بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ

16:0.அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் அறிவுரைப்படியே அனைத்துக் காரியங்களையும் செய்ய நாடுகிறேன். (பார்க்க 6:162)
இறைவழிகாட்டுதலை ஏற்றுக்கொள்ளாமல், தம் மன இச்சையின்படி செயல்படும் சமுதாயம், அழிவை சந்திக்கும் என்று இறைத்தூதர் மக்களிடம் அவ்வப்போது எடுத்துரைக்கிறார். அந்த அழிவு எப்போது வரும் என்று அம்மக்களும் இவரிடம் அடிக்கடி கேட்கிறார்கள். (பார்க்க 29:54) ஏதோ அந்த அழிவுகள் எற்படுவது சந்தோஷமான விஷயமா?


أَتَىٰٓ أَمْرُ ٱللَّهِ فَلَا تَسْتَعْجِلُوهُ ۚ سُبْحَٰنَهُۥ وَتَعَٰلَىٰ عَمَّا يُشْرِكُونَ.

16:1. அல்லாஹ் நிர்ணயித்துள்ள விதிமுறைகளின்படி, அவர்களுக்கு ஏற்படவிருக்கும் அழிவுக்கான அறிகுறிகள் உருவாகி வருகின்றன. அதற்காக நீங்கள் யாரும் அவசரப்பட வேண்டியதில்லை. அவர்கள் ஏற்படுத்தி வைத்திருக்கும் கற்பனை தெய்வங்கள், அல்லாஹ்வின் அழிவிலிருந்து காப்பாற்றும் சக்தி பெற்றவை என்ற மிதப்பில் இருக்கிறார்கள். ஆனால் அல்லாஹ்வின் வல்லமையோ அவர்களுடைய கற்பனைகளுக்கெல்லாம் அப்பாற்பட்டதாகும்.
மேலும் வஹீ என்னும் இறைவழிகாட்டுதல்கள், யார் வேண்டுமானாலும் தன் சுய அறிவைக் கொண்டு ஏற்படுத்திக் கொள்ளுகின்ற விஷயம் தான் என எண்ணிக் கொள்கிறார்கள். (பார்க்க 6:93) அப்படி அல்ல. அவை அகிலங்கள் அனைத்தையும் படைத்து பரிபாலிக்கும் வல்லமையுடைய ஏக இறைவனகிய அல்லாஹ்வின் புறத்திலிருந்து இறக்கி அருளப்படுகின்ற செயல் திட்டங்களே ஆகும்.


يُنَزِّلُ ٱلْمَلَٰٓئِكَةَ بِٱلرُّوحِ مِنْ أَمْرِهِۦ عَلَىٰ مَن يَشَآءُ مِنْ عِبَادِهِۦٓ أَنْ أَنذِرُوٓا۟ أَنَّهُۥ لَآ إِلَٰهَ إِلَّآ أَنَا۠ فَٱتَّقُونِ.

16:2. அல்லாஹ்வின் செயல் திட்டத்தின் படி “வஹீ” என்னும் இறைவழிகாட்டுதல்கள், பிரபஞ்ச இயற்கைச் சக்திகளாகிய "மலக்குகள்" மூலமாக, யார் அதற்கு தகுதியானவராக இருக்கிறாரோ, அவருடைய உள்ளத்தில் இறக்கி அருளப்படுகின்றன (பார்க்க 2:97). இந்த வழிகாட்டுதல்கள் இறக்கி அருளப்படுவதன் நோக்கமே, அகிலங்கள் அனைத்திலும் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருடைய அதிகாரமும் செயல்படுவதில்லை என்பதையும், மனித இனமும் அவனுடைய கட்டளைக்கே அடிபணிந்து செயல்படவேண்டும் என்பதையும் மக்களுக்கு விளக்குவதற்காகவே ஆகும். அவ்வழிகாட்டுதலின் படி செயல்படவில்லை என்றால் அதனால் ஏற்படும் விபரீத விளைவுகளைப் பற்றி எடுத்துரைத்து, எச்சரிக்கை செய்யவே இவை இறக்கி அருளப்படுகின்றன.
எனவே ஏக இறைவனாகிய அல்லாஹ் மனித கற்பனையில் வடிந்த கடவுள் அல்ல.


خَلَقَ ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضَ بِٱلْحَقِّ ۚ تَعَٰلَىٰ عَمَّا يُشْرِكُونَ.

16:3. அந்த வழிகாட்டுதல்கள் யாவும் அகிலங்கள் அனைத்தையும், பூமியையும் ஆக்கப்பூர்வமான நோக்கங்களுக்காகவே படைத்த ஏக இறைவனாகிய அல்லாஹ்வின் புறத்திலிருந்து அருளப்படுவதாகும். இறைச் செயல்திட்டங்கள் யாவும் மனித கற்பனைகளுக்கெல்லாம் அப்பாற்பட்டவை ஆகும்.
ஏக இறைவனின் படைப்புகளைப் பற்றி சற்று சிந்தித்துப் பாருங்கள். அவை அனைத்தும் எவ்வாறு ஆக்கப்பூர்மான பலன்களை தரும் வகையில் படைக்கப்பட்டுள்ளன என்பதை நீங்களே அறிந்து கொள்வீர்கள். முதலில் மனித படைப்பையே எடுத்துக் கொள்ளுங்கள்.


خَلَقَ ٱلْإِنسَٰنَ مِن نُّطْفَةٍۢ فَإِذَا هُوَ خَصِيمٌۭ مُّبِينٌۭ.

16:4. இவ்வுலகில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் அணு அளவில் இருக்கும் இந்திரியத் துளியிலிருந்து கருவாகி, பலப் படித்தரங்களைக் கடந்து பிறக்கிறது என்பதை கவனியுங்கள். இருந்தும் மனிதன் இந்த படைப்பின் மகத்துவத்தை அறிவதில்லை.
அல்லாஹ்வின் ஆக்கப்பூர்வமான செயல்திட்டம் நடைபெறுவதால் தான், இந்திரியத் துளி பல படித்தரங்களை கடந்து குழந்தையாக வளர்ந்து பிறக்கிறது என்பதை எண்ணிப் பாருங்கள். ஒவ்வொரு மனித சரீரத்திலும் ஒரு உலகமே ஐக்கியமாகி உள்ளது என்று சொன்னாலும் அது மிகையாகாது. இப்படி யாரால் படைக்க முடியும்? அது மட்டுமா?


وَٱلْأَنْعَٰمَ خَلَقَهَا ۗ لَكُمْ فِيهَا دِفْءٌۭ وَمَنَٰفِعُ وَمِنْهَا تَأْكُلُونَ.

16:5. இறைவனின் இயற்கை படைப்புகளில், கால்நடைகளின் படைப்புகளைப் பற்றியும் சிந்தித்துப் பாருங்கள். அவை யாவும் எவ்வாறு பலனளிக்கும் வகையில் படைக்கப்பட்டுள்ளன என்பதையும் கவனியுங்கள். குளிர் காலங்களில் அணிவதற்கு இதமான ஆடைகளை செய்து கொள்ள தோல்களும் மற்றும் பல நன்மைகளும் அவற்றைக் கொண்டு உங்களுக்கு கிடைக்கின்றன. அது மட்டுமின்றி உங்களுக்காக ருசி மிக்க மாமிசமும் அவற்றிலிருந்தே கிடைக்கிறது.


وَلَكُمْ فِيهَا جَمَالٌ حِينَ تُرِيحُونَ وَحِينَ تَسْرَحُونَ.

16:6. இது மட்டுமின்றி அவை காலையில் மேய்வதற்கு செல்லும் போதும், மாலையில் திரும்பி உங்கள் வீட்டுக்கு வருவதும் உங்கள் கண்களுக்கு எவ்வளவு குளிர்ச்சியாகவும் அழகாகவும் இருக்கிறது என்பதையும் கவனியுங்கள்.


وَتَحْمِلُ أَثْقَالَكُمْ إِلَىٰ بَلَدٍۢ لَّمْ تَكُونُوا۟ بَٰلِغِيهِ إِلَّا بِشِقِّ ٱلْأَنفُسِ ۚ إِنَّ رَبَّكُمْ لَرَءُوفٌۭ رَّحِيمٌۭ.

16:7. மேலும் நீங்கள் சுமக்க முடியாத சுமைகளை சுமந்து செல்ல அவை பெருமளவு உதவுகின்றன என்பதையும் கவனியுங்கள். இப்படிப்பட்ட சிறந்த ஏற்பாடுகளை செய்து கொடுத்த அல்லாஹ் மிகவும் இரக்கமுடையவன் அல்லவா?


وَٱلْخَيْلَ وَٱلْبِغَالَ وَٱلْحَمِيرَ لِتَرْكَبُوهَا وَزِينَةًۭ ۚ وَيَخْلُقُ مَا لَا تَعْلَمُونَ.

16:8. மேலும் நீங்கள் சவாரி செய்து பயணம் செய்வதற்காக குதிரைகள், கோவேறு கழுதைகள், கழுதைகள் ஆகியவை படைக்கப்பட்டுள்ளன. இவையாவும் உங்கள் வாழ்வை அலங்கரிக்கின்றன அல்லவா? இப்படியாக நீங்கள் அறியாத பலவற்றைப் படைக்கும் பேராற்றலுடையவன் தான் அல்லாஹ்.
இந்த உயிரினங்களின் வாழ்க்கை முறையை கவனித்துப் பாருங்கள். அவை அனைத்தும் தத்தம் இயல்பின் அடிப்படையில் செயல்படுவதை நீங்கள் அறிவீர்கள். அவை ஒவ்வொன்றும் எவ்வாறு வாழவேண்டும் என்ற விதிமுறையை நிர்ணயித்தது அல்லாஹ் தான். அவற்றில் எதுவும் அந்த விதிமுறைக்கு மாற்றமாக ஒருபோதும் செயல்பட முடியாது. ஆனால் மனிதனை பொருத்த வரையில் மற்ற உயிரினங்களைப் போல் தம் இயல்பின் அடிப்படையில் செயல்படும் கட்டாயத்தில் இல்லை. மனிதனுக்கு முழு சுதந்திரம் அளிக்கப்பட்டு விட்டதால்,


وَعَلَى ٱللَّهِ قَصْدُ ٱلسَّبِيلِ وَمِنْهَا جَآئِرٌۭ ۚ وَلَوْ شَآءَ لَهَدَىٰكُمْ أَجْمَعِينَ.

16:9. அவன் எவ்வாறு வாழவேண்டும் என்பதை “வஹீ” எனும் இறைவழிகாட்டுதல்கள் மூலம் அறிவித்து விடுவது என்பதே அல்லாஹ்வின் செயல்திட்டமாகும். எனவே அவன் இறைவழிகாட்டுதலை ஏற்று நடப்பதும், மறுப்பதும் மனிதனின் விருப்பத்திற்கு விடப்பட்ட விஷயமாகும். (பார்க்க 18:29) மற்ற உயிரினங்களைப் போன்று மனிதனையும் ஒரே திசையில் செயல்படும்படி படைக்க அல்லாஹ் நாடியிருந்தால் அவன் அவ்வாறே படைத்திருக்க முடியும்.
இவ்வுலகில் வாழும் உயிரினங்களின் விஷயத்திற்குப் பின், வெளி உலகில் செயல்படும் இறைவனின் படைப்புகளைப் பற்றி சிந்தித்துப் பாருங்கள்.


هُوَ ٱلَّذِىٓ أَنزَلَ مِنَ ٱلسَّمَآءِ مَآءًۭ ۖ لَّكُم مِّنْهُ شَرَابٌۭ وَمِنْهُ شَجَرٌۭ فِيهِ تُسِيمُونَ.

16:10. இறைவன் நிர்ணயித்த விதிமுறைகளின் படியே வானத்திலிருந்து மழை பொழிகிறது. அதிலிருந்து உங்களுக்கு குடிநீரும் கிடைக்கிறது. அந்த மழை நீரைக் கொண்டு புற்பூண்டுகளும், மரம் செடிகளும் வளர்கின்றன. இவை அனைத்தும் கால் நடைகளுக்கு இரையாகவும் அமைகின்றன.


يُنۢبِتُ لَكُم بِهِ ٱلزَّرْعَ وَٱلزَّيْتُونَ وَٱلنَّخِيلَ وَٱلْأَعْنَٰبَ وَمِن كُلِّ ٱلثَّمَرَٰتِ ۗ إِنَّ فِى ذَٰلِكَ لَءَايَةًۭ لِّقَوْمٍۢ يَتَفَكَّرُونَ.

16:11. அந்த மழை நீரைக் கொண்டே, நீங்கள் விவசாயம் செய்து பயிர்களையும், ஒலிவம் எனும் ஜைத்தூன் மரங்களையும், பேரீத்த மரங்களையும் இன்னும் எல்லா வகையான கனி வகைகளையும் வளர்த்துக் கொள்கிறீர்கள். ஆக அவற்றை உங்களுக்கு உணவாக விளைவிப்பவன் அல்லாஹ் தானே. இவையாவும் அல்லாஹ்வின் பரிபாலன சட்டத்தின் கீழ் செய்யப்பட்ட ஏற்பாடுகள் ஆயிற்றே! இவற்றை உருவாக்கும் ஆற்றல் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருக்கும் ஒருபோதும் கிடையாது. சிந்தித்து செயல்படும் மக்களுக்கு இறைவன் படைத்த இயற்கைப் படைப்புகளின் அத்தாட்சிகள் பல கிடைக்கும்.


وَسَخَّرَ لَكُمُ ٱلَّيْلَ وَٱلنَّهَارَ وَٱلشَّمْسَ وَٱلْقَمَرَ ۖ وَٱلنُّجُومُ مُسَخَّرَٰتٌۢ بِأَمْرِهِۦٓ ۗ إِنَّ فِى ذَٰلِكَ لَءَايَٰتٍۢ لِّقَوْمٍۢ يَعْقِلُونَ.

16:12. மேலும் அவனே இரவையும் பகலையும் மாறிமாறி வரும்படியாகவும் சூரியனையும், சந்திரனையும், நட்சத்திரங்களையும் கோள்களையும் படைத்து உங்கள் வாழ்க்கைக்கு உறுதுணையாக செயல்படும்படி ஆக்கிவைத்ததும் அல்லாஹ் தான். இறைவனின் இயற்கைப் படைப்புகளை ஆய்வு செய்யும் அறிவுடைய மக்களுக்கு இவையாவும் அத்தாட்சிகளாக இருக்கின்றன.
அதாவது பகல் பகலாகவே இருந்து, இரவு இரவாகவே இருந்தால், எந்த உயிரினமும் உயிர் வாழ சாத்தியமில்லை. மேலும் உணவு உற்பத்திக்கு, சூரியனின் வெப்பம் தேவைப்படுகிறது. மேலும் இரவு நேர குளிர்ச்சியைக் கொண்டு மரம் செடிகள் தம் கனிகளை (starch) உருவாக்கும் சக்தியையும் பெறுகின்றன. இரவு ஏற்படாமல் பகலாகவே இருந்தால் வெப்பம் தாங்காமல் அனைத்துமே மடிந்து போகும்.
மேலும் இந்த பூமியில் உயிரினங்கள் உயிர்வாழ சந்திரனின் புவி ஈர்ப்புச் சக்தியும் முக்கியமான ஒன்றாகும். பூமிக்கும் சந்திரனுக்கும் உள்ள இடைவெளி சற்றே தள்ளிப் போயி விட்டாலும் அல்லது சற்றே சமீபமாக வந்து விட்டாலும், இங்குள்ள உயிரினங்கள் சின்னாபின்னமாகி விடும். இவையாவும் இறைவனின் கட்டளைப்படி கட்டுக் கோப்பாக செயல்படுவதால் தான், மனிதனால் இவ்வுலகில் சிறப்பாக உயிர் வாழ முடிகிறது.
மேலும் சூரியன் சந்திரன் மற்றும் நட்சத்திரங்களை நீங்கள் பயன்படுத்தும் வகையில் படைக்கப்பட்டு உள்ளதாக சொல்லப்படுகிறது. இவற்றின் செயல்பாடுகளைப் பற்றி நமக்கு தெரிந்தால் தான் அவற்றைப் பயன்படுத்திக் கொள்ளும் முறையை நம்மால் அறிந்து கொள்ள முடியும். எனவே அறிவியல் ஆய்வு கூடங்களை ஏற்படுத்தி மக்களை வான்மண்டல ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் சிறந்த அறிஞர்களாக - ஆலிம்களாக (பார்க்க 35:27-28) உருவாக்குவது ஒவ்வொரு அரசின் கடமையுமாகும். ஏனெனில் ஆய்ந்தறியக் கூடிய மக்களுக்குத் தான் இதில் அத்தாட்சிகள் பல கிடைக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது.


وَمَا ذَرَأَ لَكُمْ فِى ٱلْأَرْضِ مُخْتَلِفًا أَلْوَٰنُهُۥٓ ۗ إِنَّ فِى ذَٰلِكَ لَءَايَةًۭ لِّقَوْمٍۢ يَذَّكَّرُونَ.

16:13. அதன்பின் வான் மண்டலத்திலிருந்து கீழிறங்கி, நீங்கள் வாழும் பூமியின் பக்கம் கவனம் செலுத்துங்கள். இறைவனின் பரிபாலன ஏற்பாடுகளின்படி வண்ண வண்ண செடி கொடிகளும், உயிர் பிராணிகளும், பறவைகளும் எவ்வளவு அழகாகப் படைக்கப்பட்டுள்ளன என்பதையும் கவனியுங்கள். இறைவனின் இயற்கை படைப்புகளைப் பற்றி ஆய்வு செய்யும் மக்களுக்கு இவையாவும் அத்தாட்சிகளாக இருக்கின்றன.
அதாவது ஒரே நீரின் தன்மையைக் கொண்டு உருவாகும் செடி கொடிகள், உயிரினங்கள் மற்றும் பறவைகள் யாவும் பல்வேறு நிறங்களையும், தன்மைகளையும் உடையதாக இருப்பதை கவனித்துப் பாருங்கள். அவையாவும் மனிதனுக்கு உணவாகவும், மருத்துவ மூலிகைகளாகவும் உதவுகின்றன என்பதை சிந்தித்துப் பாருங்கள். எனவே இவற்றை ஆய்வு செய்து மக்களின் நல் வாழ்விற்காக பாடுபடுபவர்களே மூஃமின்கள் ஆவார்கள். (பார்க்க 3:190-191). அவற்றை ஆய்வு செய்பவர்களை உலமாக்கள் (Scientist) என்கிறது. (பார்க்க 35:27-28)


وَهُوَ ٱلَّذِى سَخَّرَ ٱلْبَحْرَ لِتَأْكُلُوا۟ مِنْهُ لَحْمًۭا طَرِيًّۭا وَتَسْتَخْرِجُوا۟ مِنْهُ حِلْيَةًۭ تَلْبَسُونَهَا وَتَرَى ٱلْفُلْكَ مَوَاخِرَ فِيهِ وَلِتَبْتَغُوا۟ مِن فَضْلِهِۦ وَلَعَلَّكُمْ تَشْكُرُونَ.

16:14. நிலத்தின் வளத்தைப் பற்றி ஆய்வுகளுக்குப் பின், நீர்வள ஆராய்ச்சிகளின் பக்கம் வாருங்கள். கடல்களையும் சமுத்திரங்களையும் (Rivers,Seas and Oceans) உங்களுக்கு பல்வேறு பலன்கள் கிடைக்கும்படியாகப் படைத்ததும் அல்லாஹ்தான். ஆழ்கடல் ஆராய்ச்சிகளை (Oceanography) மேற்கொண்டு, ருசிமிக்க உணவாகத் திகழும் மீன்களையும், உங்களை அலங்கரித்துக் கொள்ள அழகான ஆபரணங்களாக இருக்கும் முத்து, பவளம் போன்றவற்றை பெற்றுக் கொள்ளும்படி ஏற்பாடுகளை செய்ததும் அல்லாஹ்தான்.
அது மட்டுமின்றி கடல் நீரைப் பிளந்து கொண்டு வேகமாய் செல்லும் கப்பல்களையும் நீங்கள் பார்க்கிறீர்கள். அவற்றைக் கொண்டு உலகிலுள்ள பல்வேறு இடங்களுக்கு சென்று உணவு வகைகள் மற்றும் வணிகப் பொருட்கள் போன்ற இறைவனின் அருட்கொடைகளை எளிதாக எடுத்துச் செல்ல முடிகிறது. இப்படியாக உலக மக்கள் அனைவரும் தத்தம் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள அவை பெரிதும் உதவுகின்றன.
ஆக இந்த படைப்புகள் யாவும் ஆக்கப்பூர்வமான நோக்கங்களுக்காகவே படைக்கப்பட்டுள்ளன. நீங்களும் அவற்றை உலக மக்கள் பலன்பெறும் வகையில் ஆக்கப்பூர்வமாகவே பயன்படுத்துங்கள். இதுவே அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தும் செயலாகும்.


وَأَلْقَىٰ فِى ٱلْأَرْضِ رَوَٰسِىَ أَن تَمِيدَ بِكُمْ وَأَنْهَٰرًۭا وَسُبُلًۭا لَّعَلَّكُمْ تَهْتَدُونَ.

16:15. அதுமட்டுமின்றி நீங்கள் வாழும் பூமியைப் பற்றி ஆராய்ந்து பாருங்கள். அது வான்மண்டலத்தில் வேகமாய் பயணித்துக் கொண்டிருந்தும், நீங்கள் நிம்மதியாக செயல்பட அசையாதிருக்கும்படி படைத்துள்ளான். அது நிலையாக ஆடாதிருக்க (Cosmic Balance) பெரிய பெரிய மலைகளையும் படைத்துள்ளான். அம்மலைகளைக் கொண்டு உங்களுக்கு பல்வேறு பலன்கள் கிடைக்கின்றன. அவற்றிலிருந்து உருண்டோடும் ஆறுகளும், பயணப் பாதைகளை அமைத்துக் கொள்ளவும் உதவுகின்றன. அல்லாஹ்வின் புறத்திலிருந்து செய்யப்பட்ட இத்தகைய ஏற்பாடுகளைக் கொண்டே உங்களுக்கு எல்லா வசதிகளும் கிடைக்கின்றன அல்லவா?


