بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
21:0.அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் அறிவுரைப்படியே அனைத்துக் காரியங்களையும் செய்ய நாடுகிறேன். (பார்க்க 6:162)
ٱقْتَرَبَ لِلنَّاسِ حِسَابُهُمْ وَهُمْ فِى غَفْلَةٍۢ مُّعْرِضُونَ.
21:1. உலக மக்கள் யாவரும் அவரவர் விருப்பப்படி செயல்பட்டு வருகிறார்கள். அதன் விளைவுகள் தோற்றத்திற்கு வரும் காலம் விரைந்து வருகின்றன என்பதைப் பற்றி யாரும் கவலைப் படுவதில்லை. இறைவன் காட்டிய நேரான பாதையை விட்டுவிட்டு தவறான வழியிலேயே செயல்படுகிறார்கள்.
مَا يَأْتِيهِم مِّن ذِكْرٍۢ مِّن رَّبِّهِم مُّحْدَثٍ إِلَّا ٱسْتَمَعُوهُ وَهُمْ يَلْعَبُونَ.
21:2. இறைவனிடமிருந்து புதிய அணுகுமுறையுடன் அறிவுரைகள் வரும்போதும், அவர்கள் அதைப் பற்றி ஆழ்ந்து சிந்தித்துப் பார்ப்பதில்லை. அவற்றை எல்லாம் விளையாட்டாகவே எடுத்துக் கொள்கிறார்கள்.
لَاهِيَةًۭ قُلُوبُهُمْ ۗ وَأَسَرُّوا۟ ٱلنَّجْوَى ٱلَّذِينَ ظَلَمُوا۟ هَلْ هَٰذَآ إِلَّا بَشَرٌۭ مِّثْلُكُمْ ۖ أَفَتَأْتُونَ ٱلسِّحْرَ وَأَنتُمْ تُبْصِرُونَ.
21:3. அப்படியும் அவற்றை கேட்டாலும், அவர்களுடைய உள்ளங்கள் அலட்சியத்தில் இருந்து விடுகின்றன. இறைவனின் அறிவுரைகளுக்கு தர வேண்டிய முக்கியத்துவத்தை அவர்கள் கொடுப்பதில்லை. அதுமட்டுமின்றி அவர்கள், “இவர் உங்களைப் போன்ற ஒரு சாதாரண மனிதராகவே இருக்கிறாரே! இதை அறிந்தும், நீங்கள் அவருடைய பேச்சில் ஏமாறப் போகிறீர்களா?” என்று தம்மிடையே இரகசியமாகப் பேசிக் கொள்கின்றனர்.
قَالَ رَبِّى يَعْلَمُ ٱلْقَوْلَ فِى ٱلسَّمَآءِ وَٱلْأَرْضِ ۖ وَهُوَ ٱلسَّمِيعُ ٱلْعَلِيمُ.
21:4. “என்னுடைய இறைவன், வானங்களிலும் பூமியிலும் பேசப்பட்டு வரும் அனைத்து விஷயங்களையும் நன்கறிந்து கொள்ளும் பேராற்றலுடையவன் ஆவான். மேலும் அவன் யாவற்றையும் செவியுறுவனாகவும் அறிபவனாகவும் இருக்கிறான்” என்ற உண்மையை சமுதாய மக்களுக்கு இறைத்தூதர்கள் எடுத்துரைத்தனர்.
بَلْ قَالُوٓا۟ أَضْغَٰثُ أَحْلَٰمٍۭ بَلِ ٱفْتَرَىٰهُ بَلْ هُوَ شَاعِرٌۭ فَلْيَأْتِنَا بِـَٔايَةٍۢ كَمَآ أُرْسِلَ ٱلْأَوَّلُونَ.
21:5. அதற்கு அச்சமுதாய மக்கள் இறைத் தூதரைப் பற்றி கூறுகையில், "அப்படியல்ல. இவர் மிகவும் குழம்பி போய் இருக்கிறார். இவரே கற்பனை செய்து கொண்டு இறைவழிகாட்டுதல்கள் என்று ஏதேதோ சொல்லி வருகிறார்” என்று பலர் பலவாறாக பேசி வருகின்றனர். சிலர், “இவர் ஒரு கவிஞர்தான்” என்கின்றனர். ஆனால் உண்மையில் இறை நிராகரிப்பவர்களே குழம்பி போயுள்ளனர். இதற்கு முன்வந்த நபிமார்கள் அற்புதத்தை நிகழ்த்தி காட்டியது போல் இவரும் நம்மிடம் நிகழ்த்தி காட்டிருக்கக் கூடாதா? என்று அவர்களில் சிலர் கேட்கின்றனர்.
இதுதான் ஆதி முதல் எல்லா நபிமார்கள் விஷயத்திலும் நடந்த உண்மை விஷயமாகும். இதற்கு முன்பும் எத்தனையோ சமுதாயத்தினர் இவ்வாறு எதிர்மறையாகப் பேசி
مَآ ءَامَنَتْ قَبْلَهُم مِّن قَرْيَةٍ أَهْلَكْنَٰهَآ ۖ أَفَهُمْ يُؤْمِنُونَ.
21:6. இறைவழிகாட்டுதலை ஏற்காமல் இறைவனின் நியதிப்படி அழிவை சந்தித்துக் கொண்டனர். இதை பற்றி அவர்களுக்கு ஆயிரம் முறை எடுத்துரைத்தாலும் அவர்கள் இறைவழிகாட்டுதலை ஏற்றுக் கொள்வதாக இல்லை.
وَمَآ أَرْسَلْنَا قَبْلَكَ إِلَّا رِجَالًۭا نُّوحِىٓ إِلَيْهِمْ ۖ فَسْـَٔلُوٓا۟ أَهْلَ ٱلذِّكْرِ إِن كُنتُمْ لَا تَعْلَمُونَ.
21:7. மேலும் இதற்கு முன் உலகிற்கு வந்த இறைத்தூதர்கள் யாவரும் மனிதர்களே அன்றி வேறில்லை. அவர்கள் வஹீ எனும் இறை செய்திகளைப் பெறும் ஆற்றல் உடையவர்களாக இருந்தார்கள். இந்த உண்மை உங்களுக்கு புரியவில்லை என்றால் இதற்கு முன்வந்த வேதமுடையவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.
وَمَا جَعَلْنَٰهُمْ جَسَدًۭا لَّا يَأْكُلُونَ ٱلطَّعَامَ وَمَا كَانُوا۟ خَٰلِدِينَ.
21:8. அது மட்டுமின்றி அந்த இறைத்தூதர்கள் யாவருக்கும் மற்ற மனிதர்களுக்கு இருப்பது போல் பசி, தாகம் என்று எல்லாமே இருந்தன. அவர்களும் இந்த உலகில் நிரந்தரமாக வாழ்ந்ததும் இல்லை.
ثُمَّ صَدَقْنَٰهُمُ ٱلْوَعْدَ فَأَنجَيْنَٰهُمْ وَمَن نَّشَآءُ وَأَهْلَكْنَا ٱلْمُسْرِفِينَ.
21:9. மேலும் இறைவழிகாட்டுதலைப் பேணி நடக்கும் சமூகத்தவர்களுக்கு பாதுகாப்பான வாழ்வு கிடைக்கும் என்று இறைத்தூதர்கள் மூலமாக அளிக்கப்பட்ட வாக்கும் நிறைவேறி வந்தன. அதற்கு எதிராக வரம்பு மீறி நடந்த சமுதாயங்கள் அழிந்தும் இருக்கின்றன.
لَقَدْ أَنزَلْنَآ إِلَيْكُمْ كِتَٰبًۭا فِيهِ ذِكْرُكُمْ ۖ أَفَلَا تَعْقِلُونَ.
21:10. அதே அடிப்படையை கொண்ட இந்த வேதமாகிய குர்ஆனும் உங்களுக்கு அளிக்கப்படுகிறது. இதிலுள்ள அறிவுரைகளின்படி நீங்கள் செயல்பட்டால் உங்களுக்கும் கண்ணியம் மிக்க வாழ்வு கிடைக்கும். இதை பற்றி சிந்தித்து அதன்படி செயலாற்ற மாட்டீர்களா?
وَكَمْ قَصَمْنَا مِن قَرْيَةٍۢ كَانَتْ ظَالِمَةًۭ وَأَنشَأْنَا بَعْدَهَا قَوْمًا ءَاخَرِينَ.
21:11. உலக வரலாற்றை ஆராய்ந்து பார்க்க சொல்லுங்கள். இறைவழிகாட்டுதலுக்கு மாற்றமாக செயல்பட்ட எத்தனையோ சமுதாயங்கள் அழிந்தே இருக்கின்றன என்ற உண்மையை அவர்கள் அறிந்து கொள்வார்கள். அவர்களுடைய அழிவுக்குப் பின் எஞ்சி இருந்தவர்கள் மீண்டும் ஒரு சமுதாயமாக உருவெடுத்தார்கள்.
فَلَمَّآ أَحَسُّوا۟ بَأْسَنَآ إِذَا هُم مِّنْهَا يَرْكُضُونَ.
21:12. அவ்வாறு வேதனைகளைச் சந்தித்த வேளையில், அவர்கள் அதிலிருந்து தப்பித்து ஓடலனார்கள்.
அதாவது ஆரம்ப கால கட்டத்தில் அவர்களுடைய தவறான செயல்களின் விளைவுகள் உணர்ந்து கொள்ளும் வகையில் தோற்றத்திற்கு வருவதில்லை. உணரா வண்ணம் அந்த விளைவுகள் ஏற்பட்டு வரும். அதன்பின் அந்த விளைவுகள் வேதனைகளின் ரூபத்தில் வரும்போது, அதிலிருந்து தப்பிக்கும் வழிகளைத் தேடி அலைவார்கள்.
لَا تَرْكُضُوا۟ وَٱرْجِعُوٓا۟ إِلَىٰ مَآ أُتْرِفْتُمْ فِيهِ وَمَسَٰكِنِكُمْ لَعَلَّكُمْ تُسْـَٔلُونَ.
21:13. அந்த கட்டத்தில் ஓடி என்ன பயன்? தப்பித்து எங்கே செல்ல முடியும்? நீங்கள் எந்த இருப்பிடங்களில் சுகபோகங்களை அனுபவித்து வந்தீர்களோ, அதே இடத்திற்குத் திரும்பிச் செல்லுங்கள். உங்களுக்கு கிடைத்திருந்த அருட்கொடைகள் யாருடைய உழைப்பிலிருந்து உங்களுக்கு கிடைத்தன என்பதைப் பற்றியும் அவற்றை நீங்கள் எவ்வாறு பயன்படுத்தி வந்தீர்கள் என்பதைப் பற்றியும் கேட்கப்படும். (மேலும் பார்க்க 102:8)
قَالُوا۟ يَٰوَيْلَنَآ إِنَّا كُنَّا ظَٰلِمِينَ.
21:14. அப்போது அவர்கள், “அடப்பாவமே! நாங்கள் உண்மையிலேயே அநியாயக் காரர்களாகவே இருந்தோமே!” என்று வேறு வழியின்றி தம் தவறை ஒப்புக் கொள்வார்கள்.
فَمَا زَالَت تِّلْكَ دَعْوَىٰهُمْ حَتَّىٰ جَعَلْنَٰهُمْ حَصِيدًا خَٰمِدِينَ.
21:15. அப்போது அவர்கள் தம் தவறை உணர்ந்து என்ன பயன்? இறைவனின் நியதிப்படி ஏற்படுகின்ற வேதனைகளின் கூப்பாடுகளும் அலரல்களும் தொடர்ந்து கொண்டே இருக்கும். அவர்களுடைய நிலைமை, அறுவடை செய்தபின் எல்லா பொலிவுகளையும் இழந்துவிட்ட வயல்களைப் போல் ஆகிவிடும்.
இந்த நிலை எதனால் என்றால் அவர்கள் உலக வாழ்வை வீண் விளையாட்டாக எடுத்துக் கொண்டதால் தான். அதன் விளைவாக அவர்களிடையே அலட்சிய போக்கும் சயநலமும் மிகைத்து இருந்தன. ஆனால்
وَمَا خَلَقْنَا ٱلسَّمَآءَ وَٱلْأَرْضَ وَمَا بَيْنَهُمَا لَٰعِبِينَ.
21:16. அகிலங்களும் பூமியும் அவற்றின் இடையே இருப்பவையும் மாபெரும் செயல்திட்டத்தை முன்வைத்தே படைக்கப்பட்டன. வீண் விளையாட்டிற்காக படைக்கப்படவில்லை. அதன் படி தனி நபரோ அல்லது சமுதாயமோ செய்துவரும் ஒவ்வொரு செயலுக்கும் ஏற்றவாறு விளைவுகள் ஏற்பட்டே தீரும்.
لَوْ أَرَدْنَآ أَن نَّتَّخِذَ لَهْوًۭا لَّٱتَّخَذْنَٰهُ مِن لَّدُنَّآ إِن كُنَّا فَٰعِلِينَ.
21:17. அவ்வாறு வீண் விளையாட்டிற்கு என்றே படைப்பதாக இறைவனின் செயல்திட்டம் இருந்திருந்தால் அவ்வாறே படைக்கப்பட்டிருக்கும். இறைவனும் அவ்வாறே விளையாடிக் கொண்டிருப்பான். ஆனால் இறைவனின் செயல்திட்டம் அவ்வாறு அல்ல.
எனவே இறைவனின் படைப்பு சட்டத்தின்படி மனித செயல்களில் ஆக்கமும் அழிவும் என்று இருவகையான ஈர்ப்புகள் உள்ளன. இவ்வுலகில் ஆக்கப்பூர்வமாக செயல்படும் சக்திகள், அழிவை ஏற்படுத்தும் சக்திகள் என இருவகையான சக்திகள் உருவெடுக்கின்றன.
بَلْ نَقْذِفُ بِٱلْحَقِّ عَلَى ٱلْبَٰطِلِ فَيَدْمَغُهُۥ فَإِذَا هُوَ زَاهِقٌۭ ۚ وَلَكُمُ ٱلْوَيْلُ مِمَّا تَصِفُونَ.
