بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ

12:0.அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் அறிவுரைப்படியே அனைத்துக் காரியங்களையும் செய்ய நாடுகிறேன். (பார்க்க 6:162)


الٓر ۚ تِلْكَ ءَايَٰتُ ٱلْكِتَٰبِ ٱلْمُبِينِ.

1. எல்லையில்லா வல்லமைகளையுடைய இரக்கமே வடிவமான ஏக இறைவனாகிய அல்லாஹ்வின் புறத்திலிருந்து இறக்கியருளப்பட்ட இவ்வேதம், தெள்ளத் தெளிவான முறையில் தொகுக்கப்பட்ட வழிகாட்டுதல்களாகும்.


إِنَّآ أَنزَلْنَٰهُ قُرْءَٰنًا عَرَبِيًّۭا لَّعَلَّكُمْ تَعْقِلُونَ.

2. இவ்வேதத்தைக் கொண்டு மனித வாழ்வின் ஓவ்வொரு விஷயத்தைப் பற்றியும் தெளிவாக விளங்கிக் கொண்டு சிறப்பாகச் செயல்பட வேண்டும் என்பதற்காக, நீங்கள் பேசும் மொழியிலேயே நாம் தெள்ளத் தெளிவான முறையில் நாம் இறக்கி அருளியிருக்கிறோம்.


نَحْنُ نَقُصُّ عَلَيْكَ أَحْسَنَ ٱلْقَصَصِ بِمَآ أَوْحَيْنَآ إِلَيْكَ هَٰذَا ٱلْقُرْءَانَ وَإِن كُنتَ مِن قَبْلِهِۦ لَمِنَ ٱلْغَٰفِلِينَ.

3. அதன்படி உமக்கு வஹீ என்னும் இறைவழிகாட்டுல் மூலம் இறக்கி அருளப்படும் இவ்வேதமான குர்ஆனில், காலஞ் சென்ற நபிமார்களின் வரலாற்றுத் தொகுப்புகளையும் அழகிய முறையில் அறிவிக்கிறோம். இதைப் பற்றிய உண்மைகளை நீங்கள் இதற்குமுன் அறிந்தவராக இருந்ததில்லை.
யாஃகூப் நபி என்பவர் இப்றாஹீம் நபியின் பேரனும் இஸ்ஹாக் நபியின் மகனும் ஆவார். அவருக்குப் பிறந்த பன்னிரண்டு பிள்ளைகளில் யூஸுஃப் நபியும் ஒருவர் ஆவார். பத்து மூத்த சகோதரர்கள் யாஃகூப்புடைய முதல் மனைவிக்குப் பிறந்தவர்கள் ஆவார்கள். யூஸுஃப்புடைய தாய் வயிற்றில் பிறந்த தம்பி பின்யாமின் என்பவர் ஆவார். யூஸுஃப் சிறுவனாக இருந்த போது, ஒருமுறை கனவு காண்கிறார். அங்கிருந்து அவருடைய வரலாறு ஆரம்பமாகிறது. கனவுகளின் விளக்கத்திற்கு இந்த அத்தியாயத்தின் கடைசி பக்கத்தை பார்க்கவும்


إِذْ قَالَ يُوسُفُ لِأَبِيهِ يَٰٓأَبَتِ إِنِّى رَأَيْتُ أَحَدَ عَشَرَ كَوْكَبًۭا وَٱلشَّمْسَ وَٱلْقَمَرَ رَأَيْتُهُمْ لِى سَٰجِدِينَ.

4. யூஸுஃப் தம் தந்தையிடம், “என் அருமைத் தந்தையே! பதினோரு நட்சத்திரங்களும் சூரியனும் சந்திரனும் எனக்கு சிரம் பணிவது போன்று நான் கனவு கண்டேன்” என்று கூறிய போது,


قَالَ يَٰبُنَىَّ لَا تَقْصُصْ رُءْيَاكَ عَلَىٰٓ إِخْوَتِكَ فَيَكِيدُوا۟ لَكَ كَيْدًا ۖ إِنَّ ٱلشَّيْطَٰنَ لِلْإِنسَٰنِ عَدُوٌّۭ مُّبِينٌۭ.

5. அவருடைய தந்தை, “என் அருமை மகனே! நீ கண்ட கனவைப் பற்றி உன் சகோதரர்களிடம் சொல்ல வேண்டாம். நீ அவர்களிடம் கூறினால், அவர்கள் உன்னை தீங்கிழைக்க சதி செய்வார்கள். ஏனெனில் அவர்கள் என் அறிவுரைகளை கேட்காமல் தம் மனோ இச்சையின்படி செயல்படுகிறார்கள். அவ்வாறு செயல்படுபவர்களுக்கு ஷைத்தான் என்னும் மனோ இச்சை அவர்களை உணர்ச்சி வேகத்தில் செயல்பட வைத்து, சகோதரர்களுக்கு இடையே பகைமையை ஏற்படுத்திவிடுகிறது” என்றார்.


وَكَذَٰلِكَ يَجْتَبِيكَ رَبُّكَ وَيُعَلِّمُكَ مِن تَأْوِيلِ ٱلْأَحَادِيثِ وَيُتِمُّ نِعْمَتَهُۥ عَلَيْكَ وَعَلَىٰٓ ءَالِ يَعْقُوبَ كَمَآ أَتَمَّهَا عَلَىٰٓ أَبَوَيْكَ مِن قَبْلُ إِبْرَٰهِيمَ وَإِسْحَٰقَ ۚ إِنَّ رَبَّكَ عَلِيمٌ حَكِيمٌۭ.

6. மேலும் அவர், “உன்னுடைய இறைவன் உன்னை ஒரு உயர் இலட்சியத்திற்காக தேர்ந்தெடுக்கப் போகிறான் என்றே எனக்குத் தோன்றுகிறது. நீ உலகில் நிகழ்ந்து வரும் நிகழ்வுகளின் பின்விளைவுகளை அறிந்து கொள்ளும் மிகப் பெரிய ஞானம் உனக்கு இறைவன் புறத்திலிருந்து கிடைக்கும் என்று நான் நினைக்கிறேன். இதற்கு முன்னர் உன்னுடைய மூதாதையராகிய இப்றாஹீம் நபி மற்றும் இஸ்ஹாக் நபி மீது தம் அருளைப் புரிந்தது போல நீயும் அவன் அருளைக் கொண்டு சிறந்த நிலைக்கு வருவாய். உன் இறைவனின் செயல் திட்டங்கள் யாவும் அறிவுப்பூர்வமானதாகவும், முழுக்க முழுக்க ஞானத்தின் அடிப்படையிலும் உள்ளன என்பதை தெரிந்துகொள்” என்று தன் மகனிடம் கூறினார்.
இங்கு ஒரு விஷயத்தை தெளிவாக்க விரும்புகிறோம். யூஸுஃப் நபியின் வரலாறு வெறும் கதை என்று எண்ணி விடாதீர்கள். இந்த வரலாறு சிந்தித்துணரும் மக்களுக்கு பல படிப்பினைகளை அளிக்கும். எனவே இதன் படிப்பினைகளை நாம் ஆங்காங்கே எடுத்துரைத்துள்ளோம்.


.۞ لَّقَدْ كَانَ فِى يُوسُفَ وَإِخْوَتِهِۦٓ ءَايَٰتٌۭ لِّلسَّآئِلِينَ

7. யூஸுஃப்பிடத்திலும் அவர்களுடைய சகோதரர்களின் விஷயத்திலும் ஆழ்ந்து சிந்திப்பவர்களுக்கு பலப் படிப்பினைகள் கிடைக்கும்.


إِذْ قَالُوا۟ لَيُوسُفُ وَأَخُوهُ أَحَبُّ إِلَىٰٓ أَبِينَا مِنَّا وَنَحْنُ عُصْبَةٌ إِنَّ أَبَانَا لَفِى ضَلَٰلٍۢ مُّبِينٍ.

8. யூஸுஃப்பிடம் தமது தந்தை மிகவும் பாசமாக இருப்பதைக் கண்ட மற்ற மகன்கள், “யூஸுஃப் மற்றும் அவருடைய சகோதரரிடத்தில் நம்மைவிட அதிகப் பிரியமுள்ளவராக இருக்கிறார். நாமோ பெரும்பான்மை பலத்துடன் இருக்கிறோம். இதைப் பற்றி சிந்திக்காத நம் தந்தை, மிகப் பெரிய தவறு செய்கிறார்” என்று பேசிக் கொண்டனர்.
கவனித்தீர்களா! யாஃகூப் என்பவர், தம் தந்தை இஸ்ஹாக் நபியிடம் அறிவுரைகளைப் பெற்று சிறப்பாக வாழும் நபியாக இருக்கிறார். அவர் தம் மகன்களிடையே பாரபட்சம் காட்டுவாரா? அந்த பிள்ளைகள்தான் இவருடைய பேச்சைக் கேட்காமல், தம் விருப்பப்படி நடப்பதாகத் தெரிகிறது. எனவேதான் அவர்கள் மீது யாகூப்புக்கு அவ்வளவாக பிரியம் ஏற்படவில்லை.
ஆனால் யூஸுஃப்பும் அவருடைய சகோதரர் பின்யாமினும் அவருடைய அறிவுரையின்படி செயல்படுவதால், அவர்கள் மீது இயல்பாகவே பிரியம் ஏற்பட்டது. இதை புறிந்து கொள்ளாத மூத்த பிள்ளைகள், தம் தந்தையே வழிதவறி செல்வதாக எண்ணிக் கொள்கின்றனர். சிந்திக்காத மக்களிடம் இப்படிப்பட்ட தவறான மனப்பான்மை ஏற்பட்டு விடுவது இயல்புதான். இதனால் போட்டியும் பொறாமையும் குறோத மனப்பான்மையும் வளர்ந்து விடுகிறது. இதைச் சரிகட்ட ஏதாவது ஒரு உபாயத்தை கையாள திட்டம் தீட்டுவார்கள். அவ்வாறே அவர்களும்


ٱقْتُلُوا۟ يُوسُفَ أَوِ ٱطْرَحُوهُ أَرْضًۭا يَخْلُ لَكُمْ وَجْهُ أَبِيكُمْ وَتَكُونُوا۟ مِنۢ بَعْدِهِۦ قَوْمًۭا صَٰلِحِينَ.

9. “யூஸுஃப்பை கொன்று விடுங்கள். அல்லது அவரை நாடு கடத்தி விடுங்கள். அப்போது உங்கள் தந்தைக்கு உங்கள் மீது பாசம் ஏற்பட்டு விடும். இதன்பின் உங்கள் மன வேதனைகள் நீங்கி பாசமுள்ள பிள்ளைகளாக அவரிடம் இருப்பீர்கள்” என்று தங்களுக்குள் ஆலோசித்துக் கொண்டார்கள்.


قَالَ قَآئِلٌۭ مِّنْهُمْ لَا تَقْتُلُوا۟ يُوسُفَ وَأَلْقُوهُ فِى غَيَٰبَتِ ٱلْجُبِّ يَلْتَقِطْهُ بَعْضُ ٱلسَّيَّارَةِ إِن كُنتُمْ فَٰعِلِينَ.

10. அவர்களில் ஒருவன், “நீங்கள் யூஸுஃப்பை கொலை செய்யாதீர்கள். நீங்கள் அவரை ஏதாவது செய்தே ஆகவேண்டும் என்று எண்ணினால் அவரை ஒரு ஆழமான கிணற்றில் தள்ளிவிடுங்கள். அப்போது அதன் வழியாகச் செல்லும் வழிபோக்கர்கள் அவரை எடுத்துக்கொள்ளக் கூடும்” என்று ஆலோசனை கூறினான்.
யூஸுஃப்புக்கு எதிராக ஏதாவது தீங்கிழைத்துதான் அவருடைய தந்தையின் பாசத்தை பெற வேண்டுமா? அவருடைய அறிவுரையின்படி கேட்டு நடந்தாலே அவருக்கு அவர்கள் மேல் பாசம் ஏற்பட்டிருக்குமே. ஆக தவறான வழியில் செல்பவர்களின் சிந்தனை இப்படித்தான் எதிர்மறையாக யோசிக்க தோன்றும்.
அவர்களின் திட்டத்தின்படி யூஸுஃப்பை தங்களுடன் உல்லாசப் பயணத்திற்காக அனுப்பி வைக்கும்படி பலமுறை கேட்டு வந்தனர். ஆனால் அவரை அவர்களுடன் அனுப்பி வைக்க அவருக்கு மனம் ஒப்பவில்லை. அந்த அளவுக்கு அவருக்கு அவர்கள் மேல் நம்பிக்கை இல்லாமல் இருந்தது. இறுதியாக ஒரு நாள் அவர்கள் தம் தந்தையிடம்,


قَالُوا۟ يَٰٓأَبَانَا مَا لَكَ لَا تَأْمَ۫نَّا عَلَىٰ يُوسُفَ وَإِنَّا لَهُۥ لَنَٰصِحُونَ.

11. “எங்கள் தந்தையே! யூஸுஃப்புடைய விஷயத்தில் நீங்கள் ஏன் எங்களை நம்புவதில்லை. மெய்யாகவே நாங்கள் அவருக்கு நன்மையை நாடுபவர்களாகவே இருக்கின்றோம்” என்றனர்.


أَرْسِلْهُ مَعَنَا غَدًۭا يَرْتَعْ وَيَلْعَبْ وَإِنَّا لَهُۥ لَحَٰفِظُونَ.

12. ஒரு நாள் அவர்கள், “நாளைய தினம் நாங்கள் உல்லாசப் பயணத்தை மேற்கொள்ள இருக்கிறோம். எனவே நீங்கள் அவரை எங்களுடன் கண்டிப்பாக அனுப்பித்தான் ஆகவேண்டும். அங்குள்ள கனிவகைகளைப் புசித்துக் கொண்டும் அங்கு விளையாடிக் கொண்டும் அவர் இருப்பார். நிச்சயமாக நாங்கள் அவரைப் பாதுகாத்து பத்திரமாகக் கொண்டு வந்து சேர்ப்போம்” என்று உறுதியளித்தார்கள்.


قَالَ إِنِّى لَيَحْزُنُنِىٓ أَن تَذْهَبُوا۟ بِهِۦ وَأَخَافُ أَن يَأْكُلَهُ ٱلذِّئْبُ وَأَنتُمْ عَنْهُ غَٰفِلُونَ.

13. அதற்கு யாஃகூப் நபி, “நீங்கள் அவனை அழைத்துச் செல்வது, என்னை கவலைக்குள் ஆக்குகிறது. மேலும் நீங்கள் அவனைக் கவனிக்காது பராமுகமாய் இருக்கும் போது, அவனை கொடிய மிருகம் ஏதாவது பிடித்து தின்றுவிடுமோ என்று நான் அஞ்சுகிறேன்” என்றார்.


قَالُوا۟ لَئِنْ أَكَلَهُ ٱلذِّئْبُ وَنَحْنُ عُصْبَةٌ إِنَّآ إِذًۭا لَّخَٰسِرُونَ.

14. அதற்கு அவர்கள், “நாங்கள் எல்லாம் ஒரு கூட்டமாக இருக்கும் போது, அவரைக் கொடிய மிருகம் தீண்ட விட்டு விடுவோமா? அப்படியொரு பெரிய நஷ்டம் ஏற்பட நாங்கள் விடுவோமா?” என்றனர்.
அப்படி எதுவும் நடக்காதவாறு நாங்கள் பார்த்துக் கொள்வோம் என்று உறுதியளித்தனர்.


15. இவ்வாறாக அவர்கள் யூஸுஃப்பை அழைத்துச் சென்று, ஆழமான கிணற்றில் தள்ளிவிட ஒன்று சேர்ந்து முடிவு செய்து இருந்தனர். மறுபக்கம் நாம், “நீர் அவர்களின் செயல்களைப் பற்றி கலலைப்படாதே. அவர்கள் செய்துவரும் செயல்களைப் பற்றி, ஒரு காலத்தில் நீ அவர்களுக்கு உணர்த்துவாய். இதைப்பற்றிய உண்மைகள் அவர்களுக்குத் தெரியாது” என்று யூஸுஃப்புக்கு இறைச்செய்தி வந்தது.
அவ்வாறே அவர்கள் தம் திட்டத்தின்படி ஒரு பெரிய கிணற்றில் அவரை தள்ளிவிட்டு தம் ஊருக்கு திரும்பி வந்து விட்டனர்.


وَجَآءُوٓ أَبَاهُمْ عِشَآءًۭ يَبْكُونَ.

16. இன்னும் அவர்கள் அன்று பொழுது சாயும் நேரத்தில் தம் தந்தையிடம் அழுதுக் கொண்டே வந்தார்கள்.


قَالُوا۟ يَٰٓأَبَانَآ إِنَّا ذَهَبْنَا نَسْتَبِقُ وَتَرَكْنَا يُوسُفَ عِندَ مَتَٰعِنَا فَأَكَلَهُ ٱلذِّئْبُ ۖ وَمَآ أَنتَ بِمُؤْمِنٍۢ لَّنَا وَلَوْ كُنَّا صَٰدِقِينَ.

17. “எங்கள் தந்தையே! நாங்கள் யூஸுஃப்பை எங்களுடைய சாமான்களிடத்தில் விட்டுவிட்டு, ஓடி விளையாடிக் கொண்டே வெகு தூரம் சென்று விட்டோம். அப்போது அந்தப் பக்கமாக வந்த ஒரு கொடிய மிருகம் அவனைப் பிடித்து தின்றுவிட்டது. ஆனால் நாங்கள் உண்மையே சொல்லும் போதும், நீங்கள் எங்களை நம்பவே மாட்டேன் என்கிறீர்கள்.” என்று கூறினார்கள்.


وَجَآءُو عَلَىٰ قَمِيصِهِۦ بِدَمٍۢ كَذِبٍۢ ۚ قَالَ بَلْ سَوَّلَتْ لَكُمْ أَنفُسُكُمْ أَمْرًۭا ۖ فَصَبْرٌۭ جَمِيلٌۭ ۖ وَٱللَّهُ ٱلْمُسْتَعَانُ عَلَىٰ مَا تَصِفُونَ.

18. மேலும் அவர்கள் தம் கூற்றை மெய்ப்பிக்க, யூஸுஃப்புடைய சட்டையில் பொய்யான இரத்தத்தை தடவிக் கொண்டு வந்திருந்தார்கள். அதைப் பார்த்து அதிர்ந்து போன யாஃகூப் நபி, “இல்லை. உங்கள் மனம் தீய காரியத்தை அழகாகக் காண்பித்து விட்டது. இந்த நிலையில் பொறுமையை மேற்கொள்வதே எனக்கு நலமாக இருக்கும். மேலும் நீங்கள் கூறும் விஷயத்தில் எவ்வளவு தூரம் உண்மை இருக்கிறது என்பதை அறிந்துகொள்ள அல்லாஹ்வின் உதவியையே நாடுகிறேன்” என்றார்.


وَجَآءَتْ سَيَّارَةٌۭ فَأَرْسَلُوا۟ وَارِدَهُمْ فَأَدْلَىٰ دَلْوَهُۥ ۖ قَالَ يَٰبُشْرَىٰ هَٰذَا غُلَٰمٌۭ ۚ وَأَسَرُّوهُ بِضَٰعَةًۭ ۚ وَٱللَّهُ عَلِيمٌۢ بِمَا يَعْمَلُونَ.