وَعَلَٰمَٰتٍۢ ۚ وَبِٱلنَّجْمِ هُمْ يَهْتَدُونَ.

16:16. மேலும் இரவில் மின்னும் நட்சத்திரங்கள் மூலம், இரவில் பாலைவனத்திலும் கடலிலும் பயணம் செய்ய சரியான பாதையை அறிந்து கொள்கிறீர்கள். இதுவும் அல்லாஹ்வின் இயற்கைப் படைப்புகளின் அடையாளங்களாகும்.
ஆக பிரபஞ்ச படைப்புகளையும் இயற்கை படைப்புகளையும் ஆய்ந்தறிந்து அவற்றை மக்கள் நலனுக்காக ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தினால், உங்களுடைய இவ்வுலக வாழ்வும் மறுமையின் வாழ்வும் சிறப்பாக இருக்கும். எனவே சமுதாயத்தில் இவற்றை ஆய்வு செய்யும் சிந்தனைகள் இல்லாது போனால் அவனது வாழ்வில் இருள் சூழ்ந்து கொள்ளும். இதனால் அங்கு பொருளாதார சிக்கல்கள் ஏற்பட்டு அதை தீர்த்து வைக்க இறந்துபோன மகான்களிடமும் கற்பனைத் தெய்வங்களிடமும் மன்றாடிக் கொண்டிருப்பார்கள்.


أَفَمَن يَخْلُقُ كَمَن لَّا يَخْلُقُ ۗ أَفَلَا تَذَكَّرُونَ.

16:17. இத்தகையவர்கள் வணங்கி வரும் கற்பனை தெய்வங்களும், இறந்து போன மகான்களும், அனைத்தையும் படைக்கும் வல்லமையுடைய அல்லாஹ்வைப் போல் உள்ளவையா? இதை அவர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டாமா?


وَإِن تَعُدُّوا۟ نِعْمَةَ ٱللَّهِ لَا تُحْصُوهَآ ۗ إِنَّ ٱللَّهَ لَغَفُورٌۭ رَّحِيمٌۭ.

16:18. அது மட்டுமின்றி அல்லாஹ்வின் படைப்புகளைப் பற்றியும் அருட்கொடைகளைப் பற்றியும் எண்ணிப் பார்த்தால், அவனுடைய வல்லமையை நீங்கள் ஒருபோதும் கணித்து கூறவே முடியாது. (பார்க்க 18:109) அப்படிப்பட்ட வல்லமையுடைய அல்லாஹ்வுக்கு இணையாக வேறு தெய்வங்களா? எனவே உங்களுடைய பாதுகாப்பான வாழ்விற்கு, கருணைமிக்க அல்லாஹ்வின் ஏற்பாடுகளை விட்டால் வேறு எந்த வழிமுறையும் கிடைக்காது.


وَٱللَّهُ يَعْلَمُ مَا تُسِرُّونَ وَمَا تُعْلِنُونَ.

16:19. இறைவனின் பரிபாலனத் திட்டத்தின்படி உங்களுடைய ஆற்றல்கள் எந்த அளவிற்கு வளர்ந்து வெளிப்பட்டுள்ளன என்பதையும், எவை வளராத் தன்மையுடன் மறைந்து கிடக்கின்றன என்பதையும் நன்கு அறியக் கூடியவன் தான் அல்லாஹ்.
இப்படியாக அகிலங்களையும் பூமியையும் படைத்து, அதில் எண்ணற்ற ஜீவராசிகளையும் படைத்து, அந்த ஜீவராசிகளில் உயர் படைப்பாக மனிதனையும் படைத்து, அவனுக்கு இவ்வுலகைக் கட்டிக்காக்கும் ‘ரூஹ்’ எனும் சகல ஆற்றல்களையும் அளித்தது அல்லாஹ்தான். எனவே


وَٱلَّذِينَ يَدْعُونَ مِن دُونِ ٱللَّهِ لَا يَخْلُقُونَ شَيْـًۭٔا وَهُمْ يُخْلَقُونَ.

16:20. அல்லாஹ்வின் வழிகாட்டுதலைப் பின்பற்றி சிறப்பாக வாழ்வதை விட்டுவிட்டு, எதையும் படைக்கும் தகுதி இல்லாதவற்றிடம் உதவிகேட்டு மன்றாடிக் கொண்டு இருக்கிறார்கள். அவையும் அல்லாஹ்வின் படைப்புகளே. உயிரற்றவை உயிருள்ள மனிதனுக்கு எவ்வாறு உதவ முடியும்?


أَمْوَٰتٌ غَيْرُ أَحْيَآءٍۢ ۖ وَمَا يَشْعُرُونَ أَيَّانَ يُبْعَثُونَ.

16:21. இறந்து போனவர்கள் இறந்து போனதுதான். இவர்கள் சொல்வது போல, அவர்கள் உயிருள்ளவர்கள் அல்லர். அது மட்டுமின்றி அவர்களின் கேள்விக் கணக்கு கேட்கப்படும் நாள் எப்போது வரும் என்று அவர்களுக்கே தெரியாது.
அப்படி இருக்கும் போது, உங்களுடைய தேவைகள் என்னவென்று அவர்களுக்கு எப்படி தெரியவரும்? அப்படியே தெரிந்தாலும் அவர்களால் எப்படி உங்களுடைய தேவைகளை நிறைவேற்ற முடியும்?


إِلَٰهُكُمْ إِلَٰهٌۭ وَٰحِدٌۭ ۚ فَٱلَّذِينَ لَا يُؤْمِنُونَ بِٱلْءَاخِرَةِ قُلُوبُهُم مُّنكِرَةٌۭ وَهُم مُّسْتَكْبِرُونَ.

16:22. எனவே நினைவில் கொள்ளுங்கள். இந்த பிரபஞ்சத்தை அடக்கி ஆளும் சகல வல்லமையுமுடைய ஏக இறைவனாகிய அல்லாஹ் ஒருவனே ஆவான். இத்தனை ஆதாரங்களை எடுத்துரைத்தும், இறைவழிகாட்டுதலை ஏற்றுக் கொள்ளாதவர்களின் உள்ளங்கள் வருங்கால நிலையான பலன்களைப் பற்றி சிந்திக்காமல், தற்காலிக உலக இன்பங்களை மட்டும் நோக்கமாகக் கொண்டு வாழவே நாடுகின்றன. அதுமட்மின்றி அவர்களுடைய செயல்பாடுகள் யாவும் குற்ற மனப்பான்மையும் ஆணவப் போக்கையுமே பிரதிபலிக்கின்றன.


لَا جَرَمَ أَنَّ ٱللَّهَ يَعْلَمُ مَا يُسِرُّونَ وَمَا يُعْلِنُونَ ۚ إِنَّهُۥ لَا يُحِبُّ ٱلْمُسْتَكْبِرِينَ.

16:23. இவ்வாறு செயல்படுபவர்கள், தம் உள்ளங்களில் உள்ளதை மறைத்து நல்லவர்கள் போல காட்டிக் கொள்கிறார்கள். ஆனால் அல்லாஹ்வைப் பொருத்தவரையில் அவர்கள் உள்ளங்களில் மறைத்து வைத்திருப்பதும் வெளிப்படுத்துவதும் ஒன்றே ஆகும். அல்லாஹ்விடம் எதையும் மறைக்க முடியாது. மேலும் ஆணவத்தோடு நடந்து கொள்பவர்களுக்கு அல்லாஹ்வின் நேசம் ஒருபோதும் கிடைக்காது.


وَإِذَا قِيلَ لَهُم مَّاذَآ أَنزَلَ رَبُّكُمْ ۙ قَالُوٓا۟ أَسَٰطِيرُ ٱلْأَوَّلِينَ.

16:24. இவ்வாறு அல்லாஹ்வின் வழிகாட்டுதலை ஏற்க மறுத்து, தம் மனம்போன போக்கில் மூட நம்பிக்கையுடன் வாழ்ந்த சமுதாயங்களின் முடிவு என்னவாயிற்று என்பதை கவனித்துப் பார்க்க சொன்னால், அவையெல்லாம் முன்னோர்களின் கட்டுக் கதைகளே அன்றி வேறில்லை என்று சொல்லி விடுகிறார்கள்.
இப்படியாக அவர்களும் வழிகெட்டு, மக்களையும் தவறான வழியில் அழைத்துச் செல்கிறார்கள். அம்மக்களும் அவர்களை கண் மூடித்தனமாகப் பின்பற்றி வருகிறார்கள். இதனால் நாள்பட நாள்பட அவர்கள் வாழும் சமுதாயத்தில் ஒழுக்க மாண்புகள் யாவும் சீர்கெட்டுப் போகும். எனவே


لِيَحْمِلُوٓا۟ أَوْزَارَهُمْ كَامِلَةًۭ يَوْمَ ٱلْقِيَٰمَةِ ۙ وَمِنْ أَوْزَارِ ٱلَّذِينَ يُضِلُّونَهُم بِغَيْرِ عِلْمٍ ۗ أَلَا سَآءَ مَا يَزِرُونَ.

16:25. அவர்களுடைய தீய செயல்களால் ஏற்படும் விபரீத விளைவுகள் தோற்றத்திற்கு வரும் கால கட்டங்களில், தாம் செய்த பாவச் செயல்களின் சுமைகளையும் அவர்கள் சுமக்கவேண்டி வரும். அது மட்டுமின்றி அறிவில்லாமல் இவர்கள், யாரை வழிகெடுத்தார்களோ அவர்களுடைய பாவச் சுமைகளையும் சுமக்க வேண்டி வரும். அந்தோ பரிதாபம்! இவ்வாறு சுமக்கும் பிரருடைய பாவச் சுமைகள் எந்த அளவுக்கு மோசமானதாகும்!


قَدْ مَكَرَ ٱلَّذِينَ مِن قَبْلِهِمْ فَأَتَى ٱللَّهُ بُنْيَٰنَهُم مِّنَ ٱلْقَوَاعِدِ فَخَرَّ عَلَيْهِمُ ٱلسَّقْفُ مِن فَوْقِهِمْ وَأَتَىٰهُمُ ٱلْعَذَابُ مِنْ حَيْثُ لَا يَشْعُرُونَ.

16:26. மேலும் அல்லாஹ்வின் வழிகாட்டுதலின்படி சமூக அமைப்பு உருவாகாதவாறு இவர்கள் செய்துவரும் சூழ்ச்சிகள் எதுவும் புதிதான ஒன்றல்ல. இவர்களுக்கு முன் வாழ்ந்தவர்களும் இவ்வாறே பல்வேறு சூழ்ச்சிகளை செய்தார்கள். ஆனால் அல்லாஹ்வின் செயல்திட்டங்களோ அவர்களுடைய சூழ்ச்சிகளின் அஸ்திவாரத்தை அடியோடு பெயர்த்து விட்டன. கற்பனை வளத்தில் அவர்கள் எழுப்பி இருந்த சமூக அமைப்பின் கட்டிடம் இடிந்து தரைமட்டம் ஆகிவிட்டது. மேலும் அவர்கள் அறிந்து கொள்ள முடியாதவாறு அவர்களுக்கு பல்வேறு வேதனைகள் வந்தடைந்தன.


ثُمَّ يَوْمَ ٱلْقِيَٰمَةِ يُخْزِيهِمْ وَيَقُولُ أَيْنَ شُرَكَآءِىَ ٱلَّذِينَ كُنتُمْ تُشَٰٓقُّونَ فِيهِمْ ۚ قَالَ ٱلَّذِينَ أُوتُوا۟ ٱلْعِلْمَ إِنَّ ٱلْخِزْىَ ٱلْيَوْمَ وَٱلسُّوٓءَ عَلَى ٱلْكَٰفِرِينَ.

16:27. அவர்களுக்கு ஏற்பட்ட கதியே இவர்களுக்கும் ஏற்படும். அவர்களுடைய செயல்களின் விளைவுகள் தோற்றத்திற்கு வரும் கால கட்டத்தில், இவர்களுடைய பங்கிற்கும் அந்த வேதனைகள் வந்தடையும். அப்போது, “நீங்கள் இதுவரையில் வழிபட்டு வந்த கற்பனை தெய்வங்கள் எங்கே? அவை உங்களைக் காப்பாற்ற வரவில்லையா?” என்று கேட்கப்படும். (மேலும் பார்க்க 6:22). உண்மையை அறிபவர்கள், “நிச்சயமாக இந்த வேதனைகள் யாவும் இறைவழிகாட்டுதலை நிராகரித்து, மனம் போன போக்கில் வாழ்பவர்களுக்குத் தான் ஏற்படும்” என்பார்கள்.
அதாவது அவர்கள் அநியாயச் செயல்களை செய்து வந்தபோது, அவை மனித நேயத்தை சீரழிக்கும் செயல்களாக உள்ளதே என்பதை எல்லாம் உணராமல் தொடர்ந்து செய்து வருவார்கள். இறுதியில் அந்த சமுதாயம் அழிவு என்னும் மரண வாயிலை சென்றடையும்.


ٱلَّذِينَ تَتَوَفَّىٰهُمُ ٱلْمَلَٰٓئِكَةُ ظَالِمِىٓ أَنفُسِهِمْ ۖ فَأَلْقَوُا۟ ٱلسَّلَمَ مَا كُنَّا نَعْمَلُ مِن سُوٓءٍۭ ۚ بَلَىٰٓ إِنَّ ٱللَّهَ عَلِيمٌۢ بِمَا كُنتُمْ تَعْمَلُونَ.

16:28. பிரபஞ்ச இயற்கை சக்திகள் மூலம் கிடைக்கும் மரண வேதனைகளை தாங்க முடியாமல், நாங்கள் சமாதானமாகவே வாழ்ந்து வந்தோமே! அதைத் தவிர நாங்கள் வேறு என்ன பாவத்தை செய்தோம்? என்று கெஞ்சுவார்கள். அதற்கு அவை, “நீங்கள் சொல்வது மிகவும் தவறானதாகும். இறைவன் நிர்ணயித்துள்ள “மனித செயல்களின் இறுதி விளைவுகள்” என்ற சட்டம் உங்களுடைய செயல்களை கண்காணித்தே வந்துள்ளது” என்று அறிவிக்கும்.


فَٱدْخُلُوٓا۟ أَبْوَٰبَ جَهَنَّمَ خَٰلِدِينَ فِيهَا ۖ فَلَبِئْسَ مَثْوَى ٱلْمُتَكَبِّرِينَ.

16:29. “எனவே நீங்கள் வேதனை மிக்க வாழ்வின் வாயிலில் புகவேண்டியது தான். அதிலிருந்து வெளியே வர எந்த வழிமுறையும் இருக்காது. இறைவழிகாட்டுதலை துச்சமாக மதித்து ஆணவத்தோடு நடந்து கொண்டவர்களுக்குக் கிடைக்கும் வேதனைகள் இதுவே ஆகும்” என்று கூறுவதாக இருக்கும்.


۞ وَقِيلَ لِلَّذِينَ ٱتَّقَوْا۟ مَاذَآ أَنزَلَ رَبُّكُمْ ۚ قَالُوا۟ خَيْرًۭا ۗ لِّلَّذِينَ أَحْسَنُوا۟ فِى هَٰذِهِ ٱلدُّنْيَا حَسَنَةٌۭ ۚ وَلَدَارُ ٱلْءَاخِرَةِ خَيْرٌۭ ۚ وَلَنِعْمَ دَارُ ٱلْمُتَّقِينَ.

16:30. இறைவழிகாட்டுதலைப் பின்பற்றி நடப்பவர்களிடம், “உங்கள் இறைவனிடமிருந்து இறக்கி அருளப்பட்டது என்ன?” என்ற கேள்விக்கு அவர்கள், ஒரே ஒரு வார்த்தையில், “நன்மைகளே” என்ற பதிலளித்து விடுவார்கள். அதாவது யார் இறைவழிகாட்டுதலின் படி அழகிய செயல்களை செய்கிறார்களோ, அவர்களுடைய உலக வாழ்வும் சிறப்பானதாக அமையும். மரணத்திற்குப் பின் தொடர்கின்ற வாழ்வும் அதைவிட மேலானதாக அமையும் என்பதே அவர்கள் சொல்லும் வார்த்தைக்கு உண்மையான அர்த்தமாகும்.


جَنَّٰتُ عَدْنٍۢ يَدْخُلُونَهَا تَجْرِى مِن تَحْتِهَا ٱلْأَنْهَٰرُ ۖ لَهُمْ فِيهَا مَا يَشَآءُونَ ۚ كَذَٰلِكَ يَجْزِى ٱللَّهُ ٱلْمُتَّقِينَ.

16:31. அதாவது தாராள பொருளாதார வசதிகள் கொண்ட சுவன வாழ்வு இவர்களுக்கு கிடைக்கும். அவர்கள் விரும்புவதெல்லாம் யாதொரு குறைவுமின்றி கிடைத்து வரும். இவை யாவும் இறைவழிகாட்டுதலின் படி செயல்படுபவர்களுக்கு இவ்வுலகில் கிடைக்கின்ற சன்மானங்களாகும்.


ٱلَّذِينَ تَتَوَفَّىٰهُمُ ٱلْمَلَٰٓئِكَةُ طَيِّبِينَ ۙ يَقُولُونَ سَلَٰمٌ عَلَيْكُمُ ٱدْخُلُوا۟ ٱلْجَنَّةَ بِمَا كُنتُمْ تَعْمَلُونَ.

16:32. இத்தயைவர்கள் இறைவனின் நியதியின் படி மரணித்ததும், பிரபஞ்ச சக்திகள், “நிலையான சந்தோஷங்களையும் அமைதியும் கொண்ட வாழ்வின் பக்கம் வாருங்கள்” என்று அவர்களை சுவனத்தின் பால் அழைத்துச் செல்லும். “இதுவே நீங்கள் உலகில் செய்து வந்த நற்செயல்களின் பலன்களாகும்” என்பதாக அந்த அழைப்பு இருக்கும்.


هَلْ يَنظُرُونَ إِلَّآ أَن تَأْتِيَهُمُ ٱلْمَلَٰٓئِكَةُ أَوْ يَأْتِىَ أَمْرُ رَبِّكَ ۚ كَذَٰلِكَ فَعَلَ ٱلَّذِينَ مِن قَبْلِهِمْ ۚ وَمَا ظَلَمَهُمُ ٱللَّهُ وَلَٰكِن كَانُوٓا۟ أَنفُسَهُمْ يَظْلِمُونَ.

16:33. இந்த உண்மையை அறிந்த பிறகும் இறை நிராகரிப்பவர்கள், பிரபஞ்ச இயற்கைச் சக்திகள் தங்களிடம் வேதனைகளைக் கொண்டு இறங்கட்டும் என்ற எதிர் பார்ப்பில் இருக்கிறார்களா? அல்லது அல்லாஹ்வின் வேதனைகள் நேரடியாக வருவதை எதிர் பார்க்கிறார்களா? இவர்களுக்கு முன் சென்ற சமுதாயத்தினரும் அவ்வாறே வேதனைகள் வந்தால் பார்த்துக் கொள்ளலாம் என்று தம் தீய செயல்களை விட்டு நீங்கவே இல்லை. இப்படியாக அவர்கள் தமக்குத் தாமே அநியாயம் செய்து கொண்டார்களே அன்றி, அல்லாஹ் அவர்களுக்கு அநியாயம் எதுவும் செய்யவில்லை.


فَأَصَابَهُمْ سَيِّـَٔاتُ مَا عَمِلُوا۟ وَحَاقَ بِهِم مَّا كَانُوا۟ بِهِۦ يَسْتَهْزِءُونَ.

16:34 எனவே அவர்கள் செய்து கொண்டிருந்த தீய செயல்களின் விளைவுகளே அவர்களிடம் வந்தடைந்தன. அன்றியும் அவர்கள் எந்த அழிவுகளின் எச்சரிக்கைகளைப் பரிகாசம் செய்து கொண்டிருந்தார்களோ, அந்த அழிவுகளே அவர்களை சூழ்ந்து கொண்டன.


وَقَالَ ٱلَّذِينَ أَشْرَكُوا۟ لَوْ شَآءَ ٱللَّهُ مَا عَبَدْنَا مِن دُونِهِۦ مِن شَىْءٍۢ نَّحْنُ وَلَآ ءَابَآؤُنَا وَلَا حَرَّمْنَا مِن دُونِهِۦ مِن شَىْءٍۢ ۚ كَذَٰلِكَ فَعَلَ ٱلَّذِينَ مِن قَبْلِهِمْ ۚ فَهَلْ عَلَى ٱلرُّسُلِ إِلَّا ٱلْبَلَٰغُ ٱلْمُبِينُ.

