بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ

20:0.அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் அறிவுரைப்படியே அனைத்துக் காரியங்களையும் செய்ய நாடுகிறேன். (பார்க்க 6:162)


طه.

20:1.பரிசுத்தமான முறையில் நேர் வழி காட்டக் கூடிய வேதம் இறக்கி அருளப்படுகிறது.
அல்லாஹ்விடமிருந்து இறை வழிகாட்டுதலைப் பெற்ற முஹம்மது நபியும் தூய உள்ளமுடையவரே,


مَآ أَنزَلْنَا عَلَيْكَ ٱلْقُرْءَانَ لِتَشْقَىٰٓ.

20:2. இறைவழிகாட்டுதலை எடுத்துரைப்பவரே! உன்னை துன்பத்தில் ஆழ்த்திவிட வேண்டும் என்பதற்காக இந்தக் குர்ஆனை நாம் உம் மீது இறக்கி அருளவில்லை.
அதாவது இந்த குர்ஆனின் அடிப்படையில் சமூக அமைப்பை உருவாக்கும் போது, ஆரம்ப நிலையில் பல சிரமங்களை சந்திக்க வேண்டி வரும். ஆனால் இறுதியில் மிகவும் சந்தோஷமான பாதுகாப்பான வாழ்க்கை கிடைக்கும். (94:5 & 6) எனவே


إِلَّا تَذْكِرَةًۭ لِّمَن يَخْشَىٰ.

20:3. இறையச்சம் உள்ளவர்கள் நல்லறிவுரைகளைப் பெற்று, வளம் மிக்க வாழ்வைப் பெறவேண்டும் என்பதற்காகவே இந்த குர்ஆன் இறக்கி அருளப்படுகிறது. (பார்க்க 17:9)


تَنزِيلًۭا مِّمَّنْ خَلَقَ ٱلْأَرْضَ وَٱلسَّمَٰوَٰتِ ٱلْعُلَى.

20:4. இவை இந்த பூமியையும், பிரமாண்டமான அகிலங்களையும் படைத்த இறைவனிடமிருந்து இறக்கியருளப்படும் வழிகாட்டுதல்களாகும்.


ٱلرَّحْمَٰنُ عَلَى ٱلْعَرْشِ ٱسْتَوَىٰ.

20:5. அவற்றைப் படைத்ததோடு அவை அனைத்தையும் கட்டுக் கோப்பாக செயல்பட வைப்பதும் அளவற்ற அருளாளனே.


لَهُۥ مَا فِى ٱلسَّمَٰوَٰتِ وَمَا فِى ٱلْأَرْضِ وَمَا بَيْنَهُمَا وَمَا تَحْتَ ٱلثَّرَىٰ.

20:6. எனவே அகிலங்களிலும் பூமியிலும் உள்ளவையும், இவ்விரண்டிற்கும் இடையே உள்ளவையும் பூமியின் ஆழ்பகுதியில் உள்ளவையும் அல்லாஹ்வின் செயல்திட்டங்களை நிறைவேற்றவே செயல்பட்டு வருகின்றன.
மனிதனும் இந்த பிரபஞ்சத்தின் ஓர் அங்கத்தினன் ஆவான். எல்லா படைப்புகளும் அல்லாஹ் நிர்ணயித்துள்ள வரையறைக்கு உட்பட்டு செயல்படும் போது, மனிதனின் ஒவ்வொரு செயலும் அவன் நிர்ணயித்த இலக்கின் படியே விளைவுகளை ஏற்படுத்தும் அல்லவா? எனவே


وَإِن تَجْهَرْ بِٱلْقَوْلِ فَإِنَّهُۥ يَعْلَمُ ٱلسِّرَّ وَأَخْفَى.

20:7. அவன் எந்த விஷயத்தைப் பற்றியும் வெளிப்படையாக பேசினாலும், இரகசியமாக பேசினாலும் அல்லாஹ்வுக்கு எந்த வித்தியாசமும் ஏற்படப் போவதில்லை. அனைத்தும் அல்லாஹ்வுக்குத் தெரிந்துவிடும்.


ٱللَّهُ لَآ إِلَٰهَ إِلَّا هُوَ ۖ لَهُ ٱلْأَسْمَآءُ ٱلْحُسْنَىٰ.

20:8. உண்மை விஷயம் என்னவென்றால்,அகிலங்கள் அனைத்திற்கும் அதிபதி அல்லாஹ் ஒருவனே ஆவான். அகிலங்கள் அனைத்தின் செயல்பாடுகளே அல்லாஹ்வின் நிறைவான சிறப்பு குணநலன்களின் பிரதிபலிப்புகளாக உள்ளன
அல்லாஹ்வின் அந்த அழகிய நற்பண்புகள் சமுதாய மக்களிடத்திலும் பிரதிபலித்தால், அந்த சமுதாயம் உலகிலேயே தலைசிறந்த சமுதாயமாக விளங்கும். ஆனால் அந்த இலக்கை அடைய ஆரம்பக் கால கட்டத்தில் பல துயரங்களையும் இன்னல்களையும் சந்திக்க நேரிடுகிறது. (பார்க்க 2:214) இப்படி ஒரு நிலை எல்லா நபிமார்களின் விஷயங்களிலும் ஏற்பட்டே இருக்கிறது. அந்த வரிசையில்


وَهَلْ أَتَىٰكَ حَدِيثُ مُوسَىٰٓ.

20:9. மூஸா நபியின் வாழ்க்கை வரலாற்று செய்திகளும் உமக்கு வந்திருக்குமே?
அவர் ஃபிர்அவ்ன் எனும் மன்னனிடம் அரண்மனையில் வளர்ந்து, (28:9) சிறப்பான கல்வி ஞானமும் பெற்று, (28:14) வாலிப வயதை அடைந்தார். அக்காலத்தில் நாட்டு நடப்பைப் பற்றி தெரிந்து கொள்ள மன்னர்கள் இரவில் மாறு வேடத்தில் நகரத்திற்கு செல்வார்கள். அது போல மூஸா நபியும் இரவு நேரங்களில் நகரத்தை சுற்றிப் பார்ப்பது வழக்கமாக இருந்து வந்தது. ஒரு முறை, இருவர் சண்டை போட்டுக் கொண்டிருக்கும் போது, இவர் தலையிட்டு ஒருவரை அவர் ஓங்கி அடிக்க, அந்த மனிதரும் இறந்து விடுகிறார் (28:15)
அதைத் தொடர்ந்து அவர் கைதாகி விடுவோம் என்ற பயத்தில் மத்யன் நாட்டிற்கு சென்றுவிடுகிறார் (28:22) அங்கு நடக்கும் அநியாயத்தையும் தட்டிக் கேட்கிறார் (28:25) அதைக் கண்ட ஷுஅய்ப் நபியின் மகள்கள் தம் தந்தையிடம் அழைத்து சென்று அவரை பணியில் அமர்த்திக் கொள்ள செய்கின்றனர். (28:27) அப்பெண்களில் ஒருவரை மணந்தும் கொள்கிறார்.
இவருடைய அவசரப் புத்தியை கண்ட ஷுஅய்ப் நபி சிறந்த பாடங்களை கற்று கொடுக்க, அவரை இறை ஞானம் பெற்ற ஒரு பெரியவரிடம் அனுப்பி வைக்கிறார். (18:71-82) இப்படியாக அவர் தம் வாழ்வின் பலப் படித்தரங்களை கடந்து தன் மனைவி மக்களோடு வாழ்ந்து வருகிறார். (பார்க்க 20:40)


إِذْ رَءَا نَارًۭا فَقَالَ لِأَهْلِهِ ٱمْكُثُوٓا۟ إِنِّىٓ ءَانَسْتُ نَارًۭا لَّعَلِّىٓ ءَاتِيكُم مِّنْهَا بِقَبَسٍ أَوْ أَجِدُ عَلَى ٱلنَّارِ هُدًۭى.

20:10. அவர் ஒருநாள் தம் குடும்பத்தாருடன் பயணிக்கும் போது, இருள் சூழ்ந்து கொள்கிறது. வெகுத் தொலைவில் வெளிச்சத்தை கண்ட அவர், தம் குடும்பத்தினரை அங்கேயே தங்க வைத்து விட்டு, அந்த வெளிச்சத்தின் பக்கம் சென்றார். ஒரு நெருப்பு கொள்ளியை ஏற்படுத்தி நடைப் பாதையை தெரிந்து கொள்ளலாம் என்று தம் குடும்பத்தாருக்கு அறிவித்து விட்டு சென்றார்.


فَلَمَّآ أَتَىٰهَا نُودِىَ يَٰمُوسَىٰٓ.

20:11. அவ்வாறு அவர் நெருப்பின் சமீபமாக வந்தபோது, "மூஸாவே!” என்ற குரல் வந்தது.


إِنِّىٓ أَنَا۠ رَبُّكَ فَٱخْلَعْ نَعْلَيْكَ ۖ إِنَّكَ بِٱلْوَادِ ٱلْمُقَدَّسِ طُوًۭى.

20:12. மேலும், “நான் தான் உன்னைப் படைத்து பரிபாலிக்கும் இறைவன் ஆவேன். இது வரையில் நீ மனித ஆற்றல்களின் எல்லைக்கு உட்பட்ட கல்வி ஞானத்தின் உச்ச நிலையை (துவாப் பள்ளத்தாக்கு) அடைந்து விட்டாய். அதையும் கடந்து, மனித அறிவுக்கு புலப்படாத நம் செயல்திட்டங்களும் உள்ளன. அவற்றைத் தேடி நீ எங்கும் அலைய வேண்டி இருக்காது. அந்த நேர்வழி இனி உன்னைத் தேடி வரும்.”


وَأَنَا ٱخْتَرْتُكَ فَٱسْتَمِعْ لِمَا يُوحَىٰٓ.

20:13. ஏனெனில் நீ, என் தூதனாக செயல்படும் தகுதியை அடைந்து விட்டாய். ஆதலால் வஹீயின் மூலமாக அறிவிக்கப்படும் வழிகாட்டுதலை முழுமையாக செவி சாய்த்து அதன்படி செயல்பட்டு வா”


إِنَّنِىٓ أَنَا ٱللَّهُ لَآ إِلَٰهَ إِلَّآ أَنَا۠ فَٱعْبُدْنِى وَأَقِمِ ٱلصَّلَوٰةَ لِذِكْرِىٓ.

20:14. “நிச்சயமாக நானே உன் இறைவனாகிய அல்லாஹ் ஆவேன். அகிலங்கள் மற்றும் பூமியில் உள்ள அனைத்திற்கும் நானே அதிபதி ஆவேன். எனவே நீ என் கட்டளைக்கு மட்டுமே அடிபணிந்து செயல்பட்டு வா. மேலும் என் அறிவுரைகளை மக்களுக்குக் கற்றுத் தர கூட்டு ஸலாத் முறையை நிலைநிறுத்து”


إِنَّ ٱلسَّاعَةَ ءَاتِيَةٌ أَكَادُ أُخْفِيهَا لِتُجْزَىٰ كُلُّ نَفْسٍۭ بِمَا تَسْعَىٰ.

20:15. “இவ்வாறு செயல்பட்டு வந்தால், உன் சமுதாயத்தில் ஒரு மாபெரும் எழுச்சி ஏற்படும். அப்படி ஒரு கால கட்டத்தில் ஒவ்வொருக்கும் அவரவர் செய்யும் செயலுக்கு ஏற்ற வகையில் பலன்கள் கிடைத்து வரும். மக்களை விட்டு மறைந்து நிற்கும் இந்த பேருண்மையை நான் உனக்கு வஹீ மூலம் அறிவிக்கிறேன்” என்று இறைவன் புறத்திலிருந்து வந்த ஒலிச் செய்தி கூறிற்று.
அதாவது தற்சமயம் உள்ள சமூக அமைப்பில் உழைப்பவர் ஒருவர், சுகத்தை அனுபவிப்பது வேறொருவர் என்ற நிலை நீடிக்கிறது. இந்த நிலை மாறி அனைவரும் உழைத்துப் பெற்ற வாழ்வாதாரத்தை அனைவருக்கும் கிடைக்கும்படி செய்து சமுதாய சமச் சீர்நலையை ஏற்படுத்த வேண்டும். இந்த செயல் திட்டத்தை நிறைவேற்றவே உன்னை நான் தூதனாகத் தேர்ந்தெடுத்து உள்ளேன்.


فَلَا يَصُدَّنَّكَ عَنْهَا مَن لَّا يُؤْمِنُ بِهَا وَٱتَّبَعَ هَوَىٰهُ فَتَرْدَىٰ.

20:16. “எனவே நான் ஏற்படுத்தியுள்ள செயல் திட்டத்தை யார் மனதார ஏற்று அதன்படி செயலாற்ற முன் வருகிறார்களோ, அவர்களை மட்டும் உன்னோடு இணைத்துக் கொள். இதை ஏற்காதவர்களை உன்னோடு வைத்துக் கொண்டால், அவர்கள் இந்த செயல்திட்டம் நிறைவேறதவாறு இடையூறுகளை செய்து வருவார்கள். அதன்பின் உன் செயல் திட்டம் எல்லாம் பாழாகிவிடும்”
இப்படிப்பட்ட கட்டளைகள் அடங்கிய குறிப்புகள் மூஸாவுக்கு அல்லாஹ்வின் புறத்திலிருந்து கிடைத்து வந்தன. அவர் அவற்றை நன்றாக ஆராய்ந்து அறிந்து கொண்டார். தன்னை சுற்றியுள்ள குடும்பத்தாருக்கும் மற்றவர்களுக்கும் அவற்றின் சிறப்புகளை எடுத்துரைத்து வந்தார். அந்த இறை வழிகாட்டுதல்கள் மனிதனின் வளமான வாழ்விற்கு சிறந்த பாதையை காட்டுவதாக இருந்தன. அதன் பின் ஒரு நாள் இறைவன் மூஸா நபியை நோக்கி,


وَمَا تِلْكَ بِيَمِينِكَ يَٰمُوسَىٰ.

20:17. “மூஸாவே! உன் கைவசமிருக்கும் இந்த வழிகாட்டுதலின் நிலை என்ன?” என்று வினவினான்.


قَالَ هِىَ عَصَاىَ أَتَوَكَّؤُا۟ عَلَيْهَا وَأَهُشُّ بِهَا عَلَىٰ غَنَمِى وَلِىَ فِيهَا مَـَٔارِبُ أُخْرَىٰ.

20:18. அதற்கு மூஸா, “இதுவே என் உயிர் நாடி. இதன் அடிப்படையிலேயே நான் செயலாற்றுவேன். ஆட்டு மந்தைகளாக அடிமைப் பட்டு வாழும் என் சமூகத்தாரை (பார்க்க 20:47) தட்டி எழுப்பி, அவர்களுடைய வளமான வாழ்க்கைக்கு வழிசெய்வேன். அது மட்டுமின்றி இந்த இறைவழிகாட்டுதல்கள் வாழ்வின் எல்லாப் பிரச்னைகளுக்கும் தீர்வு அளிப்பதாக உள்ளன” என்று பதிலளித்தார்.