19. அதன் பின்னர், அந்த காட்டின் வழியாக பயணக் கூட்டம் ஒன்று வந்தது. அந்த கிணற்றிலிருந்து தண்ணீர் இறைக்க அவர்களில் ஒருவரை அனுப்பினார்கள். அதிலிருந்து தண்ணீர் இறைக்க வாளியை விட்டதும், அதை யூஸுஃப் பிடித்துக் கொண்டு அங்கிருந்து கூக்குரலிட்டார். அதைக் கேட்ட அவன் மகிழ்ச்சியில், அந்த கிணற்றில் ஒரு அழகிய சிறுவன் இருப்பதாகக் கூறி அனைவரையும் அழைத்தான். இப்படியாக அனைவரும் சேர்ந்து சிறுவனை மேலே கொண்டுவந்து, யாருக்கும் தெரியாதவாறு அழைத்துச் சென்றுவிட்டனர். அவர்கள் செய்து வந்தவை எல்லாம் அல்லாஹ்வுக்கு நன்கு தெரிந்தே இருந்தன.


وَشَرَوْهُ بِثَمَنٍۭ بَخْسٍۢ دَرَٰهِمَ مَعْدُودَةٍۢ وَكَانُوا۟ فِيهِ مِنَ ٱلزَّٰهِدِينَ.

20. அந்த சிறுவனை நீண்ட நாட்களுக்கு தம்முடன் தங்க வைத்துக்கொள்ள முடியாது என்பதால், அந்தப் பயணக் கூட்டத்தினர் அவனை எகிப்து நாட்டின் கடை வீதியில் அற்பமான விலைக்கு விற்றுவிட தீர்மானித்தனர். இந்த விஷயத்தில் அவர்கள் அந்தச்சிறுவன் மீது சற்றும் பாசம் காட்டவில்லை.


وَقَالَ ٱلَّذِى ٱشْتَرَىٰهُ مِن مِّصْرَ لِٱمْرَأَتِهِۦٓ أَكْرِمِى مَثْوَىٰهُ عَسَىٰٓ أَن يَنفَعَنَآ أَوْ نَتَّخِذَهُۥ وَلَدًۭا ۚ وَكَذَٰلِكَ مَكَّنَّا لِيُوسُفَ فِى ٱلْأَرْضِ وَلِنُعَلِّمَهُۥ مِن تَأْوِيلِ ٱلْأَحَادِيثِ ۚ وَٱللَّهُ غَالِبٌ عَلَىٰٓ أَمْرِهِۦ وَلَٰكِنَّ أَكْثَرَ ٱلنَّاسِ لَا يَعْلَمُونَ.

21. அவ்வாறே அச்சிறுவனை எகிப்து நாட்டைச் சேர்ந்த அரசு அதிகாரி ஒருவர் விலை கொடுத்து வாங்கி, தன் வீட்டிற்கு அழைத்துச் சென்றார். அவர் தம் மனைவியிடம், “இந்தச் சிறுவனை நல்லவிதமாக பராமரித்து வளர்த்து வா. இவனைப் பார்க்கும் போது, ஒரு நல்ல குடும்பத்தைச் சேர்ந்தவனாகத் தெரிகிறான். பிற்காலத்தில் இவன் மூலமாக நமக்கு பலன்கள் பல கிடைக்கும். எனவே இவனை ஒரு அடிமையாக எண்ணாமல் தம் சொந்த மகனைப் போல் வைத்துக் கொள்ளலாம்” என்றார். இவ்வாறாக யூஸுஃப் சகல வசதிகளுடன் வளர்ந்து வர இறைவன் புறத்திலிருந்து ஏற்பாடுகள் ஆயின. மேலும் உலகில் நடைபெற்று வரும் நிகழ்வுகளின் இறுதி விளைவுகள் எப்படி இருக்கும் என்பதை அறிந்து கொள்ளும் ஞானமும் அறிவாற்றலும் சிறப்பாக வளர இறைவன் புறத்திலிருந்து பாக்கியங்கள் கிடைத்தன. இப்படியாக அல்லாஹ்வின் செயல்திட்டங்கள் யாவும் யாதொரு தடையுமின்றி சிறப்பாக நிறைவேறி வந்தன. ஆனால் மக்களில் பெரும்பாலோர் இதைப் பற்றி சிந்தித்து அறிவதில்லை.
இவரைத் தத்தெடுத்த நபர் ஒரு அரச சபையில் உயர் பதவியில் இருந்தவர் என்பது பின்வரும் நிகழ்வுகளிலிருந்து நமக்குப் புலனாகிறது. மேலும் ஒரு நபி எனப்படுபவர் ஒரு சாதராண மனிதராக இருப்பினும், அவருள் அறிவாற்றலும் செயல்திறனும் சிறப்பாக இருத்தல் அவசியமாகிறது. அப்போது தான் அவர் வருங்காலத்தில் சிறந்த மாமனிதராக விளங்கமுடியும். உலக மக்களை சீர்திருத்த ஆவன செய்வார். அவரை தத்தெடுத்துக் கொண்டவர்கள் அவரை நல்லவிதமாக கல்வி பயில ஏற்பாடு செய்திருப்பார்கள். மேலும் நபித்துவ தேர்வில் இருப்பவர்கள் இறைவனின் நேரடி கண்காணிப்பில் வளர்ந்து வந்ததாகவும் இவ்வாசகத்திலிருந்து நமக்குப் புலனாகிறது. ஆக நாமும் இப்படிப்பட்ட அறிவாற்றலை வளர்த்துக் கொள்ள முயல வேண்டும்.


وَلَمَّا بَلَغَ أَشُدَّهُۥٓ ءَاتَيْنَٰهُ حُكْمًۭا وَعِلْمًۭا ۚ وَكَذَٰلِكَ نَجْزِى ٱلْمُحْسِنِينَ.

22. இப்படியாக அவர் சிறப்பாக வளர்ந்து வாலிப வயதை அடைந்தார். மேலும் அவர் உலக விவகாரங்களை அறிந்துகொள்ளும் ஞானமும், அவற்றை சரி செய்வது எப்படி என்கிற கல்வியறிவும் கற்று, சிறந்த செயல் வீரராக விளங்கினார். இவை எல்லாம் அவரிடம் இருந்த நன்நடத்தையின் பலனாகக் கிடைத்தவையாகும். இதுவே இறைவனின் நியதியாகும்.
மேலும் சிறு வயதில் வாழ்ந்து வந்த கிராமத்தில் இப்படிப்பட்ட உயர் கல்வியும் ஞானமும் பெறுவதற்கு வாய்ப்பு இருந்திருக்காது. எனவே தான் இந்த ஏற்பாடுகள் இறைவன் புறத்திலிருந்து செய்யப்பட்டன. இவை யாவும் நபித்துவ தொடர் இருந்த காலத்தில் நடந்தவை ஆகும். (விளக்கத்திற்கு பார்க்க 5:3)
இப்படியாக யூஸுப் நபி வாலிப வயதை அடைந்த நிலையில், அவர் வாழ்ந்து வந்த வீட்டின் எஜமானிக்கு அவர் மீது மோகம் ஏற்பட்டது. எனவே அவரை எப்படியாவது அடையவேண்டும் என்று உறுதி கொண்டிருந்தாள். அப்படியும் ஒரு நாள்


وَرَٰوَدَتْهُ ٱلَّتِى هُوَ فِى بَيْتِهَا عَن نَّفْسِهِۦ وَغَلَّقَتِ ٱلْأَبْوَٰبَ وَقَالَتْ هَيْتَ لَكَ ۚ قَالَ مَعَاذَ ٱللَّهِ ۖ إِنَّهُۥ رَبِّىٓ أَحْسَنَ مَثْوَاىَ ۖ إِنَّهُۥ لَا يُفْلِحُ ٱلظَّٰلِمُونَ.

23. அவர் தனித்திருந்த போது, அவ்வீட்டின் பெண்மணி அவர் மீது விருப்பங் கொண்டு, கதவுகளை தாழிட்டுக் கொண்டு, தம் விருப்பத்திற்கு இணங்கி வருமாறு வற்புறுத்தினாள். அதற்கு இணங்க மறுத்த அவர், “அல்லாஹ் என்னை காத்தருள்வானாக. நிச்சயமாக உன் கணவராகிய என் எஜமானர், என்னை மதிப்பு மறியாதையுடன் கவனித்து வருகிறார். அவருக்கு நான் நம்பிக்கைத் துரோகம் செய்வதா? இப்படி அநியாயம் செய்பவர்கள் ஒருபோதும் தம் வாழ்வின் லட்சியத்தில் வெற்றி பெறவே மாட்டார்கள் என்பதை அறிந்து கொள்” என்று கூறி அவளை விட்டு வெளியே வர முற்பட்டார்.


وَلَقَدْ هَمَّتْ بِهِۦ ۖ وَهَمَّ بِهَا لَوْلَآ أَن رَّءَا بُرْهَٰنَ رَبِّهِۦ ۚ كَذَٰلِكَ لِنَصْرِفَ عَنْهُ ٱلسُّوٓءَ وَٱلْفَحْشَآءَ ۚ إِنَّهُۥ مِنْ عِبَادِنَا ٱلْمُخْلَصِينَ.

24. ஆனால் அவரை எப்படியாவது அடைந்து விட அவள் உறுதியாக இருந்தாள். ஆனால் யூஸுஃப்புக்கோ இறைவனின் வழிகாட்டுதல்கள் கிடைத்திருந்ததால், அவளுடைய விருப்பத்திற்கு அவர் இணங்கவே இல்லை. இப்படியாக இறைவனின் நியதிப்படி மானக்கேடானச் செயலை செய்வதை விட்டு அவரால் தடுத்துக்கொள்ள முடிந்தது. அதுமட்டுமின்றி அதனால் ஏற்படும் தீங்கிலிருந்து பாதுகாப்பும் கிடைத்தது. இப்படியாக அவர் அல்லாஹ்வின் நல்லடியார்களில் ஒருவராக இருந்தார்.
கவனித்தீர்களா? வாலிப வயதில் அதுவும் எப்படிப்பட்ட தர்ம சங்கடமான தருணம்? எப்படிப்பட்ட ஆடவரும் இப்படி ஒரு சந்தர்ப்பத்தை நழுவ விடுவானா? ஆனால் இவ்வாறு செய்வதை விட்டு யூஸுஃப் நபியைக் கட்டுப்படுத்தியது எது என்பதை கவனித்தீர்களா? அல்லாஹ்வின் அச்சம்தான் அவரை தடுத்தது. அதாவது இப்படிப்பட்ட தவறான உறவுகளை வைத்துக் கொண்டால், தன் வருங்கால வாழ்வு எவ்வாறு திசைமாறிச் சென்று, இறைவனின் நியதிப்படி பல்வேறு தீய விளைவுகளுக்கு (Cause & Effects) ஆளாக வேண்டியிருக்கும் என்பதை நன்கு அறிந்திருந்தார்.
எனவேதான் அவர் அவளை விட்டு விரண்டோட எண்ணினார். ஆக இறையச்சம் உள்ள ஒவ்வொருவரும் இப்படிப்பட்ட தகாத செயலை ஒருபோதும் செய்ய மாட்டார்கள் என்பதே உலக மக்களுக்கு கிடைக்கின்ற படிப்பினையாகும். இப்படியாக ஒவ்வொருவரும் இறைவனின் நல்லடியார்களின் பட்டியலில் இடம் பெற நாடுவோமாக.


وَٱسْتَبَقَا ٱلْبَابَ وَقَدَّتْ قَمِيصَهُۥ مِن دُبُرٍۢ وَأَلْفَيَا سَيِّدَهَا لَدَا ٱلْبَابِ ۚ قَالَتْ مَا جَزَآءُ مَنْ أَرَادَ بِأَهْلِكَ سُوٓءًا إِلَّآ أَن يُسْجَنَ أَوْ عَذَابٌ أَلِيمٌۭ.

25. இப்படியாக யூஸுஃப் அவளை விட்டு தப்பி ஓட முயன்று, ஒருவரை ஒருவர் முந்திக்கொள்ள, கதவின் பக்கம் இருவரும் ஓடினார்கள். இதனால் அவருடைய சட்டை பின்புறத்தில் கிழித்து விட்டது. அப்படியும் கதவை திறந்ததும் எதிரே அவளுடைய கணவர் நிற்பதைக் கண்டனர். உடனே தன் குற்றத்தை மறைக்க, அவள், “உம் மனைவியின் மானத்தோடு விளையாட இவன் நாடுகிறான். எனவே அவனுக்குத் தக்க தண்டனை அளிக்க வேண்டும். இவனை சிறையிலடைத்து சாட்டை அடி கொடுக்கவேண்டும். அல்லது வேறு என்ன கடுமையான தண்டனை இருக்கிறதோ அதை இவனுக்குக் கொடுக்க வேண்டும்” என்று மன விரக்தியுடன் ஆவேசப்பட்டாள்.


قَالَ هِىَ رَٰوَدَتْنِى عَن نَّفْسِى ۚ وَشَهِدَ شَاهِدٌۭ مِّنْ أَهْلِهَآ إِن كَانَ قَمِيصُهُۥ قُدَّ مِن قُبُلٍۢ فَصَدَقَتْ وَهُوَ مِنَ ٱلْكَٰذِبِينَ.

26. அதற்கு, “இவள்தான் தன் ஆசைக்கு இணங்கி வருமாறு என்னை வற்புறுத்தி அழைத்தாள்” என்று கூறி அவளுடைய குற்றச்சாட்டிற்கு மறுப்பு தெரிவித்தார். இதைப் பற்றி அங்கிருந்த சட்ட வல்லுனர்கர்களிடம் ஆலோசனை கேட்கப்பட்டது. அவர்களில் ஒருவர், இவருடைய சட்டை முன்புறத்தில் கிழிந்திருந்தால் அவள் உண்மை சொல்கிறாள். இவர் பொய்யராகிறார் என்று பொருள்படும்” என்றார்.


وَإِن كَانَ قَمِيصُهُۥ قُدَّ مِن دُبُرٍۢ فَكَذَبَتْ وَهُوَ مِنَ ٱلصَّٰدِقِينَ.

27. மேலும் அவர், “ஓரு வேளை சட்டை பின்புறத்திலிருந்து கிழிந்திருந்தால் அவள் பொய் சொல்கிறாள். இவர் உண்மையாளர்களில் உள்ளவராக இருப்பதாகப் பொருள்படும்” என்றனர்.
சிந்தனையாளர்களே! கவனித்தீர்களா? அந்தக் காலத்திலும் குற்றத்தை நிரூபிக்க சட்ட ஆலோசகர்களின் உதவியை நாடி இருக்கிறார்கள். அவர்களும் அறிவுப்பூர்வமான ஆதாரங்களுடன் நடந்த உண்மைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளார்கள். எனவே குற்றச்சாட்டைக் கேட்டதும் தீர விசாரிக்காமல் தண்டனை அளிப்பது நியாயமாகுமா? மேலும் தகாத உறவுகள் ஏற்பட்டதற்கு நான்கு சாட்சியங்கள் இருத்தல் அவசியம் என்று 4:15, 24:4 வாசகங்கள் கூறுகின்றன. சாட்சியங்கள் விஷயத்தில் இச்சம்பவமும் ஒரு ஆதாரமாகும். அதாவது சந்தர்ப்ப சூழ்நிலையின் ஆதாரத்தைக் கொண்டு (Circumstancial evidence) வைத்து தகாத உறவு ஏற்பட்டதா இல்லையா என்பதை தெரிந்து கொள்ளலாம். ஆக


فَلَمَّا رَءَا قَمِيصَهُۥ قُدَّ مِن دُبُرٍۢ قَالَ إِنَّهُۥ مِن كَيْدِكُنَّ ۖ إِنَّ كَيْدَكُنَّ عَظِيمٌۭ.

28. யூஸுஃப்புடைய சட்டை பின்புறமாகக் கிழிந்திருந்ததை அவர்கள் கண்டபோது, “இது பெண்ணின் சதி திட்டமே ஆகும். அவளுடைய சதி திட்டம் மிகவும் மோசமானதே” என்று தீர்ப்பானது.


يُوسُفُ أَعْرِضْ عَنْ هَٰذَا ۚ وَٱسْتَغْفِرِى لِذَنۢبِكِ ۖ إِنَّكِ كُنتِ مِنَ ٱلْخَاطِـِٔينَ.

29. எனவே அந்த எஜமானன் யூஸுஃப்பைப் பார்த்து, “யூஸுஃப்பே! இதனை நீர் இதோடு விட்டுவிடு. இதை நீ பெரிது படுத்தாதே” என்று கூறி, தன் மனைவியைப் பார்த்து, “நீ செய்தது மிகவும் பாவச் செயலாகும். அவ்வாறு செயல்படுவதை விட்டு, நீ பாதுகாப்பாக இருக்க வழியை தேடிக்கொள். நிச்சயமாக இந்தப் பாவச் செயல் உன் புறத்திலிருந்தே நடந்துள்ளது” என்று எச்சரித்தார்.


۞ وَقَالَ نِسْوَةٌۭ فِى ٱلْمَدِينَةِ ٱمْرَأَتُ ٱلْعَزِيزِ تُرَٰوِدُ فَتَىٰهَا عَن نَّفْسِهِۦ ۖ قَدْ شَغَفَهَا حُبًّا ۖ إِنَّا لَنَرَىٰهَا فِى ضَلَٰلٍۢ مُّبِينٍۢ.

30. ஆனால் அரண்மனையில் நடந்த இந்த விஷயம், ஊரெல்லாம் பரவிவிட்டது. எனவே அப்பட்டணத்தில் இருந்த சில பெண்கள், “அஜீஸின் மனைவி தன்னிடமுள்ள ஒரு அடிமை வாலிபன் மீது மோகங் கொண்டு தன் ஆசைக்கு இணங்கும்படி வற்புறுத்தினாளாம். அவன் மேலுள்ள மோகம் அவளை மயக்கி விட்டது. அவள் தன் ஆசையை நிறைவேற்றிக் கொள்ள அவள் கையாண்ட முறைதான் சரியில்லை. அதனால் தான் அவள் குற்றவாளி ஆகிவிட்டாள்” என்று பேசிக் கொண்டார்கள்.
அந்நாட்டில் இருந்த பெண்களின் மனோநிலை எவ்வாறு இருந்தது என்பதைக் கவனித்தீர்களா? அஜீஸின் மனைவி செய்த செயலில் தவறு ஒன்றுமில்லை. ஆனால் அவள் கையாண்ட முறைதான் தவறு என்கிறார்கள். இதுதான் இறைவழிகாட்டுதலைப் பின்பற்றாத மக்களில் இருக்கும் தவறான மனப்பான்மையாகும்.


فَلَمَّا سَمِعَتْ بِمَكْرِهِنَّ أَرْسَلَتْ إِلَيْهِنَّ وَأَعْتَدَتْ لَهُنَّ مُتَّكَـًۭٔا وَءَاتَتْ كُلَّ وَٰحِدَةٍۢ مِّنْهُنَّ سِكِّينًۭا وَقَالَتِ ٱخْرُجْ عَلَيْهِنَّ ۖ فَلَمَّا رَأَيْنَهُۥٓ أَكْبَرْنَهُۥ وَقَطَّعْنَ أَيْدِيَهُنَّ وَقُلْنَ حَٰشَ لِلَّهِ مَا هَٰذَا بَشَرًا إِنْ هَٰذَآ إِلَّا مَلَكٌۭ كَرِيمٌۭ.

