بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
107:0.அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் அறிவுரைப்படியே அனைத்துக் காரியங்களையும் செய்ய நாடுகிறேன். (பார்க்க 6:162)
.ᴑ أَرَءَيْتَ ٱلَّذِى يُكَذِّبُ بِٱلدِّينِ
107:1. இஸ்லாம் மார்க்கத்தை பொய்பிக்கின்றானே, அவனைப் பற்றிய உண்மை உனக்குத் தெரியுமா?
அவன் மார்க்கத்தை மனதார ஏற்றுக் கொண்டதாக உதட்டளவில் கூறி வருவான். ஆனால் செயலளவில் பொய்ப்பித்து வருவான். ஒருவருடைய செயல்பாடுகளை வைத்துத் தான் மார்க்கத்தில் அவருக்கு எந்த அளவிற்கு ஈடுபாடு உண்டு என்பதைக் கணிக்க முடியும். உண்மை இவ்வாறு இருக்க, அவனுடைய செயலே அதற்கு மாற்றமாக இருந்தால், அவன் முஸ்லிம் என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொள்வதே பொய் என்றாகி விடுகிறது. (75:31-35) (95:7)
உலகில் யாரும் ஆதரவற்ற நிலையில் சிக்கித் தவிக்கக் கூடாது. தான் ஒரு அனாதை என்ற நினைப்பே சமுதாயத்தில் யாருக்கும் வரக்கூடாது என்பதே இஸ்லாமிய மார்க்கத்தை இந்த உலகில் நிலைநாட்டுவதன் முக்கிய நோக்கமாகும். மேலும் ஒருவருடைய சம்பாதனை ஏதோ ஒரு காரணத்திற்காக தடைப்பட்டு விட்டால் அவருக்கு உதவிக் கரங்களை நீட்ட வேண்டும் என்பதே மார்க்க போதனைகளின் கருவூலமாகும். ஆனால் இந்த மார்க்கத்தை ஏற்றுக் கொண்டு அதை பொய்யாக்குபவனைப் பாருங்கள்.
.ᴑ فَذَٰلِكَ ٱلَّذِى يَدُعُّ ٱلْيَتِيمَ
107:2. அவன் ஆதரவற்று தவிப்பவர்களை விரட்டி விடுகின்றான்.
.ᴑ وَلَا يَحُضُّ عَلَىٰ طَعَامِ ٱلْمِسْكِينِ
107:3. யாசிப்பவர்களுக்கு தானும் உதவுவதுமில்லை. உதவி செய்யும்படி பிறருக்கு ஊக்குவிப்பதும் இல்லை. (69:34) (89:17-18)
அவன் வெளித்தோற்றத்தில் செயல்படும் பாணியோ வேறு விதமாக உள்ளது. அவனுடைய நடை உடை பாவனையைப் பாருங்கள். அவன் தன்னைத் தானே ஒரு தொழுகையாளி என்பதை காட்டிக் கொள்ளவே தொழுக வருகிறான். இப்படிப்பட்டவர்கள் தொழுது விட்டு தம் கடமை முடிந்து விட்டது என்று தவறாக எண்ணிக்கொண்டு இருக்கிறார்கள். அல்லது பிறர் தம்மை பெரிய மஹான் என சொல்ல வேண்டும் என்பதற்காகவே தொழுகிறார்கள்;.
.ᴑ فَوَيْلٌۭ لِّلْمُصَلِّينَ
107:4. இப்படிப்பட்டவர்களின் தொழுகை எல்லாம் அவனுக்கு பேரழிவைத்தான் தேடித் தரும்.
.ᴑ ٱلَّذِينَ هُمْ عَن صَلَاتِهِمْ سَاهُونَ
107:5. இப்படியாக அவர்கள் தம் கூட்டுத் தொழுகை மூலம் கற்பிக்கப்படும் விஷயத்தில் அலட்சியமாகவே இருக்கிறார்கள்.
.ᴑ ٱلَّذِينَ هُمْ يُرَآءُونَ
107:6. அது மட்டுமின்றி பிறருக்குக் காட்டிக் கொள்வதற்காகவுமே தொழுகிறார்கள்.
இதனால் தொழுகையின் நோக்கம் என்னவென்று அவனுக்கு அறவே தெரியாது. (29:45) மார்க்க அடிப்டையில் எப்படிப்பட்ட சமுதாயம் உருவாக வேண்டும் என்றால், அதில் அனைவரும் இறைவழிகாட்டுதலை கடைப்பிடிக்க வேண்டும்.
மேலும் ஒட்டுமொத்த மனிதகுல மேம்பாட்டிற்காக ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். அதற்காக சமுதாயத்தில் ஒவ்வொருவரும் இறை நெறிமுறைகளை அறிந்து கொள்ள வேண்டும். அதற்காக செய்யப்பட்ட ஏற்பாடு தான் இந்த கூட்டு தொழுகை முறை ஆகும். அதன்பின் மிஞ்சி நிற்பதோ ருக்கூ (குனிதல்) சஜ்தா (சிரம் பணிதல்) ஆக இவையெல்லாம் இறைவனுக்குக் கட்டுப்படுவதாக வெளிப்படுத்தும் செய்கைகளே ஆகும். ஆனால் ருக்கூவையும் சஜ்தாவையும் மட்டும் தம் வாழ்வின் இறுதி இலக்கு என்று எண்ணிக் கொண்டதால், மற்ற கடமைகளை எல்லாம் காற்றில் பறக்க விட்டுவிட்டு (9:54)
.ᴑ وَيَمْنَعُونَ ٱلْمَاعُونَ
107:7. தேவை உள்ளவர்கள் தேவைகளை நிறைவேற்ற முடியாமல் செய்து விடுகின்றார்கள்.
அவனுடைய இந்த விந்தையான போக்கு எவ்வாறு உள்ளது என்றால், ஒரு புறம் தொழுதுக் கொள்ளவும் செய்கிறான். அதே சமயத்தில் அனைவருக்காகவும் பொது உடமை ஆக்கப்பட வேண்டிய வாழ்வாதாரங்களின் ஊற்றுக் கண்களை தன் வரை தடுத்துக் கொள்ளவும் செய்கின்றான். (70:21) அதைக் கொண்டு ஆதாயங்களை தேடிக் கொள்ளவே நாடுகின்றான். இப்படிப்பட்டவர்கள் தாம் மார்க்கத்தை பொய்ப்பிப்பவர்கள் ஆவார்கள்.