بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
113:0.அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் அறிவுரைப்படியே அனைத்துக் காரியங்களையும் செய்ய நாடுகிறேன். (பார்க்க 6:162)
முன்னுரை:நாம் ஏற்கனவே விளக்கம் அளித்தது போல, இஸ்லாமிய ஆட்சி அமைப்பு என்பது ஒட்டு மொத்த சமுதாயத்தின் நலன் காத்தல் என்ற அடிப்படையில் உருவாக்கப்படுவதே ஆகும். அதற்காக பல்வேறு சமுதாய சீர்த்திருத்தங்களை செய்ய வேண்டி வரும். அனைத்து பொறுப்புகளையும் ஒரு சிலரால் மட்டும் சுமக்க இயலாது. அந்த பொறுப்புகளை மூஃமின்களிடையே பகிர்ந்துகொள்ள வேண்டி வரும். அப்போது அனுபவக் குறைவால் பல வகையில் சிக்கல்கள் வரும். அவற்றைத் தீர்த்து வைப்பதில் இறைவனின் வழிகாட்டுதலின்படி பாதுகாப்பு தேட வேண்டும். மேலும் ஆரம்பக் கால கட்டங்களில் ஒட்டு மொத்த மக்களையும், தாய் தன் குழந்தையை எவ்வாறு பாதுகாக்கிறாளோ அவ்வாறே செயல் வீரர்கள் அனைவரையும் பாதுகாத்து வர வேண்டும். இந்த வகையில்தான் இந்த அத்தியாயம் பேசுகிறது. நமக்கு என்ன அறிவுரை கிடைக்கிறது என்பதைப் பார்ப்போம்.
قُلْ أَعُوذُ بِرَبِّ ٱلْفَلَقِ.
113:1. இறைவழிகாட்டுதலின் அடிப்படையில் ஆட்சியமைப்பு உருவாகும் ஆரம்ப நிலையில், மிகவும் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். ஒவ்வொரு கட்டத்திலும் இறைவனின் வழிகாட்டுதல் என்னவோ அதன்படியே பணியாற்ற வேண்டும். இதை மக்களிடம் சொல்லிவிடுவீராக.
مِن شَرِّ مَا خَلَقَ.
113:2. இந்த பிரபஞ்ச படைப்புகளில் எதுவும் தானாகவே நல்லதோ அல்லது தீமையானதோ அல்ல. அவற்றை பயன்படுத்தும் விதத்தில் தான் அவை நல்லதாகவோ தீயதாகவோ விளங்குகின்றன. எனவே அந்த படைப்புகளைக் கொண்டு உருவாக்கப்படும் புதிய கண்டுபிடிப்புகளை எல்லாம் ஆக்கப்பூர்வமான நோக்கங்களுக்காகப் பயன்படுத்துவதே இந்த நல்லாட்சியின் குறிக்கோளாகும். (பார்க்க 3:190-191) அவற்றை மனித அழிவிற்காக பயன்படுத்தப்பட மாட்டாது. ஆக இறை நெறிமுறைகளுக்கு உட்பட்டு அவற்றைப் பயன்படுத்தினால் மட்டுமே மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்க முடியும். எனவே இறைவனின் நெறி முறைகளையே மையமாக வைத்து செயல்பட வேண்டும் என்றும் மக்களுக்கு அறிவித்துவிடுங்கள்.
وَمِن شَرِّ غَاسِقٍ إِذَا وَقَبَ.
113:3. மேலும் ஒரு நாட்டின் வளர்ச்சிக்காக அத்தியாவசிய பொருட்களைப் பாதுகாக்க வேண்டியது மிக மிக அவசியமான ஒன்றாகும். எனவே இதுபோன்ற அத்தியாவசியங்களை பாதுகாப்பதில் இந்த ஆட்சி அதிகம் கவனம் செலுத்தும். இதற்காகவும் இறைவனின் நடைமுறை சட்டங்களின்படியே செயல்பட வேண்டும் என்று அறிவித்துவிடுங்கள்.
உதாரணமாக தண்ணீரை எடுத்துக் கொள்ளுங்கள். அதை நாம் தேக்கி வைக்கவில்லை என்றால் வேளாண்மைத் துறை பாதிப்புக்குள்ளாகும். அதனால் நாட்டில் பிரச்னைகள் உருவாகும்.
وَمِن شَرِّ ٱلنَّفَّٰثَٰتِ فِى ٱلْعُقَدِ.
113:4. இந்த ஆட்சிமுறைக்கு எதிராக சிலர் பிரச்சாரம் செய்து வருவார்கள். அதனால் மக்களிடம் இருக்கும் விசுவாசம் குறைந்து, தொய்வும் பலவீனமும் ஏற்பட்டு விடும். அதிலிருந்து பாதுகாப்பாக இருப்பதும் அவசியம் ஆகும். இதற்காக இறைவன் நிர்ணயித்துள்ள விதிமுறைகளின் படி விழிப்புடன் செயல்பட வேண்டும் என்பதையும் சொல்லிவிடுங்கள்.
وَمِن شَرِّ حَاسِدٍ إِذَا حَسَدَ.
113:5. இவற்றையெல்லாம் கடந்து இந்த நல்லாட்சி வெற்றிகரமாக செயல்படும் போது, இதன்மீதுள்ள பொறாமையின் காரணமாக எதிர்தரப்பினர் பல்வேறு சூழ்ச்சிகளை செய்து வருவார்கள். இதிலிருந்தும் பாதுகாப்பாக இருக்க வழிவகுத்துக் கொள்ள வேண்டியது மிக மிக அவசியம் என்பதையும் மக்களிடம் எடுத்துரையுங்கள்.