بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
13:0.அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் அறிவுரைப்படியே அனைத்துக் காரியங்களையும் செய்ய நாடுகிறேன். (பார்க்க 6:162)
الٓمٓر ۚ تِلْكَ ءَايَٰتُ ٱلْكِتَٰبِ ۗ وَٱلَّذِىٓ أُنزِلَ إِلَيْكَ مِن رَّبِّكَ ٱلْحَقُّ وَلَٰكِنَّ أَكْثَرَ ٱلنَّاسِ لَا يُؤْمِنُونَ.
13:1. அகிலங்கள் அனைத்திலும் ஆட்சி செய்யும் அல்லாஹ்வின் புறத்திலிருந்து, முஹம்மது நபி மூலமாக இறக்கி அருளப்படும் இவ்வேதம், மாபெரும் அருட்கொடையாகும்.
நபியே! உம்மீது இறக்கியருளப்பட்ட இவ்வேதம் எக்காலத்திலும் பொருந்தக் கூடிய வாழ்க்கை நெறிமுறைகளை உள்ளடக்கியதாக உள்ளது மேலும், உலக மக்களின் சிறப்பான வாழ்விற்கு மிகச் சரியான வழியை காட்டக் கூடியதாகவே உள்ளது. ஆனால் பெரும்பாலான மக்கள் இந்த உண்மைகளை ஏற்றுக் கொள்வதில்லை.
ٱللَّهُ ٱلَّذِى رَفَعَ ٱلسَّمَٰوَٰتِ بِغَيْرِ عَمَدٍۢ تَرَوْنَهَا ۖ ثُمَّ ٱسْتَوَىٰ عَلَى ٱلْعَرْشِ ۖ وَسَخَّرَ ٱلشَّمْسَ وَٱلْقَمَرَ ۖ كُلٌّۭ يَجْرِى لِأَجَلٍۢ مُّسَمًّۭى ۚ يُدَبِّرُ ٱلْأَمْرَ يُفَصِّلُ ٱلْءَايَٰتِ لَعَلَّكُم بِلِقَآءِ رَبِّكُمْ تُوقِنُونَ.
13:2. இவ்வாறு இறக்கி அருளிய அல்லாஹ்வின் எல்லையில்லா வல்லமையை அறிந்து கொள்ள வேண்டுமென்றால், பரந்து விரிந்து காணப்படும் வானங்களும், அதில் பல கோள்களும், நட்சத்திரங்களும் எவ்வித தூண்களின் துணையுமின்றி எவ்வாறு கட்டுக்கோப்பாக இயங்கி வருகின்றன என்பதை கவனித்துப் பாருங்கள். அவற்றை எல்லாம் படைத்ததோடு அவற்றை கட்டுக் கோப்பாக இயக்கி வருவதும் அல்லாஹ் தான். அதில் சூரியனையும் சந்திரனையும் நிர்ணயிக்கப்பட்ட கால அளவின்படி இயங்க வைத்து, அவற்றைக் கொண்டு நீங்கள் மாதங்கள் மற்றும் வருடங்கள் என சரியாக கணக்கிடும் படியாக படைத்ததும் அல்லாஹ் தான். இவை அனைத்தையும் அல்லாஹ் தன் செயல் திட்டங்களின்படி படைத்துள்ளான். இவற்றை எல்லாம் நன்கறிந்து, அல்லாஹ்வின் செயல் திட்டத்தின் படி நீங்களும் செயல்படவேண்டும் என்பதற்காகவே வாழ்க்கை வழிகாட்டுதல்கள் அடங்கிய இவ்வேதம் உங்களுக்கு தெள்ளத் தெளிவாக எடுத்துரைக்கப்படுகிறது. இதற்கு மாற்றமாக செயல்பட்டால் அதன் பின்விளைவுகளை நீங்கள் சந்தித்தே ஆக வேண்டும் என்பதையும் இவ்வேதம் தெள்ளத் தெளிவாக எடுத்துரைக்கிறது.
وَهُوَ ٱلَّذِى مَدَّ ٱلْأَرْضَ وَجَعَلَ فِيهَا رَوَٰسِىَ وَأَنْهَٰرًۭا ۖ وَمِن كُلِّ ٱلثَّمَرَٰتِ جَعَلَ فِيهَا زَوْجَيْنِ ٱثْنَيْنِ ۖ يُغْشِى ٱلَّيْلَ ٱلنَّهَارَ ۚ إِنَّ فِى ذَٰلِكَ لَءَايَٰتٍۢ لِّقَوْمٍۢ يَتَفَكَّرُونَ.
13:3. அல்லாஹ்வின் மாபெரும் வல்லமையைப் பற்றி மேலும் அறிந்துகொள்ள வேண்டும் என்றால், நீங்கள் வாழும் பூமி எவ்வாறு படைக்கப்பட்டுள்ளது என்பதைப் பற்றி சிந்தித்துப் பாருங்கள். அது உருண்டை வடிவில் இருந்தும், நீங்கள் எவ்வித சிரமுமின்றி வாழ விரிப்பாக ஆக்கியுள்ளான் என்பதையும் கவனியுங்கள். அது மட்டுமின்றி உறுதியான பெரிய பெரிய மலைகளும், அவற்றிலிருந்து பாய்ந்தோடும் ஆறுகளையும் படைத்துள்ளான். மேலும் பல்வேறு கனிவகைகளைத் தரும் மரங்கள் மற்றும் செடிகொடிகளையும் படைத்துள்ளான். அவை ஒவ்வொன்றிலும் ஜோடி ஜோடியாக உள்ளன. மேலும் இப்பூமியை இரவு பகல் என மாறிமாறி வரும்படி சுழன்று வருகிறது. அதைக் கொண்டே அனைத்து உணவு வகைகளும் கனிவகைகளும் விளைகின்றன. அல்லாஹ்வின் இந்த மாபெரும் பரிபாலன அமைப்பின் படைப்புகளைப் பற்றி சிந்தித்துணரும் மக்களுக்கு அத்தாட்சிகள் பல கிடைக்கும்.
وَفِى ٱلْأَرْضِ قِطَعٌۭ مُّتَجَٰوِرَٰتٌۭ وَجَنَّٰتٌۭ مِّنْ أَعْنَٰبٍۢ وَزَرْعٌۭ وَنَخِيلٌۭ صِنْوَانٌۭ وَغَيْرُ صِنْوَانٍۢ يُسْقَىٰ بِمَآءٍۢ وَٰحِدٍۢ وَنُفَضِّلُ بَعْضَهَا عَلَىٰ بَعْضٍۢ فِى ٱلْأُكُلِ ۚ إِنَّ فِى ذَٰلِكَ لَءَايَٰتٍۢ لِّقَوْمٍۢ يَعْقِلُونَ.
13:4. அதுமட்டுமின்றி பூமியை ஒட்டி, படர்ந்தாற் போல் வளரும் திராட்சைத் தோட்டங்களும், விளை நிலங்களும், கிளைகள் உள்ள மரங்களும், கிளைகள் இல்லாத பேரீட்சைக் கொடிகளும் படைக்கப்பட்டு இருப்பதை கவனியுங்கள். இவையாவும் வளர்வதற்கு தண்ணீர் அவசியமாகிறது. தண்ணீரின் தன்மை ஒரே மாதிரியாக இருப்பினும், அதைக் கொண்டு வளரும் கனிவகைகளிலும், தானிய வகைகளிலும் பல்வேறு சுவைகளையும், ஒவ்வொன்றிலும் பல்வேறு தனிச் சத்துகளையும் கொண்டுள்ளன என்பதையும் சிந்தித்துப் பாருங்கள். இவை யாவும் அறிவைப் பயன்படுத்தி சிந்திக்கும் மக்களுக்குத் தான் அவற்றிலுள்ள உண்மைகள் விளங்கும்.
ஆக எண்ணற்ற பிரபஞ்சப் படைப்புகளையும் அவற்றின் பின்னனியில் செயல்படும் அல்லாஹ்வின் மாபெரும் வல்லமையைப் பற்றியும் சிந்திக்காத மக்கள், தம் வாழ்க்கையை குறுகிய வட்டத்திற்குள் கொண்டுவந்து விடுகிறார்கள். அதாவது உண்டு மகிழ்வது, தன் வம்சத்தை பாதுகாத்து வருவது, இறைவனை திருப்பதிப்படுத்த சில சடங்கு சம்பிரதாயங்களைக் கடைப்பிடிப்பது என்று தமக்கென ஒரு வட்டத்தை ஏற்படுத்திக் கொள்கிறார்கள். இப்படியாக நிகழ் கால வாழ்விலும், வருங்கால நிலையான வாழ்விலும் சிறப்பான வாழ்விற்கு வழிவகுக்கும் இறை வழிகாட்டுதல்கள் எதுவும் தேவையற்றவை என்று எண்ணுகிறார்கள்.
۞ وَإِن تَعْجَبْ فَعَجَبٌۭ قَوْلُهُمْ أَءِذَا كُنَّا تُرَٰبًا أَءِنَّا لَفِى خَلْقٍۢ جَدِيدٍ ۗ أُو۟لَٰٓئِكَ ٱلَّذِينَ كَفَرُوا۟ بِرَبِّهِمْ ۖ وَأُو۟لَٰٓئِكَ ٱلْأَغْلَٰلُ فِىٓ أَعْنَاقِهِمْ ۖ وَأُو۟لَٰٓئِكَ أَصْحَٰبُ ٱلنَّارِ ۖ هُمْ فِيهَا خَٰلِدُونَ.