31. இதைப் பற்றி கேள்வியுற்ற அஜீஸின் மனைவி, ஊரிலுள்ள சில பெண்களை விருந்திற்காக அழைப்பு விடுத்தாள். இதற்காக அவள் சாய்மானங்களை சித்தப்படுத்தி வைத்தாள். அவர்கள் முன் பழங்களை அறுக்கும் கத்திகளையும் வைத்து விட்டாள். அவர்கள் அனைவரும் அங்கு வந்ததும், யூஸுஃப்பை அவர்கள் முன் வரும்படி கேட்டுக் கொண்டாள். அப்பெண்களும் யூஸுஃப்பைப் பார்த்து, தம் மோக வலையில் சிக்க வைக்க முயன்றனர்.
ஆனால் அதில் அவர்கள் தோல்வியைக் கண்டனர். அவர் அந்த அளவிற்கு உயர் பண்புள்ளவராக இருந்தார். அவர்கள் அவர் மேலுள்ள காதலை வெளிப்படுத்த, அங்கு வைக்கப்பட்டிருந்த கத்தியால் தம் கைகளையும் காயப்படுத்திக் காட்டினர். ஆனால் அவர் அதற்கும் மசியவே இல்லை.
அவர்கள் தம் முயற்சியில் தோல்வியைக் கண்டதும், அவர்கள், “யா அல்லாஹ்! நீயே பரிசுத்தமானவன்! உண்மையிலே இவர் சாதாரண மனிதராகவே இல்லை. நிச்சயமாக இவர் அல்லாஹ்வின் கட்டளைக்கு இணங்கி வாழும் மலக்காகவே இருக்கிறார். அதனால் தான் இவரை தம் மோக வலையில் சிக்க வைக்கவே முடியவில்லை” என்று பிரம்மித்து கூறினார்கள்.
அதாவது ஒழுக்கமுள்ள சமுதாயங்களில் வாழும் பெண்கள், தம் கற்புக்கு பங்கம் ஏற்படாதவாறு பார்த்துக் கொள்வார்கள். எப்படிப்பட்ட ஆண் அழகனைப் பார்த்தாலும், அவன் மேல் ஆசை கொள்ளும் சபலம் அவர்களிடம் ஒருபோதும் இருக்காது. ஆனால் ஒழுக்கமற்ற சமுதாயங்களில் பிற ஆடவருடன் தொடர்பு வைத்துக் கொள்வதில் தவறு ஒன்றும் இல்லை என்ற மனப்பான்மை பெரும்பாலான பெண்களிடம் வளர்ந்து விடும். எனவேதான் யூஸுஃப்பைக் கண்டு அவரையும் மயக்க அவர்கள் முயன்றனர். ஆக இவை யாவும், அந்த சமுதாயத்தில் ஒழுக்க மாண்புகள் எந்த அளவிற்குச் சீர்கெட்டு இருந்தது என்பதையே பிரதிபலிக்கிறது. அஜீஸின் மனைவியைப் பற்றி தரக்குறைவாக பேசிய பெண்களின் நிலைமையும் அதுவே என்பதை எடுத்துக் காட்டவே இந்த கபட நாடகத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. (பார்க்க 12:50)


قَالَتْ فَذَٰلِكُنَّ ٱلَّذِى لُمْتُنَّنِى فِيهِ ۖ وَلَقَدْ رَٰوَدتُّهُۥ عَن نَّفْسِهِۦ فَٱسْتَعْصَمَ ۖ وَلَئِن لَّمْ يَفْعَلْ مَآ ءَامُرُهُۥ لَيُسْجَنَنَّ وَلَيَكُونًۭا مِّنَ ٱلصَّٰغِرِينَ.

32. அப்போது அவள், “நீங்கள் எவர் சம்பந்தமாக என்னை விமர்சித்தீர்களோ, அவர்தான் இவர். நான் அவரை என் விருப்பத்திற்கு இணங்கும்படி வற்புறுத்தியது உண்மைதான். ஆனால் அவர் மன உறுதியுடன் தம்மை காத்துக் கொண்டார். இனியும் அவர் என் ஆசைக்கு இணங்கி வராவிட்டால், அவர் மீது ஏதாவது பழி சுமத்தி சிறையிலடைக்க முயல்வேன். இப்படியாக அவரைச் சிறுமை அடைந்தவர்களில் ஒருவராகவும் ஆக்கிவிடுவேன்” என்று சொன்னாள்.


قَالَ رَبِّ ٱلسِّجْنُ أَحَبُّ إِلَىَّ مِمَّا يَدْعُونَنِىٓ إِلَيْهِ ۖ وَإِلَّا تَصْرِفْ عَنِّى كَيْدَهُنَّ أَصْبُ إِلَيْهِنَّ وَأَكُن مِّنَ ٱلْجَٰهِلِينَ.

33. இதைப் பற்றி கேள்வியுற்ற யூஸுஃப், “என் இறைவனே! இவர்கள் என்னை எதன் பக்கம் அழைக்கிறார்களோ, அதைவிட சிறைவாசமே மேலானதாகும். இவர்களுடைய சதியை விட்டு நான் பாதுகாப்பாக இருக்க எனக்கு மன வலிமையைக் கொடு. இல்லையெனில் அவர்கள் சதியில் நான் சிக்கி அறிவில்லாதவர்களில் ஒருவனாக ஆகிவிடுவேன்” என்றார்.


فَٱسْتَجَابَ لَهُۥ رَبُّهُۥ فَصَرَفَ عَنْهُ كَيْدَهُنَّ ۚ إِنَّهُۥ هُوَ ٱلسَّمِيعُ ٱلْعَلِيمُ.

34. எனவே அவருடைய வேண்டுதலின்படி அவர்களிலிருந்து பாதுகாப்பாக இருக்க இறைவன் புறத்திலிருந்து ஏற்பாடுகள் ஆயின. அப்பெண்களின் சதியில் அவர் ஒரு போதும் சிக்கவில்லை. நிச்சயமாக இறைவன் அனைத்து விஷயங்களையும் அறிபவனாகவும் கேட்பவனாகவும் இருக்கிறான்.


ثُمَّ بَدَا لَهُم مِّنۢ بَعْدِ مَا رَأَوُا۟ ٱلْءَايَٰتِ لَيَسْجُنُنَّهُۥ حَتَّىٰ حِينٍۢ.

35. இப்படியாக யூஸுஃப் குற்றமற்றவர் என்பதற்கு ஆதாரங்கள் பல இருந்தும், அவர் மீது குற்றம் சுமத்தி அவருக்கெதிராக வழக்கு தொடரப்பட்டது. அப்பெண்கள் அவருக்கெதிராக சாட்சி சொல்லி, அவரை சிறையில் அடைக்க வேண்டும் என்று தீர்ப்பானது.
அதாவது பணத்தையும் அதிகாரத்தையும் வைத்துக் கொண்டு தீர்ப்பை எப்படி வேண்டுமானாலும் தம் பக்கம் செய்து கொள்ளலாம் என்பதே அக்காலத்திலும் இக்காலத்திலும் நடக்கும் விஷயங்களாகும். ஆக இறைவழிகாட்டுதலைப் பின்பற்றாத சமுதாயங்களில் இவையாவும் பொதுவான விஷயம்தான்.
இதனால் அவர் சிறையில் அடைக்கப்பட்டார். அங்கும் அவர் தன் நன் நடத்தையைக் கொண்டு அனைவரிடமும் சிறப்பாகப் பழகி, அவர்களிடம் இறைவழிகாட்டுதலின் சிறப்புகளை எடுத்துரைத்து வந்தார் (பார்க்க 12:40).


وَدَخَلَ مَعَهُ ٱلسِّجْنَ فَتَيَانِ ۖ قَالَ أَحَدُهُمَآ إِنِّىٓ أَرَىٰنِىٓ أَعْصِرُ خَمْرًۭا ۖ وَقَالَ ٱلْءَاخَرُ إِنِّىٓ أَرَىٰنِىٓ أَحْمِلُ فَوْقَ رَأْسِى خُبْزًۭا تَأْكُلُ ٱلطَّيْرُ مِنْهُ ۖ نَبِّئْنَا بِتَأْوِيلِهِۦٓ ۖ إِنَّا نَرَىٰكَ مِنَ ٱلْمُحْسِنِينَ.

36. ஒரு நாள், அவருடன் இருந்த கைதிகளில் இருவர் அவரிடம் வந்தார்கள். அவ்விருவரும், தாம் கண்ட கனவைப் பற்றி அவரிடம் எடுத்துரைத்தனர். அதில் ஒருவன், தான் திராட்சை பழரசத்தை பிழிவதைப் போல் கனவு கண்டதாகக் கூறினான். மற்றவன், தன் தலைமீது ரொட்டி சுமப்பது போலவும் அவற்றை பறவைகள் தின்பது போலவும் கனவு கண்டதாகக் கூறினான். இந்த கனவுகளின் பொருள் என்ன என்பதை தமக்கு தெரிவிக்கும்படி யூஸுஃப்பிடம் கேட்டுக் கொண்டனர். ஏனெனில் யூஸுஃப் மிகவும் உயர்ந்த சிந்தனையுள்ளவராக இருப்பதை அவர்கள் கண்டார்கள்.


قَالَ لَا يَأْتِيكُمَا طَعَامٌۭ تُرْزَقَانِهِۦٓ إِلَّا نَبَّأْتُكُمَا بِتَأْوِيلِهِۦ قَبْلَ أَن يَأْتِيَكُمَا ۚ ذَٰلِكُمَا مِمَّا عَلَّمَنِى رَبِّىٓ ۚ إِنِّى تَرَكْتُ مِلَّةَ قَوْمٍۢ لَّا يُؤْمِنُونَ بِٱللَّهِ وَهُم بِٱلْءَاخِرَةِ هُمْ كَٰفِرُونَ.

37. அதற்கு அவர், “உங்கள் இருவருக்கும் நான் கனவின் விளக்கங்களை, உணவு வேளைக்கு முன்பே கூறிவிடுவேன். ஆனால் அதற்குமுன் நான் யார் என்பதையும், என்ன கொள்கைளை மேற்கொள்பவன் என்பதையும் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். நான் சொல்லப் போகும் விஷயம் எல்லாம் என் தனிப்பட்ட கருத்துக்கள் அல்ல. என் இறைவன் எனக்கு கற்று கொடுத்த ஞானத்தின் அடிப்படையில் நான் உங்களுக்கு எடுத்துரைக்கிறேன். அதன் அடிப்படை கோட்பாடு என்னவென்றால் அல்லாஹ்வையும் அவன் நிர்ணயித்துள்ள, “மனித செயல்களுக்கு ஏற்ற இறுதி விளைவுகள்” என்ற சட்டங்களையும் ஏற்றுக் கொள்ளாமல் தம் மனம் போன போக்கில் வாழ்பவர்களில் நான் ஒருவனாக இல்லை.
கவனித்தீர்களா? ஒர் இறைத்தூதர் என்பவர் எந்த நிலையிலும், சமயம், சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம், ஓரிறை கொள்கையை மக்களுக்கு எடுத்துரைத்து அவர்களை திருத்துவதே தன் லட்சியப் பணியாக கருதுகின்றார். இந்த வழிமுறையை நாமும் கடைபிடிக்க வேண்டும்.


وَٱتَّبَعْتُ مِلَّةَ ءَابَآءِىٓ إِبْرَٰهِيمَ وَإِسْحَٰقَ وَيَعْقُوبَ ۚ مَا كَانَ لَنَآ أَن نُّشْرِكَ بِٱللَّهِ مِن شَىْءٍۢ ۚ ذَٰلِكَ مِن فَضْلِ ٱللَّهِ عَلَيْنَا وَعَلَى ٱلنَّاسِ وَلَٰكِنَّ أَكْثَرَ ٱلنَّاسِ لَا يَشْكُرُونَ.

38. மேலும் அவர், “நீங்கள் இப்றாஹீம் இஸ்ஹாக் மற்றும் யாஃகூப் போன்றவர்களின் பெயரை கேள்விப்பட்டு இருப்பீர்கள். நான் அவர்கள் பின்பற்றிய மார்க்கத்திலேயே இருப்பவன். அவர்கள் அனைவரும் அல்லாஹ்வின் வழிகாட்டுதலுக்கு இணையாக வேறு எந்த வழிமுறையையும் பின்பற்றவில்லை. இந்த வழிகாட்டுதல்கள் யாவும் எங்கள் மீதும் மற்றவர்கள் மீதும் அல்லாஹ் புரிந்த அருட்கொடைகளாகும். ஆனால் பெரும்பாலான மக்கள் இந்த உண்மைகளை அறிந்து கொள்ளாமல் அல்லாஹ்வுக்கு நன்றி விசுவாசத்துடன் நடந்து கொள்வதில்லை” என்று கூறினார்.


يَٰصَىٰحِبَىِ ٱلسِّجْنِ ءَأَرْبَابٌۭ مُّتَفَرِّقُونَ خَيْرٌ أَمِ ٱللَّهُ ٱلْوَٰحِدُ ٱلْقَهَّارُ.

39. “சிறையில் இருக்கும் என் தோழர்களே! மனிதனின் ஒவ்வொரு தேவைக்கும் ஒரு தெய்வம் என எண்ணி அவற்றிடம் மன்றாடிக் கொண்டிருப்பது சிறந்ததா அல்லது எல்லா தேவைகளையும் நிறைவேற்றும் பேராற்றலுடைய ஒரே இறைவனின் கட்டளைக்கு இணங்கி செயல்படுவது சிறந்ததா என்பதை நீங்களே சிந்தியுங்கள். ஆக அகிலங்கள் அனைத்தையும் கட்டுக்கோப்பாக ஆளும் இறைவன், அல்லாஹ் ஒருவனே ஆவான்” என்பதை அறிந்து கொள்ளுங்கள்.


مَا تَعْبُدُونَ مِن دُونِهِۦٓ إِلَّآ أَسْمَآءًۭ سَمَّيْتُمُوهَآ أَنتُمْ وَءَابَآؤُكُم مَّآ أَنزَلَ ٱللَّهُ بِهَا مِن سُلْطَٰنٍ ۚ إِنِ ٱلْحُكْمُ إِلَّا لِلَّهِ ۚ أَمَرَ أَلَّا تَعْبُدُوٓا۟ إِلَّآ إِيَّاهُ ۚ ذَٰلِكَ ٱلدِّينُ ٱلْقَيِّمُ وَلَٰكِنَّ أَكْثَرَ ٱلنَّاسِ لَا يَعْلَمُونَ.

40. “அல்லாஹ்வின் வழிகாட்டுதலை விட்டுவிட்டு, நீங்கள் வணங்கிக் கொண்டிருப்பவை யாவும் நீங்களும் உங்கள் மூதாதையர்களும் வைத்துக் கொண்ட கற்பனைப் பெயர்களே அன்றி வேறில்லை. அவை எவ்வித சக்தியும் பெற்றவையாக இல்லை. அல்லாஹ்வின் புறத்திலிருந்தும் எவ்வித சக்தியோ ஆற்றலோ அவற்றிற்கு அளிக்கப்படவும் இல்லை. அல்லாஹ் ஒருவனுக்கே அன்றி வேறு யாருடைய அதிகாரத்திற்கும் அடிபணிந்து செயல்பட வேண்டிய அவசியமில்லை. அல்லாஹ்வின் வழிகாட்டுதலின் படியே இவ்வுலகில் மனிதனும் ஆட்சி செய்ய வேண்டும். இதுவே அல்லாஹ்வின் கட்டளையாகும். மனிதனின் சிறப்பான வாழ்விற்குத் தேவையான நிலையான மார்க்கமும் இதுவே ஆகும். ஆனால் மனிதர்களில் பெரும்பாலோர் இந்த உண்மைகளை அறிந்து கொள்வதில்லை” என்று போதித்தார்.


يَٰصَىٰحِبَىِ ٱلسِّجْنِ أَمَّآ أَحَدُكُمَا فَيَسْقِى رَبَّهُۥ خَمْرًۭا ۖ وَأَمَّا ٱلْءَاخَرُ فَيُصْلَبُ فَتَأْكُلُ ٱلطَّيْرُ مِن رَّأْسِهِۦ ۚ قُضِىَ ٱلْأَمْرُ ٱلَّذِى فِيهِ تَسْتَفْتِيَانِ.

41. “சிறையில் இருக்கும் என் தோழர்களே! இப்போது நீங்கள் இருவர் கண்ட கனவுகளின் பொருளடக்கத்தை நான் அறிவிக்கிறேன். உங்களில் ஒருவர் தம் அரசனுக்கு திராட்சை பழரசத்தை புகட்டும் வேலை வாய்ப்பைப் பெறுவார். மற்றவர் தூக்கில் இடப்பட்டு அவருடைய தலையை பறவைகள் கொத்தித் தின்னும். நீங்கள் இருவரும் கண்ட கனவுகளின் விளக்கம் கோரியதன் பலன்கள் இவையே ஆகும். இவ்வாறே உங்களுக்கு தீர்ப்புகள் கிடைக்கும்” என்று யூஸுஃப் நபி அவர்களிடம் எடுத்துரைத்தார்.

<

وَقَالَ لِلَّذِى ظَنَّ أَنَّهُۥ نَاجٍۢ مِّنْهُمَا ٱذْكُرْنِى عِندَ رَبِّكَ فَأَنسَىٰهُ ٱلشَّيْطَٰنُ ذِكْرَ رَبِّهِۦ فَلَبِثَ فِى ٱلسِّجْنِ بِضْعَ سِنِينَ.

42. மேலும் அவர், அவ்விருவரில் விடுதலை பெறுபவரிடம், தான் எடுத்துரைத்த இறை அறிவுரைகளை மன்னரிடம் கூறும்படி கேட்டுக் கொண்டார். ஆனால் அவர் விடுதலை பெற்றபின் அந்த உண்மைகளை மன்னரிடம் எடுத்துரைக்க மறந்து விட்டார். அந்த அளவிற்கு அவனிடம் ஞாபகச் சக்தி குறைவாக இருந்தது. மன இச்சையின் படி செயல்படுபவர்களின் நிலை இவ்வாறாகத் தான் இருக்கும். இப்படியாக யூஸுஃப் நபி சில ஆண்டுகள் வரையில் சிறையில் இருக்க நேர்ந்தது.
அதன் பின் அந்நாட்டு மன்னர் ஒரு கனவு காண்கிறார். அதன் விளக்கத்தைப் பெற அவர் பலரிடம் யோசனைகளைக் கேட்கிறார். ஆனால் யாராலும் அதன் விளக்கத்தைத் தரமுடியவில்லை.


وَقَالَ ٱلْمَلِكُ إِنِّىٓ أَرَىٰ سَبْعَ بَقَرَٰتٍۢ سِمَانٍۢ يَأْكُلُهُنَّ سَبْعٌ عِجَافٌۭ وَسَبْعَ سُنۢبُلَٰتٍ خُضْرٍۢ وَأُخَرَ يَابِسَٰتٍۢ ۖ يَٰٓأَيُّهَا ٱلْمَلَأُ أَفْتُونِى فِى رُءْيَٰىَ إِن كُنتُمْ لِلرُّءْيَا تَعْبُرُونَ.

43 அந்த மன்னர், “நான் ஏழு கொழுத்த பசுக்களை, ஏழு மெலிந்த பசுக்கள் தின்பதையும், வேறு ஏழு பசுமையான கதிர்களையும், மற்ற ஏழு உலர்ந்த கதிர்களையும் நான் கனவில் கண்டேன். அரசவை பிரதானிகளே! கனவுகளின் விளக்கத்தை சொல்லக் கூடிய ஞானம் உங்களிடம் இருந்தால், என் கனவின் விளக்கத்தை எனக்கு அறிவியுங்கள்” என்று அரசபையைக் கூட்டிக் கூறினார்.


قَالُوٓا۟ أَضْغَٰثُ أَحْلَٰمٍۢ ۖ وَمَا نَحْنُ بِتَأْوِيلِ ٱلْأَحْلَٰمِ بِعَٰلِمِينَ.

44. இதைக் கேட்ட அந்த அரசவைத் மந்திரிகள், “இவை யாவும் குழப்பமான கனவுகளே ஆகும். எனவே நாங்கள் கனவுகளுக்கு விளக்கங் கூற அறிந்தவர்கள் அல்லர்” என்று கூறிவிட்டார்கள்.


وَقَالَ ٱلَّذِى نَجَا مِنْهُمَا وَٱدَّكَرَ بَعْدَ أُمَّةٍ أَنَا۠ أُنَبِّئُكُم بِتَأْوِيلِهِۦ فَأَرْسِلُونِ.