قَالَ أَلْقِهَا يَٰمُوسَىٰ.

20:19. அதற்கு இறைவன், “ஆம். நீ சரியாகப் புரிந்து வைத்துள்ளாய். எனவே இவற்றை மக்களிடம் தொடர்ந்து சமர்ப்பித்து வா” என்று கட்டளையிட்டான். (பார்க்க 26:10)
அதன்படி அவர் மக்களிடம் அவற்றை போதிக்க ஆரம்பித்தார். ஆனால் அம்மக்கள் இவற்றின் உண்மை நிலையை புரிந்து கொள்ளவில்லை. எனவே நாலாப் புறமும் பரவலாக எதிர்ப்புகள் வலுத்தன. எனவே அவர்


فَأَلْقَىٰهَا فَإِذَا هِىَ حَيَّةٌۭ تَسْعَىٰ.

20:20. இறைவழிகாட்டுதலை மக்களிடம் எடுத்துரைத்து அவர்களை ஏற்றுகொள்ள வைப்பது என்பது மலைப் பாம்புவிடம் போராடுவதற்கு ஒப்பான செயலாகத் தோன்றியது. (It was an Himalayan Task before him.)


قَالَ خُذْهَا وَلَا تَخَفْ ۖ سَنُعِيدُهَا سِيرَتَهَا ٱلْأُولَىٰ.

20:21. அதற்கு இறைவன், “இந்த எதிர்ப்பை கண்டு பயப்படாதே. என் வழிகாட்டுதலின் படி உறுதியோடு செயல்பட்டு வா. காலப் போக்கில் எல்லாமே சீராகி வரும். உன் விருப்பப்படி அவர்கள் இறைவழிகாட்டுதலை ஏற்றுக் கொள்வார்கள்” என்று அறிவுறுத்தினான்.


وَٱضْمُمْ يَدَكَ إِلَىٰ جَنَاحِكَ تَخْرُجْ بَيْضَآءَ مِنْ غَيْرِ سُوٓءٍ ءَايَةً أُخْرَىٰ.

20:22. “மேலும் இறைவழிகாட்டுதலை எப்போதும் மனதில் பதிய வைத்துக் கொண்டு, அவற்றை மக்கள் மத்தியில் ஆதாரப்பூர்வமாக எடுத்துரை. அவை காலப் போக்கில் அவர்களுடைய ஒளிமயமான வாழ்விற்கு மாசற்ற அறிவுரைகளாக பளிச்சிடும். இது இறைவனின் மாபெரும் அத்தாட்சிகளின் ஒன்றாகும் அல்லவா?” (மேலும் பார்க்க 27:12&28:32)
அவ்வாறே அவர் மக்களிடம் எடுத்துரைத்து வந்தார். (பார்க்க 25:35-36) அங்கு ஃபிரிஅவ்னியர்கள் மற்றும் இஸ்ரவேலர்கள் என இரு பிரிவினர்கள் இருந்தனர். இஸ்ரவேலர்களை, ஃபிர்அவ்னியர்கள் கொத்தடிமைகளாக ஆக்கி வைத்திருந்தனர். இறை வழிகாட்டுதல்கள் மூலம் நாட்டில் நடக்கும் அநியாய அக்கிரமங்களைப் பற்றி இஸ்ரவேலர்களுக்கு கொஞ்சம் கொஞ்சமாக புரிய வந்தது.


لِنُرِيَكَ مِنْ ءَايَٰتِنَا ٱلْكُبْرَى.

20:23. இப்படியாக மக்கள் மத்தியில் ஒரு மாபெரும் எழுச்சியை ஏற்படுத்தவே இந்த இறைவழிகாட்டுதல்கள் உமக்கு அளிக்கப்படுகின்றன.


ٱذْهَبْ إِلَىٰ فِرْعَوْنَ إِنَّهُۥ طَغَىٰ.

20:24. அதை அடுத்து இரண்டாம் கட்டமாக, ஃபிர்அவ்ன் மன்னனிடம் சென்று இறை வழிகாட்டுதலை எடுத்துரைக்கும் படி மூஸா நபிக்கு கட்டளை வந்தது. ஏனெனில் அவனது ஆட்சியில் அநியாய அக்கிரமச் செயல்கள் மிகைத்திருந்தன. மேலும் அவனும் வரம்பு மீறின செயல்களில் ஈடுபட்டு வந்தான் (பார்க்க 28:4)


قَالَ رَبِّ ٱشْرَحْ لِى صَدْرِى.

20:25. ஃபிர்அவ்னிடம் இறை வழிகாட்டுதலை எடுத்துரைப்பது என்பது சாதாரண காரியமல்ல. இதற்காக மன வலிமையும் தைரியமும் அவசியமான ஒன்றாகும். எனவே அவர் இறைவனிடம் மன வலிமையும் தைரியத்தையும் அளிக்கும்படி பிரார்த்தித்தார்.


وَيَسِّرْ لِىٓ أَمْرِى.

20:26. மேலும் மூஸா நபி, இந்த செயல்திட்டத்தை எளிதாக்கி வைக்கும் படி இறைவனிடம் பிரார்தித்தார்.


وَٱحْلُلْ عُقْدَةًۭ مِّن لِّسَانِى.

20:27. இதற்காக, தன் பேச்சாற்றலை சிறப்பாக ஆக்கித் தரும்படி இறைவனிடம் பிரார்தித்தார்.


يَفْقَهُوا۟ قَوْلِى.

20:28. அப்போது தான் மன்னருக்கு சொல்ல வேண்டிய விஷயத்தை எளிதாக எடுத்துரைத்து புரியவைக்க முடியும் என்றார்.


وَٱجْعَل لِّى وَزِيرًۭا مِّنْ أَهْلِى.

20:29. மேலும் தன் குடும்பத்திலிருந்து தனக்கு உதவி செய்ய ஒர் உதவியாளரையும் ஏற்படுத்தித் தரும்படி இறைவனிடம் வேண்டிக் கொண்டார்.


هَٰرُونَ أَخِى.

20:30. இந்த பணிக்காக என் சகோதரர் ஹாரூன் மிகவும் தகுதியானவர். எனவே அவரையும் என் துணைக்கு அழைத்துச் செல்ல அனுமதி அளிக்கும்படி இறைவனிடம் வேண்டினார்.


ٱشْدُدْ بِهِۦٓ أَزْرِى.

20:31. அவரை என்னுடன் அழைத்து சென்றால், என் காரியங்களை நிறைவேற்றிக் கொள்ள மிகவும் உதவிகரமாக இருக்கும் என்றார்.


وَأَشْرِكْهُ فِىٓ أَمْرِى.

20:32. எனவே தன் இலட்சியத்தில் பங்கேற்க, அவரை தன்னுடன் அனுப்பிவைக்கும் படி இறைவனிடம் பிரார்த்தித்தார்.


كَىْ نُسَبِّحَكَ كَثِيرًۭا.

20:33. இதனால் எங்களால் முடிந்த வரையில் உன் அறிவுரைகளை மன்னனிடமும், அவனுடைய அரசு பிரமுகர்களிடமும் எடுத்துரைக்க வசதியாக இருக்கும்.


وَنَذْكُرَكَ كَثِيرًا.

20:34. மேலும் உன் வழிகாட்டுதல்களை அவ்வப்போது நினைவு கொள்வதற்கு, ஒருவரையொருவர் உதவியும் செய்து கொள்ளலாம் என்று இறைவனிடம் பிரார்தித்தார்.


إِنَّكَ كُنتَ بِنَا بَصِيرًۭا.

20:35. மேலும் அவர், “நிச்சயமாக நீ எங்களுடைய எண்ணங்களையும், செயல் திட்டங்களையும் அறிபவனாகவே இருக்கிறாய்” என்று இறைவனிடம் பிரார்தித்தார்.


قَالَ قَدْ أُوتِيتَ سُؤْلَكَ يَٰمُوسَىٰ.

20:36. அவ்வாறே அவர் இறைவனிடம் கேட்ட அனைத்தையும் அவருக்கு அளிப்பதாக இறைவனிடமிருந்து பதில் வந்தது.


وَلَقَدْ مَنَنَّا عَلَيْكَ مَرَّةً أُخْرَىٰٓ.

20:37. “இதற்கு முன்னரும் நீ சிறு குழந்தையாக இருந்தபோதும், நாம் உனக்கு உதவி புரிந்தே இருக்கிறோம். உன்னுடைய ஒவ்வொரு காரியத்திலும் நாம் உதவி செய்தே வருவோம்” என்று இறைவனிடமிருந்து ஆறுதல் செய்தி கிடைத்தது.


إِذْ أَوْحَيْنَآ إِلَىٰٓ أُمِّكَ مَا يُوحَىٰٓ.

20:38. நீ சிறு குழந்தையாக இருந்தபோது, உன்னை வளர்த்து ஆளாக்குவதில் உன் தாயாருக்கு சில சிக்கல்கள் இருந்தன. அப்போது நாம் செய்துள்ள ஏற்பாட்டினைப் பற்றிய செய்தியை அவருக்கு அனுப்பி வைத்தோம் (மேலும் பார்க்க 28:7)


أَنِ ٱقْذِفِيهِ فِى ٱلتَّابُوتِ فَٱقْذِفِيهِ فِى ٱلْيَمِّ فَلْيُلْقِهِ ٱلْيَمُّ بِٱلسَّاحِلِ يَأْخُذْهُ عَدُوٌّۭ لِّى وَعَدُوٌّۭ لَّهُۥ ۚ وَأَلْقَيْتُ عَلَيْكَ مَحَبَّةًۭ مِّنِّى وَلِتُصْنَعَ عَلَىٰ عَيْنِىٓ.

20:39. உன்னை ஒரு பேழையில் வைத்து நதியில் விட்டுவிடும்படி உன் தாயாருக்கு செய்தி அனுப்பினோம். அந்த பேழை நதியில் மிதந்தவாறே ஒரு குறிப்பிட்ட கரையை சென்றடைந்தது. அங்கே நமக்கு எதிராக செயல்பட்டு வந்தவனும், உன் சமூகத்தாருக்கு பகைவனாகவும் இருந்த ஃபிர்அவுன் மன்னன், உன்னை தத்து எடுத்துக் கொண்டான். இப்படியாக நீ நம் கண்காணிப்பில் சிறப்பாக வளர்ந்து வர எல்லா ஏற்பாடுகளையும் செய்து கொடுத்தோம்.


إِذْ تَمْشِىٓ أُخْتُكَ فَتَقُولُ هَلْ أَدُلُّكُمْ عَلَىٰ مَن يَكْفُلُهُۥ ۖ فَرَجَعْنَٰكَ إِلَىٰٓ أُمِّكَ كَىْ تَقَرَّ عَيْنُهَا وَلَا تَحْزَنَ ۚ وَقَتَلْتَ نَفْسًۭا فَنَجَّيْنَٰكَ مِنَ ٱلْغَمِّ وَفَتَنَّٰكَ فُتُونًۭا ۚ فَلَبِثْتَ سِنِينَ فِىٓ أَهْلِ مَدْيَنَ ثُمَّ جِئْتَ عَلَىٰ قَدَرٍۢ يَٰمُوسَىٰ.

20:40. அந்தப் பேழை செல்லும் வழியாகவே உன் சகோதரி நடந்து சென்று, நீ சென்றடைந்த இடத்தை கண்டுக் கொண்டாள் (பார்க்க 28:11) அவள் மன்னரிடம் சென்று இக்குழந்தையை வளர்க்கும் பொறுப்பை ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒருவரை உங்களுக்கு அறிவிக்கட்டுமா என்று கேட்டாள். அவ்வாறே அந்த மன்னரிடம் அனுமதி பெற்று, உன் தாயாரை உன்னிடம் மீட்டுத் தந்தோம். இப்படியாக உன் தாயார் உன்னைப் பார்த்து கண் குளிர்ச்சி அடைந்தார். மேலும் உன்னை பிரிந்து வாடிய உன் தாயாரின் துக்கமும் தீர்ந்தது.
அதன் பின் நீ வாலிப வயதை அடைந்த போது, இருவரிடையே நடைபெற்ற தகராறைத் தீர்த்து வைக்கப் போய், ஒரு மனிதனை எதிர்பாராத விதமாக கொன்று விட்டாய். (பார்க்க 28:15) அதைத் தொடர்ந்து நாம் உன்னை மத்தியன் நாட்டிற்கு அனுப்பி வைத்து அக்கவலையிலிருந்து விடுவித்தோம். அங்கும் நீ பல இக்கட்டான சூழ்நிலையைக் கடந்து வந்தாய்.
அவ்வாறே நீ மத்யன் நாட்டிலேயே பல வருடங்கள் இருக்க நேர்ந்தது. இப்படியாக நீ உன் வாழ்வின் பலப் படித்தரங்களைக் கடந்து பலப் பயிற்சிகளுக்குப் பின்னரே பக்குவமாகி இறைத் தூதனாக ஆகும் தகுதியைப் பெற்றாய்.


وَٱصْطَنَعْتُكَ لِنَفْسِى.

20:41. அதன் பின்புதான் நீ என்னுடைய நபித்துவத் தேர்வில் தேர்ச்சிப் பெற்றாய்.
கவனித்தீர்களா? நபித்துவத்திற்கு தேர்ச்சிப் பெற எத்தனை படித்தரங்களை கடக்கவேண்டி உள்ளது என்பதை கவனியுங்கள். அதன் பின்னரே அவருக்கு இறை வழிகாட்டுதல்களை அளித்து மக்களை திருத்தும் பணியை மேற்கொள்ளும் படி கட்டளை இடப்படுகிறது. இதே போல் அனைத்து நபிமார்களுக்கும் இப்படிப்பட்ட சிறப்பு பயிற்சிகளை அளித்த பின்புதான் நபித்துவப் பட்டம் அளிக்கப்பட்டதாக நமக்குப் புலனாகிறது. நெருப்பை பெற சென்ற மூஸா நபிக்கு எதிர்ப்பாராத விதமாக நபித்துவம் கிடைத்தது என்ற கருத்து தவறானது. தொட்டில் குழந்தையாக இருந்த போது ஈஸா நபிக்கு வேதம் கிடைத்தது என்பதும் தவறான கருத்தாகும். (பார்க்க 19:28-30)


ٱذْهَبْ أَنتَ وَأَخُوكَ بِـَٔايَٰتِى وَلَا تَنِيَا فِى ذِكْرِى.

20:42.“நீயும் உன் சகோதரரும், ஃபிர்அவ்ன் மன்னனிடம் சென்று, ஆதாரப்பூர்வமான நம் வழிகாட்டுதலை எடுத்துரையுங்கள். என்னுடைய அறிவுரைகளை அவர்களுக்கு எடுத்துரைப்பதில் சற்றும் தளர்ந்து விடாதீர்கள்”


ٱذْهَبَآ إِلَىٰ فِرْعَوْنَ إِنَّهُۥ طَغَىٰ.