13:5. மனிதன் தன் எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்காமல் தற்காலிக சுகங்களை மட்டும் நோக்கமாகக் கொண்டு வாழ்வதைக் கண்டு வியப்படைகிறீர்களா? இதனால்தான் அவர்கள், “நாங்கள் மரித்து மண்ணோடு மண்ணாகிவிட்ட பின்பு, நாம் மீண்டும் புதிதாகப் படைக்கப்படுவோமா?” என்று கேட்கிறார்கள். மனித வாழ்க்கை மரணத்திற்குப் பின்பும் தொடர்கிறது என்கிற உண்மையை அவர்களால் புரிந்து கொள்ள முடிவதில்லை. இந்த அளவிற்கு “தற்காலிக சுகவாழ்வு’’ எனும் வலையில் சிக்கிக் கொள்கிறார்கள். இதனால் அவர்களுடைய எதிர்கால நிலையான வாழ்வு கேள்விக்குறியாக ஆகிவிடுகிறது. இத்தகையவர்களின் வாழ்க்கை வேதனை மிக்கதாய் மாறிவிடுவதோடு, அதிலிருந்து மீண்டு வரும் வழிமுறை எதுவும் அவர்களுக்குக் கிடைக்காது.
மக்களில் பலர் மரணத்திற்குப் பின் மீண்டும் எழுப்பப் படுவதை ஏற்றுக் கொண்டுள்ள போதும், ஏன் தீயச் செயல்களிலிருந்து விலகுவதில்லை என்ற கேள்வி எழுகிறது. தீய செயல்களின் தண்டனையிலிருந்து தப்பிக்க எளிய வழிமுறைகள் உள்ளதாக சொல்லி மத குருமார்கள் சில சடங்குகளைக் கற்றுக் கொடுத்து விடுவார்கள். மக்களும் அதை நம்பி தைரியமாக தீய செயல்களில் ஈடுபடுவார்கள். அப்படியே தண்டனை கிடைத்தாலும் சில காலம் தான் என்பார்கள். (பார்க்க 2:80, 3:24)
இறைவழிகாட்டுதல்களைப் பின்பற்றுவதால் சமுதாயத்தில் உள்ள பிரச்சனைகள் நீங்கி, வளமான வாழ்க்கைக்கு வழிகள் பிறக்கும். அவற்றிற்கு மாற்றமாக செயல்பட்டால், சமுதாயத்தில் தீய விளைவுகள் பல ஏற்பட்டு, சமுதாய சீரழிவுகள் ஏற்படும். இந்த உண்மையை இறைத்தூதர் மக்களுக்கு எடுத்துரைக்கிறார். ஆனால் மக்களோ இறைவழிகாட்டுதலை ஏற்று, அதன்படி செயல்பட்டு, மகத்தான ஒரு சமுதாயத்தை உருவாக்குவதற்குப் பதிலாக,
وَيَسْتَعْجِلُونَكَ بِٱلسَّيِّئَةِ قَبْلَ ٱلْحَسَنَةِ وَقَدْ خَلَتْ مِن قَبْلِهِمُ ٱلْمَثُلَٰتُ ۗ وَإِنَّ رَبَّكَ لَذُو مَغْفِرَةٍۢ لِّلنَّاسِ عَلَىٰ ظُلْمِهِمْ ۖ وَإِنَّ رَبَّكَ لَشَدِيدُ ٱلْعِقَابِ.
13:6. இறைத்தூதராகிய உம்மிடம், நன்மைக் கிடைப்பதற்கு முக்கியத்துவம் அளிப்பதற்குப் பதிலாக, அவர்கள் தீய செயல்களின் விளைவுகளை உடனே தங்கள் கண்ணெதிரே கொண்டுவந்து காட்டும்படி அவசரப்படுகிறார்கள். இதற்கு முன்பு வாழ்ந்த சமூகத்தவர்களும் இப்படித்தான் பேசி வந்தார்கள். ஆனால் அல்லாஹ்வின் வழிகாட்டுதலோ மனிதனின் தவறான செயல்களால் பிற்காலத்தில் ஏற்படும் விபரீத விளைவுகளிலிருந்து பாதுகாக்கவே நாடுகிறது. அதற்காகத் தான் இறைவழிகாட்டுதல் இறக்கி அருளப்படுகின்றன. ஆனால் மக்களோ அவற்றை ஏற்க மறுத்து, தீய செயல்களில் நிலைத்து விடுகிறார்கள். அதன் விளைவாக இறைவன் நிர்ணயித்த கடுமையான வேதனைகளும் தவிர்க்க முடியாததாகி விடுகிறது.
وَيَقُولُ ٱلَّذِينَ كَفَرُوا۟ لَوْلَآ أُنزِلَ عَلَيْهِ ءَايَةٌۭ مِّن رَّبِّهِۦٓ ۗ إِنَّمَآ أَنتَ مُنذِرٌۭ ۖ وَلِكُلِّ قَوْمٍ هَادٍ.
13:7. முன்சென்ற சமுதாயங்கள் தம் இறைத் தூதர்களிடம் கேட்டுக் கொண்டது போலவே, இப்போதும் இறைவழிகாட்டுதலை ஏற்க மறுப்பவர்கள், “இவர் இறைத்தூதர் என்பதற்கு இறைவனிடமிருந்து ஏதாவது ஒரு அத்தாட்சி வந்திருக்கக் கூடாதா?” என்று கேட்கின்றனர் ஆனால் நீரோ அவர்களுடைய தவறான செயல்களால் ஏற்படும் தீய விளைவுகளைப் பற்றி எடுத்துரைத்து, முன் எச்சரிக்கை செய்பவரே ஆவீர். இப்படித்தான் காலம் காலமாக ஒவ்வொரு சமூகத்தவருக்கும் நேர்வழியை காட்டத்தான் இறைத்தூதர்கள் வந்தனர்.
இப்போது இறுதியாக இறைவழிகாட்டுதல்கள் அடங்கிய வேதமாக திருக்குர்ஆன் இறக்கி அருளப்பட்டு விட்டது. இதைக் கொண்டு மக்களுக்கு அறிவுரைகளை செய்யும் பொறுப்பு சமுதாயத்தின் ஒரு சாராருக்கு உண்டு (பார்க்க 3:104). அவ்வாறு செய்யாவிட்டால், மக்களின் செயலுக்கேற்ற விளைவுகள் இறைவனின் நியதிப்படி ஏற்பட்டே தீரும். தீய செயல்களின் விளைவுகள் தோற்றத்திற்கு வருவதற்கு காலத் தவணை நிர்ணயிக்கப்பட்டு விட்டது. இத்தனை ஏன்?
ٱللَّهُ يَعْلَمُ مَا تَحْمِلُ كُلُّ أُنثَىٰ وَمَا تَغِيضُ ٱلْأَرْحَامُ وَمَا تَزْدَادُ ۖ وَكُلُّ شَىْءٍ عِندَهُۥ بِمِقْدَارٍ.
13:8. ஒவ்வொரு பெண்ணும் கருத்தரிப்பதும், அது வளர்ந்து வருவதும் அல்லாஹ்வுக்குத் தெரியாமல் இருப்பதில்லை. அவளுடைய கர்ப்பப் பையில் உள்ளவற்றில் எவை குறைந்து வருகிறது என்பதும், எவை விரிவடைந்து வருகின்றது என்பதும் அல்லாஹ்வுக்கு நன்கு தெரியும். அதன்பின் நிர்ணயிக்கப்பட்ட கால அளவின்படி அந்தக் கர்ப்பத்தில் இருக்கின்ற குழந்தை பிறந்து விடுகிறது.
அது போல மனிதன் செயல்களின் விளைவுகள் நிர்ணயிக்கப்பட்ட கால தவணைக்குப் பின் நிச்சயமாக ஏற்படும். நடக்கவிருக்கும் இந்த விளைவுகளைப் பற்றி மனித அறிவுக்குப் புலப்படுபவதில்லை. அதைப் பற்றி எடுத்துச் சொன்னாலும் அவற்றை சிந்தித்து ஏற்றுக் கொள்வதில்லை.
عَٰلِمُ ٱلْغَيْبِ وَٱلشَّهَٰدَةِ ٱلْكَبِيرُ ٱلْمُتَعَالِ.
13:9. ஆனால் மனித அறிவுக்குப் புலப்படாத விஷயங்களும், வெளிப்படையான விஷயங்களும் அல்லாஹ்வுக்குத் தெரியும். இந்த அளவுக்கு அல்லாஹ்வின் வல்லமை மிகவும் விசாலமானதாகவும் அனைத்தையும் கட்டுப்படுத்தக் கூடியதாகவும் உள்ளது.
سَوَآءٌۭ مِّنكُم مَّنْ أَسَرَّ ٱلْقَوْلَ وَمَن جَهَرَ بِهِۦ وَمَنْ هُوَ مُسْتَخْفٍۭ بِٱلَّيْلِ وَسَارِبٌۢ بِٱلنَّهَارِ.
13:10. எனவே உங்களில் எவரும் எந்த ஒரு செயலையும் மறைவாக செய்தாலும், வெளிப்படையாக செய்தாலும், அல்லாஹ்வைப் பொருத்த வரையில் சமமே ஆகும். இரவில் மறைவாக நடைபெற்றாலும், பகல்நேர வெளிச்சத்தில் வெளிப்படையாக நடைபெற்றாலும் அவன் நிர்ணயித்தபடி அவற்றின் விளைவுகள் ஏற்பட்டே தீரும்.
