنُونَ ۚ وَمَن يَفْعَلْ ذَٰلِكَ يَلْقَ أَثَامًۭا.

25:68. மேலும் அந்த செயல்வீரர்கள், அல்லாஹ்வின் வழிகாட்டுதலுக்கு இணையாக வேறெதையும் பின்பற்றவும் மாட்டார்கள் அதற்காக அழைப்பும் விட மாட்டார்கள். சமுதாயத்தில் எங்கும் கொலைக் குற்றம் நடக்காதவாறு பார்த்துக் கொள்வார்கள். மேலும் திட்டமிட்டு செய்த கொலைக் குற்றவாளிக்கு, நீதி மன்றத்தில் தீர விசாரித்து குற்றம் நிரூபிக்கப்பட்டால் மரண தண்டனை அளிப்பார்கள். அதேபோல் நாட்டில் எங்கும் விபச்சாரம் நடைபெறாதவாறு பார்த்துக் கொள்வார்கள். அதையும் மீறி விபச்சாரம் செய்யத் துணை நிற்கும் தரகர்களுக்கும் (Pimps) அல்லது பாலியல் பலாத்காரம் செய்வோருக்கும் மேற்சொன்ன அதே மரண தண்டனை அளிக்கப்படும்.


يُضَٰعَفْ لَهُ ٱلْعَذَابُ يَوْمَ ٱلْقِيَٰمَةِ وَيَخْلُدْ فِيهِۦ مُهَانًا.

25:69. இவ்வுலகில் இப்படிப்பட்ட தண்டனையிலிருந்து தப்பிவிட்டால், மரணத்திற்குப் பின் தொடர்கின்ற நிலையான காலக் கட்டத்தில், இதைவிட பன்மடங்கு அதிகமாக தண்டனை கிடைக்கும். மேலும் அவர்கள் இழிவு அடைந்தவர்களாக அங்கு நெடுங்காலம் இருப்பார்கள்.


إِلَّا مَن تَابَ وَءَامَنَ وَعَمِلَ عَمَلًۭا صَٰلِحًۭا فَأُو۟لَٰٓئِكَ يُبَدِّلُ ٱللَّهُ سَيِّـَٔاتِهِمْ حَسَنَٰتٍۢ ۗ وَكَانَ ٱللَّهُ غَفُورًۭا رَّحِيمًۭا.

25:70. ஆனால் எவர் பாவ செயல்கள் செய்வதை விட்டுவிட்டு, மனந்திருந்தி, இறைவழிகாட்டுதலை ஏற்று, ஆக்கப்பூர்வமான நற்செயல்களைச் செய்து வருகிறார்களோ, அத்தகையவர்களுக்கு மன்னிப்பு உண்டு. தீய வழியில் பயன்படுத்திய ஆற்றல்களை இப்போது இறைவழிகாட்டுதலின்படி ஆக்கப்பூர்வமான நற்செயல்களில் பயன்படுத்தட்டும். (39:35) இவர்களுக்கு அல்லாஹ்வின் ஆட்சியமைப்பு பாதுகாப்பு அளிப்பதோடு அவர்களை பாசத்துடன் அரவணைத்துக் கொள்ளும்.


وَمَن تَابَ وَعَمِلَ صَٰلِحًۭا فَإِنَّهُۥ يَتُوبُ إِلَى ٱللَّهِ مَتَابًۭا.

