بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ

15:0.அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் அறிவுரைப்படியே அனைத்துக் காரியங்களையும் செய்ய நாடுகிறேன். (பார்க்க 6:162)


الٓر ۚ تِلْكَ ءَايَٰتُ ٱلْكِتَٰبِ وَقُرْءَانٍۢ مُّبِينٍۢ.

15:1. உலக மக்கள் அனைவரும் கடைப்பிடிக்க வேண்டிய சட்டதிட்டங்கள் அடங்கிய இவ்வேதம், நிகரற்ற வல்லமையும் கிருபையுமுடைய அல்லாஹ்வின் புறத்திலிருந்து இறக்கி அருளப்படுகிறது. மேலும் இந்த குர்ஆனில் அனைத்து விஷயங்களைப் பற்றியும், தெள்ளத் தெளிவாக பதிவு செய்து தொகுக்கப்பட்டுள்ளன.


رُّبَمَا يَوَدُّ ٱلَّذِينَ كَفَرُوا۟ لَوْ كَانُوا۟ مُسْلِمِينَ.

15:2. இறைவழிகாட்டுதல்களின் அடிப்படையில் சமூகஅமைப்பு உருவாகும்போது, அவற்றின் பலன்கள் கொஞ்சம் கொஞ்சமாக மக்களுக்குத் தெரியவரும். அப்போது நாங்களும் இவற்றை ஏற்று, அதற்கு உதவி செய்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும் என்று, இதை எதிர்ப்பவர்களின் மனதில் ஏக்கம் ஏற்படும்.


ذَرْهُمْ يَأْكُلُوا۟ وَيَتَمَتَّعُوا۟ وَيُلْهِهِمُ ٱلْأَمَلُ ۖ فَسَوْفَ يَعْلَمُونَ.

15:3. இப்போது வேண்டுமானால் அவர்கள் உண்டு மகிழ்ந்து, தற்காலிக சுகங்களை அனுபவித்துக் கொண்டு இருக்கட்டும். செல்வங்களின் மீதுள்ள அளவு கடந்த ஈர்ப்பு, அவர்களுடைய தவறான செயல்களின் விளைவுகளைப் பற்றிய சிந்தனையே இல்லாமல் ஆக்கிவிடுகிறது. (பார்க்க 102:1). எனினும் அவர்கள் செய்து வரும் செயல்களின் விளைவுகளை கண்கூடாக பார்த்துக் கொள்ளும் காலக் கட்டம் வெகு தூரத்தில் இல்லை.


وَمَآ أَهْلَكْنَا مِن قَرْيَةٍ إِلَّا وَلَهَا كِتَابٌۭ مَّعْلُومٌۭ.

15:4. இதற்கு முன்பும் எந்த சமுதாயமும் நாம் நிர்ணயித்த கால தவணைக்கு முன்பாக அழிந்ததில்லை. இந்த “கால அவகாசம்” என்பது நம் செயல் திட்டங்கள் சம்பந்தப்பட்ட விஷயமாகும். இந்த செயல் திட்டம் யாருக்கும் மறைவான ஒன்றாக இருப்பதில்லை. அதாவது அனைவருக்கும் தெரிந்த உண்மையே.


مَّا تَسْبِقُ مِنْ أُمَّةٍ أَجَلَهَا وَمَا يَسْتَـْٔخِرُونَ.

15:5. “கால அவகாசம்” என்ற இந்த சட்டம், எந்த அளவுக்கு உறுதியானது என்றால், அதன்படி நடைபெறுவதில் இம்மியளவும் காலத்தாமதமும் இருப்பதில்லை. அவை குறித்த நேரத்திற்கு முன்பு ஏற்படுவதும் இல்லை.


وَقَالُوا۟ يَٰٓأَيُّهَا ٱلَّذِى نُزِّلَ عَلَيْهِ ٱلذِّكْرُ إِنَّكَ لَمَجْنُونٌۭ.

15:6. தற்சமயம் மக்கள் தம் செல்வாக்கின் மமதையில் இருந்து கொள்ளட்டும். எனவே நீர் கூறுவதை கேட்டு, “வேதம் இறக்கி அருளப்படுவதாக கூறும் நீர் சரியான பைத்தியக்காரர் தான்” என்று பேசிக் கொள்ளட்டும்.


لَّوْ مَا تَأْتِينَا بِٱلْمَلَٰٓئِكَةِ إِن كُنتَ مِنَ ٱلصَّٰدِقِينَ.

15:7. மேலும் அவர்கள், “நீர் உம் கூற்றில் உண்மையாளராக இருந்தால், எங்களிடத்தில் மலக்குகளை கொண்டுவந்திருக்க வேண்டாமா?” என்றும் சொல்லட்டும்.
aq_விளக்கம் மலக்குகள் என்றால் ஏதோ வானத்திலிருந்து தோன்றுகின்ற வல்லவர்கள் அல்லது தேவ தேவதைகள் என்ற எண்ணத்தில் இருப்பார்கள். அவர்கள் அற்புதங்களை நிகழ்த்திக் காட்டி தங்கள் காரியங்களையும் நிறைவேற்றித் தருவார்கள் என்ற கற்பனையில் இருப்பார்கள். எனவே தான் இப்படிப்பட்ட விமர்சனங்கள் வருகின்றன. ஆனால் மலக்குகள் என்பது பிரபஞ்ச இயற்கை சக்திகளே ஆகும். அவை மனித செயல்களின் விளைவுகளை ஏற்படுத்தக் கூடியவையாகவே இருக்கின்றன.


مَا نُنَزِّلُ ٱلْمَلَٰٓئِكَةَ إِلَّا بِٱلْحَقِّ وَمَا كَانُوٓا۟ إِذًۭا مُّنظَرِينَ.

15:8. ஆக நாம் மலக்குகளை அவர்களுடைய செயல்களுக்கு ஏற்றவகையில் விளைவுகளாக, அதற்குரிய நேரத்தில் தான் இறக்குகிறோம். அப்படி அவர்களுடைய செயல்களின் விளைவுகளாக வரும்போது, அவர்களுக்கு அளிக்கப்பட்ட கால அவகாசம் முடிந்து போயிருக்கும்.


إِنَّا نَحْنُ نَزَّلْنَا ٱلذِّكْرَ وَإِنَّا لَهُۥ لَحَٰفِظُونَ.

15:9. எனவே எல்லா உண்மைகளையும் கொண்ட இந்த குர்ஆனை நாமே இறக்கி அருளுகிறோம். உலகம் நிலைத்திருக்கும் நாள்வரையில் இதில் சொல்லப்பட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டே எல்லாமே நிகழ்ந்து வரும். இப்படியாக நம் கூற்றிற்கு நாமே பாதுகாத்து வருகிறோம். (பார்க்க 6:115). எனவே நம் கூற்றிற்கு மாற்றமாக எதுவும் ஒருபோதும் நடைபெறாது.


وَلَقَدْ أَرْسَلْنَا مِن قَبْلِكَ فِى شِيَعِ ٱلْأَوَّلِينَ.

15:10. இந்த உண்மைகளை இறக்கி அருளுவது புதிதான ஒன்றல்ல. காலம் காலமாக இறைத்தூதர்கள் மூலமாக ஒவ்வொரு சமூகத்தவர்களுக்கும் இந்த உண்மைகளையே எடுத்துரைத்துள்ளோம்.


وَمَا يَأْتِيهِم مِّن رَّسُولٍ إِلَّا كَانُوا۟ بِهِۦ يَسْتَهْزِءُونَ.

15:11. இந்த உண்மைகளை எடுத்துரைத்த இறைத் தூதர்களைப் பார்த்து, சமுதாயத்தினரில் பலர் ஏளனம் செய்யாமல் இருந்ததில்லை. எனவே இப்போதும் உம்மைப் பார்த்து இவர்கள் கேலி செய்கிறார்கள்.


كَذَٰلِكَ نَسْلُكُهُۥ فِى قُلُوبِ ٱلْمُجْرِمِينَ.

15:12. இவ்வாறே தீய செயலில் ஈடுபடுபவர்களின் நெஞ்சங்களில், நம் நியதிப்படி விஷமத்தனம் புகுந்துக் கொள்கிறது.


لَا يُؤْمِنُونَ بِهِۦ ۖ وَقَدْ خَلَتْ سُنَّةُ ٱلْأَوَّلِينَ.

15:13. எனவே இறைவழிகாட்டுதலை ஏற்றுக்கொள்ளும் மனப் பக்குவம் அவர்களிடம் இருப்பதில்லை. இவர்களுக்கு முன்னிருந்தவர்களின் நிலைமையும், இப்படித் தான் இருந்து வந்துள்ளது.


وَلَوْ فَتَحْنَا عَلَيْهِم بَابًۭا مِّنَ ٱلسَّمَآءِ فَظَلُّوا۟ فِيهِ يَعْرُجُونَ.