لَهُۥ مُعَقِّبَٰتٌۭ مِّنۢ بَيْنِ يَدَيْهِ وَمِنْ خَلْفِهِۦ يَحْفَظُونَهُۥ مِنْ أَمْرِ ٱللَّهِ ۗ إِنَّ ٱللَّهَ لَا يُغَيِّرُ مَا بِقَوْمٍ حَتَّىٰ يُغَيِّرُوا۟ مَا بِأَنفُسِهِمْ ۗ وَإِذَآ أَرَادَ ٱللَّهُ بِقَوْمٍۢ سُوٓءًۭا فَلَا مَرَدَّ لَهُۥ ۚ وَمَا لَهُم مِّن دُونِهِۦ مِن وَالٍ.
13:11. ஒவ்வொரு மனிதனின் செயல்களையும் கண்காணிக்கும் வகையில்தான் இந்த உலகம் படைக்கப்பட்டுள்ளது. அதாவது மனிதனுடைய செயல் என்னவோ, அதன்படியே அவனுடைய உலகமும் உருவாகும். எனவே இதற்கு முன்பாக நடந்த செயல்களானாலும் சரி, இனி அவன் கண்ணெதிரே நடக்கும் செயல்களாக இருந்தாலும் சரி, அதன் விளைவுகளை அவன் சந்தித்தே ஆக வேண்டும். இதே அடிப்படையில்தான் சமுதாயமும் உருவாகும். ஒரு சமுதாயம் தன் நிலையை மாற்றிக் கொள்ள விரும்பினால், அது தன் செயல்களின் பாணியை மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டும். இல்லையெனில், அச்சமுதாயத்தில் எந்த மாற்றத்தையும் ஒருபோதும் கொண்டு வரவே முடியாது. அப்படி மாற்றங்களை எதுவும் கொண்டுவராமல், தீய செயல்கள் தொடர்ந்தால், அல்லாஹ்வின் நியதிப்படி ஏற்படும் அத்தீமைகளின் விளைவுகளை யாராலும் தடுக்க முடியாது. அல்லாஹ்வின் வழிகாட்டுதலை விட்டுவிட்டால், அவனுடைய சிறப்பான வாழ்விற்கு வேறு எந்த வழிமுறையும் இருக்க முடியாது.
هُوَ ٱلَّذِى يُرِيكُمُ ٱلْبَرْقَ خَوْفًۭا وَطَمَعًۭا وَيُنشِئُ ٱلسَّحَابَ ٱلثِّقَالَ.
13:12. மேலும் அல்லாஹ்வின் பரிபாலன ஏற்பாடுகளில் அச்சத்தை ஏற்படுத்தும் இடி மின்னல்களும் உள்ளன. அந்த இடி மின்னல்களைக் கொண்டு பூமியில் இரசாயண மாற்றங்கள் ஏற்பட்டு பசுமையாக மாறிவிடுவதும் உண்டு. மேலும் அதைத் தொடர்ந்து பொழியும் கன மழையினால் விளைச்சல்களுக்கு உயிரோட்டமும் கிடைத்து விடுகிறது.
وَيُسَبِّحُ ٱلرَّعْدُ بِحَمْدِهِۦ وَٱلْمَلَٰٓئِكَةُ مِنْ خِيفَتِهِۦ وَيُرْسِلُ ٱلصَّوَٰعِقَ فَيُصِيبُ بِهَا مَن يَشَآءُ وَهُمْ يُجَٰدِلُونَ فِى ٱللَّهِ وَهُوَ شَدِيدُ ٱلْمِحَالِ.
13:13. இந்த இடி மின்னல்களும் சரி, மற்ற பிரபஞ்ச இயற்கை சக்திகளும் சரி. அவை அனைத்தும் அல்லாஹ்வுக்குப் பயந்து அவனுடைய கட்டளைக்கு இணங்கி தொடர்ந்து செயல்பட்ட வண்ணம் இருக்கின்றன. அதனால் இந்த பரிபாலன அமைப்பு ஆயிரமாயிரம் போற்றுதலுக்கு உரியதாக அமைந்து விடுகிறது. இப்போது இருப்பது இடி மின்னல்களின் தாக்கங்களினால் ஏற்படும் பாதிப்புக்களைப் பற்றியது. அதிலிருந்து பாதுகாத்துக் கொள்ள தகுதி இல்லாதவர்களுக்கு அல்லாஹ்வின் நியதிப்படி தாக்கங்களை ஏற்படுத்தி விடுகிறது. இப்படியாக அல்லாஹ்வின் மாபெரும் வல்லமையைப் பற்றி விரிவாக எடுத்துரைத்தும், இறைவழிகாட்டுதலைப் பற்றி தர்க்கிக்கின்றனர். ஆனால் அல்லாஹ்வின் வலிமையோ அனைத்தையும் மிகைக்கக் கூடியதாக உள்ளது.
பிரபஞ்ச இயற்கை படைப்புகளின் செயல்பாடுகள் ஒருபுறம், மனிதனின் அறிவாற்றலும் உழைப்பும் மறுபுறம். இவை இரண்டும் ஒருங்கிணைந்து செயல்பட்டால் தான் மனிதனின் தேவைகள் நிறைவேறி வரும். (பார்க்க 53:39) அதைத் தொடர்ந்து, இறைவழிகாட்டுதல்கள் அவனுடைய சிறப்பான பாதுகாப்பான வாழ்விற்கு வழி வகுக்கிறது. மனிதன் அவற்றை ஏற்று கடைப்பிடித்தால் அவனுடைய நிகழ்கால வாழ்வும் வருங்கால நிலையான வாழ்வும் சிறப்பாக இருக்கும். இதுதான் அல்லாஹ்வின் நிலை மாறா சட்டமாகும். எனவே
لَهُۥ دَعْوَةُ ٱلْحَقِّ ۖ وَٱلَّذِينَ يَدْعُونَ مِن دُونِهِۦ لَا يَسْتَجِيبُونَ لَهُم بِشَىْءٍ إِلَّا كَبَٰسِطِ كَفَّيْهِ إِلَى ٱلْمَآءِ لِيَبْلُغَ فَاهُ وَمَا هُوَ بِبَٰلِغِهِۦ ۚ وَمَا دُعَآءُ ٱلْكَٰفِرِينَ إِلَّا فِى ضَلَٰلٍۢ.
13:14. அல்லாஹ்வின் இத்தகைய வழிகாட்டுதலை விட்டுவிட்டு வெறும் வார்த்தைகளால் கற்பனைத் தெய்வங்களை அழைத்துக் கொண்டிருந்தால், மனிதனுக்கு எவ்வித பலனும் கிடைக்காது. இதை ஒரு உதாரணத்தைக் கொண்டு விளங்கிக் கொள்ளலாம். ஒருவன் தண்ணீர் முன் நின்றுகொண்டு அது தானாக தன் வாய்க்குள் வந்தடைய வேண்டும் என்று இரு கைகளையும் விரித்து பிரார்தித்துக் கொண்டிருக்கின்றான். அவன் கைகளால் அள்ளாது அது அவன் வாய்க்குள் போய் சென்றடையுமா? அது போலத்தான் கற்பனைத் தெய்வங்களை புகழ் பாடிக்கொண்டும், அவைகளை திருப்தி படுத்துவதாகவும் எண்ணிக் கொண்டிருந்தால், என்ன பலன் ஏற்படப் போகிறது? ஆக இறைவழிகாட்டுதலை நிராகரிப்பவர்களின் நிலைமையும் இதுவே ஆகும்.
وَلِلَّهِ يَسْجُدُ مَن فِى ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضِ طَوْعًۭا وَكَرْهًۭا وَظِلَٰلُهُم بِٱلْغُدُوِّ وَٱلْءَاصَالِ ۩.
13:15. அகிலங்களிலும், பூமியிலும் உள்ளவை அனைத்தும் அல்லாஹ்வின் கட்டளைக்கு முற்றிலும் சிரம்பணிந்து செயல்பட்டு வருகின்றன. அவை விரும்பத்தக்க விளைவுகளை ஏற்படுத்தினாலும், விரும்பத்தகாத விளைவுகளை ஏற்படுத்தினாலும் அவை காலை முதல் மாலை வரையில் நிழல் தொடர்ந்து வருவது போல், அல்லாஹ்வின் கட்டளைக்கு தொடர்ந்து அடிபணிந்து செயல்படுகின்றன.
சூரிய வெளிச்சத்திற்கு ஏற்றவாறுத் தான் நிழலின் திசைகள் மாறுகின்றன. ஆனால் அந்த நிழல் தன் திசையை எவ்வாறு வேறு கோணத்தில் மாற்றிக்கொள்ள முடியாதோ, அதுபோலத் தான் பிரபஞ்ச இயற்கை படைப்புகள் தம் நிலையை தாமே ஒருபோதும் மாற்றிக்கொள்ள முடியாது. மேலும் இந்த நிழலின் திசையை வேறு எந்த சக்தியைக் கொண்டும் மாற்றி அமைக்க முடியுமா? அது போலத்தான் மனித செயல்களின் விளைவுகள் அவனை நிழல் போல் பின் தொடர்கின்றன. அந்த விளைவுகளை யாராலும் மாற்றி அமைக்க முடியாது.
