بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ

19:0.அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் அறிவுரைப்படியே அனைத்துக் காரியங்களையும் செய்ய நாடுகிறேன். (பார்க்க 6:162)


كٓهيعٓصٓ.

19:1. கண்ணியத்திற்குரிய. நேர்வழியை காட்டவல்ல, நிரந்தரமாக ஜீவித்திருக்கும், எல்லாம் ஞானத்தையும் தொலை நோக்கு பார்வையுடன் கூடிய, உண்மையே வடிவமாகிய அல்லாஹ்விடமிருந்து இறக்கி அருளப்பட்ட வேதமிது.


ذِكْرُ رَحْمَتِ رَبِّكَ عَبْدَهُۥ زَكَرِيَّآ.

19:2. இறைவழிகாட்டுதலுக்கு மட்டுமே கட்டுப்பட்டு வாழ்ந்த ஜகரிய்யா நபிக்கு, இறைவன் புறத்திலிருந்து அருளப்பட்ட அருட்கொடைகளைப் பற்றிய உண்மைகளை இது எடுத்துரைக்கிறது.


إِذْ نَادَىٰ رَبَّهُۥ نِدَآءً خَفِيًّۭا.

19:3. அவர் தம் இறைவனிடம் மிகவும் பணிவுடன் உளமாற இவ்வாறு பிரார்தித்தார்.


قَالَ رَبِّ إِنِّى وَهَنَ ٱلْعَظْمُ مِنِّى وَٱشْتَعَلَ ٱلرَّأْسُ شَيْبًۭا وَلَمْ أَكُنۢ بِدُعَآئِكَ رَبِّ شَقِيًّۭا.

19:4. “என் இறைவனே! எனக்கு மிகவும் வயதாகி விட்டதால், நான் பலவீனம் அடைந்து கொண்டே போகிறேன். என் தலைமுடியும் நரைத்து விட்டது. இது வரையில் நான் உன்னிடம் கேட்டவை எதுவும் எனக்கு நீ அளிக்காமல் இருந்ததில்லை.”


وَإِنِّى خِفْتُ ٱلْمَوَٰلِىَ مِن وَرَآءِى وَكَانَتِ ٱمْرَأَتِى عَاقِرًۭا فَهَبْ لِى مِن لَّدُنكَ وَلِيًّۭا.

19:5. “இப்போது எனக்கு மிகவும் வயதாகிவிட்டது. என் மனைவிக்கும் வயதாகிவிட்டது. மேலும். என் உறவினர்களில் யாரும் உன் வழிகாட்டுதலை எடுத்துரைத்து, சமுதாய சீரமைப்பு பணிகளை மேற்கொள்ளும் தகுதியுடையவர்கள் இருப்பதாகத் தெரியவில்லை. யாகூப் நபி முதலே தொடர்ந்து வந்த இப் பணிகள் இனி தொடராதோ என நான் அஞ்சுகிறேன். எனவே நீ எனக்கு புத்திர பாக்கியத்தை அளிப்பாயாக.”


يَرِثُنِى وَيَرِثُ مِنْ ءَالِ يَعْقُوبَ ۖ وَٱجْعَلْهُ رَبِّ رَضِيًّۭا.

19:6. “எனக்கு ஒரு குழந்தை பிறந்தால், யாஃகூப் நபியின் சந்ததியர்களில் வந்தவர்களும். நானும் எவ்வாறு இறைவழிகாட்டுதலை எடுத்துரைத்து, சமூக சீரமைப்பு பணியைத் தொடர தகுதியுடையவராக விளங்கினார்களோ, அவ்வாறே அவனையும் இந்த பணியைத் தொடரத் தகுதியுடையவனாக ஆக்குவேன். என் இறைவனே! நீ இதற்காக அப்படிப்பட்ட பேராற்றல் மிக்க ஒரு குழந்தையை எனக்கு தந்தருள்வாயாக” என்று இறைவனிடம் வேண்டினார்.
சிந்தனையாளர்களே! ஒரு நபியின் உள்ளத்தில் எத்தகைய நல்ல எண்ணங்கள் இருந்தன என்பதை கவனித்துப் பாருங்கள். புத்திரப் பாக்கியமும் இறைவனின் பணியை தொடர்வதற்காகவே என்கிறார். நாமும் இந்த நோக்கத்தைக் கொண்டே குழந்தைகளை பெற்றெடுக்க வேண்டும். பிள்ளைகளுக்கும் இதே நோக்கத்தோடு திருமணமும் செய்து வைக்க வேண்டும்.


يَٰزَكَرِيَّآ إِنَّا نُبَشِّرُكَ بِغُلَٰمٍ ٱسْمُهُۥ يَحْيَىٰ لَمْ نَجْعَل لَّهُۥ مِن قَبْلُ سَمِيًّۭا.

19:7. ஜகரிய்யா நபியின் வேண்டுதல் ஏற்று கொள்ளப்பட்டது. “ஜக்கரிய்யாவே! உன் வேண்டுதலின்படி உனக்கு ஒரு குழந்தை பிறக்கும். அவனுடைய பெயர் யஹ்யா என்பதாகும். இதற்கு முன்னர் இப்படிப்பட்ட பேராற்றல் மிக்கவரை உன் வம்சத்தில் இருப்பதாக கேள்விப்பட்டு இருக்கமாட்டீர்” என்று இறைவன் புறத்திலிருந்து நன்மாராயம் கிடைத்தது.


قَالَ رَبِّ أَنَّىٰ يَكُونُ لِى غُلَٰمٌۭ وَكَانَتِ ٱمْرَأَتِى عَاقِرًۭا وَقَدْ بَلَغْتُ مِنَ ٱلْكِبَرِ عِتِيًّۭا.

19:8. அதற்கு அவர், “என் இறைவனே! என் மனைவியோ குழந்தை பெற்றெடுக்கும் வயதையும் கடந்து முதுமை அடைந்து விட்டாள். இந்த வயதில் புத்திரப் பாக்கியம் எவ்வாறு கிடைக்கும்?" என்று கேட்டார்.
அதாவது வயதான காலத்தில் எனக்கு குழந்தை பிறக்கும் எனும் இந்த நற்செய்தி எனக்கு விளங்கவில்லை. காரணம், மர்யமை என்னுடைய பராமரிப்பில் விடப்பட்டது போல் ஒரு குழந்தை கிடைக்குமா அல்லது என் மனைவியின் மூலமே குழந்தை பிறக்குமா? (பார்க்க 3:39)


قَالَ كَذَٰلِكَ قَالَ رَبُّكَ هُوَ عَلَىَّ هَيِّنٌۭ وَقَدْ خَلَقْتُكَ مِن قَبْلُ وَلَمْ تَكُ شَيْـًۭٔا.

19:9. அதற்கு இறைவன். “முறைப்படி அனைவருக்கும் எவ்வாறு குழந்தை பிறக்கிறதோ, அவ்வாறே உனக்கும் ஒரு குழந்தை பிறக்கும். உன் மனைவியின் வயதான காலத்தில் ஒரு குழந்தையை பெற்றெடுக்க வைப்பது மிகவும் சுலபமான காரியமே. நீயும் ஒரு கால கட்டத்தில் ஒன்றுமே இல்லாத நிலையில் இருந்த போது. நாம் உம்மை படைத்தோம் அல்லவா? அது போலத் தான் உனக்கு பிறக்கப்போகும் குழந்தையும்” என்று இறைவனிடமிருந்து பதில் வந்தது.


قَالَ رَبِّ ٱجْعَل لِّىٓ ءَايَةًۭ ۚ قَالَ ءَايَتُكَ أَلَّا تُكَلِّمَ ٱلنَّاسَ ثَلَٰثَ لَيَالٍۢ سَوِيًّۭا.

19:10. அதற்கு அவர், “இது விஷயமாக நான் என்ன செய்ய வேண்டும் என்பதை எனக்கு குறிப்பிட்டு சொல்வாயாக” எனக் கேட்டார். அதற்கு இறைவன், மூன்று நாட்களுக்கு மக்களிடம் பேசி வருவதை நிறுத்திவிடு. இதுவே உனக்கு அளிக்கப்படும் குறிப்பாகும்” என்று பதில் வந்தது.
அதாவது ஹைக்கல் என்கிற ஆசிரமத்தில் இருந்தபடியே மக்களிடம் போதித்து வருவதை மூன்று நாட்களுக்கு நிறுத்திவிட்டு, குழந்தைப் பிறப்பதற்கான முயற்சியில் ஈடுபடும்படி அறிவுறுத்தினான் (பார்க்க 3:41)


فَخَرَجَ عَلَىٰ قَوْمِهِۦ مِنَ ٱلْمِحْرَابِ فَأَوْحَىٰٓ إِلَيْهِمْ أَن سَبِّحُوا۟ بُكْرَةًۭ وَعَشِيًّۭا.

19:11. அவ்வாறே அவர் தன் போதனைக் கூடத்தை விட்டு வெளியே வந்து விட்டார். அவரை சந்திக்க வந்த தம் சமூகத்தாரிடம், அன்றாடப் பணிகளை தொடர்ந்து செய்து வரும்படி கூறிவிட்டு சென்றார்.
இதை தொடர்ந்து அவர் மனைவியிடம் இருந்த குறைகள் நீங்கி, (பார்க்க 21:90) முறைப்படி ஒரு குழந்தை பிறந்தது.


يَٰيَحْيَىٰ خُذِ ٱلْكِتَٰبَ بِقُوَّةٍۢ ۖ وَءَاتَيْنَٰهُ ٱلْحُكْمَ صَبِيًّۭا.

19:12. இன்னும் யஹ்யா நபி இறைவனின் நியதிப்படி, தன் சிறு வயதிலிருந்தே மிகச் சிறந்த சொல்லாற்றலையும், சமூகப் பிரச்னைகளைத் தீர்த்து வைக்கும் அறிவாற்றலையும் பெற்றிருந்தார். மேலும் அவர் வாலிப வயதை அடைந்தபோது, இறைவனின் வழிகாட்டுதலுக்கு முற்றிலும் அடிபணிந்து உறுதியோடு செயல்படும்படி கட்டளையிட்டோம்.


وَحَنَانًۭا مِّن لَّدُنَّا وَزَكَوٰةًۭ ۖ وَكَانَ تَقِيًّۭا.

19:13. அவரும் அவ்வாறே இறைவழிகாட்டுதலுக்கு முற்றிலும் கட்டுப்பட்டு நடந்து கொண்டார். ஒரு சிறந்த மனிதராக விளங்குவதற்குரிய எல்லா நற்பண்புகளும் அவரிடம் வளர்ந்து, இறையச்சத்துடன் பரிசுத்தமான முறையில் வாழ்ந்து வந்தார்.