20:43.“ஃபிர்அவ்ன் மிகவும் வரம்பு மீறின செயல்களில் ஈடுபட்டு வருவதால், அவனைத் திருத்த நீங்கள் இருவரும் அவனிடம் செல்லுங்கள்”


فَقُولَا لَهُۥ قَوْلًۭا لَّيِّنًۭا لَّعَلَّهُۥ يَتَذَكَّرُ أَوْ يَخْشَىٰ.

20:44. நீங்கள் இருவரும் அவனிடம் சென்று மென்மையான சொற்களால் என்னுடைய வழிகாட்டுதலை எடுத்துரையுங்கள். அதனால் அவன் நல்லுபதேசம் பெற்று விடலாம். அல்லது அவனுடைய தவறான ஆட்சி முறையால் ஏற்படும் தீய விளைவுகளை எண்ணி அச்சமும் கொள்ளலாம்.


قَالَا رَبَّنَآ إِنَّنَا نَخَافُ أَن يَفْرُطَ عَلَيْنَآ أَوْ أَن يَطْغَىٰ.

20:45. அதற்கு அவ்விருவரும், “எங்கள் இறைவனே! அவன் எங்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கவோ அல்லது எங்களை அவன் கொடுமைப்படுத்தலாம் என்றோ பயப்படுகிறோம்” என்று கூறினார்கள்.


قَالَ لَا تَخَافَآ ۖ إِنَّنِى مَعَكُمَآ أَسْمَعُ وَأَرَىٰ.

20:46. அதற்கு, “நீங்கள் இருவரும் அதைப் பற்றிய அச்சம் கொள்ளத் தேவையில்லை. நிச்சயமாக நான் அனைத்தையும் செவியேற்பவனாகவும் பார்ப்பவனாகவும் இருக்கின்றேன். எனவே என் உதவி உங்களுக்கு நிச்சயம் கிடைக்கும்” என்று இறைவனிடமிருந்து ஆறுதல் செய்தி கிடைத்தது.


فَأْتِيَاهُ فَقُولَآ إِنَّا رَسُولَا رَبِّكَ فَأَرْسِلْ مَعَنَا بَنِىٓ إِسْرَٰٓءِيلَ وَلَا تُعَذِّبْهُمْ ۖ قَدْ جِئْنَٰكَ بِـَٔايَةٍۢ مِّن رَّبِّكَ ۖ وَٱلسَّلَٰمُ عَلَىٰ مَنِ ٱتَّبَعَ ٱلْهُدَىٰٓ.

20:47. அவ்வாறே அவ்விருவரும் ஃபிர்அவ்ன் மன்னனிடம் சென்று, “நாங்கள் இறைத் தூதர்களாக வந்து இருக்கிறோம். நாம் உங்கள் இறைவனிடமிருந்து ஆதாரப்பூர்வமான வழிகாட்டுதலை எடுத்துரைக்க வந்துள்ளோம்.
எந்தச் சமுதாயம் இறை வழிகாட்டுதலைப் பின்பற்றுமோ, அது சாந்தியும் அமைதியும் கொண்ட சமுதாயமாக உருவாகும் என்று இறைவன் புறத்திலிருந்து உறுதி அளிக்கப்படுகிறது. எனவே நீங்கள் இறைக் கட்டளைப்படி ஆட்சி செய்து வாருங்கள். மேலும் இஸ்ரவேலர்களைத் துன்புறுத்தாதீர்கள்.
நீங்கள் உங்கள் ஆட்சிமுறையை மாற்றிக் கொள்ள விரும்பவில்லை என்றால், இஸ்ரவேலர்களை விடுதலை செய்து எங்களுடன் அனுப்பிவிடுங்கள்” என்று கூறினார்கள்.


إِنَّا قَدْ أُوحِىَ إِلَيْنَآ أَنَّ ٱلْعَذَابَ عَلَىٰ مَن كَذَّبَ وَتَوَلَّىٰ.

20:48.“எந்தச் சமுதாயம் இறைவழிகாட்டுதலை எற்க மறுத்து தவறான வழியில் செல்லுமோ, அது காலப் போக்கில் பல வேதனைகளுக்கு ஆளாகி அழிந்து போகும் என எங்களுக்கு வந்த இறைச் செய்தி கூறுகிறது” என்றனர்.


قَالَ فَمَن رَّبُّكُمَا يَٰمُوسَىٰ.

20:49. இவற்றை எல்லாம் கேட்டு வந்த ஃபிர்அவ்ன், மூஸா நபியை பார்த்து, “உங்கள் இருவருடைய இறைவன் என்பவன் யார்?" என்று கேட்டான்.


قَالَ رَبُّنَا ٱلَّذِىٓ أَعْطَىٰ كُلَّ شَىْءٍ خَلْقَهُۥ ثُمَّ هَدَىٰ.

20:50. அதற்கு மூஸா நபி, “எங்களுக்கு என்று தனி இறைவன் யாரும் இல்லை. இவ்வுலகிலுள்ள ஒவ்வொரு பொருளையும் படைத்து பரிபாலித்து அவை எவ்வாறு செயல்பட வேண்டும் என்ற விதிமுறைகளையும் நிர்ணயித்துள்ளானே அவன்தான் எங்கள் அனைவரின் இறைவனும் ஆவன்” என்றார்.
இதைக் கேட்ட ஃபிர்அவ்ன் வாயடைந்து போய்விட்டான். அவருடைய பதிலை வைத்து மூஸா நபி மீது எந்த நடவடிக்கையும் எடுக்க முடியவில்லை. எனவே அவன் தன் வாதத்தின் திசையை மாற்றிக் கொண்டான். அவனுடன் சபையில் மந்திரிகளும் மற்ற அதிகாரிகளும் இருந்தனர். அவர்கள் யாவரும் இறைவனுக்கு மாறு செய்பவர்களாகவே இருந்தனர். அவர்களுடைய முன்னோர்களும் அவ்வாறே வாழ்ந்தவர்கள் ஆவார்கள். அவர்களை இவருக்கு எதிராக பகை ஏற்படுத்திட வேண்டும் என எண்ணி அவர்களுடைய முன்னோர்களின் நிலையைப் பற்றி விசாரித்தான்.


قَالَ فَمَا بَالُ ٱلْقُرُونِ ٱلْأُولَىٰ.

20:51.“அப்படியென்றால் முன் சென்ற தலைமுறைகளின் நிலைமை என்ன?” என்று ஃபிர்அவ்ன் கேட்டான்.


قَالَ عِلْمُهَا عِندَ رَبِّى فِى كِتَٰبٍۢ ۖ لَّا يَضِلُّ رَبِّى وَلَا يَنسَى.

20:52. அவர்களுடைய நிலையைப் பற்றி என் இறைவனே நன்கு அறிகிறான். அவரவர் செய்து வந்த செயல்களின் குறிப்புகள் இறைவனின் பதிவுப் புத்தகத்தில் இருக்கின்றன. எனவே என் இறைவன் அதன்படி தீர்ப்பளிப்பதில் தவறுவதுமில்லை மறப்பதும் இல்லை.


ٱلَّذِى جَعَلَ لَكُمُ ٱلْأَرْضَ مَهْدًۭا وَسَلَكَ لَكُمْ فِيهَا سُبُلًۭا وَأَنزَلَ مِنَ ٱلسَّمَآءِ مَآءًۭ فَأَخْرَجْنَا بِهِۦٓ أَزْوَٰجًۭا مِّن نَّبَاتٍۢ شَتَّىٰ.

20:53.“நான் பேசிவரும் இறைவனின் வல்லமையை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள். இப்பூமியைப் படைத்து அதில் நீங்கள் சிறப்பாக வாழ, அதை விரிப்பாக அமைத்து, அனைத்து வாழ்வாதார வசதிகளை ஏற்படுத்தியவனும் இறைவனே. நீங்கள் எளிதாக பயணம் செய்ய பாதைகளை அமைத்துக் கொடுத்ததும் இறைவனே. மேலும் அவனுடைய ஏற்பாட்டின் படியே மழையும் பொழிகிறது. அதைக் கொண்டு பல்வேறு தாவரங்களையும் செடி கொடிகளையும் ஜோடிஜோடியாக வெளிப்படுத்தியதும் இறைவனே.


كُلُوا۟ وَٱرْعَوْا۟ أَنْعَٰمَكُمْ ۗ إِنَّ فِى ذَٰلِكَ لَءَايَٰتٍۢ لِّأُو۟لِى ٱلنُّهَىٰ.

20:54.“எனவே அதைக் கொண்டே உங்களுக்கும், உங்கள் கால் நடைகளுக்கும் உணவு வகைகள் மற்றும் ஆகாரங்கள் கிடைக்கின்றன. மேலும் சிந்தித்துணரும் மக்களுக்கு இதில் பல அத்தாட்சிகள் இருக்கின்றன” என்று மூஸா நபி ஃபிர்அவ்னுக்கும் அவனுடைய சபையோருக்கும் விளக்கமளித்தார்.


۞ مِنْهَا خَلَقْنَٰكُمْ وَفِيهَا نُعِيدُكُمْ وَمِنْهَا نُخْرِجُكُمْ تَارَةً أُخْرَىٰ.

20:55. அது மட்டுமின்றி இந்த மண்ணிலிருந்து உங்கள் அனைவரையும் படைத்ததும் இறைவனே. அதன்பின் உங்கள் வாழ்வு முடிவு பெறும்போது, மீண்டும் மண்ணுக்குள்ளேயே போய் சேர்ந்து விடுகிறீர்கள்.அதன்பின் நீங்கள் இறைவனின் நியதிப்படி மீண்டும் எழுப்பப்பட்டு, நீங்கள் எவ்வாறு செயல்பட்டு வந்தீர்கள் என்று கேட்கப்படும்.


وَلَقَدْ أَرَيْنَٰهُ ءَايَٰتِنَا كُلَّهَا فَكَذَّبَ وَأَبَىٰ.

20:56. இப்படியாக மூஸா நபி மூலமாக ஃபிர்அவ்னுக்கு ஆதாரப்பூர்வமான வழிகாட்டுதலை எடுத்துரைத்தும், அவை எல்லாம் வெற்றுப் பேச்சு என கூறி, மிகவும் கர்வம் பிடித்தவனாக அவற்றை எற்க மறுத்து விட்டான். (பார்க்க 26:34)


قَالَ أَجِئْتَنَا لِتُخْرِجَنَا مِنْ أَرْضِنَا بِسِحْرِكَ يَٰمُوسَىٰ.

20:57. மாறாக அவன் மூஸா நபியைப் பார்த்து, “நீர் உன் வசீகரப் பேச்சைக் கொண்டு பொய்யான மார்க்கத்தை எடுத்துரைத்து, நாட்டை விட்டு எங்களை வெறியேற்றவா நம்மிடம் வந்தீர்?” என்று பல கோணங்களில் ஆதங்கத்துடன் கேட்க ஆரம்பித்தான்.


فَلَنَأْتِيَنَّكَ بِسِحْرٍۢ مِّثْلِهِۦ فَٱجْعَلْ بَيْنَنَا وَبَيْنَكَ مَوْعِدًۭا لَّا نُخْلِفُهُۥ نَحْنُ وَلَآ أَنتَ مَكَانًۭا سُوًۭى.

20:58.“அவ்வாறாயின் இதை போன்றே நாங்களும் நம் வசீகர பேச்சாளர்களை வரவழைத்து, உமக்கு தக்க பதிலடி தருவோம். எனவே இந்த கருத்துப் போட்டியை வைத்துக்கொள்ள ஒரு நாளை குறித்துச் சொல்லுங்கள். இதில் நானோ அல்லது நீரோ மாற்றம் செய்யாதவாறு ஓர் ஒப்பந்தம் செய்து கொள்ளலாம். எனவே மக்கள் அனைவரும் திரளாக வந்து கூடும் ஒரு நாளை குறிப்பிட்டு சொல்லுங்கள்” என்றான். (விளக்கத்திற்குப் பார்க்க 26:36-40)


قَالَ مَوْعِدُكُمْ يَوْمُ ٱلزِّينَةِ وَأَن يُحْشَرَ ٱلنَّاسُ ضُحًۭى.

20:59. அதற்கு மூஸா நபி, அழகு அலங்காரங்களுடன் அனைவரும் திரளாக ஒன்றுகூடும் திருநாளில் இந்த கருத்துப் போட்டியை வைத்துக் கொள்ளலாம் என்று அந்த நாளை குறித்துக் கொடுத்தார். அதற்கான முற்பகல் நேரமும் நிர்ணயிக்கப்பட்டது. (7:115)


فَتَوَلَّىٰ فِرْعَوْنُ فَجَمَعَ كَيْدَهُۥ ثُمَّ أَتَىٰ.

20:60. அதன்படியே ஃபிர்அவுனும் நாட்டில் வாதத் திறமை மிக்க மதகுருமார்களை வரச் சொல்லி கட்டளை பிறப்பித்தான் (பார்க்க 7:111). அவ்வாறே அவர்களும் குறித்த நாளில் வந்து விட்டனர். அவர்களை எல்லாம் ஒன்று திரட்டிக் கொண்டு போட்டியின் இடத்திற்கு ஃபிர்அவ்னும் வந்து சேர்ந்தான்.


قَالَ لَهُم مُّوسَىٰ وَيْلَكُمْ لَا تَفْتَرُوا۟ عَلَى ٱللَّهِ كَذِبًۭا فَيُسْحِتَكُم بِعَذَابٍۢ ۖ وَقَدْ خَابَ مَنِ ٱفْتَرَىٰ.

20:61. அந்த கருத்துப் போட்டி நடைபெறுவதற்கு முன் மூஸா நபி மதகுருமார்களை சந்தித்து, அல்லாஹ்வின் மீது பொய்யான விஷயங்களை இட்டுக்கட்டிக் கூறாதீர்கள். அவ்வாறு செய்பவர்களுக்கு கேடுதான் என்பதை மனதில் பதிய வைத்துக் கொண்டு பேசுங்கள். இல்லை என்றால் இறைவனின் நியதிப்படி நீங்கள் பல வேதனைகளுக்கு ஆளாவீர்கள். எந்தச் சமுதாயத்தில் இறைவனைப் பற்றி தவறான கற்பனை கதைகள் கூறப்பட்டு வந்ததோ, அது அழிவை சந்தித்தே இருக்கின்றன” என எச்சரித்தார்.


فَتَنَٰزَعُوٓا۟ أَمْرَهُم بَيْنَهُمْ وَأَسَرُّوا۟ ٱلنَّجْوَىٰ.

20:62. அதைத் தொடர்ந்து அந்த மதகுருமார்களும் ஒன்றுகூடி, தங்களுடைய அணுகுமுறை எவ்வாறு இருக்கவேண்டும் என்பதை தங்களுக்குள் கலந்து ஆலோசித்துக் கொண்டனர். அதன் பின்னரே அவர்கள் விவாதத்திற்கு ஆயத்தமானார்கள்.