15:14. இந்த வழிகாட்டுதல்கள் இறைவன் புறத்திலிருந்து வருகின்றன என்பதற்கு ஆதாரமாக மலக்குகளை கொண்டுவந்து காட்டும்படி கூறுகிறார்கள். அவர்கள் முன் வானத்தில் ஒரு வாயிலை திறந்து அதில் ஏறிச் சென்று அற்புத்ததைக் காட்டினாலும், அவர்கள் இறை வழிகாட்டுதலை ஏற்றுக் கொள்வதாக இல்லை.


لَقَالُوٓا۟ إِنَّمَا سُكِّرَتْ أَبْصَٰرُنَا بَلْ نَحْنُ قَوْمٌۭ مَّسْحُورُونَ.

15:15. ஒரு வேளை அப்படி செய்து காட்டினாலும் அப்போதும் அவர்கள், “இவையாவும் கண்கட்டி வித்தைகளே. எனவே எங்கள் வழிமுறைகளே சாலச் சிறந்தது” என்று கூறி அவற்றின் மிதப்பில் இருந்து விடுவார்கள்.
இப்போது இருப்பது இந்தக் குர்ஆன் தன் மீது இறக்கி அருளப்படுகிறது என்று கூறுபவர் ஒரு பைத்தியக்காரர் என்று சொல்வதைப் பற்றியாகும். மேலும் அவர்கள், இது போன்ற விஷயங்களை நாங்களும் நட்சத்திரங்களின் கணக்கை வைத்து கூறிவிட முடியும் என்கிறார்கள். ஆனால்


وَلَقَدْ جَعَلْنَا فِى ٱلسَّمَآءِ بُرُوجًۭا وَزَيَّنَّٰهَا لِلنَّٰظِرِينَ.

15:16. வானில் இரவில் மின்னும் நட்சத்திரங்கள் யாவும் தம் வட்டறைக்குள் நீந்தி செல்லும்படி நாமே படைத்துள்ளோம். எனவே அவை இரவில் வானத்தை அலங்கரிக்கின்றன. அதன் நிலையை கண்டறிந்து உங்களால் இரவில் பாலைவனத்திலும் கடலிலும் பயணிக்க முடிகிறது. (பார்க்க 16:16)


وَحَفِظْنَٰهَا مِن كُلِّ شَيْطَٰنٍۢ رَّجِيمٍ.

15:17. இந்த நட்சத்திரங்களுக்கும் கோள்களுக்கும் எவ்வித பாதிப்புகளும் ஏற்படாதவாறு நாமே அவற்றை பாதுகாத்து வருகிறோம். எனவே தீய சக்திகள் எதுவும் அவற்றை நெருங்காது. அவற்றின் செயல்பாடுகளை யாராலும் மாற்றி அமைக்கவும் முடியாது.
அதுபோல மனிதனின் பாதுகாப்பான வாழ்விற்கு இறைவழிகாட்டுதல்கள் அளிக்கப்படுகின்றன. அவற்றைப் பின்பற்றி வரும் சமுதாயங்களில், தீய சக்திகள் எதுவும் நெருங்காது. வானத்தை நட்சத்திரங்கள் அலங்கரிப்பது போல், இந்தப் பூமியை மனிதனின் பரிசுத்த செயல்கள் ஜொலிக்க வைக்கும்.
ஆனால் காஃபிர்களோ, இறை வழிகாட்டுதல்களை எல்லாம் விட்டுவிட்டு, இந்த நட்சத்திரங்கள் தான் மனித வாழ்வின் எதிர்காலத்தை நிர்ணயிக்கின்றன என நினைத்து, ஜாதகம், ஜோசியம் இராசிப் பலன்கள், மற்றும் பில்லி, சூனியம், சனிப்பெயர்ச்சி, குருப்பெயர்ச்சி என்று மக்களிடம் கூறி வழிகெடுத்து வருகிறார்கள். இவை எல்லாம் அவர்களுடைய கருத்துக் கணிப்பே அன்றி உண்மை விஷயங்கள் அல்ல. மனிதனுடைய வாழ்வை நிர்ணயிக்கும் வல்லமை அந்த நட்சத்திரங்களுக்கு ஒருபோதும் இல்லை. ஆனால் இவையாவும் உண்மை என்று சிலர் நம்புகிறார்கள்.


إِلَّا مَنِ ٱسْتَرَقَ ٱلسَّمْعَ فَأَتْبَعَهُۥ شِهَابٌۭ مُّبِينٌۭ.

15:18. இத்தகைய ஜாதக கணிப்பை நம்பி வாழ்பவர்கள் மட்டும், வெறுக்கப் பட்ட இந்த தீய சக்திகளின் பிடியில் சிக்கிக் கொள்வார்கள்.* இப்படிப்பட்ட ஜோதிடர்களை இறைவழிகாட்டுதல் என்ற தீப்பந்தம் விரட்டி அடிக்கும். (பார்க்க 26:210-212, 37:8-9, 52:38, 67:5 & 72:8-9)
இறைவழிகாட்டுதலின் அடிப்படையில் ஆட்சியமைப்பு ஏற்படும் போது, மக்களிடையே விழிப்புணர்ச்சி ஏற்பட்டு இவர்களுடைய இந்த ஏமாற்று வேலைகள் யாவும் வெளிப்பட்டு விடும்.
இந்த உண்மைகளை அறிந்து கொள்ளவேண்டும் என்றால், பிரபஞ்ச படைப்புகளைப் பற்றி ஆராய்ந்து பாருங்கள். அவற்றிலுள்ள நட்சத்திரங்களும், கோள்களும், பூமியும் எவ்வாறு செயல்பட்டு வருகின்றன என்பதை ஆராய்ந்து பாருங்கள்.


وَٱلْأَرْضَ مَدَدْنَٰهَا وَأَلْقَيْنَا فِيهَا رَوَٰسِىَ وَأَنۢبَتْنَا فِيهَا مِن كُلِّ شَىْءٍۢ مَّوْزُونٍۢ.

15:19. நீங்கள் வாழும் இந்த பூமி உருண்டை வடிவில் இருப்பினும், நீங்கள் சிறப்பாக செயல்பட, விரிப்பாகவும் அது ஆடாது அசையாது இருக்க மலைகளை ஆணிகளாகவும் படைத்து, இந்தப் பூமியை நிலைப்பெற செய்தோம். அந்த மலைகளைக் கொண்டு, தண்ணீரை தேக்கவைத்து தேவையான அளவு பாசனத்திற்காகப் பயன்படுத்தி பல்வேறு உணவு வகைகளை பயிரிட உங்களுக்கு உதவியாக இருக்கும்படி செய்கிறோம்.


وَجَعَلْنَا لَكُمْ فِيهَا مَعَٰيِشَ وَمَن لَّسْتُمْ لَهُۥ بِرَٰزِقِينَ.

15:20. இப்படியாக உங்கள் வாழ்க்கைக்குத் தேவையான எல்லா உணவு வகைகளையும் கிடைக்கச் செய்தோம். இவை யாவும் உங்களுக்காகவும் நீங்கள் உணவளிக்காத மற்ற ஜீவராசிகளுக்காகவும் படைத்துள்ளோம்.


وَإِن مِّن شَىْءٍ إِلَّا عِندَنَا خَزَآئِنُهُۥ وَمَا نُنَزِّلُهُۥٓ إِلَّا بِقَدَرٍۢ مَّعْلُومٍۢ.

15:21. அதுமட்டுமின்றி பிரபஞ்சத்திலும் பூமியிலும் உங்கள் வாழ்க்கைக்குத் தேவையான அனைத்து பொக்கிஷங்களும் அளவின்றி நம்மிடம் இருக்கின்றன. அவற்றில் இருந்து உங்களுக்குத் தேவையான அளவு வாழ்வாதரங்களை கொஞ்சம் கொஞ்சமாக வெளிப்படுத்துகிறோம்.
இவை இயற்கை படைப்புகள் என்று கூறப்படுகின்றன. அந்த இயற்கை படைப்புகளைப் படைத்தவன் தான் அல்லாஹ்!


وَأَرْسَلْنَا ٱلرِّيَٰحَ لَوَٰقِحَ فَأَنزَلْنَا مِنَ ٱلسَّمَآءِ مَآءًۭ فَأَسْقَيْنَٰكُمُوهُ وَمَآ أَنتُمْ لَهُۥ بِخَٰزِنِينَ.

15:22. இன்னும் காற்றுகளை சூல்கொண்ட மேகங்களாக நாமே அனுப்புகிறோம். அதைத் தொடர்ந்து வானத்திலிருந்து உங்களுக்காக மழையை பொழிய வைக்கிறோம். மழை பொழிய வைக்கும் இந்த செயல் திட்டம் நம்முடையதாகும். வானில் மழை நீரை நீங்கள் சேகரித்து பொழிய வைப்பதில்லை.


وَإِنَّا لَنَحْنُ نُحْىِۦ وَنُمِيتُ وَنَحْنُ ٱلْوَٰرِثُونَ.

