بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ

14:0.அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் அறிவுரைப்படியே அனைத்துக் காரியங்களையும் செய்ய நாடுகிறேன். (பார்க்க 6:162)


الٓر ۚ كِتَٰبٌ أَنزَلْنَٰهُ إِلَيْكَ لِتُخْرِجَ ٱلنَّاسَ مِنَ ٱلظُّلُمَٰتِ إِلَى ٱلنُّورِ بِإِذْنِ رَبِّهِمْ إِلَىٰ صِرَٰطِ ٱلْعَزِيزِ ٱلْحَمِيدِ.

14:1. நிகரற்ற வல்லமை உடைய அல்லாஹ்வின் புறத்திலிருந்து இறக்கி அருளப்பட்ட இவ்வேதம், உலக மக்களை "வழிகேடுகள்" என்ற இருளிலிருந்து "நேர்வழி" என்ற வெளிச்சத்தின் பக்கம் கொண்டு வரக்கூடியதாக உள்ளது. (பார்க்க 33:43) இவை யாவும் இறைவனின் செயல் திட்டங்களின் அடிப்படையைக் கொண்டவையாகும். உலக மக்களை நேரான பாதையில் அழைத்துச் செல்லக் கூடிய இந்த வழிகாட்டுதல்கள், எல்லா பாராட்டுகளும் போற்றுதல்களும் ஏக இறைவனாகிய அல்லாஹ்வுக்கே என்பதற்கு சான்று பகர்கின்றன.


ٱللَّهِ ٱلَّذِى لَهُۥ مَا فِى ٱلسَّمَٰوَٰتِ وَمَا فِى ٱلْأَرْضِ ۗ وَوَيْلٌۭ لِّلْكَٰفِرِينَ مِنْ عَذَابٍۢ شَدِيدٍ.

14:2. அல்லாஹ்வின் நிகரற்ற வல்லமை எப்படிப்பட்டது என்றால், அகிலங்கள் மற்றும் பூமியில் உள்ளவை அனைத்தும் அல்லாஹ்வின் செயல் திட்டங்களை நிறைவேற்றவே செயல்படுகின்றன. அப்படிப்பட்ட வல்லமையுடைய இறைவனிடமிருந்து வரும் வழிகாட்டுதல்களை ஏற்க மறுப்பவர்களின் வாழ்வில் இருள் சூழ்ந்து கொள்ளும். அதனால் அவர்களுடைய வாழ்வு வேதனை மிக்கதாக ஆகிவிடும்.


ٱلَّذِينَ يَسْتَحِبُّونَ ٱلْحَيَوٰةَ ٱلدُّنْيَا عَلَى ٱلْءَاخِرَةِ وَيَصُدُّونَ عَن سَبِيلِ ٱللَّهِ وَيَبْغُونَهَا عِوَجًا ۚ أُو۟لَٰٓئِكَ فِى ضَلَٰلٍۭ بَعِيدٍۢ.

14:3. ஏனெனில் இத்தகையவர்கள், தம் வாழ்வின் வருங்கால நிலையான பலன்களைப் பற்றி எல்லாம் அக்கறை கொள்ளாமல், குறுகிய காலப் பலன்களையும் சுகங்களையும் மட்டுமே நோக்கமாகக் கொண்டு வாழ்கிறார்கள். ஆனால் இறைவழிகாட்டுதல், நிகழ்கால வாழ்வும், வருங்கால நிலையான வாழ்வும் சிறப்பாக அமையவேண்டும் என்ற நோக்கத்தோடு அழைப்பு விடுகிறது. ஆனால் இவர்கள் அவ்வழிகாட்டுதலில் குழப்பங்களை ஏற்படுத்தி, மக்கள் இதில் இணையாதவாறு தடுத்து வருகிறார்கள். இத்தகையவர்கள் தாம் வழிகேட்டில் வெகுதூரம் சென்று விட்டவர்கள் ஆவார்கள்.


وَمَآ أَرْسَلْنَا مِن رَّسُولٍ إِلَّا بِلِسَانِ قَوْمِهِۦ لِيُبَيِّنَ لَهُمْ ۖ فَيُضِلُّ ٱللَّهُ مَن يَشَآءُ وَيَهْدِى مَن يَشَآءُ ۚ وَهُوَ ٱلْعَزِيزُ ٱلْحَكِيمُ.

14:4. இறைவழிகாட்டுதல்கள் என்பது ஒரு குறிப்பிட்ட நாடு அல்லது குறிப்பிட்ட சமுதாயத்திற்கு மட்டும் இறக்கி அருளப்படுகின்ற விஷயம் அல்ல. உலகம் முழுவதும் உள்ள அனைத்து தரப்பு மக்களுக்கும் பொருந்தக் கூடியவையாகும். எனவே அவரவர் பேசும் மொழியிலேயே விளக்கி கூறுவதற்காக இறைத் தூதர்களை அனுப்பி வைக்கிறோம். அவற்றை ஏற்றுக்கொள்ள விரும்பாதவர்களை வழிகேட்டில் செல்ல விட்டுவிடுவதும், அவற்றை ஏற்றுக்கொள்ள நாடுபவர்களுக்கு நேர்வழியை அளித்து விடுவதுமே அல்லாஹ்வின் செயல் திட்டமாகும். (பார்க்க 18:29). அல்லாஹ்வின் செயல்திட்டங்கள் யாவும், அனைத்தையும் மிகைக்கக் கூடியதாகவும், ஞானம் மிக்கதாகவும் உள்ளன என்பதே உண்மையாகும்.


وَلَقَدْ أَرْسَلْنَا مُوسَىٰ بِـَٔايَٰتِنَآ أَنْ أَخْرِجْ قَوْمَكَ مِنَ ٱلظُّلُمَٰتِ إِلَى ٱلنُّورِ وَذَكِّرْهُم بِأَيَّىٰمِ ٱللَّهِ ۚ إِنَّ فِى ذَٰلِكَ لَءَايَٰتٍۢ لِّكُلِّ صَبَّارٍۢ شَكُورٍۢ.

14:5. இவ்வாறு உலகிற்கு வருகை தந்த இறைத்தூதர்களில், மூஸா நபியும் ஒருவர் ஆவார். அவருடைய சமூகத்தார் வழிகேடுகள் என்ற இருளில் மூழ்கி இருந்ததால், இறைவழிகாட்டுதலை எடுத்துரைத்து, அவர்களை இருளிலிருந்து வெளிச்சத்திற்கு கொண்டு வரும்படி நாம் அவரை அனுப்பி வைத்தோம். இறைவழிகாட்டுதலைப் பின்பற்றி, அவர்களுடைய முன்னோர்களுக்குக் கிடைத்த கண்ணியம் மிக்க உயர் அந்தஸ்தைப் பற்றி எடுத்துரைத்து, அவர்களை நினைவூட்டும் படி கட்டளையிட்டோம். அது மட்டுமன்றி, யாரெல்லாம் இறைக்கொள்கைக் கோட்பாட்டில் நிலைத்திருந்து, உறுதியோடு செயல்படுகிறார்களோ, அவர்களுக்கெல்லாம் இந்த உயர்வும், கண்ணியமும், வளம்மிக்க வாழ்வும் கிடைத்துவிடும் என்ற நற்செய்தியும் அவர் மூலம் அனுப்பப்பட்டது.


وَإِذْ قَالَ مُوسَىٰ لِقَوْمِهِ ٱذْكُرُوا۟ نِعْمَةَ ٱللَّهِ عَلَيْكُمْ إِذْ أَنجَىٰكُم مِّنْ ءَالِ فِرْعَوْنَ يَسُومُونَكُمْ سُوٓءَ ٱلْعَذَابِ وَيُذَبِّحُونَ أَبْنَآءَكُمْ وَيَسْتَحْيُونَ نِسَآءَكُمْ ۚ وَفِى ذَٰلِكُم بَلَآءٌۭ مِّن رَّبِّكُمْ عَظِيمٌۭ.

14:6. மூஸா நபி தம் சமூகத்தாரிடம், “ஃபிர்அவ்னும் அவனுடைய கூட்டத்தாரிடமிருந்தும் உங்களை அல்லாஹ் காப்பாற்றி, உங்கள்மீது எந்த அளவிற்கு அருள் புரிந்தான் என்பதை நினைவு கூறுங்கள். அவர்களோ உங்களை எந்த அளவிற்கு கொடுமைப்படுத்தி துன்புறுத்தி வந்தார்கள் என்பதையும் நினைத்துப் பாருங்கள். உங்களில் வீரம் மிக்க ஆண்களால் தம் ஆட்சிக்கு ஆபத்துக்கள் ஏற்பட்டுவிடும் என அஞ்சி, அவர்களை குறிவைத்து கொல்வதும், கோழைகளை வாழ விட்டுவிடுவதும் அவனுடைய கொள்கையாக இருந்து வந்தது. அப்படிப்பட்ட கொடிய வேதனையிலிருந்து உங்களை அல்லாஹ் காப்பாற்றியது எவ்வளவு பெரிய மகத்தான உதவி என்பதையும் எண்ணிப் பாருங்கள்” என்றார்.


وَإِذْ تَأَذَّنَ رَبُّكُمْ لَئِن شَكَرْتُمْ لَأَزِيدَنَّكُمْ ۖ وَلَئِن كَفَرْتُمْ إِنَّ عَذَابِى لَشَدِيدٌۭ.