قَالُوٓا۟ إِنْ هَٰذَٰنِ لَسَٰحِرَٰنِ يُرِيدَانِ أَن يُخْرِجَاكُم مِّنْ أَرْضِكُم بِسِحْرِهِمَا وَيَذْهَبَا بِطَرِيقَتِكُمُ ٱلْمُثْلَىٰ.

20:63. அதன்பின் மதகுருமார்கள், திரளாக கூடியிருந்த மக்களைப் பார்த்து, “நிச்சயமாக இவ்விருவரும் தம் வசீகர பேச்சுத் திறமையால் உங்கள் அனைவரையும் ஏமாற்ற பார்க்கிறார்கள். இப்படிப்பட்ட பேச்சைக் கொண்டு அவர்கள் உங்களை நாட்டை விட்டு வெளியேற்றவும், சிறப்பான உங்கள் மார்க்க பாதையை போக்கிவிடவும் விரும்புகிறார்கள்” என்று கூறினார்கள்.


فَأَجْمِعُوا۟ كَيْدَكُمْ ثُمَّ ٱئْتُوا۟ صَفًّۭا ۚ وَقَدْ أَفْلَحَ ٱلْيَوْمَ مَنِ ٱسْتَعْلَىٰ.

20:64. அதன்பின் அவர்கள் விவாதத்திற்கு வந்த மற்ற குருமார்களை பார்த்து, “இன்றைய தினம் வேற்றுமை பகைகளை ஒதுக்கிவிட்டு, அனைவரும் ஓரணியாக நின்று, நம் அனைவருக்கும் பகைவராய் இருக்கும் இவர்களை முறியடிக்க தயாராகி விடுங்கள். இன்றைய தினம் வாதத்தில் யாருடைய கை மேலோங்கி நிற்கிறதோ, அவர் தாம் வெற்றியாளர் ஆவார்” என்று முழக்கமிட்டனர்.


قَالُوا۟ يَٰمُوسَىٰٓ إِمَّآ أَن تُلْقِىَ وَإِمَّآ أَن نَّكُونَ أَوَّلَ مَنْ أَلْقَىٰ.

20:65. அதன்பின் விவாதத்தை ஆரம்பித்து வைக்க மூஸா நபியிடம் அவர்கள், “நீர் முதலில் வாதத்தை தொடங்குகிறீரா அல்லது நாங்கள் முதலில் தொடங்கட்டுமா?” என்று கேட்டார்கள்.


قَالَ بَلْ أَلْقُوا۟ ۖ فَإِذَا حِبَالُهُمْ وَعِصِيُّهُمْ يُخَيَّلُ إِلَيْهِ مِن سِحْرِهِمْ أَنَّهَا تَسْعَىٰ.

20:66. அதற்கு அவர், “அவ்வாறல்ல. நீங்கள் உங்கள் வாதத்தை முதலில் எடுத்துரையுங்கள்” என்றார். அதைத் தொடர்ந்து, அவர்கள் ஒருவர் பின் ஒருவராக தம் கைவசம் இருந்த மார்க்க விஷயங்களை சமர்ப்பித்தனர். அவர்கள் தம் பேச்சுத் திறமையால் அவற்றில் உண்மை இருப்பது போல் எடுத்துரைத்தனர். மக்களையும் அவை கவர்ந்துவிடுவது போல் மூஸா நபிக்கு தோன்றியது.


فَأَوْجَسَ فِى نَفْسِهِۦ خِيفَةًۭ مُّوسَىٰ.

20:67. எனவே மூஸா நபிக்கு கொஞ்சம் அச்சம் ஏற்பட்டது. (பார்க்க 7:116)


قُلْنَا لَا تَخَفْ إِنَّكَ أَنتَ ٱلْأَعْلَىٰ.

20:68. அப்போது, “மூஸாவே! நீர் பயப்படாதீர். நிச்சயமாக நீ சமர்ப்பிக்கும் மார்க்க விஷயங்களே மேலோங்கி நிற்கும்” என்று இறைவனிடமிருந்து ஆறுதல் செய்தி வந்தது.


وَأَلْقِ مَا فِى يَمِينِكَ تَلْقَفْ مَا صَنَعُوٓا۟ ۖ إِنَّمَا صَنَعُوا۟ كَيْدُ سَٰحِرٍۢ ۖ وَلَا يُفْلِحُ ٱلسَّاحِرُ حَيْثُ أَتَىٰ.

20:69.“எனவே உன் கைவசம் இருக்கும் மார்க்க உண்மைகளை அவர்கள் முன் சமர்ப்பியும். அவர்கள் சமர்ப்பித்த மார்க்க விஷயங்களை எல்லாம் முறியடித்து, நீயே மேலோங்கி வருவாய். ஏனெனில் அவர்கள் எடுத்துக் காட்டிய விஷயங்கள் யாவும் வெறும் யூகங்களே ஆகும். நீ இறைவழிகாட்டுதலை ஆதரப்பூர்வமாக அவர்கள் மனதில் பளிச்சிடும்படி எடுத்துரை. அவர்களால் உன்னை ஒருபோதும் வெற்றி கொள்ள முடியாது” என்று மூஸா நபிக்கு இறைவன் ஊக்கமளித்தான் (மேலும் பார்க்க 7:117-118).
அவ்வாறே அவரும், இறைவனின் மார்க்க உண்மைகளை அவர்கள் முன் ஆதாரப்பூர்வமாக எடுத்துரைக்கவே, அவர்களுடைய மதப் பிரச்சாரங்களின் சாயம் வெளுத்து விட்டது. மூஸா நபி மார்க்க உண்மைகளை எடுத்துரைத்து வெற்றி பெற்றார்.


فَأُلْقِىَ ٱلسَّحَرَةُ سُجَّدًۭا قَالُوٓا۟ ءَامَنَّا بِرَبِّ هَٰرُونَ وَمُوسَىٰ.

20:70. அவருடைய மார்க்க உண்மைகளைக் கேட்ட மதகுருமார்கள் அனைவரும், மூஸா நபி முன் தலைவணங்கி, அவருடைய மார்க்கத்தை ஏற்றுக் கொள்வதாக வெளிப்படையாக அறிவித்து விட்டனர். ஹாரூன் மற்றும் மூஸாவுடைய இறைவனின் வழிகாட்டுதலை நாங்களும் மனமாற ஏற்றுக் கொள்வதாக அறிவித்து விட்டனர்.


قَالَ ءَامَنتُمْ لَهُۥ قَبْلَ أَنْ ءَاذَنَ لَكُمْ ۖ إِنَّهُۥ لَكَبِيرُكُمُ ٱلَّذِى عَلَّمَكُمُ ٱلسِّحْرَ ۖ فَلَأُقَطِّعَنَّ أَيْدِيَكُمْ وَأَرْجُلَكُم مِّنْ خِلَٰفٍۢ وَلَأُصَلِّبَنَّكُمْ فِى جُذُوعِ ٱلنَّخْلِ وَلَتَعْلَمُنَّ أَيُّنَآ أَشَدُّ عَذَابًۭا وَأَبْقَىٰ.

20:71. இதைக் கவனித்து வந்த ஃபிர்அவ்ன் மன்னனுக்கு கோபம் தலைக்கு மேல் ஏறிவிட்டது. அவன்,என் அனுமதி எதுவும் பெறாமலேயே நீங்கள் அனைவரும் அவருடைய மார்க்கத்தை ஏற்றுக் கொண்டீர்களா? நிச்சயமாக அவர், பேச்சில் மயக்கும் மகா சூரன் என்றே நினைக்கிறேன். நீங்கள் என் வழிக்கு வரவில்லை என்றால், நான் உங்களை மாறுகை மாறுகால் வாங்கி பேரித்த மரத்தில் உங்களை தொங்க விட்டுவிடுவேன். இவ்வாறு வேதனை அளிப்பதில் கடுமையானவன் நானா அல்லது மூஸாவின் இறைவனா என்பதை தெரிந்து கொள்வீர்கள்” என கோபக் கனலில் கத்தினான்.


قَالُوا۟ لَن نُّؤْثِرَكَ عَلَىٰ مَا جَآءَنَا مِنَ ٱلْبَيِّنَٰتِ وَٱلَّذِى فَطَرَنَا ۖ فَٱقْضِ مَآ أَنتَ قَاضٍ ۖ إِنَّمَا تَقْضِى هَٰذِهِ ٱلْحَيَوٰةَ ٱلدُّنْيَآ.

20:72. அதற்கு அந்த மதகுருமார்கள், “எங்களைப் படைத்த எங்கள் இறைவனிடம் இருந்து வந்துள்ள தெளிவான ஆதாரங்களை விடவும், எங்களைப் படைத்தவனை விடவும் உன்னை மேலானவனாக நாங்கள் எடுத்துக் கொள்வதற்கு இல்லை. ஆகவே நீ என்ன தீர்ப்பு செய்ய இருக்கிறாயோ அதன் படியே செய்துகொள். உன்னுடைய தீர்ப்பு எல்லாம் தற்காலிகமானதே என்பதை தெரிந்துகொள்” என்று பதிலளித்து விட்டனர்.
வருங்கால நிலையான காலக் கட்டத்தில், இத்தகைய கட்டளைகள் செல்லாது என்பதை நாங்கள் மூஸா நபி மூலம் தெரிந்து கொண்டோம்.


إِنَّآ ءَامَنَّا بِرَبِّنَا لِيَغْفِرَ لَنَا خَطَٰيَٰنَا وَمَآ أَكْرَهْتَنَا عَلَيْهِ مِنَ ٱلسِّحْرِ ۗ وَٱللَّهُ خَيْرٌۭ وَأَبْقَىٰٓ.

20:73. மேலும் அவர்கள் ஃபிர்அவ்னிடம், “எங்கள் இறைவனிடமிருந்து வந்துள்ள தெளிவான வழிகாட்டுதலை ஏற்றுக் கொண்டோம். இதுவரையில் நாங்கள் போதித்து வந்த தவறான மதப் பிரச்சாரங்களால் ஏற்பட்ட தீய விளைவுகளிலிருந்து நிவாரணம் பெற எங்கள் இறைவனிடமே பாதுகாப்புத் தேடிக் கொள்கிறோம். அல்லாஹ்வின் வழிகாட்டுதலும் அவனுடைய செயல் திட்டங்களே மிகவும் மேலானவையாக இருக்கின்றன என்பதை நாம் மூஸா நபி மூலம் அறிந்து கொண்டோம்” என்று மிகவும் பணிவோடு கூறினர்.


إِنَّهُۥ مَن يَأْتِ رَبَّهُۥ مُجْرِمًۭا فَإِنَّ لَهُۥ جَهَنَّمَ لَا يَمُوتُ فِيهَا وَلَا يَحْيَىٰ.

20:74. மேலும் அவர்கள் ஃபிர்அவ்னிடம், “நிச்சயமாக எவன் இறைவனிடத்தில் குற்றவாளியாக வருகிறானோ, அவனுக்கு நரகம் நிச்சயமாக காத்திருக்கிறது. அதில் அவன் சாகவும் மாட்டான் வாழவும் மாட்டான் என்பதையும் நாங்கள் மூஸா நபி மூலமாக தெரிந்து கொண்டோம்” என்றனர்.


وَمَن يَأْتِهِۦ مُؤْمِنًۭا قَدْ عَمِلَ ٱلصَّٰلِحَٰتِ فَأُو۟لَٰٓئِكَ لَهُمُ ٱلدَّرَجَٰتُ ٱلْعُلَىٰ.

20:75. மேலும் அவர்கள், “எந்த சமுதாயத்தவர்கள் இறைவழிகாட்டுதலை ஏற்று, ஆக்கப்பூர்வமான சமூக நலத்திட்டங்களைத் தீட்டி உழைத்து வருகிறார்களோ, அவர்களுக்கு உயர்வும் கண்ணியமும் நிச்சயம் உண்டு என்பதையும்”


جَنَّٰتُ عَدْنٍۢ تَجْرِى مِن تَحْتِهَا ٱلْأَنْهَٰرُ خَٰلِدِينَ فِيهَا ۚ وَذَٰلِكَ جَزَآءُ مَن تَزَكَّىٰ.

20:76.“எதுவரையில் அவ்வாறு சிறப்பாக செயல்பட்டு வருகிறார்களோ, அதுவரையில் அவர்களுக்கு சுவனத்திற்கு ஒப்பான சந்தோஷமான பாதுகாப்பான வாழ்வு கிடைக்கும். அங்கு அவர்களுடைய உழைப்பிற்கு ஏற்ப தாராளமான பொருளாதார வசதிகள் கொண்ட சமுதாயமாக விளங்கும். இதுவே தன்நலமற்ற தூய எண்ணங்களுடன் செயல்படும் சமூகத்தவர்களுக்குக் கிடைக்கும் சன்மானங்களாகும் என்பதையும் நாங்கள் மூஸா நபி மூலம் தெரிந்து கொண்டோம்” என்றும் ஃபிர்அவ்னிடம் விளக்கமளித்து அவன் அறிவித்த தண்டனையைப் பொருட்படுத்தவே இல்லை.
மூஸா நபி அந்த மத குருமார்களுக்கு எப்படி எல்லாம் மார்க்க உண்மைகளை விரிவாக எடுத்துரைத்து அல்லாஹ்வை ஏற்றுக்கொள்ள வைத்துள்ளார் என்பதை கவனித்தீர்களா? கைத் தடியை கீழே எறிந்து, பாம்பாக்கி இந்த மார்க்க உண்மைகளை விளக்க முடியுமா? இந்த கருத்துப் போட்டி நடப்பதற்கு முன் அவர்கள் ஃபிர்அவ்னிடம் கேட்ட சன்மானம் எங்கே? (பார்க்க 7:113-114) இந்த போட்டிக்குப் பின் அல்லாஹ்வின் மீது அவர்களுக்கு ஏற்பட்ட அசைக்க முடியாத ஈமான் எங்கே? தெளிவாக சிந்தித்துப் பார்க்க வேண்டிய விஷயமே!!
அதன்பின் மூஸா நபி தம் சமூகத்தவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுக்க மாண்புகளை கற்றுக் கொடுத்து வந்தார். மேலும் தற்காப்பு பயிற்சிகளையும் அளித்து, சிறந்த செயல்வீரர்களாக வருவதற்கு ஏற்பாடுகளை செய்து வந்தார் (பார்க்க 7:128) ஃபிர்அவ்னிடம் பலமுறை இஸ்ரவேலர்கள் போராடியும் அவர்களை விடுதலை அளிக்க அவன் மறுத்துவிட்டான். (பார்க்க 7:130-135) எனவே எகிப்து நாட்டிலிருந்து பாலஸ்தீன நாட்டிற்கு சென்றுவிட இறைக் கட்டளை வந்தது. அவர்கள் செல்லும் பாதையின் குறுக்கே நைல் நதி வருவதால், அவர்கள் அதன் குறுக்கே ஒரு பாதையை ஏற்படுத்திக் கொண்டார்கள். (விளக்கத்திற்கு பார்க்க 7:136)


وَلَقَدْ أَوْحَيْنَآ إِلَىٰ مُوسَىٰٓ أَنْ أَسْرِ بِعِبَادِى فَٱضْرِبْ لَهُمْ طَرِيقًۭا فِى ٱلْبَحْرِ يَبَسًۭا لَّا تَخَٰفُ دَرَكًۭا وَلَا تَخْشَىٰ.