15:23. இப்படியாக பூமியிலுள்ள ஒவ்வொரு படைப்பும் நம் நிர்ணயித்த விதிமுறைகளின் படி உயிர் வாழ முடிகிறது. மேலும் குறித்த காலத்திற்குப் பின் அவற்றின் வாழ்வு முடிவுக்கு வந்துவிடுகிறது. இப்படியாக நாமே எல்லாவற்றையும் நிர்ணயிக்கும் அதிகாரியாக இருக்கிறோம்.
இந்த உண்மைகளை ஆராய்ந்து பாருங்கள். அவை எல்லாமே இறைவனின் செயல் திட்டப்படி செயல்படுகின்றன. அவற்றைப் பயன்படுத்தி சிறப்பாக வாழத்தான் மனிதனுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. அன்றி அந்த படைப்புகளின் மீது சொந்தம் கொண்டாட மனிதனுக்கு உரிமை இல்லை. ஏனெனில் மனிதனுக்கு இவ்வுலகில் நிரந்தர வாழ்வு கிடைப்பதில்லை. (பார்க்க 56:63-74)


وَلَقَدْ عَلِمْنَا ٱلْمُسْتَقْدِمِينَ مِنكُمْ وَلَقَدْ عَلِمْنَا ٱلْمُسْتَـْٔخِرِينَ.

15:24. எனவே உங்களில் திறமையுடன் முன்னேறியவர்கள், தாம் பெற்ற செல்வங்கள் மீது சொந்தம் கொண்டாடுபவர்கள் யார் என்றும், திறமையின்றி பின்தங்கி இருப்பவர்கள் யார் என்றும் அல்லாஹ்வுக்குத் தெரியும்.
ஆனால் அல்லாஹ்வின் செயல்திட்டத்தில் சமுதாய ஏற்றத் தாழ்வுக்கு ஒருபோதும் இடமிருப்பதில்லை. எனவே இருப்போர் இல்லாதோர் என்ற வேற்றுமை நிலைத்திருக்க வாயப்பில்லை.


وَإِنَّ رَبَّكَ هُوَ يَحْشُرُهُمْ ۚ إِنَّهُۥ حَكِيمٌ عَلِيمٌۭ.

15:25. நிச்சயமாக இறைவனின் நியதிப்படி, அனைவரும் ஒன்றுபட்டு கூடிவாழும் காலக் கட்டம் வந்தே தீரும். இவை எல்லாம் முழுக்க முழுக்க கல்வி ஞானத்தின் அடிப்படையைக் கொண்ட சொல்லாகும்.
அதாவது மனிதன் கூட்டுக் குடும்ப வாழ்க்கை முறையில் அடியெடுத்து வைத்த காலத்திலிருந்து அவனுக்கு என்ன அறிவுரை கிடைத்தது என்ற பேருண்மையை “ஆதம்” என்ற தலைப்பில் ஏற்கனவே 2:30-39 & 7:11-25 வாசகங்களில் உவமை வடிவில் உதாரணமாக விளக்கப் பட்டுள்ளது. இங்கு மீண்டும் ஒரு புதிய கோணத்தில் விளக்கப்படுகிறது.


وَلَقَدْ خَلَقْنَا ٱلْإِنسَٰنَ مِن صَلْصَٰلٍۢ مِّنْ حَمَإٍۢ مَّسْنُونٍۢ.

15:26. மனித படைப்பின் ஆரம்பம் இந்தப் பூமியிலுள்ள ஒசை தரக்கூடிய கருப்பான களி மண்ணின் சத்திலிருந்து இறைவனின் செயல்திட்டப்படி உருவானது.


وَٱلْجَآنَّ خَلَقْنَٰهُ مِن قَبْلُ مِن نَّارِ ٱلسَّمُومِ.

15:27. மனித படைப்புக்கு லட்சக் கணக்கான வருடங்களுக்கு முன், இந்தப் பூமி வெப்பம் நிறைந்ததாக இருந்து வந்தது (பார்க்க 40:11) அந்த கொடிய வெப்பத்தில் வாழ தகுதியுடைய உயிரினம் இந்த பூமியில் படைக்கப்பட்டன. அவை ஜின் இனம் என்பதாகும்.
ஜின் இனம் என்பது ஆதிவாசிகள், மலைவாழ் மக்கள், பழங்குடியினர் ஆவார்கள். ஆக யுகங்கள் பல கடந்து பூமியின் வெப்பம் கொஞ்சம் கொஞ்சமாக தணிந்தபோது, இப்பூமியில் புதிய படைப்பாக மனித இனம் உருவாக ஆரம்பித்தது. எனவே ஜின் இனம் ஆதியில் படைக்கப்பட்டதால், அவர்களை ஆதிவாசிகள், பழங்குடியினர், மலைவாழ் மக்கள் என்கிறோம்.


وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَٰٓئِكَةِ إِنِّى خَٰلِقٌۢ بَشَرًۭا مِّن صَلْصَٰلٍۢ مِّنْ حَمَإٍۢ مَّسْنُونٍۢ.

15:28. இறைவனின் இத்திட்டத்தின்படி, இந்தப் புதிய படைப்பு, ஓசை தரும் கருப்பான களிமண்ணின் சத்திலிருந்து படைக்கப்பட்டது. இந்தத் திட்டத்தைப் பற்றி பிரபஞ்ச இயற்கை சக்திகளாகிய மலக்குகளுக்கு அறிவிக்கப்பட்டது.
இறைவனின் படைப்பு திட்டங்கள் யாவும் நீண்டகால செயல் திட்டங்களாகும். அதில் பரிணாம வளர்ச்சி ஏற்படுவதற்கு எடுத்துக் கொள்ளப்படும் காலஅளவு ஆயிரமாயிரம் ஆண்டுகளாகும் (பார்க்க 32:5) அந்த அடிப்படையில் தான் ‘அலக்’ என்ற நிலையிருந்து உருவாகி (பார்க்க 96:2) பலப் படித்தரங்களைக் கடந்து (பார்க்க 23:12-14) மனிதன் என்ற உருவத்திற்கு வந்தடைந்தான்.


فَإِذَا سَوَّيْتُهُۥ وَنَفَخْتُ فِيهِ مِن رُّوحِى فَقَعُوا۟ لَهُۥ سَٰجِدِينَ.

15:29. இப்படியாக மனிதனை செவ்வையாக்கி, அவன் மனிதனாக உருவெடுத்த போது, அவனுக்கு இறைவன் புறத்திலிருந்து பார்வைப் புலன், செவிப் புலன் மற்றும் சிந்தித்து செயலாற்றும் ஆற்றல்கள் அளிக்கப்பட்டன (பார்க்க 32:9) மேலும் அவனுக்கு முழு சுதந்திரமும் கிடைத்தது. எனவே இயற்கை சக்திகள் மனித கட்டளைக்கு சிரம் பணிந்து செயல்படும் படியாக இறைக் கட்டளையும் வந்தது.


فَسَجَدَ ٱلْمَلَٰٓئِكَةُ كُلُّهُمْ أَجْمَعُونَ.

15:30. அவ்வாறே பிரபஞ்ச இயற்கை சக்திகள் அனைத்தும் மனித கட்டளைக்கு சிரம்பணிந்து செயல்பட ஆரம்பித்தன.
அதாவது இறைவனின் செய்ல்திட்டப்படி மனித சிந்தனைகள் வளர வளர, இறைவனின் படைப்புகளை ஆய்வு செய்து, அவற்றின் தன்மைகளை அறிந்து தம் தேவைக்கேற்ப பயன்படுத்திக் கொள்ளும் ஆற்றல் மனிதனுக்கு கிடைத்தது. (பார்க்க 2:31) எனவே இப்போதும் இந்த இயற்கை சக்திகள் மனித கட்டளைக்கு கட்டுப்படுகின்றன.


إِلَّآ إِبْلِيسَ أَبَىٰٓ أَن يَكُونَ مَعَ ٱلسَّٰجِدِينَ.

15:31. ஆனால் பிரபஞ்ச இயற்கை சக்திகளில், மனிதனுள் செயல்பட்டு வரும் “இப்லீஸ்” எனும் தீய குணங்கள் இறைக் கட்டளைப்படி செயல் படுவதில்லை. அதாவது மனிதனில் இருக்கும் தற்பெருமை, சுயநலம் மற்றும் ஆணவம் போன்ற தீய குணங்கள் (பார்க்க 2:34) இறைவனுக்கு கட்டுப்படுபவையாக இருப்பதில்லை.
இறைவன், மனித படைப்பு, இயற்கை சக்திகள், மற்றும் மனித சரீரத்தில் இயங்கி வரும் இப்லீஸிய தன்மை ஆகியவைப் பற்றி நீங்கள் சரியாக புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக ஏற்கனவே 2:30-38, 7:11-25ல் சொன்னது போல அவற்றின் உண்மை நிலையை உரையாடல் வடிவில் உவமானமாகச் சொல்லப்படுகிறது. இவையாவும் உண்மையிலேயே எங்கோ எப்போதோ நடந்ததாக எடுத்துக்கொள்ளக் கூடாது. ஏனெனில் இறைக் கட்டளைக்கு மாறு செய்யும் சக்தி இந்த பிரபஞ்சத்தில் உள்ள எந்த படைப்பிற்கும் இல்லை (பார்க்க 16:50) மேலும் தனது செயல் திட்டத்தில் யாரையும் இறைவன் கூட்டாக்கிக் கொள்வதுமில்லை (18:25). இதை மனதில் பதிய வைத்துக் கொள்ளுங்கள். எனவே அந்த உரையாடலைக் கொண்டு என்ன படிப்பினை கிடைக்கிறது என்பதை மட்டும் கவனியுங்கள்.


