بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
11:0.அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் அறிவுரைப்படியே அனைத்துக் காரியங்களையும் செய்ய நாடுகிறேன். (பார்க்க 6:162)
الٓر ۚ كِتَٰبٌ أُحْكِمَتْ ءَايَٰتُهُۥ ثُمَّ فُصِّلَتْ مِن لَّدُنْ حَكِيمٍ خَبِيرٍ.
11:1. கிருபை மிக்க அல்லாஹ்வின் புறத்திலிருந்து இறக்கி அருளப்பட்ட இவ்வேதம், கற்பாறைகளில் செதுக்கி வைக்கப்பட்டது போல் ஆணித்தரமாகவும், தெளிவான ஆதாரங்களுடன் விரிவாகவும் சொல்லப்பட்டவை ஆகும். இவ்வேத விஷயங்கள் அனைத்தும் அளவற்ற அறிவாற்றலும், ஞானமிக்கோனுமாகிய அல்லாஹ்வின் புறத்திலிருந்து வந்தவையாகும்.
أَلَّا تَعْبُدُوٓا۟ إِلَّا ٱللَّهَ ۚ إِنَّنِى لَكُم مِّنْهُ نَذِيرٌۭ وَبَشِيرٌۭ.
11:2. இவ்வேதத்தின் அடிப்படைக் கோட்பாடு என்னவென்றால், மனிதன் அல்லாஹ்வின் வழிகாட்டுதலைத் தவிர வேறு எதற்கும் இணங்கி செயல்படக் கூடாது என்பதே ஆகும். இதற்கு மாற்றமாக செயல்படுவதால் ஏற்படும் விபரீத விளைவுகளைப் பற்றி முன்னெச்சரிக்கை செய்வதும், இறை வழிகாட்டுதலின்படி செயல்படுவதால் கிடைக்கும் நன்மைகளைப் பற்றிய நன்மாறாயம் எடுத்துரைப்பதுமே இவ்வேதத்தின் கருவூலமாகும்.
இதனை அடிப்படையாகக் கொண்டு
وَأَنِ ٱسْتَغْفِرُوا۟ رَبَّكُمْ ثُمَّ تُوبُوٓا۟ إِلَيْهِ يُمَتِّعْكُم مَّتَٰعًا حَسَنًا إِلَىٰٓ أَجَلٍۢ مُّسَمًّۭى وَيُؤْتِ كُلَّ ذِى فَضْلٍۢ فَضْلَهُۥ ۖ وَإِن تَوَلَّوْا۟ فَإِنِّىٓ أَخَافُ عَلَيْكُمْ عَذَابَ يَوْمٍۢ كَبِيرٍ.
11:3. நபியே நீர் மக்களிடம், “இறைவனின் பரிபாலன அமைப்புமுறை எனும் இயற்கை ரீதியான ஏற்பாடுகளைக் கொண்டே உங்களுடைய பாதுகாப்பான வாழ்விற்கு வேண்டிய வாழ்வாதாரங்களைத் தேடிக்கொள்ளுங்கள். இறைவனின் வழிகாட்டுதலின் பக்கமே உங்கள் கவனத்தைச் செலுத்தி வாருங்கள். அவ்வாறே செயல்பட்டு வந்தால், ஒரு குறிப்பிட்ட காலத் தவணைக்குப் பின், உங்களுக்கு வசதி வாய்ப்புகள் பெருகி வரும். நீங்கள் எந்த அளவிற்கு அதிகமாக உழைக்கிறீர்களோ, அந்த அளவிற்கு உங்களுக்கு வசதி வாய்ப்புகள் பெருகி வரும். இக்கொள்கையை விட்டு நீங்கள் திரும்பி விட்டால், உங்கள் வாழ்வில் பிரச்சனைகள் பல ஏற்பட்டு, வேதனைகளைச் சந்திக்க வேண்டிவரும் என நான் அஞ்சுகிறேன்” என்று அறிவித்து விடுங்கள்.
إِلَى ٱللَّهِ مَرْجِعُكُمْ ۖ وَهُوَ عَلَىٰ كُلِّ شَىْءٍۢ قَدِيرٌ.
11:4. நீங்கள் இந்த கோட்பாட்டினை விட்டு தற்போது திரும்பி விட்டாலும், உங்கள் சமுதாயத்திலுள்ள பிரச்சனைகள் தீர, அல்லாஹ்வின் இந்த வழிகாட்டுதலின் பக்கமே வந்தாக வேண்டும். இதை விட்டால் உங்களின் சிறப்பான வாழ்விற்கு வேறு எந்த வழிமுறையும் ஒருபோதும் கிடைக்காது. ஏனெனில் அனைத்துப் படைப்புகளின் கட்டுப்பாடும் அல்லாஹ்விடமே உள்ளது என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்.
أَلَآ إِنَّهُمْ يَثْنُونَ صُدُورَهُمْ لِيَسْتَخْفُوا۟ مِنْهُ ۚ أَلَا حِينَ يَسْتَغْشُونَ ثِيَابَهُمْ يَعْلَمُ مَا يُسِرُّونَ وَمَا يُعْلِنُونَ ۚ إِنَّهُۥ عَلِيمٌۢ بِذَاتِ ٱلصُّدُورِ.
11:5. இறைவழிகாட்டுதலுக்கு மாற்றமாக செயல்படுபவர்களின் நிலைமை எவ்வாறு உள்ளது என்று தெரியுமா? வெளித் தோற்றத்தில் ஒரு விதமாகவும், தனித்து இருக்கும் போது வேறு விதமாகவும் நடந்து கொள்கிறார்கள். இப்படியாக அவர்கள் உள்ளங்களில் மறைத்து வைத்திருப்பதை மூடி மறைக்கவே முயல்கிறார்கள். ஆனால் அல்லாஹ்விடம் இப்படி மூடி மறைக்க முடியுமா? வெளிப்படையான செயல்களும் திரைக்கு மறைவாக நடைபெறுவதும் அவனுக்குத் தெரியாமல் போய்விடுமா? மனித உள்ளங்களில் ஊடுருவிச் செல்லும் எண்ணங்களையும் அறிந்து கொள்ளும் பேராற்றல் உடையவன்தானே அல்லாஹ்!
۞ وَمَا مِن دَآبَّةٍۢ فِى ٱلْأَرْضِ إِلَّا عَلَى ٱللَّهِ رِزْقُهَا وَيَعْلَمُ مُسْتَقَرَّهَا وَمُسْتَوْدَعَهَا ۚ كُلٌّۭ فِى كِتَٰبٍۢ مُّبِينٍۢ.
11:6. அல்லாஹ்வின் வல்லமையும், பேராற்றலையும் அறிந்துகொள்ள வேண்டும் என்றால், உலகிலுள்ள எல்லா உயிரினங்களும் உயிர் வாழ்வதற்கு வேண்டிய விசாலமான பரிபாலன ஏற்பாடுகளை செய்திருப்பதைப் பற்றிச் சிந்தித்துப் பாருங்கள். அத்தகைய ஏற்பாடுகள் இருப்பதால் தான் எந்த உயிரினமும் உணவு கிடைக்காமல் செத்து மடிவதில்லை. (பார்க்க 29:60, 41:10) அது மட்டுமின்றி எந்த உயிரினம் எங்கு எவ்வாறு வாழ வேண்டும் என்பது போன்ற எல்லா சட்ட விதிமுறைகளையும் நிர்ணயித்தது அல்லாஹ் தான். இப்படியாக ஒவ்வொரு விஷயத்தைப் பற்றியும் அழியா ஏட்டில் விவரமாக பதிவாக்கப்பட்டு, அதன்படியே அகிலங்கள் அனைத்தும் செயல்பட்டு வருகின்றன. அவற்றில் எந்த மாறுதலையும் ஒருபோதும் காணமாட்டீர்கள்.
அல்லாஹ்வின் வழிகாட்டுதலின் அடிப்படையில் உருவாகும் ஆட்சியமைப்பு, இந்த வாழ்வாதார ஏற்பாடுகளை மேற்கொள்ளும். இப்படியாக மனிதனோ அல்லது மற்ற எந்த உயிரினமோ பட்டினியால் வாடாமல் இருக்க பார்த்துக் கொள்ளும். ஆக நாட்டின் உணவு உற்பத்தி மற்றும் அதன் பங்கீட்டுமுறை அந்த அரசின் முக்கிய கடமையாக இருக்கும். (12:54-55)
وَهُوَ ٱلَّذِى خَلَقَ ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضَ فِى سِتَّةِ أَيَّامٍۢ وَكَانَ عَرْشُهُۥ عَلَى ٱلْمَآءِ لِيَبْلُوَكُمْ أَيُّكُمْ أَحْسَنُ عَمَلًۭا ۗ وَلَئِن قُلْتَ إِنَّكُم مَّبْعُوثُونَ مِنۢ بَعْدِ ٱلْمَوْتِ لَيَقُولَنَّ ٱلَّذِينَ كَفَرُوٓا۟ إِنْ هَٰذَآ إِلَّا سِحْرٌۭ مُّبِينٌۭ.
11:7. இந்தப் பரிபாலனத் திட்டம் சிறப்பாக செயல்படும் வகையில் வானங்களையும் பூமியையும் அல்லாஹ் ஆறு கால கட்டங்களாகப் படைத்து, அவற்றைத் கட்டுக்கோப்பாக செயல்படுத்தி வருகிறான். (விளக்கத்திற்கு பார்க்க 7:54) அது மட்டுமின்றி உயிரினங்கள் அனைத்தும் வாழ்வதற்கு உயிர் நாடியாகத் திகழும் தண்ணீரின் ஏற்பாட்டையும் தம் கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொண்டான். (பார்க்க 2:22)
ஆக உலக மக்களில் யார் அல்லாஹ்வின் வழிகாட்டுதலைப் பின்பற்றி, அழகிய முறையில் செயல்பட்டு சிறப்பாக வாழ்கிறார்கள் என்பதைப் பரிசோதித்துக் கொள்வதற்காக, வாழ்வு மற்றும் மரணத்தின் கட்டுப்பாட்டையும் தன்வசம் வைத்துக் கொண்டான்.(பார்க்க 67:2).
இந்த அடிப்படை கோட்பட்டை ஏற்காதவர்களிடம், மரணத்திற்கு பின்பும் மனிதனின் வாழ்வு தொடர்கிறது என்று சொன்னால் அவையெல்லாம் வெற்றுப் பேச்சு என்று சொல்லி விடுகிறார்கள். “மனித வாழ்வு என்பது இவ்வுலக வாழ்வோடு சரி” என்கிறார்கள். (பார்க்க 45:24).
திருக்குர்ஆனில் வாழ்வு மற்றும் மரணத்தைப் பற்றி பேசும் போது, தனி நபரின் வாழ்வு-மரணம், சமுதாயத்தின் வாழ்வு-மரணம் என இரு அர்த்தங்களில் பேசுகிறது. சமுதாயத்தின் மரணம் என்பது அங்கு வாழும் மக்கள் யாவரும் எவ்வித ஆற்றலும் இல்லாமல் நடை பிணங்களாக வாழ்வது என்று பொருள் படும். (பார்க்க 7:179) அப்படி வாழ்பவர்களுக்கு உயிரோட்டம் அளிக்கவே இந்தக் குர்ஆன் கற்றுத் தரப்படுகிறது. (பார்க்க 8:24) இந்தக் கல்வியறிவு என்பது உலக படைப்புகளின் ஆய்வுகள் (பார்க்க 30:19-27, 16:10-16) மற்றும் ஒழுக்க மாண்புகள் சம்பந்தப்பட்ட கல்விமுறையாகும். இவை இரண்டும் இருந்தால் தான் சமுதாயமும் நாடும் சீரும் சிறப்புமாக வாழ்வதற்கான வழிகள் கிடைக்கும். தனி நபரின் இவ்வுலக வாழ்வும், மரணத்திற்கு பின்னுள்ள வாழ்வும் சிறப்பாக இருக்கும். (பார்க்க 2:201).
وَلَئِنْ أَخَّرْنَا عَنْهُمُ ٱلْعَذَابَ إِلَىٰٓ أُمَّةٍۢ مَّعْدُودَةٍۢ لَّيَقُولُنَّ مَا يَحْبِسُهُۥٓ ۗ أَلَا يَوْمَ يَأْتِيهِمْ لَيْسَ مَصْرُوفًا عَنْهُمْ وَحَاقَ بِهِم مَّا كَانُوا۟ بِهِۦ يَسْتَهْزِءُونَ.
11:8. இந்த உண்மைகளை எல்லாம் ஏற்றுக் கொள்ளாதவர்களிடம், “இறைவனின் நியதிப்படி உங்களுடைய செயல்களுக்கேற்ற வகையில் விளைவுகள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பின் வரும். அவை உடனே வருவதில்லை” (பார்க்க 16:61) என்று சொன்னால் அவர்கள், “அப்படி வேதனை அளிப்பதற்கு யார் கால தாமதம் செய்யச் சொன்னது? உடனே அளிக்க வேண்டியதுதானே” என ஏளனமாகப் பேசுகிறார்கள். ஆனால் இப்படிப் பேசி வருவதால் அவர்களுக்கு வர வேண்டிய அழிவு காலம் வராமல் போய்விடுமா? அப்படியும் வந்தால் அதை அவர்களால் தடுத்து நிறுத்தத் தான் முடியுமா? எதை அவர்கள் பரிகாசமாகப் பேசிக்கொண்டு இருக்கிறார்களோ, அதுவே அவர்களை கண்டிப்பாக சூழ்ந்து கொள்ளும் என்பதை அவர்கள் அறிந்துகொள்ள வேண்டாமா?
وَلَئِنْ أَذَقْنَا ٱلْإِنسَٰنَ مِنَّا رَحْمَةًۭ ثُمَّ نَزَعْنَٰهَا مِنْهُ إِنَّهُۥ لَيَـُٔوسٌۭ كَفُورٌۭ.
11:9. இத்தகையவர்கள், இறைவன் புறத்திலிருந்து கிடைக்கின்ற வாழ்க்கை வசதிகளை மனிதன் இழந்து விட்டால், அவன் நிராசையுடன் ‘‘இறைவன் விதித்த விதி’’ என்று சொல்லி விடுகின்றான். தான் செய்து வந்த தவறான செயல்களைப் பற்றி சிந்தித்துப் பார்க்க மாட்டான். இப்படியாக அவன் நன்றி மறந்தவனாக ஆகி விடுகின்றான்.
அதாவது தாம் செய்து வந்த தவறான செயல்களால் அவர்களுக்கு நஷ்டம் ஏற்பட்டதை இறைவன் விதித்த விதி என்று அல்லாஹ்வின் மீது பழிசுமத்தி விடுகிறார்கள். இது நன்றி மறந்த பேச்சாகும்.
وَلَئِنْ أَذَقْنَٰهُ نَعْمَآءَ بَعْدَ ضَرَّآءَ مَسَّتْهُ لَيَقُولَنَّ ذَهَبَ ٱلسَّيِّـَٔاتُ عَنِّىٓ ۚ إِنَّهُۥ لَفَرِحٌۭ فَخُورٌ.
11:10. அதே சமயம் மனிதனுக்கு ஏற்படுகின்ற துன்பங்கள் நீங்கி, இறைவன் புறத்திலிருந்து அருட்கொடைகள் கிடைத்தால், “என்னைப் பிடித்த கேடுகள் எல்லாம் நீங்கி விட்டன” என்று சந்தோஷமாகக் கூறுவான். ஏதோ தம் வாழ்வின் லட்சியத்தில் வெற்றி கண்டுவிட்டது போல் பெருமகிழ்ச்சி கொள்பவனாக இருப்பான்.
இதுதான் இறைவழிகாட்டுதலை ஏற்றுக்கொள்ளாத சமுதாய மக்களிடையே நிகழ்கின்ற அன்றாட சம்பவங்களாகும். அவர்கள் தற்காலிக சுகங்களையே நோக்கமாகக் கொண்டு வாழ்வார்கள். சமுதாய மக்களின் வருங்கால நலனைப் பற்றியோ, அல்லது தன் மரணத்திற்குப் பின் தொடர்கின்ற வாழ்வைப் பற்றியோ கவலைக் கொள்ளவே மாட்டார்கள். அவை எல்லாம் வரும்போது பார்த்துக் கொள்ளலாம் என்ற அசட்டுத் தைரியத்தில் இருப்பார்கள். துன்பம் ஏற்படும் போது, அல்லாஹ் இப்படி செய்து விட்டான் என்பார்கள். சுகமான வாழ்வு கிடைத்தால் இவை எல்லாம் தம் உழைப்பில் கிடைத்த செல்வங்கள் என நினைத்து பெருமிதம் கொள்வார்கள்.
إِلَّا ٱلَّذِينَ صَبَرُوا۟ وَعَمِلُوا۟ ٱلصَّٰلِحَٰتِ أُو۟لَٰٓئِكَ لَهُم مَّغْفِرَةٌۭ وَأَجْرٌۭ كَبِيرٌۭ.
11:11. ஆனால் இறைவழிகாட்டுதலை ஏற்றுக்கொண்டவர்கள் இன்பத்திலும் துன்பத்திலும் நிதானத்துடன் ஒரே சீராக நடந்து கொள்வார்கள். மன உறுதிப்பாடுடன் ஆற்றல்மிக்க நற்செயல்களைத் தொடர்ந்து செய்து வருவார்கள். இத்தகையவர்களுக்கே பாதுகாப்பான வாழ்வும் அவர்களுடைய உழைப்பிற்கேற்ப நற்பலன்களும் தொடர்ந்து கிடைத்து வரும்.
மேலும் இறைவனிடமிருந்து இறக்கி அருளப்படும் இந்தக் குர்ஆன், மக்களின் தவறான செயல்களால் ஏற்படும் அல்லது ஏற்படவிருக்கும் விபரீத விளைவுகளைப் பற்றி அடிக்கடி எடுத்துரைக்கிறது. ஆனால் இந்த முன் எச்சரிக்கைகளை அவர்கள் செவி சாய்ப்பதாக இல்லை. எனவே
فَلَعَلَّكَ تَارِكٌۢ بَعْضَ مَا يُوحَىٰٓ إِلَيْكَ وَضَآئِقٌۢ بِهِۦ صَدْرُكَ أَن يَقُولُوا۟ لَوْلَآ أُنزِلَ عَلَيْهِ كَنزٌ أَوْ جَآءَ مَعَهُۥ مَلَكٌ ۚ إِنَّمَآ أَنتَ نَذِيرٌۭ ۚ وَٱللَّهُ عَلَىٰ كُلِّ شَىْءٍۢ وَكِيلٌ.