وَبَرًّۢا بِوَٰلِدَيْهِ وَلَمْ يَكُن جَبَّارًا عَصِيًّۭا.

19:14. மேலும் அவர், தம் பெற்றோர்களுக்கு மிகவும் சிறந்த முறையில் பணிவிடை செய்து கவனித்து வந்தார். அவர் ஒருபோதும் அவர்களை கடிந்து கொண்டதுமில்லை. அவர்களிடம் கர்வத்துடன் நடந்து கொண்டதுமில்லை.


وَسَلَٰمٌ عَلَيْهِ يَوْمَ وُلِدَ وَيَوْمَ يَمُوتُ وَيَوْمَ يُبْعَثُ حَيًّۭا.

19:15. இப்படியாக அவர் பிறந்து வளர்ந்ததும், மரணிக்கும் வரை தொடர்ந்த வாழ்விலும், சாந்தமான வாழ்விற்கு எடுத்துக்காட்டாகவே விளங்கினார். மேலும் மரணத்திற்குப் பின் தொடர்கின்ற வாழ்விலும் சாந்தியும் அமைதியும் கொண்ட இடத்திலேயே அவர் வசிப்பார்.
இறைவழிகாட்டுதலை எடுத்துரைத்து சமூதாய நல்லிணக்கத்திற்காகப் பாடுபடும் இறைத்தூதர்களிடம். எப்படிப்பட்ட நற்பண்புகளும் இலட்சியங்களும் இருந்தன என்பதை கவனித்தீர்களா? நாமும் நற்பண்புள்ளவர்களாக வளர்ந்து நம் பிள்ளைகளையும் நல்லோர்களாக வளர்க்க முயலவேண்டும்.
இப்படியாக சிறந்த முறையில் வாழ்ந்து, “மாமனிதர்கள்” என்று புகழ் பெற்றவர்கள் ஆண்கள் மட்டும் தான் என்பதல்ல. அவ்வாறு பெண்களாலும் வாழ்ந்து காட்ட முடியும் என்பதற்கு ஈஸா நபியின் தாயார் மர்யமும் முன்மாதிரியாக விளங்குகிறார். (பார்க்க 66:12)
அவர் ஹைக்கல் என்ற ஆசிரமத்தில் ஜக்கரிய்யா நபியின் கண்காணிப்பில் கன்னி ஸ்திரியாக இருந்து வந்தார். (பார்க்க 3:37) ஆசிரமம் என்ற பெயரில் பெண்களுக்கு எதிராக நடந்து வந்த முறைகேடுகளை தட்டிக் கேட்டதற்காக, அங்குள்ளவர்கள் அவருக்கு பகைவர்களாகி விட்டார்கள். (பார்க்க:3:42-44) எனவே அவர் யூசுஃப் என்பவரின் துணையுடன் யாருக்கும் தெரியாமல், அந்த ஆசிரமத்தை விட்டு வெளியேறி, அதன் கிழக்குத் திசையில் இருந்த நசீரியா என்ற ஊருக்கு சென்று விட்டார்.


وَٱذْكُرْ فِى ٱلْكِتَٰبِ مَرْيَمَ إِذِ ٱنتَبَذَتْ مِنْ أَهْلِهَا مَكَانًۭا شَرْقِيًّۭا.

19:16. இவ்வேதத்தில் மர்யமைப் பற்றிய வரலாற்று நிகழ்வுகளை எடுத்துரையுங்கள். அவர் ஆசிரமத்தில் தம்மோடு வாழ்ந்து வந்தவர்களை விட்டு வெளியேறி, கிழக்கு பக்கமுள்ள இடத்திற்கு சென்று விட்டார்.


فَٱتَّخَذَتْ مِن دُونِهِمْ حِجَابًۭا فَأَرْسَلْنَآ إِلَيْهَا رُوحَنَا فَتَمَثَّلَ لَهَا بَشَرًۭا سَوِيًّۭا.

19:17. அவர் யாருக்கும் தெரியாதவாறு அவர்களிடமிருந்து மறைவாக வாழ்ந்து வந்தார். அப்போது நாம் ஒரு செய்தியை ஜக்கரிய்யா நபி மூலமாக அனுப்பி வைத்தோம். அந்த செய்தியை கொண்டு சென்றவரும் ஒரு மனிதராகவே இருந்தார்.
அதாவது ஆசிரமத்தில் துறவறத்தை மேற்கொள்பவர்கள் அங்கிருந்து வெளியேறி மக்களோடு மக்களாக வாழ்வது என்பது சாதாரண விஷயமல்ல. மேலும் அந்த ஆசிரமத்து மடாதிபதிகளுக்கு எதிராகக் குரல் எழுப்பியதால், அவர் வாழும் இடத்தைப் பற்றி அவர்களுக்கு தெரிந்தால், அவரை அவர்கள் கொன்று விடுவார்கள். எனவேதான் அவர், அவர்களிடமிருந்து மறைவாக வாழ்ந்து வந்தார். இப்படிப்பட்ட இக்கட்டான சூழ்நிலையில் தான். தனக்கு குழந்தை பிறக்கும் என்ற செய்தியை கேட்டதும் திடுக்கிட்டுப் போனார். ஏனினில் துறவிகள் குழந்தையை பெற்றெடுப்பது என்பது அல்லாஹ்வுக்கு எதிரான செயலாகும் என்ற நினைப்பில் வாழ்ந்தவர் ஆவார். எனவே அவர் அச்செய்தியை கொண்டு வந்தவரிடம்,


قَالَتْ إِنِّىٓ أَعُوذُ بِٱلرَّحْمَٰنِ مِنكَ إِن كُنتَ تَقِيًّۭا.

19:18. “இப்படிப்பட்ட செய்தியை விட்டு அர்ரஹ்மானிடம் காவல் தேடிக்கொள்கிறேன். நீ அல்லாஹ்வுக்கு பயப்படுபவராக இருந்தால், இனி இப்படிப்பட்ட செய்தியுடன் ஒருபோதும் என்னிடம் வராதே” என்றார்.


قَالَ إِنَّمَآ أَنَا۠ رَسُولُ رَبِّكِ لِأَهَبَ لَكِ غُلَٰمًۭا زَكِيًّۭا.

19:19. அதற்கு செய்தியை கொண்டு வந்தவர், “நான் கொண்டுவந்தது உமது இறைவனின் செய்தியே ஆகும். அறிவாற்றலும் நற்பண்புகளும் கூடிய ஒர் ஆண் குழந்தை உமக்கு பிறக்கப் போகும் நற்செய்தி இறைவனிடமிருந்து தான் வந்துள்ளது” என்றார்.


قَالَتْ أَنَّىٰ يَكُونُ لِى غُلَٰمٌۭ وَلَمْ يَمْسَسْنِى بَشَرٌۭ وَلَمْ أَكُ بَغِيًّۭا.

19:20. அதற்கு மர்யம், “துறவறத்தை மேற்கொள்ளும் என்னை எந்த ஆடவரும் தீண்டாதிருக்க. (3:47) எனக்கு எவ்வாறு குழந்தை பிறக்கும்? மேலும் நான் நடத்தை பிசகியவளாகவும் இருந்ததில்லையே” என்று ஆவேசத்துடன் கேட்டார்.
கவனித்தீர்களா? ஓர் ஆணுடன் இணைந்துதான் குழந்தையை பெற்றெடுக்க முடியும் என்ற உண்மை மர்யமிற்கு தெரிந்திருந்தது. மேலும் அவருடைய நன் நடத்தைக்கும் இந்த வாசகம் சாட்சியளிக்கிறது. அவர் ஆசிரமத்தை விட்டு வெளியேறியதால் மக்கள் அவரைப் பற்றி அவதூறுகளை கூறி வந்தனர் (பார்க்க 4:156)


قَالَ كَذَٰلِكِ قَالَ رَبُّكِ هُوَ عَلَىَّ هَيِّنٌۭ ۖ وَلِنَجْعَلَهُۥٓ ءَايَةًۭ لِّلنَّاسِ وَرَحْمَةًۭ مِّنَّا ۚ وَكَانَ أَمْرًۭا مَّقْضِيًّۭا.

19:21. அதற்கு அச்செய்தியைக் கொண்டுவந்தவர். “இறைவனின் படைப்பு சட்டத்தின்படி எவ்வாறு குழந்தைப் பிறக்கின்றதோ, “அவ்வாறே” உனக்கும் பிறக்கும். இதில் எந்த சிக்கலும் இல்லை. உனக்கு பிறக்கப் போகும் குழந்தை, உலக மக்களுக்கு ஓர் முன்மாதிரியாக விளங்குவான். அவனுக்கு இறைவனிடமிருந்து எல்லா வகையிலும் வழிகாட்டுதல்கள் கிடைத்து சிறப்பாக வருவான். இவை யாவும் இறைவனின் செயல்திட்டப் படி தீர்மானிக்கப்பட்ட விஷயமாகும். மேலும் இச்செய்தியை நானே உனக்கு எடுத்துரைக்கவில்லை. மாறாக இறைவன் புறத்திலிருந்து அனுப்பப்பட்ட செய்தியாகும்” என்று விளக்கமளித்தார். (மேல்கொண்டு விளக்கத்திற்கு பார்க்க 3:48-50)
அதாவது ஜக்கரிய்யா நபிக்கு சொன்ன செய்தியைப் போன்றே இங்கையும் சொல்லப்பட்டு இருப்பதை கவனியுங்கள். அதன்படியே அவர் துறவறத்தை விட்டுவிட்டு. தன் கணவர் யூசுஃப்புடன் இல்லற வாழ்வை தொடங்கினார்.


۞ فَحَمَلَتْهُ فَٱنتَبَذَتْ بِهِۦ مَكَانًۭا قَصِيًّۭا.

19:22. அதைத் தொடர்ந்து அவர் முறைப்படி கருவுற்றார். கன்னிஸ்திரியாக இருந்து வந்த இவரை, உண்மை தெரிந்தவர்கள் பலவாராக கேள்விகளை கேட்பார்கள் என்பதால். கர்ப்பவாதியான அவர் ஒரு தொலைவான இடத்திற்கு சென்றடைந்தார்.


فَأَجَآءَهَا ٱلْمَخَاضُ إِلَىٰ جِذْعِ ٱلنَّخْلَةِ قَالَتْ يَٰلَيْتَنِى مِتُّ قَبْلَ هَٰذَا وَكُنتُ نَسْيًۭا مَّنسِيًّۭا.

