بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ

24:0.அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் அறிவுரைப்படியே அனைத்துக் காரியங்களையும் செய்ய நாடுகிறேன். (பார்க்க 6:162)
முன்னுரை - ஒரு நாட்டில் நிலவிவரும் பாலியல் உறவுமுறைகள்,பண்பாடு, ஒழுக்க மாண்புகள் மற்றும் இல்லத்தில் கடைப்பிடித்து வரும் நெறிமுறைகள் ஆகியவற்றை வைத்தே அந்த நாடு எந்த அளவுக்கு சிறப்பாக இருக்கிறது என்பதை கணித்து விடலாம். எனவே திருக்குர்ஆன் பாலியல் உறவு முறைகளில் கட்டுப்பாடுகளை விதிக்கிறது. ஆண் பெண் திருமணம் செய்யாமல் வைத்துக் கொள்ளும் பாலியல் உறவுமுறைகளை,மானக்கேடான செயல்கள் என வெளிப்படையாக அறிவிக்கிறது. (பார்க்க 17:32) பாலியல் உறவுமுறை விஷயத்தில் கட்டுப்பாடு உள்ள நாடுகள் தான் தன் இலட்சியப் பாதையில் நிலையாக வெற்றி நடை போடமுடியும் என்கிறது (பார்க்க 23:5-6,70,29-30). எனவே குர்ஆனில் உள்ள கட்டளைகள் உங்கள் மீது கடமையாக்கபட்டது போல் (பார்க்க 28:85) இந்த அத்தியாயத்தில் தரப்படுகின்ற கட்டளைகளும் உங்கள் மீது கடமையாக்கப்படுகின்றன.
மேலும் இஸ்லாமிய ஆட்சி அனைத்துத் தரப்பு மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்ற பொறுப்பு ஏற்றுக்கொள்ளும். (பார்க்க 11:6) எனவே எளிமையான திருமண முறையை கடைப்பிடிக்கவே அது அறிவுறுத்துகிறது. மேலும் பாலியல் உணர்ச்சிகளை தூண்டும் அனைத்து உபாயங்களுக்கும் அது தடை விதிக்கிறது. (பார்க்க 4:15-16) எனவே பெண்களின் பாதுகாப்பான வாழ்விற்கு இது இன்றியமையாத விஷயமாகும்.


سُورَةٌ أَنزَلْنَٰهَا وَفَرَضْنَٰهَا وَأَنزَلْنَا فِيهَآ ءَايَٰتٍۭ بَيِّنَٰتٍۢ لَّعَلَّكُمْ تَذَكَّرُونَ.

24:1. இந்த இறை வேதமான குர்ஆன் இறக்கி அருளப்பட்டது போல (பார்க்க 15:9), இந்த அத்தியாயமும் இறைவன் புறத்திலிருந்து இறக்கி அருளப்படுகிறது. இதிலுள்ள கட்டளைகளைப் பின்பற்றுவது உங்கள் மீதுள்ள கடமையாகும். இதிலுள்ள அறிவுரைகளை நன்றாகப் படித்து அவற்றை செயல்படுத்த, மிகத் தெளிவான முறையில் இறக்கி அருளப்படுகின்றன.
மனித ஆற்றல்கள் முழு அளவில் வளர்வதற்கு பாலியல் உறவுமுறையில் கட்டுப்பாடுகள் இருப்பது அவசியமாகின்றன. தான் விரும்பி ஏற்கும் பெண்ணை மணக்க அனுமதிக்கும் குர்ஆன் (பார்க்க 4:3),பெண்ணை விலைப் பொருளாக கருதுவதை வன்மையாக கண்டிக்கிறது. எனவே திருமண ஒப்பந்த முறையை அது கடமையாக்குகிறது. (பார்க்க 4:19-25) எனவே


ٱلزَّانِيَةُ وَٱلزَّانِى فَٱجْلِدُوا۟ كُلَّ وَٰحِدٍۢ مِّنْهُمَا مِا۟ئَةَ جَلْدَةٍۢ ۖ وَلَا تَأْخُذْكُم بِهِمَا رَأْفَةٌۭ فِى دِينِ ٱللَّهِ إِن كُنتُمْ تُؤْمِنُونَ بِٱللَّهِ وَٱلْيَوْمِ ٱلْءَاخِرِ ۖ وَلْيَشْهَدْ عَذَابَهُمَا طَآئِفَةٌۭ مِّنَ ٱلْمُؤْمِنِينَ.

24:2. ஆண் பெண் ஆகிய இருவரில் சட்டவிரோத பாலியல் உறவுமுறைக்கு அது தடை விதிக்கிறது. அதையும் மீறி திருமணமின்றி யாரவது அப்படிப்பட்ட உறவை வைத்துக் கொண்டால்,அவர்கள் இருவரும் தண்டனைக்கு உரியவர் ஆவார்கள். அப்படிப்பட்ட உறவு இருப்பதாக நிரூபணமானால் (பார்க்க 4:15,24:4) இஸ்லாமிய நீதிமன்றம் ஒவ்வொருவருக்கும் நூறு கசையடி அடிக்க உத்தரவு பிறப்பிக்கும். உண்மையிலேயே அல்லாஹ்வின் வழிகாட்டுதலையும் “மனித செயல்களின் இறுதி விளைவுகள்” என்ற ஆஃகிரத்தையும் நீங்கள் ஏற்றுக் கொள்பவராக இருந்தால்,இந்த தண்டனையை நிறைவேற்றுவதில் யாருக்கும் பாரபட்சம் காட்டவேண்டாம். அதுமட்டுமின்றி அது மற்றவர்களுக்கும் ஒரு பாடமாக இருக்க வேண்டும் என்பதற்காக இந்த தண்டனையை பொது மக்கள் முன்னிலையில் நிறைவேற்றுங்கள்.


ٱلزَّانِى لَا يَنكِحُ إِلَّا زَانِيَةً أَوْ مُشْرِكَةًۭ وَٱلزَّانِيَةُ لَا يَنكِحُهَآ إِلَّا زَانٍ أَوْ مُشْرِكٌۭ ۚ وَحُرِّمَ ذَٰلِكَ عَلَى ٱلْمُؤْمِنِينَ.

24:3. இந்த தண்டனையை இருவருக்கும் ஏன் தரப்படவேண்டும் என்றால்,ஆண் பெண் இடையே ஏற்படும் இத்தகைய உடன்பாடு,இருவரின் இணக்கத்துடன் தான் ஏற்பட முடியும். இதில் பெண்ணையோ ஆணையோ தனியாகக் குற்றம் சுமத்த முடியாது. இருவரில் ஒருவர் பரிசுத்தமானவராக இருந்தால், இப்படி நடக்க சாத்தியமில்லை. பெண்ணும் சபலபுத்தி உள்ளவளாகவோ அல்லது தம் வாழ்வின் எந்த இலட்சியமும் இல்லாதவளாகவோ இருந்தால் தான் இப்படிப்பட்ட உறவுமுறைக்கு உடன்படுவாள். அதே போல ஆணும் அத்தகைய சபலபுத்தி உள்ளவனாக இருந்தால் தான் இத்தகைய தகாத உறவு ஏற்படும். எனவேதான் அவ்விருவருக்கும் தண்டனை அளிக்கும்படி கட்டளையிடப்படுகிறது. மேலும் இறைவழிகாட்டுதலை ஏற்று நடக்கும் மூஃமின்கள் இப்படிப்பட்ட தகாத செயலில் ஈடுபடுவதிலிருந்து தவிர்த்துக் கொள்வார்கள்.
இவ்வாசகத்தில் வரும் ‘நிக்காஹ்’ என்ற வார்த்தைக்கு ஆண் பெண் ஆகிய இருவரிடையே ஏற்படும் உடன்பாடு (Understanding) என்று பொருள் தந்துள்ளோம் (ஆதாரம்:லிஸானுல் அரப் என்ற அகராதி)


وَٱلَّذِينَ يَرْمُونَ ٱلْمُحْصَنَٰتِ ثُمَّ لَمْ يَأْتُوا۟ بِأَرْبَعَةِ شُهَدَآءَ فَٱجْلِدُوهُمْ ثَمَٰنِينَ جَلْدَةًۭ وَلَا تَقْبَلُوا۟ لَهُمْ شَهَٰدَةً أَبَدًۭا ۚ وَأُو۟لَٰٓئِكَ هُمُ ٱلْفَٰسِقُونَ.

24:4. இந்த தண்டனையை யார் வேண்டுமானாலும் யாருக்கு வேண்டுமானாலும் தரமுடியும் என்பதல்ல. யாரும் கற்புள்ள பெண்கள் மீது அவதூறு கூறி பழி சுமத்த முடியாது. எனவே தகாத உறவுமுறை வைத்திருப்பதாக யாராவது ஒரு கற்புள்ள பெண் மீது புகார் செய்தால்,அவர் அக்குற்றத்தை நிரூபிக்க குறைந்தது நான்கு சாட்சிகளையாவது (Circumstantial Evidences) கொண்டுவர வேண்டும். (சாட்சிகள் எப்படி? பார்க்க 24:24) அப்படி அவரால் சாட்சிகளை வைத்து அக்குற்றத்தை நீதிமன்றத்தில் நிரூபிக்க முடியவில்லை என்றால் குற்றம் சுமத்தியவருக்கு எண்பது கசையடி தரப்படும். மேலும் அத்தகையவர்களின் புகார்களையும் சாட்சிகளையும் இனி நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளாது. ஏனெனில் அவர்கள் வேண்டுமென்றே சமுதாயத்தில் குழப்பத்தை ஏற்படுத்தும் பாவிகளாக கருதப்படுவர்.


إِلَّا ٱلَّذِينَ تَابُوا۟ مِنۢ بَعْدِ ذَٰلِكَ وَأَصْلَحُوا۟ فَإِنَّ ٱللَّهَ غَفُورٌۭ رَّحِيمٌۭ.

24:5. எனினும் வீண் பழி சுமத்தியவர்கள், அறியாமையில் தவறிழைத்து விட்டதாக கூறி , தம்மை திருத்திக் கொள்வதாக நீதிமன்றத்தில் மன்னிப்பு கோறினால், அவர்களுக்கு மன்னிப்பு அளிக்க இறைச் சட்டத்தில் இடமுண்டு. அல்லாஹ்வின் ஆட்சியமைப்பு அனைத்து தரப்பு மக்களின் பாதுகாப்பைக் கருதி,நிலைமைக்குத் தக்கவாறு கருணையுடன் அணுகும் என்பதில் சந்தேகம் வேண்டாம்.


وَٱلَّذِينَ يَرْمُونَ أَزْوَٰجَهُمْ وَلَمْ يَكُن لَّهُمْ شُهَدَآءُ إِلَّآ أَنفُسُهُمْ فَشَهَٰدَةُ أَحَدِهِمْ أَرْبَعُ شَهَٰدَٰتٍۭ بِٱللَّهِ ۙ إِنَّهُۥ لَمِنَ ٱلصَّٰدِقِينَ.

24:6. மேலும் தன் மனைவிக்கு எதிராக கணவனோ அல்லது தன் கணவருக்கு எதிராக மனைவியோ பழிசுமத்தி (பார்க்க 2:228),அதற்கு ஆதாரமாக அவரிடம் வேறு சாட்சிகள் எதுவும் இல்லை என்றால்,நிச்சயமாக,தான் உண்மையே பேசுவதாக நீதிமன்றத்தில் அல்லாஹ்வின் மீது நான்குமுறை சத்தியம் செய்து கூறவேண்டும்.


وَٱلْخَٰمِسَةُ أَنَّ لَعْنَتَ ٱللَّهِ عَلَيْهِ إِن كَانَ مِنَ ٱلْكَٰذِبِينَ.

24:7. அதை அடுத்து ஐந்தாம் முறையாக அவர்,தான் குற்றம் சுமத்தியதில் பொய் இருந்தால் அல்லாஹ்வின் ஆட்சியமைப்பு மூலமாகக் கிடைக்கும் சலுகைகள் கிடைக்காமல் போகும் என்பதை அறிந்தே இந்த புகாரை கொடுத்துள்ளதாக நீதிமன்றத்தில் சத்தியம் செய்து கூற வேண்டும்.


وَيَدْرَؤُا۟ عَنْهَا ٱلْعَذَابَ أَن تَشْهَدَ أَرْبَعَ شَهَٰدَٰتٍۭ بِٱللَّهِ ۙ إِنَّهُۥ لَمِنَ ٱلْكَٰذِبِينَ.

24:8. அப்போது குற்றம் சுமத்தப்பட்டவர் தண்டனைக்கு உரியவராகி விடுவார். அவர் தம்மீது பொய்யாகக் குற்றம் சுமத்தப்பட்டதாகக் கருதினால்,அவர் தம்மீது பொய்யான வழக்கே தொடரப்பட்டுள்ளதாக அல்லாஹ்வின் மீது நான்கு முறை நீதிமன்றத்தின் முன் சத்தியம் செய்து கூறவேண்டும்.


وَٱلْخَٰمِسَةَ أَنَّ غَضَبَ ٱللَّهِ عَلَيْهَآ إِن كَانَ مِنَ ٱلصَّٰدِقِينَ.

