بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ

17:0.அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் அறிவுரைப்படியே அனைத்துக் காரியங்களையும் செய்ய நாடுகிறேன். (பார்க்க 6:162)
உலகிற்கு வருகைத் தந்த எல்லா இறைத் தூதர்களும், தம் சமுதயாத்திலுள்ள சீர்கேடுகளை நீக்கி, இறைவழிகாட்டுதலின் படி தலைசிறந்த சமுதயாத்தை உருவாக்க முயற்சிகளை மேற்கொண்டனர். ஆனால் அவர்களுடைய போதனைகள் அங்கு வாழும் சுய நலக்காரர்களுக்கும், மதத் தலைவர்களுக்கும் எதிராக அமைந்தன. எனவே அவருடைய போதனைகள் மக்கள் மத்தியில் வளர விடாமல் தடைகளை ஏற்படுத்தி வந்தனர். அது முடியாமல் போகவே, இறைத் தூதர்களை தீர்த்துக் கட்டும் முயற்சிகளில் ஈடுபட்டனர். இது காலம் காலமாக நடந்து வந்த உண்மையாகும். (பார்க்க 6:112) இதே போன்று முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கும் ஏற்பட்டது. இவருக்கு எதிராகவும் பகைவர்கள் சதிதிட்டங்களைத் தீட்டினர். (பார்க்க 8:30, 16:126, 17:76) ஆனால் அவர்களுடைய சதித் திட்டங்களை எல்லாம் முறியடிக்கும் வகையில் அவர் மக்கமா நகரைவிட்டு தமக்கு ஆதரவாக இருந்த மதீனாவிற்கு ஹிஜ்ரத் செய்து சென்று விட்டார். இதைப் பற்றி இந்த அத்தியாயம் பேசுகிறது.


سُبْحَٰنَ ٱلَّذِىٓ أَسْرَىٰ بِعَبْدِهِۦ لَيْلًۭا مِّنَ ٱلْمَسْجِدِ ٱلْحَرَامِ إِلَى ٱلْمَسْجِدِ ٱلْأَقْصَا ٱلَّذِى بَٰرَكْنَا حَوْلَهُۥ لِنُرِيَهُۥ مِنْ ءَايَٰتِنَآ ۚ إِنَّهُۥ هُوَ ٱلسَّمِيعُ ٱلْبَصِيرُ.

17:1. மனித கற்பனைக்கெல்லாம் அப்பாற்பட்ட, சகல வல்லமைகளையும் உடைய அல்லாஹ்வின் திட்டப்படி, இறைக் கட்டளைக்கு அடிபணிந்து செயல்படும் தூதரை, இரவோடு இரவாக மஸ்ஜிதுல் ஹராம் என்னும் மக்கமா நகரிலிருந்து, மிகத் தொலைவில் இருக்கும் மஸ்ஜிதுல் அஃக்ஸா எனும் பள்ளத்தாக்கின் அருகாமையில் இருக்கும் (பார்க்க 8:42) மதீனாவிற்கு ஹிஜரத் செய்து செல்ல ஏற்பாடுகள் ஆயின.
இதுவரையில் போதனை அளவில் இருந்த இறைவழிகாட்டுதல்களை, சமுதாயத்தில் நடைமுறைப்படுத்தி, அவற்றின் பலன்களை மக்களுக்கு நிரூபித்துக் காட்டுவதற்காக, மக்கள் ஆதரவுள்ள இடத்திற்குச் சென்றார். இறைவனின் செயல்திட்டங்கள் யாவும், அனைத்தையும் கவனத்தில் கொள்ளும் பேராற்றல் மிக்கதாய் உள்ளன என்பதே உண்மையாகும்.
நபிமார்கள் தமக்கு சாதகமான இடத்திற்கு சென்று அங்கு சமூக அமைப்பை உருவாக்கி சீர்திருத்தங்களை செய்வது புதிதான ஒன்றல்ல. ஏறக்குறைய எல்லா நபிமார்களும் இவ்வாறே செய்துள்ளனர். உதாரணத்திற்கு இறைச் செயல்திட்டங்களை நடைமுறைப்படுத்தி அவற்றின் பலன்களை எடுத்துக்காட்ட ஃபிர்அவ்னிடம் செல்லும்படி மூஸா நபிக்கு இறைக்கட்டளை வந்தது (பார்க்க 20:23) அதற்காக


وَءَاتَيْنَا مُوسَى ٱلْكِتَٰبَ وَجَعَلْنَٰهُ هُدًۭى لِّبَنِىٓ إِسْرَٰٓءِيلَ أَلَّا تَتَّخِذُوا۟ مِن دُونِى وَكِيلًۭا.

17:2. இறைவழிகாட்டுதல் அடங்கிய வேதம் இறைவன் புறத்திலிருந்து மூஸா நபிக்கும் அளிக்கப்பட்டது. மேலும் அவ்வேதம் இஸ்ரவேலர்களுக்கு வழிகாட்டியாகவும் திகழ்ந்தது. அதில் அல்லாஹ்வின் வழிகாட்டுதலைத் தவிர வேறு எதையும் அடிப்படையாக வைத்து செயல்படக் கூடாது என்ற கட்டளையும் இருந்தது.


ذُرِّيَّةَ مَنْ حَمَلْنَا مَعَ نُوحٍ ۚ إِنَّهُۥ كَانَ عَبْدًۭا شَكُورًۭا.

17:3. அவருக்கு முன்னர், நூஹ் நபி விஷயத்திலும் இவ்வாறே நடந்தது. மக்களின் எதிர்ப்புகள் வளரவே, அவர் தம்முடைய ஆதரவாளர்களுடன் கப்பலில் ஏறி பாதுகாப்பான இடத்திற்கு ஹிஜ்ரத் செய்து சென்று விட்டார். நிச்சயமாக அவர் இறைக் கட்டளைக்கு அடிபணிந்து மிகவும் நன்றி விசுவாசத்துடன் நடந்து கொள்பவராகவே இருந்தார்.
ஆனால் இஸ்ரவேலர்களின் வலராற்று ஏட்டினைப் புரட்டிப் பாருங்கள். அவர்கள் கொடுங்கோல் மன்னனாக இருந்த ஃபிர்அவ்னின் பிடியிலிருந்து தப்பிச் சென்று, மூஸா நபியின் தலைமையில் நேர்வழி பெற்று சிறப்பாக வாழ்ந்து வந்தனர். (பார்க்க 2:40)


وَقَضَيْنَآ إِلَىٰ بَنِىٓ إِسْرَٰٓءِيلَ فِى ٱلْكِتَٰبِ لَتُفْسِدُنَّ فِى ٱلْأَرْضِ مَرَّتَيْنِ وَلَتَعْلُنَّ عُلُوًّۭا كَبِيرًۭا.

17:4. அதன் பின் காலப் போக்கில் இறைவழிகாட்டுதலுக்கு எதிராக நாட்டில் அழிச்சாட்டியம் செய்து இருமுறை வேதனை மிக்க அழிவுகளை சந்தித்த வரலாற்று ஏட்டினை எழுதிக் கொண்டனர்.
சமுதாயங்களில் ஏற்படும் வளர்ச்சியும் வீழ்ச்சியும், நாள் கணக்கிலோ வருடக் கணக்கிலோ ஏற்படுகின்ற ஒன்றல்ல. நூற்றாண்டுகள் (centuries) என்ற கணக்கில் ஏற்படுபவையாகும். இதை கவனத்தில் கொள்ளுங்கள். அதாவது ஒரு சமுதாயம் தவறான செயலில் ஈடுபட ஆரம்பிக்கும் போது, அதன் விளைவுகள் கொஞ்சம் கொஞ்சமாக ஏற்பட்டு அழிவை நோக்கிச் சென்று விடும். அது போல ஆக்கப்பூர்வமான நற்செயல்களை செய்யும் போதும் படிப்படியாக முன்னேறி சுவன வாழ்வை ஈட்டிகொள்ளும். இவை இறைவனால் நிலை நிறுத்தப்பட்ட நிலையான சட்டமாகும். இதுவே இறைவனின் வாக்கு என்பதாகும்.


فَإِذَا جَآءَ وَعْدُ أُولَىٰهُمَا بَعَثْنَا عَلَيْكُمْ عِبَادًۭا لَّنَآ أُو۟لِى بَأْسٍۢ شَدِيدٍۢ فَجَاسُوا۟ خِلَٰلَ ٱلدِّيَارِ ۚ وَكَانَ وَعْدًۭا مَّفْعُولًۭا.

17:5. இஸ்ரவேலர்களே! இறைவனின் நியதிப்படி, உங்களுடைய தவறான செயல்களின் விளைவாக முதன் முறையாக அழிவு ஏற்பட்டது. பலம் வாய்ந்த (பஃக்தெ நசர் என்ற பாபிலோனிய) படை வீரர்களின் தாக்குதலுக்கு ஆளாகி அழிந்து போனீர்கள். அவர்கள் உங்கள் நாட்டில் நுழைந்து, உங்களில் ஒவ்வொருவரையும் தேடி கண்டுபிடித்து கொன்று குவித்தார்கள். இவ்வாறே இறைவனின் வாக்கு முதல் தடவையாக நிறைவேறியது.
அதைத் தொடர்ந்து அவர்கள் தம் சுதந்திர வாழ்வை பறிகொடுத்து, அடிமைகளாக வாழ நேர்ந்தது. இப்படியாக ஆண்டுகள் பல ஓடின. அவர்கள் செய்த தவறுகளை எண்ணி, இறைவனின் வழிகாட்டுதலின்படி திருந்தி வாழ முற்பட்டனர். அதன் பலனாக, கால சூழ்நிலை அவர்களுக்கு சாதகமாக மாறி வந்தது. ஜுல்ஃகர்நைன் என்ற பேரரசரின் உதவியைக் கொண்டு அவர்களுடைய அடிமை வாழ்வு முடிவுக்கு வந்தது.


ثُمَّ رَدَدْنَا لَكُمُ ٱلْكَرَّةَ عَلَيْهِمْ وَأَمْدَدْنَٰكُم بِأَمْوَٰلٍۢ وَبَنِينَ وَجَعَلْنَٰكُمْ أَكْثَرَ نَفِيرًا.

17:6. இப்படியாக நீங்கள் திருந்தி வாழ முன்வந்ததால், இறைவனின் நியதிப்படி எதிரிகளை முறியடிக்க போர் தடவாளங்கள் மற்றும் வீரர்களைக் கொண்டு வெற்றி பெறும் வாய்ப்பு உங்களுக்குக் கிடைத்தது. அதைத் தொடர்ந்து, உங்களுக்கு ஏராளமான வாழ்வாதாரங்கள் கிடைத்து சிறப்பாக வாழலானீர்கள். மேலும் உங்கள் சமுதாயம் பெருகி பல்கியது. உங்கள் இறைவனின் உதவியும் கிடைத்து பெருந்திரளான சமுதாயமாக விளங்கினீர்கள்.


إِنْ أَحْسَنتُمْ أَحْسَنتُمْ لِأَنفُسِكُمْ ۖ وَإِنْ أَسَأْتُمْ فَلَهَا ۚ فَإِذَا جَآءَ وَعْدُ ٱلْءَاخِرَةِ لِيَسُۥٓـُٔوا۟ وُجُوهَكُمْ وَلِيَدْخُلُوا۟ ٱلْمَسْجِدَ كَمَا دَخَلُوهُ أَوَّلَ مَرَّةٍۢ وَلِيُتَبِّرُوا۟ مَا عَلَوْا۟ تَتْبِيرًا.

17:7. இப்படியாக நீங்கள் ஒட்டுமொத்த சமுதாய சமச்சீர்நிலையை பாதுகாத்து சிறப்பாக செயல்பட்டால், அதன் நன்மைகள் உங்களுக்கே சேரும் என்பதையும், தீமையான செயல்களில் ஈடுபட்டு வந்தால் அவற்றின் பாதிப்புக்கள் உங்களுக்கே ஏற்படும் என்ற உண்மையையும் நீங்கள் புரிந்து கொண்டீர்கள். ஆனால் நீங்கள் காலப் போக்கில் உங்கள் போக்குகளை மீண்டும் மாற்றிக் கொண்டீர்கள். அதனால் இரண்டாம் முறையாக (டைட்டஸ் என்பவர் தலைமையில் வந்த ரோமாபுரி வீரர்கள்) உங்களுக்கு எதிராக படையெடுத்து, பைத்துல் முகத்தஸ் இருக்கும் இடத்தில், இதற்கு முன் பாபிலோனியர்கள் நுழைந்தது போல இவர்களும் நுழைந்து உங்கள் ஊரை சின்னா பின்னமாக்கி விட்டார்கள். இதனால் உங்கள் முகம் வாடி போயிற்று. இப்படியாக இறைவனின் வாக்கு இரண்டாம் முறையும் உண்மையே என நிரூபணம் ஆகிவிட்டது.
அதாவது தீய செயல்கள் தொடரும்போது, அந்த நாட்டைக் காக்கும் வலிமை அரசமைப்புக்கும் அதன் படைவீரர்களுக்கும் குறைந்து, எதிரிகளின் தாக்குதலை சமாளிக்கும் பலமின்றி, தோல்வியை சந்திக்க நேர்கிறது. இதுவும் இறைவன் விதித்த விதிமுறையாகும்.


عَسَىٰ رَبُّكُمْ أَن يَرْحَمَكُمْ ۚ وَإِنْ عُدتُّمْ عُدْنَا ۘ وَجَعَلْنَا جَهَنَّمَ لِلْكَٰفِرِينَ حَصِيرًا.

17:8. ஆனால் நீங்கள் இப்போதும் அதே போல தீய செயல்களை தொடர்ந்து செய்து வருகிறீர்கள். அவற்றை விட்டுவிட்டு இறைவனின் அறிவுரைப்படி திருந்திக் கொண்டால், உங்களுக்கு அளவிலா அருட்கொடைகள் கிடைக்கும். (பார்க்க 7:157) ஆனால் உங்களிடையே தீய செயல்கள் தொடர்ந்தால், முன்பு இருமுறை தண்டிக்கப்பட்டது போல இப்போதும் தண்டிக்கப்படுவீர்கள். இறைவழிகாட்டுதலை ஏற்க மறுத்து வாழ்பவர்களுக்குக் கிடைக்கும் நரக வேதனைகள் கொண்ட அழிவுகள் இப்படியாகத் தான் இருக்கும்.
வரலாற்று ஆதாரங்களின்படி உமர் (ரலி) அவர்களின் ஆட்சி காலத்தில், இஸ்ரவேலர்கள் தோல்வி அடைந்து, பைத்துல் முகத்தஸை மீண்டும் அவர்கள் பறிகொடுத்து விட்டனர். அதன் பின் அவர்களில் பெரும்பாலோர் அல்லாஹ்வின் வழிகாட்டுதலை ஏற்றுக் கொண்டதகாவும் அதன்படி மக்களாட்சி மலர்ந்ததாகவும் வரலாற்று குறிப்புகள் அறிவிக்கின்றன.


إِنَّ هَٰذَا ٱلْقُرْءَانَ يَهْدِى لِلَّتِى هِىَ أَقْوَمُ وَيُبَشِّرُ ٱلْمُؤْمِنِينَ ٱلَّذِينَ يَعْمَلُونَ ٱلصَّٰلِحَٰتِ أَنَّ لَهُمْ أَجْرًۭا كَبِيرًۭا.

17:9. இப்போது நேர்வழி இந்த குர்ஆன் மூலம் மட்டுமே கிடைக்க வாய்ப்புள்ளது. இதன் அறிவுரைகளை ஏற்று நடப்பவர்களுக்கு நிலையான சந்தோஷமான வாழ்க்கைக்கு வேண்டிய நேர்வழி கிடைத்துவிடும். அது மட்டுமின்றி திருக்குர்ஆன் காட்டும் வழியில் ஆக்கப்பபூர்வமான நற்செயல்களில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டால், உங்களுக்கு பலவகையில் நன்மைகள் கிடைத்து வரும் என்பதை இதன் மூலம் நற்செய்தி அளிக்கப்படுகிறது.


وَأَنَّ ٱلَّذِينَ لَا يُؤْمِنُونَ بِٱلْءَاخِرَةِ أَعْتَدْنَا لَهُمْ عَذَابًا أَلِيمًۭا.

17:10. இதற்கு மாறாக வருங்கால நலத்திட்டங்களில் அக்கறை கொள்ளாமல், தற்காலிக சுகங்களை மட்டும் முன்வைத்து வாழும் சமுதாயங்கள், தீய செயல்கள் மிகைத்து நோவினை தரும் வேதனைகளை சந்தித்தே தீரும்.


وَيَدْعُ ٱلْإِنسَٰنُ بِٱلشَّرِّ دُعَآءَهُۥ بِٱلْخَيْرِ ۖ وَكَانَ ٱلْإِنسَٰنُ عَجُولًۭا.

17:11. மனிதனின் செயல்பாடுகளை வைத்துப் பார்க்கும் போது, நன்மைகள் பெற ஆர்வம் காட்டுவதற்குப் பதிலாக, தீய வழியில் சென்று தீய விளைவுகளையே கூவிகூவி அழைத்து கொள்வதைப் போல் உள்ளது. காரணம், கூடுமான வரையில் அவசர அவசரமாக சொத்து செல்வங்களை சேகரித்துக் கொள்ளவேண்டும் என்ற ஆசையே அவனிடம் மிகைத்து நிற்கிறது.
மனிதனுடைய இந்த அவசரப் புத்தியை ஒரு உதாரணத்தைக் கொண்டு விளங்கிக் கொள்ளலாம்.


وَجَعَلْنَا ٱلَّيْلَ وَٱلنَّهَارَ ءَايَتَيْنِ ۖ فَمَحَوْنَآ ءَايَةَ ٱلَّيْلِ وَجَعَلْنَآ ءَايَةَ ٱلنَّهَارِ مُبْصِرَةًۭ لِّتَبْتَغُوا۟ فَضْلًۭا مِّن رَّبِّكُمْ وَلِتَعْلَمُوا۟ عَدَدَ ٱلسِّنِينَ وَٱلْحِسَابَ ۚ وَكُلَّ شَىْءٍۢ فَصَّلْنَٰهُ تَفْصِيلًۭا.

17:12. இறைவனின் நியதிப்படி நிகழ்ந்து வரும் இரவையும் பகலையும் கவனித்துப் பாருங்கள். மேலோட்டமாக பார்க்கும் போது, இவை இரண்டும் ஒன்றுக்கொன்று எதிராகத் தோன்றலாம். ஆனால் பகலை மங்கச் செய்து இருளாக்கி வைப்பதும், இருளை போக்கிவிட்டு வெளிச்சத்தை ஏற்படுத்துவதும், உங்கள் வாழ்வாதாரங்களைத் தேடிக்கொள்ளவும், மாதம் மற்றும் ஆண்டுகளின் எண்ணிக்கையை அறிந்து கொள்வதற்காகவுமே ஆகும். மேலும் நாம் ஒவ்வொரு விஷயத்தையும் தெளிவாக விவரித்து இருக்கிறோம் என்பதையும் நீங்கள் கவனியுங்கள்.
அதாவது பகலின் ஒளியை இரவு போக்கிவிடுவது போல, நன்மையான செயல்களின் பலன்களை தீய செயல்கள் போக்கிவிடும். இறுதியில் அவை அழிவில் கொண்டு போய் சேர்க்கும். மாறாக எவ்வாறு மனிதன் தன் விஞ்ஞான அறிவை பயன்படுத்தி, இரவையும் மின் விளக்குகளால் ஜொலிக்கச் செய்துள்ளானோ, அவ்வாறே இறைவழிகாட்டுதல் என்ற ஞானஒளியின் துணையைக் கொண்டு, சமுதாயத்தில் இருள் சூழும் நிலை ஏற்படாதவாறு மனித வாழ்வை ஒளிமயமாக ஆக்கிக்கொள்ள முடியும்.