45. நீண்ட காலத்திற்கு முன் நடந்த இச்சம்பவம், சிறையிலிருந்து விடுதலை பெற்றவனுக்கு யூஸுஃப்புடைய ஞாபகம் வந்தது. எனவே இந்தக் கனவின் விளக்கத்தைப் பெற தன்னை யூஸுஃப் இருக்கும் சிறைக்கு அனுப்பி வைக்க அரசனிடம் அனுமதி அளிக்கக் கேட்டுக் கொண்டான்.


يُوسُفُ أَيُّهَا ٱلصِّدِّيقُ أَفْتِنَا فِى سَبْعِ بَقَرَٰتٍۢ سِمَانٍۢ يَأْكُلُهُنَّ سَبْعٌ عِجَافٌۭ وَسَبْعِ سُنۢبُلَٰتٍ خُضْرٍۢ وَأُخَرَ يَابِسَٰتٍۢ لَّعَلِّىٓ أَرْجِعُ إِلَى ٱلنَّاسِ لَعَلَّهُمْ يَعْلَمُونَ.

46. அவ்வாறே அவன் சிறைக்குள் யூஸுஃப்பிடம் வந்து, “யூஸுஃப்பே! எப்போதும் உண்மையே பேசுபவரே! இந்தக் கனவின் விளக்கத்தையும் எனக்கு அறிவியுங்கள். அதாவது ஏழு கொழுத்த பசுக்களை, ஏழு மெலிந்த பசுக்கள் தின்பதையும் பசுமையான ஏழு கதிர்களையும் வேறு ஏழு காய்ந்து உலர்ந்துவிட்ட கதிர்களையும் அரசர் கனவில் கண்டார். இதற்கு என்ன பொருள் என்பதை எனக்கு அறிவிப்பீராக. இதன் விளக்கத்தை அறிந்து கொள்வதற்காக, மக்கள் அனைவரும் சபையில் கூடியிருக்கிறார்கள். நான் உடனே அவர்களிடம் திரும்பிச் சென்று இதைப் பற்றி அறிவிக்க வேண்டியுள்ளது” என்றான்.


قَالَ تَزْرَعُونَ سَبْعَ سِنِينَ دَأَبًۭا فَمَا حَصَدتُّمْ فَذَرُوهُ فِى سُنۢبُلِهِۦٓ إِلَّا قَلِيلًۭا مِّمَّا تَأْكُلُونَ.

47. அதற்கு யூஸுஃப் நபி, “நீங்கள் தொடர்ந்து ஏழு ஆண்டுகளுக்கு சிறப்பாக விவசாயம் செய்து நல்ல மகசூலைப் பெறுவீர்கள். நீங்கள் அறுவடை செய்த விளைச்சலில் நாட்டு மக்களுக்குத் தேவையான அளவு மட்டும் கதிர்களிலிருந்து பிரித்து எடுத்து கொள்ளுங்கள். மீதமுள்ளதை கதிர்களோடு இணைத்தே சேமித்து வையுங்கள்”


ثُمَّ يَأْتِى مِنۢ بَعْدِ ذَٰلِكَ سَبْعٌۭ شِدَادٌۭ يَأْكُلْنَ مَا قَدَّمْتُمْ لَهُنَّ إِلَّا قَلِيلًۭا مِّمَّا تُحْصِنُونَ.

48. “பின்னர் அதைத் தொடர்ந்து வரும் ஏழு ஆண்டுகள் கடுமையான வறட்சி ஏற்பட்டு பஞ்சம் வரும். நீங்கள் பத்திரப்படுத்தி வைத்த கதிர்களிலிருந்து தானியங்களை பிரித்து எடுத்து அவற்றை வறட்சி காலத்தில் பயன்படுத்தி கொள்ளுங்கள். அவற்றின் ஒரு பகுதியை மீண்டும் விவசாயம் செய்வதற்காக வைத்துக் கொண்டு மற்றதை பயன்படுத்திக் கொள்ளுங்கள். இப்படியாக அந்த பஞ்சம் வரும் ஆண்டுகளில் சேமித்து வைத்த கதிர்கள் பயன்படும்” என்றார்.


ثُمَّ يَأْتِى مِنۢ بَعْدِ ذَٰلِكَ عَامٌۭ فِيهِ يُغَاثُ ٱلنَّاسُ وَفِيهِ يَعْصِرُونَ.

49. அதை தொடர்ந்து ஓராண்டு வரும். அதில் நல்ல விதமாக மழை பெய்து மக்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். அதன் பிறகு மக்களுக்குத் தேவையான வாழ்க்கை வசதிகள் தொடர்ந்து கிடைத்து வரும்” என்று மன்னர் கண்ட கனவின் விளக்கத்தை அறிவித்தார்.


وَقَالَ ٱلْمَلِكُ ٱئْتُونِى بِهِۦ ۖ فَلَمَّا جَآءَهُ ٱلرَّسُولُ قَالَ ٱرْجِعْ إِلَىٰ رَبِّكَ فَسْـَٔلْهُ مَا بَالُ ٱلنِّسْوَةِ ٱلَّٰتِى قَطَّعْنَ أَيْدِيَهُنَّ ۚ إِنَّ رَبِّى بِكَيْدِهِنَّ عَلِيمٌۭ.

50. யூஸுஃப் நபி தந்த விளக்கத்தை அரச சபையில் மக்கள் முன்பு அறிவிக்கப்பட்டது. இதைக் கேட்ட மன்னர் பெருமகிழ்ச்சியுடன் அவரை தன்னிடம் அழைத்து வர கட்டளை பிறப்பித்தார். அவ்வாறே அரசு காவலாளி ஒருவர் யூஸுஃப்பிடம் வந்து, அவரை அழைத்துச் செல்ல வந்துள்ளதாக சொன்னான். அதற்கு யூஸுஃப், மன்னனிடம் திரும்பிச் சென்று, தன் மீதுள்ள குற்றச்சாட்டை தீர விசாரித்து, நான் நிரபராதி என்பதை நிரூபித்த பின்னரே என்னை விடுதலை செய்ய சொல்லுங்கள். தம் விரல்களை காயப்படுத்திக் கொண்ட அப்பெண்களிடம் நடந்த உண்மை நிலவரங்களை தீர விசாரிக்கும்படி சொல்லி, அந்த காவலாளியை திருப்பி அனுப்பி விட்டார். மேலும் நம் அரசர் அப்பெண்களின் சதியை நன்கு அறிந்தவராகவே இருக்கிறார்” என்றும் அந்த காவலாளியிடம் கூறினார்.


قَالَ مَا خَطْبُكُنَّ إِذْ رَٰوَدتُّنَّ يُوسُفَ عَن نَّفْسِهِۦ ۚ قُلْنَ حَٰشَ لِلَّهِ مَا عَلِمْنَا عَلَيْهِ مِن سُوٓءٍۢ ۚ قَالَتِ ٱمْرَأَتُ ٱلْعَزِيزِ ٱلْـَٰٔنَ حَصْحَصَ ٱلْحَقُّ أَنَا۠ رَٰوَدتُّهُۥ عَن نَّفْسِهِۦ وَإِنَّهُۥ لَمِنَ ٱلصَّٰدِقِينَ.

51. அவ்வாறே அரசர் அப்பெண்களை சபையில் அழைத்து, “யூஸுஃப்பை உங்கள் விருப்பத்திற்கு இணங்குமாறு நீங்கள் அழைத்த போது, அங்கு நடந்தது என்ன?” என்று விசாரித்தார். அதற்கு அப்பெண்கள், “அல்லாஹ் எங்களை காப்பாற்றுவானாக! நாங்கள் அவரிடத்தில் யாதொரு கெடுதியையும் காணவில்லை” என்று உண்மையை சபையில் ஒப்புக் கொண்டார்கள்.
இந்த விசாரணைகளை கேட்டுக் கொண்டிருந்த அதிபர் அஜீஸின் மனைவி, “இப்போது அனைவருக்கும் உண்மை வெளியாகிவிட்டது. நான் இவரை என் விருப்பத்திற்கு இணங்குமாறு வற்புறுத்தியது உண்மைதான். ஆனால் அவர் உண்மையாளர்களில் உள்ளவர் ஆவார்” என்று சபையில் தம் தவரை பகிரங்கமாக ஒப்புக் கொண்டார்.


ذَٰلِكَ لِيَعْلَمَ أَنِّى لَمْ أَخُنْهُ بِٱلْغَيْبِ وَأَنَّ ٱللَّهَ لَا يَهْدِى كَيْدَ ٱلْخَآئِنِينَ.

52. அங்கு விசாரணைக்கு வந்திருந்த யூஸுஃப் நபி, “இவ்விசாரணையை நான் விரும்பியதற்கு காரணம் யாதெனில், என் எஜமானர் வீட்டில் இல்லாத போது, அவருக்கு நான் துரோகம் செய்யவில்லை என்பதை அவர் அறிந்து கொள்ளட்டும் என்பதற்காகவே தான். மேலும் அல்லாஹ் துரோகிகளின் சதி திட்டங்களுக்கு ஒருபோதும் துணை நிற்பதில்லை என்பதை அனைவரும் அறிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவே ஆகும்” என்றார்.
சிந்தனையாளர்களே! தனி ஒரு மனிதர், எந்த அளவிற்கு தன் நன் நடத்தையைக் கொண்டு உலக மக்களை திருத்துவதற்கு முயல்கிறார் என்பதைக் கவனியுங்கள். மேலும் தன் மீதுள்ள குற்றச்சாட்டுடன் சிறையிலிருந்து விடுதலைப் பெற அவர் நாடவில்லை. சிறையில் கஷ்டங்களை அனுபவித்தாலும், தான் ஒரு நிரபராதி என தீர்ப்பு பெற்ற பின்பே விடுதலைப் பெற வேண்டும் என்று உறுதியோடு இருப்பது அவருடைய உயர்ந்த பண்பை பிரதிபலிக்கிறது. இப்படிப்பட்ட உயர் பண்புகளை சமுதாய மக்களும் தம்முள் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்ற படிப்பினை இச்சம்பவத்திலிருந்து புலனாகிறது.


۞ وَمَآ أُبَرِّئُ نَفْسِىٓ ۚ إِنَّ ٱلنَّفْسَ لَأَمَّارَةٌۢ بِٱلسُّوٓءِ إِلَّا مَا رَحِمَ رَبِّىٓ ۚ إِنَّ رَبِّى غَفُورٌۭ رَّحِيمٌۭ.

53. இதை கவனித்த அஜீஸின் மனைவி, "நான் என் மனதை, பாவத்தை விட்டு பரிசுத்தமாக்கி விட்டதாக கூறவில்லை. இறைவழிகாட்டுதலை ஏற்று அதன்படி முழுக்க முழுக்க நடந்து கொண்டாலன்றி, மன இச்சையை எவரும் கட்டுப்படுத்தி வைக்க முடியாது என்பதை நான் யூஸுஃப் நபி மூலம் அறிந்து கொண்டேன். ஏனெனில் மன இச்சை எப்போதும் தீமையான செயல்களில் ஈடுபடும்படியே தூண்டிக் கொண்டு இருக்கும். நிச்சயமாக இறைவனின் வழிகாட்டுதல்கள் அனைவரின் பாதுகாப்பான வாழ்விற்கும் வழிசெய்யும் கருணை மிக்கதாய் இருக்கின்றன” என்று தன் தவறை ஒப்புக்கொண்டு இனி ஒழுக்கத்தோடு வாழ்வதாக அவள் உறுதியளித்தாள்.
இதன்பின் நாட்டின் எதிர் கால திட்டங்களைப் பற்றி ஆலோசனைகள் நடந்து வந்தன. நாட்டின் தானிய உற்பத்தியை சிறப்பாக கவனித்து வரவும், வருங்காலத்திற்காக அவற்றைப் பாதுகாத்து வைப்பது பற்றியும் திட்டங்கள் தீட்டப்பட்டன. யூஸுஃப்புடைய திறமையையும் நன் நடத்தையையும் கவனித்து வந்த அந்நாட்டு அரசருக்கு அவர் வெகுவாக கவர்ந்து விட்டார்.


وَقَالَ ٱلْمَلِكُ ٱئْتُونِى بِهِۦٓ أَسْتَخْلِصْهُ لِنَفْسِى ۖ فَلَمَّا كَلَّمَهُۥ قَالَ إِنَّكَ ٱلْيَوْمَ لَدَيْنَا مَكِينٌ أَمِينٌۭ.

54. “அவரை என்னிடம் அழைத்து வாருங்கள். அவரை நான் நெருங்கிய ஆலோசகராக அமர்த்திக் கொள்வேன்” என்று அந்நாட்டு அரசர் அறிவித்தார். அதைத் தொடர்ந்து அரசரிடம் தன்னுடைய பூர்வீகத்தைப் பற்றியும், தான் கற்றிருந்த ஓரிறைக்கொள்கைப் பற்றியும் அரசருக்கு விளக்கினார். அவற்றை எல்லாம் கேட்டுக் கொண்ட அரசர், “இன்றிலிருந்து நீர் நம்மிடம் பெரும் அந்தஸ்துள்ள சபைத் தலைவர் ஆவீர். நீர் மிகவும் நம்பிக்கைக்கும் உரியவராக இருக்கின்றீர்” என்று அவரைப் பாராட்டி புகழ்ந்து தன் மந்திரி சபையில் இணைத்துக் கொள்ள முடிவெடுத்தார்.


قَالَ ٱجْعَلْنِى عَلَىٰ خَزَآئِنِ ٱلْأَرْضِ ۖ إِنِّى حَفِيظٌ عَلِيمٌۭ.

55. இதை அறிந்த யூஸுஃப், தனக்கு உணவு மந்திரியாக நியமிக்க அரசரிடம் தம் விருப்பத்தை வெளிப்படுத்திக் கொண்டார். அவர், “இந்நாட்டின் தானிய களஞ்சியங்களை பராமரித்து பாதுகாக்கும் பொறுப்பை எனக்கு அளிப்பீராக. அவற்றைப் பாதுகாக்க நன்கு அறிந்தவனாகவே இருக்கின்றேன்” என்று அரசரிடம் தன் விருப்பத்தை தெரிவித்துக் கொண்டார்.
சிந்தனையாளர்களே! சற்று கவனித்துப் பாருங்கள். அரசனின் அன்பும் அரவணைப்பும் கிடைத்ததும், அவர் அங்கு சொகுசாக வாழ நினைக்க வில்லை. நாட்டின் உணவு உற்பத்தி மற்றும் அவற்றைப் பாதுகாக்கும் திறமை தம்மிடம் உள்ளதாகவும், அவற்றை பராமரித்து வரும் பொறுப்பை ஏற்றுக் கொள்வதாகவும் அவர் கூறுகிறார். அவர் அந்நாட்டில் பிறக்காமல், விலைக்கு வாங்கப்பட்டவராக இருந்த போதும், அவர் வாழும் நாட்டு மக்களுக்கு தொண்டு செய்யும் எண்ணம் அவரிடம் இருப்பதைக் கவனியுங்கள். இதுவே அல்லாஹ்வின் வழிகாட்டுதலின்படி நடப்பவர்களின் எண்ணங்களும் செயல்பாடுகளும் ஆகும்.
இந்த வரலாற்று நிகழ்விலிருந்து மேலும் சில முக்கியமான விஷயங்களும் நமக்குப் புலனாகிறது. ஏற்கனவே 11:6 வாசகத்தில் கூறியது போல் ஒரு நாட்டின் உணவு உற்பத்தியை தம் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து அவற்றை பொது வினியோகத்தின் மூலம் அனைவருக்கும் போய் சேரும்படி ஏற்பாடு செய்வது அந்நாட்டு அரசாட்சியின் பொறுப்பாகும் என்பது புலனாகிறது.
மேலும் மனிதன் பொறுப்பில் விடப்பட்ட இப்பூமியில் செழிப்பும், பஞ்சமும் மாறிமாறி வரும் என்பதையே நமக்கு எடுத்து காட்டுகிறது. பசுமை நிறைந்த காலங்களில் உணவு உற்பத்தியை பெருகச் செய்து, அவற்றைச் சேமித்து வைப்பது அந்நாட்டு அரசின் பொறுப்பாகும்.
ஆனால் தனிநபர் என்ற அடிப்டையில் அவற்றை சேமித்து வைத்துக் கொண்டால், அது பதுக்கல் என்றாகிவிடுகிறது. இது இஸ்லாத்தில் ஆகுமானது அல்ல.


وَكَذَٰلِكَ مَكَّنَّا لِيُوسُفَ فِى ٱلْأَرْضِ يَتَبَوَّأُ مِنْهَا حَيْثُ يَشَآءُ ۚ نُصِيبُ بِرَحْمَتِنَا مَن نَّشَآءُ ۖ وَلَا نُضِيعُ أَجْرَ ٱلْمُحْسِنِينَ.

56. இவ்வாறே யூஸுஃப்பின் விருப்பப்படி, அந்நாட்டின் உணவு உற்பத்தி மற்றும் அவற்றை பாதுகாக்கும் அதிகாரங்களும் அவருக்கு கிடைக்கும்படி அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பாகச் செய்யப்பட்டன. இறைவனின் நாட்டப்படி யார் அழகிய நற்செயல்களைச் செய்கிறாரோ, அவருக்கே உயர் பதவிகள் கிடைக்கும். எனவே ஆக்கப்பூர்வமான நன்மையான செயல்களை செய்பவர்களின் உழைப்பு வீண் போகாது என்பதே இறைவனின் கூற்றாகும்.


وَلَأَجْرُ ٱلْءَاخِرَةِ خَيْرٌۭ لِّلَّذِينَ ءَامَنُوا۟ وَكَانُوا۟ يَتَّقُونَ.

57. மேலும் இவர்களுடைய உழைப்பிற்குக் கிடைக்கின்ற பலன்கள், அவர்களுடைய நிகழ்கால வாழ்வோடு முடிந்து விடுவதில்லை. யாரெல்லாம் அல்லாஹ்வின் வழிகாட்டுதலை ஏற்று அதன்படி இறையச்சத்துடன் சிறப்பாக செயல்படுகிறார்களோ, அவர்களுடைய வருங்கால நிலையான வாழ்விலும் சிறப்பான பலன்கள் இறைவன் புறத்திலிருந்து கிடைக்கும்.
இப்படியாக வசந்த காலங்கள் முடிவு பெற்று வறட்சி காலம் துவங்கியது. நாலாப் புறமும் பஞ்சமும் வறட்சியும் நிலவியது. இறைவனின் செயல் திட்டத்தின்படி எகிப்து நாட்டின் அரசு களஞ்சியத்தில் இருக்கின்ற உணவு தானியங்களின் பங்கீட்டு முறை (Ration System) ஆரம்பமானது. இதைப் பற்றி கேள்வியுற்ற யூஸுஃப் நபியின் குடும்பத்தினரும் தானியங்களைப் பெற அங்கு வந்தனர்.


وَجَآءَ إِخْوَةُ يُوسُفَ فَدَخَلُوا۟ عَلَيْهِ فَعَرَفَهُمْ وَهُمْ لَهُۥ مُنكِرُونَ.

58. அப்போது அங்கு வந்த தன் சகோதரர்களைப் பார்த்து, யூஸுஃப் அடையாளங் கண்டு கொண்டார். ஆனால் அவர்களோ யூஸுஃப்பை அடையாளங் கண்டு கொள்ளவில்லை.


وَلَمَّا جَهَّزَهُم بِجَهَازِهِمْ قَالَ ٱئْتُونِى بِأَخٍۢ لَّكُم مِّنْ أَبِيكُمْ ۚ أَلَا تَرَوْنَ أَنِّىٓ أُوفِى ٱلْكَيْلَ وَأَنَا۠ خَيْرُ ٱلْمُنزِلِينَ.

