بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
111:0.அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் அறிவுரைப்படியே அனைத்துக் காரியங்களையும் செய்ய நாடுகிறேன். (பார்க்க 6:162)
முன்னுரை:இறைவழிகாட்டுதலை கடைப்பிடிக்காத சமுதாயமும் சரி; - அதன் தலைவர்களும் சரி - அல்லது மதத் தலைவர்களும் சரி - எல்லோருமே சுய நலத்தின் அடிப்படையில் தான் வாழ்ந்து வருவார்கள். தத்தம் பதவிகளையும் அந்தஸ்த்தையும் தக்கவைத்துக் கொள்ளவேண்டும் என்பதில் கண்ணும் கருத்துமாக இருப்பார்கள். அதனால் பொது மக்கள் பாதிப்புக்குள் ஆகிறார்களே என்ற உணர்வும் அவர்களிடம் இருப்பதில்லை. அதே சமயத்தில் ஒட்டுமொத்த மனித குலம் சிறக்க இஸ்லாம் என்னும் மார்க்கம் மேலோங்கும் போது, அங்குள்ள மக்களுள் குறிப்பாக தலைவர்களுக்கு இது பாதிக்கிறது. குர்ஆன் இறக்கி அருளப்படும் கால கட்டத்திலும் அதிகார வர்க்கத்தில் இருந்த குரைஷியர்கள், இந்த நல்லாட்சி உருவாகாதபடி பல சூழ்ச்சிகளை செய்ய முற்படுகிறார்கள். அங்கிருந்த தலைவனுடைய கதி என்னவாயிற்று என்பதை இங்கு பேசப்படுகிறது.
تَبَّتْ يَدَآ أَبِى لَهَبٍۢ وَتَبَّ.
111:1. இறைத்தூதர் கொண்டு வந்த இஸ்லாமிய மார்க்கம் மேலோங்கி வரும் நிலையில், குரைஷியர்களின் தலைவனான அபூலஹப் உடைய பலம் குன்றிப் போனது. அவனுடைய பலம் குன்றிப் போயிவிட வேண்டியதுதான். ஏனெனில்
مَآ أَغْنَىٰ عَنْهُ مَالُهُۥ وَمَا كَسَبَ.
111:2. இஸ்லாமிய மார்க்கம் ஒட்டு மொத்த சமுதாய நலனை முன்வைத்தே தோற்றுவிக்கப்படுகிறது. ஆனால் அபூலஹபோ அவனுடைய செல்வ பலத்தை முன்வைத்தே அதிகாரம் செலுத்தி வருகிறான். எனவே அவனுடைய செல்வமும் அதிகாரமும் இப்போது எந்தப் பலனையும் அளிப்பதாக இல்லை (96:7) (92:11) (69:27-29)
سَيَصْلَىٰ نَارًۭا ذَاتَ لَهَبٍۢ.
111:3. அவன் விரைவில் நரக வேதனைக்கு ஆளாவான்.
அதாவது ஒருவரிடமிருந்து அதிகாரமும் செல்வமும் பறிபோய் விட்டால், அப்போது ஏற்படும் மன வேதனைக்கு எல்லையே இருக்காது. அது நரகத்தை விட கொடியதாக இருக்கும.;
وَٱمْرَأَتُهُۥ حَمَّالَةَ ٱلْحَطَبِ.
111:4. இந்த மார்க்கத்திற்கு எதிராக சூழ்ச்சிகள் செய்து வருவதில் அவனுடைய மனைவியும் சளைத்தவள் அல்ல. அவளும் தன் பங்கிற்கு வதந்திகளை பற்ற வைத்துக் கொண்டு வருகிறாள். அவளும் இதே நரகத்தின் வலையில் சிக்கி தொங்கிப் போவாள்.
فِى جِيدِهَا حَبْلٌۭ مِّن مَّسَدٍۭ.
111:5. இறைவனின் வழிகாட்டுதலுக்கு வணங்கி நடக்காமல் ஆணவங்கொண்ட தலை, எவ்வாறு கேடுகளின் கயிற்றில் சிக்கி தொங்கி விடப்போகிறது என்பதை நீங்களே பார்ப்பீர்கள்.