بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ

23:0.அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் அறிவுரைப்படியே அனைத்துக் காரியங்களையும் செய்ய நாடுகிறேன். (பார்க்க 6:162)
ஒரு சமுதாயமோ அல்லது நாடோ, அது தன் இலட்சியத்தில் வெற்றி இலக்கை அடைய நாடினால், இறைவழிகாட்டுதலின் படி செயலாற்றும் மூஃமின்களிடம் இருக்கவேண்டிய ஒழுக்க மாண்புகள் மற்றும் செயல்முறைகள் எவ்வாறு இருக்கவேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.


قَدْ أَفْلَحَ ٱلْمُؤْمِنُونَ.

23:1. இறைவழிகாட்டுதலை மனதார ஏற்று செயல்படும் செயவீரர்களுள் வெற்றி இலக்கை அடைபவர்கள் எத்தகையவர் என்றால்,


ٱلَّذِينَ هُمْ فِى صَلَاتِهِمْ خَٰشِعُونَ.

23:2. அவர்கள் சமுதாய ஒழுக்க மாண்புகளை கட்டிக்காக்க, இறைச் சட்டங்களைக் கற்றுத் தரும் ஸலாத்தில் முழு கவனம் செலுத்தி, அவ்வாறு கற்றுக்கொண்டதை தம் வாழ்வின் இலட்சியமாக ஆக்கிக் கொள்வார்கள்.


وَٱلَّذِينَ هُمْ عَنِ ٱللَّغْوِ مُعْرِضُونَ.

23:3. மேலும் அவர்கள், தம்மிடமுள்ள ஆற்றல்களை ஆக்கப்பூர்வமான சமூக நலத் திட்டங்களுக்காக பயன்படுத்திக் கொள்வார்களே அன்றி, சமுதாய வளர்ச்சியை பாதிக்கும் வீணானவற்றில் கவனம் செலுத்தவே மாட்டார்கள்.


وَٱلَّذِينَ هُمْ لِلزَّكَوٰةِ فَٰعِلُونَ.

23:4. மேலும் அவர்கள், அனைத்து தரப்பு மக்களின் வளர்ச்சிக்காக நலத்திட்டங்களை தீட்டி, அவற்றில் முழு கவனத்தையும் செலுத்துவார்கள். அதற்காகவே தம் செல்வங்களைப் பயன்படுத்துவார்கள்.


وَٱلَّذِينَ هُمْ لِفُرُوجِهِمْ حَٰفِظُونَ.

23:5. மேலும் மனித ஆற்றல்களின் பொக்கிஷமாக விளங்கும் ஆண்மை வீரியத்தை வீணடிக்க மாட்டார்கள்.


إِلَّا عَلَىٰٓ أَزْوَٰجِهِمْ أَوْ مَا مَلَكَتْ أَيْمَٰنُهُمْ فَإِنَّهُمْ غَيْرُ مَلُومِينَ.

23:6. தமக்கு மகப்பேறு தேவை எனும் பட்சத்தில் தன் மனைவியிடத்தில் மட்டும் செல்வார்கள். அதைத் தவிர தம்மிடமுள்ள பணிவிடைப் பெண்களை திருமணம் செய்து மனைவி என்கிற அந்தஸ்தைக் கொடுத்து (பார்க்க 4:25) அவர்களிடம் வாழ்வதிலும் தவறில்லை
இந்த வாசகத்தில் பணிவிடையாளர்கள் முன் வெட்க ஸ்தலங்களை காட்டிக் கொள்வதில் தவறு ஒன்றுமில்லை என்று வருகிறது. அதாவது மருத்துவ சிகிச்சையின் போது, ஆணோ அல்லது பெண்ணோ தவிர்க்க முடியாத சூழ்நிலைகளில் மருத்துவர் மற்றும் செவிலியர்களிடம் தம் உடலின் மர்ம ஸ்தலங்களை காட்டுவதில் தவறு ஒன்றுமில்லை என்றும் பொருள் கொள்ளலாம். (மேலும் பார்க்க 70:30)


فَمَنِ ٱبْتَغَىٰ وَرَآءَ ذَٰلِكَ فَأُو۟لَٰٓئِكَ هُمُ ٱلْعَادُونَ.

23:7. இதைத் தவிர, அவர்கள் காம உணர்ச்சிகளை தூண்டும் வேறு எந்த செயலானாலும் அவற்றை இறைச் சட்டத்திற்கு புறம்பான செயல்களாக கருதுவார்கள்.


وَٱلَّذِينَ هُمْ لِأَمَٰنَٰتِهِمْ وَعَهْدِهِمْ رَٰعُونَ.

23:8. மேலும் அவர்கள் எத்தகையோர் என்றால் தம்மிடம் அமானிதமாக ஒப்படைக்கப்பட்ட அரசு பொறுப்புகளையும், அதை கட்டிகாக்க எடுத்துக் கொண்ட பிரமாணங்களையும் காப்பாற்றுவார்கள்.


وَٱلَّذِينَ هُمْ عَلَىٰ صَلَوَٰتِهِمْ يُحَافِظُونَ.

23:9. சுருங்கச் சொன்னால் இறைவழிகாட்டுதலின்படி ஏற்படுத்தப்படும் ஆட்சியமைப்பை கட்டிக் காப்பாற்றுவதில் கண்ணும் கருத்தமாய் இருப்பார்கள். (பார்க்க 24:41)


أُو۟لَٰٓئِكَ هُمُ ٱلْوَٰرِثُونَ.

23:10. இத்தகையவர்கள் வாழும் சமுதாயத்தவர்களே சுவனத்திற்கு ஒப்பான வாழ்வை பெறுவதற்கு உண்மையான வாரிசுதாரர்கள் ஆவார்கள்.


ٱلَّذِينَ يَرِثُونَ ٱلْفِرْدَوْسَ هُمْ فِيهَا خَٰلِدُونَ.

23:11. மேலும் அந்த சுவன வாழ்வு எல்லா சந்தோஷங்களுடனும், பேரானந்தம் அளிக்கக் கூடிய ஒன்றாக இருக்கும். அவர்கள் எதுவரையில் மேற்சொன்னவாறு செயல்படுகிறார்களோ, அதுவரையில் அந்த சுவன வாழ்வு நீடிக்கும். மேலும் அவர்கள் இறந்த பின்பும் அச்சுவன வாழ்வு தொடரும்.
இத்தகையவர்களே சுவர்க்கத்திற்கு வாரிசுதாரர்களாக ஆவதற்கு தகுதிப் பெறும் மூஃமின்கள் மற்றும் தொழுகையாளிகள் ஆவர். (விளக்கத்திற்கு பார்க்க 70:23-35) மேலும் இறைவழிகாட்டுதலின் நோக்கமும் அதுவே ஆகும். ஏனெனில் மனிதன் சந்தோஷமாக வாழவேண்டும் என்பதே இறைவனின் நாட்டமாகும். இதற்காக இறைவனின் செயல்திட்டங்கள் யாவும் முறைப்படி நடைபெற்று வருகின்றன. அதில் மனித படைப்பு, வளர்ப்பு, அவனுள் வளரும் ஆற்றல்கள் என எல்லாமே படிப்படியாக நடந்து வருகின்றன. மனித வாழ்வு என்று எடுத்துக் கொண்டால் அதை இரண்டாக பிரிக்கலாம். அதில் ஒன்று அவனுடைய சரீர வாழ்வு மற்றொன்று அவனுடைய ஒழுக்க மாண்புகள் மற்றும் மனித நேயம் சம்பந்தப்பட்ட வாழ்வு. முதலில் அவனுடைய சரீர வாழ்வின் ஆரம்பம் எவ்வாறு ஏற்படுகிறது என்பதைக் கவனியுங்கள்.


وَلَقَدْ خَلَقْنَا ٱلْإِنسَٰنَ مِن سُلَٰلَةٍۢ مِّن طِينٍۢ.

23:12. இறைவனின் செயல்திட்டப்படி மனித படைப்பின் ஆரம்பம் மண்ணின் சத்திலிருந்து பல படித்தரங்களைக் கடந்து உருவானது. (விளக்கத்திற்குப் பார்க்க 22:5, 32:7)


ثُمَّ جَعَلْنَٰهُ نُطْفَةًۭ فِى قَرَارٍۢ مَّكِينٍۢ.

23:13. அதன்பின் யுகங்கள் பல கடந்து, மனித படைப்பு, இறைவனின் செயல்திட்டப்படி, இந்திரியத் துளியிலிருந்து உருவாக ஆரம்பித்தது. (பார்க்க 32:5-9) அந்த இந்திரியத் துளி ஒரு பாதுகாப்பான இடமான கருப்பைக்குள் தங்கி வளரும்படி ஏற்பாடு செய்யப்பட்டது.


ثُمَّ خَلَقْنَا ٱلنُّطْفَةَ عَلَقَةًۭ فَخَلَقْنَا ٱلْعَلَقَةَ مُضْغَةًۭ فَخَلَقْنَا ٱلْمُضْغَةَ عِظَٰمًۭا فَكَسَوْنَا ٱلْعِظَٰمَ لَحْمًۭا ثُمَّ أَنشَأْنَٰهُ خَلْقًا ءَاخَرَ ۚ فَتَبَارَكَ ٱللَّهُ أَحْسَنُ ٱلْخَٰلِقِينَ.

23:14. அந்த இந்திரியத்துளி சில நாட்களில், ‘அலக்’ எனும் அட்டைப் பூச்சிப் போன்று மாறிவிடுகிறது. அதன்பின் அந்த ‘அலக்’ தசைப் பிண்டமாக வளர்ந்து, அதில் எலும்புகள் வளர்கின்றன. அதை தொடர்ந்து, அந்த எலும்புகளைச் சுற்றி மாமிசம் அணிவிக்கப்படுகிறது. அத்துடன் அல்லாஹ்வின் பாக்கியமிக்க ஆற்றல்களின் (ரூஹ்) அணுஅளவு அவனுக்கு அளித்து, (பார்க்க 32:9) இறுதியில் ஒரு புதிய பிறவியாக இவ்வுலகில் பிரவேசிக்கின்றான். மனித படைப்பின் தொடரை கவனித்துப் பார்க்கும் போது, படைப்பாளிகளிலேயே சிறந்த படைப்பாளி அல்லாஹ்வே என்பதில் யாருக்கும் எவ்வித சந்தேகமும் இருக்காது.


ثُمَّ إِنَّكُم بَعْدَ ذَٰلِكَ لَمَيِّتُونَ.

23:15. அதன்பின் இறைவனின் இதே சரீர சட்ட விதிமுறைகளின்படி, நீங்கள் சில காலம் வாழ்ந்து இறந்து விடுகிறீர்கள்.
இப்போது மனிதவாழ்வு மரணத்தோடு முடிந்து விடுகின்றதா என்ற கேள்வி எழுகிறது. இறைவனின் பாக்கியமிக்க ஆற்றல்கள் எனும் ‘ரூஹ்’ மனிதனுள் வைக்கப்பட்டு விட்டதால், மனிதனின் தனித் தன்மையாகிய ‘ரூஹ்’ மரணத்திற்குப் பின்பும் முன்னேறிச் செல்லவேண்டும் என்பதே அல்லாஹ்வின் செயல்திட்டமாகும். இதுதான் மனித ஒழுக்க மாண்புகள், குணநலன்கள், மனித நேயம் போன்றவற்றின் அடிப்படையில் உள்ள வாழ்வாகும். அவற்றைக் கொண்டுதான் இந்த ‘ரூஹ்’ வளர்ச்சிப் பெற முடியும். எனவே


ثُمَّ إِنَّكُمْ يَوْمَ ٱلْقِيَٰمَةِ تُبْعَثُونَ.