21:18. ஆக்கப்பூர்வமான சக்திகள், அழிவை ஏற்படுத்தும் சக்திகளை முறியடித்து அதை ஒடுக்கிவிட வேண்டும் என்பதே இறைவனின் செயல் திட்டமாகும். அவ்வாறு நிகழும்போது, இவ்வுலக வாழ்வை வீண் விளையாட்டாக எடுத்துக் கொண்டவர்களின் நிலைமை பரிதாபத்திற்குரியதாக ஆகிவிடுகிறது.
وَلَهُۥ مَن فِى ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضِ ۚ وَمَنْ عِندَهُۥ لَا يَسْتَكْبِرُونَ عَنْ عِبَادَتِهِۦ وَلَا يَسْتَحْسِرُونَ.
21:19. இவையாவும் இறைவனால் நிர்ணயிக்கப்பட்ட செயல் திட்டங்களாகும். இவற்றை யாராலும் எக்காலத்திலும் மாற்றி அமைக்க முடியாது. ஏனெனில் அகிலங்கள் மற்றும் பூமியில் உள்ளவை அனைத்தும், அல்லாஹ்வின் செயல் திட்டங்களை நிறைவேற்றவே செயல்பட்டு வருகின்றன. அவற்றில் உள்ள அனைத்தும் அல்லாஹ்வின் கட்டளைக்கே சிரம்பணிகின்றன. அவற்றில் எதுவும் பெருமையடித்து மாறு செய்வதில்லை. இறைத்திட்டங்களை நிறைவேற்றுவதில் சற்றும் சோர்வும் அடைவதில்லை.
يُسَبِّحُونَ ٱلَّيْلَ وَٱلنَّهَارَ لَا يَفْتُرُونَ.
21:20. இறைவன் நிர்ணயித்த படி அல்லும் பகலும் இடைவிடாது தம் கடமைகளை சிறப்பாக நிறைவேற்றி வருவது இறைவனின் வல்லமையை போற்றுவதாக பிரதிபலிக்கின்றன.
ஆனால் மனிதனின் நிலை அவ்வாறு இல்லை. இறைவனின் செயல்திட்டப்படி அவனுக்கு முழு சுதந்திரத்தையும், சிந்திக்கும் ஆற்றலையும் அளித்து விட்டதால் இறைவழிகாட்டுதலை ஏற்றுக்கொள்கின்ற விஷயத்தில் அவனுடைய விருப்பத்திற்கு விடப்படுகிறது. (பார்க்க 18:29) இந்த வழிகாட்டுதல்கள் இல்லாத சமுதாயங்களில்:
أَمِ ٱتَّخَذُوٓا۟ ءَالِهَةًۭ مِّنَ ٱلْأَرْضِ هُمْ يُنشِرُونَ.
21:21. பொதுவாக மனிதர்கள் அகிலங்களையும் பூமியையும் படைத்தது இறைவன்தான் என்பதை ஒப்புக்கொள்வார்கள். (பார்க்க 39:38&43:9) ஆனால் பூமியிலுள்ள படைப்புக்களை தெய்வங்களாக ஏற்றுக் கொண்டு அவற்றை வணங்கி வந்தால்தான் உலக வாழ்வில் சுகமாக இருக்கமுடியும் என்றும் எண்ணிக் கொள்வார்கள். இது அவர்களுடைய மிகப் பெரிய அறியாமையாகும்.
அதாவது அகிலங்களில் உள்ளவை அனைத்தும் எவ்வாறு அல்லாஹ்வுக்கு கட்டுப்பட்டு செயல்படுகின்றனவோ அவ்வாறே மனிதனும் இறைக் கட்டளைக்கு கட்டுப்பட்டு வாழ்ந்திருக்க வேண்டும். ஆனால் மனிதனோ, இதற்கு பதிலாக தம் சொந்த வாழ்வில், அல்லாஹ்வின் தலையீடு வேண்டாம் என எண்ணி தங்களுக்கு என தெய்வங்களை உருவாக்கி வைத்துக் கொள்கிறான்.
لَوْ كَانَ فِيهِمَآ ءَالِهَةٌ إِلَّا ٱللَّهُ لَفَسَدَتَا ۚ فَسُبْحَٰنَ ٱللَّهِ رَبِّ ٱلْعَرْشِ عَمَّا يَصِفُونَ.
21:22. இவர்கள் எண்ணி இருப்பது போன்று, இந்த அகிலங்களை வெவ்வேறு சக்திகள் கட்டுப்படுத்துவதாக இருந்திருந்தால், அகிலங்கள் அனைத்தும் அழிந்தே போயிருக்கும். ஆனால் உண்மை அதுவல்ல. அவற்றை படைத்ததோடு அனைத்தையும் கட்டுக் கோப்பாக செயல்படுத்தி வருவது ஏக இறைவனே. எனவேதான் எங்கும் எவ்வித மோதலோ அல்லது பிரச்னையோ இன்றி சிறப்பாக செயல்படுகின்றன. அல்லாஹ்வைப் பற்றி மனிதன் செய்து வைத்திருக்கும் கற்பனையை விட அவன் மிகமிக அளவற்ற உயர்ந்த நிலையை வகிப்பவனே.
لَا يُسْـَٔلُ عَمَّا يَفْعَلُ وَهُمْ يُسْـَٔلُونَ.
21:23. மேலும் அவனுடைய வல்லமை எவ்வாறு உள்ளது என்றால், அவனுடைய செயல் திட்டத்தைப் பற்றி யாரும் கேள்வி கேட்க முடியாது. ஆனால் மனிதர்கள் செய்துவரும் செயல்களுக்கு அவனிடம் பதில் சொல்லியே ஆகவேண்டும்.
அதாவது அல்லாஹ்வின் செயல் திட்டத்தின் படி, மனிதர்களுக்கு சட்டதிட்டங்கள் அடங்கிய வேதங்கள் அளிக்கப்படுகின்றன. அவற்றை விட்டுவிட்டு மற்ற வழிமுறைகளை கடைப்பிடிக்கும் போது, அவை சிறப்பான வாழ்விற்கு நிலையாக வழி வகுப்பதில்லை. இதனால் மனித வாழ்வில் பிரச்னைகள் பல ஏற்படுகின்றன.
أَمِ ٱتَّخَذُوا۟ مِن دُونِهِۦٓ ءَالِهَةًۭ ۖ قُلْ هَاتُوا۟ بُرْهَٰنَكُمْ ۖ هَٰذَا ذِكْرُ مَن مَّعِىَ وَذِكْرُ مَن قَبْلِى ۗ بَلْ أَكْثَرُهُمْ لَا يَعْلَمُونَ ٱلْحَقَّ ۖ فَهُم مُّعْرِضُونَ.
21:24. இந்த அளவுக்கு ஆதாரப்பூர்வமான விளக்கங்களை அளித்த பின்பும், அவர்கள் அல்லாஹ்வின் வழிகாட்டுதலை விட்டுவிட்டு, வேறு வழிமுறைகளை கடைப்பிடிக்க விரும்புகிறார்களா? அப்படியாயின் அவர்களிடம், அல்லாஹ்வின் வழிகாட்டுதலை விட்விட்டு வேறு வழிமுறைகளை கடைப்பிடித்து சிறப்பாக வாழ்ந்தவர்களின் ஆதாராங்களை கொண்டுவரச் சொல்லுங்கள்.
"இதோ ஆக்கப்பூர்வமான நலத் திட்டங்களுடன் கூடிய இறைவேதமும், அவற்றை ஏற்று சிறப்பாக செயல்படுபவர்களும் என்னுடன் இருக்கிறார்கள். இதற்கு முன்பும் இவ்வாறு செயல்பட்டு சிறப்பாக வாழ்ந்த ஆதாரங்களும் எங்களிடம் இருக்கின்றன. உங்களிடம் அப்படி ஆதாரம் ஏதேனும் இருந்தால், அதை கொண்டுவாருங்கள். இதை எல்லாம் விட்டுவிட்டு வெறும் கண் மூடித்தனமாக இவற்றை புறக்கணிக்காதீர்கள்” என்று கூறிவிடுங்கள்.
وَمَآ أَرْسَلْنَا مِن قَبْلِكَ مِن رَّسُولٍ إِلَّا نُوحِىٓ إِلَيْهِ أَنَّهُۥ لَآ إِلَٰهَ إِلَّآ أَنَا۠ فَٱعْبُدُونِ.
21:25. இதற்கு முன் வந்த எல்லா இறைத்தூதர்களும் இதே அடிப்படையில் தான் மக்களுக்கு அறிவுருத்தி வந்தார்கள். அகிலங்களிலும் பூமியிலும் உள்ள அனைத்தும் அல்லாஹ்வின் செயல் திட்டப்படியே செயல்பட்டு வருகின்றன. மனிதனும் அவனுடைய வழிகாட்டுதலுக்கு மட்டுமே அடிபணிந்து வாழவேண்டும் என்றே அவர்கள் அறிவுருத்தி வந்தார்கள்.
وَقَالُوا۟ ٱتَّخَذَ ٱلرَّحْمَٰنُ وَلَدًۭا ۗ سُبْحَٰنَهُۥ ۚ بَلْ عِبَادٌۭ مُّكْرَمُونَ.
21:26. ஆனால் இன்றைய மக்களின் நிலை என்ன? அல்லாஹ்வைப் பற்றி தாங்களே பல கற்பனைகளை செய்து கொண்டு, அவற்றை மக்களிடம் சொல்லி வருகிறார்கள். அந்த கதைகளில் அல்லாஹ்வுக்கு ஒரு புதல்வன் உண்டு என்பதும் ஒன்றாகும். இப்படிப் பட்ட கற்பனை கதைகளுக்கெல்லாம் அப்பாற்பட்டவன் தான் அல்லாஹ். அதுமட்டுமின்றி அவர்கள் யாரை அல்லாஹ்வின் புதல்வன் என்று கருதுகிறார்களோ, அவரே அல்லாஹ்வின் வழிகாட்டுதலுக்கு முற்றிலும் அடிபணிந்து செயல்பட்டவராக இருந்தார்.
لَا يَسْبِقُونَهُۥ بِٱلْقَوْلِ وَهُم بِأَمْرِهِۦ يَعْمَلُونَ.
21:27. அல்லாஹ்வின் வழிகாட்டுதலுக்கு கட்டுப்பட்டு வாழ்ந்த இறைத் தூதர்களில் எவரும் எந்த பேச்சையும் அவனை முந்தி பேசியதும் கிடையாது. அவர்கள் அவனுடைய கட்டளையை மீறி நடந்ததும் கிடையாது.
அதாவது அல்லாஹ்வின் வழிகாட்டுதல்கள் என்னவோ அவற்றை மட்டும் மக்களுக்கு எடுத்துரைத்தார்கள். அவற்றின் படியே செயல்பட்டும் வந்தார்கள். உள்ளத்தில் ஒன்று வெளித் தோற்றத்தில் வேறு என்று அவர்கள் ஒருபோதும் செயல்பட்டதில்லை. ஏனெனில்
يَعْلَمُ مَا بَيْنَ أَيْدِيهِمْ وَمَا خَلْفَهُمْ وَلَا يَشْفَعُونَ إِلَّا لِمَنِ ٱرْتَضَىٰ وَهُم مِّنْ خَشْيَتِهِۦ مُشْفِقُونَ.
21:28. அவர்கள் முன் நிகழ்ந்து வருவதும் அவர்களுக்குப் பின்னால் நடப்பது என்னவென்றும் அல்லாஹ்வுக்கு நன்கு தெரியும் என்பதை அவர்கள் அறிந்திருந்தார்கள். எனவே அவர்கள் அல்லாஹ்வின் நாட்டம் எதுவோ, அதன்படியே செயல்பட்டும் போதித்தும் வந்தார்கள். அதற்கு மாற்றமாக செயல்படுவதால் ஏற்படும் விபரீத விளைவுகளுக்கு அஞ்சி நடந்தார்கள்.
۞ وَمَن يَقُلْ مِنْهُمْ إِنِّىٓ إِلَٰهٌۭ مِّن دُونِهِۦ فَذَٰلِكَ نَجْزِيهِ جَهَنَّمَ ۚ كَذَٰلِكَ نَجْزِى ٱلظَّٰلِمِينَ.
21:29. ஆக இதற்குமுன் வந்த எந்த இறைத்தூதரும், “நானும் கடவுள்தான்” என்று ஒருபோதும் சொன்னதில்லை. (பார்க்க 3:78) ஒருவேளை அவர்களில் யாராவது அவ்வாறு சொல்லி இருந்தால், அவர்களும் நரக வேதனையை அனுபவிக்க நேர்ந்திருக்கும். எவ்வாறு மற்ற மனிதர்களை நாம் தண்டிக்கிறோமோ, அவ்வாறே நாம் அவர்களையும் தண்டித்திருப்போம்.
இறைத்தூதர்களின் சொல்லும் செயலும் எவ்வாறு இருந்தன என்பதை கவனித்தீர்களா? இறைக் கட்டளைக்கு மாற்றமாக அவர்கள் செயல்பட்டிருந்தால், அவர்களும் தண்டனையிலிருந்து தப்பிக்க முடியாது என்று கூறப்படுகிறது. ஆனால் இன்றைய நிலை என்ன? அல்லாஹ் சொல்லாததை எல்லாம் அல்லாஹ் சொன்னதாக இட்டுக்கட்டி கூறி வருபவர்கள் ஏராளம். அவர்களுக்கு ஏற்படும் கதி என்ன? (பார்க்க 33:67-68)
அது மட்டுமின்றி மக்கள் மத்தியில் அல்லாஹ்வைப் பற்றி பல கற்பனை கதைகள் பேசப்பட்டு வருகின்றன. இதனால் அவனுடைய வல்லமைப் பற்றி அவர்கள் அறிந்து கொள்வதில்லை. அதைத் தொடர்ந்து அல்லாஹ்வுக்கு பல உதவியாளர்களும் இருப்பதாக கூறுகிறார்கள். ஆனால் இந்த உலக படைப்புகளைப் பற்றி சற்று சிந்தித்துப் பார்த்தால் இறைவனின் வல்லமை எந்த அளவுக்கு எல்லையற்றது என்பதை அறிந்து கொள்ளலாம்.