24:9. அவரும் ஐந்தாம் முறையாக,தான் கூறுவது உண்மையே என்றும்,இந்த வாக்குமூலம் பொய்யென நிரூபணமானால், அல்லாஹ்வின் ஆட்சியமைப்பு சலுகைகள் தனக்கு கிடைக்காமல் போகும் என்பதை நன்கு அறிவேன் என்றும் நீதிமன்றத்தில் சத்தியம் செய்து கூற வேண்டும்.
இப்படியாக நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் குற்றப் பத்திரிகையை பரிசீலித்து, குறுக்கு விசாரணையை மேற்கொள்வார்கள். இதில் யார் பொய்யர்கள் என்ற உண்மை வெளிப்பட்டு விடும். மேலும் வழக்கின் நிலவரத்தை தீர விசாரித்து அதற்கேற்ற வகையில் நீதிபதிகள் தீர்ப்பு வழங்குவார்கள். ஏதோ பழைய பகையை முன்வைத்து உணர்ச்சி வேகத்தில் பழி சுமத்தி இருந்தால், அதற்கு தக்கவாறு தீர்ப்பு வழங்கப்படும். தீர்ப்பு அளிக்கப்பட்ட பின்பும் வாதியோ பிரதிவாதியோ குற்றம் புரிந்துள்ளதாக நிரூபணமானால் ஆட்சியமைப்பு மூலமாக கிடைக்கின்ற சலுகைகளை அவர் நிரந்தரமாக இழக்க நேரிடும்.


وَلَوْلَا فَضْلُ ٱللَّهِ عَلَيْكُمْ وَرَحْمَتُهُۥ وَأَنَّ ٱللَّهَ تَوَّابٌ حَكِيمٌ.

24:10. இப்படியாக சமூக நல்லிணக்கத்திற்காக இறைவன் புறத்திலிருந்து தெளிவான வழிகாட்டுதல்கள் அளிக்கப்படுகின்றன. இது அல்லாஹ்வின் மிகப் பெரிய கருணையே ஆகும். அல்லாஹ்வின் இத்தகைய கருணையும் வழிகாட்டுதலும் இல்லாதிருந்தால், அனைவருமே உணர்ச்சி வேகத்தில் செயல்பட்டு, சமுதாயமே சீர்கெட்டுப் போயிருக்கும். எனவே அல்லாஹ்வின் ஆட்சியமைப்பு அறியாமையில் செய்யும் தவறுகளுக்கு மன்னிப்பு அளிப்பதுடன், நிலைமைக்குத் தக்கவாறு விவேகத்துடனும் நடந்து கொள்ளும்.


إِنَّ ٱلَّذِينَ جَآءُو بِٱلْإِفْكِ عُصْبَةٌۭ مِّنكُمْ ۚ لَا تَحْسَبُوهُ شَرًّۭا لَّكُم ۖ بَلْ هُوَ خَيْرٌۭ لَّكُمْ ۚ لِكُلِّ ٱمْرِئٍۢ مِّنْهُم مَّا ٱكْتَسَبَ مِنَ ٱلْإِثْمِ ۚ وَٱلَّذِى تَوَلَّىٰ كِبْرَهُۥ مِنْهُمْ لَهُۥ عَذَابٌ عَظِيمٌۭ.

24:11. இறைவழிகாட்டுதலை மனதார ஏற்றுக்கொண்டவர்களே! நீதிமன்ற விவகாரங்களை நீங்கள் அலசி ஆராய்ந்து பாருங்கள். உங்கள் மீது தவறுசலாக குற்றம் சுமத்தியவர்கள், உங்களை சார்ந்தவர்களே ஆவர். இதனால் உங்களுக்கு மிகப் பெரிய தீங்கு ஏற்பட்டு விட்டதாக எண்ண வேண்டாம். நீதிமன்றம் மூலமாக நீங்கள் நிரபராதி என்று தீர்ப்பு வழங்கப்பட்டால், அது உங்களுக்கு நன்மையே ஆகும். பொய் வழக்கு தொடர்ந்தவர்களுக்கு கடுமையான தண்டனை கிடைத்தே தீரும்.


لَّوْلَآ إِذْ سَمِعْتُمُوهُ ظَنَّ ٱلْمُؤْمِنُونَ وَٱلْمُؤْمِنَٰتُ بِأَنفُسِهِمْ خَيْرًۭا وَقَالُوا۟ هَٰذَآ إِفْكٌۭ مُّبِينٌۭ.

24:12. இறைவழிகாட்டுதலை மனதரா ஏற்று அதன்படி செயல்படும் ஆண் பெண் ஆகியோர், பழிச் சொல்லுக்கு ஆளானவர்களைப் பற்றி எல்லோரிடமும் அவதூறு சொல்லிக் கொண்டு இருக்கக் கூடாது. மாறாக இதைப் பற்றி கேள்வியுற்றால்,இது வீண் பழி என்றே தான் நினைப்பதாகவும், அதைப் பற்றி நீதி மன்றம் பார்த்துக் கொள்ளும் என்றும் கூறுவதே சிறந்த செயலாகும். இத்தகைய நல்லெண்ணங்களுடன் செயல்படுபவர்கள் தான் மூஃமின்கள் ஆவர்.


لَّوْلَا جَآءُو عَلَيْهِ بِأَرْبَعَةِ شُهَدَآءَ ۚ فَإِذْ لَمْ يَأْتُوا۟ بِٱلشُّهَدَآءِ فَأُو۟لَٰٓئِكَ عِندَ ٱللَّهِ هُمُ ٱلْكَٰذِبُونَ.

24:13. மேலும் அவர்கள், “நீதி மன்றத்தில் அக்குற்றத்தை நிரூபிக்க நான்கு சாட்சிகளை கொண்டு வர வேண்டியுள்ளதே. அவ்வாறு அக்குற்றத்தை நிரூபிக்க சாட்சிகளை கொண்டு வர முடியவில்லை என்றால், குற்றம் சுமத்தியவர் பொய்யராக கருதப்படுவாரே. நீதி மன்றத்தில் "பொய்யர்" என்று தீர்ப்பானால் அவருக்கு தண்டனையும் கிடைக்குமே!” என்றே கூறுவார்கள்.


وَلَوْلَا فَضْلُ ٱللَّهِ عَلَيْكُمْ وَرَحْمَتُهُۥ فِى ٱلدُّنْيَا وَٱلْءَاخِرَةِ لَمَسَّكُمْ فِى مَآ أَفَضْتُمْ فِيهِ عَذَابٌ عَظِيمٌ.

24:14. மேலும் “இறைவழிகாட்டுதல்” என்ற அருட்கொடைகள் உங்களுக்கு கிடைக்காமல் இருந்திருந்தால், நிகழ்கால வாழ்விலும் வருங்கால நிலையான வாழ்விலும் ஏற்படுகின்ற பிரச்னைகளுக்கு தீர்வு காண முடியாமல் போயிருக்கும். அதனால் நீங்கள் தம் மன இச்சைப்படி செயல்பட்டு பல வேதனைகளுக்கு ஆளாகியிருப்பீர்கள்.
அதாவது குற்றம் சுமத்துவதும் அதைப் பற்றி மக்கள் மத்தியில் வதந்திகளை பரப்புவதும் தீய செயல்களாகும். ஏனெனில் அதனால் மக்களிடையே நல்லிணக்கம் ஏற்படாமல் பகைமையைத் தான் வளர்க்கும். இதை முக்கியமாக கவனத்தில் கொண்டு 24:12 சொல்லப்பட்டது போல் நல்ல அபிப்ராயத்தையே வெளிப்படுத்த வேண்டும்.


إِذْ تَلَقَّوْنَهُۥ بِأَلْسِنَتِكُمْ وَتَقُولُونَ بِأَفْوَاهِكُم مَّا لَيْسَ لَكُم بِهِۦ عِلْمٌۭ وَتَحْسَبُونَهُۥ هَيِّنًۭا وَهُوَ عِندَ ٱللَّهِ عَظِيمٌۭ.

24:15. இதை விட்டுவிட்டு குற்றத்தைப் பற்றிய எந்த உண்மையும் அறியாமல் வேண்டுமென்றே எல்லோரிடமும் சொல்லிக் கொண்டு திரியக் கூடாது. எதைப் பற்றி உங்களுக்கு தெளிவான உண்மை தெரியவில்லையோ, அதைப் பற்றியா சொல்லித் திரிகிறீர்கள்? மேலும் இப்படி சொல்லித் திரிவது சாதாரண விஷயம் என்று எண்ணிக் கொண்டீர்களா? இல்லை. இதனால் சமுதாயத்தில் பெருமளவில் பாதிப்புகளை ஏற்படுத்தி வரும். எனவே அல்லாஹ்வின் சட்டப்படி இது மிகப் பெரிய குற்றமாகும்.


وَلَوْلَآ إِذْ سَمِعْتُمُوهُ قُلْتُم مَّا يَكُونُ لَنَآ أَن نَّتَكَلَّمَ بِهَٰذَا سُبْحَٰنَكَ هَٰذَا بُهْتَٰنٌ عَظِيمٌۭ.

24:16. மேலும் யாராவது இப்படி பேசுவதை கேட்டால், “இதைப் பற்றி நாம் கருத்து சொல்வதற்கு ஒன்றுமில்லை. இது அல்லாஹ்வின் தூய்மையான வழிகாட்டுதலின்படி செயல்படும் நீதிமன்ற விவகாரமாகும். எனவே இதைப் பற்றி நாம் ஏதாவது சொன்னால் அது வீண் பழியாகிவிடும்” என்று கூறியிருக்கக் கூடாதா?


يَعِظُكُمُ ٱللَّهُ أَن تَعُودُوا۟ لِمِثْلِهِۦٓ أَبَدًا إِن كُنتُم مُّؤْمِنِينَ.

24:17. எனவே நீங்கள் உண்மையிலேயே அல்லாஹ்வின் வழிகாட்டுதலை மனதார ஏற்றுக்கொண்ட மூஃமின்களாக இருந்தால், இப்படிப்பட்ட பொறுப்பில்லாத பேச்சுகளின் பக்கம் ஒருபோதும் கவனம் செலுத்தாதீர்கள். இது அல்லாஹ்வின் அறிவுரையாகும்.


وَيُبَيِّنُ ٱللَّهُ لَكُمُ ٱلْءَايَٰتِ ۚ وَٱللَّهُ عَلِيمٌ حَكِيمٌ.

24:18. சமூக நல்லிணகத்தை கட்டிக் காக்க, எல்லா விஷயங்களும் அல்லாஹ்வின் புறத்திலிருந்து உங்களுக்கு மிகத் தெளிவாக விளக்கப்படுகின்றன. உங்களுடைய ஒவ்வொரு சொல்லும் செயலும் என்ன என்பதையும் அதன் பின்விளைவுகள் என்னவாக இருக்கும் என்பதையும் தெளிவாக அறிந்து கொள்ளும் வல்லமையுடைய அல்லாஹ்விடமிருந்து வரும் அறிவுரைகளாகும்.


إِنَّ ٱلَّذِينَ يُحِبُّونَ أَن تَشِيعَ ٱلْفَٰحِشَةُ فِى ٱلَّذِينَ ءَامَنُوا۟ لَهُمْ عَذَابٌ أَلِيمٌۭ فِى ٱلدُّنْيَا وَٱلْءَاخِرَةِ ۚ وَٱللَّهُ يَعْلَمُ وَأَنتُمْ لَا تَعْلَمُونَ.

24:19. நினைவில் கொள்ளுங்கள். இறைவழிகாட்டுதலை மனதார ஏற்று, அதன்படி தலைச் சிறந்த சமுதாயத்தை உருவாக்க பாடுபடுபவர்களைப் பற்றி யார் வேண்டுமென்றே புரளிகளை பரப்பி வருகிறார்களோ, அவர்களுக்கு ஆட்சியமைப்பு சட்டப்படி தண்டனை கிடைக்கும். அது மட்டுமின்றி அத்தகையவருக்கு மரணத்திற்குப் பின் தொடர்கின்ற வாழ்விலும் கடுமையான தண்டனை கிடைக்கும். இதுதான் மனித வாழ்வைப் பற்றி இறைவன் நிர்ணயித்துள்ள சட்டமாகும். இதைப் பற்றி எல்லாம் உங்களுக்குத் தெரியாது. ஆனால் அல்லாஹ்வுக்கு நன்கு தெரியும்.


وَلَوْلَا فَضْلُ ٱللَّهِ عَلَيْكُمْ وَرَحْمَتُهُۥ وَأَنَّ ٱللَّهَ رَءُوفٌۭ رَّحِيمٌۭ.

24:20. இப்படியாக "இறைவழிகாட்டுதல்" என்ற அருட்கொடைகள் உங்களுக்கு கிடைக்காதிருந்தால், உங்களுடைய இத்தகைய செயல்களால் உங்களுக்கு பல வேதனைகள் ஏற்பட்டிருக்கும். நிச்சயமாக மனிதன் சிறப்பாக வாழவேண்டும் என்பதற்காகவே இத்தகைய வழிகாட்டுதல்கள் அளிக்கப்படுகின்றன. இவை அல்லாஹ்வின் அளவற்ற கிருபையையும் அன்பையும் பிரதிபலிக்கின்றன.


۞ يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟ لَا تَتَّبِعُوا۟ خُطُوَٰتِ ٱلشَّيْطَٰنِ ۚ وَمَن يَتَّبِعْ خُطُوَٰتِ ٱلشَّيْطَٰنِ فَإِنَّهُۥ يَأْمُرُ بِٱلْفَحْشَآءِ وَٱلْمُنكَرِ ۚ وَلَوْلَا فَضْلُ ٱللَّهِ عَلَيْكُمْ وَرَحْمَتُهُۥ مَا زَكَىٰ مِنكُم مِّنْ أَحَدٍ أَبَدًۭا وَلَٰكِنَّ ٱللَّهَ يُزَكِّى مَن يَشَآءُ ۗ وَٱللَّهُ سَمِيعٌ عَلِيمٌۭ.

