بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
105:0.அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் அறிவுரைப்படியே அனைத்துக் காரியங்களையும் செய்ய நாடுகிறேன். (பார்க்க 6:162)
முன்னுரை:ராஜ தந்திரம் என்பது போல, போர் தந்திரங்களும் முக்கியம் வாய்ந்தவை. படைப் பலத்தை விட இந்த தந்திரங்கள் நல்ல பலன்களை ஈட்டித் தரும். இன்றைய நவீன யுத்தங்களும் இதே அடிப்படையில்தான் நடைபெறுகின்றன. அந்த வகையில் இந்த அத்தியாயம் பேசுகிறது. வரலாற்றுக் குறிப்புப் படி அப்ரஹா என்ற படைத் தலைவன் கஅபாவின் கட்டிடத்தை வேரோடு தகர்த்தெறிய இரகசியமாக திட்டமிட்டான். அதற்காக பெரிய யானைப் படைகளுடன் கஅபாவிற்கு பக்கத்தில் உள்ள மலைக்குப் பின்புறத்தில் வந்து கூடினான். மறு நாள் காலையில் திடீர் தாக்குதல் நடத்தி அதை அழித்திட வேண்டும் என்பது அவனுடைய சதி திட்டம். ஆனால் அவன் கண்டதோ மிகப் பெரிய தோல்வியே. அது எப்படி சாத்தியமாயிற்று என்பதை நாம் பார்ப்போம்.
ஏகாதிப்பத்திய ஆட்சியை நடத்தி வரும் அதிகார வர்க்கம், எப்போதும் தம்மிடமுள்ள பெரிய படைப் பலத்தையே நம்பி தம்மை யாரும் அசைக்க முடியாது என்ற நினைப்பில் இருக்கும். ஆனால்
أَلَمْ تَرَ كَيْفَ فَعَلَ رَبُّكَ بِأَصْحَٰبِ ٱلْفِيلِ.
105:1. அந்த யானைப் படை வீரர்களுடைய நிலைமையை உம்முடைய இறைவன் எவ்வாறு உருமாற்றினான் என்பதை நீங்கள் கண்கூடாகப் பார்க்கவில்லையா? இதை அவர்களிடம் கேளுங்கள்.
أَلَمْ يَجْعَلْ كَيْدَهُمْ فِى تَضْلِيلٍۢ.
105:2. அவர்களுடைய இரகசிய சதி திட்டங்கள் உமது இறைவனின் நியதிப்படி எவ்வாறு முறியடிக்கப்பட்டன என்பதை நீங்களே பார்த்துக் கொண்டீர்கள் அல்லவா?
وَأَرْسَلَ عَلَيْهِمْ طَيْرًا أَبَابِيلَ.
105:3. அந்த யானைப் படை வீரர்கள் திடீர் தாக்குதல் நடத்த மலைக்குப் பின்புறத்தில் இரகசியமாக கூடியிருந்தார்கள். பருந்துகள் மற்றும் மாமிச பட்சிகளின் கூட்டம் இறைவனின் நியதிப்படி அந்தப் படைகள் தங்கியிருந்த இடத்திற்கு மேல் பறந்து வந்தன. இப்படியாக அந்த இரகசிய சதி திட்டம் உங்களுக்கு அம்பலமானது.
பொதுவாக போர் சமயங்களிலோ அல்லது மிருகங்கள் வேட்டையாடும் போதோ, மாமிசப் பட்சிகள், தமக்கு உணவு கிடைக்கும் என்பதை இயல்பாகவே தெரிந்து கொண்டு மேல் மட்டத்தில் கூட்டம் கூட்டமாக பறந்து வரும். அதைக் கொண்டு மலைக்கு அப்பால் வழக்கத்திற்கு மாறாக ஏதோ நிகழ்வதாக உங்களால் யூகிக்க முடிந்தது.
تَرْمِيهِم بِحِجَارَةٍۢ مِّن سِجِّيلٍۢ.