وَكُلَّ إِنسَٰنٍ أَلْزَمْنَٰهُ طَٰٓئِرَهُۥ فِى عُنُقِهِۦ ۖ وَنُخْرِجُ لَهُۥ يَوْمَ ٱلْقِيَٰمَةِ كِتَٰبًۭا يَلْقَىٰهُ مَنشُورًا.

17:13. ஆக நன்மையான செயல்களோ தீயச்செயல்களோ அவை ஒவ்வொருவரின் செயல்களின் ஏட்டில் பதிவாகி பாதுகாக்கப்பட்டு வருகின்றன. அவை அவனை விட்டு எங்கும் மறைந்து போகாது. அச்செயல்களின் விளைவுகள் தோற்றத்திற்கு வரும்போது, அவன் செய்து வந்த செயல்கள் ஒரு புத்தகமாக (records) வெளிவரும்.


ٱقْرَأْ كِتَٰبَكَ كَفَىٰ بِنَفْسِكَ ٱلْيَوْمَ عَلَيْكَ حَسِيبًۭا.

17:14. அப்போது அவனிடம் தம் செயல்களின் ஏட்டை புரட்டிப் பார்க்கும்படி கூறப்படும். அவையே அவனுக்கு எதிராக சாட்சி சொல்ல போதுமானதாக இருக்கும்.


مَّنِ ٱهْتَدَىٰ فَإِنَّمَا يَهْتَدِى لِنَفْسِهِۦ ۖ وَمَن ضَلَّ فَإِنَّمَا يَضِلُّ عَلَيْهَا ۚ وَلَا تَزِرُ وَازِرَةٌۭ وِزْرَ أُخْرَىٰ ۗ وَمَا كُنَّا مُعَذِّبِينَ حَتَّىٰ نَبْعَثَ رَسُولًۭا.

17:15. எனவே தான் நாம் ஒரு விஷயத்தை திரும்பத் திரும்பக் கூறுகிறோம். அதாவது எவன் நேர்வழி பெற்று நற்செயல்களை செய்கின்றானோ, அது தன்னுடைய நன்மைக்காகவே செய்து கொள்கிறான். மாறாக எவன் தீய வழியில் செல்கின்றானோ அவன் தனக்கே கேடு விளைவித்துக் கொள்கின்றான். ஒருவர் செய்யும் பாவச் செயல்களின் விளைவுகள் என்ற சுமையை பிரிதொருவர் ஒருபோதும் சுமக்கவே முடியாது. இறைவனின் நியதிப்படி முன்அறிவிப்பு செய்யாமல் யாருக்கும் வேதனை அளிக்கப் படுவதுமில்லை. (26:202)
இவ்வாசகத்தில் இறைத் தூதரை அனுப்பாமல் எவரையும் இறைவன் அழிப்பதில்லை என்று கூறப்படுகிறது. இப்போது நபித்துவத் தொடர் முற்றுப் பெற்றுவிட்டது. இனி எந்த நபியும் வரமாட்டார். இதனால் நமக்கு எந்த அழிவும் வராது என்பதல்ல. மாறாக உலகம் நிலைத்திருக்கும் காலம் வரையில் நிலை நிறுத்தப்பட்ட சட்டதிட்டங்கள் அடங்கிய வேதம் கொடுத்தாகி விட்டது. இதை ஆராய்ந்து அறிந்து அதன்படி வாழ்வது ஒவ்வொருவருடைய கடமையாகும். அறியாமை தண்டனையிலிருந்து தப்பிப்பதற்கு வழியல்ல.(ignorance of law is no excuse)
மற்றபடி உலகில் நிகழ்ந்து வரும் ஆபத்துக்கள் எல்லாம் முன்அறிவிப்போடு தான் ஏற்படுகின்றன. ஒருவருக்கு மாரடைப்பு ஏற்படுகிறது என்றால் அதன் அறிகுறிகள் முன்னதாகவே தோற்றத்திற்கு வந்து விடுகின்றன. அந்த சமயத்தில் அவன் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக்கொள்ள வேண்டும். அலட்சியமாக இருந்துவிட்டால் அவன் மாரடைப்பால் மாண்டு போவான்.
இதே போல எல்லா உலக நிகழ்வுகளையும் சிந்தித்துப் பாருங்கள். சமுதாயங்களும் அழிந்து போகாமல் சிறப்பாக வாழ முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை, தக்க நேரத்தில் எடுத்தால் தான் அந்த அழிவிலிருந்து காப்பாற்றிக் கொள்ள முடியும். அலட்சியமாக இருந்துவிட்டால் அந்த அழிவை தவிர்க்க முடியாததாகி விடும்.
மேலும் ஒருவருடைய பாவச் சுமையை பிரிதொருவர் சுமக்க முடியாது என்றும் சொல்லப்படுகிறது. எனவே முஹம்மது நபி (ஸல்) நமக்கு பரிந்துரை செய்வார் என்ற எதிர்ப்பார்ப்பும் தவறானது என்று நமக்குப் புலனாகிறது.


وَإِذَآ أَرَدْنَآ أَن نُّهْلِكَ قَرْيَةً أَمَرْنَا مُتْرَفِيهَا فَفَسَقُوا۟ فِيهَا فَحَقَّ عَلَيْهَا ٱلْقَوْلُ فَدَمَّرْنَٰهَا تَدْمِيرًۭا.

17:16. இறைவனின் நியதிப்படி அழியப் போகும் சமுதாயத்தின் நிலை எவ்வாறு இருக்கும் என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள். அங்கு வாழும் சுகவாசிகள் இறைவழிகாட்டுதலை ஏற்க மறுத்து, செல்வங்களை கூடுமான வரையில் சுருட்டிக் கொள்வதிலேயே கண்ணும் கருத்துமாக இருப்பார்கள். அது மட்டுமின்றி தீய செயல்களில் தொடர்ந்து ஈடுபடுபவர்களாகவே இருப்பார்கள். அப்படி ஒரு நிலையில் தான் அழிவு எனும் நரக வேதனைகள் அவர்களை பீடித்து கொள்கின்றன.


وَكَمْ أَهْلَكْنَا مِنَ ٱلْقُرُونِ مِنۢ بَعْدِ نُوحٍۢ ۗ وَكَفَىٰ بِرَبِّكَ بِذُنُوبِ عِبَادِهِۦ خَبِيرًۢا بَصِيرًۭا.

17:17. இதே போன்று நூஹ் நபியின் சமுதாயத்திற்குப் பின், எத்தனையோ சமுதாயங்கள் இறைவனின் நியதிப்படி அழிந்து போயின. இதைப் பற்றி எடுத்துரைப்பதன் நோக்கமே, உமது இறைவன் அனைவருடைய செயல்களையும் கண்காணித்து, அறிபவனாகவே இருக்கிறான் என்பதை உலகார்க்கு தெரிவிக்கத்தான்.
எனவே நீங்கள் தவறான வழியில் சென்றால் அதன் விளைவுகளிலிருந்து நீங்களும் ஒருபோதும் தப்ப முடியாது என்பதை அறிந்து கொள்ளுங்கள்.


مَّن كَانَ يُرِيدُ ٱلْعَاجِلَةَ عَجَّلْنَا لَهُۥ فِيهَا مَا نَشَآءُ لِمَن نُّرِيدُ ثُمَّ جَعَلْنَا لَهُۥ جَهَنَّمَ يَصْلَىٰهَا مَذْمُومًۭا مَّدْحُورًۭا.

17:18. எனவே எந்தச் சமுதாயம் தற்காலிக சுகங்களை மட்டும் கருத்தில் கொண்டு செயல்படுகிறதோ, அவர்களின் உழைப்பிற்கு ஏற்றவாறு இறைவனின் நியதிப்படி அனைத்து வசதிகளும் கிடைத்து விடுகின்றன. இத்தகைய சமுதாயங்களின் வருங்கால வாழ்வு கொஞ்சம் கொஞ்சமாக நரகமாக மாறிவரும். இறுதியில் அவர்கள் அல்லாஹ்வின் அருட்கொடைகளைப் பெறும் தகுதியை இழந்து, நரக வாழ்வில் புகுவார்கள். (2:220)


وَمَنْ أَرَادَ ٱلْءَاخِرَةَ وَسَعَىٰ لَهَا سَعْيَهَا وَهُوَ مُؤْمِنٌۭ فَأُو۟لَٰٓئِكَ كَانَ سَعْيُهُم مَّشْكُورًۭا.

17:19. மாறாக எந்த சமுதாயம் தற்காலிக பலன்களோடு, வருங்கால நிலையான பலன்களையும் நோக்கமாகக் கொண்டு, இறை வழிகாட்டுதலின் படி உழைக்கிறதோ, அவர்களே மூஃமின்கள் எனப்படுவர். அவர்களுடைய நற்செயல்களுக்கு ஏற்ப இவ்வுலகிலும் வருங்கால நிலையான வாழ்விலும் சந்தோஷமான வாழ்வு கிடைக்கும் (பார்க்க 2:201-202)


كُلًّۭا نُّمِدُّ هَٰٓؤُلَآءِ وَهَٰٓؤُلَآءِ مِنْ عَطَآءِ رَبِّكَ ۚ وَمَا كَانَ عَطَآءُ رَبِّكَ مَحْظُورًا.

17:20. ஆனால் அல்லாஹ்வின் புறத்திலிருந்து யாருக்கும் எவ்வித பாரபட்சமும் இருக்காது. அதாவது தற்காலிக வாழ்வை நோக்கமாகக் கொண்டு உழைப்பவர்களுக்கும், தற்காலிக மற்றும் வருங்கால நிலையான பலன்களையும் முன்வைத்து உழைப்பபவர்களுக்கும், உமது இறைவனின் அருட்கொடைகள் எவ்வித குறைவுமின்றி கிடைத்து வரும். ஏனெனில் அல்லாஹ் அகிலங்கள் அனைத்தையும் பரிபாலிக்கின்ற ரப்புல் ஆலமீனாக இருக்கிறான்.
இதுதான் இறைவனின் நிலையான சட்டமாகும். இதன் அடிப்படையில் தான் உலக சமுதாயங்களின் உழைப்பிற்கேற்ப வளர்ச்சியும் வீழ்ச்சியும் ஏற்பட்டு வருகின்றன. உழைக்காமல் மூட நம்பிக்கையில் வாழ்பவர்கள் மிகவும் பின்தங்கிய நிலையில் இருப்பார்கள். அதனால் அவர்கள் ஒழுக்க மாண்புகளை கட்டிக் காக்க முடியாமல் சீரழிந்து விடுகிறார்கள். அறிவியல் ஆய்வுகளை மேற்கொள்ளும் சமுதாயங்கள் பொருளாதார ரீதியாக முன்னேற்றம் அடைந்தாலும், இறைவழிகாட்டுதல் இல்லாததாலும், வருங்கால நிலையான பலன்களைப் பற்றி கவலைப்படாததாலும் அங்கும் ஒழுக்க மாண்புகள் இருப்பதில்லை. அதனால் அங்கும் சீரழிவுகள் ஏற்பட்டு அவர்கள் அழிவை சந்திக்கிறார்கள்.


ٱنظُرْ كَيْفَ فَضَّلْنَا بَعْضَهُمْ عَلَىٰ بَعْضٍۢ ۚ وَلَلْءَاخِرَةُ أَكْبَرُ دَرَجَٰتٍۢ وَأَكْبَرُ تَفْضِيلًۭا.

17:21. உலக நாடுகளின் நிலையை நீங்கள் கவனித்துப் பார்ப்பீர்களாயின், முன்னேறிய நாடுகள், பின்தங்கிய நாடுகள் என்றிருக்கும். இப்படியாக சிலருக்கு சிலரைவிட சிறப்புகள் கிடைத்திருக்கும். ஆனால் இறைவழிகாட்டுதலின் அடிப்படையில் செயல்படும் சமுதாயங்களே நிகழ்கால வாழ்விலும் எல்லா வளமும் பெற்று சிறப்பாக வாழும். வருங்கால நிலையான வாழ்விலும் பல சிறப்புகளைப் பெற்று உயர்ந்த நிலையில் சுவனத்திற்கு ஒப்பான வாழ்வு கிடைக்கும். தனி நபர் விஷயத்தில் வருங்கால நிலையான வாழ்வு என்பது மரணத்திற்குப் பின்பும் தொடரக் கூடியதாக உள்ளது.


لَّا تَجْعَلْ مَعَ ٱللَّهِ إِلَٰهًا ءَاخَرَ فَتَقْعُدَ مَذْمُومًۭا مَّخْذُولًۭا.

17:22. அல்லாஹ்வின் வழிகாட்டுதல்படி வாழ்வதை விட்டுவிட்டு, வேறு வாழ்க்கை வழிமுறைகளை கடைப்பிடித்து வந்தால் முன்னேறிய சமுதாயங்கள் பழிக்கப்பட்டும், பின்தங்கிய நிலையில் இருக்கும் சமுதாயங்கள் ஆதரவற்ற நிலையிலும் இருக்கும்.
எனவே உலகில் இப்படி ஒரு நிலை ஏற்படுவதற்கு அல்லாஹ்வை குறை கூறாதீர்கள். இதற்கு முழுக்க முழுக்க மனிதன் தான் பொறுப்பாவான். உலகின் இந்நிலை மாற வேண்டும் என்றால்


۞ وَقَضَىٰ رَبُّكَ أَلَّا تَعْبُدُوٓا۟ إِلَّآ إِيَّاهُ وَبِٱلْوَٰلِدَيْنِ إِحْسَٰنًا ۚ إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ ٱلْكِبَرَ أَحَدُهُمَآ أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَآ أُفٍّۢ وَلَا تَنْهَرْهُمَا وَقُل لَّهُمَا قَوْلًۭا كَرِيمًۭا.

17:23. மனிதன் அல்லாஹ்வின் வழிகாட்டுதலுக்கு மட்டும் கட்டுப்பட்டு வாழ்ந்து, சமுதாய சமச் சீர்நிலையைக் கட்டிக் காக்க வேண்டும். அந்த சமச் சீர்நிலை உருவாகவேண்டும் என்றால் உங்கள் எண்ணங்களும் செயல்பாடுகளும் இவ்வாறிருக்க வேண்டும்.
உங்கள் தாய் தந்தையர் ஆகிய இருவரின் தேவைகளை அழகிய முறையில் நிறைவேற்றி வரவேண்டும். அவ்விருவரோ அல்லது தாய் தந்தையரில் ஒருவரோ முதுமை அடைந்த நிலையில் இருப்பார்கள். அவர்களுக்கு மன வருத்தம் அளிக்கும் வகையில் “சீ” என்று கூட சொல்லக் கூடாது. அவர்களை நீங்கள் வீட்டை விட்டு ஒருபோதும் விரட்டக் கூடாது. அவர்களிடம் நீங்கள் கனிவான முறையிலும், கண்ணியத்துடனும் பேச வேண்டும்.


وَٱخْفِضْ لَهُمَا جَنَاحَ ٱلذُّلِّ مِنَ ٱلرَّحْمَةِ وَقُل رَّبِّ ٱرْحَمْهُمَا كَمَا رَبَّيَانِى صَغِيرًۭا.

17:24. மேலும் அவர்களுக்காக நீங்கள் பணிவு என்ற இறக்கையை விரித்து பாசத்துடன் நடந்துகொள்ள வேண்டும். மேலும், “ஒருவர், தான் சிறு பிள்ளையாக இருந்த போது, அவ்விருவர் எவ்வாறு வளர்த்து வந்தார்களோ, அதுபோலவே அவ்விருவர் மீதும் கிருபை செய்ய வேண்டும்” என்று மக்களுக்கு அறிவிப்பாயாக.
நினைவில் கொள்ளுங்கள். உள்ளத்தில் ஒன்று செயல் வேறு என்று நீங்கள் செயல்பட்டால் அல்லாஹ்வின் வெறுப்புக்கு ஆளாவீர்கள். (பார்க்க 61:2-3) எனவே நீங்கள் செய்யும் பிரார்த்தனைக்கு ஏற்றவாறு அவ்விருவருக்கும் பணிவிடை செய்து பாதுகாத்து வரவேண்டும்.


رَّبُّكُمْ أَعْلَمُ بِمَا فِى نُفُوسِكُمْ ۚ إِن تَكُونُوا۟ صَٰلِحِينَ فَإِنَّهُۥ كَانَ لِلْأَوَّٰبِينَ غَفُورًۭا.

17:25. எனவே உங்களுடைய உள்ளங்களில் இருப்பது என்னவென்பது இறைவனுக்கு நன்கு தெரியும். நீங்கள் இறைவனிடம் வேண்டிக் கொண்டபடி நற்செயல்களை செய்பவர்களாக இருந்தால் தான், உங்கள் இறைவனின் பாதுகாப்பும் அரவணைப்பும் உங்களுக்கு நிச்சயமாகக் கிடைக்கும்.
பொதுவாக பெற்றொர்கள் தம் வயதான காலத்தில் சிறு பிள்ளைகளைப் போல் பேசுவார்கள். (பார்க்க 16:70) அது உங்களுக்கு எரிச்சலை உண்டாக்கும். அதை தாளாமல் அவர்கள் மீது நீங்கள் எரிந்து விழுவீர்கள். ஆனால் நீங்கள் இறைவனிடம் வேண்டிக் கொண்ட படி, அவர்களுடைய பேச்சிற்கு மறுபேச்சு பேசாமல், பொறுமையுடன் அழகிய முறையில் உங்களால் சாத்தியமானதை செய்து வந்தால், உங்களில் பொறுமையுடன் செயல்படக் கூடிய நற்பண்புகள் வளரும். வீட்டை சரி செய்யும் ஆற்றலும் நிதானத்துடன் நடந்து கொள்ளும் மனப் பக்குவமும் உங்களில் வளர்ந்தால் தான், ஊரையும் நாட்டையும் சரி செய்யும் ஆற்றல்கள் உங்களில் வளரும். உங்கள் தாய் தந்தையர் அல்லாஹ்வின் வழிகாட்டுதலை ஏற்றுக் கொண்டவர்களாக இருப்பினும் ஏற்றுக் கொள்ளாதவர்களாக இருப்பினும் சரியே! நீங்கள் அல்லாஹ்வின் வழகாட்டுதலை விட்டுவிடக் கூடாது.


وَءَاتِ ذَا ٱلْقُرْبَىٰ حَقَّهُۥ وَٱلْمِسْكِينَ وَٱبْنَ ٱلسَّبِيلِ وَلَا تُبَذِّرْ تَبْذِيرًا.