11:12. இறைவழிகாட்டுதலை எடுத்துரைப்பவரே! வஹீ மூலம் அறிவிக்கப் பட்டவற்றில் எச்சரிக்கை போன்ற சில விஷயங்களை மக்களிடம் எடுத்துரைக்காமல் விட்டு விடலாம் என்று நீங்கள் எண்ணலாம். நீங்கள் அவ்வாறு செய்வதால் அவர்களுக்கு வரவிருக்கும் வேதனைகள் வராமல் போய்விடுமா? எனவே அவற்றை எடுத்துரைத்து எச்சரிக்கை செய்வது உங்கள் மீதுள்ள முக்கியக் கடமையாகும். இதை அடுத்து, “அவர் மீது ஒரு பொக்கிஷமாவது இறங்க வேண்டாமா? அல்லது அவருடன் ஒரு மலக்காவது வர வேண்டாமா?” என்பது போன்ற விமர்சனங்களைப் பற்றியதாகும். இதைப் பற்றியெல்லாம் நீர் பொருட்படுத்தாமல், உம் கடமையை நிறைவேற்றி வாருங்கள். அல்லாஹ் நிர்ணயித்த சட்டங்கள் அவர்களுடைய ஒவ்வொரு செயலையும் கவனித்துக் கொள்ளும்.
أَمْ يَقُولُونَ ٱفْتَرَىٰهُ ۖ قُلْ فَأْتُوا۟ بِعَشْرِ سُوَرٍۢ مِّثْلِهِۦ مُفْتَرَيَٰتٍۢ وَٱدْعُوا۟ مَنِ ٱسْتَطَعْتُم مِّن دُونِ ٱللَّهِ إِن كُنتُمْ صَٰدِقِينَ.
11:13. அல்லது அவர்கள், “இவ்வேதத்தை இவரே தம் கற்பனை வளத்துடன் எழுதிக் கொண்டார்” என்று கூறுகிறார்களா? அப்படியாயின், “நீங்களும் தம் சுய அறிவைக் கொண்டு இவ்வேதத்தைப் போன்றே பத்து அத்தியாயமாவது ஏற்படுத்திக் காட்டுங்கள். நீங்கள் உங்கள் வாதத்தில் உண்மையாளர்களாக இருந்தால் மனிதனின் சிறப்பான வாழ்விற்கு அல்லாஹ்வின் இவ்வழிகாட்டுதலை விட்டுவிட்டு, இதைவிட சிறந்த வழிமுறைகளை ஏற்படுத்திக் காட்டுங்கள் (பார்க்க 2:23, 10:38) இதற்காக உங்களில் உள்ள வல்லுனர்களையும் அறிஞர்களையும் அழைத்துக் கொள்ளுங்கள்” என்று அவர்களிடம் அறைகூவல் விடுங்கள்.
فَإِلَّمْ يَسْتَجِيبُوا۟ لَكُمْ فَٱعْلَمُوٓا۟ أَنَّمَآ أُنزِلَ بِعِلْمِ ٱللَّهِ وَأَن لَّآ إِلَٰهَ إِلَّا هُوَ ۖ فَهَلْ أَنتُم مُّسْلِمُونَ.
11:14. அவர்களிடமிருந்து இந்த அறைகூவலுக்கு எந்த பதிலும் வரவில்லை என்றால், நிச்சயமாக இவ்வேத அறிவுரைகள் ஞானமிக்க அல்லாஹ்விடமிருந்து வந்தவையே என்பதையும், வேறு எந்த வழிமுறைகளையும் கடைப்பிடித்து, மனிதன் சிறந்த வாழ்வைப் பெறவே முடியாது என்பதையும் அறிந்து கொள்ளும்படி அவர்களிடம் கூறிவிடுங்கள். இனியேனும் அவர்கள் இதற்கு முற்றிலும் அடிபணிந்து வாழ முன்வரட்டும்.
مَن كَانَ يُرِيدُ ٱلْحَيَوٰةَ ٱلدُّنْيَا وَزِينَتَهَا نُوَفِّ إِلَيْهِمْ أَعْمَٰلَهُمْ فِيهَا وَهُمْ فِيهَا لَا يُبْخَسُونَ.
11:15. இவ்வாறு அறிவிப்பு செய்த பின்பும், வருங்கால நிலையான பலன்களைப் பற்றியெல்லாம் சிந்திக்காமல் தற்காலிக சுகங்களை மட்டும் நோக்கமாகக் கொண்டு வாழும் சமுதாயங்களுக்கு, அவர்களுடைய உழைப்பிற்கேற்ப பலன்கள் இறைவன் புறத்திலிருந்து கிடைத்து விடும். இதில் எவ்விதக் குறைப்பாடும் வைக்கப்பட மாட்டாது.
أُو۟لَٰٓئِكَ ٱلَّذِينَ لَيْسَ لَهُمْ فِى ٱلْءَاخِرَةِ إِلَّا ٱلنَّارُ ۖ وَحَبِطَ مَا صَنَعُوا۟ فِيهَا وَبَٰطِلٌۭ مَّا كَانُوا۟ يَعْمَلُونَ.
11:16. ஆனால் இத்தகைய சுயநலப் போக்குடன் தற்காலிக சொகுசு வாழ்வை மட்டும் நோக்கமாகக் கொண்டு வாழ்பவர்களுக்கு, வருங்கால நிலையான பலன்களில் பங்கு எதுவும் கிடைக்காது. அதனால் அத்தகைய சமுதாயங்கள் காலப் போக்கில் அழிந்து போவது தவிர்க்க முடியாததாகி விடுகிறது. இப்படியாக அவர்களுடைய உழைப்புகள் எல்லாம் நிலையான பலன்களை அளிப்பதாக இருப்பதில்லை.
இறைவழிகாட்டுதலின் உண்மை நிலையை அறிந்துகொள்ள மூன்று வழிகள் உள்ளன.
(1) மனிதனின் அறிவுப் புலன்கள்
(2) வழிகாட்டுதலின் அடிப்படையில் ஏற்படும் நற்பலன்களும் விளைவுகளும்
(3) வரலாற்று ஆதாரங்கள் மற்றும் அவற்றின் உதாரணங்கள் மூலம் கிடைக்கின்ற படிப்பினைகள்.
أَفَمَن كَانَ عَلَىٰ بَيِّنَةٍۢ مِّن رَّبِّهِۦ وَيَتْلُوهُ شَاهِدٌۭ مِّنْهُ وَمِن قَبْلِهِۦ كِتَٰبُ مُوسَىٰٓ إِمَامًۭا وَرَحْمَةً ۚ أُو۟لَٰٓئِكَ يُؤْمِنُونَ بِهِۦ ۚ وَمَن يَكْفُرْ بِهِۦ مِنَ ٱلْأَحْزَابِ فَٱلنَّارُ مَوْعِدُهُۥ ۚ فَلَا تَكُ فِى مِرْيَةٍۢ مِّنْهُ ۚ إِنَّهُ ٱلْحَقُّ مِن رَّبِّكَ وَلَٰكِنَّ أَكْثَرَ ٱلنَّاسِ لَا يُؤْمِنُونَ.
11:17. இவற்றின் அடிப்படையில் உண்மைகள் தெளிவான பின், மூஸா நபி போன்றோர் காலத்தில் அம்மக்களுக்குக் கிடைத்த அதே நற்பலன்களும் விளைவுகளும் இப்போதும் கிடைக்கும் என்பதை ஆராய்ந்து அறிந்து ஏற்றுக் கொள்பவர்களே உண்மையான மூஃமின்கள் ஆவார்கள். இந்த உண்மைகளை எல்லாம் ஏற்றுக் கொள்ளாமல், இறைவழிகாட்டுதலுக்கு மாற்றமாகச் செயல்படுபவர்கள் போய் சேரும் இடம் நரகமாகத்தான் இருக்கும். இதில் யாருக்கும் எவ்வித சந்தேகமும் இருக்கத் தேவையில்லை. காலம் காலமாய் நடந்து வந்த உண்மை விஷயங்களே உங்கள் இறைவனிடமிருந்து வந்துள்ளன. ஆனால் இதைப்பற்றி பெரும்பாலோர் சிந்தித்து ஏற்றுக் கொள்வதில்லை.
وَمَنْ أَظْلَمُ مِمَّنِ ٱفْتَرَىٰ عَلَى ٱللَّهِ كَذِبًا ۚ أُو۟لَٰٓئِكَ يُعْرَضُونَ عَلَىٰ رَبِّهِمْ وَيَقُولُ ٱلْأَشْهَٰدُ هَٰٓؤُلَآءِ ٱلَّذِينَ كَذَبُوا۟ عَلَىٰ رَبِّهِمْ ۚ أَلَا لَعْنَةُ ٱللَّهِ عَلَى ٱلظَّٰلِمِينَ.
11:18. இந்த உண்மைகளைப் பற்றி எல்லாம் சிந்திக்காமல் அல்லாஹ்வின் பெயரைப் பயன்படுத்தி, அல்லாஹ் சொல்லாதவற்றை எல்லாம் அல்லாஹ் சொன்னதாக இட்டுக்கட்டி சுயமாக ஷரீயத் சட்டங்களையும் வழிமுறைகளையும் ஏற்படுத்திக் கொள்கிறார்கள். இவர்களை விட அநியாயக்காரர் வேறு யாராவது இருக்க முடியுமா? இத்தகையவர்கள் அல்லாஹ்வின் நீதிமன்றத்தின் முன்பாக நிறுத்தப்படுவார்கள். “இவர்கள் தான் இறைவன் மீது இட்டுக்கட்டி பொய்யுரைத்தவர்கள்” என்று அவர்களுடைய நிலைமையே சாட்சி கூறுவதாக இருக்கும். இவ்வாறாக அவர்கள் அல்லாஹ்வின் அருட்கொடைகள் அனைத்தையும் இழந்து தவிப்பார்கள்.
அதாவது சமுதாய மக்கள் தொடர்ந்து சிறப்பாக வாழவேண்டும் என்றால் அல்லாஹ்வின் செயல் திட்டங்களைப் பற்றிய தவறான தகவல்கள் மக்கள் மத்தியில் பரவவிடக் கூடாது. இஸ்லாமிய அரசு இவ்வாறு நடக்காதவாறு கவனித்துக் கொள்ளும். அதையும் மீறி தவறான விஷயங்களைப் பரப்புவோருக்கு சிறைத் தண்டனை அளிக்கும். அல்லாஹ் அறிவிக்காத ஜாதகக் கணிப்புகள், ராசிப் பலன்கள், பாவமன்னிப்பு பரிகாரங்கள் போன்றவைகளும் இதில் அடங்கும்.
ٱلَّذِينَ يَصُدُّونَ عَن سَبِيلِ ٱللَّهِ وَيَبْغُونَهَا عِوَجًۭا وَهُم بِٱلْءَاخِرَةِ هُمْ كَٰفِرُونَ.
11:19. மேலும் அவர்கள், தாமே உருவாக்கி வைத்திருக்கும் ஷரீயத் சட்டங்களை அல்லாஹ்வின் மார்க்கம் என கூறி, அல்லாஹ்வின் உண்மையான மார்க்கத்தின் பக்கம் வந்து இணைவதை விட்டு தடுத்து வருகிறார்கள். அது மட்டுமின்றி மார்க்க விஷயங்களிலும் பல குழப்பங்களை ஏற்படுத்தி வருகிறார்கள். இறுதியில் அவர்களே இறைவழிகாட்டுதலுக்கு எதிராகச் செயல்படுபவர்களாக ஆகிவிடுவார்கள்.
أُو۟لَٰٓئِكَ لَمْ يَكُونُوا۟ مُعْجِزِينَ فِى ٱلْأَرْضِ وَمَا كَانَ لَهُم مِّن دُونِ ٱللَّهِ مِنْ أَوْلِيَآءَ ۘ يُضَٰعَفُ لَهُمُ ٱلْعَذَابُ ۚ مَا كَانُوا۟ يَسْتَطِيعُونَ ٱلسَّمْعَ وَمَا كَانُوا۟ يُبْصِرُونَ.
11:20. ஆனால் அல்லாஹ் ஏற்படுத்தியுள்ள “மனித செயல்களுக்கு ஏற்ற பின் விளைவுகள்” என்ற பிடியிலிருந்து அவர்களால் தப்பிக்கவே முடியாது. அவர்களின் சிறப்பான வாழ்விற்கு அல்லாஹ்வின் வழிகாட்டுதலைத் தவிர, வேறு எதுவும் துணை நிற்காது. எனவே காலம் செல்ல செல்ல அவர்கள் செய்து வரும் தீயசெயல்களுக்கு ஏற்ப மோசமான விளைவுகள் ஏற்பட்டு, சமுதாயத்தில் பிரச்சனைகள் அதிகமாகிக் கொண்டே செல்லும். கூடவே வேதனைகளும் அதிகமாகும். இதனால் அச்சமுதாய மக்களிடம் எதையும் கேட்டு தெரிந்து கொள்ளும் ஆற்றலோ அல்லது பார்த்து சிந்தித்துணரும் தகுதியோ இருக்காது.
أُو۟لَٰٓئِكَ ٱلَّذِينَ خَسِرُوٓا۟ أَنفُسَهُمْ وَضَلَّ عَنْهُم مَّا كَانُوا۟ يَفْتَرُونَ.
11:21. இத்தகையவர்கள்தாம் தமக்குத் தாமே நஷ்டம் விளைவித்துக் கொண்டவர்கள் ஆவார்கள். தம் கற்பனை வளத்தோடு இவர்கள் உருவாக்கி வைத்துள்ள வழிமுறைகள் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக இவர்களை விட்டு அழிந்து போகும்.
لَا جَرَمَ أَنَّهُمْ فِى ٱلْءَاخِرَةِ هُمُ ٱلْأَخْسَرُونَ.
11:22. இத்தகையவர்கள் இறுதியில் பெரும் நஷ்டம் அடைந்தவர்களாக திக்கற்ற நிலையில் இருப்பார்கள் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
إِنَّ ٱلَّذِينَ ءَامَنُوا۟ وَعَمِلُوا۟ ٱلصَّٰلِحَٰتِ وَأَخْبَتُوٓا۟ إِلَىٰ رَبِّهِمْ أُو۟لَٰٓئِكَ أَصْحَٰبُ ٱلْجَنَّةِ ۖ هُمْ فِيهَا خَٰلِدُونَ.
11:23. மாறாக எந்த சமூகத்தவர்கள் அல்லாஹ்வின் வழிகாட்டுதலை ஏற்று, அவற்றிற்கு முற்றிலும் அடிபணிந்து, அவற்றில் உள்ள கட்டளைப் படி ஆக்கப்பூர்வமான நலத் திட்டங்களைத் தீட்டி உழைக்கிறார்களோ, அவர்களுடைய சமுதாயம் சுவனத்திற்கு ஒப்பானதாக மாறிவரும். அவர்கள் அவ்வாறு செயல்படும் வரையில் சுவன வாழ்வு தொடர்ந்து நீடிக்கும்.
۞ مَثَلُ ٱلْفَرِيقَيْنِ كَٱلْأَعْمَىٰ وَٱلْأَصَمِّ وَٱلْبَصِيرِ وَٱلسَّمِيعِ ۚ هَلْ يَسْتَوِيَانِ مَثَلًا ۚ أَفَلَا تَذَكَّرُونَ.
11:24. மேற்சொன்ன இரு பிரிவினர்களைப் பற்றி ஒரு உதாரணத்தைக் கொண்டு விளங்கிக் கொள்ளலாம். ஒரு பிரிவினர் சிந்தித்து உணர முடியாத குருடர்கள் செவிடர்களைப் போன்றவர்களாக இருக்கின்றனர். மற்றொரு பிரிவினர் எதையும் சிந்தித்து செயலாற்றும் தகுதி உடையவர்களாக இருக்கிறார்கள். இவ்விரு பிரிவினரும் சமம் ஆவார்களா? நீங்களே சிந்தித்துப் பதில் கூறுங்கள். (மேலும் பார்க்க 13:16-19, 35:19)
மேற்சொன்ன இந்த உதாரணத்திற்கு இன்றைய நடைமுறை உலகமே சாட்சியாகும்.சிந்தித்து செயலாற்றும் நாடுகள் சிறப்பாகவும், மூடநம்பிக்கையில் மூழ்கிக் கிடக்கும் நாடுகள் மிகவும் பின்தங்கிய நிலையிலும் இருப்பதை நாம் காண்கிறோம். இருந்த போதிலும் பொருளாதார ரீதியாக முன்னேறியுள்ள நாடுகளில் மனித ஒழுக்க மாண்புகள் சம்பந்தப்பட்ட இறைவழிகாட்டுதல்கள் இல்லாததால், அவர்களுடைய “முன்னேற்றமே” அவர்களை அழிவின் பக்கம் அழைத்துச் சென்று விடுகிறது. இது இன்றைய உலகில் மட்டும் நடக்கின்ற விஷயமல்ல. காலம் காலமாய் இப்படித்தான் நடந்து வந்துள்ளது.
وَلَقَدْ أَرْسَلْنَا نُوحًا إِلَىٰ قَوْمِهِۦٓ إِنِّى لَكُمْ نَذِيرٌۭ مُّبِينٌ.
11:25. அவ்வாறே பண்டைய காலத்தில் வாழ்ந்த நூஹ் நபியின் சமுதாய மக்களும் செயல்பட்டார்கள். அம்மக்களுக்கு நூஹ் நபி அறிவுரை செய்து வந்தார். அவர்களுடைய தவறான செயல்களால் ஏற்படவிருக்கும் விபரீத விளைவுகளைப் பற்றி வெளிப்படையாகவே எடுத்துரைத்தார்.
أَن لَّا تَعْبُدُوٓا۟ إِلَّا ٱللَّهَ ۖ إِنِّىٓ أَخَافُ عَلَيْكُمْ عَذَابَ يَوْمٍ أَلِيمٍۢ.
11:26. அவர் செய்த போதனைகளின் முக்கிய அம்சம் யாதெனில், அல்லாஹ்வின் வழிகாட்டுதலைத் தவிர வேறு எந்த வழிமுறைகளையும் பின்பற்றக் கூடாது என்பதே ஆகும். அவர்கள் செய்து வரும் தவறான செயல்கள் யாவும் நோவினை தரும் அழிவுகளை ஏற்படுத்தக் கூடியதாகவே உள்ளன என்பதை எண்ணி, தான் அஞ்சுவதாக பலமுறை எடுத்துரைத்தார்.
فَقَالَ ٱلْمَلَأُ ٱلَّذِينَ كَفَرُوا۟ مِن قَوْمِهِۦ مَا نَرَىٰكَ إِلَّا بَشَرًۭا مِّثْلَنَا وَمَا نَرَىٰكَ ٱتَّبَعَكَ إِلَّا ٱلَّذِينَ هُمْ أَرَاذِلُنَا بَادِىَ ٱلرَّأْىِ وَمَا نَرَىٰ لَكُمْ عَلَيْنَا مِن فَضْلٍۭ بَلْ نَظُنُّكُمْ كَٰذِبِينَ.
11:27. அவருடைய போதனைகளைக் கேள்வியுற்ற சமுதாயத் தலைவர்கள்,"உம்மை எங்களைப் போன்ற ஒரு சாதாரண மனிதராகவே அன்றி, வேறு எந்த தனிச் சிறப்பும் உம்மிடம் இருப்பதாக நாங்கள் காணவில்லையே. அதுமட்டுமின்றி உம்மோடு இருப்பவர்களின் நிலைமையும் கவனிக்கிறோம். இந்த பாமர மக்கள் முன் யோசனை எதுவுமின்றி கண்மூடித்தனமாக உம்முடன் இணைந்து இருப்பதாகவே தெரிகிறது. எங்களை விட அவர்களிடம் எவ்வித மேன்மையும் இருப்பதாகத் தெரியவில்லை. இதை எல்லாம் வைத்துப் பார்க்கும் போது, நீர் சொல்வது போல் வேதனைகள் எதுவும் வராது என்றே எங்களுக்குத் தோன்றுகிறது” என்றார்கள்.