105:4. அதன் பின் நீங்கள் மலைகள் மீது ஏறி கருங்கற்களை அவர்கள் மீது வீசி எறிந்தீர்கள்.
அந்தக் கூட்டத்தில் யானைகள் தாக்கப்பட்டதால், அவை இங்கும் அங்குமாக ஓடின. இதனால் அங்கு தங்கியிருந்த அந்தப் படைவீரர்கள் யானைகளால் மிதிபட்டு நசுங்கி போனார்கள். இப்படியாக
فَجَعَلَهُمْ كَعَصْفٍۢ مَّأْكُولٍۭ.
105:5. அந்த பறவைக் கூட்டத்திற்கு மென்று தின்ன கூழ் போல சரியான ஆகாரம் கிடைத்து விட்டது.
பின் குறிப்பு:படைப் பலத்தோடு சிந்தனைப் பலமும் என்றென்றும் அவசியமான ஒன்றாகும். தரை வழி தாக்குதலை விட வான் வழித் தாக்குதல்கள் மூலம் எதிரிக்கு பெருத்த நட்டத்தை ஏற்படுத்தி எளிதில் வீழ்த்திட முடியும் என்பது இந்த அத்தியாயத்திலிருந்து புலனாகிறது. மேலும் மனித நேயம் மற்றும் மனித உரிமைகள் காப்பாற்றப்படவே போரிட அனுமதி தரப்படுகிறது. (பார்க்க 22:39) அதுவும் நிர்ப்பந்தம் ஏற்பட்டாலொழிய போரிடுவதற்கு அல்லாஹ்வின் சட்டம் அனுமதிப்பதில்லை. மேலும் தம்மை திருத்திக்கொள்ள எதிர் தரப்பினருக்கு தக்க கால அவகாசமளித்து போர் அறிவிப்பு செய்து அதன்பின்னரே முறைப்படி போரிடவேண்டும். அதை விட்டுவிட்டு ஒருவருக்கெதிராக மற்றவர் சதி திட்டங்களை தீட்டுவது, உலகில் குழப்பங்களை ஏற்படுத்துவது, அப்பாவி மக்களைக் கொன்று குவிப்பது, வழிபாட்டுத் ஸ்தலங்களை நாசமாக்குவது போன்ற செயல்களுக்கு ஒருபோதும் இஸ்லாத்தில் இடமில்லை. (பார்க்க 22:40) இதையே இந்த அத்தியாயம் வலியுறுத்திச் சொல்கிறது.
அந்தப் பறவைகளே கற்களை வானத்திலிருந்து எறிந்ததாக பலர் மொழிபெயர்ப்பு செய்துள்ளார்கள். ‘தர்மீஹிம்’ என்ற சொல் முன்னிலையைக் (Second Person) – “நீங்கள்” என்று குறிக்கும். படற்கையைக் Third Person)ஐ – பறவைகளைக் குறிக்காது. மேலும் லூத் நபியின் சமுதாயத்தின் மீது வானத்திலிருந்து பொழிந்த சுடப்பட்ட கற்களுக்கு “அம்தர்னா அலைஹா ஹிஜாரதின் மின் ஸிஜ்ஜீல்” என்ற வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டுள்ளது. (பார்க்க 11:82) (7:84) அதாவது நாம் அவர்கள் மீது சுடப்பட்ட கற்களை பொழிந்தோம். எனவே தர்மீஹிம் என்பதற்கு நாம் தந்துள்ள விளக்கஉரையே பொருத்தமானது. லூத் நபி சமுதாயத்திற்கு அல்லாஹ்வே கற்களைப் பொழிந்த போது, உலகப் பிரசித்திப் பெற்ற கஅபதுல்லாவை காப்பாற்ற பறவைகளை ஏன் அனுப்ப வேண்டும் என்ற கேள்வியும் எழுகிறது. எனவே நாம் தந்துள்ள விளக்க உரையே சரியானது என்பதற்கு இதுவும் ஓர் ஆதாரமாகும்.