بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ

110:0.அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் அறிவுரைப்படியே அனைத்துக் காரியங்களையும் செய்ய நாடுகிறேன். (பார்க்க 6:162)
முன்னுரை:சென்ற அத்தியாயத்தில் குறிப்பிட்டது போல் இறைத்தூதரும் அவருடைய தோழர்களும் தம் சமுதாயத்தை விட்டு பிரிந்து (மதினாவிற்கு) சென்று விடுகிறார்கள். அங்கு இவர்களுக்கு பேராதரவு கிடைக்கிறது. எனவே இறைவனுடைய செயல்திட்டப்படி ஒரு அமைப்பை உருவாக்குவதற்குச் சாதகமான சூழ்நிலை உள்ளது. இதற்காக அவர்கள் செய்ய வேண்டிய பணிகள் யாவை என்பதை இறைவன் தெள்ளத் தெளிவாக எடுத்துரைக்கின்றான். அதைப் பற்றி நாம் இங்கு பார்ப்போம்.


إِذَا جَآءَ نَصْرُ ٱللَّهِ وَٱلْفَتْحُ.

110:1. சமுதாய சீர்த்திருத்தவாதியே! அல்லாஹ்வின் நியதிப்படி உமக்கு ஆதரவும் உதவியும் கிடைக்கும் போது, எதிர் அணியினரின் எதிர்ப்புகள் ஓய்ந்து மார்க்கத்தின் கதவுகள் நாலாப்புறமும் திறக்கப்படும்.


وَرَأَيْتَ ٱلنَّاسَ يَدْخُلُونَ فِى دِينِ ٱللَّهِ أَفْوَاجًۭا.

110:2. அப்போது மக்கள் அணி அணியாய் அல்லாஹ்வின் மார்க்கத்தில் வந்து இணைவதை நீர் கண்கூடாகப் பார்த்துக் கொள்வீர் (19:96)
அப்போது நம் கடமைகள் எல்லாம் முடிந்து விட்டன. நமது குறிக்கோளை நாம் அடைந்து விட்டோம் என்று அமைதியாக அமர்ந்து விடாதீர். ஒரு போதும் அவ்வாறு செய்யக் கூடாது. ஏனெனில் இனிமேல் தான் உம்முடைய பொறுப்புகளின் சுமை மிக மிக அதிகமாக இருக்கும். (96:7-8) (73:5)


فَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ وَٱسْتَغْفِرْهُ ۚ إِنَّهُۥ كَانَ تَوَّابًۢا.

110:3. எனவே உமது இறைவனின் ஆட்சியமைப்பை போற்றுதலுக்கு உரியதாக உயர்த்திட முழுவேகத்துடன் செயல்பட்டு வா. இந்த ஆட்சியை செயலிழக்கச் செய்ய சில விஷமிகள் இருக்கத்தான் செய்வார்கள். அதை முறியடிக்க பாதுகாப்பு ஏற்பாடுகளை செய். நீர் இவ்வாறு செய்தால் அல்லாஹ்வின் உதவியும் மிக வேகமாக உம்மை வந்தடையும்.
முடிவுரை:இந்த செய்தி வரவிருக்கும் எல்லா தரப்பு மக்களுக்கும் பொருந்தக் கூடியவையே ஆகும். இறைவழிகாட்டுதலின்படி முழு வேகத்தில் செயல் பட்டால் இறைவனிடமிருந்து உதவி கிடைப்பது சர்வ நிச்சயம் என்று வாக்குறுதி அளிப்பதாக இந்த அத்தியாயம் நிரூபிக்கிறது. நீங்கள் அவ்வாறு செய்யவில்லை என்றால் வேறு ஒரு சமுதாயம் வந்து இந்தப் பணிகளை வேறு பாணியில் செய்ய ஆரம்பிக்கும். அவர்கள் உங்களை விட சிறந்த முறையில் செய்து முடிப்பார்கள். உங்களுக்கு அது பாதகமாக இருக்கும் (47:38)