قَالَ يَٰقَوْمِ أَرَءَيْتُمْ إِن كُنتُ عَلَىٰ بَيِّنَةٍۢ مِّن رَّبِّى وَءَاتَىٰنِى رَحْمَةًۭ مِّنْ عِندِهِۦ فَعُمِّيَتْ عَلَيْكُمْ أَنُلْزِمُكُمُوهَا وَأَنتُمْ لَهَا كَٰرِهُونَ.
11:28. அதற்கு அவர், “என் சமுதாய மக்களே! நான் இறைவனிடமிருந்து பெற்ற தெளிவான ஆதாரங்களை உங்களிடம் எடுத்துரைப்பதை நீங்கள் கவனிக்கவில்லையா? என் இறைவனிடமிருந்து அருட்கொடையாகக் கிடைத்துள்ள வழிகாட்டுதலின்படி நான் செயல்படுகிறேன். ஆனால் நான் சொல்லும் எந்த விஷயமும் உங்களுக்குப் புரியவில்லை என்கிறீர்கள். நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அதன் உண்மைகளை எடுத்துரைப்பது என் மீதுள்ள கடமையாகும். வலுக்கட்டாயமாக அவற்றை உங்கள் மேல் திணிக்க முடியாது. ஏனெனில் இவை யாவும் சிந்தித்து முழு விருப்பத்துடன் ஏற்றுக் கொள்ளவேண்டிய வழிகாட்டுதல்களாகும்” என்று விளக்கமளித்தார்.
وَيَٰقَوْمِ لَآ أَسْـَٔلُكُمْ عَلَيْهِ مَالًا ۖ إِنْ أَجْرِىَ إِلَّا عَلَى ٱللَّهِ ۚ وَمَآ أَنَا۠ بِطَارِدِ ٱلَّذِينَ ءَامَنُوٓا۟ ۚ إِنَّهُم مُّلَٰقُوا۟ رَبِّهِمْ وَلَٰكِنِّىٓ أَرَىٰكُمْ قَوْمًۭا تَجْهَلُونَ.
11:29. மேலும் அவர், “மானுட சமுதாயமே! இவையெல்லாம் நான் உங்களுடைய நன்மைக்காகவே சொல்கிறேன் என்பதையும் கவனித்துப் பாருங்கள். நான் என் சுயநலத்திற்காக இதை உங்களிடம் எடுத்துரைக்கவில்லை. எனக்குரிய வாழ்வாதாரங்கள் அல்லாஹ்வின் பரிபாலன ஏற்பாட்டிலிருந்து கிடைத்து வருகின்றன. எனவே உங்கள் விருப்பத்திற்கு இணங்கி, இறைவழிகாட்டுதலை ஏற்றுக் கொண்டிருப்பவர்களை விரட்டிவிடுவதற்கும் இல்லை. நான் அவ்வாறு செய்தால் அவர்கள் இறைவனிடம் முறையிடுவார்கள். நீங்கள் அவர்களை அறிவிலிகள் என்கிறீர்கள். ஆனால் சிந்தித்துப் பார்க்கையில் நீங்கள்தான் அறிவிலிகளாகத் தெரிகிறீர்கள்” என்றார்.
وَيَٰقَوْمِ مَن يَنصُرُنِى مِنَ ٱللَّهِ إِن طَرَدتُّهُمْ ۚ أَفَلَا تَذَكَّرُونَ.
11:30. மேலும் அவர், “என் மக்களே! நான் உங்களுக்காக அவர்களை விரட்டிவிட்டால் அல்லாஹ்வின் தண்டனையிலிருந்து என்னை காப்பாற்றுபவர் எவரும் இருக்க மாட்டார்கள். இதைப் பற்றி நீங்கள் சிந்திக்க வேண்டாமா?” என்றார்.
وَلَآ أَقُولُ لَكُمْ عِندِى خَزَآئِنُ ٱللَّهِ وَلَآ أَعْلَمُ ٱلْغَيْبَ وَلَآ أَقُولُ إِنِّى مَلَكٌۭ وَلَآ أَقُولُ لِلَّذِينَ تَزْدَرِىٓ أَعْيُنُكُمْ لَن يُؤْتِيَهُمُ ٱللَّهُ خَيْرًا ۖ ٱللَّهُ أَعْلَمُ بِمَا فِىٓ أَنفُسِهِمْ ۖ إِنِّىٓ إِذًۭا لَّمِنَ ٱلظَّٰلِمِينَ.
11:31. மேலும் அவர், “என்னிடம் அல்லாஹ்வின் பொக்கிஷங்கள் இருப்பதாகவோ, மறைவானவற்றை அறிவதாகவோ அல்லது நான் ஒரு மலக் என்றோ உங்களிடம் சொல்லவில்லை. மாறாக நான் சொல்வது என்னவென்றால் எவர்களை நீங்கள் இழிவானவர்கள் என்று எண்ணுகிறீர்களோ, அவர்களுக்கு அல்லாஹ் யாதொரு நன்மையும் அளிக்காமல் விட்டுவிடுவானா? உள்ளங்களில் பரிசுத்த தன்மைக் கொண்டு சிறப்பாகச் செயல்படுபவர்களே உயர்ந்தவராக ஆகிறார். நடை, உடை, பாவனைக் கொண்டு அல்ல. அவர்களுடைய உள்ளங்களில் இருப்பது அல்லாஹ்வுக்கு நன்கு தெரியும். எனவே அல்லாஹ்வின் விருப்பத்திற்கு மாறாக நான் அவர்களை விரட்டி, அநியாயக்காரர்களில் ஒருவனாக ஆக விரும்பவில்லை” என்றார்.
قَالُوا۟ يَٰنُوحُ قَدْ جَٰدَلْتَنَا فَأَكْثَرْتَ جِدَٰلَنَا فَأْتِنَا بِمَا تَعِدُنَآ إِن كُنتَ مِنَ ٱلصَّٰدِقِينَ.
11:32. அதற்கு அவர்கள், “நூஹே! நீர் எங்களுடன் அளவுக்கு அதிகமாகவே தர்க்கம் செய்துவிட்டீர். எங்கள் விருப்பப்படி நீர் உன்னை மாற்றிக்கொள்ளப் போவதாகத் தெரியவில்லை. எனவே நீர் உண்மையாளராக இருந்தால் நீர் அடிக்கடி எச்சரிக்கை செய்து வருவாயே, அந்த வேதனைகளை இப்போதே எங்கள்முன் கொண்டுவந்து காட்டும்” என்றார்கள்.
قَالَ إِنَّمَا يَأْتِيكُم بِهِ ٱللَّهُ إِن شَآءَ وَمَآ أَنتُم بِمُعْجِزِينَ.
11:33. அதற்கு அவர், “அந்த அழிவுகளையும் வேதனைகளையும் கொண்டுவருவது என் சக்திக்கு உட்பட்ட விஷயமல்ல. அவை யாவும் உங்கள் செயல்களுக்கு ஏற்ப விளைவுகளாக ஏற்படுபவையாகும். எனவே நீங்கள் செயல்படுவதை வைத்துப் பார்க்கும் போது, அந்த அழிவு நிச்சயமாக விரைவில் ஏற்படும் என்றே தெரிகிறது. அவ்வாறு அழிவு ஏற்பட்டால் அதை தடுத்து நிறுத்த உங்களால் ஒருபோதும் முடியாது” என்றார்.
وَلَا يَنفَعُكُمْ نُصْحِىٓ إِنْ أَرَدتُّ أَنْ أَنصَحَ لَكُمْ إِن كَانَ ٱللَّهُ يُرِيدُ أَن يُغْوِيَكُمْ ۚ هُوَ رَبُّكُمْ وَإِلَيْهِ تُرْجَعُونَ.
11:34. மேலும் அவர், “ஆக யார் வழிகேட்டிலேயே செல்ல முடிவெடுத்து அல்லாஹ்வின் நியதிப்படி அழிவைச் சந்திக்கும் நிலைக்கு ஆளாகுகிறார்களோ, அத்தகையவர்களுக்கு என் அறிவுரைகள் பலனளிக்காது. அத்தருணத்தில் நானே உங்களை அழிவிலிருந்து பாதுகாக்க எண்ணிணாலும் என்னாலும் முடியாது. ஏனெனில் உங்கள் அனைவரையும் கண்காணிப்பவன் அல்லாஹ் ஒருவனே ஆவான். நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலும் “அவன் நிர்ணயித்த விளைவுகள்” என்ற இலக்கை நோக்கியே செல்கிறது என்பதை அறிந்து கொள்ளுங்கள்” என்றார்.
أَمْ يَقُولُونَ ٱفْتَرَىٰهُ ۖ قُلْ إِنِ ٱفْتَرَيْتُهُۥ فَعَلَىَّ إِجْرَامِى وَأَنَا۠ بَرِىٓءٌۭ مِّمَّا تُجْرِمُونَ.
11:35. “நூஹே! நீயே உன் சுய சிந்தனையின் அடிப்படையில் இப்படி பேசி வருவதாக அவர்கள் எண்ணுகிறார்களா? நீர் அவர்களிடம், “அல்லாஹ் சொல்லாததை எல்லாம் நான் இட்டுக்கட்டிக் கூறினால், நானே குற்றவாளி ஆகிவிடுவேன். எனவே நீங்கள் செய்து வரும் குற்றங்களுக்கு நீங்களே பொறுப்பாளி ஆவீர்கள். நான் அதிலிருந்து விலகியே நிற்கிறேன்” என்று கூறுவிடும்படி அல்லாஹ்விடமிருந்து வஹீச் செய்தி வந்தது.
وَأُوحِىَ إِلَىٰ نُوحٍ أَنَّهُۥ لَن يُؤْمِنَ مِن قَوْمِكَ إِلَّا مَن قَدْ ءَامَنَ فَلَا تَبْتَئِسْ بِمَا كَانُوا۟ يَفْعَلُونَ.
11:36. மேலும், “இறைவழிகாட்டுதலை ஏற்றுக்கொண்டு உம்முடன் இருப்பவர்களைத் தவிர மற்றவர்கள் ஈமான் கொள்ள மாட்டார்கள் என்றே தெளிவாகிறது. எனவே அவர்கள் செய்து வருவதைப் பற்றி வருத்தப்படாதீர். நீர் அவர்கள் போக்கில் விட்டுவிடு” என்றும் அந்த வஹீச் செய்தியில் சொல்லப்பட்டிருந்தது.
وَٱصْنَعِ ٱلْفُلْكَ بِأَعْيُنِنَا وَوَحْيِنَا وَلَا تُخَٰطِبْنِى فِى ٱلَّذِينَ ظَلَمُوٓا۟ ۚ إِنَّهُم مُّغْرَقُونَ.
11:37. மேலும் அந்த வஹீச் செய்தியில், அல்லாஹ்வின் கண்காணிப்பில் ஒரு கப்பலைக் கட்டும்படி கட்டளை வந்தது. இனியும் மக்கள் செய்து வரும் செயல்களைப் பற்றி என்னிடம் முறையிட்டுக் கொண்டிருக்க வேண்டியதில்லை. ஏனெனில் அவர்கள் தவறான வழியிலேயே மூழ்கிக் கிடக்கிறார்கள்.
وَيَصْنَعُ ٱلْفُلْكَ وَكُلَّمَا مَرَّ عَلَيْهِ مَلَأٌۭ مِّن قَوْمِهِۦ سَخِرُوا۟ مِنْهُ ۚ قَالَ إِن تَسْخَرُوا۟ مِنَّا فَإِنَّا نَسْخَرُ مِنكُمْ كَمَا تَسْخَرُونَ.
11:38. எனவே இறைவனின் வழிகாட்டுதலின்படி அவர் ஒரு கப்பலைக் கட்ட ஆரம்பித்தார். அதன் பின்னணியில் இருக்கும் உண்மைகளை அறியாத அந்நாட்டு மக்கள், இவர் செய்து வருவதைப் பற்றி பரிகாசமாகவே பேசி வந்தனர். அதற்கு நூஹ் நபி அடக்கமாக, “நீங்கள் எங்களைப் பரிகசிப்பதனால் நான் இந்தப் பணியை நிறுத்த முடியாது. நீங்கள் எங்களைப் பரிகசிப்பது போலவே ஒரு நேரத்தில் நாங்களும் உங்களைப் பரிகசிக்கும் நிலை ஏற்படும்” என்று பதிலளித்து வந்தார்.
فَسَوْفَ تَعْلَمُونَ مَن يَأْتِيهِ عَذَابٌۭ يُخْزِيهِ وَيَحِلُّ عَلَيْهِ عَذَابٌۭ مُّقِيمٌ.
11:39. “வேதனை அளிக்கும் இழிநிலைக்கு யார் தள்ளப்படுகிறார்கள் என்பதை விரைவில் அறிந்து கொள்வீர்கள். அதுவும் அது தற்காலிகமான இழிநிலையாக இருக்காது. மாறாக அது நிரந்தரமான அழிவாக இருக்கும் என்பதையும் அறிந்து கொள்வீர்கள்” என்று கூறினார்.
حَتَّىٰٓ إِذَا جَآءَ أَمْرُنَا وَفَارَ ٱلتَّنُّورُ قُلْنَا ٱحْمِلْ فِيهَا مِن كُلٍّۢ زَوْجَيْنِ ٱثْنَيْنِ وَأَهْلَكَ إِلَّا مَن سَبَقَ عَلَيْهِ ٱلْقَوْلُ وَمَنْ ءَامَنَ ۚ وَمَآ ءَامَنَ مَعَهُۥٓ إِلَّا قَلِيلٌۭ.
11:40. இறுதியாக இறைவனின் நியதிப்படி அந்த அழிவுகள் வந்த தருணத்தில், தொடர் மழையால் நீரூற்றுகள் நாலாப் புறமும் பொங்கிடவே, அவை பேரலைகளாக மாறின (பார்க்க 11:44). அப்போது அங்கு வாழும் ஒவ்வொரு உயிரினங்களிலிருந்தும் ஒரு ஜோடியை சேகரித்துக் கொள்ள இறைக்கட்டளை வந்தது. மேலும் எவர் அவருடைய பேச்சை மறுப்பதில் உறுதியாக இருக்கிறார்களோ அவர்களைத் தவிர்த்து, மற்றவர்களையும் ஈமான் கொண்டவர்களையும் கப்பலில் ஏற்றிக் கொள்ளும்படி அந்தக் கட்டளை இருந்தது. மேலும் மக்களில் மிகச் சிலரே ஈமான் கொண்டவர்களாக இருந்தார்கள்.
۞ وَقَالَ ٱرْكَبُوا۟ فِيهَا بِسْمِ ٱللَّهِ مَجْر۪ىٰهَا وَمُرْسَىٰهَآ ۚ إِنَّ رَبِّى لَغَفُورٌۭ رَّحِيمٌۭ.
11:41. இறைக் கட்டளைப்படி அந்த கப்பலில் ஏறிக்கொள்ளும் படி ஈமான் கொண்டவர்களிடம் அவர் கூறினார். அதற்கு அவர்கள், தாம் போகும் இடத்தைப் பற்றி கேட்டனர். அவர், "இந்தக் கப்பல் போவதும் நிற்பதும் அல்லாஹ்வின் விதிமுறைகளின் படியே இருக்கும். நிச்சயமாக இந்தக் கப்பல் மூலம் இறைவனின் முழு பாதுகாப்பும் கருணையும் உங்களுக்குக் கிடைக்கும்” என்றார்.
وَهِىَ تَجْرِى بِهِمْ فِى مَوْجٍۢ كَٱلْجِبَالِ وَنَادَىٰ نُوحٌ ٱبْنَهُۥ وَكَانَ فِى مَعْزِلٍۢ يَٰبُنَىَّ ٱرْكَب مَّعَنَا وَلَا تَكُن مَّعَ ٱلْكَٰفِرِينَ.
11:42. அதன் பின்னர் நீர்மட்டம் உயர உயர, பேரலைகள் மலைகள் போல் ௐடிய வெள்ளத்தில் அந்தக் கப்பல் மிதந்து செல்ல ஆரம்பித்தது. அப்போது தன்னை விட்டு விலகி நின்ற மகனைப் பார்த்து, “என் அருமை மகனே! எங்களோடு நீயும் ஏறிக்கொள். பிடிவாதம் பிடிக்காதே” என்றார்.
قَالَ سَـَٔاوِىٓ إِلَىٰ جَبَلٍۢ يَعْصِمُنِى مِنَ ٱلْمَآءِ ۚ قَالَ لَا عَاصِمَ ٱلْيَوْمَ مِنْ أَمْرِ ٱللَّهِ إِلَّا مَن رَّحِمَ ۚ وَحَالَ بَيْنَهُمَا ٱلْمَوْجُ فَكَانَ مِنَ ٱلْمُغْرَقِينَ.
11:43. அதற்கு அவன், “இந்தத் தண்ணீரிலிருந்து காப்பாற்றிக்கொள்ள எனக்குத் தெரியும். அதோ அந்த மலையின் உச்சிக்குச் சென்று நான் என்னை பாதுகாத்துக் கொள்வேன்” என்றான். இதைக் கேட்ட நூஹ் நபி, “இந்தத் தருணத்தில் யாருக்கு அல்லாஹ்வின் உதவியும் அருளும் இந்த கப்பல் மூலம் கிடைத்துள்ளதோ, அவர்களைத் தவிர வேறு எவரும் இந்தப் பிரளயத்திலிருந்து மீள முடியாது” என்றார். அச்சமயம் அவர்களிடையே பேரலை ஒன்று எழுந்து அவனை மூழ்கடித்து விட்டது. அவருடைய மகனும் மூழ்கடிக்கப்பட்டவர்களில் ஒருவனாக இருந்தான்.
وَقِيلَ يَٰٓأَرْضُ ٱبْلَعِى مَآءَكِ وَيَٰسَمَآءُ أَقْلِعِى وَغِيضَ ٱلْمَآءُ وَقُضِىَ ٱلْأَمْرُ وَٱسْتَوَتْ عَلَى ٱلْجُودِىِّ ۖ وَقِيلَ بُعْدًۭا لِّلْقَوْمِ ٱلظَّٰلِمِينَ.
11:44. அதைத் தொடர்ந்து சில நாட்களுக்குப் பின் மழையும் நின்றது. அல்லாஹ்வின் நியதிப்படி பூமியின் மேற்பரப்பில் இருந்த தண்ணீரும் வடிய ஆரம்பித்தது. கொஞ்சம் கொஞ்சமாக நீர் வடிந்ததும் அந்தக் கப்பல் பத்திரமாக ‘ஜூது’ என்ற மலையின் மீது தரை தட்டியது. அநியாய செயலில் ஈடுபட்டிருந்த மக்களுக்கு ஏற்படும் அழிவுகள் இப்படித்தான் இருக்கும் என்பதை அக்கப்பலில் இருந்த மூஃமின்கள் கண்கூடாகப் பார்த்துக் கொண்டார்கள்.