قَالَ يَٰٓإِبْلِيسُ مَا لَكَ أَلَّا تَكُونَ مَعَ ٱلسَّٰجِدِينَ.

15:32. “இப்லீஸே! சிரம் பணிந்தவர்களில் நீயும் சேராமல் விலகி இருக்க கராணம் என்ன?” என்று இறைவன் கேட்டான்.


قَالَ لَمْ أَكُن لِّأَسْجُدَ لِبَشَرٍ خَلَقْتَهُۥ مِن صَلْصَٰلٍۢ مِّنْ حَمَإٍۢ مَّسْنُونٍۢ.

15:33. அதற்கு இப்லீஸ், “ஓசை தரும் கருப்பான களி மண்ணிலிருந்து படைக்கப்பட்ட மனிதனுக்கு நான் சிரம் பணிவதற்கில்லை” என்று கூறினான்.
கவனித்தீர்களா? நான் உயர்ந்தவன் மற்றவன் தாழ்ந்தவன் என்ற ஆணவப்போக்கு மனிதனிடத்தில் இன்றைக்கும் காணப்படுகின்ற தீய குணங்களாகும். அதனால்தான் சமுதாயத்தில் எல்லா பிரச்சனைகளும் உருவாகின்றன.


قَالَ فَٱخْرُجْ مِنْهَا فَإِنَّكَ رَجِيمٌۭ.

15:34. “அவ்வாறாயின் நீ இங்கிருந்து வெளியேறி விடு. நீ நம் அருட்கொடைகளை எல்லாம் இழந்து, ஒதுக்கப்பட்டவனாக ஆகிவிட்டாய்.”


وَإِنَّ عَلَيْكَ ٱللَّعْنَةَ إِلَىٰ يَوْمِ ٱلدِّينِ.

15:35. “மேலும் நம் வழிகாட்டுதலின் அடிப்படையில் சமூக அமைப்பு ஏற்படும் கால கட்டத்தில், நம் அருட்கொடைகள் எல்லாவற்றையும் இழந்து தவிப்பவனாக இருப்பாய்”
மனிதனிடத்தில் இருக்கும் இந்த ஆணவப் போக்கே, இறைவழிகாட்டுதலை ஏற்க தடுக்கிறது. இதனால் அவன் பிரபஞ்ச ஆய்வுகளை மேற்கொள்ளும் திறன்களை இழந்து எல்லாமே அல்லாஹ்வும் மலக்குகள் செய்து தருவார்கள் என்ற மூட நம்பிக்கையில் முழ்கி, (பார்க்க 2:210) எல்லா ஆற்றல்களையும் இழந்து நடை பிணமாக வாழ்வான். இதனால் மனிதனுக்குக் கிடைத்த அல்லது கிடைக்கவிருந்த சுவனத்திற்கு ஒப்பான வாழ்வு பறிபோயிவிடுகிறது.


قَالَ رَبِّ فَأَنظِرْنِىٓ إِلَىٰ يَوْمِ يُبْعَثُونَ.

15:36. “என் இறைவனே! இவ்வாறு நடை பிணங்களாக வாழும் இவர்களை, உன் வழிகாட்டுதல்களைப் பெற்று விழிப்புணர்ச்சி ஏற்படும் காலம் வரையில் என் ஆதிக்கம் செல்லுமாறு அவகாசம் தருவாயாக” என்று இப்லீஸ் கேட்டுக் கொண்டான்.


قَالَ فَإِنَّكَ مِنَ ٱلْمُنظَرِينَ.

15:37. “நிச்சயமாக நாம் உனக்கு அந்த வாய்ப்பை அளிக்கிறோம்.”


إِلَىٰ يَوْمِ ٱلْوَقْتِ ٱلْمَعْلُومِ.

15:38. “மக்களில் வழிப்புணர்வு ஏற்படும் காலம் வரையில், உன் ஆதிக்கம் நடைபெற்று வரும்.
இறைவழிகாட்டுதலின் மூலம் மனிதனுக்கு விழிப்புணர்ச்சி ஏற்படும்போது, ஷைத்தானிய குணங்கள் அவனை விட்டு விலகிக் கொள்ளும். (பார்க்க 15:40)


قَالَ رَبِّ بِمَآ أَغْوَيْتَنِى لَأُزَيِّنَنَّ لَهُمْ فِى ٱلْأَرْضِ وَلَأُغْوِيَنَّهُمْ أَجْمَعِينَ.

15:39. அதற்கு இப்லீஸ், “என் இறைவனே! என்னை நீ வழிகேட்டில் விட்டுவிட்டதால், நான் இவ்வுலகின் எல்லா வழிக்கேடான செயல்களையும் அவர்களுக்கு அழகாகத் தோன்றும்படி செய்து, அவர்கள் அனைவரையும் வழிகெடுத்து வருவேன்” என்றான்.
கவனித்தீர்களா? மனிதனுள் செயல்பட்டு வரும் இந்த இப்லீஸியத் தன்மை தான், தாம் செய்யும் ஒவ்வொரு செயலும் அழகாகவும், மிகவும் சிறப்பாகவும் இருப்பதாக எண்ண வைக்கும். இறைவழிகாட்டுதலின் ஒளி இல்லாததால் அவனுக்கு இந்த நிலைமை ஏற்படுகிறது. இன்றைய உலகில் நிகழ்ந்து வரும் எல்லா கேடுகெட்ட செயல்களும் அழகாகத் தோன்றும்படி, அலங்காரங்களுடன் வலம் வந்து கொண்டிருக்கின்றன. (பார்க்க 6:43, 7:146, 13:33) தாம் செய்வது சரியா தவறா என்று அறிந்து கொள்வதற்கு மனிதன் முன் உள்ள ஒரே உரைகல் திருக்குர்ஆன் மட்டுமே. (பார்க்க 25:2)


إِلَّا عِبَادَكَ مِنْهُمُ ٱلْمُخْلَصِينَ.

15:40. மேலும் அந்த இப்லீஸ், “மனிதர்களில் உன் வழிகாட்டுதலைப் பின்பற்றி வரும் நல்லடியார்களைத் தவிர, மற்ற எல்லோரிடத்திலும் என் ஆதிக்கம் செல்லும் என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன்” என்றான்.


قَالَ هَٰذَا صِرَٰطٌ عَلَىَّ مُسْتَقِيمٌ.

15:41. அதற்கு இறைவன், “என் புறத்திலிருந்து கிடைக்கின்ற வழிகாட்டுதலே மனிதனுக்குக் கிடைக்கின்ற நேரான வழியாக இருக்கும்” என்றான்.


إِنَّ عِبَادِى لَيْسَ لَكَ عَلَيْهِمْ سُلْطَٰنٌ إِلَّا مَنِ ٱتَّبَعَكَ مِنَ ٱلْغَاوِينَ.

15:42. “என் வழிகாட்டுதலை பின்பற்றுகின்ற என் அடியார்கள் மீது உன் ஆதிக்கம் ஒருபோதும் செல்லாது. ஆனால் உன்னை பின்பற்றிச் செல்பவர்கள், வழிகெட்டவர்களாக ஆகி உன் ஆதிக்கத்தின் பிடியில் சிக்கிக்கொள்வர்” என்று இறைவன் கூறினான்.
கவனித்தீர்களா? இறை வழிக்காட்டுதலை ஏற்று நடக்கும் மூஃமின்களைப் பற்றி அல்லாஹ்வின் அபிப்ராயம் என்னவென்பதை கவனித்தீர்களா? மனோ இச்சை எனும் ஷைத்தானுக்கு ஒருபோதும் கட்டுப் பட்டு நடக்க மாட்டார்கள் என்று சொல்லப்படுவதை கவனியுங்கள். இன்றைய முஸ்லிம்களின் நிலை என்னவென்பதையும் கவனியுங்கள்.


وَإِنَّ جَهَنَّمَ لَمَوْعِدُهُمْ أَجْمَعِينَ.

15:43. “அதனால் அவர்கள் செய்து வரும் தவறான செயல்களின் இறுதி விளைவாக ஒட்டு மொத்தமாக வேதனைகள் நிறைந்த நரகத்தில் தள்ளப் படுவார்கள். இதுவே நாம் நிர்ணயித்துள்ள விதிமுறைகளாகும்” என்று இறைவன் கூறினான்.


لَهَا سَبْعَةُ أَبْوَٰبٍۢ لِّكُلِّ بَابٍۢ مِّنْهُمْ جُزْءٌۭ مَّقْسُومٌ.