24:21. இறைவழிகாட்டுதலை மனதார ஏற்றுக்கொண்டவர்களே! நீங்கள் உங்கள் மனோ இச்சையைப் பின்பற்றி சுயநலத்துடன் ஒருபோதும் செயல்படாதீர்கள். சமூக விரோத செயலில் ஈடுபடுபடுபவர்களின் பேச்சை கேட்காதீர்கள். அவர்கள் எப்போதும் உங்களை மானக்கேடான செயல்களையும் சமூக நல்லிணக்கத்தை கெடுக்கும் தீய செயல்களை செய்யுமாறும் தூண்டிக் கொண்டிருப்பார்கள். (பார்க்க 2:268) "இறைவழிகாட்டுதல்" என்ற அருட்கொடைகள் இல்லாதிருந்தால் ,உங்களுள் மனித ஆற்றல்களும் ஒழுக்க மாண்புகளும் வளர வாய்ப்புகள் ஒருபோதும் கிடைத்திருக்காது. அல்லாஹ்வின் அறிவுரைகளின் படி செயல்பட நாடுபவர்களுக்கே மனித ஆற்றல்களும் சிந்திக்கும் திறனும் வளரும். அல்லாஹ்வின் கேட்கும் வல்லமையும் அறிந்து கொள்ளும் வல்லமையும் அளவற்றவையாகும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
மேலும் ஒரு விஷயத்தை நினைவில் கொள்ளுங்கள். நீதிமன்றத்தில் குறுக்கு விசாரணையின் போது, வழக்கு சம்பந்தமாக பல சாட்சியாளர்களை அழைப்பார்கள். அப்போது சில சாட்சியாளர்கள் உங்களிடமிருந்து உதவிப் பெறுபவர்களாகவும் இருக்கலாம். அவர்கள் உங்களுக்கு எதிராக சாட்சி சொன்னதற்காக அவர்களை பகைத்துக் கொள்வது முறையாகாது. எனவே


وَلَا يَأْتَلِ أُو۟لُوا۟ ٱلْفَضْلِ مِنكُمْ وَٱلسَّعَةِ أَن يُؤْتُوٓا۟ أُو۟لِى ٱلْقُرْبَىٰ وَٱلْمَسَٰكِينَ وَٱلْمُهَٰجِرِينَ فِى سَبِيلِ ٱللَّهِ ۖ وَلْيَعْفُوا۟ وَلْيَصْفَحُوٓا۟ ۗ أَلَا تُحِبُّونَ أَن يَغْفِرَ ٱللَّهُ لَكُمْ ۗ وَٱللَّهُ غَفُورٌۭ رَّحِيمٌ.

24:22. செல்வ சீமான்களாகிய உங்களிடமிருந்து உங்கள் உறவினர்களும், ஏழை எளிய மக்களும், அல்லாஹ்வின் செயல்திட்டங்களை நிறைவேற்ற, தம் ஊரைவிட்டு வெளியேறி ஹிஜ்ரத் செய்து வந்தவர்களும் உதவி பெற்று வருகிறார்கள். அவர்களில் சிலர் நீதிமன்றத்தில் உங்களுக்கு எதிராக சாட்சி சொல்லும் கட்டாயத்தில் இருந்திருக்கலாம். அதற்காக அவர்களுக்கு உதவி செய்வதை நிறுத்திவிட சத்தியம் செய்யாதீர்கள். ஏனெனில் அது கடந்து போன விஷயமாகும். இவற்றை எல்லாம் பெரிது படுத்திக்கொண்டு பகைமை உணர்வுடன் செயல்படாதீர்கள். அல்லாஹ்விடமிருந்து உங்களுக்கு பாதுகாப்பான வாழ்வு கிடைக்க வேண்டும் என்று நீங்கள் விரும்பினால், இதை கவனத்தில் கொண்டு சுமுகமான உறவை வைத்துக் கொள்ளுங்கள். அல்லாஹ்வின் வழிகாட்டுதல்கள் அனைத்து தரப்பு மக்களின் பாதுகாப்பான வாழ்விற்கு வழி வகுக்கின்றன. இது அல்லாஹ்வின் மாபெரும் கருணையாகும் அல்லவா?
அதாவது நீதிமன்றத்தில் அல்லாஹ்வின் சட்டத்திற்கு முன் அனைவரும் சமம். எனவே உண்மைக்கு சாட்சி சொல்வது ஒவ்வொரு மூஃமின்கள் மீதும் உள்ள முக்கிய கடமையாகும். (பார்க்க 5:8,5:106) சமுதாயத்தில் அநீதி இழைக்கப்படக் கூடாது என்பது தான் முக்கியமாகும். எனவே சாட்சி சொல்பவர் தன் கடமையைத் தான் செய்தார் என்பதை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும். எனவே


إِنَّ ٱلَّذِينَ يَرْمُونَ ٱلْمُحْصَنَٰتِ ٱلْغَٰفِلَٰتِ ٱلْمُؤْمِنَٰتِ لُعِنُوا۟ فِى ٱلدُّنْيَا وَٱلْءَاخِرَةِ وَلَهُمْ عَذَابٌ عَظِيمٌۭ.

24:23. அல்லாஹ் நிர்ணயித்த நெறிமுறைகளைக் கடைப்பிடித்து ஒழுக்கத்துடன் வாழும் களங்கமில்லா பெண்கள் மீது அபாண்டமாக பழி சுமத்துவது இனி நடைபெறக் கூடாது. அவ்வாறு யாராவது பழி சுமத்தினால் (பார்க்க 24:4,24:9) அவருக்கு கடுமையான தண்டனை கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்ளட்டும். இந்த தண்டனை அவருடைய மரணத்திற்குப் பின்பும் தொடரும் என்பதையும் அறிந்து கொள்ளட்டும்.
அதாவது நீதிமன்றத்தில் குறைந்தது நான்கு சாட்சிகளையாவது கொண்டுவந்து ஒருவர் செய்த குற்றத்தை நிரூபிக்க வேண்டும். அந்த சாட்சிகள் மனிதர்களின் சாட்சியாக மட்டும் இருக்க வேண்டும் என்பதல்ல. குற்றச் சம்பவத்தை நிரூபிக்க


يَوْمَ تَشْهَدُ عَلَيْهِمْ أَلْسِنَتُهُمْ وَأَيْدِيهِمْ وَأَرْجُلُهُم بِمَا كَانُوا۟ يَعْمَلُونَ.

24:24. நீதிமன்ற விசாரணையின் போது சம்பந்தப்பட்ட சாட்சியாளர்களின் வார்த்தைகளாகவும் இருக்கலாம். அல்லது அந்த குற்றவாளியின் கைகள் மற்றும் கால்களின் ரேகைகளாகவும் இருக்கலாம். அவற்றையும் சாட்சியாக ஏற்றுக் கொள்ளப்படும். அந்த சம்பவம் தொடர்புள்ள பொருட்களையும் சாட்சியாக எடுத்துக் கொள்ளப்படும்.(மேலும் பார்க்க 41:20)
ஒரு பெண் தகாத உறவை வைத்துள்ளதாக புகார் வந்தால் அவள் கருத்தரித்திருந்தால் அந்தச் சாட்சியே போதுமானதாக இருக்கும் அல்லவா?


يَوْمَئِذٍۢ يُوَفِّيهِمُ ٱللَّهُ دِينَهُمُ ٱلْحَقَّ وَيَعْلَمُونَ أَنَّ ٱللَّهَ هُوَ ٱلْحَقُّ ٱلْمُبِينُ.

24:25. ஆக இறைவழிகாட்டுதலின் அடிப்படையில் செயல்படும் இஸ்லாமிய ஆட்சி நடைபெறும் கால கட்டத்தில் ஒருபோதும் நீதி தவறாது. அவரவர் செய்து வந்த செயல்களுக்கு ஏற்ப கூலி அவர்களுக்கு கிடைத்து விடும். மேலும் அல்லாஹ்வின் இத்தகைய ஆட்சியமைப்புதான் தலைச்சிறந்த உண்மையான ஆட்சி என்பதை அவர்கள் அறிந்து கொள்வார்கள்.
மேலும் ஒரு விஷயத்தை நினைவில் கொள்ளுங்கள். சமுதாய ஒழுக்க மாண்புகள் சிறக்க வேண்டும் என்றால், பெண்கள் மட்டும் ஒழுக்கத்துடன் நடந்துகொள்ள வேண்டும் என்றோ ஆண்கள் எப்படி வேண்டுமானாலும் நடந்து கொள்ளலாம் என்பதோ அல்ல. ஆண் பெண் ஆகிய இருபாலருமே ஒழுக்கத்துடன் நடந்து கொண்டால்தான் அது ஒழுக்கமுள்ள சமுதாயமாகக் கருதப்படும். எனவே


ٱلْخَبِيثَٰتُ لِلْخَبِيثِينَ وَٱلْخَبِيثُونَ لِلْخَبِيثَٰتِ ۖ وَٱلطَّيِّبَٰتُ لِلطَّيِّبِينَ وَٱلطَّيِّبُونَ لِلطَّيِّبَٰتِ ۚ أُو۟لَٰٓئِكَ مُبَرَّءُونَ مِمَّا يَقُولُونَ ۖ لَهُم مَّغْفِرَةٌۭ وَرِزْقٌۭ كَرِيمٌۭ.

24:26. பொதுவாக கெட்ட எண்ணங்களைக் கொண்ட துஷ்டர்களும், ஒழுக்கமற்ற செயல்களை செய்பவர்களும் நீதிமன்றத்தில் பொய் சாட்சிகள் மூலம் தப்பித்து விடலாம். அவர்கள் நல்லவர்கள் போல சமுதாயத்தில் நடமாடவும் செய்யலாம். அதே போல பரிசுத்தமான கற்புள்ள ஆண்களும் பெண்களும், சந்தர்ப்ப வசமாக பழிச் சொல்லுக்கு ஆளாகி நடத்தை கெட்டவர்கள் என்று பொய் சாட்சி மூலம் அநியாயமாக தீர்ப்பும் பெறலாம். ஆனால் குர்ஆனிய ஆட்சியமைப்பில் இது சாத்தியமில்லை. பரிசுத்தவான்களை யாரும் வேண்டுமென்றே பழிசுமத்த முடியாது. மேலும் அத்தகைய நேர்மையானவர்களுக்கு அனைத்துப் பாதுகாப்பும், ஆட்சியமைப்பின் சலுகைகளும் கண்ணியமான முறையில் கிடைக்கும்.
ஒழுக்க மாண்புகளைக் கட்டிக்காக்க மேலும் சில விஷயங்களை தெரிந்து கொள்ளுங்கள்.


يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟ لَا تَدْخُلُوا۟ بُيُوتًا غَيْرَ بُيُوتِكُمْ حَتَّىٰ تَسْتَأْنِسُوا۟ وَتُسَلِّمُوا۟ عَلَىٰٓ أَهْلِهَا ۚ ذَٰلِكُمْ خَيْرٌۭ لَّكُمْ لَعَلَّكُمْ تَذَكَّرُونَ.

24:27. இறைவழிகாட்டுதலை மனதார ஏற்று நடப்பவர்களே! நீங்கள் ஒருவர் வீட்டிற்கு செல்வதாக இருந்தால் அவ்வீட்டாரிடம் முன்அனுமதி பெற்றுதான் போகவேண்டும். மேலும் அவ்வீட்டாரிடம் அவர்களுடைய நலனை பேணிக் காக்கவே வந்துள்ளதாக (ஸலாம்) சொல்ல வேண்டும். இந்த வரையறையைக் கடைப்பிடிக்காமல் எந்த வீட்டிற்குள்ளும் நீங்கள் நுழையக் கூடாது. நீங்கள் நல்லறிவுரைப் பெறுவதற்காக இப்படிப்பட்ட விஷயங்கள் இறைவனிடமிருந்து அருளப்படுகின்றன.
இது முக்கியமான ஒன்றாகும். முன்அறிவிப்பு (Prior appointment) செய்யாமல் வீட்டிற்கோ அலுவகங்களுக்கோ செல்வதால், அங்கிருப்பவர்களுக்கு பல சங்கடங்கள் ஏற்படலாம். அவர்கள் பல பணிகளை செய்ய திட்டமிட்டு இருப்பார்கள். நீங்கள் திடீரென்று செல்வதால் அவற்றை எல்லாம் விட்டுவிட்டு உங்களை கவனிக்க வேண்டிவரும். இதை நீங்கள் கவனத்தில் கொள்ளுங்கள்.


فَإِن لَّمْ تَجِدُوا۟ فِيهَآ أَحَدًۭا فَلَا تَدْخُلُوهَا حَتَّىٰ يُؤْذَنَ لَكُمْ ۖ وَإِن قِيلَ لَكُمُ ٱرْجِعُوا۟ فَٱرْجِعُوا۟ ۖ هُوَ أَزْكَىٰ لَكُمْ ۚ وَٱللَّهُ بِمَا تَعْمَلُونَ عَلِيمٌۭ.

24:28. மேலும் அவ்வீட்டில் எவரையும் காணவில்லை என்றால் அவ்வீட்டிற்குள் செல்லாதீர்கள். அவ்வீட்டார் வந்தபின் அவரிடம் முன்அனுமதி பெற்றே அவ்வீட்டிற்குள் பிரவேசியுங்கள். மேலும் அவ்வீட்டார் உங்களை திருப்பி அனுப்பிவிட்டால், நீங்கள் திரும்பிவிடுங்கள். இது உங்களுடைய நன்நடத்தையையே காட்டும். ஆக நீங்கள் செய்வது அனைத்தும் அல்லாஹ்வுக்கு நன்கு தெரியும் என்பதை மறவாதீர்கள்.
அதாவது நீங்கள் சந்திக்க நினைக்கும் நபர் அவ்வீட்டில் இல்லாத நிலையில் அங்குள்ள பெண்கள் உங்களை அவ்வீட்டில் காக்க வைக்க சங்கோசப்பட்டால், அவர்கள் உங்களை திருப்பியும் அனுப்பிவிடலாம். அதே போல் உங்கள் வீட்டிலுள்ள பெண்கள் வெளியே சென்றிருக்கலாம். அந்த சமயத்தில் பெண்கள் யாராவது உங்கள் வீட்டிற்குள் வர நினைத்தால், அதை நீங்களும் நளினமாக சொல்லி திருப்பி அனுப்பிவிடலாம்.