أَوَلَمْ يَرَ ٱلَّذِينَ كَفَرُوٓا۟ أَنَّ ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضَ كَانَتَا رَتْقًۭا فَفَتَقْنَٰهُمَا ۖ وَجَعَلْنَا مِنَ ٱلْمَآءِ كُلَّ شَىْءٍ حَىٍّ ۖ أَفَلَا يُؤْمِنُونَ.
21:30. நிச்சயமாக ஒரு காலத்தில் வானங்களும் பூமியும் இணைந்தே இருந்தன. அதன் பின்னர் இறைவனின் செயல் திட்டப்படி அவை வெடித்து சிதறின. அதாவது பூமி மற்ற கோள்களிலிருந்து பிரிந்து சூரிய குடும்பம் என உருவாயிற்று. இந்த சூரிய குடும்பத்தில் உள்ள எல்லா கோள்களும் தத்தம் புவி ஈர்ப்பில் வான் மண்டலங்களில் வேகமாக சுழன்று வருகின்றன. (பார்க்க 21:33 36:40). இந்த பூமியும் தன் ஆரம்ப நிலையில் புகை மண்டலமாகவும் கடின உஷ்ணமுள்ள பிழம்பாகவும் இருந்தது (பார்க்க 41:9-12)
அதன்பின் அது பல படித்தரங்களைக் கடந்து, வெப்பமும் பிழம்பும் படிப்படியாக தணிந்து இந்த பூமியில் உயிரினங்கள் உருவாக ஆரம்பித்தன. இந்த படித்தரங்களில் ஒவ்வொன்றையும் கடப்பதற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட கால அளவு ஐம்பது ஐம்பதாயிரம் வருடங்களாகும். (பார்க்க 70:4) இப்படியாக இந்த பூமியின் மேல்பரப்பில் (Earth Crust) இருந்த நீரும் வடிந்து, உயிரினம் உருவாவதற்கு வழிகள் பிறந்தன. (பார்க்க 79:30-33) மேலும் தண்ணீரிலிருந்து எல்லா உயிரினங்களும் உருவாயின.
இந்த அளவுக்கு பிரமாண்டமான செயல் திட்டங்களுடன் உருவாக்கப்பட்ட இந்த சூரிய குடும்பத்தை (Big Bang Theory) யை ஆராய்ந்த பின்பும் அல்லாஹ்வின் வல்லமையையும் அவனுடைய வழிகாட்டுதலையும் ஏற்க மறுக்கிறார்களா?
وَجَعَلْنَا فِى ٱلْأَرْضِ رَوَٰسِىَ أَن تَمِيدَ بِهِمْ وَجَعَلْنَا فِيهَا فِجَاجًۭا سُبُلًۭا لَّعَلَّهُمْ يَهْتَدُونَ.
21:31. அதுமட்டுமின்றி, இந்த பூமி வான்மண்டலத்தில் வேகமாக சுற்றி வந்தாலும், அது ஆடாமலும் அசையாமலும் இருக்க, ஆணிகளைப் போல மலைகளும் படைக்கப்பட்டுள்ளன. இதனால் தான் மனிதனால் எந்த சிரமுமின்றி பணியாற்ற முடிகிறது. மேலும் ஓர் இடத்திலிருந்து மற்ற இடங்களுக்கு செல்ல வசதியாக பாதைகளும் அமைக்கப்பட்டுள்ளன. (மேலும் பார்க்க 16:15)
இந்த வாசகம் (Cosmic balance)ஐப் பற்றி பேசுகிறது. மலைகளை அளவுக்கு அதிகமாக குடைத்து எடுத்து விடுவதால் Cosmic Imbalance ஏற்பட்டு பூகம்பம் சுனாமி போன்ற பேராபத்துக்கள் ஏற்பட வாய்ப்புகள் ஏற்பட்டு விடுகின்றன ஏனெனில் இந்த பூமி மற்ற எட்டு கிரகங்களின் புவி ஈர்ப்பில் நிலையாக்கப் பட்டுள்ளது.
எனவே இந்த பூமியில் ஏற்படும் ஒவ்வொரு அசைவும் மற்ற கோள்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றன. அந்த பாதிப்புகள் மீண்டும் பூமிக்கே வந்தடைகின்றன. பூமி தன் புவி ஈர்ப்பின் நிலையை சரி செய்து கொள்ளும் போது, பூகம்பம், சுனாமி போன்ற நிகழ்வுகள் ஏற்படுகின்றன. இதுவும் ஒரு வகையான மனித செயல்களின் விளைவுகள் என்ற அடிப்படையில்தான் ஏற்படுபவையாகும.
وَجَعَلْنَا ٱلسَّمَآءَ سَقْفًۭا مَّحْفُوظًۭا ۖ وَهُمْ عَنْ ءَايَٰتِهَا مُعْرِضُونَ.
21:32. ஆக அல்லாஹ் தன் செயல்திட்டப்படி இந்த பூமியை விதானமாகவும் பாதுகாப்பாகவும் இருக்கும் வகையில் வானங்களை (Balanced Atmospheric Zones) படைத்துள்ளான். இத்தகைய அறிவுப்பூர்வமான ஆதாரங்களை அளித்த பின்பும், அவர்கள் இறைவழிகாட்டுதலை ஏற்க மறுக்கிறார்களா?
وَهُوَ ٱلَّذِى خَلَقَ ٱلَّيْلَ وَٱلنَّهَارَ وَٱلشَّمْسَ وَٱلْقَمَرَ ۖ كُلٌّۭ فِى فَلَكٍۢ يَسْبَحُونَ.
21:33. அது மட்டுமின்றி இந்த பூமி வான்மண்டலத்தில் சூரியனைச் சுற்றி வருவதால், இரவும் பகலும் ஏற்படுகின்றன. இந்த பூமியை சந்திரன் சுற்றி வருவதால் மாதங்களின் கணக்கை உங்களால் வைத்துக் கொள்ள முடிகிறது. இவை யாவும் தத்தம் வட்டரையில் (GivenOrbits) நீந்தி வருபவையாகும். (பார்க்க 36:40)
இத்தகைய பிரமாண்டமான உலகங்களை படைப்பது கடினமா? அல்லது மனிதனைப் படைப்பது கடினமா? (பார்க்க 79:27) இதைப் பற்றி மனிதன் எப்போதாவது சிந்தித்து பார்த்ததுண்டா? அல்லாஹ்வின் வல்லமையை அறிந்து அவனுடைய வழிகாட்டுதலை ஏற்று நடக்க முன்வர வேண்டாமா? ஏனெனில்
وَمَا جَعَلْنَا لِبَشَرٍۢ مِّن قَبْلِكَ ٱلْخُلْدَ ۖ أَفَإِي۟ن مِّتَّ فَهُمُ ٱلْخَٰلِدُونَ.
21:34. எந்த மனிதனுக்கும் இந்த பூமியில் நிரந்தர வாழ்வு கிடைத்ததே இல்லை. இவ்விஷயத்தில் யாரும் விதிவிலக்கும் அல்ல. நபியே! நீரும் ஒரு நாள் இல்லை ஒரு நாள் மரணித்தே ஆகவேண்டும். உண்மை இவ்வாறிருக்க இறை வழிகாட்டுதலை ஏற்க மறுப்பவர்கள் இங்கு நிரந்தரமாக உயிர் வாழப் போகிறார்களா?
كُلُّ نَفْسٍۢ ذَآئِقَةُ ٱلْمَوْتِ ۗ وَنَبْلُوكُم بِٱلشَّرِّ وَٱلْخَيْرِ فِتْنَةًۭ ۖ وَإِلَيْنَا تُرْجَعُونَ.
21:35. அவர்கள் சற்றே சிந்தித்துப் பார்த்தால், இந்த உண்மை விளங்கிவிடும். அதாவது ஒவ்வொருவரும் மரணத்தை சந்தித்தே ஆக வேண்டும். இவ்வுலகில் நன்மை தீமை என இருவகையான செயல்களை செய்யும் வாய்ப்புகள் ஒவ்வொருக்கும் கிடைத்துள்ளன. நீங்கள் செய்து வரும் ஒவ்வொரு செயலும் அல்லாஹ் நிலை நிறுத்தியுள்ள இலக்கின்படியே விளைவுகளை ஏற்படுத்துகின்றன. எனவே நீங்கள் எத்தகைய செயல்களை செய்கிறீர்கள் என்பதே உங்களுக்குரிய பரீட்சையாகும் (மேலும் பார்க்க 67:2)
யாருக்கும் நித்தய வாழ்வு கிடைத்த தில்லை எனும்போது, ஈஸா நபி மற்றும் மூஸா நபி மட்டும் உயிரோடு இருப்பதாக சொல்லிக் கொள்வதில் எந்த உண்மையும் இல்லை. இந்த உண்மைகளை மக்கள் முன் எடுத்துரைக்கும் போது, இதை ஏற்காதவர்கள் அறிவுப்பூர்வமான ஆதாரங்களோடு மறுத்திருந்தால் சரியாக இருந்திருக்கும். அதை அவர்களால் கொண்டு வர முடிவதில்லை. எனவே அவர்கள் இறைவழிகாட்டுதலை எடுத்துரைப்பவரை பரிகாசம் செய்ய ஆரம்பித்து விடுகிறார்கள்.
وَإِذَا رَءَاكَ ٱلَّذِينَ كَفَرُوٓا۟ إِن يَتَّخِذُونَكَ إِلَّا هُزُوًا أَهَٰذَا ٱلَّذِى يَذْكُرُ ءَالِهَتَكُمْ وَهُم بِذِكْرِ ٱلرَّحْمَٰنِ هُمْ كَٰفِرُونَ.
21:36. இதனால் இறை நிராகரிப்பவர்கள் இறைத்தூதரைப் பார்க்கும் போது, "உங்கள் தெய்வங்களை பற்றி குறை கூறுபவர் இவர்தானா?” என்று தங்களுக்குள் பரிகாசமாக பேசிக் கொள்கின்றனர். இது ஒன்றும் புதிதான ஒன்றல்ல. காலம் காலமாக எல்லா நபிமார்கள் விஷயத்திலும் இப்படித் தான் நடந்து வந்துள்ளது. ஏனெனில் அருட் கொடையாளனின் அறிவுரைகளை ஏற்க மறுப்பதற்கு அவர்கள் சொல்லும் சாக்கு போக்கே ஆகும் இது.
இறைவழிகாட்டுதலை எடுத்துரைப்பவர்கள் அவர்களுடைய தவறான செயல்களின் விளைவுகளைப் பற்றி எடுத்துரைக்கும் போது, “அந்த விளைவுகள் எப்போது ஏற்படும்?” என்று அவசரப்பட்டு ஏளனமாக கேட்கிறார்கள்.
خُلِقَ ٱلْإِنسَٰنُ مِنْ عَجَلٍۢ ۚ سَأُو۟رِيكُمْ ءَايَٰتِى فَلَا تَسْتَعْجِلُونِ.
21:37. இப்படியாக மனிதனிடத்தில் ஒவ்வொரு விஷயத்திலும் அவசர புத்தி இருக்கத் தான் செய்கிறது. ஆனால் அவர்கள் செய்துவரும் செயல்களுக்கு ஏற்ற பலன்களோ அல்லது தீய செயல்களின் விளைவுகளோ அதற்குரிய நேரத்தில் இறைவனின் நியதிப்படி ஏற்பட்டே தீரும். எனவே நீங்கள் அவசரப்பட்டு ஆகப்போவது ஒன்றுமில்லை.
وَيَقُولُونَ مَتَىٰ هَٰذَا ٱلْوَعْدُ إِن كُنتُمْ صَٰدِقِينَ.
21:38. எனவேதான் அவர்கள், “நீர் சொல்வது உண்மையாக இருந்தால், நீர் அடிக்கடி மிரட்டி வரும் அந்த வேதனைகளுக்குரிய காலம் எப்போது வரும்?” என்று கேட்கிறார்கள்.
ஏதோ அந்த வேதனைகளைப் பார்த்து சந்தோஷமாக ரசிக்கக் கூடியவை என்று எண்ணிக் கொண்டார்களா? அவை அவர்களுக்கு தவிர்க்க முடியாத வேதனைகளாக இருக்குமே. அவற்றை அவர்கள் அனுபவித்தே ஆகவேண்டுமே!
لَوْ يَعْلَمُ ٱلَّذِينَ كَفَرُوا۟ حِينَ لَا يَكُفُّونَ عَن وُجُوهِهِمُ ٱلنَّارَ وَلَا عَن ظُهُورِهِمْ وَلَا هُمْ يُنصَرُونَ.
21:39. மேலும் அவர்கள் எதிர்கொள்ள இருக்கும் வேதனைகளிலிருந்து ஒருபோதும் பின்வாங்கவே முடியாதே! அதுமட்டுமின்றி அந்த வேதனைகள் ஏற்படாமல் தடுக்கவோ அல்லது அவற்றிலிருந்து காப்பாற்றுபவரோ எவரும் இருக்க மாட்டார்களே! இந்த உண்மையை அறிந்திருந்தால் இப்படி அவர்கள் பேசுவார்களா?
بَلْ تَأْتِيهِم بَغْتَةًۭ فَتَبْهَتُهُمْ فَلَا يَسْتَطِيعُونَ رَدَّهَا وَلَا هُمْ يُنظَرُونَ.
21:40. அப்படியல்ல. அந்த வேதனைகள் அவர்கள் சற்றும் எதிர்ப்பாராத விதமாக ஏற்படக்கூடிய ஒன்றாக இருக்குமே! அப்போது அதிலிருந்து தப்பித்துக்கொள்ள இங்கும் அங்குமாக தட்டழிந்து திரிய வேண்டி வருமே! இவற்றையெல்லாம் அவர்களால் தடுத்துக்கொள்ள முடியுமா? அதற்காக அவர்களுக்கு கால அவகாசம் தான் கிடைக்குமா?
وَلَقَدِ ٱسْتُهْزِئَ بِرُسُلٍۢ مِّن قَبْلِكَ فَحَاقَ بِٱلَّذِينَ سَخِرُوا۟ مِنْهُم مَّا كَانُوا۟ بِهِۦ يَسْتَهْزِءُونَ.