16:35. மேலும் கற்பனைத் தெய்வங்களை வழிபட்டு வருபவர்கள், “அல்லாஹ் நாடியிருந்தால் நாங்களும் எங்கள் மூதாதையர்களும் ஒருபோதும் இணைத் தெய்வங்களை வணங்கி இருக்கமாட்டோம். மேலும் நாங்கள் எந்த பொருளையும் ஆகாதவை என்று விலக்கி இருக்க மாட்டோம்” என்று கூறுகிறார்கள். (பார்க்க 6:148) அதாவது அவர்கள் செய்வதனைத்தும் அல்லாஹ்வின் நாட்டப்படி தான் என்கிறார்கள். இப்படி பேசுவது இவர்கள் மட்டும் அல்ல. இவர்களுக்கு முன் வாழ்ந்தவர்களும் இப்படித்தான் பேசி, தம் செயல்களுக்கு நியாயம் கற்பிக்க முயன்றார்கள். மேலும் எல்லாமே விதிப்படி தான் நடக்கும் என்பார்கள் (பார்க்க 6:149, 36:47, 43:20) இவ்வாறு தம் செயல்களுக்கு அல்லாஹ் தான் பொறுப்பாவான் என்று கூறுபவனை எவ்வாறு திருத்த முடியும்? எனவே அத்தகையவர்ளுக்கு இறைவழிகாட்டுதலை எடுத்துரைப்பதோடு இறைத்தூதர்களின் கடமை முடிந்து விடுகிறது.


وَلَقَدْ بَعَثْنَا فِى كُلِّ أُمَّةٍۢ رَّسُولًا أَنِ ٱعْبُدُوا۟ ٱللَّهَ وَٱجْتَنِبُوا۟ ٱلطَّٰغُوتَ ۖ فَمِنْهُم مَّنْ هَدَى ٱللَّهُ وَمِنْهُم مَّنْ حَقَّتْ عَلَيْهِ ٱلضَّلَٰلَةُ ۚ فَسِيرُوا۟ فِى ٱلْأَرْضِ فَٱنظُرُوا۟ كَيْفَ كَانَ عَٰقِبَةُ ٱلْمُكَذِّبِينَ.

16:36. இப்படியாக நாம் ஒவ்வொரு சமூகத்தவர்க்கும் இறைத் தூதர்களை அனுப்பினோம். அவர்கள் அனைவரும் அல்லாஹ்வின் கட்டளைக்கு மட்டும் அடிபணிந்து செயல்படும்படி தம் சமூகத்தவர்க்கு எடுத்துரைத்தார்கள். மேலும் தம் மன இச்சைக்கு அடிபணியாதீர்கள் என்றும் அறிவுறுத்தி வந்தனர். சில சமுதாயத்தவர்கள் அல்லாஹ்வின் அறிவுரைகளை ஏற்று சிறப்பாக வாழ்ந்தவர்களும் இருக்கிறார்கள். சிலர் அவற்றை நிராகரித்து வழிகேட்டில் சென்று அழிவை சந்தித்துக் கொண்டவர்களும் இருக்கிறார்கள். இறை வழிகாட்டுதலுக்கு எதிராக செயல்பட்டு அழிவை சந்தித்துக் கொண்ட சமுதாயங்களின் கதி என்னவாயிற்று என்பதை அறிய உலகை சுற்றிப் பாருங்கள்.


إِن تَحْرِصْ عَلَىٰ هُدَىٰهُمْ فَإِنَّ ٱللَّهَ لَا يَهْدِى مَن يُضِلُّ ۖ وَمَا لَهُم مِّن نَّٰصِرِينَ.

16:37. இறைவழிகாட்டுதலை எடுத்துரைப்பவரே! மக்கள் அனைவரும் நேர்வழி பெற்று, பேரழிவிலிருந்து பாதுகாப்பாக இருக்கவேண்டும் என்ற அளவு கடந்த ஆவல் உம்மிடம் இருக்கிறது. ஆனால் வழிகேட்டில் செல்ல விரும்புவோரை அல்லாஹ் வலுக்கட்டாயமாக நேர்வழியில் கொண்டு செல்வதில்லை. மேலும் அந்த அழிவுகள் வரும் போதும், இத்தகையவர்களுக்கு உதவி புரிபவர்கள் யாரும் இருக்கவும் போவதில்லை.
ஏனெனில் மனிதனுக்கு முழு சுதந்திரத்தை அளித்து விட்டதால், மற்ற உயிரினங்கள் போல் இவனுக்கு எந்த நிர்ப்பந்தமும் இருப்பதில்லை. மேலும் அவனுக்கு நல்லவை, தீயவை ஆகியவற்றை பிரித்து அறிவிக்கும் வழிகாட்டுதல்களை அளித்துவிட்டு, கூடவே அவனுக்கு பகுத்தறிவும் அளித்து, அவன் தன் சுய விருப்பத்துடனே இறைவழிகாட்டுதலை ஏற்று நடக்க முன் வரவேண்டும் என்பதே அல்லாஹ்வின் நாட்டமும், நிலையான செயல் திட்டமும் ஆகும்.


وَأَقْسَمُوا۟ بِٱللَّهِ جَهْدَ أَيْمَٰنِهِمْ ۙ لَا يَبْعَثُ ٱللَّهُ مَن يَمُوتُ ۚ بَلَىٰ وَعْدًا عَلَيْهِ حَقًّۭا وَلَٰكِنَّ أَكْثَرَ ٱلنَّاسِ لَا يَعْلَمُونَ.

16:38. இப்போது அவர்கள், “எந்தச் சமுதாயம் செத்து மடிந்து விட்டதோ, அது மீண்டும் புத்துயிர் பெற்று சிறப்பாக வாழும் வாய்ப்பே பெறாது” என்று அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து கூறி வருகிறார்கள். அப்படியல்ல. எந்த ஓரு சமுதாயமும் இறைவழிகாட்டுதலை ஏற்று அதன்படி செயல்பட்டால், அது மீண்டும் வளர்ச்சியடைந்து சிறப்பாக வாழும் தகுதியை பெற்றுக் கொள்ளும் என்பது அல்லாஹ்வின் வாக்காகும். அந்த வளர்ச்சியின் வேகம் அவர்களுடைய செயல்களைப் பொறுத்தே அமையும். அல்லாஹ்வின் இந்த வாக்குறுதி ஒருபோதும் மாறாது. எனினும் மக்களில் பெரும்பாலோர் இதை அறிந்து கொள்வதில்லை.


لِيُبَيِّنَ لَهُمُ ٱلَّذِى يَخْتَلِفُونَ فِيهِ وَلِيَعْلَمَ ٱلَّذِينَ كَفَرُوٓا۟ أَنَّهُمْ كَانُوا۟ كَٰذِبِينَ.

16:39. இப்படியாக இறைவழிகாட்டுதலை ஏற்று நடக்கும் சமுதாயம், சிறப்பாக வளர்ந்து அல்லாஹ்வின் வாக்கு உண்மையானதே என்று நிரூபணம் ஆகிவிடும். இப்போது அவர்கள் எந்த விஷயத்தில் தர்க்கித்துக் கொண்டு இருக்கிறார்களோ, அவையெல்லாம் தெளிவாகிவிடும். இறைவழிகாட்டுதலை நிராகரிப்பவர்கள் சத்தியம் செய்து சொல்லி வந்த விஷயங்கள் எல்லாம் பொய்யென ஆகிவிடும்.


إِنَّمَا قَوْلُنَا لِشَىْءٍ إِذَآ أَرَدْنَٰهُ أَن نَّقُولَ لَهُۥ كُن فَيَكُونُ.

16:40. ஏனெனில் இவை யாவும் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட நிலையான செயல் திட்டங்களாகும். ஒரு செயல் திட்டத்தை உருவாக்க அல்லாஹ் தீர்மானித்தால், அத்திட்டம் அவ்வாறே பலப் படித்தரங்களைக் கடந்து உருவாகி வரும். அதில் அல்லாஹ்வுக்கு எவ்வித சிரமும் இருப்பதில்லை. ஆகுக என்று சொல்வதோடு சரி, அவை அவ்வாறே நிர்ணயிக்கப்பட்ட கால அளவுபடி உருவாகிவிடும். (பார்க்க 32:5, 70:4)
எனவே உலகில் எந்தச் சமுதாயம் இந்த திட்டத்தின் கீழ், இறைவழிகாட்டுதலை ஏற்று சிறப்பாக செயல்படுமோ, அது படிப்படியாக முன்னேறி சுவனத்திற்கு ஒப்பான வாழ்வை ஈட்டிக் கொள்ளும் என்பது தீர்மானிக்கப்பட்ட செயல்திட்டமாகும். தற்சமயம் இறைவழிகாட்டுதலை ஏற்றுக் கொண்டவர்கள் எதிரணியினரால் பலவகையில் கொடுமைகளுக்கு ஆளாகிறார்கள். அதனால் அவர்கள் தம் வீடுகளை விட்டு அகதிகளாக வெளியேற வேண்டியுள்ளது.


وَٱلَّذِينَ هَاجَرُوا۟ فِى ٱللَّهِ مِنۢ بَعْدِ مَا ظُلِمُوا۟ لَنُبَوِّئَنَّهُمْ فِى ٱلدُّنْيَا حَسَنَةًۭ ۖ وَلَأَجْرُ ٱلْءَاخِرَةِ أَكْبَرُ ۚ لَوْ كَانُوا۟ يَعْلَمُونَ.

16:41. ஆனால் எதிர் அணியினரால் ஏற்படும் கொடுமைகள் யாவும் தற்காலிகமானதே ஆகும். யார் கொடுமைகளுக்கு ஆளாகியும் அல்லாஹ்வின் செயல்திட்டங்களை நிறைவேற்ற, தம் ஊரை விட்டு ஹிஜ்ரத் செய்து செல்கிறார்களோ, அவர்களுக்கு இவ்வுலகில் மிக அழகான தங்குமிடங்கள் இறைவனின் நியதிப்படி கிடைக்கும். அது மட்டுமின்றி அவர்களுடைய வருங்கால வாழ்வும் வளத்துடன் பாதுகாப்பானதாக இருக்கும். இவர்கள் இந்த உண்மைகளை அறிந்தால், அவர்களுக்கு ஏற்படும் தற்காலிக துயரங்கள் யாவும் பெரிதாகவே தோன்றாது. (மேலும் பார்க்க 2:155)


ٱلَّذِينَ صَبَرُوا۟ وَعَلَىٰ رَبِّهِمْ يَتَوَكَّلُونَ.

16:42. இத்தகையவர்கள், தமக்கு எத்தனை துயரங்கள் ஏற்பட்டாலும் இறைவனின் செயல் திட்டங்களை நிறைவேற்ற நிலைத்திருந்து அயராது உழைப்பார்கள். மேலும் ஒவ்வொரு விஷயத்திலும் இறை வழிகாட்டுதலையே முன்வைத்து செயல்படுவார்கள். அவற்றின் மீது அவர்களுக்கு அந்த அளவுக்கு பரிபூரண நம்பிக்கை இருக்கும்.
இப்போது இருப்பது இறைத் தூதர் ஏன் ஒரு மலக்காகவோ, அற்புதங்களை காட்டக் கூடியவராகவோ இல்லாமல், ஒரு சாதாரண மனிதராகவே இருக்கிறாரே என்ற ஆட்சேபனைப் பற்றியது.


وَمَآ أَرْسَلْنَا مِن قَبْلِكَ إِلَّا رِجَالًۭا نُّوحِىٓ إِلَيْهِمْ ۚ فَسْـَٔلُوٓا۟ أَهْلَ ٱلذِّكْرِ إِن كُنتُمْ لَا تَعْلَمُونَ.

16:43. “இதற்கு முன் வந்த எல்லா இறைத்தூதர்களும் சாதாரண மனிதராகவே இருந்தார்கள். அவர்கள் தம் சமூகத்தவர்க்கு இறைவழிகாட்டுதலை எடுத்துரைத்தார்கள். இது பற்றிய உண்மை உங்களுக்கு தெரியவில்லை என்றால், இதற்கு முன் வேதஞானம் பெற்றவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்” என்று அவர்களிடம் கூறிவிடுங்கள்.


بِٱلْبَيِّنَٰتِ وَٱلزُّبُرِ ۗ وَأَنزَلْنَآ إِلَيْكَ ٱلذِّكْرَ لِتُبَيِّنَ لِلنَّاسِ مَا نُزِّلَ إِلَيْهِمْ وَلَعَلَّهُمْ يَتَفَكَّرُونَ.

16:44. அத்தூதர்கள் மூலம் இறக்கியருளப்பட்ட அறிவுரைகள் யாவும் தெளிவான ஆதாரங்களைக் கொண்டவையே ஆகும். இறைவழிகாட்டுதலை எடுத்துரைப்பவரே! அதே அடைப்படையில் தான் நாம் வேத அறிவுரைகள் அடங்கிய இந்தக் குர்ஆனை இறக்கி அருளுகிறோம். இந்த அறிவுரைகளை நீர் உலக மக்களுக்கு தெளிவு படுத்துவதற்காக இவை உமக்கு இறக்கி அருளப்படுகின்றன. இந்த அறிவுரைகளை அவர்கள் கண்மூடித்தனமாக ஏற்றுக்கொள்ள வேண்டியதில்லை (பார்க்க 25:73) மாறாக அந்த அறிவுரைகளை ஏற்று நடப்பதால் ஏற்படுகின்ற பலன்களைப் பற்றி நன்கு ஆராய்ந்து அறிந்து அவற்றை ஏற்று கொள்ளட்டும்.
இந்த அறிவுரைகளை ஏற்றுக் கொள்ளாமல் தாம் கடைப்பிடித்து வரும் மூட நம்பிக்கைகளை தக்கவைத்து கொள்ளவும், மக்கள் மத்தியில் இந்த மார்க்கம் வளராத வகையில் பல்வேறு சூழ்ச்சிகளை செய்து வருகிறார்கள். மேலும் அவர்கள் தீய செயல்களை தொடர்ந்து செய்து வரலாம் என்ற எண்ணத்திலும் இருக்கிறார்களா? இல்லை.


أَفَأَمِنَ ٱلَّذِينَ مَكَرُوا۟ ٱلسَّيِّـَٔاتِ أَن يَخْسِفَ ٱللَّهُ بِهِمُ ٱلْأَرْضَ أَوْ يَأْتِيَهُمُ ٱلْعَذَابُ مِنْ حَيْثُ لَا يَشْعُرُونَ.

16:45. தீய செயல்களில் ஈடுபட்டு பல்வேறு சூழ்ச்சிகளை செய்துவரும் அவர்கள், அல்லாஹ்வின் நியதிப்படி, ஆட்சி அதிகாரங்களை எல்லாம் இழந்து, இழிவுக்கு ஆளாவார்கள். அவர்களுடைய தீய செயல்களால் ஏற்படும் விபரீத விளைவுகள் அவர்கள் அறியா வண்ணம் கொஞ்சம் கொஞ்சமாக ஏற்பட்டு வரும். இத்தகைய இழிவோ அல்லது அழிவோ ஒருபோதும் ஏற்படாது என்ற தைரியத்தில் அவர்கள் தீய செயல்களை தொடர்ந்து செய்து வருகிறார்களா?


أَوْ يَأْخُذَهُمْ فِى تَقَلُّبِهِمْ فَمَا هُم بِمُعْجِزِينَ.

16:46. அல்லது அவர்கள் தம் சூழ்ச்சிகளை நிறைவேற்றிக் கொள்ள இங்கும் அங்குமாக அலைந்து கொண்டிருக்கும் போதே, அல்லாஹ் நிர்ணயித்துள்ள “மனித செயல்களுக்கு ஏற்ற பின் விளைவுகள்” என்ற சட்டத்தின் பிடியில் சிக்க மாட்டோம் என்று இருக்கிறார்களா? அவ்வாறு அல்லாஹ்வின் செயல் திட்டங்களை இவர்கள் ஒருபோதும் செயலிழக்க செய்ய முடியாது என்பதே உண்மையாகும். (மேலும் பார்க்க 6:65, 7:182)
இறைவழிகாட்டுதலின் அடிப்படையில் உருவாகும் ஆட்சியமைப்பு ஒட்டுமொத்த மக்களின் நலனை பாதுகாப்பதாகவும், கருணை மிக்கதாகவும் உள்ளது. ஆனால் இதை எதிர்ப்பவர்கள் இந்த அமைப்பு ஏற்படாதவாறு சமூக நல்லிணக்கத்தை சீரழிக்கவே முயல்கிறார்கள். எனவே இந்த தடைக்கல்லை அகற்ற வேண்டியதாகி விடுகிறது.


أَوْ يَأْخُذَهُمْ عَلَىٰ تَخَوُّفٍۢ فَإِنَّ رَبَّكُمْ لَرَءُوفٌۭ رَّحِيمٌ.

16:47. இப்படியாக தம் ஆட்சி அதிகாரத்தை படிப்படியாக இழந்து, அழிந்துபோகும் நிலைமை அவர்களுக்கு ஏற்படாது என்று அச்சமின்றி இருக்கிறார்களா? நிச்சயமாக உங்கள் இறைவனின் செயல்திட்டங்கள் யாவும் அனைத்து தரப்பு மக்களின் நலனைப் பேணி பாதுகாப்பதாகவும் கருணைமிக்கதாகவும் உள்ளன என்பதை அவர்கள் அறிந்து கொள்ளட்டும்.
உலகில் மக்கள் எவ்வாறு செயல்படுகிறார்களோ, அவ்வாறே அவர்கள் வாழும் சமூக அமைப்பு உருவாகி வரும். எல்லோரும் நலமாக வாழவேண்டும் என்று இறைவனிடம் பிரார்த்தனை செய்து விட்டு, தன் விஷயத்தில் சுயநலமாக செயல்பட்டால், (பார்க்க 2:44) சமுதாய ஏற்றத்தாழ்வுகள் ஏற்பட்டு சீர்கேடுகள் தான் ஏற்படும். எனவே ஒருநாள் இல்லை ஒருநாள் அந்த சீரழிவில் நீங்களும் சிக்கி அழிந்து விடுவீர்கள்.


أَوَلَمْ يَرَوْا۟ إِلَىٰ مَا خَلَقَ ٱللَّهُ مِن شَىْءٍۢ يَتَفَيَّؤُا۟ ظِلَٰلُهُۥ عَنِ ٱلْيَمِينِ وَٱلشَّمَآئِلِ سُجَّدًۭا لِّلَّهِ وَهُمْ دَٰخِرُونَ.

16:48. அவர்கள் உலக படைப்புகளை ஆராய்ந்துப் பார்ப்பதில்லையா? அவை எல்லாமே இறைவனின் கட்டளைப்படி மிகச் சரியாக செயல்பட்டு வருகின்றன. சூரிய ஒளியால் ஏற்படுகின்ற நிழலைக் கவனித்துப் பாருங்கள். அது எவ்வாறு வலமும் இடமுமாக மாறி மாறி சாய்கிறது என்பதை கவனியுங்கள். அதைக்கொண்டு தானே உங்களால் பொழுதின் நேரக் கணக்கை மிகத் துல்லியமாக கணக்கிட முடிகிறது.
எவ்வாறு அந்த நிழல்கள் தன் நிலையைத் தானே மாற்றிக் கொள்ளாதோ, அது போலவே உங்கள் செயல்களின் விளைவுகளை ஒருபோதும் யாராலும் மாற்ற முடியாது. உங்களின் தீய செயல்களால் ஏற்படும் சீர்கேடுகளை நீங்கள் தான் சரி செய்ய வேண்டும். அதற்கு இவ்வுலக வாழ்வில் வாய்ப்புள்ளது. மரணத்திற்குப் பின் எப்படி செய்ய முடியும். அதன் வேதனைகளை அனுபவிக்கத் தான் முடியும்.


وَلِلَّهِ يَسْجُدُ مَا فِى ٱلسَّمَٰوَٰتِ وَمَا فِى ٱلْأَرْضِ مِن دَآبَّةٍۢ وَٱلْمَلَٰٓئِكَةُ وَهُمْ لَا يَسْتَكْبِرُونَ.

16:49. காரணம் அகிலங்கள் மற்றும் பூமியில் உள்ள எல்லா ஜீவராசிகளும், பிரபஞ்ச இயற்கை சக்திகளும் அல்லாஹ்வின் கட்டளைக்கே சிரம்பணிந்து செயல்படுகின்றன என்பதை கவனித்துப் பாருங்கள். அவற்றில் எதுவும் அல்லாஹ்வின் கட்டளைக்கு மாற்றமாக செயல்படுவதே இல்லை.


يَخَافُونَ رَبَّهُم مِّن فَوْقِهِمْ وَيَفْعَلُونَ مَا يُؤْمَرُونَ ۩.

16:50. அவை அனைத்தும் தங்களுக்கு மேலாக இருக்கும் சர்வ வல்லமையுடைய இறைவனுக்கு பயந்து செயல்படுகின்றன. இன்னும் அவை யாவும் தமக்கு ஏவப்பட்ட கட்டளைகள் என்னவோ அதன்படியே செயல்படுகின்றன.
இந்த இரு வாசகங்களில் ‘ஸுஜூது’ என்ற வார்த்தை பயன்படுத்தப் படுள்ளது. அந்த வார்த்தைக்கு குர்ஆனே விளக்கமளித்து விடுகிறது. அதாவது அல்லாஹ்வின் கட்டளை என்னவோ அதன் படியே செயல்படுவது தான் “ஸுஜுது” என்பதாகும். மனிதனைத் தவிர்த்து மற்ற படைப்புகள் யாவும் அவ்வாறு செயல்படும் படியாகவே படைக்கப்பட்டுள்ளன. அவை அனைத்தும் இறைவன் விதித்த படி தம் இயல்பின் அடிப்படையில் செயல்படுகின்றன. (பார்க்க 24:41) எனவே அங்கு எந்த பிரச்சனையும் இருப்பதில்லை. எல்லாமே அழகாக செயல்படுகின்றன. ஆனால் மனிதனுக்கு மட்டும் முழு சுதந்திரத்தை அளித்து விட்டு, இறைவழிகாட்டுதல்கள் நபிமார்கள் மூலமாக இறக்கி அருளப்படுகின்றன. மனிதனும் இறைக் கட்டளைக்கு மட்டுமே அடிபணிந்து (ஸுஜூது செய்து) செயல்பட்டால், அவனுடைய தற்காலிக வாழ்வும் மறுமை எனும் நிலையான வாழ்வும் சுவனத்திற்கு ஒப்பானதாகவும் மன நிறைவுடனும் இருக்கும்.
மேலும் பிரபஞ்ச படைப்புகள் அனைத்தும் அல்லாஹ்வின் கட்டளைப்படி செயல்படுவதால், மனித செயல்களுக்கு ஏற்றவாறு பலன்களையும் விளைவுகளையும் மிகச் சரியாக ஏற்படுத்தி வருகின்றன. எனவே


۞ وَقَالَ ٱللَّهُ لَا تَتَّخِذُوٓا۟ إِلَٰهَيْنِ ٱثْنَيْنِ ۖ إِنَّمَا هُوَ إِلَٰهٌۭ وَٰحِدٌۭ ۖ فَإِيَّٰىَ فَٱرْهَبُونِ.