23:16.“மனித செயல்களின் இறுதி விளைவுகள்” என நிர்ணயிக்கப்பட்ட கால கட்டத்தில், நீங்கள் செய்து வந்த செயல்களுக்கு பதிலளிக்க வேண்டி வரும். இதுதான் "ஃகியாம நாள்" எனப்படுவதாகும்.
இந்த அத்தியாயத்தின் தொடக்கத்தில் (23:1-9ல்) சொல்லப்பட்டதுப் போல, சிறப்பாக செயல்பட்டோரின் ‘ரூஹ்’ வளர்ச்சிப் படித்தரங்களை கடந்து சுவனத்தை சென்றடைகிறது. தீய செயல்களில் ஈடுபட்டவர்களின் ‘ரூஹ்’ நரகத்தில் தள்ளப்படுகிறது. இது எப்படி சாத்தியமாகும் என்ற கேள்வி உங்களுக்கு எழலாம். அதற்கு நீங்கள் வாழும் பூமியை ஆராய்ந்து பாருங்கள்.


وَلَقَدْ خَلَقْنَا فَوْقَكُمْ سَبْعَ طَرَآئِقَ وَمَا كُنَّا عَنِ ٱلْخَلْقِ غَٰفِلِينَ.

23:17. அல்லாஹ்வின் செயல்திட்டப்படி இந்த பூமி மட்டுமின்றி வான் மண்டலங்களில் கோள்களும் எண்ணற்ற நட்சத்திரங்களும் படைக்கப்பட்டு அவற்றில் ஒவ்வொன்றும் தமக்குரிய பாதையில் செல்கின்றன என்பதை கவனியுங்கள். இப்படியாக அகிலங்களில் உள்ள ஒவ்வொரு படைப்பின் செயல்பாட்டைப் பற்றியும் அல்லாஹ் ஒருபோதும் பராமுகமாக இருப்பதில்லை.
இது உண்மை என்றால் மனிதனின் ‘ரூஹ்’ வும் வளர்ச்சிப் படித்தரங்களைக் கடந்து செல்வதும் உண்மையே. மரணத்திற்குப் பின் ஏற்படும் ஈர்ப்பு அவனுடைய செயல்களுக்கு ஏற்றவாறு ஏற்படும். தீயவர்கள் நரகத்தின் பக்கம் விரைய வேண்டியிருக்கும். நல்லோர்கள் சுவனத்தின் பக்கம் ஈர்க்கப் படுவார்கள்.


وَأَنزَلْنَا مِنَ ٱلسَّمَآءِ مَآءًۢ بِقَدَرٍۢ فَأَسْكَنَّٰهُ فِى ٱلْأَرْضِ ۖ وَإِنَّا عَلَىٰ ذَهَابٍۭ بِهِۦ لَقَٰدِرُونَ.

23:18. அது மட்டுமின்றி அல்லாஹ்வின் செயல்திட்டப்படி வானத்திலிருந்து அளவோடு மழை பொழிய வைத்து, அந்த மழை நீர் குறிப்பிட்ட காலம் வரையில் பூமியில் தங்குகிறது. அந்த மழை நீரை உடனே போக்கிவிடவும் செய்திருக்க முடியும். ஆனால் அந்த மழை நீரை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்பதற்காக அதை பூமியில் சில காலங்களுக்கு தங்க வைக்கப்படுகிறது.


فَأَنشَأْنَا لَكُم بِهِۦ جَنَّٰتٍۢ مِّن نَّخِيلٍۢ وَأَعْنَٰبٍۢ لَّكُمْ فِيهَا فَوَٰكِهُ كَثِيرَةٌۭ وَمِنْهَا تَأْكُلُونَ.

23:19. மேலும் மழை நீரைக் கொண்டு பேரீச்சை, திராட்சை போன்ற தோட்டங்கள் உருவாகின்றன. அவற்றில் உங்களுக்காக அநேக கனிவகைகளும் விளைகின்றன. அவை உங்களுக்கு அறுசுவை உணவாகவும் விளங்குகின்றன.


وَشَجَرَةًۭ تَخْرُجُ مِن طُورِ سَيْنَآءَ تَنۢبُتُ بِٱلدُّهْنِ وَصِبْغٍۢ لِّلْءَاكِلِينَ.

23:20. அதே போன்று ஸினாய் மலைப் பிரதேசத்தில் எண்ணெய் வித்து மரங்களும் பல உள்ளன. அதிலிருந்து ஜைத்தூன் என்ற எண்ணெய் உற்பத்தியாகிறது. உங்களுக்காக அறுசுவை உணவை தயாரிக்க அது பெருமளவு உதவுகிறது.


وَإِنَّ لَكُمْ فِى ٱلْأَنْعَٰمِ لَعِبْرَةًۭ ۖ نُّسْقِيكُم مِّمَّا فِى بُطُونِهَا وَلَكُمْ فِيهَا مَنَٰفِعُ كَثِيرَةٌۭ وَمِنْهَا تَأْكُلُونَ.

23:21. அது மட்டுமின்றி நீங்கள் வளர்த்து வரும் கால்நடைகள், உங்கள் வாழ்வில் பெருமளவு உதவிகரமாக உள்ளன. அவற்றின் வயிறுகளிலிருந்து சுரக்கும் பால் முதல்கொண்டு பல வகையான பலன்கள் உங்களுக்குக் கிடைத்து வருகின்றன. இறுதியாக அவற்றின் மாமிசத்தை புசிக்கவும் செய்கிறீர்கள்.
மேற்சொன்ன படைப்புகள் யாவும் உண்மையே என்றால் மரணத்திற்குப் பின் தொடரும் வாழ்வும் உண்மையே என்பதை ஏற்றுக் கொள்ளுங்கள். இப்படியாக நிலப் பகுதியில் கிடைக்கும் வாழ்வாதாரங்கள் மட்டுமின்றி கடலிலும் உங்களுக்காகப் பல நன்மைகள் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. (பார்க்க 16:14) அதற்காக


وَعَلَيْهَا وَعَلَى ٱلْفُلْكِ تُحْمَلُونَ.

23:22. கடலில் பயணம் செய்ய உங்களை சுமந்து செல்லும் கப்பல்களும் இருக்கின்றன.
அல்லாஹ்வின் இத்தகைய ஏற்பாடுகள் இருப்பதால்தான் உங்களால் இவ்வுலகில் உயிர்வாழ முடிகிறது. இவை மனிதனின் சரீர வாழ்விற்குத் தேவையான பொருட்களாகும். ஆனால் மனித வாழ்வின் மறு பக்கமாகத் திகழும் மனித ஓழுக்க மாண்புகள், மனித நேயம், மற்றும் அவனது ஆற்றல்களின் வளர்ச்சி போன்ற விஷயங்கள் உள்ளன. இவை மனிதனின் கூட்டு வாழ்க்கைக்கு இன்றியமையாததாக உள்ளன. மனிதனுள் இவை வளர இறைவழிகாட்டுதல்கள் அவசியமாகின்றன. அவை அல்லாஹ்வின் புறத்திலிருந்து நபிமார்கள் மூலமாக இறக்கி அருளப்படுகின்றன. அந்த வரிசையில் நூஹ் நபியும் வருகிறார்.


وَلَقَدْ أَرْسَلْنَا نُوحًا إِلَىٰ قَوْمِهِۦ فَقَالَ يَٰقَوْمِ ٱعْبُدُوا۟ ٱللَّهَ مَا لَكُم مِّنْ إِلَٰهٍ غَيْرُهُۥٓ ۖ أَفَلَا تَتَّقُونَ.

23:23. அவர், அல்லாஹ்வின் வழிகாட்டுதலுக்கு மட்டும் அடிபணிந்து செயல்படும்படி தம் சமூகத்தாரிடம் அறிவுறுத்தி வந்தார். அல்லாஹ்வைத் தவிர வேறு யாருடைய செயல்திட்டமும் இவ்வுலகில் நடைபெறுவதில்லை. எனவே அல்லாஹ்வின் அறிவுரைகளுக்கு எதிராக செயல்படுவதால் ஏற்படும் விபரீத விளைவுகளுக்கு அஞ்சி வாழுங்கள் என்று அறிவுறுத்தி வந்தார்.


فَقَالَ ٱلْمَلَؤُا۟ ٱلَّذِينَ كَفَرُوا۟ مِن قَوْمِهِۦ مَا هَٰذَآ إِلَّا بَشَرٌۭ مِّثْلُكُمْ يُرِيدُ أَن يَتَفَضَّلَ عَلَيْكُمْ وَلَوْ شَآءَ ٱللَّهُ لَأَنزَلَ مَلَٰٓئِكَةًۭ مَّا سَمِعْنَا بِهَٰذَا فِىٓ ءَابَآئِنَا ٱلْأَوَّلِينَ.

23:24. ஆனால் செல்வ செழிப்புடன் வாழ்ந்த சமுதாயத் தலைவர்கள், அவருடைய அறிவுரைகளை ஏற்க முன்வரவில்லை. எனவே அவர்கள், “இவர் என்ன! ஒரு சாதாரண மனிதராக இருக்கும் நிலையில், அவர் உங்களை விட சிறப்பைப் பெற விரும்புகிறாரே! மேலும் உங்களை நேர்வழிப்படுத்த அல்லாஹ் நாடியிருந்தால், அவன் மலக்குகளை அல்லவா தூதராக அனுப்பி இருக்க வேண்டும்? எங்களுக்கு முன் வாழ்ந்த நம் மூதாதையர்களிடம் இப்படிப்பட்ட போதனைகளை கேள்விப்பட்டதே இல்லையே!” என்று அங்கு கூடியிருந்தவர்களைப் பார்த்து கூறலானார்கள்.


إِنْ هُوَ إِلَّا رَجُلٌۢ بِهِۦ جِنَّةٌۭ فَتَرَبَّصُوا۟ بِهِۦ حَتَّىٰ حِينٍۢ.

23:25. மேலும் அவர்கள், “இவருடைய பேச்சுகள் நூதனமாக உள்ளன. இந்த மனிதருக்கு பைத்தியம் பிடித்துள்ளது என்றே நினைக்கிறோம். நீங்கள் அவருடைய பேச்சை கேட்காதீர்கள். நீங்கள் பொறுத்திருந்து பாருங்கள். என்ன நடக்கிறது என்பதை நீங்களே தெரிந்து கொள்வீர்கள்” என்றனர்.
இப்படியாக அவர் தம் சமூகத்தவர்களுக்கு அறிவுரைகளை செய்தும் பலனற்று போய்விட்டன. அவர்களிடம் தனிப்பட்ட முறையிலும் வெளிப்படையாகவும் எடுத்துரைத்தார். (பார்க்க 71:8-9) ஆனால் அவருக்கு எதிராக பகை தான் வலுத்தது. அவரை கொல்லப் போவதாகவே அவர்கள் மிரட்டினார்கள். (பார்க்க 26:!16) இனி அங்கு இருந்தால் தனக்கும் தன்னை பின்பற்றி வருபவர்களின் உயிருக்கும் ஆபத்து வரும் என்பதை உணர்ந்தார். எனவே அவர்


قَالَ رَبِّ ٱنصُرْنِى بِمَا كَذَّبُونِ.

23:26.“என் இறைவா! இவர்கள் உன் வழிகாட்டுதலை ஏற்க மறுப்பதோடு, அவை யாவும் பொய்யென கூறி எங்களில் அநேகரை வழிகெடுத்து வருகின்றனர். (பார்க்க 71:27) எனவே அவர்களிலிருந்து காப்பாற்றிக் கொள்ள எனக்கு உதவி செய்வாயாக!” என்று பிரார்த்தித்தார்.


فَأَوْحَيْنَآ إِلَيْهِ أَنِ ٱصْنَعِ ٱلْفُلْكَ بِأَعْيُنِنَا وَوَحْيِنَا فَإِذَا جَآءَ أَمْرُنَا وَفَارَ ٱلتَّنُّورُ ۙ فَٱسْلُكْ فِيهَا مِن كُلٍّۢ زَوْجَيْنِ ٱثْنَيْنِ وَأَهْلَكَ إِلَّا مَن سَبَقَ عَلَيْهِ ٱلْقَوْلُ مِنْهُمْ ۖ وَلَا تُخَٰطِبْنِى فِى ٱلَّذِينَ ظَلَمُوٓا۟ ۖ إِنَّهُم مُّغْرَقُونَ.