14:7. உங்களை அவர்களிடமிருந்து விடுவித்ததன் நோக்கமே, உங்களிடம் மறைந்திருக்கும் ஆற்றல்களை சிறப்பாக வளர்த்து, சிறந்த முறையில் செயலாற்றக் கூடியவர்களாக வரவேண்டும் என்பதே ஆகும். அதன்படி செயல்பட்டால் உங்களுக்கு இறைவனின் அருள் மேன்மேலும் கிடைத்து உயர் நிலைக்கு சென்றடைவீர்கள். நீங்கள் இறைவனுக்கு நன்றி விசுவாசத்துடன் நடந்து கொள்ளவில்லை என்றால் மீண்டும் கடுமையான வேதனைக்கு ஆளாவீர்கள் என மூஸா நபிக்கு வந்த அச்செய்தி குறிப்பு கூறிற்று.


وَقَالَ مُوسَىٰٓ إِن تَكْفُرُوٓا۟ أَنتُمْ وَمَن فِى ٱلْأَرْضِ جَمِيعًۭا فَإِنَّ ٱللَّهَ لَغَنِىٌّ حَمِيدٌ.

14:8. இச்செய்தியை எடுத்துரைத்த மூஸா நபி மேலும் அவர்களிடம், “இதன்படி நடந்து கொண்டால் அது உங்கள் நலனுக்கே ஆகும். இல்லையேல் நீங்கள் அனைவரும் ஒன்றுகூடி அதற்கு மாறு செய்தாலும் அதனால் அல்லாஹ்வுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்திட முடியாது. உங்களுக்குத் தான் அதன் விளைவுகள் வந்தடையும். அதே சமயம் ஏதோ இதன்படி நடந்து கொண்டால் அல்லாஹ்வுக்கு உதவி செய்வதாக எண்ணிக் கொள்ளாதீர்கள். அவன் எந்த தேவையுமற்றவன். அவனுடைய செயல்திட்டங்கள் எல்லாம் பாராட்டுக்குரியதே ஆகும் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்” என்றார்.


أَلَمْ يَأْتِكُمْ نَبَؤُا۟ ٱلَّذِينَ مِن قَبْلِكُمْ قَوْمِ نُوحٍۢ وَعَادٍۢ وَثَمُودَ ۛ وَٱلَّذِينَ مِنۢ بَعْدِهِمْ ۛ لَا يَعْلَمُهُمْ إِلَّا ٱللَّهُ ۚ جَآءَتْهُمْ رُسُلُهُم بِٱلْبَيِّنَٰتِ فَرَدُّوٓا۟ أَيْدِيَهُمْ فِىٓ أَفْوَٰهِهِمْ وَقَالُوٓا۟ إِنَّا كَفَرْنَا بِمَآ أُرْسِلْتُم بِهِۦ وَإِنَّا لَفِى شَكٍّۢ مِّمَّا تَدْعُونَنَآ إِلَيْهِ مُرِيبٍۢ.

14:9. மேலும் அவர், “உங்களுக்கு முன் வாழ்ந்த நூஹ், ஆது, சமூது போன்ற சமூகத்தாரின் வரலாற்று உண்மைகளையும், அவர்களுக்குப் பின் வாழ்ந்த பல சமுதாயங்களின் வரலாற்று உண்மைகளையும் உங்களிடம் பலமுறை சொல்லி இருக்கின்றேன். அவர்களுடைய வரலாற்று உண்மைகளை அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறிய மாட்டார்கள். அவர்களிடம் வந்த இறைத் தூதர்கள் தெளிவான ஆதாரங்களையே அவர்களுக்கு எடுத்துரைத்தார்கள். ஆனால் அவர்களோ இறைத் தூதர்களை பேச விடாதபடி செய்து விட்டனர். “நீர் எந்த விஷயங்களை எங்களுக்கு எடுத்துரைக்கின்றாயோ அவற்றை நாங்கள் ஏற்றுக்கொள்வதாக இல்லை. மேலும் நீங்கள் எந்த இறைவனின் ஆட்சியமைப்பின் பக்கம் அழைப்பு விடுகிறாயோ, அதெல்லாம் இங்கு உருவாகும் என்ற நம்பிக்கை எங்களுக்கு அறவே கிடையாது” என்று அவர்கள் கூறி விட்டார்கள். இந்த விஷயத்தையும் அச்சமுதாயத்தினருக்கு மூஸா நபி எடுத்துரைத்தார்.


۞ قَالَتْ رُسُلُهُمْ أَفِى ٱللَّهِ شَكٌّۭ فَاطِرِ ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضِ ۖ يَدْعُوكُمْ لِيَغْفِرَ لَكُم مِّن ذُنُوبِكُمْ وَيُؤَخِّرَكُمْ إِلَىٰٓ أَجَلٍۢ مُّسَمًّۭى ۚ قَالُوٓا۟ إِنْ أَنتُمْ إِلَّا بَشَرٌۭ مِّثْلُنَا تُرِيدُونَ أَن تَصُدُّونَا عَمَّا كَانَ يَعْبُدُ ءَابَآؤُنَا فَأْتُونَا بِسُلْطَٰنٍۢ مُّبِينٍۢ.

14:10. அதற்கு இறைத்தூதர்கள் அவர்களிடம், “அகிலங்களையும் பூமியையும் படைத்துப் பரிபாலிக்கும் இறைவனுடைய வழிகாட்டுதலைப் பற்றியா நீங்கள் சந்தேகப்படுகிறீர்கள்? உங்களிடையே நிலவி வரும் தவறான செயல்களை நீக்கி உங்களுக்குப் பாதுகாப்பான வாழ்வு கிடைக்கச் செய்ய வேண்டும் என்பதற்காகவே இந்த அழைப்பு விடப்படுகிறது. அதுமட்டுமின்றி தீய செயல்களை நீங்கள் எப்போதும் செய்து கொண்டே இருக்க முடியாது. உங்களுடைய செயல்களின் விளைவுகள் ஏற்பட காலத் தவணை நிர்ணயிக்கப்பட்டுள்ளது” என்று விளக்கி வந்தார்கள். இந்த அறிவுரைகளைக் கேட்ட அச்சமுதாயத்தினர், “நீங்கள் எங்களைப் போன்ற ஒரு சாதாரண மனிதரே அன்றி வேறில்லை. அப்படி இருக்க, காலம் காலமாக எங்கள் மூதாதையர்கள் கடைப்பிடித்து வந்த வழிமுறைகளையா சரியில்லை என கூறி அவற்றை தடுக்க வந்தீர்கள்? அப்படி என்றால், நம் வணக்க வழிபாடுகள் எல்லாம் அழிந்து, இறைவனின் மார்க்கமே நிலைபெறும் என்ற உங்களுடைய கூற்றுக்கு தக்க ஆதாரங்களைக் கொண்டு வாருங்கள்” என்று கூறி வந்தார்கள்.


قَالَتْ لَهُمْ رُسُلُهُمْ إِن نَّحْنُ إِلَّا بَشَرٌۭ مِّثْلُكُمْ وَلَٰكِنَّ ٱللَّهَ يَمُنُّ عَلَىٰ مَن يَشَآءُ مِنْ عِبَادِهِۦ ۖ وَمَا كَانَ لَنَآ أَن نَّأْتِيَكُم بِسُلْطَٰنٍ إِلَّا بِإِذْنِ ٱللَّهِ ۚ وَعَلَى ٱللَّهِ فَلْيَتَوَكَّلِ ٱلْمُؤْمِنُونَ.

14:11. அதற்கு அந்த இறைத்தூதர்கள் அவர்களை நோக்கி, “நாங்கள் உங்களைப் போன்ற மனிதர்களே என்பதை ஒப்புக் கொள்கிறோம். ஆனால் இறை வழிகாட்டுதல்கள் என்பதெல்லாம் இறைவனின் செயல்திட்டங்கள் சம்பந்தப்பட்டவை ஆகும். யார் அதற்கு தகுதியானவர் என்று இறைவனின் தேர்வில் இருக்கிறார்களோ, அவர்களுக்குத் தான் இந்த வழிகாட்டுதல்கள் இறக்கி அருளப்படுகின்றன.
அதன்பின் அவற்றைக் கொண்டு கிடைக்கும் பலன்களைப் பற்றியதாகும். அவற்றை பின்பற்றினால் தான் அவற்றின் பலன்கள் கிடைக்கும். நாங்களே அந்த பலன்களை உங்கள் முன் கொண்டுவந்து காட்ட இயலாது. ஆனால் நிச்சயமாக அல்லாஹ்வின் வழிகாட்டுதலில் முழுமையான நம்பிக்கை எங்களுக்கு உண்டு. எனவே நாங்கள் எங்கள் முயற்சியில் வெற்றி பெறுவது உறுதி” என்று பதிலளித்து வந்தார்கள்.


وَمَا لَنَآ أَلَّا نَتَوَكَّلَ عَلَى ٱللَّهِ وَقَدْ هَدَىٰنَا سُبُلَنَا ۚ وَلَنَصْبِرَنَّ عَلَىٰ مَآ ءَاذَيْتُمُونَا ۚ وَعَلَى ٱللَّهِ فَلْيَتَوَكَّلِ ٱلْمُتَوَكِّلُونَ.