وَنَادَىٰ نُوحٌۭ رَّبَّهُۥ فَقَالَ رَبِّ إِنَّ ٱبْنِى مِنْ أَهْلِى وَإِنَّ وَعْدَكَ ٱلْحَقُّ وَأَنتَ أَحْكَمُ ٱلْحَٰكِمِينَ.
11:45. தன் மகன் கண்ணெதிரே பிரளயத்தில் அடித்துச் செல்வதைக் கண்ட நூஹ் நபிக்கு துக்கம் தாளமுடியவில்லை. அவர் இறைவனிடம், “என் இறைவனே! என் மகன் என் குடும்பத்தைச் சேர்ந்தவன் தானே. என் குடும்பத்தாரை காப்பாற்றுவதாக நீ அளித்த வாக்கு பொய்யாகாதே. எனவே அவன் விஷயமாய் உன் தீர்ப்பை எதிர்பார்க்கிறேன். ஏனெனில் உன்னைவிட சிறந்த நீதி வழங்குவோர் வேறு எவரும் இல்லை” என்று கூறினார்.
قَالَ يَٰنُوحُ إِنَّهُۥ لَيْسَ مِنْ أَهْلِكَ ۖ إِنَّهُۥ عَمَلٌ غَيْرُ صَٰلِحٍۢ ۖ فَلَا تَسْـَٔلْنِ مَا لَيْسَ لَكَ بِهِۦ عِلْمٌ ۖ إِنِّىٓ أَعِظُكَ أَن تَكُونَ مِنَ ٱلْجَٰهِلِينَ.
11:46. அதற்கு, “நூஹே! உண்மையாகவே அவன் உன் குடும்பத்தைச் சேர்ந்தவன் அல்லன். அவன் உனக்குப் பிறந்த மகனாக இருக்கலாம். ஆனால் அவனுடைய செயல்கள் யாவும் ஒழுக்கமற்றதாக இருந்தன. எனவே அவன் உன் அறிவுரைகளை ஏற்றுக்கொண்ட குடும்பத்தில் ஒருவனாக இல்லை. இதைப் பற்றிய உண்மை உனக்குத் தெரியாமல் இல்லை. இருந்தும் அவனைக் காப்பாற்ற சொல்லி என்னிடம் கேட்டுக் கொண்டிருக்க வேண்டாம். நீ உண்மை விஷயங்களை அறிந்து கொள்ளவேண்டும் என்பதற்காக இந்த அறிவுரைகளை நான் உனக்கு தருகிறேன்” என்று இறைவனிடமிருந்து பதில் வந்தது.
கவனித்தீர்களா? இறைக்கொள்கைக் கோட்பாடுகளா அல்லது இரத்த பந்த உறவுமுறையா என்ற கேள்வி எழும் போது, இறைக் கொள்கை தான் முக்கியமானதாகும். இரத்த பந்த உறவுமுறை யாவும் இரண்டாம் பட்சமாகும் என்பதை இவ்வாசகம் நமக்கு தெளிவாக்குகிறது அல்லவா?
قَالَ رَبِّ إِنِّىٓ أَعُوذُ بِكَ أَنْ أَسْـَٔلَكَ مَا لَيْسَ لِى بِهِۦ عِلْمٌۭ ۖ وَإِلَّا تَغْفِرْ لِى وَتَرْحَمْنِىٓ أَكُن مِّنَ ٱلْخَٰسِرِينَ.
11:47. உண்மை நிலையை அறிந்து கொண்ட நூஹ் நபி, “என் இறைவா! எனக்கு எதைப் பற்றிய தெளிவான ஞானம் இல்லையோ அதைப் அறிந்துகொள்ள உன்னிடமே பாதுகாவல் தேடுகிறேன். அனைவரையும் பாதுகாப்பு அளிப்பதில் நீயே கருணை மிக்கவன் ஆவாய். இல்லையெனில் நான் நஷ்டம் அடைந்தோரில் ஒருவனாக ஆகியிருப்பேன்” என்று கூறினார்.
அதாவது அவன் ஒரு நபியின் மகன் என்பதால், அவனைக் காப்பாற்றி இருந்தால் அவன் செய்து வந்த தகாத செயல்களை இங்கும் வந்து செய்து கொண்டிருப்பான். அதனால் இறைவனின் செயல்திட்டங்கள் நிறைவேறாதவாறு இடையூறுகள் ஏற்பட்டிருக்கும். இவை யாவும் இறைவனுக்குத் தெரியும்.
வெள்ள நீர் வடிந்ததும் அந்தக் கப்பலிருந்து இறங்கி தம் அருளைத் தேடிக்கொள்ள இறைவனிடமிருந்து வஹீச் செய்தி வந்தது. பூமியின் அந்தப் பகுதி நீரில் மூழ்கியதால் அதிலிருந்த வளங்கள் யாவும் அடித்துச் சென்றிருக்கும் என்று அவருக்குத் தோன்றியது. ஆனால் உண்மை அது வல்ல.
قِيلَ يَٰنُوحُ ٱهْبِطْ بِسَلَٰمٍۢ مِّنَّا وَبَرَكَٰتٍ عَلَيْكَ وَعَلَىٰٓ أُمَمٍۢ مِّمَّن مَّعَكَ ۚ وَأُمَمٌۭ سَنُمَتِّعُهُمْ ثُمَّ يَمَسُّهُم مِّنَّا عَذَابٌ أَلِيمٌۭ.
11:48. “நூஹே! நீயும் உன்னோடு இருப்பவர்களும் சிறப்பாகவும் மன நிறைவோடும் வாழ்வதற்கான அனைத்து வசதிகளும் நம் ஏற்பாட்டின் படி கிடைக்கும். எனவே நீ இந்தக் கப்பலைவிட்டு இறங்கி உன் பணியை தொடர்ந்து செய். இப்போது இருப்பது உம்முடன் இருப்பவர்களைப் பற்றியது. அவர்களில் சிலர், உனக்கு மாறு செய்பவர்களும் இருப்பார்கள். அவர்களுக்கு சில காலம் தான் சுக வாழ்வு கிடைக்கும். அதன் பின்னர் அவர்களுடைய செயல்களின் விளைவாக அவர்கள் நோவினை தரும் வேதனைகளில் சிக்கிக் கொள்வார்கள்” என்று வஹீச் செய்தி வந்தது.
تِلْكَ مِنْ أَنۢبَآءِ ٱلْغَيْبِ نُوحِيهَآ إِلَيْكَ ۖ مَا كُنتَ تَعْلَمُهَآ أَنتَ وَلَا قَوْمُكَ مِن قَبْلِ هَٰذَا ۖ فَٱصْبِرْ ۖ إِنَّ ٱلْعَٰقِبَةَ لِلْمُتَّقِينَ.
11:49. இறைச்செய்திகளை எடுத்துரைப்பவரே! இந்த நிகழ்வுகள் ஏற்பட்டபோது, நீர் அவர்களோடு வாழ்ந்ததில்லை. இவையாவும் உனக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. எனவே இவற்றை வஹீச் செய்திகள் மூலமாக நாம் உமக்கு அறிவிக்கிறோம். இதன் நோக்கம் என்னவென்றால் நூஹ் நபி எவ்வாறு எதிர்ப்புகளைச் சமாளித்துக் கொண்டு பொறுமையுடனும் நிதானத்துடனும் தன்னுடைய பாதுகாப்புக்கான ஏற்பாடுகளைச் செய்துகொண்டு தன் பணியில் சிறப்பாக செயல்பட்டாரோ, அவ்வாறே நீரும் சிறந்த செயல்திட்டங்களைத் தீட்டி செயல்பட வேண்டும். அவ்வாறு இறைவழிகாட்டுதலின் படி செயல்பட்டால் அவருக்கு கிடைத்த நல்ல முடிவு போலவே உமக்கும் வெற்றிகள் பல கிடைக்கும்.
அது மட்டுமின்றி இது போன்ற நிகழ்வுகள் ஒரே ஒரு நபிக்கு மட்டும் ஏற்பட்டதாக எண்ணிக் கொள்ளாதீர்கள். ஏறக்குறைய எல்லா நபிமார்களுக்கும் இப்படித் தான் ஏற்பட்டது. நூஹ் நபியைத் தொடர்ந்து அவருக்குப்பின் வந்த ஹுது நபி விஷயத்திலும் அவ்வாறே நடந்தது. என்ன நடந்தது என்பதைக் கவனியுங்கள்.
وَإِلَىٰ عَادٍ أَخَاهُمْ هُودًۭا ۚ قَالَ يَٰقَوْمِ ٱعْبُدُوا۟ ٱللَّهَ مَا لَكُم مِّنْ إِلَٰهٍ غَيْرُهُۥٓ ۖ إِنْ أَنتُمْ إِلَّا مُفْتَرُونَ.
11:50. ஹுது நபி, ‘ஆது’ என்கின்ற சமுதாயத்தில் பிறந்த ஒரு நபி ஆவார். அவரும் மக்களிடம், “அல்லாஹ்வின் வழிகாட்டுதலுக்கு மட்டும் அடிபணிந்து வாழுங்கள். அவனைத் தவிர உங்களுக்கு கட்டளை இடுபவன் வேறு எவரும் இல்லை. ஆனால் நீங்களோ அவனுடைய வழிகாட்டுதலை விட்டுவிட்டு, கற்பனைக் கதைகளைச் சொல்லி மனம்போன போக்கில் வாழ்ந்து வருகிறீர்கள்” என்று எடுத்துரைத்தார்.
يَٰقَوْمِ لَآ أَسْـَٔلُكُمْ عَلَيْهِ أَجْرًا ۖ إِنْ أَجْرِىَ إِلَّا عَلَى ٱلَّذِى فَطَرَنِىٓ ۚ أَفَلَا تَعْقِلُونَ.
11:51. மேலும் அவர், “இவை யாவும் உங்கள் நலனுக்காகவே எடுத்துரைக்கிறேன். இதை நான் என் சுய லாபத்திற்காக உங்களிடம் எடுத்துரைக்கவில்லை. எனக்கு வேண்டிய வாழ்க்கை வசதிகளை என்னை படைத்த அல்லாஹ்வின் ஏற்பாடுகளின் மூலமே உழைத்து பெற்றுக் கொள்கிறேன். இதை எல்லாம் பார்த்தும், நான் சொல்வதை விளங்கிக் கொள்ள மாட்டீர்களா?” என்று மக்களிடம் அறிவுருத்தி வந்தார்.
وَيَٰقَوْمِ ٱسْتَغْفِرُوا۟ رَبَّكُمْ ثُمَّ تُوبُوٓا۟ إِلَيْهِ يُرْسِلِ ٱلسَّمَآءَ عَلَيْكُم مِّدْرَارًۭا وَيَزِدْكُمْ قُوَّةً إِلَىٰ قُوَّتِكُمْ وَلَا تَتَوَلَّوْا۟ مُجْرِمِينَ.
11:52. “என் சமுதாய மக்களே! உங்களுடைய தவறான செயல்களால் ஏற்படவிருக்கும் விபரீத விளைவுகளிலிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ள அல்லாஹ்வின் வழிகாட்டுதலின் பக்கம் வந்து விடுங்கள். உங்களுடைய தவறான செயல்களை விட்டுவிடுங்கள். மேலும் இறைவனின் நியதிப்படி வானிலிருந்து பெய்யும் மழையைக் கொண்டு பூமி எவ்வாறு புத்துயிர் பெறுகிறது என்பதையும், அதில் விளையும் உணவு வகைகளிலிருந்து உங்களுக்கு வலிமையும் பொலிவும் எவ்வாறு கூடி வருகின்றன என்பதையும் கவனியுங்கள். அவ்வாறே இறைவழிகாட்டுதல்கள் உங்களுடைய சிறப்பான வாழ்விற்கு வலுவூட்டும் வகையில் உள்ளன. இதைப் புறக்கணித்து குற்றம் புரிபவர்களாக ஆகிவிடாதீர்கள்” என்று அவர் பலமுறை எச்சரித்து வந்தார்.
قَالُوا۟ يَٰهُودُ مَا جِئْتَنَا بِبَيِّنَةٍۢ وَمَا نَحْنُ بِتَارِكِىٓ ءَالِهَتِنَا عَن قَوْلِكَ وَمَا نَحْنُ لَكَ بِمُؤْمِنِينَ.
11:53. அதற்கு சமுதாயத் தலைவர்கள், “ஹுதே! நீ எங்களிடம் சொல்லி வரும் விஷயங்கள் எதுவும் ஆதாரப்பூர்வமாக இருப்பதாகத் தெரியவில்லை. எனவே உம்மை நம்பி, நாங்கள் வழிபட்டு வரும் தெய்வங்களை விட்டுவிட தயாராக இல்லை. அது மட்டுமின்றி நாங்கள் உன் போதனைகளை ஏற்றுக் கொள்வதாகவும் இல்லை” என்று கூறினார்கள்.
إِن نَّقُولُ إِلَّا ٱعْتَرَىٰكَ بَعْضُ ءَالِهَتِنَا بِسُوٓءٍۢ ۗ قَالَ إِنِّىٓ أُشْهِدُ ٱللَّهَ وَٱشْهَدُوٓا۟ أَنِّى بَرِىٓءٌۭ مِّمَّا تُشْرِكُونَ.
11:54. மேலும் அவர்கள், “எங்களுடைய தெய்வங்களுக்கு எதிராக நீர் பேசியதால் அவற்றின் சாபம் உமக்கு ஏற்பட்டுள்ளது என்றே நினைக்கிறோம். அதனால் தான் நீர் இப்படிப்பட்ட விசித்திரமான பேச்சுக்களைப் பேசி வருகின்றீர்” என்றார்கள். அதற்கு அவர், “இப்படிப்பட்ட எண்ணங்களை வைத்திருப்பவர்களிடம் நான் என்னவென்று பேசுவது? நானும் உங்களுக்கு எதிராக அல்லாஹ்வைத் தான் சாட்சியாக்க முடியும். நீங்கள் வழிபட்டு வரும் கற்பனைத் தெய்வங்களை விட்டு நான் விலகி நிற்கிறேன்” என்று கூறினார்.
مِن دُونِهِۦ ۖ فَكِيدُونِى جَمِيعًۭا ثُمَّ لَا تُنظِرُونِ.
11:55. மேலும் அவர், “நீங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து எனக்கு எதிராக உங்கள் தெய்வங்களின் மூலம் என்ன சூழ்ச்சிகளைச் செய்ய விரும்புகிறீர்களோ, அவற்றை நீங்கள் செய்து கொள்ளுங்கள். இதில் காலத் தாமதம் செய்யாதீர்கள்” என்று கூறினார்.
إِنِّى تَوَكَّلْتُ عَلَى ٱللَّهِ رَبِّى وَرَبِّكُم ۚ مَّا مِن دَآبَّةٍ إِلَّا هُوَ ءَاخِذٌۢ بِنَاصِيَتِهَآ ۚ إِنَّ رَبِّى عَلَىٰ صِرَٰطٍۢ مُّسْتَقِيمٍۢ.
11:56. மேலும் அவர், “உங்களுக்கும் எனக்கும் இறைவனாக இருக்கும் அல்லாஹ் நிர்ணயித்துள்ள “மனித செயலுக்கேற்ற விளைவுகள்” என்ற சட்டத்தின் மீதே நான் முழுமையான நம்பிக்கை வைத்து செயல்பட்டு வருகிறேன். இந்த சட்டம் அனைவருக்கும் பொருந்தக் கூடியதாகும். அகிலங்கள் அனைத்திலும் உள்ள எந்த உயிரினமும், இந்த செயல்வினைச் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பவே முடியாது. அந்த அளவிற்கு அந்த சட்டங்கள் உறுதியானவையாகும். மேலும் அவன் எனக்கு காட்டுகின்ற வழி, மனிதனின் சிறப்பான வாழ்விற்கு மிகச் சரியான பாதையைக் காட்டும் வகையில் உள்ளது” என்றார்.
فَإِن تَوَلَّوْا۟ فَقَدْ أَبْلَغْتُكُم مَّآ أُرْسِلْتُ بِهِۦٓ إِلَيْكُمْ ۚ وَيَسْتَخْلِفُ رَبِّى قَوْمًا غَيْرَكُمْ وَلَا تَضُرُّونَهُۥ شَيْـًٔا ۚ إِنَّ رَبِّى عَلَىٰ كُلِّ شَىْءٍ حَفِيظٌۭ.
11:57. “இந்த அளவிற்கு தெளிவான ஆதாரங்களுடன் அறிவுரைகளை அளித்த பின்பும், நீங்கள் அவற்றைப் புறக்கணித்து விட்டால், அதனால் ஏற்படும் பாதிப்புகளுக்கு நீங்கள் தான் பொறுப்பாளி ஆவீர்கள். உங்களுடைய செயல்களின் விளைவுகளைப் பற்றித் தெளிவாக எடுத்துரைப்பதே என் மீதுள்ள கடமையாகும். அந்தக் கடமையை நான் நிறைவேற்றி வருகிறேன். எனவே உங்களுடைய தவறான செயல்களின் விளைவாக சமூக சீரழிவுகள் ஏற்பட்டு, உங்களுக்குப் பதிலாக வேறு நாட்டைச் சேர்ந்தவர்கள் உங்கள் மீது ஆட்சி செய்யக்கூடும். அப்படி ஒரு நிலை ஏற்படும் போது, உங்களால் அதை தடுத்து நிறுத்த முடியாது. நிச்சயமாக என் இறைவனின் வழிகாட்டுதல்கள் யாவும் அனைவரையும் பாதுகாப்பு அளிக்கும் வகையில் உள்ளன” என்றார்.
தற்சமயம் அவர்கள் செய்து வரும் ஆட்சியில் ஏற்றத் தாழ்வும், பாரபட்சமும், அநியாய அக்கிரமங்களும் நடந்து வருகின்றன. அதனால் நாட்டில் சீரழிவுகள் ஏற்பட்டு வருகின்றன. இப்படி வெகுநாட்களுக்கு நீடிக்க முடியாது. எனவே வேறு நாட்டைச் சேர்ந்தவர்கள் இவர்களுடைய அராஜகத்தை ஒழித்துக் கட்டி, அனைத்துத் தரப்பு மக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு செயல்படுவார்கள். இது இறைவனுடைய ஏற்பாடாகும் (பார்க்க 2:251)
وَلَمَّا جَآءَ أَمْرُنَا نَجَّيْنَا هُودًۭا وَٱلَّذِينَ ءَامَنُوا۟ مَعَهُۥ بِرَحْمَةٍۢ مِّنَّا وَنَجَّيْنَٰهُم مِّنْ عَذَابٍ غَلِيظٍۢ.
11:58. இப்படியாக அவர்களுடைய அராஜகம் உச்ச கட்டத்தை அடைந்த போது, ஹுதையும் அவருடன் இருந்த ஈமான் கொண்டவர்களையும் வஹீச் செய்தியின் மூலம் பாதுகாப்பான இடத்திற்குச் சென்றுவிடுமாறு அறிவித்தோம். இப்படியாக அவர்களை கடுமையான வேதனையிலிருந்து காப்பாற்றினோம்.
وَتِلْكَ عَادٌۭ ۖ جَحَدُوا۟ بِـَٔايَٰتِ رَبِّهِمْ وَعَصَوْا۟ رُسُلَهُۥ وَٱتَّبَعُوٓا۟ أَمْرَ كُلِّ جَبَّارٍ عَنِيدٍۢ.