قُلْ مَن رَّبُّ ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضِ قُلِ ٱللَّهُ ۚ قُلْ أَفَٱتَّخَذْتُم مِّن دُونِهِۦٓ أَوْلِيَآءَ لَا يَمْلِكُونَ لِأَنفُسِهِمْ نَفْعًۭا وَلَا ضَرًّۭا ۚ قُلْ هَلْ يَسْتَوِى ٱلْأَعْمَىٰ وَٱلْبَصِيرُ أَمْ هَلْ تَسْتَوِى ٱلظُّلُمَٰتُ وَٱلنُّورُ ۗ أَمْ جَعَلُوا۟ لِلَّهِ شُرَكَآءَ خَلَقُوا۟ كَخَلْقِهِۦ فَتَشَٰبَهَ ٱلْخَلْقُ عَلَيْهِمْ ۚ قُلِ ٱللَّهُ خَٰلِقُ كُلِّ شَىْءٍۢ وَهُوَ ٱلْوَٰحِدُ ٱلْقَهَّٰرُ.
13:16. எனவே கற்பனைத் தெய்வங்களை வணங்கி வருபவர்களிடம், “வானங்களையும் பூமியையும் பரிபாலித்து வருவது யார்?” என்று கேளுங்கள். நீங்கள் கூறுவது போல், அவர்களும் அல்லாஹ்வை என்று பதில் கூறிவிடுவார்கள். (பார்க்க 23:84-90, 29:61-63). “அப்படி இருக்கும் போது, இறைவழிகாட்டுதலை விட்டுவிட்டு, கற்பனைத் தெய்வங்களை உங்களுடைய பாதுகாவலர்களாக ஏன் எடுத்துக் கொள்கிறீர்கள்? அவையோ தமக்கே எந்த நன்மையும் தீமையும் செய்துகொள்ள சக்தி பெறாதவையாக இருக்கின்றனவே.
நீங்கள் சொல்வதைப் பார்த்தால், குருடனும் பார்வை உடையவனும் சமமானவர்களே அல்லது இருளும் ஒளியும் சமமானதே என்று சொல்வது போல் அல்லவா இருக்கிறது! (மேலும் பார்க்க:11:24, 35:19)
அல்லாஹ் படைத்திருப்பதைப் போல் நீங்கள் வணங்கி வரும் கற்பனைத் தெய்வங்கள், ஏதாவது ஒன்றைப் படைக்கும் சக்தி பெற்றவையா? அப்படியும் அந்த கற்பனைத் தெய்வங்களே படைத்தன என்று நீங்கள் சொல்வது போல் சொன்னாலும், அந்த தெய்வங்களை எல்லாம் படைத்தது யார் என்று உங்களால் உறுதியாக சொல்லத்தான் முடியுமா?” என்று அவர்களிடம் கேளுங்கள்.
எனவே நீங்கள் அவர்களிடம் படைப்பு விஷயத்தில் தீர்மானமாக சொல்லிவிடுங்கள். “அகிலங்களிலும் பூமியிலுள்ள அனைத்தையும் படைத்தது அல்லாஹ்வே ஆவான். அனைத்து படைப்புகளும் அவன் நிர்ணயித்த சட்ட விதிமுறைகளின்படியே செயல்படுகின்றன. அதாவது எல்லாவற்றிலும் அவனுடைய மேலாண்மையே செல்லும்” என்று அவர்களிடம் கூறிவிடுங்கள்.
أَنزَلَ مِنَ ٱلسَّمَآءِ مَآءًۭ فَسَالَتْ أَوْدِيَةٌۢ بِقَدَرِهَا فَٱحْتَمَلَ ٱلسَّيْلُ زَبَدًۭا رَّابِيًۭا ۚ وَمِمَّا يُوقِدُونَ عَلَيْهِ فِى ٱلنَّارِ ٱبْتِغَآءَ حِلْيَةٍ أَوْ مَتَٰعٍۢ زَبَدٌۭ مِّثْلُهُۥ ۚ كَذَٰلِكَ يَضْرِبُ ٱللَّهُ ٱلْحَقَّ وَٱلْبَٰطِلَ ۚ فَأَمَّا ٱلزَّبَدُ فَيَذْهَبُ جُفَآءًۭ ۖ وَأَمَّا مَا يَنفَعُ ٱلنَّاسَ فَيَمْكُثُ فِى ٱلْأَرْضِ ۚ كَذَٰلِكَ يَضْرِبُ ٱللَّهُ ٱلْأَمْثَالَ.
13:17. அல்லாஹ்வின் அதே செயல் திட்டங்களின் அடிப்படையில், வானத்திலிருந்து மழை பொழிகிறது. அதைத் தொடர்ந்து ஓடைகளிலும் ஆறுகளிலும், அவற்றின் கொள்ளளவு படி வெள்ளங்கள் பாய்ந்து செல்கின்றன. அவ்வெள்ளங்கள் மேல்பகுதியில் நுரைகளும் சுமந்து செல்கின்றன. நீரைப் பயன்படுத்தும் போது, நீங்கள் தேவையற்ற நுரை மற்றும் அழுக்குகளை நீக்கிவிடுகிறீர்கள். அதேபோல்
ஆபரணங்களையோ அல்லது பாத்திரங்களையோ நீங்கள் தயாரிக்கும் போது, அந்தந்த உலோகப் பொருட்களை நெருப்பில் உருக்கி எடுக்கிறீர்கள். அப்போது அந்த உலோகங்களிலிருந்து தேவையற்ற அழுக்குகளும் நுரைகளும் கழிகின்றன. அவற்றை சுத்தம் செய்து நல்லதையே பயன்படுத்திக் கொள்கிறீர்கள். இப்படியாக தேவையற்றதை விலக்கி விடுகிறீர்கள்.
ஆக உலக மக்களுக்கு பலனுள்ளவை இவ்வுலகில் தங்கிவிடுகிறது. பலனற்றவை அழிந்துவிடுகின்றன. (மேலும் பார்க்க:13:39, 21:18, 42:24) நீங்கள் விளங்கிக் கொள்ளும் பொருட்டு இத்தகைய உதாரணங்கள் தரப்படுகின்றன.
(1) அது போலத்தான் உலக மக்களுக்கு பயன்படும் வாழ்க்கை நெறிமுறைகளும் நடைமுறைச் சட்டங்களும் உலகில் நிலைத்து நின்று செயல்படுகின்றன. தேவையற்ற சடங்கு சம்பிரதாயங்கள் அழிந்து போய் விடுகின்றன.
(2) அதே போல உலக மக்களுக்கு பலனளிக்காத சமுதாயங்களும் அழிந்து போகின்றன.
(3) தனி நபர் விஷயத்திலும் தகுதியற்றவன் அழிவை சந்திக்கிறான்.
(4) அதே போல் போலியான அரசாட்சியும் இவ்வுலகில் நீடித்து செயல் பட முடியாது.
(5) எனவே ஒவ்வொருவரும் மற்றவர்களுக்குப் பலனளிக்கும் வகையில் தகுதியுள்ளவர்களாக தம்மை ஆக்கிக்கொள்ள வேண்டும்.
لِلَّذِينَ ٱسْتَجَابُوا۟ لِرَبِّهِمُ ٱلْحُسْنَىٰ ۚ وَٱلَّذِينَ لَمْ يَسْتَجِيبُوا۟ لَهُۥ لَوْ أَنَّ لَهُم مَّا فِى ٱلْأَرْضِ جَمِيعًۭا وَمِثْلَهُۥ مَعَهُۥ لَٱفْتَدَوْا۟ بِهِۦٓ ۚ أُو۟لَٰٓئِكَ لَهُمْ سُوٓءُ ٱلْحِسَابِ وَمَأْوَىٰهُمْ جَهَنَّمُ ۖ وَبِئْسَ ٱلْمِهَادُ.
13:18. இறைவழிகாட்டுதல் மனிதனுக்கு சிறப்பான வாழ்வு கிடைக்க அழைப்பு விடுகிறது. அவற்றை ஏற்று அதன்படி செயல்படும் சமுதாயத்திற்கு அழகிய நன்மைகளை கிடைத்து வரும். மாறாக எந்த சமுதாயம் அவற்றை ஏற்க மறுத்து அதற்கு எதிராக செயல்படுமோ, அதனால் ஏற்படும் சமூக சீர்கேடுகள் அதை அழிவின் பக்கம் அழைத்துச் செல்லும். அப்போது, உலகம் முழுவதும் உள்ள சொத்து செல்வங்களை கொடுத்தோ அல்லது அதைவிட பன்மடங்கு அதிகமாகக் செலவழித்தோ துயரங்களிலிருந்து தம்மை காப்பாற்றிக்கொள்ள விரும்புவார்கள். (மேலும் பார்க்க 3:91) ஆனால் அந்த அழிவினால் ஏற்படும் வேதனைகளிலிருந்து ஒருபோதும் தப்பிக்க முடியாது. இப்படியாக ஒவ்வொருடைய செயல்களுக்கும் கேள்விக் கணக்கு உண்டு என்பதையும், அது மிகவும் கடினமானது என்பதையும் அவர்கள் அறிந்து கொள்ளட்டும். அவர்களுக்கு இறுதியாக கிடைப்பது வேதனைகள் மிக்க நரக வாழ்வே ஆகும். அது அவர்களின் மிக மிக மோசமான நிலையாகும்.
۞ أَفَمَن يَعْلَمُ أَنَّمَآ أُنزِلَ إِلَيْكَ مِن رَّبِّكَ ٱلْحَقُّ كَمَنْ هُوَ أَعْمَىٰٓ ۚ إِنَّمَا يَتَذَكَّرُ أُو۟لُوا۟ ٱلْأَلْبَٰبِ.