16:51. அகிலங்களிலுள்ள இயற்கை படைப்புகளுக்கு ஒரு “கடவுள்”, மனிதர்களுக்கு ஒரு “கடவுள்” என்று இரு வெவ்வேறு “கடவுள்கள்” என்ற நினைப்பில் வாழாதீர்கள். உலகிலுள்ள மற்ற படைப்புகள் அனைத்தும் அல்லாஹ்வின் கட்டளைக்கு மட்டுமே எவ்வாறு சிரம்பணிந்து செயல்படுகின்றனவோ அவ்வாறே மனிதனும் அல்லாஹ்வின் வழிகாட்டுதலுக்கு மட்டுமே கட்டுப்பட்டு வாழ முன் வரவேண்டும் என்பதே அல்லாஹ்வின் கூற்றாகும். மாறாக அப்படி நீங்கள் வாழவில்லை என்றால், அதனால் இறைவனின் நியதிப்படி ஏற்படும் விபரீத விளைவுகளுக்கு ஆயத்தமாகிக் கொள்ளுங்கள்.


وَلَهُۥ مَا فِى ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضِ وَلَهُ ٱلدِّينُ وَاصِبًا ۚ أَفَغَيْرَ ٱللَّهِ تَتَّقُونَ.

16:52. அகிலங்களிலும் பூமியிலும் உள்ளவை அனைத்து படைப்புகளும் அல்லாஹ்வின் செயல் திட்டங்களை நிறைவேற்றவே செயல்பட்டு வருகின்றன. எனவே அவன் நிர்ணயித்த விதிமுறைகளின் படியே உங்கள் செயல்களுக்கேற்ற விளைவுகள் ஏற்பட்டு வருகின்றன. அவ்வாறு இருக்கும் போது, நீங்கள் அல்லாஹ்வின் வழிகாட்டுதலை விட்டுவிட்டு, மற்ற வழிமுறைகளை ஏன் கடைப்பிடித்து வருகிறீர்கள்?


وَمَا بِكُم مِّن نِّعْمَةٍۢ فَمِنَ ٱللَّهِ ۖ ثُمَّ إِذَا مَسَّكُمُ ٱلضُّرُّ فَإِلَيْهِ تَجْـَٔرُونَ.

16:53. மேலும் நீங்கள் உங்கள் திறமையும் உழைப்பையும் கொண்டு ஈட்டிக் கொண்ட அருட்கொடைகள் யாவும், நீங்களே உருவாக்கிக் கொண்ட ஒன்றா? அல்லாஹ் படைத்துள்ள இயற்கை படைப்புகளின் உதவியைக் கொண்டுதானே அவற்றை ஈட்டிக் கொண்டீர்கள்? அதே சமயம் உங்களுக்கு துன்பம் நேர்ந்துவிட்டால் அதிலிருந்து விடுபட அல்லாஹ்வின் இயற்கை படைப்புகளின் உதவியைத் தானே தேடுகிறீர்கள்? (பார்க்க 6:40-41)


ثُمَّ إِذَا كَشَفَ ٱلضُّرَّ عَنكُمْ إِذَا فَرِيقٌۭ مِّنكُم بِرَبِّهِمْ يُشْرِكُونَ.

16:54. பின்னர் நீங்கள் அத்துன்பத்திலிருந்து விடுபட்டு விட்டால், பழையபடி உங்களுள் ஒரு பிரிவினர் - இறைவழிகாட்டுதலுக்கு மாற்றமாக, மத குருமார்கள் காட்டும் வழிமுறைகளையே பின்பற்றுகிறீர்களே!


لِيَكْفُرُوا۟ بِمَآ ءَاتَيْنَٰهُمْ ۚ فَتَمَتَّعُوا۟ ۖ فَسَوْفَ تَعْلَمُونَ.

16:55. இத்தகையவர்களால் சில காலம் தான் சுகம் அனுபவித்துக் கொள்ள முடியும். அதன்பின் அவர்களின் தவறான செயல்களின் விளைவாக ஏற்படும் வேதனைகளைப் பற்றி விரைவில் அறிந்து கொள்ள வேண்டி வரும்.
அப்படி அவர்கள் செய்யும் தவறான செயல்கள்தான் என்ன? அதன் விளைவாக சமுதாயத்தில் ஏற்படும் தீய விளைவுகள் என்ன என்பதையும் கவனியுங்கள்.


وَيَجْعَلُونَ لِمَا لَا يَعْلَمُونَ نَصِيبًۭا مِّمَّا رَزَقْنَٰهُمْ ۗ تَٱللَّهِ لَتُسْـَٔلُنَّ عَمَّا كُنتُمْ تَفْتَرُونَ.

16:56. எனவே அவர்களுக்கு கிடைத்த வாழ்வாதாரங்களில் சிறு பாகத்தை ஒன்றுமே அறியாத கற்பனை தெய்வங்களுக்காக என்று ஒதுக்கி வைக்கிறார்கள். இவை யாவும் அவர்களாகவே ஏற்படுத்திக் கொண்ட வழிமுறைகளே அன்றி அல்லாஹ் நிர்ணயித்த வழிமுறைகள் அல்ல. இவர்கள் இவ்வாறு செய்து வருவது பற்றி கேள்வி கணக்கு கண்டிப்பாக உண்டு.
அவர்கள் சமுதாய வளர்ச்சிக்காக தம் செல்வங்களை பயன் படுத்துவதற்குப் பதிலாக, அதில் சிறு பகுதியை அவர்கள் வழிபட்டு வரும் கற்பனை தெய்வங்களுக்காக என்று ஒதுக்கிவிட்டு மற்றதை தமக்கே சொந்தம் என்று வைத்துக் கொள்கிறார்கள். இப்படி செய்வதால் தம்மிடமுள்ள செல்வங்கள் யாவும் பரிசுத்தமாகி விடுவதாக எண்ணிக் கொள்கின்றனர். இதனால் சமுதாயத்தில் ஏற்றத்தாழ்வுகள் ஏற்பட்டு வருகின்றன. இது ஆரோக்கியமான சமுதாயத்திற்கு உகந்தது அல்ல.


وَيَجْعَلُونَ لِلَّهِ ٱلْبَنَٰتِ سُبْحَٰنَهُۥ ۙ وَلَهُم مَّا يَشْتَهُونَ.

16:57. அது மட்டுமல்லாமல் இறைவனைப் பற்றி அவர்கள் கூறும் கற்பனைக் கதைகளுக்கு அளவே இருப்பதில்லை. அவற்றில் இறைவனுக்கு புதல்விகளும் உண்டு என்றும் கதை கட்டுவார்கள். ஆனால் அல்லாஹ்வோ இத்தகைய கற்பனைகளுக்கெல்லாம் அப்பாற்பட்டவன் ஆவான். ஆனால் அவர்கள் தமக்கு மட்டும் ஆண் குழந்தைகள் தான் வேண்டும் என்று விரும்புவார்கள். (மேலும் பார்க்க 43:16)


وَإِذَا بُشِّرَ أَحَدُهُم بِٱلْأُنثَىٰ ظَلَّ وَجْهُهُۥ مُسْوَدًّۭا وَهُوَ كَظِيمٌۭ.

16:58. அப்படியும் தனக்கு ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளதாக தெரிந்தால், அவனது முகம் கருத்து விடுகிறது. இதனால் அவனுடைய முகம் கவலையால் வாடிப் போயி விடுகிறது. (43:17)


يَتَوَٰرَىٰ مِنَ ٱلْقَوْمِ مِن سُوٓءِ مَا بُشِّرَ بِهِۦٓ ۚ أَيُمْسِكُهُۥ عَلَىٰ هُونٍ أَمْ يَدُسُّهُۥ فِى ٱلتُّرَابِ ۗ أَلَا سَآءَ مَا يَحْكُمُونَ.

16:59. தனக்கு பிறந்த பெண் குழந்தையின் செய்தியை, பிறரிடம் எடுத்துரைக்க சங்கோசப்பட்டுக் கொண்டு அவன் ஒளிந்து கொள்கின்றான். அந்த அளவுக்கு பெண் குழந்தையின் பிறப்பு அவனுக்கு கேவலமான ஒன்றாக இருக்கிறது. காரணம் அக்குழந்தையை வளர்த்து காலமெல்லாம் கஷ்டப்படுவதா அல்லது பிஞ்சு குழந்தையை ஒரே அடியாக கொன்று மண்ணில் புதைத்து விடுவதா என்ற குழப்பத்தில் மூழ்கி விடுகிறான். இப்படியொரு நிலை ஏற்படுவது எவ்வளவு பெரிய துர்பாக்கியமானது!
இவை தான் அவர்கள் உருவாக்கி வைத்திருக்கும் சமூக அமைப்பின் நிலைபாடாகும். இதைப் பற்றி கேட்டால் நாங்கள் எந்த தீமையும் செய்யவில்லை என்கிறார்கள் (16:28) எல்லாமே அல்லாஹ்வின் நாட்டப்படி தான் நடக்கிறது. இங்கு நடக்கும் தீமைகளுக்கு நாங்கள் பொறுப்பு அல்ல என்கிறார்கள்.(16:35) இவை யாவும் மூடநம்பிக்கையின் அடிப்படையில் உருவாகி வரும் சமூக அமைப்பின் பிரதிபலிப்புகளே ஆகும்.


لِلَّذِينَ لَا يُؤْمِنُونَ بِٱلْءَاخِرَةِ مَثَلُ ٱلسَّوْءِ ۖ وَلِلَّهِ ٱلْمَثَلُ ٱلْأَعْلَىٰ ۚ وَهُوَ ٱلْعَزِيزُ ٱلْحَكِيمُ.

16:60. எந்தச் சமுதாயம் தம் வருங்காலத்தைப் பற்றி எல்லாம் சிந்திக்காமல், கண்மூடித்தனமாக செயல்படுகிறதோ, அதன் நிலை இவ்வாறு தான் இருக்கும். இத்தகையவர்கள் தற்காலிக சுகங்களை மட்டும் நோக்கமாகக் கொண்டு வாழ்வார்கள். இதனால் இப்படிப்பட்ட சமூக சீரழிவுகள் ஏற்படுகின்றன.
ஆனால் இறைவழிகாட்டுதலின் அடிப்படையில் உருவாகும் சமூக அமைப்பு, உயர் பண்புகளைக் கொண்டதாக இருக்கும். ஏனெனில் அனைத்தையும் மிகைத்த அல்லாஹ்வின் ஞானத்தின் அடைப்படையில் தான் அந்த சமூக அமைப்பு செயல்படும்.
இந்த சமுதாயத்தில் ஆணோ பெண்ணோ எல்லோரும் சம அந்தஸ்து உடையவர்களே ஆவர் (பார்க்க 33:35) அல்லாஹ்வின் வழிகாட்டுதலைப் பேணி நடப்பதால் அம்மக்களுள் அல்லாஹ்வின் சிறப்பு குணநலன்களே வளர்ந்து வரும் (பார்க்க 2:138, 30:27) ஆனால் சமுதாய மக்களுள் உயர் பண்புகளோ அல்லது சீரழிவுகளோ கண்ணிமைக்கும் நேரத்தில் ஏற்படக்கூடிய ஒன்றல்ல. இவை யாவும் படிப்படியாக ஏற்படக் கூடியவையாகும்.


وَلَوْ يُؤَاخِذُ ٱللَّهُ ٱلنَّاسَ بِظُلْمِهِم مَّا تَرَكَ عَلَيْهَا مِن دَآبَّةٍۢ وَلَٰكِن يُؤَخِّرُهُمْ إِلَىٰٓ أَجَلٍۢ مُّسَمًّۭى ۖ فَإِذَا جَآءَ أَجَلُهُمْ لَا يَسْتَـْٔخِرُونَ سَاعَةًۭ ۖ وَلَا يَسْتَقْدِمُونَ.

16:61. எனவே அல்லாஹ் உருவாக்கியுள்ள விதிமுறைகளின்படி மனித செயல்களின் விளைவுகள் ஏற்பட கால அவகாசங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. மனிதன் செய்யும் தவறான செயல்களுக்கு உடனுக்குடன் பாதிப்புகள் ஏற்படுவதில்லை. அவ்வாறு உடனுக்குடன் பாதிப்புகளை ஏற்படுத்துவதாக இருந்தால், இந்த பூமியில் எந்த உயிரினமும் மிஞ்சி இருக்காது. அதன் பின் இந்த பூமியில் யார்தான் வாழ்வது? (மேலும் பார்க்க 35:45) எனவே மனித செயல்களின் விளைவுகள் தோற்றத்திற்கு வருவதற்கு கால அவகாசம் அளிக்கப்படுகிறது. அந்த அவகாசத்திற்குள் மனிதன் திருந்தி வாழும் வாய்ப்பை பெறுகிறான். (32:21) அந்த கால அவகாசம் முடிந்ததும் அல்லாஹ் நிர்ணயித்துள்ள விதிமுறைப் படி விளைவுகள் ஏற்பட்டே தீரும். அதில் சற்றும் கால தாமதமும் இருக்காது. அந்த கால அவகாசத்திற்கு முன்பும் அந்த விளைவுகள் தோற்றத்திற்கு வருவதும் இல்லை.
இந்த சட்டம் தனி நபருக்கும் பொருந்தும். சமுதாயத்திற்கும் பொருந்தும். மனிதன் செய்யும் ஒவ்வொரு செயலும் விளைவுகளை ஏற்படுத்தியே தீரும். அந்த விளைவுகளை யாராலும் மாற்றி அமைக்க முடியாது. எந்த செயலுக்கு என்ன விளைவுகள் என்பதை திருக்குர்ஆன் தெள்ளத் தெளிவாக எடுத்துரைக்கிறது. அதன் படியே விளைவுகள் ஏற்படும். எனவே தான் தீய விளைவுகளிலிருந்த பாதுகாப்பாக வாழ விரும்பினால், அல்லாஹ்வின் வழிகாட்டுதல்கள் அடங்கிய குர்ஆனை ஏற்று நடப்பது இன்றியமையாததாக ஆகிவிடுகிறது.


وَيَجْعَلُونَ لِلَّهِ مَا يَكْرَهُونَ وَتَصِفُ أَلْسِنَتُهُمُ ٱلْكَذِبَ أَنَّ لَهُمُ ٱلْحُسْنَىٰ ۖ لَا جَرَمَ أَنَّ لَهُمُ ٱلنَّارَ وَأَنَّهُم مُّفْرَطُونَ.

16:62. ஆனால் அவர்களிடம் அல்லாஹ்வைப் பற்றிய கற்பனைக் கதைகளுக்கு அளவே இருப்பதில்லை. அவர்கள் மனதில் தோன்றுவதை எல்லாம் அல்லாஹ்வுக்கு பெருமை சேர்ப்பதாக எண்ணி, அவற்றை மக்களிடம் சொல்லி அதில் எண்ணற்ற நன்மைகள் கிடைக்கும் என்றும் சொல்லி வருகிறார்கள். இத்தகைய பிரச்சாரங்கள் சமுதாயத்தை நரகத்தில் தள்ளாமல் வேறு எங்கு கொண்டு போய் சேர்க்கும்?
அதாவது இப்படிப்பட்ட பிரச்சாரங்களால் அல்லாஹ் தான் எல்லாவற்றையும் செய்யக் கூடியவன். அவனை மிஞ்சி எதுவும் நடக்காது. நம்மால் எதுவும் செய்ய முடியாது. எல்லாமே அவன் செயல். எவ்வளவு தான் முயன்றாலும் கிடைக்க வேண்டியது தான் கிடைக்கும். நம் தலைவிதியில் ஏற்கனவே எல்லாமே எழுதியாகி விட்டது. நாம் இவ்வுலகத்திற்காக வாழக் கூடாது. நம்முடைய உண்மையான வாழ்க்கை மரணத்திற்குப் பின்னுள்ள மறுமை வாழ்வுதான். அதற்காகவே நாம் பாடுபடவேண்டும். இப்படிப்பட்ட சிந்தனைகளை மக்கள் மனதில் விதைத்து விட்டால், மனித உழைப்பில் தொய்வு ஏற்பட்டு முன்னேறுவதற்கு வாய்ப்பில்லாமல் போய் விடுகிறது. எனவே அவன் உலக அரங்கில் மிகவும் பின்தங்கிய நிலையில் வாழ நேர்கிறது. ஆனால் முன்னேற்றப் பாதையில் மேன்மேலும் முன்னேறுபவன் தான் சுவர்க்கவாசிகள் என திருக்குர்ஆன் கூறுகிறது. (பார்க்க 56:10)


تَٱللَّهِ لَقَدْ أَرْسَلْنَآ إِلَىٰٓ أُمَمٍۢ مِّن قَبْلِكَ فَزَيَّنَ لَهُمُ ٱلشَّيْطَٰنُ أَعْمَٰلَهُمْ فَهُوَ وَلِيُّهُمُ ٱلْيَوْمَ وَلَهُمْ عَذَابٌ أَلِيمٌۭ.

16:63. இறைவழிகாட்டுதலை எடுத்துரைப்பவரே! உமக்கு முன்னரும் எல்லா சமூகத்தவர்க்கும் இறைவழிகாட்டுதலை எடுத்துரைக்க இறைத் தூதர்களை அனுப்பி வைத்தோம். நம்முடைய இந்த கூற்றுக்கு உலக வரலாறே சாட்சியாக இருக்கிறது. ஆனால் அச்சமுதாயத்தில் வாழ்ந்த சுயநலக்கார தலைவர்கள், அவர்களுடைய தவறான செயல்களை மக்களுக்கு அழகாகத் தோன்றும்படி செய்தார்கள். அவர்களைப் போலவே, மதக் குருமார்கள் கூறுவதே மிகச் சரியானவை என்ற நினைப்பில், இக்கால மக்களும் இருக்கிறார்கள். அதனால் அவர்களால் தம் தவறான செயல்களால் ஏற்படும் தீய விளைவுகளைப் பற்றி அறிந்து கொள்ள முடியாமல் போயிவிடுகிறது.


وَمَآ أَنزَلْنَا عَلَيْكَ ٱلْكِتَٰبَ إِلَّا لِتُبَيِّنَ لَهُمُ ٱلَّذِى ٱخْتَلَفُوا۟ فِيهِ ۙ وَهُدًۭى وَرَحْمَةًۭ لِّقَوْمٍۢ يُؤْمِنُونَ.

16:64. மக்களிடம் இதைப் பற்றி எடுத்துரைத்தால், உங்களிடம் அவர்கள் தர்க்கித்து வருகிறார்கள். எனவே நீங்கள் அவர்களிடம் இறைவழிகாட்டுதலை தெளிவாக எடுத்துரைத்து, இவையாவும் மக்களிடையே உள்ள வேற்றுமை பகைகளை நீக்குவதற்காகவே ஆகும் என்பதையும், அவற்றைப் பின்பற்றுவதால் ஏற்படும் நன்மைகள் என்னவென்பதையும் விளக்குங்கள். இறைவழிகாட்டுதலை ஏற்று அதன்படி வாழும் மக்களுக்கு இந்த அறிவுரைகள் மிகவும் பலனளிக்கக் கூடியதாகவே இருக்கின்றன.


وَٱللَّهُ أَنزَلَ مِنَ ٱلسَّمَآءِ مَآءًۭ فَأَحْيَا بِهِ ٱلْأَرْضَ بَعْدَ مَوْتِهَآ ۚ إِنَّ فِى ذَٰلِكَ لَءَايَةًۭ لِّقَوْمٍۢ يَسْمَعُونَ.

16:65. எவ்வாறு அல்லாஹ் வானிலிருந்து மழை பொழிய வைத்து, அதன் மூலம் உயிரற்று இறந்து கிடக்கும் பூமியை உயிர்பெறச் செய்து செழிப்பாக ஆக்குகின்றானோ, அவ்வாறே இந்தக் குர்ஆன் மூலமாக நடைபிணமாக வாழும் சமுதாயத்தை, புத்துயிர் பெறச் செய்து அனைத்து வளங்களுடனும் சிறப்பாக வாழும் வழியை காட்டுகிறான். இவ்வாறே அல்லாஹ்வின் அழைப்பை செவிசாய்க்கும் மக்களுக்கு இதில் தக்க அத்தாட்சி கிடைத்து விடுகிறது.


وَإِنَّ لَكُمْ فِى ٱلْأَنْعَٰمِ لَعِبْرَةًۭ ۖ نُّسْقِيكُم مِّمَّا فِى بُطُونِهِۦ مِنۢ بَيْنِ فَرْثٍۢ وَدَمٍۢ لَّبَنًا خَالِصًۭا سَآئِغًۭا لِّلشَّٰرِبِينَ.