19:23. அவ்வாறே அவர் ஒரு பேரித்த மரங்களின் தோட்டங்கள் நிறைந்த இடத்தில் வந்து தங்கினார். அதைத் தொடர்ந்து எல்லா கர்ப்பிணிப் பெண்களுக்கும் பிரசவ வலி ஏற்படுவது போலவே, அவருக்கும் தாங்க முடியாத வலி ஏற்பட்டு துடிதுடித்து போனார். “இப்படி ஒரு வேதனை ஏற்படும் முன்பே நான் மரணித்திருக்கக் கூடாதா? இதைப் பற்றி அறியாதவளாகவே நான் இருந்திருப்பேனே!” என்று பிரசவ வேதனையால் துடிதுடித்தார்.


فَنَادَىٰهَا مِن تَحْتِهَآ أَلَّا تَحْزَنِى قَدْ جَعَلَ رَبُّكِ تَحْتَكِ سَرِيًّۭا.

19:24. அதற்கு,“இப்படி வலி ஏற்படுவது இயல்புதான். இதற்கெல்லாம் நீ பயப்படாதே. உனக்கு அருகாமையில் நீரோடையும், தலைக்கு மேல் பழுத்த பேரீத்தங்களைக் கொண்ட மரங்களும் உள்ளன. இவை யாவும் உமது இறைவனின் அருட்கொடையாகும்” என்று அவருடன் இருந்தவர்கள் மூலம் ஆறுதல் அளிக்கப்பட்டது.


وَهُزِّىٓ إِلَيْكِ بِجِذْعِ ٱلنَّخْلَةِ تُسَٰقِطْ عَلَيْكِ رُطَبًۭا جَنِيًّۭا.

19:25. “மேலும் இந்த மரத்தை உலுக்கினால் உண்பதற்கு சுவையான பழுத்த பேரீத்தப் பழங்களும் கிடைத்துவிடும். இப்படியாக எந்த சிரமும் இல்லாமல் நீ வாழலாம்” என்றனர்.


فَكُلِى وَٱشْرَبِى وَقَرِّى عَيْنًۭا ۖ فَإِمَّا تَرَيِنَّ مِنَ ٱلْبَشَرِ أَحَدًۭا فَقُولِىٓ إِنِّى نَذَرْتُ لِلرَّحْمَٰنِ صَوْمًۭا فَلَنْ أُكَلِّمَ ٱلْيَوْمَ إِنسِيًّۭا.

19:26. அவ்வாறே அந்த குழந்தையும் பிறந்தது. “அந்த பழங்களை உண்டு மகிழ்ந்து, நீரோடையின் நீரைப் பருகி, அழகிய குழந்தையின் முகத்தை கண்குளிர பார்த்து சந்தோஷமாக இரு. இதையும் மீறி யாராவது உன்னை அடையாளம் கண்டு உன்னை விசாரிக்க வந்தால். அருட்கொடையாளன் இறைவனுக்காக மௌன விரதம் மேற்கொண்டிருப்பதாக சைகையின் மூலம் கூறிவிடு. இதனால் நீ யாரிடமும் பேச வேண்டி இருக்காது” என்று அறிவுறுத்தினார்கள்.
கவனித்தீர்களா? பழுத்த பேரீத்த மரங்களின் அடியில் குழந்தை பிறந்ததாக கூறப்படுகிறது. எனவே ஈஸா நபி பிறந்தது கோடைக் காலத்தில் தான் என்று உறுதியாகிறது. குறிப்பாக ஆங்கில மாதக் கணக்குப்படி ஆகஸ்ட் மாதம் என்று புலனாகிறது. அப்போது தான் பேரீத்தப் பழங்கள் பழுக்கும் பருவக் காலமாகும்.
மேலும் யாராவது உன்னைப் பார்த்து அடையாளம் கொண்டால், மௌன விரதம் இருப்பதாக கூறிவிடும்படி சொல்லப்படுகிறது. ஒரு குழந்தை பிறந்தால் எல்லோருக்கும் சந்தோஷம் தான் ஏற்படும். அதுவும் ஆண் குழந்தை என்றால் தொல்லவே வேணடாம். ஆனால் இங்கு நிலைமை நேர் மாற்றமாக இருக்கிறது.
இவர் துறவறத்தை மேற்கொண்ட கன்னி ஸ்திரியாக இருந்ததால், இவரை அடையாளம் கொள்பவர்கள், தேவையற்ற கேள்விகளை கேட்டுக் கொண்டிருப்பார்கள். ஏனெனில் அவர்களைப் பொருத்த வரையில் இது ஒரு பெரிய தெய்வ குற்றமாகும். எனவே அவர்களுக்கெல்லாம் இறைவனின் செயல் திட்டத்தைப் பற்றி விளக்கிக் கொண்டிருக்க முடியாது. அப்படி சொன்னாலும் அது அவர்களுக்குப் புரியாது. எனவே இந்த உபாயத்தை கையாள சொல்லப்படுகிறது.
இப்படியாக அந்த குழந்தையைப் பெற்றெடுத்து அவர் தன் கணவருடன் யாருக்கும் தெரியாத இடத்தில் வளர்த்து வந்தார். தான் ஜக்கரிய்யா நபி மூலம் கற்றிருந்த தவ்ராத் எனும் இறைவழிகாட்டுதலை ஈஸாவுக்கு கற்றுக் கொடுத்து வந்தார். அவர் வாலிப வயதை அடைந்த பின் அவருக்கு நபித்துவமும் கிடைத்தது. (19:30)


فَأَتَتْ بِهِۦ قَوْمَهَا تَحْمِلُهُۥ ۖ قَالُوا۟ يَٰمَرْيَمُ لَقَدْ جِئْتِ شَيْـًۭٔا فَرِيًّۭا.

19:27. அதன்பின் மர்யம் தன் மகனுடன் தம் சொந்த ஊருக்கு திரும்பி வந்தார். ஈஸா நபியின் போதனைகளைக் கேட்டு வந்த அவருடைய சமூகத் தலைவர்கள், மிகவும் ஆத்திரமடைந்தார்கள். அவர்கள் மிகவும் கோபத்துடன், “இது என்ன? இப்படி ஒரு விபரீதமான செயலை செய்திருக்கிறாய்” என்று மர்யமிடம் கேட்டு வந்தனர்.


يَٰٓأُخْتَ هَٰرُونَ مَا كَانَ أَبُوكِ ٱمْرَأَ سَوْءٍۢ وَمَا كَانَتْ أُمُّكِ بَغِيًّۭا.

19:28. அவர்கள், “ஹாரூனின் சகோதரியே! நீயோ அல்லது உன் தந்தையோ கெட்ட மனிதராக இருந்ததில்லை. உன் தாயாரும் ஆசிரமத்திற்கு எதிரான எந்தப் பேச்சும் பேசினது கிடையாது”
ஆனால் நீயோ உன் பையனை ஏன் இவ்வாறு வளர்த்து இருக்கிறாய்? அவன் நம் ஆசிரம சட்ட விதிமுறைகளுக்கு எதிராக பேசி வருகிறானே! என்று ஆவேசமாக பேசினார்கள்.


فَأَشَارَتْ إِلَيْهِ ۖ قَالُوا۟ كَيْفَ نُكَلِّمُ مَن كَانَ فِى ٱلْمَهْدِ صَبِيًّۭا.

19:29. அதற்கு மர்யம், தன் மகனிடமே கேட்டு கொள்ளும்படி சொல்லி வந்தார். அதற்கு அச்சமுதாயத் தலைவர்கள், “நாம் எப்படி தொட்டிலில் இருக்கும் சிறு பிள்ளையிடம் பேசுவது?” என்று ஆவேசமாக கேட்டார்கள்.
அதாவது பெரியவர்களான நாம் சின்ன குழந்தையிடம் எவ்வாறு பேசுவது? எங்களைப் பொருத்த வரையில் அவன் சிறு பையனே. அதற்கு ஈஸா நபி. “இதில் சிறியவன் பெரியவன் என்று என்ன இருக்கப் போகிறது? உண்மையை யார் எடுத்துக் கூறினாலும் ஒன்றுதானே!" என்றார்.


قَالَ إِنِّى عَبْدُ ٱللَّهِ ءَاتَىٰنِىَ ٱلْكِتَٰبَ وَجَعَلَنِى نَبِيًّۭا.

19:30. அவர், “நான் இறைக் கட்டளைக்கு அடிபணிந்து வாழ்பவனாகவே இருக்கிறேன். எனக்கு இன்ஜீல் எனும் இறைவழிகாட்டுதல் அளிக்கப்பட்டுள்ளது. இன்னும் நான் இறைத் தூதனாக இருக்கிறேன்” என்றார்.
உண்மையிலேயே அவர் தொட்டில் குழந்தையாக இருந்திருந்தால், அவர் எப்படி இன்ஜீல் எனும் வேதத்தை பெற்றுக் கொண்டிருக்க முடியும். எனவே இச்சம்பவம் அவருக்கு நபித்து பட்டம் கிடைத்து, மக்களிடம் போதித்த பின்புதான் நடந்தது என்று தெளிவாகிறது. மக்கள் மத்தியில் இவருடைய போதனைகளைப் பற்றி பேசப்படுவதால் தான் அதை கேள்வியுற்ற மதத் தலைவர்கள் இவ்வாறு தர்க்கம் செய்தனர். வயதானவர்களாக இருக்கும் மதத் தலைவர்களின் முன்பு இவர் சிறு குழந்தையே!


وَجَعَلَنِى مُبَارَكًا أَيْنَ مَا كُنتُ وَأَوْصَٰنِى بِٱلصَّلَوٰةِ وَٱلزَّكَوٰةِ مَا دُمْتُ حَيًّۭا.

19:31. மேலும் அவர், "இறைவனின் எல்லா பாக்கியங்களையும் பெற்று நான் சிறப்பாக வாழ்கிறேன். எனவே நான் எங்கிருந்தாலும், நீங்கள் சுயமாக உருவாக்கி வைத்திருக்கும் ஷரீயத் சட்டங்களை விட்டுவிட்டு இறைவழிகாட்டுதலை வாழ்நாள் முழுவதும் கடைப்பிடித்து சமுதாய வளர்ச்சிக்காக பாடுபடுபவனாகவே இருப்பேன்”
மேலும் என் தாயாரைப் பற்றி பலவிதமாக அவதூரு பேசி வருகிறீர்கள். அவர் இறைவழிகாட்டுதலின் படியே வாழ்ந்து வந்தவர் ஆவார்.