13:19. இத்தகைய வழிகாட்டுதல்கள் உம் இறைவன் புறத்திலிருந்து இறக்கி அருளப்படுகின்றன என்பதை அறிந்து, அதன்படி செயல்படுபவர் குருடர்களைப் போலாவாரா? ஒருபோதும் இல்லை. சிந்தித்து செயலாற்றுபவர்களுக்கே இவ்வழிகாட்டுதலிருந்து அறிவுரைகள் கிடைக்கும்.
ٱلَّذِينَ يُوفُونَ بِعَهْدِ ٱللَّهِ وَلَا يَنقُضُونَ ٱلْمِيثَٰقَ.
13:20. இறைவழிகாட்டுதலை ஏற்றுக்கொண்ட மூஃமின்கள் எத்தகையவர்கள் என்றால், அவர்கள் அல்லாஹ்விடம் செய்து கொண்ட வாக்குறுதியை முழுமையாக நிறைவேற்றுவார்கள். (பார்க்க:9:111) மேலும் அவர்கள் ஒருபோதும் அந்த உடன்படிக்கையை முறித்துவிடவும் மாட்டார்கள்.
وَٱلَّذِينَ يَصِلُونَ مَآ أَمَرَ ٱللَّهُ بِهِۦٓ أَن يُوصَلَ وَيَخْشَوْنَ رَبَّهُمْ وَيَخَافُونَ سُوٓءَ ٱلْحِسَابِ.
13:21. அல்லாஹ்விடம் செய்துகொண்ட அந்த உடன்படிக்கையின் முக்கிய அம்சம் என்னவென்றால் சமுதாயத்தில் பிரிவினை ஏற்படாதவாறு அனைத்துத் தரப்பு மக்களின் நலனையும் பேணிகாத்து அவர்களுடைய நல்லிணக்கத்திற்காகப் பாடுபடவேண்டும். இப்படியாக சமுதாய ஒருமைப்பாட்டை கட்டிக் காக்க வேண்டும். அவ்வாறு செய்யவில்லை என்றால் அதனால் அல்லாஹ்வின் நியதிப்படி ஏற்படும் விபரீத விளைவுகளை எதிர்கொள்ள வேண்டி வரும் என்பதை அஞ்சுவார்கள். அல்லாஹ்வின் கேள்விக் கணக்கு மிகவும் கடுமையானது என்பதையும் அஞ்சுவார்கள்.
وَٱلَّذِينَ صَبَرُوا۟ ٱبْتِغَآءَ وَجْهِ رَبِّهِمْ وَأَقَامُوا۟ ٱلصَّلَوٰةَ وَأَنفَقُوا۟ مِمَّا رَزَقْنَٰهُمْ سِرًّۭا وَعَلَانِيَةًۭ وَيَدْرَءُونَ بِٱلْحَسَنَةِ ٱلسَّيِّئَةَ أُو۟لَٰٓئِكَ لَهُمْ عُقْبَى ٱلدَّارِ.
13:22. மேலும் அவர்கள் எத்தகையோர் என்றால் வாழ்வின் ஒவ்வொரு விஷயத்திலும் இறைவனின் வழிகாட்டுதல் என்னவென்பதை அறிந்து அதன்படியே செயலாற்றுவார்கள். அது மட்டுமின்றி அவர்கள் இறைக் கொள்கைக் கோட்பாட்டில் நிலைத்திருந்து உழைப்பார்கள். இப்படியாக இறைவனுடைய செயல்திட்டங்கள் நிறைவேற சமூக நல அமைப்பை ஏற்படுத்தி சமுதாய நலத் திட்டங்களைத் தீட்டி, அதற்காக பொருளுதவியும் செய்து வருவார்கள். அவர்கள் செய்து வரும் உதவிகளைப் பற்றி பிறரிடம் சொல்லிக் காட்டாமல் இரகசியமாக செலவிடுவார்கள். அப்படியும் வெளிப்படையாகச் செய்வதாக இருந்தாலும் அது மற்றவர்களையும் உதவி செய்ய ஊக்குவிக்கும் வகையில் இருக்கும். இப்படியாக சமுதாயத்தில் நன்மையான செயல்களை செய்து கொண்டு, தீய செயல்கள் நடைபெறாதவாறு தடுத்து வருவார்கள். இத்தகையவர்களின் உழைப்புகளே எக்காலத்திற்கும் பலனளிக்கக் கூடியதாக அமையும். அதாவது இம்மையிலும் மறுமையிலும் பலன்கள் கிடைக்கும். (பார்க்க 11:115, 28:54)
جَنَّٰتُ عَدْنٍۢ يَدْخُلُونَهَا وَمَن صَلَحَ مِنْ ءَابَآئِهِمْ وَأَزْوَٰجِهِمْ وَذُرِّيَّٰتِهِمْ ۖ وَٱلْمَلَٰٓئِكَةُ يَدْخُلُونَ عَلَيْهِم مِّن كُلِّ بَابٍۢ.
13:23. இத்தகையோரின் உழைப்பிற்கு ஏற்றவாறு அந்த சமுதாயம் சுவனத்திற்கு ஒப்பானதாக மாறி வரும். அதில் அவர்களுடைய தாய் தந்தையர், மனைவி மக்கள், என யாரெல்லாம் இறைச் சட்டங்களுக்கு இணங்கி செயல்படுகிறார்களோ, அவர்கள் எல்லாம் இச்சுவனத்திற்கு உரியவர்கள் ஆவார்கள். இவர்களுடைய உழைப்பிற்கு பிரபஞ்ச இயற்கைச் சக்திகளின் உதவியும் தொடர்ந்து கிடைத்து வரும். இதுவும் இம்மையிலும் மறுமையிலும் கிடைக்கும்.
سَلَٰمٌ عَلَيْكُم بِمَا صَبَرْتُمْ ۚ فَنِعْمَ عُقْبَى ٱلدَّارِ.
13:24. அந்த பிரபஞ்ச இயற்கை சக்திகளின் உதவிகள், இவர்கள் அனைவரும் மனஉறுதியோடு நிலைத்திருந்து உழைத்ததன் பலனாக மனநிறைவோடு, நிம்மதியாக, எந்தக் குறைவுமின்றி வாழுங்கள் என்று வாழ்த்துக்கள் கூறுவதாக இருக்கும். இவையெல்லாம் இவ்வுலக வாழ்வோடு முடிந்திராமல், மரணத்திற்குப் பின் தொடர்கின்ற நிலையான வாழ்விலும் கிடைத்து வரும்.
وَٱلَّذِينَ يَنقُضُونَ عَهْدَ ٱللَّهِ مِنۢ بَعْدِ مِيثَٰقِهِۦ وَيَقْطَعُونَ مَآ أَمَرَ ٱللَّهُ بِهِۦٓ أَن يُوصَلَ وَيُفْسِدُونَ فِى ٱلْأَرْضِ ۙ أُو۟لَٰٓئِكَ لَهُمُ ٱللَّعْنَةُ وَلَهُمْ سُوٓءُ ٱلدَّارِ.
13:25. ஆனால் அல்லாஹ்விடம் உறுதியோடு செய்து கொண்ட வாக்குறுதியை முறித்துவிட்டு, அவற்றிற்கு மாற்றமாக செயல்பட்டு, சமுதாய ஒருமைப்பாட்டையும், நல்லிணக்கத்தையும் சீர்குலையும் வகையில் செயல்படுவர்களின் நிலை பரிதாபத்திற்குரியதே ஆகும். அவர்கள் சமுதாய ஒற்றுமையை கட்டிக் காக்கவேண்டும் என்று அல்லாஹ்விடம் செய்து கொண்ட வாக்குறுதிகளை மீறிவிட்டு சமுதாயத்தை பல பிரிவினர்களாகப் பிரித்து அதில் ஏற்றத் தாழ்வுகளை ஏற்படுத்தும் விஷமிகளாக மாறிவிடுகிறார்கள். இத்தகையவர்களே இறுதியில் பெரும் நஷ்டவாளிகளாக இருப்பார்கள். (பார்க்க 2:27) அவர்கள் அல்லாஹ்வின் அருட்கொடைகள் அனைத்தையும் இழந்து மிகவும் கேடுகெட்ட நிலைக்கு தள்ளப்படுவார்கள்.
ٱللَّهُ يَبْسُطُ ٱلرِّزْقَ لِمَن يَشَآءُ وَيَقْدِرُ ۚ وَفَرِحُوا۟ بِٱلْحَيَوٰةِ ٱلدُّنْيَا وَمَا ٱلْحَيَوٰةُ ٱلدُّنْيَا فِى ٱلْءَاخِرَةِ إِلَّا مَتَٰعٌۭ.
13:26. இப்படியாக அல்லாஹ்வின் வழிகாட்டுதலை ஏற்று அதன்படி செயல்படுவோருக்கு வாழ்வாதார வசதிகள் விசாலமாகி விடுகின்றன. (13:23). அவற்றிற்கு மாற்றமாகச் செயல்படுவோருக்கு பொருளாதார சிக்கல்களும் சமுதாய சீர்கேடுகளும் ஏற்பட்டு வரும். எனினும் இத்தகைய சமுதாயங்களில் சிலருக்கு அவர்களுடைய உழைப்பிற்கு ஏற்ப இன்பமான வாழ்வு இவ்வுலகில் கிடைத்து விடுகிறது. (பார்க்க 17:18-21) அவர்களுக்குக் கிடைக்கின்ற இந்த சுக வாழ்வு நிலையானதாக இருப்பதில்லை. இறுதியில், அல்லாஹ்வின் வழிகாட்டுதலின்படி செயல்படுவதால் கிடைக்கும் சந்தோஷமான வாழ்வை ஒப்பிடும்போது, தற்காலிகமாக கிடைத்த சுகங்கள் யாவும் அற்பமானதே என்ற உண்மை விளங்கிவிடும்.