23:27. அதற்கு, இறைவனின் நேரடிக் கண்காணிப்பில் கப்பல் ஒன்றை கட்டும்படி கட்டளை வந்தது. அதன்பின் குறித்த நேரத்தில் இறைச் செயல்திட்டப்படி அப்பிரதேசத்தில் தொடர் மழை பெய்து, பூமி பிரளயத்தில் பொங்கி எழும். அப்போது, “நீங்களும் உம்மைப் பின்பற்றி வருபவர்களும் அந்த கப்பலில் ஏறிக் கொள்ளுங்கள். அது மட்டுமின்றி பறவைகளிலிருந்தும் கால்நடைகளிலிருந்தும் ஜோடி ஜோடியாக அதில் ஏற்றிக் கொள்ளுங்கள். யார் உம் அறிவுரையை ஏற்கவில்லையோ அவர்கள் இதில் ஏறமாட்டார்கள். அத்தகையவர்கள் தண்டனைக்குரியவர்கள் ஆவார்கள். மேலும் அநியாய அக்கிரம செயல்களில் ஈடுபட்டிருந்தோரின் மீது பரிதாபப்பட்டு இறைவனிடம் பரிந்து பேச வேண்டாம். நிச்சயமாக அவர்கள் மூழ்கடிக்கப்படுவார்கள்” என்ற வஹீச் செய்தி வந்தது.
அக்காலத்தில் அந்த மலைப் பிரதேசங்களில் வாழ்பவர்களுக்கு கடலில் செல்லும் கப்பலைப் பற்றிய ஞானம் இருக்க வாய்ப்பில்லை. எனவே இறைவனின் நேரடி கண்காணிப்பில் கட்டும்படி கட்டளை வருகிறது. அந்த கப்பலைப் பார்க்கும் அம்மக்களுக்கும் வியப்பான ஒன்றாக இருந்திருக்கும். எனவே இவருடைய செயலைப் பார்த்து கேலி கிண்டல் செய்தார்கள்.
மேலும் ஒரு விஷயத்தைக் கவனியுங்கள். எதிர் தரப்பினரால் தம் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என பயந்து இறைவனிடம் பாதுகாப்பு விஷயமாக பிரார்த்தனை செய்கிறார். அல்லாஹ் நாடி இருந்தால் அவரை ஒரு பாதுகாப்பான இடத்திற்கு கொண்டுபோய் சேர்த்திருக்க முடியும். ஆனால் அல்லாஹ்வின் செயல்திட்டம் அவ்வாறு இல்லை. பாதுகாப்பு விஷயமும் மனிதனின் பொறுப்பில்தான் விடப்படுகிறது. எனவே நூஹ் நபியை பார்த்து கப்பல் ஒன்றை கட்டும்படி கட்டளையிடுகிறான். இறைவன் மனிதனுக்கு நேரடியாக உதவி செய்யும் திட்டம் எக்காலத்திலும் ஒருபோதும் இருந்ததில்லை என்பது இதிலிருந்து புலனாகிறது.


فَإِذَا ٱسْتَوَيْتَ أَنتَ وَمَن مَّعَكَ عَلَى ٱلْفُلْكِ فَقُلِ ٱلْحَمْدُ لِلَّهِ ٱلَّذِى نَجَّىٰنَا مِنَ ٱلْقَوْمِ ٱلظَّٰلِمِينَ.

23:28. நீரும் உம்மை சார்ந்தவர்களும் அந்த கப்பலில் ஏறிக் கொள்ளுங்கள். அது நீரில் மிதக்க ஆரம்பித்ததும் அநியாய அக்கிரமக்கார கூட்டத்தாரிடமிருந்து எங்களைக் காப்பாற்றிய அல்லாஹ்வின் செயல்திட்டம், எல்லா போற்றுதலுக்கு உரியதே என்பதை உணர்ந்து கூறுவீர்கள்.


وَقُل رَّبِّ أَنزِلْنِى مُنزَلًۭا مُّبَارَكًۭا وَأَنتَ خَيْرُ ٱلْمُنزِلِينَ.

23:29. மேலும், “இறைவா! நீ எங்களை வாழ்வாதாரங்கள் மிக்க பாக்கியமான இடத்தில் இறங்கும் படி செய்தருள்வாயாக. இப்படிபட்ட சிறந்த இடத்தில் எங்களை இறக்குவதில் நீயே மேலானவன்” என்று பிரார்த்தித்த வண்ணம் இருப்பீராக.
அதாவது உங்கள் எண்ணங்களும் செயல்களும் இறைவனின் அறிவுரைகளின் படியே இருத்தல் அவசியம். அவ்வாறு செயல்படவில்லை என்றால் இவர்களுக்கும் அதே போன்ற வேதனைகள் பீடித்துக் கொள்ளும். (பார்க்க 11:48)


إِنَّ فِى ذَٰلِكَ لَءَايَٰتٍۢ وَإِن كُنَّا لَمُبْتَلِينَ.

23:30. எனவே நூஹ்வுடைய சமூகத்தவர்க்கு ஏற்பட்ட பரிதாபமான நிலை, “மனித செயல்களுக்கு ஏற்ப இறுதி விளைவுகள்” என்ற சட்டம் எந்த அளவுக்கு உறுதி வாய்ந்தது என்பதை உலக மக்களுக்கு எடுத்துரைப்பதாக உள்ளது.


ثُمَّ أَنشَأْنَا مِنۢ بَعْدِهِمْ قَرْنًا ءَاخَرِينَ.

23:31. மேலும் அந்த பிரளயத்திலிருந்து தப்பியவர்கள் காலப் போக்கில் ஒரு சமுதாயமாக உருவெடுத்தது. இதுவும் அல்லாஹ்வின் மாபெரும் செயல்திட்டமாகும்.
அதாவது அநியாய அக்கிரம செயலில் ஈடுபடுபவர்களை இவ்வுலகிலிருந்து நீக்கி, ஒழுக்க மாண்புகளுடன் வாழும் சமுதாயங்கள் உருவாகவேண்டும் என்பதே இறைவனின் செயல்திட்டமாகும். எனவே நூஹ் நபி காலத்திற்குப் பின் உருவான சமுதாயத்தில் மீண்டும் குழப்பங்கள் ஏற்பட்டபோது, அவற்றை சீர்செய்ய இறைத்தூதர்கள் அனுப்பப்பட்டனர்.


فَأَرْسَلْنَا فِيهِمْ رَسُولًۭا مِّنْهُمْ أَنِ ٱعْبُدُوا۟ ٱللَّهَ مَا لَكُم مِّنْ إِلَٰهٍ غَيْرُهُۥٓ ۖ أَفَلَا تَتَّقُونَ.

23:32. அங்கு வருகை தந்த தூதர்களும் அவர்களிலிருந்தே பிறந்து வளர்ந்தவர்களாக இருந்தனர். அந்த இறைத்தூதர்களும் அல்லாஹ்வின் கட்டளைக்கு மட்டும் அடிபணிந்து செயல்படும்படி அறிவுறுத்தி வந்தனர். மேலும் அவர்கள், “இவ்வுலகில் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருடைய ஆட்சி அதிகாரமும் நடைபெறுவதில்லை. எனவே அவனுடைய கட்டளைக்கு மாற்றமாக செயல்பட்டால், உங்கள் வாழ்வில் விபரீத விளைவுகள் ஏற்படும் என்பதை அஞ்சி செயல்பட வேண்டாமா?” என்று அவர்களிடம் இறைத்தூதர்கள் போதித்து வந்தனர்.


وَقَالَ ٱلْمَلَأُ مِن قَوْمِهِ ٱلَّذِينَ كَفَرُوا۟ وَكَذَّبُوا۟ بِلِقَآءِ ٱلْءَاخِرَةِ وَأَتْرَفْنَٰهُمْ فِى ٱلْحَيَوٰةِ ٱلدُّنْيَا مَا هَٰذَآ إِلَّا بَشَرٌۭ مِّثْلُكُمْ يَأْكُلُ مِمَّا تَأْكُلُونَ مِنْهُ وَيَشْرَبُ مِمَّا تَشْرَبُونَ.

23:33. நூஹ் நபி காலத்தில் வாழ்ந்த சமுதாய தலைவர்களைப் போலவே, அங்கு வாழ்ந்த அரசு அதிகாரிகளும், மதத் தலைவர்களும், செல்வ சீமான்களும் இறைவழிகாட்டுதலை ஏற்க மறுத்து வந்தனர். மேலும் அவர்களுடைய செயல்களின் இறுதி விளைவுகளை சந்திக்கவேண்டி வரும் என்ற முன் எச்சரிக்கையை பொய்யெனக் கூறிவந்தனர். இதற்கு காரணம் இறைத்தூதர் மற்றவர்களைப் போலவே ஒரு சாதாரண மனிதராக இருக்கிறாரே. உணவருந்துவதும், நீரைப் பருகுவதும் என மற்றவர்களைப் போலவே இருக்கிறாரே. இவருடைய பேச்சை நாம் எப்படி கேட்பது? இதுவே அவர்கள் இறைவழிகாட்டுதலை ஏற்க மறுப்பதற்கு கூறிவந்த காரணமாகும்.


وَلَئِنْ أَطَعْتُم بَشَرًۭا مِّثْلَكُمْ إِنَّكُمْ إِذًۭا لَّخَٰسِرُونَ.

23:34. எனவே அவர்கள், “உங்களைப் போன்ற ஒரு சாதாரண மனிதருக்கு நீங்கள் கட்டுப்பட்டால் நிச்சயமாக நீங்கள் நஷ்டத்திற்குள்ளாவீர்கள்” என்று கூறி வந்தனர்.
அதாவது இறைத்தூதர் என்பவர் தனிச்சிறப்புப் பெற்றவராக இருக்கவேண்டும். அப்போது தான் அவரை நாங்கள் அடையாளம் கொள்வோம். அது மட்டுமின்றி இந்த தூதர் எங்களுக்கு கிடைத்துள்ள செல்வங்களை எங்கள் விருப்பப்படி செலவழித்து சொகுசாக வாழவும் கூடாது என்கிறார் (பார்க்க 11:87).


أَيَعِدُكُمْ أَنَّكُمْ إِذَا مِتُّمْ وَكُنتُمْ تُرَابًۭا وَعِظَٰمًا أَنَّكُم مُّخْرَجُونَ.

23:35. இறந்த பின் மண்ணோடு மண்ணாகவும் எலும்புகளாகவும் ஆன பின்னரும், மீண்டும் எழுப்பப்பட்டு நீங்கள் செய்து வந்தமைக்கு பதிலளிக்கும் நாள் நிச்சயம் உண்டு என்றும் மிரட்டி வருகிறார்” என்று கூறினர்.


۞ هَيْهَاتَ هَيْهَاتَ لِمَا تُوعَدُونَ.

23:36.“என்னே ஒரு விசித்திரமானப் பேச்சு! இப்படியெல்லாம் நடப்பது சாத்தியமா? நம் அறிவுக்கு எட்டாத விஷயமே இது” என்றனர்.


إِنْ هِىَ إِلَّا حَيَاتُنَا ٱلدُّنْيَا نَمُوتُ وَنَحْيَا وَمَا نَحْنُ بِمَبْعُوثِينَ.

23:37.“எங்களைப் பொறுத்தவரையில் மனித வாழ்வு என்பது இவ்வுலக வாழ்வோடு முடிந்து போகின்ற ஒன்றுதான். நாம் உயிர் வாழ்கிறோம். அதன் பின் இறந்து விடுகிறோம். அவ்வளவு தான். எனவே அவர் கூறுவது போல மீண்டும் எழுப்பப் படுபவர்கள் அல்ல” என்றனர்.


إِنْ هُوَ إِلَّا رَجُلٌ ٱفْتَرَىٰ عَلَى ٱللَّهِ كَذِبًۭا وَمَا نَحْنُ لَهُۥ بِمُؤْمِنِينَ.

23:38. “ஆனால் இந்த மனிதரைப் பாருங்கள். அல்லாஹ் ஏதேதோ கூறுவதாக இவரே இட்டுக் கட்டி கூறி வருகிறார். எனவே இவரை நாம் எப்படி நம்புவது?” என்றனர்.


قَالَ رَبِّ ٱنصُرْنِى بِمَا كَذَّبُونِ.