15:44. நரகத்திற்கு சென்றடைய வாசல்கள் பல உள்ளன. அவ்வாசல்களில் ஒவ்வொன்றும் பங்கிடப்பட்ட பிரிவினருக்கு உரியதே ஆகும்.
கவனித்தீர்களா? தீய வழியில் செல்வதற்குப் பல வழிகள் உள்ளன. ஒவ்வொரு தீய செயலுக்கும் இறுதி விளைவுகள் எப்படி இருக்க வேண்டும் என்று ஏற்கனவே இறைவன் தீர்மானித்து விட்டான். அதன்படி நரக வாயில்களில் தீயவர்கள் நுழைவார்கள். ஆனால் நேர்வழி பெற மனிதன் முன் இருக்கும் ஒரேவழி இறைவழிகாட்டுதல்கள் அடங்கிய திருக்குர்ஆன் மட்டுமே. (பார்க்க 17:9)
சிந்தனையாளர்களே! மேலே உரையாடல் வடிவில் சொல்லப்பட்ட விஷயங்களை வைத்து, இன்றைய நடைமுறை உலகத்தை சற்று அலசிப் பாருங்கள். ஆதாமின் இந்த நிலை ஒவ்வொரு சமுதாயத்தினரிடமும் இருப்பதை நீங்கள் காண்பீர்கள். எனவே இவை யாவும் மனிதனுக்கு புரிய வைப்பதற்காக இப்படிப்பட்ட வாசகங்கள் திருக்குர்ஆனில் காணக் கிடைக்கின்றன. பள்ளிக்கூடங்களில் உருண்டை விடிவில் ஒரு சிறிய பந்தை காட்டி, அதில் அட்சரேகை, பூமத்திய ரேகை, மகர ரேகை என்று கோடுகளை இட்டு, உலகம் எவ்வாறு செயல்படுகிறது என்பதை மாணவர்களுக்கு ஆசிரியர்கள் விளக்குவார்கள். அதுபோலத் தான் இந்த ஷைத்தானின் உரையாடல் சம்பந்தப்பட்ட விஷயமுமாகும். இந்தப் பூமியைச் சுற்றி அப்படிப்பட்ட கோடுகள் இருக்கிறதா? அதுபோலத் தான் அந்த இப்லீஸ் என்ற தனி படைப்பு ஒருபோதும் இறைவனிடம் மோதியதுமில்லை பேசியதுமில்லை.


إِنَّ ٱلْمُتَّقِينَ فِى جَنَّٰتٍۢ وَعُيُونٍ.

15:45. இந்த நரக வேதனைகள் இறைவழிகாட்டுதலைப் பின்பற்றி நடப்பவர்களை நெருங்காது. அவர்கள் சுவனபதியில் சந்தோஷமாக இருப்பார்கள். அதில் நீரூற்றுகள் சதா ஓடிக்கொண்டிருக்கும். இந்த சுவன வாழ்வு இவ்வுலகிலும் மறுமையிலும் தொடரும் (பார்க்க 16:30-32)


ٱدْخُلُوهَا بِسَلَٰمٍ ءَامِنِينَ.

15:46. இறைவழிகாட்டுதலை பின்பற்றி நடப்பவர்கள் மனநிறைவுடனும் எவ்வித அச்சமுமின்றி பாதுகாப்பாக வாழும் சுவனத்திற்கு உரியவர்கள் ஆவார்கள்.


وَنَزَعْنَا مَا فِى صُدُورِهِم مِّنْ غِلٍّ إِخْوَٰنًا عَلَىٰ سُرُرٍۢ مُّتَقَٰبِلِينَ.

15:47. அவர்களுடைய உள்ளங்களில் எவ்வித குரோத மனப்பான்மையோ அல்லது பகைமையோ ஒருபோதும் இருக்காது. அவர்களிடையே சகோதரத்துவமும் பாசமும்தான் மிகைத்து நிற்கும். அவர்கள் அனைவரும் சந்தோஷமாக அரியாசனத்தில் ஆனந்தமாக அமர்ந்தவாறு பணிபுரிவார்கள்.


لَا يَمَسُّهُمْ فِيهَا نَصَبٌۭ وَمَا هُم مِّنْهَا بِمُخْرَجِينَ.

15:48. அத்தகையவர்கள் எப்போதும் சந்தோஷமாக குதூகலத்துடன் பணியாற்றுவார்கள். அங்கு தொய்வோ சிரமங்களோ ஒருபோதும் இருக்காது. அவர்களுக்குக் கிடைக்கும் இருப்பிடங்கள் நிலையானதாக இருக்கும். யாரும் அவர்களை வெளியேற்றவும் மாட்டார்கள்.


۞ نَبِّئْ عِبَادِىٓ أَنِّىٓ أَنَا ٱلْغَفُورُ ٱلرَّحِيمُ.

15:49. இறைவழிகாட்டுதலை எடுத்துரைப்பவரே! இறைவழிகாட்டுதலைப் பின்பற்றி நடப்பவர்களுக்கு அல்லாஹ்வின் புறத்திலிருந்து எல்லா வகையான பாதுகாப்பும் அன்பும் அரவணைப்பும் கிடைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்பதை மக்களுக்கு எடுத்துரையுங்கள்.
மேற்சொன்ன சுவனவாழ்வு பெறுபவர்களின் நிலை விவரித்து கூறப்பட்டது. ஆனால் இப்லீஸ் எனும் மன இச்சையை பின்பற்றி நடப்பவர்களின் நிலை இதற்கு நேர் மாற்றமாக இருக்கும். அங்கு நிம்மதி இருக்காது. மக்களிடையே குரோதமும் பகைமையும் வளர்ந்து அவர்களது வாழ்க்கை, முள் பாதைகளில் நடப்பதற்கு ஒப்பானதாக இருக்கும். அவர்கள் வாழும் இல்லங்கள், அவர்களை விட்டு பறிபோயி விடும். இவை எல்லாம் நடக்கும். ஆக


وَأَنَّ عَذَابِى هُوَ ٱلْعَذَابُ ٱلْأَلِيمُ.

15:50. இறைவழிகாட்டுதலுக்கு எதிராக செயல்படுபவர்களுக்கு கிடைக்கின்ற வேதனைகள் நோவினை மிக்கதாகவே இருக்கும் என்பதையும் மக்களிடம் எடுத்துரைப்பீராக.
நோவினைமிக்க வேதனைகள் லூத் நபியின் சமூகத்தவர்க்கு எவ்வாறு ஏற்பட்டது என்பதை கவனித்துப் பார்க்கும்படி சொல்லுங்கள். அச்சமூகத்தவர்களுக்கு ஏற்பட்ட அந்த அழிவைப் பற்றிய முன்னெச்சரிக்கை வந்தது. (பார்க்க 11:70)


وَنَبِّئْهُمْ عَن ضَيْفِ إِبْرَٰهِيمَ.

15:51. இப்ராஹீம் நபியிடம் வந்த விருந்தினர்கள் மூலமாக, லூத் நபியின் சமூகத்தாருக்கு ஏற்படவிருக்கும் அழிவினைப் பற்றிய செய்தி வந்தது.


إِذْ دَخَلُوا۟ عَلَيْهِ فَقَالُوا۟ سَلَٰمًۭا قَالَ إِنَّا مِنكُمْ وَجِلُونَ.

15:52. அவர்கள் கொண்டுவந்த செய்தியில் இப்ராஹீம் நபிக்கு நன்மாராயமாக இருந்தபோதும், மற்ற செய்திகள் அவருக்கு வருத்தம் அளிப்பதாக இருந்தது.


قَالُوا۟ لَا تَوْجَلْ إِنَّا نُبَشِّرُكَ بِغُلَٰمٍ عَلِيمٍۢ.

15:53. அந்த விருந்தாளிகள், “பயப்படாதீர்கள். நாம் உமக்கு ஞானமிக்க ஒரு புதல்வன் பிறக்கப் போகும் என்ற நற்செய்தியை கூறவே வந்துள்ளோம்” என்று கூறினார்கள்.


قَالَ أَبَشَّرْتُمُونِى عَلَىٰٓ أَن مَّسَّنِىَ ٱلْكِبَرُ فَبِمَ تُبَشِّرُونَ.

15:54. இதை கேட்ட அவர், “என்னுடைய இந்த வயதான காலத்தில் புத்திர பாக்கியம் கிடைக்கும் என்ற நற்செய்தியைக் கொண்டு வந்துள்ளீர்களே! எந்த அடிப்படையில் இந்த செய்தியை கொண்டு வந்துள்ளீர்கள்? இந்த வயதிலும் எனக்குக் குழந்தை பிறக்குமா?” என்று கேட்டார்.


قَالُوا۟ بَشَّرْنَٰكَ بِٱلْحَقِّ فَلَا تَكُن مِّنَ ٱلْقَٰنِطِينَ.

15:55. அதற்கு அவர்கள், “நாங்கள் இந்த நன்மாராய செய்தியை இறைவன் புறத்திலிருந்து தான் கொண்டு வந்துள்ளோம். அதில் நீங்கள் நிராசை கொள்ளாதீர்கள்” என்று கூறினார்கள்.