لَّيْسَ عَلَيْكُمْ جُنَاحٌ أَن تَدْخُلُوا۟ بُيُوتًا غَيْرَ مَسْكُونَةٍۢ فِيهَا مَتَٰعٌۭ لَّكُمْ ۚ وَٱللَّهُ يَعْلَمُ مَا تُبْدُونَ وَمَا تَكْتُمُونَ.

24:29. அதே சமயத்தில் கிடங்கு போன்ற யாருமே வசிக்காத வீடுகளில் நீங்கள் உங்கள் பொருட்களை வைத்துக் கொள்ளலாம். அப்போது நீங்கள் அத்தகைய இடத்திற்குள் செல்ல முன்அறிவிப்பு எதுவும் செய்யத் தேவையில்லை. நீங்கள் வெளிப்படையாக செயல்படுவதும் மறைமுகமாக செயல்படுவதும் அல்லாஹ்வுக்குத் தெரியமாமல் போகாது.
மேலும் வெளியில் செல்பவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகளையும் தெரிந்து கொள்ளுங்கள். இவை எல்லாம் மிகச் சாதாரணமாகத் தோன்றலாம். ஆனால் அவையே பிற்காலத்தில் மிகவும் பலன் அளிக்கக் கூடியதாக அமையும்.


قُل لِّلْمُؤْمِنِينَ يَغُضُّوا۟ مِنْ أَبْصَٰرِهِمْ وَيَحْفَظُوا۟ فُرُوجَهُمْ ۚ ذَٰلِكَ أَزْكَىٰ لَهُمْ ۗ إِنَّ ٱللَّهَ خَبِيرٌۢ بِمَا يَصْنَعُونَ.

24:30. இறைவழிகாட்டுதலை மனதார ஏற்று செயல்படும் மூஃமின்களே! நீங்கள் வெளியில் செல்லும்போது, மற்றவர்களுக்கு சபலத்தை ஏற்படுத்தும் வகையில் அரைகுறை ஆடைகளை அணிந்து செல்லாதீர்கள். மேலும் ஆபாச எண்ணங்களுடன் உங்கள் பார்வையை இங்கும் அங்குமாக அலைய விடாதீர்கள். இவையெல்லாம் மனதில் மறைந்து கிடக்கும் தீய உணர்வுகளாகும். அவற்றை கட்டுப்படுத்தி உங்களை பரிசுத்தமாக்கிக் கொள்ளுங்கள். நீங்கள் செய்து வரும் அனைத்து விஷயங்களும் அல்லாஹ்வுக்கு நன்கு தெரியும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.


وَقُل لِّلْمُؤْمِنَٰتِ يَغْضُضْنَ مِنْ أَبْصَٰرِهِنَّ وَيَحْفَظْنَ فُرُوجَهُنَّ وَلَا يُبْدِينَ زِينَتَهُنَّ إِلَّا مَا ظَهَرَ مِنْهَا ۖ وَلْيَضْرِبْنَ بِخُمُرِهِنَّ عَلَىٰ جُيُوبِهِنَّ ۖ وَلَا يُبْدِينَ زِينَتَهُنَّ إِلَّا لِبُعُولَتِهِنَّ أَوْ ءَابَآئِهِنَّ أَوْ ءَابَآءِ بُعُولَتِهِنَّ أَوْ أَبْنَآئِهِنَّ أَوْ أَبْنَآءِ بُعُولَتِهِنَّ أَوْ إِخْوَٰنِهِنَّ أَوْ بَنِىٓ إِخْوَٰنِهِنَّ أَوْ بَنِىٓ أَخَوَٰتِهِنَّ أَوْ نِسَآئِهِنَّ أَوْ مَا مَلَكَتْ أَيْمَٰنُهُنَّ أَوِ ٱلتَّٰبِعِينَ غَيْرِ أُو۟لِى ٱلْإِرْبَةِ مِنَ ٱلرِّجَالِ أَوِ ٱلطِّفْلِ ٱلَّذِينَ لَمْ يَظْهَرُوا۟ عَلَىٰ عَوْرَٰتِ ٱلنِّسَآءِ ۖ وَلَا يَضْرِبْنَ بِأَرْجُلِهِنَّ لِيُعْلَمَ مَا يُخْفِينَ مِن زِينَتِهِنَّ ۚ وَتُوبُوٓا۟ إِلَى ٱللَّهِ جَمِيعًا أَيُّهَ ٱلْمُؤْمِنُونَ لَعَلَّكُمْ تُفْلِحُونَ.

24:31. அதே போல் பெண்களும் வெளியில் செல்லும் போது, சில வரையறைகளை கடைப்பிடிக்க வேண்டும். ஆண்களோ பெண்களோ தம்மை அலங்கரித்துக் கொள்வதில் தடை ஒன்றுமில்லை (பார்க்க 7:32). ஆனால் தங்கள் பார்வை அன்னிய ஆடவர்களை வசீயப்படுத்தும் வகையில் இருப்பது கூடாது. எனவே அறைகுறை ஆடையுடனோ அல்லது கவர்ச்சி ஆடைகளை அணிந்தோ வெளியில் திரிவது கூடாது. இதனால் இளைஞர்கள் மனதில் சபலத்தை ஏற்படுத்தும். எனவே கை,கால்,முகம் போன்ற சாதாரணமாக வெளியில் தெரியக் கூடியவற்றைக் காட்டிக் கொள்வதில் தடை ஒன்றுமில்லை.
ஆனால் இளைஞர்களைக் கவரக்கூடிய மார்பகங்கள், இடுப்பு போன்றவற்றை, தான் அணியும் சேலையைக் கொண்டு மூடி மறைத்து வெளியில் செல்லுங்கள். *மேலும் அவர்கள் இல்லத்தில் இருக்கும் போது, தன் கணவர், தந்தை, மாமனார், மாமியார், புதல்வர்கள், கணவனின் புதல்வர்கள், சகோதரர்கள், சகோதரர்களின் புதல்வர், புதல்விகள்,வீட்டிலிருக்கும் பணியாட்கள்,வயதான மூதாதைகயர்கள்,பெண்களின் மறைவான உறுப்புக்களைப் பற்றி அறியாத சிறுவர் சிறுமியர்கள், ஆகியவர்கள் முன்னிலையில் இயல்பான ஆடைகளுடன் நடமாடுவதில் தவறு ஒன்றுமில்லை. இவர்களைத் தவிர மற்ற அன்னியர்கள் முன்னிலையில்,தன் உடல் அழகை வெளிப்படுத்தும் வகையில் இறுக்கமான ஆடைகளுடனோ அல்லது அறைகுறை ஆடைகளுடனோ பழகுவது ஒருபோதும் கூடாது.
மேலும் தான் அணிந்திருக்கும் ஆபரணங்கள் தெரியும்படியாக கை கால்களைத் ஆட்டிக்கொண்டு நடக்க வேண்டாம். இதற்கு முன் இத்தகைய விஷயங்களில் தவறு ஏதேனும் நிகழ்ந்திருந்தால், அதை சரிசெய்து கொள்ளுங்கள். இனி அவ்வாறு நடக்காதீர்கள். இவை யாவும் உங்களுக்கு மிகவும் சாதாரண விஷயங்களாகத் தோன்றலாம். ஆனால் காலப் போக்கில் அதுவே பெரிய பிரச்னையாக வந்து நிற்கும். மேலும் உங்கள் வாழ்வின் வெற்றி இலக்கை அடைவதில் இவை தடையாக வந்து நிற்கும். எனவே இவற்றைக் கவனத்தில் கொண்டு முறைப்படி நடந்து கொள்வது மிகமிக அவசியம்.
சேலையை அணியாதவர்கள், கழுத்து முதல் பாதங்கள் வரையில் மறைக்கக் கூடிய இறுக்கமில்லாத தளர்ந்த ஆடைகளை அணிந்து செல்லலாம்.


وَأَنكِحُوا۟ ٱلْأَيَٰمَىٰ مِنكُمْ وَٱلصَّٰلِحِينَ مِنْ عِبَادِكُمْ وَإِمَآئِكُمْ ۚ إِن يَكُونُوا۟ فُقَرَآءَ يُغْنِهِمُ ٱللَّهُ مِن فَضْلِهِۦ ۗ وَٱللَّهُ وَٰسِعٌ عَلِيمٌۭ.

24:32. மேலும் திருமணம் ஏற்பாடு செய்யும்போது, சில வரையறைகளை கவனத்தில் கொள்ள வேண்டும். உங்களில் ஆணோ பெண்ணோ குடும்பத்தை வழிநடத்திச் செல்லும் தகுதி உடையவர்களுக்கே மணமுடித்து கொடுங்கள். அவர்களில் ஏழையாகவோ, விதவையோ விதவனாகவோ இருந்தாலும் சரியே. ஆற்றல் மிக்கவர்களுக்கு அல்லாஹ்வின் அருட்கொடைகள் காலப் போக்கில் கிடைத்துவிடும். மேலும் அல்லாஹ்வின் செயல் திட்டங்களோ மிக விசாலமாகவும் ஞானத்தின் அடிப்படையிலும் உள்ளன.
ஆணோ பெண்ணோ திருமண வயதை அடைந்திருந்தும், மனப்பக்குவமும் கல்வியும் இருத்தல் அவசியம். ஏனெனில் இது அவர்களின் வாழ்க்கை பிரச்னையாகும். ஒருவரிடம் வசதி வாய்ப்பு குறைவாக இருக்கலாம். காலப்போக்கில் அல்லாஹ்வின் அருட்கொடைகளை அவர்கள் பெற்று விடுவார்கள். ஆனால் மனோ ரீதியாக அவர்கள் பக்குவம் அடையவில்லை என்றால் அவர்களுடைய வாழ்க்கையே கேள்விக் குறியாக ஆகிவிடும்.


وَلْيَسْتَعْفِفِ ٱلَّذِينَ لَا يَجِدُونَ نِكَاحًا حَتَّىٰ يُغْنِيَهُمُ ٱللَّهُ مِن فَضْلِهِۦ ۗ وَٱلَّذِينَ يَبْتَغُونَ ٱلْكِتَٰبَ مِمَّا مَلَكَتْ أَيْمَٰنُكُمْ فَكَاتِبُوهُمْ إِنْ عَلِمْتُمْ فِيهِمْ خَيْرًۭا ۖ وَءَاتُوهُم مِّن مَّالِ ٱللَّهِ ٱلَّذِىٓ ءَاتَىٰكُمْ ۚ وَلَا تُكْرِهُوا۟ فَتَيَٰتِكُمْ عَلَى ٱلْبِغَآءِ إِنْ أَرَدْنَ تَحَصُّنًۭا لِّتَبْتَغُوا۟ عَرَضَ ٱلْحَيَوٰةِ ٱلدُّنْيَا ۚ وَمَن يُكْرِههُّنَّ فَإِنَّ ٱللَّهَ مِنۢ بَعْدِ إِكْرَٰهِهِنَّ غَفُورٌۭ رَّحِيمٌۭ.

24:33. எனவே விவாகம் செய்து கொள்வதற்குரிய வசதிவாய்ப்பு பெறாதவர்கள் என்ன செய்ய வேண்டும்? அத்தகையவர்கள் முழு அளவில் தகுதி பெறும் வரையில் மனக் கட்டுப்பாடுடன் இருக்க வேண்டும். மேலும் அவர்கள் ஒழுக்கத்தைப் பேணி நடந்துகொள்ள வேண்டும்.
மேலும் சமுதாயத்தில் சிக்கித் தவிக்கும் கொத்தடிமைகள் மற்றும் விலை மாதர்கள், தம்மை விடுவித்துக் கொடுக்க அரசுக்கு விண்ணப்பித்தால், சம்பந்தப்பட்ட உரிமையாளர்களிடம் ஈட்டுத் தொகை அளித்து அவர்களை விடுவிக்க ஏற்பாடு செய்யுங்கள். மேலும் அவ்வாறு விடுவிக்கப்பட்டவர்கள் சுயமாக தம் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளும் தகுதியுடையவராய் இருக்கிறார்களா என்பதையும் கவனியுங்கள். அப்படி வசதி இல்லாதவர்களுக்கு தக்க வசதிகளை செய்து தவருவதும் சமூக அமைப்பின் முக்கிய கடமையாகும்.
மேலும் இத்தகையவர்கள் திருமணம் செய்துகொள்ளும் எண்ணம் கொண்டிருந்தால், அவர்களை தடுக்காதீர்கள். அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கவில்லை என்றால் அவர்கள் மீண்டும் தவறான வழியில் செல்லும் கட்டாயத்திற்கு தள்ளப்படலாம். அவ்வாறு எவரேனும் அவர்களுக்கு எதிராக நடந்து, அவர்களை கட்டாயத்திற்கு ஆளாக்கினால், இந்த அரசு பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக செயல்படும். குற்றவாளிகளுக்கு தக்க தண்டனை அளிக்கும்.
இவையாவும் சமுதாயத்தில் பின்தங்கிய நிலையில் இருப்பவர்களுக்கும், அபலைப் பெண்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் நலத் திட்டங்களாகும்.


وَلَقَدْ أَنزَلْنَآ إِلَيْكُمْ ءَايَٰتٍۢ مُّبَيِّنَٰتٍۢ وَمَثَلًۭا مِّنَ ٱلَّذِينَ خَلَوْا۟ مِن قَبْلِكُمْ وَمَوْعِظَةًۭ لِّلْمُتَّقِينَ.