23:39. எனவே அந்த இறைத்தூதர், “என் இறைவா! இவர்கள் உன்னுடைய அறிவுரைகளை கண்மூடித்தனமாக ஏற்க மறுத்து வருகின்றனர். அவர்களிலிருந்து பாதுகாத்துக் கொள்ள நீ எங்களுக்கு உதவி செய்வாயாக!” என்று பிரார்த்தித்தார்.


قَالَ عَمَّا قَلِيلٍۢ لَّيُصْبِحُنَّ نَٰدِمِينَ.

23:40. அதற்கு, “அவர்களுக்கு அளிக்கப்பட்ட காலத் தவணை முடியும் தருவாயில் இருக்கிறது. எனவே விரைவில் அவர்களுடைய செயல்களின் விளைவுகளை சந்தித்துக் கொள்வார்கள்” என்று இறைவனிடமிருந்து வஹீச் செய்தி வந்தது.


فَأَخَذَتْهُمُ ٱلصَّيْحَةُ بِٱلْحَقِّ فَجَعَلْنَٰهُمْ غُثَآءًۭ ۚ فَبُعْدًۭا لِّلْقَوْمِ ٱلظَّٰلِمِينَ.

23:41. அவ்வாறே அவர்களுக்கு விடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை உண்மையாகி விட்டது. பயங்கரமான இடி முழக்கங்கள் அவர்களை பீடித்து, அவர்கள் குப்பைக் கூளங்களாக மாறிவிட்டனர். இப்படியாக அநியாய செயல்களில் ஈடுபட்டு வந்த சமுதாயத்தினருக்கு அல்லாஹ்வின் அருட்கொடைகள் கிடைப்பது எங்ஙனம்?


ثُمَّ أَنشَأْنَا مِنۢ بَعْدِهِمْ قُرُونًا ءَاخَرِينَ.

23:42. அவர்களுடைய அழிவுக்குப் பின் அவர்களில் மிஞ்சியிருந்தவர்கள் காலப் போக்கில், இறைவனின் நியதிப்படி வேறொரு சமுதாயமாக உருவெடுத்தார்கள்.


مَا تَسْبِقُ مِنْ أُمَّةٍ أَجَلَهَا وَمَا يَسْتَـْٔخِرُونَ.

23:43. இப்படியாக எந்த சமுதாயமாக இருந்தாலும், தம் செயல்களின் இறுதி விளைவுகளை ஒரு குறிப்பிட்ட கால தவணைக்குப் பின் சந்தித்தே தீரும் என்பது இறைவன் நிர்ணயித்த சட்டமாகும். இந்த காலத் தவணை முந்தவும் செய்யாது பிந்தவும் செய்யாது. (விளக்கத்திற்குப் பார்க்க 7:34)


ثُمَّ أَرْسَلْنَا رُسُلَنَا تَتْرَا ۖ كُلَّ مَا جَآءَ أُمَّةًۭ رَّسُولُهَا كَذَّبُوهُ ۚ فَأَتْبَعْنَا بَعْضَهُم بَعْضًۭا وَجَعَلْنَٰهُمْ أَحَادِيثَ ۚ فَبُعْدًۭا لِّقَوْمٍۢ لَّا يُؤْمِنُونَ.

23:44. இப்படியாகத் தான் நாம் காலம் காலமாக இறைவழிகாட்டுதலின் படி சமுதாய சீர்திருத்தங்களை செய்து வைக்க இறைத் தூதர்களை ஒன்றன் பின் ஒன்றாக அனுப்பி வைத்தோம். மேலும் ஒவ்வொரு சமுதாயத்தினரிடமும் சீர்திருத்தவாதிகள் வந்த போதெல்லாம் அவரைப் பொய்ப்பித்து அவர்கள் எதிர்க்காமல் இருந்ததில்லை. அதனால் அவர்கள் அழிவை சந்தித்துக் கொண்டார்கள். ஆனால் இந்த உண்மைகள் எல்லாம் பிற்காலத்தில் வந்த சமூகத்தவர்களுக்கு வெறும் கதைகளாக மாறிவிட்டன. ஆக இந்த உண்மைகளை ஏற்காத மக்களுக்கு அல்லாஹ்வின் அருட்கொடைகள் கிடைப்பது எங்ஙனம்?


ثُمَّ أَرْسَلْنَا مُوسَىٰ وَأَخَاهُ هَٰرُونَ بِـَٔايَٰتِنَا وَسُلْطَٰنٍۢ مُّبِينٍ.

23:45. இப்படியாக உலகிற்கு வருகை தந்த இறைத்தூதர்கள் வரிசையில் மூஸா நபியும் அவருடைய சகோதரர் ஹாரூன் நபியும் வந்தார்கள். அவ்விருவரும் அல்லாஹ்வின் வழிகாட்டுதல்களை தக்க ஆதாரங்களுடன் மக்களிடமும் அந்நாட்டு மன்னனாக இருந்த ஃபிர்அவுனிடமும் எடுத்துரைக்க அனுப்பி வைத்தோம்.


إِلَىٰ فِرْعَوْنَ وَمَلَإِي۟هِۦ فَٱسْتَكْبَرُوا۟ وَكَانُوا۟ قَوْمًا عَالِينَ.

23:46. அவ்விருவர், ஃபிர்அவுனிடமும் அவனுடைய அரசவை பிரமுகர்களிடமும் இறைவழிகாட்டுதலை எடுத்துரைத்தனர். ஆனால் அவர்கள் ஆணவங்கொண்டு அவற்றை ஏற்க மறுத்து விட்டனர்.


فَقَالُوٓا۟ أَنُؤْمِنُ لِبَشَرَيْنِ مِثْلِنَا وَقَوْمُهُمَا لَنَا عَٰبِدُونَ.

23:47. அவர்களும், மற்றவர்களைப் போலவே இவ்விருவரும் சாதாரண மனிதர்களாக இருக்கிறார்களே!. இவர்களுடைய அறிவுரைகளையா நாம் கேட்பது? இன்னும் சொல்லப் போனால் இவர்களுடைய சமுதாயத்தவர்கள் நமக்கு அடிமைகளாகவே இருக்கின்றனரே!” என்று பெருமையடித்துக் கொண்டனர்.


فَكَذَّبُوهُمَا فَكَانُوا۟ مِنَ ٱلْمُهْلَكِينَ.

23:48. இப்படியாக அவர்கள், அவ்விருவர் எடுத்துரைத்த இறைவழிகாட்டுதலை பொய்யென கூறி அவற்றை ஏற்க மறுத்து விட்டனர். எனவே அவர்களும் அழிந்து போனவர்கள் பட்டியலில் இடம்பெற்று விட்டனர்.


وَلَقَدْ ءَاتَيْنَا مُوسَى ٱلْكِتَٰبَ لَعَلَّهُمْ يَهْتَدُونَ.

23:49. அவர்களுக்கு மூஸா நபி மூலம் இறைவழிகாட்டுதலை அனுப்பியதன் நோக்கமே, அவர்கள் அதன்படி செயல்பட்டு அவர்களுக்கு நேரவிருந்த அழிவிலிருந்து காப்பாற்றவே ஆகும்.
அதே போன்று மக்களை நேர்வழியில் கொண்டுவர ஈஸா நபியும் அவரது தாயார் மர்யமும் வந்தனர். அவர்கள் மக்களிடம் இறைவழிகாட்டுதலை ஆதாரப்பூர்வமாக எடுத்துரைத்தனர். மர்யம், யூதர்களின் ஹைக்கல் என்கிற ஆசிரமத்தில் பெண்களுக்கு எதிராக நடந்து வந்த முறைகேடுகளைப் பற்றி தட்டிக் கேட்டார். அதனால் அவர் பெரும் இன்னல்களுக்கு ஆளானார். ஈஸா நபி யூதர்களிடையே இருந்து வந்த முறைகேடுகளை நீக்கி சிறந்ததொரு சமுதாயத்தை உருவாக்க பாடுபட்டார். ஆனால் யூதர்களோ இறைவழிகாட்டுதலை ஏற்று நடப்பதற்குப் பதிலாக அவருக்கெதிராக சதி செய்யவே நாடினார்கள்


وَجَعَلْنَا ٱبْنَ مَرْيَمَ وَأُمَّهُۥٓ ءَايَةًۭ وَءَاوَيْنَٰهُمَآ إِلَىٰ رَبْوَةٍۢ ذَاتِ قَرَارٍۢ وَمَعِينٍۢ.

23:50. இப்படியாக ஈஸா நபியும் அவருடைய தாயார் மர்யமும், இறைவனின் ஆதாரப்பூர்வமான வழிகாட்டுதல்களை மக்களிடம் எடுத்துரைத்தனர். மேலும் அவ்விருவர் யூதர்களின் சதி வலையில் சிக்காமல் பாதுகாப்பான இடத்திற்கு ஹிஜ்ரத் செய்து சென்று விட்டனர். அவர்கள் சென்ற இடம் நீர் வீழ்ச்சிகள் நிரைந்த செழிப்பான மலைப் பிரதேசமாக இருந்தது. இப்படியாக அவர்களுக்கு பாதுகாப்பான வாழ்வு கிடைத்தது.


يَٰٓأَيُّهَا ٱلرُّسُلُ كُلُوا۟ مِنَ ٱلطَّيِّبَٰتِ وَٱعْمَلُوا۟ صَٰلِحًا ۖ إِنِّى بِمَا تَعْمَلُونَ عَلِيمٌۭ.

23:51. ஆக உலகிற்கு வருகை தந்த இறைத்தூதர்கள் அனைவரும், தூய்மையான பொருட்கள் அனைத்தையும் பயன்படுத்திக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டனர். மேலும் சமுதாய சீரமைப்பு பணியில் முன்நின்று செயல்பட அறிவுறுத்தப்பட்டனர். மேலும் “மனித செயல்களின் விளைவுகள்” என்ற அல்லாஹ்வின் சட்டம் ஒவ்வொரு செயலையும் கண்காணித்து வருகிறது என்பதை அவர்களுக்கு அறிவித்து இருந்தோம்.


وَإِنَّ هَٰذِهِۦٓ أُمَّتُكُمْ أُمَّةًۭ وَٰحِدَةًۭ وَأَنَا۠ رَبُّكُمْ فَٱتَّقُونِ.

23:52. இறைத் தூதர்களின் போதனைகள் யாவும் ஒரே அடிப்படையைக் கொண்டதாகும் (பார்க்க 36:3). அவர்களை பின்பற்றி வந்த அனைத்து தரப்பு மக்களும் ஒரே சமூகத்தவராகவே இருந்திருக்க வேண்டும். காரணம் அனைவரையும் படைத்த இறைவன் ஒருவனே. அவனுடைய வழிகாட்டுதலுக்கு மட்டும் கட்டுப்பட்டு வாழவேண்டும் என்பதே இறைத் தூதர்கள் அனைவருடைய போதனைகளாக இருந்து வந்தன.


فَتَقَطَّعُوٓا۟ أَمْرَهُم بَيْنَهُمْ زُبُرًۭا ۖ كُلُّ حِزْبٍۭ بِمَا لَدَيْهِمْ فَرِحُونَ.