11:59. இதோ! இவர்கள் தான் ‘ஆது’ சமுதாயத்தினர்கள் ஆவார்கள். அவர்கள் தங்கள் இறைவனின் ஆதாரப்பூர்வமான வழிகாட்டுதல்களை ஏற்க மறுத்ததோடு, இறைத் தூதர்களின் அறிவுரைகளையும் ஏற்று நடந்து கொள்ளவில்லை. மாறாக அவர்கள் ஒவ்வொரு விஷயத்திலும் தவறான வழியிலேயே சென்ற தலைவர்களின் கட்டளையைப் பின்பற்றி வாழ்ந்தார்கள்.
وَأُتْبِعُوا۟ فِى هَٰذِهِ ٱلدُّنْيَا لَعْنَةًۭ وَيَوْمَ ٱلْقِيَٰمَةِ ۗ أَلَآ إِنَّ عَادًۭا كَفَرُوا۟ رَبَّهُمْ ۗ أَلَا بُعْدًۭا لِّعَادٍۢ قَوْمِ هُودٍۢ.
11:60. எனவே அவர்கள் தம் நிகழ்கால வாழ்விலும், வருங்கால நிலையான வாழ்விலும் அல்லாஹ்வின் அருட்கொடைகளை படிப்படியாக இழந்து பல பிரச்சனைகளுக்கும் வேதனைகளுக்கும் ஆளானார்கள். இவையாவும் அவர்கள் மீதுள்ள வெறுப்பின் காரணமாக அல்ல. இறைவனின் வழிகாட்டுதலுக்கு மாறு செய்ததன் விளைவாக ஏற்பட்டன. ஆக ஹுது நபி நாட்டைச் சேர்ந்த ‘ஆது’ கூட்டத்தாருக்கு ஏற்பட்ட துர்பாக்கியம் என்ன என்பதை நீங்களே சிந்தித்துப் பாருங்கள்.
۞ وَإِلَىٰ ثَمُودَ أَخَاهُمْ صَٰلِحًۭا ۚ قَالَ يَٰقَوْمِ ٱعْبُدُوا۟ ٱللَّهَ مَا لَكُم مِّنْ إِلَٰهٍ غَيْرُهُۥ ۖ هُوَ أَنشَأَكُم مِّنَ ٱلْأَرْضِ وَٱسْتَعْمَرَكُمْ فِيهَا فَٱسْتَغْفِرُوهُ ثُمَّ تُوبُوٓا۟ إِلَيْهِ ۚ إِنَّ رَبِّى قَرِيبٌۭ مُّجِيبٌۭ.
11:61. இவர்களைப் போலவே ‘சமூது’ கூட்டத்தாருக்கும் ஏற்பட்டது. அவர்களை நல்வழிபடுத்த சாலிஹ் நபி வந்தார். அவரும் மக்களை நோக்கி,"அல்லாஹ்வின் வழிகாட்டுதலுக்கு மட்டும் அடிபணிந்து நடந்து கொள்ளுங்கள். அவனைத் தவிர வேறு யாரும் உங்களை அதிகாரம் செலுத்தக் கூடியவர் இல்லை. இந்தப் பூமியில் உங்களைப் படைத்து, நீங்கள் சிறப்பாக வாழ அனைத்து வசதிகளையும் ஏற்பாடு செய்தவன் அல்லாஹ்வே. மேலும் உங்களுடைய பாதுகாப்பான வாழ்விற்காகவே இந்த வழிகாட்டுதல்கள் அளிக்கப்படுகின்றன. எனவே நீங்கள் கடைப்பிடித்து வரும் தவறான வழிமுறைகளை விட்டுவிட்டு அல்லாஹ்வின் பாதுகாப்பு வளையத்திற்குள் வந்துவிடுங்கள். நிச்சயமாக என் இறைவன் மிகவும் அருகாமையிலேயே இருக்கிறான். மேலும் நம் அனைத்து தேவைகளை நிறைவேற்றுபவனாகவும் இருக்கின்றான்” என்று போதித்து வந்தார்.
قَالُوا۟ يَٰصَٰلِحُ قَدْ كُنتَ فِينَا مَرْجُوًّۭا قَبْلَ هَٰذَآ ۖ أَتَنْهَىٰنَآ أَن نَّعْبُدَ مَا يَعْبُدُ ءَابَآؤُنَا وَإِنَّنَا لَفِى شَكٍّۢ مِّمَّا تَدْعُونَآ إِلَيْهِ مُرِيبٍۢ.
11:62. அதற்கு அவர்கள், “சாலிஹே! இதற்கு முன்பெல்லாம் நீர் எங்களிடையே நம்பிக்கைக்குரியவராக இருந்தீர். நீரே எங்களுடைய வழிகாட்டியாக விளங்குவீர் என நாங்கள் நினைத்திருந்தோம். ஆனால் இப்போதோ உம் பேச்சில் பெருமளவு மாறுதல்கள் ஏற்பட்டிருப்பதைக் காண்கிறோம். அதுவும் காலம் காலமாக எங்கள் மூதாதையர்கள் பின்பற்றி வந்த வணக்க வழிமுறைகளையா விட்டுவிட எங்களிடம் கூறுகிறீர்? அது மட்டுமின்றி எந்தக் கொள்கையின் பக்கம் நீர் எங்களை அழைக்கின்றீரோ, அதில் உண்மை எதுவும் இருப்பதாக எங்களுக்குத் தோன்றவில்லை” என்று கூறலானார்கள்.
قَالَ يَٰقَوْمِ أَرَءَيْتُمْ إِن كُنتُ عَلَىٰ بَيِّنَةٍۢ مِّن رَّبِّى وَءَاتَىٰنِى مِنْهُ رَحْمَةًۭ فَمَن يَنصُرُنِى مِنَ ٱللَّهِ إِنْ عَصَيْتُهُۥ ۖ فَمَا تَزِيدُونَنِى غَيْرَ تَخْسِيرٍۢ.
11:63. “என் சமுதாய மக்களே! என் இறைவனிடமிருந்து தெளிவான ஆதாரப்பூர்வமான வழிகாட்டுதல்களை நான் பெற்றிருக்கிறேன். அவை மனிதனின் சிறப்பான வாழ்விற்கு வழிகாட்டும் ஒளிவிளக்காகத் திகழும் மாபெரும் அருட்கொடையாக இருக்கின்றன. இதைப் பற்றி நீங்கள் கவனித்துப் பார்க்க மாட்டீர்களா? உங்கள் சொல்லுக்கு இணங்கி நானும் அல்லாஹ்வின் வழிகாட்டுதலுக்கு மாறு செய்தால் அதனால் ஏற்படுகின்ற விளைவுகளிலிருந்து என்னைக் காப்பாற்றுபவன் யார்? உங்களுடைய வழிமுறைகள் யாவும் பேரழிவுகளைத் தவிர வேறு எதையும் ஏற்படுத்தாது என்பதே உண்மையாகும்.
இறைவன் புறத்திலிருந்து செய்யப்பட்டுள்ள வாழ்வாதார வசதிகள் யாவும் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் பொதுவானதாகும். இவற்றை சமூக விஷமிகள் தம் வசப்படுத்தி பதுக்கல் செய்து பொருளாதார சிக்கல்களை ஏற்படுத்தி வந்தனர். இதனால் வசதிப் படைத்தோர் அதிகாரம் செலுத்தி, நலிந்த மக்களை நசுக்கி வந்தார்கள். இதற்கு எதிராகத் தான் சாலிஹ் நபி குரல் கொடுத்தார்.
وَيَٰقَوْمِ هَٰذِهِۦ نَاقَةُ ٱللَّهِ لَكُمْ ءَايَةًۭ فَذَرُوهَا تَأْكُلْ فِىٓ أَرْضِ ٱللَّهِ وَلَا تَمَسُّوهَا بِسُوٓءٍۢ فَيَأْخُذَكُمْ عَذَابٌۭ قَرِيبٌۭ.
11:64. “என் சமுதாய மக்களே! இதோ இந்தப் பெண் ஒட்டகம் இருக்கின்றதே! அது உங்களுடைய சமூக அமைப்பின் அடையாளமாகத் திகழ்கின்றது. அது சிறப்பாகச் செயல்பட அனைவரும் ஒத்துழைப்புத் தாருங்கள். அதற்கு பாதிப்புகள் ஏற்படும்படி எவ்வித தீங்கும் செய்யாதீர்கள். இதையும் மீறி அதற்கு பங்கம் விளைவித்தால் சமூக அமைப்பின் கட்டுப்பாடு சீர்குலைந்து விட்டதாக அர்த்தமாகும். அதன் விளைவாக உங்கள் சமுதாயத்தில் பிரச்சனைகள் பல ஏற்பட்டு அழிவுகள் விரைந்து வரும்” என்றார்.
ஆனால் சாலிஹ் நபியின் அறிவுரைகள் நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை. அந்த சமூக அமைப்பின் கட்டுப்பாட்டை அவர்கள் மீறிவிட்டார்கள். அதனால் காலப்போக்கில் அந்த ஆட்சியமைப்பு தன் கட்டுப்பாட்டை இழந்துவிட்டது.
فَعَقَرُوهَا فَقَالَ تَمَتَّعُوا۟ فِى دَارِكُمْ ثَلَٰثَةَ أَيَّامٍۢ ۖ ذَٰلِكَ وَعْدٌ غَيْرُ مَكْذُوبٍۢ.
11:65. நாளடைவில் ஒட்டகத்தின் அடிப்படையில் அவர்கள் செய்துகொண்ட ஒப்பந்தம் செயல்படுத்த முடியாதவாறு செயலிழக்கச் செய்து விட்டனர். (பார்க்க 7:77) சாலிஹ் நபி அவர்களிடம், “இன்றைய தினத்திலிருந்து மூன்று நாட்களுக்கு அவகாசம் கிடைக்கும். அதற்குள் நீங்கள் உங்களைப் பாதுகாத்துக் கொள்ள உங்கள் இருப்பிடத்தை விட்டு சென்றுவிடுங்கள். இல்லையெனில் இந்த இடத்தில் ஏற்படவிருக்கும் அழிவில் நீங்களும் மடிவீர்கள். இவ்வாறு நடக்கப் போவது சர்வ நிச்சயம். இதில் எந்த மாற்றமும் இல்லை” என்று முன் எச்சரிக்கை செய்தார்.
فَلَمَّا جَآءَ أَمْرُنَا نَجَّيْنَا صَٰلِحًۭا وَٱلَّذِينَ ءَامَنُوا۟ مَعَهُۥ بِرَحْمَةٍۢ مِّنَّا وَمِنْ خِزْىِ يَوْمِئِذٍ ۗ إِنَّ رَبَّكَ هُوَ ٱلْقَوِىُّ ٱلْعَزِيزُ.
11:66. அதேபோல் இறைவனின் நியதிப்படி அந்த அழிவுகள் ஏற்படும் தருணம் நெருங்கிவிட்டது. சாலிஹ் நபியும் அவரைச் சார்ந்தவர்களும் இறைவனின் வழிகாட்டுதலின்படி அவ்வூரை விட்டு வெளியேறி, அந்த அழிவிலிருந்து அவர்கள் மீண்டு கொண்டார்கள். நிச்சயமாக அல்லாஹ்வின் செயல் திட்டம் மிகவும் உறுதியானதும் வலுவானதும் ஆகும்.
وَأَخَذَ ٱلَّذِينَ ظَلَمُوا۟ ٱلصَّيْحَةُ فَأَصْبَحُوا۟ فِى دِيَٰرِهِمْ جَٰثِمِينَ.
11:67. சாலிஹ் நபியின் பேச்சைக் கேட்காமல் அங்கேயே தங்கிவிட்டவர்கள் பேரிடி முழக்கத்துடன் கூடிய பூகம்பத்தில் சிக்கிக் கொண்டனர். (பார்க்க 7:78)
كَأَن لَّمْ يَغْنَوْا۟ فِيهَآ ۗ أَلَآ إِنَّ ثَمُودَا۟ كَفَرُوا۟ رَبَّهُمْ ۗ أَلَا بُعْدًۭا لِّثَمُودَ.
11:68. இப்படியாக அவர்களுடைய வீடுகள் இடிந்து தரைமட்டமாகி விட்டன. மேலும் அந்த ஊர் இருந்த இடம் காணாமல் போய்விட்டது. இவையாவும் அவர்கள் மேல் இருந்த வெறுப்பின் காரணமாக அல்ல. மாறாக அல்லாஹ்வின் வழிகாட்டுதலை ஏற்க மறுத்ததோடு இறைத்தூதரின் முன் எச்சரிக்கையையும் அவர்கள் பொருட்படுத்தவில்லை. அதனால் அந்த அழிவில் அவர்கள் சிக்கி அழிந்து போனார்கள். (பார்க்க 7:79)
அதுமட்டுமின்றி அழிவு ஏற்படுவதற்குமுன் இறைத் தூதர்கள் மூலம் எல்லா சமூகத்தவர்களுக்கும் எச்சரிக்கை விடபட்டு வந்தது. இறைத் தூதர்களின் பேச்சை நிராகரித்து வந்த அவர்களுடைய போக்கு இத்தகைய எச்சரிக்கையையும் பொருட்படுத்தாது அந்த அழிவில் சிக்கிக் கொண்டனர்.
وَلَقَدْ جَآءَتْ رُسُلُنَآ إِبْرَٰهِيمَ بِٱلْبُشْرَىٰ قَالُوا۟ سَلَٰمًۭا ۖ قَالَ سَلَٰمٌۭ ۖ فَمَا لَبِثَ أَن جَآءَ بِعِجْلٍ حَنِيذٍۢ.
11:69. அது போல இப்றாஹீம் நபிக்கும் இறைச் செய்தி வந்தது. அனைவருக்கும் நலம் உண்டாவதாக என்று கூறிய வண்ணம், அந்த செய்திகளை கொண்டு வந்தவர்கள், இப்றாஹீம் நபியிடம் நற்செய்தியை எடுத்துரைத்தார்கள். அவரும் அவர்களுடைய நலமான வாழ்வை விரும்புவதாக கூறி, அவர்களுக்கு மாமிசப் வருவல்களை உண்பதற்கு ஏற்பாடு செய்தார்.
நற்செய்திகளை கொண்டு வருபவர்கள் உண்டு மகிழ்ந்து செல்வார்கள். ஆனால் கெட்ட செய்தியை கொண்டு வருபவர்கள் யாரும் உணவருந்திக் கொண்டோ அல்லது நீண்ட நேரம் பேசிக் கொண்டோ இருக்க மார்ட்டார்கள்.
فَلَمَّا رَءَآ أَيْدِيَهُمْ لَا تَصِلُ إِلَيْهِ نَكِرَهُمْ وَأَوْجَسَ مِنْهُمْ خِيفَةًۭ ۚ قَالُوا۟ لَا تَخَفْ إِنَّآ أُرْسِلْنَآ إِلَىٰ قَوْمِ لُوطٍۢ.
11:70. அவ்வாறே அவர்கள் உணவு சாப்பிடாததைக் கண்டு, இப்றாஹீம் நபிக்கு சந்தேகமும் பயமும் ஏற்பட்டது. அதற்கு அவர்கள், “பயப்படாதீர்கள். நாங்கள் கொண்டுவந்துள்ள கெட்ட செய்தி உங்களுக்கு அல்ல. லூத்து நபியின் சமூகத்தவர்கள் சம்பந்தப்பட்டவை ஆகும்” என்று கூறினார்கள்.
وَٱمْرَأَتُهُۥ قَآئِمَةٌۭ فَضَحِكَتْ فَبَشَّرْنَٰهَا بِإِسْحَٰقَ وَمِن وَرَآءِ إِسْحَٰقَ يَعْقُوبَ.
11:71. இறைவன் புறத்திலிருந்து இப்றாஹீம் நபிக்குப் பிறக்கப் போகும் இஸ்ஹாக்கைப் பற்றியும் அவருக்குப் பின் இஸ்ஹாக் மூலமாக பிறக்கப் போகும் யாஃகூப்பைப் பற்றிய நற்செய்தியாகவும் இருந்தது. அங்கு நின்றுக் கொண்டிருந்த இப்றாஹீம் நபியின் மனைவிக்கு பெருமகிழ்ச்சி ஏற்பட்டது.
قَالَتْ يَٰوَيْلَتَىٰٓ ءَأَلِدُ وَأَنَا۠ عَجُوزٌۭ وَهَٰذَا بَعْلِى شَيْخًا ۖ إِنَّ هَٰذَا لَشَىْءٌ عَجِيبٌۭ.
11:72. அவருக்குப் பிறக்கப் போகும் குழந்தையின் நற்செய்தி மகிழ்ச்சி அளித்தாலும், தன்னுடைய முதுமையை எண்ணி திகைப்பில் இருந்தார். “அடக் கடவுளே! வயதான இந்த காலத்தில் எனக்குப் புத்திர பாக்கியமா? இதோ என் கணவர் இருக்கிறாரே! இவரும் முதியவராகி விட்டார். இந்நிலையில் நான் குழந்தையைப் பெற்றெடுப்பேனா? இது ஆச்சரியமான விஷயம்தான்” என்று இப்றாஹீம் நபியின் மனைவி கூறினார்.
قَالُوٓا۟ أَتَعْجَبِينَ مِنْ أَمْرِ ٱللَّهِ ۖ رَحْمَتُ ٱللَّهِ وَبَرَكَٰتُهُۥ عَلَيْكُمْ أَهْلَ ٱلْبَيْتِ ۚ إِنَّهُۥ حَمِيدٌۭ مَّجِيدٌۭ.
11:73. அதற்கு அவர்கள், “அல்லாஹ்வின் செயல் திட்டங்களைப் பற்றி நீங்கள் ஆச்சரியப்படுகிறீர்களா? குழந்தையின் நற்செய்தி இந்த வீட்டிற்கு வரப்போகும் பேரொளியாகவும் அல்லாஹ்வின் அருளும் பாக்கியமும் மலரப் போகிறது என்பதையும் எண்ணி மகிழ்வடையுங்கள். நிச்சயமாக அல்லாஹ்வின் செயல் திட்டங்கள் யாவும் போற்றுதலுக்கு உரியதாகவே உள்ளன என்பதை அறிந்து கொள்ளுங்கள்” என்று கூறினார்கள்.
فَلَمَّا ذَهَبَ عَنْ إِبْرَٰهِيمَ ٱلرَّوْعُ وَجَآءَتْهُ ٱلْبُشْرَىٰ يُجَٰدِلُنَا فِى قَوْمِ لُوطٍ.
11:74. இந்த நன்மாறாய செய்தியைக் கேட்ட இப்றாஹீம் நபிக்கு மன நிறைவு ஏற்பட்டது. ஆனால் லூத்துடைய சமூகத்தவர்களைப் பற்றி இறைவனின் செயல் திட்டம் என்ன என்பதை தீவரமாக விசாரிக்க ஆரம்பித்தார்.
إِنَّ إِبْرَٰهِيمَ لَحَلِيمٌ أَوَّٰهٌۭ مُّنِيبٌۭ.