14:12. மேலும் அவர்கள் தம் சமூகத்தவர்களிடம், “இந்த அளவிற்கு தெளிவான ஆதாரங்கள் வந்த பின்பும் அவற்றை நம்பி ஏற்று, அதன்படி செயல்படாமல் இருக்க எங்களுக்கு என்ன வந்தது? நாங்கள் எங்கள் முயற்சியில் வெற்றி பெறும் அனைத்து வழிமுறைகளையும் இறைவனிடமிருந்து பெற்றிருக்கிறோம். இந்த செயல் திட்டங்கள் நிறைவேறாதவாறு நீங்கள் எங்களுக்கு தொல்லை செய்தாலும், அவற்றை நாங்கள் சகித்துக் கொள்ளத் தயார். அந்த அளவுக்கு எங்களுக்கு அல்லாஹ்வின் செயல்திட்டங்களின் மீது பரிபூரண நம்பிக்கையும் அசைக்க முடியாத உறுதிப்பாடும் உள்ளது” என்று கூறி வந்தார்கள்.


وَقَالَ ٱلَّذِينَ كَفَرُوا۟ لِرُسُلِهِمْ لَنُخْرِجَنَّكُم مِّنْ أَرْضِنَآ أَوْ لَتَعُودُنَّ فِى مِلَّتِنَا ۖ فَأَوْحَىٰٓ إِلَيْهِمْ رَبُّهُمْ لَنُهْلِكَنَّ ٱلظَّٰلِمِينَ.

14:13. இதைக் கேட்ட அச்சமூகத்தவர்கள் இறைத் தூதர்களை நோக்கி, “உங்களை எங்கள் நாட்டை விட்டு துரத்திவிட வேண்டியது தான். இதை விட்டால் வேறு வழியில்லை. அல்லது நீங்கள் பழையபடி எங்களுடைய சமூகக் கட்டுப்பாட்டுக்குள் திரும்பி வந்து விடுங்கள்” என்று மிரட்ட ஆரம்பித்தனர். மறுபுறம் இறைவனிடமிருந்து, “நீங்கள் பயப்படாதீர்கள். இந்த அநியாயக்காரர்கள் நம் நியதிப்படி அழிந்து போவார்கள்” என்ற ஆறுதல் செய்தி அத்தூதர்களுக்கு வந்தது.


وَلَنُسْكِنَنَّكُمُ ٱلْأَرْضَ مِنۢ بَعْدِهِمْ ۚ ذَٰلِكَ لِمَنْ خَافَ مَقَامِى وَخَافَ وَعِيدِ.

14:14. மேலும் அந்த இறைச்செய்தியில், “நாம் உங்களையும் உங்களைப் பின்பற்றுபவர்களையும் இவர்களிடமிருந்து காப்பாற்றி, சிறப்பாக வாழும்படி வழி செய்வோம். இவையாவும் உங்களை ஆதரித்து, எதிரிகளை ஒழித்து விடுவது என்பதல்ல நம் நாட்டம். நாம் ஏற்படுத்தியுள்ள விதிமுறைகளின்படி அவர்களின் அநியாய செயல்களால் அவர்கள் அழிந்து போவதும், நீங்கள் நம் எச்சரிக்கைக்கு அஞ்சி நடப்பதால் இந்த உதவிகள் கிடைப்பதுமே ஆகும்” என்று கூறப்பட்டது.


وَٱسْتَفْتَحُوا۟ وَخَابَ كُلُّ جَبَّارٍ عَنِيدٍۢ.

14:15. இப்படியாக அவ்விரு பிரிவினரும் தத்தம் நிலையில் செயல்பட்டு இறுதியில் அல்லாஹ்வின் விதிமுறைகளின் படியே அந்த பிடிவாதக்கார கூட்டத்தார் அழிவை சந்தித்துக் கொண்டார்கள்.


مِّن وَرَآئِهِۦ جَهَنَّمُ وَيُسْقَىٰ مِن مَّآءٍۢ صَدِيدٍۢ.

14:16. அந்த அழிவுகளும் தற்காலிக அழிவாக இருந்ததில்லை. நிலையான அழிவுகள் என்ற நரக வேதனைகளின் பாழ்குழியில் தள்ளப்பட்டார்கள். அங்கு அவர்களுக்குக் கிடைத்த உணவோ அழுகிப் போய் நாற்றமடிக்கக் கூடியதாக இருந்தது. அவர்களுடைய நிலைமை அந்த அளவிற்கு மோசமாக இருந்தது.


يَتَجَرَّعُهُۥ وَلَا يَكَادُ يُسِيغُهُۥ وَيَأْتِيهِ ٱلْمَوْتُ مِن كُلِّ مَكَانٍۢ وَمَا هُوَ بِمَيِّتٍۢ ۖ وَمِن وَرَآئِهِۦ عَذَابٌ غَلِيظٌۭ.

14:17. இப்படியாக அவர்கள் வேறு வழியின்றி சிரமத்தோடு சிறிது சிறிதாக இந்த அவல நிலையை அனுபவிக்க வேண்டியதாயிற்று. மேலும் அவர்கள் சொகுசு வாழ்வு வாழ்ந்து பழக்கப்பட்டதால், இந்த மோசமான நிலைமையை அவர்களால் ஜீரணிக்க முடியவில்லை. அவர்களை நாலாப்புறமும் மரணம் நெருங்கிக் கொண்டிருப்பதை உணர்ந்தார்கள். ஆனால் மரணமும் வருவதாக இல்லை. இப்படியாக அவர்கள் முன் நாலாப்புறமும் வேதனைகள் மேல் வேதனைகளே ஏற்பட்டு வந்தன.
இவையாவும் அவர்கள் இவ்வுலகில் அனுபவித்த வேதனைகள் ஆகும். மரணத்திற்குப் பின் தொடர்கின்ற வேதனைகளோ இவற்றைவிட பன்மடங்கு கடுமையாக இருக்கும். இவை எல்லாம் நடந்த வரலாற்று உண்மைகள் ஆகும். இப்படி ஒரு நிலை ஏற்படுவது அவர்களுக்கு மட்டும் என்பதல்ல.


مَّثَلُ ٱلَّذِينَ كَفَرُوا۟ بِرَبِّهِمْ ۖ أَعْمَٰلُهُمْ كَرَمَادٍ ٱشْتَدَّتْ بِهِ ٱلرِّيحُ فِى يَوْمٍ عَاصِفٍۢ ۖ لَّا يَقْدِرُونَ مِمَّا كَسَبُوا۟ عَلَىٰ شَىْءٍۢ ۚ ذَٰلِكَ هُوَ ٱلضَّلَٰلُ ٱلْبَعِيدُ.

14:18. மாறாக யாரெல்லாம் இறைவழிகாட்டுதலை ஏற்க மறுத்து அதற்கு எதிராகச் செயல் படுகிறார்களோ, அவர்களுக்கெல்லாம் இப்படி ஒரு நிலைமை ஏற்பட்டே தீரும். அவர்களுடைய உழைப்புகள் எல்லாம் எரிந்து சாம்பலாகி விடும். அந்தச் சாம்பல் ஒரே ஒரு காற்றில் பறந்தோடி விடுவது போல் இவர்களுடைய உழைப்புகள் எல்லாம் இவ்வுலகில் நிலையான பலன்களை ஒருபோதும் தராது. அதுமட்டுமின்றி அவர்கள் சம்பாதித்து வைத்திருக்கும் செல்வங்கள் எதுவும் அவர்களுக்கு உதவாது. இப்படி ஒரு நிலை ஏற்படுவதே வழிகேட்டில் வெகு தூரம் சென்றதன் விளைவுகளாகும்.
சிந்தனையாளர்களே! இவ்வுலகில் மனிதர்கள் விஷயத்தில் மட்டும் இப்படி ஒரு நிலை ஏன் ஏற்படுகிறது என்பதைக் கவனித்தீர்களா? ஏனெனில்


أَلَمْ تَرَ أَنَّ ٱللَّهَ خَلَقَ ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضَ بِٱلْحَقِّ ۚ إِن يَشَأْ يُذْهِبْكُمْ وَيَأْتِ بِخَلْقٍۢ جَدِيدٍۢ.

14:19. வானங்களிலும் இந்த பூமியிலும் உள்ள அல்லாஹ்வின் எல்லா படைப்புகளையும் கவனித்துப் பார்க்க மாட்டீர்களா? அவை எல்லாம் ஆக்கப்பூர்வமான பலன்களை தரக் கூடியதாகவே உள்ளன. எவை இவ்வுலகில் பலன் அளிப்பதில்லையோ அவை அழிந்து போய்விடுகின்றன. அதற்குப் பதிலாக புதிய படைப்புகள் உருவாகின்றன. அது போல, நீங்கள் கடைப்பிடித்து வரும் வாழ்க்கை நெறிமுறைகள் ஆக்கப்பூர்வமான பலன்களை அளிக்கும் வகையில் இருத்தல் அவசியம். அவ்வாறு பலனளிக்காத வகையில் இருந்தால் அந்த கலாச்சாரம் அழிந்து போகும். இதுவே இறைவனின் நியதியாகும். (பார்க்க 4:133, 9:39, 47:38)
உதாரணத்திற்கு பண்டைய காலத்தில் மாட்டு வண்டிகள் தான் போக்குவரத்து சாதனங்களாக இருந்தன. ஆனால் அவை இக்கால சூழ்நிலைக்கு ஒத்து வராது. எனவே அவை இவ்வுலகில் முன்னிலை வகிக்க முடியவில்லை. அதற்குப் பதிலாக இயந்திரங்கள் பொருத்தப்பட்ட வாகனங்கள் உருவாக்கப்பட்டு அவை புழக்கத்தில் உள்ளன. அதே போல ஒவ்வொரு படைப்புகளையும் ஆராய்ந்து பாருங்கள். உண்மைகள் விளங்கும். ஆனால் மனிதன் மட்டும், தான் பண்டைய காலத்திலிருந்து கடைபிடித்து வரும் சடங்கு சம்பிரதாயங்களை மட்டும் அப்படியே தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்று ஆசைப்படுகிறான். அந்த இடத்தில் அதை விட சிறந்த வழிமுறையை கொண்டுவர யாராவது முன்வந்தால் அதை உடனே எதிர்க்கிறான்.


