بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ

22:0.அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் அறிவுரைப்படியே அனைத்துக் காரியங்களையும் செய்ய நாடுகிறேன். (பார்க்க 6:162)


يَٰٓأَيُّهَا ٱلنَّاسُ ٱتَّقُوا۟ رَبَّكُمْ ۚ إِنَّ زَلْزَلَةَ ٱلسَّاعَةِ شَىْءٌ عَظِيمٌۭ.

22:1. ஓ மனிதர்களே! உங்கள் அனைவரையும் படைத்து பரிபாலிக்கின்ற இறைவனின் வழிகாட்டுதலை பேணி நடந்து கொள்ளுங்கள். அதன்படி சமுதாய அமைப்பை உருவாக்கி, அனைத்து தரப்பு மக்களையும் ஒருங்கிணைத்து சமமாக நடத்தி வாருங்கள். அவ்வாறு செய்யவில்லை என்றால் சமுதாய சமன்பாடு சீர்குலைந்து, கலவரங்கள் வெடிக்கும். அப்போது நீங்கள் கட்டிக் காத்து வந்த சமூக அமைப்பின் அஸ்திவாரம் யாவும் ஆட்டம் கண்டுவிடும்.


يَوْمَ تَرَوْنَهَا تَذْهَلُ كُلُّ مُرْضِعَةٍ عَمَّآ أَرْضَعَتْ وَتَضَعُ كُلُّ ذَاتِ حَمْلٍ حَمْلَهَا وَتَرَى ٱلنَّاسَ سُكَٰرَىٰ وَمَا هُم بِسُكَٰرَىٰ وَلَٰكِنَّ عَذَابَ ٱللَّهِ شَدِيدٌۭ.

22:2. அத்தகைய கலவரங்களின் பயங்கர நிலை எவ்வாறு இருக்கும் என்றால், பாலூட்டிக் கொண்டிருக்கும் தாய்மார்களும் தம் குழந்தைகளுக்கு பாலூட்டுவதையும் மறந்து விடுவார்கள். இதன் பயத்தால் கர்ப்பிணி பெண்களுக்கு கருச்சிதைவும் ஏற்பட்டுவிடும். தான் செய்வது என்னவென்று அறியாமல் போதையில் தடுமாடுபவனைப் போல் மக்கள் தத்தளிப்பார்கள். இறைவனின் நியதிப்படி ஏற்படும் “மனித செயல்களுக்கு ஏற்ப இறுதி விளைவுகள்” இவ்வாறே கடுமையாக இருக்கும்.
எனவே சுய நலத்துடன் செயல்பட்டு சமூக ஒருமைப்பாட்டை சீர்குலைத்து விடாதீர்கள். இப்படியாக இறைவனின் செயல்திட்டங்களை பற்றிய ஒவ்வொரு விஷயத்தையும் இந்த வேதத்தில் தெளிவாக எடுத்துரைக்கப்படுகிறது.


وَمِنَ ٱلنَّاسِ مَن يُجَٰدِلُ فِى ٱللَّهِ بِغَيْرِ عِلْمٍۢ وَيَتَّبِعُ كُلَّ شَيْطَٰنٍۢ مَّرِيدٍۢ.

22:3. ஆனால் மக்களுள் பலருக்கு இந்த உண்மைகள் எதுவும் தெரியாது. இத்தகையவர்கள், அல்லாஹ் ஏற்படுத்தியுள்ள சட்ட விதிமுறைகளைக் குறித்து தர்க்கம் செய்கிறார்கள். இது எதனால் என்றால், அவர்கள் தம் மன இச்சைப்படி வாழவே விரும்புகிறார்கள். எனவே மனிதனின் சிறப்பான வாழ்வை பற்றி அவர்களுடைய அறிவுக்கு எட்டாமலேயே போய் விடுகிறது.


كُتِبَ عَلَيْهِ أَنَّهُۥ مَن تَوَلَّاهُ فَأَنَّهُۥ يُضِلُّهُۥ وَيَهْدِيهِ إِلَىٰ عَذَابِ ٱلسَّعِيرِ.

22:4. இறைவழிகாட்டுதலை விட்டுவிட்டு, ஷைத்தான் எனும் மனோ இச்சையை பின்பற்றி நடப்பவர்கள் யாவரும் தவறான பாதையிலேயே செல்ல நேரிடும். அதன் விளைவாக சமுதாய சீர்கேடுகள் ஏற்பட்டு நரக வேதனைகளை அனுபவிக்க வேண்டிவரும். இந்த சட்ட விதிமுறைகளை நாம் ஏற்கனவே ஏற்படுத்தி விட்டோம்.
ஆனால் அவர்களோ மனித வாழ்க்கை தற்காலிக வாழ்வுடன் முடிந்து விடுகிறது என்ற தவறான எண்ணங்களில் இருக்கிறார்கள். தம் செயல்களுக்கு யாருக்கும் பதிலளிக்க வேண்டியதில்லை என கருதி அவர்கள் தம் மன இச்சைப் படியே வாழ்கிறார்கள். உண்மை அதுவல்ல.


يَٰٓأَيُّهَا ٱلنَّاسُ إِن كُنتُمْ فِى رَيْبٍۢ مِّنَ ٱلْبَعْثِ فَإِنَّا خَلَقْنَٰكُم مِّن تُرَابٍۢ ثُمَّ مِن نُّطْفَةٍۢ ثُمَّ مِنْ عَلَقَةٍۢ ثُمَّ مِن مُّضْغَةٍۢ مُّخَلَّقَةٍۢ وَغَيْرِ مُخَلَّقَةٍۢ لِّنُبَيِّنَ لَكُمْ ۚ وَنُقِرُّ فِى ٱلْأَرْحَامِ مَا نَشَآءُ إِلَىٰٓ أَجَلٍۢ مُّسَمًّۭى ثُمَّ نُخْرِجُكُمْ طِفْلًۭا ثُمَّ لِتَبْلُغُوٓا۟ أَشُدَّكُمْ ۖ وَمِنكُم مَّن يُتَوَفَّىٰ وَمِنكُم مَّن يُرَدُّ إِلَىٰٓ أَرْذَلِ ٱلْعُمُرِ لِكَيْلَا يَعْلَمَ مِنۢ بَعْدِ عِلْمٍۢ شَيْـًۭٔا ۚ وَتَرَى ٱلْأَرْضَ هَامِدَةًۭ فَإِذَآ أَنزَلْنَا عَلَيْهَا ٱلْمَآءَ ٱهْتَزَّتْ وَرَبَتْ وَأَنۢبَتَتْ مِن كُلِّ زَوْجٍۭ بَهِيجٍۢ.

22:5. மனித வாழ்க்கை என்பது தொடர் பயணமாகும். எனவே அவன் செய்து வரும் நற்செயல்களுக்கு ஏற்ப நற்பலன்களோ அல்லது தீய செய்களுக்கு ஏற்ப தண்டனையோ அனுபவிக்கும் கால கட்டம் நிச்சயம் உண்டு. இறைவனின் இத்திட்டப் படி, நீங்கள் மீண்டும் உயிர்பெற்று எழுப்பப்படுவீர்கள். இதில் உங்களுக்கு சந்தேகம் இருந்தால், உங்களுடைய படைப்பை பற்றியே சற்று சிந்தித்துப் பாருங்கள். ஆரம்ப காலத்தில் நீங்கள் மண்ணின் சத்திலிருக்கும் உயிரணுவிலிருந்து (பார்க்க 32:7 & 4:1) பல படித்தரங்களைக் கடந்து, மனித உருவில் படைக்கப்பட்டீர்கள்.
அதன்பின் அடுத்த கட்டமாக, மனித படைப்பு ஆண் பெண் சேர்க்கையின் மூலம் இந்திரியத் துளியிலிருந்து உருவானது. அந்த இந்திரியத்துளி தாயின் கருப்பையில் ‘அலக்’ எனும் அட்டைப்பூச்சிப் போன்று உருவம் பெறுகிறது. அதன்பின் அது தசைக் கட்டியாக உருவம் பெறுகிறது. நீங்கள் நன்றாக விளங்கிகொள்ள வேண்டும் என்பதற்காகவே இந்த விவரங்களை அளிக்கிறோம். நம் செயல்திட்டப்படி அந்த கரூவு குறிப்பிட்ட காலம் (300 நாட்கள்) வரையில் தாயின் கருப்பையில் தங்குகிறது. அதன்பின் குழந்தை பிறந்து விடுகிறது.
அக்குழந்தை படிப்படியாக வளர்ந்து வாலிப வயதை அடைகிறது. (பார்க்க 16:70) உங்களில் சிலர் வாலிப வயதிலேயே மரணித்து விடுகிறார்கள். மற்றும் சிலர் வயதான காலம் வரையில் உயிர் வாழ்கிறார்கள். நல்ல அறிவோடு வாழ்ந்து வந்த நீங்கள், வயதானக் காலத்தில் ஏதும் அறியாத குழந்தை போல் ஆகிவிடுகிறீர்கள். (மேலும் பார்க்க 16:70)
அதை அடுத்து நீங்கள் வாழும் பூமியை கவனித்துப் பாருங்கள். வரண்டுக் கிடக்கும் பூமியின் மீது மழை நீர் பொழிகிறது. அதன் பின், அது உயிர்பெற்று அதில் பல்வேறு புற்பூண்டுகள் முளைத்து, அழகாக வளர்ந்து வருகிறது. அவற்றின் ஒவ்வொன்றிலும் ஜோடி ஜோடியாகப் படைக்கப்பட்டுள்ளன என்பதையும் கவனியுங்கள்.
இப்படியாக மனித வாழ்வில், வாழ்வு மரணம் என்று நிகழ்ந்த வண்ணம் உள்ளன. இறைவழிகாட்டுதல் பெறாத சமுதாயத்தில் வாழ்பவர்களின் வாழ்க்கை இந்த அளவுக்குத் தான் இருக்கும். இறை வழிகாட்டுதலை ஏற்று அதன்படி வாழ்பவர்கள், எவ்வாறு மழை நீரைக் கொண்டு பூமி பசுமையாகி அனைவருக்கும் நன்மைப் பயிப்பதாக விளங்குகிறதோ, அது போல அவர்களும் புத்துயிர் பெற்று, மற்றவர்களுக்கும் பலனளிக்கும் வகையில் வாழ்வார்கள். அத்தகையவர் தான் மரணத்திற்குப் பின் தொடர்கின்ற அடுத்த கட்ட வாழ்விலும் சுவனத்திற்கு செல்லும் தகுதியுடையவர்கள் ஆவார்கள். அப்படி தகுதி பெறாதவர்கள் அழிந்து, நரக வேதனைகளையே அனுபவிப்பார்கள்.


ذَٰلِكَ بِأَنَّ ٱللَّهَ هُوَ ٱلْحَقُّ وَأَنَّهُۥ يُحْىِ ٱلْمَوْتَىٰ وَأَنَّهُۥ عَلَىٰ كُلِّ شَىْءٍۢ قَدِيرٌۭ.

22:6. இதுவே மனித வாழ்வைப் பற்றிய அல்லாஹ்வின் செயல் திட்டங்களாகும். இறைவனின் செயல் திட்டங்கள் யாவும் முன்னேற்றப் பாதையை நோக்கியே செயல்படுவதாக உள்ளன. மனித படைப்பைப் பற்றி மேற்சொன்ன விஷயம் உண்மையே என்றால், இறந்தவர்களை மீண்டும் உயிர்ப்பிப்பதும் உண்மையே என்பதை அறிந்து கொள்ளுங்கள். அவ்வாறு மனிதனை மீண்டும் உயிர்ப்பிப்பதில் அவனுக்கு எவ்வித சிரமும் இல்லை. இப்படியாக அல்லாஹ்வின் செயல் திட்டங்களின் படி ஒவ்வொரு படைப்பும் எவ்வாறு செயல்பட வேண்டும் என்ற அளவுகோல்களும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
எவ்வாறு குழந்தை பிறப்பதற்கும், அது வளர்ந்து வாலிப வயதை அடைவதற்கும், அதன் வாழ்வு முடிவு பெறுவதற்கும் கால அளவு நிர்ணயிக்கப்பட்டு படிப்படியாக நடந்து வருகிறதோ, அவ்வாறே மனித செயல்களுக்கு ஏற்பத்தான் சமுதாயங்களின் வளர்ச்சியும் வீழ்ச்சியும் படிப்படியாக ஏற்பட்டு வரும். நடை பிணமாக வாழும் ஒரு சமுதயாம் இறைவழிகாட்டுதல் பெற்று முன்னேறுவதற்கும், முன்னேறிய சமுதாயங்கள் இறைவழிகாட்டுதலை விட்டுவிட்டு தவறான வழியில் சென்றால் அவை வீழ்ச்சியடைவதற்கும் நிர்ணயிக்கப்பட்ட கால அளவுபடி படிப்படியாக அறியா வண்ணம் நடைபெற்று வரும். (பார்க்க- 8:53)


وَأَنَّ ٱلسَّاعَةَ ءَاتِيَةٌۭ لَّا رَيْبَ فِيهَا وَأَنَّ ٱللَّهَ يَبْعَثُ مَن فِى ٱلْقُبُورِ.

22:7. இறைவனின் செயல்திட்டத்தின் படி நிர்ணயிக்கப்பட்ட இந்த கால அளவு, நடைபிணமாக வாழும் சமுதாயங்கள் இறைவழிகாட்டுதலை கொண்டு எழுச்சி பெறும் கால கட்டமாகும். இதில் யாரும் எவ்வித சந்தேகமும் கொள்ளத் தேவையில்லை. அதேபோல இறந்தவர்களை உயிர் கொடுத்து எழுப்புவதும் உறுதியே. அதுவும் நிர்ணயிக்கப்பட்ட கால அளவின்படி நடப்பது சர்வ நிச்சயம்.


