بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
112:0.அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் அறிவுரைப்படியே அனைத்துக் காரியங்களையும் செய்ய நாடுகிறேன். (பார்க்க 6:162)
முன்னுரை: (
1) உலகில் வாழும் மக்களுள், கடவுள் அல்லது இறை நம்பிக்கை என்பது இன்றிமையாத ஒன்றாகும். எல்லா பகுதி மக்களும் கடவுளை ஏதாவது ஒரு பெயரை வைத்து அழைக்கிறார்கள் அல்லது வழிபட்டு வருகிறார்கள். உதாரணமாக கிறிஸ்தவர்கள் இயேசுவையும் (Jesus Crhist) யூதர்கள் மோசஸ்ஸையும் (Moses)இந்திய மக்கள் ஈஷ்வரையும் முஸ்லிம்கள் அல்லாஹ்வையும் கடவுள் அல்லது இறைவனாக ஏற்று வணங்கி வருகிறார்கள். திருக்குர்ஆனும் கடவுளைப் பற்றி நமக்கு அறிமுகப்படுத்தி வைக்கிறது. அது பெரும்பாலான இடங்களில் அல்லாஹ் என்ற பெயரிலும் அவனுடைய முக்கிய பரிபாலிக்கும் தன்மையான ரப்பு என்ற பெயரிலும் அறிமுகப்படுத்துகிறது.
(2) இருப்பினும் இறைவனைப் பற்றி குர்ஆன் அறிமுகப்படுத்தும் பாணியே வேறு விதமாக உள்ளது. அதாவது இறைனுடைய வல்லமைகள் - குண நலங்கள் - சிஃபத்துக்கள் - என்ற அடிப்படையில் இந்த அகிலமும் உலகமும் செயல்பட்டு வருவதாக அது நமக்கு அறிவிக்கிறது. அதை நாம் சிந்தித்துப் பார்த்தால் அவை எல்லாமே இந்த உலகில் நடைபெற்று வரும் நடைமுறைச் சட்டங்கள் Law of Nature என்றே தெளிவாக உணர முடிகிறது. உதாரணமாக “இறைவன் வானிலிருந்து மழையை பொழிய வைக்கிறான்" என்று 2:22இல் வருகிறது. இது இந்த உலகில் நிலையான நடைமுறைச் சட்டமாக செயலாக்கம் பெற்று வருபவை ஆகும். இதே போல் இந்த உலகம் முழுவதும் நிகழ்ந்து வரும் சம்பவங்கள் எல்லாம் அவன் நிர்ணயித்த சட்டங்கள் - விதிமுறைகள் - இறைவன் செயல்பட்டு வரும் பாணி -(System in Function) என்றே புலனாகிறது.
(3) எனவே குர்ஆன் மூலமாகத் தான் இறைவனைப் பற்றிய சரியான மதிப்பீடு நமக்கு கிடைக்கிறது. அப்போதுதான் இந்த உலகில் செய்ய வேண்டியவை மற்றும் செய்யக் கூடாதவை என்ன வென்பதை மனிதனால் அரிந்துகொள்ள முடியும். இல்லையேல் இறைவனின் நடைமுறை சட்டத்தில் இல்லாததை எல்லாம் இறைவன் செய்து தருவதாக மனிதன் தவறாகக் கற்பனைச் செய்துக் கொள்வான். இறைவனின் நடைமுறைச் சட்டங்கள் எல்லாம் இவனுக்குப் புறியாமல் போய்விடும். எனவே இவனுடைய எதிர்பார்ப்பு வீணாகி விடும். இதுதான் இன்றைய மனிதனின் நிலை.
(4) சிந்தனையாளர்களே! வாருங்கள். இந்த சின்னஞ்சிறு அத்தியாயத்தில் கண் மணிக்குள் உலகமே ஐக்கியமாகி இருப்பது போல் ஒட்டு மொத்த குர்ஆனின் கோட்பாட்டையே இதனுள் கொண்டு வந்து, இறைவன் தன்னைப் பற்றி எவ்வாறு அறிமுகப்படுத்திக் கொள்கிறான் என்பதை கவனியுங்கள்.
قُلْ هُوَ ٱللَّهُ أَحَدٌ.
112:1. சமூக சீர்த்திருத்தவாதியே! அல்லாஹ் எனப்படுபவன் ஒருவனே (Unique and Universal) என்பதை அனைவருக்கும் அறிவித்துவிடு.
அதாவது அவன் இயற்றிய சட்டத் திட்டங்கள் எல்லாம் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் ஒரே சீராக பொருந்தக் கூடியவையே. அனைவருக்கும் அல்லாஹ் ஒருவனே. இதில் எவ்விதத்திலும் பாகுபாடு இருப்பதில்லை. இந்த நடைமுறைச் சட்டங்களை இயற்றுவதிலோ அல்லது அவற்றை மாற்றி அமைப்பதிலோ யாருடைய தலையீடும் இருக்க முடியாது. இதன் அடிப்படையில் உலக மக்கள் அனைவரும் ஓரினத்தவன் என்றாகி விடுகிறது. எனவே அல்லாஹ்வின் கொள்கைகளின் அடிப்படையில் உலகம் முழுதும் “ஒரே சமுதாயம்” என ஒருமைப்பாட்டுக் குரல் எழ வேண்டும்.