11:75. இப்றாஹீம் நபி சகிப்புத் தன்மை உடையவராகவும், இளகிய மனம் உள்ளவராகவும், ஒவ்வொரு விஷயத்திலும் இறைவழிகாட்டுதலை முன்வைத்து செயல் படுபவராகவும் இருந்தார்.
يَٰٓإِبْرَٰهِيمُ أَعْرِضْ عَنْ هَٰذَآ ۖ إِنَّهُۥ قَدْ جَآءَ أَمْرُ رَبِّكَ ۖ وَإِنَّهُمْ ءَاتِيهِمْ عَذَابٌ غَيْرُ مَرْدُودٍۢ.
11:76. இறைச் செய்தியைக் கொண்டு வந்தவர்கள், “இப்றாஹீமே! நீர் அவர்களைப் பற்றிய கவலையை விட்டுவிடு. ஏனெனில் இறைவனின் நியதிப்படி அவர்களுடைய செயல்களின் விளைவுகள் தோற்றத்திற்கு வரும் காலம் நெருங்கி விட்டன. எனவே அவர்களுக்கு நேரவிருக்கும் வேதனைகள் தவிர்க்க முடியாதவையாகும்” என்று தீர்க்கமாக சொல்லிவிட்டு லூது நபியிடம் சென்று விட்டார்கள்.
وَلَمَّا جَآءَتْ رُسُلُنَا لُوطًۭا سِىٓءَ بِهِمْ وَضَاقَ بِهِمْ ذَرْعًۭا وَقَالَ هَٰذَا يَوْمٌ عَصِيبٌۭ.
11:77. அவர்கள் லூது நபியிடம் வந்து இச்செய்தியை எடுத்துரைத்த போது, அவர் மக்களுக்காக பெரிதும் விசனப்பட்டார். அவர் மிகவும் வருத்தத்துடன், “இது மிகவும் நெருக்கடி மிக்க காலமாயிற்றே! ” என்றார்.
ஏனெனில் அவ்வூரார், ஊருக்குப் புதிதாக வருபவர்களிடமும் தகாத செயல்களை செய்து விடுவார்கள் என்ற அச்சம் அவருக்கு இருந்தது. எனவே அவர்களைக் காப்பாற்றி பத்திரமாக அனுப்பி வைக்கும் பொறுப்பு அவருக்கு இருந்தது.
وَجَآءَهُۥ قَوْمُهُۥ يُهْرَعُونَ إِلَيْهِ وَمِن قَبْلُ كَانُوا۟ يَعْمَلُونَ ٱلسَّيِّـَٔاتِ ۚ قَالَ يَٰقَوْمِ هَٰٓؤُلَآءِ بَنَاتِى هُنَّ أَطْهَرُ لَكُمْ ۖ فَٱتَّقُوا۟ ٱللَّهَ وَلَا تُخْزُونِ فِى ضَيْفِىٓ ۖ أَلَيْسَ مِنكُمْ رَجُلٌۭ رَّشِيدٌۭ.
11:78. அவருடைய சமூகத்தார் இறைச் செய்திகளை எடுத்து வந்திருப்பவர்களை நோக்கி விரைந்தோடி வந்தார்கள். அவர்கள் ஏற்கனவே செய்த தகாத செயல்களைச் செய்ய விரும்பியே அங்கு வந்தார்கள். லூது நபி அவர்களை தனியாக அழைத்து, “இதோ இந்தப் பெண்மணிகள். இவர்கள் என்னுடைய புதல்விகள் போன்றவர்கள் ஆவார்கள். இந்த பரிசுத்தமான பெண்களை நீங்கள் மணமுடித்து சந்தோஷமாக இருப்பதை விட்டுவிட்டு, ஏன் இவ்வாறு தகாத செயல்களில் ஈடுபட்டுக் கொண்டு திரிகிறீர்கள்? உங்களின் தகாத செயல்களுக்கு அல்லாஹ் விதித்துள்ள விபரீத விளைவுகளை எண்ணி அஞ்ச வேண்டாமா? மேலும் என் விருந்தினர்கள் விஷயத்திலும் நீங்கள் என்னை அவமானப் படுத்தாதீர்கள். உங்களில் ஒருவர் கூட நல்ல மனிதராக இல்லையா?” என்று கவலையுடன் கேட்டார்.
قَالُوا۟ لَقَدْ عَلِمْتَ مَا لَنَا فِى بَنَاتِكَ مِنْ حَقٍّۢ وَإِنَّكَ لَتَعْلَمُ مَا نُرِيدُ.
11:79. அதற்கு அவர்கள், “நீங்கள் கூறும் புதல்வியர்களில் எங்களுக்கு எந்த ஆர்வமும் இல்லை என்பதை நீர் திடமாக அறிந்திருக்கின்றீர். நாங்கள் விரும்புவது என்னவென்று நிச்சயமாக உமக்குத் தெரியும்” என்று கூறினார்கள்.
قَالَ لَوْ أَنَّ لِى بِكُمْ قُوَّةً أَوْ ءَاوِىٓ إِلَىٰ رُكْنٍۢ شَدِيدٍۢ.
11:80. அதற்கு லூது நபி, “உங்களுடைய தகாத செயலை தடுத்து நிறுத்த என்னிடம் போதுமான சக்தி இல்லாமல் போய்விட்டதே! எனக்கு வலிமைமிக்க ஆதரவு ஒன்றும் இல்லாமல் போயிற்றே!” என்று மனம் வெதும்பினார்.
قَالُوا۟ يَٰلُوطُ إِنَّا رُسُلُ رَبِّكَ لَن يَصِلُوٓا۟ إِلَيْكَ ۖ فَأَسْرِ بِأَهْلِكَ بِقِطْعٍۢ مِّنَ ٱلَّيْلِ وَلَا يَلْتَفِتْ مِنكُمْ أَحَدٌ إِلَّا ٱمْرَأَتَكَ ۖ إِنَّهُۥ مُصِيبُهَا مَآ أَصَابَهُمْ ۚ إِنَّ مَوْعِدَهُمُ ٱلصُّبْحُ ۚ أَلَيْسَ ٱلصُّبْحُ بِقَرِيبٍۢ.
11:81. இதை அறிந்த அவ்விருந்தினர்கள், “ லூத்தே! நாங்கள் உம்முடைய இறைவனின் தூதர்களாக வந்திருக்கிறோம். இந்த கொடுமைக்காரர்கள் உம்மை ஒன்றும் செய்ய முடியாது. எனவே அந்தி சாய்ந்ததும் இரவோடு இரவாக யாருக்கும் தெரியாமல் நீங்களும் உங்களைச் சார்ந்தவர்களையும் அழைத்துக் கொண்டு இவ்வூரைவிட்டுப் வெளியேறி விடுங்கள். இவர்களைப் பற்றி எண்ணிக் கொண்டு உங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள். உம்மோடு வரக் கூடியவர்களில் உம் மனைவி இருக்கமாட்டாள். அவர்களுக்கு வரவேண்டிய ஆபத்துகளின் நேரம் நெருங்கி விட்டது. அந்தப் பேரழிவுகள் வரக் கூடிய நேரம் மறுநாள் காலைப் பொழுதாகும். எனவே நேரம் மிகவும் குறைவாக உள்ளது. உடனே புறப்படுவதற்கு ஆயத்தமாகுங்கள்” என்று அறிவித்தனர்.
فَلَمَّا جَآءَ أَمْرُنَا جَعَلْنَا عَٰلِيَهَا سَافِلَهَا وَأَمْطَرْنَا عَلَيْهَا حِجَارَةًۭ مِّن سِجِّيلٍۢ مَّنضُودٍۢ.
11:82. லூத் நபியும் அவரைச் சார்ந்தவர்களும் அவ்வாறே அவ்வூரைவிட்டு வெளியேறி விட்டனர். அதன்பின் குறித்த நேரத்தில் அந்த பேரழிவுகள் ஏற்பட்டு விட்டன. அவர்கள் கட்டியிருந்த பெரும் மாளிகைகள் யாவும் இடிந்து தரை மட்டமாகி மண்ணில் புதைந்து போயின. அதுமட்டுமின்றி பூமியும் பிளந்து அதிலிருந்து எரி கற்கல் அடங்கிய பிழம்பும் பீரிட்டு வெளியேறின. அவை யாவும் அவர்கள் மேல் மழை போல் பொழிந்தன.
مُّسَوَّمَةً عِندَ رَبِّكَ ۖ وَمَا هِىَ مِنَ ٱلظَّٰلِمِينَ بِبَعِيدٍۢ.
11:83. அந்த எரிகற்கள் இறைவனிடமிருந்து அவர்களுக்கு மரண அடியின் அடையாளமாகத் திகழ்ந்தன. மனித செயல்களின் விளைவாக அவர்கள் அந்த அழிவில் சிக்கிக் கொண்டனர். இப்படிப்பட்ட பேரழிவுகள் அக்கிரமச் செயலில் ஈடுபடுவோருக்கு வெகு தொலைவில் இருப்பதில்லை.
۞ وَإِلَىٰ مَدْيَنَ أَخَاهُمْ شُعَيْبًۭا ۚ قَالَ يَٰقَوْمِ ٱعْبُدُوا۟ ٱللَّهَ مَا لَكُم مِّنْ إِلَٰهٍ غَيْرُهُۥ ۖ وَلَا تَنقُصُوا۟ ٱلْمِكْيَالَ وَٱلْمِيزَانَ ۚ إِنِّىٓ أَرَىٰكُم بِخَيْرٍۢ وَإِنِّىٓ أَخَافُ عَلَيْكُمْ عَذَابَ يَوْمٍۢ مُّحِيطٍۢ.
11:84. அதேபோல் மத்யன் நாட்டில் வாழ்ந்த ஷுஅய்ப் நபியின் வரலாறும் மிகவும் முக்கியமானதாகும். அவரும் அங்குள்ள மக்களுக்கு இறைவழிகாட்டுதலை எடுத்துரைத்தார். அவர் மக்களிடம், “அல்லாஹ்வின் வழிகாட்டுதலுக்கு மட்டும் அடிபணிந்து வாழுங்கள். அவனைத் தவிர அதிகாரம் செலுத்துபவன் வேறு யாரும் இல்லை. நீங்கள் அனைவரும் சந்தோஷமாக வாழ்ந்து வருவதை நான் கவனிக்கிறேன். அதே சமயம் சமுதாயத்தில் ஏற்றத்தாழ்வு ஏற்பட்டு வருவதையும் நான் கவனிக்காமல் இல்லை. அதற்கு முக்கிய காரணம் கொடுக்கல் வாங்கல் வியாபர விஷயத்தில் அளவையிலும் நிறுவையிலும் உள்ள முறைக்கேடுகள்தான். இவற்றைச் சரிசெய்யுங்கள். நுகர்வோர்க்குச் சேர வேண்டிய பொருட்களை நியாயமாக கிடைக்க வழி செய்யுங்கள். நீங்கள் அவ்வாறு சரி செய்யவில்லை என்றால் இப்போது உங்களுக்குக் கிடைத்து வரும் சந்தோஷங்கள் நீடிக்காது என்றே நானும் அஞ்சுகிறேன்” என்று போதித்து வந்தார்.
وَيَٰقَوْمِ أَوْفُوا۟ ٱلْمِكْيَالَ وَٱلْمِيزَانَ بِٱلْقِسْطِ ۖ وَلَا تَبْخَسُوا۟ ٱلنَّاسَ أَشْيَآءَهُمْ وَلَا تَعْثَوْا۟ فِى ٱلْأَرْضِ مُفْسِدِينَ.
11:85. மேலும் அவர், “என் சமூகத்தவர்களே! நாட்டில் பொருளாதாரம் மற்றும் சமூக சமச்சீர்நிலை நிலைக்க வேண்டும் என்றால் மக்கள் அனைவருக்கும் சேர வேண்டிய வாழ்வாதாரங்களில் ஏற்றத் தாழ்வு இருக்கக் கூடாது. நீதித் துறையும் மிகவும் நியாயமான முறையில் செயல்பட வேண்டும். எனவே அளவை நிறுவை விஷயத்தில் அநீதி இழைத்து ஏழை எளிய மக்களை பாதிப்புக்குள் ஆக்காதீர்கள். அநியாயச் செயலில் ஈடுபட்டு விஷமம் செய்துகொண்டு அலையாதீர்கள்” என்று அவர் மக்களிடம் போதித்தார்.
மேலும் அவர், “இப்படி அநியாயமாக சொத்து செல்வங்களை ஈட்டிக் கொள்வதில் நன்மை இருக்கிறது என்று எண்ணிக் கொள்ளாதீர்கள்.
بَقِيَّتُ ٱللَّهِ خَيْرٌۭ لَّكُمْ إِن كُنتُم مُّؤْمِنِينَ ۚ وَمَآ أَنَا۠ عَلَيْكُم بِحَفِيظٍۢ.
11:86. சமூக சீர்நிலையை பாதுகாத்து நீதி நியாயத்தை கடைப்பிடிப்பதால் கிடைக்கின்ற நன்மைகள் தான் உண்மையான நன்மைகளாகும். இவையே அல்லாஹ்விடமிருந்து கிடைக்கின்ற நிலையான நன்மைகளாகும். ஆனால் அல்லாஹ்வின் வழிகாட்டுதலை முழு அளவில் ஏற்று அதன்படி செயல்பட்டால் தான் இதைப் பற்றிய உண்மைகள் உங்களுக்கு விளங்கும். மற்றபடி உங்களுக்கு தீங்கு ஏற்பட்டால், என்னாலும் உங்களை காப்பாற்ற முடியாது” என்று மக்களுக்கு எடுத்துரைத்தார்.
அவருடைய தொடர் போதனைகளைக் கேட்டு வந்த சமுதாயத் தலைவர்களும், செல்வந்தர்களும் இவரை எதிர்த்து வாதிட வந்தார்கள். இவருடைய சித்தாந்தம் சமுதாயத்தில் வளர விடாமல் எப்படியாவது தடுத்து நிறுத்த வேண்டும் என்பதிலேயே அவர்கள் கண்ணும் கருத்துமாக இருந்தார்கள்.
قَالُوا۟ يَٰشُعَيْبُ أَصَلَوٰتُكَ تَأْمُرُكَ أَن نَّتْرُكَ مَا يَعْبُدُ ءَابَآؤُنَآ أَوْ أَن نَّفْعَلَ فِىٓ أَمْوَٰلِنَا مَا نَشَٰٓؤُا۟ ۖ إِنَّكَ لَأَنتَ ٱلْحَلِيمُ ٱلرَّشِيدُ.
11:87. அவர்கள், ஷுஅய்ப்பே! நீ எப்படிப்பட்ட ‘ஸலாத்’ முறையை கொண்டு வர விரும்புகிறாய்? காலம் காலமாக எங்கள் மூதாதையர்கள் வழிபட்டு வந்த தெய்வங்களை விட்டுவிடவா உன் ‘ஸலாத்’ கட்டளையிடுகிறது? அது மட்டுமின்றி நாங்கள் ஈட்டி வரும் செல்வங்களை எங்கள் விருப்பப்படி செலவு செய்வதையும் அந்த ‘ஸலாத்’ தடுப்பதாக இருக்கிறதே! இதுநாள் வரையில் எங்கள் மூதாதையர்கள் செய்து வந்ததெல்லாம் சரியில்லை என்றும், நீர் மட்டும் ஏழை எளிய மக்களின் நலனைக் காக்கும் நல்லவர் போலவும் அல்லவா பேசி வருகிறீர்?” என்று அவர்கள் வாதிட ஆரம்பித்தார்கள்.
சிந்தனையாளர்களே! ஒரு நபி, தம் சமுதாயத்தில் கொண்டு வரும் "ஸலாத்" முறை என்னவாக இருக்கிறது என்பதை கவனித்தீர்களா? பொருளாதாரம் மற்றும் சமூக சமச்சீர் நிலைக்காக சீர்திருத்தங்களை கொண்டு வருவதே அந்த "ஸலாத்"தின் முக்கிய நோக்கமாக இருக்கிறது என்று இந்த வாசகம் கூறுவதைக் கவனித்தீர்களா? இது முஸ்லிம்கள் மீதுள்ள எவ்வளவு பெரிய பொறுப்பு என்பதையும் கவனியுங்கள். எனவேதான் நன்மையை ஏவி தீமைகளை தடுப்பதே சலாத்தின் நோக்கம் என 29:45 வாசகம் வலியுறுத்திச் சொல்கிறது.
قَالَ يَٰقَوْمِ أَرَءَيْتُمْ إِن كُنتُ عَلَىٰ بَيِّنَةٍۢ مِّن رَّبِّى وَرَزَقَنِى مِنْهُ رِزْقًا حَسَنًۭا ۚ وَمَآ أُرِيدُ أَنْ أُخَالِفَكُمْ إِلَىٰ مَآ أَنْهَىٰكُمْ عَنْهُ ۚ إِنْ أُرِيدُ إِلَّا ٱلْإِصْلَٰحَ مَا ٱسْتَطَعْتُ ۚ وَمَا تَوْفِيقِىٓ إِلَّا بِٱللَّهِ ۚ عَلَيْهِ تَوَكَّلْتُ وَإِلَيْهِ أُنِيبُ.
11:88. அதற்கு ஷுஅய்ப் நபி, “என்னுடைய மக்களே! என் இறைவனின் தெளிவான ஆதாரப்பூர்வமான வழிகாட்டுதலின் அடிப்படையில் நான் செயல்படுகிறேன் என்பதை நீங்கள் அறிவீர்கள். மேலும் இறைவனின் அருட்கொடைகளை நான் நேர்மையான முறையில் பெற்று சிறப்பாக வாழ்ந்து வருவதையும் நீங்கள் பார்க்கிறீர்கள். ஆனால் நீங்களோ நாட்டில் ஏற்றத்தாழ்வு ஏற்படும் வகையில் அநியாயமாக செல்வங்களை சுருட்டிக் கொள்கிறீர்கள். இப்படிப்பட்ட தவறான செயல்கள் நடைபெறுவதை விட்டு நான் தடுத்து வருகிறேன். உங்களைப் போல தவறான செயலில் ஈடுபட நான் விரும்பவில்லை. என்னால் இயன்ற வரையில் நாட்டில் சீர்திருத்தங்களைக் கொண்டு வரவேண்டும் என்பதே அன்றி வேறெதையும் நான் நாடவில்லை. இந்த முயற்சிகள் எல்லாம் அல்லலாஹ்வின் உதவியைக் கொண்டே அல்லாது வேறில்லை. அவன் அருளியுள்ள வழிகாட்டுதலில் முழுமையான நம்பிக்கை வைத்து அதன்படியே முற்றிலும் செயல்பட்டு வருகிறேன்” என்று நளினமாக பதிலளித்தார்.
وَيَٰقَوْمِ لَا يَجْرِمَنَّكُمْ شِقَاقِىٓ أَن يُصِيبَكُم مِّثْلُ مَآ أَصَابَ قَوْمَ نُوحٍ أَوْ قَوْمَ هُودٍ أَوْ قَوْمَ صَٰلِحٍۢ ۚ وَمَا قَوْمُ لُوطٍۢ مِّنكُم بِبَعِيدٍۢ.