20:77. இது சம்பந்தமாக மூஸா நபிக்கு இறைவன் புறத்திலிருந்து வஹிச் செய்தி வந்தது. அதில் “என் வழிகாட்டுதலை ஏற்று நடக்கும் செயல்வீரர்களை யாருக்கும் தெரியாமல் அழைத்துச் சென்று, வழியில் வரும் நதியின் குறுக்கே ஒரு பாலத்தை கட்டிக் கொள்ளுங்கள். ஃபிர்அவுன் உங்களைப் பிடித்து விடுவான் என்ற பயமோ பீதியோ கொள்ளத் தேவையில்லை” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
அதன் படியே அவர்கள் நதியைக் கடக்க இரகசியமாக குறுக்கே பாலத்தை கட்டுவதற்கு ஏற்பாடுகளைச் செய்துகொண்டனர். அதன்பின் குறித்த நாளில் இரவோடு இரவாக பயணத்தை மேற்கொண்டனர். (விளக்கத்திற்குப் பார்க்க 7:136)


فَأَتْبَعَهُمْ فِرْعَوْنُ بِجُنُودِهِۦ فَغَشِيَهُم مِّنَ ٱلْيَمِّ مَا غَشِيَهُمْ.

20:78. இதை அறிந்த ஃபிர்அவ்னும் தன் படைகளுடன் மறுநாள் காலையில் பின் தொடர்ந்தான் (பார்க்க 26:60) ஆனால் அவன் தன் படைகளுடன் நதியில் விழுந்து மூழ்கிப் போனான்.


وَأَضَلَّ فِرْعَوْنُ قَوْمَهُۥ وَمَا هَدَىٰ.

20:79. ஆட்சிபீடத்தில் இருந்த ஃபிர்அவுன் தன் சமூகத்தாரை வழிகெடுத்ததோடு, அவர்களை நேரான பாதையில் அழைத்துச் செல்லவுமில்லை. எனவே அவனுக்கு இந்த கதி ஏற்பட்டுவிட்டது.


يَٰبَنِىٓ إِسْرَٰٓءِيلَ قَدْ أَنجَيْنَٰكُم مِّنْ عَدُوِّكُمْ وَوَٰعَدْنَٰكُمْ جَانِبَ ٱلطُّورِ ٱلْأَيْمَنَ وَنَزَّلْنَا عَلَيْكُمُ ٱلْمَنَّ وَٱلسَّلْوَىٰ.

20:80. இஸ்ரவேலர்களே! இப்படியாக நாம் உங்களை உங்களுடைய கொடுங்கோல் மன்னனிடமிருந்து காப்பாற்றி, “தூர்” எனும் சினாய் மலை அடிவாரத்தில் குடியிருக்க, மூஸா நபி மூலமாக ஏற்பாடுகளை செய்தோம். அங்கு உங்களுடைய வருங்கால வாழ்க்கை சிறப்பாக இருக்கும் என்று அவர் மூலமாக வாக்களித்தோம். அதற்காக எல்லா வகையான உணவு வகைகளும் உங்களுக்கு தாராளமாகக் கிடைக்கச் செய்தோம்.


كُلُوا۟ مِن طَيِّبَٰتِ مَا رَزَقْنَٰكُمْ وَلَا تَطْغَوْا۟ فِيهِ فَيَحِلَّ عَلَيْكُمْ غَضَبِى ۖ وَمَن يَحْلِلْ عَلَيْهِ غَضَبِى فَقَدْ هَوَىٰ.

20:81. மேலும் நாம், “உங்களுக்கு அளித்துள்ள உணவு வகைகளில் பரிசுத்தமானதை உண்ணுங்கள் பருகுங்கள். ஆனால் நீங்கள் ஒருபோதும் வரம்பு மீறின செயலில் ஈடுபடாதீர்கள். அவ்வாறு செய்வீரர்களானால், “மனித செயல்களின் விளைவுகள்” என்ற நியதியின்படி வேதனைகள் உங்களை வந்தடையும். எந்த சமுதாயத்தின் மீது அழிவு ஏற்படுகிறதோ, அது நிச்சயமாக வீழ்ச்சியின் பக்கம் விரைந்து பல வேதனைகளுக்கு ஆளாகும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்”


وَإِنِّى لَغَفَّارٌۭ لِّمَن تَابَ وَءَامَنَ وَعَمِلَ صَٰلِحًۭا ثُمَّ ٱهْتَدَىٰ.

20:82.“மாறாக தவறான செயல்களை விட்டுவிட்டு, அல்லாஹ்வின் வழிகாட்டுதலை ஏற்று ஆக்கப்பூர்வமான நற்செயல்களை செய்பவர்களுக்கு மென்மேலும் சிறந்த வாழ்க்கை வசதிகள் கிடைத்து வரும். மேலும் அவர்களுக்கு பாதுகாப்பான வாழ்க்கையும் நிச்சயமாக கிடைக்கும்”
இப்படியாக மூஸா நபி நல்லறிவுரைகளை அளித்து, அவர்களுக்கு சிறந்த பயிற்சிகளை அளித்து வந்தார். அனைவரும் கட்டுக் கோப்பாக வாழும்படி ஏற்பாடுகளை செய்து வந்தார். மேல்கொண்டு அவருக்கு இறைவழிகாட்டுதல் அளிப்பதற்காக தூர் மலைக்கு மறுபக்கம் உள்ள இடத்திற்கு வரும்படி இறைவனிடமிருந்து அவருக்கு கட்டளை வந்தது. அதைத் தொடர்ந்து தம் சமுகாத்தாரை விட்டு 40 நாட்களுக்குப் பிரிந்திருக்க நேர்கிறது.


۞ وَمَآ أَعْجَلَكَ عَن قَوْمِكَ يَٰمُوسَىٰ.

20:83. அவ்வாறே அவர் சினாய் மலை அடிவாரத்திற்கு மூஸா நபி வந்த போது, “மூஸாவே! உன் சமூகத்தாரை விட்டு இவ்வளவு சீக்கிரம் விரைந்து வரக் காரணம் என்ன?” என்று இறைவன் கேட்டான்.


قَالَ هُمْ أُو۟لَآءِ عَلَىٰٓ أَثَرِى وَعَجِلْتُ إِلَيْكَ رَبِّ لِتَرْضَىٰ.

20:84. அதற்கு மூஸா நபி, “என் இறைவனே! என் சமூகத்தார் அனைவரும் என் அறிவுரைகளின் படியே செயல்பட்டு வருகின்றனர். மேலும் நான் உன் அழைப்பை ஏற்று, உன்னிடமிருந்து மேற்கொண்டு வழிகாட்டுதல் ஏதாவது இருந்தால் அவற்றையும் பெற்றுச் செல்லவே உன்னிடம் விரைந்து வந்தேன்” என்றார்.
அதாவது அவருடைய சமூகத்தாரை விட்டு சில நாட்கள் பிரிந்து இருப்பதில் பெரிய அளவில் பாதிப்புகள் எதுவும் வராது என்று கருதியதால் இறைவனிடம் விரைந்து சென்றதாக அவர் கூறினார்.


قَالَ فَإِنَّا قَدْ فَتَنَّا قَوْمَكَ مِنۢ بَعْدِكَ وَأَضَلَّهُمُ ٱلسَّامِرِىُّ.

20:85. “நீ இங்கு வந்தபின், உன் சமூகத்தாருக்கு ஒரு கேடு ஏற்பட்டுவிட்டது. சாமிரி என்பவன் அவர்களை வழிகெடுத்து விட்டான்” என்று இறைவன் அறிவித்தான்.


فَرَجَعَ مُوسَىٰٓ إِلَىٰ قَوْمِهِۦ غَضْبَٰنَ أَسِفًۭا ۚ قَالَ يَٰقَوْمِ أَلَمْ يَعِدْكُمْ رَبُّكُمْ وَعْدًا حَسَنًا ۚ أَفَطَالَ عَلَيْكُمُ ٱلْعَهْدُ أَمْ أَرَدتُّمْ أَن يَحِلَّ عَلَيْكُمْ غَضَبٌۭ مِّن رَّبِّكُمْ فَأَخْلَفْتُم مَّوْعِدِى.

20:86. ஆகவே மூஸா நபி நாற்பது நாட்கள் பயணத்தை முடித்துக் கொண்டு, தம் சமூகத்தாரிடம் கோபமாக திரும்பி வந்தார். அவர்களைப் பார்த்து, “இது என்ன விபரீத விளையாட்டு? உங்களுக்கு அமைதியான வாழ்வு அளிப்பதாக இறைவன் கொடுத்த வாக்குறுதி நிறைவேறியதா இல்லையா? அதில் கால தாமதம் இருந்ததா? அல்லது உங்கள் இறைவன் மீது அவநம்பிக்கை ஏற்பட்டு இந்த வழிபாட்டு ஏற்பாடுகளை செய்து கொண்டீர்களா? இவ்வாறு செய்தால், உங்கள் இறைவனின் கோபத்திற்கு ஆளாவீர்கள் என்பதை நீங்கள் மறந்து விட்டீர்களா? இறைவனுக்கு மட்டுமே கட்டுப்பட்டு வாழ்வதாக நீங்கள் எனக்கு கொடுத்த வாக்குறுதி என்னவாயிற்று?” என்று கேட்டார்.


قَالُوا۟ مَآ أَخْلَفْنَا مَوْعِدَكَ بِمَلْكِنَا وَلَٰكِنَّا حُمِّلْنَآ أَوْزَارًۭا مِّن زِينَةِ ٱلْقَوْمِ فَقَذَفْنَٰهَا فَكَذَٰلِكَ أَلْقَى ٱلسَّامِرِىُّ.

20:87. அதற்கு அவர்கள், “நாங்கள் உமக்கு கொடுத்த வாக்குறுதிக்கு நாங்களாகவே மீறவில்லை. நாங்கள் அணிந்திருந்த ஆபரணங்கள் நகர்புற வாழ்க்கைக்கு ஏற்ற வகையில் அலங்காரமாக இருந்தன. ஆனால் இப்போது நாங்கள் இந்த காட்டு பகுதியில் வாழ்ந்து வருகிறோம். எனவே அவை தேவையற்ற சுமையாக இருந்ததால் அவற்றை நாங்கள் அனைவரும் கழற்றி விட்டோம். அதை நெருப்பில் உருக்கி ஒரு பொம்மையை செய்திட எங்களுக்கு சாமிரி யோசனை கூறி, அவனும் தன்னிடம் இருந்த நகையை கழற்றி கொடுத்துவிட்டான்” என்றனர்.


فَأَخْرَجَ لَهُمْ عِجْلًۭا جَسَدًۭا لَّهُۥ خُوَارٌۭ فَقَالُوا۟ هَٰذَآ إِلَٰهُكُمْ وَإِلَٰهُ مُوسَىٰ فَنَسِىَ.

20:88.“அவற்றை நெருப்பில் உருக்கிய சாமிரி, காளைக் கன்று போலவே ஒரு பொம்மையை செய்து கொடுத்தான். அந்த பொம்மையை ஊதும்போது மாடு கத்துவதுப் போல் இருந்தது. இதை கண்ட சிலர், இதுவும் நம் வழிபாட்டு தெய்வமே. மூஸாவின் தெய்வமும் இதுவாகத் தான் இருக்கவேண்டும் என்று கூறி, அதை வழிப்பட ஆரம்பித்து விட்டனர். ஆனால் மூஸா திரும்பி வந்தால் என்ன செய்வார் என்பதை சாமிரி மறந்து விட்டான்” என்று கூறினார்கள்.


أَفَلَا يَرَوْنَ أَلَّا يَرْجِعُ إِلَيْهِمْ قَوْلًۭا وَلَا يَمْلِكُ لَهُمْ ضَرًّۭا وَلَا نَفْعًۭا.

20:89. அதற்கு மூஸா நபி, “அது ஒரு மாட்டின் சப்தத்தை எழுப்புவது என்னவோ உண்மைதான். ஆனால் அதைத் தவிர, அதால் வேறு எதையாவது செய்ய முடிகிறதா? அது மட்டுமின்றி அது உங்களுக்கு எந்த நன்மையோ, தீமையோ செய்ய சக்தியற்றதாக இருக்கிறதே. இதை அவர்கள் கவனித்துப் பார்க்க வேண்டாமா?” என்று கேட்டார்.


وَلَقَدْ قَالَ لَهُمْ هَٰرُونُ مِن قَبْلُ يَٰقَوْمِ إِنَّمَا فُتِنتُم بِهِۦ ۖ وَإِنَّ رَبَّكُمُ ٱلرَّحْمَٰنُ فَٱتَّبِعُونِى وَأَطِيعُوٓا۟ أَمْرِى.

20:90.அவர்களோடு இருந்த ஹாரூன் நபியும் மூஸா நபி வருவதற்கு முன் அவர்களை திருத்த முயற்சிகளை மேற்கொண்டார். அவர், “என் சமூகத்தாரே! நிச்சயமாக இதைக் கொண்டு உங்களுக்கு பல குழப்பங்கள் தான் ஏற்படும். உங்களை படைத்து பரிப்பாலிக்கும் இறைவன் அருட்கொடைகளை அளிப்பவனாகவே இருக்கின்றான். எனவே அவன் காட்டிய வழியைப் பின்பற்றுங்கள். வீணான இப்படிப்பட்ட செயலில் ஈடுபடாதீர்கள். நான் சொல்வதை கேளுங்கள்” என்று அவர்களிடம் பலமுறை விளக்கி வந்தார்.


قَالُوا۟ لَن نَّبْرَحَ عَلَيْهِ عَٰكِفِينَ حَتَّىٰ يَرْجِعَ إِلَيْنَا مُوسَىٰ.

20:91. அதற்கு அவர்கள், “இந்த வழிபாட்டு முறையை விட்டுவிட எங்களுக்கு விருப்பமில்லை. மூஸா அவர்கள் வரட்டும். அப்போது பார்த்துக் கொள்ளலாம்” என்று திட்டவட்டமாக கூறிவிட்டனர்.


قَالَ يَٰهَٰرُونُ مَا مَنَعَكَ إِذْ رَأَيْتَهُمْ ضَلُّوٓا۟.

20:92. இதை அறியாத மூஸா நபி, தம் சகோதரர் ஹாரூன் மீது மிகவும் கடிந்து கொண்டார். அவர், "ஹாரூனே! இவர்கள் வழிகேட்டில் செல்வதை நீர் கண்ட போது, அவர்களுக்கு தக்க முறையில் விளக்கி அதை தடுத்காதிருக்க உமக்கு என்ன வந்தது?” என்று கோபத்துடன் கேட்டார்.