وَبَرًّۢا بِوَٰلِدَتِى وَلَمْ يَجْعَلْنِى جَبَّارًۭا شَقِيًّۭا.

19:32. “எனவே நான் அவருக்கு வாழ்நாள் முழுவதும் பணிவிடை செய்ய கடமைப்பட்டுள்ளேன். உங்கள் பேச்சை கேட்டு அவருக்கு தீங்கிழைக்க நான் ஒன்றும் கர்வம் பிடித்த மனிதன் அல்ல”


وَٱلسَّلَٰمُ عَلَىَّ يَوْمَ وُلِدتُّ وَيَوْمَ أَمُوتُ وَيَوْمَ أُبْعَثُ حَيًّۭا.

19:33. “எனவே என்னுடைய பிறப்பும். மரணிக்கும் வரையில் தொடரும் வாழ்வும். மரணத்திற்குப் பின் தொடரும் மறுமை வாழ்வும் அமைதியும் சாந்தியும் கொண்டதாகவே இருக்கும்” என்று அவர் தம் சமூகத்தாரிடம் எடுத்துரைத்தார்.
கவனித்தீர்களா? யஹ்யா நபியின் பிறப்பு. இறப்பு மற்றும் மரணத்தற்குப் பின் தொடர்கின்ற வாழ்வைப் பற்றி சொல்லப்பட்டது போலவே (பார்க்க 19:15) ஈஸா நபியின் பிறப்பு இறப்பை பற்றியும் சொல்லப்பட்டுள்ளது. எனவே ஈஸா நபியின் பிறப்பு ஒரு விசித்திரமான பிறப்பும் அல்ல. அவருடைய மரணமும் வழக்கத்திற்கு மாற்றமானதும் அல்ல என்று இதிலிருந்து தெளிவாகத் தெரிகிறது. (பார்க்க 3:40-55) மேலும் தொட்டில் குழந்தை இப்படி எல்லாம் பேசுமா என்பதையும் சிந்தித்துப் பாருங்கள்.


ذَٰلِكَ عِيسَى ٱبْنُ مَرْيَمَ ۚ قَوْلَ ٱلْحَقِّ ٱلَّذِى فِيهِ يَمْتَرُونَ.

19:34. இதுவே மர்யமின் குமாரர் ஈஸா நபியின் உண்மை வரலாறாகும். ஆனால் அவரது பிறப்பை பற்றியும், இறப்பை பற்றியும் கிறிஸ்தவர்களில் பலர், பல்வேறு கருத்துக்களை வைத்துள்ளார்கள். அவர்கள் எதில் சந்தேகத்தில் இருக்கிறார்களோ. அவருடைய உண்மை விஷயத்தை தெளிவுபடுத்தாகி விட்டது.


مَا كَانَ لِلَّهِ أَن يَتَّخِذَ مِن وَلَدٍۢ ۖ سُبْحَٰنَهُۥٓ ۚ إِذَا قَضَىٰٓ أَمْرًۭا فَإِنَّمَا يَقُولُ لَهُۥ كُن فَيَكُونُ.

19:35. மேலும் கிறிஸ்தவர்களைப் பாருங்கள். ஈஸா நபியை அல்லாஹ்வின் புதல்வன் என்கிறார்கள். இப்படிப்பட்ட உறவுமுறைகளுக்கெல்லாம் அப்பாற்பட்டவன் தான் அல்லாஹ். அவன் எந்த செயல் திட்டத்தை நடைமுறைப்படுத்த தீர்மானித்தாலும் அது தானாகவே உருவாகிவிடும். இதில் யாருடைய உதவியும் தேவையிருப்பதில்லை. இவை அவனுடைய அளவற்ற வல்லமையின் பிரதிபலிப்பாகும்.
அப்படியும் ஈஸா நபி உலக மக்களுக்கு போதித்து வந்த விஷயம்தான் என்ன?


وَإِنَّ ٱللَّهَ رَبِّى وَرَبُّكُمْ فَٱعْبُدُوهُ ۚ هَٰذَا صِرَٰطٌۭ مُّسْتَقِيمٌۭ.

19:36. உங்கள் அனைவரையும் படைத்து பரிபாலிக்கும் ஏக இறைவனாகிய அல்லாஹ்வே என்னுடைய இறைவனும் உங்களுடைய இறைவனும் ஆவான். எனவே நாம் அனைவரும் அவனுடைய கட்டளைக்கு மட்டுமே கட்டுப்பட்டு வாழவேண்டும். இதுவே மனித வாழ்வின் சிறப்பான வாழ்விற்கு நேரான பாதையாகும். இதுவே அவருடைய போதனைகளின் கருவூலமாகும்.


فَٱخْتَلَفَ ٱلْأَحْزَابُ مِنۢ بَيْنِهِمْ ۖ فَوَيْلٌۭ لِّلَّذِينَ كَفَرُوا۟ مِن مَّشْهَدِ يَوْمٍ عَظِيمٍ.

19:37. ஆனால் ஈஸா நபியின் போதனைகளை கேட்டு வந்த சமுதாய மக்களிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு வந்தன. அந்தோ பரிதாபம்! வளம் மிக்க வாழ்விற்கு வழிகாட்டியாக விளங்கிய அவருடைய அறிவுரைகளை ஏற்க மறுத்து வாழ்வதால், “மனித செயலுக்கேற்ற இறுதி விளைவுகள்”என்ற சட்டத்தின்படி ஏற்படும் கேடுகளைப் பற்றி அவர்களுக்கு தெரியாமல் போனது பரிதாபத்திற்குரியதே!
இன்றைய கால கட்டங்களிலும் கிறிஸ்தவர்கள் ஈஸா நபியை ஆண்டவன் அல்லது தேவகுமாரன் என்று தேவைக்கு ஒப்ப சொல்லிக் கொண்டு, தம் மனம் போன போக்கில் வாழ்ந்து வருகின்றனர்.


أَسْمِعْ بِهِمْ وَأَبْصِرْ يَوْمَ يَأْتُونَنَا ۖ لَٰكِنِ ٱلظَّٰلِمُونَ ٱلْيَوْمَ فِى ضَلَٰلٍۢ مُّبِينٍۢ.

19:38. ஆனால் அவர்களுடைய தீய செயல்களின் விளைவுகள் தோற்றத்திற்கு வரும் கால கட்டங்களில், அவர்கள் அவற்றை தெளிவாகத் தெரிந்து கொள்வார்கள். அப்போது பார்த்தும் கேட்டும் என்ன பயன்? வழிகேட்டில் செல்பவர்களுக்கு என்ன விமோசனம் கிடைக்கப் போகிறது?


وَأَنذِرْهُمْ يَوْمَ ٱلْحَسْرَةِ إِذْ قُضِىَ ٱلْأَمْرُ وَهُمْ فِى غَفْلَةٍۢ وَهُمْ لَا يُؤْمِنُونَ.

19:39. இறைவழிகாட்டுதலை எடுத்துரைப்பவரே! இப்படி ஒரு வேதனைமிக்க கால கட்டம் எற்படுவது தவிர்க்க முடியாத ஒன்றாகும் என்பதை அவர்களிடம் எடுத்துரைத்து, அவர்களுக்கு முன்னெச்சரிக்கை செய்யுங்கள். ஏனெனில் அவர்கள் அறியாமையில் அதைப் பற்றி எந்த கவலையும் இன்றி செயல்படுகிறார்கள்.
காரணம் அவர்கள், தம் ஆட்சி அதிகாரம் மற்றும் செல்வங்களின் மமதையில் இருக்கிறார்கள். இதனால் அவர்கள் இறைவழிகாட்டுதலை ஏற்க மறுத்து முறைதவறி நடக்கிறார்கள். வெகு நாட்களுக்கு இப்படி நீடிக்க வாய்ப்பில்லை. ஏனெனில் இவ்வுலகில் உள்ள அனைத்து படைப்புகளும் இறைவனின் சட்டப்படியே செயல்பட்டு வருகின்றன. இதற்கு எதிராக மனிதன் செயல்பட்டால், அதனால் ஏற்படும் விளைவுகள் மனிதனுக்குத் தான் என்பதை அவர்கள் அறிந்து கொள்ள வேண்டும்.


إِنَّا نَحْنُ نَرِثُ ٱلْأَرْضَ وَمَنْ عَلَيْهَا وَإِلَيْنَا يُرْجَعُونَ.

19:40. இந்தப் பூமியும் அதில் உள்ள எல்லா படைப்புகளும் நமக்கே உரியதாகும். அதாவது அவை அனைத்தும் நம் கட்டளைப் படியே செயல்படுகின்றன. எனவே உங்களுடைய ஒவ்வொரு செயலும் நாம் நிர்ணயித்த இலக்கின்படியே விளைவுகளை ஏற்படுத்தி வரும். அந்த விளைவுகளின் இலக்கை விட்டு நீங்கள் வேறு எங்கும் செல்ல ஒருபோதும் வாய்ப்பில்லை.


وَٱذْكُرْ فِى ٱلْكِتَٰبِ إِبْرَٰهِيمَ ۚ إِنَّهُۥ كَانَ صِدِّيقًۭا نَّبِيًّا.

19:41. அதே போன்று. உண்மைக்கு இலக்கணமாக விளங்கிய இப்றாஹீம் நபியின் வரலாற்று நிகழ்வுகளைப் பற்றியும் இவ்வேதமான குர்ஆன் மூலம் எடுத்துரைப்பீராக.


إِذْ قَالَ لِأَبِيهِ يَٰٓأَبَتِ لِمَ تَعْبُدُ مَا لَا يَسْمَعُ وَلَا يُبْصِرُ وَلَا يُغْنِى عَنكَ شَيْـًۭٔا.

19:42. அவர். தன் தந்தையின் தெய்வ வழிபாட்டைப் பற்றி தர்க்கித்து வந்தார். அவற்றால் எதையும் பார்க்கவும் முடியாது. கேட்கவும் முடியாது. உங்களுக்கு எந்த நன்மையும் ஏற்படுத்தவும் முடியாது. உண்மை இவ்வாறிருக்க. அவற்றை வணங்கி வருவதில் என்ன பயன்? என்று பலமுறை அவரிடம் விளக்கம் கேட்டு வந்தார்.


يَٰٓأَبَتِ إِنِّى قَدْ جَآءَنِى مِنَ ٱلْعِلْمِ مَا لَمْ يَأْتِكَ فَٱتَّبِعْنِىٓ أَهْدِكَ صِرَٰطًۭا سَوِيًّۭا.