وَمِنَ ٱلنَّاسِ مَن يُجَٰدِلُ فِى ٱللَّهِ بِغَيْرِ عِلْمٍۢ وَلَا هُدًۭى وَلَا كِتَٰبٍۢ مُّنِيرٍۢ.

22:8. ஆனால் இந்த உண்மையை அறியாத மக்களில் சிலர், கல்வி அறிவோ, இறைவழிகாட்டுதலோ, தெளிவான வேதங்களின் ஞானஒளியோ எதுவுமே இல்லாமல், அல்லாஹ்வின் செயல்திட்டத்தைக் குறித்து தர்க்கம் செய்பவர்களும் இருக்கிறார்கள்.


ثَانِىَ عِطْفِهِۦ لِيُضِلَّ عَن سَبِيلِ ٱللَّهِ ۖ لَهُۥ فِى ٱلدُّنْيَا خِزْىٌۭ ۖ وَنُذِيقُهُۥ يَوْمَ ٱلْقِيَٰمَةِ عَذَابَ ٱلْحَرِيقِ.

22:9. இத்தகையவர்களிடம் அல்லாஹ்வின் செயல்திட்டத்தை எடுத்துரைத்தால், அறிவுப்பூர்வமாக சிந்தித்து பதிலளிப்பதை விட்டுவிட்டு, ஆணவத்துடன் முகத்தை திருப்பிக் கொள்கிறார்கள். அதுமட்டுமின்றி இத்தகையவர்கள் தாமும் வழிகெட்டு, மற்றவர்களையும் அல்லாஹ்வின் பாதையில் செயல்படாதவாறு தடுத்தும், வழிகெடுத்தும் வருகிறார்கள். இத்தகையவர்களின் உலக வாழ்வும் வேதனைக்குரியதாக ஆகிவிடும். “மனித செயல்களுக்கு ஏற்ற விளைவுகள்” ஏற்படும் காலக் கட்டங்களிலும் அவர்களுக்கு தாளா நரக வேதனைகள் தொடரும்.


ذَٰلِكَ بِمَا قَدَّمَتْ يَدَاكَ وَأَنَّ ٱللَّهَ لَيْسَ بِظَلَّٰمٍۢ لِّلْعَبِيدِ.

22:10. நீங்கள் செய்துவந்த தவறான செயல்களின் விளைவாக வந்தடையும் வேதனைகளே என்று கூறுவதாக இருக்கும். ஆக அல்லாஹ்வின் புறத்திலிருந்து யாருக்கும் ஓர் அணு அளவும் அநியாயம் செய்யப்பட்ட மாட்டாது.


وَمِنَ ٱلنَّاسِ مَن يَعْبُدُ ٱللَّهَ عَلَىٰ حَرْفٍۢ ۖ فَإِنْ أَصَابَهُۥ خَيْرٌ ٱطْمَأَنَّ بِهِۦ ۖ وَإِنْ أَصَابَتْهُ فِتْنَةٌ ٱنقَلَبَ عَلَىٰ وَجْهِهِۦ خَسِرَ ٱلدُّنْيَا وَٱلْءَاخِرَةَ ۚ ذَٰلِكَ هُوَ ٱلْخُسْرَانُ ٱلْمُبِينُ.

22:11. இவர்களைத் தவிர மக்களுள் சிலர் இருக்கிறார்கள். அவர்கள் அல்லாஹ்வின் வழிகாட்டுதலை தேவைக்கேற்ப பின்பற்றி வருவார்கள். அதாவது தனிப்பட்ட முறையில் தமக்கு நன்மை இருப்பதாக தெரிந்தால் பின்பற்றுவது, நஷ்டம் ஏற்படும் என்றால் அவற்றை விட்டுவிடுவது என்ற நிலையில் இருப்பார்கள். இத்தகையவர்களே சந்தர்ப்பவாதிகள் ஆவர். (பார்க்க 4:145) இத்தகைய சமுதாயங்களின் நிகழ்கால வாழ்வும் வருங்கால நிலையான வாழ்வும் பெரும் நஷ்டத்தை விளைவிப்பதாக இருக்கும்.
இதற்கு காரணம், இறை வழிகாட்டுதலின் படி சமூக அமைப்பு ஏற்படுத்தும் போது, தற்காலிகமாக சில சிரமங்களை சந்திக்க வேண்டிவரும். (பார்க்க 2:155) ஆனால் அவர்களின் வருங்கால வாழ்வு சிறப்பாக இருக்கும். இந்த உண்மையை அவர்கள் புரிந்து கொள்வதில்லை. எனவே அவர்கள்


يَدْعُوا۟ مِن دُونِ ٱللَّهِ مَا لَا يَضُرُّهُۥ وَمَا لَا يَنفَعُهُۥ ۚ ذَٰلِكَ هُوَ ٱلضَّلَٰلُ ٱلْبَعِيدُ.

22:12. அல்லாஹ்வின் வழிகாட்டுதலை விட்டுவிட்டு, எந்த ஒரு தீங்கோ அல்லது நன்மையோ செய்ய முடியாத கற்பனை தெய்வங்களிடம், தம் தேவைகளை நிறைவேற்றித் தரும்படி பிரார்த்தித்துக் கொண்டு இருக்கிறார்கள். இது எவ்வளவு பெரிய வழிக்கேடு!


يَدْعُوا۟ لَمَن ضَرُّهُۥٓ أَقْرَبُ مِن نَّفْعِهِۦ ۚ لَبِئْسَ ٱلْمَوْلَىٰ وَلَبِئْسَ ٱلْعَشِيرُ.

22:13. இன்னும் சொல்லப் போனால், அவர்கள் பின்பற்றி வரும் வழிமுறைகள் யாவும் நன்மை அளிப்பதற்குப் பதிலாக தீய விளைவுகளையே அதிகமாக்கி வருகின்றன. எனவே எவை தம்மை பாதுகாக்கும் என்று எண்ணிக் கொண்டு ஆராதிக்கிறார்களோ, அது மோசமான வழிமுறையே. அவற்றை ஆதரித்து செயல்படுபவர்களும் மோசக்காரர்களே.


إِنَّ ٱللَّهَ يُدْخِلُ ٱلَّذِينَ ءَامَنُوا۟ وَعَمِلُوا۟ ٱلصَّٰلِحَٰتِ جَنَّٰتٍۢ تَجْرِى مِن تَحْتِهَا ٱلْأَنْهَٰرُ ۚ إِنَّ ٱللَّهَ يَفْعَلُ مَا يُرِيدُ.

22:14. மாறாக இறை வழிகாட்டுதலை ஏற்று, அதன்படி ஆக்கப்பூர்வமான சமூக நலத் திட்டங்களைத் தீட்டி உழைக்கும் சமுதாயம் சுவனத்திற்கு ஒப்பாக உருவாகும். அங்கு பொருளாதார வசதிகளும் வற்றாத ஜீவநதி போல் தாராளமாக தொடர்ந்து கிடைத்து, வளம் மிக்க சமுதாயமாக விளங்கும். இதுவே அல்லாஹ்வின் நாட்டப்படி நிலைநிறுத்தப்பட்ட நிலையான சட்டமாகும்.


مَن كَانَ يَظُنُّ أَن لَّن يَنصُرَهُ ٱللَّهُ فِى ٱلدُّنْيَا وَٱلْءَاخِرَةِ فَلْيَمْدُدْ بِسَبَبٍ إِلَى ٱلسَّمَآءِ ثُمَّ لْيَقْطَعْ فَلْيَنظُرْ هَلْ يُذْهِبَنَّ كَيْدُهُۥ مَا يَغِيظُ.

22:15. எனவே இறை வழிகாட்டுதலின் படி சமூக அமைப்பை உருவாக்கினால், நிகழ்கால வாழ்விலும் வருங்கால நிலையான வாழ்விலும் அல்லாஹ்வின் உதவி கிடைக்கும் என்பதே உண்மை. இந்த உண்மையை எடுத்துக் கூறுபவர்கள் தவறான வழியில் இருப்பதாக பலர் எண்ணுகிறார்கள். அவர்களால் முடிந்தால் தம்மிடமுள்ள உபாயங்களை வைத்துக் கொண்டு வானில் ஏறிச் சென்று மூஃமின்களுக்குக் கிடைக்கும் நன்மைகளை தடுத்துப் பார்க்கட்டும். இப்படி தீய எண்ணம் கொண்டவர்களுக்கு பொறாமையும் ஆத்திரமும் தான் மிஞ்சும்.


وَكَذَٰلِكَ أَنزَلْنَٰهُ ءَايَٰتٍۭ بَيِّنَٰتٍۢ وَأَنَّ ٱللَّهَ يَهْدِى مَن يُرِيدُ.

22:16. இவ்வாறே ஒவ்வொரு விஷயத்தைப் பற்றியும் ஆதாரப்பூர்வமாக தெளிவான முறையில் அறிவுரைகளை அளிக்கிறோம். இவற்றை சிந்தித்து ஏற்றுக்கொள்ள முன்வருபவர்களுக்கு நேர்வழி கிடைத்து விடுகிறது. கண்மூடித்தனமாக வாழ்பவர்களுக்கு நேர்வழி கிடைப்பது எப்படி?
இறைவழிகாட்டுதலை ஏற்றுக் கொள்வதற்கு தடையாக நிற்பவை முன்னோர்களின் வழிப்பாடு, மூட நம்பிக்கைகள், அவர்களே உருவாக்கி வைத்திருக்கும் மதச் சடங்குகள் போன்றவையாகும். அவர்களின் கணிப்பு படி இறைவழிகாட்டுதலை ஏற்று நடப்பவர்கள் வழிகேட்டில் இருப்பதாக எண்ணுவார்கள். ஆனால்


إِنَّ ٱلَّذِينَ ءَامَنُوا۟ وَٱلَّذِينَ هَادُوا۟ وَٱلصَّٰبِـِٔينَ وَٱلنَّصَٰرَىٰ وَٱلْمَجُوسَ وَٱلَّذِينَ أَشْرَكُوٓا۟ إِنَّ ٱللَّهَ يَفْصِلُ بَيْنَهُمْ يَوْمَ ٱلْقِيَٰمَةِ ۚ إِنَّ ٱللَّهَ عَلَىٰ كُلِّ شَىْءٍۢ شَهِيدٌ.

22:17. அல்லாஹ்வின் மீது ஈமான் கொண்டவர்களாகட்டும் அல்லது யூதர்கள், மதச் சடங்குகளை பின்பற்றாத சாபியீன்கள், கிறிஸ்தவர்கள், மஜுஸியர்கள், எந்த கொள்கையும் இல்லாத முஷ்ரிக்குகளாகவோ இருக்கட்டும். யார் நேர்வழியில் இருந்து சிறப்பாக வாழ்கிறார்கள் என்பது, அவரவர் செய்து வரும் செயல்களுக்கு ஏற்ப விளைவுகள் தோற்றத்திற்கு வரும் கால கட்டங்களில் தெளிவாகிவிடும். (மேலும் பார்க்க 6:15, 11:121) நிச்சயமாக அல்லாஹ்வின் நியதிப்படி ஏற்பட்டுவரும் அனைத்து நிகழ்வுகளும் இதற்கு சாட்சியாகவே இருக்கும்.


أَلَمْ تَرَ أَنَّ ٱللَّهَ يَسْجُدُ لَهُۥ مَن فِى ٱلسَّمَٰوَٰتِ وَمَن فِى ٱلْأَرْضِ وَٱلشَّمْسُ وَٱلْقَمَرُ وَٱلنُّجُومُ وَٱلْجِبَالُ وَٱلشَّجَرُ وَٱلدَّوَآبُّ وَكَثِيرٌۭ مِّنَ ٱلنَّاسِ ۖ وَكَثِيرٌ حَقَّ عَلَيْهِ ٱلْعَذَابُ ۗ وَمَن يُهِنِ ٱللَّهُ فَمَا لَهُۥ مِن مُّكْرِمٍ ۚ إِنَّ ٱللَّهَ يَفْعَلُ مَا يَشَآءُ ۩.

22:18. ஏனெனில் அகிலங்களும் பூமியில் உள்ளவை அனைத்தும் அல்லாஹ்வின் கட்டளைக்கே சிரம்பணிந்து செயல்படுகின்றன. வானத்தில் ஒளிவீசும் சூரியன், சந்திரன் மற்றும் இரவில் மின்னும் எண்ணற்ற நட்சத்திரங்கள், பூமியில் இருக்கும் மலைகள், செடிகொடிகள், மற்ற எல்லா ஜீவராசிகள், மனிதனின் சரீர வாழ்வு என எல்லாவற்றையும் அவர்கள் கவனித்துப் பார்க்கட்டும். அவற்றில் எதுவுமே அல்லாஹ்வின் சட்ட வட்டரையை மீறி செயல்பட முடியாது. அவை அனைத்துமே அல்லாஹ்வின் செயல்திட்டப்படியே செயல்பட்டாக வேண்டும். (பார்க்க 16:49-50) ஆனால் மனிதனுக்கு மட்டும் முழு சுதந்திரம் அளிக்கப்பட்டு விட்டதால், அவன் இறைவனுக்குக் கட்டுப்பட்டே வாழவேண்டும் என்ற கட்டாயத்தில் இருப்பதில்லை. எனவே அவன் இறைக் கட்டளைக்கு மாறு செய்து, பல வேதனைகளுக்கு அளாகிவிடுகிறான். அதுமட்டுமின்றி யார் அல்லாஹ்வின் அறிவுரைகளுக்கு மாறு செய்து இழிவுக்கு ஆளாகிறார்கிளோ, அவர்களுக்கு கண்ணியமான வாழ்வு ஒருபோதும் கிடைக்காது. இதுவே அல்லாஹ்வின் நாட்டப்படி ஏற்படுத்தப்பட்டுள்ள சட்ட விதிமுறைகளாகும். (மேலும பார்க்க 35:10)


۞ هَٰذَانِ خَصْمَانِ ٱخْتَصَمُوا۟ فِى رَبِّهِمْ ۖ فَٱلَّذِينَ كَفَرُوا۟ قُطِّعَتْ لَهُمْ ثِيَابٌۭ مِّن نَّارٍۢ يُصَبُّ مِن فَوْقِ رُءُوسِهِمُ ٱلْحَمِيمُ.

