بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
106:0.அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் அறிவுரைப்படியே அனைத்துக் காரியங்களையும் செய்ய நாடுகிறேன். (பார்க்க 6:162)
முன்னுரை:அரசாளும் சமூகத்தவர்க்கு உலகில் எப்பொழுதும் கீர்த்தியும் புகழும் இருக்கும். இதற்கு அதிகாரப் பலம், செல்வப் பலம் எனப் பல காரணங்கள் இருக்கும். குர்ஆனிய ஆட்சியில் இந்த அந்தஸ்து வேற்றுமை இருக்காது. அக்காலத்தில் எகிப்திய நாட்டின் ஃபேரோஸியர்கள் (Phaeros) பலம் வாய்ந்தவர்களாக இருந்தார்கள். அதன் பிறகு இஸ்ரவேலர்களுக்கு அந்த புகழும் கீர்த்தியும் கிடைத்தன. இன்றைக்கும் இந்த உயர்வு தாழ்வு என்ற நிலை இருக்கத் தான் செய்கிறது. அது போல இந்த குர்ஆன் இறக்கியருளப்படும் அக்கால கட்டத்தில் அரபு நாட்டில் ஆட்சி அதிகாரம் குரைஷியர்கள் கையில் இருந்தது. கூடவே மக்களிடத்தில அவர்களுக்கு மதிப்பும் மரியாதையும் செல்வாக்கும் இருந்து வந்தது. அவர்கள் என்ன செய்தார்கள் என்பதை நாம் இங்கு பார்ப்போம்.
لِإِيلَٰفِ قُرَيْشٍ.ᴑ
106:1. குரைஷியர்கள் கஅபா என்னும் பழம்பெரும் ஆலயத்தின் நிர்வாகிகளாக இருந்தார்கள். அதனால் மக்கள் மத்தியில் அவர்களுக்கு மதிப்பும் செல்வாக்கும் இருந்து வந்தது.
إِۦلَٰفِهِمْ رِحْلَةَ ٱلشِّتَآءِ وَٱلصَّيْفِ.ᴑ
106:2. இதன் காரணமாக அக்கம் பக்கத்திலுள்ள நாட்டினருக்கும் இவர்களுக்கும் இடையே உடன்படிக்கை இருந்து வந்தது. அதன் அடிப்படையில் அவர்களை யாரும் தாக்கவும் மாட்டார்கள், கொள்ளையும் அடிக்க மாட்டார்கள். அதனால் அவர்கள் கோடையிலும் குளிர் காலத்திலும் யாதொரு பயமுமின்றி பாதுகாப்பாக வியாபாரப் பயணங்களை மேற்கொள்ள முடிந்தது.
فَلْيَعْبُدُوا۟ رَبَّ هَٰذَا ٱلْبَيْتِ. ᴑ
106:3. கஅபாவின் நிர்வாகிகள் என்கிற காரணத்தினால், அவர்களுக்கு மதிப்பும் மரியாதையும் என்னவோ இருந்தது. ஆனால் அவர்கள் ஏற்றுக்கொண்ட பொறுப்புகளை நிறைவேற்றி வரவில்லை.
ٱلَّذِىٓ أَطْعَمَهُم مِّن جُوعٍۢ وَءَامَنَهُم مِّنْ خَوْفٍۭ.ᴑ
106:4. அந்த கஅபாவை இறைவனின் செயல் திட்டங்களின் தலைமைச் செயலகமாக ஆக்கி, சிறந்த முறையில் தொண்டாற்ற அவர்களுக்கு அனைத்து வசதிகளும் வாழ்வாதாரங்களும் கிடைத்து வந்தன. ஆனால் அந்த கஅபாவை யாத்திரைகளின் புனித இடமாக ஆக்கி, தாமும் அதன் மடாதிபதிகளாக ஆகிவிட்டார்கள்.
இது தவறான கண்ணோட்டமாகும். அந்த கஅபாவை இறைவன் வகுத்துத் தந்த வழிகாட்டுதலின் படி உலக மக்களின் சமாதானக் கேந்திரமாக ஆக்கியிருக்க வேண்டும். இறை இல்லம் என்பதோடு அவர்களுக்கும் உயர்வு கிடைத்திருக்கும்;.