23:53. ஆனால் அத்தூதர்களை பின்பற்றி வந்தவர்கள், அவர்களுடைய மறைவுக்குப் பின் காலப் போக்கில் தங்களுடைய நடைமுறை சட்டத்தில் மாற்றங்களை கொண்டுவந்து, பல்வேறு பிரிவினர்களாக பிரிந்து விட்டனர். இப்படியாக ஒவ்வொரு பிரிவினரும் தம்மிடம் இருக்கும் வழிமுறைகளே தலைச் சிறந்தது என எண்ணி அவற்றையே முழு ஆர்வத்துடன் பின்பற்றலாயினர். (மேலும் பார்க்க 30:32)
சிந்தனையாளர்களே! இந்நிலை திருக்குர்ஆன் இறக்கி அருளப்படும் கால கட்டத்தில் நடந்த விஷயம் என்று எண்ணிக் கொள்ளாதீர்கள். இன்றைய கால கட்டத்திலும் முஸ்லிம்களிடையே ஏற்பட்டிருக்கும் பிரிவுகளை இவ்வாசகம் படம் பிடித்து காட்டுவதாக இருக்கிறது. தம்மை ஹனஃபீ, ஷாஃபீ, மாலிகி, ஹம்பலி, அஹ்லெ ஹதீஸ் போன்ற பிரிவுகளை ஏற்படுத்திக் கொண்டது அல்லாஹ்வுக்கு மாற்றமான செயலாகும். இது போன்ற எண்ணற்ற பிரிவுகள் ஏற்பட்டு அவற்றை பின்பற்றிவரும் ஒவ்வொரு பிரிவும், தம்மிடம் இருப்பதே தலைச்சிறந்த வழிமுறை என்று தவறாக எண்ணிக் கொண்டிருக்கிறது. இவையாவும் சில காலத்திற்கு நீடிக்கலாம். ஆனால் காலப்போக்கில் பெருமளவு பாதிப்புகளை ஏற்படுத்தி விடும். எனவே இறைவழிகாட்டுதலை எடுத்துரைப்பவரே! இப்போதும் இத்தகைய பிரிவை சேர்ந்தவர்கள், உண்மை என்னவென்று அறிந்து கொள்ள விருப்பமில்லாமல் உம்மை கண்மூடித்தனமாக எதிர்த்து வருகின்றனர். எனவே


فَذَرْهُمْ فِى غَمْرَتِهِمْ حَتَّىٰ حِينٍ.

23:54.அவர்களுடைய செயல்களின் விளைவுகள் ஏற்படும் வரையில் அவர்களை தம் அலட்சியப் போக்கில் ஆழ்ந்திருக்க விட்டுவிடுங்கள். (மேலும் பார்க்க 22:17)


أَيَحْسَبُونَ أَنَّمَا نُمِدُّهُم بِهِۦ مِن مَّالٍۢ وَبَنِينَ.

23:55. அல்லாஹ் அவர்களுக்கு அளித்துள்ள செல்வங்களும் சந்ததிகளும் இப்படியே வளர்ந்து, அவர்களை நிரந்தரமாகப் பாதுகாக்கும் என்ற எண்ணத்தில் இருக்கிறார்களா?


نُسَارِعُ لَهُمْ فِى ٱلْخَيْرَٰتِ ۚ بَل لَّا يَشْعُرُونَ.

23:56. இவ்வாறே அல்லாஹ்விடமிருந்து கிடைக்கும் நன்மைகள் தொடர்ந்து கிடைத்துக் கொண்டே இருக்கும் என்று எண்ணுகிறார்களா? உண்மை அதுவல்ல. இவற்றை அல்லாஹ் அளித்ததன் நோக்கத்தைப் பற்றி அவர்கள் அறிந்து கொள்ளவில்லை.


إِنَّ ٱلَّذِينَ هُم مِّنْ خَشْيَةِ رَبِّهِم مُّشْفِقُونَ.

23:57. மாறாக, இறைவழிகாட்டுதல்களுக்கு எதிராக செயல்படுவதால் ஏற்படும் தீய விளைவுகளுக்கு அஞ்சி செயல்படுபவர்களுக்கே உண்மையான சந்தோஷங்களும் அல்லாஹ்வின் உதவியும் தொடர்ந்து கிடைத்து வரும்.


وَٱلَّذِينَ هُم بِـَٔايَٰتِ رَبِّهِمْ يُؤْمِنُونَ.

23:58. இதற்காக அவர்கள் அல்லாஹ்வின் வழிகாட்டுதல்களை மனதார ஏற்று அவற்றின்படி செயல்படுவார்கள்.


وَٱلَّذِينَ هُم بِرَبِّهِمْ لَا يُشْرِكُونَ.

23:59. மேலும் அவர்கள் அல்லாஹ்வின் வழிகாட்டுதலுக்கு இணையாக, வேறு எந்த சித்தாந்தங்களையும் பின்பற்ற மாட்டார்கள்.


وَٱلَّذِينَ يُؤْتُونَ مَآ ءَاتَوا۟ وَّقُلُوبُهُمْ وَجِلَةٌ أَنَّهُمْ إِلَىٰ رَبِّهِمْ رَٰجِعُونَ.

23:60. ஏனெனில் தாம் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் அல்லாஹ்விடம் பதிலளிக்க வேண்டிவரும் என்பதை அஞ்சி, தமக்கு அல்லாஹ் அளித்துள்ள செல்வங்களை அவன் காட்டிய வழியில் சமுதாய மேம்பாட்டிற்காகவே பயன்படுத்துவார்கள்.


أُو۟لَٰٓئِكَ يُسَٰرِعُونَ فِى ٱلْخَيْرَٰتِ وَهُمْ لَهَا سَٰبِقُونَ.

23:61. இத்தகையவர்களுள் ஆக்கப்பூர்வமான நன்மையான செயல்களை செய்வதில் வேகமும் ஊக்கமும் இருக்கும். மேலும் இத்தகைய செயல்களில் ஒருவரையொருவர் முந்துபவர்களாக இருப்பார்கள்.


وَلَا نُكَلِّفُ نَفْسًا إِلَّا وُسْعَهَا ۖ وَلَدَيْنَا كِتَٰبٌۭ يَنطِقُ بِٱلْحَقِّ ۚ وَهُمْ لَا يُظْلَمُونَ.

23:62. இத்தகைய நற்செயல்களால் மனித ஆற்றல்கள் வேகமாக வளர பெரிதும் உதவுகின்றன என்பதை அவர்கள் அறிந்து கொள்வார்கள். தேவையில்லாமல் அல்லாஹ் தம்மை சிரமத்திற்கு ஆளாக்குகிறான் என்று ஒருபோதும் எண்ண மாட்டார்கள். இவை தான் உலகில் நிரந்தமாக நிலைநிறுத்தப்பட்ட சட்டங்களாகும். அல்லாஹ் ஒருபோதும் யாருக்கும் அநியாயம் செய்வதில்லை.


بَلْ قُلُوبُهُمْ فِى غَمْرَةٍۢ مِّنْ هَٰذَا وَلَهُمْ أَعْمَٰلٌۭ مِّن دُونِ ذَٰلِكَ هُمْ لَهَا عَٰمِلُونَ.

23:63. ஆனால் மக்களுள் பலர் இந்த உண்மைகளை எல்லாம் தெரியாமல் அறியாமையில் வாழ்கிறார்கள். மேலும் அவர்கள் சுயநலத்தில் மூழ்கி கிடக்கிறார்கள். அதனால் அவர்கள் செய்து வருபவை யாவும் நேர்வழியை விட்டு விலகியே இருக்கின்றன.


حَتَّىٰٓ إِذَآ أَخَذْنَا مُتْرَفِيهِم بِٱلْعَذَابِ إِذَا هُمْ يَجْـَٔرُونَ.

23:64. இத்தகைய தற்காலிக சுகபோகங்களை அனுபவித்துக் கொண்டிருப்பவர்கள் வேதனைகளில் சிக்கிக்கொள்ளும் வரையில், இவ்வாறே செயல்பட்டு வருவார்கள். அந்த வேதனைகள் அவர்களைத் தீண்டும்போது, அவற்றை தாங்கிக்கொள்ள முடியாமல் புலம்பிக்கொண்டு இருப்பார்கள். ஆனால் அந்த நேரத்தில் அவர்களுக்கு உதவுவோர் எவரும் இருக்க மாட்டார்கள்.


لَا تَجْـَٔرُوا۟ ٱلْيَوْمَ ۖ إِنَّكُم مِّنَّا لَا تُنصَرُونَ.

23:65. இப்படி வேதனைகளிலிருந்து விடுபட அபயக்குரலை எழுப்புவது வீண் என்ற நிலைதான் மிஞ்சும். ஏனெனில் இறைவனின் இந்த வேதனைகளிலிருந்து விடுவிக்க உதவிசெய்வோர் எவரும் இருக்க மாட்டார்கள்.


قَدْ كَانَتْ ءَايَٰتِى تُتْلَىٰ عَلَيْكُمْ فَكُنتُمْ عَلَىٰٓ أَعْقَٰبِكُمْ تَنكِصُونَ.

23:66. காரணம், உங்களுக்கு இறைவனின் வழிகாட்டுதல்களை எடுத்துரைத்த போது, நீங்கள் அவற்றை செவி சாய்க்கவே முன்வரவில்லை. அப்படியும் கேட்டாலும் அவற்றை பொருட்படுத்தாமல் அலட்சியம் செய்தீர்கள்.


مُسْتَكْبِرِينَ بِهِۦ سَٰمِرًۭا تَهْجُرُونَ.

23:67. அதுமட்டுமின்றி தம் ஆலோசனை சபையில் வீணான ஆணவப் பேச்சும் கர்வமும் தான் மிகைத்திருந்தன. மேலும் அங்கு நீங்கள் பேசி வந்தவையும் ஒழுக்கமற்றதாகவே இருந்தன. இதனால் அவர்கள் வேதனையை அனுபவிக்க வேண்டியதாயிற்று.


أَفَلَمْ يَدَّبَّرُوا۟ ٱلْقَوْلَ أَمْ جَآءَهُم مَّا لَمْ يَأْتِ ءَابَآءَهُمُ ٱلْأَوَّلِينَ.

23:68. இந்த இறைவேதமான குர்ஆன் என்ன சொல்கிறது என்பதை அவர்கள் சிந்தித்துப் பார்ப்பதில்லையா? அவர்களுடைய முன்னோர்களுக்கும் வந்த வழிகாட்டுதல் தானே இது. புதிதாக ஏதாவது இதில் சொல்லப்படுகிறதா?


أَمْ لَمْ يَعْرِفُوا۟ رَسُولَهُمْ فَهُمْ لَهُۥ مُنكِرُونَ.

23:69. அல்லது அவர்களிடம் இருக்கும் இறைத் தூதருடைய கடந்த கால வாழ்க்கை பற்றி அவர்கள் அறிவதில்லையா? அவர் இந்த குர்ஆன் இறக்கி அருளப்படுவதற்கு முன் எப்போதாவது அவர்களிடம் பொய்யுரைத்து இருக்கிறாரா? (பார்க்க 10:16) இப்போது அவர் இறைவழிகாட்டுதலை எடுத்துரைக்கிறாரே, அதைப் பற்றி அவர்கள் சிந்திக்காமல் அவர் சொல்வதை ஏன் ஏற்க மறுக்கிறார்கள்?


أَمْ يَقُولُونَ بِهِۦ جِنَّةٌۢ ۚ بَلْ جَآءَهُم بِٱلْحَقِّ وَأَكْثَرُهُمْ لِلْحَقِّ كَٰرِهُونَ.

23:70. அல்லது அவருக்கு பைத்தியம் பிடித்திருக்கிறது என்று எண்ணிக் கொண்டார்களா? இல்லை. இந்த இறைத்தூதர் அவர்களிடம் இறை சட்டங்களின் உண்மை நிலையை தானே எடுத்துரைக்கிறார்? சுயநலக்காரர்களின் வழிமுறைக்கு இவை எதிராக செல்வதால் இதை வெறுக்கிறார்கள்.


وَلَوِ ٱتَّبَعَ ٱلْحَقُّ أَهْوَآءَهُمْ لَفَسَدَتِ ٱلسَّمَٰوَٰتُ وَٱلْأَرْضُ وَمَن فِيهِنَّ ۚ بَلْ أَتَيْنَٰهُم بِذِكْرِهِمْ فَهُمْ عَن ذِكْرِهِم مُّعْرِضُونَ.

23:71. இறைவனின் இயற்கைப் படைப்புகளும் அவர்களுடைய விருப்பப்படி செயல்பட்டிருந்தால், வானங்களும் பூமியும் அவற்றில் உள்ளவை யாவும் சீர்கெட்டு போய் இருக்கும். மேலும் எல்லா விதமான குழப்பங்களும் ஏற்பட்டு அழிந்தே போயிருக்கும். மக்கள் அனைவரும் சிறந்த முறையில வாழவேண்டும் என்பதற்காக தான் இந்த அறிவுரைகள் தரப்படுகின்றன. ஆனால் அவர்களோ அப்படிப்பட்ட உயர் பண்புகளும் ஒழுக்க மாண்புகளுடன் கூடிய வாழ்வை விரும்புவதில்லை போலும்.