أَلَّا تَتَّبِعَنِ ۖ أَفَعَصَيْتَ أَمْرِى.

20:93. மேலும் அவர், "நான் உங்களுக்கு செய்து வந்த அறிவுரைகளைப் பின்பற்றி இருக்க வேண்டாமா? நீங்கள் ஏன் என் கட்டளையை மீறி நடந்து கொண்டீர்கள்?” என்று கேட்டார்.


قَالَ يَبْنَؤُمَّ لَا تَأْخُذْ بِلِحْيَتِى وَلَا بِرَأْسِىٓ ۖ إِنِّى خَشِيتُ أَن تَقُولَ فَرَّقْتَ بَيْنَ بَنِىٓ إِسْرَٰٓءِيلَ وَلَمْ تَرْقُبْ قَوْلِى.

20:94. அதற்கு ஹாரூன், என் தாயின் செல்ல மகனே! இது விஷயமாக என் குடுமியைப் பிடித்து இழுத்து என்னை வம்புக்கு இழுக்காதீர். நான் அவர்களுக்கு பலமுறை எடுத்துரைத்தேன். ஆனால் அவர்கள் அதை பொருட்படுத்தவே இல்லை. அதை கடுமையாக்கி இருந்தால் இஸ்ரவேலர்களிடையே பிரிவு ஏற்பட்டிருக்கும். அதன்பின் நீர் என்னிடம் இவர்களிடையே ஏன் பிரிவினையை உண்டாக்கினீர்? நான் வந்தபின் அதைப் பற்றி சரியான முடிவை எடுத்திருப்பேனே என்று நீர் கூறுவீரோ என நான் பயந்தேன்” என்று பதிலளித்தார்.
இதைக் கேட்ட மூஸா நபி நிம்மதியடைந்தார். கவனித்தீர்களா? ஓர் இறைத் தூதர் சிலை வணக்க வழிபாட்டையும் பொறுத்துக் கொள்கிறார். ஆனால் சமூகத்தாரிடையே பிரிவினை ஏற்படக் கூடாது என்பதில் எந்த அளவுக்கு வழிப்புணர்வுடன் நடந்து கொள்கிறார் என்பதை கவனியுங்கள். ஆனால் இன்றைய நிலை என்ன? யாராவது ஒரு புதிய கொள்கையை மக்கள் முன் கொண்டு வந்தாலே போதும், உடனே அவர்களுக்கு ஒரு பிரிவை ஏற்படுத்தி அதற்கு ஒரு தனிப் பெயரும் சூட்டி விடுகிறார்கள். இது எந்த அளவுக்கு பாவச் செயல் என்பதை 6:159 வாசகத்தை பாருங்கள்.


قَالَ فَمَا خَطْبُكَ يَٰسَٰمِرِىُّ.

20:95. அதன்பின் மூஸா நபி சாமிரியைப் பார்த்து, “உன் விஷயம் என்ன?” என்று கேட்டார்.


قَالَ بَصُرْتُ بِمَا لَمْ يَبْصُرُوا۟ بِهِۦ فَقَبَضْتُ قَبْضَةًۭ مِّنْ أَثَرِ ٱلرَّسُولِ فَنَبَذْتُهَا وَكَذَٰلِكَ سَوَّلَتْ لِى نَفْسِى.

20:96. அதற்கு சாமிரி, “உம் சமூகத்தாரிடையே எங்கும் காணாத கட்டுக்கோப்பான வாழ்க்கை முறை இருப்பதை கண்டேன். இதன் பின்னணியில் செயல்படுவது இறைவழிகாட்டுதலே என்பதையும் நான் யூகித்துக் கெண்டேன். நானும் அதை பின்பற்றுவது போல் இந்த கூட்டத்தில் இணைந்துக் கொண்டேன். நீர் இல்லாத சமயம் பார்த்து, சிலை வணக்க வழிபாட்டிற்கு வழிசெய்தேன். உம் மக்களும் அதை ஏற்றுக் கொண்டார்கள். அவ்வாறு செய்வதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி ஏற்பட்டது” என்று கூறினான்.


قَالَ فَٱذْهَبْ فَإِنَّ لَكَ فِى ٱلْحَيَوٰةِ أَن تَقُولَ لَا مِسَاسَ ۖ وَإِنَّ لَكَ مَوْعِدًۭا لَّن تُخْلَفَهُۥ ۖ وَٱنظُرْ إِلَىٰٓ إِلَٰهِكَ ٱلَّذِى ظَلْتَ عَلَيْهِ عَاكِفًۭا ۖ لَّنُحَرِّقَنَّهُۥ ثُمَّ لَنَنسِفَنَّهُۥ فِى ٱلْيَمِّ نَسْفًا.

20:97. அதற்கு மூஸா நபி, சரி. இனி உனக்கு இங்கு வேலையில்லை. இங்கிருந்து போய்விடு. இனி வரும் உன் வாழ்நாளில் நீ யாரைக் கண்டாலும் என்னைப் போல் யாரும் ஆகிவிடாதீர்கள் என்றுதான் நீ சொல்ல வேண்டி வரும். அந்த அளவுக்கு உனக்கு மோசமான வேதனைகள் இறைவனின் நியதிப்படி வந்தடையும். அதிலிருந்து நீ ஒருபோதும் தப்பவே முடியாது. நீ தரிப்பட்டு ஆராதனை செய்து கொண்டிருந்தாயே, “அந்த நாயனுக்கு” என்ன கதி ஏற்படப் போகிறது என்பதை பார். நான் அதனை சுட்டெரித்து சாம்பலாக்கி அதை நதியில் வீசி எரிந்து விடுகிறேன்” என்று கூறினார்.


إِنَّمَآ إِلَٰهُكُمُ ٱللَّهُ ٱلَّذِى لَآ إِلَٰهَ إِلَّا هُوَ ۚ وَسِعَ كُلَّ شَىْءٍ عِلْمًۭا.

20:98. அதன் பின் தம் சமூகத்தாரை நோக்கி, “நீங்கள் கட்டுப்பட வேண்டியது இந்த பிரபஞ்சத்தை படைத்து செயலாற்றும் ஏக இறைவனாகிய அல்லாஹ்வின் வழிகாட்டுதலுக்கு மட்டுமே. அவனே இவ்வுலகிலுள்ள ஒவ்வொன்றையும் படைத்து அவை எவ்வாறு செயல்படுகின்றன என்ற முழு ஞானமும் உடையவன். இதை நீங்கள் ஒருபோதும் மறந்துவிடாதீர்கள்” என்றார்.


كَذَٰلِكَ نَقُصُّ عَلَيْكَ مِنْ أَنۢبَآءِ مَا قَدْ سَبَقَ ۚ وَقَدْ ءَاتَيْنَٰكَ مِن لَّدُنَّا ذِكْرًۭا.

20:99. இறைவழிகாட்டுதலை எடுத்துரைப்பவரே! இவையாவும் நடந்து முடிந்த வரலாற்று உண்மைகளாகும். இதிலிருந்து திட்டமாக நம்மிடமிருந்து நினைவூட்டும் நல்லறிவுரைகள் கிடைக்கும். இதிலிருந்து படிப்பினை பெறுவதற்காக நாம் இதனை கொடுத்திருக்கிறோம்.
(1) மூஸா நபியின் இச்சம்பவ நிகழ்ச்சியிலிருந்து நமக்கு பல படிப்பினைகள் கிடைக்கின்றன. அதாவது நபித்துவத் தேர்வுக்கு முன் மூஸா பல வகையில் பயிற்சி அளிக்கப்படுகிறார். (20:40-41) இது மிகமிக முக்கியமான ஒன்றாகும். அதாவது இறைவழிகாட்டுதலை எடுத்துரைக்கும் தகுதி பெற்றவர்களை மட்டும் திருக்குர்ஆனின் ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும்.
(2) அதன் பின் அந்த வஹீச் செய்திகளின் உண்மை நிலையையும், அதன் நோக்கத்தையும் அவர் நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும். (20:17-18) அதன் பின்னரே அவர் மக்களுக்கு கொஞ்சம் கொஞ்சமாக எடுத்துரைக்க வேண்டும்.
(3) இவ்வாறு எடுத்துரைத்து ஒரு சமுதாயத்தை திருத்தி நேர்வழிக்கு கொண்டு வருவது என்பது சாதாரணமான விஷயமல்ல. இதற்காக அல்லும் பகலும் உழைக்க வேண்டி இருக்கிறது. (20:20-22)
(4) மக்கள் ஆதரவை திரட்டிக் கொண்டு அடுத்த கட்டமாக ஆட்சியாளர்களை திருத்த முயல வேண்டும். இதுவும் ஒரு சிரமமான விஷயமே ஆகும். இதற்காக அவர்கள் மதகுருமார்களிடம் வாதம் செய்து அதிலும் அவர்கள் வெற்றி பெற வேண்டும்.
(5) இத்தகைய சம்பவம் மூஸா நபிக்கு மட்டும்தான் ஏற்பட்டது என்று நினைக்காதீர்கள். ஏறக்குறைய எல்லா நபிமார்கள் விஷயத்திலும் இப்படித்தான் நடந்தது. (பார்க்க அத்தியாயம் 7, 11 & 26) இறுதியாக முஹம்மது நபி (ஸல்) அவர்களும் இப்படித்தான் அரும்பாடுபட்டு உலக மக்களை திருத்த முற்பட்டார். அதில் அவர் வெற்றியும் பெற்றார். அவருக்குப் பின் இந்த பொறுப்பு மூஃமின்களிடம் ஒப்படைக்கப்படுகிறது. (பார்க்க 3:81 &144)
(6) மக்கள் திரளாக வந்து கூடிவிட்டனர் என்பதால் அவர்கள் அனைவரும் மார்க்கத்தில் இணைந்து விட்டதாக அர்த்தம் கொள்ளக் கூடாது. அவர்களில் வேரூன்றி கிடக்கும் சடங்கு சம்பிரதாயங்களின் தாக்கம் எளிதில் நீங்காது. சற்றே அசர்ந்தாலும் அவர்கள் பழைய நிலைக்குப் போயிவிடும் வாய்ப்பு ஏற்பட்டு விடும். (20:83-90)
(7) மக்களை திருத்தி நேர்வழிக்கு கொண்டு வரும் சமயத்தில் சாமிரி போன்றோர் இருக்கத்தான் செய்வார்கள். எனவே மிகவும் கவனாக இருந்து அப்படிப் பட்டவர்களை களையெடுக்க வேண்டும்.
(8) மார்க்கத்தில் வந்து இணைந்தப் பின், அவர்களிடையே பிரிவினை ஏற்படாதவாறு பார்த்து கொள்ளவேண்டும். (பார்க்க 20:94) இவை யாவும் மேற்சொன்ன நிகழ்வுகளின் மூலம் நாம் பெறும் படிப்பினைகளாகும்.


مَّنْ أَعْرَضَ عَنْهُ فَإِنَّهُۥ يَحْمِلُ يَوْمَ ٱلْقِيَٰمَةِ وِزْرًا.

20:100. யார் அல்லாஹ்வின் அறிவுரைகளை புறக்கணித்து அதற்கு மாற்றமாக செயல்படுகிறார்களோ, அவர்களுடைய தவறான செயல்களின் விளைவுகள் தோற்றத்திற்கு வரும் கால கட்டங்களில், அதன் வேதனைகளை அவர்கள் தான் சுமக்க நேரிடும்.


خَٰلِدِينَ فِيهِ ۖ وَسَآءَ لَهُمْ يَوْمَ ٱلْقِيَٰمَةِ حِمْلًۭا.

20:101. அவர்கள் இந்த வேதனைகளை நீண்ட காலத்திற்கு சுமக்க வேண்டி வரும். மரணத்திற்குப் பின் தொடர்கின்ற வாழ்விலும் இச்சுமை மிகவும் மோசமானதாக இருக்கும்.
அதாவது அவர்களுடைய செயல்களின் விளைவுகள் இவ்வுலகிலும் தோற்றத்திற்கு வரும். அவை உள்நாட்டு கலவரம், மோதல், போர் என்ற ரூபத்தில் ஏற்படும். இஸ்லாமிய ஆட்சியமைப்பு உருவாகும் காலத்திலும் இந்த மோதல்கள் ஏற்படும்.


يَوْمَ يُنفَخُ فِى ٱلصُّورِ ۚ وَنَحْشُرُ ٱلْمُجْرِمِينَ يَوْمَئِذٍۢ زُرْقًۭا.

20:102. அப்போது களத்தில் சந்திக்க சங்கொலி எழுப்பப்படும் நாளில், குற்றம் புரிந்தவர்களின் கண்களே இருண்டுவிடும். அந்த அளவுக்கு அவர்களுக்கு பயம் ஏற்படும். (மேலும் பார்க்க 20:124)


يَتَخَٰفَتُونَ بَيْنَهُمْ إِن لَّبِثْتُمْ إِلَّا عَشْرًۭا.

20:103. அப்போது அவர்கள் தங்களுக்குள், “நாம் அனைவரும் இவ்வாறே எப்போதும் இன்புற்று வாழ்ந்திடலாம் என இருந்தோமே! ஆனால் பத்தே நாட்களில் நிலைமையே தலைகீழாக மாறிவிட்டதே என்று வருத்தத்துடன் பேசிக் கொள்வார்கள்.


نَّحْنُ أَعْلَمُ بِمَا يَقُولُونَ إِذْ يَقُولُ أَمْثَلُهُمْ طَرِيقَةً إِن لَّبِثْتُمْ إِلَّا يَوْمًۭا.

20:104. அவர்கள் தமக்கு ஏற்பட்டுள்ள பீதியில் என்ன என்னவெல்லாம் பேசுவார்கள் என்பது நமக்குத் தெரியும். அங்குள்ளவர்களில் நல்வழியில் இருப்பவர்கள், நீங்கள் வாழ்ந்த காலம் மிகச் சொற்பமானதே அன்றி வேறில்லை என்பார்கள்.


وَيَسْـَٔلُونَكَ عَنِ ٱلْجِبَالِ فَقُلْ يَنسِفُهَا رَبِّى نَسْفًۭا.

20:105. பெரிய பெரிய மலைகளைப் போல் செல்வங்களையும், அதிகாரங்களையும் குவித்து வைத்துக் கொண்டிருப்பவர்களின் நிலைமை என்னவாகும் என அவர்கள் பயத்தில் கேட்கிறார்கள். அவர்களை எல்லாம் என் இறைவன் தரைமட்டமாக ஆக்கிவிடுவான் என்று கூறிவிடுவீராக.


فَيَذَرُهَا قَاعًۭا صَفْصَفًۭا.

20:106. அதன் பின் ஏற்றத்தாழ்வுகள் நீங்கி சமதர்ம ஆட்சியமைப்பு ஏற்படும்.