16:66. அதேபோல இறைவன் படைத்துள்ள கால்நடைகளைப் பற்றி கவனித்துப் பாருங்கள். அவற்றிலும் உங்களுக்குப் பலப் படிப்பினைகள் கிடைக்கும். அவை உண்ணும் தீனிகள் வயிற்றில் ஜீரணித்து, சாணமாகவும் இரத்தமாகவும் பிரிந்து விடுகின்றன. இவ்விரண்டிற்கும் இடையே குடிப்பதற்கு பரிசுத்தமான அருசுவைப் பாலும் உருவாகிறது.
அதுபோல சமுதாயத்தில் நல்லவர்களும் கெட்டவர்களும் இருப்பார்கள். இறைவழிகாட்டுதல் என்ற ஊட்டச் சத்தை இவர்களுக்கிடையில் புகட்டினால், மாசற்ற பால் உருவாவது போல், பரிசுத்தமான பலனளிக்கக் கூடிய உத்தமர்களை உருவாக்கலாம். பால் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் பலனுள்ளதாக விளங்குவது போல, இந்த உத்தமர்கள் அனைத்து தரப்பு மக்களின் வாழ்வை சிறப்பிக்க முன்வருவார்கள்.


وَمِن ثَمَرَٰتِ ٱلنَّخِيلِ وَٱلْأَعْنَٰبِ تَتَّخِذُونَ مِنْهُ سَكَرًۭا وَرِزْقًا حَسَنًا ۗ إِنَّ فِى ذَٰلِكَ لَءَايَةًۭ لِّقَوْمٍۢ يَعْقِلُونَ.

16:67. மேலும் இறைவனின் படைப்புகளில் உள்ள பேரீச்சை, திராட்சை போன்ற பழங்களை எடுத்துக் கொள்ளுங்கள். அவற்றைக் கொண்டு போதை அளிக்கும் மதுவும் உருவாகிறது. நல்ல ஆரோக்கியமளிக்கும் பழரசமாகவும் அவை விளங்குகின்றன. நிச்சயமாக இதிலும் சிந்திக்கும் மக்களுக்கு அத்தாட்சிகள் பல கிடைக்கும்.
அதாவது பூமியில் விளையும் பழங்களை தக்க முறையில் பாதுகாத்து, நேர காலத்தோடு பயன்படுத்தினால், அவை மக்களின் நல்வாழ்விற்கு உறுதுணையாக விளங்கும். அவற்றை சரிவர பராமரிக்காமல் விட்டுவிட்டால், அது அழுகிவிடும். அந்த அழுகல்களைக் கொண்டு மது பானங்களைத் தான் தயாரிக்க முடியும். அல்லது அவற்றை குப்பையில் தான் வீசி எறியவேண்டி வரும். அதுபோலவே உலகில் பிறக்கும் குழந்தைகளை நன்றாக வளர்த்து இறைவனின் வழிகாட்டுதலை அந்தந்த நேரத்தில் அவர்களுக்கு ஊட்டி சீராக வளர்த்தால், அவர்கள் சமுதாயத்திற்கு நன்மை பயப்பவர்களாக உருவாகி வருவார்கள். அப்படி எல்லாம் செய்யாமல் அவர்களாகவே வளரட்டும் என்று விட்டுவிட்டு, எந்த கல்வியையும் நேரக் காலத்தோடு அளிக்காமல் விட்டால், சமுதாயத்தில் அவர்கள் தீமை செய்பவர்களாக மாறி விடுவார்கள். அதன்பின் அவர்களை சிறைச்சாலை அல்லது நரகம் என்ற குப்பையில் தான் தள்ளவேண்டி வரும்.


وَأَوْحَىٰ رَبُّكَ إِلَى ٱلنَّحْلِ أَنِ ٱتَّخِذِى مِنَ ٱلْجِبَالِ بُيُوتًۭا وَمِنَ ٱلشَّجَرِ وَمِمَّا يَعْرِشُونَ.

16:68. அதே போல் இறைவனின் படைப்புகளில் மனிதனை தவிர்த்து மற்ற உயிரினங்களைப் பற்றி கவனித்து பாருங்கள். உதாரணத்திற்கு தேனீயை எடுத்துக் கொள்ளுங்கள். இறைவனின் நியதிப்படி அதனுள் உள்ளூர உணர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. அதனால் அவை மலைகளிலும் மரங்களிலும் உயர்ந்த கட்டிடங்களிலும் தேன் கூடுகளை அமைத்து தேனை சேகரிக்கின்றன.


ثُمَّ كُلِى مِن كُلِّ ٱلثَّمَرَٰتِ فَٱسْلُكِى سُبُلَ رَبِّكِ ذُلُلًۭا ۚ يَخْرُجُ مِنۢ بُطُونِهَا شَرَابٌۭ مُّخْتَلِفٌ أَلْوَٰنُهُۥ فِيهِ شِفَآءٌۭ لِّلنَّاسِ ۗ إِنَّ فِى ذَٰلِكَ لَءَايَةًۭ لِّقَوْمٍۢ يَتَفَكَّرُونَ.

16:69. அதன்பின் இறைவனின் நியதிப்படி, எல்லா வகையான கனிகளிலும் பூக்களிலும் உள்ள தேனை உறுஞ்சி எளிதாக அந்த தேன்கூட்டிற்குள் சேகரித்து விடுகின்றன. இவ்வாறு உறுஞ்சிய தேன் அதன் வயிற்றுக்குள் சென்று பல நிறங்களாக மாறிவிடுகின்றன. எனவே தான் தேனும் பல நிறங்களை உடையதாக வெளிவருகிறது. இந்த தேன் மக்களின் பல்வேறு நோய்களின் சிகிச்சைக்காக பயன்படுகின்றன. சிந்தித்து செயலாற்றும் மக்களுக்குத் தான் இதில் அத்தாட்சிகள் பல கிடைக்கும்.
(1) இந்த வாசகத்தில் தேனீக்கு வஹீ அனுப்பியதாக வருகிறது. அதாவது மனிதனை தவிர்த்து மற்ற எல்லா படைப்புகளும் தம் இயல்பின் அடிப்படையில் செயல்படும்படி, அதனுள் “வஹீ” என்றும் வழிகாட்டுதல்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவை எல்லாம் அதன்படியே வாழ்ந்து வருகின்றன.
(2) அதாவது அவை எங்கு வாழவேண்டும்? அவற்றின் ஆகாரம் எங்கு கிடக்கும்? தம் இனப்பெருக்கம் எவ்வாறு செய்து கொள்ள வேண்டும்? தமக்கு யாரால் ஆபத்துகள் வரும்? அதிலிருந்து பாதுகாப்பாக இருப்பது எப்படி? இது போன்ற விஷயங்களை அந்த படைப்பினங்களுக்கு யாரும் கற்றுத் தருவதில்லை. (24:41)
(3) ஆனால் மனித விஷயத்தில் அவ்வாறு இருப்பதில்லை. மனிதன் குழந்தைப் பருவத்தில் இருக்கும் போது, நல்லது எது? கெட்டது எது? என்று அறிந்து கொள்ளும் ஞானம் இருப்பதில்லை. அவனுடைய சுற்றுப்புற சூழல் எவ்வாறு செயல்படுகிறதோ, அதன்படியே அவனும் வளர்ந்து வருவான். அவனுடைய சிந்தனையும் அவ்வாறே வளரும். (விளக்கத்திற்கு அல்லாஹ்வும் மனிதனும் என்ற நூலைப் படியுங்கள்) அவனை சுற்றியுள்ளவர்கள் பேசும் மொழியையே இவனும் பேசுவான். அவனை சுற்றியுள்ளவர்களின் கலாச்சாரத்தையே இவனும் பின்பற்றுவான்.
(4) சுருங்கச் சொன்னால் மனிதனைத் தவிர்த்து மற்ற படைப்பினங்கள் யாவும் இறைவனின் நேரடி கட்டுப்பாட்டில் வாழ்கின்றன. எனவே அவையாவும் ஏதாவது ஒரு வகையில் உலக மக்களுக்கு பலனளிக்கக் கூடியவையாக உள்ளன. மனிதனும் இறைவனின் போதனைகளை ஏற்று, அதன்படி வாழ்ந்தால் அவனும் உலக மக்களுக்கு பலனளிக்கும் வகையில் செயல்படுவான். அவன் மனிதனாய் பிறந்ததற்கு அர்த்தமும் இருக்கும்.
(5) தேனீக்கள் எவ்வாறு தாம் உழைத்துப் பெற்ற தேனை, தேன்கூட்டில் சேர்த்து விடுகிறதோ, அதேபோல் மனிதனும் தாம் உழைத்து பெற்ற செல்வங்களை தம் தேவைக்குப் போக மிகுதிகாக உள்ளதை பொது நிதியில் சேர்த்து, அனைத்து தரப்பு மக்களின் நலனுக்காக பயன்படுத்தினால், ஏற்றத்தாழ்வு இல்லாத சமச் சீர்நிலைக் கொண்ட சமுதாயம் உருவாகும். அத்தகைய சமுதாயங்களில் கொடுப்பவர் இருப்பார்கள். ஆனால் கேட்பவர்கள் இருக்க மாட்டார்கள்.
(6) மேலும் தேன்கூட்டை தக்க நேரத்தில் எடுத்து விநியோகித்தால் தான் அவை மக்களுக்கு பலனளிக்கும். இல்லையென்றால் அந்த தேனை தேனீக்களே குடித்து மடிந்துவிடும். அதுபோல செல்வங்களை குவித்து வைத்துக் கொண்டால் அவை நாட்டு மக்களின் வளர்ச்சிக்காக பயன்படாது, மேலும் அத்தகைய செல்வங்களே அவனை தவறான வழியில் செல்லும்படி செய்து அழிவைத் தேடி தந்து விடும்.


وَٱللَّهُ خَلَقَكُمْ ثُمَّ يَتَوَفَّىٰكُمْ ۚ وَمِنكُم مَّن يُرَدُّ إِلَىٰٓ أَرْذَلِ ٱلْعُمُرِ لِكَىْ لَا يَعْلَمَ بَعْدَ عِلْمٍۢ شَيْـًٔا ۚ إِنَّ ٱللَّهَ عَلِيمٌۭ قَدِيرٌۭ.

16:70. மேலும் மனிதனின் சரீர வாழ்க்கை விஷயத்திலும் மற்ற படைப்புகள் போலவே வாழ்வும் மரணமும் ஏற்படுகின்றன. அல்லாஹ்வின் படைப்பு சட்டத்தின்படி அவன் பிறக்கிறான். அதன் பின் அவனுடைய வாழ்வு முடிவு பெற்று விடுகிறது. அவன் கல்வியறிவு பெற்றிருந்தும் அவனுடைய வயதான காலத்தில் மிகவும் தளர்ந்து, ஏதும் அறியா குழந்தைப் போல் ஆகிவிடுகிறான். (மேலும் பார்க்க 22:5) நீங்கள் கவனித்துப் பார்த்தால், அல்லாஹ்வின் செயல்திட்டங்கள் யாவும் எந்த அளவுக்கு ஞானத்தின் அடிப்படையிலும் கட்டுக்கோப்பாகவும் உள்ளன என்பதை அறிந்து கொள்வீர்கள்.
மனித வாழ்வை எடுத்துக் கொண்டால் குழந்தைப் பருவம், வாலிப வயது, முதுமை என்று பல நிலைகளில் மாறி வருகின்றன. எனவே குழந்தைகளுக்கும் முதுமை அடைந்தோருக்கும் வாழ்வாதாரத்தை ஈட்டிக் கொள்ளும் வாய்ப்பு மிகக் குறைவாகவே இருக்கும். வாலிப வயதில் இருப்பவர்களுக்கு சம்பாதிக்கும் வாய்ப்பு அதிகமாகக் கிடைக்கிறது.


وَٱللَّهُ فَضَّلَ بَعْضَكُمْ عَلَىٰ بَعْضٍۢ فِى ٱلرِّزْقِ ۚ فَمَا ٱلَّذِينَ فُضِّلُوا۟ بِرَآدِّى رِزْقِهِمْ عَلَىٰ مَا مَلَكَتْ أَيْمَٰنُهُمْ فَهُمْ فِيهِ سَوَآءٌ ۚ أَفَبِنِعْمَةِ ٱللَّهِ يَجْحَدُونَ.

16:71. இப்படியாக சமுதாயத்தில் வாழ்வாதார விஷயத்திலும் சிலர் சிலரைவிட மேன்மை பெற்றிருப்பார்கள். இருப்பினும் குடும்பம் என்று எடுத்துக் கொண்டால், சம்பாதிப்பவர் சம்பாதிக்காதவர் என்று யாரும் பிரித்துப் பார்ப்பதில்லை. சிறு பிள்ளைகளும் வயோதிகர்களும் சம்பாதித்தாலும் சம்பாதிக்காவிட்டாலும் அவர்களுடைய தேவைகளை நிறைவேற்றி வருகிறீர்கள். குடும்ப வருவாயில் அனைவருக்கும் சமப்பங்கு கிடைக்கவே நீங்கள் நாடுகிறீர்கள்.
அதுபோலத் தான் ஒரு சமூகம் அல்லது நாடு என்று எடுத்துக் கொண்டால் பல தரப்பட்ட தொழில்கள் இருக்கும். ஒவ்வொரு தொழிலிலும் தேர்ச்சி பெற்றவர்கள் இருப்பார்கள். அதில் ஒவ்வொருவருக்கும் தனிச் சிறப்புகளும் இருக்கும். அவை அனைத்தும் ஒருங்கிணைந்தால் தான் சமுதாயம் என்று உருவாகும். இதில் உயர்வு தாழ்வு என்பது கிடையாது. எனவே ஆட்சியமைப்பு அல்லது சமூக அமைப்பு, அனைத்து தரப்பு மக்களுக்கும் அடிப்படை தேவைகளை சரி சமமான முறையில் சேர்க்க வழி செய்ய வேண்டும். அவ்வாறில்லாமல் தம் இனத்தவர் என்று பிரித்துப் பார்ப்பீர்களானால் அல்லாஹ்விடம் நீங்கள் நன்றி விசுவாசத்துடன் நடந்து கொள்வதில்லை என்றே பொருள்படும்.


وَٱللَّهُ جَعَلَ لَكُم مِّنْ أَنفُسِكُمْ أَزْوَٰجًۭا وَجَعَلَ لَكُم مِّنْ أَزْوَٰجِكُم بَنِينَ وَحَفَدَةًۭ وَرَزَقَكُم مِّنَ ٱلطَّيِّبَٰتِ ۚ أَفَبِٱلْبَٰطِلِ يُؤْمِنُونَ وَبِنِعْمَتِ ٱللَّهِ هُمْ يَكْفُرُونَ.

16:72. மேலும் அல்லாஹ்வின் படைப்புகளில், உங்களிலிருந்தே ஜோடி ஜோடியாக படைத்திருப்பதையும் கவனித்துப் பாருங்கள். அதைக் கொண்டு உங்களுக்கு பிள்ளைகளும், பேரன் பேத்தி என சந்ததிகளும் உருவாகின்றன. உங்கள் குடும்பங்கள் சிறப்பாக இருக்க அனைவரின் ஒத்துழைப்பும் அவசியாமாகிறது. குடும்பப் பொறுப்பை சமமாக பிரித்துக் கொள்கிறீர்கள். எனவே அவர்களுக்குத் தேவையான அடிப்படைத் தேவைகளையும் ஒரே சீராக நிறைவேற்றி வருகிறீர்கள். ஆனால் நாட்டு மக்களின் நலனை காக்கும் விஷயத்தில் பாரபட்சம் காட்டி அல்லாஹ்வின் அருட்கொடைகளை தவறாகப் பயன்படுத்துகிறீர்களே.
இது சரியா? அதாவது நாட்டு மக்கள் அனைவரையும் ஒரே குடும்பத்தை சேர்ந்த மக்களாக பாவித்து அவர்கள் அனைவரையும் சரி சமமாக நடத்திச் செல்லும் ஆட்சிமுறை இருந்தால் தான், அந்த நாடு வேகமாக முன்னேறி தலைசிறந்த நாடாக விளங்கும். இது தான் அல்லாஹ்வின் அறிவுரையாகும்.
இதிலிருந்து உங்களுக்குத் தெரிவிப்பது என்னவென்றால், உங்களுக்கு கிடைக்கின்ற வாழ்வாதாரங்கள் யாவும் நீங்களே உருவாக்கிக் கொண்ட ஏற்பாடுகளின் மூலம் அல்ல. வானத்திலிருந்து பொழியும் மழை, பூமியில் புதைந்துக் கிடைக்கின்ற அளவற்ற சத்துக்கள், சூரிய வெப்பம் மற்றும் காற்றின் சக்தி ஆகிய அனைத்தும் ஒருங்கிணைந்து செயல்படுவதால் தான், உங்களால் உழைத்து வாழ்வாதராங்களைப் பெற முடிகிறது. இவை யாவும் அல்லாஹ்வின் ஏற்பாடுகளே ஆகும். எனவே அல்லாஹ்வின் கட்டளையின்படி நீங்கள் அவற்றை சமுதாய மக்கள் அனைவருக்காகவும் சரிசமமாகப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.


وَيَعْبُدُونَ مِن دُونِ ٱللَّهِ مَا لَا يَمْلِكُ لَهُمْ رِزْقًۭا مِّنَ ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضِ شَيْـًۭٔا وَلَا يَسْتَطِيعُونَ.

16:73. ஆனால் இறை நிராகரிப்பவர்களோ, அல்லாஹ்வின் அறிவுரைகளை எல்லாம் காற்றில் பறக்க விட்டுவிட்டு, எதையும் படைக்கும் தகுதியில்லாத கற்பனை தெய்வங்களை உருவாக்கி வைத்துக் கொண்டு, வேறு வழிமுறைகளை பின்பற்றி வருகிறார்கள். அந்த கற்பனைத் தெய்வங்கள் வானத்திலிருந்தும் பூமியிலும் உங்களுக்காக உணவை அளித்து வருகின்றனவா? என்று அவர்களிடம் கேளுங்கள்.
இதைப் பற்றி கேட்டால் உடனே அவர்கள் அல்லாஹ் நாடியிருந்தால் அனைவரையும் பணக்காரர்களாகவே படைத்திருப்பான். ஆனால் அவனே ஏழை பணக்காரன் என பிரித்து படைத்துள்ளான் என்று இவர்கள் செய்து வருவதை அல்லாஹ்வையே மேற்கோள்காட்டி நியாயம் கற்பிக்கிறார்கள்.


فَلَا تَضْرِبُوا۟ لِلَّهِ ٱلْأَمْثَالَ ۚ إِنَّ ٱللَّهَ يَعْلَمُ وَأَنتُمْ لَا تَعْلَمُونَ.

16:74. ஆனால் நீங்கள் இப்படிப்பட்ட தப்பான விஷயங்களை அல்லாஹ்வின் வழிகாட்டுதலுக்கு உதாரணமாக ஒருபோதும் கூறாதீர்கள். நீங்கள் அறியாத விஷயங்கள் எல்லாம் அல்லாஹ்வுக்கு தெரியும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஆழ்ந்து சிந்தித்துப் பார்த்தால் உண்மை உங்களுக்கே விளங்கும்.


۞ ضَرَبَ ٱللَّهُ مَثَلًا عَبْدًۭا مَّمْلُوكًۭا لَّا يَقْدِرُ عَلَىٰ شَىْءٍۢ وَمَن رَّزَقْنَٰهُ مِنَّا رِزْقًا حَسَنًۭا فَهُوَ يُنفِقُ مِنْهُ سِرًّۭا وَجَهْرًا ۖ هَلْ يَسْتَوُۥنَ ۚ ٱلْحَمْدُ لِلَّهِ ۚ بَلْ أَكْثَرُهُمْ لَا يَعْلَمُونَ.

16:75. நீங்கள் உதாரணங்களையே கூற விரும்பினால் அல்லாஹ் காட்டும் உதாரணங்களையே நீங்களும் கூறலாம். ஒருவர் ஏழை அடிமையாக வாழ்கிறார். அவர் தன்னிச்சையாக செயல்பட முடியாது. மற்றொருவர் இருக்கிறார். அவருக்கு எல்லா வசதி வாய்ப்புகளும் கிடைத்துள்ளன. அவர் அவற்றிலிருந்து மற்றவர்க்கு மறைமுகமாகவும் வெளிப்படையாகவும் கொடுத்து உதவுகிறார். நீங்களே சொல்லுங்கள். இவர்கள் இருவரும் சமமாவார்களா? இரண்டாம் வகையை சேர்ந்தவர் அல்லாஹ்வின் செயல்திட்டங்களை புகழுக்குரியவையாக ஆக்குகிறார் அல்லவா? ஆனால் பெரும்பாலான மக்கள் இந்த உண்மையை அறிந்து கொள்வதில்லை.
அதாவது உலகிலுள்ள எல்லா படைப்பினங்களையும் பரிபாலிப்பவனாகிய அல்லாஹ் சிறந்தவனா அல்லது தன் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளவே அல்லாஹ்வின் உதவியை நாடி இருக்கும் கற்பனை தெயவங்கள் சிறந்தவையா? இவ்விருவரும் சமமாவார்களா? கொடை வள்ளலாக இருப்பவரை மதிப்பீர்களா? கையேந்துபவர்களை பாராட்டி மகிழ்வீர்களா?


وَضَرَبَ ٱللَّهُ مَثَلًۭا رَّجُلَيْنِ أَحَدُهُمَآ أَبْكَمُ لَا يَقْدِرُ عَلَىٰ شَىْءٍۢ وَهُوَ كَلٌّ عَلَىٰ مَوْلَىٰهُ أَيْنَمَا يُوَجِّههُّ لَا يَأْتِ بِخَيْرٍ ۖ هَلْ يَسْتَوِى هُوَ وَمَن يَأْمُرُ بِٱلْعَدْلِ ۙ وَهُوَ عَلَىٰ صِرَٰطٍۢ مُّسْتَقِيمٍۢ.