22:19. ஆக இறைவழிகாட்டுதலை ஏற்றுக் கொண்டவர்கள் மற்றும் அதை ஏற்க மறுப்பவர்கள் ஆகிய இவர்களிடையே இறைவனின் செயல் திட்டத்தைக் குறித்து தர்க்கங்கள் நடைபெறுகின்றன. ஆனால் இறைவழிகாட்டுதலுக்கு மாற்றமாக செயல்படுபவர்களுக்கு காலப் போக்கில் தாளா வேதனைகள் சூழ்ந்து கொள்கின்றன. தற்சமயம் அவர்கள் கர்வத்துடன் நடந்து கொள்ளலாம். ஆனால் அந்த வேதனைக்குரிய கால கட்டங்களில் அவர்களுக்குத் தலைக்குனிவு தான் ஏற்படும்.


يُصْهَرُ بِهِۦ مَا فِى بُطُونِهِمْ وَٱلْجُلُودُ.

22:20. இதனால் அவர்களிடமிருந்த ஆணவப்போக்கு அழிந்து, அவர்களுக்குள்ளே இருந்த கர்வமும் பொசுங்கிவிடும்.


وَلَهُم مَّقَٰمِعُ مِنْ حَدِيدٍۢ.

22:21. அது மட்டுமின்றி அவர்கள் இரும்புக் கம்பிகளால் உருவாக்கப்பட்ட சிறைச்சாலையில் அடைக்கப்படுவர்.


كُلَّمَآ أَرَادُوٓا۟ أَن يَخْرُجُوا۟ مِنْهَا مِنْ غَمٍّ أُعِيدُوا۟ فِيهَا وَذُوقُوا۟ عَذَابَ ٱلْحَرِيقِ.

22:22. இந்த சிறைவாசம் அவர்களுக்கு கிடைக்கும் நிலையான ஆயுட்கால தண்டனையாக இருக்கும். அதிலிருந்து தப்பி ஓட முயன்றால் அவர்கள் மீண்டும் பிடிபட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள். மேலும் அவர்களுடைய தண்டனை கடுமையாக்கப்படும்.


إِنَّ ٱللَّهَ يُدْخِلُ ٱلَّذِينَ ءَامَنُوا۟ وَعَمِلُوا۟ ٱلصَّٰلِحَٰتِ جَنَّٰتٍۢ تَجْرِى مِن تَحْتِهَا ٱلْأَنْهَٰرُ يُحَلَّوْنَ فِيهَا مِنْ أَسَاوِرَ مِن ذَهَبٍۢ وَلُؤْلُؤًۭا ۖ وَلِبَاسُهُمْ فِيهَا حَرِيرٌۭ.

22:23. இதற்கு மாறாக யார் இறைவழிகாட்டுதலை ஏற்று அதன்படி ஆக்கப்பூர்வமான நற்செயல்களை செய்கிறார்களோ, அவர்களுக்கு அல்லாஹ்வின் நியதிப்படி தாராளமான வாழ்க்கை வசதிகள் வற்றாத ஜீவநதிப் போல் கிடைத்து வரும். மேலும் அவர்களுடைய சிறந்த சேவைக்காக அல்லாஹ்வின் ஆட்சியமைப்பு சார்பாக பொன்னாடைகள் போர்த்தப்படும். மேலும் அவர்கள், முத்துக்கள் பதிக்கப்பட்ட ஆபரணங்கள் அணிவிக்கப் பட்டு கௌரவிக்கப் படுவார்கள். மேலும் அவர்களுக்கு விதவிதமான பட்டாடைகளும் அளிக்கப்படும்.


وَهُدُوٓا۟ إِلَى ٱلطَّيِّبِ مِنَ ٱلْقَوْلِ وَهُدُوٓا۟ إِلَىٰ صِرَٰطِ ٱلْحَمِيدِ.

22:24. அவர்களுடைய சொல்லும் செயலும் இறைவனின் சொல்லுக்கு ஏற்ப இருந்தன என்பதற்காகவே இந்த பாராட்டும் போற்றுதலும் கிடைக்கின்றன. அவர்கள் எப்போதும் இறைவன் காட்டும் நேரான பாதையிலேயே இருந்தார்கள். மேலும் இறைவனின் செயல் திட்டங்கள் யாவும் போற்றுதலுக்கு உரியதாக ஆக்க அரும்பாடு பட்டார்கள்.
இத்தகைய இஸ்லாமிய ஆட்சியமைப்பும், கட்டுக்கோப்பான சமூக அமைப்பும் நிலைத்திருக்க வேண்டும். மேலும் வருங்கால தலைமுறையினருக்கும் இறைவனின் அறிவுரைகள் தெள்ளத் தெளிவாக கிடைக்கச் செய்ய வேண்டும். அதுமட்டுமின்றி இறை வழிகாட்டுதலின் படி தலைசிறந்த சமுதாயத்தை உருவாக்க வேண்டும். உலக மக்களின் அமைதிக்காக பாடுபடும் சமுதாயம் என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டாக விளங்க வேண்டும். (பார்க்க 2:143) இதுபோன்ற உயர் நோக்கங்களோடு தான் கஅபா எனும் தலைமை செயலகம் நிருவப்பட்டது. (பார்க்க 2:125, 3:96-97)


إِنَّ ٱلَّذِينَ كَفَرُوا۟ وَيَصُدُّونَ عَن سَبِيلِ ٱللَّهِ وَٱلْمَسْجِدِ ٱلْحَرَامِ ٱلَّذِى جَعَلْنَٰهُ لِلنَّاسِ سَوَآءً ٱلْعَٰكِفُ فِيهِ وَٱلْبَادِ ۚ وَمَن يُرِدْ فِيهِ بِإِلْحَادٍۭ بِظُلْمٍۢ نُّذِقْهُ مِنْ عَذَابٍ أَلِيمٍۢ.

22:25. எனவே ‘மஸ்ஜிதுல் ஹராம்’ எனும் சங்கை மிக்க தலைமை செயலகம், அந்நாட்டில் வாழ்பவர்களுக்கும், வெளி நாட்டவருக்கும் சம அந்தஸ்து அளித்து, உலக மக்கள் அனைவரையும் அல்லாஹ்வின் வழிகாட்டுதலின் படி வழிநடத்தி செல்லும் தலைமை செயலகமாக நிருவப்பட்டது. ஆனால் இப்போதோ, இதற்கு எதிராகச் செயல்படுகிறார்கள். இத்தகையவர்களுக்கு கடுமையான தண்டனை அளிக்கப்படும். காரணம் அவர்கள் தாமும் வழிகெட்டு மற்றவர்களையும் இறை வழிகாட்டுதலை விட்டு தடுத்து வருகிறார்கள். அது மட்டுமின்றி அவர்கள், அந்த வளாகத்திற்குள் அநியாயமாகவும் வரம்பு மீறின செயல்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
இப்படி அவர்கள் செய்து வரும் அநியாயம் அக்கிரமம்தான் என்ன?


وَإِذْ بَوَّأْنَا لِإِبْرَٰهِيمَ مَكَانَ ٱلْبَيْتِ أَن لَّا تُشْرِكْ بِى شَيْـًۭٔا وَطَهِّرْ بَيْتِىَ لِلطَّآئِفِينَ وَٱلْقَآئِمِينَ وَٱلرُّكَّعِ ٱلسُّجُودِ.

22:26. இறைவனின் செயல்திட்டப்படி இப்ராஹீம் நபி, ‘கஅபா’ எனும் தலைமை செயலகத்தை நிருவினார். அச்செயலகத்தில் அல்லாஹ்வின் வழிகாட்டுதலுக்கு இணையாக வேறு எந்த வழிமுறையையும் பின்பற்றக் கூடாது என்பதே அதன் மையக் கோட்பாடாகும். இறைவனின் செயல் திட்டங்களைப் பற்றி அறிந்துகொள்ள, கஅபாவின் சுற்றுப் புறத்திலிருந்து வந்து தங்கியிருப்பவர்கள், அந்த செயலகத்தின் நிர்வாகிகள், அதைக் கட்டிக் காக்கும் செயல் வீரர்கள் என அனைவரும், வீணான சடங்கு சம்பிரதாயங்களுக்கு இடமளிக்காமல் பரிசுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்பது அல்லாஹ்வின் கட்டளையாகும். அப்போது தான் அனைவரும் இறைவனின் கட்டளைக்கு மட்டுமே தலைவணங்கி, அதற்கு ஏற்ற வகையில் செயல்படுவார்கள். (மேலும் பார்க்க 2:125)
ஆனால் அவர்களோ இந்த கட்டளைகளை எல்லாம் காற்றில் பறக்கவிட்டு விட்டு, சூதாட்டமும் களியாட்டமும் என்று அநியாயச் செயலில் ஈடுபட்டு வருகிறார்கள். (பார்க்க 89:1-4) எனவே அவர்களை அப்புறப்படுத்தி விட்டு மீண்டும் அந்த செயலகத்தின் உண்மையான நோக்கங்களை நிறைவேற்ற, முஹம்மது நபிக்கு கட்டளை பிறக்கப்பட்டது. (பார்க்க 9:28) அதன்படியே அவர் மக்காமா நகரை வெற்றி கொண்டு இந்த செயலகத்தை மீண்டும் உயிர்ப்பித்தார். அதைத் தொடர்ந்து:


وَأَذِّن فِى ٱلنَّاسِ بِٱلْحَجِّ يَأْتُوكَ رِجَالًۭا وَعَلَىٰ كُلِّ ضَامِرٍۢ يَأْتِينَ مِن كُلِّ فَجٍّ عَمِيقٍۢ.

22:27. நபியே! உலக மக்கள் அனைவரின் அமைதியான பாதுகாப்பான வாழ்விற்காக, ஒருங்கிணைப்புக் கூட்டத்தை (International Conference) கூட்டுவீராக. இறைவழிகாட்டுதலை ஏற்றுக் கொண்டவர்கள், வெகு தொலைவிலிருந்து மிகவும் ஆர்வத்துடன், நடந்தும் மெலிந்த ஒட்டகங்களின் மூலமும் வருவார்கள்.
அரேபிய நாடு பாலைவனமாக இருப்பதால் அக்கால வசதிக்கு ஏற்ப ஒட்டகத்தில் தான் பயணத்தை மேற்கொள்வார்கள். அங்கு போய் சேர்வதற்கு வாரம் அல்லது மாதக் கணக்கில் ஆகிவிடும். பயணக் களைப்பால் ஒட்டகங்கள் மெலிந்து விடும். ஹஜ் பயணத்தை மேற்கொள்பவர்களுக்கு தலைமுடியை களையவும் வாய்ப்பு கிடைப்பதில்லை.


لِّيَشْهَدُوا۟ مَنَٰفِعَ لَهُمْ وَيَذْكُرُوا۟ ٱسْمَ ٱللَّهِ فِىٓ أَيَّامٍۢ مَّعْلُومَٰتٍ عَلَىٰ مَا رَزَقَهُم مِّنۢ بَهِيمَةِ ٱلْأَنْعَٰمِ ۖ فَكُلُوا۟ مِنْهَا وَأَطْعِمُوا۟ ٱلْبَآئِسَ ٱلْفَقِيرَ.

22:28. இப்படியாக மிக ஆர்வத்தோடு வருபவர்களுக்கு உணவு வசதிகளை செய்து தாருங்கள். இதற்காக ஹஜ் பயணத்தை மேற்கொள்பவர்கள் மூலமாக அன்பளிப்பாக அனுப்பப்பட்ட (பார்க்க 2:196) ஆடு, மாடு, ஒட்டகம் போன்றவற்றை அல்லாஹ்வின் பெயரை சொல்லி அறுத்து, அவர்களுக்காக உணவு ஏற்பாடுகளை செய்து தாருங்கள். இப்படியாக பயணக் களைப்பில் இருப்பவர்களின் சிரமங்களை போக்குங்கள். எல்லாவற்றிற்கும் மேலாக இறைவழிகாட்டுதலின் படி செயல்படுவதால் ஏற்படும் நன்மைகளைப் பற்றி அவர்களுக்கு எடுத்துரையுங்கள்.
அதாவது முஹம்மது நபி (ஸல்) அவர்கள் இறைவழிகாட்டுதலின் படி மதினாவில் ஆட்சியமைப்பு ஏற்படுத்தினார். மக்கமா நகரில் உள்ள கஅபாவை உலக மக்களின் தலைமை செயலகமாக ஆக்கி சிறப்பிக்கச் செய்தார். அங்கு வாழும் மக்களும் இறைவழிகாட்டுதலைப் பின்பற்றி எந்த அளவிற்கு சிறப்பாகவும் ஒற்றுமையுடனும் வாழ்கிறார்கள் என்பதை உலக மக்களுக்கு எடுத்துக் காட்ட (Exhibition of Achievements) அழைப்பு விடுத்தார். உலகின் பல்வேறு பகுதியிலிருந்து அங்கு வருபவர்கள் இவை எப்படி சாத்தியமாகும் என்பதை அறிந்து, அவ்வாறே தம் நாட்டிலும் சிறந்த சமூக அமைப்பை உருவாக்க வழிமுறைகளை அறிந்து கொண்டு செல்ல வேண்டும். அதில் ஏற்படும் சிக்கல்களை எவ்வாறு களைவது என்பது போன்ற விஷயங்களையும் அறிந்துகொள்வதே ஹஜ்ஜின் நோக்கமாகும்.