أَمْ تَسْـَٔلُهُمْ خَرْجًۭا فَخَرَاجُ رَبِّكَ خَيْرٌۭ ۖ وَهُوَ خَيْرُ ٱلرَّٰزِقِينَ.

23:72. இறைவழிகாட்டுதலை எடுத்துரைப்பவரே! நீர் அவர்களிடம் பிரதிப்பலன் எதையாவது எதிர்ப்பார்த்தீரா? இல்லையே. உம் இறைவனிடமிருந்து கிடைக்கின்ற பலன்களே மகத்தானது அல்லவா? மேலும் அனைவருக்கும் வாழ்வாதாரங்களை அளிப்பதில் இறைவனைவிட மேலானவன் யாராவது இருக்க முடியுமா?


وَإِنَّكَ لَتَدْعُوهُمْ إِلَىٰ صِرَٰطٍۢ مُّسْتَقِيمٍۢ.

23:73. நீர் அவர்களின் நிம்மதியான பாதுகாப்பான வாழ்வின் பக்கம் அழைத்துச் செல்லும் நேரான பாதையை அல்லவா காட்டுகின்றீர்?


وَإِنَّ ٱلَّذِينَ لَا يُؤْمِنُونَ بِٱلْءَاخِرَةِ عَنِ ٱلصِّرَٰطِ لَنَٰكِبُونَ.

23:74. உண்மை விஷயம் என்னவென்றால், எவர்கள் “மனித செயல்களின் இறுதி விளைவுகள்” என்கின்ற இறைச் சட்டத்தை ஏற்க மறுக்கிறார்களோ, அவர்கள் தாம் நேர்வழியை விட்டு விலகிச் செல்கிறார்கள்.
எனவே அவர்கள் வாழ்வில் ஏற்படும் சிறுசிறு வேதனைகளின் காரணத்தைப் பற்றி ஆராய்வதில்லை. எல்லாம் விதிப்படித் தான் நடக்கிறது என்று எண்ணிக் கொண்டு கண் மூடித்தனமாக வாழ்ந்து வருகிறார்கள்.


۞ وَلَوْ رَحِمْنَٰهُمْ وَكَشَفْنَا مَا بِهِم مِّن ضُرٍّۢ لَّلَجُّوا۟ فِى طُغْيَٰنِهِمْ يَعْمَهُونَ.

23:75. அவர்கள் மீது இரக்கம் கொண்டு, அல்லாஹ் நிர்ணயித்த வழிமுறைப்படி அவர்களுடைய துன்பங்களை நீக்கினாலும், அறியாமையில் வரம்பு மீறி வழிகேட்டிலேயே மூழ்கி கிடப்பார்கள்.


وَلَقَدْ أَخَذْنَٰهُم بِٱلْعَذَابِ فَمَا ٱسْتَكَانُوا۟ لِرَبِّهِمْ وَمَا يَتَضَرَّعُونَ.

23:76. அவர்களுக்கு வேதனைகள் ஏற்பட்டாலும், அல்லாஹ்வின் எந்த சட்டத்திற்கு மாற்றமாக செயல்பட்டு இந்த துயரங்கள் தமக்கு ஏற்பட்டுள்ளது என்பதை அறிந்து, அதற்கு தக்கவாறு தம்மை திருத்திக் கொள்ளவும் மாட்டார்கள். அந்த துயரங்களிலிருந்து விடுபட என்ன வழிமுறை என்பதைக் கேட்டு தெரிந்து கொள்ளும் ஆர்வமும் இருப்பதில்லை.


حَتَّىٰٓ إِذَا فَتَحْنَا عَلَيْهِم بَابًۭا ذَا عَذَابٍۢ شَدِيدٍ إِذَا هُمْ فِيهِ مُبْلِسُونَ.

23:77. எனவே இறைவனின் நியதிப்படி கடுமையான வேதனைகள் வந்தடையும் வரையில் இப்படியே கவலையற்று இருந்து விடுவார்கள். அந்த வேதனைகள் வந்தபின் அவர்கள் தம் தவறை உணர்ந்து திருந்துகிறார்களா என்றால் அதுவுமில்லை. மாறாக அவர்கள் நம்பிக்கை இழந்து ஒன்றுக்கும் இயலாதவர்களாக ஆகிவிடுவார்கள்.
இது தான் இறைவழிகாட்டுதலை ஏற்க மறுத்து அல்லது இறைவழிகாட்டுதல் இன்றி வாழும் சமுதாய மக்களுள் நடக்கும் விஷயங்களாகும். இந்த வேதனைகள் யாவும் அவர்களுடைய தவறான செயல்களின் விளைவுகளாக வந்தடைவதாகும்.


وَهُوَ ٱلَّذِىٓ أَنشَأَ لَكُمُ ٱلسَّمْعَ وَٱلْأَبْصَٰرَ وَٱلْأَفْـِٔدَةَ ۚ قَلِيلًۭا مَّا تَشْكُرُونَ.

23:78. அல்லாஹ்வின் புறத்திலிந்து உங்களுக்கு செவிப்புலன்களும் பார்வைப் புலன்களும் அளிக்கப்பட்டுள்ளன. அவற்றைப் பயன்படுத்தி சிந்தித்து செயலாற்ற பகுத்தறிவும் அளிக்கப்பட்டுள்ளது. இறைவனின் இந்த அருட்கொடைகளை நேரான பாதையில் பயன்படுத்தி சிறப்பாக வாழ்பவர்கள் மிகச் சிலரே இருக்கிறார்கள்.
அதாவது இறைவனிடமிருந்து அளிக்கப்பட்டுள்ள இந்த ஆற்றல்களை பயன்படுத்தி சிறப்பாக வாழ்வதை விட்டுவிட்டு, கண்மூடித்தனமாக மூட நம்பிக்கையில் வாழ்வதால் உங்களுக்குப் பல வேதனைகள் ஏற்பட்டு வருகின்றன. நீங்கள் சிந்தித்து செயலாற்றுபவர்களாக இருந்தால்


وَهُوَ ٱلَّذِى ذَرَأَكُمْ فِى ٱلْأَرْضِ وَإِلَيْهِ تُحْشَرُونَ.

23:79. மனித படைப்பு இவ்வுலகின் எல்லாப் பகுதியிலும் பல்கி பெருகி வந்துள்ளதையும், அனைவரும் வாழ்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருப்பதையும் சிந்தித்துப் பார்த்திருப்பார்கள். உலகிலுள்ள எந்த சமுதாயமும் அல்லாஹ் நிர்ணயித்துள்ள “மனித செயல்களுக்கு ஏற்ற விளைவுகள்” என்ற சட்ட விதிமுறைகளுக்கு வெளியே செல்லவே முடியாது என்பதையும் அறிந்து கொண்டிருப்பார்கள்.


وَهُوَ ٱلَّذِى يُحْىِۦ وَيُمِيتُ وَلَهُ ٱخْتِلَٰفُ ٱلَّيْلِ وَٱلنَّهَارِ ۚ أَفَلَا تَعْقِلُونَ.

23:80. அல்லாஹ்வின் அதே சட்ட விதிமுறைகளின்படி சமுதாயங்களின் வளர்ச்சியும் வீழ்ச்சியும் ஏற்பட்டு வருகிறது. எவ்வாறு இரவு பகல் என்று மாறிமாறி வருகின்றதோ அவ்வாறே சமுதாயத்தின் வாழ்வும் மரணமும் ஏற்பட்டு வருகிறது. நீங்கள் இறைவழிகாட்டுதலின் படி சிந்தித்து செயலாற்றும் சமுதாயமாக இருந்தால் உங்கள் வாழ்வில் இருள் சூழும் நிலை ஏற்படாது.
ஆனால் மக்களோ கண் மூடித்தனமாகவே வாழ்ந்து வருவதால், மனித வரலாற்றின் உண்மை நிலையைப் பற்றி சிந்தித்துப் பார்ப்பதில்லை. எனவே


بَلْ قَالُوا۟ مِثْلَ مَا قَالَ ٱلْأَوَّلُونَ.

23:81. அவர்களுடைய முன்னோர்கள் கூறி வந்தது போலவே இவர்களும் மனித வாழ்வைப் பற்றி சொல்லி வருகிறார்கள். அதாவது


قَالُوٓا۟ أَءِذَا مِتْنَا وَكُنَّا تُرَابًۭا وَعِظَٰمًا أَءِنَّا لَمَبْعُوثُونَ.

23:82.“நாங்கள் மரணமடைந்து மண்ணோடு மண்ணாகி வெறும் எலும்புக் கூடுகளாக ஆகிவிட்டாலும், நாங்கள் மீண்டும் எழுப்பப்படுவோமா? என்று அவர்கள் கேட்டு வந்தார்கள். அவர்களை போலவே இன்றைக்கு இவர்களும் கேட்கிறார்கள்.


لَقَدْ وُعِدْنَا نَحْنُ وَءَابَآؤُنَا هَٰذَا مِن قَبْلُ إِنْ هَٰذَآ إِلَّآ أَسَٰطِيرُ ٱلْأَوَّلِينَ.

23:83. எனவே மரணத்திற்குப் பின் மீண்டும் எழுப்பப்படுவார்கள் என்று வாக்களிக்கப்பட்டு உள்ளதாக கூறுவது, முன்னோர்களின் கட்டுக் கதைகளே அன்றி வேறில்லை என்றும் இவர்கள் கூறுகிறார்கள்.
மரணத்திற்குப் பின் தொடர்கின்ற வாழ்வை பற்றித் தற்சமயம் உள்ள அறிவை வைத்துக் கொண்டு விளக்க முடியாது. அது மனித வாழ்வைப் பற்றி அல்லாஹ் எடுத்துள்ள முடிவாகும். அதைப் பற்றி இந்த வேதத்தில் குறிப்பிடப்படுகிறது. அல்லாஹ்வின் சொல் ஒருபோதும் பொய்யாகாது. எனவே மரணத்திற்குப் பின் தொடர்கின்ற வாழ்வு என்பது ஈமான் கொள்ளும் விஷயத்தின் முக்கிய அம்சமாகும்.
மேலும் மனிதன் உருவாக்கும் சமூக அமைப்பு தனி நபருடைய மரணத்தோடு முடிந்து விடுவதில்லை. அது தொடரக் கூடிய ஒன்றாக இருக்கிறது. அவன் எப்படிப்பட்ட சமுதாயத்தை உருவாக்கி செல்கின்றானோ, அதையே அடுத்த தலைமுறையினரும் பின்பற்றுவார்கள். இந்த உண்மையை யாராவது மறுக்க முடியுமா? இந்த விதிமுறைகளை ஏற்படுத்தியதும் அல்லாஹ்தான்.


قُل لِّمَنِ ٱلْأَرْضُ وَمَن فِيهَآ إِن كُنتُمْ تَعْلَمُونَ.

23:84. இந்தப் பூமி மற்றும் அதிலுள்ள படைப்புகளைப் பற்றி அவர்களிடம் விசாரியுங்கள். அவையாவும் யாருக்குச் சொந்தம் என்று கேளுங்கள். இதைப் பற்றிய உண்மையை அறிந்திருந்தால் இதற்குப் பதிலளிக்கும்படி அவர்களிடம் கேளுங்கள்.


سَيَقُولُونَ لِلَّهِ ۚ قُلْ أَفَلَا تَذَكَّرُونَ.

23:85. அதற்கு அவர்கள், அல்லாஹ்வுக்கே சொந்தம் என்று பதில் அளிப்பார்கள். அவ்வாறாயின் அல்லாஹ்வின் அறிவுரைகளை ஏற்று நடக்க மாட்டீர்களா? என்று அவர்களிடம் கேளுங்கள்.


قُلْ مَن رَّبُّ ٱلسَّمَٰوَٰتِ ٱلسَّبْعِ وَرَبُّ ٱلْعَرْشِ ٱلْعَظِيمِ.