11:89. மேலும் அவர், “என் சமுதாய மக்களே! நான் எடுத்துரைக்கும் இறை வழிகாட்டுதலுக்கு எதிராக நீங்கள் என் மீது பகைமை கொள்ளாதீர்கள். இதற்கு முன்சென்ற நூஹ்வுடைய சமுதாயம், லூத்துடைய சமுதாயம் மற்றும் சாலிஹ் நபியின் சமுதாயங்கள் எல்லாம் இறை வழிகாட்டுதலுக்கு மாறுசெய்து, அழிவை சந்தித்துக் கொண்டன. உங்களுக்கும் அப்படிப்பட்ட வேதனைகள் வந்தடையக் கூடாது என்பதற்காகவே அறிவுரை செய்கிறேன். அது மட்டுமின்றி அழிந்து போன லூத்துடைய சமுதாயம் வாழ்ந்த இடம், உங்கள் வசிப்பிடத்திற்கு மிக அருகாமையிலேயே உள்ளது என்பதையும் கவனியுங்கள்” என்றார்.
وَٱسْتَغْفِرُوا۟ رَبَّكُمْ ثُمَّ تُوبُوٓا۟ إِلَيْهِ ۚ إِنَّ رَبِّى رَحِيمٌۭ وَدُودٌۭ.
11:90. “எனவே உங்கள் அனைவரையும் படைத்துப் பரிபாலிக்கும் இறைவனின் வழிகாட்டுதலின்படி பாதுகாப்பான வாழ்வின் பக்கம் வந்துவிடுங்கள். உங்களுடைய தவறான செயல்களை விட்டுவிட்டு அவன் காட்டிய வழியில் செயல்படுங்கள். அவ்வாறு செயல்பட்டால் நிச்சயமாக என் இறைவனின் கருணையும் அரவணைப்பும் உங்களுக்குக் கிடைக்கும்” என்று அறிவுரை செய்து வந்தார்.
قَالُوا۟ يَٰشُعَيْبُ مَا نَفْقَهُ كَثِيرًۭا مِّمَّا تَقُولُ وَإِنَّا لَنَرَىٰكَ فِينَا ضَعِيفًۭا ۖ وَلَوْلَا رَهْطُكَ لَرَجَمْنَٰكَ ۖ وَمَآ أَنتَ عَلَيْنَا بِعَزِيزٍۢ.
11:91. இதைக் கேட்ட சமுதாயத் தலைவர்கள், “ஷுஅய்ப்பே! நீ போதித்து வரும் விஷயங்களில் பெரும்பாலானவை எங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. உம்மிடம் எங்களை விட எவ்வித சிறப்பு இருப்பதாகவும் தெரியவில்லை. நீர் எங்களைவிட மிகவும் பலஹீனமாகவே இருக்கின்றீர். நீர் எங்களுடைய குலத்தைச் சேர்ந்தவர் என்பதற்காக இதை நாங்கள் உம்மிடம் சொல்கிறோம். மேலும் உம்மோடு இணைந்திருப்பவர்கள் இல்லாதிருந்தால் உம்மை கல்லாலெறிந்தே கொன்றிருப்போம். உம்மைப் பற்றி எங்களிடம் இருந்த மதிப்பு, மரியாதை எல்லாம் போய்விட்டன” என்று எச்சரித்தார்கள்.
قَالَ يَٰقَوْمِ أَرَهْطِىٓ أَعَزُّ عَلَيْكُم مِّنَ ٱللَّهِ وَٱتَّخَذْتُمُوهُ وَرَآءَكُمْ ظِهْرِيًّا ۖ إِنَّ رَبِّى بِمَا تَعْمَلُونَ مُحِيطٌۭ.
11:92. அதற்கு ஷுஅய்ப் நபி,"அல்லாஹ் நிர்ணயித்துள்ள “மனித செயல்களுக்கு ஏற்ற பின் விளைவுகளைப்” பற்றி நான் எடுத்துரைக்கிறேன். அதிலிருந்து யாரும் தப்ப முடியாது என்பதையும் நான் எச்சரித்து வருகிறேன். ஆனால் நீங்களோ குலம், கோத்திரம் என்ற அடிப்படையில் பேசுகிறீர்கள். இவை எல்லாம் அல்லாஹ்வின் வழிகாட்டுதலை விட முக்கியத்துவம் வாய்ந்ததா? இறை வழிகாட்டுதலை எல்லாம் நீங்கள் புறந்தள்ளி விட்டீர்கள். என் இறைவன் “நிர்ணயித்துள்ள மனித செயல்களுக்கு ஏற்ற பின் விளைவுகள்” என்ற சட்டம், நீங்கள் செய்யும் எல்லா செயல்களையும் சூழ்ந்தவையாகவே இருக்கின்றன என்பதை தெரிந்து கொள்ளுங்கள்” என்றார்.
وَيَٰقَوْمِ ٱعْمَلُوا۟ عَلَىٰ مَكَانَتِكُمْ إِنِّى عَٰمِلٌۭ ۖ سَوْفَ تَعْلَمُونَ مَن يَأْتِيهِ عَذَابٌۭ يُخْزِيهِ وَمَنْ هُوَ كَٰذِبٌۭ ۖ وَٱرْتَقِبُوٓا۟ إِنِّى مَعَكُمْ رَقِيبٌۭ.
11:93. “என் சமுதாய மக்களே! இதையும் மீறி நீங்கள் இறை வழிகாட்டுதலை ஏற்று நடக்க முன்வரவில்லை என்றால், உங்கள் விருப்பப்படி செயல்பட்டு வாருங்கள். நாங்களும் இறை வழிகாட்டுதலின்படி செயல்பட்டு வருகிறோம். இழிவு தரும் வேதனைகள் யாரை வந்தடைகிறது என்பதையும், பொய்யர்கள் யார் என்பதையும் விரைவில் அறிந்து கொள்வீர்கள். அப்படி ஒரு வேதனைகள் வந்தடைவதை தவிர, வேறு எதையும் நீங்கள் எதிர் பார்க்க முடியாது. நானும் என் செயல்களுக்குரிய பலன்களை எதிர் பார்க்கிறேன்” என்றார்.
وَلَمَّا جَآءَ أَمْرُنَا نَجَّيْنَا شُعَيْبًۭا وَٱلَّذِينَ ءَامَنُوا۟ مَعَهُۥ بِرَحْمَةٍۢ مِّنَّا وَأَخَذَتِ ٱلَّذِينَ ظَلَمُوا۟ ٱلصَّيْحَةُ فَأَصْبَحُوا۟ فِى دِيَٰرِهِمْ جَٰثِمِينَ.
11:94. அந்த சமூகத்தவர்களின் தீய செயல்கள் மிகைத்திடவே, அதன் விளைவுகள் தோற்றத்திற்கு வரும் நேரம் நெருங்கி விட்டது. அவ்வூரில் அழிவு ஏற்படும் தருணத்தைப் பற்றி இறைவனிடமிருந்து முன்னெச்சரிக்கை செய்தி வந்து, அதனால் அவரும் அவரைச் சார்ந்தவர்களும் அவ்வூரை விட்டு வெளியேறி விட்டார்கள். இறைவனிடமிருந்து வந்த முன்னெச்சரிக்கையை மதிக்காமல் அங்கேயே தங்கி விட்டவர்கள், அங்கு ஏற்பட்ட பூகம்பத்தில் அழிந்து விட்டார்கள். அவர்கள் வாழ்ந்த ஊர் இருந்த இடம் தெரியாதபடி தரைமட்டம் ஆகிவிட்டது.
كَأَن لَّمْ يَغْنَوْا۟ فِيهَآ ۗ أَلَا بُعْدًۭا لِّمَدْيَنَ كَمَا بَعِدَتْ ثَمُودُ.
11:95. இப்படியாக அந்த மத்தியன் வாசிகளும், சமூது கூட்டத்தார் அழிந்து போனது போலவே, அடியோடு அழிந்து, அவர்கள் வாழ்ந்த இடம் உலக வரை படத்திலிருந்து காணாமல் போயிற்று.
وَلَقَدْ أَرْسَلْنَا مُوسَىٰ بِـَٔايَٰتِنَا وَسُلْطَٰنٍۢ مُّبِينٍ.
11:96. இதே போன்று நாம் மூஸா நபியையும் தெளிவான ஆதாரங்களை ஃபிர்அவ்னிடம் எடுத்துரைக்க முழு அதிகாரத்தை அளித்து அனுப்பி வைத்தோம்.
إِلَىٰ فِرْعَوْنَ وَمَلَإِي۟هِۦ فَٱتَّبَعُوٓا۟ أَمْرَ فِرْعَوْنَ ۖ وَمَآ أَمْرُ فِرْعَوْنَ بِرَشِيدٍۢ.
11:97. அவர் ஃபிர்அவ்ன் மன்னனிடமும், அவனுடைய அரசவை மந்திரிகளிடமும் எடுத்துரைக்கச் சென்றார். ஃபிர்அவ்னும் அவனுடைய அரசவை மந்திரிகளும் பின்பற்றி வந்த சட்டதிட்டங்களில், நேர்மையோ அல்லது அறிவுப் பூவர்வமாகவோ இருந்ததில்லை. ஆனால் அவர்கள் அவற்றையே பின்பற்றி வந்தனர். மூஸா நபியின் வேத அறிவுரைகளை அவர்கள் ஏற்க முன்வரவில்லை.
இதற்காக நீ வருத்தப்பட வேண்டியதில்லை என்று இறைவனின் ஆறுதல் செய்தி கூறிற்று. அதாவது.
يَقْدُمُ قَوْمَهُۥ يَوْمَ ٱلْقِيَٰمَةِ فَأَوْرَدَهُمُ ٱلنَّارَ ۖ وَبِئْسَ ٱلْوِرْدُ ٱلْمَوْرُودُ.
11:98. இஸ்ரவேலர்களின் ஆதரவு உமக்கு கிடைக்கும் போது, ஃபிர்அவ்ன் தன் படைகளை கொண்டு உம்மை எதிர்க்க வருவான். அவனும் அவனைச் சார்ந்தவர்களும் அழிவு என்னும் பாழ்குழியில் தள்ளப்படுவார்கள். (பார்க்க 14:28-29) அவர்கள் போய் சேரும் இடம் மிகவும் கெட்ட நரகமாக இருக்கும்” என்ற செய்தி இறைவனிடமிருந்து அவருக்கு வந்தது.
وَأُتْبِعُوا۟ فِى هَٰذِهِۦ لَعْنَةًۭ وَيَوْمَ ٱلْقِيَٰمَةِ ۚ بِئْسَ ٱلرِّفْدُ ٱلْمَرْفُودُ.
11:99. “அது மட்டுமின்றி நிகழ்கால வாழ்விலும், வருங்கால நிலையான வாழ்விலும் அல்லாஹ்வின் அருட்கொடைகளை இழந்து அவர்கள் இழிவுக்கு ஆளாவார்கள். இப்படியாக அவர்களுக்கு கிடைக்கும் சன்மானம் மிகவும் கெட்டதாகவே இருக்கும்” என்று அச்செய்தி கூறிற்று.
ذَٰلِكَ مِنْ أَنۢبَآءِ ٱلْقُرَىٰ نَقُصُّهُۥ عَلَيْكَ ۖ مِنْهَا قَآئِمٌۭ وَحَصِيدٌۭ.
11:100. இறைத்தூதரே! இவை யாவும் நடந்து முடிந்த வரலாறுகளாகும். இவற்றை நாம் வஹீ மூலம் எடுத்துரைக்கிறோம். அவற்றில் ஒரு சில சமுதாயங்கள் இன்னமும் வாழ்ந்து வருகின்றன. மற்றவை முற்றிலுமாக அழிந்து விட்டன.
وَمَا ظَلَمْنَٰهُمْ وَلَٰكِن ظَلَمُوٓا۟ أَنفُسَهُمْ ۖ فَمَآ أَغْنَتْ عَنْهُمْ ءَالِهَتُهُمُ ٱلَّتِى يَدْعُونَ مِن دُونِ ٱللَّهِ مِن شَىْءٍۢ لَّمَّا جَآءَ أَمْرُ رَبِّكَ ۖ وَمَا زَادُوهُمْ غَيْرَ تَتْبِيبٍۢ.
11:101. இந்த அழிவுகள் எல்லாம் அவர்கள் தமக்குத் தாமே செய்துக் கொண்ட அக்கிரமச் செயல்களின் காரணமாகவே ஏற்பட்டவை ஆகும். நாம் ஒருபோதும் அவர்களுக்கு அநியாயம் செய்யவில்லை (மேலும் பார்க்க 4:40). அவர்கள் செய்து வந்த அக்கிரமச் செயல்களின் விளைவுகள் தோற்றத்திற்கு வந்த போது, அவர்கள் அழைத்துக் கொண்டிருந்த கற்பனைத் தெய்வங்கள் எதுவும் அவர்களுக்கு எவ்வித உதவியும் செய்யவில்லை. அவர்களின் தவறான போக்குகள் அவர்களுக்கு நஷ்டத்தை தவிர வேறெதையும் அதிகரிக்கச் செய்யவில்லை.
وَكَذَٰلِكَ أَخْذُ رَبِّكَ إِذَآ أَخَذَ ٱلْقُرَىٰ وَهِىَ ظَٰلِمَةٌ ۚ إِنَّ أَخْذَهُۥٓ أَلِيمٌۭ شَدِيدٌ.
11:102. வரலாற்றுச் சான்றுகள் யாவும் உங்களுக்கு எதை எடுத்துரைக்கின்றன என்றால் உலகில் எந்த சமுதாயத்தைச் சேர்ந்தவர்களானாலும் சரியே! அவர்கள் அநியாய அக்கிரமச் செயலில் ஈடுபடும் போது, அல்லாஹ் நிர்ணயித்துள்ள “மனித செயல்களுக்கேற்ற விளைவுகள்” என்ற சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிக்கவே முடியாது என்பதே. அவர்களுக்கு கிடைத்த வேதனைகளும் துன்பங்களும் எந்த அளவுக்கு கடுமையாக இருந்தன என்பதையும் அறிவிப்பதே ஆகும்.
إِنَّ فِى ذَٰلِكَ لَءَايَةًۭ لِّمَنْ خَافَ عَذَابَ ٱلْءَاخِرَةِ ۚ ذَٰلِكَ يَوْمٌۭ مَّجْمُوعٌۭ لَّهُ ٱلنَّاسُ وَذَٰلِكَ يَوْمٌۭ مَّشْهُودٌۭ.
11:103. முன்சென்ற சமுதாயங்களின் வரலாற்று ஆதாரங்கள் யாவும் அநியாய அக்கிரமச் செயல்களில் ஈடுபட்ட சமூகத்தவர்களுக்கு ஏற்பட்ட அழிவுகளைப் பற்றியே அறிவிக்கின்றன. அல்லாஹ்வின் நிலைமாறாத சட்ட விதிமுறைகளின் படியே அவை நடைபெற்றதாகும். அதற்கு அஞ்சி வாழும் இக்கால சமுதாயங்களுக்கு தக்க படிப்பினை இருக்கிறது. இதே நிலைமாறாச் சட்ட விதிமுறைகளின் படி நபியே! உம்முடைய அறிவுரைகளை எதிர்க்கும் மக்களுக்கும் ஏற்படும். அவர்கள் அனைவரும் ஒன்றுதிரண்டு உம்முடன் மோதும் தருணம் நிச்சயம் வரும்போது, இவர்களும் அந்த அழிவுகளை கண்கூடாகப் பார்த்துக் கொள்வார்கள்.
وَمَا نُؤَخِّرُهُۥٓ إِلَّا لِأَجَلٍۢ مَّعْدُودٍۢ.
11:104. நம்முடைய சட்டப்படி குறிப்பிட்ட கால தவணை வரையில் அவர்களுக்கு அவகாசம் கிடைக்கிறது. அவ்வளவுதான். அதன்பின் அந்த விளைவுகளை அவர்கள் சந்தித்தே தீருவார்கள். (பார்க்க 16:61)
يَوْمَ يَأْتِ لَا تَكَلَّمُ نَفْسٌ إِلَّا بِإِذْنِهِۦ ۚ فَمِنْهُمْ شَقِىٌّۭ وَسَعِيدٌۭ.
11:105. அப்படி ஒரு கால கட்டத்தில் எல்லா நிகழ்வுகளும் அல்லாஹ்வின் சட்ட விதிமுறைகளின் படியே செயல்பட்டு வரும். அதற்கு எதிராக யாரும் பேச இயலாது. இப்போது இருப்பது போல அவரவர் விருப்பப்படி சட்டங்களை ஏற்படுத்திக் கொள்வது என்ற நிலையும் அப்போது இருக்காது. அந்த காலக் கட்டத்தில் நல்லவர்களும் துற்பாக்கியவான்களும் தனித்தனியே பிரிந்து விடுவார்கள் (பார்க்க 36:59) அப்போது அல்லாஹ்வின் அருட்கொடைகளைப் பெற்று சிறப்பாக வாழும் நற்பாக்கியவான்கள் ஒரு புறம், அவற்றை இழந்து தவிப்பவர்கள் மறுபுறம் என பிரிந்து விடுவார்கள்.
فَأَمَّا ٱلَّذِينَ شَقُوا۟ فَفِى ٱلنَّارِ لَهُمْ فِيهَا زَفِيرٌۭ وَشَهِيقٌ.
11:106. துர்பாக்கியசாலிகள் யாவரும், நரக வேதனைகளை அனுபவித்து வருவார்கள். அவர்களுக்கு ஏற்படும் வேதனைகளால் பெருங் கூச்சலும் அலரலும் தான் மிஞ்சும்.
خَٰلِدِينَ فِيهَا مَا دَامَتِ ٱلسَّمَٰوَٰتُ وَٱلْأَرْضُ إِلَّا مَا شَآءَ رَبُّكَ ۚ إِنَّ رَبَّكَ فَعَّالٌۭ لِّمَا يُرِيدُ.
11:107. மேலும் அவர்கள் யாவரும் நிலையான வேதனைகள் மிக்க வாழ்வையே அனுபவித்து வருவார்கள். இப்படி ஒரு செயல் திட்டம், வானங்களையும் பூமியையும் படைத்த ஏக இறைவனால் உருவாக்கபட்டதாகும். இதில் யாருடைய தலையீடும் இருக்க வாய்ப்பில்லை. அதை எதிர்ப்பதற்கும் யாரும் சக்தி பெற மாட்டார்கள்.
۞ وَأَمَّا ٱلَّذِينَ سُعِدُوا۟ فَفِى ٱلْجَنَّةِ خَٰلِدِينَ فِيهَا مَا دَامَتِ ٱلسَّمَٰوَٰتُ وَٱلْأَرْضُ إِلَّا مَا شَآءَ رَبُّكَ ۖ عَطَآءً غَيْرَ مَجْذُوذٍۢ.
11:108. இதற்கு மாறாக எந்த சமுதாயம் அல்லாஹ்வின் அருட்கொடைகளைப் பெறும் பாக்கியசாலியாக இருக்கிறதோ, அது சுவர்க்கத்திற்கு ஒப்பானதாக இருக்கும். இறை வழிகாட்டுதலைப் பேணி நடக்கும் வரையில் நீண்ட காலம் வரையில் அதில் இன்புற்று வாழ்வார்கள். இதுவும் வானங்களையும் பூமியையும் படைத்த இறைவனால் நிலைநிறுத்தப்பட்ட செயல் திட்டமாகும். இப்படியொரு நற்பாக்கியம் கிடைப்பதும் நிலையான சட்டத்தின் அடிப்படையில் தான் ஆகும்.