قَالَ وَمَن يَقْنَطُ مِن رَّحْمَةِ رَبِّهِۦٓ إِلَّا ٱلضَّآلُّونَ.

15:56. “இறைவனின் நற்செய்தியில் எனக்கு அவநம்பிக்கை ஏற்படுவதா! ஒருபோதும் இல்லை. இறைவழிகாட்டுதல்கள் பெறாத வழிகேடர்கள்தாம் இப்படி அவநம்பிக்கையுடன் இருப்பார்கள். ஆனால் நான் கேட்பதோ இந்த வயதான காலத்தில் குழந்தை எவ்வாறு பிறக்கும் என்பதைப் பற்றியதே” என்றார். (பார்க்க 14:39)


قَالَ فَمَا خَطْبُكُمْ أَيُّهَا ٱلْمُرْسَلُونَ.

15:57. அதன்பின் அந்த விருந்தினர்களின் அடுத்த கட்ட செயல்திட்டம் என்னவென்று இப்ராஹீம் நபி கேட்டார்.


قَالُوٓا۟ إِنَّآ أُرْسِلْنَآ إِلَىٰ قَوْمٍۢ مُّجْرِمِينَ.

15:58. அதற்கு அவர்கள், “அக்கிரம செயல்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் லூத் நபி சமூகத்தாரிடம் நாங்கள் அனுப்பப் பட்டுள்ளோம்” என்றார்கள்.


إِلَّآ ءَالَ لُوطٍ إِنَّا لَمُنَجُّوهُمْ أَجْمَعِينَ.

15:59. அது, லூத் நபியைச் சார்ந்தவர்களைத் தவிர மற்றவர்கள் அனைவருக்கும் நேரவிருக்கும் அழிவினைப் பற்றிய செய்தியாக இருந்தது. லூத் நபியைச் சார்ந்தவர்கள் மட்டுமே காப்பாற்றப் படுவார்கள் என அச்செய்தி கூறிற்று.


إِلَّا ٱمْرَأَتَهُۥ قَدَّرْنَآ ۙ إِنَّهَا لَمِنَ ٱلْغَٰبِرِينَ.

15:60. அப்படி காப்பாற்றப்படுபவர்கள் பட்டியலில் லூத் நபியின் மனைவி இடம் பெறவில்லை. ஏனெனில் அவளும் இறை வழிகாட்டுதலுக்கு மாற்றமாக தீய செயல்களில் ஈடுபட்டு வந்தாள். எனவே அவள் லூத் நபியின் அறிவுரையைக் கேட்காமல் அழிவு ஏற்படவிருக்கும் இடத்திலேயே தங்கிவிடுவாள். அதனால் அவளுக்கும் அழிவு என்று தீர்மானமாகி விட்டது” என்று அச்செய்தி கூறிற்று.


فَلَمَّا جَآءَ ءَالَ لُوطٍ ٱلْمُرْسَلُونَ.

15:61. அதன்பின் அவர்கள் அங்கிருந்து லூத் நபியிடம் வந்தார்கள்.


قَالَ إِنَّكُمْ قَوْمٌۭ مُّنكَرُونَ.

15:62. அவர்களை வரவேற்ற லூத் நபி, “நீங்கள் இந்த ஊரைச் சேர்ந்தவர்களாக தெரியவில்லையே. வெளியூரைச் சேர்ந்தவர்களாக இருக்கிறீர்களே” என்றார்.


قَالُوا۟ بَلْ جِئْنَٰكَ بِمَا كَانُوا۟ فِيهِ يَمْتَرُونَ.

15:63. அதற்கு அவர்கள், “ஆம். நாங்கள் அனைவரும் வெளியூரார்தான். ஆனால் உம்மிடம் ஒரு செய்தியை கொண்டு வந்துள்ளோம். இதுவரையில் உம் சமூகத்தார் எதைப் பற்றி உம்மிடம் தர்க்கித்து வந்தார்களோ, அந்த அழிவின் செய்தியினை நாம் கொண்டு வந்துள்ளோம்” என்றனர்.


وَأَتَيْنَٰكَ بِٱلْحَقِّ وَإِنَّا لَصَٰدِقُونَ.

15:64. மேலும் அவர்கள், “உம் சமூகத்தார் எதிர் பார்த்த அழிவை, உண்மைப் படுத்தி காட்டவே நாங்கள் வந்துள்ளோம்” என்று கூறினார்கள்.


فَأَسْرِ بِأَهْلِكَ بِقِطْعٍۢ مِّنَ ٱلَّيْلِ وَٱتَّبِعْ أَدْبَٰرَهُمْ وَلَا يَلْتَفِتْ مِنكُمْ أَحَدٌۭ وَٱمْضُوا۟ حَيْثُ تُؤْمَرُونَ.

15:65. எனவே நீங்கள், உங்களைச் சார்ந்தவர்களை அழைத்துக் கொண்டு இருள் சூழ்ந்ததும் இந்த ஊரைவிட்டு வெளியேறி விடுங்கள். அவர்கள் அனைவரையும் முன்னதாக அனுப்பிவிட்டு நீர் அவர்களை பின் தொடர்ந்து செல்ல்லவும். நீங்கள் எவரும் திரும்பி பார்த்துக்கொண்டு நேரத்தை வீணடிக்காதீர்கள். ஏனெனில் நீங்கள் போகவேண்டிய இடம் தொலைவில் உள்ளது. அதன்படி குறித்த இடத்தை சென்றடைய வேண்டும்” என்றார்கள்.


وَقَضَيْنَآ إِلَيْهِ ذَٰلِكَ ٱلْأَمْرَ أَنَّ دَابِرَ هَٰٓؤُلَآءِ مَقْطُوعٌۭ مُّصْبِحِينَ.

15:66. “மேலும் அவர்கள் அனைவரும் மறுநாள் விடியற்காலையில் வேரோடு அழிந்து போவார்கள். இறைவனின் நியதிப்படி நிகழவிருக்கும் இச்செய்தி யாவும் தீர்மானிக்கப்பட்ட ஒன்றாகும்” என்றார்கள்.


وَجَآءَ أَهْلُ ٱلْمَدِينَةِ يَسْتَبْشِرُونَ.

15:67. லூத் நபியிடம் வெளியூரார் வந்துள்ளதை அறிந்து, அவ்வூர் மக்கள் மகிழ்ச்சியுடன் வந்தார்கள்.


قَالَ إِنَّ هَٰٓؤُلَآءِ ضَيْفِى فَلَا تَفْضَحُونِ.

15:68. அவர்களிடம் லூத் நபி, “இவர்கள் அனைவரும் என் விருந்தினர்கள் ஆவர்” என்று அறிமுகப்படுத்தி விட்டு, “அவர்களிடம் நீங்கள் முறைதவறி நடந்து என்னை அவமானப்படுத்தி விடாதீர்கள்” என்று கேட்டுக் கொண்டார்.


وَٱتَّقُوا۟ ٱللَّهَ وَلَا تُخْزُونِ.

15:69. மேலும் அவர், “அல்லாஹ் விதித்துள்ள மனித செயலுக்கேற்ற விளைவுகளைப் பற்றி அஞ்சி அதற்கேற்றவாறு நடந்து கொள்ளுங்கள். என்னுடைய அறிவுரைகளை கேவலமாக்கி விடாதீர்கள்” என்றார்.


قَالُوٓا۟ أَوَلَمْ نَنْهَكَ عَنِ ٱلْعَٰلَمِينَ.

15:70. அதற்கு அவர்கள், மற்ற உலகார்க்கு நடந்த விஷயங்களைப் பற்றி எல்லாம் எங்களிடம் கூறவேண்டாம் என உமக்கு எத்தனை முறை தடுப்பது? இருந்தும் நீங்கள் அவர்களுக்கு நேர்ந்த துர்பாக்கியங்களைப் பற்றியே எங்களோடு இணைத்து பேசுகிறீர்களே!” என்றனர்.


قَالَ هَٰٓؤُلَآءِ بَنَاتِىٓ إِن كُنتُمْ فَٰعِلِينَ.

15:71. அதற்கு அவர், “இதோ இந்த பெண்மணிகள். இவர்கள் என் புதல்வியர்கள் போன்றவர்கள் ஆவர். அவர்களுடன் நீங்கள் முறைப்படி மணமுடித்து அவர்களோடு சந்தோஷமாக வாழ்ந்து கொள்ளுங்கள்” என்றார்.


لَعَمْرُكَ إِنَّهُمْ لَفِى سَكْرَتِهِمْ يَعْمَهُونَ.

15:72. இவற்றை கவனித்து வந்த அந்த விருந்தினர்கள், “உம் நபித்துவத்தை சாட்சியாக வைத்து கூறுகிறோம். இவர்கள் ஒருபோதும் உன் அறிவுரைகளை ஏற்றுக் கொள்ளவே மாட்டார்கள். அந்த அளவுக்கு மதி மயங்கிய நிலையில் இருக்கிறார்கள்” என்றனர்.