17:26. இதே அடிப்படையில் தான் நீங்கள் உற்றார் உறவினர்களிடமும் நடந்துகொள்ள வேண்டும். அவர்களுக்கு சேரவேண்டிய உரிமைகளை நீங்கள் கொடுத்து வாருங்கள். அதற்கு அடுத்தபடியாக சம்பாதிக்க இயலாத உடல் ஊனமுற்றவர்களுக்கும், அல்லாஹ்வின் பாதையில் செயல்படுபவர்களுக்கும், உங்கள் வசதிக்கு ஏற்றவாறு உதவி செய்து வாருங்கள். ஆனால் நீங்கள் அவசியமற்ற எந்த ஆடம்பர செலவுகளையும் ஒருபோதும் செய்யாதீர்கள். அப்போது தான் உங்களால் உற்றார் உறவினர்களுக்கு உதவ முடியும்.
மேலும் ஒரு விஷயத்தை கவனியுங்கள். உறவினர்களுக்கு நீங்கள் செய்யும் உதவிகள் யாவும் அவர்களுடைய உரிமை என்று குறிப்பிடுகிறது. எனவே நீங்கள் அவர்களிடமிருந்து எந்த பிரதி உபகாரத்தையும் எதிர் பார்க்கக் கூடாது என்பதே இதன் பொருளாகும். ஆக நீங்கள் உங்கள் குடும்ப செலவுகளை மிகவும் சிக்கணமாக செய்து வரவேண்டும். அப்போது தான் மற்றவர்களுக்கு உங்களால் உதவ முடியும். மேலும் உறவினர்களின் தேவைகளைத் தான் நிறைவேற்றி வரவேண்டுமே அன்றி அவர்களுக்கு உதவி செய்து அவர்களை கெடுத்துவிடக் கூடாது.


إِنَّ ٱلْمُبَذِّرِينَ كَانُوٓا۟ إِخْوَٰنَ ٱلشَّيَٰطِينِ ۖ وَكَانَ ٱلشَّيْطَٰنُ لِرَبِّهِۦ كَفُورًۭا.

17:27. எனவே வீண் விரயமாக செலவுகளை செய்பவர்கள், தம் மனோ இச்சையின்படி செயல்படும் ஷைத்தானைச் சார்ந்தவர்கள் ஆவார்கள். உங்கள் மனோ இச்சையானது, எப்போதும் இறைக் கட்டளைக்கு மாறு செய்யவே தூண்டிக் கொண்டிருக்கும். (மேலும் பார்க்க 2:268)


وَإِمَّا تُعْرِضَنَّ عَنْهُمُ ٱبْتِغَآءَ رَحْمَةٍۢ مِّن رَّبِّكَ تَرْجُوهَا فَقُل لَّهُمْ قَوْلًۭا مَّيْسُورًۭا.

17:28. ஒருவேளை உறவினர்கள் உங்கள் உதவியை நாடிவரும் சமயத்தில், நீங்களும் அல்லாஹ்வின் அருளை எதிர் பார்த்து இருக்கும் போது, அவர்களுக்கு உதவ முடியாத நிலையில் இருந்தால், நீங்கள் அவர்களிடம் கனிவான முறையில் அன்புடன் பேசி நிலவரத்தை புரிய வையுங்கள்.


وَلَا تَجْعَلْ يَدَكَ مَغْلُولَةً إِلَىٰ عُنُقِكَ وَلَا تَبْسُطْهَا كُلَّ ٱلْبَسْطِ فَتَقْعُدَ مَلُومًۭا مَّحْسُورًا.

17:29. மேலும் அன்றாடம் நீங்கள் செலவு செய்யும் போது, ஒரு விஷயத்தை கவனத்தில் கொள்ள வேண்டும். அதாவது உலோபித்தனம் செய்து உங்கள் கைகளை மிகவும் இறுக்கிக் கொள்ளக் கூடாது. இதனால் நீங்கள் பழிச் சொல்லுக்கு ஆளாவீர்கள். அதே சமயத்தில் முற்றிலும் கைகளை விரித்து ஊதாரித்தனமாக செலவு செய்து, கையேந்தும் நிலைக்கு தள்ளப்பட்டு, நிந்தனைக்கு ஆளாகிவிடவும் கூடாது.


إِنَّ رَبَّكَ يَبْسُطُ ٱلرِّزْقَ لِمَن يَشَآءُ وَيَقْدِرُ ۚ إِنَّهُۥ كَانَ بِعِبَادِهِۦ خَبِيرًۢا بَصِيرًۭا.

17:30. அதை தவிர்த்து, வாழ்வாதாரத்தை அளிக்கும் விஷயத்தில் இறைவனின் சட்டம் அனைவருக்கும் பொதுவானதாகும். அதன் அடிப்படையில் யார் அதிக அளவில் திறமையுடன் உழைக்கிறார்களோ, அவர்களுக்கு தாராளமான வாழ்வாதார வசதி வாய்ப்புகள் கிடைக்கின்றன. (பார்க்க 53:39) திறமையின்றி உழைப்பவர்களுக்கு அளவோடு வாழ்வாதாரங்கள் கிடைக்கின்றன. ஆக ஒவ்வொருவரின் நிலைமை என்னவென்பது அல்லாஹ்வுக்கு நன்கு தெரியும் என்பதை நீங்கள் நினைவில் கொள்ளுங்கள்.
எனவே வசதி படைத்தவர்கள், நலிந்த மக்களின் தேவைகளை நிறைவேற்ற முன்வர வேண்டும். உழைக்க இயலாதவர்கள் தான் உதவித் தொகைகளைப் பெறும் தகுதியுடைவர்கள் ஆவார்கள். உழைக்காமல் சோம்பேறிகளாக சுற்றிக் கொண்டு கையேந்தி பிழைக்கக் கூடாது.


وَلَا تَقْتُلُوٓا۟ أَوْلَٰدَكُمْ خَشْيَةَ إِمْلَٰقٍۢ ۖ نَّحْنُ نَرْزُقُهُمْ وَإِيَّاكُمْ ۚ إِنَّ قَتْلَهُمْ كَانَ خِطْـًۭٔا كَبِيرًۭا.

17:31. மேலும் உங்கள் பிள்ளைகளுக்கு கல்வியறிவு மற்றும் நற்போதனைகளை அளித்து, நல்ல ஆற்றல் மிக்கவர்களாக வளர்த்து வாருங்கள். உங்கள் குடும்பத்தில் வசதி வாய்ப்பு இல்லாதிருப்பதை காரணம் காட்டி, அவர்களை வேலையில் அமர்த்தி, அவர்களுடைய எதிர்காலத்தை பாழாக்கி விடாதீர்கள். இறைவழிகாட்டுதலின் அடிப்படையில் உருவாகியுள்ள ஆட்சியமைப்பு, உங்களுக்கும் உங்கள் பிள்ளைகளுக்கும் வாழ்வாதார வசதிகளை அளித்து தரும். (மேலும் பார்க்க 6:151) எனவே பிள்ளைகளின் எதிர் காலத்தை பாழாக்கி விடுவது, கொலை செய்வதற்கு சமமான பாவச் செயலாகும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.


وَلَا تَقْرَبُوا۟ ٱلزِّنَىٰٓ ۖ إِنَّهُۥ كَانَ فَٰحِشَةًۭ وَسَآءَ سَبِيلًۭا.

17:32. மேலும் சமூகக் கட்டுப்பாட்டை சீரழிக்கும் செயல்களில் முக்கியமானது ஆண் பெண் ஆகியோரிடையே ஏற்படும் முறையற்ற பாலியல் உறவுமுறைகளாகும். எனவே விபச்சாரத்தின் பக்கம் அழைத்து செல்லக்கூடிய மானக் கேடான செயல் எதுவாக இருந்தாலும், அவை சமுதாயத்தில் நிகழாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள். இப்படியாக பெண்களின் பாதுகாப்பு விஷயத்தில் கவனம் செலுத்தி வாருங்கள். அவ்வாறு செய்யாமல் விட்டுவிட்டால் விபச்சாரம் போன்ற தகாத செயல்கள் சமுதாயத்தில் வளர்ந்து, பெண்களின் கற்புக்கு பாதுகாப்பு கிடைக்காமல், சமுதாயம் கட்டுப்பாட்டை இழந்து சீரழிந்து போகும்.


وَلَا تَقْتُلُوا۟ ٱلنَّفْسَ ٱلَّتِى حَرَّمَ ٱللَّهُ إِلَّا بِٱلْحَقِّ ۗ وَمَن قُتِلَ مَظْلُومًۭا فَقَدْ جَعَلْنَا لِوَلِيِّهِۦ سُلْطَٰنًۭا فَلَا يُسْرِف فِّى ٱلْقَتْلِ ۖ إِنَّهُۥ كَانَ مَنصُورًۭا.

17:33. அதை அடுத்து, நீதிமன்ற விவகாரத்தில் சில அடிப்படை கொள்கையை நீங்கள் கடைப்பிடிக்க வேண்டும். (பார்க்க 5:8) அது தொடர்பாக யாரையும் நியாயமான காரணமின்றி மரண தண்டனை அளிக்கக் கூடாது. யாராவது கொலை செய்யப்பட்டால், அந்த கொலையாளிக்கு நீதிமன்றத்தின் மூலமாக தக்க தண்டனை அளிக்க அவருடைய வாரிசுகளுக்கு உரிமை உண்டு. ஆனால் அந்த கொலைச் சம்பவத்தின் பின்னணியை நன்கு ஆய்ந்தறிந்து, அதற்குத் தக்க வகையில் தான் தண்டனை அளிக்க வேண்டும். இதில் வரம்பு மீறுதல் கூடாது. (பார்க்க:2:178) இப்படியாக இறைவனின் ஆட்சியமைப்பு சட்டங்கள், ஒவ்வொருவரின் பாதுகாப்பான வாழ்விற்கும் வழிவகுக்கின்றன.


وَلَا تَقْرَبُوا۟ مَالَ ٱلْيَتِيمِ إِلَّا بِٱلَّتِى هِىَ أَحْسَنُ حَتَّىٰ يَبْلُغَ أَشُدَّهُۥ ۚ وَأَوْفُوا۟ بِٱلْعَهْدِ ۖ إِنَّ ٱلْعَهْدَ كَانَ مَسْـُٔولًۭا.

17:34. நீதிமன்ற விவகாரத்திற்கு அடுத்தபடியாக சொத்து செல்வங்களின் பராமரிப்பு விஷயம் வருகிறது. அநாதைகளின் சொத்துக்களை பராமரிக்க பொறுப்பு ஏற்றவர்கள் (Guardians), அந்த பிள்ளைகள் வளர்ந்து பெரியவர்களாகி (Major) நல்ல அறிவாற்றலும் திறமையும் முழுஅளவில் வளரும் வரையில் பாதுகாத்து வரவேண்டும் (மேலும் பார்க்க 4:6) மேலும் நீங்கள் கொடுத்த வாக்குகளை ஒருபோதும் மீறாதீர்கள். நீங்கள் செய்யும் ஒவ்வொரு வாக்குறுதியைப் பற்றியும் விசாரணை நிச்சயமாக நடக்கும் என்பதை மறவாதீர்கள்.


وَأَوْفُوا۟ ٱلْكَيْلَ إِذَا كِلْتُمْ وَزِنُوا۟ بِٱلْقِسْطَاسِ ٱلْمُسْتَقِيمِ ۚ ذَٰلِكَ خَيْرٌۭ وَأَحْسَنُ تَأْوِيلًۭا.

17:35. மேலும் சமுதாய சமன்பாடு விஷயத்தில் முக்கிய இடம் வகிப்பது வணிகத் துறையாகும். அதில் கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் ஒரே சீரான அளவையும் நிறுவையும் (Uniform Mesurement and Weighment System) இருப்பது மிகவும் அவசியமான ஒன்றாகும். இவை சமூக நல்லிணக்கத்திற்கு நன்மை பயப்பதாகவும், அழகான சமுதாயமாக உருவாக்கவும் பெரிதும் உதவும்.
சமுதாய நல்லிணக்கத்திற்கு பாதிப்புகளை ஏற்படுத்துவதில், வதந்திகள் பரவுவது முக்கியமான ஒன்றாகும். எனவே மக்கள் எந்த ஒரு விஷயத்தைப் பற்றியும் நன்றாக தெரிந்து கொள்ளாமல் விமர்சித்துக் கொண்டோ அல்லது அதை பின்பற்றிக் கொண்டோ இருக்காதவாறு அறிவுரைகளை செய்ய வேண்டும். ஆட்சி பொறுப்பில் இருப்பவர்கள் முக்கியமாக இந்த விஷயத்தை கவனத்தில் கொள்ளவேண்டும்.


وَلَا تَقْفُ مَا لَيْسَ لَكَ بِهِۦ عِلْمٌ ۚ إِنَّ ٱلسَّمْعَ وَٱلْبَصَرَ وَٱلْفُؤَادَ كُلُّ أُو۟لَٰٓئِكَ كَانَ عَنْهُ مَسْـُٔولًۭا.

17:36. ஆக எந்த விஷயத்தைப் பற்றி உங்களுக்கு தெளிவான ஞானம் இல்லையோ அதை பின்பற்றாதீர்கள். எதையும் கேட்டு அறிந்துகொள்ள செவிப் புலனும், பார்த்து விளங்கிக்கொள்ள பார்வையும், தீர்க்கமாக அறிந்துகொள்ள பகுத்தறிவும் இறைவன் புறத்திலிருந்து உங்களுக்கு கிடைத்துள்ளன. இவற்றைப் பயன்படுத்தி ஒவ்வொரு விஷயத்தைப் பற்றியும் தெளிவாக தெரிந்த பின்னரே அதை பின்பற்றுங்கள். இறைவழிகாட்டுதல் சம்பந்தமாக வஹீச் செய்தியாக இருப்பினும் கண்மூடித்தனமாக செயல்படாதீர்கள். (பார்க்க 25:73) இல்லை என்றால் இவற்றை எல்லாம் இறைவன் உங்களுக்கு கொடுத்தற்கு ஒரு அர்த்தமும் இல்லாமல் போயிவிடும்.


وَلَا تَمْشِ فِى ٱلْأَرْضِ مَرَحًا ۖ إِنَّكَ لَن تَخْرِقَ ٱلْأَرْضَ وَلَن تَبْلُغَ ٱلْجِبَالَ طُولًۭا.

17:37. அது மட்டுமின்றி உங்களுடைய நன்நடத்தை, உங்களிடையே நிலவி வரும் பரஸ்பர உறவைக் கொண்டே வெளிப்படும். எனவே நீங்கள் நடந்து செல்லும் போதும், கர்வத்துடன் நடந்து சென்றால் அது உங்களுக்கு எந்த சிறப்பையும் தேடித் தராது. ஏனெனில் இப்படி நடப்பதால் நீங்கள் பூமியை பிளந்துவிடவா போகிறீர்கள்? அல்லது மலையின் உச்சிக்குத் தான் சென்று விடுவீர்களா?
உங்கள் எண்ணங்கள், பேச்சுகள் மற்றும் செயல்பாடுகள் அனைத்தும் உங்களுடைய நற்பண்புகளை பிரதிப்பலிப்பதாகவே உள்ளன.


كُلُّ ذَٰلِكَ كَانَ سَيِّئُهُۥ عِندَ رَبِّكَ مَكْرُوهًۭا.

17:38. எனவே இறைவனின் ஒவ்வொரு அறிவுரையையும் நன்றாக மனதில் பதிய வைத்துக் கொண்டு தீய செயல்களிலிருந்து விலகி இருக்க வேண்டும். இல்லை என்றால் நீங்கள் அனைவரின் வெறுப்புக்கும் ஆளாவீர்கள். இறைவனின் அரவணைப்பும் உங்களுக்கு ஒருபோதும் கிடைக்காது.


ذَٰلِكَ مِمَّآ أَوْحَىٰٓ إِلَيْكَ رَبُّكَ مِنَ ٱلْحِكْمَةِ ۗ وَلَا تَجْعَلْ مَعَ ٱللَّهِ إِلَٰهًا ءَاخَرَ فَتُلْقَىٰ فِى جَهَنَّمَ مَلُومًۭا مَّدْحُورًا.

17:39. இந்த அறிவுரைகள் எல்லாம் அர்த்தமற்றவை என்று எண்ணாதீர்கள். அவை ஒவ்வொன்றும் தெளிவான ஞானத்தின் அடிப்படையில் சொல்லப் பட்டவையாகும். இவை எல்லாம் நபியின் உள்ளத்தில் தோன்றிய கருத்துக்கள் அல்ல. இறைவன் புறத்திலிருந்து இறக்கி அருளப்படுகின்ற ஞான உபதேசங்கள் ஆகும். எனவே அல்லாஹ்வின் இந்த அறிவுரைகளை விட்டுவிட்டு, நீங்கள் வேறு வழிமுறைகளை கடைப்பிடித்தால், அதனால் ஏற்படும் விபரீத விளைவுகள், உங்களை நரக வேதனையில் தான் தள்ளிவிடும். அதாவது நீங்கள் மனித நேயத்தை இழந்து, எல்லா விதமான நிந்தனைக்கும் ஆளாகி, கீழ்தரமான வாழ்க்கைக்கு தள்ளப்படுவீர்கள். இதுவே இவ்வுலகில் கிடைக்கின்ற நரக வேதனை என்பதாகும்.
எனவே ஒரு சமுதாயம் அல்லாஹ்வின் அறிவுரைகளை விட்டுவிட்டு, வேறு வழிமுறைகளைக் கடைப்பிடித்து வந்தால் காலப் போக்கில் அங்கு பிரச்னைகள் பல உருவாகும். கூடவே கடவுளைப் பற்றி பல கற்பனை கதைகளும் மூட நம்பிக்கைகளும் வளரும்.


أَفَأَصْفَىٰكُمْ رَبُّكُم بِٱلْبَنِينَ وَٱتَّخَذَ مِنَ ٱلْمَلَٰٓئِكَةِ إِنَٰثًا ۚ إِنَّكُمْ لَتَقُولُونَ قَوْلًا عَظِيمًۭا.

17:40. எனவே பிரபஞ்ச இயற்கை சக்திகளாகிய மலக்குகளுக்கு பெண்களின் பெயரை இட்டுக் கொண்டு, அவை எல்லாம் அல்லாஹ்வின் புதல்விகள் என்கிறீர்கள். ஆனால் தமக்கு மட்டும் ஆண் குழந்தை வேண்டும் என்று ஆசைப்படுகிறீர்கள். இவ்வாறு நீங்கள் அல்லாஹ்வைப் பற்றி கற்பனை செய்து கூறுவது எவ்வளவு பெரிய அபாண்டமான பொய்யாகும் என்பதை கவனித்துப் பாருங்கள்.


وَلَقَدْ صَرَّفْنَا فِى هَٰذَا ٱلْقُرْءَانِ لِيَذَّكَّرُوا۟ وَمَا يَزِيدُهُمْ إِلَّا نُفُورًۭا.