24:34. இப்படியாக நீங்கள் சரியாக விளங்கிக் கொண்டு சிறப்பாக செயல்பட வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு விஷயத்தைப் பற்றியும் தெளிவான முறையில் விளக்கப்படுகின்றன. இவற்றை உங்களுக்கு முன்சென்ற வரலாற்றின் ஆதாரத்தைக் கொண்டும் பல்வேறு உதாரணங்களின் மூலமும் விளக்கப்படுகின்றன. அல்லாஹ்வின் வழிகாட்டுதலுக்கு மாற்றமாக செயல்படுவதால் ஏற்படும் விபரீத விளைவுகளுக்கு அஞ்சி செயல்படுவோருக்கு இவை அறிவுரைகளாக இருக்கும்.


۞ ٱللَّهُ نُورُ ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضِ ۚ مَثَلُ نُورِهِۦ كَمِشْكَوٰةٍۢ فِيهَا مِصْبَاحٌ ۖ ٱلْمِصْبَاحُ فِى زُجَاجَةٍ ۖ ٱلزُّجَاجَةُ كَأَنَّهَا كَوْكَبٌۭ دُرِّىٌّۭ يُوقَدُ مِن شَجَرَةٍۢ مُّبَٰرَكَةٍۢ زَيْتُونَةٍۢ لَّا شَرْقِيَّةٍۢ وَلَا غَرْبِيَّةٍۢ يَكَادُ زَيْتُهَا يُضِىٓءُ وَلَوْ لَمْ تَمْسَسْهُ نَارٌۭ ۚ نُّورٌ عَلَىٰ نُورٍۢ ۗ يَهْدِى ٱللَّهُ لِنُورِهِۦ مَن يَشَآءُ ۚ وَيَضْرِبُ ٱللَّهُ ٱلْأَمْثَٰلَ لِلنَّاسِ ۗ وَٱللَّهُ بِكُلِّ شَىْءٍ عَلِيمٌۭ.

24:35. அல்லாஹ்வின் வல்லமையும் பேராற்றலும் அகிலங்கள் அனைத்திலும் பூமியிலும் பரவி இருப்பது போல், மனிதனின் சிறப்பான வாழ்க்கைக்கு இவ்வேதம் ஒளி விளக்காகத் திகழ்கிறது. (மேலும் பார்க்க 5:15, 42:52)
(1) எவ்வாறு ஒரு விளக்கு கண்ணாடி மாடத்தில் பத்திரமாக பாதுகாக்கப்பட்டு, அந்த கண்ணாடி ஒளிவீசும் நட்சத்திரமாக இருக்கிறதோ, அதே போல் இந்த இறைவழிகாட்டுதல்கள் அடங்கிய இந்த வேதமும் மனித சுய சிந்தனையின் சடங்கு, சம்பிரதாயம், முன்னோர்களின் வழிப்பாடு போன்ற தாக்கங்களிலிருந்து பாதுகாக்கப்பட்டு, மக்களின் அறியாமை என்ற இருளைப் போக்கி, நேர்வழி காட்டும் ஒளி விளக்காக உள்ளது.
(2) எவ்வாறு அந்த விளக்கு தொடர்ந்து ஒளி வீசுவதற்கு ஜைத்தூன் எண்ணெய் துணை நிற்கிறதோ, அது போல இறைவழிகாட்டுதல்கள் எல்லா கால கட்டத்திற்கும் தொடர்ந்து உதவிட, முன்உதாரணங்களும், படிப்பினைகளும், பிரபஞ்ச படைப்புகளின் செயல்பாடுகளும் மனிதனின் ஒளிமயமாக வாழ்விற்கு நிலையான ஊன்றுகோலாக இருக்கின்றன.
(3) இந்த வழிகாட்டுதல்கள் கிழக்கு மேற்கு என்று எந்தப் பக்கமும் சாயாமல் ஒளிவீசக் கூடியதாக உள்ளன. *அந்த வழிகாட்டுதலை கடைப்பிடித்தாலும் கடைப்பிடிக்கா விட்டாலும் அது தன் நிலையை மாற்றிக் கொள்ளாது. ஒரு சமுதாயம் இந்த வழிகாட்டுதலைக் கடைப்பிடிக்கும் போது, ஒளிக்கு மேல் ஒளி கிடைத்துக் கொண்டே போகும்.
(4) இந்த வழிகாட்டுதல்கள் ஏழைக்கு ஆதரவாகவோ செல்வந்தர்களுக்கு எதிராகவோ அல்லது செல்வந்தர்களை ஆதரித்து ஏழை எளிய மக்களுக்கு எதிராகவோ இருப்பதில்லை. மேலும் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்திற்கு மட்டும் வழிகாட்டியாக இருப்பதில்லை. உலக மக்கள் அனைவருக்கும் சரி சமமான அறிவுரைகள் அடங்கிய வேதமாகும்.
(5) இவ்வாறாக உலக மக்கள் அனைவரும் சரியாக விளங்கிக் கொண்டு மிகச் சிறப்பாக செயல்பட வேண்டும் என்பதற்காகவே இப்படிப்பட்ட உதாரணங்களைக் கொண்டு அல்லாஹ் விளக்குகிறான். இப்படியாக அல்லாஹ் ஒவ்வொரு விஷயத்திலும் ஞானம் மிக்கவனாக இருக்கிறான்.


فِى بُيُوتٍ أَذِنَ ٱللَّهُ أَن تُرْفَعَ وَيُذْكَرَ فِيهَا ٱسْمُهُۥ يُسَبِّحُ لَهُۥ فِيهَا بِٱلْغُدُوِّ وَٱلْءَاصَالِ.

24:36. எனவே மனிதனின் ஒளிமயமான வாழ்விற்கு வழிகாட்டியாக விளங்கும் இவ்வேத அறிவுரைகள், ஒவ்வொரு வீட்டிலும் தொடர்ந்து எடுத்துரைக்கப்பட வேண்டும். அவற்றை கடைப்பிடிப்பதால் கிடைக்கும் உயர்வைப் பற்றியும் கண்ணியமான வாழ்வைப் பற்றியும் வீட்டிலுள்ள அனைவருக்கும் தெரியப்படுத்த வேண்டும் என்று கட்டளை இடப்படுகிறது. எனவே அதற்கு சரியான நேரங்கள் காலையும் மாலையுமாகும்.


رِجَالٌۭ لَّا تُلْهِيهِمْ تِجَٰرَةٌۭ وَلَا بَيْعٌ عَن ذِكْرِ ٱللَّهِ وَإِقَامِ ٱلصَّلَوٰةِ وَإِيتَآءِ ٱلزَّكَوٰةِ ۙ يَخَافُونَ يَوْمًۭا تَتَقَلَّبُ فِيهِ ٱلْقُلُوبُ وَٱلْأَبْصَٰرُ.

24:37. மற்ற நேரங்களில் மக்களிடையே வியாபாரம் மற்றும் கொடுக்கல் வாங்கல் போன்ற தொழில் ரீதியான அன்றாட அலுவல்கள் இருக்கும். ஆனால் இவை அல்லாஹ்வின் அறிவுரைகளுக்கு தடையாக இருக்கக் கூடாது. காரணம் அவர்கள் அந்த அறிவுரையின் படியே தம் தொழிலையும் மேற்கொள்வார்கள். இப்படியாக அல்லாஹ் காட்டிய வழியில் சட்டம் ஒழுங்கை பேணிக் காத்து, சமுதாய வளர்ச்சிக்காக உழைத்து வருவார்கள். அல்லாஹ்வின் வழிகாட்டுதலுக்கு மாற்றமாக செயல்பட்டால் ஏற்படும் வேதனையும் கதிகலங்கிய நிலையின் கால கட்டத்தைப் பற்றியும் அஞ்சி இவர்கள் செயல்படுவார்கள்.


لِيَجْزِيَهُمُ ٱللَّهُ أَحْسَنَ مَا عَمِلُوا۟ وَيَزِيدَهُم مِّن فَضْلِهِۦ ۗ وَٱللَّهُ يَرْزُقُ مَن يَشَآءُ بِغَيْرِ حِسَابٍۢ.

24:38. மேலும் அல்லாஹ்வின் வழிகாட்டுதலின்படி சமுதாய ஒற்றுமைக்காகவும் வளர்சிக்காகவும் உழைப்பது ஒருபோதும் வீண்போகாது. அத்தகையவர்களுக்கு அல்லாஹ்வின் புறத்திலிருந்து மென்மேலும் பலன்கள் கிடைத்து வரும். ஆக அல்லாஹ்வின் வழிகாட்டுதலின் படி உழைப்பவர்களுக்கு அளவில்லா வாழ்வாதாரங்களும் கிடைக்கின்றன.


وَٱلَّذِينَ كَفَرُوٓا۟ أَعْمَٰلُهُمْ كَسَرَابٍۭ بِقِيعَةٍۢ يَحْسَبُهُ ٱلظَّمْـَٔانُ مَآءً حَتَّىٰٓ إِذَا جَآءَهُۥ لَمْ يَجِدْهُ شَيْـًۭٔا وَوَجَدَ ٱللَّهَ عِندَهُۥ فَوَفَّىٰهُ حِسَابَهُۥ ۗ وَٱللَّهُ سَرِيعُ ٱلْحِسَابِ.

24:39. இதற்கு மாறாக எந்தச் சமுதாயம் வானுலக ஒளியாக இருக்கும் இறைவழிகாட்டுதலை ஏற்க மறுத்து, அதற்கு மாற்றமாக செயல்படுமோ, அவர்களுடைய செயல்களின் பலன்கள் திறந்த வெளியில் தென்படும் கானல் நீரைப் போன்றதாக இருக்கும். தாகமுள்ளவன் அந்த கானல் நீரைப் பார்த்து தண்ணீர் என நினைக்கிறான். அதுபோல, தான் செய்து வரும் செயல்கள் யாவும் நன்மையானவை என்றே நம்புகிறான். அவன் அந்த கானல் நீரின் பக்கம் வரும்போது, அங்கு ஒன்றுமில்லாததை காண்கின்றான். அதாவது அவன் செய்து வந்த செயல்களின் எதிர் பார்த்த பலன்கள் ஒருபோதும் கிடைப்பதில்லை. அவனுடைய செயல்களின் விளைவுகள் அல்லாஹ் நிர்ணயித்த விதிமுறைப் படியே ஏற்படுவதை காண்பான். மேலும் ஒவ்வொரு செயலின் விளைவுகளை ஏற்படுத்தும் விஷயத்திலும் அல்லாஹ்வின் கணக்கு வழக்கு ஒருபோதும் தவறாது.


أَوْ كَظُلُمَٰتٍۢ فِى بَحْرٍۢ لُّجِّىٍّۢ يَغْشَىٰهُ مَوْجٌۭ مِّن فَوْقِهِۦ مَوْجٌۭ مِّن فَوْقِهِۦ سَحَابٌۭ ۚ ظُلُمَٰتٌۢ بَعْضُهَا فَوْقَ بَعْضٍ إِذَآ أَخْرَجَ يَدَهُۥ لَمْ يَكَدْ يَرَىٰهَا ۗ وَمَن لَّمْ يَجْعَلِ ٱللَّهُ لَهُۥ نُورًۭا فَمَا لَهُۥ مِن نُّورٍ.

24:40. எனவே அத்தகைய சமூகத்தவர்களின் வாழ்வு இருளில் மூழ்கி சூனியம் ஆகிவிடுகிறது. எவ்வாறு ஒருவர் ஆழ்கடல் இருளில் மூழ்கி தத்தளிக்கிறானோ, அது போல அத்தகைய சமுதாயங்களில் பிரச்னைகள் பல ஏற்பட்டு அவற்றிற்கு தீர்வு காணமுடியாமல் தத்தளித்து வரும். அது மட்டுமின்றி அவரை கடல் அலைகள் இழுத்துச் சென்று, மூழ்கடித்து, அலைக்கு மேலும் அலைகளும் அதன்மேல் மேகங்களும் அவனை இருளில் தத்தளிக்க வைப்பது போல, சமுதாயத்தில் பிரச்னைக்கு மேல் பிரச்னைகளும், அவற்றை தீர்த்து வைக்க முயன்றால் அந்த தீர்வால் மேலும் பல சிக்கல்களும் ஏற்பட்டு வரும். (மேலும் பார்க்க 2:17-20) எவ்வாறு இத்தகைய இருளில் சிக்கித் தவிப்பவர் தன் கைகளை வெளியே நீட்ட முடியாதோ அல்லது தன் கையை வெளியே நீட்டினாலும் அதை பார்க்க முடியாதோ, அவ்வாறே சமுதாய சிக்கல்களுக்கு ஒருபோதும் நிலையான தீர்வை காணவே முடியாது. இதுவே அல்லாஹ்வின் பேரொளியாக இருக்கும் இறைவழிகாட்டுதலை புறக்கணித்து வாழும் சமுதாயங்களின் இழிநிலையாகும்.
ஆனால் இறைவனின் சட்டங்களுக்கு உட்பட்டு வாழும் மற்ற படைப்புகளில் இத்தகைய பிரச்னைகள் எதுவும் இருப்பதில்லை. ஏனெனில் மற்ற படைப்புகள் யாவும் அல்லாஹ் விதித்த விதிமுறைகளின் படி, தம் இயல்பில் அடிப்படையிலேயே வாழ்கின்றன.


أَلَمْ تَرَ أَنَّ ٱللَّهَ يُسَبِّحُ لَهُۥ مَن فِى ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضِ وَٱلطَّيْرُ صَٰٓفَّٰتٍۢ ۖ كُلٌّۭ قَدْ عَلِمَ صَلَاتَهُۥ وَتَسْبِيحَهُۥ ۗ وَٱللَّهُ عَلِيمٌۢ بِمَا يَفْعَلُونَ.