16:76. மேலும் அல்லாஹ் கூறும் இன்னொரு உதாரணத்தையும் கவனியுங்கள். ஒருவர் ஊமையாக இருக்கிறார். எந்த திறமையும் இல்லாதவர். அவர் தம் எஜமானனுக்குப் பெரும் சுமையாக இருக்கிறார். அவரை எங்கு அனுப்பினாலும் அவரால் எந்த நன்மையும் கொண்டுவர முடியாத நிலையில் இருக்கிறார். மற்றவரோ தானும் நேர்வழியில் இருந்து கொண்டு, மற்றவர்களுக்கும் நீதி நியாயத்துடன் நடந்து, நன்மையான செயல்களை செய்து வரும்படி அறிவுறுத்தி வருகிறார். ஆக இவர்கள் இருவரும் சமமாவார்களா?
அதாவது மூட நம்பிக்கைகளுக்கு அடிமையாகி வாழ்பவர்களால் உலகில் நடக்கும் அநியாயத்தைப் பற்றி தட்டிக் கேட்க முடியாது. உலகிற்கு எந்த நன்மையையும் சேர்க்க முடியாது. மாறாக எதையும் சிந்தித்து செயலாற்றும் தகுதி உடையவர்களால் மட்டுமே நாட்டிற்கும் உலகிற்கும், நன்மைகளை சேர்க்க முடியும். இந்த உண்மைகள் எல்லாம் அவர்களுடைய சிந்தனைப் புலன்களை விட்டு மறைவாக உள்ளன. எனவே வஹீ எனும் இறைவழிகாட்டுதலை மக்களுக்கு எடுத்துரைத்து, விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துவது ஒவ்வொருவரின் முக்கிய கடமையாகும். மேலும் அவர்களுக்கு இத்தகைய உதாரணங்களின் மூலம் விளக்கவேண்டும்.


وَلِلَّهِ غَيْبُ ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضِ ۚ وَمَآ أَمْرُ ٱلسَّاعَةِ إِلَّا كَلَمْحِ ٱلْبَصَرِ أَوْ هُوَ أَقْرَبُ ۚ إِنَّ ٱللَّهَ عَلَىٰ كُلِّ شَىْءٍۢ قَدِيرٌۭ.

16:77. அகிலங்களிலும் இப்பூமியிலும் உள்ள மறைவான விஷயங்கள் எல்லாம் அல்லாஹ்வுக்கு நன்கு தெரியும். மேலும் மனித செயல்களுக்கேற்ற விளைவுகள் ஏற்படக்கூடிய கால கட்டம் எப்போது வரும் என்பதும் அல்லாஹ்வுக்குத் தெரியும். அது நிகழும்போது எல்லாமே கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்து முடிந்துவிட்டது போலிருக்கும். அல்லாஹ்வின் செயல்திட்டங்கள் யாவும் நிர்ணயிக்கப்பட்ட கால அளவுபடியே நிகழ்ந்து வரும். இப்படியாக எல்லா படைப்புகளின் செயல்பாடுகளையும் அளவுகோல்களையும் அல்லாஹ் நிர்ணயித்துள்ளான்.
இதை ஒரு உதாரணத்தைக் கொண்டு விளங்கிக் கொள்ளலாம்.


وَٱللَّهُ أَخْرَجَكُم مِّنۢ بُطُونِ أُمَّهَٰتِكُمْ لَا تَعْلَمُونَ شَيْـًۭٔا وَجَعَلَ لَكُمُ ٱلسَّمْعَ وَٱلْأَبْصَٰرَ وَٱلْأَفْـِٔدَةَ ۙ لَعَلَّكُمْ تَشْكُرُونَ.

16:78. தாயின் வயிற்றில் கருவு வளர்வது ஆரம்ப கட்டத்தில் உங்களால் அறிந்து கொள்ள முடிவதில்லை. அதன் நிர்ணயிக்கப்பட்ட கால அளவின்படி உருவானதும் உங்களால் அறிந்து கொள்ள முடிகிறது. அதைத் தொடர்ந்து அது வளர்ந்து குழந்தைப் பிறக்கிறது. நீங்கள் சிறப்பாக வாழ்ந்து இறைவனுக்கு நன்றி விசுவசத்துடன் நடந்து கொள்ள செவிப்புலன்களையும், பார்வைப் புலன்களையும், சிந்தனைத் திறன்களையும் உங்களுக்கு அளித்துள்ளான்.
அதுபோல சமுதாயங்களில் நடந்து வரும் முறைக்கேடான செயல்களின் விளைவுகளைப் பற்றி, ஆரம்பக் காலக் கட்டத்தில் யாருக்கும் தெரிவதில்லை. அவர்களுக்கு பார்வைப் புலன்களும், செவிப்புலன்களும், சிந்தனைத் திறனும் இருந்தும், அதை அறிந்து கொள்ளும் ஆற்றல் அவர்களிடம் இருப்பதில்லை. இந்த உண்மையை இறைவழிகாட்டுதல் மூலம் இறக்கி அறிவிக்கப்படுகிறது. அவ்வழிகாட்டுதலை ஏற்று அதன்படி நடந்து பாதுகாப்பாக வாழ முன்வந்தால் அது உங்களுக்கு நல்லது. இல்லையெனில் அந்த விளைவுகள் தோற்றத்திற்கு வந்த பின்புதான் உங்களால் உணர முடியும். அப்போது மிகவும் கால தாமதம் ஆகிவிட்டிருக்கும். குழந்தை பிறப்பதை எவ்வாறு தடுக்க முடியாதோ அது போல அந்த விளைவுகளையும் உங்களால் தடுக்க முடியாது.


أَلَمْ يَرَوْا۟ إِلَى ٱلطَّيْرِ مُسَخَّرَٰتٍۢ فِى جَوِّ ٱلسَّمَآءِ مَا يُمْسِكُهُنَّ إِلَّا ٱللَّهُ ۗ إِنَّ فِى ذَٰلِكَ لَءَايَٰتٍۢ لِّقَوْمٍۢ يُؤْمِنُونَ.

16:79. மேலும் அல்லாஹ்வின் செயல்திட்டப்படி வானங்களில் பறவைகள் தம் இறக்கைகளை விரித்து, பறப்பதை நீங்கள் பார்ப்பதில்லையா? அவற்றை ஆகாயத்தில் தாங்கி நிற்கச் செய்வது அல்லாஹ்வின் ஏற்பாட்டைக் கொண்டுதானே! நிச்சயமாக இறைவழிகாட்டுதலை ஏற்று நடப்பவர்களுக்கு இதில் அத்தாட்சிகள் பல இருக்கின்றன.
வானில் பறவைகள் பறக்கும் போது இயற்கைச் சக்திகள் அவற்றை தாங்கிச் செல்கின்றன. அதே போல் இரு சக்கர வாகனங்களை நாம் வேகமாக ஓட்டிச் செல்லும் போது, கூடவே இயற்கைச் சக்திகள் உதவி புரிகின்றன. அதனால் அவை செங்குத்தான நிலையில் வேகமாக செல்ல முடிகிறது. இப்படியாக அல்லாஹ்வின் பேராற்றலும் வல்லமையும் பூமியிலும் வானங்களிலும் பரவி இருப்பதால் தான் எல்லா உயிரினங்களும், மனிதனும் சிறப்பாக உயிர் வாழ முடிகிறது. மற்ற உயிரினங்கள் இறைவனுக்கு கட்டுப்பட்டு வாழ்வது போல மனதனும் இறைவனுடைய வழிகாட்டுதலுக்கு கட்டுப்பட்டு வாழந்தால், சுதந்திரப் பறவைகளாக சிறப்பாக வாழலாம்.


وَٱللَّهُ جَعَلَ لَكُم مِّنۢ بُيُوتِكُمْ سَكَنًۭا وَجَعَلَ لَكُم مِّن جُلُودِ ٱلْأَنْعَٰمِ بُيُوتًۭا تَسْتَخِفُّونَهَا يَوْمَ ظَعْنِكُمْ وَيَوْمَ إِقَامَتِكُمْ ۙ وَمِنْ أَصْوَافِهَا وَأَوْبَارِهَا وَأَشْعَارِهَآ أَثَٰثًۭا وَمَتَٰعًا إِلَىٰ حِينٍۢ.

16:80. மேலும் நீங்கள் தங்குவதற்கு வசதியாக வீடுகளை அமைத்துக்கொள்ள, இறைவன் புறத்திலிருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி நீங்கள் வேறு ஊர்களுக்குச் சென்று வாழ, தற்காலிக கூடாரங்களை கட்டிக்கொள்ள கால்நடைகளின் தோல்கள் உதவி புரிகின்றன. மேலும் வெள்ளாடு, செம்மறியாடு, ஒட்டகம் போன்றவற்றின் உரோமங்களிலிருந்து ஆடைகளையும் தயாரித்துக் கொள்கிறீர்கள். குளிர் காலத்தில் உடுத்திக் கொள்ள அவை இதமாக இருக்கின்றன.
இவை யாவும் நீங்கள் நாடோடிகளாக வாழ்ந்த காலத்திலும் இறைவன் புறத்திலிருந்து கிடைத்திருந்த வாழ்க்கை வசதிகளாகும். அவற்றை எல்லாம் நீங்களே படைத்தவை அல்ல. அது மட்டுமின்றி கூடாரங்களை கட்டி கொள்ள வசதியில்லாத கால கட்டத்தில்:


وَٱللَّهُ جَعَلَ لَكُم مِّمَّا خَلَقَ ظِلَٰلًۭا وَجَعَلَ لَكُم مِّنَ ٱلْجِبَالِ أَكْنَٰنًۭا وَجَعَلَ لَكُمْ سَرَٰبِيلَ تَقِيكُمُ ٱلْحَرَّ وَسَرَٰبِيلَ تَقِيكُم بَأْسَكُمْ ۚ كَذَٰلِكَ يُتِمُّ نِعْمَتَهُۥ عَلَيْكُمْ لَعَلَّكُمْ تُسْلِمُونَ.

16:81. நிழல்களைத் தரும் பெரிய பெரிய மரங்களைப் படைத்ததும் அல்லாஹ் தான். அவற்றைக் கொண்டு வெயிலின் வெப்பத்திலிருந்து பாதுகாத்து சுகமாக வாழ முடிகிறது. மேலும் மலைகளில் ஆங்காகங்கே குகைகளும் படைக்கப்பட்டுள்ளன. அதிலும் நீங்கள் வாழ்வதற்கு வசதியாக இருக்கின்றன. அது மட்டுமின்றி நீங்கள் அழகாகத் தோன்றுவதற்கும் (பார்க்க 7:26) வெயிலின் வெப்பத்திலிருந்து பாதுகாப்பாக இருக்கவும் ஆடைகளையும், போரில் பாதுகாப்பாக இருக்க போர் கவசங்களையும் செய்துகொள்ள ஏற்பாடுகளை செய்ததும் அல்லாஹ்தான். இவை யாவும் நீங்கள் சிறப்பாக வாழ்வதற்கு இறைவன் புறத்திலிருந்து அளிக்கப்பட்ட அருட்கொடைகளாகும்.
இவற்றை எல்லாம் பயன்படுத்திக் கொண்டு நீங்கள் ஒற்றுமையுடன் ஒன்று கூடி வாழவேண்டும் என்பது இறைவனின் கட்டளையாகும். (பார்க்க 13:21, 13:25) அதன் படி வாழ்வதாக மனிதனும் உறுதியளித்தான்.


فَإِن تَوَلَّوْا۟ فَإِنَّمَا عَلَيْكَ ٱلْبَلَٰغُ ٱلْمُبِينُ.

16:82. ஆனால் அவர்கள் இறைவழிகாட்டுதலை தெளிவாக்கிய பின்பும், அதைப் புறக்கணித்து அதற்கு மாறு செய்தால், அதற்காக நீங்கள் கவலைப்பட தேவையில்லை. அவர்களுக்கு நேர் வழியினைக் காட்டுவதே உம்மீதுள்ள கடமையாகும்.


يَعْرِفُونَ نِعْمَتَ ٱللَّهِ ثُمَّ يُنكِرُونَهَا وَأَكْثَرُهُمُ ٱلْكَٰفِرُونَ.

16:83. அவர்களுக்குக் கிடைத்துள்ள அருட்கொடைகள் யாவும் இறைவன் புறத்திலிருந்து தான் என்பதை உணர்ந்தும், இறைக் கட்டளைக்கு அடிபணிய மறுக்கிறார்கள். அவர்களில் பெரும்பாலோர் மாறு செய்பவர்களாகவே இருக்கின்றனர்.
இதற்குக் காரணம் அவர்களின் தவறான செயல்களின் விளைவுகள் எவ்வளவு கடுமையாக இருக்கும் என்பதை அவர்கள் அறிவதில்லை (பார்க்க 16:77) எனவே தவறான செயல்களை தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறார்கள். இறைவழிகாட்டுதலின் படி ஆட்சியமைப்பு உருவாகும் சமயம், அவர்கள் செய்து வந்த செயல்களைப் பற்றி விசாரிக்கப்படும்.


وَيَوْمَ نَبْعَثُ مِن كُلِّ أُمَّةٍۢ شَهِيدًۭا ثُمَّ لَا يُؤْذَنُ لِلَّذِينَ كَفَرُوا۟ وَلَا هُمْ يُسْتَعْتَبُونَ.

16:84. அப்படியொரு காலக் கட்டத்தில் ஒவ்வொரு சமூகத்திலிருந்தும் அவர்களுக்கு எதிராக சாட்சி சொல்ல அவர்களிலிருந்தே வருவார்கள். (பார்க்க 16:89, 4:41) இந்த சாட்சியாளர்கள் இறைவனின் ஆட்சியமைப்புக்கு ஆதரவாக பேசுபவர்களும் இருப்பார்கள். எனவே இறைஆட்சியமைப்புக்கு எதிராக செயல்படுபவர்ளின் சாட்சிகள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. மேலும் அவர்கள் தண்டனையிலிருந்து தப்பிக்கவும் முடியாது.


وَإِذَا رَءَا ٱلَّذِينَ ظَلَمُوا۟ ٱلْعَذَابَ فَلَا يُخَفَّفُ عَنْهُمْ وَلَا هُمْ يُنظَرُونَ.

16:85. மேலும் அநியாய அக்கிரமச் செயல்களை செய்து வந்தவர்கள் தண்டனையை அனுபவிக்கும் போது, அதன் கடுமையை தாங்க முடியாமல் அவ்வேதனைகளை குறைக்குமாறு மன்றாடுவார்கள். ஆனால் அவர்களுடைய மன்றாடுதல் எதுவும் பலனளிக்காது. அவர்களுடைய தண்டனையும் குறையாது. அவர்களுக்கு உதவி செய்வோர் எவரும் இருக்க மாட்டார்கள்.


وَإِذَا رَءَا ٱلَّذِينَ أَشْرَكُوا۟ شُرَكَآءَهُمْ قَالُوا۟ رَبَّنَا هَٰٓؤُلَآءِ شُرَكَآؤُنَا ٱلَّذِينَ كُنَّا نَدْعُوا۟ مِن دُونِكَ ۖ فَأَلْقَوْا۟ إِلَيْهِمُ ٱلْقَوْلَ إِنَّكُمْ لَكَٰذِبُونَ.

16:86. இன்னும் அல்லாஹ்வுக்கு இணையாக வணங்கி வந்த கற்பனை தெய்வங்களைக் காட்டி அவர்கள் அல்லாஹ்விடம், “எங்கள் இறைவனே! உன்னை விட்டுவிட்டு இவற்றைத் தான் நாங்கள் தெய்வங்களாக பாவித்து வழிபட்டு வந்தோம்” என்று கூறுவார்கள். அது சமயம், அந்த போலியான தெய்வங்கள் எதுவும் பேசாது. அவை அனைத்தும் பொய்யே என்று நிரூபணம் ஆகிவிடும்.


وَأَلْقَوْا۟ إِلَى ٱللَّهِ يَوْمَئِذٍ ٱلسَّلَمَ ۖ وَضَلَّ عَنْهُم مَّا كَانُوا۟ يَفْتَرُونَ.

16:87. இறை ஆட்சியமைப்பு செயல்படும் போது, அதன்முன் அநீதி இழைத்தவர்கள் எல்லாம் சரணடைந்து விடுவார்கள். அவர்கள் செய்து கொண்டிருந்த சூழ்ச்சிகள் யாவும் செயலற்று பொகும்.
இவை எல்லாம் இறைவனின் ஆட்சியமைப்பு நடைபெறும் போது இவ்வுலகில் நடை பெறும். அப்படி அந்த ஆட்சி ஏற்படாத கால கட்டத்தில் அவர்களுடைய மரணத்திற்கு பின்பு இவை கண்டிப்பாக நடக்கும்.


ٱلَّذِينَ كَفَرُوا۟ وَصَدُّوا۟ عَن سَبِيلِ ٱللَّهِ زِدْنَٰهُمْ عَذَابًۭا فَوْقَ ٱلْعَذَابِ بِمَا كَانُوا۟ يُفْسِدُونَ.

16:88. அல்லாஹ்வின் வழிகாட்டுதலை ஏற்க மறுத்ததோடு, மக்களையும் இறை ஆட்சியமைப்பு ஏற்படாதவாறு இடையூறுகளை செய்து, நாட்டில் குழப்பங்களை ஏற்படுத்துபவர்களுக்கு “மனித செயல்களுக்கேற்ற விளைவுகள்” என்ற சட்டப்படி வேதனைகள் அதிகரித்துக் கொண்டே செல்லும்.


وَيَوْمَ نَبْعَثُ فِى كُلِّ أُمَّةٍۢ شَهِيدًا عَلَيْهِم مِّنْ أَنفُسِهِمْ ۖ وَجِئْنَا بِكَ شَهِيدًا عَلَىٰ هَٰٓؤُلَآءِ ۚ وَنَزَّلْنَا عَلَيْكَ ٱلْكِتَٰبَ تِبْيَٰنًۭا لِّكُلِّ شَىْءٍۢ وَهُدًۭى وَرَحْمَةًۭ وَبُشْرَىٰ لِلْمُسْلِمِينَ.

16:89. மேலும் இறைவனின் வழிகாட்டுதலின்படி ஆட்சியமைப்பு செயல்படும் காலக் கட்டத்தில், சமுதாயத்தில் உள்ள ஒவ்வொருவரும், தீயவர்களுக்கு எதிராக சாட்சி சொல்ல அவர்களிலிருந்தே வருவார்கள். அவ்வாறு சாட்சி கூறுபவர்கள், “இவ்வேதத்தில் இறக்கி அருளப்பட்டுள்ள ஒவ்வொரு விஷயத்தைப் பற்றியும் இறைத் தூதர் எங்களுக்கு தெளிவான ஆதாரங்களுடன் விளக்கினார். மேலும் அவற்றை ஏற்று நடக்கும் முஸ்லிம்களுக்கு இவை நேர் வழிகாட்டியாகவும் அதன்படி வாழ்பவர்களின் வாழ்க்கை சிறப்பாக அமையும் என்பதையும் இறைத் தூதர் விளக்கிக் காட்டி விட்டார்” என்று சாட்சி சொல்வார்கள்.
ஏனெனில் சமூக விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் தம்மை ஏதும் அறியாத களங்கமற்றவர்கள் என்று கூறிக் கொள்வார்கள். எங்களுக்கும் இறை வழிகாட்டுதல் கிடைத்திருந்தால் நாங்களும் நேர்வழியில் இருந்திருப்போம் என்பார்கள். ஆனால் அறியாமை தண்டனையிலிருந்து தப்புவதற்கு வழியல்ல (பார்க்க 17:15) (Ignorance of Law is no excuse)


۞ إِنَّ ٱللَّهَ يَأْمُرُ بِٱلْعَدْلِ وَٱلْإِحْسَٰنِ وَإِيتَآئِ ذِى ٱلْقُرْبَىٰ وَيَنْهَىٰ عَنِ ٱلْفَحْشَآءِ وَٱلْمُنكَرِ وَٱلْبَغْىِ ۚ يَعِظُكُمْ لَعَلَّكُمْ تَذَكَّرُونَ.

16:90. அவ்வாறு இறைத்தூதர்கள் தம் சமூகத்தவர்க்கு எடுத்துரைத்த இறைவழிகாட்டுதல்களின் முக்கிய அம்சங்கள் என்ன என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள்.
(1) சமுதாயத்தில் நீதி நெறிமுறையை கட்டிக் காத்து வரவேண்டும். அல்லாஹ்வின் சட்டப்படியே தீர்ப்பு அளிக்கவேண்டும். அந்த தீர்ப்பு தம்மை சார்ந்தவர்களுக்கு எதிராகச் சென்றாலும் சரியே. நீதியை விட்டுவிடக் கூடாது. (பார்க்க 5:8)
(2) சமுதாயச் சமச்சீர்நிலையை ஏற்படுத்தி அதைகட்டிக் காப்பாற்ற வேண்டும். இருப்போர் இல்லாதோர் என்ற வேற்றுமைகளை களைத்தால் தான் சமுதாய ஒற்றுமையை ஏற்படுத்த முடியும்.
(3) சமூகச் சீர்திருத்தங்களை உற்றார் உறவினர்களிலிருந்து ஆரம்பியுங்கள். அவர்களுடைய தேவைகளை நிறைவேற்றி வாருங்கள். அதன் பின் அதை படிப்படியாக விரிவாக்கம் செய்து, ஒட்டு மொத்த சமுதாயத்தின் தேவைகளையும் நிறைவேற்றுங்கள்.
(4) சமுதாயத்தில் மானக்கேடான மற்றும் தீய செயல்கள் நடைபெறாதவாறு பார்த்து கொள்ளுங்கள். அந்த மானக்கேடான செயல்கள் - வெளிப்படையாக இருந்தாலும் அந்தரங்கமாக இருந்தாலும் சரியே (பார்க்க 7:33)
(5) அல்லாஹ் நிர்ணயித்துள்ள வரம்புகளை மீறி செயல்படாதீர்கள். இந்த அறிவுரைகளை அல்லாஹ் அருளுவதன் நோக்கமே, நீங்கள் அனைவரும் அவற்றைக் கடைப்பிடித்து சிறந்த மஹான்களாகத் திகழவேண்டும் என்பதற்காகவே ஆகும். மேலும்


وَأَوْفُوا۟ بِعَهْدِ ٱللَّهِ إِذَا عَٰهَدتُّمْ وَلَا تَنقُضُوا۟ ٱلْأَيْمَٰنَ بَعْدَ تَوْكِيدِهَا وَقَدْ جَعَلْتُمُ ٱللَّهَ عَلَيْكُمْ كَفِيلًا ۚ إِنَّ ٱللَّهَ يَعْلَمُ مَا تَفْعَلُونَ.