21:41. இறை வழிகாட்டுதலை எடுத்துரைப்பவரே! இவ்வாறு அவர்கள் இறைவனின் அறிவுரைகளைப் பரிகசிப்பது புதிதான ஒன்றல்ல. காலம் காலமாக இப்படித் தான் நடந்து வந்துள்ளது. இதற்கு முன் வந்த நபிமார்களையும் இவ்வாறே பரிகாசம் செய்து இருக்கிறார்கள். அவர்களுடைய அலட்சிய போக்கால், வாழ்வில் பல பிரச்சனைகள் ஏற்பட்டு அவர்கள் செய்து வந்த ஏளனமே அவர்களை வேதனைகளாக சூழ்ந்து கொண்டன.
قُلْ مَن يَكْلَؤُكُم بِٱلَّيْلِ وَٱلنَّهَارِ مِنَ ٱلرَّحْمَٰنِ ۗ بَلْ هُمْ عَن ذِكْرِ رَبِّهِم مُّعْرِضُونَ.
21:42. இறைவழிகாட்டுதலை எடுத்துரைப்பவரே! நீர் அவர்களிடம், “இரவிலோ அல்லது பகலிலோ உங்களுக்கு அத்தகைய வேதனைகள் வந்தடைந்தால், அருட் கொடையாளனின் வழிமுறைகளைத் தவிர வேறு யார் உங்களை காப்பாற்ற முடியும்?” என்று கேட்டுப் பாருங்கள். அவர்களிடமிருந்து எந்த பதிலும் வராது. காரணம் அவர்கள் அல்லாஹ் நிர்ணயித்துள்ள “மனித செயல்களுக்கு ஏற்ற விளைவுகள்” என்ற சட்டத்தைப் பற்றி அறியாமலே இருக்கிறார்கள். (பார்க்க 10:107)
أَمْ لَهُمْ ءَالِهَةٌۭ تَمْنَعُهُم مِّن دُونِنَا ۚ لَا يَسْتَطِيعُونَ نَصْرَ أَنفُسِهِمْ وَلَا هُم مِّنَّا يُصْحَبُونَ.
21:43. அல்லது அவர்கள் வணங்கி வரும் கற்பனை தெய்வங்கள் அந்த வேதனையிலிருந்து அவர்களை காப்பாற்றுமா? அவற்றால் எப்படி காப்பாற்ற முடியும்? அவற்றால் தம்மையே காப்பாற்றிக் கொள்ள முடியாதே. அவை எங்கு நம்மிடமிருந்து அவர்களை காப்பாற்றுவது?
ஆக எல்லாமே இறைவன் நிர்ணயித்துள்ள “மனித செயலுகேற்ற விளைவுகள்” என்ற சட்ட விதிமுறைகளின் படியே நடந்துவரும். இதில் அவர்களோ அல்லது அவர்களுடைய கற்பனைத் தெய்வங்களோ விதிவிலக்கல்ல.
بَلْ مَتَّعْنَا هَٰٓؤُلَآءِ وَءَابَآءَهُمْ حَتَّىٰ طَالَ عَلَيْهِمُ ٱلْعُمُرُ ۗ أَفَلَا يَرَوْنَ أَنَّا نَأْتِى ٱلْأَرْضَ نَنقُصُهَا مِنْ أَطْرَافِهَآ ۚ أَفَهُمُ ٱلْغَٰلِبُونَ.
21:44. நடந்த உண்மை என்னவென்றால், அவர்களுடைய முன்னோர்களுக்கு இறைவனின் நியதிப்படி தாராளமான வாழக்கை வசதிகள் கிடைத்து வந்தன. அதனால் அவர்கள் சுகமான வாழ்வின் போதையில் மயங்கிக் கிடந்தனர். இறை வழிகாட்டுதலை பின்பற்றாமல் நீண்ட காலமாக வாழ்ந்து வந்ததால் தம்மை விட்டு இந்த சுகபோகங்கள் பறிபோகாது என்று நினைத்துக் கொண்டனர். ஆனால் அவர்கள் சற்றே இறைவழிகாட்டுதலை சிந்தித்துப் பார்த்திருந்தால், அவர்களுடைய வாழ்வாதார வசதிகள் கொஞ்சம் கொஞ்சமாக சுருங்கி வருவதைப் பற்றி அவர்கள் உணர்ந்து இருப்பார்கள். (மேலும் பார்க்க 13:41) இவ்வாறிருந்தும் அவர்கள் தம் நிலையை நிரந்தரமாக தக்க வைத்துக் கொள்ள முடியும் என்று நினைக்கிறார்களா?
உதாரணத்திற்கு நம் நாட்டில் சுதந்திரத்திற்கு முன் முஸ்லிம்களிடம் இருந்த வளமான வாழ்வு இன்றைக்கு கிடையாது. இருந்தும் அவர்கள் தம் பழைய போக்கிலேயே வாழ விரும்புகின்றனர். இதே நிலை நீடித்தால் அவர்களுக்கு மென்மேலும் துயரங்களும் வேதனைகளும் வந்தடையும். இதிலிருந்து காப்பாற்றிக் கொள்ள ஒரே வழி இந்த இறைவழிகாட்டுதல் மட்டும்தான். மேலும் முஸ்லிம் நாடுகள் இறை வழிகாட்டுதலைப் பின்பற்றாததால் அவர்களுடைய நாடுகள் கொஞ்சம் கொஞ்சமாக தம் கட்டுப்பாட்டை விட்டு பறிபோய் அன்னியர்களின் ஆதிக்கத்திற்குள் வந்து கொண்டிருக்கின்றன. (பார்க்க 13:41)
قُلْ إِنَّمَآ أُنذِرُكُم بِٱلْوَحْىِ ۚ وَلَا يَسْمَعُ ٱلصُّمُّ ٱلدُّعَآءَ إِذَا مَا يُنذَرُونَ.
21:45. இறைவழிகாட்டுதலை எடுத்துரைப்பவரே! நீர் அவர்களிடம், “எனக்கு அறிவிக்கப்பட்ட வஹீ எனும் இறைவழிகாட்டுதல் மூலமே எச்சரிக்கை செய்கிறேன் என்பதை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள். இவற்றை நானாகவே என் சுய சிந்தனையைக் கொண்டு உங்களுக்கு சொல்லவில்லை” என்று அறிவித்து விடுவீராக. எனினும் சிந்தித்து செயலாற்றும் தகுதியுடைவர்களே இந்த எச்சரிக்கையை உதாசீனப்படுத்தாமல் செவிமடுத்து, அதற்கு ஏற்றவாறு பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுப்பார்கள்.
وَلَئِن مَّسَّتْهُمْ نَفْحَةٌۭ مِّنْ عَذَابِ رَبِّكَ لَيَقُولُنَّ يَٰوَيْلَنَآ إِنَّا كُنَّا ظَٰلِمِينَ.
21:46. ஆனால் வரவிருக்கும் வேதனைகளின் கடுமை எந்த அளவிற்கு பயங்கரமாக இருக்கும் என்றால், அவர்களை அவை தீண்டும் போது பீதியில், “எங்களுக்கு கேடுகாலம் சூழ்ந்து கொண்டது. நாங்கள் செய்து வந்த அநியாய செயல்களின் விளைவுகள், வினையாக வந்து விட்டனவே!” என்று புலம்ப ஆரம்பித்து விடுவார்கள்.
இப்படி ஒரு நிலைமை மனிதனுக்கு எற்படக் கூடாது என்பதற்காகவே இறைவழிகாட்டுதல்கள் அளிக்கப்படுகின்றன. அவற்றை ஏற்று அதன்படி சமூக அமைப்பு ஏற்படுமானால், இந்த வேதனைகள் ஒருபோதும் ஏற்படாது.
وَنَضَعُ ٱلْمَوَٰزِينَ ٱلْقِسْطَ لِيَوْمِ ٱلْقِيَٰمَةِ فَلَا تُظْلَمُ نَفْسٌۭ شَيْـًۭٔا ۖ وَإِن كَانَ مِثْقَالَ حَبَّةٍۢ مِّنْ خَرْدَلٍ أَتَيْنَا بِهَا ۗ وَكَفَىٰ بِنَا حَٰسِبِينَ.
21:47. இறைவழிகாட்டுதலின்படி ஆட்சியமைப்பு நடைபெறும் சமுதாயத்தில் நீதித் துறை மிகவும் சிறப்பாக செயல்படும். எனவே அங்கு பொருளாதார வளர்ச்சியும், சமுதாய சமச்சீர்நிலையும் ஏற்பட்டு வரும். அங்கு யாருக்கும் அணு அளவும் அநியாயம் செய்யப்பட மாட்டாது. குற்றம் புரிந்தவர்களுக்கு மட்டுமே தண்டனை கிடைக்கும். அதிலும் அணு அளவும் விட்டுக் கொடுக்கப்பட மாட்டாது. அவ்வாறு கணக்கெடுக்க நம்முடைய செயல்திட்டங்களே போதுமானதாக இருக்கும்.
இத்தகைய சமூக அமைப்பு ஏற்படுத்துவது புதிதான ஒன்றல்ல. காலம் காலமாக எல்லா இறைத் தூதர்களும் இதையே செய்து காட்டினார்கள். அந்த வரிசையில்
وَلَقَدْ ءَاتَيْنَا مُوسَىٰ وَهَٰرُونَ ٱلْفُرْقَانَ وَضِيَآءًۭ وَذِكْرًۭا لِّلْمُتَّقِينَ.
21:48. மூஸா நபிக்கும் ஹாரூன் நபிக்கும் நன்மை தீமைகளைப் பிரித்தறிவிக்கும் வேதம் இறைவன் புறத்திலிருந்து அருளப்பட்டது. இறை அறிவுரைகளைப் பேணி நடப்பவர்களுக்கு ஒளிமயமான வாழ்விற்கு நேர்வழி காட்டக் கூடியதாகவும் நல்லறிவுரைகள் அடங்கியதாகவும் இருந்தது.
ٱلَّذِينَ يَخْشَوْنَ رَبَّهُم بِٱلْغَيْبِ وَهُم مِّنَ ٱلسَّاعَةِ مُشْفِقُونَ.
21:49. அந்த இறைவனின் அறிவுரைகளைப் பேணி நடப்பவர்கள் ஒவ்வொரு விஷயத்திலும் எப்போதும் உளப்பூர்வமாக இறைவனுக்கு அஞ்சி நடப்பார்கள். இறைக் கட்டளைகளுக்கு மாற்றமாக செயல்படுவதால் ஏற்படும் இறுதி விளைவுகளை சந்திக்க நேரிடும் என்பதை எண்ணி பயப்படுவார்கள்.
وَهَٰذَا ذِكْرٌۭ مُّبَارَكٌ أَنزَلْنَٰهُ ۚ أَفَأَنتُمْ لَهُۥ مُنكِرُونَ.
21:50. இறை வேதமான இந்த குர்ஆனும் அதே அடிப்படையைக் கொண்டதாகும். இதைப் பின்பற்றி நடக்கும் எல்லா சமுதாயங்களுக்கும் பாக்கியமிக்க வளமான வாழ்வு கிடைக்கும் என்பதே இதன் நிலைப்பாடாகும். இப்படியொரு வாழ்வு கிடைப்பதற்கு வழிகாட்டியாக விளங்கும் இந்த குர்ஆனையா ஏற்க மறுக்கிறீர்கள்?
۞ وَلَقَدْ ءَاتَيْنَآ إِبْرَٰهِيمَ رُشْدَهُۥ مِن قَبْلُ وَكُنَّا بِهِۦ عَٰلِمِينَ.
21:51. இதே போல் நாம் மூஸா மற்றும் ஹாரூனின் காலத்திற்கு முன்பாக இப்ராஹீம் நபிக்கும் நேர்வழியினை அளித்தோம். நேர்வழி பெற்ற அவர், எல்லா ஆற்றல்களுடனும் சிறப்பாகச் செயல்பட்டார். அவர் செய்து வந்த ஒவ்வொரு செயலும் இறைவனின் செயல்திட்டப்படியே இருந்தது.
إِذْ قَالَ لِأَبِيهِ وَقَوْمِهِۦ مَا هَٰذِهِ ٱلتَّمَاثِيلُ ٱلَّتِىٓ أَنتُمْ لَهَا عَٰكِفُونَ.
21:52. அவருடைய தந்தையிடமும், சமூகத்தாரிடமும், "உங்களைப் போன்றே உருவமைப்பு கொண்ட சிலைகளை சுற்றி வந்து செய்யும் வணக்க வழிபாட்டின் உண்மை நிலைமை என்ன?" என்று விசாரித்து வந்தார்.
قَالُوا۟ وَجَدْنَآ ءَابَآءَنَا لَهَا عَٰبِدِينَ.
21:53. அவர்களுடைய வழிபாட்டிற்கு ஆதரவாக எந்த ஆதாரத்தையும் அவர்களால் கொண்டுவர முடியவில்லை. அவர்களுடைய முன்னோர்கள் வணங்கி வந்ததை மட்டுமே அவர்களால் ஆதாரமாக கூற முடிந்தது.
قَالَ لَقَدْ كُنتُمْ أَنتُمْ وَءَابَآؤُكُمْ فِى ضَلَٰلٍۢ مُّبِينٍۢ.
21:54. இதை எப்படி ஆதாரமாக எடுத்துக்கொள்ள முடியும்? நீங்களும் உங்களுடைய மூதாதையர்களும் வழிகேட்டில் இருந்து வந்ததாகவே தெரிகிறது” என்று இப்ராஹீம் நபி குற்றம் சாட்டினார்.
قَالُوٓا۟ أَجِئْتَنَا بِٱلْحَقِّ أَمْ أَنتَ مِنَ ٱللَّٰعِبِينَ.
21:55. இவருடைய குற்றச்சாட்டிற்கு அவர்களால் எந்த பதிலையும் தர முடியவில்லை. எனவே அவர்கள் அவரை மிரட்ட ஆரம்பித்து விட்டார்கள். அவர்கள், “நீர் எல்லா விஷயத்தையும் அறிந்து பேசுகிறாயா அல்லது விளையாட்டிற்காக இப்படி பேசுகிறாயா?” என்று கேட்டார்கள்.