59. அவர்களுக்கு வேண்டிய தானியப் பொருட்கள் ஆயத்தப்படுத்தி தரப்பட்ட போது, அவர்களிடம் குடும்பத்தைப் பற்றி விசாரித்தார். பிறகு அவர்களை நோக்கி, “மீண்டும் இங்கு வரும் போது, உங்களுடைய தந்தை வழிச் சகோதரனை என்னிடம் அழைத்து வாருங்கள். நிச்சயமாக நான் உங்களுக்கு சேர வேண்டிய தானியங்களை கொடுத்ததோடு உங்களுக்கு சிறந்த முறையில் விருந்து உபச்சாரமும் செய்துள்ளேன் அல்லவா?” என்று அவர்களிடம் கேட்டார்.


فَإِن لَّمْ تَأْتُونِى بِهِۦ فَلَا كَيْلَ لَكُمْ عِندِى وَلَا تَقْرَبُونِ.

60. எனவே நீங்கள் மீண்டும் இங்கு வரும் போது, அவரை என்னிடம் அழைத்து வாருங்கள். இல்லையெனில் உங்களுக்கு இங்கிருந்து தானியங்கள் எதுவும் கிடைக்காது. மேலும் நீங்கள் இந்தப் பக்கமே வரக்கூடாது” என்று கூறினார்.


قَالُوا۟ سَنُرَٰوِدُ عَنْهُ أَبَاهُ وَإِنَّا لَفَٰعِلُونَ.

61. அதற்கு அவர்கள், “எங்கள் தந்தையை நம்பவைக்க ஏதாவது ஓர் உபாயத்தைக் கையாளுவோம். நாங்கள் அவரை எங்களுடன் அழைத்து வர அனைத்து முயற்சிகளையும் கண்டிப்பாக மேற்கொள்வோம்” என்று உறுதியளித்தார்கள்.


وَقَالَ لِفِتْيَٰنِهِ ٱجْعَلُوا۟ بِضَٰعَتَهُمْ فِى رِحَالِهِمْ لَعَلَّهُمْ يَعْرِفُونَهَآ إِذَا ٱنقَلَبُوٓا۟ إِلَىٰٓ أَهْلِهِمْ لَعَلَّهُمْ يَرْجِعُونَ.

62. பின்னர் யூஸுஃப் தம் பணியாட்களிடம், “அவர்கள் தானியத்திற்காகக் கொடுத்த கிரயப் பணத்தை என் சார்பாக அவர்களுக்குத் தெரியாமல் அவர்களுடைய மூட்டையில் வைத்து விடுங்கள். அவர்கள் தம் வீட்டுக்கு சென்றதும், தானிய மூட்டைகளை திறக்கும் போது, தாம் கொடுத்த கிரயப் பணத்தை அவர்கள் அடையாளங் கொள்வார்கள். இப்படியாக அவர்கள் அந்தக் கிரயப் பணத்தை கொடுத்துவிட தம்மிடம் மீண்டும் வரக்கூடும்” என்று கூறினார்.


فَلَمَّا رَجَعُوٓا۟ إِلَىٰٓ أَبِيهِمْ قَالُوا۟ يَٰٓأَبَانَا مُنِعَ مِنَّا ٱلْكَيْلُ فَأَرْسِلْ مَعَنَآ أَخَانَا نَكْتَلْ وَإِنَّا لَهُۥ لَحَٰفِظُونَ.

63. அவ்வாறே அவர்கள் தம் வீட்டிற்குத் திரும்பியதும், அங்கு நடந்த விஷயத்தை தம் தந்தையிடம் எடுத்துரைத்தார்கள். அவரை நோக்கி, “எங்கள் தந்தையே! நாங்கள் எங்கள் சகோதரனை எங்களுடன் அழைத்துச் செல்லாவிட்டால் நமக்குக் கிடைக்க வேண்டிய தானியப் பங்கீடு கிடைக்காது. ஆகவே எங்களுடன் எங்களுடைய சகோதரனையும் அனுப்பி வையுங்கள். நாங்கள் தானியத்தை பெற்றுக் கொண்டு இவரையும் மிகவும் கவனத்துடன் பாதுகாத்து திருப்பி கொண்டு வந்து சேர்த்து விடுகிறோம்” என்றனர்.


قَالَ هَلْ ءَامَنُكُمْ عَلَيْهِ إِلَّا كَمَآ أَمِنتُكُمْ عَلَىٰٓ أَخِيهِ مِن قَبْلُ ۖ فَٱللَّهُ خَيْرٌ حَٰفِظًۭا ۖ وَهُوَ أَرْحَمُ ٱلرَّٰحِمِينَ.

64. இதைக் கேட்ட யாஃகூப், “இதற்கு முன்னர் இவருடைய சகோதரர் விஷயத்தில் நம்பியது போன்று, இவர் விஷயத்திலும் என்னை நம்பச் சொல்கிறீர்களா? அந்த தானியம் கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை. எங்களை பாதுகாக்க அல்லாஹ் ஒருவனே போதுமானவன். கிருபையாளர்களில் அவனே எல்லோரையும் விட மிகச் சிறந்த கிருபையாளன் ஆவான்” என்று கூறி, அவர்களுடைய வேண்டுதலை ஏற்க மறுத்து விட்டார்.


وَلَمَّا فَتَحُوا۟ مَتَٰعَهُمْ وَجَدُوا۟ بِضَٰعَتَهُمْ رُدَّتْ إِلَيْهِمْ ۖ قَالُوا۟ يَٰٓأَبَانَا مَا نَبْغِى ۖ هَٰذِهِۦ بِضَٰعَتُنَا رُدَّتْ إِلَيْنَا ۖ وَنَمِيرُ أَهْلَنَا وَنَحْفَظُ أَخَانَا وَنَزْدَادُ كَيْلَ بَعِيرٍۢ ۖ ذَٰلِكَ كَيْلٌۭ يَسِيرٌۭ.

65. அவர்கள் தானிய மூட்டையை அவிழ்த்த போது, அவர்களுடைய கிரயப் பணம் அவர்களிடம் திருப்பி அளிக்கப்பட்டு இருப்பதைக் கண்டார்கள். அவர்கள், “எங்கள் தந்தையே! தானியமும் அதற்குரிய கிரயப் பணமும் நமக்குத் திரும்பக் கொடுக்கப்பட்டு இருப்பதைப் பார்த்தீர்களா? அதைவிட நமக்கு வேறு என்ன வேண்டும்? எனவே நம் குடும்பத்திற்கு வேண்டிய தானியங்களை வாங்கி வர நாம் மீண்டும் செல்வோம். நீங்கள் எங்கள் சகோதரனின் பாதுகாப்பைப் பற்றிக் கவலைப்படாதீர்கள். நாங்கள் அவரை பத்திரமாக பாதுகாத்துக் கொள்வோம். மேலும் ஓர் ஒட்டகச் சுமை நிறைந்த தானியங்களை கொண்டு வருவோம். இவையாவும் அந்த மன்னரைப் பொறுத்தவரை ஒரு அற்பமான அளவுதான்” என்று கூறினார்கள்.


قَالَ لَنْ أُرْسِلَهُۥ مَعَكُمْ حَتَّىٰ تُؤْتُونِ مَوْثِقًۭا مِّنَ ٱللَّهِ لَتَأْتُنَّنِى بِهِۦٓ إِلَّآ أَن يُحَاطَ بِكُمْ ۖ فَلَمَّآ ءَاتَوْهُ مَوْثِقَهُمْ قَالَ ٱللَّهُ عَلَىٰ مَا نَقُولُ وَكِيلٌۭ.

66. இவர்களுடைய பேச்சைக் கேட்ட யாஃகூப் நபி, “சரி. நான் அவரை உங்களுடன் அனுப்பி வைக்கிறேன. ஆனால் ஒரு நிபந்தனை. அவரை என்னிடம் பாதுகாப்பாக திரும்பக் கொண்டுவந்து சேர்த்து விடுவதாக நீங்கள் அனைவரும் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து கூற வேண்டும். ஒருவேளை உங்கள் அனைவருக்கும் ஆபத்துக்கள் ஏதாவது சூழ்ந்து கொண்டால், அது வேறு விஷயமாகும். இல்லையெனில் நான் ஒருபோதும் அவரை உங்களுடன் அனுப்பவே மாட்டேன்” என்றார். அதற்கு அவர்கள் அனைவரும் அவ்வாறே சத்தியம் செய்து வாக்குறுதி அளித்தனர். இதன்பின்பும் அவர், “நாம் செய்துகொண்ட சத்தியத்திற்கு அல்லாஹ்வே சாட்சியாளனாக இருக்கின்றான்” என்று கூறினார்.


وَقَالَ يَٰبَنِىَّ لَا تَدْخُلُوا۟ مِنۢ بَابٍۢ وَٰحِدٍۢ وَٱدْخُلُوا۟ مِنْ أَبْوَٰبٍۢ مُّتَفَرِّقَةٍۢ ۖ وَمَآ أُغْنِى عَنكُم مِّنَ ٱللَّهِ مِن شَىْءٍ ۖ إِنِ ٱلْحُكْمُ إِلَّا لِلَّهِ ۖ عَلَيْهِ تَوَكَّلْتُ ۖ وَعَلَيْهِ فَلْيَتَوَكَّلِ ٱلْمُتَوَكِّلُونَ.

67. மேலும் அவர் தம் மகன்களிடம், “நீங்கள் அனைவரும் ஓரணியாக சேர்ந்து பட்டணத்திற்குள் செல்ல வேண்டாம். தனித்தனியே பிரிந்து வெவ்வேறு வழியாக செல்லுங்கள். உங்களுடைய பாதுகாப்பிற்காகவே இதை நான் உங்களிடம் கூறுகிறேன். ஆனால் நீங்கள் அல்லாஹ்வின் நியதிப்படி அங்குள்ள சூழ்நிலைக்கு ஏற்றவாறு உங்களை நீங்கள் பாதுகாத்து கொள்ளுங்கள். ஏனெனில் பாதுகாப்பு விஷயத்தில் நான் உங்களை விட்டுக் கொடுக்க முடியாது. நினைவில் கொள்ளுங்கள். ஆபத்துகள் வருவதும் பாதுகாத்துக் கொள்வது, இலாபம் நஷ்டம் ஏற்படுவது ஆகிய அனைத்துமே அல்லாஹ்வின் நியதிப்படியே ஏற்படும். அதன் மீதே நான் முழு நம்பிக்கை வைத்துள்ளேன்” என்று கூறி அவர்களை அனுப்பி வைத்தார்.


وَلَمَّا دَخَلُوا۟ مِنْ حَيْثُ أَمَرَهُمْ أَبُوهُم مَّا كَانَ يُغْنِى عَنْهُم مِّنَ ٱللَّهِ مِن شَىْءٍ إِلَّا حَاجَةًۭ فِى نَفْسِ يَعْقُوبَ قَضَىٰهَا ۚ وَإِنَّهُۥ لَذُو عِلْمٍۢ لِّمَا عَلَّمْنَٰهُ وَلَٰكِنَّ أَكْثَرَ ٱلنَّاسِ لَا يَعْلَمُونَ.

68. அவர்கள் அனைவரும் அவ்வாறே தங்கள் தந்தையின் அறிவுரைப் படி தனித்தனியே மிஸ்ரு நகரத்திற்குச் சென்றடைந்தார்கள். இப்படியாக அவர்கள் தங்கள் தந்தையின் ஒரு விருப்பத்தை நிறைவேற்றினார்களே அன்றி அதன்பின் அல்லாஹ்வின் நியதிப்படி அங்கு நிழவிருக்கும் சம்பவங்களை அவர்கள் தடுக்கக் கூடியவர்களாக இருக்கவில்லை. தனித்தனியே செல்லும் படி சொன்ன விஷயமும் அவர்களுடைய பாதுகாப்புக்காக அல்லாஹ் யாஃகூப்புக்கு கொடுத்த ஞானத்தின் அடிப்படையில் தான் ஆகும். மூட நம்பிக்கையின் அடிப்படையில் அல்ல. இதைப் பற்றி எல்லாம் இப்போதுள்ள பெரும்பாலான மக்களுக்குத் தெரியாது.


وَلَمَّا دَخَلُوا۟ عَلَىٰ يُوسُفَ ءَاوَىٰٓ إِلَيْهِ أَخَاهُ ۖ قَالَ إِنِّىٓ أَنَا۠ أَخُوكَ فَلَا تَبْتَئِسْ بِمَا كَانُوا۟ يَعْمَلُونَ.

69. அதன்பின் அவர்கள் யாவரும் யூஸுஃப்பிடம் சென்றபோது, அவர் தம் சகோதரன் பின்யாமினை தன்னுடன் அமர்த்திக் கொண்டார். மேலும், தான் அவருடைய சகோதரன் யூஸுஃப் என்பதையும் தம் சகோதரர்களுடன் இனி நடக்கவிருக்கும் நிகழ்வுகளைக் குறித்து நீர் கவலைப்பட வேண்டாம் என்றும் அவர் இரகசியமாக தெரிவித்துக் கொண்டார்.


فَلَمَّا جَهَّزَهُم بِجَهَازِهِمْ جَعَلَ ٱلسِّقَايَةَ فِى رَحْلِ أَخِيهِ ثُمَّ أَذَّنَ مُؤَذِّنٌ أَيَّتُهَا ٱلْعِيرُ إِنَّكُمْ لَسَٰرِقُونَ.

70. பின்னர் அவர்களுக்கு சேர வேண்டிய தானியப் பொருட்களை சித்தம் செய்து கொடுத்த போது, தம் சகோதரர் பின்யாமினின் பையில் யூஸுஃப்பின் கட்டளைப்படி அளவு மரக்கால் ஒன்றை அவரது காலவலாளிகள் அதில் மறைத்து வைத்துவிட்டனர். அதன்பின் அனைவரும் புறப்பட தயாராகும் போது, அதிகாரி ஒருவர் ஓடி வந்து, “ஓ ஒட்டகக் கூட்டத்தாரே! நீங்கள் அனைவரும் திருடர்களே!” என அவர்களைப் பார்த்து கூச்சலிட்டார்.


قَالُوا۟ وَأَقْبَلُوا۟ عَلَيْهِم مَّاذَا تَفْقِدُونَ.

71. அதற்கு, “அவர்கள் அந்த அதிகாரிகளிடம் வந்து, நீங்கள் எதனை இழந்து விட்டீர்கள்?” என்று கேட்டார்கள்.


قَالُوا۟ نَفْقِدُ صُوَاعَ ٱلْمَلِكِ وَلِمَن جَآءَ بِهِۦ حِمْلُ بَعِيرٍۢ وَأَنَا۠ بِهِۦ زَعِيمٌۭ.

72. அதற்கு அவர், “இங்கு அரசாங்க அளவு மரக்கால் ஒன்றைக் காணவில்லை. அதைக் கண்டுபிடித்து தருபவர்களுக்கு ஒரு ஒட்டக சுமை தானியங்கள் சன்மானமாகக் கிடைக்கும். அதற்கு நான் உறுதி அளிக்கிறேன்” என்று கூறினார்.


قَالُوا۟ تَٱللَّهِ لَقَدْ عَلِمْتُم مَّا جِئْنَا لِنُفْسِدَ فِى ٱلْأَرْضِ وَمَا كُنَّا سَٰرِقِينَ.

73. இதைக் கேட்ட அவர்கள், “நாங்கள் அல்லாஹ்வின் மீது ஆணையிட்டு கூறுகிறோம். நாங்கள் இங்கு எந்தக் குழப்பத்தையும் செய்வதற்காக வரவில்லை. நாங்கள் எங்கள் தானியங்களை வாங்கவே வந்துள்ளோம் என்பதை நீங்களே அறிவீர்கள். அப்படியும் நாங்கள் நல்ல குடும்பதைச் சேர்ந்தவர்கள். எனவே நாங்கள் திருடர்கள் அல்லர்” என்று அவர்களுடைய குற்றச்சாட்டிற்கு மறுப்பு தெரிவித்தார்கள்.


قَالُوا۟ فَمَا جَزَٰٓؤُهُۥٓ إِن كُنتُمْ كَٰذِبِينَ.

74. அதற்கு அவர்கள், “நீங்கள் பொய்யர்கள் என நிரூபிக்கப்பட்டால், அதற்குரிய தண்டனை என்னவென்று உங்களுக்குத் தெரியுமா?” என்று அதிகாரிகள் கேட்டார்கள்.


قَالُوا۟ جَزَٰٓؤُهُۥ مَن وُجِدَ فِى رَحْلِهِۦ فَهُوَ جَزَٰٓؤُهُۥ ۚ كَذَٰلِكَ نَجْزِى ٱلظَّٰلِمِينَ.

75. அதற்கு அவர்கள், “அதற்குரிய தண்டனை என்னவென்று எங்களுக்குத் தெரியும். எவருடைய பைக்குள் அந்த திருட்டுப் பொருள் கண்டுபிடிக்கப்படுகிறதோ, அவர் கைது செய்யப்படுவார். அநியாயம் செய்வோருக்கு எங்கள் நாட்டிலும் இதே தண்டனைதான் அளிக்கப்படுகிறது” என்று அவர்கள் கூறினார்கள்.


فَبَدَأَ بِأَوْعِيَتِهِمْ قَبْلَ وِعَآءِ أَخِيهِ ثُمَّ ٱسْتَخْرَجَهَا مِن وِعَآءِ أَخِيهِ ۚ كَذَٰلِكَ كِدْنَا لِيُوسُفَ ۖ مَا كَانَ لِيَأْخُذَ أَخَاهُ فِى دِينِ ٱلْمَلِكِ إِلَّآ أَن يَشَآءَ ٱللَّهُ ۚ نَرْفَعُ دَرَجَٰتٍۢ مَّن نَّشَآءُ ۗ وَفَوْقَ كُلِّ ذِى عِلْمٍ عَلِيمٌۭ.

76. அதன்படியே ஒவ்வொருவருடைய பையையும் சோதனை செய்துகொண்டே பின்யாமினின் பையையும் பரிசோதித்தார்கள். அவருடைய பையில் அந்த மரக்கால் மறைத்து வைக்கப்பட்டிருப்பதை அவர்கள் முன் எடுத்துக் காட்டினார்கள். இவ்வாறாக யூஸுஃப் தம் தம்பியை தன்னிடம் வைத்துக்கொள்ள தகுந்த உபாயத்தை கையாண்டார். இல்லையெனில் அந்நாட்டு சட்டப்படி அவ்வாறு வெளியாட்கள் யாரையும் தம்முடன் வைத்துக்கொள்ள முடியாது. இவ்வாறே அறிவைப் பயன்படுத்தி சிறப்பாக செயல்படுபவர்களுக்கே உயர் பதவியும் அந்தஸ்தும் இறைவனின் நியதிப்படி கிடைத்து விடுகின்றன. அல்லாஹ்வின் கல்வி ஞானம் எல்லாரையும்விட மிக மிக மகத்தானது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.


۞ قَالُوٓا۟ إِن يَسْرِقْ فَقَدْ سَرَقَ أَخٌۭ لَّهُۥ مِن قَبْلُ ۚ فَأَسَرَّهَا يُوسُفُ فِى نَفْسِهِۦ وَلَمْ يُبْدِهَا لَهُمْ ۚ قَالَ أَنتُمْ شَرٌّۭ مَّكَانًۭا ۖ وَٱللَّهُ أَعْلَمُ بِمَا تَصِفُونَ.