19:43. மேலும் அவர், “என் அருமை தந்தேயே! உண்மையிலேயே அறிவுப்பூர்வமான ஞான உபதேசங்கள் எனக்கு இறைவனிடமிருந்து வந்துள்ளன. எனவே அவற்றை நீங்கள் பின்பற்றுங்கள். நான் உங்களுக்கு சிறப்பான நேர் வழியினை காட்டுகிறேன்” என்று அவர் அறிவுருத்தினார்.


يَٰٓأَبَتِ لَا تَعْبُدِ ٱلشَّيْطَٰنَ ۖ إِنَّ ٱلشَّيْطَٰنَ كَانَ لِلرَّحْمَٰنِ عَصِيًّۭا.

19:44. மேலும் அவர்,“என் அருமை தந்தையே! நீங்கள் மனோ இச்சை எனும் ஷைத்தானை பின்பற்றாதீர்கள். நிச்சயமாக அது அருட்கொடையாளன் அல்லாஹ்வுக்கு மாற்றமாக செயல்படவே தூண்டிக் கொண்டிருக்கும்” என எச்சரித்தார்.


يَٰٓأَبَتِ إِنِّىٓ أَخَافُ أَن يَمَسَّكَ عَذَابٌۭ مِّنَ ٱلرَّحْمَٰنِ فَتَكُونَ لِلشَّيْطَٰنِ وَلِيًّۭا.

19:45. மேலும் அவர்,“என் அருமை தந்தேயே! நீங்கள் அருட்கொடையாளன் காட்டிய நேர்வழியை விட்டுவிட்டு உங்கள் மனோ இச்சைக்கு அடிபணிந்து செயல்படுகிறீர்கள். அதனால் ஏற்படும் விபரீத விளைவுகளுக்கு நான் அஞ்சுகிறேன்” என்றும் எச்சரித்தார்.


قَالَ أَرَاغِبٌ أَنتَ عَنْ ءَالِهَتِى يَٰٓإِبْرَٰهِيمُ ۖ لَئِن لَّمْ تَنتَهِ لَأَرْجُمَنَّكَ ۖ وَٱهْجُرْنِى مَلِيًّۭا.

19:46. அதற்கு அவருடைய தந்தை, “இப்றாஹீமே! காலம் காலமாக நான் வழிபட்டுவரும் தெய்வங்களை புறக்கணித்து விட்டாயா? நீ இப்படி பேசுவதை நிறுத்தவில்லை என்றால் நான் உன்னை கல்லால் அடித்து கொன்று விடுவேன். நீ என் கண் முன்னாடி வந்து நிற்காதே. எதுவரையில் நீ உன்னுடைய இச்செயலை விட்டு விலகவில்லையோ, அது வரையில் நீ என்னை விட்டு பிரிந்தே இருக்க நேரிடும்” என்று கடுமையாக கோபக்கனலுடன் சாடினார்.


قَالَ سَلَٰمٌ عَلَيْكَ ۖ سَأَسْتَغْفِرُ لَكَ رَبِّىٓ ۖ إِنَّهُۥ كَانَ بِى حَفِيًّۭا.

19:47. அதற்கு இப்றாஹிம் மிகவும் நிதானத்துடன், “உங்களுக்கு இறைவன் நல்வழி காட்டுவானாக! உங்களுக்கு மன அமைதியை தருவானாக! உங்களுக்கு எல்லா வகையிலும் பாதுகாப்பான வாழ்வை அளிப்பானாக! நிச்சயமாக என் இறைவன் என் மீது கருணை மிக்கவனாகவே இருக்கிறான். எனவே அவன் என் வேண்டுதலை நிறைவேற்றி வைப்பான்” என்றார்.
தாய் தந்தையின் பாசம்மிக்க உறவுமுறையா அல்லது அல்லாஹ்வின் கொள்கை கோட்பாடுகளா என்று வரும்போது, அந்த உறவுமுறைக்கு முக்கியத்துவம் அளிக்க அவர் ஒப்பவில்லை.எனவே அவர்,


وَأَعْتَزِلُكُمْ وَمَا تَدْعُونَ مِن دُونِ ٱللَّهِ وَأَدْعُوا۟ رَبِّى عَسَىٰٓ أَلَّآ أَكُونَ بِدُعَآءِ رَبِّى شَقِيًّۭا.

19:48. “நான் உங்களையும். அல்லாஹ்வையன்றி நீங்கள் வணங்கி வருபவற்றை விட்டும் விலகிக் கொள்கிறேன். என்னை படைத்துப் பரிபாலிக்கும் இறைவனிடம் மட்டுமே உதவிக்கு அழைப்பேன். நிச்சயமாக அவனிடம் பிரார்த்திப்பது வீண் போகாது என்பதை நான் அறிகிறேன்” என்றார்.


فَلَمَّا ٱعْتَزَلَهُمْ وَمَا يَعْبُدُونَ مِن دُونِ ٱللَّهِ وَهَبْنَا لَهُۥٓ إِسْحَٰقَ وَيَعْقُوبَ ۖ وَكُلًّۭا جَعَلْنَا نَبِيًّۭا.

19:49. இப்படியாக அவர் தம் பெற்றோர்களையும், ஊராரையும் விட்டு விலகிக்கொண்டார். அல்லாஹ் அல்லாத பிறதெய்வ வழிபாட்டை விட்டும் விலகிக்கொண்டார். பாலஸ்தீன நாட்டிற்குச் சென்று அங்கு மில்லத் எனும் மக்கள் தொண்டு நிருவனத்தை உருவாக்கி, சிறப்பாக செயல்பட்டு வந்தார். அதன்பின் அவருடைய வயதான காலத்தில், அவருக்கு இஸ்மாயில் மற்றும் இஸ்ஹாக் என இரு புதல்வர்களும் (பார்க்க 11:71. 14:39) யாகூஃப் எனும் பேரனும் பிறந்தார்கள். அது மட்டுமின்றி, யாஃகூப் சந்ததியர்களில் பல நபிமார்கள் பிறந்தார்கள். இவையாவும் இறைவனின் அருட்கொடைகளாகும்.


وَوَهَبْنَا لَهُم مِّن رَّحْمَتِنَا وَجَعَلْنَا لَهُمْ لِسَانَ صِدْقٍ عَلِيًّۭا.

19:50. அவர்கள் அனைவருக்கும் இறைவழிகாட்டுதல் எனும் அருட்கொடைகளை அளித்தோம். அவற்றை அவர்கள் பின்பற்றியதால் உலகில் தலைசிறந்த தலைவர்கள் என புகழுடன் வாழ்ந்து சென்றார்கள்.


وَٱذْكُرْ فِى ٱلْكِتَٰبِ مُوسَىٰٓ ۚ إِنَّهُۥ كَانَ مُخْلَصًۭا وَكَانَ رَسُولًۭا نَّبِيًّۭا.

19:51. அவ்வாறு வந்த இறைத்தூதர்கள் வரிசையில் மூஸா நபியும் வருகிறார். அவருடைய வரலாற்று சிறப்புகளை இவ்வேதத்தின் மூலமாக இங்கு தருகிறோம். அவரும் மாசற்ற நற்பண்புள்ள மாமனிதராக விளங்கினார். அவர் இறைத் தூதராகவும், இறைவழிகாட்டுதலை நடைமுறைப்படுத்திக் காட்டிய வல்லவராகவும் இருந்தார்.


وَنَٰدَيْنَٰهُ مِن جَانِبِ ٱلطُّورِ ٱلْأَيْمَنِ وَقَرَّبْنَٰهُ نَجِيًّۭا.

19:52. அவர் சினாய் மலை அடிவாரம் பக்கமாக வந்த போது, நாம் அவரை அழைத்து, நம் வழிகாட்டுதலை அளிக்க அருகில் வரும்படி கூறினோம்.


وَوَهَبْنَا لَهُۥ مِن رَّحْمَتِنَآ أَخَاهُ هَٰرُونَ نَبِيًّۭا.

19:53. அது மட்டுமின்றி அவருடைய சகோதரர் ஹாரூனையும் வழிகாட்டுதல்களை அளித்து இறைத்தூதராக ஆக்கினோம். அவை அவருக்கு கிடைத்த மாபெரும் பொக்கிஷங்களாக இருந்தன.


وَٱذْكُرْ فِى ٱلْكِتَٰبِ إِسْمَٰعِيلَ ۚ إِنَّهُۥ كَانَ صَادِقَ ٱلْوَعْدِ وَكَانَ رَسُولًۭا نَّبِيًّۭا.

19:54. இறைத்தூதர்கள் வரிசையில் இஸ்மாயிலும் முக்கிய அங்கம் வகிக்கிறார். அவரைப் பற்றியும் இவ்வேதத்தில் குறிப்பிடாமல் இருக்க முடியாது. அவர் எப்போதும் தம் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் உண்மையாளராக இருந்தார். அவரும் இறைத் தூதராகவும், இறைவழிகாட்டுதலை நடைமுறைப்படுத்திக் காட்டிய வல்லவராகவும் இருந்தார்.


وَكَانَ يَأْمُرُ أَهْلَهُۥ بِٱلصَّلَوٰةِ وَٱلزَّكَوٰةِ وَكَانَ عِندَ رَبِّهِۦ مَرْضِيًّۭا.

19:55. தம்மை பின்பற்றுபவர்களிடம், இறைவழிகாட்டுதலை எடுத்துரைக்கும் “ஸலாத்” முறையை கடைபிடித்து வரும்படியும், சமுதாய நலத் திட்டங்களைத் தீட்டி, அதற்காக செலவு செய்து வரும்படியும் அவர் அறிவுறுத்தி வந்தார். இப்படியாக அவர் எப்பபோதும் இறைவனின் விருப்பப்படியே செயல்பட்டு வந்தார்.


وَٱذْكُرْ فِى ٱلْكِتَٰبِ إِدْرِيسَ ۚ إِنَّهُۥ كَانَ صِدِّيقًۭا نَّبِيًّۭا.

19:56. மேலும் இறைத்தூதர்கள் வரிசையில் இத்ரீஸ் நபியின் வரலாற்றைப் பற்றியும் இவ்வேதத்தில் குறிப்பிடாமல் இருக்க முடியாது. ஏனெனில் அவரும் இறை வழிகாட்டுதலை எடுத்துரைக்கும் உண்மையாளர் பட்டியலில் முக்கிய இடம் பெறுகிறார்.


وَرَفَعْنَٰهُ مَكَانًا عَلِيًّا.