قَالَ بَل رَّبُّكُمْ رَبُّ ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضِ ٱلَّذِى فَطَرَهُنَّ وَأَنَا۠ عَلَىٰ ذَٰلِكُم مِّنَ ٱلشَّٰهِدِينَ.
21:56. அதற்கு அவர் மிகவும் நிதானத்துடன், “இது ஒன்றும் விளையாட்டு சமாச்சாரம் அல்ல. அகிலங்களையும் பூமியையும் படைத்த இறைவனே உங்களையும் படைத்து பரிபாலிப்பவனாக இருக்கிறான். இந்த உண்மையை உங்களிடம் தெளிவாக எடுத்துரைக்கவே நான் வந்துள்ளேன்” என்று அவர்களிடம் கூறினார்.
இப்படியாக அவர் தம் சமூகத்தாரிடமும் தந்தையிடமும் பலமுறை எடுத்துரைத்து அழகிய முறையில் அவர்களை திருத்த முயற்சிகளை மேற்கொண்டார். (பார்க்க 6:76-80) ஆனால் அவர்களில் பெரும்பாலோர் செவி சாய்ப்பதாக தெரியவில்லை. எனவே அந்த சிலைகளின் உண்மை நிலையை அவர்களுக்கு புரிய வைக்க ஒரு உபாயத்தைக் கையாளப் போவதாக சொல்லி வந்தார்.
وَتَٱللَّهِ لَأَكِيدَنَّ أَصْنَٰمَكُم بَعْدَ أَن تُوَلُّوا۟ مُدْبِرِينَ.
21:57. “நீங்கள் அனைவரும் திரும்பிச் சென்றதும் நான் உங்களுடைய சிலைகளுக்கு ஒரு முடிவு கட்டுகிறேன். இதற்கு அல்லாஹ்வே சாட்சியாக இருக்கட்டும்” என்று கூறினார்.
فَجَعَلَهُمْ جُذَٰذًا إِلَّا كَبِيرًۭا لَّهُمْ لَعَلَّهُمْ إِلَيْهِ يَرْجِعُونَ.
21:58. அவ்வாறே ஒரு நாள் இரவில் யாருக்கும் தெரியாமல் அவற்றை துண்டு துண்டாக உடைத்து விட்டார். ஆனால் அவற்றில் இருந்த பெரிய சிலையை மட்டும் அப்படியே விட்டுவிட்டார். அவர்கள் அந்த பெரிய சிலையின் பால் தன் கவனத்தை செலுத்தட்டும் என்பதற்காக இவ்வாறு செய்தார்.
قَالُوا۟ مَن فَعَلَ هَٰذَا بِـَٔالِهَتِنَآ إِنَّهُۥ لَمِنَ ٱلظَّٰلِمِينَ.
21:59. அதன் பின் கோயில் சிலைகள் உடைக்கப்பட்டு இருந்ததை கண்ட மக்கள், “எங்கள் தெய்வங்களுக்கு இவ்வாறு தீங்கு விளைவித்தது யார்? நிச்சயமாக இவ்வாறு செய்தவன் மிகவும் அக்கிரமக்காரனாகத் தான் இருக்கவேண்டும்” என்று ஆவேசப்பட்டு பேசலாயினர்.
قَالُوا۟ سَمِعْنَا فَتًۭى يَذْكُرُهُمْ يُقَالُ لَهُۥٓ إِبْرَٰهِيمُ.
21:60. அவர்களில் சிலர், “இளைஞன் ஒருவன் இவற்றைப் பற்றி கேலியாக பேசி வந்ததை நாங்கள் கேள்விப் பட்டிருக்கிறோம். அவனுக்கு இப்ராஹீம் என்று பெயர் சொல்லப்படுகிறது” என்றார்கள்.
قَالُوا۟ فَأْتُوا۟ بِهِۦ عَلَىٰٓ أَعْيُنِ ٱلنَّاسِ لَعَلَّهُمْ يَشْهَدُونَ.
21:61. “அப்படியானால் அவனை மக்கள் முன் கொண்டுவாருங்கள். இவர்களுடைய சாட்சியங்களின் முன்னிலையில் அவன்தான் செய்தான் என்பதை நிரூபித்து விடலாம்” என்றார்கள்.
قَالُوٓا۟ ءَأَنتَ فَعَلْتَ هَٰذَا بِـَٔالِهَتِنَا يَٰٓإِبْرَٰهِيمُ.
21:62. அதன்படி இப்ராஹீம் அங்கு வந்ததும் அவரை பார்த்து, “இப்ராஹீமே! எங்கள் தெய்வங்களை இவ்வாறு செய்தது நீதான் என்று உம்மீது குற்றம் சுமத்தப்படுகிறது. இதற்கு நீர் தரும் விளக்கம் என்ன?” என்று கேட்டனர்.
قَالَ بَلْ فَعَلَهُۥ كَبِيرُهُمْ هَٰذَا فَسْـَٔلُوهُمْ إِن كَانُوا۟ يَنطِقُونَ.
21:63. அதற்கு அவர், “இத்தகைய செயலை செய்தது யார் என்று என்னிடம் ஏன் கேட்கிறீர்கள்? இதோ! இந்த பெரிய சிலை இருக்கின்றதே. அதனிடமே கேட்க வேண்டியதுதானே! அது உங்களுக்கு சரியான பதில் கொடுத்திருக்குமே!” என்றார்.
فَرَجَعُوٓا۟ إِلَىٰٓ أَنفُسِهِمْ فَقَالُوٓا۟ إِنَّكُمْ أَنتُمُ ٱلظَّٰلِمُونَ.
21:64. இதை கேட்டதும் அங்கு கூடியிருந்த அனைவரும் பதிலேதும் கூற இயலாமல் திகைத்து விட்டனர். “நாங்கள் தாம் தவறான வழியில் இருந்து அநியாயம் செய்து கொண்டோமோ” என்று தங்களுக்குள் முணுமுணுத்துக் கொண்டனர்.
ثُمَّ نُكِسُوا۟ عَلَىٰ رُءُوسِهِمْ لَقَدْ عَلِمْتَ مَا هَٰٓؤُلَآءِ يَنطِقُونَ.
21:65. எனவே அவர்களுடைய முகங்கள் அவமானத்தால் தொங்கிப் போயின. அவர்கள் மெதுவாக,"அவை பேச மாட்டா என்பதை நீர்தான் அறிவீரே!” என்றனர்.
قَالَ أَفَتَعْبُدُونَ مِن دُونِ ٱللَّهِ مَا لَا يَنفَعُكُمْ شَيْـًۭٔا وَلَا يَضُرُّكُمْ.
21:66. “அப்படியானால் அல்லாஹ்வின் வழிகாட்டுதலை விட்டுவிட்டு, உங்களுக்கு எந்த நன்மையும் தீமையும் செய்ய இயலாதவற்றையா நீங்கள் வணங்குகிறீர்கள்?” என்று மறுகேள்வி கேட்டார்.
அதாவது அல்லாஹ் படைத்துள்ள இயற்கை படைப்புகளின் மூலமே எல்லா வசதி வாய்ப்புகளும் மனிதனுக்கு கிடைத்து வருகின்றன. அவற்றை எவ்வாறு பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்ற சட்டதிட்டங்களும் அல்லாஹ்வின் புறத்திலிருந்து அறிவிக்கப்படுகிறது. அதன்படி வாழ்ந்தால் மனித வாழ்க்கை சிறப்பாக இருக்கும். உண்மை இவ்வாறு இருக்கும் போது, சிலைகளை உருவாக்கி வைத்துக்கொண்டு அவற்றிற்கு தெய்வ போர்வையைப் போர்த்தி வணங்கி வருவதால் என்ன பலன் கிடைக்கப் போகிறது? இதை அச்சமுதாய மக்களுக்கு புரிய வைக்கவே அவர் இந்த வழிமுறையைக் கையாண்டார்.
அது மட்டுமின்றி அனைத்து தரப்பு மக்களும் ஒற்றுமையுடன் ஒன்றுகூடி சிறப்பாக வாழ சொல்வதே இறைவழிகாட்டுதலாகும். ஆனால் இந்த சிலை வணக்க வழிபாடுகளால் மக்களுள் இறைவனைப் பற்றிய தவறான கண்ணோட்டம்தான் வளர்கிறது. சமுதாயத்தைப் பற்றிய அக்கறை அவர்களிடம் அறவே இருக்காது. ஒப்புக்கு வேண்டுமானால் நாம் சமாதானத்தையே விரும்புவதாக சொல்லிக் கொள்வார்கள். (பார்க்க 2:11) ஆனால் அவர்களுடைய சுயநல போக்கால் சமுதாயத்தில் ஏற்றத் தாழ்வு ஏற்பட்டு குழப்பங்களும் கலவரங்களும் தான் ஏற்படும். எனவே
أُفٍّۢ لَّكُمْ وَلِمَا تَعْبُدُونَ مِن دُونِ ٱللَّهِ ۖ أَفَلَا تَعْقِلُونَ.
21:67. “நான் இந்த சிலை வணக்க வழிபாட்டு முறையை அறவே வெறுக்கிறேன். ஏனெனில் அல்லாஹ்வின் வழிகாட்டுதலை விட்டுவிட்டு, வேறு வழிமுறைகளைக் கடைப் பிடிப்பவர்களுக்கு கேடுகள்தான் ஏற்பட்டு வரும். இதனை நீங்கள் விளங்கிக் கொள்ளவில்லையா?” என்று அவர்களிடம் கேட்டார்.
அங்கு கூடியிருந்த மக்களுள் சிலர் இப்ராஹீமின் கூற்றில் உண்மை இருப்பதை உணர்ந்தார்கள். ஆனால் அவர்களில் பெரும்பாலோர் அவருடைய பேச்சை கேட்கவில்லை. அது மட்டுமின்றி அவருடைய செயல் அக்கம் பக்கத்திலுள்ள ஊர்களுக்கு காட்டு தீ போல் பரவியது. அவர்களுள் ஆவேசமும் கொந்தளிப்பும் ஏற்பட்டது. எனவே அவர்கள்
قَالُوا۟ حَرِّقُوهُ وَٱنصُرُوٓا۟ ءَالِهَتَكُمْ إِن كُنتُمْ فَٰعِلِينَ.
21:68. “நீங்கள் ஏதாவது செய்ய நாடினால் இவரை நெருப்புக் குண்டத்தில் போட்டு எரித்து விடுங்கள். இப்படியாக உங்கள் தெய்வங்களுக்கு உதவி செய்யுங்கள்” என்று ஆவசேமாக பேச ஆரம்பித்தனர்.
கவனித்தீர்களா? தெய்வங்கள் மனிதனுக்கு உதவி செய்யப் போய், அந்த தெய்வங்களுக்கு உதவி செய்யுமாறு மக்களை ஏவுகிறார்கள் என்பதை கவனித்தீர்களா? இதுதான் அந்த கற்பனை தெய்வங்களின் உண்மை நிலையாகும். தம்மையே காப்பாற்றிக் கொள்ள முடியாத அவற்றால் மனிதனுடைய தேவைகளை எப்படி அவை நிறைவேற்றித் தரும்?
அவர்களிடையே நிலவி வந்த ஆவேசத் தீ அதிகரித்துக் கொண்டே சென்றது. எனவே அங்கு இருந்தால் தன் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என எண்ணி அவர் அவ்வூரைவிட்டு ஹிஜ்ரத் செய்து பாலஸ்தீன நாட்டிற்கு சென்று விட்டார். (பார்க்க 37:98) எனவே மக்களின் கோபத் தீயும் அடங்கி விட்டது.
قُلْنَا يَٰنَارُ كُونِى بَرْدًۭا وَسَلَٰمًا عَلَىٰٓ إِبْرَٰهِيمَ.
21:69. இப்படியாக இப்ராஹீமுக்கு எதிராக எழுந்த "ஆவேசத் தீ" இறைவனின் நியதிப்படி தணிந்து விட்டது. அங்கிருந்து வெளியேறி அவர் சென்ற இடமும் (பாலஸ்தீனம்) அவருக்கு குளிர்ச்சியாகவும் சுகமளிக்கக் கூடியதாகவும் இருந்தது.
وَأَرَادُوا۟ بِهِۦ كَيْدًۭا فَجَعَلْنَٰهُمُ ٱلْأَخْسَرِينَ.
21:70. மேலும் அவரை தீர்த்துக்கட்ட சதி செய்யவே நாடினார்கள். ஆனால் அவர் ஹிஜ்ரத் செய்து சென்று விட்டதால், அவர்களுடைய சதி திட்டங்கள் யாவும் வீணாகி விட்டன. (மேலும் பார்க்க 29:26)
அதாவது அவரை உண்மையிலேயே நெருப்பில் போடவில்லை. அவர்கள் சதி திட்டத்தைத் தான் தீட்டினார்கள் என்பதும், அது பலிக்கவில்லை என்பதும், இதிலிருந்து புலனாகிறது.
وَنَجَّيْنَٰهُ وَلُوطًا إِلَى ٱلْأَرْضِ ٱلَّتِى بَٰرَكْنَا فِيهَا لِلْعَٰلَمِينَ.
21:71. இப்படியாக அவரையும் அவருடைய சகோதரர் மகன் லூத்தையும் அந்த பேராபத்திலிருந்து காப்பாற்றி எல்லா வளங்களுடனும் கூடிய நாட்டிற்கு செல்ல வழி செய்தோம். மேலும் அந்த நாடு, அனைவருக்கும் பாக்கிய மிக்க நாடாக இருந்தது.
அவர் சென்ற பாலஸ்தீன நாட்டில் மில்லதே இப்ராஹீம் எனும் மக்கள் தொண்டு நிருவனத்தை நிறுவி சுற்றுப்புற நாட்டு மக்களின் நலனை பேணிக் காத்து வந்தார். மேலும் அவருக்கு நீண்ட காலம் வரையில் புத்திரப் பாக்கியம் இல்லாமலே இருந்தது. (பார்க்க 11:71&14:39)
وَوَهَبْنَا لَهُۥٓ إِسْحَٰقَ وَيَعْقُوبَ نَافِلَةًۭ ۖ وَكُلًّۭا جَعَلْنَا صَٰلِحِينَ.