25:71. நினைவில் கொள்ளுங்கள். வெறும் வார்த்தைகளால் ஆயிரம் முறை உச்சரித்து மன்னிப்பு கோரினாலும், அது பாவமன்னிப்பு ஆகாது. ஆக்கப்பூர்வமான நற்செயல்களை செய்வதைக் கொண்டே பாவமன்னிப்புத் தேடுவதற்கு உண்மையான அர்த்தமாகும். அத்தகையவர்களுக்கே அல்லாஹ்விடத்தில் பாவ மன்னிப்பு உண்டு (மேலும் பார்க்க 4:17)
ஏனெனில் ஒருவர் சுவர்க்கத்திற்கு செல்ல வேண்டும் என்றால் தம் வாழ்நாள் காலத்து செயல்களின் ஏட்டில் நன்மையை மிகைக்கச் செய்ய வேண்டும். (பார்க்க 7:8-9) வெறும் வார்த்தைகளால் பாவ மன்னிப்புத் தேடினால் அவை ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. இதுவே உலகமெங்கும் உள்ள மக்களுக்கு விடுக்கப்பட்ட செய்தியாகும். இதை விட்டுவிட்டு வேறு எந்த வழிமுறையும் தம் பாவங்களுக்கு பரிகாரமாக ஆகமுடியாது.


وَٱلَّذِينَ لَا يَشْهَدُونَ ٱلزُّورَ وَإِذَا مَرُّوا۟ بِٱللَّغْوِ مَرُّوا۟ كِرَامًۭا.

25:72. மேலும் அந்த செயல்வீரர்கள் நீதிமன்றத்தில் சாட்சி சொல்ல நேர்ந்தால், ஒருபோதும் பொய் சாட்சி சொல்ல மாட்டார்கள். மேலும் அவர்கள் எந்த அரட்டை அரங்கத்திலும், பங்கெடுத்துக் கொள்ள மாட்டார்கள். வீணான எந்த செயலிலும் ஈடுபட மாட்டார்கள். அதையும் மீறி அப்படிப்பட்ட இடங்களுக்குச் செல்ல நேர்ந்தால் உண்மை அறிந்த பின் கண்ணியமான முறையில் ஒதுங்கி சென்று விடுவார்கள்.


وَٱلَّذِينَ إِذَا ذُكِّرُوا۟ بِـَٔايَٰتِ رَبِّهِمْ لَمْ يَخِرُّوا۟ عَلَيْهَا صُمًّۭا وَعُمْيَانًۭا.

25:73. மேலும் அந்த செயல்வீரர்கள் எந்த செய்தியையும் மேலோட்டமாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள். அது இறைச் செய்தியாக இருப்பினும் சரியே. அதைப் பற்றி தீர விசாரித்து உண்மை அறிந்த பின்னரே அவற்றை ஏற்று, அதற்குத் தக்கவாறு செயல்படுவார்கள். அதாவது அவர்கள் ஒருபோதும் கண்மூடித்தனமாக செயல்படவே மாட்டார்கள்.
இப்படியாக நாட்டைக் காக்கும் இந்த செயல்வீரர்கள், தம் வீட்டையும் சிறப்பாக வழிநடத்தி வருவார்கள். அவர்களுடைய எண்ணங்களும் செயல்பாடுகளும் சிறப்பாக இருக்கும். அவர்கள் தம் மனைவி மக்களை கண்குளிரச் செய்யும் வகையில் நடந்து கொள்வார்கள். இப்படி ஒரு குடும்பம் அமைய வேண்டும் என்றால், மனைவி மக்களை சந்தோஷமாக வைத்துக் கொள்ள வேண்டும். தம் சம்பாத்தியத்தை குடும்ப நலனுக்காக செலவிட வேண்டும்.


وَٱلَّذِينَ يَقُولُونَ رَبَّنَا هَبْ لَنَا مِنْ أَزْوَٰجِنَا وَذُرِّيَّٰتِنَا قُرَّةَ أَعْيُنٍۢ وَٱجْعَلْنَا لِلْمُتَّقِينَ إِمَامًا.

25:74. எனவே இந்த செயல்வீரர்கள், “எங்கள் இறைவா! எங்கள் மனைவியையும் எங்கள் சந்ததியரையும் எங்களுக்கு கண் குளிரச் செய்வாயாக. மேலும் சமுதாயத்தில் அனைவரையும் இறைவழிகாட்டுதலைப் பேணிநடக்கும் சான்றோர்களாக ஆக்குவாயாக. அத்தகைய இறையச்சம் உள்ளவர்களின் தலைவர்களாக எங்களை ஆக்குவாயாக” என்று எல்லாம் வல்ல இறைவனிடம் பிரர்த்திப்பார்கள்.