19:57. அவரும் உயர் பதவியும் அந்தஸ்தும் பெற்று மகச் சிறப்பாக வாழ்ந்து காட்டியவர் ஆவார். (மேலும் பார்க்க 4:158)


أُو۟لَٰٓئِكَ ٱلَّذِينَ أَنْعَمَ ٱللَّهُ عَلَيْهِم مِّنَ ٱلنَّبِيِّۦنَ مِن ذُرِّيَّةِ ءَادَمَ وَمِمَّنْ حَمَلْنَا مَعَ نُوحٍۢ وَمِن ذُرِّيَّةِ إِبْرَٰهِيمَ وَإِسْرَٰٓءِيلَ وَمِمَّنْ هَدَيْنَا وَٱجْتَبَيْنَآ ۚ إِذَا تُتْلَىٰ عَلَيْهِمْ ءَايَٰتُ ٱلرَّحْمَٰنِ خَرُّوا۟ سُجَّدًۭا وَبُكِيًّۭا ۩.

19:58. அவர்கள் யாவரும் அல்லாஹ்வின் அருட்கொடைகளை பெற்று சிறப்பாக வாழ்ந்து காட்டியவர்கள் ஆவார்கள். அந்த பட்டியலில் ஆதிகால மனித சமுதாயத்தை சேர்ந்தவர்களும், இறைத்தூதர்களும் இடம் பெறுகிறார்கள். குறிப்பாக நூஹ் நபியுடன் கப்பலில் ஏறி தப்பித்தவர்கள், இப்றாஹீம் நபியின் சந்ததியர்கள், அவர்களுள் உருவான இஸ்ரவேலர்கள் ஆகிய அனைவரும் நம் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி சிறப்பாக வாழ்ந்தவர்கள் ஆவார்கள். காரணம் அருட்கொடையாளன் அல்லாஹ்வின் அறிவுரைகளை அவர்கள் முன் எடுத்து வைத்தபோது, அவர்கள் அனைவரும் கண்களில் நீர் மல்க, அவற்றை மனதார ஏற்று அதன்படியே வாழ்ந்து காட்டியவர்கள் ஆவார்கள்.


۞ فَخَلَفَ مِنۢ بَعْدِهِمْ خَلْفٌ أَضَاعُوا۟ ٱلصَّلَوٰةَ وَٱتَّبَعُوا۟ ٱلشَّهَوَٰتِ ۖ فَسَوْفَ يَلْقَوْنَ غَيًّا.

19:59. ஆனால் காலப் போக்கில் அவர்களுக்குப் பின் வந்தவர்கள், இறை வழிகாட்டுதலையும் சமூகக் கட்டுப்பாட்டைக் கற்றுத் தரும் "ஸலாத்" முறையையும் வீணாக்கி விட்டார்கள். அதைத் தொடர்ந்து அவர்கள், தம் மனோ இச்சைக்கு அடிமையாகி, தாளா வேதனைகளை சந்தித்துக் கொண்டார்கள்.


إِلَّا مَن تَابَ وَءَامَنَ وَعَمِلَ صَٰلِحًۭا فَأُو۟لَٰٓئِكَ يَدْخُلُونَ ٱلْجَنَّةَ وَلَا يُظْلَمُونَ شَيْـًۭٔا.

19:60. ஆனாலும் ஒரு சில சமுதாயத்தவர்கள் தம் தவறான செயல்களை விட்டுவிட்டு, அல்லாஹ்வின் வழிகாட்டுதலை ஏற்று ஆக்கப்பூர்வமான நலத் திட்டங்களைத் தீட்டி, உழைத்து வந்தவர்களும் இருந்தார்கள். அவர்களுக்கு சுவனத்திற்கு ஒப்பான சிறந்த வாழ்க்கை கிடைத்து வந்தது. அவர்களில் யாருக்கும் எவ்வித அநீதியும் இழைக்கப்பட வில்லை.


جَنَّٰتِ عَدْنٍ ٱلَّتِى وَعَدَ ٱلرَّحْمَٰنُ عِبَادَهُۥ بِٱلْغَيْبِ ۚ إِنَّهُۥ كَانَ وَعْدُهُۥ مَأْتِيًّۭا.

19:61. இவ்வுலகில் இப்படிப்பட்ட சுவனத்திற்கு ஒப்பான வாழ்வு கிடைப்பது பற்றி, ஆரம்பத்தில் மனிதனின் அறிவுப் புலன்களுக்கு எட்டுவதில்லை. ஆனால் அல்லாஹ்வுக்கு அடிபணிந்து செயல்பட்டு வந்தால், அச்சுவன வாழ்வு நிச்சயமாக கிடைத்து விடும். ஏனெனில் அல்லாஹ்வின் வாக்குறுதியில் எவ்வித மாற்றமும் ஏற்பட ஒருபோதும் வாய்ப்பில்லை.


لَّا يَسْمَعُونَ فِيهَا لَغْوًا إِلَّا سَلَٰمًۭا ۖ وَلَهُمْ رِزْقُهُمْ فِيهَا بُكْرَةًۭ وَعَشِيًّۭا.

19:62. அத்தகைய சுவனத்திற்கு ஒப்பான சமுதாயத்தில், வீணான எந்த செயலும் நிகழ்வதை நீங்கள் காண மாட்டீர்கள். அங்கு ஒவ்வொரும், “பிறர் நலம் பேணுதல்” என்ற அடிப்படையிலேயே செயல்படுவார்கள். அங்கு ஒருபோதும் உணவு பற்றாக் குறை என்ற பேச்சிற்கே இடமிருக்காது. அந்த அளவிற்கு தாராளமான வாழ்க்கை வசதிகள் கிடைத்து வரும். இத்தகைய சுவன வாழ்வு அவர்களுக்கு தானமாகவோ அல்லது மற்றவரின் பரிந்துறையின் பேரிலோ கிடைக்கின்ற ஒன்றல்ல். மாறாக


تِلْكَ ٱلْجَنَّةُ ٱلَّتِى نُورِثُ مِنْ عِبَادِنَا مَن كَانَ تَقِيًّۭا.

19:63. அல்லாஹ்வின் வழிகாட்டுதலுக்கு மாற்றமாக செயல்படுவதால் ஏற்படும் விபரீத விளைவுகளுக்கு அஞ்சி, இறைக்கட்டளைக்கு மட்டும் கட்டுப்பட்டு வாழ்பவர்களே இத்தகைய சுவனத்திற்கு ஒப்பான வாழ்க்கைக்கு உரியவர்கள் ஆவார்கள். அது அவர்களுடைய உழைப்பிற்கு கிடைக்கின்ற சன்மானங்களாகும்.


وَمَا نَتَنَزَّلُ إِلَّا بِأَمْرِ رَبِّكَ ۖ لَهُۥ مَا بَيْنَ أَيْدِينَا وَمَا خَلْفَنَا وَمَا بَيْنَ ذَٰلِكَ ۚ وَمَا كَانَ رَبُّكَ نَسِيًّۭا.

19:64. இறைக் கட்டளையின் படி செயல்படுவதன் மூலமே பிரபஞ்ச இயற்கை சக்திகளின் உதவிகள் இடைவிடாமல் கிடைத்து, வளமான வாழ்விற்கு வழிகள் பிறக்கும். அந்த இயற்கை சக்திகள் மூலம் உங்களுக்கு பலன்கள் கிடைத்து வருவதும், அவற்றில் தொடர்ந்து கிடைக்கக் கூடிய பலன்கள் மறைந்திருப்பதும், அவற்றிற்கிடையே வெளிப்படையாக இருப்பதும் ஏக இறைவனின் செயல்திட்டத்தை நிறைவேற்று வதற்காகவே ஆகும். ஆக இந்த பிரபஞ்சத்தில் நடைபெற்று வரும் எந்த செயலும் இறைச் சட்டத்திற்கு வெளியே செல்ல ஒருபோதும் வாய்ப்பில்லை.


رَّبُّ ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضِ وَمَا بَيْنَهُمَا فَٱعْبُدْهُ وَٱصْطَبِرْ لِعِبَٰدَتِهِۦ ۚ هَلْ تَعْلَمُ لَهُۥ سَمِيًّۭا.

19:65. எனவே அகிலங்களையும் பூமியையும் படைத்து பரிபாலிக்கின்ற இறைவனின் கட்டளைக்கு மட்டுமே மனிதன் கட்டுப்பட்டு செயல்பட வேண்டும். மேலும் அச்செயல் திட்டத்தில் உறுதிப்பாடும் நிதானமும் அவசியமாகின்றன. அல்லாஹ்வுக்கு நிகரான வல்லமையும் பேராற்றலும் மற்றவரிடமும் இருப்பதாக நீர் எண்ணுகிறீரா?


وَيَقُولُ ٱلْإِنسَٰنُ أَءِذَا مَا مِتُّ لَسَوْفَ أُخْرَجُ حَيًّا.

19:66. அவ்வாறு இறைவனின் செயல்திட்டப்படி மனஉறுதியுடன் நிலைத்திருந்து செயல்பட்டால், உயிரற்று நடை பிணமாக வாழும் சமுதாயம், புத்துயிர் பெற்று சிறப்பாக வாழும் வாய்ப்பை பெறும். ஆனால் இந்த உண்மையை ஏற்க மறுப்பவர்கள், இறந்துவிட்ட பின், நாம் மீண்டும் உயிர் பெறுவோமா என்று ஏளனமாக கேட்கிறார்கள்.


أَوَلَا يَذْكُرُ ٱلْإِنسَٰنُ أَنَّا خَلَقْنَٰهُ مِن قَبْلُ وَلَمْ يَكُ شَيْـًۭٔا.

19:67. இதற்குமுன் இருந்த மனிதனின் நிலையை அவன் சற்று கவனித்துப் பார்க்கட்டும். ஒரு பொருளாகவே இல்லாதிருந்த அவனை, (76:1) சிறப்பாக்கியது இறைவன்தானே. உண்மை இவ்வாறிருக்க அவனை மீண்டும் உருவாக்குவதில் என்ன சிரமம் இருக்கப் போகிறது?
ஆக மரணத்திற்குப் பின் தொடர்கின்ற வாழ்க்கையை ஏற்க மறுப்பதும். “மனித செயல்களுக்கேற்ற இறுதி விளைவுகள்” என்ற இறைவனின் சட்டத்தை ஏற்க மறுப்பதும் ஒன்றே. ஏனெனில் இறைவனின் இந்த சட்டத்தின் பிடியில் நாம் சிக்க மாட்டோம் என்ற தவறான எண்ணம் அத்தகையவர்களிடம் உருவாகிவிடுகிறது. எனவே மரணத்திற்குப் பின் தொடர்கின்ற வேதனைகள் ஒருபுறம் இருக்க, இவ்வுலகிலேயே ஏற்படுகின்ற வேதனைகளையும் அவர்கள் அனுபவித்தும், அதே போல் பிறருடைய வேதனைகளையும் கண்கூடாகக் காணும் காலம் நிச்சயம் வரும் என்பதை அவர்களுக்கு தெளிவாக எடுத்துரையுங்கள்.