21:72. அதன்பின் அவருக்கு இஸ்ஹாக் எனும் புதல்வனும், பேரனாகிய யாஃகூப்பும் பிறந்தார்கள். இவர்களில் ஒவ்வொருவரும் ஆற்றல்மிக்க செயல்களை செய்து உலக வரலாற்றில் “சான்றோர்” என்ற முத்திரையைப் பதித்து சென்றவர்கள் ஆவார்கள்.
وَجَعَلْنَٰهُمْ أَئِمَّةًۭ يَهْدُونَ بِأَمْرِنَا وَأَوْحَيْنَآ إِلَيْهِمْ فِعْلَ ٱلْخَيْرَٰتِ وَإِقَامَ ٱلصَّلَوٰةِ وَإِيتَآءَ ٱلزَّكَوٰةِ ۖ وَكَانُوا۟ لَنَا عَٰبِدِينَ.
21:73. அதுமட்டுமின்றி அவர்கள் யாவரும் இறைவனின் வழிகாட்டுதலை மக்களுக்கு எடுத்துரைத்து நேர்வழி காட்டி வந்த மாமேதைகளாக இருந்தார்கள். அவர்கள் தம் சமூகத்தவர்களிடம் இறைவன் காட்டிய வழியில் சமுதாய மேம்பாட்டிற்காக நலத் திட்டங்களைத் தீட்டி அயராது உழைத்து வரும்படி அறிவுறுத்தினார்கள். மேலும் சமூக ஒழுக்க மாண்புகளை கட்டிக் காக்கும் ஸலாத் முறையை கடைப்பிடித்து வரும்படியும், சமுதாய வளர்ச்சிக்காக தொடர்ந்து உதவி செய்து வரும்படியும் மக்களுக்கு அறிவுறுத்தி வந்தார்கள். இப்படியாக இறைத்தூதர்கள் யாவரும் நம் கட்டளைக்கு மட்டுமே அடிபணிந்து செயலாற்றும் செயல்வீரர்களாக இருந்தார்கள்.
وَلُوطًا ءَاتَيْنَٰهُ حُكْمًۭا وَعِلْمًۭا وَنَجَّيْنَٰهُ مِنَ ٱلْقَرْيَةِ ٱلَّتِى كَانَت تَّعْمَلُ ٱلْخَبَٰٓئِثَ ۗ إِنَّهُمْ كَانُوا۟ قَوْمَ سَوْءٍۢ فَٰسِقِينَ.
21:74. இதே அடிப்படையில் லூத் நபியும் தம் சமூகத்தாரிடம் இறைவழிகாட்டுதலை எடுத்துரைத்து வந்தார். அவருக்கும் மக்களை நேர்வழி படுத்தக்கூடிய ஞானமும், அவற்றை செயல்முறைப் படுத்தும் கல்வியும் இறைவனின் நியதிப்படி அளிக்கப்பட்டு இருந்தது. ஆனால் அச்சமூகத்தவர்களோ மிகவும் மோசமான மானக்கேடான செயல்களுக்கு அடிமையாகி இருந்தனர். எனவே அவரும் அவரை பின்பற்றியவர்களும் இறைக் கட்டளைப் படி அவ்வூரை விட்டு ஹிஜ்ரத் செய்து சென்று விட்டார்கள். இவ்வாறாக அவ்வூரில் ஏற்பட்ட பேராபத்திலிருந்து காப்பாற்றப்பட்டார்கள். ஏனெனில் அச்சமுதாயத்தினர் மிகவும் கெட்டவர்களாகவும் பெரும்பாவிகளாகவும் இருந்தார்கள். (பார்க்க 7:80-81)
وَأَدْخَلْنَٰهُ فِى رَحْمَتِنَآ ۖ إِنَّهُۥ مِنَ ٱلصَّٰلِحِينَ.
21:75. அதை தொடர்ந்து லூத்து நபிக்கு இறைவனின் அருட்கொடைகள் பல கிடைத்து அவர் சிறப்பாக வாழலானார். அவர் இறைக் கட்டளைக்கு மட்டுமே அடிபணிந்து வாழ்ந்தவர்களில் ஒருவராக இருந்தார் என்பதில் எவ்வித சந்தேமும் இல்லை.
وَنُوحًا إِذْ نَادَىٰ مِن قَبْلُ فَٱسْتَجَبْنَا لَهُۥ فَنَجَّيْنَٰهُ وَأَهْلَهُۥ مِنَ ٱلْكَرْبِ ٱلْعَظِيمِ.
21:76. அதே போன்று முற்காலத்தில் வாழ்ந்த நூஹ் நபியும் மக்களை நல்வழிபடுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தார். அவருடைய சமுதாயத்தினரும் அவரை கடுமையாக எதிர்த்து வந்தனர். எனவே அவர் தன்னை காப்பாற்றும்படி இறைவனிடம் பிரார்த்தித்தார். அவரும் அவரைப் பின்பற்றி வந்தவர்களும் இறைக் கட்டளைப்படி கப்பலில் ஏறி (பார்க்க 11:40) அங்கு ஏற்பட்ட பெரிய பிரளயத்திலிருந்து மீண்டு கொண்டார்கள்.
وَنَصَرْنَٰهُ مِنَ ٱلْقَوْمِ ٱلَّذِينَ كَذَّبُوا۟ بِـَٔايَٰتِنَآ ۚ إِنَّهُمْ كَانُوا۟ قَوْمَ سَوْءٍۢ فَأَغْرَقْنَٰهُمْ أَجْمَعِينَ.
21:77. இப்படியாக இறைவழிகாட்டுதல்கள் என்பதெல்லாம் வீண் பேச்சு என்று ஏளனமாகப் பேசி வந்த சமூகத்தவரிடமிருந்து நூஹ்வை காப்பாற்றினோம். அங்கு ஏற்படவிருக்கும் ஆபத்தைப் பற்றி அவர் மக்களுக்கு எச்சரிக்கை செய்த போது, அச்சமுதாயத்தினர் அதை பொருட்படுத்தவே இல்லை. (பார்க்க 11:39) எனவே அந்த பிரளயத்தில் அவர்கள் அனைவரும் மூழ்கி போனார்கள்.
وَدَاوُۥدَ وَسُلَيْمَٰنَ إِذْ يَحْكُمَانِ فِى ٱلْحَرْثِ إِذْ نَفَشَتْ فِيهِ غَنَمُ ٱلْقَوْمِ وَكُنَّا لِحُكْمِهِمْ شَٰهِدِينَ.
21:78. அதே போன்று மக்களை நேர்வழிப்படுத்த முயன்ற இறைத் தூதர்கள் வரிசையில் தாவூத் நபியும், சுலைமான் நபியும் வருகிறார்கள். அவர்கள் ஆற்றிய சிறந்த பணியைப் பற்றி குறிப்பிடாமல் இருக்க முடியாது. அவர்கள் இருவரும் ஆட்சி பீடத்தில் இருந்தார்கள். வேலியே பயிரை மேய்வது போல அச்சமுதாய மக்களுள் இருந்த பதுக்கல் பேர்வழிகள், விளைச்சலின் மகசூல்களை இரகசியமாக கொள்ளை அடிப்பதில் தீவிரமாக இருந்தனர். அதற்கு அரசு அதிகாரிகளும் உடந்தையாக இருந்தார்கள். எனவே மலைகளைப் போல் செல்வங்களை குவித்துக் கொள்ளும் இத்தகைய சமூக விரோத சக்திகளைக் கட்டுப்படுத்த அவ்விருவரும் பாதுகாப்பு சட்டங்களை நாட்டில் பிறப்பித்து வந்தனர். இவையாவும் இறைவனின் செயல்திட்டப்படி அவர்கள் செய்தார்கள்.
فَفَهَّمْنَٰهَا سُلَيْمَٰنَ ۚ وَكُلًّا ءَاتَيْنَا حُكْمًۭا وَعِلْمًۭا ۚ وَسَخَّرْنَا مَعَ دَاوُۥدَ ٱلْجِبَالَ يُسَبِّحْنَ وَٱلطَّيْرَ ۚ وَكُنَّا فَٰعِلِينَ.
21:79. தாவூத் நபிக்குப் பின் சுலைமான் நபி ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். (பார்க்க 27:16) அவருடைய ஆட்சி காலத்தில் சமூகவிரோத சக்திகளை தம் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துவிட்டார். இப்படியாக நாம் ஒவ்வொரு நபிக்கும் ஞானத்தையும் கல்வியையும் அளித்திருந்தோம். தாவூத் நபி, தன் ஆட்சி காலத்தில் மலைவாசிகளின் தலைவர்களையும், குதிரைப் படைகளையும் பயிற்சியளித்து வைத்திருந்தார். அவர்கள் அனைவரும் இவருடைய கட்டளைகளை செவ்வன நிறைவேற்றி வந்தார்கள். இந்த ஏற்பாடுகள் எல்லாம் இறைவன் புறத்திலிருந்து கிடைக்கும் வசதிகளாகும்.
وَعَلَّمْنَٰهُ صَنْعَةَ لَبُوسٍۢ لَّكُمْ لِتُحْصِنَكُم مِّنۢ بَأْسِكُمْ ۖ فَهَلْ أَنتُمْ شَٰكِرُونَ.
21:80. அதுமட்டுமின்றி போரிடும் போது, எதிரிகளின் தாக்குதலிருந்து உங்களை பாதுகாத்து கொள்வதற்காக போர்க் கவசங்களை அணிந்து கொள்கிறீர்களே, அவை தாவூத் நபி காலத்தில் தோன்றியவையாகும். இந்த அளவிற்கு வசதி வாய்ப்புகளைப் பெற்றிருந்தும், நீங்கள் நன்றி விசுவாசத்துடன் நடந்து கொள்வதில்லை.
وَلِسُلَيْمَٰنَ ٱلرِّيحَ عَاصِفَةًۭ تَجْرِى بِأَمْرِهِۦٓ إِلَى ٱلْأَرْضِ ٱلَّتِى بَٰرَكْنَا فِيهَا ۚ وَكُنَّا بِكُلِّ شَىْءٍ عَٰلِمِينَ.
21:81. மேலும் பலமாக வீசும் கடல் காற்றை பயன்படுத்திகொள்ள பாய்மரக் கப்பல்களை தயாரிக்க சுலைமான் நபி ஏற்பாடுகளை செய்தார். (30:46) அதனால் அங்குள்ளவர்களுக்கு கடல் பயணம் எளிதாகி விட்டது. கடலுக்கு அப்பால் உள்ள வளம் மிக்க தீவுகளிலிருந்து வாழ்வாதாரங்களை எளிதாக தம் நாட்டிற்கு கொண்டுவர முடிந்தது. இப்படியாக நாம் ஒவ்வொரு விஷயத்தையும் நன்கு அறிந்தவராகவே இருக்கிறோம்.
وَمِنَ ٱلشَّيَٰطِينِ مَن يَغُوصُونَ لَهُۥ وَيَعْمَلُونَ عَمَلًۭا دُونَ ذَٰلِكَ ۖ وَكُنَّا لَهُمْ حَٰفِظِينَ.
21:82. மேலும் அவர் ஆழ்கடல் ஆராய்ச்சியை மேற்கொண்டு கடலில் இருக்கும் முத்துக்களையும் பவளங்களையும் எடுக்க, கடலில் மூழ்கி வரக் கூடிய பலம் பொருந்தியவர்களை பணியில் அமர்த்தி வைத்திருந்தார். அதுமட்டுமின்றி மற்ற கடினமான வேலைகளையும் அவர்கள் கவனித்து வந்தார்கள். (பார்க்க 34:14&38:37) அவர்கள் அனைவரும் சுலைமான் நபி ஏற்படுத்திய இறைவனின் ஆட்சியமைப்பின் கீழ் பணியாற்றி வந்தார்கள்.
۞ وَأَيُّوبَ إِذْ نَادَىٰ رَبَّهُۥٓ أَنِّى مَسَّنِىَ ٱلضُّرُّ وَأَنتَ أَرْحَمُ ٱلرَّٰحِمِينَ.
21:83. அது போலவே அய்யூப் நபியின் வாழ்க்கை வரலாறும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். அவர் ஒரு முறை கடுமையான வலியால் அவதிப்பட நேர்ந்தது. அத்துன்பத்திலிருந்து காப்பாற்ற இறைவனிடம் பிரார்த்தித்து வந்தார். அவர், “இறைவா! நிச்சயமாக கிருபை செய்பவர்களில் நீயே மிக்க கிருபை செய்பவனாக இருக்கிறாய்” என்று பிரார்த்தித்தார்.
அதாவது அவருக்கு ஏற்பட்டிருந்த வலியிலிருந்து இறைவனின் இயற்கை சட்டத்தின்படி உள்ள மருந்துகள் மூலம் நிவாரணம் பெற முயற்சிகளை மேற்கொண்டார். அதைக் கொண்டு அவர் அதிலிருந்து நிவாரணம் பெற்றார். (பார்க்க 38:41-44)
فَٱسْتَجَبْنَا لَهُۥ فَكَشَفْنَا مَا بِهِۦ مِن ضُرٍّۢ ۖ وَءَاتَيْنَٰهُ أَهْلَهُۥ وَمِثْلَهُم مَّعَهُمْ رَحْمَةًۭ مِّنْ عِندِنَا وَذِكْرَىٰ لِلْعَٰبِدِينَ.
21:84. இவ்வாறாக அவருடைய பிரார்த்தனை ஏற்றுக் கொள்ளப்பட்டது. அவருக்கு ஏற்பட்டிருந்த துன்பம் மருத்துவ ரீதியாக நீங்கியது. அவரை விட்டு பிரிந்து இருந்த அவருடைய சமூகத்தாரும் அவரைத் தேடி திரும்பி வந்து விட்டனர். மேலும் ஒரு கூட்டத்தினர் அவரோடு வந்து இணைந்தார்கள். அவர் இறைக் கட்டளைக்கு மட்டுமே அடிபணிந்து செயல்பட்டு வந்ததால் இந்த அருட்கொடைகள் யாவும் அவருக்கு கிடைத்தன.
وَإِسْمَٰعِيلَ وَإِدْرِيسَ وَذَا ٱلْكِفْلِ ۖ كُلٌّۭ مِّنَ ٱلصَّٰبِرِينَ.