وَمَا ذَٰلِكَ عَلَى ٱللَّهِ بِعَزِيزٍۢ.

14:20. ஆக இவ்வாறு உங்களுக்குப் பதிலாக புதிய படைப்புகளை உருவாக்குவது அல்லாஹ்வுக்கு சிரமமான காரியமல்ல என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள்.


وَبَرَزُوا۟ لِلَّهِ جَمِيعًۭا فَقَالَ ٱلضُّعَفَٰٓؤُا۟ لِلَّذِينَ ٱسْتَكْبَرُوٓا۟ إِنَّا كُنَّا لَكُمْ تَبَعًۭا فَهَلْ أَنتُم مُّغْنُونَ عَنَّا مِنْ عَذَابِ ٱللَّهِ مِن شَىْءٍۢ ۚ قَالُوا۟ لَوْ هَدَىٰنَا ٱللَّهُ لَهَدَيْنَٰكُمْ ۖ سَوَآءٌ عَلَيْنَآ أَجَزِعْنَآ أَمْ صَبَرْنَا مَا لَنَا مِن مَّحِيصٍۢ.

14:21. இப்பவும் காலம் கடந்து விடவில்லை. நீங்கள் அல்லாஹ்வின் கட்டளைக்கு இணங்கி சமூக சீரமைப்பு பணியில் ஈடுபட முன்வாருங்கள். இவ்வாறு செய்யவில்லை என்றால் அல்லாஹ்வின் நியதிப்படி நீங்கள் அனைவரும் விளைவுகளை சந்திக்கும் தருணத்தை தவிர்க்க முடியாததாகி விடும். அதன் வேதனைகளை தாங்க முடியாமல், சமுதாயத்திலுள்ள பெருமையுடன் வாழ்ந்த தலைவர்களிடம், அவர்களைப் பின்பற்றி வந்த பலவீனர்கள், “இந்த வேதனையிலிருந்து தப்பிக்க வழி ஏதாவது உண்டா?” என்று கேட்பார்கள். அப்போது அத்தலைவர்கள், “எங்களுக்கே தப்பிக்க வழி கிடைத்திருந்தால் நாங்கள் உங்களுக்கு நிச்சயமாக சொல்லி இருப்போமே! இப்போது நாங்கள் தப்புவதே பெரும்பாடாக இருக்கிறதே! இந்த தருணத்தில் பதற்றத்தால் மனம் கலங்கினாலும் அல்லது பொறுமையுடன் இருந்தாலும் நமக்கு ஒன்றுதான். எங்களால் இந்த நிலைமையை எதிர்த்து எதையும் செய்ய முடியவில்லை. இங்கிருந்து தப்பித்துச் செல்லவும் எந்த வழியும் இருப்பதாகத் தெரியவில்லை” என்பார்கள்.


وَقَالَ ٱلشَّيْطَٰنُ لَمَّا قُضِىَ ٱلْأَمْرُ إِنَّ ٱللَّهَ وَعَدَكُمْ وَعْدَ ٱلْحَقِّ وَوَعَدتُّكُمْ فَأَخْلَفْتُكُمْ ۖ وَمَا كَانَ لِىَ عَلَيْكُم مِّن سُلْطَٰنٍ إِلَّآ أَن دَعَوْتُكُمْ فَٱسْتَجَبْتُمْ لِى ۖ فَلَا تَلُومُونِى وَلُومُوٓا۟ أَنفُسَكُم ۖ مَّآ أَنَا۠ بِمُصْرِخِكُمْ وَمَآ أَنتُم بِمُصْرِخِىَّ ۖ إِنِّى كَفَرْتُ بِمَآ أَشْرَكْتُمُونِ مِن قَبْلُ ۗ إِنَّ ٱلظَّٰلِمِينَ لَهُمْ عَذَابٌ أَلِيمٌۭ.

14:22. இப்படியாக அல்லாஹ்வின் நியதிப்படி துயரச் சம்பவங்கள் நிகழும்போது, “இதுநாள் வரையில் அல்லாஹ் உங்களுக்கு நபிமார்கள் மூலம் அறிவித்து வந்த கடுமையான வேதனைகள் யாவும் உண்மையே என இன்றைய தினம் நிரூபணம் ஆகிவிட்டன. நாங்களும் உங்களைக் காப்பாற்றுவதாக வாக்களித்து வந்தோம். ஆனால் எங்களால் அந்த வாக்குகளை காப்பாற்ற முடியவில்லை. எனவே அவற்றிற்கு மாறுசெய்ய வேண்டியதாயிற்று. நீங்களாகவே எங்கள் அழைப்பை ஏற்று எங்களைப் பின்பற்றி வந்தீர்கள். அதைத் தவிர எங்களுக்கு உங்கள் மேல் எவ்வித அதிகாரமும் இருந்ததில்லை. ஆகவே நீங்கள் எங்களை நிந்திக்காதீர்கள். உங்களை நீங்களே நிந்தித்துக் கொள்ளுங்கள். உங்களை எங்களால் காப்பாற்றவோ அல்லது எங்களை உங்களால் காப்பாற்றவோ ஒருபோதும் முடியாது. நீங்கள் இதுவரையில் அல்லாஹ்வின் வழிகாட்டுதலுக்கு இணையாகப் பின்பற்றி வந்தமைக்கு நாங்கள் பொறுப்பாளி அல்ல. நிச்சயமாக அக்கிரமக்காரர்களுக்கு நோவினை தரும் வேதனைகள் உண்டு என்பதை நாங்களும் அறிந்து கொண்டோம்” என்று சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வந்த தலைகணம் பிடித்த தலைவர்கள் கூறிவிடுவார்கள்.
சிந்தனையாளர்களே! இந்த வாசகத்தில் உள்ள விஷயங்கள் யாவும் உங்களைப் பார்த்து ஷைத்தான் இப்படி கூறுவான் என்று சொல்லப்பட்டுள்ளது. இதை நாம் மன இச்சையை பின்பற்றி நடப்பவர்கள் மற்றும் அவர்களை வழிநடத்திச் செல்லும் தலைவர்கள் என்று பொருள் தந்துள்ளோம். காரணம் இவையாவும் இவ்வுலகில் நடக்கின்ற அல்லது நடக்கவிருக்கும் நிலைமையைப் பற்றியதாகும். ஆனால் கியாம நாளிலும் மனிதனைப் பார்த்து அந்த ஷைத்தான் இதே வார்த்தைகளை சொல்லிவிட்டால், மனிதனுடைய நிலைமை என்னவாக இருக்கும் என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
ஆக ஷைத்தான் என்ற ஒரு தனி படைப்பு மனிதனை தவறான வழியின் பக்கம் ஒருபோதும் அழைப்பதில்லை. மனிதனில் செயல்பட்டு வரும் உள்ளூர தீய உணர்வுகளே ஷைத்தான் என்பதாகும். அவையே உங்களை தவறான செயல்களை செய்ய சதா தூண்டிக் கொண்டிருக்கும். கியாம நாளில் மனஇச்சை எனும் ஷைத்தான் நம்மைவிட்டு இலகுவாக விலகிக் கொள்கிறது. எனவே நம் செயல்களுக்கு நாமே பொறுப்பாளி ஆகிவிடுகிறோம்.
மனித அறிவுக்கு இறைவழிகாட்டுதல்கள் என்ற வலிமை இருந்தால் அந்த ஷைத்தான் என்னும் மன இச்சை, அறிவுக்கு கட்டுப்பட்டு செயல்படும். இல்லாவிட்டால் மனித அறிவு மனஇச்சைக்கு அடிமைப்பட்டு தவறான வழியில் இழுத்துச் செல்லும். இதுதான் ஷைத்தானைப் பற்றிய உண்மையான நிலைமை ஆகும்.


وَأُدْخِلَ ٱلَّذِينَ ءَامَنُوا۟ وَعَمِلُوا۟ ٱلصَّٰلِحَٰتِ جَنَّٰتٍۢ تَجْرِى مِن تَحْتِهَا ٱلْأَنْهَٰرُ خَٰلِدِينَ فِيهَا بِإِذْنِ رَبِّهِمْ ۖ تَحِيَّتُهُمْ فِيهَا سَلَٰمٌ.

14:23. இதற்கு மாறாக, அல்லாஹ்வின் வழிகாட்டுதலை ஏற்று, அதன்படி ஆக்கப்பூர்வமான சிறந்த சமூக நலத் திட்டங்களைத் தீட்டி, அல்லும் பகலும் உழைப்பவர்களின் சமுதாயம் சுவனத்திற்கு ஒப்பானதாக மாறிவரும். அதில் அனைவரும் இன்புற்று இருப்பார்கள். அவர்களுடைய உழைப்புக்கு ஏற்ப, தாராளமான பொருளாதரா வசதிகள் ஜீவ நதிபோல் கிடைத்து வரும். அல்லாஹ்வின் கட்டளைப்படி எதுவரையில் இப்படி சிறப்பாக செயல்படுவார்களோ, அதுவரையில் அச்சுவன வாழ்வு நீடிக்கும். அப்படி வாழும் அனைவரின் எண்ணங்களும் செயல்களும் பிறர் நலன் பேணல் என்ற அடிப்படையில்தான் இருக்கும்.