23:86. அதை அடுத்து, வானங்கள் பலவற்றைப் படைத்து அவற்றை பரிபாலித்து கட்டிக் காப்பவன் யார் என்று அவர்களிடம் கேளுங்கள். (மேலும் பார்க்க 16:49, 42:29)


سَيَقُولُونَ لِلَّهِ ۚ قُلْ أَفَلَا تَتَّقُونَ.

23:87. அவை அனைத்தும் அல்லாஹ்வின் கட்டுப்பட்டிற்குள் செயல்படுபவையே என்பதை ஏற்றுக் கொள்வார்கள். “அவ்வாறாயின், மனிதனும் அல்லாஹ்வின் வழிகாட்டுதலுக்கு மட்டும் தானே கட்டுப்பட்டு வாழ்ந்திருக்க வேண்டும்? அந்த வழிகாட்டுதலுக்கு மாற்றமாகச் செயல்படுவதால் ஏற்படும் விபரீத விளைவுகளுக்கு அஞ்சி நடக்கமாட்டீர்களா?” என்று அவர்களிடம் கேளுங்கள்.


قُلْ مَنۢ بِيَدِهِۦ مَلَكُوتُ كُلِّ شَىْءٍۢ وَهُوَ يُجِيرُ وَلَا يُجَارُ عَلَيْهِ إِن كُنتُمْ تَعْلَمُونَ.

23:88. மேலும் அவர்களிடம்,“உலகிலுள்ள ஒவ்வொரு படைப்பும் யாருடைய அதிகாரத்திற்கு உட்பட்டு செயல்படுகின்றன? அவற்றை எல்லாம் பாதுகாப்பவன் யார்? யாருடைய அதிகாரத்திற்கு உட்பட்டு செயல்பட்டால் பாதுகாக்கப்பாக வாழ முடியுமோ, அப்படிப்பட்ட வல்லமை உடையவன் யார்? இந்த உண்மையை நீங்கள் அறிந்தால் எங்களுக்கு தெரிவியுங்கள்” என்று அவர்களிடம் கேளுங்கள்.


سَيَقُولُونَ لِلَّهِ ۚ قُلْ فَأَنَّىٰ تُسْحَرُونَ.

23:89. அதற்கு அவர்கள், அத்தகைய அதிகாரங்கள் எல்லாம் அல்லாஹ்வுடையதே என்பதை ஒப்புக் கொள்வார்கள். “உண்மை அதுவாயின், நீங்கள் ஏன் அல்லாஹ்வின் வழிகாட்டுதலுக்கு கட்டுப்பட்டு வருவதில் தயக்கம் காட்டுகிறீர்கள்?” என்று அவர்களிடம் கேளுங்கள்.


بَلْ أَتَيْنَٰهُم بِٱلْحَقِّ وَإِنَّهُمْ لَكَٰذِبُونَ.

23:90. மனிதனின் சிறப்பான வாழ்விற்கு நேரானப் பதையை காட்டும் வழிகாட்டுதல்கள் வந்த பின்பும், அவற்றை ஏற்காததற்கு காரணம் அவர்களுடைய சுயநலப் போக்கும் முன்னோர்களின் வழிபாடுகளும்தான். இதனால் அவர்கள் இறைவழிகாட்டுதலில் உண்மை இல்லை எனக் கூறி நிராகிரிக்கிறார்கள்.


مَا ٱتَّخَذَ ٱللَّهُ مِن وَلَدٍۢ وَمَا كَانَ مَعَهُۥ مِنْ إِلَٰهٍ ۚ إِذًۭا لَّذَهَبَ كُلُّ إِلَٰهٍۭ بِمَا خَلَقَ وَلَعَلَا بَعْضُهُمْ عَلَىٰ بَعْضٍۢ ۚ سُبْحَٰنَ ٱللَّهِ عَمَّا يَصِفُونَ.

23:91. இந்த பிரபஞ்சத்தில் அல்லாஹ்வின் செயல்திட்டங்கள் நிறைவேற வேறு யாருடைய உதவி தேவைப்படுகிறது? அவனுடன் இணைந்து பணியாற்றுபவர் யார்? அவ்வாறு இந்த அகிலத்தை ஆளும் கடவுள்கள் பல இருந்திருந்தால், அவற்றில் ஒவ்வொன்றும், தான் படைத்தவற்றைத் தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொண்டிருக்கும். இதில் சிலர் சிலரைவிட மிகைத்திருப்பார்கள். (பார்க்க:21:22) அங்கு மோதல்கள் பல ஏற்பட்டு வரும். அப்படி எதுவும் நடைபெறாததே அல்லாஹ்வைத் தவிர வேறு யாருடைய அதிகாரமும் இந்த பிரபஞ்சத்தில் செயல்படுவதில்லை என்பதற்கு சான்றாகும். எனவே அவர்கள் அல்லாஹ்வைப் பற்றி கற்பனை செய்து வைத்திருப்பதை விட மிகமிக மேலானவன் அல்லவா?


عَٰلِمِ ٱلْغَيْبِ وَٱلشَّهَٰدَةِ فَتَعَٰلَىٰ عَمَّا يُشْرِكُونَ.

23:92. அதுமட்டுமின்றி உங்கள் முன் நடப்பவையும் உங்களுக்குப் பின்னாடி மறைவாக நடக்கும் விஷயங்களும் அல்லாஹ்வுக்கு நன்கு தெரியும். எனவே அல்லாஹ்வுக்கு இணையாக வேறு வழிமுறைகளைப் பின்பற்றி வருவதும் அல்லாஹ்வுக்குத் தெரியாமல் போகுமா? அவன் நிர்ணயித்த விதிமுறைகளின்படி விளைவுகள் ஏற்பட்டே தீருமே.


قُل رَّبِّ إِمَّا تُرِيَنِّى مَا يُوعَدُونَ.

23:93. “இறைவா! வாக்களிக்கப்பட்ட அந்த வேதனைகளை நான் காண நேர்ந்தால்”


رَبِّ فَلَا تَجْعَلْنِى فِى ٱلْقَوْمِ ٱلظَّٰلِمِينَ.

23:94. அப்போது என்னை அந்த அநியாயக்காரக் கூட்டத்தை விட்டு விலகியிருக்க செய்வாயாக” என்று தான் இறைவனிடம் பிரார்த்திப்பீர்.
ஏனெனில் அவர்கள் படும் வேதனைகளை தம்மால் பார்த்து சகித்துக்கொள்ள முடியாது. அந்த அளவுக்கு அந்த வேதனைகள் கடுமையானதாக இருக்கும்.


وَإِنَّا عَلَىٰٓ أَن نُّرِيَكَ مَا نَعِدُهُمْ لَقَٰدِرُونَ.

23:95. வாக்களிக்கப்பட்ட அந்த வேதனைகளை உம் வாழ் நாளிலேயே கொண்டு வரும் ஆற்றலுடையவன் தான் அல்லாஹ்.


ٱدْفَعْ بِٱلَّتِى هِىَ أَحْسَنُ ٱلسَّيِّئَةَ ۚ نَحْنُ أَعْلَمُ بِمَا يَصِفُونَ.

23:96. இறைவழிகாட்டுதலை எடுத்துரைப்பவரே! நீங்கள் நன்மையான செயல்களை செய்வதன் மூலம் தீமையை தடுத்து வருவீராக. அவர்கள் அல்லாஹ்வைப் பற்றி வர்ணிப்பதை நீங்கள் பெரிது படுத்தாதீர்கள்.
எடுத்துக்காட்டாக விபச்சாரத்தை ஒழிக்க விபச்சாரிகளை தண்டிப்பதற்குப் பதிலாக, அவர்களுக்கு மறுவாழ்வு கிடைக்க ஏற்பாடுகளை செய்வதோடு ஆபாசங்களை தடுத்து வந்தால், விபச்சாரத்தை கட்டுப்படுத்த முடியும். அது போல மற்ற சமூக சீர்கேடுகளையும் நன்மையான செயலைக் கொண்டு தடுக்கலாம்.


وَقُل رَّبِّ أَعُوذُ بِكَ مِنْ هَمَزَٰتِ ٱلشَّيَٰطِينِ.

23:97.“மேலும் சமூக விரோத சக்திகளிலிருந்து பாதுகாப்பாக இருக்க உன் வழிகாட்டுதல் மூலம் காவல் தேடுகிறேன்”என்று கூறுவீராக.


وَأَعُوذُ بِكَ رَبِّ أَن يَحْضُرُونِ.

23:98. இன்னும் அத்தகையவர்களின் தீமைகள் நெருங்காதவாறு இறைவன் காட்டிய பாதுகாப்பான வழியில் எப்போதும் செயல்படவே நாடுகிறேன் என்றும் கூறுவீராக.


حَتَّىٰٓ إِذَا جَآءَ أَحَدَهُمُ ٱلْمَوْتُ قَالَ رَبِّ ٱرْجِعُونِ.

23:99. அவர்கள் யாவரும் தமக்கு மரணம் ஏற்படும் வரையில் இப்படித்தான் தீய செயல்களில் ஈடுபட்டுக் கொண்டே இருப்பார்கள். அவர்கள் மரணித்த பின், தம்மை மீண்டும் உலகிற்குத் திருப்பி அனுப்பும்படி இறைவனிடம் இரைஞ்சுவார்கள்.


لَعَلِّىٓ أَعْمَلُ صَٰلِحًۭا فِيمَا تَرَكْتُ ۚ كَلَّآ ۚ إِنَّهَا كَلِمَةٌ هُوَ قَآئِلُهَا ۖ وَمِن وَرَآئِهِم بَرْزَخٌ إِلَىٰ يَوْمِ يُبْعَثُونَ.

23:100. அவ்வாறு மீண்டும் உலகிற்கு அனுப்பி வைத்தால், இறைவழிகாட்டுதலின்படி ஆக்கப்பூர்வமான நற்செயல்களை செய்வதாக கூறுவான். ஆனால் உண்மை அதுவல்ல. அது அவனுடைய வெறும் வார்த்தைகளே ஆகும். அவன் அப்படிப்பட்ட நற்செயலை செய்யவும் மாட்டான். அப்படி மீண்டும் திருப்பி அனுப்பும் இறைவனின் செயல்திட்டமும் கிடையாது. மேலும் அவர்கள் மீண்டும் எழுப்பப்படும் நாள் வரையில் அவர்கள் முன்னே திரை இருக்கும்.
இந்த வாசகத்தில் “ஆலமெ பர்ஜஃக்” பற்றி கூறப்படுகிறது. மனிதன் மரணித்த பின் அவனுடைய ‘ரூஹ்’ அல்லது “நஃப்ஸ்” எனும் ஆத்மா, பூமிக்கு அப்பால் உள்ள பர்ஜக் என்கின்ற இடத்திற்கு சென்றடைகிறது. எனவே அவன் மீண்டும் இவ்வுலகிற்கு உயிர் பெற்று வரவே முடியாது. மரணித்தவனின் ஆன்மா பூமியிலேயே சுற்றிக் கொண்டு இருக்கும் என்று சொல்வதிலும் உண்மை இல்லை.


فَإِذَا نُفِخَ فِى ٱلصُّورِ فَلَآ أَنسَابَ بَيْنَهُمْ يَوْمَئِذٍۢ وَلَا يَتَسَآءَلُونَ.

23:101. ஆக மனிதன் செய்து வந்த செயல்களைப் பற்றி கேள்வி கேட்கப்படும் கால கட்டத்தில் அபய ஒலி எழுப்பப்படும். அப்போது அவர்களிடையே பாசம் பந்தம் என்று எதுவும் இருக்காது. ஒருவரையொருவர் விசாரித்துக் கொள்ளவும் மாட்டார்கள்.
அதாவது ஒவ்வொருவரும் தான் செய்த செயல்களுக்கு பதிலளிக்க வேண்டியுள்ளதே என்ற கவலையில் தான் இருப்பார்கள். இதில் மற்றவர்களைப் பற்றி கவலைப்பட்டு என்னவாகப் போகிறது? அவர்களுடைய எதிர் காலம் அவர்கள் செய்து வந்த செயல்களின் படியே நிர்ணயமாகும்.


فَمَن ثَقُلَتْ مَوَٰزِينُهُۥ فَأُو۟لَٰٓئِكَ هُمُ ٱلْمُفْلِحُونَ.