فَوَرَبِّكَ لَنَحْشُرَنَّهُمْ وَٱلشَّيَٰطِينَ ثُمَّ لَنُحْضِرَنَّهُمْ حَوْلَ جَهَنَّمَ جِثِيًّۭا.

19:68. தீய வழியில் செல்லும் தலைவர்களிடம், “இறைவனின் நியதிப்படி. களத்தில் சந்திக்கும் காலம் நிச்சயம் வரும் என்றும், அப்போது அவர்கள் தோல்வியுற்று நரக வேதனைகளை அனுபவிக்க நேரிடும்” என்பதையும் அறிவித்துவிடுங்கள்.


ثُمَّ لَنَنزِعَنَّ مِن كُلِّ شِيعَةٍ أَيُّهُمْ أَشَدُّ عَلَى ٱلرَّحْمَٰنِ عِتِيًّۭا.

19:69. அதன் பின்னர், அருட்கொடையாளன் இறைவனின் ஆட்சியமைப்பு ஏற்படுவதற்கு எதிராக தீவிரமாக செயல்பட்ட ஒவ்வொரு கூட்டத்தாரின் தலைவர்களும் தனித்தனியே பிரிக்கப்படுவார்கள்.


ثُمَّ لَنَحْنُ أَعْلَمُ بِٱلَّذِينَ هُمْ أَوْلَىٰ بِهَا صِلِيًّۭا.

19:70. பின்னர் அந்த நரக வேதனைகளை அனுபவிப்பதில் முக்கியஸ்தர்கள் யார் என்பது, இறைவனுக்கு நன்குத் தெரியும். அதன்படியே அவர்கள் முதலில் நரகத்தில் தள்ளப்படுவார்கள்.


وَإِن مِّنكُمْ إِلَّا وَارِدُهَا ۚ كَانَ عَلَىٰ رَبِّكَ حَتْمًۭا مَّقْضِيًّۭا.

19:71. இதற்கு அர்த்தம், அவர்கள் மட்டும் தண்டிக்கப்படுவார்கள் என்பதல்ல. தீய செயலில் ஈடுபட்ட ஒவ்வொருவருக்கும் தண்டனை கிடைக்காமல் போகாது. ஏனெனில் இது உமது இறைவன் தீர்மானித்ததாகும்.


ثُمَّ نُنَجِّى ٱلَّذِينَ ٱتَّقَوا۟ وَّنَذَرُ ٱلظَّٰلِمِينَ فِيهَا جِثِيًّۭا.

19:72. ஆனால் இறையச்சத்துடன் செயல்பட்டவர்கள், இப்படிப்பட்ட வேதனையிலிருந்து மீண்டு கொள்வார்கள். மாறாக அநியாய செயலில் ஈடுபடுபவர்களின் நிலை படுமோசமான நரக வேதனைகளைக் கொண்டதாக இருக்கும்.


وَإِذَا تُتْلَىٰ عَلَيْهِمْ ءَايَٰتُنَا بَيِّنَٰتٍۢ قَالَ ٱلَّذِينَ كَفَرُوا۟ لِلَّذِينَ ءَامَنُوٓا۟ أَىُّ ٱلْفَرِيقَيْنِ خَيْرٌۭ مَّقَامًۭا وَأَحْسَنُ نَدِيًّۭا.

19:73. இப்படியாக இறைவனின் வழிகாட்டுதலை தெளிவான முறையில் எடுத்துரைத்தும், இதை ஏற்க மறுப்பவர்கள் மூஃமின்களைப் பார்த்து, “இப்போது நம் இரு பிரிவினர்களில் யாருடைய நிலை சிறப்பாக இருக்கிறது. மேலும் அரசாளும் தகுதி யாருக்கு மேலோங்கி நிற்கிறது என்பதையும் நீங்களே சொல்லுங்கள்” என்று கேட்கிறார்கள். “இதிலிருந்து யார் நேர்வழியில் இருக்கிறார்கள் என்பதை எண்ணிப் பாருங்கள்” என்றும் பேசி வருகிறார்கள்.
இறைவழிகாட்டுதலின் அடிப்படையில் சமூக அமைப்பும் அரசாட்சியும் ஏற்படுத்த முற்படும்போது, மூஃமின்களிள் நிலமை மிகவும் மோசமாகத் தான் இருக்கும். எதிரணியின் செல்வ பலமும், படைப் பலமும் மேலோங்கியே இருக்கும். ஆனால் இறுதியில் யாருக்கு வெற்றி கிடைக்கிறது என்ற உண்மை அவர்களுக்குப் புரிய வாய்ப்பில்லை. ஏனெனில்


وَكَمْ أَهْلَكْنَا قَبْلَهُم مِّن قَرْنٍ هُمْ أَحْسَنُ أَثَٰثًۭا وَرِءْيًۭا.

19:74. இவர்களைவிட சிறந்த செல்வ செழிப்புடனும், படைப் பலத்துடனும் ஆட்சி செய்து வந்த எத்தனையோ சமுதாயங்கள் இறைவனின் நியதிப்படி அழிந்து போய் இருக்கின்றதே!


قُلْ مَن كَانَ فِى ٱلضَّلَٰلَةِ فَلْيَمْدُدْ لَهُ ٱلرَّحْمَٰنُ مَدًّا ۚ حَتَّىٰٓ إِذَا رَأَوْا۟ مَا يُوعَدُونَ إِمَّا ٱلْعَذَابَ وَإِمَّا ٱلسَّاعَةَ فَسَيَعْلَمُونَ مَنْ هُوَ شَرٌّۭ مَّكَانًۭا وَأَضْعَفُ جُندًۭا.

19:75. இறைவழிகாட்டுதலை எடுத்துரைப்பவரே! நீங்கள் அவர்களிடம். “தற்சமயம் நம்முடைய நிலைமை உங்களை விட மோசமாக இருப்பது என்னவோ உண்மைதான். உங்களுடைய தவறான செயல்களளால் ஏற்படும் விபரீத விளைவுகள் தற்சமயம் உங்களுக்கு தோற்றத்திற்கு வராமலும் இருக்கலாம். ஆனால் வாக்களிக்கபட்ட காலத் தவணைக்குப் பின், அந்த விளைவுகள் தோற்றத்திற்கு வந்தே தீரும். அந்த கால கட்டங்களில் அதன் வேதனையை நீங்களே அனுபவித்துக் கொள்வீர்கள். ஆரம்ப காலத்தில் அந்த விளைவுகள் சிறுசிறு வேதனைகளாகத் தோன்றிவரும். இறுதியில். அழிவு எனும் வேதனைகள் உங்களை சூழ்ந்து கொள்ளும். அப்போது யாருடைய நிலைமை உயர்வாக இருக்கப் போகிறது என்பதும், எந்த கூட்டத்தினர் பலஹீனமானவர்கள் என்ற உண்மையும் தெரிந்து விடும்” என்று எடுத்துரைப்பீராக.


وَيَزِيدُ ٱللَّهُ ٱلَّذِينَ ٱهْتَدَوْا۟ هُدًۭى ۗ وَٱلْبَٰقِيَٰتُ ٱلصَّٰلِحَٰتُ خَيْرٌ عِندَ رَبِّكَ ثَوَابًۭا وَخَيْرٌۭ مَّرَدًّا.

19:76. இதற்கு மாறாக, யார் அல்லாஹ் காட்டிய நேர்வழியில் செயல் படுகிறார்களோ. அவர்களுக்கு மென்மேலும் அனுபவ ரீதியாக தேற்சிப் பெற்று முன்னேறுவார்கள். நிரந்தரமாக நிலைத்திருக்கக் கூடிய வாழ்வதார வசதிகளை, ஆக்கப்பூர்வமான நோக்கங்களுக்காக மட்டுமே பயன்படுத்துவார்கள். இதனால் அவர்களுக்கு இறைவனின் நியதிப்படி பலன்கள் பன்மடங்காகக் கிடைக்கும்.


أَفَرَءَيْتَ ٱلَّذِى كَفَرَ بِـَٔايَٰتِنَا وَقَالَ لَأُوتَيَنَّ مَالًۭا وَوَلَدًا.

19:77. இறைவழிகாட்டுதல்கள் எல்லாம் தேவையற்றவை என மறுத்து, பொருட் செல்வமும், ஆட்பலமும் இருந்தால் மட்டும் போதும் என்றும், அவை எல்லாம் நிரந்தரமாக நீடித்து நிற்பவை என்றும் மனிதன் எண்ணிக் கொண்டானா? அல்லது


أَطَّلَعَ ٱلْغَيْبَ أَمِ ٱتَّخَذَ عِندَ ٱلرَّحْمَٰنِ عَهْدًۭا.

19:78. இது சம்பந்தமாக அவனுக்கு மறைவான ஞானம் ஏதாவது கிடைத்து விட்டதா? அல்லது அருட்கொடையாளன் இறைவனிடமிருந்து அப்படி ஏதாவது உறுதிமொழி தான் வந்துள்ளதா?


كَلَّا ۚ سَنَكْتُبُ مَا يَقُولُ وَنَمُدُّ لَهُۥ مِنَ ٱلْعَذَابِ مَدًّۭا.

19:79. அப்படியல்ல. அவன் பேசி வருவதும் செயல்பட்டு வருவதும், இறைவனின் நியதிப்படி பதிவாகி வருகின்றன. அவனுடைய தவறான செயல்களின் விளைவாக வேதனைகள் அதிகமாகிக் கொண்டே செல்லும்.
அவன் செய்து வந்த செயல்களின் விளைவுகள் தோற்றத்திற்கு வரும் கால கட்டங்களில்


وَنَرِثُهُۥ مَا يَقُولُ وَيَأْتِينَا فَرْدًۭا.

19:80. அவன் எந்த செல்வங்களின் மீது பெருமையாக பேசிக் கொண்டிருந்தானோ, அவை யாவும் பறிபோய் விடும். அச்செல்வங்களுக்கு நாமே வாரிசு ஆவோம். எனவே அவன் அவற்றை எல்லாம் விட்டுவிட்டு நம்மிடம் தன்னந் தனியாகவே வருவான்.
அதாவது மனிதனுக்கு இவ்வுலகில் நிரந்தர வாழ்க்கை கிடைப்பதில்லை. அவன் ஒரு நாள் இல்லை ஒரு நாள் மரணித்து தான் ஆக வேண்டும். அப்போது அவனுடைய பிள்ளைகளும் பொருட் செல்வமும் அவனோடு வரப் போவதில்லை. அவன் செய்து வந்த செயல்கள் மட்டுமே அவனுடன் வரும். அல்லாஹ்வின் ஆட்சியமைப்பு இருந்தால் அவனுடைய செல்வங்களை அரசுடமையாக்கிக் கொள்ளும்.