أَلَمْ تَرَ كَيْفَ ضَرَبَ ٱللَّهُ مَثَلًۭا كَلِمَةًۭ طَيِّبَةًۭ كَشَجَرَةٍۢ طَيِّبَةٍ أَصْلُهَا ثَابِتٌۭ وَفَرْعُهَا فِى ٱلسَّمَآءِ.

14:24. இறைவழிகாட்டுதலை மனதார ஏற்றுக் கொண்டவர்களே! மேலே குறிப்பிடப்பட்டுள்ள இரு வெவ்வேறு சமுதாயங்களின் நிலைமை எவ்வாறு மாறிவிடுகிறது என்பதை சற்று சிந்தித்துப் பாருங்கள். அவ்விரு சமுதாயங்களைப் பற்றி ஒரு உதாரணத்தைக் கொண்டு அல்லாஹ் உங்களுக்கு எவ்வாறு சிறப்பாக விளக்குகிறான் என்பதையும் கவனியுங்கள். சிறப்பாக வாழ்பவர்கள் கடைபிடித்து வரும் வாழ்க்கை நெறிமுறைக்கு ஒரு உதாரணமாவது, வானளாவி பரந்து விரிந்து, சதா பழங்களையும் நறுமணங்களையும் அளிக்கக் கூடிய மரமாகவும், அதன் வேர்கள் பூமியில் ஆழமாக ஊடுருவிச் சென்று உறுதி மிக்கதாய் இருப்பதற்கு ஒப்பானதாகும்.


تُؤْتِىٓ أُكُلَهَا كُلَّ حِينٍۭ بِإِذْنِ رَبِّهَا ۗ وَيَضْرِبُ ٱللَّهُ ٱلْأَمْثَالَ لِلنَّاسِ لَعَلَّهُمْ يَتَذَكَّرُونَ.

14:25. மேலும் அம்மரம் இறைவனின் நியதிப்படி எல்லா பருவக் காலங்களிலும் தன்னுடைய கனியை கொடுத்துக் கொண்டே இருக்கும். இதுவே அல்லாஹ்வின் அறிவுரைப்படி சிறப்பாக செயல்படும் சமுதாயத்திற்கு ஒப்பான உதாரணமாகும். மக்கள் அறிவுரை பெறும்பொருட்டு இத்தகைய உதாரணங்கள் இறைவன் புறத்திலிருந்து தரப்படுகின்றன.


وَمَثَلُ كَلِمَةٍ خَبِيثَةٍۢ كَشَجَرَةٍ خَبِيثَةٍ ٱجْتُثَّتْ مِن فَوْقِ ٱلْأَرْضِ مَا لَهَا مِن قَرَارٍۢ.

14:26. இதற்கு மாறாக, அல்லாஹ்வுக்கு இணையாக வேறு வழிமுறைகளை பின்பற்றி வருபவர்களுக்கு ஓர் உதாரணமாவது – எந்த பலனுமளிக்காத பட்டமரத்திற்கு ஒப்பானதாகும். அதன் வேர்கள் பூமியின் ஆழ்பகுதி வரையில் செல்வதில்லை. அதனால் சற்றே காற்றடித்தாலும் தாங்கி நிற்கக்கூடிய சக்தி பெற்றிருக்காது. எனவே அவை வேரோடு சாய்ந்து விடும்.


يُثَبِّتُ ٱللَّهُ ٱلَّذِينَ ءَامَنُوا۟ بِٱلْقَوْلِ ٱلثَّابِتِ فِى ٱلْحَيَوٰةِ ٱلدُّنْيَا وَفِى ٱلْءَاخِرَةِ ۖ وَيُضِلُّ ٱللَّهُ ٱلظَّٰلِمِينَ ۚ وَيَفْعَلُ ٱللَّهُ مَا يَشَآءُ.

14:27. இவ்வாறாக அல்லாஹ்வின் வழிகாட்டுதல் நிலையான உறுதிமிக்க கொள்கைக் கோட்பாடுகளுடன் கூடிய சிறப்பான வாழ்வின் பக்கம் அழைப்பு விடுகிறது. எனவே இறை வழிகாட்டுதலை ஏற்று அதன்படி செயல்படும் சமுதாயத்தின் நிகழ்கால வாழ்வும் வருங்கால நிலையான வாழ்வும் சிறப்பாக அமையும் என்று அது வாக்களிக்கிறது. இதற்கு மாறாக அல்லாஹ்வின் வழிகாட்டுதலை ஏற்காமல் அதற்கு மாறு செய்யும் சமுதாயத்தில் பாவகர செயல்கள் மிகைத்து வழிதவறிச் சென்று விடும் . அதனால் அவர்கள் கட்டிக் காத்து வரும் சமூக அமைப்பு சீரழிந்து, அழிவை நோக்கி சென்றுவிடுகிறது. இதுவே அல்லாஹ் மனிதர்கள் விஷயத்தில் பிறப்பித்துள்ள நிலைமாறா நிரந்தரச் சட்டமாகும். ஏனெனில் அல்லாஹ், தான் நாடியதை செய்யக் கூடிய பேராற்றல் உடையவனே.


۞ أَلَمْ تَرَ إِلَى ٱلَّذِينَ بَدَّلُوا۟ نِعْمَتَ ٱللَّهِ كُفْرًۭا وَأَحَلُّوا۟ قَوْمَهُمْ دَارَ ٱلْبَوَارِ.

14:28. இந்த கோட்பாட்டினை மையமாக வைத்து உலக வரலாற்றின் ஏடுகளை புரட்டிப் பாருங்கள். மனித வாழ்வு சிறப்பாக அமைய வேண்டும் என்பதற்காக அல்லாஹ் அளித்த அருட்கொடைகளை எல்லாம் தவறாக பயன்படுத்தியவர்கள் அழிவு என்னும் பாழ்குழியில் எவ்வாறு தள்ளப்பட்டார்கள் என்ற உண்மைகளையே சொல்லும்.


جَهَنَّمَ يَصْلَوْنَهَا ۖ وَبِئْسَ ٱلْقَرَارُ.

14:29. இப்படியாக அவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக வேதனையளிக்கும் நரகத்தின் வாயில்வரை சென்றடைந்தார்கள். அவர்கள் சென்றடைந்த இடம் எவ்வளவு கெட்ட இடம் என்பதை அப்போது தான் உணர்ந்தார்கள்.
அந்த சமயத்தில் உணர்ந்து என்ன பயன்? அதிலிருந்து மீண்டு வர என்ன வழி இருக்கப் போகிறது? இக்கால மக்கள் இதை உணர்ந்து செயல்பட்டால், அவர்களுக்கு ஏற்பட்ட இழி நிலையிலிருந்து தப்பிக்கலாம். ஆனால்


وَجَعَلُوا۟ لِلَّهِ أَندَادًۭا لِّيُضِلُّوا۟ عَن سَبِيلِهِۦ ۗ قُلْ تَمَتَّعُوا۟ فَإِنَّ مَصِيرَكُمْ إِلَى ٱلنَّارِ.

14:30. இப்போதும் அவர்கள் செய்துவரும் செயல்கள்தான் என்ன? அவர்கள் அல்லாஹ்வின் பெயரைப் பயன்படுத்திக் கொண்டு, அவன் காட்டிய வழிகாட்டுதலை விட்டுவிட்டு, அதற்கு இணையாக வேறு வழிமுறைகளை போதித்து வருகிறார்கள். இப்படியாக மக்களையும் அல்லாஹ்வின் வழிகாட்டுதலை விட்டு திசைமாறச் செய்து விடுகிறார்கள். இறைவழிகாட்டுதலை எடுத்துரைப்பவரே! நீங்கள் இந்த உண்மைகளை மக்களிடம் தொடர்ந்து எடுத்துரையுங்கள். அவர்கள் ஏற்காவிட்டால் அவர்களிடம், “சிறிது காலம் சுகம் அனுபவித்துக் கொள்ளுங்கள். இறுதியில் நிச்சயமாக நீங்கள் போய் சேரும் இடம் நரகமே என்பதை அறிந்து கொள்ளுங்கள்” என்று அவர்களிடம் கூறுங்கள்.


قُل لِّعِبَادِىَ ٱلَّذِينَ ءَامَنُوا۟ يُقِيمُوا۟ ٱلصَّلَوٰةَ وَيُنفِقُوا۟ مِمَّا رَزَقْنَٰهُمْ سِرًّۭا وَعَلَانِيَةًۭ مِّن قَبْلِ أَن يَأْتِىَ يَوْمٌۭ لَّا بَيْعٌۭ فِيهِ وَلَا خِلَٰلٌ.