17:41. இப்படியாக இறைவனைப் பற்றி விதவிதமான கற்பனை கதைகளைக் கூறி, மக்களை மூட நம்பிக்கையில் மூழ்க வைத்து அழிந்து போகக் கூடாது என்பதற்காகவே, இந்த குர்ஆனில் அறிவுரைகளை பலக் கோணங்களில் எடுத்துரைத்து விளக்கம் அளிக்கப்படுகிறது. ஆனால் அவர்களோ இந்த அறிவுரைகளை கேட்ட பின்பும், சிந்தித்து அவற்றை பின்பற்றுவதற்குப் பதிலாக, அவற்றை முற்றிலும் புறக்கணித்து விடுவது என்றே தீர்மானமாக இருக்கிறார்கள். எனவே இறைவன் கூறும் அறிவுரைகளை கேட்டதும் அவர்களுக்கு வெறுப்பு தான் அதிகமாகிறது.


قُل لَّوْ كَانَ مَعَهُۥٓ ءَالِهَةٌۭ كَمَا يَقُولُونَ إِذًۭا لَّٱبْتَغَوْا۟ إِلَىٰ ذِى ٱلْعَرْشِ سَبِيلًۭا.

17:42. அவர்கள் கூறிவருவது போல பிரபஞ்சத்தை கட்டி ஆளும் சக்திகள் வெவ்வேறாக இருந்திருந்தால், அவையும் இந்த அகிலங்களை, தம் கட்டுப்பாட்டில் கொண்டு வர அல்லாஹ்வுக்கு எதிரான வழிமுறைகளை ஏற்படுத்தி இருக்கும். அப்படி ஒரு கட்டத்தில் இந்த பிரபஞ்சத்தில் மோதல்களும் பேரழிவுகளும் ஏற்பட்டிருக்கும். (பார்க்க 21:22) ஆனால் உண்மையிலேயே அப்படிப்பட்ட எந்த குழப்பமும் ஏற்படுவதில்லை. இதைப்பற்றி அவர்களிடம் எடுத்துரையுங்கள்.


سُبْحَٰنَهُۥ وَتَعَٰلَىٰ عَمَّا يَقُولُونَ عُلُوًّۭا كَبِيرًۭا.

17:43. பிரபஞ்சத்தில் எங்கும் எந்த மோதலும் குழப்பமும் ஏற்படாமல் இருப்பதே, இவர்களின் கற்பனை கதைகள் எல்லாம் பொய்யானவையே என்பதை நிரூபிக்கின்றன. மேலும் அல்லாஹ்வின் வல்லமையோ இவர்களின் கற்பனைகளுக்கெல்லாம் அப்பாற்பட்டவை ஆகும்.


تُسَبِّحُ لَهُ ٱلسَّمَٰوَٰتُ ٱلسَّبْعُ وَٱلْأَرْضُ وَمَن فِيهِنَّ ۚ وَإِن مِّن شَىْءٍ إِلَّا يُسَبِّحُ بِحَمْدِهِۦ وَلَٰكِن لَّا تَفْقَهُونَ تَسْبِيحَهُمْ ۗ إِنَّهُۥ كَانَ حَلِيمًا غَفُورًۭا.

17:44. மேலும் ஏழேழு அகிலங்களிலும், பூமியிலும் இவற்றிற்கு இடையே உள்ள அனைத்து படைப்புகளும் அல்லாஹ்வின் செயல்திட்டங்களை நிறைவேற்றவே மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. அல்லாஹ்வின் செயல் திட்டங்கள் போற்றுதலுக்கு உரியவையாக ஆக்குகின்றன. இதை தடுக்கும் எந்த சக்தியும் இந்த பிரபஞ்சத்தில் இல்லை. ஆனால் அவை எவ்வாறு செயல்பட்டு வருகின்றன என்பதை அறிந்து கொள்ளும் அறிவாற்றல் தற்சமயம் உங்களுக்கு இல்லை. அவ்வாறு அவற்றைப் பற்றிய உண்மைகள் உங்களுக்குத் தெரிய வரும்போது, (பார்க்க 41:53) இந்த பிரபஞ்ச படைப்புகளை கட்டி ஆளும் வல்லமை அல்லாஹ்வுக்கு மட்டுமே உண்டு என்பதையும், அதனால் அவை அனைத்தும் பாதுகாப்பாக முறையோடு செயல்பட்டு வருகின்றன என்ற உண்மையும் உங்களுக்கு விளங்கும்.
வானுலகில் எந்த மோதலும் இருப்பதில்லை. ஆனால் மனிதன் விஷயத்தில் அவ்வாறு இல்லை. மனிதனுக்கு முழு சுதந்திரம் அளிக்கப்பட்டு விட்டதால், ஏற்றுக் கொள்வோர் ஏற்றுக் கொள்ளாதோர் என்ற நிலை ஏற்படுகிறது. மனிதன் சுயமாக உருவாக்கி, கடைப்பிடித்து வரும் வழிமுறைகளை விட்டுவிட இறைவழிகாட்டுதல் சொல்வதால், அவனது மனம் அதை ஏற்க மறுக்கிறது.


وَإِذَا قَرَأْتَ ٱلْقُرْءَانَ جَعَلْنَا بَيْنَكَ وَبَيْنَ ٱلَّذِينَ لَا يُؤْمِنُونَ بِٱلْءَاخِرَةِ حِجَابًۭا مَّسْتُورًۭا.

17:45. இதனால் இந்த குர்ஆனின் அறிவுரைகளை அவர்களுக்கு எடுத்துரைக்கும் போது, “மனித செயல்களின் இறுதி விளைவுகள்” என்ற இறைவனின் விதிமுறையை ஏற்று நடப்பவர்களுக்கும், அவற்றை மறுப்பவர்களுக்கும் இடையே பிளவு ஏற்படுகிறது.


وَجَعَلْنَا عَلَىٰ قُلُوبِهِمْ أَكِنَّةً أَن يَفْقَهُوهُ وَفِىٓ ءَاذَانِهِمْ وَقْرًۭا ۚ وَإِذَا ذَكَرْتَ رَبَّكَ فِى ٱلْقُرْءَانِ وَحْدَهُۥ وَلَّوْا۟ عَلَىٰٓ أَدْبَٰرِهِمْ نُفُورًۭا.

17:46. இதனால் அவர்கள் புரிந்துகொள்ள முடியாதபடி, அவர்களுடைய உள்ளங்களில் திரைகள் பல ஏற்பட்டு விடுகின்றன. அதைப் பற்றி எடுத்துரைத்தாலும், அவர்கள் எதுவும் கேட்காதது போல் சென்று விடுவார்கள். எனவேதான் இந்த பிரபஞ்சத்தை அடக்கியாளும் வல்லமையுடைய இறைவன் ஒருவனே என்பதையும், அவனுக்கு மட்டுமே மனிதனும் கட்டுப்பட்டு வாழவேண்டும் என்றும் நீர் அவர்களிடம் எடுத்துரைக்கும் போது, அவர்கள் முகத்தை திருப்பி கொண்டு திரும்பி சென்று விடுகிறார்கள்.


نَّحْنُ أَعْلَمُ بِمَا يَسْتَمِعُونَ بِهِۦٓ إِذْ يَسْتَمِعُونَ إِلَيْكَ وَإِذْ هُمْ نَجْوَىٰٓ إِذْ يَقُولُ ٱلظَّٰلِمُونَ إِن تَتَّبِعُونَ إِلَّا رَجُلًۭا مَّسْحُورًا.

17:47. அப்படியும் அவர்கள் உங்களுடைய பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டாலும், அதன் நற்போதனைகளைக் கேட்டு அதன்படி செயல்படுவதற்காக வருவதில்லை. அவர்கள் அக்கூட்டத்தை விட்டு சென்றதும், “இவை யாவும் மக்களை வசியப்படுத்தும் வெற்றுப் பேச்சுக்களே. நீங்கள் அவருடைய பேச்சில் உண்மை இருப்பதாக எண்ணி அவரை பின்பற்ற வேண்டியதில்லை” என்று தங்களுக்குள் பேசிக் கொள்கிறார்கள். அவர்கள் செய்வதெல்லாம் அல்லாஹ்வுக்கு நன்குத் தெரியும் என்பதை அவர்களுக்கு எடுத்துரையுங்கள்.


ٱنظُرْ كَيْفَ ضَرَبُوا۟ لَكَ ٱلْأَمْثَالَ فَضَلُّوا۟ فَلَا يَسْتَطِيعُونَ سَبِيلًۭا.

17:48. இறைவழிகாட்டுதலை எடுத்துரைப்பவரே! உம்மைப் பற்றி எப்படியெல்லாம் விமர்சிக்கிறார்கள் என்பதையும் கவனித்துப் பாருங்கள். இவையெல்லாம் அவர்கள் வழிகேட்டில் வெகுதூரம் சென்று விட்டதையே காட்டுகிறது. இப்படிப்பட்டவர்கள் நேர்வழி பெறும் வாய்ப்பே இல்லை.


وَقَالُوٓا۟ أَءِذَا كُنَّا عِظَٰمًۭا وَرُفَٰتًا أَءِنَّا لَمَبْعُوثُونَ خَلْقًۭا جَدِيدًۭا.

17:49. மரணத்திற்குப் பின் தொடர்கின்ற மனித வாழ்வைப் பற்றி அவர்கள் கேள்விபடும் போது,“நாங்கள் இறந்த பின் எலும்பு கூடுகளாகவும் மக்கிப்போன துகள்களாகவும் ஆகிவிடுகிறோமே! அதன்பின் நாங்கள் எவ்வாறு புதிய படைப்பாக மீண்டும் படைக்கப்பட்டு எழுப்பப்படுவோம்?” என்று கேட்கிறார்கள்.


۞ قُلْ كُونُوا۟ حِجَارَةً أَوْ حَدِيدًا.

17:50. அதற்கு “நீங்கள் எலும்புக் கூடுகளாகவோ அல்லது மண்ணாகவோ மாறுவது என்ன? கல்லாகவோ இரும்பாகவோ மாறிப் போனாலும் நீங்கள் மீண்டும் எழுப்பப் படுவீர்கள்” என்றும்,


أَوْ خَلْقًۭا مِّمَّا يَكْبُرُ فِى صُدُورِكُمْ ۚ فَسَيَقُولُونَ مَن يُعِيدُنَا ۖ قُلِ ٱلَّذِى فَطَرَكُمْ أَوَّلَ مَرَّةٍۢ ۚ فَسَيُنْغِضُونَ إِلَيْكَ رُءُوسَهُمْ وَيَقُولُونَ مَتَىٰ هُوَ ۖ قُلْ عَسَىٰٓ أَن يَكُونَ قَرِيبًۭا.

17:51. “அல்லது அதைவிட கடினம் என நீங்கள் நினைக்கும் பொருளாகவே மாறி விடுங்கள். உங்களை மீண்டும் எழுப்புவது நிச்சயம்” என்று அவர்களிடம் கூறிவிடுங்கள். அதற்கு அவர்கள்,“அவ்வாறு எழுப்புபவர் யார்?” என்று கேட்கிறர்கள். “யார் உங்களை முதன் முதலில் படைத்தானோ, அவனே உங்களை மீண்டும் படைப்பான்” என்று கூறி விடுங்கள். அதற்கு அவர்கள் உங்களை ஏளனமாகப் பார்த்து, “இப்படி ஏற்படுவது எப்போது?” என்கிறார்கள். “அது வெகு சீக்கிரத்திலும் ஏற்படலாம்” என்று அவர்களிடம் கூறிவிடுங்கள்.
அதாவது மனிதன் எவ்வாறு மரணத்திற்குப் பின் நிச்சயமாக எழுப்பப்படுவானோ, அதுபோலவே இவ்வுலகிலும் செத்து மடிந்து ஜடமாக வாழும் சமுதாயமும், இறைவழிகாட்டுதலை பின்பற்றி நடப்பதன் மூலமாக மீண்டும் உயிர் பெற்று சிறந்த சமுதாயமாக விளங்கும். இதை விளங்கி கொள்ளாதவர்கள் அப்படி ஒரு உயர் நிலை எப்போது வரும் என்று நபியிடம் கேட்கிறார்கள். இறைவழிகாட்டுதலை பின்பற்றி எந்த அளவிற்கு உழைக்கிறார்களோ, அந்த அளவிற்கு வேகமாக முன்னேறி உயிர் பெற்ற சமுதாயமாக விளங்கும் என்று அவர் பதிலளிக்கிறார்.


يَوْمَ يَدْعُوكُمْ فَتَسْتَجِيبُونَ بِحَمْدِهِۦ وَتَظُنُّونَ إِن لَّبِثْتُمْ إِلَّا قَلِيلًۭا.

17:52. அப்படி ஒரு காலக் கட்டத்தில், இறைவனை மனதார பாராட்டிய வண்ணம் அவனது அழைப்பை ஏற்று நடப்பதாக பதிலளிப்பீர்கள். நீங்கள் வாழ்ந்த காலம் மிகவும் சொற்பமானதே என்பதையும் அப்போது உணர்ந்து கொள்வீர்கள்.
அதாவது இறைவனின் ஆட்சியமைப்பு நடைபெறும் கால கட்டத்தில், அரசு பிறப்பிக்கும் ஒவ்வொரு கட்டளைக்கும் அடிபணிந்து செயல்படுவார்கள். அதன்படி நடப்பதால் ஏற்படும் நன்மைகளை எண்ணி அவர்கள் இறைவனை புகழாரம் செய்வார்கள். ஏனெனில் அப்போது கிடைக்கின்ற நன்மைகளைப் பார்க்கும் போது, இன்னும் நம் வாழ்நாள் நீடித்தால் நன்றாக இருக்குமே என எண்ணுவீர்கள்.


وَقُل لِّعِبَادِى يَقُولُوا۟ ٱلَّتِى هِىَ أَحْسَنُ ۚ إِنَّ ٱلشَّيْطَٰنَ يَنزَغُ بَيْنَهُمْ ۚ إِنَّ ٱلشَّيْطَٰنَ كَانَ لِلْإِنسَٰنِ عَدُوًّۭا مُّبِينًۭا.

17:53. இறைவழிகாட்டுதலை எடுத்துரைப்பவரே! ஒருவர் மற்றவரிடம் பேசும் போது, மிகவும் அழகிய முறையில் பேசி வருமாறு இறைவழிகாட்டுதலின்படி நடப்பவர்களிடம் கூறிவிடுங்கள். ஏனெனில் மனோ இச்சை எனும் ஷைத்தான் மக்களிடையே பகைமையை உண்டாக்கவே எப்போதும் தூண்டிக் கொண்டிருக்கும். எனவே அது மனித நேயத்தையும் ஒருமைப்பாட்டையும் சீரழிக்கும் தீய சக்தியாகும். அதிலிருந்து பாதுகாத்து கொள்ளும்படி அறிவுறுத்துங்கள்.


رَّبُّكُمْ أَعْلَمُ بِكُمْ ۖ إِن يَشَأْ يَرْحَمْكُمْ أَوْ إِن يَشَأْ يُعَذِّبْكُمْ ۚ وَمَآ أَرْسَلْنَٰكَ عَلَيْهِمْ وَكِيلًۭا.

17:54. மேலும் அவர்களிடம், “நீங்கள் செயல்பட்டு வருவதெல்லாம் இறைவனுக்கு நன்குத் தெரியும். எனவே இறைவனின் நாட்டப்படி நீங்கள் செயல்பட்டால் அவனுடைய கருணையும் உதவியும் கிடைக்கும். அவனுடைய கட்டளைக்கு மாறு செய்தால், வேதனை மிக்க வாழ்வே கிடைக்கும். எனவே நாம் அவர்களை கண்காணிக்கும் அதிகாரியாக உம்மை அனுப்பவில்லை” என்று அவர்களிடம் சொல்லிவிடுங்கள்.
இறைவனின் கட்டளைக்கு இணங்கி செயல்பட்டு, இறை அருட்கொடைகளை பெற்றுக் கொள்வதும், அவற்றை நிராகரித்து தவறான வழியில் சென்று சீரழிந்து போவதும் அவரவர் பொறுப்பில் விடப்பட்ட விஷயமாகும்.


وَرَبُّكَ أَعْلَمُ بِمَن فِى ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضِ ۗ وَلَقَدْ فَضَّلْنَا بَعْضَ ٱلنَّبِيِّۦنَ عَلَىٰ بَعْضٍۢ ۖ وَءَاتَيْنَا دَاوُۥدَ زَبُورًۭا.

17:55. அகிலங்களிலும் பூமியிலும் உள்ளவற்றின் நிலைமை என்னவென்று இறைவனுக்கு நன்றாகத் தெரியும். அதே அடிப்படையில் உலகிலுள்ள பலதரப்பட்ட சமூகத்தவர்களுக்கு கால சூழ்நிலைக்கு ஏற்றவாறு இறைத்தூதர்களை அனுப்பி வைத்தோம். வெற்றி இலக்கு என்று பார்க்கும்போது, நபிமார்களுள் சிலர் சிலரைவிட மேன்மை பெற்றிருந்தார்கள். சில நபிமார்களுக்கு உயர் அந்தஸ்தும் பதவியும் கிடைத்திருந்தன.(பார்க்க 2:253) அதே அடிப்படையில்தான் தாவூத் நபிக்கும் அரசாளும் பதவியும் ஜபூர் எனும் வேதத்தையும் அளித்தோம். (பார்க்க 27:15)
அதாவது இறைவழிகாட்டுதல்கள் யாவும் ஒரே அடிப்படையை கொண்டவையாக இருந்தன. ஆனால் அவர்களுடைய போதனைகள் மக்கள் வரை சென்றடையச் செய்வதிலும், இறை ஆட்சியமைப்பு நிலை பெற செய்வதிலும் சில நபிமார்கள் சிலரை விட மிகைத்திருந்தார்கள். (பார்க்க 2:253) தாவுத் நபிக்கு இறை வேதமும் ஆட்சி பொறுப்பும் கிடைத்திருந்தன. அதனால் அந்த நாடு சீரும் சிறப்புமாகத் திகழ்ந்தது. இவற்றை எல்லாம் மறந்து விட்டு தம் தேவைகளை நிறைவேற்றி கொள்ள, இப்போது அல்லாஹ் அல்லாத கற்பனை தெய்வங்களிடமும் மகான்களிடமும் உதவியை நாடிக் கொண்டிருக்கிறார்கள். அவையெல்லாம் உங்களுடைய கஷ்டத்தை போக்கிவிடவா போகிறது? அல்லது உங்களுக்கு நன்மைகளைத் தான் தரப் போகின்றதா?


قُلِ ٱدْعُوا۟ ٱلَّذِينَ زَعَمْتُم مِّن دُونِهِۦ فَلَا يَمْلِكُونَ كَشْفَ ٱلضُّرِّ عَنكُمْ وَلَا تَحْوِيلًا.

17:56. எனவே அவர்களிடம், “யார் உங்களுக்கு உதவி புரிவார்கள் என்ற கற்பனையில் இருக்கிறீர்களோ, அவர்களில் யாராலும் உங்கள் கஷ்டத்தை ஒருபோதும் போக்கிவிடவே முடியாது. அல்லது அவர்களால் உங்களுக்கு எந்த நன்மையும் செய்ய இயலாது” என்று அவர்களிடம் எடுத்துரையுங்கள்.