23:102. யாருடைய நன்மைகளின் எடைத் தட்டு கனக்கிறதோ, அவர்கள் தாம் வெற்றியாளர்களாக இருப்பார்கள்.


وَمَنْ خَفَّتْ مَوَٰزِينُهُۥ فَأُو۟لَٰٓئِكَ ٱلَّذِينَ خَسِرُوٓا۟ أَنفُسَهُمْ فِى جَهَنَّمَ خَٰلِدُونَ.

23:103. மாறாக யாருடைய நன்மைகளின் எடை இலேசாக இருக்கிறதோ, அவர்கள் நஷ்டம் விளைவித்துக் கொண்டவர்கள் ஆவர். மேலும் அவர்கள் தாம் நரக வேதனைகளை நிரந்தரமாக அனுபவிப்பார்கள். (மேலும் பார்க்க 7:8-9&101:6-10).


تَلْفَحُ وُجُوهَهُمُ ٱلنَّارُ وَهُمْ فِيهَا كَٰلِحُونَ.

23:104. அந்த நரக வேதனைகள் அவர்களுடைய முகங்களை கரிக்கச் செய்துவிடும். அவர்களுடைய உதடுகள் மிகவும் மோசமான நிலையில் சுருண்டு போய் இருக்கும்.


أَلَمْ تَكُنْ ءَايَٰتِى تُتْلَىٰ عَلَيْكُمْ فَكُنتُم بِهَا تُكَذِّبُونَ.

23:105. அப்போது அவர்களிடம்,“இறை வழிகாட்டுதல்கள் உங்களிடம் வரவில்லையா? அப்போது அவற்றை நீங்கள் பொய்ப்பிக்கவே செய்தீர்களே!” என்று கூறுவதாக அவர்களின் நிலை இருக்கும்.


قَالُوا۟ رَبَّنَا غَلَبَتْ عَلَيْنَا شِقْوَتُنَا وَكُنَّا قَوْمًۭا ضَآلِّينَ.

23:106.“எங்கள் இறைவனே! இப்போது சொல்வதற்கு என்ன இருக்கிறது? எங்களுடைய அறிவிலித்தனம் எங்களை மிகைத்து விட்டது என்றே சொல்ல முடியும். எனவே நாங்கள் வழிதவறிய கூட்டத்தினராகவே இருந்தோம்” என்று புலம்புவார்கள்.


رَبَّنَآ أَخْرِجْنَا مِنْهَا فَإِنْ عُدْنَا فَإِنَّا ظَٰلِمُونَ.

23:107. மேலும் அவர்கள், “எங்கள் இறைவா! இப்போது உண்மை என்னவென்று எங்களுக்கு தெளிவாகிவிட்டது. எனவே நீ எங்களை இந்த நரகத்தை விட்டு வெளியேற்றுவாயாக! நாங்கள் ஒருபோதும் பாவச் செயலில் ஈடுபடமாட்டோம். அவ்வாறு செய்தால் நிச்சயமாக நாங்கள் அநியாயக்காரர்கள் தாம்” என்று கூறுவார்கள்.


قَالَ ٱخْسَـُٔوا۟ فِيهَا وَلَا تُكَلِّمُونِ.

23:108. உங்களை மீண்டும் உலகிற்கு அனுப்புவது என்ற பேச்சிற்கே இடமிருக்காது. கடந்த கால வாழ்வில் செய்த தீவினைக்குப் பதிலாக இந்த நரக வேதனைகளை தொடர்ந்து அனுபவிக்க வேண்டியதாக இருக்கும்.


إِنَّهُۥ كَانَ فَرِيقٌۭ مِّنْ عِبَادِى يَقُولُونَ رَبَّنَآ ءَامَنَّا فَٱغْفِرْ لَنَا وَٱرْحَمْنَا وَأَنتَ خَيْرُ ٱلرَّٰحِمِينَ.

23:109. உங்களில் ஒரு பிரிவினர் இறைவழிகாட்டுதலை மனதார ஏற்று செயல்பட்டு வந்தார்கள். அவர்கள் இறைவனின் வழிகாட்டுதலை ஏற்று நடப்பதாக உறுதி பூண்டிருந்தார்கள். அவர்கள் தீயவர்களின் துஷ்ட செயல்களின் தாக்கங்களிலிருந்து பாதுகாத்துக் கொள்ள இறைவனின் வழிமுறைகளை தேடிக் கொண்டார்கள். இறைவனை விட கிருபை செய்வதில் வேறு யாரும் இல்லை என்று உறுதியோடு நம்பினார்கள்.


فَٱتَّخَذْتُمُوهُمْ سِخْرِيًّا حَتَّىٰٓ أَنسَوْكُمْ ذِكْرِى وَكُنتُم مِّنْهُمْ تَضْحَكُونَ.

23:110. ஆனால் நீங்களோ, அவர்களை பரிகாசம் செய்வதற்கு வாய்ப்பாகவே ஆக்கிக் கொண்டீர்கள். அதில் எந்த அளவுக்கு மூழ்கி விட்டீர்கள் என்றால் உங்களுக்கு என்னுடைய நினைவே வரவில்லை. அவ்வாறு செய்வதால் ஏற்படும் விளைவுகளைப் பற்றியும் சிந்திக்கவே இல்லை. அவர்களைப் பார்த்து நீங்கள் ஏளனமாக நகைத்துக் கொண்டுதான் இருந்தீர்கள்.


إِنِّى جَزَيْتُهُمُ ٱلْيَوْمَ بِمَا صَبَرُوٓا۟ أَنَّهُمْ هُمُ ٱلْفَآئِزُونَ.

23:111. இவ்வாறிருந்தும் அவர்கள் இறைவனின் செய்திட்டத்தில் நிலைத்திருந்து தொடர்ந்து உழைத்து வந்தார்கள். அதற்குரிய பலன்தான் அவர்களுக்கு இன்று கிடைக்கிறது. அத்தகையவர்களே வெற்றியாளர்கள் என்பதில் என்ன சந்தேகம் இருக்கிறது?


قَٰلَ كَمْ لَبِثْتُمْ فِى ٱلْأَرْضِ عَدَدَ سِنِينَ.

23:112.“உலகில் நீங்கள் எத்தனை காலம் வாழ்ந்தீர்கள் என்பதை நினைவுப்படுத்திக் கூற முடியுமா?” என்று அவர்களிடம் கேட்கப்படும்.


قَالُوا۟ لَبِثْنَا يَوْمًا أَوْ بَعْضَ يَوْمٍۢ فَسْـَٔلِ ٱلْعَآدِّينَ.

23:113. அவர்களுடைய சிந்தனா சக்தி எந்த அளவுக்கு மங்கிப் போய் இருக்கும் என்றால், அவர்கள் எத்தனைக் காலம் உயிர் வாழ்ந்தார்கள் என்ற கணக்கை கூட கணித்து கூற இயலாது. எனவே அவர்கள் ஒரு நாள் அல்லது சிறிது காலம்தான் என்ற கணக்கில்தான் பேசுவார்கள். (பார்க்க 2:259) அதையும் மீறி தீவிரமாக விசாரித்தால் அதைப் பற்றிக் கணக்கு வைத்திருப்பவர்களிடம் கேட்டுக் கொள்ளுமாறு பதில் அளிப்பார்கள்.


قَٰلَ إِن لَّبِثْتُمْ إِلَّا قَلِيلًۭا ۖ لَّوْ أَنَّكُمْ كُنتُمْ تَعْلَمُونَ.

23:114.“ஆக நீங்கள் உலகில் உயிர் வாழ்ந்த காலம் மிகமிக சொற்பமே ஆகும் என்பதை அறிந்து கொள்ளுங்கள்” என்று கூறப்படும்.
அதாவது மரணத்திற்குப் பின் தொடர்கின்ற வாழ்க்கை நிரந்தரமாக யுகங்கள் என்ற கணக்கில் இருக்கும். அதை மனிதனின் இவ்வுலக வாழ்வோடு ஒப்பிட்டுப் பார்க்கும் போது, இவ்வுலக வாழ்வு நொடிப் பொழுதாக இருக்கும். இறைவழிகாட்டுதலை எடுத்துரைப்பவரே! நடக்கவிருக்கும் இந்த உண்மைகளை எடுத்துரைத்த பின் இவற்றை ஏற்க மறுப்பவர்களிடம்,


أَفَحَسِبْتُمْ أَنَّمَا خَلَقْنَٰكُمْ عَبَثًۭا وَأَنَّكُمْ إِلَيْنَا لَا تُرْجَعُونَ.

23:115.“உங்களை இறைவன் படைத்திருப்பதெல்லாம் வீண் விளையாட்டிற்காக என்று நினைத்துக் கொண்டீர்களா? சிறிது காலம் வாழ்ந்து விட்டு அதன் பின் இறந்து விட்டால் உங்கள் வாழ்க்கை முடிந்து விடுகிறது என்று எண்ணிக் கொண்டீர்களா? இல்லை. நீங்கள் செய்துவரும் ஒவ்வொரு செயலும் அல்லாஹ் நிர்ணயித்த இலக்கை நோக்கியே செல்கிறது. எனவே நீங்கள் செய்தமைக்கு பதிலளிக்க வேண்டிய கால கட்டம் வந்தே தீரும்.


فَتَعَٰلَى ٱللَّهُ ٱلْمَلِكُ ٱلْحَقُّ ۖ لَآ إِلَٰهَ إِلَّا هُوَ رَبُّ ٱلْعَرْشِ ٱلْكَرِيمِ.

23:116. அகிலங்கள் அனைத்தையும் படைத்து, கட்டுக கோப்பாக செயல் படுத்தி வரும் அளவில்லா வல்லமை உடைய அல்லாஹ்வின் வழிகாட்டுதல்கள் மனிதனின் சிறப்பான வாழ்விற்கு மிகச் சரியான வழியினைக் காட்டுகின்றன. கண்ணியம் மிக்க இறைவனாகிய அல்லாஹ்வின் கட்டுப்பாட்டில் தான் அனைத்துமே செயல்பட்டு வருகின்றன. எனவே மனிதனும் அல்லாஹ்வின் அறிவுரைகளுக்கு மட்டும் கட்டுப்பட்டு வாழ்ந்தால் அவனுக்கும் கண்ணியம் மிக்க வாழ்வு கிடைக்கும்.


وَمَن يَدْعُ مَعَ ٱللَّهِ إِلَٰهًا ءَاخَرَ لَا بُرْهَٰنَ لَهُۥ بِهِۦ فَإِنَّمَا حِسَابُهُۥ عِندَ رَبِّهِۦٓ ۚ إِنَّهُۥ لَا يُفْلِحُ ٱلْكَٰفِرُونَ.

23:117. எனவே அல்லாஹ்வின் வழிகாட்டுதலை விட்டுவிட்டு எவ்வித ஆதாரமும் இல்லாத பிற தெய்வ வழிபாட்டில் ஈடுபடுகின்றனர். இத்தகையவர்களின் கணக்கு வழக்கு அல்லாஹ்விடமே உள்ளது. எனவே இத்தகையவர்கள் நிலையாக சந்தோஷமான பாதுகாப்பான வாழ்வு பெறும் விஷயத்தில் ஒருபோதும் வெற்றி பெற மாட்டார்க்ள.


وَقُل رَّبِّ ٱغْفِرْ وَٱرْحَمْ وَأَنتَ خَيْرُ ٱلرَّٰحِمِينَ.

23:118. அவர்கள் இந்த உண்மையை ஏற்றுக் கொண்டாலும் ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் உன்னுடைய எண்ணங்களும் பிரார்த்தனைகளும் இவ்வாறு இருக்கவேண்டும். “என் இறைவா! உன் பரிபாலன அமைப்பின் மூலமாக எங்களுக்கு பாதுகாப்பான வாழ்விற்கு வழி கிடைத்திட செய்வாயாக. பாதுகாப்பு அளிப்பதிலும் கருணை காட்டுவதிலும் உன்னைவிட சிறந்தவர் இந்த அகிலத்தில் வேறு எவரும் இல்லை” என்பதாக இருக்க வேண்டும்.