ثُمَّ لْيَقْضُوا۟ تَفَثَهُمْ وَلْيُوفُوا۟ نُذُورَهُمْ وَلْيَطَّوَّفُوا۟ بِٱلْبَيْتِ ٱلْعَتِيقِ.

22:29. இத்தகைய உயர்ந்த நோக்கங்களுடன் ஹஜ்ஜுக்கு வருபவர்கள், தம்மிடம் இருந்த எல்லா விதமான தவறான கொள்கைகளை விட்டு பரிசுத்தமாகி, உலக மக்களின் அமைதிக்காக ஏற்படுத்தப்பட்டுள்ள பழமை வாய்ந்த இந்த தலைமை செயலக்தைக் கட்டிக்காக்க, உறுதிப்பாடுடன் தம் ஹஜ் பயணத்தை நிறைவேற்றி வருவார்கள்.


ذَٰلِكَ وَمَن يُعَظِّمْ حُرُمَٰتِ ٱللَّهِ فَهُوَ خَيْرٌۭ لَّهُۥ عِندَ رَبِّهِۦ ۗ وَأُحِلَّتْ لَكُمُ ٱلْأَنْعَٰمُ إِلَّا مَا يُتْلَىٰ عَلَيْكُمْ ۖ فَٱجْتَنِبُوا۟ ٱلرِّجْسَ مِنَ ٱلْأَوْثَٰنِ وَٱجْتَنِبُوا۟ قَوْلَ ٱلزُّورِ.

22:30. இதுவே ஹஜ் பயணத்தின் நோக்கங்களும் செயல்திட்டங்களும் ஆகும். இதை மனதில் கொண்டு, யார் அல்லாஹ்வின் அறிவுரைகளை மதித்து, அதன்படி தத்தம் நாட்டிற்குச் சென்று சிறந்த செயல்களைச் செய்து வருகிறார்களோ, (பார்க்க 2:200) அவர்களுடைய இறைவனிடத்தில் அவர்களுக்கு சிறந்த பலன்கள் கிடைக்கும். மேற்சொன்ன நாற்கால் பிராணிகளில் ஏற்கனவே 5:3 இல் விலக்கப்பட்டது போக, மற்ற உயிர் பிராணிகளை உங்கள் உணவிற்காக பயன்படுத்தி கொள்ளலாம். ஆனால் அத்துடன் உங்கள் கடமைகள் முடிந்து விடுவதில்லை. சமுதாயத்தை கெடுக்கும் அருவறுக்கத் தக்க செயல்கள் எதுவும் நடைபெறாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். நீங்கள் பொய் பேசுவதிலிருந்தும் தவிர்த்துக் கொள்ள வேண்டும். அப்போது தான் நாட்டு மக்களின் அபிமானத்தை உங்களால் பெற முடியும்.


حُنَفَآءَ لِلَّهِ غَيْرَ مُشْرِكِينَ بِهِۦ ۚ وَمَن يُشْرِكْ بِٱللَّهِ فَكَأَنَّمَا خَرَّ مِنَ ٱلسَّمَآءِ فَتَخْطَفُهُ ٱلطَّيْرُ أَوْ تَهْوِى بِهِ ٱلرِّيحُ فِى مَكَانٍۢ سَحِيقٍۢ.

22:31. இப்படியாக நீங்கள் இறைவழிகாட்டுதலின் படி ஆட்சியமைப்பை உருவாக்கி, அனைவரும் ஒருங்கிணைந்து செயல்படுங்கள். அதில் வேறு எந்த கொள்கையையும் இணைக்காதீர்கள். ஆனால் யாருடைய ஆட்சியமைப்பு இறைவழிகாட்டுதலுக்கு இணையாக வேறு வழிமுறைகளை பின்பற்றுகிறதோ, அது இறக்கை அறுந்த பறவைகள் எவ்வாறு வானில் பறக்க முடியாமல் கீழே விழுந்து அவற்றை மாமிசப் பட்சிகள் கொத்திக் கொள்கின்றனவோ, அதுபோல பலம் அனைத்தையும் இழந்து தத்தளிக்கும். அல்லது பலமான காற்று வீசி, வெகுத் தொலைவில் உள்ள இடத்திற்கு அடித்துச் செல்லப்படுவது போல, கலகம் கலவரம் போன்றவை ஏற்பட்டு வீட்டையும் நாட்டையும் இழந்து அகதிகளாய் அலைய வேண்டி வரும்.


ذَٰلِكَ وَمَن يُعَظِّمْ شَعَٰٓئِرَ ٱللَّهِ فَإِنَّهَا مِن تَقْوَى ٱلْقُلُوبِ.

22:32. இதுதான் இறைவன் வகுத்துள்ள வழிமுறைகளின் படி நிகழ்வதாகும். இதற்கு மாறாக யார் அல்லாஹ்வின் அடையாளச் சின்னங்களாகத் திகழும் செயலகத்தை கண்ணியப்படுத்த உழைக்கிறார்களோ, அவர்களுடைய உள்ளங்களில் இறைவனின் வழிகாட்டுதலை பேணிக் காக்கும் மனப்பான்மை இருப்பதாக பொருள்படும்.
அத்தகையவர்களுக்கு உயர்வும் கண்ணியமும் கிடைக்கும். மேலும் ஒரு விஷயத்தை நினைவில் கொள்ளுங்கள். இந்த செயலகத்தில் உள்ள அடையாள சின்னங்களை பாதுகாப்பதை மட்டும் நோக்கமாக கொண்டால், அது வெறும் சடங்கு சம்பிரதாயமாக மாறிவிடும். மேலும் ஹஜ் சமயம் அனுப்பப்படுகின்ற அன்பளிப்பு பிராணிகளை ஏதோ பலிப் பிராணிகள் என்றோ அல்லது அவை புனிதமானவை என்றோ எண்ணிக் கொள்ளாதீர்கள்.


لَكُمْ فِيهَا مَنَٰفِعُ إِلَىٰٓ أَجَلٍۢ مُّسَمًّۭى ثُمَّ مَحِلُّهَآ إِلَى ٱلْبَيْتِ ٱلْعَتِيقِ.

22:33.அந்த அன்பளிப்பு பிராணிகள் யாவும் புனிதமான பிராணிகள் அல்ல. அவற்றை நீங்கள் மற்ற நாட்களில் எவ்வாறு பயன்படுத்தி பலன் பெறுகிறீர்களோ, அதுபோலத் தான் இதுவும். அவற்றை உணவுக்காக பயன்படுத்திக் கொள்ள ஹஜ் சமயத்தில் இறைவனின் பழமை வாய்ந்த செயலகத்தில் சேர்ப்பித்து விடுவதாகும்.


وَلِكُلِّ أُمَّةٍۢ جَعَلْنَا مَنسَكًۭا لِّيَذْكُرُوا۟ ٱسْمَ ٱللَّهِ عَلَىٰ مَا رَزَقَهُم مِّنۢ بَهِيمَةِ ٱلْأَنْعَٰمِ ۗ فَإِلَٰهُكُمْ إِلَٰهٌۭ وَٰحِدٌۭ فَلَهُۥٓ أَسْلِمُوا۟ ۗ وَبَشِّرِ ٱلْمُخْبِتِينَ.

22:34. இப்படியாக உலகிலுள்ள ஒவ்வொரு சமுதாயத்தவருக்கும், இறைவன் புறத்திலிருந்து சிறந்த வழிமுறை வழங்கப்பட்டது. அதன்படி உணவுக்காக பயன்படுத்திக் கொள்ளும் கால்நடைகளை அல்லாஹ்வின் பெயரை சொல்லி முறைப்படி அறுத்து உண்ண வேண்டும். (பார்க்க 6:120-121) இதனால் உங்களுடைய சிந்தனையும் செயலும் எப்போதும் உங்களைப் படைத்து பரிபாலிக்கும் இறைவனாகிய அல்லாஹ்வின் வழிகாட்டுதலை நோக்கியே இருக்க வேண்டும். உங்களுடைய ஒவ்வொரு செயலும் இறை வழிகாட்டுதலுக்கு உட்பட்டே இருக்க வேண்டும். இப்படியாக இறைவழிகாட்டுதலின் படி சிறந்த சேவை செய்பவர்களுக்கே நற்பலன்கள் கிடைத்து வரும்.
இவையே அல்லாஹ்வின் புறத்திலிருந்து வரையறுக்கப்பட்ட வழிமுறைகளாகும்.


ٱلَّذِينَ إِذَا ذُكِرَ ٱللَّهُ وَجِلَتْ قُلُوبُهُمْ وَٱلصَّٰبِرِينَ عَلَىٰ مَآ أَصَابَهُمْ وَٱلْمُقِيمِى ٱلصَّلَوٰةِ وَمِمَّا رَزَقْنَٰهُمْ يُنفِقُونَ.

22:35. மேலும் இத்தகையவர்களிடம் இறைவனின் அறிவுரைகளை எடுத்துரைத்தால், அவற்றைப் பற்றி சிந்தித்து ஏற்றுக் கொள்வார்கள் (பார்க்க 25:73). அதற்கு எதிராக செயல்படுவதால் ஏற்படும் விபரீத விளைவுகளைப் பற்றி எண்ணி அஞ்சுவார்கள் (மேலும் பார்க்க 8:3). மேலும் எத்தனை சிரமங்கள் ஏற்பட்டாலும் இறைக் கொள்கையில் நிலைகுலையாமல் அயராது உழைத்தும் வருவார்கள் (பார்க்க 2:155). மேலும் அவர்கள் சமுதாய ஒழுக்க மாண்புகளைப் பேணிக் காக்கும் ஸலாத் முறையை நிலைநிறுத்துவார்கள் (பார்க்க 29:45) மேலும் சமூக நலத் திட்டங்களைத் தீட்டி அவற்றிற்காக உதவியும் செய்து வருவார்கள்.
இத்தகைய சிறந்த சேவை செய்பவர்களுக்கே இறைவன் புறத்திலிருந்து நற்பலன்கள் கிடைத்து வரும். இப்படியாக அவர்கள் இறைவனின் ஆட்சியமைப்பு சிறப்பாக செயல்பட உறுதுணையுடன் செயல்படுவார்கள்.


وَٱلْبُدْنَ جَعَلْنَٰهَا لَكُم مِّن شَعَٰٓئِرِ ٱللَّهِ لَكُمْ فِيهَا خَيْرٌۭ ۖ فَٱذْكُرُوا۟ ٱسْمَ ٱللَّهِ عَلَيْهَا صَوَآفَّ ۖ فَإِذَا وَجَبَتْ جُنُوبُهَا فَكُلُوا۟ مِنْهَا وَأَطْعِمُوا۟ ٱلْقَانِعَ وَٱلْمُعْتَرَّ ۚ كَذَٰلِكَ سَخَّرْنَٰهَا لَكُمْ لَعَلَّكُمْ تَشْكُرُونَ.

22:36. அதுபோல கால்நடைகளில் ஒட்டகமும் இறைவனின் ஆட்சியமைப்பை சிறப்பிக்கும் அடையாள சின்னமாக விளங்குகிறது. ஏனெனில் அதிலிருந்து உங்களுக்கு நன்மைகள் பல கிடைக்கின்றன. அவற்றின் மாமிசமும் உங்களுக்கு சிறந்த உணவாக திகழ்கிறது. எனவே நின்ற நிலையிலேயே அல்லாஹ்வின் பெயரைச் சொல்லி அவற்றை அறுத்து, அவற்றின் மாமிசத்தை நீங்களும் உண்ணுங்கள். மேலும் ஹஜ்ஜுக்கு வந்தவர்களில் தேவையுள்ளவர்கள் யார், கஷ்டத்தில் இருப்பவர் யார் என்பதை கண்டறிந்து அவர்களுக்கும் உணவளியுங்கள். இவ்வாறாக உணவுப் பற்றாக்குறை ஏதுமின்றி, ஹஜ் கூடியதன் உயர் இலட்சியங்களை நிறைவேற்ற இவை உங்களுக்கு உபகாரமாக விளங்குகின்றன.
அதாவது ஒட்டகங்கள் இறைவனின் அடையாளச் சின்னங்கள் என்பதால் அவை புனிதமானவை என்று எண்ணிவிடாதீர்கள். அது போல அல்லாஹ்வின் பெயரை சொல்லி அவற்றை அறுப்பதால் அவற்றின் மாமிசமோ இரத்தமோ அல்லாஹ்விடம் சென்றடைவதாக எண்ணிக் கொள்ளாதீர்கள்.


لَن يَنَالَ ٱللَّهَ لُحُومُهَا وَلَا دِمَآؤُهَا وَلَٰكِن يَنَالُهُ ٱلتَّقْوَىٰ مِنكُمْ ۚ كَذَٰلِكَ سَخَّرَهَا لَكُمْ لِتُكَبِّرُوا۟ ٱللَّهَ عَلَىٰ مَا هَدَىٰكُمْ ۗ وَبَشِّرِ ٱلْمُحْسِنِينَ.