وَيَقُولُ ٱلَّذِينَ كَفَرُوا۟ لَوْلَآ أُنزِلَ عَلَيْهِ ءَايَةٌۭ مِّن رَّبِّهِۦ ۗ قُلْ إِنَّ ٱللَّهَ يُضِلُّ مَن يَشَآءُ وَيَهْدِىٓ إِلَيْهِ مَنْ أَنَابَ.
27. இந்த உண்மைகளை எல்லாம் அம்மக்களிடம் எடுத்துரைக்கும் போது, அவர்கள் (ஏற்கனவே 13:7ல் குறிப்பிட்டபடி) “இவர் ஓர் இறைத்தூதர் தான் என்பதற்கு இறைவன் புறத்திலிருந்து அத்தாட்சிகள் ஏதாவது இருக்கிறதா?” என்று கேட்டு இறைவழிகாட்டுதலை ஏற்காததற்கு சாக்குபோக்கு சொல்கிறார்கள். இவ்வாறு இறைவழிகாட்டுதலை ஏற்க முன்வராதவர்கள், அல்லாஹ்வின் நியதிப்படி வழிகேட்டில் சென்று விடுகிறார்கள். யாருக்கு வழிகாட்டுதலை பெறும் ஆர்வம் இருக்கிறதோ, அவர்களுக்குத் தான் அல்லாஹ்வின் புறத்திலிருந்து நேர்வழி கிடைக்கிறது.
ٱلَّذِينَ ءَامَنُوا۟ وَتَطْمَئِنُّ قُلُوبُهُم بِذِكْرِ ٱللَّهِ ۗ أَلَا بِذِكْرِ ٱللَّهِ تَطْمَئِنُّ ٱلْقُلُوبُ.
13:28. அல்லாஹ்வின் அறிவுரைகளைக் கேட்டு அறிந்து கொள்ளும் இவர்கள், “நாம் நேர்வழியிலேயே இருக்கிறோம்” என்ற மனநிறைவுடன் செயல்படுவார்கள். ஏனெனில் அல்லாஹ்வின் அறிவுரைகள் மட்டுமே முழுமையான மனநிறைவை அளிக்கக் கூடியதாக இருக்கின்றன.
ٱلَّذِينَ ءَامَنُوا۟ وَعَمِلُوا۟ ٱلصَّٰلِحَٰتِ طُوبَىٰ لَهُمْ وَحُسْنُ مَـَٔابٍۢ.
13:29. இத்தகையவர்கள், அல்லாஹ்வின் வழிகாட்டுதலை பெறுவதோடு கடமை முடிந்துவிட்டது என்றில்லாமல், சமுதாய மேம்பாட்டிற்காக தம்மால் இயன்ற அளவு ஆக்கப்பூர்வமான, ஆற்றல்மிக்க செயல்களை செய்து வருவார்கள். அத்தகையவர்களுக்கே எல்லா நற்பாக்கியங்களும் வளமான வாழ்வும் கிடைக்கும்.
كَذَٰلِكَ أَرْسَلْنَٰكَ فِىٓ أُمَّةٍۢ قَدْ خَلَتْ مِن قَبْلِهَآ أُمَمٌۭ لِّتَتْلُوَا۟ عَلَيْهِمُ ٱلَّذِىٓ أَوْحَيْنَآ إِلَيْكَ وَهُمْ يَكْفُرُونَ بِٱلرَّحْمَٰنِ ۚ قُلْ هُوَ رَبِّى لَآ إِلَٰهَ إِلَّا هُوَ عَلَيْهِ تَوَكَّلْتُ وَإِلَيْهِ مَتَابِ.
13:30. இத்தகைய வளமான வாழ்வு கிடைக்க வழிமுறையை எடுத்துரைப்பது புதிதான ஒன்றல்ல. காலம் காலமாக தொன்று தொட்டு வந்த வழிகாட்டுதலே ஆகும். அதுபோலவே, இறைச் செய்திகளை எடுத்துரைப்பவரே! உம்மையும் உம் சமூகத்தாரிடம் அனுப்பி இருக்கிறோம். நாம் உம்மிடம் இந்தக் குர்ஆன் மூலமாக எவற்றை வஹீ என்னும் வழிகாட்டுதலை இறக்கி அருளினோமோ, அவற்றை மக்களிடம் தெளிவாக எடுத்துரைப்பதற்காகவே அனுப்பி இருக்கிறோம். ஆனால் மனித வாழ்வில் எல்லா வளங்களையும் பெற்று சிறப்பாக வாழ வழிவகுக்கும் இந்த வழிகாட்டுதலை ஏற்க அவர்கள் மறுக்கிறார்கள். நீர் அவர்களிடம், “அல்லாஹ்வை ஏற்றுக் கொள்வதும் இறைவழிகாட்டுதலை ஏற்றுக் கொள்வதும் ஒன்றே ஆகும். அவற்றின் மீதே பரிபூரண நம்பிக்கைக் கொண்டு அதன்படியே செயலாற்றுங்கள். நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலும் அவன் நிர்ணயித்த இலக்கின் படியே விளைவுகளை ஏற்படுத்துவதால், இறைவழிகாட்டுதலை விட்டுவிட்டால் உங்களின் சிறப்பான வாழ்விற்கு வேறு எந்த வழிமுறையும் கிடைக்காது” என்பதை தெளிவாக எடுத்துரையுங்கள்.
மனிதனின் சிறப்பான வாழ்விற்கு சரியான பாதையை அவர்களிடம் எடுத்துரைத்தால், அவற்றை சிந்தித்து ஏற்றுக் கொள்வதற்குப் பதிலாக ஏதாவது அற்புதத்தை நிகழ்த்தி காட்டி இருக்க வேண்டும் என்று இறைத்தூதரிடம் கோரிக்கை வைக்கிறார்கள். (பார்க்க 6:37, 6:111) இவை எல்லாம் இறைவழிகாட்டுதலை ஏற்காததற்கு சொல்லும் சாக்குப் போக்குகளே ஆகும்.
وَلَوْ أَنَّ قُرْءَانًۭا سُيِّرَتْ بِهِ ٱلْجِبَالُ أَوْ قُطِّعَتْ بِهِ ٱلْأَرْضُ أَوْ كُلِّمَ بِهِ ٱلْمَوْتَىٰ ۗ بَل لِّلَّهِ ٱلْأَمْرُ جَمِيعًا ۗ أَفَلَمْ يَا۟يْـَٔسِ ٱلَّذِينَ ءَامَنُوٓا۟ أَن لَّوْ يَشَآءُ ٱللَّهُ لَهَدَى ٱلنَّاسَ جَمِيعًۭا ۗ وَلَا يَزَالُ ٱلَّذِينَ كَفَرُوا۟ تُصِيبُهُم بِمَا صَنَعُوا۟ قَارِعَةٌ أَوْ تَحُلُّ قَرِيبًۭا مِّن دَارِهِمْ حَتَّىٰ يَأْتِىَ وَعْدُ ٱللَّهِ ۚ إِنَّ ٱللَّهَ لَا يُخْلِفُ ٱلْمِيعَادَ.
13:31. அவர்களிடம் இந்த குர்ஆனை முன்வைத்து, மலைகளை நகரும்படி செய்தாலும், அல்லது பூமியைப் பிளந்து காட்டினாலும் அல்லது இறந்தவர்களை உயிர்ப்பித்து பேசும்படிச் செய்தாலும், அவர்கள் இறை வழிகாட்டுதலை ஒருபோதும் ஏற்றுக்கொள்வதாக இல்லை. (மேலும் பார்க்க 6:35) ஆகவே இத்தகையவர்களைப் பற்றி நீங்கள் கவலைப்பட்டு உங்கள் நேரத்தை வீணடிக்காதீர்கள். அவர்களுடைய விஷயங்கள் யாவும் அல்லாஹ்வின் நியதிப்படியே நிகழும்.
ஏனெனில் மற்ற உயிரினங்கள் தம் இயல்பின் அடிப்படையில் வாழும்படி படைத்திருப்பதைப் போல் மனிதனையும் படைத்திருந்தால் மனிதர்கள் அனைவரும் நேர்வழியில் இருந்திருப்பார்கள். ஆனால் அல்லாஹ்வின் செயல் திட்டம் அவ்வாறு இல்லை. மனிதனுக்கு முழு சுதந்திரத்தை அளித்துவிட்டு, இறைவழிகாட்டுதலை நபிமார்கள் மூலம் இறக்கி அருளிவிட்டு, (பார்க்க 2:38) அவற்றை ஏற்றுக் கொள்வதும், ஏற்க மறுப்பதும் மனித விருப்பத்திற்கு விடப்பட்டு விட்டது (பார்கக 18:29, 76:3). இந்த உண்மை மூஃமின்களாகிய உங்களுக்கு தெரியாதா?