لَّا تَرَىٰ فِيهَا عِوَجًۭا وَلَآ أَمْتًۭا.

20:107. அப்போது ஏழை பணக்காரன் என்ற ஏற்றத்தாழ்வுகளோ, வேற்றுமை பகையோ இருப்பதாக நீர் எங்கும் காணமாட்டீர்.


يَوْمَئِذٍۢ يَتَّبِعُونَ ٱلدَّاعِىَ لَا عِوَجَ لَهُۥ ۖ وَخَشَعَتِ ٱلْأَصْوَاتُ لِلرَّحْمَٰنِ فَلَا تَسْمَعُ إِلَّا هَمْسًۭا.

20:108. அப்போது இப்படிப்பட்ட ஏற்றத்தாழ்வு இல்லாத சமூக அமைப்பும், ஆட்சியமைப்பும் உருவாகிட அழைப்புகள் விடப்படும். அவர்களைப் பின்பற்றி அனைத்து தரப்பு மக்களும் செல்வார்கள். அதில் எந்த கோணலும் இருப்பதை நீங்கள் காணமாட்டீர். அப்போது அருட்கொடையாளனின் வழிகாட்டுதலுக்கு எதிராக எழுந்த குரல்கள் யாவும் ஓய்ந்துவிடும். அவர்கள் யாவரும் இருந்த இடம் காணாமல் போய்விடுவார்கள்.


يَوْمَئِذٍۢ لَّا تَنفَعُ ٱلشَّفَٰعَةُ إِلَّا مَنْ أَذِنَ لَهُ ٱلرَّحْمَٰنُ وَرَضِىَ لَهُۥ قَوْلًۭا.

20:109. அப்படியொரு கால கட்டங்களில் அருட்கொடையாளன் பொருந்திக் கொண்டவர்களைத் தவிர, வேறு யாருடைய பரிந்துரையும் பலனளிக்காது.
இவை இஸ்லாமிய ஆட்சி காலத்தில் நடைபெறும் நீதிமன்ற விவகாரங்களாகும். அர்ரஹ்மானுக்கு பொருந்திக் கொண்டவர்கள் என்றால் அர்ரஹ்மான் நிர்ணயித்துள்ள படி “வழக்கறிஞர்கள்” (Lawyers) என்ற பட்டம் பெற்றவர்கள் என்பது அதன் பொருளாகும். அவர்கள் மட்டுமே குற்றம் சுமத்தப்பட்டவர்கள் நிரபராதியாக இருந்தால், அவர்களுக்கு ஆதரவாக வாதாடுவார்கள். கியாம நாளில் இத்தகைய சட்ட நிபுணர்களுக்கு அவசியம் இருக்காது. காரணம் அனைத்து விஷயங்களையும் அறிபவன் தான் அல்லாஹ்.


يَعْلَمُ مَا بَيْنَ أَيْدِيهِمْ وَمَا خَلْفَهُمْ وَلَا يُحِيطُونَ بِهِۦ عِلْمًۭا.

20:110. அருட்கொடையாளன், அவர்களுக்கு முன்னால் இருப்பதும் அவர்களுக்கு பின்னால் இருப்பதும் நன்கு அறிந்தவனே. ஆனால் இந்த பேருண்மையை நீதிபதிகள் தம் சுயஅறிவைக் கொண்டு அறிய மாட்டார்கள்.
எனவே குற்றச் சம்பவத்திற்கு முன்பும், அதற்கு பின்பும் நடந்த சம்பவ நிகழ்ச்சிகளை வைத்து, நடந்த உண்மை என்னவென்பதை வழக்கறிஞர்களால் மட்டுமே அறிந்து கொள்ள முடியும். மற்றவர்களால் முடியாது.


۞ وَعَنَتِ ٱلْوُجُوهُ لِلْحَىِّ ٱلْقَيُّومِ ۖ وَقَدْ خَابَ مَنْ حَمَلَ ظُلْمًۭا.

20:111. எனவே எவன் அக்கிரம செயலை செய்தானோ, அவன் பெற்றிருந்த உயர் அந்தஸ்தை இழந்து ‘குற்றவாளி’ எனத் தீர்மானிக்கப்படுவான். இவ்வாறு செயல்படக் கூடிய அல்லாஹ்வின் சட்டங்களுக்குமுன் அனைவரும் முகம் தாழ்த்தி அடிபணிந்து செயல்படுவார்கள்.


وَمَن يَعْمَلْ مِنَ ٱلصَّٰلِحَٰتِ وَهُوَ مُؤْمِنٌۭ فَلَا يَخَافُ ظُلْمًۭا وَلَا هَضْمًۭا.

20:112. இதற்கு மாறாக சமுதாய வளர்ச்சிக்காக ஆற்றல் மிக்க நற்செயல்களை செய்யும் முஃமின்கள், தமக்கு எதிராக அநியாயம் செய்யப்படும் என்றோ தம் உழைப்புக்குரிய வெகுமதி கிடைக்காது என்றோ ஒருபோதும் பயப்பட மாட்டார்கள்.
அதாவது தற்சமயம் நடைபெற்று வரும் ஆட்சியமைப்பில் குற்றவாளிகள் தப்பித்து விடுகிறார்கள். நிரபராதிகள் தண்டிக்கப்படுகிறார்கள். ஆனால் கட்டுக் கோப்பான இஸ்லாமிய ஆட்சி நடைபெறும் கால கட்டத்தில் அநியாயமாக செயல்படுபவர்களுக்கு தண்டனை நிச்சயம் கிடைக்கும். நற்செயலை செய்வோருக்கு தக்க பலன்கள் கிடைக்கும்.


وَكَذَٰلِكَ أَنزَلْنَٰهُ قُرْءَانًا عَرَبِيًّۭا وَصَرَّفْنَا فِيهِ مِنَ ٱلْوَعِيدِ لَعَلَّهُمْ يَتَّقُونَ أَوْ يُحْدِثُ لَهُمْ ذِكْرًۭا.

20:113. இப்படியாக இந்த குர்ஆனை நீங்கள் பேசும் மொழியிலேயே தெள்ளத் தெளிவாக நாம் இறக்கி அருளி இருக்கிறோம். நம் வழிகாட்டுதலுக்கு எதிராக செயல்படுவதால் ஏற்படும் விபரீத விளைவுகளுக்கு அஞ்சி, சிறந்த அறிவுரைகளை பெற்று சிறப்பாக வாழவேண்டும் என்பதற்காகவே இதை நாம் இறக்கி அருளுகிறோம். நீங்கள் அவற்றை நினைவில் வைத்துக் கொள்ளும் பொருட்டு இதில் பல எச்சரிக்கை செய்திகளையும் விவரித்துள்ளோம்.


فَتَعَٰلَى ٱللَّهُ ٱلْمَلِكُ ٱلْحَقُّ ۗ وَلَا تَعْجَلْ بِٱلْقُرْءَانِ مِن قَبْلِ أَن يُقْضَىٰٓ إِلَيْكَ وَحْيُهُۥ ۖ وَقُل رَّبِّ زِدْنِى عِلْمًۭا.

20:114. இப்படியாக அல்லாஹ்வின் வழிகாட்டுதலை முன்வைத்து செயல்பட்டு வந்தால் தலைசிறந்த சமுதாயமும் ஆட்சியமைப்பும் உருவாகும். ஏனெனில் அகிலங்கள் அனைத்திலும் செயல்பட்டு வரும் அல்லாஹ்வின் அரசாட்சியே தலைசிறந்த ஆட்சியாக இருக்கின்றது. எனவே நபியே! நீ எந்த ஒரு விஷயத்தைப் பற்றி முடிவெடுத்தாலும் அதில் அவசரம் காட்டாதீர். அல்லாஹ்வின் வழிகாட்டுதல் என்னவென்பதை பூரணமாக ஆராய்ந்து அறிந்த பின்பே முடிவெடுங்கள். எனவே இதற்கான கல்வி ஞானத்தை அதிகமாக்கும்படி உன் இறைவனிடம் பிரார்த்தனை செய்த வண்ணமிருங்கள்.
ஏனெனில் இறைவழிகாட்டுதல் இன்றி, தம் மனோ இச்சையின் படி வாழ்வதால் ஏற்படும் துயர நிகழ்வுகளை நாம் பலமுறை எடுத்துரைத்துள்ளோம். ஆதிகால மனிதனின் வரலாற்று உண்மைகளையும் எடுத்துக்காட்டாக கூறி விளக்கி இருக்கிறோம். (பார்க்க 2:30-38, 7:11-25)


وَلَقَدْ عَهِدْنَآ إِلَىٰٓ ءَادَمَ مِن قَبْلُ فَنَسِىَ وَلَمْ نَجِدْ لَهُۥ عَزْمًۭا.

20:115. நாம் மனிதனுக்கு இறைவழிகாட்டுதலை விளக்கி இருந்தோம். ஆனால் அவன் அதை காலப்போக்கில் விட்டுவிட்டு திசைமாறிச் சென்றுவிட்டான். ஏனெனில் இறைவழிகாட்டுதலின் முக்கியத்துவத்தை அவன் புரிந்து கொள்ள தவறிவிட்டான். இது அவனில் இருக்கும் பலவீனமாகும்.


وَإِذْ قُلْنَا لِلْمَلَٰٓئِكَةِ ٱسْجُدُوا۟ لِءَادَمَ فَسَجَدُوٓا۟ إِلَّآ إِبْلِيسَ أَبَىٰ.

20:116. இறைவனின் செயல்திட்டப்படி, பிரபஞ்ச இயற்கை சக்திகள் மனித கட்டளைக்கு சிரம் பணிந்து வரும் அதே சமயத்தில், மனிதனுள் செயல்படும் தீய சக்தியாகிய இப்லீஸ், அல்லாஹாவுக்கு கட்டுப்படுவதில்லை. இதனால் மனிதன் இப்லீஸிய குணங்களுக்கு கட்டுப்பட்டு கர்வம் பிடித்தவனாக மாறி விட்டான்.
அதாவது பிரபஞ்ச இயற்கை சக்திகளைப் பற்றி ஆராய்ச்சி செய்து பல்வேறு புதிய விஞ்ஞான கண்டுபிடிப்புகளை செய்துகொள்ளும் ஆற்றல்கள் மனிதனுள் வைக்கப்பட்டுள்ளன. அவற்றை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதை இறைவழிகாட்டுதல்கள் தெரிவிக்கின்றன. மனிதன் தன் மனோ இச்சை என்னும் இப்லீஸுக்குக் கட்டுப்படுவதால், அதை இறைவனின் அறிவுரைகளை ஏற்றுக் கொள்வதில்லை. இதனால் அவன் தன் அழிவைத் தானே தேடிக்கொள்கிறான். எனவேதான்


فَقُلْنَا يَٰٓـَٔادَمُ إِنَّ هَٰذَا عَدُوٌّۭ لَّكَ وَلِزَوْجِكَ فَلَا يُخْرِجَنَّكُمَا مِنَ ٱلْجَنَّةِ فَتَشْقَىٰٓ.

20:117.“ஓ மானிடனே! உன் மனோ இச்சையானது எப்போதும் ஆண் பெண் ஆகிய இரு பாலரின் சுகமான வாழ்வை சீர்குலைக்கும் பகையாக இருக்கிறது. எனவே அதற்கு அடிமையாகி, உங்களுடைய நிம்மதியான சுவன வாழ்வை இழந்து விடாதே. இதனால் உனக்கு பல இன்னல்கள் ஏற்படும்” என்று இறைவனிடமிருந்து எச்சரிக்கை செய்தி வந்த வண்ணமிருந்தது.


إِنَّ لَكَ أَلَّا تَجُوعَ فِيهَا وَلَا تَعْرَىٰ.

20:118.“இப்போது நீங்கள் வாழும் இச்சுவன வாழ்வில் உங்களுக்கு உணவைப் பற்றியோ அல்லது உடையைப் பற்றிய கவலையோ ஒருபோதும் இருந்ததில்லை.”


وَأَنَّكَ لَا تَظْمَؤُا۟ فِيهَا وَلَا تَضْحَىٰ.

20:119.“அதுமட்டுமின்றி உங்களுக்கு ஏற்படும் தாகத்தைப் பற்றியோ, வெயிலின் கடுமையைப் பற்றிய கவலையோ இருந்ததுமில்லை.”
இவையெல்லாம் உங்களுக்கு தாராளமாக கிடைத்து வருகின்றன. இதனால் எந்த கவலையும் இல்லாமல் நீங்கள் சுகமாக வாழ்ந்து வருகிறீர்கள். ஆனால் உங்கள் மனோ இச்சைக்கு அடிமையாகிவிட்டால், இந்த வாழ்க்கை வசதிகள் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து நீங்கள் பல சிரமங்களுக்கு ஆளாவீர்கள். இந்த பேருண்மையை அறியாத மனிதன்


فَوَسْوَسَ إِلَيْهِ ٱلشَّيْطَٰنُ قَالَ يَٰٓـَٔادَمُ هَلْ أَدُلُّكَ عَلَىٰ شَجَرَةِ ٱلْخُلْدِ وَمُلْكٍۢ لَّا يَبْلَىٰ.

20:120. ஷைத்தான் எனும் தன் மனோ இச்சைக்கு அடிமையாகி விட்டான். இதனால் அவனது வாழ்வில் பல குழப்பங்கள் ஏற்பட்டுவிட்டன. இந்த குழப்பமான சூழ்நிலையில், அவன் தன் பெயரையும் அரசாட்சியையும் இவ்வுலகில் தக்க வைத்துக்கொள்ள, அவன் தேடிக்கொண்ட வழிமுறையே ‘தன் வம்சம்’ ‘தன் குடும்பம்’ ‘தன் கோத்திரம்’ ‘தன் நாடு’ என்பதாகும். இதைக் கொண்டுதான் அவனுக்கு நித்திய ஜீவனமும், நிரந்தர ஆட்சியும் கிடைக்கும் என்ற தவறான கண்ணோட்டம் அவனுள் வளர்ந்து விட்டது.
அதாவது ஒட்டுமொத்த மனித இனத்தின் சந்தோஷமான வாழ்வை கருத்தில் கொண்டு வாழ்வதை விட்டுவிட்டு ‘தன் குடும்பம்’ ‘தன் குலம்’ ‘கோத்திரம்’ என்ற சுயநல அடிப்படையில் வாழ ஆரம்பித்து விட்டான். இதனால் அவனுள் பலப் பிரிவுகள் ஏற்பட்டு வந்தன.


فَأَكَلَا مِنْهَا فَبَدَتْ لَهُمَا سَوْءَٰتُهُمَا وَطَفِقَا يَخْصِفَانِ عَلَيْهِمَا مِن وَرَقِ ٱلْجَنَّةِ ۚ وَعَصَىٰٓ ءَادَمُ رَبَّهُۥ فَغَوَىٰ.