22:37. எனவே கால்நடைகளின் மாமிசமோ அல்லது இரத்தமோ அல்லாஹ்விடம் ஒருபோதும் சென்று அடைவதில்லை. ஆனால் நீங்கள் எந்த அளவிற்கு இறை வழிகாட்டுதலைப் பேணி நடக்கிறீர்கள் என்பதுதான் முக்கியமானதாகும். உங்களுக்கு உணவுச் சிரமங்கள் இருக்கக் கூடாது என்பதற்காகவே இந்த கால்நடைகளின் ஏற்பாடுகள் இறைவன் புறத்திலிருந்து செய்யப்பட்டுள்ளன. இறைவனின் வழிகாட்டுதலே தலைச் சிறந்தது என்பதை உலக அரங்கில் நிரூபித்துக் காட்டவே இங்கு நீங்கள் அனைவரும் ஒன்று திரண்டு வந்துள்ளீர்கள் என்பதை மறவாதீர். இப்படிப்பட்ட உயர் நோக்கங்களுடன் சிறந்த சேவைகளை செய்பவர்களுக்கே நற்பலன்கள் காத்து நிற்கின்றன.


۞ إِنَّ ٱللَّهَ يُدَٰفِعُ عَنِ ٱلَّذِينَ ءَامَنُوٓا۟ ۗ إِنَّ ٱللَّهَ لَا يُحِبُّ كُلَّ خَوَّانٍۢ كَفُورٍ.

22:38. இறைவழிகாட்டுதலை ஏற்றுக்கொண்டவர்கள் சிறந்த சேவைகளைச் செய்து வந்தால் ஆபத்துகள் நீங்கி அல்லாஹ்வின் பாதுகாப்பு கிடைக்கும். அதாவது மக்களின் நலனுக்காகப் பாடுபட்டால் மக்களின் அபிமானத்தைப் பெற்று, அவர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். ஆனால் இதை எல்லாம் விட்டுவிட்டு, நம்பிக்கைத் துரோகம் செய்தால் அல்லாஹ்வின் நேசம் ஒருபோதும் கிடைக்காது. அதே சமயம் மக்களின் ஆதரவும் கிடைக்காது. (பாhக்க 2:161)
எனவே நாட்டிலுள்ள சமூக விரோத சக்திகளைக் கட்டுப்படுத்த வேண்டியது முக்கியமான பணியாகும். அவ்வாறு அவர்களை அடக்கி வைக்காவிட்டால், அவர்களால் முன்னேற்றத் திட்டங்கள் யாவும் தடைப்பட்டுப் போகும். மேலும் அன்னிய நாட்டைச் சேர்ந்தவர்களால் ஏற்படும் ஆபத்துக்களை விட உள்நாட்டு குழப்பவாதிகளால் ஏற்படும் பாதிப்புகளே கடுமையானதாகும். (பார்க்க 2:191) எனவே


أُذِنَ لِلَّذِينَ يُقَٰتَلُونَ بِأَنَّهُمْ ظُلِمُوا۟ ۚ وَإِنَّ ٱللَّهَ عَلَىٰ نَصْرِهِمْ لَقَدِيرٌ.

22:39. யார் அநியாய அக்கிரம செயல்களில் தொடர்ந்து ஈடுபடுகிறார்களோ, அவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க இறைவனின் ஆட்சியமைப்புக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. அவர்களுடைய சூழ்ச்சிகளை முறியடிக்க அல்லாஹ்வின் ஆட்சியமைப்பு பலம் மிக்கதாய் இருக்கிறது.


ٱلَّذِينَ أُخْرِجُوا۟ مِن دِيَٰرِهِم بِغَيْرِ حَقٍّ إِلَّآ أَن يَقُولُوا۟ رَبُّنَا ٱللَّهُ ۗ وَلَوْلَا دَفْعُ ٱللَّهِ ٱلنَّاسَ بَعْضَهُم بِبَعْضٍۢ لَّهُدِّمَتْ صَوَٰمِعُ وَبِيَعٌۭ وَصَلَوَٰتٌۭ وَمَسَٰجِدُ يُذْكَرُ فِيهَا ٱسْمُ ٱللَّهِ كَثِيرًۭا ۗ وَلَيَنصُرَنَّ ٱللَّهُ مَن يَنصُرُهُۥٓ ۗ إِنَّ ٱللَّهَ لَقَوِىٌّ عَزِيزٌ.

22:40. அவர்கள் செய்த அநியாய செயல்கள் என்னவென்பதை தெரிந்து கொள்ளுங்கள். இறைவழிகாட்டுதலை ஏற்றுக்கொண்டவர்கள், “எங்களை படைத்து பரிபாலிப்பவன் அல்லாஹ் ஒருவனே” என்று தான் கூறினார்கள். அதை தவிர அவர்கள் வேறு எந்த பாவமும் செய்யவில்லை. அப்படி அவர்கள் கூறியதற்காக, அவர்களுடைய வீடுகளைவிட்டு அநியாயமாக வெளியேற்றி விட்டார்கள். அப்படியும் ஈமான் கொள்ளும் விஷயம் யாவும் தனிப்பட்ட உரிமையாகும். அதில் மற்றவர் யாரும் தலையிட முடியாது. இதற்கு முன்பும் பலதரப்பட்ட மக்களின் ஆசிரமங்கள், கிறிஸ்தவ கோயில்கள், யூத ஆலயங்கள், அல்லாஹ்வின் பெயரைத் தியானிக்கும் பள்ளிவாசல்கள் என பல்வேறு வழிபாட்டுத் தலங்கள் இருக்கத் தான் செய்கின்றன. அவையெல்லாம் அழிந்து போகாதவாறு காப்பாளர்கள் மூலம் இறைவன் பாதுகாத்து வரவில்லையா? இப்போது மட்டும் அல்லாஹ்வை ஏற்றுக் கொண்டவர்களை ஊரைவிட்டு துரத்துவது நியாயமாகுமா? எனவே அவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுத்தே ஆகவேண்டும். இத்தகைய நடவடிக்கை எடுப்பதில் யார் உறுதுணையாக இருக்கிறார்களோ, அவர்களுக்கு இறைவனின் ஆட்சியமைப்பு தக்க பாதுகாப்பு அளித்து உதவி செய்து வரும். நிச்சயமாக இறைவனின் ஆட்சியமைப்பு வலிமை மிக்கதாய் இருக்கின்றது என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.


ٱلَّذِينَ إِن مَّكَّنَّٰهُمْ فِى ٱلْأَرْضِ أَقَامُوا۟ ٱلصَّلَوٰةَ وَءَاتَوُا۟ ٱلزَّكَوٰةَ وَأَمَرُوا۟ بِٱلْمَعْرُوفِ وَنَهَوْا۟ عَنِ ٱلْمُنكَرِ ۗ وَلِلَّهِ عَٰقِبَةُ ٱلْأُمُورِ.

22:41. மேலும் ஈமான் கொண்டவர்கள் எத்தகையோர் என்றால், அவர்களிடம் நாட்டின் ஆட்சி பொறுப்பை ஒப்படைத்தால், இறைவனின் வழிகாட்டுதலின் படி “நிஜாமெ சலாத்” எனும் மக்களாட்சியை நிலை நாட்டுவார்கள். மக்கள் நலத்தைக் காப்பதே அந்த ஆட்சியின் நோக்கமாக இருக்கும். இறைவன் காட்டும் நன்மையான செயல்களை எடுத்துரைத்து அதன்படி செயல்படும்படி மக்களுக்கு அறிவுறுத்தும். தீமையான செயல்கள் எவை என்பதையும் எடுத்துரைத்து, அவை நடைபெறாதவாறு தடுத்தும் வரும். (பார்க்க 3:104) மக்கள் பிரச்சனை எதுவாக இருந்தாலும், அதை இறைவழிகாட்டுதலின் படி தீர்த்து வைக்க சபையில் கலந்தாலோசித்து முடிவெடுப்பார்கள். (மேலும் பார்க்க 5:44)


وَإِن يُكَذِّبُوكَ فَقَدْ كَذَّبَتْ قَبْلَهُمْ قَوْمُ نُوحٍۢ وَعَادٌۭ وَثَمُودُ.

22:42. இறைவழிகாட்டுதலை எடுத்துரைப்பவரே! இறைவனின் ஆட்சியமைப்பு திட்டங்களை பொய்ப்பித்தால், இதற்கு முன் நூஹ்வுடைய சமுதாயத்தவர்களுக்கும் ‘ஆது’ மற்றும் ‘சமூது’ சமூகத்தவர்க்கும் ஏற்பட்ட அழிவு போலவே இவர்களுக்கும் ஏற்படும் என்பதை எச்சரிக்கை செய்து விடுவீராக.


وَقَوْمُ إِبْرَٰهِيمَ وَقَوْمُ لُوطٍۢ.

22:43. அது மட்டுமின்றி இப்றாஹீம் நபி மற்றும் லூத் நபி சமூகத்தவர்களுக்கும் அதே போன்று அழிவுகள் ஏற்பட்டன.


وَأَصْحَٰبُ مَدْيَنَ ۖ وَكُذِّبَ مُوسَىٰ فَأَمْلَيْتُ لِلْكَٰفِرِينَ ثُمَّ أَخَذْتُهُمْ ۖ فَكَيْفَ كَانَ نَكِيرِ.

22:44. இவ்வாறே மத்யன் வாசிகளும், மூஸா நபியை பொய்ப்பித்தவர்களும், அவர்களுக்குரிய கால அவகாசத்திற்குப் பின், அழிவை சந்தித்து கொண்டார்கள். அல்லாஹ் நிர்ணயித்துள்ள “மனித செயல்களுக்கேற்ற விளைவுகள்” என்ற சட்டத்தின் ‘பிடி’ எந்த அளவுக்கு கடுமையாக இருந்தன என்பதையும் உலகமே பார்த்துக் கொண்டது.


فَكَأَيِّن مِّن قَرْيَةٍ أَهْلَكْنَٰهَا وَهِىَ ظَالِمَةٌۭ فَهِىَ خَاوِيَةٌ عَلَىٰ عُرُوشِهَا وَبِئْرٍۢ مُّعَطَّلَةٍۢ وَقَصْرٍۢ مَّشِيدٍ.

22:45. இப்படியாக அநியாய அக்கிரமச் செயல்களில் ஈடுபட்டு வந்த எத்தனையோ சமுதாயங்கள் இறைவனின் நியதிப்படி அழிந்தே இருக்கின்றன. அவர்கள் வாழ்ந்த வீடுகளும் எண்ணற்ற கிணறுகளும் எத்தனையோ கோட்டைகளும் கேட்பாரற்று அழிந்து பாழாகிக் கிடக்கின்றன என்பதையும் அவர்கள் கவனித்துப் பார்க்கட்டும்.


أَفَلَمْ يَسِيرُوا۟ فِى ٱلْأَرْضِ فَتَكُونَ لَهُمْ قُلُوبٌۭ يَعْقِلُونَ بِهَآ أَوْ ءَاذَانٌۭ يَسْمَعُونَ بِهَا ۖ فَإِنَّهَا لَا تَعْمَى ٱلْأَبْصَٰرُ وَلَٰكِن تَعْمَى ٱلْقُلُوبُ ٱلَّتِى فِى ٱلصُّدُورِ.

22:46. மக்கள் தம் வீடுகளிலேயே அடைந்து கிடக்கின்றனர். அவர்கள் உலகத்தை சுற்றிப் பார்த்திருந்தால், விளங்கிக் கொள்ளக் கூடிய உள்ளங்களும் செவியேற்கும் மனப்பான்மையும் அவர்களிடம் இருந்திருக்கும். அவர்களுடைய பார்வைப் புலன்கள் என்னவோ சரியாகத்தான் இருக்கின்றன. ஆனால் அவற்றை விளங்கிக் கொள்ளும் உள்ளங்கள் தான் மங்கியுள்ளன.


وَيَسْتَعْجِلُونَكَ بِٱلْعَذَابِ وَلَن يُخْلِفَ ٱللَّهُ وَعْدَهُۥ ۚ وَإِنَّ يَوْمًا عِندَ رَبِّكَ كَأَلْفِ سَنَةٍۢ مِّمَّا تَعُدُّونَ.

22:47. இதனால் அவர்களுக்கு எச்சரிக்கை செய்தும், அந்த வேதனைகள் வரவில்லையே என்று அவர்கள் அவசரப்படுகிறார்கள். ஆனால் அல்லாஹ்வின் எச்சரிக்கைகள் எதுவும் ஒருபோதும் பொய்யாகாது என்பதை அவர்களிடம் எடுத்துரையுங்கள். எனவே அவர்களுடைய தவறான செயல்களின் விளைவுகள் ஏற்படுவது தவிர்க்க முடியாததாகும். ஆனால் அந்த விளைவுகள் தோற்றத்திற்கு வருவதற்கு நீண்ட காலம் ஆகிறது. எவ்வாறு இறைவனின் வானுலக செயல்திட்டங்கள் யுகங்கள் என்ற கால அளவுபடி செயல்படுகின்றதோ (பார்க்க 32:5) அது போல சமுதாயங்களில் வீழ்ச்சியும் நூற்றாண்டுகள் மற்றும் யுகங்கள் என்ற அடிப்படையிலேயே ஏற்படுகின்றன. (மேலும் விளக்கத்திற்குப் பார்க்க 2:259) இதுவே இறைவனின் நீண்ட கால செயல்திட்டங்களாகும்.
ஒரு சமுதாயம் தவறான வழியில் செயல்படும் போது, அது காலப் போக்கில் வீழ்ச்சி அடைவது தவிர்க்க முடியாததாகி விடுகிறது. தற்சமயம் அந்த அழிவின் அறிகுறிகள் அவர்கள் கண்ணெதிரே தோன்றாமல் இருக்கலாம். ஆனால் அந்த அழிவு ஏற்படாது என்று தப்பு கணக்கு போட வேண்டாம் என அவர்களிடம் எச்சரித்து விடுங்கள். எனவே தவறான செயல்களை விட்டுவிட்டு இறைவழிகாட்டுதலின் படி ஆக்கப்பூர்வமான செயல்களை செய்யும்படி அறிவுறுத்துங்கள். அவ்வாறு அவர்கள் திருந்தவில்லை என்றால்


وَكَأَيِّن مِّن قَرْيَةٍ أَمْلَيْتُ لَهَا وَهِىَ ظَالِمَةٌۭ ثُمَّ أَخَذْتُهَا وَإِلَىَّ ٱلْمَصِيرُ.