எனவே உங்களுக்கு எதிராக அவர்கள் ஏதாவது விஷமம் செய்து கொண்டே இருப்பார்கள். அதனால் உங்களுக்கு சிறுசிறு தொல்லைகள் ஏற்பட்டுக் கொண்டே இருக்கும். (பார்க்க 3:111) இவையாவும் உங்களைச் சுற்றி வாழ்பவர்களாலும் ஏற்படலாம். அவற்றை எல்லாம் பொருட்படுத்தாமல், அல்லாஹ் காட்டிய வழியில் தொடர்ந்து செயலாற்றுங்கள். நிச்சயமாக அல்லாஹ்வின் நியத்திப்படி உங்களுக்கு உதவிகள் வந்தடையும் (பார்க்க 3:139, 10:103) அல்லாஹ்வின் வாக்குறுதியில் எந்த மாறுதலும் ஒருபோதும் ஏற்படாது என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.
وَلَقَدِ ٱسْتُهْزِئَ بِرُسُلٍۢ مِّن قَبْلِكَ فَأَمْلَيْتُ لِلَّذِينَ كَفَرُوا۟ ثُمَّ أَخَذْتُهُمْ ۖ فَكَيْفَ كَانَ عِقَابِ.
13:32. மேலும் ஒரு விஷயத்தையும் நினைவில் கொள்ளுங்கள். இப்படி அவர்கள் பரிகசிப்பதும் தொல்லைகளைத் தருவதும் புதிதான ஒன்றல்ல. காலம் காலமாக எல்லா நபிமார்கள் விஷயத்திலும் இப்படித்தான் நடந்து வந்துள்ளது. அவர்கள் திருந்துவதற்கு தக்கக் கால அவகாசம் அளிக்கப்பட்டது. அந்த கால தவணைக்குப் பின் அவர்கள் அல்லாஹ்வின் பெருந் தண்டனைக்கு ஆளானார்கள். வரலாற்று உண்மைகள் இதையே எடுத்துக் காட்டுகின்றன. இதையும் நீங்கள் கவனித்துப் பாருங்கள்.
أَفَمَنْ هُوَ قَآئِمٌ عَلَىٰ كُلِّ نَفْسٍۭ بِمَا كَسَبَتْ ۗ وَجَعَلُوا۟ لِلَّهِ شُرَكَآءَ قُلْ سَمُّوهُمْ ۚ أَمْ تُنَبِّـُٔونَهُۥ بِمَا لَا يَعْلَمُ فِى ٱلْأَرْضِ أَم بِظَٰهِرٍۢ مِّنَ ٱلْقَوْلِ ۗ بَلْ زُيِّنَ لِلَّذِينَ كَفَرُوا۟ مَكْرُهُمْ وَصُدُّوا۟ عَنِ ٱلسَّبِيلِ ۗ وَمَن يُضْلِلِ ٱللَّهُ فَمَا لَهُۥ مِنْ هَادٍۢ.
13:33. அல்லாஹ் நிர்ணயித்துள்ள “மனித செயலுக்கேற்ற விளைவுகள்” என்ற விதிமுறைகளின் படி, ஒவ்வொருவரின் செயல்களின் விளைவுகளும் ஏற்பட்டுக் கொண்டே வருகின்றன. அப்படியிருந்தும் அவர்கள் அல்லாஹ்வின் வழிகாட்டுதலுக்கு இணையாக வேறு வழிமுறைகளைக் கடைப்பிடித்து வருகிறார்கள். அவர்களிடம், “நீங்கள் கடைப்பிடித்து வரும் வழிமுறைகளைப் பற்றிய விவரங்களை எங்களுக்கு எடுத்துரையுங்கள். அவற்றின் உண்மை நிலையை கண்டுக் கொள்ளலாம். அல்லது அல்லாஹ் அறியாதவற்றை நீங்கள் அவனுக்கு அறிவிக்கின்றீர்களா? அல்லது நீங்கள் கூறுவது வெறும் வார்த்தைகள் தானா?” என்று அவர்களிடம கேளுங்கள். அப்படி அல்ல. இறைவழிகாட்டுதலை ஏற்க மறுப்பவர்களுக்கு அவர்கள் செய்துவரும் செயல்கள் யாவும் அழகாக இருப்பதாகத் தான் தோன்றும். எனவே அவர்கள் நேர்வழியின் பக்கம் வரவே மாட்டார்கள். எவன் அல்லாஹ்வின் வழிகாட்டுதலை ஏற்க மறுக்கின்றானோ, அவன் நேர்வழி பெற வேறு எந்த வழியும் இருக்காது.
لَّهُمْ عَذَابٌۭ فِى ٱلْحَيَوٰةِ ٱلدُّنْيَا ۖ وَلَعَذَابُ ٱلْءَاخِرَةِ أَشَقُّ ۖ وَمَا لَهُم مِّنَ ٱللَّهِ مِن وَاقٍۢ.
13:34. அத்தகையவர்களின் தற்காலிக இவ்வுலக வாழ்விலும் பிரச்சனைகள் பல ஏற்பட்டு அவர்களுடைய வாழ்வு வேதனை மிக்கதாய் ஆகிவிடும். வருங்கால நிலையான வாழ்விலும் கடுமையான வேதனைகளுக்கு ஆளாவார்கள். அத்தகையவர்களை காப்பாற்றுவோர் எவரும் இருக்க மாட்டார்கள்.
۞ مَّثَلُ ٱلْجَنَّةِ ٱلَّتِى وُعِدَ ٱلْمُتَّقُونَ ۖ تَجْرِى مِن تَحْتِهَا ٱلْأَنْهَٰرُ ۖ أُكُلُهَا دَآئِمٌۭ وَظِلُّهَا ۚ تِلْكَ عُقْبَى ٱلَّذِينَ ٱتَّقَوا۟ ۖ وَّعُقْبَى ٱلْكَٰفِرِينَ ٱلنَّارُ.
13:35. இதற்கு மாறாக அல்லாஹ்வின் வழிகாட்டுதலை ஏற்றுக் கொண்டவர்கள், தீய செயல்களால் ஏற்படும் பின் விளைவுகளுக்கு அஞ்சி செயல்படுபவார்கள். இவர்களுக்கே வாக்களிக்கப்பட்ட சுவனத்திற்கு ஒப்பான வாழ்வு கிடைக்கும். அத்தகைய சமுதாயங்களில் தாராள பொருளாதார வசதிகள் வற்றாத ஜீவநதியாய் சதா பெருகி வரும். அங்கு கிடைக்கும் கனிவகைகள் சுவை மிக்கதாகவும், நிழல் தொடர்வது போல் அவர்களுக்கு கிடைத்த வண்ணமும் இருக்கும். இவைதான் சுவன வாழ்விற்குத் தரப்படும் உதாரணமாகும். இவை இறையச்சத்துடன் செயல்படுவோருக்குக் கிடைக்கின்ற சன்மானங்களாகும். மாறாக இறைவழிகாட்டுதலை நிராகரித்து, தம் மனம்போன போக்கில் வாழ்பவர்களின் வாழ்வு நரகமாக மாறிவரும்.
وَٱلَّذِينَ ءَاتَيْنَٰهُمُ ٱلْكِتَٰبَ يَفْرَحُونَ بِمَآ أُنزِلَ إِلَيْكَ ۖ وَمِنَ ٱلْأَحْزَابِ مَن يُنكِرُ بَعْضَهُۥ ۚ قُلْ إِنَّمَآ أُمِرْتُ أَنْ أَعْبُدَ ٱللَّهَ وَلَآ أُشْرِكَ بِهِۦٓ ۚ إِلَيْهِ أَدْعُوا۟ وَإِلَيْهِ مَـَٔابِ.
13:36. நபியே! இவ்வாறாக நம் வழிகாட்டுதலை ஏற்று அதன்படி செயல்பட்டு, அதன் பலன்களை பெறுவோர், உம்மீது இறக்கி அருளப்படும் அறிவுரைகளைப் பற்றி அறிந்து பெருமகிழ்ச்சியுடன் கொண்டாடுகிறார்கள். இதைத் தவிர்த்து வேறு சிலர் இருக்கிறார்கள். உம்மீது இறக்கி அருளப்படும் வழிகாட்டுதல்களில் சிலவற்றை ஏற்று, மற்றவற்றை ஏற்க மறுப்பார்கள். எனவே அவர்களிடம், “அல்லாஹ்வின் கட்டளைக்கு மட்டும் அடிபணிந்து செயல்பட வேண்டும். அவன் காட்டிய வழிகாட்டுதலுக்கு இணையாக வேறு வழிமுறைகளை கடைப்பிடிப்பது ஒருபோதும் கூடாது என்றே எனக்குக் கட்டளை வந்துள்ளது. நான் உங்களையும் அதன் பக்கமே அழைக்கிறேன். உங்கள் வாழ்வின் அனைத்து பிரச்சனைகளுக்கும் அவனுடைய வழிகாட்டுதலைக் கொண்டே எக்காலத்திலும் தீர்வு கிடைக்கும்” என்று எடுத்துரைப்பீராக.
وَكَذَٰلِكَ أَنزَلْنَٰهُ حُكْمًا عَرَبِيًّۭا ۚ وَلَئِنِ ٱتَّبَعْتَ أَهْوَآءَهُم بَعْدَمَا جَآءَكَ مِنَ ٱلْعِلْمِ مَا لَكَ مِنَ ٱللَّهِ مِن وَلِىٍّۢ وَلَا وَاقٍۢ.