16:91. (6) நீங்கள் அல்லாஹ்விடம் செய்து கொண்ட வாக்குறுதியை (பார்க்க 9:111) ஒரு போதும் மீறாதீர்கள். அதனடிப்டையில் நீங்கள் அல்லாஹ்வை சாட்சியாக வைத்து மக்களுக்கு கொடுத்த வாக்கை நிறைவேற்றுங்கள். நீங்கள் செய்வதனைத்தையும் அல்லாஹ்வுக்கு நன்கு தெரியும் என்பதை மறவாதீர்கள்.


وَلَا تَكُونُوا۟ كَٱلَّتِى نَقَضَتْ غَزْلَهَا مِنۢ بَعْدِ قُوَّةٍ أَنكَٰثًۭا تَتَّخِذُونَ أَيْمَٰنَكُمْ دَخَلًۢا بَيْنَكُمْ أَن تَكُونَ أُمَّةٌ هِىَ أَرْبَىٰ مِنْ أُمَّةٍ ۚ إِنَّمَا يَبْلُوكُمُ ٱللَّهُ بِهِۦ ۚ وَلَيُبَيِّنَنَّ لَكُمْ يَوْمَ ٱلْقِيَٰمَةِ مَا كُنتُمْ فِيهِ تَخْتَلِفُونَ.

16:92. ஒரு பெண்மணி கஷ்டப்பட்டு நூலை நூற்று நன்றாக முறுக்கேற்றியபின், அதை தானே துண்டுதுண்டாக வெட்டிவிட்டாளே, அவளைப் போன்று ஆகிவிடாதீர்கள். அதாவது சமுதாய ஒருமைப்பாட்டை கஷ்டப்பட்டு ஏற்படுத்திய பின், நீங்கள் மக்களுக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றாமல் சுயநலத்தோடு செயல்பட்டால் சமுதாயத்தில் எதிர்ப்பும், பிளவுகளும் ஏற்பட்டு சமுதாயம், துண்டு துண்டாக ஆகிவிடும். மேலும் சமுதாயத்தில் சிறுபான்மையினர் பெரும்பான்மையினரை மிகைத்து விடுவார்கள் என்ற அச்சத்தில் தேவையற்ற ஆணைகளை பிறப்பித்து, மக்களை ஏமாற்றாதீர்கள். இவையாவும் சமூக நல்லிணக்கத்திற்கு உகந்தது அல்ல. நீங்கள் எவ்வாறு நடந்து கொள்கிறீர்கள் என்பதே முக்கியமானதாகும். மேலும் அல்லாஹ்வின் கண்காணிப்பில் எப்போதும் இருக்கிறீர்கள் என்பதை மறவாதீர்கள். நீங்கள் இந்த அறிவுரைகளுக்கு மாற்றமாக செயல்பட்டால், உங்கள் செயல்பாடுகளின் விளைவுகள் ஏற்படும் நாளில் தெளிவாவது உறுதி.


وَلَوْ شَآءَ ٱللَّهُ لَجَعَلَكُمْ أُمَّةًۭ وَٰحِدَةًۭ وَلَٰكِن يُضِلُّ مَن يَشَآءُ وَيَهْدِى مَن يَشَآءُ ۚ وَلَتُسْـَٔلُنَّ عَمَّا كُنتُمْ تَعْمَلُونَ.

16:93. மற்ற உயிரினங்களைப் போன்றே அல்லாஹ் மனிதனையும் தம் இயல்பின் அடிப்படையிலேயே வாழும்படி படைத்திருந்தால், மனிதர்கள் அனைவரும் ஒரே சீராக வாழ்ந்திருப்பார்கள். ஆனால் அல்லாஹ்வின் செயல்திட்டம் அதுவல்ல. மனிதனுக்கு முழு சுதந்திரத்தையும் அளித்துவிட்டு, இறைவழிகாட்டுதலை நபிமார்கள் மூலம் இறக்கி அருளிவிட்டு, அவற்றை ஏற்கமறுத்து வழிகேட்டில் செல்வதும், அவற்றை ஏற்று நேர்வழியில் செல்வதும் மனித விருப்பத்திற்கு விடப்பட்டு விட்டது. எனவே உங்கள் செயல்களுக்கு நீங்களே பொறுப்பாளி ஆகிறீர்கள்.


وَلَا تَتَّخِذُوٓا۟ أَيْمَٰنَكُمْ دَخَلًۢا بَيْنَكُمْ فَتَزِلَّ قَدَمٌۢ بَعْدَ ثُبُوتِهَا وَتَذُوقُوا۟ ٱلسُّوٓءَ بِمَا صَدَدتُّمْ عَن سَبِيلِ ٱللَّهِ ۖ وَلَكُمْ عَذَابٌ عَظِيمٌۭ.

16:94. எனவே நாம் மீண்டும் வலியுறுத்தி சொல்லி விடுகிறோம். நீங்கள் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளையும், சத்திய பிரமாணங்களையும், மக்களை ஏமாற்றும் சாதனங்களாக ஆக்கிக் கொள்ளாதீர்கள். நீங்கள் அனைவரும் ஒருங்கிணைந்து ஆட்சியமைப்பை ஏற்படுத்திய பின், நம்பிக்கை துரோகச் செயல்களில் ஈடுபட்டு ஒருமைப்பாட்டை சீர்குலைக்காதீர்கள். இப்படியாக அல்லாஹ்வின் செயல் திட்டங்களை நிறைவேற்ற முடியாமல், நீங்கள் அனைவரும் கடுமையான வேதனைகளுக்கு ஆளாவீர்கள்.


وَلَا تَشْتَرُوا۟ بِعَهْدِ ٱللَّهِ ثَمَنًۭا قَلِيلًا ۚ إِنَّمَا عِندَ ٱللَّهِ هُوَ خَيْرٌۭ لَّكُمْ إِن كُنتُمْ تَعْلَمُونَ.

16:95. மேலும் அல்லாஹ்வின் ஆட்சியமைப்பு சட்டங்களின்படியே செயல்படுவதாக நீங்கள் எடுத்துக் கொண்ட பிரமாணங்களை, அற்ப ஆதாயங்களுக்காக புறந்தள்ளி விடாதீர்கள். நீங்கள் அல்லாஹ்வின் ஆட்சியமைப்பு மூலமாக கிடைக்கும் பலன்களைப் பற்றி அறிந்தால், நீங்கள் இவ்வாறு செய்ய மாட்டீர்கள்.


مَا عِندَكُمْ يَنفَدُ ۖ وَمَا عِندَ ٱللَّهِ بَاقٍۢ ۗ وَلَنَجْزِيَنَّ ٱلَّذِينَ صَبَرُوٓا۟ أَجْرَهُم بِأَحْسَنِ مَا كَانُوا۟ يَعْمَلُونَ.

16:96. அப்படியும் நீங்கள் சுயநலமாக எவ்வளவுதான் செல்வங்களை ஈட்டிக் கொண்டாலும், அவை உங்களிடம் நிரந்தரமாக தங்கப் போவதில்லை. நீங்களும் இவ்வுலகில் நிரந்தரமாக தங்கப்போவதும இல்லை. ஆனால் அல்லாஹ்வின் ஆட்சியமைப்பின் மூலமாக கிடைக்கின்ற பலன்கள் யாவும் நிலைத்திருக்கக் கூடியவை ஆகும். ஆக யார் அல்லாஹ்வின் வழிகாட்டுதலின்படி நிலைத்திருந்து அயராது உழைக்கிறார்களோ, அவர்களுடைய நற்செயல்களின் பலனாக நன்மைகள் பன்மடங்காக அவர்களுக்குக் கிடைத்து வரும்.


مَنْ عَمِلَ صَٰلِحًۭا مِّن ذَكَرٍ أَوْ أُنثَىٰ وَهُوَ مُؤْمِنٌۭ فَلَنُحْيِيَنَّهُۥ حَيَوٰةًۭ طَيِّبَةًۭ ۖ وَلَنَجْزِيَنَّهُمْ أَجْرَهُم بِأَحْسَنِ مَا كَانُوا۟ يَعْمَلُونَ.

16:97. உங்களில் ஆணோ பெண்ணோ யாரெல்லாம் அல்லாஹ்வின் வழிகாட்டுதலை ஏற்று, அதன்படி ஆக்கப்பூர்வமான நற்செயல்களை செய்கிறார்களோ, அவர்களுக்கு வளமான வாழ்வு கிடைக்கும். அது மட்டுமின்றி அவர்கள் செய்து வந்த நற்செயல்களின் பலனாக பல்வேறு நன்மைகள் அவர்களுக்கு வந்தடையும். இறைவனின் சட்டப்படி ஆணும் பெண்ணும் சமஅந்தஸ்து உள்ளவர்கள் என்பது இதிலிருந்து புலனாகிறது.


فَإِذَا قَرَأْتَ ٱلْقُرْءَانَ فَٱسْتَعِذْ بِٱللَّهِ مِنَ ٱلشَّيْطَٰنِ ٱلرَّجِيمِ.

16:98. எனவே இறைவழிகாட்டுதல் அடங்கிய திருக்குர்ஆன் காட்டும் வழியில் செயல்பட நீங்கள் முன்வரும் போது, சமூக விரோத சக்திகளை எதிர்கொள்ள வேண்டி வரும். அவர்கனை எல்லாம் எதிர்கொண்டு நீங்கள் திருக்குர்ஆனின் படி மிகவும் தீவரமாக உங்கள் செயல்திட்டத்தில் முன்னேற வேண்டும்.


إِنَّهُۥ لَيْسَ لَهُۥ سُلْطَٰنٌ عَلَى ٱلَّذِينَ ءَامَنُوا۟ وَعَلَىٰ رَبِّهِمْ يَتَوَكَّلُونَ.

16:99. ஆக எந்தச் சமுதாயம் இறைவழிகாட்டுதலுக்கு முற்றிலும் அடிபணிந்து செயல்படுமோ, அங்கு சமூக விரோத சக்திகளைக் கட்டுப்படுத்தி விடலாம். அப்படிப்பட்ட சமுதாயத்தில் தீய சக்திகளின் ஆதிக்கம் செல்லாது.


إِنَّمَا سُلْطَٰنُهُۥ عَلَى ٱلَّذِينَ يَتَوَلَّوْنَهُۥ وَٱلَّذِينَ هُم بِهِۦ مُشْرِكُونَ.

16:100. இதற்கு மாறாக எந்த சமுதாயம் மனோ இச்சை எனும் ஷைத்தான் காட்டும் பாதையில் செயல்படுமோ, அது நிச்சயமாக அல்லாஹ்வின் வழிகாட்டுதலுக்கு எதிராகவே செயல்படும். அதனால் அங்கு எல்லா விதமான மூட நம்பிக்கைகளும் தீமையான செயல்களும் நடைபெற்று வரும்.
இறைவழிகாட்டுதலை ஏற்க மறுக்கும் வேதக்காரர்கள், ஏற்கனவே இறைவேதங்கள் இருக்கும்போது, இந்த புதிய வேதமான திருக்குர்ஆன் எதற்கு என்று கேட்கிறார்கள். மேலும் முன்வேதமாகிய தவ்ராத்தில் பிறப்பிக்கப்பட்ட கட்டளைக்கு மாற்றமாக சில கட்டளைகள் இந்த புதிய வேதத்தில் பிறப்பிக்கப்படுவது ஏன் என்றும் கேட்கிறார்கள். காரணம் அவ்வேதங்களில் காலப்போக்கில் அவர்களே மாற்றங்களை செய்து கொண்டார்கள். (பார்க்க 2:106)


وَإِذَا بَدَّلْنَآ ءَايَةًۭ مَّكَانَ ءَايَةٍۢ ۙ وَٱللَّهُ أَعْلَمُ بِمَا يُنَزِّلُ قَالُوٓا۟ إِنَّمَآ أَنتَ مُفْتَرٍۭ ۚ بَلْ أَكْثَرُهُمْ لَا يَعْلَمُونَ.

16:101. அவர்கள் வேதத்தில் மாற்றங்களை செய்து கொண்டதை சரி செய்து மீண்டும் இறக்கி அருளப்படுகிறது. எனவே இந்த இறைத்தூதர் தம் இஷ்டத்திற்கு வேதத்தில் எழுதி கொள்கிறார் என்று அவர்கள் கூறுவது தவறாகும். எந்த காலக் கட்டங்களில் எத்தகைய சட்ட திட்டங்களை இறக்கி அருளவேண்டும் என்று அல்லாஹ்வுக்கு நன்கு தெரியும். எனினும் அவர்களில் பெரும்பாலோர் இந்த உண்மையை அறிய மாட்டார்கள். (பார்க்க 2:106)


قُلْ نَزَّلَهُۥ رُوحُ ٱلْقُدُسِ مِن رَّبِّكَ بِٱلْحَقِّ لِيُثَبِّتَ ٱلَّذِينَ ءَامَنُوا۟ وَهُدًۭى وَبُشْرَىٰ لِلْمُسْلِمِينَ.

16:102. அவர்கள் கூறுவது போல இந்த இறை வேதமான குர்ஆனை இறைத் தூதர் தம் இஷ்டத்திற்கு எழுதி கொள்கின்ற ஒன்றல்ல. ஓர் ஊசிமுனை அளவுகூட எவ்வித மாற்றமும் செய்யாமல் உள்ளது உள்ளபடியே இறக்கி அருளும் சக்தியாக செயல்படும் ஜிப்ரீல் மூலம் இறக்கி அருளப்படுவதாகும் (பார்க்க 2:97) இதைக் கொண்டு இறை வழிகாட்டுதலை ஏற்று நடப்பவர்களுக்கு உறுதிப்பாடு அளிக்கவும், நேர்வழி காட்டவும், அதன்படி செயல்படுவதால் ஏற்படும் நன்மைகளை எடுத்து கூறுவதாகவும் உள்ளது. இந்த உண்மையை அவர்களுக்கு எடுத்துரைப்பீராக.

وَلَقَدْ نَعْلَمُ أَنَّهُمْ يَقُولُونَ إِنَّمَا يُعَلِّمُهُۥ بَشَرٌۭ ۗ لِّسَانُ ٱلَّذِى يُلْحِدُونَ إِلَيْهِ أَعْجَمِىٌّۭ وَهَٰذَا لِسَانٌ عَرَبِىٌّۭ مُّبِينٌ.

16:103. மேலும், “இவரிடம் ஒரு மனிதர்தான் வந்து கற்றுக் கொடுக்கிறார்” என்றும் அவர்கள் கூறுவது அல்லாஹ்வுக்குத் தெரியாமல் இல்லை. இப்படி கற்றுக் கொடுப்பதாக கூறும் நபருக்கு அரபி மொழி தெரியாத அன்னியராக இருக்கிறார் என்பதையும் எண்ணிப் பார்ப்பதில்லை. மேலும் இதில் சொல்லப்படுகின்ற விஷயங்களும், அதன் சொல் நயத்தையும் எந்த ஒரு தனி நபராலும் சொல்ல முடியுமா என்பதையும் அவர்கள் கவனித்துப் பார்ப்பதில்லை.


إِنَّ ٱلَّذِينَ لَا يُؤْمِنُونَ بِـَٔايَٰتِ ٱللَّهِ لَا يَهْدِيهِمُ ٱللَّهُ وَلَهُمْ عَذَابٌ أَلِيمٌ.

16:104. ஆக உண்மை விஷயம் என்னவென்றால், அல்லாஹ்வின் வழிகாட்டுதலை ஏற்க விரும்பாதவர்களுக்கு, அல்லாஹ்வின் புறத்திலிருந்து ஒருபோதும் நேர்வழி கிடைப்பதில்லை. இதனால் அவர்கள் வழிதவறிச் சென்று நோவினை தரும் வேதனைகளுக்கு ஆளாகிறார்கள்.


إِنَّمَا يَفْتَرِى ٱلْكَذِبَ ٱلَّذِينَ لَا يُؤْمِنُونَ بِـَٔايَٰتِ ٱللَّهِ ۖ وَأُو۟لَٰٓئِكَ هُمُ ٱلْكَٰذِبُونَ.

16:105. மேலும் அவர்கள், இவர் இட்டுகட்டிக் கூறுகிறார் என்று சொல்வதெல்லாம், இறை வழிகாட்டுதலை ஏற்க மனமில்லாமல் பேசுகின்ற பேச்சே ஆகும். இறை வழிகாட்டுதலை ஏற்று கொள்ள மாட்டோம் என்று நேரடியாக கூறாமல் இப்படி மறைமுகமாகப் பேசி வருகிறார்கள். எனவே அவர்களே பொய்யர்கள் ஆவர்.


مَن كَفَرَ بِٱللَّهِ مِنۢ بَعْدِ إِيمَٰنِهِۦٓ إِلَّا مَنْ أُكْرِهَ وَقَلْبُهُۥ مُطْمَئِنٌّۢ بِٱلْإِيمَٰنِ وَلَٰكِن مَّن شَرَحَ بِٱلْكُفْرِ صَدْرًۭا فَعَلَيْهِمْ غَضَبٌۭ مِّنَ ٱللَّهِ وَلَهُمْ عَذَابٌ عَظِيمٌۭ.

16:106. இப்போது இருப்பது இறை வழிகாட்டுதலை ஏற்றுக்கொண்ட பின், அதற்கு மாற்றமாக செயல்படுபவர்களைப் பற்றியது. அவர்கள் இறைவழிகாட்டுதலைப் பின்பற்றுவதால் ஏற்படும் நன்மைகளை அறிந்துக் கொண்ட பின்பும், அவற்றிற்கு மாற்றமாக செயல் பட்டால், அத்தகையவர்களும் கடுமையான வேதனைக்கு ஆளாவார்கள். எனினும் ஏதோ நிர்ப்பந்தத்தின் அடிப்படையில் அதற்கு மாறு செய்வது என்பது வேறு விஷயம் ஆகும். அது ஒரு பெரிய குற்றமும் இல்லை.
அது மட்டுமின்றி தற்காலிக சுகங்களைத் தரும் சில செயல்கள், எதிர்கால வாழ்வை பாதிக்கக் கூடியதாக இருக்கும். மது, போதைப் பொருட்கள், சூதாட்டம், விபச்சாரம், லஞ்சம், வட்டித் தொழில் போன்றவை தற்காலிக ஆதாயங்களைத் தருபவை. ஆனால் அவை அவர்களுடைய எதிர்காலத்தில் பெரிய அளவில் பாதிப்புகளை ஏற்படுத்தும். அது மட்மின்றி சமுதாய சீரழிவுகளும் ஏற்படும். இத்தகைய செயல்களை திருக்குர்ஆன், "ஹயாதுத் துன்யா" என்கிறது. அதாவது தற்காலி பலன்களை மட்டும் அளிக்கக் கூடிய செயல்கள். ‘ஹயாத்துல் ஆஃகிரா’ என்பது வருங்கால நிலையான வாழ்வை குறிக்கும். மனிதனுடைய வாழ்வு மரணத்திற்கு பின்பும் தொடர்வதால் மரணத்திற்குப் பின் தொடர்கின்ற வாழ்வையும் ‘ஹயாத்துல் ஆஃகிரா’ அல்லது ‘மறுமை நாள்’ என்று வருகிறது. எனவே எதிர்க்கால நலனை கருத்தில் கொண்டு இப்படிப்பட்ட தற்காலிக ஆதாயங்களை மட்டும் தரும் செயல்களை தவிர்த்து கொள்ள வேண்டும்.


ذَٰلِكَ بِأَنَّهُمُ ٱسْتَحَبُّوا۟ ٱلْحَيَوٰةَ ٱلدُّنْيَا عَلَى ٱلْءَاخِرَةِ وَأَنَّ ٱللَّهَ لَا يَهْدِى ٱلْقَوْمَ ٱلْكَٰفِرِينَ.

16:107. ஆனால் இறை நிராகரிப்பவர்கள், தற்காலிக சந்தோஷங்களைத் தரும் செயல்களையே நேசிப்பவர்களாக இருக்கிறார்கள். வருங்கால நிலையான பலன்களைப் பற்றிய அக்கறை அவர்களிடம் இல்லை. இத்தகைய இறை நிராகரிப்பவர்களுக்கு அல்லாஹ் நேர்வழி காட்டுவதில்லை.


أُو۟لَٰٓئِكَ ٱلَّذِينَ طَبَعَ ٱللَّهُ عَلَىٰ قُلُوبِهِمْ وَسَمْعِهِمْ وَأَبْصَٰرِهِمْ ۖ وَأُو۟لَٰٓئِكَ هُمُ ٱلْغَٰفِلُونَ.

16:108. இதனால் காலப்போக்கில், அவர்களுடைய உள்ளங்களிலும், காதுகளிலும், பார்வைப் புலன்களிலும் அல்லாஹ்வின் நியதிப்படி திரை ஏற்பட்டு விடும். அதன்பின் நீங்கள் எவ்வளவு தான் தீய செயல்களால் ஏற்படும் பாதிப்புகளைப் பற்றி எடுத்துச் சொன்னாலும், அவர்கள் அலட்சியமாகவே இருந்து விடுவார்கள்.