22:48. அநியாய செயல்களில் ஈடுபட்டிருந்த எத்தனையோ சமுதாயங்கள், அவர்கள் திருந்த வாய்ப்பு அளிக்கப்பட்ட பின், அழிவுகளின் பிடியில் சிக்கிக் கொண்டன என்பதையும், இறைவனின் இந்த பிடியிலிருந்து யாரும் தப்பவே முடியாது என்பதையும் அவர்களிடம் எடுத்துரையுங்கள்.


قُلْ يَٰٓأَيُّهَا ٱلنَّاسُ إِنَّمَآ أَنَا۠ لَكُمْ نَذِيرٌۭ مُّبِينٌۭ.

22:49. “ஓ மனித சமுதாயமே! இந்த எச்சரிக்கையை நான் உங்கள் அனைவரின் முன்பும் தெள்ளத் தெளிவாக எடுத்துரைப்பவனாகவே இருக்கிறேன்” என்று உலக மக்களுக்கு வெளிப்படையாக அறிவித்து விடுவீராக.


فَٱلَّذِينَ ءَامَنُوا۟ وَعَمِلُوا۟ ٱلصَّٰلِحَٰتِ لَهُم مَّغْفِرَةٌۭ وَرِزْقٌۭ كَرِيمٌۭ.

22:50. எனவே இந்த எச்சரிக்கையை செவி சாய்த்து, இறைவழிகாட்டுதலை ஏற்று, ஆக்கப்பூர்வமான சமூக நலத் திட்டங்களைத் தீட்டி, உழைத்து வரும் சமுதாயங்களுக்கு பாதுகாப்பான வாழ்வும், கண்ணியமிக்க வாழ்வாதரங்களும் தாராளமாகக் கிடைத்து வரும்.


وَٱلَّذِينَ سَعَوْا۟ فِىٓ ءَايَٰتِنَا مُعَٰجِزِينَ أُو۟لَٰٓئِكَ أَصْحَٰبُ ٱلْجَحِيمِ.

22:51. மாறாக, இறைவனின் சட்ட திட்டங்களுக்கு எதிராக செயல்பட்டு, சிறப்பான வாழ்வை பெற முடியும் என்று எண்ணினால், அது ஒருபோதும் முடியாது. இறுதியில் அவர்கள் வேதனை மிக்க வாழ்வையே பெறுவார்கள்.
இப்படி இறைவழிகாட்டுதலை எடுத்துரைத்து சீர்திருத்தங்களை செய்வதும், அவற்றை மக்களில் பெரும்பாலோர் ஏற்க மறுத்து அதற்கு எதிராக செயல்படுவதும், புதிதான ஒன்றல்ல. காலம் காலமாக ஒவ்வொரு இறைத்தூதர் மற்றும் சீர்திருத்தவாதிகள் விஷயத்திலும் இப்படித் தான் நடந்து வந்துள்ளன.


وَمَآ أَرْسَلْنَا مِن قَبْلِكَ مِن رَّسُولٍۢ وَلَا نَبِىٍّ إِلَّآ إِذَا تَمَنَّىٰٓ أَلْقَى ٱلشَّيْطَٰنُ فِىٓ أُمْنِيَّتِهِۦ فَيَنسَخُ ٱللَّهُ مَا يُلْقِى ٱلشَّيْطَٰنُ ثُمَّ يُحْكِمُ ٱللَّهُ ءَايَٰتِهِۦ ۗ وَٱللَّهُ عَلِيمٌ حَكِيمٌۭ.

22:52. இறைவழிகாட்டுதலை எடுத்துரைப்பவரே! உமக்கு முன் வந்த நபிமார்கள் அனைவரும், சமூக சீர்கேடுகளை நீக்கி சமுதாயத்தில் சமச்சீர் நிலையை கொண்டுவரவே பாடுபட்டனர். ஆனால் அங்கிருந்த சுயநலக்கார கூட்டத்தினர் அவர்களை எதிர்க்காமல் இருந்ததில்லை. எனினும் நபிமார்கள் சுயநலக்காரர்களின் இடையூறுகளை நீக்கி, அல்லாஹ்வின் வழிகாட்டுதலை உறுதிப்பட நிலைநிறுத்தினார்கள். இப்படியாகத் தான் காலம் காலமாக நடந்து வந்துள்ளது. இந்த விஷயங்கள் யாவும் அல்லாஹ்வுக்குத் தெரியாமல் இல்லை.


لِّيَجْعَلَ مَا يُلْقِى ٱلشَّيْطَٰنُ فِتْنَةًۭ لِّلَّذِينَ فِى قُلُوبِهِم مَّرَضٌۭ وَٱلْقَاسِيَةِ قُلُوبُهُمْ ۗ وَإِنَّ ٱلظَّٰلِمِينَ لَفِى شِقَاقٍۭ بَعِيدٍۢ.

22:53. இறைவழிகாட்டுதலின் படி சமுதாய சீர்திருத்தங்களைக் கொண்டுவர முயலும்போது, சுயநலத்தில் வேரூன்றிப் போனவர்களுக்கும், கடின சித்தமுள்ளவர்களுக்கும் பெரும் சோதனையாக அமைந்து விடுகிறது. இதனால் அவர்கள் இறைவழிகாட்டுதலின் படி ஆட்சியமைப்பு ஏற்படுவதை எதிர்த்து பகைவர்களாக மாறி விடுகிறார்கள். மேலும் அவர்களால் எந்த அளவுக்கு முடியுமோ அந்த அளவுக்கு இத்திட்டத்தை முறியடிக்கவே தீவிரமாக செயல்படுவார்கள்.
அதே போன்றுதான் இன்றைய கால கட்டத்திலும் இந்த குர்ஆனிய வழிகாட்டுதலின்படி சீர்திருத்தங்களை கொண்டுவர முயலும்போது, எதிர்ப்புகள் வருகின்றன. இது குறித்து காலஞ் சென்ற நபிமார்களின் வாழ்க்கை வரலாறுகள் இந்தக் குர்ஆனில் தெளிவாக தரப்பட்டுள்ளன. (பார்க்க 5:48) இதில் எவ்வித சிறு தவறும் ஏற்படவில்லை. ஏனெனில் இவற்றை இறைவனே இறக்கி அருளியதாகும் (பார்க்க 15:9) எனவே


وَلِيَعْلَمَ ٱلَّذِينَ أُوتُوا۟ ٱلْعِلْمَ أَنَّهُ ٱلْحَقُّ مِن رَّبِّكَ فَيُؤْمِنُوا۟ بِهِۦ فَتُخْبِتَ لَهُۥ قُلُوبُهُمْ ۗ وَإِنَّ ٱللَّهَ لَهَادِ ٱلَّذِينَ ءَامَنُوٓا۟ إِلَىٰ صِرَٰطٍۢ مُّسْتَقِيمٍۢ.

22:54. யாருக்கு வேத ஞானம் உள்ளதோ அவர்கள், இந்த வேதமான குர்ஆனும் இறைவனிடமிருந்து வந்தவையே என்பதை எவ்வித சந்தேகமும் இன்றி நன்கு உணர்ந்து, அதிலுள்ள வழிகாட்டுதல்கள் மீது நம்பிக்கை கொள்வார்கள். அது மட்டுமின்றி அவர்களுடைய உள்ளங்கள் இதிலுள்ள கட்டளைக்கு முற்றிலும் சிரம் பணிந்து செயல்படுவதாக உறுதிகொள்ளும். (பார்க்க 5:83-84) இப்படியாக இறைவழிகாட்டுதலை நம்பி ஏற்றுக்கொள்வோருக்கு அல்லாஹ்வின் புறத்திலிருந்து நேரான வழி கிடைத்து விடுகிறது.


وَلَا يَزَالُ ٱلَّذِينَ كَفَرُوا۟ فِى مِرْيَةٍۢ مِّنْهُ حَتَّىٰ تَأْتِيَهُمُ ٱلسَّاعَةُ بَغْتَةً أَوْ يَأْتِيَهُمْ عَذَابُ يَوْمٍ عَقِيمٍ.

22:55. இந்த பேருண்மைகளை ஏற்க மறுத்து அதற்கு எதிராக செயல்படுபவர்களுக்கு, நேர்வழி ஒருபோதும் கிடைக்காது. அதனால் அவர்கள் தவறான வழியிலேயே செயல்படுவார்கள். அதன் விளைவுகள் கொஞ்சம் கொஞ்சமாக ஏற்பட்டு அவை வேதனைகளாக திடீரென்று தோற்றத்திற்கு வரும். அதுவரையில் தமக்கு ஆபத்து எதுவும் வராது என்று மிதப்பிலேயே இருப்பார்கள்.
அதாவது தம்மை தட்டிக் கேட்க யாரும் இல்லை என்ற தைரியத்தில் அநியாய அக்கிரம செயல்களைத் தொடர்ந்து செய்து வரும்போது, அங்கு சமூக சீர்கேடுகள் ஏற்பட்டு கலகம் கலவரம் என்று விஸ்வரூபம் எடுக்கும். இதுதான் உலகில் நிகழ்ந்து வரும் உண்மையாகும். ஆனால் இப்போது இந்த குர்ஆனிய வழிகாட்டுதலின்படி சமூக அமைப்பு ஏற்படப் போகிறது. எனவே அந்த சமூக விஷமிகளை முறியடித்து அவர்களை அகற்றியே ஆகவேண்டும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.


ٱلْمُلْكُ يَوْمَئِذٍۢ لِّلَّهِ يَحْكُمُ بَيْنَهُمْ ۚ فَٱلَّذِينَ ءَامَنُوا۟ وَعَمِلُوا۟ ٱلصَّٰلِحَٰتِ فِى جَنَّٰتِ ٱلنَّعِيمِ.

22:56. அப்படிப்பட்ட கால கட்டத்தில், அதை எதிர்கொள்ள அவர்களால் ஒரு போதும் முடியாது. அல்லாஹ் நிலைநிறுத்தியுள்ள சட்ட விதிமுறைகளின் படியே நாட்டில் எல்லா தீர்ப்புகளும் வழங்கப்படும். மேலும் அல்லாஹ்வின் வழிகாட்டுதலை ஏற்று அதன்படி ஆக்கப்பூர்வமான நற்செயலை செய்வோருக்கு அழகிய, அமைதியான, பாதுகாப்பான, சுவனத்திற்கு ஒப்பான வாழ்வு கிடைக்கும். இந்த வாழ்வு அவர்களுடைய மரணத்திற்குப் பின்பும் தொடரும்.


وَٱلَّذِينَ كَفَرُوا۟ وَكَذَّبُوا۟ بِـَٔايَٰتِنَا فَأُو۟لَٰٓئِكَ لَهُمْ عَذَابٌۭ مُّهِينٌۭ.

22:57. இதற்கு மாறாக எந்தச் சமுதாயம் இறைவழிகாட்டுதலை ஏற்க மறுத்து அவற்றை பொய்யாக்குமோ, அது நரக வேதனைகள் கொண்ட இழிவான சமுதாயமாகத் திகழும்.


وَٱلَّذِينَ هَاجَرُوا۟ فِى سَبِيلِ ٱللَّهِ ثُمَّ قُتِلُوٓا۟ أَوْ مَاتُوا۟ لَيَرْزُقَنَّهُمُ ٱللَّهُ رِزْقًا حَسَنًۭا ۚ وَإِنَّ ٱللَّهَ لَهُوَ خَيْرُ ٱلرَّٰزِقِينَ.

22:58. மேலும் அல்லாஹ்வின் ஆட்சியமைப்பை கட்டிக் காக்கும் செயல்வீரர்கள், மரணத்தைப் பற்றியோ அல்லது கொல்லப்படுவதைப் பற்றியோ கவலைப்பட வேண்டியதில்லை. ஏனெனில் அவர்களுக்கு சிறப்பான வாழ்வு கிடைக்க அல்லாஹ்வின் புறத்திலிருந்து எல்லா ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. மேலும் மரணத்திற்குப் பின்பும் அவர்கள் வளர்ச்சி படித்தரங்களைக் கடந்து, சிறப்பான வாழ்வை பெறுவது உறுதி. அல்லாஹ்வின் இச்செயல்திட்டம் மகத்தானவையே என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. (மேலும் பார்க்க 2:154)


لَيُدْخِلَنَّهُم مُّدْخَلًۭا يَرْضَوْنَهُۥ ۗ وَإِنَّ ٱللَّهَ لَعَلِيمٌ حَلِيمٌۭ.