أُو۟لَٰٓئِكَ ٱلَّذِينَ يَدْعُونَ يَبْتَغُونَ إِلَىٰ رَبِّهِمُ ٱلْوَسِيلَةَ أَيُّهُمْ أَقْرَبُ وَيَرْجُونَ رَحْمَتَهُۥ وَيَخَافُونَ عَذَابَهُۥٓ ۚ إِنَّ عَذَابَ رَبِّكَ كَانَ مَحْذُورًۭا.

17:57. ஏனெனில் இவர்கள், தமக்கு யார் மூலமாக இறைவனின் உதவி கிடைக்கும் என்று நினைத்துக் கொண்டு மன்றாடிக் கொண்டிருக்கிறார்களோ, அவர்களே தமக்கு இறை அருள் வேண்டும் என்றும், அவனுடைய தண்டனைக்கு அஞ்சியுமே இருக்கிறார்கள். இவர்கள் யாரை இறைவனின் மிக நெருக்கமானவர்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்களோ, அவர்களுடைய நிலைமையும் இதுவே ஆகும். ஏனெனில் இறைவனின் தண்டனைகள் யாவும் அச்சப்பட வேண்டிய ஒன்றே ஆகும்.
இத்தகைய தவறான கொள்கையின் அடிப்படையில் வாழும் சமுதாயமும், அதன் ஆட்சியாளர்களும், தம்மை யாரும் அசைக்க முடியாது என்ற அசட்டு தைரியத்தில் இருப்பார்கள். தமக்கு எந்த ஆபத்தும் வராது என்றும், அப்படி வந்தால் தங்களுடைய கற்பனை தெய்வங்களும் மகான்களும் உதவி புரிவார்கள் என்றும் எண்ணி இருப்பார்கள்.


وَإِن مِّن قَرْيَةٍ إِلَّا نَحْنُ مُهْلِكُوهَا قَبْلَ يَوْمِ ٱلْقِيَٰمَةِ أَوْ مُعَذِّبُوهَا عَذَابًۭا شَدِيدًۭا ۚ كَانَ ذَٰلِكَ فِى ٱلْكِتَٰبِ مَسْطُورًۭا.

17:58. ஆனால் இறைவனின் நியதிப்படி, தவறான கொள்கையின் அடிப்படையில் நடைபெற்ற எந்த ஆட்சியும் இவ்வுலகில் அழிவை சந்திக்காமல் இருந்ததில்லை. அத்தகையவர்களின் அழிவுகள் கடுமையான வேதனைகள் மிக்கதாய் இருந்தன. இனியும் இவ்வுலகம் நிலைத்திருக்கும் நாள் வரையில் இப்படித்தான் நடைபெற்று வரும். இவை யாவும் நிரந்தரமாக நிலைநிறுத்தப்பட்ட இறைவனின் சட்டமாகும். அதில் எவ்வித மாறுதலும் ஒருபோதும் ஏற்படாது.
ஆனால் அவர்களோ இப்படிப்பட்ட அழிவுகள் வருவதற்கு முன் இறைவன் புறத்திலிருந்து ஏதாவது அடையாளங்கள் இறக்கப்பட வேண்டும் என்று கூறுகிறார்கள்.


وَمَا مَنَعَنَآ أَن نُّرْسِلَ بِٱلْءَايَٰتِ إِلَّآ أَن كَذَّبَ بِهَا ٱلْأَوَّلُونَ ۚ وَءَاتَيْنَا ثَمُودَ ٱلنَّاقَةَ مُبْصِرَةًۭ فَظَلَمُوا۟ بِهَا ۚ وَمَا نُرْسِلُ بِٱلْءَايَٰتِ إِلَّا تَخْوِيفًۭا.

17:59. அவ்வாறு அவர்களுக்கு அடையாளங்களை அனுப்ப நமக்கு எந்தத் தடையும் இல்லை. ஆனால் இதற்கு முன் வாழ்ந்த சமுதாயங்களும், அவற்றை பொய்ப்பிக்கவே செய்தார்கள். உதாரணத்திற்கு சமூது சமூகத்தவரிடம், சாலிஹ் நபி மூலமாக பெண் ஒட்டகத்தை அறிமுகப்படுத்தி, அதை சமூக அமைப்பின் சமச் சீர்நிலையின் அடையாளமாக ஆக்கினோம். அதை கட்டிக் காப்பாற்றும்படி வலியுறுத்தியும் சொன்னோம். அவ்வாறு நீங்கள் செய்யவில்லை என்றால் நீங்கள் அழிந்து போய் விடுவீர்கள் என்றும் அச்சமூட்டி எச்சரித்தோம். ஆனால் அவர்களோ இறைக் கட்டளைக்கு மாற்றமான செயலில் ஈடுபட்டு சமூக அமைப்பின் சின்னமாக இருந்த ஒட்டகத்தை பாழ்படுத்தி விட்டார்கள். அதை தொடர்ந்து அவர்களும் அழிவை சந்தித்துக் கொண்டார்கள்.
இப்போதுள்ள முஸ்லிம்களும் இத்தகைய அடையாளங்கள் வரவேண்டும் என்ற எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள். இமாம் மஹ்தி வருவார். அல்லது ஈஸா நபி மீண்டும் வருவார். அவர்கள் தான் கியாம நாளின் அடையாளங்கள் என கதைகளைக் கூறி வருகிறார்கள். உலக மக்களின் தவறான செயல்களால் ஏற்படும் அழிவுகள் இவர்களுக்கு அடையாளங்களாக தெரிய வில்லையா? மேலும் சமூக சீரழிவுகள் ஏற்பட்டு வருவது அவர்களுக்கு அடையாளமாக தெரியவில்லையா? பல்வேறு சமுதாயங்களின் அழிவைப் பற்றி ஆதாரப்பூர்வமாகவும் ஆணித்தரமாகவும் எடுத்துரைக்கப் பட்டுள்ளதே அதை அவர்கள் கவனிக்க மாட்டார்களா?


وَإِذْ قُلْنَا لَكَ إِنَّ رَبَّكَ أَحَاطَ بِٱلنَّاسِ ۚ وَمَا جَعَلْنَا ٱلرُّءْيَا ٱلَّتِىٓ أَرَيْنَٰكَ إِلَّا فِتْنَةًۭ لِّلنَّاسِ وَٱلشَّجَرَةَ ٱلْمَلْعُونَةَ فِى ٱلْقُرْءَانِ ۚ وَنُخَوِّفُهُمْ فَمَا يَزِيدُهُمْ إِلَّا طُغْيَٰنًۭا كَبِيرًۭا.

17:60. அல்லாஹ்வின் வல்லமையோ உலகிலுள்ள அனைத்து தரப்பு மக்களின் செயல்களை கண்காணிக்கும் வகையில் அவர்களை சூழ்ந்தவையாக இருக்கிறது. எனவே அவர்கள், தங்களின் தவறான செயல்களால் அழிவை நோக்கி செல்கின்றனர் என்ற உண்மை உங்களுக்குத் தெளிவாகி இருக்கும். அவர்கள் உம் அச்சுறுத்தலை பொருட்படுத்துவதே இல்லை. அதைப் பற்றி பேசினாலே அவர்களுக்கு வெறுப்பையே அதிகரிக்கிறது. எனவே அவர்களுக்கு நேரவிருக்கும் அழிவுகள் அவர்களுக்கு கள்ளிச் செடிப்போல் ஜீரணிக்க முடியாத சோதனையாக விளங்கப் போகிறது. (பார்க்க:44:44-49)
இறை நிராகரிப்பவர்கள் இவ்வாறு அலட்சியமாக நடந்து கொள்வது புதிதான ஒன்றல்ல. ஆதி முதல் பல சமுதாயத்தினர் இப்படித் தான் நடந்து வந்துள்ளார்கள். இதற்கு மூலக் காரணம் மனிதனிடத்தில் இருக்கும் சுய நலமும் ஆணவமும் தான் ஆகும். இதை ஆதமும் அவரது மனைவியும் என்ற கதைச் சுருக்கத்தின் உதாரணத்தைக் கொண்டு விளங்கிக் கொள்ளலாம்.


وَإِذْ قُلْنَا لِلْمَلَٰٓئِكَةِ ٱسْجُدُوا۟ لِءَادَمَ فَسَجَدُوٓا۟ إِلَّآ إِبْلِيسَ قَالَ ءَأَسْجُدُ لِمَنْ خَلَقْتَ طِينًۭا.

17:61. இறைவனின் செயல் திட்டப்படி, மனிதனில் கல்வி ஞானம் வளர வளர பிரபஞ்ச இயற்கை சக்திகள் மனித கட்டளைக்கு அடிபணிந்தன. எல்லா இயற்கை சக்திகளும் மனித கட்டுப்பாட்டுக்குள் வந்தன. ஆனால் மனிதனுள் இருக்கும் சுயநலம் மற்றும் ஆணவப் போக்கு என்ற இப்லீஸிய குணம், இறைக் கட்டளைக்கு சிரம் பணியவில்லை. ஆக மண்ணால் படைக்கப்பட்ட மனிதனுக்கா கட்டுப்படுவது என்ற ஆணவம் தான் இப்லீஸியத் தன்மையாக இருந்தது. (விளக்கத்திற்கு பார்க்க 7:12-15, 15:30-33)
ஆக செல்வ செழிப்புடன் வாழ்பவர்களிடம், ஒழுக்க மாண்புகளை பேணிக் காப்பதற்காக இறைவழிகாட்டுதலை இறைத் தூதர் எடுத்துரைக்கிறார். அவர் எந்த தனிச் சிறப்பும் பெறாத ஒரு சாதாரண மனிதராக இருப்பதால், அவருடைய அறிவுரைக்கு கட்டுப்படுவதா என்ற இப்லீஸிய ஆணவம் தான் அவர்களை நேர்வழி பெறுவதை விட்டு தடுக்கிறது. ஆக வஹீ எனும் இறைவழிகாட்டுதலைப் பின்பற்றி அவரை கண்ணியப்படுத்துவதை விட்டுவிட்டு, அவர் மீது பொறாமைப் பட்டு இறைவழிகாட்டுதலையே நிராகரிக்கின்றனர் (பார்க்க 2:90)


قَالَ أَرَءَيْتَكَ هَٰذَا ٱلَّذِى كَرَّمْتَ عَلَىَّ لَئِنْ أَخَّرْتَنِ إِلَىٰ يَوْمِ ٱلْقِيَٰمَةِ لَأَحْتَنِكَنَّ ذُرِّيَّتَهُۥٓ إِلَّا قَلِيلًۭا.

17:62. “எனக்கும் மேலாக இவரை கண்ணியப்படுத்தியே பார்க்க வேண்டும் என்பது உன்னுடைய நோக்கம் என்றால், நீ கியாம நாள் வரையில் எனக்கு அவகாசம் கொடுத்தால் நான் இவரைச் சார்ந்தவர்களில் ஒரு சிலரைத் தவிர மற்ற எல்லோரையும் வழிகெடுத்தே தீருவேன்” என்று இப்லீஸ் கூறினான்.
அதாவது இறைவழிகாட்டுதல் மூலமாக உயர்நிலைக்கு செல்வது, ஆணவம் கொண்ட சுயநலக்காரர்களுக்கு பிடிக்கவில்லை. எனவே இறை வழிகாட்டுதலை ஏற்காதவாறு மக்களை வழிகெடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இறை வழிகாட்டுதலின் அடிப்படையில் சமூகஅமைப்பு உருவாகும் வரையில் இவர்கள் இப்படித்தான் செய்வார்கள்.


قَالَ ٱذْهَبْ فَمَن تَبِعَكَ مِنْهُمْ فَإِنَّ جَهَنَّمَ جَزَآؤُكُمْ جَزَآءًۭ مَّوْفُورًۭا.

17:63. அதற்கு இறைவன், “சரி! போய் விடு. உன்னைப் பின்பற்றும் அனைவருக்கும் நிச்சயமாக நரகம் தான் தண்டனையாகக் கிடைக்கும்” என்று கூறினான்.
அதாவது இறைவழிகாட்டுதலுக்கு எதிராக தன் மனோ இச்சையின்படி செயல்படுபவர்கள் இறுதியாகப் போய் சேரும் இடம் நரகமாகத் தான் இருக்கும்.


وَٱسْتَفْزِزْ مَنِ ٱسْتَطَعْتَ مِنْهُم بِصَوْتِكَ وَأَجْلِبْ عَلَيْهِم بِخَيْلِكَ وَرَجِلِكَ وَشَارِكْهُمْ فِى ٱلْأَمْوَٰلِ وَٱلْأَوْلَٰدِ وَعِدْهُمْ ۚ وَمَا يَعِدُهُمُ ٱلشَّيْطَٰنُ إِلَّا غُرُورًا.

17:64. மேலும் இறைவன், “இன்னும் நீ அவர்களுள் உன்னால் முடிந்த வரை உன் ஏமாற்று வித்தைகளைக் கொண்டு மயக்கி வசீயப்படுத்து. உன்னுடைய குதிரைப் படையையும், காலாட் படையையும் தயாரித்துக் கொண்டு அவர்களுக்கு எதிராக ஏவி விடு. அவர்களின் செல்வங்களையும் ஆட்களையும் நீ கூட்டாக்கிக் கொள். அவர்களுக்கு பொய்யான வாக்குறுதிகளையும் கொடு” என்று கூறினான். ஆனால் ஷைத்தான் வாக்களிப்பதெல்லாம் வெறும் ஏமாற்று வேலையே அன்றி வேறில்லை.
இறைவழிகாட்டுதலின் அடிப்படையில் சமூக அமைப்பு அல்லது ஆட்சியமைப்பு உருவாவதை எதிர்த்து, சில சுயநலக்கார ஷைத்தானியர்கள் பிரச்சாரம் செய்து மக்களை வழி தவறச் செய்வார்கள். அதையும் மீறி இறைக் கொள்கை மக்கள் மத்தியில் பரவி வந்தால், அதற்கு எதிராக படைப் பலத்தை பிரயோகிப்பார்கள். இதற்காக செல்வங்களையும் பயன்படுத்தி கொள்வார்கள். இப்படியாக வருங்கால சந்ததிகளை எல்லாம் ஒன்று திரட்டி இறை வழிகாட்டுதலுக்கு மாற்றமான கொள்கைகளை கற்றுக் கொடுத்து பல்வேறு பொய்யான வாக்குறுதிகளை செய்து வருவார்கள். இதுவே இன்றைய நிலமையும் ஆகும் என்பதை கவனித்துப் பாருங்கள்.


إِنَّ عِبَادِى لَيْسَ لَكَ عَلَيْهِمْ سُلْطَٰنٌۭ ۚ وَكَفَىٰ بِرَبِّكَ وَكِيلًۭا.

17:65. “நிச்சயமாக இறைவழிகாட்டுதலை ஏற்று நடக்கும் மூஃமின்களிடத்தில் உன் அதிகாரம் செல்லாது. எனவே நயியே! இந்த நல்லோர்கள் மூலம் இறைவனின் சமூக அமைப்புக்கு ஏற்பாடு செய். தீயவர்களிலிருந்து பாதுகாக்க இறைவனே போதுமானவன்.”


رَّبُّكُمُ ٱلَّذِى يُزْجِى لَكُمُ ٱلْفُلْكَ فِى ٱلْبَحْرِ لِتَبْتَغُوا۟ مِن فَضْلِهِۦٓ ۚ إِنَّهُۥ كَانَ بِكُمْ رَحِيمًۭا.

17:66. ஒ மனிதனே! உங்கள் இறைவனின் வல்லமையை அறிந்துகொள்ள வேண்டும் என்றால், வாழ்வதாரப் பொருட்களை சுமந்துகொண்டு கடலில் வேகமாக செல்லும் பெரிய பெரிய கப்பல்களைப் பாருங்கள். அவை எவ்வாறு ஆடாமல் வேகமாக நீந்திச் செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்பதை கவனித்துப் பாருங்கள். இதைக் கொண்டு உலகின் பல்வேறு பகுதியிலிருந்து வாழ்வாதாரங்களை உங்ளால் பெற முடிகிறது. இவை எல்லாம் அல்லாஹ்வின் மாபெரும் கிருபையாகும் அல்லவா?
அதுபோல நல்லோர்கள் உருவாக்கவிருக்கும் நல்லாட்சிக்கு இறைவன் புறத்திலிருந்து ஏராளமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அவற்றை நீங்கள் பயன்படுத்தி, தீயவர்களை கட்டுப்படுத்தி விடலாம்.


وَإِذَا مَسَّكُمُ ٱلضُّرُّ فِى ٱلْبَحْرِ ضَلَّ مَن تَدْعُونَ إِلَّآ إِيَّاهُ ۖ فَلَمَّا نَجَّىٰكُمْ إِلَى ٱلْبَرِّ أَعْرَضْتُمْ ۚ وَكَانَ ٱلْإِنسَٰنُ كَفُورًا.

17:67. நீங்கள் கடல் பயணம் மேற்கொள்ளும் சமயம், உங்களுக்கு ஏதேனும் ஆபத்து ஏற்பட்டால், உடனே நீங்கள் இறைவனின் நியதிப்படி மீட்பு நடவடிக்கைகளை எடுக்கிறீர்களா அல்லது வெறும் பிரார்த்தனை செய்துகொண்டு இருக்கிறீர்களா? இறைவனின் நியதிப்படி மீட்பு நடவடிக்கைத் தானே எடுக்கிறீர்கள்? அவற்றின் மூலம் ஆபத்திலிருந்து மீண்டுவிட்டால், நீங்கள் பழையபடி இறைவனுக்கு மாற்றமாகவே, தம் மனோ இச்சைக்கு அடிபணிந்து செயல்பட ஆரம்பித்து விடுகிறீர்களே!
அதாவது மனித வாழ்வு சிறப்பாக அமைய இறைவழிகாட்டுதல் அளிக்கப்படுகிறது. அதை அவன் புறக்கணித்து விட்டால், அவனிடம் சுயநலமும் அகம்பாவமும் மிகைத்து விடுகிறது. ஆபத்து ஏற்பட்டால் மட்டும் இறைவனின் உதவியை நாடுவான். அதன் பின் அல்லாஹ்வை மறந்து பழைய நிலைக்குச் சென்றுவிடுகிறான். இது எவ்வளவு பெரிய நன்றி கெட்ட செயலாகும் அல்லவா?


أَفَأَمِنتُمْ أَن يَخْسِفَ بِكُمْ جَانِبَ ٱلْبَرِّ أَوْ يُرْسِلَ عَلَيْكُمْ حَاصِبًۭا ثُمَّ لَا تَجِدُوا۟ لَكُمْ وَكِيلًا.