وَٱتَّخَذُوا۟ مِن دُونِ ٱللَّهِ ءَالِهَةًۭ لِّيَكُونُوا۟ لَهُمْ عِزًّۭا.

19:81. அவர்கள் தங்களின் பாதுகாப்பான வாழ்க்கைக்கு அல்லாஹ்வின் வழிகாட்டுதலை விட்டுவிட்டு, கற்பனை தெய்வங்கள் தாம் வல்லமைப் பெற்றவை என்று எண்ணிக் கொண்டிருக்கிறார்களா?
இது எப்படி உண்மை ஆகும்? அவர்களுடைய தவறான செயல்களால் ஏற்படும் விபரீத விளைவுகளிலிருந்து காப்பாற்ற அந்த கற்பனை தெய்வங்களால் முடியுமா? எனவே


كَلَّا ۚ سَيَكْفُرُونَ بِعِبَادَتِهِمْ وَيَكُونُونَ عَلَيْهِمْ ضِدًّا.

19:82. அவர்கள் ஒரு கட்டத்தில் கற்பனை தெய்வங்களை வணங்குவதை விட்டுவிட்டு, அதற்கு எதிராகத் திரும்பி விடுவார்கள்.


أَلَمْ تَرَ أَنَّآ أَرْسَلْنَا ٱلشَّيَٰطِينَ عَلَى ٱلْكَٰفِرِينَ تَؤُزُّهُمْ أَزًّۭا.

19:83. உண்மை விஷயம் என்னவென்றால் மனோ இச்சையின்படி நடப்பவர்களும் அவர்களுடைய தலைவர்களும், இறைவழிகாட்டுதலின் படி சமூக அமைப்பு உருவாகதவாறு இறை மறுப்பாளர்களை சதா தூண்டிக் கொண்டிருக்கிறார்கள்.


فَلَا تَعْجَلْ عَلَيْهِمْ ۖ إِنَّمَا نَعُدُّ لَهُمْ عَدًّۭا.

19:84. எனவே அவர்களுக்கு நேரவிருக்கும் அழிவு ஏற்பட்டே தீரும். நீர் அதற்காக அவசரப்படாதீர். நிர்ணயிக்கப்பட்ட கால அளவின்படி அந்த அழிவுகள் ஏற்பட்டே தீரும்.


يَوْمَ نَحْشُرُ ٱلْمُتَّقِينَ إِلَى ٱلرَّحْمَٰنِ وَفْدًۭا.

19:85. அப்போது, இறையச்சத்துடன் செயல்பட்டு வந்தவர்கள் அனைவரும் ஒன்று கூடுவார்கள். கண்ணியத்துடன் கூடிய எல்லா சிறப்புகளுடனும் நாம் அவர்களை வரவேற்போம்.


وَنَسُوقُ ٱلْمُجْرِمِينَ إِلَىٰ جَهَنَّمَ وِرْدًۭا.

19:86. மறுபுறம், இறை நிராகரிப்பவர்களின் நிலை மிகவும் மோசமாக இருக்கும். தாகத்துடன் வாடும் மிருகங்கள் எவ்வாறு தண்ணீரைத் தேடி அலையுமோ, அவ்வாறே அவர்களை அலைய விட்டுவிடுவோம்.


لَّا يَمْلِكُونَ ٱلشَّفَٰعَةَ إِلَّا مَنِ ٱتَّخَذَ عِندَ ٱلرَّحْمَٰنِ عَهْدًۭا.

19:87. அப்படி ஒரு கால கட்டத்தில், அருட்கொடையாளனிடம் பரிந்து பேச யாரும் தகுதி பெற மாட்டார்கள். இறைவனின் வாக்குப்படி அவர்களுடைய செயல்களே பரிந்து பேசக் கூடியதாக இருக்கும்.


وَقَالُوا۟ ٱتَّخَذَ ٱلرَّحْمَٰنُ وَلَدًۭا.

19:88. அப்போது அல்லாஹ்வுக்கு மகனை ஏற்படுத்திக் கொண்டவர்களின் கதியும் அதுவே ஆகும். மர்யமின் மகன் ஈஸாவும் அவர்களைக் காப்பாற்ற வரமாட்டார்.


لَّقَدْ جِئْتُمْ شَيْـًٔا إِدًّۭا.

19:89. இப்படி அல்லாஹ்வுக்கு புதல்வன் என்று கற்பனை செய்து கொண்டது எவ்வளவு பெரிய அபாண்டமான சொல்லாகும்!


تَكَادُ ٱلسَّمَٰوَٰتُ يَتَفَطَّرْنَ مِنْهُ وَتَنشَقُّ ٱلْأَرْضُ وَتَخِرُّ ٱلْجِبَالُ هَدًّا.

19:90. இப்படிப்பட்ட பேச்சு வானங்களே வெடித்துச் சிதறி, பூமியும் பிளந்து, மலைகளும் வெடித்து தூள்தூளாவதற்குச் சமமான சொல்லாயிற்றே இது! (மேலும் பார்க்க 42:5)


أَن دَعَوْا۟ لِلرَّحْمَٰنِ وَلَدًۭا.

19:91. நீங்களே சற்று சிந்தித்துப் பாருங்கள். அல்லாஹ்வுக்கு ஒரு புதல்வன் உண்டு என்ற சித்தாந்தம் நியாயமான ஒன்றா?


وَمَا يَنۢبَغِى لِلرَّحْمَٰنِ أَن يَتَّخِذَ وَلَدًا.

19:92. அல்லாஹ்வின் தனித்தன்மைக்கும் வல்லமைக்கும் ஒரு வடுவு ஏற்படுத்துவதற்கு சமமான சொல் அல்லவா? அல்லாஹ்வுக்கு ஒரு மகன் எதற்கு?


إِن كُلُّ مَن فِى ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضِ إِلَّآ ءَاتِى ٱلرَّحْمَٰنِ عَبْدًۭا.

19:93. அகிலங்களிலும் பூமியிலும் உள்ளவற்றில் அருட்கொடையாளன் அல்லாஹ்வுக்கு அடிபணிந்து செயல்படாமல் இருப்பவை எதுவுமே கிடையாது. எல்லாமே அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு செயல்படும்போது, அவனுக்குப் புதல்வன் எதற்கு?


لَّقَدْ أَحْصَىٰهُمْ وَعَدَّهُمْ عَدًّۭا.

19:94. அது மட்டுமின்றி அல்லாஹ்வின் வல்லமை எந்த அளவிற்கு எல்லையற்றதாக உள்ளது என்றால், எண்ணற்ற படைப்புகளின் ஒவ்வொன்றிலும் அவன் சூழ்ந்தவனாகவே இருக்கிறான். அவற்றில் ஒவ்வொன்றும் எவ்வாறு செயல்படுகின்றன என்பதை மிகத் துல்லியமாக கண்காணிக்கும் வல்லமைப் பெற்றவன்.


وَكُلُّهُمْ ءَاتِيهِ يَوْمَ ٱلْقِيَٰمَةِ فَرْدًا.

19:95. ஏற்கனவே 19:80ல் சொல்லப்பட்டது போல “மனித செயல்களின் விளைவுகள்” தோற்றத்திற்கு வரும் கால கட்டத்தில் ஒவ்வொருவராக தன்னந் தனியாக அவனிடம் வருவர். (மேலும் பார்க்க 6:94)


إِنَّ ٱلَّذِينَ ءَامَنُوا۟ وَعَمِلُوا۟ ٱلصَّٰلِحَٰتِ سَيَجْعَلُ لَهُمُ ٱلرَّحْمَٰنُ وُدًّۭا.

19:96. யார் அல்லாஹ்வின் வழிகாட்டுதலை ஏற்று ஆக்கப்பூர்வமான சிறந்த செயல்களை செய்தார்களோ, அவர்களுக்கு அருட்கொடையாளன் அல்லாஹ்வின் நேசம் கிடைக்கும்.


فَإِنَّمَا يَسَّرْنَٰهُ بِلِسَانِكَ لِتُبَشِّرَ بِهِ ٱلْمُتَّقِينَ وَتُنذِرَ بِهِۦ قَوْمًۭا لُّدًّۭا.

19:97. இவற்றை எல்லாம் நீங்கள் எளிதாக புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக, நீங்கள் பேசும் மொழியிலேயே இந்த குர்ஆனை தெளிவான முறையில் தொகுத்து கொடுக்கிறோம். இதிலுள்ள அறிவுரைகளை ஏற்று நடப்பவர்களுக்கு சிறந்த வாழ்வு கிடைக்கும் என்ற நன்மாறாயம் கூறவும், இதற்கு முரணாக செயல்படுபவர்கள், விபரீத விளைவுகளை சந்திக்க நேரிடும் என்பதை எச்சரிப்பதற்காகவும் இவை அருளப்படுகின்றன.


وَكَمْ أَهْلَكْنَا قَبْلَهُم مِّن قَرْنٍ هَلْ تُحِسُّ مِنْهُم مِّنْ أَحَدٍ أَوْ تَسْمَعُ لَهُمْ رِكْزًۢا.

19:98. இதற்கு முன்னர், இறைவனின் நியதிப்படி, எத்தனையோ சமுதாயத்தினர் தம் தவறான செயல்களால் அழிந்து போயுள்ளனர். அவர்களுடைய அழிவை நீர் பார்த்தீரா? அல்லது அவர்களுடைய அலரல் சப்தத்தைத்தான் நீர் கேட்டீரா?
கண்கூடாகப் பார்த்தோ அல்லது அவர்களுடைய அலரல் சப்தத்தைக் கோட்டோ இந்த குர்ஆனை நீர் எழுதவில்லை. அகிலங்கள் அனைத்திலும் பூமியிலும் உள்ள மறைவான விஷயங்களை எல்லாம் அறிந்திருக்கும் வல்லமையுடைய இறைவனின் சொல்லாகும். எனவே நீங்களும் தவறான செயல்களில் ஈடுபட்டு அழிவை தேடிக் கொள்ளாதீர்கள். இதுதான் كٓهيعٓصٓ. என்பதன் பொருளாகும்.