22:59. மேலும் அத்தகையவர்கள் விரும்பும் இடங்களுக்கெல்லாம் செல்ல வசதி வாய்ப்புகள் கிடைத்து வரும். இப்படியாக அல்லாஹ்வின் செயல்திட்டங்கள் யாவும் ஞானத்தின் அடிப்படையிலேயே உள்ளவையாகும். அதே சமயத்தில் விவேகத்துடனும் செயல்படக் கூடியவையாகும்.
ஆக போர் தொடுக்க அனுமதி அளிக்கப்பட்டதன் நோக்கம் (பார்க்க 22:39) யாரையும் துன்பறுத்தவோ அல்லது ஆக்கிரமிப்பு செய்யவோ அல்ல. அநியாய அக்கிரமங்களை ஒடுக்கத்தான் அனுமதி அளிக்கப்பட்டது.


۞ ذَٰلِكَ وَمَنْ عَاقَبَ بِمِثْلِ مَا عُوقِبَ بِهِۦ ثُمَّ بُغِىَ عَلَيْهِ لَيَنصُرَنَّهُ ٱللَّهُ ۗ إِنَّ ٱللَّهَ لَعَفُوٌّ غَفُورٌۭ.

22:60. ஆக எந்த அளவுக்கு பகைவர்கள் அத்து மீறி தீங்கிழைத்தார்களோ, அந்த அளவே இறைவனின் ஆட்சியமைப்பு அவர்களை தண்டிக்கும். பகைவர்கள் தீங்கிழைப்பதில் ஓயவில்லை என்றால் இறைவனின் ஆட்சியமைப்பும் அவர்களை ஒடுக்கி வைக்க கடுமையான நடவடிக்கை தொடர்ந்து எடுக்கும். அல்லாஹ்வின் சட்டதிட்டங்கள் யாவும் அநியாய அக்கிரமங்களை ஒடுக்கி பாதுகாப்பான வாழ்விற்கே துணை நிற்கும்.
ஒரு நாடோ அல்லது சமுதாயமோ ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு, அக்கிரமங்களை சகித்துக் கொண்டிருந்தால் அதற்கு விடிவுகாலமே பிறக்காது என்பதல்ல. அல்லாஹ்வின் நடைமுறைச் சட்டம் அங்கு நிச்சயமாக மாற்றத்தை ஏற்படுத்தும்.


ذَٰلِكَ بِأَنَّ ٱللَّهَ يُولِجُ ٱلَّيْلَ فِى ٱلنَّهَارِ وَيُولِجُ ٱلنَّهَارَ فِى ٱلَّيْلِ وَأَنَّ ٱللَّهَ سَمِيعٌۢ بَصِيرٌۭ.

22:61. எனவே எவ்வாறு இருள் சூழ்ந்த நிலை மாறி வெளிச்சம் ஏற்படுகிறதோ, மேலும் எவ்வாறு வெளிச்சத்துடன் இருக்கும் பகலை இருள் சூழ்ந்து கொள்கிறதோ, அவ்வாறே அக்கிரமம் செய்யப்பட்டவர்களுக்கு விடுவுகாலம் பிறக்கும். அக்கிரம் செய்பவர்களின் வாழ்வில் இருள் சூழ்ந்து கொள்ளும். ஆக உலகில் நிகழ்ந்து வரும் அனைத்து விஷயங்களையும் கேட்கும் வல்லமையும், அறிந்து கொள்ளும் வல்லமையும் அல்லாஹ்வுக்கு நிச்சயம் உண்டு என்பதை நினைவில் கொள்ளுங்கள்.


ذَٰلِكَ بِأَنَّ ٱللَّهَ هُوَ ٱلْحَقُّ وَأَنَّ مَا يَدْعُونَ مِن دُونِهِۦ هُوَ ٱلْبَٰطِلُ وَأَنَّ ٱللَّهَ هُوَ ٱلْعَلِىُّ ٱلْكَبِيرُ.

22:62. ஆக இறைவனின் செயல்திட்டங்கள் யாவும் ஆக்கப்பூர்வமான பலன்களை தரக்கூடியதாகவே உள்ளன. எனவே இறைவழிகாட்டுதலை விட்டுவிட்டு மற்ற கற்பனை தெய்வங்களை உதவிக்கு அழைத்துக் கொண்டிருப்பது, அழிவை ஏற்படுத்தக் கூடியதாகவே உள்ளது. மாறாக அல்லாஹ்வின் வழிகாட்டுதல்கள் உலக மக்கள் அனைவரையும் உயர் நிலைக்கு அழைத்து செல்லக் கூடியதாகவே உள்ளன.


أَلَمْ تَرَ أَنَّ ٱللَّهَ أَنزَلَ مِنَ ٱلسَّمَآءِ مَآءًۭ فَتُصْبِحُ ٱلْأَرْضُ مُخْضَرَّةً ۗ إِنَّ ٱللَّهَ لَطِيفٌ خَبِيرٌۭ.

22:63. இறைவனின் செயல்திட்டப்படி வானத்திலிருந்து மழை பொழிவதை நீங்கள் பார்ப்பதில்லையா? அந்த மழை நீரைக் கொண்டு வறண்ட பூமி பசுமையாகி விடுவதை நீங்கள் கவனிப்பதில்லையா? அதுபோலத் தான் இறை வழிகாட்டுதல்கள் இன்றி வாடி வதங்கிப் போயிருக்கும் சமுதாயத்தை புதுப் பொலிவுடன் வாழ இவ்வேதம் வழிவகுக்கின்றன. அல்லாஹ்வின் செயல் திட்டங்கள் மிகமிக நுணுக்கத்துடன் செயல்படக் கூடியதாகவே உள்ளன என்பதை அறிந்து கொள்ளுங்கள்.


لَّهُۥ مَا فِى ٱلسَّمَٰوَٰتِ وَمَا فِى ٱلْأَرْضِ ۗ وَإِنَّ ٱللَّهَ لَهُوَ ٱلْغَنِىُّ ٱلْحَمِيدُ.

22:64. சுருங்கச் சொன்னால் வானங்கள் மற்றும் பூமியில் உள்ளவை அனைத்தும் அல்லாஹ்வின் செயல்திட்டங்களை நிறைவேற்றவே செயல்பட்டு வருகின்றன. ஆனால் அல்லாஹ் யாரையும் சார்ந்து இல்லை. அந்த அளவுக்கு அவனுடைய வல்லமை பெருமைக்கும் போற்றுதலுக்கும் உரியதாகும்.


أَلَمْ تَرَ أَنَّ ٱللَّهَ سَخَّرَ لَكُم مَّا فِى ٱلْأَرْضِ وَٱلْفُلْكَ تَجْرِى فِى ٱلْبَحْرِ بِأَمْرِهِۦ وَيُمْسِكُ ٱلسَّمَآءَ أَن تَقَعَ عَلَى ٱلْأَرْضِ إِلَّا بِإِذْنِهِۦٓ ۗ إِنَّ ٱللَّهَ بِٱلنَّاسِ لَرَءُوفٌۭ رَّحِيمٌۭ.

22:65. அல்லாஹ்வின் அதே செயல் திட்டத்தின்படி, பூமியில் உள்ள ஒவ்வொரு படைப்பையும் மனிதன் பயன்படுத்திக் கொள்ளும் படியாகவே படைக்கப்பட்டுள்ளன. உதாரணத்திற்கு கடலில் பாய்ந்து செல்லும் கப்பல்கள் எவ்வாறு உங்களுக்கு பலனுள்ளதாக இருக்கின்றன என்பதை கவனியுங்கள். மேலும் பூமியைச் சுற்றி, பரந்து விரிந்து கிடக்கும் வானத்தைப் பாருங்கள்? அது பூமியில் விழாதவாறு பாதுகாப்பாக இல்லையா? நிச்சயமாக அல்லாஹ்வின் செயல் திட்டங்கள் அனைத்துத் தரப்பு மக்களின் நலனை காக்கும் பேராற்றல் உடையதாகவே உள்ளன. இதையே அல்லாஹ்வின் அளவற்ற கருணையின் பிரதிபலிப்பாக இருக்கிறது.
ஆதி முதல் இன்று வரையில் அல்லாஹ்வின் கொள்கை கோட்பாடுகளில் எந்த மாற்றமும் இருந்ததில்லை. அவற்றை எடுத்துரைத்த நபிமார்களும் ஒரே மார்க்கத்தைத் தான் கொண்டுவந்தார்கள். (பார்க்க 42:13) ஆனால் அவற்றை நடைமுறைப் படுத்தும் போது, கால சூழ்நிலைக்கு ஏற்றவாறு அவை மாறிவரும். உதாரணத்திற்கு எண்ணெய் வளம் மிக்க நாடுகளில் மக்களிடம் வரியை வசூலிக்க அந்நாட்டு அரசுக்கு அவசியம் இருக்காது. அதே சமயத்தில் மற்ற நாடுகளில் வரியை விதித்து தான் ஆக வேண்டும் என்ற நிலை இருக்கும். எது எப்படி இருந்தாலும் அனைத்து தரப்பு மக்களுக்கும் அடிப்படை வசதிகளை செய்து தருவதே ஒவ்வொரு நாட்டு அரசின் முக்கிய கடமையாகும். இப்படியாக


وَهُوَ ٱلَّذِىٓ أَحْيَاكُمْ ثُمَّ يُمِيتُكُمْ ثُمَّ يُحْيِيكُمْ ۗ إِنَّ ٱلْإِنسَٰنَ لَكَفُورٌۭ.

22:66. அல்லாஹ்வின் அதே சட்ட விதிமுறைகளின் படியே மனிதனுக்கு வாழ்வும் மரணமும் ஏற்படுகிறது. மனிதனின் வாழ்வு மரணத்திற்குப் பின்பும் தொடர்கிறது. அவன் செய்து வரும் செயல்களுக்கு அங்கும் கேள்விகணக்கு உண்டு. ஆனால் மனிதனோ அல்லாஹ்வின் இந்த செயல்திட்டத்தை ஏற்க மறுப்பவனாகவே இருக்கிறான்.
அவன் ஏற்க மறுப்பதால் மரணத்திற்குப் பின் கேள்வி கணக்கு இல்லை என்று ஆகிவிடுமா? அல்லாஹ்வின் இதே சட்ட விதிமுறைகளின் படி சமுதாயத்தின் வளர்ச்சியும் வீழ்ச்சியும் நடைபெற்று வருகின்றன. எனவே


لِّكُلِّ أُمَّةٍۢ جَعَلْنَا مَنسَكًا هُمْ نَاسِكُوهُ ۖ فَلَا يُنَٰزِعُنَّكَ فِى ٱلْأَمْرِ ۚ وَٱدْعُ إِلَىٰ رَبِّكَ ۖ إِنَّكَ لَعَلَىٰ هُدًۭى مُّسْتَقِيمٍۢ.

22:67. ஒவ்வொரு சமூகத்தவருக்கும் சிறப்பாக வாழ்வதற்கான வழிமுறைகள் செய்து தரப்பட்டன. அவற்றை அவர்கள் தம் கலாச்சாரமாக பின்பற்றி வருகின்றனர். அதில் யாருக்கும் எந்த பிணக்கும் இருக்க வேண்டிய அவசியமில்லை. இப்போது இந்த குர்ஆனிய வழிகாட்டுதலின் அடிப்படையில் சமூக அமைப்பை உருவாக்க கட்டளை வந்துள்ளது. எனவே முழுமையான மார்க்கத்தை எடுத்துரைக்கும் இறைவழிகாட்டுதலின் பக்கம் நீங்கள் அழைப்பு விடுங்கள். ஏனெனில் நீங்கள்தான் நேரான பாதையில் இருக்கிறீர்கள்.
அதாவது ஒவ்வொரு சமுதாயமும் தமக்கே உரிய கலாச்சாரத்தை பின்பற்றி வருகிறது. அவை நாட்டு மக்களின் சுமுகமான வாழ்விற்கு உதவிகரமாக இருக்கின்றனவா என்பதைத்தான் கவனிக்க வேண்டும். அவை பாதிப்புகளை விளைவிப்பதாக இருந்தால் அவற்றை நீக்கிவிட வேண்டும்.


وَإِن جَٰدَلُوكَ فَقُلِ ٱللَّهُ أَعْلَمُ بِمَا تَعْمَلُونَ.

22:68. இதையும் மீறி அவர்கள் இது குறித்து தர்க்கம் செய்வதாக இருந்தால் அவர்களிடம், “மனித செயல்களுக்கு ஏற்ற விளைவுகள்” என்ற அல்லாஹ்வின் சட்டம் உங்கள் செயல்களை கண்காணித்துக் கொண்டே வருகிறது என்று கூறிவிடுங்கள்.


ٱللَّهُ يَحْكُمُ بَيْنَكُمْ يَوْمَ ٱلْقِيَٰمَةِ فِيمَا كُنتُمْ فِيهِ تَخْتَلِفُونَ.

22:69. எனவே அல்லாஹ்வின் இந்தச் சட்ட விதிமுறைகளின் படி உங்களுடைய செயல்களின் விளைவுகள் தோற்றத்திற்கு வரும் கால கட்டத்தில், நீங்கள் எது விஷயமாக முரண்பட்டுக் கொண்டிருந்தீர்களோ, அதைப்பற்றிய சரியான தீர்ப்பு கிடைத்து விடும்.


أَلَمْ تَعْلَمْ أَنَّ ٱللَّهَ يَعْلَمُ مَا فِى ٱلسَّمَآءِ وَٱلْأَرْضِ ۗ إِنَّ ذَٰلِكَ فِى كِتَٰبٍ ۚ إِنَّ ذَٰلِكَ عَلَى ٱللَّهِ يَسِيرٌۭ.