فَأَخَذَتْهُمُ ٱلصَّيْحَةُ مُشْرِقِينَ.

15:73. ஆகவே முன்பு அறிவித்தபடி பொழுது விடியும் வேளையில் அவர்களை பேரிடி முழக்கம் பிடித்துக் கொண்டது.


فَجَعَلْنَا عَٰلِيَهَا سَافِلَهَا وَأَمْطَرْنَا عَلَيْهِمْ حِجَارَةًۭ مِّن سِجِّيلٍ.

15:74. அதன்பின் அவர்கள் வாழ்ந்த ஊர் தலைகீழாக புரண்டுவிட்டது. களிமண்ணாலான எரிப் பிழம்புகள் அவர்கள் மீது பொழிந்தன. அதில் அனைவரும் மடிந்து போனார்கள்.


إِنَّ فِى ذَٰلِكَ لَءَايَٰتٍۢ لِّلْمُتَوَسِّمِينَ.

15:75. இந்த வரலாற்று நிகழ்வுகளிலிருந்து, சிந்தித்து செயலாற்றும் மக்களுக்கு படிப்பினைகள் பல கிடைக்கும்.
சிந்தனையாளர்களே! அவர்களுக்கு ஏற்பட்ட துர்பாக்கியத்திற்குக் காரணம் என்ன? இறைவழிகாட்டுதலின்படி சிறப்பாக சுவனத்தில் வாழ்வதற்குப் பதிலாக, இப்லீஸிய குணங்களுக்கு அடிமைப்பட்டு வாழ்ந்ததால் இச்சுவனத்தில் வாழும் தகுதியை இழந்து விட்டனர். இதனால் அவர்கள் கேடுகெட்ட செயல்களின் உச்சத்திற்கே சென்று விட்டார்கள். மனிதர்களிடையே இருக்கும் தீய செயல்களில் மிக மோசமான செயலாகிய ஒரினச் சேர்க்கையின் மோக வலையில் சிக்கிக் கொண்டனர். இதை இக்காலத்தில் Homo-Sex & Lesbianism என்பார்கள். சதூம் என்னும் அந்த ஊரார் இத்தகைய செயல்களைச் செய்து வந்தார்கள். எனவே இன்றைக்கும் ஓரினச் சேர்க்கையை Sodomy என்று தான் குறிப்பிடுகிறோம். இப்படிப்பட்ட பழக்கமுள்ள சமுதாயத்தில் சீரழிவுகள் வேகமாக பரவி வரும். ஆனால் விஞ்ஞானத்தில் தேர்ச்சி பெற்ற மேலை நாடுகளும் அமெரிக்கா போன்ற நாடுகளிலும் இந்த ஓரின சேர்க்கைக்கு அரசு அங்கீகாரம் கொடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. லூத் நபியின் சமுதாயத்திற்கு ஏற்பட்ட அழிவுகள் இவர்களுக்கு வராதா? அவர்கள் இதைப்பற்றி சற்று சிந்தித்துப் பார்த்து இப்லீஸிமிடமிருந்து பாதுகாப்பாக இருக்க வேண்டும்.


وَإِنَّهَا لَبِسَبِيلٍۢ مُّقِيمٍ.

15:76. இத்தனைக்கும் அழிந்துப் போன ‘சத்தூம்’ என்ற நகரம் அரேபியர் பயணிக்கும் வழியில்தான் இருக்கிறது.


إِنَّ فِى ذَٰلِكَ لَءَايَةًۭ لِّلْمُؤْمِنِينَ.

15:77. நிச்சயமாக இறைவழிகாட்டுதலை ஏற்று நடப்பவர்களுக்கு இதில் பல அத்தாட்சிகள் கிடைக்கும்.


وَإِن كَانَ أَصْحَٰبُ ٱلْأَيْكَةِ لَظَٰلِمِينَ.

15:78. அதே போல் அடர்ந்த சோலைகளாக திகழ்ந்த மத்தியன் நாட்டு மக்களின் நிலைமையும் ஏற்பட்டது. அவர்களும் மிகவும் அக்கிரமக் காரர்களாக இருந்தார்கள்.


فَٱنتَقَمْنَا مِنْهُمْ وَإِنَّهُمَا لَبِإِمَامٍۢ مُّبِينٍۢ.

15:79. எனவே இறை விதிமுறைகளின் படி அவர்கள் வாழ்ந்த ஊரும் தலைகீழாகப் புரண்டு அழிந்து போனார்கள். இப்படியாக அவர்களும் தம் தீய செயல்களின் விளைவுகளை சந்தித்துக் கொண்டனர். அவர்களுடைய ஊரும் நீங்கள் பயணிக்கும் வழியில்தான் இருக்கிறது.


وَلَقَدْ كَذَّبَ أَصْحَٰبُ ٱلْحِجْرِ ٱلْمُرْسَلِينَ.

15:80. அதே போல “அஸ்ஹாபுல் ஹிஜ்ர்” என்று அழைக்கப்படுகின்ற “சமூது” சமுதாயத்தினரும் நம் வழிகாட்டுதலை ஏற்க மறுத்து, தம் மனம்போன போக்கில் வாழ்ந்து வந்தனர். இறைவழிகாட்டுதல்கள் என்பதெல்லாம் பொய் என கூறி வந்தனர்.


وَءَاتَيْنَٰهُمْ ءَايَٰتِنَا فَكَانُوا۟ عَنْهَا مُعْرِضِينَ.

15:81. எனினும் நம் வழிகாட்டுதலை நம் தூதர்கள் மூலமாக பல ஆதாரங்களுடன் விளக்கி வந்தோம். ஆனால் அவர்களோ அவற்றை ஏற்றுக் கொள்வதாக இல்லை. அவற்றை அவர்கள் புறக்கணித்தே வந்தார்கள்.


وَكَانُوا۟ يَنْحِتُونَ مِنَ ٱلْجِبَالِ بُيُوتًا ءَامِنِينَ.

15:82. கட்டிட கலையில் எந்த அளவிற்கு தேர்ச்சிப் பெற்றவர்களாக இருந்தார்கள் என்றால், அவர்கள் மலைகளையே குடைத்து உறுதியான வீடுகளையும், பிரம்மாண்டமான மாளிகைகளையும் கட்டி வந்தனர். (பார்க்க 7:74)


فَأَخَذَتْهُمُ ٱلصَّيْحَةُ مُصْبِحِينَ.

15:83. ஆனால் இறைத் தூதர்களின் அறிவுரைகளை ஏற்க மறுப்பவர்களாகவே இருந்ததால், அவர்கள் வாழ்ந்த இடத்தில் ஏற்படவிருக்கும் பூகம்பத்தைப் பற்றிய முன் எச்சரிக்கையையும் பொருட்படுத்தவில்லை. (பார்க்க 7:79) எனவே அதில் சிக்கி அவர்களும் அழிந்து போனார்கள்.


فَمَآ أَغْنَىٰ عَنْهُم مَّا كَانُوا۟ يَكْسِبُونَ.

15:84. அவர்களுக்கு அழிவு ஏற்பட்ட கால கட்டத்தில் அவர்கள் சேமித்து வைத்த செல்வங்கள் எதுவும் அவர்களை அந்த ஆபத்திலிருந்து காப்பாற்றவே இல்லை.
இந்த வரலாற்று உண்மைகளிலிருந்து நீங்கள் அறிந்து கொள்ளும் அறிவுரைகள் என்ன? அகிலங்களையும் பூமியையும் ஏதோ வீண் விளையாட்டிற்காக படைத்ததாக எண்ணி, தம் விருப்பம் போல் எப்படி வேண்டுமானாலும் செயல்பட்டுக் கொண்டு, அநியாய அக்கிரம செயல்களை தொடர்ந்து செய்து கொண்டிருக்கலாம் என்ற நினைப்பில் மனிதன் இருக்கக் கூடாது என்பதே. அவன் செய்து வரும் செயல்களுக்கு ஏற்ப அதனதன் விளைவுகள் அவன்முன் தோற்றத்திற்கு வந்தே தீரும். எனவே இயற்கை சீற்றங்களின் அடிப்படையில் இந்த ஆபத்துக்கள் ஏற்படும் போது, அதிலிருந்து தம்மை பாதுகாத்துக் கொள்ளும் திறமையும் முன்னேற்பாடும் அவசியமாகிறது. அப்படி ஆற்றல்களையும் சிந்தனையையும் இழந்தவர்கள் அந்த ஆபத்துகளில் சிக்கி மடிந்து விடுகின்றனர். அதே சமயம் மனிதனின் அநியாய செயல்களால் ஏற்படும் விபரீத விளைவுகளிலிருந்து பாதுகாத்துக் கொள்ள இறைவழிகாட்டுதல் ஒன்றே உதவி புரியும்.


وَمَا خَلَقْنَا ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضَ وَمَا بَيْنَهُمَآ إِلَّا بِٱلْحَقِّ ۗ وَإِنَّ ٱلسَّاعَةَ لَءَاتِيَةٌۭ ۖ فَٱصْفَحِ ٱلصَّفْحَ ٱلْجَمِيلَ.