لَا جَرَمَ أَنَّهُمْ فِى ٱلْءَاخِرَةِ هُمُ ٱلْخَٰسِرُونَ.

16:109. இத்தகையவர்கள் வருங்கால நிலையான வாழ்வில் மிகவும் நஷ்டவாளிகளாகத் தான் இருப்பார்கள்.


ثُمَّ إِنَّ رَبَّكَ لِلَّذِينَ هَاجَرُوا۟ مِنۢ بَعْدِ مَا فُتِنُوا۟ ثُمَّ جَٰهَدُوا۟ وَصَبَرُوٓا۟ إِنَّ رَبَّكَ مِنۢ بَعْدِهَا لَغَفُورٌۭ رَّحِيمٌۭ.

16:110. இதற்கு மாறாக, இறைவன் காட்டிய வழியில் செயல்படுபவர்கள், தம்மை அதற்காக முழுவதும் அர்ப்பணித்து, இன்னல்களையும் இக்கட்டான சூழ்நிலைகளையும் எதிர்கொண்டு நிலைகுலையாமல் உறுதியோடு அயராது உழைப்பார்கள். மேலும் அவசியம் ஏற்படின் வீட்டையும், நாட்டையும் துறக்கவும் தயங்க மாட்டார்கள். அத்தகையவர்களுக்கு அல்லாஹ்வின் புறத்திலிருந்து உதவிகளும் நல்லருளும் கிடைக்கும். அல்லாஹ்வின் வழிகாட்டுதல்கள் யாவும் அனைத்து தரப்பு மக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு செயல்படும் கருணை மிக்கதாய் இருக்கின்றன என்பதில் சந்தேகம் கொள்ள வேண்டாம்.


۞ يَوْمَ تَأْتِى كُلُّ نَفْسٍۢ تُجَٰدِلُ عَن نَّفْسِهَا وَتُوَفَّىٰ كُلُّ نَفْسٍۢ مَّا عَمِلَتْ وَهُمْ لَا يُظْلَمُونَ.

16:111. ஆக ஏற்கனவே 16:10இல் சொன்னது போல, அவரவர் செய்யும் செயல்களின் விளைவுகள் தோற்றத்திற்கு வரும் கால கட்டத்தில், அவர்கள் செய்து வரும் தீய செயல்களே அதற்குரிய தண்டனையை அளிக்க போதுமானதாக இருக்கும். இதை எதிர்த்து யாரும் வாதிடவும் முடியாது. அதே சமயத்தில் அவர்கள் யாரும் ஒருபோதும் அநியாயம் செய்யப்படவும் மாட்டார்கள். அவர்கள் என்ன தீய செயல்களை செய்தார்களோ, அதற்கேற்ற தண்டனைதான் அவர்களுக்குக் கிடைக்கும்.
தனி நபருக்குச் சொல்லப்பட்ட இவ்விஷயம், சமுதாயத்திற்கும் பொருந்தும். அதாவது ஒரு சமுதாயம் எவ்வாறு செயல்படுகிறதோ, அதன்படியே அவர்களின் நற்செயல்களுக்கு நற்பலன்களும் தீய செயல்களுக்கு தீய விளைவுகளும் கிடைத்து வரும். இந்தப் பேருண்மையை ஒரு உதாரணத்தின் மூலம் விளங்கிக் கொள்ளலாம்.


وَضَرَبَ ٱللَّهُ مَثَلًۭا قَرْيَةًۭ كَانَتْ ءَامِنَةًۭ مُّطْمَئِنَّةًۭ يَأْتِيهَا رِزْقُهَا رَغَدًۭا مِّن كُلِّ مَكَانٍۢ فَكَفَرَتْ بِأَنْعُمِ ٱللَّهِ فَأَذَٰقَهَا ٱللَّهُ لِبَاسَ ٱلْجُوعِ وَٱلْخَوْفِ بِمَا كَانُوا۟ يَصْنَعُونَ.

16:112. ஒர் ஊரில் எல்லோரும் அச்சமில்லாமல் நிம்மதியாக வாழ்ந்து வந்தனர். அங்கு அவர்களுக்கு வேண்டிய உணவு மற்றும் வாழ்வாதாரங்கள் யாவும் தாராளமாகக் கிடைத்து வந்தன. ஆனால் காலப் போக்கில் அவர்கள் அல்லாஹ்வின் கட்டளைக்கு அடிபணிந்து வாழ தவறிவிட்டனர். அதாவது அனைத்து தரப்பு மக்களுக்கும் சேர வேண்டிய வாழ்வாதாரங்களில் மோசடி செய்ய ஆரம்பித்தார்கள். அதனால் அச்சமுதாயத்தில் பசியின் கொடுமையும், பாதிக்கப்பட்டவர்களால் ஏற்படும் ஆபத்துகளின் பயமும் நாலாப்புறமும் சூழ்ந்து கொண்டன. இப்படியாக சிறப்பாக வாழ்ந்து வந்த அச்சமுதாயம் சீரழிந்து வேதனைக்குள் ஆனது.


وَلَقَدْ جَآءَهُمْ رَسُولٌۭ مِّنْهُمْ فَكَذَّبُوهُ فَأَخَذَهُمُ ٱلْعَذَابُ وَهُمْ ظَٰلِمُونَ.

16:113. இத்தகைய ஏற்றத் தாழ்வுகளையும், சீரழிவுகளையும் சரி செய்து சமுதாயத்தை சீரமைக்க, இறைத்தூதர் ஒருவர் அவர்களிலிருந்தே அவர்களிடத்தில் வந்தார். அவர் சமுதாயத்தினரை திருத்த அறிவுரைகளை செய்து வந்தார். அவர்களுடைய தவறான செயல்களால் ஏற்படும் விபரீத விளைவுகளைப் பற்றி எடுத்துரைத்து எச்சரிக்கை செய்து வந்தார். ஆனால் அவருடைய அறிவுரைகளை அந்த அநியாயக்காரர்கள் ஏற்கவில்லை. எனவே அவர்கள் அநியாயம் செய்து வந்ததன் காரணமாக அவர்களுக்கு வேதனைகள் பீடித்துக் கொண்டன.


فَكُلُوا۟ مِمَّا رَزَقَكُمُ ٱللَّهُ حَلَٰلًۭا طَيِّبًۭا وَٱشْكُرُوا۟ نِعْمَتَ ٱللَّهِ إِن كُنتُمْ إِيَّاهُ تَعْبُدُونَ.

16:114. இறைவழிகாட்டுதலை ஏற்றுக்கொண்டவர்களே! நீங்கள் இந்த உதாரணத்தின் மூலம் படிப்பினை பெறுங்கள். நீங்கள் அவ்வாறு அநியாயமாக செயல்படாதீர்கள். அல்லாஹ்வின் கட்டளைப்படி நியாயமான முறையில் வாழ்வாதார பங்கீட்டு முறையை கடைப்பிடித்து நீங்களும் உங்கள் பங்கிற்கு அவற்றை பெற்று கொள்ளுங்கள். இப்படியாக நீங்கள் அல்லாஹ்வின் கட்டளைக்கு இணங்கி நன்றி விசுவாசத்துடன் நடந்து கொள்ளுங்கள்.


إِنَّمَا حَرَّمَ عَلَيْكُمُ ٱلْمَيْتَةَ وَٱلدَّمَ وَلَحْمَ ٱلْخِنزِيرِ وَمَآ أُهِلَّ لِغَيْرِ ٱللَّهِ بِهِۦ ۖ فَمَنِ ٱضْطُرَّ غَيْرَ بَاغٍۢ وَلَا عَادٍۢ فَإِنَّ ٱللَّهَ غَفُورٌۭ رَّحِيمٌۭ.

16:115. அதுமட்டுமின்றி அல்லாஹ் தடை விதித்ததைத் தவிர, வேறெதையும் தடை செய்யாதீர்கள். உணவு வகையில் தடை செய்யப்பட்டவை நான்கு மட்டுமே ஆகும். தானாகவே செத்தது, பீச்சிடும் இரத்தம், பன்றியின் இறைச்சி மற்றும் அல்லாஹ் அல்லாத பெயரைச் சொல்லி அறுக்கப்பட்டவை ஆகியவையே தடை செய்யப்படுகின்றன. (2:173, 5:3) இருப்பினும் தவிர்க்க முடியாத இக்கட்டான சூழ்நிலையில் சிக்கிக் கொண்டால், இவற்றை உண்பதிலும் தவறு ஒன்றுமில்லை. அந்தந்த சூழ்நிலைக்கு ஏற்றவாறு செயல்பட வேண்டும். அதில் வரம்பு மீறல் இருக்கக் கூடாது. அல்லாஹ்வின் வழிகாட்டுதல்கள் அனைத்து தரப்பு மக்களின் பாதுகாப்பைக் கருதும் கருணை மிக்கதாய் இருக்கின்றன என்பதுதான் உண்மை.


وَلَا تَقُولُوا۟ لِمَا تَصِفُ أَلْسِنَتُكُمُ ٱلْكَذِبَ هَٰذَا حَلَٰلٌۭ وَهَٰذَا حَرَامٌۭ لِّتَفْتَرُوا۟ عَلَى ٱللَّهِ ٱلْكَذِبَ ۚ إِنَّ ٱلَّذِينَ يَفْتَرُونَ عَلَى ٱللَّهِ ٱلْكَذِبَ لَا يُفْلِحُونَ.

16:116. அதே சமயத்தில் ஒரு விஷயத்தை நீங்கள் நன்றாக மனதில் பதிய வைத்து கொள்ளுங்கள். நீங்கள் உங்கள் விருப்பப்படி இவை எல்லாம் ஆகுமானவை, இவை எல்லாம் ஆகுமானதல்ல என்று மக்களிடம் வார்த்தைகளைக் கொட்டி விடாதீர்கள். இப்படித் தான் அல்லாஹ் கூறுகிறான் என்று அவன் பெயரை பயன்படுத்தி பொய்யுரைக்காதீர்கள். இப்படி யார் அல்லாஹ்வின் பெயரைப் பயன்படுத்தி இட்டுகட்டிக் கூறுகிறார்களோ, அவர்கள் தம் செயல்திட்டத்தில் ஒருபோதும் வெற்றிபெறவே மாட்டார்கள்.


مَتَٰعٌۭ قَلِيلٌۭ وَلَهُمْ عَذَابٌ أَلِيمٌۭ.

16:117. இப்படி அல்லாஹ்வின் பெயரை பயன்படுத்தி இட்டுக்கட்டி கூறுபவர்கள், சிறிது காலம் மட்டுமே சுகம் அனுபவித்து கொள்ள முடியும். ஆனால் இறுதியில் அவர்களுடைய வாழ்வு வேதனை மிக்கதாக ஆகிவிடும்.


وَعَلَى ٱلَّذِينَ هَادُوا۟ حَرَّمْنَا مَا قَصَصْنَا عَلَيْكَ مِن قَبْلُ ۖ وَمَا ظَلَمْنَٰهُمْ وَلَٰكِن كَانُوٓا۟ أَنفُسَهُمْ يَظْلِمُونَ.

16:118. இப்படித்தான் பழங்காலத்தில் யூதர்களும் செயல்பட்டார்கள். நாம் ஏற்கனவே 6:146ல் அறிவித்தபடி ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு ஒரு சில காரணங்களுக்காக சில உணவு வகைகளை தடை விதித்திருந்தோம். ஆனால் அவர்களோ, அவற்றை நிரந்தரமாக்கிக் கொண்டதோடு பலவற்றை தடைசெய்து கொண்டு தமக்குத்தாமே அநியாயம் செய்து கொண்டார்கள். அல்லாஹ் அவர்களுக்கு ஒருபோதும் அநீதி இழைத்ததில்லை.


ثُمَّ إِنَّ رَبَّكَ لِلَّذِينَ عَمِلُوا۟ ٱلسُّوٓءَ بِجَهَٰلَةٍۢ ثُمَّ تَابُوا۟ مِنۢ بَعْدِ ذَٰلِكَ وَأَصْلَحُوٓا۟ إِنَّ رَبَّكَ مِنۢ بَعْدِهَا لَغَفُورٌۭ رَّحِيمٌ.

16:119. இருப்பினும் நடந்தவை நடந்ததாகவே இருக்கட்டும். நீங்கள் இதுவரையில் அறியாமையில் இப்படிப்பட்ட தவறுகளை செய்திருக்கலாம். இப்போது இறை வழிகாட்டுதல்கள் வந்து விட்டன. எனவே அறியாமையில் செய்த தவறுகளுக்கு அல்லாஹ்விடம் மன்னிப்பு உண்டு (பார்க்க 4:17). ஆனால் நீங்கள் அந்த தவறுகளை உடனடியாக விட்டுவிட்டு, அல்லாஹ்வின் வழிகாட்டுதலை ஏற்று, தம்மை அதன்படி திருத்திக் கொள்ளுங்கள். இத்தனை காலத்திற்குப் பின்பும், நீங்கள் திருந்தி வாழ்ந்தால் உங்கள் வாழ்வு பாதுகாப்பானதாக ஆகிவிடும். ஏனெனில் இப்படி ஒரு செயல்திட்டத்தை ஏற்படுத்திய அல்லாஹ் மிகவும் கருணை மிக்கவன் ஆவான்.
ஆனால் யூதர்களோ அவர்களுடைய பரமகுரு இப்றாஹீம் நபியைப் பின்பற்றி வருவதாக பறைசாற்றிக் கொள்கிறார்கள்.


إِنَّ إِبْرَٰهِيمَ كَانَ أُمَّةًۭ قَانِتًۭا لِّلَّهِ حَنِيفًۭا وَلَمْ يَكُ مِنَ ٱلْمُشْرِكِينَ.

16:120. ஆனால் இப்றாஹீம் நபியோ ஒருபோதும் அல்லாஹ்வின் வழிகாட்டுதலுக்கு மாற்றமாக செயல்பட்டது கிடையாது. அவர் முற்றிலும் இறைவனுக்கு கட்டுப்பட்டவராகவே வாழ்ந்தார். சுருங்கச் சொன்னால் அவர் ஒட்டுமொத்த சமுதாயங்களின் மார்க்க மேதையாகவே திகழ்ந்தார்.


شَاكِرًۭا لِّأَنْعُمِهِ ۚ ٱجْتَبَىٰهُ وَهَدَىٰهُ إِلَىٰ صِرَٰطٍۢ مُّسْتَقِيمٍۢ.

16:121. அவர் அல்லாஹ்வின் அருட்கொடைகளை அவன் காட்டிய வழியில் பயன்படுத்தி, அவனுக்கு நன்றி விசுவாசத்துடன் நடந்துகொண்டார். அதனால் தான் அவர் "உலக மக்களின் தலைவர்" என்ற பட்டத்திற்கு அல்லாஹ்வின் தேர்வில் இடம்பெற்றார். (பார்க்க 2:124) மேலும் அவர் அனைத்து விஷயங்களிலும் நேர்வழி பெற்று அதன்படி செயல்படுபவராகவே இருந்தார். அவர் சென்ற வழியில் நீங்களும் செல்லுங்கள். (பார்க்க 6:161)


وَءَاتَيْنَٰهُ فِى ٱلدُّنْيَا حَسَنَةًۭ ۖ وَإِنَّهُۥ فِى ٱلْءَاخِرَةِ لَمِنَ ٱلصَّٰلِحِينَ.

16:122. அதனால் இறைவனின் நியதிப்படி உலக வாழ்வில் அவருக்கு மிகவும் உயர்ந்த அந்தஸ்து கிடைத்தது. அவர் மறுமை வாழ்விலும் சிறந்த தலைவர்களில் ஒருவராக விளங்குவார்.


ثُمَّ أَوْحَيْنَآ إِلَيْكَ أَنِ ٱتَّبِعْ مِلَّةَ إِبْرَٰهِيمَ حَنِيفًۭا ۖ وَمَا كَانَ مِنَ ٱلْمُشْرِكِينَ.

16:123. இதனால் தான் நபியே! இப்றாஹீம் நபி எவ்வாறு மில்லத் என்ற மக்கள் தொண்டு இயக்கத்தை ஏற்படுத்தி சிறப்பாக செயல்பட்டாரோ, அவ்வாறே நீங்களும் சிறப்பாக செயல்படுங்கள். அவர் ஒருபோதும் இறைவனுக்கு இணையாக வேறு எந்த வழிமுறையையும் கடைப்பிடித்ததே இல்லை.


إِنَّمَا جُعِلَ ٱلسَّبْتُ عَلَى ٱلَّذِينَ ٱخْتَلَفُوا۟ فِيهِ ۚ وَإِنَّ رَبَّكَ لَيَحْكُمُ بَيْنَهُمْ يَوْمَ ٱلْقِيَٰمَةِ فِيمَا كَانُوا۟ فِيهِ يَخْتَلِفُونَ.

16:124. ஆனால் இந்த யூதர்களோ, இப்ராஹீம் நபி கடைப்பிடித்த வழிமுறையையே தாமும் கடைப்பிடித்து வருவதாக முறையிட்டுக் கொள்கிறார்கள். மேலும் வரம்பு மீறின செயலில் ஈடுபட்ட மீனவர்களுக்கு ஏற்பட்ட கதியைப் பற்றி ஒவ்வொருவரும் ஒரு கருத்தை வைத்துக் கொண்டு, தர்க்கித்து வருகின்றனர். (பார்க்க 2:65, 4:47, 4:154, 7:163) அவர்கள் செய்து வரும் தவறான செயல்களின் விளைவுகள் ஏற்படும் காலக் கட்டத்தில், மீனவர்களுக்கு ஏற்பட்ட அதே கதி இவர்களுக்கும் ஏற்படும். அப்போதுதான் இவர்களுக்கு உண்மைகள் விளங்கும் போல் உள்ளதே!


ٱدْعُ إِلَىٰ سَبِيلِ رَبِّكَ بِٱلْحِكْمَةِ وَٱلْمَوْعِظَةِ ٱلْحَسَنَةِ ۖ وَجَٰدِلْهُم بِٱلَّتِى هِىَ أَحْسَنُ ۚ إِنَّ رَبَّكَ هُوَ أَعْلَمُ بِمَن ضَلَّ عَن سَبِيلِهِۦ ۖ وَهُوَ أَعْلَمُ بِٱلْمُهْتَدِينَ.

16:125. எனவே நீங்கள் அவர்களைப் பற்றிய கவலையை விட்டுவிட்டு, மக்களிடம் அல்லாஹ்வின் வழிகாட்டுதலை விவேகத்துடனும், அழகிய உபதேசக்தைக் கொண்டும் எடுத்துரைத்து அல்லாஹ்வின் சன்மார்க்கத்தில் வந்து இணையுமாறு அழைப்பீராக! இன்னும் நீங்கள் அவர்களிடத்தில் தர்க்கம் செய்ய நேர்ந்தாலும், அழகிய முறையில் தர்க்கம் செய்யுங்கள். ஆக வழி தவறிச் செல்பவர்கள் யார், மற்றும் நேர்வழியில் இருப்பவர் யார் என்பது இறைவனுக்குத் தெரியும் என்பதை நீங்கள் மறவாதீர்கள்.


وَإِنْ عَاقَبْتُمْ فَعَاقِبُوا۟ بِمِثْلِ مَا عُوقِبْتُم بِهِۦ ۖ وَلَئِن صَبَرْتُمْ لَهُوَ خَيْرٌۭ لِّلصَّٰبِرِينَ.

16:126. இறை வழிகாட்டுதலைப் பேணி நடப்பவர்களே! நீங்கள் பகைவர்களை அடக்க எண்ணினால், அவர்கள் எந்த அளவுக்கு எல்லையை மீறி நடந்தார்களோ, அதே அளவு நீங்களும் அவர்களைத் துரத்திப் பிடியுங்கள். நீங்கள் பொறுமையுடன் உங்கள் எல்லைக் கோட்டிற்குள்ளேயே தங்கிக் கொண்டாலும் அது உங்களுக்கு நல்லதே ஆகும்.
ஏனெனில் மனிதன் மனிதனுக்குப் பகைவன் என்ற அடிப்படையில் செயல்படுவது முறையாகாது. இரு வேறு கொள்கைகளுக்கு இடையே நடக்கும் போராட்டமே இது. எனவே மனிதர்களைக் கொன்று குவிப்பது போரின் நோக்கமில்லை.


وَٱصْبِرْ وَمَا صَبْرُكَ إِلَّا بِٱللَّهِ ۚ وَلَا تَحْزَنْ عَلَيْهِمْ وَلَا تَكُ فِى ضَيْقٍۢ مِّمَّا يَمْكُرُونَ.

16:127. நீங்கள் எந்த விஷயத்திலும் நிலைகுலையாமல் செயல்படுவதே சாலச் சிறந்தது. அல்லாஹ்வின் வழிகாட்டுதலோடு ஒன்றி செயல்படுங்கள். அவ்வாறு செயல்படாமல் உங்களால் எதையும் இவ்வுலகில் சாதிக்க முடியாது. அன்றி உமக்கு எதிராக பகைவர்கள் செய்யும் சூழ்ச்சிகளைப் பற்றி கவலைப்பட்டுக் கொண்டிராதீர்கள். உங்கள் மனம் அதற்காக நெருக்கடியில் ஆகிவிடவேண்டாம்.


إِنَّ ٱللَّهَ مَعَ ٱلَّذِينَ ٱتَّقَوا۟ وَّٱلَّذِينَ هُم مُّحْسِنُونَ.

16:128. அல்லாஹ்வின் வழிகாட்டுதலை பேணி நடப்பவர்களுக்கும் அழகிய சமூக சேவை செய்பவர்களுக்கும் அல்லாஹ்வின் உதவி கிடைப்பது உறுதி என்பதை அறிந்து கொள்ளுங்கள்.