77. இதைக் கண்ட அவர்கள், “இவனுடைய சகோதரன் யூஸுஃப்பும் திருடனாகத்தான் இருந்தான் போலும். அதே திருட்டுப் புத்தி அவனுடன் பிறந்த தம்பிக்கும் வந்துள்ளது!” என்று தங்களுக்குள் பேசிக் கொண்டார்கள். இதைக் கேள்வியுற்ற யூஸுஃப், அவர்கள் மேல் இருந்த கோபத்தை வெளிப்படுத்திக் கொள்ளவில்லை. மாறாக அவர்களை நோக்கி, “இத்தனை காலத்திற்கு பின்பும் நீங்கள் இன்னமும் திருந்தவே இல்லை. உங்களிடமுள்ள தீய எண்ணங்கள் உங்களை விட்டு போகவே இல்லை. இவருடைய அண்ணணும் திருடியிருப்பார் என்று பேசிக் கொண்டீர்களாமே, எதை வைத்து இந்த தீர்மானித்திற்கு வந்தீர்கள். அவர் எப்படிப்பட்டவர் என்பதற்கு அல்லாஹ்வே சாட்சியாக இருக்கிறான்” என்று கூறி அவர்களை மிரட்டினார்.


قَالُوا۟ يَٰٓأَيُّهَا ٱلْعَزِيزُ إِنَّ لَهُۥٓ أَبًۭا شَيْخًۭا كَبِيرًۭا فَخُذْ أَحَدَنَا مَكَانَهُۥٓ ۖ إِنَّا نَرَىٰكَ مِنَ ٱلْمُحْسِنِينَ.

78. இதைக் கேட்ட அவருடைய சகோதரர்கள் பயத்தில் நடுங்கிப் போனார்கள். அவர்கள், “எங்கள் அதிபதியே! இவருக்கு வயதான ஒரு தந்தை இருக்கிறார். இந்த சம்பவத்தைப் பற்றி கேள்விப்பட்டால், அவர் ஒருபோதும் ஒப்புக்கொள்ள மாட்டார். அவருக்கு பதில் சொல்லி, அவரை நம்ப வைக்க எங்களால் ஒருபோதும் முடியாது. எனவே அவரை விட்டுவிட்டு அவருக்குப் பதிலாக எங்களில் ஒருவரை இங்கு தடுத்து நிறுத்திக் கொள்ளுங்கள். எங்கள் அதிபதியே! இது வரையில் நீங்கள் எங்களுக்கு அன்போடு பல உபகாரங்களை செய்தீர்கள். இந்த ஒரே ஒரு விஷயத்தில் எங்களுக்கு நீங்கள் தயவு காட்டுங்கள்” என்று யூஸுஃப்பிடம் மன்றாடினார்கள்.


قَالَ مَعَاذَ ٱللَّهِ أَن نَّأْخُذَ إِلَّا مَن وَجَدْنَا مَتَٰعَنَا عِندَهُۥٓ إِنَّآ إِذًۭا لَّظَٰلِمُونَ.

79. இதைக் கேட்ட யூஸுஃப், “அல்லாஹ் எங்களைக் காப்பாற்ற வேண்டும்! நாங்கள் எப்படி திருடாதவரை கைது செய்ய முடியும்? யார் திருடினானோ அவனைத் தான் கைது செய்ய முடியும். அது தான் சட்டம். அவ்வாறு செய்தால் நாங்கள் அநியாயக்காரர்கள் ஆகிவிடுவோம்” என்றார்.


فَلَمَّا ٱسْتَيْـَٔسُوا۟ مِنْهُ خَلَصُوا۟ نَجِيًّۭا ۖ قَالَ كَبِيرُهُمْ أَلَمْ تَعْلَمُوٓا۟ أَنَّ أَبَاكُمْ قَدْ أَخَذَ عَلَيْكُم مَّوْثِقًۭا مِّنَ ٱللَّهِ وَمِن قَبْلُ مَا فَرَّطتُمْ فِى يُوسُفَ ۖ فَلَنْ أَبْرَحَ ٱلْأَرْضَ حَتَّىٰ يَأْذَنَ لِىٓ أَبِىٓ أَوْ يَحْكُمَ ٱللَّهُ لِى ۖ وَهُوَ خَيْرُ ٱلْحَٰكِمِينَ.

80. எவ்வளவோ அவருக்கு எடுத்து சொல்லியும், அவர்களுடைய வேண்டுதல்கள் நிராகரிக்கப்பட்டன. எனவே அவர்கள் அதில் நம்பிக்கை இழந்தவர்களாக, தங்களுக்குள் தனியே தம் தந்தையிடம் என்ன சொல்வது என்பதைப் பற்றிய ஆலோசனையில் இறங்கினார்கள். “நம் தந்தை எங்களிடம் அல்லாஹ்வை சாட்சியாக வைத்து உறுதிமொழி வாங்கிய பின்னரே பின்யாமினை எங்களுடன் அனுப்பி வைத்தார் என்பதை எண்ணிப் பாருங்கள். ஏற்கனவே அவருடைய அண்ணன் யூஸுஃப் விஷயத்திலும் அவருடைய பார்வையில் நீங்கள் பெருங் குற்றவாளிகளாக இருக்கிறீர்கள். எனவே இந்த பிரச்சனை தீரும் வரையில் நான் தந்தையின் முகத்தில் முழிக்க மாட்டேன். அவர் எனக்கு அனுமதி அளித்தால் மட்டுமே நான் அங்கு வருவேன். அல்லது அல்லாஹ்விடமிருந்து இதற்கு நல்ல தீர்ப்பு ஏற்படும் வரையில் நான் இந்த நாட்டை விட்டு போக மாட்டேன்” என்று அவர்களின் மூத்த சகோதரன் கூறி விட்டார்.


ٱرْجِعُوٓا۟ إِلَىٰٓ أَبِيكُمْ فَقُولُوا۟ يَٰٓأَبَانَآ إِنَّ ٱبْنَكَ سَرَقَ وَمَا شَهِدْنَآ إِلَّا بِمَا عَلِمْنَا وَمَا كُنَّا لِلْغَيْبِ حَٰفِظِينَ.

81. அவர், “ஆகவே நீங்கள் உங்கள் தந்தையிடம் திரும்பி சென்று, இங்கு நடந்த உண்மைகளை எடுத்துரையுங்கள். அவருடைய மகன் செய்த திருட்டைப் பற்றி அவர்களுக்கு விளக்குங்கள். அதற்கு நீங்களே சாட்சியாளராக இருந்ததையும் அவரிடம் எடுத்துரையுங்கள். அவரிடம் உண்மையைத் தவிர வேறெதையும் சொல்லவில்லை என்பதையும் அவருக்குப் புரிய வையுங்கள்” என்றார்.


وَسْـَٔلِ ٱلْقَرْيَةَ ٱلَّتِى كُنَّا فِيهَا وَٱلْعِيرَ ٱلَّتِىٓ أَقْبَلْنَا فِيهَا ۖ وَإِنَّا لَصَٰدِقُونَ.

82. “அப்படியும் அவர் உங்களை நம்பவில்லை என்றால், நம் ஊரிலிருந்து தானியங்களை வாங்க வந்த மற்றவர்களையும் விசாரித்துக் கொள்ளும்படி அவரிடம் சொல்லுங்கள். நீங்கள் உண்மையே பேசுவதாக அவரை நம்ப வைக்க ஏதாவது ஒரு உபாயத்தை கையாளுங்கள்” என்று கூறி அவர்களை அனுப்பி வைத்தார்.


قَالَ بَلْ سَوَّلَتْ لَكُمْ أَنفُسُكُمْ أَمْرًۭا ۖ فَصَبْرٌۭ جَمِيلٌ ۖ عَسَى ٱللَّهُ أَن يَأْتِيَنِى بِهِمْ جَمِيعًا ۚ إِنَّهُۥ هُوَ ٱلْعَلِيمُ ٱلْحَكِيمُ.

83. அவ்வாறே அவர்கள் ஊர் வந்து சேர்ந்ததும், நடந்த உண்மைகளை அவருடைய தந்தை யாஃகூப்பிடம் எடுத்துரைத்தனர். இதைக் கேட்ட அவர் மிகவும் அதிர்ந்து போனார். “என் மகன் ஒரு திருடனா! இல்லை. ஒருபோதும் இருக்காது. நீங்கள்தான் அவருக்கு எதிராக ஏதோ ஒரு சூழ்ச்சி செய்து அவரை என்னிடமிருந்து பிரித்துவிட சதி செய்திருப்பீர்கள். இப்படித்தான் உங்கள் மனம் தூண்டியிருக்கும். இந்த தருணத்தில் பொறுமையோடு இருப்பதைத் தவிர வேறெதையும் என்னால் செய்ய முடியாது. எனவே இதையும் நான் சகித்துக் கொள்கிறேன். அல்லாஹ் இருவரையும் என்னிடம் கொண்டு வந்து சேர்க்க போதுமானவன். அவன் அனைத்து விஷயங்களையும் அறிபவனாகவும் ஞானமிக்கவனாகவும் இருக்கின்றான் என்பதை உறுதியாக நம்புகிறேன்” என்று மனம் வெதும்பி கூறினார்.


وَتَوَلَّىٰ عَنْهُمْ وَقَالَ يَٰٓأَسَفَىٰ عَلَىٰ يُوسُفَ وَٱبْيَضَّتْ عَيْنَاهُ مِنَ ٱلْحُزْنِ فَهُوَ كَظِيمٌۭ.

84. பின்னர் அவர் தம் பிள்ளைகளைப் பார்த்து, “யூஸுஃப்புடைய பிரிவைக் கொண்டு ஏற்பட்ட துக்கமே இன்னும் என்னை விட்டு நீங்கவில்லை. அதற்குள் இன்னொரு பேரிடியா?” என்று கண்களில் நீர் மல்க துக்கத்தை அடக்கிக் கொண்டே கூறினார்.


قَالُوا۟ تَٱللَّهِ تَفْتَؤُا۟ تَذْكُرُ يُوسُفَ حَتَّىٰ تَكُونَ حَرَضًا أَوْ تَكُونَ مِنَ ٱلْهَٰلِكِينَ.

85. தந்தையின் துக்கத்தைப் பார்த்த அவருடைய பிள்ளைகள், அவருக்கு ஆறுதல் வார்த்தைகளை சொல்வதற்குப் பதிலாக அவரை கடிந்து பேசினார்கள். அவர்கள், “இன்னமும் ‘யூஸுஃப்’ ‘யூஸுஃப்’ என்று அவரைப் பற்றிய நினைப்பிலேயே இருக்கிறீரா? அப்படியே நீங்கள் உங்களை மாய்த்துக் கொள்வீர்களா? அவருடைய நினைப்பு உங்களை விட்டு இன்னமும் நீங்கவே இல்லையே! நாங்கள் பின்யாமினைப் பற்றி கூறியவற்றிற்கு அல்லாஹ்வே சாட்சியாக இருக்கிறான்” என்று அவரிடம் கடிந்து கொண்டார்கள்.


قَالَ إِنَّمَآ أَشْكُوا۟ بَثِّى وَحُزْنِىٓ إِلَى ٱللَّهِ وَأَعْلَمُ مِنَ ٱللَّهِ مَا لَا تَعْلَمُونَ.

86. அதற்கு அவர், “என்னுடைய துக்கமும் கவலையும் தீர அல்லாஹ்விடமே முறையிடுகிறேன். அல்லாஹ்விடமிருந்து நீங்கள் அறியாதவற்றை நான் அறிவேன்” என்றார்.


يَٰبَنِىَّ ٱذْهَبُوا۟ فَتَحَسَّسُوا۟ مِن يُوسُفَ وَأَخِيهِ وَلَا تَا۟يْـَٔسُوا۟ مِن رَّوْحِ ٱللَّهِ ۖ إِنَّهُۥ لَا يَا۟يْـَٔسُ مِن رَّوْحِ ٱللَّهِ إِلَّا ٱلْقَوْمُ ٱلْكَٰفِرُونَ.

87. மேலும் அவர், “என் மக்களே! நீங்கள் அனைவரும் மீண்டும் எகிப்து நாட்டிற்குச் செல்லுங்கள். அங்கு யூஸுஃப்பைப் பற்றியும் அவருடைய சகோதரர் பின்யாமினையும் தேடி கண்டுபிடியுங்கள். அல்லாஹ்வின் அருளைப் பற்றி நம்பிக்கை இழக்காதீர்கள். அல்லாஹ்வின் வழிகாட்டுதலின்டி செயல்படுவோருக்கு எந்தத் துயரமும் நெருங்காது. அதற்கு எதிராக செயல்படுபவர்களுக்கு அவனுடைய அருளும் உதவியும் கிடைக்காது” என்று அறிவுறுத்தி அவர்களை அனுப்பி வைத்தார்.


فَلَمَّا دَخَلُوا۟ عَلَيْهِ قَالُوا۟ يَٰٓأَيُّهَا ٱلْعَزِيزُ مَسَّنَا وَأَهْلَنَا ٱلضُّرُّ وَجِئْنَا بِبِضَٰعَةٍۢ مُّزْجَىٰةٍۢ فَأَوْفِ لَنَا ٱلْكَيْلَ وَتَصَدَّقْ عَلَيْنَآ ۖ إِنَّ ٱللَّهَ يَجْزِى ٱلْمُتَصَدِّقِينَ.

88. அவர்கள் மீண்டும் எகிப்து நாட்டின் தலைநகருக்கு வந்து, அவர்களைப் பற்றி விசாரிக்க ஆரம்பித்தனர். யூஸுஃப்பைப் பற்றிய துப்பு எதுவும் கிடைக்காததால், அவர்கள் இறுதியில் அந்நாட்டு அரசனை சந்தித்து, “அரசே! எங்கள் குடும்பத்தில் பெரிய அளவில் துயரங்கள் பற்றிக் கொண்டன. நாங்கள் எங்கள் சகோதரர் இருவரையும் இழந்து விட்டோம். அவர்களைத் தேடி கண்டுபிடிப்பதிலேயே காலத்தைக் கடத்திவிட்டோம். அதனால் உணவு தானியங்களை வாங்கவும் எங்களிடம் பணம் காசு இல்லை. எனவே நீங்கள் எங்கள் மேல் இரக்கப்பட்டு, அதிக அளவில் எங்களுக்கு உணவு தானியங்களை இலவசமாகக் கொடுங்கள். நிச்சயமாக தான தர்மம் செய்பவர்களுக்கு அல்லாஹ் நற்கூலி வழங்குகிறான்” என்று கெஞ்ச ஆரம்பித்து விட்டார்கள்.
சிந்தனையாளர்களே கவனித்தீர்களா? இறை வழிகாட்டுதலுக்கு எதிராக தீய செயல்களில் ஈடுபடுவோரின் நிலை எவ்வாறு பரிதாபத்திற்குரியதாக மாறிவிடுகிறது என்பதைக் கவனியுங்கள்.


قَالَ هَلْ عَلِمْتُم مَّا فَعَلْتُم بِيُوسُفَ وَأَخِيهِ إِذْ أَنتُمْ جَٰهِلُونَ.

89. இந்த விஷயத்தைப் பற்றி கேள்வியுற்ற யூஸுஃப், அவர்களிடம் வந்து, “நீங்கள் அறிவிலிகளாக இருந்த கால கட்டத்தில் யூஸுஃப்பிடமும் அவருடைய தம்பி பின்யாமினிடமும் எவ்வாறு நடந்து கொண்டீர்கள்? அதைப் பற்றி உங்களுக்கு ஞாபகம் இருக்கின்றதா?” என்று கேட்டார்.
இதைக் கேட்ட அவர்கள் திடுக்கிட்டு தம் குடும்ப விஷயத்தைப் பற்றியும் சதி வேலைகளைப் பற்றியும் இவருக்கு எப்படி தெரியும்? எல்லாவற்றையும் அப்படியே சொல்கிறாரே என எண்ணி இவர்தான் தம் சகோதரன் யூஸுஃப்பாக இருக்கக் கூடும் என கருதி,


قَالُوٓا۟ أَءِنَّكَ لَأَنتَ يُوسُفُ ۖ قَالَ أَنَا۠ يُوسُفُ وَهَٰذَآ أَخِى ۖ قَدْ مَنَّ ٱللَّهُ عَلَيْنَآ ۖ إِنَّهُۥ مَن يَتَّقِ وَيَصْبِرْ فَإِنَّ ٱللَّهَ لَا يُضِيعُ أَجْرَ ٱلْمُحْسِنِينَ.

90. “நீர்தாம் எங்கள் தம்பி யூஸுஃப்போ?” என்று அவர்கள் கேட்டார்கள். அதற்கு யூஸுஃப், “ஆம். நான்தான் யூஸுஃப்” ஆவேன். இதோ! இவர்தான் என் தம்பி பின்யாமின் ஆவார். நிச்சயமாக எங்கள் மீது அல்லாஹ் அருள் புரிந்திருக்கிறான் என்பதை இப்போதாவது புரிந்து கொள்கிறீர்களா? ஆக யார் அல்லாஹ்வுக்கு அஞ்சி அவனுடைய கட்டளையின் படி உறுதியோடு செயல்படுகிறார்களோ, அத்தகைய நன்மை செய்வோர்களின் செயல்களை அல்லாஹ் ஒருபோதும் வீணாக்க மாட்டான்” என அவர்களுக்கு மார்க்க உண்மைகளை எடுத்துரைத்தார்.


قَالُوا۟ تَٱللَّهِ لَقَدْ ءَاثَرَكَ ٱللَّهُ عَلَيْنَا وَإِن كُنَّا لَخَٰطِـِٔينَ.

91. அவருடைய பேச்சையும் அவருக்குக் கிடைத்திருந்த உயர் பதவியையும் கண்ட அவருடைய சகோதரர்கள், “அல்லாஹ்வின் மீது ஆணையாக! நாங்கள் உமக்கு தீங்கிழைத்தவர்களாக இருந்தும், நீர் எங்களிடம் பரிவோடு நடந்து கொள்கின்றீர். நிச்சயமாக அல்லாஹ் எங்களைவிட உம்மை உயர்ந்த நிலைக்கு கொண்டு வந்துள்ளான்” என்று தம் தவறை உணர்ந்து, யூஸுஃப்பிடம் மதிப்பு மரியாதையுடன் நடந்து கொண்டார்கள். மேலும் அவர்கள் யூஸுஃப்பிடம், தாம் செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்டுக் கொண்டனர்.


قَالَ لَا تَثْرِيبَ عَلَيْكُمُ ٱلْيَوْمَ ۖ يَغْفِرُ ٱللَّهُ لَكُمْ ۖ وَهُوَ أَرْحَمُ ٱلرَّٰحِمِينَ.

92. அதற்கு அவர், “இன்று உங்கள் மீது எவ்வித குற்றச்சாட்டும் இல்லை. அல்லாஹ் உங்களுடைய தவறான செயல்களால் ஏற்படவிருந்த பாதிப்புகளிலிருந்து பாதுகாப்பு அளிப்பான். இவ்வாறு தாம் செய்த தவறுகளை உணர்ந்து, திருந்தி வாழ முன்வருவோருக்கு தக்க வாய்ப்பு அளிக்கும் அல்லாஹ் கிருபையாளனில் மிகச் சிறந்த கிருபையாளன் ஆவான்” என்றார்.


ٱذْهَبُوا۟ بِقَمِيصِى هَٰذَا فَأَلْقُوهُ عَلَىٰ وَجْهِ أَبِى يَأْتِ بَصِيرًۭا وَأْتُونِى بِأَهْلِكُمْ أَجْمَعِينَ.

93. நீங்கள் அனைவரும் சந்தோஷமாக ஊருக்கு திரும்பிச் சென்று, நடந்த உண்மைகளை நம் தந்தையிடம் எடுத்துரையுங்கள். நான் உயிருடன் இருக்கிறேன் என்பதற்கு அடையாளமாக என் சட்டையை எடுத்துச் சென்று அவரிடம் சமர்ப்பியுங்கள். அப்போதுதான் அவருக்கும் உண்மைகள் வெளிச்சத்திற்கு வந்து விடும். அதுமட்டுமின்றி உங்கள் குடும்பத்தார் அனைவரையும் இங்கு அழைத்து வாருங்கள்” என்று கூறி அவர்களை யூஸுஃப் அனுப்பி வைத்தார்.