17:68. இப்படியாக நீங்கள் கடலில் ஏற்பட்ட ஆபத்திலிருந்து மீண்டு, நிலப் பகுதிக்கு வந்துவிட்டால் உங்களுக்கு எந்த ஆபத்தும் ஏற்படாது என்று நினைத்து கொள்கிறீர்களா? ஆனால் அல்லாஹ்வின் வல்லமையோ கடல், பூமி ஆகிய அனைத்து இடங்களிலும் சூழ்ந்தவையாக இருக்கிறதே. எனவே கடலில் புயலால் ஏற்பட்ட ஆபத்துக்களைப் போலவே, நிலப் பகுதியிலும் பூகம்பமோ அல்லது எரிமலைப் பிழம்போ ஏற்படாது என்பதற்கு என்ன நிச்சயம்? அவ்வாறு ஏற்பட்டால் உங்களைப் பாதுகாப்போர் எவரையும் நீங்கள் காணமாட்டீர்களே!
ஆக மனிதன், எப்போதும் வருமுன் காப்போம் என்று விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என்பதே இறைவனின் அறிவுரையாகும். அப்போது தான் இப்படிப்பட்ட ஆபத்துகளிலிருந்து பாதுகாத்துக் கொள்ளும் தகுதி உடையவனாக ஆக்கிக் கொள்ள முடியும். எனவே


أَمْ أَمِنتُمْ أَن يُعِيدَكُمْ فِيهِ تَارَةً أُخْرَىٰ فَيُرْسِلَ عَلَيْكُمْ قَاصِفًۭا مِّنَ ٱلرِّيحِ فَيُغْرِقَكُم بِمَا كَفَرْتُمْ ۙ ثُمَّ لَا تَجِدُوا۟ لَكُمْ عَلَيْنَا بِهِۦ تَبِيعًۭا.

17:69. ஒரு முறை கடலில் ஏற்பட்ட ஆபத்திலிருந்து மீண்டு விட்டால், மறுபடியும் அப்படிப்பட்ட ஆபத்துகள் வரவே வராது என்று எண்ணிக் கொள்கிறீர்களா? அதை விட கடுமையான புயலின் தாக்கத்தால் உங்கள் கப்பல் தன் கட்டுப்பாட்டை இழந்து சின்னாபின்னமாக சிதறி, நீங்கள் அனைவரும் மூழ்கிவிடலாம் அல்லவா? அப்படிப்பட்ட சூழ்நிலையிலும் நீங்கள் அல்லாஹ்வின் எந்த சட்டத்திற்கு மாற்றமாக செயல்பட்டதால் அந்த விபத்து நேர்ந்தது என்பதைத் தான் சிந்திப்பீர்கள். அப்படிப்பட்ட ஆபத்திலிருந்து பாதுகாத்துக் கொள்ள இறைவனின் நியதிப்படி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பீர்கள். இதை விட்டால் உங்களுடைய பாதுகாப்புக்கு வேறு என்ன வழி இருக்கப் போகிறது?
அதுபோல உங்களுடைய தவறான செயல்களால் உங்களின் வாழ்க்கைப் படகு சாய்ந்து விட்டால், அதிலிருந்து மீள உங்களுக்கு என்ன வழி இருக்கப் போகிறது? எனவே தான் உங்கள் வாழ்க்கைப் படகு சாயாமல் வேகமாக முன்னேறிச் செல்ல, இந்த இறை வழிகாட்டுதல்கள் அளிக்கப்படுகின்றன. இதை விட்டால் மனிதனுக்கு வேறு எந்த வழிமுறையும் கிடைக்காது.
மனித படைப்பு என்று எடுத்துக் கொண்டால், இறைவன் புறத்திலிருந்து ஒரே சீரான உடல் அமைப்பும், சிந்தனைப் புலன்களும் அளிக்கப்பட்டுள்ளன. வானிலிருந்து பொழிகின்ற மழைத் துளிகள் தூய்மையானவையே. ஆனால் பொழியும் இடத்திற்கு ஏற்றவாறு அவற்றின் தன்மைகள் மாறிவிடுகின்றன. அது போலத் தான் சூழ்நிலைக்கு ஏற்றவாறு மனிதனின் சிந்தனையும் ஆற்றலும் மாறி விடுகின்றன. இறை வழிகாட்டுதலின் படி சூழ்நிலை உருவானால், அதன் படியே அவனுடைய சிந்தனையும் செயலாற்றலும் வளரும்.


۞ وَلَقَدْ كَرَّمْنَا بَنِىٓ ءَادَمَ وَحَمَلْنَٰهُمْ فِى ٱلْبَرِّ وَٱلْبَحْرِ وَرَزَقْنَٰهُم مِّنَ ٱلطَّيِّبَٰتِ وَفَضَّلْنَٰهُمْ عَلَىٰ كَثِيرٍۢ مِّمَّنْ خَلَقْنَا تَفْضِيلًۭا.

17:70. ஆக நாம் மனிதனாய் பிறக்கும் ஒவ்வொருவரையும் கண்ணியப்படுத்தியே இருக்கிறோம். மேலும் மனித இனத்திற்குத் தேவையான எல்லா வாழ்வாதாரங்களையும் நிலத்திலும் கடலிலும் நாம் ஏற்படுத்தியுள்ளோம். மேலும் மற்ற உயிரினங்களைவிட மனிதனுக்கு நாம் மகத்துவத்தையும் உயர்வையும் அளித்துள்ளோம்.
இறைவனின் இந்த சட்டத்தின் (Constitutional Act) அடிப்படையில், உலகில் பிறக்கும் ஒவ்வொரு மனிதனுக்கும் அடிப்படை உரிமை கிடைக்கிறது. அதாவது பேச்சுரிமை, சிந்திக்கும் உரிமை மற்றும் வாழ்வாதார உரிமை ஆகியவை யாவும் அனைவருக்கும் பொதுவானவையாகும். அதைப் பறித்துக் கொள்வதற்கு யாருக்கும் உரிமை இல்லை. இவை யாவும் அல்லாஹ் நிர்ணயித்துள்ள மனித வாழ்க்கை சம்பந்தப்பட்ட சட்ட வரம்புகளாகும். ஆனால் அத்துடன் மனித ஒழுக்க மாண்புகள் சம்பந்தமாகவும் வரையறைகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.


يَوْمَ نَدْعُوا۟ كُلَّ أُنَاسٍۭ بِإِمَٰمِهِمْ ۖ فَمَنْ أُوتِىَ كِتَٰبَهُۥ بِيَمِينِهِۦ فَأُو۟لَٰٓئِكَ يَقْرَءُونَ كِتَٰبَهُمْ وَلَا يُظْلَمُونَ فَتِيلًۭا.

17:71. அதன்படி எல்லா மக்களும் அவரவர் செய்து வந்த செயல்களின் குறிப்பேடுகளுடன் நிற்கும்படி அழைக்கப்படுவார்கள். அப்போது யாருடைய நற்செயல்களின் எடை கனக்கிறதோ, அவர் நற்பேறுகளை பெறுபவர்களாக இருப்பார்கள். அவர்கள் தம் செயல்களின் குறிப்புகளை மிகுந்த ஆர்வத்துடன் படிப்பார்கள். அவர்கள் செய்து வந்த நற்செயல்களின் பலன்களை அவர்கள் பெற்றுக் கொள்வார்கள். அவர்களில் யாரும் அநியாயம் செயய்யப்பட மாட்டார்கள்.
ஆனால் மனித செயல்களின் விளைவுகள் மரணத்திற்குப் பின் தொடர்கின்ற வாழ்வில்தான் கிடைக்கும் என்பதல்ல. நற்செயல்களின் பலன்களோ தீய செயல்களின் விளைவுகளோ இவ்வுலக வாழ்விலும் உணரும் வகையில் தோற்றத்திற்கு வரும். எனவே இதை நன்றாக கவனத்தில் கொண்டு இவ்வுலக வாழ்விலும் மறுமை வாழ்விலும் சிறப்பான பாதுகாப்பான வாழ்வை பெற முயலவேண்டும். ஆனால்


وَمَن كَانَ فِى هَٰذِهِۦٓ أَعْمَىٰ فَهُوَ فِى ٱلْءَاخِرَةِ أَعْمَىٰ وَأَضَلُّ سَبِيلًۭا.

17:72. இவ்வுலக வாழ்வில் குருட்டுத்தனமாக வாழ்ந்து வந்தால், அவனுடைய மறுமை வாழ்விலும் குருடனாகவே வாழ நேரிடும். அதாவது அத்தகையவர்களுக்கு இவ்வுலகிலும் எவ்வித சிறப்பும் இருப்பதில்லை. மறுமை வாழ்விலும் எந்த பலனும் கிடைக்காது. இத்தகையவர்களே நேர்வழியை விட்டு தவறியவர்கள் ஆவார்கள். (மேலும் பார்க்க 20:124)


وَإِن كَادُوا۟ لَيَفْتِنُونَكَ عَنِ ٱلَّذِىٓ أَوْحَيْنَآ إِلَيْكَ لِتَفْتَرِىَ عَلَيْنَا غَيْرَهُۥ ۖ وَإِذًۭا لَّٱتَّخَذُوكَ خَلِيلًۭا.

17:73. அது மட்டுமின்றி ஒரிறைக் கொள்கையை ஏற்க விரும்பாதவர்கள், (பார்க்க 17:46) “வஹீ” எனும் இறைவழிகாட்டுதலில் தங்களுடைய வழிமுறைகளையும் சேர்த்து அல்லாஹ்வின் பெயரில் இட்டுக் கட்டிக் கூறவே அவர்கள் விரும்பினார்கள். அவ்வாறு நீரும் செய்திருந்தால் உம்மை அவர்கள் உற்ற நண்பராகவும் ஆக்கிக் கொள்ளலாம் என்ற தீர்மானத்தில் இருந்தார்கள். (மேலும் பார்க்க 10:15, 11:113 & 68:9)


وَلَوْلَآ أَن ثَبَّتْنَٰكَ لَقَدْ كِدتَّ تَرْكَنُ إِلَيْهِمْ شَيْـًۭٔا قَلِيلًا.

17:74. ஆனால் இறைவழிகாட்டுதலில் உமக்குப் பூரண நம்பிக்கையும் உறுதிப்பாடும் இருந்ததால், நீர் அவர்களின் ஆசைப்படி அவர்கள் பக்கம் கொஞ்சமும் சாயவில்லை. உம்மை நேர்வழியை விட்டு திருப்பிவிடவே அவர்கள் பல்வேறு சதிகளை செய்து வந்தார்கள். அவற்றில் இதுவும் ஒன்றாகும்.


إِذًۭا لَّأَذَقْنَٰكَ ضِعْفَ ٱلْحَيَوٰةِ وَضِعْفَ ٱلْمَمَاتِ ثُمَّ لَا تَجِدُ لَكَ عَلَيْنَا نَصِيرًۭا.

17:75. அவ்வாறு நீர் அவர்கள் பக்கம் சாய்ந்திருந்தால், இவ்வுலக வாழ்விலும், மறுமை வாழ்விலும் இருமடங்கு வேதனைகளை நுகருமாறு செய்திருப்போம். பின்பு நமக்கெதிராக உமக்கு உதவியாளர் எவரையும் நீர் காணமாட்டீர்.
அல்லாஹுஅக்பர். உலகத் தலைவராம் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லிம் அவர்களுக்கே இந்தத் தண்டனை என்றால், “இஸ்லாம்” என்ற பெயரில் இன்றைக்கு ஆலிம்கள் பேசிவரும் விஷயங்கள் என்னவென்பதை சிந்தித்துப் பாருங்கள். நபி (ஸல்) அவர்கள் பெயரைப் பயன்படுத்தி ஏராளமான விஷயங்களை புனைந்து மக்களிடம் பரப்பி வருகிறார்கள். இத்தகையவர்கள் அல்லாஹ்வின் தண்டனையிலிருந்து தப்புவார்களா? போதாத குறைக்கு அன்னல் நபி அவர்களே தம் வாழ்நாளின் இறுதி கட்டத்தில் மிகவும் கஷ்டப்பட்டு உயிர் நீத்ததாக புத்தகங்களில் எழுதியுள்ளார்கள். அவர் என்ன அல்லாஹ்வை விட்டுவிட்டு காஃபிர்கள் பக்கம் சாய்ந்து விட்டாரா?


وَإِن كَادُوا۟ لَيَسْتَفِزُّونَكَ مِنَ ٱلْأَرْضِ لِيُخْرِجُوكَ مِنْهَا ۖ وَإِذًۭا لَّا يَلْبَثُونَ خِلَٰفَكَ إِلَّا قَلِيلًۭا.

17:76. ஆக இவையாவும் அவர்களுடைய சதி திட்டங்களே ஆகும். உம்மை ஏதாவது ஒரு காரணம் காட்டி ஊரைவிட்டு விரட்டிவிடவோ அல்லது உம்மை தீர்த்து கட்டவோ முடிவெடுத்துள்ளார்கள். அப்படியும் அவர்கள் உம்மை கொன்றுவிட்டால், அவர்கள் நிரந்தரமாக வாழப் போகிறார்களா? (பார்க்க 8:30)


سُنَّةَ مَن قَدْ أَرْسَلْنَا قَبْلَكَ مِن رُّسُلِنَا ۖ وَلَا تَجِدُ لِسُنَّتِنَا تَحْوِيلًا.

17:77. இப்படிப்பட்ட சதி திட்டங்களைத் தீட்டுவது புதிதான ஒன்றல்ல. காலம் காலமாக எல்லா நபிமார்கள் விஷயத்திலும் இப்படித்தான் நடந்து வந்துள்ளது. அவர்களுடைய சமூகத்தார் தம்மிடம் வந்த நபிமார்களுக்கு விதவிதமான துன்பங்களை விளைவித்தனர். அது போலவே இவர்களும் உமக்கு எதிராக பல சதி திட்டங்களை தீட்டி வருகிறார்கள். ஆக இனியும் யாராவது இறைவழிகாட்டுதலை மக்களுக்கு எடுத்துரைத்தால், இப்படித் தான் எதிர்ப்புகள் வளரும். ஏனெனில் இவையாவும் இறைவன் வகுத்த நியதிப்படி நிகழ்வதாகும். அதில் எந்த மாறுதலையும் நீங்கள் காணமாட்டீர்கள்.
ஆக இறைத்தூதர்கள் இறைவழிகாட்டுதலை எடுத்துரைப்பதும், அவற்றை மக்களில் சிலரைத் தவிர பெரும்பாலோர் நிராகரிப்பதும், அதன்பின் அவற்றை எதிர்த்து சதி திட்டங்களைத் தீட்டுவதும், இறுதியில் எதிரிகள் அழிவை சந்திப்பதும் காலம் காலமாக நடந்து வந்தவையே ஆகும். இவை யாவும் தானாக ஏற்படக் கூடிய ஒன்றல்ல. திருக்குர்ஆனின் போதனைகளை மக்களுக்கு கற்றுக் கொடுக்கும் "ஸலாத்" முறையை நிலைநிறுத்தி அதன்படி வாழ மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் போது, இந்த எதிர்ப்புகளும் மோதல்களும் ஏற்படும்.


أَقِمِ ٱلصَّلَوٰةَ لِدُلُوكِ ٱلشَّمْسِ إِلَىٰ غَسَقِ ٱلَّيْلِ وَقُرْءَانَ ٱلْفَجْرِ ۖ إِنَّ قُرْءَانَ ٱلْفَجْرِ كَانَ مَشْهُودًۭا.

17:78. இதற்காக காலை முதல் மாலை வரையில் திருக்குர்ஆனின் போதனைகளை கற்றுத் தரும் "ஸலாத்தை" நிலைநிறுத்த வேண்டியது அவசியமாகிறது. அந்த போதனைகளின் குறிப்புகளைப் பற்றி நீங்கள் விடியற்காலையில் குர்ஆனிலிருந்து தெரிந்து கொள்ள வேண்டும். ஆக பொழுது விடிவதற்கு சற்றுமுன் உள்ள நேரமே இதற்கு சரியான நேரமாகும். ஏனெனில் பகல் முழுவதும் உமக்கு ஓயாத பணிகள் உள்ளன (பார்க்க 73:7)


وَمِنَ ٱلَّيْلِ فَتَهَجَّدْ بِهِۦ نَافِلَةًۭ لَّكَ عَسَىٰٓ أَن يَبْعَثَكَ رَبُّكَ مَقَامًۭا مَّحْمُودًۭا.

17:79. அதற்கும் மேலாக அவசரக் கால சமயங்களில், சமூக பிரச்னைகளைப் பற்றி தீர்வு காண்பதற்காக திருக்குர்ஆனின் ஆய்வுகளை இரவின் ஒரு பகுதியில் முயலுங்கள். இந்த உபரியான கடமை உமக்கு மட்டுமே ஆகும். இப்படியாக தலைசிறந்த சமுதாயம் உருவாக நீர் அல்லும் பகலும் பாடுபட்டால், அனைவராலும் போற்றி பாராட்டுக்குரிய உயர்ந்த நிலையை அடையும் காலம் வெகு தூரத்தில் இல்லை. இப்படிப்பட்ட சமூக அமைப்பில் உருவாகும் ஆட்சியமைப்பே தலைசிறந்த ஆட்சியென உலகமே வியந்து பாராட்டும்.
நபி (ஸல்) அவர்களுக்கு சொல்லப்பட்ட இந்த வழிமுறை அவரைப் பின்பற்றி வரும் மூஃமின்களுக்கும் பொருந்தும். (பார்க்க 3:144) மேலும் இவ்வாசகத்தில் வரும் “மஃகாமம் மெஹ்மூதா” என்பதற்கு அனைவராலும் போற்றிப் பாராட்டப்படுகின்ற பேரரசர் என்று பொருளாகும்.


وَقُل رَّبِّ أَدْخِلْنِى مُدْخَلَ صِدْقٍۢ وَأَخْرِجْنِى مُخْرَجَ صِدْقٍۢ وَٱجْعَل لِّى مِن لَّدُنكَ سُلْطَٰنًۭا نَّصِيرًۭا.

17:80. மேலும் உங்கள் செயல் திட்டங்களில் முன்னேறிய வண்ணம் இறைவனின் உதவியை நாடுங்கள். “இறைவனே! நான் எந்த செயல்திட்டத்தில் அடியெடுத்து வைத்தாலும் உன்னுடைய உயர்ந்த நோக்கத்தை முன்வைத்தே என்னை செயல்பட வைப்பாயாக. எந்த செயல் திட்டங்களை நிறைவேற்றினாலும், உன்னுடைய நோக்கங்கள் நிறைவேற உதவி செய்வாயாக. உன் புறத்திலிருந்து வழிகாட்டுதலை பெற்று செயல்பட்டால், வெற்றி பெறுவது நிச்சயம். எனவே நீ எனக்கு எல்லா வகையிலும் உதவி செய்வாயாக”
என்பதாக உங்கள் பிரார்த்தனைகள் இருக்க வேண்டும். அவை உங்களுடைய எண்ணங்களை பிரதிப்பலிப்பதாக இருக்க வேண்டும். இப்படியாக நீங்கள் இறைவனின் செயல்திட்டங்களின் படி முன்னேறிச் செல்லுங்கள்.


وَقُلْ جَآءَ ٱلْحَقُّ وَزَهَقَ ٱلْبَٰطِلُ ۚ إِنَّ ٱلْبَٰطِلَ كَانَ زَهُوقًۭا.

