بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ

109:0.அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் அறிவுரைப்படியே அனைத்துக் காரியங்களையும் செய்ய நாடுகிறேன். (பார்க்க 6:162)
முன்னுரை:நாம் ஏற்கனவே குறிப்பிட்டது போல இறைத்தூதர் என்பவர் தம் சமுதாயத்தில் உள்ள சீர்கேடுகளை நீக்கி சிறந்த சமுதாயத்தை உருவாக்க அயராது பாடுபடுபவரே ஆவார். இதற்காக முதன் முதலில் தம்மை சார்ந்தவர்களுக்கும் ஊர் மக்களுக்கும் (6:92) அதன் பின் நாட்டில் உள்ள அனைத்து தரப்பு மக்களுக்கும் (39:41) இறை வழிகாட்டுதலை எடுத்துரைக்கிறார். இதற்குக் காரணம் என்ன வென்றால் அங்கு நிலவி வரும் சீரகேடுகளால் அந்த சமுதாயம் அழியும் தருவாய்க்கு தள்ளப்பட்டு இருப்பதை இறைத் தூதர்களால் நன்றாக உணர முடிகிறது.
எனவே அந்த சமூகத்தவரை எப்படியாவது அந்த அழிவிலிருந்து காப்பாற்றிட வேண்டும் என்ற நல்லெண்ணத்துடன் மக்களிடமும் ஆட்சியாளர்களிடமும் எடுத்துரைக்கிறார்கள். (11:87-88) (2:258) அதே போல முஹம்மது நபி (ஸல்) அவர்களும் இறை நெறிமுறைகளை மக்கள் முன் எடுத்து வைத்தார்கள். அம்மக்களை நேர்வழிப்படுத்தவும் அவர்களை அழிவிலிருந்து காப்பாற்றிடவும் தம்மால் முடிந்த அளவிற்கு முயற்சிகளை மேற்கொண்டார்.
ஒரு சிலரைத் தவிர பெரும்பாலோர் அவருடைய அறிவுரையை ஏற்றுக் கொள்ளவில்லை. இனி அவர் அடுத்த கட்ட பணியை மேற்கொள்ள வேண்டியிருந்தது. அதாவது இந்த கொள்கைகளின் அடிப்படையில் ஆட்சி அமைப்பை ஏற்படுத்துவது என்பதாகும். எனவே தற்போது தன்னுடைய செயல் திட்டங்களுக்கு ஆதரவளிப்பவர்கள் யார் என்பதை பகிரங்கமாக அறிவிக்கும் தருவாய் வந்து விட்டது. அதைப் பற்றி இந்த அத்தியாயம் பேசுகிறது.


قُلْ يَٰٓأَيُّهَا ٱلْكَٰفِرُونَ.

109:1. சமுதாய சீர்த்திருத்தவாதியே! இறைவழிகாட்டுதலை எதிர்ப்பவர்களிடம் வெளிப்படையாக அறிவிப்பு செய்து விடுவாயாக.


لَآ أَعْبُدُ مَا تَعْبُدُونَ.ᴑ

109:2. நானோ அகிலங்களைப் படைத்த இறைவனின் வழிகாட்டுதல்களை ஏற்று அதன்படி வாழ்வதே தெய்வ வழிபாடு என்று பொருள் கொள்கிறேன். ஆனால் தெய்வ வழிபாடு என்பதற்கு நீங்கள் அளிக்கும் விளக்கமே வேறு. நான் அளிக்கும் விளக்கம் வேறு. நீங்கள் தெய்வங்களை ஆராதனை செய்து வருகிறீர்கள்.(பார்க்க 6:56)


وَلَآ أَنتُمْ عَٰبِدُونَ مَآ أَعْبُدُ.ᴑ

109:3.“உங்களுடைய வாழ்வின் இலக்கும் என்னுடைய இலக்கும் வெவ்வேறாக உள்ளன. இறைவனை வழிபடும் முறைகளும் வெவ்வேறாக உள்ளன. நீங்கள் வழிபடும் தெய்வ வழிபாடு வேறு.
எனவே நம் இரு அணியினரும் ஓர் இலக்கை நோக்கி பயணிக்கவே முடியாது." என்று வெளிப்படையாக அறிவித்து விடுவாயாக.


وَلَآ أَنَا۠ عَابِدٌۭ مَّا عَبَدتُّمْ.ᴑ

109:4. நீங்கள் கடைப்பிடித்து வரும் வணக்கவழிபாடு வழிமுறைகளை நாங்கள் ஒருபோதும் ஏற்க மாட்டோம்.


وَلَآ أَنتُمْ عَٰبِدُونَ مَآ أَعْبُدُ.ᴑ

109:5. உங்களைக் கவனித்துப் பார்க்கும் போது, நாங்கள் இறைவனின் வழிகாட்டுதலை ஏற்று நடப்பதைப் போல், நீங்கள் ஏற்று நடக்கப் போவதாக தெரியவில்லை.
எனவே நமக்கிடையே உள்ள விரிசல் இப்போதும் தீராது. வருங்காலத்திலும் தீராது. ஏனெனில் உங்களுடைய வழிபாடு வேறு. என்னுடைய வழிபாடு வேறு ஆகும்." என்பதையும் அறிவித்து விடுவீர்.


لَكُمْ دِينُكُمْ وَلِىَ دِينِ.

109:6.“எனவே உங்களுடைய செயல்திட்டம் வேறு. எங்களுடைய செயல்திட்டம் வேறு. இப்போது அவரவர் செயல் திட்டங்களின் அடிப்படையில் செயல்படுவோம்.
இறுதியில் யார் வெற்றி இலக்கை அடைகிறார்கள் என்பதை அவரவர் செயல்திட்ட அடிப்படையில் ஏற்படும் விளைவுகளே நிரூபித்து விடும்" என்பதையும் அறிவித்துவிடுவாயாக. (6:135, 6:158, 7:71, 7:89, 9:52, 10:20, 10:41, 10:102, 11:38-39)