وَلَمَّا فَصَلَتِ ٱلْعِيرُ قَالَ أَبُوهُمْ إِنِّى لَأَجِدُ رِيحَ يُوسُفَ ۖ لَوْلَآ أَن تُفَنِّدُونِ.

94. அவ்வாறே அவர்களுடைய பயணக்குழு எகிப்து நாட்டைவிட்டு புறப்பட்டது. அந்த நேரத்தில் யாஃகூப் நபி, தம் ஊரார்களிடம், “என்னை நீங்கள் பைத்தியக்காரர் என்று நினைக்கவில்லை என்றால் ஒரு விஷயத்தை கூற ஆசைப்படுகிறேன். எனக்கு என் மகன் யூஸுஃப் உயிருடன் இருப்பதை நான் உணர்கிறேன்” என்று கூறினார்.


قَالُوا۟ تَٱللَّهِ إِنَّكَ لَفِى ضَلَٰلِكَ ٱلْقَدِيمِ.

95. இதை கேட்ட அவ்வூரார், அவரைப் பார்த்து, “இன்னமும் நீர் உம் மகன் யூஸுஃப்பின் நினைப்பிலேயே மூழ்கி கிடக்கிறீரா?. அவர் உயிருடன் இருக்கிறாரா இல்லையா என்பதை அல்லாஹ்தான் நன்கறிவான்” என்று சொன்னார்கள்.


فَلَمَّآ أَن جَآءَ ٱلْبَشِيرُ أَلْقَىٰهُ عَلَىٰ وَجْهِهِۦ فَٱرْتَدَّ بَصِيرًۭا ۖ قَالَ أَلَمْ أَقُل لَّكُمْ إِنِّىٓ أَعْلَمُ مِنَ ٱللَّهِ مَا لَا تَعْلَمُونَ.

96. அதன் பின், அந்த ஒட்டக வாகனங்கள் அவருடைய ஊரை சேர்ந்ததும், அவரிடம் ஒருவன் ஓடி வந்து, அவர்முன் யூஸுஃப்பின் சட்டையை கொண்டு வந்து காட்டினார். அதைப் பார்த்த யாஃகூப் நபிக்கு, தம்மில் இருந்து வந்த இருள்கள் நீங்கி, அனைத்து விஷயங்களும் தெளிவாகி விட்டன. அப்போது அவர் மக்களைப் பார்த்து, நீங்கள் அறியாததை எல்லாம் அல்லாஹ்விடமிருந்து நான் நிச்சயமாக அறிவேன் என்று உங்களிடம் கூறவில்லையா?” என்று உரக்கமாக கூறி தன் சந்தோஷத்தை வெளிப்படுத்திக் கொண்டார்.
வஹீச் செய்திகள்:உலகிலுள்ள மனிதனைத் தவிர்த்து மற்ற எல்லா உயிரினங்களுக்கும் வஹீ என்கிற இறைவழிகாட்டுதல்கள் அதனதன் உடலமைப்பிலேயே அமைக்கப்பட்டு விட்டன. உதாரணத்திற்கு தேனீக்கு நாம் வஹீ அறிவித்தோம் என்று 16:68 வாசகம் கூறுகிறது. இது தேனிக்குள் வைக்கப்பட்டுள்ள உள்ளூர உந்துதல் என்பதே அதன் பொருளாகும்.
ஆனால் மனிதனை பொருத்த வரையில் இப்படிப்பட்ட உணர்வுகள் அவனுள் வைக்கப்படவில்லை. அவன் பிறந்து வளர்ந்து வரும் சூழ்நிலைக்கு ஏற்றவாறு அவருடைய மொழி, கலாச்சாரம், மற்றும் ஓழுக்க மாண்புகள் வளரும். தமிழகத்தில் பிறந்த குழந்தையை இங்கிலாந்தில் கொண்டு போய் வளர்த்தால் அது ஆங்கிலம் தான் பேசும். தமிழ் பேசாது.
மனிதனுக்கு அளிக்கப்பட்ட வஹீ எனும் இறைவழிகாட்டுதல் மனிதனுள் பிறக்கின்ற சிந்தனைகள் அல்ல. அவனுக்கு இறைவனிடமிருந்து கிடைக்கின்ற வழிகாட்டுதல்கள் ஆகும். அவை வெளியிலிருந்து கிடைக்கிறது. எனவே இறைவழிகாட்டுதல் எனும் வஹீயை பொருத்த வரையில் உலக மக்களுக்கு வழிகாட்ட வேண்டிய விஷயங்களை மட்டும் எடுத்துரைக்கிறது. அதாவது இறைவன் தன் செயல் திட்டங்களில் உள்ளதை மட்டும் தெள்ளத் தெளிவாக எடுத்துரைக்கிறான். இவற்றை எல்லாம் மனிதன் தம் சுயஅறிவைக் கொண்டு தெரிந்து கொள்ள முடியாதவை ஆகும். அது மட்டுமின்றி இறைவனின் செயல் திட்டங்களை மனித வாழ்வோடு தொடர்பு படுத்தி பேசுகிறது. அதனால் மனித சிந்தனை மற்றும் செயலாற்றல்கள் வேகமாக வளர்ந்து சிறந்த முறையில் வாழ்க்கையை அமைத்துக்கொள்ள மனிதனுக்கு பெருமளவு உதவுகிறது. எனவே இந்த இறைவழிகாட்டுதல் தேவையில்லாத விஷயங்களைப் பற்றி ஒருபோதும் சொல்வதில்லை. அவர் இறைத்தூதராக இருப்பினும் சரியே!
உதாரணத்திற்கு யூஸுஃப்பின் சகோதரர்கள் மனதில் உள்ள சதி திட்டங்களைப் பற்றி வஹீ மூலம் யூஸுஃப் நபிக்கு அறிவிக்கும் அல்லாஹ், (பார்க்க 12:15) அதே சமயத்தில் நபியாக இருக்கின்ற யாஃகூப் நபிக்கு தம் மகன் உயிருடன் இருக்கின்ற விஷயத்தை வஹீ மூலம் அறிவிக்கவில்லை. ஏனெனில் யாஃகூப் நபி தம் பிள்ளையை தவறவிட்டது, அவருடைய குடும்ப விவகாரமாகும். எனவே அதைப் பற்றி எந்த அறிவிப்பும் வருவதில்லை. இறுதியாக யூஸுஃப் அனுப்பிய சட்டையை பார்த்து, அவர் உயிருடன் இருப்பதை தெரிந்து கொள்கிறார். ஆனால் யூஸுஃப்புடைய விஷயத்தில் அவர் வருங்காலத்தில் நாட்டை ஆளப்போகும் நபியாக இருப்பதால், அவரை கிணற்றில் தள்ளிவிடும் போது, பயத்தில் அவருக்கு பாதிப்புகள் ஏற்பட்டிருக்கலாம். அவருக்கு தைரியமூட்டவே அந்த செய்தி அப்போது அவருக்கு அறிவிக்கப்படுகிறது. மேலும் யாஃகூப் சந்ததியரில் பிற்காலத்தில் இஸ்ரவேலர்கள் என்கிற மிகப் பெரிய சமுதாயத்தை உருவாக்குவது இறைவனின் செயல் திட்டமாக இருந்தது. எனவே அங்கு வஹீச் செய்தி அவசியமான ஒன்றாக இருந்தது.
மேலும் யூஸுஃப் நபிக்கு கிடைத்த வஹீச் செய்தி அவர் மனதில் எழுந்த உள்ளுர உந்துதல்களே என்று ஒரு சிலர் கருதுகிறார்கள். எனவே மனித சிந்தனையில் உதிக்கும் எண்ணங்களும் இறைவனின் வஹீச் செய்திகளே என்றும் நினைக்கிறார்கள். இது முற்றிலும் தவறான கண்ணோட்டாகும். ஏனெனில் ஒருவர் திருடுவதற்கு திட்டமிடுகிறார் என்றால் அது இறைவனின் செயலாக ஆகிவிடுமா?


قَالُوا۟ يَٰٓأَبَانَا ٱسْتَغْفِرْ لَنَا ذُنُوبَنَآ إِنَّا كُنَّا خَٰطِـِٔينَ.

97. ஆக அவர்களுடைய மகன்கள் தம் தந்தையிடம், “எங்கள் தந்தையே! நாங்கள் இதுநாள் வரையில் தவறான வழியில் செயல்பட்டு வந்தோம். இதனால் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து எங்களை பாதுகாத்துக் கொள்ள நாடுகிறோம். இதற்குண்டான வழிமுறைகளை எங்களுக்கு கற்றுத் தருவாயாக” என்று கேட்டுக் கொண்டனர்.


قَالَ سَوْفَ أَسْتَغْفِرُ لَكُمْ رَبِّىٓ ۖ إِنَّهُۥ هُوَ ٱلْغَفُورُ ٱلرَّحِيمُ.

98. அதற்கு அவர், “நான் நிச்சயமாக உங்களுடைய பாதுகாப்பான வாழ்விற்காக இறைவனிடமிருந்து பெற்ற வழிகாட்டுதலை உங்களுக்கு கற்றுத் தருகிறேன். அல்லாஹ் அனைவரையும் பாதுகாக்கும் கிருபை மிக்கவனாகவே இருக்கின்றான்” என்று உறுதியளித்தார்.


فَلَمَّا دَخَلُوا۟ عَلَىٰ يُوسُفَ ءَاوَىٰٓ إِلَيْهِ أَبَوَيْهِ وَقَالَ ٱدْخُلُوا۟ مِصْرَ إِن شَآءَ ٱللَّهُ ءَامِنِينَ.

99. அதன்பின் யூஸுஃப் நபி கேட்டுக் கொண்டபடி, அவர்கள் அனைவரும் யூஸுஃப்பிடம் வந்தனர். அவர்கள் அனைவரையும் வரவேற்று, தம்முடன் கண்ணியத்துடன் தங்க வைத்துக் கொண்டார். மேலும் அவர், “இனி நாம் அனைவரும் அல்லாஹ்வின் செயல் திட்டங்களின்படியே நடந்து வருவோம். எனவே நீங்கள் அச்சமின்றி எகிப்து நாட்டில் விரும்பும் இடங்களுக்குச் சென்று மக்கள் நலப்பணிகளில் ஈடுபடலாம்” என்று கூறினார்.
இப்படியாக சில காலம் வரையில் அனைவரும் அங்கு ஆர்வத்தோடு பணியாற்றி வந்தார்கள். அந்நாட்டு அரசனின் மறைவுக்குப் பின், ஆட்சியை நடத்தும் பொறுப்பு யூஸுஃப் நபிக்கு கிடைத்தது.


وَرَفَعَ أَبَوَيْهِ عَلَى ٱلْعَرْشِ وَخَرُّوا۟ لَهُۥ سُجَّدًۭا ۖ وَقَالَ يَٰٓأَبَتِ هَٰذَا تَأْوِيلُ رُءْيَٰىَ مِن قَبْلُ قَدْ جَعَلَهَا رَبِّى حَقًّۭا ۖ وَقَدْ أَحْسَنَ بِىٓ إِذْ أَخْرَجَنِى مِنَ ٱلسِّجْنِ وَجَآءَ بِكُم مِّنَ ٱلْبَدْوِ مِنۢ بَعْدِ أَن نَّزَغَ ٱلشَّيْطَٰنُ بَيْنِى وَبَيْنَ إِخْوَتِىٓ ۚ إِنَّ رَبِّى لَطِيفٌۭ لِّمَا يَشَآءُ ۚ إِنَّهُۥ هُوَ ٱلْعَلِيمُ ٱلْحَكِيمُ.

100. அவர் தம் தாய் தந்தையரை அரியாசனத்தில் அமர்த்தி, அனைத்து அதிகாரங்களையும் அவருக்கு அளித்தார். அவ்விருவருக்கும் மதிப்பும் மரியாதையும் கிடைத்து வந்தன. அவர்களுடைய பிள்ளைகள் அனைவரும் அவருடைய கட்டளைக்கு சிரம்பணிந்து செயல்பட்டனர். அந்த நேரத்தில் யூஸுஃப் நபி தம் தந்தையை நோக்கி, “என் தந்தையே! இதுதான் நான் சிறு வயதில் கண்ட கனவின் பொருளாகும். இதனை என் இறைவன் உண்மை ஆக்கினான். அவன் என்னை சிறையிலிருந்து விடுதலைப் பெற செய்ததுடன், எனக்கும் என் சகோதரர்களுக்கும் இடையே இருந்த மனக் கசப்பையும் வெறுப்பையும் நீக்கி, அனைவரையும் கிராமத்திலிருந்து கொண்டு வரச் செய்தான். இதன் மூலம் இறைவன் எனக்கு பேருபகாரம் செய்துள்ளான் என்றே சொல்வேன். என் இறைவன், தான் நாடியவற்றை மிக நுட்பமான முறையில் நடைமுறைப் படுத்த பேராற்றல் உடையவன் ஆவான் என்பது உறுதி. அது மட்டுமின்றி அவன் அனைத்தையும் அறிந்து கொள்ளும் வல்லமை உடையவனாகவும் ஞானமிக்கவனாகவும் இருக்கின்றான் என்பதில் என்ன சந்தேகம் இருக்கப்போகிறது?” என்றார்.


۞ رَبِّ قَدْ ءَاتَيْتَنِى مِنَ ٱلْمُلْكِ وَعَلَّمْتَنِى مِن تَأْوِيلِ ٱلْأَحَادِيثِ ۚ فَاطِرَ ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضِ أَنتَ وَلِىِّۦ فِى ٱلدُّنْيَا وَٱلْءَاخِرَةِ ۖ تَوَفَّنِى مُسْلِمًۭا وَأَلْحِقْنِى بِٱلصَّٰلِحِينَ.

101. மேலும் அவர், “என் இறைவனே! நீ எனக்கு அரசாளும் தகுதியை அளித்துள்ளாய். மேலும் உலக நிகழ்வுகளில் ஏற்படும் பின்விளைவுகளை அறிந்து கொள்ளும் ஞானத்தையும் வழங்கினாய். இதனால் மக்கள் சிறப்பாக வாழ, பல நலத் திட்டங்களை என்னால் எளிதாக நாட்டில் கொண்டு வர முடிகிறது. அகிலங்களையும் பூமியையும் படைத்தவனே! இவ்வுலக நிகழ்கால வாழ்விலும் வருங்கால நிலையான வாழ்விலும் சிறப்பாக வாழ வழி செய்து என்னை பாதுகாப்பவனும் நீயே! ஆகவே நான் இவ்வுலகில் வாழ்ந்து வரும் காலமெல்லாம் நாட்டு மக்கள் அனைவரின் சிறப்பான வாழ்விற்கு பாடுபடும் சிறந்த சேவகனாக – முஸ்லிமாக என்னை ஆக்குவாயாக. இன்னும் நீ என்னை உலகில் சிறப்பாக செயல்பட்ட சான்றோர்களின் பட்டியலில் இணைத்திட செய்வாயாக” என்று அச்சபையில் அனைவர் முன்பும் பிரார்தித்தார்.


ذَٰلِكَ مِنْ أَنۢبَآءِ ٱلْغَيْبِ نُوحِيهِ إِلَيْكَ ۖ وَمَا كُنتَ لَدَيْهِمْ إِذْ أَجْمَعُوٓا۟ أَمْرَهُمْ وَهُمْ يَمْكُرُونَ.

102. இவையாவும் நடந்து முடிந்த யூஸுஃப் நபியின் உண்மை வரலாறாகும். இதைப் பற்றிய உண்மைகளை மக்கள் அனைவரும் மறந்து விட்டார்கள். எனவே நபியே! உமக்கும் இதைப் பற்றிய உண்மை எதுவும் தெரியாது. எனவே இவற்றை வஹீ என்னும் இறைவழிகாட்டுதல் மூலம் அறிவிக்கப்படுகிறது. ஏனெனில் யூஸுஃப்புடைய சகோதரர்கள் சதி செய்ய நாடிய போதும், அதன்பின் அவர்கள் அனைவரும் ஒன்றிணைந்த போதும் நீர் அவர்களிடம் இருந்ததில்லை.


وَمَآ أَكْثَرُ ٱلنَّاسِ وَلَوْ حَرَصْتَ بِمُؤْمِنِينَ.

103. நபியே! இந்த வரலாற்றின் உண்மைகளையும் அதன் படிப்பினைகளையும் அறிந்து மக்கள் சிறப்பாக வாழவேண்டும் என்று அளவிலா ஆசை வைத்திருக்கிறாய். ஆனால் பெரும்பாலான மக்கள் இதனை ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை.


وَمَا تَسْـَٔلُهُمْ عَلَيْهِ مِنْ أَجْرٍ ۚ إِنْ هُوَ إِلَّا ذِكْرٌۭ لِّلْعَٰلَمِينَ.

104. நபியே! மக்கள் அனைவருக்கும் சிறந்ததொரு வாழ்வு கிடைக்கவேண்டும் என்பதற்காகத் தான் அவர்களிடம் நீ அறிவுறுத்தி வருகிறாய். அதற்காக அவர்களிடமிருந்து எந்த பிரதி உபகாரத்தையும் எதிர் பார்ப்பதில்லை. இந்த வரலாற்று உண்மைகளிலிருந்து கிடைக்கும் படிப்பினைகள் யாவும் அகிலத்தார் அனைவருக்கும் தரப்படுகின்ற அறிவுரைகளே ஆகும் என்பதை மக்களுக்கு விளக்கி விடுவிடுங்கள்.


وَكَأَيِّن مِّنْ ءَايَةٍۢ فِى ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضِ يَمُرُّونَ عَلَيْهَا وَهُمْ عَنْهَا مُعْرِضُونَ.

105. அதுமட்டுமின்றி அகிலங்கள் அனைத்திலும் இப்பூமியிலும் அல்லாஹ்வின் அளவற்ற பொக்கிஷங்கள் புதைந்து கிடக்கின்றன. அவற்றை ஆராய்ந்து அறிந்து பலன்களைப் பெற்றுக்கொள்ளும் தகுதிகளை வளர்த்துக் கொள்ளச் சொன்னால் அதையும் ஏற்றுக் கொள்ள தயாராக இல்லை.


وَمَا يُؤْمِنُ أَكْثَرُهُم بِٱللَّهِ إِلَّا وَهُم مُّشْرِكُونَ.

106. இந்த அறிவுரைகளை எல்லாம் விட்டுவிட்டு, ஒரு பலனும் அளிக்காத சடங்கு சம்பிராதயங்களுக்கு முக்கியத்துவம் அளித்து, அவற்றை கடைப்பிடித்து வருகின்றனர். எனவே அவர்களில் பெரும்பாலோர் மனம் போன போக்கில் வாழும் முஷ்ரிக்குகளாகவே இருக்கின்றனர்.


أَفَأَمِنُوٓا۟ أَن تَأْتِيَهُمْ غَٰشِيَةٌۭ مِّنْ عَذَابِ ٱللَّهِ أَوْ تَأْتِيَهُمُ ٱلسَّاعَةُ بَغْتَةًۭ وَهُمْ لَا يَشْعُرُونَ.

107. இவ்வாறு செயல்படுவதன் விளைவாக, சமுதாய சீர்கேடுகள் ஏற்பட்டு அல்லாஹ்வின் நியதிப்படி அவர்களுக்கு கேடுகாலம் சூழ்ந்து கொள்கிறது. இதைப் பற்றி எல்லாம் சிந்திக்காமல் அவர்கள் அசட்டு தைரியத்தில் இருக்கிறார்களா? அந்த விளைவுகள் அவர்கள் சற்றும் எதிர்பாராத விதமாக திடீரென்று ஏற்படும் என்பதைப் பற்றியும் அச்சமற்று இருக்கிறார்களா?