14:31. மேலும் இறைவழிகாட்டுதலை ஏற்று நடக்கும் செயல்வீரர்களிடம், அல்லாஹ்வின் அறிவுரைகளை எடுத்துரைத்து தீய செயல்களிலிருந்து விலக்கும் ‘ஸலாத்’ முறையை நிலை நாட்டும்படி கூறுங்கள். மேலும் சமுதாயத்திலுள்ள நலிந்த மக்களின் துயர் துடைக்க பொருளுதவியோ அல்லது மற்ற பொது சேவைகளையோ செய்து வரும்படி வலியுறுத்தி வாருங்கள். இந்த உதவிகளும் சேவைகளும் மறைமுகமாகவோ வெளிப்படையாகவோ செய்யலாம். ஆனால் அவற்றை உடனே செய்ய ஆரம்பியுங்கள். நாளை செய்வதை இன்றே செய். இன்று செய்வதை இப்போதே செய். இவை யாவும் எப்போது வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம் என்று சொல்லப்படும் கொடுக்கல் வாங்கல் என்ற வியாபாரம் அல்ல என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
ஏனெனில் காலத்தின் சுழல் எவ்வாறு முன்நோக்கி செல்கிறது என்பதை இந்த பிரபஞ்ச படைப்புகளின் செயல்பாடுகளை வைத்து கவனியுங்கள். அவை ஒருபோதும் பின்நோக்கி செல்வதில்லை. எனவே நீங்கள் இந்த ஸலாத் அமைப்பை ஏற்படுத்தி, சமுதாய மேம்பாட்டிற்காக பாடுபட்டால் மறுபுறம் அல்லாஹ்வின் பரிபாலன அமைப்பும் உங்களுக்கு துணை நிற்கும். ஆக


ٱللَّهُ ٱلَّذِى خَلَقَ ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضَ وَأَنزَلَ مِنَ ٱلسَّمَآءِ مَآءًۭ فَأَخْرَجَ بِهِۦ مِنَ ٱلثَّمَرَٰتِ رِزْقًۭا لَّكُمْ ۖ وَسَخَّرَ لَكُمُ ٱلْفُلْكَ لِتَجْرِىَ فِى ٱلْبَحْرِ بِأَمْرِهِۦ ۖ وَسَخَّرَ لَكُمُ ٱلْأَنْهَٰرَ.

14:32. அகிலங்களிலும் பூமியிலும் உள்ள அனைத்தையும் படைத்து பரிபாலித்து வருவது அல்லாஹ் தான். வானத்திலிருந்து மழை பொழிய ஏற்பாடுகளை செய்ததும் அல்லாஹ் தான். அந்த மழை நீரைக் கொண்டு, உங்களுக்கு ஆகாரமாக இருக்கும் பல்வேறு கனி வகைகளும் விளைகின்றன. அல்லாஹ்வின் இதே இயற்கை படைப்பு சட்டத்தின்படி, கடலில் மலைகளைப் போன்று மிதந்து செல்லும் கப்பல்களையும், பிரம்மாண்டமான ஜீவ நதிகளையும் படைத்து, நீங்கள் அவற்றை பயன் படுத்திக் கொள்ளும் படியாக அமைத்து கொடுத்ததும் அல்லாஹ்வே.


وَسَخَّرَ لَكُمُ ٱلشَّمْسَ وَٱلْقَمَرَ دَآئِبَيْنِ ۖ وَسَخَّرَ لَكُمُ ٱلَّيْلَ وَٱلنَّهَارَ.

14:33. அது மட்டுமின்றி சூரியனையும் சந்திரனையும் படைத்து, தத்தம் வட்டரையில் நீந்தி செல்லும்படி ஒழுங்கு படுத்தி வைக்கப்பட்டுள்ளன. அதனால் இரவும் பகலும் மாறி மாறி வருகின்றன. இவற்றைக் கொண்டு பகலில் நீங்கள் சிறப்பாக செயல்படவும், இரவில் ஓய்வு எடுத்துக் கொள்ளவும் முடிகிறது. அவை யாவும் உங்களுக்கு பலனளிக்கும் வகையில் படைக்கப்பட்டுள்ளன.


وَءَاتَىٰكُم مِّن كُلِّ مَا سَأَلْتُمُوهُ ۚ وَإِن تَعُدُّوا۟ نِعْمَتَ ٱللَّهِ لَا تُحْصُوهَآ ۗ إِنَّ ٱلْإِنسَٰنَ لَظَلُومٌۭ كَفَّارٌۭ.

14:34. மேலும் உங்களின் சிறப்பான வாழ்க்கைக்குத் தேவையான அனைத்தையும் படைத்து உங்களுக்கு அளிக்கப்பட்டுள்ளன. (மேலும் பார்க்க 55:29). இந்த வாழ்வாதார படைப்புகளையும் அருட்கொடைகளையும் நீங்கள் எண்ணத் தொடங்கினால் அவற்றை உங்களால் கணக்கிட முடியாது. (பார்க்க 18:109) இவை யாவும் ஒட்டு மொத்த மனித இனமும் சிறப்பாக வாழ்வதற்கு செய்யப்பட்ட ஏற்பாடுகளே ஆகும். ஆனால் மனிதனோ அவற்றை தம் கைவசப்படுத்தி அவற்றின் மீது சொந்தம் கொண்டாடுகிறான். இதனால் சமுதாயத்தில் இத்தனை குழப்பங்களும் பிரச்சனைகளும் ஏற்பட்டு விடுகின்றன. இப்படியாக அவன் அநியாயக்காரனாகவும் நன்றி கெட்டவனாகவும் மாறி விடுகின்றான்.
மனிதனின் இந்த போக்கை சரி செய்து, அனைவரும் சாந்தியும் சமாதானமுமாக வாழ ஏற்பாடு செய்யவே இறைத்தூதர்கள் வந்தார்கள். அப்படி வந்த இறைத்தூதர்கள் வரிசையில் இப்றாஹீம் நபியும் ஒருவர் ஆவார். அவர் இந்த நோக்கத்தை முன்வைத்தே “கஅபா” என்ற தலைமைச் செயலகத்தை நிறுவினார் (பார்க்க 2:125) அப்பணிகளை சிறப்பாக நிறைவேற்றி வந்த அவர்,


وَإِذْ قَالَ إِبْرَٰهِيمُ رَبِّ ٱجْعَلْ هَٰذَا ٱلْبَلَدَ ءَامِنًۭا وَٱجْنُبْنِى وَبَنِىَّ أَن نَّعْبُدَ ٱلْأَصْنَامَ.

14:35. “என் இறைவா! இந்த மக்கமா நகரத்தை அச்சம் நீங்கி, சாந்தியும் சமாதானமும் கொண்ட இடமாக விளங்கச் செய்வாயாக! இதற்காகவே உன் கட்டளைப்படி இந்த செயலகத்தை உருவாக்கி செயல்பட வைத்துள்ளேன். நீ என்னையும் என் மக்களையும் உன் வழிகாட்டுதலை விட்டுவிட்டு, வேறு வழிமுறைகளின் பக்கம் செல்லாதவாறு பார்த்துக் கொள்வாயாக” என்று இப்றாஹீம் நபி தம் மனதில் எழுந்த எண்ணங்களை இறைவனிடம் சமர்ப்பித்தார். இந்த வரலாற்று உண்மைகளை மக்களிடம் எடுத்துரைப்பீராக.


رَبِّ إِنَّهُنَّ أَضْلَلْنَ كَثِيرًۭا مِّنَ ٱلنَّاسِ ۖ فَمَن تَبِعَنِى فَإِنَّهُۥ مِنِّى ۖ وَمَنْ عَصَانِى فَإِنَّكَ غَفُورٌۭ رَّحِيمٌۭ.

14:36. மேலும் அவர், “என் இறைவனே! நிச்சயமாக அல்லாஹ்வின் வழிகாட்டுதலை விட்டுவிட்டு வேறு வழிமுறைகளைப் பின்பற்றுவதால், மக்களில் பெரும்பாலோர் வழிகேட்டில் சென்றுள்ளார்கள். எனவே உன் வழிகாட்டுதலை எவர் பின்பற்றுகிறாரோ, அவர் மட்டும் என்னை சேர்ந்தவராவார். எவர் இதற்கு மாறு செய்கிறாரோ, அவர் என்னை சார்ந்தவர் அல்லர். அவர் என் தந்தையாக இருந்தாலும் சரியே! (பார்க்க 60:4). என்றாலும் உன் நாட்டப்படி அனைத்து தரப்பு மக்களையும் பாதுகாத்து, அவர்களுடன் கருணையோடு செயல்பட எங்களுக்கு நீ வழிகாட்டுவாயாக” என்று தம் மனதில் எழுந்த எண்ணங்கள் பிரார்த்தனையாக உதிர்ந்தன.


رَّبَّنَآ إِنِّىٓ أَسْكَنتُ مِن ذُرِّيَّتِى بِوَادٍ غَيْرِ ذِى زَرْعٍ عِندَ بَيْتِكَ ٱلْمُحَرَّمِ رَبَّنَا لِيُقِيمُوا۟ ٱلصَّلَوٰةَ فَٱجْعَلْ أَفْـِٔدَةًۭ مِّنَ ٱلنَّاسِ تَهْوِىٓ إِلَيْهِمْ وَٱرْزُقْهُم مِّنَ ٱلثَّمَرَٰتِ لَعَلَّهُمْ يَشْكُرُونَ.

14:37. “என் இறைவனே! இப்படிப்பட்ட உயர் நோக்கங்களுடன், என் மகனையும் என்னை சார்ந்தவர்களில் சிலரையும், விவசாயம் செய்ய முடியாத பாலைவன பள்ளத்தாக்கில் உள்ள புழமை வாய்ந்த ‘கஅபா’ என்னும் இடத்தில் குடியமர்த்துகிறேன். (பார்க்க 2:127-128) இங்குள்ள மக்கள் அனைவரும் நீ காட்டிய வழியில் செயல்பட வைக்க சமூக அமைப்பை ஏற்படுத்தி, மக்கள் அனைவரும் சிறப்பாக வாழ வழிவகுத்துத் தருவாயாக. இதற்காக மக்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிடைக்கச் செய்வாயாக. மேலும் இங்குள்ளவர்களுக்கு வளம் மிக்க வாழ்வு பெற தாராளமான வாழ்க்கை வசதிகளை செய்தருள்வாயாக” என்ற நோக்கங்களை முன்வைத்து செயல்பட்டார்.