فَلَا تَكُ فِى مِرْيَةٍۢ مِّمَّا يَعْبُدُ هَٰٓؤُلَآءِ ۚ مَا يَعْبُدُونَ إِلَّا كَمَا يَعْبُدُ ءَابَآؤُهُم مِّن قَبْلُ ۚ وَإِنَّا لَمُوَفُّوهُمْ نَصِيبَهُمْ غَيْرَ مَنقُوصٍۢ.
11:109. இறைவழிகாட்டுதலை எடுத்துரைப்பவரே! இவர்கள் கடைப்பிடித்து வரும் வழிமுறைகளால் ஏற்படவிருக்கும் விபரீத விளைவுகளைப் பற்றி நீர் எவ்வித சந்தேகமும் கொள்ளவேண்டாம். இதற்குமுன் இவர்களுடைய மூதாதையர்கள் கடைப்பிடித்து வந்த வழிமுறைகளையே இவர்களும் கடைப்பிடித்து வருகிறார்கள். எனவே அவர்களுக்கு ஏற்பட்ட அழிவுகளே இவர்களுக்கும் ஏற்படும் என்பதில் எவ்வித சந்தேகமும் வேண்டாம். இவர்களும் தம் பங்கிற்கு அத்தகைய வேதனைகளை அனுபவித்தே தீருவார்கள்.
وَلَقَدْ ءَاتَيْنَا مُوسَى ٱلْكِتَٰبَ فَٱخْتُلِفَ فِيهِ ۚ وَلَوْلَا كَلِمَةٌۭ سَبَقَتْ مِن رَّبِّكَ لَقُضِىَ بَيْنَهُمْ ۚ وَإِنَّهُمْ لَفِى شَكٍّۢ مِّنْهُ مُرِيبٍۢ.
11:110. இதே கொள்கை கோட்பாடுகளைக் கொண்ட வேதத்தை நாம் மூஸா நபிக்கும் கொடுத்தோம். ஆனால் மூஸா நபியின் மறைவுக்குப் பின் காலப் போக்கில் அவர்கள் அதில் மாறுபட்ட கருத்துக்களை ஏற்படுத்திக் கொண்டனர். இதனால் தான் அவர்கள் இன்றைக்கும் உம்மை எதிர்க்கிறார்கள். மனிதன் செய்யும் தவறான செயல்களுக்கு உடனுக்குடன் தண்டனை அளிக்காமல் அவர்கள் திருந்துவதற்கு தக்க அவகாசத்தை கொடுக்க வேண்டும் என்பதே அல்லாஹ்வின் செயல் திட்டமாகும். (16:61) அவ்வாறு இல்லாதிருந்தால், அவர்களுடைய முடிவு எப்போதோ ஏற்பட்டிருக்கும். எனவேதான் அவர்களும் அழிவு ஏற்படுவது பற்றி சந்தேகத்திலேயே இருக்கிறார்கள். தமக்கு ஆபத்துக்கள் எதுவும் நேராது என்ற நினைப்பில் இருக்கிறார்கள்.
وَإِنَّ كُلًّۭا لَّمَّا لَيُوَفِّيَنَّهُمْ رَبُّكَ أَعْمَٰلَهُمْ ۚ إِنَّهُۥ بِمَا يَعْمَلُونَ خَبِيرٌۭ.
11:111. அவர்களில் ஒவ்வொருவரும், தாம் செய்து வந்த செயல்களின் விளைவுகளை இறைவனின் நியதிப்படி பெற்றுக் கொள்வார்கள் என்பதில் எவ்வித சந்தேகமும் வேண்டாம். இதில் அவர்களுக்கு சிறிதளவும் அநியாயம் செய்யப்பட மாட்டாது. அவர்களுடைய செயல்கள் அனைத்தும் அல்லாஹ்வுக்கு தெரியாமல் இல்லை என்பதையும் அவர்களுக்கு எடுத்துரையுங்கள்.
فَٱسْتَقِمْ كَمَآ أُمِرْتَ وَمَن تَابَ مَعَكَ وَلَا تَطْغَوْا۟ ۚ إِنَّهُۥ بِمَا تَعْمَلُونَ بَصِيرٌۭ.
11:112. எனவே நீரும் உம்முடன் திருந்தி வாழ முன்வந்தவர்களும் அல்லாஹ்வின் அறிவுரைகளின் படியே மக்கள் நலப்பணியில் தொடர்ந்து செயல்பட்டு வாருங்கள். அதில் எவ்வித குறையும் வைக்காதீர்கள். நிச்சயமாக நீங்கள் அனைவரும் அல்லாஹ்வின் கண்காணிப்பிலேயே இருக்கிறீர்கள் என்பதை மனதில் பதிய வைத்துக் கொள்ளுங்கள்.
وَلَا تَرْكَنُوٓا۟ إِلَى ٱلَّذِينَ ظَلَمُوا۟ فَتَمَسَّكُمُ ٱلنَّارُ وَمَا لَكُم مِّن دُونِ ٱللَّهِ مِنْ أَوْلِيَآءَ ثُمَّ لَا تُنصَرُونَ.
11:113. மேலும் சமூக விரோத செயல்களில் ஈடுபடுவோரிடம் சகவாசம் வைத்துக் கொள்ளாதீர்கள். அவர்களுக்கு ஆதரவாக நீங்கள் செயல்பட்டால் நீங்களும் கடும் வேதனைக்கு ஆளாவீர்கள். அந்த வேதனைகளிலிருந்து மீள அல்லாஹ்வின் வழிகாட்டுதலைத் தவிர வேறு எதுவும் உங்களுக்கு துணை நிற்காது. மேலும் உங்களுக்குத் துணையாக உதவி புரிய வேறு யாரும் முன் வரமாட்டார்கள்.
وَأَقِمِ ٱلصَّلَوٰةَ طَرَفَىِ ٱلنَّهَارِ وَزُلَفًۭا مِّنَ ٱلَّيْلِ ۚ إِنَّ ٱلْحَسَنَٰتِ يُذْهِبْنَ ٱلسَّيِّـَٔاتِ ۚ ذَٰلِكَ ذِكْرَىٰ لِلذَّٰكِرِينَ.
11:114. எனவே இறைவழிகாட்டுதலை மக்களுக்கு எடுத்துரைக்க, கூட்டு ஸலாத்முறை அவசியமாகிறது. இதற்காக தினந்தோரும் விடியற் காலையிலும், அந்தி சாய்ந்து இருள் சூழும் நேரத்திலும் முறைப்படி இறை வழிகாட்டுதலைக் கற்றுத் தரும் "ஸலாத்" முறையை கடைப்பிடித்து வாருங்கள். அதன் மூலம் கிடைக்கின்ற அறிவுரைகளின்படி ஆக்கப்பூர்வமான நன்மையான செயல்களை செய்து வந்தால், உங்களிடம் இருந்து வந்த தீய பழக்க வழக்கங்கள் நீங்கி வரும். ஆக இறை அறிவுரைகளின்படி வாழ விரும்பும் ஒவ்வொரு சமுதாய மக்களுக்கும் இந்த அறிவுரைகள் இன்றியமையாதது ஆகும்.
وَٱصْبِرْ فَإِنَّ ٱللَّهَ لَا يُضِيعُ أَجْرَ ٱلْمُحْسِنِينَ.
11:115. அது மட்டுமின்றி இறைவழிகாட்டுதலைக் கற்றுக் கொடுத்து மக்களை நல்வழிப்படுத்தும் செயல் திட்டங்களை நிறைவேற்றுவதில் தொடர்ந்து பணியாற்றி வரவேண்டும். இதில் தொய்வு ஏற்படக் கூடாது. இப்படியாக சமூக நல்லிணக்கத்திற்காக பாடுபடுவோரின் உழைப்புகள் எதுவும் ஒருபோதும் வீண் போகாது.
فَلَوْلَا كَانَ مِنَ ٱلْقُرُونِ مِن قَبْلِكُمْ أُو۟لُوا۟ بَقِيَّةٍۢ يَنْهَوْنَ عَنِ ٱلْفَسَادِ فِى ٱلْأَرْضِ إِلَّا قَلِيلًۭا مِّمَّنْ أَنجَيْنَا مِنْهُمْ ۗ وَٱتَّبَعَ ٱلَّذِينَ ظَلَمُوا۟ مَآ أُتْرِفُوا۟ فِيهِ وَكَانُوا۟ مُجْرِمِينَ.
11:116. இதுவரையில் சொல்லப்பட்ட வரலாற்று உண்மைகளை கவனித்துப் பாருங்கள். அதில் ஒர் உண்மை உங்களுக்கு விளங்கும். அதாவது இதற்குமுன் இருந்த சமுதாயங்களில் அல்லாஹ்வின் வழிகாட்டுதலை ஏற்று அதன்படி சீர்திருத்த நடவடிக்கைகளை எடுக்க முன்வந்த அறிவுடையோர், மிகக் குறைவான எண்ணிக்கையில் தான் இருந்தார்கள். (பார்க்க 11:86) அவர்களுக்கு அல்லாஹ்வின் புறத்திலிருந்து பாதுகாப்பும் உதவியும் கிடைத்தன. அவர்கள் தம் நாட்டில் ஏற்றத் தாழ்வுகள் ஏற்படாதவாறு தடுத்து வந்தனர். மாறாக அங்கு வாழ்ந்த மற்றவர்களில் பெரும்பாலோர் சுயநலப் போக்குடன் அநியாய செயலில் ஈடுபட்ட தலைவர்களையே பின்பற்றி வந்தார்கள். அதனால் அவர்களும் குற்றம் புரியும் மக்களாகவே இருந்தார்கள்.
இன்றைக்கும் திருக்குர்ஆனின் போதனைகளை மக்கள் முன் எடுத்துரைக்கும் போது, மிகச் சிலரே இவற்றை சிந்தித்து அதன்படி செயல்பட முன்வருகிறார்கள். (பார்க்க 7:3) இவற்றை ஏற்றுக் கொள்வார்களா இல்லையா என்பது பற்றிக் கவலை கொள்ளாமல், இறைவழிகாட்டுதலை பக்குவமாக மக்கள் முன் வைப்பது ஒவ்வொருடைய கடமையுமாகும். அவர்களுடைய மனநிலைப் பற்றி அல்லாஹ்வுக்கு நன்கு தெரியும். ஒருவேளை அவர்கள் யூனுஸ் நபி சமூகத்தவர்களைப் போல திருந்தலாம் அல்லவா?
وَمَا كَانَ رَبُّكَ لِيُهْلِكَ ٱلْقُرَىٰ بِظُلْمٍۢ وَأَهْلُهَا مُصْلِحُونَ.
11:117. இவ்வாறாக சீர்த்திருத்தங்களை செய்து, திருந்தி கொண்டிருக்கும் நிலையில் எந்த சமுதாயத்தையும் அல்லாஹ் அழிப்பதில்லை. அவர்கள் திருந்துவதற்கு தக்க கால அவகாசம் அளிக்கப்படுகிறது.
ஆனால் தவறான செயல்களில் அவர்கள் நிலைத்து விட்டால், அதனால் ஏற்படும் பாதிப்புகள் அவர்களை நரக வேதனைகளில் தள்ளி விடுகின்றன. இப்படி ஒரு நிலை இவ்வுலகில் ஏன் நடைபெறுகிறது என்ற கேள்வி உங்களுக்கு ஏழலாம். அதற்குக் காரணம் என்னவென்றால்
وَلَوْ شَآءَ رَبُّكَ لَجَعَلَ ٱلنَّاسَ أُمَّةًۭ وَٰحِدَةًۭ ۖ وَلَا يَزَالُونَ مُخْتَلِفِينَ.
11:118. மற்ற உயிரினங்களை தம் இயல்பின் அடிப்படையில் வாழும்படி படைத்திருப்பதைப் போல், மனிதனையும் ஒரே சீராக ஒரு குறிப்பிட்ட இயல்பின் அடிப்படைப்பில் செயல்படும்படி அல்லாஹ் படைக்க நாடவில்லை. அவ்வாறு மற்ற உயிரினங்களைப் போல் மனிதனையும் படைத்திருந்தால் அனைவரும் ஒரே சீராக நடந்து கொண்டிருப்பார்கள். ஆனால் மனிதனுக்கு முழு சுதந்திரத்தையும் அளித்து விட்டதால், தமக்குள் இந்த அளவுக்கு வேற்றுமை பகைகள் உருவாகி இருக்கின்றன.
அதாவது மனிதனுக்கு முழு சுதந்திரத்தையும் அளித்துவிட்டு இறை வழிகாட்டுதலை நபிமார்கள் மூலம் அளித்து விட்டு, அவன் தம் சுய விருப்பத்துடன் சிந்தித்து அவற்றை ஏற்று அதன்படி வாழ முன்வர வேண்டும் என்பதே அல்லாஹ்வின் செயல் திட்டமாகும். அவ்வாறு அவன் வாழ்ந்தால் சமுதாயத்தில் உள்ள வேற்றுமை பகைகளுக்கு தீர்வு கிடைத்து விடும். (பார்க்க 2:36-38)
إِلَّا مَن رَّحِمَ رَبُّكَ ۚ وَلِذَٰلِكَ خَلَقَهُمْ ۗ وَتَمَّتْ كَلِمَةُ رَبِّكَ لَأَمْلَأَنَّ جَهَنَّمَ مِنَ ٱلْجِنَّةِ وَٱلنَّاسِ أَجْمَعِينَ.
11:119. எந்தச் சமுதாயம் “அல்லாஹ்வின் வழிகாட்டுதல்” என்ற அருளை ஏற்று அதன்படி வாழ்கிறதோ, அங்கு வேற்றுமை பகைகள் யாவும் நீங்கி ஒன்றுபட்ட சமுதாயமாக மாறி விடும். இப்படி ஏற்படுவது அல்லாஹ்வின் மாபெரும் கிருபையாகும். இந்த நோக்கத்துடன் தான் அல்லாஹ் மனிதனைப் படைத்தான். (பார்க்க 51:56). ஆனால் எந்தச் சமுதாயம் சிந்தனை எதுவுமின்றி தம் மன இச்சையின்படி செயல்படுகிறதோ, (பார்க்க 7:179) அது நரக வேதனைகளின் பக்கம் விரைந்து சென்று விடுகிறது. இறைவன் நிர்ணயித்துள்ள இந்த சட்டம் நகர்புற மக்களானாலும் சரியே, அல்லது நாட்டுபுற மக்களானாலும் சரியே, அனைவருக்கும் சமமாக பொருந்தும். இதுதான் இறைவனின் நிலைமாறா நிரந்தர சட்டமாகும். வரலாற்று உண்மைகளும் இதையே எடுத்துரைக்கின்றன என்பதை நீங்களே பார்த்துக் கொண்டீர்கள். இதில் ஒருபோதும் மாறுதல் ஏற்படாது.
وَكُلًّۭا نَّقُصُّ عَلَيْكَ مِنْ أَنۢبَآءِ ٱلرُّسُلِ مَا نُثَبِّتُ بِهِۦ فُؤَادَكَ ۚ وَجَآءَكَ فِى هَٰذِهِ ٱلْحَقُّ وَمَوْعِظَةٌۭ وَذِكْرَىٰ لِلْمُؤْمِنِينَ.
11:120. இதற்குமுன் வாழ்ந்த பல சமுதாயத்தவர்கள் செய்து வந்த தவறான செயல்களைப் பற்றியும், அவற்றைச் சரிசெய்ய இறைத்தூதர்கள் கொண்டுவந்த ஒழுங்குமுறை நடவடிக்கைகளைப் பற்றியும், அவரை ஏற்காததால் அவர்களுக்கு ஏற்பட்ட துர்பாக்கிய நிலைப் பற்றியும் எடுத்துரைப்பதன் நோக்கமே, உங்கள் உள்ளம் தெளிவு பெற்று, அதன்படி மக்களை நல்வழிபடுத்த ஆவன செய்ய வேண்டும் என்பதற்காகத் தான். இந்த வரலாற்று உண்மைகளில் உங்களுக்குப் பல படிப்பினைகளும் நல்லறிவுரைகளும் கிடைக்கும். இறைவழிகாட்டுதலை ஏற்று நடக்கும் மூஃமின்களுக்கு இவை சிறந்த அறிவுரைகளாகவும் இருக்கும்.
وَقُل لِّلَّذِينَ لَا يُؤْمِنُونَ ٱعْمَلُوا۟ عَلَىٰ مَكَانَتِكُمْ إِنَّا عَٰمِلُونَ.
11:121. இத்தனை ஆதாரங்களை எடுத்துரைத்தும், இவற்றைச் சிந்தித்து ஏற்றுக் கொள்ளாதவர்களிடம், “நீங்கள் உங்கள் போக்கின்படி செயலாற்றுங்கள். நாங்களும் எங்கள் இறைவனின் செயல்திட்டப்படி செயல்படுகிறோம்.” என்று அறிவிப்பு செய்து விடுங்கள்.
وَٱنتَظِرُوٓا۟ إِنَّا مُنتَظِرُونَ.
11:122. மேலும் அவர்களிடம், “நீங்கள் செய்யும் செயல்களின் விளைவுகளை எதிர் பாருங்கள் நாங்களும் எங்கள் செயல்களின் பலன்களையும் எதிர் பார்க்கிறோம்.” என்று அறிவிப்பு செய்து விடுங்கள்.
وَلِلَّهِ غَيْبُ ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضِ وَإِلَيْهِ يُرْجَعُ ٱلْأَمْرُ كُلُّهُۥ فَٱعْبُدْهُ وَتَوَكَّلْ عَلَيْهِ ۚ وَمَا رَبُّكَ بِغَٰفِلٍ عَمَّا تَعْمَلُونَ.
11:123. இந்த அறிவிப்புகள் யாவும் தனிநபர் ஒருவரிடமிருந்து வரக்கூடிய ஒன்றல்ல. அகிலங்களையும் பூமியையும் படைத்து அவற்றில் நடக்கும் ஒவ்வொரு இரகசியங்களையும் அறிந்து கொள்ளும் வல்லமை உடைய அல்லாஹ்விடமிருந்து வரும் சொல்லாகும். நீங்கள் செய்து வரும் ஒவ்வொரு செயலும் அவன் நிர்ணயித்த "விளைவுகள்" என்ற இலக்கை நோக்கியே செல்கின்றன என்பதை அறிந்து கொள்ளுங்கள். எனவே அவனுடைய வழிகாட்டுதலை ஏற்று அதற்கு முற்றிலும் அடிபணிந்து வாழுங்கள். அதன் மீதே உறுதியான நம்பிக்கை கொண்டு செயல்படுங்கள். நீங்கள் உங்கள் வாழ்வில் வெற்றி பெறுவீர்கள் என்பதில் சந்தேகம் வேண்டாம். இல்லையெனில் நீங்கள் செய்வது குறித்து உம் இறைவன் பராமுகமாக இருப்பதில்லை என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.