قُلْ هَٰذِهِۦ سَبِيلِىٓ أَدْعُوٓا۟ إِلَى ٱللَّهِ ۚ عَلَىٰ بَصِيرَةٍ أَنَا۠ وَمَنِ ٱتَّبَعَنِى ۖ وَسُبْحَٰنَ ٱللَّهِ وَمَآ أَنَا۠ مِنَ ٱلْمُشْرِكِينَ.

108. இறைவழிகாட்டுதலை எடுத்துரைப்பவரே! நீர் மக்களிடம், “நான் கடைப்பிடித்து வரும் வழிமுறைகள் யாவும் தெளிவான ஞானத்தின் அடிப்படையிலானவை ஆகும். என்னைப் பின்பற்றி வருபவர்களும் தெளிவான ஞானத்தின் அடிப்படையில் தான் செயல்படுகிறார்கள். அத்தகைய தெளிவான ஞானத்தின் பக்கமே நான் உங்களையும் அழைக்கிறேன். இதுவே என்னுடைய நேரான வழியாகும். இங்கு தேவையற்ற சடங்கு சம்பிரதாயங்களுக்கும், கற்பனை கதைகளுக்கும், மூடநம்பிக்கைகளுக்கும் எந்த இடமும் இல்லை. அல்லாஹ்வின் வழிகாட்டுதல்கள் இவற்றிற்கு எல்லாம் அப்பாற்பட்டவையாகும். எனவே அவனுடைய வழிகாட்டுதலுக்கு இணையாக வேறு எந்த வழிமுறையையும் நான் கடைப்பிடிப்பவனும் அல்லன்” என்று அறிவித்து விடுங்கள்.


وَمَآ أَرْسَلْنَا مِن قَبْلِكَ إِلَّا رِجَالًۭا نُّوحِىٓ إِلَيْهِم مِّنْ أَهْلِ ٱلْقُرَىٰٓ ۗ أَفَلَمْ يَسِيرُوا۟ فِى ٱلْأَرْضِ فَيَنظُرُوا۟ كَيْفَ كَانَ عَٰقِبَةُ ٱلَّذِينَ مِن قَبْلِهِمْ ۗ وَلَدَارُ ٱلْءَاخِرَةِ خَيْرٌۭ لِّلَّذِينَ ٱتَّقَوْا۟ ۗ أَفَلَا تَعْقِلُونَ.

109. இறைவழிகாட்டுதலை எடுத்துரைப்பவரே! உமக்கு முன்னர் நாம் உலகிலுள்ள எல்லா சமூகத்தவர்களுக்கும் நம் தூதர்களை அனுப்பி வைத்தோம். அவர்கள் அனைவரும் அவரவர் சமுதாயத்தினரிடையே பிறந்து வளர்ந்து வந்தவர்களே ஆவர். அவர்களுக்கு நம் வழிகாட்டுதல்களை அவரவர் பேசும் மொழியிலேயே எடுத்துரைத்தனர் (பார்க்க 14:4) இறைவழிகாட்டுதலை ஏற்க மறுத்து தவறான வழியில் சென்று அழிந்து போன சமுதாயங்களும் இருக்கின்றன. அவர்களைப் பற்றி அறிந்துகொள்ள உலகில் பிரயாணம் செய்து பார்த்துக் கொள்ளட்டும். அவர்களுடைய முடிவு என்னவாயிற்று என்பதை அவர்கள் பார்க்கவில்லையா? ஓவ்வொரு செயலுக்கும் இறுதி விளைவுகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன என்பதை அறிந்து, அதற்கு அஞ்சி வாழ்ந்த சமுதாயங்களுக்கு சிறந்த வாழ்க்கை கிடைத்து வந்தது என்பதையும் அவர்கள் கவனிப்பதில்லையா? இதை அவர்கள் சிந்தித்து ஏற்றுக்கொள்ள வேண்டாமா?
இந்த வரலாற்று உண்மைகள் இன்னொரு விஷயத்தையும் எடுத்துக் காட்டுகிறது. அதாவது யாஃகூப் நபி, தம் பிள்ளைகளுக்கு அறிவுரைகளை செய்த போது, அவற்றை அவர்கள் ஏற்று அதன்படி நடக்க முன் வரவில்லை. ஆனால் யூஸுஃப் நபி மற்றும் அவருடைய தம்பி பின்யாமினிடம் ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் இருந்தது. எனவே யூஸுஃப் தன் நன்நடத்தைக் கொண்டு உயர் நிலைக்கு வருகிறார். அவருடைய சகோதரர்களுக்கு பிரச்சனைகள் பல ஏற்பட்டு கையேந்தும் நிலைமைக்கு தள்ளப்பட்டு, அதன் பின்னரே அவர்கள் தம் தவறுகளை உணர்ந்து நேர்வழிக்கு வருகிறார்கள். இப்படியாகத் தான் ஒவ்வொரு தூதர்கள் விஷயத்திலும் நடந்து வந்தது. அதாவது அவர்கள் தம் சமூகத்தவர்க்கு நேர்வழி காட்டிய போது அவர்கள் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. அவர்களுடைய தீய செயல்களின் விளைவுகளைச் சந்தித்த போது சிலர் அவற்றை ஏற்று நடக்க முன் வந்தார்கள்.


حَتَّىٰٓ إِذَا ٱسْتَيْـَٔسَ ٱلرُّسُلُ وَظَنُّوٓا۟ أَنَّهُمْ قَدْ كُذِبُوا۟ جَآءَهُمْ نَصْرُنَا فَنُجِّىَ مَن نَّشَآءُ ۖ وَلَا يُرَدُّ بَأْسُنَا عَنِ ٱلْقَوْمِ ٱلْمُجْرِمِينَ.

110. அவர்கள் இறைவழிகாட்டுதலை தம் சமூகத்தவர்க்கு எடுத்துவைக்கும் போதெல்லாம், அவர்களில் பெரும்பாலோர் ஏற்க மறுப்பதோடு, அவருக்கு எதிராக சதி திட்டங்களையே தீட்டினர். இதைக் கவனிக்கும் தூதர்கள், இனி இவர்களை திருத்த முடியாது என்று நம்பிக்கை இழந்து விடுகின்றனர். கூடவே தம் உயிருக்கும் ஆபத்து ஏற்படும் என்றும் அஞ்சுகின்றனர். அப்படி ஒரு கட்டத்தில் இறைவன் அவர்களுக்கு உதவி புரிந்தே இருக்கின்றான். இவ்வாறாக இறைவனின் நாட்டப்படி செயல்படுவோருக்கு இறைவனுடைய பாதுகாப்பு கிடைத்து விடுகிறது. குற்றம் புரிந்தவர்களுக்கு அவர்களுடைய தீய செயல்களுக்கு ஏற்ப தண்டனையும் கிடைத்து விடுகிறது.


لَقَدْ كَانَ فِى قَصَصِهِمْ عِبْرَةٌۭ لِّأُو۟لِى ٱلْأَلْبَٰبِ ۗ مَا كَانَ حَدِيثًۭا يُفْتَرَىٰ وَلَٰكِن تَصْدِيقَ ٱلَّذِى بَيْنَ يَدَيْهِ وَتَفْصِيلَ كُلِّ شَىْءٍۢ وَهُدًۭى وَرَحْمَةًۭ لِّقَوْمٍۢ يُؤْمِنُونَ.

111. உலக வரலாற்றின் சுழல் இதையே எடுத்து காட்டுகிறது. மக்கள் தவறான வழியில் செல்வதும் - அவர்களை திருத்த இறைத்தூதர்கள் வருவதும் - அவருக்கெதிராக மக்கள் ஒன்று கூடி சதி திட்டங்களை தீட்டுவதும் - இறுதியில் தூதர்கள் வெற்றி பெறுவதும் - குற்றம் புரிந்தவர்கள் அழிவை சந்திப்பதும் என இவ்வாறே நடந்து வந்துள்ளதை எடுத்துக் காட்டுகிறது. ஆக அறிவுடையோர் இந்த உண்மைகளை ஆராய்ந்து அறிந்து, அதற்கு ஏற்றவாறு பொறுமையுடனும் நிதானத்துடனும் மக்களுக்கு இறைவனின் நல்லறிவுரைகளை எடுத்துரைத்து அவர்களைத் திருத்தி நேர்வழியில் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுவே திருக்குர்ஆன் கூறும் வரலாற்று நிகழ்வுகளிலிருந்து கிடைக்கின்ற படிப்பினையாகும். எனவே இந்த வரலாற்று நிகழ்வுகள் வெறும் கதைகள் அல்ல. இவை யாவும் நடந்து முடிந்த உண்மை நிகழ்வுகள் ஆகும். இவற்றை சிந்தித்து அதன்படி செயல்படுவோருக்கு நேர்வழியினை காட்டக் கூடியதாகவும் இறைஅருள் பெறும் பாக்கியம் மிக்கதாகவும் இருக்கின்றன.
கனவின் பலன்கள்:
(1) யூஸுஃப் நபியின் வரலாற்றில் கனவின் பலன்களைப் பற்றி முக்கியமாக பேசுவார்கள். இதை அடிப்படையாக வைத்து கனவின் பலன்கள் என புத்தகங்களை வெளியிடுகிறார்கள். இவை எல்லாம் சரியானதா என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.
(2) மனித சரீரத்தில் ‘ஹிஸ்’ என்ற உள்ளுணர்வுகள் எப்போதும் செயல்பட்டுக் கொண்டே இருக்கும். மனிதன் உறங்கினாலும் அது உறங்காது. எப்போதும் விழிப்புடன் இருக்கும். இந்த உள்ளுணர்வுகள் தான் அவனுடைய செயல்களுக்கு உந்துதல்களாக அமைகின்றன.
(3) இதனால் அவனுள் ஆசைகள் வளர்கின்றன. அவனுடைய ஆசைகள் அவன் வாழும் காலம், சூழ்நிலை, சந்தர்ப்பம், வாய்ப்பு வசதிகளுக்கு ஏற்பத்தான் நிறைவேறி வரும். அதே சமயம் இவனுடைய பல ஆசைகள் நிறைவேறாமலும் போகலாம். இதற்குக் காரணம் இவனுடைய ஆசைகளுக்கு ஏற்ப திறமை, முயற்சி, உழைப்பு எதுவும் இருக்காது. எனவே அவை நிறைவேறாத ஆசைகளாக அவன் மனதில் நிற்கும். இந்த ஆசைகள் நிறைவேறுவது போல் தூக்கத்தில் கனவில் வரும்.
(4) இந்த உள்ளுணர்வுகள் அவனுள் வளர வளர அவை மனதில் ஆசைகளாக வேருண்றி போய்விடும். இளைஞர்களுக்கிடையே மலரும் ஆசைகள் மற்றும் காதல் இதற்கு உதாரணமாக கூறலாம். இந்த ஆசைகள் மனித உணர்வுகளோடு சம்பந்தப்பட்ட விஷயங்களாக இருப்பதால், அந்த உணர்வுகள் மனிதனுடைய அறிவின் கட்டுப்பாட்டை செயலிழக்கச் செய்து விடுகிறது. தன் ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ள, ஏதாவது ஒரு வழிமுறையை கையாளுவான். அவற்றின் பின்விளைவுகளைப் பற்றியும் சிந்திக்க மாட்டான். நிறைவேறாத ஆசைகள் அவன் தூங்கும் போதும் அவை நிறைவேறுவது போல் கனவில் தோன்றும். இவையாவும் அவரவர் வாழும் கால சூழ்நிலைக்கு ஏற்றவாறு கனவுகள் ஏற்படும். எனவே எல்லோருடைய கனவுகளுக்கும் ஒரே மாதிரியான பலன்களைத் தரும் என்று கூறுவது அறிவுடமை ஆகாது.
(5) நபியின் கனவு:உதாரணத்திற்கு இறைத் தூதர்களாகிய நபிமார்கள், எப்போதும் சமுதாயத்தில் நிகழ்ந்து வரும் சம்பவங்களைப் பற்றியும், அவற்றின் பின்விளைவுகளைப் பற்றியும், அவற்றை சரி செய்ய வழிமுறைகளை தேடிக் கொண்டும் இருப்பார்கள். இவைதான் அவர்களுடைய இலட்சியக் கனவாக இருக்கும்.
(6) யூஸுஃப் நபி, நட்சத்திரங்களும் சூரியனும் சந்திரனும் அடிபணிவது போல் கனவு காண்கிறார். அந்த கனவைப் பற்றி தம் தந்தையிடம் எடுத்துரைக்கும் போது, இவருக்கு கிடைக்கவிருக்கும் உயர் பதவிப் பற்றி அவருக்கு விளக்கி அதற்கேற்ற வகையில் சிறப்பாக செயல்படும்படி அறிவுறுத்துகிறார். எனவே அவர் தம் வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் இறைவழிகாட்டுதலைப் பேணி நடந்து, மாபெரும் இலட்சியத்துடன் வாழ்ந்து வந்தார். பல ஆண்டுகள் சிறையில் அடைபட்டு கிடந்தாலும் மனம் தளராமல் அயறாது பாடுபட்டு உயர் பதவியை அடைந்தார். அவருடைய கனவு இலட்சிய கனவாக இருந்ததால் பெண்களின் மோக வலையிலும் சிக்காமல் தம்மை பாதுகாத்துக் கொண்டார்.
(7) யூஸுஃப் நபி, இப்றாஹிம் நபியின் கொள்ளு பேரன் ஆவார். அவருடைய பாட்டனார் இஸ்ஹாக் நபி ஆவார். இவர்கள் எல்லாம் ஆட்சி அதிகாரத்தில் இருந்தவர்கள் ஆவர். ஆனால் இவருடைய தந்தை யாஃகூப் நபி அரசாட்சியில் இல்லை. எனவே தம் தந்தையை ஆட்சியில் அமர்த்த வேண்டும் என்பதே யூஸுஃப்புடைய இலட்சிய கனவாகும். அதில் அவர் வெற்றியும் பெற்றார். இப்படியாக அவருடைய பெற்றோருக்கு பெயர் சொல்லும் பிள்ளையாகத் திகழ்ந்தார். அவ்வாறே நம்மில் ஒவ்வொருவரும் சிறப்பாக வாழ்ந்துக் காட்டி ‘சிறந்த குடிமகன்’ என்று பெயரெடுக்க இலட்சிய கனவைக் காண வேண்டும்.
(8) ஆக கனவுகள் என்பது அவரவர் வாழும் கால சூழ்நிலைக்கு ஏற்றவாறு அமையும். அவற்றின் பலன்களும் வெவ்வேறாக இருக்கும்.
(9) ஒரு நபியின் கனவு, கைதியின் கனவு மற்றும் அரசனின் கனவு வெவ்வேறு திசையில் இருப்பதை கவனித்துப் பாருங்கள். அவரவர் வாழ்ந்து வரும் சூழ்நிலைக்கு ஏற்றவாறே அவர்களுடைய எண்ணங்களும் முயற்சிகளும் இருக்கும். அதற்கு ஏற்றவாறே அவர்களுடைய கனவுகளும் இருக்கும். எனவே தூக்கத்தில் கனவு வருவது சர்வ சாதாரணம் தான். ஆனால் அவற்றின் பலன்கள் ஒரே சீராக இருக்கும் என சொல்வது சரியல்ல.
(10) ஒரு நாட்டை ஆளும் அரசனுடைய கவனமும் சிந்தனையும், நாட்டை சிறப்பாக ஆள்வது பற்றியும், அந்த ஆட்சியைத் தக்க வைத்துக்கொள்வது பற்றியும், அதன் பாதுகாப்பைப் பற்றியும் எப்போதும் இருந்து வரும். எனவே ஏழு மெலிந்த பசுக்கள் கொழுத்த பசுக்களை தின்பது போல் கனவு கண்டதும் தன் ஆட்சிக்கு ஆபத்துக்கள் ஏதாவது ஏற்பட்டுவிடுமோ என அஞ்சி, அரசவை மந்திரிகளிடமும் பொது மக்களிடமும் அதன் விளக்கத்தை கேட்கிறார். அதற்கு இறைவழிகாட்டுதல் பெற்ற யூஸுஃப் நபி மூலமாக அவருக்கு விளக்கம் கிடைக்கிறது.
(11) குற்றம் புரிந்து சிறையில் அடைக்கப்பட்ட இருவரும் கனவு காண்கிறார்கள். அந்த சிறைத் தண்டனையிலிருந்து தமக்கு எப்போது விடுதலை கிடைக்கும் என்ற எண்ணங்களே அவர்கள் உள்ளங்களில் ஊடுருவி இருந்தது. அவர்களுடைய கனவுகளும் அதை ஒட்டியே இருக்கும். எனவே அவர்கள் கண்ட கனவுக்கு விளக்கம் தருவதில் எந்த சிரமும் இருப்பதாகத் தெரியவில்லை.
(12) கெட்ட கனவுகள்:ஒரு சிலருக்கு தூக்கத்தில் கெட்ட கனவுகள் ஏற்பட்டு நடுநடுங்கிப் போவார்கள். இவை எல்லாம் வயிற்று கோளாரினால் ஏற்படுகின்ற பாதிப்புகளாகும். சிலர் படுத்திருக்கும் நிலையால் இருதயத்திற்கும் மூளைக்கும் இடையே செல்ல வேண்டிய இரத்த ௐட்டம் தடைபட்டுப் போய் தூக்கத்தில் மூச்சு திணரல் ஏற்படும். அதைத் தொடர்ந்து பயங்கர கனவுகள் ஏற்படும். அத்தகையவர்கள், தாம் படுத்திருக்கும் நிலையை மாற்றிக்கொள்ள வேண்டும். இதற்கெல்லாம் பயப்படக் கூடாது.
(13) கனவுகள் அவசியமா? கனவு காணும் விஷயத்தில் கால சூழ்நிலை, சந்தர்ப்பம், மனோநிலை உடல்நிலை ஆகியவற்றிற்கு ஏற்றவாறு தான் கனவுகள் அமையும். எனவே கனவுகளின் பலன்கள் எல்லோருக்கும் ஒரே மாதிரியாக அமைய வாய்ப்பில்லை. முடவன் கொம்பு தேனுக்கு ஆசைப்படுவது போல், பலர் நடக்க முடியாத விஷயத்திற்கெல்லாம் ஆசைப்பட்டு கனவு கண்டு கொண்டிருப்பார்கள். இதனால் எவ்வித பலனும் ஏற்படப் போவதில்லை. கனவை கனவாகவே எடுத்துக்கொள்ள வேண்டும்.
(14)கனவோ நனவோ அதை அடைய வேண்டுமானால் விடாமுயற்சி, கடின உழைப்பு, திறமை, ஆற்றல் மற்றும் ஒழுக்க மாண்புகள் ஆகிய வற்றின் மூலமாகத்தான் அவற்றை நிறைவேற்றிக் கொள்ள முடியுமே தவிர வெறும் தூக்கத்தில் கனவு கண்டுவிட்டதால் அவை நமக்கு கிடைத்து விடும் என்ற எதிர் பார்ப்பில் இருந்து விடக் கூடாது. ஒவ்வொருவரின் வாழ்விலும் இலட்சிய கனவுகள் இருக்க வேண்டும். அவற்றை நிறைவேற்றிக் கொள்ள யூஸுஃப் நபி எவ்வாறு உறுதியோடு செயல்பட்டு அவற்றை உலகார்க்கு எடுத்துக் காட்டினாரோ, அது போலவே நாமும் முயலவேண்டும். இதுதான் யூஸுஃப் நபியின் வாழ்க்கை வரலாற்றில் நமக்கு கிடைக்கும் படிப்பினை ஆகும்.