20:121. அவன் இப்படியாக தன் மனோ இச்சையின் ஈர்ப்பில் அடிமையாகி, குலம் கோத்திரங்களின் வாழ்வின் ருசியை காண ஆரம்பித்தான். இதனால் அவனுடைய கண்ணியமான வாழ்வு பறிபோய் விட்டது. அவன் தன் ஆதிக்கத்தை தக்க வைத்துக் கொள்ள, மானம் போவதைப் பற்றியும் அவன் கவலைப்படவில்லை. (பார்க்க 7:27) ஆயினும் அவன் வெளித் தோற்றத்தில் தன் கண்ணியத்தை காப்பாற்றிக் கொள்ள மட்டும், அலங்கார ஆடைகளை பயன்படுத்திக் கொண்டான். மற்றபடி எல்லா விதமான தீய குணங்களும் அவனுள் வளர்ந்து விட்டன. இவ்வாறாக மனிதன் இறைவழிகாட்டுதலுக்கு மாறு செய்து வழிதவறிச் சென்றுவிட்டான்.


ثُمَّ ٱجْتَبَٰهُ رَبُّهُۥ فَتَابَ عَلَيْهِ وَهَدَىٰ.

20:122. இருப்பினும், அவனுடைய தவறுகளை சரிசெய்யும் வழிமுறைகள் இறைவனிடம் நிச்சயம் உண்டு. அதாவது அவர்களில் ஒருவரை தேர்ந்தெடுத்து, இறைவழிகாட்டுதலை எடுத்துரைத்து அவர்களை திருத்தி, பாதுகாப்பான வாழ்விற்கு வழிசெய்வது என்பதே இறைவனின் செயல் திட்டமாகும்.


قَالَ ٱهْبِطَا مِنْهَا جَمِيعًۢا ۖ بَعْضُكُمْ لِبَعْضٍ عَدُوٌّۭ ۖ فَإِمَّا يَأْتِيَنَّكُم مِّنِّى هُدًۭى فَمَنِ ٱتَّبَعَ هُدَاىَ فَلَا يَضِلُّ وَلَا يَشْقَىٰ.

20:123. மனிதனின் தவறான செயல்களால் அவனுடைய வாழ்க்கைத் தரம் சீர் கெட்டுவிட்டது. அதாவது அவனிடையே வளர்ந்து வந்த குலம் கோத்திரங்களுள், பகைமையும் மோதல்களும் ஏற்பட்டுவிட்டன. இதனால் அவனுக்கு கிடைத்திருந்த “சுவன வாழ்வு” என்ற உயர் அந்தஸ்து பறிபோய், கீழ்தரமான வாழ்விற்கு தள்ளப்பட்டான். இந்த வேற்றுமை பகைகளை வேரறுத்து, மீண்டும் சுவன வாழ்வு கிடைக்க இறைவன் புறத்திலிருந்து வழிகாட்டுதல்கள் வந்தன. எந்த சமுதாயம் இறைவழிகாட்டுதலை ஏற்று அதன்படி செயல்படுமோ, அது பாதுகாப்பான நேர்வழி பெற்ற சமுதாயமாக விளங்கும்.


وَمَنْ أَعْرَضَ عَن ذِكْرِى فَإِنَّ لَهُۥ مَعِيشَةًۭ ضَنكًۭا وَنَحْشُرُهُۥ يَوْمَ ٱلْقِيَٰمَةِ أَعْمَىٰ.

20:124. எந்தச் சமுதாயம் இறைவனின் அறிவுரைகளை புறக்கணித்து, தம் மனோ இச்சையின்படி செயல்படுமோ, அங்கு பிரச்னைகள் பல உருவாகி, வாழ்வாதார நெருக்கடியும் ஏற்பட்டு வரும். அதுமட்டுமின்றி அவர்களுடைய மறுமை வாழ்விலும் அவர்கள் குருடர்களாகவே எழுப்பப்படுவார்கள்.


قَالَ رَبِّ لِمَ حَشَرْتَنِىٓ أَعْمَىٰ وَقَدْ كُنتُ بَصِيرًۭا.

20:125. அப்போது அவன், “என் இறைவனே! நான் பார்வையுடையவனாக இருந்தேனே. நீ ஏன் என்னை குருடனாக எழுப்பினாய்” என்று கேட்பான்.


قَالَ كَذَٰلِكَ أَتَتْكَ ءَايَٰتُنَا فَنَسِيتَهَا ۖ وَكَذَٰلِكَ ٱلْيَوْمَ تُنسَىٰ.

20:126. அதற்கு இறைவன், “நம்முடைய வழிகாட்டுதல்கள் உன்னிடம் வந்தன. அவற்றை நீ பொருட்படுத்தவே இல்லை. அவ்வாறே இன்றைய தினம் உனக்கு ஏற்பட்டுள்ள இந்த நிலைமையை நாம் பொருட்படுத்த மாட்டோம். இதுதான் நம்முடைய வழிகாட்டுதலை ஏற்க மறுப்பவர்களுக்கு ஏற்படும் நிலை” என்று சொல்லிவிடுவான்.


وَكَذَٰلِكَ نَجْزِى مَنْ أَسْرَفَ وَلَمْ يُؤْمِنۢ بِـَٔايَٰتِ رَبِّهِۦ ۚ وَلَعَذَابُ ٱلْءَاخِرَةِ أَشَدُّ وَأَبْقَىٰٓ.

20:127. ஆகவே நம்முடைய வழிகாட்டுதலின் உண்மை நிலையை ஏற்காமல், வரம்பு மீறி நடப்பவர்களுக்கு இவ்வாறு தான் துயரங்கள் ஏற்படும். அது மட்டுமின்றி மரணத்திற்குப் பின் தொடர்கின்ற வாழ்விலும் இந்த வேதனைகள் இதைவிட கடினமாகவும் நிலையாகவும் இருக்கும்.


أَفَلَمْ يَهْدِ لَهُمْ كَمْ أَهْلَكْنَا قَبْلَهُم مِّنَ ٱلْقُرُونِ يَمْشُونَ فِى مَسَٰكِنِهِمْ ۗ إِنَّ فِى ذَٰلِكَ لَءَايَٰتٍۢ لِّأُو۟لِى ٱلنُّهَىٰ.

20:128. இப்படியாக இதற்குமுன் எத்தனையோ சமுதாயங்கள் “மனித செயல்களின் இறுதி விளைவுகள்” என்ற இறைவனின் நியதிப்படி அழிந்தே இருக்கின்றன. இதை அறிந்தும் அவர்கள் படிப்பினை பெறவில்லையா? அவர்கள் குடியிருந்த இடங்களில்தானே இவர்களும் வாழ்கிறார்கள். இதில் அறிவுடைய மக்களுக்கு நிச்சயமாக அத்தாட்சிகள் பல கிடைத்திருக்க வேண்டுமே!


وَلَوْلَا كَلِمَةٌۭ سَبَقَتْ مِن رَّبِّكَ لَكَانَ لِزَامًۭا وَأَجَلٌۭ مُّسَمًّۭى.

20:129. ஆனால் இறைவனின் நியதிப்படி ஏற்படும் “மனித செயல்களின் விளைவுகள்” ஒரு குறிப்பிட்ட காலத் தவணைக்குப் பின்பே ஏற்படுகின்றன. இறைவனின் இப்படியொரு செயல் திட்டம் இல்லாதிருந்தால், எப்போதோ அவர்களுக்கு முடிவு ஏற்பட்டிருக்கும். (மேலும் பார்க்க 16:61)


فَٱصْبِرْ عَلَىٰ مَا يَقُولُونَ وَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ قَبْلَ طُلُوعِ ٱلشَّمْسِ وَقَبْلَ غُرُوبِهَا ۖ وَمِنْ ءَانَآئِ ٱلَّيْلِ فَسَبِّحْ وَأَطْرَافَ ٱلنَّهَارِ لَعَلَّكَ تَرْضَىٰ.

20:130. ஆகவே அவர்களுடைய பேச்சை நீர் பெரிதுபடுத்தாமல், அவர்களுடைய போக்கில் அவர்களை விட்டுவிடு. இறைவன் காட்டிய வழியில் நீர் அல்லும் பகலும் அயராது உழைப்பீராக. இரவு பகல் என்று பார்க்காமல், சமுதாயத்தை நேர்வழிப்படுத்தி, அதன் மேம்பாட்டிற்காக உழைத்து வாருங்கள். இவ்வாறாக இறைவனின் செயல்திட்டங்கள் பாராட்டுக்கு உரியவையாக ஆக்குவதில் கண்ணும் கருத்துமாக இருப்பீர்களாக. இதனால் உங்களுக்கு மன நிறைவு கிடைக்கும்.
இப்படி சமுதாய மேம்பாட்டிற்காக உழைக்கும் போது, பல சிரமங்களைச் சந்திக்க நேரிடும். ஆனால் இறைவழிகாட்டுதலுக்கு எதிராக செயல்படுபவர்கள் தற்காலிகமாக சொகுசாக வாழ்ந்து வருவார்கள்.


وَلَا تَمُدَّنَّ عَيْنَيْكَ إِلَىٰ مَا مَتَّعْنَا بِهِۦٓ أَزْوَٰجًۭا مِّنْهُمْ زَهْرَةَ ٱلْحَيَوٰةِ ٱلدُّنْيَا لِنَفْتِنَهُمْ فِيهِ ۚ وَرِزْقُ رَبِّكَ خَيْرٌۭ وَأَبْقَىٰ.

20:131. எனவே அவர்களில் ஒரு பிரிவினருக்கு கிடைத்திருக்கும் இன்பமான வாழ்வைப் பற்றி, நீர் உன் கவனத்தை செலுத்தாதீர். இவையெல்லாம் அவர்களுக்கு கிடைக்கும் தற்காலிக சுகங்களே ஆகும். அவர்களுக்கு அவை மிக அழகாக தோன்றுகின்றன. எனவே அதில் அவர்கள் மூழ்கிக் கிடக்கிறார்கள். ஆனால் இறைவனின் வழிகாட்டுதலின் படி உழைப்பவர்களுக்கு, இதைவிட பன்மடங்கு சிறப்பான நிலையான வாழ்வும் அந்தஸ்தும் கிடைப்பது உறுதி.


وَأْمُرْ أَهْلَكَ بِٱلصَّلَوٰةِ وَٱصْطَبِرْ عَلَيْهَا ۖ لَا نَسْـَٔلُكَ رِزْقًۭا ۖ نَّحْنُ نَرْزُقُكَ ۗ وَٱلْعَٰقِبَةُ لِلتَّقْوَىٰ.

20:132. இறைவழிகாட்டுதலை எடுத்துரைப்பவரே! நீர் உம்மோடு இணைந்து செயல்படுபவர்களிடம், இறைவனின் செயல்திட்டங்களை நிறைவேற்றி வரும்படி கட்டளை பிறப்பீராக. நீரும் அவ்வாறே அவர்களோடு இணைந்து அயராது செயல்பட்டு வருவீராக. இறைவனின் ஆட்சியமைப்பு அவர்களிடமிருந்து உதவி நாடுவதாக எண்ண வேண்டாம் என அவர்களிடம் எடுத்துரையுங்கள். மாறாக உங்களுக்கான வாழ்வாதார வசதிகள் இறைவன் புறத்திலிருந்தே கிடைக்கின்றன. இதை மனதில் வைத்து யார் அல்லாஹ்வின் சட்ட திட்டங்களைப் பேணி நடக்கிறார்களோ, அவர்களுக்கே வளமான வாழ்வு கிடைக்கும் என்ற நன்மாராயம் கூறிவிடுங்கள்.


وَقَالُوا۟ لَوْلَا يَأْتِينَا بِـَٔايَةٍۢ مِّن رَّبِّهِۦٓ ۚ أَوَلَمْ تَأْتِهِم بَيِّنَةُ مَا فِى ٱلصُّحُفِ ٱلْأُولَىٰ.

20:133. இறைவழிகாட்டுதலுக்கு மாற்றமாக செயல்படுபவர்கள், “நம் இறைவனிடமிருந்து ஓர் அத்தாட்சியை இவர் ஏன் நம்மிடம் கொண்டு வரவில்லை?” என்று கேட்கிறார்கள். அவர்களிடம், “இதற்கு முன் வந்த இறைவேதங்களில் உள்ள ஆதாரப்பூர்வமான விஷயங்களில் எவை இதில் வராமல் இருக்கிறது என்று கேளுங்கள். (பார்க்க 5:48)
அதாவது இறைவழிகாட்டுதலின் உண்மைகளை நிரூபிக்க மாயாஜால வித்தைகளுக்கு அவசியமிருப்பதில்லை. மாறாக அவை ஆதாரங்களுடன் அறிவுப்பூர்வமாக நிரூபிக்கப்படுகின்றன. இதே விஷயங்கள் இதற்கு முன்தைய வேதங்களிலும் எடுத்துரைக்கப்பட்டன.


وَلَوْ أَنَّآ أَهْلَكْنَٰهُم بِعَذَابٍۢ مِّن قَبْلِهِۦ لَقَالُوا۟ رَبَّنَا لَوْلَآ أَرْسَلْتَ إِلَيْنَا رَسُولًۭا فَنَتَّبِعَ ءَايَٰتِكَ مِن قَبْلِ أَن نَّذِلَّ وَنَخْزَىٰ.

20:134. ஒருவேளை இறைவழிகாட்டுதல்கள் அளிக்கப்படுவதற்கு முன்னமே அவர்களை நாம் அழித்திருந்தால் அவர்கள், எங்கள் இறைவா! நீ எங்களுக்கு இறைவழிகாட்டுதலை எடுத்துரைக்கும் ஒரு தூதரை அனுப்பி இருக்க வேண்டாமா? நீ அவ்வாறு அனுப்பி இருந்தால் நாங்கள் சிறுமைப்படுவதற்கும் கேவலப்படுவதற்கும் முன்னரே உன் வழிகாட்டுதலைப் பின்பற்றி இருப்போமே” என்று கூறி இருப்பார்கள். அப்படி ஒரு நிலை அவர்களுக்கு ஏற்படக் கூடாது என்பதற்காகவே இந்த இறைவழிகாட்டுதல்கள் அளிக்கப்படுகின்றன.


قُلْ كُلٌّۭ مُّتَرَبِّصٌۭ فَتَرَبَّصُوا۟ ۖ فَسَتَعْلَمُونَ مَنْ أَصْحَٰبُ ٱلصِّرَٰطِ ٱلسَّوِىِّ وَمَنِ ٱهْتَدَىٰ.

20:135. எனவே இறைவழிகாட்டுதலை ஏற்க மறுப்பவர்களிடம், உங்கள் செயல் திட்டத்தின்படி நீங்கள் செயல்பட்டு வாருங்கள். நாங்களும் இறைவன் காட்டிய வழியில் செயல்படுகிறோம். அதன்பின் அவரவர் செய்து வரும் செயல்களின் விளைவுகள் தோற்றத்திற்கு வரும் கால கட்டம் வரும். அப்போது யார் நேரான பாதையில் இருக்கிறார்கள் என்ற உண்மை தெளிவாகிவிடும்” என்று கூறிவிடுவீராக.