أُو۟لَٰٓئِكَ يُجْزَوْنَ ٱلْغُرْفَةَ بِمَا صَبَرُوا۟ وَيُلَقَّوْنَ فِيهَا تَحِيَّةًۭ وَسَلَٰمًا.

25:75. இப்படியாக அந்த செயல்வீரர்கள் தம் இறைக் கொள்கைக் கோட்பாட்டில் நிலைத்திருந்து அயராது உழைத்து வருவார்கள். அதன் பலனாக, அந்த சமுதாயத்தில் மறுமலர்ச்சி எற்பட்டு, வாழ்வாதார வசதிகளும் சமுதாய சமச் சீர்நிலையும் ஏற்பட்டு வரும். இதனால் அங்கு அனைவரும் சந்தோஷமாக வாழ்வதுடன் ஒவ்வொருவரும், பிறர் நலனைப் பேணிக்காக்கும் எண்ணங்களை வெளிப்படுத்தும் வகையில் உளமாற தெரிவித்துக் கொள்வர். எங்கு நோக்கினும் சாந்தியும் சமாதானமும் என்ற பேரொலியே ஒலிக்கும்.


خَٰلِدِينَ فِيهَا ۚ حَسُنَتْ مُسْتَقَرًّۭا وَمُقَامًۭا.

25:76. இத்தகைய சமுதாயம் உருவாவது ஏதோ சில காலத்திற்காக என்பதல்ல. அப்படிப்பட்ட வாழ்வு நிலையாகக் கிடைக்கக் கூடியவையே ஆகும். அப்படிப்பட்ட உயர்வும் கண்ணியமும் சந்தோஷங்களும் நிலையாகக் கிடைக்கும் இடத்தில் வாழ்வது மிகவும் சிறந்தது அல்லவா?
இதுவே சான்றோர்களின் உழைப்பிற்குக் கிடைக்கின்ற வெகுமானங்களாகும். இதற்காக சமூக சமச் சீர்நிலையை சீர்குலைக்கும் எந்த செயலும் நிகழாதவாறு பார்த்துக் கொள்ளவேண்டும். முக்கியமாக கல்வி போதனைகள் விஷயத்தில் அரசு முழு கவனம் செலுத்தவேண்டும். இறைச் செய்திகள் என்ற பெயரில் தவறான விஷயங்களைப் எங்கும் பரவாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் சமுதாயம் சந்தோஷங்கள் நிறைந்ததாக இருக்கும். இவற்றை எல்லாம் கவனிக்காமல் ஏதோ வாழ்ந்து விட்டுப் போய்விடலாம் என்றிருப்பவர்களுக்கு கிடைக்கும் சந்தோஷங்கள் தற்காலிகமானதே.


قُلْ مَا يَعْبَؤُا۟ بِكُمْ رَبِّى لَوْلَا دُعَآؤُكُمْ ۖ فَقَدْ كَذَّبْتُمْ فَسَوْفَ يَكُونُ لِزَامًۢا.

25:77. இறைவழிகாட்டுதலை எடுத்துரைப்பவரே! நீர் இறை நிராகரிப்பவர்களிடம், “இறைவனின் பால் விடுக்கும் என் அழைப்பை நீங்கள் ஏற்று செயல்பட முன்வரவில்லை என்றால், உங்களை இறைவன் ஒருபோதும் பொருட்படுத்தப் போவதில்லை. ஏனெனில் நீங்கள் இறைவழிகாட்டுதலை நிராகரித்து வருவதால், அதன் தீய விளைவுகளை நீங்கள் தான் சந்தித்துக் கொள்வீர்கள்” என்று அறிவித்து விடுங்கள்.