24:41. வானங்களிலும் பூமியிலும் உள்ள மற்ற படைப்புகள் எவ்வாறு சிறப்பாக செயல்படுகின்றன என்பதை கவனித்துப் பாருங்கள். விண்ணில் பறக்கும் பறவைகள் தம் இறக்கைகளை விரித்து அணி அணியாய் பறந்து செல்வதை நீங்கள் பார்ப்பதில்லையா? அந்தப் படைப்புகள் யாவும் தமக்கு இடப்பட்ட கடமைகளை செவ்வன நிறைவேற்றி வருகின்றன. ஏனெனில் அவற்றிற்குத் தம் கடமைகள் என்னவென்பதும் அவற்றை எவ்வாறு நிறைவேற்ற வேண்டும் என்பதும் நன்கு தெரியும். அதுமட்டுமின்றி உலகிலுள்ள எல்லா படைப்புகளின் செயல்பாடுகள் என்னவென்பதையும் அல்லாஹ்வுக்குத் தெரியாமல் இருப்பதில்லை.
அதாவது உலகில் வாழும் மற்ற உயிரினங்கள் தம் இயல்பின் அடிப்படையில் வாழ்கின்றன. அவற்றிற்கு தம் ஆகாராம் என்ன? அவற்றை எப்படி அடைவது? தம் இனப் பெருக்கத்தை எவ்வாறு செய்து கொள்வது? தமக்கு யாரால் ஆபத்து வரும்? அந்த ஆபத்திலிருந்து எவ்வாறு தம்மை பாதுகாதுக் கொள்வது? இதுபோன்ற வழிகாட்டுதல்கள் அதனதன் உடல் அமைப்பிலேயே வைக்கப்பட்டுள்ளன.
இனப் பெருக்கத்தை பொறுத்த வரையில் பறவைகள் மற்றும் மீன் இனங்கள் கண்டம் விட்டு கண்டம் சென்று தம் குஞ்சுகளை பொரிக்கின்றன. அந்த குஞ்சுகள் வளர்ந்து பெரிதாகி தம் சொந்த இடத்திற்கு திரும்பி சென்று விடுகின்றன. இவற்றிற்கு அதைப்பற்றி யாரும் கற்றுக் கொடுப்பதில்லை.
ஆனால் மனிதனின் நிலை அவ்வாறில்லை. மனிதனுக்கு ஒவ்வொன்றைப் பற்றியும் சொல்லித் தரவேண்டும். காரணம் மனிதனுக்கு வழிகாட்டுதல்கள் வெளியிலிருந்து தான் கிடைக்கின்றன. அவனுக்குள் வைக்கப்படவில்லை. எனவேதான் மனித வாழ்வும் சிறப்பாக இருக்கவேண்டும் என்பதற்காக, அவனுக்கு இறைவன் புறத்திலிருந்து வழிகாட்டுதல்கள் நபிமார்கள் மூலமாக அளிக்கப்படுகின்றன. அவை இந்த இறைவேதமான குர்ஆனில் அசல் வடிவில் உள்ளன.


وَلِلَّهِ مُلْكُ ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضِ ۖ وَإِلَى ٱللَّهِ ٱلْمَصِيرُ.

24:42. வானங்களிலும் பூமியிலும் உள்ள அனைத்தும் அல்லாஹ்வின் அதிகராத்திற்கு உட்பட்டே செயல்பட்டு வருகின்றன. அதாவது அல்லாஹ் நிர்ணயித்த வழிமுறைகளின் படியே அவை செயல்பட்டு வருகின்றன. எனவே மனிதனின் ஒவ்வொரு செயலும் இறைவன் நிர்ணயித்த விளைவுகளையே ஏற்படுத்தும். மேலும் மனித பிரச்னைகளுக்குத் தீர்வு காண அவன் இறைவழிகாட்டுதலின் பக்கமே வந்தாகவேண்டும்.
மனித செயல்கள் - ஆக்கப்பூர்வமன செயல்களோ, தீய செயல்களோ, அவற்றின் விளைவுகள் உடனே தோற்றத்திற்கு வருவதில்லை. அந்த விளைவுகள் உணரா வண்ணம் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து, அவை தோற்றத்திற்கு வரும். உதாரணத்திற்கு மழையை எடுத்துக் கொள்ளுங்கள்.


أَلَمْ تَرَ أَنَّ ٱللَّهَ يُزْجِى سَحَابًۭا ثُمَّ يُؤَلِّفُ بَيْنَهُۥ ثُمَّ يَجْعَلُهُۥ رُكَامًۭا فَتَرَى ٱلْوَدْقَ يَخْرُجُ مِنْ خِلَٰلِهِۦ وَيُنَزِّلُ مِنَ ٱلسَّمَآءِ مِن جِبَالٍۢ فِيهَا مِنۢ بَرَدٍۢ فَيُصِيبُ بِهِۦ مَن يَشَآءُ وَيَصْرِفُهُۥ عَن مَّن يَشَآءُ ۖ يَكَادُ سَنَا بَرْقِهِۦ يَذْهَبُ بِٱلْأَبْصَٰرِ.

24:43. மழை எவ்வாறு பொழிகிறது என்பதை கவனிப்பதில்லையா? அல்லாஹ்வின் நியதிப்படி காற்று மண்டலத்தில் மேகங்கள் மெதுவாக உருவாகி, அவை ஒன்றிணைந்து, ஒன்றன் மேல் ஒன்றாக அடர்த்தியாகி விடுகின்றன. அதன் நடுவே உருவாகும் மழை நீரை நீங்கள் பார்க்கிறீர்கள். அது மட்டுமின்றி சில சமயங்களில் வானத்தில் மலைகளைப் போல உருவாகும் மேகக் கூட்டங்களின் நடுவே பனிக் கட்டிகள் உருவாகி, ஆலாங்கட்டி மழையாகவும் பொழிகிறது. அல்லாஹ்வின் நியதியின் படி காற்றின் திசையை நோக்கி அந்த மேகக் கூட்டங்கள் நகர்ந்து சென்று, ஆங்காங்கே மழை பொழிவதையும்,அதன்பின் அந்த மேகங்கள் கலைந்து சென்று விடுவதையும் நீங்கள் பார்க்கிறீர்கள். அது மட்டுமின்றி அந்த மேகங்களுக்கிடையே உங்கள் கண்களைப் பறிக்கும் மின்னொளி உருவாவதையும் நீங்கள் பார்க்கிறீர்கள்.
அதாவது காற்றிலுள்ள ஈரப் பதம் உங்கள் கண்களுக்குப் புலப்படுவதில்லை. அது மேகமாக உருவாகும் போதுதான் உங்கள் கண்களுக்குத் தென்படுகின்றன. அதன்பின் அவை அடர்த்தியாகி மழை நீராகவும் இடி மின்னலாகவும் உருவாகின்றன. அதுபோல உங்களுடைய நற்செயல்களோ அல்லது தீய செயல்களோ,அதன் விளைவுகள் முதலில் தோற்றத்திற்கு வருவதில்லை. அவை கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து நற்செயல்களின் பலன்களாக மழை நீரைப் போலவும் தீய செயல்களின் விளைவுகளாக இடி மின்னல்கள் போலவும் ஏற்படுகின்றன.


يُقَلِّبُ ٱللَّهُ ٱلَّيْلَ وَٱلنَّهَارَ ۚ إِنَّ فِى ذَٰلِكَ لَعِبْرَةًۭ لِّأُو۟لِى ٱلْأَبْصَٰرِ.

24:44. மேலும் அல்லாஹ் நிர்ணயித்துள்ள விதிமுறைகளின் படியே இரவும் பகலும் மாறிமாறி வருகின்றன. நிச்சயமாக சிந்தனை உள்ள மக்களுக்கு இதில் பல படிப்பினைகள் இருக்கின்றன.
அதாவது எவ்வாறு இரவும் பகலும் ஏற்பட்டு வருகின்றதோ, இறைவழிகாட்டுதல்கள் இல்லாத சமுதாயங்களில் இன்பமும் துன்பமும் மாறிமாறி வரும். மேலும் அவர்கள் வாழ்வில் இருள் சூழ்ந்த நிலையும், சில நாட்கள் வெளிச்சத்தை தரக் கூடியதாகவும் இருக்கும். இறைவழிகாட்டுதலின் அடிப்படையில் வாழும்போது, அவர்கள் வாழ்வில் இருள் சூழ்ந்த நிலை ஏற்படாது. எனவே மனிதன் இறைவழிகாட்டுதலுக்குக் கட்டுப்பட்டு வாழவேண்டும்.
மேலும் இரவும் பகலும் மாறி மாறி வருவதாலேயே இவ்வுலகில் உயிரினங்களால் உயிர் வாழ முடிகிறது. மாறாக பகல் பகலாகவே இருந்தாலோ, அல்லது இரவு இரவாகவே இருந்தாலோ இவ்வுலகில் உயிரினங்கள் வாழ முடியாது. எனவே அல்லாஹ்வின் செயல் திட்டப்படியே இவை இரண்டும் மாறிமாறி வருகின்றன.(பார்க்க 28:71-73)


وَٱللَّهُ خَلَقَ كُلَّ دَآبَّةٍۢ مِّن مَّآءٍۢ ۖ فَمِنْهُم مَّن يَمْشِى عَلَىٰ بَطْنِهِۦ وَمِنْهُم مَّن يَمْشِى عَلَىٰ رِجْلَيْنِ وَمِنْهُم مَّن يَمْشِى عَلَىٰٓ أَرْبَعٍۢ ۚ يَخْلُقُ ٱللَّهُ مَا يَشَآءُ ۚ إِنَّ ٱللَّهَ عَلَىٰ كُلِّ شَىْءٍۢ قَدِيرٌۭ.

24:45. மேலும் அல்லாஹ்வின் படைப்பு சட்டத்தின் படியே எல்லா உயிரினங்களும் நீரிலிருந்து உருவாயின. அவற்றில் ஊர்வன,இருகால்களால் நடப்பன மற்றும் நாற்கால் பிராணிகள் என பல்வேறு உயிரினங்கள் உள்ளன. இவை யாவும் அல்லாஹ்வின் செயல்திட்டப்படி உருவானவையாகும். அவற்றை படைத்ததோடு அவை ஒவ்வொன்றும் எவ்வாறு வாழவேண்டும் என்பதையும் நிர்ணயித்து அவற்றைக் கட்டுக்கோப்பாக நடத்தி வருவதும் அல்லாஹ்வே.


لَّقَدْ أَنزَلْنَآ ءَايَٰتٍۢ مُّبَيِّنَٰتٍۢ ۚ وَٱللَّهُ يَهْدِى مَن يَشَآءُ إِلَىٰ صِرَٰطٍۢ مُّسْتَقِيمٍۢ.

24:46. இவ்வாறாக நீங்கள் வாழும் உலகைப் பற்றியும் அதிலுள்ள படைப்புகளைப் பற்றியும் தெள்ளத் தெளிவாக அறிந்துகொண்டு சிறப்பாக வாழவேண்டும் என்பதற்காகவே இறைவழிகாட்டுதல்கள் அளிக்கப்படுகின்றன. இவற்றை ஏற்று நடக்க முன்வருபவர்களுக்கு அல்லாஹ் நிர்ணயித்துள்ள நேர்வழி கிடைத்து விடுகிறது.


وَيَقُولُونَ ءَامَنَّا بِٱللَّهِ وَبِٱلرَّسُولِ وَأَطَعْنَا ثُمَّ يَتَوَلَّىٰ فَرِيقٌۭ مِّنْهُم مِّنۢ بَعْدِ ذَٰلِكَ ۚ وَمَآ أُو۟لَٰٓئِكَ بِٱلْمُؤْمِنِينَ.

24:47. இந்த அளவுக்கு தெளிவான ஆதாரங்களை இறக்கி அருளிய பின்பும், மக்களுள் சிலர் இருக்கிறார்கள். அவர்கள் அல்லாஹ்வின் வழிகாட்டுதலையும் அவற்றை நடைமுறைப்படுத்த இறைத் தூதர் கொண்டு வரும் ஆட்சியமைப்பு சட்டங்களையும் ஏற்று நடப்பதாக உதட்டளவில் சொல்லிக் கொண்டு, அவற்றிற்கு மாற்றமாக செயல்படுகிறார்கள். அத்தகையவர்கள் யாவரும் மூஃமின்கள் பட்டியலில் இடம்பெறவே மாட்டார்கள்.


وَإِذَا دُعُوٓا۟ إِلَى ٱللَّهِ وَرَسُولِهِۦ لِيَحْكُمَ بَيْنَهُمْ إِذَا فَرِيقٌۭ مِّنْهُم مُّعْرِضُونَ.

24:48. எனவே அல்லாஹ்வின் வழிகாட்டுதலின்படி அவர்களுடைய சமூகப் பிரச்னைகளுக்கு, அமைப்பு ரீதியாக தீர்வு காண இறைத்தூதர் அழைப்பு விடுத்தால், அவர்களின் ஒரு பிரிவார் அதில் பங்கெடுப்பதில்லை.


وَإِن يَكُن لَّهُمُ ٱلْحَقُّ يَأْتُوٓا۟ إِلَيْهِ مُذْعِنِينَ.

24:49. ஆனால் அவர்களுக்கு சாதகமாக இருப்பதாக தெரிந்தால், அவர்கள் அதன் பக்கம் விரைந்தோடி வருகிறார்கள்.
அவர்களுடைய செயல்களைப் பார்த்து மூஃமின்கள் மனதில் பல கேள்விகள் எழலாம். அதாவது


أَفِى قُلُوبِهِم مَّرَضٌ أَمِ ٱرْتَابُوٓا۟ أَمْ يَخَافُونَ أَن يَحِيفَ ٱللَّهُ عَلَيْهِمْ وَرَسُولُهُۥ ۚ بَلْ أُو۟لَٰٓئِكَ هُمُ ٱلظَّٰلِمُونَ.