17:81. இப்போது அனைத்து தரப்பு மக்களின் நலனைப் பேணிக் காக்கும் ஆட்சிமுறை ஏற்பட்டு விட்டது. எனவே போலியான அராஜக ஆட்சிமுறை முடிவுக்கு வந்து விடும். இப்படிப்பட்ட உயர் நோக்கங்களைக் கொண்ட ஆட்சி ஏற்படும்போது, அழிவை ஏற்படுத்தும் ஆட்சிமுறைக்கு இடமே இருக்காது. இந்த உண்மையை அவர்களுக்கு வெளிப்படையாக அறிவித்து விடுங்கள்.
இப்படிப்பட்ட சமூக அமைப்பும், ஆட்சியும் ஏற்படவேண்டும் என்றால், மனிதனின் தனிப்பட்ட அறிவைக் கொண்டு ஏற்படுத்த முடியாது. இதற்காக குர்ஆனின் வழிகாட்டுதல் அவசியமாகிறது. ஏனெனில்


وَنُنَزِّلُ مِنَ ٱلْقُرْءَانِ مَا هُوَ شِفَآءٌۭ وَرَحْمَةٌۭ لِّلْمُؤْمِنِينَ ۙ وَلَا يَزِيدُ ٱلظَّٰلِمِينَ إِلَّا خَسَارًۭا.

17:82. சமுதாயத்தைக் கட்டிக் காக்கும் மூஃமின்களுக்காக எல்லா சமூக பிரச்னைகளுக்கும் தீர்வு அளிக்கும் வகையில் இந்தக் குர்ஆன் இறக்கி அருளப்படுள்ளது. இதைக் பின்பற்றுவதைக் கொண்டு மூன்மின்களிடையே நிலவி வரும் குறைப்பாடுகளும், பலவீனங்களும் படிப்படியாக குறைந்து வரும். இதை எதிர்ப்பவர்களின் நிலைமை படுமோசமாகிக் கொண்டே செல்லும்.


وَإِذَآ أَنْعَمْنَا عَلَى ٱلْإِنسَٰنِ أَعْرَضَ وَنَـَٔا بِجَانِبِهِۦ ۖ وَإِذَا مَسَّهُ ٱلشَّرُّ كَانَ يَـُٔوسًۭا.

17:83. ஏனெனில் இறைவன் அளித்துள்ள “வழிகாட்டுதல்கள்” என்ற அருட்கொடைகளின் நோக்கம் என்னவென்று மனிதனுக்கு தெரிவதில்லை. இதனால் அவன், தான் பெற்ற செல்வங்கள் தனக்கு மட்டுமே சொந்தம் என நினைத்து, இறைக் கட்டளைக்கு மாறு செய்கிறான். இதன் விளைவாக சமுதாயத்தில் இருப்போர் இல்லாதோர் என்ற நிலை விரிவடைந்து, சமூக சிக்கல்கள் ஏற்பட்டு துயரங்கள் அவனை தீண்டும்போது, நிராசை அடைந்தவனாக பதறிப் போகிறான்.


قُلْ كُلٌّۭ يَعْمَلُ عَلَىٰ شَاكِلَتِهِۦ فَرَبُّكُمْ أَعْلَمُ بِمَنْ هُوَ أَهْدَىٰ سَبِيلًۭا.

17:84. இதற்கு காரணம் உலகிலுள்ள ஒவ்வொரு சமுதாயமும் அவரவர் விருப்பத்திற்கு ஏற்றவாறு சமூக அமைப்பை ஏற்படுத்தி, அதுவே சரியான பாதை என நினைத்து அவற்றை கடைப்பிடித்து வருவதே ஆகும். (பார்க்க 30:32) ஆனால் இறைவழிகாட்டுதல் மட்டுமே எது சரியான பாதை என்பதை தெள்ளத் தெளிவாக எடுத்துரைக்கிறது.


وَيَسْـَٔلُونَكَ عَنِ ٱلرُّوحِ ۖ قُلِ ٱلرُّوحُ مِنْ أَمْرِ رَبِّى وَمَآ أُوتِيتُم مِّنَ ٱلْعِلْمِ إِلَّا قَلِيلًۭا.

17:85. சமுதாயத்திற்கு உயிரோட்டம் அளிக்கும் இந்த இறைவழிகாட்டுதல் எங்கிருந்து எவ்வாறு வருகிறது என்ற கேள்வியும் மக்களிடையே இருக்கிறது. இவை யாவும் இறைவனின் “செயல் திட்டங்கள்” சம்பத்தப்பட்டவை ஆகும் என்று அவர்களிடம் கூறிவிடுங்கள். அதைப் பற்றி அறிந்து கொள்ளும் அறிவாற்றல் மனிதனிடம் இல்லை. ஏனெனில் மனிதன் சிறப்பாக வாழ எந்த அளவுக்கு அறிவாற்றல் தேவையோ, அந்த அளவே அவனுக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இறைவழிகாட்டுதல்கள் விஷயங்கள் யாவும் உலக ஆய்வுகளை மேற்கொண்டு அறிந்து கொள்கின்ற ஒன்றல்ல. அல்லது இறைத்தூதரின் உள்ளத்தில் உதிக்கின்ற விஷயங்களும் அல்ல (பார்க்க 53:3) இறைவன் புறத்திலிருந்து செய்யப்பட்ட ஏற்பாட்டின் அடிப்படையில் தரப்படுகின்ற வழிகாட்டுதலாகும். (பார்க்க 2:97) எனவே


وَلَئِن شِئْنَا لَنَذْهَبَنَّ بِٱلَّذِىٓ أَوْحَيْنَآ إِلَيْكَ ثُمَّ لَا تَجِدُ لَكَ بِهِۦ عَلَيْنَا وَكِيلًا.

17:86. நாம் உமக்கு “வஹீயாக” அறிவித்ததை போக்கிவிட வேண்டும் என்பது நம்முடைய செயல் திட்டமாக இருந்தால், அவ்வாறு நம்மால் செய்ய முடியும். அதன் பின்னர் நமக்கு எதிராக உமக்காக வாதாடக் கூடிய எவரையும் நீர் காணமாட்டீர்.
அதாவது வஹீச் செய்திகள் அனுப்புகின்ற செயல் திட்டத்தை போக்கிவிட்டு, மற்ற உயிரினங்கள் உயிர்வாழ்வது போல் தம் இயல்பின் அடிப்படையில் மனிதனையும் வாழும்படி செய்ய முடியும். ஆனால் அல்லாஹ்வின் செயல்திட்டம் அது வல்ல. வஹீச் செய்திகளை இறக்கி அருளிய பின், அவற்றை பாதுகாக்கும் பொறுப்பையும் தாமே எடுத்து கொள்ள வேண்டும் என்பதே இறைவனின் செயல் திட்டமாகும். (பார்க்க 6:116, 15:9) அவற்றை ஒருங்கிணைத்து மக்களிடம் சமர்ப்பிக்கவும் பொறுப்பு ஏற்கப்பட்டது (பார்க்க 75:17-19) எனவே அவற்றை ஏற்று நடப்பதும் ஏற்க மறுப்பதும் மனித விருப்பத்திற்கு விடப்பட்டது (பார்க்க 18:29)


إِلَّا رَحْمَةًۭ مِّن رَّبِّكَ ۚ إِنَّ فَضْلَهُۥ كَانَ عَلَيْكَ كَبِيرًۭا.

17:87. இப்படியாக உமது இறைவன் புறத்திலிருந்து கிடைக்கின்ற “வழிகாட்டுதல்கள்” யாவும் அருட்கொடைகளே ஆகும். இவையாவும் மனிதனின் அறிவுப் புலன்களுக்கு எட்டாத மிக உயர் நிலையிலிருந்து இறக்கி அருளப்படுவதாகும்.
“வஹீ” எனும் இறைவழிகாட்டுதல்கள் எவ்வாறு இறக்கி அருளப்படுகின்றன என்ற ஆராய்ச்சியில் இறங்கினால், அதனால் எந்த பலனும் யாருக்கும் கிடைக்காது. மாறாக வழிகாட்டுதல்கள் என்ன வந்துள்ளன என்பதை ஆராய்ந்து அறிந்தால், சிறப்பான வாழ்க்கைக்கு வழி கிடைக்கும். உங்களுக்கு இதில் விருப்பம் இல்லையென்றால்


قُل لَّئِنِ ٱجْتَمَعَتِ ٱلْإِنسُ وَٱلْجِنُّ عَلَىٰٓ أَن يَأْتُوا۟ بِمِثْلِ هَٰذَا ٱلْقُرْءَانِ لَا يَأْتُونَ بِمِثْلِهِۦ وَلَوْ كَانَ بَعْضُهُمْ لِبَعْضٍۢ ظَهِيرًۭا.

17:88. இந்த குர்ஆனிலுள்ள வழிகாட்டுதலைப் போலவே, உலக மக்களின் சிறந்த வாழ்விற்கான வேறு வழிமுறைகளை கொண்டுவர முயன்றுப் பாருங்கள். அதற்காக நகர்புற மக்களாயினும் நாட்டுப்புற மக்களாயினும் சரியே. உங்களில் ஒருவருக்கொருவர் உதவி புரிந்து, மனிதகுல மேம்பாட்டிற்காக வேறு சிறந்த வழிமுறைகளைக் கொண்டு வாருங்கள். இதைவிட சிறந்த வழிமுறையை உங்களில் யாராலும் கொண்டுவரவே முடியாது என்பது தான் உண்மையாகும். இதை மக்களிடம் வெளிப்படையாக அறிவித்துவிடுங்கள். மனிதன் தன் சுயஅறிவைக் கொண்டு ஏற்படுத்தியுள்ள சமூக அமைப்பைப் பற்றி கவனித்துப் பாருங்கள். தற்சமயம் உலகில் நிலவி வரும் பிரச்னைகளே, இப்படிப்பட்ட வழிமுறைகளை மனிதனால் ஒருபோதும் கொண்டுவர முடியாது என்பதற்கு ஆதாரமாகும்.


وَلَقَدْ صَرَّفْنَا لِلنَّاسِ فِى هَٰذَا ٱلْقُرْءَانِ مِن كُلِّ مَثَلٍۢ فَأَبَىٰٓ أَكْثَرُ ٱلنَّاسِ إِلَّا كُفُورًۭا.

17:89. உலக மக்கள் அனைவரும் இறைவழிகாட்டுதலை புரிந்து ஏற்றுக்கொண்டு, அதன்படி சிறப்பாகவும் பாதுகாப்பாகவும் வாழவேண்டும் என்பதற்காகவே இந்த குர்ஆனில் பல்வேறு உதாரணங்களின் மூலம் பலக் கோணங்களில் விவரித்து கூறியிருக்கிறோம். ஆனால் மக்களோ இதை ஏற்று நடப்பதாக தெரியவில்லை.


وَقَالُوا۟ لَن نُّؤْمِنَ لَكَ حَتَّىٰ تَفْجُرَ لَنَا مِنَ ٱلْأَرْضِ يَنۢبُوعًا.

17:90. மாறாக அவர்கள் அற்புதங்களை எதிர்பார்த்து ஏமார்ந்து கிடக்கின்றனர். இப்போதும் இறைத் தூதரிடம் “நீர் எங்களுக்காக ஒரு நீரூற்றைப் பீறிட்டு வரும்படி செய்து காட்டு” என்கிறார்கள். “அவ்வாறு செய்து காட்டாத வரையில் நாங்கள் இறை வழிகாட்டுதலை ஏற்றுக்கொள்ள மாட்டோம்” என்கிறார்கள்.
இதனால் ஏற்படும் நஷ்டம் யாருக்கு என்பதை அவர்கள் எண்ணிப் பார்ப்பதில்லை. அது மட்டுமின்றி, இறைத் தூதர் ஒரு சாதாரண மனிதராகவே இருக்கிறாரே. குறைந்த பட்சம் செல்வந்தராக இருந்தாலாவது நன்றாக இருந்திருக்குமே என்றும் எண்ணுகிறார்கள். நீர் சுவனத்தைப் பற்றி அடிக்கடி கூறுவது போல


أَوْ تَكُونَ لَكَ جَنَّةٌۭ مِّن نَّخِيلٍۢ وَعِنَبٍۢ فَتُفَجِّرَ ٱلْأَنْهَٰرَ خِلَٰلَهَا تَفْجِيرًا.

17:91.“பேரீட்சை மரங்களும், திராட்சைக் கொடிகளும் கொண்ட தோட்டமாவது உம்மிடம் இருந்திருக்க வேண்டுமே! அதன் நடுவே நீர் ஒலித்தோடச் செய்திருக்க வேண்டுமே! ஆனால் உம்மிடம் அப்படி எதுவுமே இல்லையே!” என்கிறார்கள்.


أَوْ تُسْقِطَ ٱلسَّمَآءَ كَمَا زَعَمْتَ عَلَيْنَا كِسَفًا أَوْ تَأْتِىَ بِٱللَّهِ وَٱلْمَلَٰٓئِكَةِ قَبِيلًا.

17:92. “அல்லது நீர் அடிக்கடி பயமுறுத்துவது போல, வானமாவது துண்டு துண்டாக இடிந்து எங்கள் மேல் விழச் செய்து காட்டிருக்க வேண்டும். எதுவரையில் அல்லாஹ்வையும் மலக்குகளையும் நேருக்கு நேராக கொண்டு வந்து காட்டுவதில்லையோ, அதுவரையில் நீங்கள் சொல்வதை ஏற்க மாட்டோம்” என்கிறார்கள்.


أَوْ يَكُونَ لَكَ بَيْتٌۭ مِّن زُخْرُفٍ أَوْ تَرْقَىٰ فِى ٱلسَّمَآءِ وَلَن نُّؤْمِنَ لِرُقِيِّكَ حَتَّىٰ تُنَزِّلَ عَلَيْنَا كِتَٰبًۭا نَّقْرَؤُهُۥ ۗ قُلْ سُبْحَانَ رَبِّى هَلْ كُنتُ إِلَّا بَشَرًۭا رَّسُولًۭا.

17:93. “அல்லது ஒரு தங்க மாளிகையாவது உமக்கு இருந்திருக்க வேண்டும். அல்லது நீங்கள் அவ்வப்போது வானத்தின் மீது ஏறிச்சென்று எங்களுக்காக எங்களுக்கு பிடித்தமான வேதத்தையாவது கொண்டு வந்திருக்க வேண்டும். இப்படி எதுவுமே இல்லாமல் நீங்கள் கொண்டு வந்துள்ள வேதம் வானுலக வேதம் என்பதை நாங்கள் எப்படி ஏற்றுக் கொள்வது?” என்று பலர் பலவாராக கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதற்கு நீங்கள், “நான் இறைவழிகாட்டுதலை எடுத்துரைக்க வந்த மனிதனே அன்றி வேறில்லை என்றும் உமது இறைவனின் வல்லமை இவற்றிற்கெல்லாம் அப்பாற்பட்டவை” என்பதையும் அவர்களுக்குத் தெளிவாக எடுத்துரைப்பீராக.


وَمَا مَنَعَ ٱلنَّاسَ أَن يُؤْمِنُوٓا۟ إِذْ جَآءَهُمُ ٱلْهُدَىٰٓ إِلَّآ أَن قَالُوٓا۟ أَبَعَثَ ٱللَّهُ بَشَرًۭا رَّسُولًۭا.

17:94. இப்போது இறைவழிகாட்டுதலை ஏற்காததற்கு அவர்கள் கூறும் காரணம், இறைத்தூதர் ஒரு சாதாரண மனிதராகவே இருக்கிறார் என்பதே ஆகும். அவர்கள் சொல்வது போல் இறைத்தூதர் ஒரு மலக்காகவோ அல்லது அபூர்வமான மனிதராகவோ இருந்திருக்க வேண்டும் என்பதே.
அப்போதாவது அவர்கள் இறைவழிகாட்டுதலை ஏற்றுக் கொண்டிருப்பார்களா? இல்லை. இவையாவும் இறைவழிகாட்டுதலை ஏற்காததற்கு அவர்கள் கூறும் சாக்கு போக்குகளே ஆகும். எனவே


قُل لَّوْ كَانَ فِى ٱلْأَرْضِ مَلَٰٓئِكَةٌۭ يَمْشُونَ مُطْمَئِنِّينَ لَنَزَّلْنَا عَلَيْهِم مِّنَ ٱلسَّمَآءِ مَلَكًۭا رَّسُولًۭا.

17:95. நீங்கள் அவர்களிடம், “இவ்வுலகில் வானவர்கள் (மலக்குகள்) வசித்திருந்து நிம்மதியாக வாழ்ந்து கொண்டிருந்தால், இறைவன் ஒரு வானவரையே வானத்திலிருந்து இறைத் தூதராக அனுப்பி இருப்பான். ஆனால் இவ்வுலகில் மனிதர்கள் வாழ்வதால் மனிதரிடமிருந்து ஒருவரை இறைத் தூதராக தேர்ந்தெடுத்து என்னை அனுப்பி இருக்கிறான்” என்று கூறிவிடுங்கள்.


قُلْ كَفَىٰ بِٱللَّهِ شَهِيدًۢا بَيْنِى وَبَيْنَكُمْ ۚ إِنَّهُۥ كَانَ بِعِبَادِهِۦ خَبِيرًۢا بَصِيرًۭا.

17:96. மேலும் அவர்களிடம், “இவ்வளவு விளக்கங்களுக்குப் பின்பும், நீங்கள் இறைவழிகாட்டுதலை ஏற்க முன்வரவில்லை என்றால், நான் உங்களை நிர்ப்பந்திக்க முடியாது. எனக்கும் உங்களுக்கும் இடையே அல்லாஹ்வின் நடைமுறைச் சட்டமே (System)) போதுமானதாகும். அது ஒவ்வொருவரின் செயலையும் கண்காணித்துக் கொண்டே வருகிறது” என்பதை அறிவித்துவிடுங்கள்.


وَمَن يَهْدِ ٱللَّهُ فَهُوَ ٱلْمُهْتَدِ ۖ وَمَن يُضْلِلْ فَلَن تَجِدَ لَهُمْ أَوْلِيَآءَ مِن دُونِهِۦ ۖ وَنَحْشُرُهُمْ يَوْمَ ٱلْقِيَٰمَةِ عَلَىٰ وُجُوهِهِمْ عُمْيًۭا وَبُكْمًۭا وَصُمًّۭا ۖ مَّأْوَىٰهُمْ جَهَنَّمُ ۖ كُلَّمَا خَبَتْ زِدْنَٰهُمْ سَعِيرًۭا.

17:97. மேலும் ஒரு விஷயத்தை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள். யார் அல்லாஹ்வின் வழிகாட்டுதலின் படி செயல்படுகிறார்களோ, அவர்களே நேர்வழி பெற்றவர் ஆவார். மாறாக யார் வழிகேட்டில் செல்ல நாடுகிறார்களோ, அவர்களுக்கு உதவி புரிவோர் வேறு எவரும் இருக்க மாட்டார்கள். மேலும் அத்தகையவர்களை நாம் இவ்வுலகில் மட்டுமின்றி, மறுமை நாளிலும் குருடர்களாகவும், ஊமைகளாகவும், செவிடர்களாகவும் ஒன்று சேர்ப்போம். இத்தகையோர் ஒதுங்குமிடம் நரகமாகவே இருக்கும். அந்த நரக வேதனைகள் குறையும் போதெல்லாம், அதை மீண்டும் அதிகமாக்கி விடுவோம்.