رَبَّنَآ إِنَّكَ تَعْلَمُ مَا نُخْفِى وَمَا نُعْلِنُ ۗ وَمَا يَخْفَىٰ عَلَى ٱللَّهِ مِن شَىْءٍۢ فِى ٱلْأَرْضِ وَلَا فِى ٱلسَّمَآءِ.

14:38. “எங்கள் இறைவனே! நாங்கள் எங்கள் மனதில் மறைத்து வைத்திருப்பவற்றையும் வெளிப்படையாக செயல்படுவதையும் நிச்சயமாக நீ அறிகிறாய். இன்னும் வானத்திலோ அல்லது பூமியிலோ நடக்கும் எந்த விஷயமும் அல்லாஹ்வுக்கு மறைவானதாக இருப்பதில்லை” என்பதை மக்கள்முன் எடுத்துரைத்தார்.


ٱلْحَمْدُ لِلَّهِ ٱلَّذِى وَهَبَ لِى عَلَى ٱلْكِبَرِ إِسْمَٰعِيلَ وَإِسْحَٰقَ ۚ إِنَّ رَبِّى لَسَمِيعُ ٱلدُّعَآءِ.

14:39. “இறைவா! நான் முதுமை அடைந்து வயதான காலத்திலும் எனக்கு இஸ்மாயில் மற்றும் இஸ்ஹாக் என்ற இரு புதல்வர்களை பெற்றெடுக்கச் செய்த நீ, எல்லா போற்றுதலுக்கும் உரியவனே ஆவாய். நீ காட்டிய வழியில் உழைப்பவர்களுக்கு தக்க பலன்களை அளித்து நம் எண்ணங்களை நிறைவேற்றக் கூடிவனாக இருக்கின்றாய்” என்று அல்லாஹ்வின் சகல வல்லமைப் பற்றி மக்களிடம் எடுத்துரைத்து புகழாரம் செய்தார்.
எவ்வாறு முதுமை அடைந்த காலத்தில் குழந்தை பெற்றெடுக்க முடியாது என்ற நிலையிலும் எனக்கு குழந்தையைப் பெற்றெடுக்கும் பாக்கியத்தை தந்தாயோ, அதுபோல சமுதாயத்தை திருத்தமுடியாத அளவிற்கு மோசமான நிலையில் இருந்தாலும், உன் வழிகாட்டுதலைக் கொண்டு சிறந்த சமுதாயத்தை உருவாக்கி புகழுக்குரியதாக ஆக்க முடியும்.


رَبِّ ٱجْعَلْنِى مُقِيمَ ٱلصَّلَوٰةِ وَمِن ذُرِّيَّتِى ۚ رَبَّنَا وَتَقَبَّلْ دُعَآءِ.

14:40. “எங்கள் அனைவரையும் படைத்து பரிபாலிப்பவனே! உன் வழிகாட்டுதலின்படி சமுதாயத்தை கட்டுக் கோப்பாக வழிநடத்திச் செல்ல உருவான "ஸலாத்" முறையை கடைப்பிடிக்க என்னையும் என்னை சார்ந்தவர்களையும் வழிவகுத்துத் தருவாயாக. நாங்கள் செய்து வரும் நற்செயல்களை நீ ஏற்றுக் கொள்வாயாக” என்று இறைவனிடம் வேண்டினார்.


رَبَّنَا ٱغْفِرْ لِى وَلِوَٰلِدَىَّ وَلِلْمُؤْمِنِينَ يَوْمَ يَقُومُ ٱلْحِسَابُ.

14:41. “எங்கள் அனைவரையும் படைத்து பரிபாலிப்பவனே! என்னையும், என் பெற்றோர்களையும், உன் வழிகாட்டுதலை ஏற்று சிறப்பாக செயல்படும் மூஃமின்களையும், அனைத்து ஆபத்துகளிலிருந்தும் பாதுகாப்பாக இருக்க வழிவகுத்துத் தருவாயாக. நாங்கள் செய்து வரும் ஒவ்வொரு செயலுக்கும் கேள்வி கணக்கு உண்டு என்பதை அறிவோம். அந்தக் கணக்கு வழக்குகளை எங்களுக்கு எளிதாக்கித் தந்தருள்வாயாக” என்றும் வேண்டினார்.
அவருடைய தந்தை மாற்று கொள்கை உடையவராக இருந்தும், அவருடைய பாதுகாப்பு பற்றி இறைவனிடம் பிரார்த்திப்பது அவருடைய நல்லெண்ணத்தை பிரதிப்பலிக்கிறது. (பார்க்க 9:114)
வயதான காலத்தில் தனக்குப் பிறந்த புதல்வன் இஸ்மாயிலை அறுத்து பலியிடுவது போல் கனவு கண்ட அவர், ஒருவேளை அது அல்லாஹ்வின் கட்டளையாக இருக்குமோ என எண்ணி, அதைப் பற்றி தன் மகனிடம் சொல்ல, அதற்கு அவரும் ஆயத்தமாகி விட்டார் (பார்க்க 37:102-103) இப்படியாக அவ்விருவரும் தியாகத்தின் உச்சத்திற்கே சென்று விட்டார்கள்.
ஆனால் அல்லாஹ்வோ அத்தகைய உயிரை பலியிடும் தியாகத்தை விரும்பவில்லை. மாறாக தன் மகன் இஸ்மாயிலை கஅபதுல்லா என்ற இடத்தில் குடியமர்த்தி அதன் செயல்பாட்டை கவனிக்க அர்ப்பணித்துவிட வந்த இறைக் கட்டளையே ஆகும். (பார்க்க 37:107). அதற்காகவே அவர் தம் மகன் இஸ்மாயிலை புல்பூண்டும் விளையாத பாலைவன காட்டில் கொண்டு வந்து விட்டார். (14:37).
இப்படியாக உலக மக்கள் அனைவரும் சாந்தியும் சமாதானமுமாக வாழ அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்து (பார்க்க 3:97) உலக மக்களின் சிறந்த தலைவராக - இமாமாக உலக வரலாற்றில் நீங்கா இடத்தை பிடித்துக் கொண்டார். (பார்க்க 2:124, 37:108). இப்படி உயர் நோக்கங்களுடன் செயல்பட்ட இப்ராஹீம் நபியின் வழிமுறையைப் பின்பற்றி, முஹம்மது நபி அவர்களும் அந்த தலைமைச் செயலகத்தின் செயல்பாடுகளை முழுஅளவில் நிறைவேற்ற வந்துள்ளார் (பார்க்க 6:161). ஆனால் இப்போதுள்ள மக்களோ இவற்றை எல்லாம் மறந்து விட்டனர்.


وَلَا تَحْسَبَنَّ ٱللَّهَ غَٰفِلًا عَمَّا يَعْمَلُ ٱلظَّٰلِمُونَ ۚ إِنَّمَا يُؤَخِّرُهُمْ لِيَوْمٍۢ تَشْخَصُ فِيهِ ٱلْأَبْصَٰرُ.

14:42. நபியே! இப்போது, அவர்கள் செய்து வரும் அக்கிரம செயல்களைப் பற்றி அல்லாஹ் பராமுகமாக இருப்பதாக யாரும் எண்ணிக் கொள்ள வேண்டாம். அவர்களுடைய அநியாய செயல்கள் எல்லாம் மிகத் துல்லியமாக பதிவாகி வருகின்றன. அவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள காலத் தவணை எல்லாம் அவர்களுடைய செயல்களில் விளைவுகள் தோற்றத்திற்கு வரும் வரையில்தான். (பார்க்க 16:61) அதன் பிறகு அவர்கள், வேதனை அளிக்கும் நரகத்தில்தான் நுழைவார்கள்.


مُهْطِعِينَ مُقْنِعِى رُءُوسِهِمْ لَا يَرْتَدُّ إِلَيْهِمْ طَرْفُهُمْ ۖ وَأَفْـِٔدَتُهُمْ هَوَآءٌۭ.

14:43. அப்படி ஒரு கால கட்டத்தில் அவர்கள் எந்தப் பக்கமும் திரும்பிப் பார்க்காமல் தலைதெரிக்க ஓடுவார்கள். அவர்களுடைய கவனமெல்லாம் எங்கேயாவது போய் ஒளிந்து கொள்வதிலேயே குறியாய் இருக்கும். இன்னும் அவர்களுடைய ஓட்டத்தால் அவர்கள் இதயத் துடிப்புகள் தொண்டையை அடைத்துக் கொள்ளும்.


وَأَنذِرِ ٱلنَّاسَ يَوْمَ يَأْتِيهِمُ ٱلْعَذَابُ فَيَقُولُ ٱلَّذِينَ ظَلَمُوا۟ رَبَّنَآ أَخِّرْنَآ إِلَىٰٓ أَجَلٍۢ قَرِيبٍۢ نُّجِبْ دَعْوَتَكَ وَنَتَّبِعِ ٱلرُّسُلَ ۗ أَوَلَمْ تَكُونُوٓا۟ أَقْسَمْتُم مِّن قَبْلُ مَا لَكُم مِّن زَوَالٍۢ.