24:50. அவர்களுடைய உள்ளங்களில் நோயுள்ளதா? அல்லது அல்லாஹ்வின் ஆட்சியமைப்பின் நடைமுறை சட்டங்கள் அவர்களுக்கு எதிராக உள்ளதாக சந்தேகப் படுகிறார்களா? அவர்களுக்கு அநீதி இழைக்கப்படும் என அஞ்சுகிறார்களா? வேறு எதற்காக அவர்கள் இதை எதிர்த்து செயல்பட நினைக்கிறார்கள்? உண்மை என்னவென்றால் அவர்களுடைய அநியாய அக்கிரம செயல்களுக்கு இறை ஆட்சியமைப்பு தடை விதிக்கிறது. எனவே தான் அவர்கள் இதை எதிர்த்து செயல்படுகிறார்கள்.


إِنَّمَا كَانَ قَوْلَ ٱلْمُؤْمِنِينَ إِذَا دُعُوٓا۟ إِلَى ٱللَّهِ وَرَسُولِهِۦ لِيَحْكُمَ بَيْنَهُمْ أَن يَقُولُوا۟ سَمِعْنَا وَأَطَعْنَا ۚ وَأُو۟لَٰٓئِكَ هُمُ ٱلْمُفْلِحُونَ.

24:51. ஆனால் மூஃமின்களிடையே இத்தகைய மன நிலையும் செயல்பாடுகளும் ஒருபோதும் இருக்காது. சமூகப் பிரச்னைகளை தீர்த்து வைக்க அல்லாஹ்வின் ஆட்சியமைப்பு அவர்களுக்கு அழைப்பு விடுத்தால், அந்த அழைப்பை உடனே ஏற்று அதற்கு அடிபணிந்து வருவதாக கூறுவார்கள். இத்தகையவர்களே வெற்றி இலக்கை எளிதில் அடையும் மூஃமின்கள் ஆவர்.


وَمَن يُطِعِ ٱللَّهَ وَرَسُولَهُۥ وَيَخْشَ ٱللَّهَ وَيَتَّقْهِ فَأُو۟لَٰٓئِكَ هُمُ ٱلْفَآئِزُونَ.

24:52. அல்லாஹ்வின் வழிகாட்டுதலுக்கும், அதனடிப்படையில் உருவாக்கப்பட்ட ஆட்சியமைப்பு சட்டங்களுக்கும் அடிபணிந்து செயல்படும் சமுதாயம் தான், தம் செயல்திட்டத்தில் வெற்றி இலக்கை அடையும். ஏனெனில் அல்லாஹ்வின் வழிகாட்டுதலுக்கு மாற்றமாக செயல்படுவதால் ஏற்படும் தீய விளைவுக்ளுக்கு அஞ்சி அதற்கு உட்பட்டே அவர்கள் செயல்படுவார்கள்.


۞ وَأَقْسَمُوا۟ بِٱللَّهِ جَهْدَ أَيْمَٰنِهِمْ لَئِنْ أَمَرْتَهُمْ لَيَخْرُجُنَّ ۖ قُل لَّا تُقْسِمُوا۟ ۖ طَاعَةٌۭ مَّعْرُوفَةٌ ۚ إِنَّ ٱللَّهَ خَبِيرٌۢ بِمَا تَعْمَلُونَ.

24:53. மேலும் இறை ஆட்சியமைப்பு, போருக்கு புறப்படும்படி கட்டளையை பிறப்பித்தால், வெறும் உதட்டளவில் சத்தியம் செய்து போருக்குப் புறப்படுவதாக கூறுபவர்கள் நயவஞ்சகர்கள் ஆவர். இந்த சத்தியங்கள் எந்த அளவுக்கு உண்மையானது என்பது, அந்த கட்டளைப் படி போருக்கு புறப்படுவதை வைத்து தான் தெரியவரும். நீங்கள் செய்து வருவது அனைத்துமே அல்லாஹ்வுக்கு தெரியாமல் போய் விடுமா?


قُلْ أَطِيعُوا۟ ٱللَّهَ وَأَطِيعُوا۟ ٱلرَّسُولَ ۖ فَإِن تَوَلَّوْا۟ فَإِنَّمَا عَلَيْهِ مَا حُمِّلَ وَعَلَيْكُم مَّا حُمِّلْتُمْ ۖ وَإِن تُطِيعُوهُ تَهْتَدُوا۟ ۚ وَمَا عَلَى ٱلرَّسُولِ إِلَّا ٱلْبَلَٰغُ ٱلْمُبِينُ.

24:54. அல்லாஹ்வின் வழிகாட்டுதலுக்கும் அதனடிப்படையில் உருவாக்கப்பட்ட ஆட்சியமைப்பு சட்டங்களுக்கும் அடிபணிந்து செயல்படும்படி மக்களுக்கு அறிவித்து விடுங்கள். இறை வழிகாட்டுதலின் படி ஆட்சியமைப்பு சட்டங்களை பிறப்பிப்பது ஆட்சி பொறுப்பில் உள்ளவர்கள் மீதுள்ள கடமையாகும். அவற்றைப் பின்பற்றுவது மக்களின் பொறுப்பாகும். அதன்படி நடந்தால் அவர்களுடைய வாழ்வு சிறப்பாக இருக்க எல்லா வழிகளும் பிறக்கும். அதற்கு மாற்றமாக செயல்படுபவர்கள் வேதனைகளை அனுபவித்துத் தான் ஆக வேண்டும். எனவே இறைச் சட்டங்களைப் பிறப்பித்து அவற்றை மக்களிடம் அறிவித்து விடுவதே இறைத்தூதரின் கடமையாகும்.


وَعَدَ ٱللَّهُ ٱلَّذِينَ ءَامَنُوا۟ مِنكُمْ وَعَمِلُوا۟ ٱلصَّٰلِحَٰتِ لَيَسْتَخْلِفَنَّهُمْ فِى ٱلْأَرْضِ كَمَا ٱسْتَخْلَفَ ٱلَّذِينَ مِن قَبْلِهِمْ وَلَيُمَكِّنَنَّ لَهُمْ دِينَهُمُ ٱلَّذِى ٱرْتَضَىٰ لَهُمْ وَلَيُبَدِّلَنَّهُم مِّنۢ بَعْدِ خَوْفِهِمْ أَمْنًۭا ۚ يَعْبُدُونَنِى لَا يُشْرِكُونَ بِى شَيْـًۭٔا ۚ وَمَن كَفَرَ بَعْدَ ذَٰلِكَ فَأُو۟لَٰٓئِكَ هُمُ ٱلْفَٰسِقُونَ.

24:55. இறை வழிகாட்டுதலை ஏற்றுக் கொண்டவர்களுள், யார் சிறப்பாக ஆற்றல்மிக்க செயல்களை செய்யும் தகுதியுடையவராக இருக்கிறார்களோ, அத்தகையவர்களிடமே ஆட்சிப் பொறுப்பு ஒப்படைக்கப்படும். இதுவே அல்லாஹ்வின் நிலையான வாக்குறுதியாகும். (மேலும் பார்க்க 33:27,39:74) உங்களுக்கு முன்சென்ற சமூகத்தவர்க்கும் இதே போன்று, தகுதி உடையவர்களிடமே ஆட்சிப் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது (மேலும் பார்க்க 21:105, 28:6). அவ்வாறு பொறுப்பெடுத்துக் கொண்டவர்கள், அல்லாஹ்வின் மார்க்க அறிவுரைகளின் படியே ஆட்சி செய்வார்கள். அதாவது அனைத்து தரப்பு மக்களின் நலனை பேணிக் காக்கும் இஸ்லாம் என்பதே இறைவன் பொருந்திக் கொண்ட மார்க்கமாகும். (பார்க்க 3:19&85) அதன் பலனாக மக்களிடையே நிலவி வரும் அச்சம் நீங்கி, அவர்களுக்கு மனஅமைதி ஏற்படும். இதுவும் அல்லாஹ்வின் புறத்திலிருந்து அளிக்கப்படுகின்ற வாக்குறுதியாகும். மேலும் அந்த ஆட்சியாளர்கள் இறைச் சட்டங்களுக்கு இணையாக வேறு எந்த வழிமுறைகளையும் கடைப்பிடிக்க மாட்டார்கள். அல்லாஹ்வின் கட்டளைக்கு மட்டுமே அடிபணிந்து செயல்படுவார்கள். இதையும் மீறி எவர்கள் அல்லாஹ்வின் வழிகாட்டுதலுக்கு மாறு செய்வார்களோ, அவர்கள் பாதகர்களின் பட்டியலில் இடம்பெறுவர்.


وَأَقِيمُوا۟ ٱلصَّلَوٰةَ وَءَاتُوا۟ ٱلزَّكَوٰةَ وَأَطِيعُوا۟ ٱلرَّسُولَ لَعَلَّكُمْ تُرْحَمُونَ.

24:56. மேலும் அவர்கள், தீமையை விலக்கி சமூக ஒழுக்க மாண்புகளைக் கற்றுத் தரும் ஸலாத் முறையை (பார்க்க 29:45) நிலைநிறுத்தி அவற்றை முழு அளவில் பேணுவார்கள் (பார்க்க 23:1). மேலும் தம் வசமுள்ள மிகுதியான செல்வங்களை சமுதாய மேம்பாட்டிற்காகவே பயன் படுத்துவார்கள். மேலும் ஆட்சி அமைப்பு சட்டங்களுக்கும் அடிபணிந்து செயல்படுவார்கள். அத்தகையவர்களுக்கு இறைவனின் ஆட்சியமைப்பின் ஆதரவு முழுஅளவில் கிடைத்து வரும்.


لَا تَحْسَبَنَّ ٱلَّذِينَ كَفَرُوا۟ مُعْجِزِينَ فِى ٱلْأَرْضِ ۚ وَمَأْوَىٰهُمُ ٱلنَّارُ ۖ وَلَبِئْسَ ٱلْمَصِيرُ.

24:57. அனைத்துத் தரப்பு மக்களின் நலனைப் பேணிக் காக்க உருவாக்கப்படும் இறைவனின் ஆட்சியமைப்பு திட்டங்கள் நிறைவேறாதவாறு, இறை நிராகரிப்பவர்கள் இடையூறுகளை விளைவிப்பார்கள் என்று நீர் எண்ண வேண்டாம். அதாவது அவர்களால் அப்படி எதுவும் செய்ய முடியாது. இறுதியாக அவர்கள் தாம் தோல்வி அடைந்து நரக வேதனைக்கு ஆளாவார்கள். அவ்வாறு அவர்கள் சென்றடையும் இடம் மிகவும் கெட்டதாக இருக்கும்.


يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟ لِيَسْتَـْٔذِنكُمُ ٱلَّذِينَ مَلَكَتْ أَيْمَٰنُكُمْ وَٱلَّذِينَ لَمْ يَبْلُغُوا۟ ٱلْحُلُمَ مِنكُمْ ثَلَٰثَ مَرَّٰتٍۢ ۚ مِّن قَبْلِ صَلَوٰةِ ٱلْفَجْرِ وَحِينَ تَضَعُونَ ثِيَابَكُم مِّنَ ٱلظَّهِيرَةِ وَمِنۢ بَعْدِ صَلَوٰةِ ٱلْعِشَآءِ ۚ ثَلَٰثُ عَوْرَٰتٍۢ لَّكُمْ ۚ لَيْسَ عَلَيْكُمْ وَلَا عَلَيْهِمْ جُنَاحٌۢ بَعْدَهُنَّ ۚ طَوَّٰفُونَ عَلَيْكُم بَعْضُكُمْ عَلَىٰ بَعْضٍۢ ۚ كَذَٰلِكَ يُبَيِّنُ ٱللَّهُ لَكُمُ ٱلْءَايَٰتِ ۗ وَٱللَّهُ عَلِيمٌ حَكِيمٌۭ.

24:58. இறைவழிகாட்டுதலை மனதார ஏற்றுக் கொண்டவர்களே! உங்களிடம் பணியாற்றுபவர்கள் மற்றும் சிறுவர் சிறுமியர்கள் உங்கள் இல்லங்களில் பொதுவாக சுற்றிக் கொண்டு இருப்பார்கள். அதில் தவறு ஒன்றுமில்லை. ஆனால் பொது மக்கள், அலுவலர்கள் மற்றும் அதிகாரிகள் உஙகளை சந்திக்க வந்தால், மூன்று சமயங்களில் முன்அனுமதி பெற்றே வரவேண்டும்.
(1) அதாவது விடியற்காலை தொழுகைக்கு முன்,
(2) மத்தியம் உணவுக்குப் பின் மேலாடைகளை களைந்து ஓய்வெடுக்கும் நேரம், (
3) இஷா தொழுகைக்குப் பின் ஆகிய மூன்று வேளைகளில் முன்அனுமதிப் பெற்றே வரும்படி சொல்லுங்கள். காரணம் இந்த நேரங்கள் யாவும் தனிமையில் இருக்கும் நேரங்களாகும்.
இதை தவிர மற்ற நேரங்களில் அலுவலக மற்றும் அவசிய விஷயங்களைக் கவனிக்க உங்களை சந்திக்க முன்அனுமதியின்றி அவர்கள் வரலாம். அவர்கள் உங்களிடம் அடிக்கடி வரவேண்டிய நிலையில் இருப்பதால் இந்த வரையறைகள் தரப்படுகின்றன.
இவ்வாறே நீங்கள் தெளிவாகப் புரிந்து கொண்டு சரியாக செயல்படவேண்டும் என்பதற்காக சின்னசின்ன விஷயங்களையும் விவரமாக எடுத்துரைக்கப் படுகின்றன. அல்லாஹ்வின் செயல்திட்டங்கள் யாவும் தெளிவான ஞானத்தின் அடிப்படையைக் கொண்டவையாகும் என்பது இதிலிருந்து புரியவில்லையா?