21:85. அதே போன்று இஸ்மாயீல், இத்ரீஸ், ஃஜல் கிஃப்லு ஆகிய நபிமார்களும் இறைக் கொள்கையில் நிலைத்திருந்து மக்களை நேர்வழிபடுத்துவதில் அயராது உழைத்தவர்கள் பட்டியலில் இடம் பெறுகின்றனர்.
وَأَدْخَلْنَٰهُمْ فِى رَحْمَتِنَآ ۖ إِنَّهُم مِّنَ ٱلصَّٰلِحِينَ.
21:86. அவர்கள் அனைவரும் இறைவனின் "நேர்வழி" என்கின்ற அருட்கொடைகளைப் பெற்ற பாக்கியவான்களாக இருந்தார்கள். காரணம் அவர்கள் அனைவரும் சமுதாய மேம்பாட்டிற்காக உழைத்த சீர்த்திருத்தவாதிகளாக இருந்தார்கள்.
وَذَا ٱلنُّونِ إِذ ذَّهَبَ مُغَٰضِبًۭا فَظَنَّ أَن لَّن نَّقْدِرَ عَلَيْهِ فَنَادَىٰ فِى ٱلظُّلُمَٰتِ أَن لَّآ إِلَٰهَ إِلَّآ أَنتَ سُبْحَٰنَكَ إِنِّى كُنتُ مِنَ ٱلظَّٰلِمِينَ.
21:87. மேலும் ஜன்னூன் நபியைப் (யூனுஸ்) பற்றியும் இங்கு குறிப்பிடாமல் இருக்க முடியாது. அவர் தம் சமூகத்தாரின் எதிர்ப்பை சமாளிக்க முடியாமல், அவர்களை விட்டு கோபமாக வெளியேறி விட்டார். அவர் இறைக் கட்டளை வரும் வரை காத்திராமல் சுயமாகவே இவ்வாறு முடிவெடுத்துக் கொண்டார். இதனால் அவர் நெருக்கடியில் சிக்கிக் கொண்டார். அப்போது அவர், "இறைவா! நீயே மிகவும் தூய்மையானவன். உன் செயல்திட்டங்களே எல்லாவற்றையும் விட மிகைத்து நிற்கக் கூடியதாக இருக்கின்றன. நான் அவசரப்பட்டு எடுத்த முடிவு மிகவும் தவறானது என்பதை நான் உணர்கிறேன். இத்துன்பத்திலிருந்து என்னை காப்பாற்றுவாயாக!” என்று பிரார்த்தித்தார்.
فَٱسْتَجَبْنَا لَهُۥ وَنَجَّيْنَٰهُ مِنَ ٱلْغَمِّ ۚ وَكَذَٰلِكَ نُۨجِى ٱلْمُؤْمِنِينَ.
21:88. எனவே அவருடைய பிரார்த்தனை ஏற்றுக் கொள்ளப்பட்டது. இன்னும் அவர் துன்பத்திலிருந்து காப்பாற்றப்பட்டார். இவ்வாறே எல்லா மூஃமின்களுக்கும் இறைவன் புறத்திலிருந்து பாதுகாப்பு கிடைக்கும்.
இந்த நற்பாக்கியங்களும் அருட்கொடைகளும் நபிமார்களுக்கு மட்டும் தான் என்பதல்ல. யாரெல்லாம் இறைவழிகாட்டுதலை ஏற்று அதன்படி செயலாற்ற முன் வருகிறார்களோ அவர்களுக்கெல்லாம் இவை நிச்சயமாக கிடைக்கும். மேலும் இறைவனின் செயல்திட்டத்தை நிறைவேற்றுவதில் ஏற்படுகின்ற சிக்கல்கள் மற்றும் ஆபத்துகளிலிருந்தும் பாதுகாப்பு கிடைக்கும் என்று இந்த வாசகம் பறை சாற்றுகிறது. மேலும் சமுதாய சீர்த்திருத்தப் பணியில் ஈடுபடும்போது, மிகவும் நிதானத்துடன் கவனமாக நடந்து கொள்ளவேண்டும். அவசரப்பட்டு சுயமாக முடிவெடுத்தால் அது ஆபத்தில் முடியும். இது யூனுஸ் நபி விஷயத்தில் நமக்கு கிடைக்கும் பாடமாக இருக்கிறது.
இதே போன்று ஜக்கரிய்யா நபியும் மக்களை நேர்வழி படுத்துவதில் ஈடுபட்டிருந்தார். அவருக்குப் பின் இந்தப் பணியை தொடர தகுதியானவர்கள் அவருடைய உறவினர்களில் யாரும் இருப்பதாக அவருக்குத் தென்படவில்லை. எனவே அவர் தன்னந்தனியாக இருப்பதை எண்ணி கவலைப்பட்டார் (பார்க்க 19:5-7)
وَزَكَرِيَّآ إِذْ نَادَىٰ رَبَّهُۥ رَبِّ لَا تَذَرْنِى فَرْدًۭا وَأَنتَ خَيْرُ ٱلْوَٰرِثِينَ.
21:89. அவர்,"இறைவா! நீ என்னை இவ்வுலகில் தனித்தவனாக விட்டுவிடாதே. வாரிசுகளில் நீயே மிகவும் மேலானவன் என்பதை நான் அறிகிறேன். ஆனால் உன் பணியைத் தொடர எனக்கு ஒரு வாரிசை அளிப்பாயாக” என்று பிரார்த்தித்தார்.
فَٱسْتَجَبْنَا لَهُۥ وَوَهَبْنَا لَهُۥ يَحْيَىٰ وَأَصْلَحْنَا لَهُۥ زَوْجَهُۥٓ ۚ إِنَّهُمْ كَانُوا۟ يُسَٰرِعُونَ فِى ٱلْخَيْرَٰتِ وَيَدْعُونَنَا رَغَبًۭا وَرَهَبًۭا ۖ وَكَانُوا۟ لَنَا خَٰشِعِينَ.
21:90. அவருடைய பிரார்த்தனையும் ஏற்றுக் கொள்ளப்பட்டது. அவரும் வயதானவராக இருந்தார். அவருடைய மனைவியும் மகப்பேறு பெறும் வயதை கடந்தவராக இருந்தார். (பார்க்க 3:40) எனவே அவருடைய மனைவியிடம் இருந்த குறைகள் நீங்க மருத்துவ ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அதை தொடர்ந்து அவருக்கு யஹ்யா எனும் ஆண் குழந்தை பிறந்தது. இப்படியாக எல்லா நபிமார்களும் இறை வழிகாட்டுதலின்படி ஆக்கப்பூர்வமான நற்செயல்களை செய்வதில் ஒருவரையொருவர் மிகைத்து நின்றனர். அவர்கள் எடுத்துக் கொண்ட சீர்த்திருத்த பணிகளின் ஒவ்வொன்றிலும் இறைவழிகாட்டுதல் என்ன என்பதை அறிந்து, உள்ளச்சப்பாடுடன் செயல்பட்டு வந்தனர். ஏனெனில் இதற்கு மாற்றமாக செயல்படுவதால் ஏற்படும் விளைவுகளைப் பற்றி எண்ணி அவர்கள் அஞ்சினார்கள்.
அதே போல உலக மக்களை சீர்திருத்தும் பணியில் ஈடுபட்டவர்கள் பட்டியலில் ஈஸா நபியின் தாயார் மர்யமும் வருகிறார். யூதர்களின் ஆசிரமத்தில் அவர் சிறு வயதிலேயே துறவியாக ஆசிரமத்தில் விடப்பட்டார். (பார்க்க 3:36-37) அவர் பருவ மங்கையான பின் அங்கிருந்த ஆசிரம மடாதிபதிகள் ஆசிரம கன்னிஸ்திரிகளுடன் முறைகேடாக நடந்து கொள்வதைக் கண்டு பயப்பட்டார் (பார்க்க 3:42)
وَٱلَّتِىٓ أَحْصَنَتْ فَرْجَهَا فَنَفَخْنَا فِيهَا مِن رُّوحِنَا وَجَعَلْنَٰهَا وَٱبْنَهَآ ءَايَةًۭ لِّلْعَٰلَمِينَ.
21:91. அந்த இக்கட்டான சூழ்நிலையிலும் அவர் தம் கற்பைக் காத்துக் கொண்டு அங்கிருந்து வெறியேறி விட்டார்.(பார்க்க 19:16) ஆசிரமத்தில் கடைப்பிடித்து வந்த துறவித்தனத்தை விட்டுவிட்டு அவர் இல்லற வாழ்வில் ஈடுபட்டு, ஈஸா நபியை பெற்றெடுத்தார். எல்லா குழந்தைகளுக்கும் எவ்வாறு மனித ஆற்றல்கள் இறைவன் புறத்திலிருந்து அளிக்கப்படுகிறதோ, (பார்க்க 32:9) அவ்வாறே ஈஸா நபிக்கும் அளிக்கப்பட்டது. அவ்விருவரும் இறைவனின் செயல்திட்டம் எந்த அளவிற்குத் தலைசிறந்தது என்பதை உலகார்க்கு எடுத்துக்காட்டியவர்கள் ஆவார்கள்.
إِنَّ هَٰذِهِۦٓ أُمَّتُكُمْ أُمَّةًۭ وَٰحِدَةًۭ وَأَنَا۠ رَبُّكُمْ فَٱعْبُدُونِ.
21:92. இறைவழிகாட்டுதலை எடுத்துரைப்பவரே! அனைத்து நபிமார்களுடைய போதனைகளும் ஆதி முதல் உன் வரையில் ஒரே அடிப்படையை கொண்டதாக இருந்து வந்தன. (பார்க்க 42:13) அவர்கள் அனைவரும் அகிலங்களை படைத்து பரிபாலிக்கும் இறைவனுக்கு மட்டும் அடிபணிந்து வாழுங்கள் என்றே மக்களுக்கு போதித்து வந்தனர்.
وَتَقَطَّعُوٓا۟ أَمْرَهُم بَيْنَهُمْ ۖ كُلٌّ إِلَيْنَا رَٰجِعُونَ.
21:93.அனைவருடைய போதனைகளும் ஒரே அடிப்படையாக இருந்த போதிலும், அவர்களுடைய மறைவுக்குப் பின் அவர்களை பின்பற்றி வந்தவர்களுள் காலப் போக்கில கருத்து வேற்றுமை ஏற்பட்டு விட்டது. இதனால் அவர்களிடையே பிளவும் ஏற்பட்டது. ஆனால் இறுதியில் அவர்களுடைய வளமான வாழ்விற்கு இறைவனின் வழிகாட்டுதலின் பக்கமே திரும்பி வர வேண்டியிருக்கும்.
فَمَن يَعْمَلْ مِنَ ٱلصَّٰلِحَٰتِ وَهُوَ مُؤْمِنٌۭ فَلَا كُفْرَانَ لِسَعْيِهِۦ وَإِنَّا لَهُۥ كَٰتِبُونَ.
21:94. ஆக இறைவன் காட்டிய வழியில் ஆக்கப்பூர்வமான சமூக நலத் திட்டங்களைத் தீட்டி உழைக்கும் சமூகத்தவர்களே மூஃமின்களின் பட்டியலில் இடம்பெறுவர். அத்தகையவர்களின் உழைப்பு ஒருபோதும் வீண் போகாது. ஒவ்வொரு சமுதாயத்தினரும் செய்து வரும் செயல்கள் இறைவனின் பதிவேட்டில் பதிவாகிறது. அதன்படி விளைவுகள் ஏற்பட்டுக் கொண்டே செல்லும்.
وَحَرَٰمٌ عَلَىٰ قَرْيَةٍ أَهْلَكْنَٰهَآ أَنَّهُمْ لَا يَرْجِعُونَ.
21:95. ஆனால் இறை வழிகாட்டுதலுக்கு மாற்றமாக செயல்படும் சமுதாயங்களில் முன்னேற்றத் திட்டங்கள் தடைப்பட்டு விடுகிறது. இதனால் அவர்களின் அழிவு தவிர்க்க முடியாததாகி விடுகிறது. (பார்க்க 17:58) எனவே அவர்கள் நேர்வழியின் பக்கம் திரும்பும் வாய்ப்பே இல்லாமல் போயி விடுகிறது.
அதாவது தம் சொந்த அனுபவங்களை முன்வைத்து அவர்கள் நேர்வழியைப் பெற முடியாது. அவர்கள் நேர்வழி பெறுவதற்கு ஒரே வழி இறைவனிடமிருந்து இறக்கி அருளப்பட்ட திருக்குர்ஆன் மட்டுமே ஆகும். இதற்கு காரணம் என்னவென்றால் இறை வழிகாட்டுதல்கள் இல்லாத சமூதாயங்களில் ஏற்றத் தாழ்வுகள் ஏற்பட்டு வருகின்றன. எனவே செல்வந்தர்களும் அதிகார வர்க்கத்தை சேர்ந்தவர்களும் நலிந்த மக்களை நசுக்கி வருவார்கள்.
حَتَّىٰٓ إِذَا فُتِحَتْ يَأْجُوجُ وَمَأْجُوجُ وَهُم مِّن كُلِّ حَدَبٍۢ يَنسِلُونَ.
21:96. ஒரு கால கட்டத்திற்குப் பின் நலிந்த மக்கள் தம் நிலையை சரிசெய்து கொள்வதற்காக, அதிகார வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் மீது அசுரர்களாய் பாய்ந்து அவர்களை முறியடித்து, அவர்கள் மீது வெற்றி கொள்வார்கள். அதன் பின் காலப் போக்கில் இவர்களுடைய நிலைமையும் இவ்வாறே ஆகிவிடும். இதுதான் இன்றைய உலகில் நடந்து வரும் யாஜூஜு மாஜூஜு விஷயங்களாகும்.
இதே அடிப்படையில் பலம் பொருந்திய நாடுகள் பலவீனமான நாட்டை அடிமையாக்கிக் கொள்கின்றன. சில வருடங்களுக்குப் பின் அடிமைப் பட்டவர்கள் புரட்சி செய்து அன்னியர்களை விரட்டியடித்து சுதந்திரம் பெறுகிறார்கள். அவ்வாறு சுதந்திரம் பெற்ற சில காலத்திற்குப் பின் இவர்களே சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டு நலிந்த மக்களை நசுக்குவார்கள். இத்தகைய பரிதாபகர நிலையிலிருந்து விடுபட ஒரே வழி இறைவழிகாட்டுதல் அடங்கிய திருக்குர்ஆன் மட்டுமே.