15:85. ஆக இந்த வானங்களும் பூமியும் இவை இரண்டிற்கும் இடையே இருப்பவையும், மனிதனின் நற்செயல்களோ, தீய செயல்களோ அவற்றின் பலன்களையும் விளைவுகளையும் ஏற்படுத்தும் வகையிலேயே (result oriented) படைக்கப்பட்டுள்ளன. மனித செயல்கள், நம் சட்ட விதிமுறைகளுக்கு எதிராக இருந்தால், அவனுக்கு அழிவுகள் ஏற்படுகின்றன. எனவே இதற்குமுன் வாழ்ந்த சமுதாயங்களுக்கு ஏற்பட்ட கதியே இக்காலத்தில் தீய செயலில் ஈடுபடுவர்களுக்கும் நிச்சயமாக ஏற்படும். இதை மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்றால் அவர்களை பொருட்படுத்தாமல், உங்கள் செயல் திட்டங்களின்படி சிறப்பாக மக்கள் நலப் பணிகளில் அழகிய முறையில் செயல்படுத்தி வாருங்கள்.


إِنَّ رَبَّكَ هُوَ ٱلْخَلَّٰقُ ٱلْعَلِيمُ.

15:86. இவை யாவும் அகிலங்களை எல்லாம் படைத்து, அவற்றின் ஒவ்வொன்றிலும் நடப்பவை அனைத்தையும் அறிந்து கொள்ளும் பேராற்றலுடைய ஏக இறைவனாகிய அல்லாஹ்வின் புறத்திலிருந்து அறிவிக்கப்படுவதாகும்.


وَلَقَدْ ءَاتَيْنَٰكَ سَبْعًۭا مِّنَ ٱلْمَثَانِى وَٱلْقُرْءَانَ ٱلْعَظِيمَ.

15:87. இப்படியாக நாம் திரும்ப திரும்ப நிகழக்கூடிய வரலாற்று உண்மைகளையும், (Historical Cyles) அத்துடன் இந்த குர்ஆனின் அறிவுரைகளையும் உங்களுக்கு வழங்கியுள்ளோம். இதே அடிப்படையில் ஒவ்வொரு சமுதாயத்தின் வளர்ச்சியும் வீழ்ச்சியும், இவ்வுலகம் நிலைத்திருக்கும் நாள் வரையில் தொடர்ந்து நடைபெற்றுவரும் (பார்க்க 39:23)


لَا تَمُدَّنَّ عَيْنَيْكَ إِلَىٰ مَا مَتَّعْنَا بِهِۦٓ أَزْوَٰجًۭا مِّنْهُمْ وَلَا تَحْزَنْ عَلَيْهِمْ وَٱخْفِضْ جَنَاحَكَ لِلْمُؤْمِنِينَ.

15:88. எனவே உம் சமூகத்தாரில் சிலர் அநியாயமாக செல்வங்களை ஈட்டிக் கொண்டு, உண்டு மகிழ்ந்து சுகமாக வாழ்ந்து வருகின்றனர். அவர்களின் பக்கம் நீங்கள் கவனம் செலுத்தாதீர்கள். அவர்களுக்கு நேரவிருக்கும் துர்பாக்கியங்களைப் பற்றி எண்ணி துக்கப்படவும் வேண்டாம். ஆனால் இறைவழிகாட்டுதலை ஏற்று உங்களுடன் இணைந்து பணியாற்றுபவர்களை, அன்பு எனும் இறக்கையைக் கொண்டு அரவணைத்து வழிநடத்திச் செல்லுங்கள்.


وَقُلْ إِنِّىٓ أَنَا ٱلنَّذِيرُ ٱلْمُبِينُ.

15:89. “நான் உங்களுடைய தவறான செயல்களால் ஏற்படவிருக்கும் விபரீத விளைவுகளைப் பற்றி எடுத்துரைத்து முன்னெச்சரிக்கை செய்பவனாகவே இருக்கிறேன்” என்று மக்களுக்கு அறிவுருத்தி வாருங்கள்.


كَمَآ أَنزَلْنَا عَلَى ٱلْمُقْتَسِمِينَ.

15:90. இதற்குமுன் வாழ்ந்த சமூகத்தவர்களுக்கு ஏற்பட்ட வேதனைகளைப் போலவே உங்களுக்கும் ஏற்படும் என்பதை அறிவிக்கிறேன்.


ٱلَّذِينَ جَعَلُوا۟ ٱلْقُرْءَانَ عِضِينَ.

15:91. ஏனெனில் அவர்கள் இந்த குர்ஆனை விட்டு மக்களை பிரித்துவிட பல்வேறு சூழ்ச்சிகளையும் உறுதியான திட்டங்களையும் தீட்டி வந்தனர். (பார்க்க 5:45, 9:107) மேலும் அவர்கள் இவையாவும் முன்னோர்களின் கட்டுக் கதைகளே அன்றி வேறில்லை (16:24) என்று மக்களிடம் கூறி இந்த குர்ஆனின் அறிவுரைகளை மட்டம் தட்டி வந்தனர்.


فَوَرَبِّكَ لَنَسْـَٔلَنَّهُمْ أَجْمَعِينَ.

15:92. அவர்கள் செய்து வந்த செயல்களுக்கு என்ன விளைவுகள் ஏற்பட்டது என்பதற்கு உம்முடைய இறைவன் நிர்ணயித்துள்ள “மனித செயலுக்கேற்ற விளைவுகள்” என்ற சட்டமே சாட்சி கூறும்.


عَمَّا كَانُوا۟ يَعْمَلُونَ.

15:93. அதாவது அவர்களுடைய செயல்களின் விளைவாக அழிந்து போவதைத் தவிர வேறு என்ன நிகழும்?


فَٱصْدَعْ بِمَا تُؤْمَرُ وَأَعْرِضْ عَنِ ٱلْمُشْرِكِينَ.

15:94. எனவே இத்தகைய சமூக விரோத செயல்களில் ஈடுபடுபவர்களின் பேச்சுகளை எல்லாம் பொருட்படுத்தாமல், உன் இறைவன் புறத்திலிருந்து நிர்ணயிக்கப்பட்ட மக்கள் நலத்திட்டங்களில் வேகம் காட்டுங்கள்.


إِنَّا كَفَيْنَٰكَ ٱلْمُسْتَهْزِءِينَ.

15:95. உம்முடைய செயல் திட்டங்களைப் பார்த்து, அவர்கள் ஏளனம் செய்கிறார்கள். ஆனால் அத்தகைய மக்களே ஏளனத்திற்கு ஆளாவார்கள் (பார்க்க 2:14-15). இதற்கு அல்லாஹ் நிர்ணயித்துள்ள சட்டமே போதுமானது.
நீங்கள் அவர்களுக்கு எதிராக தற்சமயம் எந்த நடவடிக்கையும் எடுக்கத் தேவையில்லை.


ٱلَّذِينَ يَجْعَلُونَ مَعَ ٱللَّهِ إِلَٰهًا ءَاخَرَ ۚ فَسَوْفَ يَعْلَمُونَ.

15:96. இவர்கள் எத்தகையோர் என்றால் அல்லாஹ்வின் வல்லமைக்கு இணையாக கற்பனைத் தெய்வங்களை ஏற்படுத்திக் கொண்டு, தாம் மிகச் சிறந்த செயல்களையே செய்து வருவதாக எண்ணிக் கொள்கின்றனர். இவர்கள் செய்துவரும் செயல்களின் விளைவுகள் தோற்றத்திற்கு வரும் நாள் வெகு தூரத்தில் இல்லை.


وَلَقَدْ نَعْلَمُ أَنَّكَ يَضِيقُ صَدْرُكَ بِمَا يَقُولُونَ.

15:97. இறைவழிகாட்டுதலை எடுத்துரைப்பவரே! அவர்களுடைய ஏளனப் பேச்சால் உன் மனம் எந்த அளவிற்கு வேதனைப்படுகிறது என்பதை நாம் அறிவோம்.


فَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ وَكُن مِّنَ ٱلسَّٰجِدِينَ.

15:98. நீங்கள் அவர்களுடைய ஏளன பேச்சுக்களை பொருட்படுத்தாமல், உன் இறைவனின் பரிபாலன செயல் திட்டங்களை அழகிய முறையில் நிறைவேற்ற தீவரம் காட்டுங்கள். இறைத் திட்டங்களை போற்றுதலுக்கு உரியதாக ஆக்குவதில் முழு அளவில் அர்ப்பணித்து செயல்படுபவர்களோடு நீரும் இணைந்து செயல்படுவீராக.


وَٱعْبُدْ رَبَّكَ حَتَّىٰ يَأْتِيَكَ ٱلْيَقِينُ.

15:99. இப்படியாக இறைவனின் மார்க்கமே தலைசிறந்த வாழ்க்கை திட்டங்கள் என்பதை உலகார் முன் நிரூபணம் ஆக, இறைக் கட்டளைக்கு மட்டுமே அடிபணிந்து வாழ்நாள் முழுவதும் செயல்படுவீராக.