وَإِذَا بَلَغَ ٱلْأَطْفَٰلُ مِنكُمُ ٱلْحُلُمَ فَلْيَسْتَـْٔذِنُوا۟ كَمَا ٱسْتَـْٔذَنَ ٱلَّذِينَ مِن قَبْلِهِمْ ۚ كَذَٰلِكَ يُبَيِّنُ ٱللَّهُ لَكُمْ ءَايَٰتِهِۦ ۗ وَٱللَّهُ عَلِيمٌ حَكِيمٌۭ.

24:59. அந்தச் சிறுவர் சிறுமியர் பருவம் அடைந்து விட்டால், பெரியவர்கள் அனுமதி பெற்று வருவது போலவே இவர்களும் அனுமதி பெற்றே மேற்சொன்ன நேரங்களில் உங்களிடம் வரவேண்டும். இவ்வாறே நீங்கள் தெளிவாகும் பொருட்டு ஒவ்வொரு விஷயத்தைப் பற்றியும் தெளிவாக எடுத்துரைக்கப்படுகின்றன. மேலும் அல்லாஹ்வின் செயல்திட்டங்கள் யாவும் தெளிவான ஞானத்தின் அடிப்படையைக் கொண்டவையாகும்.


وَٱلْقَوَٰعِدُ مِنَ ٱلنِّسَآءِ ٱلَّٰتِى لَا يَرْجُونَ نِكَاحًۭا فَلَيْسَ عَلَيْهِنَّ جُنَاحٌ أَن يَضَعْنَ ثِيَابَهُنَّ غَيْرَ مُتَبَرِّجَٰتٍۭ بِزِينَةٍۢ ۖ وَأَن يَسْتَعْفِفْنَ خَيْرٌۭ لَّهُنَّ ۗ وَٱللَّهُ سَمِيعٌ عَلِيمٌۭ.

24:60. உங்களிலுள்ள வயதான மூதாட்டிகள் தம் வயதான காலத்தில், இளம் பெண்கள் மேலாடைகளை அணிந்து கொள்வது போல் இவர்களும் அணிந்து கொள்ள வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. இருப்பினும் அவர்களும் தம் மேலாடைகளை அணிந்து ஒழுக்கத்தை பேணிக் கொள்வது மிகவும் நல்லதே ஆகும். அல்லாஹ்வின் கேட்கும் வல்லமையும், அறிந்து கொள்ளும் வல்லமையும் அளவற்றவை என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
இந்த வரையறைகள் யாவும் உஷ்ணப் பிரதேசங்களில் வாழ்பவர்களுக்குப் பொருந்தும். காரணம் கோடைக் காலங்களில் ஆடை அணிவது சிரமமாக இருக்கும். மற்றபடி குளிர் பிரதேசங்களில் வாழ்பவர்கள் இயல்பாகவே ஆடைகளை அணியவேண்டி இருக்கும்.
மேலும் அன்னியர்களின் வீட்டிற்கு செல்லும் போது, அவ்வீட்டாரின் அனுமதிப் பெற்றபின்பே வீட்டிற்குள் செல்லும்படி அறிவுறுத்தப்பட்டது. (பார்க்க 24:27). இதனால் உற்றார் உறவினர்களும் அன்னியர்கள் ஆகிறார்களா என்ற கேள்வி எழுகிறது. உறவுமுறை என்பது வேறு, பண்பாடு என்பது வேறு விஷயமாகும். ஒழுக்கத்தை பேணிக் காக்கவே அந்த அறிவுரைகள் தரப்பட்டன. ஏனெனில் நெருக்கமானவர்கள் மற்றும் உறவினர்கள் வீட்டில் உணவருந்தும் விஷயத்தில் நீங்கள் கோசப்பட மாட்டீர்கள். ஆனால் அன்னியர்கள் வீட்டிற்கு செல்லும்போது அவ்வாறு செய்யமாட்டீர்கள்.


لَّيْسَ عَلَى ٱلْأَعْمَىٰ حَرَجٌۭ وَلَا عَلَى ٱلْأَعْرَجِ حَرَجٌۭ وَلَا عَلَى ٱلْمَرِيضِ حَرَجٌۭ وَلَا عَلَىٰٓ أَنفُسِكُمْ أَن تَأْكُلُوا۟ مِنۢ بُيُوتِكُمْ أَوْ بُيُوتِ ءَابَآئِكُمْ أَوْ بُيُوتِ أُمَّهَٰتِكُمْ أَوْ بُيُوتِ إِخْوَٰنِكُمْ أَوْ بُيُوتِ أَخَوَٰتِكُمْ أَوْ بُيُوتِ أَعْمَٰمِكُمْ أَوْ بُيُوتِ عَمَّٰتِكُمْ أَوْ بُيُوتِ أَخْوَٰلِكُمْ أَوْ بُيُوتِ خَٰلَٰتِكُمْ أَوْ مَا مَلَكْتُم مَّفَاتِحَهُۥٓ أَوْ صَدِيقِكُمْ ۚ لَيْسَ عَلَيْكُمْ جُنَاحٌ أَن تَأْكُلُوا۟ جَمِيعًا أَوْ أَشْتَاتًۭا ۚ فَإِذَا دَخَلْتُم بُيُوتًۭا فَسَلِّمُوا۟ عَلَىٰٓ أَنفُسِكُمْ تَحِيَّةًۭ مِّنْ عِندِ ٱللَّهِ مُبَٰرَكَةًۭ طَيِّبَةًۭ ۚ كَذَٰلِكَ يُبَيِّنُ ٱللَّهُ لَكُمُ ٱلْءَايَٰتِ لَعَلَّكُمْ تَعْقِلُونَ.

24:61. உணவு அருந்துவதற்காக அனைவரும் சமப் பந்தியில் அமரும்போது, உங்களுடன் குருடர்கள், முடவர்கள், நோயாளிகள் ஆகியோர் சேர்ந்து உணவு அருந்துவதில் குற்றம் ஏதுமில்லை. அதே போல் உங்கள் சொந்த வீடுகளிலோ, உங்கள் தாய் தந்தையர் வீடுகளிலோ, உங்கள் சகோதாரர், சகோதரி, அத்தை, சித்தப்பா, சின்னம்மா, மாமன், உங்களுடைய சொந்த வீட்டிலோ அல்லது நெருங்கிய நண்பர்கள் வீடுகளுக்கோ செல்ல நேர்ந்து, அவர்களுடன் உணவருந்த நேர்ந்தால், தன்னந்தனியாகவோ அல்லது அவர்களுடன் சேர்ந்தோ உணவருந்துவதில் தவறு ஒன்றுமில்லை.
ஆனால் நீங்கள் எந்த வீட்டிற்கு சென்றாலும் அங்குள்ளவர்களுக்கு பிரச்னையோ பாதிப்போ ஏற்படும்படியான எந்த செயலையும் செய்யக் கூடாது. மாறாக நல்ல பரஸ்பர உறவு நாடி அங்குள்ளவர்களின் நலனில் அக்கறை கொண்டவர்களாகவே செல்ல வேண்டும். மேலும் அங்குள்ளவர்களில் குறைப்பாடுகள் ஏதேனுமிருந்தால் அவற்றை நீக்க தம்மாலான உதவி செய்ய வேண்டும். நீங்கள் ஒவ்வொறு விஷயத்தைப் பற்றியும் நன்றாக அறிந்து செயல்பட வேண்டும் என்பதற்காக அல்லாஹ்வின் புறத்திலிருந்து இவை இறக்கி அருளப்படுகின்றன.
இப்படியாக உறவினர்கள் மற்று நண்பர்களிடம் நீங்கள் நடக்கவேண்டிய முறையைப் பற்றி அறிந்துகொண்ட பின் பொதுவாழ்வைப் பற்றி மேலும் சில வஷயங்களைத் தெரிந்து கொள்ளுங்கள்.


إِنَّمَا ٱلْمُؤْمِنُونَ ٱلَّذِينَ ءَامَنُوا۟ بِٱللَّهِ وَرَسُولِهِۦ وَإِذَا كَانُوا۟ مَعَهُۥ عَلَىٰٓ أَمْرٍۢ جَامِعٍۢ لَّمْ يَذْهَبُوا۟ حَتَّىٰ يَسْتَـْٔذِنُوهُ ۚ إِنَّ ٱلَّذِينَ يَسْتَـْٔذِنُونَكَ أُو۟لَٰٓئِكَ ٱلَّذِينَ يُؤْمِنُونَ بِٱللَّهِ وَرَسُولِهِۦ ۚ فَإِذَا ٱسْتَـْٔذَنُوكَ لِبَعْضِ شَأْنِهِمْ فَأْذَن لِّمَن شِئْتَ مِنْهُمْ وَٱسْتَغْفِرْ لَهُمُ ٱللَّهَ ۚ إِنَّ ٱللَّهَ غَفُورٌۭ رَّحِيمٌۭ.

24:62. இறைவழிகாட்டுதலையும் அதனடிப்படையில் உருவான ஆட்சியமைப்பு சட்டங்களையும் ஏற்று நடக்கும் மூஃமின்கள், பொது விஷயங்களைப் பற்றி கலந்து ஆலோசிக்க தலைமை வகிப்பவர் சபையைக் கூட்டும்போது, அந்த ஆலோசனைக் கூட்டம் முடியும் வரையில் அங்கேயே இருந்து முழு விஷயங்களையும் அறிந்து கொள்ளவேண்டும். அப்போதுதான் நீங்கள் அல்லாஹ்வின் வழிகாட்டுதலையும் அதன் ஆட்சியமைப்பு சட்டங்களையும் மனதார ஏற்றுக் கொண்டதாக பொருள்படும்.
அதையும் மீறி சில அவசர தேவைக்காக தலைமை தாங்கியிருக்கும் நபியிடம் யாராவது அனுமதி கேட்டால் அவர்களின் நிலைமைக்கு ஏற்றவாறு அவர் அனுமதி கொடுக்கலாம். இவ்வாறு அவர் சபையை விட்டு செல்வதால், அவருடைய பாதுகாப்பிற்கு எந்த பாதிப்பும் வராதவாறு பார்த்துக் கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ்வின் ஆட்சியமைப்பு அனைத்து தரப்பு மக்களின் பாதுகாப்பைக் கருதியே கருணையோடு அரவணைத்துக் கொள்கிறது.


لَّا تَجْعَلُوا۟ دُعَآءَ ٱلرَّسُولِ بَيْنَكُمْ كَدُعَآءِ بَعْضِكُم بَعْضًۭا ۚ قَدْ يَعْلَمُ ٱللَّهُ ٱلَّذِينَ يَتَسَلَّلُونَ مِنكُمْ لِوَاذًۭا ۚ فَلْيَحْذَرِ ٱلَّذِينَ يُخَالِفُونَ عَنْ أَمْرِهِۦٓ أَن تُصِيبَهُمْ فِتْنَةٌ أَوْ يُصِيبَهُمْ عَذَابٌ أَلِيمٌ.

24:63. மேலும் ஒரு விஷயத்தை முக்கியமாக நினைவில் கொள்ளுங்கள். இந்த சபைக் கூட்டம் என்பது நீங்கள் ஒருவரையொருவர் அழைத்து பேசிக்கொள்ளும் சாதராண கூட்டம் போல எண்ணிக் கொள்ளாதீர்கள். நாட்டின் பொது விஷயங்களைப் பற்றி கலந்தாலோசித்து முக்கியமான முடிவுகளை எடுக்க அழைக்கப்படும் அழைப்பே ஆகும். (மேலும் பார்க்க 42:38, 62:9). எனவே எவர் ஒருவர் அந்த சபையிலிருந்து மறைமுகமாக நழுவிச் சென்றுவிடுகிறாரோ, அவரைப்பற்றி இந்த சபைக்கு தெரியாமல் போகாது. மேலும் அவருடைய போக்கு என்னவென்பதும் தெரிந்துவிடும். ஆகவே அவர்கள் பாதிப்புக்கு ஆளாவார்கள். அல்லது அவர் முனாஃபிக்கு என்று நிரூபணமானால் பல வேதனைகளுக்கும் ஆளாவார். இதற்கு அவர்கள் அஞ்சி நடந்து கொள்ளட்டும்.
அவ்வாறு சபையை விட்டு இடையில் வெளியேறி விட்டால் அல்லாஹ்வின் ஆட்சியமைப்புத் திட்டங்கள் நிறைவேறாமல் போகுமா? அல்லது அதனால் ஏற்படும் பாதிப்புகள் அல்லாஹ்வுக்கா?


أَلَآ إِنَّ لِلَّهِ مَا فِى ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضِ ۖ قَدْ يَعْلَمُ مَآ أَنتُمْ عَلَيْهِ وَيَوْمَ يُرْجَعُونَ إِلَيْهِ فَيُنَبِّئُهُم بِمَا عَمِلُوا۟ ۗ وَٱللَّهُ بِكُلِّ شَىْءٍ عَلِيمٌۢ.

24:64. வானங்களிலும் பூமியிலும் உள்ளவை யாவும் அல்லாஹ்வின் செயல்திட்டங்களை நிறைவேற்றவே செயல்பட்டு வருகின்றன என்பதை அவர்கள் அறிந்து கொள்ளட்டும். உங்களில் ஒவ்வொருவரும் எந்த மன நிலையில் இருக்கிறீர்கள் என்பதையும் அறியக் கூடியவன் தான் அல்லாஹ். நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலும் அல்லாஹ் நிர்ணயித்த இலக்கை நோக்கியே செல்கின்றன என்பதையும் கவனத்தில் கொள்ளட்டும். அவர்களுடைய செயல்களின் விளைவுகள் தோற்றத்திற்கு வரும்போது, அவர்களுக்கு உண்மை என்னவென்பது புரிந்துவிடும். அல்லாஹ் எல்லாவற்றின் மீதும் பேராற்றல் உடையவன் என்பதை அப்போது அவர்கள் அறிந்து கொள்வார்கள்.