13:37. இந்த நோக்கங்களை மையமாக வைத்தே ஒட்டுமொத்த சட்டதிட்டங்கள் அடங்கிய இவ்வேதத்தை தெள்ளத் தெளிவான முறையில் நீங்கள் பேசும் மொழியிலேயே இறக்கி அருளுகிறோம். எனவே இந்த அளவிற்கு தெளிவான ஞானம் வந்த பின்பும், நீங்கள் இறை நிராகரிப்பவர்களுடைய மனோ இச்சைகளைப் பின்பற்றாதீர்கள். அவ்வாறு நீங்கள் அவர்களை பின்பற்றினால், அல்லாஹ் நிர்ணயித்துள்ள மனித செயலுக்கேற்ற விளைவுகளிலிருந்து மீண்டு வரவோ, உங்களுக்கு உதவி செய்யவோ அல்லது காப்பாற்றவோ எவரும் வர மாட்டார்கள்.
இப்போது இருப்பது இறைத்தூதர்களைக் குறித்து அவர்கள் கொண்டுள்ள கற்பனைக் கதைகளைப் பற்றியது. அதாவது இறைத்தூதர்கள் ஒரு மலக்காக இருக்க வேண்டும். (பார்க்க 6:111) அவரிடம் தோட்டங்கள் இருக்க வேண்டும் (பார்க்க 25:8) என்பது போன்ற கருத்துக்களைப் பற்றியது. இவை எல்லாம் அவர்களுடைய சாக்கு போக்குகளே ஆகும்.
وَلَقَدْ أَرْسَلْنَا رُسُلًۭا مِّن قَبْلِكَ وَجَعَلْنَا لَهُمْ أَزْوَٰجًۭا وَذُرِّيَّةًۭ ۚ وَمَا كَانَ لِرَسُولٍ أَن يَأْتِىَ بِـَٔايَةٍ إِلَّا بِإِذْنِ ٱللَّهِ ۗ لِكُلِّ أَجَلٍۢ كِتَابٌۭ.
13:38. நபியே! உமக்கு முன்னர் வந்த நபிமார்கள் அனைவரும் திருமணமாகி மனைவி மக்களோடு சிறப்பாக வாழ்ந்தவர்களே ஆவர். அவர்களில் எவரும் உலகைத் துறந்த முனிவர்கள் அல்லர்.
அவர்கள் அனைவரும் சமுதாய சீர்திருத்தவாதிகளே. (பார்க்க 2:151) அது மட்டுமின்றி அந்த நபிமார்களில் எவரும் இறைக் கட்டளைகளைத் தவிர வேறு எதையும் ஆதாரமாக மக்களிடம் எடுத்துரைத்ததில்லை.
ஆனால் அவர்களுக்குப் பின் வந்த சமூகத்தவர்களே, அவர்களைக் குறித்து மாற்றமான கருத்துகளை ஏற்படுத்திக் கொண்டார்கள். ஒவ்வொரு சமுதாயத்திற்கும் திருந்துவதற்கு தக்க வாய்ப்பு அளிக்கப்படுகிறது. அதன் பின் அவர்கள் அழிவை சந்தித்துக் கொள்வார்கள்.
எல்லா நபிமார்களுக்கும் திருமணமானதாக கூறப்படுகிறது. ஆனால் ஈஸா நபிக்கு மட்டும் திருமணமாகவில்லை என்றும், ஃகியாம நாளில் திருமணமாகும் என்றும் கதை கட்டுகிறார்களே இது சரியா?
يَمْحُوا۟ ٱللَّهُ مَا يَشَآءُ وَيُثْبِتُ ۖ وَعِندَهُۥٓ أُمُّ ٱلْكِتَٰبِ.
13:39. எனவே அல்லாஹ் ஏற்படுத்தியுள்ள நிலையான சட்ட விதிமுறைகளின் படி, தவறான வழியில் செல்பவர்கள் அழிந்து போவார்கள். இறைவழிகாட்டுதலின் படி சிறப்பாக செயல்படுபவர்கள் இவ்வுலகில் நிலைத்திருப்பார்கள். இதுவே அல்லாஹ்வின் நிலைமாறா நிரந்தர சட்டமாகும். அவை அழியா ஏட்டில் பதிவாகி அதன்படியே இந்த அகிலங்கள் அனைத்தும் செயல்பட்டு வரும். மனித விஷயத்திலும் அல்லாஹ்வின் இந்த நிலையானசட்டத்தின் அடிப்படையிலேயே நிகழ்ந்து வரும்.
وَإِن مَّا نُرِيَنَّكَ بَعْضَ ٱلَّذِى نَعِدُهُمْ أَوْ نَتَوَفَّيَنَّكَ فَإِنَّمَا عَلَيْكَ ٱلْبَلَٰغُ وَعَلَيْنَا ٱلْحِسَابُ.
13:40. இறைவழிகாட்டுதலை எடுத்துரைப்பவரே! அல்லாஹ்வின் இந்த நிலையான சட்டங்களின்படியே மூஃமின்கள் முன்னேறி வருவதையும், நிரகாரிப்பவர்களுக்கு ஏற்படும் துயர சம்பவங்களில் சிலவற்றையும் உங்கள் வாழ்நாளிலேயே பார்ப்பீர். அதற்குள் உம்முடைய வாழ்நாள் காலம் முடிவுற்றாலும், அவர்களைப் பற்றி நீர் கவலைப்பட வேண்டாம். அல்லாஹ்வின் வழிகாட்டுதலை மக்களிடம் எடுத்துரைப்பதே உம்மீதுள்ள முக்கிய கடமையாகும். மற்றபடி அவர்களுக்கு நேரவிருக்கும் முன்னேற்றங்கள் மற்றும் அழிவுகள் யாவும் அல்லாஹ்வின் சட்டவிதிமுறைப் படியே ஏற்பட்டு வரும். (மேலும் பார்க்க 40:77)
أَوَلَمْ يَرَوْا۟ أَنَّا نَأْتِى ٱلْأَرْضَ نَنقُصُهَا مِنْ أَطْرَافِهَا ۚ وَٱللَّهُ يَحْكُمُ لَا مُعَقِّبَ لِحُكْمِهِۦ ۚ وَهُوَ سَرِيعُ ٱلْحِسَابِ.
13:41. இப்படியாக எதேச்சதிகார அடிப்படையில் நடைபெற்று வரும் அராஜக ஆட்சிகள் யாவும் இப்பூமியின் வரைபடத்திலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருவதை நீங்கள் கவனித்துப் பார்பதில்லையா? இறைவழிகாட்டுதலுக்கு உட்பட்ட மக்களாட்சி அவற்றின் இடத்தைப் பிடித்து வருவதையும் கவனியுங்கள். இவையாவும் அல்லாஹ் தீர்மானித்த விதிமுறைகளாகும். எனவே அல்லாஹ்வின் தீர்ப்பின் படி மக்களாட்சி உலகின் எல்லா பகுதிகளிலும் மலர்ந்தே தீரும். ஆராஜக ஆட்சிமுறைக்கு எதிராகக் கேட்கப்படும் கேள்விக் கணக்கு இப்படிதான் தீவிரமாக இதுக்கும்.
وَقَدْ مَكَرَ ٱلَّذِينَ مِن قَبْلِهِمْ فَلِلَّهِ ٱلْمَكْرُ جَمِيعًۭا ۖ يَعْلَمُ مَا تَكْسِبُ كُلُّ نَفْسٍۢ ۗ وَسَيَعْلَمُ ٱلْكُفَّٰرُ لِمَنْ عُقْبَى ٱلدَّارِ.
13:42. இறைவழிகாட்டுதலை நிராகரிப்பவர்கள் இப்படி ஒரு சிறந்த ஆட்சி ஏற்படாதவாறு திட்டங்களைத் தீட்டிக் கொண்டிருப்பார்கள். இதுவும் புதிதான ஒன்றல்ல. இதற்கு முன்பும் இப்படித்தான் செய்தார்கள். இப்போதும் இப்படி ஒரு ஆட்சி ஏற்படுவதை அவர்கள் விரும்பவே மாட்டார்கள். ஆனால் அல்லாஹ்வின் திட்டங்களோ, அவற்றை எல்லாம் முறியடித்து விடும். ஏனெனில் ஒவ்வொருவரும் எத்தகைய செயல்களில் ஈடுபட்டிருக்கிறார்கள் என்ற உண்மை அல்லாஹ்வுக்குத் தெரியும். எனவே இறைவழிகாட்டுதலை ஏற்காமல் செயல்படுபவர்கள் போய் சேரும் இடம் எது என்பதை அவர்கள் விரைவில் அறிந்து கொள்வார்கள்.
وَيَقُولُ ٱلَّذِينَ كَفَرُوا۟ لَسْتَ مُرْسَلًۭا ۚ قُلْ كَفَىٰ بِٱللَّهِ شَهِيدًۢا بَيْنِى وَبَيْنَكُمْ وَمَنْ عِندَهُۥ عِلْمُ ٱلْكِتَٰبِ.
13:43. இறைவழிகாட்டுதலை ஏற்க மறுப்பவர்கள், “நீர் இறைச் செய்தி அல்ல” என்று சொல்கிறார்கள். எனவே நீர் சொல்வது போல் எங்களுக்கு வேதனைகள் எதுவும் வந்தடையாது என்கிறார்கள். அவர்களிடம், “எனக்கும் உங்களுக்கும் இடையே அல்லாஹ்வும், வேத ஞானம் பெற்ற மூஃமின்களும் சாட்சிகளாக இருக்கிறார்கள். இவையே எனக்கு போதுமானதாகும்” என்று கூறிவிடுவீராக. அவ்வாறு நடப்பதை நான் பார்க்காவிட்டாலும் முஃமின்கள் பார்த்துக் கொள்வார்கள்.