وَٱقْتَرَبَ ٱلْوَعْدُ ٱلْحَقُّ فَإِذَا هِىَ شَٰخِصَةٌ أَبْصَٰرُ ٱلَّذِينَ كَفَرُوا۟ يَٰوَيْلَنَا قَدْ كُنَّا فِى غَفْلَةٍۢ مِّنْ هَٰذَا بَلْ كُنَّا ظَٰلِمِينَ.
21:97. இந்த அத்தியாய தொடக்கத்தில் சொன்னது போல, இறைவழிகாட்டுதலின் அடிப்படையில் இந்த மாற்றம் விரைவில் ஏற்படப் போவது உண்மையே. அப்போது இறைவழிகாட்டுதலை ஏற்க மறுத்து தன்னிச்சையாக செயல்படுபவர்களின் விழிகள் திகிலில் விரிந்தே நின்றுவிடும். “இனி எங்களுக்குக் கேடுதான். இப்படியொரு நிலை ஏற்படும் என்று செய்யப்பட்ட முன்னெச்சரிக்கையை உதாசீனப்படுத்தி விட்டோமே! அதுமட்மின்றி நாங்கள் அநியாயம் செய்தவர்களாகவே இருந்து விட்டோமே!” என்று தான் புலம்பிக் கொண்டு இருப்பார்கள்.
إِنَّكُمْ وَمَا تَعْبُدُونَ مِن دُونِ ٱللَّهِ حَصَبُ جَهَنَّمَ أَنتُمْ لَهَا وَٰرِدُونَ.
21:98.“நீங்களும் உங்கள் மூதாதையர்களும் அல்லாஹ்வின் வழிகாட்டுதலை விட்டுவிட்டு அதற்கு இணையாக வேறு வழிமுறைகளை கடைப்பிடித்து வந்தீர்களே. எனவே நீங்கள் அனைவரும் நரக நெருப்பிற்கு எரிபொருளாகவே ஆகப் போகிறீர்கள். அதாவது உங்களுடைய செயல்களே உங்களை நரகத்தின் பால் அழைத்துச் செல்பவையாக இருக்கின்றன” என்று கூறப்படும்.
لَوْ كَانَ هَٰٓؤُلَآءِ ءَالِهَةًۭ مَّا وَرَدُوهَا ۖ وَكُلٌّۭ فِيهَا خَٰلِدُونَ.
21:99. “நீங்கள் வழிபட்டு வந்த மகான்கள் மற்றும் பெரியார்கள் உண்மையிலேயே சக்தி பெற்றவர்களாக இருந்திருந்தால், அவர்களே நரகத்திற்கு வந்து சேர்ந்திருக்க மாட்டா. ஆனால் அவர்கள் அனைவருமே அங்கு நிரந்தரமாக இருப்பதையே நீர் காண்பீர்.
அதாவது மனித வாழ்வில் பிரச்சனைகள் எதுவும் ஏற்படாமல் பாதுகாப்பதே இறைவழிகாட்டுதலின் நோக்கமாகும். ஆனால் அவ்வாறு பாதுகாக்க இயலாத கற்பனைத் தெய்வங்கள் இருந்தென்ன பயன்? நரகவேதனை போன்ற துயரங்களை அனுபவித்துக் கொண்டிருப்பவர்கள் மத்தியில், அவர்களுடைய பிரச்னைகளை தீர்த்து வைக்க சக்தி பெறாத கற்பனை தெய்வங்கள் இருந்தென்னப் பயன்?
لَهُمْ فِيهَا زَفِيرٌۭ وَهُمْ فِيهَا لَا يَسْمَعُونَ.
21:100. அந்த நரக வேதனைகளால் காதுகளே பிளந்து போகும் அளவிற்கு புலம்பலும் அழுகையும் சதா ஒலித்துக் கொண்டே இருக்கும்.
إِنَّ ٱلَّذِينَ سَبَقَتْ لَهُم مِّنَّا ٱلْحُسْنَىٰٓ أُو۟لَٰٓئِكَ عَنْهَا مُبْعَدُونَ.
21:101. மாறாக எவர்கள் இறைவனின் நியதிப்படி நற்பாக்கியங்களை பெறக்கூடிய நற்செயல்களை செய்து வருகிறார்களோ, அத்தகையோரை இந்த நரக வேதனைகள் நெருங்காது.
لَا يَسْمَعُونَ حَسِيسَهَا ۖ وَهُمْ فِى مَا ٱشْتَهَتْ أَنفُسُهُمْ خَٰلِدُونَ.
21:102. அத்தகைய சமுதாயங்களில் வேதனைகளின் புலம்பல் என்ற பேச்சிற்கே இடமிருக்காது. அங்கு அவர்களுடைய அனைத்து தேவைகளும் எவ்வித சிரமுமின்றி நிறைவேறி வரும். இப்படிப்பட்ட வாழ்வு நிலையாகக் கிடைக்கும்.
لَا يَحْزُنُهُمُ ٱلْفَزَعُ ٱلْأَكْبَرُ وَتَتَلَقَّىٰهُمُ ٱلْمَلَٰٓئِكَةُ هَٰذَا يَوْمُكُمُ ٱلَّذِى كُنتُمْ تُوعَدُونَ.
21:103. மேலும் அவர்களுடைய வாழ்வில் திகில் அளிக்கக் கூடிய சம்பவங்கள் எதுவும் நிகழாது. அந்த அளவிற்கு பிரபஞ்ச இயற்கை சக்திகள் அவர்களுடைய நல்வாழ்விற்கு உறுதுணையாக இருக்கும். இது தான் உங்களுக்கு வாக்களிக்கப்பட்ட சந்தோஷமான பாதுகாப்பான வாழ்வாகும்.
இறைவழிகாட்டுதல் இல்லாத நாடுகளில் உயர் பதவிகளை வகிப்பவரை, “வானத்தைப் போன்று உயர்ந்தவர்கள்”, “மகான்கள்” “தனிப்பிறவி” போல் கருதப்படுகிறார்கள். ஆனால் இறைவழிகாட்டுதலின்படி சமூகஅமைப்பு உருவாகும் கால கட்டங்களில் உயர்வு தாழ்வு என்ற இந்நிலை மாறி அனைவரும் சமமே என்ற நிலை உருவாகும.
يَوْمَ نَطْوِى ٱلسَّمَآءَ كَطَىِّ ٱلسِّجِلِّ لِلْكُتُبِ ۚ كَمَا بَدَأْنَآ أَوَّلَ خَلْقٍۢ نُّعِيدُهُۥ ۚ وَعْدًا عَلَيْنَآ ۚ إِنَّا كُنَّا فَٰعِلِينَ.
21:104. எனவே இனி “உயர் அந்தஸ்து” என்ற பேச்சிற்கு அவசியமில்லை என்று கருதி, அவசியமற்ற ஏடுகளை எவ்வாறு கசக்கிப் போடப்படுகிறதோ அவ்வாறே “உயர்பதவி” வகிப்பவர்கள் தூக்கி எறியப்படுவார்கள். காரணம் உயர் பண்புள்ளவர்களிடமே இந்த ஆட்சியமைப்பு ஒப்படைக்கப்படும். ஆதி காலத்தில் மனிதன் எவ்வாறு சரி சமமாக இன்புற்று வாழ்ந்தானோ, அதே நிலை மீண்டும் உருவாகி வரும். இதுதான் இறைவழிகாட்டுதலைப் பின்பற்றுவதால் ஏற்படும் நற்பலன்கள் என வாக்களிக்கப்படுகிறது. நிச்சயமாக இந்த வாக்கு நிறைவேறியே தீரும்.
وَلَقَدْ كَتَبْنَا فِى ٱلزَّبُورِ مِنۢ بَعْدِ ٱلذِّكْرِ أَنَّ ٱلْأَرْضَ يَرِثُهَا عِبَادِىَ ٱلصَّٰلِحُونَ.
21:105. இப்படிப்பட்ட சமூகஅமைப்பு உருவாவது புதிதான ஒன்றல்ல. முந்தைய காலங்களிலும் இவ்வாறே உருவாயின. இதைப் பற்றி தாவூத் நபி காலத்தில் இறக்கி அருளப்பட்ட ‘ஜபூர்’ எனும் வேதத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் பல்வேறு அறிவுரைகளை அளித்தப் பின், ஆற்றல்மிக்க செயல்களை செய்யும் தகுதி உடையவர்களே நாட்டை ஆள்வதற்கு உரியவர்கள் ஆவார்கள் (Survival of the Fittest) என்று எழுதப்பட்டுள்ளது.
إِنَّ فِى هَٰذَا لَبَلَٰغًۭا لِّقَوْمٍ عَٰبِدِينَ.
21:106. ஆக இறை வழிகாட்டுதலுக்கு மட்டும் இணங்கி செயல்படும் செயல் வீரர்களுக்கு இதில் பல அறிவுப்பூர்வமான வழிகாட்டுதல்கள் கிடைக்கும்.
وَمَآ أَرْسَلْنَٰكَ إِلَّا رَحْمَةًۭ لِّلْعَٰلَمِينَ.
21:107. இப்படியாக நாம் உலக மக்கள் அனைவரின் நலனைக் கருதியே இந்த வேத அறிவுரைகளை உனக்கு அளித்துள்ளோம். இது அல்லாஹ்வின் மிகப் பெரிய அருட்கொடையாகும். இதன் அடிப்படையில் வாழும் மக்களுக்கு நிம்மதியான பாதுகாப்பான வாழ்வு நிச்சயமாகக் கிடைக்கும்.
قُلْ إِنَّمَا يُوحَىٰٓ إِلَىَّ أَنَّمَآ إِلَٰهُكُمْ إِلَٰهٌۭ وَٰحِدٌۭ ۖ فَهَلْ أَنتُم مُّسْلِمُونَ.
21:108. எனவே இறைவழிகாட்டுதலை எடுத்துரைப்பவரே! “இவ்வுலகிலுள்ள அனைத்துமே உங்களையும் என்னையும் படைத்து பரிபாலிக்கின்ற இறைவனின் கட்டளைக்கு உட்பட்டே செயல்படுகின்றன. மனிதனும் இறைவனின் வழிகாட்டுதலுக்கு உட்பட்டே செயல்பட வேண்டும். இதுவே எனக்கு வஹீ எனும் இறைவழிகாட்டுதல் மூலம் கிடைக்கின்ற அறிவுரைகளாகும்” என்பதை நீர் உலக மக்களுக்கு வெளிப்படையாக அறிவித்துவிடு. “இந்த இறை அறிவுரைகளை ஏற்று அதன்படி செயல்பட முன்வருகிறீர்களா?” என்று அவர்களிடம் கேளுங்கள்.
فَإِن تَوَلَّوْا۟ فَقُلْ ءَاذَنتُكُمْ عَلَىٰ سَوَآءٍۢ ۖ وَإِنْ أَدْرِىٓ أَقَرِيبٌ أَم بَعِيدٌۭ مَّا تُوعَدُونَ.
21:109. இதன் பின்பும் அவர்கள் இதை ஏற்க மறுத்து தவறான வழியில் செயல்பட்டால், அதனால் ஏற்படும் விபரீத விளைவுகளைப் பற்றி உங்கள் அனைவருக்கும் ஒன்றுபோல் முன்னெச்சரிக்கை செய்துவிட்டேன். அந்த விளைவுகள் விரைவிலும் ஏற்படலாம். அல்லது சில காலங்களுக்குப் பின்பும் ஏற்படலாம். அதன் கால அளவு எனக்குத் தெரியாது. ஆனால் நற்செயல்களோ அல்லது தீய செயல்களோ அதனதன் பலன்கள் அல்லது விளைவுகள் ஏற்படுவதை யாராலும் தடுக்க முடியாது.
إِنَّهُۥ يَعْلَمُ ٱلْجَهْرَ مِنَ ٱلْقَوْلِ وَيَعْلَمُ مَا تَكْتُمُونَ.
21:110. மேலும் இதையும் தெரிந்து கொள்ளுங்கள். நீங்கள் வெளிப்படையாக பேசி வருவதும் உள்ளத்தில் மறைத்து வைத்திருப்பதும் அல்லாஹ்வுக்கு தெரியாமல் இல்லை. எனவே சொல் ஒன்று செயல் வேறு என்ற எண்ணங்களை விட்டுவிடுங்கள்.
وَإِنْ أَدْرِى لَعَلَّهُۥ فِتْنَةٌۭ لَّكُمْ وَمَتَٰعٌ إِلَىٰ حِينٍۢ.
21:111. இதையும் மீறி நீங்கள் உங்கள் செயல்பாடுகளை மாற்றிக் கொள்ளவில்லை என்றால் அதன் விளைவுகளை நீங்கள் சந்தித்துக் கொள்வது சர்வ நிச்சயம். ஆனால் அந்த விளைவுகள் ஏற்படுவதற்கு நிர்ணயிக்கப்பட்ட காலத் தவணை யாவும் உங்களுடைய வேதனைகளை அதிகமாக்கவா அல்லது சில காலம் வரையில் சுகம் அனுபவிப்பதற்காகவா என்பது எனக்கு தெரியாது.
قَٰلَ رَبِّ ٱحْكُم بِٱلْحَقِّ ۗ وَرَبُّنَا ٱلرَّحْمَٰنُ ٱلْمُسْتَعَانُ عَلَىٰ مَا تَصِفُونَ.
21:112. இறைத்தூதர் இந்த அறிவிப்புக்குப் பின், “இறைவா! உலக மக்களின் செயல்களின் உண்மை நிலைக்கு ஏற்ப தீர்ப்பை வழங்குவாயாக” என்று பிரார்த்தித்தார். அதன்பின் மக்களைப் பார்த்து,"ஏக இறைவனான அருட்கொடையாளனே அனைவரையும் பரிபாலிப்பவனாக இருக்கின்றான். எனவே இறைவழிகாட்டுதலின்படி செயல்படும் ஞானம் நாம் அனைவருக்கும் கிடைக்க அவனிடமே உதவியை தேடுவோமாக!” என்றார்.