22:70. ஏனெனில் வானத்திலும் பூமியிலும் நடக்கும் அனைத்து விஷயங்களைப் பற்றியும் அல்லாஹ்வுக்கு நன்கு தெரியும் என்பதை நீர் அறியவில்லையா? இவற்றில் உள்ள ஒவ்வொரு படைப்பின் செயல்பாடுகளைப் பற்றியும் விதிமுறைகளை நிர்ணயித்தது அல்லாஹ் தான். அதன்படி விளைவுகளை ஏற்படுத்தியே தீரும். இப்படி படைப்பதில் அல்லாஹ்வுக்கு எந்த சிரமும் இருப்பதில்லை.


وَيَعْبُدُونَ مِن دُونِ ٱللَّهِ مَا لَمْ يُنَزِّلْ بِهِۦ سُلْطَٰنًۭا وَمَا لَيْسَ لَهُم بِهِۦ عِلْمٌۭ ۗ وَمَا لِلظَّٰلِمِينَ مِن نَّصِيرٍۢ.

22:71. எனவே அல்லாஹ்வின் வழிகாட்டுதலை விட்டுவிட்டு, அவர்கள் வணங்கி வரும் கற்பனை தெய்வங்களைக் குறித்து அல்லாஹ்விடமிருந்து எவ்வித ஆதாரமும் இறக்கி அருளப்படவில்லை. அது மட்டுமின்றி அந்த கற்பனை தெய்வங்களுக்கே இதைப் பற்றி எவ்வித ஞானமும் இல்லை. இத்தகைய அநியாயக்காரர்களுக்கு உதவி செய்வோர் எவரும் இருக்கவும் மாட்டார்கள்.
அல்லாஹ்வின் வழிகாட்டுதலை ஏற்றுக்கொள்ள அறிவுறுத்தும் போது, அது அவர்களுடைய வழிப்பாடுகளுக்கு எதிராக இருக்கிறது. அவர்கள் வணங்கிவரும் தெய்வ வழிபாட்டை விட்டுவிட சொல்கிறது. இதனால் அவர்களிடமிருந்து எதிர்ப்புகள் வலுத்து, அவர்கள் அநியாய செயலில் ஈடுபடுகின்றனர். இஸ்லாமிய ஆட்சியமைப்பு நிலைநிறுத்தப்படும் கால கட்டத்தில் இத்தகையவர்களுக்கு ஆதரவு கிடைக்காது.


وَإِذَا تُتْلَىٰ عَلَيْهِمْ ءَايَٰتُنَا بَيِّنَٰتٍۢ تَعْرِفُ فِى وُجُوهِ ٱلَّذِينَ كَفَرُوا۟ ٱلْمُنكَرَ ۖ يَكَادُونَ يَسْطُونَ بِٱلَّذِينَ يَتْلُونَ عَلَيْهِمْ ءَايَٰتِنَا ۗ قُلْ أَفَأُنَبِّئُكُم بِشَرٍّۢ مِّن ذَٰلِكُمُ ۗ ٱلنَّارُ وَعَدَهَا ٱللَّهُ ٱلَّذِينَ كَفَرُوا۟ ۖ وَبِئْسَ ٱلْمَصِيرُ.

22:72. மேலும் அவர்களிடம் இறைவழிகாட்டுதலை தெளிவான முறையில் எடுத்துரைத்தால், அவர்களுக்கு வெறுப்பையே அதிகமாக்குகிறது. அவர்களுடைய முகங்களே அந்த வெறுப்பை காட்டிக் கொடுக்கிறது. இறைவழிகாட்டுதலை எடுத்துரைப்பவரை சாகடித்து விடலாமா என்ற அளவிற்கு அவர்களுக்கு கோபம் வருகிறது. அவர்களிடம், “இதைவிட எப்படிப்பட்ட கொடூரமான நிலை உங்களுக்கு ஏற்படப் போகிறது என்பதை அறிவிக்கட்டுமா? அதுதான் நெருப்பாலான நரக வேதனைகளாகும். இறைவழிகாட்டுதலை ஏற்க மறுத்து அநியாய செயல்களில் ஈடுபடுவோருக்கு அவை சித்தப் படுத்தப்பட்டுள்ளன. இத்தகைய இடங்களில் தள்ளப்படுவது நல்ல இடமா என்பதை நீங்களே சற்று சிந்தித்துப் பாருங்கள்” என்று கூறிவிடுவீராக.


يَٰٓأَيُّهَا ٱلنَّاسُ ضُرِبَ مَثَلٌۭ فَٱسْتَمِعُوا۟ لَهُۥٓ ۚ إِنَّ ٱلَّذِينَ تَدْعُونَ مِن دُونِ ٱللَّهِ لَن يَخْلُقُوا۟ ذُبَابًۭا وَلَوِ ٱجْتَمَعُوا۟ لَهُۥ ۖ وَإِن يَسْلُبْهُمُ ٱلذُّبَابُ شَيْـًۭٔا لَّا يَسْتَنقِذُوهُ مِنْهُ ۚ ضَعُفَ ٱلطَّالِبُ وَٱلْمَطْلُوبُ.

22:73. உலக மக்களே! வாருங்கள். உங்களுக்கு ஒரு உதாரணத்தின் மூலம் உண்மையை விளக்குகிறோம். அல்லாஹ்வை விட்டுவிட்டு யாரை நீங்கள் தெய்வங்களாக பாவித்து வழிபட்டு வருகிறீர்களோ, அவை அனைத்தும் ஒன்று சேர்ந்து ஒர் ஈயைக்கூட படைக்க முடியாது. அதுமட்டுமின்றி அவற்றின் இயலாமையை பற்றியும் தெரிந்து கொள்ளுங்கள். அந்த ஈ ஒரு பொருளை பறித்துக் கொண்டு போனாலும், அவற்றால் அந்த பொருளை விடுவிக்கவும் முடியாது. இந்த அளவுக்கு பலவீனமாக இருப்பவற்றிடம் நீங்கள் உங்கள் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள வேண்டிக் கொண்டிருக்கிறீர்களே!


مَا قَدَرُوا۟ ٱللَّهَ حَقَّ قَدْرِهِۦٓ ۗ إِنَّ ٱللَّهَ لَقَوِىٌّ عَزِيزٌ.

22:74. உண்மை விஷயம் என்னவென்றால் அவர்கள் அல்லாஹ்வைப் பற்றியோ அவனுடைய வல்லமைப் பற்றியோ சரியாக கணிக்கவே இல்லை. இதனால்தான் அவர்கள் இத்தகைய வழிபாடுகளில் மூழ்கிக் கிடக்கின்றனர். ஆனால் அல்லாஹ்வின் அளவிலா வல்லமையோ அவர்கள் கற்பனைக்கு எட்டாத அளவுக்கு விசாலமாக உள்ளது.
இப்போது எஞ்சி நிற்பது அவர்கள் வணங்கி வரும் காலம் சென்ற நபிமார்கள் மற்றும் மலக்குகளைப் பற்றிய விஷயங்களாகும். அவை யாவும் அல்லாஹ்வின் வழிகாட்டுதலை மக்களுக்கு சமர்ப்பிக்கும் ஏற்பாடுகளே ஆகும்.


ٱللَّهُ يَصْطَفِى مِنَ ٱلْمَلَٰٓئِكَةِ رُسُلًۭا وَمِنَ ٱلنَّاسِ ۚ إِنَّ ٱللَّهَ سَمِيعٌۢ بَصِيرٌۭ.

22:75. அல்லாஹ் மலக்குகளிலிருந்தும், மனிதர்களிலிருந்தும் தூதுச் செய்திகளைச் உலக மக்களுக்கு சமர்ப்பிக்க தேர்ந்தெடுத்துக் கொண்டான். நிச்சயமாக அல்லாஹ் அனைத்தையும் கேட்டு தெரிந்து கொள்ளும் அளவற்ற வல்லமை உடையவன்.
மலக்குகள் என்பது பிரபஞ்ச இயற்கை சக்திகளாகும். அதில் மொழி மற்றும் அதன் ஓசையும் அடங்கும்.


يَعْلَمُ مَا بَيْنَ أَيْدِيهِمْ وَمَا خَلْفَهُمْ ۗ وَإِلَى ٱللَّهِ تُرْجَعُ ٱلْأُمُورُ.

22:76. எனவே அவர்கள் கண்ணெதிரே நடக்கின்ற விஷயங்களும், அவர்களுக்கு பின்னால் நடக்கின்ற விஷயங்களும் அல்லாஹ்வுக்கு தெரியாமல் போவதில்லை. அது மட்டுமின்றி மனிதனின் ஒவ்வொரு செயலும் அல்லாஹ் நிர்ணயித்த இலக்கின்படியே விளைவுகளை ஏற்படுத்தும்.


يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟ ٱرْكَعُوا۟ وَٱسْجُدُوا۟ وَٱعْبُدُوا۟ رَبَّكُمْ وَٱفْعَلُوا۟ ٱلْخَيْرَ لَعَلَّكُمْ تُفْلِحُونَ ۩.

22:77. இறைவழிகாட்டுதலை மனதார ஏற்றுக்கொண்டவர்களே! நீங்கள் அனைவரும் அல்லாஹ்வின் அறிவுரைகளுக்கு தலை வணங்கி அதன்படி செயல்பட்டு வாருங்கள். சுருங்கச் சொன்னால் அல்லாஹ்வின் கட்டளைக்கு மட்டும் அடிபணிந்து செயல்படுங்கள். மேலும் சமூக நலப் பணிகளில் தொடர்ந்து செயலாற்றுங்கள். இந்த வழிமுறைகளால் மட்டுமே நீங்கள் உங்கள் வெற்றி இலக்கை அடைவீர்கள்.


وَجَٰهِدُوا۟ فِى ٱللَّهِ حَقَّ جِهَادِهِۦ ۚ هُوَ ٱجْتَبَىٰكُمْ وَمَا جَعَلَ عَلَيْكُمْ فِى ٱلدِّينِ مِنْ حَرَجٍۢ ۚ مِّلَّةَ أَبِيكُمْ إِبْرَٰهِيمَ ۚ هُوَ سَمَّىٰكُمُ ٱلْمُسْلِمِينَ مِن قَبْلُ وَفِى هَٰذَا لِيَكُونَ ٱلرَّسُولُ شَهِيدًا عَلَيْكُمْ وَتَكُونُوا۟ شُهَدَآءَ عَلَى ٱلنَّاسِ ۚ فَأَقِيمُوا۟ ٱلصَّلَوٰةَ وَءَاتُوا۟ ٱلزَّكَوٰةَ وَٱعْتَصِمُوا۟ بِٱللَّهِ هُوَ مَوْلَىٰكُمْ ۖ فَنِعْمَ ٱلْمَوْلَىٰ وَنِعْمَ ٱلنَّصِيرُ.

22:78. மேலும் அல்லாஹ்வின் வழிகாட்டுதலின் படி, ஒட்டுமொத்த மக்களின் நலனைக் காக்க ஏற்படுத்தப்பட்டுள்ள ஆட்சியமைப்பு சிறப்பாக செயல்படும் வகையில் அயராமல் செயல்பட்டு வாருங்கள். இத்தகைய உயர் நோக்கங்களுக்காவே உங்களை அல்லாஹ் தேர்ந்தெடுத்துள்ளான். இந்த மார்க்கத்தில் இணைந்து சிரமப்பட வேண்டி இருக்கிறதே என்று எண்ணிக் கொள்ளாதீர்கள். இவையாவும் உங்கள் நன்மைக்காகவே சொல்லப்படுகின்றன. (பார்க்க 2:286)
இதுவே உங்களின் மூத்த தலைவராகிய இப்றாஹீம் நபியின் வழிமுறையும் ஆகும். அவர் கடைப்பிடித்து வந்த வழிமுறை புதிதான ஒன்றல்ல. அனைத்து தரப்பு மக்களின் நலலைப் பேணிக்காக்கும் ‘இஸ்லாம்’ என்பதே அதன் பெயராகும். இத்தகைய நோக்கங்களுடன் இதற்குமுன் பாடுபட்ட செயல்வீரர்களும் ‘முஸ்லிம்’ என்ற பெயரிலேயே அழைக்கப்பட்டார்கள். இந்த இறைவேதமான குர்ஆனிலும் இவர்களுக்கு இதே பெயரைச் சூட்டுகிறது. இத்தகைய சிறப்பான ஆட்சியமைப்பைக் கட்டிக்காக்கும் பொறுப்பை இறைத்தூதர் ஏற்றுக்கொள்கிறார்.
அவருக்குப் பின் ஆட்சி பொறுப்பை ஏற்றுக்கொண்டவர்கள் இறையாட்சியை பேணிப் பாதுகாப்பார்கள். (பார்க்க 3:144) இதற்காக மக்களை தவறான வழியை விட்டு தடுத்து நன்மையின் பக்கம் அழைக்கும் ‘ஸலாத்’ முறைக்கு ஏற்பாடு செய்யுங்கள். (பார்க்க 29:45 & 3:110) மேலும் சமுதாய வளர்ச்சிக்காக உதவியும் செய்து வாருங்கள். இப்படியாக அனைவரும் ஒருங்கிணைந்து சமூக நலனை நோக்கமாகக் கொண்டு உழைத்து வாருங்கள் (மேலும் பார்க்க 3:103) அப்போது தான் உங்கள் அனைவருக்கும் பாதுகாப்பான வாழ்வு நிரந்தரமாகக் கிடைக்கும். ஏனெனில் இறைவனின் செயல்திட்டங்களே சிறந்த பாதுகாப்பும் உதவியும் தரக் கூடியவையாக உள்ளன.