ذَٰلِكَ جَزَآؤُهُم بِأَنَّهُمْ كَفَرُوا۟ بِـَٔايَٰتِنَا وَقَالُوٓا۟ أَءِذَا كُنَّا عِظَٰمًۭا وَرُفَٰتًا أَءِنَّا لَمَبْعُوثُونَ خَلْقًۭا جَدِيدًا.

17:98. இந்த வேதனை எல்லாம் அவர்கள் மீதுள்ள வெறுப்பின் காரணமாக அல்ல. மாறாக அவர்கள் இறைவழிகாட்டுதலை ஏற்க மறுத்து, அவர்கள் செய்து வந்த தவறான செயல்களின் விளைவாக கிடைக்கும் வேதனைகளாகும். அவர்கள் செய்து வரும் செயல்களுக்கு கேள்வி கணக்கு கேட்கப்படும் நாள் வரும் என்றும், அதற்காக நீங்கள் மீண்டும் எழுப்பப்படுவீர்கள் என்று அவர்களிடம் சொன்ன போதெல்லாம் அவர்கள், “நாங்கள் மரித்து எலும்புகளாகவும், உக்கி மண்ணோடு மாண்ணாகவும் ஆகிவிட்ட பின்பும் நாம் புதியதொரு படைப்பாக படைக்கப்படுவோமா?” என்று ஏளனமாக சொல்லிக் கொண்டிருந்தார்களே அதற்காக அவர்களுக்கு கிடைக்கும் கூலியாகும்.
அதாவது தம் செயல்களுக்கு ஏற்ற விளைவுகள் ஏற்படும் காலம் வரும் என்பதை ஏற்று அதற்கு அஞ்சி முன் எச்சரிக்கையோடு நடந்திருந்தால், அவர்களுடைய நிலைமை இந்த அளவிற்கு மோசமாக இருந்திருக்காது.


۞ أَوَلَمْ يَرَوْا۟ أَنَّ ٱللَّهَ ٱلَّذِى خَلَقَ ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضَ قَادِرٌ عَلَىٰٓ أَن يَخْلُقَ مِثْلَهُمْ وَجَعَلَ لَهُمْ أَجَلًۭا لَّا رَيْبَ فِيهِ فَأَبَى ٱلظَّٰلِمُونَ إِلَّا كُفُورًۭا.

17:99. மனிதனை மீண்டும் எழுப்பப்படுவது பற்றி சந்தேகங் கொள்ளும் இவர்கள், பிரம்மாண்டமாக அகிலங்களையும் பூமியையும் படைக்கப்பட்டு இருப்பதை கவனித்துப் பார்க்கட்டும். இவை எல்லாம் ஒரு காலத்தில் எதுவுமே இல்லாமல் இருந்தன. ஒன்றுமே இல்லாததிலிருந்து படைக்கும் பேராற்றல் உடைய அல்லாஹ்வுக்கு, மனிதனை மீண்டும் படைப்பதில் என்ன சிரமம் இருக்கப் போகிறது? இதற்காக ஒவ்வொரு மனிதனின் வாழ்வும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்காக என்றே நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அவனுக்கு மரணம் ஏற்பட்ட பின், அவன் செய்த செயல்களின் உண்மை நிலை வெட்ட வெளிச்சமாகி விடும். இதில் யாருக்கும் எவ்வித சந்தேகமும் இருக்க வேண்டியதில்லை. இருப்பினும் அக்கிரமக்காரர்கள் இதை ஏற்க மறுக்கிறார்கள்.


قُل لَّوْ أَنتُمْ تَمْلِكُونَ خَزَآئِنَ رَحْمَةِ رَبِّىٓ إِذًۭا لَّأَمْسَكْتُمْ خَشْيَةَ ٱلْإِنفَاقِ ۚ وَكَانَ ٱلْإِنسَٰنُ قَتُورًۭا.

17:100. இதை ஏற்க மறுப்பதற்கு காரணம் என்ன? இறைவன் புறத்திலிருந்து கிடைத்துள்ள செல்வங்களை தமக்கு மட்டுமே சொந்தமாக்கிக் கொள்ள வேண்டும் என்ற பேராசை தான். இறைவழிகாட்டுதலை ஏற்றுக்கொண்டால், அவற்றை சமூக மேம்பாட்டிற்காக செலவழிக்க வேண்டி வருமே. எனவே தான் அவன் இத்தனை விதண்டா வாதம் செய்கிறான். ஆக இறைவழிகாட்டுதலை ஏற்காத மனிதனிடத்தில் உலோபித்தனம் வளர்ந்து விடுகிறது.
அவர்களுடைய இந்த மனப்பான்மைதான் உமக்கு எதிராக செயல்பட தூண்டுகிறது. இவை யாவும் இப்போதைய மக்களிடம் மட்டும் இருக்கும் பழக்க வழக்கமல்ல. காலம் காலமாக இறைவழிகாட்டுதல் இல்லாத மக்களிடம் இப்படிப்பட்ட எண்ணங்கள் வளர்ந்தே வந்துள்ளன. உதாரணமாக மூஸா நபி காலத்தில் வாழ்ந்த ஃபிர்அவ்னிய சமுதாயத்தினரிடமும் இப்படிப்பட்ட எண்ணங்களே இருந்தன.


وَلَقَدْ ءَاتَيْنَا مُوسَىٰ تِسْعَ ءَايَٰتٍۭ بَيِّنَٰتٍۢ ۖ فَسْـَٔلْ بَنِىٓ إِسْرَٰٓءِيلَ إِذْ جَآءَهُمْ فَقَالَ لَهُۥ فِرْعَوْنُ إِنِّى لَأَظُنُّكَ يَٰمُوسَىٰ مَسْحُورًۭا.

17:101. மூஸா நபி காலத்தில் ஃபிர்அவ்னுக்கும் அவனுடைய சமுதாயத்திற்கும் ஏற்பட்ட அழிவுக்கு முன்பு (பார்க்க 7:137) சிறிய சிறய வேதனைகளை நம் அத்தாட்சிகளாக ஒன்பது முறை இறக்கினோம். அப்போது அவர்கள் இஸ்ரவேலர்களிடம் எவ்வாறு நடந்து கொண்டார்கள் என்பதை அவர்களிடமே கேளுங்கள். (பார்க்க 7:133-136) இதற்கு முன் மூஸா நபி ஃபிர்அவ்னிடம் அல்லாஹ்வின் வழிகாட்டுதலை அறிவுப்பூர்வமாகவும், ஆதாரப்பூர்வமாகவும் எடுத்துரைத்த போது, “மூஸாவே! நிச்சயமாக இவையாவும் மக்களை வசியப்படுத்தும் சூனியம் என்றே கருதுகிறேன்” என்று தான் கூறினான்.


قَالَ لَقَدْ عَلِمْتَ مَآ أَنزَلَ هَٰٓؤُلَآءِ إِلَّا رَبُّ ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضِ بَصَآئِرَ وَإِنِّى لَأَظُنُّكَ يَٰفِرْعَوْنُ مَثْبُورًۭا.

17:102. அதற்கு மூஸா நபி ஃபிர்அவ்னிடம், “நான் உம்மிடம் எடுத்துரைத்த ஆதாரப்பூர்வமான வழிகாட்டுதல்கள் யாவும் வானங்களையும் பூமியையும் படைத்த இறைவனிடமிருந்து வந்தவை தான் என்பதை நீர் அறிகின்றாய். இருப்பினும், இவற்றை நீ ஏற்க மறுப்பதால், உமக்கு அழிவு நிச்சயம் என்றே நான் எண்ணுகிறேன்” என்றார்.


فَأَرَادَ أَن يَسْتَفِزَّهُم مِّنَ ٱلْأَرْضِ فَأَغْرَقْنَٰهُ وَمَن مَّعَهُۥ جَمِيعًۭا.

17:103. எனவே மூஸா நபியையும் அவரை சார்ந்தவர்களையும் ஒழித்துக்கட்ட ஃபிர்அவ்ன் நாடினான். ஆனால் அல்லாஹ்வின் நியதிப்படி ஃபிர்அவ்னும் அவனுடைய படையினருமே அழிந்து போனார்கள்.


وَقُلْنَا مِنۢ بَعْدِهِۦ لِبَنِىٓ إِسْرَٰٓءِيلَ ٱسْكُنُوا۟ ٱلْأَرْضَ فَإِذَا جَآءَ وَعْدُ ٱلْءَاخِرَةِ جِئْنَا بِكُمْ لَفِيفًۭا.

17:104. இப்படியாக ஃபிர்அவ்னின் வேதனையிலிருந்து மீண்டு வந்த இஸ்ரவேலர்களை, பாலஸ்தீன நாட்டில் நிம்மதியாக வாழும்படி அறிவுறுத்தினோம். நீங்களும் இறைவழிகாட்டுதலுக்கு மாற்றமாக செயல்பட்டால், உங்களுக்கும் அழிவு நிச்சயம் என்று எச்சரிக்கை செய்தோம். இறைவனின் இந்த வாக்கு ஒருபோதும் மாறாது என்பதையும் எச்சிரிக்கை செய்தோம்.
ஆனால் அவர்கள் இறைவழிகாட்டுதலுக்கு மாற்றமாக செயல்பட்டு இருமுறை அழிவை சந்தித்துக் கொண்டனர். (பார்க்க 17:4-7)


وَبِٱلْحَقِّ أَنزَلْنَٰهُ وَبِٱلْحَقِّ نَزَلَ ۗ وَمَآ أَرْسَلْنَٰكَ إِلَّا مُبَشِّرًۭا وَنَذِيرًۭا.

17:105. இறைவன் புறத்திலிருந்து இறக்கி அருளப்படும் விஷயங்கள் யாவும் கற்பனைக் கதைகள் அல்ல. நடந்து முடிந்த உண்மைகள் அப்படியே இறக்கி அருளப்படுகின்றன. இவற்றை நீங்களும் நன்கு ஆராய்ந்து அறிந்து அதற்கேற்றவாறு வாழ்ந்தால், உங்களுடைய வாழ்வும் சிறக்கும் என்பதையும், அதற்கு மாற்றமாக செயல்பட்டால், விபரீத விளைவுகளை சந்திக்க வேண்டிவரும் என்பதையும் எச்சரிக்கை செய்யவே இவை உங்களுக்கு அளிக்கப்படுகின்றன.


وَقُرْءَانًۭا فَرَقْنَٰهُ لِتَقْرَأَهُۥ عَلَى ٱلنَّاسِ عَلَىٰ مُكْثٍۢ وَنَزَّلْنَٰهُ تَنزِيلًۭا.

17:106. இறைவனின் இதே செயல் திட்டப்படி இந்தக் குர்ஆனும் இறக்கி அருளப்பட்டது. மக்கள் மனதில் நன்றாக பதியும் படி இவ்வேதத்திலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக எடுத்துரைத்து, அவர்களை நேர்வழிபடுத்த வேண்டும். எனவே தான் இதை ஒட்டுமொத்தமாக இறக்காமல், சிறிது சிறிதாக படிப்படியாக இறக்கியருளினோம்.
இந்த குர்ஆனிலுள்ள விஷயங்களின் குறிப்புகளை எளிதாகப் பார்த்து அறிந்து கொள்வதற்காக அத்தியாயங்களாகவும், பகுதி பகுதிகளாகவும் பிரிக்கப்பட்டுள்ளது. இதனால் மனித வாழ்க்கை சம்பந்தப்பட்ட எந்த வழிகாட்டுதலானாலும், இதன் மூலம் எளிதாக தெரிந்து கொள்ளலாம்.


قُلْ ءَامِنُوا۟ بِهِۦٓ أَوْ لَا تُؤْمِنُوٓا۟ ۚ إِنَّ ٱلَّذِينَ أُوتُوا۟ ٱلْعِلْمَ مِن قَبْلِهِۦٓ إِذَا يُتْلَىٰ عَلَيْهِمْ يَخِرُّونَ لِلْأَذْقَانِ سُجَّدًۭا.

17:107. இறைவழிகாட்டுதலை எடுத்துரைப்பவரே! நீர் மக்களிடம், “இந்த குர்ஆனின் போதனைகளை ஏற்றுக் கொண்டாலும் ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் இதிலுள்ள கொள்கை கோட்பாடுகளில் எந்த மாற்றமும் ஏற்படப் போவதில்லை. முந்தைய வேத ஞானம் பெற்றவர்கள், இதில் சொல்லப்படும் அறிவுப்பூர்வமான விஷயங்களை கேட்டவுடன், அதன் முன் தலைசாய்த்து முழு மனதுடன் ஏற்று கொள்வார்கள்” என்று அறிவித்து விடுவீராக.(பார்க்க 5:83)


وَيَقُولُونَ سُبْحَٰنَ رَبِّنَآ إِن كَانَ وَعْدُ رَبِّنَا لَمَفْعُولًۭا.

17:108. மேலும் அவர்கள், “எங்கள் இறைவன் மிகவும் பரிசுத்தமானவன். எங்களுடைய இறைவனின் வாக்குறுதி நிறைவேறியே தீரும்” என்றும் கூறுவார்கள்.
அதாவது இறைவனின் செயல்திட்டப்படி இறுதியாக முஹம்மது நபி அவர்கள் மூலமாக நிறைவான வேதம் இறக்கி அருளப்படும் என்று அவர்களுடைய வேதத்தில் குறிப்பிடப்பட்டு இருப்பதற்கு இணங்க, இந்த வேதம் இறக்கி அருளப்படுகிறது என்பதை அவர்கள் தெரிந்து கொள்வார்கள். (பார்க்க 7:157)


وَيَخِرُّونَ لِلْأَذْقَانِ يَبْكُونَ وَيَزِيدُهُمْ خُشُوعًۭا ۩.

17:109. இன்னும் இதில் சொல்லப்படுகின்ற விஷயங்களை கேட்டு, அவர்களுடைய கண்களில் நீர் மல்க உள்ளச்சப்பாடுடன் மனதார ஏற்றுக் கொள்வார்கள் (மேலும் பார்க்க 5:83-84)
இதை விட்டுவிட்டு வெறும் வார்த்தைகளை உச்சரித்துக் கொண்டிருப்பதால் உயர்வும் கண்ணியமும் கிடைத்து விடும் என்று எண்ணிக் கொள்ளாதீர்கள். அதன்படி இறைவனுக்கு கற்பனைப் பெயர்களைச் சூட்டி கொள்ளாதீர்கள். எனவே


قُلِ ٱدْعُوا۟ ٱللَّهَ أَوِ ٱدْعُوا۟ ٱلرَّحْمَٰنَ ۖ أَيًّۭا مَّا تَدْعُوا۟ فَلَهُ ٱلْأَسْمَآءُ ٱلْحُسْنَىٰ ۚ وَلَا تَجْهَرْ بِصَلَاتِكَ وَلَا تُخَافِتْ بِهَا وَٱبْتَغِ بَيْنَ ذَٰلِكَ سَبِيلًۭا.

17:110. அல்லாஹ்வை, அல்லாஹ் என்றோ அர்ரஹ்மான் என்றோ அழையுங்கள். அல்லது குர்ஆனிலுள்ள எப்பெயரைக் கொண்டு அழைத்தாலும் சரியே, அது அவனுடைய முழு வல்லமைகளையும் சிறப்பு குணநலங்களையும் பிரதிபலிப்பதாகவே உள்ளன. அப்படியும் அல்லாஹ்வுக்கு அழகிய குணநலப் பெயர்கள் பல உண்டு. மேலும் நீங்கள் உங்கள் போதனைக் கூடங்களில் நடத்தி வரும் "கூட்டு ஸலாத்தில்", மிகவும் உரக்கமாகவோ அல்லது மிக மிக மெதுவாகவோ எடுத்துரைக்காதீர்கள். இவை இரண்டிற்கும் இடையே உள்ள நடுத்தரமான வழியைக் கடைபிடியுங்கள்.
இப்போது இருக்கின்ற கேள்வி, அல்லாஹ்வை அவனுடைய எந்த சிறப்புக் குணநலங்களின் பெயரைக் கொண்டு அழைப்பது என்பதல்ல. மாறாக எந்த சிறப்பு குணநலன்களை அல்லாஹ் தன்னகத்தே கொண்டுள்ளானோ, அவனுடைய வழிகாட்டுதலைப் பின்பற்றுவது என்பதே ஆகும். எனவே அல்லாஹ் தன்னைப் பற்றி எந்த அளவுக்கு திருக்குர் ஆனில் சொல்லி இருக்கிறானோ, அவற்றையே உளப்பூர்வமாக ஏற்றுக்கொள்ள வேண்டும்.
மேலும் அவனுடைய வழிகாட்டுதலைக் கொண்டு, அல்லாஹ்வின் சிறப்பு குணநலன்களை சமுதாய மக்களுள் வளர்க்க போதனைகள் இருக்கவேண்டியது மிகமிக அவசியம். இந்த சிறப்புக் குணநலன்களை தவறாகப் பயன்படுத்துதல் கூடாது (பார்க்க 2:138, 7:180). ஆனால் இதையெல்லாம் கவனிக்காமல் அல்லாஹ்வுக்கு பிள்ளை குட்டிகள் இருப்பதாக கற்பனை செய்து பேசி வருவது சரியாகுமா?


وَقُلِ ٱلْحَمْدُ لِلَّهِ ٱلَّذِى لَمْ يَتَّخِذْ وَلَدًۭا وَلَمْ يَكُن لَّهُۥ شَرِيكٌۭ فِى ٱلْمُلْكِ وَلَمْ يَكُن لَّهُۥ وَلِىٌّۭ مِّنَ ٱلذُّلِّ ۖ وَكَبِّرْهُ تَكْبِيرًۢا.

17:111. இறைவழிகாட்டுதலை எடுத்துரைப்பவரே! நீர் மக்களிடம், “நீங்கள் கூறுவது போல் அல்லாஹ்வுக்கு எந்த மகனும் இல்லை. அவனை யாரும் பெற்றெடுக்கவும் இல்லை. அவனுடைய அதிகாராத்தில் யாருடைய தலையீடும் ஒருபோதும் இருக்கவும் முடியாது. ஓரிறைவனாகிய அல்லாஹ் அனைத்து சக்திகளையும் (Supreme Power) தன்னகத்தே கொண்டிருக்கும் வல்லமை பெற்றவன். அவனுக்கு யாருடைய துணையும் தேவையில்லை. போற்றுதலுக்கும் பாராட்டுக்கும் உரிய அல்லாஹ்வின் தனித்தன்மை இதுவே ஆகும்.
வானுலகில் எவ்வாறு அல்லாஹ்வின் செயல்திட்டங்கள் சிறப்பாக செயல்பட்டு பாராட்டுக்குரியதாக விளங்குகின்றனவோ, அவ்வாறே மனிதனும் இறைவழிகாட்டுதலை பின்பற்றி நடந்தால்,அங்கு உருவாகும் சமூக அமைப்பு பாராட்டுக்கும் பெருமைக்கும் உரியதாக விளங்கும்.