ٱللَّهُ ٱلصَّمَدُ.
112:2. அல்லாஹ் எனப்படுபவன் தேவையற்றவன். அதாவது தன்னிறைவு பெற்றவன். யாதொரு குறைப்பாடும் அற்றவன்.
மற்றவை – மற்றவர்கள் எல்லாம் உயிர் வாழ அவனைச் சார்ந்து இருக்கின்றன. ஆனால் அல்லாஹ் அவற்றிற்கெல்லாம் அப்பாற்பட்டவன். அல்லாஹ் யாரையும் சார்ந்தவன் அல்ல. அவனுக்கு நிகர் அவனே.
لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ.
112:3. அவன் யாரையும் பெறவும் இல்லை; அவனை யாரும் பெற்றெடுக்கவும் இல்லை. பிறப்பு இறப்பு என்பதெல்லாம் மனித உலகில்தான் நடப்பவை ஆகும். அல்லாஹ் அவற்றிற்கெல்லாம் அப்பாற்பட்டவன்.
உலகில் உள்ள அனைத்து உயிரினங்களும் அல்லாஹ் நிர்ணயித்த (Law of Creation) படைப்புச் சட்டத்தின் கீழ் படைக்கப்பட்டவை ஆகும். ஆனால் அல்லாஹ்வோ மகப்பேறு (Procreation) என்ற அடிப்படையில் படைக்கப்பட்டவன் அல்ல. ஏனெனில் மகப்பேறு விஷயத்தில் பெற்றோர்களின் ஒரு பாகம் பிள்ளையில் வந்து விடுகிறது. எனவே பிள்ளையை பெற்றெடுத்த தந்தையிடம் ஒரு குறைப்பாடு வந்து விடுகிறது. ஆனால் அல்லாஹ்வின் படைப்பு விஷயத்தில் அவ்வாறு இல்லை.
وَلَمْ يَكُن لَّهُۥ كُفُوًا أَحَدٌۢ.
112:4. அல்லாஹ்விற்கு நிகராக வேறு எந்த படைப்பையும் வைத்து ஒப்பிட்டுச் சொல்ல முடியாது. அவ்வாறு எதையும் உதாரணங்காட்டி அவனை ஒப்பிடவும் முடியாது.
முடிவுரை:(1) சிந்தனையாளர்களே! மேற்சொன்ன விஷயங்களைப் பற்றி நன்றாக சிந்தித்துப் பாருங்கள். அல்லாஹ் எவ்வாறு யாரையும் சார்ந்தவனாக இல்லையோ அவ்வாறே அவன் மனிதனுக்காக இயற்றி தந்துள்ள சட்டதிட்டங்களும் (குர்ஆன்) யாரையும் சார்ந்து இல்லை. அவற்றை கடைப்பிடிப்பதால் மனிதனுக்குத்தான் அனுகூலங்கள் ஏற்படுமே அன்றி அவற்றை நிராகரித்து விட்டால், அதன் பாதிப்பு அல்லாஹ்வுக்கு அல்ல. (ஏனெனில் அவன் சமத் ஆக இருக்கிறான்)
(2) அதை அடுத்து சமுதாயத்தில் சட்ட ஒழுங்கை பாதுகாப்பவர்கள் அந்த சட்டத்தைப் பேணி நடப்பதில் எவ்வித பாகுபாடும் காட்டக் கூடாது. தந்தை, மகன், மாமன், மச்சான் என்ற உறவுமுறைகளின் தலையீடுகள் இருக்கக் கூடாது. இறைச் சட்டங்கள் உறவு முறைக்கெல்லாம் அப்பாற்பட்டவையாக கருத வேண்டும். (ஏனெனில், அல்லாஹ் லம் எலித் வலம் யூலத் ஆக இருக்கிறான்)
(3) மேலும் அல்லாஹ்வின் இந்த கொள்கை கோட்பாடுகளின் அடிப்படையில் ஒரு சமுதாயம் உருவெடுத்தால் அதற்கு ஈடு இணையான சிறந்த சமுதாயம் வேறெங்கும் இந்த உலகில் உருவாக்க முடியாது. (ஏனெனில் வலம் யகுன்ல்லஹு குஃபூவன் அஹத்)
(4) எனவே மனிதனின் பார்வைப் புலன்களுக்கு அப்பால் உள்ள இறைவனைப் பற்றி (6:103) கற்பனை கதைகளை கூறி, மக்களை தவறான பாதையில் அழைத்துச் செல்வதற்குப் பதிலாக, அவனுடைய வழிகாட்டுதலை எடுத்துரைத்து மக்களை சரியான கடமை உணர்வுடன் வாழ வழிசெய்தால் நம் வாழ்வும் இறைவனின் ஒளியைக் கொண்டு பிரகாசிக்கும். நாடும் சிறக்கும். (39:69)