14:44. இப்படி ஒரு வேதனைகள் நிறைந்த நிலைமை நிச்சயமாக வரும் என்பதை அநியாய செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு எச்சரிக்கை செய்வீராக. அப்படியும் அவர்கள் திருந்தவில்லை என்றால் அவர்களுடைய நிலைமை இவ்வாறு இருக்கும். வேதனை மிக்க அந்த காலக் கட்டத்தில்,"எங்கள் இறைவா! எங்களுக்கு நீ சற்றே அவகாசம் கொடுப்பாயாக. நாங்கள் உன்னுடைய வழிகாட்டுதலை ஏற்று உன் தூதர் காட்டிய வழியில் செயல்படுவோம்” என்று மன்றாடுவார்கள். அதற்கு,"எங்களுடைய ஆட்சி அதிகார பலத்திற்கு ஒருபோதும் சரிவு ஏற்படாது என்று மார் தட்டிக் கொண்டிருந்தீர்களே! இப்போது என்ன வந்தது?” என்று இறைவனின் பதில் கேள்வியாக இருக்கும். மேலும்


وَسَكَنتُمْ فِى مَسَٰكِنِ ٱلَّذِينَ ظَلَمُوٓا۟ أَنفُسَهُمْ وَتَبَيَّنَ لَكُمْ كَيْفَ فَعَلْنَا بِهِمْ وَضَرَبْنَا لَكُمُ ٱلْأَمْثَالَ.

14:45. “உங்களுக்கு முன்வாழ்ந்த பல சமூகத்தாரின் வாழ்க்கை வரலாற்றைப் பற்றி நாம் உங்களுக்கு அறிவிக்கவில்லையா? அநியாய செயல்களில் ஈடுபட்டு, தமக்குத் தாமே அழிவை தேடிக் கொண்டவர்களைப் பற்றிய எச்சரிக்கை வரவில்லையா? இப்படியாக இறைவன் நிர்ணயித்த "மனித செயலுக்கேற்ற விளைவுகள்" என்ற விதிமுறைகளைப் பற்றி (பார்க்க 11:56) பல உதாரணங்களின் மூலம் நாம் விளக்கமளித்தோமே! இருந்தும் நீங்கள் உங்கள் நிலையை மாற்றிக் கொள்ளவே இல்லையே!”


وَقَدْ مَكَرُوا۟ مَكْرَهُمْ وَعِندَ ٱللَّهِ مَكْرُهُمْ وَإِن كَانَ مَكْرُهُمْ لِتَزُولَ مِنْهُ ٱلْجِبَالُ.

14:46. “மேலும் நீங்கள் இறைவனின் ஆட்சியமைப்பு நிலை பெறாதவாறும் பல சூழ்ச்சிகளை செய்து வந்தீர்கள். நீங்கள் அந்த சூழ்ச்சிகளில் மலைகளைப் போல் உறுதியாக இருந்தாலும், அல்லாஹ்வின் செயல் திட்டங்களுக்கு முன், (Master Plan) உங்களுடைய சூழ்ச்சிகள் எல்லாம் பறந்தோடி விடும் என்பதை நாங்கள் உங்களுக்கு முன்பே அறிவிக்கவில்லையா?”
இவ்வளவு விரிவான முறையில் முன்னெச்சரிக்கை செய்த போதும், நீங்கள் அநியாய செயல்களை நிறுத்தவில்லையே! இப்போது நீங்கள் செய்த செயல்களுக்கு வருந்தி என்ன பயன்?


فَلَا تَحْسَبَنَّ ٱللَّهَ مُخْلِفَ وَعْدِهِۦ رُسُلَهُۥٓ ۗ إِنَّ ٱللَّهَ عَزِيزٌۭ ذُو ٱنتِقَامٍۢ.

14:47. ஆகவே அல்லாஹ் தன் தூதர்களின் மூலமாக அறிவித்து வந்த “மனித செயல்களுக்கு ஏற்ற விளைவுகள்” என்ற சட்டத்தில் மாறுதல்கள் ஏற்படும் என்று ஒருபோதும் யாரும் எதிர் பார்க்க வேண்டாம். அல்லாஹ்வின் செயல் திட்டங்கள் யாவும் அனைத்தையும் மிகைக்கக் கூடியதாகவும், குற்றம் புரிந்தவர்களுக்கு தண்டனை அளிப்பதில் உறுதியாகவும், இருக்கின்றன என்பதை நினைவில் கொள்ளட்டும்.


يَوْمَ تُبَدَّلُ ٱلْأَرْضُ غَيْرَ ٱلْأَرْضِ وَٱلسَّمَٰوَٰتُ ۖ وَبَرَزُوا۟ لِلَّهِ ٱلْوَٰحِدِ ٱلْقَهَّارِ.

14:48. எனவே இறைவனின் வழிகாட்டுதலின் அடிப்படையில் ஆட்சியமைப்பு இவ்வுலகில் நிலைபெறுவது உறுதி. அப்போது இந்த உலகம் மாறுபட்ட உலகமாகத் திகழும். வானத்தைப் போல் உயர் பதவியின் மமதையில் இருப்பவர்களின் நிலைமை மாறி, நல்லோர்களின் கையில் ஆட்சியமைப்பு வந்துவிடும். அப்படி ஒரு காலத்தில் ஏக இறைவனாகிய அல்லாஹ்வின் வழிகாட்டுதலின் படியே எல்லா தீர்ப்புகளும் செயல் திட்டங்களும் நடைபெற்று வரும்.


وَتَرَى ٱلْمُجْرِمِينَ يَوْمَئِذٍۢ مُّقَرَّنِينَ فِى ٱلْأَصْفَادِ.

14:49. எனவே அல்லாஹ்வின் ஆட்சியமைப்பு நிலைபெறும் அக்கால கட்டத்தில் குற்றம் புரிந்தவர்கள் சங்கிலிகளால் பிணைக்கப்பட்டு இருப்பதை நீர் காண்பீர்.
இவ்வாறு இங்கு அந்த ஆட்சி நடைபெற கால தாமானாலும், மரணத்திற்குப் பின் தொடர்கின்ற வாழ்வில் இத்தகைய தண்டனை நிச்சயமாகக் கிடைக்கும்.


سَرَابِيلُهُم مِّن قَطِرَانٍۢ وَتَغْشَىٰ وُجُوهَهُمُ ٱلنَّارُ.

14:50. அவர்களுடைய ஆடை அலங்காரங்கள் யாவும் தார் பூசப்பட்டவைப் போல் ஆகிவிடும். அவர்களுடைய முகங்கள் தீ மூட்டியது போல் மாறி, தாங்கமுடியாத வேதனைகளால் துடிதுடித்துப் போவார்கள்.


لِيَجْزِىَ ٱللَّهُ كُلَّ نَفْسٍۢ مَّا كَسَبَتْ ۚ إِنَّ ٱللَّهَ سَرِيعُ ٱلْحِسَابِ.

14:51. இவை எல்லாம் மனித செயல்களின் விளைவாக ஒவ்வொருவருக்கும் அல்லாஹ்வின் புறத்திலிருந்து கிடைக்கின்ற தண்டனைகளாகும். அல்லாஹ்வின் சட்டம், குறித்த நேரத்தில் கேள்விக் கணக்கு கேட்பதில் கால தாமதம் செய்வதில்லை என்பதில் யாருக்கும் சந்தேகம் வேண்டாம்.
அதாவது மனித செயல்களின் விளைவுகள் உடனுக்குடன் ஏற்பட்டு வரும். ஆனால் அவை மனிதனால் உணர்ந்து கொள்ள முடிவதில்லை. காரணம் அவை ஒரு காலக் கட்டத்திற்குப் பின்புதான் தோற்றத்திற்கு வரும். உதாரணத்திற்கு குடிப் பழக்கத்தை சொல்லலாம்.


هَٰذَا بَلَٰغٌۭ لِّلنَّاسِ وَلِيُنذَرُوا۟ بِهِۦ وَلِيَعْلَمُوٓا۟ أَنَّمَا هُوَ إِلَٰهٌۭ وَٰحِدٌۭ وَلِيَذَّكَّرَ أُو۟لُوا۟ ٱلْأَلْبَٰبِ.

14:52. இப்படியாக நடந்து முடிந்த அல்லது நடக்கவிருக்கும் உண்மைகளை எடுத்துரைப்பதன் நோக்கம் -
(1) இந்த வரலாற்று உண்மைகளின் பேரொளியைக் கொண்டு, மனிதன் தன் வாழ்க்காயின் இலக்கை எளிதாக அடைந்து கொள்ள வேண்டும்.
(2) தம் தவறான செயல்களின் பின்விளைவுகள் எந்த அளவிற்கு வேதனை மிக்கதாய் இருக்கும் என்பதை அறிந்து, முன் எச்சரிக்கையோடு நடந்து கொள்ள வேண்டும்.
(3) அகிலங்களிலும் உலகிலுள்ள அனைத்தும் அல்லாஹ்வின் கட்டளைக்கு உட்பட்டே செயல்படுகின்றன. அவனைத் தவிர வேறு யாருடைய அதிகாரமும் எங்கும் நடைபெறுவதில்லை. மனிதனும் அவனுடைய கட்டளைக்கு மட்டுமே அடிபணிந்து செயல்பட வேண்டும்.
(4) எனவே உலகில் எந்த சமுதாயமானாலும் சரியே. அல்லாஹ்வின் கட்டளைகளுக்கு எதிராக செயல்பட்டால், அதன் பின்விளைவுகளை சந்தித்தே ஆக வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு வாழவேண்டும்.
(5) இந்த அறிவுரைகளை எப்போதும் நினைவில் கொண்டு, அறிவுப்பூர்வமாக சிந்தித்து சிறப்பாக செயல்பட வேண்டும்.
இதற்காகவே இந்த வரலாற்று உண்மைகள் விவரிக்கப்படுகின்றன.